தலையங்கம்

Related image

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு –                                                                           நாம்  எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு  

நாம் எல்லோரும் சமமா? 

இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை 

அவ்வளவு மோசமா?

சுபாஷ் சந்திர போஸின் வீரம்,  காந்தியின் அகிம்சை , நேருவின் பெருமிதம், சாஸ்திரியின் விவேகம், இந்திரா காந்தியின் தைரியம், மோடியின் பெருமை  எல்லாம் நமது நாட்டை எங்கே எடுத்துச்  சென்றிருக்கிறது ?  

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும் பற்றி கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்  அங்குஸ் மாடிசன் கூறுகிறார் :

கி பி 1000 வது ஆண்டில் உலகப் பொருளாதரத்தில் இந்தியாவின் பங்கு 27 சதவீதம். சீனா  மற்றும் ஐரோப்பா எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு முன்னணியில் இருந்தது.    அதே நிலை தான்  கி பி 1500 லும். அப்போது உலக அளவில் நமது பங்கு  25  சதவீதம்.  

விடுதலைக்குப்பிறகு     இந்தியாவின் பங்கு  வெறும் 2 சதவீதம் மட்டுமே !

இந்தியா எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறது  என்று தெரிகிறதா? 

ஆனால் நேரு , இந்திரா காந்தி காலத்தில் நாம் கடைப்பிடித்த பாதுகாக்கப்பட்டச் சந்தை முறையால் நாம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தோம். 

ஆனால் 1991 இல் உலக மயமாக்கப்பட்டவுடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடக்க ஆரம்பித்தது.  

2005இல்  9 வது இடத்தில் இருந்த நமது நாடு  2011இல்  மூன்றாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. நமக்கு மேலே சீனாவும் அமெரிக்காவும் தான் இருக்கின்றன.

கேம்ப்ரிட்ஜ்  கருத்துப்படி 2040 இல்  சீனா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து உலகை  ஆளும்.

எனவே நாம் சீனாவைத் தோற்கடிக்க வேண்டியது டோக்லாமில் மட்டுமல்ல;  பொருளாதாரத் துறையிலும் கூட.

Related image

 

டிட்பிட்ஸ் : 

நம்முடன் காங்கோவும், பஹ்ரைனும், தென் கொரியாவும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. 

நமது இந்தியக்  கொடியை வடிவமைத்தவர் பிங்கலி  வெங்கையா என்பவர். 

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்ற  பாரதியார் பாடல் ஒரு  போட்டியில்   மூன்றாவது  பரிசைப் பெற்றதாம்.

இந்த வருடம்,  சுதந்திர நாளில்,  நாம் , நமது நாட்டைப் புதிய இந்தியாவாக மாற்றும் உறுதியை எடுத்துக் கொள்ளப்போகிறோம்.

மோடி சொல்கிறார் என்பதற்காக அல்ல.

இது நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய  கடமை. 

 

குவிகம் பதிப்பகம் துவக்க விழா

மே மாத குவிகம் நிகழ்வில் “புத்தகங்கள் பதிப்பிக்க எளிய வழி’ என்னும் தலைப்பில் திரு ஸ்ரீகுமார் அவர்கள் உரையாற்றினார். தற்போது நடைமுறையில் இருக்கும் மாற்றுப் பதிப்பக முறையான “PRINT ON DEMAND” பற்றியதாகும். ( விவரத்திற்கு ஜூன் குவிகம் இதழைப் பார்க்கவும்)

 அந்நிகழ்வில் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயத்தில் ஒன்று, நம் நண்பர்களில் பெரும்பாலோர்  புத்தகங்களை  எழுதியும் வெளியிட்டும்  இருக்கிறார்கள். ஆனால் வழக்கமான பதிப்புமுறையில்  வெளியிடும்பொழுது,   அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பதுடன், அடிக்கப்பட்ட புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கிவிடுகிறது என்பதும்  உண்மை .

இந்த மாற்றுப் பதிப்பக   முறையைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தில் குவிகம் மின்னிதழில்  எஸ் கே  என்ற  பெயரில்   தொடர்ந்து வெளிவந்த “படைப்பாளிகள்” என்னும் தொடர் கட்டுரைகளைப் புத்தக வடிவில்  மாற்றும் முறையில் இறங்கினோம்.

 அப்போது தோன்றிய எண்ணம்தான் “குவிகம் பதிப்பகம்”.   மேலும்  நண்பர்கள்  புத்தகம் வெளியிட எண்ணினால் அவர்களுக்கு ஒரு உதவியாகவும்   குவிகம் பதிப்பகம் விளங்கவேண்டும் என முடிவு செய்தோம்.

அதன்படி குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தகமாக “சில படைப்பாளிகள்” வெளிவந்தது.

புத்தக வெளியீடு நிகழ்வு ஞாயிறு 23 ஜூலை 2017 அன்று ராயப்பேட்டையில் நடைபெற்றுவந்த புத்தகத் திருவிழாவில் ‘விருட்சம் சந்திப்பு’ கடையில் நடந்தது.

புத்தகத்தை திரு செந்தில் (பரிசல்) அவர்கள் வெளியிட்டார்கள். எதிர்பாராதவிதமாக கவிஞர் வைதீஸ்வரன், எழுத்தாளர்கள் திரு எஸ். ராமகிருஷ்ணன், திரு சச்சிதானந்தம்  திரு கண்ணன்  கலந்து கொண்டார்கள்.

குவிகம் பதிப்பகம் தொடக்க விழா, இலக்கியச் சிந்தனை மற்றும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்தும் ஜூலை மாதக்  கூட்டங்களுடன்   நிகழ்ந்தது.

திரு.ப லக்ஷ்மணன் குவிகம்  பதிப்பகத்தைத் தொடங்கி  வாழ்த்துரை வழங்கினார். திரு  புதுவை ராமசாமி  மற்றும்  திரு கண்ணன்  முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.  

புத்தகம் வெளியிட  விரும்பும் நண்பர்களுக்குச்  சில குறிப்புகள்:

புத்தகம்  வெளியிடுவது இன்றைய  சூழ்நிலையில் கடினம் அல்ல .    

முதலில்   உங்கள்  கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை  வோர்ட் டாகுமெண்டாகத்  தயார் செய்துகொள்ளுங்கள்.

அவற்றை ஒற்றுப் பிழை, மற்றப் பிழைகள்  இல்லாமல்   இருக்கும்படி  பிழை திருத்தவும். ( உதவிக்குத் தேவையானால்  http://vaani.neechalkaran.com/  என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.)  ஒன்றுக்கு மேற்பட்டவர்  பார்த்துத்  திருத்துவது நலம். 

 மின்னஞ்சல்  (kuvikam.com ) தொடர்புகொள்ளவும்.

 

கொடியின் துயரம் – கவிஞர் வைதீஸ்வரன்

Related image

எங்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதுவும் தெருவெல்லாம் வீடெல்லாம் பெரியவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வரப் போவது பற்றியும் வெள்ளைக்காரர்கள் ஆகஸ்ட் 15ந்தேதி நாட்டை விட்டுப் போவதைப் பற்றியும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஜூலை 1947.

