தலையங்கம் –                                 ஆ.ஆ. – ஆச்சரியம்

image
image

No wonder BROOM sweeps!  It is meant for sweep! 

டெல்லியில்  நடைபெற்ற தேர்தலில்  ஆம் ஆத்மியின் அமோக வெற்றி அனைத்துப் பிரிவினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இதன் சிறப்புகள் : 

  • ஊழலுக்கு எதிரான கட்சி வென்றுள்ளது- நல்ல காலம் பிறக்குது.. 
  • எழுபதில் 67 இடங்கள் வெற்றி! உண்மையில் வரலாறு காணாத வெற்றி!
  • தேர்தல் ஜோதிடர்கள், கருத்துக் கணிப்புக்கள் அனைத்தையும்   (மேலே காண்க) இது பின் தள்ளி விட்டது. . 
  • பிஜேபியை வெறும் 3 சீட்டுக்குத் தள்ளி- காங்கிரசுக்கு முட்டை கொடுத்து மீதம் 67 ஐயும் எடுத்துக் கொண்டது!
  • மோடி அலையைக் கட்டுப் படுத்தியது!   


ஆ..ஆ..வின்  ஆர்ப்பரிப்புக்குக்  காரணம் என்ன?

 . உறுதியான  வாக்குறுதிகளை வழங்கியது

  •      டெல்லி தனி மாகாணம் 
  •       எல்லோரும் உட்பட்ட ஜன் லோக் பால் சட்டம் 
  •       2 லட்சம் கழிப்பறைகள்
  •       பாதி விலையில் மின்சாரம்
  •       எல்லோருக்கும் 700 லிட்டர் தண்ணீர்  
  •       சி‌சி‌டி‌வி கேமராக்கள் -பெண்கள் பாதுகாப்பு படை 
  •       500 பள்ளிகள் , 20 கல்லூரிகள் 
  •       உதவி மையங்கள்   டெல்லி முழுவதும் இலவச  WIFI வசதி 


வெற்றிக்கான மற்ற காரணங்கள்: 

  1. சாதாரண மக்களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டது      ( பத்து ரூபாய் மப்ளர் vs  பத்து லட்சம் சூட்)  
  2. திட்டமான பிரசாரம் 
  3. வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்டது (இதுவரை யாரும் செய்யாதது!) 
  4. முஸ்லிம் ஓட்டுக்கள் மொத்தமாக வந்தது 
  5. மற்ற எதிர்க்கட்சிகளும் இவர்களை ஆதரித்தது
  6. பி ஜே பியை விவாதத்திற்கு அழைத்தது   
  7. கிரண் பேடியை  முதல்வராக அறிவிக்க வைத்தது 
  8. ஓட்டுக்குக் காசு கொடுக்காதது 
  9.  காங்கிரஸின் படு  வீழ்ச்சி 
  10. காங்கிரஸ்-பிஜேபிக்கு ஒரு மாற்று    

இனி மோடி,

  •  ஆகாய விமானத்திலிருந்து தரைக்கு வரவேண்டும்!
  •  பாலம் விமான நிலையத்திற்குப்  போவதற்குப் பதிலாக    பாலங்கள் கட்டவேண்டும்! 
  • மற்ற நாட்டை விட்டு நம் நாட்டைக் கவனிக்க வேண்டும் 

இனி காங்கிரஸ், 

  • பெருமளவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!

இனி ஆ.ஆ. 

  • செயல்.. செயல்.. இது தான் தாரக மந்திரமாக இருந்து  நல்ல மாற்றுக் கட்சியாக மலரவேண்டும்.

நடக்குமா?  நடக்கவேண்டும்! 

——————————————————————–

ஆண்டு : 2                                                                   மாதம் : 2 

image

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா 
ஆலோசகர்              :அர்ஜூன் 
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா 
வரைகலை             : அனன்யா


ஒபாமாவின் இந்தியா விஜயம் –  அதுவும் நமது குடியரசு விழாவில் கலந்து கொண்டது பெருமையான செய்தி தான். 

தொடரட்டும் இந்தியா அமெரிக்கா நல்லுணர்வு !

இந்த  வீடியோ சும்மா ஜாலிக்காக! நல்லா கலாய்ச்சிருக்காங்க !

நன்றி: Headlines Today

 

2014 தமிழ்த் திரைப்படம் -ஒரு கண்ணோட்டம்                 (Action King )

2014 இல் வழக்கத்துக்கு மாறாக நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன.  எல்லா வருடங்களிலும் ரஜினி அஜீத் சூர்யா தனுஷ் படங்கள் வரும். ஹிட் ஆகும். ஆனால் இந்த வருஷம்  சில நல்ல புதுமையான   படங்கள் வந்துள்ளன .அவை ஹிட்டும்  ஆகியிருக்கின்றன. 

சரி இந்த வருடம் வந்த சிலபடங்களைப் பற்றி   டாப் 10 பாணியில் பேசுவோம் 

லிங்கா 

image

தலைவர் படம் என்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு போனதினாலே சுமார் ரகத்தில் லிங்காவைச் சேர்க்க முடிந்தது. இல்லைன்னா ????  ரஹ்மான் பாட்டு எதுவும் மனசிலே நிக்கலை. ரஜினியின் பழைய படங்களை மிக்ஸியில் அரைத்து தோசை ஊத்தியிருக்கிறார் கே. எஸ் ரவிகுமார். சாரி தலைவரே. தோசை வேகவில்லை. 

பத்துக்கு நாலு 

அரிமா நம்பி: 

image

நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. வித்தியாசமான  திருப்பங்கள்.செதுக்கியதைப் போன்ற பாத்திரங்களும் வசனங்களும். விக்ரம் பிரபு மற்றும் மற்ற நடிகர்  நடிகைகள் இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்கிருக்கலாம். தொய்வு இல்லாமல் போகிறதுக்காக டைரக்டரைப் பாராட்டலாம்.  டூயட் பாடற   வழக்கத்தை யாராவது மாத்தினால் தேவலை. 

பத்துக்கு ஆறு.   

யாமிருக்க பயமே: 

image

திகிலும் காமெடியும் கலப்பது தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட்.  நிறைய இடங்களில் பயமும் குபீர் சிரிப்பும் வருகின்றன என்றாலும் அவை எதிர்பார்த்த மாதிரி தான் இருக்கின்றன, நிறைய பேரின் நடிப்பு சுமார் ரகத்துக்கு கீழே! நல்ல முயற்சி.

பத்துக்கு ஏழே கால் . 

வாயை மூடிப் பேசவும்: 

image

புதுமையான கனவுக் கதை. சின்னச் சின்னப்   பாத்திரங்களும் நல்லா பண்ணியிருக்காங்க. குறும்படத்தை பெரிய படமா எடுத்திருக்கற சிரமம் பார்க்கும் போது தெரியுது.சுந்தரலிங்கம் சார்! தமிழ் சினிமாவுக்கு செம புதுமையான வரவு. 

பத்துக்கு ஏழு.    

மெட்ராஸ்: 

image

இந்தப் படத்தின் ஹீரோ சுவர் தான். அந்தப் பாணியில் சொன்னால் பழைய சுவத்துக்குப் புதுப் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அங்கே அங்கே கலர் சூப்பரா இருந்தாலும் நிறைய இடங்களில் பெயிண்ட் சாயம் போயிருக்கு. ஏம்ப்பா! இந்த தமிழ் பேசற ஹீரோயின்கள் எல்லாம் எங்கே போயிட்டாங்க? ஒண்ணு ரெண்டு பாட்டு கேட்க நல்லாவே இருக்கு. 

பத்துக்கு ஆறே முக்கால் . 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் 

image

வித்தியாசமா எடுக்கணும்னு முடிவு பண்ணி எடுத்த இந்தப் படத்தை பார்த்திபன் நல்லாவே கொண்டு போயிருக்கிறார்.எல்லாத்தையும் தலை மேல் போட்டுக்கிட்டு  நடிப்பில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். அருமையான முயற்சி. 

பத்துக்கு ஏழு.

காவியத் தலைவன் 

image

நல்ல தரமான காலப் பின்னணி . நல்ல திறமையான நடிகர்கள்.சூப்பரான ரஹ்மானின் இசை. கண்ணைக் கவரும் உடைகள். அருமையான ஒளிப்பதிவு. இத்தனை ‘நல்ல’ க்கள் நிறைய இருந்தும் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நல்லா  இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏன் ? டைரக்டரைக் கேட்க வேண்டிய கேள்வி.     கதையோட கருவும் 1930 வருட நாடகப் பின்னணியும்  சரியா ஒட்டவில்லை. 

பத்துக்கு ஏழேகால்    

தெகிடி:

image

புதுமைச் சரக்குடன் விறுவிறுப்பையும் சரியா கலந்து கொடுத்திருக்கிறார்கள். முக்கியக் கதா பாத்திரங்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ‘விண்மீன் விழியில்’ பாட்டும் எடுத்த விதமும் ரொம்ப நாளைக்குப் பிறகு திரும்பிப்  பார்க்க வைக்கின்றன. எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் 

பத்துக்கு ஏழே முக்கால்.   

சதுரங்க வேட்டை: 

image

எடிட்டிங் என்றால் இந்தப் படத்தைப் பார்த்துத் தான் கத்துக்கணும் . திரைக்கதையும் வசனமும் காமெடியை அல்லாக்க  தூக்கிவிடுது. ஊ ழலைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரணும் என்பதற்காக எடுத்த படம் இல்லை. ஆனால் அது இயல்பா மக்களுக்குப் போய்ச் சேர்வது தான் இதன் பெரிய வெற்றி. நடிப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து க்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தா படம் எங்கேயோ போயிருக்கும். 

பத்துக்கு எட்டு.  

ஜிகிர்தண்டா: 

image

2014இல் டாப் படம் இது. இதுவரைக்கும் நாம் பாக்காத கதை /திரைக்கதை . டைரக்டர் கார்த்தி சுப்பராஜ்  சூப்பரா கலக்கிட்டீங்க! ஒரு ரவுடி படம் ‘மாஸ்’ படமாக மட்டுமில்லே ‘கிளாஸ்’ படமாகவும் இருக்க முடியும்னு நிரூபித்த படம்.அதே மாதிரி படத்தை சீரியஸா எடுத்து போகாம காமெடியில் காவடி கட்டினது ரொம்ப ரொம்ப சூப்பர். சாதாரண ரவுடியை  சினிமா களத்தைப் பார்த்து மியூசிக், லைட்டிங்க், ஒலிப்பதிவு எல்லாம் பிச்சு ஒதரவிட்டு பின்னாடி அவனோட தனி ஸ்டைலைக் கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர். அசால்ட்டா  திரிந்த ரவுடி சேதுவை ஒரு  முத்திரை ஹீரோவா மாத்தின விதம் இன்னும் பல வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் தமிழ்ப் படத்தின் திருப்புமுனையா  நிலைச்சு நிக்கும் .    

பத்துக்கு ஒன்பது.

பார்க்காமல் கேள்வி ஞானத்தை  மட்டும் வைத்து சொல்ல அனுமதித்தால், 


கோச்சடையான்  – பத்துக்கு மூணு. 
ரம்மி                        – பத்துக்கு நாலு 
முண்டாசுப்பட்டி  – பத்துக்கு  ஐந்து 
கப்பல்                      – பத்துக்கு ஐந்து 
பிசாசு:                     – பத்துக்கு ஆறு 
கயல்                      – பத்துக்கு ஆறரை  

 
மற்ற மாஸ் படங்கள் – ஜில்லா, வீரம், அஞ்சான் ,மான் கராத்தே, கத்தி இதுக்கெல்லாம் என்ன மார்க் போட்டாலும் ரசிகர்கள் மாலை போட்டு அபிஷேகம் செய்து பார்க்கத் தான் போறாங்க! 

2015இல் படம் எடுக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

– வித்தியாசமா எடுங்க!

– புத்திசாலி மக்களை ( அவர்கள் தான் மெஜாரிட்டி) கவர ரூம் போட்டு யோசிச்சுக் கதை எழுதுங்க!

– ஃபார்முலா 44 கதை வேணாமே!

– தமிழ்ப்  படத்தின் தரத்தைக் கொஞ்சம் முன்னுக்குக் கொண்டு வாங்க!

