சோழன்

முற்கால சோழ நாட்டுக் கதைகளைச் சற்றுப் பார்ப்போம்.
இவைகள் எல்லாம் கி மு 300 – கி பி 100 வாழ்ந்த சோழ மன்னர்கள் பற்றி
:
சூரிய குலத்திலிருந்து வந்தவர்கள் சோழர்கள்.
தூங்கெயில் எறிந்த தொடுத்தோள் செம்பியன் புகார் நகரில் 28 நாள் இந்திர விழா எடுக்க ஏற்பாடு செய்தான். பருந்திடமிருந்து புறாவைக் காத்த சிபி இவன். பசுவின் கன்றை தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை அளித்த மனுநீதி சோழன் இக்காலத்தைச் சேர்ந்தவன்.
முதல் கதை: சோழ மன்னன் செங்கணான்.
சென்ற இதழில் சுருக்கமாகக் கோடி காட்டினோம்.
இப்பொழுது விரித்துக் கூறுவோம்.
சரித்திரத்தை விடுத்து சற்றே புராணம் கூறுவதைக் கேட்போம்!
திருவானைக்காவல் என்னும் தலத்தில் ஒரு நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது.
யானை ஒன்று தினமும் தனது துதிக்கையால் தண்ணீரும், பூவும் எடுத்துவந்து சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. (திருவானைக்காவல்!!).
அந்த நாவல் மரத்தின் மீது சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் வலையால் பந்தல் அமைத்தது.
யானை சிலந்தி வலையைக் கண்டது.
‘எம்பெருமானுக்குக் குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே!’ யானை வருந்தியது.
யானை வலையை அழித்துச் சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது.
வலை அறுந்தது கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் வலை பின்னியது.
இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும் யானை அதை அழிப்பதுமாக செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன.
சிலந்தியின் பொறுமை எல்லை கடந்தது.
வலையை அழித்திடும் யானையை ஒழிக்க வேண்டும்!
முடிவு கட்டியது!
ஒரு நாள் – சிவபெருமானை வழிபட வந்த சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து… கடித்தது.
யானையும் துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது.
சிலந்தி இறந்தது.
யானையும் சிலந்தியின் விஷம் தாங்காமல் மடிந்தது.
புராணம் மேலும் கூறுகிறது!
சிலந்தியும் யானையும் சிவலோகத்தில் சிவத்தொண்டர்களாம்.
கோபம் – பொறாமையால் – ஒருவரை ஒருவர் சபித்து இவ்வாறு சிலந்தி-யானை என்று பிறந்தனராம்.
இறைவன் யானைக்கு (மட்டும்) சிவபதம் அளித்தார்.
சிலந்தியைச் சோழர் குலத்தில் உதித்து கோயில்கள் அமைத்துச் சிவத்தொண்டு புரிய அருள் செய்தார்.
ஏன் யானைக்கு மட்டும் சிவபதம்?
யானையைக் கொல்லச் சிலந்தி ‘முதலில்’ முயன்றதால் அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது (செம லாஜிக் மச்சி!)
சிலந்தி சோழ குலத்தில் பிறந்தது.
பிறந்த போதே குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன.
அரசியார் குழந்தையை உச்சிமோந்து என் செல்வக்கோச் செங்கணான் என்று வாஞ்சையோடு கொஞ்சினாள்.
கோச்செங்கட் சோழர் சிவ ஆலயம் எழுப்பத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டினார்.
நெஞ்சம் மறப்பதில்லை!
அது நினைவை இழக்கவில்லை!
யானைப் பகை மனதில் இன்னும் இருந்தது!
அதனால் – திருவானைக்காவல் கோவிலில் யானை நுழைய முடியாதபடி ‘சிறு’ வாயில் அமைத்தார்!
போர்க்களத்தில் பெரும்வீரனாக இருந்ததுடன் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்த சிறந்த சிவபக்தன் செங்கணான்!
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் சோழன் செங்கணானுடன் போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்தான்.
சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.
