சரித்திரம் பேசுகிறது! –யாரோ – பாஹியான்-2


பாஹியான் மெல்ல மெல்ல … மதுராபுரி வந்தான்!
‘ஆஹா! நாடு என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்!’
பாஹியான் பெரு வியப்புக்கு ஆளானான்.
காரணம்:
மக்கள் செழிப்பாக இருந்தனர்!
மகிழ்ச்சியாக இருந்தனர்!
அரசாங்கத்தின் கெடுபிடி எதுவும் இல்லை!
சுதந்திரத்தை முழுவதும் அனுபவித்தனர்!
தண்டனைகள் குறைவு!
நாடு முழுவதும்:
மக்கள் உயிர் வதை செய்வதில்லை!
மது அருந்தவில்லை!
மண்ணில் இது ஒரு சொர்க்கமோ?

கபிலவஸ்து…
இன்றைய இந்தியா-நேபாளம் நாட்டு எல்லைப் பகுதியில் இருந்தது.
புத்த சமயத்தினரின் புனித யாத்திரைத்தலங்களுள் ஒன்று.
புத்தர் பிறந்த இடம்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாஹியான் கபிலவஸ்து அடைந்தான்.
அது பாலைவனமாக இருந்தது.
வெறும் சில மக்களே இருந்தனர்.
பாஹியான் மனம் கனமாகியது.
புத்தர் பிறந்த இடமா இது?

வீதியில் சந்தித்த சில புத்த பிக்ஷுக்கள் பாஹியானையும் அவன் நண்பன் ‘தௌ செங்’ இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”
“சீனாவிலிருந்து”
பிக்ஷுக்கள் பெருமூச்சு விட்டனர்.
“நல்லது.
புத்த சமயத்தை நாடி வெகு தொலைவிலிருந்து இது வரை ஒருவரும் வந்ததில்லை. உங்கள் வரவு எங்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது”

பின்னர் பாடலிபுத்திரம் சென்றபோது ‘அசோகரது அரண்மனை’ பாழடைந்து கிடந்தது..


(பாழடைந்த அரண்மனையைப் பார்வையிடும் பாஹியான்
By Unknown – Hutchinson’s story of the nations, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=20046493)

இருப்பினும் மகத நாடெங்கும் புத்த மதம் கொண்டாடப்பட்டது.
எங்கெங்கு காணினும்… ஸ்தூபிகளும், புத்த விஹாரங்களும் இருந்தது.
அது பாஹியானுக்கு மன நிறைவை அளித்தது.

பாஹியான் தனது குறிப்பேடுகளில் இவ்வாறு எழுதினான்:
“குப்தர்கள், மௌரியர்களது ஆட்சியைப் பின்பற்றினர்.
ஆனாலும் அவர்கள் நிகழ்த்திய கொடுமைகளை நிகழ்த்தவில்லை.
நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் நிலவியது.
குப்தர்கள் ஆட்சி செய்த நாட்டில் 6 வருடங்கள் சுற்றியுள்ளேன்.
ஒரு முறை கூட கள்வரால் தாக்கப்படவில்லை.
வருத்தப்படும்படியான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை”.

இவ்வளவு எழுதிய அவன் ‘சந்திரகுப்த‘ மன்னனைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை!
என்ன விந்தையோ?
ஒருக்கால் அவன் எழுதியது நமக்குத்தான் கிடைக்கவில்லையோ?

பத்துபேர்கொண்ட குழுவுடன் தொடங்கிய பயணத்தில்…
இப்பொழுது பாஹியானுடன் ‘தௌ செங்’ மட்டுமே கூடஇருந்தான்.

“தௌ செங்!
நீ ஒருவனாவது என்னுடன் பயணத்தில் இருப்பது நினைத்தால் மகிழ்ச்சி!
சீனா சென்று நம் இருவரும் புத்த மதம் பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்லலாம்”
‘தௌ செங்’ மௌனமானான்.
முகம் வாடி இருந்தது.
கண்கள் கலங்கியது.
“பாஹியான்! நான் சொல்வது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்”
“…..?”
“இந்நாட்டு புத்த பிக்ஷுக்களின் இறை உணர்வு என்னை வெகுவும் ஆகர்ஷித்துவிட்டது.
நான் இங்கேயே இருந்து ‘புத்தராகி’… வாழ முடிவு செய்து விட்டேன்”

பாஹியான் தனியனானான்!
அவன் பயணம் நிற்கவில்லை!

பாஹியான் நாளந்தா அடைந்தான்.
அங்கிருந்து அருகில் இருந்த ராஜகிரிஹ நகர் சென்றடைந்தான்.
அது மகதத்தின் முதல் தலைநகரம்.
அங்கிருந்த ‘கழுகு மலை’ சென்ற போது பாஹியானின் உணர்ச்சிகள் கரைபுரண்டன.
கண்ணில் நீர் வழிந்தோடியது.

 

‘கழுகு மலை’

‘’புத்தர் பெருமான் ..
முன்பு இங்கு வாழ்ந்து…
இங்குதானே ‘சுரகாம சூத்திரம்’ போதித்தார்!
நான்… தாமதமாகப் பிறந்ததால் புத்தர் பெருமானை சந்திக்க இயலாது போனேனே!” என்று தன் அவலங்களைக் குறித்தான்.

பின்னர் கயா, பாடலிபுத்திரம், வாரணாசி சென்று புத்த கோவில்களைத் தரிசித்தான்.

ஒரு வருடம் சென்றது.

கங்கை நதியில் பயணம் செய்து வங்காள குடாவிலிருந்த ‘தம்லக்’ என்ற துறைமுக நகர் அடைந்தான்.
அங்கு இரண்டு வருடங்கள் தங்கினான்.
முதலில் சமஸ்கிருத மொழியை நன்கு கற்றுக்கொண்டான்.
புத்த சூத்திரங்கள் அனைத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்தான்.
தான் கண்ட அனைத்தையும் படங்களாக வரைந்தான்.

பாஹியான் தன் கடமைகளை நன்கு உணர்ந்திருந்தான்:
‘இந்த பொக்கிஷங்களை சீனாவுக்குப் பத்திரமாகக் கொண்டு சென்று அங்கு அதை போதிக்க வேண்டும்!’

கனத்த மனத்துடன் பாஹியான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து விடை பெற்றான்.

வணிகக் கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டான்.
கப்பல் பதினான்கு நாட்களுக்குப் பின் ‘இலங்கை’ சேர்ந்தது.
இலங்கையில்..
புத்த இலக்கியம் களஞ்சியமாகக் கிடந்தது.
அத்தனையும் சமஸ்கிருதத்தில்!

புதையல் கண்ட கள்வன் ஆனான்!
மேகம் கண்ட மயில் ஆனான்!

இரண்டு வருடம் அங்கு தங்கி அனைத்தையும் மொழி பெயர்த்து எழுதினான்.

பிறகு ஒரு வணிகக்கப்பலில், அங்கிருந்து புறப்பட்டான்.
கப்பலில் 200 பேர் பயணிகள்.
இரண்டு நாள் பயணித்தபின் ஒரு நாள் மாலை..
கரு மேகங்கள் வானத்தை நிறைத்தது.
குளிர்ந்து வீசிய காற்று மெல்லமெல்ல வலுவடைந்து புயலானது.
கப்பல் ஆடியாடி அலைக்கழிந்தது.
ஊழிக்காற்று தொடர்ந்தது.
பதிமூன்று நாட்கள் புயலின் சீற்றம்!
அது அனைத்தையும் அந்த இலங்கைக் கப்பல் தாக்குப்பிடித்தது.
அந்நாள் வரை..
அன்று காலை கப்பலின் அடித்தளத்திலிருந்து நீர் கசியத் துவங்கியது.
கப்பலின் தலைவன் :
“எல்லாப் பயணிகளும் தங்களிடமுள்ள கனமான உடமைகளை உடனடியாகக் கடலில் வீசி எறியவேண்டும்.
அப்பொழுதுதான் இந்த நீர்க் கசிவை சமாளிக்க முடியும்”

பயணிகள் வேறு வழி இல்லாமல் தங்கள் உடமைகளைத் துறந்தனர்.

பாஹியான் திகைத்தான்:
‘நாம் ஒரு ஆயுட்காலம் உழைத்து சேமித்த கிரந்தங்கள் அனைத்தும் நீரில் போகுமோ’ – வேதனையால் துவண்டான்.

‘புத்தர் பெருமானே!
உங்கள் திருவடியே சரணம்!
என்னைக் காக்காவிட்டாலும் எனது இந்த புத்தக் கிரந்தங்களைக் காக்கவேண்டும்’

அதிசயம் உடனே நடந்தது.
பறவைகள் தென்பட்டன.
சிறிய தீவு கண்பட்டது.
கப்பல் கரை சேர்ந்தது.
அந்த ஓட்டை சரி செய்யப்பட்டு கப்பல் மீண்டும் புறப்பட்டது.
தொண்ணூறு நாட்கள் பயணத்திற்குப் பின்..
ஜாவா தீவுக்குப் போய்ச் சேர்ந்தது.
பாஹியான் அங்கு ஐந்து மாதம் தங்கினான்.

பிறகு அங்கிருந்து மறுபடியும் இன்னொரு பெரிய வணிகக் கப்பலில் சீனா செல்லப் புறப்பட்டான்.
50 நாட்களுக்குத் தேவையான உணவுப்பண்டங்கள் கப்பலில் இருந்தது.
பாஹியான் மனது பெரும் நிம்மதியில் இருந்தது.
முடிவில்..
‘நமது கடமைகள் நிறைவேறப்போகிறது…
தாய் நாடே!
இதோ வருகிறேன்!”
அவன் மனம் இன்பத்தில் மிதந்தது!

(இதை சினிமா எடுத்தால் இங்கு ஒரு பாட்டு போட்டிருப்பார்கள்!)

சோதனைகள் முடிந்தது என்று நினைத்த போது…
அதே சூறாவளிக் காற்று…
மீண்டும்..
கப்பல் பயணிகள் – பாஹியானின் முன் கப்பல் பயணத்தில் புயலால் அடைந்த துன்பங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனர்.

ஒருவன்:
“இந்த சீனன் நம்முடன் வருவதால்தான் இந்தப் புயல் வருகிறது.
இந்த ஒருவனால் நாம் அனைவரும் ஏன் புயலில் மடியவேண்டும்?”
பாஹியான் இதை எதிர்பார்க்கவில்லை.

“நான் ஒரு பாவமும் அறியாதவன்.. புத்தர் பெருமானே இது என்ன சோதனை?”

பாஹியான் அருகிலிருந்த இன்னொருவன் பெரும் வீரன்.
பாஹியான் பயணங்களைப்பற்றி அறிந்திருந்தான்.
அவன் சொன்னான்:
“இந்தச் சீன மனிதர் பெரும் புத்த பக்தர்.
மேலும் புத்த இலக்கியங்களை சீனாவில் போதிப்பதற்காகச் செல்கிறார்.
இவரால் புயல் வந்தது என்பது பெரும் மூடத்தனம்.
யாரேனும் இவரைக் குறை கூறினால்..
அவர்கள் இந்த புயலிருந்து தப்பிப்பார்கள்.
அது உண்மை தான்.
ஆனால்…
அவர்கள் எனது வாளிலிருந்து தப்பிக்க இயலாது!
இது சத்தியம்”
வாளை உயர்த்தினான்.
வீரனின் குரல்… புயல் சத்தத்தையும் மீறிப் பயங்கரமாக ஒலித்தது.
அனைவரும் அடங்கினர்.

‘புத்தரின் கருணை எப்படி யார் மூலமாகவோ வருகிறது!’ – பாஹியான் வியந்தான்.

70 நாட்கள் கப்பல் கடலில் அலையுண்டுத் தள்ளாடியது.
உணவுப் பொருட்கள் தீர்ந்தது.
பின்னர் திசை மாறிய கப்பல் சரியான திசையில் செலுத்தப்பட்டு..
12 நாட்களில்…
சீனா அடைந்தது.

புத்தர் கருணையை எண்ணி பாஹியான் நெகிழ்ந்தான்.

(சீனா திரும்பிய பாஹியானுக்கு வரவேற்பு)

சீனாவில் பாஹியானுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது!

(பாஹியான் சினிமாவுக்கு இங்கே ஒரு பாட்டுப் போட்டு முடிக்கலாம்!)

ஒரு மனிதன்..
மத்திய சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு…
கோபி பாலைவனம், ஹிந்து குஷ் வழியாக குப்தராஜ்யத்தில் பயணித்து..
புத்த கிரந்தங்களை கிரகித்து, மொழிபெயர்த்து..
வங்காள விரிகுடாக் கடல் வழியாக, இலங்கை, ஜாவா சென்று..
உயிர் எப்பொழுது போகுமோ என்ற நிலையில் கடல் பயணம் செய்து..
சீனா திரும்பினான்.

அவன் போதனைகள்..
சீனாவில் புத்த சமயம் வளம்பெறப் பெரும் காரணம்.
அவன் ஒரு சரித்திர ‘நாயகன்’!
சரித்திரம் அவன் புகழ் பாடட்டும்…

நமது சரித்திர ஆய்வு தொடரட்டும்…

தலையங்கம்

சென்னையில் மழைக் காலம்

 

 

 

 

Image result for சென்னை மழை 2017

2015 டிசம்பர் ஒன்றுக்குப் பிறகு சென்னையில் லேசாக மழை பெய்தால் கூட வெள்ளம் முதல்மாடிவரை வந்துவிடுமோ என்று பயப்படவைத்துவிட்டது. 

மழை வெள்ளமும் ஏரித்திறப்பும் சென்னை வாசிகளுக்குப் புதியதல்ல என்றாலும் பயம் புதிது. 

எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோதே, உடல் நலமின்றி இராமாவரம் இல்லத்தில் இருந்தபோதே செம்பரம்பாக்கம் ஏரி  திறந்ததால் வெள்ளம் அவரது  வீட்டைச்சூழ, அவரைக் கட்டமரத்தில் அழைத்து வந்து கன்னிமரா  ஹோட்டலில் தங்கவைத்தனர். இது நடந்தது 1985இல்.

மக்களின் இன்றைய பயத்துக்குக் காரணம் நீர் நிலைகளை அழித்தது, பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டியது, ஏரிகளில் வீடு கட்டியது,  அரசு இயந்திரங்களின் கையாலாகாததன்மை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 

மழை வேண்டும்; வெள்ளம் வேண்டாம். அதற்கு வழி, நாம் திருந்துவதுதான். 

இல்லையென்றால் இயற்கையால் மீண்டும் மீண்டும்  தண்டிக்கப்படுவோம்.  

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (5) – புலியூர் அனந்து

Image result for malgudi days

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
அல்லும் பகலும் வெறும் கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்..

சீக்கிரமே வேலைக்குப் போய்விட்டேன். ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கென்று போவதற்கு இரண்டு வருடங்கள் இடைவெளி இருந்தது. அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று சொல்வதற்கில்லை.

அந்தக் காலத்தில் எஸ். எஸ். எல். ஸி. முடித்துவிட்டு கல்லூரிக்கோ பாலிடெக்னிக்கிற்கோ படிக்கப் போகாத பெரும்பாலானவர்கள் டிம்மி பேப்பரை உருட்டி எடுத்துக்கொண்டு டைப்பிங் கற்றுக்கொள்ள இன்ஸ்டிடியூட் போவார்கள். நானும் ஒருமணிநேரம் இன்ஸ்டிடியூட்டில் பொழுதுபோக்கினேன்.  கொஞ்சம் தீர்மானமாக இருப்பவர்களோ அல்லது யாரேனும் அறிவுறுத்தியபடியோ சிலர் சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்வதுண்டு.

பொழுதுபோகவில்லை என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். எனக்கென்னவோ பொழுது நம் கண்முன்னாலேயே யாதொரு பயனும்இன்றிப் போகிறது என்பதுதான் சரி.

மாலைவேளைகளில் ஒரு சிறு கோஷ்டியுடன் காலாற நடந்து ஊரைச் சுற்றிவருவோம். அங்கத்தினர் பதிவேடு இல்லாத அந்தக் குழுவில் பலதரப்பட்ட நபர்கள். அவர்களைப்பற்றி பின்னால் சொல்லவேண்டும். அந்தக் குழுவில் அதிகம் பேசாத நபர் நான் மட்டுமே.

மதியம் நூலகத்தில் நிறைய நேரம் போகும்.உரையாடல்களில் கலந்துகொள்ளாவிட்டாலும் , நாலு பேர் மத்தியில் பொழுதுபோக என்னென்ன விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டேன்.

சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட்.

அதற்குத் தினசரிகளையும் வாரப்பத்திரிகைகளையும் படிப்பது அவசியம். டெக்ஸாஸ் கோப்பையில் ரிச்சர்ட்ஸ் அடித்த 189, ஆலன் நாட் கொடுக்காத காட்சை காட்ச்சாக மாற்றி அவுட் ஆக்கிய ஏக்நாத் சோல்கர், திண்டுக்கல் இடைத்தேர்தல், சமீபத்தில் வந்த படங்களும் அவற்றில் வந்த பிரபல பாடல்களும் என்று பலர் அளந்து விடும்போது ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பது ரொம்பக் கஷ்டம்.
விவரங்கள் தெரிந்திருந்தும், சில அதிகப்படி செய்திகள் கைவசம் இருந்தும் வாயைத் திறக்காமல் இருப்பதுதான் வழக்கம். என் அப்பா சொன்ன ஒரு கருத்து இதற்குக் காரணமாக இருக்கலாம்.

‘நாலு பேர் ஒரு விஷயத்தில் சர்ச்சை செய்யும்போது நாம் பேசாம இருந்தா நமக்கு ஒண்ணும் தெரியாதுபோல என்று மத்தவங்க நினைச்சுக்குவாங்க. நாம் ஏதாவது சொல்லிட்டா அவங்க நினைச்சது சரிதான்னு ஊர்ஜிதம் ஆயிடும்.’

தவிர கோர்வையா ரசிக்கும்படியாக, ஏன் குறைந்தபட்சம் புரியும்படியாக நமக்குச் சொல்லவராது என்று ஒரு அசாத்தியத் ‘தன்னம்பிக்கை’(?) இருந்திருக்கவேண்டும்.

