Monthly Archives: May 2018
குவிகம் ஆண்டுவிழா…! -அன்புடன் ஆர்க்கே..!
குவிகம் இலக்கியவாசலின் நான்காம் ஆண்டு தொடக்கவிழா குவிகம் இல்லத்தில் மே 6, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குவிகம் மின் நூலகத்தை நண்பர் ஷங்கர் ராமசாமி அவர்கள் துவக்கிவைத்து விளக்கிப் பேசினார்.
அதன்படி குவிகம் இல்லத்திற்கு வரும் நண்பர்கள் கிண்டில் பதிப்பில் வெளிவந்துள்ள புத்தகங்களை குவிகம் சந்தாவில் இலவசமாகப் படிக்கலாம்!
அத்துடன் குவிகத்திற்கு அங்கத்தினர் சேர்க்கையும் இந்த ஆண்டுவிழாவில் துவக்கப்பட்டது. வருடத்திற்கு 1200 ரூபாய் கொடுத்து குவிகம் அங்கத்தினராக அனைவரும் சேரலாம்.
இந்த விழாவின் வெற்றியைப்பற்றி நாங்கள் சொல்வதைவிட நண்பர் ஆர்கே முகநூலில் பதிவிட்ட கருத்தை இங்கே தருகிறோம். (நன்றி ஆர் கே)
குவிகம் இலக்கிய வாசல் ஆண்டு விழா தி.நகரில் அமைப்பாள இரட்டையருள் ஒருவரான கிருபானந்தனின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. கத்திரி வெயிலின் உக்கிரத்தையும் உஸ் உஸ்ஸையும் மீறி இலக்கிய தாகம் தணித்துக்கொள்ள முப்பதுபேருக்கு மேல் நான்கு மணி முதல் ஏழேமுக்கால் மணிவரை இருந்து முழுமையாக ரசித்தது கோடை மழை போன்ற அதிசயம்.
எங்கள் அபிமானக் கவிஞர் வைதீஸ்வரன் அவர்களின் “சில கட்டுரைகள், ஒருநேர்காணல் “புத்தக வெளியீடு. புத்தக விமர்சனமும்.
தொடர்ந்து கதை வாசித்தல், கவிதை வாசித்தல் வித்யாசமான ரசனைக்கலவை நிகழ்வு. படைப்பாளிகள் க்ருஷாங்கினி, முரளிக்கிருஷ்ணன்,பானுமதி, சரஸ்வதி, P R கிரிஜா, ஈஸ்வர், ஆர்.கே. ராமநாதன்,
லதா ரகுநாதன், விக்ரம் வைத்யா, சதுர்புஜன், உமா பாலு, கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என கதைசொல்லல்,கவிதை வாசிப்புகள் கலவையாகி மாறி சுவாரஸ்யம் சேர்த்தன. நேர நிர்வாகம் பெரிதாக நீளாமல் பங்களித்த அனைவரும் காலஅளவைக் கருத்தில்கொண்டு ஆர்வம் குறையாமல் உரையாற்றியது நல்ல முயற்சி.
கணையாழியில் பரிமளவிலாஸ் கதையெழுதிய முரளிகிருஷ்ணன் இதற்கு முன்னான குடந்தை மகாமக நிகழ்வை கதை சொல்லியாகச் சொன்னார்.
ரமணரைப்பற்றிய கவிதை, உறவுக்கார கைம்பெண் பாட்டியின் கதை, கருப்பை அறுவை சிகிச்சை கதை, பேப்பர் படிக்கும் 82 வயது தாத்தா கதை என கதைக்களங்களும் கதை சொல்லிய விதங்களும் புதிய பரிமாணத்தில் இருந்தன. சதுர்புஜன் தான் வகுப்பெடுத்த MBA மாணவர்களின் கதையில் சங்கரின் கதையை ‘காதல்பாடம்” பாடம் சிறுகதையாய் நிகழ்த்தியே காட்டினார். குரல் வளமும் உடல் மொழியும் முகபாவமும் அவரை ஒரு நல்ல மேடை அனுபவ நடிகனாக முன்னிறுத்தியது.
விக்ரம் வைத்யாவின் ஒரு வயதான இலையின் வீரியக் கவிதையும் கனவுகாண் பாலியல் வன்முறையாளன் தைரியக் கவிதையும் வித்தியாச தளங்கள்.
கிருஷ்ணமூர்த்தி தத்தெடுக்கப்பட்ட நான்கு வயது சிறுமி அமெரிக்கா சென்ற நிஜ நிகழ்வை நெகிழ்வுடன் கதைசொல்லியாய் சொன்னார்.
மேற்குமாம்பலம் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி homoeopathy.meditation.single dose methods எனும் ஆங்கில நூல்களையும் இங்கிலாந்து மலர் மருந்துகள் பாகம் 1 யும் வந்திருந்தோர்க்கு இலவசமாகத் தந்தார்.
உரையாடியபோது அனைவரும் எமர்ஸனை சில வரிகளாவது படித்தே ஆகவேண்டும் என பிரிஸ்கிருப்ஷன் எழுதாமல் பரிந்துரை செய்தார்..!
கிருபானந்தம் ஸார் நன்றிகூற மௌலி புது விருட்ச இதழ் தந்தார்.
அதிகபட்சம் குறைந்தபட்ச நிமிடங்களே எடுத்துக்கொள்வேன் என்று சொல்லி நான் நான்கே நான்கு கவிதை வாசித்தேன். அதில் இரண்டு பிரபல பத்திரிகைகள் இரண்டில் பிரசுரமாகி நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டவை.
நான் வாசித்த என்னுடைய கவிதைகள்பற்றி எந்தப் பத்திரிகை என்ன கவிதை என ஆர்வமாகக் கேட்பவர்கள் அந்தப் பத்திரிகைகளுக்கு ஒருவருட சந்தாவும் என் கவிதைத்தொகுப்பினை வாங்குவதாகவும் இஷ்ட தெய்வத்தின் மீது (சா)சத்யபிரமாணம் எடுத்து ஒரு ஐநூறு பேராவது பதிவிட்டால் கோடை மழை பெய்யவும் நல்ல கவிதையும் நல்ல பத்திரிகையும் உய்யவும் பலமானதொரு வாய்ப்பிருக்கிறது..!
சொல்றத சொல்லிட்டேன்.அப்பறம் உங்க இஷ்டம்…!
குவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா – வீடியோ
விஜயன் அவர்கள் குவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழாவிற்கு வந்து அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ எடுத்து, யூ டியூபில் பதிவு செய்திருப்பது மிகவும் அருமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
அவருக்கு எப்படி நன்றி சொல்வது?
பார்த்து ரசியுங்கள்!
அமுதசுரபியில் குவிகம்
தமிழ் வளர்க்கும் அமைப்புகள் என்ற தலைப்பில் குவிகத்தைப்பற்றி மே மாத அமுதசுரபி இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. தொகுத்து எழுதிய ஸ்ரீமதி ரவிச்சந்திரனுக்கும், திரு கிளிக் ரவி அவர்களுக்கும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!!
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
சூரியதேவன் ராகுவின் பிடியிலிருந்து முழுவதுமாகத் தன்னை விடுவித்துக்கொண்டான். தனக்குத் துணையாயிருந்த சந்திரன் மயங்கிக்கிடப்பதைப் பார்த்தான்.
அவன் மனதில் எரிமலை வெடித்துக்கொண்டிருந்தது.
ஸந்த்யாவிற்காகக் காந்த சிகிச்சைசெய்ய ஒப்புக்கொண்டதும் அதன் விளைவாகச் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே ஸந்த்யாவின் பேரழகு தன்னைத் தாக்கியதில் இருவரும் நிலை குலைந்து உறவுகொண்டதையும் அதன் தொடர்ச்சியாக ராகு தன்னைப் பிடித்துத் தன்னுடைய சக்தியைப் பெற்றுக்கொண்டதையும் எண்ணினான். ஸந்த்யாவும் குற்ற உணர்ச்சியில் அங்கிருந்து சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்தான். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ராகு என்ற எண்ணம் அவன் மனத்தில் மேலோங்கி நின்றது. அவனுக்கு ராகுமீது அடக்கமுடியாத ஆத்திரம் வந்தது. அவனை அழித்துவிடவேண்டும் என்ற அளவுக்குக் கோபம் பொங்கியது.
எங்கே அந்த ராகு என்று தேடினான். சூரியனைத் தன் வயிற்றில் அடக்கிவைத்து அவனுடைய சக்தியைக் கிரகித்துக் கொண்ட ராகு அவனை விடுவித்தபிறகு அதுவும் சூரியன் விழிக்கும்போது அருகில் இருந்தால் ஆபத்து என்பதை நன்கு உணர்ந்ததால் அவன் விழிக்கும்முன்பே அங்கிருந்து பறந்து செல்ல முயன்றான்.
ஆனால் சூரியதேவன் சக்தி இழந்திருந்தாலும் புத்தி இழந்துவிடவில்லை. தனது கிரணப் பார்வையாலேயே ராகு இருக்கும் இடத்தை அறிந்து, அவன் தப்பித்துச் செல்ல இயலாதவாறு எரி வளையத்தை உண்டுபண்ணினான். எரியும் வளையத்துக்குள் மாட்டிக்கொண்ட ராகு அனலில் அகப்பட்ட பாம்புபோலத் துடித்தான். ஆனால் அமிர்தமுண்ட சொர்ணபானு அரக்கன் அல்லவா அவன். அவனை எந்தச் சக்தியும் அழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வரத்தை பிரும்மாவிடம் வாங்கியிருக்கிறான். அந்த வரத்தைப் பயன்படுத்தித் தன்னை நிழலாக மாற்றிக்கொண்டான். நிழல் வடிவம் எடுத்ததால் சூரியனின் சுட்டெரிக்கும் எரிவளையம் அவனை ஒன்றும் செய்யமுடியவில்லை. நிழல் வடிவில் அவனுக்குக் கிடைத்த இன்னொரு அனுகூலம் சூரியதேவனின் கண்களுக்கும் அவன் புலப்படவில்லை . மனத்துக்குள் சூரியதேவனைப் பழிவாங்கிய குரூர திருப்தியில் அந்த மாளிகையை விட்டுப் பறந்து வானத்தில் சென்றுவிட எண்ணினான்.
சூரியதேவன் கண்களில் அவனால் இருளைப் பூசமுடிந்தது. ஆனால் விஷ்வகர்மா அமைத்த அந்த மண்டபத்திலிருந்து வெளியேற அவனுக்கு எங்கும் வழி கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் சூரியனை விழுங்கவந்த தன்னை நொந்துகொண்டான். மயக்கம் தெளிந்து சந்திரன் எழுந்துவிட்டால் தன் நிழல் வடிவு மறைந்து எல்லோர் கண்களுக்கும் தான் தென்படுவோமே , தன்னைச் சூரியதேவன் பிடித்தால் என்னாவாகும் என்ற எண்ணம் அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது.
அந்த மண்டபத்தை நோக்கி விஷ்வகர்மா வருவதைப் பார்த்தான். அவன் பீதி இன்னும் அதிகமாயிற்று. சூரியனிடமிருந்து தப்பினாலும் தேவசிற்பி விஷ்வகர்மாவின் பார்வையிலிருந்து தப்பமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட ராகு தவித்தான். அவனுக்கு உதவுவதற்காகவோ என்னவோ விஷ்வகர்மாவின் பின்னால் ஸந்த்யாவும் வந்து கொண்டிருந்தாள். . சூரியதேவனும் ராகுவைத் தேடுவதை விட்டுவிட்டு விஷ்வகர்மா வருவதையும் லட்சியம் செய்யாமல் ஸந்த்யாவை உற்றுப் பார்த்தான். அவன் பார்வையில் ஸந்த்யாவின் அழகு ஜொலித்தது. அது மட்டுமல்லாமல் அவளின் அழகு நிழலும் தரையில் படர்ந்தது.
அந்தக் கணத்தில் தான் தப்பும் வழியைக் கண்டுகொண்டான் ராகு. எவர் கண்ணிலும்படாது தன் நிழலை ஸந்த்யாவில் நிழலில் மறைத்துக்கொண்டான். ராகு ஸந்த்யாவின் நிழல் சாயாவாக மாறிவிட்டான். இனி அவனை சூரியதேவனோ விஷ்வகர்மாவோ ஏன் பிரும்மதேவர் வந்தால்கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதை அறிந்த ராகு இனி சுலபமாகத் தப்பிவிடலாம் என்று உறுதிகொண்டான்.
அவன் எண்ணப்படியே காரியங்கள் நடைபெற்றன.
ஆனால் அந்த சாயா ஏற்படுத்தப்போகிற விபரீதங்கள் எப்படி சூரியனை, ஸந்த்யாவை, விஷ்வகர்மாவை,ஏன் அகில உலகத்தையே ஆட்டுவிக்கப் போகின்றன என்பதை அந்தக் கணத்தில் யாரும் உணரவில்லை. அப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் சூரியன் ஸந்த்யாவை அந்தக் கணத்திலேயே தன் எரி வளையத்தில் சுட்டுப் பொசுக்கியிருப்பான். விதி வலியது. ராகுவின் பார்வையிலிருந்து சூரியன் தப்பலாம் . விதியின் பார்வையிலிருந்து அவனாலும் தப்பமுடியவில்லை.
தப்பமுடியாது.
அதுதான் விதி.
(தொடரும்)
எம கதை (இரண்டாம் பகுதி)
சித்திரகுப்தனின் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் கசிந்துவிட்டால் அது பூலோகத்தை மட்டுமல்லாமல் தேவ உலகத்தையும் ஆட்டிப்படைக்கும், பிறகு பிரும்மா விஷ்ணு சிவன் இந்த மூன்று பேர்களின் கோபத்தை யாராலும் தாங்கமுடியாது என்பதை அறிந்த எமன் கலங்கினான். அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தவறுகளுக்குப் பதில் எழுதியே அவனால் தாளமுடியவில்லை. ஏதாவது பெரிய அளவில் தவறு நடந்தால் சித்ரகுப்தனை மன்னித்தாலும் தன்னை யாரும் மன்னிக்கமாட்டார்கள் என்று எமன் பயந்தான்.
