Monthly Archives: June 2016
தோளின் சுமை – சிந்தாமணி


கேவலம், என் சுமையும்
ஒரு பாரமா?
அண்டத்தை அளாவி ஆள்பவன் நீ
அடியவன் என்னை அடைவதும் உனக்கு, ஒரு தூரமா?
இமைகளின் கனத்தைத்
தாங்கா இருவிழிகள்
இரவெல்லாம்
தூக்கம் துறந்தன.
திருட்டு மூட்டையாம்
குருட்டு வேதனை
தோளில் ஏற்றியே
நடந்த பாதங்கள்
பழகின பாதையும் மறந்தன.
பாரவண்டி பக்கத்தில் இருக்க
என் தலையில் ஏனிந்தச்
சும்மாடு சுமைகேடு?
அப்பாடா ,
என் தோளின் சுமையை
உன் தாளில் போட்டதும்
கண்களில் தூக்கம்
கப்பிக்கொண்டது.
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்! —– சிவமால்
இறைவி – விமர்சனம்
இறைவி படம் பார்த்தேன்!
கார்த்திக் சுப்புராஜ் அடுத்த மணிரத்னம் தான்.
கதையும் வசனமும் ஒரு மாதிரி இருந்தாலும் சொல்லும் விதம் அல்ட்ரா புதுசு.
பிடித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு . வித்தியாசமாக இருக்கிறது. என்பதே என் பதில்!
நம் எதிர்பார்ப்புகளை மீறிப் பாத்திரங்கள் பயணிக்கின்றன.
“ஆண் -நெடில் பெண் குறில் – என்ன கேவலமான மனிதர்கள் நாம்’ என்று ஒரு ஆண் சொல்லும் போது ஆண்கள் கை தட்டுகிறார்கள். டைரக்டருக்கு வெற்றி ! படம் வெற்றியடையுமா? தெரியவில்லை.
Inspired by Sujatha’s Jannal malar என்று சொல்கிறார். மணி சாரின் ஆயுத எழுத்து வாசனை கொஞ்சம் அடிக்கிறதோ?
‘பெட்டிக்கு வெளியே’ எண்ணங்கள் நிறைந்த படம்.
முதலில் அதன் டிரைலர் பாருங்கள்!! அப்புறம் புதுயுகம் டிவியில் பத்திரிகை ஆசிரியர் மதன் கார்த்திக் சுப்புராஜை பேட்டி கண்டதின் யூட்யூப் வடிவம் பாருங்கள்!
மொத்தத்தில் அக்கினித் திராவகம்
ஷாலு மை வைஃப் – எஸ் எஸ்
குருஜினியும் ஷாலுவும் பஜ்ரங்க்பலி ஷர்மாவும் சேர்ந்து கோமாதாவின் கோவிலுக்காக்கத் தயார் செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் எதிரணியின் பிரசார பீரங்கி பலமாக வேலை செய்தது. எருமையும்தான் நமக்குப் பால் தருகிறது. சொல்லப்போனால் எருமைமாட்டுக் காபிதான் டிகிரி காபி மற்றவையெல்லாம் வெறும் பிளஸ் டூ தான். எமனுக்கு வாகனம் எருமை. எமன் தமிழன். காமதேனு – கோமாதா எல்லாம் ஆரிய மாயை என்று அவர்கள் பிரசாரம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது.
தமிழ்நாட்டில் எப்பவும் எல்லாத்திலும் ரெண்டு கட்சி இரு
க்கும். அந்தக் காலத்தில தெருக்கூத்திலக்கூட எரிஞ்ச கட்சி எரியாத கட்சி என்று ரெண்டு இருக்குமாம். காப்பிக்கு டபரா டம்ளர் என்று இருப்பது போல. இட்டிலுக்கு சட்னி சாம்பார் என்று இருப்பது போல.
முன்னாடி சோழன்-பாண்டியன் என்று அடிச்சுக்கிட்டோம். அப்புறம் சிவன்-.விஷ்ணு என்று அடிச்சுக்கிட்டோம். சினிமாவில எம் ஜி ஆர் – சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்று எப்பவும் நாம் ரெண்டு பிரிவா பிரிஞ்சே நிப்போம். அரசியல்ல திமுக – அதிமுக, கருணாநிதி – ஜெயலலிதா இப்படி எல்லாத்திலேயும் ரெட்டை ரெட்டையா நாம பிரிஞ்சே இருப்போம். அது தான் இரண்டின் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையோ?
எங்க வீட்டிலேயே எடுத்துக்கங்களேன்.ஷாலு ஆளுங்கட்சி. நான் எதிர்க்கட்சி. ஷிவானி, ஷ்யாம் இருவரையும் சேர்த்துக்கொண்டு மக்கள் நலக்கூட்டணி அமைப்பேன். ஷிவானி, ஷாலுகூட எல்லாத்துக்கும் சண்டைபோடுவா. என்கூட இருப்பது போலத் தோன்றும். ஆனா எங்கட்சிக்கு வரமாட்டா. ஷ்யாம் சுயேச்சை எம் எல் ஏ ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப் போடுவதுபோல யாருக்குப் போடுகிறான் என்பது அவனுக்கே தெரியாது. என் சைடுன்னு நினச்சுக்கிட்டிருப்பேன் ஆனா பல சமயம் சேம் சைடு கோல் போடுவான். ஒவ்வொரு முறையும் எனக்கு சாதகமா ஓட்டுப் போட நான் காசு அல்லது மற்ற சமாசாரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும். ஷாலு அம்மாவாச்சே. குழந்தைகளுக்கு இலவசங்களைக் கொடுத்தே என்னைக் கவுத்திடுவா.
இதெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு ஷாலு ஒரு கொடுமைக்கார அரக்கி மாதிரி, நம்ம சீரியல்களில் வரும் வில்லிகள் மாதிரி தோன்றியிருக்கும்னா அதற்கு நான் பொறுப்பில்லை. நானும் கொஞ்சம் சாதாரண நிகழ்ச்சிக்குக் கண்ணும் காதும் வைத்து எழுதுவதுண்டு. ஷாலு இதைக் கண்டு கொள்வதில்லை என்பதால் என் தெனாவட்டு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
ஆனால் இது எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே ஆட்டிவிடும் என்பதைத் தெரிந்து திடுக்கிட்டுப்போனேன். அது என்ன அக்மெரிண்ட் என்கிறீர்களா?
நானும் ஷாலுவும் எப்படி லவ் பண்ணிக் கல்யாணம் செய்துகொண்டோம் என்று உங்களுக்கு விலாவாரியா சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவுக்கெவ்வளவு இன்னோசெண்ட் ஆக இருந்தாளோ அந்த அளவுக்கு இப்போ இண்டெலிஜெண்டா இருக்கா. கல்யாணம் முடிஞ்சு முதல் இரவில ஷாலு என்கிட்டே சொன்னாள்:
“இங்கே பாருங்கோ! இப்போ உங்க கிட்டே சில முக்கியமான சமாசாரம் பேசப்போறேன். என்னன்னா லவ் பண்ணும் போது நாம நிறைய பொய் சொல்லியிருப்போம். நிறைய சமாசாரங்களை மறைச்சிருப்போம். அதெல்லாம் காதல் பண்ணும் போது ஓகே. ஆனால் கல்யாணம் ஆனப்புறம் நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது.
“கரெக்ட் ஷாலு , நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது. கிட்ட வா “
:”கொஞ்சம் இருங்கோ! நாம நிறைய பேசணும். எங்க தமிழ் டீச்சர் எங்களுக்கு இதைப்பத்தி கிளாஸ் எடுத்திருக்கா. நாம மனம் விட்டுப் பேசணும். அப்பறம்தான் மத்த எல்லாம். “
” தமிழ் டீச்சர் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பேச்சுதான். எங்க என் சி சி மாஸ்டர் கூட சொல்லிக் கொடுத்திருக்கிறார் ஸ்கூலில. பேச்சைக் கொறை செயலில் இறங்குன்னு”
“நான் சீரியஸா பேசறேன். நீங்க ஜோக் அடிக்கிறீங்க. இந்த சமயத்திலதான் நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்.
“நானும் அதையேதான் சொல்றேன்- நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்”
“கொஞ்சம் கேளுங்க! நான் உங்ககிட்டே மறச்சதை முதல்ல சொல்லிடறேன். அப்பத்தான் நான் எந்தவித குற்ற மனப்பான்மையும் இல்லாம உங்க கூட இருக்கமுடியும். அதுக்கப்பறம் நீங்க உங்களைப் பத்தின எனக்குத் தெரியாத உண்மையெல்லாம் சொல்லணும். “
“ஷாலு, உன்னைப்பத்தின எந்த உண்மையையும் என்னால ஏத்துக்கமுடியும். பழசு ஏதாயிருந்தாலும் அதை மறந்துட்டு நம்ம வாழ்க்கையைத் தொடங்குவோம். நேரமாகுது.”
“நீங்க பழசு வேண்டாமுன்னு சொல்றதைப் பாத்தா எனக்கு சந்தேகமாயிருக்கு”
“நீ பழசைச் சொல்லத் துடிக்கிறதப் பாத்தா எனக்கு பயமாயிருக்கு”
” நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடறேன். நீங்க பெருந்தன்மையோட அதை ஏத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
” ஷாலு, இதெல்லாம் சினிமாவிலேயும் கதையிலும் தான் வரலாம். நிஜ வாழ்க்கையில முதல் இரவில் யாரும் இப்படிப் பேசிக்கிட்டிருக்க மாட்டாங்க.”
” ப்ளீஸ், நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடுங்க! நான் உங்களை லவ் பண்ணறதுக்கு முன்னாடியே…….
முன்னாடியே?
சொன்னாள்.
என் தலை வெடித்தது. காலேஜ் படிப்பு முடிஞ்சப்புறம் ஒரு வருஷமா அவள் லவ் பண்ணியிருக்காளா? அவ அம்மா அப்பாவுக்கும் தெரியாமலா? மகாபலிபுரம் லைட் ஹவுஸ் ஜோசியன் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே? எத்தனை நாள் நானும் இவளும் மணிக்கணக்கா பேசிக்கொண்டிருந்தோமே ? அப்பல்லாம் சொல்லலையே? வெறும் லவ் தானா? அதுக்கும் மேல உண்டா?
“அந்த வயசில தெரியாம வந்த ஆசை. அதில ஒரு கிக். மொள்ள அம்மா அப்பாகிட்டே சொன்னேன். எனக்கு வந்த கடிதங்களையெல்லாம் காட்டினேன். அவர்கள் ஒத்துக்கவேயில்லை. எல்லாவற்றையும் கிழித்து எறிந்தார்கள். அதற்குப் பிறகு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.”
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
“விடு ஷாலு, கீதா சொன்னாளே?” என்று ஏதோ பேசவேண்டும் என்று உளறினேன்.
“யார் கீதா?” – அவள் குரல் உயர்ந்தது.
“கீதா .. பகவத் கீதா .. நடந்தது ஓடட்டும் . நடப்பவை நடக்கட்டும். அது சரி..” கொடேஷன் சரியா சொல்லத் தெரியாமல் தடுமாறினேன்.
“இப்ப தான் எனக்கு நிம்மதியாச்சு. உங்களுக்கு அதில ஒண்ணும் வருத்தமில்லையே?”
விஷத்தைக் கொடுத்துவிட்டு அதில் சர்க்கரை போதுமோ என்பது போலல்லவோ கேட்கிறாள் என்று நினைத்தேன்.
“இந்தாங்கோ! இந்தப் பாலைக் குடிச்சுட்டு உங்க கதையைச் சொல்லுங்கோ!” என்றாள்.
“ஷாலு, ஒரே ஒரு கேள்வி உன்னுடைய பழைய சமாசாரத்தைப் பத்தி. நீ லவ் பண்ணிணியே அவன் பேர் என்ன? “
“வாட். லவ்வா?” அலறினாள் ஷாலு. :யாரு சொன்னா நான் லவ் பண்ணினேன்னு ? நான் லா பண்ணினேன்னு சொன்னது உங்களுக்குக் காதில விழலையா? சட்டம். பி ஜி எல். கரெஸ்பாண்டில் பண்ணினேன். உங்களுக்கு லவ்வுன்னா விழுந்தது?”
“அப்பாடா, என் வயத்தில கூஜா நிறைய பாலை வார்த்தாள். நீ ‘லா’ பண்ணினேன்னு சொல்லணுமா என்ன? உன் ரத்தத்திலேயே ஆர்குமெண்ட் ஊறியிருக்கு.”
இந்தக் களேபரத்தில என்னோட பழய கதையைக் கேட்க மறந்துட்டா. நல்லதாப் போச்சு!
“நீங்க எப்படியிருந்தாலும் நான் உங்களை மனசார ஏத்துக்கறதா அன்னிக்கு ஆஞ்சநேயர் ஸ்வாமி கிட்டே வாக்குக் கொடுத்துட்டேன். சரி, நம்ம அக்ரிமெண்டுக்கு வருவோமா?”
“அதென்ன அக்ரிமெண்ட்? ஓஹோ ! கல்யாணத்துக்கு முன்னாடி லா(வ் ) பண்ணின குசும்பா?”
“உங்களை நான் மகாபலிபுரத்தில பாத்த அன்னிக்கு எனக்குத் தூக்கமே வரலை. கனவில நம்ம ரெண்டு பேருக்கும் அன்னைக்கே கல்யாணம் ஆயிடுச்சு. நடு ராத்திரி எழுந்திருச்சு உங்க பேரை மேஜை மேலேயிருந்த பேப்பரில் எழுதினேன். அப்போதான் தெரிஞ்சுது அது ஒரு ஸ்டாம்ப் பேப்பர் என்று. அதில நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனபிறகு நடக்கப்போற ஒரு அக்ரீமெண்டைக் கற்பனையா எழுதினேன். இது தான் அது” என்று காட்டினாள்.
அதை நான் சத்தமாகப் படிக்கப் படிக்க ஷாலு வெட்கத்தில் நெளிந்தாள். அதில் எழுதியிருந்ததைப் படிக்கும்போது எனக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி அக்ரிமெண்ட் போட்டா எந்தக் கல்யாணத்திலும் பிரச்சினை வராது. “இவ்வளவு ஆசையாடா ஷாலுக்குட்டி” என்று கேட்டுவிட்டு அவளை இறுக்கப் பிடித்தேன்.
அந்த அக்ரிமெண்டில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்துகொள்ள ஆசையாய் இருக்கிறதா? சாரி! லேடீஸ் மற்றும் ஜெண்டில்மென். அதெல்லாம் கண்டிப்பா பர்சனல். உங்க ஆசையைத் தூண்டிவிட்டதற்காக ஒரே ஒரு ஐட்டம் மட்டும் சொல்லுகிறேன்.
கண்டிஷன் நம்பர் 7: என்ன தகராறு வந்தாலும் ராத்திரி பத்து மணிக்குக் கட்டிலில் கட்டிப் பிடித்துக் கொண்டு ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பழைய பாடலின் முதல் வரியை மூன்று முறை பாடவேண்டும்.
ஆனால் குவிகத்தில் எழுதிவரும் இந்தத் தொடர் எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே அசைத்துவிடும் போலிருக்கிறதே !
அப்போது போன் அடித்தது. குவிகம் ஆசிரியர்தான். கசாமுசான்னு கத்தினார்.
” நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும் கோமாதா பூஜையையும் பஜ்ரங் பலியையும் தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள். ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள். இதனால் சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்” என்று ஒரே மூச்சில் சொன்னார்.
அதைதொடர்ந்து ஒரு சம்மன் எஸ்எம்எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது
என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள். கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது அந்த எஸ் எம் எஸ். ” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா என்னா சார்) விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.
ஜட்ஜ் ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.
அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில் இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது. உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம். “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை உடனே தடை செய்யவேண்டும் ” என்று புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.
இந்தக் கதை இப்போது நீதி மன்றத்தின் பார்வையில் உள்ளது. இடைக்காலத் தடை இல்லையென்றால் கதை தொடரலாம்.
(வாய்தா ஏதும் இல்லையென்றால் அடுத்த மாதம் முடியலாம்)
அப்பாவின் டைப்ரைட்டர் – டாக்டர் பாஸ்கர் புத்தக விமர்சனம்
ஜூன் 4 – மாலை 4 மணி ஜி ஆர் டி அரங்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்றால் அது ஒரு திருமண அல்லது நிச்சயதார்த்த விழா என்று தானே நினைப்பீர்கள்!
மன்னிக்கவும். அது ஒரு புத்தக வெளியீட்டு விழா!
டாக்டர் பாஸ்கர் எழுதிய ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ என்ற கட்டுரைப் புத்தகம்தான் அது.
மணிமேகலைப் பிரசுரம் பதிப்பித்துள்ளது.
விழாவைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் புத்தகத்தின் விமர்சனத்துக்குப் போகலாம்.
இந்த விழாவில் , பாஸ்கரன் என்ற மனித நேயமிக்க ஒரு மருத்துவரையும், நட்புக்கு உதாரணமாகத் திகழும் சிறந்த நண்பரையும் , தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு எழுதிவரும் எழுத்தாள்மையையும், புத்தகத்தின் மூலம் தந்தைக்கு விழா எடுத்த பெருந்தகைமையையும் கண்டோம்.
ரவி தமிழ்வாணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், லேனா தமிழ்வாணன், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் கிரிஜா ராகவன், உரத்த சிந்தனை ராம் ,முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ,மற்றும் எழுத்துலகப் பிதாமகர் அசோகமித்ரன் ஆகியோரை மனம் போன அளவில் பேசவிட்டு விழாவின் நாயகரான டாக்டர் பாஸ்கர் இரண்டே இரண்டு நிமிடம் பேசிய ஓர் அபூர்வ நிகழ்ச்சியையும் அங்கே கண்டோம்.
இதை எழுதிவிட்டு “அப்பாவின் டைப்ரைட்டர்’ புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டு எழுதுகிறேன். ( இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது இதைப்படித்து முடிக்க )
எனது ஒரு வரி FIR :
படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது.
விவரம்:
சொல் புதிதில்லை கருத்தும் புதிதில்லை. குபுக்கென்று சிரிக்க வைக்கவில்லை. கண்ணின் ஓரத்தில் கண்ணீர் கசிய வைக்கவில்லை. ஆனால் நடை – கோடையின் துவக்கத்தில் அக்கரையின் ஓரத்தில் கொஞ்சமாக ஓடும் காவிரியைப் போல எழுதியிருக்கும் இவரும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சொல்ல வைத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. (அலை பாயுதே மாதவன் சொல்வது மாதிரி )
வறுத்த நிலக்கடலையை அல்லது சீடையை ஒன்றொன்றாக வாயில் போட்டு அசை போட்டுக்கொண்டு அந்தக்காலத்தில் அக்கா , தம்பி தங்கைகளோடு சண்டை போட்டுக்கொண்டு குமுதம், விகடன், கல்கி, கல்கண்டு, சாவி, இதயம், குங்குமம் படிப்போமே !
{ நான்: நான் முதல்லே படிச்சுட்டு தர்றேன்.
அக்கா: நீ முதல்லே வேண்டாம் – முதல் அட்டைலேர்ந்து கடைசி அட்டை வரை படிப்பே !
நான்: இல்லேக்கா -சத்தியமா தொடர் கதைகள்- சிறுகதைகள் எல்லாம் படிக்கமாட்டேன் ! சும்மா துணுக்கு எல்லாம் பாத்துட்டுத் தர்ரேன்
அக்கா: சரி! சரி! நீயே படிச்சுட்டுத் தா. அதுக்காகச் சத்தியமெல்லாம் பண்ணாதே!}
அதைப்போல இதமாக இருந்தது.
பிள்ளையார் சுழி போட்டு, அப்பாவிற்கும் அவரது டைப் ரைட்டருக்கும் ஒரு கும்பிடு போட்டு டாக்டர் பாஸ்கரன் சென்ற பாதை கடற்கரைச் சாலையில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவது போல ஜாலியாக இருந்தது.