சிறுவர்களான எங்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று கொஞ்சம் புரியாமலும் புரிந்த மாதிரியும் இருந்தது. அன்னிய நாட்டு வெள்ளைக்காரர்களை விரட்டிவிட்டு நம்மை நாமே சுதந்திரமாக ஆட்சி செய்து கொள்ளப் போகிறோம் என்றார் அப்பா. எனக்கு ஓரளவுதான் புரிந்தமாதிரி இருந்தது.. ..

எப்படியும் நமக்குச் சொந்தமான இந்தியா நமக்கே கிடைக்கிறது.. என்று நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது .. வீட்டுப் பண்டிகைகள்போல இது ஒரு நாட்டுப்பண்டிகையோ.!
முனிஸிபாலிடி பார்க்குகளில் நட்ட நடுக் கம்பத்தில் பொருத்திய வானொலிப் பெருக்கிகள் வரப் போகும் சுதந்திர நாள் பற்றி சத்தமாக முழங்கிக் கொண்டிருந்தன. தேசியத் தலைவர்களுக்கும் ஆங்கில அரசாங்கத்துக்கும் இடையே நிகழும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகளைப்பற்றிய செய்திகளை மாலை வேளைகளில் எல்லோரும் கூட்டங் கூட்டமாகச் சுற்றி நின்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு எல்லாம் ஏதோ கலவரமாக பரபரப்பாகத் தோன்றியது.

அதுவும் இந்தியா இரண்டாகப் பிரியப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றிய அச்சமும் குழப்பமும் எல்லோர் மனதிலும் ஊடாடிக் கொண்டிருந்தது.

இது நாள்வரை குடும்ப நண்பர்களாகப் பழகி வந்த பல முஸ்லீம் குடும்பங்களை இனிமேல் திடீரென்று வேற்று நாட்டுக்காரர்கள் போலப் பார்க்கப் போகிறோமா என்றுகூடப் பலருக்குக் கலவரமாக இருந்தது!!
என் அப்பாவுடன் நெருங்கிப் பழகி வியாபாரத்தில் பங்கெடுத்த பல முஸ்லீம்கள் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். ஸலீம் மாமாவுக்கு என்னிடம் மிகவும் பிரியம். நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது என்னை அடிக்கடி வெளியில் தூக்கிக்கொண்டு போய் எதையாவது வாங்கித் தருவார். குடும்ப விசேஷங்களுக்குப் பரஸ்பரம் போய்வருவோம்

கிராமபோன் பெட்டிகளில் “ஆடுவோமே…பள்ளு…. பாடுவோமே..” பாட்டும் “வெற்றியெட்டு திக்குமெட்டக் கொட்டு முரசே “ பாட்டும் மூலைக்கு மூலை கேட்டுக் கொண்டிருந்தது. காற்றெல்லாம் சுதந்திர கோஷம்!

நாற்பதுகளில் பாரதியார் பாடல்களைக் கூட்டமாக வெளியே பாடுவதற்கு சராசரி மக்களுக்குத் தயக்கமாக இருக்கும்……. வெள்ளைக்காரன் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவானோ என்று பயம்.

பாரதி பாடல்களின் மீது அபார பக்தி கொண்ட என் அப்பாவும் அவர் நண்பர்களும்கூட முன்னிரவில் எங்கள் வீட்டுப் பின் தோட்டத்தில் ராந்தல் விளக்கை சுற்றி அமர்ந்து கொண்டு பாரதி பாடல்களை உரக்கப் பாடாமல் உள்ளத்தோடு சன்னக் குரலில் பாடுவதை நான் கவனித்திருக்கிறேன்

எல்லோருக்கும் சுதந்திரத்தின் மேல் ஆசை இருந்தது. பெருமையாகவும் இருந்தது.. ஆனால் அடிபட்டு ஜெயிலுக்குப்போய் அல்லல்படுவதற்கு ஒரு சிலர்தான் துணிச்சலுடன் தயாராய் முன்வந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் மானசீகமான ஏக்கம் மட்டும் உண்டு
இப்போது அந்தப் பயம் போய் விட்டது. எத்தனையோ ஆண்டுகளாக கட்டிப் போட்டிருந்த கழுத்துக் கயிறு அறுந்து, படல் திறந்து விட்ட ஆட்டுமந்தைகள்போல் ஆரவாரமான சந்தோஷத்தில் அத்தனை பேரும் திக்குத்திசை தெரியாமல் ஆனந்தப்பட்டார்கள்.
கடைகளில் விதவிதமான பாரதமாதாக்கள் கையில் மூவர்ணக் கொடியேந்திக் கொண்டு பத்திரிகைகளில் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.

பள்ளிக்கூடங்களில் ஆகஸ்ட் 15-ல் பையன்கள் சட்டையில் குத்திக் கொள்வதற்காக பின்னூசியுடன் சின்னச்சின்ன கொடிகள் மூட்டையாக வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அதோடு மிட்டாய்ப் பொட்டலங்களும் கூட.

எங்கள் தெருவில் என் தெருப் பையன்களெல்லாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடலாம் என்று கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தோம்
ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரிப்பதென்று முடிவாகியது. வெள்ளைப் பேப்பர் வாங்கி’ ஜிலுஜிலுப்பான ஜரிகை அட்டை ஒன்றைக் கத்தரித்து . அழகான நோட்டுப் புத்தகமாக தைத்துக் கொடுத்தான் முருகேசன்.. . எங்கள் நண்பர்களில் அவன்தான் கைவேலைகளில் திறமைசாலி. கந்தசாமி அச்சு அசலாகப் படங்களை கார்பன் பேப்பர் வைத்து நகல் எடுத்து வர்ணம் பூசுவான்.

முகப்பில் விரிந்த கூந்தலுடன் கொடியேந்திய பாரதமாதா படமும் இரண்டாவது பக்கத்தில் மகாத்மா காந்தியும் அடுத்து பாரதியார் படமும் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களுக்கு பாரதியாரின் தேசீய கீதங்களும் வடிவாகியது.

அடுத்த பக்கத்தில் நாட்டுப்பற்றுபற்றி நான் ஒரு பாட்டு எழுதினேன். மனதுக்குள் கவிதை எழுதுவதாக ஒரு நினைவுடன். எனக்குள் தோன்றும் ஏதாவது ஒரு தாள மெட்டுக்கு ஏற்ற மாதிரி எப்படியோ வார்த்தைகள் வந்து விடும். பெரியவர்கள் அதைப்படிக்கும் போது ஒவ்வொருவரும் ஒரு ராகத்தில் கைகளை ஆட்டிக் கொண்டு பலமாகப் பாடி உற்சாகமாகச் சிரிப்பார்கள். 

அவர்கள் பாராட்டுகிறார்களா பகடி செய்கிறார்களா என்று தெரிந்து கொள்ள முடியாமல்……. . எனக்கு ஆத்திரமாக வரும்…. ஆனால் எல்லோரும் என்னை “என்ன…கவிராயரே! “என்று முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.

சேகர் அவன் பாட்டி சொன்னாளென்று ‘ஒரு பாப்பாவும் கீரிப்பிள்ளையும்’ என்று ஒரு கதை எழுதினான்.. ராமு அவன் வெகு நாட்களுக்கு முன் எழுதி வைத்திருந்த ஒரே ஒரு துப்பறியும் கதையை அனுப்பியிருந்தான். .
சில நண்பர்களின் அப்பாக்களும் எங்கள் பத்திரிகைத் தயாரிப்பில் ஆர்வமடைந்து அவரவர்களுக்குத் தெரிந்த உபதேச மொழிகளை அனுப்பியிருந்தார்கள்.

