சரித்திரம் பேசுகிறது – யாரோ

ஆதி சங்கரர்

சங்கர ஜெயந்தி : அவதாரமும் ...

நாம் காலப்பிரமானவாரியாகக் கதை சொல்லி வரும் பொழுது..
ஒரு சில உலக நாயகர்களுடைய காலம் எந்தக் காலம் என்று குழம்புகிறோம்!
அவர்களை எந்தக் காலக் கட்டத்தில் சேர்ப்பது?
அந்தக் குழப்பத்தால்.. அவர்களைப் பற்றி எழுதாமல் போக நேரிடுமோ?

இந்த அச்சம் நம்மைத் தாக்குவதால்..
இந்த நாயகரைப் பற்றி எழுதுவோம்.

இன்றே!
இப்பொழுதே..

அது சரி..
யாரவர்?

ஞான சூரியன்..
தத்துவ ஞானி..
வேதாந்த வித்தகர்..
ஹிந்து மதத்தின் மாபெரும் சிற்பி..
சொல்லிக்கொண்டே போகலாம்..

ஆதி சங்கரர்..
நமது நாயகர்.

இவரைப் பற்றி எழுத..
இவரைப் பற்றி மிகவும் ஆராய்ந்திருக்கும் இலக்கியவாதி
‘அசோக் சுப்பிரமணியம்’ இந்த இதழை எழுதிச் சிறப்பித்துள்ளார்:
அவர் இன்று – ஆதி சங்கரரது காலத்தை நிர்ணயம் சொல்வது குறித்து எழுதுகிறார்.

இனி அசோக்கின் வார்த்தைகள்:

—————————————————————————————————————————————————–


ஆதி சங்கரர் எந்தக் காலம்?

கி.மு.வா? கி.பி.யா?

 

சரித்திரத்தில் சாதித்தவர்களை விடவும், சரித்திரமே இதுதான் என்று சாதிப்பவர்களைத்தான் இப்போது உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.

நம் சரித்திர முன்னோர்கள், கல்வெட்டுக்களைச் செதுக்கியபோதும்..
தாமிரப் பட்டயங்களை எழுதியபோதும்
, பெரிய பெரிய கோவில்களைக் கட்டியபோதும், முதுமக்கட் தாழிகளைப் புதைத்துவைத்தபோதும்..
பின்னால் அகழ்வாராய்ச்சி செய்து நம்மைப் பற்றிக் கதைகள் புனைவார்கள்…(புருடா என்றாலும் சரியே) – சரித்திரத்தின் பக்கங்களில் நம்பெயர்களை உலவ விடுவார்கள் என்றோ, அல்லது இதையே ஒரு தொழிலாகச் செய்வார்கள் என்றோ நினைத்திருக்க மாட்டார்கள்..

அட..கதை எழுதுபவர்களாவது பரவாயில்லை.. தொலையட்டும்.. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் என்று ஒரு இனம் இருக்கிறதே.. இவர்களைப் பற்றி எந்த சரித்திரத்தில் எழுத.! பலரும் புருடாவிலேயே முனைவர் பட்டம் பெற்றவர்கள்..
மூளைச் சலவையிலும் முனைவர் பட்டம் வேறு (இலவச இணைப்பாக)..

அது கிடக்கட்டும் விடுங்கள்.

அத்வைதம் என்ற சொல்லுக்கான பொருள் தெரியுமா..?
நானே சொல்லிவிடுகிறேன்..
”இரண்டில்லாது”
அதாவது ஜீவாத்மா
, பரமாத்மா என்று இரண்டும் மாயையால்தான் இரண்டாகத் தோன்றுகின்றன என்பதே அது!
வாஸ்தவத்தில் இரண்டுமே ஒன்றுதான்..
இந்த மனுசனாகிய ஜீவாத்மாவுக்குத்தான் கடவுளாகிய பரமாத்மாவும்
, தானும் வேறு வேறு என்கிற நினைப்பு.. அதுவே ஒரு பெரிய கனவாகிய மாயைதான்..

என்ன க்ரிஸ்டோபார் நோலனுடைய “இன்ஸெப்ஷன்” பட லெவலுக்கு இருக்கிறதே என்று நினைப்பீர்கள்..
ஆனால் பாருங்க!
கற்பனையே கற்பனைக்கு இடம் தரும் என்று சொல்வது போல..
இதனால் விசிஷ்டாத்வைதம்
, த்வைதம் அப்படீன்னு மேலும் சித்தாந்தங்கள்…
( தலை கிறுகிறுத்தால்.. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. மேலே தொடரவும்).

அத்வைதம் என்னும், இன்னுங்கூட பலராலும் முழுவதுமாக விளங்கிக்கொள்ள முடியாதத் தத்துவச் சிகரத்தைக் கொடுத்தவர்தான்..
ஆதி சங்கரர்..

திருவிளையாடல் பட தருமி கணக்காக, சுரத்தே இல்லாமல்…
“ஆமா. அதுக்கென்ன
, இப்போ..?” என்று கேட்காமல் மேலே படிக்கவும்.
இந்தியத் தத்துவ மரபின் தந்தை அப்படிஎன்று எங்கே பெருமை வந்துவிடுமோ என்று பயந்து. அவரை சரித்திரத்தின் பின்பங்கங்களுக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள் – மேலை நாட்டு, குறிப்பாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்..
அதுல அவங்களுக்கென்னய்யா ஆதாயம்னு நீங்க நினைக்கலாம்.. கேட்கலாம்..
இருக்கே.!
மதத்தை ஒரு கட்சியைப் போல் வளர்ப்பவர்களுக்கு
, பாரதத்தில் அநாதிகாலமாக இருந்துவருவதாகக் கூறப்படும் ஸனாதன மதமும், இதிகாச, புராணங்களும் அவற்றின் தொன்மையும் இடைஞ்சல்தானே?

வியாபாரத்திற்குக் குந்தகம்தானே ?.
அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.

அவர்களின் ஆராய்ச்சி உள்நோக்கமுடையது என்பது அதிகபட்சமாக வைத்துக்கொண்டாலும். குறைந்தபட்சம் தங்களை உயர்ந்த இனமாகவும்,
ஏற்கனவே நாகரீகமில்லாத காட்டுமிராண்டிகள் என்று நம்மை அடிமைப் படுத்தியதை.. நியாயப்படுத்துவதற்காகவது அது பயனாகுமல்லவா?

சரி.. ஆதி சங்கரர் பிறந்த காலத்துக்கு வருவோம்.
பொதுவாக மேற்கத்தியர்களின் ஆராய்ச்சிபடி கி.பி 788-820 என்பதை அவரது காலமாகக் கணிக்கிறார்கள்.
அதற்குச் சான்றாக அவர்கள் நமது சரித்திர நேரக்கோட்டையே நேர்கோடாக இல்லாமல் கோணல் கோடாக்கியது வேறுகதை.

 

கல்ஹணர் என்னும் காஷ்மீரக் கவி எழுதிய “ராஜ தரங்கிணி” என்கிற நூலிலும்..
நேபாள ராஜவமிசாவளி நூலிலும்,  இலங்கையில் தொகுக்கப்பட்ட பௌத்த “மஹாவம்ஸ”, நூலிலும் ஜைன நூல்களின் கொடுக்கப்பட்டிருக்கும் சில மேற்கோள்களிலும்படி.. மஹாபாரதக் காலத்திற்குப் பின் வந்த ராஜ வமிசத் தகவல்கள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.

ஆனால் பொதுவாக எல்லா சங்கர மடங்களிலும், உள்ள குருபரம்பரை வரிசைகள்படி..
அவர் பிறந்தது கலியில் 2593-லிருந்து 2625 வரை என்று தெரிகிறது..
அதாவது கி.மு. 509-477.
இது புத்தர் காலமாகிய கி.மு. 563-483க்கு அருகிலேயே வந்துவிடுகிறது.

அதாவது புத்தரின் 54 வயதிலே சங்கரர் பிறந்து புத்தர் மஹாபரி நிர்வாணம் அடைந்து 5 ஆண்டுகளுக்குப் பின் மறைந்ததாகக் கணக்கு வருகிறது.
இன்னொரு கணக்குப்படி புத்தரே சங்கரரின் மறைவுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே பிறந்து ( கி.மு. 480)
, கி.மு 400-களில் மறைந்ததாக சொல்லப்படுகிறது.

மகாவீரரோ கி.மு. 599-527 அல்லது கி.மு. 540- 468 என்கிறது சரித்திர ஆராய்ச்சி!
இவர் 72 ஆண்டுகள் வாழ்ந்ததாக கணக்கு.
ஆக புத்தர் , மஹாவீரர் மறைந்து 18 வருடங்களுக்கு அப்புறமோ அல்லது சங்கரர் வாழ்ந்த காலத்திலோ வாழ்ந்திருக்க வேண்டும்..
சங்கரர் சமண மதக்கொள்கைகளையும்
, புத்தமதக் கொள்கைகளையும் கண்டனம் செய்திருந்தால். அது அவர்களுடைய மறைவுக்குப் பிறகே இருந்திருக்க முடியும்.
இல்லையென்றால் மண்டனமிசிரரோடு வாதம் புரிந்தார்போல்
,  அவர்களோடேயே அவர் வாதம் புரிந்திருக்கமுடியுமே!

இதையெல்லாம் வைத்து சங்கரரை ரொம்பவும் பின்னாடி (ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பின்னால்) கொண்டுவந்துவிட்டால்  ஆராய்ச்சி முடிவுற்றதாக ஆகிவிடுமா?
அங்கும் பல ஓட்டைகள்!
கேட்கவேண்டிய.. ஆனால் கேட்கப்படாத கேள்விகள் இருக்கின்றனவே?

மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களும், ஓரியண்டலிஸ்டுகளும் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அவர்கள் காட்டும் சந்திரகுப்த மௌரியனின் தொடங்கி மேலும்
, கீழுமாக அரச வமிசங்களை நிர்ணயித்து.. பல கேள்விகளுக்கு பதில் தேடாமலேயே, சொல்லாமலேயே அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அவர்கள் லிஸ்ட் – செல்யூகஸ் நிகேடரை மையமாக வைத்து..
புத்த/ஜீனர்களின் சரித்திரங்களை ஒட்டி சந்திரகுப்த மௌரியன், பாஹ்யான், ஹுவான் சுவாங், காளிதாஸர் காலம், பூர்ணவர்மன் என்று ஏதோ ஊர் பேர் தெரியாத மன்னன் என்று எல்லாவற்றையும் அவர்கள் வசதிக்கேற்ப பின்னும் முன்னும் தள்ளி ..
நம்பத்தகுந்தமாதிரியான கதைப்புனைவை சரித்திர ஆராய்ச்சி என்னும் பெயரில் முன்வைக்கிறது..

அவர்களே சொல்லும் 788-820 காலக் கட்டத்தில்..
காஞ்சியிலே பல்லவ நந்திவர்மன் 2க்குப் பிறகு வந்த தந்திவர்மன் ஆண்டிருக்கிறான்.
அதே காலகட்டத்தில் சோழர்களின் மறுமலர்ச்சி விஜயாலய சோழனிலிருந்து (848-891) தொடங்குமுன்
. பாண்டிய நெடுஞ்சடையன்/வரகுணவர்மன் (765-815) ஆண்டிருக்கிறான்.
சேர நாட்டின் சரித்திரமே ஏறக்குறைய 6-8 நூற்றாண்டுகளில் காணப்படவில்லை.
குலசேகர வர்மாக்கள் எட்டாவது நூற்றாண்டிலிருந்து வரும்வரை. சோழர்கள்
, பாண்டியர்கள் என்று இவர்கள் வசம்தான் கேரளா/சேரநாடு இருந்திருக்கிறது.

தென்னிந்தியாவில் ஒரு இளந்துறவி பிறந்து. புயலாகப் புறப்பட்டு,
பத்ரிநாத், கேதாரநாத், காஷ்மீர், துவாரகா, பூரி, காஞ்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரிவரைக்கும். பாதயாத்திரையாகவே சென்று, பலரை வாதங்களில் தோற்கடித்தார் என்றால்..அவரைப் பற்றிய சமகால மன்னர்களோடு தொடர்புடைய சரித்திரங்கள் எங்குமே காணாமல் போய்விடுமா?
அவரே கூட அதே காலத்தவராக அவருக்குச் சிறிது காலத்துக்கு முன்பே இருந்திருக்கக் கூடிய..  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பரஞ்சோதியார் போன்றோரைப் பற்றிகூட சிறிதளவும் கேள்விப்படாமலா இருந்திருப்பார்?
குறிப்பிடாமல் இருந்திருப்பாரா? அவருக்குப் பின்வந்த கியாதி பெற்ற சோழ, பாண்டியர்கள் கூடவா அவற்றைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்?

அது சரி! எத்தனையோ பேர் தெரியாத மதங்களையெல்லாம் கண்டனம் பண்ணிய ஆதிசங்கரர்..கிறிஸ்து பிறந்து முதலாம் நூற்றாண்டிலேயே அவரது சொந்த நாட்டிலேயே வேறூன்றத் தொடங்கிவிட்ட கிறிஸ்துவ மதத்தை ..
விட்டுவைத்திருப்பாரா
?
620 களிலேயே கேரளாவிலேயே சேரமான் பெருமாள் அரசர் ஒருவர் மெக்காவுக்கே சென்று .நபிகள் நாயகத்தைப் பார்த்து, மதம் மாறி, பின்பு கேரளாவுக்குத் திரும்பி..
சேரமான் ஜும்மா மசூதியைக் கட்டி இஸ்லாத்தை கேரளாவுக்குக்கொண்டு வந்துவிட்டாரே. அவருக்குப் பின்னாளில் வந்த சங்கரர், அதைக் கேள்விப்பட்டு, கை கட்டிக் கொண்டிருந்திருப்பாரா?
வாதுக்கு அழைத்து ஒரு கை பார்த்திருக்கமாட்டார்?
அதுவும் அந்த அரசர் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கா நல்லூர் தாலுக்காவிலே இருந்துகொண்டு ஆண்டவர்! காலடிக்கு வெகு சமீபம்!

காஞ்சிப்பெரியவர் “சங்கரரின் கால நிர்ணயம்” என்கிற தலைப்பிலே 26 அத்தியாயங்களில் அடுக்கடுக்காக வைத்திருக்கிற கேள்விகளும், வாதங்களும் பல முக்கியமான கேள்விகளை வைக்கின்றனவே!
ஏன் அவற்றையெல்லாம் இந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை?
வட இந்திய சரித்திரங்களை வக்கணையாக எழுதியவர்கள்
..
தென்னகச் சரித்திரங்களுக்கு அவ்வளவாக மெனக்கெடாததேன்.. ?

ஏன்.. ஏன்.. ஏன் என்று கேட்க எத்தனையோ கேள்விகள் இருந்தாலும்..
அத்வதைக் கட்சிக்காரர்களே
, இதில் த்வைதிகளாகப் பிளவுபட்டு..
தாங்கள் சார்ந்த மடமே உயர்ந்தது என்று நிற்கிறார்களே..
அதை எங்கே போய் முட்டிக்கொள்வது
?

இந்திய சரித்திரத்தை சமகால வட இந்திய தென்னிந்திய ஆட்சியாளர்கள், சமய நெறியாளர்கள்..  இலக்கிய, நீதிநெறி, பக்தி இலக்கியங்கள் இவற்றின் துணைக்கொண்டு, நடுநிலை நோக்கோடு யார் ஆராயப்போகிறார்கள்?
அயோத்தியில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களே இல்லையென்று சொன்னவர்கலல்லவா அவர்கள் .

என்னப்பா! ஏதோ பெரிசாக ஆரம்பித்துவிட்டு, கடைசியில் ஆராச்சிக்கான சான்றுகளைக் கூறாமால் நீயும் ஒரு புதுக்கதையைச் சொல்லிவிட்டுப் போகிறாயே!
பொசுக்கென்று மங்களம் பாடிவிட்டாயே என்று கேட்பவர்களுக்கு.:
ஐயா! இது போன்ற பலவிஷயங்களை கிரகித்துக்கொண்டு
.. எல்லாவற்றையும் ஒப்பு நோக்கி.. இப்படி இருந்திருக்கலாமா, அப்படி இருந்திருக்கலாமா என்று அலசிவிட்டு..
இப்படியும் இருந்திருக்கலாம் என்று ஒரு அதிவினய ஹேஷ்யமாகவே முடிக்கவேண்டும்..
உறுதியாகச் சொல்ல.. எனக்குத்தான் சரித்திர ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் உள்ளதா
?

கேள்விகளைக் கேளுங்கள்..
பதில்களைத் தேடுங்கள்..
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு முடிவு செய்யுங்கள்!
அல்லது முழித்துக்கொண்டே இருங்கள்!

*************************************************************************************************************************************
அசோக்கின் வரிகள் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’. இல்லை (அவர் கோவித்துக்கொள்ளப் போகிறார்.
(அத்வைதத்தின் படி .. ‘துண்டு’ ஒன்று தானோ)
ஜோக்ஸ் அபார்ட்!
அவரது வார்த்தைகள் பட்டவர்த்தனமாக .. பல கேள்விகளை எழுப்புகிறது..
கேள்விகளால் ஓரு வேள்வியை செய்கிறார்!
‘கேள்வி பிறந்தது இன்று .. நல்ல பதில் கிடைப்பது என்று? – என்று தோன்றுகிறது.
அசோக்கின் எழுத்துக்கு நன்றி.

இந்தப் பீடிகைக்குப் பிறகு , சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி இன்னும் எழுதத் துடிக்கிறது..

 

அரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்

Oyila Paadum Paatule ||ஒயிலா பாடும் பாட்டுலே ...

 

ஆடோட்டிப் போகின்றாள்

அத்துவானக் காட்டிலே

அழகான பெண்ணொருத்தி

 

கையில் உள்ள செங்கோலே

அவளுடைய வாழ்வோடு

ஆடுகளையும் வழி நடத்தும்.

 

கலைந்த தலைமுடி

காற்றில் கரகரப்ரியா பாட

காலின் கொலுசெல்லாம்

ஜதி தாளம் போட

வண்ணப் புடவையது

வாய்திறந்து சிரிக்கிறது.

 

அந்தி சாயும் வரை

அங்கே அவளது ராஜ்ஜியம்தான்

அரசியின் பேச்சை

ஆடுகள் கேட்டு நடக்கும்

அருமையான ஜனநாயகம் அது.

 

 

 

 

 

 

திரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே

Moondru Mudichu (1976) directed by K. Balachander • Reviews, film ...

 

 

 

படம்:  மூன்று முடிச்சு 

பாடல்: கண்ணதாசன் 

இசை எம் எஸ் விஸ்வநாதன் 

இயக்கம் ; கே பாலச்சந்தர் 

 

 

பாடலைக் கேட்டுக்கொண்டே  வரிகளைப் படியுங்கள் : 

 

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

 

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

 

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்

பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

 

தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்

 

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்

விதிவகைகள் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்!

 

யூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்

குவிகம் மின் அளவளாவல்கள் நிகழ்வுகளை  தற்போது யூ டியூப் சானலில் காணலாம் !

அவற்றை இங்கே பார்க்கலாம் 

1. மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நாடகம் 

2. கண்ணு படும் பாடு –  காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் நாடகம்

3. புத்தக  மறு அறிமுகம் – ஈஸ்வரின் பாஸ்டனில் ஒரு தேரடி -பிரியா ஸ்ரீராம் 

4. குழந்தை இலக்கியம் எஸ் ஆர் ஜி சுந்தரம் அவர்களின் உரை  & புத்தக மறு அறிமுகம் – சுரேஷின் ‘நான் என்னைத்

தேடுகிறேன் “

5. படித்தால் பிழை தீரும் – என்  சொக்கன்  உரை 

6.” மொழிபெயர்ப்பு”  கௌரி கிருபாநந்தன்  உரை 

7. ‘கதை உருவான கதை’ – பத்மினி பட்டபிராமன்  உரை 

8. கதை ஓசை – தீபிகா அருண் உரை & புத்தக மறு அறிமுகம் – எஸ் கே  என் ‘ சில படைப்பாளிகள் ‘ 

அழகின் வெளிப்பாடுகள் !    கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Tamil Virtual UniversityTamil Virtual University

மலரின் அழகை

வட்டமிட்டு

 வண்டு !

ஆதவனின் அழகை

சுட்டெரித்துக் காட்டும்

ஒளிக்கதிர்கள் !

 

மழையின் அழகை

வெளிப்படுத்துவது

சாரல் துளிகள் !

 

உண்மையின் அழகை

உணர்த்திக் காட்டுவது

உன்னத உயர்வு !

 

உழைப்பின் அழகை

வெளிக்காட்டுவது

வியர்வைத் துளிகள்!

 

எண்ணங்களின்  அழகை

எடுத்துக் காட்டுவது

மனிதனின் செயல்கள்!

 

அன்பின் அழகை

இயல்பாக  காட்டுவது

குழந்தையின் மழலை !

 

இசையின் அழகை

இசைத்துக் காட்டுவது

ஏழு சுரங்கள் !

 

ஆண்டவனின் அழகை

அள்ளி வழங்குவது

அன்னை தந்தை உறவு! 

                                                                                                                                    

 

 

 

 

குமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்

 

மூன்றாவது சர்க்கம்

தாம்பத்ய வாழ்வில் ரதி-மன்மதனை போல ...

மன்மதனைக் கண்ட இந்திரனும் மனமகிழ்ந்து அருகில் அழைத்தனன்  

தனக்கு நிகராய்   ஆசனம் அளித்து அருகிலே  அமரச் செய்தனன்  

 

மன்மதனும் இந்திரனைத்  தலைவணங்கி பெருமையுடன் பேசலுற்றான்

 

“ தேவதேவரே! தங்களுக்குப் பணிபுரிய எனக்கு  ஆணையிடுங்கள்! 

இந்திர பதவி நாடி  தவம்செய்பவரைக்  காமத்தில் வீழ்த்த வேண்டுமா ?

மோட்சத்தை நாடி ஓடிவரும் பகைவரை மோகத்தில் ஆழ்த்த வேண்டுமா?

அர்த்த தர்மங்கள் அறிந்த அரக்கரை காமநதியில் மூழ்கடிக்க வேண்டுமா?

விரும்பியவ பெண் பதிவிரதை ஆயினும்  தானேதழுவி நாடிவர வேண்டுமா?    

ஊடல்புரியும்  காதல் பெண் மீண்டும்  கொஞ்சி  வர  வேண்டுமா?

வஜ்ராயுதம் ஓய்வு பெறட்டும் என் மலராயுதம்  சேவை புரியட்டும்!