யானைகள் மீது எத்தனை வெறுப்பு? பூர்வ ஜென்ம பகையோ?
Grey pottery with engravings, Arikamedu, 1st century CE
By PHGCOM – self-made photographed at Musee Guimet, 2007, GFDL, https://commons.wikimedia.org/w/index.php?curid=3598599

இரண்டாம் கதை: கிள்ளியும் கிள்ளியும்!
சேர, சோழ, பாண்டியர்கள் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டு மடிந்தது கண்டு நாம் நொந்து போகிறோம்.
ஆனால் இந்தக் கதை இன்னும் சோகமானது.
சோழர்களே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு அழிந்தனர்.
கரிகாலனுக்குப் பின் நலங்கிள்ளி என்ற ஒரு சோழன் பூம்புகாரிலிருந்து அரசாண்டான்.
நெடுங்கிள்ளி என்ற சோழன் உறையூரிலிருந்து அரசாண்டான்.
கோவூர் கிழார் என்ற பெரும் புலவர் தமிழ் நாட்டில் பெரும் புகழ் கொண்டு விளங்கினார்.
சேர சோழ பாண்டிய அனைத்து மன்னர்களுடைய அன்புக்கும் பாத்திரமானவர்.
அவர் அந்தக்கால கண்ணதாசன்!
இப்படிப்பட்ட கவிஞர்கள் மன்னர்களின் வீரத்தைப் பாராட்டிப் பாடல் அமைப்பர்.
ஆயினும் அதே சமயம் மன்னர் தவறிழைத்தாலோ அதைக் கடுமையாக விமர்சிக்கத் தயங்கமாட்டார்கள்.
அந்தக்கால ‘துக்ளக் சோ’!
உதாரணத்திற்கு: வெண்ணிக் குயத்தியார் என்ற கவிஞர் சோழன் கரிகாற் பெருவளத்தான் வெண்ணியில் சேர பாண்டியர்களை வென்றது குறித்துப் பாடுகையில் இவ்வாறு கூறுகிறார்:
“கரிகால் வளவ! பல போர்களில் வென்ற உனது ஆற்றல் பெரிது!
பெருஞ்சேரலாதனை வென்றதால் நீ பெரியதொரு வெற்றியை அடைந்திருக்கிறாய்! ஆனால் வெற்றியுடன் தோல்வியும் உன்னைச் சேர்ந்திருக்கிறது!
போரில் புண்பட்டதால் சேரன் போர்க்களத்திலேயே வட திசை நோக்கி உயிர் துறந்தான்!
அதனால் உனக்குப் பழி நேர்ந்து விட்டது!
அவன் மானத்தைப் பெரியதாக மதித்தான்.
நீயோ மானத்தை விட வெற்றியையே பெரிதாக மதிக்கிறாய்!
சீர் தூக்கிப்பார்! நீ அடைந்த வெற்றியை!”
என்ன துணிவு!
சரி நமது கிள்ளி versus கிள்ளி கதைக்கு வருவோம்!
கோவூர் கிழார் பாடல் ஒன்றில் – சேரநாட்டைச் சேர்ந்த வஞ்சி நகரமும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரை நகரமும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன.
அவன் சக்தி படைத்த சோழன்!
நட்பை வளர்ப்பது கடினம்!
பகை மூட்டுவதோ எளிது!
இருவருக்கும் கடும் பகை.
நலங்கிள்ளி பெரும் படை கொண்டு உறையூர் கோட்டையை முற்றுகையிட்டான்.
நாட்கள் நகர்ந்தன.
முற்றுகை தொடர்ந்ததது.
கோவூர் கிழார் இப்படி இரு சோழர்களும் அடித்துக்கொள்வதைப் பார்த்து வெதும்பினார்.
இந்த போர் நல்லதல்ல என்று எண்ணிய கோவூர் கிழார் உலகத்து இயற்கையையும் நாட்டுநடப்பையும் சுட்டிக்காட்டிப் போரைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்.
உன்னோடு போரிட வந்திருக்கிறவன்
பனம்பூமாலை அணிந்தவன் (சேரன்) அல்லன்.