ஒரு வழியாக பத்திரிகை நிரம்பிப் புடைத்து விட்டது. அட்டைகளை ஒட்டும்போது சரியான பசைகளை உபயோகிக்காததும் இந்தப் புடைப்புக்குக் காரணமாக இருக்கலாம்..

பத்திரிகையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போய் பெரியவர்களிடம் பத்திரிகையைக் கொடுத்தோம். படித்து விட்டுத் தருவதற்கு ஒரு நாள் அவகாசம்.

“பேஷ்..பேஷ்….சுதந்திரத்தைக் கொண்டாட சிறுவர் பத்திரிகையா? “என்று தட்டிக் கொடுத்தார்கள். வாசித்து விட்டு ஊக்கத் தொகையாக ஓரணா அரையணா கொடுத்தார்கள்.

நான் சுதந்திரப் பத்திரிகையை ஜேம்ஸ் மாமாவுக்குக் காட்ட மிக ஆவலாக இருந்தேன். ஜேம்ஸ் மாமா சிறைச் சாலையில் அதிகாரியாக இருந்தார். வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவார். வெளியில் டமிலும் பேசுவார்.

அவர் வீட்டில் நாய் பொம்மை போட்ட கிராமபோன் பெட்டி இருந்தது. தினந்தோறும் காலையில் நான் அங்கே போகும்போது, சில சமயம் ஆங்கிலப் பாடல்களைப் போட்டு நடனம் ஆடி ரஸித்துக் கொடிருப்பார். அவருடைய மனைவியும் நீள கவுன் போட்டுக் கொண்டு கூந்தலை அரையாக வெட்டிக் கொண்டு அவருடன் சகஜமாக ஆடுவார்.. வேடிக்கையாக இருக்கும்

அவரிடம் பெரிய வானொலிப் பெட்டி ஒன்றும் இருந்தது. அந்தப் பெட்டியில் காதை வைத்துக்கொண்டு மும்முரமாக வெளிநாட்டுச் செய்திகளையும் போர்ச்செய்திகளையும் கேட்டுக் கொண்டிருப்பார்.
நான் போனபோது கதவைத் தட்டிச் சற்று நேரங் கழித்துத்தான் திறந்தார். உள்ளே இரண்டு பெட்டிகள் திறந்தவாறு இருந்தன. அதில் மாமா துணிமணிகள் சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.. ஏதோ பயணம் போவதற்கு ஆயத்தப்படுவதுபோல் இருந்தது

“ மாமா…..சுதந்திர தினத்துக்கு எங்கள் பத்திரிகை மாமா “ என்றேன்.
அவர் சந்தோஷப் படவில்லை. “ அப்படியா? எனக்கு டமில் படிக்க வராது பையா….என்னா எலுதிருக்கே?””

“சுதந்திரத்தைப்பத்தி…”

“ அடேடே……சொடந்திரமா?….ஹா… ஒங்களை அவுத்து விட்டுட்டாங்களா?.. தம்பி இதை நல்லா ஒட்டக் கூடாதா? இப்பவே… சொடந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியற மாதிரி வருதே!…ஹ்ஹ்ஹா..” என்று பத்திரிகையைக் கொடுத்தார். .

அவர் வழக்கமான ஜேம்ஸ் மாமாவாக இல்லையோ? நாங்கள் பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்.

அடுத்த இரண்டு மாதங்களில் அவர் சீமைக்குப் போய் விட்டார்.
ஆகஸ்ட் 15க்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன. கடைகளில் கொடி வியாபாரம் பரபரப்பாக நடந்தது. சிறுவர்கள் கொடி வாங்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். தங்கள் வீட்டிலேயே கொடி ஏற்ற வேண்டுமென்று சிலருக்கு ஆசை…எனக்கும்தான்….. நான் அப்பாவுடன் சென்று சுமாரான அகல நீளத்துக்கு ஒரு கதர்க் கொடி வாங்கினேன்.
எங்க வீட்டு மொட்டை மாடியில் சுவரோரத்தில் இரும்பு வளையத்தில் ஒரு நீளக் கொம்பைக் கட்டி நிறுத்திக் கொடியை உச்சியில் சுருட்டிக் கட்டி வைத்தோம். உள்ளே பூக்களை வைத்துக் கட்டினோம்.
ஆகஸ்ட் 15ந் தேதி விடியும் போது எல்லோரும் சேர்ந்து கூடி கொடி ஏற்றிப் பறக்க விடவேண்டுமென்று தீர்மானம்.

நாங்கள் நாலைந்து நண்பர்களும் அவர்கள் அண்ணா அக்கா அப்பா அம்மாக்களை 15ந் தேதி காலை ஆறு மணிக்கு மொட்டை மாடிக்கு வரச் சொன்னோம். கொடி ஏற்றத்துக்கு!!

எல்லோரும் சரியாக ஆறு மணிக்கு மொட்டை மாடியில் கூடி விட்டார்கள். பெரியவர்களுக்குள் வயதான மாமா ஒருவரைக் கொடியின் முடிச்சைத் தளர்த்திப் பறக்கவிடச்சொன்னார் அப்பா.

காற்று சுமாராகத்தான் வீசியதால் கொடி தொங்கித் தொங்கித்தான் பறந்தது. இருந்தாலும் எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சியும் பெருமிதமுமாக இருந்தது.. எல்லோரும் கை தட்டினோம்.
என் சிநேகிதர்களில் அனந்து மிக அழகாகப் பாடுவான்.
பாரதியாரின் “தாயின் மணிக் கொடி பாரீர் “ பாட்டைக் கணீரென்று பாடினான். “பட்டொளி வீசி பறந்திடப் பாரீர் “ என்ற வார்த்தையைக் கேட்க எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. வார்த்தை அளவுக்குக் கொடி எதிரே பட்டொளி வீசிப் பறக்கவில்லையென்று தோன்றியது. எனக்குக் குறைதான்….. பறக்காமல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது.
கொடி பறப்பதைப் பின்னணி கோஷத்தோடு சினிமாத்திரையில் பார்க்கும்போதுதான் உணர்ச்சிகரமாக இருக்கிறது. வெளியே பறப்பதற்குக் கொடி காற்றை நம்பி இருக்கிறது.

சில பெரியவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். என் அப்பாவின் கண்கள் ரொம்பவே கலங்கி இருந்தது. என் அக்காவும் நானும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கினோம்

பெரியவர்கள் “ சபாஷ்…கவிராயரே!” என்று என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கினார்கள்.
அப்போதுதான் ஸலீம் மாமா வந்தார். அவசரம் அவசரமாக வந்தார்..

“ என்ன மாமா…இவ்வளவு லேட்டு! சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து?” என்று சிரித்தேன்.

அவர் சிரிக்கவில்லை. “ எல்லாம் போயிடுத்துப்பா” என்று அப்பாவைப் பார்த்தார். அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு.

அப்பா சலீம் மாமாவைப் பார்த்தவுடன் மேலும் கலங்கிப் போய் அவர் தோளைப் பற்றிக் கொண்டு தனியாக நகர்ந்தார்.