அதனால் நாரதரிடம் அதைப்பற்றிக் கேட்டு, வரப்போகும் ஆபத்தைப்பற்றி சபைக் குறிப்பில் இடம்பெறச் செய்துவிட்டால் நாளை நடக்கும் விசாரணையின்போது அது தனக்கு உதவக்கூடும் என்று அதைப்பற்றிய தன் கருத்தை ஆழமாகப் பதிவுசெய்தான் எமன். அவுட்சோர்ஸ் செய்யும்போது, தகவல் தெரிந்த நபர்கள், தங்கள் மாமன் மச்சான் இவர்களின் சாவு நாளைத் தெரிந்துகொண்டு சொல்லிவிட்டால், அதனால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு அளவே இருக்காது. இன்னும் சிலர், தகவல்களை நல்ல விலைக்குச் சில ஏஜென்சிக்கு விற்றுவிட்டார்கள் என்றால், அவர்கள் அதை வைத்துக்கொண்டு நாடிஜோதிடம்மாதிரி புதிய பிஸினஸ் ஆரம்பித்து விடுவார்கள். அதன்பின் சிவ தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. மார்க்கண்டேயன் விவகாரத்தில் சிவபெருமானிடம் வாங்கியதைப்போல் பலமடங்கு உதை வாங்கவேண்டி நேரிடும் என்பதை உணர்ந்தான் எமன்.
அதனால் தகவல் பாதுகாப்புச் சரிவரத் தெரிந்தால்தான் இதற்குத் தான் அனுமதி அளிக்கமுடியும் என்று திட்டவட்டமாக எமன் கூறினான்.
எமன் கூறியதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லோரும் கொஞ்சம் ஆடிப்போய்விட்டனர். ஆனால் நாரதர் இந்தக் கேள்வியை யாராவது கேட்பார்கள் என்பதை அறிந்து முன்கூட்டியே அதற்கான பதிலையும் தயார் செய்துகொண்டு வந்திருந்தார்.
“எனதருமை எமதர்மராஜரே! உங்கள் கேள்வி மிகவும் சரியான கேள்வி! அதுவும் சரியான சமயத்தில் கேட்ட – கேட்கப்படவேண்டிய கேள்வி! இதைக் கேட்டதும் மும்மூர்த்திகள்கூடக் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டார்கள் என்பதை அவர்களின் முகக் குறிப்பே சொல்கிறது. சிவபெருமானின் தலையிலிருந்து சந்திரன் கீழே விழுந்துவிட்டான். விஷ்ணுவின் சக்கரம் சுற்றுவதை சில வினாடிகள் நிறுத்திவிட்டன. பிரும்மாவின் நான்கு முகங்களும் ஒரே திசையை அதாவது எமனை நோக்கியே பார்க்கின்றன. தேவிகளின் கரங்களும் தங்கள் நாதர்களின் கரங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. முருகனோ பேச்சை மாற்ற விநாயகப் பெருமானின் தும்பிக்கையை முழம்போட்டு அளக்க ஆரம்பித்துவிட்டார். விநாயகப் பெருமானும் அதைப் புரிந்துகொண்டு தம்பியின் முகங்களில் இருக்கும் கண்களை எண்ண ஆரம்பித்துவிட்டார். சித்திரகுப்தனோ தான் ராகு காலத்தில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
“உங்கள் அனைவருடைய கவலையையும் போக்கவேண்டியது இப்போது என் கடமை ஆகிறது.
யாருக்கும் தெரியாத – தெரிந்து கொள்ளக்கூடாத தகவல்கள் கசிந்தால் அது விளைவிக்கும் அனர்த்தங்கள் நம் அனைவருக்கும் தெரியும்.”
இப்படிச் சொல்லிக் கொண்டே நாரதர் யாரும் அறியாமல் தன் தம்பூராவின் நரம்பை மெல்லத் தடவினார். அது பூலோகம் சென்று இணையம் வழியாக விக்கிபீடியாவெல்லாம் சென்று தகவல் என்றால் என்ன என்பதற்கு எவ்வளவு ஜார்கன் இருக்கமுடியுமோ அவ்வளவு தகவல்களைக் கொட்டியது . அதை அப்படியே நாரதர் வார்த்தையில் கொட்டினார்:
” தகவல் என்னும் கருத்துரு அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து தொழில்நுட்பப் பின்புலம் கொண்ட பொருள்கள் வரை பல்வேறு பொருண்மை பரவல் கொண்டதாக இருந்தாலும் எளிமையாக, தகவல் என்பது குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பு வடிவம் ஆகும்.
எனவே இது தரவு, அறிவு எனும் கருத்துப் படிமங்களோடு தொடர்புள்ள சொல்லாகும்.
தரவு என்பது குறிப்பிட்ட அளபுருக்கள் சார்ந்த இயல்மதிப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது.
அறிவு என்பது இயல்பொருள்கள் அல்லது நுண்ணிலைக் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் தகவு அல்லது திறன் ஆகும். தரவைப் பொறுத்த வரையில் அதன் நிலவலுக்கு ஒரு நோக்கீட்டாளர் தேவையில்லை. ஆனால், அறிவு என்பதற்கு அறியும் நோக்கர் அதாவது அறிபவர் கட்டாயமாகத் தேவைப்படும்.
அடிப்படையில் தகவல் என்பது ஓர் அமைப்பில் நிலவும் முதல்-விளைவு நிகழ்வின் பரவுதல் ஆகும். தகவல் ஒரு செய்தியின் உள்ளடக்கமாகவோ நிலவுகை குறித்த நேரடியாக அல்லது மறைமுகமாக நோக்கீட்டின் உள்ளடக்கமாகவோ அமையும். காணும் எதுவும் தன்னளவில் ஒரு செய்தியாகும். இந்தப் பொருளிலும் தகவல் செய்தியின் உள்ளடக்கம் ஆகிறது. தகவலைப் பல்வேறு வடிவங்களில் குறிமுறைப்படுத்தி செலுத்தலாம் அல்லது விளக்கலாம். விளக்கத்தை காட்டாக, தகவலைக் குறிகளின் நிரலாக வரிசைப்படுத்தலாம் அல்லது குறிகைகளாக்கி அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பலாம். அல்லது காப்பாகத் தேக்கிவைக்க கரந்தநிலைக் குறிகளில் குறிமுறைப்படுத்திச் செலுத்தலாம் அல்லது பாதுகாக்கலாம்.
தகவல் உறுதியின்மையைக் குறைக்கிறது. ஒரு நிகழ்வின் உறுதியின்மை என்பது அதன் நிகழ்தலின் நிகழ்தகவு ஆகும். இது நிகழ்தலுக்கு தலைக்கீழ் விகிதத்தில் அமையும். ஒரு நிகழ்வு கூடுதலான உறுதியின்மையோடு இருந்தால், அதன் உறுதியின்மையைத் தீர்க்க கூடுதலான தகவல் தேவையாகும். தகவலின் அலகுகளாக பிட், நேட் என்பவை அமைகின்றன. தகவல் எண்பது செய்தி எனும் கருத்துப்படிமம் பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருளைக் குறிக்கிறது.
தகவல் என்பது கட்டுத்தளை, கருத்துபுலப்பாடு, கட்டுபாடு, தரவு, வடிவம், கல்வி, அறிவு, பொருள், புரிதல், உளத்தூண்டல்கள், படிவம் (பாணி), புலன்காட்சி, உருவகம், இயலடக்கம் ஆகிய கருதுபாடுகளுடன் நெருக்கமாக உறவு பூண்டுள்ளது.
தமிழில் தகவல் என்பது, செய்தி என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது.
ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான information என்னும் சொல்லுக்கு, “தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது.
இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்” என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. தகவல் சமூகம், தகவல் புரட்சி, தகவல் தொழில்நுட்பம், தகவல்
அறிவியல் என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் தகவல் என்பது “ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை” ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது பெறுனர்களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய உள்ளடக்கம் எனலாம்.
தகவல் என்பது காணும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது துல்லியத் தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு கூடும்போது அதன் துல்லியத் தன்மையும் மிகும்” (***)
நாரதர் ரொம்ப ஓவராகப் போவதாகத் தெரிந்த விஷ்ணு, சக்கரத்தால் அவரது தம்பூராவின் தந்தியை அறுக்க இணையத்தின் தகவல் துண்டிக்க, நாரதரும் நிலைமை அறிந்து சப்ஜெக்டுக்கு வந்தார்.
“தகவல் என்பது பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. அந்தப் பார்வையில் சிறிது காட்சிப் பிழையைக் கொடுத்துவிட்டால் தகவல் என்னவென்று பார்ப்பவர்களுக்கு அது புரியாது. இதை மனதில்கொண்டு நாம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக அது இருக்கவேண்டும். அதை முதலில் புகுத்திவிட்டால் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.”
” அது, அது என்கிறீரே, அது என்ன? ” என்று பொறுமை இழந்து எமதர்மராஜன் கேட்டார்.
“அதுதான் ஆதார் எண் ” என்றார் நாரதர்.
(தொடரும்)
*** https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
மாடு நேர்மையானது – எஸ்.வைதீஸ்வரன்
எண்ணை வியாபாரி கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எண்ணை வாங்குவதற்கு ஒருவன் தூக்குப் பாத்திரத்தோடு வந்தான்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றிக்கொண்டிருந்த வியாபாரி இடையில் சற்று நிறுத்தித் தலை சாய்த்து எதையோ உற்றுச் செவி சாய்த்துக் கேட்டான்..
பின் கொல்லையில் அமைந்திருந்த செக்காலையிலிருந்து வந்த சலங்கை சப்தம் நின்று போயிருந்தது.. உடனே வியாபாரி நாக்கை மடக்கி வாயில் “டுர்…டுற்…” என்று சப்தம் செய்தான். சத்தம் எழுப்பியவுடன் சலங்கை சப்தம் தொடர்ந்தது.
எண்ணை வாங்க வந்தவன் இதைக் கவனித்தான்.
“அதென்ன திடீர்னு சத்தம் குடுத்தீங்க ?” ன்னு கேட்டான்
வியாபாரி சொன்னான்.
“ அது ஒண்ணுமில்லே… பின்னால எள் எண்ணையாட்டறதுக்கு செக்கு மாடு சுத்திக்கிட்டு வருது…அது ஒழுங்கா நிக்காம சுத்துதா இல்லையான்னு இங்கேருந்தே கவனிக்க அது கழுத்துலே மணியைக் கட்டித் தொங்கவிட்ருக்கேன்… மாடு நின்னா சத்தம் நின்னு போயிரும், உடனே நான் குரல் குடுப்பேன் … அது மறுபடியும் சுத்த ஆரம்பிக்கும்…” அப்படீன்னான்.
வந்தவன் சாதுரியமான மனிதன்.
அவன் சொன்னான்…” அதெல்லாம் சரிப்பா……ஆனா மாடுங்க ஒவ்வொரு சமயம் சாமர்த்தியமா ஓடாமயே ஒரே எடத்துலெயே நின்னுகிட்டுத் தலையைமட்டும் அப்பப்போ ஆட்டிக்கிட்டே இருந்தா மணிச் சத்தம் கேட்டு நீங்க ஏமாந்துடுவீங்க இல்லையா? “
பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி முடித்த வியாபாரி வந்தவனை உற்றுப் பார்த்தவாறு சொன்னான்..
“ அய்யா…நீஙக நெனைக்கிறது சரிதான்…..ஆனா…அந்த மாதிரி ஏமாத்து வேலையெல்லாம் மாடுங்க செய்யாது..!!.”
ஒரு சொற்பொழிவில் கேட்டது
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
காளிதாசன்-ரகுவம்சம் 3
ரகுவம்சம் தொடர்கிறது…
ரகுவம்சத்தை நிறைவு செய்து – பிறகு .. இந்திய வரலாற்றின் மற்ற நாயக நாயகிகள் கதைகள் தொடரும்.
இப்பொழுது நேயர்களை ‘ரகு’வின் ஆட்சிக்கு அழைத்துச் செல்கிறோம்.
முன்கதை:
ரகுவம்சத்தில் – திலீபன் தொடங்கி ரகு கதை படித்துக்கொண்டிருக்கிறோம்…
ரகு, விஸ்வஜித் யாகத்தைச் செய்து தாராளமாகத் தானங்களைக் கொடுத்தான். அரச கஜானாவின் செல்வம் குறைந்துகொண்டே வந்தது. யாக முடிவில் மன்னனுக்கு மிஞ்சியது ‘மண் பாத்திரம்’ மட்டுமே. யாகத்தை நடத்தி முடித்து, ஏதுமற்றவனாய் நின்றான். அவனது கவலை: இந்த நேரம் பார்த்து எவனாவது தானம் என்று கேட்டு வந்தால்?
கலங்கி நின்றான்!
‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ…’ என்று ஒரு சோகப்பாடல் பாடினான்..
அவன் பயந்தது நடந்தேவிட்டது.
அவனைத் தேடி கௌட்ச முனிவர் வந்தார்.
அவர்..வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர். அவருக்குத் தனது ‘குரு’வுக்குக் குரு தட்க்ஷணை கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருந்தது. சரி..அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாகப் பெற்றுக்கொண்டு செல்லலாம் – என வந்தார். முனிவரை அமரச் சொல்லி அர்க்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானான்.
முனிவருக்கு ‘விஷயம்’ விளங்கிவிட்டது.
அரசன் இன்று செல்வந்தனல்லன்.. ஒரு அன்னக்காவடி என்று..
அரசன் கையில் இருந்ததெல்லாம் .. மண் பாண்டம்… மட்டுமே!
