image

பாரதியின் சிறப்பான வசன கவிதை! – காற்று! 

ரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல்.ஓலைப் பந்தல்,தென்னோலை.

குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.
  image

 மூங்கிற் கழியிலே கொஞ்சம்  கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு இந்தக் கயிறு. ஒரு நாள் சுகமாக
ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை ‘குஷால்’ வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.

“கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை?

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லா விட்டால், முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.

எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும் அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலேயிருந்தன.

அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)

கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

“என்ன, கந்தா, சௌக்கியம் தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?” என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன்:- “ அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூடி லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயா பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.

“சரி. சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்” என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகட வென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந்தானே?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டும் விட்டது..

சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்துகொண்டே வந்தது. “என்ன,கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்ல 
மாட்டேனென்கிறாய்? வேறொருசமயம் வருகிறேன். போகட்டுமா?’ என்றேன்.

“அட போடா! வைதிகம்! வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில விவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் 
நானும் சில விஷயங்கள் பேசலாம். என்றிருக்கிறேன். போய்விடாதே, இரு” என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

image

சிறிது நேரம் கழிந்தவுடன்,பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.

உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

இரண்டே‘சங்கதி’ பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடிந்தவுடன், வள்ளி, இது முடிந்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி-கோலாஹலம்.

சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக் கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.

அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும்  கவனிக்கவில்லை.

நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்தது, கந்தன் என் வரவை எதிர் நோக்கியிருந்தது.

என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.

“அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?” என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!‘

காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது. ‘நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம்  ப்ரஹ்மாஸி” காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

image

அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது.

ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன்:- “மகனே , ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய்விட்டது, நான் ப்ராண சக்தி.

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு களைப்பெய்தியவுடனே அதனை உறங்க-இறக்க-விட்டு விட்டேன். 

துயிலும் சாவுதான். சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன்.
அது மறுபடி பிழைத்துவிடும்.

நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன்.நான் சக்தி குமாரன், என்னை வணங்கி வாழ்க. என்றான்.

“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வமேவ ப்ரத்யக்ஷம் ஹ்ம வதிஷ்யாமி.”

image

பக்கம் 2/25 

பாரதி சொன்னாரா? – ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்று!

image

image

பாரதியார் “மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னார் என்று பலர் சொல்லித் திரிவார்கள்! எவ்வளவு தவறான வார்த்தை அவை! மக்கள் எப்படித்  தவறான செய்தியைப் பரப்புகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர்  உதாரணம்.

அவர் சொன்னது இது தான்: 

‘மெல்லத் தமிழினிச்  சாகும்; மேற்கு மொழிகள் உலகில் ஓங்கும் ’ என்று மடையர்கள் அறிவற்றவர்கள் கூறித்திரிவர். அந்த சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து எட்டுத் திசையெங்கும் சென்று கலைவளத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள். கடவுள்  ஆசியாலும்  புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும். தமிழன்னை உலகத்தில் என்றும்கோலோச்சி  இருப்பாள் !

என்பதே பாரதியாரின் கருத்து!   

 அவர் எழுதிய முழு பாடல் இது தான்: 

”“கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன் 
காதில் விழுந்த திசைமொழி எல்லாம் 
என்னென்னவோ பெயருண்டு – பின்னர் 
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்! 

தந்தை அருள் வலியாலும் – முன்பு 
சான்ற புலவர் தவ வலியாலும் 
இந்தக் கணமட்டும் காலன் – என்னை 
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் 

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி 
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்! 
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு 
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! 

"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச 
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் 
மெத்த வளருது மேற்கே – அந்த 
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 

சொல்லவும் கூடுவதில்லை – அவை 
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த 
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" 

என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ! 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் 
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 

தந்தை அருள் வலியாலும் – இன்று 
சார்ந்த புலவர் தவ வலியாலும் 
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ் 
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." 

image

பக்கம் 3/25 

அகமதாபாத்திற்கு அருகில் உள்ள காந்திநகரில் (குஜராத்தின் தலைநகரம்) அக்ஷர்தாம் என்ற ஸ்வாமிநாராயன் கோவில் உள்ளது! பிரமாண்டமான கோவில்.! அதன் அழகையும் அதில் இருக்கும் குருமார்களின் திறமைகளைப் பற்றியும் இன்டெர்நெட்டில் ஏராளமாக இருக்கின்றன. உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மிக  நிறுவனங்களில்  ஸ்வாமிநாராயன்  முதல் இடத்தில் இருக்கிறது  என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்! மொத்தம் 1100 கோவில்கள் உள்ளனவாம்!

காந்திநகர் கோவிலில் நடைபெரும் லேசர்  – தண்ணீர் ஷோவின் கதை கீழே! வீடியோ மேலே!  ஆன்மீகமும்   விஞ்ஞானம்  இணைந்த நிகழ்ச்சி !

கதையைப் படித்துவிட்டு வீ டியோவைப் பாருங்கள்! மிகவும்  நன்றாக இருக்கும்!அபாரம்! அற்புதம் !

வஜஸ்ரவாஸ் என்ற செல்வந்தன் மிகப் பெரிய யாகத்தைச்  செய்தான். அந்த யாகத்தின் ஆகம விதிப்படி எல்லா செல்வங்களையும் தானம் செய்யவேண்டும். 