பழகிய நண்பர்கள் ( சீராஜூதீன், லேனா)
பிடித்த எழுத்தாளர்கள் ( சார்வாகனன், ம.வே சிவகுமார், சுஜாதா, அழகியசிங்கர், ஜெயகாந்தன், விக்ரமன், அசோகமித்திரன், சந்திரமோகன், சந்திரசேகர், ரமேஷ், முத்துலிங்கம், மாலன் )
மதிக்கும் மனிதர்கள் ( மாமனார், தலைமை ஆசிரியர், டாக்டர் சாந்தா, கிருஷ்ணமூர்தி ஸ்ரீநிவாஸ், டாக்டர் சுனிதி சாலமன், )
பிரபலங்கள் ( தேவன், சஞ்சை சுப்ரமணியன், மாண்டலின் ஸ்ரீநிவாஸ், சோ ,கிரிஜா ராகவன், மனோரமா )
திரைப்படங்கள் ( இதயக்கமலம், தில்லானா மோகனாம்பாள், மைக்கேல் மதன காம ராஜன், காக்கா முட்டை, குற்றம் கடிதல்)
மனதை வருடிய செய்திகள் ( சிறுவயது பள்ளி, மார்கழிப் பூ, செக்கு, கிருஷ்ண ஜெயந்தி,சென்னை வெள்ளம், அய்யப்பன்)
சென்ற இலக்கியக்கூட்டங்கள், படித்த புத்தக விமர்சனங்கள்,
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மருத்துவத் துறையைப்பற்றிப் பல உயரிய பதிவுகள்
டாக்டர் பாஸ்கரன்! உங்களிடம் ஸ்டெத் மட்டுமல்ல நல்லதொரு பேனாவும் இருக்கிறது.
இரண்டையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை!
மணிமகுடம் – புதிய சரித்திரத் தொடர் கதை — ஜெய்சீதாராமன்
முன்னுரை
அமரர் கல்கியின் நாவல்களில் தலைசிறந்த படைப்பு விஜயாலயன் ஸ்தாபித்து தஞ்சையைத் தலைநகரமாய் கொண்டு, ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் பொற்காலமாய் திகழ்ந்த பிற்கால சோழர்களின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகும். என்னுடைய இந்த குறுநாவலை எழுதத்தூண்டிய சிந்தனை, பொன்னியின் செல்வனில் அவர் குறிப்பிட்டிருந்த பாண்டியர்களின் வம்சாவளிப் பொக்கிஷங்களான, விலைமதிக்க முடியாத மணிமகுடத்திலிருந்தும் இரத்தின மாலையிலிருந்தும் எழுந்ததாகும்!! அவைகள் மதுரையைத் தலைநகரமாய் கொண்ட பாண்டியர் பொருட்டு ஈழ மன்னன் மகிந்தனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விவரம் வரலாற்றில் பொறிக்கப்பட்ட சான்றாகும்!! இந்த என் கற்பனை நிறைந்த குறுநாவலின் வடிவாக்கம் அவைகளை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது! நான் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்தவைகளை முடிந்தவரையில் கற்பனை மூலமாகவே சித்தரித்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வனின் கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன் இக்கதையிலும் முக்கிய பாத்திரத்தை ஏற்கிறான். அமரரின் கற்பனை வடிவாக்கம் நந்தினி, திருமலை மற்றும் ஒன்றிரண்டு பாத்திரங்களைத் தவிர ரவிதாசன் உள்பட ஏனையோர் அனைவரும் இவ்வரலாற்றில் அடக்கம். கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நேயர்கள் அறிந்துகொள்ள ஒரு தொடர் வரைபடத்தையும், சோழ நாடு மற்றும் ஈழப் பிரதேசங்களில் வரும் முக்கிய இடங்கள் அடங்கிய வரைபடத்தையும் இணைத்திருக்கிறேன்.
வந்தியத்தேவன், மர்ம புதிர் முடிச்சுகளை அவிழ்த்து, எல்லா பாண்டியர் எதிர்ப்புகளையும் முறியடித்து, மற்றும் தன் புத்தி சாதுர்யத்தினால் பொக்கிஷங்களை சோழர்களிடம் பத்திரமாக சேர்ப்பிக்கின்றானா என்பதற்கான விடையை நாவலின் இறுதியில் காணலாம்.
எனவே என்னால் இயன்றமட்டும் சிரமப்பட்டு இதை ஒரு விறுவிறுப்பான கதையாக முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை சித்தரிக்க முயன்றிருக்கிறேன். அதில் நான் தோல்வியுற்றிருந்தால் இது என் முதல் கதையானதால் உங்கள் மன்னிப்பை நான் சிரம்தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். இதற்குமுன் கதை எழுதும் பழக்கத்தை நான் ஏற்றதில்லை!
கதையை முடித்து முதன்முதலில் இக்கதையின் நகலை என் நண்பர் Mr. சகஸ்ரநாமனிடம் காண்பித்தேன். அதைப்படித்து என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர் – அவரே இக்கதையின் அஸ்திவாரம்!
இக்கதைக்கு உறுதுணையாய் இருந்து என்னை ஊக்குவித்த குரு Ms..ப்ரீதம் சக்ரவர்த்தி, கடைசிவரை சரியான பாதையில் இட்டுச் சென்றவர். அவருக்கு என் முதல் நன்றி உரித்தாகுக! எனக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்திய மனைவி ஷாந்தாவுக்கு நன்றி. எனக்கு ஊக்கமளித்த மகள் சுஷீலாவுக்கு நன்றி. மற்றும் எழுத்துப் பிழைகளை சரிபார்த்துக்கொடுத்த Mr. ஸ்ரீநிவாசன், Mrs. உஷாஸ்ரீநிவாசன், பாலகிருஷ்ணன் முதலியோருக்கு நன்றிகள்!
முக்கியமாக பொன்னியின் செல்வன் க்ரூப்பின் K.சுந்தர் அவர்கள் வரலாற்று சம்பந்தமாக திருத்தங்கள் செய்ய மிகவும் உதவிகள் புரிந்திருக்கிறார். பிழை திருத்தங்கள் மற்றும் சரியான நடைமுறைகள் முதலியவற்றிலும் உதவி செய்து என்னை ஊக்குவித்திருக்கிறார். அவருக்கு நான் என்றென்றும் கடன்பட்டுள்ளேன். க்ரூப்பின் மற்றுமொரு உறுப்பினர் Mr சுந்தர்ராஜனும் பிழைகளை திருத்தம் செய்வதில் துணை புரிந்திருக்கின்றார். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக!
கடைசியாய் இதை படிக்கும் ஒவ்வொரு நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்கள், விமர்சனம் முதலியவைகளை என்னிடம் jands.raman@gmail.com மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த குறுநாவலை அமரர் கல்கிக்கு சமர்ப்பிக்கின்றேன்
ஜெய்சீதாராமன்
==================================================================
அத்தியாயம் 01. குடந்தை சாலையில்..
பொழுது சாயும் மாலை நேரம். சூரியன் தன் பொன்நிறக் கதிர்களால் பூமியை செந்நிறமாக மாற்றிப் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. ஆடி மாதத் தென்றல் மரங்களையும் செடிகொடிகளையும் மெல்ல அசைத்து எழுப்பிய ‘மரமர’சத்தம் தேவகானம் போல் தோன்றியது. வசீகரமும், நல்ல திடகாத்திரமும், வைரம்பாய்ந்த நெஞ்சும் கொண்ட இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்த புரவி ஒன்று கொள்ளிடத்திலிருந்து குடந்தை செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் தலையெடுத்து ஆட்சியை நிலைநாட்டிக் கொண்ட காலம் அது. இளைஞனின் பெயர் ‘வந்தியத்தேவன்’.
பாதை மனித சஞ்சாரமில்லாமல் வெறுமையாய் காட்சியளித்தது. களைப்படைந்தவனாகக் காணப்பட்ட வந்தியத்தேவன் பாதைக்குச் சற்று அருகில் தென்பட்ட ஓடைக்கு அருகில் சென்று கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். புரவியில் தொங்கவிடப்பட்டிருந்த தண்ணீர் குடுக்கையை எடுத்து கவிழ்த்துப் பார்த்து அது தீர்ந்துவிட்டிருப்பதை அறிந்து கொண்டான். இறங்கி ஓடையில் முகத்தைக் கழுவி தண்ணீர் பருகினான். அரை இடுப்பிலிருந்து முறுக்கிக் கட்டிய துணியை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடுக்கையில் தண்ணீரை நிரப்பி, குதிரையின் அருகில் சென்று சேணத்துக் கயிற்றில் மாட்டி, கட்டிக் கொண்டிருந்தான்.அப்போது..
டக் டக்கென்று விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்பொலி கேட்டு, சத்தம் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு திடுக்கிடும் காட்சியைக் கண்டான்!
பாதையில் குதிரையில் ஒருவன் முன்னால் அதிவேகமாய் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் குதிரைகளில் நான்கு நபர்கள் உடலில் போர்த்திய துணியும், தலையில் முண்டாசும் அணிந்து துரத்திக்கொண்டு வந்தனர். முன் குதிரையைத் தாண்டிச் சென்று அதை வழி மறித்துச் சட்டென்று நிறுத்தினார்கள். மடக்கப்பட்ட குதிரை பிளிரிட்டுக்கொண்டு முன் கால்களிரண்டையும் மேலே தூக்கித் தடுமாறியது. அதிலிருந்தவன் கீழே விழுந்தான். துரத்தியவர்களில் ஒருவன் கீழே குதித்தான். இடுப்பிலிருந்து கத்தியை உருவி கீழே விழுந்தவனை நோக்கிப் பாய்ந்தான். நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், விழுந்த நிராயுதபாணியை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதே தன் முதற் கடமை என்று எண்ணி, தான் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். நினைத்ததை உடன் முடிக்கும் இயல்பு கொண்ட நமது வந்தியத்தேவன் குதிரையிலிருந்து வேலை எடுத்து, கணப் பொழுதில் குறி தவறாது பாய்ந்தவன் மேல் எறிந்தான்.
வேல் அவனின் ஒரு தொடையைத் துளைத்தது. நிலை தவறி, தள்ளாடி உதிரம் பெருக அவன் தரையில் விழுந்தான். கத்தி தரையில் விழுந்தது. அதற்குள் தரையில் குதித்த மற்ற மூவர்களில் ஒருவன், கத்தியை முதலில் விழுந்தவனின் நெஞ்சில் பாய்ச்சினான். பிறகு கத்தியை நெஞ்சிலிருந்து வெளியே உருவ முயன்றவாறே வந்தியத்தேவன் இருந்த திக்கை நோக்கினான். அவன் கண்களும், சம்பவ இடத்திற்கு உருவிய கத்தியுடன் பாய்ந்து வந்து கொண்டிருந்த வந்தியத்தேவனின் கண்களும் ஒரு கணம் சந்தித்தன. ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல் கத்தியை உருவும் முயற்சியைக் கைவிட்டு, சட்டென்று பாதி முகத்தை, கழுத்தில் தொங்கிய துணியை ஒரு கரத்தால் இழுத்து மூடி, மற்றொரு கரத்தால் கூட வந்த மற்ற இருவரையும் பார்த்து ஒரு சைகை செய்தான். மூவரும், வேலால் தாக்குண்டவனை விட்டுவிட்டு விரைந்து ஓடினார்கள். இருவர் முதலில் குதிரைகளில் தாவி ஏறினார்கள். மற்றொருவன் வேலால் தாக்கப்பட்டவனின் குதிரையின் முகப்புக் கயிறைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பின்பற்றினான். சுளீரென்று சவுக்கால் அடித்து குதிரைகளை விரட்டிவிட்டார்கள். அவைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.
ஓடி வந்த வந்தியத்தேவன் நின்றான். கொலையாளிகள் விரைந்து சென்று கொண்டிருந்ததைக் கண்டான். கத்தியால் குத்தப்பட்டவனின் முனகல் கேட்டு திரும்பிப் பார்த்தான். தொடர்ந்து சென்று மற்றவர்களைப் பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். முதலில் வேலினால் அடிபட்டவனின் அருகில் சென்றான். உதிரம் நன்கு வெளியேறியதால் பலவீனமடைந்திருந்த அவனைப் பார்த்து “ஏன் அந்த மனிதனைக் கொன்றீர்கள்? உடனே பதிலைச் சொல்” என்று கடினமான தோரணையில் கேட்டான். அந்த மனிதன், சுட்டெரிக்கும் கண்களினால் வந்தியத்தேவனை வெறித்து நோக்கினான். கண் இமைக்கும் நேரத்தில் இடுப்பிலிருந்த சிறிய திருகுவாளை எடுத்து நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டான். அவன் தலை தொங்கியது.
அவனை விட்டுவிட்டு மற்றவனை நோக்கி வந்தியத்தேவன் விரைந்தான். மூக்கில் விரலை வைத்துப் பார்த்து உயிர் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவன், பதிந்திருந்த கத்தியை பலம் கொண்டு உருவி வெளியில் எடுத்தான். அதன் கைப்பிடியில் மீன் உருவம் பொறித்திருந்ததைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் பிறகு தூர எறிந்தான். இரத்தம் குப்பென்று பீறிட்டது. அடிபட்டவன் நினைவை இழந்திருந்தான்.
வந்தியத்தேவன் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் குடுக்கையை எடுத்து வந்து, திறந்து கையில் தண்ணீரை விட்டு முகத்தில் தெளித்தான். குதிரையின் அருகே கீழே விழுந்திருந்த அரைத் துணியை ஓடிப் போய் எடுத்து வந்து, கிழித்து, கத்திக் காயத்தில் வைத்து, இடுப்பைச் சுற்றிலும் கட்டினான். துணியால் அவனுக்கு விசிறினான். நேரம் கடந்தது. அடிபட்டவன் மெல்ல கண்களைத் திறந்தான். சுற்றுமுற்றும் பார்த்து வந்தியத்தேவனை நோக்கினான்.
வந்தியத்தேவன், “நண்பா, வலிக்கிறதா? அவர்கள் யார்? ஏன் உன்னைத் துரத்திக் கொல்ல முயன்றார்கள்?” என்று சரமாரியாய் கேள்விகளைச் பொழிந்தான்.
அடிபட்டவன் ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் ஒன்றும் வெளிவரவில்லை. பேசும் சக்தியை அவன் இழந்திருந்தான்.
“உன்னை உடன் குடந்தைக்கு தூக்கிச் சென்று வைத்தியசாலையில் சேர்த்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறி வந்தியத்தேவன் அவனைத் தூக்க முயன்றான்.
ஆனால், அடிபட்டவனின் கைகள் வந்தியத்தேவனின் கைகளைப் பற்றின. ‘இனிமேல் பயனில்லை’ என்று சொல்வது போல் வந்தியத்தேவனுக்குத் தோன்றியது.மெல்ல ஒரு கரத்தை விடுவித்து, தொலைவில் நின்றுகொண்டிருந்த அவனுடைய குதிரையைச் சுட்டிக் காட்டியபடியே மறுபடியும் ஏதோ சொல்ல முற்பட்டான்! ஆனால் வெறும் முனகல் சத்தம்தான் வெளிவந்தது.
அவனுடைய கண்கள் நன்றியுடன் வந்தியத்தேவன் கண்களை நோக்கின! சிறிது நேரம்தான்! ஒரு கணம் பிரகாசமடைந்த கண்கள் மறுகணம் மங்கி மூடின. கைகள் தளர்ந்தன. அவனைவிட்டு உயிர் பிரிந்தது.
வந்தியத்தேவன் தரையில் அமர்ந்து சிறிது நேரம் மாண்டவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினான்.
மெல்ல எழுந்து நின்றான். நடந்த சம்பவங்களை நினைத்து ஜீரணிக்க சிறிது நேரமாயிற்று. ‘எதற்காகக் குதிரையைச் சுட்டிக்காட்டி இவன் ஏதோ சொல்ல முயன்றான்?’ என்று யோசித்தவாறே அந்த மனிதனுடைய குதிரையின் அருகில் சென்றான்.எஜமானர் இல்லாத வேற்று மனிதர் வந்திருப்பதைப் பார்த்து குதிரை கனைத்து முரண்டு பிடித்தது.
வந்தியத்தேவன் தன் குதிரையின் அருகே சென்றான். பையிலிருந்து தன் குதிரைக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த வெல்லக் கட்டிகளை எடுத்து வந்து, அவற்றில் இரண்டை எடுத்து மிரண்ட குதிரையின் வாய்க்கு அருகே கொண்டு சென்றான். மிகப் பசியுடன் இருந்த அந்தக் குதிரை அதை நாக்கால் பற்றி உண்ண ஆரம்பித்தது. மெதுவாக எஞ்சியிருந்ததையும் கொடுத்தான். அதையும் நன்றாகச் சாப்பிட்டு முடித்தது! குதிரைகளின் பாஷையை அறிந்த வந்தியத்தேவன் கயிற்றைப் பிடித்தவாறே அதன் தாடையைத் தட்டிக் கொடுத்தான் சிறிது நேரம் அதன் கழுத்தை தடவியவாறே இருந்தபின் அது சாந்தம் அடைந்தது.
குதிரையின் முதுகில் கட்டியிருந்த சேணத்தை நோக்கினான். அதன் இரு பக்கங்களிலும் பொருட்கள் வைத்த பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. பைகளை சோதனை செய்தான். அவைகளில் அணியும் ஆபரணங்கள் மட்டுமே இருந்தன. வேல் ஒன்று தனியாக வேறு பையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. இவைகளைத் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை.
‘இந்த சாதாரணப் பொருட்களைப் பற்றியா இவ்வளவு கஷ்டப்பட்டு நம்மிடம் தெரிவிக்க முயன்றான்? நிச்சயமாக இருக்காது! கொல்லப்பட்டவன் ஏதோ முக்கிய உண்மையைப் பற்றியே சொல்ல நினைத்திருக்கிறான். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? ம்.. சேணத்தின் கீழ் ஏதாவது மறைத்து வைத்திருப்பானோ?’ என்று எண்ணியவாறே அதன் அடியில் கையை விட்டுத் துழாவினான். அவன் கணிப்பு வீண் போகவில்லை. பை ஒன்று கீழே விழுந்தது!
பையை எடுத்துக் கவிழ்த்துக் கீழே கொட்டினான்.
உள்ளிருந்து சில எழுத்தோலைகளும், ஒரு கனமான சிறிய தாமிரத் தகடும் கீழே விழுந்தன.
தகடைக் கையில் எடுத்து உற்று நோக்கினான். வேலைப்பாடுடன் கூடிய அந்தப் பதக்கத்தில் ஒரு புலியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மாண்டவன் ஒரு சோழ நாட்டின் கைதேர்ந்த ஒற்றன் என்பதைத் தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கத்தியின் கைப்பிடியில் ஏற்கெனவே கண்ட மீனின் உருவம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பது புரிய ஆரம்பித்தது.
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் பகை முற்றிப்போயிருந்த அந்தக் காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காகச் சோழ ஒற்றனைப் பாண்டியர்கள் கொன்றிருக்கிறார்கள் என்பதை அறிய வந்தியத்தேவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பாண்டிய சதிகாரர்கள் எப்படி சோழ நாடு முழுவதிலும் பரவியிருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்தான்! தொடர்ந்து எழுந்த ஆர்வத்தால் தூண்டப்பட்டுத் தரையில் கிடந்த எழுத்தோலைகளைப் பார்வையிட்டான். அவைகள் கீழ்க்கண்டவாறு காணப்பட்டன:
(தொடரும்)
பேராசிரியர் சிந்தாமணி – பேட்டி
அரசுக் கல்லூரியில் மாணவர்கள் படித்தபின் தங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருப்பது மிகவும் அரிது.
ஆனால் ஒரு ஆங்கிலப் பேராசிரியரை நினைவில் வைத்து அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவரைவைத்து ஒரு சிறிய ஆவணப்படம் எடுப்பது என்பது அரிதிலும் அரிது.
ஜெய் சக்திவேல் என்ற அந்நாள் மாணவர் – இந்நாள் கல்லூரி உதவிப் பேராசிரியர், தனது முன்னாள் பேராசிரியரைப் பேட்டி கண்டு எடுத்த வீடியோ இது.
மாணவருக்கும் பெருமை ! ஆசிரியருக்கும் பெருமை !
முப்பத்தொன்பதாவது புத்தகக் கண்காட்சி -(ஜூன் 1-13 )
காயிதே மில்லத் கல்லூரி மைதானத்திலிருந்த நாட்களிலிருந்தே சுமார் இருபது கண்காட்சிக்கு சென்றிருந்தாலும் இம்முறை பெரிய மாறுதல். மேஜைக்கு அந்தப்பக்கம். நண்பரின் ஸ்டாலைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு.
இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் பைகளில் புத்தகங்களோடு எத்தனை பேர். விடுமுறை நாட்களிலும் கடைசி நாளிலும் நல்ல கூட்டம். விதவிதமான ரசனைகளும் தேவைகளும். புத்தகங்கள் மத்தியிலேயே 13 நாட்கள். முன்பே அறிமுகமான சில எழுத்தாளர்கள், புதிய அறிமுகங்கள், வாசகர்கள், மற்றகடைகளில் இருந்த உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள். விதவிதமான நுகர்வோர் .. நேரம் சென்றதே தெரியவில்லை.
வருபவர்களில்
- லிஸ்ட் எழுதிக்கொண்டுவந்து கேட்பவர்கள்.
