அட்டைப்படம் நவம்பர் 23

விஷ்ணுபுரம் விருது 2023 – யுவன் சந்திரசேகருக்கு.

Vishnupuram Ilakkiya Vattam

 

நண்பர்களே,

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம்.

இவ்விழா இன்றைய சூழலில் மிகக்குறைந்த அளவில் நடத்தப்படவேண்டும் என்றாலும் ஓரளவு நிதி தேவை. இந்த ஆண்டு முதல் விருத்தொகை ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. மிகமிகக்குறைந்த செலவில் இதை நடத்துகிறோம் என்றாலும்கூட இதற்கான செலவுகள் மிகுதி. நாங்கள் தனிப்பட்ட முறையில் எவரிடம் சென்று , கோரி நிதிவசூல் செய்வதில்லை. கார்ப்பரேட் நிதியும் பெறுவதில்லை. நண்பர்களை நம்பியே இதுவரை இவ்விழா நிகழ்கிறது.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch: ICICI Bank, Ramnagar Branch, Coimbatore
Account Name: VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
Current Account No: 615205041358
IFSC Code: ICIC0006152

 

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் அளிக்க விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

jeyamohan.writerpoet@gmail.com

நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

திரைக்கதம்பம் ( அக்டோபர் 2023) – சிறகு ரவி

 

இறுகப்பற்று

Irugapatru Movie Review And Rating Tamil Yuvaraj Dhayalan Vikram Prabhu |  ரசிகர்களை இறுக்கமாக பற்றியதா 'இறுகப்பற்று' திரைப்படம் விமர்சனம் இதோ Movies  News in Tamil

பல இடங்களில் நம்மைக் கட்டிப் போடுகிறது படம். கவனம் சிதறாமல் கொண்டு சென்ற இயக்குனர் யுவராஜ் தயாளனுக்கு பாராட்டுக்கள். கடைசியில் நல்ல படங்கள் செய்யும் ஒரு குறுகுறுப்பு சிந்தனையோடு வெளியேறுகிறோம். மூன்று தம்பதியர் இடையே விழும் முடிச்சு சிக்கல்கள் தான் கதை. மாறி மாறி அவர்களின் தருணங்களைக் காட்டினாலும், ரசிகனை படத்தோடு இணைக்க உளவியல் மருத்துவர் மூலம் தெளிவு காட்டப்பட்டிருக்கிறது. இதில் மனோகரின் ( விக்ரம் பிரபு) பாத்திரம் வினோதம். உளவியல் மருத்துவரான மனைவி மித்ராவின் அறிவுரைகள், பணி தாண்டி வீட்டிலும் ஒலிக்கும்போது, அவனது அழுத்தம் அதிகமாகிறது. டாடா, குட் நைட் படங்களைப் போல நல்ல படங்களும் ஈர்க்கும் என்பதற்கு இப்படம் இன்னொரு உதாரணம். காட்சிப்படுத்துதலை விட்டு விட்டு, வசனங்கள் மூலம் அனைத்தையும் சொல்ல வந்தது தான் இதன் குறை. ஆனாலும் ஆங்காங்கே தெளித்து விடப்பட்ட நகைச்சுவை படத்தை காப்பாற்றுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இறுகப்பிடித்தால் எந்த முடிச்சும் அறுந்துவிடும் எனும் பழமொழிதான் இந்தப் படத்தின் ஒன்லைன். அதை மூன்று ஜோடிகள் மூலம் சொல்ல வந்த விதம் அருமை. ஷரத்தா ஸ்ரீநாத், விக்ரம் பிரபு, வித்தார்த், ஸ்ரீ  போன்றவர்களின் உணர்ந்த நடிப்பு இதன் பலம். – தி ஹிந்து

நிறைய கொண்டாடப்பட வேண்டிய தருணங்கள். மிகச் சொற்ப குறைகள். அற்புதமான நடிப்பு அனைவரிடமிருந்தும். இது இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது.- இண்டியா டுடே.

”கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு காரணம் |தேவையில்லை கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம்தான் “என்ற யதார்த்தமான டயலாக்குடன் தொடங்குகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம். விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தமிழ் சினிமாவில் தம்பதிகளின் அன்பின் தேவையை உணர்த்தும் படமாக வந்துள்ளது இறுகப்பற்று. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய படமாக இறுகப்பற்று இருக்கும் என்பது உறுதி. – கல்கி இணைய இதழ்

புதிதாக கல்யாணமான தம்பதிகளுக்கு இது ஒரு கோனார் நோட்ஸ். எடுத்தோம் கவிழ்த்தோம் பிரிவோம் என்றில்லாமல் நவீன தம்பதிகள் உளவியல் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது ஆரோக்கிய சினிமா – சினிமா எக்ஸ்பிரஸ்.

பிரச்சார தொனியுடன் கூடிய ஒரு ரசிக்கத்தக்க குடும்ப சித்திரம். புதிதாக எதையும் சொல்லாமல் கவரக்கூடிய விதத்தில் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. – இந்தியா ஹெரால்டு.

தி ரோட்

தி ரோட்'(The Road) – சினிமா விமர்சனம் | Miya george, College professor,  Movies and tv shows

எதையும் இதிலிருந்து தனித்து எடுத்து ரசிக்க முடியாத அலுப்பான படம். போலவே, திரிஷாவின் போராளி பிம்பத்தை இன்னமும் சாய்த்து கவலையைக் கூட்டுகிறது. திரிஷா சோடையில்லை என்றாலும் மாயழகனாக ஷபீர் கல்லரக்கல் பட்டையை கிளப்புகிறார். தோல்விப் படங்களில் அவரது நடிப்பை இனி வீணடிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.- தி ஹிந்து

விபத்தா? கொலையா? எனும் புலனாய்வு காட்சிகள் ஈர்க்கின்றன. பாதி வழியில் இன்னொரு கதையை இதோடு இணைத்ததில், நம் கவனம் சிதறுகிறது. இன்னும்  சொல்லப்போனால், வில்லனின் கதையைப் பார்த்து அவன் மீது பரிதாபப்பட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுகிறோம் எனும் வகையில் இயக்குனர் அருண் வசீகரன் நம்பிக்கை தருகிறார். திருஷாவின் தொலைந்த ஆடு முகம், நமக்குள் அவர் மேல் பரிதாபத்தையும், அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனும் பதற்றத்தையும் விதைக்கிறது. இதற்கு மேல் புதிதாக உத்திகள் இல்லாமல் படம் தடுமாறுகிறது. சாம் சி எஸ்ஸின் காதைக் கிழிக்கும் இசை நம்மை இன்னும் ரணமாக்குகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

நல்ல திரில்லராக வந்திருக்க வேண்டியது. பழைய பாட்டையில் போனதில் புதிதாக எதுவும் நம்மை ஈர்க்காமல் கை விட்டு விடுகிறது. கொலையை ஒரு விபத்தாக கட்டு கட்டும் காவல் துறையின் புறையோடிய வழிகளை மீண்டும் சொல்ல வந்து தோல்வியடைகிறது படம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் திரிஷாவால் எது நல்ல படம் என்று தீர்மானித்து தேர்வு செய்ய முடியவில்லை என்பது தான் இன்றைய தீர்ப்பு. – இண்டியா டுடே!

ரத்தம்

அட்ரா சக்க : ரத்தம்(2023) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்) @  அமேசான் பிரைம்

மேம்போக் காக எழுதபட்ட கதைக்குப் பொருத்தமான காட்சிகளும் இல்லை. தேவையான நடிப்பும் இல்லை. அதனால் ரத்தமற்று, சோகையாகி, உயிரை விடுகிறது படம். கடைசியில் சில காட்சிகளைத் தவிர எதையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல் வெளியேறுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதன் எதையும் தெறிக்க விடவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

  

800

800 review. 800 Tamil movie review, story, rating - IndiaGlitz.com

முத்தையா முரளீதரனின் வாழ்வு பயணம் நம்மை உட்கார வைக்கிறது என்றாலும், இன்னும் கூட ஆழமாகச் சொல்லியிருக்கலாமோ எனும் ஏக்கமும் வருகிறது. வாழும் நாட்டில் உரிமை மறுக்கப்பட்டு, விடுதியில் தங்கி படிக்கும் முரளியின் வாழ்வு அர்ஜுனா ரனதுங்காவின் ஊக்கத்தால் மாற்றப்படுகிறது. அதே சமயம் வேறு குழு உறுப்பினர்கள் யாரும் உதவவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது. இரண்டாம் பாதியில் சற்று புரிதல் சேர்க்கப்பட்டிருக்கிறது. முரளி ஈழ போராளி பிரபாகரனை ( நரைன்) சந்திக்கும் கட்டம் அற்புதம். நாட்டில் அமைதி வேண்டும் என விரும்பும் முரளியும், அதற்கு போர் மட்டுமே வழி என்று நினைக்கும் கேப்டனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் பதைப்பு மிகுந்தது. முரளியாக மதூர் மிட்டல் பாத்திரத் தேர்வில் பாஸ். பல கிரிக்கெட் காட்சிகள் நாம் பார்த்தவை என்றாலும் கடைசி போட்டியின் அமைப்பில் சற்று உணர்வுகளை தூண்டி விட்டிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இன்னும் கூட நகாசும் தெளிவும் இருந்திருக்க வேண்டிய படம். சில அருமையான நடிப்பும், திறன் மிக்க கலைஞர்களும் கொண்ட குழு, இன்னும் செய்திருக்கலாம். – இந்தியா டுடே!

சாகச வீரனைப் பற்றிய கதையை, சராசரியாக சொல்லும் படம். ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு சாதனை வீரரின் முத்திரை காட்சிகளை சரியாகப் பதிவாக்கி இருக்கிறது. முரளியின் வாழ்வில் வந்த சிக்கல்: பந்து வீச்சா அல்லது எறிதலா? இதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதும் ஒரு குறை. – தி ஹிந்து

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில், அவரை துரத்திக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி, அவர் யார் என்கிற அடையாளம் தான். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை ஒரு சிங்களர் என்றா இல்லை தமிழரா? எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது பற்றி படம். மைதானத்தில் நடக்கும் காட்சிகள் அப்படியே வருகிறது. ஆனால் முத்தையாவின் இறுதி போட்டியில், கொஞ்சம் டிராமா கலந்து, கனவுகளுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதுடன், ஒரு திறமைசாலியின் சாதனையை தனித்து காட்டுகிறார்கள். மொத்தத்தில் பாதி கிணறு – சமயம் தமிழ்.

 

எனக்கு எண்டே கிடையாது

Enaku Endey Kidaiyaathu - Cinema Review | எனக்கு எண்டே கிடையாது - சினிமா  விமர்சனம்

சராசரி படமாக இருக்கும் என்று பார்க்க உட்கார்ந்தால் மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார்கள். முதல் பாதி க்ரைம் திரில்லராகவும், இரண்டாம் பாதியை பிளாக் காமெடி க்ரைம் டிராமாவாகவும் எடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ். ஒரு வீடு. நான்கைந்து கதாபாத்திரங்கள். அதற்குள் அடுத்து என்ன எனும் பதைப்பை விதைத்த விதத்தில், இப்படத்தின் திரைக்கதை செமையாக எழுதப்பட்டு, காட்சிகளாகவும் அப்படியே திரையில் காட்டப்படுகிறது. பிரபல முகங்கள் இல்லாமல், கதைக்கு பொருந்தும் நடிகர்களை தேர்வு செய்த விதத்தில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். கலா சரணின் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம். கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற படம் – ஃபில்மி கிராஃப் அருண்.

ஷாட் பூட் த்ரீ

ஷாட் பூட் த்ரீ | Dinamalar

ஆர்ப்பரித்து கொண்டாடக்கூடிய படமில்லை. கைத்தட்டலும் விசில்களும் கூட இருக்காது. ஆனால் படம் முடிந்து, பெயர்கள் உருண்டு மறையும்போது, நம் நெஞ்சம் லேசான பஞ்சு போல ஆவது உண்மை. நல்ல படம் தான். ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது இந்த ஜாமூன் படத்தில். -சினிமா எக்ஸ்பிரஸ்

ஒரு சரியான குழந்தைகளுக்கான படம். ஆரோக்கியமான சரியான திட்டமிடலுடன் கூடிய ஒரு சுவையான விருந்து. ஒரு இந்திய படம் குழந்தைகளையும் நாய்களையும் மையப்படுத்தி எடுத்திருப்பதே சாதனை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா

முக்கியமான அவசியமான செய்திகளை,அறிவுரைகளை சரியான விகிதத்தில் கொண்டு சேர்க்கும் அற்புதமான சிறுவர் படம் இது. – சவுத் ஃபர்ஸ்ட்.

லியோ

Changes in Leo Shooting

படத்தின் ஆரம்பக் காட்சிகள் கவனமாக மித வேகத்தில் செலுத்தப்படுகிறது. அதுவே திரையின் அற்புத தருணங்கள். பார்த்திபனின் குடும்பம்; அதில் இருக்கும் பாசம், நேசம் எனக் கொண்டாட்டம் கொப்பளிக்க. வில்லர்கள் அவர் நடத்தி வரும் உணவு விடுதியை நாசம் செய்ய வரும்போது  படம் வேகம் எடுக்கிறது. விஜய் ஒரு நட்சத்திரம் மட்டுமல்ல; நல்ல நடிகரும் கூட என்பதை சிரத்தையோடு வெளிக்காட்ட முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் பாதி வண்ணம் என்றால் பின் பாதி சாயம் போன வர்ணம். சரியாக எழுதப்படாத காட்சிகள், படத்தை தொங்கலில் விடுகின்றன. திரிஷா அருமையாக நடித்திருக்கிறார். அதை பிரியா ஆனந்த் விசயத்தில் சொல்வதற்கில்லை. முதல் பாதியை பரபரவென்று எழுதி இரண்டாம் பாதியில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். அதனால் இது ஒரு சராசரி படமாக  ஆகிவிட்டது. – 123 தெலுகு

இலக்கை எட்டாத படத்தில் விஜய் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். இந்தப் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறார். ஒன்றை பாராட்ட வேண்டும். எதிலிருந்து சுட்டோம் என்பதை மறைக்கும் இயக்குனர்கள் நடுவில், இதிலிருந்து தான் ஈர்ப்பு என்று பட்டவர்த்தனமாக டேவிட் க்ரோனென்பெர்க்கின் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் எனும் படத்தை அறிவித்த நேர்மையை பாராட்ட வேண்டும். திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன் எல்லோரும் அருமையாக நடிக்க, அர்ஜுன் மட்டும் சோடை போயிருக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். அனிருத்தின் இசை படத்தை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது. லியோ, விஜய்யின் நடிப்பிற்காக பார்க்க வேண்டிய  படம். லோகேஷின் இயக்கத்திற்காக அல்ல. – இண்டியன் எக்ஸ்பிரஸ்.

லோகேஷின் மோசமான படத்தை தட்டி எழுப்ப முயன்றிருக்கிறார் விஜய். ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொன்னாலும் அதைத் தாண்டி இன்னும் ஆழமான படிமங்களை விதைக்க முயன்றிருக்கிறார் லோகேஷ். இலக்கை தவற விட்டாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக படமாக இருக்கும். அதனால் லோகேஷை திரை ரசிகன் கைவிட மாட்டான். – தமிழ் ஹிந்து.

இது ஒரு அதிரடி சண்டைப் படம் என்பதில் சந்தேகமில்லை. அதில் விஜய்யால் அபூர்வமான நடிப்பை தர முடிந்தது ஆச்சர்யம். இதில் அனிருத்தின் பங்கு மிகவும் முக்கியம். பல இடங்களில் இசை படத்தை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இது கொடுத்த காசுக்கு நட்டமில்லாத படம். – இந்தியா டுடே.

வழக்கமான பாட்சா கதை தான். ஆனால் பெரிய தாதா லியோதாஸ் இப்போது திருந்தி ஹிமாசலப் பிரதேசத்தில் பேக்கரி வைத்திருக்கும் குடும்பஸ்த்தர் பார்த்திபன் எனும் சஸ்பென்ஸை கடைசி வரையில் கொண்டு சென்றது இயக்குனரின் சாமர்த்தியம். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், மிஸ்கின் போன்றவர்களிடம் நல்ல நடிப்பை வாங்கியது இயக்குனரின் புத்திசாலித்தனம். விஜய்யை மாஸ் ஹீரோவாக காட்டாமல், நடிகராக காட்டிய விதத்தில் இப்படம் வித்தியாசப்படுகிறது. அனிருத்தின் பின்னணி இசை இல்லையென்றால் இந்தப் படத்தை இந்தளவு ரசித்திருக்க முடியாது. பெரும் உழைப்பை போட்டிருக்கிறார் ராக் ஸ்டார். மடோனா சபாஸ்டியனின் பாத்திரம் சரியாக எழுதப்பட்டு, படம் முடிந்தபின்னும் மனதில் நிற்கிறது. மனோஜின் ஒளிப்பதிவில், குளிர்சாதனம் இல்லாத்  திரையரங்குகளிலும் குளிர் எடுக்கும் அற்புத படிமங்கள்.- வலைப்பேச்சு.

சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜின் மோசமான படத்தில் விஜய். சொந்த திறமையை நம்பாமல், புகழ் போதையில் சிக்கியிருக்கிறார்ல் இயக்குனர். திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் என்றாலும், விஜய்யின் மற்ற மாஸ் படங்களைப் போலல்லாமல் வித்தியாசமான நடிகர் விஜயை காட்டிய விதத்தில் பாராட்டு பெறுகிறார். பல முடிச்சுகளைப் போட்டு அதை நம்பும் விதமாக அவிழ்ப்பதில் லோகேஷ் கெட்டிக்காரர். இதிலும் கழுதைப் புலியை அடக்கும் ஆரம்பக் காட்சியுடன் நிற்காமல், பார்த்திபன் எனும் விஜய், வீட்டு நாயைப் போல மாற்றிய காட்டு விலங்கிற்கும், ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவை க்ளைமேக்ஸில் தந்திருப்பது அவரது புத்திசாலித்தனம். தேவையற்று அவருடைய பழைய படங்களின் பாத்திரங்களை இதில் கோடிட்டிருப்பது அனாவசியமாகப் படுகிறது. இது லியோ பார்த்திபன் கதையாக மட்டும் இருந்தால் இன்னும் கூட சுவையாக இருந்திருக்கும். அனிருத்தின் தொப்பியில் இறகு. லோகேஷுக்கு சின்ன சறுக்கல்.– இண்டியன் எக்ஸ்பிரஸ்.

தீக்கங்கு போல நடித்திருக்கும் விஜய்யால் கூட லோகேஷின் லியோவை காப்பாற்ற முடியவில்லை. இந்தப் படம் இயக்குனரின் இன்னொரு சுவாரஸ்ய படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லோகீஷ் மீது ரசிகன் வைத்திருக்கும் நம்பிக்கை அடுத்த படம் வரை தாங்கும்.– தி ஹிண்டு.

நல்ல சுவாரஸ்யமான ஆக்ஷன் திரில்லருடன் ஒரு குடும்பக் கதையையும் இணைத்து சுவையான படமாக வந்திருக்கிறது லியோ – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

எதிர்பார்க்காத திருப்பங்கள்; அதிரடி சண்டைக் காட்சிகள். தூவப்பட்ட நகைச்சுவை. கவன சிதற வைக்காத பின்னணி இசை. இவைதான் லியோவின் யூ எஸ் பி. அதை நன்றாக புரிந்து தங்க தட்டில் விஜய் எனும் கலைஞரை ரசிகனுக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ். மொத்தத்தில் அதிகம் எதிர்பார்க்காமல் போனால் ஏமாற்றமில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தனது முந்தைய படங்களில், போதைப் பொருட்களை மையப்படுத்திய கதையாகக் கொடுப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வழக்கமாக இருந்தது. இந்தப் படத்திலும் அப்படித்தான் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்த்தால், அதை ஒரே ஒரு காட்சியுடன் நிறுத்தி விட்டு, ஒரு குடும்பச் சித்திரமாக மாற்றி இருக்கிறார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்துடன் ஒப்பிடும் போது இதில் ‘ஸ்கிரிப்ட்’ன் வேகம், அழுத்தம் குறைவு. மொத்தத்தில் லியோ கொஞ்சம் யோ..நிறைய யோவ். – தினமலர்

கர்ஜனையாக ஆரம்பித்து முனகலாக முடிகிறது லியோ – சினிமா எக்ஸ்பிரஸ்.

அன்பெனும் ஆயுதம்’ என்ற மெலோடி அமைதியான நீரோடை என்றால், `நான் ரெடிதான் வரவா’ பாடல் அரங்கம் அதிரும் அடைமழை! பின்னணி இசையில் இரண்டு ஆங்கிலப் பாடல்கள், `பேட் ஆஸ் தீம்’ என ரியல் ராக்ஸ்டாராகப் பல காட்சிகளைக் காப்பாற்றி இருக்கிறார் அனிருத். `நான் ரெடிதான்’ பாடலில் தினேஷ் மாஸ்டரின் நடன வடிவமைப்பு சிறப்பு. பனிப்பிரதேசத்தின் குளிர்ச்சி,, புகையிலை தொழிற்சாலையின் வெக்கை என இருவேறு இடங்களைத் தனது ஒளியுணர்வால் சிறப்பாக வேறுபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. படத்தின் ஓர் அங்கமாகவே பயணிக்கும் சண்டைக் காட்சிகளைக் கதையின் முதுகெலும்பாகக் கருதி வடிவமைத்துள்ளார்கள் அன்பறிவு மாஸ்டர்கள். ஆனால் முதற்பாதியிலிருந்த இந்த முழுமையும் நிதானமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். பிளாஷ்பேக் தொடங்கிப் பல இடங்களில் தள்ளாடுகிறது திரைக்கதை. நம்பத்தன்மையே இல்லாத ட்விஸ்ட்டுகள், தேவையற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை மழுங்கடிக்கின்றன. அதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ கதாபாத்திரம் படத்திற்குச் சாதகமாக இல்லாமல், பாதகமாகக் காலை வாரியிருக்கிறது.- விகடன் இணைய இதழ்.

 

மார்கழி திங்கள்

மார்கழி திங்கள் | Dinamalar

எதிர்பார்க்காமல் போனால் சில இன்ப அதிர்வுகள் கொண்ட படமாக இது இருக்கும். பிரபல இயக்குனர் (பாரதிராஜா) மகனாக இருக்கும் சங்கடம் மனோஜ் பாரதிராஜாவுக்கு உண்டு. அதீத எதிர்பார்ப்புகளுடன் ரசிகன் படம் பார்க்க வருவான். ஆனாலும் ஒரு சுத்தமான காதல் கதையை கொடுத்த விதத்தில் மனோஜ் சோடை போகவில்லை. கவனமான எழுத்து இதன் பலம். கவிதாவின் ( ரக்ஷனா) மீது நமக்கு ஈர்ப்பை விதைக்க திரைக்கதை தவறவில்லை. ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு குறைவான நீளம் கொண்ட படம் சில சமயம் ஆமை வேகத்தில் போகிறதோ என்று தோன்றாமலில்லை. சிறிது நேரமே வந்தாலும் இயக்குனர் சுசீந்திரனின் பாத்திரம் ஆழமானது. அதே போல் இளையராஜாவின் இசை, பல வகைகளில் படத்தை முன்னெடுத்து செல்கிறது. மனத்தை அசைக்க வைக்கும் பழைய பாணி படம் இது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா

ரசவாத காதல் கதை பழைய தொழில் நுட்ப வித்தைகளால் கைவிடப் படுகிறது. கடைசி கால் பாக படத்தில் விழித்துக் கொள்கிறார் இயக்குனர் மனோஜ் பாரதி ராஜா. சில திருப்பங்களால் பதைபதைப்பை விதைக்கிறார். அதற்குள் படத்தின் விதி கை மீறி விடுகிறது. – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

திண்டுக்கல் மாவட்டம் நெய்காரபட்டியில் தன் தாத்தாவுடன் (பாரதிராஜா) வாழ்ந்து வருகிறார் தாய், தந்தையை இழந்த கவிதா (ரக்‌ஷனா). பத்தாம் வகுப்பு படிக்கும் கவிதாவிற்கும், அவரின் சக வகுப்பு மாணவரான வினோத்திற்கும் (ஷியாம் செல்வம்), யார் முதல் மதிப்பெண் எடுப்பது என்ற போட்டி எழுகிறது. அது மோதலாக… அப்படியே காதலாகவும் மாறுகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தாத்தாவிடம், வினோத் மீதான தன் காதலைப் பற்றிச் சொல்கிறார் கவிதா. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவரான தாத்தா, தன் பேத்தியை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத்திற்குத் திருமணம் செய்து வைக்கத் தயங்குகிறார். அதனால், காதலை முழுமனதாக ஏற்கவும் இல்லாமல், மறுக்கவும் இல்லாமல், காதலர்களுக்கு ஒரு நிபந்தனையை விதிக்கிறார். அந்த நிபந்தனை என்ன? அந்த நிபந்தனையாலும் காதலுக்கு எதிராக நிற்கும் ஆதிக்க சாதியினராலும் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது? என்பதைப் பேசுகிறது மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’. அறிமுக நடிகர் ரக்‌ஷனா, தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் செயற்கைத்தனம் எட்டிப்பார்த்தாலும், அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான காதல், ஏமாற்றம், கோபம், இயலாமை ஆகியவற்றைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் ஷியாம் செல்வம், சில காட்சிகளில் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார். தன் தளர்ந்த உடலாலும், குரலாலும் படத்திற்கு உயிரூட்டப் போராடியிருக்கும் பாரதிராஜா படத்திற்குப் பலம். அவரை இன்னும் ஆழமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஓரிரு வசனங்களை மட்டும் பேசி விட்டு, செட் பிராப்பர்ட்டி போலப் படம் முழுவதும் வந்து போகிறார் அப்புக்குட்டி. வில்லனாக தன்னைக் காட்டிக்கொள்ள ஒவ்வொரு காட்சியிலும் பெரும் முயற்சி செய்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், குறைந்தபட்சம் ஒரு பிரதான கதாபாத்திரம் என்ற ரீதியில் கூட அக்கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதில் நிற்கவில்லை. கவிதாவின் தோழியாக வரும் அறிமுக நடிகர் நக்‌ஷா, தன் கச்சிதமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். சுசீந்திரனின் திரைக்கதையும், செல்லா செல்வத்தின் வசனங்களும் இறுதிக்காட்சியில் மட்டும் வாய் திறக்கிறது. கருப்பொருளுக்குத் தேவையான எதார்த்தமும் சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையும், நேர்த்தியோடு ரசிக்கும்படியான திரையாக்கமும் இல்லாமல் போனதால், இந்த மார்கழி திங்கள் பிரகாசத்தைத் தராமல் டல் அடிக்கிறது. – விகடன் இணைய இதழ்

கூழாங்கல்

கூழாங்கல் விமர்சனம்: ஆணாதிக்கம், குடும்ப வன்முறை, மது அடிமைத்தனம் - கேள்வி  கேட்கும் அந்த ஒற்றை கல்! | Koozhangal Review: A rustic and realistic  portrayal that attacks ...

சோனி லிவ் தளத்தில் காணக்கிடைக்கிறது பல விருதுகளைப் பெற்ற இந்தப் படம்.

இணையாத சில காட்சிகள். ஆனால் படம் முழுவதையும் பார்த்த பின் அவை கதையோடு ஒத்துப் போவதை உணர முடிகிறது. குறைவான வசனங்களால் இயக்குனர் வினோத்ராஜ் சொல்ல வந்ததை பொட்டில் அறைகிறார். வசனமற்ற காட்சிகள், பாத்திரங்களுக்கு கடக்கும் முன்னரே பார்வையாளனை உணர்வில், நெகிழ்வில் மூழ்கடித்து விடுகிறது. எந்த கதை மாந்தருக்கு சோகம் பீடிக்கப்படுவதில்லை. ஆனாலும் படம் நெடுக கசியும் சோகம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. எந்த பிரச்சாரத் தொனியும் இல்லை. எந்த ஒரு துக்கத்திற்கும் தீர்வு சொல்லப்படவில்லை. இவர்கள் வாழ்வு இப்படித்தான் எனும் யதார்த்த தொனி படத்தின் பலம். திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் நவீனம் இல்லை என்பது குறை என்றாலும் சில விஷயங்களை நவீனம் கெடுத்து விடும் எனும் உண்மையை உணர்ந்து இயங்கியிருக்கிறார் இயக்குனர். அதனால் முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார். – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

பல படங்களில் எது குறைகிறது..அது பிரபல நட்சத்திரங்கள் நடித்த  படமாக இருந்தாலும் என்பதை அழகாக புரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்ராஜ் தன் முதல் படத்தை இயக்கிய விதத்திலேயே புரிய வைத்து விடுகிறார். அதனால் கூழாங்கல் உணர்வு பூர்வமான அழுத்தமான படமாக வந்திருக்கிறது. – தி ஹிந்து.

எடுக்க வந்த கதைக்கு உண்மையாக இருந்திருக்கிறார் இயக்குனர் வினோத்ராஜ். அவரது உழைப்பு படம் நெடுக தெரிகிறது. அதுவே நயன் தாராவை ஆஸ்கர் வரை கொண்ட செல்ல தூண்டியிருக்கிறது. – இந்தியா டைம்ஸ்.