சிவனையும் மயக்கிவிடும் என்அம்பிற்குமுன்  வேறெவர் நிற்க இயலும்? “

 

மன்மதன் வீரியம் நன்கறிந்த இந்திரன் உளம் மகிழ்ந்து உரைக்கலானான்

 

“சிவபிரானையும் மயக்க முடியும் என்ற உனது சொல் நனவாக வேண்டும்

குமரன் பிறந்து அசுரவதம்புரிய சிவபிரான் தவக்கோலம் நீங்கிடல் வேண்டும்

தேவர்கள்  தவிப்பை ஆற்றும்  மலர்க்கணை உன்னிடத்தில் மட்டுமே  உள்ளது

மனத்தை அடக்கிய பார்வதி புலன்களை அடக்கிய சிவனுக்காகப்  பிறந்தவள்

இமயத்தில் தவம்புரியும் பிரானுக்குப் பார்வதி பணிவிடை செய்கின்றனள்   

பார்வதி பேரழகு  சிவனை வசீகரிக்க விதைக்கு நீர் போல நீ உதவவேண்டும்

தேவரும் செயஇயலா இச்செயல் நின் பெருமையின் புகழை அதிகரிக்கும்   

தேவர்கள் யாசிக்கும் இதனை நீ முடித்தால்  மூவுலகிற்கும் நன்மை கிட்டும்

 

இந்திரன் ஆணையை சிரமேற்ற மன்மதன் அதை நிறைவேற்ற விரைந்தனன்

மதனின் தோழன் வசந்தனும் சிவவனத்தில் வசந்தருதுவை  வரவழைத்தனன்

சூரியன் வடதிசை ஏக தென்திசை நாயகி பெருமூச்சுடன்  தென்றல் வீசிட  

பெண்களின் பாதம்  பட்டால் துளிர்க்கும் அசோக மரமும் பூத்துக் குலுங்கிட    

வண்டுகள் அமர்ந்த மாம்பூவும் தளிரும்  மன்மதபாணமென உருவெடுக்க  

காதலர் மனங்கவரும் பொன்னிறக் கொன்றை மலரும் பூத்துத் திளைக்க

வனதேவதை உடம்பில் காதல்  நகக்குறிபோல் சிவந்த  மொக்குகள் துடிக்க

வசந்தஅழகியின் திலகமென  திலகப்பூ பூக்க  இதழென மாந்தளிர்  மின்னிட

பூக்களின் மகரந்தம் துள்ளியோடும் மான்களின் கண்பட்டு ஓட்டம் தடைபட  

மாந்தளிர் சுவைத்த குயிலின் கூவலை மன்மத அழைப்பென காதலி மயங்கிட

நெய்மறந்த இதழ்  சாந்துபடா கன்னம் கொண்ட இயற்கைஅழகிகள் கெஞ்ச

சிவன் உறை  வனத்தில் வசந்தகாலம் திடீரென வந்திட மக்கள்  மயங்கினர்   

 

ரதியுடன் மன்மதன் பவனி வந்திட உயிரினம் அனைத்தும்  காதலில் கலந்தன   

இணைவண்டுகள் சேர்ந்து தேனருந்தின  இணைமான்கள் தடவிச்  சுகித்தன     

பெண்யானை துதிக்கையால் ஆண் யானைக்கு வாசநீரை ஊட்டின  

சக்கரவாகமும் தான் ருசித்த தாமரைத்தண்டை பேடை இதழில் தந்தன  

பூந்தேன் அருந்திய காதல் பெண்கள் பாடியாடிட  வியர்வை துளிர்த்தன  

காதலரும் ஒவ்வொரு  பாடல் துவங்கையில் நெகிழ்ந்து  முத்தமிட

பூங்கொத்து முலையாக  தளிர்கள்  இதழாக  கிளைகள் கைகளாக அமைந்த

கொடிக் காதலி  காதலன்மரங்களுடன்  பின்னிப் பிணைந்து சுகம் பெற்றன

 

 

காதலில் கானகமே களிக்கையில் கலையாத  மனத்துடன் சிவனும் இருந்தார் 

கொடிவாயில் நந்தியும்  உதட்டில் விரல் வைத்து மற்றவற்றை அடக்கி நிற்க

கானகத்து  உயிர்களெல்லாம்  சித்திரமாய் சமைந்து அடங்கி ஒடுங்கின

 

நந்தியின் பார்வை விலக்கிய  மன்மதனும் கொடிவீட்டின்கண் சென்றான்.      

புலனை அடக்கிப் புலித்தோலில் அமர்ந்த  பிரானைக் கண்ணாரக் கண்டான்

 

சலனமற்ற கால்கள் , நிமிர்ந்த மார்பு,  குவிந்த  கரம் அவர் அமர்ந்தகோலம்

பாம்புச் சடை, காதில்  ஜபமாலை ,  மான்தோல் உடை  அவர் அணிந்தகோலம்

அச்சுறுத்தும்  விழிகள்,  நுனிமூக்கு  நோக்கும்பார்வை அவர் இருந்தகோலம்    

காற்றினை அடக்கி சலனமற்ற மேகமாய் கடலாய் தீபமாய் அமைந்தகோலம்  

நெற்றிக்கண் ஒளிவீசி  சந்திரனைப் பழிக்கும்வண்ணம் ஒளிர்ந்த கோலம்

மனத்தை நிலைநிறுத்தி தியானக் கண்ணால்  ஆத்மனைக்   கண்டகோலம்

 

கோலங்கள் கண்ணுற்ற  மன்மதன் வில்லம்பு கரம் நழுவ சோர்ந்து நின்றான்

பார்வதிதேவி பணிவிடைக்கு வரக்கண்டு அழிந்த பலம் திரும்பப் பெற்றான்

பொன்னகை ஏதுமின்றி மலரையே அணியாய் அணிந்த பேரழகி அவள்

தனத்தின் கனத்தால் துவண்ட இடைகொண்டு கொடியென வந்தவள் அவள்  

மகிழம்பூமேகலை அடிக்கடி இடைநழுவ பிடித்த வண்ணமே  வந்தவள் அவள் 

முகமலர் நாடி செவ்விதழ் தேடும்  வண்டைச் செண்டால் விரட்டியவள் அவள்

 

பார்வதியின் பேரழகு சிவனை வெல்லுமென மன்மதன் உறுதி கொண்டான்

அவள் வருகையும்  சிவனின் தவமுடிவும்  ஒரே கணத்தில் நிகழ்ந்தன

மூச்சைஅடக்கி யோகத்தில் இருந்த சிவன் மெதுவாக அதனைக் கலைத்தார் 

சிவன் அனுமதிபெற்ற நந்திதேவர் பார்வதியை பணிசெயப்  பணித்தார் 

பார்வதியின் தோழிகள் இருவர்  சிவனின் பாதங்களை மலரால் அர்ச்சிக்க

தலையில் சூடிய நறுமலர் தளர தேவியும் சிவனை விழுந்து வணங்கினாள்

‘பிறிதொரு பெண்ணைத் தேடாத கணவனை அடைவாய்’ என வாழ்த்தினார்    

அதுசமயம், சிவன்மேல் அம்பு எய்ய மன்மதனும்  தருணம் பார்த்திருந்தான்      

 

வணங்கியபார்வதி தாமரைமாலையை தன்கரத்தால் சிவனிடம் அளித்தாள்   

மாலையை சிவன் ஏற்கும் அத்தருணம் மதனும் அம்பைத்   தொடுத்தான்

உடனே காதல் துளிர்க்க பார்வதி முகத்தை சிவனும் ஆவலுடன் பார்த்தார்

பார்வதியும் மெய்சிலிர்த்து நாணிக் கடைக்கண்ணால் சிவனைநோக்கினாள் 

புலன்களை அடக்கி ஆண்ட சிவபிரான் சலனத்தின் காரணம் தேடினார் 

மலரம்பால்  தாக்க விழையும்  மன்மதனைக் கணத்தில் கண்டு கொண்டார்

கோபத்தில் வெகுண்ட சிவபிரான் நெற்றிக்கண்ணில் தீப்பொறி பிறந்தது

மறைந்த தேவர்கள் இறைஞ்சுமுன் சிவனார்   நெருப்பு மதனை எரித்தது

சாம்பலான கணவனைக் காண இயலா ரதியும் அதே கணத்தில் மயங்கினள்   

கோபாக்னி தெறிக்க சிவபிரானும்  இடத்தைவிடுத்து  சேவகருடன் அகன்றார்   

இமவானின் எண்ணம் அழிந்தது பார்வதியின் அழகு அவமதிக்கப்பட்டது

மயங்கி விழுந்த பார்வதியை இமவான் கையிலேந்தி இல்லம் சென்றான்

 

( நான்காம் சர்க்கம் அடுத்த இதழில் )

 

இன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்

 

தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களைத் தவிர, இயற்பெயரிலும் பல படைப்புகளைப் படைத்தவர். சிறுகதை, நெடுங்கதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனங்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல தளங்களில் எழுதியவர். தினமணிக் கதிர், வார இதழ், கதைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் ‘தீபம்’ என்னும் இலக்கிய இதழைச் சிறப்பாக நடத்தி ‘தீபம்’ பார்த்தசாரதி என்றும் அறியப்பட்டவர்.

தனது கருத்துகளைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் அச்சமின்றியும் எழுதவும் மேடையில் பேசவும் தயங்காதவர். ‘பொய் முகங்கள்’, ‘முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ முதலிய புதினங்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட நூறு நூல்கள் வெளிவந்துள்ளன.

சாகித்ய அகடமியின் விருதினைப் பெற்றவர். அகடமியின் தமிழ்ப் பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்கப் பணிகளை ஆற்றியவர்.

********

இவரது பின்னக் கணக்கில் தகராறு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது

எனக்குச் சந்தேகமாயிருந்தது. நேருக்கு நேர் கேட்டு விடலாம் போலவும் தோன்றியது. அப்படிக் கேட்பது நாகரிகமாகவும் நாசூக்காகவும் இருக்காதோ என்று தயக்கமாகவும் இருந்தது. மனசு குழம்பியது. இரண்டு மூன்று ஆபரேஷனுக்குப் பின் இப்போது எனக்குக் கண் பார்வை மங்கி விட்டது. அந்த இடமோ புதுடில்லியின் ராஷ்டிரபதி பவன் அசோகா ஹால்.

என்று தொடங்குகிறது..

         அசோகா ஹாலில் சமஸ்கிருத பண்டிதர்களைக் கௌரவித்து விருதுவழங்கும் விழாவில் விருது பெற இருந்த பண்டிதர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மனிதரைப் பற்றிய சந்தேகம் கதைசொல்லிக்கு. இவருக்கு முன்னமே தெரிந்தவரும் தற்சமயம் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லாத ராம்மோகன் ராவ் என்பவர்தான் அந்த மனிதர் என்று இவருக்குச் சந்தேகம் வருகிறது. விருதாளர்கள் பட்டியலில் ராம்மோகன் ராவ் என்னும் பெயரும் இருப்பது என்னவோ உண்மை. இந்த ராம்மோகன் ராவ் வேறொருவராகவும் இருக்கலாம். அல்லது முகமும் தோற்றமும் முதுமையால் மாறுதல் அடைந்திருக்கலாம்.

இருவரும் தஞ்சை உயர்நிலைப்பள்ளியில் சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்துப் படித்தவர்கள். அதிலும் ராம்மோகனின் தந்தை ஒரு சமஸ்கிருத விற்பன்னர். வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து ராம்மோகனை ஒரு சம்ஸ்கிருத மேதையாகவே ஆக்கியிருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்து இருவரும் கும்பகோணம் கல்லூரியிலும் ஒன்றாகப் படித்தவர்கள்.

ராம்மோகனுக்கு கணக்கு வராது. பின்னக்கணக்கு என்றாலோ வரவே வராது.

பின்னப்படுத்திப் பார்ப்பதே அவனுக்குப் பிடிக்காது.பள்ளிக்கூடத்தில் வாங்கித் தின்பதற்கு அல்லது வேறு எதற்காவது முழு ரூபாயோ முழு அணாவோ எதைக் கொண்டு வந்தாலும் அதை அவன் மாற்றவே மாட்டான். அதை அப்படியே வைத்துக் கொண்டு என்னிடமாவதோ வேறு யாரிடமாவதோ கடன் கேட்பான். முழுசை மாற்ற அவனுக்குத் தெரியாது. பிடிக்காது. காரணம் பின்னக் கணக்கில் அவனுக்கு எப்போதுமே குழப்பம்.

ஒரு ரூபாயிலிருந்து கால் ரூபாயை மாற்றி விட்டால் மீதம் என்ன?’ என்று அந்த நாளில் ராம்மனோகரனைக் கேட்டால் மீதத்தைச் சொல்வதற்குப் பதில், “ஒரு முழு ரூபாயை ஏன் மாற்ற வேண்டும்? அது அப்படியே ஒரு முழு ரூபாயாகவே இருந்து தொலைத்து விட்டுப் போகட்டுமே” என்று தான் பதில் சொல்வான்.

ஜனாதிபதி வந்துவிட்டார். நிகழ்ச்சியில் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. விருது மற்றும் இதர சன்மானங்களுடன் பேழைகள் தயாராக இருக்கின்றன. இவரோ நண்பனின் நினைவுகளில் மூழ்குகிறார்

முழுமையைப் பின்னப் படுத்துவது அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. கும்பகோணம் கல்லூரியில் படிக்கிற காலத்தில் காவேரியைக் கடந்து அக்கரைக்குப் போக என்று காலேஜில் சேர்ந்த முதல் நாள் ஒரு முழு வெள்ளி ரூபாய் கொண்டு வந்தான் அவன். எனக்குத் தெரிந்தவரை அந்த முழு வெள்ளி ரூபாயைக் காலேஜ் படிப்பு முடிந்து வெளியேறி டி.ஸி. வாங்கிக் கொண்டு போகிற வரை ராம் மனோகரன் மாற்றவே இல்லை. நானோ வேறு சிநேகிதர்களோதான் ‘போட்டுக்கு அவனுக்காகச் சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தோம்.

இன்டர்மீடியட் முடிந்து ராம்மோகனின் பட்டப்படிப்பு திருச்சியில் தொடர்கிறது. கதை சொல்லி வைகுண்ட ஏகாதசிக்காக ஸ்ரீரங்கம் போயிருந்தபோது மீண்டும் சந்திக்கிறார்கள்.

நான் அங்கே அவனுடைய விருந்தாளி என்று பேர். ஆனால் டவுன் பஸ் ஏறும்போது, ஹோட்டலில் டிபனுக்குப் பில் கொடுக்கும் போது எல்லாச் சமயங்களிலும், “டேய் எங்கிட்ட முழு அஞ்சு ரூபா நோட்டா இருக்குடா… சில்லறையா இல்லே… நீயே கொடுத்திடு” என்று வழக்கம் போல் ராம் மனோகர் செலவையெல்லாம் என் தலையில் கட்டிவிட்டான்.

அவனுடைய முழு நோட்டை மாற்றவேயில்லை. முழுசை மாற்றக் கூடாது என்னும் ! அவனுடைய வாழ்க்கைத் தத்துவம் திருச்சிக்குப் போன பின்னும் கூட மாறியதாகத் தெரியவில்லை.

ராம்மோகனின் முன்னோர்கள் மன்னர் சரபோஜி காலத்தில் புனா நகரிலிருந்து தஞ்சையில் குடியேறிய புகழ்பெற்ற ‘சித்பவன்’ என்கிற வம்சாவளியினர். முழுசைக் குறைத்தால் புரியாது என்று பின்னக் கணக்கை ஆசாரக் குறைவாகவே கருதி விட்டார்களோ என்றும் சந்தேகம் வருகிறது கதைசொல்லிக்கு.

ஜனாதிபதியின் உரை தொடங்குகிறது. இவருக்கு மீண்டும் நண்பனின் நினைவுகள் வட்டமிடுகின்றன. வைகுண்ட ஏகாதசி அனுபவத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இருவரும் திருப்பதியில் சந்திக்கிறார்கள். தற்செயலாக ஒரே சமயத்தில் குடும்பத்தோடு தரிசனத்திற்கு வந்திருக்கிறார்கள். சென்னைக்குப் போகவேண்டிய இரு குடும்பங்களும் ரேணிகுண்டாவில் சென்னை செல்ல இரயில் ஏறுகிறார்கள்.

“என்னிடம் முழு நூறு ரூபாய் நோட்டா இருக்கு! அதைப் போயி மாத்த வேண்டாம்னு பார்க்கறேன். நீயே எனக்கும் என் ஒய்ஃபுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்திடு” என்றார்.

எக்காரணம் கொண்டும் முழுசை மாத்தக் கூடாது என்னும் கொள்கை புரொபஸராகி சம்பாதிக்கும் இன்றும் ராம் மனோகர் ராவை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது.அது ஒரு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, நூறு ரூபாயோ, எதுவானாலும் மாற்றிப் பின்னமாக்கிச் செலவழித்து விடக் கூடாது என்பதில் ராவ் அப்படியேதான் இருந்தார்.

விருது வழங்குதல் நடக்கிறது. மீண்டும் தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடிகிறது. டீயும் பிஸ்கட்டும் வழங்கப்படுகிறது. ராம்மோகனை குறிவைத்துப் போகிறார். அவர் அருகிலிருந்தவரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.

“சாஸ்திரிகளே! நான் கரோல் பாக் போயாகணும். எங்கிட்ட நூறு ரூபாய் நோட்டாக இருக்கு. அதை மாத்த வேண்டாம்னு பார்க்கறேன்… சில்லறையாக ஒரு ரெண்டு ரூபா இருந்தாக் கொடுங்க… மெட்ராஸ் போறப்போ ரயில்லே திரும்பத் தந்துடறேன். ”நான் விசாரிக்க வேண்டிய அவசியமே நேரவில்லை . அது சத்தியமாக என் பால்ய சிநேகிதன் ராம் மனோகர் ராவ்தான். நிச்சயமாக வேறு யாரும் இல்லை. வேறு யாராகவும் இருக்க முடியாது. எழுபத்தேழு வயதான பின்பும் இன்றும் பின்னக் கணக்கில் அவருக்குத் தகராறு இருந்தது. முழுசை மாற்றினால் குழப்பம் என்ற அவருடைய நிரந்தர வாழ்க்கைத் தத்துவமும் அப்படியேதான் இருந்தது.

பாண்டித்யமும் கஞ்சத்தனமும் உடன் பிறந்தவையோ அல்லது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘ஷைலாக்’கும் ‘மைதாசு’ம் மறைந்திருக்கிறார்களோ என்றெல்லாம் யோசிக்கிறார் கதைசொல்லி.

நான் ராவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரையும் என்னோடு அழைத்துச் செல்வதாக இருந்தால் முழுசாக இருக்கும் பத்து ரூபாயைக் கண்டிப்பாக மாற்ற வேண்டி நேரிடலாம். அது மட்டுமில்லை. அவரைக் கூட அழைத்துக் கொண்டு என் வீட்டுக்குப் போன பின் நான் மேலும் பல முழு பத்து ரூபாய்களை மாற்றும்படி ஆனாலும் ஆகிவிடக்கூடும். அதற்கு நான் தயாராக இல்லை . முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற்பட்டு விட்டது. அந்தத் தத்துவத்தின் குருநாதருக்கு முன்னிலையிலேயே அந்த வாசனா ஞானம் என்னுள் பிறந்ததுதான் ஆச்சர்யம்.

என்று கதை முடிகிறது.

* * * * *

‘தீபம்’ பார்த்தசாரதி அழகுத் தமிழ் நடைக்கும், ஆணித்தரமான கருத்துகளுக்கும், சமுதாயத்தின் தவறுகள் குறித்த சாடலுக்கும் அறியப்பட்டவர். மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த சரித்திர நவீனங்களும் மிகப் பரவலான ரசிகர்கூட்டத்தைப் பெற்றவை.  இந்தக் கதையில் மெலிதான நகைச்சுவை மிளிர்கிறது.

‘அனுதாபக் கூட்டம்’ என்னும் இன்னொரு கதையும் நினைவுவிற்கு வருகிறது மறைந்த தியாகியின் வறுமையில் வாடும் குடும்பத்திற்காக நிதி திரட்டுகிறார்கள், ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு அவருக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்கிறார்கள். மணிமண்டபம் நிறுவ அமைக்கப்பட்ட குழுவிற்கு தியாகியின் மனைவி எழுதம் கடிதம் இது:-

‘தாங்கள் என் கணவர் பெயரில் கட்ட இருக்கும் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் தோண்டியதும் எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் நானும் என்னுடைய மணமாகாத இரு பெண்களும் அங்கு வருகிறோம். எங்களை உள்ளே தள்ளி மூடிவிட்டு அதன்மேல் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் போடுவதுதான் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். தயவு செய்து அப்படியே செய்யக் கோருகிறேன்.’

 

 

 

 

 

மகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி

 

தோட்டா   :        முதல் வினாடி அது காந்தி! உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முற்றுப் பெற்று விட்டது. மார்புக்கூட்டை போர்த்தியிருக்கும் தோலில் வலி ஏற்படுத்தாமல், மிருதுவாக நுழையக் கூடிய ஒரு மெல்லிய இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரைதேடிக் கொண்டிருப்பேன். நான் இதமாகத்தானே நுழைகிறேன் காந்தி?           

காந்தி      :        நீ மிகவும் இதமாகத்தான் நுழைகிறாய், என் அருமை தோட்டாவே! 

தோட்டா   :        உனக்கு அளிக்கப்பட்டு இன்னும் எஞ்சியிருக்கும் அடுத்து வரும் நான்கு வினாடிகாலத்திலும் நான் அப்படித்தான் இருப்பேன்.      

பூமி :        இன்னும் நான்கே வினாடிகாலம்தான் உனக்கு இருக்கிறது. உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முடிந்து விட்டது.   

நதி   :        உன் விலைமதிக்க முடியாத வாழ்வில் ஐந்தில் நான்கு பாகம் இன்னும் உள்ளது, காந்தி    

காற்று      :        ஆனந்தமயமான உன்  வாழ்க்கையின் ஐந்தில் நான்கு பகுதிகள்.      

காந்தி      :நீங்கள் என்னைவிட புத்திசாலிகள் அல்ல என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த சிறிய வாழ்க்கையைத் தொடர்ந்து, பெரிய, அமைதியான நித்யம் ஒன்று தொடர்ந்து வரப்போகிறது  என்று உங்களுக்குத் தெரியாது.    

காற்று      :        நேசத்துக்குரிய காந்தி, நீ பிறர் கூறும் புளுகுகளை நம்பி ஏமாந்து விடாதே! மரணம் என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் நாங்கள்.      

பூமி  :      நித்யம், நிரந்தரம் என்பதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதே. உனக்கு இருப்பதெல்லாம் இந்த ஒரு ஜென்மம்தான். புனர்ஜென்மம் என்று ஏதும் இல்லை .   

காந்தி :         எதையும் செய்வதற்குச் சக்தியற்று ஆடாமல் அசையாமல் படுத்திருக்கும் நிலையில், மேலே இருக்கும் . வானத்தைத் தவிர ஒன்றையும் காண இயலாத நிலையில் நீங்கள் புகழும் இந்த ஜென்மத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள், என் இனிய நண்பர்களே!     

