நண்பர் ராகவன், இந்திரா நகர் தினமும் இதுமாதிரி காய்கறிகளை வைத்து காலை வணக்கம் செய்திகள் அனுப்புகிறார். நன்றி ராகவன் சார் !
Monthly Archives: January 2022
குவிகம் புத்தக அங்காடி
குவிகம் பதிப்பகம் 100 புத்தகங்களுக்கு மேல் பதிப்பித்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.!
அவற்றை வாசகர்களுக்கு குறைந்த விலையில் தருவதற்காக இப்போது ‘குவிகம் புத்தக அங்காடி’என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
அதன் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
உங்களுக்குப் பிடித்தப் புத்தகங்களை வாங்கி எழுத்தாள நண்பர்களை ஆதரியுங்கள்!!
உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப் படுத்துங்கள் !
குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – சாய்நாத் கோவிந்தன்
குவிகம் அன்பர்கள் தெரிவித்த கருத்துப்படி குறுக்கெழுத்துப் போட்டி நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்.
இந்த மாதம் உங்களுக்கான போட்டி !
பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்து. விடை அடுத்தமாதம் வெளிவரும்.
முதலில் வரும் சரியான விடைக்கு ரூபாய் 100 பரிசு !
இதைத் தயாரித்து வடிவமைத்த நண்பர் சாய்நாத் கோவிந்தன் அவர்களுக்கு நன்றிகள் பல.
லிங்கை கிளிக் செய்தால் குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
எண் குறிக்கப்பட்ட கட்டத்தில் கிளிக் செய்தால் குறிப்பு தெரிய வரும். அந்தக் கட்டங்களில் சரியான எழுத்துக்களை கொடுக்கப்பட்டுள்ள கீ போர்ட் மூலமே நிரப்பவேண்டும்.
உதாரணமாக முதல் குறிப்பு:
இடமிருந்து வலம்:
1 தியாகவிடங்கரின் புதல்வி, படகோட்டி முருகய்யனின் தங்கை (5)
இதற்கான விடை பூங்குழலி . அதை தட்டச்சு செய்ய கட்டத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விசைப்பலகையை உபயோகிக்கவேண்டும். பூ அடிக்க ‘ப’ அடித்தபிறகு ‘ஊ’ அடிக்கவேண்டும். அதேபோல் ‘ங்’ அடிக்க ‘ங’ மற்றும் புள்ளி ‘.’ அடிக்கவேண்டும். தவறாக அடித்தால் திருத்திக் கொள்ளவும் முடியும்.
Click this link to participate in Kuvikam Crossword puzzle .
http://beta.puthirmayam.com/crossword/A9E90F2AAA?embed=1
இது சாம்பிள் மட்டுமே. இதில் நிரப்ப இயலாது.
உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்
பிரளயம் .. பிரளயம் .. மனித இனம் என்றைக்கும் சந்திக்கக் கூடாதது. அதைக் கடவுளர்களின் கொடுமை என்பதா இல்லை மனிதனின் கொடுமைகளுக்கு கடவுள் தரும் தண்டனை என்பதா என்று புரியாத புதிர் அது.
ஈயா கடவுளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதால்தான் அந்தக் கொடூர பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்தேன் என்று கில்காமேஷுக்கு உத்தானபிஷ்டிம் விளக்கி மேலும் கூறலானான்.
“ஆறுநாட்கள் கோரதாண்டவம் ஆடிய பிரளயம் இனி அழிப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் வந்ததும் அமைதி கொண்டது. படகிலிருந்து மிகுந்த தயக்கத்துடன் வெளியே வந்தேன்.பிரளயத்துக்குப் பின் அமைதி அதி பயங்கரமாக இருந்தது. பட்சிகளும் மிருகங்களும் தைரியமாக வெளியே போய் எந்தவித ஆபத்தும் இல்லாமல் இருந்ததை உணர்ந்து நானும் என் சகாக்களுடன் வெளியே வந்தேன். அந்த மலை உச்சியிலேயே அத்தனைக் கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பலியிட்டுப் பூசையும் செய்தேன்.
ஏழு கொப்பறைகளில் மதுவையும் எண்ணையையும் சேர்த்து கடவுள்களுக்கு நன்றிக் கடன் செலுத்தினேன். மது மாமிச வாசனை உணர்ந்த அனைத்துக் கடவுளர்களும் பலியை ஏற்றுக்கொள்ள வந்தனர். கடைசியாகக் காதல் தேவதை இஷ்டாரும் வந்தாள். அவள் சக தேவதைகளை விளித்துச் சொன்னாள்.
“ இப்படி மனித குலம் அழிந்து நான் பார்த்ததே இல்லை! இந்தப் பலி விருந்துக்கு எல்லாக் கடவுள்களும் வரட்டும். ஆனால் இவ்வளவு கொடுமையான முறையில் மனித குலத்தை நசித்த என்லில் மட்டும் வரக்கூடாது. நான் உயிருக்கு உயிராக நேசித்த என் மக்களைக் கொஞ்சமும் சிந்திக்காமல் இரக்கமின்றி பிரளயத்தின் மூலம் கொன்ற அவனை என்னால் மன்னிக்கவே முடியாது” என்று கூறினாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக என்லில் அங்கே வந்தான். ஒரு மனிதன் அவன் குடும்பம் மற்றும் பட்சி பறவை காட்டு வீட்டு மிருகங்கள் இவை அனைத்தும் தப்பிவிட்டதை அறிந்து மிகவும் கோபப்பட்டான். குழப்பத்துக்கும் சப்தத்துக்கும் காரணமாயிருந்த மனித இனப் பெருக்கத்தை முழுவதும் அழைக்க இயலாமல் செய்தது யார் என்று கடவுளர் அனைவரிடமும் கேட்டான்.
நீர்த்தேவதை நினுர்த்தா என்லிலிடம் கூறினான்.” என்லில்! நீ கோபப்பட்டு பிரயோஜனமில்லை ! இது அனைத்தும் ஈயா கடவுளின் அனுக்கிரகம். தப்பியவன் ஈயாவின் நண்பன். ஈயாவுடன் அறிவிலும் யுக்தியிலும் யாரும் போட்டி போட முடியாது. எல்லா விஷயங்களும் எப்படி நடைபெறவேண்டும் என்று அறிந்தவர் ஈயா ஒருவர்தான்.”
அதுவரை அமைதிகாத்த ஈயா வாய்திறந்து , ‘வீரனே என்லில்! புத்திசாலியான நீ இப்படி புத்தியில்லாத காரியத்தை ஏன் செய்தாய்? இப்படிப் பிரளயத்தை அனுப்பி மக்களை மாய்க்கலாமா? மக்கள் இல்லையென்றால் நமக்கு யார் பலி தருவார்கள்? பாபம் செய்தவன் மேல் பாவச் சுமை ஏறட்டும். தவறு செய்தவன் தவறு செய்தனவனாகவே இருக்கட்டும். தவறு செய்தவனைத் தண்டி! ஆனால் இப்படி ஒரேடியாக எல்லோரையும் அழிக்கலாமா? எல்லா மக்களுமா பாபம் செய்தார்கள்? ஓநாய்களையும் நரிகளையும் மனிதர்கள் மேல் ஏவலாம். பலர் தப்பி விடுவார்கள். பஞ்சத்தையும் பட்டினியையும் அனுப்பலாம். சிலர் தப்பிவிடுவார்கள். நோய் நொடி கொடுத்தாலும் சிலபேர் தப்பிவிடுவார்கள். பிரளயத்தை ஏவலாமா? இதிலிருந்து யார்தான் தப்பி உயிர்வாழ முடியும்? அதனால்தான் ஒருசிலரையாவாது காப்பாறவேண்டும் என்று யோசித்தேன். நானும் இந்த மனிதனுக்குக் கடவுளர்களின் ரகசியத்தைச் சொல்லவில்லை. அவன் ஏதோ கனவு கண்டு பிரளயத்திலிருந்து தப்ப அவனே வழி அமைத்துக்கொண்டான். இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து கொள்ளுங்கள். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. “ என்று ஆணித்தரமாகக் கூறினார்.
இதைக் கேட்ட என்லில் என்னை அழைத்துக் கொண்டு என் படகுக்கு வந்தார். நான் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவர் பின் சென்றேன்.அவர் என்னையும் என மனைவியையும் அவருக்கு இரு புறத்திலும் மண்டியிடச் செய்தார். எங்கள் முன்னுச்சிகளைத் தன் இரு கைகளால் தொட்டுக்கொண்டு ஆசீர்வதித்தார்.
பின்னர் அவர் ஒரு அறிவிப்பு செய்தார்.
“ இதுவரையில் உத்னபிஷ்டிம் மனிதர்களில் ஒருவனாக இருந்தான். இன்றுமுதல் அவனும் அவன் மனைவியும் தேவர்களாக தூரத்தில் நதியின் வாய்க்கருக்கில் வசிப்பார்கள். “
“ கில் காமேஷ்! இப்படியாகத்தான் என்னைக் கடவுள்களின் ஒருவனாகச் செய்தார்கள். அன்றுமுதல் நான் இந்த நதிக்கரையில் வசித்து வருகிறேன். இப்போது சொல் ! உனக்காக யார் கடவுள்களைக் கூட்டி வந்து நித்தியத்துவத்தை உனக்குப் பெற்றுத் தருவார்கள்? சாகாத வாழ்வு வேண்டுமென்றால் சில காரியங்கள் செய்யவேண்டும். முதல் படியாக ஆறு நாட்கள் ஏழு இரவுகள் கண்களை மூடாமல் தூங்காமல் இருக்கவேண்டும். முடிகிறதா பார்! “ என்று சொன்னார்.
தனக்காக எந்தக் கடவுள் சாகா வரத்தைத் தர உதவக்கூடும் என்று கில்காமேஷ் தடுமாறி நின்றான். உத்னபிஷ்டிம் சொல்வதுபோல முதல் படியை முயற்சி செய்வோம் என்று அவன் நினைக்கும்போதே தூக்க மயக்கம் அவனை ஆட்டிப் படைத்தது. இலேசாக ஆடி வழியத் தொடங்கினான். பஞ்சுப் போர்வையால் போர்த்தப்பட்டவன் போல அவன் மூச்சு விட்டான். சுகமாக நித்திரை வந்தது.
உத்னபிஷ்டிம் தான் மனைவியிடம் கூறினான். “ இதோ பார் கில்காமேஷை! பல நாட்கள் தூங்காதவன் இன்று உறங்குகிறான். இவனுக்கு எப்படி சாவில்லாத வாழ்வு கிடைக்கும்? முதல் படியிலேயே தடுக்கி விழுந்துவிட்டான். இவனுக்கு எப்படி அந்த வரம் கிடைக்கும்?”
அவன் மனைவி, “ தயவுசெய்து அவனை எழுப்புங்கள்! அவன் தூங்காதிருக்கட்டும். அவன் ஊர் திரும்பி தன் ஊருக்குச் செல்லட்டும். இல்லையென்றால் இங்கேயே அவன் இறந்துபோவான்” என்று கெஞ்சினாள்.
“ எல்லா மனிதர்களும் ஒருவகையில் ஏமாற்றுக்காரர்கள்தான். நான் மனிதனாக இருந்ததால் இதைப் பற்றி ஆணித்தரமாக என்னால் கூறமுடியும். இவன் முடிந்தால் நம்மையும் ஏமாற்றக்கூடும். அதனால் அவன் தூங்கும் நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒரு ரொட்டி சுட்டு அவன் தலைமாட்டில் வைத்துவிடு! அதைப்பார்த்து அவன் எத்தனை நாள் தூங்கியிருக்கிறோம் என்பதை அவனால் கணக்குப் பார்த்துக் கொள்ள முடியும். சுவற்றிலும் புள்ளி வைத்து கணக்கிடு!” என்று உத்நபிஷ்டிம் தன் மனைவியிடம் கூறினான்.
ஆறுநாள் தூங்கிய கில்காமேஷ் ஏழாம் நாள் இலேசாகக் கண்விழித்தான்.. உத்நபிஷ்டிம் வந்து எழுப்பியதும் “ இப்பொழுதுதானே தூங்க ஆரம்பித்தேன். அதற்குள் ஏன் எழுப்புகிறாய்?” என்று கேட்டான்.
“கில்காமேஷ் ! நீ உன் உடலில் பலம் வரத் தேவையான அளவிற்கு ஆறு நாட்கள் தூங்கியிருக்கிறாய். இங்கு பார் ஆறு நாள் ரொட்டிகள் வீணாகிக் கிடக்கின்றன. இனி நீ உன் ஊருக்குப் புறப்பட்டுச் செல்லவேண்டியதுதான்.” என்றான் உத்னபிஷ்டிம்.
கில் காமேஷிற்கு மனதில் சொல்ல முடியாத அளவிற்குத் துக்கம் பீரிட்டெழுந்தது.
“ என நம்பிக்கைக்கு உரிய உத்னபிஷ்டிம்! இனி நான் என்ன செய்வது என்று சொல் ! இரவுத்திருடன் என் உடலை மயக்கி என்னை செத்தவனாக்கிவிட்டான். என் உடலில் சாவு குடியிருக்கிறது. சாவின் கோரப்பிடியிலிருந்து தப்ப எனக்கு நீயும் உதவ மறுக்கிறாய்! நானும் செத்து மடியவேண்டியதுதானா? “ என்று மனம் உருகும்படி கேட்டான்.
இதைக் கேட்ட உத்னபிஷ்டிமின் மனம் சற்று இளகுவது போல இருந்தது. அதைக் கவனித்த அவன் மனைவி.” கில்காமேஷ் மனம் நிறைய நம்பிக்கையுடன் மிக நீண்ட பயணம் மேற்கொண்டு இங்கு வந்திருக்கிறான். அவன் அலுத்துப்போய் வெறுங்கையுடன் வீடு திரும்பக்கூடாது. ஏதாவது அவனுக்குத் தந்துதான் அனுப்பவேண்டும்” என்று கூறினாள்.
அதைக்கேட்ட கில்காமேஷின் மனத்தில் நம்பிக்கை கொஞ்சம் பிறந்தது.
(தொடரும்)
திரை இலக்கிய ரசனை – எஸ் வி வேணுகோபாலன்
மகாநதி
அதிர்ச்சி அனுபவப் பயணம்
எஸ் வி வேணுகோபாலன்
சுஜாதாவின் கவிதை ஒன்று, கணையாழியில் எழுபதுகளின் கடைசியில் வந்தது என்று நினைவு. வேண்டாம் என்பது தலைப்பு. பதினாறு சீர் கழி நெடிலடி விருத்தம் என்று போட்டு எழுதி இருந்தார். அதன் முதல் வரி தான் இங்கே மேற்கோள் காட்டப்போவது: ‘காலையிலே எழுந்திருந்தால் செய்தித்தாளில் கற்பழிப்பு செய்திகளைப் படிக்க வேண்டாம்’. எல்லாவற்றிலும் இருந்து விலகி தப்பித்து வாழ்வது பற்றிய பகடி அது. காலையில் சில செய்திகளை வாசிக்க, ஏன் தலைப்புச் செய்திகளைப் பார்க்கவே அச்சமாக இருக்கும். சிலபோது வரிசையாக யாராவது கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால், அதைக் கேட்கப் பொறுக்காமல், தலையைப் பிடித்துக் கொண்டு, போதும்..போதும் என்று சொல்வோர் உண்டு. சில படங்களைத் திரும்பப் பார்க்கலாமா என்றால் நிஜ வாழ்க்கையின் அதிர்ச்சியான விஷயங்களை அது காட்சிப்படுத்தும் கனத்தைத் தாங்க முடியாமல் மறுத்துக் கொள்வோர் உண்டு. மகாநதி அப்படியான ஒரு படம் தான்.
ஓபியம் (OPM) என்பது தான் கதையின் ஒற்றை வரி. எனது சொந்தப பணம் என்பதற்கும், அடுத்தவர் காசு என்பதற்கும் ஒரே குறியீடு இந்த ஆங்கில மூவெழுத்துகள். பணம் எத்தனை ஈவிரக்கமற்றது என்பதை, எத்தனையோ கவிஞர்கள் பாடி இருக்கின்றனர். எங்கே தேடுவேன் என்று பாடினார் என் எஸ் கிருஷ்ணன். காசே தான் கடவுளடா என்பது மற்றொரு பாட்டு. பணத்தை முன்னிலைப்படுத்தும் சமூக அமைப்பில் எல்லா உறவுகளும் கொச்சைப்படுத்தப்படும், எல்லாம் பண்டமாகப் பார்க்கப்படும். வர்த்தகமயம் ஆக உலகம் மாறி நிற்கும் என்பதை மிகுந்த கவிநயமிக்க வாசகங்களில் நீங்கள் படிக்க விரும்பினால் 1848ம் ஆண்டில் வெளியாகி உலகைக் குலுக்கிய நூலுக்குள் செல்லவேண்டும். அதற்குப் பிறகு வருவோம்.
மனைவியை இழந்த நல்ல மனிதர், இரண்டு குழந்தைகள், மூத்தவள் அப்போதுதான் பருவமெய்தும் வயதில், மாமியார் உடன் இருக்க எங்கோ கும்பகோணம் அருகே வெளியுலகம் அறியாமல் நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கும் விவசாய வாழ்க்கை, கொஞ்சம் கூட காசு பண்ணலாம், பெரிய கஷ்டம் இல்லாமல் என்று போடப்படும் தூண்டிலில் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிப் போவது தான் படம். படத்தின் கதையல்ல, காட்சிப்படுத்தல், நடிப்பு, வசனம், இசை இவை தான் நிறைய பேசப்படுவது.
மத்திய சிறைச்சாலையில் இருந்து தான் படம் பின்னோக்கிப் போய் கதை சொல்கிறது. சிறைச்சாலையை நேரடியாகக் கண் முன் நிறுத்தும் படம், கடைசி கட்டங்களில், சிவப்பு விளக்குப் பகுதியைக் காட்சிப்படுத்தும். பரிதாப உணர்ச்சியைத் தூண்டவோ, கிளுகிளுப்பை ஏற்றவோ அல்ல, இரண்டுமே பார்வையாளரைப் புரட்டி எடுக்கும் என்பது தான் முக்கியமாகச் சொல்லவேண்டியது. உண்மைக்கு எத்தனை நெருக்கமாக நின்று ஒரு கதையைப் பார்வையாளருக்குச் சொல்ல முடியுமோ காட்சி மொழியில் அது ஒரு திரைப்படத்தின் தனித்துவமான அம்சமாக அமைகிறது.
சிறையறையைப் பகிர்ந்து கொள்வோரில் ஒருவர் பூர்ணம் விசுவநாதன், மற்றவர் கமல் ஹாசன். பூர்ணம் பேசும் ஒவ்வொரு வசனமும் படைப்பூக்கத்தோடு சிறை வாழ்க்கையை எடுத்து வைக்கிறது. இரவு படுத்துக் கொண்டிருக்கையில், இது தான் கடைசி ரயில். இத்தோட காலம்பற நாலரைக்குத் தான் முதல் வண்டி என்பார். பார்க் ரயில் நிலையம் அருகே மத்திய சிறையில் குடியிருக்கும் உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்துவது மட்டுமல்ல, ஒரு சிறைவாசியின் அன்றாடம் என்னவாக இருக்கும், அவரது சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் போகும் என்பதை வெளிப்படுத்துகிறது படம். கைதிகளுக்கு உணவு வழங்குமிடத்தைத் தான் அதிகம் பார்த்திருக்கிறோம், படங்களில், மகாநதி சமையல் செய்யுமிடத்தைக் காட்டுவது கதைக் களனுக்கும் அவசியமானது. கைதிகளுக்கு பீடி வாங்கிக் கொடுப்பதற்கு சிறைக் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு உதவி செய்வது பற்றிக் கதைகளில் வந்ததுண்டு. ஆனால், அதன் உள்ளரசியல் இன்னும் குளோஸ் அப் கொண்டுபோய்ப் பேசுகிறது மகாநதி.
பெண் குழந்தைகளைச் சிதைத்து சிவப்பு விளக்குப் பகுதிக்கு சப்ளை செய்பவன் குரூர முகம், வெட்டுத் தழும்பு, வில்லன் சிரிப்பு இதெல்லாம் கொண்டிருப்பது இல்லை. அழகான முகம், சபாரி உடை, தொடக்க நிகழ்வுகளில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து முதலீடு செய்யத் துடிப்பவர், சமூகத்தின் கண்ணியமிக்க மனிதர். அவரது ஏஜெண்டுகளும் அத்தனை எளிதில் கொடியவர்களாக அடையாளப்படுத்த முடியாத நடவடிக்கைகளில் கரைந்திருந்து, பிரச்சனை வெடிக்கும்போது மட்டுமே சொந்த உருவத்தில் வெளிப்படுபவர்கள்.
அம்மா இல்லாத பெண் குழந்தை, தகப்பனும் சிறையிலடைபட்டுக் கிடக்கும் ஒரு துரதிருஷ்ட நேரத்தில் மலர்கிறாள், அதை அந்தத் தந்தை அறியவரும் காட்சி, எப்பேற்பட்ட கல் நெஞ்சையும் உருக்கிப்போடும். படத்தின் திரைக்கதைக்கு முக்கியமான இந்தக் காட்சி, அந்தப் பெண் குழந்தையின் அறியாமை கலந்த அந்த மலர்ந்த முகம், பின்னர் எப்படியாக மாற இருக்கிறது என்பது பார்வையாளரை எப்போதும் பதறவைக்கும் விஷயமாகும்.
தனது மகளைத் தேடி கல்கத்தா போகும் காட்சியில், டாக்சி டிரைவர் கேட்கிறான், மாமனாரும் மருமகனும் ஒன்றாக அந்தப் பகுதிக்குப் போகும் விநோதத்தை இப்போது தான் பார்க்கிறேன் என்று. அதுவரை அது என்னமாதிரியான இடம் என்று இந்த இரண்டு பேருக்குமே தெரியாது என்பது கதையோட்டம் வழங்கும் அதிர்ச்சிகளில் முக்கியமான இடம். சொந்த மகளை ஒரு தகப்பன் விலைமாதர் விடுதியில் கண்டெடுத்து, அவளை அங்கிருந்து மீட்டெடுக்கும் இடம் இதயத்தை அறுத்துப் போடுவதாகும். அந்த புரோக்கர்களிடம் காணப்படாத மனிதநேயம், அதே தந்தை தனது மகனைப் பராமரித்து வரும் ஒரு கழைக்கூத்தாடியிடம் கண்டு நெகிழ்வதைப் படம் பேசுமிடம் படத்தில் ரணத்தை ஆற்றும் மிகச் சில இடங்களில் ஒன்று. இரண்டு காட்சிகளிலுமே மாமனார் உடனிருக்கிறார் என்பது முக்கியம்.
யாரையும் பழி வாங்கவோ, தனது வாழ்க்கை நாசமானதற்கு வேறு யாரையும் பொறுப்பாக்கவோ நாயகன் அலைவது இல்லை. ஆனால், இரவின் மடியில் ஒரு சிறுமி உறக்கத்தில் கூட வாடிக்கையாளர்கள் தன்னுடலைப் படுத்தும் பாட்டை முணுமுணுத்துக் கடக்கும் இடத்தில் உடைந்து நொறுங்கிப் போகிறான் தந்தை. இப்படியாக விற்கப்படும் அனைத்துக் குழந்தைகளது தகப்பன்மார்களில் ஒரு பிரதிநிதியாகத் தான் அவன் பிள்ளைக்கறி கேட்கும் கயவனைத் தேடித் போகிறான். தண்டிக்கிறான்.அதுவும் அவனடையும் துன்பம் தான். ஆனால் அதைக் கடக்கவேண்டியவன் ஆகிறான்.
சீட்டுக் கம்பெனி மோசடிகள் பற்றிய பதிவு, வேறு ஒரு முனையில் இருந்து அணுகப்படும் கதையில், பணம் பண்டமாக மாறாமல் பணமாகவே பரிவர்த்தனைக்கு உள்ளாகும் சந்தையின் விந்தையில் கருகும் எளிய மக்கள் வாழ்க்கை பற்றியும் இலேசாக அடையாளப்படுத்துகிறது. பணத்தை வைத்து மேலும் பணம் பண்ணும் வர்த்தகத்தில் பணத்திற்காக என்னவும் செய்யலாம் என்பதும் தவிர்க்க முடியாத விதியாக மாறுகிறது. மனித உறவுகளுக்கோ, நேயத்திற்கோ, நியாயத்திற்கோ இடம் இருக்க முடியாது போகிறது. சந்தையின் பலிபீடத்தில் அறம் என்பது நேரெதிரான வரையறை கொள்ளப்படுகிறது. படத்தின் ஆகப்பெரிய விஷயம் இது தான். ஆனால் அதை நேரடியாகக் கண்ணுற முடியாது. கார்ல் மார்க்ஸ், ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் இருவரும் இந்த உலகுக்கு அளித்துச் சென்றுள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை இதை அத்தனை விரிவாகப் பேசுகிறது.
படத்தின் இரு முக்கிய மனிதர்கள் கமல் ஹாசன், ரா கி ரங்கராஜன். படத்தைக் கிட்டத்தட்ட பெருமளவு சுமக்கவேண்டிய கதையமைப்புக்கான பாத்திரத்தை, கமல் அசத்தலாக செய்திருப்பார். இந்தப் படத்திற்கான உணர்வுகளை, உணர்ச்சிகளைப் பார்வையாளருக்கு ஏற்படுத்தும் வண்ணம் திரைக்கதைக்கேற்ற முறையில் வசனத்தைத் தனித்துவத் தெறிப்பாக எழுதி இருக்கிறார் ரா கி ரங்கராஜன்.
எஸ் என் லட்சுமி எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார், இதில் வாழ்ந்திருக்கிறார். தன்னை அம்மா என்றே விளிக்கும் கமலிடம், அவர், “நான் அம்மாவா இல்ல மாப்பிள, மாமியாராத் தான் இருந்துட்டேன்” என்கிற இடம் படத்தின் உருக்கமான காட்சிகளில் முக்கியமானது. குழந்தைகள் அப்படி நடித்திருப்பார்கள்.
‘சுவாமி நம்பிக்கை இருந்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டே’ என்று சிறையில் சொல்லும் பூர்ணம், தன்னை கமல் உற்றுப்பார்ப்பது அறிந்தவுடன் ஆத்திகனாகவே இருந்தும் தான் ஏன் உள்ளே வந்தேன் என்று சொல்லித் தேம்பும் இடமாகட்டும், வம்புக்குப் போகாதே என்று சிறையில் கமலைத் தடுப்பரண் அமைத்துக் காப்பாற்ற முனைவதிலாகட்டும், இறுதிக்கட்ட காட்சிகளில் அவரோடு பயணிக்கும் இடங்களில் ஆகட்டும் அருமையாகச் செய்திருப்பார். அவருடைய மகளாக வரும் சுகன்யாவுக்கு அளவான பாத்திரம், அதற்கேற்ப வெளிப்படுகிறார். சிறைக் காவலராக வரும் சங்கர் அனாயாசமாக செய்திருப்பார், அவருக்கு முதல் படம் இது. தவறான திசை காட்டும் பாத்திரத்தில், கொச்சி ஹனீபா மிகச் சிறந்த முறையில் நிறைவாக செய்திருப்பார். ராஜேஷுக்கும் அளவான பாத்திரம்.
படத்தின் முக்கிய கதாபாத்திரம், இளையராஜாவின் இசை. ‘ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்’ பாடலும், ‘தை பொங்கலோ பொங்கல்’ பாடலும், ‘பேய்களை நம்பாதே’ பாடலும் மட்டுமல்ல பின்னணி இசை படத்தின் உயிரான அம்சங்களில் முக்கியமானது. கல்கத்தா படகோட்டியின் வங்காளிப் பாடலில் இளையராஜாவின் குரல் சென்று கலந்து தொடரும் பாடல் அபாரமானது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் பாராட்டுக்குரிய விஷயங்கள்.
தனித்தனி செய்திகள் படிக்கிறோம் நாளேட்டில், வெறுத்துப் போகிறோம். இங்கே அங்கே கேள்விப்படுகிறோம் சலிப்படைகிறோம். நமக்கே ஏதேனும் நிகழும்போது அதிர்ச்சி கொள்கிறோம். கண்ணுக்குப் புலனாகாத இழையோட்டத்தில் இந்த சமூக அமைப்பு இவற்றையெல்லாம் இப்படித்தான் வடிவமைத்திருக்கிறது என்று உணர சில நேரம் தூக்கிவாரிப் போடவைக்கும் கலை இலக்கிய அனுபவங்களுக்குள் பயணம் செய்தாக வேண்டி இருக்கிறது.
மகாநதி அப்படியான ஒரு திரையனுபவம்.
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
சுந்தரன்
அரிஞ்சயனுக்கு அடுத்தபடி யாரென்று கேட்டால், சின்னக்குழந்தையும் சொல்லும் -அது ‘சுந்தரசோழன்’ என்று.
காவியம் படைத்த கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற காப்பியத்தில், சோழ மன்னராக வரும் சுந்தரசோழச் சக்கரவர்த்தியை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். ஆக, கல்கியின் ரேடாருக்குள் நாம் இப்பொழுது நுழைய இருக்கிறோம். அந்த பயம் ஒன்று.