வஜஸ்ரவஸுக்கு நச்சிகேதன் என்ற 16 வயது மகன் இருந்தான்.  தந்தை செய்கின்ற தருமங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். தந்தை பசுக்களை தானம் கொடுக்கும் போது வயதான உபயோகமற்ற பசுக்களையே கொடுப்பதைக் கண்டு வேதனையுற்றான். மற்றும் எல்லா செல்வங்களையும் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டான். அவன் தந்தையிடம் , “தந்தையே!  ஏன் நீங்கள் உங்கள் உடமைகளை எல்லாவற்றையும்  தானம் செய்யவில்லை?. நான் தங்கள் உடமையில்லையா? என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான். வஜஸ்ரவஸ் பதில் கூறத் தயாராயில்லை. நச்சிகேதனோ  திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்கவும் அவனுக்குக் கோபம் வந்தது. அந்தக் கணத்தில் ‘ஆம்.உன்னை யமனுக்குத் தானமாகக்  கொடுக்கப் போகிறேன்’ என்று ஆத்திரத்தில் என்ன சொல்கிறோம் என்பதை உணராமல் கூறினான். 

பிறகு தவறை நினைத்து வருந்தினான். ஆனால் நச்சிகேதனோ தந்தை சொன்ன சொல்லை நிலைநிறுத்த  எமன் இருப்பிடம் சென்றான். அந்த சமயம் எமன் அங்கு இல்லை. அதனால் மூன்று நாட்கள் உணவு,நீர்,தூக்கம் இன்றி எமன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தான். எமனும் நச்சிகேதனின் பெருமையை உணர்ந்து மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மூன்று வரம் தருவதாகக் கூறினான்.

image

முதல் வரம்    தந்தை நலமாக இருக்கவேண்டும் என்று கேட்டதும் எமனும் மகிழ்ச்சியுடன் தந்தான். 

இரண்டாவது வரத்தை உலக மக்களுக்காகக் கேட்டான். துக்கம்,துயரம், முதுமை , இறப்பு என்னும் துன்பத்தில் உழலும் மக்கள் எப்படி சுவர்க்கம் அடைய முடியும் என்று எமனிடம் கேட்டான். எமனும் மகிழ்ந்து, எப்படி எந்த யாகத்தைச் செய்தால் ஸ்வர்க்கம் அடையமுடியும் என்ற ரகசியத்தையும் சொன்னான். நச்சிகேதன் சிறுவன் ஆனாலும் எமன் சொன்னதை நன்கு அறிந்து கொண்டதால் எமன் அந்த யாகத்துக்கு நச்சிகேதன் பெயரையே வைத்தான். 

மூன்றாவது வரமாக ’ இறப்புக்குப் பின் மனிதருக்கு நிகழ்வது என்ன’ என்ற மரண ரகஸ்யத்தைச் சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டான். எமனுக்கு நச்சிகேதனை மிகவும் பிடித்தது. ஆனாலும் அந்த    ரகஸ்யத்தைச் சொல்ல மனம் வரவில்லை. அதற்குப் பதிலாக பொன்னையும் பொருளையும் சுகங்களையும் ஐஸ்வர்யங்களையும் தருவதாகக் கூறினான். நச்சிகேதனோ அவை எதுவும் தனக்குத் தேவையில்லை; மரண ரகஸ்யத்தை மட்டும் கூறுமாறு வேண்டினான்.  

முடிவில் எமனும் மனமகிழ்ந்து மனிதன் ஆத்மாவை உணர்ந்தால் மரணமின்மை என்ற நிலையை அடையக் கூடும் என்று மரண ரகசியத்தை உபதேசித்தான். 

இந்தக் கருத்து தான் கடோபநிஷத்தின் மூலக்கருத்தாகும். 

 பக்கம் 4/25 

EXIT REVIEW:  

image

அர்ஜூன்: தலைவர் கலக்கல் தான்.. சும்மா லாஜிக்  அது இதுன்னு பார்க்கக் கூடாது! ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும் !அம்மாவுக்கும்  பிடிக்கும் 

அனன்யா: எனக்குப்   பிடிச்சிருந்தது 

IT Guy: ராத்திரி 1.30 மணி முதல் ஷோவுக்குப் போனேன்! பெரிய படம்! பெரிய ஏமாற்றம்!

ஸ்ரீராம்: தேவையில்லாம நிறைய இழுத்திருக்கிறார்கள்! நீளத்தைக் குறைச்சிருக்கணும் ! ரெண்டு ரஜினி தேவையே இல்லை!  பாட்டுகள் எல்லாம் தேவைல்லாத இடத்தில வருது! சந்தானம் பாஷையில சொல்லப்போனா ‘பினிஷிங்  குமாரின் பினிஷிங் சரியில்லை!  பாக்கணும்னு அவசியம் இல்லே!

NK : படையப்பாவை சில இடங்களில் ஞாபகப் படுத்துகிறது. சோனாக்ஷி ஆச்சரியமாக நன்றாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் சுமார் ரகம். பாதிக்குப்பின் கொஞ்சம் மோசம் .3 ½ மணி நேரப் படமாக இருந்தாலும் எல்லோரையும் பார்க்க வைக்கும்!ஒரு தடவை பார்க்கலாம். 

சங்கர்: படம் பெரிசு. இருந்தாலும் போராடிக்கல! ரஜினி வித்தியாசமான கதையில நடிக்கணும் !இனிமே ரஜினி இந்தமாதிரி நடிச்சா ஓடறது சந்தேகம் தான் 

அமெரிக்காவில் உள்ள தெலுங்கு நண்பர்  : லிங்காவுக்கு அப்புறம்  யாராவது தெலுங்கு ஹீரோவையோ தெலுங்கு படத்தையோ கிண்டல் அடிச்சிங்கன்னா அவங்களை அமெரிக்காவை விட்டே தொரத்திடுவோம்! 

image

 

பக்கம் 6/25 

ஏன் கிருஷ்ணன் சூதாட்டத்தைத் தடுக்கவில்லை?

இன்டெர்நெட்டில் வந்த ஒரு அருமையான விளக்கக் கட்டுரை!

image

மகாபாரதத்தில் ‘வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று கிருஷ்ணன் தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? உத்தவர் கேட்ட கேள்வியும் கிருஷ்ணன்  அதற்குக் கூறிய விளக்கமும் இது வரை கேள்விப் படாதவை! 