– பாத்திரங்களைப்   புதுப் பாணியில் செதுக்குங்க!

– பாலச்சந்தருக்கு அப்புறம் ஹீரோயின் படங்களையே காணோம். நல்ல தமிழ் பேசத்தெரிந்த ஹீரோயின்களை வைத்து ஹீரோயினை மையமாகக் கொண்ட படமும் எடுங்கள்! 

– விறுவிறுப்பா எடிட்டிங் பண்ணுங்க. 

–  ஒண்ணரை மணி நேரத்தில் படத்தை முடிங்க! 

– தேவையில்லாத  பாட்டு பைட் எல்லாம் வேணாங்க!

இதெல்லாம் சொல்லறது ஈஸி கண்ணா!  செஞ்சு பார்டா என்று சொல்றீங்களா! 

எங்க  ஆசையைச் சொல்லிப்புட்டோம். அப்பறம் உங்க விருப்பம்!! 

வாலண்டைன் தின ஸ்பெஷல் – ஒரு காதல் கானா 

பாடலைக் கேட்க  மேலே கிளிக் செய்யவும் 

image

காலேஜ் வாசல் டீ கடையில நின்னு
காத்துக் கெடந்து தினமும் தின்னு பன்னு
காதல் வந்து மனசு எல்லாம் மண்ணு
ஒரு லுக் விட மாட்டியா நீ  கண்ணு

ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப்  பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா

போன மாதம் கிழமை வெள்ளி
பாத்து  இருந்தேன் எந்தன் ஜோலி
தலை நெறைய வாசனை மல்லி
கடைக்கு வந்தா  ஸ்கூட்டியை தள்ளி

அவ  டயறு மட்டும் ஆக வில்லை பஞ்சர்
என் ஹார்ட் டியூபு வீக் ஆகி டார்ச்சர்

ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப்  பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா

உன் அண்ணன்கிட்டே வாங்கி மொத்து
ஆக மாட்டேன்  காதல் பரத்து
ஜெய்ப்பேன் நீ என் காதல் சொத்து
நான் சூரியவம்ஸம் சரத்து

அட வாங்கித் தாறேன் கோல்டு பேங்கிலு செயினு
வில் யு பி மை ஸ்வீட்டு வேலன்டைனு

ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப்  பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா


காலேஜ் வாசலில் காத்து கெடக்கும் ஆளு
என் ஹீரோ நீயி, நான்தான் உன்னோட கேர்ளு
அப்பன் கிட்டே வந்து பொண்ணு கேளு – நீ 
தாலி கட்டு, பார்த்து முகூர்த்த நாளு

ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு லவ்வு பண்ணிட்டேன்
என் ராசா உந்தன் வேலன்டைனு நானும் ஆகிட்டேன்

image

ஐ  – ஒரு அனாடமி  (ராசாத்தி கண்ணு )

‘ஐ’ என்றால் அது ஐந்து என்றால்
அதன் விமர்சனமும் ஐந்து பரிணாமத்தில் …

image

1. இது ஒரு ஷங்கர் படம்


ஷங்கர் படம் என்றாலே சிலவற்றை எதிர்பார்க்கலாம்.அந்த Checklist வைத்து இந்தப் படத்தைப் பார்ப்போம்
அளவில்லாத பிரம்மாண்ட பட்ஜெட்             -செக்
ஹிட் ஹைடெக் பாடல்கள்                              -செக்
சூப்பர் சினிமாட்டோக்ராஃபி                              -செக்
இதுவரை பார்த்திராத இடங்கள்                      -செக்
புதுமையான சண்டைக் காட்சிகள்                  -செக்
பானைப்பாட்டு , பூக்கள் நிறைந்ததே பாட்டு   -செக்
ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்கள்                  -செக்
கொடூரமாகப் பழி வாங்கும் படலம்                -செக்
வலுவான கதை, திரைக்கதை                           – sorry மிஸ்ஸிங்


2. கதை, திரைக்கதை, நடிகர்கள்


பொதுவாக ஒரு பெரிய நாட்டளவுப் பிரச்சினையை ஷங்கர் தீர்த்து வைப்பார். ஆனால் இதில் ஒரு தனிமனிதன் பிரச்சினையைக் கையாண்டிருக்கிறார்.


ஒரு பாடி பில்டரின் புதுமையான கதை.அவரின் மிஸ்ட ர் இந்தியா கனவு, அதற்காக உடம்பை தயார் செய்யும் முயற்சிகள் எல்லாம் காட்டி இருக்கிறார். 
ஆனால் அவர்களின் சக்தி,முதலீடு எல்லாம் அந்த கட்டு மஸ்தான உடம்பு தான் என்பதை இன்னும் கொஞ்சம் மனதில் நிற்கும்படியாகக் காட்டியிருக்கலாம்.


ஹீரோவின் உருவம் மாறுவது ஒரு முக்கியமான கட்டம். அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருந்தால் பார்ப்பவரின் மனதைத் தொட்டிருக்கும். அங்கே டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார்.


மேலும் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையால், முதலிலிலேயே மாறுபட்ட ஹீரோவை பார்த்ததால், அந்த மாற்றம் தரும் பஞ்ச் மிஸ் ஆகிறது.


ஷங்கரின் எல்லா படங்களிலுமே ஒன்றிரண்டு நெகிழ வைக்கும் டைலாக் ,காட்சி வரும். இதிலும் இருக்கு – , சந்தானத்தின் கண்ணிலேயே கண்ணீர் வரும் அளவுக்கு. ஆனால் நம்மால் ஏனோ ரசிக்க முடியவில்லை.


அடுத்தது இது தான் நடக்கும் என்றும், இவர் தான் முக்கிய வில்லன் என்றும் எல்லோராலும் எளிதாக யூகிக்க முடியும் என்று ஷங்கரால் ஏனோ யூகிக்க முடியவில்லை.  எல்லோருக்கும் எளிதாக புரிந்த வில்லன்களின் சதித் திட்டத்தை, 80 களில் வரும் படம் போலே, அவர்களே விரிவாக விளக்குவது சற்று எரிச்சலைத் தருகிறது.

image


ஹீரோயின் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் தான். ஒரு மாடலாக வருவதால், பல விதமான, குறைவான உடைகளில் வந்தாலும், கண்ணுக்கு உறுத்தாமல் அழகாக இருக்கிறார். தமிழர்களின் மனதில் கவர்ச்சிக் கன்னி கோடி லைக்ஸ் வாங்குவார் என்பதில் ஆச்சர்யம் இல்லை. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.


காமெடிக்கு சந்தானம்.  முன் பாதியில் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.  ஆனால் பின்பகுதியில் சீரியஸ் டைமில் காமெடி கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.  பவர் ஸ்டாரும் சில இடங்களில் வந்து, விழுந்து விழுந்துச்  சிரிக்க வைக்காவிட்டாலும் , சில ஸ்மைல்களை அள்ளிச் செல்கிறார்.


வில்லன்களில் சில பேர் அனாவசியம். சண்டைக் காட்சிகள், சினிமாட்டோக்ராஃபி மற்றும் காட்சி இடங்கள் மிக பிரமாதம். ஒவ்வொரு ஷாட்டையும் பார்க்கப் பார்க்க அழகு.  காமிராமேனுக்கு ஒரு தனி ஷொட் டு. அடுத்த வெகேஷன் எல்லோரும் சீனா லொகேஷன் போனால் ஆச்சரியம்  இல்லை !.


புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக புது வகையான சதி மற்றும் பழி வாங்கும் யுக்திகள் என்று டைரக்டர் காட்டி இருக்கிறார். ஆனால் முகம் சுளிக்கும் வகையில்  கொடூரமாக இருக்க வேண்டுமா  என்பது யோசிக்க வேண்டிய விஷயம் .


3. இசை, பாடல்கள்


ரஹ்மானின் இசை இதில் கொ டி கட்டிப் பறக்கிறது.  தலைவர் படத்தில் சற்று கோட்டை விட்ட ரஹ்மான் இதில் விட்ட இடத்தைப்  பிடித்திருக்கிறார்.


ஏற்கனவே பாடல்களெல்லாம் மெகா ஹிட். இசை மற்றும் பாடியவர் குரல் கேட்டு எல்லோரும் மெரசலாயிட்டோம். பாடல்களை படம் ஆக்கிய விதமும் அபாரம். 


4. ஐ என்றால்?


தமிழிலே ‘ஐ’ என்கிற சொல்லுக்கு அர்த்தங்கள் பல. அதை ஒரு பாட்டுலே மதன் கார்கி ரொம்ப ரொம்ப ஐ(ஹை) யாக சொல்லி இருக்கிறார்

“ ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐ களின் ஐ அவள் தானா ?”

“ ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐ களின் ஐ அவன் நீயா?”

கதையைப் பொறுத்தவரை ‘ஐ’ இரண்டு இடத்துலே முக்கியமா வருது.

 ஹீரோ ஹீரோயின் லவ் பண்ணுவதற்குக் காரணம் – ஐ (ஒரு பெர்ஃப்யூம்) 

அதே மாதிரி வில்லன் ஹீரோவை அட்டாக் பண்ணுவதும் – ஐ (ஒரு வைரஸ்)


5. அதற்கும் மேலே ‘I’ என்றால் ‘நான்’ என்கிறார் விக்ரம்

image

சினிமாத் துறையில் விக்ரமின் அர்ப்பணிப்புப் பற்றி எல்லோரும் அறிந்தது தான். ஒரு படத்தில் ஒரு கெட்டப்பில் வந்தால், அடுத்த படத்தில் வேற கெ ட்டப்புக்குக் கடுமையா உழைக்கும் ஒரு நேர்மையான நடிகர் . ஆனால் இந்த படத்தில் அதற்கும் மேலே  ஒரே படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் வருகிறார். 


விக்ரம் in ஐ என்பதை விட இது விக்ரமின் ஐ 


முதலில் ஒரு பாடி பில்டர் – இதற்காக நல்ல கட்டு மஸ்தான உடம்பை தயார் செய்திருக்கிறார். மிஸ்டர் இந்தியா போட்டிக்காக எண்ணை தடவிய உடம்போடு  போஸ் குடுக்கும் விக்ரமின் உழைப்பை நன்றாகப் பாராட்ட வேண்டும். 


அடுத்து ஒரு ஹேண்ட்ஸம் மாடல் – மோதலில் லுக் மாறுவது, பிறகு பாடி லாங்குவேஜ் என்று நம்பும்படியாக இருக்கிறது. இங்கு டைரக்டருக்கும் பாராட்டுகள் சொல்ல வேண்டும். 

ஹீரோயின் அவரை காதலிக்கிறேன் என்று சொல்லும் போது, கூல் மாடல் லுக்குடன், அப்பாவியாக சென்னை தமிழில் “லிங்கேசா நம்பாதே நம்பாதே ” என்று ஓடும் காட்சி அருமை. பூக்களே,ஆய்லா பாட்டில் அவரைப் பார்த்து, அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த பெண்கள் கூட, தங்கள் பாய்ஃப்ரெண்ட் இவர் போல் இருக்க வேண்டும் என்று சொல்லும்படி வைத்து விட்டார்.


கடைசியாக கூனன் – இதற்காக மேக்கப் மட்டும் போதுமென்று இல்லாமல் எடையைக் குறைத்து, அந்த பாத்திரத்துக்கு ஏற்றபடி தன்னையே உருமாற்றி இருக்கிறார்.


அதனால் விக்ரமின் நடிப்பு, உழைப்பு, body builder physique, ஹேண்ட்ஸம்  லுக், கூனிக்  குறுகிய கோலம் எல்லாம் காண கண்டிப்பாக ஐ பார்க்கலாம்.


ஆனால் கதை, திரைக்கதை என்று பார்த்தால்     ??

image


ஆகமொத்தம் இந்த ‘i’ ஃபிசிக்ஸ்ஸில் வரும் கரண்ட்டாக இல்லாமல் கணிதத்தில் வரும் கற்பனையாகத் தான் இருக்கிறது.

படத்தைப் போலவே இந்த விமர்சனமும் நீ…..ண்டு  விட்டது!