மேலும், பொன்னியின் செல்வனைப் படித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், சுந்தரசோழனை நாம் சித்தரிப்பது கண்டு கோபம் கொள்ளுவார்களோ என்ற பயம் வேறு.
கல்கியின் கற்பனையில், சுந்தரசோழர் – அந்த நாள் சினிமாவில் நாகையா போல படுத்தபடுக்கையில் இருந்துப் புலம்பிக்கொண்டிருப்பார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே தனது ஃபிளாஷ்பேக்கில் ‘சிங்களத்து சின்னக்குயிலே’ என்று மந்தாகினியுடன் டூயட் பாடியிருப்பார். கல்கியின் கற்பனையோ கடலளவு- நமது கற்பனையோ கைம்மண் அளவு! கல்கி ஐந்து பாகங்களில் எழுதிக் கலக்கிய சமாச்சாரங்களை ஒரே அத்தியாயத்தில் சொல்வது பொன்னியாற்று வெள்ளத்தை சங்குக்குள்ளே அடக்குவது போலத்தான். ஆனால் சங்குக்குள்ளே இருந்தாலும் அது காவிரி நீரன்றோ? இந்த முத்தாய்ப்புடன் இனி நீங்கள் படிக்கலாம்.
அவன் அரிஞ்சயன் மகன்; வைதும்பராயன் மகளான பேரழகி கல்யாணிக்குப் பிறந்தவன். பராந்தகன் என்றே பெயர் வைத்தனர். அழகில் மன்மதன் போல விளங்கிய அந்தக் குழந்தை பராந்தக மன்னனின் செல்லப்பேரனாயிற்று. அவனை ‘சுந்தரா’ என்று அழைத்தான். நாமும் சரித்திரத்தில் பல பேரழகிகளைப் பற்றி விலாவாரியாகச் சிலாகித்து எழுதி வருகிறோம். ஆனால் எந்த நாயகனையாவது அழகன் என்று ஒருமுறை கூட சிலாகித்து எழுதவில்லை. அந்த விஷயத்தில் இது ஒரு முதல். அழகின் காரணமாக மக்கள் அவனுக்கு இட்ட பெயர் சுந்தரன்- அதுவே சரித்திரத்திலும் நிலைத்தது.
சுந்தரசோழன், சிறுவனாக இருந்த போதே ஈழத்துப் போரில் கலந்து கொண்டான். ஈழம் சென்று சோழர்கள் தோல்வியடைந்து திரும்பினார்கள். சுந்தரன் மட்டும் திரும்பவில்லை. சுந்தரனைப் பற்றிய செய்திகள் தஞ்சைக்கு கிடைக்காமல் போக, அனைவரும் கவலை அடைந்திருந்தனர். அப்போது ஈழத்தில், சோழவீரர்கள் சுந்தர சோழனை ஒரு தீவில் கண்டுபிடித்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள். இறக்கும் தருவாயில் இருந்த பராந்தக சோழர் சுந்தர சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்டவேண்டுமெனவும், அவருடைய வாரிசுகளே சோழதேசத்தினை ஆள வேண்டுமெனவும் கண்டராதித்தரிடம் கூறிவிட்டு சிவபதம் அடைந்தார். கண்டராதித்தரும் ராஜாங்க விசயங்களை வெறுத்தபடியால் ஒப்புக் கொண்டார். தான் அரசனானபின்னும், அரிஞ்சய சோழனிடமும், அவர் மகன் சுந்தரசோழனிடமும் ராஜாங்க காரியங்களைக் கண்டராதித்த சோழர் ஒப்படைத்தார். இதில் பல விஷயங்கள் நாம் கேட்ட பழைய கதை.
957: அரிஞ்சயன் மரணமடைந்தான். ஏற்கனவே திட்டமிட்டபடி, சுந்தரசோழன் பட்டமேற்றான். அவனது மூத்த மைந்தன் ஆதித்த கரிகாலனுக்கு அன்று வயது வயது 15. மீசை முளைக்கத் துவங்கிய பருவம். உடலோ கடும் போர்ப்பயிற்சியை மேற்கொண்டதால் தேக்கு மரம் போல உறுதியான உடல். சுந்தரசோழன் பட்டமேற்கொண்ட அன்று மாலை ஆதித்தன் கேட்டது: “அப்பா, வீரபாண்டியனிடம் நாம் தோற்றது என் மனதில் ஆறாத வடுவாக உள்ளது. அந்தப் போரில், நம் அரசகுல இளவரசன் தலையை அவன் வெட்டிப் பந்தாடிய நிகழ்ச்சி இன்றும் என் இரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது. அவன் தலையைக் கொய்யாமல் இருப்பது என் தூக்கத்தைக் கெடுக்கிறது. தந்தையே! என்று நமது பாண்டிய நாட்டுப் படையெடுப்பு?”
ஆதித்தனின் ஆவேசம், சுந்தரசோழனை ஒரு கணம் கதி கலங்க வைத்தாலும், அவன் வீரம் அவனுக்குள்ளும் ஒரு உத்வேகத்தைக் கிளப்பியது.
“நன்று மகனே. நன்றே சொன்னாய்! ஆனால்- இன்னும் சில வருடம் பொறுக்கவேண்டும் மகனே. ஐந்து வருடத்துக்குள் நடக்கும். அதற்குள், நமது படையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும் அதை நடத்திச் செல்ல நமக்கு ஒரு இருபது வயதான தலைவன் தேவை” என்றான். அரசனின் கண்கள் ஆதித்தனை ஊடுருவின. ஆதித்தனும் புரிந்து கொண்டான் – அந்த இருபது வயது தளபதி தான் தான் என்று. ஆதித்த கரிகாலனுக்கு அந்த ஐந்து வருடங்கள் மெதுவாக நகர்வது போலத் தோன்றியது.
சுந்தர சோழன் ஆட்சி ஏறும்போது தெற்கில் பாண்டியர்களும் , வடக்கில் இராட்டிரகூடர்களும் வலிமையில் மேலோங்கியிருந்தனர். சோழ நாட்டின் எல்லை சுருங்கிப் போயிருந்தது.
962 – சேவூர்ப் போர்: சொன்னதைச் செய்தான் சுந்தரசோழன். பட்டம் பெற்று தன் ஐந்தாம் ஆண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்துவந்த வீரபாண்டியன் மீது படையெடுத்தான். அந்தக்களம், முன்பு சோழர் தோற்ற அதே சேவூர்ப் போர்க்களம். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் இந்த இரண்டாம் சேவூர்ப்போர் நடந்தது. செந்நீர் ஆறாக ஓடியது; பல யானைகள் மடிந்தன. ஆதித்த கரிகாலன் போரில் கலந்து கொண்டான், வீரபாண்டியனுடன் விளையாடினான்’ என்று லீடன் பட்டயம் பகர்கின்றது. பாண்டியனுக்கு சிங்கள மன்னன் நான்காம் மகிந்தன் படையுதவி செய்திருந்தான். சோழப்படையில் நின்று போரிட்ட கொடும்பாளுர் சிற்றரசனான ‘பராந்தக சிறிய வேளார்’ பாண்டிய நாட்டிற்குள் படையோடு சென்று பாண்டியனைக் காட்டில் புகுமாறு விரட்டினான்; சுந்தரசோழன், ‘பாண்டியனை சுரம் இறக்கிய பெருமாள்’ என்று பெயர் கொண்டான்.
முதலில் இதைப்படிக்கும் போது .. (உங்களைப்போலவே) ‘ சுந்தரசோழன் எதற்காக வீரபாண்டியனின் காய்ச்சலை குணமாக்கினார்?’ என்று யோசித்தேன். பிறகு ஆராய்ச்சி செய்து, சுரம் என்பது கரிசல் காடு என்றறிந்தேன்! பொதுவாக, கரிந்த மரங்களைக் கொண்ட காடு ‘சுரம்’ எனப்படும். வீரபாண்டியன் சுரம் புகுந்தான்.
‘பராந்தக சிறிய வேளார்’, வீர பாண்டியனுக்குத் துணையாக வந்த இலங்கைப் படைகளைத் தாங்கிக் கொண்டே இலங்கைக்கும் சென்றான்;
965 – ‘பாண்டியனை அடியோடு அழிக்க வேண்டுமானால் – அவனுக்கு உதவி செய்து வரும் ஈழத்தை வெல்ல வேண்டும்’ என்று எண்ணிய சுந்தரசோழன் ஈழநாடு மீது படையெடுப்பு நடத்தினான். ஈழ நாட்டு தளபதி சேனன், சோழப்படைகளுடன் போரிட்டான். சோழர்கள் தோல்வியடைந்தனர். கொடும்பாளூர் சிறிய வேளாண் கடும்போர் செய்து, போர்க்களத்தில் இறந்தான். சோழர்கள் ஈழத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து பின் வாங்கினர்.
வீரபாண்டியனை எதிர்த்த ஆதித்த கரிகாலனுக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர். அவருள் ஒருவன் முற்கூறிய வேளார். மற்றொருவன் -‘பூதி விக்கிரம கேசரி’ என்னும் கொடும்பாளுர்ச் சிற்றரசன். சோழ மன்னர் கொடும்பாளுர்ச் சிற்றரசரிடம் பெண் கொடுத்தும், பெற்றும் வந்தனர். ஈழத்தை வெல்லாமல் போனாலும், பாண்டியரை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்தாயிற்று. பின், பராந்தகன் ஆண்ட காலத்தில் இழந்த தொண்டை மண்டலத்தை மீட்பது ஒரு குறிக்கோள் ஆனது.
சுந்தரசோழன் தொண்டை நாட்டைக் கைப்படுத்த முயன்றான். சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன் இவர்தம் கல்வெட்டுகள் தொண்டை நாட்டில் மிகுதியாகக் கிடைப்பதையும், மூன்றாம் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் குறைந்து காணப்படுவதையும் நோக்க, முதற்பராந்தகன் இறுதிக் காலத்தில் இழந்த தொண்டை மண்டலம் அவன் மரபினனது இடைவிடா முயற்சியால் சிறிது சிறிதாகக் கைப்பற்றப் பட்டு வந்தது என்பது தெரிகிறது. இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர் ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது.
966 – ‘ஈழத்திடம் தோற்று, சோழர்கள் தொண்டை மண்டலத்தில் முனைப்பாகப் போர் புரிந்தது’, – வீரபாண்டியனுக்கு தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்தது. மீண்டும் சோழ-பாண்டிய யுத்தம். இந்த யுத்தத்தில், வீரபாண்டியன் -ஆதித்தன் இருவரும் நேருக்கு நேர் போரிட்டனர். சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல் ஆதித்தன் பாண்டியருடன் போரிட்டான். இறுதியில், வீரபாண்டியன் வீழ்ந்தான். வீரபாண்டியன் தலை வெட்டப்பட்டது. ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையை, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான். ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன்’ என்ற பெயர் – ஆதித்த கரிகாலனுக்குக் கிடைத்தது. சுந்தரன் ஆதித்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். ஆதித்த கரிகாலன் சோழநாட்டுக்குப் பட்டம் பெற்று ஆளாவிட்டாலும். தொண்டை மண்டலத்துக்கு ராஜாவாக இருந்தான். தன் பெயரில் கல்வெட்டுகள் வெளிவரக் காரணமாக இருந்தான். தந்தைக்கு ஆட்சியில் உதவியாக இருந்தனன்; அதனாலோ அவன் தன்னைப் பரகேசரியாகக் குறித்தான் போலும்.
பொன்னியின் செல்வனைப்பற்றி சில சுருக்கமாக சொல்லியே ஆகவேண்டும்.
வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் நண்பன்- காஞ்சியிருந்து தஞ்சாவூர் வந்து, சோழ அரசியலில் சிக்கிக் கொள்கிறான். குந்தவையின் காதல் வலையிலும் தான்.
ஈழத்துக்கு தூது சென்று அருண்மொழியை சந்தித்து நண்பனாகிறான். சதிகள், துரோகம், காதல், அன்பு என்று பல உணர்ச்சிகள் பொங்கும் பல பாத்திரங்கள். சோழ குலத்தை முழுமையாக அழிக்க நடக்கும் சதி முறியடிக்கப்படுகிறது- ஒன்றைத்தவிர. ஆதித்தன் மட்டும் கொலை செய்யப்படுகிறான். பழுவேட்டர், சம்புவரையர் – மதுராந்தகனை மன்னனாக்க முயல்கின்றனர். அருண்மொழி மன்னனாக மக்கள் விழைய, அருண்மொழி அரசுரிமையைத் தியாகம் செய்து மதுராந்தகனை மன்னனாக்குகிறான். இது பொன்னியின் செல்வனெனும் காவிரியை ஒரு சங்குக்குள் எடுத்திருக்கிறோம்.
969 -சுந்தரசோழன் உயிருடன் இருந்த பொழுதே ஆதித்தன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை வழக்கைப்பற்றிப் பலர் ஆய்ந்து வரும் நேரத்தில் நாமும் குட்டையைக் குழப்புவானேன்? ஆனாலும் அதைப் பேசிப்பார்ப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வம் அதை எழுதத் தூண்டுகிறது.
‘விண்ணுலகைப்பார்க்கும் ஆசையில் ஆதித்தன் மறைந்தான்’ -என்கிறது சரித்திரம். இதற்குக் காரணம் என்ன? இதை கல்கி கிளப்பிவிட, பல சரித்திர நூலாசிரியர்கள் பல கதைகளைப் புனைந்தனர்.
சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதாச கிரமவித்தன் என்ற நான்கு சகோதரர்கள் இந்தக் கொலை செய்தனர் என்பதை சரித்திர ஆதாரம் காட்டுகிறது. ஆனால் இவர்கள் அம்புகளானால், எய்தவர் யார்?
முதல் குற்றவாளி: கண்டராதித்தன் மகனான உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால், சிற்றப்பனான அரிஞ்சயன் நாட்டை ஆண்டான், பின்னர் அவன் மகனான சுந்தரசோழன் அரசன் ஆனான்; அவனுக்குப் பின் பெரு வீரனான ஆதித்த கரிகாலனே பட்டம் பெறவேண்டியவன். அவன் பட்டம் பெற்றால் தான் தன் வாழ்நாளில் அரசனாதல் என்பது இயலாதென்பதை அறிந்த மதுராந்தகன் ஏதோ ஒரு சூழ்ச்சியால் ஆதித்தனைக் கொலை செய்துவிட்டான்- என்று சிலர் கூறுகின்றனர்..
அடுத்த கோணம்: அருண்மொழி-குந்தவை கூட்டு சேர்ந்து இந்தக் குற்றத்தை செய்தனர் என்று சொல்லி நாம் அனைவரது எதிர்ப்புக்கும் ஆளாகலாம். அந்தக் கூற்றின்படி: ஆதித்தன் வடக்கில் இராட்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்தியுதடன், போரில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பொன்னால் காஞ்சியில் ஒரு மாளிகையை அமைத்தான். போரில் பெற்ற செல்வங்களில் ஒரு துளியைக் கூட தஞ்சைக்குக் அனுப்பவில்லை. அவன் தனி அரசன் போலவே செயல்பட்டான் எனக் கூறப்படுகிறது, இதனால் சிற்றரசர்களின் ஒரு பிரிவினர் அவன்மேல் அதிருப்தியடைந்தனர். சோழ ராஜ்ஜியத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற குந்தவை ஆதித்தனின் இந்த செயலை விரும்பவில்லை. குந்தவை தன் இளைய தம்பி ராசராசனின் மூலமே சோழப் பேரரசு உயர்ந்த நிலையை எட்டும் என நம்பினாள். இப்படி ஒரு மோடிவ் .
இன்னொரு கூற்று: பாண்டியன் ஆபத்துதவிகள், வீரபாண்டியனின் மரணத்துக்குப் பழிவாங்கத் துடித்தவர்களின் கூட்டு முயற்சி.
எப்படியோ, நாமும் நமது பங்கைச் செய்துவிட்டோம்.
சோழக்குடிமக்கள் ஆதித்தனுக்குத் தம்பியான அருள்மொழித் தேவனையே (இராசராசனை) பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை; தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான்; அவனை அரசனாக்கினான்; தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். அவனுக்குப் பின் தானே அரசனாவன் என்னும் ஒப்பந்தப்படி இச்செயலைச் செய்தான்.
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். ‘பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது.
சுந்தரசோழன் காஞ்சிபுரத்தில் தனக்கென்று இருந்த பொன்னாலான மாளிகையில் நோயுற்று கி.பி 973 ல் காலமானான். அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ எனப்பட்டான். சுந்தரசோழன் மலையமான்களின் பரம்பரையைச் சேர்ந்த வானவன் மாதேவி என்ற இவர் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள்.. வானவன் மாதேவியார்க்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், குந்தவை என்னும் மக்கள் மூவர் இருந்தனர்.
குந்தவையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் எழுந்தருளுவித்தார். .தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. அதை எழுதியதில், நாமும் பெருமை கொள்வோம். சோழ நாட்டின் சரித்திரத்தை இனியும் பேசுவோம்.
நாதாந்தம் – மீனாக்ஷி பாலகணேஷ்
(தாகூர்- கீதாஞ்சலி-பாடல் 2)
தாங்கள் பாட்டிசைக்கும்படி எனக்கு உத்தரவிடும்போது எனது இதயம் பெருமையில் பூரித்து வெடித்துவிடும் போலுள்ளது; தங்கள் முகத்தை நோக்கும் எனது கண்களில் கண்ணீர் ததும்புகிறது.
எனது வாழ்விலுள்ள கொடூரமான முரண்பாடுகள் இனிமையானதொரு இன்னிசையில் கரைந்தோடுகின்றன – ஒரு பறவை ஆனந்தமாகத் தனது சிறகுகளை விரித்துக்கொண்டு கடலைக் கடந்து பறப்பது போன்று எனது ஆராதனையும் தனது சிறகுகளை விரித்தெழுகின்றது.
தாங்கள் எனது பாடலைக்கேட்டு மகிழ்கின்றீர்கள் என நானறிவேன். தங்கள் முன்னிலையில் ஒரு பாடகனாக மட்டுமே நான் வர இயலும் எனவும் அறிவேன்.
என்னால் அடைவதற்கு இயலாத தங்கள் அடிகளை (பாதங்களை) எனது இசையின் பரந்த சிறகுகளின் நுனியினால் தொடுகிறேன்.
அந்த இசையினைப் பாடும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்புண்டு என்னையும் மறந்து, தங்களை, எனது கடவுளை, நான் ‘எனது நண்பனே’ என அழைக்கின்றேன். (தாகூர்- கீதாஞ்சலி-பாடல் 2)
———————————————————————–
எல்லா இசையும், நமது சாஸ்திரீய சங்கீதம் முதற்கொண்டு, திரை இசை, நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்திலும் ஒரு தெய்வத்தன்மை ஊடுருவி நிற்கின்றதென்பது மறுக்க இயலாத உண்மை. ஒரு பாடலையோ இசையையோ படைக்கும் / இசைக்கும் கலைஞனுக்குள் இறைமை நிறைந்து நின்று தன்னை அப்பாடலாகவோ இசையாகவோ வெளிப்படுத்திக் கொள்கின்றதென்பதும் மற்றுமொரு பேருண்மை. இதனைத்தான் வள்ளலார் நாதாந்தம் என்கிறார். அந்த இறைவனையும் நாதாந்த தெய்வம் என அழைத்து மகிழ்கிறார்.
————————————————————————-
1983ல் மோட்ஸார்ட் எனும் மேற்கத்திய இசைமேதையைப் பற்றிய அற்புதமானவொரு திரைப்படம் ‘AMADEUS’ எனும் பெயரில் வெளிவந்தது. மோட்ஸார்ட் பிறவி இசைமேதை. ஆனால் அவனுடைய மேதைத்தனமும், விளையாட்டுப் பிள்ளைத்தனமும் சக கலைஞர்களிடையேயும் அவனை ஆதரித்த அரசவைப் பெருமக்களிடமும் சினத்தையும் பொறாமையையும் தான் வளர்த்தன. ஆகவே எத்தனை அருமையான (அவனுடைய இறப்பிற்குப்பின் தான் அவன் படைப்புகள் பிரபலமாயின) படைப்புகளைப் படைத்திருந்தும் அவை பெரியமனிதர்களின் ஆதரவைப் பெறவில்லை. திரைக்கதையின்படி, மிகவும் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு அவன் மரணமடைகிறான். தன் இறுதி நாட்களில் ‘இறந்தவர்களுக்கான இசை வழிபாடு’ (Requiem Mass) ஒன்றை இயற்ற முயன்று அதனை முடிக்காமலே இறக்கிறான். கையில் பணமில்லாததனால் ஏழைகளுக்கு அளிக்கப்படும் மிக எளிய சவ அடக்கம் அவனுக்குச் செய்யப்படுகிறது.
திரைக்கதையில் அவனைப் பொறாமையால் மிகவும் வெறுத்த, ஆனால் பெரிதும் வியந்த ஒரு இசைக்கலைஞரால் (சாலியேரி (Salieri) எனும் பெயர்கொண்ட அவர் புத்தி சுவாதீனமிழந்து ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார்) மோட்ஸார்ட்டின் இசையின் மேன்மை இவ்வாறு விவரிக்கப்படுகின்றது:
“இசை எல்லாம் அவனுடைய மூளையில் அப்படியப்படியே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது போலும்! ஒரு ஸ்வரம், அது வெகு பொருத்தமான இடத்தில் வந்து அமரும் அழகு; இசைத் தொடர்கள், அவற்றின் அமைப்பு எப்படிப் பொருந்தி நிற்கும்! பிஷப்பின் மாளிகையிலும் அரசர்களின் அவையிலும் ஒலித்த அந்த சங்கீதம் ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல! அது நிச்சயமாகக் கடவுளின் குரலேதான்! அந்த இசையின் சொல்லமுடியாத அழகை (இனிமையை) நான் கேட்டேன். அதில் திளைத்தேன்….” என இவ்வாறு சக கலைஞன் ஒருவனால் விவரிக்கப்படும் மோட்ஸார்ட்டின் இசை நிச்சயமாக தெய்வத்தன்மை வாய்ந்தது. கடவுளே அந்த இசையில் குடியிருந்தாலொழிய, அந்த இசையாக உருவெடுத்திருந்தாலொழிய அப்படிப்பட்டதொரு இசையை உருவாக்க யாராலும் முடியாது.
எல்லாரையும் போல நானும் மேற்கத்திய இசையின் பல இசை அமைப்புகளையும் ஆபராக்களையும் கேட்டிருக்கிறேன். ஒருமுறை பெர்லின் நகரில் ஒரு சின்னஞ்சிறிய தேவாலயத்தில் ஒரு குளிர்கால மாலையில் மோட்ஸார்ட்டின் இந்த ‘இறந்தவர்களுக்கான இசை வழிபாடு’ இசைக்கப்படப்போவதாக அறிவிப்பு வந்திருந்தது. நம்ப மாட்டாத வகைக்கு சாரிசாரியாக மக்கள் கூட்டம் சர்ச்சை நோக்கிச் சென்றதில் அங்குள்ள சிறிய ஹால் நிரம்பி வழிந்தது. நாங்கள் பலர் குறுகலான படிவழியாக மேலேறி ஆர்கன் எனும் இசைக்கருவி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர இடமின்றி நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தோம்.
இங்கு குளிர் இன்னுமே அதிகமாக இருந்தது. உட்காரவும் இடமில்லை. எல்லாரும் குளிரில் நடுங்கியபடி, கோட்டுகளையும், கம்பளிக் கையுறைகளையும் கூடக் கழற்றாமல் நின்றவண்ணமே இருந்தோம். இது எல்லாம் இசை ஆரம்பிக்கும்வரை தான். பின் இசைதான் எங்கள் சிந்தையை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டது.
‘கடவுளே, இவர்களுக்கு, நிரந்தரமான, அமைதியான ஓய்வைத் தந்தருள் (Requiem aeternam),’ என்ற பொருள்பட ஆரம்பித்த வழிபாட்டில் உள்ளம் ஒருமைப் பட்டது.
இந்த இசை வழிபாட்டில், அதாவது, ‘மாஸ்’-ல் (Mass) நான்கு அல்லது ஐந்து பகுதிகள் உண்டு. முதல் பகுதி, ‘கடவுளே என் மீது கருணை காட்டும் (Kyrie eleison),’ எனப் பாடுவது. வயலின், புல்லாங்குழல் இவை இசைக்கப்படுவதைத் தொடர்ந்து ‘ஸொப்ரானோ’ (Soprano) பாடகி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது உடல் எல்லாம் புல்லரிக்கும். பின் படிப்படியாக மற்ற குரல்களுடன் சேர்ந்தும் தனியாகவும் பாடும்போது, பொருள் விளங்காவிடினும் (பெரும்பான்மையாக இவை இலத்தீன் மொழியில் இருக்கும்) ‘இது ஒரு இசை வழிபாடு – இசையே பிரதானம்,’ என்ற உணர்வில் தவறாமல் கண்ணீர் பெருகிவிடும். ‘கடவுளே, எத்தனை விதமான இசைமரபுகள், அத்தனையும் சத்தியமான அழகுபொங்கும் இறைவடிவங்கள் அல்லவோ,’ என்று மயிர்க் கூச்செடுக்கும்.
உணர்ச்சியும், வாழ்வில் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்ட மேதையான ஒரு இளம் இசைக்கலைஞன், தனக்காகவே எழுதிக்கொண்ட இறுதி இசை வழிபாடு, ஆரம்பித்த உடன் எல்லாரையும் ஒரு அழுத்தமான துயரவலையில் மூடிப்பொதிந்து கொண்டது. ஒரு பகுதி முடிந்து இன்னொரு பகுதி ஆரம்பிப்பதற்குமான இடைப்பட்ட சிறு நொடிகளில் கூட ஒரு சப்தமுமில்லை. ஒரு மோனத்தில் மூழ்கிய வண்ணம் அனைவரும் மோட்ஸார்ட்டிற்கு மானசீகமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 50 நிமிஷங்களின் பின் இசை முற்றுப்பெற்றதும் இதயங்கள் கனத்து இருந்ததால் ஒரு கைதட்டல் ஒலியும் இல்லை. இது இலவச நிகழ்ச்சியாதலால், உண்டியல் ஒன்றை ‘சர்ச்’சைச் சேர்ந்த சிலர் கொண்டு வர, எல்லாரும் அதில் தங்களால் இயன்றதைப் போட்டோம். பத்தும், இருபதுமாகத்தான்! மோட்ஸார்ட் இறந்தபோது இப்படிச் செய்திருந்தால் அந்த மேதைக் கலைஞனுக்குரிய கடைசி மரியாதையை நன்றாகச் செய்திருக்கலாமே என்கிற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் அப்பொழுது ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
————————————————————————
ஹிந்துஸ்தானி இசை – இதில் ஈடிணையற்றதொரு அற்புதம் ஒளிந்திருப்பது அதனை ஆழ்ந்து கேட்கத் தொடங்கியபோதுதான் மனதில் உறைத்தது. இதில் துருபத் இசை (Dhrupad) என ஒரு வகை – மிக மிகப் பழமையானது. இதன் விளக்கத்தைக் கேட்டபோது புல்லரித்தது. இந்துக்களின் வழிபாட்டிற்கெனவே சாமவேதத்திலிருந்து பிறந்த இந்த இசை வகை ஏற்படுத்தப்பட்டது. இந்துக்களால் பாடப்பெற்ற இந்த துருபத் பாணி இசையானது, பின்பு இஸ்லாமியர்களான டகர் (Dagar) குடும்பத்தோரால் கிட்டத்தட்ட 20 தலைமுறைகளாகப் பாடப்பட்டு வருகிறது. இங்கு இந்த இசையைப் பற்றி விளக்கப் போவதில்லை. இந்த இசை என்னுள் ஏற்படுத்திய அற்புதமான அனுபவத்தை மட்டுமே விளக்க முயல்கிறேன்.
டகர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இசைவல்லுனரான உஸ்தாத் நஸீர் அமினுத்தின் டகரின் ஒரு இசைப்பதிவை முதன்முதலில் கேட்டதும் சிந்தையும் மனமும் அப்படியே இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்துவிட்டது. பாடலும், காலை நேரத்திற்கேயான ‘பைரவ்’ எனும் ராகமும் (பாடல் வரிகள், சொற்களுக்கு ஹிந்துஸ்தானி இசையில் பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை என்பார்கள்; ராகம், ஆலாபனை, பாடும் முறையே பிரதானம்) ‘சிவே ஆதி மத அந்த’ எனும் சிலவேயான சொற்களும் அருமையிலும் அருமை. முழுமுதற் கடவுளான சிவன் ஆதியும் அந்தமும் ஆனவன் எனவும் பொருள் கொள்ளலாம். துருபத் முறை இசையில் ஒவ்வொரு ஸ்வரமாக ராகத்தை விஸ்தரித்துக் கொண்டுபோகும் விதம் தனித்தன்மை வாய்ந்தது. பைரவ் எனப்படும் ராகமே முதலில் சிவபெருமானால் புனையப்பட்டது எனவும் கூறுவார்கள். சிந்தையை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை துருபதின் ஆலாபனை நுட்பங்கள். அதிகாலையில் இந்தப் பதிவைக் கேட்டால் உடலெல்லாம் சிலிர்க்கும். புளகாங்கிதம் நிறையும். யூ ட்யூபில் உள்ளது இந்த பதிவு. ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். அந்த நாட்களில் இந்த இசைப்பதிவை யாரிடமிருந்தோ பெற்றுப் பதிவு செய்து வைத்துக்கொண்டு காஸட் தேயும்வரை திரும்பத் திரும்பக் கேட்டதுண்டு.