- ஸ்டால்களில் புத்தகப் பட்டியல் வாங்கிப்போய் அதிலிருந்து நிதானமாக தேர்ந்தெடுத்து பின்னர் வந்து வாங்குபவர்கள்.
- புத்தகங்களை நோட்டம் விட்டு மனதில் பட்டால் வாங்குபவர்கள்
- சமீபத்தில் வந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட புத்தகத்தை குறிவைத்து வாங்குபவர்கள்
- புத்தகம் வாங்காமலேயே குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவற்றை வாங்குபவர்கள்
- பட்ஜெட் போட்டு வாங்குபவர்கள்
- பாதி வாங்கியபின் ATM சென்று பணம் எடுத்து வாங்குபவர்கள்
- பிரபலங்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பவர்களும் , ‘ஆட்டோக்ராஃப்’ வாங்குபவர்களும்
- கடைசி நாட்களில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் எதிர்பார்த்து வந்தவர்கள்.
- வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றவர்கள்.
ஸ்டால்களில்
- பொருட்காட்சி விற்பனையை பெரிதும் நம்பியிருக்கும் பதிப்பாளர்கள்.
- நஷ்டம் வராமல் விட்டாலே போதும் என்கிற பகுதிநேர பதிப்பாளர்கள்
- கண்காட்சிகளை மட்டுமே நம்பியி’ருக்கும் ஒரு சில பதிப்பாளர்கள்
- குறைவான சொந்த பதிப்புகளும் அதிகப்படியாக பிற புத்தகங்களும் வைத்திருக்கும் பதிப்பகங்கள்
- விற்பனை மட்டுமே செய்யும் விற்பனையாளர்கள்.
- திருவிழாக்கடைகள் போல் உணவகம், கரும்பு ஜூஸ், செடிகள், வாகன ஸ்டாண்ட் இன்ன பிற
நிகழ்ச்சிகளில்
- அரங்கத்தில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள்
- ஸ்டால்களில் பெரிய , சிறிய அளவில் வெளியீட்டு விழாக்கள்
ஒரு ஸ்டாலில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர்களும், உதவியாளர்களும் இருந்தார்கள். நல்ல எனர்ஜியுடன் வேலை செய்தார்கள். ஆனால், ‘வாங்க வேண்டாம் ஸார்.. பார்த்துட்டுப்போங்க’ என்று அழைத்த அந்த இளைஞனிடம் ‘நீயே வாங்கவேண்டாம் என்கிறாயே, அப்ப எதுக்குப் பாக்கணும்?’ என்று கேட்டார்.
விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி மாணவன் சுனில் குமார் தன் நண்பன் மல்லிக்குடன் வந்திருந்தான். அப்பா செலவிற்கு கொடுத்த ரூ.100 க்கும் ஜூலியஸ் சீசர் என்ற புத்தகம் வாங்கிப் போனான். பார்க்கவே நிறைவாக இருந்தது. பல பழைய புதிய நண்பர்களுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்புதான் எனக்கு “TAKE AWAY”.
கிருபாநந்தன்
புத்தகக் கண்காட்சியைக் காணாதவர்கள் நிச்சயமாக ஓர் அருமையான உணர்வைப் பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ! இந்தக் குஷி மற்றும் கொண்டாட்டம் காண நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்கவேண்டும் ! உங்களுக்காக இந்த சிறு வீடியோ !
நேற்றைய நாளையும் நாளைய நேற்றும் (சுரா)
நேற்றைய நாளைக்கும் நாளைய நேற்றைக்கும்
வேறுபாடு நிறைய உண்டு
நேற்றுப் போனால் நாளை வரவில்லை
எனவே நேற்றைய நாளை
வெறும் கற்பனை கனவு எதிர்பார்ப்பு
நாளைக்குப் போய்ப் பார்த்தால்
நாளையும் தெரியும் நேற்றும் தெரியும்
இரண்டிலும் எதார்த்தம் பிடிபடும்
நிஜத்தின் தரிசனம் கிட்டக்கூடும்
ஆனால், ஸ்வாமி, இன்றென்னவோ?
இலக்கியவாசல் 13வது நிகழ்வின் தொகுப்பு
நானறிந்த சுஜாதா” – ஒரு பதிவு
குவிகம் இலக்கிய வாசலின் பதின்மூன்றாவது நிகழ்வாக “நானறிந்த சுஜாதா” பனுவல் புத்தக நிலைய அரங்கில் மே 21, சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு.சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பும் செய்தார்.
.மூத்த எழுத்தாளர் “நகுபோலியன்” அவர்கள் தனது சிறுகதையினை வசித்தார்.
சுஜாதாவின் நாடகமான “மாறுதல்” திருவான்மியூர் ஆனந்த் குடியிருப்புக் குழந்தைகள் ஒரு குறுநாடகமாக . திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அவர்கள் இயக்கத்தில் எல்லோரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றினார்கள்.
(ஆயிரம் நாடகங்களில் பங்கேற்ற திரு தமிழ்த்தேனி, உட்கார்ந்தவாறே ஒரு காட்சியினை கண்முன் நிறுத்தமுடியும் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னது இந்த நாடகம் கொடுத்த அனுபவத்தை நன்கு தெரியப்படுத்துகிறது)
“தமிழ்த்தேனி” அவர்கள் ‘அம்மா’ மற்றும் ‘கன்னியாகுமரி’ என்னும் இரு கவிதைகளால் அவையை அலங்கரித்தார்.
சுஜாதா அவர்களிடம் பக்தி என்றே சொல்லக்கூடிய வகையில் ஈடுபாட்டால் ‘சுஜாதா தேசிகன்’ என்று மாறிவிட்ட தேசிகன் அவர்கள் சுஜாதாவின் எழுத்துக்களுக்குள் நுழைந்த கதையினையும், அமரர் சுஜாதாவின் வியத்தகு பார்வையையும் பழகும் முறையினையும் கூறி எழுத்தாளராகவே நாமறிந்த அவரை ஒரு மாபெரும் மனிதனாகவும் கண்முன் நிறுத்தினார்.
ஜெயராமன் ரகுநாதன் அவர்கள் பிரமிப்பு அடையும் வாசகனாக எழுத்துக்களையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவரது படைப்புகளைக் கொண்டே விவரித்து அனைவரின் மனதிலும் சுஜாதாவை மறுவாசிப்பு செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பங்குபெற்றோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். திரு கிருபானந்தனின் நன்றி நவிலலுடன் இனிய மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
முகநூலில் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள டாக்டர் பாஸ்கரன், திரு சுஜாதா தேசிகன் மற்றும் திரு ஜெயராமன் ரகுநாதன் ஆகியோருக்கும் நமது நன்றி.
ரோஜா நிறச் சட்டை – அழகியசிங்கர்


Click here to Reply or Forward
|
லதாவின் கார்ட்டூன் பக்கம்
இயற்கையின் சீற்றம் – “தைலம்”
எரிதழல் சுழன்றது ஏழுநூறு கோடியாவது முறையாக.
இருளகன்று ஒளி பாய்ந்தது.
இயற்கை அன்னை துயிலெழுந்தாள்.
என்னென்ன புதுமையோ என்றெண்ணிக் கண் விழித்தாள்
“யானறியாத புதுவர வென்னவோ” என எண்ண, எண்ண –
“அம்மா, அம்மா” காற்று வந்து கண்ணைக் கசக்கியது.
“ஏனடா, கண்ணே, கைவிலக்கு, கண்ணக் கசக்காதே.”
“அம்மா, புகை, புகை, இலைப்புகை, ஆலைப்புகை,
வாகனப்புகை, அணுகுண்டுப்புகை, கண் எரிகிறதே.”
“சீ, சிறுபிள்ளை, இதற்குப்போய்” அழுவதா?
அதோ அக்காள் பார், போய் விளையாடு”
ஆழிப்பெண் ஓடிவந்தாள் விழியொழுக
“அம்மா, என்னைச் சேறாக்கினான்,
எண்ணைச் சேறாக்கினான்.
என் செல்வங்களைப் பிணமாக்கினான், பாரம்மா” எனக் கால் பிடித்தாள்.
“பேதையே,நீ கலங்காதே” கண்துடைத்து,
”வான் மகள் அழைக்க வருகிறாள் பார் விளையாட
ஓடு, ஓடு, சேர்ந்து கொள்” என்றாளன்னை
“ஓட்டை போட்டானே அம்மா,
என் சட்டையில் ஓட்டை போட்டானே,
சும்மாயிருந்த என்னைக் கிள்ளினானே,
என் செய்வேன்?” புலம்பி மழையாய் அழுதாள் வான்மகள்.
காற்றும் கடலும் வானும் ஓடிவர,
மெய்தழுவி மூவரையும் மடிசாய்த்தாள் மண்மாதா.
பேதைகளே! யார்க்கஞ்சுவது? எவர்க்கஞ்சுவது?
கேவலம் இந்த மனிதனுக்கா? சே! வெட்கம்!
புகைமண்டலமாக்கினானா உன்னை?
சேறாக்கினானா உன்னை?
கிழித்தானா உன்னை? நீங்கள் என்ன செய்தீர்கள்?
மூவரும் ஒரே குரலில்,
”நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை
எப்பொழுதும் போல் எங்கள் கடமையைத்தான் செய்தோம்”
“எந்த தைரியத்தில் உங்களைத்தொட்டான்?
நானிருப்பது தெரியவில்லை அவனுக்கு?
முட்டாள் மனிதன்!
என்னை சீண்டக் கூடாதென்று தெரியாதா?
என் சீற்றம் புரியாதா அவனுக்கு.
காட்டுகிறேன் நான் யாரென்று.
பிள்ளைகளே, உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை.
காண்பிக்கிறேன், வாருங்கள்
நான் சற்றே திரும்பினால் காற்றே, நீ திசை மாறுவாய்
மனிதன் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து சாவான்
கடலே, நீ கொந்தளிப்பாய்
அவனையும் அவனுடைமைகளையும்விழுங்கி விடுவாய்.
வானமே, நீ ஊதாக் கதிர்ளைக் கக்கி உருக்குலைப்பாய் அவனை
இருக்குமிடம் தெரிந்து நடக்காவிட்டால் இது தான் கதி“.
கோபத்தில் உடல் விதிர்த்தாள், திரும்பினாள்
தலை முடிந்தாள் இயற்கை அன்னை !
சுனாமியாய்ச் சீறினாள் !
பூகம்பமாய் வெடித்தாள் !
மழையாய்க் கொட்டினாள் !
சுஜாதா எழுதிய மாறுதல் நாடகத்தின் குறு வடிவம்
மாபெரும் எழுத்தாளர் சுஜாதா எழுதிய அரைமணிநேரம் 20-25 நிமிடங்கள் நடைபெறக்கூடிய மாறுதல் என்ற நாடகத்தை சின்னஞ் சிறார் நடிப்பதற்காக 8 நிமிடத்தில் சுருக்கி அமைத்த வடிவம் இது. (சுஜாதா மன்னிப்பாராக).
ஆனந்த் அபார்ட்மெண்ட்ஸைச் சேர்ந்த அனன்யா, ஷாலு, கிருத்திகா, ரேகா நடித்து, “மிகவும் சிறப்பாக இருந்தது” என்று டாக்டர் பாஸ்கரன் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்த நாடகம்.
குவிகம் இலக்கியவாசலின் 13வது நிகழ்வில் அரங்கம் ஏறியது.
குறு வடிவம் மற்றும் இயக்கம்: விஜயலக்ஷ்மி
(இந்த நாடகத்தின் ரிகர்சல் போது எடுத்த வீடியோவை அடுத்த பக்கத்தில் காணலாம்)
பாத்திரங்கள்: சுந்தரமூர்த்தி, நாடகாசிரியர் விசுவநாதன்,
நடிகை ராதா, சபா செக்ரட்டரி ராமன்.
விசுவநாதன் ; உங்க நம்பர் என்ன?
சுந்தரமூர்த்தி : ஏ – ஏழு.
விசு : எனக்கும் ஏ – ஏழு கொடுத்திருக்காங்களே!
சுந்த : எங்கே ! காட்டு ! ( விசு காட்டுகிறான் )
சுந்த : (சற்று ஆச்சரியத்துடன்) இது தப்பு. நான் இருபது வருஷமா இந்த சபாவிலே மெம்பரா இருக்கேன். இருபது வருஷமா இந்த ஏ – ஏழிலே உக்காந்திருக்கேன். இதே லொடக்காசி நாற்காலியிலே…… (டிக்கெட்டை மறுபடி பார்க்கிறார்) நீ என்ன மெம்பரா? உன்னைப் பார்த்ததே இல்லையே ! புதுசா!
விசு : ஆமா சார் ! யாரையாவது கேட்டுப் பார்ப்பமா?
சுந்த : கேக்கறது என்ன ? ஸீட்டு தப்பு. அங்க எங்காவது போய் உக்காரு.
(விசு பக்கத்தில் உட்காருகிறான். சுந்தரமூர்த்தி அவனை விரோதத்துடன் பார்க்கிறார்.)
விசு : : செக்ரட்டரி வரட்டும் சார். அவர் தீர்த்து வெக்கட்டும்.
( ஒரு பெண் வருகிறாள். சுந்தரமூர்த்தி போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது. )
பெண் : அண்ணா ! ஸீட்டு கிடைச்சுதா?
விசு : எங்க ! எனக்குக் கொடுத்த அதே சீட் நம்பர்லே இவரு ஓக்காந்திருக்காரு.
பெண் : ஐயோ ! அது எப்படி ! சார் உங்க டிக்கட்டைக் காட்டுங்க.
சுந்தர : இத பாரும்மா ! நான் இந்த சபாவிலே நீ பொறக்கறதுக்கு முன்னாடில இருந்தே மெம்பர். இதே ஸீட்டைத் தேச்சுக்கிட்டு இருக்கிறவன்.
பெண் : அதெப்படி ஸார் உங்க நம்பர் இவனுக்கும் கொடுத்திருக்காங்க ! வேறே ஏதாவது ஏ – செவன் இருக்கா ? ( அவர் பக்கத்திலே உட்காருகிறாள் ). உங்க டிக்கட்டைப் பார்க்கலாமே.
சுந்த : டிக்கட்டு எல்லாம் என்கிட்டக் கிடையாது. நான் மெம்பர்ங்கறேன்.
பெண் : மெம்பர்ஷிப் கார்டைக் காட்டுங்க.
சுந்த : எதுக்குக் காட்டணும் ? காட்ட வேண்டிய அவசியமில்லை.
பெண் : காட்டலைன்னா ஸீட்டையாவது விடுங்க. இவன் கிட்டே ஏ – செவன் இருக்கில்லே ?
சுந்த : என்னடாது எழவாப் போச்சு ! நான் எத்தனை வருஷமா இதே ஸீட்லே…..
பெண் : அப்ப மெம்பர்ஷிப் கார்டைக் காட்டுங்க.
சுந்த : கார்டு கொண்டுவரலை. செக்ரட்டரி வரட்டும். அந்தாளுக்கு என்னை நல்லாத் தெரியும்.
விசு : ராதா விட்டுரு. செக்ரட்டரி வந்தப்புறம் பார்த்துக்கலாம்.
பெண் : இல்லை அண்ணா ! அப்புறம் கூட்டம் ஜாஸ்தி வந்துரும். அதனாலதான் உன்னை முன்னால வந்து உக்காரச் சொன்னேன். நாடகத்தை எழுதினது நீ ! ஒனக்கு இந்தச் சலுகை கூடக் கிடையாதுன்னா எப்படி? (சுந்தரமூர்த்தி திரும்பிப் பார்க்கிறார்) அதுக்கு மேலே நானும் இதில நடிக்கிறேன். இப்ப மட்டும் செக்ரட்டரி இந்த ஸீட்டு உனக்கில்லைன்னு சொல்லட்டும். எல்லாத்தையும் கான்சல் பண்ணிட்டு வீ வில் வாக் அவுட் !
விசு : அதெல்லாம் வேண்டாம் ! பெரியவங்களோட நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடலாம்.
பெண் : மெம்பர்ஷிப் கார்ட்கூட இல்லேண்ணா இவர்கிட்ட !
விசு : எதுக்குத் தகராறு ? அவங்க வரட்டுமே !
(இதற்குள் சுந்தரமூர்த்தியின் தோரணை சற்று மாறியிருக்கிறது.)
சுந்த : (ராதாவிடம்) என்ன சொன்னே நீ ? (விசுவிடம்) இந்த நாடகத்தை நீ எழுதியிருக்கியா ?
விசு : ஆமா ஸார் ! இன்னிக்கு என்ன நாடகம்னு தெரியுமா உங்களுக்கு?
சுந்த : தெரியாது.
விசு ; தெரியாமையா நாடகம் பார்க்க வரீங்க?
சுந்த : இப்ப எல்லா நாடகமும் ஒரே மாதிரிதானே இருக்கு ! ஏதோ ஓரங்க நாடகமோ என்னவோ சொன்னாங்க.
பெண் : உங்க ஒய்ஃப் வரலையா ஸார்?
சுந்த : அவ வந்துட்டா வீட்ல சமையல் பண்றது யாரு?
விசு : வாஸ்தவம்தான்.
பெண் ; `என்ன வாஸ்தவம்? அந்தம்மா மட்டும் டிராமா பார்க்க வேண்டாமா?
சுந்த : அதுக்கு ஒரு எழவும் புரியாது. அழ வேண்டிய இடத்திலே சிரிக்கும்.
பெண் : அவங்களுக்கு அங்கதான் சிரிப்பு வருதோ என்னவோ?
சுந்த : என்ன டிராமா இன்னிக்கு?
விசு : என்ன மாதிரி டிராமா உங்களுக்குப் பிடிக்கும்?
சுந்த : எனக்குப் பிடிக்கிற டிராமா எல்லாம் போயிடுத்துப்பா. அந்தக் காலத்தில கிட்டப்பா, செல்லப்பா, டிராமா எல்லாம் பார்த்திருக்கேன். வெங்கலக் குரல்லே மைக்கே இல்லாம கணீர்னு பாடுவா. என்ன ஸ்டேஜ் எபெக்ட்ஸ் ! அனுமார் ஸஞ்ஜீவி மலையை எடுத்துண்டு வருவார். ஸ்டேஜ்லயே மலை பறக்கும். அவ்வையார் டிராமா பார்த்திருக்கியோ நீ? அதை நாடகத்தோட பொற்காலம்னுதான் சொல்லணும்.
விசு : அப்போ இப்ப…?
சுந்த : இப்ப என்ன ? வெறும் ஜோக்ஸ், இல்ல அரசியல், இல்ல பிராமண வீட்டுக் கதை. இப்ப என்ன பண்றாங்க. நாடகத்தைப் படிச்சுக் காட்டறாங்க. படுதா வேண்டாம். நாற்காலி வேண்டாம். இப்ப ஓங்கண்ணா எழுதியிருக்கிற நாடகத்தைச் சொல்லல. பொதுவா நாடகங்களைப் பத்திச் சொல்லிண்டிருக்கேன். நீ தப்பா நெனைச்சுக்காதே.
பெண் ; நல்ல நாடகங்களைப் பாக்காம எப்படி ஸார் நீங்க சொல்ல முடியும்?
சுந்த : நல்ல நாடகங்கள் இருக்கா, சொல்லு., பாக்கறேன். ஒனக்காகப் பாக்கறேன். (விசுவிடம்) ஆமா ! உன் அபிப்பிராயத்திலே நாடகம்னா என்னன்னு நினைச்சுண்டிருக்கே?
விசு : அதைத்தான் பாக்கப் போறீங்களே?
சுந்த : என்ன, சொல்லேன்.
விசு : சொல்றேன் ! அதுக்குள்ள இந்த சீட்டுப் பிரச்னையைத் தீர்த்துக்கலாம்னுட்டு…
பெண் : (வெளியே பார்த்து) பிரச்னையைத் தீர்த்துரலாம். செக்ரட்டரி வரார்.
சுந்த ; ராமன்! இங்க வாய்யா ! நான் இந்தச் சபாவிலே எத்தனை நாளா மெம்பர்?
செக்ர : என்ன இப்படிக் கேட்டுட்டேள்? ஆரம்பத்திலேருந்தே நீங்கதானே மெம்பர்!
சுந்த : எத்தனை வருஷமா இந்த இடத்திலே உட்கார்ந்துண்டிருக்கேன்?
செக்ர : ஏன்? என்ன விஷயம்?
சுந்த : இவருக்கு என் ஸீட்டைக் குடுத்திருக்கியே, என்னய்யா ஆர்கனைசேஷன் !