 

 

ஆழ்வார்களும் கண்ணதாசனும் – சௌரிராஜன்

பன்னிரு ஆழ்வார்கள்: ஓர் அறிமுகம்- Dinamani
பேராசிரியருக்கு கற்பித்த கண்ணதாசன் | tamil news Kannadasan life history
*ஆழ்வார்களும்* *கண்ணதாசனும்* – *முன்னுரை*.      –   ( *பகுதி 1* ) 
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பரம ரசிகர்களில் அடியேனும் ஒருவன் என்பதை என்னை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.  
அவரது பல பாடல்களை எடுத்துக்கொண்டு அலசல் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.  
அவர் பாடல்களில் இலக்கியத் தாக்கம் என்பதை பற்றியும் அங்கங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.  
திவ்ய பிரபந்தம்,  திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் பாடல்கள்,  சங்க கால பாடல்கள் ,  என அனைத்தையும் கற்றுணர்ந்தவர் கவிஞர்.  அவரது பல பாடல்களில், மேற்கூறிய ஏதேனும் ஒரு நூலில் இருந்து ஏதேனும் ஓர்  இழை  புலப்படும்
அவை *அனைத்தும்* அவர் அறிந்து செய்ததா அல்லது இயல்பாக அவ்வாறு அமைந்து விட்டதா என்ற கேள்விக்கு பதில் கிடையாது.‌ ஏனெனில் பதில் சொல்லக் கூடியவர் கவிஞர் ஒருவரே. அவர் இன்று நம்மிடையே இல்லை.
அவர் தெரிந்தே வெவ்வேறு இலக்கியங்களில் இருந்து கருத்தை எடுத்து  ஆண்டிருந்தாலும்,  பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் என்றோ படித்த இலக்கிய நயத்தை மனதில் உள்ளிருத்தி,  பிற்காலத்தில் என்றோ ஒரு நாள்,  திரைப்படங்களின் கதை சூழலுக்கு ஏற்ப கேட்கப்படும் பாடல்களில் அவற்றை வெளிப்பட வைப்பது , அதுவும்,  எளிமையான தமிழில் பாமரனும் அறிய கொடுப்பது என்பது சாதாரணமாக  எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.  கவிஞர் நம்மை வியக்க வைக்கிறார். 
ஆழ்வார்கள் அருளிச்செய்த *நாலாயிர திவ்ய பிரபந்தம்* என்று எடுத்துக் கொண்டால் அதைப்பற்றி கண்ணதாசன் தனது *அர்த்தமுள்ள இந்து மதம்*  நூலில்  இவ்வாறு கூறுகிறார் :
” பக்திச்சுவையை , இலக்கியச் சுவையாக்கி , தமிழ் நயமும், ஓசை நயமும், பொருள் நயமும் கலந்து, படிப்பவர்களுக்கு தெய்வீக உணர்ச்சியையும் லௌகீக உணர்ச்சியையும் ஒன்றாக உண்டாக்குவது திவ்ய பிரபந்தம்.  “
இந்நிலையில்,  நாலாயிர திவ்ய பிரபந்தத்தை நமக்கு அளித்த 12 ஆழ்வார்களின் தாக்கம் கண்ணதாசனின் எந்தெந்த பாடல்களில் வெளிப்பட்டிருக்கின்றன என்பது பற்றி ஒரு கட்டுரைத்தொடர் எழுதினால் என்ன என்ற யோசனை எனக்கு வந்தது.
யோசனையை நடைமுறைப் படுத்த விழைந்தபோது,  மதுரை பேராசிரியர், மரியாதைக்குரிய பெரியவர் *சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள்* எழுதிய  *ஆழ்வார்களும் கண்ணதாசனும்*  என்ற ஒரு புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது.  அவரது பேச்சையும் இணையத்தில் கேட்டேன்.  அவரது ஆழ்ந்த வைணவ ஈடுபாட்டையும் கண்ணதாசன் மேல் உள்ள அன்பையும் புரிந்து கொண்டேன். 
ஆழ்வார்களின் தாக்கமாக வந்த கவிஞரின் பாடல்கள் என்று அவர் மேற்கோள் காட்டிய பெரும்பான்மையான பாடல்கள் கவிஞரின் தனிப்பாடல்கள் –  அதாவது *திரைப்பாடல்கள் அல்ல* .  எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் அவ்வளவாக பரிச்சயமற்ற கவிஞரின் தனிக்  கவிதைகளை இந்த கட்டுரைத் தொடரில் நான் கொடுக்க விரும்பவில்லை. 
மேலும் ஒன்று, இரண்டு வாலியின் பாடல்களும் கண்ணதாசன் பாடல்களாக,  தவறாக, அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 
இதனால் எல்லாம் புத்தகத்தின் அருமை குறையவில்லை‌ என்பதை சொல்லியே ஆக வேண்டும்.‌ நான் எழுதும் இந்த தொடரில் சொ.சொ.மீ. அவர்களின் பங்கு அனேகமாக *இல்லை*  என்பதை சொல்வதற்காக இவற்றை குறிப்பிடுகிறேன். மிகச்சில இடங்களில் இருவரும் ஒரே மாதிரியான ஒப்பீட்டை எழுதியிருப்பது தற்செயலே.‌
அடுத்து,  அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக விளங்கும் *திரு.  வெங்கட்* ( முழு பெயர் திரு வேங்கடநாதன் அல்லது வேங்கட கிருஷ்ணன் என்பதாக இருக்கலாம் என யூகிக்கிறேன் – திருவல்லிக்கேணி காரர் என்பதால் )  அவர்களின் பேச்சை இணையத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது . அபார ஞானம்.  குறிப்பாக அவர் கண்ணதாசனின் இரு திரைப்பாடல்களை மட்டும்  எடுத்துக்கொண்டு, அவற்றை முறையே திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வாழ்க்கை சரிதத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. அவற்றில் பாசுரங்களுடன் பாடல்கள் ஒப்பீடு என்பதாக சொல்லப்படவில்லை.‌ கவிஞரின் பாடல்கள், குறிப்பிட்ட ஆழ்வார்களின் வாழ்க்கை சரிதத்தை விவரிப்பதாக சொல்லி இருக்கிறார். 
மேற்கூறியவற்றைத் தாண்டி, இக்கட்டுரைத்தொடருக்கான ஒப்பீடு சம்பந்தமான பதிவுகள்  எதுவும் என் தேடலில் கிடைக்கவில்லை.  அனைத்து  ஒப்பீடுகளும்  அடியேன் சிந்தனையில் உதித்தவையே.  சில ஆழ்வார் பாசுரங்களை படிக்கும் போதும், கேட்கும் போதும்,  பளீர் என்று கண்ணதாசனின் ஏதோ ஒரு பாடல் மனதில் தோன்றும். குறித்துக் கொள்வேன்.  அதே மாதிரி கண்ணதாசனின் சில பாடல்களை கேட்கும் பொழுது,  அட,  இது ஆழ்வார் பாசுரத்தில் சொல்லப்பட்ட கருத்தாக இருக்கிறதே என்று தோன்றும். 
அதையும் குறித்துக்கொள்வேன். 
இப்படியாக என் கட்டுரை தொடருக்கு விஷயங்கள் சேகரித்து,  இப்பொழுது *ஆழ்வார்களும் கண்ணதாசனும்*  என்ற ஒரு கட்டுரைத் தொகுதியாக உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன். 
இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிடப்படவிருக்கும்  ஒப்பீடுகள் தவிர, வேறு பல பாசுரங்களின்  தாக்கத்தை கண்ணதாசனின் வேறு பல பாடல்களில் பார்க்கலாம்.  குறிப்பாக ஆண்டாள்  பாசுரங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவற்றின் தாக்கம் வெளிப்படும்படி கண்ணதாசன் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார்.  என் கட்டுரைகளில் நான் கொடுத்திருப்பது  ஒவ்வொரு பகுதியிலும்,  ஒரு ஒப்பீடு மட்டுமே. அபூர்வமாக இரண்டு. அதைத் தாண்டி கொடுக்கவில்லை –  கட்டுரைகளின் நீளம் கருதி. 
இத்தொடரில் எடுத்துக் கொண்டுள்ள ஆழ்வார்கள் வரிசை என்பது அவர்களது அவதார வரிசை *அல்ல* .  எழுதும் வசதிக்கேற்ப நான் தேர்ந்தெடுத்த வரிசைதான் அவை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். 
இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் என்று சொல்லப் போனால் ,
ஆழ்வார்களையும் திவ்ய பிரபந்தத்தையும் மட்டுமே அறிந்த வைணவ அன்பர்களுக்கு ஒப்பிலாக் கவிஞன் கண்ணதாசனை அறிமுகப்படுத்துவது,  
அதே போன்று, கவியரசர் கண்ணதாசனை மட்டுமே அறிந்த கவிதை / திரைப்பாடல்கள்  ரசிகர்களுக்கு ஆழ்வார்களையும் பிரபந்தத்தையும் அறிமுகப்படுத்துவது,  
ஆக, இரு சாராரையும் ஒரு புள்ளியில் இணைப்பது,  எனக் கொள்ளலாம்.‌
அடியேனின் சிறு முயற்சி. 
ஒவ்வொரு பகுதியையும் நிதானமாக படித்து பின்னூட்டம் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
விவரமானதோ அல்லது மிக சுருக்கமானதோ –  பின்னூட்டம் எப்படி இருந்தாலும் அத்தகைய பின்னூட்டங்கள்  அடுத்த பகுதியை உங்களுக்கு  உற்சாகத்துடன் அனுப்ப,  என்னை வழி நடத்தும். 
நிதானமாக படிக்க நேரம் கொடுப்பதற்காக,  இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் அடுத்தடுத்த பகுதிகளை வெளியிட எண்ணியுள்ளேன்.‌
 ( *பகுதி 2 * ) 
பன்னிரண்டு ஆழ்வார்களில்,  முதல் மூன்று ஆழ்வார்களை  சேர்த்து,  முதல் ஆழ்வார்கள் என்று சொல்வார்கள்.. 
*முதலாழ்வார்கள் முறையே,*  *பொய்கையாழ்வார்,  பூதத்தாழ்வார்,  பேயாழ்வார்*  ஆகியோர். 
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதின் அங்கமாக , இந்த மூவாழ்வார்களின் அருளிச்செயல்கள்  முறையே 
*முதலாம் திருவந்தாதி* ,  *இரண்டாம் திருவந்தாதி*  மற்றும் 
*மூன்றாம் திருவந்தாதி* .‌
முதல் ஆழ்வார்கள் மூவரும் சமகாலத்தவர்கள்.  அடுத்தடுத்த நாட்களில் பிறந்தவர்கள். 
” அயோனிஜர்கள் ” என்று கருதப்படுபவர்கள்.  ( தாயின் வயிற்றில் பிறவாமல்,  சுயம்பு வாக தோன்றியவர்கள் என்ற பொருள். ) 
ஒரு மழைக் காலத்தில் யதேச்சையாக ( பெருமாள் திருவுள்ளத்தால் என கொள்ளலாம்)  முதலாழ்வார்கள் மூவரும் ( பொய்கையாழ்வார்,  பூதத்தாழ்வார்,  பேயாழ்வார் ) ஒன்று கூடினர்.  
இவர்கள் கூடிய இடம், *திருக்கோயிலூர்* என்ற திருத்தலம். 
அங்கு ஒரு முனிவரின் ஆசிரமத்தில் ஒரு இடைகழியில் ( கொட்டாரம்)  இருட்டில் மழைக்காக ஒதுங்கிய இவர்களின் மனமோ,  மாலவன் நினைவிலேயே இருந்தது. 
அந்த இடமானது , 
ஒருவர் படுக்கலாம், 
இருவர் அமரலாம், 
மூவர் நிற்கலாம் 
என்ற அளவுக்கு சிறியதாக இருந்தது. 
மூவரும் நெருக்கமாக நின்று கொண்டே, மாலவனைப் பற்றி அளவளாவி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட திருக்கோயிலூர் எம்பெருமான் அவர்கள் பேசுவதை கேட்க ஆசைகொண்டு  அவர்களிடையே புகுந்து நெருக்கினார்.  அவ்விருட்டில் மூவரைத் தவிர வேறு ஒருவரும் தம்மை நெருக்குவதை உணர்ந்து, நெருக்கத்தின் காரணத்தை அறிய , வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.  
முதலில் *பொய்கையாழ்வார்* : 
(முதல் திருவந்தாதி -1)
பொருள் முதலில் . 
பரந்த இவ்வுலகை அகல் (விளக்கு) ஆக  கொண்டு,  நீண்ட கடலை நெய்யாகக் கொண்டு, கதிரவனை சுடராகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்,  துன்பம் எனும் கடலில் இருந்து மீள்வதற்கு.
இப்போது பாசுரம்‌ : 
*வையம் தகளியாய்* 
*வார்கடலே நெய்யாக* 
*வெய்ய கதிரோன் விளக்காக* – *செய்ய சுடர் ஆழியான்* *அடிக்கே* 
*சூட்டினேன் சொல் மாலை* *இடராழி நீங்குகவே என்று*
இதில் *புற இருள்* அகன்றது.
அடுத்து *பூதத்தாழ்வார்* :
(இரண்டாம் திருவந்தாதி -1)
அன்பை அகல் ஆகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு ஞான  விளக்கேற்றினேன்
*அன்பே தகளியாய்* 
*ஆர்வமே நெய்யாக* 
*இன்புருகு சிந்தை இடுதிரியா* – 
*நன்புருகி ஞானச் சுடர்* *விளக்கேற்றினேன்*
*நாரணற்கு*
*ஞானத் தமிழ் புரிந்த நான்* 
இதில் *அக இருள்* அகன்றது.‌ 
பொய்கையார் புற இருளையும் பூதத்தார் அக இருளையும் போக்கியபின் , பேயாழ்வாருக்கு அங்கிருந்த பெருமாள், பிராட்டியாருடன் கண்ணுக்கு தெரிந்தார்.
உடனே ,  *பேயாழ்வார்* பாடுகிறார்: 
(மூன்றாம் திருவந்தாதி -1)
பெரிய பிராட்டியாரை – தாயாரை ( திரு) சேவிக்க பெற்றேன்.  பெருமாளின் பொன் போன்ற அழகிய திருமேனியையும் சேவிக்கப் பெற்றேன்.  சூரியன் போன்ற பிரகாசத்தையும் சேவிக்கப்பெற்றேன்.  யுத்த பூமியில் பராக்கிரமம் காட்டுகின்ற (செரு கிளரும்)  அழகிய திருவாழியையும் (சக்கரம்) திருக்கையில் சேவிக்கப்பெற்றேன்.  வலம்புரி சங்கு மற்றொரு கையில் சேவிக்கப்பெற்றேன். 
*திருக்கண்டேன்* 
*பொன் மேனி கண்டேன்* 
*திகழும் அருக்கன்  அணி* *நிறமும் கண்டேன்* – *செருக்கிளரும்*
*பொன்னாழி கண்டேன்*
*புரி சங்கம் கைக்கண்டேன்* *என்னாழி வண்ணன் பால்* *இன்று* .
தான் கண்ட தரிசனத்தை மற்ற இரு ஆழ்வார்களுக்கும் காட்டுகிறார் பேயாழ்வார்.  
இதுவரை முதலாழ்வார்கள் மூவரையும் அவர்களின் படைப்புகளில் இருந்து ஒவ்வொரு பாசுரத்தையும்   சுருக்கமாக பார்த்தோம் . மூன்றுக்கும் உள்ள  தொடர்பையும் பார்த்தோம். மேலும் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
ஆனாலும் , கட்டுரையின் நீளம் மற்றும் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு நியாயம் செய்ய வேண்டிய முக்கியத்துவம் –  இரண்டையும் கருத்தில் கொண்டு மேலே செல்கிறேன்.‌
இப்போது *கண்ணதாசனை*  உள்ளே அழைத்து வரலாம்.  ஆழ்வார் பாசுரங்களில் *வழக்கமான*  விளக்கு, எண்ணெய்,  திரி என்பன இல்லாமல், உலகம், கடல், சூரியன் மற்றும் அன்பு, ஆர்வம், அறிவு ஆகியன கொண்டு எப்படி அவர்கள் விளக்கேற்றினார்கள் என்பதையும் அதை ஒட்டி இறைவன் காட்சி தந்ததையும் பார்த்தோம்.  
இதன் தாக்கத்தில் விளைந்த இரு கண்ணதாசன் பாடல்கள் எனக்கு ஞாபகம் வந்தன. 
முதலில், 
*கே பாலச்சந்தர்* இயக்கத்தில் வெளிவந்த *மன்மத லீலை* திரைப்படத்தில் , *எம் எஸ் விஸ்வநாதன்* அவர்கள் அருமையாக  இசையமைக்க  *வாணி ஜெயராமின்* அற்புதமான குரலில்  *கண்ணதாசன்* எழுதிய பாடல்: 
*நாதமென்னும் கோவிலிலே*
*ஞான விளக்கேற்றி* *வைத்தேன்*
*ஏற்றி வைத்த விளக்கினிலே*
*எண்ணெய் விட நீ* *கிடைத்தாய்*.
ஆழ்வார் போன்றே இங்கும் *ஞான விளக்கு* . 
ஆழ்வார்கள் காலத்தில், விளக்குகள் ஏற்றி, புற இருள், அக இருள்  ஆகியன அகன்றதும் எம்பெருமான் நேரிலேயே வந்து காட்சி கொடுத்தான்.‌ ஆனால் இன்று அவன் தன் சார்பாக வேறொருவரை அனுப்பி வைக்கிறான்.  ( தெய்வம் மனுஷ்ய ரூபேண‌…)
அதைத்தான் கவிஞர் தன் சரணத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார்  :
*இறைவன் என ஒருவன்*
*என் இசையினில் மயங்கிட* *வருவான்*
*ரசிகன் என்ற பெயரில்* –
*இன்று அவன்தான் உன்னைக்* *கொடுத்தான்*
திரைப்பாடலில் குறிப்பிட்டுள்ள *இசை*  என்பது பிரபந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள பாசுரத்திற்கு ஈடு. 
அங்கு ஆழ்வார் பாசுரங்களில் மயங்கி இறைவன் நேரில் வந்தான்.  இங்கு நாயகியின் இசையில் மயங்கி இறைவன் அனுப்பிய ரசிகனாக நாயகன் வந்தான். அந்த நாயகன் தான் அந்த நாயகிக்கு  இறைவன் எனவும் கொள்ளலாம். 
ஆஹா. சிலிர்க்கிறது. 
அடுத்து ஞாபகம் வந்த பாடல், 
*இதயக்கமலம்* படத்தில் மாமா *கே வி மகாதேவன்* அவர்கள் அற்புதமாக இசையமைக்க,  *பி சுசிலாவின்* தேன் குரலில் *கண்ணதாசனின்* பாடல் :
*மலர்கள் நனைந்தன* *பனியாலே*
*என் மனதும் குளிர்ந்தது* *நிலவாலே*
*பொழுதும் விடிந்தது கதிராலே*
*சுகம் பொங்கி எழுந்தது* *நினைவாலே** 
என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலில் ஒரு *சரணம்* : 
*இறைவன் முருகன் திரு* *வீட்டில்*
*என் இதயத்தினால் ஒரு* *விளக்கேற்றி*
*உயிரெனும் காதல் நெய்யூற்றி*
*உன்னோடிருப்பேன் மலரடி போற்றி*
ஆழ்வார்கள் பாசுரங்களோடு ஒப்பீடு என்பதாக தனியாக  விளக்கவும் வேண்டுமோ ? ! 
கண்ணதாசனை,  நெகிழ்ச்சியோடு அடுத்த ஆழ்வாரிடம் அழைத்துச் செல்வோம்.‌ 

பெண் பார்த்தப் படலம் – மைசூர் மனோகர்

இயற்கை உணவில் இருக்கும் நச்சை விரட்டுங்கள் | Femina.in

 

“ஹலோ சரசு, அவங்க எப்போ வரதா சொன்னே?”

“ஏன், பதினோரு மணிக்குத் தான். அதுக்கு முன்னாடி இல்ல. அரை மணி நேரம் லேட் ஆகலாம். ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?. தயார் செஞ்சிடலாம் இல்லையா?. இன்னொரு தரம் சரியாக்  கேட்டுக்கோங்க!. ஹோட்டல் ஐட்டம் எதுவும் இருக்கக் கூடாது. ரெடி-மிக்ஸ் யூஸ் பண்ணக் கூடாதாம். ஐட்டமெல்லாம் யார் பண்ணது, ரெசிப்பி என்னன்னு கேள்வி ஆராய்ச்சி இன்டர்வியூ வேறு இருக்குமாம். டெய்லி பண்ற மாதிரி மெனு இருந்தா போதுமாம். நாம ஜாக்கிரைதையா இருக்கணும். சொதப்பிடக்கூடாது. வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள்”.

சரசுவின் கணவர் நளவேந்தன் தன்னுடைய சமையல் திட்டத்தை விவரித்தார்.

“இந்த வருஷம் சிறு தானிய ஆண்டாச்சே. அதனாலே வரகு அரிசி சாதம். மெட்ராஸ் ஸ்டைலே முருங்கைக்காய் போட்டு சாம்பார். பருப்பு இல்லாம மைசூரு ரசம். மிச்சம் மீதி இருக்கிற காய்கறி வச்சி கலவையா ஒரு அவியல்.

“அவியல் சரி  வருமா? நாம இதுவரைக்கும் பண்ணதில்ல”

“எல்லாம் சரியாய் தான் வரும். கவலைப்படாதே. உனக்குத் தெரியமா, மைசூர்-பாக் எப்படி வந்திச்சின்னு?. ஒரு நாள் தலைமை அரண்மனை சமையல்காரர் திடீர்ன்னு ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் எளிமையா செய்யப் போக, மைசூரு மஹாராஜா அதன் பேரை கேட்கப் போக, அவரும் திடிரென்று சூட்டிய பேர் தான் இப்போ உலக பிரசித்திப் பெற்ற மைசூர்பா”.

“சப்பாத்தி பரோட்டா பாலக் பன்னிர் இப்படி நார்த் இந்தியன் டிஷ் எதாவது வேணுமா?”

“அதெல்லாம் வேணாம். ஐட்டம்ஸ் ஜாஸ்தி ஆயிடும். அவங்களும் சிம்பிளா இருந்தா போதும்னாங்க”.

“சரி. அப்புறம், சுண்டக்காய் வத்தல் இருக்கு. அத வச்சி குழம்பு பண்ணில்லாம். முந்தா நேத்து புளித்தத் தயிர் இருக்கே. அத வச்சு பூசணிக்காய் போட்டு, முந்திரி தேங்காய் அரைச்சி ஊத்தினா சூப்பரா மோர் குழம்பு. கொரிக்க மொரமொரனுன்னு அரிசி வடகம் செஞ்சில்லாம். மாம்பழ சீசன் இப்போ. அதனால மாம்பழ மில்க்-ஷேக். கூலா வெயில்ல வர்றவங்களுக்கு வெல்கம் ட்ரிங்க்“.

“ஸ்வீட் என்னப் பண்ண போறிங்க ? எல்லா ஐட்டம் ரெசிப்பி ஒரு பேப்பர்லே எழுதி வச்சுடுங்கோ”.

“எள்ளுருண்ட தான் ஸ்வீட். நேத்தேப் பண்ணி வச்சிட்டேன். சூப்பரா வந்திருக்கு. இப்போ மணி ஆறு தான். சூடா ஒரு பில்டர் காபி குடிச்சிட்டு, குளிச்சிட்டு வந்து ஆரம்பிக்கிறேன். பத்துக்குள்ளார எல்லாம் ரெடி ஆயிடும். டோன்ட் ஒரி ! ”. நளவேந்தன் அறிக்கை சமர்ப்பித்து விட்டு இடத்தைக் காலி செய்தார்.

மணி 11 நெருங்க நெருங்க எல்லோருக்கும் ஒரே டென்ஷன். ஆண்டவா, முருகா, பிள்ளையாரப்பா, பெருமாளே, பராசக்தியே,  மஹாலக்ஷ்மியே என்று அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டார்கள். சரியாக மணி 11 அளவில், அவர்கள் நான்கு பேர், அப்பா அம்மா மகன் மகள் அமைதியாக நுழைந்தார்கள். வந்த எல்லோருக்கும் புன்னகை வரவேற்பு இலவசமாக அளிக்கப்பட்டது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு வார்த்தைகள் கணீரென்று வெளிவந்தன.

“எல்லா ஐட்டம்களும் டேபிள்ள இருக்கா. எங்க பொண்ணு வந்து கேட்கிறப்போ, பையன் வந்து எல்லாத்தையும் ஐட்டம் வாரியாப் பேர் சொல்லி அத எப்படிப் பண்றதுனு விளக்கம் சொல்லணும். புரிஞ்சுதா?. என்ன, பையன் இன்னும் ஏன் வரல. சீக்கிரம் வரச் சொல்லுங்க”. பெண்ணின் அம்மா சுருதிக் கூட்டி வினவினார்.

அப்போது தான் நளவேந்தன்-சரசு தம்பதியின் மகன் பரதன் மெதுவாக நிதானமாக உள்ளேயிருந்த அறையிலிருந்து ரெசிப்பி அடங்கிய கணினி நோட்புக் சகிதம் வெளிப்பட்டார்.

ஒவ்வொரு ஐட்டமும் கொஞ்சம் ருசித்தப் பின் வந்திருந்த இளம்பெண் கேட்டாள். “இங்குள்ள தயாரிப்புகளில் உங்கள் பங்கு என்ன?, உங்கள் பெற்றோர் பங்கு என்ன?. தெரிவிக்க முடியுமா?” .

“ஆமாம், நான் பொய் சொல்லல. அப்பா ஃபுட் டெக்னாலஜிஸ்ட், அப்பா தான் முழுவதும் தயாரித்துள்ளார். நான் ஃபுட் இன்ஜினீயர், மிக்ஸி கிரைண்டர் ஆப்பரேட் செய்வது, ரெசிபி எழுதுவது, போட்டோ- வீடியோ எடுப்பது மற்றும் அவற்றை யூடியூபில் அப்-லோட் செய்வது என் வேலை. அம்மா ஃபுட் மேனேஜ்மென்ட். எல்லாவற்றையும் ருசிப் பார்த்து ‘எக்ஸலண்ட், சூப்பர், நன்று, பரவாயில்லை, மோசம் என்று ரேட்டிங் கொடுப்பாள். அதாவது, கிரிட்டிக்கல் அனாலிசிஸ் (விமர்சன பகுப்பாய்வு) பண்ணுவாங்க. கட்டாயம் தந்தை வழி தனயனாக நாளை நான் மாறுவேன்”. முதலில் தயங்கித் தயங்கி வெளி வந்த வார்த்தைகள் பின்னர் சரளமாக திருத்தமாக ஓடி வந்தன.

அந்த இளம்பெண் தன் அம்மாவிடம் மிதமிஞ்சிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். “குடும்பம்னா இது மாதிரி இருக்கணும். நான் இவரையே மணந்துக் கொள்கிறேன், அம்மா. நல்ல இயற்கையான ஆரோக்கியமான உணவு-முறைக்கு இங்கே உத்தரவாதம் நிச்சயம்”.

எல்லோர் முகத்திலும் ‘அப்பாடா’ என்று நிம்மதி ஒளி பரவியது.   

குவிகம் -சிவசங்கரி சிறுகதைத் தேர்வு – அக்டோபர் 23- சாய் கோவிந்தன்

 

குவிகம் -சிவசங்கரி சிறுகதைத் தேர்வு 

—————————————————————————————————————————————-

2023  அக்டோபர் மாதத்திற்கான தேர்வு பெற்ற சிறுகதை

ஆர். வி. சுப்ரமணியன் ”சரண் நாங்களே” – ஆசிரியர் ஆர். வி. சுப்ரமணியன்

சொல்வனம் 22 அக்டோபர் 2023

—————————————————————————————————————————————-

சிறுகதை என்பது பக்க வரையறைக்கு உட்பட்டது அல்ல. ஒரு கதையின் அளவை அந்தக் கதை தீர்மானம் செய்யும் என்பது இலக்கணமறிந்த எழுத்தாளர்களின் நியாயம் ஆகும். அதன்படி பல பத்திரிக்கைகள் எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறது. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது வலைதளங்களும் முகநூல்களும். யாரும் கதை எழுதலாம்.  அவர்களுக்குத் தேவை ஒரு கரு. சில உத்திகள். நிறைய கதை படித்த அனுபவம். நமக்கென்று சில ஆதர்சன எழுத்தாளர்களை வைத்துக்கொண்டாலும், அனைவரையும் படிக்க வேண்டும். ஏழு ஸ்வரங்களுக்குள் கோடானு கோடி பாடல்கள் உருவாகும் விந்தைபோலவே சிறுகதைகளும் எனக்கு வியப்பை தருகிறது.

சம்சாரத்தில் இருக்கும் எதார்த்தமான மாமியார் மருமகள் பிணக்கு வீட்டுக்கு வீடு, சூழலுக்கு சூழல் மாறுவது கதைக்களம் ஆகிறது. பள்ளி, கல்லூரிக் காதல் கதைகள் இன்னும் ஆயிரமாயிரம் வந்துகொண்டே இருக்கும். காதல் இருக்கும் வரை. நம் புராண இதிகாச கதைகளை ஆழமாகப் படித்தால், அதன்மீது  நம் கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் கதையாக உருவம் பெரும். சமூகக் கொடுமைகளுக்கு இன்றளவும் பஞ்சமில்லயே? அது போதாதா? எழுத வேண்டும். அவ்வளவு தான். அதைப்போல நிறைய படிக்க வேண்டும்.

ஐம்பத்தி இரண்டு கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக நான் படித்தும், எனக்கு ஆயாசம் ஏற்படவில்லை. மாறாக வியப்பும் ஆச்சர்யமும் மேலோங்கி நிற்கிறது. காரணம் ஒவ்வொரு கதையிலும் அந்த எழுத்தாளுமைகள் கதை சொன்ன விதம். அவர்கள் பிரயோகப் படுத்தியுள்ள சில சொற்கள், சில வாக்கிய அமைப்புகள், கதை முடிக்கும் விதம் என்று பல.

எல்லா கதைகளும் சிறப்பாக இருந்தது. சில கதைகளை, ஒரு முறை படித்தேன். சிலவற்றை இரண்டு முறை. காரணம் அந்தக் கதையை படிக்கும் பொழுது, படிக்கும் வேகத்தில் முக்கியமான எதையோ கடந்துவிட்ட ஒரு உணர்வு.  சில கதைகளுக்கு, முடிவை வாசகர்களே யூகிக்க வைக்கும் உத்தி ஏதுவாக இல்லை.

சரி, சில கதைகளைப் பற்றிய சிறு விமர்சனங்கள். கதையின் பெயர்களை  தவிர்த்து இங்கே தந்துள்ளேன்.

  • பை ஒன். கெட் த்ரீ. அதாவது, ஒன்று வாங்குங்கள், மூன்றை எடுத்துச் செல்லுங்கள் என்ற ரீதியில்,  ஒரு கதையில், மூன்று கதை. கைமண் அளவு கற்ற எனக்கு இது புது உத்தியாக தெரிகிறது.
  • ஓய்வுக்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டமிட ஒரு ஓய்வு தேவைப்படுகிறது. அதுவும் ஒரு கதையாகிறது.
  • நகைச்சுவை கதை எழுதுவது கடினம். நகைச்சுவை கதைகளைப் படிக்கும் போது, குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலேனும்   படிப்பவருக்கு இயல்பாக சிரிப்பு வந்தால் அது வெற்றிக் கதை.
  • தனிமையில் ஏற்படும் உண்மையான சலனங்கள்.
  • “வாழ்க்கைன்னு வந்துட்டா விவரமா இருக்கணும்”, காதல் வேறு கல்யாணம் வேறு என்று சொல்லப்படும் கதை.
  • அழகு அவரவர் பார்வையை பொறுத்தது. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் எப்போதும் அழகுதான்.
  • தேவதைகள் ஆபத்தில் உதவுவார்கள்.
  • விலங்குகளின் இடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றை விரட்டும் தற்காலச் சூழலை சொல்லும் கதை. கடவுள் அனைத்தையும் காக்கிறார்.
  • நோய்கள் பற்றிய புரிதல் குறைவினால் வரும் பயம்,   சகிப்புத்தன்மை இல்லாத மனிதர்களின் உணர்வினை சொல்லும் இயல்பான கதை.
  • காகிதத்தில் வண்ணம் தீட்டுவதும், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவதும் வேறு ரகம். நவராத்திரி சமயத்தில் பொம்மைகளைப் பார்த்ததும் தோன்றிய கதையாக இருக்கலாம்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை சொல்லும் கதை.
  • பெரிய கதைக்கான களம். சுருக்கியதால், விரைவு வண்டி போல செல்கிறது கதை.
  • மழை நீரும் சில சமயங்களில் சுடும். அது மனநிலையை பொறுத்து
  • என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சில சமயங்களில் வழிகாட்ட சாமிதான் வரணும்.சரி, இனி பதக்கப் பட்டியல்.

    தங்கம்: ஆர். வி. சுப்ரமணியன் எழுதிய சரண் நாங்களே. (சொல்வனம் 22.10.23)

    மகாபாரதப் போர் முடிந்த பின்னர் நிகழும் சம்பாஷனை, தருமர் தர்மவானா? அவரை பற்றிய விமர்சனங்கள் என்ன? அவர் போற்றப்படுகிறாரா என்று விவரிக்கும் கதை. சில நுணுக்கங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. குகையில் இருக்கும் பனிக்குச்சி, குகை விரிசல்கள் வழியே தெரியும் நட்சத்திரங்கள், பீமனின் பாட்டு, நாய் என்று சில.  

    2. வெள்ளி: ஜே.வி. நாதன் எழுதிய ஒரு டீஸ்பூன் மன்னிப்பு. (குமுதம் 04.10.23)

    மன்னிப்பின் கணத்தை நியாயத்தின் கணத்துடன் தராசில் வைத்து சரிபார்க்க முடியாது. மனம் தெளிவு பெறவில்லையென்றால், செய்யும் செயலில் தடுமாற்றம் வரும். இந்தக் கதையில், எளிமையான எழுத்து நடை எனக்குப் பிடித்தது. ஒரு அழுத்தம் இருந்தது. எதை செய்யவும் பொறுமை அவசியம். அது கொலையாகவே இருந்தாலும் கூட.

    3.   வெண்கலம்:: தேவி லிங்கம் எழுதிய வக்கிரம். (குங்குமம் 20.10.23)

    மனித பாலியல் நடத்தைகள் பற்றிய பாலியல் கல்வியின் அவசியத்தை சொல்லியிருக்கும் கதை.

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? – ஜி.பி.சதுர்புஜன்

புத்தகம் : கந்தர்வர்களின் உலகம் ( கவிதைகள் )

எழுதியவர் : லாவண்யா சத்யநாதன்

தளம் வெளியீடு : ஜனவரி 2019

பக்கம் : 56

விலை : ரூ. 60

 

 

 

நான் படித்த நூல்களை உங்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்கின்ற இந்தத் தொடரில், இதுவரை கவிதை நூல் ஒன்றைக் கூட குறிப்பிடவில்லை. அந்தக் குறை இப்போது தீர்ந்து விட்டது.

சமீபத்தில் “சிறகு” பத்திரிகையை  தனியாளாய், தானே எல்லாமுமாய் நடத்தி வரும் சிறகு ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்த ஒரு சந்திப்பில், கவிஞர் லாவண்யா சத்யநாதன் அவர்கள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ஐம்பத்தாறே பக்கங்கள் உள்ளதால், ஒரு மினி புத்தகம் என்றே இதனைக் குறிப்பிடலாம்.  சாவகாசமாய் படித்தால் கூட ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுக்காது.

லாவண்யா சத்யநாதனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது என அறிகிறேன். முதல் இரண்டு தொகுப்புகளும் “விருட்சம்” வெளியீடுகள்.

தஞ்சாவூர்க் கவிராயர் இந்நூலுக்கு அழகான முன்னுரையும் பரிந்துரையும் அளித்திருக்கிறார். “ந.பிச்சமூர்த்தி, சி.மணி, எஸ், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்ற புகழ்மிக்க புதுக்கவிஞர்களின் மரபின் தொடர்ச்சியாக லாவண்யாவைக் குறிப்பிடத் தோன்றுகிறது” என்ற அவருடைய வரிகள் கவிதைகளின் கனத்திற்கு கட்டியம் கூறுகின்றன.

கவிஞரின் படைப்புகள் நவீன விருட்சம், புது எழுத்து, லயம், மணல் வீடு, கவிதாசரன், கல்வெட்டு பேசுகிறது, வேட்கை, சொல்வனம் டாட்காம், மலைகள் டாட்காம் ஆகிய பத்திரிகைகளில் இடம் பெற்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என்பதும் வாசகர்களுக்கு  உற்சாகம் அளிக்கக்கூடிய தகவல்.

சிறு நூலாக இருந்தாலும் மொத்தம் 46 கவிதைகளை உள்ளடக்கியது “கந்தர்வர்களின் உலகம்” என்ற இக்கவிதைத் தொகுதி. அனைத்தும் சிறு கவிதைகளாக இருப்பதால், படிக்கும்போது அயர்வு ஏற்படுவதில்லை. கருத்தூன்றிப் படிக்க முடிகிறது.

எல்லாக் கவிதைகளும் எல்லோருக்கும் பிடிப்பதற்கில்லை. பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வாசகருக்கும் பிடிக்கக்கூடிய, உதட்டிலே முறுவலை வரவழைக்கக்கூடிய, ஒரு தரம், இரண்டு தரம் – என்று மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கக்கூடிய கவிதைகள் நிச்சயம் இதில் இருக்கின்றன.

 

   “மல்லித்தோட்டம்” என்ற தலைப்பில் ஓர் அழகிய கவிதை :

 

 

: காத்திருக்கிறது உனக்காக

 என் கூந்தலில் மல்லிகைத் தோட்டம்

 

 குறிப்பறிந்த தோழிபோல

 நழுவிச் சென்றதென் தோள் பற்றியிருந்த

 உள்ளாடை

 

நிலா காய்கிறது

என்னைத் தொட்டுப்பார்

தெரியும்

 

கணிகை போல் கணினி

உன் மடியில்

 

கணினியும் கடலும் ஒன்று

மூழ்கியவன் கரை சேர்வதில்லை

 

மணித்துளிகளாய் உதிர்கின்றன

மல்லிகைகள்

மடிக்கணினியையே நீ

மணந்திருக்கலாம்

 

 

நான் மிகவும் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக அந்தக் கடைசி வரி. நச்சென்று வந்து விழுந்திருக்கிறது. பல கவிதைகள் சுருக்கென்றும் தைக்கின்றன.