‘சரி இது காசுக்காகாது’ – என்று எண்ணி மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
முனிவரைத் தடுத்து நிறுத்தி ரகுராமன் கேட்டார் :
முனிவரே! தாங்கள் வந்த காரியம் யாது? அதைக் கூறுவீர்களா?
சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர் கூறினார்:
மன்னா – நான் வரதந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கிச் சில காலமானதுமே அவருக்கான குரு தட்க்ஷணை என்ன தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு, ‘நான் அவருக்கு செய்யும் பணிவிடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்’ மட்டுமே குரு தட்க்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார். ஆனால் … அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து புறப்படும்போது… கடைசியாக .. ‘நான் என்ன தக்ஷணை தரவேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என பதினான்கு வித்தைகளுக்குத் தட்க்ஷணையாகப் பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா’ என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்.
அடிச்சிட்டார் அந்தர் பல்டி!
குரு – சாதாரண – சராசரி- மனிதன் ஆனார்!
சில நேரங்களில் சில மனிதர்கள்!
எம்புட்டுப் பணம் கேட்கிறார்!
முனிவர் தொடர்ந்தார்:
நான் உன்னைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு செல்லலாம் என இங்கு வந்தேன். ஆனால் – உன்னுடைய நிலைமை கண்டேன். ஆகவே மன்னா, இதை எண்ணி நீ யோசனை செய்யவேண்டாம். நான் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்டுக்கொள்கிறேன்.
முனிவரை மீண்டும் தடுத்து நிறுத்தினார் ரகுராமன். அவரிடம் கூறினான் ‘மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்டபின் அதை பெற்றுக்கொள்ளாமல் வெறும் கையோடு போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது நீங்கள் கேட்ட தானத்தைக் கொண்டுவந்து தருகிறேன்’ என்று கூறிவிட்டு அவரை ஓய்வு எடுக்குமாறு கூறினார்.
இந்நாளாக இருந்தால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கியிருக்கலாம்! ஹா ஹா !
பணக்கவலை மனிதனின் தூக்கத்தைக் குலைக்கிறது. இரவு முழுவதும் தூக்கம் இன்றித் தவித்தான் மன்னன். மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டுவரலாம் என்று நினைத்தான். மறுநாள் பொழுதுவிடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி ‘மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிரம்பிக் கிடக்கின்றன’ என்ற சேதியைக்கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்றுபார்க்க அவர் முன் வந்த குபேரன் ‘மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?’ எனக் கேட்க மன்னனும் ‘நன்றி குபேரா, நன்றி’ எனக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
அந்நாளைய பஞ்சாப் நேஷனல் வங்கி குபேரன் பேங்க்தான் போலும்!
பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த கௌட்ச முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் ‘மன்னா! நீ நீடூழி வாழ்ந்து, உன் ராஜ்யத்தைத் தொடர்ந்து ஆள்வதற்கு, நல்ல மகன் பேறு பெற்றுக்கொண்டும் வாழ உனக்கு என் ஆசிகள்’ என மன்னனை வாழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்’ . நாளடைவில் ரகுராமனுக்கும் ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.
அயன் (அஜா)
அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தான். அப்போது விதர்ப தேசத்தைச் சேர்ந்த பேரரசன் தனது தங்கையான இந்துமதிக்கு சுயம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்குப் பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அயனுக்கும் அழைப்பு வந்தது.
அயனும் அந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ள விதர்ப தேசத்துக்குக் கிளம்பிச் சென்றான். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில், அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி ஆக்ரோஷமாகக் கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது. அயன் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப்பொட்டில் அதைச் செலுத்தினான். உடனே, அந்த யானை மறைந்து அதற்குப் பதில் அங்கு ஒரு அழகிய மனிதன் நின்றுகொண்டு இருந்தான்.
அயனிடம் கூறினான்:
‘மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு நாள் – மாதங்க முனிவரின் சாபம் காரணமாக நான் யானை உருவில் இத்தனை காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் ‘பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும்’
இந்த முனிவர்களோட ரௌசு தாங்கமுடியல … கோபம் வந்தா .. நல்லாப் போட்டுத் தாக்கறாங்கய்யா..பிடி சாபம்! என்று…
பிரியம்வதன் தொடர்ந்தான்:
‘மன்னா, நானும் இத்தனை காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக்கிடந்தேன். மிக்க நன்றி. மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்குத் தக்க நேரத்தில் உதவிடும்’ என்று கூறியபின் அவருக்கு ஒரு பாணத்தைத் தந்துவிட்டுக் கூறினான் ‘மன்னா! நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்தப் பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக்கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது. இந்த பாணம் உனக்கு வெற்றியைக் கொடுக்கும்’.
அயனும் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றான்.
விதர்ப அரசர், நகர் எல்லைக்கே வந்து அவனை வரவேற்றுச் சபைக்கு அழைத்துச்சென்றார். அங்கோ அரண்மனையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து அவரவர் ஆசனங்களில் அமர்ந்துகொண்டு இருந்தனர். அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.
சுயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும் தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாகச் சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த சேலைவழியே பார்த்துக்கொண்டே நடந்துசென்றாள். கூட இருந்த அவளது தோழி அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமை பெருமைகளைக் கூறி அவளுக்கு அறிமுகம் செய்துவந்தாள். அந்த மன்னர்களும், ராஜகுமாரர்களும் இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை வெளிப்படுத்தியவாறு இருந்துகொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சிசெய்தார்கள்.
ஒரு அரசன், தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரைச் சுற்றிச் சுற்றி சுழற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தான். இன்னொருவன், தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்டத் தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை அவ்வப்போது கையில் எடுத்தெடுத்து மீண்டும் தன்னுடைய தோள் மீது போர்த்திக்கொண்டான். இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்துத் தனது தோள்மீது போட்டுக்கொண்டான்.
சரியான காமெடி பீஸ்கள்!
அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்துசென்றாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிறபோது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது இப்பாடல்..
இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிறபோது ஒவ்வொரு மாடமும் ஒளிபெற்றுப் பின்னர் இருளடைவதுபோல, இவள் வருதலைப் பார்த்து ஒளிபெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார் காளிதாசன்! ***
அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் அருகில்சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின. அவனது அமைதியான, அடக்கமான முகமே அவன் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
தோழி: ‘ராஜகுமாரி..மேலே செல்லலாமா’
இந்துமதி: ‘சற்றுப் பொறுடி.என்ன அவசரம்’ – மெல்ல முணுமுணுத்தாள்.
தனது கையில் இருந்த மாலையை அயன் கழுத்திலே போட்டாள்.
அரசரும் அவனை ஆரத்தழுவி அனைவர் முன்னிலையிலும் தனது மகளை அயனுக்குத் திருமணம் செய்வித்தார். இந்துமதியை அழைத்துக்கொண்டு அயன் தனது நாட்டுக்குத் திரும்பலானான்.
இங்கு ஒரு சண்டைக் காட்சியை அமைப்பது அவசியம் என்று காளிதாசன் நினைத்தார் போலும்!
இந்துமதி தமக்குக் கிடைக்காத கோபத்தில் வழியில் பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள். நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தாக்கினர். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியம்வதன் கொடுத்த விசேஷ பாணம் நினைவுக்குவர அதை அவன் எதிரிகள்மீது பிரயோகித்தான். அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்றுகுவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினான்.
மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்துகொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகுராமன் மனம் மகிழ்ந்தான். அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரை வணங்கி அவர்களுடைய ஆசிர்வாதம் பெற்றனர். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகுராமனும் முக்தி தேடி வனத்துக்குச் சென்று விட்டார். அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தான் . ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் நல்ல ஆட்சி தந்தான்.
ஒருநாள் அவனது தந்தை ரகுராமனும் தமது யோக சக்தியைக்கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக்கொண்டான் என்ற செய்தி வந்தது. தனது தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்தான். அவனுக்குச் சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தான். பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்குத் தசரதன் என்ற பெயர்சூட்டி மகிழ்ந்தார்.
அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினார். பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார்.
அமைதியாக நதியினிலே ஓடம்!
ஓடும்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
ஒருநாள் அவன் தனது மனைவி இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி விளையாடிக்கொண்டு இருந்தான். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது வானத்து வழியே நாரதமுனி சென்றுகொண்டு இருந்தார்.
அவரது வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது.
விழுந்த மாலை இந்துமதியின் மார்புமீது வந்து விழுந்தது.
அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்தாள்.
அடுத்த கணம் கீழே விழுந்தாள்.
உடலை விட்டு உயிர் பிரிந்தது…
அது தேவன் செய்த விதியோ?
சரித்திரம் தொடர்ந்து பேசும்….
அயன் கதை தாண்டி … ரகு வம்சத்தின் கடைசி வரை கதை சொல்வோம்…
***
संचारिणी दीपशिखेव रत्रौ यं यं व्यतीयाय पतिंवरा सा नरेन्द्रमार्गाट्ट इव प्रपेदे विवर्णभावं स स भूमिपालः!! |
“Sancharini deepashikheva ratrau Yam Yam vyatiyay patimvara sa Narendramargatta eva prapede Vivarnabhavam sa sa bhoomipalah”. |
(சப்ஜெக்டுக்கு வா ! சப்ஜெக்டுக்கு வா ! என்று மிரட்டினால் கூட வரமாட்டேன்கிறாரே, இந்த ‘யாரோ’ … வேற வழி ….. தொடரும்)
மீனம்மா நானுன் தாஸனம்மா..! — கோவை சங்கர்
மீனம்மா நானுன் தாஸனம்மா – உன்னூராம்
மதுரை யம்பதி வாஸனம்மா!
அவளிலையேல் அவனில்லை சக்தியின்றி சிவமில்லை
உன்னருள் இலையென்றால் அவனியிலே அசைவில்லை!
உனைப்பாடும் பக்தர்யாம் துன்பத்தில் உழல்கையிலே
மனசாந்தி சாந்தியென மனம்விட்டு கதறுகிறோம்
வன்முறைகள் எங்களையே விடாது வாட்டுகையில்
அன்புக்கும் அமைதிக்கும் இறைஞ்சியே ஏங்குகிறோம்!
வெறிகொண்ட மாந்தர்கள் நடுவில்யாம் நிற்கையிலே
பட்டால்தான் புரியுமென நினைப்பதுவும் முறைதானோ
அபயமென்று வந்தவரை சோதிப்பது சரிதானோ
உபாயமொன்று சொல்லியெமை காத்திடவே வேண்டாமோ!
ஆசையது அதிகமாக நெறிகெட்டு செல்கையிலே
அணையிட்டு தடுப்பதுன் கடமைதா னில்லையோ
அழுக்காறு ஆட்கொள்ள மனம்வெதும்பி வாடுகையில்
பொறாமையே வராமல் செய்திடவே வேண்டாமோ!
யாமெல்லாம் உன்னுடைய பிள்ளைகள் அல்லவோ
எமையெல்லாம் வதைப்பது உனக்குத்தான் நீதியோ
எப்போதும் உனைநினைக்க நீசெய்யும் சூழ்ச்சியோ – எமக்கு
நல்வாழ்க்கை அமைப்பதுன் கடமைதான் இல்லையோ!
இது ஐ பி எல் சீசன் அதற்காக மீண்டும் ராமாயண கிரிக்கெட்
ராமாயண கிரிக்கெட்
அறுபதினாயிரம் டெஸ்ட் ரன்களைக் குவித்தவரும் இந்நாள் ‘அயோத்யா கிரிக்கெட் கிளப்’ தலைவருமான தசரதன் தன் பிள்ளைகள் ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் நால்வரும் கிரிக்கெட் டில் சிறப்பாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டார். அதுசமயம் அங்கே வந்த விஸ்வாமித்ரர் சௌத் ஆப்ரிக்காவில் நடக்கும் லோக்கல் மேட்சில் கலந்துகொள்ள ராமனையும் லக்ஷ்மணனையும் கூப்பிட்டபோது அவர்கள் எதிர்காலம் என்னாகுமோ என்று கவலைப்பட்டார்.
சௌத் ஆப்பிரிக்காவில் சூப்பராக அவர்கள் விளையாடியதைப் பார்த்து மனம் மகிழ்ந்த விஸ்வாமித்ரர் மிதிலையில் நடக்கும் புதுவித கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள ராம லக்ஷ்மணரை அழைத்துச்சென்றார்.
மிதிலையில் தக தக என்று தங்கத்தினால் ஆன ‘வோர்ல்ட் கப் ‘ ஒன்று பரிசாகக் காத்துக்கொண்டிருந்தது. அருகே மாபெரும் பேட்.. அந்த பேட்டை எடுத்து யார் ஜனகர் போடும் பந்தை சிக்ஸர் அடிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ‘வோர்ல்ட் கப்’.
ராமன் வந்து பேட்டைத்தூக்கி ஜனகர் போட்ட புல்டாஸ்சை வேகமாக அடிக்க பேட், பந்து, ஜனகரின்
அரண்மனை ஜன்னல்கள் எல்லாம் நொறுங்கிப் போயின.
ராமனுக்குக் கிடைத்தது வோர்ல்ட் கப் .
தசரதன் மிக மகிழ்ந்து ராமனை அயோத்யா கிரிக்கெட் டீமின் காப்டனாக்க நிச்சயித்து அறிவித்தார்.
உடனே ஏ சி சி யின் மற்றொரு மெம்பர் கைகேயி, பரதனைத்தான் கேப்டனாகப் போடவேண்டும் என்று வாதாடினாள் .
அதுமட்டுமல்லாமல் ராமன் 14 வருஷம் ‘சென்னை 28ல்’ இருக்க வேண்டும் என்றும் போராடினாள் . கைகேயிக்குக் கொடுத்த சத்தியத்தை எண்ணிக் கலங்கினான் தசரதன்.