வேப்பம்பூமாலை அணிந்தவனும் (பாண்டியன்) அல்லன்.
இரண்டுபேரும் ஆத்திமாலை அணிந்தவர்களே (சோழர்களே)
உங்களில் எவர் தோற்றாலும் உங்களின் குடி தான் தோற்றது.
இரண்டுபேரும் வெற்றி பெறுவதும், உலகத்தியற்கை அல்ல.
எனவே உங்களின் செயல் குடிப்பெருமையைக் காப்பதாக இல்லை;
மாறாக இது உங்களைப் போன்ற பிற மன்னர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.
இதைப் பாடலாக்குகிறார் கோவூர் கிழார்.
நல்ல அறிவுரைகள் அரசர்களின் காதில் ஏறவில்லை.
ஆனால் புறநானூறில் ஏறி சரித்திரத்தைக் கூறுகிறது.
அதுமட்டுமல்ல.
நலங்கிள்ளியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து இளந்தத்தன் என்றொரு புலவன் நெடுங்கிள்ளியின் கோட்டைக்குள் வந்து விட்டான். நெடுங்கிள்ளி இந்தப்புலவரை ஒற்றன் என்று கருதிக் கொல்ல ஆணையிட்டான்.
கோவூர் கிழார் துடி துடித்து விட்டார்.
நண்பன் இளந்தத்தன் மாபெரும் கவிஞன்!
அவன் மீது இப்படி ஒரு போலிக் குற்றமா?
கடிதக் கவிதை ஒன்று தீட்டி நெடுங்கிள்ளிக்கு அனுப்பினார்.
அதில் மன்னரின் பெருமை பேசுவதைக் காட்டிலும் புலவர்களின் இயல்பையும் பெருமையையுமே பெரிதும் பேசியிருக்கிறார்.
அவர் சொன்னது:
புலவர்கள் பெற்ற செல்வத்திற்காக மகிழ்வார்கள்;
அதை சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்வார்கள்.
பெற்ற செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளாமல்.. முகம் வாடாமல்.. மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
அப்படிப்பட்ட இவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்
இப்படி எழுதினார்.
கணைகளை விட கவிதைகளின் தாக்கம் அதிகம்!
நெடுங்கிள்ளி இளந்தத்தனை உடனே விடுதலை செய்தான்.
கோவூர் கிழார் மேலும் பார்த்தார்.
சரி. போரை நிறுத்தத் தான் கூறிய அறிவுரையை இந்த மன்னர்கள் கேட்கவில்லை.
அப்படியானால் அவர்கள் வீரத்துடன் போர் புரியட்டுமே?
எதற்காக நெடுங்கிள்ளி பயந்து கொண்டு கோட்டையில் பதுங்கி உள்ளான்?
கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று கவி பாடினார்:
“நெடுங்கிள்ளி!
முற்றுகையிடப்பட்ட உறையூர் கோட்டையின் நிலைமையை அறிவாயாக.
குழந்தைகள் பாலில்லாமல் கதறுகின்றனர்.
மகளிர் பூவற்ற வெறுந் தலையை முடிந்து கொள்கிறார்கள்.
மக்கள் நீரும் சோறும் இன்றி வருந்தும் ஒலி கேட்கிறது.
இந்நிலையில் இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல்.
பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே!
நீ அறவழியில் வாழ விரும்பினால்:
நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு;
நீ மறவழியில் வாழ விரும்பினால்:
நலங்கிள்ளியுடன் போர் செய்.
வாளாவிருப்பது தவறு! உன் வாளை உயர்த்து!
இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது”
இப்படி ஒரு மன்னன் முன்பு கூற எத்தனை துணிச்சல் வேண்டும்!
ஆனால்,
கணைகளை விட கவிதைகளின் தாக்கம் அதிகம்!
நெடுங்கிள்ளி கோட்டையை விட்டு வெளி வந்து நலந்கிள்ளியுடன் போரிட்டான்.
காரியாறு என்ற இடத்தில நடந்த கடும் போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டான்.
