மகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி

இந்த நாடகம் முதன்முதலாக 1949 இல் ஜெர்மனியில் ரேடியோ நாடகமாக ஒலிபரப்பப்பட்டது.
பின்னர் 1994இல் சென்னை அகில இந்திய வானொலி இதன் தமிழ் வடிவை ஒலி பரப்பியது.
அதே வருடம் கூத்துப்பட்டறை இதை மேடைநாடகமாக அரங்கேற்றி வெற்றி கண்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்தப்புத்தகம் 300 க்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை ஆயிற்று.
இதன் கதைச் சுருக்கம்:
மகாத்மா காந்தி சுடப்பட்ட பிறகு அவரைச் சுட்ட தோட்டா, அவர் விழுந்த பூமி, அவரைச் சுற்றியிருக்கும் காற்று, அருகில் இருக்கும் யமுனா நதி ஆகியவை காந்தியுடன் பேசுகின்றன. எல்லாவற்றையும் விட காந்தியின் குரலே தனி வடிவம் பெற்று காந்தியுடன் பேசுகிறது.
இந்த உரையாடல்களின் மூலம் காந்தியின் தத்துவத்தை அவரது பெருமையை அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.
சற்று ஆழமான கருத்துக்கள் கொண்ட நாடகம்.
அதன் தாக்கம் உங்களைவிட்டு மறைய பல நாட்கள் ஆகலாம்.
குவிகம் அளவலாவலில்   மே 24 , 2020 அன்று நாடகமாகப் படிக்கப்பட்டு அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. 
அதன் முதல் பகுதி : 

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்

அறிவிப்பாளர் : 1948-ஆம் ஆண்டு, ஜனவரி 30-ஆம் தேதி அன்று காலை எட்டு மணிக்கு காந்தி தன் குடிலை விட்டுக் கிளம்பி அவர் வழக்கமாகப் பிரார்த்தனை செய்யும் இடத்திற்குச் சென்றார். மலைப்பிரதேசத்திலிருந்து வந்து வீசிய காற்று புத்துணர்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தது. வானத்தில் சின்னஞ்சிறிய மேகம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனுடைய தெளிவற்ற விளிம்புகள் நீலநிற வானத்தினுள் புகுந்தன. பிரார்த்தனை இடத்திற்குச் சற்று தள்ளி நதி ஒன்று சோம்பலாக, ஓட மனமின்றி ஓடிக் கொண்டு காலை இளஞ் சூரியனின் வெயிலில் பனிப்படலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.

மகாத்மா காந்தியுடன் அவருடைய நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் முதலாவதாக, ஆனால் காந்திக்குச் சற்று பின்னால் பண்டிட் நேரு வந்து கொண்டிருந்தார்.

பெரும் திரளாக மக்கள் கூட்டம் காந்தியின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகத் காத்திருந்தனர். பழைய வறண்டு போன நதிப்படுகையில் இருக்கும் குன்றுகளில் மிக அடக்கத்துடன் தீண்டத் தகாதவர்கள் உட்கார்ந்திருந்தனர். மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் தன்னுள் கொண்ட கொடிகளை ஆட்டி அசைத்து மக்கள் மிக ஆரவாரத்துடன் காந்தியை வரவேற்றனர்.
(மக்கள் குரல் “காந்தி, காந்தி” முதலில் உரக்க, பின்பு அறிவிப்பாளர் தன் வருணனையைத் தொடரும் போது மெள்ள மெள்ள பின் நகர்ந்து செல்வது போல்)

காந்தி பிரார்த்தனை செய்வதற்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் தாழ்வான மேடையின் பக்கத்தில் மாணவர் பிரார்த்தனை பாடல் குழு இசைக் கருவிகளுடன் நின்று கொண்டு இனிய பாடல்களை வேகமாக இசைத்துக் கொண்டிருந்தது.
(மேலும் வேகமாக மகிழ்ச்சியூட்டும் இசை, ஆரம்பத்தில் தனியாக பின்பு மெள்ள மெள்ள பின் நகர்ந்து மக்கள் குரல்களுடன் கலந்து மெல்லிய கீதமாக ஆனந்தமான சூழலை உருவாக்கிக் கொண்டு இருந்தது . – – )

மகாத்மா மேடையை நோக்கிச் சென்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது. பின்பு அடக்கத்துடன் மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காகத் தன் தலையைத் தாழ்த்தினார். காந்திக்கு இருபுறமும் வழிந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு இடையே உள்ள இடைவெளி சந்தில் காந்தியைப் போல் ஒல்லியாக இருந்த ஒரு இளைஞன், காலடி எடுத்து வைத்தான். அவர் முன் மண்டியிட்டு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டுபவன் ஒருவன் வணங்குவது போல், தலையைத் தாழ்த்தினான். மகாத்மா கைகளை நீட்டி அவனை ஆசிர்வதித்தார். ஆனால் அந்த இளைஞனோ அவன் மண்டியிட்டு இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் அப்படியே இருந்தான். காந்தியைப் பின்தொடர்ந்து வந்த பெண் ஒருத்தி அவனைப் பக்கவாட்டில் தள்ளி நகர்த்த முயன்றாள்.

திடீரென்று குதித்து எழுந்து நிற்கிறான் அவன். அவன் முகம் மிகவும் இறுகி உயிரற்று இருந்தது. அதுவரை தன் சட்டையினுள் மறைத்து வைத்திருந்த தன் வலக்கையை ‘விருட்டென்று எடுத்து வீசி காந்திக்கு நேராகத் துப்பாக்கி ஒன்றை நீட்டுகிறான்.

(மக்கள் வெள்ளத்தின் குரல் அலைகள் மேலும் மேலும் எழுகின்றன. பிரார்த்தனை இசை அடிக்கடி அதன் இடையில், ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக ஆனால் குறைந்த இடைவெளிகளில். துப்பாக்கி வெடிக்கும் சத்தம். பின்பு அமைதி, நீண்ட சப்தநாடிகளையும் செயலி ழக்கச் செய்யும் அமைதி)

ஒரு குரல் (நேரு) : டாக்டர் யாரும் இங்கு இல்லையா?

குரல்கள் : காந்திக்கு என்ன ஆயிற்று?

மற்ற குரல்கள் : அமைதி! நேரு பேசுகிறார்.

நேரு : டாக்டர் யாரும் இல்லையா?

குரல்கள் : பாக்டர் யாராவது இருக்கிறார்களா இங்கே ?

மற்ற குரல்கள் : டாக்டர்!

பல குரல்கள் : காந்திக்கு ஒரு டாக்டர் தேவை! (இனம் புரியாத சத்தங்கள்)

ஒரு குரல் : இதோ வருகிறார், டாக்டர்!

நேரு : குழந்தைகளே, டாக்டருக்கு வழிவிடுங்கள்!

பல குரல்கள் : டாக்டருக்கு வழிவிடு!

(மக்கள் கூட்டத்தில் சலசலப்பு! டாக்டருக்கு வழிவிட கூட்டம் இரண்டாகப் பிரிகிறது. பின் வேகமாக வரும் டாக்டரின் காலடிகளின் ஒலி! அவரின் காலடி ஒலி கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை இழந்து, தொனியில் குறைந்து கொண்டே வந்து, பின்பு ஏதோ பெருந்துயரத்தில் கேட்பது போல் கேட்டு இறுதியாக ஓய்ந்து விடுகிறது.

இனி நடக்கப்போவதெல்லாம்-காலம், காட்சிகள் போன்றவை வேறு ஒரு உலகத்தில் நடக்கப் போகின்றவை என்பதை உணர்த்துவதற்காக!

காந்தி : (பேசுகிறார்) என்ன விந்தை இது! இப்போது நான் ஒரு பச்சிளங் குழந்தையைப் போல் புவி மீது படுத்துக் கொண்டிருக்கிறேன். கைகளில் பலமில்லை. கால்களிலும் பலமில்லை! கைகால்களை என்னால் அசைக்க முடியவில்லை. என்னால் பேசவும் இயலவில்லை . என் தலையையும் திருப்ப இயலவில்லை . ஆகாயத்தையும் அதில் மிதக்கும் சிறிய மேகத்தையும் தவிர வேறு எதையுமே என்னால் பார்க்க முடியவில்லை. நான் குழந்தையாய் இருந்த அந்தக் காலத்தில் எல்லாம் எப்படி இருந்தனவோ அவ்வாறே இன்றும்! இதயத்தின் அடியில் என் மார்பு வெதுவெதுப்பாகவும் ஈரத்தினால் நனைந்தும் இருக்கிறது. மனதிற்கினிய வாசனையைப் போன்ற ஒரு வாசனையை ரத்தம் பரப்புவதை உணர்கிறேன். மகரந்தத்துகள்கள் மலர் இதழ்களில் ஊர்ந்து கீழாக நழுவுவது போல் ஏதோ அந்நிய பொருள் ஒன்று என் மார்பினில் மிருதுவாக நுழைகிறது.

பெண்குரல் ஒன்று : என்னை மன்னித்து விடு, மகாத்மா!

காந்தி : யார் நீ?

பெண் குரல் : உன் மார்பின் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் (துப்பாக்கித்) தோட்டா நான். என்னை மன்னித்துவிடு!

காந்தி : எதை மன்னிக்க வேண்டும் நான்?

தோட்டா : அதைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். டம் டம் நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப் பட்டவள் நான், புலிகளையும் காட்டுயானைகளையும் சுடுவதற்காக, உன்னைச் சுடவேண்டும் என்று நான் விரும்பிய தில்லை. ஒரு துப்பாக்கியில் சுழல் என்னை உங்கள் மீது பாய வைத்துவிட்டது.

காந்தி : உன் மீது எந்தக் குற்றமும் இல்லை , துப்பாக்கியின் மீதும் குற்றமில்லை. என் மீது துப்பாக்கியை நீட்டிய அந்த இளைஞனும் குற்றமற்றவன். இரைந்து கூவ முடியும் என்றால் எல்லோர் காதிலும் விழும்படி நான் கத்திக் கூவுவேன், அவன் நிரபராதி என்று.
நான் அவன் நெற்றியைத் தொட்டு ஆசிர்வதித்திருக்கிறேன். என்னுடைய உறுதியான பழைய விரல்களில் இன்னும் கொஞ்சமாவது சக்தி இருந்திருக்கிறது என்றால் அவன் நெற்றியில் நான் இட்ட அந்த அடையாளத்தை இறைவன் கண்டு கொள்வான்.

தோட்டா : என்னையும் ஆசீர்வதித்துவிடு!

காந்தி : உன்னை ஆசீர்வதிக்கிறேன், என் தோட்டாவே!

தோட்டா : உனக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ துப்பாக்கியில் பயன்படுத்தும் உயிரற்ற திடப்பொருளாக தோட்டாவை போல் அல்லாமல் மிருதுவாக இளையகன்னி ஒருத்தியின் ஸ்பரிசம் போல் நான் உன்னுள் புகுவேன்.

காந்தி : நீ என்னுள் நுழைகிறாய் என்ற உணர்வே எனக்கில்லை என் அன்பிற்குரிய தோட்டாவே!

தோட்டா : ஆனால் நான் நுழைந்து கொண்டுதான் இருக்கிறேன். உன் மேல் சரீரத்தின் வழியாக தசைகளின் ஊடே, உடலின் உள்ளேயுள்ள நாளங்களின் வழியாக இன்னும் ஐந்து விநாடியில் உன் இதயத்தின் நுனியில் தொட்டுவிடுவேன்.

காந்தி : பிறகு?

தோட்டா : அதன் பின்பு நீ இறந்து விடுவாய்!

காந்தி : அதுதான் மரணம் என்று யாருக்குத் தெரியும்? எங்கும் ஒரே அமைதி குடி கொண்டிருக்கிறது. சிவப்பு, மஞ்சள் நிறகொடிகளை ஆட்டிக் கொண்டு அங்கு மக்கள் இருந்தார்களே! இப்போது நான் காண்பதெல்லாம் உயரே என்மீது இருக்கும் வானத்தையும் ஒரு சிறு வெள்ளை வெளேரென்று இருக்கும் மேகத்தையும் தான். பக்திப் பாடல்கள் கேட்டனவே! மக்களின் ஒருமித்த குரல்களை கேட்டேனே! இப்போது என் காதில் விழுவதெல்லாம் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் நதியின் ஓட்டத்தையும் மலைப் பிரதேசத்திலிருந்து வந்து வீசிக் கொண்டிருக்கும் காற்றையும் மட்டும்தான். அதுதான் மரணம் என்று யாருக்குத் தெரியும்?

பெண் குரல் : (ஆழமாக) அதுதான் மரணம்.

காந்தி : யார் நீ?

பெண் குரல் : நீ படுத்து இருக்கும் பூமி! மரணம் என்பது என்ன என்பதை நான் முற்றிலும் அறிவேன், காந்தி! கிறித்துவர்கள், மரணமடைந் தவர்களை என்னுள் தான் புதைப்பார்கள். புழுக்கள் எப்படி மரணமடைந்தவர்களை சாப்பிட்டுத் தீர்த்து விடுகின்றன என்பதை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

ஆண் குரல் : (ஆழமான குரல் ஒலியில்) நான் தான் யமுனை நதி, மகாத்மா காந்தி. உன் இடது காது ஓரமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். உன் இந்து மதத்தினர் மரணமடைந்தவர்களின் அஸ்தியை என்மீது தூவுவார்கள். மேலும் மிதந்து செய்ய முடியாமல் கனத்து என்னுள் ஆழ்ந்து போக ஆரம்பிக்கும் வரை அதை நான் சுமந்து செல்கிறேன்.
அதன்பின் நாராசமான நெடியுடன் கருநிற சேறாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.

ஆண் குரல் (உயர்ந்த குரலில்) உன் உடலை வருடிக் கொண்டிருக்கும் காற்று நான். மரணமடைந்து விட்ட பார்ஸி இனமக்களின் எலும்புகளைப் பற்றியிருக்கும் சதைகளை பருந்துகள் கிழித்து – இரையாக்கிக் கொண்டபின் எஞ்சி இருக்கும் எலும்புகளுடன் விளையாடிக் கொண்டு இருப்பேன்.
மேல்கூரை இல்லாத கோபுரங் களிலிருந்து பாலைவனத்திற்கு எலும்புகளை அடித்துக் சென்று அவைகளுடன் கண்ணாம்பூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பேன், ஆண்களுடனும் பெண்களுடனும்.

பூமி : மரணம் என்ன என்பதை நாங்கள் நன்கு அறிவோம், மகாத்மா காந்தி.

காந்தி : நான் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் என்னை பொறுமையாக இருக்க விடுங்கள், மரணத்தை எதிர்த்துப் போராடாமல் இருக்கவிடுங்கள்.

பூமி : காந்தி, இனிமேலும் பொறுமையாக இருப்பதற்கு நேரம் இல்லை உனக்கு.

நதி : ஐந்து வினாடி நேரங்கள் தான் உனக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

பூமி : காந்தி. ஐந்து வினாடி நேரம் என்பது என்ன என்று தெரியுமா உனக்கு? நீ கீழே சாய்ந்து விழுந்தபோது உன் தலைபோய் மோதிய மண்ணாங்கட்டி தூள்தூளாக உடைந்து போவதற்கு ஆகும் நேரம் ஐந்து வினாடிகள்.
நதி உன் காதோரமாக வரும் – அலை, உன்னிடமிருந்து 20 அடிகள் தள்ளியுள்ள நதியின் மீது உள்ள பாலத்தின் கம்பத்தை எட்டும்போது ஐந்து வினாடிகள் முடிவடைந்துவிடும்.

காற்று : தோட்டாவை போல் மின்னல் வேகத்தில் பறக்கும் சக்தி கொண்ட, மேலே பறந்து கொண்டிருக்கும் அந்தச் சிட்டுக்குருவி, பறந்து மேகத்தின் விளிம்பை உரசும் போது ஐந்து வினாடிகள் முடிந்து விடும். அதன் பின்பு நீ மரணமடைந்து விடுவாய்.

பூமி : இந்த ஐந்து வினாடிகளைப் பயன்படுத்திக் கொள், காந்தி!

நதி : நிறுத்தி விடு காலஓட்டத்தை!

காற்று : கெட்டியாக பிடித்துக் கொள்!

காந்தி : நண்பர்களே, நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்றால், அந்தச் சிட்டுக்குருவி மேகவிளிம்பை உரசுவதற்கான காலம் அந்த அலை பாலத்தின் கம்பத்தை அடைவதற்கான காலம் போன்ற ஐந்து வினாடிகளுக்கு மேல் நான் உயிருடன் இருக்க முடியாது என்றால் ஏன் நான் வீணாக உணர்ச்சி வசப்படவேண்டும்? ஏன் நான் பொறுமையாக காத்துக் கொண்டிருக்கக் கூடாது? என்கிறீர்கள்?

பூமி : ஐந்து வினாடிகள் என்பது எங்களைப் பொறுத்தவரையில் ஒன்றும் இல்லைதான். சின்னஞ்சிறு சிரிப்பு போல ஒன்றும் இல்லைதான்.
உன் தலையின் அடியில் எப்படி அந்த மண்ணாங்கட்டி தூள் தூளாகிக் கொண்டு இருக்கிறதோ அதைப்போல மலைகள் தூள் தூளாவதை நான் கண்டிருக்கிறேன். அதன் பின் புதிய மலைகள் தோன்றின. அவையும் பின்பு தூள்தூளாகின. ஆனால் உன் மூச்சு நின்று போவதற்கு முன் உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐந்து வினாடிகள் உன்னைப் பொருத்த வல ரயில் நீண்டநேரம் தான்.

காற்று : ஒரு ஆயுள்கால நேரம். காந்தி.

நதி : நித்யமானது.

காற்று “ தோட்டாவைப் போல் வேகமாகச் செல்லும் சக்தியுடைய அந்த சிட்டுக்குருவியைப் பார்! அது ஆடாமல் அசையாமல் நின்று விட்டது. குத்தூசி ஒன்றினால் ஆகாயத்தில் குத்தி நிறுத்தப்பட்ட உயிரில்லாத பட்டாம்பூச்சியைப் போல அது தொங்குகிறது. மேகத்தை நோக்கிச் சென்ற மேகத்தின் விளிம்பை எப்போது அது தொடும் என்று எவராலும் சொல்ல முடியாது. ஆயுள் காலமும் அப்படித்தான் நீண்டு இருக்கிறது.

நதி : அதோ அந்த சிற்றலையை பார்! இளங்காலை சூரிய வெளிச்சத்தின் பளபளத்துக் கொண்டிருந்தது. அது கனமாகி விட்டது. ஏதோ கனமான உலோகப்பொருள் போல. தங்கநிறப் பனிக்கட்டிபோல உறைந்து நிற்கிறது. அது முன்பு பாடிய மெல்லிசை, ஆனந்தத்தை அளிக்கவல்ல பாடல், இப்போது பெரும் ஆழத்திலிருந்து வருவதால் எவர் காதையும் அது எட்டாது.பாலத்தை சென்றடைவதற்கு முடிவில்லாத கால ஓட்டம் தேவை, அதற்கு.

காற்று : நித்யம் என்ற காலமின்மையை பயன்படுத்திக் கொள்!நதி : நீ உயிருடன் வாழவேண்டும்.

காற்று : நீ உயிருடன் வாழவேண்டும் காந்தி!

காந்தி : ஆம்! குறுகிய காலமின்மை , புவியில் புகுந்து இருப்பது ஆடாமல் அசையாமல் குழந்தை போல என் மேல் இருக்கும் நீலநிற வானத்தையும் நீலவானத்தில் சிட்டுக்குருவியையும் பார்த்துக் கொண்டிருப்பது, நிதானமாக உயர்ந்தும் தாழ்ந்தும் மாறி மாறி வரும் அலைகளைப் பார்ப்பது போலாகும். நீங்களே பாருங்கள், நீரிலி ருந்து எழும் தீவில் எப்படிப்பட்ட தனிமையில் நான், தீவைச் சுற்றியிருக்கும் நீர்ப்பரப்பு பின்னுக்கு நகர்வதால், நான் நீர்மட்டத்திற்கு மேலே உயரத்தில் இருக்கிறேன்.

இனி எழுந்திருக்க வேண்டியதில்லை. இனி உணவு உண்ணவும், ரயில் வண்டிகளில் பிரயாணம் செய்யவும் வேண்டாம். இனி பேசத் தேவையில்லை, புன்னகை புரியத் தேவையில்லை. அதற்கெல்லாம் மாறாக மிக்க அமைதியாக இருப்பது, எல்லாவற்றையும் பற்றி எண்ணிப் பார்ப்பது மட்டும்தான் என் வேலை.

(லேசான பாடல் கீதத்தை உள்புகுத்தவும்)

இனிமேல் வெறுப்பினால் மனக்காயம் அடையப் போவதில்லை. மடத்தனத்தால் சித்திரவதை படப் போவதில்லை. தேவைக்கு மீறிய நல்ல உள்ளத்தால் களைப்படையப் போவதில்லை, நண்பர்களே! மனித சஞ்சாரமற்ற பாலைவனத்தில் ஒரு யோகியைப் போல தவத்தில் என்னால் ஈடுபட முடியும் நண்பர்களே!

தெய்வாம்சம் என்பது என்ன என்பதைப் பற்றியும் மனிதர்களை பற்றியும் என்னுடைய சிறிய எளிய ஆன்மாவைப் பற்றியும் சிந்திக்கப் போகிறேன். சிந்தனையில் மூழ்குவது சிந்தனையின் வாயிலாக பிரார்த்திப்பது, பிரார்த்தனையில் ஈடுபடுவது, சில சமயங்களில் மட்டும் கேட்கும் என்னுடைய, நான் நேசிக்கும் சிறிய அமைதியான குரலை மீண்டும் கேட்கக் கூடிய அளவிற்கு பிரார்த்தனை புரிவது இந்த குரல்தான் பாதையை, சரியான பாதையை எனக்குக் காட்ட முடியும். நண்பர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருங்கள்.

(மணி அடிக்கும் ஓசை)

காந்தி : என்ன அது?

தோட்டா : முதல் வினாடி அது காந்தி! உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முற்றுப் பெற்று விட்டது. உன்னுடைய மார்புக்கூட்டு எலும்புகளில் ஊடுறுவி இருக்கிறேன். இதயத்தின் மேல் இருக்கும் ஐந்தாவது, ஆறாவது எலும்புகளுக்கு இடையே மிகவும் ஜாக்கிரதையாக தேடிக் கொண்டிருக்கிறேன். மார்புக்கூட்டை போர்த்தியிருக்கும் தோலில் வலி ஏற்படுத்தாமல், மிருதுவாக நுழையக் கூடிய ஒரு மெல்லிய இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரைதேடிக் கொண்டிருப்பேன். நான் இதமாகத்தானே நுழைகிறேன் காந்தி?

(அடுத்த வினாடி அடுத்த மாதம்) 

காளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்

குமாரசம்பவம் என்றால் என்ன? குமரனின் ...

இரண்டாம் சர்க்கம்

 

தாரகன் எனும்அசுரன் செய்கொடுமை தாளாது தேவரும் துடித்திட்டார்     

சூரிய்னைக் கண்ட தாமரை போல பிரும்மனைக் கண்டு முகம்மலர்ந்தார்

 

நான்முகனின் திருக்கண் தம்மேல் விழுந்ததும் அவரைப் போற்றிப் பாடினர்

 

“உலகத்தின்  முதல்வர்  நீவிர்! முக்கடவுள்  பணியையும் நீவிரே புரிகின்றீர்!

நீரில்நின் சக்தியைக்  கொண்டு  தாவர ஜங்கம உயிர்கள் தோற்றுவித்தீர்!

முக்குணம் சேர்ந்த நீவிர் முத்தொழில் மூன்றையும் ஒருங்கே செய்கின்றீர்!

ஆணாகி பெண்ணாகி இரண்டுமாகி  உலகின் முதல் தாய் தந்தையுமானீர் !

ஆயிரம் சதுர்யுகம் நின் பகல் அதில் விழிப்புடன்  படைப்புகள் படைக்கின்றீர்!

மறுஆயிர சதுர்யுகம்  நீர் உறங்க உலகமே பிரளய நீராகி  அழிகின்றது !

முதலும் முடிவும் இல்லாத நீவிரே அழிவற்றவர், உலகின் முழுமுதல் நாயகர் !

தாமே கருவியாகி படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றையும் செய்பவர் !

அடர்பொருள் அணுப்பொருள் பருப்பொருள் அனைத்துக்கும் அதிபதி நீவிர் !

பிரணவத்தை  மந்திரமாக்கி     ஸ்வரங்களை  யாகமாக்கி  பலன்களை   சொர்க்கமாக்கி

அனைத்திற்கும்  மூலமான வேதத்திற்கு வித்திட்ட முதல்வர் நீவிர்!  

பிருகிரதி- ஜீவன் தனித்தனி தத்துவம் என்பர், நீரோ இரண்டும் இணைந்தவர்

தேவர்கள் வணங்கும் பித்ருக்கள்  துதிக்கும்  ஆதி பகவானும்  நீவிர் !

அவிசும் நீவிர், அதை இடுபவரும் நீவிர், உண்பவர் நீர், உண்ணப்படுபவர் நீர்

அறிபவர் நீர் அறியப்படுபவரும் நீவிர்! அனைத்தின் பரம்பொருளும் நீவிரே!”

 

தேவர்மொழி கேட்ட நான்முகன் பார்வையால் அவர் துயரம் உணர்ந்தார்  

 

ஒளியின்றி மழுங்கிய வஜ்ராயுதம் கொண்ட இந்திரன்

வாடிய சர்ப்பமென  பாசக்கயிறு கொண்ட வருணன்     

ஆயுதம் ஏதுமின்றி  துயர்முகத்துடன் இருந்த குபேரன்

சக்தியிழந்த தண்டத்துடன் மனம்வெதும்பிய எமன்

சுவரில் பதித்த  சித்திரம்போல வெப்பமிழந்த சூரியன் 

வேகமின்றி தடைபட்டுத் தயங்கிக் கிடக்கும்  வாயு

 

பனிமறைத்த  சந்திரன் போல்  களையிழந்த தம்மக்களை கண்ட பிரும்மர்

காரணத்தை  அறிந்திடினும் காரியத்தை அவர்களையே  கூறப் பணித்தார்

 

பிரும்மருக்குப் பதிலுரைக்க இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியை வேண்ட

அறிவுக்கண் படைத்த பிரகஸ்பதியும்  கைகுவித்து சொல்லலானார்  

 

“ எல்லாம் அறிந்த தங்களுக்கு நாங்கள் படும் துயரம் தெரியாதா?

