Monthly Archives: July 2015
மெல்லிசை மன்னர் சோக இசையைப் பரப்பிவிட்டு சென்றுவிட்டார்!
தமிழ்ப் பாடல்கள் உள்ளவரை அவரது இசையும் இனிமையும் நிலைத்து நிற்கும்!
அவரது பிரிவால் வாடும் தமிழ்த் திரை உலகத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது?
அவரது புகழ் அஞ்சலி அடுத்த குவிகம் இதழில் !!
குவிகம் இலக்கிய வாசல் – சிறுகதைச் சிறுவிழா
குவிகம் இலக்கிய வாசல் –
நான்காவது நிகழ்வு

“சிறுகதைச் சிறுவிழா”
கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.
இடம்: ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018. நாள்:
18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00
பரிசுகளும் உண்டு.
நேரம் கருதி சிறுகதைகள் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.
பின்னால் நடத்தத் திட்டமிட்டு வரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.
கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9791069435 என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.
ஷாலு மை வைஃப்
ஒரு வழியாக ஷாலுவையும் அவள் குருஜினியையும் சிங்கப்பூர் விமானத்தில் ஏற்றிவிட்டு ஷ்யாம் ஷிவானியுடன் காரில் வந்துகொண்டிருந்தேன்.

அவ்வளவு அழகா ஆர்கியு பண்ணின ஷிவானி ஷாலு கிளம்பியதும் அழ ஆரம்பித்துவிட்டாள். அது தான் .குழந்தை – அது தான் தாய்ப்பாசம்.ஷ்யாம் அழவில்லை ஆனால் உர்ரென்று இருந்தான்.எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது.
திடீரென்று போன் அலறியது. என்னுடைய பாஸ்.ராத்திரி பதினொரு மணிக்கு போன் பண்றாரே என்று தடுமாறி எடுத்தால் ஸ்பீக்கர் வேறு ஆன் ஆகிவிட்டது. “ பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டாளா? தங்கமணி … என்ஜாய்..” என்று ஜனகராஜ் பாணியில் சொல்லிவிட்டு வைத்து விட்டார். தேவை தானா?
மறுபடியும் போன். இந்த தடவை ஷாலு. இமிகிரேஷன்,செக்கப் கஸ்டம்ஸ் எல்லாம் முடித்துவிட்டாளாம். செக்யூரிட்டி செக் முடியர வரைக்கும் குழந்தைகள் கூட பேசலாம்னு போன் பண்ணினாளாம். ஷ்யாம் முதல்லே போனைப் பிடுங்கினான். ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் நிறைய கேள்விகள் கேட்கிறாள் போல இருக்கு. அவன் எல்லாத்துக்கும் ஒரு வார்த்தையிலே பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
சரி.
இம்ம்
ஓகே ..
சரி சரி..
ஓகே ஓகே .
முடியாது.
வேண்டாம்.
சரி சரி.
அம்மா பிளீஸ்..

இதுக்கு மேல் ஷிவானிக்குப் பொறுமை போய் விட்டது. ’ என்கிட்டே கொடு அண்ணா ’ என்று போனைப் பிடுங்கிக் கொண்டாள்.
அதற்குப் பிறகு நடந்தது ஒரு பாசப் போராட்டம். ஷிவானி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். கடவுளே! பத்து நிமிடம் கூட ஆகலை. இன்னும் பத்து நாளை எப்படி சமாளிப்பது?ஆனால் அந்த அழுகைக்கு மத்தியில என் ஆபீஸ் பாஸ் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.. என்ஜாய்!“ என்று சொன்னதை ஷாலுவிடம் போட்டுக் கொடுக்க மறக்கவில்லை. அது தான் ஷிவானி!
அப்பா! அம்மா உன்கூட பேசணுமாம்!
என்னாச்சு உங்க பையனுக்கு?
என்னாச்சு?
எதைச் சொன்னாலும் அப்படியான்கிற மாதிரி பேசரான்!
அப்படியா?
இதே தான் ! உங்களை மாதிரி ஒத்தை வார்த்தையில் பதில் சொல்றான்?
ஓஹோ!
அப்படியே உங்களைக் கொண்டிருக்கான்! கல்லுளிமங்கன்!
நானா அவனா ?
ரெண்டு பெரும் தான்.
அப்போ ஷிவானி?
அவளுக்கு என்னை மாதிரி பூஞ்சை மனசு! ஏன் இப்படி அழறா?
இப்போ நீ எதுக்கு அழறே? அதே மாதிரி தான் அவளும்.அவ அப்படியே உன்னைக் கொண்டிருக்கா?
ரொம்ப சரி! நீங்க உங்க பாஸ்சொன்னமாதிரி என்ஜாய் பண்ணுங்கோ!
ஷாலு! கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ! நீயாத்தானே சிங்கப்பூர் போகணும்னு ஆசைப்பட்டே! பாக்கிறவா எல்லாம் நான் கொடுமைப் படுத்தி உன்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பறேன்னு நினைச்சுப்பா!
ஆமா! என் பொறந்த வீடு என்ன சிங்கப்பூரா? பிளேன்ல போறதுக்கு?
உங்க ஊர் கோனேரிராஜகீழ்ப்பாக்கத்துக்கு உன்னைப் பொண்ணு பாக்க வந்த போதே ஒத்தை மாட்டு வண்டியில தானே வந்தேன்!
இப்போ இது ரொம்ப அவசியமா? செத்தே இருங்கோ! குருஜினி ஏதோ சொல்கிறார். உங்களோட தத்துப்பித்துப் பேச்சைக் கேட்க இப்ப நேரமில்லை. நீங்க வீட்டுக்குப் போங்கோ! அப்பறம் கூப்பிடறேன்!
பாத்து ஷாலு! டேக் கேர்!
போன் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குப் போய்ச் சேரும் போதே ராத்திரி பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. குழந்தைகள் இரண்டும் துவண்டு போய் தூக்கம் பிடித்து விட்டார்கள். எனக்கு வீட்டில் ஷாலு இல்லாதது என்னவோ போலிருந்தது. தூக்கமே வரவில்லை. ஷாலு பிளைட் கிளம்ப இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கு. கண்டிப்பா போன் பண்ணுவா. அதுவரைக்கும் டி வி ஏதாவது பாக்கலாம்னு ரிமோட்டை எடுத்து வழக்கம் போல் ஒவ்வொரு சானலா மாற்றிக் கொண்டிருந்தேன். என் பாஷையில் டி வி பிரவுஸ் செய்துகொண்டிருந்தேன்.
ஒரு சானலைக் கூட ஒழுங்கா பாக்க மாட்டீங்க! ! தானும் பாக்காம மத்தவங்களையும் பாக்கவிடாம அப்படியென்ன உங்க மனசில ஒரு சேடிசம்? – ஷாலு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் டி வி ரிமோட்டைத் தொட்டதும் பாடும் முதல் பல்லவி இது! அதுக்கப்பறம் அவ அனுபல்லவி பாடுவா! நான் சரணம் என்று ரிமோட்டைக் கொடுத்துட்டு ( அப்படி தூக்கி எறியாதீங்கோ! உடைஞ்சா உங்களுக்கென்ன? என் சீரியல் தான் அம்போ ஆயிடும்) கம்ப்யூட்டர் மவுசை எடுத்துக் கொண்டு விடுவேன். ( எப்பப் பாத்தாலும் கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் ! வீட்ல நாலு மனுஷா இருக்காளே அவா கூட கொஞ்சமாவது பேசணும்னு உங்களுக்குத் தோணவே தோணாதா ? – வீட்டிலே நாம மூணு பேர் தானே இருக்கோம். உன் கசின் சிஸ்டர் வந்திருக்கான்னு சொல்லவே இல்லையே! ) இந்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் அவள் மசிய மாட்டாள்.
அப்போது தான் நியூஸ் 7 சானலில் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு என்ற சேதி முக்கிய செய்தியாக வந்துகொண்டிருந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன என்று பார்க்க முயலும் போது திடீரென்று கரண்ட் கட்டாகி டிவி ஆப் ஆகிவிட்டது. இன்வர்ட்டரை சரி பண்ணுங்கோன்னு ரெண்டு வாரமா ஷாலு சொல்லிக் கொண்டே இருந்தா. நான் தான் அசால்ட்டா இப்பெல்லாம் அம்மா கரண்ட் போறதேயில்லை தெரியுமோ? என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஷாலுவுக்குப் போன் செய்தேன். ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை. எனக்குப் பயத்தில் வேர்த்தது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
அந்த செய்தியே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
சட்டென்று வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். இன்னிக்கென்று எந்த வீட்டிலும் லைட்டே இல்லை. யார் தூங்கிட்டா இல்லே யார் முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கானு தெரியலை. கரண்ட் கட் ஆனாலும் இன்வார்ட்டர் கரன்ட்டில் ராத்திரி பூரா டி வி பார்க்கும் நாலாம் மாடி சில்க் ஸ்மிதா…
( அப்படி சொல்லாதீங்கோ! அவ காதிலே விழப் போகிறது! அப்பறம் அவ ஊர் கடப்பா கல்லால தான் அர்ச்சனை நடக்கும் –
அவ கணவனுக்கு எப்போதும் நைட் டியூட்டி அவ என்ன பண்ணுவா?
)
சில்க் ஸ்மிதா…
வீடு கூட இருளடைந்திருந்தது. இன்னிக்கு அந்த தாடிக்கார தெலுங்கானா பாபுவுக்கு ஆபீஸில் நைட் டியூட்டி இல்லை போலிருக்கு.
யார் வீட்டுக் கதவைத் தட்டலாம்னு யோசிக்கும் போது மொபைல் அலறியது.
கோனேரிராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து அவள் அப்பா! "மாப்பிள்ளை ! ஷாலு சௌகரியமா பிளேன் ஏறிட்டாளா?” அவ சகட ராசிக்காரி.எப்பவும் துருதுருன்னு இருப்பா.! என்ன! பதிலே சொல்ல மாட்டேங்கிரேள்? சித்தே இருங்கோ! ஏதோ டிவியில ஏதோ சொல்றான்.. மொபைல் கட்டாகிவிட்டது. ஷாலுவிற்கு ஏழெட்டு முறை போன் செய்தேன். ரிங் போகிறது. “இந்த இணைப்பாளர் உங்களுடன் பேசப் பிரியப் படவில்லை” என்ற அர்த்தத்தில் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் பாஷையில் கைபேசி அலறியது.
எனக்கு டென்ஷன் ஏறத் தொடங்கியது.
பாகுபலியின் முதல் பாகம் இப்போது வெளிவந்திருக்கிறது!
பாராட்டு மழையில் குளிக்கிறார் டைரக்டர் ராஜமௌளி!
பிரும்மாண்டத்தில் சங்கரைத் தூக்கி சாப்பிட்டுவிட்டாராம்!
பொன்னியின் செல்வன் திரையில் வரும் காலம் அதிக தூரத்தில் இல்லை! வந்தியத்தேவனையும் குந்தவையையும் ராஜராஜ சோழனையும் பார்க்கப் பொறுத்திருப்போம்!
தி.ஜா பக்கம்
வீடு!