அல்லது தத்துவரீதியா ஒரு விளக்கம் சொல்லலாம்.
ஆட்டுக்கே வாலை அளந்து வைத்த கடவுள் மனிதனுக்கும் எல்லாவற்றையும் அளந்துதான் வைத்திருக்கிறான்.சுவாசிக்க, நுகர ஆகிய இரண்டு வேலைகளுக்கு இரண்டு மூக்குத் துவாரங்கள். கேட்பது மட்டும் செய்யும் ஒரு வேலைக்கு இரண்டு காதுகள். பார்ப்பதற்குமட்டும் இரண்டு கண்கள். ஆனால் பேசுவதும் சாப்பிடுவதும் ஆகிய இரண்டு வேலைகளுக்கு ஒரே வாய். கண்ணும் காதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவில் எட்டில் ஒரு பங்குதான் பேச வேண்டும் என்றுதான் இறைவன் படைத்திருப்பான் என்று சொல்லலாம்.

அந்த இரண்டு வருடங்களில் இன்ஸ்டிடியூட், மாலை கோஷ்டி, நூலகம் போக மற்ற நேரங்களை வீட்டில்தான் கழிக்க வேண்டும். பகலில் தூங்குவதில்லை என்று தீர்மானமாக நான் இருந்தேன். வீட்டில் மதியம் தூங்காததற்கு மேலே சொன்ன பட்டுக்கோட்டையாரின் பழைய  பாடல்மட்டும் காரணமல்ல. எங்கள் தெருவிலேயே ‘காஞ்சான் ’ என்று அறியப்பட்ட ஒருவன் இருந்தான். அவன் யார், அவன் உண்மைப் பெயர் என்ன, இந்தப் பெயருக்குக் காரணம் என்ன, அவனுக்கு என்ன வயது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆற்றிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் கொண்டு வரவோ மரம் வெட்டவோ, சுமைகள் தூக்கவோ எல்லோருக்கும் காஞ்சான்தான். யார் வீட்டில் வேண்டுமானாலும் அவனுக்கு உணவு கொடுத்துவிடுவார்கள். பழைய வேட்டியோ, சட்டையோ அவனுக்குப் பஞ்சமில்லை. அதனை வைத்துக்கொள்ள இடம் யார் வீடு வேண்டுமானாலும் போதும்.

யாரும் வேலை சொல்லாதபோது எங்கே வேண்டுமானாலும், பெரும்பாலும் யார் வீட்டுப் புழக்கடையிலோ, வெறும் தரையாக இருந்தாலும் தலைக்கும் ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் படுத்துவிடுவான். படுத்த இருபது வினாடிகளில் தூங்கிவிடுவான். கொஞ்சம் பலமாகக் குரல்கொடுத்தாலும் விழித்துக்கொள்வான். பிள்ளையார் கோவில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டே தூங்குவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவனும் அதிகம் பேசுவதில்லை . ஒரு மனிதனாக இல்லாமல் ஒரு ஜந்துவாகத்தான் அவன் எல்லோராலும் பார்க்கப்பட்டான். அந்தக் காஞ்சானிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளத்தான் நான் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டேனோ என்னவோ?

வீட்டிற்குள்ளேயே இருந்த நேரங்களில் அக்கம்பக்கம் உள்ள பெண்களுடன் அம்மாவின் அரட்டைக் கச்சேரி காதில் விழுந்தே தீரும். ‘இரண்டும் கெட்டான்’ போன்ற சில வார்த்தைகள் தெரிந்துகொண்டதும் அப்போதுதான். யாரையோ இரண்டும் கெட்டான் என்று குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் நானும் அப்போது அந்த சொல்லிற்குப் பொருந்திவருவேனோ என்று தோன்றியது. வளர்ந்து விட்ட  சிறுவனோ, வளர்ந்து வரும் இளைஞனோ இல்லையே? அதனால் எளிதாக ‘இரண்டுங்கெட்டான்’ என்று சொல்லிவிடலாம் . ஆனால் அந்த வார்த்தையை இளக்காரமாகத்தான் உபயோகப் படுத்துவார்கள்.
மிதித்தால் கொத்திவிடும் பாம்பு என்று தாண்டிவிடவும் முடியாது, தாண்டினால் வறுமை வந்துவிடும் என்று சொல்லப்படும் பழந்துணி என்று மிதிக்கவும் முடியாது என்றெல்லாம் பழமொழி விளக்கம் பேச்சில் அடிபட்டுக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் எது தர்மசங்கடம் என்று எங்கேயோ படித்த விளக்கத்தை ஒரு பெண்மணி சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. ராமனுக்கு வாலிவதம் ஒரு தர்மசங்கடம் என்றுதான் சொல்லவேண்டும். மறைந்திருந்து கொன்றால் வீரத்திற்கு இழுக்கு. நேரில் நின்று போரிட்டுத் தோற்றுவிட்டால் ராஜ தர்மத்திற்கும் சினேக தர்மத்திற்கும் இழுக்கு.  எந்தத் தவறைச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்யத்தானே வேண்டும்?..

ஒரு முனிவர் கண்களில் ஒரு காட்சி தெரிகிறது. பூச்சி தன்னைக் கவ்வவரும் பல்லியைக் கவனிக்காமல் இருந்தது. அந்தப் பூச்சியை கையைத் தட்டி விரட்டினால் பல்லியின் உணவைக் கெடுத்த பாவமும் அப்படிச் செய்யாவிட்டால் உயிர்வதைக்கு உடந்தையாக இருந்த பாவமும் சேருமாம். என்ன செய்வார் அந்த முனிவர்?
(என்னவோ சொல்ல ஆரம்பித்து எதையோ சொல்கிறேனோ?)

என்னைப்போன்று பள்ளிப் படிப்புமுடித்து வேலைக்குப் போக வயதாகாத ஒரு சிலர் டைப்பிங், சுருக்கெழுத்துதவிர தங்கள் குடும்ப வியாபாரம் அல்லது சிறுதொழில்களில் தந்தைக்கு உதவி செய்து வந்தார்கள். பக்கத்து கிராமங்களில் நிலமிருந்த குடும்பத்தைச் சேர்ந்த பையன்கள் விவசாயத்தில் சிறுசிறு வேலைகள் செய்து வந்தார்கள்

ராமாஜி என்கிற பள்ளித் தோழன் அப்பாவின் தச்சு வேலைகளில் உதவியாக இருந்து ஒரே வருஷத்தில் நேர்த்தியான தச்சர் ஆகிவிட்டான். தச்சுவேலையை ஒரு கலையாகத்தான் அவன் பார்த்தான். ஐந்தே வருடங்களில் எங்கள் ஊரிலேயே மிகச் சிறந்த ஃபர்னீச்சர் மார்ட் முதலாளியும் தொழிலாளியும் ஆக விளங்கினான். சொந்தமாக வீடு வாங்கும் அளவிற்குக் குடும்பம் முன்னுக்கு வந்தது. எங்கள் குடும்பத்திலேயே வியாபார நோக்கு கொண்டவர்களோ, கைவினைஞர்களோ கிடையாது. நிலபுலன்களும் கிடையாது.
யாரோ சொன்னார்கள் என்று கொஞ்சம் கதை, கவிதை ஆகியவற்றை நூலகத்தில் படிக்க முயற்சி செய்தேன். சரிப்படவில்லை. நன்கு படித்துப் பிறகு எழுதவும் ஆரம்பித்து இருந்தால் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் தமிழனாக நான் இருந்திருப்பேனோ என்னவோ?

இந்த நிலையிலிருந்து ஒரு விடுதலையைப் போல (என் வீட்டார் கருதியதைப்போல கடவுள் புண்ணியத்தில்) எனக்கு வேலை கிடைத்தது.

(ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டேனோ? முன்னே சொன்னபடி உடன் ஊர்சுற்றிய நண்பர்களைப்பற்றி இனி சொல்ல வேண்டியது தான். பிறகு இருக்கவே இருக்கிறது நான் வேலை பார்த்த லட்சணம்!)

( அப்புறம் என்ன? அப்புறம் பாக்கலாம்)

   ஆண்டாள் ஊசல் !  – தில்லைவேந்தன்                

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

Related image

சூரியதேவன் இதைக் கேட்டதும் ‘ ஆஹா , இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருக்கும்போது கவலை எதற்கு ?’ என்று மனதில் நினைத்ததுமட்டுமல்லாமல் வாய்விட்டும் கூறினான். ஸந்த்யாவின் மீது இருந்த காதல் வெறியில் அவளுக்காத் தன் உடல் பொருள் பிரகாசம் அனைத்தையும் இழக்கும் மன நிலையில் இருந்தான் சூரியதேவன்.

“விஸ்வகர்மா அவர்களே! கவலையை விடுங்கள். நானே என்னைப் படைத்த பிரும்ம தேவரிடம் சென்று, என் பிரகாசத்தின் அளவை ஸந்த்யா தாங்கும் அளவிற்கு நிரந்தரமாகக் குறைத்துக் கொள்கிறேன்.அதனால் உலகத்தில் எந்த மூலைக்கும் பாதிப்பு இல்லாமலும் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.

 “வேண்டாம்! வேண்டாம்! ஸந்த்யாவின் பிறப்பு ரகசியத்தில் நான் குறுக்கிட்டதற்கே அவர் என்னிடம் கோபமாக இருக்கிறார். இதை அவர்  நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் அவருக்குத் தெரியாமல்தான் இந்தக் காந்தச் சாணை பிடிக்கப்படவேண்டும். இந்தச் சிகித்சைக்குப் பிறகு தங்கள் திருமேனியின் செவ்வண்ணம் சற்றுக் குறைந்து கருமை படரக்கூடும். இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர் அதிகமாகும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பழைய பிரகாசம் வளரும். ஸந்த்யாவால் தங்களைத்  தாங்க முடியாதபோது மீண்டும் தாங்கள் இந்தச் சாணையைப் பிடித்துக் கொண்டால்  போதும்” என்றார் விஸ்வகர்மா.

“தங்கள் ஆசைப்படியே நடந்து கொள்கிறேன். தங்கள் ஆசியும் ஸந்த்யாவின் அன்பும் எனக்குக் கிடைத்தால்போதும்” என்று கூறி சூரியதேவன் அவரை வணங்கினான்.

ஸந்த்யாவின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. பெருமையில் அவள் உள்ளமும் பூரித்தது.

“ ஸந்த்யா! இப்பொழுதே அந்த சந்திரகாந்தச் சாணைச்   சிகிச்சையை நான் சொல்லிக் கொடுத்ததுபோலச் செய்துவிடு. இதை, ஒரு மனைவிதான் தன் கணவனுக்குச் செய்யமுடியும். பத்துப் பதினைந்து நாழிகைகளில் இதைச் செய்துவிடலாம். ஆனால், அது முடியும்வரை நீ சூரியதேவருடன் இணைந்துவிடக்கூடாது. அது மிக மிக முக்கியம். உங்கள் ஆசை எல்லை மீறினால் உன் மேனியை  அவரது கிரணங்கள் உருக்கிப் பொற்குழம்பாக  மாற்றிவிடும். அதன்பின் உன்னை பழைய உருவிற்குக் கொண்டுவருவது பிரும்மராலும் முடியாது. ஆகவே மகளே! இந்தக் கறுப்புத் திரையை உன் கண்களில் கட்டிக்கொள். இதன் வழியாக நீ அவரை நன்கு பார்க்கமுடியும். ஆனால் அவரின் வெப்பம் உன் கண் மூலமாக வந்து உன்னை ஊடுருவாது. உங்கள் இருவரையும் எமது ஆராய்ச்சிச் சாலைக்கு அழைத்துப்போக புஷ்பக விமானங்கள் வரும். மகளே உன் சமத்து! ” என்று கூறிவிட்டுக் கனத்த இதயத்துடன் விஸ்வகர்மா சென்றார்.

இரு விமானங்களில் தனித்தனியே சென்று மேரு மலையின்  அடிவாரத்தில் இருக்கும் ஆராய்ச்சிச் சாலைக்குக்குள் நுழைந்தார்கள்.

யாருமில்லாத அந்தத் தனியிடத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிந்தது. இருவர் இதயங்களும் வரப்போகிற ஆபத்தைப் புறக்கணித்துவிட்டு இணைந்து கொள்ள விரும்பின.அவ்வளவு ஆழமாக காமன் கணைகள் இருவர்மீதும் பாய்ந்திருந்தது.  ஆசை பயத்தை வெல்லுமா , இல்லை பயம் ஆசையை வெல்லுமா  என்பது  புரியாத  நிலையில் இருவரும் இருந்தார்கள்.

 உலகைப் படைக்குமுன்னே  ஒரு விதியையும் படைத்துவிட்டான் பிரும்ம தேவன்.

விதி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  விதியுடன்  நவ கிரகங்களும்  வேடிக்கை பார்க்கவந்திருந்தன.  

(தொடரும்)

இரண்டாம் பகுதி

எமியின் பேச்சைக்கேட்டு எமனும் திகைத்துவிட்டான்.

ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப்போல் பேசிய அவளை எப்படிப் பாராட்டுவதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அதிலும் தன் வாழ்வில் நடந்த அந்தத் துயரச் சம்பவங்களைப்பற்றி அவள் பேசியது அவனைப் பழைய நினைவுகளில் மூழ்கச் செய்தது.

அவன் எவ்வளவு முயன்றாலும் மறக்க முடியாத அந்த நாட்கள் !

எமியை அழைத்துக் கொண்டு அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக் களைக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“  சகோதரி! உன்னுடைய இன்றைய பேச்சு என் மனதில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்டது. அதைப்பற்றி நாம் மேலும் பேச ஆரம்பித்தால் அது பெரிய கொந்தளிப்பில் கொண்டுபோய்விடும். அதை அப்படியே விட்டுவிடுவதுதான் நமக்கு நல்லது.  நாளை நாம் நரகபுரிக்குச் செல்வோம். அங்கு நீ பார்க்கவேண்டியது, செய்யவேண்டியது ஏராளமாக இருக்கின்றன. தற்போது நீ சற்று ஓய்வெடுத்துக்கொள்!. சித்திரகுப்தனிடம் எனக்குச் சற்று வேலை இருக்கிறது.அதை முடித்துவிட்டு உன்னிடம் வருகிறேன்” என்று கூறி எமன் புறப்பட்டான்.

அங்கே எமனுடைய அலுவலக அறையில் சித்திரகுப்தன் மூன்று பேரிடம் விவாதித்துக்கொண்டிருந்தான். வந்திருப்பவர்கள் பூலோகத்து ஆட்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் நால்வரும் எமனுடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

சித்திரகுப்தன் ஏற்கனவே இதைப்பற்றி எமனிடம் பலமுறை  விவாதித்திருக்கிறான். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் சிறிது அபிப்ராயபேதம் இருந்துவந்தது. சித்திரகுப்தன் காலங்காலமாகத் தன் தொழிலை மிகச் சிறப்புடன் செய்துவந்து கொண்டிருக்கிறான். அவன் செயல்பாட்டில் இதுவரை யாரும் குறை கூறியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எமன், சித்ரகுப்தனைத் தன் உதவியாளன் என்றோ அவன் ஒரு தனி உருவம் என்றோ எண்ணியதே கிடையாது. சித்திரகுப்தனைத்  தன் எண்ணத்தின் பிரதிபலிப்பு என்றே எண்ணினான். பல சமயம் அவனிடம், சித்ரகுப்தா! நீ தான் என் மூளை, நீ என் அருகில் இல்லையென்றால் நான் மூளையற்றவனாகி விடுவேன்’ என்று விளையாட்டாகச்சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒருவனைத்தான்  எமனும் தேடிக்கொண்டிருந்தான்.

தன் தந்தையின் வேண்டுகோள்படி தனக்குத் தர்மராஜன் பட்டம் கிட்டியதும் மனிதர்களின் மரணத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டது.  எமன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அவன் அதற்குத் தகுதியானவன் என்பதை நிரூபித்துக் காட்டியபின்  சிவபெருமான் அளித்த  பதவிதான் அது. இந்த மாபெரும் பொறுப்பை நிர்வகிக்கத் தனக்குத் தக்க துணைவன் வேண்டும் என்று எமன் சிவபெருமானிடம் யாசித்தான். அப்போது சேர்ந்தவன்தான் சித்திரகுப்தன்.

சித்திரகுப்தன் எமனிடம் சேர்ந்ததே ஒரு சிறு கதை.      

கயிலாயத்தில் ஒரு தடவை பார்வதிதேவி விளையாட்டாக ஓவியம் ஒன்றை வரைந்தாள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதற்கு உயிர்கொடுங்கள் என்று பார்வதி சிவனை வேண்டினாள். சிவனும்  ‘சித்திரபுத்திரனே வா’ என அழைக்க சித்திரத்தில் இருந்து சித்திரகுப்தன் வெளிவந்தான். சித்திரகுப்த என்ற வார்த்தைக்கு ‘மறைந்துள்ள படம்’ என்று பொருள் என்று சிவன் பார்வதியிடம் விளக்கினார்.  

அதே சமயம் இந்திரன், தன் மனைவி இந்திராணி விளையாட ஒரு  குழந்தை வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிவந்தான். அகலிகை சாபத்தால் அவனுக்குக் குழந்தை பிறக்காது என்று உணர்ந்த சிவபெருமான்,  சித்திரத்தில் பிறந்த சித்திரகுப்தனை  இந்திரனுக்குப் புத்திரனாக இருக்கும்படி அருள்புரிந்தார். சிவபெருமான் ஆணைப்படி  சித்திரபுத்திரன்  காமதேனுவின் வயிற்றில் உதித்து, ஏடும் எழுத்தாணியும் கையில் பிடித்து அவதரித்தான்.  

சித்திரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்கவேண்டும் என பார்வதி விரும்பினாள். அந்த நேரத்தில் ‘மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்லத்  தனக்கு உதவியாளர் வேண்டும்’ என்று எமதர்மராஜன், இறைவனை வேண்டிநின்றார். சித்திரகுப்தனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து, எமதர்மனின் உதவியாளராக நியமித்தார் சிவபெருமான்.