செக்ர : இஸ் இட் ? (விசுவிடம்) ஸார் கொஞ்சம் காமிங்கோ! (டிக்கட்டை வாங்கிப் பார்த்து விட்டு, யோசித்து ) இது எப்படி ஆச்சு? (சுந்தரமூர்த்தியிடம்) சார்! ஐம் ஸோ ஸாரி! இன்னிக்கு மட்டும் வேறு ரோவில சீட் போட்டுக் கொடுத்துர்றேன்.
சுந்த : அது எப்படி இவருக்கு மட்டும் சலுகை? இவரை அங்கே போகச் சொல்லு.
செக்ர : சார், இவர் யார் தெரியுமோல்லையோ, ஆதர்.. , டிராமாவோட சிருஷ்டிகர்த்தா, எழுதினவருக்கு ஒரு மரியாதை வேண்டாமா?
சுந்த : வேற ஸீட்டு போட்டுக் கொடுக்கறது? என் சீட்தான் ஆம்டுதோ?
செக்ர ; இத பாருங்க. மத்த ஸீட்டெல்லாம் ஃபுல்லி ரிசர்வ்ட். இன்னிக்குக் கமிஷனர் வரார்.
சுந்த : ஏன், நான் மட்டும் வர மாட்டேனா?
செக்ர : ஆனஸ்டா, அதான் நீங்க இந்த மாதிரி எக்ஸ்பெரிமண்டல் டிராமாவுக்கெல்லாம் வர மாட்டீங்கன்னு நினைச்சோம். அதான் சார் இந்தக் குழப்பம். இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா?
சுந்த : (கண்டிப்பாக) அதெல்லாம் முடியாதுப்பா.
செக்ர : (சுருதி மாறி) அண்ணா மன்னிக்கணும்…. ரொம்பப் பிடிவாதம் பிடிக்கறேள்.
சுந்த : நானா? நானா பிடிவாதம் பிடிக்கறேன்?
செக்ர : ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேளா?
சுந்த : முடியாது. ஆன் பிரின்சிபிள், முடியாது.
செக்ர : (பரிதாபமாக விசுவைப் பார்த்து) ஸாரி சார்! நீங்க வந்து ஒண்ணு செய்யுங்கோ. இப்போதைக்குப் பக்கத்திலேயே இந்த சீட்லேயே உக்காந்து பாருங்கோ. (சுந்தரமூர்த்தியிடம் ஆவேசமாக) அண்ணா ! உங்க ஏ – செவன்லேயே ஜீவித காலம் வரைக்கும் உக்காருங்கோ ! நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். (விசுவிடம்) நீங்க இங்க உக்காந்துக்கங்கோ சார். (பெண்ணிடம்) ஸாரி மிஸ் ராதா, உங்களை மேக்கப் ரூம்ல கூப்பிட்டுண்டிருக்கா.
சுந்த : (தன்னிச்சையாக) நான் எதுக்குச் சொல்ல வரேன்னா, ஒரு பிரின்சிபிள்னு லைஃப்ல வேணும் இல்லையா?
விசு : வாஸ்தவம்தான்.
சுந்த ; பர்சனலா இதை எடுத்துக்கக் கூடாது நீங்க. என் லைஃப் பூரா இப்படி நான் சண்டை போட்டிருக்கேன். ஒரு பிரின்சிபிள்னு வெச்சுண்டா, அதை விடவே கூடாது. அதுலேருந்து மாறவே கூடாது.
விசு : அது எப்படி சார்? மாறுதல் இல்லாம முன்னேற்றமே இல்லையே சார்.
சுந்த : மாறணும்னா நீ மாறிட்டுப் போய்யா. நான் எதுக்கு மாறணும்? எதுக்காக ஒன்னோட வால்யூஸை நான் ஏத்துக்கணும்? இந்த ஓலகத்தில இருக்கிறவரைக்கும் ஒரு பிடிவாதம் வெச்சுண்டு இருக்க எனக்கு உரிமை இருக்கா இல்லியா?
விசு : இந்த மாதிரி பெரியவங்களுடைய பல விதமான பிடிவாதங்களினால இளையவர்கள் செய்ய நினைக்கிற மாறுதல்களுக்குத் தடங்கல் வருதுன்னு நினைக்கிறேன்.
சுந்த : அது எப்படி? எல்லா மாறுதல்களையும் நாங்க ஏத்துக்கணும்னு கட்டாயம் இல்லையே?
விசு : மாறுதல் இல்லேன்னா மனுஷன் செத்துப் போயிடுவான் ஸார். எல்லாத்திலேயும் மாறுதல் வந்துதான் தீரணும்.
சுந்த : மாறுதல்ங்கறது நல்லதுக்கா, கெடுதலுக்கானு பார்க்கணுமா வேண்டாமா?
விசு : அய்யோ, நல்லது கெடுதல் எல்லாம் பத்தி இந்த மாறுதலுக்குக் கவலை இல்ல சார்.
சுந்த : மாறுதலோ, புரட்சியோ நம்மகிட்டே வர முடியாதப்பா.
விசு : வந்துரும் சார் வந்துரும்.
சுந்த : சரி. அது பாட்டுக்கு வரட்டும். (கெடிகாரத்தைப் பார்த்து) இன்னிக்கு உன் நாடகம் என்ன சொல்லுது?
விசு : என் நாடகம் இந்த மாறுதலைப் பத்தித்தான் சார். நீங்க நாடகம்கிறது, பாட்டு, படிப்பினைன்னீங்க. என் அபிப்பிராயத்தில நாடகம், நம்முடைய பாசாங்குகள், பிடிவாதங்களை எல்லாம் காட்டணும்.
சுந்த : அப்படியா? யாரு நடிகர்கள்? நம்ம ராதா. அப்புறம்?
விசு : அப்புறம் நானு, செக்ரட்டரி, நீங்க.. அவ்வளவுதான்.
சுந்த : என்னப்பா சொல்றே? புரியும்படியாச் சொல்லு. நானா?
விசு : இதுவரைக்கும் நாம பேசிக்கிட்டு இருந்ததுதான் என் முதல் ஓரங்க நாடகம் சார். நாடகம் மாறிப் போச்சு. (எதிரே கையைக் காட்டி) அத பாருங்க, அவுங்கல்லாம் இதுவரைக்கும் நம்மைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. (பக்கவாட்டில் பார்த்து உரக்க) விளக்கைப் போடுப்பா ஆடியன்சுக்கு!
இதான் சார், நாடகத்திலே ஏற்பட்டுக்கிட்டு இருக்கிற மாறுதல்.
சுந்த : (நின்று ஆடியன்ஸைப் பார்த்து, பிரமித்து) அடப்பாவி! நான் வரல்ல ! எனக்கு இந்த மாறுதல் வேண்டாம் ! வேண்டவே வேண்டாம் !
விசு : அதைத்தான் நானும் சொல்றேன். வெலகிக்கங்கன்னுட்டு !
( ஏ – ஏழு ஸீட்டில் விசுவநாதன் உட்கார்ந்து கொள்ள, மேடை விளக்குகள் மங்கி மறைய திரை விழுகிறது.)
இந்த குறு நாடகத்தின் ரிகர்சல் போது எடுத்த வீடியோ
படைப்பாளி -(வ.சா. நாகராஜன்)
குறிப்பிடத்தக்க பல சிறுகதைகள் எழுதியிருக்கும் திரு. வ சா நாகராஜன், அறுபது எழுபதுகளில் கலைமகள், அமுதசுரபி, ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர். தொடர்ந்து எழுதிவந்தவர். பல சிறுகதைப்போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். பள்ளி நாட்களில் தனது நண்பர் திரு K பாலச்சந்தர் (பின்னால் இயக்குனர் திலகம்) அவர்களுடன் இணைந்து “சுதந்திர மலர்” என்னும் கைப்பிரதி புத்தகத்தை வெளியிட்டவர். பெரும்பாலான கதைகளில் எளிய மத்தியத்தர குடும்ப சூழ்நிலைகள் இவரது நிலைகலன்.
‘பாசி’, ‘விதியின்கை’, ‘பொய்மான்’, ‘மனசாட்சி’, ‘மோர்க்குழம்பு’ ஆகியவை இவரது சிறந்த சிறுகதைகளில் சில.
எந்த ஒரு கிராமத்திலும் இடிபாடுகளுக்கிடையே ஏதாவது ஒரு கோயிலைப் பார்த்தால் உங்களுக்கு சுகவனேஸ்வரரையும் சுந்தரிப்பாட்டியையும் கண்டிப்பாக நினைவுபடுத்தும் இந்தக் கதை.
கலைமகள் இதழில் ஏப்ரல் 1968இல் வந்த சிறுகதை – இவரது “உயிர்மேல் ஆசை” என்னும் அந்த முழு சிறுகதையும் இங்கே:
உயிர் மேல் ஆசை
வைகறை ஞாயிற்றின் முதல் கீற்று அந்த ஊரில் பாட்டிமீது தான் முதலில் விழும். வெண்ணாற்றில் குளித்து முடித்து ஈரப்புடவை சொட்டச்சொட்ட நின்றபடியே அந்த முதல் ஒளியை எதிர்நோக்கி ஜபத்தையும் அங்கேயே முடித்துக்கொண்டபின் குடத்தை எடுத்துக்கொண்டு ஆள் உயரம் உள்ள படுக்கைக் கரையில் ஏறி இறங்கி, படு வேகமாகக் கண் மண் தெரியாமல் லாரிகள் பறக்கும் மெயின் ரோடைத் தாண்டித் தெருவுக்குள் அந்த இறக்கத்தில் பாட்டி இறங்கும் போதுதான் பல் துலக்கவே ஆற்றுப் பக்கம் போகும் பலர் எதிரில் வருவார்கள்.
சாலையைத் தாண்டி நாலு தப்படி நடந்ததும் சுகவனேசுவரர் கோயிலின் கீழ் வாசல் நிறைந்த கோபுரமாக இருந்து இப்போது இடிந்துபோய் மொட்டையாகச் சுற்றுப்புறம் முழுவதும் அரைக் கல்லாகவும் கால் கல்லாகவும் இறைந்து கிடக்கும் அந்த இடத்தைத் தாண்டி உள்ளே நுழைவாள் பாட்டி. கோபுர வாசலிலிருந்து முன் மண்டபம் வரும்வரை உள்ள அந்த நாற்பது அடிப் பிரதேசத்தில் நெருஞ்சிமுட் செடிகள் தன்னிச்சையாக வளர்ந்திருந்தாலும் ஒற்றையடிப் பாதையாக வழி விட்டிருக்கும். பாட்டி கண்களை இடுக்கித் தடம் புரிந்துகொண்டு நடந்து முன் மண்டபத்தில் ஏறி உள்ளே நோக்குவாள். முன் மண்டபமே இருட்டாக இருக்கும். அதனுள் தெரியும் கர்ப்பக்கிரகம் அதைவிடக் கருக்கிருட்டாக இருக்கும். அதனுள் தண்டபாணி குருக்கள் தட்டுத்தடுமாறி உதயவேளை பூஜையை முடித்துக் கொண்டு விட்டதற்குச் சாட்சியாக விளக்கேற்றி வைத்து விட்டுச் சுகவனேசுவரரின் தலையில் இரண்டு பூக்களையும் போட்டுவிட்டுப் போயிருப்பார். அந்தக் கருக்கிருட்டிலும் இந்தச் சின்ன விளக்கொளியில் எண்ணெய் முழுக்கில் வழவழவென்று தெரியும் சுகவனேசுவரரைத் தரிசித்துப் பரவசமாகி நிற்பாள் பாட்டி. பின்னர் வலப்புறம் தனியாக அமைந்துள்ள அம்மன் சந்நிதியிலும் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளிப் பிரகாரத்துக்கு வருவாள். அந்த இடத்தில் இப்போதெல்லாம் சுந்தரிப் பாட்டி மாத்திரமே கால் வைப்பதனால் தடங்கூட விழாமல் எல்லா இடங்களிலும் ஒரே நெருஞ்சி முட்காடாக இருக்கும். அந்தப் பிரதேசத்தில் பாட்டி காலில் முள் தைத்துக் கொள்ளாமல் ஓர் உத்தேசமாக நடந்து தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு வருவாள். பாட்டியின் பிரகாரச் சுற்றே இந்தத் தட்சிணாமூர்த்தியை உத்தேசித்திதுத்தான். பிராகாரத்தில் இருந்த பிள்ளையாரும் சுப்பிரமணியரும் அவரவர்களுடைய மண்டபங்களை விட்டுக் கோயிலின் முன்மண்டபத்தின் இருட்டு மூலைகளை எப்போதோ ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள்.
ஒருவாறாக கோயிலைச் சுற்றிக்கொண்டு வெளியில் வந்து ஈரப்புடவை புழுதியில் படாதவாறு கோபுர வாசலில் ஒரு நமஸ்காரமும் செய்துவிட்டுப் பாட்டி வெளியேறுவாள். சிவன் கோவில் வாசலைத் தாண்டி நாலு தப்படி தெற்கு நோக்கி நடந்தால் சின்ன வாய்க்கால் ஒன்று குறுக்கிடும். அதில் பாலம் அமைத்து வெகு காலம் ஆகிவிட்டதனால் அது இப்போது வண்டிப் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக ஆகி, கல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். அந்த இடத்தையும் ஜாக்கிரதையுடன் தாண்டி இரு பக்க வேலியடைப்புடைய சந்தினுள் நுழைந்து தெருவுக்குள் பிரவேசித்து மேற்கே திரும்பினால் நாலாவது வீடு பாட்டியின் வீடு.
‘வீடு’ என்று கௌரவத்துக்காக அதைச் சொல்லலாமே தவிர பாட்டிக்கான எழுபது வயசையும் அதற்கு மேலும் விழுங்கி விட்டு நிற்கும் அந்த வீடு பல ஆண்டுகளாக எந்த விதமான பழுதும் பார்க்கப் படாமல், மனிதர்களிடமிருந்து மறைந்து விட்ட நன்றி விசுவாசத்தைத் தானாவது கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்குடன்தான் இன்னும் விழாமல் நிற்கிறது என்று சொல்ல வேண்டும். வீட்டின் திண்ணையையும் இடைக்கழியையும் தாண்டினால் பெரிய முற்றம், நீண்ட கூடம், தாழ்வாரம்.. அவ்வளவுதான். சமையற்கட்டும் பின்னால் இருந்த பகுதிகளும் எப்போதோ விழுந்துவிட்டன.
பாட்டிக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு காரியந்தான் அவசரம். காலையில் எழுந்து இருள் பிரிவதற்கு முன் குளித்துவிட்டுச் சுகவனேசுவரர் தரிசனத்தை முடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வளவுதான். அதன் பின்னர் அவள் கால அட்டவணை ஒரு வரைமுறைக்கு உட்பட்டதில்லை. ஏகாதசி முதலிய விரத நாட்களில் அந்த வீட்டில் அடுப்பே மூட்டப்படாது. மற்ற நாட்களில் பத்து மணிக்கு மேல் ஒரே ஒரு தடவை மூட்டப்பட்டு, பாட்டியின் மூன்று வேளை ஆகாரமும் ஒரே அடுப்பில் முடிந்துவிடும்.
பாட்டி தன் எழுபது வயது வாழ்க்கையையும் இப்படியேயா வாழ்ந்திருப்பாள்? அவளும் ஒரு காலத்தில் சின்னஞ்சிறுமியாக இதே தெருவில் பாவாடையைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, நாக்கைத் துருத்தியபடியே பாண்டியாடியிருப்பாள். அந்த நாளில் அறுபது வருஷங்களுக்கு முன்னர், ஒரு நாள் பாதிப் பாண்டியாட்டத்தில் ‘உப்புக்கோட்டில்” அவள் இரண்டு கால்களையும் வைத்துக்கொண்டு நிற்கும்போது யாரோ வந்து அவளைத் தூக்கிக்கொண்டு போய்க் கையிலும் காலிலும் மூக்கிலும் கழுத்திலும் தூக்க முடியாதபடி நகைகளை அணிவித்து, எட்டு வயதில் பதினெட்டு முழப் புடவையை உடலில் சுற்றிக் கல்யாணம் என்ற அந்த விளையாட்டை ஆடியிருப்பார்கள்.
ஆம், அப்படித்தான் நடந்தது.
பாட்டியின் பிறந்த வீடும் அந்த நாளில் வசதி வாய்ந்தது. புகுந்த வீடோ பெரிய கை. பாட்டி அந்த வீட்டில் புகுந்த சில நாட்களுக்கெல்லாம் மாமியாராக இருந்தவள் மருமகளை அழைத்துத் தனக்கு இருந்த பெட்டி கொள்ளாத நகை அத்தனையையும் காண்பித்து அவளை ஸ்தம்பிக்கச் செய்தாள்.
அந்த நாட்களின் நினைவுகள் பாட்டியின் மனத்தில் இலேசாக நிழலாடுகின்றன.
ஒரு நாள் இரவு, கூடத்தில் மாமியாருடன் படுத்துக் கொண்டிருந்தாள். மாமனாரும் ‘அவரும்’ வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தார்கள். நடுநிசிக்கு மேல் அவள் கண் விழித்துப் பார்க்கும்போது மாமனாரை ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்கிறது. ஏழெட்டு முரட்டுத் திருடர்கள் வீட்டின் உள் அறையில் இருந்த மரப்பெட்டிகளை எல்லாம் கூடத்தில் கொண்டு வந்து கவிழ்த்திருக்கிறார்கள். கூடம் முழுவதும் தங்கச் சங்கிலிகளும் வளையல்களும் காசுமாலைளுமாகச் சிதறிக் கிடக்கின்றன. மாமியார் தம் கழுத்தில் இருந்த தாலிச் சரட்டைத் தவிர மற்றவை அனைத்தையும் கழற்றி வைக்கிறார். அவளையும் அப்படியே செய்யச் சொல்கிறார்கள். பின்னர் அவற்றை எல்லாம் மூட்டையாகக் கட்டித் திருடர்கள் தூக்கிக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகப் போகிறார்கள். மாமியார் அழுதுகொண்டே மாமனாரின் கட்டுகளை அவிழ்க்கிறார்.
அந்தக் காட்சி அவ்வளவுதான்.
அதன் பின்னர் மாமனார் மாமியார் ஒவ்வொருவராகக் காலமானதுகூடத் திருடர்கள் வந்துவிட்டுப் போனதைப் போல் அவ்வளவு ஆழமாகப் பதியவில்லை. அதற்குப் பின் அவள் வாழ்க்கையில் சோக நாடகமான அதுவும் அந்த நாட்களிலேயே நடந்து முடிந்தது.
எப்படியோ காலம் நகர்ந்து அவளுக்கும் பதினைந்து வயதாகி நினைவு தெரிந்து, இருபத்தைந்து வயதாகி அறிவு தெரிந்து, முப்பத்தைந்து வயதாகி மூப்பின் நரை தெரிந்து, நாற்பத்தைந்து ஆகிப் பாட்டி என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டாள்.
அவளுக்கு இரண்டு அண்ணாக்கள், ஒரு தங்கை உண்டு. அவள் வீட்டுச் சொத்தை எல்லாம் கொள்ளைக்காரர்களிடம் பறிகொடுத்து விட்டபின் அவளால் அவர்களுக்கு ஓர் ஆதாயமும் இல்லை. அவளுக்கும் அவர்களால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. அவ்வப்போது ஒவ்வொருவர் வீட்டிலும் கொஞ்ச நாள் காலம் கழித்து, அத்தனை பேர் வாயிலும் புகுந்து புறப்பட்டு, அவ்வப்போது கோபித்துக்கொண்டு இங்கே திரும்பி வந்து இந்த வீட்டில் நாலைந்து மாதம் அடைக்கலம் புகுந்து விட்டு மீண்டும் அந்தத் தனிமையின் கொடுமையைத் தாள முடியாமல் வெட்கத்தையும் விட்டு அந்த அண்ணன்மார்கள் வீட்டிலும் சகோதரி வீட்டிலும் அவர்கள் குழந்தைகளிடமும் அன்பை யாசிக்கும் தனிக் கட்டையாகக் காலம் கழித்தாள் அவள்.
பின்னர் அண்ணாக்களின் பிள்ளைகளும், சகோதரியின் பெண்களும் அவரவர்கள் சென்னை, பம்பாய், டில்லி என்று பல ஊர்களில் பிழைப்புக்குப் போனபோது அவர்கள் எல்லோருக்குமே ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் அவள் தயவு வேண்டியிருந்தது. பம்பாயில் அண்ணா பிள்ளையின் மனைவிக்கு நாலாவது பிரசவத்துக்காக நான்கு மாதம் பம்பாயில் இருந்துவிட்டுத் திரும்பவும் ஊருக்கு வந்து வெண்ணாற்று நீரோட்டையும், சுகவனேசுவரர் தரிசனத்தையும் விட்டுப் போன நாட்களுக்கும் சேர்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும்போது கல்கத்தாவில் இருந்த சகோதரி பெண்ணிடமிருந்து அழைப்பு வரும். அங்கேயிருந்து நேராக டில்லிக்குப் போக வேண்டியிருக்கும். இப்படியாக ஒரு பதினைந்து வருஷம் தன் உடலை ஓடாக்கி வஞ்சனையின்றி அத்தனை பேருக்கும் உழைத்தாள் பாட்டி, ஒரு பிரதிபலன் நினைக்காமல் மனசில் துளியும் கள்ளங்கபடு இல்லாமல்.