நீங்கள் கவிதைகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி திறந்த மனதுடன் வாசிப்பவராய் இருந்தால், நிச்சயம் இந்த நூலைக் கையிலெடுக்கலாம்.

 

 

 

ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :

 

  1. The Wisdom Bridge            
  2. BITS of Social Impact” 
  3. Adventures Of A Countryside Doctor
  4.  ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்
  5. பாரதி கண்ட தெய்வ தரிசனம்
  6. அம்மா அம்மா ( சிறுகதைத் தொகுப்பு )

 

 

திரை ரசனை வாழ்க்கை 21 – எஸ் வி வேணுகோபாலன் – ஜிகர்தண்டா டபிள் எக்ஸ்

நேர்த்தியான திரைக்கதை, தேர்ச்சியான நடிப்பு, காத்திரமானபடமாக்கல்

மலைவாழ் மக்களின் சிக்கலும் அரசியலும் கலந்த கலவை: ஜிகர்தண்டா 2/a review of  jigarthanda double x movie‘நாம் கலையைத் தேர்வு செய்வதில்லை, கலை தான் நம்மைத் தேர்வு செய்கிறது’ என்ற வாசகங்களோடு தொடங்குகிறது படம். “டைரக்டர் சார், சுயசரிதையைக் கொஞ்சம் மாத்தி எழுதிக்கலாமா?” என்று ஒரு குரல் கேட்க, “எவனும் இங்க புதுசா எதுவும் எழுத முடியாது… பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சிக்கிட்டா போதும் … எழுதப்பட்டது எல்லாம் எழுதப்படும்” என்று பதில் வருகிறது. கேட்பவர் ஒரு கேங்ஸ்டர், நடிகர் அல்ல. பதில் சொல்பவர் அவரைக் கொல்ல வந்திருப்பவர், படம் இயக்குபவர் அல்ல.

ஜிகர்தண்டா (2014) ஒரு கேங்ஸ்டரை வைத்துத் திரைப்படம் எடுக்கத் துணியும் இயக்குநரைத் திரைப்படுத்தியது. ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் முற்றிலும் வித்தியாசமான களத்தில் கொலையையும் கலையையும் மோதவிட்டுக் கலையை வெல்லவைக்கிறது.

சில வாரங்களுக்குமுன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், திரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் / இயக்குநர் எஸ் ஜே சூர்யா மூவரும் பங்கேற்றதும், குறிப்பாக சந்தோஷ் நாராயணன் முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டதும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

குற்றங்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள கதையில் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், ஊடாக அவற்றின் அரசியல் பேசப்படுவது தான் படத்தின் முக்கியமான அம்சம். ஒரு கொலைஞன் கலைஞனாக உருப்பெறுவது மட்டுமல்ல, அந்தக் கொலைஞனைக் கொல்ல வருபவரும் அந்தக் கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பதும், இந்தக் கூட்டு விளைவுக்கு இருவரும் பரஸ்பரம் எதிரெதிர் திசைகளில் ஆற்றும் வினைகள் காரணமாவதும் அதன் தொடர்ச்சியாக நிறைவாக முன்னெழும் அரசியல், திரைக்கலையில் மிகுந்த கலைநேர்த்தியோடு கையாளப்பட்டிருப்பதும் அண்மைக் காலத்தில் முக்கிய படைப்பாக நோக்க வைக்கிறது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்பது கால காலமாகச் சொல்லப்படும் பழமொழி. யாரோ பிரதமராகவோ, முதல்வராகவோ நியமனம் செய்யப்பட, அதற்குக் கிஞ்சிற்றும் தொடர்பற்ற அப்பாவிகள் நடுத்தெருவில் வெட்டி வீழ்த்தப் படுகின்றனர். மலைவாசிகள் காவல் நிலையத்திலேயே வைத்து வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அராஜக வன்முறைகளைப் பற்றிய உண்மைச் செய்திகளும் அங்கேயே புதைக்கப்பட்டுவிட, தயாரிக்கப்பட்ட செய்திகள் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியில் சேருமுன் தற்செயலான கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் கிருபாகரன் (எஸ் ஜே சூர்யா). அவரோடு சேர்ந்து அதே போன்று அடைபட்டுள்ள நான்கு பேரை, தனக்குத் தேவையான 4 கொலைகளைச் செய்தால் முந்தைய குற்றத்திலிருந்து அவர்களை விடுவித்துக் காவல் துறை பணியில் சேர்த்துவிட உறுதி அளித்து கெடு விதித்து விடுவிக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி (நவீன் சந்திரா). அது அவர் தனக்கு உயிரான அண்ணன் நடிகர் ஜெயக்கொடி (ஷைன் டாம் சாக்கோ) எப்படியாவது முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற சேவைக்கான தேவையில் இருந்து எழுவது. சீட்டுக் குலுக்கிப் போடுவதில், கிருபை கொல்ல வேண்டிய நபர் அலையஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்) என்று வருகிறது. சீசர் ஆகப்பட்டவர் யாரெனில் மதுரை ஜிகர்தண்டா அமைப்பின் கேங்ஸ்டர், முதல்வர் தேர்வுக்குக் காத்திருக்கும் கார்மேகத்தின் (இளவரசு) புஜபலம்.

அங்கே தான் கொலைக்கும் கலைக்கும் முதல் சந்திப்பு நிகழ்கிறது. இளவயதில் இருந்தே ஹாலிவுட் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகனாக இருக்கும் சீசர், ஒரு நடிகரின் சீண்டலில் தானே ஒரு கறுப்பு நாயகனாகத் திரையில் தோன்றும் திடீர் ஆசை ஏற்படுத்திக் கொண்டு, தன்னை வைத்துப் படமெடுக்க விரும்பும் இயக்குநர்களை நேர் காணலுக்கு அழைக்கிறார். இது தான் சரியான வாய்ப்பு என்று ஓர் இயக்குநராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சீசருக்கு நெருக்கமான வட்டத்திற்குள் நுழையத் திட்டமிடுகிறார் கிருபாகரன். சீசரின் சொல் வழக்கில் சுடுதல் (ஷூட்டிங்) தொடங்கி விடுகிறது. தான் செய்யவேண்டிய கொலைக்கான நாள், இடம், தருணத்திற்காக கனவில் ரோல் – காமிரா -ஆக் ஷன் என்ற புதிய உலகில் நுழைகிறார் சத்ய ஜித் ரேயின் உதவியாளன் ரே தாசன் என்ற பெயரோடு கிருபாகரன். என்ன நடக்கிறது பிறகு என்பது தான் கதை.

அலையஸ் சீசருக்கான முன்கதை, அடர்ந்த பசுமையான கோம்பை வனத்தில் இருக்கிறது. அதே பழங்குடி இனைத்துப் பெண்ணான அவனது மனைவி மலையரசிக்கு (நிமிஷா சஜயன்) வளைகாப்பு நடக்க இருக்கிறது. அங்கே யானைகளைக் கொன்று தந்தங்களைக் களவாடிக் கடத்தும் ஷெட்டாணியை (விது) வேட்டையாட முகாமிடும் காவல் துறை அப்பாவிப் பழங்குடி மக்களை இழுத்துவந்து கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் நூதனத் தலைவனாகப் பொறுப்பேற்று வரும் டி எஸ் பி தான், கிருபாகரன் உள்ளிட்ட நால்வரைத் தனது அண்ணன் நிமித்தம் சீசர் உள்ளிட்டோரைக் கொலை செய்ய அனுப்பி வைத்தவன்.

மலையரசி வளைகாப்புக்கு முந்தைய இரவு, கிருபாகரன் சீசரிடம் சிக்கிவிடத் தக்க திருப்பங்கள் ஏற்பட்டுவிட, அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கிருபை, சீஸரை கோம்பை வன மக்களைக் காக்கும் கள நாயகனாக மலை நோக்கிச் சென்றால் தான் ஆஸ்கர் விருது பெறும் திரைக்கதையைப் படமெடுக்க முடியும் என்று திருப்பிவிட, விதி அதே டி எஸ் பி முன் கிருபையைக் கொண்டு நிறுத்தி விடுகிறது. ஷெட்டாணியோடு சீசரை மோதவைத்துக் கொன்றுவிட கிருபை அமைக்கும் திரைக்கதையை சீசரின் வீர சாகசம் முறியடித்து அவனை உயிரோடு பிடித்து அரசின்முன் கொண்டு வந்து நிறுத்தித் தகர்க்கிறது. அங்கே தகர்வது கிருபையின் திட்டம் மட்டுமல்ல, ஷெட்டாணியை உலவவிட்டு மலைக்காட்டு வளத்தை இரு பெரும் கார்ப்பொரேட்டுகளுக்கு விலைபேசி அவர்கள் மூலம் தனக்கு பிரதமர் பதவிக்காகக் காத்திருக்கும் முதல்வரின் (கபிலா வேணு) கனவும் தான்.

பிறகென்ன….பேனாவைக் கெட்டியாகப் பற்றி இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் பேனா, ஆட்சியாளர்கள் மூலம் எழுதப்பட்ட கதையைச் சரியாக எழுதிக் கொண்டு போகிறது. அரச பயங்கரவாதத்தின் முன் அப்பாவிக் காட்டுவாசிகள் தங்களையோ, தங்கள் காட்டையோ, தங்கள் உயிருக்குயிரான யானைகளையோ, இயற்கை வளத்தையோ எதையுமே காப்பாற்ற முடியாதென்ற கிருபாகரனின் வாசகங்களை, சீசர் சற்றே மாற்றி, நிகழும் வன்முறைகளை எதிர்கொண்டு ஒரு பெரும் தியாகம் செய்து தங்களையே மாய்த்துக் கொண்டு அந்தப் பதிவுகளைத் திரைக்கலை எனும் நொறுக்க முடியாத ஆயுதத்தால் மக்கள் திரள் முன் கொண்டு சேர்ப்போம் என்று உரை நிகழ்த்தி முடிக்கிறான். அடுத்து நிகழும் அரசின் காவல் துறையின் கண்மூடித் தனமான தாக்குதல், கிருபையின் கண்களைத் திறந்து அவரை உண்மையான திரை இயக்குநராகப் பரிணமிக்க வைத்துவிடுகிறது.

கஜினி படத்தில் எப்படி தான் சாகும் வரை, சூர்யா தான் சஞ்சய் ராமசாமி என்பதை அசீன் பாத்திரம் அறிவதில்லையோ, இந்தப் படத்தில் ரே தாசன் என்ற பெயரில் கிருபாகரன் உண்மையில் தன்னைக் கொல்லவே இயக்குநர் போல் ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதை சீசர் கடைசி வரை அறிவதில்லை என்பது ஒரு கவித்துவ சோகம். தான் செய்யாத குற்றத்திற்கு வாழ்க்கையையே பறிகொடுக்க நேர்ந்த கொலைக்கு உண்மையில் சீசர் தான் பொறுப்பு என்று உணர்ந்து இன்னும் இறுக்கமான மனத்தோடு அவனைக் கொல்லத் தயாராகும் கிருபாகரன் பின்னர் மனம் மாறும் இடம் இன்னும் கவித்துவமானது. படத்தில் திறந்த வெளியும், நெருக்கமான குடியிருப்பின் இருளடர்ந்த அறைகளும், அடர்த்தியான காடும், தியேட்டரும் எல்லாமே உருவகமாக உருப்பெறும் பாங்கு சிறப்பானது.

ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இருவரையும் இந்தப் படத்திற்கான பாத்திரங்களாக வார்ப்பதில் அசாத்திய உழைப்பைச் செலுத்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தாங்கள் இதுவரை அறியப்பட்ட விதத்திற்கு முற்றிலும் மாறுபட்ட நடிப்பை அசாத்தியமாக வழங்கியுள்ளனர் இருவரும். உடல் மொழி, வசன உச்சரிப்பு எல்லாமே இருவரும் அற்புதமாக நல்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். லாரன்சின் புன்னகை படத்தில் முத்திரை. அல்லையன் என்ற தனக்கு இளவயதில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஷூட்டிங் நடத்த நேரில் வந்தபோது வைத்த பெயர் அலையஸ் சீசர் என்கிறார் ராகவா லாரன்ஸ். அல்லையன் என்பது, குழுவிலிருந்து தனித்துச் சென்று விடும் யானைக்கான பெயர், தனது மக்களிடமிருந்து விலகிப் போய்விடும் நாயகனுக்கு அதனாலேயே அந்தப் பெயர் சூட்டினேன் என்று ஒரு நேர் காணலில் சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

மலையரசி பாத்திரத்திற்குப் படத்தில் அளவான வாய்ப்புகளே என்றாலும் வலுவான காட்சிகள், நிமிஷா சஜயன் அபாரமாக நடித்திருக்கிறார். பார்வையாளர்களது மொத்த வெறுப்பையும் கைப்பற்றிக் கொள்ளும் டி எஸ் பி ரத்தினகுமார் பாத்திரம் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல்வராக வரும் கபிலா வேணு தேவையான அளவில் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே தோன்றும் ஜோதி (இயக்குநர் தமிழ்) முதல் உதவிப் இயக்குனர் துரைப்பாண்டியன் (சத்யன்) வரை அனைத்துப் பாத்திரங்களும் பொருளடர்த்தியோடு சித்தரிக்கப்பட்டுள்ளது கார்த்திக் சுப்புராஜ் பெற்றுள்ள வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. வசனங்கள் யாவும் தேர்ச்சியாக செதுக்கப்பட்டுள்ளன.

வளைகாப்புக்கு வந்த கூட்டாளி ‘பெரியவர்’ மரணம், உண்மையில் திட்டமிடப்பட்ட கொலை என்று போஸ்ட்மார்ட்டத்தில் தெரியவர, வேகமாக நடக்கும் நிகழ்வுகளை அடுத்து மயான பூமியில் சீசர் துப்பாக்கியோடு குறி பார்க்கும் திசையில் எதிர்ப்புறத்தில் இருந்து ரே தாசன் காமிராவை சீசரை நோக்கிக் குறி வைக்கும் அருமையான தருணம், அண்மைக்காலங்களில் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட இடைவேளைக் காட்சி.

கிளிண்ட் ஈஸ்ட்வுட் நினைவாக கிளிவுட் தியேட்டர், கதையின் முக்கிய காட்சிகள் நிகழும் களமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது, கோம்பை வனத்தில் சேத்துக்காளி அம்மனை முன்னிறுத்திக் காட்டுவாசிகள் கதை சொல்லப்படுவது உள்ளிட்டு நுட்பமான பல இடங்களும், காட்டுவாசிகளுக்கும் இயற்கைக்குமான உணர்ச்சிகரமான உறவுகள் காட்சியிலும், வசனங்களிலும் வெளிப்படும் தருணங்களும் படத்தில் முக்கியமானவை. தமிழ்ப்படங்களில் பார்வையாளரைத் திணறவைக்கும் வன்முறைக் காட்சிகளை உருவாக்கும் தன்மை போட்டிபோட்டுக் கொண்டு நிகழ்ந்திருக்க, இந்தப் படத்தின் கொலைகளும், வன்முறை தாக்குதல்களும் கூட பாதிக்கவே செய்கின்றன. ஆனால், ஆகப் பெரிய வன்முறைக் கருவி யாரிடம் இருக்கிறது என்பதை இரண்டாம் பகுதியில் இயக்குநர் வெளிப்படுத்துவதும் குறிப்பிட வேண்டியது.

ஷெட்டாணியின் தாக்குதலிலிருந்து காப்பாற்றி உயிர் தரிக்க வைத்ததற்கு சீசருக்கு நன்றி சொல்ல மற்ற யானைகளோடு தான் ஈன்ற இளம் யானைக்குட்டியோடு வரும் யானையைப் பார்க்கையில், மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவிக்க யானைகள் கூட்டமாக வந்து செல்வதை (யானை டாக்டர்) ஜெயமோகன் கதையில் வாசித்தது, நினைவுக்கு வந்தது. யானையின் பிரசவக் காட்சி, ரே தாசன் பாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை மாற்றுவதில் முக்கிய பங்களிக்கிறது.

படத்தின் பாடல்களில் அத்தனை ஆழ்ந்து லயிக்க இயலவில்லை, ஆனால், பின்னணி இசை படத்திற்கான முக்கிய பங்களிப்பு. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவு செய்திருக்கும் திருநாவுக்கரசு, படத்தொகுப்பாளர் ஷஃபிக் முகமது அலி இருவரது உழைப்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. 1970களில் நடக்கும் கதை என்பதால் அப்போதைய மதுரையை, அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் படத்திற்காக உருவாக்குவதில் மறைந்த கலை இயக்குநர் சந்தானம் நல்கிய பங்களிப்பை இயக்குநர் மதிப்போடு குறிப்பிட்டு இருக்கிறார். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்திருக்கிறார். கணினி வரைகலை, யானை வேட்டை காட்சிகளில் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

வாச்சாத்தி பழங்குடி மக்களை மிகுந்த வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய குற்றத்தில் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அனைவருமே (வழக்குக் காலத்தில் மரணமடைந்தோர் தவிர்த்து) தண்டிக்கப்பட்ட வழக்கில், பின்புலத்தில் காரணமாக இருந்த ஆட்சி அதிகாரத்திற்குப் பொறுப்பான யாரும் விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட இயலாத சட்டத்தின் போதாமையை வழக்கறிஞர் ஆர் வைகை குறிப்பிட்டிருந்த விஷயத்தை இந்தப் படம் குறியீடாகப் பேசுவது கவனத்தை ஈர்க்கிறது.

ஆதிப் பழங்குடிகள் காலகாலமாக தமக்கான இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் அரசியலை மிக வலுவாகப் பேசும் வகையில் ஜிகர்தண்டா டபிள் எக்ஸ், முக்கியமான படைப்பாக வந்திருக்கிறது. கலையின் மேன்மையைக் கொண்டாடும் விதத்திலும் அது பேசப்படுவதாகிறது. அதனாலேயே, கிளைமாக்சில் தவிர்த்திருக்கக் கூடிய ரே தாசன் – டி எஸ் பி மோதல், தர்க்க ரீதியான சில கேள்விகள் உள்ளிட்ட சில அம்சங்களை மீறியும் பார்க்க வேண்டிய முக்கிய படமாகிறது.

 

 

 

 

 

 

வாழ்க்கை எனும் ஓடம்…… 8    -மரியாதை மீனாக்ஷி பாலகணேஷ்

ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு - குழந்தைகளை வாங்க, போங்க என்று  பேசுவதுதான் மரியாதையா? மருத்துவர் விளக்கம் No Comments வீட்டில் ...

           புரிந்தும் புரியாத இரண்டாங்கெட்டான் வயது என நினைக்கிறேன். தாத்தாவின் ஊருக்கு, அம்மாவின் பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தோம். “அம்மா, எனக்கு நீ தலைவாரிப் பின்னி விடுவாயா?” என்று ஒருமையில் கேட்டேன் என் தாயிடம். நிச்சயமாக என் வயது ஐந்தோ ஆறோதான். பார்த்துக் கொண்டே இருந்த பெரிய மாமா என்னைத் தன்னிடம் அழைத்தார். அழகாகச் சொல்லிக் கொடுத்தார், ” உன் வயசு என்ன?அம்மா வயசு என்ன? எவ்வளவு பெரியவள் அம்மா? அவாளை நீ வா, போ என்று கூப்பிடக் கூடாது. ‘வாங்கோ,’ என்று மரியாதையாகத்தான் அழைக்க வேண்டும்,” என்றார், எனக்கோ சந்தேகம். உடனே அதனைச் சரி செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனம்?

           “எதிர்வீட்டு கோபு அவனுடைய அப்பா அம்மாவை, “வா, போ,” என்றுதானே சொல்கிறான் மாமா,” என்றேன். “இங்க பார், அவர்கள் வீட்டில் செய்வதெல்லாம் நாம செய்ய முடியுமா? அதை அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உனக்கு மட்டுமே நாங்கள் சொல்லித்தர முடியும்.”

           அன்றிலிருந்து எல்லாப் பெரியவர்களையும் பன்மையில், ‘வாங்கோ, வாங்க,’ என்றே அழைக்க ஆரம்பித்து அதுவே பழகிப் போயும் விட்டதால் வித்தியாசமாகவே எண்ணத் தோன்றவும் இல்லை! அம்மா கூடத் தன் அண்ணாவான மாமாவை ‘நீங்க’ எனத்தான் அழைத்தாள். சில  சமயங்களில் என்னையொத்த வயதுக் குழந்தைகள், பெரியப்பா, சிற்றப்பா குழந்தைகள் வரும்போது அவர்கள் சிற்றப்பா, பெரியப்பா ஆன என் பெற்றோரை, “நீ,” என ஒருமையில் விளிக்கும்போது கோவம் வரும். ஆனால் எங்களைப் பார்த்து அவர்களும் ‘வாங்க’ என காலப்போக்கில் மாறிவிட்டதனால் பெருமையாக இருக்கும்.

           வயதாக ஆக, வாசலில் பால்காரர், பூக்காரம்மாள், காய்கறி விற்பவர் எல்லோரையுமே அவர்கள் வயதில் பெரியவர்களானால் பன்மையில் கூப்பிடும் வழக்கம் பழகிப் போயிற்று. நல்ல வழக்கம் மாமா சொல்லித் தந்தது எனப் பெருமையாக இருந்தது.

           வயதாக ஆக நண்பர்களுடன் பலவற்றையும் விவாதிக்கும்போது, ‘அழைக்கும் விதத்தில் மரியாதை காண்பிப்பதனாலேயே ஒருவர்மீது மரியாதை காட்டுகிறோம் என்று அர்த்தமல்ல’ என ஒரு தோழியின் விவாதம். நான்கைந்து வயதே பெரியவனான கணவனை (அல்லது சமவயதினனான ஒருவனை) மனைவி ‘நீங்கள்’ என அழைக்க வேண்டும்; அவன் மட்டும் அவளை ‘வாடி, போடி’ என ஏன் ஒருமையில், படுமட்டமாக அழைக்க வேண்டும் என இன்னொரு கேள்வி. ‘அவள் தனக்குக் கீழ்ப்படிந்தவள்,’ என உலகுக்குத் தெரிவிக்கவே என்று வாதிட்ட இன்னொரு இளமைச் செருக்கு நிறைந்த கூட்டம். குழம்பித் தான் போகும் எல்லாருக்கும்.

           இன்னொரு விஷயம், நான் பின்னாளில் அறிந்து கொண்டது; மதுரைப்பக்கம் சிறு குழந்தைகளைக் கூட வாங்க, போங்க எனப் பன்மையில்தான் பேசுவார்கள் என்பது. ஆச்சரியமாகவே இருந்தது.

           இறைவனைக்கூட ஒருமையில் விளிக்க உரிமைபெற்ற அடியவர்கள் ஒருபுறம்! ‘பித்தலாட்டக்காரி,’ (காமாட்சி விருத்தம்) என்றெல்லாம் அம்பாளைக் கடிந்துகொள்ளவும் அடியவர்களுக்கு உரிமை உண்டு. ‘பித்தா, பேயா,’ என சிவனையும், ‘வெண்ணெய் திருடின கள்வா,’ எனக் கிருஷ்ணனையும் அழைக்கலாம். அதே சமயம் திருஞான சம்பந்தர், மங்கையர்க்கரசியார் போலும் அடியார்களைப்  பற்றி எழுதும்போது மரியாதையாகப் பன்மையில்தான் எழுத வேண்டும் எனும் நியமமும் உண்டு!

           தற்காலத்தில் நியமங்கள் அனைத்தும் குழம்பி, மேலைநாட்டு நாகரிகத்தில் தேவையல்லாதவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நிற்கும் கூட்டம் ஒன்று. முன்பின் தெரியாதவர்களைத் தொலைபேசியில் அழைத்து (வியாபார நிமித்தமாகவோ, வங்கித் தொடர்பாகவோ) பேசும்போது திரு அல்லது திருமதி எனும் அடைமொழி சேர்க்காமலும், எடுத்த எடுப்பில் முதல் பெயரால் அழைத்துப் பேசுவதும் நம்மில் பலருக்கு எரிச்சலை ஊட்டக்கூடியதே! ஒருமுறை இப்படிப்பட்ட ஒரு சம்பாஷணையின்போது அடுத்த முனையில் இருந்த இளைஞனிடம், “தம்பி, உனக்கு என் பேரனின் வயது இருக்கலாம். நீ பாட்டி என அழைத்தால் நான் கோபிக்க மாட்டேன். ஆனால் முன்பின் பார்க்காத என்னைப் பெயர் சொல்லி அழைத்தால் நன்றாகத்தான் இல்லை,” எனக்கூறி விட்டேன்!

           இவை அனைத்துமே ஒரு சம்பிரதாயத்தின் அடிப்படையில், ஒருவர் வளர்க்கப்பட்ட முறையில், ஒரு நாகரிகத்தின் பிரதிபலிப்பானவை. அமெரிக்காவில் ஒருவரை ஆன்ட்டி என்றோ, அங்கிள் என்றோ, பாட்டி என்றோ சுலபத்தில் அழைத்துவிட முடியாது. உடனே தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு விடுவார்கள். அதே போல, அமெரிக்க நாகரிகத்தை (முதல் பெயரைச் சொல்லி, முன்பின் தெரியாத பாட்டி முதல் பேரன்வரை அழைப்பதை) மட்டும் நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

           சிந்திக்க வேண்டும். காரண காரியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

           எனக்கு இதுவும் இன்னொரு வாழ்க்கைப் பாடமாகத் தோன்றுகிறது.

           கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறோமோ என அச்சம் ஏற்படுகிறது.

           ___________________________________________

 

 

 

 

 

 

 

 

 

 

 

          

 

 

சியேட்டலில் ஜெயமோகன்

 

மூன்று அறிதல் முறைகள்

B. Jeyamohan - Wikipedia

அக்டோபர் 10, வாஷிங்டன் மாநில ரெட்மண்ட் நகரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மூன்று அறிதல் முறைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், ஜெமோ அவர்கள் அமெரிக்காவில் ஆற்றும் முதல் தத்துவார்த்த உரையாகும். செரிவான இந்த உரையை முழுமையாக உள்வாங்குவதும் அதன் முழுமை அடையதும் என்பது காலத்தின் மூலமும் அவரின் உரை எழுப்பிய கேள்விகளை எண்ணங்களை தொடர்வதன் மூலமே அடைய முடியும் என்று எண்னுகிறேன். அதே வேளையில் அவர் உரையின் என் குறிப்புக்களை இங்கு தொகுத்துள்ளேன். இது இன்னும் மெருகேற்றப்பட வேண்டிய முழுமையடையாத குறிப்பு. அவர் உரையில் குறிப்பிட்ட கூடாதுகளில் ஒன்று paraphrasing. அந்த கூடாதில்தான் இந்தக்கட்டுரை நிற்கிறது எனினும், இந்த காலிஃபிளவர் இப்படித்தான் இயங்குகிறது.

சங்கர் பிரதாப் இலக்கியத்திற்கும் நிரல்மொழிக்கும் உள்ள தொடர்ப்பை மிக அழகாக எடுத்துரைத்தார், Donald E. Knuth. அவர்களின் Art of Computer Programming புத்தகத்தை மேற்கோள்காட்டி ஒரு புதிய சிந்தைக்கான விதைவிதைத்தார். ஜெயமோகன் அவர்களின் நித்யவனம் முன்னெடுப்புகளை தொட்டுப் பேசியது அதுபற்றி மேலும் அறியும் ஆவலை தூண்டியது.

ஒரு தத்துவார்த்த உரை என்பது அடிப்படையை கலைப்பது (Rapture) அதன் பின் கேள்வி பதில் இருப்பதில்லை, ஆனால் அது ஒருவருடைய புரிதலை கலைத்துவிடும், அது சரியாக காலம் ஆகும் என தத்வ உரையின் தன்மை சொல்லி தொடங்கினார்.

தத்துவங்களை அனுகுவதில் மூன்று பிழைகள் உண்டு. ஒன்று, ஒரு கருத்தை பேசும்போது மனம் அது தொடர்பான எண்ணங்களை கொண்டு செல்லும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு பாயும் (association), அது கூடாது. இரண்டு, கருத்தை சொல்லும்போதே அதற்கான மாற்று கருத்தை (negation fallacy) மனம் கொண்டுவந்துகொண்டடே இருக்கும், இது அந்த கருத்தை உள்வாங்க தடையை உண்டுசெய்துவிடும். மூன்று, சொல்லும் கருத்தை மீண்டும் தன்னுடைய மொழியில் அதை மறு உருவாக்கம் செய்தல், ‘அன்பு குடும்பத்தின் அடிப்படை’ என்றால் அதை ‘பாசம் குடும்பத்தின் அடிப்படை’ என திரும்ப சொல்லல் (paraphrasing). இதன் மூலம் அந்த மூலக்கருத்து முழுமையாக வந்தடையாமல்போகிறது. எனவே இந்த மறுமொழிதல் (paraphrasing) கூடாது.

Advertisement

இன்று சூரியகிரகணம், இதில் தத்துவ உரைசெய்ய நல்ல சகுனம். சுவர்பானு எனும் அசுரன் ராகு, கேதுவாக மாறினான், இந்த சுவர்பானு பாம்பு சூரிய, சந்திரனை விழுங்குவது என்பது தொன்மம். இதற்கு எதிரான பகுத்தறிவும் இங்கு உண்டு. இந்த இருநிலையின் (duality) அடிப்படை இந்த உரை.

ஒவ்வொரு துறையின் உச்சம் கவிதையாகிறது, பாடலாகிறது அது மற்ற துறைகளில் தாக்கத்தை தருகிறது. 1951ல் நடராஜ குரு கட்டுரை சமர்பிக்கப்படுகிறது Can science be sung? (Wisdom). இது பகவத்கீதை பற்றியது. பகவத்கீதை பாடப்பட்ட அறிவியல். இந்த கேள்வியை விடையளிக்க முயலும் போது ‘ஏன் பாட வேண்டும்?’ என்ற கேள்வி வருகிறது. மரம் மலர்கள் விட்டு மனம் பறப்புவது என்பது கடினமானது அழகும் இனிமையுமாக மாறுவது இயற்கையின் கவித்துவம். பிரமீளின் கவிதையொன்று ‘எவ்வளவு கனிந்திருந்தால் மரம் மலராகியிருக்கும்’ என்கிறது.

பிரமிளின் emc2 கவிதை, Barry Parker அவர்களின் Einstein’s Dream புத்தகம் அறிவியல் கவிதையாவதன் சாட்சிகள். அறிவியலில் இருக்கும் ஒரு ஒத்திசைவு symmetry, aesthetics முக்கியமாகிறது. சமஸ்கிரதத்தில் அனன்யதா என்ற சொல் பிரிதொன்றில்லா தன்மையை குறிக்கும், தனித்துவமும் sprouty முளைக்கும் தன்மையும் பங்களிக்கிறது.

இந்தியமரபு அறிவியலையும் தத்துவத்தையும் கவிதையாக முன்னெடுக்கிறது. பகவத்கீதை ஒரு கதை சூழலை முன்னிறுத்தி அதன் முக்கிய கட்டத்தில் தத்துவத்தை சொல்கிறது. சொந்தங்களை கொல்லவேண்டாம் என்ற அர்சுனனின் உண்மைக்கும் மேலான ஒரு உண்மை அங்கே மொழியப்படுகிறது. சமான்ய உண்மைக்கு மேல் விஷேச உண்மை விளக்கப்படுகிறது. இது போலவே சாந்தோக்கிய உபநிஷதம் உத்தாலக ஆருணி தன் மகனும், சீடனுமான சுவேதகேதுவிடம், எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பும் இடத்தில் தொடங்குகிறது. இப்படி தத்துவங்கள் ஒரு dramatic situation கொண்டுள்ளது.

பகவத்கீதை ஒவ்வொரு அத்தியாயமும் அதன் முந்தைய அத்யாயத்தை முறன்படுகிறது. சரணாகதியை பேசி, அடுத்த அத்யாயத்திலேயே சாங்கிய யோகம், தர்கம் பேசுகிறது, இப்படி ஒவ்வொன்றாக மறுத்து அது விபூதி யோகத்தில் முடிகிறது.

இவ்வுலகத்தின் வரலாறு நீண்டது. மனிதன் மிக சமீபத்தில் வந்தவன். Andrew H. Knoll அவர்களின் A Brief History of Earth: Four Billion Years in Eight Chapters புத்தகத்தில் சில பக்கங்கள் மட்டுமே மனிதனைப்பற்றி பேசுகிறது.

மூன்று அறிதல் முறைகள் இருக்கிறது

1. கற்பனை Imagination

2. தர்கம் Logic

3. உள்ளுணர்வு Intuition

I. Imagination

குகையோவியங்களுக்கும் இன்று உள்ள ஓவியங்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. 30,000 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியங்கள் இன்றைய ஓவியங்களின் உட்கூறுகளை கொண்டுள்ளது (Timeless connectivity). மீன் ஓவியம் (மந்தாரே திரண்டி மீன்), யானை என கனகச்சிதமான ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் இருக்கம் இடங்களில் தங்கி அந்த ஓவியங்கள் தரும் உணர்வுகளில் தோய்ந்து கனவு கான்பதும் சமீப காலங்களில் செய்யப்படுகிறது. archaeology dream என்று பெயர்.

இப்படிக் கனவுகள் வருவதற்கென்றே சில வகை காளான்களை உண்டு அந்த குகையோவிங்கள் இருக்கும் இடங்களில் தங்குவார்கள்.

மனிதன் தன்னுடைய கற்பனையின் மூலமே Idea, Concept, கருத்துருவங்கள் ஏற்படுத்துகிறான். Erich அவர்களின் The Art of Loving என்ற புத்தகம் சிறந்த வாசிப்பு.