ஜானகிராமனின் தனித்தன்மையான பெண்டாளும் கதை இது!
ஒரு டாக்டர். அழகான பெண்டாட்டி. நல்ல கொழந்தைகள். அருமையான வீடு. வீட்டைப் பற்றி டாக்டருக்கு எப்பவும் பெருமை. கம்பவுண்டர் மகாதேவன் வந்து சேர்ந்தான். அவனுடைய சேவையைப் பற்றிச் சொல்கிறார். . "பால் வாங்கி மோர் வாங்கி ஒரு வேலைக்காரன் செய்துவிட்டான்" என்று பாரதியார் பிரமாதமாக எழுதிவிட்டார். மகாதேவனைப் பார்த்திருந்தால் ‘மகாதேவன் பிள்ளைத் தமிழ்’ என்று காவியமே எழுதியிருப்பார்.
அப்படிப்பட்ட மகாதேவன் டாக்டர் ஊருக்குப் போய் , நடு ராத்திரி வரும் போது அவர் வீட்டில் அவர் கட்டிலில் படுத்திருக்கிறான். அவர் மனைவி சந்தோஷமா தரையில் படுத்திருக்கிறாள். அவர் கட்டிலில் அவன் உடம்பிலிருந்த சந்தன வாசனை அவருக்குக் குமட்டியது. காந்தி செத்துப் போனாப்பல இருந்தது. அவளின் தலையைப் பிடித்துக் குலுக்கினார். மகாதேவனை வேலையை விட்டுத் தொரத்தினார். அதற்குப் பிறகு அவள் தைரியமா அவன் கூட வெளியில் சுற்ற ஆரம்பித்தாள்.

வீட்டை வித்து பாதியைக் கொடுத்திடு நான் போயிடறேன் என்றாள். வீட்டை விக்க முடியாதுன்னு ஒத்தக் காலிலே நின்னார் டாக்டர். ஒரு நாள் தலைவிரி கோலமா வந்தாள். மகாதேவன் செத்துப் போயிட்டானாம்.வீட்டை வித்துக் கொடுத்தா அவ போயிடுவா! அதனாலே வீட்டை வாங்க வர்ரவங்க கிட்டே எக்குத் தப்பா பேசி விரட்டிவிட்டுக் கொண்டே அவளுடன் அதே வீட்டில் இருக்கிறார் டாக்டர்.

ஆட்டுக்கால் பகவதி தேவி – கின்னஸ் சாதனை படைத்த பக்தர் கூட்டம் Attukal Devi : 360 degree virtual tour of Attukal Devi (Attukal Bhagavathy) Temple Trivandrum, Kerala, India

சிறப்பு நன்றி: Leen Thobias Powered by www.p4panorama.com © attukaldevi.com 2007 – 2015 Powered by Nakshathra Design
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆட்டுக்கால் பகவதி அம்மன். கேட்கும் வரத்தைத் தருபவள்.
திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த அம்மனைத் தரிசிக்க இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். .
தமிழக மற்றும் கேரளாவின் பாரம்பரியங்கள் இணைந்திருக்கும் கோவில் இது. .
கண்ணகி தான் இந்தக் கோவிலின் மூல நாயகி.
கண்ணகி கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்து கொடுங்களூர் சென்று வானுலகம் அடையுமுன் வந்த இடம் தான் ஆட்டுக்கால் பகவதி என்ற ஐதீகம் உண்டு.
பிப்ரவரி மாதம் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். காலையில் தலைமைப் பூசாரி மூல அடுப்பைப் பற்ற வைத்ததும் அந்த நெருப்பு பொங்கல் வைக்கத் தயாராயிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். வந்திருக்கும் லட்சோப லட்சம் மக்களும் மாலைக்குள் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டாடுகின்றனர்.
10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது.
இத்தனை பெண்கள் குவிந்து வழிபாடு செய்வதில் இந்த ஆட்டுக்கால் பகவதி உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்தியனே தூங்காதே – கோவை சங்கர்