. “பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ , நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை  அறிய  ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கிருஷ்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக  நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்
நன்கறிந்த ஞானியான நீ, ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட, முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம்
அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை!

image


‘திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள்
தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ’;துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்தபிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த
நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?’;’; என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;
மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

image


பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
தொடர்ந்தான்.

“துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி,
பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,‘நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்
நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம்.

ஆனால்,அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்
தவறையும் செய்தான். ‘ஐயோ! விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான் . யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,  அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும்
இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்
சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!

நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும்  தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய
மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன
தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

image


“அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?”
என்றார் உத்தவர்.

“கேள்” என்றான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?”

புன்னகைத்தான் கண்ணன். 

“உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்மவினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில்
குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்
கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?”
என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!  எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற
முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர,  அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
போராடவில்லை!

image

பக்கம் 8/25 

சனி

image

சனியின்    சிறப்பு        அடுத்த     நாள்        விடுமுறை
சனியின்    சிறப்பு       அரப்புடன்   எண்ணை    முழுக்கு    
சனியின்    துவக்கம்     வாரத்தின்   முடிவு
சனியில்    கிட்டிடும்     வாரத்தின்   கூலி
சனியின்    சனி தசை   சகலரையும் வாட்டும்
சனியின்    இரவுக்       காய்ச்சல்    சுகமான     காய்ச்சல்                   சோம்பலைக் கொஞ்ச     நவக்கிரகம்  சுற்ற தேவை சனி
வார        வழக்கத்தில் விடுபட     தேவை      சனி
படம்        பார்க்க      கண்ணுறங்க தேவை      சனி
காதல்       புரிய        ஊர் சுற்ற   தேவை      சனி

கணவன் மனைவியை திட்டுவது சனியனே   
தாய் குழந்தையைத் திட்டுவதும்  சனியனே 
கெட்டபின் சுட்டிக் காட்டுவதும் சனியனே 
தொடர்ந்து துயர் தருவதும் ஏழரைச் சனியனே 

அவரைப் பகைத்து அழிந்தவர் ஆயிரம்ஆயிரம்
அரசனை  ஆண்டியாக்கி  பெண்ணிணை  பேதையாக்கி    
வீரனைக் கோழையாக்கி அறிஞனை முட்டாளாக்கி 
மனிதனை மிருகமாக்கி  தேவரைத் தரையில் தள்ளி 
அனைவருடன் விளையாடும் வித்தகர்   சனீஸ்வரர் !
ஈ ஸ்வரனுக்குச் சமம் அதனால்  சனீஸ்வரன் 
காகம் ஏறும் தம்பிரான்  எண்ணைப் பிரியன் 
அவரிடம் பிரியமாய்க் கெஞ்சுவது எமைத் தொடாதே!
காலைப் பற்றி காலை வாரும் நிபுணர்  அவர் 
கணக்கில் வல்லானைத் தொட மாட்டாராம்!

ஷீர்டிக்கு அருகில் சனிக்கு ஒரு கோவில் 
சனி சிங்கனாபூர்  என்ற அழகான திருத்தலம் 
வீடுகளுக்கு கதவே இல்லாத சிறப்பான ஊர் 
சனிப்       பார்வை     தவிர்க்க     அவரைத்    துதி
திருநள்ளாறு    கோவிலில் காட்சிதரும் பகவான்
துன்பம் தொலைய  அவரைத்  தினமும்   துதி !

பக்கம்  9/25 

ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)

இந்த மாதம்: தி ஜானகிராமன்

[ வெல்லத்தை எத்தனை முறை சுவைத்தாலும்  இனிப்பு தான்  தி.ஜானகிராமன் தியாகய்யர் பற்றிய கதையை ஏற்கனவே பார்த்தோம். இது ‘துணை’ என்ற கதையைப் பற்றி! ]

image

தி ஜானகிராமன் என்கிற படைப்பாளியை மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி போன்ற நாவல்கள் மூலம் பலர் அறிந்திருந்தாலும் அவருடைய சிறுகதைகள் அவ்வளவாக பேசப்படவில்லை என்பது என் கருத்து. அவரது நாவல்களில் மையக்கருத்தாகவோ அல்லது பின்னணியாகவோ ஒரே விஷயம்  இருப்பதாக பலத்த குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தபோது பலருக்கு (அண்மையில் மறைந்த திருமதி. ராஜம் கிருஷ்ணன் உட்பட) வருத்தம் அல்லது கோபம்.

அற்புதமான பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

இரண்டு முதியவர்கள் 79 வயது முதியவரையும் அவரது 98  வயது தகப்பனாரையும் “பென்ஷன்” ஆபீசுக்கு அழைத்துச் செல்ல  நேரிடும் ஒருவரின் அனுபவமாக ‘துணை’ என்கிற கதையை இழையோடும் மெல்லிய நகைச்சுவையோடு  சொல்லுகிறார்.

image

98 வயதுக்காரர் ‘லேடி’ என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இளம்வயதில் சுருட்டி தலையணையாக வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தலைமுடியாம். அவரது மகன் பெயரோ சின்னக்குழந்தை. தந்தையையும், தாத்தாவையும்  “மஸ்டர் டே"க்கு  (ஓய்வூதியம் பெறுவோருக்கு வருடம் ஒருமுறை நேரில் செல்லவேண்டிய கட்டாயம்) வழக்கமாக அழைத்துச் செல்லும் சின்னக்குழந்தையின் மகன் (58 வயது)  காசிக்குப் போயிருந்ததால் தன் நண்பரின் மகனின் உதவியை நாடுகிறார் சின்னக்குழந்தை.

இரு முதியவர்களையும் வண்டி ஏற்பாடு செய்து அழைத்துசென்று, பென்ஷன் வாங்கியபிறகு திரும்பும் வழியில் மாட்டுவண்டி குடைசாய்துவிடுகிறது. பெரியவர்கள் இருவருக்கும் லேசான அடி. இவனுக்குத்தான் பிராக்ச்சர். நினைவிழந்த இவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று கட்டுடன் வீட்டில் சேர்த்துவிடுகிறார்கள் இரு முதியவர்களும்.