இப்போதும்கூட இதை எழுதுவதற்காகவே அதனை கேட்கின்றேன். ஆனால் எழுத்து நின்று விட்டது. வேறு வேலை ஒன்றும் செய்ய இயலாதவொரு மோனநிலையில் என்னை ஆழ்த்திவிட்டது இவ்விசை.
தெள்ளத்தெளிவாக ஒரு கருத்து துலங்குகிறது: ஒரு இசைஞன் இசையை இசைப்பதில்லை. ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்து எழும் இசையாகவே அவன் மாறிவிடுகின்றான்; எப்போது மாறிவிடுகிறானோ அப்போதே அவனுக்கு முக்தி சித்திக்கின்றது. பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் பீம்ஸேன் ஜோஷி, பண்டிட் குமார் காந்தர்வா, இன்னும் பலரின் இசையைக் கேட்டால் இது எவ்வளவு பெரிய தவம் என்று புரியும்.
————————————————————————–
இனி நமது தென்னிந்திய இசைக்கு வரலாம் – தியாகராஜ சுவாமிகள் பாடிவைத்தபடி எத்தனையோ மஹான்கள்; அமிர்ததாரையாகப் பொழியும் பாடல்கள், ராகங்கள், பாடகர்கள். அன்றிலிருந்து இன்றுவரை இசைவானில் ஜ்வலிக்கும் தாரகைகள்- யாரைப் பற்றி எழுதி முடியும்?
ஒரேயொரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தியாகராஜ ஆராதனை என்று ஆண்டுதோறும் திருவையாற்றில் நடக்கும். அதில் பங்கேற்று, பஞ்சரத்னம் பாடுவது ஒரு தனியான தேவானுபவம்.
‘தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்’ எனும் வள்ளலாரின் கூற்றுக்கிணங்க, பாடும் எவரும் பெரிய இசை வல்லுனராகவே இருக்கத் தேவையில்லை. ‘ஜகதானந்தகாரகா,’ என நாட்டை ராகத்தில் சீனியர் வித்வான்கள் தொடங்கிவைக்க, ஆயிரம் ஆயிரம் குரல்கள் இணைந்து அஞ்சலி செலுத்தும் அந்த நேரத்தில் உடலில் ஒரு புது சக்தி புகுந்து கொள்ளும்.
பந்தலுக்கு வெளியே நின்றுகொண்டு பாடினாலும், ஒரு மஹானுக்கு அஞ்சலி செலுத்தும் பேரார்வத்தில் ‘நாம்’ என்பதே மறந்தும் போகும். ஸ்வரங்களும் சாஹித்யங்களுமாக அந்த இறைமை நம்மைச் சூழ்ந்து அரவணைக்கும். கண்ணீர் ஆறாகப் பெருகியோடக் குரல் தழதழக்கும். நாம் பிறவி எடுத்ததே இந்த அனுபவத்திற்குத்தானே என ஒரு எண்ணம் தோன்றும். நாமே பஞ்சரத்தினங்களாக மாறி உடல், குரல், நேரம், காலம் எனும் பிரக்ஞை துளிக்கூட இன்றி மாறிவிடலாம்.
இந்த அசாத்தியமான நிகழ்வு- ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்ட தினத்தில், நேரத்தில் கூடிப் பாடி ஒரு மஹானுக்கு அஞ்சலி செலுத்துவதென்பது உலகிலேயே இங்குதான் நிகழ்கிறது.
——————————————————————
தாகூரின் கவிதையைப் படித்து ரசித்தபோது இவையெல்லாம் சிந்தையில் காட்சிகளாக கருத்துக்களாக எழுந்தன. இந்தக் கவிதையின் சாராம்சத்தை ஒவ்வொரு நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தாலும் அருமையாக உள்ளது.
என்ன ஆச்சரியம்! இது நமது சென்னையில் சங்கீதத்திற்கென்றே ஒதுக்கப்பட்ட காலகட்டம்!
ஜனவரியில் பகுளபஞ்சமியன்று தியாகராஜ ஆராதனையும் திருவையாற்றில் நடைபெறும்.
வாசகர்களுடன் என் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
———————————————————————
ரத்னாகரனின் மனைவி – சந்திரிகா பாலன்
மூலம் : சந்திரிகா பாலன்
தமிழில் :தி.இரா.மீனா
ரத்னாகரனின் மனைவி
ஒரே கதையில் இரண்டு பாத்திரங்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தால், கதாசிரியருக்கு அது ஒரு பிரச்னையாக இருக்கும். வாழ்க்கையிலும் கூட
உறவில் நெருக்கமான இருவர் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் அதுவும் பிரச்னைதான்.ஒரு பாத்திரத்தின் பெயரைக் கதாசிரியர் ஏன் மாற்றி
வைக்கக் கூடாதென்று நீங்கள் கேட்கலாம். கதையைப் படித்துக் கொண்டு போகும் போது அதன் காரணம் உங்களுக்குப் புரியும்.
இந்தக் கதையில் இடம் பெறும் இரண்டு ரத்னாகரன்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
ஒரு ரத்னாகரனின் டிரைவர் இன்னொரு ரத்னாகரன்.
ரத்னாகரன்களின் மனைவியருக்கு வெவ்வேறு பெயர்கள்.டிரைவர் ரத்னாகரனின் மனைவி இந்து லேகா, அவள் அரசு நடத்தும் அங்கன்வாடியில் துப்புரவுத் தொழிலாளியாகவும், ஆயாவாகவும் இருப்பவள்.
இப்போது இந்துலேகா சாதப் பானையை அடுப்பிலிருந்து கீழே இறக்கிவைத்து விட்டு,சுத்தம் செய்து ,மிளகாய்ப் பொடி மற்றும் உப்பால் மேல்பூச்சு செய்யப்பட்டிருந்த மீன்களை வாழை இலையில் சுற்றி நெருப்பில் வைத்து சுடுகிறாள். வாழை இலையில் சூடு சரியாகப் படும்படி அதைப் போட்டு திருப்புகிற போது அவள் மகள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறாள்.
“அம்மா, அந்தக் கொள்ளைக்காரன் எப்படி புலவன் ஆனாரென்று சொல்லேன்.”
“எனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டேனே” இந்துலேகா மகளைக் கோபமாகப் பார்க்கிறாள்.
“அப்படியானால் நான் என்ன செய்யட்டும் அம்மா?இது எனக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட ப்ராஜக்ட்.நான் இதை வகுப்பில் நாளை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டும்.”
“அப்பா வந்த பிறகு அவரிடம் கேள்.” சொல்லிக் கொண்டே இந்துலேகா தன் பழைய கவுனையும், துண்டையும் எடுத்தாள்.வாழை இலையைத் திருப்பி வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே இருக்கிற தனித்த பகுதிக்குப் போனாள்.
மகளுக்கு எரிச்சலும், கோபமும் உண்டாயின.
தனித்த பகுதி என்பது கழிவறையும்,குளியலறையும் சேர்ந்தது.எல்லாக் கழிவறைகளையும் போல இதுவும் நான்கு சுவர்கள்,மேற்கூரை உடையதுதான்,ஆனால் ஒரு குறிப்பிட்ட வித்தியாசம், சிமெண்ட் தரை பிளந்து அதிலிருந்து புல் வளர்ந்து அது புல்வெளி போலிருப்பது தான். ஒரு தடவை, ஒரு மஞ்சள் பாம்பு புல் பகுதியிலிருந்து வந்து விட்டது.அது சாதாரணப் பாம்பில்லை, விஷப்பாம்பு. அதைப் பார்த்ததும்
இந்துலேகா அலறிக் கொண்டே வெளியே ஒடி வந்து விட்டாள்.
வராந்தாவில் உட்கார்ந்திருந்த ரத்னாகரன் ஓடி வந்து அதை அடித்துக் கொன்றான். இந்துலேகா பாம்பு ஒளிந்து கொண்டிருக்கிறதா என்று கவனமாகப் பார்த்து விட்டு, இல்லையென்று உறுதி செய்து கொண்டு நிம்மதியாக குளிக்க ஆரம்பித்தாள். ஆட்டம் காணும் படிகளில் ரத்னாகரன் ஏறி வருவதற்கு முன்னாலே அவள் குளித்தாக வேண்டும்.கழிவறையின் மட்டமான தரை பற்றி அவள் எப்போதெல்லாம் பேசுகிறாளா ,அப்போது இந்த மாதிரியான ஒரு வீட்டைக் கட்ட அவன் எத்தனை பாடுபட்டு
இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது என விளக்கம் தருவான்.
தாய் வெளியே வருவதற்காக மகள் கழிவறையின் வெளியிலேயே காத்திருந்தாள். இந்துலேகா வெளியில் வந்தவுடன் “அம்மா, இப்போது நான் லிஜியின் வீட்டிற்குப் போய் வரட்டுமா? சீக்கிரம் திரும்பி வந்து
விடுகிறேன். லிஜியின் அப்பா கல்லூரியில் வேலை பார்ப்பதால் கொள்ளைக்காரன் எப்படி புலவர் ஆனார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.”
ஆனால் தான் வாழ்கிற சமுதாயத்தில், திருடர்களின் உலகம் எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கும் அம்மா, சிறிய பெண்ணாக இருந்தாலும் கூட இருட்டு நேரத்தில் எப்படித் தன் மகளை இன்னொருவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பாள்? மகள் திரும்பி வரும்வரை அம்மாவால் நிம்மதியாகக் காத்திருக்க முடியுமா ?
”வேண்டாம், அப்பா வரும் வரை பொறு” என்று கடுமையாகச் சொல்லி விட்டு வீட்டிற்குள் போனாள்.
இரண்டாவது ரத்னாகரனின் மனைவி பிரவீணா இப்போது கழிவறையில் இருந்து வெளியே வந்தாள்.அவளுடைய கழிவறைத் தரையிலும் புல் வளர்ந்திருந்தது என்று கதையாசிரியர் சொன்னால் ,அது ஆச்சர்யகரமான ஒன்றாக இருக்கலாம்,ஏனெனில் ரத்னாகரனின் வீடு பெரிய முற்றத்துடன் கூடிய ஆடம்பரமான, அதிநவீனமான மூன்று மாடிக் கட்டிடம்.அதனால் அவர்கள் வீட்டுக் கழிவறையிலுள்ள புல், பிளந்த தரையில் வளர்ந்தில்லை;
அது ஐந்து நட்சத்திர ஓட்டலில் கவனத்துடன் போஷாக்காக வளர்க்கப்பட்ட ஒன்று.எந்தப் பாம்பும் அங்கு வந்து எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி விளையாட முடியாது. அவள் கழிவறையிலிருந்து சமையலறைக்குள் போன போது, எந்தக் குழந்தையும் அவளைப் பின் தொடர்ந்து கொள்ளைக்
காரன் எப்படி புலவர் ஆனார் என்று கேட்கவில்லை. அவளுடைய இரண்டு குழந்தைகளும் ஊட்டியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர்.
எவ்வளவு பெரிய புலவராக இருந்தாலும், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்குக் கூட அனுமதிக்கப்பட மாட்டார். சமையலறையில் , இரவில் அங்கே நடக்கப் போகும் விருந்துக்காக, பரபரப்பாக சமையல்காரி ரோஷன் நெய் சாதம்,வாத்து வறுவல், மீன் கறி என்று பல வகையான பதார்த்தங்களை செய்து முடித்திருந்தாள். இப்போது பிரவீணா பாலப்பம் செய்கிறாள் . ரோஷன் முகக்கவசமும் ,கையில் வெள்ளை உறைகளும் அணிந்திருந்தாள். அப்ரானும்,தலையில் தொப்பியும் அணிந்திருந்தால் ,அவள் தொழிலில் தேர்ந்த சமையல் நிர்வாகியாக இருந்திருப்பாள்.
“உன் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு போ,” பிரவீணா அவளிடம் சொன்னாள். ரத்னாகரனும், அவன் நண்பர்களும் வருவதற்கு முன்னால் ரோஷனை அனுப்பி விட விரும்பினாள். அவள் அப்படிச் செய்வதற்கு அவளவில் காரணங்களிருக்கலாம்.நவீன சமையலறையின் அமைப்பு வரவேற்பறையில் உள்ளவர்களும் கூட சமைப்பவரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்ததுதான் என்பது கதாசிரியரின் யூகம். ஆனால் மனைவியரின் மனதில் பல விதமான எண்ணங்களிருக்குமே.
வீட்டின் ஒரே அறை இரண்டாகப் பிரிந்து ஹாலாகவும் ,சமையலறை ஆகவும் என்று, இன்னொரு ரத்னாகரனின் சமையலறையும் நவீன அமைப்புத்தான். தன் பொருளாதாரப் பற்றாக் குறையில் ஹாலின் குறுக்கே சிறிய சுவரெழுப்பி சமையலறையாக்கியது சமகால பாஷனை ஒட்டியது. சில விஷயங்கள் எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்டவை. மனிதனோ அல்லது அவனுடைய பொருளாதார ஏற்றத்தாழ்வோ எதையும் மாற்றி விடமுடியாது.
டிரைவர் ரத்னாகரன் பென்ஸ் காரை ஓட்ட பிரவீணாவின் கணவன் ரத்னாகரன் தனது கை கால்களைப் பரப்பிக் கொண்டு பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தான். பிரவீணா முகத்தில் சிரிப்பேயில்லாமல் கதவைத் திறந்து விட்டாள். அவன் அவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு
கோபமாகக் கத்தினான்,“கட்டிக் கொள்ள உனக்கு வேறு புடவையே இல்லையா? இன்று வரப் போகிறவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று உனக்குத் தெரியுதா? அல்லது ,என்னை அவமானப் படுத்த நினைத்திருக்கிறாயா?” கடந்த முறை மும்பைக்குப் போன போது வாங்கி வந்த டிசைனர் புடவையை அணிந்து கொள்ளச் சொன்னான்.பேசும் போது அவன் ரோஷனை கடைக்கண்ணால் பார்ப்பதை பிரவீணா விரும்பவில்லை. அதனால் எல்லா பாத்திரங்களையும் மேசையில் வைத்து விட்டு உடனடியாகப் போகும்படி கோபமாகச் சொன்னாள்.
டிரைவர் ரத்னாகரன் தன் பேச்சைக் கேட்டு விடக் கூடாதென்பதற்காக கதவைச் சாத்தினாள்.
ஆனால் டிரைவர் ரத்னாகரனுக்கு, பிரவீணாவின் குடும்ப வாழ்க்கை ரகசியங்ககளுக்குள் நுழைய எந்த விருப்பமுமில்லை; அதற்கு பதிலாக அவன் அவளுடைய சமையலறைக்குள் நுழைய விரும்பினான். அதனால் அவன் வீட்டின் பின்பகுதியை நோக்கி நடந்தான். கணவனும், மனைவியும் மாடிக்குப் போய் விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு ரோஷன் தன் முகக் கவசத்தை நீக்கினாள். அவள் அழகாக இருந்தாள். தன் அழகான முகத்தில் மயக்கும் புன்னகையை வரவழைத்துக் கொண்டு பின்பக்க வழியில் போய் ,அங்கிருந்த ரத்னாகரனிடம் ஒரு பெரிய துண்டு வாத்து வறுவலைக் கொடுத்தாள் அவன் அதை வேகமாகத் டிரவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு,அவள் மூக்கை விளையாட்டாகத்
திருக முயற்சித்தான்.அவள் விலகிக் கொண்டு ஒரு சிரிப்போடு“இன்றைக்கு இரவு சந்திக்கலாமா?”என்று கேட்டாள். “இல்லை, முடியாது“ என்று
வெளிப்படையான ஏமாற்றத்தோடு சொன்னான்.
“மணலை ஏற்றிக் கொண்டு நான் லாரியில் போக வேண்டும்.”என்றான்.ரோஷனுக்குத் தெரியும் அது
நியாயமற்றது என்று தெரிந்தாலும் ,தனது அந்தரங்க லாபத்திற்காக தனது போலியான வருத்தத்தை வெளிப்படுத்தினாள். திடீரென அருகே காலடிச்
சத்தம் கேட்க, சமையலறைக்கு விரைந்தாள். ரத்னாகரன் கார் ஷெட்டிற்குள் ஓடி, காரின் பின்னால் ஒளிந்து நின்று, வாத்து வறுவலை அனுபவித்துச் சாப்பிட்டான். சமையல்காரப் பெண்ணை காதலிப்பதிலுள்ள இன்பம் அலாதியானதுதான் என்று அவனுக்குத் தெரியும்.பிறகு கார் சாவியை ஒப்படைத்து விட்டு வேகமாக நடந்து சாராயக் கடையின் நீண்ட வரிசையில் சேர்ந்து கொண்டான்.
அவன் வரிசையில் சேர்ந்து கொண்ட நேரத்தில்,ஒரு மோட்டார் பைக் வேகமாக வந்து கடையின் எதிரில் நின்றது. ஜீன்ஸ் அணிந்திருந்த இரண்டு பெண்கள் வண்டியிலிருந்து இறங்கி, வரிசையை சட்டை செய்யாமல் கவுண்ட்டர் அருகே சென்றனர்.வரிசையில் நின்றவர்கள் அவர்களை ஆர்வத்தோடு பார்க்க, அவர்களில் ஒருவன் மட்டும் கத்தினான்:
“நீங்கள் பெண்களாக இருப்பதாலேயே வரிசையைப் புறக்கணிக்க முடியாது. காத்திருக்கும் நாங்கள் எல்லோரும் முட்டாள்களா?” என்று கேட்டான்.
கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த பெண்“ சகோதரரே, பெண்களுக்கு என்று ஒதுக்கீடு இருக்கிறது. வரிசையில் உங்களுக்குப் பின்னால் நாங்கள் நின்றால், பத்திரிக்கைகாரர்கள் எங்களைச் சூழ்ந்து கொள்வார்கள். பிறகு கடையை மூட வேண்டியதுதான். நாம் எல்லோரும் நஷ்டப் படுவோம் அல்லவா?” என்றாள்.
அதற்குள் பாட்டிலை வாங்கிக் கொண்டு விட்ட இன்னொரு பெண், வேகமாக ஓடி வந்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு “எங்கள் பாட்டிக்கு மிக மோசமான வயிற்றுக் கோளாறு,அதனால் அவசரமாக வாங்கிக் கொண்டு போகிறோம். நாங்கள் வேகமாகப் போக வேண்டும்” என்றாள்.
“ஆமாம், வேகமாகப் போகவேண்டும். பாட்டி, பேத்தியின் வயிற்றுக் கோளாறு குணமாகட்டும்“ என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.
பைக் போய் விட்டது.தனக்குள் ஒரு புதிய சக்தி வருவது போல ரத்னாகரன் உணர்ந்தான். பெண்கள் இப்படித்தானிருக்க வேண்டும்.
சமையலறையின் அழுக்கு முழுவதும் முகத்தில் படர்ந்திருக்கும் பெண் யாருக்கு வேண்டும்?” என்று நினைத்தான்.
“அம்மா, உன் முகம் முழுவதும் கருப்பு புள்ளி களிருக்கின்றன” மகள் அம்மாவிடம் சொன்னாள்.கவுனால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட அம்மா “இப்போது போய்விட்டதா?”என்றாள்.இயந்திரத்தனமாக தலையை
ஆட்டிய மகளின் மனதில்,ஆஜானுபாகுவான ,கருப்பான கொள்ளைக்காரன் தரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான்.
ஒரு ரத்னாகரன் தன் விருந்தினர்களுக்கு பாட்டில்களை உடைத்து கொடுத்துக் கொண்டிருக்க,மற்றொரு ரத்னாகரன் கைகளைச் சுழற்றியவாறு பாடியபடி வீட்டிற்குள் நுழைந்தான்.அவன் வருவதைப் பார்த்ததும் மகள் தன் கேள்வியோடு அவனைப் பார்த்து ஒடி வந்தாள்.
“எந்தத் திருடன்? வால்மீகியா?” மகளை அணைத்தபடி கேட்டான்.
“ஆமாம்,அப்பா,வால்மீகிதான் அவரது பெயர்” மகள் மகிழ்ச்சியில் குதித்தாள்.ஆசிரியர் அந்தப் பெயரைத்தான் சொன்னார். நாம் மறந்து விட்டேன்.அப்பா ,ஒரு பத்தி எழுதினால் போதும்.நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா?”
ஆனால் தினமும் விளக்கேற்றி வைத்து பாட்டி ராமாயணம் படித்ததைப் பார்த்திருப்பதால் ரத்னாகரனுக்கு ராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி என்பது மட்டும் தெரியும்.பல இடங்களில்,பக்கங்கள் கிழிந்து போயிருந்த புத்தகம் அது. பாட்டியைத் தவிர யாரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க மாட்டார்கள்.பாட்டி படித்ததால் அவனுக்கு ராமன்,சீதை ஏன் ராவணன் பற்றியும் அதிகம் தெரியும், ஆனால் வால்மீகி… ஆனால் ஏன் வாசகர்களுக்கு ஆசிரியர் பற்றித் தெரிய வேண்டும்? ஏன் ஒரு குறிப்பிட்ட
மனிதர் ஆசிரியராக ஆனார் என்பதை நாம் ஏன் அறியவேண்டும்? இன்னும் சொல்லப் போனால், வாசகர்களுக்கு அந்தப் புத்தகம் பற்றிக் கூட முழுதாகத்
தெரியாது.
“ வால்மீகி. .ராமாயணத்தை வால்மீகி தான் எழுதினார் .”ரத்னாகரன் மகளிடம் சொன்னான்.
“ஆசிரியர் அதையெல்லாம் சொல்லி விட்டார்.வால்மீகி ஒரு திருடன், எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் அவர் பெரிய புலவர் ஆனார். எப்படி? அதுதான் கேள்வி.
”புலவராவதற்கு ஒருவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியமா என ரத்னாகரன் நினைத்தான்.அவனுடைய நண்பர்களில் சிலர் படிக்காதவர்களாக இருந்தாலும்,அவர்கள் மிகுந்த குடி போதையில் இருக்கும் போது, பிரயத்தனமில்லாமலேயே கவிதை சொல்வார்கள். திரைப்படப் பாடல்களைப் போல அழகான கவிதைகள்.
“சாப்பாடு எடுத்து வைக்கவா?” இந்துலேகா கேட்டாள்.கைப் பகுதியில் அவள் உடை கிழிந்திருப்பது கண்ணில் பட அவனுக்குக் கோபம் வந்தது. எடுத்து வைக்கச் சொன்னான். கழிவறை அருகே போன அவன் மண்டிக் கிடந்த புல்லின் அருகே தான் கொன்ற பாம்பின் உறவினர்கள் யாராவது
இருக்கிறார்களா என்று பார்த்தான்.
“ஒரு சிறிய புல்வெளிப் பரப்பு போல உங்கள் கழிவறை மிக அழகாக இருக்கிறது. ரத்னா.இது உன் மனைவியின் எண்ணமா?”என்று ரத்னாகரிடம் நண்பர் கேட்டார். “ஹா.ஹா..என் மனைவிக்கு அழகு,கருத்து எதுவும் கிடையாது.” சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தான். நண்பன் ரத்னாகரனின் மனைவியை இரக்கத்தோடு பார்க்க, அவள் சமையலறையில் வேலையாயிருப்பது போல பாவனை காட்டினாள்.அவள் முகம் தெரியவில்லை.அழகான புடவையில் வந்த போது அவள் அழகு மிக வெளிப்படையாகத் தெரிந்து.ரத்னாகரனுக்கு அவள் ஏற்றவளில்லை என்பதை நண்பன் புரிந்து கொண்டான். நண்பனின் பார்வையைப் புறக்கணித்து விட்டு அவள் டேபிளை அலங்காரம் செய்த போது ஒரு சிநேகிதி அவளையழைத்து “ என்ன செய்கிறீர்கள் சமையலறையில்? வாருங்கள் “ என்று தங்களோடு வந்து உட்கார வேண்டினாள்.
ஒரு பெரிய பெட்டியை அறைக்குள் தூக்கிக் கொண்டு போன ரத்னாகரனுக்கு இது எதுவும் காதில் விழவில்லை.
இன்னொரு ரத்னாகரன் மணலைத் திருட்டுத்தனமாக கடத்து ம் லாரியின் டிரைவராக உட்கார்ந்திருந்தான். இன்று பணம் கிடைத்தவுடன் இந்துவிற்கு இரண்டு கவுன்களும், ரோஷனுக்கு ஒரு சேலையும், மகளுக்கு ஒரு டிரஸ்ஸும் வாங்க வேண்டுமென்று நினைத்தான்.பிறகு மளிகைக் கடைக்கும், காய்கறிக் கடைக்கும் கொடுக்க வேண்டிய கடனில் கொஞ்சம் கொடுத்து விட வேண்டும். லாரியை வேகமாக ஓட்டினான், அவன் கைது செய்யப்படப் போகிறான்.
ரத்னாகரன் நன்றாகக் குடித்து விட்டு போதையிலிருந்தான். வீட்டில் இனிமேல் பார்ட்டிகள் எதுவும் நடக்கக் கூடாதென்றும், ஹாஸ்டலிலுள்ள குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரப் போவதாகவும்,அம்மாவின் மானத்தை அவர்களாவது காப்பாற்றுவார்கள் என்று இப்போது பிரவீணா ரத்னாகரனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் விரும்பிய போல நடந்து கொள்ள இது அவள் அப்பாவின் வீடு இல்லை என்று பதில் சொன்னான் .தன் அப்பா கறை படிந்தவரில்லை என்று அவள் சொல்ல,குடும்பத்திற்காக தான் பாடுபடுவதாகச் சொன்னான். கறை படிந்த எதுவும் தமக்கு வேண்டாமென்று கத்தினாள். போதையின் உச்சத்திலிருந்த அவன் தனிமையாக உணர்ந்து பிதற்றியபடி சோபாவில் விழுந்து உறங்கிப் போனான்.போர்க்களம் போலக் கிடந்த சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்யாமலே அவளும் அறைக்குள் போய்ப் படுத்தாள்.தூக்கம் வரவில்லை.
ரத்னாகரனின் நண்பன் சில்லுவண்டித்தனமாக நடந்து கொண்டது அவளுக்கு வலித்தது. கையில் விலங்கோடு ரத்னாகரனை அவன் வீட்டிற்கு இரண்டு போலீஸ்கார்கள் அழைத்து வந்தனர்.மேஜையில் அவன் உதவியோடு
எதையோ தேடினர். கிடைத்தும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
“சார்,என்ன இதெல்லாம் ? அவர் என்ன தவறு செய்தார்?”என்று இந்துலேகா கேட்டாள்.
“இனிமேல் உங்கள் கணவர் சிறைக்குள்ளே மணல் திருடலாம் .”என்றனர். ஜாமீனுக்காக வக்கீலைப் போய் பார்த்து வரும்படியும், குடும்பத்திற்காகத் தான் இந்த செயல்களைச் செய்ததாகவும் சொல்லி அவன் கெஞ்சினான்.
“நான் எதுவும் செய்ய மாட்டேன்.செய்த தவறுக்கு தண்டனைஅனுபவிக்க வேண்டும்” என்று ஆத்திரமாகச் சொன்னாள்.அழும் மகளிடம்,“ நாளை பள்ளிக்குப் போக வேண்டும். படுத்துக் கொள்.” என்றாள்.
“அப்பா வரும் வரை பள்ளிக்குப் போக மாட்டேன்”மகளை அணைத்துத் தூங்க வைத்தாள்.
தாறுமாறாகப் படுத்திருக்கும் கணவனை சட்டை செய்யாமல் பிரவீணா வராந்தாவிற்கு வந்தாள். வேலைக்கு வந்த இந்து லேகா அவளுக்கு உப்புமாவும், தன் மகளுக்கு தேநீரும் தந்தாள். சோர்ந்திருக்கும் மகளிடம் சிறிது சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்பினால் லிஜியின் அப்பாவிடம் பேசி
சந்தேகத்தை சரி செய்து கொள்ளலாமென்கிறாள்.மகள் உற்சாகமாகக் கிளம்புகிறாள்.
கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் லிஜியின் அப்பா ஆர்வத்தோடு தன்னிடம் விளக்கம் கேட்க வந்திருக்கும் சிறுமியிடம் “அந்தத் கொள்ளைக்காரன் புலவரானதற்குக் காரணம் ஒரு பெண்தான்—- அவன் மனைவிதான்.ஒரு பெண் வேண்டுமென்றே வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டாள் ! ஒரு சக்தி வாய்ந்த உருவகம்.! ”இப்படித்தான் அவர் பதில் சொல்வார். அவர் சொல்வது ஒன்றும் அந்தச் சிறுமிக்குப் புரியாது.ஆனால் என்ன செய்ய முடியும்? கல்விசார் அறிஞர்கள் சிறு குழந்தைகளிடம் கூட இப்படித்தான் பேசுகிறார்கள்.