மழலைக்
குழந்தையில் பேதமில்லை கண்ணே
மழலை மனதினிலே
வஞ்சமில்லை பெண்ணே
முதலில்
சொல்வதுவும் ‘அம்மா’வென்றசொல்லே
முருகனென்றோ
அல்லாவென்றோ ஏசுவென்றோ இல்லெ..!
பிறக்கின்ற
குழந்தையொன் றுங்கொண்டு வருவதில்லை
இறக்கின்ற மனிதனொன்றும்
கொண்டு போவதில்லை
நிலையில்லா
வாழ்க்கையிலே ஏனிந்தத் தொல்லை
அல்லாவா ராமரா
ஏனிந்தச் சண்டை !
நீர்பருக
டம்ப்ளரே வேணுமென்பார் சிலமாந்தர்
ஒர்சிலர் குவளையிலே மனதாரப் பருகிடுவார்
கலயங்கள்
உருவத்தில் வேறாக இருந்தாலும்
ஜில்லென்ற
தண்ணீரில் பேதமில்லை ஒன்றுதானே !
ராமரென்று
அழைத்தாலும் அல்லாவென்று பணிந்தாலும்
வாமனனே யென்றாலும்
கர்த்தரென்று சொன்னாலும்
கோயிலிலே
சர்ச்சினிலே மசூதியிலே அருள்கின்ற
தெய்வமும்
ஒன்றுதானே பிரம்மத்தின் பெயர்கள்தானே!
இந்தியனே
தூங்காதே மானத்தை வாங்காதே
காந்தியின்
தேசத்தில் எம்மதமும் சம்மதம்
தியாகங்கள்
பலசெய்து ஈன்றநற் பெயரினையே
நியாயமற்ற செய்கையால் நொடிப்பொழுதில் இழக்காதே!
சொப்பன வாழ்வில் (நாடகம் by ஒய்.ஜி.மகேந்திரன்)

முதல் அரைமணி நேரம் பார்க்கும் போது ‘அவ்வளவு தான். ஒய்.ஜி.மகேந்திரன் பழைய பெருங்காய டப்பாகிவிட்டார் என்று தீர்மானம் செய்து பாதியிலேயே கிளம்பிவிடலாம் என்று தோணும்.
ஆனால் நாடகத்தில் அந்த ட்விஸ்ட் வந்த பிறகு – அதாவது – அசடாக இருந்த அவர் எப்படி புத்திசாலியாக தன்னைப் பழித்தவரைப் பழிவாங்கும் வில்லனாக மாறுகிறார் என்றதும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. சில இடங்களில் அவர் பேசும் பஞ்ச் டயலாக் கை தட்டலை வாங்குகிறது என்பது உண்மை தான். கடைசியில் பழி வாங்குவது தவறு என்பதை அவர் எல்லாரையும் பழி வாங்கிய பிறகு புரிந்து கொண்டார் என்பது காதுல பூ.
அசடாக இருந்தாலும் மகேந்திரன் ஜோக் அடிக்கணும் அதிலும் அரசியல் இருக்கணும் என்பது விதியா என்ன? . கேஸ் போட சுப்பிரமணிய சுவாமி, டிராபிக் ராமசாமி இருவரையும் பற்றிச் சொல்லும் போது அரங்கம் கலகலக்கிறது. மற்றபடி ஜோக்குகள் சுப்பிணி (அருணாசலத்தில் ரஜினியின் மாமாவாக வரும் இரண்டடி மனிதர்) ஜோக் உட்பட
எல்லாம்
மொக்கை ரகம் தான்.

மகேந்திரனிடமிருந்து இன்னும் வித்தியாசமாக புத்திசாலித் தனமாக எதிர்பார்க்கிறோம். அவர் என்னமோ தியாகராஜ பாகவதர் காலத்தை விட்டு வெளியே வர மாட்டேனென்கிறாரே!
சென்னை மெட்ரோ – ஒரு ஜாலியான பயணம்

மன்னிக்கவும். இது நம்ம சென்னை மெட்ரோ அல்ல. அதுதானே பார்த்தேன் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது!
இது தான் நமது மெட்ரோ! ( பங்களூரில் NAMMA METRO . சென்னையில் AMMA METRO ).
வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா 29ந்தேதி ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் மெட்ரோ ரயிலைத் துவக்கி வைத்தார்.


இன்றைய நிலவரம்:
- மெட்ரோ வருவதற்குக் காரணம் நாங்கள் தான் என்று தி.மு.க – அ.தி.மு.க இரண்டும் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன’
- தி.மு.க வின் ஸ்டாலின் மெட்ரோவில் போகும்போது யாரையோ கன்னத்தில் அறைந்து விட்டதாக ஒரு வீடியோ வைரலாகப் பரவி முடிவில் அது தவறானது என்று முடிவாகியது.
- இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான மெட்ரோ சென்னை மெட்ரோ. பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு 40 ரூபாய்.
- ஆலந்தூர் ரயில் நிலயத்திலிருந்து வெளியே வருவதற்குள் படி இறங்கி தாவு தீர்ந்துவிடும்.
- ஆலந்தூரில் இறங்கி கிண்டிக்கு பஸ் பிடிக்க நினைத்தால் ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்கும் போது உங்கள் உயிருக்கு யாரும் ஜவாப்தாரி இல்லை.வடிவேலு கிணறைக் காணோம் என்ற மாதிரி சப்வேயைக் காணோம்.


மெட்ரோவின் சிறப்புகள் ( திட்டப்படி)
மெட்ரோ இரயில் நிலையங்களில்
- தானியங்கி இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படும்.
“ஸ்மார்ட் கார்டு” முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
- தானியங்கி இரயில் இயக்கம், தானியங்கி இரயில் பாதுகாப்பு மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளைக் கொண்டதாக இருக்கும்
- முழுவதுமே குளிரூட்டப்பட்ட வசதியுடன் இருக்கும்.
- முதல் வகுப்பு/ மகளிருக்கென்று தனியாக பெட்டி வைக்கும் யோசனை உண்டு
- கடைகள், கழிவறைகள், தொலைக்காட்சி பெட்டிகள், இணைப்புப் பேருந்துகள், வாகன நிறுத்தங்கள் போன்ற வசதிகள் இருக்கும்
- கழிப்பறை வசதி இருக்கும் ( ரயில் தொடர் வண்டிகளில் கழிப்பறை வசதிகள் இருக்காது)
- சுரங்கப்பாதையில் பயணிக்கும் போதும், இரயில் நிலையங்களிலும் செல்போன்களில் பேச முடியும்.
- அவசர சூழ்நிலைகளில் இரயில் பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை பொத்தான்களை அழுத்தி இரயில் ஓட்டுநரை எச்சரிக்கலாம்.
- அடுத்து வரும் இரயில் நிலையங்களின் பெயர்களை மின் அணுதிரையில் பார்க்கும் வசதியும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதியும் இருக்கும்.
- உடல் ஊனமுற்றோர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை நிறுத்திவைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
- நான்கு பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ இரயில் தொடரில் சுமார் 1,276 பேர் பயணம் செய்யலாம்.
- WIFI வசதி தர திட்டம் உள்ளது.
- வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ இரயிலில் சுமார் 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் ஆகும். தற்சமயம் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை செல்ல 17 நிமிடங்கள் ஆகும்.
மெட்ரோ இரயில் வழித்தட விவரங்கள்:

வழித்தடம் – 1
வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 23.1 கி.மீ.
வழித்தடம் – 2
சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 கி.மீ.
மொத்தம் 45.1 கி.மீ.
டிஜிட்டல் லாக்கர்

சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்களை இணையதளம் மூலம் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் லாக்கர் சிஸ்டம்
ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு்ளளது.
ஷேர்களை டிமேட் செய்து பங்கு வர்த்தக பொறுப்பாளரிடம் வைப்பதைப் போல , காசோலைகளை மின் வடிவாக மாற்றி வங்கிகள் பயன்படுத்துவது போல நமது ஆவணங்களை மின் வடிவில் வைப்பது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய செயல்பாடு.
டிஜிட்டல் லாக்கர் முறையில் இணையதளத்தில் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியக் குடிமகன் அனைவரும் பேப்பர் ஆவணங்களை பெட்டிகளில் பத்திரப்படுத்துவதைத் தவிர்த்து அவற்றின் மின்வடிவங்களை அரசாங்கம் வழங்கும் ஈ-லாக்கரில் பத்திரப்படுத்தலாம்.
ஆதார் எண் வைத்திருக்கும் அனைவரும் டிஜிட்டல் லாக்கர் கணக்குகளை தொடங்கலாம்.
ஒருவருக்கு 10 மெகா பைட் அளவில் இணையதளத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லாக்கர் வசதியை பெற விரும்புபவர்கள் ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண்ணில் ‘ஒரு முறை பாஸ்வேர்ட்" (OTP ) பெற்று துவங்கலாம். அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக பதிவேற்றம் செய்து அதற்குரிய இணையதள குறியீட்டை பெற்று கொள்ளலாம்.
எதிர்காலத்தில் அரசு துறைகள், கல்லூரிகளில் நாம் பெற வேண்டிய சான்றிதழ்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையில் இணையம் மூலம் எளிதாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உளளது.
இந்த ஆவணங்களை மற்ற அரசுத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வசதி இருக்கும். உதாரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பேப்பர் ஆவணங்களை இணைப்பதற்குப் பதிலாக இந்த இணையத்திலிருந்து நேரடியாக அனுப்பலாம்.
சான்றுகள் அல்லது ஆவணங்களை வேறு இடத்திற்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்படும்போது, சம்பந்தப் பட்டவர்களிடம், இன்டர்நெட் இணைப்பு முகவரியைக் கொடுத்தால் போதும். அதன்மூலம், கல்வி உள்ளிட்ட சான்றுகள், சொத்து ஆவணங்கள் காணாமல் போவது தவிர்க்கப்படும்.
https://digitallocker.gov.in மேற்கொண்ட இணையதளம் மூலம் லாக்கர் கணக்கு துவங்கலாம்.
ஆத்திச் சூடீ