“ என்ன ஆச்சு? தகவல் தெரிந்ததா? “

ஸலீம் மாமா பொங்கி வந்த துக்கத்தைப் வாய்க்குள் பொத்திக் கொண்டு அப்பாவிடம் கேவிக் கொண்டே ஏதோ சொன்னார். பிறகு குலுங்கிக் குலுங்கி அழுதார்..

அப்பா “ அய்ய்ய்யோ… உன் தம்பி குடும்பமா….டெல்லீ…லே…யா…. ” என்று கத்தி விட்டார். “ அப்பாவுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டார்

ஸலீம் மாமா தள்ளாடிக் கொண்டே மெதுவாகக் கீழே இறங்கினார்.
“மாமா..மாமா….ஸ்வீட் எடுத்துக்கோங்கோ…” என்று கத்தினேன். அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் படி இறங்கிக் கொண்டிருந்தார்.

“அப்பா…அப்பா,,,என்னப்பா…என்னப்பா.. ஆச்சு?…..””

அப்பா ஒரு மூலையில் கொடியின் கீழே இடிந்து உட்கார்ந்து விட்டார்.
“ அப்பா…அப்பா….” நான் அவரைத் தொட்டுக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.

“ டேய் பேசாம நீ கீழே போடா…. ஸலீம் மாமாவுக்குக் குடும்பத்துலே இப்போ பெரிய துக்கம்…….நம்ம மாதிரி குடும்பங்களுக்கும் இப்போது ஆபத்தான சமயம்தான்.. ஊரெல்லாம் சாவு…..ரத்தம்….ரணம்…… ……பேசாம போடா……..” என்றார்.

நான் போகாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்பா… என்னைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினார். “ இப்போ நமக்கு சுதந்திரம் வந்துட்டுதுன்னு மார் தட்டிக்கிறதா…………… மாரடிச்சுக்கிறதான்னு தெரியலேடா…..?…. எல்லாம் போறும்…..கீழே வாடா…நீ…….” கோபத்துடன் எழுந்திருந்தார்

பறப்பதற்கு சக்தியில்லாமல் கொடி வருத்தமாகத் தொங்கிக் கொண்டிருந்தது அந்த முதல் சுதந்திர நாளில்!!

 

சரித்திரம் பேசுகிறது -யாரோ

 

ராமகுப்தர்   (துவக்கம்) 

Image result for samudragupta statue

வாசகரே! நாம் படித்த சரித்திரத்தில் சமுத்திரகுப்தருக்குப்பின் இரண்டாம் சந்திரகுப்தன் பதவியேற்று ‘பொற்காலம்’ அமைத்தான் – என்று படித்திருப்போம்.

ஆனால் சரித்திரத்தைச் சற்றுக் கூர்ந்து படித்தால்…

அங்கே… ‘நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!’

உண்மை…

சரித்திர வல்லுனர்கள் இடையில் நடந்த இந்த சரித்திரத் துகள்களை இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் கண்டெடுத்தனர்.

இங்கு இதிகாசம் போன்ற ஒரு கதை கிடைக்கிறது.

காதல், வீரம், பாசம், துரோகம், நாடகம், வேஷம் அனைத்தும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

கதை சொல்வோம்:

 

சமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்…

சமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்பு நடத்திய நாட்களில் …

பாடலிபுத்திரத்தில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவன் – ராமகுப்தன்.

சமுத்திரகுப்தனின் இளைய மகன் சந்திரகுப்தன்…

சமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்புகளில் எல்லாம் ..

நேரடியாகக் களமிறங்கிப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றுத் தந்தவன் – சந்திரகுப்தன்.

அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சந்திரகுப்தனின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.

சமுத்திரகுப்தனும் தனக்குப்பின் அரசனாக வர சந்திரகுப்தனே தகுதியானவன் என்று உணர்ந்திருந்தான்.

சமுத்திரகுப்தன் மந்திரியை அழைத்து:

“மந்திரியாரே… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எனது தந்தை முதலாம் சந்திரகுப்தர் என்னை விட மிகவும் தைரியசாலி”

அவனது வார்த்தைகள் வேதனையை வெளியிட்டது.

மந்திரி: “மன்னவா… உலகமே அஞ்சும் மகாராஜாதிராஜரான தங்களுக்கு தைரியத்தில் என்ன குறைவு. அகில உலகமே தங்கள் பேரைக் கேட்டாலே நடுங்குகிறது”

சமுத்திரகுப்தன்: “மந்திரி… இது உனக்குத் தெரியாதவை அல்ல. இருப்பினும் மறுபடியும் கூறுகிறேன் கேள்!

 என் தந்தை எனது திறமைகளை நன்கு அறிந்திருந்தார். எனக்குப் பல அண்ணன்மார்கள் இருந்த பொழுதிலும்.. அவர் தைரியமாக, மக்கள் அவையில்… என்னை ‘அரசன்’ என்று அறிவித்தார். எனக்கு நன்றாகத் தெரியும்… 

எனது மூத்த மகன் ராமகுப்தன் ஒரு வீரனாக வளரவில்லை.. நான் எடுத்த படையெடுப்புகளில் ஒன்றில் கூட அவன் பங்கு பெறவில்லை..

வீரமற்று ஒரு கோழையாகவே இருந்திருக்கிறான்.

இன்றும் நான் அவனை மாளவத்தின் ஆளுநராக வைத்திருக்கிறேன்.

அதன் தலைநகரான உஜ்ஜயினியில் இருந்துகொண்டு அவன் அங்கு தனது பெயரில் தங்க நாணயங்களை வெளிவிட்டு வருகிறான்.

சக மன்னன் ருத்ரசிம்மா-II மற்றும் அவன் இளவரசன் ருத்ரசிம்மா-III  இருவரும் அருகிலேயே பெரும் சக்திகொண்டு உள்ளனர்.

அவர்கள் என்னிடம் அன்று தோற்று ஒளிந்தாலும் இன்று அவர்கள் தினவெடுத்த தோள்களுடன் தெனாவெட்டாகத் திரிகின்றனர்.

ராமகுப்தன் அவர்களைத் தாக்காமல், அவர்களை வெற்றி கொள்ளாமலும் அடங்கிக் கிடக்கிறான்.

சந்திரகுப்தனோ ..

வீரத்தின் சிகரம் ..

வெற்றியின் நாயகன்…

மக்களின் காவலன்..

அவனை அரசனாக அறிவிப்பது தானே நீதி..நியாயம்..உத்தமம்..

ஆனால் அதை அறிவிக்க என் நெஞ்சில் தயக்கம்…

இப்போழுது சொல்லுங்கள்…

நான் தைரியசாலியா?”

மாவீரன் புலம்புகிறான்..

இந்திய நெப்போலியனின் இரும்பு இதயம் கரும்பு போல் நெகிழ்ந்தது.

புத்திரப்பாசங்கள் எப்பேர்ப்பட்ட வீரர்களையும் பலவீனமாக்கும்!

மந்திரி கூறுகிறார்:

“மன்னவா … நான் இன்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்… தங்களுக்குப் பின் சந்திரகுப்தரை அரசராக்குவேன்.”