——————————————–
சந்திரிகா பாலன்,ஆங்கிலப் பேராசிரியை. பதினைந்து சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஆறு பொது நூல்களும் எழுதியவர். கேரள சாகித்ய அகாதெமி விருது,பத்மராஜன் விருது பெற்றவர்.
குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
கவிஞன் ஆவேன் !
நானும் ஒருநாள் கவிஞன் ஆவேன் –
அழகிய கவிதைகள் ஆயிரம் படைப்பேன் !
அம்மா அப்பா பெருமை படும் விதம் –
அசத்தல் கவிதைகள் எழுதித் தருவேன் !
இயற்கை எழிலைப் பாடும் கவிதை –
இறைவன் பெருமை கூறும் கவிதை !
அன்னையின் அன்பைக் காட்டும் கவிதை –
ஆயிரம் நானும் படைப்பேன் பாரு !
உழைப்பவன் உயர்வைப் போற்றும் கவிதை –
ஊருக்கு நல்லது சொல்லும் கவிதை !
நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் கவிதை –
நலமாய் நானும் படைப்பேன் பாரு !
படித்தவர்க்கேற்ற பண்டிதக் கவிதை –
பாமரனுக்கேற்ற பலவிதக் கவிதை !
புதுப்புதுக் கருத்துகள் புகலும் கவிதை –
புதிதாய் நானும் படைப்பேன் பாரு !
படித்துச் சுவைத்திட ஓரிரு கவிதை –
பாடிக் களித்திட ஓரிரு கவிதை !
பள்ளிச் சிறுவர் பண்படக் கவிதை –
பாக்கள் பலவிதம் படைப்பேன் பாரு !
அண்ணன் தம்பி பற்றிய கவிதை –
அக்காள் தங்கை பற்றிய கவிதை !
வீட்டின் இன்பம் வெளிப்படும் கவிதை –
வரிசையாய் நானும் படைப்பேன் பாரு !
இலக்கணத்தோடு ஓரிரு கவிதை –
எளிமையாய் ஓரிரு புதுக்கவிதை !
வரமாய் வரும் ஒரு வசன கவிதை –
நிச்சயம் நானும் படைப்பேன் பாரு !
காற்றைப் பற்றி ஒரு கவிதை –
காடுகள் பற்றியும் ஒரு கவிதை !
ஆறு அருவியைப் பாடும் கவிதை –
சலசலவென நான் படைப்பேன் பாரு !
பாம்பைப் பாடும் ஒரு கவிதை –
பறவைகள் பற்றியும் ஒரு கவிதை !
நாயைப் பற்றிய கவிதையும் ஒன்று –
நலமாய் நானும் படைப்பேன் பாரு !
பாரதி மீசை பற்றிய கவிதை –
பார்த்தசாரதி கோயில் கவிதை !
வைரமுத்துவை வெல்லும் கவிதை –
ஒரு நாள் நானும் படைப்பேன் பாரு !
சித்தர்கள் போல ஞானக் கவிதை –
சிந்திக்க வைக்கும் சிறப்புக் கவிதை !
பக்தியைப் போற்றும் பழந்தமிழ்க் கவிதை –
திருவாசகம் போல் தருவேன் பாரு !
நானும் ஒருநாள் கவிஞன் ஆவேன் –
அழகிய கவிதைகள் ஆயிரம் படைப்பேன் !
அம்மா அப்பா பெருமை படும் விதம் –
அசத்தல் கவிதைகள் எழுதித் தருவேன் !
*************************************************
என்ன செய்யப் போகிறாய் ?
சின்னச் சின்னக் கண்ணனே – நீ
என்னவாகப் போகிறாய் ?
பள்ளி சென்று படித்துவிட்டு
என்ன செய்யப் போகிறாய் ?
சிரித்து மயக்கும் செல்லப் பெண்ணே – நீ
என்னவாகப் போகிறாய் ?
பட்டமெல்லாம் பெற்ற பின்னர்
என்ன செய்யப் போகிறாய் ?
விவசாய விஞ்ஞானியாய்
வளர்ந்து நிற்கப் போகிறேன் !
விஷ உணவைத் தடுத்துவிட்டு
இயற்கை உரம் நாடுவேன் !
விளைச்சலைப் பெருக்குதற்கு
விளைநிலத்தைப் பறிகொடேன் !
மண்வளத்தைப் பெருக்குவேன் –
மனித வளம் போற்றுவேன் !
கவிஞனாகவே வளருவேன் –
கற்பனையைப் போற்றுவேன் !
அற்பமாகப் பாட்டெழுதும்
அடிமைத்தனம் சாடுவேன் !
காதலைப் பாடினாலும்
கருத்தோடு பாடுவேன் !
கண்ணியம் நான் காப்பேன் –
கடமை என்றும் போற்றுவேன் !
பொறியாளனாய் நான் வருவேன் –
புதிய வழிகள் காணுவேன் !
எளிய மக்கள் ஏற்றம் பெற –
எந்திரங்கள் செய்குவேன் !
வேலை தேடி வேறு நாடு –
போவதையே மாற்றுவேன் !
தாய்நாட்டில் தழைத்துவிட –
தந்திரங்கள் செய்குவேன் !
உண்மையாகப் படித்து நானும் –
மருத்துவராய் வளருவேன் !
உடம்பு மனம் அத்தனைக்கும் –
வைத்தியங்கள் செய்குவேன் !
குறைந்த செலவில் பெரிய குணம் –
கொடுக்கும் மருந்து கலக்குவேன் !
நோய் இல்லாமல் நூறு வருடம் –
வாழும் வழியைக் காட்டுவேன் !
என்னைப்போலே நாளை நூறு –
சிறுவர் இருப்பர் அல்லவா ?
துடிதுடிப்பும் துறுதுறுப்பும் –
சிறகடிக்கும் அல்லவா ?
நம்பிக்கை வளர்க்கும் விதம் –
நல்ல கல்வி ஊட்டுவேன் !
ஆசிரியர் என்றால் மீண்டும் –
பெருமை கொள்ள வாழுவேன் !
தொழில் ஒன்று தொடங்கி நானும் –
அதிபராக வளருவேன் !
உழைக்கும் மக்கள் நூறு பேரை –
ஊக்குவித்து உயர்த்துவேன் !
உற்பத்தியில் உயர்நிலைகள் –
அடையும் வழிகள் தேடுவேன் !
ஊருக்கு உபயோகம் –
கிடைக்கும் வழியை நாடுவேன் !
பலருக்கும் வழியைக் காட்டும் –
அறிஞனாக வளருவேன் !
பாரம்பரியம் நமக்கு உண்டு –
பழைய கதைகள் கூறுவேன் !
உலகத்தை வழி நடத்தும் –
விஷயங்களைக் காட்டுவேன் !
இந்தியாவைப் பின்பற்றி உலகம் –
நடந்துவரச் செய்குவேன் !
எந்த வேலை என்றாலும் –
ஒழுங்காகச் செய்குவேன் !
படிப்படியாய் உயர்ந்து நானும் –
பாரதத்தை உயர்த்துவேன் !
அம்மா அப்பா போற்றும் விதம் –
வளர்ச்சி பெற்று வாழுவேன் !
நாளை உலகம் மெச்சும் விதம் –
நல்ல வழியில் செல்லுவேன் !
*****************************************************************
அபூர்வங்கள் – ந பானுமதி
சங்கராபரணம் என்ற ஒரு திரைப்படம், திரைப்பட இரசிகர்களையும், கர்னாடக இசைப் பிரியர்களையும் இரசிக்க வைத்த ஒரு வெற்றிப் படம். ஹிந்தோள இராகத்தில் அமைந்த ‘சாமஜ வர கமனா’ என்ற தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனையை சங்கர சாஸ்திரிகளின் பெண் பாடும் போது ஸ்வரம் தவறிப் போக அவர் சீற்றம் கொள்வது பலருக்கும் நினைவிலிருக்கலாம். வசந்தா என்றொரு இராகத்தையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உடனே எனக்கு நினைவில் வருவது ‘ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள்வாயம்மா’ என்ற பாடல். இவ்விரு இராகங்களிலும் பல பாடல்கள் தென்னிந்திய திரை இசையிலும், வட இந்திய திரைப் பாடல்களிலும் வந்திருக்கின்றன.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல பரிசோதனைகளை இராகங்களில் செய்து பார்த்தவர். அனேகமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அந்தந்த இடங்களின் இசையின் நுட்பங்களை அறிந்து தன் கீர்த்தனைகளில் அமைத்தவர். மேலே குறிப்பிட்ட இரு இராகங்களான ஹிந்தோளத்தையும், வசந்தாவையும் இணைத்து அவர் இயற்றிய கீர்த்தனை ‘சந்தான ராம்ஸ்வாமி’ என்ற ஒன்று. அந்தப் பாடலில் சொற்களையும், இராகத்தையும் அவர் பிணைத்துப் பிணைத்து அமைத்திருப்பது அற்புதமாக இருக்கும்.
சந்தான இராமர் சகுண, நிர்க்குண வடிவத்தில் இருக்கிறார் என்று பல்லவியைத் தொடங்குகிறார் அவர். அந்தக் கீர்த்தனையின் அனுபல்லவி இப்படி வரும்
‘ஸந்ததம் யமுனான்பாபுரி நிவசந்தம் நத சந்தம் ஹிந்தோள வசந்தம் சந்த மாதவம், ஜானகி தவம் சச்சிதானந்த வைபவம் சிவம்.’இராகத்தின் பெயரான ஹிந்தோள வசந்தம் வந்துள்ளது. அது மட்டும் அழகில்லை; புரி நி வசந்தம் என்று வரும் வசந்தம், சந்தம், சந்த மாதவம் என்று சந்தத்தில் இராக பாவனைகளோடு இலக்கிய சந்தத்தையும் கொண்டு அமைந்துள்ளது. இதைப் பாடகர்கள் திரும்பத் திரும்பப் பாடுகையில் சந்தம், வசந்தம், புரி நி வசந்தம், ஸந்தத வசந்தம், ஹிந்தோள வசந்தம், சந்த மாதவ வசந்தம், வசந்த ஜானகி தவம், சச்சிதானந்த ஜானகி வசந்தம், சச்சிதானந்த ஹிந்தோள வசந்தம் என்றெல்லாம் பாடுகையில் அதன் இலக்கியச் சுவை நம்மை அதில் மொத்தமாக அமிழ்த்திவிடும். நமக்கு இராகம் தெரிய வேண்டாம், ஆனால், பாவம் புரிந்து விடும். அது நம் மனதில் உள்ளே புகுந்து கொண்டு அந்த மொழி அமைப்பில், அது இராகத்துடன் பொருந்திப் போகும் அந்த அழகில் பரவசப்படுத்தி ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்தப் பாடலின் அர்த்தத்தை சுருக்கமாகப் பார்ப்போம். பாடல் இவ்வாறு தொடங்குகிறது.
சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே
குணங்கள் உள்ளவனாக நமக்குத் தோன்றும் ஸ்ரீராமனே குணங்களற்றவனாக இருக்கிறான். இது பர தத்துவத்தைக் குறிக்கிறது. உருவ வழிபாட்டில் தொடங்கி அருவமான இறையைக் குறிப்பிடுகிறார் தீக்ஷிதர்.
அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்
(ஹிந்தோள வசந்தத்தால் வணங்கப்படும் இவர் எப்போதுமே, யமுனாம்பாபுரி என்று சொல்லப்படும் நீடாமங்கலத்தில் இருப்பவர். சத்யம், ஞானம், ஆனந்தமான நிரந்தரனும் இவரே.)
தீக்ஷதரின் பாடல்கள் இடத்தைப் பற்றியும் குறிப்புகள் கொடுக்கும் ஆவணங்கள். நீடாமங்கலத்தில் கோயில் கொண்டுள்ள குழந்தை வரம் அருளும் சந்தான ராமனை இதில் காட்டுகிறார்.
சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்
(அனைத்து வளங்களையும் அருள்பவர். துறவிகளின் இதயத்தில் தன் தாமரைப் பாதங்களைக் காட்டுபவர். அழகும், அபூர்வவுமான
சிந்தாமணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவரது கண்கள் ஆதவனும், நிலவுமாகத் தோற்றமளிக்கின்றன. துக்கமற்ற ஆனந்த ஞான உருவான இராமரை குருகுஹனாகிய நான் வணங்குகிறேன்.)
சிந்தாமணி என்றுமே கவிஞர்களை ஈர்த்திருக்கிறது. அபூர்வமான அது, கடவுளை அலங்கரிப்பதாக அவர்கள் பாடல்களில் அமைக்கிறார்கள். இராமரின் கண்கள் தீயவர்களை தண்டிப்பதில் சூரியனைப் போலவும், சாதுக்களுக்கு நிலவைப் போல குளிர்ச்சி தருவதாகவும் சொல்வதில் தீக்ஷதரின் ஞானம் ஒளிர்கிறது.
மனிதர்கள் விரும்புவது மழலைச் செல்வங்களை. அதைத் தரும் சந்தானராமன் ஹிந்தோள வசந்தமாய் நம்மை வசீகரிக்கிறான்
மண் பானை – முனைவர் கிட்டு முருகேசன்
அன்று ஏன்? இப்படி மழை பெய்தது. பூமியும் சற்றே ஆச்சர்யப்பட்டு இருக்கும். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
அந்த பலமண் குளமும் அப்படித்தான் நீர் நிரம்பி இருந்தது.
பெயருக்கு ஏற்றார் போல் அது; பல மண்ணாலான குளம்தான். மணல், கழிமண், செம்மண் எனக் கோர்த்துக் கிடக்கும் செம்புலப் பெயல் நீர் சூழ்ந்த இடம்.
தேங்கி நிற்கும் நீர்; மஞ்சள் நிறத்தில் குளங்களாகத்தான் இருந்தது.
ஊர்க்காரர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்தக் குளம் நீர் நிரம்பி எத்தைக் காலம் ஆகிவிட்டது. தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.
அந்தக் குளத்தில் கால் வைத்தால் வழுக்கும், அதனால் செருப்பு இல்லாமல்தான் இறங்குவார்கள். உழவு மாடு, எருமை மாடு என அனைத்துக் கால்நடைகளும் அதில்தான் குளிக்க வைத்து சுத்தம் செய்வார்கள்.
அந்தக் குளத்தை நம்பி எத்தனையோ உயிர்கள் வாழ்கிறது. அதில் மனிதர்களும் அடங்குவர். காலைக் கடனைக் கழித்து கால் அலம்புபவர்கள் ஒருபக்கம். நீர் தேங்கியதால் ஆழ்துளை கிணறுகள் அதிக நீர் ஊர ஆம்பிக்கும் என விவசாயிகள் ஒரு புறம் மகிழ்ந்தனர். மண்ணை எடுத்து பாண்டங்கள் செய்வோர் மறுபக்கம். குறும்புத்தனம் மிக்க சுட்டிக் குழந்தைகள் தங்களுடைய திறமைக்கு ஏற்ப பிள்ளையார் சிலைகள் செய்து விளையாடினர்.
இப்படி அந்தக் குளத்தில் கிடக்கும் மண் குதிரையாய், சிலையாய், பானையாய், இன்னும் பல கலைநயமிக்கப் பொருளாய்ப் பரிணமிக்கும்.
நம்மை இப்படி பயன்படுத்துகிறார்களே! என்பதை மண் அறியுமா?
மண்ணியல் வாழ்வு காந்திய வாழ்க்கையாகத்தான் அமைகிறது.
ஆம்! மண்ணுக்குத் தெரியும் எப்படியும் இவர்கள் நம்மை வந்தடைவார்கள் என்று. அதனால்தான் என்னவோ; தன்னை துன்புறுத்துபவர்களை விட்டு வைக்கிறது.
அப்போ; இதைக் காந்திய வழி எனச் சொல்வதில் தவறில்லை.
அந்தக் குளத்தின் கரையில் சிறுகுடிசை. குடிசையின் வாசலின் வயது முதிர்ந்த ஓர் உருவம். சக்கரத்தின் அருகே அமர்ந்திருந்தது. தலையில் வழுக்கை, காதோரம் நரைத்த முடி. குயவனின் வயிறு உடம்போடு ஒட்டிக் கிடந்தது. இன்று ஒரு பானை உற்பத்தி செய்துவிட்ட மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிந்தது. அருகே செம்மண்; மிதிபடுவதற்கு தகுந்தாற்போல் நீர் தெளித்து வைக்கப்பட்டு இருந்தது.
அவ்வழியாக நடைபயணம் வந்த இளைஞன் ஒருவன், குயவனைப் பார்த்ததும் நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்த குயவன்; என்ன தம்பி அப்படிப் பார்க்கிறாய் என்றான்.
ஒன்றும் இல்லை அய்யா; இது என்ன? வெறும் சக்கரத்தில் இப்படி ஒரு உருவம்.
இதைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு காலத்தில் பெருமையாகப் போற்றபட்டு வந்த மக்களின் பயன்பாட்டுப் பொருள். இதன் பெயர் மண் பானை.
அகலம், நீளம், வட்டம் என்று சொன்னாலே மண் பானையின் வடிவம்தான் நினைவுக்கு வரும். அதனுள் நீர் ஊற்றி வைத்தால் குளிர்ச்சியையும் சுவையையும் வெளிக்காட்டும் ஆற்றல் அதற்கு உண்டு. இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவையும் சமைக்கலாம்.
மண்ணோடு வாழ்க்கை நடத்தும் மக்கள். மண்ணை வெறும் பொருளாதாரத் தேவையாக மட்டுமே கருதுகிறார்கள். அதனால்தான் மண்ணாலான பொருட்களை பயன்படுத்தவும் தவறிவிட்டார்களோ?
அவசர கால நவீன வாழ்கையில் மனிதர்களையே மனிதர்கள் தேவைக்காகத்தானே பயன்படுத்துகிறார்கள். மண்பானை இதில் என்ன விதிவிலக்கா?
ரப்பரும் சில்வரும் ஆளுமை கொண்ட மனிதச் சமூகத்தில் மண்பானைகள் அனாதைகளாய்க் கிடக்கிறது. நானும் இன்று; அப்படித்தான் இருக்கிறேன். காலமாற்றம் எவ்வளவோ நிகழ்வுகளை என் கண்ணெதிரே கொண்டுவந்து விட்டிருக்கிறது. அவற்றையும் தாண்டி இந்தத் தொழிலை விடாமல் நான் செய்வதற்கு காரணம் உண்டு. அது! இந்த மண் பானை என்னிடம் பேசிய வார்த்தகள்தான்.
என்ன? மண்பானை பேசுமா?
ஆமாம் தம்பி.
ஒரு நாள் இந்தக் கரையில் அமர்ந்து கொண்டு பானைகளை உற்பத்தி செய்து; அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு பானை என்னை அறியாமல் தவறி விழுந்து உடைந்துவிட்டது. அய்யோ! என்று வருத்தத்தோடு வேலையைத் தொடர்ந்தேன். திடீரென ஒரு பானை என் முகத்தைப் பார்த்தது.
அனுதாபம் தேவையில்லை மானிடனே!
என்னை சற்றேனும் பேச விடு என்று மண் பானை கேட்டது.
மனிதன் பாவம்; பொருளாதாரம் தேடி ஓடும் உலகில் மண் பானை வைத்து அடுப்பு மூட்டி விரகில் சமைக்க நேரம் ஏது. அது அவன் குற்றமில்லை. அவனை வழிநடத்தும் சமூகத்தின் குற்றம். குக்கர் உணவும் சுகர் வாழ்க்கையும் பழகிப்போன மனிதர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.
பாவம்; உனக்கும் ஏக்கம் வரத்தான் செய்கிறது.
குறுக்கிடாதே மானிடனே! என்னைப் பேசவிடு.
மண்ணை வெட்டி எடுத்து மிதித்து, அடித்து, துவைத்துத் தட்டி எடுத்து எனக்கு உருவம் கொடுக்கும் மனிதன் கோவணம்தான் கட்டியிருக்கான். என்னை விற்பனை செய்ய.
அவனே! சில்வர் பாத்திரத்தில்தான் கஞ்சி குடிக்கிறான்.
பொருளாதாரத்தின் தேவையாய் என்னை கருதுகிறான்.
என் உருவம் ஓவிய ஆசிரியரின் பயிற்றுக் கல்வியோடு நின்றுவிடுகிறது.
சாலை ஓரங்களில் என்னைப் பார்ப்போர் வேடிக்கையாய்ப் பார்க்கிறார்கள்.
நான்; மண் பானை என்பதால்.
என்னை விற்பவனோ தலைவலி என்று மாத்திரை போடுகிறான். வாங்க வந்தவனோ வெகு நேரம் பேரம் பேசிவிட்டு மருந்துக் கடையில் வாய்மூடி பணம் கொடுத்துவிட்டு மருந்தை வாங்கிச் செல்கிறான்.
நானோ! புறம் தள்ளும் பொருளாய்க் காத்துக் கிடக்கிறேன்.
நான் தழியாய் இருந்தபோது, என்னுள் எத்தனையோ மனிதர்கள் புறம் தள்ளப்பட்டனர்.
வீதியில் உருவம் கெட்டு மண்ணாய்க் கரைந்தாலும் என்னுள் எத்தனை வேடிக்கை மனிதர்கள்.
உணர்வே இல்லாத உருவில் இருக்கும் எங்களை கல்லறையில் வைக்கிறார்கள். தோளில் சுமந்து முச்சந்தியில் உடைக்கிறார்கள். சமையலறையை அலங்கரிக்க வேண்டிய எங்களை இறப்புச் சடங்குகளில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ரப்பர், சில்வர் பொருட்களை மதிப்புடையது என நினைத்து மங்கள நிகழ்வுகளில் பரிசுப் பொருளாய்க் கொடுக்கிறார்கள். அவையெல்லாம் காலம் கடந்த உழைப்பைத் தருகிறதாம்.
நான் ஏன்? இங்கு இழிவுப் பொருளானேன்.
இந்த மனிதர்கள் காலம் கடந்து வாழ்வதை ஏன்? மறந்து விடுகிறார்கள்.
சமைப்பது, உண்பது, குடிப்பது அனைத்தும் மண் பாண்டங்களுக்கு மாற்றாய் அமையும் போது, மானுடம் எப்படி நலம் பெறும்.
மண்ணை எடுத்து உருவம் கொடுத்ததால் பானையானேன். வெறும் மண்ணாய்க் கிடந்திருந்தால் என்னை கூறுபோட்டு விற்றுவிடுவார்கள் இந்த; ரியல் எஸ்டேட்காரர்கள்.
குடிக்காரனுக்குப் போதைவரவில்லை என்றால்; நான் என்ன செய்வேன். அவன் மனைவி எனக்குள் சேர்த்து வைத்த பணத்திற்காக தூக்கிப்போட்டு உடைத்து விடுகிறான். சிலர் பக்கத்துவீட்டு சண்டைகளில்கூட எங்களைத்தான் போட்டு உடைக்கிறார்கள்.
நாங்களா? உழப்பைத் தரவில்லை. நீங்கள்தான் எங்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டீர்கள்.
காலில் முள்ளைக் குத்திக்கொண்டு; முள் காலில் வந்து குத்திவிட்டது என்று சொல்பவர்களாச்சே நீங்கள். எப்படி தங்கள் மீது குற்றம் என்று ஒத்துக்கொள்வீர்கள்.
முற்காலத்தில் உடைந்த ஓடாய் நான் கிடந்த போது எழுதிப் பழகினர்.
இன்று! அதை அகழாய்வு செய்து போற்றுகின்றனர்.
எனது பெருமை இப்படியல்லவா! தொடங்குகிறது. இது எத்தனை பேருக்குத் தெரியும். முதுமக்கள் தழியாய் நான் பெற்ற பேரு; இவ்வுலகம் அறியும்.
இது என்னுடைய பெருமைக்காக அல்ல மானிடனே! உனது சிறுமை குணத்திற்கு ஒளியாய்.
இன்றைய அறிவியல் உலகில் எதையெல்லாம் நீ உயர்வாகக் கருதுகிறாயோ; அதை உற்பத்தி செய்ய உன்னுடைய நீர், நிலம், காற்று அனைத்தும் மாசடைவதை உணரவில்லையா?
என்னைத் தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் நீங்கள் உயர் மானிடப் பிறப்பு; உங்கள் வாழ்வோடு கலந்த நான் சாதாரண மண் குடம் (பானை).
உடல் முழுதும் காற்றை அடைத்துக் கொண்டு வாழும் மானிடனே! உன் பொருள் தேடும் ஓட்டத்தை நிறுத்து.
எத்தனை முறை உனக்கு நன்மைகள் செய்தாலும் என்னை சாதாரணப் பொருளாய்ப் பார்க்கிறாய். அதை இன்றோடு விட்டுவிடு.
உன்னை உன் மனதை என்னுள் புகுத்து. என்னுள் இருக்கும் சக்தியை உனக்குத் தருகிறேன். போலிச் சாமியார்கள் தேடி அலைய வேண்டாம். பணம் பிடுங்கும் மருத்துவம் தேவையில்லை. நல வாழ்வை நான் தருவேன்.
சுவையாய் நான் தரும் ஆகாரம். என்றும் நீ வாழலாம் நெடுந்தூரம்.
நான் பேச வேண்டிய கட்டாய காலத்தில் இருந்தேன்.
பேசிவிட்டேன். மானிடா நீ பேசலாமே! என்று சொல்லி முடித்தது.
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் பானையைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். எதை நான் பேசுவேன். உயர்வாய்ப் பேன வேண்டிய உன்னை உதாசீனப்படுத்திய நாங்கள் கண்ணிருந்தும் குருடர்களானோம். ‘உணர்வுள்ளவற்றை உணராத மனிதர்கள் உன்னை எப்படி போற்றுவார்கள்’.
தவறாக எண்ணிவிடாதே; தெய்வ வாழ்வே! என்னை மன்னித்து விடு. உனக்குள் நான்; எனக்குள் நீ; ஒன்றாய் வாழ்வோம். நீ மண் பானை அல்ல; மான்பான வாழ்வைத் தரும் உயிரில்லா உருவம். மண் பானை வாழ்வைத் தேடி மானுடம் அலையும் காலம் எதுவோ! அதுவே பொற்காலம்.
குயவனின் வார்த்தைகளை செவிமடுத்த அந்த இளைஞன் வாயடைத்து நின்றான். அவனுக்குள் ஏதோ! ஒரு மாற்றம் வரத்தான் செய்தது.
அய்யா! உண்மையில் மண்பானையின் தேவையும் உங்களுடைய உழைப்பும் உலகோர் அறிவார் அய்யா; என்று கூறிவிட்டு, கையில் இருந்த செல்போனில் சக்கரம், பானையுடன் குயவனையும் சேர்த்து செல்பி எடுத்து முகநூலில் பதிவேற்றினான். ஆயிரத்திற்கு மேல் லைக்குகள் கிடைத்தது.
குயவனும் மண்பானையும் சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக உலா வருகின்றனர்.
இளைஞனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
“துன்புறுத்தினாள்!” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
அவசரமாக தொலைப்பேசியில் அன்று பேசியவன் தன்னைத் தினேஷ் என அறிமுகப் படுத்திக் கொண்டான். தன் உயிர்த் தோழன் ஸாகேத் சமீபகாலமாக இன்னலில் மாட்டிக் கொண்டு, ஆளே மாறிவிட்டான், அதற்கு ஒரு வழி காண என்னிடம் அழைத்து வருவதாக ஒரே மூச்சில் விவரித்தான். எங்களுடன் நிம்ஹானஸ் (NIMHANS) இன்ஸ்டிடியூட்டில் மனநலம் படித்த ஸைக்காட்ரிஸ்ட் ஒருவர், வட இந்தியாவில் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை புரிபவர். ஸாகேத்தின் குடும்பத்தினரின் ஊரில் அவர் மனநல முகாம் நடத்தி இருந்தார். அங்கே அவரைச் சந்தித்து ஆலோசித்த போது, அவர் சென்னையில் என்னைப் பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.
தன் ஊரில், சாகேத்தின் குடும்பம் மிகப் பிரபலமானவர்கள். ஆகையால் யாருக்கும் பிரச்சினை விவரங்கள் தெரியாமல் இருக்க, இவ்வளவு தொலைவில் உள்ள என்னை ஆலோசிக்க வந்தார்கள். எனக்கு ஹிந்தி மொழி நன்றாகத் தெரியும் என்பது இன்னொரு காரணம்.
இருபத்தி நான்கு வயதுள்ள ஸாகேத், ஜவுளி வடிவமைப்பு படித்திருந்தான். படிப்பு முடித்த கையுடன் ஜவுளி நிறுவனத்தை அமைத்தான். ஐந்து சக ஊழியர்களை நியமித்துக் கொண்டான். இவன் பெற்றோர் இதைப் பெருமையுடன் ஊக்குவித்தார்கள்.
