Monthly Archives: January 2016
தலையங்கம் – ஜல்லிக்கட்டு – கொம்பு சீவும் விளையாட்டு
கடைசியில் பூனைக்கு மணி கட்டிவிட்டார்கள் ! மன்னிக்கவும் காளைக்குக் கொம்பு சீவி விட்டார்கள்!
தமிழக மக்கள் ஏழுகோடிபேரின் ஒருமித்த விருப்பத்தைச் செவிமடுத்த மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டுக் காளையை மிருகவதைப் பட்டியலிலிருந்து எடுத்து விட்டது !
தமிழக அரசு, மக்களுக்காகப் போராடிப் பெற்றுத்தந்த மாபெரும் பொங்கல் பரிசு இது !
இந்தப் பொங்கலில் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு மீண்டும் வரப் போகிறது !
அஞ்சாத சிங்கமடி என் காளை
இது பஞ்சாப் பறக்க விடும் ஆளை
என்று வீரப் பாடல் பாடிக் காளையை அடக்கும் வீரனுக்கே தன்னை அடக்கும் பெருமையைக் கொடுப்பார்கள் மறத் தமிழ்க் கன்னிப்பெண்கள்!
காளையரும் காளையின் வாலை முறுக்க அதன் திமிளைத் தனது பிடியில் அடக்க மீசையை முறுக்கிக் கொண்டு வருவார்கள் !
தமிழக அரசியலில் ஒருவருக்கொருவர் கொம்புக்கு வர்ணம் அடித்தவர்கள் இப்போது குளம்புகள் மிதிபடத் துள்ளிக் குதித்து ஓடுகிறார்கள் !
இது போதும் எங்களுக்கு ! இனி தமிழகத்தில் தேனும் பாலும் ஓடப்போகிறது !
தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க எங்களிடம் ஒரு கல் தயார் !
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் கோழை நாய்களின் குடலை உருவி மாலை போட காளையைக் கொம்பு சீவிக் களத்தில் இறக்கிவிட்டோம் !
தத்தித் தகிடக தத்தோம் !
தத்தித் தகிடக தத்தோம் !
பி.கு : கடைசியாகத் தெரிந்த தகவல்படி உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதாம்.
இந்த ஜல்லிக்கட்டு இருக்காதாம் – தேர்தல் மல்லுக்கட்டு தான்
ஷாலு மை வைஃப்
ஆஞ்சநேயர் ஜோதிடத்துக்கு டோக்கன் வாங்கும் இடத்தில் ஷாலுவைப் பார்ப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கும் அவள் ரெட் கலர் தான். ஆனால் சிவப்புக் கலர் சல்வார் துப்பட்டா அணிந்திருந்தாள். அவள் என்னைப் பார்த்துவிட்டு ஆச்சரியப் படுவாள் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் அவள் கைவளையல் என் கையில் பட்டுக் கீறி இரத்தம் வரவழைத்தற்காக வருந்துவாள் என்றும் எதிபார்த்தேன்.
ஆனால் அவள் முகத்தில் என்னைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வளையல் உடைந்ததுக்காக சென்டிமெட்டலா கோபித்துக் கொண்டாள் என்று தான் முதலில் நினைத்தேன் . அவள் காசு கொடுத்து வாங்கின பேப்பர் டோக்கனை கிழித்து எறிந்துவிட்டு என்னைப் பார்த்து ‘ஹும்’ என்று உறுமிவிட்டு மேலே நடக்க முற்பட்டாள்.
“ஷாலு என்னைத் தெரியலையா ? நான் தான் நேற்று உன்னை இன்டர்வியூ பண்ணினேனே , ஞாபகம் இல்லையா ?” என்று பழைய ஸ்ரீதர் படம் ஜெமினிகணேசன் மாதிரி கேட்டேன்.
” உங்க கம்பெனிக்கு மட்டும் இவ்வளவு பாஸ்ட்டான கூரியர் எப்படிக் கிடைச்சான். நேத்திக்கு சாயங்காலம் தான் இன்டர்வியூ நடந்தது. இன்னிக்குக் காலையிலேயே ரிசல்ட் வந்து நிக்கறது”
” அதுக்கு நீ எனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும். நான் தான் உன்னை ஸ்ட்ராங்கா ரெகமென்ட் பண்ணினேன்.” என்றேன்.
” அப்படியா ! உங்களுக்கு உங்க கம்பெனியில அவ்வளவு தான் மதிப்போ? ” என்று கேட்டாள்.
” நீ என்ன சொல்லற?”