ஆத்திசூடி – Aathichoodi

image

ஔவையாரின் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! 

மேலே உள்ள லிங்க் ஆத்திச்சூடிக்காக அமைக்கப்பட்டுள்ளது. 

ஆத்திச்சூடியின் வரிகளும் அதன் ஆங்கிலப் பொருளும்: (facebook லிருந்து ) நன்றி: இன்டெர்நெட் 

image

 அ.. ஆ..இ .. 

1. அறம் செய விரும்பு /  Learn to love virtue.
2. ஆறுவது சினம் /  Control anger.
3. இயல்வது கரவேல் /  Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் /  Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /  Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /  Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /  Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /  Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் /  Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /  Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /  Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /  Speak no envy.
13. அஃகம் சுருக்கேல் /  Don’t shortchange.

அடுத்தது ……….. க..ங ..ச.. (அடுத்த இதழில்)  

ஆத்திசூடி – Aathichoodi

மாதொருபாகன் by பெருமாள் முருகன்

image

பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஒரு மாபெரும் இலக்கிய சர்ச்சையைத் துவக்கிவிட்டது. 

இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் சிலர் குழந்தை பிறக்க கணவனால்  முடியாது என்ற போது சமூகம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைப்படி கண்ணுக்குத் தெரியாத ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று  எழுதியிருக்கிறார்.. 

 {இதே முறைப்படி தான்  மகாபாரதத்திலும் வம்ச விருத்திக்காக வியாசர் மூலம்  திருதராஷ்ட்ரனும் பாண்டுவும் விதுரனும் பிறந்ததாகச்  சொல்லப்படுகிறது. }

இது சரியா தவறா என்ற கேள்வி இல்லை இந்த சர்ச்சைக்குப் காரணம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எழுதியதற்காக பெருமாள் முருகனுக்கு எதிராகப்  போராட்டம் நடைபெற்றது. அலுவலகர்கள் முன்னிலையில்  அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். அவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெறுவதாக அவரைக் கூற வைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்,  பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார் – இனி கதையே  எழுதமாட்டார் என்றும்  அவரே அறிவித்தார்.

image
image

அதற்குப் பிறகு மற்ற எழுத்தாளர்களும் சில சமூக ஆர்வலர்களும் எழுத்தாளரின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் பெருமாள் முருகனை அந்த அமைப்புகள் நடத்திய விதத்தைக் கண்டித்தனர். நீதி கேட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். 

இப்போது  நிறைய எழுத்தாளர்கள் அவருக்காகவும் எழுத்து சுதந்திரத்துக்காகவும்  வரிந்துகட்டிக் கொண்டுப்  போராட வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. 

எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்? அளவில்லா சுதந்திரம் சரியானதா? திரைப் படங்களுக்கு சென்சார் இருக்கின்றன. ஆனால் பத்திரிகைகள், கதைகளுக்கு அந்த மாதிரி இல்லை. ஆராய்ச்சி அல்லது கற்பனை என்ற பெயரில் யார் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?    

மாற்றாக யார் எழுத்தை வேண்டுமானாலும் சமூக ஆர்வலர்களும் பலம் படைத்த அரசியல், ஜாதி, ஊடக குழுக்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் தடை செய்யக் கூறிப் போராட்டம் நடத்தலாமா?

இதப் பற்றி குவிகத்தின் கருத்து என்ன  என்று நண்பர்கள் கேட்டனர். 

நாம் சொல்வது இது தான். 

எழுத்தாளர்களுக்கு வானளாவிய சுதந்திரம் தரப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ‘your liberty stops where my nose starts ’ என்ற தத்துவப்படி பிறர் நலனுக்கு உணர்வுகளுக்குப் பாதகம் ஏற்படுமே என்றால் எழுத்தாளரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

இதற்காக எழுத்தாளர் நீதி மன்றங்கள் நாட்டளவில் உலக அளவில் அமைக்கப் பட்டாலும் தவறில்லை! 

ரயில் விவரம் தெரிய  139க்கு எஸ்‌எம்‌எஸ் செய்யவும்

image

ரயிலில் பயணம் செய்வோர்களுக்கு மிகவும் உபயோகமானது 139க்கு எஸ்‌எம்‌எஸ் செய்து விவரங்கள் தெரிந்து கொள்வது! 

ஸ்மார்ட் போன்  தேவையில்லை. சாதா போனே போதும்!

 எஸ்‌எம்‌எஸ்  அனுப்பினால் பதில் எஸ்‌எம்‌எஸ் வரும். 

என்னென்ன ?

1) சீட் நம்பர் தெரிந்து கொள்ள     

    SMS “PNR  < 10 Digit PNR Number >  to  139 

2) ரயில் வரும்/புறப்படும் நேரம் அறிய 

 SMS ” AD <Train No.> <Station  code / STD Code of  Station > to 139   

3) செல்லும் பாதையில் முக்கிய நிலையங்களில் ரயில் போகும்  நேரம். 

SCHEDULE <Train Number>

4) ரயில் நாம் சேரவேண்டிய நிலையத்தை அடைவதற்கு முன் (சுமார் அரை மணி ) நமக்கு ஒரு அலாரம் கொடுக்க ! ( இரவில் பயணம் செய்யும் போது குறிப்பாக ரயில் தாமதமாகப் போகும் போது இது மிகவும் உபயோகமாயிருக்கும்) 

SMS  ALERT <PNR Number>   to 139 

5) ரயில் எங்கு பயணிக்கிறது/எவ்வளவு தாமதம் என்பதை அறிந்து கொள்ள 

SMS  SPOT <Train Number >   


6) இதைத் தவிர சீட் இருக்கிறதா என்பதையும் கட்டணம் எவ்வளவு என்பதையும் கூட அறிந்து கொள்ளலாம் !  SEAT / FARE என்ற சொற்கள் மூலமாக!

வாழ்க டெக்னாலஜி ! வளர்க ரயில் துறையின் சேவை! 

ஷாலு மை வைஃப்

image

இன்னிக்கு ஜனவரி ஒண்ணு! ஷாலு காலை ஆறு மணிக்கு எழுந்து காபி குடித்துக்கொண்டே இன்னிலிருந்து ஏதாவது புதுசா ஆரம்பிக்கணும்! என்ன பண்ணலாம் என்று யோசித்தாள். மேஜை மேலே இருக்கும் ஸ்வாமினியின் போட்டோவைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். படத்தை எடுக்கும் போது அதன் அருகிலிருந்த டி‌வி ரிமோட் கீழே விழுந்து டி‌வி தானாக ஆன் ஆகியது.

அதில் “நலந்தானா” என்ற பாடல் ஆடலுடன் திரையில் வந்தது.

உடனே அவளுக்கு ஒரு பொறி தட்டியது. தலைக்கு மேலே ஒரு பல்ப் எரிந்தது.

image

ஆஹா இது தான் ஸ்வாமினியின் கட்டளை என்று ‘கண்டேன் சீதையை’ பாணியில் புல்லரித்தாள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் பண்ணியது எப்படி ஸ்வாமினிக்கு தெரிந்தது? நான் இந்த மாதம் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் ஸ்வாமினியின் ஆணை. தன் அறிவைத் தானே மெச்சிக் கொண்டாள்.அந்தப் பாடல் முடிவில் வந்த உருவமும் ( மோகனாம்பாளின் தாயார் வடிவாம்பாள் தான்) ஸ்வாமினி சாடையில் இருந்தது அவளுக்கு தெய்வாதீனமாக இருந்தது.

உடனே செயலில் இறங்கினாள் ஷாலு. ஸ்டூலை எடுத்துப் பரணில் இருக்கும் அவளது கருப்பு டிரங்க் பெட்டியை தேடலானாள். அதில் தான் அவளுடைய பரத நாட்டிய டிரஸ், கொண்டை, காகித கனகாம்பரப்பூ, ராக்கொடி, நகை செட், அத்தர் எல்லாம் இருந்தன. ஆறாவது படிக்கும் போது நலந்தானா பாட்டுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவில் அபிநயம் பிடித்த போது டான்ஸ் டீச்சர் கோமளாவுடன் போய் மைலாப்பூரில் பத்து கடைகளில் ஏறி இறங்கி வாங்கியது. இருபது வருஷமானாலும் பத்து இடத்துக்கு சேகர் டிரான்ஸ்பரில் சென்ற போது கூட இந்த டிரங்க் பெட்டியைத் தூக்கி எறிய மனசு வரவில்லை. ஒவ்வொரு வருஷமும் விஜயதசமி அன்றைக்கு அதைத் திறந்து பார்த்து கற்பனையில் கொஞ்ச நேரம் ஆடிவிட்டுத் தான் டிரங்க் பெட்டியை மூடுவாள்.

மெள்ள டிரங்க் பெட்டியை கீழே வைத்துத் திறந்தாள். அதில் முக்கியமான ஒன்றைக் காணோம்! அவளது சலங்கை! எங்கே போயிற்று என்று புரியாமல் ஒரு நிமிடம் குழம்பினாள். சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒருமுறை ஷிவானிக்குச் சலங்கையைக் காட்டிவிட்டு சேகரிடம் ஒரு மஞ்சப் பையில் போட்டு டிரங்க் பெட்டியில் வைக்கச் சொன்னது. சேகர் வேணுமென்றோ ( அல்லது வேண்டாமென்றோ) அதை பெட்டிக்குப் பின்னால் எறிந்து விட்டான். ‘சரி பிறகு எடுத்துக் கொள்ளலாம்’ என்று அவளும் அப்போது விட்டுவிட்டாள். இப்போ அது ரொம்பப் பின்னாடி போய் விட்டது. கிடைக்க மாட்டேங்குது.

அப்பொழுது ஷ்யாம் ஒன் பாத் ரூம் போக அவசர அவசரமாக ஓடி வந்தான்.

“ஷ்யாம் கண்ணா ! அம்மாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ணிரியா?”

“போம்மா ரொம்ப அர்ஜண்ட்” என்று சொல்லி பாத் ரூமுக்குள் போய் டமால்ல்ன்னு கதவைச் சாத்தினான்.

“சனியனே மெல்ல சாத்துடா!" 

எவன் தயவும் வேண்டாம் நாமே எடுப்போம் என்று அந்த மஞ்சப்பையை நகர்த்தினாள். அவள் போறாத நேரம். அது இன்னும் கொஞ்சம். ஒரு அடி  உள்ளே தள்ளிப் போய் விட்டது.

திடீரென்று அவள் காலில் ஏதோ பிறாண்டுவதை உணர்ந்து ‘ஐயோ’ என்று அலறினாள். கீழே பார்த்தால் ஷ்யாம் தான் அவள் காலடியில்.. அந்த அலறலில் கீழே விழப் போன அவள் சுவத்தைப் பிடித்துக் கொண்டதால் தப்பித்தாள்.

"ஷ்யாம் கண்ணா அம்மாவுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா! நான் உன்னைத் தூக்கிப் பிடிச்சுக்கறேன். நீ அந்தப் பரணுக்குள்ளே இருக்கிற மஞ்சப் பையை எடுத்துத் தாயேண்டா!”

“சரி, நான் எடுத்துத் தர்றேன். இன்னிக்கு சாயங்காலம் பீச்சுக்குக் கூட்டிட்டுப் போகணும் சரியா? ”

“சரிடா! வா!”

“மஞ்சப்பை தெரியுதாடா?”

“அம்மா என் கிரிக்கெட் பேட்-பால் இருக்கும்மா ! தொலைஞ்சு போச்சுன்னு பொய் தானே சொன்னே!”

பக்கத்து விட்டு ஜன்னலை உடைச்ச கோபத்தில தூக்கி எறிஞ்சது! இப்போ அவன் கண்ணிலே படுது

“முதல்லே மஞ்சப்பையை எடு!”

“அதெல்லாம் முடியாது. முதல்லே பேட்-பால்”.

“சரி எடுத்துத் தொலை!” பேட் பாலைத் தூக்கி கீழே வீசினான்.

“அம்மா !மஞ்சப் பையைக் காணோம்மா!”

“நல்லாப் பாருடா! நான் இன்னும் கொஞ்சம் தூக்கி விடறேன்!”

“அம்மா என் டமாரம்!”

ஐயோ! அது வேற அவன் கண்ணில பட்டுடுச்சா! இனிமே நம்ம காதெல்லாம் டமாரம் தான்!