ராமன் தானாகவே சென்னை 28 போவதாக ஒப்புக்கொண்டு வோர்ல்ட் கப்பையும் லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
சென்னை 28ல் தனியாக இருந்த ‘ வோர்ல்ட் கப் ’பைப் பார்த்த ஸ்ரீ லங்கா கேப்டன் ராவணனின் தங்கை சூர்ப்பனகை அதைத் திருடும்போது லக்ஷ்மணன் பேட்டால் அடிக்க மூக்கில் அடிபட்டு ஓடினாள். அவள் கேப்டன் ராவணனிடம் விஷயத்தைக் கூறியதும் அவன் விடுதலைப் புலிகள் வேஷத்தில் வந்து’ வோர்ல்ட் கப்’பைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். ராமனும், லக்ஷ்மணனும் மனம் தளர்ந்து ‘ வோர்ல்ட் கப்’பைத் தேடியபடி சென்னைத் தெருவெல்லாம் ஓடினார்கள்.
வரும் வழியில் ‘ கிஷ்கிந்தா கிரிக்கெட் ‘ கிளப்பின் மெம்பரான அனுமனைச் சந்தித்தனர். அனுமன் ராமனை அயோத்யா குப்பத்தில் நடைபெறும் வாலி – 11 Vs சுக்ரீவன் – 11 போட்டிக்கு அம்பயராக இருக்கும்படி வேண்டிக்கொண்டான்.மற்ற அம்பயர்கள் எல்லாம் தாதா வாலிக்குப் பயந்து அவனுக்கு அவுட்டே கொடுப்பதில்லை என்றும் சொன்னான் சொல்லின் செல்வன் அனுமன். மேட்சின் போது சுக்ரீவன் போட்ட ‘ நோ பாலுக்கு ‘ ராமன் வாலியை ‘ LBW ‘என்று சொல்லி அவுட் ஆக்கினான். “ ராமா ! நீயே இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டு லோக்கல் மேட்சில் இருந்து ரிடயர்ட் ஆனான் வாலி.
சுக்ரீவனைக் கேப்டனாக்கி அவன் ஆட்களை விட்டு ‘ வோர்ல்ட் கப்’ பைத் தேடும்படி கேட்டுக்கொண்டான் ராமன்.
அனுமன் அது ஸ்ரீ லங்காவில் இருக்கிறது என்று கண்டுசொன்னான். உடனே லக்ஷ்மணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஸ்ரீ லங்கா புறப்பட்டான் ராமன். அங்கே ‘ வைஸ் கேப்டன் ‘ விபீஷணன் கட்சிமாறி இவர்கள் டீமில் சேர்ந்துகொண்டான்.
மேட்ச் தொடங்கியது. முப்பத்து முக்கோடி தேவரும் ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்தனர். முதலில் பேட் செய்த ராமன் – லக்ஷ்மணன் – ஓபனிங் பேட்ஸ் மென் இருவரும் பவுண்டரி, சிக்சராகவே அடித்தனர். ராவணனின் பௌலர்கள் எல்லோரும் களைத்துப் போயினர். ஆனால் திடீரென்று ஆல் ரவுண்டர் இந்திரஜித் ஒரு ‘ பவுன்ஸர் ‘ போட லக்ஷ்மணன் அடிபட்டு மயங்கி விழுந்தான். ராமன் துடித்துப்போனான். ஆனால் அனுமன் ஓடி வந்து முகத்தில் ‘ ஸ்பிரே ‘ பண்ண லக்ஷ்மண் எழுந்து விளையாடத் துவங்கினான். ஐம்பது ஓவரில் ஆயிரம் ரன் எடுத்து ராமன் லக்ஷ்மண் இருவரும் ‘ நாட் அவுட் ‘ பொசிஷனில் ‘ டிக்ளேர் ‘ செய்தனர்.
அடுத்து வந்தது ஸ்ரீ லங்காவின் பேட்டிங். ராமன் லக்ஷ்மணன் பாஸ்ட் பௌலிங்கிற்கு முன்னால் ஆட முடியாமல் தவித்தனர். அங்கதனும் சுருள்பந்து போட்டு வேறு திணறடித்தான்.. ஆனால் பல செஞ்சுரி போட்ட கும்பகர்ணன் வந்து, எல்லா பந்துகளையும் சிக்ஸராக அடிக்க ராமன் கவலைப்பட ஆரம்பித்தான். ஆனால் முடிவில் சுக்ரீவனின் சுருள்பந்தில் முகத்தில் அடிபட்டு, ராமனின் பெருமையை உணர்ந்து, “ ராமா” உன் கையாலேயே அவுட் ஆக விரும்புகிறேன் “ என்று சொல்ல அடுத்துப் போட்ட ராமனின் பந்தில் ‘ கிளீன் போல்டாகி ‘ வெளியேறினான் கும்பகர்ணன்.
அதேபோல், இந்திரஜித் எப்படிப் போட்டாலும் பவுண்டரியாக அடிப்பதைக் கண்டு கலங்கிய ராமனிடம் ‘ ஷார்ட் பிட்ச் ‘ போட்டால் தடுமாறுவான் என்று விபீஷணன் சொல்ல லக்ஷ்மணன் அதே மாதிரி போட அவுட் ஆனான் இந்திரஜித். ஸ்டேடியத்தில் இருந்த முப்பத்து முக்கோடி தேவரும் ‘ ஜிங் ஜிங் ‘ என்று ‘ ஜால்ரா ‘ தட்டி ஆரவாரம் செய்தனர்.
அடுத்து வந்த ராவணன் கோபாவேசத்தில் அடிக்க ஆரம்பித்தான். ஆனால் அப்போது லைட் பெயிலியராகிக் கொண்டிருந்தது. ராமன் நினைத்திருந்தால் அவனை அவுட் ஆக்கியிருக்கமுடியும். இருந்தாலும் ராமன் பெருந்தன்மையுடன் ராவணனை ‘ இன்று போய் நாளை வா ‘ என்று சொன்னான். ராவணன் அவமானத்தில் துடிதுடித்துப் போய்விட்டான்.
மறுநாள் மேட்சில் ராவணன் தனது பத்து பேட்டுகளை மாற்றி மாற்றி விளையாடியும் ராமன் லக்ஷ்மணன் பௌலிங்கில் ரன் எதுவும் எடுக்கவே முடியவில்லை. எல்லா ஓவரும் மெய்டனாகவே போய்க் கொண்டிருந்தன. கடைசியில் ராமனின் சூப்பர் பௌலிங்கில் க்ளீன் போல்டானான் ராவணன். “வோர்ல்ட் கப் “ திரும்பவும் ராமனிடம் வந்து சேர்ந்தது, இருப்பினும் அது ஸ்ரீ லங்காவில் ராவணனிடம் இத்தனை நாள் இருந்ததே என்று சந்தேகப்பட்டு உலக மக்களுக்காக அதை ‘ Fire Polish ‘ போட்டு எடுத்துச்சென்றனர்.
ராமன் அயோத்திக்குக் கேப்டனாகும் காட்சியில்லாமல் எப்படி ராமாயணக் கிரிக்கெட் முடிவுறும்?
ராமன் கேப்டனாகி, வோர்ல்ட் கப் அருகில் இருக்க பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னனுடன் அனுமனும் கை கட்டி பவ்யமாக நிற்க ஓர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டதும் ராமாயண கிரிக்கெட் முடிவுற்றது.
இலக்கியவாசல் – ஏப்ரலில் நடந்தது மேயில் வருவது
ஏப்ரல் 28 சனிக்கிழமையன்று வழக்கம்போல் இலக்கிய சிந்தனையும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்திய நிகழ்வு
இலக்கியச் சிந்தனை சார்பில் பெருமதிப்பிற்குரிய புதுவை ராமசாமி அவர்கள் புலவர் கீரனின் தமிழ்ப் பணியைப்பற்றி அழகாக உரையாற்றினார்.
குவிகம் இலக்கியவாசல் சார்பில் திருமதி வல்லபா ஸ்ரீநிவாசன் அவர்கள் ‘கோவில் சிற்பங்களில் இலக்கியம்’ என்பதைப்பற்றித் தெளிவாகவும் பெருமையுடனும் பேசினார்கள்.
மே மாதம் 26 ஆம் நாள் திருமதி காந்தலக்ஷ்மி ‘சிறுகதைகளின் போக்கும் நோக்கமும்’ என்பதுபற்றி இலக்கியச் சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இரண்டின் சார்பாகவும் பேச இருக்கிறார்கள்!
அனைவரும் வருக!
அம்மா கை உணவு (3) – சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தோசை ஒரு தொடர்கதை
தோசையம்மா தோசையென்று பாட்டு எழுதினான்
அன்று முதல் இன்று வரை அந்த ஆசை விடலியே !
அரிசிமாவும் உளுந்துமாவும் அரைத்து சுட்ட தோசையில்
அன்றும் இன்றும் என்றும் என்றும் பாசம் சிறிதும் போகலை !
காலை என்றால் இட்டிலி ; மாலை என்றால் தோசைதான் ;
ஆண்டாண்டு காலமாக அம்மா வார்த்துப் போட்டது !
சட்டினியும் சாம்பாரும் சேர்த்தடித்தால் சொர்க்கமே –
இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று கேட்கத் தோன்றுமே !
தோசைக் கல்லைப் போட்டதும் சொய் சொய் ஓசை கேட்டதும்
நாவில் ஊறும் எச்சிலை நிறுத்திடவே முடியுமோ ?
முறுகலான தோசையை முகர்ந்து பார்க்கும் போதிலே
உறுதியாக நம் முகத்தில் புன்முறுவல் தோன்றுமே !
விண்டு விண்டு உண்ணும் போது தீர்ந்துபோகும் தோசைகள் –
ஒன்றிரண்டு மூன்று என்று எண்ணிக்கைகள் ஏதடா ?
தொட்டுத் தொட்டு உண்ணலாம் முழுகடித்தும் தின்னலாம்
எண்ணையும் பொடியும் போட்ட தோசைக்கேது ஈடடா ?
சாதா, மசாலா என்று ரகம்ரகமாய் தோசைகள் !
தோசைக்காகவே தனியே தொடங்கிவிட்ட ஓட்டல்கள் !
தமிழனுடன் கலந்துவிட்ட பெருமை பெற்ற தோசைதான் –
தரணி முழுதும் சுற்றிச் சுற்றி பவனியாக வருகுது !
ஆசைக்கோர் அளவில்லை ஆன்றோர் சொன்ன வாக்கிது –
தோசைக்கும் அளவில்லை – நாமறிந்த உண்மையே !
சலித்திடாது இறுதிவரை தோசை சுட்டு வழங்கினாள் –
அன்னை தந்த தோசை ருசி என் நாவில் என்றும் நின்றதே !
@@@@@@@@@@@@@@
சுஜாதாவின் பிறந்த நாள் மே 03 – அவரது தந்தையைப்பற்றிய ஒரு கட்டுரை (வாட்ஸ் அப்பில் வந்தது)
இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப்பற்றி எழுத்தாளர் சுஜாதா:

“அப்பா அன்புள்ள அப்பா”
செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”
“என்னப்பா வேணும் உனக்கு?”
“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”
சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.
பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.
நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.
பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அப்புறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”
“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”
“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போய்விட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”
“ஏதாவது படித்துக் காட்டட்டுமா அப்பா?”
“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.
காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.
பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”
“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”
“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”
ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.
கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.
“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”
படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”
மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”
ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.
ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.
“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”
“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெக்ட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”
எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…
ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.
“என்னப்பா?”
“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.
If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.
பொய்!
ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடண்ட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?
காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.
ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.
“பேர் சொல்லுங்கோ”
“சீனிவாசரா..”
“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர் நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.
சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸ்பத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.
காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”
உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”
“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.
ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுத்துண்டு எழுதுங்களேன்!”
சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும் சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.
“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.
சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.
Ask Rangarajan about Bionics!
ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!
ஏன் இந்த ஈர்ப்பு? – மாலதி சுவாமிநாதன் மன நல மற்றும் கல்வி ஆலோசகர்
என் க்ளையன்ட் ஒருவர் விடைபெற்று முடித்து, கதவைத் திறந்து வெளியேறியதுமே, சட்டென்று இருவர் உள்ளே நுழைந்தார்கள். ஒருவர், “ஸாரீ, ரொம்ப அவசரம். நான் சுகன். எனக்கு உங்களைத் தெரியும். இவர் என் நண்பர். இவங்க மூத்த மக, காதல் விவகாரத்தால் வீட்டிலே அடைத்து வைத்திருக்கிறோம். நான்தான் உங்களிடம் அழைத்துவரச் சொன்னேன். என்னிக்கு வரலாம்?” மூச்சு விடாமல் முடித்தார். அவளை அடைத்து வைத்திருந்ததால், நாளை என்றேன். உடனே அந்த அப்பா கண்களில் நீர் வழிய “ராணி நல்ல பொண்ணு, இப்படி..” முடிக்காமல் வெளியே சென்றுவிட்டார்.
அடுத்த நாள் வந்தார்கள். ராணி கசங்கிய சுடிதார், வாராத தலை, என்றைக்கோ பின்னிய பின்னல். அவளின் இடப்பக்கத்தில் அவள் அப்பா, வலப் பக்கத்தில் ஒரு பெண்மணி (அம்மா?), பின்னே சுகன். உள்ளே நுழைந்ததும் சுகன், “நான் வெளியே இருக்கிறேன். இது இவர்கள் குடும்ப விவகாரம். ஏய் ராணி, மேடத்துக்கிட்ட எல்லாம் சொல்லு. மேடம், ஃபீஸ் நானே தருகிறேன்.” என்று சொல்லி வெளியேசென்றார்.