"அம்மா, எங்களோடு வந்ததற்குத் தண்டனை உங்க குழந்தைக்கு. படு கிழங்கள் இருக்கோமே, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ? ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை ..”   என்று சின்னக்குழந்தை சொல்ல, “நாம அழச்சிண்டு வந்துட்டோம்” என்று முடிக்கிறார் ‘லேடி’ கிழவர்.

கதை முழுவதும் வரும் உரையாடல்கள் தான் வெகு இயற்கை.

“ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு  பிள்ளை, அவருக்கு ஒரு  பிள்ளை.. ”

“என்னப்பா சொல்லிக்கொண்டே போனா?”

“அதுதான் நிறுத்திப்பிட்டேனே.. அஞ்சு தலைமுறை … ”

“இவர் அப்பாவுக்குத் தொன்னுத்தெட்டு வயதுன்னு சொன்னாரே, கேட்டியா.. நாலைந்து வருஷமா இப்படித்தான் சொல்லிண்டிருக்கார்.”

 அழைத்துப்போக கிளம்புகையில்

‘லேடி’ கிழவரிடம் அருகில் சென்று இவன் “சௌக்யமா” என்பர் கேட்க அவர், “யாரது, எனக்கு கண்தான் தெரியாது. காது கேட்கும்.” என்கிறர் ‘லேடி’, வயதானவர்கள் முன் இயல்பாகவே உச்சஸ்தாயியில் பேசுகிறது தவறு என்று உணர்த்தும்வகையில்.

கிளம்பும்போது, “என்னடா, சின்னக்குழந்தை கிளம்பலாமோல்லியோ?” என்று ‘லேடி’ கேட்க “ இதோ ஆயிற்று .. சட்டை போட்டுக்க வேண்டியதுதான்” என்கிறர் சின்னக்குழந்தை.

“பேஷ்.. முன்னாடியே போட்டுக்க முடியலையோ? என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப்போறியோ, தெரிலை, சரி சரி, வா, சட்டுன்னு” என்கிறார் ‘லேடி’.   

       அங்கே கஜானா அருகில்,

“ஏன் பிள்ளையை மட்டும் அழைச்சிண்டு வந்திருக்கே, பேரன் எங்கே?” என்று ஒருவர் கேட்க

“காசிக்குப்போயிருக்கான்” என்கிறர் ‘லேடி’

“காசிக்கா? போடு சாம்பிராணி.  ஏன்? நீயும் போயிட்டு வரப்படாதோ"     

"நானுமா? பேஷ்.. ஹூசூர் கஜனாவே காசியா இருக்கு நமக்கு , நன்னாச்சொன்னே போ … ”

“எத்தனை மாஸ்டர் ஆச்சு.. அறுபது இருக்குமா?”

“அறுபதா? 55ம்  60ம் நூத்திப் பதினஞ்சுன்னா? என்னடா இது ? நூத்திபதினஞ்சுப் வயசா ஆயிடுத்து எனக்கு?”

“பின்னே சொல்லேன்"  

"இதெல்லாம் என்ன கேள்வி?”

“ஏன், கேக்கப்படாதோ”

“கேட்டுண்டே இரு, போ”

                திரும்பி வரும்போது¸

      ரிடையர் ஆகாமலே வேலைபார்க்க முடியாதா என்று பேச்சு வருகிறது.

“ஏன் முடியாது? பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்திலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப்போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுத்துன்னா, முட்டளாப் போயிடறான், கபோதியாப் போயிடுறான்னு கவண்மெண்ட் நெனச்சிண்டு இருக்கு. அவாவா பலத்துகேத்தப்போல வேலை பாக்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55 ன்னு வக்கிறது .. என்னடா பேத்தல்.”

முழுக்கதையையும் படிக்க  https://abedheen.wordpress.com/2011/08/27/janakiraman-taj-thunai/

நாம் அறிந்த, பார்த்த, பழகியவர்களை நினைவுபடுத்தும் வகையில் பாத்திரப்படைப்பு கொண்ட இவரது கதைகள் சில – ‘பாயசம்’, ‘அடுத்த…’, ‘அக்பர் சாஸ்திரி’, ‘வீடும் வெளியும்’, ‘தீர்மானம்’, ‘நடராஜக்கால்’

படத்திற்கு நன்றி: விகடன் & கோபுலு 

 பக்கம்  11/25 

அரோகரா கோஷம் விண்ணதிர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்!
டிசம்பர் 05,2014
image

திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.

டிசம்பர் 5 அன்று  அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு  அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

image

image
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. மஹா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

நன்றி: தினமலர் 

பக்கம்  13/25 

திதத் தத்தத் தித்தத – அருணகிரியார்

வைணவப் புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். 

வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்களின் காதுகளை, வென்றவர் அறுக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக பல பேருடைய காதுகளைப் போட்டியில் வென்று அறுத்தார் வில்லிபுத்தூரார்.

image

ஒருமுறை அவ்வூருக்கு வந்த முருக  பக்தரான  அருணகிரிநாதர் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டார். 

image

அந்தப்  பாடலாவது ..

திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி

(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து

(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து

(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.