” இங்கே பாருங்கோ” என்று சொல்லி அவளுடைய ஹேன்ட் பேகிலிருந்து லெட்டரை எடுத்து என் மூஞ்சிக்கு நேரே நீட்டினாள். படித்தேன். பக் என்றிருந்தது. ‘உங்களுக்கு இந்த வேலையைத் தர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று எழுதியிருந்தது. கீழே மிஸ். ஓ எம் ஆர் கையெழுத்துப் போட்டிருந்தாள். ‘ பழிவாங்கி விட்டாளே ‘ என்று நொந்துகொண்டு, ‘ சாரி, ஷாலு, எங்கேயோ தப்பு நடந்திருக்கு. நாளான்னக்கி ஆபீஸில் இதை சரி பண்ணிடறேன்.”
வேண்டாம் சார். நீங்க இன்டர்வியூ முடிஞ்சதும் ‘ நீ செலக்டட்’ என்று சொன்னதை நம்பி நேத்து என் பிரண்ட்ஸ்களுக்கெல்லாம் பார்ட்டி வேறே கொடுத்திட்டேன். இன்னிக்கு காலைல இந்த மாதிரி லட்டர் வருது. எனக்கு உங்க கம்பெனியே வேண்டாம் “
அப்படிச் சொல்லிவிட்டு ” வாடி போகலாம்” என்று பக்கத்தில் இருந்த ஒரு குட்டிப் பொண்ணை இழுத்துக் கொண்டு போகப் புறப்பட்டாள். ஷாலுவின் ஜாடை அப்படியே இருந்தது. என் பிற்கால மச்சினியாக இருக்கக்கூடும்.
” ஒரு நிமிஷம். நான் சொன்னதை நீ நம்பலை இல்லையா ? இதோ இந்த ராம்ஸ் கிட்டே கேட்டுக்கோ” என்று சொல்லித் திரும்பிப் பார்த்தா ராம்ஸைக் காணோம்.
குரங்கு ஒரு கையில் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இன்னொரு கையில் ஒவ்வொரு கடலையை ஸ்டைலா எடுத்து வாயிலே போட்டுக் கொள்ளும் அழகை ராம்ஸ் ரொம்பப் பக்கத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான். ” ராம்ஸ், இங்கே வாயேன்” என்று நான் கத்தியதைக் கேட்டு அவசர அவசரமாகத் திரும்பியவன் குரங்குக்குப் பக்கத்தில் வைத்திருந்த கடலையைத் தட்டிவிட்டான். குரங்குக்கு வந்ததே கோபம். கம்புட்டரை விட்டுவிட்டு அவனைத் துரத்த ஆரம்பித்தது. அவன் ஓடி வந்து எனக்கும் ஷாலுவுக்கும் நடுவில் நின்றான். கிட்டே வந்த குரங்கு ஷாலுவின் துப்பட்டாவைப் பறித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே ஏறியது. துப்பட்டாவைத் தனது கைகளில் சுற்றிச் சுற்றி விளையாட ஆரம்பித்தது. ஷாலு திக்பிரமையில் அப்படியே சிலை மாதிரி நின்றுவிட்டாள். ரொம்ப கஷ்டமாப் போச்சு.
கும்பல் எல்லாம் அந்த மரத்தைச் சுற்றி வந்தது. கம்ப்யுட்டர் ஜோசியக்காரனுக்குக் கெட்ட கோபம். பின்னே, அது அவன் வருமானப் பிரச்சினை இல்லையா?
அப்போ நான் என் பாக்கெட்டில இருந்த கடலைப் பொட்டலத்தைக் குரங்குக்குத் தூக்கிப் போட்டேன். அது மறுபடியும் ஸ்டைலா கடலைப் பாக்கெட்டை ஒரு கையால் பிடித்து இன்னொரு கையிலிருந்த துப்பட்டாவைத் தூக்கிப் போட்டது. அது நேரா என் கழுத்தில் மாலையா விழுந்தது. ஆஹா என்ன சுகம் என்று சில வினாடி அதன் வாசனையை அனுபவித்து உடனே சுய நினைவு வந்து அதை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் திக்பிரமையில் இருந்ததால் நானே அவளுக்கு அதை மாலையா மாட்டிவிட்டேன்.
பாரதிராஜா பக்கத்தில் இருந்திருந்தா உடனே ஏழு குட்டிப் பொண்ணுகளுக்கு தேவதை டிரஸ் போட்டு எனக்குப் பின்னாடி ஆட விட்டிருப்பார்.