II. Logic

யானையின் தும்பிக்கை அசாத்தியமானது அது மிகச்சிறிய பூவையும் கசங்காமல் தரையிலிருந்து எடுக்கும் வல்லமைகொண்டது, ஒரு பெரும் மரத்தையும் சாய்க்கும் வல்லமை கொண்டது. கற்பனை என்பது தும்பிக்கை என்றால் அதன் கால்கள்தான் தர்கம் (logic). படைப்பில் நாக்கும், தும்பிக்கையும் மிகவும் அசாத்தியமானது, மனிதனால் அதுபோன்ற ஒரு கருவியை இன்னும் உருவாக்க முடியவில்லை.

மொழிதான் தர்கத்தின் தொடக்கம். கற்பனையை பூமியுடன் practicality பற்றி பேசுவது. வேதாந்தம் Idealistic பேசும் போது சாருவாகம் practicality பேசுகிறது. objectivity எலோருக்கும் விளங்கவைக்ககூடியது. collective truth, generalization தர்கம் இது இருப்பதால் இது இன்னது என்றும், இன்னதுக்கு எல்லாம் இது இருக்கும் என்ற ஒரு பொதுமையை கொண்டுவருகிறது. Static-ness. ஒரு நிலைமையை (certainty) தரும் அதே நேரத்தில் ஒரு ஊசலாட்டத்தையும் அது வழங்குகிறது. Certainty with Suspension, இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையை (empirical truth) நோக்கி செல்கிறது. இது ஒரு structureயை உருவாக்கிறது. Structure is logic.

வாழ்வின் வெவ்வெரு பரணாமங்களும் ஒன்றெயென்று சார்ந்து அமைகிறது, imagination logic என்பது duality. உதாரணமாக இசை (imagination), இலக்கியம், தத்துவம், கணிதம் (logic), இசை என சுழல்கிறது.

III. Intuition

Intuition என்பதற்கு சேதனா என்று சமஸ்கிரத்தில் ஒரு சொல்லுண்டு தமிழில் இதற்கு முன் சொல் இல்லை ஆனால் தற்போது உள்ளுணர்வு என்று அதை சொல்லாக்கம் செய்துள்ளோம். Bhom-JK Project

மனிதனுக்கு language knowledge, bio intelligent, culture knowledge, cosmic knowledge என்று பல தலங்களிலிடையே ஊடாடி தன்னுடைய சிந்தனையை ஆக்குகிறான். இது intuition மூலமே! உலகம் முழுதும் ஓன்றாகவே இருக்கிறது.

நம் imagination, logical intelligenceயை suspend செய்து bio existenceஆக மாரும் போதுதான் இத்த பிரபஞ்ச பிரமாண்ட knowledge பெருவதற்கான சாத்தியமாகிறது. இதுதான் தியான மரபு. வெரும் இயற்கையின் பகுதியாய இருந்து அறியும் அறிவு.

இந்த மூன்று அறிதலும் கலவை! எதுவும் தனித்து இயங்குவதில்லை! ஒவ்வொருவரும் அவர்களின் எல்லை மருவக்கூடிய இடத்தை அறியவேண்டும்.

நம் மூளை ஓர் கூழ் போல ஒருபகுதி மூளையை இழந்தவன் தன் வாழ்நாளில் எந்த ஒரு குறையும் இல்லாமல் சில நேரங்களில் தலைவலியை மட்டும் அனுபவித்து வாழ்ந்து முடித்த சான்றுகள் இங்கு உண்டு. குகை மனிதன் பிரம்மாண்ட நெடுகல் வைத்துள்ளான். தன்னுடைய தலைமுறை தாண்டியும் காலமெல்லாம் (eternity) தன் தலைவன் கீர்த்தி இருக்கவேண்டும் என்று எது உந்துகிறது.

மானுடம் முழுதும் வெவ்வேறு விதத்தில் ஊற்று நீரை பெருகிறது. அது வெவ்வேறு அறிதல் வகையில் வெளிப்பட்டாலும் எல்லாம் ஓர் பிரம்மம் தான்.

எகிப்திய புராணங்களில் ராகு கேது போன்ற கதை உண்டு, கிரேக்க புராணங்களில் பாம்பு உண்டு, ஏன் இதுபோன்ற ஒத்த சிந்தனைகள் ஏற்பட்டன என்பதை நோக்கி செல்வது உகந்தது.

Sponsored Content
Urologist: 92% of Men with ED Don’t Know About This Easy Fix (Try It Tonight)
Urologist: 92% of Men with ED Don’t Know About This

சரித்திரம் பேசுகிறது – யாரோ

 

குலோத்துங்கன்-2

KADAL PURA - 3 VOLUMES [கடல் புறா - 3 பாகங்கள்] [Unknown...சாளுக்கியச் சோழன் குலோத்துங்கனின் ஆட்சியின்‌ 26-ஆம்‌ ஆண்டு.  கி. பி. 1096-ல் தென்கலிங்கப்போர்‌ நிகழ்ந்தது. இப்போர்,‌ வேங்கிகாட்டில்‌ அரசப்பிரதிநிதியாயிருந்த குலோத்துங்கன் மகன் விக்கிரமசோழன்‌ தென்கலிங்கநாட்டின்‌ மன்னனாகிய தெலுங்கவீமன்மேற்‌ படையெடுத்துச்‌ சென்று அவனை வென்றான். இப்போர்‌ குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால்‌ நிகழ்த்தப் பெற்றதாயினும்‌ குலோத்துங்கன் ஆட்சிக்காலத்திலே நடைபெற்றது.

குலோத்துங்கனின் ஆட்சியின்‌ 45-ஆம்‌ ஆண்டு கி, பி. 1115-ஆம் ஆண்டிற்கு முன்னர்‌ வடகலிங்கப்போர்‌ நடைபெற்றது. இது, வட கலிங்க வேந்தன் அனந்தவர்மனுடன் குலோத்துங்கன்‌ நடத்தியது. இப்போரை வெற்றியுடன் நடத்தித் திரும்பியவன்‌ குலோத்துங்கனின் படைத்‌ தலைவர்களுள்‌ முதல்வன் கருணாகரத்‌ தொண்டைமான் (சாண்டில்யனின் இளையபல்லவன்)‌. இவனோடு வாணகோவரையன், முடிகொண்ட சோழன்‌ என்ற இரண்டு படைத்தலைவர்களும்‌ அங்குச்‌ சென்றிருந்தனர்‌. குலோத்துங்கனது ஆட்சியில்‌ நடந்த போர்களுள்‌ இதுவே இறுதியில்‌ நடந்தது. வடகலிங்‌கத்தில்‌ நடந்த இப்போர்‌ நிகழ்ச்சி‌ ஜயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியில் விவரிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கதை சொல்லலாமா?

ஒருநாள்‌. காஞ்சிமாநகரில், பொன்மாளிகையான அரண்மனையில்,‌ ஓவியமண்டபத்தில், குலோத்துங்கன் கொலுவீற்றிருந்தான். அப்பொழுது, வாயிற்காப்போன் ஓடிவந்து ௮ரசனை வணங்கி, “சக்கரவர்த்தி! வேந்தர் பலர் தங்கள் திறைப்பொருள்‌ கொணர்ந்து கடைவாயிலின்‌ கண்‌ காத்துக்கொண்டிருக்கின்‌றனர்‌” என்றான்‌. ௮தைக்கேட்ட அரசன்‌ “அன்னாரை விடுக” என்றான். வந்ததோ ஒரு கூட்டம்! அந்தக்கூட்டத்திலிருந்தவர்கள்:

தென்னவர்‌ வில்லவர்‌ கூவகர்‌ சாவகர்‌ சேதிபர்‌ யாதவரே கன்னடர்‌ பல்லவர்‌ கைதவர்‌ காடவர்‌ காரிபர்‌ கோசலரே. கங்கர்‌ கடாரர்‌ கவிந்தர்‌ துமிக்தர்‌ கடம்பர்‌ நுளும்பர்களே வங்க ரிலாடர்‌ மராடர்‌ விராடர்‌ மயிந்தர்‌ சயிந்தர்களே சிங்களர்‌ வங்களர்‌ சேகுணர்‌ சேவணர்‌ செய்யவ ரையணரே கொங்கணர்‌ கொங்கர்‌ குலிங்கர்‌ ௮வக்தியர்‌ குச்சரர்‌ கச்சியசே வத்தவர்‌ மத்திரர்‌ மாளுவர்‌ மாகதர்‌ மச்சர்‌ மிலேச்சரீகளே. குத்தர்‌ திகத்தர்‌ வடக்கர்‌ துருக்கர்‌ .குருக்கர்‌ வியத்தர்களே.

இந்த மன்னர்கள்,‌ குலோத்துங்கனை அணுகிப்‌ பணிந்து “மன்னர்‌ மன்ன! நாங்கள் நினக்கு திறைப்பொருள்‌ கொணர்ந்துளோம்‌” என்‌றுறைத்துத்‌ தாம்‌ கொண்டுவந்துள்ள பொற்கலம்,‌  மணித்திரள்‌ முதலான பொருள்கள்‌ அனைத்தையும்‌ அரசன்‌ முன் வைத்துக் கைகுவித்து ஒருபுடை நின்றனர்‌. அப்போது அரசன்‌ அமைச்சரைப்பார்த்து, “இதெல்லாம் சரி அமைச்சரே! இவர்க‌ளைத் தவிரத் திறை கொடாதார்‌ இன்னும்‌ எவரேனும் உளரோ?” என்று வினவினான்‌. அமைச்சர் மெல்லச் சொன்னான் ”வடகலிங்கத்தரசன்‌ இருமுறை திறை கொடுக்கவில்லை” என்றான். அரசன்‌ பெரிதும்‌ வெகுண்டு “அங்கனமாயின்‌ அவனது வலிய குன்றரணம்‌ இடியவென்று அவனையும்‌ ௮வனது யானைகளையும் பற்றிக் கொண்டுவருக” என்றான்‌. இதைக்கேட்டு, ௮ருகில் அமர்ந்திருந்த இளையபல்லவன் எழுந்தான். “மன்னா! அந்நாளில் நமக்கு பாலூர்ப்பெருந்துறையில் நடந்த கொடுமைகளுக்குப் பாடம் கற்பிக்க, நல்ல வாய்ப்பு இது. அடியேன் கலிங்கத்தை வென்று வருகிறேன். விடைகொடுக்கவேண்டும்” என்றான். ௮ரசன், “நல்லது சொன்னாய் நண்பா! அங்கனமே செய்க” என்றான்‌.

குலோத்துங்கனிடம் விடைபெற்ற இளையபல்லவன், நால்வகை சேனைகளுடன் போருக்கெழுந்தான். எங்கும்‌ முரசங்கள்‌ முழங்கியது. நாற்படையும்‌ சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப்போல் திரண்டெழுந்தது. கண்டவர் வியப்பெய்தி, ‘இச்சேனை கடலைக்‌ கலக்குமோ? மலையை இடிக்குமோ?’ என்று நடுங்கினர். நாத்திசைகளும்‌ அதிர்ந்தது. தூளிப்படலம்‌ பிறந்தது. இளையபல்லவன் யானைமேல் ஏறி இரை தேடும் புலியின் சீற்றத்துடன் சென்றான். சில நகரங்களை எரியூட்டினான். சில ஊர்களைச் சூறையாடினான்.

நல்ல குணமும், பண்பாடும், அறிவும் கொண்ட இளையபல்லவன் இவ்வாறு ஏன் செய்தான் என்ற கேள்விக்கு சாண்டில்யன் கடல்புறாவில் பதில் சொல்கிறார். பாலூர்ப்பெருந்துறையில் அன்று கலிங்கத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த பெருங்கொடுமைகளே காரணம். முன்னாளில், பாலூர்ப்பெருந்துறையில் தன்னைச் சிறைசெய்து, நீதிமன்றத்தில் அவமதித்த கலிங்கமன்னன் அனந்தவர்மனை எண்ணினான். குலோத்துங்கனும், காஞ்சனா தேவியும் தன்னை அந்த நீதி மன்றத்திலிருந்து தப்புவித்ததை எண்ணினான். பாலூரில், தமிழ் வணிகர்களுக்குக் கொடுமை செய்த கலிங்க மன்னனை எண்ணினான். இந்த எண்ணங்கள் அவன் சீற்றத்தை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன்.சோழப்படைகளுக்கு, பன்னிரண்டு ஆறுகளைத் தாண்ட வேண்டியிருந்தது. பாலாறு, பொன்முகரி, பழவாறு, கொல்லியெனும் நான்கு ஆறுகளைத் தாண்டிப்‌ பெண்ணையாற்றையும்‌ கடந்துப்பின்னர் கிருஷ்ணா நடக்கியத் தாண்டி, கோதாவரியையும் தாண்டினான். மீண்டும் சில நகரங்களை எரியூட்டினான். சில ஊர்களைச் சூறையாடினான்.

குடிமக்களெல்லாம்‌, “ஐயோ, மதில்கள்‌ இடிகின்றனவே; வீடுகள்‌ எரிகின்‌றனவே; புகைப்படலங்கள்‌ சுருண்டு சுருண்டு எழுகின்றனவே; அரண்‌ எங்குள்ளது? நமக்குப்‌ புகலிடம்‌ எங்கே? இங்குத்‌ தலைவர்‌ யார் இருக்கிறார்கள்? படைகள்‌ வருகின்றதே. அந்தோ! நாம் மடிகின்றோம்” என்று ஓலமிட்டுக்கொண்டு நாற்புறமும்‌ ஓடி அலைந்தனர்‌. அவ்வாறு ஏங்கிய மக்கள் “ஐயோ! நம்‌ மன்னன்‌, குலோத்துங்க சோழனுக்கு திறை கொடுக்காது காரணமாக எதிரே தோன்றியது இந்தப்படை போலும். அந்தோ, இனி என்ன‌ செய்வது!” என்றலறிக்கொண்டு. வார்த்தைகள் குழற, உடல்‌ பதற, ஒருவருக்கொருவர்‌ முன்னாக, இடுப்பில் கட்டிய ஆடைகள் அவிழ்வதையும் கருதாது, தங்கள் அரசன் அனந்தவர்மனைக் காண அரண்மனையில் குழுமி நின்றனர்.

கலிங்கமன்னன் அனந்தவர்மன் இந்த மக்களின் ஓலத்தைக்கண்டான். அவனது சிறியகண்கள் மேலும் சிறியதானது. கண்களில் பிரேதக்களை தோன்றியது. இதழ் வெளுத்தது. கைகள் புடைத்தது. உடல் வியர்த்தது. குரூரம் அவன் முகத்தில் பரவியது. தோள்கள் குலுங்க வெறிச்சிறிப்புச் சிரித்தான். கூடியிருந்த மக்களைப்பார்த்துச் சத்தமாக சொன்னான்: “நான் அன்றொரு நாளில் அனபாயனையே கைது செய்திருந்தேன். தப்பி விட்டான். இளையபல்லவனையும் தூக்குமரத்துக்கு அனுப்ப இருந்தேன். அவனும் தப்பிப் பிழைத்தோடினான். அந்த அநபாயன் வராமல், இன்று, இளையபல்லவன் என்ற அம்பை மட்டும் எறிந்திருக்கிறான். அவன் மீண்டும் என் பிடியில் மாட்ட வருகிறான். இம்முறை அவன் தப்பமுடியாது” என்றவன், “மக்களே! நமது காடு நமக்கு அரண். இருக்கும் மலைகள் நமக்கு அரண். கடலும் அரண். இவற்றாற்‌ சூழப்பெற்று பலம் பொருந்தி இருக்கும் இந்தக் கலிங்கத்தை அறியாத இளையபல்லவனின் படை வருகிறது. நல்லது. நாம் சென்று காண்போம். நீங்கள் கவலையில்லாமல் கலைந்து செல்லுங்கள்” என்றான். எதிரியின் படை வலிவை அறியாத மன்னர்கள் சீரழிந்த கதை அவன் அறியவில்லை போலும்.

அனந்தவர்மன் சொன்னதைக் கேட்ட அவன் மந்திரி எங்கராயன்‌ ‘அரசர்‌ கோபம் கொண்டாலும், அரசுக்குத் தகுந்த அறிவுரை வழங்குவது தன் கடமை‘ என்றுணர்ந்து, மன்னனைப் பார்த்து சொன்னான். “மன்னர்‌ பெருமானே, அடியேன்‌ கூறுவனவற்றை இகழாது சிறிது செவிசாய்த்துக்‌ கேட்டருளல்‌ வேண்டும்‌. வேற்றரசர்களைப்‌ புறங்கண்டு வெற்றிபெற குலோத்துங்கன் படைமட்டும் போதாதோ! அவனே தேரில்‌ வருதல்‌ வேண்டுமோ என்ன? அவனுடைய படையினாற்‌ தோல்வியடைந்த அரசுகள் கெட்ட கேட்டினை நீ கேட்கவில்லயா? முன்னொருநாள் அவனது படை அழித்த சேரர் கதை கேட்கவில்லையா? சேரனுக்கும் மலை அரண், மற்றும் கடல் அரண் இருந்தது. ஆயினும், சோழன் விழிஞமழித்ததும்‌, காந்தளூர்ச்சாலை கொண்டதும்‌ தன்‌ படை மட்டும் கொண்டல்லவா? அங்கு அவன் ஆயிரம்‌ யானைகளை கைப்பற்றிக்‌ கொண்டதை நீ அறியாயோ? அநபாயன்‌ படையினால் மட்டுமே தம்‌ மண்டலங்களை இழந்த வேந்தர்களின் பட்டியலை நீ அறியாயோ? அந்தப் பெரும்படை முன் உன் படைவலி என்னவென்பதை எண்ணித் துணிவாயாக. இதை நான் சொல்ல, உனக்குச் சீற்றம் வரினும், அந்தப்படையை எதிர்கொள்ளும் போது, நான் கூறியதின் உண்மையை நீ நன்குணர்வாய்” என்றான்.

அமைச்சர்கள் சொல்வதைக் கேளாத மன்னர்கள் அழிந்தது புராண காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. இராவணன் அழிந்ததும் அதானாலே! அனந்தவர்மன் அமைச்சரின் அறிவுறைக்கு என்ன சொன்னான்? விரைவில், விவரமாகப் பேசலாம்.

இம்மாதக் கவிஞர் – திரு ஆத்மநாதன்    – முனைவர் தென்காசி கணேசன்

எம்.கே.ஆத்மநாதன் 7ம் ஆண்டு நினைவு நாள்: செய்தது குறைவு, எல்லாமே நிறைவு |  DinamalarVinnodum mugilodum - Pudhayal - MSV-TKR - M K Athmanathan - P Susheela, C S  Jayaraman - 1957 - YouTube

 

எம். கே. ஆத்மநாதன்  – ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் வள்ளியூரில பிறந்த இவர், சிறு வயதிலேயே டி கே எஸ் நாடகக் குழுவில் இணைந்தவர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் , பாடலாசிரியர்.  கதை வசனமும் எழுதி இருக்கிறார்.

சுமார் 75 படங்களில, 120   பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின்  முதல் பாடல் – .’ரத்தபாசம்’ படத்தில் ‘பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப்பது ஏனோ?’

இசையா? கவிதையா? என்று வியக்கத்தக்க வகையில், பாடல்களைத் தந்தவர் –

புதையல் திரைப்படத்தில்,

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே

அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ

விளையாடி.. இசை பாடி….

விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்

ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே

சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே

சந்தோஷம் காண உள்ளம் நாடுதே

 

மல்லிகா படத்தில்,

நீல வண்ண கண்ணனே

உனது எண்ணமெல்லாம் நானறிவேன்

கண்ணா என் கையைத் தொடாதே

மோஹன கண்ணா என் கையைத் தொடாதே

 

தன்னந்தனியான என்னை

துன்புறுத்தலாகுமோ

நானுனக்கு சொந்தமோ

ராதை என்ற எண்ணமோ

கண்ணை கண்ணை காட்டி என்னை

வம்பு செய்யலாகுமோ

 

அவன் பித்தனா திரைப் படத்தில்,

 

இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்

நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கிறானா மனிதன் இருக்கிறானா
இறைவன் கேட்கிறான்

பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி

ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால் இயற்கையும் நின்று விடும்

 

களத்தூர் கண்ணம்மாவில்,

மலரில் மது எதற்கு

மதுவில் சுவை எதற்கு

மனதில் ஆசை வளரும்போது

மனிதன் ரசிப்பதற்கு

 

அமர தீபம் படத்தில்

 

எல்லோரும் கூடி ஆடப் பாடக்

கொண்டாடும் நாளிதே – நல்ல நாளிதே

 

மகேஸ்வரி திரைப்படத்தில்

 

அழகு நிலாவின் பவனியிலே

அமைதி கொஞ்சும் இரவினிலே

அல்லி மலர்ந்தே ஆடுதே !

 

களங்கமிலா என் மனதினிலே

கலை அழகே உமதன்பாலே 

அமர காவியம் பாடுதே

 

நாடோடி மன்னனில்,

 

தடுக்காதே என்னைத் தடுக்காதே

தளுக்கி மினுக்கி வந்து மனசைக் கெடுக்காதே

 

நல்லவன் வாழ்வான் படத்தில,

 

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்  மற்றும்,

 

குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா

மனசை மயக்குதா – சுகமும் கிடைக்குதா 

 

புதையல் படத்தில்,

 

தங்க மோகனத் தாமரையே

நீ செங்கதிர் கண்டு சிரிப்பதானாலே

மங்கையர் வதனம் வாடுதே

 

திருமணம் திரைப்படத்தில், பல்லவியை கண்ணதாசன்,

 

என் எண்ணம் இனிப்பதேனோ

இரு கண்ணும் சிவப்பதேனோ

என்று எழுத, சரணங்களை, கண்ணதாசன் புகழும்படி, ஆத்ம நாதன் எழுதினாராம்.

 

இப்படிப் பல பாடல்கள் தந்தவர் திரு ஆத்மநாதன். 250 நாடங்களுக்கு மேலே இசை அமைத்து இருக்கிறார்.

 

நாலு வேலி நிலம், மல்லியம் மங்களம், மாமன் மகள், மகேஸ்வரி, நாட்டுகொரு நல்லவன், அல்லி, விக்ரமாதித்தன், எதையும் தாங்கும் இதயம்,  திருடாதே என பல படங்களில், இவரது பாடல்கள் வெளி வந்துள்ளன.

நடிகர் திலகம், என் டி ராமராவ் நடித்து வெளிவந்த தெனாலி ராமன் திரைப்படத்திற்கு, கண்ணதாசனுடன், வசனம், பாடல்கள் எழுதி இருக்கிறார் திரு ஆத்மநாதன்.

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இன்றும் நடக்கும், ஒளி ஒலி காட்சி இவரது இசையில் ஒலிப்பதை பெருமையுடன் கூறுகிறார். 1982ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், செல்வி ஜெயலலிதா நடித்த மதுர நாயகி என்ற பிரமாண்டமான நாட்டிய நாடகத்திற்கும், இவர் தான் இசை அமைத்தாராம்.

கலைமாமணி விருது,  அவ்வை சண்முகம் விருது, தமிழ்ச் செம்மல் விருது என பல விருதுகள் பெற்றவர்.  அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என நான்கு முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமை கொண்டவர்.

திறமை இருந்த அளவிற்கு, புகழும் பொருளும் கிடைக்காமல் மறைந்த  பல கலைஞர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம்.  ஒரே பதில்  –   “  காலம் “ .

நன்றி .

அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திக்கலாம்.

 

 

கௌரி கல்யாணமும் எண்ணை பிசுக்கும் – மஞ்சுளா சுவாமிநாதன்

சிறுகதை: நேர்முகம் | சிறுகதை: நேர்முகம் - hindutamil.in

டொக்! டொக்! என்று வீட்டின் மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்பட்ட பந்தை தன் மட்டையால் அடித்து ஷாட் பயிற்சி செய்து கொண்டிருந்தான் விக்ரம். அருகே குட்டி மேகா தன் பங்கிற்கு பரதம் பயின்று கொண்டிருந்தாள்.  “ தையும் தத்த தையும் தா கா,” என்று. ராம் அன்றைய முக்கிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்த வண்ணம் சோஃபாவில் அமர்ந்திருந்தான். கௌரி அவளை சுற்றி நடப்பது எதையும் சட்டை செய்யாமல், அவளது மடிக்கணினியில் மும்மரமாக டைப் செய்து கொண்டிருந்தாள்.

“ராம்… லேப்டாப்க்கு தமிழ்ல என்ன சொல்லுவாங்க?”

“மடிக்கணினி”

“ஒட்டெழுத்து வருமா வராதா?”

“ஓய் எழுத்தாளர், நீதான் இதெல்லாம் எழுதணும். என்ன கேட்காத. சரி, மணி எட்டாசே என்ன டின்னர் பண்ண போற?”

“ என்ன பண்ணலாம்? நீயே சொல்லேன்”

“சப்பாத்தி குருமா?”

“அய்யோ… ரொம்ப நேரம் ஆகுமே”

“சரி தோசை வாத்து சட்னி அரைச்சிடு”

“மாவு கம்மியா இருக்கே… இந்த வாரம் அரைக்கல”

“சரி, வழக்கம் போல உப்மாவையாவது பண்ணு… ரவை இருக்கா?”

“ அது இருக்கு… ஆனா, நாளைக்கு சாம்பார் வெக்க புளி கொஞ்சம் கம்மியா இருக்கு… சாப்டுட்டு வாங்கிட்டு வரியா?”

“போன வாரம் மாச மளிகை லிஸ்ட் போட்ட இல்ல,புளி அதுல போட மறந்துட்டியா?”

“சாரி ராம், பிளீஸ் வாங்கிட்டு வா”

கௌரி ஒரு வளரும் எழுத்தாளர். அவளுக்கு வாசிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். திருமணம் ஆனது முதல் இரு குழந்தைகள், தனியார் கம்பெனியில் வேலை என்று பரபரப்பா இருந்தாலும் , இரவு ஒரு அரை மணி நேரமாவது வாசிக்கணும், மாதம் இரண்டு கதையோ, கட்டுரையோ எழுதி தமிழ் இதழ்களில் பிரசுரம் செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஆசை. ஆரம்பத்தில் சில நிராகரிப்பு இருந்தாலும், சமீப காலமாக அவள் எழுதுவது தொடர்ந்து சில வார மற்றும் மாத பத்திரிகைகளில் பிரசுரம் ஆகிறது. இதனால் அவளும் விடாமல் எழுதுகிறாள். கௌரிக்கு எழுத பிடிக்கும், ராமுக்கு அதை படிக்க, திருத்த பிடிக்கும், இப்படி ஒரு ஒப்பந்தத்தில் அவர்கள் குடும்ப வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.

“கௌரி, உங்க அம்மா அப்பா தீபாவளி சீர் வைக்க நாளைக்கு வராங்க. நானும் அவங்களுக்கு இந்த முறை தீபாவளி  பண்டிகை இல்லையேன்னு, நம்மோட ரெண்டு வாரம் தங்கி, தீபாவளி சேர்ந்து கொண்டாடிட்டு போலாம்ன்னு கூப்பிட்டு இருக்கேன்,” என்றான் ராம்.

“எங்க அம்மா உனக்கு எதுக்கு கால் பண்றாங்க?”

“உனக்கு பண்ணினாங்களாம் … நீ எடுக்கல, அதான் என் கிட்ட விஷயத்த சொன்னாங்க.”

“ஓ அதுவா… இன்னிக்கு லஞ்ச் டைம்ல கால் பண்ணினாங்க, ஒரு நல்ல கதைக் கரு கெடச்சுது, அதான் என் டைரில குறிப்பு எடுத்துட்டு இருந்தேன். நான் எப்போதும் டைரி இல்லாம இருக்கவே மாட்டேன்.”

“உனக்கு கதைக் கரு கெடச்சா எழுத டைரி வெச்சிருக்கியே… அதுல வீட்டுக்கு வேண்டிய விஷயங்கள், செய்ய வேண்டிய விஷயங்களையும் குறிப்பு எடுத்தா மறக்காதுல்ல?”

“பிளீஸ் ராம், வக்கீல் குறுக்கு கேள்வி கேக்குற மாதிரி கேட்காத … நான் குடும்ப தலைவி ரோல்ல கொஞ்சம் ஆவெரேஜ் தான். ஆனா, அம்மா ரோலில் ஸ்ட்ராங். என் பசங்களுக்கு சின்ன வயசுலயே படிக்கும் ஆர்வத்த ஏற்படுத்திட்டேன்…”என்று ராமிடம் கொஞ்சலாக வாதம் செய்தாள் கௌரி.

கௌரியின் அம்மாவும்,  அப்பாவும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன் வர, வீடே ஒரே அமளி துமளி ஆனது. “ஏன்  கௌரி பட்சணம் ஸ்வீட்ஸ்  எல்லாம் கடையில வாங்குற? வீட்ல செஞ்சாதானே கட்டுப்படியாகும்,” என்று தொடங்கிய கௌரியின் அம்மா சீதா வீட்டையே திருப்பிப் போட்டாள்.

“இதோ பாரு மாசா மாசம் ஒழுங்கா லிஸ்ட் போட்டு மளிகை சாமான் வாங்கணும். ஒண்ணு விட்டுப்போச்சு, ரெண்டு விட்டுப்போச்சுன்னு மாப்பிள்ளைய அடிக்கடி கடைக்கு அனுப்பக் கூடாது. வீடே ஊழலா இருக்கு, கிச்சன் செல்ஃப் எல்லாம் மாசம் ஒரு முறை பிசுக்கு போக தொடச்சு பேப்பர் மாத்தணும் சரியா. வாரா வாரம் வீட்லயே தோசை மாவு அரைக்கணும், கடை மாவு உடம்புக்கு நல்லது இல்ல ,” என்று சீதா வேலை செய்து கொண்டே அறிவுரை கொடுத்த வண்ணம் இருந்தார்.

கௌரியும் “சரிம்மா” “வாஸ்தவம் தான், இனிமேல் சுத்தமா வெச்சுக்கறேன்,” என்று தலையை ஆட்டியபடியே அம்மாவுக்கு உதவிகள் செய்தாள்.

“இது என்ன ஒரு டப்பால தனியா மிக்சர் இருக்கு? அதை இந்த மிக்சரோட போட்டு வை… ஒரே டப்பாவா போகும்,” என்று ஒரு சம்படத்தை சீதா எடுக்க…

“அம்மா! நில்லு … அது போன தீபாவளிக்கு வாங்கினது, இதோட சேர்க்காத..” என்று பதறினாள் கௌரி.

அவ்வளவு தான் சீதா சாமியாடினாள், “ இதோ பாருங்க மாப்பிள்ளை, இவ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல. நீங்க ரொம்ப எடம் கொடுத்துட்டீங்க! இனிமேல் இந்த கதை புஸ்தகம் படிக்கிறது, சிறுகதை எழுதறது எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வைக்கணும். மொதல்ல வீட்டப் பாரு.  மாப்பிள்ளை, நீங்க தான் அவள எழுத விடாம பார்த்துக்கணும் . நான் கால் பண்ணி செக் பண்ணுவேன்,” என்று கௌரியையும் ராமையும் உட்கார வைத்து சரமாரியாக திட்டித் தீர்த்தாள்.

மறுநாள் அதிகாலை ராம் எழும்போது அருகில் கௌரியை காணவில்லை. நேற்று வாங்கிய திட்டில் அதிகாலையே எழுந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாளா? என்று எண்ணி சமையல் கட்டுக்கு சென்றான்.அங்கும் அவள் இல்லை. வீடு முழுவதும் அவளைத் தேடிப் பார்த்து சற்று துணுக்குற்றான் ராம். பலகனியில் மின் விளக்கு போட்டிருப்பது கண்டு அங்கே சென்றான். கௌரி தரையில் படுத்திருந்தாள். ராம் அவளை மெல்லமாக தட்டி எழுப்பினான்.

“இதோ பாரு, அவங்க சொல்றாங்களேன்னு நீ எழுதறத நிறுத்த வேண்டாம். வேலைய முடிச்சுட்டு எழுது. வருத்தப் படாத…” என்றான் ராம் கனிவாக.

“அது இல்ல ராம், ‘படைப்பாளிகளோடு வாழ்வது கொண்டாட்டமா? போராட்டமா? ‘ என்று ஒரு தொடர் படிச்சேன். அதில் ஆண் எழுத்தாளர்களும், அவர்கள் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள பற்றி எழுதி இருந்தாங்க… நேத்து நடந்த சம்பவத்த வெச்சு, பெண் படைப்பாளிகளோடு வாழ்வது பற்றி ஓர் நகைச்சுவை கதை எழுதினேன்… அப்பறம் இங்கேயே தூங்கிட்டேன் …” என்றாள் சிரித்தபடி கௌரி.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

சமையல் குறிப்பு
Filter Coffee - Desert Food Feed(also in Tamil)

நேற்று மாலை நண்பர் ஒருவரை காண அவர் வீட்டிற்கு சென்று இருந்தேன்.
நண்பரின் மனைவி மிகவும் நல்லவர்தான், மிகவும் அன்பாக பழகக் கூடியவர்தான். நான் அவருக்கு கெடுதல் ஒன்றும் நினைத்தவனுமில்லை.

அப்படி இருந்தும் எனக்கு அவர் போட்ட காபியைக்  குடிக்கக் கொடுத்தார்.

நண்பரிடம் பேசியது ஞாபகம் இல்லை. அங்கு காபி சாப்பிடும் பொழுது மனதில் ஓடியதுதான் ஞாபகம் வருகிறது. அதை மட்டும் பகிர்கிறேன் .

முதலில் தோன்றியது காபி போட கற்று தர ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம் என்று.
அந்த அளவிற்கு வசதி இல்லை. மேலும் ஏற்கனவே அட்மிஷன் இல்லாமல் பொறியியல் கல்லூரிகள் எல்லாம் கஷ்டப்படுகின்றன. எனவே அந்த எண்ணத்தை தவிர்த்து விட்டேன்.
அப்புறம் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாமா என யோசித்தேன். அதையும் கை விட்டு விட்டேன்.
இருப்பினும் மனது கேட்கவில்லை. எனவே முதல் பாடத்தை நம் நண்பர்களின் நண்மைக்காக கீழே கொடுத்துள்ளேன்.