பதவுரை:

திதத்த ததித்த ..திதத்த ததித்த என்னும் தாள  வாத்திசைகளை,

திதி … தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,

தாதை … உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,

தாத … மறை கிழவோனாகிய பிரம்மனும்,

துத்தி … புள்ளிகள் உடைய படம் விளங்கும்,

தத்தி … பாம்பாகிய ஆதிசேஷனின்,

தா … முதுகாகிய இடத்தையும்,

தித … இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)

தத்து … அலை வீசுகின்ற,

அத்தி … சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),

ததி … ஆயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக் கொண்டு,

து … அதை மிகவும் வாங்கி  உண்ட (திருமாலும்),  போற்றி வணங்குகின்ற,

இதத்து … போ¢ன்ப சொரூபியாகிய,

ஆதி … மூலப்பொருளே,

தத்தத்து … தந்தங்களை உடைய,

அத்தி … யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,

தத்தை … கிளி போன்ற தேவயானையின்,

தாத … தாசனே,

திதே துதை … பல தீமைகள் நிறைந்ததும்,

தாது … ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,

அதத்து உதி … மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,

தத்து அத்து … பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)

அத்தி தித்தி … எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),

தீ … அக்னியினால்,

தீ … தகிக்கப்படும்,

திதி … அந்த அந்திம நாளில்,

துதி தீ … உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,

தொத்ததே … உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

பொழிப்புரை ………

நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே!, தேவயானையின் தாசனே! ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

image

இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றார்.

 மேலும் அருணகிரியார், இனி இது போன்ற போட்டி வைக்கலாகாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்தார்.

வில்லிபுத்தூரார் தன் பாவத்தைத் தீர்க்க மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார். அதுவே வில்லிபாரதம் என்று அழைக்கபடுகிறது.

பக்கம்  14/25 

அக்கடா

image

 சோலைமலை ஒரு சோம்பேறிப்பய புள்ளை. எந்த வேலையும் செய்யப் பிடிக்காது. கோவில்ல அன்னதானம்  போடும் போது சரியா போய்த் தின்பான்.ராத்திரி பசிக்குமே! வீட்டுக்கு வருவான். கூலி வேலை செஞ்சு வயத்தைக் கழுவிக்கிட்டு வருகிற அவன் ஆத்தா பெத்த பாவத்துக்கு சோறு தண்ணி காட்டுவா. தின்னுட்டு அக்கடான்னு  திண்ணையில தூங்குவான்.

அன்னிக்கு கோயில் பூட்டிக் கிடக்கு. அன்னதானம் இல்லே. மதியச் சோத்துக்கே வீட்டுக்கு வந்தான். அவன் அம்மா அக்கடான்னு திண்ணையில தெக்கு வடக்கா  கிடக்கா! 

பக்கம்  15/25 

எட்டு

image

எட்டும்      வரை       எட்டு  அதி   உயரம்      தனை தொட்டு
எட்டும்      வரை       சுற்று புது   உலகம்      தனை சுற்று
எட்டு        திசைகள் !   எட்டு  திக்குகள் !  
எட்டு        பாலகர் !    எட்டு  சித்திகள் !
தேவகியின்  எட்டாம்     மைந்தன்    கிருஷ்ணன் !
கங்கையின்  எட்டாம்     புத்திரன்     பீஷ்மன் !
வாகன      ஓட்டிகள்    வெறுக்கும்  எண்        எட்டு
உரிமை     வழங்க      எட்டு        போடச்      சொல்வதாலா ?
பாமர       மக்கள் வெறுக்கும்  திதியும்     எட்டு
எட்டு        எட்டு        என்று       சுட்டிக்      காட்டுவதாலா ?
 
கொட்டடி    பெண்ணே !  எட்டிலே     கொட்டடி    பெண்ணே !
ஒரெட்டில்   முகவெட்டு  ஈரெட்டில்    மார்கட்டு
மூவெட்டில்  பால்புகட்டு   நாலெட்டில்  நூல் பகற்று
ஐயெட்டில்   முன்னேற்று ஆறெட்டில்  வழி   காட்டு
ஏழெட்டில்   அமைதி காட்டு     எட்டெட்டில்  பற்றை ஓட்டு
 

image

கொட்டடா   பொன்னா    எட்டிலே     கொட்டடா   பொன்னா
ஓரெட்டில்   விளையாட்டு ஈரெட்டில்    கல்வி       கற்று
மூவெட்டில்  பணம் ஈட்டு       நாலெட்டில்  பொருள்     ஈட்டு
ஐயெட்டில்   அறிவு ஏற்று       ஆறெட்டில்  சிகரம்       தொட்டு
ஏழெட்டில்   வழி காட்டு        எட்டெட்டில்  பற்றை      ஓட்டு ! !

பக்கம்  17/25 

வேடிக்கையான பழமொழிகள்

image

இளையாளே  வாடி மலையாளம் போவோம்; மூத்தாளே வாடி முட்டிக் கொண்டு சாவோம்

அர்ஜூன் போல ஒரு ஆம்படையான் கிடைச்சா அவளுக்கு எதுக்குத் தாலி?

ஏற்கனவே மாமியார்  பேய்க்கோலம் இதுல அத்திலிபித்திலி வேறையா?

கூரை ஏறி  கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போகப்  போகிறானாம். 

உடையவரே நக்கரார் ; .இதில உத்திராட்சக் கொட்டை போட்டவருக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் வேணுமாம்!

image

என்ன இடம்டா இது! எருமைமாடு கண்ணு போட்ட மாதிரி இருக்குது! 

நல்ல நாள் பாத்து  நாசமாப் போனேன்!

ஆசை தோசை அப்பளம் வடை 

காக்கைக்கு இருந்தா பறக்கும் போது தெரிஞ்சிருக்கும்!

முதல் நாள் வாழை இலை ; ரெண்டாம் நாள் தையல் இலை;
மூன்றாம் நாள் வாடா எலே போடா எலே 

சாமியாரும் சாமியாரும் உரசினா சாம்பல் தான் கொட்டும் 

உச்சந் தலையிலே செருப்பால  அடிச்ச மாதிரி இருக்குன்னேன்! 

நாய்க்கு வேலையுமில்லை நிக்க நேரமுமில்லை 

வாயில பல்லைப் போட்டுப் பேசாதே !

முடி உள்ள மகராசி அள்ளி முடிஞ்சுக்கிறா! 

ஏணி மடைன்னா நூணி மடைங்க்ரான்!

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.

ஊருக்குன்னு ஒரு தேவிடியா அவ யாருக்குன்னு ஆடுவா?