தங்களிடம் வரம் பெற்ற தாரகாசுரன் செய்யும் கொடுமைகள்   தீராதா?

தாரகன் மகளிர் வாடக்கூடாதென்று வெப்பம் குறைத்த  சூரியன்  

கலைகளை தாரகனுக்கு அர்ப்பணிக்கும் தாரகேசன் சந்திரன்

தாரகன் வனமலர்கள் உதிராமலிருக்க பயந்து வீசும் வாயு 

தனியே வந்த காலங்கள் மாறி ஒன்றாய் பயந்து வரும் ருதுக்கள்  

முத்தும் பவழமும்  தாரகனுக்கு  சமர்ப்பிக்கும் சமுத்திரராஜன்

தலைமீது ஒளிவீசும் ரத்தினம் கொண்டு காவல் பணிபுரியும்   வாசுகி  

ஆபரணங்கள் அனைத்தையும் காணிக்கையாய்த் தந்திட்ட  இந்திரன்  

 

இத்தனை சேவைகள்  செய்தும் கொடுமை குறையா தாரகன்

இந்திரனின் எழில்  நந்தவனத்தை அழித்து நிர்மூலமாக்கினன்

தேவமகளிரைச் சிறையிலிட்டு  சாமரம் வீசப் பணித்தனன்

தங்கமேருவைத்  தகர்த்தெறிந்து கேளிக்கை மலையாய் மாற்றினன்   

கங்கையின் தங்கத் தாமரை பறித்தெறிந்து  சேற்றுநீராய் மாற்றினன்

விண்ணில் பறக்கும் தேவரின்  பயணத்தைத் தடுத்து  நிறுத்தினன்   

யாகத்தின் பலனாம் அவிஸை  அக்னியிடமிருந்தே  பறித்தனன்

பாற்கடல் உதித்த இந்திரனின்  குதிரையையும் கவர்ந்தனன்

விஷ்ணுவின் சக்ராயுதம்தனை   அணியும் ஆபரணமாய் மாற்றினன்

இந்திரனின் ஐராவதத்தைத்  தன் யானைகள் கொண்டு தாக்கினன் 

தாரகன் கொடுமையில் தீராத சுரம் வந்ததெனத்    துடிக்கின்றோம் “

 

தேவர்படும்   கடுந்துயரம்  பகர்ந்து  பிரும்மரிடம்  வரம் வேண்டினர்

 

 

“தேவர் துயர்களைய  சேனைத்தலைவனை பிரும்மர்  படைத்திட வேண்டும்

அத்தலைவன்  துணைகொண்டு இந்திரன் தாரகனை அழித்திட  வேண்டும்

அவ்வீரன் கருணையால்  தேவகுலமும்   தம்பெருமையை  மீட்டிட வேண்டும்“

 

பிரும்மரும்  தேவர் துயர்களைக்  களையும்  சொற்களைச் சொல்லலுற்றார்  

 

“ நம்மக்கள் களிப்படைய மாண்ட புகழ் மீண்டுவர  காலம் கனிந்து வரும்

 உலக அழிவைத்  தடுக்கவே தாரகனுக்கு  வேண்டும்வரம் தந்தேன்

எந்நாளும் என்னாலும் இறக்கக்கூடாதென என்னிடமே வரம் பெற்றவன்    

கொடுமையினன்  ஆயினும் வரந்தந்த  நானே அழித்தல்  முறையன்று

சிவகுமரன்  தவிர வேறெவரும் தாரகனை அழித்தல் இயலாததொன்று        

சிவசக்தி ஒன்றே  அண்டம்  அனைத்திலும் அளவிலாப்  பெருமை பெற்றது

சிவனோ  ஸதியைப் பிரிந்து தவக்கோலம் பூண்டுள்ளார்   

ஸதியோ  பார்வதி உருவெடுத்து இமவான் மடியில்  வளர்கின்றாள்

பார்வதியின் பேரெழில்  சிவபிரானைக் காந்தமென இழுத்திட வேண்டும்

சிவனின் சக்தியைப் பார்வதி தாங்கி புத்திரன் பிறந்திட   வேண்டும்

உதித்திடும் புத்திரன்  தாரகனை அழித்து மூவுலகைக்  காத்திட வேண்டும்   

சிவபார்வதி ஒன்றுசேர தேவரும் உடனே முயன்றிடவேண்டும் “

 

வழிசொன்ன பிரும்மரின் மொழி கேட்டு தேவரும் வாழ்வில் ஒளி பெற்றார்

சிவபார்வதி   காதலில் கலந்திட மன்மதனே  தக்கவன் எனஇந்திரன் எண்ண  

கரும்புவில்லும் மலரம்பும் தரித்த மன்மதன் கண்முன்  தோன்றி நின்றனன்

 

(தொடர்ச்சி அடுத்த இதழில் )

 

சொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்

சோழிகள் குலுங்கிச் சிதறின அதனுடன் “பத்து பத்து” என்று ஒரு முதிர்ந்த குரலும் “இல்லை பன்னெண்டு பன்னெண்டு” என்று மற்றொரு சன்னமான குரலும் அந்தச் சோழிகளுடன் குலுங்கிக்கொண்டு ஊடோடின. சோழிகள் இருவரின் பேச்சையும் சட்டைசெய்யாமல் எப்பிடி எட்டு போட்டு நின்னோமுல்ல என்று எட்டு சோழிகள் விரிந்தும் நான்கு சோழிகள் குவிந்தும் ஓடிநின்றன.

சித்ரா நல்லவேளை தப்பிச்ச இன்னும் ஒரு ரெண்டு சேந்து விழுந்திருந்ததுன்னா இந்நேரம் பெரியபாம்பு கொத்தி  ஆரம்பிச்ச எடத்துக்கே போயிருப்ப என்றாள் சாரதா. அதென்னக்கா அந்த ரெண்டு சேந்து விழுகாமையே நானு வாழ்க்கைய துவங்குன இடத்துலதான இருக்கேன். பரமபதம் ஆடுரப்பவாச்சும் பாம்பு கடிக்காம இருந்தா ஒரு சந்தோசந்தான்.

ஜோசியர் காலசர்ப்பதோசம் இருக்கறதால ராமேஸ்வரம் போயி பரிகாரம் செய்யணுன்னு சொன்னாரு எனக்கு.  ஏற்கனவே வாழ்கையில பாம்பு கடிச்சி வாழ்க்கையே வீங்கிப்போனதால, பரமபதத்தில பாம்புங்க என்ன ஒண்ணும் செய்யறதில்ல போலருக்குக்கா.

சித்ரா தனது காயை நகர்த்திக் கொண்டிருக்க, சாரதா சோழிகளைக் குலுக்கித் தனது குலதெய்வம் படவேட்டு அம்மனை வேண்டிக்கொண்டு ஒரு பன்னிரண்டு கேட்டுவிட்டு தரையில் உருட்டினாள்.  ஆனால் சாமி பத்தை கழித்து எடுத்துக்கொண்டு இரண்டு மட்டுமே போட்டது. சிறிய பாம்பு கொத்தி ஒருபடி கீழே இறங்கிவந்தது சேர்ந்தது சாரதாவின் காய்.

மனதில் வெறுப்போடு சோழிகளை சித்ராவின் பக்கம் ஒதுக்கிக்கொண்டே, அதென்னடி, ஆம்படையான் ஓடிப்போயிட்டா ஒனக்கு வாழ்கையே அத்தமிச்சிட்டா மாதிரி பேசறே. செகண்ட் மாரேஜ்லாம் இப்ப சர்வசாதாரணம் ஆயிடுச்சி. ஆனா என்ன நீ பிராமணாளா வந்து பொறந்து தொலைச்சிட்டே.  ஒனக்குக் கலியாணமே முப்பதுலதான ஆச்சி.  ரெண்டே வருசத்துல ஆம்படயான் ஓடிப் போயிட்டான்.  ஒங்கிட்டே என்ன இல்லைன்னு காணாமப் போயிட்டான், இல்ல அப்பிடி அதிசயமா என்னத்தத் தேடிண்டு போனான்னும் தெரியல.  ஒடம்புல ஒரு வியாதி இல்ல, நல்லா சமைக்கத் தெரியு,து பக்தியா இருக்கத் தெரியுது யாருக்கும் எனக்குத் தெரிஞ்சி நீ பெருசா துரோகம் பண்ணதில்லை.  தெய்வக் குத்தமோ இல்ல ஒன்னோட பூர்வஜென்ம கர்மாவோ இப்பிடி ஆயிடிச்சி ஒனக்கு, என்று சாரதா அங்கலாய்த்தாள். 

     இந்த பேச்சுக்களை இரண்டு வருடமாக கேட்டு கேட்டுப் பழகிவிட்ட சித்ராவுக்கு அக்காவின் பேச்சைவிட அடுத்து ஒரு நாலு போட்டு ஏணியில் ஏறி பரமபதத்தின் அடுத்தபடிக்கு சென்றுவிடவேண்டுமென்று மனம் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது.

    சித்ரா கேட்டபடி நாலு விழுந்தது. சித்ரா தனதுகாயை எடுத்து சந்தோசமாக அந்த சிறியஏணியில் ஏற்றி பெரிய பாம்பின் தலைக்கு மேலிருந்த கட்டத்தில் வைத்துவிட்டு சாரதாவை வெற்றிக் களிப்போடு பார்த்தாள். 

 

    இதுல எல்லாம் உனக்கு கைராசிதாண்டீ கேட்ட நம்பர் ஒன்னோட கையில சகுனியாட்டம் அப்பிடியே வந்துவிளையாடுது. ஆனா ஒன்னோட வாழ்க்கையிலதான் எங்கியோ ஒருசுழி மாத்தமுடியாம ஒன்ன கவுத்துட்டு போயிடுச்சி.

     சாரதாவுக்கு தான் தோல்வியடையப் போகின்றோம் என்பதைவிட தினமும் பரமபதத்தில் தன்னை செயிக்கும் சித்ரா வாழ்கையில் தோற்றுப் போனதைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்பதே நோக்கமாக இருந்தது. ஒரு முறையாவது ஜெயித்திருந்தால் பரவாயில்லை ஒவ்வொரு முறையும் சித்ராவே ஜெயித்தால் என்ன செய்வது. புண்பட்ட மனது அவளது குறைகளைச் சுட்டிக்காட்டி ஆறுதலைத் தேடிக் கொண்டிருந்தது.

 தெருவில் ஆளரவம் கேட்டது.

 என்ன மாமி இன்னிக்கு ஏகாதசி ஒருவேள அன்னந்தான் அதான் சோழி உருளறது திண்ணேல  போஜனம்லாம் ஆயிடிச்சா?  என்று அவர்களது கவனத்தைக் கலைத்தார் சுந்தரம் ஐயர்.

ஆயிடிச்சி மாமா கோவிலுக்கு போற வரைக்கும் கொஞ்சநேரம் பகவான நெனச்சிட்டிருக்கணுன்னு பரமபதம் ஆடிண்டிருக்கோம். என்று கூறிவிட்டு சோழிகளை இணைத்து கையில் குலுக்கிக்கொண்டாள் சாரதா. 

 ஏண்டி சித்ரா ஒன்னோட ஆம்படையானப்பத்தி சேதி ஏதும் தெரிஞ்சிதா.

 இனிமேல் தாயம் போட்டால்தான் பரமபதம் ஏறமுடியும் என்று டென்சனில் இருந்த சித்ரா “ தெரியல அத்திம்பேர்  நீங்க வேணா ரெண்டாந்தாரமா கட்டிக்கிறேளா.  அதான் பட்டுமாமிக்கு டிபி, ஆஸ்துமான்னு நீங்க படுறபாடு இந்த அக்ரகாரம் பூராத் தெரியுமே.”

  ஐயருக்கு சித்ராவின் மேல் ஒரு கண் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்துகொள்வார்.

     அதான் ஒனக்கும் எனக்கும் பகவான்  ஒரு எழுத்து எங்கியோ மாத்தி எழுதிண்டுட்டான்.  ரெண்டுபேரோட வாழ்க்கையும் காதந்த ஊசியாட்டம் ஆயிடிச்சி எதையும் கோக்கமுடியல. வாரப்ப என்ன வரம் வங்கிண்டு வந்தோம்ன்னு தெரியல இப்பிடி அல்லாடுறோம்.  என்ன கொடுப்பின இருக்குன்னு பகவான்ட்ட கேப்போம்.  “ஹூம்” பகவான் மனசு வச்சா நடக்கட்டும் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே சித்ராவின் கண்களை ஊடுருவி அவளது ஆழ்மனதை தொட்டுச் சுவைத்துப் பார்த்தார். இப்போதைக்கு இவ்வளவுதான் சாத்தியம். ஆத்துலருந்து கெளம்பி இப்ப நம்மபெருமாள் கோவிலுக்குத்தான் போயிண்டு இருக்கேன். ஆட்டத்த முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுங்கோ. இன்னிக்கி ராமசுப்பு ஐயரோட உபன்யாசம் இருக்கு மிஸ்பண்ணிடாதேள்.  ஐயரின் குரல் தெருவில் இருந்த காற்றில் கலந்து தேய்ந்து மறைந்தது.

சரிங்க அத்திம்பேர்.

     சாரதா ஒரு பன்னிரண்டும், ஐந்தும், ரெண்டும் போட்டு இரண்டு பாம்புகளைக் கடந்து ஒருவழியாக ஏணியில் ஏறி பாதி தூரம் வந்திருந்தாள்.

 ஒரு தாயம் மூன்று போட்ட சித்ரா பரமபதம் எறிக்கொண்டாள்.

ஒன்னோட கை இங்கே நல்லா விளையாடுதுடீ. ஆனா என்ன எழவோ ஒனக்கு வாழ்க்கைதான் முட்டிகிட்டு நிக்குது.

 இனி பாம்பினால் வெட்டுப்பட வாய்ப்பில்லை தாயம் போட்டால் போதும் என்று சந்தோசத்தில் இருந்த சித்ராவுக்கு இப்பொழுதுதான் சாரதா தனது வாழ்க்கையை பற்றி சொல்வது சிறிது உரைக்கத் துவங்கியது முகத்தில் இருந்த சந்தோசக்களை மாறியது.

     சாரதாவுக்கு என்னதான் நீ பரமபதத்தில ஜெயிச்சாலும் வாழ்கையில நீ ஒடஞ்ச பானைதான என்று குத்திக் காட்டுவதில் ஒரு ஆனந்தம். சித்ராவுக்கு பரமபதத்தில் வெற்றியென்றால் சாரதாவுக்கு அவளை சீண்டிப் பார்த்து வெற்றியின் களிப்பை சோகமாக்கிப் பார்ப்பதில் ஒரு வெற்றிப்பெருமிதம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

     சித்ரா சில தாயங்கள் போட்டு கடைசிக் கட்டத்தை அடைந்திருந்தாள்.

     ஓங் கைரசிக்கு அத்தன பாம்புலையும் சிக்காம ஏணியா ஏறிகிட்டு போயி பரமபதத்தைத் தொட்டுட்ட. எனக்குதான் இதுல கொடுத்து வைக்கல. சரிடீ எப்போவும் போல நீதாஞ் ஜெயிச்சே. வா எடுத்துவச்சிட்டு கோவிலுக்கு போகலாம்.  ஆட்டம் கலைந்து பரமபதம் சுருட்டப்பட்டு சோளிகள்  டப்பாவில் கொட்டப்பட்டு  பரணில் ஏறியது.

    கோவில் களைகட்டியிருந்தது. வண்ண விளக்குகள் சீரியல் பல்புகள் என்று ஏக தடபுடல் இந்தமுறை.  பெருமாளின் பெரியவடிவ உருவம் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் வாசலில் அனைவரையும் வரவேற்றது.  இளைஞர்கள் சிலர் அதன் முன்நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

     சித்ராவை அழைத்துக் கொண்டு சாரதா கோவிலுக்குள்ளே நுழைந்தாள். கோவிலின் முன்னால் இருந்த ஆஞ்சநேயருக்கு வணக்கம் போட்டுவிட்டு நேராக உள்ளே சென்று பெருமாளையும் தாயரையும் தரிசித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் அங்கிருந்த அரசமரத்தின் அடியில் சுகமாக காற்று வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டிருந்த இரு ஐயர்களின் அருகில் ஒரு இடத்தை சுத்தப்படுத்தித் தாமும் அமர்ந்துகொண்டனர்.

    என்ன ஒய் எப்பிடி இருக்கான் ஒங்க புள்ளையாண்டான்  கிரீன்கார்டு வாங்கி அமெரிக்காலயே செட்லாயிட்டானாமே. ஒமக்கே மாசமானா அம்பதுரூவா அனுப்பிச்சிடுரான்னு கேள்விப்பட்டேன், எல்லாத்துக்கும் எழுத்து வேணும் ஓய்.

     ஆமாம் ஒய் சொன்னாமாதிரி  கொஞ்சம் கடனெல்லாம் அடைச்சிட்டு வாழ்க்கை நிம்மதியானா ஓடிண்டிருக்கு இப்ப. செத்த முன்னாடி உபன்யாசம் கேட்டேள்ள ராமசுப்பு சும்மா பிச்சி ஒதரிட்டாரு இன்னிக்கு. பெருமாளே மனசு குளிர்ந்து கேட்டுண்டு இருந்துருப்பாரு. கிருஷ்ணபகவான் பரலோகம் போறதா சொல்றப்ப கண்கலங்கிடுத்து ஓய். பகவானுக்கே இந்த கெதின்னா நாமள்லாம் என்ன ஓய்.  இவாள்ளாம் மிஸ்பண்ணிண்டுட்டா என்று சாரதாவை சுட்டி “உச்” கொட்டினார் ஐயர்.

     கவனிச்சேன் ஓய் அதான் பூமிக்கு வாரப்பவே  தனக்குன்னு ஒரு அம்ப செஞ்சி ஏகலைவனோட அம்பராத்தூளில சொறுகி வச்சிட்டுல்ல வந்துருக்காரு பகவான்.

அது சரி இதுலேருந்து அவாள்ளாம் நமக்கு என்ன சொல்லவர்ரா? பகவானா இருந்தாக் கூட ஒருநாள் கெளம்பிட வேண்டியதுதானா என்ன? சொல்லுங்க ஒய்?

  அதில்ல ஓய், அவாள்லாம் தேகசித்தி அடஞ்சவுங்க அதனால எதோ ஒருகாரணத்தவச்சி அவாளே லோகவாழ்க்கையை அவங்களே முடிச்சிக்குவாங்க.   எமனோட  அப்பாய்ண்ட்மெண்ட் எல்லாம் நோக்கும் நேக்குந்தான்.   பகவான்லாம் அவாளே எல்லாத்தையும் பாத்துண்டுவார்.  என்று சொல்லிக் கொண்டே உடன் கொண்டுவந்திருந்த பிரசர் மாத்திரையையும் சுகர் மாத்திரையையும் வாயில் போட்டு தண்ணீர் குடித்தார்.  என்னவோய் பண்ணறது இன்னிக்கி சாப்பாடு இல்லேன்னாலும் இதுகள போடாம இருந்தா ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம் அதான் நேரத்துக்கு போட்டுக்கறேன்.

   எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து தவறாம வைகுண்ட ஏகாதசிக்கு சொர்கவாசல்  வந்துடுறேன். இது எனக்கு அம்பதாவது மொற.  எப்பிடியும் நம்மளை பகவான் அவரோட வைகுந்தத்தில சேத்துண்டுடுவார்னு நம்பிக்கை இருக்கு ஓய் என்ன சொல்றேள்.

   நெசந்தான் ஓய். சொர்க்கவாசல் போறது பாக்கியமில்லையா பின்ன.

    அதான் ஒரு நாள்முழுக்க அன்ன ஆகாரமில்லாம கண்முழிச்சு உக்காந்து விரதமிருந்து உபன்யாசம் கேக்கரோமில்ல.  இந்த காலந்தான் ஓய் ரொம்ம முக்கியம் இந்த காலத்துல நாம பகவான நெனச்சிண்டே இருந்தாலே சுவர்க்கம் நிச்சயம். அதுனாலதான் பாத்தேளா ராபூரா நம்மள தூங்கவிடாம கோவில்ல ஏதாவது  நிகழ்சி செஞ்சிண்டே இருப்பா.

     ஒலிபெருக்கியில் எல்லாரும் பிரார்த்தனை பண்ணிக்கோங்கோ ஹோமத்தில இப்போ பூர்ணாகுதி ஆகப்போறது என்று சப்தம் கேட்டது. சாரதா சித்ராவைப் பார்த்தாள். சித்ராவுக்கு அக்கா என்ன சொல்லப் போகின்றாள் என்று புரிந்துவிட்டது.  அரசமரத்திலிருந்து எழுந்து யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்று மனபாரத்தையெல்லாம் பிரார்த்தனை செய்து எரிந்துகொண்டிருந்த வேள்வித் தீயில் கொட்டிவிட்டு திரும்பி வந்து மண்டபத்தில் வந்து அமர்ந்துகொண்டனர்.

     காலை மணி ஐந்து ஆகிவிட்டிருந்தது. முழிக்க முழிக்க அனைத்து நிகழ்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மண்டபத்திலேயே அசந்து தூங்கிவிட்டிருந்தனர். சுவர்க்க வாசல் திறப்பதற்கு  ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்து. வாழைமரம் தென்னங்குருத்து மலர் மாலைகள் என்று சொர்கவாசல்  அமர்க்களமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

     மக்கள் நடுஇரவே எழுந்து மூடியிருந்த சொற்கவசலுக்கு முன்னால்  வரிசையில் நிற்கத் துவங்கியிருந்தனர். சிலர் இரவே வந்து சொர்கவாசலுக்கு முன்னால் இடுப்பிலிருந்த துண்டை எடுத்து விரித்து உறங்கிக் கொண்டிருந்தனர். காலையில் சொர்க்கவாசல் திறந்தவுடன் முதல் ஆளாக அதில் நுழைந்து வெளிவந்து வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென்பதே அவர்களது திட்டம்.

     மற்றோருபக்கம் அர்ச்சகர்கள் உற்சவரைத் தாயார்களுடன் ஒரு பல்லகில் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரம்தான் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுவிடும். அடிவானத்தில் சிறிது மெல்லொளி எழுந்து இருட்டோடு கவிழ்ந்திருந்த  குளிரையும்  விரட்டத் துவங்கியிருந்தது.

     சொர்க்கவாசலின் முன்னே ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டு கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. யார் முதலில் சுவர்கவாசல் வழியாகச் செல்வது என்று  ஒவ்வொருவர் மனதிலும் ஒரு உந்துதல், எப்படியாவது முதலில் சென்றுவிடவேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அதனால்  வரிசை எல்லாம் இப்பொழுது அமைதியாக இருக்கும் வாசல் திறந்தவுடன் எல்லோரும் மொத்தமாக சென்று முட்டிக்கொள்வார்கள். அந்தக் கூட்டத்தில் நுழைந்து பிதுங்கி வெளிவருவதற்குள் போதுமென்று ஆகிவிடும்.

சித்ராவுக்கு சொர்கவாசல் விழித்திருந்து பார்ப்பது இதுதான் முதல் முறை.

உறங்குபவர்களை எழுப்புவதற்கென்றே ஒருகோவில் பணியாள் இரவு முழுவதுவும் ஒரு லத்தியை கையில் வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டிருப்பான். மூன்றுமணிக்கே அவனது சப்தமும்அடங்கிக் கோவில் வாசலில்உள்ள தூணில் சாய்ந்து அவனும் உறங்கிக் கொண்டிருந்தான். சன்னதி மட்டும் திறந்திருந்து அர்ச்சகர்கள் இரவு முழுவதுவும் ஷிப்ட் போட்டு விழித்திருந்தனர்.  சாரதா சித்ராவுக்கு பின்னால் உறங்கிக்கொண்டிருந்த  ஐயர் ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருந்தார். அந்த மண்டபம் முழுவதும் அலறியது. உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் எழுந்துவிட்டனர்.

சன்னதியில் உற்சவருக்கு அலங்காரங்கள் முடிந்து ஆரத்தி ஆகிக்கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் வாசல் திறந்துவிடும். இரவே வந்து வாசல்முன் படுத்துக்கிடந்த தடித்த ஆசாமிகள் எழுந்து நின்றிருந்தனர். அவர்கள் புத்திசாலித்தனமாக தமக்குள்ளே கைகளை ஒரு சங்கிலிபோல அமைத்துக் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்துவதுபோல யாரையும் தம்மைத் தாண்டி அனுமதிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்வதுபோல தமது நிலையை முன்னிறுத்திக் கொண்டிருந்தனர்.

ஒய் பாத்தேளா கூட்டத்த, சிட்டில இருக்குற பெரிய கோவில்னா இந்நேரம் பத்து போலிஸ்காரங்க வந்திருப்பாங்க. இங்கே  இந்த மஸ்கோத்து பசங்கதான் போலீசு. அல்லாரையும் தடுத்துட்டு மொதஆளா அவனுங்கதான் வாசல்ல பூருவானுங்க.  ஐயரே கொஞ்சம் நாம மெதுவாத்தான போகலாம். இந்தக் கூட்ட நெரிசல்ல சிக்கி ஒடம்புக்கு எதன்னா ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடப் போகுது.

சித்ராவும் சாரதாவும் அந்த ஐயர்களை கேடயம்போல பயன்படுத்திக்கொண்டு அவர்கள் பின்னால் பாதுகாப்பாக  வரிசையில்  நகர்ந்து கொண்டிருந்தனர். 