சித்திரகுப்தன் தன் ஏடுகளில் உயிர்களின் பாப புண்ணியக் கணக்கைத் துல்லியமாக ஆராய்ந்து  எழுதிவந்தான். மரணத்திற்குப் பிறகு தர்மராஜனிடம் அந்த உயிர் நிற்கும்போது, சித்திரகுப்தன் கையில் உள்ள ஏடுகள் அசையும். அந்த உயிர் செய்த பாபங்கள் புண்ணியங்கள் துலாக்கோலில் நிறுக்கப்படும். அதன் அடிப்படையில் எமன் தீர்ப்பை வழங்குவான். அந்த உயிர் செல்ல வேண்டிய இடம் சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா என்று. அதுமட்டுமல்லாமல் நரகபுரியில் அந்த உயிருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதும்  சித்திரகுப்தனின் ஏடுகளில் கண்டுள்ள கணக்கின் அடிப்படையில்தான் நடைபெறும்.

பல்லாயிரம் ஆண்டுகள் பலகோடி மக்களின் தகவல்களை ஏட்டில் எழுதிவந்த சித்ரகுப்தனுக்கு  ஏன் அவற்றை ஒரு கருவியில் பதிவு செய்து பின்னர் தேவைப்படும்போது மென்பொருள் மூலம் அவற்றை வெளியே கொண்டுவரக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. எமனுக்கு இது அவ்வளவு சரியாகப்படவில்லை. இதுவரை செய்த பணி சிறப்பாக இருக்கும்போது புதிய செயல்பாடு எதற்கு என்று வினவினான்.

“ நான் என் வேலையை மிகமிகச் சிறப்பாகச் செய்கிறேன் என்றால் அதைவிடச் சிறப்பாக புதிய முறையில் அந்த வேலையைச் செய்யத் திட்டமிடவேண்டும். இல்லையென்றால் இயந்திரத்தைப்போல மூளையும் பழுதாகிவிடும். செயல்பாட்டிலும் குறை வந்துசேர்ந்து விடும் ”  என்றான்.

சித்திரகுப்தன் கூறிய பதில் எமனை யோசிக்க வைத்தது. முடிவில் சம்மதிக்கவும்  வைத்தது. 

அதன் விளைவாகப்  பூலோகத்திலிருந்து மென்பொருள் வல்லுனர்கள் எமபுரிப்பட்டணத்திற்கு  வந்துள்ளனர்.

(தொடரும்)

இறைவன் கோவில் ஹவாய் தீவில்

அமெரிக்காவின்  ஒரு மாநிலத்திற்குப் பெயர் ” வருக வருக” (ALOHA) ! அந்த அழகுப் பிரதேசம் எது தெரியுமா?

ஹவாய்!!!

ஹவாய் என்பது வட அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு நடுவே பசுபிக் கடலில் உள்ள தீவுகளின் கூட்டம். ஹவாய் அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959ம் ஆண்டு இணைக்கப்பட்டது.  ஹவாய் என்பது 7 பெரிய தீவுகளையும், நூற்றுக்கும் அதிகமான குறுந்தீவுகளையும் கொண்டுள்ளது.

அந்த ஹவாய்த் தீவுகளில்  சுற்றுலாப்  பயணிகள் ரசிக்கும் வகையில் அருமையான நீலநிறக்  கடலும், மிதமான வெப்பநிலை கொண்ட தண்ணீரும், பல்வேறு கடல்  விளையாட்டுகளும் , கண்ணுக்குக்  குளிர்ச்சியான பசுமையான  காடுகளும் நிறைந்து உள்ளன !

அதில் உள்ள அழகான தீவுகளில் ஒன்று கௌவாய்!

இங்குதான் இருக்கிறது ” இறைவன் கோவில்” என்று அழைக்கப்படும் தமிழ் சிவாலயம். கோவில் சன்னதியில் தேவாரத்தின் ஒலி கேட்கும். சிவ ஆகமப்படி பூசையும் சடங்குகளும் தினந்தோறும் நடைபெறுகிறது.

அதனை மேற்பார்வை செய்ய குருமார்கள் இருக்கின்றனர். அங்கு HINDUISM TODAY  என்ற காலாண்டு  இதழ் பதிப்பிக்கப்படுகிறது. 

(http://www.himalayanacademy.com

Image of Hinduism Today

அந்தக் கோவில் இன்னும் முழுமைபெறவில்லை. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். 

அதன் எழில்மிகு தோற்றத்தைக் காணுங்கள்

 

Iraivan dsc8361.jpg

 

ஹனுமான் சாலிசா – தமிழில்

 

 
நித்யஸ்ரீ பாடிய தமிழ் ஹனுமான் சாலிசா
 

துளசிதாஸ் அவர்கள் எழுதிய ஹனுமான் சாலிஸாவின் மூலம்: 

தோஹா

ஶ்ரீ குரு சரன ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி
பரனஊ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்திஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகார்

த்யானம்

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம்
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம்

சௌபாஈ

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1

ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3

கம்சன வரண விராஜ ஸுவேஶா
கானன கும்டல கும்சித கேஶா || 4

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை
காம்தே மூம்ஜ ஜனேஊ ஸாஜை || 5

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா
ராமலகன ஸீதா மன பஸியா || 8

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா || 9

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே || 11

ரகுபதி கீன்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாஈ || 12

ஸஹஸ வதன தும்ஹரோ ஜாஸ காவை
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14

ஜம(யம) குபேர திகபால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா
லம்கேஶ்வர பஏ ஸப ஜக ஜானா || 17

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19

துர்கம காஜ ஜகத கே ஜேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20

ராம துஆரே தும ரகவாரே
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

னாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25

ஸம்கட தேம்(ஸேம்) ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26

ஸப பர ராம தபஸ்வீ ராஜா
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27

ஔர மனோரத ஜோ கோஇ லாவை
ஸோஈ அமித ஜீவன பல பாவை || 28

சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29

ஸாது ஸன்த கே தும ரகவாரே
அஸுர னிகன்தன ராம துலாரே || 30

அஷ்டஸித்தி னௌ(னவ) னிதி கே தாதா
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜனம ஜனம கே துக பிஸராவை || 33

அம்த கால ரகுவர புரஜாஈ
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாஈ || 34

ஔர தேவதா சித்த ன தரஈ
ஹனுமத ஸேஇ ஸர்வ ஸுக கரஈ || 35

ஸம்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈ
க்றுபா கரோ குருதேவ கீ னாஈ || 37

ஜோ ஶத வார பாட கர கோஈ
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோஈ || 38

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40

தோஹா

பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப்
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாஈ ஸப ஸன்தனகீ ஜய

“கண்டதை ” எழுதுகிறேன் – ரகுநாதன்

 
 

Related image

மீண்டும் டாக்டர் வைகுண்டம்
———————————————

“ நீங்க புது பேஷண்டா?”

“இல்லெங்க. நான் ஏற்கனவே ஒரு சர்ஜரிக்காக இங்க வந்துருக்கேன்!”

”அப்போ உங்க ஃபைல் நம்பர் சொல்லுங்க”

“நான் இப்போ பேஷண்ட்டா வரலை”

”பின்னே?”

“டாகடர் ராதா நகுலனைப்  பார்க்கவந்திருக்கேன்”

“சீஃபையா? இப்போவா? முடியவே முடியாதும்மா. பாத்தீங்க இல்ல, எவ்வளவுபேர் காத்துக்கினு இருக்காங்க”

“எம்பேர் சொல்லி நான் வந்திருக்கேன்னு சொல்லுங்க. அவங்க விருப்பப்பட்டா பாக்கறேன், இல்லென்னா போய்டறேன்!”

“என்னம்மா நீங்க! கைல குழந்தையோட வேற இருக்கீங்க! சரி, அப்படி உக்காருங்க, இப்ப உள்ள போயிருக்கற பேஷண்ட் வந்துடட்டும். நான் போய் சொல்றேன்”

தாங்க் யூ!

தடாலென்று அந்தக்கதவு திறந்தது. புயல் மாதிரி வெளியே வந்த டாக்டர் ராதா நகுலன், “ஸ்வேதா! எப்பிடி இருக்கே? க்ரீச்சிட்டுக் கத்தியவாறே ஒடிவந்து இவளை அணைத்துக்கொண்டாள்.

“எப்போ வந்தே? ஏன் காத்துண்டு இருக்கே? நாந்தான் படிச்சுப்படிச்சு சொல்லியிருக்கேனே, நீ நேரே உள்ள வரலாம்னு. உன்னை யாரானும் இங்க காத்திருக்கச்சொன்னாங்களா?

படபடவென்று பொரிந்தார்.

பயந்தவாறே அந்த ரிசப்ஷனிஸ்ட் ஸ்வேதாவைப்பார்த்து, “போட்டுக்கொடுத்திடாதே” என்று கண்களாலேயே கெஞ்சினாள்.

ஓ! யுவர் ஸ்வீட் சைல்ட்! அமெரிக்காவுக்குப்போய்ட்டே.  இல்லேன்னா நாந்தான் இவள டெலிவரி பண்ணியிருப்பேன்! வாட்ஸ் ஹர் நேம்?

“டாக்டர்! நீங்க எனக்குக் கொடுத்த வரம் இவள். வேறென்ன இருக்க முடியும் பேர் ராதாதான்!

“ஸ்வேதா! ஸ்வேதா! டாக்டர் ராதா நகுலன், அந்த மிகப்பெரிய நர்சிங் ஹோமின் தலைவி, தன்னுடைய வெயிட்டிங்க் ஹாலில் காத்துக்கொண்டிருந்த அவளுடைய பேஷண்ட்டுகளான, நேற்றைய, இன்றைய, நாளைய தாய்மார்களின் மத்தியில் கூச்சமின்றி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே ஸ்வேதாவை கட்டிக்கொண்டார்.

”இங்க யாரும்மா ஸ்வேதா? கூட வந்திருக்கிறது யாரு?”

”இதோ நாங்கதான்.’

”வாங்க, டாக்டர் கூப்டறாரு”

டாகடர் மல்லிகார்ஜுன ராவ் கண்ணாடியை ஒரு முறை துடைத்துப் போட்டுக்கொண்டார். மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை ஒரு முறை உருட்டி வைத்தார். நாற்காலியின் கைப்பிடியில் இருந்த டவலால் கையைத் துடைத்தார். முகத்தில் கவலை ரேகைகள்.

“வாங்கம்மா! வா ஸ்வேதா! உக்காருங்க, நீங்களும்தான்”

“பரவாயில்லை டாக்டர்”

“ஸ்வேதா அப்பா வரலியா?”

அவர் ஆஃபீஸ் விஷயமா காக்கிநாடா டூர் போயிருக்கார் டாக்டர்”

சரி, டெஸ்ட் எல்லாம் பார்த்தேன்மா. ஸ்வேதாவுக்கு வந்திருக்கிறது அப்பெண்டிஸைடிஸ் இல்ல. அவளுடைய ஓவரியில ஸிஸ்ட். அதும் பெரிசா இருக்கும்மா. மலிக்நண்ட் இல்லாம இருக்கணும். அந்த ராகவேந்திரர்தான் காப்பாத்தணும்.

அம்மா விசும்ப ஆரம்பித்தாள்.

”பயப்பட வேண்டாம்மா! சர்ஜரி பண்ணி எடுத்திடலாம். இப்பல்லாம் மெடிசன் ரொம்ப தூரம் வளர்ந்துடுத்து”

உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லியே?’

”ஒரு ஆபத்தும் இல்லேம்மா! ரொம்ப ஈஸியா எடுத்துடலாம்”

”நல்ல வேளை டாக்டர். பயந்துட்டேன்”

“அம்மா! சர்ஜரியில ஒவரியையே எடுக்கணும்”

“டாக்டர்!

ஆமாம்மா! உயிர்தான் முக்கியம் இல்லியா? ஸிஸ்டர்! ஸ்வேதாவை அழைச்சிண்டுபோய் வெய்ட், எல்லாம் எடுத்துடுங்களேன்”

ஸ்வேதா நகர்ந்ததும், “என்ன அம்மா! நீங்களே இப்படி பதட்டப்படலாமா? குழந்தைக்கு என்ன தெரியும்?”

டாக்டர்! அவளுக்கு கல்யாணம், குழந்தைன்னு…”

“இந்தக்காலத்துல  பையன்கள் எல்லாம் ரொம்பப் பரந்த மனஸும்மா. குழந்தை பொறக்காட்டி என்ன, அடாப்ட் பண்ணிக்கலாமே”

”டாக்டர்! அவளுக்கு 17 வயசுதான் ஆகறது. இந்த வயசுல ஓவரி ரிமூவல்ன்னா……எனக்கே தாங்க முடியல்லியே”

“என்னமா பண்ணறது! வராத வ்யாதி வந்துடுத்து. நமக்கு இப்போ ஸ்வேதாவோட உசிரு முக்கியமா இல்லியா?

அய்யோ! ஆமாம் டாக்டர்!

“ஒண்ணும் கவலைப்பாடாதீங்கம்மா! நானே ஜெனெரல் சர்ஜந்தானே! நானே அவளுக்கு ஜாக்கிரதையா ஆபரேஷன் பண்ணிடறேன். நீங்க நாளைக்கே அட்மிட் ஆகிடுங்க. இங்க பண்ணினா செலவும் கம்மிதான். ஒண்ணரை லட்சம்தான் ஆகும், இதுவே நீங்க ……அங்க போனீங்கனா சுளையா அஞ்சு லட்சம் எடுத்து வையிம்பான்”

“நாளைக்கு வேண்டாம்  டாக்டர்! அவ அப்பா நாளன்னிக்கி வந்துடுவார்”

”லேட்  பண்ணினா ஸிஸ்ட் பர்ஸ்ட் ஆயிடும். அப்புறம் என்ன குறை சொல்லக்கூடாது”

”ஒரு நாள்தானே டாக்டர்!”

”சரிம்மா, கண்டிப்பா நாளன்னிக்கு வந்து அட்மிட் ஆகிடுங்கோ”

“என்னது ஓவரி ரிமூவலா? வெளயாடறியா? பேஷண்ட் 17 வயசுப்பொண்ணுன்னு சொன்னியே?”

”ஆமாம் ப்ரொஃபசர்!”

”யாரவன் அந்த டாக்டர்? நீயா நரசிம்மா?”

”அய்யோ! நானில்லை. டாக்டர் மல்லிகார்ஜுனன்!”

“டாக்டரா? அவன் ப்ளம்பர்யா ! யூஸ்லெஸ் ஃபெல்லோ! சரி, நீ ஒண்ணு  பண்ணு! அந்த ரிப்போர்ட் எல்லாம் எனக்கு அனுப்பி வை. ஆமாம், இன்னிக்கே”

நரசிம்மா?”

“சொல்லுங்க ப்ரொஃபசர்”

”ரிபோர்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். அந்த சின்னப்பெண்ணையும் அவளோட அம்மாவையும் என்னை வந்து பார்க்கச்சொல்லு!”

”எஸ்! இன்னிக்கே நாலு மணிக்கு!”

“வாங்க! யூ மஸ்ட் பி ஸ்வேதா!”

அழாதீங்கம்மா! நீங்களே அழுதா குழந்தை என்ன பண்ணுவா?

”டாக்டர்! என் குழந்தைக்கு ஏன் இப்படி ஆகணும்?”

”அதுக்கெல்லாம் என் கிட்ட பதில் இல்லம்மா. நாங்கள்ளாம் வெறும் டாக்டர்கள். முடிஞ்ச வரைக்கும் எங்களுக்குத் தெரிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணறோம், அப்புறம் அந்த ரங்கனாதன்தான் அம்மா!

”டாக்டர்! நீங்களே வைகுண்டம் ஆச்சே! எங்களுக்கு நீங்கதான் கதி”

”நான் வெறும் வைகுண்டம்னு பேரு வெச்சவன்மா. இதெல்லாம் ஆண்டவன் செயல்.”

”நீங்கதான் எங்களுக்கு இப்போ ஆண்டவன் டாக்டர்.”

“பாக்கலாம்மா! என்னால முடிஞ்சவரைக்கும் பாத்துடலாம். இது கைனெக் சமாச்சாரம். அதனால நானே அட்டெண்ட் பண்ண முடியாது. சரியான ஒரு எக்ஸ்பர்ட் தேவை. நா கூட இருந்து உதவியும் பண்ணறேன். 17 வயசு. இப்ப போய் ஓவரிய எடுன்னு சொல்றது கொடுமை. கைனக்கிட்ட அனுப்பறேன். போய்ப்பாருங்க. அவ கைனக் மற்றும் சர்ஜன்கூட. அவகிட்டெ போங்க. நான் பேசறேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க பொண்ணுக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் ஆகி உங்க கையில் பேரனோ பேத்தியோ குடுக்கத்தான் போறா?

யாருகிட்ட அனுப்பப்போறீங்க டாக்டர்?’

டாக்டர் ராதா நகுலன்.

பைலட் படம்

குறும்படம் பல புதிய டைரக்டர்களுக்கு அறிமுகக் கடிதமாக இருந்து வந்தது… இன்னும் வருகிறது.

ஆனால் இப்போது பைலட் பிலிம் என்பதுதான் சமீபத்திய புதிய அடையாள அட்டை.

புதிதாகப் படம் எடுப்பவர், தன் கதையின்  ஒன் லைனை சொல்லுவதற்குப் பதிலாக அந்தக் கதையை ஒரு குறும்படம்மாதிரி இசை, கிராபிக்ஸ் போன்றவற்றுடன் எடுத்துத் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி அவர்கள் ஒப்புக்கொண்டபிறகு முழு அளவில் எடுப்பது இன்றைய டிரென்ட்.

அந்த மாதிரி எடுத்த அபயன் என்ற பைலட் படத்தைப்  பாருங்கள்.