கூட்டத்தில் இருந்த மக்கள் எல்லோரும் கை தட்டி விசில் அடித்தார்கள்.
ஷாலுவும் நினைவுக்கு வந்தாள். வெட்கத்தில் நெளிந்தாள். என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.
குரங்குக்காரனும் ” வா ராஜா வா” என்று கெஞ்ச அதுவும் கடலையை அப்படியே ஒரே வாயில் போட்டுக் கொண்டு தாவிக் குதித்து கம்ப்யூட்டர் முன்னால் வந்து பழையபடி தொழிலைப் பார்க்க ஆரம்பித்தது.
“முதல்ல இந்த அம்மாவுக்கும் சாருக்கும் ஜோசியம் பாத்துட்டுத் தான் மத்தவங்களுக்கெல்லாம் ” என்று ஜோசியக்காரன் சொல்லக் கூட்டம் ஆமோதித் துக் கையைத் தட்டியது.
ஷாலு வெட்கத்தோட என் கூட வந்தாள். ” கண்ணா இந்த அம்மாவுக்கு என்ன வேணும் ? இந்த ஐயா ஆசைப்பட்டது கிடைக்குமா ? என்று சொல்லிக் குரங்கை டியூன் பண்ணினான் அந்த ஜோசியக்காரன். குரங்கு எங்கள் இருவர் முகத்தையும் சில வினாடிகள் மாறி மாறிப் பார்த்தது. நானும் என் பாக்கெட்டிலிருந்த இன்னொரு கடலைப் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். “லஞ்சம்” லஞ்சம்” என்று பின் பக்கத்திலிருந்து ஒரு பொடியன் வாய்ஸ் கொடுத்தான்.
குரங்கு எதையுமே லட்சியம் பண்ணாம கொடுத்த கடலையை வாங்கி சாப்பிடாமல் அப்படியே அருகிலிருந்த டேபிளில் வைத்துவிட்டு கீ போர்டில் ஏதோ அடித்தது. கம்யூட்டர் கருப்பு ஸ்கிரீன் எங்களைப் பார்த்து இருந்தது. திடீரென்று அதில் நானும் ஷாலுவும் தெரிந்தோம். கூட்டத்தில் விசில் பறந்தது. குரங்கு வெப்கேமை ஆன் செய்திருக்கு. மறுபடியும் கி போர்டில் குரங்கு கட கட . இப்போது ஸ்கிரீனில் ராமர் சீதைக்கு மாலை போடும் காட்சி தெரிந்தது. அந்த மாலை சிவப்பு கலரில் இருந்தது. சீதையும் சிவப்பு கலரில் புடவை உடுத்தியிருந்தாள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது.
இதுக்கு மேல நான் விளக்கம் ஏதாவது சொல்லவேண்டுமா? என்று கேட்டான் ஜோசியக்காரன். கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது. ஷாலுவின் முகம் வெட்கத்தில் அவள் சல்வார் கலரில் மாறியது. அவள் சட்டென்று எழுந்து போக ஆரம்பித்தாள். நான் ஒரு நூறு ரூபாயை ஜோசியக்காரனுக்குக் கொடுத்து விட்டு அவள் பின்னால் நடந்தேன். ராம்ஸும் என் பிற்கால மச்சினியும் கூட வந்தார்கள்.
அடுத்த வாரம் ஷாலுவும் ஸ்டெல்லாவும் எங்கள் கம்பெனியில் சேர்ந்தார்கள். எங்களை மாதிரியே ராம்ஸுக்கும் ஸ்டெல்லாவுக்கும் செட் ஆகியது. அது ஒரு தனிக் கதை !
(அப்புறம்?)
2015 படங்கள்
பொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் )
மேலே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா?
இனி , பொங்கலுக்குக் கவிதை ஒண்ணு எழுதலாமா?
மஞ்சளைத் தேய்ச்சுக் குளிக்கறதும் போச்சு
மஞ்சத்தண்ணி ஊத்தித் தொரத்தறதும் போச்சு
உறியடியில வழுக்கி அடிக்கறதும் போச்சு
எருதைப் பூட்டிஏர் ஓட்டறதும் போச்சு
வீட்டுக்கு வெள்ளை அடிக்கறதும் போச்சு
மாட்டுக்கு மாலை போடறதும் போச்சு
கரும்பைப் பல்லில் கடிக்கறதும் போச்சு
கருக்கல்ல எழுகிற பழக்கமும் போச்சு
பூளைப்பூ கொத்தைச் சொருகறதும் போச்சு
பானையில பொங்கல் வைக்கறதும் போச்சு
கண்டாங்கி சேலையை சொருகறதும் போச்சு
வேட்டியைத் தழையக் கட்டறதும் போச்சு
வாழை இலைச்சோறு திங்கறதும் போச்சு
வாழ்த்துமடல் எழுதி அனுப்பறதும் போச்சு
வாசல்ல கோலம் போடறதும் போச்சு
உறமுறையைக் கண்டு கலாய்க்கறதும் போச்சு
பரம்பரைப் பழக்கம் எல்லாமே போச்சு
ஜல்லிக்கட்டு மட்டும் வேணும்டா மச்சான் !