மாமன்னன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

ஆனால் அந்த மந்திரி…

இந்நாளைய மந்திரி போன்றவர்..

ஊழலின் மொத்த உருவம்…

மந்திரியின் எண்ணம் எல்லாம்:‘சந்திரகுப்தன் அரசனானால் நேர்மையான ஆட்சி செய்வான். ஆனால், ராமகுப்தன் அரசனானால் தனக்குப் பொன்னும் பொருளும் கொடுப்பான்’.

மந்திரி கட்சி மாறினான்.

சில நாட்களிலே…

சமுத்திரகுப்தன் மறைந்து விட்டான்.

இரும்புக்கரங்களால் உலகையே வென்ற மாவீரன்.

சுவர்க்கத்திற்குப் படையெடுக்கப் போயினன் போலும்!

ராமகுப்தன் மந்திரியை அழைத்தான்.

“மந்திரியாரே!

நான் அரசனானால் இந்நாட்டை நீங்களே நிர்வகிக்கலாம்.

பொன் மூட்டைகளுக்கும்… பெரும் நிலங்களுக்கும் தாங்கள் அதிபதியாகலாம்.

தந்தை இறந்த இன்றே எனக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

காலம் தாழ்த்தினால் சந்திரகுப்தன் ஏதாவது செய்து அரியணையைப் பறித்துக்கொள்வான்.”

மந்திரி:

“ராமகுப்தரே! நீங்கள் தான் இந்நாட்டு மன்னர்..

அதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

சில நாட்கள் பொறுக்க வேண்டுவது மிகவும் அவசியம்.

மக்கள் அனைவரும் மன்னர் இறந்த துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.

உங்கள் பட்டாபிஷேகத்தை யாரும் கொண்டாடமாட்டார்கள்.”

மந்திரி தொடர்ந்தார்..

“மேலும் இன்னொரு முக்கிய சமாசாரம்” அவன் காதில் முணுமுணுத்தார்.

ராமகுப்தனின் முகம் சூரியப்பிரகாசம் அடைந்தது.

“அமைச்சரே… இந்த ஆலோசனை ஒன்றுக்காக .. உங்களுக்கு எதையும் தரலாம்..”

சூழ்ச்சிகள் ரகஸ்யமாகும்பொழுது அதன் சக்தி இன்னும் அதிகமாகும்.

காலம் காலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பேரழகி தோன்றி மக்களின் நெஞ்சங்களை ஈர்த்து- மாமன்னர்களைத் தன் வசமாக்குவர்.

Related image

மகாபாரதத்தின் திரௌபதி.. புத்தர் காலத்தில் ஆம்ரபாலி…இந்நாளில் ஐஸ்வர்யாராய் …என்று சரித்திரம் படம் பிடித்துக் காட்டும்.

இவர்கள் அனைவரும் அழகு மட்டும் கொண்டிருக்கவில்லை.

அறிவிலும் மேம்பட்டிருந்தார்கள்.

அந்த வரிசையில் அன்று…

துருவாதேவி…

இளவரசி..

பேரழகி..

அவள் அழகின் பெருமை காட்டுத் தீ போல நாட்டில் பரவியிருந்தது.

அழகுடன் கூடிய அவளது அறிவும் மற்றும் துணிச்சலும் நாடறிந்தது.

சந்திரகுப்தனின் மாவீரமும் அவனது போர் சாகசங்களும் அவள் மனதில் காதலைத்  தூண்டியது.

அவனது வசீகரமும், அறிவும், கலையார்வமும் அவளை வெகுவாக ஈர்த்தன.

சந்திரகுப்தனும் துருவாதேவியை எண்ணிக் காதலால் உருகினான்.

Image result for பாஹுபலி 1 and 2

நளன் – தமயந்தி போல் இருவரது காதலும் தூது விட்டு வளர்ந்தது.

சமுத்திரகுப்தன் மறையுமுன்…

சந்திரகுப்தன் தந்தையிடம் சென்று அவனிடம் தன் காதலைக் கூறியிருந்தான்.

சமுத்திரகுப்தன் தனது தள்ளாத நிலையிலும் …

அவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தான்.

சந்திரகுப்தனும் துருவாதேவியும் தேன்பூக்களில் விழுந்த தேனீக்கள் போலாயினர்..

காதல் ஒரு போதை!

நினைத்தவுடனே அது போதை தரும்!

திருமணம் செய்து கொள்வதைவிட அதற்குக் காத்துக் கிடப்பதில் உள்ள சுகம்.

சுகமோ சுகம்…

சமுத்திரகுப்தன் காலமாகி வாரமிரண்டு சென்றது.

ராமகுப்தன் சந்திரகுப்தனை அழைத்தான்.

Image result for rana and prabhas in bahubali

மந்திரியாரும் உடன் இருந்தார்.

ராமகுப்தன்:

“சந்திரகுப்தா!

தந்தையின் மரணம் நமது நாட்டையே ஆட்டிவிட்டது…

அரசன் இல்லாத நம் நாட்டை அந்நிய மன்னர்கள் தாக்க முயலுவர்.

அதை நீ தான் படைத்தலைமை ஏற்று தடுத்துக் காக்கவேண்டும்.

தந்தையார் சாகும் முன் மந்திரியாரிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.

அதை அவர் சொல்லக் கேள்”

மந்திரியார் விஷயங்களைத் திரித்துக் கூறினார்:

“சந்திரகுப்தா!

மாமன்னர் தன் கடைசி நாட்களில் பெரும் துயரத்தில் இருந்தார்.

தான் மன்னனாவதற்காகத் தன் அண்ணன்களை அழிக்க நேர்ந்த கொடுமைதனை நினைத்து நினைத்துப் பெரிதாகப் புலம்பினார்.

அவர் அழுது அன்றுதான் நான் பார்த்தேன்”

மந்திரியின் குரல் தழுதழுத்தது.

நடிப்பில் அவர் சிவாஜி கணேசனை மிஞ்சினார்.

மந்திரி தொடர்ந்தார்:

“மன்னர் என்னிடம் சொன்னது:

மந்திரி… இதுபோல் நமது குப்தர் பரம்பரையில் இனி நடக்கக்கூடாது.

சந்திரகுப்தன் மாவீரன் … அவன் படைத்தலைவனாகி நமது நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும். ஆனால் அரசனாக என் மூத்தமகன் ராமகுப்தன்தான் வரவேண்டும். சந்திரகுப்தன் அவனை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும்.

இதை நீ அவனிடம் எடுத்துக் கூறிச் செய்வாயா? என்று கேட்டார். “

மந்திரி சொல்வதைக் கேட்டு சந்திரகுப்தனுக்கு மனம் உருகியது..

பாகாய் உருகியது.

“மந்திரியாரே!

தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு ஒன்றும் இல்லை…

ராமகுப்தனுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.

குப்தர்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு அவனது ஆட்சிக்கு என்னால் எந்த குந்தகமும் வாராது”

உண்மையாக … நேர்மையாக அவனது வாக்கு கம்பீரமாக ஒலித்தது.

சதிகள் … சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறது..

‘இராமாயணத்திலிருந்து… பாகுபலி வரை’ சதிகள் காவியங்களை நடத்தி வந்துள்ளது.

மந்திரிகள் சூழ்ச்சி செய்வதும் ஊழல் செய்வதும் இந்நாளில் சகஜமாகி விட்டது.