 

மலடி – பொன் குலேந்திரன்

படங்கள்: நந்திதா போஸ்

Related image

அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டுபுரண்டு படுத்தாள். அழுதுஅழுது அவள் முகம் வீங்கிப்போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப்போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால் உணரமுடிந்தது. அன்று பின்னேரம் டாக்டரிடம் போய்வந்தபின் இருவரும் அதிகம் பேசவில்லை. இரவு உணவு கூட அவர்களுக்கு வெறுப்பாகயிருந்தது. ஆனால் அவர்கள் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வர போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

மௌனமாக இரவு சாப்பாட்டை அவசரம்அவசரமாக முடித்துக் கொண்டு நேரத்தோடு வந்துபடுத்தார்கள். வழமையில் தேவன் தான்  பொறியியலில் உயர் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் யூனிவர்சிட்டியில் நடந்ததைக் கதைகதையாய் சொல்லுவான். அதே போல் அபிராமியும் தான் தற்காலிகமாக வேலை செய்யும் ஒக்ஸ்பேர்ட் ஸ்டீரீட் கடையொன்றில்  அன்று சந்தித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வாள். ஆனால் அன்று மட்டும் இருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அந்த மெடிக்கல் ரிப்போர்ட்தான் காரணம். என்ன முடிவை நாங்கள் டாக்டருக்குச் சொல்வது? அவர்கள் எதிர்பார்க்காதவாறு பரிசோதனைக்குப் பின் வந்த ரிப்போர்ட் அமைந்திருந்து. ஊர் நினைத்தது ஒன்று ஆனால் உண்மை வேறு.

*******

Image result for kannaththil muthamittaal nandhitha bose and her husband

அபிராமிக்குத் திருமணமாகும்போது வயது இருபத்திஇரண்டு. பல்கலைக் கழகத்தில் கணக்கியலில் சிறப்புச் சித்தி பெற்று, படிப்பு முடித்து அடுத்த சில மாதங்களில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவள் திருமணத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. அவள் மேலும் படிப்பைத் தொடர்ந்து எம்.எஸ்சி செய்யப்போட்டிருந்த திட்டமெல்லாம் நினைவேறாமல் போய்விட்டது. காரணம் அவளின் அப்பாவுக்கு இன்னும் அதிககாலம் தான் உயிரோடை இருக்கமாட்டேன் என்ற பயம்தான் பிடித்துக் கொண்டது. “தனக்கு மாரகத் திசை தொடங்கிவிட்டதாம். தான் சாகுமுன் ஒரு பேரப் பிள்ளையையாவது பார்த்தாகவேண்டும்” என்று அவர் காரணம் காட்டினார். அம்மாவுக்கு அபிராமி அவ்வளவு இளமையில் திருமணம் முடிப்பது விருப்பமில்லை. ஆனால் தந்தையின் வற்புறுத்தலின்பேரில் திருமணம் நடந்தது.

தேவன் அவளின் தகப்பனுக்குத் தூரத்துச் சொந்தம். மின் பொறியாளராகக் கொழும்பில் வேலைபார்த்தவன். அவனுக்கும் அபிராமிக்கும் வயது வித்தியாசம் அவ்வளவுக்கு இல்லை. ஆக மூன்று வயதுதான் வித்தியாசம். அபிராமி பெற்றோருக்கு ஒரே மகள். ஓவசியராக இருந்து நிறையச் சம்பாதித்தவர் அபிராமியின் தந்தை தம்பிராசா. ஓவசியர் தம்பிராசா சேர்த்த சொத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடு, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஒரு பெரிய வீடு அவர்  பெயரில் இருந்தது. அதில் கொழும்பு வீட்டை அபிராமிக்குச் சீதனமாகக் கொடுத்தார். தனக்குப்பிறகு தன் சொத்தெல்லாம் அபிராமிக்கு என்றும் அவளுக்குப் பிறகு அவள் பிள்ளைகளுக்கும் என்று அவர் உயில் எழுதி வைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை.

அபிராமிக்குக் கலியாணமாகிப் பத்து வருஷமாகியும் பிள்ளை பாக்கியம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அந்தக் கவலை அவளை வாட்டியது. ஊரில் அதை வக்கணையாகப் பலர் பேசினார்கள். மலடி என்ற பட்டம் அவளைத் தேடிவந்து ஒட்டிக்கொண்டது. தகப்பன் ஊரை ஏமாற்றிச் சொத்து சேர்த்தார். அது பிள்ளையிளை காட்டிப் போட்டுது என்று மறைமுகமாக சிலர் கதைத்தனர். கலியாண வீடு, சாமித்திய சடங்கு, சுமங்கலி பூஜை போன்ற நல்ல காரியங்களுக்கெல்லாம் போகாமல் அவள் ஒதுங்கி நின்றாள்.

அவள் சாதகத்தின்படி அவளுக்கு உதயத்து செவ்வாய், அதானல் மணவாழக்கையில்  குறையிருக்கும் என்று சாஸ்திரி சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. திருமணத்துக்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு சாந்திகூட அவள் பெற்றோர்கள் செய்தார்கள். “அப்ப ஏன் அப்பா தெரிந்திருந்தும் தான் சேர்த்த சொத்தை அனுபவிக்க ஒரு வாரிசு வேண்டும் என்றதானே அவசரப்பட்டுக் கலியாணம் எனக்கு செய்து வைத்தார்”. அபிராமி தாயிடம் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வாள். தேவன் தன் மனைவிமேல் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருந்தான். அவள் மனது நோக எதுவும் பேசமாட்டான்.

அதனால் அவள் இரண்டாம் திருமணம் அவனை செய்யச் சொன்னபோது கோபத்தில் இரண்டு நாள் அவன் அவளோடு பேசவில்லை. “அபிராமி! நான் பத்து வருஷம் உன்னோடு கூடிவாழ்ந்து போட்டு எப்படி நான் இனி இன்னொருத்தியோடு வாழமுடியும்? ஒரு குழந்தைக்காக நான் மறுதிருமணம் செய்யவேண்டுமென்றால் ஒரு சமயம் எனக்கு இரண்டாம்தாரமாக வருபவளுக்கும் பிரச்சனையிருந்து குழந்தை கிடைக்காமல் போய்விட்டால்? தேவன் முற்றாக மறு திருமணம் செய்ய மறுத்துவிட்டான். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்கக்கூட அபிராமியின் பெற்றோர் அவ்வளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

*******

மேல் படிப்புக்கான  மூன்று வருடப் புலமைப் பரிசுபெற்று தேவன் லண்டன் பல்கலைக்கழகத்திற்குப் போனபோது அவன், கூடவே அபிராமியையும் அழைத்துச்சென்றான். ஊர் வாயில்இருந்து தப்புவதற்கு அது நல்ல சந்தர்ப்பமாக அவனுக்குப் பட்டது. அதுவுமன்றி மனைவியைப் பிரிந்து அவனால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தேச மாற்றமாவது ஒரு நல்லதைச் செய்யட்டும் என்ற ஒரு நம்பிக்கை அவர்கள் இருவருக்கும்.

லண்டன் வந்து சிலமாதங்களில், அவனோடு கொழும்பு றோயல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பன் சந்திரனைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு ஏற்பட்டது. கல்லூரிக் காலத்தில் சந்திரனும் தேவனும் இணைபிரியாத நண்பர்கள். சந்திரனும் தேவனும் ஒரே வருடம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தவர்கள். சந்திரன் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றான். தேவன் சிவில் என்ஜினியரானான். படிக்கும் காலத்தில் பம்பலபிட்டி லோரிஸ் வீதியில் உள்ள ஒரு அறையொன்றில் இருவரும் தங்கிப் படித்தனர். பல்கலைக்கழகப்    படிப்புக்குப்பின் அவர்கள் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரன் தன்னோடு படித்த ஒரு தமிழ் பெண் டாக்டரைக் காதலித்து மணமுடித்து லண்டன் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டான். சந்திரனும் அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

சந்திரனைச் சந்தித்தபோது தேவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சந்திரனின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது  என்றும் அவனுக்கும் தன்னைப்போல் குழந்தைகள் இல்லை என்றும் அவன் சொன்னபோது தேவனால் நம்பமுடியவில்லை.. என்ன நடந்தது என்று கேட்டபோது லண்டன் வந்தபின் தானும் மனைவியும் ஒரு கார் விபத்துக்கு உள்ளானதாகவும் அதில் கர்ப்பமாகயிருந்த தன் மனைவி இறந்ததாகவும் சொல்லி சந்திரன் அழுதான். அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று தேவனுக்குத் தெரியும் . சந்திரன் மனைவி வசந்தியைக் கொழும்பில் படிக்கும்போது பலதடவை சந்தித்திருக்கிறான். படித்தகாலத்தில், தினமும் பம்பலபிட்டி பிள்ளையார் கோயிலில் சந்திரனோடு அவளைக் காணலாம். நல்ல மனம் உள்ள சந்திரனுக்கு வாழ்க்கையில் இப்படியும் ஒரு துயரமா என்று தேவனும் அபிராமியும் கவலைப்பட்டார்கள்.

சந்திரன் லண்டனில் ஒரு கைனகோலஜிஸ்ட்டாக வேலை செய்தான். அவனது கைராசி என்னவோ அவனிடம் வந்த கேஸ்கள் எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தைவேறு தாய்வேறாக சென்றதாகக் கேள்விப்பட்டான். பிள்ளைகள் இல்லாதவர்களின் பிரச்சனைகளைக்கூட அவன் தீர்த்து வைத்தாக அவன் நண்பர்கள் கூறியதைக் கேட்டு மனதுக்குள் தன் பிரச்சனையையும் அவனோட பேசி ஒரு தீர்வு காணலாமா என அபிராமியுடன் கலந்து பேசினான் தேவன். இறுதியில் சந்திரனின் மருத்துவ உதவியை அவர்கள் நாடினார்கள்.

“உனக்கு இந்த உதவியை நான் செய்யாவிட்டால் எங்களுக்கு இடையே உள்ள நட்புக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனக்குத்தான் குழந்தைச் செல்வம் இல்லாவிட்டாலும் உனக்காவது கிடைக்க வழியிருக்கா என்று பார்ப்போம்” என்றான் சந்திரன்.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் தேவனும் அபிராமியும் முடிவை எதிர்பார்த்து நின்றனர். வந்த மெடிக்கல் ரிப்போர்ட் சந்திரனைத் திகைக்க வைத்தது. அதை தேவனுக்கும் அபிராமிக்கும் எடுத்துச்சொல்ல அவனுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது .

Related image

ரிப்போர்டின்படி அபிராமியின் கருப்பைபையில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சந்திரனின் விந்துக்கள் குழந்தையை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. சிறு வயதில் அவனுக்கு வந்த ஏதோ ஒரு கடுமையான வருத்தம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்திரன் விளக்கம் கொடுத்தபோது, தேவன் மனைவியின் கையைப்பிடித்து  ஓ வென்று அழுதுவிட்டான். அபிராமி கலங்கவில்லை. சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு “எதற்காக இப்ப நீங்கள் அழுகுறீர்கள். எமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்றாள் வார்த்தைகள் தழும்ப அபிராமி.

“ஊர் உனக்கு மலடி என்று பட்டம் சூட்டிற்று. உண்மையில் நான்தான் மலடன். எமது சமுதாயம் எந்தக் குறையிருந்தாலும் முதலில் அந்தப் பழியை பெண்மேல்தான் போடும். என்னை மன்னித்துவிடு. திருமணத்துக்கு முன் இதைப்பற்றித் தெரிந்திருந்தால் நான் திருமணத்துக்குச் சம்மதித்திருக்க மாட்டேன். உன் வாழ்க்கையைப் பாழடித்திருக்க மாட்டேன்” என்று அபிராமியின் கையைப் பிடித்து அழுதான். அபிராமி பேசாமல் அமைதியாக “என்ன விசர் கதை கதைக்கிறியள். எது நடக்கவேண்டும் அது நல்லதாகவே நடக்கத்தான் செய்யும். மனம் வருந்திப் பயன் இல்லை, இனி நடக்கப்போவதைப் பார்ப்போம். கீதையில் சொன்ன தத்துவும் பேசினாள் அபிராமி.

சற்று நேரம் சிந்தித்து விட்டு “டாக்டர் இதுக்கு தீர்வு இல்லையா?” என்றாள் மனத் தைரியத்துடன் அபிராமி.

“ ஏன் இல்லை. இந்த நவீன விஞ்ஞான உலகில் இல்லாத தீர்வுகளா” என்றான் டாக்டர் சந்திரன் அமைதியாக.

அந்தப் பதிலைத் தேவனும் அபிராமியும் டாக்டர் சந்திரனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

“என்ன சந்திரன் சொல்லுகிறீர்கள்? எங்களுக்குக் குழந்தை கிடைக்க வழியுண்டா?” தேவன் கேட்டான்.

“ஆம் உண்டு. ஆனால் படித்த நீங்கள் இருவரும் உங்கள் இருவருக்குள்ளும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இது உங்கள் இருவருக்கும் எனக்குமிடையிலான இரகசியமக இருக்கட்டும்” என்று கூறிவிட்டுச் செயற்கை முறையில் கருப்பையுக்குள் விந்துவை செலுத்திக் குழந்தை பெறவைக்கும் முறையை விபரமாக விளக்கினார் சந்திரன்.
தேவனும் அபிராமியும் அதைக் கேட்டதும் வாயடைத்துப்போய் இருந்தார்கள்.

“என்ன பேசாமல்  மெளனமாகயிருக்கிறீர்கள்? பத்து வருஷமாக உங்களுக்குக் குழந்தையில்லை. இப்போ ஒரு வழி இருக்கிறது. அதுவும் நீங்கள் லண்டனில் இருப்பதால் இதை என்னால்  நீங்கள் சம்மதித்தால் திருப்திகரமாக நிறைவேற்றி வைக்கமுடியும். இருவரும் கலந்து ஆலோசித்துப் பதில் சொல்லுங்கள் “ என்றார் சந்திரன்.

“யார் விந்தை என் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்துவீர்கள்” என்ற கேள்வியை எழுப்பினாள் அபிராமி.;
“ நிச்சயமாக அது உங்கள் கணவனுடையதாக இருக்கமுடியாது. ஏன் என்றால் அது சக்தியிழந்த விந்துக்கள். அதற்கு ஒரு விந்து வங்கியில் இருந்து உங்கள் இனத்துக்கும், நிறத்துக்கும் பொருத்தமானதொன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு சில விதிமுறைகளும் பரிசோதனைகளும் உண்டு. அந்த விந்துக்கு உரிமையாளர் யார் என்பது பரம இரகசியமாக வைக்கப்படும். உங்களுக்குத் தெரியவராது. அதனால்  பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரக்கூடாது. அதுவும் நோய் இல்லாத ஒருவரிடம் பெற்ற விந்துவாக இருக்கும். ஏன் என்றால் பிறக்கும் குழந்தை அழகான, ஆரோக்கியமான, உங்களைப்போல் நிறமுள்ள குழந்தையாக இருக்க வேண்டுமல்லவா. அதுவும் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தையாக இருக்கவேண்டும். சுவிகாரம் எடுப்பதிலும் பார்க்க இது ஒரு படி மேல். ஏன் என்றால் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தையல்லவா. அக்குழந்தையின் இரத்தத்தில் அபிராமியின் மரபுணுவும் கலந்திருக்கும். அதைத்தானே நீங்களும் விரும்புவீர்கள் என்ன?” என்றார் சிரித்தபடி சந்திரன்.

தேவன் அபிராமியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகத்தில் எதுவித உணர்வுகளும் தெரியவில்லை. கண்கள் கலங்கியது.

“எனக்குத் தெரியும், இது உங்களால் உடனடியாக எடுக்க முடியாத முடிவென்று. நீங்கள் இருவரும் அவசரப்படாது ஆழ்ந்து சிந்தித்துப் பேசி முடிவு எடுத்துவிட்டு உங்கள் இருவருக்கும் சம்மதம் இருந்தால் என்னை வந்து சந்தியுங்கள். பின் மற்றவையை நான் கவனிக்கிறேன்’” என்றார் டாக்டர் சந்திரன்.

*******

கட்டிலின் நேர் எதிரான சுவரில் தொங்கிய படத்தில் சிரித்தபடி பெரும் விரலை சூப்பியபடி இருந்த அழகிய குழந்தையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார்கள் தேவனும் அபிராமியும். இதுபோல இருக்குமா டாக்டர் சொன்ன குழந்தை? இரவு இரவாக தேவனும் அபிராமியும் ஒரு முடிவுக்கு வரமுடியாது தவித்தது அந்தப் படத்தில் இருந்த குழந்தைக்குத்தான் தெரியும். நடப்பது நடக்கட்டும். எனக்கும் அவருக்கும் தேவை என்மேல் உள்ள மலடி என்ற பட்டத்தைப் போக்க ஒரு குழந்தை, என்று அபிராமி மனதில் ஒரு முடிவுக்கு வந்தவள்போல் கண்களைத் துடைத்துக்கொண்டு,

”அத்தான் நாளைக்கு டாக்டர் சந்திரனுக்கு டெலிபோன் செய்து நாங்கள் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள்”  என்றாள் அபிராமி மனத்தைரியத்துடன்.

“அதைத்தான் அபிராமி நானும் தீர்மானித்தனன். நான் நினைக்க நீ சொல்லிப்போட்டாய்” என்றான் தேவன் அமைதியாக.

படத்தில் இருந்த குழந்தை அவளைப்  பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. அவளுக்குத் தன் வயிற்றில் அதேபோல் குழந்தை ஒன்று ஊர்வதுபோன்ற உணர்வு. தான் தாயாகப் போகிறேன் என்ற பெருமை முகத்தில் பிரதிபலித்தது. இனி சமூகம் தன்னை மலடி என்று ஒதுக்கிவைக்க மாட்டாது. சடங்குகளில் எனக்கு ஒரு இடமுண்டு.

******

ஒரு வருடத்துக்குள் அபிராமி ஒரு அழகிய ஆண் குழந்தைக்குத் தாயானாள். தங்களைப் பார்க்க வந்த சந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகத் தங்கள் இரு கைகளைக் கூப்பி தேவனும் அபிராமியும் வணங்கினர்.