சித்ரா வாசலை மறித்துக் கொண்டிருக்கும் அந்த முரட்டுக் கூட்டத்தைப் பார்த்து அதில் யார் முதலில் நுழைந்து வெற்றியடைவார்கள் என்று  மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள்.   முதலில் யார் நுழைந்து வெளியில் வந்தார்கள் என்கின்ற பெருமை சல்லிக்கட்டில் காளையை அடக்கினவனின் வீரம்போல அடுத்த வருடம்வரை அந்த ஊரில் பெருமையாகப் பேசப்படும். பின்னே இந்தக் கூட்டத்துல சமாளிச்சி மொத ஆளா வெளியே வர்றது சும்மாவா?

கூடியிருந்த கூட்டம்தான் சொர்கவாசல் வழியே நுழையப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, வரிசையில் முதல் ஆளாக அலங்கரித்துக்கொண்டு பெருமாள் துணைவியாருடன் வந்து  நின்றுகொண்டார். ஐயர் சொர்கவாசலை சாவிபோட்டு திறந்தவுடன் சுவாமியின் பல்லக்கு கோவிந்தா கோசத்துடன் முதலில் நுழைந்து வெளியேறிப் போனது.

என்ன ஓய் பார்த்தேளா பெருமாள்ன்னா மொதல்ல நொழஞ்சி வெளியே போறாரு.

ஆமா ஓய் நம்மளுக்கு  சொர்கத்துக்கு வழி தெரியாமத்தான தவிச்சிட்டுருக்கோம் அவருன்னா வந்து கைட் பண்றாரு.

 பொறவு சொர்கத்துக்கு சாவி அவாதான வெச்சிருக்கா அப்ப அவரு இல்லாம கதவ எப்புடித்தொறக்க முடியும்? 

அந்த தடிப்பசங்க மூஞ்சிய பாத்தீங்களா நான்தான் மொதல்லன்னு முண்டிக்கிட்டு நின்னானுங்க. பெருமாள் வந்தோடனே அப்பிடியே செவுத்துல பல்லிமாதிரி போயி ஒட்டிக்கிட்டானுங்க. மொதல்ல வெளியபோனா என்ன கெவர்னர் பட்டமா குடுக்கப் போறா? போக்கத்தவனுங்க!

பெருமாள் முன்னின்று வழிகாட்ட கூட்டம் முந்திக் கொண்டு சொர்க்கவாசல் வழியாக செல்லத் துவங்கியது.

சித்ராவுக்கு ஒரே கிளர்ச்சி முதல் முறையாக சொர்கவாசல் நுழைகின்றோம் எப்படி இருக்குமோ? என்று மனம் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தது. வேறு எதற்காகவும் இப்படி இரவு முழுவதும் அவள் கண்விழித்து காத்திருந்ததில்லை இதுவரை.  வாழ்கையில் இனிமேலாவது பெருமாள் நமக்கு கண்கொண்டு பார்ப்பார் என்று மனம் குதூகலித்தது.

சித்ராவும் சாரதாவும் கூட்டத்தில் கலைந்து பிரிந்துவிடாமல் இருக்க ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றிக்கொண்டனர்.

 இரவு மெலிந்து வானம் சற்று வெளுத்திருந்தது சூரியன் இன்னும் எழவில்லை. கோவிலுக்குள் கோவிந்தா கோசம் விண்ணை முட்டிக் கொண்டிருந்தது.

ஆமைபோல நகர்ந்த வரிசையுடன்  தொடர்ந்து நகர்ந்து, சொர்க்கவாசல் வழியாக நசுங்கி வெளியே வந்து விழுந்தனர் சித்ராவும், சாரதாவும். தடுமாறி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிடாமல் சமாளித்து எழுந்து நின்றவர்கள் எதிரே கண்ணுக்கு தெரிந்தது பூட்டிக்கிடந்த ஒரு பாழடைந்த தாசியின்வீடு. அதன்  முன்னால் அன்று புதிதாக முளைதிருந்த ஏகாதசி டீக்கடையில் முதலில் நுழைந்து வெளியே வந்திருந்த அந்த முரட்டு சிங்கங்கள்  தூக்கக் கலக்கத்துடன் வெளியேறுகின்ற கூட்டத்தின் மீது ஒரு அலட்சியப்பார்வையை வீசிக்கொண்டே வெற்றிப் பெருமிதத்துடன்  டீயை உறிஞ்சிக்கொண்டு நின்றிருந்தன. டீக்கடைக்கு கீழே சாக்கடை கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.  இரண்டு நாய்கள் ஒரு எலும்புத் துண்டுக்காக அதில் விழுந்து கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. மற்றொருபக்கம் அந்த சாக்கடையில் பன்றி ஒன்று சுகமாக உறங்கிக்கொண்டிருந்தது.  தெருவில் ஆங்காங்கே பெண்கள் மார்கழி மாத கோலம் போட்டுக் கொண்டு அவரவர்கள் வாசலை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ வைகுண்டத்திற்கே டிக்கெட் எடுத்து போவதுபோல கற்பனை செய்து வைத்திருந்த சித்ராவின் மனதில் சொர்கவாசல் பற்றி இருந்த அத்தனைக் கற்பனைகளும் படபடவென்று சரிந்து விழுந்தது.  என்ன இது மீண்டும் அதே இடத்திற்கு அதே வாழ்கைக்குத் தானே திரும்ப வருகின்றோம் என்று பொசுக்கென்றிருந்தது.  இதுல நொழஞ்சி வந்ததால இனிமேல் ஒருவேளை ஏதும் வாழ்கையில மாற்றம் நடக்குமோ என்று மனம் ஏங்கிக் குழம்பிக் கொண்டிருந்தது. சிந்தனை சுழன்றுகொண்டிருக்க வயிற்றை ஏதோ வலிபோல ஒன்று கவ்வி இழுத்தது ஒருவேளை அன்னம் உண்டது உடலுக்கு போதவில்லை போலிருக்கின்றது.  பின்னால் திரும்பிப் பார்க்க முட்டிக்கொண்டும் பிதுங்கிக்கொண்டும் பலர் சொர்கவாசல் வழியாக தொடர்ந்து வெளியேறி வந்து கொண்டிருந்தனர்.

மாமி கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ யாருன்னா சாக்கடையில தள்ளி விட்டுடுவா என்ற சப்தம் கேட்டு சாரதாவின் கையைப் பிடித்துத்தள்ளிக் கொண்டு வெளியேறுபவர்கள் செல்ல வழிவிட்டுநின்றாள் சித்ரா.

     தூரத்தில் சுவாமியின் பல்லக்கு கோவிலைச் சுற்றிக்கொண்டு மீண்டும் கோவிலுக்குள்ளே சென்றுகொண்டிருந்தது.                                      

 

 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சேரமான் பெருமாள்-2

சேரமான் பெருமாள் ஒரு இஸ்லாமியரா ...

முன் கதை:

சேரமான் பெருமாள் என்ற சேர மன்னன்..

தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் என்ன செய்தார் என்பதில்..

இரண்டு கதைகள் – இரண்டு கருத்துக்கள்.

முதல் கதையில் அவர் இஸ்லாமைத் தழுவி மெக்கா சென்றார்.

அவரது நண்பர்கள் இந்தியாவில் முதல் மசூதியைக் கட்டி இந்தியாவில் இஸ்லாமிய வித்துக்களை விதைத்தனர்.

இது முன்கதை.

இனி வருவது..

முற்றிலும் மாறுபட்ட – மறு கதை!

சில காலம் முன்பு எழுத்தாளர் சுஜாதா ஒரு கதை எழுதினார்.

அதன் பெயர்: ‘கம்ப்யூட்டரே.. ஒரு கதை சொல்லு’.

அதில் கதாநாயகன் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருப்பான்.

அது கதை சொல்லும்

அதில் கொடுத்த சாராம்சய விகிதத்துக்குத் தகுந்தாற்போல கதைகள் கிடைக்கும்.

கதாநாயகன் கொடுக்கும் ஒரு விகிதம் : சரித்திரம் : 50% ; செக்ஸ்: 50%

கிடைக்கும் கதை:

‘இராஜராஜ சோழன் விதவைக்கு முத்தம் தந்து’ – என்று கதை தொடங்கும்.

பொதுவாக நமது ‘சரித்திரம் பேசுகிறது’ கதைகளில்: சரித்திரம் : 80% கற்பனை : 20 % இருக்கும்.

இக்கதையில் மட்டும் நமது விகிதம் பின்வருமாறு :

சரித்திரம்: 20%; புராணம்: 60%: கற்பனை (சொந்த சரக்கு): 20%

இனி கதை தொடரட்டும்.

 

இரண்டாம் கதை: கைலாசம்

இடம் : மாகோதை (மகோதயபுரம்).

ஒரு துறைமுக நகரம்.

இந்நாளில் இது கொடுங்களூர்.

சங்களா நதி (இன்றைய பெரியார் நதியின் துணை நதி) அரபிக்கடலுடன் சங்கமிக்கும் நகரம்.

சேர மன்னன் சேரமான் பெருமாளின் அரண்மனை நதியின் சங்கமத்துக்கு அருகிலிருந்தது.

மன்னன் அரண்மனையில் உறங்கியிருந்தான்…

கனவில் ஒரு காட்சி .. வானத்தில் பிறைச் சந்திரன்.. அதன் அருகில் ஒரு ரிஷபம். ஒரு பாம்பு। சிலம்பொலி கேட்கிறது.

கனவிலிருந்து விழிக்கிறான்.

சிவபெருமான் அணிந்திருக்கும் பிறை, பாம்பு, அவர் ஆரோகணிக்கும் விடை.

அவர் நர்த்தனமாடும் போது எழும்பும் சிலம்பு ஓலி. .

இந்த இடத்தில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்தால் நன்றாக இருக்கும்.

மாகோதையார் சேர மன்னர் பரம்பரையில் பிறந்தவர்.

எனினும்..மன்னருக்குரிய படைக்கலப் பயிற்சி ஒன்றும் அவர் கற்கவில்லை.

பரமசிவன் பணிக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டார்.

திருவஞ்சைக்களம் சிவன் கோவில் அருகே வீடு அமைத்து இறைப்பணி செய்தார்.

சேரமன்னன் செங்கோற் பொறையன் – துறவு பூண்டு பதவி துறந்து காடு சென்றான்.

(அவனுக்கு என்ன பிரச்சனையோ?)

அமைச்சர்கள் கூடினர்.

மாகோதையாரை மன்னராக்க விரும்பினர்.

மாகோதையார் சஞ்சலமடைந்தார்.

இறைவனிடம் விண்ணப்பித்தார்.

தமிழில் அசரீரி என்று வார்த்தை உண்டு.

பொதுவாக புராணக் கதைகளில் அது வெகுவாக வரும்.

கடவுள் மனிதனுக்கு ஏதேனும் சொல்ல விரும்பினால்..

ஓன்று கனவில் வருவார்..

அல்லது..

அசரீரி வழியாக சொல்வார்.

அது வானத்திலிருந்து ஒலிபரப்பாகும்.

சிவபெருமான் அசரீரி வாயிலாக மாகோதையாரை அரசனாகப் பணித்தார்.

மேலும் “உனது தினசரி பூஜை முடியும் போது எனது சிலம்பொலி உனக்குக் கேட்கும்” – என்றும் அருளினார்.
மாகோதையார் ‘சேரமான் பெருமாள்’ என்ற பெயரில் சேர மன்னனானார்.

அச்சமயம்..

மதுரையில் பாணபத்திரர் என்று ஒரு புலவன்..

பரம ஏழை!

பெரும் சிவபக்தன்.

சிவபெருமான் பக்தனுக்கு இறங்கினார்.

‘சேரமன்னன் உமக்கு பொருளுதவி செய்து காப்பான்’ – என்று ஓலை எழுதி பாணபத்திரரிடம் சேர்த்தார்.

தருமிக்கு ஓலை தந்து பிரச்சினை உருவானது நினைந்தோ என்னமோ..

சிவபெருமான் இம்முறை சேரமான் பெருமாள் கனவிலும் இதைப்பற்றி சொல்லி வைத்தார்.

நக்கீரன் போல் யாரோ ஒருவர் முளைத்துக் காரியத்தைக் குழப்பினால்?

பாணபத்திரர் அந்த ஓலையை சேரமன்னனிடம் கொண்டு சென்றார்.

சேரமான் பெருமாள் பாணபத்திரரை வரவேற்றார்.

நிதி அமைச்சரை அழைத்தார்.

கஜானாவில் இருப்பது அனைத்தையும் கொண்டு வரப் பணித்தார்.

அனைத்தையும் பாணபத்திரருக்கு அளித்து அவரைப் ‘பண’பத்திரராக்கினார்!!

இது மட்டுமல்லாது.. ‘எனது அரசாட்சியையும் ஏற்றுக்கொள்ளுங்கள்” -என்றார்.

சிவபக்திக்கும் சிவனடியார் பக்திக்கும் ஒரு லிமிட் இல்லை போலும்.

பாணபத்திரர் நெகிழ்ந்தார்.

தனக்கு வேண்டுவது மட்டும் எடுத்துக் கொண்டு விடை பெற்றார்.

ஃபிளாஷ்பேக் முடிந்தது.

 

கனவிலிருந்து விழித்த சேரமான் பெருமாள் – குளித்து – சிவவழிபாடு செய்தார்.

சிவவழிபாடு முடியும் தறுவாயில் தினமும் சிலம்பொலி கேட்கும்.

ஆனால் அன்று… சிலம்பொலி கேட்கவில்லை.

வருந்திய சேரமான்: ”இறைவா! யான் செய்த அபராதம் யாது?” என்று அழுது தொழுதார்.

சிவபக்தி முத்தினால் விபரீதமாக சிந்திப்பர் போலும்..

‘இறையருள் இல்லாத வாழ்வு எதற்கு? ‘ என்று உடைவாளை மார்பில் நாட்டி உயிர்துறக்க சித்தமானார்.

சினிமாவில் கிளைமாக்ஸ் சமயத்தில் வரும் போலீஸ் போல..

சிவன் காட்சி அளித்து தனது சிலம்பொலியை ‘பத்து டெசிபல்’ அதிகப்படுத்தி சத்தமாகக் கேட்க வைத்தார்.

பிறகு விளக்கமும் அளித்தார்.

 

‘எனது அருமைத் தோழன் சுந்தரன் தில்லையில் வண்ணப்பதிகங்களால் என்னைத்தாலாட்டினான்.

அதில் சற்றே மயங்கிக்கிடந்தோம்.

அது காரணம் சிலம்பொலி சற்று தாமதித்தது’ – என்று சொல்லி மறைந்தார்.

‘இறைவன் இவ்வாறு பாராட்டிய சுந்தரர் யார்! அவரைப் பார்க்காத இந்த வாழ்வு பயனுள்ளதல்லவே!’ -என்று நினைத்தார் சேர மன்னன்.

இந்த எண்ணம் வந்ததும் ‘சேரமான் பெருமாள்’ அரச போகத்தைத் துறந்தார்.

ஆட்சியை அமைச்சர்களிடம் ஒப்புவித்து தில்லை சென்றார்.

அங்கு ஆலயங்களில் தொழுது – பண் பாடி – திருவாரூர் சென்றார்.

சுந்தரரை சந்தித்து இருவரும் அன்பு பூண்டு நின்றனர்.

இருவரும் ஆலயங்கள் தொழுது .. பதிகம் பாடி .. பேரின்புற்று இருந்தனர்.

அங்கு சேரமான் பெருமாள் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை இயற்றினார்.

 

கதையின் கிளைமாக்ஸ்க்கு வந்து விட்டோம்.

ஒருநாள் சேரமான் பெருமாள் நதியில் இறங்கிக் குளிக்கும் போது ..

சுந்தரர் கரையில் இருந்தார்.

அந்நேரம் .. சிவபெருமான் திருக்கைலாசத்திலிருந்து வெள்ளையானை ஒன்று அனுப்பினார்.

பூத கணங்கள் – சுந்தரரிடம் சிவன் அவரை கைலாயத்துக்கு வருமாறு பணித்ததைக் கூறினர்.

சுந்தரர் ,யானையில் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான் பெருமாளை நினைத்துக்கொண்டு சென்றார்.

சேரமான் பெருமாள் சுந்தரருடைய செயலை அறிந்து, அருகிலே நின்ற குதிரையில் ஏறிக்கொண்டு ..

குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார்.

உடனே அந்தக் குதிரை ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரர் பயணித்த வெள்ளையானையை அடைந்தது..

Uncategorized – Page 43 – vpoompalani05

 

அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது.

சேரமான் பெருமாள், சுந்தரர், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலை அடைந்தனர்.

குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கினர்.

வாயிலில் சேரமான் பெருமாள் தடுக்கப்பட்டார்.

சுந்தரர் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்து தொழுது :

“சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான் பெருமாள் புறத்திலே வந்து நிற்கின்றார்”
என்றார்.

பரமசிவன் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து:

‘சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனது ஏன்” – என்று வினவினார்.

சேரமான் பெருமாள்: “சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன்

தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்” என்று விண்ணப்பஞ்செய்தார்.

அப்பொழுது சிவபெருமான் “சேரனே! அவ்வுலாவைச் சொல்லு” என்று திருவாய்மலர்ந்தருளினார்.

சேரமான் பெருமாள் பாடினார்.

சிவபெருமான் அதற்கு அருள்செய்து, “நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு” என்று திருவாய்மலர்ந்தருளினார்.

(இந்த வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது)

வாசசகர்களே!

இரண்டு கதைகளையும் படித்தீர்கள்..

சேரமான் பெருமாள் எங்கே சென்றார்?

மெக்காவுக்கா, கைலாசத்துக்கா?

எங்கு சென்றால் என்ன?

நமக்கு இரு கதைகள் கிடைத்தது.

 

கொசுறு: 

விநாயகர் அகவல் | - Dinakaran

( நன்றி :அகத்தியர் சன்மார்க்க சங்கம் பதிவு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். ‘அயிராவணம்’ என்னும் யானையை ஈசன் அனுப்ப, அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதை அறிந்த அவரது தோழரான சேரமான் பெருமானும், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரரின் அயிராவண யானையைச் சுற்றி வந்து தானும் கயிலாயம் புறப்பட்டார். இருவரும் வானில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீழே பார்க்கையில், திருக்கோவிலூர் சிவ தலத்தில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டு பூஜை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர்.

திருக்கயிலாய ஈசனை தரிசிக்கும் வாய்ப்புக்காக பலரும் தவமாய் தவமிருக்கும் நிலையில், வாய்ப்பை தவற விட யாருக்குத்தான் மனம் வரும்? ஆனாலும் உடனடியாக யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அவ்வை பாட்டி, ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு விநாயகர் பூஜையை பதற்றத்துடன் விரைவாக பண்ணி முடிக்கத் திட்டமிட்டு விரைவாக பூஜைகளை செய்தாள்.

அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. அது வேறு யாருடையதும் அல்ல.. பெரிய யானை கணபதியே அசரீரியாக தன் பக்தையான அவ்வையிடம் பேசினார்.

‘அவ்வையே! நீ எனது பூஜையை சற்று மெதுவாகச் செய். கவலை வேண்டாம். பூஜை முடிந்ததும் சுந்தரரும், சேரமானும் திருக்கயிலை மலை சென்றடைவதற்குள்ளாகவே, உன்னை அவ்விடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்’ என்று கூறினார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வையார், ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட…’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி திருக்கோவிலூர் பெரிய யானை கணபதியை நிதானமாக பூஜித்தார்.

என்ன ஆச்சரியம்! அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவன் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வை பாட்டியை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிற்பாடுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.

 

அடுத்து வருவது? சற்றே காத்திருங்கள்…

 

எம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா

வாழ்க நீ எம்மான் !

 

 

எம் வி வெங்கட்ராம்

(நன்றி: அடவி இதழின் எம் வி வெங்கட்ராம் சிறப்பிதழ் )

திரு கல்யாணராமன் அவர்கள் எம் வி வெங்கட்ராம் பற்றிப் பேசிய காணொளி:

 

 

 

திரு ரவி சுப்பிரமணியன் அவர்கள் எம் வி வெங்கட்ராம் பற்றி எழுதியது 

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 7:12 AM | வகை: எம்.வி. வெங்கட்ராம், கட்டுரை, ரவிசுப்ரமணியன் 

( நன்றி: அழியாச்சுடர்கள்)

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை.

“கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்…” என்பதை அவன் அறிந்தவனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழைஇழையாய் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். ஆடைகளைப் பயன்படுத்தும் நாம் நெய்தவனைப்பற்றி யோசித்ததே இல்லை. ஆனாலும் மிகச் சிலரின் காதுகளுக்கு தறியின் இடதும் வலதுமாய் ஒடி ஒடி நூல் இழைக்கும் நெளியின் ஒலி கேட்கிறது. அப்படித்தான் எனக்கும் தேனுகாவுக்கும் அது கேட்டது. அந்த சப்தம் தந்த உறுத்தலால் தான் தொண்ணூற்றி ஓராம் ஆண்டின் இறுதியில் கரிச்சான்குஞ்சு மற்றும் எம்.வி.வி ஆகியோரது புத்தகங்களே இப்போது அச்சில் இல்லாமல் இருக்கிறது அவற்றை நாம் கொண்டு வர ஏற்பாடு செய்ய  வேண்டுமென்றும் அவர்களுக்காக கருத்தரங்கள் நடந்த வேண்டுமென்றும் சந்திக்கும் போதெல்லாம் பேசி பேசி திட்டமிட்டுக் கொண்டே இருந்தோம்.  அப்போது தொண்ணூற்றி இரண்டில் திடீரென கரிச்சான்குஞ்சு இறந்து விட்டார். பதற்றமாக இருந்தது. ஏதோ செய்ய தவறிவிட்டோம் என்பது போலவான ஒரு மனச்சங்கடம். உடனே கரிச்சான்குஞ்சுவின் வெளிவராத “காலத்தின் குரல்” என்ற புத்தகத்தை நண்பர் “புதிய நம்பிக்கை” பொன் விஜயன் மூலமாக வெளிக்கொண்டு வந்தோம். அப்போது அதில் பொதியவெற்பனும் கடைசியில் சேர்ந்துகொண்டார். கருத்தரங்கம் நடத்த முடியாத நாங்கள் கரிச்சான்குஞ்சுக்கான இரங்கல் கூட்டத்தை நடத்தினோம். அப்போது அவர் படத்தை திறந்து வைத்து அப்புத்தகத்தையும் வெளியிட்டார் எம்.வி.வி.
கும்பகோணம் காந்திபூங்கா எதிரில் உள்ள ஜனரஞ்சனி ஹாலின் கீழ்புற சிறிய அரங்கில் அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த நாளின் மதியத்தில் எம்.வி.வியின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கையும் நடத்தினோம். அசோகமித்திரன், கோவை ஞானி, கோமல்சாமிநாதன் ம.ராஜேந்திரன், மாலன், ப்ரகாஷ், மார்க்ஸ் போன்ற எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எம்.வி.வி. அந்த கூட்டத்தில் பேசிய இறுதி உரையின் கடைசி வரிகள் ரொம்பவும் நெகிழ்வானது, “நான் கல்லாப்பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையை கட்டி பூட்டி விட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (அதாவது முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்”. அதாவது இரண்டாயிரம் ஆண்டு நிகழப்போகிற தன் மரணத்திற்கு கிட்டத்தட்ட அவர் தொண்ணூற்றி இரண்டிலேயே தயாரான ஒரு மனநிலையில் இருந்தார். அவரது இந்த வார்த்தைகள் இவரது புத்தகங்களையும் தாமதமில்லாது உடனே கொண்டு வந்து விட வேண்டுமென எங்களைத் தூண்டியது.
பொதிய வெற்பனிடம் அப்போது அது பற்றி பேச அவர் எம்.வி.வியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ”இனி புதிதாய்” – என்ற தலைப்பில் ஒரு புத்தமாக கொண்டு வந்தார்.

வெளியிடப்படாத அவரின் காதுகள் நாவலின் கையெழுத்து பிரதி சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தில்  ஏழாண்டுகள் ஆக இருந்து கடைசியில் காணாமலே போய்விட்டது. எங்களுக்கும் எம்.வி.வி.க்கும் மிகச்சிறந்த நண்பராக இருந்த ஆசிரியர் கலியமூர்த்தியின் சலியாத தேடுதலால், அது மறுபடி கைக்கு கிடைத்தது. அதனை நான்

 

அன்னம் பதிப்பகம் மீராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். அவரும் ஒரு ஆறுமாதகாலத்துக்குப் பின் அதைப் படித்துப் பார்த்து அதன் தரமும் மேன்மையும் உணர்ந்து அதனை வெளியிட்டார். அந்நாவலுக்கான பொருத்தமான ஜாக்ஸன் போலக்கின் ஒவியத்தை அட்டைப்படமாக வடிவமைத்து தந்தார் தேனுகா. எங்களுக்கு இதல்லாம் சந்தோஷமான காரியங்களாக இருந்தது.

சவுத் ஏஷியன் பதிப்பகம் வழியாக “என் இலக்கிய நண்பர்கள்” – என்ற எம்.வி.வியின் கட்டுரை தொகுதியை கொண்டுவந்தோம். அதன் முன்னுரையில் கூட எங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார் எம்.வி.வி. இன்றும் காலச்சுவடு வழியாக சரிச்சான்குஞ்சு எம்.வி.வி. புத்தகங்களை கொண்டு வர நானும் தேனுகாவும் முன் முயற்சி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து கொண்டுமிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது ”பைத்தியக்காரப் பிள்ளையே” – சான்று என்று அசோக மித்திரானால் குறிப்பிடப்பட்ட எம்.வி.வி. வெளியில் வர இயலாத அவரது இறுதிகாலங்களில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்திக்க ஏங்கியவாறே இருந்தார். அதை உணர்ந்த நாங்கள் எந்த எழுத்தாளர் கும்பகோணத்துக்கு வந்தாலும் அவர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். அப்படித்தான் ஞானக்கூத்தன், எஸ்.வைதீஸ்வரன், பிரபஞ்சன், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, கோபிகிருஷ்ணன், வண்ணநிலவன், மீரா, திலகவதி, கோமல் சாமிநாதன் போன்ற பலரையும் நான் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவாறு இருந்தேன். நானும் தேனுகாவும் சராசரியாய் வாரம் ஒரு முறை அவரை பார்ப்பவர்களாக இருந்தோம். அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புகளும் எங்களுக்கு அமைந்தது.