தலைமுறை தலைமுறையாக அவர்கள் விவசாயிகள். பயிர், பழங்கள் மற்றும் பூ வகைகள் வயலில் பூத்துக் குலுங்கும். வீட்டில் அண்ணன்மார் இருவரும் தந்தையோடு விவசாயத்தைப் பார்த்துக் கொண்டனர். சிறுவயதிலிருந்தே ஸாகேத் உடைகளை, ஜவுளிகளை வடிவு அமைப்பதைப் பார்த்துப் பிரமித்ததுண்டு. அவன் ஜவுளி சம்பந்தமாகத் தொழில் செய்வான் என்பது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் துள்ளி ஓடும் அணில்களுக்குக் கூட தெரிந்ததே. தன் தொழில், வேலை என்று மட்டும் இல்லாமல் ஸாகேத் தினமும் இரண்டு மணி நேரத்திற்குப் பூக்கள், பழங்கள் வளர்ப்பிலும் ஆர்வத்துடன் பங்கு கொண்டான்.
தன் வீட்டினரைப் போலவே ஸாகேத்துக்கும் தாராள மனசு. உதவி செய்யும் மனப்பான்மை. இந்த சுபாவத்தைத் திவா என்றவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால் சாகேத்திற்குப் பல துன்பங்கள் நேர்ந்திருக்கிறது என்பது தினேஷின் கணிப்பு.
இந்த சங்கடத்தின் ஆரம்பம், திவாவின் மாமனார், ஆலோக் அவளுக்குப் பிரத்யேகமாகத் தாவரங்கள் நர்ஸரி ஆரம்பித்து வைத்ததில் தான்.
இருபத்தெட்டு வயதான திவா பட்டப்படிப்பை முடித்தபின் வேலை செய்து பார்த்தாள், பிடிக்கவில்லை. வீட்டில் பார்த்த மாப்பிள்ளை சிவா, அவளைப் பொருத்தவரை உப்பு சப்பு இல்லாதவன். இருந்தும் கல்யாணம் செய்து கொண்டாள். சமீபத்தில் புது வேலையில் சிவா சேர்ந்திருந்தான். எந்த வேலையிலும் ஓரிரு வருடத்திற்கு மேல் நிலையாக அவன் இருந்ததில்லை. அதனாலேயே அவனுடைய பெற்றோர் கல்யாணம் செய்ததுடன் ஒரு சொந்தத் தொழிலை அவன் மனைவிக்கு ஆரம்பித்துக் கொடுத்தார்கள். அப்படித் தான் இந்த பஸந்த் பஹார் நர்ஸரி உதயமானது.
வீட்டில், மாமனார் ஆலோக், தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா, வீடு மனை விற்பனை நிறுவனத்தில் மாமியார் நேஹா ஸுபர்வைஸர் வேலையிலிருந்தாள்.
நர்ஸரி பொறுப்பை மருமகள் திவாவிற்குச் சமர்ப்பித்தார்கள்.
தாவரங்கள் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாததால் தம் நண்பர்களாகிய ஸாகேத் குடும்பத்தினரின் உதவியைக் கேட்டார்கள். மறுபேச்சு இல்லை. முடிந்த வரை நர்ஸரி தாவரங்களைப் பற்றிப் பல தகவல்கள் சொல்லி, நர்ஸரியை அமைக்க உதவியாக இருந்தார்கள். உதவுவது ஸாகேத்தின் பொறுப்பு என்று தந்தை சொல்ல, அவனும் செய்ய ஒப்புக்கொண்டான்.
பத்துப் பதினைந்து நாட்கள், மிஞ்சினால் ஒரு மாதம் எடுக்கும் எனக் கணக்கிட்டான் ஸாகேத். ஆனால் பல மாதங்களுக்குப் பின்னரும் விடுபட இயலவில்லை. . வெளியில் சொல்ல முடியாத இன்னல்களால் தவித்தான் சாகேத்.
ஸாகேத் மிக அமைதி ஆவதைக் கவனித்த குடும்பத்தினர் என்ன ஏது என விசாரித்துப் பார்த்தார்கள். பதில் கிடைக்கவில்லை. உயிர்த் தோழனான தினேஷ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கவனித்தான். தர்மசங்கடமான நிலை. அப்போது தான் ஸைக்காட்ரிஸ்ட்டை சந்தித்துப் பேசினான். என்னிடம் அழைத்து வந்தான்.
முதல் முறை என்னிடம் வந்த போது, ஸாகேத், தான் அனுபவித்து வரும் தர்மசங்கடமான நிலையைப் பகிர வெட்கப் பட்டான். பொதுவாக வன்முறை, கொடுமைப் படுத்தல் அனுபவித்து வருவோர் இவ்வாறு நினைப்பார்கள். அவர்கள் உணர்வை அனுசரித்துப் போக வேண்டும். அவனுள் பொங்கிய வேதனை அவன் தோற்றத்தில் தெளிவாகத் தென்பட்டது. முதன்முறையாகப் பேச முயல, வார்த்தைகள் மிகக் குறைவு. உடல் நடுங்கி, கண்ணீர் ததும்பியது. சாகேத்திடம் வன்முறை சகிக்கும் போது இவ்வாறு நேரும் எனப் பல உதாரணங்கள் சொல்லி விவரித்தேன்.
ஸாகேத் பகிர வந்ததே பெரிய முன்னேற்றம் எனச் சொன்னேன். நடந்தவை தனக்குக் கேவலமாக இருப்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். செயலற்ற நிலை உணர்வதாகக் கூறினான். இங்கு வந்தது, இதிலிருந்து விடுபட ஆரம்ப நிலை என்றேன். ஊக்கப்பட்டான்.
அனுபவிக்கும் கட்டத்தைத் தாண்டிச் செல்லவே வந்திருக்கிறோம் என்ற திடமான உறுதி வந்ததும் பகிருவது சுலபமாகும் என்றேன். நான் மனநல பிரிவில், ஸைக்காரிக் ஸோஷியல் வர்கர். எங்களிடம் வருவோரின் நிலையை, பகிர்தலை யாரிடமும் சொல்ல மாட்டோம் (எங்கள் பாஷையில் confidentiality) என விளக்கினேன். இங்கு எழுதுவதைப் போல, மாணவர்கள், பொது மக்களுக்கு மனநலம் பற்றி விவரிக்க உபயோகித்தாலும், அடையாளங்களை மாற்றி வைப்போம்.
சொன்ன விவரங்களை ஸாகேத் விம்மி அழுது கொண்டே தலை ஆட்டி கேட்டுக் கொண்டான். சென்றான். இரண்டு வாரத்திற்குப் பிறகு மறுபடி தினேஷுடன் வந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மிக அவசரமான, தேவையுள்ள க்ளையன்டை மட்டுமே பார்ப்பேன். ஸாகேத் வெளியூரிலிருந்து வருவதால் சம்மதித்தேன். சாயங்காலம் விமானத்தில் வந்தார்கள். முழு பௌர்ணமி. அந்த சந்திரனின் வெளிச்சம் போல இவன் வாழ்வும் தெளிவு பெறவே இந்த நாளை தேர்ந்தெடுத்தது போல ஆயிற்று!
ஆரம்பிப்பதற்கு முன் அவனுடைய தற்போதைய நிலையை விளாவரியாக விளக்கச் சொன்னேன். தட்டுத் தடுமாறி ஆரம்பித்து, நடந்ததை முழுவதையும் விவரித்தான்.
திவாவிற்கு நர்ஸரி நடத்துவது சற்றும் தெரியாததால் அவளைப் பலமுறை சந்திக்க நேர்ந்தது. தியா கேட்ட கேள்விகள் அனைத்தையும் ஸாகேத் விளக்கினான். அவள் மறுபடி மறுபடி திடீரென வருவாள். சர்ரென்று வாகனத்தை வேகமாக அவன் அருகாமையில் ஓட்டி வந்து பயமுறுத்துவாள். தொட்டுத் தொட்டுப் பேசுவது ஸாகேத்திற்குப் பிடிக்கவே இல்லை. “செய்யாதே அக்கா” என்றால் தியா பதிலுக்கு “ஏய், அக்காவா? வெட்கமா?” என்று கேலி செய்து இன்னும் அருகில் நெருங்குவாள். சீக்கிரமே முடித்து விட வேண்டும் என்று துடித்தான். தியா கேட்டதற்கு விறைப்பாக விளக்கம் அளித்தான் ஸாகேத். அவள் முகத்தைச் சுளித்து, புரியவில்லை என்ற பாவனை செய்து “வந்து செய்து காட்ட முடியுமா?” என எல்லோரும் முன்னால் கெஞ்சினாள். இந்த நடத்தையை ஸாகேத்தின் குடும்பத்தினர் அவள் சகஜமாகப் பழகுகிறாள் என்றே எடுத்துக் கொண்டனர்.
தியா உள்ளுக்குள் குதுகலம் அடைந்தாள். அன்றிலிருந்து, அதிகபட்சம், “வந்து காட்டேன்” கோரிக்கையை விடுத்தாள். ஸாகேத் தன் வாழ்நாளில் முதன்முறையாக உதவுவதை வருந்தினான். அவ்வாறு நினைப்பதற்குத் தன்னையே நிந்தித்துக் கொண்டான். தியாவின் வருகை, அல்ல வரச்சொல்லி அழைக்கும் போது மனம் நடுங்கும். கடமைக்காகப் போவான்.
சாகேத்திற்கு தன்னுடைய இந்த மனமாற்றம் அன்னியதாகத் தோன்றியது. கடுகு அளவு கூடப் பிடிக்கவில்லை. விளைவாக அவனது வேலையில் பாதிப்பு வரத் துவங்கியது. இதை சரிப்படுத்தவும் வந்தேன் என்றான். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஸெஷனில் இந்த நிலையின் பல காரணி, சூழல், உணர்வு அவனுடைய நடத்தை, குறைகள் பற்றி யோசிக்க வைத்தேன்.
ஸெஷன்களில் முடிவானதின்படி, தன் உடற்மொழியை (body language) மேலும் கவனிக்கத் தொடங்கினான். மாற்ற ஆரம்பித்தான்.
தியா அவன் கையை உரசி அழைக்கையில், தேவையில்லாமல் இப்படிச் செய்கிறாள் என்று உணர்ந்தான். அவள் கால்களை அருகாமையில் கொண்டு வருவதை, விரல்கள், கைகளை தன் கையின் பக்கம் நீட்டுவதை ஸாகேத் கவனித்து, தன்னைச் சுதாரித்து, முடிந்த அளவிற்குத் தள்ளிப் போவான். அப்போது தியா அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, சிரிப்பாள்.
அவளுடைய அம்மா அங்கே இருந்து விட்டால், இருவரும் அவனைச் சீண்டி விட்டு நகைத்துக் கொள்வார்கள். அவளுடைய அம்மாவும் உடந்தையாயிற்றே! இருவரும் தன்னைவிட வயதில் அதிகம் வேறு. தடுக்க முடியாமல் தவித்தான். குற்ற உணர்வுடன் தத்தளித்தான்.
இதையே மறுமுறை ஸாகேத் வந்தபோது ஸெஷனில் ஆராய்ந்தான். ஸாகேத்தை அந்த தருணங்களில் தான் நினைத்துக் கொண்டதை, நடந்து கொண்ட விதத்தைப் பற்றி விளாவரியாக விவரிக்க, கதை சொல்லி புதிர் போட்டு, வரைந்து என விதவிதமான வகையில் பகிரச் செய்தேன்.
அவள் நடத்தைக்கு மறுப்பு தெரிவிக்காதது அவனுக்குக் குற்ற உணர்வை ஊட்டியது. தவிர்த்துவிட தான் ஏன் முயலவில்லை என வியந்தான்.
தன் செய்கைகளால் தியா கிலுகிலுப்பு அடைந்தாள்.
வன்முறை, புல்லியிங் (bullying) பற்றிய பல கட்டுரைகள் படிக்கக் கொடுத்தேன். ஏனெனில் தியாவின் செய்கையால் ஸாகேத்திற்கு தவிப்பு ஏற்பட்டது அவளுக்குக் கிளர்ச்சியைத் தந்தது. ஸாகேத் தன்னை விடுவித்துக் கொள்ளாதது அவளுக்கு வெற்றியானது. காயப்படுத்தியே ஸாகேத்தை தன்வசத்தில் வைத்தாள். பாதிக்கப்பட்ட நிலையை ஸாகேத் சுதாரிக்கத் தெரியாமல் படும் அவஸ்தை தியா போன்றவர்களுக்கு வெற்றி.
கட்டுரைகளில் இவை அனைத்தும் பல வர்ணனை வடிவில் இருந்தது. படித்து வந்தபின், முன்பைவிட ஸாகேத்திடம் ஒரு சுறுசுறுப்பு, கண்கள் பளிச்சென்று இருந்தது. அவனுக்குத் தெளிவு பிறந்தது போல எனக்குத் தோன்றியது. இந்த bibliotherapy (படித்து அறிவதின் மூலம் குணப்படுத்துவது) முறை, அனுபவித்து வருவதைப் பற்றிப் படிக்கையில், அதைப் பற்றிய சரியான தெளிவு புரிதல் வர உதவும், மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் தோன்றும். தோன்றியது!
அதன்படி, தியா மிக அருகில் நெருங்கி நிற்கும் போது ஸாகேத் “மன்னிக்கவும், மூச்சு விட இடம் கொடுத்து, கொஞ்சம் தள்ளி நிக்க முடியுமா”? என்றான். தியா திடுக்கிட்டுப் போனதாகச் சொன்னான். தன்னால் சொல்ல முடிந்தது என்பதே அவனுக்குத் தைரியம் கொடுத்தது. புது தெம்பு வந்தது.
தன் உதவி செய்யும் கொள்கையை தியா பயன் படுத்திக் கொள்கிறாள், தவறாக அணுகுகிறாள், தன் கொள்கையில் குறை இல்லை என்று புரிந்து கொண்டான். பிரச்சினையின் மையமே மற்றவர்கள் அவதிப் படுவாரோ என அஞ்சி “எனக்கு இதில் உடன்பாடு இல்லை”, “மாட்டேன்” என்று சொல்லாமல் இருப்பது. விளைவாக இத்தகைய சூழலில் நேர்கிற தவிப்புகள்.
தியா நெருங்கும் போது, ஸ்பரிசத்தைத் தவிர்க்க எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என வகுக்க ஆரம்பித்தான்.
ஸெஷன்களில் பயின்றவற்றை தியாவிடம் நடத்திக் காட்ட வேண்டிய நிலையில் தட்டுத் தடுமாறினான். தியா மேலும் கை போடுவது நேர்ந்தது. இதை வெல்ல, நண்பன் தினேஷை உடன் சேர்த்துச் செய்ய முடிவானது.
செய்ய ஆரம்பித்தார்கள். மடமடவென பல மடங்கு ஸாகேத் திடமானான். தியா அவனிடம் நெருங்கி வரும் தருணங்களில், நேரடியாக, “எதற்காக தியா, உன்னை நீயே இவ்வளவு தாழ்த்திக் கொள்கிறாய்? பெண்ணான உனக்கு இது அழகாக இல்லை. அருவருப்பைத் தான் தருகிறது” எனச் சொல்லி விலகினான்.
தியாவும் விட்ட பாடில்லை. ஸாகேத் அடுத்த நிலைக்குப் போக வேண்டிய நிலை வந்தது. அதைப் பல ரோல் ப்ளே மூலம் தயார் செய்தோம். ஓரிரு முறை ஸ்பரிசம் செய்ய முயலும் போது, அவள் கண்களைப் பார்த்தவாறு விலகிக் கொண்டான். திட்டவட்டமான குரலில் பேச, தியா தடுமாற்றம் கொண்டாள். ரிஸ்க் எடுத்து அவள் சறுக்கல் கண்டதைக் கேட்டு தியாவின் தாயார் அவளைக் கிண்டலாக பேசினாள்.
நல்லெண்ணத்தில் ஸாகேத் தியாவிடம் தன் போக்கை மாற்றிக் கொள்ள, என்னைப் பார்க்கப் பரிந்துரைதான். அவளுடைய இந்த செயலால் தனக்கு நேர்ந்த உபாதைகளை அவளிடம் வெளிப்படையாகக் கூறினான். அத்துடன் விடாமல் தான் மனநலனை திடப்படுத்திக் கொண்டதாகச் சொன்னான். தியாவும் இந்த நடத்தையைச் சுதாரித்துக் கொள்வதற்கு வழி வகுக்க என்னை அணுகச் சொன்னான்.
அவமானம், ஆச்சரியம் அடைந்தாள் தியா ஆனால் அந்த க்யூரியாசிட்டி அவளை, சிவா, ஆலோக், நேஹா, தன் அம்மாவுடன் என்னிடம் அழைத்து வந்தது.
தியாவுடைய அம்மாவைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட ரிஸ்க் எடுக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே தியாவை அபாயத்தில் கிளுகிளுப்பு உணர, இரு வாகனத்துக்கு நடுவில் ஸைக்கிள் விட அல்ல ஓட, சினேகிதி, நண்பர்களை, ஆசிரியர்களை கேலி செய்ய, சீண்ட ஊக்குவிப்பாளாம். பயமே தெரியாதாம். தானும் அதுபோல என்றாள் அவள் தாயார்.
கணவன் சிவாவோ மிக நிதானமானவன். பெற்றோர் எடுக்கும் முடிவின்படி அவன் போவது அவளுக்குச் சலிப்புத் தந்தது. இந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் ஆலோக் நேஹா ஜோடியை ஆதர்ச ஜோடி என எல்லோரும் கூறினார்கள். ஜோடிகள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். வெளி உலகிற்கு மட்டும் இந்த மாதிரி. இவர்கள் இடையே உள்ள கடும் அபிப்பிராய பேதங்கள், வாக்குவாதம், மனஸ்தாபம். அதைப் பார்த்து “ஆதர்ச” தம்பதியருக்கு தியா மரியாதை தர தனக்கு மனம் வரவில்லை என்றாள். ஆலோக் நேஹா தங்களைப் போன்ற “ஆதர்ச” தம்பதிகளாக இருக்க வலியுறுத்த, சிவா அதை ஆமோதிப்பதை வெறுத்தாள். ஏதோவொரு த்ரில் செய்ய மனம் ஏங்கியது. வேறு ஒருவரைத் தன் வலையில் சிக்க வைக்க தியா துடித்தாள்.
அம்மா தூண்டுதல் கூடியதாலும், தனக்குக் கிளுகிளுப்பு செய்ய, இந்த ஆதர்ச தம்பத்தியர் முகத்தில் கரியைப் பூச, தியா ஸாகேத்தை வசப்படுத்தப் பார்த்தாள். சீண்டி விட்டு மற்றவர்கள் அவதிப்படும் நிலையில் சுகம் பெறுவதற்காக. திவா, அவள் அம்மா இருவருக்கும் ஹை ரிஸ்க் பிஹேவியர். ஸாகேத்தை சீண்டிவிடுவதை விட்டு விடச் சிவா சொன்னான். பொறாமையா என்று திவா விவாதித்தாள். ஆலோக் நேஹா திடுக்கிட்டுப் போனார்கள்.
தியா செய்யும் சேட்டையில் அவளுடைய அம்மா இன்பம் அனுபவித்து, தூண்டி விடுவது பழக்கம். சிகிச்சை என்று போனால் என்னாவாகுமோ என நினைத்து, தியாவை அழைத்துக் கொண்டு அவள் வெளிநாட்டுக்குச் சென்று விட்டதாக தியாவின் தந்தை வந்து தகவல் சொல்லி விட்டுப் போனார். தியாவிற்கு ஏதோ புரிதல் இருக்கிறது என்றாலும், இருவருக்கும் என்றைக்காவது தாங்கள் செய்வதின் விளைவைப் புரிந்த பின்னரே உதவி நாடுவார்கள்.
******************************************
ஆர்கானிக் தம்பி பாப்பா! – ரேவதி பாலு
“என் சீமந்தத்திற்கு உங்க பாட்டி தூக்குத் தூக்கா ஸ்வீட் பண்ணிட்டு அதை எறும்பு கிட்டேயிருந்து காப்பாத்த என்ன பாடுபட்டா தெரியுமாடீ?” தன் இரண்டாவது பெண்ணின் சீமந்தத்திற்கு லட்டு பிடித்துக் கொண்டிருந்த ஜலஜா, மும்பையிலிருந்து முன்னதாகவே தங்கையின் சீமந்தத்திற்காக தன் ரெண்டு குழந்தைகளுடன் வந்திருந்த முதல் பெண் சுஜாவிடம் சொன்னாள்.
“ஏம்மா? அந்த காலத்தில எறும்புப் பொடி, எறும்பு சாக்பீஸ் எல்லாம் இல்லியா?” சுஜா ஆச்சரியமாகக் கேட்டாள்.
“இல்லையே! ஸ்வீட் வச்சிருக்கிற ஒவ்வொரு தூக்கையும் ஸ்வாமி அறையில தரையில வச்சு அதைச் சுத்தி மஞ்சள் பொடியில ஒரு வட்டம் போடுவாங்க. சாதாரணமா மஞ்சள் பொடி வாசனைக்கே எறும்பு வராது. ஆனா அதைத் தாண்டியும் எறும்பு வந்துடுமோன்னு ஒவ்வொரு தூக்கோட வெளிப்புற வயத்துப் பாகத்திலேயும், அதாண்டீ பாத்திரத்தோட நடுப்பாகம், விளக்கெண்ணையை சுத்தித் தடவி விடுவாங்க. என்ன ஐடியா பாரு? எறும்பு தூக்கில ஏறினா கூட விளக்கெண்ணையைத் தாண்டி ஏற முடியாம வழுக்கி விழுந்துடுமாம்.” ஜலஜா சிரித்தாள்.
“இப்போ பாரேன்! அரவிந்த் பிரட் சாப்பிட்டுட்டு மிச்சம் வச்ச தட்டுல ஒரு எறும்பாவது வந்திருக்கான்னு. நானும் எத்தனை நாளா பார்க்கிறேன், பிரட், பிஸ்கெட், சர்க்கரை, கோதுமை மாவு ஒரு சாமான்லேயாவது எறும்பு வருதான்னு. அது மட்டுமல்ல. காய், பழமெல்லாம் வாங்கினா ரெண்டு நாள் வச்சிருந்தா முன்னாடியெல்லாம் கெட்டுப் போயிடும். இப்போ ஒரு வாரம் கூட அப்படியே இருக்கே? ஊஹ¨ம்! எல்லாத்திலேயும் என்ன பூச்சிக் கொல்லி ரசாயனம் போடறாங்களோ தெரியல! அதெல்லாம் வயத்துக்கு எவ்வளவு கெடுதல்!” ஜலஜா அலுத்துக் கொண்டாள்.
“ஏம்மா? கடையில ஆர்கானிக்குன்னு போட்டு சாமானெல்லாம் விக்கிறாங்களே. அதை வாங்கிப் பார்க்கிறதுதானே?” என்றாள் சுஜா.
“அம்மா!” இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அரவிந்த் உள்ளறைக்குச் சென்று விட்டுத் திரும்ப ‘தட தட’ வென்று ஓடி வந்தான் மூச்சிரைக்க.
“இங்கே வந்து பாரேன்! தம்பிப் பாப்பா ஆர்கானிக்குன்னு நினைக்கிறேன்!”
“என்னடா சொல்ற?” ஒன்றும் புரியாமல் சுஜா அவன் பின்னாலேயே ஓடினாள்.
உள் அறையில் கீழே பாயில் படுத்திருந்த ஐந்து மாதக் குழந்தையைச் சுற்றி ஒரு வரிசையில் கறுப்பு எறும்புகள் போய்க் கொண்டிருந்தன.
பதறிப் போய் சுஜா குழந்தையைத் தூக்கினாள். பால் குடித்து முடித்து வாயோரம் பால் ஒழுகத் தூங்கிப் போன குழந்தையைச் சுற்றி அந்தப் பால் வாசனைக்காக எறும்புகள் வந்திருக்கின்றன என்று தெரிந்ததும், எறும்புகளைத் தட்டி விட்டு விட்டு குழந்தையின் சட்டையைக் கழற்றி உடம்பில் எங்கேயாவது எறும்புகள் இருக்கின்றனவா என்று பதட்டத்தோடு பார்த்தாள்.
“நான் சொன்னேனில்ல தம்பிப் பாப்பா ஆர்கானிக்குன்னு. இப்ப நீயே பாரு பாட்டி! ஆர்கானிக்குன்னா தானே எறும்பு வரும்?” ஐந்து வயது அரவிந்த் சீரியசான முகபாவத்தோடு சொல்ல பிரமித்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஜலஜாவும், சுஜாவும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.
நடுப்பக்கம் – ராமன் எத்தனை ராமனடி – சந்திரமோகன்
இராமாவதாரம்- பாமரனின் பார்வையில்
கவிச்சக்கர வர்த்தி கம்பர், தான் எழுதிய ராம காதையை திருவரங்கம் அரங்க நாதன் முன்னர் அறங்கேற்றிய பொழுது இராம அவதாரம் என்றே குறிப்பிடுகிறாராம். வால்மீகியின் இராமாயணம் உலகப் புகழ் பெற்று இருந்ததால் பின் நாட்களில் கம்பரின் இராம காதை கம்ப இராமயணம் என்று அழைக்கப் பட்டதாம்.
பெரும்பாலும் என் வயதொத்தவர்கள் வாழ்நாளில் ஒருதடவையாவது கம்ப இராமாயணம் முழுதும் படிக்க வேண்டும் என்ற ஆவலை மனதின் ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்தே வாழ்வை கடந்து விடுகிறார்கள். புண்ணியம் செய்த சிலருக்கு ஆசை கை கூடுகிறது. சிலருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பகுதிகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இராம கதையை முழுதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென என் மனதில் விதைக்கப் பட்ட ஆசையொன்று இச்சமயம் முளை விட்டதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.
எதில் ஆரம்பிப்பது, எங்கு ஆரம்பிப்பது! தேடினேன். வால்மீகியை படிக்க தேவ பாஷையான சமஸ்கிருதம் தெரியாது. கம்பனை படித்து புரிந்து கொள்ளுமளவிற்கு தமிழில் ஞானம் கிடையாது. மீண்டும் தேடினேன்.
கம்பனைக் கேட்டால்” தேவ பாஷையில் இக்கதை செய்தவர் மூவரானவர்” என்கிறார். சமஸ்கிருதத்தில் மூவர் எழுதி உள்ளார்களாமே அவர்கள் யாரென்று பார்த்தால் நம் அகத்தியர்,வியாசர், வால்மீகி ஆகிய மூவராம். மக்கள் மனதில் வேரூன்றி நிலைத்தது என்னவோ வால்மீகி இராமாயணம்தான்.
வால்மீகி தான் வாழ்ந்த காலத்தில் வடநாட்டில் வழங்கி வந்த இராம சரிதத்தை அக்கால வாழ்வியலை முன் வைத்து தன் கவி நயத்தால் பேரிதிகாசமாக வழங்கினார். அவர் இராம சரிதத்தின் ஒரு குறிப்பிட்ட படியை சித்தரித்தார். ஆனால் இராமாயணம் கதையின் அம்சங்களில் வளர்ந்து கொண்டே வந்துள்ளது. காவிய நாயகன் இராமனும் உத்தம மனிதன் என்ற நிலையிலிருந்து இறைவன் என்ற நிலைக்கு உயர்த்தப் பட்டான்.
வைதீக மதப் பிரிவான வைணவம் இராம காவியத்தை பக்தி இலக்கியமாக போற்றியது. அகத்தியர் இயற்றிய அத்யாத்ய இராமாயணம் பக்தி சுவை நிறைந்து கலைச் சுவையற்று இருந்ததால் மக்கள் மனதில் நிற்க வில்லையாம். இந்தியில் துளசிதாசர் எழுதியதும் இவ்வகையே.
அதேசமயம் தங்கள் பங்கிற்கு சமணமும் பௌத்தமும் இராமனை தம் மத நாயகனாக காட்டின.
பௌத்த இராமாயணத்தில் அம்மத கொள்கைகளே விரிவாக கூறப்படுகிறதாம். அதில் வினோதமான ஒரு தகவல் , புத்தர் சார்ந்த சாக்கிய மரபில் உடன் பிறந்த ஆணும் பெண்ணும் மணந்து கொள்ளுதல் வழக்கமாம். அவ்வழக்கின் படி சீதையும் இராமனும் உடன் பிறந்தவர்களென்று பௌத்த இராமாயணம் கூறுகிறது.
ஜைன இராம சரிதையிலும் மத நோக்கமே மேம்பட்டு நின்றதாம்.ஜைன இராம சரிதையில் தசரதன் காசிக்கு அரசன் பின்னர் அயோத்திக்கு அரசனாகிறான். இதைத் தழுவி ஜைன இராம சரிதை கன்னடத்திலும் தமிழிலும எழுதப்பட்டன. தான் வளர்த்த யாகத்திற்கு இராமனை அனுப்பக் கோரி ஜனகர் தசரதனை வேண்டுகிறார். அங்கு சென்ற இராமன் சீதையை மணந்தார். தம்பதியை காசியில் வசிக்கச் செய்தார் தசரதன்.