“ஷ்யாம்! ஒழுங்கா மஞ்சப் பையை எடுத்துக் குடு! இல்லேன்னா உன்னைப் பரணுக்குள்ளேயே இறக்கி விட்டிடுவேன்!”

“சரிம்மா! டமாரம் மட்டும் எடுத்துக்கிட்டு மஞ்சப்பையை எடுத்துத் தர்றேன்!”

“அம்மா! மஞ்சப்பை கிடைச்சுடுத்து! அதுக்குள்ளே என்னம்மா ஜால்ரா மாதிரி?”

“அது சலங்கைடா”!

“சலங்கையை என்னம்மா பண்ணுவாங்க? ”

“அதைக் காலிலே போட்டு டான்ஸ் ஆடணும்டா!”

“நான் போடவா?”

“முதல்லே இறங்கு! அப்பறம் போடலாம்!”

“அட சனியனே! ஏண்டா சலங்கையை என் காலிலே போட்டே! வலி பிராணன் போறது?”

“நீ தானேம்மா சலங்கையைக் காலிலே போடணும்னு சொன்னே! ”

மெல்ல அவனை இறக்கிவிட்டுக் காலைத் தடவிக் கொண்டே சலங்கையை எடுத்துத் தடவிப் பார்த்தாள்.

அவளுக்கே அவள் கொஞ்சம் கொஞ்சமாக சந்த்ரமுகி ஸ்டைலில் மாறுவது போல் உணர்ந்தாள்.

“அம்மா பசிக்குது” என்று ஷிவானி வந்தபோது தான் ஷாலுவுக்குத் தெரிந்தது. இன்னிக்கு காலை டிபனைப் பத்தி யோசிக்கவே இல்லை என்பது.

image

அதற்குப் பிறகு ஷாலு  சுத்தமாக மாறிவிட்டாள். 

“இத பாருங்கோ! இன்னிக்கி நாம கோமளா டீச்சரைப் பார்க்கணும்! திரும்ப நான் பரத நாட்டியம் கத்துக்கிட்டு இந்த மாசம் 26ம் தேதி குடியரசு தின விழாவிலே நம்ம காலனியில் பரத நாட்டியம் ஆடப் போறேன்!”

“இங்கே பாரு ஷாலு! கோமளா டீச்சர் அன்னிக்கு உனக்கு சரியா கத்துக் குடுக்கலைங்கிறதுக்காக இன்னிக்கு அவங்களைப் பழி வாங்கக் கூடாது! அவங்களுக்கு இப்போ 75 வயசு இருக்கும்.சும்மா நின்னாலே கால் ரெண்டும் ஆடும்.”

கோமளா டீச்சரைப் பார்க்கப் போனோம் அவர்கள் படுத்த படுக்கையில் இருந்தார்கள். ஷாலு மனம் தளரவில்லை. அவர்கள் நடத்துற டான்ஸ் ஸ்கூல் போனோம். அங்கே ஷியாமளா என்ற அவரது மாணவி சொல்லிக் கொடுப்பதாகக் கேள்விப் பட்டோம்.

போய்ப் பார்த்தால் ஷியாமளா ஷாலுவின் கிளாஸ்மெட். சின்ன வயதில் ஷாலு மாதிரி ஆட முடியவில்லை என்று கோபித்துக் கொண்டு டான்ஸை நிறுத்திவிட்டு கராத்தே சேர்ந்தவள். அவளிடம் கற்றுக் கொள்ள ஷாலுவுக்கு ஈகோ பிரச்சினை.

“நான் என் குரு கோமளாவின் போட்டோவை வைத்துக்கொண்டு ஏகலைவி மாதிரி கத்துக்கப்போறேன் ” என அறிவித்தாள் ஷாலு.

அதற்குப் பின் ஷாலுவின் போக்கே மாறிவிட்டது. தினமும் ஆறு மணிநேரம் அசுர சாதகம் செய்தாள். மற்றவர்களுடைய மெய் வருத்தம் பார்க்காமல் மற்றவர்களைக் கண் துஞ்சவிடாமல் கருமமே கண்ணாக இருந்தாள். மூன்று ஜீவன்கள் பசி பட்டினியில் துடித்தாலும் கவலைப்படாமல் நாட்டியமே உயிர் மூச்சு என்று இருந்தாள்.

image

ஏற்கனவே நான் சமையலில் மாஸ்டராக இருந்ததால் பட்டினிச் சாவிலிருந்து தப்பினோம். இது தான் சாக்குன்னு ஷ்யாம் இருபத்து நாலு மணி நேரமும் விளையாட்டே கதின்னு இருந்தான். பக்கத்து பிளாட் காரர்கள் உணர்ச்சிகள் – முதலில் பாராட்டு.. சந்தோஷம் .. அனுசரணை..பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் ஆத்திரம் கோபம் கடைசியில் கொலைவெறி அளவிற்குப் போய்விட்டார்கள். பிளாட் செக்ரட்டரி மொழி பட செக்ரட்டரி மாதிரி எங்களைக் காலி பண்ணிப் போகச் சொன்னார். அப்புறம் தான் அவருக்குத் தெரிந்தது இது  எங்க சொந்த வீடு என்று. லீகல் நோட்டீஸ் கொடுக்கப் போவதாகக் கத்தி விட்டுச் சென்றார்.

.எல்லாரும் என்கிட்டே தான் சொல்வார்களே தவிர ஷாலுகிட்டே பேச பயம்.“என்ன கொடுமை சேகர் சார் "என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டம் அழுதுவிட்டுப்  போவார்கள்.

ஷிவானி தினமும் அம்மா ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். ஷாலு தூங்கும் போது இவள் சலங்கையைக் கட்டிக்கொண்டு தையா தக்கா என்று குதிப்பாள்.

image

ஜனவரி 26 குடியரசு வந்தது. அன்று மாலை கலை நிகழ்ச்சிகள். ஷாலுவின் நண்பிகள்  மற்றும் அவள் உறவினர்களெல்லாம் வந்து அவள் பங்குபெறும் பரத நாட்டியத்தைக் காண ஓடோடி வந்தார்கள்.

அதே நலந்தானாவுக்கு ஷாலு ஆடினாள். .மேடையில் ஷாலுவைப் பார்க்க அவள் ஆட்டதைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பிரமாதமாக ஆடினாள். ‘கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ’ என்று அபிநயம் பிடிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் சறுக்கி விழுந்தாள். எழுந்திருக்க முடியவில்லை. பாட்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஷாலுவால் ஆட முடியவில்லை.நான் மேடை ஏறி ஷாலுவைக் கைத்தாங்கலாகப் பிடித்தேன். சீரியசாக ஒன்றும் இல்லை!

image

பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம் ஷிவானியை மேடையில் ஏத்திவிட்டான். எந்த வித மேக்கப்பும்  இல்லாமல் ஷிவானி அம்மாவின் ஆட்டத்தைத் தொடர்ந்தாள். நலந்தானா என்று அம்மாவைக் கண்ணால் கேட்டு ஷிவானி ஆடியதும் பயங்கர கைதட்டல். ஷிவானிக் குட்டி பார்த்த ஞானத்திலேயே பிரமாதமாக ஆடினாள். எல்லோரும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கத்த மீண்டும் முதலிலிருந்து பாட்டு துவங்கியது. ‘கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ’என்ற இடம் வரும் போது ஷாலுவிற்கு எல்லாம் சரியாகிவிட்டது .அவளும்  .ஷிவானியுடன் தொடர்ந்து ஆடினாள். 

image

அன்னிக்கு ஷாலு தான் சூப்பர் ஸ்டார். அவளைப் பேசச் சொல்லி மேடைக்கு அழைத்தார்கள். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவி மாதிரி நல்லா பேசினாள். இருபத்தைந்து நாளில் இருபது வருடத்துக்கு முன் கத்துக் கொண்டநாட்டியத்தைத் தனக்கு திரும்பக் கொண்டு வந்ததற்காக தனது ஸ்வாமினிக்கு நன்றி சொன்னாள். இனிமேல் தான் ஆடப்போவதில்லை என்றும் இனி ஷிவானியை பரதம் கற்றுக் கொள்ள வைப்பது தான் தனது முதல் வேலை என்றும் சொன்னாள். அரங்கமே கை தட்டியது. 

கடைசியாக அவள் சொன்னது  என்னை ஆச்சரியத்தில் மிதக்க வைத்தது.

” நான் இந்த மாதிரி நாட்டியத்திற்கு மீண்டும் வர முக்கிய காரணம் என் கணவர் சேகர்  தான்!  அவர் தான் ‘என் கணவன்  என் தோழன்’ சீரியலில் வரும் சூர்யா மாதிரி என்னை உற்சாகப் படுத்தினார் “ என்று சொன்னது தான். 

அன்றைக்கு இரவு அவளிடம் கேட்டேன். ‘ஏன் இப்படி மேடையில் ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னாய்? 

"அப்பொழுது தான் நீங்கள் எனது அடுத்த மாத முயற்சியான  கார் ஓட்டும் படலத்துக்கு உங்கள்   காரைக் கொடுப்பீர்கள் ”  என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். 

எனக்குத் தலை சுற்றியது!

டி‌வி சீரியலுக்கு ஓ (ட்டு ) போடுங்க!! –                (ராசாத்தி கண்ணு )

டி‌வி சீரியல் பார்ப்பது தவறா? ஒரு வித்தியாசமான கோணம்

image


பொதுவாக நம் வீடுகளில் ஒரு பேச்சு உண்டு…

  • சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, சீரியல் ப்ரேக்லே தான் காபி கிடைக்கும் எங்க வீட்டுலே
  • அமெரிக்காவில் இருந்து பேசினாலும், எங்க அம்மா சீரியலுக்கு  நடுவுல பேச மாட்டாங்க
  • எப்போ பார்த்தாலும் அபி, கோபி, வாணி,ராணி பத்தி தான் கவலைப் பட்டுட்டு இருப்பாங்க, ஏதோ அவுங்களும் நம்ம குடும்பம் போல
  •  ஞாயிறு ஆனால் ஒரே சோகமா இருப்பாங்க. அன்னிக்கி சீரியல் இருக்காதே
  •  இந்த சீரியல் எப்பவுமே ஒரே அழுகை தான், அவங்க பேச்சும், ஒரே மோசமா தான் இருக்கும்.
  • எதிலே பார்த்தாலும் ஒரே சதித்திட்டம், மாமியார்-மருமகள் கொடுமை, குழந்தை மாற்று, எல்லாம் மோசமான சிந்தனைகள், இதை பார்த்து தான் நம்ம வீட்டு பெண்களும் அப்படி யோசிக்கிறாங்க
  •  வீட்டில் தாத்தா பாட்டி சீரியல் பார்ப்பதால், குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகுது 
  • இந்த டிவி  முன்னாடி வேஸ்ட் பண்ற டைம்லே ஏதாவது உருப்படியா செய்யலாம் 


எந்த விஷயமும் அளவுக்கு மீறினால் அது நல்லது இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக சீரியல் பார்ப்பதே தவறு என்று சொல்வது சரியில்லை.

முக்கியமான குற்றச்சாட்டுகளை  எடுத்து  சற்று ஆராய்வோம்               (நீயா நானா கோபிநாத் பாணியில்)


டி‌வி யில் வரும் எல்லா பெண்களும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நிறைய பெண்களைக்  கொடூரவாதிகளாய்க்  காட்டுகிறார்கள்.

உங்கள் மனதில் இன்னும், மெட்டி ஒலி சரோவும், சாந்தி வில்லியம்ஸ் மாமியாரும் தான் இருக்கிறார்கள். இல்லையென்றால்  நளினி – அபி காம்பினேஷன்.
சற்று இந்தக் காலத்துக்கு வாங்க.! அதே சாந்தி வில்லியம்ஸை வாணி ராணி அறிவாலும் அன்பாலும்  சமாளிப்பதைப்  பாருங்கள்.
அழுகை இருந்தாலும், சீரியலில் தான் பெண்களைத்  தொழில் அதிபர்கள், சமுதாயத்தில் முன்னேறுபவர்களாகக்  காட்டுகிறார்கள்.