ந ..நா..நீ..
66. நன்மை கடைப்பிடி / Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் / Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / Don’t over snack.
71. நூல் பல கல் / Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் / Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / Avoid unhealthy lifestyle.
ப..பா..பி..
77. பழிப்பன பகரேல் / Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / Don’t encourage war.
ம..மா..மி..
88. மனம் தடுமாறேல் / Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / Don’t over dramatize.
91. மீதூண் விரும்பேல் / Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / Do not associate with vamps.
97. மொழிவது அற மொழி / Speak with clarity.
98. மோகத்தை முனி / Hate any desire for lust.
வ…வா..வி..
99. வல்லமை பேசேல் / Don’t self praise.
100. வாது முற்கூறேல் / Don’t gossip or spread rumour.
101. வித்தை விரும்பு / Long to learn.
102. வீடு பெற நில் / Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / Be impartial


இந்த வார இணைய தளம் ஜெயமோகனின் இணைய தளம்.
அவருடை மகாபாரதம் – வெண் முரசு – ஒரு உலக சாதனையைப் படைக்கப் போகிறது.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மாபெரும் புதினம். பல நூறு வருடங்கள் நிலைத்து நிற்கப் போகும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
அவரது அறம் என்ற சிறுகதையை மேலே கூறிய இணைய தளத்தில் இலவசமாகப் படிக்கலாம். அதைப் படித்து முடிக்கும் போது உங்கள் இதயத்தை யாரோ பிசைவது போல் இருந்தால் அது ஜெயமோகனின் எழுத்து ஆள்மைக்கே போய்ச் சேரும்!
டைரக்டர் பாலாவுடன் சேர்ந்து திரைத்துறையிலும் கலக்கி இருக்கிறார்.
அவரது மற்ற படைப்புகளையும் படிப்போம்!
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13
சுட்ட கதை

ரவி தன் மனைவிக்கு காது கொஞ்சம் பிராப்ளம் ஆகிவருகிறது என்பதை உணர்ந்ததும் அவளுக்கு என்ன மாதிரி ‘காது கேட்கும் கருவி’ வாங்க வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்தான்.
அவளிடம் எப்படி இதைப்பற்றிப் பேசுவது என்று தயங்கி அவர்களுடைய குடும்ப டாக்டரை அணுகி யோசனை கேட்டான்.
‘அது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. கணவனே அவளுக்கு எந்த அளவுக்குக் காது கெட்டுப்போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்று சொன்னார்.
எப்படி டாக்டர் என்று ஆர்வத்தோடு கேட்டான் ரவி.
ரொம்ப ஈசி. நான் சொல்லறபடி செய்! அவளுக்கு 40 அடி தூரத்தில் இருந்து நீ சாதாரணமான குரலில் பேசி அவளுக்கு அது கேட்குதான்னு பாரு!
கேக்கலைன்னா 30 அடி துரத்தில பேசிப்பாரு!
அதுவும் கேக்கலைன்னா 20 அடி தூரத்தில்
பேசிப்பாரு!
இப்படியே அவளிடமிருந்து சரியான பதில் வரும் வரை பேசிப்பாரு!
பிறகு சொல்லு அவளுக்கு எத்தனை தூரத்தில் காது கேக்குதுன்னு! அதுக்குத் தகுந்த மாதிரி மெஷின் கொடுத்திடலாம்!
அன்று மாலையே ரவி அவளைப் பரிசோதிக்க எண்ணினான்.
40 அடிக்குத் தள்ளி இருந்து “கமலா! இன்னிக்கு ராத்திரிக்கு என்ன டிபன்” என்று சாதாரணமாக் கேட்டான்.
அவளிடமிருந்து பதில் வரவில்லை.
முப்பது அடிக்குப் போய் அதே கேள்வியைக் கேட்டான். அப்போது பதில் இல்லை.
20 அடி – ஹுஹூம் .
10 அடி பதிலே இல்லை.
அவளுக்கு மிக அருகில் சென்று ‘இன்னிக்கு ராத்திரிக்கு என்ன டிபன்’ என்று கேட்டான்.
அவள் சொன்ன பதிலால் அவனுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.
என்ன சொல்லியிருப்பாள்?
உனக்கு என்னாச்சு ரவி? ஐந்தாவது தடவையா சொல்றேன் இன்னிக்கு ரவா உப்புமா!
அரசியலும் பெண்களும்