அறுபது வயது முடிந்த பிறகுதான் அவளால் முன்னைப் போல் பம்பாய்க்கும் கல்கத்தாவுக்கும் போக முடியவில்லை. சென்னைக்குக் கூடப் போக முடியவில்லை. இப்போதெல்லாம் பாட்டியும் அந்த வீடும், வெண்ணாறும் சுகவனேசுவரரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்டுவிட்ட பிணைப்புடன் இணை பிரிக்க முடியாதவர்களாக ஆகி விட்டார்கள்.
இந்த அறுபது வருஷ காலத்தில் சுகவனேசுவரரின் வாழ்க்கையையும் கவனித்து வந்திருக்கிறாள் பாட்டி. முன்பெல்லாம், அவள் சின்னஞ்சிறுமியாக இருந்தபோது இந்தச் சுகவனேசுவரர் மிகப் பிரசித்தியுடன் இருந்தார். நவராத்திரி என்றால் ஒன்பது நாளும் ஊர் அமர்க்களப்படும். அம்மனின் அலங்காரத்தைப் பார்ப்பதற்காகச் சுற்று வட்டாரத்திலிருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான ஜனங்கள் வருவார்கள். நான்கு புறமும் மதில் சுவர் அடைப்புடன் இருந்த விசாலமான பிரகாரத்தில் விநாயகர் சந்நிதிக்கு அருகில் ஒன்பது நாளும் கதை கச்சேரிகள் நடக்கும். சிவராத்திரி என்றால் ஊர் முழுவதும் குஞ்சுகுளுவான் வரை சுகவனேசுவரர் சந்நிதியில் தூங்காமல் நின்றபடியே ஆறு காலம் நடக்கும் அபிஷேங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும். அந்த விமரிசை எல்லாம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து போய் இப்போது தண்டபாணி குருக்கள் தயவில் இருந்து வருகிறார் சுகவனேசுவரர். பாட்டிக்காவது தினந்தோறும் வெண்ணாற்று ஸ்நானம் கிடைக்கிறது. சுகவனேசுவரருக்கு அதுகூட இல்லை.
தண்டபாணி குருக்கள் பாழ்பட்டு மண்மேடிட்டுக் குழம்பிக் கிடக்கும் கோயில் கிணற்றிலிருந்து செம்பைப் போல் இருக்கும் சின்னக் குடத்தில் நடுங்கும் கைகளால் தண்ணீரை எடுத்து வந்து செய்யும் அபிஷேகத்துடன் அவர் திருப்தியடைய வேண்டியதாக இருந்தது. தண்டபாணி குருக்களுக்கும் வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு சுகவனேசுவரர் பிரசித்தியுடன் விளங்கிய காலமும் தெரியும். சுந்தரி பாட்டி என்ற ஏக பக்தியுடையவராகி விட்ட இன்றையக் காலமும் தெரியும். பாட்டியை விடப் பத்து வயது பெரியவரான அவருக்கு பாட்டிக்கு உள்ள உடல் தென்பில்லை. பார்வையும் குறைவு. பல நாட்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து லிங்க உருவத்தை அருகில் தொட்டுப் பார்த்துவிட்டுக் கை நிதானத்தில் அபிஷேகத்தை முடித்துக்கொண்டு துணியால் துடைக்க ஆரம்பிக்கும் போதுதான் ஊற்றிய தண்ணிரில் ஒரு பொட்டுக் கூட லிங்கத்தின்மீது விழுந்திராததைக் கண்டு மீண்டும் கிணற்றுக்குப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகத்தை முடிப்பார்.
அதிகாலை வேளையில் அயர்த்து தூங்கினாலும் பாட்டியின் உள்மனதில் ஒரு கடியாரம் ஓடிக்கொண்டிருக்கும். எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்ததும் அலாரம் வைத்து எழுவது போல் எழுந்திருக்கிறாள் பாட்டி. தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டிருந்த கட்டையை எடுத்துச் சுவரோரம் வைத்துவிட்டு சமையலறையாக உபயோகப்படும் தாழ்வாரத்தின் மூலைக்குப் போய் தூக்குவதற்கு வாகாக இருக்கும் சின்னக் குடத்தையும் பல் தேய்க்க அடுப்புச் சாம்பல் கட்டி ஒன்றையும் வீபூதிச் சம்புடத்தையும் புடவைத் துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஆற்றுக்குக் கிளம்புகிறாள்.
வாசல் பக்கத்துக் கதவைத் தூக்கி நிறுத்தித் தாழிட்டுக் கொண்டிருக்கும்போது, “அம்மா” என்ற குரல் கேட்டுத் திரும்புகிறாள். தெருவோடு போய்க் கொண்டிருந்த வேலைக்காரி அன்னம், “குருக்களய்யா போயிட்டாங்க அம்மா… பாதி ராவுக்கு மேலே..”என்று அறிவித்துவிட்டுப் போகிறாள்.
அப்படியே அயர்ந்துபோன பாட்டி, “என்னடி சொல்கிற? நிஜம்மாவா?” என்று கேட்பதற்கு முன்னமே அந்த வீட்டு வாசலைக் கடக்கும் அன்னம், “ஆமாம்மா. போய்ப் பாரு” என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டினுள் நுழைந்து விடுகிறாள்.
அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஒரு கணம் அப்படியே நிற்கும் பாட்டி ஒருவாறு சமாளித்துக்கொண்டு தாழிட்ட கதவைத் திறந்து மீண்டும் உள்ளே போய்க் குடத்தையும் துண்டையும் இடைகழித் திண்ணையில் வைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு கிழக்கு நோக்கி நடக்கிறாள். குருக்கள் வீட்டுத் திண்ணையில் சிறு கூட்டம் கூடியிருக்கிறது. உள்ளே போன பாட்டியைப் பார்த்ததும் குருக்களின் பெண் அபயம் “பாட்டி! அப்பாவைப் பாருங்களேன். ஒரே நிமிஷத்தில் போயிட்டாரே!” என்று கதறுகிறாள்.
பாட்டி கீழே அமர்ந்து தண்டபாணி குருக்களைப் பார்க்கிறாள். தூங்குபவர் போல் இருக்கிறார் அவர். “ராத்திரி ஒரு மணி இருக்கும். ‘அபயம்’னு கூப்பிட்டார். அப்பவே மூச்சு ஒரு மாதிரியா இழுத்தது. ‘அபயம்! எனக்கு உன்னைப்பத்திக்கூடக் கவலையில்லை. சுகவனேசரை நினைச்சால்தான் நெஞ்சை என்னமோ பண்றது. சங்கரன் சரியாய்ப் பூஜை பண்ணமாட்டான். நான் சொன்னேன்னு ஊர்க்காராகிட்டே சொல்லி வேறே யாராவது சிரத்தையுள்ள குருக்களா- யார் வருவா? சுகவனேசுவரருக்குப் பூஜை நின்னு போயிட்டால் பாவம், சுந்தரிப் பாட்டிதான் ஏங்கிக்போயிடுவா’ என்று உங்கள் பேரைத்தான் மெதுவாச் சொல்லிண்டே இருந்தார். விளக்கு அணையறா மாதிரி பக்குன்னு போயிட்டார் பாட்டி!” என்று ஓங்கிய குரலில் அழ ஆரம்பிக்கிறாள் அபயம்.
ஒரு வழியாகப் பாட்டி அந்த வீட்டை விட்டு வெளியில் வரும்போது சூரியன் உதித்து வெகு நேரம் ஆகிறது. வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்த பாட்டி ஆற்றுப் பக்கம் போகும் சந்தினுள் திரும்பி நடக்கிறாள். சுகவனேசுவரர் சந்நிதியைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு ஆற்றுக்குப் போய் ஸ்நானம் செய்து முடித்துக் கொண்டு திரும்புகிறாள். சந்நிதிக்கு அருகில் வரும்போது அவளையுமறியாமல் அவள் கண்கள் கோபுர வாசலில் திரும்புகின்றன. இரண்டு தப்படி போன பிறகுதான் ‘இன்றைக்குச் சுவாமிக்குப் பூஜை கிடையாதே!’ என்பது நினைவுக்கு வருகிறது. அவள் கண்ணுக்குக் கோயில் ஒரே நாளில் களையிழந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. மறுகணம் வேறு ஒரு நினைவும் உள்மனத்தில் ஓடுகிறது. நாலைந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் இந்த மாதிரி தான் நித்தியப்படி பூஜை நின்று போன சிவன் கோயில் ஒன்று, முதலில் சுற்றுச் சுவர் கொஞ்சங் கொஞ்சமாக இடிந்து விழுந்து, பின் கர்ப்பக்கிரகமும் ஜீரணமாகி, அந்த லிங்கம் வெட்ட வெளியில் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, மாட்டுக்காரப் பையன்களின் விளையாட்டுப் பொருளாக மாறிப்போய் விட்டதை பாட்டி பார்த்திருக்கிறாள்.

அதை நினைத்த பின் அவள் வாழ்வில் பின்னிப் பிணைந்து போய் விட்ட இந்தச் சுகவனேசுவரருக்கும் இந்தக் கதிதான் வருமோ என்ற எண்ணம் தோன்றி மறைய அவள் புலன்கள் அனைத்தும் அந்த நினைவால் நடுங்குகின்றன.
‘சுகவனேசா! உனக்கு இன்னிக்கு மாத்திரம்தான் பூஜை கிடையாதா? இல்லை, இனிமேல் என்றைக்குமே கிடையாதா?’ அடிமனத்திலிருந்து பந்தாகச் சுருட்டிக்கொண்டு எழும் கேள்வியைக் கேட்டுவிட்டு அப்படியே நிற்கிறாள்.
“இந்த ஊரிலே, இந்த உலகத்திலே எனக்கு வேண்டியவன்னு நீ ஒருத்தன்தான். இனிமேல் நீ கூட எனக்கு இல்லாமல் போயிடுவே போலிருக்கிறதே!” என்று மௌனமாகக் கண்ணீர் விடுகிறாள். இனித் தினமும் ஆற்றில் குளித்துவிட்டுக் கோவிலுக்குப் போகாமலே வீட்டுக்கு வர வேண்டும் என்ற நினைவை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன. மெல்லத் திரும்பி வீட்டை நோக்கி நடக்கிறாள். வாய்க்கால் மதகின் அருகில் வெளியே துருத்திக்கொண்டு நிற்கும் கல்லின் நினைவு இன்று பாட்டியின் மனத்தில் இல்லை. இடம் தெரியாமல் காலை எடுத்து வைத்தபோது கல்லில் கால் தடுக்கி அப்படியே தலை குப்புறக் கீழே விழுகிறாள். விழுந்த வேகத்தில் பூஞ்சையான அந்த உடலில் இருந்த நினைவும் போய் விடுகிறது.
காலையில் எழுந்ததும் குருக்கள் வீட்டுச் செய்தி கேட்டு அங்கே போய் விசாரித்து விட்டுப் பல் துலக்குவதற்காக வாயில் வைத்த வேப்பங்குச்சியுடன் சந்தில் வந்து கொண்டிருந்த பட்டாமணியம் வேம்புவும் இன்னும் இரண்டொருவரும் மதகடியில் நினைவிழந்து கிடக்கும் பாட்டியைத் திருப்பிப் போட்டு வாய்க்கால் தண்ணீரைச் சேம்பிலையில் ஏந்தி முகத்தில் அடித்துப் பார்த்தும் மூர்ச்சை தெளியாமற் போகவே, அப்படியே கால் பக்கம் ஒருவரும் தலைப்பக்கம் ஒருவருமாகத் தூக்கி வீட்டுத் திண்ணையில் கொண்டு வந்து போடுகிறார்கள். வெகு நேரம் கழித்துக் கண்ணைத் திறந்த பாட்டி அடுத்த வீட்டுப் பெண்கள் குனிந்தபடியே தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு எழுந்திருக்க முயற்சி செய்கிறாள்.
பிற்பகலில் குருக்கள் காரியமெல்லாம் முடிந்து பாட்டியும் ரசஞ்சாதத்தைக் கரைத்துக் குடித்தபின் பட்டாமணியம் பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். “இனிமே உங்களாலே இங்கேயிருந்து ஆத்துக்குப் போய்க் குளிக்க முடியாது. படுகை இறக்கத்திலே இறங்கின மயக்கத்தில் ஒரு கணம் அசந்து நின்றால், ராட்சத லாரிக்காரன் ஒரு கணத்தில் உங்களை அப்பளமாக்கிவிட்டு நிற்காமல் போய் விடுவான். அதனால் இனிமேல் குளியல், ஜபதபம் எல்லாத்தையும் வீட்டிலேயே வச்சுக் கொள்ளுங்கோ” என்று சொல்லுகிறார்.
பாட்டி யோசிக்கிறாள். சுகவனேசுவரரே இருந்தும் இல்லாதவராகப் போய்விட்ட பிறகு ஆற்று ஸ்நானம் மாத்திரம் எதற்கு என்று தோன்றுகிறது. “அது சரிப்பா. குளிக்கிறதுக்கு முதல்லே கிணறாவது வேணுமே” என்று பாட்டி வரட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள். பாட்டியின் வீட்டில் இருந்த கிணறு எந்தக் காலத்திலோ பாழடைந்து தூர்ந்தும் போய் விட்டது.
“அதற்கென்ன? நானே நாலு ஆளை விட்டுக் கிணற்றை வெட்டித் தரச் சொல்கிறேன். நீங்க மாத்திரம் கிணறு இல்லையேன்னு ஆத்துக்குப் போய் லாரியிலே மாட்டிக் கொள்ளாமல் இருங்கோ” என்று மீண்டும் பயமுறுத்துகிறார் பட்டாமணியம்.
பாட்டிக்குச் சாவதில் பயம் இல்லை. ஆனால் லாரியில் விழுந்து சாவதை நினைத்து நடுங்கிய பாட்டி, “சரிடாப்பா. எவ்வளவு ஆகுமோ, பார்த்து நீயே செய்து கொடு” என்று முடிக்கிறாள்.
கிணறு வெட்டும் வேலை ஆரம்பமாகிறது. வேம்பு நல்ல மனிதர். அவரே காலையிலும் மாலையிலும் முன் நின்று கிணறு தோண்டும் வேலையைப் பார்வையிடுகிறார். நாலைந்து நாள் ஐந்தாறு ஆள் வேலை செய்து பத்தடிக்கும் மேல் தோண்டியும் கிணற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியே காணவில்லை. வேம்புவைப் பிடித்த கவலை பாட்டியையும் பிடித்துக் கொள்ளவே, “இது என்னடாப்பா, அதிசயமாக இருக்கு? இவ்வளவு அருகில் வெண்ணாறு இருக்கும்போது… ஊம் வேறே இடத்திலே வேணுமானா வெட்டிப் பார்க்கலாமா?” என்று ஆலோசனை கேட்கிறாள்.
“இன்னும் நாலைந்தடி பார்க்கலாம்” என்கிறார் வேம்பு.
சாயங்காலம் கிணற்றருகில் பாட்டியும் வேம்புவும் கவலையுடன் வேலை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழே வெட்டும் ஆள் கடப்பாரையில் ஏதோ தட்டுப்படவே மெதுவாக அதை எடுத்து வாளியில் போட்டு மேலே அனுப்புகிறான். அதைக் கையில் எடுத்துப் பார்க்கும் வேம்பு, “அட! என்ன இது?” என்று தம்மை அறியாமலே கூப்பாடு போடுகிறார். “என்னப்பா? புதையலா?” என்று சிரிக்கிறாள் பாட்டி.
ஆம், புதையல்தான்! கீழே இருந்த ஆள் வெட்டி வெட்டி வாளியில் வைத்து மேலே அனுப்புகிறான். எத்தனையோ ஆண்டுகளாகப் பூமிக்கு அடியில் இருந்த தங்கம் ஒளியிழந்து கறுத்திருந்தாலும் நிறையாலும் உருவத்தாலும் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. தங்கம் சங்கிலிகளாகவும் வளையல்களாகவும் நாலைந்து காசுமாலைகளாகவும் ஏழெட்டு வாளிகளில் வருகிறது. ஆட்களும் உற்சாகத்துடன் ஒட்ட ஒட்ட வெட்டி, இனிமேல் இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டுதான் கரை ஏறுகிறார்கள்.
பாட்டி வீட்டுத் தாழ்வாரத்தில் வாளியில் வந்த தங்க நகைகள் நன்றாக அலம்பப்பட்டுக் கொட்டிக் கிடக்கின்றன. வேம்பு, பாட்டிக்கும் நகைகளுக்கும் நம்பிக்கையான பொறுப்பாக இருந்து ஒரு வழியாக அத்தனைக்கும் பட்டியல் தயாரிக்கிறார். அன்றைக்கு ராத்திரி நகைகள் அவர் வீட்டு இரும்புப் பெட்டியில் பத்திரப் படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
மறுநாள் காலையில் பாட்டி வீட்டில் ஊரே கூடியிருக்கிறது. ஆளுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். “இது கண்டெடுத்த புதையலானதால் சர்க்காருக்குத் தெரிவிக்க வேண்டும். சர்க்காரின் உடைமை இது” என்று பள்ளிக்கூட வாத்தியார் சொல்லுகிறார். ஆத்திரத்துடன் வேறொருவர், “அநியாயமாகச் சர்க்காருக்கு எதற்குப் போக வேண்டும்? இதெல்லாம் பாட்டியின் வீட்டுச் சொத்துத்தான். அறுபது வருஷத்துக்கு முன் இதே வீட்டில் நடந்த தீவட்டிக் கொள்ளையைப் பற்றியும், திருடர்கள் சாக்குச் சாக்காகச் சங்கிலிகளையும் காசு மாலைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு போனதையும் எங்கள் அப்பா எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி நேரடியாகத் தெரிந்தவர்கள் இன்னும் இந்த ஊரில் சில பேர் இருக்கிறார்கள். அந்தத் திருடர்கள்தாம் என்ன காரணத்தினாலோ அந்த மூட்டைகளைக் கிணற்றில் போட்டுப் போய் விட்டார்கள். அது இப்போது பாட்டியிடமே வந்திருக்கிறது. இதில் சர்க்காருக்கு எந்த விதமான பாத்தியதையும் இல்லை” என்று விமரிசனம் செய்கிறார்.
சர்க்கார் பிரதிநிதியான பட்டாமணியம் வேம்புவுக்குச் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் அவரும் அதை ஆமோதிக்கிறார்.
இதே ஊரில் இருந்தும் இத்தனை நாளாக பாட்டியை அதிகமாகப் பாராமல் இருந்த அவள் அண்ணாவும், பாட்டிக்கு வந்துள்ள நகைப் பொறுப்புகளைப் பற்றித் தம்மாலான உதவியை மனமுவந்து செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துக் கொள்கிறார். எல்லோருக்குமே கரை புரண்ட உற்சாகம்.
கடைசியில் பாட்டி சொல்கிறாள். “இந்த நகை எல்லாம் உண்மையாகவே எங்கள் வீட்டு நகைதானோ, இல்லாவிட்டால் கண்டெடுத்த புதையலோ எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும் என் ஆசை இதுதான். எனக்கு மனுஷர்கள் இல்லை என்று நினைச்சு ஏங்கியது உண்டு. நீங்க இத்தனை பேரும் என்கிட்டே இவ்வளவு பிரியமா இருக்கிறதைப் பார்த்து மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் பெருமையாகவும் இருக்கு. நான் அனாதையாக இருந்த ஊரில் சாக மாட்டேன்கிற தைரியம் வந்துடுத்து. இப்பவே என் ஆசையையும் சொல்லிடறேன். இந்த நகைகளை நான் கையாலே கூடத் தொடப் போகிறது இல்லை. இது எல்லாத்தையும் இப்பவே வித்துடணும். இதிலே வருகிற பணத்தைக் கொண்டு சுகவனேசுவரர் கோயிலைத் திருப்பிக் கட்டணும். மறுபடியும் சுவாமிக்கு நித்தியப்படி பூஜைக்கு ஏற்பாடு பண்ணணும். பிரகாரத்திலே இருக்கிற நெருஞ்சி முள்ளெல்லாம் போய்ச் சிமிண்டுத் தரையாக்கணும். நாலு பக்கமும் முன்னே இருந்த மாதிரி மதில் அமையணும். மண்டபமும் கர்ப்பக்கிரகமும் முன்மாதிரி புதுக் களையுடன் ஒளி வீசணும். இந்த வேலைகளை எல்லாம் நீங்க எல்லாருமே பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்யணும்” என்று சொல்லிக்கொண்டே போகும்போது பாட்டியின் கண்ணில் புத்தொளியும் இளமை ஆர்வமும் பெருக்கெடுத்தோடுகின்றன.