“ இதென்ன பழக்கம் தேவன் ! என் கடமையைத்தான் நான் செய்தனன். நீ என் நண்பன். அதை மறந்துவிடாதே. நீ  என்னைக் கும்பிடுவது எனக்கு மனதுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது ” என்று கூறியபடி அவனது இரு கரங்களையும்பற்றிக் கீழே தாழ்த்தினார் சந்திரன்.

“ டாக்டர்!  இவர் படிப்பு இன்னும் நான்கு மாதங்களில் முடியப்போகிறது. அதற்குப்பிறகு நாங்கள் ஊருக்குத் திரும்ப இருக்கிறோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தங்களுக்கு பேரப்பிள்ளை கிடைத்ததையிட்டுப் பெரிய மகிழ்ச்சி. கோல் எடுத்து பேசிச்சினம். “ என்றாள் அபிராமி.

“ அவர்களுக்கு ஏதாவது சொன்னீர்களா?” என்றார் சந்திரன்.

“ உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் மீறுவோமா?” என்றார் தேவன்.

“ நல்லது. நானும் மாற்றலாகி கிலாஸ்கோவுக்குப் போகிறேன். இனி உங்களைச் சந்திப்பேனோ தெரியாது. அதனால் உங்கள் குழந்தைக்கு என் சிறிய பரிசு கொடுக்க விரும்புகிறேன்.” என்று ஒரு கடித உறையை அபிராமியிடம் சந்திரன் கொடுத்தார்.

“ என்ன டாக்டர் இது?.. நாங்கள் அல்லவா உங்களுக்குப் பரிசு தரவேண்டும்” என்றாள் அபிராமி.

“ சந்திரன் நீர் செய்த இந்த பெரிய உதவி போதாது என்று இதுவுமா?” தேவன் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கும் தன் கரங்களினால் சந்திரனின் கைகளைப் பிடித்தான்.

சந்திரன் பதில் பேசாது குழந்தையைத் தேவனிடம் இருந்து வாங்கினான். குழந்தையின் மிருதுவான கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டுத் தன் கண்கணில் வந்த கண்ணீரை அவர்கள் காணாதவாறு துடைத்துக் கொண்டு,

“ சரி நான் வாறன் எனக்கு வேலையிருக்கு” என்று பதிலை எதிர்பார்க்காமல் அறையைவிட்டு வெளியேறினான். அவர் நடந்த விதம் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. டாக்டர் சந்திரன் அறையைவிட்டு வெளியேபோய் சில நேரத்துக்குப் பின் தேவன் கடித உறையை அபிராமியிடம் வாங்கிப் பிரித்தான். அதனுள் சிறு கடிதமும் ஒரு பத்திரமும் இருந்தது. கடிதத்தில் இருந்ததை தேவன் வாசித்தான்

‘அன்பின் நண்பன் தேவனுக்கும் சகோதரி அபிராமிக்கும்.
இதோடு என் பெயரில் என் இறந்துபோன பெற்றோர் எழுதிய சொத்துக்கைளை எல்லாம் உங்கள் குழந்தையின் பெயரில் எழுதி வைத்திருக்கிறேன். இனி எனக்குச் சொத்துக்கள் தேவையில்லை. நான் மறுமணம் செய்து கொள்ளப்போவதில்லை. என் வாழ்வில் எனக்கென ஒரு வசந்திதான். இது உங்கள் மகனுக்கு என் பரிசு. ஒரே ஒரு வேண்டுகோள். என் மனைவி விபத்தில் இறக்கும்போது அவள் ஆறுமாதம் கர்ப்பம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவள் வணங்கும் முருகன் பெயரான “அழகன்” என்ற பெயர் வைக்க இருந்தோம். ஆனால் அது எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதனால் அழகான உங்கள் மகனுக்காவது அந்தப் பெயரை வைப்பீர்கள் எனத் தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன். அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்களா?’

இப்படிக்கு
சந்திரன்

கடிதத்தினதும் உயிலினதும் அர்த்தங்களை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பகிர்ந்துகொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இப்படியும் ஒரு மனிதனா என்றது அவர்கள் இருவரினதும் உள்ளங்கள்.

******

 

மரணம்  ஒரு கற்பிதம் ( ஒரு கட்டுரை) – வைதீஸ்வரன்

Related image

நேற்று ஒரு கார்டு வந்தது. ..”மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம்
போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் ”
என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி இப்படிக்கு சிவராமன் ” என்று கையெழுத்திட்டிருந்தது.

கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது.
யார் இந்த சம்பந்தம்… யார் இந்த சிவராமன் இவர்களுக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ?

வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாகத் தெரியவந்தது. அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின்  வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை.

என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ
மக்களைப்போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில்
எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பவர். இன்று இறந்து போயிருப்பவர்…

இந்த யதார்த்தத்தில் திரு சம்பந்தத்தின் சோகமான
மரணம் என்னை எந்த வகையில் பாதிக்கக் கூடும் ..ஏதோ ஒரு
மனிதனின் இழப்பு என்ற தகவலைத் தாண்டி ?

இன்னும் யோசித்துப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரையில்
அவர் எப்போதுமே இறந்தவர்தான்

ஒருவரின் சாவு என்பது அவருக்கும் நமக்கும் உள்ள அன்றாட
நெருக்கத்தையும் சார்புகளையும் உறவையும் பொறுத்தே
முக்கியத்துவம் பெறுகிறது..

நமது குடும்பம் காலப்போக்கில் குடும்பங்களாக விரிவடைந்து
அவைகள் மேலும் உபகிளைகளாக பல ஊர்களில் படர்ந்து
பல்கிப் பெருகும்போது நமக்கு ஆரம்பத்தில் தெரிந்த குடும்ப
உறவுகள் பிறகு வெறும் நட்புக்களாகி பிறகு வெறும் அறிமுகங்களாகப் பிறகு அதுவும் நீர்த்துப்போய் அவர்கள் அதிகம் பாதிக்காத எங்கோ வாழ்கின்ற நபர்களாக மாறிப் போய்விடுகிறார்கள்

இந்த மாற்றங்களே ஒரு வித மரணமாக அல்லது மரணத்தின்
வெவ்வேறு வகையான சாயல்களாக எனக்குத் தோன்றுகிறது.

                                                * * * **

சில வருஷங்களுக்கு முன் என் சகோதரர் இறந்து போனார்.
அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள்.

சகோதரர் இறந்துபோன சில தினங்களுக்குப் பிறகு ஒரு
நண்பர் வாசலில் வந்து கதவைத் தட்டினார்.. திறந்தேன்…

”ராமனாதன் இல்லையா..? ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே
வந்தார். அவர் வெளியூருக்குப்  போய்விட்டுப் பத்து நாட்களுக்குப்பிறகு அப்போதுதான் வருகிறார்.. நாங்கள் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு எப்படி இதைச் சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் நின்றோம்..

அவருக்கு எங்கள் மௌனம் அர்த்தமாகவில்லை. அந்தச் சமயம் எங்கள் அண்ணி தலைவிரிகோலமாகப் பொட்டு இல்லாமல் வெளியே வந்து எட்டிப் பார்த்து நண்பரைப் பார்த்தவுடன் ”ஓ”வென்று அழுதார்.. ”ஒங்க நண்பர் போய்ட்டார் ”……..

வந்த நண்பர் ஒரு நிமிஷம் திகைத்துப்போய் தலையைப் பிடித்துக்
கொண்டு கீழே தடாலென்று விழுந்தார்.. ”அய்யோ அய்யோ..’ என்று
கதறினார்.. அவரால் அந்த அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

”ஊர்லேருந்து வந்தவுடனெ இன்னிக்குக் கண்டிப்பா வந்து பாப்பேன்னு சொல்லியிருந்தேனே..இப்படி என்னை ஏமாத்திட்டுப் போய்ட்டானே ! இனிமே அவன் மாதிரி ஒரு மனுஷனை எங்கே போய் பாப்பேன்..” என்று வாய் குளறி புலம்பினார்… வெகுநேரம் ..

நண்பனின் இந்த நிரந்தரப் பிரிவு ஈடுசெய்ய முடியாத இழப்பாக
அவருக்குத் தோன்றியது. மரணம் அதன் முழு உக்கிரத்துடன் அவரைத் துடிக்க வைத்துக்கொண்டிருந்தது.

சற்று நேரம் விம்மி அழுத பின்பு மெள்ளத் தாங்கி எழுந்தார்.

”ராமனாதனுக்கு இந்த புஸ்தகத்தைக் கொடுக்கலாம்னு ஊர்லேருந்து வாங்கிண்டு வந்தேன்..இதை என் ஞாபகமா அவன் போட்டோ அடியிலெ வைச்சுடுங்கோ.. என்று ஒரு புஸ்தகத்தை மேஜையின் மேல் வைத்தார்..

அதன் தலைப்பு ”Life is beautiful ”

                                                ** ** ** **

தான் இறந்து போனபிறகு நண்பர்களில் யார் யார் எந்த எந்த விதமாக அனுதாபத்தைத் தெரிவிக்கிறார்கள், விரோதிகள் எவ்விதம் சந்தோஷப்படுகிறார்கள்  என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன், தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியைப் பேப்பரில் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தான் ஒரு மேதை.

 அவன் பெயர்  பி டி பார்னும் (P. T Barnum) அமெரிக்காவில் ஸர்க்கஸ் கலையில் புரட்சிகள் செய்த ஒரு வித்யாசமான மனிதன் ..

மனித உள்மனக் கருத்துகளைக் கிளறிப் பார்க்க மரணம் இவனுக்கு
ஒரு வசதியான நாடகமாக அமைந்தது….

                                              ** ** **

ஒரு பெரிய அரசியல் தலைவர் ஆஸ்பத்திரியில் அவசரப்
பிரிவில் சேர்க்கப்பட்டுத் தீவிரமான சிகிச்சையில் உயிரோடு
போராடிக் கொண்டிருக்கும்போதே அவர் மரணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்த சில அரசியல் பிரமுகர்கள் அவசர ஆத்திரத்தால்
அந்த தலைவரின் இரங்கல் செய்தியைப் பார்லிமெண்டில் அறிவித்துவிட்டார்கள். பிறகு அல்லோலகல்லோலமாகி அந்தத்  தவறான இரங்கலுக்காக மன்னிப்புக் கோரப்பட்டது; சில ஆண்டுகளுக்கு முன்னால்..

இந்தச் சம்பவம் பலருக்கும் இப்போது நினைவுக்கு வரலாம்…

மரணம் சிலரை சில சமயம் முட்டாளாக்கி விளையாடுகிறது.

                                                 ** ** **

கடைசியாக மரணத்தை பற்றிய இன்னொரு பரிமாணத்தைச் சொல்லும் என் சிறிய கவிதை ஒன்று

”மரத்தை விட்டுப் பிரிந்து மலர்கள் மண்ணில்   மெத்தென்று விழுகின்றன;

சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு. 

 

                                                      ** ** **

கவிதைக்குள் குடும்பம் – நிலா ரவி

என்ன செய்யப் போகிறாய்..? –கோவை சங்கர்

Image result for அவ்வை முருகன்

என்ன செய்யப் போகிறாய் – முருகா
என்ன செய்யப் போகிறாய்?

பழத்திற்கு அண்ணனுடன் சண்டையிட்டாய்
பெற்றோர்கள் தெய்வமென்று நிலைநாட்ட
கோபமொடு பழனிக்கு ஓடிவிட்டாய்
கள்ளமிலா குழந்தையின் குணங்காட்ட!

பெற்றோரை அன்புடன் பேணுவது உன்காலம்
முதியோர்கள் விடுதிக்கு அனுப்புவது என்காலம்
கல்லான நெஞ்சங்கள் கரைவது எப்போது
எண்ணங்கள் நல்லவையாய் மாறவேண்டும் இப்போது!

ஆளாகும்வரை அம்மா அதற்குப்பின் அவள் ஆயா
பருவம்வரை தந்தை அதற்குப்பின் அவர்கந்தை
அன்புக்குயாம் அடிமையிலை வேண்டாமந்த பாசவலை
நான்சுகமாய் வாழவேண்டும் இதுஇப்போது எங்கள்நிலை!

நாகரீகப் போர்வையிலே புத்திகெட்டு திரிகின்றோம்
நான்நான் நானென்ற அகந்தையிலே அலைகின்றோம்
இன்சொல்லும் உதவாது கடுஞ்சொல்லும் ஆகாது
அடியாலும் முடியாது எங்களை மாற்றிடவே!

உன்னடியார் பலபலபேர் அவனியிலே தோன்றட்டும்
பாலர்முதல் பெரியோர்வரை பாடங்கள் நடத்தட்டும்
நல்வழி எவ்வழியென வீதிதோறும் சொல்லட்டும்
அன்பதன் பாசமதன் மேன்மையினை முழங்கட்டும்!

ஒருவழியை சொல்லிவிட்டேன் இனிஉன்பாடு – இக்
கலியுக மாந்தர்பாடு எனைஆளைவிடு!

—————————————————————–

ராஜ நட்பு – 4 – ஜெய் சீதாராமன்

முன்கதை…..

Image result for construction of thanjavur big temple

  வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பேஜிங்கில்  ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காண வந்திருந்த, கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சார தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதை சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன் கேட்கின்றனர். அதில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் கட்டப்போகும் பெருவுடையார் ஆலயத்திற்குப் பணிசெய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம்,  மகிழ்வித்து உற்சாகப்படுத்த வாங்மெங் ஒப்புக் கொள்ளுகிறார்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் முதல் தளம் நிறைவு பெற்று இரண்டாம் தள வேலைகள் தொடங்கியிருக்கின்றன. வாங்மெங் நார்த்தாமலை நிகழ்ச்சிகளை  முடித்துத் திரும்பும்போது தற்செயலாக ஒரு சதிச்செயலைப்பற்றித் தெரிந்துகொள்ளுகிறார். தஞ்சாவூருக்கு வடக்கேயுள்ள 10000 வேலி நெல் கதிர்களை தீக்கிரையாக்கும் நோக்கத்தையும், ராஜராஜனைக் கொலை செய்யும் திட்டத்தையும் பகைவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டறிகிறார். தஞ்சை சென்று கிருஷ்ணன் ராமனிடம் சதியாளர்களின் திட்டத்தைச் சொல்லுகிறார். கிருஷ்ணன் பயிர்களைக் காக்கவும், வாங்மெங் சக்ரவர்த்தியை எச்சரிக்கவும் முடிவாகிறது. வாங்மெங் ஓலை முடிவடைந்து அதிகாரி இரண்டாம் ஓலையைப் படிக்கிறார்.

இனி……

3.கிருஷ்ணன் ராமனின் ஓலை

Image result for construction of thanjavur big temple

“இது சக்ரவர்த்தியின் திருமந்திர ஓலை நாயகம் கிருஷ்ணன் ராமன் எழுதும் ஓலை. இனி மதிப்புக்குரிய வாங்மெங் இவ்வோலையைத் தொடர இயலாது. அதற்கான காரணத்தைப் பிறகு கூறுகிறேன்.

வெள்ளிக்கிழமை பகல் நேரம். அடித்தளம் அமைக்கப்பட்டு இரண்டாம் தள வேலைகள் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலய களத்திற்கு நான் அவசரமாய் வந்தேன். சக்ரவர்த்தி நேராக அங்கு வருவதாக இருக்கிறார். அரண்மனையிலிருந்து இங்கு வர அமைத்திருந்த சுரங்க வாயில் வழியாகத்தான் எப்போதும் இங்கு வருவது வழக்கம். என்னேரமும் அவர் வரக் கூடும்! வாங்மெங் எங்கே? ஒப்படைத்திருந்த வேலையைச் செவ்வனே செய்து முடித்திருப்பாரா? சுற்றுமுற்றும் பார்த்தேன். நடுவில் கட்டப்படும் விமானத்தின் இரண்டு தளங்களின் அடியைச் சுற்றிலும் சாரங்கள் அமைக்கப்பட்டு அங்கு அடைய சாய்தளங்களும் கட்டப்பட்டிருந்தன. சாய்தளப் பாதைகளும், சாரங்களும் யானைகள் செல்லத்தக்க ஏற்றவாறு கட்டப்பட்டிருந்தன. வாங்மெங் இரண்டாவது சார சாய்தள பாதையின் உச்சியில் நின்றுகொண்டு பரபரப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் இருந்தார். இந்த நிலையில் எச்சரிக்கை இன்னும் அரசர் காதுகளுக்கு எட்டவில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது.

அச்சமயம் சக்ரவர்த்தி சுரங்க வாயில் சிறிய மண்டபத்திலிருந்து வெளிவந்தார். இரண்டாவது சார சாய்தள பாதையில் ஏறத்தொடங்கினார். நான் வாங்மெங்கை நோக்கினேன். வாங்மெங்கின் கண்கள் இரண்டாவது தளத்தில் பொருத்த, கயிறுகளால் தூக்கிவிட்டு தொங்கவிடப்பட்டிருந்த சிற்பத்தில் வந்து நின்றன. அரசர் மேலே ஏறிவந்தவண்ணம் இருந்தார். வாங்மெங் பறந்தோடிவந்து அரசரைத் தள்ளிவிடுவதற்கும் கோடாலி ஏந்திய ஒரு உருவம் ஒரே வெட்டில் கயிறைப் பிளப்பதற்கும் சரியாக இருந்தது. அரசர் தள்ளிப்போய் கீழே விழுந்தார். காளியின் சிற்பம் வாங்மெங்கின் தலைமேல் விழுந்தது. வீரர்கள் கொலையாளியைப் பிடித்தனர். நான் வாங்மெங்கை நோக்கி விரைந்தேன்.

வீரர்கள் சக்ரவர்த்திக்கு ஒன்றும் ஆகவில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். யானைகள் கொண்டுவரப்பட்டு வாங்மெங்மேல் சாய்ந்திருந்த காளி சிற்பம் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். எனினும் பயனில்லை. இரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த வாங்மெங்கின் உயிர், சிற்பம் விழுந்தவுடனேயே பிரிந்திருக்க வேண்டும்.