சரோஜினி நாயுடு, விஜயலக்ஷ்மி பண்டிட், இந்திரா காந்தி, ஜெயலலிதா ,மம்தா பானெர்ஜி , சுஷ்மா சிவராஜ் , ஸ்மிரிதி இரானி வசுந்தரா ராஜி, சோனியா காந்தி , மாயாவதி ,பிரகாஷ் காரட் .போன்ற பெண்மணிகள் இந்திய அரசியல் வானில் மின்னிய /மின்னும் முழு நட்சத்திரங்கள்!
அவர்களில் பலர் பல அவதூறுகளுக்கு உள்ளாகி எதிக்கட்சிகளாலும், பத்திரிகைகளாலும் அவதிப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் அவற்றையெல்லாம் முறியடித்து தாங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அது எப்படி?
அதுதான் சக்தியின் சக்தி!
பட்டுகோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல்களில் எனக்கு பிடித்தது.
- கொக்கரக் கொக்கரக்கோ சேவலே
- என்னருமை காதலிக்கு நீ இளையவளா மூத்தவளா
- சின்னஞ்சிறு கண்மலர்
- சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
- தூங்காதே தம்பி தூங்காதே
- திருடாதே பாப்பா திருடாதே
- உன்னைக்கண்டு நான் ஆட
- வாடிக்கை மறந்தது ஏனோ
- நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
- துள்ளாத மனமும் துள்ளும்
- உனக்காக எல்லாம் உனக்காக
- காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்
- சின்னப் பொண்ணான போதிலே
- வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே
- என்றும் துன்பமில்லை இனி சோகம் இல்லை
- காடு விளைஞ்சென்ன மச்சான்
ஐம்பது வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவரது வரிகளில் உள்ள எளிமையும் இனிமையும் கருத்தும் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஒரு முறுக்கு ஏற்றுகிறது. உங்களுக்கு?
பாடல்களைக் கேட்க ஆசையா? மேலே உள்ள யூடியூப் ஆடியோவை க்ளிக்குங்கள்!
எழுத்தாளர் பிரபஞ்சனுடன் நேர்காணல்
திரு பிரபஞ்சன் நேர்காணல் – ஒரு பதிவு
குவிகம் இலக்கிய வாசலின் மூன்றாவது நிகழ்வாக கடந்த 20-06-2015 சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் நடைபெற்றது.
திரு சுந்தரராஜன் அவர்களின் வரவேற்புரைக்குப்பின்
திரு பிரபஞ்சன் அவர்கள் உரையாற்றினார்
அதில் தெறித்த முத்துக்களில் மாதிரிக்கு இதோ:
- இலக்கியம் என்பது எழுத்தாளர் ஒருவரால் முழுக்க முழுக்க செய்யப்படுவது அல்ல. எழுத்தாளரும் வாசகர்களும் சேர்ந்து உருவாக்குவது தான் இலக்கியம்.
- தி ஜானகிராமன் தன் அப்பா காலத்துக் காவேரியைப் பற்றி எழுதினார். அவ்ர் காலக் காவேரி வறண்ட காவேரியாம். வறட்சி என்பது தண்ணீர் நீரோட்டத்தைப் பொறுத்து இல்லை. வாழ்க்கை நீரோட்டத்தைப் பொறுத்தது.
- மோகமுள்ளில் வரும் யமுனாவின் வீட்டைத் தான் தஞ்சாவூரில் கண்டுபிடித்ததாகக் கூறினார். அதாவது அந்த வீட்டைப் பார்த்த பிறகு தான் ஜானகிராமன் எழுதியிருக்க முடியும்.
- தன்னை மிகவும் கவந்த எழுத்தாளர்கள் அண்டன் செக்காவ்., மாப்பாசான், ஓ.ஹென்றி.
- செக்காவின் “ The Death of a Government Clerk” ( அது ‘தும்மல்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது) என்ற கதையை அழகாக விவரித்தார்.
ஒரு மிலிட்டரி கிளார்க் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை அறியாமல் தும்மல் வருகிறது. தும்முகிறான். தும்மும் போது தனது எச்சில் தவறி யார் மீதாவது பட்டிருக்குமோ என்று பார்க்கிறான். அவ்னது பாஸ் – நாட்டின் மிக உயர்ந்த மிலிட்டரி அதிகாரி- முன்னால் உட்காந்து தன் தலையைத் தடவிக் கொள்வதைப் பார்க்கிறான். அவர் அவனது நேரடி பாஸ் இல்லை என்றாலும் தும்மியதற்காக அவரிடம் மன்னிப்பைக் கோருகிறான். அவர் ‘பரவாயில்லை’ என்றார். அவனுக்கு அவர் மன்னித்ததாகத் தெரியவில்லை. மறுநாள் அவரிடம் சென்று ‘தும்மல் என்பது இயற்கையாக வரும் விஷயம்’ அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினான். அவர் அவனை சட்டை செய்யவில்லை. அதற்காக மிகவும் சோகப்படுவது போல முகத்தை வைத்துக் கொண்டு ஜாடையாலே அவனை வெளியே துரத்துகிறார். தான் அவரைக் கிண்டல் செய்வதாக எண்ணி விட்டார் என்று எண்ணி அதற்காகவும் அவரிடம் மன்னிப்பைப் பெற வேண்டும் என்று எண்ணினான். அடுத்த நாள் அவனது மிலிட்டரி யூனிபாரம் போட்டுக் கொண்டு அவரிடம் போய் நடந்த விஷயங்களைச் சொல்லி அவரிடம் மன்னிப்பை வேண்டினான். அதிகாரிக்கு முகம் சிவந்தது. கோபத்தில் உடல் ஆடியது. “வெளியே போ ” என்று கத்தினார். அவன் மிகவும் பயந்து போய் தன் வீட்டுக்குப் போய் தன் யூனிபாரத்தைக் கூடக் கழட்டாமல் அப்படியே சோபாவில் சாய்ந்து செத்துப் போனான்.
அடுத்து ரோமேய்ன் ரோலண்ட் என்ற பிரெஞ்ச் எழுத்தாளர் பற்றிக் குறிப்பிட்டார் . அவர் நோபல் பரிசு பெற்றவர். அவர் தான் 1924 இல் மகாத்மா காந்தியை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்.
சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும் போது சொன்னார். ’ சிறுகதை என்பது மாட்டை மூக்கணாம் கயிற்றைப் பற்றி இழுப்பது போல. நீங்களாக எவ்வளவு முயற்சித்தாலும் மாடு நகராது.அதுக்கே நடக்க வேண்டும் என்று தோன்றினால் தான் அது உங்களுடன் வரும்"
இன்னொரு
மகாபாரத கிளைக்கதை
சம்பவம் திரு பிரபஞ்சன் சொன்னது :
உத்தரைக்குக் கரிக்கட்டையாகக் குழந்தை பிறக்கிறது. அதற்கு உயிர் இல்லை. அஸ்வத்தாமனின் பிரும்மாஸ்திரத்தின் வேலை.
உயிர் வரவேண்டும் என்றால் நெஞ்சில் காமம் இல்லாதவர் தொட்டு வருட வேண்டும் என்று விதுரர் சொல்கிறார்
காமத்தை அடக்கிய ரிஷிகள் தொடுகிறார்கள். உயிர் வரவில்லை
கிருஷ்ணர் நான் தொடவா என்று கேட்கிறார்
எல்லோரும் சிரிக்கின்றனர் எப்போதும் கோபிகளுடன் கூடி இருக்கும் கிருஷ்ணனா என்று தயங்குகிறார்கள்.
ஆனால் கிருஷ்ணர் தொடுகிறார். குழந்தை உயிர் பெற்று எழுகிறது.
கோபிகைகள் மனதில் ஆசை காமம் எல்லாம் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணன் மனதில் இருப்பது அன்பு மட்டும் தான். அதில் துளி அளவு கூட காமம் இல்லை.
நேர்காணலில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள்:

அமைப்பின் சார்பிலும் கலந்துகொண்டோர் சார்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு பிரபஞ்சன் விரிவாக பதிலளித்தார்.
:-
பிடித்த படைப்பாளிகள் “ஆனந்த ராகவ் ” – எஸ். கே. என்

தற்போது எழுதிவரும் கதாசிரியர்களில் திரு ஆனந்த் ராகவ்
கவனிக்கப் படவேண்டியவர். பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில்
இருப்பவர்.
ஆஸ்திரியாவில் தேங்காய் உடைக்கப் படும் சிரமங்கள் (“தேங்காய்”)
, “பிறந்த மண்ணில் உறவுகளையும் புகுந்த மண்ணில் உடைமைகளையும் வைத்துக்கொண்டு
அவஸ்தைப்படுகிற அர்த்தநாரிக் குடும்பங்களின் வயோதிக மிச்சங்கள்”, வீட்டை
அடுக்குமாடிகளாக மாற்ற
மனமில்லாதவர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாவிற்கு பயந்து வாழ்பவர்கள் (“மடி நெருப்பு”) படுத்த படுக்கையாய்
இருக்கும் தந்தையும் அவர் மகனின் நினைவுகளில் முந்திய காலமும் (“காத்திருப்பு”),
ஒரு திடுக்கிடும் தற்கொலை (“கடைசிப் பயணம்”) என்று இக்காலப் பிரச்சினைகளே
இவரது கதைகளின் கரு.
இவரது “தூஸ்ரா” , “தனிமை” மற்றும்
நான்கு சிறுகதைகள் நாடகங்களாக மேடையேற்றப்பட்டு வரவேற்பு பெற்றன.
நான் முதலில் படித்த இவரது “அந்தரங்கம்” (எனது
கணிப்பில் இவரது மாஸ்டர் பீஸ்") கதை
இப்படிப் போகிறது.
* * * * * * *
அலுவலகத்தில் தன்
அறையில் நிக்கி நுழையும்போதே ஆச்சரியமாக அவன் மனைவி தீப்தி அமர்ந்திருக்கிறாள். இருவரும்
எம்.பி.ஏ. வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஆறு மாத தம்பதிகள். ஏதோ கிளையன்ட்
மீட்டிங் போகும் வழியில் இவன் அலுவலகத்திற்கு வந்ததாகக் கூறுகிறாள்.