ராணியின் அப்பா என்னைப் பார்த்து, “என்னன்னு புரியவே இல்லை, நல்லா படிக்கிற புள்ள.” குபுக்கென்று அழ ஆரம்பித்தார். வந்த பெண்மணி, ராணியைப் பார்த்து, “பாரு அப்பா எப்படி அழறார், எல்லாம் உன்னாலே. மேடம், நா இவ அம்மா. பட்டறை இருக்கு. எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்ததுக்கு இப்படியா செய்யணும்?” என்றாள்.
ராணி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கீழே பார்த்தபடி இருந்தாள். அவளைப் பெயரிட்டுக் கூப்பிட்டு என்னிடம் பேச விரும்புகிறாளா என்று கேட்டேன். தலையை வேகமாக அசைத்தாள். பெற்றோரிடம் அவளைத் தனியாகப் பார்க்க விரும்புகிறேன் என்றேன். ஏன் என்று இருவரும் கேட்டதற்கு, பதிலளித்தேன், “உங்களை வைத்துப் பேசினால், உங்களுக்கு மன வருத்தமாகும். ராணிக்கும் கஷ்டமாக இருக்கும். இங்கு பேசுவதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டேன். தேவை இருந்தால்தான் சொல்வேன். நீங்களும் இங்கு பேசியதைச் சொல்ல ராணியை வற்புறுத்தக் கூடாது” என்றேன்.
பெற்றோர் வெளியேறியதும், ராணி பத்து நிமிடத்திற்குக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். தன்னை அடைத்து வைத்தது, என்னவோ செய்தது என்று ஆரம்பித்தாள். 12ம் வகுப்பில் படிக்கிறாள். படிக்கப் பிடிக்கும், எப்பொழுதும் முதல் ராங்க்தானாம்.
பத்தாவதிலிருந்து வீட்டில் கெடுபிடி அதிகம். அவள் பெற்றோருக்கு ஏதோ பயம். அவள் டீச்சர்களிடம், “ராணி குணவதியாக இருக்காளா?” என்றே கேட்பார்களாம். வெளியே சென்றாலே, ‘கீழே பார்த்து நட’, ‘யாரோடும் பேசாதே’ என்பார்களாம். இதற்கு முன்பு இப்படி எல்லாம் செய்யவில்லை என்றும் சொன்னாள்.
இதனாலேயோ என்னவோ, அவள் ஆசிரியர்கள், இவள் ஒரு மார்க் குறைந்தாலும் “என்ன சரியா இருக்கியா? காதல் கீதல் இல்லையே” என்று கேலியாகக் கேட்பார்களாம். இந்த முறை அவள் வகுப்புத் தோழன் சுரேஷ், இரண்டாவது ராங்க் வாங்குபவன், இவள் தனக்கென்றுத் தக்க வைத்திருந்த முதலாவது ராங்க்கைப் பறித்து வாங்கி விட்டான். சுரேஷ் தானாக வந்து, ஆறுதல் சொல்லிச்சென்றான். அவள் மனதிற்கு இதமாக இருந்தது.
அன்றிலிருந்து சுரேஷிடம் சந்தேகங்கள் கேட்பது, வாழ்த்துவது ஆரம்பமானது. அவனுடன் செலவிட்ட நிமிடங்கள் மிக இனிமையாக இருக்க, ஏதோ கிளர்ச்சி செய்தது. ஏதாவது சாக்குக் கண்டுபிடித்துப் பேசுவார்கள். நாளடைவில், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீடு திரும்புவது என்றாயிற்று.
அடுத்த பரீட்சையில், இருவரும் 60-70 மதிப்பெண்கள் வாங்கினார்கள். வீட்டில், ஆசிரியர்கள், நண்பர்கள், எல்லாரும் கேட்டார்கள், சத்தம் போட்டார்கள். ராணி-சுரேஷ் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக் கொண்டார்கள். திடீரென, ‘இது தான் காதல். காதல் என்றால் இதெல்லாம் சகஜம்ப்பா ‘என்று நகைத்தார்கள். கவலைப்படவில்லை.
ராணியின் அப்பா சந்தேகித்தார். ராணி-சுரேஷ்பற்றிக் கண்டுபிடித்து, அவளை உதைத்து, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அறையில் பூட்டிவிட்டார்கள். ஸ்கூலில் லீவ் கேட்டுக்கொண்டார்கள். சுரேஷ் வீட்டிற்குப் போய், அவனைச் சத்தம் போட்டுவிட்டுப் பிறகு சுகன் சொன்னதால், என்னிடம் வந்தார்கள்.
ராணியிடம், அவள் கடந்துவந்த வாழ்க்கைப் பகுதிகளை வைத்தே அவளின் இன்றைய நிலையை விளக்கினேன். ஒவ்வொரு பருவத்திலும், மாற்றங்கள், சந்தோஷங்கள், திகைப்பு எல்லாம் உண்டு.
நம்முடைய சிறு வயதில், ஸ்கூல் போகப் பழகுகிறோம். முதலில் சிறிது நேரத்திற்கு, வெளி உலகம் பழகிக்கொள்ள, ஒழுங்கு வளர, மழலையர் பள்ளிக்குச் செல்லுகிறோம். எவ்வளவோ புது அனுபவங்கள், பலவற்றுக்குக் குதூகலம் அடைந்தோம். மூன்றே மணி நேரம் பள்ளி, விதவிதமாக பல வண்ண உடைகள் அணியலாம். பிறகு ஆரம்பப் பள்ளி, 5-6 மணி நேரம், சீருடை. பாட புத்தகங்கள் அதிகரிக்க, நண்பர்கள் கூடி, நல்லது-கெட்டது, சரி-தவறு தெரிய வந்தது. பாட்டு, நாடகம், விளையாட்டுப் பயிற்சிகள் தொடங்கியது, இதிலேயும் சில நம்மை மிகவும் ஈர்த்தது. உடல் மனம் வளர, தோழமையும் சேர, பெஸ்ட் நண்பன், எல்லாம் வளர்ந்தது. இது, ஐந்து வருட காலம். அதன் பிறகு, மேல்நிலைப் பள்ளி, குழந்தைப் பருவத்திலிருந்து மாறும் நேரம், பெரியவர்களாகவில்லை. உடைகள், உயரம், இடை, குரல் மாறின. சலிப்பு, கோபம் அதிகரித்தது. நம்முள் பல ரசாயனம் சுரப்பதால் இந்த மாற்றங்கள். இந்தப் பருவத்தில் பல வளர்ச்சி அடைவதால், ‘நான் யார்’ என்ற கேள்வியும் எழ, அதே நிலையில் உள்ள நண்பர்களுடனேயே இருக்கத் தோன்றுகிறது. அவர்களில், பாசம் காட்டுவோர்மேல் அதிக ஈர்ப்பு உண்டாகிறது என்றேன்
இவை ஒவ்வொன்றும் பருவம் மாறிவரும் அறிகுறிகள். அதில் ஒரு இயற்கையான அம்சம், ஆண் பெண் ஒருவரோடு ஒருவர் பேச விரும்புவது. நம் வயதுடையவர் நம்மைப்போலவே யோசிப்பது, பேசுவதால் அவர்களுடன் ஒத்துப்போய்விடும். பெற்றோர் நம்மைத் திருத்திக்கொண்டே இருப்பதால் வாக்குவாதமாக இருக்கும்.
அம்மா அப்பா கண்டிப்பு, டீச்சர்களின் சந்தேகங்கள் நிலவ, சுரேஷ் பரிவாகப் பேசினது, ஆதரவு காட்டியதை காதல் என்று அவள் தீர்மானம் கொண்டதாகச் சொன்னேன். இதைத் தனக்கு நியாயப்படுத்த, மதிப்பெண் குறைந்ததும் அது பெற்றோரை பழி வாங்கியதாகத் தோன்றச்செய்தது என்று விளக்கினேன்.
ராணி ஒப்புக் கொண்டாள். தனக்கு வீட்டிலும், தோழிகளிலும் ஆதரவு இருப்பதை விரல் விட்டு எண்ணினாள். தனக்குள் ஏதோ குழப்பம் இருப்பதாகவும், இதைச் சரி செய்யவேண்டும் என்றும் சொன்னாள்.
ராணியின் பெற்றோரை அழைத்து, அவளை அடுத்த ஐந்து நாட்களுக்குத் தினம் அழைத்து வரச்சொன்னேன். பெற்றோர், பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து, நல்லவர்களாகப் பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காகப் பருவம் வந்த பின்பு கண்டிப்பை அதிகரித்தோம் என்றார்கள். அதுவும் காதலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இதையே போதித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் தெளிவுபடுத்தினேன், இந்தப் பருவத்தில், கோபமாகச் சொன்னாலோ, போதிப்பதுபோல் சொன்னாலோ இவர்கள் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்று.
பெற்றோரை ராணியிடம் பேசச்சொன்னேன். வார்த்தை, சைகைகளால் பாசத்தைக்காட்டி, அவளை நம்ப முயற்சிக்கச் சொன்னேன். இருவரும், மறுத்தார்கள். இந்த அடம் பிடிப்பினால், ராணி பயந்து, பகிர்ந்து கொள்ளவில்லை. வளரும் பருவத்தில், யாராவது தன் பயம், அச்சத்தைப் போக்குவார்களா என்று தேடுவார்கள். இதன் விளைவே, இந்தக் காதல். எடைபோடும் மனப்பான்மையால் இடைவெளி அதிகமாகிறது. இதைச் சுதாரிக்கவே ராணியிடம் பேசச்சொன்னேன். சரியாகும், இல்லை என்று எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்காமல் அவர்களை அனுப்பிவைத்தேன்.
முதல் நாள், ராணியின் உணர்வுகளை வரைமுறைப்படுத்த ஆரம்பித்தோம். உணர்வுகளைப் பெயர் இட்டுச் சொன்னால், அதன் ஆதங்கம் குறையும். இதைப் பழக்கிக்கத் தொடங்கினாள். உணர்வுகளை, பல கண்ணோட்டத்தில் பார்த்தாள், இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கவனிக்கப் புரிய ஆரம்பித்தது. ராணி, “புது உலகம் திறந்தது என்றாள்!”
அடுத்ததாக, ராணி, சுரேஷிடம் பெற்ற ஆதரவைப்போல், மற்றவர்கள் எவ்வாறு கொடுக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு வந்தோம். ஒப்பிட்டுப் பார்த்ததில், அவள் தோழிகள், அம்மா, தம்பி, டீச்சர்கள் இவர்களின் பங்களிப்பும் பலவிதமாக இருந்தது. சுரேஷ் தந்த அன்பு, ஊக்கத்தை, காதல் என்ற வட்டத்துக்குள் வைத்தாள். அப்படி வைத்ததால், அதில்மட்டும் கவனத்தைச் செலுத்தினாள். தன் இடப்புகளையும் விட்டுவிட்டதால், மதிப்பெண்ணும் குறைய, பாதிப்பு தனக்குத்தான் என்பதையும் கவனிக்கவில்லை. பெற்றோர் சொல்வதைக் கேட்க மனம் விடவில்லை.
நாள் தோறும் சுரேஷ் நினைப்பு இருப்பதாக ராணி கவலையுடன் சொன்னாள். இதைச் சுதாரிக்க, பிப்லியோதெரபீ உபயோகித்து, கட்டுரைகள், சிறுகதை, கவிதை, படித்து (Bibliotherapy) விவாதித்தோம். ராணி, வீட்டு வேலைகளில் கைகொடுக்க ஆரம்பித்தாள். இந்த வேலைகளைச் செய்யும்போது, சுரேஷை நினைப்பதைக் குறித்து வரச்சொன்னேன். நாள் 4: சுரேஷ் பெயர் இல்லவேயில்லை! சுரேஷுடன் கலக்கம் இல்லாமல் பேசமுடிந்தது. மற்ற ஆண் தோழர்களுடனும் கூச்சமில்லாமல் பழகமுடிந்தது.
இதைப் பார்த்த சுரேஷ் வியந்தான். அன்று ராணியால் வர முடியவில்லை. நான் என் அறையை அடைந்ததும், மூன்று பேர், ஸ்கூல் யூனிஃபார்முடன் உள்ளே நுழைந்தார்கள். உட்கார மறுத்து, முறைத்தார்கள். “ம்ம் சொல்லுங்க” என்றதற்கு, “நான் உட்கார வரலை” என்றான் கதவு அருகில் இருந்தவன். “நீங்க யார்?” என்றேன். “நாங்க ஃப்ரெண்ட்ஸ்” என்றான் இன்னொருவன். “புரியலை “என்றேன். “ப்ரெண்ட்ஸ் சினிமா பார்க்கல?” என்றான் நக்கலாக. நான் உடனே “யார் சூர்யா, யார் விஜய்?” என்றதற்கு, கதவருகே இருப்பவனைக் காட்டி “சூர்யா” என்றவுடன். “ஓ, அப்போது நீ ரமேஷ் கண்ணா, இவன் விஜய்” என்றேன்.
“நான், ராணி” என்றதுமே அவனை நிறுத்திச் சொன்னேன், “மன்னிக்கவும், என்னைப் பார்க்க வருபவரைப்பற்றி எங்கள் தொழில் தர்மப்படி யாரிடமும் சொல்லமாட்டோம்”.
சூர்யா-சுரேஷிடம் மற்ற இருவரின் ராங்க்பற்றிக் கேட்டேன். விஜய் 10, ரமேஷ் கண்ணா 25 என்றார்கள். சூர்யா-சுரேஷைப் பார்த்து, “நீ சரியான கஞ்சன்” என்றேன். திகைத்து “ஏன்” என்றான். “பின்னென்ன, நீங்க “ப்ரெண்ட்ஸ்” ஆனா, இவங்க படிப்பில் கஷ்டப்படறாங்க. உனக்கு இவர்களை, நர்ஸரியிலேர்ந்து பழக்கம், ஆனா நேற்று அறிமுகமான ராணியைப்பற்றி அக்கறையாக் கேட்க வந்திருக்க”. திகைத்தான், உட்காரச் சொன்னேன் – உட்கார்ந்தார்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்று மூவரும் கேட்டார்கள்.