அவர் வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சுற்றிய காலம் என்ற ஒன்று இருந்தது. அதற்குபின் எண்பதுகளின் துவக்கத்தில் கும்பகோணம் காந்தி பார்க்கின் திறந்த வெளியிலும் ஜனரஞ்சனி ஹாலின் சா துஷேஷய்யா நூலகத்திலும் நாங்கள் சிறுசிறு கூட்டங்களை நடத்தி அதில் எம்.வி.வியையும் கரிச்சான்குஞ்சுயையும் பேசவைப்போம். தங்கள் எழுத்துலக அனுபவங்களை அவர்கள் எங்களுக்கு கதை கதையாக சொல்வார்கள். இருவருமே வயசு வித்யாசமின்றி எல்லோரிடமும் இணக்கமாக பழகக்கூடியவர்கள். சில சமயம் அசட்டுத்தனமாக நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்வார்கள். சமயத்தில் ” வக்காள ஒழிகளா..” என்பது போன்ற வார்த்தைகள் கரிச்சான்குஞ்சு வாயிலிருந்து சகஜமாக வரும். எம்.வி.வியிடமிருந்து அப்படி கேட்க முடியாது. கரிச்சான்குஞ்சுவிடமிருந்து பரவசமும் குழந்தைத்தனமும், குதூகலமும், சிரிப்பும் பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்ளும். எம்.வி.வி. எப்போதும் நிதானமாக இருப்பார். எல்லாவற்றையும் கடந்த ஒரு ஞானியின் புன்னகையோடு சலனமின்றி இருப்பார் பல சமயம். கரிச்சான்குஞ்சு வாய்விட்டு எதிராளியின் மேலேகூட சமயத்தில் தட்டி  சிரிப்பார். எம்.வி.வியின் சிரிப்பு அடக்கமாக கட்டுக்குள் இருக்கும்.

வறுமையும் லௌகீக சிரமங்களும் மனஅழுத்தமும் இருக்கும் போதும் கூட எம்.வி.வி. ஒரு மெல்லிய புன்னகையோட இருந்திருக்கிறார். எந்த கஷ்டத்திலும் நண்பர்களிடம் அவர் கடன் வாங்கியதில்லை. நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அத வெளில சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரை குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும், பல்கடிச்சு தாங்கணும் என்பார். அவர் அவரது இந்த வார்த்தைகளுக்கு தக்கவே அவர் வாழ்ந்தார்.

வீட்டிலிருந்தபடியே தினமும் கொஞ்சம் கைகால் நீட்டி உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பூஜை அறையில் தினமும் சாமி கும்பிடும் வழக்கமும் இருந்தது. அதுபோலவே தினமும் முகச்சவரம் செய்து கொள்வதில் கவனமாக இருப்பார். புதிய புதிய சட்டைகளை அணிந்து கொள்வார். பவுடர் பூசிக்கொள்வார். முகம் எப்போதும் தேஜஸ்ஸாக இருக்கும். கணக்காக வாரிய தலைமுடி. திருநீறும் குங்குமமும் துலங்கும் நெற்றி. வெற்றிலை காவி ஏறிய பற்கள். பன்னீர் புகையிலை வாசம். தாம்பூலம் தளும்பும் இதழ்களின் கனிந்த சிரிப்பு. பார்த்தடவுடன் ஒரு மரியாதை தோன்றும் விதமாகவே அவர் எப்போதும் இருப்பார். பனியனோடு வீட்டில் அமர்ந்து இருக்கும் போதுகூட. ஒரு தத்துவ ஞானியின் பிரசன்னம்போல இருக்கும் அவரது இருப்பு.
“ திருக்கண்டேன் பொன்மேனிக்கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று…..”
அவர் தோற்றம் இந்த பேயாழ்வாரின் இந்த பாசுரத்தை எனக்கு நினைவூட்டும் சில சமயம். அதீத வறுமையிலும் செம்மாந்து புன்னகைத்த எம்.வி.வி. அந்த எழுத்தின் மூலமே அதை அடைந்தார் என்பதுதான் துயரம்.

பெரும் பட்டுஜரிகை வியாபாரியான அவர் வியாபாரத்தையும் மறந்து எழுதத்துவங்குகிறார். தேனி என்ற  இலக்கிய பத்திரிக்கையை துவங்கி முதலீடு போட்டு, தானே ஆசிரியராக இருந்து நடத்துகிறார். உதவி ஆசிரியர் அவரது அத்யந்த நண்பன் கரிச்சான்குஞ்சு. பேப்பர்காரனுக்கு பிரஸ்காரனுக்கு பைண்டிங் பண்றவனுக்கு நாம் கடன் சொல்ல முடியுமா? பணம் இல்லன்னு சொல்ல முடியுமா? எழுத்தாளன் மட்டுமென்ன விதிவிலக்கு என்று, நாற்பதுகளில்  தேனியில் எழுதியவர்களுக்கு இருநூறு ரூபாய் சன்மானம் தந்துள்ளார். இவ்வளவு பணம் வருகிறதே என்று இரண்டு பெயரில் அதில் எழுதிய எழுத்தாளர்களும் உண்டு என்பது இதில் இன்னொரு சுவாரஸ்யம். அந்தகாலத்தில் கிட்டத்தட்ட அந்த ஒரு வருஷத்தில் முப்பதாயிரம் ரூபாய் இந்த பத்திரிக்கையால் நஷ்ட்டம் அடைந்துள்ளார் எம்.வி.வி. இந்த காலமதிப்பில் அது எத்தனைலட்சம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அந்த பத்திரிக்கை நடத்தியதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் ஒரு தனி நாவலுக்குரியது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். மௌனியின் கதை ஒருமுறை பிரசுரத்திற்கு வந்ததாகவும் அதில் ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக். கமா, புல்ஸ்டாப் ஏதுமில்லை கிளாரிட்டி இல்லை. ஆனால், எல்லாவற்றையும் மீறி, நெளிநெளிகோடுகளால் ஆன, நுட்பமான வேலைப்பாடு கூடிய, மனச்சித்திரங்கள் அவை என்று சிலாகித்துச் சொல்வார். அந்த தேனி பத்திரிக்கைகாக பேப்பர்கூட வாங்கத்தெரியாமல் பேல் கணக்கில் ஆர்டர் கொடுக்க அது வீட்டில் வந்து இறங்கியுள்ளது. ஒரு நாள் அந்த பத்திரிக்கைக்காக பேப்பர் நறுக்க பேலை உருட்ட, அது வாசல் வரை ஓடி பரந்து விரிந்து கிடந்திருக்கிறது. அந்த நேரத்தில் இவரிடம் ஜரிகை வாங்க வந்த குஜராத் சேட், அந்த பேப்பரின் மேல் நடந்து இவரை வந்து அடைகிறார். இந்த பித்து உள்ள உன்னால் இனி வியாபாரம் சரியாக செய்ய முடியாது என்று, அன்றே அவருடனான எல்லா வியாபார உறவுகளையும் முறித்துக்கொள்கிறார். பின், மெல்ல ஷீணமடைந்து முடிவுக்கு வருகிறது அவரது வியாபாரம். அதன் பின்னான வறுமையும் மன அவசங்களும் அவரை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வந்திருக்கிறது. இருபத்திஏழு வருஷங்கள் அவரது காதுகளில் நாரசமான விநோதமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அதனோடுதான் நான் வாழ்ந்தேன் கடைசியில் என் குருநாதன் முருகன் திருவருளால்தான் அந்த துயரங்களிலிருந்து மீண்டேன் என்று சொன்னார். காதுக்குள் யாரோ அமர்ந்திருப்பது போலவும் திட்டுவது போலவும் சிரிப்பது போலவும் அழைப்பது போலவுமான, அமானுஷ்ய குரல்கள் அவரை ஆட்டிப்படைத்திருக்கிறது. அந்த அனுபவத்தின் வழியே அவர் கண்டடைந்த நாவல்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற காதுகள் நாவல்.

அந்த நாவலை பல எழுத்தாளர்களால்கூட சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. மருத்துவர்கள் இது ஒரு ஹாடிட்ரி ஹல்யூசினேஷன் சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தி அதுபற்றிய விஷயங்களைச் சொன்ன பிறகே அந்த நாவல் குறித்து பலருக்கும் புரிந்தது.
சிறுகதை நாவல் குறுநாவல் கட்டுரை மொழி பெயர்ப்பு குழந்தை இலக்கியம். நாடகம் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக்குவித்த எம்.வி.வி. தனது வாழ்நாளில் சராசரியாக அவரே சொன்னபடி ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதியுள்ளார். இவ்வளவு எழுதிய எம்.வி.விக்கு அவரது கடைசி பத்து ஆண்டுகளில் ரைட்டர்ஸ்கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாமல் ஆனது.

என்ன ரவி எம்.வி.வி. கையெழுத்து இப்படி இருக்கு என்று கேட்ட மீராவுக்கு நான் எழுதிய பதில் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தேன்.
எழுதி எழுதிச் சோர்ந்த விரல்கள்
இப்போது கையெழுத்திடவும் நடுங்குகிறது
இ.சி.ஜி. கிராப் போல. என்று

பட்டாடை நெய்யும் சௌராஷ்ட்டிரர்கள் சமூகத்தில் பிறந்த அவரது வாழ்வில் பட்டின் மினுமினுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. அவரது பால்ய காலத்தின் சில வருஷங்கள் தவிர. அந்த பால்யகாலத்திலும் அவருக்கு இன்னொரு அவஸ்தை நிகழ்ந்தது. தனது சொந்த அப்பா அம்மாவால் அவரது தாய்மாமனுக்கு சிறுவயதிலேயே தத்து கொடுக்கப்பட்டவர் எம்.வி.வி. மாமாவை அப்பா என்றும் அத்தையை அம்மா என்றும் அழைக்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது அத்தை இவ்வளவு செலவு பண்ணி உன்னை தத்துஎடுத்தேனே அம்மா என்று கூப்பிட மாட்டேன் என்கிறாயே அம்மா என்று கூப்பிடு என்று சொல்லி தண்டிக்கிறார். வாய் அம்மா என்றாலும் மனம் ஒட்டாமல் தத்தளிக்கிறார் வெங்கட்ராம். அவரது மன அழுத்தத்தில் துவக்கப்புள்ளி இது என்று சொல்லலாம்.

இவ்வளவுக்கு மத்தியில் சுவாரஸ்யமான பல அடுக்குகளை கொண்டது அவரது வாழ்க்கை. அப்பா அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடிஸ்வர வாழ்க்கை. பதிமூன்று வயதில் எழுத்ததுவங்கியது. பதினாறு வயதில் மணிக்கொடியில் சிட்டுக்குருவி என்ற கதை பிரசுரம். பி.ஏ. பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கி கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கிய புலமை. இளம் வயது திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம். நாற்பத்தெட்டில் தேனி பத்திரிக்கை துவங்கியது. பத்திரிக்கையில் நஷ்டம், அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியாக சிலகாலம். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு காலம். இந்த அனுபவங்களும் கூட இல்லாவிட்டால் எழுத்தை தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில் என்பார் எம்.வி.வி.
கரிச்சான்குஞ்சு கவனிக்கப்படாதது போலவான ஒரு விஷயம் எம்.வி.விக்கு முழுவதுமாக நேர்ந்து விடவில்லை. ”என்னய்யா இந்த ஊரை இப்படிக்கொண்டாடுதேய்யா அவரை” – என்று லா.ச.ரா. குறிப்பிடும்படி ஆனது அந்திமக்காலங்களில் அவர் மீது குவிந்த கவனம்.
அவர் சௌராஷ்ட்டிர மொழியில் எழுதி இன்னும் வெளிவராத புத்தகம் மீ காய் கரு. தமிழில் அதன் அர்த்தம் நான் என்ன செய்யட்டும்.

கடைசியாக வந்த அவரது புத்தகம் எம்.வி.வியின் கணிசமான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. அதை மிகுந்த பிரியத்தோடும் பொருளாதார சிரமத்தோடும் பாவைச்சந்திரன் வெளியிட்டார். அதில் பிழைகள் திருத்தும்வரை பார்வை சரியாக இருந்தது எம்.வி.விக்கு. அந்த புத்தகம் முழுமைப்பெற்று வரும் போது அதைப்பற்றி அவரது காதில் சத்தமாக கத்தி சொல்ல வேண்டியிருந்தது. அட்டைப்படத்தில் சிரித்தபடி இருக்கும் அவரது புகைப்படத்தை தன் கைகளால் மட்டுமே தடவிப்பார்த்துக் கொள்ள முடிந்தது அவருக்கு.
கேட்காத காதுகளோடும் பார்க்க முடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் குமிழிகளோடும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை. இயன்ற வரையில் நினைவுதப்பாமல் இருந்த வரையில் எல்லா கஷ்டங்களையும் மீறி கைமாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்து கொண்டே இருந்தார். தன் நடுங்கும் விரல்களால்.

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 – ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

பொருளடக்கம்
1 வாழ்க்கைக் குறிப்பு
2 எழுதிய நூல்கள்
2.1 புதினங்கள்
2.2 சிறுகதைத் தொகுதிகள்
2.3 குறுநாவல்கள்
2.4 கட்டுரைத் தொகுப்புகள்
3 விருதுகள்
4 வெளி இணைப்புகள்

வாழ்க்கைக் குறிப்பு

1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் “தேனீ” என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். ‘தேனீ ‘ இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.

பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான் நூல்கள் இவை. மொத்தக்கூலிக்காக இவற்றை எம்.வி.வெங்கட்ராம் எழுதினார். இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன

மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறைந்தார்

எழுதிய நூல்கள்

புதினங்கள்

நித்தியகன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ
காதுகள்
சிறுகதைத் தொகுதிகள்
குயிலி (1964)
மாளிகை வாசம் (1964)
வரவும் செலவும் (1964)
மோகினி (1965)
உறங்காத கண்கள்(1968)
அகலிகை முதலிய அழகிகள் (1969)
இனி புதிதாய் (1992)
எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் (1992)
முத்துக்கள் பத்து (2007)
பனிமுடி மீது கண்ணகி

குறுநாவல்கள்

நானும் உன்னோடு மற்றும் 6 குறுநாவல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

என் இலக்கிய நண்பர்கள்
நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40-க்கும் மேற்பட்ட நூல்கள்)

ஆனந்த விகடனில் 1970களில் “நஞ்சு” என்ற தொடர் நாவலை எழுதினார். “பாலம்” என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் “காதுகள்’ நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு “காதுகள்’ புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. “வேள்வித்தீ” என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.

விருதுகள்
சாகித்திய அகாதமி விருது (காதுகள், 1993)
தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)
சித்த சூரி ரத்ன விருது
லில்லி தேவசிகாமணி விருது
சாந்தோம் விருது
புதுமைப்பித்தன் சாதனை விருது

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

எம். வி. வெங்கட்ராம் - தமிழ் ...

மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் கும்பகோணம் வாசி. பொருளாதாரப் பட்டம் பெற்றவர், பட்டு ஜரிகை வியாபாரம் நடத்திய பிறகு முழுநேர எழுத்தாளர் ஆனவர்.  இவர் தாய்மொழி   சௌராஷ்டிரம்.  தனது 16 வயதில் ‘மணிக்கொடி’ இதழில் கதைகள் எழுதத் துவங்கினார். கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார்.

இவரது நாவல்களில் மிகவும் பேசப்பட்டவை  சாகித்ய அகடமி விருது பெற்றுத் தந்த “காதுகள்” மற்றும் “நித்ய கன்னி”. அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன. “தேனீ” என்கிற பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலத்தில் இருந்து பல மொழி பெயர்ப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் என பல நூல்கள் வந்துள்ளன. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ‘பைத்தியக்காரப் பிள்ளை’ தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலர் கணித்துள்ளார்கள்.

* * * * * * *

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை என்னும் கதை ….

கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும்.

என்று தொடங்குகிறது..

22 வயது (அதாவது அந்தக்கால திருமணவயதில்) இருக்கும் சந்திரனைப் பற்றி அவன் தந்தை சொல்வதாக கதை அமைகிறது.  சட்டம் படித்திருந்தும் வக்கீல் தொழிலில் விருப்பம் இல்லாததால் அப்பாவின் வியாபாரத்திலும் விவசாயத்திலும் துணை புரிந்துவரும் சந்திரன், தனது திருமண விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறான்.

கல்லூரி நாட்களில் ‘கதை எழுதும் பைத்தியம்’ பிடித்து பல எழுதத் தொடங்க, ‘சில பல’ கதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகிறது. கல்லூரியை விட்டு வெளிவந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கட்டுமா என்று தந்தையிடம் கேட்டுவிட்டு ‘ராகம்’ என்னும்  பத்திரிகையும் நடத்துகிறான். மற்ற பத்திரிகைகள் சந்திரனையும் அவன் பத்திரிகையையும் புகழ்கின்றன.  

 பத்திரிகை தொடங்க  தடை சொல்லாத, மகனை பிறர் புகழ்வதில் மகிழ்ச்சி அடைந்த தந்தை  ஆறு மாத ‘இலக்கியத்தின் விலை’ ரூபாய் ஐயாயிரம் என்று அறிந்துகொண்டு திடுக்கிடுகிறார்.   

அது சரி, கணக்குப் பார்த்தாயா?

அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல என்றான் அவன் உணர்ச்சியோடு.

லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங்களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?

பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? ராகத்துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?

பத்திரிகையை நிறுத்திவிட்டாலும் எழுதுவதும் அவை பிரசுரமாவதும் பத்து இருபது சன்மானம் வருவதும் தொடர்கிறது.

தந்தையின் பார்வையில் அவர் பையன் நல்லவன்- நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியவன்- புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவன். பெண்களுடன் -சகஜமாகப் பழகுகிறவன்-சீட்டாடத்தின் நான்கு ஜாதிகள் தெரியாதவன்- தந்தையுடன் நண்பன்போலப் பழகுகிறவன். எல்லாம் சரிதான். கல்யாண விஷயத்தில் மனம் விட்டு பேசவில்லையே!

தன்  மகன்  மகாலட்சுமியை  திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அப்பா விரும்புகிறார்.  ‘அடி வயது முதல்’ நண்பனின் மகள் அவள். இரு குடும்பங்களும் நெருங்கிய நட்பில் இருந்தார்கள். சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டு இரு நண்பர்களும் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டிருந்தார்கள். மகாலட்சுமியின் தந்தை  இறந்தவுடன் சந்திரனின் அப்பா அந்தக் குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்ள சந்திரனுக்கு இஷ்டம் இல்லை. இருவரும் நன்றாகப் பழகும்போது ஏன் அப்படி  என்று தந்தைக்குப் புரியவில்லை. ஒருநாள் மகனைக் கண்டித்து கேட்டுவிடுவது என்று தீர்மானிக்கிறார். சந்திரன் வரும்போது இளையமகன்  மூன்று வயது  குருமூர்த்தியுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.  

இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். …………  கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி.

சந்திரனை நேரடியாக கேட்கத் தொடங்குகிறார். திருமணத்திற்கு நாள் பார்கலாமா என்று கேட்டுவிடுகிறார். மகனோ மகாலட்சுமியே வேண்டாம் என்கிறார்.

 ‘கறுப்பாயிருக்கிறாள்’, ‘ஒண்ணரைக் கண்’, ‘சதா நாட்டியம் ஆடுகிறாள்’, ‘ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள்’என்றெல்லாம் குறைகாண முடியாத பெண்ணை ஏன் வேண்டாம் என்கிறான் எனக் கேட்டுவிடுகிறார். இரண்டு நாட்களில் சொல்வதாக சந்திரன் பதிலளித்து விடுகிறான்.

ரகுராமனும் என்கிற நண்பரும் மகாலட்சுமியும் மறுநாள் மதிய உணவிற்காக வருகிறார்கள் என்பதால்  தந்தையை வீட்டிலிருக்க வேண்டும் என சந்திரன் கேட்டுக்கொள்கிறான்.   காலையிலேயே மகாலட்சுமியின் முகத்தில் கண் விழிக்கிறார் தந்தை. சந்திரனும் இன்னொரு இளைஞனும் வாசலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞன் தான் ரகுராமனாம்.

அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது.

இருவரும் சென்றதும் ரகுராமன் எப்படி என்று தந்தையிடம் விசாரிக்கிறான் சந்திரன்.  

 என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான் என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக.

அப்படிச் சொல்லுங்க அப்பா! என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.

இது என்ன அற்ப சந்தோஷம்?

ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.

நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே என்றேன் சிரித்துக்கொண்டே.

இருக்கிறதே!

பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை…”

பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!

தந்தைக்கு அதிர்ச்சி. மகாலட்சுமி படித்தவள் மட்டுமல்ல பிறவி மேதையும் கூட என்கிறான் ரகுராமன் அவள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறான். அவளைச் சந்திக்கப்போவதே ஏதேனும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தானாம்.

அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்

உனக்குக் கல்யாணம் வேண்டாம் எனச் சொல்லப்போகிறாயா என்ற கேள்விக்கு, அப்பா பார்த்துச் சொல்லும் பெண்ணை மனம் புரிந்துகொள்ளத் தயார் என்கிறான் சந்திரன். பிறகென்ன?

குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந்தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.

இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.

என்று கதை முடிகிறது.

* * * * * * *

எளிய நடை, தந்தை மகன் உறவின் அன்யோன்னியம், கரிசனம், இயல்பான உரையாடல்கள் ஆகியவற்றை கதையினைப் படிக்கும்போது உணர முடிகிறது.

  18.05.2020 அன்று இவரது நூற்றாண்டு தினம். சாகித்ய அகடமி விருது ஏற்புரையில் சில வரிகள்

அகாதெமி விருது பெறும் காதுகள் என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

 

 

குவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்

Food History Jottings: Charles Carter's 1730 Prunella and Tamarind ...

நன்றி: அழியாச்சுடர்

அப்பா வெளியூருக்குப் போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப் புளிய மரத்தை ஒரு தடவை பார்த்துக் கொள்வார். ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமான மரம் அது. அடியில் பன்றி அடைந்து உரம் கொடுக்க ஊர் பூராவிலும் உள்ள மரங்களில் செழித்துக் கொழித்து நிற்கும் அது. அப்பாவுக்குச் சொந்தமான மரம்.

ஒரு செவ்வகவாக்கில் ஐந்து மைல் விஸ்தீரணத்தில் ஆறு சின்னக் கிராமங்களிலும் இந்தத்gandharvanதாய்க் கிராமத்திலும் அப்பாவுக்கு நிலங்களுண்டு. அத்தனை நஞ்சை புஞ்சை வீடு மரங்களிலும் அப்பாவுக்கு ரொம்பப் பிடித்தமானது இந்த புளியமரம்தான். வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு குன்று பச்சையாய் நிற்பது போலிருக்கும். அருகில் வந்து அண்ணாந்து பார்த்தால் ஆயிரங்கிளையோடு அடர்ந்து அந்த மரத்திற்குள் ஒரு தோப்பு அசைந்தாடுவது போலிருக்கும்.

எண்ணெய் பூசியதுபோல் வழுவழுவென்றிருக்கும். சிமிண்டுத் திண்ணையில் பகல் பூராவும் அப்பா உட்கார்ந்திருப்பார். நாலு பண்ணையாள்களுக்கும் அஞ்சு கிராமத்துக் குத்தகைக்காரர்களுக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உத்தரவுகள் போகும். எப்போதாவது பர்மாக் குடையை விரித்து நடப்பார்.  ஒரு நாளைக்கு இத்தனை தடவை என்று எண்ணிவிடலாம் இறங்கி நடப்பதை.

அப்பா நடந்திருக்க வேண்டிய நடையெல்லாம் தாத்தா நடந்திருந்தார். சமஸ்தானத்தில் தாத்தா இந்தப் பிரதேசத்தின் பேஷ்கார்.

மஹாராஜா இந்தப் பக்கமாய் ஒரு முறை திக் விஜயம் செய்தபோது தாத்தா ஒவ்வொரு வேளை விருந்தையும் ஒரு உற்சவமாய் நடத்தியிருக்கிறார். மஹாராஜாவின் நாக்கு அது வரை அறிந்திராத ருசியும் பண்டமும் விருந்துகளில். பரிவாரங்கள் தங்கள் வயிறுகளைத் தாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய நிலை.

மரியாதை காட்டி வெகுவாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்த தாத்தாவை அழைத்து விரலை அவ்வப்போது நீட்டிக் கொண்டே வந்தார் மஹாராஜா. பின்னால் அந்த நிலங்களெல்லாம் தாத்தாவுக்குச் சமானமாய் வந்தன.

தாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து எட்டு நாட்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆட்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுது கொண்டிருந்த குடியானவர்களை நிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மஹாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார். அடிதடிகளும் நாலு கொலைகளும் நடந்ததாகப் பேச்சுண்டு.

தாத்தா வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டுப் போனார். எந்த ஊரில் யாரு வீட்டிலிருக்கிறார், ராத்திரி எத்தனை மணிக்கு வருவார் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. உள்ளூரில்தான் தங்கியிருக்கிறார் “ஒரு வீட்டில்” என்பது போல் நக்கலாக ஒருவர் சொல்ல “அதெல்லாமில்லை சிறைக்குளமோ பண்ணந்தையோ கீரந்தையோ எங்கேயிருக்காகனு யார் கண்டா” என்று அழுத்தமாய் அடுத்த ஆள் பேசிவிடும்.

சில சமயம் விடியற்காலைகளில் சிவந்த கண்களோடு வந்து சேர்வாராம். வந்ததும் பரபரவென்று வீட்டு ஆள்கள் ஒரு அண்டா நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து வாசலில் வைப்பார்கள். குளிரக் குளிரக் குளித்து வேட்டி துண்டை நனைத்துப் போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைவாராம்.

தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு அப்பா நடக்கையிலே மஹாராஜா இந்தியப் பிரஜையாகிவிட்டார். சாசனங்களையும் பட்டயங்களையும் அப்பா கையில் ஒப்படைத்துவிட்டுத் தாத்தா கிழக்குக் காட்டில் எரிந்தபோது முதல் தேர்தல் முடிந்து ஓட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த நேரம்.