முதல் பாடம்:
காப்பி போடுவது ஒரு கலை. (an art)
காபி போட முதலில் டிகாக்‌ஷன் தேவை.
Decoction போட ஒரு devotion (ஈடுபாடு) தேவை.
காபியின் சூட்சுமம் நாம் தெரிவு செய்யும் தூளில்தான இருக்கிறது.
முதலில் பீபரி, பிளாண்டேஷன் விதைகளை சரியான விகிதத்தில் கலந்து சிக்கரி கலக்காமல் பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் இறுகி மூடிவைத்துக் கொள்ள வேண்டும்.

காபி பில்டரின் மேல் பாகத்தில் தேவையான அளவு காபித் தூளை போட வேண்டும்.
பின்பு இரண்டு விரல்களால் அதை மெதுவாக அழுத்த வேண்டும். கடினமாக அழுத்தக்கூடாது.ரொம்ப மெதுவாகவும் அழுத்தக் கூடாது. காபித் தூள் குவியலுக்கு இடையே காற்று தாராளமாக சென்று வர வேண்டும்.

வெந்நீர் கொதிப்பதற்கு சற்று முன்பே இறக்கி விட வேண்டும்.
இடுக்கியில் வெந்நீர் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு மெதுவாக தூளின் மேல் ஊற்ற வேண்டும். சொட்டு சொட்டாக ஊற்றினால் நலம்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கலக்காத பாலை நன்கு சுட வைத்துக்கொள்ள வேண்டும்.
டிகாக்‌ஷன் முழுதும் கீழ் பாத்திரத்தில் இறங்கியவுடன் தான் காபி கலக்க முடியும். அது வரை வேறு ஏதேனும் உபயோகமான வேலை இருந்தால் பார்க்கலாம். இல்லாவிடின் சும்மா அமர்ந்திருக்கவும். டிகாக்‌ஷன் இறங்கி விட்டதா என அடிக்கடி மூடியைத் திறந்து பார்க்க வேண்டாம்.

பாலில் டிகாக்‌ஷனை ஊற்றுவதா அல்லது டிகாக்‌ஷனில் பாலை ஊற்றுவதா என என் ஆராய்ச்சி இன்னும் முடிய வில்லை.

அதுவரை நாம் பாலில் டிகாக்‌ஷனை கலப்போம்.
ஒரு டம்ளரில் பாலை எடுத்துக் கொண்டு சரியான அளவில் டிகாக்‌ஷனை மெதுவாக ஊற்ற வேண்டும். இங்கு அதிக கவனம் தேவை.
கலவை அதிக கருப்பாகவும் இருக்கக்கூடாது வெள்ளையாகவும் இருக்கக்கூடாது.இப்பொழுது காபி ரெடி.
காபியை ஆற்றும் விதத்தில்தான் காபியின் சுவையே உள்ளது.
இது என் நண்பர் சுந்தரராஜன் சொல்லிய ரகசியம். அவர் M.Sc ரசாயனம் படித்தவர். ரீல் விடத்தெரியாத நல்லவர். 
ஒரு கையில் காலி டம்ளரையும் மற்றொரு கையில் காபியையும் வைத்து கடையில் ஆற்றுவது போல உயர தூக்கி ஆற்ற வேண்டும்.  அப்பொழுது காபியில் உள்ள caffeine
காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் கலந்து வாசனையை(flavour)தூக்கி விடுமாம்.

இப்படியெல்லாம் காபி போட்டா உங்களுக்குதான் கஷ்டம் , நிறைய தடவை காபி போட வேண்டி இருக்கும் . பார்த்துக்கங்க.

கடந்த சமையல் குறிப்பு பகுதியில் ‘வெந்நீர் போடுவது எப்படி’ என்ற பதிவிற்கு கிடைத்த வரவேற்பின் தாக்கமே இப்பதிவு. 


சிவமால் ……

Non Veg Jokes,Funny Jokes : மல்லிகபூ இட்லி சுட்டு கொடுங்க, இல்லன்ன ஒரு மணி  நேரம் என்கூட இருக்கணும்! - give the jasmine flower idly, or be with me for  an hour tamil sexy jokes -best comedy jokes on pappu and his plan to deal with a doubting wife read  funny chutkule on husband and wife in hindi - Viral Jokes: जब पप्पू ने  पत्नी का शक

குட்டீஸ் லூட்டீஸ்: வலி மீட்பு ஜெல்

நானும், மகள் மிதிலாவும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

விளம்பரப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென்று, ‘ஏன்பா..வலி மீட்பு ஜெல்னு
விளம்பரப் படுத்தறாங்களே… அந்த ஜெல்லை, வலி வந்து குணமான மூட்டுலே தடவினா, எகெய்ன்
அந்த மூட்டுலே வலி வந்துடுமோ..?’ என்றாளே பார்க்கலாம்.

அந்த விளம்பரத்தையும், அவளையும் பார்த்து அயர்ந்து உட்கார்ந்திருந்தேன்.

அதுவும் சரிதானே..!

— சிவமால்

—————————————————————————————————————–

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

ஸ்பெஷல் ப்ளாக்

புதிதாகக் கட்டப்பட்டிருந்த அந்த ப்ரும்மாண்டமான காம்ப்ளக்ஸை வியப்போடு
சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ப்ரும்மாண்ட காம்ப்ளக்ஸை ‘எ’, ‘பி’ ‘ஸி, ‘டி’ன்னு
பிரித்திருந்தார்கள். ‘எ’. ‘பி’ ‘ஸி’ ப்ளாக்ஸைச் சுற்றி முடித்திருந்தவர்கள், ‘டி’ ப்ளாக்
கிற்கு வந்தோம்.

‘ஏன் ஸார்.. இங்க்லீஷ்லே நல்ல புலமை இருக்குன்னு காட்ட வேண்டியதுதான்.. அதற்காக
இப்படியா.. அந்த போர்டைப் பாருங்க..’ என்று ‘டி’ ப்ளாக் என்ட்ரன்ஸில் இருந்த போர்டைச்
சுட்டிக்காட்டினார் எங்கள் க்ரூப்பில் வந்த ஒருவர்.

ஸ்பெஷல் ப்ளாக்
டுபாக்கோ ஃப்ரீ
ஆல்கஹால் ஃப்ரீ
நான்விஜிடேரியன் ஃப்ரீ
ஸ்பெஷல் ‘டி’ ப்ளாக்’

என்று எழுதி இருந்தது. அழகா ஸிம்பிளா ‘ நோ ஸ்மோக்கிங்., ‘நோ ஆல்கஹால்’
‘நோ நான்விஜிடேரியன்’னு எழுதி இருக்கலாம். அதை விட்டுவிட்டு இங்க்லீஷ் புலமையைக்
காட்டறேன்னு இப்படி எழுதி இருக்காங்க… இதைப் படித்தா இந்த ப்ளாக்லே இதெல்லாம்
ஃப்ரீயா கிடைக்கும்னு சொல்ற மாதிரி இல்லே இருக்கு’ என்று சிரித்தார்.

பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.

–சிவமால்.

சுற்றிச்சுழலும் ஒரு உறவு- பி. ஆர். கிரிஜா

அப்பா- மகள் உறவுகளைப் போற்றும் 5 தமிழ் திரைப்படங்கள் ! | Femina.in“கைய ஒழுங்காப் புடிச்சி பார்த்து நடந்து வா, குதிச்சிண்டே இருக்காதே….” அப்பாவின் குரல் மறுபடியும் காதில் ஒலிக்கத் தொடங்கியது. என்ன இது, வயது அறுபத்தி மூன்று முடியப் போகிறது. இன்னும் இந்த நினைவுகள் என்னை சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறதே !….. பன்னிரண்டு வயதில் அப்பா இறந்து போனார், நேற்று நடந்தது போல் அல்லவா இருக்கிறது எனக்கு !

சொன்னால் யாராவது நம்புவார்களா ! ஏண்டி, உனக்கே பேரன் பிறந்தாச்சு இன்னும் என்னடி அப்பா அப்பான்னு…. , என்னை கிண்டல் செய்வார்கள். என்னுடைய உணர்வுகளை யாராவது புரிந்து கொண்டால் தானே ? சொல்வார்கள், சொல்வார்கள் காலம் ஒரு அரிய மருந்து, அது எல்லாவற்றையும் சரி செய்து விடும், நாளாவட்டத்தில் துக்கமும் துயரமும் மறைந்து போகும் என்று. சொன்னவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவனை நான் உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்.

நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் என் ஆழ் மனதில் அப்பா அப்பா அப்பா தான். அம்மா கூட வருவதில்லை. கேட்கும் உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். மாதாவுக்கு பிறகுதானே பிதா என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் என் மனம் எனக்குத்தானே தெரியும் ? தூங்கி எழுந்தால் அப்பா, சாப்பிட உட்கார்ந்தால் அப்பா, ஏதாவது ஒரு பாட்டை கேட்கும்போது அப்பாவுடன் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து சினிமாவுக்குச் சென்றது, வரும் வழியில் மசாலா பால் குடித்தது, அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்தபோது அப்பா காதைத் திருகியது அப்பப்பா……அப்பப்பா என்ன, அப்பா தான். .சகலமும் எனக்கு அப்பாதான். என் கணவர் தான் பாவம் பொறுமைசாலி. ஒரு நாளைக்கு நூறு முறையாவது என் அப்பாவைப் பற்றி பேசும்போது உம் உம் என்று புன்னகையுடன் காது கொடுத்துக் கேட்பாரே தவிர, கேட்டு கேட்டு காது புளித்து விட்டது என்று ஒருநாளும் அங்கலாய்க்க மாட்டார்.

புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மனம் சிறிது சிறிதாக அதில் லயிக்க ஆரம்பித்தது. அப்போது வாயில் கதவு திறந்தே இருந்ததால் பக்கத்து வீட்டிலிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் எம் எஸ்ஸின் குரலில். மறுபடியும் அப்பா….. தினமும் என்னுடைய பன்னிரண்டு வயது வரை வீட்டில் மாலையில் எல்லோரும் அப்பாவைச் சுற்றி உட்காருவோம். அவர் விஷ்ணு சஹஸ்ரநாமம் கணீர் என்று சொல்ல ஆரம்பிப்பார். எல்லோரும் கூடவே சொல்வார்கள். நான் சிறுமி ஆதலால் அவ்வப்போது ஓடி விடுவேன். அப்பா என்னை இழுத்து அணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து கேட்கச் சொல்வார். அது முடிந்த பிறகு பேரீச்சம்பழம் நைவேத்யம். என் கண், மனம் அதில்தான் இருக்கும். அதற்காகவே பொறுமையாகக் காத்திருப்பேன். அது தினமும் காதில் விழுந்ததாலோ என்னவோ விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடம். என்னையும் அறியாமல் நான் எம் எஸ்ஸின் குரலோடு சேர்ந்து சொல்ல ஆரம்பித்தேன். அவ்வளவுதான். கையில் எடுத்த புத்தகத்தை டேபிளில் வைத்தேன். மனது புத்தகத்தில் லயிக்கவில்லை
பெண், பிள்ளை எல்லோரும் திருமணமாகி அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு எங்கோ தூர தேசத்தில் இருக்கிறார்கள். நானும் விடாமல் என்னுடைய இந்த அப்பா பல்லவியை என் கணவரிடம் தினம் கொட்டித் தீர்க்கிறேன். அவரும்தான் பாவம் என்ன செய்வார்.
இதிலிருந்து நான் வெளியே வருவேனா ? என்னையே நான் தினம் தினம் கேட்டுக் கொள்கிறேன்.

மாலை 6:00 மணி ஆனால் நானும் என் கணவரும் அருகில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அப்போது ஒரு அரை மணி நேரம் அங்கு வரும் குழந்தைகளையும், அவர்களுடன் வரும் பெரியவர்களையும் நாங்கள் இருவரும் பார்த்து ரசிப்போம். சில குழந்தைகளை பாட்டி அல்லது தாத்தா அழைத்து வருவார்கள், சில குழந்தைகளை பெரும்பாலும் அம்மாக்கள் அழைத்து வருவார்கள். எப்போதாவது சனி ஞாயிறுகளில் அப்பாக்கள் அழைத்து வருவார்கள். பார்த்தீர்களா , திரும்பவும் அப்பா. நீங்கள் என்னை அப்பா பைத்தியம் பிடித்த மனநோயாளி என்று சொன்னாலும் பரவாயில்லை. எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் என் உணர்வுகள், நினைவுகள் நிஜமானது. அது உங்கள் யாருக்கும் புரியாது. நான் புரிய வைக்க முயற்சிக்கப் போவதுமில்லை. பார்க்கில் சறுக்கு மரத்தில் விளையாடி முடித்துவிட்டு ஒரு குழந்தையை அதன் அப்பா தன்னுடைய பைக்கில் பின்னாடி உட்கார வைக்கிறார்.

மறுபடியும் என் மனம் பின்னோக்கி 1970 களுக்கு செல்கிறது. அப்போது திருவருட்செல்வர் படம் பார்த்துவிட்டு வழக்கம் போல் அப்பாவின் சைக்கிளில் ஏறி அமர்கிறேன். வீட்டிற்கு திரும்பும் வழியில் ஜூஸ் கடை. வழக்கம் போல் பிடிவாதம். ரோடு என்று கூட பார்க்காமல் ஒரே அடம் பிடித்தேன். அப்போது எனக்கு 10 வயது இருக்கும். இந்தக் காலத்தில் 10 வயது குழந்தைகள் எவ்வளவு முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் ஒரு ஐந்து வயது பெண் போல பிடிவாதம் பிடித்தேன். என் அப்பாவும் வேறு வழி இன்றி கடையில் நிறுத்தி ஆரஞ்சு ஜூஸ் வாங்கிக் கொடுத்தார். அடுத்த நாள் சளி பிடித்து விட்டது. ஒரே இருமல். அப்பா டாக்டர் என்பதால் உடனே மருந்து கொடுத்து என்னை சரிப்படுத்தினார். இப்போது கூட தொண்டையில் அந்த ஜூஸின் ருசி. நீங்கள் கேலியாக சிரிப்பது என் காதில் விழத்தான் செய்கிறது. சிரிங்க, நன்றாக சிரிங்க…. உண்மையைச் சொன்னால் உங்களுக்கெல்லாம் சிரிப்பு வருகிறதா ….. வரட்டும் வரட்டும் எனக்குக் கவலை இல்லை.

மணி பார்த்தேன் இரவு ஏழு. எத்தனை நேரம் தான் நானும் இவரும் டிவி பார்த்துக் கொண்டும் ஐ பி எல் ஐப் பற்றிப் பேசிக்கொண்டும், புத்தகங்களைப் படித்துக் கொண்டும் பொழுதைக் கழிப்பது ? ஆழ்மனதில் பேரன் பேத்திகளை கொஞ்சும் ஆசை நிராசையாகப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கோ வெளிநாட்டில் இருப்பவர்களை வாட்சப் வீடியோவில் கொஞ்சுகிறோம். இதுதான் இன்றைய யதார்த்தம். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலைமை. ஒரு போலி வாழ்க்கை. என் அப்பாவின் நினைவு மட்டுமே என்னுள் ஆழ்ந்து உறைந்து கிடக்கிறது. அதுதான் நிஜம். அதை தினமும் மாடு அசை போடுவது போல அசை போட்டு ஆனந்தப்படுகிறேன். ஆனாலும் அவரது நினைவுகள் என்னை தூங்க விடாமல் சுற்றிச் சுற்றி வருகிறது. என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை இது தொடரும் என்றே தோன்றுகிறது. ஒரு மனநல மருத்துவரைக் கூட பார்த்தாகிவிட்டது. அவர் பதிலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. “மேடம், நீங்கள் மற்ற விஷயங்களில் முழு கவனத்தை செலுத்துங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்று. இனிமேலா இந்த 63 வயதிற்கு மேலா ? எனக்கு சிரிப்புத்தான் வந்தது. பேசாமல் வெளியே வந்து ஓலா பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். என் கணவர் கூட கிண்டலாக ஒரு நாள் சொன்னார்… “தினமும் உன் அப்பாவைப் பற்றி இவ்வளவு சொல்கிறாயே பேசாமல் ஒரு முழு நாவல் உன்னையும் உன் அப்பாவை மட்டுமே வைத்து எழுதேன்… போட்டிக்குக் கூட அனுப்பலாம். யார் கண்டது ? வித்தியாசமாக உள்ளதே என்று உனக்கு முதல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.” என்றார். அவரைப் பார்த்து முறைத்ததில் நமக்கேன் வம்பு என்று பேசாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

மனது ஒன்றிலும் லயிக்காமல் அலைபாயத் தொடங்கியது. வெளியே வந்தேன். அடுத்த தெரு வரை ஒரு நடை நடந்து விட்டு வரலாமே என்று. அப்போதுதான் பார்த்தேன் அந்த தெரு முனையில் ஒரு கர்ப்பிணி பெண் கிழிந்த உடையில் வருவோர் போவோரிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோக்காரர் தன் அருகில் இருக்கும் மற்றொரு ஆட்டோக்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. “இந்த பொம்பள பாவம்பா…. மூணு நாள் முன்னாடி வரை நல்லாத்தான் இருந்துச்சு…. இவ புருஷன் முந்தாநாள் லாரி அடிச்சு செத்துப் போயிட்டாரு… இது எட்டு மாசம் கர்ப்பமா இருக்கு. அந்த ஆளு தன் பிள்ள வெளிய வரதுக்கு முன்னாடியே போயிடுச்சுப்பா…. கஷ்ட காலம். இந்தப் புள்ள அப்பா மூஞ்சி கூட பார்க்காம வளரப் போகுது பாரு…. அத நினைச்சாத்தான் கஷ்டமா இருக்குப்பா….” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட நான் வெலவெலத்துப் போய் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று விட்டேன்.

“அம்மா…. அம்மா…. என்னம்மா ? ஆட்டோ வேணுமா ?” குரல் வந்த திசையில் சட்டென்று திரும்பிப் பார்த்தேன். உடனே என்னை சுதாரித்துக் கொண்டு, “வேண்டாம்பா” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் அருகில் போய் அவளுக்கு கையில் இருந்த பணத்தையும், பழங்களையும் கொடுத்தேன். மனம் லேசானது. திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பா என் கூடவே என் கையைப் பிடித்து நடப்பது போலத் தோன்றியது.

“மன உளைச்சலைப் புரிந்து கொண்டேன்!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

“மன உளைச்சலைப் புரிந்து கொண்டேன்!”

மன அழுத்தம், மன உளைச்சல் அதிகமாக உள்ளதா.. இலகுவில் விடுபட இதை மட்டும் செய்யுங்கள் - ஐபிசி தமிழ்

முப்பது வயதான ரீடா, முனைவர் பட்டத்திற்கான ஆறாவது வருடத்திலிருந்தாள். கால வரம்பு நீடிக்கிறதே, தன்னால் இதை முடிக்க முடியுமா என்ற கவலையாலும், துறை ஆலோசகர் (PhD guide) எச்சரிக்கை செய்ததாலும் பதட்டம் அதிகரித்தது. என்னைப் பார்க்க மருத்துவர் பரிந்துரைத்திருந்தார்.

குழந்தைப் பருவத்தில், தந்தை வெளிநாட்டு சென்றதால் ஊர், பள்ளி மாறிய போதும் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்று உணர்ந்ததை விவரித்தாள். அந்த சமயங்களில் முழங்கை வலியும், மேல்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்து பதட்ட நிலையும் இருப்பதாக விவரித்தாள்.

முன்பைவிட வீரியம் அதிகரித்தது. மனநல மருத்துவர் தேவையான மருந்துகளைத் தந்ததும், சற்று நன்றானது. விடியற்காலையில் எழுந்திருப்பதும். மனம் படிக்க எழுத வேண்டியதை அலச, பதட்ட நிலை துவங்கியது.

ரீடா பல வெற்றியைப் பெற்றிருந்தாலும் தனக்குத் திறமைக் குறைவு என எண்ணினாள். இந்த மாதிரியான சிந்தனை நாள் முழுதும் படர, முடித்துத் தர வேண்டிய வேலையைச் செய்யாமல் ஏதோவொன்று செய்ய, செய்ய வேண்டிய வேலைகள் அப்படியே இருக்கும். தீய சுழற்சியானது: வேலை செய்யவேண்டும், ஆனால் மனம் அலைமோத, வேறொன்றைச் செய்ய, வேலையை முடிக்கவில்லை.

மந்த நிலை நிலவ, எதிலும் உற்சாகம் ஏற்படவில்லை. முடிக்க வேண்டியதைப் பற்றிய சிந்தனை இருக்க, சோர்வு கூடியது என்றாள்.‌

முன்பெல்லாம் ஓடுவது மனதிற்குப் புத்துணர்ச்சி தந்தது. முழங்கை வலியினால் ஓட முடியவில்லை என்றாள். வலியும் மனநிலையும் மாறாமல் இருந்துவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பினாள்.

உதவியற்ற நிலையை உணர்ந்தாள். இது, மன உளைச்சல் உண்டாக்கலாம்.

தனிப்பட்ட ஸெஷன்கள் ஒருபுறம் போய்க்கொண்டிருந்தது. ஏற்கனவே நடந்துகொண்டிருந்த க்ரூப் தெரப்பியில் ரீடாவை சேர்த்துக் கொண்டேன். உடனே முழுமையாகச் சரியாகிவிடுவேன் என்றாள். இது மாயமாக மாறுவதற்காக இல்லை, மன உளைச்சலைப் பற்றிப் புரிந்துகொண்டு செயல் பட வழிகளைத் தேட என விளக்கினேன்.

ரீடாவிற்கு ஏற்பட்ட முதல் புரிதலே, சிந்தனையைத் திணிக்கப் பார்த்தால் எதிர்த்துத்தான் நிற்கும் என்று. இதை மேலும் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொள்ள முரண்டு பிடிக்கும் வழியை விட்டுவிட்டு, செய்து பார்க்க வடிவமைப்புச் செய்தேன், இந்த மனநிலையிலிருந்து வெளிவருவதற்கே.

அதற்காக, கைவிரல்களை ஒரு சிறு கயிற்றினால் பின்னி விடுவிக்கச் சொன்னேன். அவசரமாக, அழுத்தம் கொடுத்து முயன்றால் விடுவிப்பு மேலும் கடினமாகும். மாறாக நிதானமாக விரல்களை ஒன்றாக இணைத்துக் கொண்டால், முடிச்சு அவிழ்ந்து விழ உதவும். இரு நிலையைக் காட்டுகிறது: முடிச்சு மன உளைச்சல் உபாதை, அவசரமாக அழுத்தத்தை அழிக்க முயல்வது, முடிச்சை அவிழ்த்து விடுவது மன உளைச்சலிருந்து வலுக்கட்டாயமாக வெளிவர முயல்வது.

ரீடா “நான் சரியாகி விடுவேனா” என்று கேட்ட கேள்விக்கு அவிழ்த்த முடிச்சைச் சம்பந்தப் படுத்த, புரிந்தது. மன உளைச்சலிருந்து நழுவ, இப்படியொன்றும் இல்லை என்ற எண்ணம் அந்த நிமிடத்திற்குச் சாந்தி செய்யும். நீடிக்காது. அதற்குப் பதிலாக இருக்கிற நிலையையும் வீச்சையும் அப்படியே கண்டுகொண்டு, ஒப்புக்கொண்டு, உடலில் நேர்வதையும் உணர்வில் ஏற்படுவதையும் அறிந்தால், பதட்டமின்றி மேற்கொண்டு செய்வதற்கு மனதில் தோன்றும்!

மேலும் புரிந்து கொள்ள, ரீடாவுடன் தொடர்ந்தேன். துன்பம் மற்ற உணர்வுகளைப் போல நமது உடலில் தென்படும். உடல் வலியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும். இது நமது தினசரி செயலில் குறுக்கிடும். உணர்ச்சிகளை எதிர்க்க முயற்சி செய்தால், இடையூறுகள் அதிகரித்து, மேலும் துன்பம் கொடுத்து தீய சுழற்சியாகலாம்.

உதாரணமாக ரீடாவின் தூக்கத்தை எடுத்துக் கொண்டேன். தூக்கம் வராத போது சிந்தனையைச் சிதறவிட, பதட்டம் கூடியது. தூக்கத்தை வரவழைக்க, கண்களை அழுத்தி மூடிக்கொள்வாள். மீதிருக்கும் வேலையைப் பற்றிய சிந்தனைகள் கூட, பதட்டம் அதிகரிக்கும், தூக்கம் வராது. தூங்காததினால் மறுநாள் சோர்வு கூட, வேலை நடக்காது, பதட்டம் அதிகரிக்கும்.

அதேபோல், இக்கட்டான நிலைமைகளைச் சந்திக்கும்போது, உணர்வுகளினால் எதிர்கொள்ளத் தெரியாமல் ஸ்தம்பித்து நிற்க, சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை, தவிப்பு உண்டாகியது. சரியாகச் சமாளிக்காததில், சூழ்நிலை மேலும் மோசமாகி, தவிப்பு அதிகரித்தது.

வெகு சீக்கிரமாக ரீடாவின் புரிதல் கூடியது! தன்னுடைய தவறான பல செயல்முறைகளைத் தெளிவாகக் கண்டறிந்தாள். உதாரணத்திற்கு, எதிர்மறை உணர்வுகள் வர, மன உளைச்சல் நேர்ந்ததை. மறப்பதற்குப் பயனில்லாத வேலை செய்ததை வரிசைப் படுத்தினாள். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வு  தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதை, வேதனை அளித்ததைப் பார்த்தாள்.

தீய சூழல்களை மாற்றி அமைக்க, ரீடாவைச் சுய இரக்கம் பயிலச் சொன்னேன், அதாவது நாம் தன்னைத் தானே மன்னித்துக் கொள்வது. தூக்கம் வராதபோது, செய்யாத வேலைகளைப் பற்றி எண்ணி பதட்டம் கூட்டுவதற்குப் பதிலாக, பிடித்த ஏதோ ஒன்றைப்பற்றி எண்ணலாம். சூழ்நிலைகளைச் சரியாகச் சந்திக்காவிட்டால், “பரவாயில்லை, மறுமுறை சரியாகச் செய்கிறேன்” என்று தன்னையே தைரியப் படுத்திக் கொள்ளலாம். தீய சூழ்ச்சிகளை இப்படி முறிக்கலாம் என ரீடா புரிந்து கொண்டாள்.

அதே சமயம், தன் நிலையை மாற்றிக்கொள்ளவும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தாள். சில செஷன்களில் உரையாடிய பிறகு, தனக்குப் பிடித்திருந்த வேலைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தாள். தையல், தோட்ட வேலை, பாடுவதைச் செய்ய ஆரம்பித்தாள். செய்யச் செய்ய, உடலில் ஏற்பட்ட மாற்றம் பழையபடி மனதில் அமைதியை அளித்ததை உணர்ந்தாள்!

ரீடா தன்னையும் அறியாமல் நன்றாகி வருவதைக் குழுவினர் அவளுக்கு எடுத்துக் கூறினார்கள்.

இதை ரீடா ஆராய்ந்ததில் தெளிவானது, தன் வலியை வெவ்வேறு வகைகளில் அணுகிப் புரிந்து கொண்டதில், உடலும் சமாதானம் ஆகிறது, வலியின் வீரியம் குறைகிறது என்று. பள்ளிக் காலத்தில் கைப்பந்துக் குழுவில் விளையாடியவள், பல ஆண்டுகளுக்குப் பிறகு உற்சாகமாகத் தொடர்ந்தாள். இதுவே மன உளைச்சலுக்கு விடையாகப் பொருந்தும் என ரீடாவின் சிந்தனைச் செயல் காண்பிக்க, மற்ற கைவேலைகளுடன் இதையும் சேர்த்துக் கொண்டாள்.

குழுவில் பலர், ரீடாவின் முயற்சிகளைப் பார்த்து, தங்களது பிரச்சினைக்கும் தீர்வு காண, தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் தேர்ந்தெடுத்தார்கள், வழிப்படுத்தினார்கள். தனிப்பட்ட செஷன்களிலும் இந்தக் குழுவிலும் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். பல ஊக்குவிப்பு நேர்ந்தது.

மொத்தத்தில், நமக்கு நேரும் உடல்-மன இன்னல்களை, தகவல் தருவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன், எப்படி நேர்கிறது, அதற்கும் நம் உணர்ச்சிகளுக்கும் இணைப்புகள் என்ன, நம் சிந்தனையை, செயல்களை எப்படிப் பாதிக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கண்டுகொள்ள வேண்டும். புரிந்தால் அதைச் சரி செய்யும் யுக்திகளைக் கடைப்பிடிக்க முடியும். மாறாக, பயத்துடன் பார்த்தால், நிலை குலுங்க வைக்கும். அதிலிருந்து ஓடிப் போக முயன்றால், அந்த நிலை நிழல் போலத் தொடரும்.

மனம் வலுவானதும், ரீடாவிற்குத் தன் பயத்திலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. குறிப்பாக, துறை ஆலோசகரிடம் பேசுவதற்கு. இதற்குக் குழுவில் ஒருவர் துறை ஆலோசகராக நடித்து (role play) ஆராய உதவினார். . இருவரும் மாறி மாறி பல சந்தேகங்களை எடுத்து, பாத்திரத்தைச் செய்ய சில தகவல்கள் வெளியானது.

குறிப்பாக, ரீடா, துறை ஆலோசகர் கேட்பதற்குப் பலமுறை பதிலளிக்காமல் உறைந்து நிற்பாள். இது முன்னேற்றம் தராததைப் புரிந்துகொண்டாள். இதன் காரணமே, பலமுறை செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டிருந்தது பதட்டத்தை ஏற்படுத்தியதனால். ரீடா தன்னை அறியாமலே எதிர்ப்புச் செய்வதையும் அதன் விளைவையும் அடையாளம் காண முடிந்தது. இதை நேருக்குநேர் பார்க்கத் தைரியம் வேண்டும். ரீடா அந்த தைரிய நிலையை அடைந்திருந்தாள். 

குழுவினருடன் நடிப்பு மூலம் கலந்தாலோசித்ததில் புரிந்தது. ரீடா ஒரு பக்கம், பல வேலைகளை முடித்திருப்பாள், முடிக்காதவற்றை நினைத்து பதற்றமடைந்து, பகிராமல் உறைந்து நிற்பாள். மற்றொரு பக்கம், சந்தேகங்கள், இடையூறுகள் காரணமாகச் சிலவற்று முடிக்காமல் நின்றிருக்கும். தன் பயம், அதைரியம், மனப்போக்கினால் செய்ய வேண்டியது சில நடந்திருக்காது. இது தெளிவானதும், தீர்வு கண்முன் இருந்தது. தன் வழியை மாற்றி, முதலில் ஆலோசகரிடம் முடித்ததைச் சொல்வதும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதும், செய்யாதவற்றிற்கு, தன் தவற்றை ஒப்புக் கொண்டு, மறுமுறை செய்வதற்கான சிறிய திட்டங்களைத் தீட்டி முடிக்க முயன்றாள்.

ரீடா தனக்கு நேர்ந்த மன உளைச்சலை விரோதியாக எண்ணாமல் உடலும் மனமும் சொன்ன தகவல்கள் என எடுத்துக் கொண்டாள். இதனைத் தான் புரிந்து கொள்ளாமல் வியந்து பயந்ததனால் பல வகையான பிரச்சினை சந்திக்க நேர்ந்தது.

இந்தப் புரிதல் முக்கியமானது. அதன் அடிப்படையில் ரீடா தன் எதிர்பார்ப்பைப் பற்றிய விளக்கம் ஆரம்பித்தேன். எளிதில் மன உளைச்சலுக்குக் காரணி எதிர்பார்ப்பு, சுய மதிப்பு எனத் தெரிந்தது. மன உளைச்சலுக்குக் காரணமே எதிர்பார்ப்பை மிக உயரத்தில் வைப்பதே. அதனால் வெற்றி அடைந்தாலும் அதை எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு, போதவில்லை என்று முடிவு செய்ய மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்.

இவையெல்லாம் முடிந்ததில் முழங்கை வலி சரியானது. முனைவர் பட்டத்திற்கு அருகில் சென்றிருந்தாள். தோழமை, பிடித்த பலவற்றைச் செய்து வந்தாள். மருத்துவர் மருந்துகளைக் குறைக்க ஆரம்பித்தார்.

 

இடம் பொருள் இலக்கியம்  11. – வ.வே.சு

ஏன் என்ற கேள்வி (தொடர்ச்சி)

வினாடி வினா போட்டியில் சரியாக விடையளித்த வினாக்கள் எத்தனை?  தரம்-5/iq/QUIZ/தினம் ஒரு தகவல்👉 Day-336 - YouTube

“வாங்க வாங்க குவிஸ் பார்மட் கொண்டுவந்து விட்டீர்களா ” என்றார் சென்னை தொலைக்காட்சி புரொட்யூசர் அஸ்வினி குமார்.

நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தான் சென்னை தூர்தர்ஷன் நிலையம். பணி முடிந்து மாலை நான்கு மணிக்குக் கிளம்பினால் என் ஸ்கூட்டரில் , தொலைக்காட்சி நிலையத்திற்கு பதினைந்து நிமிடங்களுக்குள் சென்றுவிடுவேன். அவர்கள் அலுவலகம் மாலை ஐந்தரை மணி வரை இயங்கும். தேவை என்றால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மேலும் சில மணி நேரங்கள் இருப்பார்கள். எனவே நிகழ்ச்சி பற்றிய “டிஸ்கஷனுக்கும்” தயாரிப்புக்கான குறிப்புகள், தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் பலமுறை நான் தொலைக்காட்சி நிலையத்திற்குச் செல்லவேண்டி இருந்தாலும் அது போக்குவரத்து , நேரம் ஆகிய இரண்டிலும் எனக்குப் பெரிய இடர்ப்பாடாக இருந்தது கிடையாது. 1978- லிருந்து தொடர்ந்து நான் பல நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியிலும் ,வானொலியிலும் தயாரித்து அளித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.