சூர்யா-சுரேஷிடம் சொன்னேன், “உனக்கும் ராணிக்கும் இடையில் ஏற்படுவது உங்கள் வயது வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள். நீ அவளுக்குப் பரிதாபப்பட்டது, உதவியது உன்னுடைய இயல்பான குணம், பலபேருக்குச் செய்ததைத்தான் இவளுக்கும் செய்தாய். இதோ விஜய், ரமேஷ் கண்ணாவிற்குக் கைகொடுத்து மேலே வர உதவி செய், வகுப்பில், கஷ்டப்படும் மற்றவருக்கும் செய், பாடம் சொல்லித் தா. அதில் வரும் ஆனந்தத்திற்கு ஈடே கிடையாது, செய்து பார், அனுபவி” என்றேன்.
இத்துடன், அவன் கோட்டைவிட்ட மதிப்பெண்களை மறுபடி அடைய முயற்சிகளைச் செய்ய நினைவூட்டினேன். இந்த வயதில் ‘நான் யார்?’என்ற தேடல் இருக்கும். இதற்குப் பதில்கள், நாம் பலவேறு பங்களிப்பினால் விடைகளைக் கண்டு அறியமுடியும். அதனால்தான் இந்த வயதில் பலவற்றில் கலந்து கொள்வது அவசியமாகும். ஒருவரிடம் ஈர்ப்பு கொள்வது “ஏன்” என்று புரிந்தாலே அதை சுதாரித்துக் கொள்ளமுடியும்.
மூவரிடம் மேலும் சொன்னேன், நீங்கள் மூவரும் சூர்யா, விஜய், ரமேஷ் கண்ணா “ப்ஃரெண்ட்ஸ்” என்றால், அவர்களின் நல்ல குணங்கள்தானே உங்களை ஈர்த்தது. அப்போது, ஏன் இப்படி என்னிடம் வந்தார்கள் என்பதை யோசிக்கச் சொன்னேன்.
ராணியின் அப்பா தன் பட்டறையை அவள் ஒரு தொழிற்சாலை ஆக்கவேண்டும் என்ற கனவை அவளிடம் தெரிவித்தார். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க ஆசை, அத்துடன் இதை இணைத்துக்கொண்டாள்.
12வதின் பரீட்சை நெருங்கிக்கொண்டு இருந்ததால், ஜனவரி முதல் வாரத்துடன் ஸெஷன்கள் நிறைவு பெற்றது. ராணியின் முன்னேற்றத்தை அவள் அப்பா வந்து சொல்லிவிட்டுப் போவார்.
சூர்யா-சுரேஷ் ஒரு ஆறு மாதத்திற்குப் பிறகு வந்து தான் மருத்துவம் எடுத்ததாகவும், சென்னை அரசாங்க கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும் சொன்னான். ராணி நன்றாகப் படிப்பதை என்னிடம் சொல்வதற்காகவே நண்பர்களிடம் கேட்டறிந்ததாகச் சொன்னான். சிரித்த முகத்துடன் “Thanks” சொல்லிச் சென்றான் சூர்யா-சுரேஷ்.
**********************************************************************
டாக்டர் அறிவொளி அவர்களுக்கு அஞ்சலி !!
திருச்சியைச் சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் தனது 80வது வயதில் இம்மாதம் காலமானார்.
டென்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற கோபேன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர். அறிவொளி.
உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை எடுத்துச்சென்ற இவர்,புற்றுநோய்க்குத் தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தனது வாழ்நாளில் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
நன்றி : வானவில் தமிழ்ச் சங்கம்
அவருடைய வித்தியாசமான வாதத்தை இந்தக் காணொளியில் காணலாம் !
வழக்காடுமன்றம்
பட்டிமன்றங்கள் – அதுவும் சாலமன் பாப்பையா , ராஜா, பாரதி பாஸ்கர் இவர்களால் மிகவும் ( அளவுக்கு அதிகமாகவே) பிரபலப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு!
பண்டிகைகள் வந்தால் தொலைக்காட்சியைத் திருப்பினால் பட்டிமன்றத்திலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.
இருந்தாலும் 60. 70 களில் இருந்த வழக்காடுமன்றம் இப்போது மறைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
வழக்காடுமன்றம் என்பது ஒரு இலக்கியப்பாத்திரம் ஒரு இலக்கியத்தில் செய்த சில செயல்கள் தவறானவை என்பதால் அவர் குற்றவாளி என்று ஒருவர் வாதிடுவார் . அவர்தான் பப்ளிக் பிராஸிக்யூட்டர் (பொது வழக்கறிஞர்)
அவர் இன்னென்ன காரணங்களால்தான் அவற்றைச் செய்தார் அவற்றில் எந்தவிதத் தவறும் இல்லை என்று கூறி அவர் குற்றவாளி இல்லை என்று மற்றவர் வாதிடுவார். அவர் டிஃபென்ஸ் வக்கீல் (பாதுகாப்பு வழக்கறிஞர்)
இருவர் வாதங்களையும் அவர்கள் அளித்த ஆதாரங்களையும் கணக்கில் கொண்டு நடுவர் ஒருவர் தீர்ப்பு அளிப்பார்.
உதாரணமாக , மகாபாரதத்தில் “கர்ணன் ஒரு குற்றவாளி” என்பது ஒரு வழக்காடுமன்றத்தில் வந்த வழக்கு.
கர்ணன் குற்றவாளி என்று வழக்குத் தொடுப்பவர் முனைவர் ராஜகோபாலன்
கர்ணன் குற்றவாளி அல்லன் என்று மறுப்பவர் முனைவர் அறிவொளி அவர்கள்
இருவர் வாதங்களையும் கேட்டுத் தீர்ப்பு வழங்குபவர் சோ. சத்தியசீலன் அவர்கள்
தமிழ் இலக்கிய நேயர்களுக்கு இது ஒரு இரண்டுமணிநேர விருந்து.
கேட்க விரும்புவர்களுக்காக அந்தக் காணொளி கீழே தரப்பட்டுள்ளது. (நன்றி: வானவில் தமிழ்ச் சங்கம்)
கேட்டு மகிழுங்கள்!
காலைப் போது ! – தில்லை வேந்தன்

குறும்படம் – ஈவ் டீசிங்
இவள் உங்கள் தங்கையாக இருந்தால் இப்படிச் செய்வீர்களா?
குவிகம் அளவளாவல் ஏப்ரல் – மே 2018
அளவளாவளல் என்ற ஒரு சிறப்பான நிகழ்வு குவிகம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1 , 2018
‘ஆவணப்படங்கள் பற்றி
பரிசு பெற்ற ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 8 , 2018
‘நீலகண்டப் பறவையைத் தேடி’ என்ற புத்தகத்தைப்பற்றிக்
கவிஞர் பானுமதி
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 15 , 2018
மாபெரும் எழுத்தாளர் , கவிதை மற்றும் கதாசிரியர், ஓவியர்
கவிஞர் வைதீஸ்வரன்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
சனிக்கிழமை ஏப்ரல் 21, 2018
“நாடக வெளி” இதழாசிரியரும் நிகழ்கலை ஆர்வலரும்
இலக்கிய விமரிசகரும் ஆகிய வெளி ரங்கராஜன்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 29 , 2018
மொழிபெயர்ப்பாளர் , இணைய இதழ் ஆசிரியர்
திரு ராஜேஷ் சுப்ரமணியம்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை மே 13 , 2018
நாடக தயாரிப்பாளர் ,இயக்குனர்
திருமதி தாரிணி கோமல்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
பார்க்கவேண்டிய படம் – நடிகையர் திலகம்
மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள படம்
சாவித்திரியின் வாழ்க்கையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் படம்
தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வந்துள்ள படம்
தமிழில் நடிகையர் திலகம் என்று வரும் படம்
பார்க்கத் தவறாதீர்கள்!
பார்த்தபின் உங்கள் அபிப்ராயங்களைக் குவிகத்திற்கு எழுதுங்கள்!
இதோ அதன் டீஸர்
சிறந்த தமிழ் திரைப்படங்கள் – என் செல்வராஜ்
1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
ஆரம்பத்தில் 50 பாடல்கள்வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன.
வருடத்துக்கு 200 படங்கள்வரை இப்போது வெளிவருகின்றன.
அவற்றில் வெற்றிபெறும் படங்கள் மிகச் சிலவே.
1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன.
பல திரைப்பட நூல்களும் சிறந்த திரைப்படங்களைப்பற்றி எழுதியுள்ளன.
எனக்குப் பிடித்த படங்கள், டாப் 10 படங்கள், சிறந்த படங்கள், அவசியம் பார்க்கவேண்டிய படங்கள் என்கிற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.
பட்டியல்களில் இருந்து அதிக பட்டியல்களில் இடம்பெற்ற படங்களின் பட்டியலைச் சிறந்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலாகத் திரைப்பட ஆர்வலர்களுக்காக அளிக்கிறேன்..
வெள்ளிவிழா கண்ட படங்கள், சிறந்த திரைப்பட விருதுபெற்ற படங்களின் பட்டியல், முக நூலில் வந்த பட்டியல்கள் ஆகியவையும் இந்த தேர்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1 | 16வயதினிலே | கமல் |
2 | அக்னிநட்சத்திரம் | பிரபு |
3 | அங்காடித்தெரு | அஞ்சலி |
4 | அஞ்சலி | மணிரத்னம் |
5 | அஞ்சாதே | மிஷ்கின் |
6 | அந்த 7 நாட்கள் | பாக்யராஜ் |
7 | அந்தநாள் | சிவாஜி |
8 | அந்நியன் | விக்ரம் |
9 | அபூர்வசகோதரர்கள்(கமல்) | கமல் |
10 | அபூர்வராகங்கள் | கமல் |
11 | அமைதிப்படை | சத்யராஜ் |
12 | அலிபாபாவும்திருடர்களும் | எம்ஜிஆர் |
13 | அலைகள்ஓய்வதில்லை | கார்த்திக் |
14 | அலைபாயுதே | மாதவன் |
15 | அவர்கள் | கமல் |
16 | அவள்அப்படித்தான் | கமல் |
17 | அவள்ஒருதொடர்கதை | பாலசந்தர் |
18 | அவ்வைசண்முகி | கமல் |
19 | அழகி | பார்த்திபன் |
20 | அழியாதகோலங்கள் | பாலுமகேந்த்ரா |
21 | அன்பேசிவம் | கமல் |
22 | அன்பேவா | எம்ஜிஆர் |
23 | அன்னக்கிளி | சிவகுமார் |
24 | ஆடுகளம் | தனுஷ் |
25 | ஆட்டோகிராப் | சேரன் |
26 | ஆண்பாவம் | பாண்டியராஜ் |
27 | ஆயிரத்தில்ஒருவன் | எம்ஜிஆர் |
28 | ஆரண்யகாண்டம் | குமாரராஜா |
29 | ஆறிலிருந்துஅறுபதுவரை | ரஜினி |
30 | இதயம் | முரளி |
31 | இந்தியன் | கமல் |
32 | இம்சைஅரசன் 23ஆம்புலிகேசி | வடிவேலு |
33 | இருவர் | மணிரத்னம் |
34 | உதிரிப்பூக்கள் | மகேந்த்ரன் |
35 | உள்ளத்தைஅள்ளித்தா | கார்த்திக் |
36 | உன்னால்முடியும்தம்பி | கமல் |
37 | ஊமைவிழிகள் | விஜயகாந்த் |
38 | எங்கவீட்டுப்பிள்ளை | எம்ஜிஆர் |
39 | எதிர்நீச்சல் | நாகேஷ் |
40 | ஒருதலைராகம் | ராஜேந்தர் |
41 | கப்பலோட்டியதமிழன் | சிவாஜி |
42 | கரகாட்டக்காரன் | ராமராஜன் |
43 | கருத்தம்மா | பாரதிராஜா |
44 | கர்ணன் | சிவாஜி |
45 | கல்யாணபரிசு | ஸ்ரீதர் |
46 | கற்றதுதமிழ் | ராம் |
47 | கன்னத்தில்முத்தமிட்டால் | மணிரத்னம் |
48 | கஜினி | சூர்யா |
49 | காக்ககாக்க | சூர்யா |
50 | காக்காமுட்டை | வெற்றிமாறன் |
51 | காதலிக்கநேரமில்லை | ஸ்ரீதர் |
52 | காதலுக்குமரியாதை | விஜய் |
53 | காதல் | பரத் |
54 | காதல்கொண்டேன் | தனுஷ் |
55 | காதல்கோட்டை | அஜீத் |
56 | கிழக்குச்சீமையிலே | பாரதிராஜா |
57 | குணா | கமல் |
58 | குருதிப்புனல் | கமல் |
59 | கேளடிகண்மணி | எஸ்பிபி |
60 | கோ | ஜீவா |
61 | சந்தியாராகம் | பாலு மகேந்த்ரா |
62 | சந்திரமுகி | ரஜினி |
63 | சந்திரலேகா | எஸ் எஸ் வாசன் |
64 | சபாபதி | டி ஆர் ராமசந்திரன் ் |
65 | சம்சாரம்அதுமின்சாரம் | விசு |
66 | சர்வர்சுந்தரம் | நாகேஷ் |
67 | சலங்கைஒலி | கமல் |
68 | சிகப்புரோஜாக்கள் | கமல் |
69 | சிந்தாமணி | பாகவதர் |
70 | சிந்துபைரவி | பாலசந்தர் |