வனத்தில் ஓய்வெடுக்க இராமன், இலக்குவன், சீதை சித்திர கூடம் செல்கிறார்கள். அங்கு வந்த நாரதரை மதியாததால் , இராவணனிடம் சீதையின் பேரழகை நாரதர் கூறுகிறார். இராவணன் மாரீசன் உடன் சென்று சீதையை கவர்ந்து செல்கிறான். அனுமான் சீதையை கண்டு வந்து இராமனிடம் தெரிவிக்கிறான். நடந்த போரில் இராவணன் இலக்குவனால் கொல்லப் படுகிறான். இலக்குவன் தவிர அனைவரும் சொர்க்கம் செல்கின்றனர். இலக்குவன் கொன்ற பாவத்திற்காக நரகம் செல்கிறான். இந்திரனும் அனுமனும் ஜைன துறவிகளாகிறார்கள். இராமன் கேவல ஞானம் பெற்று நிர்வாணம் அடைந்தான். இராமனுக்கு பதினாயிரம் மனைவியராம். மத நோக்கம் மேற் பட்டதால் கலையுணர்ச்சியும் கவிதையுணர்ச்சியும் முற்றும் மறைந்து ஜைன இராம சரிதை விரைவில் அழிந்தது.
இராமாயணம் உலகில் வழங்கும் சரிதைகளில் பழமையும் பெருமையும் வாய்ந்தது. இராக் காலங்களில் மக்கள் திரளாய் கூடும் இடத்தில் இராம சரிதையை கதையாக, பாட்டாக கூறும் பழக்கம் வெகு நாட்களாக நடந்து வந்துள்ளது. அதுவே பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வாதாராமாகவும் இருந்து வந்துள்ளது. கதை கூறுபவர் தாம் கற்ற வித்தையை காட்டவும், மக்களை கவரவும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை புகுத்தி வால்மீகியை விட்டு சற்று விலகிச் சென்றனர். உப கதைகள் பல சேர்த்தும் பக்தியை மிகைப்படுத்தியும் இராம சரிதத்தை ஒரு பக்தி இலக்கியமாக மாற்றினர் பலர். சிலர் தங்கள் கற்பனை வளத்தை காட்டி இலக்கிய உணர்வை கெடுத்தனர். அவைகளையொட்டி வந்த இராம காதைகள் எவையும் நிலைக்க வில்லை. நிலைத்து நின்றது வால்மீகியின் இராமாயணமும், அதை மூலமாக வைத்து, காலத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் ஏற்ப சிறிய மாற்றங்களுடன் படைக்கப் பட்ட கம்ப இராமாயணமுமே.
கலிங்கத்து பரணி பாடிய ஜெயங் கொண்டார், ஒட்டக் கூத்தர், கம்பர் ஆகிய மூவரை மட்டுமே தமிழுலகம் கவிச்சக்கர வர்த்தி என அழைத்தது. முதல் இருவரும் சோழ அரசர்களின் நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்கள் புகழ் பாடியவர்கள். அவர்கள் பட்டம் நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை.
கம்பனுக்கு அரச தொடர்பு ஒன்றுமில்லை. மாறாக கம்பன் அரசரது கோபத்திற்கு ஆளாகி, வேற்று இடங்களுக்கு சென்று மறைந்து வாழும்படி நேரிட்டது. இறுதியில் கம்பன் ஓர் அரசனால் மரணம் அடைந்தான் என்றும் சரித்திரம் கூறுகிறது.
இருப்பினும் கவிச்சக்ரவர்த்தி என்றால் கம்பன் எனும் புகழே அவன் இயற்றிய இராமாயணத்தின் சிறப்புக்குச்சான்று.
கம்ப இராமாயணம் சொல் வளம், செய்யுள் வளம், உவமை, வருணனை, பாத்திரங்களை சிறப்பிக்கும் வளம் நிறைந்து விளங்குவதால் தமிழ் அறிந்த அனைவரும் பெருமையுடன் படிக்க வேண்டிய காவியமாக இயற்றி சுமார் 850 ஆண்டுகளுக்கு பின்னரும் நம் கைகளிலும் செவிகளிலும் தவழ்ந்து வருகிறது.
கம்பன் இயற்றிய இராமாவதாரம் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டு வால்மீகி இராமாயணத்தோடு ஒத்த பெருமையும், கவித்துவமும் காணப்படுகின்றன என்பார்கள். கம்பன் தான் ஒரு வைணவன் என்றோ அல்லது இது ஒரு பக்தி இலக்கியம் என்றே எங்கும் காட்ட வில்லை.
தன் இராம சரிதையில் ஒவ்வொரு பாத்திரத்தையம் மனதில் நிற்குமளவிற்கு பெருமைப் படுத்துகிறார். இராமனுக்கு நிகராக இராவணன் படைக்கப் பட்டுள்ளான். அவனது அந்த க்ஷன நேரப் பித்தமே அவன் அழிவுக்கு காரணமானது. அதுபோலவேதான் கூனியும் கைகேயியும். இராமனின் சிறுவயதில் உண்டி வில்லால் அடிவாங்கிய கூனியின் கோபமும், கூனியின் பேச்சால் மயங்கிய கைகேயி தன் வசமிழந்த தருனம் மட்டுமே அவர்கள் கெட்டவரகளாக தோன்றினர்.
இராமனை திரும்ப அழைத்து வர சென்ற பரதனுடன் கிளம்பி முன் வரிசையில் உடன் நடந்தவர்கள் அந்த இருவருமே.
இராமனின் ஒழுக்கம், சீதையின் கற்பு நெறி, அனுமனின் கம்பீரம், இலக்குவன் , பரதன், கும்பகர்ணன் ஆகியோரின் சகோதர பாசம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அக்காவியத்தை ஒரு தடவையாவது படித்து அனுபவிக்க வேண்டும்.
படிக்க வாய்ப்பு இல்லாவிடின் சிங்கப்பூரிலிருந்து காணொளி மூலமாக திரு. அ.கி. வரதராஜன் ஐயா அவர்கள் எடுக்கும் வகுப்பை கேட்களாம். கம்ப ராமாயணத்தின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காட்டி அழகான விளக்கங்களுடன் அவரது வகுப்பை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். சுந்தர காண்டம் மட்டும் வாரம் ஒரு வகுப்பாக 80 வாரங்கள் தாண்டியுள்ளன. ஒரு வகுப்பு சுமார் ஒன்றரை மணி நேரம். வாய்ப்பும் நேரமும் உள்ளவர்கள் கேட்கலாம்.
வீடியோ பார்க்க கேட்க நேரமில்லை என்றால் அழகு தமிழில் டாக்டர் ரா. சீனிவாசன் அவர்கள் எழுதிய உரை நடையை (கீழே) முன்னர் படித்து பின்னர் கம்பரை படிக்க முயலளாம்.
கம்பர் பிறந்த மண்ணில் பிறந்து கம்பனின் கவிதையை படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு நாம் பல பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை.
இன்னும் கொஞ்சம் தகவல் இணையத்திலிருந்து திரட்டியவை – நன்றி விஜயபாரதம்
அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்
துளசிதாசர் அருளிய ராம சரித மானஸ் -காலம் 16 ஆம் நூற்றாண்டு.
ஜம்மு & கஷ்மீர் – ‘ராமாவதார சரிதை’ – காலம் 19 ஆம் நூற்றாண்டு.
குஜராத் – பிரேமானந்த ஸ்வாமி – துளசி கிருத ராமாயணம்
மகாராஷ்ட்ரா – ஏக்நாத் – பவர்த்த ராமாயண – காலம் 16 ஆம் நூற்றாண்டு
அஸ்ஸாம் – மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் – 15 ஆம் நூற்றாண்டு
வங்காளம் – கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட கிரித்திவாசி ராமாயணம் – 15 ஆம் நூற்றாண்டு
ஒதிஷா – பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் – காலம் 16 ஆம் நூற்றாண்டு
ஆந்திரப் பிரதேசம் – புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு
கர்நாடகா – 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்), 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா முத்தண்ணா எனும் லக்ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.
தமிழ்நாடு – கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’. – 12 ஆம் நூற்றாண்டு
கேரளா – – துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு – 16 ஆம் நூற்றாண்டில்.
நேபாளம் – 19 ஆம் நூற்றாண்டில் பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவா – 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு .
உத்தரப் பிரதேசம் – உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.
இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத்
திகழ்கின்றன.
அயல்நாடுகளிலும் ராமகதை இன்றளவும் சொல்லப்பட்டு வருவது அதன் பெருமைக்குச் சான்று.
கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)
ஆக, இப்படி ஏராளமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
காலடி – கிரிஜா ராகவன்
அலெக்ஸா வழக்கம்போல 5.30க்கு க்கு அலாரம் அடித்து அவரை எழுப்பியது.
“அலெக்ஸா ஸ்டாப்” என்று அதை நிறுத்தி விட்டு சுந்தர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். கைகளைத் தேய்த்துக்கொண்டு உள்ளங்களைப் பார்த்து
கராக்ரே வஸதே லக்ஷ்மி
கரமத்யே ஸரஸ்வதி
கரமூலே ஸ்திதா கௌரி
மங்கலம் கர தர்ஸனம்
என்று சொல்லி முகத்தை இரு கைகளால் அழுந்த வருடிக்கொண்டு எழுந்தார்.
அடுத்த அரை மணியில் கிடுகிடுவென்று அவருடைய காலை ரொட்டீன்கள் நடந்தன. தூங்கும் ராகேஷும் சுகன்யாவும்எழுந்துவிடக்கூடாதே என்பதற்காகவே சப்தமில்லாமல் டிகாஷன் போட்டு பால் காய்ச்சி காபி குடித்து சாமி விளக்கையும் ஏற்றினார்.
சாமி முன்னாடி நிற்கும் போது ஒரு நிமிடம் நளினியின் நினைவு எழுந்து அடங்குவதை தடுக்க முடியவில்லை. இருபது வருடங்களுக்கு முன் அவசரமாய் போய் சேர்ந்த மகராசி. பெருமூச்சுடன் மனைவி நினைவைப் பின்தள்ளி ஷார்ட்ஸ், டீ ஷர்ட் அணிந்து வாக்கிங் கிளம்பினார். தலை வார கண்ணாடியைப் பார்க்கும் போது தோன்றியது.
“சுந்தர் நீ தனி தாண்டா. இதுதான் வாழ்க்கை. ரியாலிடி. அன்பு, வார்த்தைன்னு ஏங்காதே ! சியர் அப்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வாக்கிங் கிளம்ப கான்வாஸ் ஷுவை மாட்டும் முன் சமையலறைக்கு சென்று நியாபகமாக கொஞ்சம் குட்டே பிஸ்கேட் கையில் எடுத்துக்கொண்டார். வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு இறங்கும் போது அவர் நினைத்தாற் போலவே கேட்டிற்கு வெளியே வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தது அந்த கறுப்புக் கலர் நாய்.
கையிலிருந்த பிஸ்கேட்டை அதற்குப் போட்டபடி “இதுக்குத்தானே வெயிட் பண்ணே ! சாப்டுட்டு போயிடணும். கூட வந்து தொந்தரவு பண்ணக்கூடாது”
ரிடையர் ஆகி ஆறுமாதம் ஆகிவிட்டாலும் இன்னும் ஆபீசர் தோரணை போகாத சுந்தர் மிரட்டியதை அந்த நாய் கண்டு கொள்ளவே இல்லை.
இரண்டு தெரு தள்ளியிருக்கும் பார்க்கிற்கு செல்லும் சுந்தரை கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தது.
அறுபதைக் கடந்த சுந்தர் இப்போதுதான் ரிடையர் ஆனார். அவர் வேலை பார்த்த ஆயில் கம்பெனி, ரிடையர்மெண்ட் வயதைத் தாண்டியும் அவருக்கு கொஞ்சம் எக்டென்ஷன் கொடுத்திருந்தது. மார்க்கெட்டிங் பிரிவில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த சுந்தர் கம்பெனிக்கு பெரிய சொத்து. அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைத்தார். காலேஜ் படித்து முடிந்ததும் முதலில் கிடைத்த வேலை. கடைசி வரை அதே கம்பெனிக்குத்தான் உழைத்தார். 26 வயதில் நளினியைக் கைப்பிடித்தவர். மகேஷ், ராகேஷ் இரண்டு பேரும் பிறந்ததும் அடுத்தடுத்து பிரமோஷன்கள் கிடைத்து வேகமாக உயர்ந்தார்.
நளினி வீட்டுப் பொறுப்பை முழுவதுமாக எடுத்துக்கொண்டு பார்த்தது மட்டுமல்ல, சுந்தரையும் ஒரு குழந்தையைப் போல்தான் பார்த்துக் கொண்டாள்.
பெரம்பலூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். பாசம் காட்ட மட்டுமே தெரிந்தவள். வெள்ளந்தியான பெண். குடும்பத்தை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாள். சுந்தருக்கே அந்த அன்பு தேனில் நனைத்த பலாச்சுளையாய் இனித்தது. நல்லூஸ், நல்லூஸ் என்று அவளையே சுற்றி வருவார்.
மகேஷுக்கு 14 வயசு இருக்கும் போது ஒரு முறை நளினிக்கு விடாமல் ஜுரம் அடித்தது. மனைவியை டாக்டரிடம் அழைத்துப் போகக்கூட நேரமில்லாமல் சுந்தர் பிசியாக இருந்தான். உள்ளூரில் இருந்த அக்காதான் நளினியைக் கவனித்துகொண்டாள். ஒரு நாள் டாக்டர் அவசரமாக வரச்சொன்னதால் அரை நாள் லீவு போட்டுவிட்டு சென்ற சுந்தரிடம் அந்த குண்டைத் தூக்கிப்போட்டார் அவர் . நளினிக்கு லூகேமியா என்றும் ரத்தப் புற்றுநோய் வந்திருக்கிறது என்னும் உண்மையை ஜீரணிப்பதற்குள் சுந்தருக்கு மயக்கமே வந்துவிட்டது. வெள்ளை அணு, சிவப்பு அணு, கதிர்வீச்சு என்று என்னென்னமோ டாக்டர் சொன்னது எதையும் புரிந்து கொள்ளும், ஒப்புக்கொள்ளும் மனநிலையில் சுந்தர் இல்லை என்பதுதான் உண்மை.
அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில் மிக கவனமாக சிகிச்சை அளித்தும், சுந்தர் அலுவலகத்தில் நீண்ட விடுப்பு எடுத்துகொண்டு கவனித்துக் கொண்டும் பிரயோசனமேயில்லாமல் எட்டு மாதங்களில் குழந்தைகளையும் சுந்தரையும் தவிக்கவிட்டு இறந்து போனாள் நளினி.
அப்போது ராகேஷ் ஐந்தாம் வகுப்பிலும் மகேஷ் பத்தாம் வகுப்பிலும் இருந்தனர். நளினியின் இடத்தில் இருந்து குடும்பத்தை அவள் ஆசைப்படி பார்த்துக் கொள்ள முடிவு செய்தான்.
இரண்டு குழந்தைகளுக்கும் தாயுமானவனாக மாறினான் சுந்தர். குழந்தைகளையும் கண்ணாகப் பாதுகாத்தான். ஆபீஸ், வீட்டுவேலை, குழந்தைகள் படிப்பு என்று இயந்திரமாக மாறி உழைத்தான். மகேஷும், ராகேஷும் அப்பாவின் வளர்ப்பில் நன்றாகப் படித்து ஊர் மெச்சும் பிள்ளைகளாக உயர்ந்தனர்.
மகேஷ் விஷவல் கம்யூனிகேஷன் படித்து லண்டனுக்கு வேலைக்குப் போனான். அங்கே அவனுக்கு கிடைத்த நட்பு ஸோரா. லண்டனிலேயே பிறந்து வளர்ந்த ஆங்கிலேயப் பெண். லண்டனுக்கே சென்று மகேஷுன் திருமணத்தை நடத்தி வைத்தார் சுந்தர்.
நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்தது ராகேஷுன் திருமணம். நளினி வழியில் சொந்தம் சுகன்யா. அடாமிக் சயன்ஸில் ரிசர்ச் ஸ்காலர், நல்லபெண். அதிகம் பேசமாட்டாள். அவள் வந்த பிறகுதான் வீட்டில் பெண்வாசம் அடிக்க ஆரம்பித்தது. சமையலில் இருந்து வீட்டை கவனிப்பது வரை சுகன்யா பார்த்து கொள்ள, வீட்டுப் பொறுப்பில் இருந்து ரிடையர் ஆனார் சுந்தர்.
நளினி இல்லை என்பதை தவிர அவருக்கு எந்தக்குறையும் இல்லை. வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வேலையிலிருந்து ரிடையர் ஆனதும் சுந்தர் தான் தனிமைப்பட்டதாக உணர ஆரம்பித்தார். பிள்ளைகளும் பாசமானவர்கள் தான். வாட்ஸ்அப்பில் அப்பாவுடன் ஒரு காண்டாக்டில் இருக்கும் மகேஷும் சரி, அப்பா மேல் தள்ளியிருந்து ஒரு கண் வைத்துக் கொள்ளும் ரகேஷும் சரி சுந்தருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. சுகன்யா மாமனாருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை விரல் நுனியில் கற்று வைத்திருக்கும் புத்திசாலி. அவர் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, பேஸ்ட் போன்றவைகளை சரியாக வாங்கி வைப்பதில் இருந்து மாமாவுக்கு புல்கா புடிக்கும், வெள்ளரிக்காய் பச்சடி பிடிக்கும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பிடிக்கும் என்று சமைப்பதில் இருந்து, மாதம் ஒரு முறை ராகேஷுடம் சொல்லி சுந்தரை டாக்டரிடம் செக்கப் செய்வதில் இருந்து சுந்தருக்கு மகளாய் வந்த வரம் தான் சுகன்யா.
இருந்தாலும் சுந்தரின் மனது அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்க ஆரம்பித்தது. தனக்கென்று தன்னிடம் அரவணைப்பாய், பாசமாய் கிட்டே வர யாரும் இல்லையே என்று மனது தவித்தது. இதுதான் வாழ்க்கை, நிதர்சனம் என்பது புரிந்தாலும் அன்பைத் தேடும் மனதின் சண்டித்தனத்தில் தவித்தார் சுந்தர் என்பதுதான் உண்மை.
அங்கு வாக்கிங் வரும் முக்கால் வாசிப்பேர் அருகம்பூல் ஜூஸ் கொஞ்ச நேரம் அரட்டை என்றெல்லாம் செட்டில் ஆவது வழக்கம். சுந்தர் தெரிந்தவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்போடு சரி. மற்றபடி அவர் வேலைதான் அவருக்கு.
வாக்கிங், ஜாகிங், எட்டுப்போடுவது எல்லாம் முடித்து வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. வேலைக்காரி ஜெயா வாசலில் அழகாக கோலம் போட்டிருந்ததை ரசித்தபடி கேட்டைத் திறந்தவருக்கு இடுக்கில் புகுந்து உள்ளே நுழைந்தது அந்தக் கறுப்புநாய். இவரை உரசி உரசி வாலை ஆட்டியது.
“யேய் சூ…..சூ….போ…. போ வெளியே” அவசரமாய் நாயைத் துரத்தினார்.”
“என்னங்கய்யா நாயி ரொம்ப ப்ரெண்டாயிடுச்சு போல !”
போர்ட்டிகோவில் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஜெயா அவரைக் கிண்டலடித்தாள்.
அங்கேயிருந்த பிரம்புச்சேரில் அப்பாடா என்று அமர்ந்தவர் காலடியில் வந்து அமர்ந்தது அந்த நாய்.
“சே ரெண்டு நாள் பிஸ்கேட் போட்டா இப்படி வீட்டுக்குள்ளே வந்திடிச்சே. இதை முதல்ல துரத்துங்க ஜெயாம்மா”.
அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு கண்களில் ஏதோ சொல்ல வந்தது போல் ஏக்கமான தொனியோடு வாலை ஆட்டிக் கொண்டே இருந்தத்கு அந்த நாய். அதன் அருகில் வந்து மெதுவாக அதை தடவிக்கொடுத்தாள் ஜெயா.
“பாவம் சாரு இது. ஏதோ அன்புக்கு ஏங்குது. நீங்க பிஸ்கேட் போட்டதும். இதோ பார்டா நம்ம மேல அன்பா இருக்க ஒருத்தர் கிடைச்சிட்டாருன்னு உங்க காலண்ட வந்து கிடக்குது. மனுசனைவிட பாசம் காட்டறதும், பாசத்துக்கு ஏங்கறதும் நாய்ங்கதான் சாரு.”
அடுத்த வீட்டு வேலைக்கு நேரமாகி விட்ட பரபரப்பில் கிளம்பினாள் ஜெயா.
பேச்சு வாக்கில் சுந்தரின் கண்களைத் திறந்து விட்ட ஜெயா சுந்தருக்கு புத்தராகவே தெரிந்தாள்.
அன்பையும் பாசத்தையும் தேடினேனே ! ஏங்கினேனே! இதோ என் காலடியில் கிடக்கே! எத்தனை ஆசையாக இந்த நாய் என்னிடம் வருகிறது. ஜெயா சொன்னாற் போல் அதுவும் என்னை மாதிரி அன்பைத் தேடுகிறதோ?
மனம் பரபரக்க அந்தக் கறுப்பு நாயின் முதுகில் மெதுவாக சுந்தர் வருடியதும் துள்ளிக் குதித்து எழுந்து வாலை ஆட்டி பரபரத்தது அந்தக் கறுப்புநாய். “வாடா வாடா என் செல்லக்குட்டி” என்று மெதுவாக அதை எடுத்து தன் மடிமேல் வைத்துக்கொண்ட சுந்தரின் மனது லேசானது.
பால சாகித்திய புரஸ்கார் விருது – கவிஞர் மு.முருகேஷ்
2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற
கவிஞர் மு.முருகேஷ் தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இவர் 10 புதுக்கவிதை, 9 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் உட்பட 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.
மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம் போல் பரவலாக கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.
கவிஞர் மு.முருகேஷ் தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றவர். இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். இவரது ஹைக்கூ கவிதைகள் எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் ’நிலா முத்தம்’ எனும் நூலாகவும், தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற நூல் பள்ளி மாணவி வி.சைதன்யா மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ’The first story told by a daughter to her mother’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.
2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9-ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.
பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேஷ் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
விருதாளர் செல்பேசி : 94443 60421
பட்டம் – ரேவதி ராமச்சந்திரன்
“பட்டம் விடலாமா பாமா பட்டம் விடலாமா
ஆகாயத்தில் அழகாய்ப் பறக்கும் பட்டம் விடலாமா …..
ஆடிக்காற்று அடிக்குது பாரு பட்டம் விடலாமா ……
உயர உயர உயரப் போகும் பட்டம் விடலாமா’
குவிக்கத்தில் எழுதியுள்ள ஜி பி சதுர்புஜன் அவர்களின் பாட்டு மனத்தில் ரீங்காரித்துக் கொண்டிருந்த போது நான் வாசலில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
குழந்தைகளின் விளையாட்டு எத்தனை எத்தனை! வீட்டிற்குள்ளே, வெளியே என்று! அலுப்பதேயில்லை, எனர்ஜியும் குறைவதில்லை. ஆனாலும் பட்டத்தின் மீதுள்ள மோகம் மட்டும் குறைவதில்லை. எத்தனை எத்தனை நிறங்கள், எத்தனை எத்தனை வடிவங்கள், அதுவும் மொட்டை மாடியில் அல்லது திறந்த வெளியில் காற்றில் அது பறக்கும்போது அவர்களது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நம் மனதும் சந்தோஷத்தில் துள்ளுகிறது. இதை யாரால் மறுக்க முடியும்!
பக்கத்து வீட்டில் ஒரு சிறிய குடும்பம். ஆண்டவன் அந்தக் குடும்பத்தை மிகவும் அளவாக செய்வதற்காக தாயைப் பிரித்துவிட்டான். பாவம் தாயில்லாப் பிள்ளைகள். அதனால் அவர்களது பாட்டி அம்புஜம் பெண் சரசுவையும், பையன் ஆனந்தையும் பார்த்துக் கொள்வதற்காக கிராமத்திலிருந்து வந்துள்ளாள். அடுப்புப் புகையா இல்லை தன் பெண்ணை நினைத்தா இல்லை தாயில்லாத இந்தக் குழந்தைகளை நினைத்தா என்று தெரியவில்லை கண்ணைக் கசக்கிக்கொண்டே சமையல் செய்வாள். சின்ன சின்னக் கதைகளைச் சொல்லி குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாள். சரசு எப்போதும் அம்மா எங்கே, அம்மா எங்கே என்று கேட்டுக் கொண்டேயிருப்பாள். அன்றும் நிலாக் கதையைச் சொல்லி சோறு ஊட்டி விட்டு முத்தாய்ப்பாக கடைசியில் ‘அந்த நிலவிலிருந்து அம்மா உங்களையேப் பார்த்துக் கொண்டிருப்பாள் ஆதலால் நீங்கள் சமர்த்தாகச் சாப்பிட வேண்டும்’ என்று முடித்தாள். உடனே சரசு ‘அம்மாவிடம் செல்ல முடியுமா’ என்று ஆசையாக வினவினாள். ‘நிலவு மிகவும் தூரத்தில் இருக்கிறது. அது முடியாதே, நீங்கள் போய் விளையாடுங்கள்’ என்று பதில் அளித்தாலும் அம்புஜத்தால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
விளையாடி விட்டு வந்த சரசுவும், ஆனந்தும் வீட்டிற்குள் நுழையும்போதே சிரிக்கும் குரல் கேட்டு ‘ஆஹா, நம் சுந்தரம் மாமா வந்துள்ளார்’ என்று குதூகலப்பட்டனர். உள்ளே வந்த அவர்கள் இருவரையும் கட்டி அணைத்து இனிப்புகளை வழங்கினார் சுந்தரம். அவர் கொண்டு வந்த விளையாட்டு சாமான்களையும், புத்தகங்களையும் பார்த்து இருவரும் ஆவலுடன் அவற்றை ஆராயத் தொடங்கினர்.
‘பாட்டி, மாமா எப்படி டில்லியிலிருந்து வந்தார்’ என்று சரசு ஆவலுடன் வினவினாள். அதற்கு அம்புஜம் ‘உங்களுக்கு லீவு வருகிறதே, எங்கேயாவது இவர்களை அழைத்துக் கொண்டு போ’ என்று நான்தான் லெட்டர் எழுதி இவரை வரவழைத்தேன்’ என்றாள் அம்புஜம். ‘ஓ அப்படியா, மாமா நாங்கள் பட்டம் விடுகிறோம், பார்க்க வாருங்கள். என்றனர். ‘ஆஹா பட்டமா, நான் வெகு தூரம் வானத்தில் பறக்க விடுவேன்’ என்று கூறி மேலும் ‘நான் விடும் பட்டம் நிலவைக் கூட தொட்டு விடும்’ என்று அட்டகாசமாகச் சிரித்தார். சரசுவும் ஆனந்தும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே ‘நிஜமாகவா மாமா எங்களுக்கும் அப்படி பட்டம் விட சொல்லித் தாருங்கள், எங்களுடைய பட்டமும் நிலவைத் தொடுமா ,நிஜமாகவா, இருங்கள் நாங்கள் போய் பட்டத்தை எடுத்து வருகிறோம்’ என்று குதித்துக் கொண்டே உள்ளே சென்றனர்.
சரசுவும் ஆனந்தும் ஒரு பெரிய பட்டத்தைத் தூக்கி வந்தனர். அதில் ஒரு சிறிய பேப்பரும் ஒட்டி இருந்ததைக் கவனித்த சுந்தரமும், அம்புஜமும் அது என்னவென்று ஆவலுடன் பார்த்தனர். அதில் ‘அம்மா எங்களைப் பார்க்க கீழே இறங்கி வருவாயா’ என்று எழுதி இருந்தது.
நிலவில் அம்மா இருக்கிறாள் என்று அம்புஜம் சொன்னதையும், லெட்டர் எழுதி டில்லியிலுள்ள மாமாவை பாட்டி வரவழைத்ததையும், தான் விடும் பட்டம் நிலவைத் தொடும் என்று சுந்தரம் சொன்னதையும் இணைத்த குழந்தைகள் அறிவிலிகள் அல்ல; அறிவு ஜீவிகள் என்பதில் சந்தேகமில்லை!
நன்னயம் – பி.ஆர்.கிரிஜா
பாண்டி பஜாரில் ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு விஜயா தெருவின் இருபுறமும் பார்த்துவிட்டு நேராக ஒரு கடைக்குள் சென்றாள். வங்கியில் மேனேஜராகப் பணி புரியும் விஜயா ஒரு மணி நேரம் பெர்மிஷன் வாங்கியதால், நிதானமாகத் துணிகளை ஆராய்ந்தாள். சுஜாவிற்கு சர்ப்ரைசாக ஒரு சுடிதார் வாங்க வேண்டும் என்று எண்ணியவாறே, கடைக்காரரிடம், “ஏம்பா, அந்த ரோஸ் கலரை கொஞ்சம் காட்டுங்க, மீடியம் சைஸ்தான், செட்டாக காட்டுங்க என்றாள்.” அவரும் அதை எடுத்து விரித்துக் காண்பித்தார். விஜயாவிற்கு அது மிகவும் பிடித்து விடவே அதை பேக் செய்யச் சொல்லிவிட்டு , புடவை செக்ஷனுக்குள் நுழைந்தாள். தோழி மாலாவிற்கு அடுத்த வாரம் பிறந்த நாள் அவளுக்கு ஒரு அழகான பிரிண்டட் சில்க் சாரி வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டும் என்று மனதுற்குள் நினைத்துக் கொண்டு ஒரு ஆரஞ்சு கலர் புடவையை செலக்ட் செய்து பில் போட செக்ஷனுக்குள் நுழைந்தாள்.