  • அதே அபி கடைசியில் வெற்றி பெற்றது ஞாபகம் இல்லையா? 
  • சித்தி ராதிகா துணி ஃபேக்டரி உரிமையாளர்
  • என் கணவன், என் தோழன் – சந்தியா ஐ‌பி‌எஸ்
  • வாணி – வக்கீல்

பெண்கள் அழுது கொண்டு இருக்கும் காலம் போய் , சாதிக்கும் காலம் சீரியலில் வந்தாச்சு, உங்களால் ஏன் ஒப்புக்கொள்ள முடியவில்லை?

சில கதாபாத்திரங்கள் கொடூரமாகத்  தான் இருக்கிறார்கள். ராவணன் கொடூரமாக இல்லாவிட்டால் ராமன் புகழ் எப்படி மேலோங்கும்?

 குடும்பத் தலைவிகள் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள். இதனால் கணவன்மார்கள், அவர்களைக்  குற்றம் சொல்கிறார்கள் –   ‘நாங்கள் களைத்து வரும் போது எங்களைக்  கண்டு கொள்வதே இல்லை. டி‌வி  ஸ்கிரீன் பார்த்தபடியே ஒரு தலை அசைப்பு தான் கிடைக்கிறது’

கணவனுக்காக வழி மேல் விழி வைத்துக்  காத்திருந்த காலம் இப்போ இல்லைதான். ஆனால் அதற்கு டி‌வி மட்டும்  காரணம் இல்லை. 

முன்பெல்லாம் கணவன் அவசரமாக வேலையை முடித்து விட்டு மனைவியைப்  பார்க்க ஓடி வருவான். ஆனால் இன்றோ, அவன் வருவதே வாணி-ராணி  வரும்போது தான். அதுவும் ஹெட்செட் போட்ட ஃபோன் பேசிக்கொண்டே, வந்த பத்தாவது நிமிஷம் லேப்டாப் வேலை.

அவள் சாப்பாடு கொடுக்க ஐந்து நிமிஷம் லேட் ஆனா, இந்த குற்றச்சாற்று.. அவள் சாப்பாடு சூடு செய்யும் வேளையிலே, சேனல் ஸ்போர்ட்ஸுக்கு மாறியிருக்கும். இதே டெண்டுல்கர் ஆடும்போது சேனல் மாத்தினா சும்மா இருப்பார்களா? இது கணவன்மார்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும்.

சீரியல் பார்த்து விட்டு, அந்த மாதிரி டிரஸ் பண்ணவேண்டும்  என்று அனாவசியமாக முயற்சி செய்கிறார்கள். அது மட்டும் இல்லை, இந்த ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்து அந்த ஹீரோவை எப்போதும் ஸ்மார்ட்,ஹேண்ட்ஸம்னு வர்ணித்து எங்களை வெறுப்பேத்துகிறார்கள்.


.ஏங்க கஜினி சூர்யா , ஐ விக்ரம் பாத்து நீங்க ஜிம் மெம்பர்ஷிப் எடுக்கலே?
சிவாஜி,எந்திரன் படத்தைபார்த்து தலைவரையும் தாண்டி ஸ்ரேயா, ஐஸ் மேலே ஜொள்ளு விடலே ?
ஹிந்தி டி‌வி சீரியல் க்ரியேட்டர்  ஏக்தா கபூர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாங்க..

“Movies – you idolize men and fantasize women…Hindi Serials – you idolize women and fantasize men”


இந்த சீரியல்ல எப்போதுமே பெண்களுக்கு தான் முக்கியத்துவம் குடுக்கறாங்க!  எப்போதும்  பெண்கள் கூடிக்  கூடி வம்பு பேசிக்கொண்டே இருக்காங்க! ஹஸ்பண்ட்ஸ் எல்லாரையும் டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க.


ஏங்க சினிமாவில் ஹீரோயின் வெறும் பாட்டுக்கும், கிளாமருக்கும் மட்டுமே வருகிறார்கள். பசங்க தான் எப்போதும் பாரில் உட்கார்ந்து “ஃப்ரெண்ட் ஃபீல் ஆய்டாலே, ஹாஃப் அடிச்சு  கூல் ஆய்டாலே” னு சொல்லிக்  குடிச்சுட்டு இருப்பாங்க.

பெண்களை மையப்  படுத்தி படம் எடுத்தது பாலசந்தர் காலத்தோட போயேபோச்சு. சீரியலிலாவது அவுங்களுக்கு முக்கியத்துவம் குடுத்தா உங்களுக்கு ஏன்  நோவுதாம்.


வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எப்போதுமே சீரியல் கதாபாத்திரங்களைப்  பத்தியே தான் கவலைப்பட்டுட்டு இருக்காங்க.

உங்கள் விஷயத்திலோ, பிள்ளைகளைப்  பத்தியோ அவுங்க கருத்துகள் சொன்னா ,
“ நாங்கல்லாம் இன்னும் சின்ன பசங்களா என்ன? ”
“எங்களுக்கும் குழந்தை வளர்க்கத் தெரியும். ”
“இது எல்லாம் ஒங்க காலம் போலே இல்லை.”
“நீங்க ஏன் டென்ஷன் எடுத்துகிறீங்க? எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.”
“சும்மா என்னைப்  பத்திக் கவலைப்படாதே பாட்டி/தாத்தா . எனக்கு தெரியும்”
“பெருசுக்கு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கணும்”

எதற்க்கு வம்பு என்று அவுங்களும் ஜோதா,அக்பர் ,துளசி,சரவணன் , மீனாட்சி  பத்திக்  கவலைப்  பட ஆரம்பிச்சுட்டாங்க.


வீட்டில் உள்ளவர்கள் டி‌வி சீரியல் பார்ப்பதால் குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகிறது.


ஏங்க, சீரியலை விடுங்க டி‌வி யில் என்ன பார்த்தால் பசங்க படிப்பு வளரும். யு‌ஜி‌சி ப்ரோக்ராம் பார்த்து அறிவு வளரும் என்று சொல்கிறீங்களா? வீட்டில் டி‌வி இருப்பதே படிப்புக்கு எதிரி தான்.

இந்த டிவி  முன்னாடி வேஸ்ட் பன்ற டைம்லே ஏதாவது உருப்படியா செய்யலாமே

டி‌வி சீரியல் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. எப்படி பாட்டு கேட்பது, இன்டெர்நெட் பிரவுசிங், கிரிக்கெட் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, போட்டோக்ராபி, ஃபிரண்ட்ஸ் கூட பீச்,சினிமா என்று சுத்துவது, காலேஜ் கேண்டீன்லே அரட்டை அடிப்பது, ஆஃபிஸ் வாட்டர் கூலர் காஸிப்  பண்ணுவது, வாட்ஸாப் மெசேஜ் அனுப்புவது, பேஸ்புக்லே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை லைக் போடறது, டெய்லி  ஸ்டேடஸ்லே மெசேஜ் சொல்வது போல இதுவும் ஒண்ணு, வேலைக்கு ஆல்டெர்னெட் 

அதுனாலே ரொம்ப ஆராயாம சீரியலைப் பாருங்க சார்! லைஃப் நல்லா  இருக்கும். (லைஃப் சந்தோஷமா இருக்கோ இல்லையோ வொய்ஃப் சந்தோஷமா இருப்பாங்க )



கீழே தெரிகிற older entries லிங்கைக் கிளிக் செய்யவும். குவிகத்தின் 16 முதல் 25 வரை  உள்ள பக்கங்களை ப்  படிக்க முடியும்!

வந்திடுமே!!!

image

வானத்தில் இருக்கிற சந்திரனும் சூரியனும்- என்
கானத்தைக் கேட்டு இப்போ மந்திரத்தில் வந்திடுமே!

மேகத்தில்  இருக்கிற மழைத்துளியும் பனித்துளியும்  என்
தாகத்தைத் தீர்க்க இங்கே தனித்தனியா வந்திடுமே!

பூமிக்கு மேலே உள்ள காற்று வெளி மண்டலமும் இந்த
சாமிக்கு மூச்சுவிட விழுந்தடிச்சு வந்திடுமே!

கடலிலே அலையடிக்கும் கருநீலத்  தண்ணியெல்லாம்
கடையிலே விக்கிற  குடிநீராய் மாறிடுமே

தோட்டத்தில் குலுங்கிவரும் பூச்செடியும் மொட்டுகளும்  நம்
வீட்டுக்கு வந்திருந்து பூஜையிலே கலந்திடுமே 

வயலிலே இருக்கின்ற நெல்மணியும் கண்மணியும் -என்
வயத்திலே நிறைகின்ற சோறாக மாறிடுமே!

நட்சத்திர கூட்டமெல்லாம் கலந்துபேசி ஓடிவந்து -என்
வீட்டு மேலே கூரையிலே ஒளிஞ்சு நின்னு பார்த்திடுமே!

வீதியிலே திரிகிற ஆடு மாடு எருமை  எல்லாம் நல்ல 
தேதி வந்து என்வீட்டில் குட்டி போட வந்திடுமே!

மரங்களில் ஒளிஞ்சுகிட்டு பாடுகிற குயில்களெல்லாம் 
சமயலறை மேடையிலே  கச்சேரி பாடிடுமே! 

மழைமேகம் பாத்து பாத்து ஆடுகிற மயில்களெல்லாம் 
ஏழை வீ ட்டு முத்தத்திலே தில்லானா ஆடிடுமே!

சாலையிலே ஓடுகின்ற பட்டுசிட்டுக்குட்டியெல்லாம்  
மாலையிலே வீடுவந்து கப்புச் சிப்புன்னு அடங்கிடுமே!

சோலையிலே கொப்பளித்து  தித்திக்கும் சுனை நீரும்  
 காலையிலே வீடுவந்து பானையெல்லாம் ரொப்பிடுமே!

கோயிலிலே இருக்கிற அப்பனும் ஆத்தாளும்  -நம்ம
வாயிலுக்கு வந்து நம்மை வாழ்த்திவிட்டு சென்றிடுமே!

பட்டியிலே  அடைத்து வைத்த பசுக்களெல்லாம் கனிவுடனே  
கெட்டிப்பாலைக்  கொடுத்து நம்மைக் குடிக்க வைத்துப் பார்த்திடுமே!

செங்கலிலே வளர்த்துவைத்த ஓமகுண்டத் தீயினிலே 
பொங்கி வந்த தேவதைகளும் நல்  வாழ்த்துக் கூறிடுமே!  

ஒரு முழம்

image

ஒருமுழக் கயிற்றில்   ஒரு பம்பரம் விடலாம்.

ஒருமுழக் கயிற்றில்  ஒரு மாட்டை அடக்கலாம்!

ஒருமுழக் கயிற்றில்  ஒரு குதிரையை ஒட்டலாம்

ஒருமுழக் கயிற்றில்  ஒரு மூட்டை  கட்டலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு இன்ஜின் ஓட்டலாம்

ஒருமுழக் கயிற்றில்  ஒரு தென்னை ஏறலாம்.

 ஒருமுழக் கயிற்றில்  ஒரு தயிரைக் கடையலாம் 

ஒருமுழக் கயிற்றில் ஒரு ராட்டை நூற்கலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு படகைக் கட்டலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு நாயை நடத்தலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு பீடி  குடிக்கலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு வித்தை செய்யலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு திருமணம் ஆகலாம்

ஒருமுழக் கயிற்றில் ஒரு பூமாலை கட்டலாம்

ஒருமுழக் கயிற்றில்  ஒரு உயிரைத் துறக்கலாம் 

ஒருமுழக் கயிற்றில்  ஒரு தூக்கை நிறைவேற்றலாம்

ஒருமுழக் கயிற்றில்  ஒரு கொலை செய்யலாம்! 