அந்நாளிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

அடுத்த வாரமே ராமகுப்தனின் முடி சூட்டு நாள் குறிக்கப்பட்டது.

மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

ஆனாலும் சந்திரகுப்தன் மகிழ்வோடு ஆதரித்தான்.

முடி சூட்டும் நாளுக்கு முதல் நாள்..

ராமகுப்தன் மந்திரி தனக்குத் தந்த ரகசிய ஆலோசனையை அமுலாக்கத் தொடங்கினான்.

துருவாதேவியை அழைத்தான்.
“துருவாதேவி…

உனது அழகு பிரசித்தியானது..

உனது அறிவோ அபரிமிதமானது.

நீ மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு ராணியாக வேண்டியவள்.

நீ சந்திரகுப்தனுக்கு நிச்சயமாகி உள்ளாய்.

அவனை மணந்தால் நீ இளவரசியாகவே இருப்பாய்.

என்னை மணந்து அகில உலகின் முடி சூடிய ராணியாக விளங்குவாய்.

நான் உனது அடிமை“

துருவாதேவி நெருப்பில் விழுந்த மயில் போல் துடித்தாள்.

“இளவரசே!…

நான் ஏற்கனவே மணமாக உள்ளேன்.

சந்திரகுப்தர் எனது காதலர்.

என் கணவனாக உள்ளார்.

என்னை விட்டு விடுங்கள்”

தைரியமாகத்தான் சொன்னாலும் … அழுகையை அவளால் அடக்க முடியவில்லை..

ராமகுப்தன்:

“துருவாதேவி!

நான் நாளை அரசன்…

எனது ஆணைக்கு சந்திரகுப்தன் கட்டுப்படுவேன் என்று உறுதி கொடுத்திருக்கிறான். மேலும் நீ என் ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்றால் சந்திரகுப்தனுக்கும் ஆபத்து காத்திருக்கிறது”

அவன் குரலில் ஒரு அச்சுறுத்தும் தொனி..

மறுநாள்…

முடி சூட்டு விழா ஆரம்பத்தில்..

அமைச்சர் அறிவித்தார்:

“இளவரசர் முடி சூடுமுன், ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முதலில் நடைபெறும், பின் இருவரும் மகாராஜாதிராஜா- மகாராணி என்று முடி சூட்டப்படுவர்”

மக்கள் திகைத்தனர்.

சந்திரகுப்தன் நிலை குலைந்து போனான்.

துருவாதேவி மேடையில் ஏறினாள்:

“சந்திரகுப்தரே.. எனது திருமணம் தங்களுடன் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் பதில் என்ன”

சந்திரகுப்தன் பெரும் சங்கடத்திற்கு ஆளானான்.

அவனிடம் வீரத்திற்குக் குறைவில்லை.

ஆனால் இது என்ன சோதனை.

“துருவாதேவி!

நீ என்றுமே என் இதயத்தில் இருப்பாய்.

என்றாவது ஒரு நாள் நான் மன்னனானால் நீ தான் என் ராணி..

ஆனால்… இன்று நான் என்ன சொல்வேன்?

அண்ணன் நாட்டைக் கேட்டான்.,,

கொடுத்தேன்..

அண்ணன் என் கண்களைக் கேட்கிறான்…

அன்பால் விளைந்த கொடுமை…

என்ன செய்வேன்!”

புலம்பினான்.

துருவாதேவி சந்திரகுப்தன் தன்னைக் காப்பான் என்று நம்பியிருந்தாள்…

திக்பிரமை அடைந்தாள்.
ராமகுப்தன்:

“சந்திரகுப்தா! மன்னனாகும் நான் உன்னிடம் வேண்டுவது இது ஒன்று தான்.

மேலும் இது குப்தச் சக்ரவர்த்தியின் ஆணை..

இதை மீறுவது ராஜத்துரோகம் மட்டுமல்ல.

தந்தையின் ஆணையை மீறுவதுமாகும்.

தந்தை உன்னை எனக்கு என்றும் பணியுமாறு ஆணையிட்டிருக்கிறார் என்பதை அறிவாயல்லவா?”

காதலர் இருவரும் துடித்தனர்.

விதி வலியது.

Image result for rana and prabhas in bahubali

ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..

ராமகுப்தன் குப்தச் சக்ரவர்த்தியானான்..

‘பாகுபலி- The Beginning’ போல இது ராமகுப்தன் – துவக்கம்.

இனி வருவது ‘பாகுபலி- The Conclusion’….

மன்னிக்கவும்..

ராமகுப்தன் – மறைவு.

காத்திருங்கள்…

விக்ரம் வேதா – விமர்சனம்

 

Related image

விஜய் சேதுபதி : நான் ஒரு கதை சொல்லட்டா?

மாதவன்: அது மட்டும் வேண்டாம்… என்னென்னவோ சொல்லி என்னை செண்டிமெண்டா யோசிக்க வைச்சுட்டு நீ பாட்டுக்கு முருங்க மரம் ஏறிடுவே!

விஜய் சேதுபதி : அது எப்படி சார்! என் கண்ணில படம் பாத்திங்களா ? அப்படியே சொல்றீங்க?

மாதவன்:  ஏய்! வால்   இருக்கிறதனால பூனையும்   எலியும் ஒண்ணுன்னு  ஆகுமா? நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா? திருடன் திருடன் தான். போலீஸ் போலீஸ் தான் !

விஜய் சேதுபதி:  சும்மா சொல்லக் கூடாது  சார் !  படம் முழுசும்  நீ டக்கரா  வெறைப்பா  உர்ருன்னு இருக்கே! லாயர் பொண்டாட்டி கிட்டேயாவது கொஞ்சம் குஜாலா  இருக்கக் கூடாது?

மாதவன்:  அதையும் நீதானே கெடுத்தே!  உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால  என் வீட்டிலேயும் பிரச்சினை! உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி? ஷோலே அம்ஜத்கான் மாதிரி.

விஜய் சேதுபதி:  பின்னே! நீ பாட்டுக்கு டுப்பு டுப்புன்னு எங்க ஆளுங்களை எல்லாம்  சுட்டுட்டு நிம்மதியா தூங்கிடுவே! நான் சும்மா இருக்க முடியுமா?  அதனாலதான் நானும் ரவுடிதான்னு காமிச்சேன்!

மாதவன்: ஆனாலும் படம் பூராவும் நீ  கலக்கறே!  டசக்கு டசக்குன்னு பாட்டு ! அட்டகாசமான பிஜிஎம்!  நிறைய பன்ச் டயலாக் வேற! உன் காட்டுலே மழை!

விஜய் சேதுபதி: ஏன் சார்! உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே! பொண்டாட்டியைக்  கொஞ்சி  ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே! அது என்ன சார் யாஞ்சி? எனக்கும்   ரொமான்ஸ் கதை இருக்குன்னு சொல்றேன், எவனும் கேக்கமாட்டேங்கிறான்.

மாதவன்: உன் கதையில செண்டிமெண்ட் தூக்கலா இருக்கு. அதை வைச்சுட்டுதானே இரும்பா இருந்த என்னை வளைச்சுப்பிட்டியே !