சேர சோழ பாண்டியர்கள் இவ்வாறு சண்டையிட்டதால்தானோ ஒரு சில நூற்றாண்டுகளில் தமிழகமே இருண்ட காலத்தில் தள்ளப்பட்டது.
சரித்திர வெறியர்கள் மேலே படியுங்கள்!
மற்றவர் அடுத்த இதழில் முற்காலப் பாண்டியர்களுக்காகக் காத்திருங்கள்!
சோழ மன்னர்களைப் பற்றி ஒரு சில வரிகள் கொண்ட தொகுப்பு:
இளஞ்சேட் சென்னி (உருவப் பல்தேர்)
இவன் கரிகாற் பெருவளத்தானின் தந்தை.
தேர் உலா விரும்பி என்று பாடப்பட்டவன்.
பெருங்குன்றூர் கிழார் இவனை “வான்தோயு நீள்குடை வயமான் சென்னி” என்று குறிப்பிட்டு அவனது கொடையைப் போற்றுகிறார்.
இளஞ்சேட் சென்னி (செருப்பாழி எறிந்தவன்)
இவன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப்பெயருடன் குறிப்பிடப்படுகிறான். செருப்பாழி என்பது சேரமன்னனின் ஊர். இவன் இந்த ஊரைக் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இந்த வெற்றியைப் போர்க்களத்திற்கே சென்று பாடி போர்யானைகளைப் பரிசாகத் தரும்படி ஒருபாடலில் வேண்டுகிறார். மற்றொரு பாடலில் இவன் தந்த அணிகலன்களை எந்த அணியை எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் தம் உடலில் ஆங்காங்கே அணிந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார். (ஒவ்வொருவருக்கும் எப்படியெல்லாம் பிரச்சினை வருது?)
இளஞ்சேட் சென்னி (பாமுள்ளூர் எறிந்தவன்)
இவன் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப் பெயர்களுடன் குறிப்பிடப்படுகிறான். பாடல் இவனை ‘நெய்தலங்கானல் நெடியோன்’ எனக் குறிப்பிடுகிறது. பாமுள்ளூர் சேரமன்னனின் ஊர். இதனை இவன் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவனை இரண்டு பாடல்களில் போற்றியுள்ளார். ஒரு பாடலில் பகைவர் பணிந்தால் தண்டிக்காதே என்று அவனை அறிவுறுத்துகிறார். மற்றொரு பாடலில் பகைவரின் கோட்டையை வெல்வதற்கு முன்பே அக் கோட்டையைத் தன் பாணர்களுக்கு இவன் வழங்கிவிடுவான் என்கிறார்.
கரிகாற் பெருவளத்தான்
உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன். வெண்ணிப் போரில் பெருஞ்சேரலாதனையும், பாண்டியனையும், 11 வேளிரையும் வென்றான். வாகைப் பறந்தலைப் போரில் 9 மன்னரை வென்றான்
பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களின் பாட்டுடைத் தலைவன்.
மனைவி நாங்கூர் வேள் மகள். முதுமைக் கோலத்தில் தோன்றி அரசவையில் தீர்ப்பு வழங்கினான் என்றும், கருவூரில் இருந்தபோது கழுமலத்துப் பட்டத்து யானை இவனுக்கு மாலை போட்டு அரசன் எனக் காட்டியது என்றும், இளமைக் காலத்தில் காலில் தீப் பட்டு உயிர் பிழைத்தான் என்றும், இரும்பிடர்த் தலையார் இவனது தாய்மாமன் என்றும் பிற்காலப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களின் பாட்டுடைத் தலைவன். பட்டினப் பாலை நூலாகத் தன்னைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதிநோறாயிரம் பொன் பரிசாக வழங்கினான். (அம்மாடி! எம்புட்டு பணம்). இவன் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்துகொண்டு அரசாட்சி செய்தான். ஒருகாலத்தில் இமயமலை வரை சென்று இடைப்பட்ட அரசர்களை வென்றான்.
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை!