சின்ன சிராய்ப்புகளுடன் தப்பிய சக்ரவர்த்திக்கு என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. யார் தள்ளினார்கள், எதற்காகத் தள்ளப்பட்டோம் என்றும் தெரியவில்லை. ஓடோடி என் அருகில் வந்தார். ‘கிருஷ்ணா, என்ன நடக்கிறது இங்கே? யார் என்னைத் தள்ளினார்கள்? எதற்காகத் தள்ளப்பட்டேன்? இந்தச் சிலை எப்படி இங்கே வந்தது? யானைகள் எதற்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றன?’ என்று கேள்விகளை ஒன்றுக்குப்பின்ஒன்றாக அடுக்கிக்கொண்டேபோனார்.

நான் என் கண்களில் கொட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே உயிரிழந்த வாங்க்மெங்கின் உடலைக் காட்டி, இது வாங்மெங்கின் உயிரற்ற சடலம்! தன்னுயிரைக்கொடுத்து உங்களுயிரைக் காப்பாற்றிய தெய்வம்!’ என்றேன்..

‘எப்படி இது ஏற்பட்டது?’ என்று கூறிக்கொண்டே இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாங்மெங்கின் உடலைப் பார்த்து, கண்களிலிருந்து பெருக்கெடுத்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறே கேட்டார்.

நான் நார்த்தாமலையிலிருந்து வாங்க்மெங்கிற்கு நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் சொல்லிமுடித்து   ‘அவரிடம் உங்களை எப்படியாவது இதைப்பற்றி எச்சரிக்கும் வேலையைத்தான் கொடுத்திருந்தேன்! ஆனால் அவர் தன்னுயிரைக்கொடுத்து உங்கள் உயிரைக் காப்பாற்றுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை’ என்றேன்.

என்னைப் பார்த்து “நெல் கதிர்களின் கதி என்ன, எல்லாம் தீக்கிரையாகிவிட்டதா?”எனக் கவலையுடன் வினவினார். அதற்கு நான் “வாங்மெங் மூன்று வருடங்களுக்கு முன் மன்சூரியாவில் தீயை பரவாமல் தடுக்கக் கையாளப்படும் விதத்தை விளக்கி அதை இங்கேயும் செயல்படுத்தத் தூண்டியிருந்தார். அதன் அவசியத்தை உணர்ந்து உடனேயே செயல்படுத்த உத்தரவிட்டேன். அதன்படி நிலங்கள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு பகுதிகளுக்கு நடுவிலும் ஒன்றரை முழங்கள் அகல இடைவெளியில் வெறுமையாக வெட்டி அதைப் பராமரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் இம்முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் என்னால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு வேலியிலும் தனியாய் வைக்கப்பட்ட தீ முதற் பகுதி இடைவெளிவரை பரவி அதற்கு மேலே பரவ இயலாமல் தானாகவே அணைந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இந்த வாங்மெங்கின் சாதனை நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். சேதம் நமக்கு நூறில் ஒரு பங்குதான். அதாவது 100 வேலிகள்தான்! மற்ற 9900 வேலிகளின் பயிர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன!”என்று கூறி முடித்தார். “என் உயிரைக் காத்ததுமல்லாமல் சோழ நாட்டையே வாங்மெங் காப்பாற்றியிருக்கிறார். இதை எப்படி ஈடு செய்யப் போகிறேன்?”என்று சக்ரவர்த்தி வாங்மெங்கின் சடலத்தை வணங்கியபடி நோக்கினார்.

‘யார் அந்த சதியாளர்கள்? அவர்களின் நோக்கம் என்ன?’ சக்ரவர்த்தி மறுபடி வினவினார்.

‘என் ஏற்பாட்டின்படி சதியாளர்களில் சிலர் பிடிபட்டார்கள். காலமின்மையால் பலர் தப்பியோடிவிட்டனர். 500க்கும் மேலான சதிகாரர்கள் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். பிடிபட்டவர்கள் சுமார் 100 பேர்கள்தான். அவர்களை அடித்து உதைத்து விசாரணை செய்ததில் இது பாண்டிய சதிகாரக்கும்பலின் வேலை எனத் தெரியவந்துள்ளது. சதிசெய்யத் தூண்டியவன், மறைந்திருந்து  செயல்படும், நமக்கு ஏற்கெனவே தொல்லை கொடுத்துவந்த ரவிதாசன்தான். அவர்களிடமிருந்து மேலும் விஷயங்களைக் கறந்து அந்த கும்பலை வேரோடறுப்பேன். இது உறுதி!’ என பதிலளித்தேன்.

சக்ரவர்த்தி, ‘பாண்டிய சதிகாரர்களின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரித்துக்கொண்டே வருவது இதன் மூலம் தெளிவாகிறது. கவலை வேண்டாம். அவர்களை முற்றிலும் முறியடிக்கும் பொறுப்பை என் மைந்தன் பட்டத்து இளவரசன் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப் போகிறேன்.’ என்று பதிலளித்தார்.

என்னிடம், ஆலய வேலைகளை உடனே நிறுத்த ஆவன செய்யுமாறு பிணைத்தார். சீன வழக்கத்தையொட்டி ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டார். அன்றிரவே வாங்மெங்கின் நல்லடக்கம் நடைபெற்றது. சக்ரவர்த்தி உள்பட வாங்மெங்கின் குழு சீன கலாசாரத்தையொட்டி வெண்ணிற ஆடைகள் அணிந்து சடங்குகள் நடத்தப்பட்டு முடிவடைந்தன.

 

( தொடரும்)

 

  

மாயன் நாகரிகம்

மாயன்   நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம்ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, மற்றும் அதன் அருகில் இருக்கும்  நாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 ஆண்டளவில் மாயன் நாகரிகம் தோன்றியது.

மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது.

ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.

 
 
ஆட்சியாளர் அல்டார் கி  மு 830  இல்
By Suraj at ml.wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=15155140
 
 

 

இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல… – ஈஸ்வர்

 

Image result for murder of an old lady in mumbai flats

மு க சு :

மும்பையில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த, ஐந்தாவது அமைதியான கொலை.

முதலில், ஒரு பஞ்சாப் சிங்க், இரண்டாவது, ஒரு மராட்டியப் பாட்டி. மூன்றாவது, ஒரு பார்சிப் பெண்மணி. நான்காவது, ஒரு கன்னடக் கிழவர். ஐந்தாவது ஒரு பாலக்காட்டுப் பாட்டி.

ஏதோ, எங்கோ, ஒரு லிங்க் இருக்கவேண்டும். எங்கே, என்ன என்பதுதான் புரியவில்லை.

போலீஸ் ஆபீசர் மணி துப்புத் துலக்க வந்திருக்கிறார் …..

Related image

 விசித்திரமாக இருந்தது.  கொலையுண்ட அனைவருமே , அறுபத்தி ஐந்து , எழுபதைத் தாண்டியவர்கள். வெவ்வேறு மாநிலத்துக்காரர்கள்.  வெவ்வேறு மொழி வேறு. இரண்டு மூன்று மாமாங்கமாக பம்பாய்  ரேஷன் கார்டில் ஏற்கனவே பதிவானவர்கள்.குறிப்பாக, மும்பையில் தனியாக வசிப்பவர்கள்.

     பஞ்சாப் சிங்கின் மகன் கனடாவில் இருந்து ஓடி வந்திருந்தான். மராட்டியப் பாட்டிக்கு சிட்னியில் இருந்து ஒரு பேரன் வந்து மௌனமாகக் கண்ணீர் விட்டுப்போனான். தாய் , தந்தை இறந்த பிறகு பாட்டியிடம் வளர்ந்தவன்.  பாசம், நன்றி மறவாது , பாட்டிக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தான். இனிமேல் கல்யாணத்திற்கு அவனுக்கு, யார், இந்தியப் பெண் பார்க்கப்போகிறார்கள், என்று வருந்தியவன்.

     பார்சிப் பாட்டிக்கு இரண்டும் பெண்கள்.இருவருமே நியூ ஜெர்சியில் எம்.எஸ் படித்து, டாக்டர்களாக இருந்தவர்கள்.  கன்னடத்துக் கிழவரின் மகன், லண்டன் புறநகர்ப் பகுதியில் ஒரு ‘இந்தியா காஃபி ஹவுஸ்’ நடத்திக்கொண்டு  இருக்கிறவர்.

     வந்தவர்கள் அனைவருமே பிறகு சொன்ன ஒரே பதில், ‘’லாஸ்ட் டைம் பார்த்தவை எல்லாம் அப்படியேதான் இருக்கு.ஒண்ணுமே காணாம போனமாதிரி தெரியலே… சார்..”

     ‘டி.எஸ்.பி. சார்,  எப்படியாவது  கண்டு பிடியுங்க…  எங்களுக்கு,  லீவு , விசா எல்லாமே ப்ராப்ளம்….  தொழிலைவிட்டு ரொம்ப நாள் இங்கே இருக்க முடியாது..”

     எல்லோரும் வந்த வேகத்தில் பறந்தும் விட்டார்கள். இனி இருந்து, அழுது என்ன பயன் என்பதாலா? அல்லது இந்திய, போலீஸ் மீது அவ்வளவுதான் நம்பிக்கையா / அல்லது அவ்வளவு நம்பிக்கையா?

     விந்தையாக இருந்தது. பின்னணி ,கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ரொம்ப மூர்க்கத்தனம் இல்லாத கொலைகள். மண்டை தாக்கப்பட்டு, நெஞ்சில் குண்டு பாய்ந்து , உடல் கன்னாபின்னாவென்று குத்திக் கிழிக்கப்பட்டு, தலை வேறு, கைகால் வேறு என்று அறுக்கப்பட்டு,  முகம் சிதைக்கப்பட்டு ……என்றெல்லாம் கோரங்கள் கிடையாது. அமைதி வழி . படுக்கையில் தூங்குவதைப்போல். லேசான வலி. விஷ ஊசிதான்.

     கொலைகளின் நோக்கம்தான் புரிபடவில்லை. மாநிலச் சண்டைகளுக்கு வழி வகுக்கவா?   நேஷனல் இண்டகரேஷன் கௌன்சிலில், பஞ்சாப், கன்னட, கேரள முதல்வர்கள், மகாராஷ்டிர முதல்வர் மீது பாயவா..? எதற்காக இந்தக் கொலைகள்?

Related image

     மணி, டில்லியில் இருந்து மும்பைக்கு வந்ததே இதற்காக அல்ல.அவனது மத்தியப் புலனாய்வுத்துறைக்கு ஏற்கனவே மூச்சு முட்டும் அளவுக்கு ஏராளமான , சிக்கலான வழக்குகள் இருந்தன. மாநில எல்லைகளைத் தாண்டும் வழக்குகளும் உண்டு. இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டி வைக்கும் , பொருளாதாரக் குற்றங்களின் நீளமான வரிசை அவனுக்குப் பரந்த அறிவைத் தந்திருந்தது.

     ஹர்ஷத் மேத்தா வழக்கு, ஜெயின் டைரி, யூரியா ஊழல் வழக்கு, கால்நடைத் தீவன ஊழல், சுடுகாட்டு ஊழல், போஃபர்ஸ் வழக்கு, தமிழக அந்நியச் செலவாணி வழக்கு என்று இவை நீள நீள, மத்தியப் புலனாய்வுத் துறையின் இளைஞர் பட்டாளத்தின் குற்றவியல் அனுபவமும் நீள ஆரம்பித்தது.

     மணியின் திறமைக்குச் சவாலாக ஒரு சில வழக்குகள் அவனிடம் தள்ளிவிடப்பட்டிருந்தன . முதலில் அவன் மும்பைக்குப் போக வேண்டும், மும்பையை கெட்டியாகப் பிடித்து உலுக்கி, அடித்தளத்தையே ஆட்டிவரும் கறுப்புச் சந்தை நிழல் அரசை அடையாளம் கண்டு வலு இழக்கச் செய்யவேண்டும்.

     அவனுக்குச் சகல சௌகரியங்களையும் மராத்திய அரசு செய்து கொடுக்கும். தேவைப்பட்டால் அங்கு நடக்கும் எந்தக் குற்றத்தின் பின்னணியையும் ஆராய அவனுக்கு, நேரிடையாக சில நீதி மன்றங்களுக்கு சில அறிக்கைகள் தயார் செய்து அனுப்ப வேண்டிய உத்தரவும் இருந்தது. சூழலுக்கு ஏற்ப , தேவைப்பட்டால் , மாநிலக் காவல்துறைக்குத் துணையாக, உடனடியாகச் செயலில் இறங்கவும், மாநிலக் காவல் துறை அவனுக்கு உறுதுணையாக உதவவும், தேவையான ரகசிய சுற்றறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தன.

மணிக்கு இப்பொழுது, பழைய நான்கு கேஸ்களும் அத்துப்படி ஆகியிருந்தன. முதல் இரண்டுவரை அவன் தலையிடவில்லை. வேறு வேலைகளில் மும்முரமாக இருந்தான். மூன்றாவது கேசின்போதுகூடப் பின்னரே அவன் ஒத்துழைப்புக் கோரப்பட்டது.  ஏதோ உள்உணர்வின் உந்துதலால், பழைய இரண்டு கொலைகளுக்குப் பின்னர், மூன்றாவதாக அந்தப் பார்சிப் பாட்டி வீட்டுக்கு வந்த மணி, அப்பொழுதே மல்ஹோத்ராவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தான் .

     “மிஸ்டர் மல்ஹோத்ரா, ..ஒரு சின்ன ரிக்வெஸ்ட். . போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, பாடி ஆஸ்பத்திரியைவிட்டுக் கிளம்பி , வீட்டுக்கு வந்து, மயானம் போறவரை, கொலையானவங்களுக்குக் கடைசி மரியாதை செலுத்தற  எல்லார்கிட்டேயும் , ஒரு ரெஜிஸ்டர்ல  கையெழுத்து, அவங்க அட்ரெஸ் , வேலை விவரம் வாங்கிக்குங்க.”

     ஆனால் அவனும், மல்ஹோத்ராவும் எதிர்பார்த்தபடியே , அதற்கு ஒரு பெரிய கூக்குரலே எழுந்தது.

     “ இது என்ன புதுப் பழக்கம்?  கண்டோலேன்ஸ்  ரெஜிஸ்டர்ல கையெழுத்தா…? போலீசுக்குப் புத்தி இருக்குதா, இல்லியா..?  சாவை மதரீதியா நடத்தி வைக்குற பண்டிட்ஜிங்ககூட கையெழுத்துப்  போட்டு இருக்காங்க… இது என்ன இந்து சமய எதிர்ப்பு மகாநாடா..?  இல்லை…. இங்கிலாந்து அரசா ..?  சாவுக்கு வர்றவங்ககிட்டே இப்பவே கண்டோலன்ஸ் ரெஜிஸ்டரும்போட்டு, கையெழுத்தும் வாங்கியாச்சு.  இனிமே இத்தாலிய ஆட்சிதான்.’ – சில பத்திரிகைகள் கிண்டலாகக் கண்டனம் தெரிவித்து இருந்தன.

      இது எந்த வகையிலும் புத்திசாலித்தனமாகப்படாததால் மல்ஹோத்ராவே சற்று எரிச்சலடைந்திருந்தான்.

     இப்பொழுது இந்தப் பாலக்காட்டுப் பாட்டி.

     “ஃபோட்டோ எல்லாம் எடுத்தாச்சா ?” மணி வினவ, மல்ஹோத்ரா , “ம்… ம்”, என்றான்.

     “லாஸ்ட் டைம் மாதிரியே இந்த முறையும் கண்டோலன்ஸ் ரெஜிஸ்டர் போட்ருங்க.”

     “தேவையா, மிஸ்டர் மணி? போலீஸ்காரங்க எங்களை, பத்திரிகைல கிழி கிழின்னு கிழிக்கறானுங்க.”

     “ அவங்க அவங்க வேலையச் செய்யறானுங்க.  நாம நம்ம வேலையச் செய்வோம்.”

     :இல்ல, மிஸ்டர் மணி….”

     “மிஸ்டர் மல்ஹோத்ரா, ப்ளீஸ் ..”

     “மணி சாப்,  இங்க இதுகூட ஒரு சென்சிடிவ்வான விஷயம்..  தாமரையா, குல்லாவான்னு எல்லாக் காரியத்தையும் பார்க்க ஆரம்பிச்சுட்டானுங்க. வெவகாரமாப் போயிடும்.. மும்பை அந்த நிலைக்குத் தள்ளப்பட்டாச்சு…”

     வீட்டை ஆராய்ந்துகொண்டே வந்த மணி நின்றான்.

     “எனக்கும் புரியாம இல்ல, மிஸ்டர் மல்ஹோத்ரா.. இன்னைக்குத் தேதிலே இதோ, இது அஞ்சாவது கொலை.  .. ஒரு தடயமும், இதுவரை கெடைக்கில.  ..  ஏன், எதுக்கு  இந்தக் கொலைன்னே புரியலை.  நாம புத்திசாலிங்க கூட,  அதி மேதாவிங்க கூட எல்லாம் போர் நடத்த வேண்டி இருக்கு.  க்ளீனா கொலையைச் செய்யறாங்க.. ஒரு தடயம் மிச்சமாகறதில்லே.  ரொம்ப உஷாராயிட்டாங்க.  நமக்கு ஏதாவது ஒரு முனை வேணும்.. அதுக்காகத்தான் ப்ளீஸ்.. சரி, லாஸ்ட்  ட்ரயல்னு வச்சிப்போம்..”

     “ஓகே, மிஸ்டர் மணி. இட் வில் பி டன்.”

     “ஏற்கெனவே அந்தப் பூனாக்காரனால் ஒரு மில்லி மீட்டர்கூட விடாமல் ஆராயப்பட்டுவிட்ட அந்தப் பாலக்காட்டுப் பாட்டியின் வீட்டை , மணியின் தீட்சண்யமான கண்கள், பூச்சியைப் பிடிக்கும் பல்லி போல் தேடின.

     இதோ து…? …

அது ஒரு கம்ப்யுட்டர்  ஸ்டேட்மென்ட்.  மேஜையில் இருந்த ஒரு கல்கி இதழின் ஏதோ ஒரு பக்கத்தில் , கொஞ்சம் கசங்கலாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது. என்னவாக இருக்கும் இது..?