பகல் முழுவதும் கோயில் வாசலில் லாரிகளில் செங்கல்லும் மணலும் வந்தவண்ணமாக இருக்கின்றன. மண்டபத்தை அடுத்த திறந்த வெளியில் புதிய பாறாங்கற்களில் டக் டக் டக் என்ற சிற்றுளிகளின் ஒலி இரவு நேரம் வரும் வரை கேட்ட வண்ணமாக இருக்கிறது. மண்டபத்தில் ஸ்தபதிக் கூட்டத்தினர் வர்ணக் குழம்புகளைக் கலந்துகொண்டே தூரிகையும் கையுமாக நிற்கின்றனர். பாட்டியின் பணத்துடன் ஊரில் உள்ள அத்தனை பேரும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தாலும் ஆட்களாலும் உதவி செய்கிறார்கள்.
மார்கழி மாதத்தின் காலை வேளையில் பாட்டி ஸ்நானத்தை முடித்துக் கொண்டு ஈரப்புடவை சொட்டச் சொட்ட உதய ஞாயிற்றின் முதற்கீற்றைத் தரிசனம் செய்யும் ஆவலுடன் கரையில் நிற்கிறாள். ஆயிற்று சூரிய பகவானைத் தரிசனம் செய்துகொண்ட பின்பு குடத்தை எடுத்துக்கொண்டு ஆற்றுப் படுக்கையில் ஏறி, மீண்டும் இறங்கி இரண்டு பக்கமும் பார்த்தபடியே சாலையைக் கடந்ததும் எதிரில் உருவாகிக்கொண்டு வரும் சுகவனேசுவரரின் முன்பக்கத்துக் கோபுரத்தைப் பார்க்கிறாள் பாட்டி. முன்பெல்லாம் அரைக் கல்லும் கால் கல்லுமாக இறைந்து கிடந்த இடங்களில் இப்போது லாரி லாரியாக வந்து இறங்கிய முழுச் செங்கற்களை வரிசை வரிசையாக அடுக்கியிருக்கும் தோற்றமே ஓர் அழகுடன் தெரிகிறது. வாசலில் நின்றபடியே, “என் அப்பா! சுகவனேசா!” என்று கண்ணீர் விடுகிறாள். இன்னும் கோயிலுக்கு ஜீர்ணோத்தாரணம் ஆகவில்லை. ஆனால் பாட்டியின் மனத்தினுள் அவள் அறுபது வருஷங்களுக்கு முன் கண்ட கோயில் அப்படியே பசுமையாகக் காட்சி அளித்தது. நாளை அப்படியே மீண்டும் அது அமையப் போவதை நினைத்துப் பெருமிதத்தில் தன் ஆயுளில் பத்து வருஷங்கள் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. சுகவனேசுவரரின் தரிசனத்துக்காக இன்னும் குறைந்தது பத்து வருஷமாவது வாழ வேண்டும் என்று உயிரின்மேல் ஆசை வருகிறது பாட்டிக்கு.
ஓன்றுக்குள் ஒன்று..! -நித்யா சங்கர்
மானேஜிங் டைரக்டர் பரந்தாமன் முகத்திலே ‘எப்படி சமாளிக்கப்
போறோம்?’ என்ற சிறு பயம் கலந்த குழப்பம். அந்த போர்டு
ரூமிலே குழுமியிருந்த மற்ற டைரக்டர்களை சிரமப்பட்டு
வரவழைத்துக் கொண்ட ஒரு அரைப் புன்னகையோடு பார்த்தார்.
‘எதற்காக இந்த அவசரக் கூட்டம். அதுவும் இல்லாமல் யூனியன்
லீடர் ரவியும் எதற்கு இந்த மீட்டிங்கில் உட்கார்ந்திருக்கிறான்?’
என்ற நினைப்பிலே டைரக்டர்கள் முகத்திலே ஒரே குழப்பம்.
எம்.டி. சீக்கிரம் பேச மாட்டாரா, ஸஸ்பென்ஸ் உடையாதா என்று
அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரவியும் அமைதியாக ஒரு ஓரமாய் புன்முறுவலோடு அமர்ந்-
திருந்தான்.
பரந்தாமன் ஒரு முறை மெலிதாகத் தொண்டையைக் கனைத்துக்
கொண்டு பேச ஆரம்பித்தார்.
‘டியர் ·ப்ரெண்ட்ஸ்.. மிகவும் ஷார்ட் நோட்டீஸில் இந்த
போர்டு மீட்டிங்கைக் கூட்டியதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன். உங்களுக்குத் தெரியும், இன்னும் ஒரு
மாதத்தில் ஏப்ரல் மாதத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம்.
ஆஸ் யூஷ்வல் நம்ம எம்ப்ளாயீஸ¤க்கெல்லாம் சம்பள உயர்வு –
இன்க்ரிமென்ட் – தர வேண்டிய மாதம். அது விஷயமாகத்தான்
உங்களையும் கலந்து ஆலோசிக்க இந்த மீட்டிங்கைக் கூட்டி
இருக்கேன்.’
‘சேர்மன்… இந்த இன்க்ரிமென்ட் விவகாரம் எதுக்கு
போர்டுக்கு வருது? நீங்கதானே ஸ்டாப் அஸோஸியேஷனுடன்
பேசி முடிவு எடுப்பீங்க’ என்று அவரை இடைமறித்தார் குழுமி-
யிருந்த டைரக்டர்களில் ஸீனியரான முகுந்தன்.
‘நார்மலா வருஷா வருஷம் ஐந்திலிருந்து பத்து பர்ஸென்ட்
அதிகரித்துச்சம்பளம் கொடுப்போம். ஆனா இந்த வருஷம்
அஸோஸியேஷன் லீடர் ரவி இருபத்தைந்து பர்ஸென்ட்
அதிகமாக்கக் கோரி மெமொராண்டம் கொடுத்திருக்கார்’
‘வாட்….இட் ஈஸ் ரிடிகுலஸ்…’ என்று எல்லா டைரக்டர்களும் கூவினர் ஏகோபித்த குரலில்.
‘நான் அஸோஸியேஷன் நிர்வாகிகளை இரண்டு மூன்று
முறை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினேன். எனக்கும்
அவர்கள் கேட்பது நியாயமாகப் படவில்லை’ என்று இழுத்தார்
பரந்தாமன்.
‘என்ன ஸார் அநியாயம்? நம்ம கம்பனி காம்படிடர்ஸை
விட நாம நம்ம கம்பனி ஸ்டாபுக்குச் சம்பளம் அதிகமாகக்
கொடுத்திட்டிருக்கோம். பின் எதற்கு இவ்வளவு அதிகமாகக்
கேட்கிறாங்க? ஆசை இருக்கலாம்.. ஆனா பேராசை இருக்கக்
கூடாது…’ என்றார் இன்னொரு டைரக்டர் காரசாரமாக.
‘ஜென்டில்மென்.. அமைதி அமைதி.. மிஸ்டர் ரவி..
நீங்களும், நம்ம கம்பனியிலே வேலை செய்யற – ஹையர்
பொஸிஷனில் இருக்கிற பாதி ஸ்டாபும் எங்களுடன் சேர்ந்து
ஆரம்பித்த கம்பெனி இது. அப்படி நாம ஒண்ணுக்கு ஒண்ணா
இருக்கிறபோது – நம்ம கம்பெனி இந்தியாவிலேயே முதன்மை-
யான கம்பெனியா இருக்க உழைக்கிறபோது – இது என்ன
முட்டுக்கட்டை? இது நம்ம கம்பெனி வர்க்கிங்கைக் கெடுத்து
விடாதா?’ என்றார் முகுந்தன் ரவியை நோக்கி.
‘ஸார் நீங்க சொன்னது ஸென்ட்பர்ஸென்ட் கரெக்ட்.
சேர்மன் ஸார்.. இங்கேயுள்ள டைரக்டர்ஸ், நான், நம்ம
கம்பெனியிலேயே வேலை செய்யற ஸீனியர் ஸ்டாப் பலபேர்
சேர்ந்து ஆரம்பித்து உருவாக்கின கம்பெனிதான் இது.
எங்களுக்கு சோறு போடும் காமதேனு..’ என்றான் ரவி
உணர்ச்சி மேலிட.
‘அந்த காமதேனுவை கொல்ல நினைக்கறியே அப்பா..’
என்றார் முகுந்தன்.
‘யூ ஆர் தரலி மிஸ்டேகன் ஸார்.. இந்தக் கம்பெனி மேலும்
மேலும் வளரணும்னு நினைக்கிறேன். நம்ம கம்பெனி
ஸ்டாபெல்லாம் கம்பெனிக்காக – கம்பெனியின் முன்னேற்றத்-
திற்காக என்ன தியாகம் வேணும்னாலும் செய்யத் தயாராய்
இருக்கணும்னு நினைக்கிறேன் ஸார்..’
‘ஆனா உங்களுடைய டிமாண்ட் அதைப் ப்ரூவ்
பண்ணலியே..’
‘எகேய்ன் யூ ஆர் மிஸ்டேகன் ஸார்.. நம்ம டைரக்டர்
சொன்ன மாதிரி நம்ம கம்பெனி காம்படிடர்ஸ் எல்லோரையும்
விட நம்ம கம்பெனி ஸ்டாபுக்கு சம்பளம் அதிகமாகக்
கொடுக்குது. அதை நான் டிஸ்பியூட் பண்ணலியே..’
‘பின்னே என்னப்பா… எதற்கு இந்த டிமாண்ட்..
கலாட்டா எல்லாம்..’
‘எக்ஸ்கியூஸ்மி ஸார்.. லெட் மீ கம்ப்ளீட்.. ஸார்
உங்களையெல்லாம் கொஞ்சம் எபீஷியன்ஸி ரேஷியோவை
பார்க்கணும்னு கேட்டுக்கறேன்.. உற்பத்தி லெவலை
எடுத்துக்கிட்டீங்கன்னா நம்ம கம்பெனி ஸ்டாஃப் ஒருத்தருடைய
உற்பத்தி லெவல் நம்ம காம்படிடர்ஸ விட மூணு மடங்கு
ஜாஸ்தி.. நீங்க அது எப்படி சாத்தியம்னு கேட்கலாம்…
நம்ம கம்பெனி அஸோஸியேஷனைப் பொறுத்தவரை அது
‘எப்படீடா அதிகமாக பணம் கறக்கலாம்.. என்னென்ன
சலுகைகள் வாங்கலாம்.. எப்போ ஸ்டிரைக் பண்ணலாம்’ என்று
அலையற அஸோஸியேஷன் கிடையாது. எங்களுக்குள்ளே
நாங்க ஒரு ரிஸர்ச் விங்க் வெச்சிட்டிருக்கோம். டெய்லி
சாயந்திரம் கூடி ‘எப்படி உற்பத்தியைப் பெருக்கலாம்..
எப்படி தரத்தை இம்ப்ரூவ் பண்ணலாம்’னு யோசிச்சிட்டேயிருக்கோம்… முடிந்தவற்றையெல்லாம் செயலாக்கிட்டுமிருக்கோம். நம்ம கம்பெனி இப்போ தரத்திலேயும், பிஸினஸிலேயும் இந்தியாவில் நம்பர் ஒன்னா இருக்குன்னா இந்தக் கடின உழைப்புதான் காரணம்.’
‘என்ன தற்பெருமை ஜாஸ்தியா இருக்கு..’ என்று
பெரிதாக நகைத்தார் மற்றொரு டைரக்டர்.
‘ஸாரி ஸார்.. தற்பெருமை இல்லை.. உங்களுக்குத்
தெரியாத ஒரு உண்மை.. அதை யாராவது சொல்ல
வேண்டுமில்லையா? அதுக்கு இந்த ஆப்பர்ச்சுனிடியை
எடுத்துக்கிட்டேன். இரண்டாவது நம்ம கம்பெனி கொடுக்கும்
சம்பளத்துக்கும் டேர்ன் ஓவருக்கும் – ஸேல்ஸ¤க்கும் – உள்ள
ரேஷியோ. நம்ம காம்படிடர்ஸ் ரேஷியோவில் பாதியாய்
இருக்கும்.’ என்றான் ரவி மூச்சுக்கூட விட மறந்து.
‘சுத்தம் .. இப்போ நீங்க கேட்கற மாதிரி இருபத்-
தைந்து பர்ஸென்ட் ஜாஸ்தி கொடுத்தா இந்த ரேஷியோ
வெல்லாம் தலைகீழா மாறிடும்’ என்றார் ஒரு டைரக்டர்
எகத்தாளமாக.
‘வித் டியூ ரெஸ்பெக்ட்.. இல்லே ஸார்.. நம்ம
ப்ரொடக்ஷன் லெவல், எபீஷியன்ஸி லெவல் இப்படியே
இருந்தாலும் கூட நம்ம காம்படிடர்ஸை விட பெட்டராகத்
தான் இருக்கும். ஆனா இந்த இடத்துலே நான் – ஆஸ் எ
ஸ்டா·ப் ரெப்ரெஸென்டேடிவ் – ஒன்று உறுதியாய் சொல்ல
முடியும். இது நம்ம ஸ்டாபுக்கு ஒரு மோடிவேஷனா
இருக்கும். அவங்க அயராத உழைப்பாலே ரெண்டு
வருஷத்துலே இதே ரேஷியோவை நாம் கொண்டு வந்திட
முடியும்.’
‘எப்படிப்பா.. சம்பள செலவு ஜாஸ்தியாயிடும் இல்லே.
இப்ப இருக்கிற காம்படிஷன்லே ஸேல்ஸ் க்ரோத் அதிகமா
எதிர் பார்க்க முடியாது.. பின்னே எப்படி..?’
‘அதுக்கும் எங்ககிட்டே பிளான் இருக்கு ஸார்…
நம்ம பிராடக்டுடைய தரத்தை உயர்த்தி அதிக உற்பத்தி
மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து ஸேல்ஸைக் கூட்ட
முடியும் ஸார்…’
‘தம்பி .. நாங்க பணம் போட்டவங்க… எங்க வயிற்றிலே
அடிச்சிடுவே போலிருக்கே..?’
‘என்ன ஸார் இப்படி சொல்லிட்டீங்க.. நம்ம கம்பனி
இருபதிலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் டிவிடென்ட்
கொடுத்திட்டிருக்கு. என்னுடைய ப்ரொஜக்ஷன்ஸ் சரியா
இருந்தா உங்க டிவிடண்ட் கண்டிப்பா கம்மியாகாது ஸார்..
ஆன் தி அதர் ஹான்ட் ஜாஸ்தி ஆகலாம். அப்புறம்
கொடுக்கப் போற சம்பளத்தை இன்கம்டாக்ஸ் எக்ஸெம்ஷ-
னையெல்லாம் க்ளெய்ம் பண்ணற மாதிரி ஒரு பாக்கேஜாக
கொடுக்கறதுக்கும் ரிக்வெஸ்ட் பண்ணி இருக்கேன்.’
டைரக்டர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர்
முகத்திலும் ஒரு அவநம்பிக்கை.
‘மிஸ்டர் ரவி.. நீங்க ஒரு பத்து நிமிடம் வெளியிலே
இருக்கீங்களா… நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவு
சொல்றோம்’ என்றார் பரந்தாமன்.
ரவி மெதுவாக வெளியில் வந்தான்.
‘மிஸ்டர் சேர்மன்… இந்த ஆவேச உறுதி மொழியை
வெச்சுட்டு நம்ம ஒண்ணும் முடிவு செய்ய முடியாது. லெட்
அஸ் நாட் அக்ஸெப்ட் திஸ்.. நார்மலா செய்யற மாதிரி
பத்து பர்ஸென்ட் – இல்லே மிஞ்சிப்போனா 12 1/2 பர்ஸென்ட்
ஒத்துக்கலாம்’ என்று கூறினார் முகுந்தன்.
‘ஆமாம் ஸார்.. நானும் அதைத்தான் நினைத்தேன்’
என்றனர் மற்ற டைரக்டர்கள் கோரஸாக.
இன்டர்காமில் செக்ரட்ரியைக் கூப்பிட்டு ரவியை
வரச் சொன்னார் பரந்தாமன்.
ரவி உள்ளே வந்தான். உட்கார்ந்தான்.
‘ஸாரி ரவி.. உங்களுடைய எக்ஸ்பிளனேஷன்ஸ்
கன்வின்ஸிங்கா இல்லே… எங்க நிலைமையையும் புரிஞ்சுக்-
குங்க.. மாக்ஸிமம் பத்து பர்ஸென்ட்தான் ஜாஸ்தி கொடுக்க
முடியும்’ என்றார் பரந்தாமன் முடிவாக.
‘ஓகே.. எனக்கு சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு.
நீங்க எல்லோருமே எனக்கு ரொம்பத் தெரிஞ்சவங்க…
வேண்டியவங்க… எங்க டிமாண்டிலே நாங்க உறுதியாய்
இருக்கோம். எங்க டிமாண்டை ஒத்துக்காததனாலே நாங்க
ஆர்கனைஸேஷனல் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்.
அதுவும் அதை நாளையிலிருந்தே ஆரம்பிக்கப் போறோம்.
தாங்க் யூ ஸார்…’ என்று வெளியே நடந்தான் ரவி.
( ரவியின் நூதன போராட்டத்தைக் காண
அடுத்த இதழுக்கு காத்திருங்கள் )
ஸோ சாரி so sorrry ( நன்றி)
ஸோ சாரி டிவி யின் சமீபத்திய மோடியின் அமெரிக்கா விஜயத்தை வைத்து அமைக்கப்பட்ட கலக்கல் காமெடி. அதையும் அதற்கு முன் வெளியிட்ட மற்ற மோடி-ஒபாமா கலாட்டாவையும் பாருங்கள்.
இதன் மூலம் மோடியின் புகழைக் குறைப்பது அல்ல நமது நோக்கம். அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அவரது வெற்றி நமது வெற்றி தான்.
ஆனாலும் கொஞ்சம் ஜாலிக்காக !
வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள் – தமிழ்தேனி
கலக்கிய குட்டையில் சிக்கும்
இலக்கிய மீன்கள் தெளிந்தால்
அவையே இலக்கிய தேன்கள்
குட்டையைக் கலக்கி குளத்தைக் கலக்கி
கடலைக் கலக்கி கலக்கி பிடிக்கும் மீன்களை
விற்றுப் பிழைக்கும் சிலர் நடுவே
மனதைத் தெளிவிக்கும் இலக்குகள் கொண்டே
இளக்கி இளக்கி இலக்கியத்தை இளக்கி
வடிக்கும் தேனை நினைவில் கொண்டு
மயக்கியதை மயங்கியதை மனதில் கொண்டு
பரப்பியதெல்லாம் இலக்கணமாய் இலக்கியமாய்
மனமெனும் கடலில் மூழ்கிக் குளித்தே
முத்தெடுத்தே சத்தான சாரமெல்லாம்
விளக்கி விளக்கி மனத்திரையில் கண்டதையெல்லாம்
விண்டுரைத்து இலக்கியப் பாதையில் இலக்குடன் போனால்
வலையில் சிக்கும் மீனும் தேனாய் மாறும்
கழுவும் மீனில் நழுவும் மீனாய்
கை தெறித்தே இலக்கியம் ஆகும்
மீனுக்கும் வானுக்கும் ஏது எல்லை
இலங்கையின் வாசல் அடைந்தான் அனுமன்
இலக்கிய வாசல் அடைந்தே நாமும்
எண்ணக் குவிகம் தனையே அடைந்து
எண்ணக் குவியல் குவித்தே மகிழ்ந்தால்
இலக்கிய வாசலுக்கேது எல்லை
சுஜாதாவின் திரைப்பட வாழ்க்கை .
சுஜாதா திரைஉலகைப் பற்றி குமுதம், உயிர்மை போன்ற இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ! பார்வை 360 என்ற புத்தகத்திலிருந்து!