கிள்ளி வளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்)
பிட்டையை வென்று கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். சேரனின் வஞ்சிமுற்றத்தை வென்று குடநாட்டைக் கைப்பற்றினான். கோவூர் கிழார் இவனை போர்க்களத்தில் கண்டு பாடி களிறுகளைப் பரிசாகப் பெற்றார்.
கிள்ளி வளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று விளக்கமாக வேறுபடுத்திக் காட்டப்படும் இவன் ‘பசும்பூட் கிள்ளிவளவன்’ ‘பெரும்பூண் வளவன்’ எனப் பாடல்களுக்குள் குறிப்பிடப்படுகிறான். இச் சோழன் உறையூர் அரசன். இவனை 10 புலவர்கள் பாடியுள்ளனர். ஆலத்தூர் கிழார்,ஆவூர் மூலங்கிழார் , இடைக்காடனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், கோவூர் கிழார் ,நல்லிறையனார் ,வெள்ளைக்குடி நாகனார் என்னும் எழுவரும் இவனது போராற்றலையும், வள்ளல் தன்மையையும் போற்றிப் பாடியுள்ளனர். மாறோக்கத்து நப்பசலையார் இவனது கொடைச் சிறப்பையும், இறப்பையும் பாடியுள்ளார். ஆடுதுறை மாசாத்தனார்,ஐயூர் முடவனார் ஆகிய இருவரும் இவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடியுள்ளனர். இவன் கருவூரை அடுத்த ஆன்பொருநை ஆற்றுமணலில் தன் படையை நிறுத்தி, முரசு முழக்கிச் சேரனைப் போருக்கு அழைத்தான். சேரன் கோட்டையை விட்டு வெளிவரவில்லை. இப்படிப்பட்ட சேரனோடு போரிடுவதற்கு வளவன் நாணவேண்டும் என்று ஒரு புலவர் அறிவுரை கூறினார். இவன் பாணர்க்குப் பொன்-தாமரை விருதும், தேரும் வழங்குவான்.நினைத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் என இவனைப் போற்றும் ஒரு புலவர் இன்சொல் பேசி எளிமையாக வாழவேண்டும் என அறிவுறுத்துகிறார். இவன் மலையமான் மக்களை யானைக்காலால் மிதிக்கவைக்க முயன்றபோது, அழும் குழந்தை யானையைக் கண்டு அழுகையை நிறுத்திக்கொண்டு வேடிக்கை பார்த்த்தைச் சுட்டிக் காட்டி குழந்தையைக் கொல்வதை ஒரு புலவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
கோப்பெருஞ்சோழன்
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். புலவனாகவும் விளங்கினான். சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறை இவனை வென்றான். தன் மக்கள் இருவர் மீது போருக்கு எழுந்தான். புலவர் ஒருவர் அறிவுரையைக் கேட்டு மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். (வடக்கிருந்து உயிர் விட அந்நாளில் பெருங்கூட்டம் போலும்!) கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனார், பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவனுடன் வடக்கிருந்தவர் பலர். பிசிராந்தையார் வருவார், அவர் வடக்கிருக்க இடம் ஒதுக்குக என்றான். தன்னுடன் வடக்கிருக்கத் துணிந்த பொத்தியாரை மகன் பிறந்த பின் வருக என்றான். அவ்வாறே அவர் வந்தபோது,அவருக்குத் தன் கல்லறையில் இடம் கொடுத்தான். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு நட்பிற்கு இலக்கணம்.
நலங்கிள்ளி சேட்சென்னி
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்னும் விளக்கப்பெயரைக் கொண்ட இவன் சிறந்த வீரன். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் இவனை ‘இயல்தேர்ச் சென்னி’ என்று குறிப்பிடுகிறார். இவனது பெயரிலுள்ள ‘நலங்கிள்ளி’ என்பதை இவனது தந்தையின் பெயராகக் கொள்வது தமிழ் மரபு.