“ ம்.. ரெடியா இருக்கு “ எனச் சொன்னேன். காப்பி குடித்துக் கொண்டே எங்கள் டிஸ்கஷன் தொடர்ந்தது. வரவேற்பைக் கொடுத்த அருமையான பார்மட். அதுதான் “ ஸ்பெஷல் குவிஸ்” பார்மட்.

ஒவ்வொரு குவிஸ் நிகழ்ச்சியும் ஒரு “தனித் தலைப்பில் “ நடத்தப்படும். அந்தத் தலைப்பிலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். இதுவரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற அத்தனை வினா சுற்றுக்களும் அதிலே இடம்பெறும். தேவைக்கு ஏற்ப சுற்றுக்கள் தன்மை மாறுபடும். எந்தத் தனித் தலைப்பில் குவிஸ் நடத்தப் படுகிறதோ அந்தத் துறை வல்லுனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அவர் மூலம் சில விடைகளுக்கான விளக்கங்களும் நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்படும்.

துறை வல்லுனர்களை அழைப்பதில் சிரமங்கள் இருக்கும் என்றாலும், அதிலே பல பிளஸ் பாயிண்டுகள் இருந்தன. நிச்சயம் அவர் ஒரு வி ஐ பி என்பதால் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்; கேள்வி பதில் தயாரிப்பில் அவர்களுடைய அனுபவமும், அறிவும் எனக்குப் பயன்படும். ஒரு வல்லுநரே அருகில் அமர்ந்திருப்பதால் விடைகள் விளக்கப்படும் போது அதன் உண்மைத்தன்மை அதிகரிக்கும். வல்லுனரின் நிறைவுரையின் போது , அவர் சார்ந்த துறையின் முக்கியமான கருத்துக்களை அவரால் பகிர்ந்துகொள்ள இயலும். அது நிகழ்ச்சியின் கண்டெண்டை மேலும் வளப்படுத்தும்.

மறுபடியும் குறிப்பிட விழைகிறேன். இந்த மாதிரி குவிஸ் எல்லாம் தற்போது புதுமையே இல்லை. ஆனால் 1980 களில் முதன்முறையாகத் தமிழ் வினாடி வினா நிகழ்ச்சியில், குறிப்பாக சென்னை தொலைக்காட்சியில் இதையெல்லாம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த போது அது ஒரு புதுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பலபேர் எனக்குத் தனியாகவும், தொலைக்காட்சி “எதிரொலி “ நிகழ்ச்சிக்குக்  கடிதங்கள் எழுதியும்  பாராட்டியுள்ளனர் . அத்துணை பார்வையாளர்களையும் ,இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

ஏறத்தாழ இரண்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலே மாதத்திற்கு இரண்டு நிகழ்ச்சிகளாக “ஸ்பெஷல்” குவிஸ் தொடர்ந்ததற்கு திரு. அஸ்வினிகுமார் அவர்களும் ஒரு முக்கிய காரணம் ஆகும். எழுத்தாளரும் வங்க நாவல்களை தமிழில் தந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆகிய த.நா.குமாரசுவாமி அவர்களின் குமாரர் அவர்.  எங்கள் இருவருடைய “வேவ் லெங்த்தும்” ஒரே மாதிரியாக அமைந்து இருந்தது எங்கள் பணியை இனிமையாக்கியது; புதுமை செய்யத் தூண்டியது. ஓர் உதாரணம் தருகிறேன்.

பொதுவாக குவிஸ் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம்தான் ஒதுக்கியிருப்பார்கள்; ஆனால் அஸ்வினிகுமார் தலையிட்டு,  நிலைய இயக்குனரிடம் ஸ்பெஷல் குவிஸ் நிகழ்ச்சியின் கூறுகளையெல்லாம் எடுத்துக் கூறி, எங்கள் நிகழ்ச்சிக்கு முக்கால் மணி நேரம் வாங்கிக் கொடுத்தார். அதாவது பதினைந்து நிமிடங்கள் அதிகம். அன்றைக்கு இருந்த ஒரே மீடியா தொலைக்காட்சிதான். அதில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தரவேண்டும். இருக்கின்ற அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் பதில்சொல்ல வேண்டும். எனவே அது பெரிய விஷயம். அதை கன்வின்சிங் ஆக எடுத்துச் சொல்லி பர்மிஷன் வாங்கியது சாதாரணம் அல்ல.

முதல் ஸ்பெஷல் குவிஸ் ரெக்கார்டிங் நடக்கிறது. ஆர்வம் அதிகம் என்பதால் நிறைய கேள்விகள், சுவையான சுற்றுக்கள் இருந்தன. ஆரம்பமே அசத்தல். பங்கேற்பாளர்களோடு வினா விடை சுற்றுக்களில் நடக்கும் உரையாடல்கள் , விடை விளக்கங்கள் இவையெல்லாம் ஸ்கிரிப்டில் எழுதமுடியாது. சில விளக்கங்களை வல்லுனர் தந்தார். சுறுசுறுப்பாக நடக்கும் நிகழ்ச்சியில் நேரம் பார்க்க மறந்துவிட்டேன். நாற்பது நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தது. இன்னும் மூன்று சுற்றுக்கள் மீதம் இருந்தன. என்ன செய்வது ? நிகழ்ச்சி பதிவாகிக் கொண்டிருக்கின்றது. பாதியில் நிறுத்தமுடியாது.  

கண்ட்ரோல் ரூமில் இருந்தபடியே அஸ்வின்குமார் உடனே முடிவெடுத்து, “தொடருங்கள்” என எனக்கு சைகை கொடுத்தார். எந்தத் தொய்வும் இல்லாமல் நான் நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். ஒண்ணரை மணி நேரம் நிகழ்ச்சி தொடர்ந்தது. ரெகார்டிங் முடிந்த பிறகு என்ன செய்வது என யோசித்தோம். பகுதி ஒன்று இரண்டு என ஒளிபரப்பிவிடலாம் என அஸ்வின் உறுதியளித்தார். இரண்டு பகுதிகளாக வெளிவந்த குவிஸ் எனதுதான் முதல் என்று நினைக்கிறேன். இதெல்லாம் இன்று தனியார் ஊடகங்களில் சாத்தியம். ஆனால் அன்று அரசு நிறுவனத்தில் பிராப்பர் பெர்மிஷன் இல்லாமல் உடனடியாக ரிஸ்க் எடுத்து உடனே ஒரு நிகழ்ச்சியின் கால அளவை மாற்றிவிட முடியாது. அந்த ரிஸ்க் அஸ்வினிக்கு பாராட்டையே வாங்கிக் கொடுத்தது. நிகழ்ச்சியைத் தயாரித்து நடத்திய குவிஸ் மாஸ்டர் என்ற வகையில் அதில் எனக்கும் பங்கு உண்டு என்ற நினைப்பு இன்றும் என் நெஞ்சைக் குளிரவிக்கின்றது.

சுவையான சில ஸ்பெஷல் குவிஸ் விவரங்களைத் தர விழைக்கின்றேன். இதில் பலதுறைகள் பற்றி எடுத்துக்கொண்டோம். இலக்கியம், வரலாறு, கலை ,அறிவியல், என்று பொதுத் தலைப்பாக இல்லாமல் அவை அவ்வத்  துறைகளுள் உள்ள குறிப்பிட்ட பகுதிகளாக அமைந்தன. அனைவரும் அறியாத புதிய தலைப்புகளை எடுத்துக் கொண்டோம். அதில் ஒன்றுதான் “ தடய அறிவியல் துறை (Forensic Science ). இது காவல் துறையின் முக்கியமான கிளை. இதன் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தக் குற்றத்தையும் சான்றுகளோடு நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. அதிகம் பலர் அறியாதிருந்தாலும் இது பற்றி அறிய பலர் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள் என நான் நம்பினேன். அதுமட்டுமல்ல, என்னிடம் படித்த மாணவர் ஒருவர் அத்துறையில் ஆய்வு மாணவராக இருந்தார்.

அன்றைய தடயவியல் துறை இயக்குனர் டாக்டர் சந்திரசேகரன் அவர்கள் மிகப் பிரபலமானவர்; நன்றாகப் பேசக் கூடியவர். திரு. எம். ஜி. ஆர். அவர்களை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட கேஸில் நீதிமன்றத்தில் அது பற்றி சான்றுகளோடு சாட்சியம் கொடுத்தவர். அவரை சந்தித்துப் பேசியபோது பல தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். அதன் அடிப்படையில் நான் பல சுவையான கேள்விகளையும் தயார் செய்தேன்.

பொதுக் கேள்விச் சுற்று, ஆடியோ வீடியோ, புதிர்க் கட்டங்கள் என்பவை தாண்டிப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினேன். ஒரு குற்றம் நடந்த சூழலை நடிகர்களைக் கொண்டு நடிக்க வைத்து அந்த வீடியோ கட்டிலிருந்து சில கேள்விகள் கேட்கலாம் என்று தீர்மானித்தேன். இதுவும் அன்று மிகப் புதிய அணுகுமுறைதான். இதற்கான நடிகர்கள் பட்ஜெட் ஆகியவற்றை அஸ்வினி ஓகே செய்து பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

ஸ்பெஷல் குவிஸ் ஒவ்வொன்றுக்கும் அந்தந்த சப்ஜெக்ட் ஐப் பொறுத்து தலைப்பு வைப்பது வழக்கம். இதற்கு “கையும் களவும்” என்ற தலைப்பைக் கொடுத்தேன்.

பங்கு கொள்ளும் அணிகளுக்கு தலைப்பு தொடர்பான பெயர்களே சூட்டுவேன். அந்த வகையில் பங்கு பெறும் நான்கு அணிகளுக்கு என்ன பெயர் அளிப்பது ? இது “துப்பறியும் துறை” என்பதால் “ கானன் டாயில் , ஸ்டேன்லி கார்டெனர், தேவன், தமிழ்வாணன் “ என்று அணிகளுக்குப் பெயர் கொடுத்தேன். முதல் சுற்றுக் கேள்வி அணிகளின் பெயர்கள் பற்றியதாகவே இருந்தது.

“இவர்கள் படைத்த துப்பறியும் கதாபாத்திரங்களின் பெயர்கள் என்ன ?” என்பது கேள்வி. ஷேர்லக்  ஹோம்ஸ் , பெரி மேஸன் , துப்பறியும் சாம்பு, சங்கர் லால் ஆகியவை சரியான விடைகள்.

தமிழ் மீது மிகவும் பற்றுக் கொண்ட தமிழ்வாணன் “சங்கர்லால் “ என்ற வட இந்தியப் பெயரை ஏன் வைத்தார் என்றும் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அணியினர் யாரும் பதில் சொல்லவில்லை. பார்வையாளர் ஒருவர் சரியான பதிலைச் சொன்னார்.

“ தமிழ்வாணனை, ஆங்கில நாவல்களில் வருவது போல துப்பறியும் கதாபாத்திரம் ஒன்றைப் படைத்து நாவல்கள் எழுதும்படி  ஒரு வாசகர் கேட்டுக்கொண்டு கடிதம் எழுதினரம். நல்ல ஐடியவாக இருக்கிறதே என்று எழுதத் தொடங்கிய தமிழ்வாணன், துப்பறியும் கதாபாத்திரத்திற்கு அந்த வாசகர் பெயரையே வைத்துவிட்டார். ஆம்! அந்த வாசகர் பெயர் “சங்கர் லால்”

தூக்கில்தான் தொங்கி ஒருவர் இறந்தார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்விக்கு பல விடைகள் வந்தன. தூக்குக் கயிறு , ஸ்டூல் , கீழே விழுந்த நிலை , நாக்கு வெளியே தொங்கும் என்றெல்லாம் சொன்னார்கள். தாடைக்கும் கழுத்துக்கும் அடியே உள்ள தழும்புதான் முக்கியத் தடயம் என்றார் பேராசிரியர்.

இறந்த உடலின் உள் பாகங்களை அறுத்து எடுத்து  பரிசோதனை செய்ய எந்த திரவத்தில் அவற்றைப் போட்டு வைப்பார்கள் என்ற கேள்விக்கு பலர் “போர்மலின்” என்ற வேதியல் பொருளைச் சொன்னார்கள். அடர்த்தியான சாதாரண உப்புக் கரைசல் என்பதே சரியான விடை. இறந்தவர் உடலில் ஆல்கஹால் இருந்ததா எனக் கண்டு பிடிக்க இதுதான் முறை” என்று பேராசிரியர் விளக்கியதும் அனைவரும் அதிசயித்தனர்.

பிரேத பரிசோதனையில் பொதுவாக இறந்தவரின் பற்களைக் கொண்டு வயதைத் தீர்மானம் செய்வார்கள். அதுவும் சிதைந்த நிலையில் இருந்தால் மண்டையோட்டில் உள்ள வரிகளைக் கொண்டு வயதை நிர்ணயம் செய்யும் புதிய முறையை ஆய்வின் மூலம் அறிமுகம் செய்து உலகப் புகழ் பெற்றவர்  அன்றைய விருந்தினராக வந்த பேராசிரியர் சந்திரசேகர்.

“மண்டையோட்டை கொண்டு ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியுமா “ என்ற கேள்விக்கு “முடியும் “ என்றாள் ஒரு பெண். எப்படி என்று கேட்டதற்கு “ அது கொஞ்சம் பெரியதாக இருக்கும் காரணம் பெண்களுக்கு மூளை அதிகம்” என்றாள். பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பலை .

“அதனால்தான் அவர்களுக்கு தலைக்கனம் அதிகம்” என்று இடைபுகுந்தான்  ஒரு மாணவன். ஆண்கள் இப்போது சிரித்தனர்.

“அதெல்லாம் இல்லை. பூ வைத்துக் கொள்வதால் அவர்கள் தலை கனம் “என்றேன்.

“சார்! காதுல பூ வைக்காதீங்க “ என்று பார்வையாளர் பக்கம் இருந்து குரல் வந்தது,

சரி! என்று நான் பேராசிரியர் பக்கம் திரும்பினேன். “ மண்டையோட்டை  வைத்து எதையும் சொல்ல முடியாது. விலா எலும்புகளை வைத்து சொல்லலாம். விலா எலும்புகள் பெண்களுக்கு ஆண்களைவிட பெரியதாக இருக்கும். குழந்தை சுமப்பதற்கான இயற்கை அது “ என அவர் இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவை போன்ற பல உரையாடல்கள் ! இன்னும் சிலவற்றை அடுத்த இதழிலும் தொடர்வேன்.

 

                      

தீபாவளி ஆர்டர்-எஸ்.எல். நாணு

 

ருசியியல் சில குறிப்புகள் 14: திவ்யமான திருப்பதி லட்டு! | ருசியியல் சில  குறிப்புகள் 14: திவ்யமான திருப்பதி லட்டு! - hindutamil.in
”அண்ணா.. ஆயிரம் லட்டுக்கு ஆர்டர் வந்திருக்கு. அதுவும் எலுமிச்சை சைஸ் லட்டு இல்லை.. கிரிக்கெட் பந்து சைஸ் லட்டு.”

சீனுவோட முகத்துலயும் குரல்லயும் சந்தோஷம் டிஸ்கோ ஆடித்து.

“யாருடா இவ்வளவு பெரிய ஆர்டர் கொடுத்திருக்கா?”

வாணலில பொன் நிறத்துல உப்பிண்டு வந்த பூந்தியை ஜாலர்ல வாரிண்டே கேட்டார் வரதன். அவர் தான் “அன்னபூரணி கேட்டரிங்”க்கு சொந்தக்காரர். மனுஷர் மாநிறத்துல அஞ்சடி பன்னெண்டு அங்குலம்.. சரி சரி.. ஆறடிக்கு ஆஜானுபாகுவா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவர் மாதிரி இருப்பார். மீசை தான் மிஸ்ஸிங். நெத்தில எப்பவும் பெயிண்ட் அடிச்ச மாதிரி பளிச்சுன்னு நாமம். பத்து நாளா சவரம் பார்க்காத முகம். உதட்டுல வெத்தலையும் புகையிலையும் கூட்டணி அமைச்சு ஏற்படுத்தின சுவடு.. கழுத்துல ஸ்படிக மாலை. தோளுல கொஞ்சம் நிறம் மக்கிப் போன சிவப்பு காசித்துண்டு. இடுப்புல அங்கங்க கரை படிஞ்ச வேஷ்டி..

திருப்பதிக்கு அடுத்தபடியா லட்டுன்னாலே வரதன் லட்டு தான். அவ்வளவு பிரசித்தம். சொல்லப்போனா வெளிநாட்டுலேர்ந்து வரவாலாம் கூட ஆர்டர் கொடுத்து வரதன் லட்டுவை வாங்கிண்டு போவா.

“டிரான்ஸ் சிஸ்டம்ஸ்”னு ஒரு கம்பூட்டர் கம்பெனி.. அதுல வேலை பார்க்கறவாளுக்கெல்லாம் தீபாவளி கிப்டா லட்டு டப்பா தரப் போறாளாம். என் சிநேகிதன் கோவிந்து அந்த கம்பெனில தான் வேலை பார்க்கறான். அவன் மூலமா தான் இந்த ஆர்டர்.. நவம்பர் பன்னெண்டாம் தேதி தீபாவளியா? நாம எட்டாம் தேதியே அறுநூறு லட்டு சப்ளை பண்ணிரணும். வண்டி அனுப்பிருவா. லட்டு சப்ளை பண்ணின உடனே பணம் செட்டில் பண்ணிருவா?”

வரதன் யோசிச்சார்.

“அறுநூறு லட்டுன்னா.. அதுவும் கிரிக்கெட் பால் சைசுக்கு லட்டுன்னா.. ம்.. ஒரு லட்டுவுக்கு அம்பது ரூபான்னு வெச்சாலுமே கிட்டத்தட்ட அம்பதாயிரம் ரூபா. கம்பெனிங்கறதுனால அறுபது ரூபான்னு கூடச் சொல்லலாம், எப்படியும் செலவெல்லாம் போக கையில கணிசமவே நிக்கும்.”

“சரிடா.. ஆறாம் தேதி காலம்பர வேலையை ஆரம்பிச்சுரலாம். நம்ம ரங்கன், கௌசிகன் அப்புறம் வைத்தா.. இவாகிட்டச் சொல்லி வெச்சுரு. இவா வந்தாத் தான் சுறுசுறுப்பா வேலை நடக்கும். பரத்வாஜை பக்கத்துலயே சேர்க்காதே. அவன் வந்தா தானும் வேலை பண்ண மாட்டான். மத்தவாளையும் வேலை பண்ண விடாம ஏதாவது தொண தொணன்னு பேசிண்டே இருப்பான். அதோட துக்கிரி வேற.. மனசு சஞ்சலப்படும் படியா எதையாவது அபசகுனமா சொல்லி வெப்பான்”

“சரிண்ணா”

“நாடார் கடைல சாமான் லிஸ்ட் கொடுத்துரு. பேக்கிங்குக்கு பிளாஸ்டிக் டப்பா அவா தராளா இல்லை நாம தான் வாங்கிக்கணுமா?”

“நாமதாண்ணா.. அந்த செலவையும் லட்டு ரேட்டுல சேர்த்துக்கச் சொன்னான் கோவிந்து. ஒரு டப்பால ரெண்டு லட்டு.. ஐநூறு டப்பா தேவைப்படும்”

“அப்படியா? சரி அளவு பார்த்து இன்னிக்கே ராயல் ஃபேன்ஸில ஆர்டர் கொடுத்துரு. பாய் இஷ்டத்துக்கு ரேட் போட்டுரப் போறார்.. நான் சொன்னேன்னு பார்த்துப் போடச் சொல்லு. லட்டுவை அப்படியே பிளாஸ்டிக் டப்பாவுல வெக்கக் கூடாது, அடில பட்டர் பேப்பர் வேணும். அதுவும் பாய் கடைலயே கிடைக்கும்.”

“சரிண்ணா”

“ம்… அப்புறம் லட்டு போட்ட டப்பாக்களைக் கொண்டு போக அட்டைப்பெட்டி வேணும்.. ஒரு அட்டைப்பெட்டில பத்து டப்பாதான் வெக்கணும். அதனால நூறு.. சரி நூத்தி இருபது அட்டைப்பெட்டியா ஸ்டேஷனரி பாலுகிட்டச் சொல்லிரு.”

“சொல்லிடறேன்”

“இதப்பாரு சீனு.. இது பெரிய ஆர்டர்.. ஒழுங்காப் பண்ணணி முடிக்கணும்.. இல்லைன்னா இத்தனை வருஷமா நான் சம்பாதிச்ச பேர் ரிப்பேர் ஆயிரும்”

வரதனோட பார்யாள் வைதேகி அங்க வந்து..

“எட்டாம் தேதி காஞ்சிபுரத்துக்கு போறோம் தானே?”

ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாலயும் காஞ்சிபுரம் ராமானுஜன் ஆதரவில்லோர் இல்லத்துக்குப் போய் அங்க இருக்கற குழந்தைகளுக்கு  லட்டுவும் கொஞ்சம் பணமும் கொடுத்துட்டு வரது வரதனோட வழக்கம். பல வருஷங்களுக்கு முன்னால ஒரு தடவை ஜீயர் சுமாமியை தரிசனம் பண்ணின போது அவர் போட்ட உத்தரவு..  அதை இத்தனை வருஷமா வரதன் விடாம கடைபிடிச்சிண்டு வரார். இந்த வருஷம் எட்டாம் தேதி காஞ்சிபுரம் போறதா தீர்மானம் பண்ணியிருந்தார். அதுக்கான ஏற்பாடுகள் தான் நடந்துண்டிருந்தது. அங்க இருக்கற குழந்தைகளுக்காக எலுமிச்சை சைசுல கிட்டத்தட்ட ஐநூறு லட்டு கொண்டு போவார். .

வரதன் யோசிச்சார்.

“எட்டாம் தேதி ஆயிரம் லட்டு நல்லபடியா டெலிவரி பண்ணணும். அதனால கண்டிப்பா காஞ்சிபுரம் போக முடியாது.”

உடனே வைதேகியைப் பார்த்து..

“எட்டாம் தேதி வேண்டாம்.. இங்க வேலை இருக்கு.. பத்தாம் தேதி போகலாம். அப்புறம் அந்த பம்பாய்காராளுக்கும் டெல்லிகாராளுக்கும் இன்வாய்ஸ் மெயில் பண்ணிட்டியா?”

“அனுப்பியாச்சு”

வைதேகி தான் அன்னபூரணி கேடரிங்கோட பில்லிங், அக்கௌண்டிங், கரெஸ்பாண்டென்ஸ் எல்லாம் பார்த்துக்கறா. அதோட அவளுக்குக் கொஞ்சம் கம்பூட்டர் விஷயங்கள் தெரியுங்கறதுனால அப்பப்ப கூகுள்ள புதுசு புதுசா எதையாவது தேடிண்டே இருப்பா.

வரதன் சொன்ன மாதிரியே சீனு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணினான். ஆறாம் தேதி காலம்பர வேலை ஆரம்பிச்சது. ஒரு பக்கம் வரதன் பூந்தி பண்ன எண்ணைச் சட்டில உட்கார பக்கத்துலயே ரங்கன் பதம் பார்த்து சக்கரைப் பாகு தயார் பண்ண, கௌசிகனும், வைத்தாவும் விடாம லட்டு பிடிச்சு ஏழாம் தேதி பாதி ராத்திரிக்குள்ள ஆயிரம் லட்டு ரெடி. லட்டு பாகு சூடு ஆறினதும் சீனுவும் வைதேகியும் ரெண்டு ரெண்டு லட்டுவா பிஸாஸ்டிக் டப்பாவுல போட்டு பேக் பண்ண..

எட்டாம் தேதி காலம்பர பத்து மணிக்கு மொத்த பார்சலும் ரெடி.

“டேய் சீனு.. டெலிவரிக்கு அவா வேன் அனுப்பறாளோல்யோ?”

வரதன் ரொம்பவே சோர்வா கேட்டார்.

“ஆமாண்ணா.. கோவிந்து சொல்லியிருக்கானே.. இருங்கோ.. அவனைக் கூப்பிட்டு பார்சல் ரெடின்னு சொல்றேன்”

சீனு திரும்பத் திரும்ப முயற்சி பண்ணியும் கோவிந்து காலை எடுக்கலை.

“என்னடா?”

“இல்லைண்ணா..  மீட்டிங்குல இருக்கான்னு நினைக்கறேன்.. அதான் எடுக்கலை. இருங்கோ மறுபடியும் முயற்சி பண்ணிப் பார்க்கறேன்”

இப்போ கோவிந்துவோட போன் ஸ்விட்ச்ட் ஆப்..

சீனுவுக்குக் கொஞ்சம் கவலை பிடிச்சுது..

ஏதாவது பிரச்சனையா?

மறுபடியும் நம்பரைத் தட்டினான்.

உகும்..

“அண்ணா,, என்னன்னு தெரியலை.. போன் கிடைக்கலை. அவா ஆபீஸ் திருவான்மியூர்ல தான் இருக்கு.. நான் வேணா போய் பார்த்துட்டு வந்துடறேன்”

சீனு கிளம்பிண்டிருக்கும் போதே பரத்வாஜ் அவசரமா வந்தான்.

“அண்ணா.. நீங்க ”டிரான்ஸ் சிஸ்டம்ஸ்” அப்படிங்கற கம்பெனிக்குத் தானே என்னைக் சேர்த்துக்காம லட்டு ஆர்டர் எடுத்திருக்கேள்”

“ஆமாம்.. இப்ப என்ன அதுக்கு?”

வரதன் கொஞ்சம் கடுப்போட தான் கேட்டார். அவர் மனசுல என்ன ஏதுன்னு தெரியாத குழப்பம்.

”அவ்வளவு தான்.. போச்சு.. கோவிந்தா கோவிந்தா”

”துக்கிரி துக்கிரி.. என்னடா சொல்றே?”

“அந்தக் கம்பெனி ஒரு அரசியல்வாதியோடதாம்.. அங்க எக்கச்சக்கமா கருப்புப் பணம் பதுங்கியிருக்காம். இன்கம்டாக்ஸ் ரெய்ட் நடக்கறது. வெளிநாட்டு டீலிங்லாம் இருக்கறதுனால ஈ.டி. ரெய்டும் வரலாங்கறா.. அநேகமா கம்பெனியை இப்போதைக்கு திறக்க மாட்டா.. உங்க ஆர்டர் அவ்வளவு தான்.. பணால்.. ஆர்டர் தான் பணால் ஆயாச்சே.. ரெண்டு லட்டு கொடுங்கோ.. வந்தது தான் வந்தேன்.. நானாவது லட்டு சாப்பிட்டுப் போறேன்”

பரத்வாஜ் சொன்னதைக் கேட்ட உடனே வரதன் சீனு எல்லாருக்கும் அதிர்ச்சி.

சீனு புலம்பவே ஆரம்பிச்சுட்டான்.

“ஐயையோ.. அண்ணா இப்போ என்ன பண்ணறது? அதுவும் கிரிக்கெட் பால் சைஸ் லட்டு.. வேற யாரும் வாங்க மாட்டாளே”

வரதனும் கொஞ்சம் கவலையோட யோசிச்சார்.

என்ன ஏதுன்னு விசாரிக்காம சீனு சொன்னதை நம்பி இவ்வளவு பெரிய ஆர்டர் எடுத்தது தப்போன்னு அவருக்கு தோணித்து.

மேல என்ன பண்ணணும்னு சத்தியமா அவருக்குப் புரியலை,,

ஆயிரம் லட்டுவை என்ன பண்ண?

அப்ப அங்க வந்த வைதேகி..

“தாம்பரத்துல ஆஸ்திக சமாஜத்துல ஏதோ பூஜை நடக்கற்தாம். ஏற்கனவே ஏற்பாடு பண்ணியிருந்த ஆளு கடைசி நிமிஷத்துல காலை வாரி விட்டதுனால உடனடியா யாரவது ஐநூறு லட்டு சப்ளை பண்ண முடியுமான்னு இன்ஸ்டாவுல கேட்டிருந்தா.. நல்ல ரேட் கொடுக்கத் தயாரா இருக்கா.. உடனே அவாளைக் கூப்பிட்டுப் பேசிட்டேன். ஒரு பாக்ஸ் லட்டு பேக்கிங்கோட நூத்தி முப்பது ரூபா. இப்ப வண்டி வந்துரும்.. தயாரா இருங்கோ”

அதுவரைக்கும் அழுது வழிஞ்சிண்டிருந்தவா முகத்துல வைதேகி சொன்னதைக் கேட்ட உடனே மத்தாப்பு மாதிரி கொஞ்சம் பிரகாசம்.

“நிஜமாவா? டேய் அம்பது அட்டைப்பெட்டியை தனியா எடுத்து வைடா சீனு.. வண்டி வந்த உடனே ஏத்திடலாம்”

சீனுவுக்கு இன்னும் கவலை தீரலை.

“சரிண்ணா.. ஐநூறு லட்டு போயாச்சு.. மீதி ஐநூறு”

வரதன் நிதானமா சொன்னார்.

“எல்லாம் அந்த ராமானுஜன் சித்தம்டா”

“என்னண்ணா சொல்றேள்? ராமானுஜன் சித்தமா?”

சீனு புரியாம குழம்பினான்.

வரதன் வைதேகியைப் பார்த்து..

“ஏற்கனவே சொன்ன மாதிரி நாம காஞ்சிபுரத்துக்கு  இன்னிக்கேப் போகலாம்.. காருக்குச் சொல்லிரு. இந்த வருஷம் அங்க குழந்தைகளுக்கு எலுமிச்சை சைஸ் லட்டுக்கு பதிலா முழு லட்டுவே கொடுக்கணம்னு ராமானுஜன் தீர்மானம் பண்ணி ஏற்பாடு பண்ணிட்டார். உண்மைல இந்த வருஷம் ரொம்பவே சந்தோஷமான தீபாவளி தான்”

வரதன் முகத்துல திருப்தி தெரிஞ்சுது.

 

 

 

பரதேசி (வெளி நாட்டுக்காரன்) – ரேவதி ராமச்சந்திரன்

கூட்டுக் குடும்பம்!- Dinamani

      (மமதா காலியா 1940 வருடம் நவம்பர் 2 ந் தேதியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் எம் ஏ பட்டம் பெற்றவர். எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் சிறந்த கவி. ‘துக்கம் சுகம்’ என்ற நாவலுக்காக 2017ல் இந்தியாவின் சிறந்த இலக்கிய பரிசான ‘வியாச சம்மானை’ பெற்றுள்ளார். இவரது கணவரும் புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர்).

இந்தக் கதை ஹிந்தியில் மமதா காலியா அவர்களால் எழுதப்பட்ட ‘பத்து கதைகள்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.

பாவனா தனது புகுந்த வீட்டைப் பற்றிச் சொல்வது போல் கதை அமைந்துள்ளது. 

 எங்களது குடும்பம் விசித்திரமானது. என் கணவரும், குடும்பத்துடன் அவரது மூத்த சகோதரரும் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கும், இந்தியாவில் இருக்கும் எங்களைப் பார்ப்பதற்கும் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கம் அதிகமாகும்பொழுது நீண்ட நேரம் போனில் பேசுகிறார்கள். அன்பு நிறைந்த கார்டு அனுப்புகிறார்கள். அடுத்த வருஷம் ஒன்று சேர்வதற்கு முனைகிறார்கள்.

முதலில் எல்லோரும் சேர்ந்து தான் இருந்தோம், மாமனார் மாமியாரும் கூட இருந்தனர். லக்பத் நகரில் உள்ள அந்தப் பெரிய பங்களாவும் எங்கள் எல்லோருக்குமாக மிகவும் சிறிதாகத் தோன்றியது. என் கணவரது இளைய சகோதரர், சகோதரிக்குக் கல்யாணங்கள் நடந்தன. பெரிய அண்ணாவும், என் கணவரும் கேந்திரிய வித்யாலத்தில் ஆசிரியர்களாகவும், இளைய சகோதரி பங்கஜ் பயிற்சி காலேஜிலும், இளைய சகோதரர் நீரத் கபூர்தலா கல்லூரியிலும் ஆசிரியராக வேலை பார்த்து வந்தனர்.. அண்ணா செய்தித்தாள் ஊன்றிப் படிப்பார். என் கணவரும், பங்கஜும் செய்திகள் பக்கமே செல்ல மாட்டார்கள். நீரத் செய்திகளைப் படிப்பதை விட இலக்கியத்தில் ஆர்வமாய் இருந்தார்.

 ஒரு நாள் அண்ணா கனடா செல்வதற்காக செய்தித்தாளில் ஒரு விளம்பரம் பார்த்தார். கனடா பள்ளிக்கூடங்களில் அதிக இருப்பிடங்கள் காலியாக இருந்தன. அண்ணாவும் அண்ணியும் நான்கு விண்ணப்பப்  படிவங்களைக் கொண்டு வந்தனர். ‘மூன்று சகோதரர்களும் சென்று விட்டால் மற்றவர்கள் தனியாக இங்கே எப்படி ஜீவனம் செய்வார்கள்?’ என்று கேட்டதற்கு அண்ணா சொன்னார் ‘பங்கஜ் இருக்கிறாள், அவள் பையன் அமர்ஜித் இருக்கிறான், மற்ற சொந்தங்கள் எல்லாம் அருகிலேயே  இருக்கின்றனர். நாங்கள் ஒரு முறை அங்கே சென்று விட்டால் மற்ற இருவரையும் கூட்டிக் கொள்வோம் எல்லோருக்கும் அங்கே வேலை வாங்கித் தரப்படும்’ என்று அண்ணா சமாதானப்படுத்தினார். ஆனால் வேலையில் இருந்து திரும்பி வந்த நீரத் கனடா செல்வதற்கு மறுத்துவிட்டார். ‘இங்கே கிடைப்பதை விட 40 மடங்கு அதிக சம்பளம் அங்கே கிடைக்கும் நம்மளுடைய வறுமையும் நீங்கும்’ என்று அண்ணா சொன்னார். அதற்கு ‘நீங்கள் சென்று வாருங்கள் நான் வரமாட்டேன்’ என்று திடமாகக் கூறிவிட்டார் நீரத். இப்படியாக என் கணவரும், குழந்தைகளுடன் அண்ணா மன்னியும் சென்று விட்டனர். நாங்களும் சிறிது நாட்கள் பஞ்சாபில் இருந்து விட்டு பிறகு நீரத்திற்கு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு குடி பெயர்ந்து விட்டோம். கனடாவில் அண்ணாவின் குழந்தைகளும் நன்றாகப் படித்து வேலை செய்யத் தொடங்கி விட்டனர்.