இலக்கிய வாசல் – பத்தாவது நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் பத்தாவது நிகழ்வு
23.01.2016 சனிக்கிழமை அன்று
பனுவல் புத்தகாலயம், திருவான்மியூரில்
மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.
திரு ரவி தமிழ்வாணன்
” புத்தக உலகம் ”
என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
அவருடன் வாசகர்கள் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிக்
கலந்துரையாடலாம்.
விழாவில் வழக்கம் போல்
சிறுகதை ஒன்றும் – கவிதை ஒன்றும்
படிக்கப்படும்
அனைவரும் வருக !
படைப்பாளி – மாலன் (எஸ்கே என் )
ஊடகவாதியாகத் தொலைக்காட்சி மூலம் நன்கறியப்பட்ட திரு.மாலன், இதழியல் பணிகளாலும் படைப்புகளாலும் கவனத்தை ஈர்த்தவர். எழுபதுகளில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள்:- சுப்ரமணிய ராஜூ (இவர் இப்போது நம்மிடையே இல்லை), பாலகுமாரன் , இரவிச்சந்திரன் (இவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை) மற்றும் மாலன். இன்னும் சிலர் விட்டுப்போயிருக்கலாம்.
இவரது படைப்புகளில் சமூகப் பொறுப்புணர்வைத் தட்டி எழுப்பும் முயற்சி நன்கு புலப்படும். கதைகள் மூலமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாணி இவருடையது என்றும் சொல்வார்கள் .
யதார்த்தத்திற்கும், கொள்கைக்கும் ஒரு இழுபறி இவரது இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ் என்னும் கதையில்
*********************************************************************************
இளைஞர்களிடையில் அறிவுஜீவி அடையாளம் பெற்று, பேசுகின்ற கூட்டங்களில் அரங்கம் அதிரக் கைத்தட்டல்களும், தர்க, குதர்க்கங்களுடன் தனது கருத்தை நிறுவக்கூடியவன், இலக்கியக் கூட்டங்களில் பங்கு பெறும் இலக்கியவாதி; அடிக்கடி வேலை மாறும் இளைஞன். இது தான் இளஞ்செழியன்.
இவனது சூத்திரங்கள் சுலபமானவை. கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் எல்லாம் கோழைகள், பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் …..
ஆனால் ரோகினி இவனது கருத்துக்களை ஏற்றுக்கொள்பவளில்லை. வெறும் கைத்தட்டலுக்கும் ஆட்டோக்ராபிற்கும் சில விசிறிகள் தவிர பயனேதும் இல்லை என்கிறாள். இவ்வாறு கருத்துக்களைப் பரப்பி மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் இருநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்கிறாள்.
“நீ சாம்ராஜ்யங்களை உருவாக்குவது இருக்கட்டும். முதலில் ஒரு ஸ்தாபனத்தை வெற்றிகரமாக நடத்திக் காண்பி பாப்போம்.”
“வியாபாரம் செய்து வெற்றி பெறுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. அதை விடப் பெரிய….”
“அந்த அற்பமான காரியத்தைத்தான் செய்து காண்பியேன்.”
மூர்க்கத்தனமாக உசுப்பிவிட்டாள் ரோகினி.
ஜெராக்ஸ் கடை வைப்பதா, அச்சாபீஸ் வைப்பதா என்று யோசித்து, மெஸ் நடத்தலாம் என முடிவுக்கு வருகிறான். பெசன்ட் நகர், கோடம்பாக்கம் என்றெல்லாம் யோசித்துக் கடைசியில் திருவல்லிக்கேணி. இடம் கிடைத்தாலும் வாடகை, அட்வான்ஸ் என்று பேரம் பேசி .. உணவகம் தொடங்கியே விடுகிறான்.