அவர் எழுதிய கதைகளை சினிமாவாக மாற்றியபோது பெற்ற ஏமாற்றங்களைத் தயக்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். சுஜாதா தன் கதையின் தயாரிப்பாளர்/டைரக்டரிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ” இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது? ”
சுஜாதா சொல்கிறார்: ” ஒரு சிறுகதையோ , நாவலோ தரும் அனுபவத்தை -பங்கீட்டை சினிமாவால் தரமுடியாது .அதேபோல் சினிமா தரும் காட்சி அனுபவத்தை சிறுகதையால் தரமுடியாது. .. இரண்டுமே வெவ்வேறு துருவங்கள்! .. முந்நூறு பக்கம் நாவல் அவர்களுக்கு வேஸ்ட் . .. சிலசமயம் சினிமாவுக்காக எழுதிக் கொடுத்ததை, பிறகு சிறுகதையா எழுயிருக்கிறேன் …
சினிமாவாக மாறின அவரது கதைகள் சிலவற்றை – சில குறிப்புக்களை நாம் கொறிக்கலாம் ! நம்ம ஸ்டார் மதிப்பெண்களுடன்!
சுஜாதாவின் காயத்ரி என்ற தினமணி கதிரில் வந்த கதை அதே பெயரில் சினிமாவாக வந்தது. ஸ்ரீதேவி தான் காயத்ரி – ரஜினிகாந்த் வில்லன் ஜெய்சங்கர் கடைசியில் வரும் கதாநாயகன். (கதை திரைப்படம்
)
அனிதா இளம் மனைவி என்ற குமுதத்தில் வந்த கதை “இது எப்படி இருக்கு? ” என்ற தலைப்புடன் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, மேஜர் சுந்தரராஜன் நடித்து வந்தது. (கதை திரைப்படம்
)
ப்ரியா – குமுததில் வந்த ஹிட் கதை – ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் ( டார்லிங்..டார்லிங்.. , அக்கரை சீமை, ) சிங்கப்பூர் பின்னணி, ரஜினியின் you too Brutus ஜூலியஸ் சீசர் நாடகம் (கதை
திரைப்படம்
)
குமுதத்தில் வந்த 24 ரூபாய் தீவு என்ற கதை ‘ஒண்டித்வனி’ என்ற பெயரில் அம்பரீஷ் நடித்து கன்னடத்தில் வந்தது. அவரே சொல்லுகிறார். படம் படு பிளாப்பாம் ! (கதை திரைப்படம்
)
கமல்ஹாசனுக்காக இவர் எழுதிய கதையின் படப்பிடிப்புத் தொடங்கிய பிறகு அதன் புகைப்படங்களை வைத்து குமுதத்தில் எழுதிய கதை “விக்ரம்” டிம்பிள் கபாடியா, அம்ஜத் கான், சத்யராஜ் நடித்த படம். (கதை திரைப்படம்
)
கமலுக்காக மருதநாயகம் படத்தின் ஸ்கிரிப்டை இவர் தயார் செய்து இங்கிலாந்தின் எலிசபெத் அரசியின் முன்னிலையில் படம் தொடங்கப் பட்டது. இப்பவும் கமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். மருதநாயகத்தை எடுக்கப் போகிறேன் என்று. ( கதை — திரைப்படம் — )
ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘ஜன்னல் மலர்’ கதை “யாருக்கு யார் காவல்” என்று எம்.ஆர்.ராதா ,ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியா நடித்த சினிமாவாக மாறியது. படம் படு பிளாப்.
அதில் ஆச்சரியம் என்னவென்றால் , இப்போது இறைவி எடுத்த கார்த்திக் சுப்புராஜ் டைட்டிலில் “partly inspired by Sujatha’s Jannnal Malar’ என்று போட்டிருக்கிறார்.
சாவி இதழில் வந்த காகிதச் சங்கிலிகள் கதை பொய்முகங்கள் என்ற பெயரில் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் தமிழில் வந்தது. பின்னர் கன்னடத்திலும் அது எடுக்கப்பட்டது.
இந்த இரண்டையும் பற்றி சுஜாதா, “சினிமா எடுத்து கெடுக்கப்பட்ட என் கதைகள்” என்று குறிப்பிடுகிறார்.
ஆனந்த விகடனில் வந்த மாபெரும் ஹிட்டான ‘கரையெல்லாம் செண்பகப்பூ” கதை பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, மனோரமா நடித்தது வெளிவந்தது. ப.ப.பி ரகம். (கதை
திரைப்படம்
)
இவருக்கு சினிமாவில் இப்படிப்பெயர் வந்ததாம். அவரே சொல்கிறார். ” வேண்டாங்க. ராசியில்லாத எழுத்தாளர். .. தேவைப்பட்டா..”
அதற்குப்பிறகு சுஜாதா அவர்கள் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள் எடுக்கும் படத்துக்கு வசனமும் கதைக்கு ஆலோசனையும் அமைக்கத் தொடங்கினார்.
அப்படி வந்த படங்கள்
ஷங்கரின், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன். அத்தனை படங்களிலும் சுஜாதாவின் முத்திரை நன்றாகவே தெரியும்.
(முதல்வனில் இன்டர்வியூ , சிவாஜியில் டீக்கடை, அன்னியனில் அம்பிபேசும் உண்மை, பாய்ஸின் இளமை, எந்திரனில் ரோபோவின் ஒவ்வொரு பிரேமிலும் சுஜாதா தெரிவார். )
மணிரத்னத்துடன் ரோஜா ( தேசியக்கொடி காட்சி), திருடா திருடா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு, லாஜோ
பாரதிராஜாவுடன் இணைந்து கண்களால் கைது செய், நாடோடித் தென்றல், பொம்மலாட்டம்
பிரசாந்த், சிம்ரன் நடித்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’ , விஷால் ,பரத் நடித்த ‘செல்லமே’
மொத்தத்தில் கதையில் – வசனத்தில் கொஞ்சம் புத்திசாலித் தனம் தேவையென்றால் தயாரிப்பாளர்களும் டைரக்டரும் நாடியது சுஜாதாவை.
சரித்திரம் பேசுகிறது – யாரோ
ஆம்ரபாலி
பீடிகை:
பொதுவாக இந்த ‘சரித்திரம் பேசுகிறது’ தொடர் – காலப் பிரமாணமாக (chronologically) தொடர்ந்து எழுதப்படுகிறது.
இந்த முறை – சற்றே முறை தவறி – காலத்திற்குப் பின்னே சென்று ஆம்ரபாலியை படம் பிடித்துக் காண்பிக்க உள்ளோம்.
காலம்: கி மு 500; இடம்: வைசாலி
பேரழகு கொண்ட பெண் பேரழிவை விளைவிக்க வல்லவள் – ஆயினும் காவியத்தில் இடம் பெறத் தவற மாட்டாள்.
சீதையின் ‘பொன் மான்’ ஆசை – ராவணனையும் அசுர குலத்தையும் ஒருங்கே அழித்தது, ஆனால் காவியம் படைத்தது.
திரௌபதியின் சிரிப்பு – துரியோதனாதியர் மட்டுமல்லாது பாண்டவராதியரையும் அழித்தது. ஆயினும் காவியம் படைக்கத் தவறவில்லை.
ஹெலன் – இவளது முகம் ஆயிரம் கப்பல்களை ஏவியதாம் – ட்ராய் நகர் அழிந்தது. ஹோமர் இதைக் காவியமாக்கினார்.
அழகி கிளியோபாத்ராவின் ஒரு சஞ்சலம் மார்க் ஆண்டனி என்ற மாவீரனைத் தோல்வியடையச் செய்தது. – ஷேக்ஸ்பியர் அதைக் காவியமாக்கினார்.
தமயந்தியின் அழகு தேவர்களையும் மயக்கியது. அவள் சுயம்வரத்தில் தேவர்கள் நளன் போல் வேடமிட்டு அவளைக் கவர நினைத்தார்கள்.
இவர்களெல்லாம் இளவரசிகள், தெய்வத்தன்மை பொருந்தியவர்கள்..
ஆனால் நமது நாயகியோ சாதாரணப் பெண்.. அழகு மட்டுமே அவள் வாழ்வைக் காவியமாக்கியது.
இனி நம் கதைக்குச் செல்வோம்:
உலகையே தர்ம விளக்கால் ஒளியூட்டிய புத்தர் வாழ்ந்த காலம்.
மகத நாடு தோன்றிப் பெரும் புகழ் பெற்ற நாட்கள்.
பண்டைய பாரதத்தில், முடியரசுகளுக்கு இணையாகச் சிறிய குடியரசுகளும் கோலோச்சின. குடியரசாகத் திகழ்ந்த ஒரு நகரம் வைசாலி (லிச்சாவிஸ் என்ற நாட்டின் தலைநகர்).
தெய்வ நாயகிகள் சீதாப்பிராட்டி, ஆண்டாள், வள்ளி எல்லாம் பூதேவியின் மடியில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.
அது போல் வைசாலியின் அரசு மாந்தோப்பில், ஒரு மாமரம் அடியில், ஒரு அழகான பெண் குழந்தை கிடந்தது.
அழகென்றால் கொள்ளை அழகு!
மகாநமன் என்ற ஒரு குறு நில மன்னன் இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தான்.
அந்தக் குழந்தை வளர வளர அதன் அழகு கூடிக் கொண்டே சென்றது.
அழகுடன் கவர்ச்சியும் நளினமும் சேர்ந்து கொண்டது.
அழகி நடனம் கற்பது இயற்கை தானே!
சிறந்த நர்த்தகியானாள்.
வைசாலியின் அரசன் மனுதேவ் அவள் நடன அரங்கேற்றத்திற்கு வந்திருந்தான்.
பதினோரு வயதிலேயே பெரும் அழகி என்ற பெயர் பெற்றாள்.
அவள் தந்தையிடம் தினமும் பலர் பெண் கேட்டு வரத் தொடங்கினர்.
அவர்கள்…பிரபுக்கள், இளவரசர்கள், செல்வந்தர்கள் என்று பலர்.
ஆனால் அவள் மனமோ அந்த கிராமத்தில் இருந்த ஒரு இளைஞன் புஷ்ப குமாரிடம் லயித்தது.
திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் நடந்திருந்தால் இந்தக் கதை இங்கேயே முடிந்திருக்கும்.
அரசன் மனுதேவ் அவளது நடனம் கண்டதிலிருந்தே கிறங்கிப் போயிருந்தான்..
எப்படியாவது இவளை அடைய வேண்டும் என்று வெறி கொண்டான்.
திருமண செய்தி அவன் வெறியைப் பெரிதாக்கியது.
நீங்கள் நினைப்பது சரி தான் (எத்தனை சினிமா பார்த்திருப்பீர்கள்!)
மணநாளில் மணமகன் பிணமாக்கப்பட்டான்.
திருமணம் நின்றது.
மீண்டும் பிரபுக்கள், இளவரசர்கள், செல்வந்தர்கள் என்று பலர் வரத் துவங்கினர்.
அவர்களுக்கு மோகம் தலைக்கேறியது.
‘என்னை விடுத்து.. வேறு எவருக்காது திருமணம் செய்ய நினைத்தால்… மவனே.. சங்கு தான்.. ‘ என்று மிரட்டினர்.
குடியரசான வைசாலியில் பாராளுமன்றம் கூடியிருந்தது.
அங்கத்தினர்கள் ஆம்ரபாலியைப் பற்றி விவாதித்தனர்,
வாசக அன்பர்களே!
நாம் வங்கிகளை தேசியமயமாக்கிய அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம்! தொழிற்சாலைகளை தேசியமயமாக்கிய அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம்!
ஆனால் ஒரு பெண்ணையே தேசியமயமாக்கிய அரசாங்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
அது தான் நடந்தது!
அநியாயம்!
ராமாயணம் மகாபாரதம் எல்லாமே ‘பெண்ணுக்கு அநீதி’ செய்து காவியமாகியது.
நம் காவியமும் அதற்கு விலக்கில்லை.
ஆம்ரபாலி – ‘நகர் வது’ (நகரத்தின் மணப்பெண்) என்று நியமிக்கப்பட்டாள்!
அனைவருடைய மகிழ்ச்சிக்காகவும் வைசாலியின் ஒருமைப்பாட்டிற்காகவும் இந்த முடிவாம்!
அதன்படி அவள் வைசாலியின் எந்த/எல்லா ஆடவருடனும் உறவு கொள்ளவேண்டும்.
வைசாலி நகரமே இன்பத்தில் மிதந்தது.
ஆம்ரபாலியின் அழகே அவளைச் சீரழித்த கொடுமையை என்னவென்று சொல்வது?
அவளுக்கு ‘ஞான்பத கல்யாணி’ என்ற பட்டமளித்தனர்.
அதன் படி நாட்டின் தலை சிறந்த பெண்மணியாக 7 வருடங்களுக்கு அங்கீகாரம்.
சிறப்பு அரண்மனை கொடுக்கப் பட்டது.
அவளுக்குத் தன் காதலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
அத்துடன் அவள் அரச சபையில் நடனமாட வேண்டும்.
ஆம்ரபாலியின் அழகின் புகழ் வைசாலி நகர் தவிர மகதம் வரை பரவியது.
மகதம்-வைசாலி இடையே பெரும் பூசல் நிலவி வந்தது.
ஆனாலும் மகத மன்னன் பிம்பிசாரன் ஆம்ரபாலியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தான்.
யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்க – மாறு வேடம் அணிந்தான்.
ஆம்ரபாலியின் அரண்மனை சென்று அவளைச் சந்தித்தான்.
அந்த ஆடவனின் நீண்ட கரங்களையும் பரந்த மார்பையும் பார்த்து அவளுக்கு ‘ஆசை’ பிறந்தது.
“ஐயா தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”
“நான் ஒரு இசைக்கலைஞன். நடனத்துக்குப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவன்” – பிம்பிசாரன்.
அவன் பொய்யுரைக்கவில்லை.
அவன் பாடினான்.
‘பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்’ என்பது போல் ஆம்ரபாலியின் கால்கள் ஆடத்துவங்கியது. மேனி அதற்குத் தகுந்த அபிநயம் புரிந்தது.
இசையும் நடனமும் ……
“தேனோடு கலந்த தெள்ளமுது… கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்… இந்த கலைக் கூடத்தில்…
இருவரது கண்களும் ஒன்றை ஒன்று கவ்வியது..
இருவரது கலைகளும் ஒன்று சேர்ந்தது.
கலைகளுடன் காதலும் கலந்தது.
நாட்கள் நொடிகள் போல வேகமாகப் போனது.
காதலன் பிரிந்தான்.
ஆம்ரபாலி காதலனின் கருவைத் தன்னுள் தாங்கினாள்.
பிறந்த மகனுக்கு ‘விமலா கொண்டன்னா’ என்று பெயரிட்டாள்.
வருடம் ஒன்று உருண்டோடியது.
வைசாலியில் போர் முரசம் கொட்டியது.
ஆம்ரபாலி பணிப்பெண்ணை அழைத்து:
“பெண்ணே, வைசாலியின் மீது போரா? இது என்ன விபரீதம்? விவரம் அறிந்து வா”- பணித்தாள்.
பணிப்பெண் அரண்மனையை விட்டு வெளியே வந்தாள்.
வீதியில் வைசாலியின் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
அருகிருந்த நாற்சந்தியில், ஒரு வீரனின் உருவப்படம் ஆறடி உயரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த்தது.
வீரர்கள் அதற்கு எரியூட்டிக் கொடும்பாவியாக எரித்தனர்.
‘பிம்பிசாரன் ஒழிக’ என்ற கோஷம் விண்ணைத் தொட்டது.
பிம்பிசாரன் வைசாலி மீது படையெடுத்து வந்திருந்தான்
எளிதாகக் கைப்பற்றிவிடலாம்.. பின் ஆம்ரபாலியை அடையலாம் என்று நினைத்திருந்தான்.
போர்க்களத்தில் காயப்பட்டுக் களத்திலிருந்து விலகி ஆம்ரபாலியின் அரண்மனையின் பின்புறம் வந்து விழுந்தான். பணிப்பெண் அவனை வைசாலியின் படை வீரன் என்று எண்ணி மாளிகைக்குக் கொண்டு வந்தாள்.
ஆம்ரபாலி அவனைப் பார்த்ததும் தன் காதலனென்று கண்டு கொண்டாள்.
பிம்பிசாரன் மயங்கிக் கிடந்தான்.
விளக்கு கொண்டு வந்தபின் பணிப்பெண் அவன் முகத்தைப் பார்த்து விட்டு
‘ஐயையோ…”
என்று வீரிட்டு அலறிவிட்டாள்.
“ஏனடி இப்படிக் கத்துகிறாய்? இவருக்கு வெறும் மயக்கம் தான்’ – என்றாள் ஆம்ரபாலி.
‘இல்லை.. அம்மா.. இல்லை “ அவள் வாய் குழறத் தொடங்கியது.
முகமோ பீதியின் உச்சத்தை எட்டியது.
“என்னடி சொல்ல வருகிறாய்.. சொல்லித் தொலையேன்” ஆம்ரபாலி சற்று பொறுமை இழந்தாள்.
‘இவர் … இவர்… மகதத்தின் மன்னர் பிம்பிசாரர்” – சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கும் மயக்கம் வரத் தொடங்கியது.
‘என்ன … இவரா… அவரா??“ – ஆம்ரபாலியின் குரல் நடுங்கியது.
‘ஆம் அம்மா… இவர் கொடும்பாவியைத் தான் வீதியில் நிறுத்தி எரித்துக் கொண்டிருந்தார்கள்”
அந்த நேரம் கண் விழித்த பிம்பிசாரன், “அம்பை …” என்று ஆம்ரபாலியை ஆசையுடன் அழைத்தான்.
“நீங்கள் மகதத்தின் மன்னர்தானா? சே! சே! எதிரி நாட்டு மன்னரிடமா நான் காதல் கொண்டிருந்தேன்?” ஆம்ரபாலி நெருப்பை மிதித்தவள் போல் துடித்தாள்.
“உன் மேல் கொண்ட காதலினால்.. நான் வெறும் இசைக் கலைஞனாகவே வந்தேன்; அதே காதலுக்காகத்தான் இன்றும் படையெடுத்து வந்தேன்” – பிம்பிசாரன் காதலில் கசிந்தான்.
“வைசாலி எனது தாயுமாகும்.. தந்தையுமாகும் … இதன் மீது படைஎடுப்பதென்பது என் உயிரையே பறிப்பதாகும்” ஆம்ரபாலியின் குரலில் துக்கத்தை விடக் கோபமே குடி கொண்டிருந்தது.
“அம்பை… நீ தான் எனக்கு வேண்டும்”
“முதலில் போரை நிறுத்துங்கள்” ஆம்ரபாலியின் குரல் கெஞ்சவில்லை… ஆணையிட்டது.
வீரத்தில் சிறந்தவனாக இரும்பு உடல் கொண்டாலும் இதயமோ காதலில் கரும்பாகக் கரைந்தது.
“அம்பை… நீ என்னுடன் வா.. மகதத்திற்கு உன்னை மகாராணியாக்குகிறேன்.. “ பிம்பிசாரன் கெஞ்சினான்.
“வைசாலிக்குத் துரோகம் செய்ய என்னால் இயலாது.. என் உடல் இந்த மண்ணுக்குத்தான் சொந்தம்..”
வெகு ஏமாற்றத்துடன் பிம்பிசாரன் பிரிந்தான்… ஆம்ரபாலி கேட்டுக் கொண்டபடி போரை நிறுத்தினான். மகதத்தின் மக்கள் பலர் அவனைக் கோழை என்றும் தூற்றத் தொடங்கினர்.
‘காதலுக்கு மரியாதை’ என்று பிம்பிசாரன் எண்ணினான்.
நொந்த பிம்பிசாரன் பாடலிபுத்திரம் சென்றான்.
மகன் அஜாதசத்ருவே அவனைச் சிறை செய்து கொடுமைப்படுத்தினான்.
அன்னம் கொடுக்காமல் பிம்பிசாரனை மெல்ல சாகடித்தான்.
ஆண்டுகள் சில சென்றன.
ஆம்ரபாலியின் வாழ்வு ‘நகரத்தின் மணப்பெண்ணாகவே’ தொடர்ந்தது.
செல்வம் அவளைத் தேடி வந்து குவிந்தது.
ஆம்ரபாலி சேர்த்த செல்வங்களை –கோவில்கள், மருத்துவமனை – சாலைகள் –என்று சமூகத்திற்குக் கொடுத்தாள்.
அவளது கருணையும், அன்பும், தயாள குணமும், அழகும் இன்றும் கங்கைக் கரை கிராமங்களில் பாடப் படுகிறதாம்.
நமது கதை ஒரு பெரு திருப்பம் அடைய உள்ளது.
மகத மன்னன் அஜாதசத்ரு – ஆம்ரபாலியின் அழகைக் கேள்விப்பட்டு அவளை அடையத் துடித்தான். வைசாலி மீது படை எடுத்தான். ஆம்ரபாலிக்கும் அஜாதசத்ருவுக்கும் காதல் என்று அறிந்த வைசாலி மக்கள் பொங்கி எழுந்தனர்.