கிராமங்களில் நீண்டு கிடந்த புஞ்சைகளை அப்பா அந்தந்த கிராமத்துக்குப் பெருங்குடியானவர்களிடம் வாரத்துக்கு விட்டு விட்டார். செவற்காட்டுப்பனைகளைப் பாட்டத்துக்கு விட்டார். தை மாசியில் வீட்டு மச்சிலும் குளுமைகளிலும் பட்டாசாலையிலும் நெல்லும் கம்பும் வரகும் கேப்பையும் ஒரு புறமாகவும் மிளகாய்,போலிருக்கும். ஒவ்வொரு தடவையும் பெட்டியைத் திறந்து மூடிவிட்டுத் திண்ணையில் உட்கார்கையில் அப்பா முகத்தில் வேர்வையும் அதிருப்தியும் தெரியும்.

ஊர்க்கோடி புளியமரம் தளதளவென்று நிற்கிறது. அதிலிருந்துதான் வருசத்திற்குண்டான புளி வருகிறது. ஆனால் ஒப்படைத்து விட்டுப் போன சாசனங்கள் பத்திரங்கள் எதிலும் ஏன் ஒரு சின்னத் துண்டு காகிதத்தில் கூட இந்த மரத்தைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.

ஒரு நாள் சுப்பையா மாமா அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேச்சுவாக்கில் “மண்டபத்து மல்லி, மண்டபத்துப் புளி ரெண்டுக்கும் சமமா ஒலகத்திலெ எங்கேயும் கிடையாது” என்று சொல்லிவிட்டார். அப்பா இதைக் கேட்டதும் அம்மாவைக் கூப்பிட்டார். “அந்தக் கொறட்டுப் புளியிலே கொஞ்சங் கொண்டாந்து மாப்பிள்ளட்ட குடு” என்று சொல்லிவிட்டு, “இன்னைக்குக் குழம்பு ஒங்க வீட்டிலெ இந்தப் புளியிலெ. விடிய வந்து சொல்லுங்க மாப்பிள்ளை, மண்டபத்துப் புளி ஒசத்தியா; கொறட்டுப் புளி ஒசத்தியானு”

மறுநாள் சுப்பையா மாமா திண்ணையில் வந்து உட்கார்ந்ததும் சொன்னார். “இந்தக் கொறட்டுப் புளிக்குச் சரியா  மண்டபத்துப் புளியும் நிக்காது; மதுரைப் புளியும் நிக்காது!”

‘கொறட்டுப் புளி’ என்று அப்பா சொல்வது ‘குறவீட்டுப்புளி’ என்பதன் சுருக்கம். ‘குறவீடு’ என்று வருகிற எதையும் வேறு மாதிரித்தான் சொல்வார். அப்படிப் பேசி முடித்ததும் எதையோ மறைத்துத் தப்பித்து விட்ட திருப்தியில் பலர் முன்னிலையில் தன்னை மறந்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்.

ஆள்பத்தி அறையின் இரும்புப் பெட்டியைத் திறந்து சாசனங்களையும் பத்திரங்களையும் பார்த்து முடித்த சில சமயங்களில் அப்பா திண்ணையிலிருந்து இறங்கிக் குடையை விரித்தும் விரிக்காமலுமாய் ஓடப் போகிற மரத்தைக் கயிறு போட்டு வைக்கப் போவது போல் ஓடுவார். கொழுந்து விடும் நேரம், பூப் பூக்கும் நேரம், பிறை பிறையாய்ப் பிஞ்சு விடும் நேரங்களில் இப்படிப் போய் மரத்தடியில் நிற்பார்.

“அய்யா மகன் வந்திருக்கார் விலகுலெ” என்று சத்தம் போட்டு, வேடிக்கை பார்க்க வரும் குறவீட்டுப் பிள்ளைகளைச் சேரிக் கிழவர்கள் விரட்டுவார்கள். மரத்தடியில் அடைந்து கிடக்கும் பன்றிகளை விரட்டி மேட்டுப்பக்கம் கொண்டு போவார்கள். பன்றிக் கழிவுகளைத் தள்ளி ஒரு புறமாய் ஒதுக்குவார்கள்.

மற்றக் குடிசைகளிலிருந்து விலகி ஒரு குடிசை மரத்திற்கு வடக்கில் தனியாய் உண்டு. வெளியில் உண்டாகும் சேரி அசுத்தங்கள் அந்தக் குடிசையருகே வந்துவிடாதவாறு சுற்றி ஒரு தீ வட்டம் நின்று காப்பதுபோல் பளிச்சென்றிருக்கும்.

அப்பாவின் குரலைக் கேட்டதும் குடிசைக்குள்ளிருந்து ஒரு கிழவி கண்ணில் பூ விழுந்து பார்வை தெரியாமல் கம்பூன்றி வெளியில் வருவாள். குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் ஆகாயத்திலிருந்து வந்து பிறந்ததுபோல் கிழவியின் மகள் தாத்தா ஜாடையில் தாத்தா நிறத்தில் வந்து நிற்பாள். அப்பாவுக்கும் அந்தப் பொம்பிளைக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசமிருக்கும்; சின்னவள்.

அந்தப் பொம்பிளையும் அவள் புருஷனும் பிள்ளைகளும் குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் நிற்பார்கள். கிழவியும் மகளும் அப்பா பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வாஞ்சையோடு கேட்பார்கள். அப்பா புறப்பட்டுப் போகும் போது அந்தப் பொம்பிளை அவர் பார்க்கும்படி முன்னே வந்து குப்பைக்கூளங்களைக் காலால் தள்ளி வழி செய்வாள். இவர்களின் இந்தச் செய்கைகளால் அப்பா தடுமாறி நடப்பார். வீடு வரும்போது மறுபடி முகம் மாறி வந்து சேர்வார்.

வெகுநேரம் யோசனையில் கிடப்பார். கணக்குப் பிள்ளையைக் கேட்டு விடலாமென்று அப்பாவுக்குப் பலமுறை தோன்றியதுண்டு. இந்த மரம் நிற்கும் நிலம் யாருக்குச் சொந்தம் என்று அவரிடம் கேட்கலாம். தன் பெயருக்கே ரசீது போடச்  சொல்லலாம் வரி கட்டியதாக. ஆனால் மரம் இருக்கும் இடம் நம் பெயரிலில்லை என்று கணக்குப்பிள்ளைக்கு நாமே சொல்லிக் கொடுத்தது போலாகிவிடும். சொத்து விஷயத்தில் அவசரப்படக்கூடாது. போகிற வரை போக வேண்டும். அப்பா, கணக்குப் பிள்ளைக்குச் சொல்லி விடும் ஞாபகம் வந்து ஒவ்வொரு முறையும் நிறுத்தி வைத்தது போக அந்த எண்ணத்தையே சில நாளில் மறந்து விட்டார்.

வருசா வருசம் புளியம்பழ உலுக்கல் அப்பா முன்னால் விமரிசையாய் நடக்கிறது. மூடை மூடையாய்ப் புளி வீட்டுப் பட்டாளத்துக்கு வருசத்து. புளியம்பழ உலுக்கலுக்கு முதல் நாளே அப்பா ஆள் சொல்லி விடுவார். மறுநாள் காலை அப்பா போகுமுன்னால் பன்றிக் கழிவுகளைக் கூட்டிப் பொட்டலாக்கி வைத்திருப்பார்கள்.

அப்பா பத்து ஆள்களோடும் ஒரு கட்டுச் சாக்குகளோடும் வெயில் வந்ததும் வருவார். வருசா வருசம் இது ஒரு சடங்கு போல் நடக்கும். உலுக்கலுக்கு முன் கிழவியின் மகள் கிழவியின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து மரத்தருகில் நிறுத்துவாள். கிழவி மரத்தைத் தொடுவாள்; தடவுவாள்; கும்பிடுவாள். குருட்டுக் கண்ணிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வடியும். மகள் மெல்லக் கிழவியை அகற்றி அழைத்துக் கொண்டு குடிசைப் பக்கம் போவாள்.

அப்பா இவைகளையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் நிற்பார். சீக்கிரமாய் இந்தச் சடங்கு நடந்து முடியவேண்டுமென்பது போல் பொறுமை இழப்பார். இது முடிந்ததும் பலசாலிகளாயுள்ள எட்டு பேர் திசைக்கு ஒருவராய் ஒரே நேரத்தில் கிளைகளில் ஏறி மேற்கொப்பைப் பிடித்துக் கொண்டு கூத்தாடுவார்கள்.

பழங்கள் உதிர்ந்து சடசடவென்று சத்தங்கிளப்பும். குற வீடுகளின் சின்னப்பிள்ளை எதுவும் பழம் பொறுக்க நடுவில் நுழைந்தால் மண்டையிலடிக்கும். ஒரு பழமே ரத்தம் கசிய வைத்துவிடும்.

மொத்தக் கிளைகளையும் உலுக்கியபின் அப்பா மரத்தைச் சுற்றி வந்து மேல் நோக்கிப் பார்வையிடுவார். ஒரு கிளை விட்டுப் போயிருந்தாலும் அவர் பார்வைக்குப் பட்டுவிடும். எல்லாமும் உலுப்பி முடிந்தவுடன் பத்துப் பேரும் பழங்களை வாரிக் கட்டுவார்கள்.

ஒரு சின்னக் குவியலை அப்பா காலாலேயே குவித்து ஒதுக்குவார். அந்தப் பொம்பிளை வந்து அள்ளிக் கொள்ளும். அள்ளும்போது அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும். மூடைகளை வண்டியிலேற்றி வீட்டில் கொண்டு வந்து இறக்குவார்கள். ஒரு வாரம் முற்றத்தில் காயும். அப்புறம் பதினைந்து பேர்கள் பட்டாசாலையில் உட்கார்ந்து உடைப்பார்கள். மறுபடியும் முற்றத்துக்குப் போகும். அப்புறம் சால்களில் அடையும்.

ஒரு வருசம் உலுக்கலில் போது கிழவி மரத்தைத் தொட்டு அழுது கொண்டிருந்தபோது மகள் புருசன், “ஒங்க ஆத்தாளை இங்கிட்டுக் கூப்பிடு. அசிங்கமாயிருக்கு; சனம் பூராவும் வேடிக்கை பார்க்குது” என்று கோபமாய்ச் சொன்னான். அந்த பொம்பிளை தயங்கியது. “கூட்டிட்டு வரப்போறியா இல்லையாடி” என்று எல்லோருமிருக்கக் காலால் ஒரு உதை விட்டான். ஓடிப்போய்க் கிழவியை இழுத்துக் கொண்டு வந்தாள். அன்று அப்பா காலால் தள்ளிக் குவித்திருந்த புளிக்கு முன்னால் வந்து அவன் “இதையும் அள்ளிக்கிட்டுப் போயிருங்க” என்றான்.

அவன் கை காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. அப்பா சற்றுக் கலங்கிப் போனார். விட்டுக் கொடுக்காமல் “இதையும் அள்ளிக் கட்டுங்கடா” என்று சொல்லிவிட்டு நடந்தார். அன்று ஒரு பழம் விடாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. அடுத்த வருசம் வழக்கம் போல் மறுநாள் புளியம்பழம் உலுக்க வரப் போவதாகச் சொல்லியனுப்பியிருந்தார் அப்பா. மறுநாள் பத்துப் பேரோடு மரத்தடிக்குப் போகையில் தரையெங்கும் பன்றிக் கழிவுகள் எங்கும் அசிங்கமும் நாற்றமும்.

கயிற்றுக் கட்டிலில் கிழவி உட்கார்ந்திருந்தாள். யாரோ வம்பாய் உட்கார்த்தி வைத்திருப்பது போலிருந்தது. அந்தப் பொம்பிளை புருஷனோடும் பிள்ளைகளோடும் நின்றாள். அப்பா அந்தப் பெண்ணைக் கடுமையாகப் பார்த்தார். “என்ன இதெல்லாம்?” என்று அதட்டினார். சொல்லி வைத்ததுபோல் யாரும் வேலை வெட்டிக்குப் போகாமல் குறவீட்டு ஆள்கள் மொத்தமும் கூடியிருந்தது.

அந்த பொம்பிளை “இனிமேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன்.” “இதிலே எனக்குப் பாத்தியதை உண்டு…” என்று பேசத் துவங்கியது. அப்பாவுக்குக் கால் நடுங்கியது; உதடு கோணியது. “போதும் போதும் பேச்சை நிறுத்து” என்று அதற்கும் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப்போவதைப் பதறிப்போய் நிறுத்தினார். கயிற்றுக் கட்டிலின் மேல் அந்தக் கிழவி நிச்சலனமாய் உட்கார்ந்து இருந்தாள்.

கூட்டி வந்த ஆள்களைத் திருப்பியழைத்துக் கொண்டு தலையைச் சாய்த்துக் குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார். அதற்கப்புறம் அப்பா ஆள்பத்தி அறைக்குள் நுழைந்து பெட்டியைத் திறந்து சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவே இல்லை

எல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ஒரு மாமியாரின் ஆதங்கம் - வாழ்க்கை ...

 

காலை வேளையில் ஒரு பெண்மணி பரபரப்புடன் வந்தாள். எங்களது மனநல நிலையம் காவல்நிலையத்தில் அமைந்திருந்தது. குறிப்பாகப் பெண்களுக்கு, மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைக்காக. புகார்களில் மனநலம், குடும்ப நலம் சார்ந்த ஏதேனும் கண்டறிந்தால் போலீசார் சம்பந்தப்பட்டோரை எங்களிடம் அனுப்பி வைப்பார்கள். நாங்கள்  காவல்துறையினருக்கு அளித்த மனநலம், உளவியல் பயிற்சியைப் பின்பற்றித் தான் காவல்துறையினர் அந்த பெண்மணியிடம் எங்களை அணுகப் பரிந்துரை செய்தார்கள்.

 

அன்று வருவோரைப் பார்ப்பது என்னுடைய பொறுப்பு. வந்ததுமே  அவள்  தன்னை பெயரைச் சொல்லி, நிலைமையை அவசரமாக விவரித்தாள் . அவள் ஐம்பது வயதுள்ள ஸ்வஜிதா, கணவன் கிரி பெரிய துணி வியாபாரி, வீட்டை நிர்வாகம் செய்வதுடன் அவ்வப்போது கணவருக்கு உதவி செய்பவள். வாரா வாரம் லேடீஸ் க்ளப் விரும்பிப் போவாளாம். மகன் சந்தோஷ், வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான்.

 

மகள் சசி. எட்டு மாதத்திற்கு முன் கல்யாணம் ஆனது. அவள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து, ஒரு மல்டி நேஷனல் நிர்வாகத்தில் இளம் வயதிலேயே டீம் லீடாக இருந்தாள். நல்ல சம்பளம். அவளுடைய கணவர் கிருஷ்ணா எம்.டெக் செய்து அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலையிலிருந்தார். அவருடைய பெற்றோர்கள் அவர்களுடன் இருந்தார்கள்.

 

ஸ்வஜிதா, தான் வந்தது தன் மகள் சசியின் மாமியார், மாமனார் பற்றிப் புகார் கொடுக்கத் தான் என்றாள். புகார் தருவதில் மிக உறுதியாக இருந்தாள். காவல்துறையினர் அவள் தவிப்பைப் புரிந்து கொண்டு, அவள் மனநிலையை அடையாளம் கண்டு எங்களிடம் அனுப்பி வைத்தனர்.

 

இந்த மாதிரியான தருணங்களில் எங்களுக்கும் காவல்துறை மீதான மதிப்பு கூடியது. அவர்களுடன் கைகோர்த்து வேலை செய்யும் வாய்ப்பு மேம்பட, பயிற்சிகளை எவ்வாறு விஸ்தாரமாக்குவது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

 

சசியின் மாமியார,-மாமனார் அவளைத் துன்புறுத்துகிறார்கள் என்பது  ஸ்வஜிதாவின் முறையீடு. காவல்துறை அவர்கள் இருவரையும் “குடும்ப வன்முறை” என்ற அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்றாள். லேடீஸ் க்ளபில் நடத்திய ஆய்வில் “குடும்ப வன்முறை” சட்டதிட்டங்களைப் பற்றிக் கேட்டு, தன்னுடைய தோழி ஊக்குவித்தாள் என்றாள்.’ சசிக்கு நேரும் கொடுமையை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றாள்.

 

“சசியின்  பாதுகாப்பு என்னுடைய  பொறுப்பு.  எனக்கு அனுபவமும் அதிகம். அதுமட்டுமல்லாமல்  எனக்கு எல்லாம் தெரியும். அதனால்தான்  இங்கே வந்தேன்” என விளக்கினாள் ஸ்வஜிதா

சசி பரிதாப நிலையில் இருப்பதால் தான் வந்திருப்பதாகக் கூறினாள். சசியை அந்த வீட்டில் வெகு காலையிலேயே எழுப்பி விடுகிறார்கள், சீக்கிரமே தூங்க வற்புறுத்துகிறார்கள், அவர்களே சாப்பிடும் பதார்த்தங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் எனப் பல குற்றச் சாட்டுகள். ஸ்வஜிதாவை பொறுத்த வரை தன் மகளின் சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்று முறையிட்டாள். இந்த நிலையில் சசி கர்ப்பிணியாக இருப்பது அவளுக்கு வேதனை அளித்தது என்றாள். இந்நேரத்தில் குழந்தை தேவையா என்றது அவளுடைய கவலையானது. சசியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாகக் கூறினாள். கணவன் கிருஷ்ணாவிடம் மகளுக்கு ஓய்வு தேவை என்று சொன்னாள். அவன் ஒப்புக் கொண்டு விட்டான்.

 

ஏன் இப்படிச் செய்தாள் என்று விளக்கினாள். கல்யாணம் ஆனதிலிருந்து இவர்கள் வீட்டிற்கு எப்போது சசி வந்தாலும் படக்கென்று போய் தூங்கி விடுவாள். கேட்டால் ரெஸ்ட் எடுப்பதாகக் கூறுவாளாம். எந்த நேரம் வந்தாலும் ஏதோ இது வரை உணவைச் சாப்பிடாத மாதிரி அள்ளிச் சாப்பிடுவாளாம். ஆச்சரியமாகவும் அருவறுப்பாகவும் இருப்பதை ஸ்வஜிதா உணர்ந்தாள். இவை சந்தேகத்தின் வேர் ஆனது.

அவர்கள் சசி வீட்டிற்குப் போனால், சசிதான் காப்பி போட்டு, பதார்த்தங்களைப் பரிமாறி, எடுத்துக் கொண்டு போவதைக் கவனித்தாள். எல்லா வேலைகளையும்  சசி மட்டுமே செய்கிறாள் என்று தோன்றியது.

 

கிருஷ்ணா மாப்பிள்ளை ஆயிற்றே, அவனிடம் கேட்கத் தயங்கினாள். சசியின் மெலிந்த சரீரத்தைப் பார்த்து ஸ்வஜிதா மூன்று நான்கு மாதங்கள் ஆனதும் கிருஷ்ணாவைக் கேட்டாள். எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறினான். மறைக்கிறார்கள் என ஸ்வஜிதா மனதில் தோன்றியது. கொடுமைப் படுத்துகிறார்கள் எனத் தீர்மானம் உறுதியானது.

 

இதனால் சசிக்கு வேதனை எந்த அளவிற்கு என்பதைக் கணிக்க அவளிடம் பேசினால் தான் தெரிய வரும் என்பதால் ஸ்வஜிதாவிடம் சசியை அழைத்து வரச் சொன்னேன். இந்த பரிந்துரையைத் துளிகூட அவள் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கே அவர்கள் கைது செய்யப் படுவார்கள், சசி சுதந்திரம் பெற்று விடுவாள் என நினைத்ததாகக் கூறினாள்.

 

செயல்முறை விளக்கினேன். ஸ்வஜிதா மறுநாளே சசியை அழைத்து வந்தாள்.

 

சசி அணிந்த வாசனைத்திரவியம் மென்மையாகக் காற்றில் கலந்து அவள் வரும்முன் வந்தது. புத்துணர்ச்சி ததும்பிய பெண்ணாகத் தென்பட்டாள். கோட்டா புடவையை நன்றாக உடுத்தி இருந்தாள். நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு, கழுத்தில் மெலிதான சங்கிலி, ஒரு கையில் விலை உயர்ந்த கை கடிகாரம், இன்னொரு கைகளில் புடவை வண்ணத்தில் ஒரு டஜன் வளையல்கள் கலகலவென ஒலித்தன. காலில் மெட்டி இல்லை.

 

அறைக்கு வந்து, அமர்ந்ததும் ஸ்வஜிதா தன் மகளிடம் “சொல்லு, எல்லாம் சொல்லு, அவங்கள சிறைக்கு அனுப்பி விடலாம்” என்றாள். சசி அவள் கையை அழுத்தி, “கூல் மா” என்றாள். சசி மன்னிப்பு கேட்டபடி விவரித்தாள், அம்மாவின் கட்டாயத்தில் வந்தாள் என்று.

 

ஜாதகம் பார்த்து கல்யாணம் நிச்சயம் செய்யப் பட்டது. சசி முழு மனதுடன் கல்யாணம் செய்து கொண்டதை வலியுறுத்திக் கூறினாள்.

 

கிருஷ்ணா மூத்தவன் என்பதால் பெற்றோர் அவர்களுடன் இருப்பார்கள் என முன்கூட்டியே அவன் அவளுடைய அபிப்பிராயம் கேட்டுக் கொண்டான். சசி இதை ஆமோதித்து, சம்மதம் தெரிவித்தாகச் சொன்னாள்.

 

கிருஷ்ணாவிற்கு அமைதியான சுபாவம். பொறுமை காப்பவன். பாசத்தைச் செயலில் காட்டுவான், வார்த்தைகளால் அல்ல. அவனுடன் அவனுடைய பெற்றோர் சந்தோஷமாக இருந்தார்கள்.

 

கல்யாணம் ஆனதும் சசியின் உற்சாகம், கலகலப்பு புதிதாக இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்தது. வெடுக்கென்று சொல்லுவதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருந்தது.

 

கல்யாணம் ஆன புதிதில் சசி ஸ்வஜிதாவிடம் புலம்பித் தள்ளினாள். காலை ஆறு மணிக்கு எழுந்து சசி வாசலைப் பெருக்கி கோலம் போட, மாமியார், குளித்து, காப்பி டிகாக்ஷன் தயார் செய்வாள். மற்றவர்கள் எழுந்து வருவதற்குள் விளக்கை ஏற்றி, பாலை நைவேத்தியம் செய்து, காப்பி போடுவார். காலையில் எல்லோரும் கூடி, ஒன்றாகக் காப்பி பருகுவது வழக்கம்.

 

அம்மா வீட்டில், சசி ஏழரை மணிக்கு எழுந்து கொள்வது பழக்கம். கையில் காப்பி வந்துவிடும், அதன் பிறகு வேலைக்குப் புறப்படுவதில் இருப்பாள். வீட்டிற்குத் திரும்பியதும் டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்ட பிறகே குளிப்பது எல்லாம். ஸ்வஜிதா எல்லா வேலைகளையும் செய்து கொள்வாள். சசியை எதுவும் செய்ய விடமாட்டாள்.

 

கல்யாணம் ஆனதிலிருந்து காலை சிற்றுண்டி தயாரிப்பது சசி. பரபரக்கச் செய்து விடுவாள். கிருஷ்ணாவிற்குப் பரிமாறி, தானும் சாப்பிட்டு, அவனுடன் வேலைக்குச் செல்வாள். இதன் நடுவில் தினம்தோறும் காலையில், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று விசாரிக்க அம்மா மணி அடித்தது போல், ஏழே முக்காலுக்குத் தொலைப்பேசியில் அழைப்பாள். சசி வேலைகளை முடிப்பதில் கவனமாக இருப்பதால் அவசரமாகப் பதில் கொடுத்து விட்டு வைப்பது ஸ்வஜிதாவிற்கு எரிச்சல் ஊட்டியது. அம்மா புரிந்து கொள்வாள் என நினைத்து விட்டாள் சசி.

 

எப்போது அவள் சசியிடம் பேச முயன்றாலும் வேலை செய்வதாகச் சொல்வாள். அப்படி என்றால் அவளை வேலை வாங்குகிறார்கள், தொந்தரவு தருகிறார்கள் என்று ஸ்வஜிதா எண்ணினாள். ஒவ்வொரு முறையும் சசி இவர்களைப் பார்க்க  வருகையில் ஸ்வஜிதா கேட்பது, “ஒத்தாசை உண்டா?” கேள்விக்கு, சசி “ஆமாம்” என்றாலும், அப்போது ஏன் தொலைப்பேசியில் பேச அவகாசம் இல்லை? “சாப்பாடு போடுகிறார்களா?” என்ற கேள்விகளுக்கு, சசி “போம்மா” என்று பதில் அளிப்பாள்.

 

முதல் பல ஸெஷன்கள் சசியிடம் கலந்துரையாடினேன். அவள் தனக்கு நேர்வது வன்முறையா என விளக்கம் பெற விரும்பினாள். குறிப்பாகத் தன்னை அம்மா எதற்காக ஓய்வு எடுக்க வீட்டிற்கு அழைத்து வந்தாள், மற்றும் கிருஷ்ணாவிடம் பேசுவதைத் தடுக்கிறாள் என்று குழம்பினாள்.

 

பல கேள்விகள்-பதில்களின் மத்தியில் அவளைப் பட்டியல் இடப் பரிந்துரைத்தேன். இங்கே/அங்கே என்ன வேலை, ஏன்/எதற்காக என எழுதி வருவதற்குச் சொன்னேன். செய்தாள். ஸ்வஜிதாவிடமும் தான் செய்வதை அதே போலப் பட்டியல் தயார் செய்யச் சொன்னேன். அம்மா-மகளைக் கூட வைத்தே பகிரச் சொன்னேன். பல கேள்விகள் கேட்டேன். பதில்களைப் பகிர, தான் இங்கே செய்வதைத் தான் அங்கே மகள் செய்கிறாள் என்று உணர்ந்து, ஸ்வஜிதாவிற்கு தன் சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும் என எண்ணினேன். ஆனால் மறுத்தாள் அவள். ஸ்விஜிதாவோடு தனியாக செஷன்கள்ஆரம்பிக்க முடிவெடுத்தேன். பிறகு வருவதாகச் சொல்லிச் சென்று விட்டாள்.