பேச்சுக்களிடையே, தான் நிர்மலா என்ற தன் தோழிக்கு
அனுப்பவேண்டிய மின்னஞ்சலை நிக்கிக்குத் தவறுதலாக அனுப்பிவிட்டதாகவும் அதை டிலீட்
செய்து விடு என்றும் கேட்டுக் கொள்கிறாள்.
பொதுவான பேச்சுக்கள் நீள்கின்றன.
“நேரமாகவில்லையா?” என்று நிக்கி கேட்க “கிளம்பணும்” என்கிறாள்
தீப்தி. மின்னஞ்சல் பார்க்கத் தொடங்கும் கணவனிடம் “ஜிமெயில் ஐடியில்
வந்திருக்கும்” என்கிறாள். தான் பின்னர் டிலீட் செய்துகொள்வதாக நிக்கி கூறுகிறான்.
அவர்களில் தொடரும் உரையாடல் கதாசிரியரின் சொற்களில்
“நிக்கி!
ஐ வில் பி லாட் மோர் ரிலீவ்டு இஃப் யூ டிலீட் த மெயில் ஐ சென்ட்!” என்று
சிரித்தாள்
“கமான்
தீப்தி.. யூ கேரி ஆன்! நான் தான் டிலீட் பண்றேன்னு சொல்றனே..!”
“அதை
டிலீட் பண்ண ஒரு நிமிஷம் ஆகுமா
டியர்?”
“ஆகாதுதான்!
ஆபீஸ் வேலையை விட்டுட்டு அதை முதலில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதில் நீ இவ்வளவு
பிடிவாதமாய் இருப்பதுதான் எனக்குப் புரியலை தீபு!”
“
நான் யாருக்கோ எழுதினதை நீ படிச்சால், எனக்கு சங்கடமாய் இருக்காதா, நிக்கி?”
“கமான்
தீப்தி! நான் அதைப் படிக்கப்போறேன்னு நீ முடிவு பண்ணிட்டியா?”
இவ்வாறு தொடர்ந்த பேச்சுகளுக்குப் பிறகு, தன் இருக்கையில்
அமரச் செய்து, பாஸ்வேர்டையும் சொல்லி அந்த மின்னஞ்சலை தீப்தியையே டிலீட் செய்யச்
செல்கிறான். அவள் டிலீட்டும் செய்து ட்ராஷையும் காலி செய்கிறாள்.
சில சம்பிரதாய சம்பாஷணைக்குப் பிறகு தீப்தி கிளம்பி
விடுகிறாள்.
காரில் ஏறும் போதே
செல்போனில் தன் தோழியிடம் “ஹாய்.. ஒரு சின்ன சந்தேகம் மெயில்
ஒண்ணைத் தப்பா டிலீட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்டி பண்ணிட்டேன். அந்த
மெயிலை மறுபடி எடுக்கணும்னா முடியுமா?” என்று கேட்கிறாள்
அதே சமயம் நிக்கியும் போனை எடுத்து, “மூர்த்தி, ஒரு
டவுட் .. மெயில் ஒண்ணைத் தப்பா டிலீட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்டி
பண்ணிட்டேன் எப்படி எடுக்கிறது? ஏதாவது வழி இருக்கா?” என்று கேட்கிறான்.
* * * * * * *
உதட்டில் ஒன்றும்
உள்ளத்தில் ஒன்றும் என்கிற hypocrisy
மனித இயல்புகளில் ஒன்று தானே.
இக்கதை ஆனந்தவிகடனில் வெளியானபோது வந்த வாசகர் கடிதங்களில்
அந்த மெயிலை படிக்க முடியாது என்று ஒருவர் எழுதியிருந்தார். ஆனால் அந்த மெயிலில்
என்ன இருந்தது என்பதும் படிக்க முடியுமா முடியாதா என்பதும் கதைக்கு முக்கியமல்ல
(irrelevant) என்பது என் கருத்து.
இவரது 13 கதைகள் சில
கதைகள் லிங்கில்
படிக்கக் கிடைக்கின்றன
சமச்சீர் முறைக் கல்வி – வரமா? சாபமா?

சமச்சீர் கல்வி தி.மு.க கொண்டு வந்ததால் அ.தி.மு.க. அதை நிறைவேற்றத் தயங்கியது. சமச்சீர் திட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப்பின், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி ஒரு முன்னேற்றம்தான் என்றாலும், சிபிஎஸ்ஈ முறைக்கு ஈடாகாது, தமிழக மாணவர்கள் சிபிஎஸ்ஈ மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்ற உண்மை இதைப் படித்தால் புரியும்.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தமிழகப் பாடத் திட்டத்தில் பயின்றோரின் வெற்றி வீதம் வெறும் 0.12% !
மத்திய அரசு பாடத் திட்டத்தில் பயின்றோர் 57% ;
ஆந்திர மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்றோர் 11.1%
ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. சென்ற ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் 65. இந்த ஆண்டிலோ வெறும் 33.
இந்தியா முழுவதிலும் 26,456 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 33 என்றால் எங்கே பிரச்சினை உள்ளதென்பதை நாம் அலசி ஆராய வேண்டும்.
மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் பயில்கிறவர்களின் எண்ணிக்கை மாநிலப் பாடத் திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. ஆனால்நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் படித்தவர்களின் பங்கு 57 சதம்.
அதேபோல தமிழகப் பாடத் திட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 33 ஆக இருக்கும் நிலையில், ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களில் 2,938 பேர்களும் மகாராஷ்டிர மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 1,610 பேர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.
இது தமிழகப் பாடத் திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இதற்கு முக்கிய காரணம்
– இங்கு 9 மற்றும் 11ம் வகுப்புகளில் தேர்வுகள் இல்லை.
– நமது தேர்வு முறையில் அறிவு சார்ந்த கேள்விகளுக்கு (knowledge based) உரிய இடமில்லை.
தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை நூற்றுக்கு நூறு வாங்கவே தயார் செய்கிறார்கள். கேள்விகள் புத்தகத்தில் இருக்கும் பாடங்களிலிருந்து அப்படியே வந்தால் தான் இது நிகழும் ( text based ) என்று அதையே அரசு ஒப்புக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள்.
இந்த நிலைமை மாறவேண்டும். தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒருமித்து இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்!
அப்போது தான் தமிழகத்தின் கல்வித்துறை வளர்ச்சி அடையும்!
கடவுள் போட்ட கணக்கு – நித்யா சங்கர்