விஜய் சேதுபதி : நான் செண்டிமெண்ட்காரன்தான்.  என்  தம்பி, அவன் பொண்டாட்டி,  கூட இருக்குற பசங்க – இவனுகளுக்கு பிரச்சினைன்னு வந்தா அதத் தீக்கறதுக்கு என்ன வேணுமுன்னா பண்ணுவேன்.

மாதவன்: இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு?  கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே! என்  உயிரையும் காப்பாத்தினே! அது சரி ,  சண்டை போடும்போது ‘ நான் நல்லா கன் பிடிக்கிறேனா சார்னு ‘ லொள்ளு   காட்டி ஸ்டைல் வேற  பண்ணறே?  அப்ளாஸ் வாங்கவா?

விஜய் சேதுபதி: அது கிடக்கட்டும் சார்! கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா? இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா?”

மாதவன் : நான்தான் ஒத்துக்கிட்டேனே! செய்யச் சொன்னவனைத் தான்னு !

விஜய் சேதுபதி: அப்ப சரி !  நாம என்ன கலக்கினாலும் நம்மளை நடிக்க வைச்ச டைரக்டர்கள்தானே கிரேட்?

மாதவன்:  சந்தேகமேயில்லை! அவங்கதான் கிரேட்!    ஆனா அதைச் சொல்லி நீ தப்பிச்சுக்க முடியாது.

விஜய் சேதுபதி: நீயும்தான் சார்!

(இருவரும் துப்பாக்கியை எடுத்து மற்றவர் மீது குறி வைக்கிறார்கள்)

ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து

 

 

 

 

 

 

 

 

புத்தியுள்ள மனிதரெல்லாம்                                                                                     வெற்றி காண்பதில்லை                                                                        வெற்றிபெற்ற மனிதரெல்லாம்                                                                புத்திசாலி இல்லை – புத்திசாலி இல்லை”

காலையில் எழுந்தவுடனேயே காப்பி சாப்பிடுவதற்கு முன்பே ஏதாவது ஒரு பாடல் வரிகள் (பெரும்பாலும் சினிமா பாட்டுதான்) என் மண்டைக்குள் சுற்ற ஆரம்பித்துவிடும். மேலே சொன்னது இன்றைய பாட்டு. இப்படி தத்துவப்பாடல் என்று இல்லை. சமயத்தில் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ கூட வரும். (‘இந்தாடிப் பொண்ணு வடை முறுக்கு’ம் வரலாம்)

என் அலுவலகத்தில் ஒருவர் விசிலிலேயே பாட்டிசைப்பார். ‘தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம்’ விசிலடித்தால் காலையில்தான் எழுதுபொருள் வியாபாரி சபாபதி வந்து போயிருப்பார்.  ‘அப்பனைப் பாடும் வாயால்’ பாட்டா, அப்படியானால் பெரும்பாலும் எம் கே ட்ரான்ஸ்போர்ட் கணக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்.

அதுமாதிரி, என்னைச் சுற்றும் பாடல்களுக்கு  நேற்றைய நிகழ்வுகளிலோ அல்லது கனவிலோ   தொடர்பைத் தேடித்தேடி எனக்கு அலுத்துவிட்டது.

Related image

போகட்டும். இந்த சந்திரபாபு பாட்டிலே இரண்டு விதமான மனிதர்களைக் குறிப்பிட்டாலும் நான் அவர் குறிப்பிடாத மற்ற இரண்டுவித மனிதர்களில் ஒருவன். (புத்திசாலியும் அல்ல, வெற்றி கண்டவனும் அல்ல). ‘ஆயிரம் பேர் நடுவில் நீ நடந்தால்’ பாட்டில் வருகிற மாலைகள் விழாத 999 பேரில் ஒருத்தன்.  எட்டாம் வகுப்பு படிக்கும்போது  கலிங்கப் போர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தாலும்  இறந்து கிடக்கும் வீரர்களில் ஒருவனாகத்தான் (அதுவும் கடைசி வரிசையில்) படுத்துக்கிடக்க நேர்ந்தது.     

இப்படி அடையாளமில்லாத யாரோ ஒருவனாகவே எட்டாம் வகுப்பின்போது இருந்திருக்கிறேன் என்றால், அதற்கு முன் ஏதாவது நினைவிற்கு வருகிறதா என யோசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அத்தை, மாமா, சின்னம்மா, பெரியம்மா, பெரியப்பா, பெரியம்மா என்று பலரும் உண்டு. அவர்களது பிள்ளைகள் என் சம வயதிலும், பெரியவர்களாகவும், சின்ன வயசுக்காரர்களாகவும் நிறையப்பேர். ஒவ்வொரு பையன் அல்லது பெண்ணைப்பற்றியும் ஏதாவது சிறு வயதுக் குறும்போ, புத்திசாலித்தனமோ, வேடிக்கையோ கொண்ட குட்டிக்கதைகள் பல பேசிப் பேசியே நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

என்னைப்பற்றிய கதைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். மரத்திற்குப் போட கரையான் எண்ணெய் வாங்கிவரச் சொல்ல, நான் குழந்தைகளுக்குப் போடும் கரப்பான் எண்ணெய் வாங்கிவந்து அடி வாங்கியது நினைவில் இருக்கிறது. 

 

Image result for கீரைக்காரி

ஒரு குட்டிச் செய்தி மட்டும் உண்டு.  வாசலோடு போன கீரைக்காரியைக் கூப்பிடுமாறு வீட்டிற்குள்ளிருந்து  பாட்டி குரல் கொடுத்திருக்கிறாள். திண்ணையில் உட்கார்ந்திருந்த நான் சும்மா இருந்துவிட்டேனாம். பாட்டி ‘கடன்காரா.. கட்டையில போக’ என்று வழக்கமான ஆசீர்வாதத்துடன் சத்தம் போட்டாளாம்.  முட்டுச் சந்தில் போய்க்கொண்டிருந்த  கீரைக்காரி, திரும்பி இப்படித்தானே வரணும் என நான் அமைதியாகப் பதிலளித்தேனாம். என்னுடைய மூன்று நான்கு வயதில் நான் ஒன்றும் மோசமில்லை என்று சொல்வதற்காக இந்தக் கதையைச் சொல்வார்கள்.

ஆனால் எப்படி நாளடைவில்  என் பெயர் ரிப்பேர் ஆகியது என்று தெரியவில்லை. சரஸ்வதி சபதத்தில்  பேசமுடியாத சிவாஜி புலவனாகவும் கோழை   ஜெமினி  வீரனாகவும்  ஆவதாக வரும். என் கேஸ் தலைகீழோ என்னவோ? இல்லையென்றால் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே’ என்பதுபோல் புத்திசாலிக் குழந்தைதான் என்றும் வருமோ என்னவோ? போகப்போகத்தான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் போலிருக்கிறது.

இஸ்கூல்ல போடுகிற அன்றைக்குப் பல பிள்ளைகளுடன் ‘ப்ளஷரில்’ (அந்தக் காலத்தில் ‘கார்’ பிளஷர் என்றுதான் சொல்லப்படும். கார் என்று சொன்னால் அது பஸ்.) போனாலும் மறுநாள் முதல் வயல்காடு, கால்வாய்கரை என்று கால்நடைதான். ஆடிப்பாடிக்கொண்டு தூக்குச்சட்டியில் சாப்பாட்டோடு பள்ளிக்குப் போனதும், ஒரு காரணமுமின்றி சில நாள் வாய்க்காலில் குதித்து விளையாடிவிட்டு ஈரத்தோடேயே ஸ்கூல் போனதும் லேசாக நினைவிருக்கிறது. என்றாவது கூட வந்த பையன்கள் மீன் பிடிக்க முயன்றால் நான் பள்ளிக்கு ஓடிவிடுவேன். சுத்த சைவம் அல்லவா?