ஒரு நாள் மன்னி போன் செய்து ‘பாவனா எங்களுடைய நல்ல நண்பர் ரிச்சர்ட் இந்தியா வருகிறார். அவர் ஒரு டாக்டர். ஒரு வாரம் இராஜஸ்தான் சுற்றி விட்டு அலகாபாத் வருகிறார்.. நமது வீட்டில் தான் தங்குவார். கொசு, பல்லி இல்லாமல் வீட்டைச் சுத்தப்படுத்தி விடு. உங்க அண்ணாவிற்கு லீவு கிடைக்காததால் அவர் கூட வர முடியவில்லை. நீ அவரை நன்றாகப்  பார்த்துக்கொள். அவருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடு’ என்றாள். ஃபோனை வைத்து விட்டு வீட்டை ஒரு நோட்டம் விட்டேன். வீடு மிருகக்காட்சி சாலை மாதிரி இருந்தது.

குழந்தைகளைத் தங்களது அறையைச் சுத்தப்படுத்தச் சொல்லிவிட்டு நான் வேறு ஓர் அறையை ஒழுங்குபடுத்தினேன். அறையின் சுவற்றில் அழகான போட்டோக்களை மாற்றிவிட்டு, புதிய துண்டு, பாத்ரூம் செருப்பு, புதிய தண்ணீர் சொம்பு, சின்ன பிரிட்ஜ் என இவைகள் அனைத்தையும் அந்த அறையில் வைத்தேன். இதைப் பார்த்த எல்லோரும் இந்த அறையை வெளிநாட்டு அறை மாதிரி அழகாக மாற்றி விட்டாயே என்றனர். ஒரு சிறிய மியூசிக் சிஸ்டமும் வைத்தேன்.

 நீரத்துடன் ஆறடி உயரம் உள்ள ரிச்சர்ட் பார்க்கர் உள்ளே வந்தவுடன் அறையே நிரம்பி விட்டது மாதிரி இருந்தது. உள்ளே வந்து எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தார். ரொட்டி துண்டுகளை வாட்டி டீ போட்டு கொடுத்தேன். வெங்காய பக்கோடா செய்து கொடுத்தேன். பக்கோடா மிகவும் சூடா இருந்தது. ரிச்சர்ட் எல்லாவற்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார். பிறகு சாயந்திரம் நதிக் கரையோரம் அவரை அழைத்துச் சென்றோம். அவர் அங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளுடைய சரித்திரத்தையும் தெரிந்து கொள்ள முயன்றார். இந்த அணையை யார் கட்டினது, எந்த வருடம் கட்டப்பட்டது, எந்தக் கடவுளுடைய சிலைகள் இவை, இத்தனைக் கடவுளை நீங்கள் வணங்குகிறீர்களே அதனால் ஏதும் குழப்பம் ஏற்படாதா, இந்த படகோட்டி எவ்வளவு நாட்களாக படகு  ஓட்டுகிறார், அவருக்கு வயது என்ன, இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். எங்களால்  சிலவற்றிற்கு பதில் கூற முடிந்தது, சிலவற்றிற்கு இல்லை. சுற்றுப்புறத்தைப் பற்றி நாங்கள் பல விஷயங்களை அறியவில்லை என்று அப்போதுதான் எங்களுக்கேத் தெரிந்தது.

எங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அவருடைய உச்சரிப்பைப் புரிந்து கொள்ள சிறிது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் சிலவற்றை சைகையினால் புரிந்து கொண்டோம். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்தோம். ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம். இரவு மீண்டும் ரிச்சர்ட் டீ குடித்தார். எங்களிடமிருந்து ஹிந்தியில் சில வார்த்தைகளைக்  கற்றுக்கொண்டு அதைப் பேச முற்பட்டார். கஜராகஹோ செல்ல விருப்பப்படுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் சாரநாத் சென்று அங்கே ஞானமாகிய போதி மரத்தைப் பார்க்க விரும்பினார். புத்த மதத்தின் சில சாமான்களை வாங்க முற்பட்டார். தனியாகவே பயமில்லாமல் சாரநாத் சென்று வந்தார். ‘இந்தியாவில் தண்ணீர் தவிர வேறு எதிரி யாரும் கிடையாது என்று உங்கள் அண்ணா சொல்லி இருக்கிறார்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

 குழந்தைகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு சாப்பிட்டனர். நான் அவர்களைத் திட்டினேன். அதைக் கேட்டு ரிச்சர்ட் அவர்களை சமாதானப்படுத்தினார். பிறகு அவர்கள் சாப்பிடாமல் எழுந்தனர். அவர்களுடைய பாட்டி திரும்பவும் இருவரையும் அழைத்து ‘நான் உங்களுக்கு கதை சொல்லிக்கொண்டே ஊட்டுகிறேன்’ என்று சொன்னார். ‘இவர்கள் இருவரும் சிறுவயதாக இருந்தபோது பாட்டி கதை சொல்லி இவர்களுக்கு ஊட்டுவார்கள், பாட்டியிடம் சாப்பிடுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், இவர்கள் இப்பொழுது வளர்ந்து விட்டார்கள், இருந்தாலும் சாப்பிடும் சமயத்தில் இவர்கள் குழந்தைகளாகி விடுகிறார்கள்’ என்று நான் சொன்னேன். ‘யார் முதலில் சாப்பிட வருகிறாரோ அவர்களுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும்’ என்று சொன்னவுடன் இருவரும் பாட்டியின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நான் புதிய தட்டில் உணவு கொண்டு வந்தேன். பாட்டி குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொண்டே எல்லா ரொட்டிகளையும் சாப்பிட வைத்தார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இரண்டு தினங்களாக வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்தாலும் சமயத்தில் அவர்கள் அதைப் பின்பற்றுவது இல்லை. இதனால் ரிச்சர்ட் இங்கிருந்து சீக்கிரமாகவே சென்று விட்டால் நலமாக இருக்கும் என்று நினைத்தேன்.

உணவிற்குப் பிறகு டீ குடித்துக் கொண்டே ‘தாங்கள் விருந்தளித்த விதத்தை நான் எப்போதுமே மறக்க மாட்டேன். எனக்கு இங்கே உங்களுடன் சேர்ந்து இருப்பது மிகப் பிடிக்கிறது’. ‘ஆமாம் இங்கே நடக்கும் குழப்பங்களையும் குழந்தைகள் நடந்து கொண்ட விதத்தையும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்’ என்று நான் சொன்னேன். ‘நீங்கள் எதை குழப்பங்கள் என்று சொல்கிறீர்களோ அதற்காகத்தான் எனது நாடு ஏங்கிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தின் இந்த ஒற்றுமையான சூழல் இப்பொழுது எங்கே கிடைக்கிறது! என்னை எடுத்துக் கொள்ளுங்கள். 12 வருடங்களாக தனியாக இருக்கிறேன். அம்மா அப்பாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது. முதலில் நான் அம்மாவுடன் இருந்தேன். பிறகு அம்மா இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். நான் அப்பாவிடம் இருக்க ஆரம்பித்தேன். ஒரு வருடத்தில் அப்பாவும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். எனக்கு எங்கேயுமே இடமில்லை. எவ்வளவு தனிமையை உணறுகிறேன் என்று சொல்லட்டுமா! நான் அமெரிக்காவில் ஒரு தனி தீவு மாதிரி. உங்களுடைய அண்ணா சொல்லிக் கொண்டே இருப்பார்கள் தனிமையைப் பற்றி. வெளிநாட்டுக்கு வராமல் நீரத் சரியான முடிவெடுத்தான்’.

 ‘ரிச்சர்ட் எனக்கு அப்போதே தெரியும். உணவிற்காக யாரும் தன்னுடைய தேசத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எழுத படிக்க, வேலை செய்ய, நல்லது கெட்டது எதுவுமே எனக்கு இங்கேயே கிடைக்கட்டும். ஏழு கடல் தாண்டிய வெளி தேசத்தில் என்னுடைய வார்த்தைகளுக்கு இங்கு இருக்கும் வாசம் இருக்காது’ என்று நீரத் உடனே கூறினார். ‘நீ சரியாக சொல்கிறாய். உன்னுடைய இரண்டு அண்ணன்மார்களும் இப்பொழுது அதை உணர்ந்து விட்டனர். நீங்கள் இந்த வீட்டில் மூன்று தலைமுறைகளாக ஒற்றுமையாக உட்கார்ந்து உணவு உண்ணுகிறீர்கள். இந்த மாதிரி சந்தோஷம் இப்பொழுது கிடைப்பது துர்லபமாகிவிட்டது. குழந்தைகளின் அம்மா அப்பா தங்களது தாயார் முன் குழந்தைகள் ஆகி அவர்கள் சொல்வதைக் கேட்கும் இந்தக் காட்சியை நான் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மூன்று தலைமுறையாக ஒரே வானத்தின் கீழ் ஒரே அறையில் அன்போடு கலந்து இருக்கிறீகள். உங்களது குழந்தைகளுக்கு இந்த சாதாரண சூழ்நிலை பெரிய விஷயம். இதை எப்பொழுதுமே தொலைத்து விடாதீர்கள்’. ரிச்சர்ட் காலையில் பனாரஸ் சென்று விட்டார். ஆனால் எனக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு பாடத்தை கற்பித்து விட்டார். அந்த வெளிநாட்டுக்காரர் ஊர் சுற்ற மட்டும் வரவில்லை என மனத்தையும் தெளிய வைக்க வந்தார் என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

 

                                    ரேவதி ராமச்சந்திரன், சென்னை    

கூடு – எஸ். கௌரிசங்கர்

 

 

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளிசெல்வி உரக்கப் படிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்காதனால், தங்கம் சமையலறையை விட்டு வெளியே வந்து வெளியிலிருந்து படுக்கை அறையை எட்டிப் பார்த்தாள். ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த செல்வி, மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்து, “ம்… சாப்பிடு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஓசைப்படாமல் உள்ளே நுழைந்த தங்கம் அவள் பின்னால் வந்து பார்க்கையில் ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு காகம் ஒரு பிஸ்கெட் துண்டை வாயில் வைத்துக் கொண்டிருந்தது.  “ம்.. சீக்கிரம் சாப்பிடு. அப்புறம் அம்மா வந்துடுவாங்க” என்று சொல்லிவிட்டு செல்வி கையில் இருந்த பிஸ்கெட்டை மீண்டும் உடைத்து ஒரு துண்டை எடுத்து அந்தப் பறவையில் அருகில் வைத்தாள்.

“காக்காவுக்கு காலையிலே டிபன் ஆயிட்டிருக்கா?” என்ற குரல் கேட்டுத் திரும்பிய செல்வி அம்மாவைப் பார்த்து பயந்தாள். மற்றொரு குரல் கேட்ட அதிர்ச்சியில் காகம் சட்டென்று பறந்து போனது.

“உனக்கு திங்கறதுக்குக் கொடுத்தா அதை காக்காவுக்கு தானம் பண்ணிகிட்டு இருக்கியா?”

“இல்லைம்மா, அது வந்து முன்னாலே உட்கார்ந்து நான் திங்கிறதைப் பார்த்துகிட்டே  இருந்தது”

“ஓ… உனக்கு வயித்தை வலிக்கும்னு அதுக்கும் போட்டியா? இதான் பரிச்சைக்கு படிக்கிற லட்சணமா?”

“எல்லாம் படிச்சுட்டேம்மா.”

“சரி, அப்போ இஸ்கூலுக்குக் கிளம்பு”

செல்வி நாற்காலியிலிருந்து இறங்கி, வெளியே இருந்த புத்தங்களைப் பையில் சொருகி வைத்தாள். பிறகு அம்மா அருகில் வந்து, ”அம்மா! அந்த மரத்துக் கிளையிலே, அந்தக் காக்கா கூடு கட்டியிருக்கும்மா. அங்கே பாரேன்” என்று ஜன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரத்தை நோக்கி கையைக் காட்டினாள். மரத்தில் இரண்டு கிளைகள் பிரியும் ஒரு இடத்தில் ஒரு கூடு கண்ணில் தென்பட்டது. காகம் அதன் அருகில் அமர்ந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

”சரி, கூடு அங்கேயே இருக்கட்டும். நீ போய் குளிக்கிற வேலையைப் பாரு”

முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்வி வெளியே போனாள்.

செல்வி, மாரியப்பன், தங்கத்தின் ஒரே செல்ல மகள். அரசாங்க நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் நல்ல சுட்டி. அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பது மாரியப்பனின் ஒரே ஆசை. அதனால் பெண்ணின் மீது கொள்ளைப் பிரியம். அவளை இதுவரை எதற்கும் திட்டியதே இல்லை. கண்டிப்பதெல்லாம் அம்மா தங்கம் மட்டும்தான். தச்சு வேலை செய்பவனுக்கு வருமானம் குறைவு. ஆனாலும் செல்வி எதைக் கேட்டாலும் வாங்கித் தர மறுத்ததில்லை. படிக்க அவளுக்கு ஜன்னலோரம் சுவற்றில் பதித்த மடக்கும் மேஜை செய்து கொடுத்திருந்தான். பிஸ்கெட்டோ, சாக்லெட்டோ எது கேட்டாலும் சாப்பிட வாங்கிக் கொடுத்தான். அன்பு மகளை கண்ணில் பொத்தி வளர்த்தான் தந்தை.

குளித்து, சாப்பிட்டுவிட்டு, புத்தகப் பையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த செல்வியிடம் “எங்கே உங்க அப்பா? புள்ளையை இஸ்கூல்லே கொண்டு விட நேரமாகலையா?”  என்று சலித்துக் கொண்டே கேட்டாள் தங்கம்.

“அப்பா, கீழே ரோடு வேலை செய்யிறவங்களோடு சண்டை போட்டுகிட்டு இருக்காரு. கீழ் வீட்டு மாமாவும் கூட இருக்காங்க”

“இப்படித்தான் இவருக்கு நேரம் காலமே தெரியறதில்லை” என்று உரக்கச் சொல்லிக் கொண்டே செல்வியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே தங்கம் வீட்டை விட்டு வெளியே வந்து படியிறங்கினாள்.

நிஜமாகவே கீழே சாலையோரத்தில் மாரியப்பன் ரோடு போட வந்தவர்களுடன் உரக்கக் கத்தி, சண்டைபோட்டுக் கொண்டிருந்தான்.

“ஏங்க! ரோட்டை பெரிசு பண்றேன்னு, மரத்தைச் சுத்தி இம்மாம் பெரிய பள்ளம் தோண்டி வைச்சிருக்கீங்களே? மரம் எப்படீங்க நிக்கும்? கீளே விழுந்துடாது?’

“அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து வளர்ந்துருக்கு. அம்பது வருச மரங்க ரெண்டும். சாமிங்க அது. அதோட வேரை போய் வெட்டிபுட்டீங்க?” என்று சேர்ந்து புலம்பினார் கீழ் வீட்டு தட்சிணாமூர்த்தி.

யானையின் துதிக்கையைப் போல இருந்த மண்ணைக் குடையும் ராட்ஷச  எந்திரக் கையின் அருகில் நின்று கொண்டிருந்த தொழிலாளி, “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. ரோட்டை அகலப்படுத்தச் சொல்லி கவர்மெண்ட் ஆர்டரு. அதான் காண்ட்ராக்டர் இப்படி பள்ளம் தோண்டி, மழைத் தண்ணி போற வடிகால் கட்டப் போறாரு. அதுக்கு இப்படித்தான் தோண்டணும். வேறே வழியில்லை”

“அது யாரு காண்ட்ராக்டரு அம்மாம் பெரிய மனுசன்? எங்கிட்டே பேசச் சொல்லு. நான் பார்த்துக்கிறேன். இனிமே ஒரு அடி கூட தோண்டக் கூடாது. மூடு பள்ளத்தை. ஆமாம் சொல்லிட்டேன்” என்று கத்தினான் மாரியப்பன்.

செல்வியை அழைத்துக் கொண்டு, வாசலுக்கு வந்து மாரியப்பன் கத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், “ஏங்க! என்ன இங்கே நின்னு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க? இஸ்கூலுக்கு நேரமாகலையா?” என்றாள்.

திரும்பி தங்கத்தையும் செல்வியையும் பார்த்த மாரியப்பன் ‘ஓ! இரு இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு சுவரில் சாத்தி நிறுத்தியிருந்த சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்து செல்வியிடம் இருந்து  புத்தகப் பையை வாங்கி முன் காரியரில் வைத்துவிட்டு, ”ஏறிக்கம்மா” என்றான். செல்வி பின்னால் ஏறியவுடன் தட்சிணாமூர்த்தியின் அருகில் வந்து நிறுத்தி, “மூர்த்தி, இதை இப்படியே விடப்படாது. நாம கவுன்சிலரைப் போய் பார்க்கலாம். ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு அவன் ”சரி” சொல்வதற்கு பொறுத்திராமல் வண்டியை மிதித்து மேலே செலுத்தினான்.

மாரியப்பன் இருக்கும் இந்த வீடு இருபது வருஷத்துக்கு முன்னால் கட்டியது. உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர், சுந்தரவதனம் கட்டிக் கொண்டிருந்த பெரிய வீட்டில் தட்சிணாமூர்த்தி கட்டிட வேலையும், மாரியப்பன் தச்சு வேலையும், சகாயம் எலெக்ட்ரிக் வேலையும் செய்தார்கள். அவரே முன்வந்து, “நீங்க மூணு பேரும் நல்லா வேலை செஞ்சிருக்கீங்க. அதனாலே நம்ம வீட்டுக்கு முன்னாலே ரோட்டோரமா ஒரு காலி மனை இருக்கு பாரு? அது என்னதுதான். அதிலே நீங்க சேர்ந்து  ஒரு வீடு கட்டிக்கோங்க. சும்மா ஆளுக்கு ஒரு நாப்பதாயிரம் கொடுங்க போதும்” என்றார். மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நான்காவதாக பெயிண்டிங் வேலை செய்த ராஜவேலுவையைச் சேர்த்துக் கொண்டார்கள். மாரியப்பன் திருவண்ணாமலை பக்கத்தில் கிராமத்தில் இருந்த வீட்டை விற்றான். மற்ற மூவரும் அவரவர் பணம் புரட்டினார்கள். ஐந்து மாதத்தில், ரோட்டோரம் கீழே இரண்டு வீடும், மேலே இரண்டு வீடுமாக கட்டிக் கொண்டார்கள்.  இவர்கள் வீட்டின் பின்னால் தன் இரண்டாவது துணைவிக்கு கட்டிய வீட்டை ஊராருக்கு மறைக்கத்தான் இந்த இடத்தைக் சுந்தரவதனம் இவர்களுக்குக் கொடுத்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள். அதை நால்வரும் பொருட்படுத்தவில்லை.  பணம் கொடுத்து, நிலத்தை வாங்கி அதை நான்கு பேருக்கும் சமமாகப் பிரித்து ரெஜிஸ்டர் செய்தாகிவிட்டது. இனி என்ன கவலை?

”இங்கே பாருங்க! ரோடு குறுகலா இருக்கிறதாலே பெரிய வண்டியெல்லாம் போக ரொம்ப கஷ்டமாயிருக்காம். அதனாலே ரோட்டை அகலப்படுத்தி ஒரகடம் எஸ்டேட் வரையிலும் கொண்டு போய் காஞ்சிபுரம் ரோட்டிலே சேர்க்கப் போறாங்க. பெரிய திட்டம்”. சுந்தரவதனத்தின் மகன் அறிவொளி மாரியப்பனைப் பார்த்துச் சொன்னான். அவன் இப்போது உள்ளூர் கவுன்சிலர்.

“இல்லீங்க, ரோட்டை அகலப்படுத்தறேன்னு பெரிய பெரிய பள்ளமா நோண்டிகிட்டே போறாங்க. மரத்தையெல்லாம் வெட்டிப்புடறாங்க.”

‘மரத்தைத்தானே வெட்டறாங்க? வீட்டை இடிக்கலையில்லை? அதுக்கு சந்தோஷப்படுங்க”

“என்னங்க இப்படிச் சொல்றீங்க?

“அதெல்லாம் அப்படித்தான். உனக்குச் சொன்னா புரியாது. போயிட்டு வா”

மாரியப்பனும் தட்சிணாமூர்த்தியும் சோர்ந்த முகத்தோடு வெளியேறினார்கள். அவர்களுக்குத் தெரியாது, ரோடு ஒப்பந்தம் எடுத்ததே அறிவொளியின் பினாமிதான் என்று.

இருவரும் வீட்டிற்கு வந்த போது, செல்வி வெளியில் தோழர்கள் ஜில்லியோடும் பில்லியோடும் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு நாள், மழையில் நனைந்து வீட்டருகே ஒதுங்கிய நாய்க்குட்டியை செல்வி வீட்டிற்கு எடுத்து வந்து விட்டாள். தொட்டவுடன் ஈரத்தில் ஜில்லென்றிந்த குட்டிக்கு “ஜில்லி” என்றே பெயரிட்டாள். சில நாட்கள் கழித்து எங்கிருந்தோ வந்த குட்டிப் பூனையும் அவர்களோடு சேர்ந்து கொண்டது. அதற்கு ”பில்லி” என்று அவள் பெயர் வைத்தாள். தினம் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அந்தத் தோழர்களோடு விளையாடுவதுதான் அவள் பொழுது போக்கு.

அப்பாவைக் கண்டதும் செல்வி ஓடிப் போய் மாரியப்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“அப்பா, இந்த வருசம் தீபாவளிக்கு எனக்கு காக்ரா, சோளி வாங்கித் தாப்பா”

“அது என்னதும்மா காக்கா, குருவி?”

“ஐயோ! காக்கா, குருவி இல்லைப்பா. காக்ரா சோளி. அது போட்டுக்கிற டிரெஸ்”

“அப்படியா? வாங்கிட்டா போச்சு. நீ கேட்டு நான் வாங்கித் தராம இருப்பேனா செல்லம்?”

”தாங்கஸ்ப்பா”

செல்லப் பெண் இங்கீலீஷ் பேசுவதைக் கேட்டு உள்ளம் பூரித்த மாரியப்பன் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பிலிருந்து தன்னை அவசரமாக விடுவித்துக் கொண்டு செல்வி, ”அப்பா.. வாயேன், உனக்கு ஒண்ணு காட்டணும்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். வேப்ப மரத்தின் அடியில் வந்து தலையைத் தூக்கி, “அங்கே பாருப்பா! காக்கா கூடு கட்டியிருக்கு” என்றதும் மாரியப்பனும் அதைப் பார்த்தான்.

 “அது வந்தும்மா, காக்கா, குருவி மாதிரி பறவையெல்லாம் கீழே கிடக்கற குச்சி எல்லாத்தியும் கொத்திகிட்டு வந்து மரத்திலே வைச்சு இந்த மாதிரி கூடு கட்டிக்கும். அதிலே முட்டை போடும். அப்புறம் அதிலேருந்து குஞ்சு வெளியே வரும்”

 “அப்போ, அந்தக் குஞ்சையெல்லாம் நாமே எடுத்து வளர்க்கலாம்பா”

மாரியப்பன் பெரிதாகச் சிரித்து, “காக்கா, அந்தக் குஞ்சையெல்லாம் நம்ம கிட்டே கொடுக்காது செல்லம். பெரிசான உடனே அந்தக் குஞ்செல்லாம் தானே வெளியே பறந்து போயிடும்” என்றான்.

செல்வியின் முகம் வருத்தத்தில் சுருங்கியதாக மாரியப்பனுக்குத் தோன்றியது. காலடியில் வந்து நின்ற ஜில்லியையும் பில்லியையும் பார்த்துவிட்டு, “நீ இவங்க ரெண்டு பேரையும் பெரிசா வளர்த்துகிட்டு இரு. அவங்க எப்பவும் நம்ம கூடவே இருப்பாங்க. இப்போ நாம சந்தோசமா வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே அவளைக் கையில் தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினான்.

அந்த வருடம் தீபாவளிக்குப் பத்து நாள் முன்னதாகவே மழை பெய்யத் தொடங்கி விட்டது. ஒரு நாள் பலத்த காற்றோடு கனத்த மழை பிடித்துக் கொண்டது.  காற்றில் வேப்ப மரத்தின் கிளைகள் பேய் ஆட்டம் ஆடி ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதில் அந்தக் கிளையில் இருந்த கூடு கீழே விழுந்து விட்டது. கூடு கீழே விழுவதை செல்வி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். உடனே வெளியில் ஓடிவந்து பார்த்த போது, மரத்தடியில் கூட்டின் குச்சிகள் சிதறிக் கிடந்தன. அருகிலேயே உடைந்து போன சில முட்டைகளும் கண்ணில் பட்டன. அழுது கொண்டே உள்ளே ஓடி வந்த செல்வி, தங்கத்திடம் வந்து, “அம்மா, அந்த காக்கா கூடு கீழே விழுந்துடிச்சும்மா. முட்டையெல்லாம் உடைஞ்சு போச்சு” என்று கதறினாள்.

“அதுக்கேண்டி இப்படிக் கத்தறே? போனாப் போகட்டும். நீ மழையிலே வெளியே போகாம வீட்டிலே  கிட. அப்புறம் சுரம் வந்துடும். போய் ஏதாவது படி, போ” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்துவிட்டாள் தங்கம்.

அழுதுகொண்டே அறைக்கு வந்த செல்வி, ஜன்னல் வழியே அந்த மரத்தையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலையில் வீட்டிற்கு வந்த மாரியப்பனிடம் கூடு உடைந்து போனதைச் சொல்லி அழுதாள்.

“அழாதே செல்லம்! காக்கா மறுபடியும் இன்னொரு கூடு கட்டிக்கும். அதிலே புதுசா முட்டை போட்டு குஞ்செல்லாம் பொரிக்கும்.” ஆனாலும் செல்வி சமாதானமானதாகத் தெரியவில்லை அவனுக்கு.

இரண்டு நாள் கழித்து பெரு மழை. ஏதோ புயல் அடிக்கப் போவதாக முன்னமே சொல்லிவிட்டதால் பள்ளிக்கு விடுமுறை. மாரியப்பனும் வேலைக்குப் போகவில்லை. மதியத்தில் திடீரென்று, சாலையோரத்தில் இருந்த அரச மரம் வேரோடு பெயர்ந்து தன்னோடு வேப்ப மரத்தையும் சேர்த்துக் கொண்டு வீட்டின் மீது சாய்ந்தது. சப்தம் கேட்டு மாரியப்பன் ஓடி வந்து பார்த்த போது, வேப்ப மரத்தின் பெரிய கிளை ஒன்று, ஜன்னலருகே வீட்டின் கூரை மீது விழுந்து ஜன்னலையே அடைத்துக் கொண்டிருந்தது. மாரியப்பன் அவசரமாக கீழே இறங்கி வந்தான்.  இரு மரங்களும் சேர்ந்து விழுந்து வீட்டின் மேல் மாடி கைப்பிடிச் சுவரை உடைத்து ஜன்னலையும் வெளிப்புறம் பெயர்த்து இறங்கி இருந்தது. எந்நேரமும் மரம் மீண்டும் சாய்ந்து சுவர் மேலும்  இடிந்து கீழே விழும் அபாயம் தெரிந்தது.  நான்கு வீட்டிலிருந்தவர்களும் அவசரமாக வெளியே வந்தார்கள். கட்டிடம் இடிந்து போனதைப் பார்த்து அழத் தொடங்கினார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், அரசாங்க வேலையாட்கள் வந்து மரங்களை அறுத்துக் கிளைகளை அகற்றத் தொடங்கினார்கள். சுற்றுப்புரத்தில் இருந்த பலரும் கூட இருந்து உதவத் தொடங்கினார்கள். உதவிக் கலெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

“கட்டிடம் மேலும் இடிஞ்சு விழும் போல இருக்கு. அதனாலே நீங்க உங்களுக்கு வேண்டிய சாமான்களை எடுத்துகிட்டு சீக்கிரம் வெளியே வந்துடுங்க”

“மரத்தைச் சுத்தி இப்படி பள்ளம் வெட்டினா எப்படீங்க நிக்கும்? அதான் விழுந்துடுச்சு. எங்க வீடே இடிஞ்சு போச்சு”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இனிமே இந்த வீட்டிலே இருந்தா உங்க எல்லாருக்கும் உசிருக்கு ஆபத்து. அதனாலே காலி பண்ணிட்டு, பக்கத்து ஸ்கூல்லே போய் இருங்க. நான் வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்.”

“அதெப்படிங்க திடீர்ன்னு காலி பண்ண முடியும்? அதெல்லாம் முடியாது. நீங்க பள்ளம் நோண்டினதுக்கு பதில் சொல்லுங்க”

”சொல்ல முடியாது. வீடே மழையிலே ஊறிப்போய் போய் கிடக்கு.  தானே இடிஞ்சு போனாலும் போயிருக்கும். உடனே இடத்தைக் காலி பண்ணிடுங்க எல்லாரும்” என்று கத்திவிட்டு, ஜீப்பில் ஏறிப் போய் விட்டார் உதவிக் கலெக்டர்.

அடுத்த ஐந்து நாட்கள் நான்கு குடும்பங்களும் நடுநிலைப் பள்ளியில் செல்வி படிக்கும் ஏழாம் வகுப்பு அறையில் குடியிருந்தார்கள். அவர்களுக்கு சமைத்த உணவு, பிஸ்கெட்டு, தண்ணீர் பாட்டில், பாய், போர்வை எல்லாம் யார் யாரோ வந்து கொடுத்து விட்டு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

ஆறாம் நாள் காலையில் தீபாவளி. சுற்றுப் புற தெருக்களில் ஜனங்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். செல்வி அதை வாசலில் வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஞாபகம் வரவே, உள்ளே ஓடிச் சென்று, “அப்பா என் தீபாவளி டிரெஸ் எங்கே?” என்று கேட்டாள். கொண்டு வந்த பெட்டிகளில் தேடியும் அது எங்கேயும் காணப்படவில்லை.

“டிரெஸ் எங்கே இருக்குன்னு தெரியலைம்மா. அப்புறம் வீட்டுக்குத் திரும்பிப் போய் தேடி எடுத்துகிட்டு வரேன்” என்று சமாதானம்  சொன்னான் மாரியப்பன்.

பத்துநாள் கழித்து, தாசில்தார் அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரி வந்தார்.

”உங்க வீடு ரொம்ப வீணாயிடுச்சு. இனிமே குடியிருக்க லாயக்கில்லை. அதனாலே அந்த வீட்டை முழுசா இடிக்கச் சொல்லிட்டாங்க. உங்க நாலு பேருக்கும் ஆளுக்கு இருபதாயிரம் நஷ்ட ஈடா கொடுக்கச் சொல்லி ஆர்டர்”

“அது எப்படீங்க? இருபது வருசத்துக்கு முன்னே நிலத்துக்கே நாங்க முப்பதாயிரம் கொடுத்து வாங்கியிருக்கோம். மேலே அம்பதாயிரம் செலவு பண்ணி வீட்டைக் கட்டியிருக்கோம். இப்போ இருபதாயிரம் கொடுத்தா எப்படி?” என்று கோபத்துடன் பொரிந்து தள்ளினான் ராஜவேலு.

“நிலம் கவர்மெண்ட் நிலம். பொறம்போக்கு. அதுக்கு ஒண்ணும் கிடைக்காது”

“பொறம்போக்கா? கவுன்சிலர் அறிவொளி ஐயாவோட அப்பாகிட்டே இருந்து வாங்கினது. பக்காவா பட்டா வாங்கிக் கொடுத்திருக்காரு அவரு”

“அது அந்த ஃப்ராட் தாசில்தார் முருகேசன் லஞ்சம் வாங்கிட்டு கொடுத்தது. இந்த மாதிரி நிறைய கேஸ் இருக்கு. அவரை ஸஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க”

“அதனாலே எங்களுக்கு என்ன? கவர்மெண்ட்தானே பட்டா கொடுத்திருக்கு?” என்றான் சகாயம் ஆத்திரத்துடன்.

“இங்கே பாருங்க. அது சரியான பட்டா இல்லை. நீங்க கோர்ட்டுக்குப் போனா கூட உங்க கேஸ் ஜெயிக்காது. பேசாம கொடுக்கிற பணத்தை வாங்கிக்கிட்டு எங்கேயாவது போய் குடியிருந்துக்கோங்க.”

நால்வருக்கும் மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை.

போகும் போது அதிகாரி நின்று, “அடுத்த திங்கட்கிழமைலேருந்து ஸ்கூல் மறுபடியும் திறக்குது. அதனாலே ஒரு வாரத்திலே இடத்தைக் காலி பண்ணிடுங்க” ஏன்று சொல்லிவிட்டுப் போனார்.

மாரியப்பனும் மற்ற மூவரும் எங்கெங்கோ மோதியும் வீடு விஷயமாக ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியில் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டுவிடுவதாக முடிவெடுத்தார்கள். போவதற்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பழைய வீட்டிற்கு அவர்கள் வந்த போது, வீட்டின் முதல் மாடி வரையிலும் இடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மாரியப்பனும் தங்கமும் கண்ணீர் விட்டு அழுதார்கள். திடீரென்று எங்கிருந்தோ ஜில்லியும் பில்லியும் ஓடி வந்து காலடியில் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தன. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் காலை ஜாக்கிரதையாக வைத்து மூவரும் நடந்தார்கள். சட்டென்று ஒரு கற்குவியலுக்குக் கீழே பார்த்து செல்வி “அப்பா” என்று கத்தினாள். அருகில் சென்று பார்த்த போது, செல்வியின் “காக்ரா, சோளி”யின் அட்டைப் பெட்டி இருந்தது. பெட்டியை மெதுவாக உருவி, திறந்து பார்த்த போது, அதில் ஒன்றுமில்லை. ”ஓ” வென்று கதறிய செல்வியை கட்டி அணைத்துக் கொண்டு தேற்றினான் மாரியப்பன்.