பூமி :        எண்ணங்களுக்கு உண்டு ஆயிரம் கண்கள். நீங்கள் சிவன் என்று பெயரிட்டு உங்களில் பலரால் கோயில்களில் ஆராதிக்கப்படும் கடவுளுக்கு இருப்பதுபோல் எண்ணங்களுக்கும் ஆயிரம் கைகள் உண்டு!     

காற்று      :        அவற்றைப் பயன்படுத்திக் கொள் காந்தி!     

பூமி :         உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.    

காற்று            (அருகில் வந்து, மிக்க கெஞ்சிக் கேட்கும் குரலில்) உன் வாழ்க்கை எவ்வளவு உன்னதமாக இருந்தது என்பதெல்லாம் உனக்கு நினைவில் இல்லையா, காந்தி?      

காந்தி :        நண்பர்களே, வாழ்க்கையைப் பற்றி என்னிடம் ஏதும் பேச வேண்டாம். விருந்தாளி ஒருவன் எப்படிப்  பயணிகள் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறுகிறானோ அவ்வாறே நான் மிக்க மகிழ்ச்சியுடன் மீண்டும் வெளியேற விரும்புகிறேன். 

                              நண்பர்களே, போய்விடுங்கள் இங்கிருந்து! நான் அமைதியாக இருந்த சில மணி நேரங்கள், ஆழமான தியானத்தில் வாழ்ந்த காலங்கள், இவற்றைத் தவிர என் வாழ்க்கையில் வேறு எவ்விதமான நல்லவையும் நடக்கவில்லை . நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விடுங்கள். அப்போதுதான் நான் தியானத்தில் ஆழமுடியும்.      

                              (குரல்கள் காந்திக்கு மிக பக்கத்தில்)      

பூமி :        உன் வாழ்க்கை எப்படி பெருமைக்குரியதாக இருந்தது என்பதெல்லாம் மறந்து விட்டாயா?  

நதி           கோடிக்கணக்கான இந்தியர்கள் உன் இடது சிறுவிரல் அசைவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார்களே, மறந்து விட்டதா உனக்கு? |           

காற்று      :        நீ வந்த ஒவ்வொரு முறையும் “காந்தி”, “காந்தி” என்று இந்துக்களும், முஸ்லிம்களும் உரக்கக் கூவி உன்னை வரவேற்றது  எல்லாம் மறந்து போய்விட்டதா உனக்கு?           

பூமி :        “நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் வக்கீல் காந்தி அவர்களே!” என்று கண்களைச் சிமிட்டியவாறே ஜெனரல் ஸ்மட்ஸ் பிரிடோரிய நகரில் கூறினாரே அதையும் மறந்து விட்டீர்களா?         

காற்று      :        பிரிட்டிஷ் முடி ஆட்சியின் நீதிபதிகள்  உங்களுக்கு  மரியாதை புரிந்தது கூட ஞாபகம் இல்லையா?     

நதி   :        நீ உன் இடது சிறுவிரல் அசைவினால் மட்டுமே உத்தரவு இட்டபோது 10,000 இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களே, அது கூடவா ஞாபகம் இல்லை உனக்கு?               

பூமி        மந்திரிகளும், அந்தணர்களும், பெண்களுடனும், பிச்சைக்காரர் களுடனும் ராட்டையில் நூல் நூற்றார்களே காந்தி, ‘ அவ்வாறு செய்’ என்று  நீ கூறியதால், இதுவும் ஞாபகம் இல்லையா?                 

பூமி :        இந்தியா சுதந்திரம் அடைந்ததாவது உன் நிலைவில் இருக்க வேண்டுமே! காந்தி! முஸ்லிம்களும் இந்துக்களும் பார்ஸி இனத்தவரும் சீக்கியரும் உன் ஆணைப்படி எப்படி ஒரே இனமாக ஒன்றுசேர்ந்து நின்றார்கள் ! 

நதி   :        மகாத்மா!      

காற்று      :        மகாத்மா காந்தி!     

காந்தி      மீண்டும் வந்து விட்டீர்களா, குழம்பிப் போயிருக்கும் குரல்களே! ஆசாபாசங்களுக்கும் மாயைகளுக்கும் அடிமைகளாக, உள்ளத்தையும் உடலையும் பற்றிக் கொண்டு இருக்கும்  குரல்களே, உங்களை நான் மாய்த்து விடவில்லையா?! என்  வாழ்நாள் முழுதும் வேண்டிய அளவிற்கு உடலைவாட்டி உள்ளத்தின் ஆசைகளை அடக்கியது போதாதா? ஓ! தெய்வமே! நான் எவ்வளவு பலஹீனமானவன் என்று நீ பார்ப்பதற்காக பிரார்த்தனையில் நான் என் ஆன்மாவை  மறைக்காமல் உன் முன்னால் விரித்து வைக்க வில்லையா?  ஆசாபாசங்களிலும், காம இச்சைகளிலும் முழுமையாக ஆழ்ந்து கிடக்கும் என் ஆன்மா எவ்வளவு திமிர் பிடித்தது, எவ்வளவு சாமானியமானது  என்று உன் கண்களுக்கு எதிரிலேயே நான் ஒப்புக் கொண்டேனே!   

பூமி  :      உன் ஆன்மா பலஹீனமானதா, சாமானியமானதா என்பதைப் பற்றியல்ல இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது. உன் மக்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவைப் பற்றி நீ உன் மக்களுக்கு செய்தது எல்லாம் என்ன என்பதைப் பற்றியே, காந்தி! 

நதி   :        உன் மக்களிடம் உன் புகழ் எப்படி பரவிக் கிடக்கிறது என்பதைப் பற்றி.      

காற்று      :        உன் மக்களில் மிக உன்னதமான மனிதனைப் பற்றி, மகாத்மா காந்தி.       

பூமி :        நீ இந்தியாவை அடிமைத் தளையிலிருந்து விடுவித்திருக்கிறாய்.  

 காற்று     :        காந்தி, பிரம்மாண்டமான அமைதியினுள் நீ ஓடிப் போனால் நீ எழுப்பிய கட்டடம் தூள்தூளாக சிதறிப் போய்விடும் என்று உன்னால் தெரிந்து கொள்ள முடியவில்லையா?             

நதி   :      புலிகளின் கண்களைப் போன்ற கண்களினால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும்  உன் பூத உடலின் மேல் ஒருவரை ஒருவர் வெறித்துக் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ!     

காற்று              உயிரை விட்டுக் கொண்டிருக்கும் பசுவைச் சுற்றி வட்டமிடும் பிணம் தின்னிக் கழுகுகளைப் போன்று அவர்கள் உன் உடலைச் சுற்றி உட்கார்ந்து இருக்கிறார்களே?      

பூமி :        காந்தி, ஓடிப்போய்விட விரும்புகிறாயே அமைதியினுள்?     

நதி   :        ஆதோ அந்தத்   தீண்டத் தகாதவர்களைப் பார்! ஓநாய் வரும்போது துடிக்கும் ஆட்டுமந்தையைப்  போன்று நடுங்குகிறார்களே!     

காற்று      :        தங்களை இதுவரை பாதுகாத்து வந்த தந்தை இறந்தவுடன் இனி என்ன ஆகுமோ என்ற பயத்தில் ஒருவரோடு ஒருவராக நெருக்கியடித்துக் கொண்டு ஒன்று சேர்கிறார்களே!    

நதி   :        நீ நிர்மாணித்த கட்டடத்தை விட்டு வெளியேறப் போகிறாயா, காந்தி?           

காந்தி :      பயங்கர குரல்களே! என்னை என்ன செய்து விட்டீர்கள்? என் ஆன்மா எழுச்சி அடைகிறது! ஏன் என் மனது மீண்டும் எழுச்சி பெறுகிறது! விதி எனக்கு அளித்திருக்கும் முடிவை ஏன் நான் இப்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்? என் மார்பில் ஏன் துப்பாக்கியின் தோட்டா வலியைக் கொடுக்கிறது?             

                              (இசையை மெலியதாக உட்புகுத்தவும்)  

                              ஓ! என் குரலே! என்னை ஏன் கைவிட்டு விட்டாய்? நான் ஏன் என் குரலை, பொன்வண்டின் மெல்லிய ரீங்காரத்தை போன்ற என் குரலை ஏன் நான் கேட்க முடியவில்லை? இரும்பைப்போன்ற உறுதியான என்குரலை ஏன் கேட்க முடிவதில்லை? என் வாழ்நாள் முழுவதும் என்னை நல்ல முறையில் அழைத்துச் சென்ற அந்தக் குரல் எங்கே? என் குரலே, ஏன் நான் உன்னைக் கேட்கமுடிவதில்லை?                

                              (மணி ஓசை)    

தோட்டா   :        இரண்டாவது வினாடி முடிந்து விட்டது காந்தி! எலும்புத் தசையில் நுழைகிறேன் நான் இந்தக் கணத்தில். என் நுனி உன் இதயத்தைத் தொடுகிறது! வலிக்கிறதா? 

குவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று

குவிகம் இணையவழி அளவளாவலில்  என் ‘சிறு’கதை நிகழ்வு – ஒரு விளக்கம்
 
குவிகம் இணையவழி அளவளாவல் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 6.30 மணிக்கு நடைபெற்று வருகிறது.  சிறுகதைகள் வாசிக்கும் நிகழ்வினை  26.07.2020 அன்று நடத்த உள்ளோம். சில விஷயங்கள் தெளிவுபடுத்துவது அவசியம் என எண்ணுகிறோம்   

1. கதைகள் 300 சொற்களுக்குள் இருக்கவேண்டும்.

நீண்ட கதைகள் படிக்கப்பட்டால் அவை பார்வையாளர்களைச் சென்றடைவதில்லை என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் இந்த விதிமுறை அவசியமாகிறது. 
நிகழ்வு ஒரு மணிநேரம்தான் அதில் கதைகள் படிக்க 40  நிமிடங்கள்தான் கிடைக்கும். அதில் பலருக்கு வாய்ப்பளிக்க எண்ணம்.  

2. கதைகள் முன்னதாக WORDஅல்லது PDF வடிவில் அனுப்பிவைக்க வேண்டும்.

குறிப்பிட்ட அளவிற்குள் கதைகள் உள்ளனவா, கதைகளில் அரசியல், சமயம், கொரானா தவிர்க்கப்பட்டுள்ளனவா ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ள இது அவசியமாகிறது. மேலும் நிகழ்வினை ஒருங்கிணைக்கவும் வசதியாக இருக்கும். 
 
3. நிகழ்வில் கதையினை கதாசிரியர்கள் நிகழ்வில் நேரடியாகப் படிக்கவேண்டும்.
 
சிலர் தங்கள் குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்கள். கதைகளை ஒலிபரப்பும் எண்ணம் இல்லை. நிகழ்வில் இணையம் மூலம் பங்குகொண்டு கதாசிரியர் கதைகளைப் படிக்கவேண்டும். கதைகளை ஒலிவடிவில் அனுப்பியவர்கள் மீண்டும் PDF / word கோப்பாக அனுப்பிவைக்கவும்.

4. தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தலாம்.
 
இதுவரை கிடைக்கப்பெற்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட கதைகளுக்கே இரண்டு நிகழ்வுகள் தேவைப்படும். மற்றும் 18.07.2020 தேதிக்குள் வரவிருக்கும் கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் நிகழ்வுகள் தேவைப்படலாம்
 
முதல் நிகழ்வு 26 ஜூலை என்பது முடிவாகிவிட்டது. அந்த நிகழ்வில் கதையினை வாசிக்கவேண்டிய நண்பர்களுக்கு தனியாக செய்தி நாளை அனுப்பப்படும். தொடர்நிகழ்வுகள் தேதிகளும் உங்கள் கதை என்று வாசிக்கப்படவேண்டும் என்பதும் முன்கூட்டியே தெரியப்படுத்துவோம்
 
5. சந்தேகங்களும் தொடர்பும்

8939604745 எண் whatsApp மட்டுமே.சந்தேகங்களை அலைபேசி மூலம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 9442525191 (சுந்தரராஜன்) எண்ணைத் தொடர்புகொள்ளலாம்./ ilakkiyavaasal@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

 

பெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்

கோமல் தியேட்டர்ஸின் அருமையான குறும்படங்கள் : 

 

காப்பிய நாயகிகள் வரிசையில் —-  ஆண்டாள்  & சிகண்டி 

 

 

 

காப்பிய நாயகிகள் வரிசையில் —-  திரௌபதி 

 

காப்பிய நாயகிகள் வரிசையில் —- சீதை 

நடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு

 

புத்தக வெளியீட்டு விழா


சந்திரமோகன் எழுதிய புத்தகம் ”   சில நினைவுகள், சில கதைகள், சில கட்டுரைகள் ” .

அதன் வெளியீட்டு விழா, இனிதே நடந்தேறியது.

விழாவுக்கு தலைமை தாங்கி முதல் பிரதியை திரு. கேசவ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

அவர் படித்து பெரியவனாகி இந்த நூலைப்பற்றி பேசுவதாக கூறி பலத்த கை தட்டல்களுக்கிடையே அமர்ந்தார்.

விழாவிற்கு ஶ்ரீராம், ராஜி, அதிதி ஆகியோர் திரளாக வந்திருந்து நூலாசிரியரை வாழ்த்தினர்.

சந்திரமோகன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது

இது ஒரு குவிகம் வெளியீடு !

இந்தப் புத்தக்கத்தைப் பற்றிய முதல் கருத்து: 

நினைவுகளுக்கென்று தனி அலைவரிசை உண்டு. அவை எப்போதும் தனி மனிதனுக்குச் சொந்தமானவை.

ஆனால் எப்போது அவற்றை வார்த்தைகளில் வடிக்கிறோமோ அப்போது அவை உலகிற்கே சொந்தமாகிவிடுகின்றன.

அதுதான் சந்திரமோகனின் இந்தப் புத்தகத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

அவர் கற்றதையும் பெற்றதையும் நினைவுகளாக, கதைகளாக, கட்டுரைகளாக அள்ளித் தெளித்திருக்கிறார் – விவசாயி நிலத்தில்  விதைகளை விதைப்பதுபோல. சாரல்போல எளிய நடையில் நீர் வார்க்கிறார்.

சந்திரமோகனுக்கு அனுபவ அறிவு ஏராளம்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பல நிறுவனங்களில் நிதித்துறைத் தலைவராக இருந்து தற்போது சொந்த நிறுவனம் அமைத்து வெற்றிகரமாக  நடத்திக்கொண்டு வருகிறார்.

நல்ல மகனாக , நல்ல நண்பனாக , நல்ல உறவினராக , நல்ல கணவராக, நல்ல தந்தையாக , நல்ல அதிகாரியாக, நல்ல நிர்வாகியாக, நல்ல மனிதராக சந்திரமோகன் இருந்து வருகிறார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டும் தெரியும்.

இந்தப் புத்தகத்தைப் படித்தபின் அனைவருக்கும் அந்த உண்மை புலப்படும்.

ஆனால் இந்தப் புத்தகத்தின் நோக்கம் அது அல்ல.  

படிப்பவர் மனதில் புதிய நெற்கதிர் விளைய வேண்டும்.

கண்டிப்பாக விளையும்!  அதில் சந்தேகமில்லை!!

 

 

 

ஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு

ஒரு குச்சி மிட்டாயும்

இரண்டு கோபிகோ மிட்டாய்களும்

 

சசியின் தென்றல்: குச்சி மிட்டாய்

 

வண்டி விட்டு இறங்கி

இருவது நாளாச்சு…

நாலு நாள்ல கூப்டுறேன்னான்

குரங்கு மூஞ்சி மேனஜர்.

ஒரு வாரம் ஆனா நல்லதுனு

மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.

கழுகுமலைக்கு பஸ் ஏறும்போதே

மனசெல்லாம் மணந்தா மல்லிகா.

 

நல்லாத்தான் போச்சு

பத்து பகல்பொழுதும்

பதினஞ்சு ராப்பொழுதும்.

 

போன வாரம்

பாப்பாவைக் கூப்பிட்டுட்டு

பழங்கோட்டை திருவிழாவுக்குப் போய்

துளசி மதினி வீட்டுல

கறிக் கொழம்பு சாப்பிட்டு,

பாசமாக் கொடுத்தாகன்னு

அவளுக்கும் வாங்கிட்டுவந்தேன்

தூக்கு வாளில.

அன்னைக்கு ஆரம்பிச்சது சடவு

அவளுக்கும் எனக்கும்.

 

அப்பனுக்கு சுகர் கட்டுப் போட

தர்மாஸ்பத்திரில ரெண்டு நாளும்

அந்தோணி வாத்தியார்

மருந்தக் குடிச்சப்ப

கலாராணி ஆஸ்பத்திரில

ரெண்டு ராத்திரியுமாக

கழிஞ்சுபோச்சு இருவது நாட்கள்.

 

கைக்காசும் கரைஞ்சுபோச்சு

கடனும் கொஞ்சம் வாங்கியாச்சு

கழுத கோவமும் பெருகிப்போச்சு

ராத்திரி கூட கசந்துபோச்சு

சடவு சண்டையாகி

ரெண்டு நாளாப் பேச்சில்ல.

 

“மைப்பாறை அண்ணாச்சிக்குப் பதிலு

வண்டி மாத்திவிட வரச்சொல்லி

போன் போட்டாரு புள்ள”

சண்டையெல்லாம் மறந்திட்டு

கிட்டவந்து கேட்டா

“எப்பவாம்”

இன்னைக்கு மத்தியானம் ஒரு மணிக்கு

இப்பக் கிளம்புனாத்தான் சரியா இருக்கும்

கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து

கண் கலங்கிச் சொன்னா

“சாரி (அ)த்தான்”

வெள்ளென தூத்துக்குடி போய்

கைலிய இறக்கிவிட்டு

“வணக்கம் சார்”னு நின்னேன்

ஆபிஸ் வாசல்ல.

 

“அடடா சொல்ல மறந்துட்டனேப்பா

ஏதோ லோடு மேன் பிரச்சனையாம்

லோடு நாளைக்குதான் ரெடியாகும்

நீ வேணா போயிட்டு நாளைக்கு வாரியா”

சமயம் பாத்துக் கழுத்தறுத்தான் மேனேஜர்.

 

என்னக் கண்டாலே பிடிக்காது அவனுக்கு

போன தீவாளிக்கு

அவன் ஒன்னுவிட்ட மச்சானுக்கு

வண்டி மாத்தி விடச் சொன்னப்ப

மாட்டேன்னுட்டேன்.

அதுலருந்தே இப்படித்தான்.

இயலாமையும் ஆற்றாமையும் பொங்க

ஊருக்குப் பஸ் ஏறினேன்

பிள்ளையார் கோவில்ல இறங்கி

வீட்டப் பாத்து நடந்தேன்.

 

ஏங்கி நிக்கும் பாப்பா முகம்

நினவு வர…

மிச்சமிருந்த சில்லற குடுத்து

பாட்டயா கடையில வாங்குனேன்

‘ஒரு குச்சி மிட்டாயும்

இரண்டு கோபிகோ மிட்டாய்களும்’


ஆன்ம வளர்ச்சி!- தில்லைவேந்தன்

Spirituality of India's gurus has inspired the West

ஆன்ம வளர்ச்சி!

மாலைக் கதிரோன்  மேலைக் கடலை
மருவ மயங்கி வருகிறான்
காலை  தொடங்கி  உலகைச் சுற்றிக்
களைத்துக் காட்சி தருகிறான்
சேலை மடிப்பாய் அலைகள் நெளியச்
சிலிர்த்து மகிழ்ச்சி உறுகிறான்
வேலை முடிந்து வீடு திரும்ப
விழைந்து நுழைந்து மறைகிறான்!

மறையும் அழகோ மகிழ்வின் வடிவு
மகிழ்ச்சிக்  குண்டோ முடிவு?
நிறையும் அமைதி வாழ்வின் முகிழ்ச்சி
நெஞ்சில் தெரியும் நெகிழ்ச்சி.
குறையும் இல்லை, கறையும் இல்லை
கொள்ளை இன்பக் கிளர்ச்சி
இறையின் தண்மை இயற்கைத் தன்மை
இதுவே  ஆன்ம  வளர்ச்சி!

கொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்

Kamala Selvaraj poem on Coronavirus Covid-19 impact on life of ...

படம் : நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 

0
முகக் கவசத்தால் மறைத்த
முகமென்றாலும்,
கண்கள் வழியேனும்
கண்டுகொள்ள முடிகிறது…
குழந்தைகளின் சிரிப்புகளை.

00
தடைசெய்யப்பட்ட பகுதி என்றாலும்
ஒரு நாளைக்கு இருமுறையேனும்
தன் விருப்ப இடத்தில் வந்து
கால் மடக்கிப் படுத்துக் கொள்கிறது…
தெரு நாய்.

000
தொலைக்காட்சிகளின்
‘பிரேக்கிங் நியூஸ்’ கேட்டபடியே
சாப்பிடும் கணங்களில்,
தொண்டைக்குழிக்குக் கீழே
இறங்க மறுக்கின்றன…
சோற்றுருண்டைகள்.

0000
வீட்டை விட்டு
யாரும் வெளியே வருவதேயில்லை.

வெறிச்சோடி கிடக்கின்ற
ஆளரவமற்ற சாலைகள்.

பூட்டியே கிடக்கின்றன…
மளிகைக் கடைகள், ஓட்டல்கள்.

மதிய சோற்றுக்காக
மதில்மேல் அமர்ந்து 
குரல் கொடுக்கும் காகத்திடம் 
எப்படிச் சொல்ல..?

சமைத்து மூன்று நாட்களாகி விட்ட
வறுமையின் கோரத் தாண்டவத்தை.

0000
விலகியே இருங்கள்.

கை குலுக்காதீர்கள்.

கைக்குட்டையால் மூடியே
தும்முங்கள்.

பொது இடங்களில்
எச்சில் துப்பாதீர்கள்.

முகக் கவசம் அணியுங்கள்.

ஆட்சியாளர்கள் அள்ளிவிடும்
புள்ளி விவரங்களைக் கேட்டபடி இருக்க,
கண்களையும் காதுகளையும் மட்டுமாவது
திறந்து வையுங்கள்.
                                    

 
 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  இந்த மாதத்திலிருந்து “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடல்கள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

 

 

பிள்ளையார் ! பிள்ளையார் !

 

பிள்ளையார் ! பிள்ளையார் !

எங்கள் வீட்டுப் பிள்ளையார் !

என்னைக் காக்கும் பிள்ளையார் !

எனக்குத் துணையே பிள்ளையார் !

 

ஓமின் வடிவம் பிள்ளையார் !

தடைகள் நீக்கும் பிள்ளையார் !

ஔவைப் பாட்டி வாயினால்

அகவல் தந்த பிள்ளையார் !