71 | சிலநேரங்களில்சிலமனிதர்கள் | ஜெயகாந்தன் |
72 | சின்னதம்பி | பிரபு |
73 | சுப்ரமண்யபுரம் | சசிகுமார் |
74 | சூர்யவம்சம் | சரத்குமார் |
75 | சேது | விக்ரம் |
76 | தண்ணீர்தண்ணீர் | கோமல் |
77 | தவமாய்தவமிருந்து | சேரன் |
78 | தளபதி | மணிரத்னம் |
79 | திருவிளையாடல் | சிவாஜி |
80 | தில்லானாமோகனாம்பாள் | சிவாஜி |
81 | தில்லுமுல்லு(ரஜினி) | ரஜினி |
82 | துள்ளாதமனமும்துள்ளும் | விஜய் |
83 | தெய்வத்திருமகள் | விக்ரம் |
84 | தேவதாஸ் | சாவித்ரி |
85 | தேவர்மகன் | கமல் |
86 | நாடோடிமன்னன் | எம்ஜிஆர் |
87 | நாட்டாமை | சரத்குமார் |
88 | நாயகன் | மணிரத்னம் |
89 | நெஞ்சத்தைக்கிள்ளாதே | மகேந்த்ரன் |
90 | நெஞ்சம்மறப்பதில்லை | ஸ்ரீதர் |
91 | நெஞ்சில்ஓர்ஆலயம் | ஸ்ரீதர் |
92 | பசங்க | பாண்டிராஜ் |
93 | பசி | ஷோபா |
94 | பஞ்சதந்திரம் | கிரேஸி மோகன் |
95 | படையப்பா | ரஜினி |
96 | பம்பாய் | மணிரத்னம் |
97 | பயணங்கள்முடிவதில்லை | மோகன் |
98 | பராசக்தி | சிவாஜி |
99 | பருத்திவீரன் | கார்த்திக் |
100 | பாகப்பிரிவினை | சிவாஜி |
101 | பாசமலர் | சிவாஜி |
102 | பாட்ஷா | ரஜினி |
103 | பாமாவிஜயம் | பாலசந்தர் |
104 | பாலைவனச்சோலை | சத்யராஜ் |
105 | பிதாமகன் | பாலா |
106 | புதியபறவை | சிவாஜி |
107 | புதியபாதை | பார்த்திபன் |
108 | புதுப்பேட்டை | தனுஷ் |
109 | புதுவசந்தம் | விக்ரமன் |
110 | புன்னகைமன்னன் | கமல் |
111 | பூவேஉனக்காக | விஜய் |
112 | பூவேபூச்சூடவா | நதியா |
113 | மகாநதி | கமல் |
114 | மண்வாசனை | பாரதிராஜா |
115 | மலைக்கள்ளன் | எம்ஜிஆர் |
116 | மனோகரா | கருணாநிதி |
117 | முதல்மரியாதை | பாரதிராஜா |
118 | முதல்வன் | ஷங்கர் |
119 | முந்தானைமுடிச்சு | பாக்யாராஜ் |
120 | முள்ளும்மலரும் | மகேந்த்ரன் |
121 | மூன்றாம்பிறை | கமல் |
122 | மைக்கேல்மதனகாமராஜன் | கமல் |
123 | மைனா | பிரபு சாலமன் |
124 | மொழி | ராதாமோகன் |
125 | மௌனகீதங்கள் | பாக்யாராஜ் |
126 | மௌனராகம் | மணிரத்னம் |
127 | ரத்தக்கண்ணீர் | எம் ஆர் ராதா |
128 | ரமணா | முருகதாஸ் |
129 | ரோசாப்பூரவிக்கைக்காரி | சிவகுமார் |
130 | ரோஜா | மணிரத்னம் |
131 | வசந்தமாளிகை | சிவாஜி |
132 | வழக்குஎண் 18 | வசந்தபாலன் |
133 | வறுமையின்நிறம்சிவப்பு | பாலசந்தர் |
134 | வாரணம்ஆயிரம் | சூரியா |
135 | வாலி | அஜித் |
136 | வாழ்வேமாயம் | கமல் |
137 | வானமேஎல்லை | பாலசந்தர் |
138 | விண்ணைத்தாண்டிவருவாயா | கௌதம் மேனன் |
139 | விருமாண்டி | கமல் |
140 | வீடு | பாலுமகேந்த்ரா |
141 | வீரபாண்டியகட்டபொம்மன் | சிவாஜி |
142 | வெயில் | வசந்தபாலன் |
143 | வேட்டையாடுவிளையாடு | கௌதம் மேனன் |
144 | வேதம்புதிது | பாரதிராஜா |
145 | ஜானி | மகேந்த்ரன் |
146 | ஜிரெயின்போகாலணி | செல்வராகவன் |
147 | ஜெண்டில்மேன் | ஷங்கர் |
148 | ஹரிதாஸ் | பாகவதர் |
149 | ஹேராம் | கமல் |
இவற்றுள் நான் 130 படங்கள் பார்த்துள்ளேன். நீங்கள்?
100க்கும் கீழே உங்கள் எண்ணிக்கையாயிருந்தால் நீங்கள் நிறைய மிஸ் பண்ணிவிட்டீர்கள்!
இன்னும் நிறைய நல்ல படங்கள் இருக்கே. ( உதாரணமாக கில்லி, விக்ரம் வேதா, தனி ஒருவன்) அதெல்லாம் இதில காணோமே என்று தேடுபவர்கள் வேற லிஸ்ட் போடலாம். !!
அணிகலன்கள் – தீபா இளங்கோ

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலி
கலைமாமணி , சிந்தனைச் செம்மல், எழுத்துச் சித்தர் என்றெல்லாம் பட்டம் , மற்றும் பல விருதுகள் வாங்கிய – பாலகுமாரன் என்கிற, தமிழ் எழுத்துலகத்தின் மாபெரும் தூண் இன்று (15 மே 2018) விழுந்துவிட்டது.
விருதுகள் இவரைத் தேடி வந்தன.
திரைப்படங்கள் இவருக்குப் புகழை அள்ளித்தந்தன ( ரஜினிகாந்த் பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி’ என்ற பாட்ஷா வசனம் இவர் பேனாவில் உதித்ததுதான்)
இவரது பல நாவல்கள் சிறுகதைகள் ஆன்மீகக் கட்டுரைகள் மக்கள் மனதில் வெகுகாலம் நிலைத்து நிற்கும்.
அவரின் முழுமையான வெற்றிகளைத் தெரிந்து கொள்ள http://www.writerbalakumaran.com
என்ற இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள்.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் குவிகம் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து
“மேற்கோள் காட்டிப் பேசுவது
அழகே அல்ல
எதையும் சுயமாகச் சிந்திக்க வேண்டும்
மேற்கோள் காட்டிப் பேசுபவன் எல்லாம்
முட்டாள் என்றான்
சீன அறிஞன் சியாங்கு புயாங்கு”
(எப்போதோ படித்த ஒரு கவிதை)
அரட்டைச் சங்க நண்பர்களுடன் செலவிட்ட நேரங்கள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு என்று சொல்லமுடியாது. சில நல்ல விஷயங்கள் காதில் விழும். சில உபயோககரமான தகவல்களும் கிடைக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக எனக்கு ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தைப் பார்க்கும் முறையில் உள்ள வித்தியாசங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
எப்போதாவது இரண்டுபேர் மத்தியில் ஒரு கருத்து முரண்பாடு இருக்கும்போது, எல்லோருடைய உடனடித் தேர்வும் மகேந்திரன்தான். வரது சார், ஏதாவது ஜோக்கடித்துப் பேச்சைத் திருப்பிவிடுவாரே தவிர, ஒரு தீர்வோ – ஏன் குறைந்தபட்சம் ஒரு நிலைப்பாடோகூட – கிடைக்காது. ஏகாம்பரம், ‘இப்படித்தான் ஆறு வருஷம் முன்னால், என் மாமா வீட்டில்…’ என்று எதாவது ஒரு நிகழ்ச்சியைச் (சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ) சொல்ல ஆரம்பித்துவிடுவார். சந்துரு சமயத்தில் நிதானமாகவும் சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டும் எதாவது ஒரு பக்கம் பேசுவார் என்றாலும் அது லாஜிகல் ஆக இருக்கும் என்று சொல்லமுடியாது. கேள்விக்குப் பதிலளிக்கவே மிகவும் தயக்கம் காட்டும் நான், கருத்துச் சொல்வதோ விவாதம் புரிவதோ நடக்காத காரியம்.
நடுவில் கொஞ்சநாட்கள் சங்கத்திற்கு வந்துபோய்கொண்டிருந்தார் ஒருவர். பெயர் ராஜசேகரன் என்று நினைக்கிறேன். அவர் இந்தக் கோஷ்டியில் எப்படி வந்தார் என்றும் தெரியவில்லை. அங்கத்தினர் யாருக்கும் உறவினரோ தெரிந்தவரோகூடக் கிடையாது. ஏகாம்பரம் ஒருநாள் ஏதோ ‘கொறிக்க’ கொண்டுவந்திருந்தார். நாங்கள் அமரும் இடத்தின் அருகில் எதற்காகவோ வந்து அமர்ந்திருந்த அவரையும் கூப்பிட்டுக் கொடுத்தார். அவரும் எங்களுடன் அமர்ந்து அதைச் சாப்பிட்டார். மறுநாளே அவரும் ஏதோ கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்துக் கணக்கைச் சரி செய்துகொண்டார். அதன் பிறகு அவ்வப்போது எங்களுடன் அமர்ந்து கொள்வார்.
‘என்ன சார் நான் சொல்வது?’ என்று யாரவது அவரை விவாதத்திற்குள் இழுத்தால் “ரொம்பச் சரி… ஆமாம் என்ன சொன்னீங்க?” என்று கேட்டு எல்லோரையும் திகைக்க வைத்து விடுவார். எப்படி திடீரென்று சேர்ந்து கொண்டாரோ, அது போலவே காணாமலும் போனார். ஆனால். அவர் சொன்ன ஒரு விஷயம் யோசிக்க வைத்தது. ‘நீங்களெல்லாம் ரொம்பநாள் நண்பர்கள். இன்னிக்கு அடித்துக்கொள்வீர்கள்- நாளைக்குச் சேர்ந்து கொள்வீர்கள். நான் எதாவது சொல்ல …. சரி விடுங்கள்’ இதுவும் என் சித்தாந்தத்திற்கு ஒட்டி வருகிறது.
பார்த்தீர்களா? நான் ஏதோ பரம ஞானிபோல சித்தாந்தம் , கோட்பாடு, உளவியல் என்று அடித்து விடுகிறேனே? இதுபோல் எதையும் (உலக வழக்கம், கூட்ட மனவியல், சமூகப் பண்பாடு) யாரையும் (அடங்காப்பிடாரி, பரோபகாரி, அதிகப் பிரசங்கி, எந்த வம்புக்கும் போகாதவன்) வகைப்படுத்தித்தான் பார்க்கவேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? மேலாண்மை (MANAGEMENT) மேற்படிப்புகளில் ‘EFFECT’ , SYNDROME’ ‘ISAM’ என்றெல்லாம் பெயர்வைத்துத்தான் (ஆங்கிலத்தில் ஜார்கன் என்று சொல்வார்களாம்) பாடமும் நடத்துவார்கள். நல்ல மதிப்பெண் வேண்டுமென்றால் தேர்வில் அவற்றை எழுதத்தான் வேண்டும். அதுபோல் ராஜசேகரன் நினைவு வந்ததும் அவர்போலவே யோசிக்கிறேனோ என்னவோ? அவரது இன்னுமொரு மேற்கோள்… “வாழ்க்கையில் ஸ்ட்ராட்டஜி தேவைதான் . ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது.’
மேடைப் பேச்சுகளிலும் இதுபோல மேற்கோள், ஜார்கன், கவிதை, சிறு நிகழ்வுகள், குட்டிக் கதைகள் என்று நிரவி விட்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும். கூட்டத்திற்குச் சற்று தாமதமாக வந்தார் ஒரு பேச்சாளர். அவர் ஆர்ப்பாட்டமாகச் சொன்ன இரண்டு குட்டிக்கதைகள், ஒரு ஜோக், ஒரு நிகழ்ச்சி எல்லாமே அவருக்கு முன்பு பேசியவர்கள் சொல்லிவிட்டர்கள். இவர் பேச்சை மயான அமைதியுடன் எல்லோரும் கேட்க, இவர் பேச்சை சீக்கிரம் முடித்துக்கொண்டார். ‘ரசனை கெட்ட கும்பல்’ என்று முணுமுணுத்தது மேடையிலிருந்த சிலர் காதில் விழுந்தது.
ஏதோ சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்த வெட்டிச்சங்க வாழ்க்கை திடீரென்று முடிவுக்கு வந்தது – எனக்கு வேலை கிடைத்த காரணத்தால். என் அண்ணன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாய் அது. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம்தான் என்று சொல்லவேண்டும். சிவகுமார் என்னும் ஒரு நல்ல மனிதர் ஒரு ஸ்டேஷனரி கடை வைத்திருந்தார். அவர் கடையில் பேப்பர் வாங்கிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக என் அப்பா அங்கே வந்தார். இருவரும் பொருள் வாங்கக் காத்துக்கொண்டு இருக்கும்போது, சிவகுமார் அப்பாவைப் பார்த்து, “நீங்க நேஷனல் ஸ்கூல்லதானே படிச்சீங்க?” என்று கேட்டார். “அட.. சிவகுமாரா?” என்று என் அப்பா கிட்டத்தட்ட கூச்சல் போட்டார்.
அந்தக் காலத்தில் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். பள்ளியை விட்டபிறகு சந்திக்கவும் இல்லை. சிவகுமாரின் அப்பாவிற்கு மாற்றல் ஆகிவிட்ட காரணத்தினால், படிப்பு முடிந்ததுமே வேறு ஊருக்குப் போய்விட்டாராம். பள்ளியிலிருந்து எஸ்.எஸ்.எல்.ஸி புத்தகம் வாங்கிய அன்றுதான் இருவரும் கடைசியாக சந்தித்து இருக்கிறார்கள்.
கடையைப் பையனிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, எங்களுடன் பக்கத்துக்கு ஹோட்டலில் காப்பி சாப்பிட வந்தார். இருவரும் பழைய நினைவுகளையும் தற்போதைய நிலைமைகளையும் பரிமாறிக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
அன்று அப்பா தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவர் வரும் முன்பே நான் தூங்கிவிட்டிருந்தேன். காலையில் என்னைக் கூப்பிட்டுக் கடிதம் ஒன்றைக் கொடுத்தார். சிவகுமார் அவரது உறவினர் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தி எழுதிய கடிதம் அது. அந்த உறவினரைப் பார்க்க நானும் அப்பாவும் மாவட்டத் தலைநகர் போனோம்.
அந்த மனிதர் மிகவும் செல்வாக்குள்ள பரோபகாரி. என்னைப்பற்றி எல்லாம் விசாரித்துக்கொண்டு ஒரு விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து நிரப்பித் தரச்சொன்னார். பின்னாட்களில் நான் ‘வேலை’ என்று பார்த்த நிறுவனத்தின் பெயரையே அன்றுதான் நான் முதலில் பார்த்தேன். ஊருக்குத் திரும்பி வந்துவிட்டோம்.
அது விஷயம் மறந்தும் போய்விட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து எனக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்ததும், என்னை ஒரு கேள்வியும் கேட்காமல் வேலையில் சேரச் சொன்னதும் ஒரு கனவுபோல்தான் இருந்தது.
வரது சார், மகேந்திரன் சார், ஏகாம்பரம், சீனா எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சந்துருவும் என்னைப் பாராட்டினார். அவர் இது போன்ற ‘சிறிய’ வேலைகளுக்குப் போவதாக இல்லையே! சற்றுத் தொலைவிலிருந்த இன்னொரு ஊரில்தான் வேலையில் சேரவேண்டும். சங்க வாழ்க்கை முடிவடைந்தது.
என்னை உளமாரப் பாராட்டியவன் எதிர் வீட்டு வேம்புதான். அவன் கதை ஒரு சோகக் கதை. நான் வேலை பார்த்த லட்சணத்தைச் சொல்லும் முன் வேம்புவின் கதையைச் சொல்லவேண்டும்
… இன்னும்
தலையங்கம்
மூன்று செய்திகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒன்று காவிரி நீர் பங்கீடு ..
இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
அணைகளை நேசிய நீரோட்டத்தில் கலக்க எந்த மாநில அரசும் தயாராயில்லை.
அப்படிக் கொடுத்தாலும் மத்தியில் இருக்கும் எந்த அரசும் ஓட்டு வங்கியைக் கணக்கில் கொள்ளாமல் நியாயமாகச் செயலாற்றுமா என்பதும் புரியவில்லை.
இரு தீர்ப்பு வருவதற்குப் பத்துப் பதினைந்து ஆண்டுகள், அதை செயலாற்ற இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் என்று போனால் நமது இந்தியா வல்லரசாகப் போகும் கனவு இன்னும் பத்துப் பதினைந்து நூற்றாண்டுகளுக்குத் தள்ளிப் போய்விடும்!
சரியென்று நீதிமன்றமோ மத்திய அரசோ மாநில அரசோ தீர்மானிப்பதை உடனே செயலாற்றவேண்டும்!
தாமதமான நீதி, தரமான நீதி – அல்ல தரமறுத்த நீதியைவிட மோசமானது .
செயல்.. செயல்.. செயல்.. இதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்கவேண்டும்!
அடுத்தது நீட் தேர்வு!
இதில் ஏன் இத்தனை குளறுடி!
நீட் வேண்டாம் என்று சென்ற ஆண்டு போராட்டம் !
இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் ஏன் தமிழகத்தில் அதிக அளவில் வைக்கவில்லை என்ற போராட்டம்!
எதையுமே எதிர்ப்பது என்ற போக்கை அரசியல் கட்சிகள் விடவேண்டும்!
அரசியலை அனைத்துக் கட்சிகளும் ஒரு நாகரிகமாகப் போற்றவேண்டும்!
இது ஒரு இந்தியனின் கனவு. நிறைவேறுமா?
மூன்றாவது கர்நாடகா தேர்தல்.
தொங்கு சபை என்று பல அரசியல் ஆரூடங்கள் சொல்லின.
அது சரியாகவும் அமைந்தது.
இனி சாணக்கிய வேலைகள் தொடரும்.
யானைப் பேரங்கள் நிகழும் (குதிரையெல்லாம் போய் விட்டது)
ஏன் அரசு அமைப்பதற்குப் புதிய முறையை சிந்திக்கக் கூடாது?
ஆட்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதைவிடக் கட்சியைத் தேர்ந்தெடுத்தால் என்ன? எந்தக் கட்சிக்கு ஒரு மாநிலத்தில் அதிக ஓட்டு எண்ணிக்கை கிடைக்கிறதோ அதையே ஐந்து ஆண்டுகள் ஆளச் சொல்வோம்.
அதே போல் நாட்டின் பிரதமரையும் தேர்ந்தெடுப்போம்
(கிட்டத்தட்ட அமெரிக்காமாதிரி இருக்கிறதே என்று தோன்றுகிறதா? )
அது சரியானால் அதைச் செய்வதில் என்ன தவறு?
பூனைக்கு மணிகட்ட மணி பார்க்க வேண்டாம்.
யோசிக்க ஆரம்பித்தாலே அது முதல் மணி!
(அம்மையார் பாணியில்) செய்வீங்களா? அல்ல – செய்வோமா?
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
படம் நன்றி: http://consenttobenothing.blogspot.in
நேர்மையின் மறுபெயர் ஏ என் சிவராமன்!
இந்திய பத்திரிக்கைத் துறையின் பிதாமகர் என்றே சொல்லலாம் – தேசப்பற்று, நாணயம், நேர்மை, மனத் துணிவு, எழுதும் கருத்துக்களில் தெளிவு இப்படிப் பல குணாதிசயங்களின் மொத்த உருவம் திரு ஏ என் எஸ் அவர்கள்.
சென்ற வாரம் டேக் மையத்தில் சதர்ன் ஹெரிடேஜ் சார்பில், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு ஏ என் சிவராமன் அவர்களைப்பற்றி (கீழாம்பூரின் அப்பா வழி மாமா தாத்தா திரு ஏ என் எஸ்) சுமார் தொண்ணூறு நிமிடங்கள் ஓர் அருமையான உரையாற்றினார். – 1904 ல் அவர் பிறந்தது முதல், தனது தொண்ணூற்று ஏழாவது பிறந்த நாளில் (பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றே – மார்ச் 1) இறந்தது வரையிலான சில நிகழ்வுகளைக் கையில் குறிப்பேதுமின்றி, சுவைபடச் சொன்னார் கீழாம்பூர் – அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்!
1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கொச்சியில் பிறந்தார் ஆம்பூர் நாணுஐயர் சிவராமன் ! அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும்! தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார்! படிப்பும் ஒரு முடிவுக்கு வந்தது!
டிசி வாங்கும்போது, அன்றைய பிரின்சிபால் திரு கே சி போஸ், எந்த நேரத்திலும், படிப்பதை விட்டுவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார் – எப்படிப்பட்ட ஆசிரியர்! சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர்! இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு பண்பு இது!
அன்று ஏ என் எஸ் க்குப் பிடித்த தலைவர் திலகர். அவர் மறைவுக்கு, தாமிரபரணி ஆற்றில் திதி கொடுத்தவர் ஏ என் எஸ்! அதனால் பிரிட்டிஷ் போலீசால் கவனிக்கப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்ய, அவர் இருக்கும் கிராமத்துக்கு வருகின்றனர் போலீசார் – இடம் கண்டுபிடித்து வந்து கைதுசெய்து, போலீஸ் வானில் ஏற்றிச்செல்ல, வீட்டிலிருந்து, அக்கிரகாரத்தின் முனைவரை அவரது தாய் கூவியபடி வேனுக்குப் பின்னால் ஓடி வருகிறார். அவருக்குத்தான் தன் பிள்ளையின் மீதும், அதைவிடத் தாய்நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் – கண்ணிலிருந்து வேன் மறையும்வரையில் அவர் ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று உரக்கக் கூவியவாறே ஓடிவருகிறார்!
கல்லிடைக்குறிச்சியில் சில காலம் சுதேசி பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார் ஏ என் எஸ் – அப்போது கிடைத்த நேரத்தில், சரித்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னாளில் தினமணியில் அவரது நேர்மையான தலையங்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது இந்தப் படிப்பு!!
அப்போது மிகச் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்த திரு டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் சென்னையில் நடத்திக்கொண்டிருந்த ’காந்தி’ இதழில் ஏ என் எஸ் சேர்ந்தார். அந்த சமயத்தில் இராஜாஜியுடன் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இருபது மாதங்கள் சிறைத் தண்டனை அடைந்தார். உடன் சிறையில் இருந்தவர் திரு காமராஜ்.
1934 ல் தொடங்கப்பட்ட தினமணிக்கு டி எஸ் சொக்கலிங்கம் ஆசிரியராக, ஏ என் எஸ் அவர்கள் உதவி ஆசிரியர் ஆனார். 1944 ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டுவிட, ஏ என் எஸ் அவர்கள் தினமணி ஆசிரியரானார். 1987 வரை தினமணியின் ஆசிரியராக அவர் ஆற்றிய பணி, பத்திரிக்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!
டி எஸ் சி அவர்களும், ஏ என் எஸ் அவர்களும் பத்திரிக்கை உலகின் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர்! பரஸ்பரம் அவர்கள் புதிய கதராடைகளை பரிமாறிக்கொள்ளாமல், ஒரு தீபாவளியும் கடந்ததில்லை!
காஞ்சி மகாப் பெரியவர், ஒரு முறை ஏ என் எஸ் அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் – ஒரு கோயிலுக்கான ‘ஷெட்’.- இதை ஏன் கொடுத்தார் என்பது இருவருக்கும் புரியாத ஒன்று! திரும்ப வந்த ஏ என் எஸ், திரு கோயங்கா அவர்களிடம், இதைப்பற்றிக் கூற, அருகிலிருந்து கேட்டவர், திரு பிர்லா அவர்கள். அரை மணி நேரத்தில் அந்த ஷெட் கட்டுவதற்கான முழுத் தொகையையும் பிர்லா அவர்கள் வழங்கி விடுகிறார்கள். எல்லாமே எதிர்பாராமல் நடக்கின்றன – பிர்லா அவர்களின் காஞ்சித் தொடர்பு, ஏ என் எஸ் அவர்களாலேயே முதலில் ஏற்படுகிறது!
எமர்ஜென்சியை வெளிப்படையாக எதிர்த்த இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்று தினமணி. சென்சார் கடுமையாக இருந்த காலம் – தலையங்கப் பகுதியை ஒன்றும் எழுதாமல் வெறுமையாக விட்டுவிடுவார் – அல்லது உலக ஜனநாயக நாடுகளைக் கேலி செய்வதுபோல் பகடியாக எமர்ஜென்சியை சாடுவார்!
திரு காமராஜ் அவர்களுக்கும், ஏ என் எஸ் க்கும் அவ்வளவு நெருக்கம். எமர்ஜென்சியில் மனமுடைந்து காமராஜ் மறைந்தபோது, வருந்தி, ஒரு வரி எழுதிவிட்டு, ‘ என் பேனா இனி எழுத மறுக்கிறது ‘ என்றெழுதி சென்சார் இருப்பதைச் சுட்டினார்! எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார்!).
திரு டி எஸ் கிருஷ்ணா, திரு காமராஜ், திரு கருணாநிதி ஆகிய மூன்று பெரும் ஆளுமைகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். எமர்ஜென்சி சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களைச் சந்திக்க, செக்யூரிடிகளுக்குத் தெரியாமல், பேப்பர் கட்டுகளுடன் வேனில் ஏ என் எஸ் பயணித்தது வியப்புக்குரியது!
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரென்ச், ஜெர்மன், உருது என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுத, படிக்கத் தெரிந்தவர். ஒரிஜினல் குரானைப் படிப்பதற்காக உருது மொழியை ஓர் ஆசிரியர் வைத்துக் கற்றுக்கொண்டார் – அப்போது அவருக்கு வயது எண்பதுக்கும் மேலே!
’கணக்கன்’, ‘அரைகுறைப் பாமரன்’ போன்ற புனைப் பெயர்களில், அறிவியல், பொருளாதாரம், அரசியல் களங்களில் ஏராளமான கட்டுரைகள், பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் ஏ என் எஸ். ‘மாகாண சுயாட்சி’ பற்றிய புத்தகம் 1928 லேயே எழுதியவர்! ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன்?’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை! ‘விண்வெளிக்கு அப்பால்’ என்ற இவரது புத்தகம், கலாம் அவர்கள் ஏவுகணைபற்றி அறிந்துகொள்ள ஓர் உந்துதலாக இருந்தது என்று கலாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்!
1987 ஆகஸ்ட் – தினமணி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் – ஆனாலும் படிப்பதையோ, எழுதுவதையோ விட்டுவிடவில்லை!
பத்திரிக்கைத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி, 1988 ல் அவருக்கு “B.D.GOENKA AWARD” கொடுக்கப்பட்டது!
2001, மார்ச் 1 திரு ஏ என் எஸ் மறைந்தார் – அவர் வாழ்க்கை முழுவதும் நேர்மை, உண்மை, உழைப்பு, படிப்பு, எழுத்து என்று நற்பண்புகளால் நிறைந்தது.
இன்றைய இளைஞர் சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் திரு ஏ என் சிவராமன் அவர்கள்.
திரு கீழாம்பூர் அவர்களுக்கு என் நன்றி – அவர் பேசியதில் மிகக் குறைந்த அளவே இங்கே எழுதியிருக்கிறேன் – ஆனாலும் மனம் நிறைவாய் இருக்கிறது!