 ”வாங்க திரும்பிப் போகலாம்” என்றாள் தங்கம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

பதில் சொல்லாமல் மேலே நடந்தான் மாரியப்பன்.

மாடிக்குப் போகும் படிக்கட்டு முழுவதும் இடிக்கப்பட்டிருந்ததால் மேலே போக முடியவில்லை. அதனால் கட்டிடத்தைச் சுற்றிக் கொண்டு பின்புறம் வந்தார்கள். அங்கே அவன் ஆசையாக வளர்த்த செம்பருத்தி, நந்தியாவட்டைச் செடிகள் கீழே முறிந்து கிடந்தன. மூலையில் ஏதோ பறவை எச்சமிட்டு தானாக வளர்ந்திருந்த இன்னொரு வேப்ப மரம் மட்டும்  நின்று கொண்டிருந்தது.

திடீரென்று “அப்பா அங்கே பாரு!” என்று சொல்லிவிட்டு செல்வி மேலே கையைக் காட்டினாள். நிமிர்ந்து பார்த்த போது, அங்கே மரத்தின் ஒரு கிளையில் காகம் ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது.

“தங்கம்! அந்த காக்காவுக்கு இருக்கிற அதிர்ஸ்டம் கூட நமக்கு இல்லை.  இடிஞ்சு போன கூட்டைப் பத்தி கவலைப் படாம, புதுசா கூடு கட்டிகிட்டு இருக்கு அது. நமக்கு அந்த மாதிரி திறமையும் வசதியும் இல்லையே?” என்று சொல்லிவிட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்தான் மாரியப்பன்.

சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள் -2-முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்

 

2. சங்கப் புலவர்களின் அறிவியல் அறிவு

சங்கத் தமிழர் வானியல் அறிவு |
சங்க காலப் புலவர்களின் பல்வேறு அறிவியல் சிந்தனைகளை சென்ற இதழ்க் கட்டுரையில் கண்டோம். இக்கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மேலும் சில கருத்துக்களைக் காணலாம்.

கணிதவியல் சிந்தனைகள்

வாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. ( குறள் 392)

என்று வள்ளுவரும் கூறினார். ஔவையாரோ எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும்

என பரிபாடல், பாடல் 2, வரிகள்13-14இல் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.

கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.

மருத்துவச் சிந்தனைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.

. . . . . . கோட்கரம் நீந்தி
நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி
(புறநானூறு, 271, 5-7)

இத்தகையதொரு நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)

மண்ணறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழர்கள் மண்ணின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். நீர் வற்றாத வைகை ஆற்றில் காணப்படும் மணல் செம்பழுப்பு அல்லது கருப்பாக இருக்கும். இம்மணல் பயிர் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததை

வரும்புனல் வையை வார்மணல் அகன்றுறைத்
திருமருதோங்கிய விரிமலர்க் காலின்
(அகநானூறு, 36. 9-10)

இங்கு ஆற்று நீர் கொண்டு வந்த வெண் மணலின் தன்மையை அறிய முடிகிறது.

பருவ மழை பொய்த்தலால் நிலம் வாடுதல்

புவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.

கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி
விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம்
(அகநானூறு, 164, 1-3)

என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.

காலக்கணக்கீடு

நல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாழிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை

‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்
குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’-
(முல்லைப்பாட்டு 57-58)

இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார். அக்கால மகளிர் நேரத்தை வட்டிலைக்கொண்டுதான் கணக்கிட்டனர். அல்லது கதிரவனைக் கொண்டு கணக்கிட்டனர்.

குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கறியா தஞ்சு வரப்பா அய்
(அகநானூறு, 43, 6-7)

நியூட்டனின் விதி

‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)

எய்த வில்லானது யானை, புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து, உயரமான யானையின் மீது எய்யப்பட்ட அம்பு அதனுள் புகுந்து வெளியே வந்து, விசை குறைந்து, யானையைவிட குறைவான உயரமுடைய புலி, மான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்தியது எனச் சொல்லும்போது நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.

சங்கப்புலவர்களின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். சங்க இலக்கியம் ஒரு கடல். கற்பவருக்குப் பல்துறை அறிவு இருந்தாலன்றி சங்க இலக்கியத்தின் முழுப்பொருளையும் அறிதல் சற்றுக் கடினமே. இத்தகைய சங்க இலக்கியங்களில் மெடிரியாலஜி (Meteorology) எனபடும் வானிலையியல் பற்றியும் பாடியிருக்க வாய்ப்பிருக்கிறதுதானே.

வாருங்கள் அதனை கண்டுணரலாம்.

சங்க இலக்கியம் – பொருநராற்றுப்படை  – பாச்சுடர் வளவ. துரையன்

பத்துப்பாட்டு- பொருநராற்றுப்படை - Uma Publicationsபத்துப் பாட்டுகளுள் இரண்டாவது பாட்டு பொருநராற்றுப்படை. புகழ்ந்து பாடுவோருக்குப் பொருநன் எனப் பெயர். ஒரு பொருநன் மற்றொரு பொருநனை ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படையாகும். அதாவது ஒரு பொருநன் மற்றொரு பொருநனுக்கு வழி சொல்லி அனுப்புவதாகும்.

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது. இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.

புதுப்புது வருவாய் வளம் பொலிந்தோங்கும் பேரூரில் விழா நடந்து முடிந்த மறுநாள் சோறு கிடைக்காமல், விழாவில் பங்கு கொண்ட கலைஞர்கள் விழா நடைபெறும் வேறு ஊரை நாடிச் செல்வது வழக்கம். இந்தப் பாட்டில் ஆற்றுப்படுத்தப்படும் பொருநன் அப்படிச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஆற்றுப்படுத்தும் புலவர் கூறுகிறார்.

வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி யேழின் கிழவ

கோடியல் தலைவ நீ நின் குறிக்கோளை அறிந்தவனாயினும் எங்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்காமல் கால் போன வழியில் சென்று கொண்டிருப்பது நீ முன்பு நோற்ற நோன்பின் பயனாகும். என்றாலும் நான் சொல்வதைப் போற்றிக் கேட்பாயாக ! உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க!

செல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய கரிகாலனின் அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம்.

பின்னர் எழுந்து பார்க்கும் போது…பகலெல்லாம் உழைத்தவர் மாலை நேரம் வந்ததும் காணும் மனச்சுமை குறைந்த புன்மைநிலை போல எங்கள் நெஞ்சம் பாதுகாப்புச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூவைச் சூழ்ந்து வண்டுகள் மொய்ப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் கல்லா இளையர் சிலர் வந்து அரசன் வருகையைச் சொல்லிக் காட்டினர். நாங்கள் எழுந்து அவனை வணங்குவதற்கு முன்னர் அவன் முந்திக் கொண்டான். வருக என்று கூவி அழைத்துக் கொண்டே வந்தான். இது அவன் நடந்து கொள்ளும் முறைமை வழக்கம். அவனது இந்த வழக்கமான செயலுக்குப் பின்னர்…

பதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. (வேவையை இக்காலத்தில் சூப் என்பர்.) அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. தண்டினான். பருகுக என்று சொல்லித் தடுத்தான். (தண்டித்தான்) காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஊழின் ஊழின் ஒற்றினோம். அவ்வப்போது வாயில் ஒற்றடம் போட்டுக் கொண்டோம். அவை சலிக்கும்போது முனிவந்தோம். அதாவது முகம் சுளித்தோம். உடனே அவன் வேறு பல மாதிரிகளில் சமைத்த உணவை வரவழைத்தான். தந்திரமாக வரவழைத்துக் கொடுத்தான்.

மண்ணமை முழவின் பண்ணமை சீறியா
ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க . . . .(110)

மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா
ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப . . . .(115)
வயின்ற காலைப் பயின்றினி திருந்து

மண்ணல்.என்பது குளித்தல். மண்ணுமங்கலம் என்னும்போது இப்பொருள் தருவது காண்க. அடித்தாலும் மண்ணும் முழவை முழக்கினோம். சீறியாழ் என்பது ஏழு நரம்புகள் கொண்டது. நரம்பு எண்ணிக்கையில் சிறிய யாழில் பண்ணமைத்துப் பாடினோம். முகவெட்டுள்ள விறலியர் பாடலின் பாணிக்கேற்ப ஆடினர். இப்படி மயங்கிய பதத்தில் பலநாள் கழித்தோம். ஒருநாள் மடைமாற்று நாளாக அமைந்தது. அன்று புலால் உணவை மாற்றிக் காய்கறி உணவைத் தரலானான். முரியா அரிசியில் புழுக்கிய பதமான சோறு அவிழ்ந்நிருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவன் கெஞ்சினான். புலாலைப் பிடிக்கக் கைவிரல் மூடும். சோற்றை அள்ள இப்போது கைவிரல்கள் நிமிர்ந்து அவிழ்ந்தன. கருணைக் கிழங்குப் புளிக்குழம்பு மிதக்குமாறு ஊற்றப்பட்டிருந்தது. சோறும் குழம்பும் அயின்றோம். பின் பலரோடும் பயின்று அளவளாவிக் கொண்டு இனிதிருந்தோம்.

கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
றாணிழன் மருங்கி லணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் . . . .(139 – 150)

இந்த நூலின் தலவன் பெயர் கரிகால்வளவன் என்று இங்குக் குறிப்பிடப்படுகிறான். ஆளும் விலங்கு ஆளி. ஆளியின்வழி வந்தது அரிமான் என்று போற்றப்படும் சிங்கம். ஆளியை நன்மான் என்று பாடல் குறிப்பிடுகிறது. அதன் குட்டிகூட விலங்குகளை வருத்தும். பால் குடிக்கும் ஆளிக்குட்டி ஞெரேர் எனப் பாய்ந்து முதன் முதலாக வேட்டைக்குச் செல்லும் போதே யானையை அழிப்பது போலக் கரிகாலன் வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் வென்றான். பனந்தோட்டு மாலை அணிந்த சேரனையும், வேப்பந்தழை மாலை அணிந்த பாண்டியனையும் ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் வென்றான். அப்போர்க்களத்திலேயே சேரனும் பாண்டியனும் மாண்டனர். வெற்றிகண்ட கரிகால்வளவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்,

பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்… பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான். நீங்கள் கைதொழுவதற்கு முன்பாகவே புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான். உங்களது பழைய ஆடை கிழிந்து குறைந்து போயிருக்கும். வேர்வை அழுக்கு ஏறி பாசி படிந்திருக்கும். கிழிசல் ஊசியால் தைக்கப்பட்டிருக்கும், புதிதாக அவன் தந்த பட்டுடையில் கொட்டைக்கரை போட்டிருக்கும். நீங்கள் புத்தாடை புனைந்த பின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். காலை வேளையில் கையைக் குடையாக்கியும் அத் தேறலைப் பருகலாம்.

யெரியகைந் தன்ன வேடி றாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி . . . .(160)
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்

பின்னர் விருதாக உன் (பொருநன்) தலையில் பொன்னாலான தாமரை சூட்டுவான். இவன் சூட்டிவிடும் தாமரை தழல் விட்டும் பிளவு பட்டும் எரியும் தீப்போல் இருக்கும். குளத்தில் இருக்கும் தாமரைக்கு மடங்கும் இதழ் உண்டு. இதில் உள்ளது மடங்காத பொன்னிதழ். பித்தை என்பது ஆணின் உச்சிக் கொண்டை. அது அழகு பெறும்படி உனக்குக் கரிகாலன் தன் கையால் சூட்டிவிட்டுப் பெருமைப் படுத்துவான். பாடினி அரில் மாலை – இது நூலில் கோக்கப்படாத முத்துமாலை.அதாவது முத்துக்களைத் தங்கத்தில் பதித்திருக்கும் மாலை. முத்தாரம் – இது நூலில் கோத்த முத்துமாலை. அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.

கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தே
ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் . . . .(165)

காலி னேழடிப் பின்சென்று கோலின்
றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் . . . .(170)

வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழந்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்

வெண்குதிரைகள் நான்கு பூட்டிய தேர்மேல் அனுப்பி வைப்பான். ஏழடி பின் சென்று நின்று ஏறுங்கள் எனபான். ஏறியபின் பேரியாழை மீட்டச் சொல்லிக் கேட்பான். அதற்குப் பரிசிலாக வளம் மிக்க ஊர் கொண்ட நாட்டுப் பகுதியைத் தருவான். யானைப் பரிசும் உண்டு. தேர் – அமரும் இடமான கொடிஞ்சி தந்தத்தால் செய்யப்பட்டது. குதிரை – குதிரையின் உச்சந் தலையில் வண்ணம் பூசிய குஞ்சம் தொங்கும். அதன் பிடரிமயிர் மடிந்து தொங்கும். குதிரைகள் பால்போல் நிறம் கொண்டவை. குதிரையை ஓட்டும் கோலின் நுனியில் முள் பொருத்தப்பட்டிருக்கும் முள் பொருத்தப் பட்டிருந்தால் அது தாற்றுக்கோல். சாட்டைப் பொருத்தப் பட்டிருந்தால் அது சாட்டைக் குச்சி. கரிகாலன் தேரோட்டியின் கையில் தாற்றுக் கோல் இல்லாமல் செய்வான். (இது அவன் விலங்குகள் மாட்டும் கொண்டிருந்த கருணையைப் புலப்படுத்துகிறது) பரிசிலாகத் தரும் நாட்டுப் பகுதியிலுள்ள ஊர்கள் விளைச்சல் குறையாத நன்செய்ப் பண்ணைகள் நிறைந்தவை. வேழம் – வெருவும் பறை போன்ற காதுகளும் பருத்துப் பெருத்த நீண்ட துதிக்கைகளும் கொண்டவை. சிறந்தவை. எனினும் பகை கண்டால் வெகுள்பவை.

பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து . . . .(175)
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத் . . . .(177)

நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாதது என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)

அப்படிப்பட்ட மன்னவனிடம் நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துகிறான்.

தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து “காலில் ஏழடிப் பின்சென்று” என்னும் பாடல் வரியால் அறிய ,முடிகிறது.

பொருநன் கடும் பசியில் உள்ளான் அதனைப் போக்குவதற்குக் கரிகார்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் என்கிறார்.

“ஆடுபசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு

நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று

எழுமதி வாழி ஏழின் கிழவா!” (பொருநராற்றுப்படை 61-63)

என்ற வரிகளின் மூலம் பொருநனின் பசித்துயரம் என்பது கொல்லுகின்ற பசித்துயரால் வருந்தும் பொருநன் உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளத்தானைப் பார். பசித்துன்பத்தைப் பற்றிக் கூறும் ஆசிரியர், பழுத்த பழமரங்களை விரும்பித்தேடிச் செல்லும் பறவைப் போலக் கரிகால் பெருவளத்தானுடைய கோட்டை அடையா வாயிலாகக் காத்துத் திறந்திருக்கும். பொருநன் கூறுகிறான், அடையா நெடுங்கதவுடைய ஆசார வாசலை அடைந்தேன். வாயிற்காவலைனைக் கேட்காமாலே உள்ளே நுழைதேன். வயிற்றுப் பசிதீர என்னுடைய வறுமை நீங்க உண்டேன். இளைத்த என்னுடல் பருத்தது. இரையுண்ட பாம்பின் உடல் போலானது. களைப்பு நீங்கிய நான், என் கையில் இருந்த கண்ணகன்ற உடுக்கையத் தட்டி இரட்டை சீர் உடைய தடாரிப் பண்ணை தாளத்திற்கு ஏற்ப இசைத்தேன். வெள்ளி முளைக்கும் வைகறைப் பொழுதில் நான் பாடத் தொடங்கு முன்பே நட்பு கொண்ட உறவினரைப் போல் கரிகால் பெருவளத்தான் என்னை வரவேற்று உபசரித்தான்.

இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ண ஓயாது உபசரித்தான். இதை மேலும் உண்ணுவதை வெறுத்து வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றைப் போட்டுப் பொறிக்கறியோடு உண்ணவைத்தான். இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி[6] என்று நூலாசிரயர் குறிப்பிடுகிறார். கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு போட்டதைப் பெருமைப் பட பொருநன் குறிப்பிடுகிறான்.

இவ்வாறு பொருநராற்றுப்படை கரிகாலனின் சிறப்பையும் தமிழர் பெருமையையும் பறைசாற்றுகிறது.

 

 

கண்ணன் கதையமுது 25 – தில்லை வேந்தன்

கம்சனை வதம் செய்வதற்காக பிறந்த கிருஷ்ணன்!!

கதிரவன் உதயம்

மன்னன் கம்சன் மறுநாளும்
வருவ தற்குக் காத்திருந்தான்.
முன்னாள் மேற்கில் மறைந்தகதிர்
மூளும் ஆர்வம் மீதூரச்
சின்னக் கண்ணன் கையாலே
சிதைந்து மாமன் மாய்வதைத்தன்
முன்னால் நடக்கக் காண்பதற்கு
முனைந்து கீழ்வான் மேலெழுந்தான்

 

கம்சன் மற்போர் அரங்கம் சென்று அமர்தல்

உரங்கொள் கம்சன் முடிபுனைந்தான்
உடைவாள் தன்னை இடையணிந்தான்
நெருங்கும் முடிவை அறியாமல்
நேரே சென்று மற்போர்செய்
அரங்கம் அடைந்து பொற்றவிசில்
அமர்ந்தான் வீரர் வாழ்த்தினரே
மருங்கு நின்ற சிற்றரசர்
வணங்கிப் பின்னர் அமர்ந்தனரே

 

குவலயாபீடம் என்ற யானையைக் கொல்லுதல்

இருவர் அரங்கில் நுழைகையிலே
எதிரில் குவல யாபீடம்
உருவம் கொண்டு மறித்ததுவே
உலக்கை துதிக்கை சுழற்றியதே
“பருவ ரைபோல் நிற்குமிதைப்
பாகா விலகிப் போகச்சொல்!”
பெருவ ரைமுன் ஏந்தியவன்
பேசு சொல்லைப் புறக்கணித்தான்

வெறிகொண்டு வெகுண்டிருந்த வேழம் தூக்கி
வீசியதே இருப்புலக்கை கண்ணன் நோக்கி
உறிகொண்ட வெண்ணெயுண் பிள்ளை துள்ளி
உடன்நகர வீழ்ந்ததுவே எங்கோ தள்ளி
நறைகொண்ட தார்மார்பன் கொம்பொ டித்து
நலிவுறவே தாக்கியதன் உயிர்மு டித்துக்
கறைகொண்ட குருதிவழி மேனி காட்டிக்
கடிதுவரத் தொடங்கியதே மல்லர்ப் போட்டி

கண்ணனைக் கண்டவரின் உணர்வுகள்

இடியேறோ இவனென்று வியந்தார் மல்லர்
எமைக்காக்க வந்தவனோ என்றார் மக்கள்
வடிவேறும் மாரனெனக் கண்டார் பெண்கள்
வந்தகுலக் கொழுந்தாகக் கொண்டார் ஆயர்
கொடியோராம் மறமன்னர் வேர றுத்துக்
குலம்விளங்கச் செய்பவனோ என்றார் பல்லோர்
முடியேறும் மாமன்னன் என்னைக் கொல்ல
முன்வந்த கூற்றமென நினைத்தான் கம்சன்

(மாரன் – மன்மதன்)

(மற்போர் அரங்கில் சாணூரன், முஷ்டிகன், சாலன்,கூடன், தோசலன் ஆகிய, வலிமையும், திறமையும் கொண்ட மல்லர்களுடன் கண்ணனும், பலராமனும் பொருதல்)

சாணூரன் – கண்ணன் மற்போர்

ஆர்த்தெழுந்த சாணூரன் மலைபோல் வந்தான்
அறைகூவல் கண்ணனுக்கு விடுத்தான், “உன்றன்
போர்த்திறத்தைக் காட்டென்றான்*, புயலாய்ப் பாய்ந்தான்
“பூங்கொத்தைப் போலுன்னைப் பிய்ப்பேன்” என்றான்
பார்த்திருந்த இளையோனும், மல்லன் கைகள்
பற்றித்தன் தலைமேலே உயரத் தூக்கி
வேர்த்தவுடல் சுழற்றிப்பின் அடித்தான் மண்மேல்
வீழ்ந்தவனும் கதறித்தன் உயிரை விட்டான்.

முஷ்டிகனும், மற்ற மூன்று மல்லர்களும் இறத்தல்

முன்னவ னோடு மோதி முட்டிகன் மாண்டு வீழ்ந்தான்
பின்னரும் மூவர் வந்தார் பெயர்ந்துவீழ் மரங்கள் ஆனார்.
மன்னவன் முகஞ்சி வந்தான் மாய்த்திட வேண்டும் நந்தன்
தன்னிரு மைந்தர் தம்மை,, தந்தையும் கொல்வீர் என்றான்

கம்சன் உயிர் பிரிதல்

ஆளரி போலக் கண்ணன் அரசனின் மேலே பாய்ந்தான்
வாளினை உருவும் மன்னன் வன்கையை இழுத்தான், கீழே
நீளமாய் வீழ்ந்த மாமன் நெஞ்சினில் குதித்தான், கம்சன்
மாளவே உயிரும் மாலின் மலரடி இணைந்த தம்மா!

(ஆளரி- சிங்கம்)

வாழ்த்தும், இணைதலும், நந்தன் விடைபெறுதலும்

மாரியென மலர்தூவி மகிழ்ந்தார் வானோர்,
மாதவத்து முனிவரெலாம் வாழ்த்து ரைத்தார்,
நேரிழையும் கொழுநனுடன் கொடுஞ்சி றையின்
நெடுங்கதவம் திறந்திடவே வெளியே வந்தாள்.
காரிழையும் வண்முகிலும், வாலி யோனும்,
கனிவுடனே வணங்கிப்பின் தழுவிக் கொண்டார்.
தாரிலங்கும் எழில்மார்பன் நந்தன் மீண்டும்
தண்பிருந்தா வனம்செல்ல விடைகொண் டானே

(நேரிழை- தேவகியைக் குறிக்கும்)

(கொழுநன்- கணவன்–வசுதேவன்)

(காரிழையும் வண்முகில்- கண்ணன்)

(வாலியோன் – வெள்ளை நிறமுடைய பலராமன்)

( தொடரும்)

 

 

 

சுப்ரபாரதி மணியன் – நாவல் & குறும்படம் விமர்சனம்

நாணல் – குறும்படம்  /  அழகு பாண்டி அரசப்பன்

  சுப்ரபாரதிமணியன் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடனில் எழுதிய ” பாதுகாப்பு “ என்ற சிறுகதையை நாணல் என்ற பெயரில் குறும்படமாக்கியிருக்கிறார்அவரின் கதைகள் முன்பே ஆறு குறும்படங்களாகி உள்ளனஅயலான்இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார்பேரெழில் குமரன்,            எஸ் எல் முருகேஷ் போன்றோர் அந்தக் குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள்இந்த முறை சுப்ரபாரதிமணியனே இயக்கியிருக்கிறார்.

குறும்படம் என்றதும் ஏதோ நீதி போதனை குறித்த வகுப்பு என்று எண்ணிக்கொண்டு அந்தப்பக்கமே போகாமல் புறக்கணித்தவன் நான்.

குறும்படம் திரைப்படம் இரண்டுமே நமக்கானதல்ல என்று ஒதுங்கியே வந்திருக்கிறேன்.ஓரமாய் ஒதுக்கியே வைத்திருக்கிறேன்.ஆனால் நானே எழுதியுமிருக்கிறேன்

ஒரு நல்ல புத்தகம் ஓரமாய் ஒதுங்கியே கிடக்கிறது ஒருவருக்கு அது வாசிக்க கிடைக்கும் வரை என்று. இருந்தாலும்

கனவு அவ்வப்போது குறும்பட விழாக்கள் நட்த்துகின்றது திருப்பூரில்சமீபத்தில் சிக்கண்ணாஅரசு  கல்லூரி தமிழ்துறை சார்பில் நடந்தேறிய குறும்பட பயிற்சி பட்டறைக்கு ஒரு நல்ல நாளில் செல்ல நேர்ந்ததும் நல்லதுதான்.குறும்படம் என்றால் என்னகுறும்படங்களின் தாக்கம் திரைத்துறையில் என்னமாதிரியான முன்னெடுப்புகளை தரவல்லது.அதன் தாக்கம் குறித்தும் அறிய முடிந்தது.

 சரி இந்த  படத்தப்பத்தி பேசுவோமா…..

 இன்றைய நவீன அசுர வேக திருப்பூர் சூழலில் ஒரு எழுத்தாளனை முன் நிறுத்தி அவனின் உணர்வுகளை இவ்வளவும் சொல்லத்துணிவதுதான் கனவு சுப்ரபாரதிமணியன் போன்ற மீப்பெரும் எழுத்தாளுமையின் நேர்மை என சொல்லலாம்.

 இதில் என்ன நேர்மை தீமை என்றெல்லாம் பேசலாம்.ஏதோ தொழில் செய்வோரை கதையின் நாயகனாக காட்டிவிட முடியும் சூழலில் தன்னைப்போன்ற ஒரு எழுத்தாளன் தான் தன் கனவு நாயகன் என எழுதவும் ஒரு துணிவு வேண்டும்.அதே நேரம் நான்கே நடிகர்களை வைத்து பதினைந்து நிமிடத்திற்குள் ஒரு கதை சொல்ல கதா விருது வாங்கியவருக்கு தகுதி இருக்கத்தான் செய்யும்.

 நாணல் படர்ந்த இடத்தில் காண்டாமிருகம் வாழ ஆசைப்படுமாம்.நாணல் வேய்ந்த கூரைகளால் நம் முன்னோர்கள் வீடு கட்டி வாழ்ந்தார்களாம்.நாணல் வளையும் வளைந்து கொடுக்கும் வீழாது. வாழும் கரை காத்து வாழவைக்கும் இதை நமது பழமையான இலக்கிங்களும் நமது பன்முகதன்மை கொண்ட படைப்பாளியான சுப்ரபாரதிமணியனும் எடுத்துக்கொண்டதில் குறும்படமாய் முன்னெடுப்பதில் மகிழ்வே.

 அடுத்த தலைப்பென்ன என கேட்கும் வில்லனுக்கு ஏற்றதாய்

மடியில சாஞ்சா மல்லிகா” என எழுத்தாளனுக்கே உரிய நக்கல் பேச்சில் அவனுக்கான எதிர்பார்ப்பையும் கூறி ஒரு நகைப்பு முணை காட்டியுள்ளது சிறப்பு.

 வில்லன் இப்படித்தான் இருக்கனுமென ஒரு கோட்டர் பாட்டிலை தண்ணி கூட கலக்காமல் குடிப்பதாக காண்பித்தது அதிர்ச்சியை தருகிறது. கொடூர வில்லத்தனத்தை அடையாளங்காட்டுகிறது.             ” சிறுக்கி மக சிக்காமலா போயிருவா “ என்பது தேனி வட்டார வழக்கெனில் அந்த வில்லன் யார்?!….

 ஒரு கடிதம் எழுத ஆரம்பித்து அதன் மூலம் எழுதி முடிகிற போது கதையும் முடிகிறது. ஒரு எழுத்தாளுமையின் கையில் குறும்படம் சிக்கியது விதி. பெரும்படம் தப்பியது பழைய கதி. இனி காண விளைவோம் அவரின் திரை மொழி.

 வசந்தியின் வாழ்க்கை ஒரு பேரனுபவம். பக்கத்து வீட்டு பெண்களோடு பகிர்ந்து கொள்ளும் சிரிப்பு வெறுப்பு பொறுப்பு என அனைத்தையும் ஒரு வயதான எழுத்தாளன் மீது ஒரு இளம் வயதுக்காரி நம்பிக்கைவைத்து அவர் வழி செல்கிறாள் என்பதும்.தன் சுய வாழ்க்கையின் பேராபத்துகளை  தன் எழுத்தின்   ஒரு கதா பாத்திரம்கூட நெருங்கி பாதிப்பை உணரக்கூடாதென அக்கறைப்படுதல் பிரமிப்பு.மனையாளை இழந்த தன் நண்பனுக்கு மறு பிறவி கொடுக்கும் பிரம்மனாக எனக்கு அந்த எழுத்தாளன் தெரிகிறான்?!….உங்களுக்கு….

 கதையினூடே   கிரிஜா சுப்ரமணியத்தின் கைவண்ணமான மாடி தோட்டமும் அதன் பேரழகும் இந்தக்குறும்படம் பார்ப்பவர்களை குறுந்தொட்டம் போட வைக்கும்….சதிராட்டம் ஆட வைக்கும்.  பின்னண்இ இசை சிறப்பு.ஆட்கள் தேர்வு நேர்மை.  சிறுகதையை  திரைக்கதை வடிவமாக்கியிருக்கும் கிள்மண்ட் விக்டர் இந்தப் படத்தில் பிரதான கதா பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்

 என்ன ஆரம்ப அறிமுகங்களில் ஒரு பாட்டு வைத்திருந்தால்  எனக்கும் ஒரு ஒரு பாட்டெழுத வாய்ப்பு கிடைத்திருக்கும்.இருந்தாலென்ன அடுத்த முறை எனக்கானதாக இருக்கலாம். இல்லை உங்களுக்கானதாக கூட …..

 

சுப்ரபாரதி மணியனின் திரை நாவல்  (விமர்சனம் :யுவராஜ்சம்பத்)

திரை

பொதுவா உங்க நாவல் எல்லாமே ஏதாவது ஒரு பொது பிரச்சனையே மையமாக வைத்து அதை சுற்றி பின்னப்பட்டிருக்கும்.. ஆனா இது கொஞ்சம் அப்படி இல்லையோஎனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது

 கந்துவட்டி கொடுமை பொருந்தாக் காதல் இந்த இரண்டைப் பற்றியும் ஒரு சின்ன லீடு இருந்தது. நான் கூட அதை விவரித்து பின்னாடி நாவல் பயணிக்கும் அப்படீன்னு நினைச்சேன்

 ஆனா நீங்க செய்யல. ஏன்போதும் அப்படிங்கிற ஒரு மனநிலையாஎவ்வளவு சொன்னாலும் இந்த சமுதாயம் கேட்காது அப்படிங்கிற ஒரு வெறுப்புணர்வா??

.. உங்க நாவலை படிக்கிற எல்லாருக்கும் இந்த வித்தியாசம்  கொஞ்சம் தூக்கலாகவே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன்…

 கதை இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டு இடங்களில்.. திருவனந்தபுரத்திலும் கோவாவிலும்.

 சாதாரண மனிதன் திரைப்பட திருவிழாக்களை எப்படிப் பார்க்கிறான் என்கிற ஒரு மாறுபட்ட பார்வை. திரைப்பட விழாக்களுக்கு தவறாமல் செல்கிற அறிவுஜீவிகளின் பார்வையில் இந்தியத் திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன ,சர்வதேச திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் தரத்தில்கதையில்காட்சிகளில்,  ஒப்பு நோக்குதல் போன்றவை மிக சிறப்பாகவே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

 சினிமாத்துறையில் திருப்பூரைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு கடந்த 50 வருடங்களாக சிறப்பாகவே இருக்கிறது என்பதை உங்கள் நாவலைப் படித்து ,அதற்குப்பின்னால் தெரிந்துகொண்டேன்.

 எனக்கெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது .நாமும் ஏதாவது ஒரு நாள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று அந்த விழாக்களை ஏன் அறிவு ஜீவிகள் பெரிதாக கொண்டாடுகிறார்கள்,  அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது . ஆனால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்லும்பொழுது எப்படியெல்லம் சிரமப்பட வேண்டும். பயணம் முதல் உணவு வரை 4,5  தியேட்டர்களுக்கு நடுவே ஓடுகிற ஓட்டம். இந்த திரைப்படத்தை பார்க்க முடியுமா முடியாதா என்கிற ஏக்கம் .அதை பார்ப்பதற்கு இரவு 12 மணிக்கு எழுந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவலம். இதையெல்லாம் மீறி மொழி தெரியாத சக மனிதர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த நாவல் .

வெறுமனே திரைப்பட விழாக்களை மட்டும் முன்னிறுத்தாமல் அந்தப் பகுதி மக்களின் உணவு வகைகள்,, கலாச்சாரம் ,மொழி ,சிறப்பு போன்ற எல்லாவற்றையும் உங்களுடைய பாணியிலேயே மிக அழகாகஇயல்பாகநாவலைப் படிக்க வாசகனின் மனதில் பதியும்படி எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள். இது உங்களுடைய வழமையான உத்தி என்றாலும்கூடமுழு நாவலையும் படித்து முடித்த பிறகு எத்தனையோ புது வித உணவுகளையும் ,அந்த மாநில மக்களின் கலை ,பண்பாடு போன்றவற்றயும்,   சினிமா சம்மந்தபட்ட  தொழில்நுட்ப வார்த்தைகளையும் தெரிந்து கொண்டேன்.  அந்த விழாவிற்கு நானே சென்று வந்து அவதிப்பட்டபிரபுவாக என்னை உணர்ந்து கொண்டேன்.   மிகச் சிறப்பாக வந்திருக்கிறது  இது. உங்களின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 வாசகனுக்கும் உலக சினிமா பற்றி பொது அறிவு  கொடுத்து இருக்கிறீர்கள்.

நாணல் சுப்ரபாதி மணியனின் “ பாதுகாப்பு “  என்ற ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதையின் திரைக்கதை வடிவம்/             “ காற்றில் அலையும் சிறகு”  என்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் இந்த சிறுகதை இடம் பெற்று இருக்கிறது