அப்போது “ஏய் விஜயா, உன்னைப் பார்த்து வருஷங்கள் ஆச்சு, எப்பிடி இருக்க ? என்ற குரல் வந்த திசையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டாள் விஜயா.
யாரை வாழ்நாள் முழுவதும் மறக்க நினைத்தாளோ, அந்த பெண் மீனா கண்ணெதிரில் நின்றால் எப்பிடி இருக்கும் ?
அவளுக்கு பழைய நினைவுகள் வந்து போயின. பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது விஜயாவிற்கு தமிழ், ஆங்கிலம் நன்றாக வரும். கணக்கு வரவே வராது. இந்த மீனாதான் க்ளாஸ் லீடர். எல்லோரையும் குச்சி வைத்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் சில சமயம் அடிக்கவும் செய்வாள். ஒரு முறை விஜயா கணக்கில் ஃபெயில் மார்க் வாங்கியதைப் பார்த்து. நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர, மாடு மேய்க்கப் போ என்று ஓங்கி குச்சியால் ஒரு அடி போட்டாள். விஜயா தொப்பென்று விழுந்து விட்டாள். வலது கையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
உடனே ஆசிரியரிடம் சென்று மற்ற தோழிகள் முறையிட்டதும், மீனாவை க்ளாஸ் லீடர் பதவியிலிருந்து விடுவித்து இவளை வீடுவரை வந்து ஆசிரியர் விட்டுவிட்டு சென்றார். அந்தக் காலம் அல்லவா, என் அப்பாவும் “ஃபெயிலானா பின்ன அடிக்காம, கொஞ்சுவாங்களா? என்று சொல்லி, சரி சரி, இத பெரிசு பண்ணாம, அடுத்த பரீட்சையில் பாஸ் பண்ற வழியப் பாரு” என்றார். மருத்துவர் ஆதலால் அவரே ஊசியும் போட்டு விட்டு மருந்து தடவினார். ஒரு வாரத்தில் சரியாகி விட்டது. அன்றிலிருந்து மீனாவைப் பார்த்தாலே , அவளுக்கு பயத்தில் கை, கால்கள் உதறும். காலங்கள் உருண்டோடின.
விஜயாவும் நன்கு படித்து, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று இப்போது வங்கியில் அதிகாரியாக இருக்கிறாள்.
சடாரென்று நினைவுலகத்துக்கு வந்தாள் விஜயா. மீனாவை நிமிர்ந்து பார்த்தாள்.அதே முகம். ஆனால் இருவருக்கும் வயது ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டது அல்லவா ? அங்கங்கே நரைத்த முடி முதுமையின் வரவைப் பறை சாற்றியது.
மீனா எப்பிடி இருக்க? உன்னை மறக்க முடியுமா ? இப்ப என்ன பண்ணற ? சென்னையில்தான் இருக்கியா ? நான் முப்பது வருஷமா சென்னையில்தான் இருக்கேன். எனக்கு ஒரே பெண், வேலை பார்க்கிறாள், அவளுக்கு கல்யாணம் பண்ணனும். உன்னைப் பற்றி சொல்லு, என்றாள் விஜயா.
ஓ, விஜயா, நான் எஸ்.எஸ்.எல்.ஸி. க்கு பிறகு படிக்கவே இல்லை. உனக்கே தெரியும், எனக்கு மூணு அண்ணன்கள், ரெண்டு அக்கா, ரெண்டு தங்கை என்று பெரிய குடும்பம். நான் பள்ளிப் படிப்பு முடித்த உடனே என் அப்பா இறந்து விட்டதால், எங்கள் எல்லோர் படிப்பும் நின்று விட்டது. என்ன, வீட்டு வேலை செய்வதும், இப்போது சம்பளம் இல்லா வேலைக்காரியாக அண்ணன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறேன், என்று சொல்லி ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டாள். அவள் தோற்றமும் மிக பரிதாபகரமாகத்தான் இருந்தது. இப்போது கூட அண்ணியின் குழந்தையைப் பார்த்துக் கொள்ளத்தான் இவளை கடைக்குக் கூட்டி வந்திருக்கிறார்கள் என்று சொன்னாள். என் மனது மிகவும் வலித்தது. கொடுமைக்காரி என்ற இத்தனை நாள் பிம்பம் மெல்ல மறைந்து ஒரு அபலைப் பெண் தோற்றம் வர ஆரம்பித்தது.
காலம்தான் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வருகிறது?
திருமணமும் ஆகாமல், அடிமையாக அவள் அண்ணன் வீட்டில் படும் கஷ்டங்களை நினைத்தபோது, விஜயாவிற்கு மனது நொறுங்கிப் போனது. கடவுளே, இந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்து, என்று மனமுருக வேண்டிக் கொண்டாள் விஜயா.
அந்த வெறுப்பு, த்வேஷம் எல்லாம் அடியோடு போய் , அவளை அன்போடுஅணைத்துக் கொண்டே சொன்னாள், “மீனா, பரவாயில்லை இந்தா, என் கார்ட், என் ஃபோன் நம்பர் இதில் இருக்கு , நீ என்னை ஒரு சண்டே வந்து பார். உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன், நீயும் சுதந்திரமாக வாழ முடியும்” என்றாள் விஜயா.
மீனாவின் கண்கள் சற்றே கலங்கின. அன்போடு என் கையைப் பற்றினாள். அவளிடம் அன்று அடி வாங்கிய அந்தக் கை இப்போது அவளை நேசத்துடன் அணைத்துக் கொண்டது. மீனாவின் கண்ணீர் விஜயாவின் தோளை நனைத்தது.
கண்ணன் கதையமுது-3-தில்லை வேந்தன்
(தேவகியின் எட்டாம் பிள்ளையால் கம்சனுக்கு மரணம் என்று அசரீரி அறிவித்தது.
பிறக்கும் குழந்தைகளை ஒப்படைப்பதாக வசுதேவன் வாக்களிக்கவே தேவகியைக் கொல்லாமல் விடுகிறான்.
எட்டாம் குழந்தை பிறக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்/ கொல்லலாம் என்று இருக்கும் கம்சனைக் காண வருகிறான் நாரதன்.
எந்தக் குழந்தையாகவும் நாராயணன் வரக் கூடும் என்று அவனை எச்சரித்துச் செல்கிறான்)
நாரதன் வருகை
முக்காலம் அறிந்திடுவான்,மூவுலகும் திரிந்திடுவான்,
தக்காரும், தகவிலரும் தாள்பணியும் தவமுடையான்,
சிக்காமல் இருப்பவரைச் சிக்கவைக்கும் நாரதனும்
அக்காலம் அக்கம்சன் அரண்மனையை அடைந்தானே!
கம்சன் வரவேற்றல்
யாதுமே அறிந்த ஞானி
என்மனை வந்தாய் போற்றி!
நாதமே ஆனாய் போற்றி!
நயம்பட உரைப்பாய் போற்றி!
தீதிலா நன்மை யாகத்
திகழ்ந்திடும் வருகை போற்றி!
பாதமே பணிந்தேன் என்று
பன்மலர் தூவிச் சொன்னான்
நாரதன் கூற்று
“மேவிடும் உன்றன் அன்பை
மெச்சினேன் .ஆத லாலே
ஆவது பற்றிச் சொல்லும்
ஆவலே கொண்டேன். நீயும்
சாவது தங்கைப் பிள்ளை
தன்கையால் என்ற றிந்தும்
பூவதன் மென்மை போன்று
பொறுமையாய் இருப்பது தேனோ?
உயிரினுக் கிறுதி என்றால்
ஒருசிறு புழுவும் தாக்கும்
எயிலமை கோட்டை வாழ்ந்தும்
ஏனுனக்(கு) அமைதிப் போக்கு?
துயிலெனும் மாயம் செய்வோன்
தொடர்ந்திடும் சூழ்ச்சி யாலே
மயலினை அடைந்தாய் போலும்,
மனத்தினில் தயக்கம் ஏனோ?
(மயல்– மதி மயக்கம்/குழப்பம்)
( எயில் — அரண்/ மதில்)
வந்து பிறக்கும் பிள்ளைகளில்
வருவான் எட்டாம் எண்ணென்று,
முந்தி நீயும் நம்பிவிட்டாய்,
முகிலின் நிறத்து மாயவனும்
எந்த எண்ணும் வரக்கூடும்
இறுதி உனக்குத் தரக்கூடும்
உந்து மதம்கொள் களிறனையாய்
உடனே தகுந்த செயல்புரிவாய்
கோவலர்கள்,யாதவர்கள்,மற்றும் உள்ளோர்
கொண்டிருக்கும் தெய்வாம்சம் அறிந்து கொள்வாய்
காவலனாய் அவர்தம்மைக் காப்ப தற்கும்
# காலநேமி யாயிருந்த உன்னைக் கொல்லும்
ஆவலினால் பாற்கடலோன் வருவான் நீயும்
அதைத்தடுக்கப் பிள்ளைகளைக் கொல்ல வேண்டும்”–
தேவமுனி பிள்ளையினைக் கிள்ளி விட்டுச்
சிரிப்புடனே தொட்டிலையும் ஆட்டிச் சென்றான்.
( # முற்பிறவியில் கம்சன் காலநேமி என்ற அசுரனாய் இருந்தான்)
கம்சன் கொடுஞ்செயல்
கொதித்தான் குதித்தான் கொடுங்கம்சன்
குமுறும் எரியின் மலையெனவே,
உதைத்தான், அறைந்தான் நிலத்தினையே
உற்ற சினத்தின் நிலையிதுவே
மதித்தான் இல்லை தந்தையினை
வருத்தி வாட்டிச் சிறையிட்டான்
விதித்த ஆணை ஒன்றால்,தான்
வேந்தன் என்றே அறிவித்தான்
பிறந்த குழந்தைகள் அறுவரைக் கொல்லுதல்
அரக்கரும், கொடுமை செய்யும்
அரசரும் துணையாய்க் கொண்டான்.
இரக்கமே இன்றித் தங்கை
ஈன்ற அறுவர் கொன்றான்
செருக்குடன், சினமும் அச்சம்
சேரவே கள்ளும் மாந்திச்
சுருக்கெனத் தேளும் கொட்டித்
துள்ளிடும் குரங்காய் ஆனான்.
( மாந்தி– குடித்து)
வசுதேவன்- தேவகியைச் சிறையில் அடைத்தல்
மாதவனாம் வசுதேவன் மற்றும் அன்பு
மங்கையவள் தேவகியும் சிறையில் தள்ளிச்
சூதுமிகு வீரர்கள் காவ லாகச்
சூழ்ந்திருக்கச் செய்தனனே கொடிய கம்சன்
யாதவர்கள் வருந்திடவே துன்பம் தந்தான்
ஏதுமறி யாதவர்கள் விதியை நொந்து
மோதுபெரும் அச்சத்தால் நாட்டை விட்டு
மூதூர்கள் பலசென்று குடிபு குந்தார்
சிறையில் இருவர் நிலை
சிறையினில் வாடும் போதும்
சிந்தையில் இறையை நாடும்
முறையினை அறிந்த வர்க்கு
மூண்டிடும் இன்னல் உண்டோ?
குறைமதிக் கொடியோன் கொன்ற
குழந்தைகள் அறுவர் எண்ணி
நிறையவே வருந்தி னாலும்
நேர்வதைப் பொறுத்துக் கொண்டார்
( தொடரும்)
அப்(பொடி)படிப் போடு – முனைவர் தென்காசி கணேசன்
நான் பேச இருப்பது, பொடி விஷயம் அல்ல. அந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். பொடி போடுபவர்கள் அறிவாளிகள் என்று கூட கூறுவார்கள். அதனால் தான், அது, அந்தஸ்து விஷயமாகவும் இருந்தது. அவஸ்தையான பழக்கங்களில் ஒன்றாகவும் இருந்தது.
எனது மாணவ பருவங்களில், எங்கு பார்த்தாலும் விளம்பரம் ; ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் விளம்பரங்கள் , பார்த்த நினைவு உண்டு.
சிறுவரை பொடியர் என்று கூறுவதுண்டு
பெண்டிர் தம் ஆடவர்க்கு சொக்குப் பொடி போடுவதுண்டு ஆனால், பொடி என்றாலே நினைவிற்கு வருவது TAS ரத்தினம் பட்டணம் பொடி ஒன்றே !
இதே போல, SR பட்டணம் பொடி, NS பட்டணம்பொடி, அம்பாள் பட்டணம் பொடி இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள். பொடியினைப் போடா மூக்கு, புண்ணியம் செய்யா மூக்கு என்று தமிழ்தாத்தா உ வே சா அவர்கள் ஒரு கவிதையே எழுதினார்கள் என்பார்கள்.
பொடி போடுவது என்பது பெரிய கலை. சாதாரணமாக, கடையில் (அப்போதெல்லாம் shop கடை என்பார்கள் . இரண்டும் ஒன்றுதானே . ஜெனரல் பேன்சி ஸ்டோர் தான் அது) , சீப்பு, பேஸ்ட், சோப்பு, பவுடர், ஹார்லிக்ஸ் முதல், கடை முதலாளி கல்லா அருகில், ஒரு சின்ன பரணி (பீங்கான் ஜாடி தான்) 3 இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு சின்ன கரண்டி (உத்தரணியை விட சிறிய அளவு கொண்ட தலை பகுதி ) நீளமாக அதில் இருக்கும். வருபவர்கள், 3 பைசா முதல் 25 பைசா வரை வாங்கி போவார்கள். நான், 70களில் எங்கள் ஊர் தென்காசி கோயில் எதிர் பஜாரில் மணி விலாஸ் போன்ற கடைகள், மண்டபத்தில் உள்ள சங்கரய்யா நாயுடு கடையில் பார்த்து இருக்கிறேன். 6 அல்லது 7 தடவை அந்த கரண்டியால் போட்டாலும், தங்கப்பொடியை விட குறைவாகவே விழும், பொதுவாக வாழை மட்டை (காய்ந்து போனது) அதை சிறு மடக்கு மடக்கி, அதில் வாங்கிப் போவார்கள். சிலர், உருட்டையாக அல்லது தீப்பெட்டி போல எவர்சில்வரில் சிறிய டப்பா வைத்திருப்பார்கள். அது மேலிருந்து திறந்து மூடுவது போல இருக்கும். வசதிக்கேற்ப, வெள்ளியில், தங்கத்தில் கூட சிலர் வைத்திருப்பார்கள்.
அந்தக் காலத்தில் உழைப்பாளிகள் ஒருபுறம் இதை உபயோகித்தாலும், அந்தஸ்து உள்ளவர்களின் அடையாளம் என, அத்தர், ஜவ்வாது, சென்ட், இவற்றுடன் இதுவும் ஒன்றாக இருந்தது.
உழைக்கும் வர்க்கத்தில் பல பெண்மணிகள் – கீரை மற்றும் காய்கறி விற்பவர்கள், தயிர் விற்பவர்கள், பொடி உபயோகிப்பார்கள். எப்படி இருந்தாலும், பொடி போடுபவர்கள் அருகில் செல்ல எல்லோருக்கும் ஒருவித தயக்கம் உண்டு. ஒன்று அந்த நெடி – அது தும்மலை ஏற்படுத்தும் . ஒவ்வாத வாசனையை தரும். இரண்டாவது, அவர்கள் கையில் கைக்குட்டை அல்லது துண்டு, சில நேரங்களில் இடுப்பில் உள்ள வேட்டி/புடவை தலைப்பு நுனி – ஒன்றும் இல்லை என்றால், அருகில் உள்ள தூண், சுவர், தரை என, பொடி சேர்ந்த சளி கையை ஈஷி விடுவார்கள் என்ற அருவருப்பு,
ஜலதோஷம் மற்றும் மூச்சு விடுவதற்கு நல்லது என்று பலர் கூறினாலும், இது ஒரு தீய பழக்கமாக தான் கருதப்பட்டது. அந்தக் காலத்தில், பலே பாண்டியா படத்தில், சிவாஜியை மாப்பிள்ளையாக்க (நீயே உனக்கு என்று என்ற பாடலுக்கு முன் ) எம் ஆர் ராதா, சிவாஜியை பார்த்து கேட்பார், மாப்பிளைக்கு, புகையா, பொடியா, குடியா எதாவது உண்டா என்பார். காரணம், அந்தக் காலத்தில் புகை மற்றும் பொடி பழக்கத்தினால், புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்பார்கள். முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்களுக்கு புற்று நோய் வர, அவரின் பொடி மற்றும் புகையிலை பழக்கம் என்று அப்போது செய்திகள் வந்தன,
எப்படியோ, பல சங்கீத கலைஞர்கள் – கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், சின்னபபா, மஹாலிங்கம் என பல திரைக் கலைஞர்கள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், GN பாலசுப்ரமணியம் என பல சங்கீத வித்வான்கள், ஜி ராமநாதன், எம் எஸ் வீ போன்ற பல இசை அமைப்பாளர்கள், பொடி போடும் பழக்கத்தில் இருந்தார்கள். அரியக்குடியின் மிக பிரபல புகைப்படங்கள் மற்றும் மாலி வரைந்தது, அவர் பொடி போடுவது, பொடியை உறிஞ்சுவது, கையை உதறுவது என பல பாவங்களில் அந்தக் காலத்தில் தீபாவளி மலர்களில் வந்திருக்கிறது. MKT குரலில் ஒரு nasal வாய்ஸ் வரும். அது அந்தப் பொடியால் தான். ஆனால், அதுவே, அவரின் style ஆனது. TMS, அவரைப் போல பாட வேண்டும் என்று அந்த வாய்ஸ் கொண்டுவருவார். ராதே உனக்கு போன்ற பல பாடல்களில் அது தெரியும். காபி, டீ, சிகரெட் போல, பொடியை உறிஞ்சிய பிறகு, ஒரு புதுவித உற்சாகம் மற்றும் உத்வேகம் வருகிறது என்பார்கள். ஜி ராமநாத ஐயர் , MSV, போன்ற இசை மேதைகள், ஆர்மோனியத்தை கையில் பிடித்தபின், பொடியை ஒரு இழு என உறிஞ்சியபின், ராகம், வேகமாக வரும் என்பார் வாலி போன்ற பல கவிஞர்கள்.
அதேபோல், அண்ணாதுரை, பொதுக்கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் முன், பொடியை ஒரு உறிஞ்சு, உரிஞ்சிய பிறகே, பேச தொடங்குவாராம். கையில், பொடிமட்டை இருந்தால், ஒரு மாதிரியாக இருக்கும், என்று, பேச வரும்போது, கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் இடையில் பொடியை வைத்து, பேசும்போது இடையில் உறிஞ்சுவராம். அதேபோல , முழங் கைகளில் இருபுறமும், பொடியை தடவி வைத்து, பேச்சுக்கு நடுவில், கையை மூக்கிற்கு அருகில் கொண்டு செல்வது போல் உறிஞ்சி விடுவார் என்பார்கள். பொடி போட்டு போட்டு, அவர் குரலே , கொஞ்சம் நாக்கை மற்றும் மூக்கை மடித்து பேசுவது போல் ஆனது. அதுவே, கழகத்தின் பாணி ஆகிவிட்டது. பொடி போடாதவர்களும், அதேபோல நாக்கை வளைத்து, மூக்கை இழுத்து , கரகர குரலில் பேச தொடங்கிவிட்டார்கள்.
பிரெஞ்சு தளபதி நெப்போலியனும், பொடிக்கு அடிமை என்பார்கள். இந்தப் பழக்கம், அந்தக் காலத்தில் வீட்டில் அல்லது பொது இடங்களில், சீட்டு விளையாடுபவர்கள் பலரிடம் உண்டு. சீட்டு விளையாட்டு தொடங்குமுன், ஒரு செம்பில் நீர், (புகையிலை கொப்பளிக்க) , பொடி மட்டை இரண்டும் இருக்கும். பாதி ஆட்டத்தில், பொடி தீர்ந்துவிட்டால், எங்களை போன்ற சிறுவர்கள் கையில் காசு கொடுத்து, ஓடிப்போய், பட்டணம் பொடி வாங்கி வா, செல்லம், என்பார்கள். இதில் ஒரு லாபம் என்னவென்றால், ஆட்டத்தில் ஈடுபாடு என்பதால், மிச்சக்காசு 2 அல்லது 3 பைசா, கேட்க மாட்டார்கள். அல்லது, நீயே வைத்துக்கொள் ராஜா என்பார்கள். பெரும்பாலும், அக்ரஹாரத்து மிராசுதார், மைனர், பண்ணையார் என பலர் இருப்பார்கள். (அந்தப் பக்கம் போவது என் வீட்டுக்கு தெரிந்தால், என் தந்தை, பின்னி விடுவார் – அது தனிக் கதை )
1981 களில் கூட , இந்த பழக்கம் இருந்தவர்கள் மற்றும் பொடி கடைகள் இருந்தன. 1981 டிசம்பரில் வெளியான குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் கூட, வேலை வெட்டி இல்லாத விசு, ஒரு பையனைக் கூப்பிட்டு, கடையில் போய் , பொடி வாங்கி வா என்பார். எந்த brand எனக் கேட்க, விசு அவர்கள், மூக்குக்குள்ள போகனும் – எதுவாக இருந்தால் என்ன என்பார்.
என் தந்தை சொன்ன ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. பொடியும் ஒரு பழக்கமே என்றும், அதில் இருந்து மீளுவது என்பது கடினமே என்பார். அவருக்கு தெரிந்த மிகப்பெரிய செல்வந்தரான வக்கீல், நெல்லையில் இருந்தார். அவருக்கு பொடி போடும் பழக்கம் உண்டு, அவரின் செல்வாக்கிற்கு, அவர், தங்கத்தில், பொடி டப்பா வைத்திருந்தார். ஒரு தடவை, வயலில் நெல் அறுவடையின் போது, அவர் கொண்டு போயிருந்த பொடி முழுவதும் காலி ஆகிவிட்டது. வயல் ஊருக்கு வெளியே இருந்ததால், கடைக்கு சென்று வாங்கி வருவது கொஞ்சம் கஷ்டம். அவருக்கு எதோ ஒன்றை இழந்த உணர்வு. பொடி இல்லையே என்று கொஞ்சம் சோர்ந்து போன போது, வயற்காட்டில் இருந்த விவசாயிகளில் ஒருவன், அவனிடம் மட்டையில் இருக்கிறது என்று கூற, அவர் முகத்தில் புது உற்சாகம் ஏற்பட, வாங்கிக்கொண்டார். அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த உணர்வு தோன்ற, அவனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவன் வந்து கொடுத்தான். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கூப்பிட்டபோது, அவன், கொஞ்சம் இருங்கய்யா – வாரேன் என்று அனைவர் மத்தியில் அவன் அப்படி கூறியது, அவரைப் பாதித்தது. என்ன நினைத்தாரோ, இந்த பாழாப்போன பழக்கம் இருக்க கண்டு தானே, இப்படி மரியாதையை இழக்க வேண்டி இருக்கிறது, இனி இந்த பொடியை தொட மாட்டேன் என்று பையில் இருந்த தங்க பொடி டப்பாவை தூக்கி ஓடையில் வீசி எறிந்தார். அருணகிரிநாதருக்கு, தமக்கையால், துளசி தாசருக்கு, தாரத்தால் , ஒரே வார்த்தையில் ஞானம் வந்தது போல, அவருக்கும், சம்சாரி (விவசாயி) சொன்ன ஒரு வார்த்தையால் ஞானம் அன்று வந்தது என்பார் என் தந்தை.
எது எப்படியோ, இந்த தலைமுறை அறியாத விஷயங்களில் இதுவும் ஒன்றானது, உருப்படி(பொடி )யான விஷயம் தானே !! போதை பழக்கங்களில் ஒன்று குறைந்ததே
குவிகம் இலக்கியத் தகவல்
கம்பன் கவிநயம் – சானகி
வஞ்சியென நஞ்சமென வந்த வஞ்சமகள் (சூர்ப்பணகையின் நடையழகு)
அழகிய உருவம் அமைந்த தோற்றத்துடன் சூர்ப்பணகை வருகிறாள். அரக்கி உருவத்தை மறைத்து வஞ்சனை உள்ளத்தோடு வருகிறாள். மிக அழகிய உருவம்; அதே நேரத்தில் வஞ்சக உள்ளம்; இதனைக் கம்பர் தமக்கே உரிய கவித்திறத்துடன் புனைந்துள்ளார்.
பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்
(கம்ப. ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப்படலம், 31.)
வாலிக்கும் சுக்ரீவனுக்கும் ஏற்பட்ட சிறு பூசல் போராக மாறுகிறது. சீதையை இழந்து சித்தம் கலங்கி இருக்கும் ராமனை சுக்ரீவன் சந்திக்கின்றான். வாலியைக் கொல்வதாக வாக்குத்தருகிறான். வாலியை நேருக்குநேர் நின்று எதிர்ப்பவரின் பாதி பலம் அவ்வாலிக்கே போய் விடும்.
இவ்வுண்மையை ராமன் அறிவான். எனவே மறைந்து நின்று வாலி மேல் அம்பு எய்கின்றான். எய்த அம்பு வாலியின் மார்பில் தைத்து நின்று விடுகிறது.
ராமனுக்கோ ஒரே திகைப்பு. முன்பு நடந்த போர்களில் தாடகை, கரன், மாரீசன் ஆகியவர்கள் மார்பைத் துளைத்துச் சென்றது போல் இதுவும் செல்லும் என்று எதிர்பார்த்தான். நடந்ததோ வேறு. அம்பு அவன் மார்பிலேயே தங்கி நின்றது.
காரணம் புரியாமல் திகைத்தான் ராமன். இதுவரை கைவிடாத அம்பு, இப்போது தன்னை கைவிட்டு விட்டதே இதென்ன வம்பு என வருந்துகிறான்.
இதைக் கம்பன் விளக்குகின்றான்–
‘கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப?
நீரும் நீர் தருநெருப்பும் வன்காற்றும் கீழ் நின்ற
பாரும் கார் வலி படைத்த வன் உரத்தை அப்பகழி’.
‘பகழி’ என்றால் ‘அம்பு’. பழத்தில் ஊசி செல்வது போலச் செல்லும் தகுதி படைத்த அம்பு, இதுவரை சென்ற அம்பு, இப்போது நின்று விடுகின்றது.
முன்பெல்லாம் தீமையை அழிப்பதற்காக ராமனின் ‘அற வில்’ பயன்பட்டது. ஆனால் இங்கோ அற நெஞ்சுடையவன் வாலி. பிறருக்குத் தீமை செய்வதறியாதவன். குரங்கினப் புத்தியால் தம்பியின் தாரத்தைப் பறித்துக் கொண்டான். எனவேதான் அறவலிபடைத்த ராமனின் அம்பு அறநெஞ்சுடைய வாலியின் மார்பில் தைத்து நின்றுவிடுகிறதாம்.
இந்த நிலையைப் பார்த்த கம்பனுக்கு என்ன சமாதானம் சொல்லுவதென்றே புரியவில்லை. ராமன் செய்த தவற்றை நினைத்து ‘என் செப்ப’ அதாவது ‘நான் என்ன சொல்ல’ என்று கையை விரித்து விடுகின்றான்.
வாலி இறந்த பிறகு அந்த அம்பு அங்கிருந்து ஊடுருவிச் சென்று அறத்தைக் கொன்ற பாவம் தொலையக் கடலில் நீராடி மீண்டும் ராமன் கைக்கு வந்து சேருகின்றதாம்.
வாலியின் உயிர் இருக்கும் வரை அவன் நெஞ்சைத் துளைக்கும் ஆற்றல் அந்த அம்புக்கு இல்லை என்று கம்பன் காட்டிய கவிதை இன்பம் கண்களைக் கசிந்துருகச் செய்கின்றன.
(நன்றி : தமிழ் மித்திரன்)
புதியனபுகுதல் – ஜனநேசன்
இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு வானத்தை ஏறிட்டிருந்த மனைவி இவரைப் பார்த்தாள் . இவரும் வானத்தை நோக்கினார். குளத்தில் நீர் முகக்கும்போது எவர்சில்வர் குடம் கைநழுவி நீரில் விழுந்து மூழ்குகையில் பின்பாகம் வட்டமாய் மிதப்பது போல் மார்கழி முன்பனியில் மங்கலாக நிலவு மிதந்து கொண்டிருந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இவர் நினைக்கும்போது மனைவி பேசத் தொடங்கி விட்டாள்.