திருமண பதிவு
அலுவலகம்
‘ஓ.கே. … மாப்பிள்ளையும் பெண்ணும் இங்கே கையெழுத்துப் போடுங்க “ என்றார் பதிவாளர்
ரவியும், தாரணியும் அவர் காட்டிய இடங்களில் கையெழுத்துப்
போட்டனர். ரவிக்கு,
அவன் மாமாவும், தாரணிக்கு அவள் தங்கையும் சாட்சிக்
கையெழுத்துப் போட்டார்கள். அவர்களைக்
கல்யாணக் கோலத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரவியின் பெற்றோர் முகத்தில்
பேரானந்தம்.
ரவியும் தாரணியும் அவர்கள் காலில் விழுந்து
நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்
கொண்டார்கள்.
தாரணி, ரவியின் பெற்றோரை பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குத்தான் என்ன பெருந்தன்மை. இந்தக்
கலப்புத் திருமணத்துக்கு – ரவியும், தாரணியும் வேறு வேறு
ஜாதியைச் சேர்ந்தவர்கள் – எந்த வித மறுப்பும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு ஒத்துக்
கொண்டது பெரும் ஆச்சரியம் !
“ அம்மா.. அப்பா….தாரணியின் அம்மாவுக்கும், தங்கைக்கும் இந்தக் கல்யாணத்தில் சம்மதம்
இருந்தாலும் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்பதால் அவர்கள் ஜாதி ஜனங்கள் என்ன
சொல்வாங்களோன்னு கவலைப்படறாங்க. அதனாலே ஊர் அறிய எல்லோரையும் கூப்பிட்டுக்
கல்யாணம் பண்ணாம, கோயில்லே நம்ம குடும்பம் மட்டும் போய்க்
கல்யாணத்தை முடிச்சிட்டு, ரிஜிஸ்டர் ஆபீசிலே போய் கல்யாணத்தை
ரிஜிஸ்டர் செய்துடலாம்னு சொல்றா… நீங்க என்ன சொல்றீங்க?”
என்று ரவி கூறியவுடன், ஒரு நிமிடம் யோசித்து விட்டு , “சரிடா.. பெண்ணும் நல்ல அழகா, குணவதியா இருக்கா..
கடந்த நாலு மாசமா ஒரே ஆபீஸிலே வேறே வேலை செஞ்சிட்டிருக்கீங்க.. உங்களுக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர்
பிடிச்சிருக்கு. அப்படியே செய்திடலாம்”னு ரவியின் பெற்றோரும் சம்மதம் தெரிவிச்சது
அதை விடப் பெரிய ஆச்சரியம்.
ஒரு நல்ல நாள் பார்த்துக் காலையில் கோயிலிலே
திருமணம் செய்து கொண்டு,
இதோ பதிவும் செய்தாகி விட்டது.
“எல்லோர்க்கும் இனிப்புக் கொடுங்க “ என்ற
ரவியின் மாமா குரல் கேட்டு இந்த உலகுக்கு
வந்தாள் தாரணி.
எல்லோரும் சந்தோஷமாக இனிப்பைச் சாப்பிட்டு
முடித்தபின் வீட்டிற்குச் செல்ல இனோவா வேனில் ஏறினர்.
“ அத்தே.. நாம முதல்லே எங்க வீட்டுக்குப்
போய் அம்மாவின் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறோம்.
ஜாதி ஜனத்திற்குப் பயப்பட்டுக் கல்யாணத்துக்குக் கூட வராம வீட்டிலேயே
உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க” என்றாள் தாரணி.
“ஆமாம்மா..நீ சொல்றது சரிதான்”
என்று ஆமோதித்தனர் ரவியின் பெற்றோர்.
வேன் தாரணியின் அம்மா வீட்டில் வந்து
நின்றது. தாரணியின் தங்கை முன்னரே அவர்கள்
வருவதை செல்போனில் சொல்லியிருந்ததால் அவள் அம்மா ஆரத்தியை ரெடியாய்
வைத்திருந்தாள்.
தாரணியின் தங்கை மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க, “ வாங்க.. வாங்க..” என்று அம்மா
வாய் நிறைய எல்லோரையும் அழைக்க, எல்லோரும் வீட்டுக்குள்
வந்தனர். மகிழ்ச்சி அலை வீடெல்லாம்
பரவியது.
திடீரென்று ரவியின் மாமா, “ இப்படி மறந்துட்டோமே.. ஸ்வீட்
கூட வாங்காம நேரே சம்பந்தி வீட்டிற்கு வந்துட்டோமே. நான் போய் ஸ்வீட் வாங்கிட்டு வரேன்” என்று
ரவியின் அம்மாவிடம் கிசுகிசுத்து விட்டு வெளியே சென்றார்.
எல்லோரும் அந்த சின்ன வீட்டின் ஹாலில்
போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர்.
“ மீனாட்சி… ஒரு கரண்டி சர்க்கரை கொடு…” என்று கூறியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்
தாரணியின் பெரியம்மா.
‘இவள் இப்ப எதுக்கு வந்தாள்’ என்று
கலவரத்தோடு தாரணியின் அம்மா மீனாட்சி, பெரியம்மாவை மெதுவாக
உள் அறைக்குக் கூட்டிக் கொண்டு போகும்படி தாரணியின் தங்கையிடம் சைகை காட்டினாள்.
பெரியம்மாவும், மாலையும் கழுத்துமாக தாரணியும், ஒரு பையனும்
உட்கார்ந்திருப்பதை உறுத்துப் பார்த்துக் கொண்டே உள்ளே போனாள்.
‘ஏண்டி சுமதி, கல்யாணமாயிடுச்சா.. “
என்றாள் சுமதியிடம்.
‘ம்..மெதுவாப் பேசு.. பெரியம்மா… இன்னிக்குக் காலையில்தான்
கோவில்லே வெச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.’
“ என்னமோடீம்மா.. நல்லதாப் போச்சு.. பாவி
மக.. தாரணி.. எங்கிருந்தோ பாலியல் நோயைப் பிடிச்சிட்டு வந்து நிக்கிறா.. முழுதும்
குணமாக்கிட்டோம்… அது சரிதான்.. ஆனா இந்தப் பெண்ணை எந்தப்
பையன் கல்யாணம் பண்ணிக்குவான் சொல்லுங்க’ன்னு உங்கம்மா புலம்பிட்டே
இருப்பாங்க.. அதுக்கு நல்ல அழகா, லட்சணமா ஒரு பையனைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறா..’ என்றாள் பெரியம்மா. அவள் பாவம்.. மெதுவாகப் பேசுகிறோம் என்று
நினைத்துத்தான் பேசினாள். ஆனால் பாழாப்
போன அவள் வெங்கலக் குரல்… அவள்
பேசியதெல்லாம் ஹாலில் உள்ளவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது.
‘டப்’பென்ற சத்தம். “ டேய், ரவி.. என்னடா
ஆச்சு’ என்று ரவியின் அம்மாவின் அலறல்.
‘என்னங்க’ என்ற தாரணியின் கூக்குரல்.
பெரியம்மாவும், சுமதியும் ஹாலிற்கு ஓடி வந்தனர்.
ஹாலில் உள்ளவர்கள் எல்லோரும் திக்பிரமை
அடைந்து உட்கார்ந்திருந்தனர்.
“ரவி, ஸ்வீட் வாங்கிட்டு வந்துட்டேன்” என்று அப்போதுதான் உள்ளே
நுழைந்த ரவியின் மாமா அங்கு உள்ள நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
‘டேய்..ரவி..’ என்று கீழே விழுந்து
கிடந்தவனைப் பிடித்து உலுக்கினார். பேச்சு
மூச்சின்றி விழுந்து கிடந்தான் ரவி.
‘அடப் பாவி. இதயக் கோளாறு உள்ள உனக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி
வெக்கிறதுன்னு உங்கம்மா புலம்பிட்டே இருப்பாங்களே.. கிளி போலே ஒரு பொண்ணு
கிடைச்சும் ஒரு நாள் கூட வாழக் கொடுத்து
வெக்கலியே’ என்று புலம்பினார்.
அவர் புலம்பலைக் கேட்ட தாரணி
திக்பிரமையடைந்து கண்கள் குத்திட்டு நிற்க அப்படியே விழுந்தாள். விழுந்தவள் எழவேயில்லை.
அவள் போட்ட கணக்கு ஒன்று. அவன் போட்ட கணக்கு மற்றொன்று. ஆனால் இதுதான் கடவுள் போட்ட கணக்கு.
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர்

மருத மலைமீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்கச் சென்றார்.
அப்போது திடீரென்று அங்கே வந்த சட்டைமுனி சித்தர் “நவரத்ன பாம்பை நீயே உனக்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! என்று உபதேசித்தார். !
அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே
குண்டலினி
ஒரு பாம்பு படுத்துக்கொண்டிருக்கிறது. அது தூங்கிக் கொண்டிருக்கும். இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது `குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும், அதனால் தியானம் சித்தியாகும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார்.
பாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. கூடு விட்டு கூடு பாயும் சக்தியும் அவருக்குக் கிட்டியது. இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது.
இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர். மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது. இவரை முறைப்படி வழிபட்டால் நாகதோஷம் அகலும். மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்.
அவரது தத்துவஞான பாடல்களைப் படியுங்கள்!
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே – சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே – சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே.
நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.
சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே.
மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே.
மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே.
பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே.
ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே.
ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே.
மதிப்பு முதலீடு -2 ( சீனு)