Related image

அரைக்கண் மூடிய நிலையிலேயே தாமோதரன் சார் பாடம் நடத்தியதும், ஸ்கூலுக்கு வராத பயல்களை வந்திருக்கும் பையன்களில் சிலரை ஏவிக் கூட்டிவரச் செய்ததும் நிழலாக நினைவில் இருக்கிறது. நான் நன்றாகப் படித்தேனா இல்லை மக்கு என்று பேரெடுத்தேனா என்பது நினைவில்லை.   

இதெல்லாம் மூன்றாம் வகுப்பு வரை. அண்ணனுக்கு ஆறாம் வகுப்பிற்கு அந்த ஊரில் பள்ளி கிடையாது.  அப்போது என் தாத்தா தான் குடும்பத் தலைவர். அவருக்கு என்ன தொழில் என்று நினைவு இல்லை. அப்பாவிற்கு  டவுனில் ஒரு  ஆபீஸ் வேலை கிடைத்தது, தாத்தாவும் ஒரு வக்கீலிடம் வேலைக்குச் சேர்ந்தது, இவற்றோடு அண்ணன் ஸ்கூலையும் முன்னிட்டு  குடும்பத்தோடு அந்த நகரப் பிரவேசம்.

‘நாலாங் க்ளாஸ்’ படிக்கும்போதுதான் யூனிபார்ம் என்னும் சீருடை ஆரம்பித்தது. எல்லாப் பள்ளிகளுக்கும் காக்கி நிக்கரும் வெள்ளைச் சட்டையும்தான். இப்போதுபோல பல வண்ணங்களில் கட்டம்போட்ட கோடுபோட்ட சட்டையெல்லாம் கிடையாது. ஆங்கிலப் பாடங்கள் ஆறாம் வகுப்பில்தான் தொடங்கும்.  வகுப்பு லீடர், ரெட் ஹவுஸ், எல்லோ ஹவுஸ், ப்ளூ ஹவுஸ், விளையாட்டுப் பீரியட், மாஸ் டிரில், இன்ஸ்பெக்ஷன் என்று அதிகாரிகள் வருவது போன்றவைகள் அறிமுகமான காலம் அது. ‘பெரியவனே’ என்று ஆசிரியர்களால் விளிக்கப்பட்டு, அந்தப் பெயர்  நிலைக்கத் தொடங்கியதும் அப்போதுதான்

முதல் முறையாக பெஞ்சில் ஏறி நின்றது பாட சம்பந்தமாக இல்லை. மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது கடைசி பீரியட். கந்தசாமி சார் பூகோளம் நடத்திக்கொண்டு இருந்தார். பக்கத்திலிருந்த ரவி, என்னை நிமிண்டி கிசு கிசு என்று ஒரு விஷயம் சொன்னான். “வகுப்பில் இரண்டு பையன்கள் பேசிக்கொண்டு இருந்தால், கந்தசாமி சார், ‘வொய் ஆர் யூ டாக்கிங்?’ என்று எழுந்திருக்கச் சொல்வார். தமிழில் பாடம் நடத்தும்போது ஏன் இங்க்லீஷில் கேட்கிறார், அதுவும் பேசுகிறவனை விட்டுவிட்டுச் சரியாகக் கேட்டுக்கொண்டு இருப்பவனைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று புரிவதில்லை”     என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கந்தசாமி சார் என்னைப் பார்த்து, “யூ ஸ்டாண்ட் அப். வொய் ஆர் யு டாக்கிங்?” என்றதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சார் கடுப்பாகி வகுப்பு முடியும் வரை என்னை பெஞ்சில் ஏறி நிற்க வைத்துவிட்டார். அவமானம் ஆத்திரம் தாங்காமல் குளத்தங்கரையில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு வீடு போய்ச்சேர்ந்ததாக ஞாபகம்.

அப்போதெல்லாம் வகுப்பு லீடர், ஹவுஸ் லீடர் என்றெல்லாம் இருந்ததில்லை. என்னைப்பற்றி நல்லவிதமாகவோ பொல்லாத  விதமாகவோ பேச்சும் கிடையாது. முதல் முதலாகக் கெட்ட பெயர் வாங்கிய சம்பவம் இதுதான்.

அந்த வாரம் கடைசி இரண்டு நாளும் நான் ஸ்கூல் போகவில்லை. குலதெய்வத்திற்குச் செய்வதற்காக ஊருக்குப் போய்விட்டோம். சனிக்கிழமை அடுத்த தெரு கோபாலைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்டேன். திங்கள் காலையில் சரித்திரம் டெஸ்ட் என்று பாடங்களின் பெயர்களையும் சொன்னான். நான் தயாராகத்தான் ஸ்கூல் போனேன்.

ஆனால் உண்மையில் அன்று சயின்ஸ் டெஸ்டாம். கோபால் வேண்டுமென்று பொய் சொல்லியிருக்கிறான். எனக்கு சோகமும் ஆத்திரமும் தாங்கமுடியவில்லை. தெரிந்ததை எழுதியிருக்கலாம். என்ன கிறுக்குத்தனமோ, வெறும் பேப்பரைக் கொடுத்துவிட்டேன். சயின்ஸ் வாத்தியாரும் சரி, வீட்டிலும் சரி, என்ன காரணம் என்று கேட்காமலேயே ரொம்பத் திமிர் என்று தண்டனை கொடுத்தார்கள். என்னுடைய பக்க நியாயத்தை அல்லது காரணத்தை நானாகவாவது சொல்லியிருக்கலாம் இல்லையா? ஏன் சொல்லவில்லை?   

இப்போது நினைக்கையில் தோன்றுகிறது —- வாயைத் திறக்க வேண்டிய சமயத்தில் திறக்காமல் கஷ்டப்படுவது என்னுடைய  ‘கேரக்ட’ராகத் தொடங்கியது அப்போதுதானோ?

வகுப்பில் ஓரிரு முரட்டுப் பையன்கள் உண்டு. (ஒருவன் சோமசுந்தரம், இன்னொருத்தன் ஆண்டனி, மூணாவதா ஒருவனும் உண்டு. பெயர் நினைவில்லை). அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அலட்சியமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆசிரியர்களைப்பற்றிப் பேசும்போது ஒருமையில் பேசுவார்கள். அவர்களுக்கு மற்ற மாணவர்களிடையே ஒரு ‘ஹீரோ இமேஜ்’ கூட சமயத்தில் ஏற்படும். என்ன காரணமோ, நான் அந்த குரூப்பில் இல்லை.

 

(சொல்ல ஆரம்பித்ததும்தான் எப்படிச் சொல்லலாம் என ஒரு பிடிப்பு வருகிறது. முடிந்தவரையில் காலக்கிரமத்தில் சொல்வது சௌகரியமாக இருக்கிறது.)