ஒருமுழக் கயிற்றில் ஒரு நோன்பு நூற்கலாம் 

ஒருமுழக் கயிற்றில் ஒரு ராக்கி கட்டலாம் 

 ஒருமுழக் கயிற்றில்  ஒரு வில்லைக் கட்டலாம்  

ஒருமுழக் கயிற்றில் ஒரு சலங்கை கட்டலாம் 

ஒருமுழக் கயிற்றில்  ஒரு பாவாடை கட்டலாம் 

 ஒருமுழக் கயிற்றில் ஒரு அரைஞாண் கட்டலாம் 

ஒருமுழக் கயிற்றில்  ஒரு கோவணம் கட்டலாம் 

ஒருமுழக் கயிற்றில் ஒரு திருடனைக் கட்டலாம் – ஏன் 

ஒருமுழக் கயிற்றில்  நம் கண்ணனையே  கட்டலாம்

image

நளபாகம் – தி. ஜானகிராமன்

image


ஜானகிராமனின் நளபாகம் ஓர் அபூர்வமான கதை அமைப்புக் கொண்ட  நாவல். தி.ஜா. வின் முத்திரைகளை அனாயாசமாகத் தாங்கி வரும் கதை இது. யாத்ரா சர்வீசில் காசி ராமேஸ்வரம் போகும் ரயிலில் சமைப்பதற்காக வந்தவர் தான் காமேச்வரன். சமையல் கலையில் ஒரு ஜீனியஸ். நல்லூரில் ஒரு வீட்டில் சமையற்காரராக ஒதுங்குகிறார். அந்த வீட்டு மாமிக்குக் குழந்தையே இல்லை. அம்பாள் உபாசனையில் இருக்கும் காமேச்வரன் அவளுக்கு அருள் பாலிக்கிறார். அவள் உண்டாகிறாள். அந்த நல்லூர் கிராமத்தில் இருக்கும் பெரிய சிறிய மனிதர்கள் எல்லாரும் அந்தக் குழந்தைக்குக் காரணம் காமேச்வரன் என்று சொல்லாமல் சொன்னார்கள்! எது உண்மை எனபது அம்பாளுக்குத் தான் தெரியும்.


அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் -பெயர்களே அவருடைய  முத்திரையைப்  பொறிக்கும் !

காமேச்வரன், வத்ஸன் , ரங்கமணி, முத்துசாமி,ஜோசியர், சுலோசனாம்மா, நாயுடு,பாட்டி, பங்கஜம், துரை , பண்டா, விஸ்வேஸ்வரன், ராமாரி குறத்தி, ஐயங்கார், ஓதுவார், ஜகது,இளங்கண்ணன், பொதுவுடமை சீனுவாசன்,குப்புராவ், வெங்காச்சம், மகாதேவ குருக்கள்,வைகுண்டம் பிள்ளை, செட்டியார், மஜீது, கலியபெருமாள், மாலிங்கம், இன்ஸ்பெக்டர் 

அதில் வரும் வசனங்களைப்  படித்தால் அந்த நளபாகத்தையும் உணரலாம்.        

“என் குருநாதன் வத்சனை நினைச்சுண்டு அவருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுத்தான் உலைநீர் வைக்கிறேன்.சமையல் சுயபோதினி புத்தகங்களைப் பார்த்து சமைக்கலே! அந்தப் புஸ்தககங்களைப் படிச்சு ரசம் குழம்பு வைச்சா நவத்துவாரமும் எரியும்”  

“பாரதியார் எங்க அண்ணா! அம்பாள் எங்க அண்ணாவிற்கு கவி பாடச் சொல்லிக் கொடுத்தா. என் கையில் கரண்டியைக் கொடுத்திருக்கா!உலகத்தையே மயக்கிறார் எங்க அண்ணா! நளபாகமாய்ப் பண்ணீப் போடறேன்!”

ஸ்வீகாரமா? நல்ல சம்ஸ்கிருதப் பேரு அது. சம்ஸ்கிருதத்திலே சொல்லிட்டா ஈயம் தங்கமாயிடும், பாறாங்கல்லு பத்மராகமாயிடும்.

“ஒத்திக்கு பதிமூணுக்காக இதே வேலை.  ஒத்திக்குஒண்ணுக்காக  இதே வேலை.ஒத்திக்கு வேலையே கிடைக்காமல் போயிடுத்து. ”

image

மரணந்தானி  வைரானி! மரணம் வரையில் தான் பகை. 

“பஞ்சாயத்தில தெருவிளக்கெல்லாம் அணைச்சுப்புட்டானுக! நிலாக் காயுதாம். சிக்கனம் நாய்க்கா தெரியும்?”
 

பாட்டி (பசு மாட்டிடம்): ஏண்டி கொம்பேறி மூக்கான்! என்ன வந்துடுத்து உனக்கு ரெண்டு நாளா ?நேத்திக்கு ரெண்டு சேர் பாலைக் கொடுத்துட்டு காலைக் காலைத் தூக்கினே.இன்னிக்கு ஒண்ணரை சேர் கொடுத்துட்டு மடியை மடியை எக்கிக்கறே! புல்லு வாங்கிப் போடறேன். கோவிச்சுக்காதேம்மா! படவாச் செருக்கி!
“புல்லுக்கட்டுன்னா அத்தனை ஆசையாடியாம்மா!, புல்லுன்ன   உடனே மடியை இளக்கிப்பிட்டியே !நிச்சயமா ரெண்டு கட்டு இன்னிக்கு ராத்திரி வாங்கிப் போடத்தான் போறேன். இல்லாட்டா ஏண்டீ  வேம்புன்னு கேட்கமாட்டியோ? 

அவ கூடை முடையரவ ! கொறத்தி !  வெட வெடன்னு பாக்குக் கண்ணு மாதிரி இருப்பா ! கடசல் கொடுத்து பண்ணினாப்பல இருக்கும் உடம்பு. அரச மரம் கொழுந்துவிட்டு அந்தக் கொழுந்துமேலே வெயில் பட்டாப்பல  உடம்பெல்லாம் மினுமினுங்கும்.  

திண்ணையில் சீட்டாட்டமும் மூக்கைத் தொடாமலே மூக்குச் சிந்திய ஆச்சரியமும் தான்… 

ஏண்டா ஆராமுது! ஏன் இப்படி சல்யன் தேரோட்டினாப்பல என் கட்சியில உட்கார்ந்துண்டு கழுத்தறுக்கறே !  

இந்தப் பிரபஞ்சத்தில ஸௌந்தர்யத்தில் பராகாஷ்டை- பரம உச்சம் லலிதை தான். அவள் சாயல் தான் எல்லாம் !  

பண்றதையும் பண்ணிட்டு சீமந்தத்தை யார் தலையிலோ கட்டினானே உன் சகபாடி..

இது தடிப்பய ஊருங்க.. பேரு தான் நல்லூரு 


இதில் வரும் மசக்கைப் பாட்டு கிராம மணம் கமழும்! 

image

"கரிவாயில் ஜலம் ஊற்றி தூக்கங்கள் வந்து
கண்ட இடத்தில் பள்ளி கொள்வார் பைங்கிளிமாரும்
ஏட்டோட தயிர் வேணும் உப்பரட்டி வேணும் 
கேட்டதெல்லாம் கொடுக்கத் தாயாரும் வேணும் 
ஏலம் களிப்பாக்கு ஜாதிக்காய் வேணும் 
வெட்டு வெட்டாய்ப் பாக்கு வேணும் வெத்திலை வேணும் 
முதல்தரமான முத்து சுண்ணாம்பு வேணும் 
நாலாம் மாசம் பிறந்தவுடனே மசக்கை தெளிந்து 
வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும் இட்டார் 
சீருடைய ஆறாம் மாதம் சீமந்தம் பண்ணி 
சிறப்புடனே நாத்தனாரும் பூவும் சூட்டினார் 
அழகான ஏழாம் மாதம் அப்பமும் கட்டி 
எட்டாம் மாதம் பிறந்ததும் தொட்டிலும் செய்தார் 
ஒன்பதாம் மாதம் பிறந்ததும் சங்கிலி பண்ணி 
ஒன்பதாம் மாதம் ஆன உடனே ஊனும் ஒழித்தாள் 
எட்டும் இரண்டும் பத்து மாதம் பூர்ணமாய் சுமந்தாள்
முத்து முத்தாய் நெற்றி வேர்க்க முகங்கள் சிவக்க 
பெத்தாளே  பாலகரை முத்து முத்தாக ”

தி.ஜா. ஒரு மண்ணின் மைந்தர்.. சந்தேகமேயில்லை!

மீனங்காடி

                                           திட்டம் 

 

image

மேரி திட்டம் தீட்டினாள் !

 எப்படி  ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ கருத்தை வலியுறுத்துவது ?  மீனங்காடி மக்கள் தினமும் தவறாது அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அதில் ஒருவன் சொன்னானே ! ‘ இந்த வேலையைச் செய்யும்போது உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ். ஒன்று உலக நாயகன் ஆவது : இரண்டாவது  கலக நாயகன்.  ஒன்றில் விருப்பு: மற்றொன்றில் வெறுப்பு:  உலக நாயகன் ஆக வேண்டும் என்றால் அது மாதிரி வித்தியாசமாகச் செய்ய வேண்டும் “  நாம் யாராக இருக்கப் போகிறோம்? மேரி யோசித்தாள் !

 அடுத்தது ‘ ஆட்டம் கொண்டாட்டம் ‘ மீனங்காடி மக்கள் தான் எப்படி எல்லோரும் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்?  அதில் தான் எவ்வளவு சந்தோஷ சக்தி  ! நாமும் விளையாட வேண்டும் ! எப்படி அந்த ஜாலி, சக்தியைக் கொண்டு வருவது ? – மேரி தீவிரமாக யோசித்தாள்.!

 மூன்றாவது படி ! ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ – மீனங்காடியில் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுடன் விளையாடி அவர்கள் நெஞ்சில் இடம் பிடிக்கிறார்கள்.  அது நல்ல எண்ணத்தையும் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் உருவாக்குகிறது.  நமது வாடிக்கையாளர்கள் யார் யார் ? நாம் எப்படி அவர்கள் கவனத்தை ஈர்க்கப் போகிறோம்? நாம் எப்படி அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகத்தை நெஞ்சில் ‘ நிறைய வைக்கிறது ?

 கடைசியா ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ‘ – எவ்வளவு அருமையான கருத்து ! மீனங்காடி மக்கள் எல்லோரும் ஒருமித்து வாடிக்கையாளர்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்.  நாம் எப்படி நமது வேலையோடு வாடிக்கையாளர்களோடு ‘ ஒண்ணா இருப்பது ?

       இவற்றை எல்லாம் விவரித்து விட்டு மேரி தன்  டிபார்ட்மெண்ட் மக்களிடம் சொன்னாள் !

       “இவற்றைப் பற்றித் தீவிரமாக யோசியுங்கள் ! எப்படி நாம் இவற்றை நம் செயலில் கொண்டு வருவது ? என்பது பற்றி ஆழமாக யோசியுங்கள்.  திங்கட்கிழமை நாம் சந்திக்கும்போது திட்டங்களோடு வாருங்கள்.  நாம் நிச்சயம் வெல்வோம்.!”

 

                         சனி – ஞாயிறு – மீனங்காடி  

 

image

      “ டீச்சரம்மா உங்களுக்கெல்லாம் ‘ ஹோம் ஒர்க்‘ கொடுத்து இங்கே அனுப்பியிருக்காங்களா?” டோனி சிரித்துக்கொண்டே சுஜாதாவிடம் கேட்டான்.  அவள் தலைக்கு மேலே ஒரு மீன் பறந்து போய்க் கொண்டிருந்தது 

 “ ஆமாம் எங்கள் பாஸ் எங்களை ஹோம் ஒர்க் செய்யச் சொன்னார்கள்!”

 “ யாரு மேரியா?”

 “ அட! மேரி மேடத்தை உங்களுக்குத் தெரியுமா?” அதற்குள்ளே ஆரம்பித்து விட்டது ‘ போகுது பார்’ ‘ போகுது பார் ‘ – இந்த சுறாமீன் சிங்கப்பூர் போகுது.’ டோனிக்கு சுஜாதாவின் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆசை! சுஜாதாவிற்கும் எப்படி இந்த மக்கள் அனைவரும் மனதும் வேலையும் ஒன்றாக இருக்கிறபடி இருக்கிறார்கள் என்று டோனியிடம் கேட்க ஆசை!.

 “ போன வாரம் மேரி கூட நீங்கள் வந்தபோது பார்த்திருக்கிறேன்.  நீங்கள் தானே அந்த கவுண்டர் பின்னால் போய் வெற்றிகரமாக மீனைப் பிடித்தது?”