இலக்கியம் பேசும் நண்பர்களும் விமர்சகர்களும் இலவசமாகவே சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். ஆளுக்கு ஒரு இலவச ஐடியா வேறு. உணவகம் நடத்துவது பல படிப்பினைகளைக் கொடுக்கிறது. சாப்பிடுபவர்கள் கடன் கேட்கிறார்கள், வியாபாரிகள் ரொக்கம் கேட்கிறார்கள். பொருள் வாங்கிவரும் பையன் காசு திருடுகிறான். சமையல் செய்யும் பெண் ஓடிப்போகிறாள். போதுமடா சாமி என்ற நிலையிலும் தாக்குப் பிடிக்கிறான்.
நல்ல காலமும் வருகிறது.
வியாபாரம் முனை திரும்பியது. இரண்டு வருட அனுபவத்தில் வியாபார நுணுக்கங்கள் புரிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு காப்பாற்றி வந்த நாணயம் காரணமாகக் கடனுக்கு சரக்கு கிடைத்தது.
சாப்பிட வந்த ரோகினி, “யூ ஆர் ரியலி கிரேட். உன் சாம்ராஜ்யங்கள் இப்போது எழட்டும்” என்று பாராட்டுகிறாள்.
ஆனால் இப்போது இளஞ்செழியனுக்கு அரசாங்கங்களை மாற்றுகிற அபிப்பிராயம் இல்லை. “புத்திசாலித்தனமாக இருப்பது மட்டுமல்ல, வெற்றிகரமாகவும் இருப்பதுதான் வாழ்க்கை” என்பது அவன் புதிய சூத்திரம். ஆனால் கையில் காசு சேர்ந்ததும் அவன் குட்டி பூர்ஷ்வா ஆகிவிட்டான் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் .
என்று கதை முடிகிறது.
*********************************************************************************
எழுபதுகளில் இருந்த சமூக நிலையினை அடிநாதமாகக் கொண்ட ‘ஆயுதம்’ , ‘ஈரம்’, ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ ஆகியவை உள்ளிட்ட சிறுகதைகள் மாலன் அவர்களின் வலைத்தளத்தில் ( இங்கே ) கிடைக்கின்றன.
இளையராஜா 1000
தமிழ்த் திரைப்பட உலகில் இளையராஜாவின் சாதனை மகத்தானது!
ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்!
எம் எஸ் விஸ்வநாதன் 1100 படங்களுக்கு இசை அமைத்து இவரை விட முன்னணியில் இருந்தாலும் இளையராஜாவின் இமாலய சாதனை பாராட்டுதற்குரியது – போற்றுதற்குரியது.
இவரது இயற்பெயர் ஞான தேசிகன். பிறந்த வருடம் 1943 . 1976இல் அன்னக்கிளியாக வந்தவர் இன்று ஆல் போல் தழைத்து வேரூன்றி நிற்கிறார்.
இவர் இசை அமைப்பாளர். இசைக்கருவிகள் வாசிப்பவர். பாடல் ஆசிரியர். பாடகர் இசை நடத்துபவர்.
வாழ்க நீ எம்மான் !!
இளையராஜாவின் ரேடியோ – அவரது பாடல்களை ஒலி பரப்பி வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தைச் சொடுக்குங்கள். அவரது பாடல்களைக் கேட்கலாம்.
http://tunein.com/embed/player/s166196/
–
மழையில் விரிந்த கொடைகள் – பத்மஜா ஸ்ரீராம்
ஆனந்த் நகர் புத்தாண்டு விழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
பூமியில் மழை – இயற்கையின் அளப்பரிய வரம்
இதில் நாம் செய்யும் பிழை –
மரம் வளர்ப்பு மறந்தோம்
மண்பாண்டங்கள் துறந்தோம்
நெகிழிகளோடு * நெருங்கினோம்
இயற்கையை நொறுக்கினோம்
வெல்லமென இனித்த இயற்கை !
வெள்ளமென விரித்தது இறக்கை !
புரட்டிப் போட்டன மழையும் வெள்ளமும் –
அதனால் விரிந்தது மனிதனின் உள்ளமும் !
கைபேசியே கதியெனக் கிடந்த இளைஞர் கரங்கள் –
கலங்கியோரின் கைதூக்கி விட்ட இம்மண்ணின் உரங்கள் !
கணவன் குழந்தை உலகமாய் இருந்த பெண்ணின் யதார்த்தம் –
தன்னையும் மறந்து பொருளிழந்தார்க்கு செய்தனுப்பிய பதார்த்தம் !
பள்ளிக்கூடம் பொம்மைப்படம் என்றிருந்த குழந்தை கூட
தாய் தந்த கைச்செலவு பணம் –
பத்து இருபதென வாரி வழங்கிய குணம் !