நலங்கிள்ளி (சோழன்)
சோழன் நலங்கிள்ளி ஒரு புலவனாகவும் விளங்கினான். சேட்சென்னி நலங்கிள்ளி புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்கள் இவனுக்கு உண்டு. ஆலத்தூர் கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவனது போராற்றலைக் கண்டு வடபுலத்து அரசர்கள் நடுங்கினர். பாண்டிய நாட்டு ‘ஏழில்’ அரண்-கதவில் தன் புலிக்கொடியைப் பொறித்தான். தன் தாயத்தாரோடு பகைமை பூண்டு நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டைக்குள்ளும் உறையூர்க் கோட்டைக்குள்ளும் அடைத்துக்கொண்டிருந்தபோது முற்றுகையிட்டுத் தாக்கினான். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லை மதித்துப் போர்த்தொழிலைக் கைவிட்டு அறச் செயல்களைச் செய்தான். தாய் குழந்தைக்குப் பால் சுரப்பது போலப் பாணர்களுக்குப் பரிசில் வழங்குவான்.பெருங்கலம் என்னும் கப்பல் செல்வ-வளம் சேர்க்கும் புகார்த் துறைக்கு அரசன். வங்கக் கப்பல்களை வேள்வித் தூணில் கட்டி நிறுத்தி வைக்கும் நாட்டை உடையவன்.
முன்பே இவன் கதை படித்தோமே!
நெடுங்கிள்ளி
காரியாற்றுத் துஞ்சியவன்
முன்பே இவன் கதை படித்திருக்கிறோம்!
பெருந் திருமா வளவன்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். திருமாவளவன் என்னும் பெயர் கரிகாலனைக் குறிக்கும். இவன் பெருந்திருமாவளவன். உறையூர் மருத்துவன் தாமோதரனார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவனுடைய நண்பன்.
பெருநற் கிள்ளி (இராசசூயம் வேட்டவன்)
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பது இவனைச் சுட்டும் பெயர். உலோச்சனார், ஔவையார் , பாண்டரங்கனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் போரில் வல்லவன். தேர்வண் மலையன் என்னும் குறுநில மன்னனின் துணையுடன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டு வென்றவன். சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருபெரு வேந்தர்களின் நண்பன். இவனது இராசசூயத்தைப் புறநானூற்றுப் பாடல் “அவி உணவினோர் புறம் காப்ப அறநெஞ்சத்தோன் வாழ” என்னும் தொடரால் குறிப்பிடுகிறது
பெருநற் கிள்ளி (போர்வைக் கோ)
சோழன் போர்வைக் கோப் பெருநற்கிள்ளி என இவன் சுட்டப்படுகிறான். போர்வை என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்டவன். சாத்தந்தையார் , பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் உறையூர் அரசன் தித்தன் என்பவனின் மகன் எனக் கொள்ளப்படுகிறான். முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்று வீழ்த்தினான். தந்தை தித்தன் இவனுக்கு ஆட்சி வழங்காதபோது புல்லரிசி உணவை மட்டுமே உண்டு வாழ்ந்துவந்தான் (இப்படி ஒரு உண்ணா விரதமா?)
பெருநற் கிள்ளி (முடித்தலைக் கோ)
சோழன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி என்னும் பெயரால் இவன் சுட்டப்படுகிறான். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு பகைமை கொண்டிருந்தான். இவன் கருவூரின்மீது படையெடுத்துச் சென்றபோது இவன் ஏறியிருந்த பட்டத்து யானை மதம் பிடித்து ஓடியது. சேரனுடன் அவனது வேண்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த புலவர் முடமோசியார் சோழன் துன்பமின்றி மீளவேண்டும் என வாழ்த்தினார். சேரன் இரும்பொறை அவனைக் காப்பாற்றினான்.
நன்றி: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
குவிகம் வாசகர்களே! கடைசி வரை இந்த இதழைப் படித்தவர்கள் சரித்திரத்தில் பேரார்வம் கொண்டவராகத் தான் இருக்க முடியும்!
அதே ஆர்வம் தான் என்னை இச் சரித்திரம் எழுதத் தூண்டுகிறது.
சரித்திரம் மேலும் பேசட்டும்!