( சஸ்பென்ஸ் தொடரும்)

கண்ணா உன்னைத் தேடுகிறேன் -முகநூல்

இதைப் படித்து முடித்தபின் உங்கள் கண்களில் கண்ணீர் கசிந்தால்  அது தான் கிருஷ்ணார்ப்பணம் .   

Related image

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம் பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை?

நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக்கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம்.

எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது! யாரிடம் போய்ச் சொல்வது இதை! பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே! யார் உள்ளே வந்து இப்படிச் செய்கிறார்கள்?

இரவு கோயிலைப் பூட்டும்போதுதான் பார்த்தார். நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள். தளர்ந்த தேகம். வயோதிகம் தன் கடந்தகாலக் கதையை, அவளது முகத்தில் சுருக்கங்களால் எழுதியிருந்தது

கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் அப்படியொரு பரவசம். அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.

பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.
அர்ச்சகர்  பிரியத்தோடு கேட்டார்: “பாட்டி! இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?”

“”நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான். கண்ணன் அருளால் அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,” என்று வேண்டிக் கொண்டேன்.

அர்ச்சகர் சிரித்தார். “அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக்கொண்டாயா?”

“எனக்கென்ன வேண்டிக்கிடக்கிறது இப்போது? போகப்போகிற கட்டை. என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா! ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனது வலது கை வலிக்காதோ! இவர்கள் தங்களுக்கான வேண்டுதலைக் கொஞ்சமாவது நிறுத்தினால்தானே அவன் தன் கைக்குச் சற்று ஓய்வு கொடுக்கமுடியும்! ஏற்கனவே பாஞ்சாலிக்குப் புடவை வழங்கியும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியும் அவன் கை வலித்திருக்கும். புல்லாங்குழல் அதிக கனமில்லாததுதான் என்றாலும், ஓயாமல் அதைக் கையில் பிடித்து உதட்டருகே வைத்து ஊதிக்கொண்டிருந்தால் அந்தக் கரம் என்னாவது? இதையெல்லாம் யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்  கேட்பதில்லை. நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்? அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம்
கொண்டாடிக்கேட்கிறது. நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்டமாட்டேன். எனக்கு வலக்கரம்  உயர்த்தி ஆசிகூறி, அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூடவேண்டாம்!”

அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன், எப்படி பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும். அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.

அன்றிரவு, அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல் புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தார். கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.

“அர்ச்சகரே! உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை. என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது. அதன்மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள். மூதாட்டியின் இல்லத்திற்குச்சென்று நடப்பதைப் பாருங்கள். பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!

மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க்கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியேசென்றது. மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.

அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.பாட்டி இரவு தாமதமாக உறங்கப்போனாள். அதற்குமுன் தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.

மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது. “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!” என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள் சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.

என்ன ஆச்சரியம்! அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாணம் பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.

நன்கு உறங்கிய அவள், அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள். “கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா? நேற்று குளிர் அதிகம். போர்வை போர்த்திக் கொண்டுதானே தூங்கினாய்?” என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.

வாய் கொப்பளித்து, முகத்தைத் தூய்மை செய்துகொண்டுவந்தாள். “தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா. உடம்புக்கு ஆகாது. நீவெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள். இன்று உனக்காகப் புள்ளிவைத்துக் கோலம் போடப்போகிறேன்,” என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள். ஒவ்வொரு புள்ளிவைக்கும்போதும் “கிருஷ்ணா! முகுந்தா! முராரே!’ என்றுகண்ணன் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே புள்ளிவைத்தாள்.

பின் கண்ணனைப்பற்றிய தோத்திரங்களைச் சொல்லியவாறே இழையிழுத்துக்  கோலம் போட்டாள். தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பு மூட்டிச் சமைக்கலானாள்.

உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.நடந்ததெல்லாம் கனவா நனவா?

அன்றும் கோயிலுக்குப் போனார்.கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப்  பார்த்ததும் அவரது மனம் பக்தியில் தழதழத்தது.

அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக்கொண்டார். அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.

ஆனால் அவள் வரவில்லை. அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:

“”அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். இனி அது கிடைக்காது”.

ஏன்?- வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.

“நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது. இன்று அவளுக்கு உடல் நலமில்லை. அதனால்தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.

நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக நீங்கள் அவள் இல்லம் செல்லுங்கள். அங்கே மக்கள் கூடியிருப்பார்கள். மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும். சுயநலமின்றி,
தாய்ப்பாசத்தோடு என்னை நேசித்த அவள் பக்தியின் பெருமையை நாளை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்!”

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.

அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை. மறுநாள் காலை மூதாட்டியின்
இல்லத்திற்கு விரைந்தார். கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.

பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அந்த ஆன்மாவை அழைத்துச்செல்ல விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்குமட்டும் தெரிந்தது.

கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.
“இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு? என் பிள்ளை கண்ணனை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அதுபோதும் எனக்கு!”

மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன் நிற்க வெட்கப்பட்டது போல் புஷ்பக விமானம் கண்ணன் ஆலயச் சுவரில் மோதி தூள்தூளாகியது.

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான். “என் தாய் அல்லவா நீ! எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?” என்ற கண்ணன் அந்த ஆன்மாவை இரு குண்டலங்களாக்கித் தன் செவிகளில் அணிந்துகொண்டான்.

குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.

அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு, அவசர அவசரமாகக் கோயிலுக்குச்சென்றார். கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.

எந்த இடத்தில் சாணித் துணுக்கு  நாள்தோறும் இருக்குமோ அந்த இடத்தில் இப்போது இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன.

 

Related image

சுயநலமற்ற ஏழைக்கிழவியின் பக்தியை அங்கீகரித்த கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

 “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!”- மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

(படங்கள்: தாரே ஜமீன் பர்  என்ற படத்திலிருந்து)

Related image

நரம்பியல் டிபார்ட்மெண்ட்டில் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்தது. மனதிற்குப் பிடித்தாற்போல், நிறையக் கற்றுக் கொடுக்கும் நிறைவான இடம்! காலை எட்டு மணியிலிருந்து சுறுசுறுப்பாகத் துவங்கி, மதியம் 12 மணி வரையில் அதே வேகத்துடன் ஓடும்!

சேர்ந்த அடுத்த மாதமே, எங்கள் சீஃப், டிபார்ட்மெண்ட் நடத்தி வரும் பள்ளிக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்.

“ஸ்பெஷல் சில்ரன்” என்ற அழகான பெயர் மூளை வளர்ச்சிக் குறைவினால் பாதிக்கப் பட்டவர்களைக் குறிக்கும். மருத்துவத் துறையில், “இன்டெலக்சுவல் டெவெலப்மெண்ட் டிஸார்டர்” (Intellectual Development Disorder) என்பார்கள். முன்பு, “மென்டலி ரிடார்டட்”(Mentally Retarded) என்று குறிப்பிட்டார்கள். இது, குறையை மட்டும் காண்பிப்பதால் அதனை மாற்றி எதனால் குறைபாடு என்பதைக் குறிக்கும் பெயராக மாற்றி அமைத்தார்கள்.

இவர்களுக்கான பள்ளியின் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். ஆர்வம் இருந்தது. வயது 22, “சமாளிப்போமா?” என்ற சிந்தனையும் எழுந்தது! காலையில் பேஷன்ட் தகவல்களை எடுத்து, என் கணிப்பை டாக்டரிடம் விவரித்தபின் ஸ்கூலுக்குப் போவேன்.

குழந்தைகள் 9.30க்கு வரத் தொடங்குவார்கள். அதற்குள், 5 டீச்சர்களும் வந்துவிடுவார்கள். ஸ்கூலைச் சுத்தம் செய்யும் ஆயா, வயதானவள், எங்களின் பக்க பலம். எல்லாம் சுத்தமாக வைத்து விடுவாள். 9:15க்கு ஸ்கூல் வாசலில் இருப்பது என்று முடிவாக இருந்தேன்.

முதல் நாள் பரபரப்பு குழந்தைகள் வர ஆரம்பமானது.

எங்கள் ஸ்கூலுக்கு வருபவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஸெரிப்ரல் பால்ஸி, ஸ்பைனா ஃபைஃபிடா (Spina Bifida), என்று பல்வேறு விதமானவர்கள் – 4 முதல் 20 வயது வரையில்.
14 குழந்தைளும், புன்னகையுடன் “குட் மார்னிங்” சொன்னார்கள். அவர்கள் என்னைப் பார்த்து, “புது மிஸ், குட் மார்னிங்” சொன்னதில், எனக்கு அவர்களின் தைரியம் தெரிந்தது.

இன்னும் ஒரு குழந்தை வரவில்லையே என்று நினைத்தபோது, உருமலுடன், கைகளை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, தலையை இரு திசையிலும் அசைத்தபடி, ‘உம்,உம்’ என்ற சத்தத்துடன் ஒரு பையன் வந்தான். உடனே, என்னைச் சுற்றி இருந்தவர்கள் சலசலப்புடன் விலகிச்சென்றார்கள்.

யாரையும் எதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பது , எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவன் வருவது, அவன் பின்னாலேயே அவன் பாட்டி ஓடிவந்தது, மற்றவர்கள் எல்லோரும் விலகிச்சென்றது, இவை அனைத்தும் பார்த்ததும், என் மனக்கண்ணில் சின்ன விநாயகர் குறும்புத் தோற்றத்தில் வருவதுபோல் தோன்றியது. பாட்டி ஓடிவந்து, பத்து ஸாரி சொன்னாள். கதவிலிருந்து, பத்து அடி தான் நடந்திருப்பான். அப்படியே, அங்கேயே உட்கார்ந்துவிட்டான். உடனே ஒருத்தர் “போச்சுடா” என்றதும் பாட்டி, “மேடம், என்ன பண்ண? அவன் நகரமாட்டான்” என்றாள். “சரியான கேஸ்” என்று சீனியர் டீச்சர் சொன்னாள். “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.” படத்தின் மிஸ்டர். ஆனந்த்தைப்போல அவனை எல்லாரும் “கேஸ்” என்றே அழைத்தார்கள்.

குழுந்தையுடன் வந்த பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எல்லோரும் அங்கிருந்து விலகியதும் திரும்ப அதே கையை ஆட்டிக்கொண்டு “உம்,உம்”. என்று வந்தான். ஆனால் அவன் கண்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.

அவன் பெயர் கிருஷ்ண குமார். வயது ஏழு, அதிகமான எடை, அவன் அருகில் போனால், சிலந்திமீன்போல் அவன் கை ஆடும். நாம் அதைப் பிடிக்கப்போனால் அவன் சத்தமும் அதிகமாகும். பாட்டிதான் சாப்பாடு ஊட்டவேண்டும். எதையும் செய்யமறுப்பானாம். தானாக டிங்டாங் ராக்கிங் பொம்மைபோல சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ஆடிக்கொண்டிருந்தான். என்னமோ, எல்லோருக்கும் இவன்மேல் பயமும், வெறுப்பும் இருந்தமாதிரியே தோன்றியது.

பாட்டிக்கு 60 வயதிருக்கும். அவர்களுக்கு, கிருஷ்ண குமார் பையன் வழி, மூன்றாவது பேரன். பிறக்கும்பொழுது அவன் தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இருந்ததால், மூச்சுத் திணறியது, பிறந்தவுடன் தொடர்ந்து வலிப்பு வந்ததையும் கூறினாள் (மூன்றுமே மூளை வளர்ச்சிக்கு ரிஸ்க் ஃபாக்டர்). இவன், மூன்றாவதாகப் பிறந்ததால், பெற்றோர் இப்படிப்பட்ட குழந்தை தேவை இல்லை என்றார்கள். பாட்டி பராமரிப்பை ஏற்றுக்கொண்டாள் (தாத்தாவின் பென்ஷன், பக்கத்துணை).

பாட்டி விவரங்களைச் சொன்னாளே தவிர, கிருஷ்ண குமாரின் பெற்றோர்களின் நிராகரிப்பைப் பெரிதுபடுத்தவில்லை. அவளின் மன உறுதி, தைரியம், தெளிவு ஆகியவற்றைப் பார்த்தால் ராணி மங்கம்மாபோல் தோன்றியது.

பேரனுடைய மூளை வளர்ச்சி தாமதிப்பதைப் பார்த்து, பாட்டி இந்த ஸ்கூலைக் கண்டுபிடித்து அவனைச் சேர்த்தாள். வந்ததிலிருந்து 5-10 அடிகூட அவன் நடந்ததில்லை என்றாள்.

ஸ்கூல் வேலைகளைச் செய்யும்போது நான் கிருஷ்ண குமாரைத் தாண்டிப் போகவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும், அவனிடம் சொல்லிக்கொண்டே போவேன்: “கிருஷ்ண குமார், நான் …செய்வதற்காகப் போகிறேன்” சில சமயங்களில் குறிப்பாக “மார்ட்டினோட சற்று படித்துவிட்டு வருகிறேன்” என்றும் தெரிவிப்பேன்.

அவன், யாரும் தன்னைத் தொடக்கூடாது என்பதுபோல் இருந்தான். இதை மாற்ற, இப்படி, அப்படிப் போய்-வரும் பொழுது, என் தலைப்பு, அவன்மேல் பட்டுவிடும்படி செய்தேன், அவனுடன் ஒரு இணைப்பை உருவாக்கவே! அவன் அருகில் வரும்பொழுது, அவனை அழைப்பதுபோல்  குரல் கொடுப்பேன். அவன் சத்தம் முதலில் பலமாக இருந்தது. மெல்ல, ஒரு மாற்றம் தோன்றியது.

இத்துடன், அவன் கைக்கு எட்டும் தூரத்தில் உட்கார்ந்து, அவனுக்கு வர்ணங்களைக் காட்ட ஆரம்பித்தேன். “பார், இந்த ப்ளாக் கலர், இதை இப்படி நிற்க வைக்கலாம்”. பதிலுக்கு அவன் “உர் உர்” என்றான். மெதுவாக, ஒரு இஞ்ச் நகர்ந்து, அவன்கிட்டே வருவேன். பொருட்களை வைத்தாலும், எடுப்பான், வைத்துவிடுவான். ஒன்றும் பெரிதாக மாறவில்லை.

சில நாட்கள் போக, அவன் உட்காரும் இடத்தில் பந்தை வைத்தேன். உட்கார மறுத்தான். பந்தை எடுத்தவுடன், தொபக்கட்டீல் என்று உட்கார்ந்தான். பந்தை உருட்டி அவனுக்கு அனுப்பினேன். கூடவே இன்னொரு குழந்தையையும் சேர்த்துக் கொண்டபின்பு, ஆர்வம் காட்டினான். பந்தினால், மற்றவருடன் இன்னொரு சின்ன இணைப்பு ஏற்பட்டது.

எப்பவும்போல, நான் போக-வர அவனிடம் நான் செய்யப் போவதைச் சொல்வது தொடர்ந்தது. நீங்கள் நினைக்கலாம், அவனுக்கு இது புரியவா போகிறது? என்று. என்னைப் பொறுத்தவரை, இவர்களுக்கும் நம்மைப்போல் உணர்வுகள் உண்டு. அதை மதித்தேன். பேசுவதைக் கேட்டால் பரிச்சயம் உண்டாகும். மெதுவாக, நான் போவது-வருவதைக் கவனிப்பது அவனுடைய தலை அசைவில் தெரிந்தது. உர் சத்தமும் குறைந்தது.

Image result for taare zameen par

அவன் பாட்டியையும்  சேர்த்துக்கொண்டேன். இரண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பெயர் சொல்வது என்று ஆரம்பித்தோம்.

பாட்டியுடன் வேதா என்ற இன்னொரு குழுந்தையைச் சேர்த்தேன். முதலில் முரண்டு பிடித்தான். பிறகு இருவருக்கும் பாட்டி சமமாகக் கவனம் செலுத்த, அமைதி நிலவியது.

பல நாட்கள் ஓடின. நான் வேதாவிடம் “உன் பழைய இடத்திற்கு இவனையும் கூட்டிச்செல், அவனுக்கு அங்கே என்னவெல்லாம் இருக்கு என்று காட்டலாம்” என்றேன். கிருஷ்ண குமார் சென்றான், கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத் தன்னுடைய இடத்திற்கு வந்து விட்டான்.

யாராக இருந்தாலும், புதியதாக ஒன்றைத் தொடங்கத் தயக்கம் இருக்கத்தான்செய்யும். கிருஷ்ண குமாருக்கு அது அதிகமாக இருந்தது. ஏனோ, இவனை மூளை வளர்ச்சி குறைபாடுள்ளவனாக மட்டும் பார்க்க என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இப்போது, இன்னொரு யுக்தி கையாண்டேன். நான் ஸ்கூலுக்குள் எங்கு சென்றாலும் (எங்கள் ஸ்கூல், சின்னது) கிருஷ்ண குமாரையும் கையைப் பிடித்து என்னுடன் அழைத்துச்சென்றேன். இதனால், அவனுக்கு இன்னொருவரின் ஸ்பரிசத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. பாட்டியை விட்டுவிட்டு, நானோ, ஆயாவோ சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தோம். அவனுடைய ‘உர்உர்’ முற்றிலுமாக நின்றது.

அதற்குப்பிறகு மற்ற குழந்தைகளையும், அவர்களின் டீச்சரையும் அவன் உட்காரும் இடத்திற்கு வரச்சொல்லிப் பாட்டுப் பாடுவதைத் தொடங்கினோம். அந்த டீச்சரும், அவனைப் புரிந்து கொண்டாள். அவர்தான் அவனை “கேஸ்” என்று முன்பு பெயர் சூட்டியவர். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவனும் பாட ஆரம்பித்தான். அதனால், அவர்கள் எல்லோரும் இருக்கும் இடத்திற்கே அவனையும் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தேன். நான் ஆயாவைக் கிருஷ்ண குமாருக்கு உதவி செய்யச்சொன்னேன். அவன் தயங்கித் தயங்கிப் போனான். அரை மணி நேரம் உட்கார்ந்தான். திரும்ப எழுந்தான், கீழேயே உட்கார்ந்தான், அவர்கள் பக்கத்திலேயே!