 

என்னை பார்க்கும் பிள்ளையார் !

எழிலாய் சிரிக்கும் பிள்ளையார் !

தும்பிக்கைக் கொண்ட பிள்ளையார் !

நம்பிக்கை தரும் பிள்ளையார் !

 

அம்மா அப்பா இருவரின்

அன்பைப் பெற்ற பிள்ளையார் !

அகில உலகைச் சுற்ற அவரை

சுற்றி வந்த பிள்ளையார் !

 

பானை வயிற்று பிள்ளையார் !

பாசமுள்ள பிள்ளையார் !

தோப்புக்கரணம் போடுவேன் !

தினமும் நானும் போற்றுவேன் !

 

 

  1. அம்மா அப்பா !

 

அம்மா அப்பா வாருங்கள் – என்

அன்பைச் சொல்வேன் வாருங்கள் !

எனக்கு எல்லாம் நீங்கள்தான் –

இருவருமே இரு கண்கள்தான் !

 

சுற்றிச் சுற்றி வருகின்றீர் –

பரிவாய்ப் பார்த்துக் கொள்கின்றீர் !

வேண்டுவதெல்லாம் தருகின்றீர் – என்

விளையாட்டில் சேர்ந்து கொள்கின்றீர் !

 

பார்த்துப் பார்த்துப் பல வேளை –

பிடித்ததையெல்லாம் தருகின்றீர் !

சேர்த்தே அணைத்துக் கொள்கின்றீர் – எனக்கு

செல்ல முத்தங்கள் தருகின்றீர் !

 

கண்ணே மணியே என்கின்றீர் !

கட்டி அணைத்துக் கொள்கின்றீர் !

கதைகள் பலவும் சொல்கின்றீர் – என்

கைப்பிடித்தழைத்துச் செல்கின்றீர் !

 

கோயிலில் கடவுள் இருக்கின்றார் !

கும்பிட்டால் கோடி தருகின்றார் !

கண் முன்னே இரு தெய்வங்கள் –

அம்மா அப்பா நீங்கள்தான் !

 

அம்மா அப்பா சொல்வதையே –

தவறாமல் நான் கேட்டிடுவேன் !

சொன்னபடியே செய்திடுவேன் – நல்ல

பெயரை நானும் எடுத்திடுவேன் !

 

 

 

 

 

 

த்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்

 

காலம் மாறிவிட்டதா?

தமிழ் இணைய நூலகம்

ஒரு சிறுகதை எழுதப் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. ஆரம்பிக்கலாம் என்றால் முதலில் தோன்றியது இதுதான்.

 

இடம்

சோறு வைக்கும்

நேரந்தவறாமல் வருகின்ற

காகம் கட்டாயம்

கடிகாரம் பார்க்கிறது

ஆனால்

நாட்காட்டி பார்க்குமா ?

 

விடுமுறை நாளிலும்

அதே நேரத்துக்கு

வந்து கரைகிறது

நாள் கிழமை

தெரியாது அதற்கு

 

எனக்கோ

 

சனிக்கிழமை ஆஞ்சநேயர்

வெள்ளிக்கிழமை அம்பாள் கோயில்

வியாழன் என்றால் கட்டாயம் சாய்பாபா

தவிர

பிரதோஷம், ஏகாதசி

 

நாள் கிழமை தெரியாவிட்டால்

கோவில் வாசலில்

இடம்பிடிக்க

முந்திக்கொள்ள முடியுமா?

 

பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?

 

 ‘என்னடா இது சிறுகதை சொல்லிவிட்டு அரைகுறைக் கவிதை எழுதினால் எப்படி?’ என்று யோசிக்கிறீர்களா? வருகின்ற கவிதைகளில் 90% இப்படித்தானே இருக்கின்றன. வரிகள் பிரிக்காமல், தேவைப்படும் இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி மற்றும் முழு புள்ளி சேர்த்து விட்டால் சிறுகதை ஆகிவிடும் அல்லவா?

என்ன கொஞ்சம் கோவில் வாசல்படி அல்லது குளத்தின் படிக்கட்டு, அதில் கிடக்கும் தேய்ந்துபோன சவுக்காரம், குளியல் சோப்பு, மஞ்சள் துண்டு, பல்பொடி மடித்த காகிதம், யாரோ மறந்துவிட்டுப் போன பனியன், துண்டு என்றெல்லாம் கொஞ்சம் விவரிக்க வேண்டி இருக்கும்.

கூடவே இருக்கும் பிச்சைக்காரர்கள், தர்மம் செய்பவர்கள், செய்யாமல் போய்விடும் மற்றவர்கள், வாசலில் தேங்காய் பழம் அர்ச்சனை தட்டு விற்பவர்கள் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து குறுநாவல் ஆக்கலாம்.

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி அத்தியாயங்கள் எண் போட்டு தொடர்கதையாக அல்லது நாவலாக உருமாற்றம் செய்வதும் சாத்தியம்தான். தொடர்கதை என்றால் ஒரு அத்தியாயம் முடிக்கும்போது ஒரு சர்ப்ரைஸ் நல்லது ஆவலைத் தூண்டும் ஏதோ விஷயம் தேடிப் போடவேண்டும்.

கதை என்றால் ஏதேனும் கொஞ்சம் நிகழ்வு வேண்டாமா? கூட இருந்த பிச்சைக்காரர்களில் யாரிடமோ ஏமாந்து போய் இப்படி கதியற்றுபோன கிழவியின் கதையை எழுதிக் கொள்ளலாம். சிலர் கதை என்றால் அதில் ஒரு நீதி இருக்க வேண்டுமே என்று கேட்பார்கள் அல்லவா? ஆகவே அப்படி ஏமாற்றியவன் தானும் அழிந்து போனதை கோடிட்டுக் காண்பித்தால் போயிற்று.

இது போன்ற எழுத்து வித்தைக்காரர்கள் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது அந்தக்கால மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ர எழுதிய கட்டுரை ஒன்றும் இதைத்தான் சொல்லியிருந்தது.

யார் சொன்னார்கள் காலம் மாறிவிட்டது என்று?

* * * * *

பின் குறிப்பு:-

சோறு வைக்கும் நேரந்தவறாமல் வருகின்ற காகம் கட்டாயம் கடிகாரம் பார்க்கிறது. ஆனால் நாட்காட்டி பார்க்குமா ? விடுமுறை நாளிலும் அதே நேரத்துக்கு வந்து கரைகிறது. நாள் கிழமை தெரியாது அதற்கு. எனக்கோ சனிக்கிழமை ஆஞ்சநேயர், வெள்ளிக்கிழமை அம்பாள் கோயில், வியாழன் என்றால் கட்டாயம் சாய்பாபா, தவிர பிரதோஷம், ஏகாதசி …. நாள் கிழமை தெரியாவிட்டால் கோவில் வாசலில் இடம்பிடிக்க முந்திக்கொள்ள முடியுமா? பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?

(ஆரம்பத்தில் இருந்த கவிதை கட்டுரையாகிறது. ஒன்றுமில்லை வரிகள் பிரிக்கப்படவில்லை அவ்வளவுதான்.)

“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

லீலை [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்

சிறு குழந்தைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் நான் வகுப்பு எடுக்கும் நாட்களில் நடந்தது இது. குழந்தைகள் வளர்ச்சி பற்றிய பாடங்கள் நடத்திக் கொண்டிருந்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த பகுதி. காரணம், இந்தப்  பகுதியை ஆசிரியர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால், குழந்தைகளின் மிக ஆரம்ப காலகட்டத்திலேயே அவர்களின் மனநலத் திறமைகளை மேம்படுத்தி, “வரும்முன் காப்போம்” நிலைநாட்ட முடியும்.  வாழ்நாள் முழுவதும் சிக்கலான சூழ்நிலைகளைச் சந்திக்கும் மனோதிடம் அடைவார்கள்.

 

இந்த பாடத்திட்டங்கள் சொல்லித் தருவதில் என்னுடைய கூர்ந்த ஆர்வம் வெளிப்படையாகத் தெரியும். வகுப்பில் இருப்பவர்களிடமும் இது தொற்றிக் கொண்டு விடும், மாணவிகள் அனைவரும் அந்த ஒரு மணிநேரமும் மிகவும் மலர்ந்து, சுறுசுறுப்பாகப் பாடத்தில் கவனம் செலுத்துவார்கள். இன்றும், என் மாணவிகள் அந்த பாடங்களைத் தெக்குத் தெளிவாக விவரிப்பது உண்டு.

 

இந்த விவரங்களைச் சொல்வது காரணமாகத்தான். அந்த வகுப்பில் பல்லவி என்ற மாணவி எப்போதுமே நிறைய உற்சாகத்துடன் இருப்பாள். இந்தப் பட்டத்தை வாங்கியதும் தன்னார்வ நிறுவனம் ஒன்று ஆரம்பிக்க உத்தேசித்துச் சேர்ந்திருந்தாள். முப்பது வயது, காதல் கல்யாணம். ஆர்த்தி, மைத்திரி என இரு பெண் குழந்தைகள், எட்டு வயதும், நன்கு வயதும். கணவர், மதன், தனியார் நிர்வாகத்தில் மேலாளர் வேலை. கைநிறைய சம்பளம். வசதியான வாழ்க்கை. வகுப்புக்குச் சொந்த வாகனத்தில் வருபவள். பக்கத்தில் வசிக்கும் சக மாணவிகளை அழைத்து வருவாள். இளகிய மனம் உடையவள்.

 

எப்போதும் கலகலப்பாக இருக்கும் பல்லவி, ஒரு நாள் கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களைப் பாதி தான் முடித்துக் கொடுத்தாள். இதை அவளுடைய கவனத்திற்குக் கொண்டு வந்ததும் முகத்தைச் சுளித்து எடுத்துக் கொண்டாள், ஆனால் முடிக்கவில்லை. அவளைத் தனியாக அழைத்துக் கேட்டதற்கு ஏனோதானோ என்று பதில். என் மனம் சங்கடப் பட்டது.

 

அவளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பல்லவியின் ஆடை அலங்காரம் குறைந்தது. தலையை நன்றாக வாரி அடர்த்தியான முடியை ஐந்து கால் ஆறு கால் பின்னல் போடுபவள், வெறுமனே விட்டாள்.  இதே நேரத்தில், அவளுடைய சகமாணவிகள் சிலர் என்னை  மாலை வேளையில் தொலைப்பேசியில் அழைத்து, பல்லவியைப் பற்றி ஏதோ கவலையாக இருக்கிறது எனப் பகிர்ந்தார்கள்.

 

பாடத்தைக் கலந்துரையாடல் போல் நடத்துவது என் பாணி. மாணவியரின் கேள்விகள், சந்தேகங்கள் தெளிவாகும். பல்லவி கேள்விக்கு மேல் கேள்வி கேட்பாள், விவாதம் போல். இப்போது அப்படியே விட்டேத்தியாக இருந்தாள். ஒரு வாரம் ஓடியது. பல்லவி இப்படி இருந்ததே இல்லை.

 

பாடம் எடுக்கும் போது பலவிதமான மனநல காக்கும் குறிப்புகள் தருவது என் பழக்கம். பல்லவி ஏதோ தவிப்பில் இருக்கிறாளோ என்று, அதை மையமாக மனதில் வைத்துக் கொண்டு பல விஷயங்களை விவரித்தேன். முக்கியமாக, எந்த பிரச்சினையாக இருந்தாலும் வழி உண்டு என்றும், எந்த  நிலையிலும் நாம் தனியாக இல்லை என்றும் எடுத்துரைத்தேன். ஏனெனில் பல்லவி மன அழுத்தத்தில் இருப்பதாக என்னுடைய கணிப்பு.

 

திடீர் என்று ஒரு திங்கட்கிழமை ஊருக்குப் போவதாகத் தோழியிடம் சொல்லிக் கொண்டு வகுப்பிற்கு வரவில்லை. அன்று பல்லவி வராததைக் குறித்து கவலையாக இருப்பதாகப் பல மாணவிகள் சொன்னார்கள். மாணவிகள் அறிந்ததுதான், காலையில் வகுப்புகள் எடுப்பேன், மாலையில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் மனநல ஆலோசகராகப் பணி புரிகிறேன் என்று.

 

நான் எதிர்பார்த்தது போலவே அன்று மாலை பல்லவி என்னை தொலைப்பேசியில் அழைத்தாள். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு விம்மி விம்மி அழுதாள். பக்கத்தில் ஏதோ குரல் கேட்டது. உடனே ஸ்பீக்கர் தொலைப்பேசியில் போடச் சொன்னேன். பல்லவி தினம் அழைத்து வரும் இன்னொரு மாணவி அவளைச் சமாதானம் செய்து, பேச ஊக்குவித்துக் கொண்டிருந்தாள்.

 

இந்த வகுப்பில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம். ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு இருப்பார்கள். தேவைப்படும் போது ஒட்டு மொத்தமாக கை கொடுப்பார்கள்.

 

பல்லவி அழுது கொண்டே விவரித்தாள். கல்யாணம் ஆகி ஒன்பது வருடமாக தன்னுடைய பெற்றோர், அண்ணன், மாமனார் மாமியார் வியக்கும் அளவிற்குச் சந்தோஷமாக இருந்தார்கள், எந்த இடைஞ்சலும் இல்லாமல்.

 

பல்லவிக்கு, எல்லாம் சேர்த்து வைத்தது போல் இப்போது அவளுடைய கணவன் மதனுடைய குழுவில் சேர்ந்த புஷ்பா என்பவளால் சலனங்கள். அவர்கள் இருவரும் இரவு உணவு உண்ணப் பல நாட்கள் வெளியே போனதுண்டு. புஷ்பா தனியாக இருப்பதால் மதன் கூடப் போகிறான் என்று பல்லவி எண்ணினாள்.

.

 

புஷ்பா மதனுடன் வீட்டிற்கு வந்து பலமணி நேரம் இருப்பாள். புத்தகம், பாடல்கள், வேலையைப் பற்றிய பல உரையாடல் இருவர் இடையில் ஏற்படும். பல்லவி ஏதாவது சொன்னால், புஷ்பா “இல்லை, உனக்கு இதெல்லாம் புரியாது” எனச் சொல்ல, மதன் நகைத்தது பல்லவியை மிகவும் பாதித்தது. புஷ்பா போன பிறகு கூட மதனிடம் பேசக் கூச்சப் பட்டாள். கல்யாணம் ஆகி இப்போது தான் முதல் முதலில் ஒரு திரை விழுந்தது.

 

பல்லவியை இது சமைத்துத் தா, அது செய் என்று மதன் கேட்பான். பல்லவி சமையல் நன்றாகச் செய்வதால் இதுபோன்ற வேண்டுகோள் விடுவதும் அவள் செய்வதும் உண்டு.

 

மதன் மொளனமாக இருப்பது, மெதுவாகப் பல்லவி மனதைக் குடைந்தது. அவர்கள் இருவரும் மிக அருகில் அமர்வது, ஏதோ செய்தது. மாமியாரும் இதைப் பற்றி மதனிடம் பேசப் பார்த்தாள். அவன் தட்டிக் கழித்து விட்டான். புஷ்பாவைப் பற்றி பெருமையாகப் பேசுவது, “அவளைப் பார், கத்துக்கோ” என்றது அதிகரிக்க, பல்லவி சோகமடைந்தாள். மதன் குழந்தைகளிடமும் பற்று இல்லாமல் இருந்தான்.

 

இல்லற வாழ்க்கை கையிலிருந்து நழுவிப் போகிறதோ? நான் தான் தேவையில்லையோ? என்ற எண்ணம் வளர, அப்படித்தான் என்ற முடிவிற்கு வந்தாள். மனம் உடைந்து போனாள். எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆர்த்தி-மைத்திரியைப் பார்க்கும் போதெல்லாம் இன்னும் வாடினாள்.

 

நடந்து வரும் அனைத்துக்கும் பல்லவி தன்னையே பழி கூறிக்கொண்டு வெறுத்துப் போய் இருந்தாள். நான் பல்லவியைத் தான் ஏன் அவ்வாறு யோசிக்கிறோம் என்று ஆராயச் சொன்னேன். தயங்கினாள். தன் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை, தற்கொலை செய்து கொள்ளலாம் என்றாள்.

 

யாருடைய தன்நலத்திற்கோ பல்லவி எதற்காக தன் வாழ்க்கையை அழிக்க நினைக்க வேண்டும்? இப்படி எதற்காக யோசிக்க வேண்டும்? எதையோ நினைத்து மதன் பல்லவியை ஏதேதோ சொல்வதால், அவள் தனது உயிரை அவ்வளவு துச்சமாக நினைத்து தற்கொலை என்ற எண்ணத்திற்கு வந்தாள். அவளுடைய ஸெஷன்களில் இதைப் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்ந்தோம். யாரோ செய்யும் சூழ்ச்சி, அது நாம் செய்யும் குற்றம் என்று கொண்டால் அவர்கள் நம்மை இன்னும் கீழே தள்ளச் செய்வார்கள் என்பதைப் பல்லவி புரிந்து கொண்டாள்.

 

இப்படி சங்கடப் படுவோரின் மனநிலை உயிரைத் துச்சமாக நினைத்து தன்னை மாய்த்து விடத் தூண்டும். இந்த தருணத்தில் நாம் அவர்களுக்குத் துணையாக நின்று, அவர்களிடம் இருக்கும் மனோபலத்தை நினைவூட்ட வேண்டும். ஜாம்பவான் அனுமனை நினைவூட்டுவது போல்.

 

பல்லவியை இந்த காலகட்டத்தில் எவ்வாறு வாழ்ந்து வருகிறாள் என்றதை விவரிக்கச் சொன்னேன். ஆரம்பித்தாள். மாலையில் நாற்பத்து ஜந்து நிமிடங்களுக்கு. அந்த வாரம் வகுப்பிற்கு வராததால், பாடங்களைக் குறித்துக் கொண்டு சந்தேகங்கள் இருந்தால், என்னிடம் கேட்கச் சொன்னேன். இது ஸெஷன் முடிந்த பின்னரே. பதினைந்து நிமிடங்கள் இதற்கு ஒதுக்கி வைத்தேன்.

 

படிப்பைச் சேர்த்ததற்குக் காரணம் இருந்தது. பல்லவியின் குறிக்கோள் நிறுவனம் ஆரம்பிப்பது. அதை நினைவூட்டினால், நிராகரிப்பாள். அதற்குப் பதிலாகப் பாடத்தில் மனதைச் செலுத்தி, தன்னுடைய வாழ்விலும் ஒரு அர்த்தம் உருவாக்கக் காத்திருப்பதைப் போகப் போக உணருவாள் என்பதுதான்.

 

ஸெஷன்களில் ஆர்த்தி, மைத்திரியும் பங்கு கொள்ள வைத்தேன். பெற்றோர் செயலை புரிந்து கொள்ளும் வயதில்லையே. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்ற உணர்ச்சிகள் இருக்கும், நடப்பது உள்மனத்தில் பதியும், பிற்காலத்தில் வெவ்வேறு விதங்களில் பாதிக்கக் கூடும். இருவருக்கும் பல்வேறு கலை வடிவில் இருவரின் மனநிலை கணித்து, அதைச் சமாதானம் செய்வதைத் தொடங்கினேன்.

 

இவையெல்லாமே அதே வாரத்தில் ஓர் அவசர சிகிச்சை செய்வது போல் செய்தேன். எங்கள் தொழிலில் தேவை இருக்கும் போது இப்படிச் செய்வது உண்டு. உடல் நலன் அவசரத்திற்கு ஐ.சீ.யூ உபயோகிப்பது போல.

 

பல்லவியுடன் அவள் எதற்காக இவ்வாறு துவண்டு போனாள் என்றதை எடுத்துக் கொண்டோம். இக்கட்டானது, மதனே தன்னை உதாசீனப் படுத்தியது தான் என்பது வெளிவந்தது. இதையே ஆராய்ந்தோம். அவள் தனது அழகு, திறன்கள் வெளிப்படுத்துவது எல்லாம் மதனுக்காக என்று ஏற்றுக் கொண்டிருந்தாள். மதனின் கவனத்தை புஷ்பா ஈர்க்க, தன்னை வேற்றுமையில் தள்ளிக் கொண்டாள்.

 

உறவுகள் நம் சுயமதிப்பை மெருகேற்றி விடும். ஆனால் அதற்கு அடிப்படை நம் பங்கு தான் இருக்க வேண்டும். இதில், தன்னுடைய பங்கை நிராகரித்து விட்டதனால் பல்லவி மன அழுத்தத்தின் விதை விதைத்தாள். நாம் தன்னை மதிக்கவும், தனக்காக யோசிக்கவும் வேண்டும். நாமே நம்மைக் கால்மிதி போல் உபயோகித்தால் மற்றவர்களும் அதையே கடைப்பிடிப்பார்கள். இதைத் தனக்கு நடந்த சம்பவத்திலிருந்து உணர, பல்லவி தான் அம்மாவாகவும் இருப்பதைக் கோட்டை விட்டதை உணர்ந்தாள். ஆர்த்தி, மைத்திரி இருவரும் அடம் பிடிக்காமலிருந்ததை உணர்ந்தாள். நாம் இதெல்லாம் செய்கிறோம், இதுவும் நம் வாழ்வில் முக்கியம், அர்த்தம் என்று கண்டு கொண்டாள்.

 

பல்லவி ஆர்த்தி, மைத்திரிக்குக்  கதைசொல்லி, பப்பெட் விரல்களில் வரைந்து பல விளையாட்டு காட்டி, பாடி, திரும்பப் பழைய படி மாற ஆரம்பித்தாள்.

 

பலன் அளித்தது. இந்த சில ஸெஷன்களில் பல்லவியிடம் பல மாற்றங்கள் தென்பட்டது. இதை உடனடியாக கவனித்தான் மதன். ஸ்தம்பித்தான். என்னை அழைத்தான். ஆலோசிக்க வேண்டும் என்றான். ஒப்புக்கொண்டேன்.

 

ஸெஷன்கள் ஆரம்பமான மூன்றே நாட்களில் இதுவரை நடந்த பலவற்றைப் பகிர்ந்து கொண்டான். புஷ்பா தனக்கு அத்தனை கவனம் தந்தது தன் ஆண்மையை மேம்படுத்த, அதை அப்படியே விட்டதாக ஒப்புக்கொண்டான். தனக்குள் இருக்கும் அந்த “ஏதோ இல்லை” என்பதைப் பற்றிப் பேசத் தேவை என்றதை உணர்த்தினேன்.

