மீனங்காடி
(சென்ற மாதம் முடிவில்………..)

அவள் இருக்கையை விட்டு இரண்டடி கூட நடக்கவில்லை. மேஜை மீது இருந்த போன் அடித்தது.ஸ்கூலிலிருந்து பையன் கூப்பிடுவானாயிருக்கும், காலையிலேயே ஜலதோஷம், ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். திட்டி அனுப்பி வைத்தாள். இப்போ என்ன பிரச்சினையோ? போனை எடுத்தாள்.
(இனி இந்த மாதம் ! ……………………………)

மேரி ! நான் தான் பிரசாத் பேசறேன்”
பிரசாத் அவளது புது டிபார்ட்மெண்டுக்கு மேலதிகாரி !
கடவுளே ! இந்த நேரத்தில் இவரா? இந்த டிபார்ட்மெண்டுக்கு வருவதா வேண்டாமா என்று யோசித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இவர். ரொம்பவும் திமிர் ஜாஸ்தி ! எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவதில் கில்லாடி ! நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனைக் கீழே வைத்து விடுவார். “ஏன் இந்த வேலையை இன்னும் முடிக்கலை” என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லும்போதே, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நாளைக்குள்ளே முடிக்கணும்” என்று சொல்லி விட்டு எழுந்து போய் விடுவார். கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்கும் வினோத அதிகாரி அவர். “ மேரி ! இந்த ஸ்டாண்டர்ட் புராஜக்ட் என்னாச்சு? ஏன் இன்னும் முடிக்கலை?” எல்லோருக்கும் தெரியும் , அது இன்னும் இரண்டு வருஷத்துக்கு முடியாது என்று. இருந்தாலும் இப்படிக் கேட்பதுதான் பிரசாத்தின் வழக்கம். இந்த மூணாம் மாடிக்கு இங்கிருக்கிற தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் மேலதிகாரி பிரசாத்தும் ஒரு சாபக்கேடு என்று மேரி எண்ணினாள் !
“ இப்போது தான் டைரக்டர்கள் மீட்டிங் முடிந்து வர்றேன் ! உன் டிபார்ட்மெண்ட் பற்றி விவரமா பேசணும் ! இன்னிக்கு மத்தியானமே !”
கண்டிப்பா வர்றேன் ! ஏதாவது பிரச்சினையா?”
“சேர்மன் சொல்றார். கம்பெனிக்குக் கடுமையான போட்டி இருக்கு ! சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நாம இருக்கிற இடத்திலேயே நிற்க இன்னும் அதிகம் ஓட வேண்டியிருக்கும். எல்லா தொழிலாளிகளும் வேலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளணும் ! உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கணும் ! சில டிபார்ட்மெண்டுகளில் இருக்கும் மெத்தனமான மந்த போக்குகளைப் பற்றிப் பேசினோம்.”
மேரியின் உடம்பில் ஒரு பயம், நடுக்கம் பரவியது.
“சேர்மன் ஒரு கருத்தரங்குக்குப் போனாராம். நம்ம கம்பெனியில் இருக்கிற மந்தப் போக்கைப் பற்றி மற்றவர்கள் பேசியது ரொம்பவும் அவமானமாயிருந்ததாம். மூணாம் மாடி மட்டும் அப்படி இருக்குன்னு குறிப்பிட்டு சொல்லவில்லை ! ஆனால் இந்த உன்னோட டிபார்ட்மெண்ட் பெரிய தலைவலியாகத் தான் இருக்கு ! நீ என்ன சொல்றே?”

“மூணாவது மாடி பற்றி குறிப்பா என்ன சொன்னாங்க?” மேரி கேட்டாள்.
“இந்த டிபார்ட்மெண்டுக்குப் புதுப் பட்டப் பெயர் வைச்சிருக்கார்களாம் ! ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ எவ்வளவு அசிங்கமா இருக்கு ! என் அதிகாரத்தில் இருக்கிற ஒரு டிபார்ட்மெண்டுக்கு இப்படி ஒரு கேவலமான பேரா?”
“குப்பைத் தொட்டி என்று சொன்னார்களா?”
“ ஒரு தடவைக்கு நாலு தடவை சொன்னார். உன்னால், உங்க டிபார்ட்மெண்டால் எனக்கு சரியான டோஸ் கிடைத்தது. தேவையா என்ன? நாம் எடுத்த புது முடிவுகளைப் பற்றி அவங்க கிட்டே சொன்னேன். உன்னை இந்த டிபார்ட்மெண்டுக்கு மேனேஜரா போட்டிருக்கிறதையும் சொன்னேன். ‘சாக்குப் போக்கு எல்லாம் வேண்டாம், இந்த டிபார்ட்மெண்ட் சீக்கிரம் சரியாகணும்’ என்று உத்தரவு போட்டார். நீ எல்லாவற்றையும் சரி செய்திட்டே இல்லே?”
‘எல்லாவற்றையும் சரி பண்ணிட்டேனா?” வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏழெட்டு வருஷமா இருக்கிற பிரச்சினை. “
இன்னும் இல்லை” என்று மெதுவாகச் சொன்னாள் மேரி.
“மேரி ! நீ இன்னும் வேகமா போகணும். உன்னால் முடியாதுன்னா சொல்லு ! உனக்குப் பதிலா வேறு யாரையாவது போடறேன் ! பாஸ் கண்டிப்பா சொல்லிட்டார்.

இங்கே இருக்கிற தொழிலாளிகள் அனைவரும் ஒழுங்கா வேலை செய்யணும். அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் சுத்தமா மாறி ஆகணும். அதுக்கு நீ என்ன, எப்படி செய்வாய்னு தெரியாது ! ஆனால் சீக்கிரம் முடிக்கணும். ஏன் இந்த மூணாம் மாடி மட்டும் இப்படி இருக்கீங்க? நீங்க எல்லோரும் ஆபீஸ் வேலை தானே செய்யறீங்க? ஏதாவது ராக்கெட்டா விடறீங்க? உங்களால் கம்பெனிக்கு வெளி மார்க்கெட்டில் எவ்வளவு கெட்ட பெயர்? இதை இனிமே வளர விடக் கூடாது. மீட்டிங்கில் ஒவ்வொரு டைரக்டரும் கேவலமா பேசறாங்க ! உங்க கிழட்டுக் கும்பல் வேலையில் பெரிசா ஒண்ணும் சாதிக்க வேண்டாம். பிரச்சினைகளை உண்டு பண்ணாமல் இருந்தால் போதாதா?” கன்னா பின்னா என்று கத்தினார்.
‘சரி இதைப் பற்றி இன்னும் விவரமா பேசணும் ! எப்ப வர்றே?”
“இரண்டு மணிக்கு வரட்டுமா?”
“இரண்டரைக்கு வா ! சரியா?”
“கண்டிப்பா” அவள் குரலில் இருந்த கோபம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
“கவலைப்படாதே மேரி ! நீ இதில் இன்னும் தீவிரமா கவனம் செலுத்தணும்”
போனை வைத்து விட்டார்.
"சரியான…….. ” திட்ட வார்த்தை தெரியாமல் தடுமாறினாள் மேரி.
என்ன இருந்தாலும் அவர் பாஸ். சொன்ன விதம் எப்படி இருந்தாலும் விஷயம் என்னமோ நூறு சதவீதம் உண்மை. ‘கவலைப்படாதே மேரி’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
(தொடரும்)