 

சசி தயக்கத்துடன், அம்மா இவ்வாறு செய்ததில் ஒன்றிரண்டு குழப்பியதாகவும், தெளிவு பெற விரும்புவதாகவும் கூறினாள். தனது சிந்தனை தெளிவுடன் இருந்தாலும் மனதில் சஞ்சலம் நிலவுகின்றது. அதைச் சரிசெய்ய விரும்பினாள். மற்றும் தன் மாமியாரைப் புரிந்து கொள்ள அவர்களுடன் ஸெஷன் கேட்டாள்.

 

சசியின் மாமியாரை ஸெஷன்களுக்கு அழைத்தேன். இவர் இருவரின் மத்தியில் புரிதலும் பாசமும் இருந்தது. இருந்தும் ஒரு திரை மறைத்தது. கல்யாணம் ஆன புதுசு அதனாலா?

 

மாமியாரை தன் கல்யாணம் ஆன காலத்தைப் பற்றிய சில தருணங்களை விவரிக்கப் பரிந்துரைத்தேன். வெளிப்படையாகப் பகிர்ந்தாள். பல கேள்விகள், விளக்கங்களுக்குப் பின்னர் சசி புரிந்து கொண்டாள் – கல்யாணம் ஆன பின்பு சூழல் மாறுகிறது. அதனால் மாற்றங்கள் இருக்கும். குடும்பத்தின்

பழக்க-வழக்கங்கள், கோட்பாடுகள் எனப் பல இருக்கும். இவற்றை என்னவென்று கவனித்து, நாளடைவில் பழகிக் கொள்வதில் சுதந்திரம் குறைவதில்லை. குடும்பத்துடன் இணைய முடியும் என்று அறிந்தாள்.

 

சசி வீட்டில் அவர்களது தினசரி வேலையைப் பற்றி மாமியாரை விளக்கம் அளிக்கச் சொன்னேன். விளக்கங்கள் அளித்தாள். பூஜை அறையில் நான்கு சாலிகிராமம் இருப்பதால், அன்றாடம் ஸ்நானம் செய்து, பால் நைவேத்யம் செய்த பிறகே காப்பி அருந்த வேண்டும். அதனால் தான் சீக்கிரமே எழுந்து, வாசலில் கோலம் போடுவது. சீக்கிரமே தூங்கச் சொல்வது, இதை விளக்கியதாகச் சொன்னாள். வெட்கத்துடன் சசி ஒப்புக்கொண்டாள்.

 

அம்மா துருவித் துருவிக் கேட்பதால் அவளிடம் விஷயங்களைத் தெளிவு படுத்தவில்லை என்றாள். உதாரணத்திற்கு, மாமியார் தனக்குச் செய்யும் பல ஒத்தாசைகளைச் சொல்லவில்லை. இதனால் நேர்ந்த விளைவையும் சசி புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதே போல, அம்மா வீட்டுக்குப் போனதும், முன் போலவே தான் எதுவும் செய்யாமல் இருப்பது, அவர்களுக்குத் தவறான தகவலைத் தெரிவித்ததை அறிந்து கொண்டாள். வன்முறையாக ஸ்வஜிதா நினைத்தாள்.

 

மாமியார் அவர்களின் மன திட்டம் பலவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாள். கிருஷ்ணா-சசி பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்குப் பிறகு எல்லா பொறுப்புகள் அவர்களுடையது என்று. இவ்வாறு மூன்று ஸெஷன்களிலேயே சசி-மாமியார் உறவு மேலும் நெருக்கமாக ஆனது. சசி அம்மாவுக்குப் புரிய வைக்க முயன்றாள்.

 

ஸ்விஜிதா முழுமனதோடு ஒப்புக்கொள்ளவில்லை. அப்பா கிரி இவை நடக்கையில் வெளிநாடு சென்றிருந்தார். எதுவும் தெரியவில்லை. சசி முடிவெடுத்து, தன் கணவர் வீட்டிற்குச் சென்றாள்.

 

இது ஸ்வஜிதாவை மிகவும் உலுக்கியது. அவர்களின்  வீட்டில் அவளைச் சந்தித்தேன். அழுகை மல்கி இருந்தாள். அவளுடைய இந்தப் பல்வேறு சஞ்சலங்களைப் பற்றி ஸெஷன்களில் உரையாடி, தன்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு, அவள் இதற்கெல்லாம் விளக்கம் பெற முயலலாம் எனப் பரிந்துரைத்தேன். ஸ்வஜிதாவோ காவல்நிலையம் வருவது தனக்குத் தலைக் குனிவு என்றாள். இந்த எண்ணத்தைத் தாண்டி வெல்வது அவள் கையில் உண்டு என அவளுடைய தைரியத்தை நினைவூட்டினேன். தானாக

எங்களிடம் வந்தது, சசியை வர வைத்தது. வாய்ப்புத் தர முடிவு செய்தாள்.

 

சசியின் முடிவு அவளுடையது. சசி முடிவெடுத்த காரணி, சூழல் வேறு. ஒவ்வொருவரின் முடிவுகள் அவரவர் நிலைமையைப் பொறுத்திருக்கும். மற்றோர் முடிவைத் தாழ்வாக எடை போடுவதில் அர்த்தம் இல்லை என்று விவாதித்தோம்.

இதையே மையமாக வைத்து மேலும் ஸ்வஜிதாவுடன் ஸெஷன்கள் தொடங்கியது. அவளுக்கு வன்முறை பற்றி அவர்களின் வாழ்வின் உதாரணங்களைக் கொண்டே விளக்கம் தந்தேன். அப்போது தான் அவளுக்குப் புரிந்தது, தான் சசியைப் பொய் சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து அழைத்து வந்தது, கிருஷ்ணாவிடம் பேசத் தடுத்தது, இதெல்லாம் வன்முறை சாயல் கொண்டது என்று

 

இதிலிருந்து ஸ்விஜிதா உணர ஆரம்பித்தாள், தனக்குக் கடந்த காலத்தில் நடந்த அனைத்தும் வைத்து, அவ்வாறு சசிக்கும் நேர்கிறது என்ற அச்சத்தில் பல முடிவுகளைச் செய்தாள் என்று. அவள் வளர்ந்தது தாய் தந்தை அக்காவுடன். கல்யாணம் கூட்டுக் குடும்பத்தில். பலபேர், அதிகமான பொறுப்பு, வேலைகள். சசிக்கும் அதேபோல.

 

தன்னுடைய சசியை வேலை வாங்காமல்   செல்லமாக வளர்த்தாள்,. அங்கே எதற்காக வேலை செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பினாள்.

 

ஆனால் சசி வேலை செய்வதில் “என் வீடு, அதில் செய்கிறேன்” என்று நிதர்சனமாகச் சிந்தித்தாளே தவிர எந்த குறையும் பார்க்கவில்லை. இதை

ஸ்விஜிதாவிற்குப் புரிந்த பின்பே, தனக்குக் குற்ற உணர்வு வராமல் இருக்கவே மாமியார் வீட்டைக் குற்றம் கூறினோம் என்று புரிய வந்தது.

 

அம்மா-மகள் தங்களது உறவை இன்னும் சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்று ஆராய்ந்தோம். ஸ்விஜிதா எப்பொழுதும் “அவர்கள் என்ன செய்தார்கள்?” , “சொன்னார்கள்” என்று நுணுக்கமாக அலசிப் பார்க்காமல் இருப்பதில் நன்மை என்பதை சசி பகிர்ந்த பின்னர் உணர்ந்தாள். ஒப்பிட்டுப் பார்த்தால், சங்கடம் விளையும் என்பதைப் புரிந்து கொண்டாள்.

 

ஸ்விஜிதாவை பாராட்ட வேண்டும். இவ்வாறு தன்னுடைய சிந்தனை, உணர்வு, செயல்பாட்டைப் புரிந்து கொள்ள, அவற்றை மாற்றி அமைக்கத் தைரியம் தேவை. ஸ்விஜிதா determination என்ற கோலுடன் மேலும் முன்னேற முடிவு எடுத்தாள்.

*****************************************************

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

என் திருமணத்திற்கு நான் போன கதை

Hindu Wedding Clipart Vector - Marriage Cliparts, HD Png Download ...

07/06/1978  அதி காலை 4 மணி. என் நண்பர் சிந்தாமணி , “மோகன் எழுந்துருங்க, நேரமாச்சு” என எழுப்புகிறார் .
நாங்கள் இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததில் சற்று அயர்ந்து தூங்கி விட்டேன்.
நல்ல இனிப்பான கனவும் காரணமாகும். அதான் sweat dreams ங்க
அப்பொழுதுதான் காலை 5.30 க்கு முகூர்த்தம் ,5 மணிக்கு மண்டபத்தில் இருக்க வேண்டும் என சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.
சும்மா சொல்லக் கூடாது. மாமா நல்ல ரூம் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போட்டிருந்தார்.
திருச்சி Travelers Bungalow, பெரிய அறை. நல்ல காற்று வசதியுடன். அப்ப ஊரே குளிர்ச்சியாகத்தான் இருக்கும் .A C யெல்லாம் கிடையாது. நல்லா தூங்கிட்டேன்.
ஆனால் வாஸ்துதான் கொஞ்சம் இடித்தது. வலது பக்கம் காவல் நிலையம் இடது பக்கம் நீதி மன்றம்.
பக்கத்திலேயே ஒரு பிள்ளையார் இருந்தார் . எதுக்கும் இருக்கட்டும் என தோப்பு கரணம் முதல் நாளே போட்டு வைத்தேன். அப்படியும் காலையில் இப்படி சோதிப்பார் என எதிர் பார்க்கல .
நாங்க இரண்டு பேரும் அவசர அவசரமாக கிளம்பிட்டோம்.
திருச்சி, தில்லை நகர், மக்கள் மன்றம்தான், பிரசித்தி பெற்ற அந்த மண்டபம்.
எப்படியும் மண்டபம் போவதற்கு 15-20 நிமிடமாவது ஆகும். மணி 4.45
பக்கத்து அறைகளில் இருந்த உறவுகள் எல்லாம் கிளம்பிட்டாங்களான்னு பார்க்க வெளியே வந்தா எல்லா அறைகளும் பூட்டியிருந்தன.
அப்பறம்தான் அவர்கள் மண்டபத்திலேயே தங்கி விட்டது ஞாபகம் வந்தது.
வண்டி ஏதாவது காத்திருக்கும் என வாசலுக்கு விரைந்தோம்.
அங்கு ஒரு ஈ,காக்கை இல்லை. அந்த காலை வேலையில் ஈ, காக்கையை எதிர் பார்த்தது தப்பு.
ஆணால் ஒரு மனுஷன் கண்ல படல.
நல்ல வேலை கண்ணில் பட்ட ஒருத்தரிடம் இங்கே ஆட்டோ கிடைக்குமா என கேட்டோம்.
அவர் இவ்வளவு சீக்கிரமா ஆட்டோ எல்லாம் கிடைக்காது. ஜங்ஷன் போங்க என்றார். ஜங்ஷன் opposite direction.
ஜங்ஷனுக்கு எப்படிங்க போறதுங்க ? பதட்டத்தில் நான்.
குறுக்க நடந்து போனால் இருபது நிமிடத்தில் போயிறலாங்க என்றார் வந்தவர்.
நான் பக்கத்திலிருந்த பிள்ளையாரை பரிதாபமா பார்க்கிறதுக்கும் ஜங்ஷன் போற முதல் டவுன் பஸ் நிக்கறதுக்கும் சரியாய் இருந்தது.
அப்புறம் என்ன. நாங்கள் இருவரும் ஜஙஷனில் இறங்கி ஆட்டோ புடிச்சு மண்டபத்தை அடையும் பொழுது மணி 5.30.
மாமா முகத்தில் சினிமாவில் காட்ற மாதிரியெல்லாம் ஒரு பதட்டத்தை காணோம்.
நாலு பக்கமும் ஆள் விட்டெல்லாம் தேடலை.
ஒரு வேலை தாலி கட்ற சமயத்துக்கு மாப்பிள்ளை கரெக்டா என்ட்ரி  கொடுத்திருவார் என்ற நம்பிக்கையோ?
அவர்கள் அனுப்பிய கார் பின்னால் வந்து நின்றது. டிரைவர் யாரிடமோ மாப்பிள்ளையை ரூமில் காணோம் பூட்டி இருக்கு என மெதுவாக பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் .
வேறு மாற்று ஏற்பாடை என் மாமனார் யோசிப்பதற்கு முன்  தாவி திருமண மேடைக்கு ஓடி தாலியை என் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி

    Vedanta bringing Science closer to Hinduism                                

இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பு அதன் ஒத்திசைந்ததும் முரணுமான இயக்கம். இயங்குவது அற்றுப் போனால் எல்லாம் அற்றுப் போகும். அப்படியானால், மறைவதனைத்தும் அற்றுத்தான் போகிறதா? மறைவதை மாறுதல் எனக் கொண்டால் இந்த இயக்க வியப்பு புலப்படுமா? அடிப்படையில் இறவாத்தன்மை உடைய  அரைத் துகள்களை(Quasi particles) அறிவியல் இன்று கண்டறிந்திருக்கிறது.(*1.) மின்சார அல்லது காந்த சக்திகள், ஒன்றில் ஏற்படுத்தும் தள்ளாட்டங்களே அரைத்துகள் எனப்படுகிறது. இத்தகைய அரைத்துகள் அழிந்தாலும் தம்மை மீளுருவாக்கம் செய்யும் திறன் பெற்றிருக்கிறது. ம்யூனிச்சில் உள்ள தொழில் பல்கலையைச் சேர்ந்த இயற்பியலாளர் Frank Pollman சொல்கிறார்: இத்தகு துகள்களுக்கிடையே பலம் நிறைந்த உட்செயல்பாடுகள் நடந்தால் அழியும் செயல் கூட நின்று போய்விடும்.

அரைத்துகள்கள் வேகமாக அழிகையில் முரணான விளைவுகள் உண்டாகி தன் சிதற்றிலிருந்தே தன்னைக் குவித்துக் கொண்டு மீண்டு விடுகிறது. முடிவில்லாமல் நிகழும் பிறப்பும் இறப்புமான ஊஞ்சலில் ஆடுகிறது. இது அலையும், துகளுமான இரட்டை நிலை(த்வைதம்). அந்த ஊஞ்சல் அலையென எழுந்து பொருளென நிற்கிறது.உதாரணத்திற்கு ஹீலியம் வாயு ஜீரோ டிகிரியில் தடைகளற்ற மேன்மையான திரவமாக இருக்கும். அதற்கு அதிலுள்ள ‘Rotons’ என்னும்அரைத்துகள் காரணம்.

எனவே, காண்பதற்கு மாறுபட்டு இருந்தாலும் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே.(*2) மாறுபட்டுத் தோன்றுவது என்பது தோற்ற மயக்கத்தினால் தான். ஒவ்வொரு துகளுக்கும் ஓரிடம் இருக்கிறது. அதற்கான சக்தி கிடைக்கப்பெறுகையில் அதன் இருப்பை அறிய முடிகிறது. எனவே வெளியின் வெற்றிடம் என்பது காலியானது இல்லை-அது தூண்டப்படாத துகள்களின் களம்.(*3)

இயங்குவது என்பதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும்; அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? வந்தது என்றுமே நம் கண் முன் நீடிக்காமல் எங்கே மறைகிறது? அப்படித் தோன்றவும்,மறைவதுமான அந்த அலகிலா விளையாட்டை ஆடுவது யார்? இறைவனா, இயற்கையா,தற்செயல்களா?

பொருளுக்கும், சக்திக்கும் இடையே உள்ள உறவு என்பது நிலையானது என்று இன்று அறிவியல் சொல்வதை நம் உபநிடதங்கள் முன்னரே சொல்லிவிட்டன. பொருளும், சக்தியும் வெவ்வேறு வடிவுகள் கொள்ளலாம்; ஆனால் அவற்றின் உறவே அனைத்திற்கும் அடிப்படை.

‘ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்

    வாசோ ஹ வாசம்  ஸ உ ப்ராணஸ்ய ப்ராண:

ச்க்ஷுஷச்சக்ஷூரதிமுஸ்ய தீரா:

     ப்ரேத்யாஸ்மல்லோகாதம்ருதா பவந்தி ‘

‘காதின் காதாக, மனதின் மனதாக, வாக்கின் வாக்காக உயிரின் உயிராக, கண்ணின் கண்ணாக இருப்பது ஒன்று; அதுவே ஆன்மா எனப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்தவன் புலன் உலகிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்.’ என்பது மேற்குறிப்பிட்ட வாக்கியத்தின் பொருள்.

ஆன்மாவை நிலைத்த உண்மை எனச் சொல்கிறது வேதாந்தம். அது என்றும் உள்ளது, தோற்றம், மறைவு என்ற இரு கூறுகள் அற்றது. இதுதான் எனக் காட்ட இயலாதது, எந்த சக்தியும் அதை அழிப்பதில்லை, அதை உணர்ந்தவர் சொல்வதற்கு மொழிகள் இல்லை, சொல்ல முயன்றால் அதை உணர்த்துவது இயல்வதில்லை. ஏனெனில் அந்த ஆன்மா அறிந்தவற்றிலிருந்து வேறுபட்டது; அறியாதவற்றை விட மேலானது. இத்தகைய விளக்கம் சொல்லும் உபநிடதம் அதி அற்புதமாக ஒன்றைச் சொல்கிறது. நாம் வழிபடும் உருவங்களோ,குறியீடுகளோ ஆன்மா இல்லை என்கிறது; அவை அனுபவப் பாதைகளாகவோ, வெளிச்சம் தரும் விளக்குகளாகவோ இருக்கலாம்- ஆனால் அவையே அனுபவமாவதில்லை-ஆன்மாவை வெளியில் தேடித் தேடி, தேட இயலாதது அது எனப் புரிந்து கொண்டு தன்னுள்ளே காணும் அறிவாய், இரண்டற்றதாய், முழுமையாய் பார்க்கச் சொல்கிறது; மிக அழகாக   ‘அறிந்தும் அறியாத நிலை‘ என்று இதனை விவரிக்கிறது. தெரியும் எனவும் சொல்ல இயலாது- தெரியாது எனவும் சொல்ல முடியாது. ஒரே வகை இனிப்பு, ஒரே கைப் பக்குவத்தில் செய்யப்பட்டது, சுவைப்பவர்களுக்கு இனிப்பு என்ற சுவையைக் காட்டும்; ஆனால், சுவையின் அலகுகள் மாறுபட்டுத்தான் அவரவர்க்குப் புலப்படும்.

‘யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ:

அவிஜ்ஞாதம் விஜானதாம் விஜ்ஞாதம விஜானதாம் ‘

இதன் பொருள் மிக வியப்பானது: ‘யாருக்குத் தெரியாதோ அவனுக்குத் தெரியும். யாருக்குத் தெரியுமோ அவனுக்குத் தெரியாது.’

திருக்குறள் சொல்கிறது:

‘பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு ‘

அறிபவன், அறிவு, அறிபடு பொருள் இம்மூன்றும் சேரும் போதுதான் நாம், ‘நான்’ என்னும் உணர்வினைக் கொண்டு எதையுமே அறிகிறோம். ஆனால்,இந்த மூன்றும் மறைகின்ற இடத்தில் தான் ஆன்ம தரிசனம் கிடைக்கிறது. உணர்வின் எந்த ஒரு நிலையிலும் ஆன்மா வெளிப்படுவதை உணர்பவனே ஆன்ம அனுபூதி பெறுகிறான். அவ்வாறு அவன் பெறுகின்ற ஆற்றல் எந்த காலத்திலும், எந்த சக்தியாலும் அழிபடுவதில்லை. உடல், மனம் போன்ற அனைத்திற்கும் உணர்வைத் தரும் ஆன்மா, தான் அழிவற்றவன் என உணர்கையில் மரணத்தை வெல்கிறான். இத்தகைய பேறு உடையவன் அனைத்து உயிர்களிலும் ஆன்மாவை உணர்கிறான். ஆன்மா புலன்களிலிருந்து தனது உணர்வை விலக்கிக்கொண்டால் கண்கள் இருந்தும் பார்க்க இயலாது, காதுகள் இருந்தும் கேட்க இயலாது.

ஐதரேய உபநிடதத்தின் விளக்கத்தை எழுதிய ஆதி சங்கரர் சொல்வது   ‘ஆன்மா நிலையானது. அது தூய உணர்வாக இருக்கிறது. அதை அறிந்தவன் உலகின் அனைத்துமே ஒரே ஆன்மா எனக் கண்டறிகிறான்; விடுதலைக்கான மார்க்கம் அதுவே.’

இந்த வகையான கூற்றுக்கு சான்றுகள் தர இயலுமா? அது அகனிலை என்ற அறிவுதான் சான்று. அனுபவ உண்மை, வெளிப்படையான உண்மை, இவற்றைத்தாண்டி அது அகனிலையை நோக்கிச் சென்று அறுதி உண்மையை உணர்கிறது. எனவேதான் வேதத்தை  சான்றெனக் கொள்கிறது.

அனுபவமே ஆன்மா என்பதால், அதைத் தனி அனுபவமென விளக்க முடியாதல்லவா? கோப்பையிலுள்ள காஃபியின் சுவையை கோப்பை அறியாது என்பதைப் போல்.

அந்த ஆன்மாவை எவ்வாறு தான் அறிவது அல்லது அனுமானம் செய்வது என்பவர்க்கும் ஒரு பதில் சொல்கிறது உபனிடதம்.

‘தத்த த்த்வனம் நாம த்த்வனம் இத்யுபாஸிதவ்யம்; ஸ ய

ஏத தேவம் வேதாபி ஹைனம் ஸர்வாணி பூதானி ஸம்வாஞ்சந்தி’  

அனைத்து உயிர்களிலும் ஆன்மா  நிறைந்திருப்பதை அறிவதே ஆன்ம அனுபவமாகிறது.

இயற்பியல் தனது பிரிவான  துளிம இயற்பியல்(Quantum physics) ,அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics) மற்றும் துணிக்கை பௌதீகவியல்(Particle Physics) மூலம்  பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது. முக்கியமாகக், காணப்படும் தோற்றமும், காணப்படுவதும் ஒன்றா அல்லது வேறா எனக் கேட்கிறது. நம்முடைய பௌதீக உலகில், இயற்கையின் சட்டங்களை, இரு கூறுகளெனக் கொள்ள முடியும் என்கிறது இயற்பியல். பல இயற்பியல் விதிகள் அளவீடுகளை மாற்றும் போது அந்தந்த விதிகளில் மாற்றமின்றியிருந்தாலும்,சிலவகைமைகள் அந்த, அறிந்திருக்கிற விதிகளின்படித்தான் காணக்கிடைக்கும் என்பதில்லை.ஒரு கோப்பையிலிருந்து தண்ணீரை ஊற்றுகையில் மொத்த நீருமே ஊற்றப்படுவதில்லை; அதன் கடைசித் துளிகள் உருட்டுத் துளிகளாகின்றன.

அணுவின் முளைக்கருவில் இருக்கும் ப்ரோடான்ஸ் மற்றும் நுயுட்ரான்ஸ். பொதுவாக நாம் அனைவரும் அறிந்ததே- நேர்மறை சக்தி, சமன் சக்தி; நாம் மற்றொன்றும் அறிவோம். எதிரெதிர் சக்திகள் ஈர்க்கப்படுவதையும், ஒரே விதமான சக்திகள் மறுதலிக்கப்படுவதையும். ஆனால், வியப்பு என்னவென்றால், மிகச் சிறிதான கரு மையத்தில் ஒரே விதமான நேர்மறை சக்தி கொண்ட ப்ரோடான்கள் மறுதலிக்காமல் இணைந்திருப்பதுதான். அதை அவ்விதம் கட்டி வைத்துள்ள அந்த மேம்பட்ட ஆற்றல் எது? இன்னமும் தெளிவில்லாத ஒரு செய்தியும் இருக்கிறது. பல துகள்கள் தங்களுடைய ஆடிப்பதிப்பாக இருப்பதில்லை. இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நுயுட்ரினோ துகள்கள்.

மரபார்ந்த இயற்பியல்(Classical Physics) பருப்பொருளுக்கு(matter) இணை எதிர் பருப்பொருள் (anti matter) உண்டு என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வானியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்-நம்முடைய பால் வீதியில் ஆன்டி மேட்டர் என்ற பொருளே இல்லை. ஒன்றாக இருந்தது-ஒன்றாகவும் இருக்கிறது. அது பலவாக உருக் கொண்டதற்கு இயற்கையின் ஆற்றல் காரணமாக இருக்கக்கூடும்-அப்படி, அதிலிருந்து பிறந்து ‘மேட்டர், ஆன்டி மேட்டர்’ என நாம் பலதாகப் பார்க்கிறோம் என்கிறார்கள்

நம் வேதாதங்கள் இதைத்தான் சொல்கின்றன. ஒன்றாய் இருந்தது- முக்குண மாறுபாட்டால் பலவாய்க் கிளைத்தது; அது ஒன்றின் ஆடிப் பாவையை பலவெனக் காட்டும் மாயையின் ஆற்றல்.

இயற்பியல் அறிஞர் சொன்னார்: ‘ அணுவினுள் இருக்கும் மின்சாரத் துகள் ‘எக்ஸ்’ என்ற புள்ளியிலோ, ‘வொய்’ என்ற நிலையிலோ அல்லது பாதி ‘எக்ஸி’லும், பாதி ‘வொயி’லுமாகக் காணப்படும். அதாவது, ஒரு எலெக்ட்ரான் ஒரே தருணத்தில் பல இடங்களில் காணப்படும். இது ‘கோபஹேஹன் புரிதல் ‘ என்று சொல்லப்படுகிறது. ஒன்றெனில் ஒன்றேயாகும்; அதுவே பலவுமாகும்.