அரச மரத்தைச் சுத்தி வந்த உடனே அடி வயித்தைத் தொட்டுப் பாத்தாளாம்

கும்பகோணத்தில கூழ் குடிக்க கொடவாசல்லேர்ந்து குனிஞ்சுகிட்டுப் போனானாம்!

பகல்லே  பசுமாடு தெரியாது; ராத்திரி எங்கே எருமை மாடு தெரியப் போகுது?

ஏரிமேல கோவிச்சுக்கிட்டு கால் கழுவாமப்  போனானாம்!

செருப்பாலே அடிச்சு பட்டால  தொடச்சானாம்!

தானும் தொட மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் 

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டிலே வைச்சாலும் வாலைக் குழைச்சிக்கிட்டு  கண்டதைத் திங்கப் போகும்!

பாவி  போன இடம் பாதாளம்!

மூக்கில்லா ராஜ்யத்தில் முறிமூக்கன் ராஜாவாம்!

பாப்பாரப் பிள்ளை நண்டு பிடிச்சா மாதிரி!

வெளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம்!

அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!

மேயப் போற மாட்டுக்குக் கொம்பில புல்லைக் கட்டினானாம்!

அவிசாரியாப் போனாலும் முகராசி வேணும்!

.image

இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேக்குறான்!

குண்டு சட்டியில குதிரை ஒட்டாதே!

கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிஞ்சிக்கிட்டானாம் 

சொகம் எங்கடான்னா சொறியிர இடத்திலேன்னானாம் . 

சட்டியில இருந்தாத்தான் ஆப்பையில வரும்

இருக்கிறது ரெண்டு ஆப்பை ரெண்டும் கழண்டாப்பை!  

ஆறெல்லாம் பாலா ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்! 

image

பக்கம் 18/25 

ஆகட்டும் ஆகட்டும்

 image

ஆகட்டும்          ஆகட்டும்
ரோஜாப்பூ         பூக்கட்டும்
ராஜாவும்          பார்க்கட்டும்
மொட்டுக்கள்       மலரட்டும்
பட்டுப் போல்       விரியட்டும்
தொட்டுத் தான்     பார்க்கட்டும்
சிட்டுப் போல்      துடிக்கட்டும்             
வெள்ளத்தில்       மிதக்கட்டும்
வெல்லம் போல்   இனிக்கட்டும்
வாசம் தான்       வீசட்டும்
வேஷம் தான்      கலையட்டும்
தேனீக்கள்         பறக்கட்டும்
தேனும் தான்      வழியட்டும்
பாலும் தான்       பொங்கட்டும்
மேனிக்குள்        அடங்கட்டும்
பித்தங்கள்         கூடட்டும்
சித்தங்கள்         சேரட்டும் !

பக்கம்  19/25 

அசையாதே சுட்டுவிடுவேன்!

image

கையில் துப்பாக்கியுடன் .நின்று கொண்டிருந்தான்.கண்களில் கொலை வெறி. கிறுக்கன் மாதிரி இருக்கிறான்,சாராய நெடி வேறு. எப்படித் தப்புவது?

உனக்கு .. உனக்கு என்ன வேண்டும்?

உன் உயிர்!

எதுக்கு..  எதுக்கு .. என்னைக் கொல்ல வேண்டும்?

நீ ஒரு சமுதாயத் துரோகி! .போன வாரம் கூட ஒரு  சிறு பெண்ணைக் கற்பழித்தாய்.!

யார்.. யாரைச் சொல்லுகிறாய்.. ? நீ அவளோட அண்ணனா? அதற்காக எந்தப் பரிகாரம் வேண்டுமானாலும் செய்கிறேன். என்னைக் கொன்று விடாதே! 

உன்னால் என்ன செய்ய முடியும்?

எது வேண்டுமானாலும்.. நீயே சொல்லு என்ன செய்ய வேண்டும்?

சொன்னான்.

அது மட்டும் முடியாது. நீயே என்னைச் சுட்டுவிடு.

சுட்டான்.

image

பக்கம்  20/25 

மீனங்காடி

                        ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
 image
      கடைசியில் ஒரு டேபிள் காலியாக இருந்தது.  நாலு  பேரும் உட்கார்ந்து சாண்ட்விச், தோசை, காபி எல்லாம் ஆர்டர் செய்தார்கள்.  மார்க்கெட்டுக்கு மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.  “ அங்கே பார் மேரி ! நம்ம சிஷ்யன் எப்படிக் கலக்குகிறான் பார் ! நல்லா கவனித்துப்  பார்த்தால் நம்ம பாடத்தில் கடைசி ஆயுதம் தெரியும் !  அவளை உற்றுக் கவனிக்கத் தூண்டினான் டோனி. மேரி ஒவ்வொரு  தொழிலாளியையும், இப்படி அப்படி பார்த்துக் கொண்டே இருந்தாள்.  என்னவெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் என்று அதிசயித்துப் போனாள்.  இப்படி யாரும் ஜாலியா, குஷியா, சந்தோஷமா வியாபாரம் செய்து அவள் பார்த்ததே இல்லை.  இடைக்கிடையே அவர்கள் அடுத்த ஆளை எப்படிக் கவரலாம் என்று யோசிப்பதும் புரிகிறது.  பிரமிப்பாக இருந்தது மேரிக்கு!