 “ அட! நீங்களும் பார்த்தீர்களா! அது உங்களுக்கும் ஞாபகம் இருக்கா?”

 “ நல்லா ஞாபகம் இருக்கு! ஆமாம்! ஏன் நீங்கள் கொஞ்சம் டல்லாக இருப்பது போல் இருக்கிறீர்கள்?”

 

image

சுஜாதா தான் எழுதிய நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள். “ டோனி! எனக்கு உங்கள் செயல்பாட்டில் எல்லாம் புரியுது. ஒண்ணே ஒண்ணைத் தவிர. ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ என்கிறீர்கள். இப்போ நீங்க என்னோட இருக்கீங்க! அது ஓகே!  அப்புறம் அந்த ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே‘ அன்றைக்கு நான் மீன் பிடித்தது இன்றைக்கு மட்டும் அல்ல, என்றைக்கும் என் நெஞ்சில் இருக்கும்.  அதுவும் ஓகே! மூணாவது ‘ ஆட்டம் கொண்டாட்டம் ‘ விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய பேரை கலாட்டா செய்திருக்கிறேன் !  ஆனால் இந்த ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்று சொல்கிறீர்களே! அதுதான் புரியவில்லை.  அது எப்படி நாம் எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது? மற்றவர்கள் தான் நம்மீது அதைத் திணிக்கிறார்களே! “

 “ சரியான கேள்வி சுஜாதா! இதுக்கு பதில் நம்ம ஓநாய்த் தலைவர்கிட்டேதான் இருக்கு.  அவர் ஒரு பெரிய ரேஸ் கார் ஒட்டினவர்.  ஒரு நாள் பலமான விபத்தில் அடிபட்டு பிழைத்ததே பெரிய காரியமாகக் கிடந்தார்!  மீதிக் கதையை அவர்கிட்டேயே கேளுங்கள்!  ஆனால் அதுக்குக் கடைக்குப் பின்னால் வார வேண்டியிருக்கும்.  அங்கே ஐஸ் கொட்டியிருக்கும். ரொம்ப குளிராக இருக்கும்! வர முடியுமா?” டோனி கேட்டான்.

 “ நான் அங்கே வர அனுமதி உண்டா?” – சுஜாதா கேட்டாள்.

 “ நாங்களும் வரலாமா?”

 திரும்பிப் பார்த்தால் சுரேஷ்! ரமேஷ்! அவனின் அழகான பையன்.

“ வாருங்கள் “ என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஓநாய்த் தலைவரைப் பார்க்கச் சென்றார்கள். அவர் தன் கதையை அழகாகச் சொன்னார்.  உருக்கமாகவும் இருந்தது. “ அந்த விபத்துக்குப் பிறகு நான் ஒவ்வொரு நாளும் என் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்  கொண்டேன்! அதுதான் எனக்குத் திருப்பு முனை – வழி காட்டி !  ஒவ்வொரு நாளும் எப்படி எப்படி அவர் மாறினார் என்பதை விளக்கமாகச் சொன்னார்.  மூவரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.  திங்கட்கிழமை மீட்டிங்கில் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.

 அதற்குப் பிறகு சுரேஷ் வெளியே போய் விட்டான்.  சுஜாதாவும், ரமேஷும் அவனுடைய குழந்தையும் அருகில் உள்ள சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று காபி, சாக்லேட். கேக் என்று வாங்கி சாப்பிட்டார்கள்.  சுஜாதா தான்  முதலில் ஆரம்பித்தாள். “ ரமேஷ்! நம்ம குப்பைத் தொட்டியை முதலில் சுத்தம் செய்ய ஆரம்பிக்கணும்! இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போனால் அதுவும் இப்படி இருக்காது என்பது என்ன நிச்சயம்?  மேரி மாதிரி ஒரு நல்ல மேனேஜர் கிடைக்குமா? சந்தேகம் தான்! எனக்கு அவங்க கிட்டே ஒரு மரியாதை தோணுது.  பிரசாத்தைக் கூட அவங்க எதிர்த்துப் பேசினார்களாம்! எந்த மேனேஜருக்கு அந்த தில் இருக்கு?’

 “ சுஜாதா! நான் நினைச்சதையே நீயும் சொல்கிறாய்!  இந்த மீனங்காடி தொழிலாளர்களால் செய்ய முடியும் என்றால் நம்மால் ஏன் செய்ய முடியாது?  அதுவும் மேரி மாதிரி ஒரு மேனேஜர் இருக்கும்போது.  ஆனாலும் அது அவ்வளவு சுலபம் இல்லை சுஜாதா! நம்ம மக்கள் சிலருக்குக் கொஞ்சம் பயமா கூட இருக்காம். நாம் அவர்களுக்குத் தைரியம் சொல்லணும்.  அப்பத்தான் நாம் நினைக்கிற – எதிர்பார்க்கிற மாறுதல் கிடைக்கும்.”

 சுஜாதா மீனங்காடியை விட்டுக் கிளம்பும்போது பார்த்தாள், – மேலும் நாலைந்து அவளது ஆபீஸ் நண்பர்கள் குழந்தை குட்டிகளுடன் மீனங்காடியில் நுழைவதை!

  

                        திட்டத்தின் முதல் கட்டம்

 

image

திங்கட்கிழமை காலை முதல் குரூப் மீட்டிங்கில் ஆரவாரம் அதிகமாகவே இருந்தது.  மேரி வழக்கம் போல் பேச்சை ஆரம்பித்தாள். 

 “ இன்று நாம் புதிய அத்தியாயத்தைத் துவக்கப் போகிறோம்! நமது குப்பைத் தொட்டியைத் தூக்கி எறியப் போகிறோம்.  திட்டத்தை எப்படி செயலாற்றுவது என்பது தான் முதல் கட்டம்.  மீனங்காடியில் நாம் கண்டதை – கேட்டதை –  கற்றதை எப்படி நாம் அலுவலகத்தில் செயல் படுத்தப் போகிறோம் என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களை – ஆலோசனைகளை – யோசனைகளை தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  அவற்றை எல்லாம் நாம் தீவிரமாகப் பரிசீலிப்போம்.”

 சுஜாதாவும், ரமேஷும் எழுந்து தாங்கள் ‘ ஓநாய்த் தலைவருடன் ‘ பேசியதைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.  சுஜாதா தான் ஆரம்பித்தாள்.

 “ ஓநாய்த் தலைவர் நல்ல ஜாலியான மனிதர்.  ஆளைப் பார்த்தால்முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  அதிலும் அவர் குரல் ரொம்பவே பயமுறுத்துவது போலத் தான் இருந்தது.  ஆனால் அவர் சொன்ன அவருடைய வாழ்க்கைக் கதை எங்களை மிகவும் உருக்கி விட்டது. அவர் ரேஸ் கார் வீரராக இருந்து ஒரு பெரிய விபத்திற்குப் பிறகு வாழ்க்கையே நொந்து போய்த் தவித்துக் கொண்டிருந்தாராம்.  அவரோட காதலி அவரை விட்டு விட்டுப் போய் விட்டாளாம்.  நண்பர்கள் கூட அவரிடம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டார்களாம்.  அவர்மீது அவருக்கே வெறுப்பும் கோபமும் தோன்றியதாம்.  வாழ்க்கையே இருட்டாக இருப்பதைப் போல உணர்ந்தாராம்.

அப்போதுதான் அவருக்கு அந்த இரண்டு வழித் தத்துவம் தோன்றியதாம்.  ஒரு வழி – வாழ் நாள் முழுவதும் இழந்து போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே சோகமாக இருப்பது, – மற்றொன்று அதை மறந்து விட்டு சந்தோஷமாக ஜாலியாக இருப்பது.  இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அன்றைக்கே முடிவு செய்தாராம் – இனி வரும் நாட்களில் தான் மகிழ்ச்சியாக, ஜாலியாக இருப்பது என்று.  அதுதான் ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற தத்துவத்தின் கருத்து என்று விளக்கினார். “

 

image

ரமேஷும் தொடர்ந்தான் . “ என் பையனுக்கும் ஓநாய்த் தாத்தாவை மிகவும் பிடித்திருந்தது.  அவர் சொன்ன பிறகுதான் என்கிட்டே –  நம் மக்கள்கிட்டே எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ‘ ஓநாய்த் தலைவருடைய அறிவுரைப்படி நாம் செயலாற்றினால் இந்த அலுவலகத்தை நாம் ஒரு சந்தோஷமான இடமாக மாற்றலாம்.  ஒவ்வொரு நாளிலும் நாம் நமது எண்ணத்தைத் தேர்ந்தெடுப்போம்.  அது நல்லதா, சிறப்பா அமையணும்! அமையும்! “

 சுரேஷும் தன் கதையைச் சொன்னான்.

“ ஓகே! சுரேஷ்! ரமேஷ்! சுஜாதா! இந்த வார விடுமுறையில் நிறைய ‘ ஹோம் ஒர்க் ‘  செய்திருக்கிறீர்கள்.  ‘ ஓவர் டைம்  ‘கேட்காததற்கு நன்றி “

 மேரி சொல்லவும் கூட்டத்தில் கசமுசவென்று சிரிப்பு தெளித்தது.

 அதற்குப் பிறகு கிட்டத்தட்ட அரைமணி நேரம் எல்லோரும் அவரவர் கருத்துக்களைக் கூற ஆரம்பித்தனர்.  கடைசியில் மேரி, “ நாம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாராவது புதிதாக ஏதாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

 இதுவரை வாயையே திறக்காமல் இருந்த ஒருவன் கூறினான்.

 “ நாம் ஏன் நான்கு டீம் தயார் செய்து அந்த மீனங்காடியின் நான்கு ஐடியாக்களையும் எப்படி உபயோகப் படுத்துவது என்று திட்டம் தீட்டக் கூடாது ?”

 மற்ற எல்லோரும் அதை ஆமோதித்தனர்.  அதைத் தொடர்ந்து மேரியும் “ ரொம்ப சரி! எனக்கும் இந்த யோசனை நன்றாகவே படுகிறது! எதற்கும் அடுத்த குரூப்பையும் கலந்து கொண்டு முடிவைச் சொல்கிறேன்”.

 மீட்டிங் முடிவில் ஒரு பேப்பரைக் கொடுத்து யார் யார் நான்கு டீமில் எதில் சேர ஆசைப்படுகிறார்கள் என்று கையெழுத்து வாங்கினாள்.  இரண்டாவது குரூப்பும் முதல் குரூப்பின் யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டது.  அவர்களும் அவர்களுக்குப் பிடித்த டீமில் சேரக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.

 முதல் கட்டம் தயார் ! செயலாற்ற வேண்டியதுதான் !

                         அணியில் சிறு சிறு மாறுதல்கள்

image

 ‘ ஆட்டம் கொண்டாட்டம்’ அணியில் சேர நிறையப்பேர் பெயர் கொடுத்திருந்தார்கள்.  மேரி அவர்களுடன் கலந்து பேசி ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘  அணிக்குச் செல்பவர்களுக்கு மீனங்காடியில் இலவச ‘ டீ ஷர்ட் ‘ கிடைக்கும் என்றதும் சிலர் தாவினர்.  அணிகள் சரியாக அமைந்ததும் அதை ஆபீஸ் ஆர்டராகப் போட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டினாள் மேரி!  அணிகள் எப்படி செயலாற்றுவது என்பதற்கான அறிவுரைகளையும் தயார் செய்தாள்.

                         அணிகளுக்கான அறிவுரைகள்

 ஒவ்வொரு அணிக்கும் ஆறுவார நேரம் தரப்படும்.  அதில் அவர்கள் மீட்டிங் போடுவது, வேண்டிய தகவலைச் சேகரிக்கிறது, கலந்து ஆலோசிப்பது எல்லாம் அடக்கம்!  கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ‘ விளக்கப் படமாக ‘ – ‘ பிரஸன்டேஷன் ‘ தயார் செய்து மக்கள் முன் காட்ட வேண்டும்.

 விளக்கப் படங்களைத் தொடர்ந்து திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்ற குறிப்புகளையும் தர வேண்டும்.