குவாண்டம் மெக்கானிக்ஸின்  அடிப்படையே ‘  நிகழ் தகவு’ (ப்ராபபிலிடி) என்பதுதான். முடிந்த முடிபாக மரபார்ந்த இயற்பியல் போல் இதில் சொல்வது இயலாதது. அந்த முடிந்த முடிவாக  மரபு நிறுவுவதை ஒரு விதத்தில் இது கேள்வி கேட்கிறது.

வெளியும், காலமும் தனித்த புள்ளிகளாக இருக்கின்றன என்கிறது துணிக்கை அறிவியல். மேலும் சொல்கிறது- துகள்கள் அந்தப் புள்ளிகளில் இருக்கலாம் ஆனால், இடையிலல்ல. அப்படியெனில், காலமும், வெளியுமான, காலவெளியான இந்த மாபெரும்       நெசவைச் செய்தது யார்? அவை இணைந்திருப்பது எவ்வாறு, யாரால்? பொருட்கள் அனைத்திலும் இருக்கக்கூடிய அணுத்திரளும் (மாலிகூல்ஸ்), அணுக்களும் இயங்கிப் பிணைந்து, உருவாக்கி, அழித்து, அதிர்வுகளாக இயங்குகின்றன. இது கல்லிலும் உண்டு, காற்றிலும் உண்டு.

மேலை நாடுகளில் இயற்பியலிலும் மற்றும் தத்துவத்திலும்  இரு கோட்பாடு பெரும்பாலும் பேணப்படுகிறது; அது பொருளையும், ஆற்றலையும் இரு வேறாகக் காண்கிறது. மரபு அறிவியலின் அடிப்படை விதி இது; இது உண்மைதான்; அதே நேரம் ஒன்றே பலவாய்ப் பரிணாமித்து வெவ்வேறு பொருளாய், உறைந்து நிற்கும் ஆற்றலாய், அல்லது வெவ்வேறு வகைகளில் ஆற்றலென வெளிப்படுவதை அணு அறிவியல் சொல்கிறது.

எனவேதான் மாற்றம் என்ற நிலை பெற்ற உண்மையை, இயங்கு சக்தியை நம் உபனிடதங்கள் சொல்கின்றன.

‘எவன் அனைத்திலும் இருக்கிறானோ,

அவைகளிலிருந்தும் மாறு பட்டும் இருக்கிறானோ

எவனை அந்தப் பொருட்கள் அறியாதோ

எவனுடைய உருவாக அவை காணக்கிடைகிறதோ

உள்ளிருந்து எதையும் இயக்குபவன் எவனோ

அவன் நிலையானவன்;அழிவற்றவன்.

அவனை ஆன்மா என அழைக்கிறோம்.’

மேலை நாட்டின் தர்க்க ஒழுங்கு வழி முறைகளால் காரணம் என்பதைக் கொண்டு நிலை பெற்ற உண்மையைக் கண்டடைய முடியாது என்கிறது துணிக்கையியல். அதன் அடிப்படையே’இருக்கலாம்’ என்பதில் அமைந்துள்ளது.

‘எது அழியாமல், சப்தமற்று, தொடு உணர்வு  இன்றி, வடிவமின்றி, சுவையற்று, வாசமற்று, முதலும் முடிவும் அற்று, நிரந்தரமாக இருக்கிறதோ அதை அறிந்தவன் மரணத்தை வெல்கிறான்.’

ஐன்ஸ்டெனின் புகழ் பெற்ற ஒரு கூற்று “கணித விதிகள் உண்மைத்தன்மையைக் கூறும் போது அவை உறுதியாக இல்லை; அவ்வாறு ஐயமற அவை சொல்லப் புகுந்தால் அவை உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில்லை.”

சார்பியல் கோட்பாடுகள் காலத்தையும், வெளியையும் தனியே காணவில்லை; அவை இரண்டும் நாற்பரிமாணமுள்ள வெளி காலம் என்றே உணர்த்தப்படுகின்றன.

துணை அணுக்கள் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதில் இணையற்றவை; துகளாகவும்,அலையாகவும் காணப்படும். அலை எனச் சொன்னவுடன் அவை முப்பரிமாணம் உள்ளவை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவை ‘பிராபபலிடி’ அலைகள். தனித்ததாக அவைகள் அறிவிப்பது என ஒன்றுமில்லை; ஆனால், தொடர்புகளால், இயக்கங்களால் அவை அறியப்படுகின்றன. குவாண்டம் தியரி இதன் மூலம் பிரபஞ்சத்தின் ஒற்றைத்தன்மையை நிறுவுகிறது.

மிகச் சமீபத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இயற்பியலாளர் தினேஷ் குமார்  ஒரு அளவீட்டை வெளியிட்டார். அதை மரபார்ந்த அறிவியலின் மாதிரி வடிவங்களைக் கொண்டு விளக்க இயலாது என்றும் நிறுவினார். beauty meson என்று அறியப்படும் துகள் அணுக்களின் மறைவைப் பற்றியது அது. இதன் மூலம் இணை எதிர் பருப் பொருட்கள் பிரபஞ்சத்தில் மறைந்து போனதை அவர் ‘முனைவாக்கத்தை’(polaraization) அளப்பதன் மூலம் தெளிவாக விளக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார் (Physical Review –D).

இதன் தொடர்பாக நாம் அறியா பருப் பொருள்’(Dark Matter) மற்றும் அறியா சக்தி(Dark Energy) ஆகியவைற்றைப் பற்றி பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஐன்ஸ்டைன் சொன்னார் : ‘நாம் நான்கு சதவீதம் மட்டுமே பிரபஞ்சத்தைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிறோம். 24% அறியாப் பொருள்-அதாவது, பால் வீதியிலும் மற்றும் பிற கேலக்ஸிகளிலும் கருந்துளைகள் செலுத்தும் ஈர்ப்பு விசை அந்தந்தக் கருந்துளைகளின் அருகேயுள்ள நட்சத்திரங்களும், தொலைவில் உள்ள நட்சத்திரங்களும் ஒரே வேகத்தில் இயங்கும் வகைமையில் இருக்கிறது. அந்த ஈர்ப்பு விசை எது? அதைப் போலவே விரிந்து கொண்டே வரும் பிரபஞ்சத்தில் எதிர் சக்தி இயங்கி விரிவாக்கத்திற்கு வழி வகுக்கிறது. ஒன்று ஈர்ப்பினால் ஒரே வேகத்தில் இயங்கச் செய்கிறது. மற்றது எதிர்ப்பினால் வேகமடையச் செய்து விரிவாக்குகிறது. இந்த அறியா சக்தியை 72% என அவர் சொல்கிறார். இவற்றை அளவீடு செய்யும் வழிமுறை இன்று நம்மிடம் இல்லை. முழுமையான ஓவியம் கிடைக்கவில்லை. சிவ- சக்தியும், ஆடும் கூத்தனும் நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை.

பகவான் கிருஷ்ணன் சொல்கிறார் “ நான் என் இயல்பால் தோற்றுவிக்கிறேன். அவை காலத்தில் சுழன்று வருகின்றன. அவைகள் தோற்றமயக்கங்கள் என உணராமல்  லீலை மறைக்கின்றது. உண்மையில் இரு வேறில்லை என அறிபவன் மரணத்தை வெல்கிறான்.”

துளிம அறிவியல், தனித்த சக்திப் பெட்டகம்(discrete energy packets) எனச் சொல்கிறது. நாம் காணும் ஒவ்வொன்றும் நிலைத்த தோற்றத்தோடு, நிலைத்த தன்மையோடு, நிலைத்த சக்தியோடு, நிலைத்த காலத்தோடு இருப்பதாக உணர்கிறோம்.ஆனால்,துளிம அறிவியல்  துகளுக்கு நிகழ் தகவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

கீழச் சிந்தனைமரபு ’ தூய உணர்வினை’ Eugene Wings’ ன் வார்த்தைகளில் சொல்வது இதுவே. ‘தொடர் சரடான உண்மையை துளிம அறிவியல் சொல்லக் கூடுவது அது தூய உணர்வினை ஏற்றுக் கொள்வதாலேயே’

வெளி, காலம், காரணம் என்பதெல்லாம் ஒரு கண்ணாடி வழி முழுமையைப் பார்ப்பது போன்றது. முழுமை என்பதில் காலம், வெளி, காரணம் என்பது இல்லை.

‘அது அசைகின்றது, அது அசைவதும் இல்லை

அது தொலைவில் உள்ளது, அருகிலும் உள்ளது

அனைத்திற்கும் உள்ளே  இருப்பதும்

அனைத்திற்கும் வெளியே இருப்பதும் இதுவே.’

மெய் ஞானமும், விஞ்ஞானமும் தேடுவது ஒன்றையே

“அறியாமையிலிருந்து அறிவிற்கு அழைத்துச் செல்லுங்கள்

இருளிலிருந்து ஒளிக்கு கூட்டிச் செல்லுங்கள்

இறப்பிலிருந்து இறவா நிலைக்கு என்னை உய்வியுங்கள்”

பிரஹதாரண்ய உபனிடதம்.

‘அண்டத்தில்’ இருப்பதை மரபார்ந்த அறிவியலும், அதன் குறுகுகளை துளிம அறிவியலும், இரண்டையும் இணைத்து பேச முற்படும் ‘அனைத்தின் தேற்றமும் (Theory of Everything) வேதாந்தங்கள் சொல்லும் ‘பிண்டத்தில்’ உள்ளதும் அறியும் தோறும் அறியாமையின் ஆழத்தைக் காட்டுகிறதோ? புத்தியால் மட்டுமே அறிய முடியாததென்று உபனிடதங்களும்  அளவீடுகளின் வழி அறியும் முறையைக் கொண்ட அறிவியலும் சிந்தனையில் ஒன்று, சிந்திக்கும் முறைகள்தான் வெவ் வேறு.

‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து’-திருக்குறள்.

பானுமதி.ந

(*1)Published in Nature Physics 2019 https://www.science alert.com/

(*2) https://blogs.scientificamerican.com/beautiful-minds/what-would-happen-if -everyone-truly

(*3)https://www.science alert.com/watch-here-s-why-galaxies-and-planets-might-only-exist-thanks-to-nothingness

Other Ref:General esssays on Upanishads, Kena ,Aithreya, Brahuthaaranyaa, Bhagavath Geeta,Tao of Physics, Physical Review, Science magazines and Thirukural

பின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்

பின்நகர்ந்த காலம், வண்ணநிலவன் ... பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்)

 

        பின்நகர்ந்த காலம் என்ற நூலின் இரண்டாம் பாகம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பாகம் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. முதல் பாகத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் வேலைக்கு சேரும்வரை எழுதி இருக்கிறார். இரண்டாம் பாகம் அதற்குப்பின்னான அவரது வாழ்க்கையையும், அவர் பயணித்த இலக்கியத்தையும் குறிப்பிடுகிறது. இந்த கட்டுரை அவர் நூலில் எழுதியிருக்கும் நடையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது.அவர் துக்ளக்கில் சேர்ந்தபோது நாட்டில் எமர்ஜென்ஸி அமலில் இருந்தது.முரசொலி,துக்ளக் இரு பத்திரிக்கைகளுக்கும் சென்ஸார் இருந்தது என்று குறிப்பிடும் வண்ணநிலவன் துக்ளக்கில் ஃப்ரூப் ரீடராக இருந்திருக்கிறார்.ஆனாலும் சோ அவரை எல்லா டிஸ்கஷனிலும் சேர்த்துக்கொள்வார்.

             சினிமா இயக்குநர் மகேந்திரன் துக்ளக்கில் சிறிது காலம் பணிபுரிந்தார்.அப்போது போஸ்ட்மார்ட்டம் என்ற தலைப்பில் சினிமா விமர்சனங்கள் துக்ளக்கில் வெளிவந்தன. வண்ணநிலவன் சேர்ந்தபின் அவருடைய சினிமா ஆர்வத்தையும், அவரின் சினிமா நண்பர்கள் ருத்ரையா,ஜெயபாரதி  ஆகியவர்களுடனான நட்பையும் கண்ட சோ மீண்டும் போஸ்ட்மார்ட்டம் பகுதியை  துவக்கினார்.அந்த பகுதியை டாக்டர் என்ற பெயரில் வண்ணநிலவன் எழுதி வந்தார். துக்ளக் பத்திரிகையில் வெளிவரும் சினிமா விமர்சனங்களை சம்பந்தப்பட்ட இயக்குநருக்கே அனுப்பி பதிலைப்பெற்று அதை பிரசுரிக்கும் வழக்கம் துக்ளக்கில் இருந்தது.

          துக்ளக் சினிமா விமர்சனங்களில் பாராட்டப்பட்ட படங்கள்  16 வயதினிலே,  முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகியவை ஆகும். அனந்தகிருஷ்ணன் என்ற அனந்த் துக்ளக் இதழில் “வாழ்ந்து காட்டுகிறார்கள் ” என்ற தொடர்கட்டுரைகளை எழுதினார்.அது நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் பத்திரிக்கைகளிலேயே துக்ளக் தான் முதல் முதலாக 1976-77ல் எழுத்தாளர்களையும் பத்திரிக்கை ஆசிரியர்களையும் பேட்டி கண்டு எழுதியது.தமிழ் பத்திரிகை ஆசிரியர்களான மணியன்(இதயம் பேசுகிறது), கி ராஜேந்திரன் (கல்கி) எழுத்தாளர்களான வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, சுஜாதா, சாண்டில்யன்சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் பேட்டிகளை வெளியிட்டது.

 

         ஆனந்தவிகடன்  ஆசிரியர் குழுவிலிருந்து  சாவி வெளியேறி தினமணிகதிர் என்ற வார இதழின் ஆசிரியர் ஆனார். 50 களில் வெளிவந்து நின்றுவிட்ட வார இதழ் அது.சாவி தினமணி கதிரில் தி ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரை சிறுகதைகளும் தொடரும் எழுதவைத்தார். ஒரு லட்சம் பிரதிகளை விற்றுக்காட்டுவதாக சாவி தினமணி கதிர் நிர்வாகத்திடம் கூறியிருந்தார். ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதி பெண்களைப் பற்றி தினமணி கதிரில் எழுத ஆரம்பித்ததும் தினமணி கதிர் ஒரு லட்சம் பிரதியை தாண்டி விற்றது.இதைப்பார்த்த ஆனந்தவிகடன், பிரேமா ராமசாமி என்ற பெயரில் வாராவாரம் ஆபாசக்கதைகளை பிரசுரித்தது.1977ல் ஆனந்த விகடனை விட்டு வெளியேறிய இதயம் பேசுகிறது என்ற பயணத்தொடர் எழுதிய  மணியன்  ” இதயம் பேசுகிறது “என்ற பெயரில் ஒரு வார இதழை ஆரம்பித்தார். தினமணி கதிரிலிருந்த சாவியை கருணாநிதியும் முரசொலிமாறனும் அழைத்து வந்து “குங்குமம்” என்ற வார இதழை துவக்கி  அதன் பொறுப்பை சாவியிடம் ஒப்படைத்தனர்.

 

வண்ணநிலவனின் நண்பர் ஒரு இயக்குனர். அந்த நண்பர் சசி என்ற பெண்ணை விரும்பினார்.அவளுடைய பள்ளித்தோழனை அவளால் தவிர்க்க முடியவில்லை அவனுடனான நட்பு தொடர்ந்தது.நண்பரோ சசி அந்த தோழனுடைய உறவை துண்டிக்காவிட்டால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனச் சொல்லிவிட்டார்.”அந்த பையன் சாதாரணமாகத்தானே பழகுகிறான்,அவனை ஏன் தவிர்க்கவேண்டும் ‘என்றாள் சசி. திருமணத்துக்குப் பிறகு அந்த உறவு தங்கள் உறவை கெடுத்துவிடும் என்று இயக்குனர் நினைத்தார். அதற்கு சசி ஒப்புக்கொள்ளவில்லை.அந்த சசியின் கதையைத்தான் ருத்ரையா ” அவள் அப்படித்தான் ” என்ற படமாக எடுத்தார். அந்த படத்துக்கு திரைக்கதை வசனத்தில் 50 சதவிகிதம் தான் தன்னுடை பங்கு  என்கிறார் வண்ணநிலவன்.

 

டால்ஸ்டாய், தாஸ்தயேவஸ்கி போன்றவர்களை இலக்கிய மேதைகளாக இவ்வுலகம் கருதுகிறது. ஆனால் அவர்களது படைப்பின் அடிநாதம் சோகமே.ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இது தான் இருக்கிறது. தற்கால நவீன இலக்கியங்களும் இந்த சோக அடிச்சுவட்டைத்தான் பின்பற்றி எழுதப்படுகின்றன.புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளில் கேலியும் குத்தலும் உள்ளது என்றாலும் அவர் இலக்கியவாதியாகத்தான் மதிப்பிடப்படுகிறார். ஏனென்றால் அவர் இந்த வாழ்க்கைய விமர்சன நோக்குடன்தான் அணுகுகிறார். ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோதுதான் வண்ணநிலவன் கம்பாநதி நாவலை எழுதினார். அதை எழுதி முடிக்க ஆறேழு மாதங்கள் ஆனது. பின் நாவலை நர்மதா ராமலிங்கத்திடம் கொடுத்தார். நர்மதா பதிப்பகம் அந்த நாவலை வெளியிட்டது.வண்ணநிலவனின் நண்பர்கள் வெளியிட்ட முதல்  சிறுகதை தொகுப்பு எஸ்தர்,  அவரின் நாவல்களான கம்பாநதி, கடல்புரத்தில் ஆகியவை  எந்த விளம்பரமும் இல்லாமல் வெளிவந்தன.வாய்மொழியாகவே அவை இலக்கிய உலகில் அறியப்பட்டன.வண்ண்நிலவன் சி சு செல்லப்பாவைத்தான் நவீன இலக்கியத்தின் சரியான விமர்சகர் என்கிறார்.க நா சு ரசனை அடிப்படையில் கருத்துக்களை சொன்னவர் என்கிறார்.

 

           தெ.சண்முகம் “உதயம்” என்ற இலக்கிய பத்திரிக்கையை நடத்தி வந்தார்.செம்மலர் மாதிரி அதிகம் பிரச்சாரத்தன்மை இல்லாத பத்திரிக்கை “உதயம்”. முற்போக்கு முகாம் எழுத்தாளராக இருந்த போதும் கலாபூர்வமாக எழுதியவர் ஆர் ராஜேந்திரசோழன். பூமணியையும் இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.எழுத்து, நடை,கசடதபற,யாத்ரா போன்ற சிற்றிதழ்கள் இலக்கியத்தில் கலையை வலியுறுத்தின.தீபமும் கணையாழியும் கூட.

           தமிழ்நாட்டில் முதன்முதலாக மாத நாவல் என்ற வகைமயை  ஆரம்பித்து வைத்தது தினத்தந்தி நிறுவனம். ராணிமுத்து என்ற பெயரில் ஏற்கனவே வெளிவந்த அகிலன் , நா பார்த்தசாரதி போன்றவர்களின் நாவல்களை சுருக்கி தனிப்புத்தகமாகவே வெளியிட்டது. அதற்கு நல்ல வரவேற்பிருந்தது.ராணிமுத்துவின் வெற்றியைப் பார்த்த மோதி பிரசுரம் ஜெயகாந்தனுடைய குறுநாவல்களை மட்டும் மாதா மாதம்  வெளியிட்டுவந்தது.அறந்தை நாராராயணன் கல்பனா என்ற மாத நாவல்  இதழைத் தொடங்கினார். மோதிபிரசுரம் விரைவில் நின்றுவிட்டது.ஜெயகாந்தனின் குறுநாவல்களை கல்பனா  வெளியிட்டது.சில இதழ்களுக்குப்பின் அதுவும் நின்றுவிட்டது.

 

“நான் மார்க்சியம் கற்றிருந்தாலும் இலக்கியத்துக்கும் அதற்கும் காததூரம் என்பதை உணர்ந்தே இருந்தேன்  மௌனி, லாசரா, நகுலன் போன்ற தமிழின் அபூர்வமான உரைநடைக்காரர்களை மார்க்ஸிஸ்டுகளோ, கம்யூனிஸ்டுகளோ பாராட்டியதில்லை. நான் மக்கள் கலை இலக்கிய கழகத்திலும் சேரவில்லை, புதிய ஜனநாயகம் பத்திரிக்கையிலும் எழுதவில்லை , புதிய ஜனநாயகத்துக்கு மாற்றாக பா ஜெயப்பிரகாசமும் சில நண்பர்களும் சேர்ந்து மனஓசை என்ற பத்திரிக்கையை வெளியிட்டனர் “என்கிறார் வண்ண நிலவன்.

ஞாநி பரீக்க்ஷா குழுவை ஆரம்பித்திருந்தார்.அவர் இந்தியன் எக்ஸ்ப்ரஸ்வேலையை விட்டபிறகுதான் பரீக்க்ஷா நாடகங்கள் நிறைய போட்டார்.”தீம்தரிகிட” பத்திரிக்கையை ஆரம்பித்தார். தன்னை குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளராக நிறுவிக்கொண்டார்.

சாண்டில்யனை  ஆசிரியராகக்கொண்டு கமலம் என்ற பத்திரிக்கையை ஜேப்பியார் ஆரம்பித்தார். சில இதழ்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

டால்டன் நிறுவனம் இந்துமதியை ஆசிரியாராககொண்டு “அஸ்வினி ” என்ற  பத்திரிக்கையை தொடங்கியது.அதில் விக்கிரமாதித்தனும், ஞாநியும் உதவியாசிரியர்கள்.ஆனாலும் அந்த பத்திரிக்கையும் அதிக நாட்கள் வரவில்லை.

சாவி குங்குமத்தை விட்டு வெளியேறி சாவி என்ற பெயரிலேயே ஒரு வார இதழை துவக்கினார்.இளைஞர்களுக்காக மாலனை ஆசிரியராகக்கொண்டு திசைகள் என்ற இதழை துவக்கினார். திசைகள் சில இதழ்களுடன் நின்றுவிட்டது. சாவி மட்டும் சற்று அதிக நாட்கள் வந்து நின்றுபோனத.  என்கிறார் வண்ணநிலவன்.

 

 பி ஆர் சோப்ரா தயாரித்த மஹாபாரதம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூரதர்ஷனில் ஒளி பரப்பானது . அந்த தொடரின் கதைவசனத்தை தமிழில் வெளியிட துக்ளக் மற்றும் தினமலர் உரிமை  பெற்றிருந்தன. டிஎஸ் வி ஹரி துக்ளக்குக்கு மொழிபெயர்த்து தந்தார். அவரின் மொழிபெயர்ப்பில் வந்த மஹாபாரதம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 1,10,000 பிரதிகள் விற்ற துக்ளக் விற்பனை இரண்டு லட்சம் பிரதிகளைத் தொட்டது. விக்கிரமாதித்தனின் முதல் கவிதைத் தொகுப்பை அன்னம் மீராவிடம் அனுப்பினார் வண்ணநிலவன். அதை ஆகாசம் நீல நிறம் என்ற கவிதைத்  தொகுப்பாக அன்னம் மீரா வெளியிட்டார்.

 

கூத்துப்பட்டறை நவீன நாடகங்களை நடத்துவதுடன் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சியும் அளித்து வருகிறது.மறைந்த ந முத்துசாமிதான் கூத்ததுப்பட்டறையை நடத்தி வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கூத்துப்பட்டறையை 1976ல் துவக்கியது வீராச்சாமி என்று அழைக்கப்படும் ரங்கராஜன் தான்.ந முத்துசாமி அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் மேலாண்மைப் போக்குகளையும் அவற்றின் அபத்தங்களையும் தனது அப்பாவும் பிள்ளையும் , காலங்காலமாக, சுவரொட்டிகள், நாற்காலிக்காரர் ஆகிய நாடகங்களில் மிகுந்த நவீன உணர்வுடன் எடுத்துக் கூறியுள்ளார்.

அவருக்குப்பிறகுதான்  இந்திரா பார்த்தசாரதியையோ, சே ராமானுஜத்தையோ வேறு யாரையுமோ  சொல்லமுடியும்.இந்திரா பார்த்தசாரதியின் மழை, போர்வை பெரிதாக பேசப்பட்டன.ஆனால் ந முத்துசாமியின் காலங்காலமாக, நாற்காலிக்காரர் ஆகிய இரண்டு நாடகங்களுக்கு முன் அவை காணாமல் போய்விடுகின்றன என்கிறார் வண்ணநிலவன்.

 

வண்ணநிலவன் இந்த புத்தகத்தில் கூறியுள்ள இலக்கியம் பற்றிய செய்திகளில் முக்கியமானவற்றை குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் பல அவர் வாழ்க்கை பற்றியவை. துக்ளக் இதழ் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். சினிமாவைப்பற்றியும்  சொல்லி இருக்கிறார். இந்த புத்தகம் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.இதிலும் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியை  மட்டுமே எழுதி இருக்கிறார். மேலும் இன்று வரையான வாழ்க்கையை அவர் எழுத வேண்டும். இந்த புத்தகத்தை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

உங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்

10 tips to handle Social Media Addiction - Martin Shervington

ஒருவகை அதீத சுயமோகம்
மனக்கோளாறு
மின்னணு நார்சிஸம்
அளவுக்கு மிஞ்சினால் 
எதுவும் ஆலகாலம் 
இதெல்லாம்
உங்களுக்கு தெரியாததா
புதிதாய் மணமானவர்கள்
சதா அதே நினைப்பாயிருப்பது போலிருந்து ஏன் இப்படி 
வெறிஎடுத்துப் பதிகிறீர்கள்
பொதுவெளியில்
பால் பேதமின்றி
எதற்காக ரெஸ்ட் ரூம் வரை நீள்கின்றன
உங்கள் தற்பட ஆசைகள்
தற்கொலைக்கு 
முந்தைய கணத்தைப் பதிவிட்டு
அமரத்துவ ஆசையோடு மரிக்கிறான் ஒருவன்
இரு சக்கர வாகனத்தில் நின்றபடி
படமெடுத்து சாகிறான் 
ஒரு சாகஸன்
முகம் மறைத்து
உறுப்புகளை மட்டும்
முன் வைக்கிறாள் ஒருத்தி
சினிமா வாய்ப்புக்காய் ஒளிவுமறைவின்றி
டிக்டாக்குவதாய் சொல்கிறாள்
இன்னொருத்தி
எங்கெங்கு காணிணும் கட்செவியடா
அங்கங்கு நிறைவது காணொளிக் கர்மமடா
எல்லோர் முதுகுகளுக்குப்பின்னும்
கேமிராக்களிருப்பது போதாதென்றா
சொந்த செலவில் 
இந்தச் சூன்யம்
அந்தரத்தில் தொங்கும்
நாக்குகளுக்காவா 
இந்தத் தேன் உற்பத்தி
வெற்று சைபர் (வெளிக்கு) முன்
ஏன் இத்தனை ட்ரில்லியன் இலக்கங்கள்
விருப்பக்குறிகளுக்கும்
பின்னூட்டங்களுக்குமாக
அடிமைகள்
சொறிந்துகொள்ளும் முட்களால்
வலி தோய்ந்த ரத்தமும்
நடுநடுங்கி நனைக்கும் கண்ணீரும்
சர்வதேச ‘மார்க் மாமாக்களின்’ இணைக்கும் வியாபாரத்துக்காவா
பிறப்பெடுத்திருக்கிறோம்
வாசிப்பும் புரிதலும் தெளிதலுமில்லா
விபரீத மூட்டத்தில்
யாரது மாய கரங்களில் நாம்.

சூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு

10 Years Of Angadi Theru Vasantha Balan Shares Lot Of Secrets

சூப்பர் மார்க்கெட் கவிதைகள் 

 

1.   கடை கடையாக 
கையேந்தும் மூதாட்டியிடம் 
ஒரு அழுகல் கனியைக் 
கொடுக்கச் சொல்கிறார் 
முதலாளி 

 

2.   மூன்று வகை திராட்சைகளிலும் 
ஒவ்வொன்று எடுத்து 
ருசித்துப் பார்த்தேன் 
ச்சீ.. ச்சீ…  இந்த பழம் 
புளிக்கிறது 

3.   எதற்கெடுத்தாலும் 
என்னையே அழைக்கிறார் 
‘கண்மணி கண்மணி’ என்று 
வெகு உரிமையாக. 
சம்பளம் வாங்கிய உடன் 
வேறு கடைக்கு மாறவேண்டும் 

 

4.  ராணி அக்கா 

நேற்று இரவு அழுதுகொண்டே 

கடையை விட்டுப் போனாள் 

இன்று புதிதாக ஒரு 

பதின் பருவத்தினள்

வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள்

 

தொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி

கவிதை - அம்மா
*தொடரும் ஜென்மங்களெல்லாம்,*
*தொடரட்டும் நம் பந்தம்,,,,,*
உயிரால் என்னை தைத்து,
*உனக்குள் வைத்தவளே…*   வரிகளில் உன்னை வைத்து,
 *வார்த்தையால் வணங்குகிறேன்….*
பூமி என்னை சுமப்பதில்லை,
*உன் பாசம் அது சுமக்கும்,,,*
சாமி நான் பார்த்ததில்லை,
 *உன் தியாகம் அது கோவிலாகும்,,,*
ஆணோ, பெண்ணோ,.,,,,, *கருப்போ, சிவப்போ,*
குறையோ நிறையோ,
*நிலைப்பேனோ மாட்டேனோ,*
பிறந்து இறப்பேனோ,
*இறந்து பிறப்பேனோ,*
குள்ளமோ உயரமோ,
நல்லவனோ கெட்டவனோ,,,
*போற்றுவேனோ தூற்றுவேனோ,,,*
எதுவும் தெரியாமல், என் மேல் பாசம் வைத்த  உயிரே….
*உன் பெயர் தான் அம்மா…..*
 ஊஞ்சலாய் தாலாட்டி ,
*ஆசையாய் பாலூட்டி.*
தலையை வருடியபடி,
*முதுகைத் தட்டியபடி,*
*தூங்கவைப்பாய் கொஞ்சியபடி..*
*அசைபோடுகிறேன்  ஏங்கியபடி….*
அம்மா, அம்மா என்றபடி,
*கண்கள் இரண்டும் நனைந்தபடி,,*
தேடுகிறேன் தாய்மடி,
*வணங்குகிறேன் உன் காலடி….*
*தொடரும் ஜென்மங்களெல்லாம்,,*
*தொடரட்டும் நம் பந்தம்,,,,*

இது என்ன விளையாட்டு..! – கோவை சங்கர்

Murugan and Woody Woodpeacock by art-rinay on DeviantArt (With ...

 

இது என்ன விளையாட்டு – சரவணா
இது என்ன விளையாட்டு

அடுத்தவன் பொருளை ஆசைப்படாதே
என்கிறது என்தங்க மனசு
அவன்பொருள் கவர்ந்து வாழ்ந்துபாரேன்
என்கிறது என்கள்ள மனசு!

பிறர்பெண்ணை பார்ப்பதுவே பெரும்பாவம்
என்கிறது என்தங்க மனசு
அவளழகை ரகசியமாய் ரசிக்கலாமா
என்கிறது என்கபட மனசு!

நல்ல எண்ணத்தை கொடுப்பவனும் நீ
கபட உணர்வை விதைப்பவனும் நீ
தர்மத்தை நெஞ்சினிலே பதிப்பவனும் நீ
ஆசைகளை மனதினிலே திணிப்பவனும் நீ!

என்னவதி உனக்கேன்ன விளையாட்டா
என்தவிப்பு உனக்கது தாலாட்டா
எனக்குத் தருகின்ற சோதனையா
எவ்வழி செல்கிறேனென பார்க்கிறயா!

 

அம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்

 கொழுக்கட்டையில்  ஆரம்பித்து தயிர் சாதத்துடன்  அம்மாவின் கை உணவு  முடிவடைகிறது. 

அடுத்த மாதத்திலிருந்து  சதுர்புஜன் அவர்களின் புதிய கவிதைத்தொடர் வர இருக்கிறது.

என்ன அது? 

கொஞ்சம் பொறுத்திருப்போம் 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018   
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019  
 17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
 18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
 19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
 20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
 21. அவியல் அகவல் நவம்பர் 2019
 22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
 23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
 24. சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
 25. துவையல் பெருமை மார்ச் 2020
 26. பொடியின் பெருமை ஏப்ரல் 2020
 27. கீரை மகத்துவம் மே 2020

 

 1. தயிர் சாதப் பெருமை !

பிரசாத தயிர் சாதம் | ருசி | Rusi | tamil ... 

எந்த ஊர் சென்றாலும் வீடே சொர்க்கம் !

எங்கே போனாலும் உடன் திரும்பத் தோணும் !

வித விதமாய் பல ருசியாய் சாப்பிட்டாலும்

ஈடில்லா உணவென்றால் தயிர் சாதம் தான் !

 

பகட்டெல்லாம் பல நாள் நான் பாராட்டினேன் !

பலபேரும் சொன்னதற்கு தலையாட்டினேன் !

உலகத்து உணவெல்லாம் ஒப்பு நோக்கினும்

ஈடில்லா உணவென்றால் தயிர் சாதம் தான் !

 

எந்த விதம் தொடங்கினாலும் முடிவு ஒன்றுதான் !

ஆடி அடங்கும்போது தேவை அமைதி தான் !

நாளுக்கொரு புதிய சுவை அனுபவித்த பின்

இறுதியில் சேரும் இடம் தயிர் சாதம் தான் !

 

தயிரும் பாலும் விட்டு நன்றாய் பிசைய வேணுமே !

விரை விரையாய் இல்லாமல் மசிய வேணுமே !

சுவைக்கு சற்று கல்லுப்பை அனுமதிக்கலாம் !

ஊறுகாயை தொட்டு தொட்டு அனுபவிக்கலாம் !

 

மாவடு தொட்டுக் கொண்டால் மதி மயங்குமே !

மோர் மிளகாய் என்று சொன்னால் முறுக்கேறுமே !

ஆவக்காய் சேர்த்தடித்தால் ஆஹா சொர்க்கமே !

எலுமிச்சை என்றாலும் நன்றாய் சேருமே !

 

தட்டில் சாதம் குறையக் குறைய இன்பம் ஏறுமே !

உண்ட உணவில் திருப்தி நிலை உருவாகுமே !

எத்தனை முறை உண்டாலும் அதே ஆனந்தம்

அம்மா கை தயிர் சாதம் பரமானந்தம் !  

 

 

 

 

 

 

காலையிலே!- தில்லைவேந்தன்

 

(சான் பிரான்சிஸ்கோவில் வீட்டிலிருந்து  நான் எடுத்த  காலையிலே  )

.                     காலையிலே!

கொஞ்சம் கதிரொளி, கொஞ்சம் இளவளி
     கூடிட வேண்டும் காலையிலே
பஞ்சின் ஒருதுளி பரவும் வான்வெளி
     பார்த்திட வேண்டும் காலையிலே
கெஞ்சும் குயிலொலி,கொஞ்சும் கிளியொலி
     கேட்டிட வேண்டும் காலையிலே
மிஞ்சும் பனிமலி பச்சைப் புல்வெளி
     மிதித்திட வேண்டும் காலையிலே.

கொஞ்சம் மலர்மணம், கொஞ்சம் மண்மணம்
     குலவிட வேண்டும் காலையிலே
துஞ்சும் இருளினம் இல்லை மறுகணம்
     தோய்ந்திட வேண்டும் காலையிலே
செஞ்சொல் பனுவல்கள் செய்து தமிழினில்
     திளைத்திட  வேண்டும் காலையிலே  ்
நெஞ்சின் கவலைகள், நேற்றின் திவலைகள்
     நீங்கிட  வேண்டும்   காலையிலே

                                                 

சின்ன சின்ன ஆசை !   – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

  Chinna Chinna Aasai DVDHD Roja 1080p HD - YouTube

 

அன்பு மலர்கள் மலர்ந்து

அமைதி நிலவ வேண்டும்

ஆன்மீக அன்பர்கள் கூடி

ஆன்ம பலம் பெற வேண்டும்

 

இன்னிசை  எழுப்பி புவியில்

இன்பம் பெற வேண்டும்

ஈன்றவளை தெய்வம் 

என்று நினைக்க வேண்டும்

 

உண்மை தன்மையுணர்ந்து

வாழ்வில் உயர்வடைய வேண்டும்

ஊனம் கண்டாலும் நேயமுடன்

நல்லுறவோடு பழக வேண்டும்

 

எவ்வுயிரும் தன் உயிர்போல்

நினைக்கும் உள்ளம் வேண்டும்

ஏற்றமிகும் பாரதம் என 

எங்கும் பேசப்பட வேண்டும்

 

ஐயம் தெளிவுபட நல்ல 

கல்வி கற்க வேண்டும்

ஒற்றுமை எங்கும் நிலவி  

ஓரினமென நினைக்க வேண்டும்

 

ஒளவை மொழி அமுதமொழி 

அனைவரும் உணர வேண்டும்

எ:.குபோல் வீரம் எங்கும்

உலகில் உறுதிபட வேண்டும்

 

உலகில்

அன்பு விதையைத்தூவி

பண்பு நீரைப் பாய்ச்சி 

உழைப்பு உரமிட்டு 

ஆன்மீக மனிதநேய 

பயிரை வளர்த்தால் 

அல்லவை தேய்ந்து உலகில் 

நல்லவை பெருகும் !

 

        

காதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்

கொரானா காலத்தில்  அவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே எடுக்கப்பட்ட குறும் நகைச்சுவைப் படம். 

காத்தாடி சார் வழக்கம்போல கலக்குகிறார் !

நீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்

இவர்  ஒரு எழுத்தாளர் .நாடகத் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர்.
40ஆண்டுகளாக மேடை நாடகங்கள் நடத்தி வருகின்றார் .
இவர்  எழுதி இதுவரை 13 நூல்கள் வந்துள்ளன.
அவற்றில் சில…
மினியேச்சர் மகாபாரதம்,
இயக்குநர் சிகரம் கேபி,
விதுர நீதியும் வள்ளுவ நீதியும்,
தமிழ் நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்,
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்,
வள்ளுவத்தில் உவமை உலா,
பூவா தலையா (சிறுகதைகள் தொகுப்பு)
பாரதரத்னா என்ற நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது பெற்றுள்ளார் .
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் “வாழ்நாள் சாதனையாளர்”விருது, சென்னை கல்சுரலின் “நாடகக் கலா சிரோமணி’ விருதுகளையும் பெற்றுள்ளார் 

எத்தனை கோடி இன்பம் | Ethanai kodi inbam vaithai ...

இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்…கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்…கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே…மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.

பாரதி இன்பமாய் நினைத்தவை…எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்

ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது…இன்பமாய் வாழ்வோம்.

இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு…வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

புது நிறம் – வளவ. துரையன்

                  

 

 தெரிந்தே இறங்கிய

  ஆழமான நதியில்

  அமிழ்ந்து கொண்டிருக்கிறேன்

 

நீரைக் குடித்துக் கொண்டு

உராயும் மீன்களை உதறியும்

போய்க்கொண்டிருக்கிறேன்.

 

முத்துகுளிப்பவன் போல

சிப்பிகளைக் கொண்டுவந்து

குவிப்பேன் என நீ காத்துக்கொண்டிருக்கிறாய்

 

இன்னமும் வெளிவரும் குமிழ்கள்

என் இருப்பை உணர்த்தலாம்

 

பல பெரிய சுறாக்கள்

பொறாமைக் கண்களுடன்

ஆனால் புன்சிரிப்புடன்போகின்றன.

 

என்மேல் படரும் பாசிகள் 

எனக்குப் புது நிறம் அளிக்கின்றன.

 

எந்த நிறமாய் மாறினாலும்

நீ என்னை அறிந்து விடுவாய்

ஆழத்திலேயே அமிழ்ந்து விடலாமா

என யோசிக்கிறேன்

 

 

ஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி

‘விண்ணைத் தாண்டி வருவாயா ?’

படத்தின் தாக்கம் மறைய பலருக்கு பல நாட்கள் ஆகலாம்.

ஆனால் கார்த்திக்கும் ஜெஸ்ஸிக்கும், -, எஸ் டி ஆருக்கும், திரிஷாவுக்கும் ,  கவுதம் மேனனுக்கும்ஏ ஆர் ரஹ்மானுக்கும் அதன்    தாக்கம் எப்போதும் இருக்கும் 

பார்த்து மகிழுங்கள் !

கார்த்திக் டயல் செய்த எண் !

என்ன அருமையான குறும்படம்

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

Dr. J. Bhaskaran Tamil Novels | Tamil ebooks online | Pustaka
சாது மிரண்டால்! – அறுபதுகளின் தமிழ் த்ரில்லர்!! 
55 வருடங்களுக்கு முன் வந்த ஒரு தமிழ்த்திரைப்படம் – அன்றைய ‘த்ரில்லர்’ வகைப் படம் – சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத, படம்! நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம்!
குவிகம் இலக்கிய வாசல் சமீபத்தில் நடத்திய ‘ஜூம்’ மீட்டிங் வித்தியாசமானது – “தனக்குப் பிடித்த ஒரு படம் பற்றி, ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும்”, ஏழு படங்கள் பேசப்பட்டன! நான் பேசிய படத்தின் சிறு ஆரம்பக் குறிப்புதான் மேலே உள்ளது!
1958ல் அன்றைய மெட்ராஸில், ஓடும் காரில் வங்கி ஊழியர் ஒருவர் பணத்துக்காகக் கொல்லப் பட்டார் – கொன்றது அவரது நண்பர்களே! சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருப்பவர்கள்அவர்கள். வங்கி ஊழியர், பெரிய தொகையை தி நகர் கிளைக்கு. எடுத்து வரும்போது காரிலேயே கொலை செய்யப்படுகிறார். ‘சூரியநாராயணன் கொலை வழக்கு’ என மிகவும் பேசப்பட்ட முக்கியமான வழக்கு அது!
அன்றைய பிரபல இயக்குனர் பீம்சிங், இந்தக் கொலையை மையமாக வைத்து, பல எதிர்பாராத திருப்பங்களுடன், அருமையான ‘கிரைம் த்ரில்லர்’ ஒன்றை உருவாக்கித் தனது உதவி இயக்குனர்கள், திருமலை – மகாலிங்கம் இயக்கத்தில், மெல்லிசை இரட்டையரில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தியின் இசையில் தயாரித்த படம்தான் ” சாது மிரண்டால்“.
வினாயகா சொஸைடி பேங்க் காஷியர் சாதுவான பசுபதி. நேர்மைக்கும், அன்புக்கும், கருணைக்கும் உதாரணமானவர்! அவரது குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கும் டீச்சர் கல்பனா. குடும்ப நண்பரும், டாக்ஸி டிரைவரும் ஆன கபாலி, அவரது காதலி கற்பகம் மற்றும் பேங்க் ஏஜெண்ட் (மானேஜர்) இவர்கள் பரஸ்பரம் அறிமுகமான நல்லவர்கள்!
கொலை, கொள்ளை, திருட்டு, குழந்தைகள் கடத்தல் செய்யும் நரசிம்மன் போலீசால் தேடப்பட்டு வருபவன். பசுபதியின் பால்ய சிநேகிதன். நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கும் நரசிம்மனை நம்புகிறார் பசுபதி – பசுபதியிடம் வலிப்பு வருவதைப் போல் நடித்து, மெழுகில் பேங்க் சாவியைப் பிரதி எடுத்து, இரவோடிரவாக பணத்தைக் கொள்ளையடிக்கிறான் – அமெரிக்காவில் இது போன்ற கொள்ளையைப் பற்றி மானேஜர் சொல்லியிருப்பதும், டாக்சி டிரைவர் நரசிம்மனைப் பற்றி எச்சரித்ததும் மனதைக் குழப்ப, இரவில் பேங்க் வந்து பார்க்கும் பசுபதி, செக்யூரிடி கொலை செய்யப்பட்டிருப்பதையும், பணம் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு, பதறுகிறார். பணப் பெட்டியுடன் நரசிம்மனைப் பார்த்து, கெஞ்சுகிறார் – பேச்சு முற்றி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் நரசிம்மனை எதிர்பாராமல் சுட்டுவிடுகிறார். இது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கபாலியின் காரில் நடக்கிறது – பின் சீட்டில் கீழே நரசிம்மன் பிணம் – பிணமிருப்பது தெரியாமல் கபாலி வண்டி ஓட்டுவதும், வண்டியில் ஏறும் சவாரி ஒவ்வொன்றும் பயந்து அலறி ஓட, ஒரு பாதிரியார் மட்டும், போலீஸுக்குத் தகவல் தருகிறார்! போலீஸ், விபரம் அறிந்து நரசிம்மனின் கூட்டாளிகளைப் பிடித்தார்களா? பணம் என்னவாயிற்று? பசுபதி மீது விழுகின்ற திருட்டு மற்றும் கொலைக் குற்றம் என்னவாயிற்று? என்பது மீதித் திரைப்படத்தில் வருகிறது!
ஒரு கிரைம் நடப்பது, பார்வையாளர்களுக்குத் தெரியும். படத்தில் வரும் பாத்திரங்கள் எப்படித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதைச் சொல்லுவதில் தான் டைரக்டரின் திறமை இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தப் படம் இன்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பதற்கு, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாவற்றிலும் இருக்கும் ‘அர்ப்பணிப்பு’ தான் காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது!
பசுபதியாக டி ஆர் ராமச்சந்திரன் (அருமையான நடிப்பு), பேங்க் ஏஜண்டாக சகஸ்ரநாமம் (பண்பட்ட நடிப்பு), நரசிம்மனாக ஓ ஏ கே தேவர் (வில்லனாக சிறப்பு), கபாலியாக நாகேஷ், காதலியாக மனோரமா (என்ன ஒரு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர், டைமிங் – செம ஜோடி!),குழந்தைகளாக குட்டி பத்மினி, மாஸ்டர் பிரபாகர், டாக்சி பயணிகளாக, பாலையா, டைபிஸ்ட் கோபு, ஏ கருணாநிதி, ஏ.வீரப்பன், ராமாராவ், உசிலை மணி, வி நாகைய்யா என நட்சத்திரக் கூட்டம்! ஒரு மிகையான நடிப்போ, அநாவசியமான வசனமோ கிடையாது!
நான் முதன் முதலாகத் தனியாகச் சென்று தியேட்டரில் பார்த்த படம் சாது மிரண்டால்! சிதம்பரம் நடராஜா டாக்கீஸில், சூடான கோடைக் கால மாட்னி ஷோ! முன் பென்ச் (35 பைசா டிக்கட்!) – வியர்வை, பீடி, சிகரெட் நாற்றம், ப்ரொஜெக்டர் ரூம் சதுர ஓட்டையிலிருந்து திரைக்கு வரும் ஒளிக் கற்றையில், சுருளாகச் செல்லும் பீடிப் புகை, இடையே விற்கப் படும் சோடேலர், வர்க்கி, கமர்கட் – இத்தனைக்கும் நடுவில், நாகேஷ் என்னும் அந்த மகா கலைஞனின் பரம இரசிகனாக ஆனேன் நான்! மீண்டும் 55 வருடங்களுக்குப் பிறகு, இன்றும் யூ ட்யூபில் பார்க்கும் போது, அன்று சிறுவனாக இரசித்த அதே மனநிலை, மகிழ்ச்சி, வியப்பு – அதே மலர்ச்சியுடன் சிரித்தேன் நான்!
ஏ வீரப்பன் தன் பெயரைப் போட்டுக்கொள்ளவில்லையெனினும், வசனம் எழுதியது அவர்தான் என்று வாமனன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்துக்கும் இவர்தான் வசனம் – சமீபத்திய கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ ஜோக்கும் இவர் எழுதியதே என்பது உபரிச் செய்தி!).
நரசிம்மனிடமிருந்து பணப் பெட்டியைப் பிடுங்க, பசுபதி போராட, அப்போது நரசிம்மன் சொல்வது: “ என்ன சாது மிரளுதா பசுபதி? நீ வெறும் பசுதான், நான் சிம்மம் – நரசிம்மன்” என்றபடி கைத்துப்பாகியை எடுப்பது சிச்சுவேஷனுக்கேற்ற வசனம்!
கதையோட்டத்தில், போகிற போக்கில் வந்து விழும் நகைச்சுவை வசனங்களுக்கு அளவேயில்லை! புது மணத் தம்பதியாக வீரப்பனும் அவர் மனைவியும் காரில் பேசிக்கொள்வதும், வழியில் ஒரு பேட்டை ரவுடியிடம் நாகேஷ் படும் பாடும், பிணத்தைப் பார்த்து புது மணத் தம்பதிகள் அலறியடித்து ஓடுவதும் இன்றும் இரசிக்கத் தக்கதாய் இருக்கிறது!
பாகவதர் பாலையா ‘யாரோ, இவர் யாரோ’ பாடியபடி பயப்படுவதும், மேக் அப் மேன் ஏ கருணாநிதி, கையில் பொம்மைத் தலையுடன் மிரளுவதும், ஃபாதர் நாகையா வழியில் இறக்கி விடச் சொல்ல, “என்ன ஃபாதர், மேரி மாதா கோவில்ல இறக்கி விடச் சொன்னீங்க, இந்துக் கோவில் முன்னால இறங்கறீங்க (அன்றைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)” என்று நாகேஷ் கேட்க, “எந்த மதமா இருந்தால் என்னப்பா, தெய்வம் ஒண்ணுதானே” என்கிறார் ஃபாதர்.
டாக்சியில் பிணத்தைப் பார்த்து, நாகேஷ் எகிறி குதிக்க, மனோரமாவும் அவரும் பேசும் பேச்சு நகைச்சுவையின் உச்சம். “பேசாம, போலீஸ் ஸ்டேஷன்லெ போய் சொல்லிடலாம்யா” – மனோரமா. உடனே நாகேஷ் “ பின்ன இதுங்கூட பேசிக்கிட்டேவா போக முடியும்?”
“நீதான் டாக்சிலே மறந்த சாமானெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்லெ கொண்டு குடுப்பியேய்யா” – மனோரமா.
“அதெல்லாம் மறந்த சாமான். இது இறந்த சாமான் இல்லே” என்பார் நாகேஷ்.
அன்றைய மெட்ராஸின், மவுண்ட் ரோட், மன்ரோ சிலை, நேப்பியர் பாலம், கடற்கரை ரோட், பீச்சில் அறுகோண ரேடியோ ஒலிபரப்பும் இடம், சென்ட்ரல் ஸ்டேஷன், பெசண்ட் நகர் பீச் – அருமையான நாஸ்டாஜியா!
1947 வருட மாடல் ‘Chevy fleetmaster’ – நீளமான மூக்குடன், கோழி முடை வடிவ கார் (MSW 7593) – மேலே மஞ்சள், கீழே கறுப்புக் கலர் டாக்சி – இடது பக்கம் மீட்டர் – ‘ஃபார் ஹயர்’ சைன் டிஸ்கை, ‘டிங்’ சத்தத்துடன் திருப்பி, மீட்டர் போடுவது – படத்தில் ஒரு முக்கியமான பாத்திரமாகவே வரும் டாக்சி, மெட்ராஸ் வீதிகளில் வலம் வந்த நாட்களை நினைவூட்டுவது சுகம்!
பாலமுரளி கிருஷ்ணா, ஏ எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் வி பொன்னுசாமி ஆகியோர் பாடியுள்ள பாடல்களை எழுதியுள்ளவர்கள் ஆலங்குடி சோமுவும், தஞ்சை வாணனும் – அளவான, த்ரில்லர் படத்திற்கேற்ற இசை டி.கே.ராமமூர்த்தி!
ஒரு பழைய படம், ஏராளமான சிந்தனைகளை, மனத்திரையில் ஓடவிடுகிறது என்றால், அந்தப் படத்தின் வார்ப்பு அவ்வளவு சிறப்பானது என்று பொருள்!
அப்போது வாழ்க்கை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், அதிக குழப்பங்கள் இல்லாமலும் இருந்தது – அதர்மம் இருந்தாலும், தர்மமே வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது! நம்பாதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்!