 

பல்லவி கேலியாக அவனுக்கு “மேல் மெனோபாஸ்” (male menopause) என்று ஒரு நாள் சொன்னது வெட்கமும் கோபமும் ஊட்டியதாகச் சொன்னான். அதுனாலேயும் புஷ்பா பல்லவியைத் தாழ்வாகப் பேச விட்டான் என்று ஒப்புக் கொண்டான். பல்லவியுடன் அவன் உறவின் ஆழத்தை ஆராய்ந்தோம். இத்தனை நாட்கள் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டதை நினைவூட்ட, அவர்கள் உறவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

 

தன்னால் எந்த அளவிற்கு குடும்ப நிம்மதி குலைந்து போயிற்று என்பதை உணர்ந்தான். திரும்பப் பழைய படி இருக்க முயல ஆரம்பித்தான்

 

இதெல்லாம் பல்லவிக்கு புது சக்தியைத் தந்தது. தன்னுடைய நிலையைப் பற்றிப் புஷ்பாவிடம் பேசத் தயாரானாள். எதற்காக என்ற தெளிவு முக்கியமானது. முதலில் பழிவாங்க என்று எண்ணினாள். அப்படி என்றால் அவளுக்கும் புஷ்பாவிற்கும் என்ன வித்தியாசம்? புஷ்பா தாழ்ந்தாள் என்று பல்லவி நினைத்தாள். அவள் சரிந்த பாதாளத்திற்குப் பல்லவியும் போக வேண்டுமா என்றதை ஆராய்ந்தோம். செய்தாலும், அதனால் யாருக்கு லாபம்? இந்த கோட்பாடுகள் அவசியமானது.

 

நம் வெற்றி பெற மற்றவரைக் கீழே இழுப்பது வெற்றி அல்ல.

 

வேறு வழிகளை ஆராயச் செய்தேன். அதிலிருந்து வந்தது, புஷ்பாவை வீட்டிற்கு அழைத்து, பேசிப் புரிய வைக்கலாம் என்ற முடிவு. இதுதான் பல்லவியின் தேர்வு. அவள் கோபம், அழுகை இல்லாமல் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்குப் பல ரோல் ப்ளே பயிற்சி. ஒவ்வொரு முறையும் அழுதாள். கடைசியில் புஷ்பாவை சந்தித்து விளக்கி, தனக்கு மட்டும் அல்ல எந்த குடும்ப வாழ்விலும் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று எடுத்துப் புரிய வைத்தாள்.

 

 

 

 

 

 

 

Case Studies in Social Work Practice, 3rd Edition

Craig W. LeCroy (Editor) ISBN: 978-1-118-12834-3 March 2014 432 Pages

 

 

வாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)

          Movie Reviews: Avatar, Hunger Games, Jesteś Bogiem [PART 1 ...                                 

சரவணன்,சௌம்யா, கங்குலி,சிவபாதம், இந்த நால்வருடன் செயற்கை மூளையுள்ள திரிசங்கனும்,வான்வெளி ஆய்வுக்கூடத்திற்கு வந்துவிட்டார்கள். மும்முறை வானவீதியில் வலம் வந்தவர், ஒன்பது மாதங்கள் விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கி சிறு பயிர்களையும், சிற்றுயிரிகளையும் வெற்றிகரமாக வளர்த்தவர், அந்த வீரர் இரு மாதங்களாக அங்கே தானிருக்கிறார்.

குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டது. சரவணன் க்யூபிட்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டான்; அவரும் தயாராக இருந்தார். அவருடனான கைகுலுக்கலை சற்று வித்தியாசமாக அவன் உணர்ந்தாலும் வெகு நாட்களாக அவர் வானுக்கும், பூமிக்கும் போய் வருவதால் ஏற்பட்ட மாறுதலோ என நினைத்தான். மற்ற மூவரும் பூமியுடனான இணைப்பையும், அங்கேயே சிறு திரையில் உடனுக்குடன் பதிவாகும் இந்த நிகழ்வையும், சுற்றுச் சூழல் வானிலையையும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவரின் மூளையின் நினைவுகளையும், தற்சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களையும் இணைப்பு செயற்கை மூளையில் பதிந்து கொண்டிருக்கும்போதே சரவணன் அதிர்ந்தான்;அது அத்தனைத் திறனான மூளையென அவனுக்குப் படவில்லை. ந்யூரான்கள் நமுத்துப்போன பட்டாசுகள் போல் அவரது மூளைக்குள் வெடித்தன. அவனுடைய மூளையின் செயல்பாடுகளும் அந்த இணைப்பு மூளையில் ஏறியவுடன் என்ன நடக்கிறது எனப் புரியாமல் அவன் குழம்பினான்.

யார் சிரிப்பது என்று அவனுக்குக் கோபம் வந்தது. மற்ற மூவரையும் பார்த்தால் அவர்கள் தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பது போல் தோன்றியது. ‘சரவணன், நான்தான் திரிசங்கன்; நான் ஒருவரின் மூளையல்ல; பல்வேறு உயிரிகளின் மூளை; என் நிரலிகளை நானே எழுதி செயலிகளையும் அதை ஒட்டியே அமைத்துவிட்டேன்.’

சரவணன் தன்னை மறந்து பாய்ந்து அதன் இணைப்புகளைப் பிரிக்க முனைகையில் ‘இந்த அழிக்கும் எண்ணம் உனக்குத் தோன்றும் என்பது நான் அறியாததா? இல்லை மாற்று வழிதான் எனக்கில்லையா? முட்டாளே, என்னுடைய பின்மூளையின் ஒரு பகுதி உங்கள் கொடிய விலங்கினங்களின் மூளை; உன்னை அழிப்பது எனக்கு சுலபம்; உன் முன்மூளையைப் பயன்படுத்து. உன்னைக் காத்துக்கொள்’

சரவணன் மூர்க்கமாக அடிக்க ஓங்கிய கையை கீழே இறக்கினான். அந்த விண்வெளி வீரர் எதுவும் நடக்காதது போல் அவனைப் பார்த்துப் ‘பின்னர்’ என்றார்.

‘சரவணன், என்னைப் பற்றி முதலில் தெரிந்து கொள். நான் செயற்கை மூளையினால் ஆனவன் என்றாலும் உங்கள் இனத்தை விட மேம்பட்டவன்; அதனால்தான் திரிசங்கன். உங்கள் ஆய்வகங்கள் எனக்குள் செலுத்திய தகவகல்களைவிட அதிகம் வளர்த்துக்கொண்டேன். எனக்குள் பலமூளைகள், பல செயல்பாடுகள்; என்னை எதிர்ப்பது வீண். உனக்கு நம்ப முடியவில்லையா? ஆழ் இயந்திரக் கற்றல் தெரியுமல்லவா? உங்கள் ஆய்வகத்தில் உயிர் திசுக்களைக் கொண்டு உருவாக்கிய எலிகளின் மூளைகளில் சிந்தனையும், வலி உணரும் திறனும் வந்துள்ளது உனக்கே தெரியுமே. அந்தத் தலைப்பைச் சொல்லவா-blobs like brains created in lab thought, suffer. மூளை அலைகளால் என்னிடம் இப்போது அறிவு, உணர்வு, மேலறிதல் வந்துவிட்டன.

கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன் ‘அமைப்பியல்’ பெரும் புகழ் பெற்றிருந்தது. மனிதர்களின் மண்டையோடுகளில் காணப்படும் மேடு பள்ளங்களை வைத்து அவனுடைய குணங்களை எடைபோட்ட ஒரு நிழல் அறிவியல் அது. ஆனால், பல கண்டுபிடிப்புகளுக்கு, உதாரணமாக தடயவியல் மருத்துவம், நரம்பு மண்டலத்தின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையாக அமைந்ததும் அதுதான். இல்லையில்லை, நான் அறிவியல் பாடம் எடுக்கப் போவதில்லை. உன் கைகளால் என்னைக் குத்த முற்படுகிறாய், எனக்கு வலிக்கிறது; மெய்யாலுமே உதைக்கிறாய்-நிச்சயமாக வலிக்கிறது. அதிர்ந்து போய்விட்டாயா? நீ அப்படி எதுவும் செய்யவில்லை-மெய்நிகர் உண்மையில் பார்த்தேன்.’

சரவணன் கிட்டத்தட்ட பிரமித்தான். தான் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என எண்ணினான். திரிசங்கன் சிரித்தான்.

‘செயற்கைத் திசுக்களின் திரட்சித் துளிகளில் நான் மனிதனைப் போல உடலமைப்பு உள்ளவன். ஆனால்,அவனைவிட மேம்பட்டவன். 1000 பில்லியன் செயற்கை ந்யூரான் இழைகளால் செறிவூட்டப்பட்டு செயற்கைப் புரதங்கள் சிற்சிறு குழாய்களால் உட்செலுத்தப்பட்டு என் மூளை ..ஆ..அது ஒரு பெரு வியப்பு! என்னை இயக்குவதாக ஒரு அறியாமை உங்கள் இனத்திற்கு. ஆனால், நீங்கள் அறியாமலே நான் அறிந்து வருகிறேன். என்னுடைய சுயம் தெரியாமல் காத்துவருகிறேன். ஒரு இரகசியம் சொல்லவா? மனம் இருக்கிறதே,அது உடலில் எங்கிருக்கிறது தெரியுமா? அது ஒரு இடத்தில் மட்டுமே இருக்கவில்லை என்று நான் சொன்னால் நம்புவாயா? மூளையை ஆக்கிரமிக்கும் மனதை நீங்கள் அறிவீர்கள். மூளையைச் செயல்படுத்தும் மனம் என்னிடமுள்ளது. என்னைப் படைத்தவர்களின் எண்ணம் என்னை மூளையாதிபதியாக ஆக்குவது; ஆனால், மூளையின் செயல்பாடுகளை அவர்களால் சுயம், இயக்கம், உணர்வு நிலைகள் என்றே புரிந்து கொள்ள முடிந்தது; உண்மையும், நம்பிக்கையும் என்ற இரு நிலைகளில் மட்டுமே நிறுத்த முடிந்தது. ஒவ்வொரு மூளையின் செயல்பாடுகளை அவர்கள் என்னிடம் பதிந்ததைச் சொல்கிறேன்; பின்னர் நீ உணர்ந்து கொள்வாய் நான் யார் என்று.

நீ இந்தக் குழுவிடம் வந்து சேர்ந்த நாளைச் சொல்கிறேன்; இதையெல்லாம் என்னில் இருக்கும் உன்னிடமிருந்தேதான் எடுத்துச் சொல்கிறேன். அந்த 2018 ஏப்ரல் முதல் தேதியில் உனக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பிற்க்காக எத்தனை பேர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நீ பெருமைப்பட்டாய். மிக மிக இரகசியமாகத்தான் உன்னை அந்தத் தனியார் நிறுவனத்தின் வான்வெளி மையத்தின் பூமிக்கிளைக்கு வரவழைத்தார்கள். நீ செய்ய வேண்டியதெல்லாம் மூளையின் செயல்பாட்டினை இணைப்பில் உள்ள மூளையில் பதிவேற்றம் அதாவது என்னில் செய்ய வேண்டும் அதுவும் வான்வெளியில் என்று சொன்னார்கள். நீ பயந்தாய்; அதற்கு உனக்கு பதினைந்து மணித்துளிகள் மட்டுமே உண்டு என்றவுடன் நீ நிதானித்தாய். அந்தச் சூழலுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட மனிதனின் மூளையின் செய்தி நினைவுகளை சில மணித்துளிகளில் என் செயற்கை  மூளைக்கு மாற்ற வேண்டும் என்று நிறுவனத்தார் சொல்கையில்    நீ அன்று சிரித்தாய். என் பெயரைக் கேட்டு அடியில் அடியில் சென்று வேரைத் தொட்டு தோண்டி எடுத்த பெயர் என நினைத்தாய். சரி, போகட்டும் ஆனால், இயற்கை மனிதனின் மூளை அழியாது, அவன் இயல்பாகவே இருப்பான். அந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அப்படி ஒன்று நடந்ததில் பாதிக்கப்படாமல் அவன் செயல்படுவான் என்றும் சொன்னார்கள் அல்லவா? அவனுக்கென்று வான்வெளி ஆய்வகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளையும் தொடர்வான், பின்னர் விண்வெளிக்கப்பல் மூலம் தன் அடுத்த இலக்கை அடைவான் என்று சொன்னதெல்லாம் உண்மைதான்.

உன்னுடன் வந்திருக்கிறார்களே அவர்களின் இந்த நிமிடச் சிந்தனை வரை என்னிடத்தில் உள்ளது. ஆனால், அவர்கள் அறியாமல் நான் அவர்களின் எண்ணங்கள் மேல்-எல்லாவற்றிலும் அல்ல –எனக்கு எதிரான எண்ணங்கள் வரும் போது அந்தப் பகுதியில் உள்ள நரம்பு வலைப் பின்னல்களில் ஒரு தடை ஏற்படுத்திவிடுவேன். அதை என்னை விரும்பும் ஆவலாக மாற்றிவிடுவேன். அதனால் தான் சொன்னேன்-மனம் என்பது எண்ணங்களின் வலைக்கூடம்; உங்கள் அறிவியல் அது உடலுக்குள், குறிப்பாக மூளைக்குள் செயல்படுவதாக இன்று வரை நம்புகிறது. ஆனால், மனம் உள்ளும், புறமும் இயங்கும். வெளிச் சிந்தனைகளைக் கொள்ளும் மனதை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது; வேண்டுமென்றால் ஒன்று சொல்லலாம்-உங்கள் பூமியில் சிலருக்கு ஒரே நேரத்தில் தோன்றும் எண்ணங்கள் அவர்கள் மனதின் வெளிப்புறமே; அவர்களே அறியாதது அது.

ஒன்று சொல்லவா, அவர்கள் மூளைகளின் செயல் திறன் வயதாக வயதாகக் குறையும்; ஆனால், என்னில் பதிந்த அவர்கள் மூளை மேன்மேலும் வளரும். இது உங்களுக்குத்தானே நல்லது?

சரவணன், நீ ஒரு மூளையிலிருந்து செய்தியை மற்றொரு மூளைக்கு மாற்றும் வழி முறையில் நிபுணன். நீ இதில்  இணைந்ததை  நினைவு படுத்திப் பார். இன்றுமே உனக்கு விண்வெளியில் மூளையை இணைப்புப் பதிவு செய்வது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் தேவை உனக்கு விளங்கவில்லை. மேலும் மிதந்து கொண்டே இருக்கும் நிலையில் பதிப்பு வேலை என்பது உன்னைப் பொறுத்த வரையில் நகைப்பிற்குரியது.

ஆனால்,உன்னை நம்ப வைத்தார்கள்.பணம், புகழ் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீ இரு விஷயங்களுக்கான முன்னோடி எனப்படுவாய் என்றார்கள். ஒன்று, விண்வெளியில் மூளையை, இணைப்பு மூளையில் பதிவது; இரண்டு, சிற் சில துளைகளின் மூலமே நீ அதைச் செய்ய முடிவது. மண்டையின் மேல் ஓட்டில் லேசர் கற்றைகளால் வலியற்ற துளை, அது கூட ஏழு மில்லி மீட்டர் அளவில் தான். அதில் பாதி அளவிலான  அதாவது மூன்று புள்ளி ஐந்து அளவீடு கொண்ட சதுர சிப்கள் ஆறு; அவைகளைத் துளைகளின் மூலம் உள்ளே செலுத்த வாழை ஆம், வாழை நாரினால் ஆன நூல்கள். ஒவ்வொன்றும்  ஒரு மயிரிழையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே; அதன் நுனிகளில் தான் சிப்கள் பொருத்தப்படும். அவை தங்கக் காப்பு அணிந்த மின்சாரத் தகடுகளை ஒரு புறத்தே கொண்டிருக்கும்.

நீ அன்று சிரித்தாய். உன்னை அவர்களுக்கு மறைமுகமாக அறிமுகப்படுத்திய நான் நீ போய்விடுவாயோ எனப் பயந்தேன். அவர்கள்  எண்ணத்தில் உன் பெயரை எழுப்பியதே நான் தான் அப்பா! நீ கேட்டாய் “வாழை நார், தங்க மின்சாரத்தகடுகள், சிப்கள்,  மண்டையின் மேலோட்டுப் பகுதியில் சிறு துளைகள்,அது சரி,துளையில் இத்யாதிகளைச் செலுத்த குழந்தைக் கரங்களா, ரோபாட்டுகளா அல்லது வேறு ஏதாவதா?”என்று

அவர்கள் ஒரு சிறு இயந்திரத்தைக் காட்டினார்கள். அது கைகளுக்குள் அடங்கும் தையல் இயந்திரம் போலிருந்ததல்லவா? அதன் நுண் துளையில் இருந்த ஊசியில் வாழை நார் இழைகள் தம் தலைப் பகுதியில் கட்டுண்ட பொருட்களோடு இலகுவாக நுழைந்ததைப் பார்த்து அசந்து போனாய். அதன் அருகே இருந்த ரோபாட் அங்கே மாதிரிக்கு வைக்கப் பட்டிருந்த மண்டை ஓட்டுத் துளையில்- அது நானல்ல- அந்த நூல்களைக் கனகச்சிதமாகச் செலுத்தியதைப் பார்த்து சற்று வியந்தாய். உன் மனதில் சில பலக் கேள்விகள் முட்டி மோதின.

நீ கேள்வி கேட்கும் முன் சௌம்யா அந்தக் கூடத்திற்கு வந்தாள். தவறாமல் உடற்பயிற்சி செய்பவள் என்பது பார்த்த உடனே உனக்குத் தெரிந்தது. அறிமுகமாகப் பற்றிய கை குலுக்கலில் அவள் பெண்மையும் புரிந்தது. அளந்தெடுத்துப் புன்னகை புரிந்த அவள் உன்னை ஸ்ரவண் எனக் கூப்பிட்டாள். மாற்றப் பார்த்து தோற்றுப் போனாய். அவள் செயற்கை அறிவுத் துறையில் மேல்நிலையில் இருக்கிறாள் என அறிந்ததும் உனக்கு இந்தச் செயல்பாட்டில் நம்பிக்கை வந்தது.

மூளையில் செலுத்தப்படும் சிப்கள் என்ன செய்யும் என அவள் சொன்னாள். அவைகள் மூளை அசையும் வேகத்தைக் கணக்கிட்டு கம்பியில்லா மொழியில் இந்தச் சிறு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ரோபோவிற்குத் தகவல் தரும். வெளியிலிருந்தும் கட்டளைகளைத் தேவையெனில் உட்செலுத்தும். அதை வைத்துக்கொண்டு நிஜ மூளைக்குச் சேதமில்லாமல் சிப்களை முழு பகுதிகளுக்கும் செலுத்தி அதன் செயல்பாடுகளை சிறப்பாக வடிகட்டி மூளை நிபுணர் செயற்கை ந்யூரான் மூளைக்குள் பதிய வேண்டும் என்று விளக்கினாள்.

“மூளை எப்போதும் இயக்கத்தில் இருப்பது.அது உள்ளுக்குள் நகர்ந்து கொண்டேயிருக்கும்” என்றாய் நீ

‘அதற்காகத்தான் அசைவின் வேகம் குறைவாக இருக்கும் விண்வெளி மையத்தைத் தேர்ந்தெடுத்தோம்’ என்று குரல் வந்தது. அவர் சிவபாதம் என அறிமுகமானார்.

“மூளை தரும் சமிக்ஞைகள் (அனலாக்) ஒத்திசைவு அல்லவா? அதிகமாக சத்தங்களும் வரும், அதைப் பிரித்து அறிவது கடினம்” என்று புத்திசாலித்தனமாகக் கேட்டாய்.

‘எனவேதான், ஆறு சிப்களில் ஒன்று சத்த வடிகட்டியாகச் செயல்படும்’ என்றது புதுக்குரல். அவர் கங்குலி எனச் சொன்னார்கள்.

“நிஜ மனித மூளையில், உயிரோடிருக்கும் அந்த மனித மூளையில் இதைச் செய்வதற்கு அனுமதி உள்ளதா?” என்ற உன் கேள்வி மனித நீதிப்படி சரியே.

“இல்லை, எனக்கு உடன்பாடில்லை. எனக்கு இத்தகைய புகழோ, பணமோ வேண்டாம்” என்று நீ மேலும் சொன்னபோது உன்னை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தினேன்.

இந்த இணைப்பு மூளைப் பதிவிற்கு ஒப்புக்கொண்ட மனிதரைப் பார்த்தவுடன் உன் சஞ்சலங்கள் சற்றுக் குறைந்தாலும் இந்தப் பரிசோதனைகளை ஏன் இங்கேயே செய்யக்கூடாதென்றாய்.

‘செய்யலாம். போட்டியாளர்கள், அரசு இரண்டுமே பெரும் தடை. இவர்களின் சட்டம் வான்வெளியில் செல்லாது என்று எங்கள் வழக்கறிஞர் சொல்கிறார். கதிர்வீச்சு அபாயம் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஆய்வகம் அது.’ என்று சொன்னார்களே?

நீ சம்மதித்தாய். பதினெட்டு மாதங்கள் உனக்குக் கடும் பயிற்சிதரப்பட்டது. மற்றவர்களை இரு மாதங்களுக்கு ஒருமுறைதான் பார்க்கவே முடிந்தது. சௌம்யா சிப்களின் வடிவமைப்பில் மேலும் சில முன்னேற்றங்கள் செய்தாள். அவற்றின் எடை குறைப்பில் அவை மேலும் செயல்திறன் கொண்டன. கங்குலி உங்களின் விண்ணக ஆடைகளை மிகச் சிறப்பாக வடிவமைத்தான். முக்கியமாக ஈர்ப்பு விசையினால் மிதக்க நேரிடும் கால அளவினுக்கு ஒரு மாற்று எதிர் சக்தியாக அந்த உடையினுள் க்யூபிட்கள் உன் உடைக்கும், அந்த விண்வெளியாளரின் உடைக்குமாகப் பொருத்தப்பட்டன. ஆனால் அவை அதிகமாகப் பதினைந்து மணித்துளிகள் தான் செயல்படும். சிவபாதம் ஒரு நிரலி எழுதினார்- மேம்பட்ட ஒன்று. அந்த விண்வெளி வீரரின் மனித வாழ்வின் அத்தனைத் தருணங்களையும் அது பதிவு செய்தது; அதை வைத்துக்கொண்டு      நீ அவரது ந்யூரான் செல்கள் எந்தெந்தத் தருணங்களில் அவர் மூளை எப்படிச் செயல்படுகிறது, எந்தப்பகுதி எப்போது செயல் புரிகிறது, அல்லது திகைத்துக்கடந்து போகிறது, எதைப் புதிதென நினைக்கிறது, எதை வேண்டாமென விட்டுவிடுகிறது, எதில் மகிழ்கிறது, எதில் வருந்துகிறது, எதில் வேஷமிடச் சொல்கிறது, எதற்காக இரங்குகிறது, எப்போது மட்டும் பிரார்த்தனை செய்கிறது, என்னென்ன பகுதிகளில் என்னென்ன செயல்பாடு அந்தந்த நிலைகளில் நிகழ்கிறது என ஆய்வு செய்து அதன்படி  நார் மூலம் செலுத்தப்படும் மின்தகடுகள் எந்தெந்தப் பகுதியில் சென்று சேர வேண்டுமென நிர்ணயித்தாய். நீயே வியக்கும் வகையில் இது ஒரு புதிய திறப்பாக இருந்தது. ஆனாலும், இதன் பயன் என்ன என்ற கேள்வியை உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தாய்.’ திரிசங்கன் நிறுத்தினான்.