மூன்றாம் மனிதன் தவிக்கிறான்
முன்பின் தெரியாதவன் கலங்குகிறான்
முகமறியா குழந்தை துடிக்கிறது
முன்வந்து மறுவாழ்வு அளித்த மகத்துவம் !
மழையில் விரிந்த கொடையாய்
மனிதநேயமே நம் வாழ்க்கைக்கு விடையாய்
கை கோர்ப்போம் !
கை கொடுப்போம் !!
வானியல் மூலம் வரலாறு – புதிய ஆராய்ச்சிப் புத்தகம்
இதிகாசத்திலிருந்து வானியல் வழியாக வரலாற்றைக் ( Mythology to history through astronomy ) காட்டுகிறது நா. பொ. ராமதுரை என்பவர் எழுதிய ‘வானியல் மூலம் வரலாறு காண்போம் ” என்ற ஆராய்ச்சிக் கட்டுரை .
இதில் பல புதிய கருத்துக்கள் உள்ளன.
மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தளமாக அமையும்.
இது என்னவென்று பார்ப்போம்.
அனைத்துக் கோள்களும் ஆரம்பமாகும் அதே நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும் காலம் ஒரு மகாயுகம் என்று அழைக்கப்படும். கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்லும் இந்த மகாயுகம் மொத்தம் 12160 ஆண்டுகள். இதுதான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்களாக 4:3:2:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதைப்போல் திதி, நட்சத்திரம்,யோகம் ஆகிய மூன்றும் ஆரம்பமாகும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் காலம் ஒரு மாகசைக்கிள் என்று அழைக்கப்படும். மேலும். அந்த ஆரம்ப நிலை என்பது சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில், அவிட்டம் நட்சத்திரத்தில் , மகாசுக்லா பிரதமை திதியில் துவங்குகிறது. திரும்ப இதே நிலைக்கு வருவதற்கு 160 ஆண்டுகள் ஆகும். இது தான் ஒரு மாக சைக்கிள் என்பது.
இவற்றைப்போல் 76 மாகசைக்கிள்கள் முடியும் போது ஒரு மகாயுகமும் முடிவடைகிறது.
நமது சூரிய வருடத்திற்கு 12 மாதங்கள். ஆனால் சாந்திரமான வருடத்திற்கு 13 மாதங்கள்.
5 சாந்திரமான ஆண்டுகள் ஒரு வேதாங்க சோதிஷா யுகா ஆகும்.
32 வேதாந்த சோதிஷா யுகா ஒரு மாகசைக்கிள் ( 32 x 5 = 160 ) ஆகும். அதாவது 160 ஆண்டுகள்.
76 மாகசைக்கிள்கள் ஒரு மகா யுகமாகும். ( 76 x 160 = 12160) 12160 ஆண்டுகள் ஆகின்றன.
2 மாகசைக்கிள்கள் பிரும்மாவிற்கு ஒரு நாள்.
36 பிரும்மா நாட்கள் ( 72 மாகசைக்கிள்கள் ) ஒரு மன்வந்தரம்.
14 மன்வந்தரங்கள் ஒரு கல்பம்.
6 கல்பங்கள் ஒரு பிரளயம்.
3 பிரளயங்கள் ஒரு மகா பிரளயம்.
27 மகா பிரளயங்கள் பிரும்மா / பூமியின் வயது
இதன்படி பிரும்மாவின் /பூமியின் வயது 595 கோடியே 70 லட்சத்து 36 ஆயிரத்து, 80 ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.
மேலும் ஸப்தரிஷி மண்டலம் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 81 ஆண்டுகள் இருந்து பின்னோக்கி நகர்ந்து அடுத்த நட்சத்திரத்தில் பிரவேசித்து,. இது போன்று 27 நட்சத்திரங்களையும் சுற்றி முடிக்க ( 27 x 81 = 2187) 2187 ஆண்டுகள் ஆகின்றன.
இதன்படி வைவஸ்வதமனுவால் தொடங்கப்பட்ட ஸப்தரிஷி ஆண்டுத் தொடக்கம் தான் கிருதயுகத்தின் துவக்கம். அது கிமு 13.10.15261 வெள்ளிக்கிழமை .அந்த சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில், அவிட்டம் நட்சத்திரத்தில் , மகாசுக்லா பிரதமை திதியில் பிரும்மாவின் இராப்பொழுதில் 28வது மகாயுகத்தில் தான் கிருதயுகம் தொடங்கியுள்ளது. ( இந்த யுகத்தில் தான் மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம் போன்ற அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன)
பிறகு வந்த திரேதா யுகம், துவாபரயுகமும் முடிந்து , கிமு 20.12.4317 வெள்ளிக்கிழமை கலியுகம் ஆரம்பமாயிற்று.