image

      முந்தா நாள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனது ஞாபகம் வந்தது மேரிக்கு .  ராத்திரி நேரம்.  குழந்தைகள் கண்ணில் தூக்கம் கப்பிக் கொண்டு வந்த நேரம்.  கவுண்டரில் சாமான்களைக் கொடுத்து விட்டு பில் போடுவதற்காகக் காத்துக் கொண்டு இருந்தாள்.  இருந்தது இரண்டே இரண்டு வாடிக்கையாளர்கள் தான்.  ஆனால் அந்த கேஷியர்களுக்குத் தான் எவ்வளவு அலட்சியம் ?  குழந்தைகளுடன் நிற்கிறாளே, சீக்கிரம் முடிப்போம் என்று தோண  வேண்டாம் ?  கேஷில் இருக்கும் இரண்டு பெண்களும் ஊர்க் கதை உலகக் கதை எல்லாம் பேசிக் கொண்டே இருந்தார்கள்.  மேரிக்குப் பொறுமையே போய் விட்டது.  குழந்தைகள் வேற “ சீக்கிரம் வாம்மா “ என்று சிணுங்க ஆரம்பித்து விட்டார்கள்.  அந்த மாதிரி நிச்சயம் இங்கே நடக்காது.  இந்த டோனியின் ஆட்கள் வேறு உலகத்திற்கு மனசாலும் போக மாட்டார்கள்.  அவர்களின் எண்ணம், செயல் எல்லாம் எப்போதும் வாடிக்கையாளருடன் ஒண்ணா இருக்கும் .  ஓ ……அது .தான்…..

      “ மேரி ! நீ கண்டு பிடிச்சுட்டே ! எனக்குத் தெரியும் “ என்று சின்னப் பையன் மாதிரி கத்தினான் டோனி.  “ இங்க பாருங்க உங்க அம்மாவை ! குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட் மேனேஜரை !” அவளைக் கிண்டல் செய்ய குழந்தைகள் கும்மாளமிட்டுச் சிரித்தார்கள்.   

      “ மேரி ! நானும் போன வாரம் ஒரு பெரிய கடைக்குப் போயிருந்தேன்.  நான் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வேலை செய்யும் மக்களைப் பார்த்தேன். அவர்கள் ஜாலியாகத் தான் இருந்தார்கள். சந்தோஷம் ! குஷி ! அரட்டை எல்லாம் இருந்தது. ஆனால் அவை எல்லாம் அவர்களுக்குள்ளே தான் இருந்தது.  நம்மைப் போன்ற வாடிக்கையாளர்களை எல்லாம் ஒரு அந்நியனைப் போலத்தான் பார்த்தார்கள்.  அவங்க சந்தோஷத்தை நம் கூடப் பகிர்ந்து கொண்டார்கள் என்றால் எவ்வளவு நன்றாக  இருக்கும் ? அவங்க கிட்டே எல்லா சமாசாரமும் இருந்தது.  ஒண்ணே ஒண்ணைத் தவிர.  அவர்கள் தங்கள் உலகத்தில் இருந்தார்கள்.  வாடிக்கையாளர் உலகத்துக்கு வரவில்லை .  ‘ நீ வேறு நான் வேறு ‘ என்று இருந்தார்கள்.  ஒண்ணா இருக்கக் கத்துக் கொள்ளவில்லை.  அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 
      மேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் “ என்று எழுதிக் கொண்டாள்.
      டோனி கிளம்ப ஆரம்பித்தான் “ மேரி நான் மீனங்காடிக்குப் போகணும் ! என் தோழர்கள் எல்லோரும் என் வேலையையும் சேர்த்துச் செய்கிறார்கள்.  அதிக நேரம் அப்படிச் செய்ய வைப்பது நியாயமில்லை.  போவதுக்கு முன்னாடி கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்ல விரும்புகிறேன் “ பெரிய பீடிகை போட்டு நிறுத்தினான் டோனி.
      “ சொல்லு டோனி ! கேட்க ஆவலாயிருக்கேன் !’
      “ உன் ஆபீஸில் எப்படி இந்த ஐடியாக்களை எல்லாம் எப்படி செயல் படுத்தப் போறேன்னு புரியலை.  ஒண்ணு மட்டும் முக்கியம் !  உன் மக்கள் கிட்டே இதைப் பற்றி பாடம் எடுப்பதை விட அவர்களுக்கு இதை நேரடியாகப் புரிய வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தோணுது. ! ஜோ சொன்ன மாதிரி அவர்களையும் இங்கு வந்து பார்த்துத் தெரிஞ்சிக்க  வைத்தால் என்ன?”
      “ நீயும் ஜோவும் சரியான ஜோடி ! எப்படி இதை ஆரம்பிக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு அனுபவ  பூர்வமா அவர்களுக்குப் புரிய வைக்கிறது தான் நல்ல வழி என்று முதலிலேயே தோணவில்லை.! அதுதான் சிறந்த வழி டோனி !  ரொம்ப ரொம்ப நன்றி டோனி ! இந்த நாளை நான் ஆயுசுக்கும் மறக்க முடியாது.  இப்படி இந்த நாளை ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ என்று பாடும் அளவிற்கு மாற்றியதற்கு எப்படி நன்றி சொல்வது ? “

      வீடு திரும்ப வரும் வரைக்கும் ஜோ பேசிக்கொண்டே வந்தான்.  இவ்வளவு குஷியாக இருந்து அவனைப் பார்த்ததே இல்லை.  ஜேனும் தான்.  மேரியும் அன்றைக்கு முழுவதும் குழந்தைகளுடன் அவர்கள் உலகத்தில் ‘ ஒண்ணா ‘ இருந்தாள் ! டோனியைப் பற்றி நினைத்தாள்.  எங்கோ பாடல் ஒலித்தது. ‘ உன்னை நான் சந்தித்தேன் ! நீ ஆயிரத்தில் ஒருவன் “ சரி ! சரி ! திங்கட்கிழமை வரட்டும் பார்க்கலாம் என்று முடிவு செய்தாள் மேரி. !

image

 
                        ஞாயிறு மதியம்
      மேரி தனி உலகத்திற்குச் செல்லும் நேரம்.  ஞாயிறு மதியம் வந்தது.  ஆவலோடு நோட்டுப் புத்தகத்தை எடுத்து குறிப்புக்களை விரிவு படுத்த ஆரம்பித்தாள்.! 

உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்:-

image

 இது நல்ல விதமாக ஆரம்பமாகி விட்டது.  அந்த ‘ மெனு ஐடியா ‘ – இன்றைய – ஸ்பெஷல் – மிகவும் நன்றாகவே வந்திருந்தது.  வெற்றியின் முதல் படி என்று சொல்லலாமா ? இது தான் முக்கியமான படி. இந்த எண்ணம் இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இந்த எண்ணத்தை மேலும் வளர்க்கணும்.! இன்னும் நல்லா எல்லாருக்கும் புரியும்படி செய்யணும்.

ஆட்டம் கொண்டாட்டம்:- 

image

இந்த மீனங்காடி பெரியவர்களின் விளையாட்டு  மைதானம் போல் இருக்கிறது.  இந்தத் தொழிலாளிகள் இப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கும்போது நமது நிதிக் கம்பெனியிலும் இதைக் கண்டிப்பாகக் கொண்டு வரலாம்.!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே :-

image

வாடிக்கையாளர் எல்லோரையும் ஜாலியா இருக்கிறபடி செய்ய வேண்டும்.  பழைய பாஸ் ஜோசப் மாதிரி இருக்கக் கூடாது.  அவர் மற்றவர் கிட்டே பேசும் போதும் ஏதோ டேப்பில் ரிகார்ட் செய்வது போலப் பேசுவாரே தவிர மனிதர் கூடப் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பார் ! அப்படி இருக்கக் கூடாது. .

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் :-  

image

இந்த மீனங்காடி தொழிலாளர்கள் எப்படி வாடிக்கையாளர் கூட ஒன்றிப் போய் விடுகிறார்கள் ? தங்களோட தனி உலகத்தில் இருப்பதே இல்லை.! அப்படியே வாடிக்கையாளர் மனதில் ஊடுருவி நிற்கிறார்கள்.  அவர்கள் கூட ரொம்ப நாள் பழகின சிநேகிதன் போலப் பேசுகிறார்கள்! பழகுகிறார்கள் ! இதை விட வேறு என்ன வேண்டும் ? 

(தொடரும்) 

பக்கம்  21/25 

வாத்தியார் மாணவர் ஜோக்ஸ்

image

எந்த மடையன் கிளாஸ் நடக்கும் போது  பேசிக்கிட்டே இருக்கான்?
நீங்க தான் சார்!

தமிழ்நாட்டில் எண்ணை வளம் அதிகமா இருக்கிற இடம் எது?
வாழைக்காய் பஜ்ஜி சார்!

ஏதாவது  சந்தேகம் இருந்தால் கேளுங்கள்? 
ரெண்டு மணி சாப்பாட்டு மணி எத்தனை மணிக்கு அடிப்பாங்க சார்?

தமிழ் நாட்டில் காபி அதிகமாக இருக்கும் இடம் சொல்லு?
சரவணபவன் சார்!

மயில், நீர்த்த தயிர், அதிகம் மூன்றுக்கும் பொருத்தமான ஒரு பேர் சொல்லு?
மோர் !
வெரிகுட் !

A B C D சொல்லு 
A B C D E F G 2G 3G 

இங்கிலீஷ் மாதம் சொல்லு?
ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரி 

தமிழ் மாதம் சொல்லு?
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி,ஆவடி, அம்பத்தூர் 

வல்லினம் – உதாரணம் சொல்லு?
அறைஞ்சு பல்லைப் பேத்துடுவேன்!

மெல்லினம் – உதாரணம் சொல்லு?
சூயிங்கம்!

இடையினம் – உதாரணம் சொல்லு?
இலியானா!

பக்கம்  22/25 

ஆட்ட நாயகன்

image

 அண்ணாமலை தான் கபடியில் எப்பவும் ஹீரோ. அவனை அடிச்சுக்க ஆளே கிடையாது. கபடி கபடின்னு பாடிக் கொண்டே போனான்னா எந்தக் கொம்பனாலும் அவனைப் பிடிக்க முடியாது. அப்படி ஒரு விலாங்கு பாடி அவனுக்கு. கபடி ஸ்டேட் லெவல் போட்டியில் அட்டகாசமாக ஆடினான். அவன் குழு அபார வெற்றி. அவன் தான் சாம்பியன்- ஆட்ட நாயகன்

கவர்னர் வந்து பதக்கத்தை  அவன் நெஞ்சில் குத்தினார். சுருக்கென்று அவன் நெஞ்சுக்குள்ளும் ஏதோ குத்தியது. வெற்றி விழா மேடையிலேயே சுருண்டு விழுந்தான். ஆட்ட நாயகனின் ஆட்டம் முடிந்தது.   

பக்கம்  23/25 

இது டிசம்பர் மாதம். சென்னையில் கச்சேரி களை கட்டும் நேரம்!

எந்தக் கச்சேரி எங்கு எப்போது நடைபெறுகிறது என்பதற்கு மேலே உள்ள லிங்க் உதவும்!  

பக்கம் 24/25 

தலையங்கம்

பூ: 2                                                                                     இதழ்: 1

நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை யோகா ! யோகா !யோகா!

image

பாரதப் பிரதமர் மோடி  ஐ .நா. சபையிடம் நம் நாட்டின் யோகாவிற்கு உலக அந்தஸ்து கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோளை முன் வைத்தார். 170க்கும் மேற்பட்ட நாடுகள் அதை வரவேற்றன.

அதனால் ஒவ்வொரு வருடமும்  ஜூன் 21ந் தேதி  உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. 

யோகா  ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தமான பயிற்சி இல்லை. அனைத்து உலக மக்களும் அதனைக் கடைபிடித்து மன வளத்தில் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசுக்கும் மாநில அரசிற்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். யோகாவை இந்தியாவில் உள்ள  அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக வைத்தால் நமது நாட்டின் அடுத்த தலைமுறை மக்கள் சிறப்பான குடிமகன்களாக வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கும்

ஆவன  செய்யுமா நமது அரசு?     

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

image

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன் 

துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன் 
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா 

பக்கம்  25/25