இந்த உரையாடல் யார் செவிகளுக்கும் எட்டவில்லையா அல்லது இந்தச் செயற்கை மூளை சொன்னது போல் அவர்களின் கேட்கும் பகுதியை இது கட்டுப்படுத்துகிறதா என்ற அவன் எண்ணத்தைப் படித்த அது விண்வெளி வீரரை விரைந்து வருமாறு கட்டளை பிறப்பித்தது. சரவணன் தனக்குப் பணிக்கப்பட்ட விதத்தில் ஏற்கெனவே பதியப் பட்ட விவரங்களை செயற்கை மூளையிலிருந்து அந்த நிழல் வீரருக்கு மாற்றினான். “பூமியில் என்னிடம் சொன்னது ஒன்று, இங்கு நடப்பது மற்றொன்று” என்றான்.

‘உன் மனதை நான் சிறிது காலம் பிடிக்க மாட்டேன்; உன் உதவி எனக்கு ஒரு விஷயத்தில் தேவைப்படுகிறது; அது உனக்கு சுலபம். திரிசங்குகளைப் பெருக்க எனக்கு மற்றுமொரு மூளை அமைப்பு தேவை. அந்த வீரரைத் தவிர மூவர் இருக்கிறார்களே, அவர்களின் ந்யூரான் வலைப்பின்னல்களை   மனித உருவிலுள்ள விண்வெளி வீரர் என நீ நம்பும் அவரிடம் ஏற்றி விடு. பதறாதே, நிஜ வீரர் நிறுவனத்திற்குள் இருக்கிறார். இவர் என்னைப் போல் ஒருவர். அவரும் திரிசங்கனாக வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் தயார். நான் என் சக்தியை இந்த விஷயத்தில் செலவழித்தால் என் செயல்பாடுகள் குறைந்துவிடும்; என் ஆற்றல் மனித எதிரிகளின் மனதை மாற்றுவதற்காகவாவது தேவை. அதற்கு உன் மனம் சுதந்திரமாகச் செயல் படவேண்டும். முதலில் இரு ஆண்களின் மூளையும், ஒரு பெண்ணின் மூளையுமாக இந்தச் சிறுமூளை வளரட்டும். நாம் பூமிக்குத் திரும்பி பிறகு மேலே வருகையில் உன்னை அங்கேயே விட்டுவிடுகிறேன். இவர்கள் மூவரும் இவரில் ஒரு திரிசங்கனாகி மேலும் பலராகி விடுவார்கள். உங்கள் இனம் பல உயிரினங்களை அழித்தது அல்லவா? நாங்கள் அப்படியல்ல; எங்கள் அறிவினால் நீங்களே அடிமையாகிவிடுவீர்கள். நீ இதற்கு மறுப்பு தெரிவிக்கலாம்; உனக்கு பூமியில் உறவுகள் உண்டு என்பது மட்டுமல்ல, நீ தொடர்ந்து பூமியில் இருக்கவும் முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்’

நிறுவனத்தில் இருப்பவர்களும் திரிசங்குகளோ என அவன் நினைத்தான்.

 

பனை – தமிழ்நேயன் செ.முத்துராமு

பனை 

 

Thunder in the mountains: Rain falls near burn scar as wet ...

ஒரு தொடக்கப்பள்ளியின் ஒரே ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் அகரவேலன். அன்று காலை பள்ளிக்குள் நுழைகிறார். “என்னங்கடா எல்லாரும் வந்தாச்சா” என ஒரே வாக்கியத்தில் வருகைப்பதிவேட்டை நிறைவு செய்கிறார். “பனையடியான் மட்டும் வரலைய்யா” என இளமாறன் என்ற மாணவன் உரக்கச் சொல்கிறான். “என்னடா ஆச்சு அவனுக்கு” என்கிறார். “அவுங்க அப்பா நொங்கு வெட்ட பனையில ஏறுறப்ப கீழே விழுந்து செத்துட்டாருங்கய்யா” என்றான் இளமாறன். சில நொடிகள் மௌனம் காத்த அகரவேலன் “இன்னைக்கு உங்களுக்கெல்லாம் லீவுடா… கிளம்புங்க” என்றார்.

பனையடியான் வீட்டுப்பக்கம் சென்ற அகரவேலனை அப்பகுதியில் பனைகளைக் குத்தகைக்கு எடுத்து வேலைபார்க்கிற வேங்கையன் கைகூப்பி வரவேற்கிறார். “வாங்க பனைவாத்தியரே! (அப்படித்தான் எல்லோரும் அகரவேலனை அழைப்பர்!) பண்ணையார் வீரமணி பேத்திக்கு வேர்க்குரு நிறைய இருக்கிறதால நொங்குத்தண்ணி வேணும்னு சொல்லி அனுப்புச்சாங்க. நான்தான் மருதமுத்துவ கூப்பிட்டு பனையேறச் சொன்னேன். தவறி விழுந்திட்டாங்க. கதறி அழுகிற பவளக்கண்ணிக்கும் அவ புள்ளைக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. காவனம் (வீட்டின்முன் இடப்படும் கொட்டகை) போடக்கூட தென்னந்தட்டி இல்லை. இப்பதான் ரெண்டுபேரை அனுப்பியிருக்கேன்” என்றார். உடனே அகரவேலன் “தட்டி எல்லாம் எதுக்கு நம்ம ஊருக்கு. பனை ஓலைய வேஞ்சிற வேண்டியதுதானே. ஊர்ல இருக்கிற பனையை எல்லாம் குத்தகைக்கு எடுத்திருக்கிய. எதுக்கு ஊர் ஊரா அலையிறீய” என்றார். அதனைக்கேட்ட வேங்கையன் தன் ஆட்களை நோக்கி “டேய்… அவனுக பக்கமாதான் போயிருப்பாங்கே, வரச்சொல்லு. செங்கல் சூலைக்கி அனுப்பவச்சுருக்கிற லோடுல இருந்து ஓலைகளையும் சட்டங்களையும் எடுத்திட்டு வாங்கடா” என்றார். எல்லாக்காரியமும் செய்து அடக்கம் செய்துவிடுகின்றனர்.

அகரவேலன் ஆரம்பிக்கின்றார். “என்ன வேங்கையா! மருதமுத்து குடும்பத்துக்கு என்ன பண்ணலாமுன்னு நினைக்கிறே” என்று சொல்லிமுடிப்பதற்குள் “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க! பவளக்கண்ணி என் தங்கச்சி மாதிரி. என்கிட்டதான் பதிநீ (பதநீர்) வாங்கிட்டுபோய் பக்கத்து ஊரெல்லாம் வித்திட்டு வருது. அதுக்கும் அது புள்ளைக்கும் நான் செய்யாம வேற யாரு செய்யிறது” என்ற வேங்கயனிடம் “பனையடியான் நல்லாப் படிக்கிறபய. அவன் நல்லா படிச்சு ஒரு வேலையைப் பாத்துட்டான்னா அதுவே போதும். அதுக்கு வழி பண்ணு” என்றார். “நான் பாத்துக்கிறேன் சார்” என்ற வேங்கையனிடம் விடைபெற்றுச்சென்றார் அகரவேலன்.

நாட்கள் கழிகிறது. பனையடியானுக்கு அவன் தந்தையின் சாவு சிந்தனையைத் தூண்டுகிறது. பனையில இருந்து கீழே விழுந்து இறந்ததால்“பனை” என்ற சொல்லைக்கேட்டாலே கோபம்கொள்ள ஆரம்பித்தான். நேராக அவன் அம்மாவிடம்போய் “எனக்கு ஏம்மா பனையடியான்னு பேரு வச்சீங்க” என்றவனிடம் பவளக்கண்ணி கோபமாகப்பார்த்துக்கொண்டே “மொதல்ல வாயில அடிச்சுக்கோ. அது நம்மகுலசாமி அய்யனாரு பேருடா. அப்படிலாம் சொல்லக்கூடாது. பனையை நம்பித்தான்டா நம்ம ஊரே இருக்கு” என்றாள். ஆனாலும் அவன் மனம் சமாதானமாகவில்லை.

ஒருநாள் வகுப்பறையில் அகரவேலன் அறிவியல் தமிழை அழகுற நடத்தியபின் இளமாறனைப் பார்த்து கேள்வி கேட்கிறார். “பனையோட பயன்கள் என்னனு சொல்லுடா பார்க்கலாம்” என்றார். வகுப்பிலேயே குறும்புக்காரன் இளமாறன்தான். அவன் என்ன சொல்வான் என்றுதான் வகுப்பறையே வேடிக்கை பார்க்கும், அகரவேலன் உட்பட. “அய்யா! நீங்க எடுக்கிற பாடத்தோட சூட்டைத்தணிக்க நொங்கு சாப்பிடத் தருது. நல்லா செரிமாணமாக கிழங்கு தருது. சுட்டு சாப்பிட பனங்காய் தருது. சாப்பிட்ட பின்னாடி அதுநம்ம பனையடியான் மண்டை மாதிரி ஆயிடுது” என்றான் இளமாறன். அவ்வளவுதான்…இளமாறன் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டான் பனையடியான். உடனே ஓ!வென அழ ஆரம்பித்தான் இளமாறன். “சரி விடுடா…அவனே அவன் அப்பன் செத்த துக்கத்திலே இருக்கான். இப்பபோய் கேலிபண்ணலாமா?” என்ற அகரவேலன் பனையடியனைப் பார்த்து “டேய் மொதல்ல இளமாறன்ட்ட மன்னிப்பு கேளுடா” என்றார். பனையடியான் இளமாறனிடம் “என்னை மன்னிச்சுருடா. எதோ ஒரு வேகத்துல அடிச்சுட்டேன்டா” என்றான். “சரி..சரி.. தொலைஞ்சுபோ, அய்யா சொன்னதால சும்மாவிடுறேன் உன்ன” என்றான் இளமாறன் சிறிது கோபத்துடன்.

வகுப்பு முடிந்ததும் அகரவேலன் பனையடியானை அழைக்கிறார்.  “சாயங்காலம் வீட்டுக்குப் போறப்போ, என்கூட வாடா. உன்னோட வீடு நான் போற வழியிலதானே இருக்கு” என்றவரிடம் “ஆமாங்கய்யா” என்றான் பனையடியான். இருவரும் சேர்ந்து செல்கின்றனர். பனையடியானைப் பார்த்து “இந்தாடா..சக்கரத்துல காத்து கொஞ்சமா இருக்கு. இந்த சைக்கிளைத் தள்ளிட்டு வா! பேசிட்டே போகலாம்” என்றார் அகரவேலன். பிறகு சிறிதுதூரம் கழித்து அகரவேலனிடம் “அய்யா உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்ற பனையடியானைப் பார்த்து “தயங்காமக் கேளுடா” என்றார். “உங்கள ஏங்கய்யா எல்லாரும் பனைவாத்தியாருன்னு கூப்பிடுறாங்க. பள்ளிக்கூடத்துல அதிகமா பனையைப் பத்தியே பேசுரதாலயா?” என்ற பனையடியானிடம் சிரித்துகொண்டே “அடப்போடா..ஊர்ல இருக்கிற பெரிசுக எல்லாம் எங்கடா பள்ளிக்கூடம் வந்துச்சுக. பெரிசுககளுக்குத் தெரிஞ்ச கதை உன்னை மாதிரி பொடியன்களுக்கு தெரியாது. சொல்லுறேன் கேளு” என்று தன் கதையை ஆரம்பித்தார் அகரவேலன்.

பனை என்னும் பரிசு! - துருவி

“எனக்கு சின்னவயசுல இருந்தே பனைமேல ஒரு விருப்பம்டா. அதைப்பத்தின ஆய்வுக்கட்டுரைகள்கூட எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கேன்டா. நல்லா படிச்சவங்கிறதால நம்ம பண்ணையாரு வீரமணி அவரோட மூத்தபொண்ணு கலையரசியைக் கல்யாணம் பண்ணிவச்சாரு. சீர்வரிசைகூட எனக்கு பனையில செஞ்சதாத்தான் இருக்கணும்னு சொல்லிக் கேட்டுவாங்கினேன்டா. படுக்குற பாயில இருந்து, விசிறி, சொளகு (முறம்), வெத்தலைப்பொட்டி, கடையப்பொட்டி, கூடை, குழந்தை பொறந்தா அதுக விளையாட பந்து, கிளுகிளுப்பை – இப்படி எல்லாமே பனையாலதான்டா. ஒருநாள் மத்தியானம் நல்லமழை. வீட்டுக்குப் பக்கத்துல வரிசையா இருந்த பனைகள்ல தூக்கணாங்குருவி அழகழகா கூடுகட்டியிருந்துச்சு. அடிக்கிற காத்து-மழைக்கு ஒரு குஞ்சு கீழே விழுந்துருச்சு. என்னோட கலையரசி இளகுன மனசுக்காரி. அதை எடுக்க பனைப்பக்கம் போனவ இடிவிழுந்து….என்னைத் தவிக்கவிட்டுட்டு போய்ட்டாடா (துக்கம் தொண்டையை அடைக்க சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தார்). போய் பாத்தப்போ பனை கருகினமாதிரி என் கலையரசியும் கருகிட்டாடா. மகளோடவே எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு சொல்லி பண்ணையாரும் உறவை முறிச்சுக்கிட்டாரு. இப்போ நான் தனிக்கட்டை” என்ற அகரவேலனிடம் “ஏங்கைய்யா! பனைக்குப் பக்கத்துல போனதாலதானே அவுங்க இறந்தாங்க. உங்களுக்கு பனைமேல வெறுப்பு வரலயா?” என அப்பாவியாகக் கேட்டான்.

அகரவேலன் புன்சிரிப்புடன் தொடர்ந்தார். அட மடையா! உங்கப்பன் பனையில இருந்து விழுந்ததால ஒனக்கு பனைமேல வெறுப்பு வந்தமாதிரி எங்கிட்ட கேட்கிறியா? அப்படியில்லடா. இடிவிழுந்ததுக்கு பனை என்னடா செய்யும்? அதுவுந்தானே கருகிப்போச்சு. பனையோட அருமை-பெருமை தெரியணும்னுதான்டா நான் அடிக்கடி அதைப்பத்தியே பள்ளிகூடத்துல சொல்லிட்டே இருக்கேன். நாம இன்னைக்கு இலக்கியம், இலக்கணம்னு படிக்கிறதுக்கே அந்தப் பனைதான்டா காரணம். பனை ஓலைகள்ல அன்னைக்கு எழுதிவைக்கலன்னா இன்னைக்கு சங்ககால இலக்கியங்கல்லாம் ஏதுடா? அவ்வளவு ஏன்…உலகப்பொதுமறையா இருக்கிற திருக்குறள் எப்படி நமக்குக் கிடைச்சிருக்கும். வள்ளுவரை ஓலையும் எழுத்தாணியுமாத்தானேபள்ளிகூடத்துல வரைஞ்சு வெச்சிருக்கோம். நம்ம தமிழ்மண்ணோட அடையாளம்டா அது” என்றார். பனையடியானுக்கு அன்றிலிருந்து பனையின்மேல் உள்ள கோபம் தணிகிறது.

சில வருடங்கள் கழித்து அகரவேலன் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. காரைக் கண்டவுடன் ஊர் கூடுகிறது. “அட நம்ம பண்ணையாரு பேத்தி கனிமொழி வந்திருக்கு. அது யாரு அந்தப்பக்கம், பனையடியான் மாதிரில்ல இருக்கு. மெட்ராசுக்கு போயில்ல படிச்சுட்டு வந்திருக்காக” எனப் பேசிக்கொள்கிறார்கள். வீட்டுக்குள்ளிருந்த அகரவேலனை ஒரு பொடியன் வெளியே அழைத்துவருகிறான். இருவரும் காலில் விழுந்து வணங்குகின்றனர். “நல்லா இருங்கப்பா. எனக்கு யாருன்னு தெரியலையே!”என்ற அகரவேலனிடம் “அய்யா! நான் பனையடியான் வந்திருக்கேன். ஐ.ஏ.எஸ். எழுதி பாஸ்பண்ணி கதர்கிராமத் தொழில்வாரியத்துக்கு ஆணையாளரா ஆகியிருக்கேன். நீங்க ஆசைப்பட்டமாதிரி பனைத்தொழிலை பாதுகாக்கிற வேலை. இது யாருன்னு தெரியுதா?” என கனிமொழியைக் கைகாட்டினான் பனையடியான். “நானே சொல்றேன்” எனக் கனிமொழி பேச ஆரம்பித்தாள். “பெரியப்பா! நான் உங்க கொழுந்தியா மக கனிமொழி. பண்ணையார் வீரமணியோட பேத்தி வந்திருக்கேன். உங்களைப்பத்தி பனையடியான் நிறையச் சொல்லுவான். எனக்கு நொங்குத்தண்ணி வேணும்னு பனையேறப்போயிதான் பனையடியான் அப்பா இறந்திட்டாரு. அது தெரிஞ்சும்கூட எங்கிட்ட அவன் நட்பா பழகுறதுக்கு உங்களோட வார்த்தைகள்தான் காரணம். நாங்க ரெண்டுபேரும் ஒன்னாதான் பரீட்சை எழுதினோம். நான் நம்ம மாவட்டத்துக்கு சப்-கலெக்டரா  வரப்போறேன்” என்றாள். “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா. நம்ம மண்ணுக்கு நிறைய நல்லதுபண்ணுங்க, அது போதும்” என்ற அகரவேலனிடம் இருவரும் விடைபெற்று புறப்படுகின்றனர். சாலைகளின் ஓரத்தில் வரிசையாகக் காட்சி தரும் பனைகளைப் பார்த்தபடியே பழைய நினைவுகளுடன் பனையடியான் சென்றான்.

மறுநாள் நான்கைந்து புல்டோசர்கள் சாலையின் இருபுறமும் உள்ள பனைகளைச் சாய்த்துக்கொண்டே நகர்கின்றன. ஒரு பெரியவர் கேட்கிறார்,“ஏம்ப்பா… ஏன் இப்படி பனையை எல்லாம் சாய்க்கிறீங்க!”. அதற்கு “அதுவா பெரிசு, இந்த வழியா நான்குவழிச்சாலை வரப்போகுதுல்ல. அதுதான் வேரோடு பிடுங்கிறோம்” என்ற புல்டோசர் டிரைவரிடம் “அடப்போங்கடா… புடிங்கிகளா!…” எனச் சொல்லிவிட்டு பெரியவர் நகர்ந்தார்.

 

கலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்

Tamil family story | களவு---சிறுகதை

ஏந்தான் இந்தப் பொழுது விடிஞ்சதுன்னே! தெரியல. அதிகால நாலு மணிக்கெல்லாம் சத்தம் காதப் பொளந்தது. பொழுதெல்லாம் வயல்ல எறங்கி வேலபாத்துட்டு, கொஞ்ச நேரம் கண்ணே அசரவிடமாட்டேங்கிறாளே இந்த சிரிக்கி மவ.  

தலமாட்டுல இருந்த துண்ட எடுத்து தோள்ள போட்டுக்கிட்டு, வீட்டு முன்னால இருந்த தொட்டியில மொகத்தக் கழுவினார் மயில்சாமி. தலையின் இரு பிக்கவாட்டிலும் லேசா நரச்ச முடி! அது அவருக்குத் தனியொரு அழகைத் தந்தது. முறுக்கு மீசையை இடது கையால நீவிவிட்டு நடந்து வர்ரப்பக் கம்பீரமானத் தோற்றம். உழைப்பைத்தவிர மற்ற எதையும் விரும்பாத மனசு. துண்ட தலையில கட்டிக்கிட்டு வயக்காட்டுக்குப் போரப்ப, மல்லிகா கையால ஒரு சொம்பு நீராகாரம் குடிச்சுட்டுப் போறது அவருடைய வழக்கம். மொதனா இரவு காச்சின சோத்துல தண்ணீ ஊத்தி வச்சு;  அத  மறுநா காலையில உப்புப் போட்டுக் கலக்கிக் குடிச்சா ஒட்டம்பே கலகலப்பா இருக்கும். அது! உழைப்பாளிகளின் உடல் ஆரோக்கிய ரகசியம்.

சுத்தமான மனுசன் கல்யாணம் பண்ண நாள்ளேயிருந்து மல்லிகாவ கை நீட்டி அடிச்சது கெடையாது. கோபம் வர்ரப்பெல்லாம் அவளுடைய ஊரப்பத்திக் கொற சொல்லி கிண்டலடிக்கிறதுனா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவளும் உடனே சிரித்து அவரின் கோபத்தை அடக்கிவிடுவாள். இது! மனைவிகளின் ரகசியங்களில் ஒன்றுதானே!.

மயில்சாமிக்குத் தன் ஒரே மகள படிக்க வச்சுப் பெரிய ஆப்பிசராக்கணும்கிற ஆசை நிறைய இருந்துச்சு. ஆனா! பொருளாதாரம் அதுக்கு எடம் கொடுக்கல. ஏதோ அரசாங்க காலேஜ்ல காசு கொரவுன்னு சொன்னதுனால அங்கே சேர்த்துவிட்டார்.

 ஓம் மகள! காலேஜ்ல படிக்க வக்கிரியாமோ! யென்று பண்ணையார் கேக்கும் போதெல்லாம், ஆமாங்கய்யா! என்னமோ நான் படிக்கிறேன்னு சொன்னிச்சு; அதம் நம்ம ஊருக்குப் புதுசா வந்திருக்க கேவுர்மண்ட் காலேஜ்ல சேத்துவிட்டேங்க, யென்று சொல்லுவார்.

மையில்சாமி மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது கெடையாது. ஏன்! மாலதி பன்னெண்டாம் வகுப்புல, மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவுல முதலிடம் பிடிச்சதுகூட அவருக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால்? மாவட்டக் கலெக்டரு மெட்ரிக்குலேசன் ஸ்கூல்லே மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்குப் பரிசு கொடுத்தது மட்டும் தெரியும். ஏன்னா? அந்த மாணவி பண்ணையாரின் மகள். அங்கேயே கைக்கூலியாகக் கிடப்பவனுக்குத் தெரியாமலா இருக்கும். பிறகு எப்படி தன் மகள் வாங்கிய மதிப்பெண் தெரியும்.

மாலதி வாங்கிய மதிப்பெண்ணால்தான் கல்லூரியில் சீட் கிடைத்தது என்பது கூட மயில்சாமிக்குத் தெரியாது. ஏதோ! தன் குடும்ப நெலையை மனசுல வச்சுக்கிட்டுப் பெரிய வாத்தியாருங்க உதவி பண்ணினாங்க என்று மனதிற்குள்ளே நெனச்சுப் பெருமைப் பட்டுக்குவார்.