மேலும் இதன் படி ,
திரேதாயுகத்தில் , கிமு 17.01.10205 திங்கள்கிழமை நள ஆண்டு மேஷ சித்திரை 6ம் நாள் புனர்பூச நட்சத்திரமும் நவமி திதியும் கூடிய தினத்தில் ராமர் அவதரித்தார்.
கலியுகத்தில் கிமு 23.07.3185 புதன்கிழமை தமிழ் நள ஆண்டில் ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்தார். ( கிருஷ்ணன் கலியுகத்தில் பிறந்திருப்பதாக இவர் கூறுகிறார்)
மேலும், மகாபாரதப் போர் துவங்கியது கிமு 29.10.3139 வெள்ளிக்கிழமை மார்கழி முதல் நாள் அன்று. 18 நாட்கள் தொடர்ந்து நடந்தது அந்தப்போர்.
கிமு 03.01.3138 திங்கள் கிழமை உத்தராயண புண்யகாலத்தில் பீஷ்மர் மோட்சமடைந்தார்.
கிமு 06.02.3101 வியாழன் அன்று கிருஷ்ணன் தனது 84 ஆவது வயதில் பரமபதம் அடைந்தார்.
பிறகு கிமு 27.12.3101 ஆண்டில் கலியுகம் முடிவுற்றது.
இவ்வாறு கிமு 13.10.15261 துவங்கிய மகாயுகம் , 4 யுகங்களை 12160 வருடத்தில் 4:3:2:1 என்ற விகிதத்தில் முறையே கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகியற்றை முடித்துவிட்டது.
கிமு 28.12.3101 ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த மகாயுகத்தின் கிருதயுகம் துவங்கியுள்ளது.
மேலும் கிமு 15261 முன்னாள் அதற்கு முந்திய மகாயுகத்தின் (27) கலியுகத்தில் தான் முதல் தமிழ்ச்சங்கம் தொடங்கியது. அங்கு தான் முருகன் அவதரித்து தமிழை வளர்த்தார்.
நாம் இப்போது இருப்பது சுவேதவராக கல்பத்தில் 8 வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் பிரும்மாவின் பகல் பொழுதும் பிரதமே பார்த்தேயுமான 29 வது மகாயுகத்தில் 2 வது யுகமான திரேதாயுகத்தில் இருக்கிறோம். இந்த யுகம் கிபி 21.02.2677 புதனன்று முடிவுறும் . பிறகு துவாபரயுகம் துவங்கும் .
தலை சுற்றுகிறதா?
சரித்திரம் பேசுகிறது – வேதம் பழையது – (யாரோ)
ஹாரப்பாக்கள் மறைந்து போயின. புது யுகம் பிறந்தது. கிமு 1700 லிருந்து கிமு 900 வரை வேத கால நாகரிகம் தழைத்தது. இக்காலத்தில் தான் வேதங்கள் தொகுக்குக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. இதை நிகழ்த்திப் பரவச் செய்தவர்கள் ‘ஆரியர்கள்’ என்ற இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த ஆரியர்? இவர்கள் நிஜமா அல்லது வரலாற்றுப் பதிவாளர்களின் கட்டுக்கதையா? சமஸ்கிருத மொழியில் ஆரியர் என்பது ஓர் அடைமொழியாகத்தான் காணப்படுகிறது. ஒருவேளை இவர்கள் ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்போ என்றும் ஐயுற சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
பொதுவான கருத்து என்னவென்றால் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடிபுகுந்து , இங்கிருந்த உள்ளூர் வாசிகளை ( திராவிடர் மற்றும் மற்றவர் ) போரில் வென்று இங்கே குடியேறியவர்கள் என்பது தான்.
குதிரைகள் பூட்டிய ரதங்களுடன் ,அக்னி, இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபட்டு சமஸ்கிருத மொழி பேசி அதைப் பரப்பிய பெருவாரியான மக்கள் இவர்கள்.
நான்கு வேதங்கள் மட்டுமல்ல , நான்கு வகுப்புகளும் இவர்கள் துவங்கியது தான். கல்வி அறிவு பிராமணருக்கும் ஷத்ரியருக்கும் மட்டும் அளிக்கப்பட்டது.