 அணிவேலைக்கென்று வாரத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மணி நேரம் அலுவலக நேரத்திலேயே சௌகரியப்படி ஒதுக்கித் தரப்படும்.  மற்றவர்கள் அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு அணிக்கும் கைச் செலவிற்காக ஆயிரம் ரூபாய் தரப்படும்.

 அணிகள் அவரவர்களுக்கான மீட்டிங்கைத் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.

 எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைத் தீர்த்து வைக்க நான் எப்போதும் தயார்.  இருந்தாலும் அணிகள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வது தான் நல்லது.

   நாம் வேலை செய்யும் இடத்தை

  நாம் விரும்புகிற இடமாக மாற்றுவோம் !

  குட்லக்  –   மேரி 


(தொடரும்)

ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும்                    (எஸ். கே. என்)

தமிழ்ச்செல்வன்

image

தானறிந்த பழகிய கிராமிய மக்களைப்பற்றிய, அவர்கள்உள்ளுணர்வுகளைத் தெளிவாகப் படம்பிடிக்கும் கதைகளை எழுதி வரும் திரு.தமிழ்ச்செல்வன் 

image

– பூ திரைப்படத்தின் மூலக் கதையான ‘வெயிலோடு போய்’ சிறுகதையைஎழுதியவர், 

– தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பொதுச்செயலாளர். 

–   முன்னாள் இராணுவ வீரர்,

–  அறிவொளிஇயக்கத்தில் முன்னணித் தொண்டர், 

–  தொழிற்சங்கவாதி,

–  தபால்துறை ஊழியர் மற்றும்பண்பாட்டுத்தளத்தில் தொடர்ந்து பணியாற்றும் செயல்வீரர் 

என வாழ்வில் பன்முகங்கள்கொண்டவர் தமிழ்ச்செல்வன். 

                                           பதிமூன்றில் ஒன்று…..

“மனிதர்கள் கை கொடுக்காதபோது தெய்வத்தின்துணையை நாடும் நம்ம ஊர் வழக்கப்படி நடராஜன் பிள்ளையார் கோவில் வாசலில் கிடந்த ஒரு பாறையின்மேல் உட்கார்ந்திருந்தான்” என்று ’பதிமூன்றில் ஒன்று’ கதை தொடங்குகிறது

பெரிய நாயக்கர் வீட்டில் வேலைக்கு நிற்கும் ஒருவரின் மகனாக,பள்ளிக்கு சென்றாலும் விடுமுறைகளில் ஆடுமேய்க்க வேண்டிய சிறுவன் நடராஜன். முனைந்து
படித்தாலும் பள்ளியில் கணக்கும் ஆங்கிலமும் மூளையில் ஏற மறுக்கின்றன.

image

பெயிலாகிப் பெயிலாகித்தான் அடுத்த வகுப்புக்குப் போவான்.
பெயிலானதும் நல்லதுக்குத்தான் என்று அப்பா நாயக்கர் வீட்டு வேலைகளுக்குக் கூட்டிப்போவார்.
பட்டாளத்தில் இருக்கும் தாய் மாமன், லீவில் வந்தபோது கூப்பாடு போட்டு திரும்பவும்
பள்ளியில் சேர்ப்பார். நடராஜன் படித்தே ஆகவேண்டும் என்று தீர்மானத்துடன்
இருந்தார். இவன் மட்டுமல்ல, தெருப்பிள்ளைகள் யாரேனும்கூட பள்ளிக்குப்போகவில்லை
என்றால் அவர்கள் வீட்டிற்குச் சென்று சண்டைபோடுவாராம்.  ஒழுங்காக ஆடு மேய்க்கவிடாமல் மச்சினர் அழும்பு
செய்வதாக அப்பாவின் எண்ணம். அம்மா தன் அண்ணனின் கட்சி.

கதாசிரியரின் வார்த்தைகளில்:- “மகனின் படிப்பை
முன்னிட்டு ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அதெல்லாம் நடராஜனை ஒருபோதும்
பாதிப்பதில்லை. அவன் பிரச்னை எல்லாம் அதமப் பொது மடங்கு, பின்னப் பெருக்கல், பிளஸ்
மைனஸ்கள், ஸ்டோரிகள், பாரகிராபுகள், ஆக்டிவ் வாய்ஸ், பேசிவ் வாய்ஸ்கள், கணக்கு
வாத்தியார் கந்தசாமி மற்றும் ஆங்கில ஆசிரியர் அழகேசன் சார்  இவ்வளவுதான்”  

நடராஜன் கணக்கு, ஆங்கிலம் தவிர எல்லாப் பாடங்களிலும் 70-80
வாங்கினாலும் கணக்கிலும் ஆங்கிலத்திலும் 20-30 க்கு கீழேதான்.

பரீட்சை பேப்பர்கள் கொடுக்கும்போது  எந்தப்பாடத்திலும் இருபது மார்க் வாங்கும்
பயல்களை ஒன்றும் சொல்லாமல், இவனைத்தான் கந்தசாமி சார் புளியம்விளாறால் விளாசுவார்.
–(“ஏம் பாடம்னா இளக்காரமா?)

"வேண்டுமென்று நான் கணக்கில் பெயிலாகவில்லை. தன்
குற்றம் எதுவுமில்லை. வச்சிக்கிட்டு நான் வஞ்சகம் செய்யவில்லை” என்று
மனமுருகி  கணக்குப் பேப்பரில் ஒருமுறை
எழுதியும் அவர் ஆவேசம் குறையவில்லை. மாறாக அதிகரித்தது.

ராவும் பகலும் புஸ்தகமும் நோட்டும் கண்ணீருமாய் கிடக்கும்
மகனைக்கண்டு பொறுக்காமல், இரண்டு வருசமாய் கொடை கொடுக்காததுதான் குத்தமோ என்று
இந்தவருடம் கிடா வெட்டிப் பொங்கலிடுவதாய் வேண்டிக்கொள்கிறாள் அம்மா.

மீசை, அருவா, நீட்டிய நாக்கு, சுற்றிலும் கறிக்குழம்பு
வாசனையுடன் ஆவேசமாக நிற்கும் மாடனுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு இருக்கும்
என்கிற யோசனை இவனுக்கு. ஆனால் பானையில் கிழக்கு திசையில் பொங்கல் வழிந்ததாலும் ஒரே
வெட்டில் கிடாவின் தலை வேறானதாலும் அவன் அம்மாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நடராஜனுக்கு தர்க்க ரீதியாக ஞானம் விரிந்துகொண்டு போனது. ‘நம்ம
சாமிகள் எல்லாம்  கிடாவும் கறியுமாக
படிப்பு வாசனை இல்லாமல்  இருக்க மேலத்தெரு
சாமியெல்லாம் சர்க்கரைப்பொங்கல், நாமக்கட்டி என்று இருக்கிறதே. நம்ப ஆளுங்க ஏன்
இப்படி சாமிக கிட்ட மாட்டிக்கிட்டாங்க?’

மறுநாள் காலையிலிருந்து
ஆளே மாறிவிட்டான். மூன்று தெரு தாண்டி பிள்ளையார் கோவிலுக்குப்போய் தினம்
108 தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கிறான். கோரிக்கை இரண்டு (1) ஆங்கிலத்திலும்,
கணக்கிலும் பாஸாக வேண்டும் (ஜஸ்ட் பாஸ்) (2) கந்தசாமி சாரை வேறு ஊருக்கு
மாற்றிவிடவேண்டும்.

கந்தசாமி சாரை  மாற்றுவதாகத்
தெரியவில்லை. ஆனால் மாதம் ரூ 40ல் (அவரிடமே ட்யூஷன்) பிரச்சினை தீர்கிறது.          

கணக்கிற்கு பிள்ளையார் சரியாக இருந்தாலும், ஆங்கிலத்திற்காக
சர்ச்சில் மண்டியிடத் தொடங்குகிறான். (அதிலும் ஒரு குழப்பம் – ஏசுவிற்கு
தாய்மொழி  ஹீப்ருவாமே ஆங்கிலம் அல்லவே?)

மாமா லீவிற்கு
வீட்டிற்கு வந்திருந்த சமயம் ஒன்பதாம் வகுப்பு முடிவுகள் வருகிறது.
நிச்சயம் பெயில்தான். ஆங்கிலமும் கணக்கும் கவிழ்த்தே தீரும் என்று இருந்தவனுக்கு
பாஸான அதிர்ச்சி தாங்கமுடியவில்லை.

ஆனாலும், புதிதாக வந்த ஹெட் மாஸ்டர், கிரேஸ் மார்க் போட்டு
பாஸ் ஆன பதிமூன்று பேரை பத்தாவதில் சேர்க்கமுடியாது என்று வெளியில் நிறுத்தி
விடுகிறார். அதில் இவனும் உண்டு.

வேறு பள்ளியில் முயற்சித்தும் அந்தப்பள்ளி பிடிக்காமல் இவன்
மட்டும் மாமாவுடன் திரும்பவும் ஹெட் மாஸ்டரைப் பார்க்கக் காத்திருக்கையில், எந்தச்
சாமியை  வேண்டிக்கொள்ள வேண்டும் எனத்
தெரியவில்லை.

‘ஹெட் மாஸ்டர் உள்ளே வரச் சொன்னதாகக் ப்யூன் வந்து
அழைத்தார்’ என்றுகதை முடிகிறது.  

ஒரு நீதிபோதனையாகவோ, இதனால் அப்படியாகி இப்படி முடிந்தது
என்னும் சம்பவக்கோர்வையாகவோ இல்லாமல் கதைகளை யதார்த்த இலக்கியப் படைப்புகளாக மிளிர
வைப்பவை அவற்றின் நடையும், உரையாடல்களும்.

இவரது ‘சிவராணி’,  ’…மற்றும்
மைனாக்கள்" மனதை ஈர்க்கின்றன. இணையத்தில் படிக்கக் கிடைக்கும் மற்றுமிரு
கதைகள்  


தமிழ்ச்செல்வனின் இரண்டு அருமையான கதைகளைப் படிக்க விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்யவும். ———–>

வெயிலோடு போய்        

கருப்பசாமியின் அய்யா

இதயக் கோளாறு! உயிர் காக்கும் மருந்து! 

நாற்பது ரூபாய்க்கும் குறைவான இந்த மூன்று மருந்துகளையும் உங்கள் பாக்கெட்டில் கிரெடிட் கார்ட். மொபைல் மாதிரி வைத்திருங்கள்! ஹார்ட்அ ட்டாக் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ வரும் போல இருந்தால் உபயோகப் படுத்துங்கள்! 

அவை என்னென்ன ? 

1. DISPIRIN

2. ATARVASTATIN

3,CLOPIDOGREL 


உங்கள் டாக்ட ரைக் கேட்டு இந்த உயிர் காக்கும் மருந்துகளை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைத்திருங்கள்! 

அனுபவம் புதுமை!!

image

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!


படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!


அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!


அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!


பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!


பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!


முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!


இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!


‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!


ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!


கவிஞர் கண்ணதாசனின்  அனுபவ வரிகள்!! 

நண்பரின் facebook பக்கத்தில் படித்தது!! 

image

1917 ஜனவரி 17 இல் பிறந்த எம்‌ஜி‌ஆர் , தமிழகத்தை – தமிழ்த் திரைத் துறையை – தமிழக மக்கள் மனத்தை பல ஆண்டுகளாக ஆண்டவர். 

அவர் பேசுவது நீண்ட சொற்கள் என்பார்கள்!

அவர் நடிப்பது நாட்டிய நாடகம் என்பார்கள்!

அவர் பழகுவது தன் இமேஜை வளர்க்க என்பார்கள்!

அவர் அரசியலில் முதிர்ச்சி அடையாதவர் என்பார்கள்!

ஆனால் பேசுவதில், நடிப்பதில் , பழகுவதில், அரசியலில் மாபெரும் வெற்றியாளராக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை!!! 

67இல் குண்டடிபட்ட  பிறகு அவர் தொட்டதெல்லாம் வெற்றி! 

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் 

என்று நம்மைப் பார்த்துப் பாடியவர். 

டாக்டர் , பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், பாரத், பாரத ரத்னா என்று பட்டங்களுக்குப் புகழ் சேர்த்தவர்.  

அவர் ஒரு சகாப்தம்!