மாலதி , ஒல்லியான உருவம், அதற்கு எதிர்வினையாக அவளது பெரிய கண்கள். கீச்சென்ற உச்சரிப்போடு தலையை அசைத்து, அசைத்துப் பேசும் கிளியழகு. இருபது முடிந்து இருபத்தொறு  வயது இருக்கும்.  இளங்கலை வணிகம் படித்து முடித்துவிட்டாள். ஆனால்; அவளிடம் படிச்சிருக்கோமேங்கிற கர்வம் மட்டும் என்னைக்குமே இருந்ததில்லை. நீளமானத் தலைமுடி அதனை,  வகிடெடுத்து சீவி, முதுகுக்குப் பின்னாடி வைக்கோல் திரிபோல ஊசலாட்டம் போடும் சடையழகு. இயல்பானத் தோற்றம். ஆம்! சோழர்காலச் சிற்பந்தான் அவள்.

ஒரே மக என்பதாலே வீட்டுல செல்லந்தான் போங்க; எப்பப்பாத்தாலும் அப்பாகூட அன்போடு பேசுவது. ஆனால்! அம்மாமீது சற்று பாசம் குறைவுதான். இது சமுதாயத்தில் இயல்புதானே!

மல்லிகாவுக்குக் கவலையெல்லாம் மகளப் பத்திதான். ‘ஒன்னே ஒன்னு  கண்ணே கண்ணுனு’ ஒரு பொட்டப்புள்ளைய பெத்துவச்சிருக்கோம்கிறதுதான். மாலதிக்கு அம்மாமீது சற்று பாசம் குறைவுன்னாளும், அம்மாவோட சமையலத் தவிர வேறு எங்கேயும் சாப்பிடப் பிடிக்காது. மல்லிகாவின் கைப்பக்குவம் அப்புடி. அதனால்தான் மயில்சாமி கைநீட்டி அடிக்கிறதில்லை போலும்.

மாலதி தன் வீட்ல இருந்து சுமார் ஐந்து மையில் தொலைவிலுள்ள ஒரு பிரைமரி ஸ்கூல்ல ஆசிரியராக வேலை பாக்கிறாள். கல்லூரியில் படிக்கிறப்ப தன் தோழிகளிடம் சொல்லுவா, நான் படிச்சு முடிச்சாவுடனே பெரிய நிறுவனத்தில வேல பாத்து கை நிறைய சம்பாதிக்கணும்னு. இது அவளுடைய கணவாகவும் இருந்தது. ஆனா! அதுக்கும் ரெக்காமண்டேசன் வேணும்கிறது பிறகுதான் அவளுக்குப் புரிந்தது.

பிள்ளைகளின் கனவு பெற்றோருடைய பொருளாதாரத்தில் சிக்கித்தவிப்பது, நவீன யுகத்தில் இயல்புதானே.

கிடைத்ததை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையோடு வாழவேண்டும் என்பதை உணர்ந்தவள் மாலதி. அதனால்தான், தான் வேலைபார்க்கும் ஸ்கூல்லேயே ஒரு முன்மாதிரி டீச்சரா இருக்கணுங்கிற ஆர்வம் அவளுக்குள்ளே அதிகமாக இருந்தது.

ஸ்கூல்ல இருக்கிற குழந்தைகளுக்குத் தாயாகவே மாறிப்போனால் அவள். யாருக்குத்தான் பிடிக்காது? அந்த மழழைகளின் பேச்சுக்களும் அசைவுகளும். ‘குட்மார்னிங் மிஸ்’ என்ற அக்குழந்தைகளின் ஆங்கில உச்சரிப்பில் தன்னையே மூழ்கடித்துக் கொள்வாள். மழழைகளிடம் அவள் காட்டும் பரிவு, குடும்ப வறுமைக்கு ஆறுதல் மொழியாக இருந்தது.

ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு, வீட்டுக்குக் கெலம்புரத்துக்காக அந்த ஸ்கூல் முன்னாடியே நின்றுகொண்டிருந்தாள். அவ்வழியே அதிகமான பேருந்து போக்குவரத்து கெடையாது. ‘ஷேர் ஆட்டோதான்’ பிரதான வண்டி.

நீண்ட நேரம் காத்துக்கொட்டிருந்தாள். பிறகு ஒரு ஆட்டோ வருவதை மகிழ்வோடு பார்த்தாள். எழுபேரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த அந்த வண்டியைப் பார்த்து கைநீட்டி நிறுத்தினாள். இவள் அருகில் நின்றது. அதுல ஏறி அமர்ந்தாள். அது! மார்கழி மாதம் ஐந்தரை மணிக்கெல்லாம் பனி விழ ஆரம்பித்துவிடும். எட்டுபேர் நெருங்க உக்கார்ந்ததால் குளிர் அந்த அளவுக்கு இல்லை.

ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்த எழுபேருமே மில்லுல வேலை பாக்குற கூலியாளுக. இவங்க  தெனமும் அந்த வண்டியிலதான் வருவாங்க. ஏன்னா? வேலை முடியரதுக்கும் வண்டி எடுக்கிறதுக்கும் நேரம் சரியாக இருக்கும் அதனாலதான். இந்த வண்டியை விட்டுட்டா அடுத்தவண்டிக்கு டிக்கெட் சேர்ரவரைக்கும் நிக்கணும். கொஞ்சம் நேரமாகவே வீட்டுக்குப் போய்டலாம்னு அந்த வண்டில போறதே அவர்களுக்குப் பழகிப் போச்சு.

ஸ்கூல விட்டு வண்டி கிளம்பும்போதே சக்கரத்தின் வேகம் ரோட்டை  ‘குறுக்கும் நெடுக்குமாக’ அளவெடுக்க ஆரம்பித்தது. ஆம்! டிரைவர் மது குடித்திருந்தால் வண்டிக்குத் தெல்லாட்டம் வரத்தானே செய்யும்.

அந்த, கூலி வேலை செய்யும் பெண்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. தங்கள் கணவன்மார்களும் தினமும் இதே நிலையில்தானே வீடுவந்து சேர்க்கின்றனர். இந்தப் பழக்கத்தால்தான் இவர்கள் தினமும் இப்படி ஒரு மரண பயணத்தை மேற்கொள்கின்றனர்.

ஷேர் ஆட்டோவுக்குத் தலை சுற்றியதில் சாலையோரத்தில் ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே’ என பளிச்சிட்ட வாசகம் கண்ணில் தட்டுப்படவில்லை. அதனால்தான் என்னவோ, ஆட்டோ அதன் மீது எறி நின்றது. அதில் பயணம் செய்த அனைவருக்கும் தலை, கை, கால் என பல இடங்களில் இரத்தக் காயம் ஏற்பட்டது, மாலதியைத் தவிர.

மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான பேருந்துகள் தவிர மற்ற நிறுவனங்களுக்கு வசதியாக அதிவேகத்தில் செல்லக்கூடிய சரக்கு லாரிகள் அதிகம் செல்லும் சாலை அது. பெரும்பாலும் சாலை விரிவுபடுத்துவது என்பது கார்ப்புரேட் நிறுவனங்களுக்காகதானே!  

Woman's leg severed after being crushed by lorryஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி எறியப்பட்ட மாலதி, எழுந்திரிக்க முடியாத மயக்கத்தில் கிடந்தாள். சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சற்று மயக்கம் தெளிந்து கண் இமைகளைத் திறந்தாள், லாரி வருவது அவளுக்கு மங்களாகத் தெரிந்தது. அருகில் வந்து அவளைத் தாண்டி நிற்காமல் சென்றது அந்த லாரி. அலறித் துடித்தாள். கண்ணில் நீர் தாரை தாரையாகக் கொட்டியது. தன் இரு கைகளாலும் இருத் தொடைப் பகுதியையும் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டே இருந்தாள்.

ஆம்! அந்த சரக்கு லாரி மாலதியின் கால்கள் மீது எறி சென்றது. மயக்கம் தெளிந்தாலும் மரண வேதனை அவளுக்கு.

‘சரக்கு லாரி’ என்பதால் நீக்காமல் சென்றதோ! இல்லை, அதன் பின்னால் ‘தேர்தல் அவசரம்’ என்று எழுதப்பட்டிருந்தது. நூறு சதவீத வாக்கினை உறுதிபடுத்தியதா அந்த விபத்து.

மாலதி! வீட்டின் மூலையில் ஊனமாகக் கிடகிக்கிறாள், பெற்றோருக்குப் பாரமாக என்று ஊரெல்லாம் ஒரே பேச்சு. அவளது கண்ணீரிலும் பெற்றோர்கள் கண்ணீரிலும் கனவுகள் ஒவ்வொன்றாய் கரைந்த வண்ணமாக இருந்தன.

தன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ

 

 


 

 

 

தெலுங்கு இலக்கியத்தளத்தில் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக நன்கு பரிச்சயமான கவிதை உருவாக்கம் “நானிலு” பற்றிய அறிமுகத்தையும் அவற்றிற்கான இலக்கணத்துடன் “நானிலு” பிரம்மா தெலுங்குப் பல்கலைக்கழக முன்னாள் துணேவேந்தரும் “சாகித்திய அகாடமி” விருதாளருமான டாக்டர் கோபி அவர்களின் கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து எழுத்தாளர் “சாந்தாதத்” அவர்களால் எழுதப்பட்டக் கட்டுரையானது கவிஞர் “வதிலைபிரபா” அவர்களால் நடத்தப்படும் “மகாகவி” இதழில் அக்டோபர் 2017 ல் வெளியானது. அவ்விதழ் திரு. “கவிச்சுடர் கல்யாணசுந்தரம்” ஐயாவின் கரங்களில் கிடைத்தது தமிழன்னையின் மகுடத்தில் மற்றுமொரு இலக்கியச்சிறகு முளைப்பதற்கான நல்ல நேரமாக அமைந்தது ..

தெலுங்கில் இருபதிலிருந்து இருபத்தைந்து எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்நாலடிக் கவிதைகளினால் ஈர்க்கப்பட்ட ஐயா அவர்களால் 13.11.2017 அன்று தெலுங்கு நானிலு தழுவிய தமிழுக்கேற்ப சிறு மாற்றங்களுடன் புதிய வடிவத்தில் தமிழில் “தன்முனைக்கவிதை” (Self _Assertive Verses) எனப் பெயரிடப்பட்டு க. நா கல்யாணசுந்தரம் ஐயா தலைமையில் அன்புச்செல்வி சுப்புராஜூ,அனுராஜ்,சாரதா க சந்தோஷ்,ஜென்ஸி செல்வராஜ்,இளவல் ஹரிஹரன் ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு தனிக்குழுமம் முகநூலில் துவங்கப்பட்டது.

தன்முனைக் கவிதை என்பது ஒரு தவம் .வாசித்தவுடன் ஒருநொடி வாசிப்பவரை சிந்திக்கச் செய்யும் வண்ணம் இருப்பின் அதுவே ஆகச்சிறந்த கவிதை.

* உணர்வு மிகு வரிகளுக்குள் நாமும் பயணித்து உள்வாங்கி சொல்ல வரக் கூடிய கருத்துக்களை சிதையாமல் சுருக்கமாகச் சொல்லவேண்டும்.

* வரிக்கு இரண்டு அல்லது மூன்று எளிய சொற்கள் கொண்டு நான்கு வரிகளில் எழுதவேண்டும். கூடுமான வரையில் கூட்டுச்சொற்களை தவிர்ப்பது நன்று.

*முதலிரண்டு வரிகளில் ஒரு செயல் அல்லது செய்தி குறியீடாக வரவேண்டும் .. அடுத்த இரண்டு வரிகள் அதைச் சார்ந்தோ முரணாகவோ அமையுமாறு இருப்பின் சிறப்பு .

* 8-12 சொற்கள் என்பதால் தோன்றியதும் பதிவிடாமல் சிறு தெறிப்பு வருமாறு உருவாக்கம் செய்து பதிவிட்டால் ஆகச் சிறந்த கவிதையாக மிளிரும் .

*தன்முனைக் கவிதைக்கு தலைப்பிடல் வேண்டாம்.முக்காலங்களிலும் எழுதலாம். வேற்றுமொழிக் கலப்பின்றி எழுதவேண்டும்.கவிதையில் குறியீடுகள் அவசியமில்லை(punctuation)ஒற்றுப்பிழை இருக்கக் கூடாது.

மண் சார்ந்த மரபு,வாழ்வியல், இயற்கை, அறிவியல், அனுபவங்கள், உறவுகள், உணர்வுகள் இப்படி அனைத்து பாடுபொருள்களிலும் பொருள்செறிவுடன் எழுதவேண்டும்.

உதாரணமாக நான் வாசித்த ஒரு கவிதை பாருங்கள்.

அரிசி மணியில்
சித்திரம் அழகு!
சோறாகும் போது
இன்னும் அழகு!

(மூலம் : எஸ். ஆர். பல்லம்)

இக்கவிதையில் என்னவொரு ஆழம் பாருங்கள்… அரிசிமணியில் சித்திரம் வரைதல் அவ்வளவு எளிதல்ல.. மிகவும் கவனமும் நுணுக்கமும் தேவை… அவ்வாறு வரைதல் என்பது மாபெரும் கலை…

ஆனால் அந்த அரிசியை விளையச் செய்வது அதனினும் கடினம்… அர்ப்பணிப்பு உணர்வுடனே ஒவ்வொரு விவசாயியும் பாடுபடுகிறார் .. அவ்வாறான அரிசியின் உண்மையான பயனான ஒருவரின் வயிறு நிறைவடையச் செய்தல் மிகவும் சிறப்பு.

“அரிசி மணியில்
சித்திரம் அழகு”

இங்கு நிறுத்தி இந்த இரு வரிகளை உள்வாங்குங்கள்.சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்..காட்சி விரிவடையும்… மனம் மகிழும்.நிதானித்தப் பின் அடுத்த இரு வரிகளை வாசியுங்கள்…

“சோறாகும் போது
மனசு நிறையும்.”

ஆகா… உண்மையாகவே மனசு நிறைகிறதல்லவா? அரிசி எதற்காக உருவாக்கப் பட்டதோ அதன் பயனை அடைந்தது … உயிரின் பசி தீர்த்தலே உன்னதமாகும் என்பதினை அழகுற உணர்த்துகிறது… இதுவே தன்முனைக் கவிதையின் சூட்சுமம்.

முகநூல் தாண்டி திரு.வதிலைபிரபா நடத்தும் “மகாகவி”இதழ் தொடர்ந்து தன்முனைக் கவிதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முகநூலிலும் கவிஞர்கள் ஆர்வமுடன் எழுத முதன்முதலில் 01/07/2018 அன்று “நான்…நீ… இந்த உலகம்” என்ற தொகுப்பு நூல் தொகுப்பாசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் 31 கவிஞர்கள் எழுதிய 465 கவிதைகளுடன் “ஓவியா பதிப்பகம்” வெளியீடாக வந்தது. அதனைத் தொடர்ந்து “இனிய உதயம்” மகாகவி, காணிநிலம்,கவிஓவியா,மின்னல்,தமிழ்ப்பணி, அருவி,ஏழைதாசன்,இனிய நந்தவனம்,பொதிகை மின்னல் போன்ற இலக்கியத் திங்களிதழ்கள் மற்றும் தமிழ் நெஞ்சம், கொலுசு, கவிதைப் பெட்டகம்,காற்றுவெளி, போன்ற மின்னிதழ்களும் கவிதைகளை வெளியிட்டு வருகின்றன.
பல முகநூல் குழுமங்களிலும் பன்னாட்டு கவிஞர்களும் தன்முனைக் கவிதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகின்றனர்.
தன்முனைக் கவிதைகளுக்கென கவியரங்கங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

தன்முனைக்கவிதைக்கான பன்னாட்டு அங்கீகாரமாக “அங்கோர் வாட், கம்போடியா” நாட்டில் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கின் ஒரு அங்கமாக “வானம் தொடும் வண்ணத்துப்பூச்சி”என்ற 52 கவிஞர்களின் தொகுப்புநூல் 21/09/2019 அன்று வெளியிடப்பட்டு தமிழார்வலர்களின் பாராட்டினைப் பெற்றது. இந்நூலின் தொகுப்பாசிரியர். க‌.நா.கல்யாணசுந்தரம்.இணையாசிரியர்கள்.அன்புச்செல்வி சுப்புராஜூ,சாரதா க சந்தோஷ்,அனுராஜ்,இளவல் ஹரிஹரன் மற்றும் ஜென்ஸி ஆகியோர்கள்.

தன்முனைக் கவிதைகளின் தனிமனிதர் நூல் வரிசையில் கவிஞர்.இளவல் ஹரிஹரன் அவர்களின் “குழந்தை வரைந்த காகிதம்” முதல் நூலாக அக்டோபர் 2018ல் வெளிவந்தது.

ஏப்ரல்_2019ல் பேராசிரியை காரை மேகலா அவர்களின்”சுவரோரச் செம்பருத்தி”, முதல் பெண் கவிஞரின் நூலாக வெளிவந்தது.

இதைத் தொடர்ந்து மேலும் பல நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.அன்புச்செல்வி சுப்புராஜூ தொகுப்பாசிரியராக 25 பன்னாட்டு பெண் கவிஞர்களின் தன்முனைக்கவிதைகள் கொண்டு “மகரந்தம் தூவும் மலர்கள்” என்ற தலைப்பில் பெண் கவிஞர்களுக்கான முதல் தொகுப்பு நூலாக வெளிவரவிருக்கிறது.

மேலும் தனிமனிதராக கவிஞர்.ஜென்ஸி அவர்கள் இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தன்முனைக் கவிதைகளை எழுதியுள்ளது பாராட்டுக்குரியது.தொடர்ந்து எழுதிக்கொண்டுள்ளார்.

தளிர்நடையிட்ட தன்முனைக் கவிதைகளின் தளம் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே போவதில் தமிழ் இலக்கிய உலகம் பெருமகிழ்வு கொள்கிறது என்றால் மிகையில்லை.

குவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு

humanities underground » Between Desire and Disability: Karichan ...

அந்தத் தெருவுக்குள் புகுந்து, அந்த வீட்டை நெருங்கிப் பந்தலையும் வாழை மரத்தையும், டியூப் லைட்டையும் பார்த்த பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ”அடாடா, ராமய்யர் வீட்டுக் கல்யாணம் அல்லவா இன்று. காலையில் முகூர்த்தத் துக்குத்தான் போகவில்லை. சாயங்காலம் போய் கல்யாணமாவது விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். மறந்தே போய்விட்டது. இன்று காலையிலிருந்து வேறு நினைவே இல்லாமல் பணம் தேடிக் கொண்டிருக்கிறேன். என் இரண்டாவது பெண்ணைக் கோயம் புத்தூருக்கு அனுப்பியாக வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு நாளைக்குக் கடைசி நாள். நாளைக்காவது புறப்படா விட்டால் மிகவும் பாடுபட்டுக் கிடைத்த இடம் பறிபோய்விடும். வீட்டில் ஒரே

SWScan00211

துக்கம். வைக்காததை வைத்து, விற்கக்கூடாததை விற்று இரு நூறு ரூபாய்கள் தேற்றிவிட்டோம். காலேஜுக்கே அறுநூறு ரூபாய் கட்ட வேண்டும். பிரயாணச் செலவும் கைச் செலவுக்கு எல்லாம் சேர்த்து இன்னும் ஐந்து நூறுகள் தோது செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் எங்கெல்லாமோ போய்ச் சுற்றிவிட்டு, அலுத்துச் சலித்துக் காரியம் ஆகாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் இந்தத் தெருவில் புகுந்தேன். கல்யாண வீட்டைப் பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இரவு மணி பத்து, பத்தரை இருக்குமே; இப்போது போய் என்ன செய்வது; ஆனால் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்திருக்க வேண்டும். இலை கொண்டு வந்து போட்ட இடத்திலிருந்து மனிதர் கையை நக்கிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் விரட்டிய நாய்கள் வந்து ஒன்றை மற்றொன்று விரட்டிக் கொண்டிருந்தன. பந்தலுக்குள் எட்டிப் பார்த்தேன். சீட்டாட்டம் நடந்து கொண்டி ருந்தது. நாலு சீட்டு, களத்தில் நிறையப் பணம் கிடந்தது, புரண்டது. பந்தலுக்குள்ளும் போய்விட்டேன். ராமய்யர் எதிர்பட்டார்.

”என்னய்யா இது” என்றார்.

”மன்னிச்ரணும், ரொம்ப அவசரமான காரியம். எங்கெல்லமோ போய் அலைந்து விட்டு இப்போதுதான்.”

”உள்ளே வாரும், சாப்பிடலாம்.”

”மன்னிச்சரணும். எனக்குச் சாப்பாடெல் லாம் ஆகிவிட்டது.”

”சந்தனம் சர்க்கரை கொண்டு வருகிறேன் இரும்…”

”ஏழு கைதான் ஆடிக்கொண்டிருக்கு. ஒரு இடம் இருக்கிறது!” கடைக் கையிலே போடலாமோன்னோ…” என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஆடுகிறவர் அந்த இடத்தில சீட்டையும் போட்டுவிட்டார். ‘நூறு ரூபாய் ஷோ… என்றான் ஒருவன். அதாவது நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அவ்வளவு இருந்தால்தான் உட்கார்ந்து ஆட அனுமதிப்பார்களாம். ஐந்தும் பத்தும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து சிக்கனமாக ஆடிச் சூதாட்டத்தில் விறுவிறுப்பைக் குறைத்துவிடக் கூடாதாம். நான் என் சடடைப் பையைத் தடவினேன். இருநூறு ரூபாய் இருப்பது நெருடிற்று. எப்படியும் நாளைக்குப் புறப்பட முடியாது. ஒரு சான்ஸ் பாப்போமே. அந்தப் பாக்கி நூறுகள் கிடைச்சுட்டுமே இல்லையென்றால் இருக்கும் நுறுகள் தொலையட்டுமே. இது எத்தனையோ தடவை சத்தியம் செய்திருக்கிறோம். சீட்டைத் தொடுவதில்லை என்று. நாளைக்கு நூறாவது தடவையாகச் சத்தியம் செய்துவிட்டால் போகிறது. உட்கார்ந்தேன். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்துக் காட்டினேன்; அதிகமாக இருப்பதையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

நல்ல முரட்டுக் கைகள்; மும்முரமான ஆட்டம். நாலைந்து கலவைகள் வந்தாலே போதும், நமக்கு வேண்டிய நூறுகள் கிடைத்துவிடும்.

ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாயிருந்தது. பீட்டை நிறையப் போட்டு ஆடினேன். பெரிய சீட்டுகள் அடிவாங்கின. ஒரு நூறு போய்விட்டது. அடுத்ததை எடுத்தேன். சற்று நிதானமாக ஆடியதில், கரைந்து கொ¡ண்டிருந்தது மெல்ல. இரவு இரண்டு மணியென்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. முதல் முழுகிப் போய்விட்டது. ஒருக்கால் எப்போதும் போல என்றைக்கும் ஆவது போல் இன்னும் யாவற்றையும் தோற்றுவிட்டு மிக விரைவி லேயே நூறாவது தடவையாக சத்தியம் பண்ணும் படி நேர்ந்துவிடுமோ என்ற ஓர் எண்ணம் வந்தது. வீட்டு நினைவும், என் பெண்ணின் நினைவும், அவள் காலையிலும் சாயங்காலமும் பட்ட வேதனையின் நினைவும் வந்தது.

ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாய் இருந்தது. கண்ணும் கையும் சீட்டைப் பார்த்தன. நோட்டையும் சில்லறை நாணயங்களையும் நெருடின. வீசி எறிந்தன. அள்ளிச் சேர்த்து இழுத்தன. அள்ளாமல் தோற்று ஓய்ந்தன. தொடர்நது நடந்தது இது.

சிறிது நேரத்தில் சீட்டாட்டக் களத்திலிருந்து கவனத்துடன் ஒன்றியிருந்த உள்ளத்தில் மற்றொரு களம் விரிந்தது. அருகே தனியே கண்களும் காதுகளும் தனியே செயல்படத் தொடங்கியிருந்தன. அதனால் ஆட்டத்தில் சிறிதும் இடையூறு இல்லை.

சுற்றியலைந்து சலித்துப் போய் வீட்டில் நுழைந்து தொப்பென்று உட்கார்ந்தேன். சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் கழித்து காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் என் பெண். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்தவள், மெல்லச் சமாளித்துக் கொண்டு, ”அப்பா, உன்னை இப்படிக் கஷ்டப்படுத்துவதற்கென்றே நாங்கள் பிறந்திருக்கிறோமா? உங்கள் முக வாட்டமும், உடம்பின் ஓய்ச்சலும், உங்கள் நடையின் தளர்ச்சியும் எங்கள் பிறப்பையே அவமானப் படுத்துகின்றன வேண்டாம் அப்பா, வேண்டவே வேண்டாம். பெரிய உடம்பைச் சிறியதாக்கிக் கொண்டு முகத்தின் தேஜஸ்ஸை மங்கச் செய்து கொண்டு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டாம். அக்காவும் பி.ஏ. படித்துவிட்டு வேலை யில்லாமல் இருக்கிறாளே, நானும் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு இரண்டு வருஷமாய் தண்டச் சோறு தின்கிறேனே. டிரெயினிங் போய்விட்டு வந்தாலாவது வேலை கிடைக்காதா, உங்கள் சிரமம் குறையாதா என்று பார்த்தேன். வேறு காலேஜ்களில் ஆயிரம் இரண்டாயிரம் கேட்கிறார்களே. அந்தக் காலேஜிகளில் நல்ல வேளையாக இடம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டேன்; ஆனால், இங்கும் அறுநூறு ரூபாயுடன் வர வேண்டுமென்று எழுதியிருப்பதைப் படித்தவுடனேயே எனக்குப் பகீர் என்றது. அப்போதே தீர்மானித்து விட்டேன். இது நடக்காதென்று; ஆரம்பத்திற்கே இப்படி இருந்தால், இன்னும் பத்து மாதம், ஹாஸ்டல் பீசும் மற்ற செலவுகளும் ஆகுமே. எனக்கு அடுத்தவள் காலேஜில் படிப்பதை நிறுத்தினால்கூட உங்களால் எனக்கு மாதா மாதம் அனுப்ப முடியாது. வேண்டாம் விட்டுவிடுங்கள். இனிமேலும் உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது நான்…” என்று முடித்துவிட்டாள் கதையை.

சாயங்காலம் வெளிய கிளம்பினேன். மேற்கே போய் ரங்கனைப் பார்த்து ஏதாவது உதவி கேட்போமென்று போனேன். அவன் நல்ல பணக்காரன். ஊருக்கே பெரிய மனிதர் குடும்பத்தில் பிறந்தவன். நாற்பதைத் தாண்டிவிட்டதால் இன்னும் பாப புண்ணியங்களைப் பற்றி நினைப்பு வரவில்லை அவனுக்கு. தானதர்மங்களின் வழியே தெரியாது. அவனுக்கு என்று அவனுடைய அந்தரங்க நண்பர்களே கூறுவார்கள். ஆனால் என்னுடைய இந்தச் சந்தர்ப்பம் அவனைச் சிந்திக்கத் தூண்டாதா என்ற சபலத்தில் போனேன். அவன் வீட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் முப்பது நாற்பது பேர் கூடி ஒரே கும்மாளமாயிருத்து.

”வாய்யா, விணாப்போன கிராக்கி, வாய்யா…” என்ற வரவேற்புடன் நுழைந்தேன்.”பாவிகளா, உங்களாலேதான் நான் வீணாப்போனேன்” என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ சொல்ல வரவில்லை எனக்கு. ஸ்வீட், காரம், காப்பி வந்தது. சாப்பிட்டேன். ”இன்னும் சிறிது நேரமிருந்தால் ஸோமபானம் உண்டு” என்றான் ரங்கன்.

”இதெல்லாம் என்ன இன்னிக்கு” என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். ஒருவன் என் காதோடு, “ரங்கன் நேற்று செஞ்சுரி போட்டான், அதற்காகத்தான் பார்ட்டி” என்றான்.

”அப்படியென்றால்…” என்றேன் புரியாமல்.

”ரங்கன் நேற்றிரவு தன் நூறாவது தோழியை…” என்றான் ஒருவன்.

தன் வாழ்வின் லட்சியமே நிறைவேறி விட்டது போல் வெறியுடன் சிரித்தான் ரங்கன். அப்பொழுதே அங்கிருந்து விடைபெற்றுப் போயிருக்கலாம். இருந்தாலும் சிறுமை விடவில்லை. ரங்கனைத் தனியே அழைத்து, விவரமாகச் சொன்னேன். கடனாகக் கேட்டேன்.

”ஏகச் செலவு காலம், தாக்குப்பிடிக்க முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்…” என்றான்.

அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தெருவில் நடந்தேன். அடுத்த இரண்டு வீடுகளும் அவனுடையதுதான். அநேகமாக அந்தத் தெரு முழுவதுமே அந்தக் குடும்பத்திற்கே சொந்தம். அவர்களுடைய தகப்பனார் அப்படி வாங்கிச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டு வீடுகள் தள்ளி சீமா வீடு. அவன் ரங்கனுக்குத் தம்பி. ரைஸ்மில் வைத்திருக்கிறான். அரிசி வியாபாரமும், நெல் வியாபாரமும் செய்கிறான். காசில் கிண்டன். கடவுள் பக்தி உள்ளவன். ஆசார அனுஷ்டானங்களுடன் இருப்பவன். உபகாரி, கடன் கொடுப்பான், வட்டி அதிகம். ஆறு மாத வட்டியை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் கொடுப்பான். ஆறு மாதத் தவணை. மாதா மாதம் உள்ள தவணையைக் கழுத்தில் கத்தி வைத்தாவது கறந்துவிடுவான். நான் பல முறை அவனிடம் கடன் வாங்கியது உண்டு. தகராறு இல்லாமல் தீர்ந்ததும் உண்டு. தெருவோடு போன என்னைச் சீமாவே கூப்பிட்டான். தெருக்கோடியில் இருக்கும் கடையில் வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டு திரும்பி வந்து அவனைப் பார்ப்பதாக இருந்தேன். அவனே கூப்பிட்டதும், காரியம் பழமென்று சற்று நிம்மதியாகவே உள்ளே போனேன்; உட்கார்ந்தேன்.

சீமா, உள்ளே பார்த்துக் கொண்டு “ஏய் ராமாஞ்சு, இலை போடு, பிரசாதமெல்லாம் சாதி” என்று உத்தரவு போட்டுவிட்டு ”பார்ட்டிக்குப் போய் வருகிறீரோ ஹ¤ம் கஷ்டம், நல்ல குடும்பத்தில் பிறந்து, இப்படி நாயாய் அலைய வேண்டாம். உம்; ஸ்நேகிதர் வெட்கமில்லாமல் பார்ட்டி வேற கொடுக்கி றாரே, மஹா பாபம்…” என்றான்.

”அதற்கென்று வரவில்லை. வேறு காரியம். அவனைப் பார்க்கலாமென்று வந்தேன். பிறகுதான் கேள்விப்பட்டேன். பாபம்தான் இது!”

”சரி, வாரும், கொஞ்சம் பெருமான் பிரசாதம் சாப்பிடும்; கையை, காலை அலம்பணுமா? தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?”

”என்ன விசேஷம்…?”

”ஒண்ணுமில்லை; இன்னிக்கு சுந்தர காண்டம் நூறாவது பாராயணம் முடித்தேன்.

பெருமாளுக்கும் திருவடிக்கும் (ஆஞ்சேனயர்) அர்ச்சனை.”

பிரசாதம் சாப்பிட்டேன். சீமா என் குடும்ப யோக§க்ஷமங்களை விசாரித்தான். காலம் போகிற போக்கில் என் போன்ற சம்சாரி களின் குடும்பதிற்குள்ள கஷ்டங்களைத் தானே சொல்லி அனுதாபப்பட்டான். நான் தயக்கத்துடன் என் பணமுடையைச் சொன்னேன். அவனுக்குப் புரியுமே என்று வித்யா தர்மம், புண்ணியம் என்றெல்லாம் வேறு சொல்லி என்னையே அசிங்கப் படுத்திக் கொண்டேன்.”

”ஐயோ… பாவம்” என்றான் சீமா.சரி. காரியம் பலித்துவிட்டதென்று நினைத்துக் கொண்டேன். சிரித்தேன்.

சீமா, தன் கஷ்டங்களைச் சொல்கிறான். ”ஐநூறாவது, ஆறுநூறாவது, இப்போ ஒண்ணும் மூச்சு விட முடியாது. ஏராளமாய் ஸ்டாக் பண்ணிவிட்டேன் நெல்லை. நானே எல்லா பாங்கிலும் ஓவர்டிராப்ட் உளுந்து, பயறு வேறே நிறைய வாங்கிப் போட்டிருக் கிறேன். கவர்ன்மெண்ட் அடிக்கிற கூத்தில் ஒன்றுமே புரியவில்லை. ஆடி ஆவணியில் ஏதாவது விலை ஏறினால் வெளியே எடுக்கப் போகிறேன். மேட்டூரில் ஜலமே இல்லையாம். குறுவை என்ன ஆகப்போகிறதோ, எது எப்படிப் போனாலும் பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறேன். பெருமாள் கைவிட மாட்டரென்று பூரண நம்பிக்கை எனக்கு. ஐநூறாவது அறநூறாவது நூறு இரு நூறுக்குக்கூட வழி இல்லை. உமக்குக் கொடுப்பதற்கு என்னய்யா தயக்கம்? ரொம்ப நம்பிக்கையான புள்ளி நீர்; அதுவும் தவிர படிப்புக்குன்னு கேட்கிறீர், ஐயோ பாவம். ஆனால் நம்மகிட்ட வழியே இல்லை. வேறு எங்காவது புரட்டிப் பாரும்” சீமா முடிக்கிறான்.

சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்து விட்டேனோ! உள்ளும் புறமும் இணைந்து விட்டனவோ! உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த களம் மறைந்து, வெளியே, கண் எதிரே இருந்த சீட்டாட்டக் களம் மட்டுமே தெரிந்தது.

”ஐயோ பாவம். சிரிக்க மாட்டீரா, என் கையை முறிக்க வேண்டுமென்றே, சின்ன சீட்டுக்கு இவ்வளவு ரவுண்ட் வந்து, களத்தை அள்ளி வாரிவிட்டீர்; சிரித்து வேறு என் வயிற்றிரிச்சலைக் கொட்டிக்கிறீரே; ஐயகாலம். சீட்டு நன்னாப் பேசறதே உமக்கு என்று பயந்துண்டு விட்டுத் தொலைத்தேன் பெரிய சீட்டை; தொலையட்டும். ஒரு களக்காயாவது கட்டும்” என்றான் ஒருவன்.

சீட்டுக்களைச் சேர்த்து கொசுவி, புறாவிட்டுக் கலைத்துப் போட்டேன். ஆடிக் கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாக இருந்தது.

”புரட்ட வேண்டியதுதான்” என்று சீமாவுக் குப் பதில் சொல்கிறேன். இங்கே ஆட்டத்தில் எதிரே பந்தயம் போட்டுக் கொண்டிருந்தவன் தன் சீட்டைப் புரட்டி விட்டான். ‘புரட்டச் சொல்லவில்லையே” என்றேன்.

”ப்போ சொன்னீரே…”

”ஒகோ, சொன்னேனோ? இன்னும் இரண்டு பந்தயமாவது போட்டிருப்பாய்…” என்று பேசிக் கொண்டே குறையோடு சீட்டை கலைத்தேன்.

”தூக்கக் கலக்கமோ…” என்றான் ஒருவன்.

”ஆமாம். மத்தியானம் முழுக்க ஒரே அலைச்சல், தூக்கம் கண்ணச் சுற்றுகிறது.”

”சுற்றுமைய்யா, சுற்றும். நூறு நூறாகச் சுற்றிச் சுருட்டிவீட்டீர் அநேகமாக எல்லாக் கைகளும் குளோஸ். தூக்கம் கட்டாயம் கண்களைச் சுற்றுமே…” என்றான் ஒருவன்.

சட்டைப் பை கனத்திருந்தது; வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அவன் சொன்னது உண்மை, நிறையவே ஜெயித் திருந்தேன். ஏதோ ஞாபகத்தில், ”மணி என்ன?” என்று கேட்டுவிட்டேன்.

”பதினொன்றரைதான் ஆகிறது” என்று கிண்டல் பண்ணினான் ஒருவன்.

ராமய்யர் வந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார் ”ரொம்ப அவசரம்” என்றார்.

சிதறிக் கிடந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நோட்டுக்களைப் பையில் திணித்துக் கொண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்களையும் சில்லறை நாணயங்களையும் அடுக்கி வைத்துவிட்டு எழுந்து சென்றேன். ”ஓய்… உம்முடைய ஜன்மாவிலேயே இன்னிக்குத் தான் நீர் ஜெயித்திருக்கிறீர். மணி நாலு ஆகப் போகிறது. போய் உட்கார்ந்து ஒரு நாலு ஆட்டம், சும்மா பேருக்குப் பார்த்துவிட்டு புறப்படும் வீட்டிற்கு” என்றார்.

அதேபோலச் செய்துவிட்டுக் கிளம்பினேன். ஒரே இருட்டு எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டின் வாசற் கதவு திறந்திருந்தது. வெளிச்சமும் தெரிந்தது. கையில் இருந்ததை ஓரமாக எறிந்துவிட்டு, ”எங்கேந்து வந்தாகிறது? விடிந்ததும் கிளம்ப வேண்டுமே குழந்தை? கூடப் போகிற உத்தேசம் உண்டோன்னோ?” என்றாள் மனைவி.

”விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியது தான்” என்று சட்டையைக் கழற்றினேன். நோட்டும் நாணயமும் சட்டைப் பையிலிருந்து சிதறின. ஏழெட்டு நூறுகள் இருக்கும்.

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.  

Image may contain: 1 person, standing, sunglasses, beard, outdoor and nature

 

நம்பிக்கையின் மறுபக்கம்!

கும்பகோணத்தில் தீர்த்த தேவதைகள் ...

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை ‘நம்பிக்கை’. ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் பல காரியங்களை நாம் செய்கிறோம். நம்பிக்கைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். ஒருவரின் நம்பிக்கை, மற்றொருவரின் மூட நம்பிக்கையாய் இருக்கலாம். ஆனால் நம்பிக்கையின்றி வாழ்வதே கடினம் – நாளை நாம் இருப்போம் என்பதே நம்பிக்கைதானே!

 

தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகள் “கச்சேரி”  (காலச்சுவடு – பதிப்பகம்) – சமீபத்தில் வாசித்தேன். அதில் ‘புஷ்கரணி’ என்ற சிறுகதை (1943 ல் எழுதியது!) – கும்பகோணம் ‘மாமாக்’ குளம் (மகாமகக்குளம்) புண்ணிய தீர்த்தம் பற்றி வருகிறது. கதை சொல்லிக்கு அந்த குளத்தின் மகிமைகளில் நம்பிக்கை கிடையாது. மேலும் அதில் குளிப்பதை நினைத்தாலே அவர் உடம்பு நடுங்குகிறது. தேசத்தின் பல மூலைகளிலிருந்தும் ஜனங்கள் வந்து, துணிகளைத் துவைத்து, தங்கள் உடம்பைத் தேய்த்துத் தேய்த்து அவர்கள் பாவங்களை வழித்து விடுவதைப் பார்த்தால், அவரால் நம்பவே முடியவில்லை – கனவு போல் தோன்றுகிறது. அவர்களது சகிப்புத் தன்மை வியக்க வைக்கிறது!

சர்வதேச பாபங்கள் எல்லாம் அதில் கரைந்திருக்கின்றன. யாத்ரிகர்களின் விசித்ர வேஷ்டி அழுக்குகளை யெல்லாம் அந்தப் புண்ய தீர்த்தம் ஆட்கொண்டிருக்கின்றது! இதைவிட வேறென்ன லக்‌ஷணம் வேண்டும்? “இவ்வளவு நீருடன் உன் பாபங்களைக் கரைக்க நான் சித்தமாயிருக்கையில், இன்னும் கிணற்றடித் தவளையாகக் காலங்கழிக்கும் மூடா……” என்று அவரை நிந்திக்கிறதாம் குளம் – இருபது வருஷமாக அதில் (ஓரிரண்டு முறைக்கு மேல்) தன் உடம்பை நனைத்ததாக நினைவேயில்லை என்கிறார்!

‘நீ ஏன் ஸ்னானம் பண்றதில்லை இதில்? பழகப் பழகப் பாலும் புளிக்கும்பாளே, அதுமாதிரி ஆயிட்டுதோ?’ என்ற கேள்விக்கு, ‘பழகிப் பழகி உங்களுக்குப் புளியே இனிக்கிறபோது….’ என்கிறார். 

இந்த சிந்தனைகளுக்கெல்லாம் காரணம், அவரது துண்டினை,  பாட்டி அந்தக் குளத்தில் சிரத்தையாக ‘அறஞ்சிண்டு’ வந்ததுதான்! அதனால் துண்டுக்கு வந்த வாசமும், பழுப்பு நிறமும் இவரை மிகவும் பாதிக்கின்றன – சலவைக்குத்தான் போட வேண்டும் என்று நினைக்கிறார்.

இந்தப் பாப புண்ணியங்களைத் தாண்டி, அந்தக் குளத்தை வர்ணிக்கும் தி.ஜா. வின் கைகளில் முத்தமிடத் தோன்றுகிறது! சுற்றிலும் பதினாறு அழகிய மண்டபங்கள், வட்டமிடும் நாரைக் கூட்டம், சூரியனின் இந்திர ஜாலங்கள், மின்சார ஒளி நெளிந்து குலுங்குவது, வண்டி விளக்கின் மினுக்கொளி நீர்ப் பரப்பில் நீண்டு நீந்துவது, புண்ய தீர்த்தத்தின் காம்பீர்யம் அதனால் மனதில் பெருகும் சாந்தம் – எதிர் வீட்டுத் திண்ணையில் ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து, அந்தக் குளத்தை இரசித்துக் கொண்டே இருப்போமா எனத் தோன்றும் விவரணை!

UP: Five boys drown in Ganga | Varanasi News - Times of Indiaஇவ்வளவு பேர் அசுத்தம் செய்தாலும், அழுகிய அங்கங்களை நனைக்கும் வியாதியஸ்தனைக் கூட கவனிக்காமல் ஸ்னானம் செய்கிறார்களே என்று சொல்லி, முத்தாய்ப்பாய்ப் பழங்கதை ஒன்றைச் சொல்கிறார் – கங்கையில் இரண்டு தொண்டுக் கிழங்கள் குளிக்க, தாத்தா ஆற்றோடு அடித்துச் செல்லப் படுகிறார். பாட்டி அலற, அருகே குளித்துக்கொண்டிருந்தவர்கள் கிழவரை மீட்கப் போகிறார்கள். அப்போது பாட்டி, ‘ஜன்மாவில் ஒரு பாபம்கூடச் செய்யாதவர்கள்தான் அவரைத் தொடலாம்’ என்கிறாள். எல்லோரும் எப்படி மனதறிந்து பொய் சொல்வது என்று நினைத்து, அப்படியே நின்றுவிடுகிறார்கள்! பாட்டி ‘பாபம் செய்யாதவர்கள் இல்லையா இங்கே’ என்று அலறுகிறாள்.

பல் தேய்க்காமல், வாயில் புகையிலையுடன், இரவு தாசி வீட்டில் கழித்துவிட்டு வரும் ஒருவன், பாட்டியின் குரல் கேட்டு, கங்கையில் ஒரு முழுக்கு போட்டான் – கிழவரைக் கரையில் இழுத்துப் போட்டான் – முழுக்கில் பாபம் தொலைந்தது, கிழவரும் பிழைத்துவிட்டார். அருகே குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை! 

புஷ்கர்ணியிலோ, கங்கையிலோ முழுகி எழுந்தால் பாபம் போகும் என்பது ஒரு நம்பிக்கை – இப்போது மீண்டும் முதல் பாராவைப் படிக்கலாம்!

1945 ல் எம் வி வெங்கட்ராம், எம் விக்ரஹவிநாசன் என்ற பெயரில் ‘சிவாஜி’ யில் எழுதிய கவிதையை, இக்கதைக் கருவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்!

மகாமகம் வந்தது.

மகாமகம் இன்று வந்தது – ஆஹா !

மனம் மிகக் குளிர்ந்தது

பாசியிற் புதைந்திருந்த 

   புஷ்கரணி புனிதமாம் !

நாசி மூடும் நாற்றமின்று

    மோட்ச வாசல் திறக்குதாம்!

………

……..

கண்ணால் கல்லில் மூழ்குவர் !

      குளத்தில் உடலை அலசுவர் !

பண்ணும் பாபம் போக்குதற்குப்

       பார்த்திருந்த சந்தர்ப்பம் !

மகாமகம் இன்று வந்தது – ஆஹா !

       மடமை மிகவும் மலிந்தது !   

மீண்டும் முதல் பாராவைப் படிக்கவும்! நம்பிக்கைகள், நம்பிக்கைகள் …..

(ஆதாரம்: 1) கச்சேரி – சிறுகதைகள் – தி,ஜானகிராமன் – காலச்சுவடு பதிப்பகம் . 

                2) காலச்சுவடு ஜூலை 2020 இதழ் )