டிங் டாங்
வாசலில் என்ன சப்தம் என்று எட்டிப்பார்க்கிறார் ராம்.
வாய்யா! சுப்பு! போனமாசம் வந்து வால்யூ இன்வேஷ்டிங் – மதிப்பீடு முதலீடு – பத்தி நிறைய சொன்னே! அதுக்கப்பறம் ஆளையே காணோம்! சீட்டுக் கம்பனிக்காரங்க மாதிரி ஓடிப்போயிட்டியே!
அடப்பாவி! நான் என் பொண்ணு வீட்டுக்கு டெல்லிக்குப் போனேனா! அப்படியே ரெண்டு பங்குதாரர் மீட்டிங் இருந்தது. அதிலேயும் கலந்து கொண்டு வந்தேன்.
பங்குதாரர் மீட்டிங்குக்கு எல்லாம் நம்மளை மாதிரி சின்ன பங்குதாரர்களை எல்லாம் விடுவாங்களா என்ன?
கண்டிப்பா ! எல்லாப் பங்குதாரரும் போகலாம்! அப்படிப் போனால்தான் அந்தக் கம்பெனியைப் பத்தியும் அந்த இண்டஸ்ட்ரி பத்தியும் நல்லா தெரிஞ்சுக்க முடியும்!
அப்படியா! இனிமே நானும் போறேன்! நல்ல கிஃப்டெல்லாம் கொடுப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்!
அதெல்லாம் அந்தக்காலம்! இப்ப நம்ம மாதிரி ஆட்களுக்கெல்லாம் அங்கே போய் அந்த கம்பனியைப் பத்தித் தெரிஞ்சுக்கிறது தான் கிஃப்ட்!

அது சரி ! நம்ம BUFFET மீட்டிங் போய்ட்டு வந்ததும் சிம்பிளா இன்வெஸ்ட் பண்ண ஏதோ வழி இருக்குன்னு சொன்னியே ! அதுக்குப் பேரு கூட என்னவோ வலை வலைன்னியே !
அதுக்குப் பேரு நெட் நெட் இன்வெஸ்டிங் ! இதைக் கண்டு பிடிச்சவர் பெஞ்சமின் கிரஹாம் ! நம்ம வாரன் பாப்பட் இவரோட மாணவர்னா பாத்துக்கோயேன்!
அப்படியா?
இது ரொம்ப சிம்பிள் ! உன்னை மாதிரி பேங்க் ஆசாமிகளுக்கு நல்லா புரியும் !
என்னை மாதிரி பேங்க் ஆளுங்களுக்கெல்லாம் ஸ்டிரைக் பண்ணத் தான் தெரியும்!
இது வேற மாதிரி ஸ்டிரைக் ! – அடி- சரியான நேரத்தில சரியா அடிக்கணும் ! நம்ம ராயல் தியேட்டர் தெரியுமில்லே !
நல்லாத் தெரியுமே ! எத்தனை படம் அதிலே பாத்திருக்கோம்! ! கடைசில தியேட்டரைக் கல்யாண மண்டபமா மாத்திட்டங்க !
அதே தான் ! அந்த ராயல் தியேட்டர் ஒரு பப்ளிக் கம்பெனி. அந்த கம்பெனி 99ல ஒரு பெரிய ஸ்டார் படம் ரிலீஸ் பண்ணப் போய் பயங்கர லாஸ் ஆயிடுச்சு! அந்தக் கம்பெனியின் பங்கு 20 ரூபாயிலிருந்து ரெண்டு ரூபாய்க்கு வந்துடுச்சு!
ஆமாம்! நல்லா ஞாபகம் இருக்கு!
அந்தக் கம்பெனியின் மதிப்பு 20 கோடியிலிருந்து ரெண்டு கோடிக்கு வந்துடுச்சு! கம்பெனியின் மதிப்பை மார்க்கெட் கேப் ( market Cap )அப்படின்னு சொல்வாங்க! எவ்வளவு ஷேர் கம்பெனி வெளியிட்டுருக்கோ அத்தோட அதன் மார்க்கெட் விலையைப் பெருக்கினா மார்க்கெட் கேப் கிடைக்கும்! அதாவது
Market Cap = current price x Total shares
ஓகே! அப்படித் தான் அதன் மார்க்கெட் கேப் 20 கோடி யிலிருந்து ரெண்டு கோடிக்குப் போயிடுச்சா!
அதில இன்னொரு சுவாரசியாமான சமாசாரம் என்னன்னா ராயல் தியேட்டருக்கு அப்போ பேங்கிலே ஐந்து கோடி ரூபாய் டிபாசிட் இருந்தது !
ஆமாம் ! நான் தான் கேன்வாஸ் பண்ணி வாங்கினேன்!
கேளு! அந்த தியேட்டருக்கு வேற கடனும் கிடையாது !
நீ சொல்லறது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு! அப்ப ரெண்டு கோடி குடுத்து ராயல் தியேட்டரை வாங்கினா ஐஞ்சு கோடி வாங்கரவனுக்குப் போகும்!
சரியா புரிஞ்சுகிட்டே! இந்த மாதிரி இன்வெஸ்ட்மெண்ட் பண்ணறது தான் நெட் நெட்
இன்வெஸ்ட்மெண்ட்!
அது சரி! இந்த ராயல் தியேட்டருக்கு அஞ்சு கோடி டெபாசிட்
இருக்கிற சமாசாரம் எல்லோருக்கும் தெரியுமே?
தெரியும் தான். ஆனால் ஸ்டாக் மார்க்கெட்டில மந்த நிலைமை இருக்கும் போது இந்த மாதிரி நிறைய நடக்கும். நிஜ வாழ்க்கையில இந்த மாதிரி சான்ஸ் ரொம்ப கம்மி, ஆனா ஸ்டாக் மார்க்கெட்டில இதெல்லாம் சகஜமப்பா!
இந்த வழியில இன்வெஸ்ட் பண்ணினா பைசா தொலையாதுன்னு நினைக்கிறேன்!
கரெக்ட்! ஆனால் இந்த கம்பெனி சமாசாரம் தெரிஞ்சுக்க அத்தோடபேலன்ஸ் ஷீட் , லாப நஷ்ட விவகாரம், எல்லாம் படிக்கணும். எல்லாரும் அந்த மாதிரி கம்பெனி ஷேரை வித்துட்டுப் போகும்போது நாம தனியா தைரியமா வாங்கணும். அது தான் மதிப்பு முதலீட்டில ஒரு கஷ்டம்.
நீ அந்த ராயல் தியேட்டர் ஷேரை அந்த சமயத்தில் வாங்கினியா?
வாங்காம இருப்பேனா?நிறைய வாங்கினேன். ரியல் எஸ்டேட் நல்லா போனப்போ தியேட்டரை வித்தாங்க. ஒரு ஷேருக்கு அம்பது ரூபாய் வந்தது.
ரெண்டு அம்பது ஆச்சா?’
இந்த மாதிரி வாய்ப்பு எப்பவும் வராது. ஆனா வரும்போது விட்டிடக் கூடாது. இதில வந்த பணத்தில தான் நான் வீட்டுக் கடனையே அடைச்சசேன்னா பாத்துக்கோயேன்!
ஓ! அப்படியா? நெட்-நெட் முதலீடு செய்ய நிறைய தைரியம் வேணும் போல இருக்கு!
கண்டிப்பா! மதிப்பு முதலீடு என்கிறது ஒரு எதிர்மறை இன்வெஸ்ட் என்று சொல்லலாம். இன்னிக்கு இது போதும் ! நான் கிளம்பறேன்! அடுத்த தடவை பெஞ்சமின் கிiரகாம் பத்தி சொல்றேன்!
ரொம்ப நன்றி சுப்பு!
தலையங்கம்- தலை அங்கம்

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு பல முறை அரசாங்கங்கள் பிறப்பித்துப் பின்னர் அதை சரிவரக் கண்காணிக்க முடியாததால் கைவிடப்பட்ட திட்டம். இப்போது உயர்நீதி மன்றத்தின் கட்டாயத்தின் பேரில் அரசு இதைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
இது நல்ல முயற்சி. அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆண்டு : 2 மாதம் : 7
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா