சரித்திரம் பேசுகிறது – யாரோ

யுவான்சுவாங்-2

Image result for yuvan swang

யுவான் சுவாங்கின் பயணம் தொடர்ந்தது.

தென்மேற்கு திசையில்  தொடர்ந்து தாஷ்கெண்ட் வழியாக சாமர்கண்ட் வந்தான். பிறகு தெற்கு திசையில்  பாமீர் பீடபூமி வழியாக குண்டூஸ் நகர் வந்தான். அங்கு பல புத்த மடாலயங்களைக் கண்டு, புத்த இலக்கியங்களை வாங்கினான்.

‘படித்ததை கொடுத்தான். பிடித்ததை எடுத்தான்’.

சந்தித்த சமய இலக்கிய விற்பன்னர்களுடன் ’அளவளாவல்’ செய்தான்.

பயணம் கிழக்கு திசையில் தொடர்ந்தது.

ஷிபர் கணவாய் 3000 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதன் வழியாக ‘கபிசி’ (இன்றைய காபூல்) வந்தடைந்தான். காந்தாரம் மற்றும் அதன் தலைநகர் புருஷபுரம் – பழைய காலத்து செல்வாக்கெல்லாம் போய் இடிபாடுகளுடன் காணப்பட்டது. அங்கும் வாது செய்து புத்தமதத்தில் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டினான். புருஷபுரம் அருகே பல புத்த ஸ்தூபிகளைப் பார்த்தான். முக்கியமாக கனிஷ்கர் ஸ்தூபி. (வருடம் 1908: டி.பி. ஸ்பூனர் எண்ற தொல்பொருள் ஆய்வாளர் – யுவான் சுவாங்கின் எழுத்தைத் துணையாகக் கொண்டு – இந்த ஸ்தூபியைக் கண்டு  பிடித்தார்).

Related imageபல நாடுகள், நகரங்கள், சிகரங்கள் தாண்டி – சிந்து நதியைக் கடந்து – தக்ஷசீலம் வந்தான். அந்நகரம் பாழடைந்து கிடந்ததைக் கண்டான்.

அப்பாடா! ஒரு வழியாக இந்தியா வந்தடைந்தான்!

ஜலந்தர், மதுரா , யமுனை, கங்கை  ஆறுகள் தாண்டி…கன்னோசி வந்து சேர்ந்தான்.

கன்னோசி ஹர்ஷனின் தலைநகரம்.

தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன். பின்னர் சகோதரி ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார். யுவான் சுவாங் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினான்.  

யுவான் அங்கிருந்த நூற்றுக்கணக்கான புத்த மடாலயங்களையும், ஆயிரக்கணக்கான புத்த மதக்குருமார்களையும் கண்டு அளவளாவினான். பின்னர் அயோத்யா, கெளசாம்பி வழியாக கபிலவஸ்து அடைந்தான். அங்கு புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்தான். அந்நாளில் பாஹியான் அங்கு வந்ததை நினைவு கூர்ந்தான். கண்கள் பனித்தன.

(தன்ஹுஆங் குகை)

கி பி 637:புத்தர் பிறந்த லும்பினி நகரிலிருந்து புத்தர் மறைந்த குஷிநகரம் வந்தான். அங்கிருந்து காசி, வைசாலி, பாடலிபுத்திரம், சாரநாத், புத்த கயா சென்று கடைசியில் நாலந்தா பல்கலைக் கழகம் வந்தான். அறிவாளிகளுக்கும, அறிவைத் தேடுபவர்களுக்கும்  பல்கலைக்கழகம் ஒரு வரப்பிரசாதம்.

யுவான் சுவாங்..

தேன் குடித்த நரியானான்.

வான் பார்த்த மயிலானான்.

பேன் பார்த்த குரங்கானான்.

(எதுகை-மோனை என்ற பெயரில் நமது கற்பனை என்ன என்ன எழுதுகிறது. ஹி.. ஹி..)

இரண்டு வருடம் அங்கேயே தங்கி விட்டான்.

கற்றது: தர்க்க சாஸ்திரம், இலக்கணம், சமஸ்கிருதம். புத்த பள்ளி ‘யோகசாரம்’. அங்கும் யுவான் பாடம் கற்றான்.

நாலந்தாவில்..

நீல மலர்கள் நிறைந்திருந்தது.

சிவந்த கனகப் புஷ்பங்கள் பரந்திருந்தது.

மாமரங்களில் மாம்பழங்கள் குலுங்கிப் பழுத்திருந்தது.

அது ஒரு கல்விக் களஞ்சியம்.

ஹார்வர்ட்,ஸ்டான்போர்ட், ஐ ஐ டி- எல்லாத்தையும் போல உலகப்பிரசித்தி பெற்றிருந்த கல்விக்கழகம். அங்கு மகாபெரிய மடாலயத்தின் தலைவர் ‘சிலபத்ரா’!

மிகச் சிறந்த ஆசான்!

மருத்துவத் திலகம்!

மகாயானக் கொள்கைகளின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.

யுவான் சுவாங் அவரது மாணவனானான்!

சிலபத்ரா ஒரு சீன அறிஞர் வருவது குறித்து ஏற்கனவே கனவு கண்டிருந்தார்.

யுவான் சுவாங் சிலபத்ராவிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.

இந்நாளின் பாங்களாதேஷ் முழுதும் சுற்றிப் பயணம் செய்து பிறகு யுவான் தென் திசை திரும்பினான்..

ஆந்திரதேசம் …

அமராவதியில் புத்த விஹாரங்கள் இருந்தன ..ஆனால் அவை ஆட்கள் யாருமில்லாது காலியாகத் தூர்ந்து கிடந்தன..அங்கும் அவனுக்குக் கற்க வேண்டியது கிடைத்தது..

அங்கிருந்து பல்லவர் தலை நகரம் காஞ்சி சென்றடைந்தான்.

புத்த சமயம் அங்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்று கண்டான்.

காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தான்.

இந்நாளில் இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.அதுபோல் ..அந்நாளில் நரசிம்மவர்ம பல்லவனும் யுவான் சுவாங்கை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.

இன்றும் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களில் யுவான் சுவாங் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்துப் புறப்பட்டு நாசிக், அஜந்தா, மாளவம் என்று பல இடங்களைக் கண்டு மீண்டும் நாலந்தா வந்தான்.

காந்தம் கவர்ந்தது போலும்!

காமரூபத்தின் (இந்நாளில் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கர வர்மன் இந்து அரசன். இருப்பினும் யுவான் சுவாங்கின் புகழ் அறிந்து அவனை தனது  நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தான். யுவான் சுவாங்கும் அந்த அழைப்பை ஏற்று காமரூபத்தின் பிராகியோதிஷ்புரத்தை வந்தடைந்தான். மூன்று மாதங்கள் அங்கிருந்தான். அதே நேரம் கன்னோசியில் ஹர்ஷவர்த்தனனுக்கு – யுவான் சுவாங்கை வரவழைத்து விழா எடுக்கவேண்டும்  என்ற ஆசை விரிந்தது.

ஹர்ஷன் பாஸ்கரனுக்கு மடல் விடுத்தான்:

“நண்பா! யுவான் சுவாங்கை உடனே இங்கே அனுப்பு. நீயும் உடனே வா. ஒரு முக்கியமான சமாசாரம்”

இருவரும் நண்பர்கள்.

பாஸ்கரனுக்கு யுவான் சுவாங்கை விட மனமில்லை!

பதில் மடல் விடுத்தான்:

“யுவான் சுவாங்கை அனுப்புவதற்கில்லை… அதற்கு பதிலாக என் தலையைக் கேள். அனுப்புகிறேன்”

ஹர்ஷன் பதில் கடிதம் :

“சரி! உடனே தலையை அனுப்பவும். அதையும்  யுவான் சுவாங்கிடமே கொடுத்தனுப்பவும்”

பாஸ்கரன் விழுந்து விழுந்து சிரித்தான்- ஹர்ஷனின் ‘காமெடி’ கண்டு!

பாஸ்கரன் யுவான் சுவாங்கை தனது ரதத்திலேயே கன்னோசிக்கு அழைத்துச் சென்றான். ஹர்ஷனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! நண்பனுடன் யுவான் சுவாங் – இருவரது வருகை உவகை தந்தது!

ஹர்ஷன் கன்னோசியில் ஒரு மாபெரும் புத்த மாநாடு நடத்தவிருந்தான். சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பது அதன் முக்கிய நிகழ்வாகத் திட்டமிட்டிருந்தான். அதற்குத்தான் அவன் பாஸ்கரனையும், யுவான் சுவாங்கையும் அழைத்திருந்தான். அதற்கு அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தான். புத்த மாநாட்டில் இரு மன்னர்கள் தவிர அண்டை நாட்டு மன்னர்கள், ஏராளமான புத்த பிக்ஷுக்கள், பிராமணர்கள் மற்றும் சமணர்கள் அனைவரும் கூடியிருந்து கொண்டாடினர்.

இங்கு ஒரு சிறு கதை சினிமா திரைக்கதை போல் விரிகிறது:

ஹர்ஷன் இந்த மாநாட்டு அலங்காரம் அமைப்பு எல்லாம் வெகு பிரம்மாண்டமாக செய்திருந்தான். கோபுரம் ஒன்று  கட்டி அதில் மிகப்பெரிய புத்தர் சிலையை நிர்மாணித்திருந்தான். பாஸ்கரன், யுவான் சுவாங் அமர உயரத்தில் சிம்மாசனம் அமைத்திருந்தான். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கி விரிவுரை ஆற்றினான்.

மதம் என்ற வார்த்தை தமிழில் பொருத்தமான டபுள் மீனிங் உள்ள வார்த்தை! யானை மதம் கொள்வது போல் மனிதனும் சமயம் என்ற மதம் கொள்கிறான்! அன்பை போதிக்கும் சமயங்கள் மதமாகி மனிதர்களுக்குள் சமயப்பூசலை ஏற்படுத்தி- கொலைவெறியாகவும் மாறுகிறது! ஹர்ஷனுடைய புத்த ஆட்சியை  – பிராமணர்கள்  வெறுத்தனர். சசாங்கன் போதி மரத்தை வெட்டி வீழ்த்தி தனது மதவெறியைக் காட்டினான். வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின. அந்த மாபெரும் மாநாட்டில் புத்தர் சிலை இருந்த இடம் திடீரென நெருப்புப்பிடித்து எரியத்தொடங்கியது. அது புத்தமத ஆதிக்கத்தைத் தாளாத கூட்டத்தின் செயல். ஹர்ஷன் அந்த நெருப்பை அணைக்க நேரடியாக ஓடினான். ஹர்ஷனது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர் ஹர்ஷன் பிரயாகையில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமிக்குமிடத்தில்- கும்பமேளாவுக்கு யுவான் சுவாங்கை அழைத்துச் சிறப்பித்தான். கும்பமேளாவை முதன் முறையாக பெரிய அளவில் ஹர்ஷன் தான் கொண்டு வந்தான். ‘அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார்’ என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளான். பிரயாகையிலிருந்து கன்னோசி திரும்பிய யுவான் சுவாங் தாயகம் திரும்ப எண்ணம் கொண்டான். ஹர்ஷன் கனத்த இதயத்துடன் அவனுக்கு ஒரு மிகப்பிரம்மாண்டமான வழியனுப்பு விழா நடத்தினான்.

கி பி 645:

பதினாறு ஆண்டுகள் கழித்து, கைபர் கணவாய் வழியாக, யுவானின் சீனா திரும்பிய பயணம் சாகசம் நிறைந்திருந்தது. கள்வர்கள் யுவான் குழுவை தாக்கி பணம் பறித்தனர். அவர்களது உடமைகளைச் சுமந்து வந்த யானை நீரில் மூழ்கியது. அந்த உடமைகளைச் சுமந்து செல்ல போக்குவரவுக்காகத் திண்டாடினர். நூற்றுக்கணக்கான சமஸ்கிருத புத்த இலக்கியங்கள் மற்றும் புத்த சிலைகள்- அவை அனைத்தையும் தாயகம் கொண்டு செல்லவேண்டுமே! !

Image result for yuan chwang + harsha

சீனாவில் யுவான் சுவாங்கிற்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது. சீனாவில் இது வரை எந்த புத்தமதகுருவுக்கும் இது போல் வரவேற்பு கிடைத்ததில்லையாம். மன்னர்- அரசு ஊழியர், வியாபாரிகள் மற்றும் அனைத்து மக்களும் விடுமுறை எடுத்து கொண்டாடினர். வீதியில் எங்கும் மக்கள் வெள்ளம். யுவான் சுவாங்கிற்கு ‘கட் அவுட்’,  விழாக்கால இசை என்று தடபுடல் செய்தனர். யுவான் சுவாங்குடைய சொத்துக்களை (வேறு ஒன்றுமில்லை.. புத்தகங்கள் தான்) சுமப்பதற்கு 20 குதிரைகள் தேவைப்பட்டதாம்!  தங்கம், வெள்ளி, சந்தனமரம் – இவைகளாலான நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை அவன் கொண்டு வந்திருந்தான். இயற்கையும் – மெல்லிய தென்றலை வீசி அவனை வரவேற்றது. யுவான் சுவாங் சீனாவிலிருந்து புறப்பட்ட போது அவன் வளர்த்த பைன் மரத்தைத் தழுவி விடை பெற்றிருந்தான் . அம்மரம் அவன் மேற்கு திசை பயணம் துவங்கிய பொழுது அத்திசை நோக்கி வளைந்து இருந்தது. யுவான் சுவாங் இப்பொழுது திரும்ப வரும் போது – அம்மரம் திரும்பி அவன் திசையை நோக்கி வளைந்ததாம். (இது என்ன கப்ஸா? என்று வாசகர்களுக்கு  என்னைத் திட்டத் தோன்றுகிறதல்லவா? நான் படித்ததைதான் எழுதினேன்) சக்கரவர்த்தி தைசாங் –  தனது அனுமதி இல்லாமல் யுவான் சுவாங் நாட்டை விட்டு சென்றதை (மறக்கவில்லை பாருங்களேன்) – மன்னித்து அவனது நண்பனான். அரண்மனையில் தனது அந்தரங்க அறையில் வரவேற்று – அவனது கதைகளைக் கேட்டறிந்தான். அவனுக்கு அரசுப் பதவிகளை அளித்தான். அதை மறுதலித்த யுவான் சுவாங் மடாலயத்தில் சேர்ந்தான்.  அவன் காலமாகும் வரை அவன் காலம் புத்த இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலேயே கழிந்தது. இன்றும் சில புத்தர் ஆலயங்களில் யுவான் சுவாங்கின் படம் வரையப்பட்டுள்ளது- அதற்கு வழிபாடும் நடக்கிறதாம்..

மனிதன் என்பவன் … தெய்வமாகலாம்…!
அவன் எழுதியது சரித்திரம்.. அவன் ஒரு சரித்திரம்!

சரித்திரம் மெல்ல நகர்கிறது…

 

 

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for சூரியனின் ஓளி

விஸ்வகர்மா மும்மூர்த்திகளையும் சந்தித்து ஆசிபெற்று ஸந்த்யாவைக் காப்பாற்ற வரமும் பெற்று அதனால் உண்டான மகிழ்ச்சியுடன் சூரிய மண்டலத்துக்கு வந்தார்.

அவர் திரும்பி வருவதற்கு முன்பே சூரியதேவனுக்கு மும்மூர்த்திகளின் விருப்பம் மனச்செய்தியாக வந்துவிட்டது. தன் கிரணங்கள் சிலவற்றை இழந்தாலாவது மும்மூர்த்திகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவன் மனம் வாக்கு செயல் அனைத்திலும் நிறைந்து இருந்தது.

அதனால் அவனே விஷ்வர்கமா திரும்ப வந்ததும் அவரை வரவேற்று அவர் காலில் விழுந்து வணங்கினான்.

விவரம் அறிந்ததும் ஸந்த்யா ஈன்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்ந்தாள். தாயும் தந்தையும் தன்னுடனே இருப்பார்கள் என்ற எண்ணமும் அவளுக்குப் பூரிப்பை அளித்தது.

காலத்தை வீணடிக்காமல் விஷ்வகர்மா இம்முறை காந்த சிகிச்சைக்குப் பதில் மற்றொரு புதிய முயற்சியில் சூரியக்கிரணங்களைக் குறைக்கத் திட்டமிட்டார்.

விஷ்வகர்மா தனது சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்த புதிய அறிவாற்றலை இதில் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி காந்த சிகிச்சை அதற்குப் பின் சாந்துக்குளியல் இரண்டும் தேவையில்லை. அதனால் சூரியதேவனுக்கு மயக்கத்தைத் தரத் தேவையில்லை. ஸந்த்யா இந்தச் சிகிச்சையைச் செய்ய இயலாது. அதுவும் நன்மைக்கே! போன தடவை நடைபெற்ற தவறுகள் இம்முறை நடக்காது. சூரியதேவனும் ஸந்த்யாவும் காதலில் ஈடுபட மாட்டார்கள். ராகுவும் குறுக்கே வரமாட்டான். தனது புதிய அறிவாற்றலைச் சூரியதேவனுக்கு விளக்கினால் அவனும் இதன் சிறப்பை அறிந்து மிகவும் ஒத்துழைப்பான் என்று உறுதியாக நம்பினார்.

” சூரியதேவரே, நீங்கள் முதன்முதலில் ஸந்த்யாவைத் தங்கப் பொய்கை அருகில் பார்த்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கினீர்கள். நான் உங்களை என் மாளிகைக்கு அழைத்து உங்கள் நிச்சயதார்த்தம் விழாவை நடத்தி பின்னர் சுபயோக சுபதினத்தில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் ஸந்த்யாவின் குறைபாடும் உங்கள் குறைபாடும் திருமணத்திற்குத் தடையாயிருக்கும் என்பதைக் கண்டேன். அதனால் காந்தச் சிகிச்சை மூலம் தங்கள் ஒளிக் கிரணங்களைச் சாணை பிடிக்கலாம் என்று ஸந்த்யா மூலம் தங்களுக்குத் தெரிவித்தேன். தாங்களும் பெருந்தன்மையுடன் அந்தச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டீர்கள். ஸந்த்யா அந்த சிகித்சையைச் செய்து முடித்த பிறகு உங்கள் காதல் எல்லை மீறியது. அதன் விளைவு சந்த்யா இந்த மூன்று குழந்தைகலையும் கருத்தரித்தாள்.”

சூரியதேவனால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

” அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, விஷ்வகர்மா அவர்களே! நான் காதல் மயக்கத்திலிருந்தபோது ராகு என்னை விழுங்கிச் சக்தி பெற்றுக் கொண்டதையும் என் நெருப்பு வலையை மீறி அவன் தப்பிச் சென்றதையும் என்னால் என்றைக்கும் மன்னிக்கவே முடியாது. நானும் ஸந்த்யாவும் காந்தருவ மணம் புரிந்து கொண்டோம், இனிப் பிரிந்திருக்க முடியாது என்றதும் தங்கள் சிற்பி மூளை வித்தியாசமாகச் செயல் படத் துவங்கியது. ஸந்த்யா என் மூலம் கருத்தரித்து விட்டாள் அதுவும் மூன்று குழந்தைகளை என்று அறிந்ததும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். பெருமைப்பட்டிருக்க வேண்டும். தாத்தா ஆகப் போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நாளில் நாங்கள் இருவரும் கலந்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கிற மகாபிரும்மருத்ரன் வருவான் என்ற ஆசையில் நீங்கள் என்னென்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? என்னை மயக்கத்தில் ஆழ்த்தி என்னிடமே அனுமதி வாங்கி என் குழந்தைகளைக் கொல்லத் துணிந்தீர்கள். அதுமட்டுமல்லாமல் ஸந்த்யாவை உங்கள் இல்லத்திலேயே இருத்தி அவளுக்குப் பதிலாகப் பதுமை ஒன்றையும் அனுப்புவதாகக் கூறி என் விருப்பத்திற்கு மாறாக என்னை அனுப்பியும் வைத்தீர்கள்! என் ஜென்ம விரோதி ராகு குறுக்கிட்டதில் உண்மை வெளிவந்து ஸந்த்யா என்னிடம் ஓடி வந்து உண்மை அனைத்தையும் கூறினாள். எனக்கு அன்றைக்கு வந்த கோபத்தில் தேவசிற்பி என்று கூட பார்க்காமல் உங்களை அன்றே அழித்திருப்பேன். ஸந்த்யாவைப் பெற்ற தந்தை என்பதால் என் கோபத்தை நானே விழுங்கிக் கொண்டேன்” .

விஷ்வகர்மா கண்களிலும் ஸந்த்யாவின் தாயின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

ஸந்த்யா தான் நிலைமைப் புரிந்து கொண்டு பேச்சைத் திசை திருப்பினாள்.

” அழகுக் குழந்தைகள் மனு, எமன், எமி பிறந்திருக்கும் குதூகல நாளில் ஏன் பழைய வேண்டாத நிகழ்வுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்? தந்தையே ! இப்போது மும்மூர்த்திகள் வேண்டிக் கொண்டபடி இவரிடமிருந்து ஆயுதங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்! அந்த முயற்சியில் எங்களுக்கும் நன்மை கிடைக்கும்” என்று வேண்டிக்கொண்டாள்.

சூரியதேவனும் நிலைமையைப் புரிந்துகொண்டு ,” சரியாகச் சொன்னாய் ஸந்த்யா! நேற்றைய நாள் முடிந்த நாள். தினமும் நான் புதியதாய் உதிக்கின்றவன்.நடக்கப் போவதைப் பற்றிப் பேசுவோம். விஷ்வகர்மா அவர்களே! எப்பொழுது துவக்கப் போகிறீர்கள் உங்கள் காந்த சிகித்சையை? ” என்று வினவினான்.

சூரியதேவரே உங்கள் கோபம் நியாயமானது தான். என் தவற்றை மன்னிக்கும்படி பலமுறை வேண்டியும் நீங்கள் செவி சாய்க்கவில்லை. இன்று பிரும்மர் அருளினால் உங்கள் மன்னிப்பைப் பெறுவதற்குத் தகுதி உடையவனாகி விட்டேன். அது மட்டுமல்ல. சற்று முன்வரை நான் காந்த சிகித்சை அளிப்பதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது அதைவிடச் சிறந்த முறை ஒன்று என் சிந்தனையில் உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்கு விளக்கிய பிறகு தங்கள் அனுமதியுடன் அதனைப் பயன்படுத்த விழைகிறேன்” என்ற பீடிகையில் ஆரம்பித்தார் விஷ்வகர்மா.

“சொல்லுங்கள்! அனைவரும் கேட்கட்டும்” என்று கூறினான் சூரியதேவன்.

Image result for சூரிய ஒளி சிதறல்

” சூரியதேவரே! கொஞம் விளக்கமாகச் சொல்ல அனுமதியை மீண்டும் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒளி வெப்பம் எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அதே சமயத்தில் உங்கள் ஒளி துகள்களாலும் ஆனது. அதுமட்டுமல்லாமல் அதற்கு அலைபோல பரவும் குணமும் உண்டு. அதை அலை நீளம் என்ற அளவையால் அளக்க முடியும்.

உங்கள் வெள்ளை ஒளி உண்மையில் ஏழு நிறங்களால் ஆனது. அதை உங்கள் தேர்ச்சக்கரத்தில் உள்ள ஏழு குதிரைகளும் நிர்ணயிக்கின்றன. உங்கள் ஒளி, மழைக்காலங்களில் நீர்த்திவலைகளில் புகுந்து வரும் பொழுது அந்த ஏழு வண்ணங்களும் வானவில் வண்ணங்களாக உரு மாறுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்த வெள்ளை நிற ஒளி பல நிறங்களாகப் பிரிவதை நிறமாலை என்கின்றோம். ஒளி ஒரு சிறிய துளை வழியாகச் செல்லும்போது ஒளி விலகுதல் நடைபெறும். அதாவது ஒளியின் கற்றை விரிகின்றது.

முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரியும்

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது.

இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.

Image result for science of light

படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை வரி. இதில் ஆற்றல் இழப்பு இல்லை.

முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள வரிகள். இதில் ஆற்றல் இழப்பு உண்டு.

முதன்மை வரியைவிடக் குறைவான அலைநீளமுள்ள எதிர் வரிகள் இதில் ஆற்றல் அதிகரிக்கும்.

சீரொளி என்ற ஒரு ஒளிவடிவமும் உண்டு. அதன் ஒளிக்கற்றையில் உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும்.

சீரொளி சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. பொதுவாக அகல்விளக்கு , கதிரவன் முதலானவற்றிலிருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் ஒரே அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களும்கூட ஒன்றுக்கொன்று அலைமுகங்கள் மாறுபட்டும் முரண்பட்டும் காணப்படும். அதாவது ஓர் ஒளியலையின் அலைமுகம் ஏறுமுகமாக இருக்கும் போது, அதே அலைநீளம் கொண்டிருக்கும் வேறு ஒளியலைகள் இருந்தாலும் அவற்றின் அலைமுகம் இறங்குமுகமாக இருக்கக்கூடும். ஆனால் சீரொளி உள்ள ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அவற்றின் அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும். சீரொளியின் பயன்பாடுகள் பலவும் இப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
தடிப்பான இரும்பை வெட்டி அறுப்பது ஒட்டவைப்பது வரை பற்பல பயன்பாடுகளுக்குச் சீரொளி பயன்படுகின்றது.ம் செய்கின்றன.

மேலும் சொல்லப்போனவரை ஸந்த்யா தடுத்து நிறுத்தினாள். “தந்தையே, தங்கள் சிற்ப மாணாக்கர்களுக்குப் போதிப்பதை இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் எப்படி இவருடைய கதிர் வெப்பத்தைக் குறைக்கப்போகிறீர்கள் , மும்மூர்த்திகளுக்கு எப்படி ஆயுதம் செய்யப்போகிறீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்களேன்” என்றாள்.

சரி, சுருக்கமாகவே சொல்கிறேன். சூரியனை நான் தயாரித்திருக்கும் ஓர் ஊடகத்தின் வழியே செல்லும்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன். அவர் அப்படி வரும் போது ஆற்றல் அதிகரிக்கும் எதிர் வரிகளைக் கொண்டு ஆயுதங்கள் செய்யப்போகிறேன். அந்த ஆயுதங்களின் இணைப்புகளை இணைக்க இவரது ஒளியில் வரும் சீரொளியைப் பயன்படுத்தப்போகிறேன்.
அந்த ஆற்றல் மிக்க ஓளி விலகியதும் சூரியதேவனின் ஒளியும் வெப்பமும் மங்கும். அதன் பிறகு அவருடைய கிரணங்களால் ஸந்த்யாவிற்கு எந்தவித பாதகமும் இருக்காது”

” மிகவும் மகிழ்ச்சி தந்தையே! இந்தப் பாதுகாப்பு நிரந்தரமாக இருக்குமா அல்லது காந்த சிகிச்சை மாதிரி சில காலம் மட்டும் இருக்குமா? ” என்று வினவினாள் ஸந்த்யா.

” மகளே! தான் இருக்கின்ற பொருட்களைக் கொண்டு அவற்றில் என் அறிவைப் பயன்படுத்திச் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் தொழிலாளி தான். மும்மூர்த்திகள் மாதிரி படைப்பாளி அல்ல. இந்த ஊடகத்தை உங்கள் அரண்மனை வாயிலில் வைக்கப்போகிறேன். அதனால் சூரியதேவன் எப்பொழுதெல்லாம் அரண்மனைக்குள் வருகிறாரோ அப்போது அவர் மங்கிய வெப்பத்துடன் கூடியவராகத் தான் உள்ளே வருவார். ஆனால் இந்த ஊடகத்திற்கு எதாவது பாதகம் விளையாதவாறு காக்கவேண்டும். ஊடகத்தில் விரிசல் எதாவது ஏற்பட்டால் பின்னர் அது முழுவதுமாகச் செயல் இழந்துவிடும்”

” ஊடகத்தில் விரிசல் வந்தால் குடும்பத்தில் விரிசல் வருமே? ஊடகத்தை எப்படிப் பாதுகாப்பது?” என்று கவலையுடன் வினவினாள் சந்த்யாவின் தாய்.

இந்த ஊடகத்தை வேறு எந்தப் பொருளும் பாதிக்கமுடியாது. ஆனால் நான் தயாரிக்கப்போகும் இரு ஆயுதங்கள் இதன் மீது பட்டால் ஊடகம் ஓட்டையாகவிடும். “

“அப்படி என்ன ஆயுதங்களை நீங்கள் படைக்கப்போகிறீர்கள்? ” என்று சூரியதேவன் வினவினான்.

” சிவபெருமானுக்குத் திரிசூலமும், விஷ்ணுவிற்குச் சுதர்சனச் சக்கரமும்” என்று பதில் உரைத்தார் விஷ்வகர்மா.

” மும்மூர்த்திகளால் எனக்கு என்றென்றும் துயரம் வராது. இதுபோதும் எங்களுக்கு” என்று சூரியதேவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.

ஸந்த்யாவின் அன்னை கொண்ட கவலை நியாயமானது என்பதைக் காலம் சொல்லியது.

(தொடரும்)

Image result for கண்ணதாசன் எம் ஜி ஆர் சிவாஜி ஜெமினிRelated image

சாலமன் பாப்பையா தன் தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறாரோ என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் எதிர்பார்க்காத ஒன்றை அவர் கூறினார்.

மூன்று அணியினரும் சிறப்பாகவே பேசினாங்க!

முதலில் சொன்ன மாதிரி எனக்கு இங்கே தீர்ப்பு சொல்லக் கொஞ்சம்   தயக்கம். காரணம் இது எமபுரிப்பட்டணம் என்பதால் அல்ல . எமன் எதிரே அமர்ந்திருக்கிறார் என்பதனால் அல்ல.

எல்லாவிதமான  பேச்சுக்களையும் இடம் பொருள் ஏவல் பார்த்துப் பேசவேண்டும் என்பது தமிழ் மூதுரை. அது என்ன இடம் பொருள் ஏவல்? எந்த இடத்தில் எதைப்பேச வேண்டும் என்று தெரிந்து பேசவேண்டும். நாம் பேசுவது எந்த  அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள் என்று புரிந்துகொண்டு பேசவேண்டும். ஏவல் -அதாவது எந்த அளவிற்குக் குரலை உயர்த்திப் பேசவேண்டும் என்பதை உணர்ந்து பேசவேண்டும். எதை எந்தப் பொருளில் எந்த அளவில் தெரிந்து  புரிந்து உணர்ந்து பேசவேண்டும்  என்பது இடம் பொருள் ஏவல் என்றாகிவிட்டது. . மனிதனாகப் பிறந்த அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயப் பாடம் இந்த இடம் பொருள் ஏவல்.

நானும் மனிதன் தான். தமிழும் தெரியாமல் படித்துவிட்டவன். அதனால் இந்த இடம் பொருள் ஏவல் என்ற பொது மறையை  மதிக்கின்றவன். அதனை முக்காலே மூணு வீசம் பயன்படுத்துகிறேன். ஏதோ சொச்சம் வைக்கிறேனே  ஏன் என்று கேட்கிறீர்களா? பட்டி மன்றத்திற்கோ வழக்காடு மன்றத்திற்கோ விவாதமேடைக்கோ தலைமை தாங்கும்போது இந்த இடம் பொருள் ஏவலை நான் பொருட்படுத்துவதில்லை. இந்தப் புனிதமான தலைமைப் பீடம் பொதுமறையிலிருந்து விலக்கு அளிக்கிறது. இதை சிறப்பு முறை என்றும் நான் சொல்வதுண்டு.பொதுத்தமிழ் சிறப்புத்தமிழ் என்று தமிழ்ப்பாடத்தில் வருவதுபோல.

அதன்படி, எந்த இடமாக இருந்தாலும் எனது தீர்ப்பை ஐயம் திரிபர எடுத்துச் சொல்வதே என் வழக்கம். எந்தப் பொருள்  சரியானது என்று எனது துலாக்கோல் கருதுகிறதோ அதைத் தெளிவாகச் சொல்வது என் மரபு. குரலை ஏற்றி இறக்கிப் பேசவேண்டிய வசியமில்லை. ஆனால் கணீரென்று ஆணித்தருணமாகச் சொல்லவேண்டியது என் கடமை.

வழக்கம் மரபு கடமை என்ற மூன்று சிறப்புக்களையும்  ஒதுக்கிவிட்டு பொதுமறையின் அடைப்படையில் சற்று வித்தியாசமாகத் தீர்ப்புச் சொல்ல விழைகிறேன்.

அதற்குக் காரணம் நான் இந்த விவாதமேடை ஆரம்பத்தில் சொன்ன நிகழ்வுதான். மதுரையில் நடைபெற்ற விவாதம். தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது “சண்டையா? சோகமா? காதலா? ” என்ற விவாதம். அந்த விவாதமேடைக்கு எம் ஜி ஆர் சிவாஜி ஜெமினி மூன்றுபேரும் வந்திருந்தார்கள் என்று கூறினேன். இவர்கள் மூன்று பேரையும் வைத்துக்கொண்டு நாம் எதாவது தீப்புக் கூறினால் ஏதாவது ஏடாகூடம் நடைபெறுமோ என்ற பயம். அந்த பயம் எனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் அல்ல. அதனால் கூட்டத்தில்குழப்பம் வந்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியவேண்டுமே என்கிற கவலையினால் ஏற்பட்ட பயம்.  நாம தான் இடம் பொருள் ஏவல் பார்க்கிற ஆசாமி இல்லையே ! தைரியமாக தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது காதல்தான் என்று முடித்தேன். அந்த இடத்தில் அப்படியே ஒரு நில நடுக்கம் எற்பட்டதுபோலத் குலுங்கியது. எம் ஜி ஆர் சிவாஜி இருவர் ரசிகர்களும் கொலைவெறியுடன் மேடைக்கு வந்தார்கள்.   

அப்போ அங்கே ஒரு அதிசயம் நடந்ததுனால நாங்க எல்லோரும்  தெய்வாதீனமா  தப்பிச்சோமுன்னு சொன்னேனில்ல?  அது என்ன தெரியுமா? அந்தக்கூட்டத்துக்குக் கவிஞர் கண்ணதாசனும் வந்திருக்கிறார். யாருக்கும் தெரியாம ஒருமூலையில உட்கார்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். தகறாறு வருவதைப் பார்த்தவுடன் அவர் உடனே மேடைக்குத் தாவி வந்தார். மைக்கைக் கையில் எடுத்தார். பேச ஆரம்பித்தார்.  

” மதுரை மகா ஜனங்களே ! இந்த ஊர்ல ஒரு பாண்டியன் தப்பா தீர்ப்பு சொன்னதுக்காக ஊரையே எரிச்சா ஒரு கண்ணகி. அப்படிப்பட்ட ஊர்ல இவர் தப்பா தீர்ப்பு சொன்னா நாம சும்மா விடுவோமா?

என்ன இது, கவிஞர் எரியிற கொள்ளியில எண்ணையை ஊத்துறாரேன்னு பயந்தேன்.

” ஆனா பாண்டியன் மாதிரி நாமளும் அவசரமா தீர்ப்பு சொல்லலாமா? கொஞ்சம் பேசிப்பார்ப்போம். எனக்கு மதுரை ஜனங்களைப் பத்தி நல்லாவே தெரியும். இந்தத் தலைப்பைப் பத்தியும் தெரியும். தமிழும் கொஞ்சம்  தெரியும். அதனால அமைதியா உட்காருங்க! நாம் இந்தத் தீர்ப்பு  சரியா தவறா அப்படீன்னு ஒரு  அப்பீலுக்குப் போவோம். அப்பிலுக்கு யார் தீர்ப்பு சொல்வது?

கூட்டம் “கண்ணதாசன் கண்ணதாசன்” அப்படின்னு கத்தியது. மேடைக்கு ஆத்திரத்தோடு வந்தவுங்க அமைதியா அவங்க இடத்தில் உட்காருவதும் தெரிந்தது.

“நானா? மன்னிக்கணும் . இதுக்குத் தீர்ப்புக் கூறத் தகுதியானவர்கள் இவர்கள் மூவரும்தான். திரையுலக ஜாம்பவான்கள் இந்த மூன்று பேரையும் மேடைக்கு அழைக்கிறேன். எம் ஜி ஆர் அவர்களே, சிவாஜி அவர்களே, பிரதர் ஜெமினி சற்று மேடைக்கு வந்து இந்தத் தீர்ப்பைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள்” என்று அழைத்தார்.

மூன்று பேரும் சிரித்துக்கொண்டே மேடைக்கு வந்தார்கள்.

இந்த அப்பிலுக்கு நீங்க தான் தீர்ப்பு சொல்லணும் . பேசினவங்க பேச்சை வைச்சு இந்த நீதிபதி தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது  சண்டையில்லை, சோகமுமில்லை காதல்தான் அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டார்.

மக்கள் எல்லாரும் கோபத்தில் இருக்காங்க! நீங்க சொல்லுங்க ? நம்ம படங்களில எது சிறந்து விளங்குது ? சண்டையா? சோகமா? காதலா?   பிரதர் நீங்க சொல்லுங்க? என்று ஜெமினியைக் கேட்டார். 

“காதல்தான் . நான் வேற என்ன சொல்வேன்” என்றார்

சிவாஜி, நீங்கள்?

காதல் தான்

ஆண்டவனே ! ( எம் ஜி ஆரும் கண்ணதாசனும் ஒருத்தரை ஒருத்தர் ஆண்டவனேன்னுதான் கூப்பிடுவாங்களாம்) நீங்க என்ன சொல்ரீங்க?

“காதல்தான் “

“அப்பறம் என்ன?  என் ஓட்டும் அதுக்குத்தான். எல்லரும் வீட்டுக்குப் போய் காதல் செய்யுங்கள்” என்று  சொல்லி நிகழ்ச்சியை முடிக்க மக்கள் அனைவரும் இவர்கள் நால்வரையும் மேடையில் பார்த்த மகிழ்ச்சியோடு கலைந்து போனார்கள்.

இதை ஏன் இவ்வளவு  விரிவாகச் சொல்கிறேன் என்றால்  இப்போது நான் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் இங்கு வந்திருக்கும் மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்த அவர்களுடைய கருத்தினைக் கேட்க விரும்புகிறேன். அவர்கள் மூவரையும் நன்கு அறிந்த நாரதர் அவர்கள் கண்ணதாசன் போல நெறியாளராக இருந்து மும்மூர்த்திகளின் கருத்தை அறியும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்றார் சாலமன் பாப்பையா.

இதைக் கேட்டுவிட்டுத்தான் ” இது நடக்க முடியாத செயல்” என்று நாரதர் சத்தமாகக்  கூறினார்.

(தொடரும்) 

 

 

 

சரியான வீடு – ஹிட்ச்காக் – தமிழில் – ரா கி ரங்கராஜன்

 

Image result for the right kind of house alfred hitchcockரா கி ரங்கராஜன்  மொழிபெயர்த்த  ”The Right Kind of House” என்ற சிறுகதையை சில மாதங்களுக்கு முன் படித்தேன். சிறுகதை படித்த பின் அதனுடைய குறும்படத்தையும் தேடி பார்த்தேன். சிறுகதையை திரைக்கு கொண்டு வரும் போது என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை கவனிக்க முடிந்தது.

நன்றி: சுஜாதா தேசிகன்

அந்தக் கதை சுருக்கமாக இங்கே…

ஊருக்குள் நுழையும் வாட்டர் பெரி என்பவர், அங்கே வீடு ஒன்று விற்பனைக்கு என்ற பலகையை பார்த்துவிட்டு அந்த ஊர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அதை பற்றி விசாரிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஒரு வயதான பெண்; ஐந்து வருஷம் முன்பு பையனைப் பறிகொடுத்தவர்; கடந்த ஐந்து வருஷமாக அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அல்லது வந்தவர்கள் அதன் விலையைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார்கள்; வெறும் 10,000 டாலர் பெறுமான வீட்டை அந்தப் பெண் ஐந்து மடங்கு அதிக விலை சொல்லுகிறார் போன்ற தகவல்களை அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருப்பவர் சொல்லுகிறார்.

“நான் வேண்டும் என்றால் அந்த பெண்மணியிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று வாட்டர் பெரி கிளம்புகிறார். அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறார். ”பேரம் பேசுவதாக இருந்தால் நீங்கள் போகலாம்” என்று அந்தப் பெண்மணி கராராகப் பேசுகிறார். வாட்டர் பெரி “சரி நீங்கள் சொல்லும் விலைக்கே அந்த வீட்டை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்கிறார். ”நிஜமாகவா ?” என்று கேட்டுவிட்டு அவருக்கு லெமன் ஜூஸ் தருகிறார் அந்தப் பெண்மணி. பிறகு ”இந்த வீட்டைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும்” என்கிறாள்.

தன்னுடைய குடும்பம் பற்றிய தகவல்களைச் சொல்லுகிறார். தன் கடைசிப் பையன் சில வருடங்களுக்கு இறந்துவிட்டான் என்கிறார். “எப்படி?” என்று வாட்டர் பெரி கேட்க, ஒரு நாள் ராத்திரி தன் மகன் ஒரு கருப்புப் பையுடன் வந்தான். அந்த பையில் என்ன இருக்கிறது என்று சரியாகச் சொல்லவில்லை. சில வாரங்கள் இங்கே இருக்க போவதாகவும் சொன்னான்; பிறகு அவன் தன் வேலை போய்விட்டதாகவும் அந்தப் பெண்மணி சொல்லுகிறார்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் ராத்திரி அவன் அறையில் பேச்சுக் குரல், சண்டை, சாமான்கள் உருளும் சத்தம் கேட்டு அங்கே தான் போன போது தன் மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தான் என்றும். சுட்டவன் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டான் என்றும் சொல்லுகிறார்.

இவள் மகனுக்கு ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சொல்லித் தெரியவருகிறது. பங்கு போடுவதில் ஏதோ பிரச்சனையில் இவன் சுடப்பட்டான் என்றும் தெரியவருகிறது. ”சுட்டுவிட்டு போனவனைக் கண்டுபிடித்தீர்களா?” என்று வாட்டர் பெரி கேட்க, அதற்கு அந்த பெண் ”இல்லை. அதனால் தான் இந்த வீட்டை ஏகப்பட்ட விலைக்கு விளம்பரம் செய்தேன். ”நிச்சயம் கொலை செய்தவன். என் மகன் இந்த வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு போக வருவான் என்ற நம்பிக்கையில் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருந்தேன்” என்கிறாள்.

வாட்டர் பெரி லெமன் ஜூஸை கீழே வைத்த போது கண்கள் இருண்டது. “லெமன் ஜூஸ் கொஞ்சம் கசக்கிறது” என்றார்.

 

ஹிட்ச்காக் தயாரித்த அந்தக் குறும்படத்தைப் பார்த்து ரசியுங்கள் !

 

குவிகம் செய்திகள்

131019.jpg

செப்டம்பர்  மாத நிகழ்வுகள்

குவிகம் இல்லத்தில் நடைபெறும் அளவளாவல் மற்றும் இலக்கிய அமுதம் நிகழ்வுகளையும், ஆழ்வார்பேட்டையில் குவிகம் இலக்கிய வாசல் சார்பில் நடக்கும் நிகழ்வினையும் பற்றிய குறிப்பினை  மாதம்தோறும் எழதலாம் என்று தொடங்குகிறோம்.

இது செப்டம்பர்  மாத நிகழ்வுகளுக்கான பதிவு

  1. செப்டம்பர் 8 : அளவளாவல்

“வாசிப்போம் தமிழ்  இலக்கியம் வளர்ப்போம் “ என்னும் முகநூல் குழுவின் நிர்வாகி திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு. ஒரு தீவிர வாசகர் ஒரு முகநூல் குழுவின் மூலம் பலரையும் படிக்க வைத்து அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளச் செய்தது இவரது சிறப்பு.

கோவில்பட்டியில் நினைவு தெரிந்த நாள் முதல் அரசியல் மற்றும்  இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவந்த அனுபவங்கள், பங்களூரூவில் இருந்த நாட்களில் தமிழ்ச் சங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டது, தனது ஊர் மற்றும் அலுவலக நண்பர்கள் பலர் இலக்கியச் சம்பந்தமாகவே இயங்கி வருவது  பற்றி பகிர்ந்துகொண்டார்.

வாசிப்போம் தமிழ்  இலக்கியம் வளர்ப்போம் தளத்தின் தரத்தைத் தொடர்ந்து உற்சாகத்துடன் தக்கவைப்பது குழுவின்  ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும், இதுவரை பதிவுகள் எழுதாத நண்பர்கள்/எழுத்தாளர்கள் அனைவரையும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தங்கள் வாசிப்பு அனுபவத்தை வாசிப்போம்…குழுவில் பகிர வேண்டும்  என்றும் கூறி இதுவரை குழுவில் சேராதவர்களுக்கு அழைப்பும் விடுத்தார்

  1. செப்டம்பர் – 15

இலக்கிய அமுதம் சார்பில் உவமைக் கவிஞர்  சுரதா அவர்களைப்பற்றி திரு. அமுதோன் உரையாற்றினார்.

திரு அமுதோன் கவிஞர் சுரதா மற்றும் கவிஞர் கண்ணதாசன் இருவரிடமும் பழகியவர். இருவரும் மென்மையான உள்ளம் படைத்தவர்கள், மற்றவர்கள் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடியவர்கள் என்பதற்கு உதாரணங்கள் சொன்னார்.

கவிஞர் சுரதாவைப் பற்றிய சில செய்திகள்.

  1. எந்தக் கவிஞரின் ஊருக்குச் சென்றாலும் அவர்கள் பிறந்த மண்ணை எடுத்துக்கொண்டு வருவாராம். (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆண்டாள் இப்படி.) அவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் ஆண்டாள் கிடத்ததாகக் கூறப்படும் இடத்தின் மண்ணையும் கொண்டுவந்தாராம். அந்த மண்ணை தன்னைப் புதைக்கும்போது உபயோகப் படுத்தவேண்டும் என்பது அவர் விருப்பமாம். அது நடக்கவில்லை. ஆனால், அசோக்நகரில் அவரது சிலை அமைக்கப்பட்டபோது அதன் பீடத்துள் அந்த மண்ணை இட்டு அதன்மேல் சிலையை அமைத்தார்களாம்.
  2. யாரேனும் இளைஞர் நல்ல கவிதை சொன்னால், உடனே அவருக்கு பரிசு கொடுப்பாராம். அவரிடம் காசு இருக்காது. அருகில் உள்ள யாரிடமாவது பத்து ரூபாய் வாங்கி அதைப் பரிசாகக் கொடுப்பாராம்.
  3. பேசிக்கொண்டு இருந்த ஓரு இளைஞரிடம்  அவர் பெயர், தந்தையின்  பெயர், ஊர் என்றெல்லாம் கேட்டாராம், சுரதா. பதில் அளித்த அந்த இளைஞர் “ நான் என்ன ஜாதி என்று தெரிந்டுகொள்ளத்தானே இப்படிக் கேட்கிறீர்கள்? நான் மனித ஜாதி.” என்று சொல்லிவிட்டாராம். சற்று நேரம் கழித்து என்று   மன்னிப்பு கேட்கும் தொனியில், உங்கள்  “மனதைப்  புண் படுத்திவிட்டேனோ?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுரதாவின் பதில் — 

“ஆணி அடிச்ச இடத்தில் அடையாளம் இல்லாமல் போகுமா?’

 

செப்டம்பர் 22: அளவளாவல்

1955 முதல் சென்னையில் நடந்த ஆன்மீகச் சொற்பொழிவு, இலக்கிய நிகழ்வு எல்லாவற்றிலும் பார்வையாளர் இடையே சங்கரிபுத்திரன் அவர்களை பார்கலாம் என்று சொல்வார்கள்.

கலந்துகொள்வதோடு ஒரு சிறு குறிப்பு, ரசமான செய்திகள் என்று பத்திரிகைகளில்  பகிர்ந்துகொண்டவர் அவர். 88 வயதான சுப்பிரமணியம் அவர்களுக்கு ‘சங்கரிபுத்திரன் புனைப்பெயரைச் சூட்டியவர் தோழர். பாலதண்டாயுதம்.

கோவைச் சிறைச்சாலையில் எழுத்தராகப் பணிபுரிந்த இவர் அந்தச் சமயத்தில் ஒரு தூக்குத் தண்டனைக் கைதிக்கு அவர் அராசங்க அனுமதியுடன் உதவியதை இன்றும் நினைவு கொள்கிறார். 

 

  1. செப்டம்பர் 29

இலக்கியச் சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் சார்பில் சனிக்கிழமை 28-9-19 அன்று “திரு ஏ.என்.சிவராமன் – ஒரு பன்முகப் பார்வை” என்ற தலைப்பில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் பேருரை ஆற்றினார்.

அது பற்றி நண்பர் ஆர்கே ராமநாதனின் முகநூல் பதிவு

மாதாந்திர கூட்டத்தில் தினமணி ஆசிரியராக அரை நூற்றாண்டுக்கு மேல் திறம்பட பணி புரிந்த ஏ என் எஸ் என்றழைக்கப்படுகிற ஏ என் சிவராமன் அவர்களின் பன்முகத் திறமை பற்றி நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ள அவரின் பேரன் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (கலைமகள் ஆசிரியர்) அவர்களைவிட பொருத்தமான நபர் வேறு யாரும் இருக்கமுடியுமா என்ன?

ஏ என் எஸ்ஸின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள், பத்திரிகை ஆசிரிய அனுபவப் பகிர்வுகள் என இரண்டையும் சரிவரப்பின்னி அவற்றை காலக் கிரம வரிசைப்படுத்தாமல் சுவாரஸ்யத்திற்கும் கோர்வைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசிய முறை கவனக்குவிப்பாய் கேட்க வைத்தது. பிழைதிருத்தி மணி சம்பவக்கதையை முத்தாய்ப்பாய் சொன்னதும் நல்ல ஃபினிஷிங் டச் .!

காந்தியவழிக் கொள்கை ஈடுபாடு, வன்முறைக்கு வாய்ப்பளிக்காத நேர்பட்ட எழுத்து வெளிப்பாடு,கட்டுரை, தலையங்கம்,பல்துறைத்தொடர் (விவசாயம் குறித்த 40 கட்டுரைகள் பல்கலைக்கழக பாடத்திட்டமாய் வைக்கப்பெற்றது அதன் வீரியத்தைப் பறைசாற்றும்) இவைதாண்டி சிறுகதையிலும் முத்திரை பதித்த எழுத்துத்திறன் (எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறந்த நூறு தமிழ்சிறுகதைகள் தேர்ச்சி பட்டியலில் ஏ என் எஸ் எழுதிய நாலாணாவும் நாலு அவுன்ஸ் பிராந்தியும் இடம் பெறும் என சிலாகித்ததை குறிப்பிட்டார்) எழுதிய பகுதிகள் ஒரு வாசகனாய் தனக்கு திருப்தி ஏற்படுத்தினால் மட்டுமே அது பிரசுரமாகும் என்னும் மனக்கொள்கை கொண்டிருந்தவர்.

எமர்ஜென்ஸி காலத்தில் தமிழில் அதிகம் கண்காணிக்கப்பட்டதும் அரசாங்க தணிக்கைக்கும் அதிகமாக உள்ளானது தினமணியும் துக்ளக்கும் என்பது பத்திரிகை தர்மநிலை நேர்மை பேசுவதின் ருசு.

தினமணி அப்போது தலையங்கத்தில் வெறுமே வெள்ளைப் பக்கம் பிரசுரித்தது ஏ.என்.எஸ்ஸின் தனித்துவ எமர்ஜென்ஸி எதிர்ப்பு நிலை பிரகடன முழக்கம்.( துக்ளக்கில் கறுப்பு மைக்கோடுகளும் அட்டையில் ஒருமுறை முழுக்க முழுக்க கறுப்பு பக்கம் அச்சானதாகவும் ஞாபகம்).  தான் மேற்கொண்ட எழுத்துப்பணிக்கு கண்ணியம் சேர்த்ததும் பரந்துபட்ட வாசிப்பை எழுத்திலும் பரவிவரச் செய்ததும் ஏ.என்.எஸ்ஸின் தனிச்சிறப்பு என்றால் அதுதான் அவரின் படைப்புப்பணிக்கான அங்கீகாரம் என்பதுதானே சரியாக இருக்கும்?!

 

ரயில் பாடகி ராணு

Image result for ராணா மொண்டல்

ராணு மொண்டால் என்பவர் கல்கத்தாவில்  ராணாகட்  ரயில் நிலையத்தில் சினிமா பாடல்களைப் பாடி காசுக்காகக் கையேந்திக் கொண்டிருந்தவர்.  சிறு வயதிலேயே பெற்றொர்களை இழந்தவர்.  19 வயதில் திருமணமாகி ஒரு பெண்ணுக்குத் தாயானவர்.

லதா மங்கேஷ்கர் போல அவ்வளவு தத்ரூபமாக அவர் பாட, அந்தக்குரலில் மயங்கிய அதீந்திர சக்கரவர்த்தி என்ற வழிப்போக்கர் ராணுவின் பாடலைப் பதிவு செய்து அதனை யூ டியூபில் போட அது வைரலாகி   ராணுவிற்கு  ஆயிரக் கணக்கானோர் பாராட்டுதல்களைத் தெரிவிக்க அவரது குரல் வெளிச்சத்துக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ஸிங்கர் போட்டியில் கலந்து கொள்ளவும் ராணுவிற்கு  வாய்ப்புக் கிட்டியது. அதில் பங்குபெற்ற பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா ராணுவிற்கு  ஹிந்தித் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் அளித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அவரை கல்கத்தவில் உள்ள பிரபல மனமகிழ் மன்ரம் அவரை துர்கா பூஜை விழாவில் சிறப்புப் பாடகராக பாடவும் அழைத்திருக்கிறது.

எத்தனை நல்ல உள்ளங்கள்!!!

திறமைக்கு உகந்த மதிப்பைக் கொடுக்க  நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும். !!!

அவர் ரயில் நிலையத்தில் பாடி வைரலான பாடலையும், திரையில் பாடிய பாடலையும் கேட்டு ரசியுங்கள்!