அங்குள்ள குழுந்தைகளைக் கூட்டிவந்து பள்ளி விடும்வரை காத்திருக்கும் அம்மா, தாத்தா, பாட்டிகளுக்கு உதவ ஓர் உதவிக் குழு ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் அவர்கள் கேள்வி கேட்டு, எங்களின் டாக்டர்களோ, நானோ விளக்கம் அளிப்பதாக முடிவுசெய்தோம்.

அந்த அரைமணி நேரம் மிகவும் உபயோகமாக இருந்தது. இங்குள்ள குழந்தைகள்பற்றிய விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டோம். வெள்ளிக்கிழமை மாலை, டீச்சர்கள் குழுவாக அதில் கலந்து கொள்ளவைத்தேன். ஏன், எப்படி என்ற விவரம் அறியத் தொடங்கியதும் அனைவரது ஒத்துழைப்பும் அதிகரித்தது.

இந்தக் குழந்தைகளைச் சமுதாயம், பாவமாகவும், பாரமாகவும் பார்க்கும். அதைப்போன்ற விஷயங்களைப் பகிர்வதற்கு இது ஒரு நல்ல இடமாக அமைந்தது. பகிர்ந்து கொள்ளும் சூழலில் “எனக்கு, இது ஏன் நேர்ந்தது” என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.

ஒரு அம்மா இதை அழகாக விளக்கினாள்.

“வேறு யார் இவர்களை கவனிப்பார்கள்? நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் (We are the Chosen one)! நம்மை நம்பி இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். “அவனும்” நம்மை நம்பி அனுப்பி வைத்திருக்கிறான் என்றால்  நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகள் போல ரொம்ப ஸ்பெஷல்!

சில நாட்கள் கழித்து எங்கள் ஸ்கூல் குழந்தைகளின் கூடப் பிறந்தவர்கள் வாலன்டியராக வர ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாளில், அவர்களின் நண்பர்களும் கைகொடுக்க ஆரம்பித்தார்கள்.

இதெல்லாம் நிறைவாக இருந்தது. ஆனால் கிருஷ்ண குமாரின் பெற்றோர் அவனை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குறையாக இருந்தது.

அந்த சமயத்தில் எனக்குள், நான் மேலும் படித்தால் இன்னும் நன்றாகப் பணிபுரியலாம் என்று தோன்றியது. எங்களுடைய சீஃப் ஆமோதித்தார், ஸ்கூலிலும் பல முறை எடுத்துச் சொன்னபின் விடை கொடுத்தார்கள். ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் படிக்க, நிம்ஹான்ஸில் (NIMHANS) சேர்ந்தேன்.

ஆறு மாதத்திற்குப் பிறகுதான் பழைய இடத்துக்கு வர முடிந்தது. இன்னொருவர் ஸ்கூல் பொறுப்பு ஏற்றிருந்தார், பல நல்ல மாற்றங்களைச் செய்தார்.

ஒரு நாள், ஏதோ அன்பளிப்பிற்காகப் புடவை தேர்ந்தெடுக்கையில், யாரோ என் பின்னலை இழுக்க, திரும்பிப் பார்த்தால் அவன் நின்று கொண்டு இருந்தான். “ஏய் கிருஷ்ண குமார்! எப்படி இருக்கே?” என்று வியப்புடன் கேட்டேன். என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் தன் கையை ‘சட சட’ என்று ஆட்டினான். நான் பழக்க தோஷத்தில், “பாட்டி எங்கே?” சைகையுடன் கேட்டேன். அவன் அருகில் இருந்த, பெண் என்னைப் பார்த்து ” பாட்டியால் வர முடியவில்லை, நான்… இவன் அம்மா…” என்றாள்.

எனக்கு மகிழ்ச்சியில் நெஞ்சு அடைத்தது, அவர்களைக் கட்டி அணைத்தேன்.

மணி மகுடம் -புத்தக வடிவில்

குவிகத்தில் தொடர் கதையாக வந்த சரித்திர நாவல் “மணிமகுடம்”. 

ஜெய் சீதாராமன் எழுதிய காவியம். 

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அதில் வந்த பாத்திரங்களையே மையமாக வைத்து அதில் முடியாமல் இருந்த சம்பவத்தை  முடித்து வைத்த கதை !

பாண்டியனின் மணிமகுடத்தை ஈழ மன்னன் மகிந்தனின் கோட்டையிலிருந்து  வந்தியத்தேவன் எடுத்துவந்து ராஜராஜ சோழனுக்கு அளித்ததாகக்  கதை.  

லதா தன்  அருமையான   வண்ணத்தில் கதைப் பாத்திரங்களை வரைந்து கொடுத்த கதை! 

விரைவில் புத்தகமாக வரப்போகிறது. 

உங்கள் பிரதிக்கு  முந்துங்கள் !

படித்தது -கேட்டது – பட்டது

Image result for பொது

===================================================================

எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன்

====================================================================

கோழையான கொசு….இருட்டுக்கு பயம் ,,,பகலில்தான் கடிக்கும்.
சூரியன் உதித்து இரண்டுமணிநேரம் சென்ற பின்னர்தான்…படையெடுக்கும். மாலை ஆறுமணிக்கெல்லாம் அடங்கிப்போகும்….இருந்தாலும் சில வெளிச்சம்இருக்கும் இடத்தில் இரவிலும் கடிக்கும்.
பிறந்த இடத்திலிருந்து 100 அடி தூரத்துக்கு மேலே போகாது….நம்ம வீட்டு கொசு நம்மளையே கடிக்கும்.
முன்னால்வந்து கடிக்காது….பின்னாலிருந்து புறங்கைகள், கணுக்கால்களில் கடிக்கும்
சாதி,மதம்,வயது,ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் ஆண் ,பெண் ,பெரியவர் சிறியவர் குழந்தைகள் வாலிபர்கள்,இளையோர் பெரியோர் என எல்லாரையும் கடிக்கும் ஒருவித கெட்ட கொசு….
சுத்தமான தண்ணீர் தான் அவற்றின் பிறப்பிடம்.
இப்போதைக்கு தமிழ் நாட்டில் தினசரி சராசரி 13 பேர்களை வென்று கொன்றுபோடுகிறது..
ஒழிக கொசுக்கள்.
ஒழிப்போம் டெங்கு 

(அருண் சுந்தரின் முகநூலிலிருந்து)

==================================================================

இறைவனுக்கு  ‘எச்சில் பரிசுத்தம்’  , ‘வாந்தி பண்ணினது பரிசுத்தம், ‘இறந்தவன் போர்வை பரிசுத்தம்’  என்று ஒரு கோவிலில் எழுதியிருந்தது. அதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.

குரு விளக்கினார்.

‘எச்சில் பரிசுத்தம்’ என்பது  கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் ‘இறைவனுக்கு’ பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம்.

‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் ‘வாந்தி பண்ணினது பரிசுத்தம்’ என்று  கூறப்பட்டிருக்கிறது.

பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம்.  அதுதான் ‘இறந்தவன் போர்வை பரிசுத்தம்’.

====================================================================

சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்?

இத்தனைக்கும் சண்டை  போடும் நபர் சமீபத்தில் தான் இருப்பார். அப்படியும் ஏன் சத்தமிடுகிறோம்.

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

=====================================================================

ஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்போகும் படம்            ” நியுட்டன்”  ; அமீர்கானின் ‘டங்கல் ‘ தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்று அவருக்கு வருத்தமாம்.

===============================================================

 

ஞானக்கூத்தன் கடலில் மூழ்கியெடுத்த முத்து

 

Related image

ஞானக்கூத்தன் தமது பிறந்தநாள்பற்றி ‘நான் அறுபது’ உள்ளிட்ட சில கவிதைகளை  எழுதியிருக்கிறார். அதில் ஒன்று இந்தக் கவிதை.

பிறந்த நாள் இரவு

வானம் தெளிந்து மழை விட்டிருந்தது.
வட்டமாய்த் திங்கள் வெளிப்பட்டது.
மேல்வானத்தில் சில மின்னல்கள்
நேரம் தாழ்ந்து கண்கள் சிமிட்டின
குரல் வளமில்லாச் சிறு சிறு இடியுடன்.

கால்வாயில் நிறைந்த தண்ணீர்
கலகலத்து விரைந்து மிகுந்து
ஓடைவழியே அல்லிக் குளத்தில்
வடக்குவாய் வழியாக
இடைவிடாமல் நுழைகிறது.

யாருமில்லை நீர் நிலையில்
இரவும் நிலவும் குளிரும் தண்ணீரும்
சொட்டு சொட்டும் மரங்களின் ஈட்டமும்
நடுச் சாமத்தில் புரியாத கவிதைக்குக்
குழைத்தன சொல்லின் மாட்சியை

காலில் மிகுந்த சேறுடன் இரவில்
திரும்பும் எனது பார்வையில்
வவ்வால் ஒன்று வீடு மாறிற்று
மேலும் மேலும் வரும் பிறந்த நாள்களை
எண்ணிப் பார்த்துநான் மகிழ்ச்சி கொள்கிறேன்
ஒன்றை மற்றது நிகர்க்காவிடினும்.

கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

Image result for pithukuli murugadas krishna songs

அசோகமித்திரனும்ஹார்மோனியமும்!

அசோகமித்திரனின் ‘நண்பனின் தந்தை’ தொகுப்பில் (நற்றிணை பதிப்பு) ஹார்மோனியம் சிறுகதை வாசித்துக் கொண்டிருந்தேன் – ஷீர்டி சாய்பாபா வண்டியில் ஒலிபெருக்கியில் பஜன் ஒலிக்கிறது – மஞ்சள் வேட்டி கட்டிய ஒருவன் கையில் ஹார்மோனியத்துடன் வண்டியைத் தள்ளி வருகிறான் – தெருமுனையில் பாடுவானாம்– இவனுக்கு ஹார்மோனியம் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தந்தையாக இருக்கலாம். அவன் பாடல் ஒலிபெருக்கியின் பாடலைவிட நன்றாக இருக்கிறது! நான்கைந்து கட்டைகளை மட்டும் அழுத்தி, பாட்டின் முழு வடிவமும் வருவதாக எழுதுகிறார். போகிற போக்கில் நேருவுக்கு ஹார்மோனியம் தெரிந்திருக்காது, பாரதியாருக்கும் ,ரவீந்திரருக்கும் ஹார்மோனியம் பிடிக்காது, ஆந்திராவில் ரயிலில் ஹார்மோனியப் பிச்சைக்காரர்கள் உண்டு என்று சொல்லி, ஹார்மோனியத்தில் கடவுள் உண்டு என்று முடிக்கிறார்!

மண்டைக்குள் கொஞ்சம் ஹார்மோனியம் நினைவுகள் பெல்லோஸ் (BELLOWS) போட்டன!

அந்தக் காலத்தில் விடியவிடிய நடக்கும் இசை நாடகங்கள், கூத்துக்கள் இவற்றின் மெயின் பின்னணி வாத்தியம் ஹார்மோனியம்தான்! ஸ்ருதி சேர்த்து, உச்சஸ்தாயியில் பாடப்படும் பாடல்கள் – மைக் இல்லாத காலங்கள்! – வசனங்களை விடவும் மிகவும் பிரசித்தி பெற்றவை! பாடகரின் ஸ்ருதியுடன் ஒன்றாகி, உடன் ஒலிக்கும் முக்கியமான இசைக்கருவி ஹார்மோனியம். எஸ் ஜி கிட்டப்பா, கே பி சுந்தராம்பாள் போன்ற அந்தக்காலக் குரல்கள் நாடகமேடையை ஹார்மோனியத்தின் துணையுடனேயே ஸ்ருதி கூட்டின!

முன்னமே வேறு வடிவங்களில் இருந்தாலும், 1840 ல் அலெக்சாண்டர் டீபைன் என்னும் ப்ரெஞ்சுக்காரர்தான் முதன் முதலில் பெயரிட்டு, ஹார்மோனியத்தை வடிவமைத்துக் காப்புரிமையும் பெற்றார்!

காற்று மூலம் ஒலியெழுப்பும் காற்று வாத்தியம் – (வாயினால் காற்று ஊதி வாசிக்கும் புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்று) துருத்திகள் மூலம் (BELLOWS) காற்றை ஊதி ஒலியெழுப்பப்படும் ‘பைப்ஆர்கன்’, மேலைநாட்டு அக்கார்டியன் போன்ற இசைக்கருவிகளின் மறுவடிவமே ஹார்மோனியம்! நம் பாரம்பரிய வழக்கப்படி, அமர்ந்து வாசிக்க வடிவமைக்கப்பட்டது! தோளின் குறுக்கே பட்டையில் கட்டி, நின்றபடியேவும் வாசிப்பவர்கள் உண்டு!

செவ்வகப் பித்தளைத் தகடுகள்மேல் துருத்திக்கொண்டிருக்கும் மெல்லிய தகடுகள், ஊதும் காற்றினால் அதிர்வடைந்து, இணைக்கப்பட்டிருக்கும் ஸ்வரக் கட்டைகளுக்கேற்ப ஒலியெழுப்பும்! ஆரம்பகாலத்தில் காற்றுத் துருத்தியைக் காலால் பெடல் செய்து ஒலியெழுப்பினர் – “கால்ஹார்மோனியம்” ! பின்னர் இடது கையினால் துருத்தியை அசைத்து, காற்று ஊதப்பட,வலது கை விரல்கள் (சுண்டுவிரல் தவிர!) ஸ்வரக்கட்டைகள் மீது வழுக்கி, நாட்டியமாட, ஸ்வரங்கள், ராகங்களாக வாசிக்கப்படுகின்ற அதிசயம் அரங்கேறியது!

வடக்கிந்திய இசையில் ஹார்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு – ஹிந்துஸ்தானி, கஜல், அபங்க் என எல்லாவகைப் பாடல்களுக்கும் முக்கிய பக்கவாத்தியம் ஹார்மோனியம்தான்! (சிலருக்கு சாரங்கிதான் பிடிக்கும்!). பீம்சென் ஜோஷி போன்றோருக்கு ஹார்மோனியமே பிரதானம் – ஹரிஹரன், பங்கஜ்உதாஸ், ஜெகஜித்சிங் கஜலுக்கும் அதுவே பக்கவாத்தியம்!

தென்னிந்தியாவில், பஜனைகள், நாம சங்கீர்த்தனங்களில் அதிக அளவில் ஹார்மோனியம் வாசிக்கப்படுகிறது. கர்னாடக சங்கீத நுட்பங்கள் ஒரு சில வாசிப்பது சிரமம் என்பதால், ஆல் இண்டியா ரேடியோவில் 1940 முதல் 1971 வரை ஹார்மோனியம் வாசிப்பது தடை செய்யப்பட்டிருந்தது – இன்று எப்படியோ தெரியாது. இப்போதெல்லாம் கீபோர்டுதான் எனக் கேள்விப்படுகிறேன்.

முதன் முதலில் நண்பர் ஒருவர் ’பேசிக்’ மாடல் (சிங்கிள் ரீட்) ஹார்மோனியம் ஒன்று கொடுத்தார். நானும் ஒரு கீபோர்ட்ஆர்டிஸ்டை (அவர் ஒரு சிறந்த இசைவல்லுனர் – கர்னாடக சங்கீதத்தில் பாடல்கள் இயற்றி, கீபோர்டில் இசையமைப்பார் – இசையை ரசிப்பதே ஒரு கலை – அதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்!) குருவாகக் கொண்டு கொஞ்சநாள் இசைப்பயிற்சி செய்தேன்! தொடர்ந்து பயிற்சி செய்யாமல் விட்டு விட்டேன் – குருவின் பெயர் தப்பித்தது!!

மைலாப்பூரில் செம்பை சிஷ்யர் ஒரு பாட்டு வாத்தியார் – மறைந்த நண்பர் தாமஸ் மூலம் அவர் அறிமுகம் – சில நாள் அவரிடம் ’பாட்டு கிளாஸ் ’க்குப் போனேன் (தோளில் ஜோல்னாப் பையில் சாம்பமூர்த்தி இசைப் புத்தகம்!) – சில ராகங்கள், சில சின்னப் பாடல்களுடன் நிறுத்திக்கொண்டேன் – அதற்குமேல் அவர் பொறுமையை சோதிக்க எனக்கு மனமில்லை! அவரிடம் ஒரு அருமையான டபுள் ரீட் ஹார்மோனியம் இருக்கும் – சா…பா…சா – நம் குரலுடன் இழையும்போதே, பிசிரில்லாததாய்த் தெரியும் உலகம்!!

ஹார்மோனியத்துடன் பாடல் என்றால் முதலில் என் நினைவுக்கு வருபவர் பித்துக்குளி முருகதாஸ் – அவரது பக்திப் பாடல்களின் ஜீவனே ஹார்மோனியத்தில்தான் என்று கூட நான் நினைப்பதுண்டு!

திரைப்பட இசையமைப்பாளர்கள் – ஒரு சிலரைத் தவிர – ஹார்மோனியம் துணையுடன்தான் மெட்டுக்கள் போடுவார்கள். எம் எஸ் வி, மஹாதேவன் இசையமைப்பில் ஹார்மோனியம் பல பாடல்களில் கூடவேவரும். எம் ஜி ஆரின் ’நாடோடி’ யில் எல்லாப் பாடல்களுக்கும் ஹார்மோனியம்தான் பேஸ் – ஹீரோ ஒரு தெருப்பாடகன்! (நாடு, அதை நாடு, அன்றொருநாள் இதே நிலவில் பாடல்கள் காலத்தினால் அழியாதவை!). இளையராஜாவின் அம்மன் கோயில் கிழக்காலே, காசி படப் பாடல்களில் ஹார்மோனியம் அழகாகச் சேர்க்கப்படிருக்கும்!

“ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” – பாலச்சந்திரராஜு அவர்களின் நல்ல புத்தகம். (மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு). வாசித்திருக்கிறேன் – நான் புத்தகத்தைச் சொன்னேன்!

Image result for msv and harmonium