இப்படிச் சில நூற்றாண்டு காலங்களாக இந்த வேத கால நாகரிகம் சிந்து, கங்கை சமவெளிகளுக்குப் பரவியது.
விவசாயம் வளர்ந்தது.
காடுகள் அழிக்கப்பட்டன. நாடுகள் உருவாகின.
மன்னராட்சி தொடங்கியது. அரசர்கள் ஆளத்தொடங்கினர். அவர்கள் அஸ்வமேத யாகங்களும் செய்தனர். ஒரு ராஜ குதிரையை நாடுகளில் உலவவிட்டு அது சென்ற இடங்களில் எல்லாம் கப்பம் வசூலித்து ( கொடுக்காவிட்டால் சண்டை தான் ) வருட முடிவில் அந்தக் குதிரையைத் தியாகம் செய்து முடிப்பார்கள்.
பழமையான ரிக் வேதம் தொகுக்கப்பட்டது. வேதம் என்றால் அறிவு என்று பொருள். அது தொழுகை, பாடல்கள், சமயச் சடங்குகள் என்று பல அம்சங்கள் கொண்டது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்கள் விரிவாகத் தொகுக்கப்பட்டன.
சாம வேதத்திலிருந்து இசை பிறந்தது.
வேதங்கள் விளக்கத்திற்காக உபநிஷத்துக்கள் அமைக்கப்பட்டன.
இந்தப் பழைய வேத காலத்திலிருந்து நமது சரித்திரம் பேசுகிறது.
( சரித்திரம் மேலும் பேசும்)
2015 இல் கலக்கிய பத்துக் குத்துப் பாடல்களும் எட்டு மெட்டுப் பாடல்களும் (அநு)
பத்துக் குத்துக்கள்
ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தவில்லை. பாடல்களைக் கேட்க மியூசிக் இணைய தளத்துக்குப் போங்கள் !
- மன மன மெண்டல் – ஒகே காதல் கண்மணி
- தங்கமே – நானும் ரௌடி தான்
- டோனு டோனுடோனு – மாரி
- மெரசலாயிட்டேன் – ஐ
- அதாரு இதாரு – என்னை அறிந்தால்
- டங்கா மாறி ஊதாரி – அனேகன்
- டாலி டம்பக்கு – மான் கராத்தே
- ஆளுமா டோலுமா – வேதாளம்
- டண்டணக்கா – ரோமியோ ஜூலியட்
- தாறு மாறு – வாலு
எட்டு மெட்டுகள்
- பூக்களே சற்று – ஐ
- என்ன சொல்ல – தங்க மகன்
- செல் செல் – காக்கா முட்டை
- நீயும் நானும் – நானும் ரௌடி தான்
- காதலும் கடவுள் முன் – உத்தம வில்லன்
- மலர்கள் கேட்டேன் – ஒகே காதல் கண்மணி
- உனக்கென்ன வேணும் சொல்லு – என்னை அறிந்தால்
- எதை விதைத்தோம் – காக்கா முட்டை
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று – குண்டலகேசி
பொங்கி எழு முருகா -கோவை சங்கர்
கருப்புச் சந்தையில் பணம் புரட்டும் மாந்தரில்
கனல்கக்கி யுனையெதிர்த்த கயவரைத் தெரியலையா ?
நேர்மையே தர்மமென நேர்வழியில் சென்றுவிட்டு
அவதியுறும் நன்மக்கள் கூக்குரல் கேட்கலையா ?
லஞ்சப்பேய் அவனன்றி ஓரணுவும் அசையாது
பஞ்சத்தின் கொடுமைகள் சொல்லிசொல்லி மாளாது
தஞ்சமென்று உன்முன்னே நிற்கின்றோம் இப்போது
அறம்வாழ மறம்வீழ நீ எழுவது எப்போது ?
காசேதான் கடவுளெனும் தாரக மந்திரம் – நாம்
சுயநலக் கூட்டத்தின் சொடுக்கிவிட்ட பம்பரம்
அச்சமோடு ஜடமாக ஆகிவிட்டோம் யந்திரம்
நேர்மையின் வழிபோக எப்போது சுதந்திரம் ?
புன்னகை போதும் பொங்கியெழு முருகா
மேன்மையது போதாது வடிவேல் மருகா
நடத்திக் காட்டிடு இன்னுமொரு ஸம்ஹாரம்
பாடுபடும் எங்களுக்கு அதுவே ஆதாரம் !
கலாய்க்கற அமெரிக்கத் தமிழ்க் குறும்படம் – அக்கப்போர்