(அஜாதசத்ருவும் ஆம்ரபாலியும்)
அவளைச் சிறை வைத்தனர்.
அஜாதசத்ருவுக்கு இது பெருங் கோபமூட்டியது.
வைசாலி நகரை சூறையாடி முற்றிலும் தீக்கிரையாக்கினான் – ஆம்ரபாலியின் சிறையைத் தவிர.
தாயாகவும் தந்தையாகவும் எண்ணியிருந்த வைசாலி அழிந்தது ஆம்ரபாலிக்குத் தாளாத துயரத்தைக் கொடுத்தது.
அஜாதசத்ரு ஆம்ரபாலியை அணுகி:
“ஆம்ரபாலி…இனி நீ விடுதலை பெற்றாய்.. உனக்காகவே இதைச் செய்தேன்” என்று பெருமிதத்துடன் கூறினான்.
ஆம்ரபாலி: “ஏன் இப்படி.. கண்களை எடுத்து விட்டு ஓவியம் எதற்கு.. இனி நீங்கள் போகலாம். உங்களோடு எந்த உறவும் வைக்க நான் விரும்பவில்லை”
கண்டிப்பான குரல் அஞ்சாத அஜாதசத்ருவையும் தாக்கியது. கலக்கியது. அவனும் மகதம் திரும்பினான்.
ஆம்ரபாலியின் மனம் சுக்கு நூறாக உடைந்து போய் இருந்தது. அரண்மனையில் தனக்குத்தானே சிறை வைத்துக்கொண்டாள். பணிப்பெண்கள் ஆம்ரபாலியைப் பற்றிக் கவலை கொண்டனர்.
ஒரு நாள்:
அரண்மனை மாடத்தில் ஆம்ரபாலி வீற்றிருந்தாள்.
பணிப்பெண்: “தலைவி! ஒரு புத்த துறவி நம் ஊருக்கு வந்துள்ளார். அவரைச் சென்று பார்த்தவர்கள் பெரும் மன அமைதி கொள்கின்றனராம்”
ஆம்ரபாலி : “…”
பணிப்பெண்: “தாங்கள் அவரைச் சென்று அவசியம் பார்க்கவேண்டும். கீழே வீதியில் பாருங்கள். அவர் நடந்து செல்கின்றார்.”
ஆம்ரபாலி அரண்மனையை விட்டு வெளியே வந்தாள்..
அந்தத் துறவி நடந்து கொண்டிருந்தார்.
ஆம்ரபாலிக்கு இது ஒரு புது அனுபவம்.
முதல் முறையாக!
தன்னைக் கண்ட எந்த ஆணும் தன்னை மறுமுறை நோக்கத் தவறியதில்லை.
துறவியோ ஆம்ரபாலியைக் கண்டும் அவளைக் காணாதவராகவே நடந்தார்.
ஆம்ரபாலி பின்தொடர்ந்தாள்.
ஒரு மாமரம் அடியில் அவர் அமர்ந்தார்.
ஆம்ரபாலி அவரைக் கண்டாள்.
இளம் துறவி.
திடகாத்திரமான உடல்.
அழகிய கண்கள்.
சீரான நடை.
சாந்தமான முகம்.
முறுவலோடிய இதழ்கள்.
குறுகுறுவென்ற தாடி.
நீண்ட கரங்கள்.
‘புத்தம் சரணம் கச்சாமி… தர்மம் சரணம் கச்சாமி’ என்ற மென்மையான சாரீரத்தில் பாடினார்..
‘சாரீரமும் சரீரத்தைப் போலவே சுகமாக இருக்கிறதே! என்ன கம்பீரமான – அதே சமயம் மென்மையான அழகான இளைஞன்!’
ஆம்ரபாலி திகைத்துப் போனாள்!
இது வரை என்னைப் போன்ற அழகி உலகில் இல்லை என்று நினைத்திருந்தேனே!
ஆண்களில் இப்படி ஒரு அற்புத அழகா?!
கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல உயர்தர ஆண்களுடன் இன்பம் அனுபவித்தேனே!
இதுபோல் அழகனைப் பார்த்ததே இல்லையே!
‘நான் பார்த்ததிலே .. உன் ஒருவனைத் தான்.. நல்ல அழகன் என்பேன்’ என்ற பாடல் அவள் மனதில் நிறைந்தது.
ஆம்ரபாலி :‘வணக்கம். தாங்கள்?’
துறவி அவளைப் பார்த்தார்.
ஆனால் பதில் சொல்லவில்லை.
என்னைப் பார்த்தாலே தெரியவில்லையா? என்பது போன்ற முக பாவம்.
ஆம்ரபாலி தொடர்ந்து பேசினாள்.
“இந்த இளம் வயதில் உங்களுக்கு ஏன் இந்தத் துறவு வாழ்க்கை?”
துறவி: ‘உண்மையைத் தேடி.”
ஆம்ரபாலி முதலில் திகைத்தாள்.
மறு கணம் இதழில் மயக்கம் தரும் முறுவலைக் கூட்டினாள்.
“இளமையைத் தொலைத்துவிட்டு… உண்மையைத் தேடுவதில் பலன் என்ன?”
இப்பொழுது – துறவி முறுவலித்தார்.
“பரமானந்தம் இதில் மட்டும் தான் கிட்டும். பெண்ணே , நீ தேடுவது வெகு தற்காலிக இன்பம்”
தனது மனத்தையும் புரிந்து கொண்டுதான் பேசினாரோ என்று ஆம்ரபாலிக்குத் தோன்றியது.
ஆம்ரபாலி விடவில்லை.
“இந்த மாயையை விட்டுவிட்டு என் விருந்தினராக என்னோடு சில மாதங்கள் தங்கி இருக்கவேண்டும். வரும் நான்கு மாதங்கள் பெரும் மழைக்காலம். இம் மழைக்காலத்தில் பயணம் செய்வது தங்களுக்கும் இயலாது.” வேண்டினாள்.
‘என் தவத்தை மாயம் என்று சொல்கிறாள்’ என்று எண்ணிய இளந்துறவியின் முகத்தில் மந்தகாசம் சற்றுப் பரந்தது.
ஆனால் அவர் கண்ணில் எந்தவித சலனமும் இல்லை.
ஒரே கணம் யோசித்தார்.
பிறகு:
“என் குருவிடம் கேட்கிறேன். அவர் சரி என்றால் வருகிறேன்”
பிறகு தனது பையிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்து ஆம்ரபாலியிடம் கொடுத்து, “இந்தப் பழத்தை நான் வரும் வரை கெடாமல் பார்த்துக்கொள்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார்.
புத்தரின் மடம்.
நமது இளந்துறவி புத்தரிடம் ஆம்ரபாலியின் விண்ணப்பத்தைக் கூறினார்.
அருகிலிருந்த மற்ற சீடர்கள் துடித்தனர்.
முற்றிலும் பக்குவப்படாத சீடர்கள் பொறாமையால் தவித்தனர்.
ஆம்ரபாலியின் அழகுப் பிரதாபம் புத்த சங்கத்திலும் பரவியிருந்தது.
புத்தர் நமது இளந்துறவியிடம்: “சரி நீ சென்று வா” என்றார்.
சீடர்கள் குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.
‘என்ன சொல்கிறீர்கள் குருவே! ஆம்ரபாலியைப் பற்றித் தாங்கள் அறியாததா? நமது சங்கத்திற்கு இது பெரும் அவமானம்” என்று கதறினர்.
புத்தர்: “சீடர்களே! இவன் கண்களைப் பாருங்கள். அதில் ஏதேனும் ஆசை தெரிகிறதா? மேலும் நான் போக வேண்டாம் என்று சொன்னாலும் இவன் வருத்தப்படப் போவதில்லை. இவன் திடமான தியானி. நான் இவனை முழுமையாக நம்புகிறேன்.”
இளந்துறவி ஒரு மாதம் கழித்து ஆம்ரபாலியின் அரண்மனையை அடைந்தான். இடையில் ஆம்ரபாலி – துறவி தந்த மாம்பழத்தைப் பாதுகாக்க பெரு முயற்சி செய்தாள் – ஒன்றும் பயனில்லை.
இளந்துறவியின் வருகை ஆம்ரபாலிக்குப் பேருவகை தந்தது.
கார்கால மழை மேகத்தைக் கண்ட வண்ண மயில் போலக் காதலில் ஆடினாள்.
துறவி: “ஆம்ரபாலி, நான் தந்த மாம்பழம் எங்கே? கொண்டு வா“ என்று பணித்தார்.
ஆம்ரபாலி கொண்டு வந்த பழம் அழுகியிருந்தது. புழுத்திருந்தது. நாற்றம் மூக்கைத் துளைத்தது.
“இந்த அழுகிய பழத்தினால் தங்களுக்கு என்ன பயன்?” ஆம்ரபாலி வினவினாள்.
துறவி தன் கைகளால் அந்தப் பழத்திலிருந்து மாங்கொட்டையைப் பிரித்தெடுத்தார்.
‘சென்ற மாதம் பார்த்த மாம்பழத்தின் அழகும், மணமும், சுவையும் இப்பொழுது எங்கே? இந்த மாங்கொட்டையைப் பார். ஒரு புதிய மாமரத்திற்கு வித்தாகும் தகுதி கொண்டது” .
“மாங்கொட்டை ஆத்மா போன்றது. எத்தனை நாள் உனது தோலும் சதையும் அழியாதிருக்கும்?”
ஆம்ரபாலி பேச்சிழந்தாள்!
துறவி நான்கு மாதம் ஆம்ரபாலி அரண்மனையில் இருந்தார்.
ஆம்ரபாலி மனம் சற்றே அலை பாய்ந்தது.
எனினும் துறவியின் வாழ்வு ஒரு தீ போல் கொழுந்து விட்டு எரிந்தது.
மாதம் நான்கு சென்றது.
ஆம்ரபாலி மெல்ல மெல்ல அடங்கினாள்.
மனம் அமைதி அடைந்தது.
துறவியிடம் மதிப்பு கொண்டாள்.
“என்னை மன்னித்து அருள வேண்டும்.
உங்களை இங்கிருக்க விரும்பியது எனது சுயநல நோக்கமாக இருந்தது.
ஆனால் இன்று என்னைத் தூயவளாக்கி விட்டீர்கள்.
ஒரு வேண்டுகோள்”
துறவி அமைதிப் புன்னகை சிந்தினார்.
“தங்கள் குருநாதர் புத்தரை சந்திக்கத் தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவரையும் எனது வீட்டில் தங்க வைத்து அவரிடமும் உபதேசம் பெறவேண்டும்.”
துறவி: “தவறாமல் செய்கிறேன். குருநாதர் நிச்சயம் வருவார்”
புத்தர் ஆம்ரபாலி அரண்மனை வந்தார்.
(ஆம்ரபாலி புத்தரை வரவேற்கிறாள்)
ஆம்ரபாலி அவர் தாள் பணிந்து:
“தவத்திரு குருவே, தங்கள் சீடரைக் கவர நான் பெரு முயற்சி செய்தேன். ஆனால் – அவர் உங்கள் திருவடிகளே வாழ்வை உய்விக்கும் பெரு மருந்து என்று என்னை உணர வைத்தார். என் உடைமைகள் எல்லாம் இனி புத்த சங்கத்திற்கே. தாங்கள் இங்கு சிறு காலம் தங்கி என் பணிவிடைகளை ஏற்றருளவேண்டும். அதன்பின் நான் புத்த பிக்ஷுணி ஆகி தங்களுக்கு சேவை செய்து வாழ்வைக் கழிக்க விரும்புகிறேன்”
புத்தர்: “ஆம்ரபாலி .. ஆனால் .. பெண்களை சங்கத்தில் சேர்ப்பதிற்கில்லை”
ஆம்ரபாலி: ‘ஏன் அப்படி?”
புத்தர் :”பெண் புத்தத் துறவிகளின் தவ வாழ்க்கையைக் குலைக்கக்கூடும்”
ஆம்ரபாலி: “புத்தத் துறவிகள் எல்லாம் அத்தனை மனத்திடமற்றவர்களா?”- துணிச்சலுடன் கேட்டாள்.
புத்தருக்கு பதில் சொல்ல இயலவில்லை.
பெண்களை சங்கத்தில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார்.
புத்தரின் சங்கத்தில், அனைத்து பிக்ஷுக்கள் “சங்கம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி” என்று கோஷமிட ஆம்ரபாலி காவி உடை அணிந்து புத்த பிக்ஷுணி ஆனாள்.
இறைவன் ஆம்ரபாலிக்கு முதலில் புற அழகு அளித்து உருவாக்கிப் பின் இறுதியில் அக அழகு அளித்து முழு அழகியாக்கினான்.
காலங்கள் பல சென்றாலும் ஆம்ரபாலி கதை சரித்திரத்தில் பேசப்படுகிறது.
கொசுறு:
வைஜயந்திமாலா, சுனில்தத் நடித்த ஆம்ரபாலி திரைப்படத்தில் வைஜயந்திமாலாவின் அழகான நடனத்தைக் கண்டால் அந்தப் பேரழகிக்கு இவரைவிடப் பொருத்தமானவர் யாரும் இருக்கமுடியாது என்று தோன்றும். அவரது படங்கள் இந்தக் கதையை அலங்கரிக்கின்றன.
இந்த நடன வீடியோவையும் பாருங்கள்:
சரித்திரம் மேலும் பேசும்!
புரிந்து கொண்டேன் — கோவை சங்கர்
புரிந்து கொண்டேன் முருகா புரிந்து கொண்டேன் -உன்
படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொண்டேன்
நல்லதும் கெட்டதும் நாட்டினிலே ஒருமித்து
நடப்பதன் காரணம் தெரிந்து கொண்டேன்!
நல்லவர் மாண்புகள் நன்றாகப் புரிந்திடவே
தீயவர் கொடுமையும் அவனியில் மலியவேண்டும்
குளிர்ச்சிமிகு நிழலினது அருமை யுணர்ந்திடவே
வேகின்ற வெயிலின் வெப்பமது வேண்டும்!
சூரபத்மன் கொடுமையால் தேவர்கள் அல்லல்பட
அசுரனின் அதர்மத்தால் உலகமது வாடிவிட
உன்கையால் அவனழிய தர்மத்தின் மேன்மையது
மனிதர்க்கும் தேவர்க்கும் நன்றாகப் புரிந்ததுவே!
ஆத்திரத்தால் பழத்தினையே அண்ணனிடம் தோற்றுவிட்டாய்
பொறுமையின் மதிப்பினையே எல்லோர்க்கும் காட்டிவிட்டாய்
சுட்டபழமா சுடாதபழமா கேட்டாய்நீ அவ்வையிடம்
அகந்தையும் ஞானமுமிரு துருவமென காட்டிவிட்டாய்!
துன்பமது இலையேல் இன்பத்தில் சுகமில்லை
கசப்பொன்று இலையேல் அமிர்தத்தில் சுவையில்லை
ஊடலும் இலையேல் கூடலில் சுகமில்லை
துரோகம் இலையேல் நட்பிலே உயர்வில்லை!
உலகிலே எல்லோரும் நல்லவராய் இருந்துவிட்டால்
அழிவிற்கு அடிகோலும் போரில்லை நோயில்லை
மக்கள்தொகை எளிதாக விரைவாகப் பெருகிடவே
தாங்காது ஐயனே இவ்வுலகம் தாங்காது!
தலையங்கம்
தமிழகத்தில் தேர்தல் அழகாக அமைதியாக நடந்து முடிவடைந்துவிட்டது.
தமிழகம் முழுவதும் ஜே ஜே என்று இருக்கிறது.
(படம்: நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் )
அம்மா தனது இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கியதன் மூலம் எம் ஜி ஆரின் சாதனையையும் தொட்டிருக்கிறார்.
எப்போதும் மாற்றத்தையே விரும்பும் தமிழக மக்கள் இம்முறை ஒற்றையா ரெட்டையா என்று பார்த்து இரண்டும் இரண்டாப்பை இரண்டும் கழண்டாப்பை என்று முடிவுகட்டி இருவருக்கும் மாறி மாறிக் குத்தினார்கள். விளைவு அதிமுகவிற்கு 134 திமுகவிற்கு 89 காங்கிரஸ் 8 மற்ற கட்சிகள் எல்லாம் ‘ஓட்டை ஆப்பை’ என்று அவைகளைத் தூர வீசிவிட்டார்கள்.
முடிவு அம்மாவிற்குச் சாதகமாக வந்தது.
அமெரிக்காவில் டெமோக்ரெடிக் , ரிபப்ளிக் என்று இரு கட்சிகள் மட்டுமே இருப்பது போல நமது தமிழகத்திலும் அதிமுக அல்லது திமுக என்று இரண்டே அணிகள் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. உதிரிக்கட்சிகளையும் ஓட்டைக்கட்சிகளையும் ஜாதிக்கட்சிகளையும் மக்கள் ஓரம்கட்டிவிட்டார்கள். நல்ல ஆரம்பம். இது தொடரவேண்டும.
வளமான ஆளுங்கட்சி – வலுவான எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் ஆணி வேர். மக்கள் இதற்கு நீரை வார்த்திருக்கிறார்கள்.
ஸ்டாலின் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்குச் செல்வது, ஜெயலலிதாவும் ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லுவது போன்ற அரசியல் நாகரிகங்கள் துளிர் விடுகின்றன.
ஜெயலலிதாவும் பா ஜ கவின் என் டி ஏ இல் சேரலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. அப்படி நடந்தால் தமிழகத்துக்கு ‘நல்ல காலம் வருது’ என்று குடுகுடுப்பை ஆட்டலாம்.
நல்ல நம்பிக்கையோடு நமது பணியைத் தொடருவோம். நடப்பவை நல்லதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்போம்.
ஏப்ரல் 29, 2016 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி
- பெண் வாக்காளர்கள் = 2,93,33,927
- ஆண் வாக்காளர்கள் = 2,88,62,973
- மூன்றாம் பாலினத்தவர் = 4,720
வயது வாரியாக வாக்காளர்கள்
- 18 முதல் 19 வயதுடையோர் – 21.05 இலட்சம்
- 20 முதல் 29 வயதுடையோர் – 1.17 கோடி
- 30 முதல் 39 வயதுடையோர் – 1.39 கோடி
- 40 முதல் 49 வயதுடையோர் – 1.24 கோடி
- 50 முதல் 59 வயதுடையோர் – 87.32 இலட்சம்
- 60 முதல் 69 வயதுடையோர் – 56.15 இலட்சம்
- 70 முதல் 79 வயதுடையோர் – 26.58 இலட்சம்
- 80 வயதிற்கு மேற்பட்டோர் – 8.4 இலட்சம்
குவிகம் இலக்கியவாசலின் 14வது நிகழ்வு
குவிகம் இலக்கியவாசலின் 14வது நிகழ்வு
“வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்”
கலந்துரையாடல்
'ஸ்பேஸஸ்' (SPACES ) அரங்கில் (1,எலியட்ஸ் கடற்கரை சாலை, பெசன்ட்நகர், சென்னை) ஜூன் 18ஆம் தேதி – சனிக்கிழமை மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நடக்கவிருக்கிறது.
- தமிழ் மின்புத்தகங்களின் ஆசிரியர்கள்
- வலைப்பூக்களிலும் முகநூலிலும் கவிதை, கதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களைப் பதிவு செய்யும் இலக்கிய அன்பர்கள்
- தமிழ் ஆர்வலர்கள்
- இவற்றையெல்லாம் படித்து விருப்பத்தையும் கருத்தையும் அள்ளித் தெளிக்கும் வாசக நண்பர்களுடன்
கலந்துரையாடலாக வடிவமைக்கப்படும் நிகழ்வு இது.
படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வாசக நண்பர்களுக்கு நேரடியாக அறிமுகப்படுத்த உங்கள் இணையதள விவரங்களுடன் 9791069435 என்று எண்ணிற்குக் குறுஞ்செய்தி (SMS) அனுப்பியோ, மின்னஞ்சலிலோ (ilakkiyavaasal@gmail.com) பதிவு செய்துகொள்ளுங்கள்.
நல்ல இலக்கியத்தை இணையத்தில் தேடிப் படித்துவரும் ஆர்வலர்கள் இலக்கிய தளங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ரசித்துவரும் இலக்கிய தளங்களைப்பற்றியும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
நேரில் கலந்துகொள்ள இயலாத வலைஞர்கள் தங்கள் வலைப்பூவினைப் பற்றிய சிறுகுறிப்பும் அனுப்பலாம்
குவிகம் மின்னிதழ் படிக்க kuvikam.com
இலக்கியவாசல் நிகழ்வுகளின் பதிவுகள் காண ilakkiyavaasal.blogspot.com