“இங்க பாருங்க, பௌர்ணமிக்கு இன்னும் ரெண்டு மூணுநாள் தான் இருக்கு. அப்புறம் தை பிறக்கும், முதல்நாள் போகி வந்துரும்.போன வருஷம் மாதிரி பிரச்சினை வந்துறக் கூடாது. அதனால பௌர்ணமிக்கு முன்னால தேன்கூடை அப்புறப்படுத்தற வேலையைப் பாருங்கள்”
இவர்கள் வீட்டின்முன் வேப்பமரம் ஒன்று ஆழக் காலூன்றி நீண்டு அகண்டு கிளைகள் விரிந்து நேராய் நிமிர்த்திய பச்சைநிற நுரையீரல் போல் நிற்கிறது ! இவர்களது வீட்டுக்கு வேப்பமரத்து வீடு என்றும் இந்தத் தெருவுக்கே வேப்பமரத்துதெரு என்ற அடையாளத்தையும் சூடிக் கொடுத்தது. அதன் உயரக்கிளையில் கொம்புத்தேனீ கூடு கட்டியிருக்கிறது. பகலில் எந்நேரமும் ஸ்ஸ்ஸென்று சுருதி மீட்டிய ரீங்காரமும் எந்த மலரின் மணமென்று பிரித்துணர இயலாத ஒரு சுகந்தமும் வேப்பநிழலின் குளிர்ச்சியும் மந்தகாசமாகத்தான் இருக்கும்! தெருவில் அம்மரத்து நிழல்விரிப்பில் காய்கனி விற்கும் கூடைக்காரர்கள் , தள்ளுவண்டிக்காரர்கள் சற்று இளைப்பாறிச் செல்லுவர். காலையில் பறவைகள் பூபாளம் பாடி எழுப்பும். மாலையில் மொழி , இன வேறுபாடின்றி அடைந்து தமது அன்றைய வலசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்! கோடைக் காலம் வந்தால் மஞ்சளும் வெள்ளையுமாகப் பூத்த வேப்பம் பூக்கள் அட்சதை தூவியததைப் போல் சொரிந்து கிடக்கும். கசப்பும் இனிப்பும் கலந்த வாசம் கமழ்ந்து கிடக்கும்! மனிதர் மட்டுமன்றி ஆடும் கோழியும் நாயும் மயங்கிக் கிடப்பர்! இப்படி கவிதை பொழியும் வேப்பமரத்தில் உச்சாங்கிளை யில் ஒருபாகை அகலத்திற்கு தேனீ கூடு கட்டியிருந்தது. பலருக்கு அச்சத்தை ஊட்டியது. அந்தமரத்தின் நிழலை மகிழ்வோடு அண்ணாந்தவர்கள் அகலமான கல்லீரல் வடிவில் தொங்கும் தேன்கூடைக் கண்டு பிரமித்து அஞ்சுவர்.
போன வருஷம் போகியன்று தெருவில் இளவட்டங்கள் போகி கொளுத்துவதற்காக சைக்கிள்டயரில் பழைய துணிகளைச் சுற்றி நெருப்பிட்டு சுழற்றினர் .சுழற்சி வேகத்தில் கரும்புகை சூழ்ந்த நெருப்புஜுவாலையின் பொறிகள் தேன்கூட்டைத் தாக்கியது. வெப்பம் தாளாமல் தீச்சுடர் வந்த திசை நோக்கி கூட்டமாய் காவல்தேனீக்கள் இறங்கி சுழுந்து சுற்றியவர்கள், வேடிக்கைப் பார்த்தவர்கள் அனைவரையும் விரட்டிக் கொட்டியது. தேனீக்களின் தாக்குதலைத் தாங்க இயலாமல் சுழுந்துவை அங்கங்கே போட்டுவிட்டு பக்கத்திலிருந்த வீடுகளில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டனர். கன்னத்தில் ,கண்இமையில் , நெற்றியில் கழுத்தில் எனத் தேனீ கொட்டிய இடமெல்லாம் வீங்கியது. தைமாதம் கல்யாணமாக வேண்டிய பெண்ணின் கீழுதடு வீங்கித் தொங்கியது . பலரும் முகம் வீஙகி கோரமாய்த் தெரிந்தார்கள். இருவர் பயத்தில் மயங்கினர். தேனீயின் சீற்றம் அடங்கிய பின் மருத்துவர்களைத் தேடிப் போனார்கள். பாதிக்கப்பட்டோர் இவரது குடும்பத்தாரிடம் சண்டைக்கு வந்துவிட்டனர். அவர்களை சமாதானம் செய்யப் பெரும்பாடாகி விட்டது. கடைசியில் மரத்தை வெட்ட வேண்டும். இல்லைஎனில் தேன்கூட்டையாவது அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை இட்டு கலைந்தார்கள். சைக்கிள்டயரில் தீக்கொளுத்தியதால் தெருவெல்லாம் ரப்பர் புகை நாறி வாந்தி எடுத்தவர் குறித்து யாருக்கும் வருத்தம் இல்லை. அதுபற்றி பேசக்கூட இல்லையே என்ற ஆதங்கம் இவருக்கு.
அந்த வருஷம் தேனீக்கு பயந்து வாசலில் பொங்கல் இடாமல் வீட்டுக்குள் அடுப்படி பொங்கல் இட்டார்கள். பொங்கல் திருநாளின் ரம்மியம் குறைந்து தோன்றியது .இதைத்தான் இவரது மனைவி நினைவூட்டுகிறாள்.
தாத்தா வைத்த மரத்தை வெட்டுவது சரியில்லை! எலிக்கு பயந்து வீட்டை இடிக்கக் கூடாது. தேன் கூட்டை அகற்ற ஆள் தேடமுடிவெடுத்தார். அவரது நினைவில் தேனெடுத்து விற்பவர்கள் எங்கெங்கு இருப்பார்கள் என்று தேடினார். புலப்படவில்லை. காலையில் எழுந்ததும் காய்கனிச் சந்தை , பேருந்துநிலையம் ரயில்நிலையம் ஆகிய இடங்களில் தேனெடுப்பவர்கள் தென்படுகிறார்களா என்று தேடினார். முன்பு தெருத் தெருவாய் ஊக்கு ஊசி ,பாசிமாலை விற்றுத் திரிவார்கள். இப்போது அவர்களைக் காண முடிவதில்லை . . இப்போது முக்குக்கு முக்கு ஃபேன்சிக் கடைகள் முளைத்து வண்ண விளக்குகளில் கண்சிமிட்டுவதால் நரிக்குறவர்கள் பிழைப்பு போனது. அவர்கள் எங்கும் தென்படுவதில்லை . கடைசியில் கோயில்வாசலில் ஒருவர் நரிக்குறவர் போல் தென்பட்டார். அவரிடம் விவரம் சொல்லி விசாரித்தார். அவர்கள் கிராமங்களுக்கு போய்விட்டார்கள். இரவு தூங்கப் போகும் போது பார்ப்பேன். விவரம் சொல்லி கூட்டி வருகிறேன். எனக்கு எதாவது காசு கொடுங்கள் என்றவரிடம் பத்துரூபாய் கொடுத்து தெரு அடையாளம் சொல்லித் திரும்பினார்.
மறுநாள்காலை தேனெடுக்கும் சிறுகோடாரி , சுரைக் குடுக்கைகள், மரமேறித் தேனடை இறக்கத் தோதான கயிற்றுச்சுருளோடு இருவர் வந்தனர் .நாய்கள் குரைப்பு சத்தம் கேட்டு இவர் வெளியே வந்து பார்த்தார். அவர்கள் இருவரும் அண்ணாந்து தேன்கூட்டைப் பார்த்தனர். காலை வெயிலில் மினுக்கும் தேனடைகளை ஊடுருவி நோட்ட மிட்டனர். அவர்களது கண்கள் மட்டுமே மரமேறி கிளைக்கு கிளை தாவி தேனடையை எட்டும் வாகு பார்த்தன.
அவர்கள் பிடறியை அழுத்தி தடவியபடி, உச்சாணிக் கொப்பில் இருக்கு சாமி ஏறித் தேனெடுக்கிறது கஷ்டம். இருந்தாலும் முயற்சி பண்ணிப் பார்க்கிறோம் சாமி. . பௌர்ணமி நெருங்கிருச்சு . தேன் கொஞ்சம்தான் இருக்கும்! வெயிலுக்கு தேனடைகள் பல்லிளிக்கிறது பாருங்க சாமி . உயிரைப் பத்திக் கவலைப்படாம ஏறிதேனெடுத்து தர்றோம். எவ்வளவு பணம் தருவீங்க சாமி ”ன்னு முதியவர் கேட்டார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த இவரது மனைவி , ”பணமா ? எங்கமரத்து தேனெடுக்கிறதுக்கு நாங்க எதுக்கு பணம் தரணும்? எடுக்கிற தேன்ல பாதி தர்றோமுல்ல . அந்தத் தேன்லாடுளை நீங்களே எடுத்து வித்துக்குங்க“ அவர்களது முகங்கள் கருத்து சிறுத்தன. மனைவியின் குறுக்கீடால் தேன்கூட்டை அப்புறப்படுத்துவது கெட்டுப்போகுமோ என்று பதறியவர், “நீங்க முதல்ல தேனெடுங்க . வேலை முடிஞ்சதும் பாதிப்பில்லாமப் பார்த்து தர்றேன் “
“முன்னூறோ , நானுறோ பேசி முடிவு பண்ணினதுக்கு பிறகு தான் மரமேறுவோம் ! “ என்றார் வயதில் மூத்தகுறவர்.
இதற்கிடையில் தெருநாய்கள் விடாது குரைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்க வீட்டுக்காரர்கள் கூடிவிட்டனர்.
கூட்டம் கூடிவிட்டது ,இனி கூலி பற்றி விவாதிப்பது நன்றாக இருக்காது என்று நினைத்து , பிற பெண்களுடன் மனைவி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்த தருணத்தில் இவர் மூன்றுவிரலைக் காட்டினார். கட்டாதக் கூலி என்று முனங்கியபடி வேட்டியை பெருங்கோவணம் போல் கட்டிக் கொண்டு இளையவர் மரம் ஏறத் தயாரானார் .
தேனெடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு தெரு ஜனங்கள் குழுக் குழுவாய் குழுமினர் . அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்க நல்ல சாகசமான விஷயம் கிடைத்து விட்டது. கூட்டத்தைப் பார்த்ததும் நாய்கள் குரைப்பை நிறுத்தின .ஐந்தாறு பெண்கள் ஆண்க ளுடன் தீவிரமாய் விவாதிப்பது போல் தென்பட்டனர். இளையவர் மரத்தருகே சென்று குனிந்து பூமியைத் தொட்டு வணங்கினார். பின் மரத்தின் அடிப்பாகத்தையும் தொட்டு கும்பிட்டு விட்டு வாகாக கால்களை வைத்து ஏறப்போனார்.
ஒரு பெண்மணி வேகமாக ஓடிப்போய் “நில்லுங்க. ஏறாதீங்க” என்று தடுத்தாள். இளையவருக்கு முகம் சிவந்தது. பெரியவர் போய் இளையவர் தோளைத் தொட்டார்.அந்த பெண்மணி தொடர்ந்து பேசினாள். “இந்தமரத்தில் தேன்கூடு இருக்கிறதால தான் தேனீக்கள் எங்கவீட்டுத் தோட்டங்களில் வலசை வருதுக. எங்க தோட்டங்களில் நிறைய பூக்குது, காய்க்குது. யாரோ புரியாமல் சொல்றாங்கன்னு தேன்கூடை அப்புறப்படுத்த வேண்டாம். போகிக்கு இந்தத் தெருவில் யாரும் டயரை எரித்து புகைமூட்டம் போடாமல் நம்ம தெருக்காரங்களே கட்டுப்படுத்திக்கலாம்“ என்றாள்.
யாரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை.வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் கலைந்தனர்.
இவருக்கு ஆறுதலாக இருந்தது. தேனெடுக்க வந்தவர்களைப் பார்த்தார். அவர்களது முகம் வெளுத்திருந்தது. இன்றைய வகுத்துப்பாடு போச்சே என்ற கவலை. இவர் மெல்ல இருவரையும் தெருமுனை டீக்கடைக்கு அழைத்துச் சென்று வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தார். அவர்களது கைகளில் ஆளுக்கு நூறுரூபாய் கொடுத்து, “போயிட்டுவாங்க. தேவைப்பட்டால் சொல்லி அனுப்புறேன்“ என்றார்.
“வேலை பார்க்காமல் கூலி எப்படி வாங்குறது” என்று ரெண்டுபேரும் ஒரே குரலில் இவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றனர்!
இவர் கையை உதறி வீடு நோக்கி நடந்தார்.
கோவை சங்கர் .. சிவமால்
வேற்றுமையில் ஒற்றுமை..! கோவை சங்கர்

மதங்களின் பெயரால் சண்டையிடும் மக்கள்நீர்
மனதிருத்தி யோர்நிமிடம் சிந்தித்துப் பார்த்தீரோ
சித்தமதைப் பின்னோக்கி மெதுவாகச் செலுத்திடுவீர்
செல்லுகின்ற பாதையிலே யுண்மைபல வுணர்ந்திடுவீர்
சோதரரும் முன்னோர்கள் பாரதத்தின் மைந்தர்களே
அண்டைய நாட்டினரின் வழிவந்த வரவல்ல
மாதவனும் இந்தியனே மகாதேவனும் இந்தியனே
அப்துலும் இந்தியனே தாமஸ¤ம் இந்தியனே!
சனாதன தர்மத்தை வாழ்க்கையின் நெறியாக
மேற்கொண்ட சமுதாயம் நம்பாரத சமுதாயம்
அண்டைய வேந்தருமே வந்தனரே நமையாள
அவர்மதக் கோட்பாட்டை விதைத்துச் சென்றனரே
வணிகமென்ற பெயரிலே அந்நியரும் வந்தனரே
அவர்மதக் கோட்பாட்டை பயிரிட்டுச் சென்றனரே
எம்மதமும் சம்மதமென நின்றநம் சமுதாயம்
ஏனைய மதங்கட்கு கம்பளம் விரித்தது..!
அரசாணை மேற்கொண்டு மாறியவர் சிலபேர்
வறுமைநிலை மாறிடவே மாறியவர் சிலபேர்
விருப்போடு மதம்மாறிச் சென்றவர் சிலபேர்
காதலியைக் கைப்பிடிக்க மாறியவர் சிலபேர்
வழிபாடுன் தனியுரிமை யென்றுநம் சமுதாயம்
நடப்பதைப் பார்த்துமே மௌனம் காத்தது
வந்தோரெலாம் போய்விட்டார் எஞ்சியவர் இந்தியரே
பலப்பல மதங்களையே தாங்கியே நிற்கின்றோம்.!
நம்நாட்டில் வாழ்கின்ற முஸ்லீம்கள் கிறித்துவர்கள்
மதம்மாறி பயில்கின்ற வம்சாவளி இந்தியரே
நாமெல்லா மோர்குலமாய் வாழ்ந்துவந்த நம்மிடையே
ஏனிந்தச் சண்டை ஏனிந்தப் பூசல்
பக்திநெறி வேறென்று பலமாகச் சொன்னாலும்
நம்முள் ளெழுகின்ற பக்திரசம் ஒன்றன்றோ,,
பூசல்களால் பெருந்துயரம் கொள்வதோ நம்நாடு
மாற்றானுக் கதுலாப மென்பதுவும் புரியலையோ!
சக்தியோ சிவனோ மாதவனோ மகாதேவனோ
ஏசுவோ அல்லாவோ புத்தரோ குருதேவரோ
அகிலத்தை யாள்கின்ற முப்பெருந் தேவியரோ
பக்தியொடு வணங்கென்று சொல்வதுநம் சித்தாந்தம்
பல்வேறு பெயர்களிலே தொழுகைநாம் செய்தாலும்
நம்முடைய வேண்டுதல்சென் றடையு மிடமொன்றே
எல்லாமத நெறிகளையும் மனதார மதித்திடுவொம்
வேற்றுமையில் ஒற்றுமையை ஒருமித்துக் காத்திடுவோம்!
——————————–
குட்டீஸ் லூட்டீஸ்:

ஆவி சொன்ன ஹாப்பி நியூ இயர்
டிசம்பர் 31ஆம் தேதி இரவு.
புத்தாண்டு வரவைக் கொண்ட்டாட நண்பர்கள் மூவர்
குடும்பத்தோடு ஒரு நண்பன் வீட்டில் கூடியிருந்தோம்.
மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
டின்னர் சாப்பிட்டு விட்டு அரட்டை அடித்துக் கொண்டி-
ருந்தோம்.
சின்னத்திரை ஒரு சானலில் புத்தாண்டு வரவேற்பு
நிகழ்ச்சிகள் நேரலையாக வந்து கொண்டிருந்தது.
மணி பன்னிரண்டு. ‘ஹாப்பி நியூ இயர்’ என்று சின்னத்
திரை முழங்கியது. ஒவ்வொரு சீரியல் நடிகர்களும்.
நடிகைகளும் முன்னே வந்து ‘ஹாப்பி நியூ இயர்’ என்று
வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்மா.. ஆவி வந்து ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லித்து’
என்று சொன்னது ஒரு குழந்தை சத்தமாக. எங்கள்
எல்லோர் பார்வையும் டி.வி. பக்கம் திரும்பியது.
‘என்னடி சொல்றே..’ என்றாள் அக்குழந்தையின் அம்மா
கிசுகிசுப்பான குரலில்.
வாழ்த்து சொல்லி விட்டு. ஒரு பக்கமாகச் சென்று நின்ற
அந்த நடிகையைக் காட்டி, ‘ அம்மா அந்த ஆன்டி
இன்னிக்கு ராத்திரி சீரியல்லே ரோடு ஆக்ஸிடன்டாகி
செத்துப் போயிட்டாங்க.. இப்போ அவங்க ஆவி வந்து
ஹாப்பி நியூ இயர் சொல்லுது’ என்றாளே பார்க்கலாம்..
அதிர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் விக்கித்துப் போய்
நாங்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லக் கூட
மறந்து போய் நின்றோம்.
— சிவமால்
—————————————–
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
அறிவியல் புனைகதை – தமிழுக்குப் புதிதா?
விருட்சம் கதை வாசிப்பு நிகழ்வில் ந.பிச்சமூர்த்தி அவர்களின் ‘விஞ்ஞானத்துக்குப் பலி’ சிறுகதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1951 வாக்கில் எழுதப்பட்டுள்ள அந்தக் கதையின் கரு இன்றைய எந்த விஞ்ஞானக் கதையையும் விஞ்சக்கூடியதாக இருந்தது! ந.பி., ஒரு வழக்கறிஞர். ஹனுமான், நவ இந்தியா போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர். மேலை நாட்டு இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்.
டாக்டர் சேதுராவ் – ‘ஸயன்ஸ்’ டாக்டர் – அவர் தன் நண்பருக்குச் சொல்வது போல கதை.
யுத்தத்திற்காகக் கொலைக் காற்று, ஆகாய விமானம், விஷ வாசனை, டார்ப்பிடோ இவற்றைக் கண்டுபிடித்து, மனித குலத்துக்கு அழிவைத் தேடும் ஸயன்ஸ் பண்டிதர்களின், “புத்தியின் விபசாரம்” இது என்கிறார் நண்பர் – ஈஸ்வரன் கொடுத்த மூளையை ஹிம்சை செய்வதற்கும், கொல்வதற்கும் உபயோகிப்பதில் அவர் நண்பருக்கு வருத்தம்.
“கடவுளைப் போல சுயமாக சிருஷ்டி செய்ய ஸயன்ஸ் பேர்வழிகள் தலைகீழாக நின்று வருகிறார்கள். எச்.மே. என்பவர் ஆல்பா என்னும் ஆளை (இயந்திர மனிதன்) செய்திருக்கிறார். ”உடலெல்லாம் இரும்புக் கூடு, கண், வாய், மூக்கு, செவி அவ்வளவும் உண்டு. மின்சாரத்தால் அவ்வளவு உறுப்புகளும் வேலை செய்கின்றன. ஆல்பா சாதாரணக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கிறதாம்; உலவுமாம். நம் தேசத்து வெற்றிலைப் பெட்டி மிராசுதார் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். பகுத்தறிவு இருப்பதாகத் தெரியவில்லை; தானாகவும் ஒன்றும் செய்யாது. ஆகவே ஆல்பாவிடம் கொஞ்சம் உஷாராகப் பழக வேண்டுமாம். ஆல்பா ஒரு வேளை இரைந்து கத்தினால், அவ்வூரில் இருக்கும் அவ்வளவு கண்ணாடிகளும் நொறுங்கிப் போகின்றனவாம். இன்னும் அதன் பிரதாபங்கள் பலவாம்”. சொல்கிறார் முனைவர் சேதுராவ்.
“ஆல்பாவை உருவாக்கிய மே யின் குரல் மாறி, கர கரக்க, அடையாளம் காண முடியாத ஆல்பாவின் வலது கை ஸயண்டிஸ்டின் கை மேல் விழுந்து, அவருக்கு ஏகப்பட்ட எலும்பு முறிவுகள்! ஆல்பாவின் சிருஷ்டி கர்த்தர், ஆல்பாவின் அடிமையானார்.”
ஐரோப்பிய ஸயன்ஸ் காங்கிரஸில் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டித்து நாடு திரும்பும் சேதுராவ், அவர் வீட்டில் வீடு கூட்டும் பாப்பாயியைக் கொலை செய்ததற்காகக் கைது செய்யப்படுவதாகவும், அவளைக் கொலை செய்தது ஆல்பா என்பதும், குரல் வித்தியாசம் தெரியாமல் அவளை அது கொன்று விட்டதாகவும், அதன் கழுத்தில் உள்ள ஒரு திருகாணியைத் திருகி அதை அமைதிப்படுத்துவதாகவும் கனவு காண்கிறார்! கதைப்படி, அவரது எதிர்ப்புக்கு, சயிண்டிஸ்ட் ஆல்பாவை அனுப்பிக் கொலை ராவைக் கொலை செய்யச் சொல்கிறார். அது ராவ் வீட்டில் அச்சத்தில் கத்தும் பாப்பாய்யைக் கொன்று விடுகிறது! பரிசோதனையாகச் செய்யப்பட்ட ஆல்பா, உயிரினத்தைக் கொல்லும் அபாயமாக மாறிவிடுகிறது!
சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதுகிறோம் என்றறியாமலே எழுதியிருப்பாரா ந.பி. என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில், அறிவியல் புனைகதை பற்றி ஓரளவுக்கு ஞானம் வந்தபிறகு, பல வித்தியாசமான அறிவியல் புனைகதைகளை வாசித்த பிறகு, அன்றே ‘சை ஃபி’ யின் கூறுகளுடன் தமிழில் பல புனைகதைகளைக் காணமுடிவது வியக்கத்தக்கது. ந.பி. கதையின் பல கூறுகள் சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வருவதைக் காணலாம்.
ஸயின்ஸ்ஃபிக்ஷன் – விஞ்ஞானக் கதை, அறிவியல் புனைகதை – என்பது என்ன?
ஹெச் ஜி வெல்ஸ் – Father of Science fiction (அ) அறிவியல் புனைகதைகளின் ஷேக்ஸ்பியர் எனப்படுகிறார். தி டைம் மெஷின் (1895), தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மோரோ (1896), தி இன்விசிபிள் மேன் (1897), தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்(1898) போன்றவை அவரது அறிவியல் புனைகதைப் படைப்புகளில் புகழ் பெற்றவை.
அறிவியல் புனைகதை (Sci – Fi) – எதிர்காலத்தைப் பற்றிய யூகங்கள் சார்ந்து புனையப்படும் கதைகள் – அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, காலப் பயணம், இணையான பிரபஞ்சங்கள், வேற்று கிரக வாழ்க்கை, மனிதர்கள் என தற்போது நிலவும் உண்மைகளுடன், கற்பனைகளைக் கலந்து, எதிர்காலம் அல்லது கடந்த காலம் பற்றிய நிகழ்வுகளைப் பற்றிச் சொல்வது! “கருத்துக்களின் இலக்கியம்” என்றவொரு மாற்றுப் பெயரும் உண்டு.
அறிவியல் புனைகதைகளுக்கான ‘திருப்திகரமான வரையறை’ இதுவரை பிடிபடவே இல்லை.
ஐசக் அசிமோ : “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு, மனிதர்களின் எதிர்வினைகளைக் கையாளும் இலக்கியத்தின் கிளையாக அறிவியல் புனைகதைகளை வரையறுக்கலாம்” என்கிறார்.
1926 ல் முதல் ‘அறிவியல் புனைகதை இதழ்’ – அமேசிங் ஸ்டோரிகள் என்ற பெயரில் – ஹ்யூகோ ஜெர்ன்ஸ்பேக் வெளியிட்டார். முதல் இதழில் அவர் எழுதியது சிந்திக்கத்தக்கது.
“அறிவியல் உண்மையும், தீர்க்கதரிசனப் பார்வையும் கலந்த ஒரு வசீகரமான காதல் …. இந்த அற்புதமான கதைகள் வாசிப்பை மிகவும் சுவாரஸ்யமாக்குவது மட்டுமல்ல – அவை எப்பொழுதும் போதனையானவை. அவை அறிவை வழங்குகின்றன… மிகவும் சுவையான வடிவில்…. இன்றைய புதிய சாகசங்கள், நாளை நனவாக்க முடியாதவை அல்ல… வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சிறந்த அறிவியல் கதைகள் இன்னும் எழுதப் பட வேண்டும் .. “
20 – 21 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் புனைகதைகளின் அபரிமிதமான வளர்ச்சியும், அவை எதிர்காலம் குறித்து எழுப்பும் வினாக்களும், விசாரங்களும் வியக்க வைப்பவை. சுற்றுச் சூழல் பிரச்சனைகள், இணையத்தின் தாக்கங்கள், விரிவடைந்துவரும் தகவல் உலகம், நானோ தொழில்நுட்பம், பற்றாக்குறை சமூகங்கள் எனப் பல தளங்களில் அறிவியல் புனைகதைகளுக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
சீவக சிந்தாமணி, மணிமேகலை, கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி, விக்கிரமாதித்தியன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பாரதியாரின் சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள், ஞானரதம் போன்றவற்றிலும் அறிவியல் புனைகதையின் கூறுகள் இருப்பதை உணரமுடிகிறது. மாய யதார்த்தம், அமானுஷ்யம், சர்ரியலிசம் போன்ற பல வகைப் புனைவுகளில், அறிவியல் புனைகதைகளின் சாயல்கள், கூறுகள் இருப்பதைக் காணமுடியும்.
புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பில் “பிரேத மனிதன்” என்ற கதை, பல பிரேதங்களிலிருந்து உருவாக்கப்படும் ஓர் உடல், தப்பிச் சென்று அனைவரையும் அழிக்கும் அபாயம் வந்துவிடுகிறது என்பதாகப் போகிறது. அறிவியல் புனைகதைகளில், பரிசோதனையாக செய்யப்படுபவை, விபரீதமான எதிர்வினைகளுக்கு வழி கோலுகின்றன என்கிற அடிப்படைக் கருத்தைக் காணலாம். மரபணுக்களில் செய்யப்படும் மாற்றங்கள், வேற்று கிரக ஆராய்ச்சிகள், வேற்று கிரக உயிரினங்களால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள், புனைவுலகம், டைம் மெஷினில் முன்னும் பின்னும் சென்று எதிர்கொள்ளும் விளைவுகள் என பரிசோதனைகளின் விபரீதங்கள் சுவாரஸ்யமான சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிவிடுகின்றன. அறிவியல் விநோதங்களை, தன் கற்பனையில் உருவாகும் புனைவுகளுடன், எதிர்காலத்தில் நிகழக்கூடிய சுவாரஸ்யமான அபாயங்களையும், வாழ்க்கையின் அபத்திரமான கணங்களையும் சொல்வது ஒரு கலை – அறிவியல் புனைகதை எழுதும் கலை!
புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ – ஒரு முரண்பட்ட புதிய சூழலை உருவாக்கி, அதற்கான விதிகளையும் வரையறுப்பது என்ற வகையில் சிறந்த விஞ்ஞானப் புனைகதையாக – ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள புனைகதைகளுக்கிணையாக – எழுதியுள்ளார் பு.பி. – இந்த வகைக் கதைகளுக்கு தமிழில் புதுமைப்பித்தன்தான் முதல்வர் – சுஜாதா (‘அறிவியல் புனைகதைகளின் கூறுகள்’ கட்டுரையில்).
சுஜாதாவின் திமிலா, நச்சுப்பொய்கை, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, ஆ போன்ற கதைகளில் அறிவியல் புனைகதை கூறுகள் அதிகமாகக் காணக் கிடைக்கின்றன.
சுதாகர் கஸ்தூரியின் 6174, 7.83 ஹெர்ட்ஸ் போன்றவையும், இரா முருகன், ஆர்னிகா நாசர் (எனக்குத் தெரிந்த வரையில் சொல்கிறேன். இதற்கு மேல் ஏராளமான அறிவியல் புனைகதைகள் தமிழில் கிடைக்கின்றன!) போன்றவர்களின் கதைகளும் இவ்வகையில் அடங்கும்.
சமீபத்தில் மகாகவி பாரதியாரின் சிறுகதைகளை வாசித்தேன். வித்தியாசமான பார்வையில், அவரது கதைகள் பலவற்றில் அறிவியல் புனைகதையின் கூறுகள் தென்படுகின்றன எனத் தோன்றியது. ஆராயலாம்.
(ஆதாரம்: 1. ந. பிச்சமூர்த்தி ‘மோகினி’ சிறுகதைத் தொகுப்பு – சந்தியா பதிப்பகம்
2. சுஜாதா – விஞ்ஞானச் சிறுகதைகள் – உயிர்மை பதிப்பகம்.
3. Internet references to Science fiction stories in Tamil
4. புதுமைப் பித்தன் சிறுகதைகள் தொகுப்பு மீ.ப. சோமசுந்தரம்.)