Monthly Archives: March 2018
காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
காஞ்சி பீடாதிபதி சங்கராச்சார்யார் ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி 28 பிப்ரவரி அன்று முக்தி அடைந்தார்.
அவர் மறைவால் வாடும் பக்த கோடிகளுக்கு ஆழ்ந்த வருத்ததைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(படங்கள்: விகடன், இணையதளம்)
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
காளிதாசன்-ரகுவம்சம்
காளிதாசன் எழுதிய தேன் கவிதைகளைக் கண்டு நமது மனமென்ற தேனீ ரீங்காரமிடுகிறது.
அட..அங்கிருந்து நகர மறுக்கிறதே!
மனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு நாம் சரித்திரப் பயணத்தைத் தொடர முடியுமா?
இருந்து இலை போட்டு விருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போவோமே!
சரி… கதைக்குப் போவோம்..
ஒரு முன்னுரை:
ரகுவம்சம் – இது ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து, அக்கினி வருணன்வரை சென்று, அந்நூல் நிறைவடைகிறது. பல கதாநாயகர்களைக் கொண்ட இக்காவியம் – திலீபன் முதலாக அக்னிவர்ணன் வரை இருபத்தி ஒன்பது அரசர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது. இதில் முக்கியமாக திலீபன், ரகு, அயன்(அஜன்), தசரதன், ராமன் ஆகியோரின் கதையைப் பதினைந்து சர்க்கங்களில் கவி இயற்றி உள்ளார். மீதமுள்ள நான்கு சர்க்கங்களில் ஒரு சர்க்கம் ராமனுடைய மகன் குசனைப் பற்றியும், ராமனுடைய பேரன் அதிதி பற்றியும், ஒரே சர்க்கத்தில் இருபத்தியொரு மன்னர்களைப் பற்றியும் கடைசி சர்க்கம் அக்னிவர்ணனைப் பற்றியும் அமைந்துள்ளது.
இப்பொழுது முன்கதை:
விஷ்ணு புராணத்தின்படி இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி. அவருடைய மகள் அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார்.
சூரியன் கதையை குவிகம் வாசகர்கள் ‘எமபுரிப்பட்டணம்’ மூலம் அறிந்திருப்பீர்கள்!
சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன். அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள்
- கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதன்
- வசிஷ்ட முனிவர்
- ஹரிச்சந்திரன்,
- சிபி மன்னன்.
சூரியனின் மகன் மனுவின் மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர் – கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
சூரிய வம்சத்தின் முதல் மன்னன் இஷ்வாகு!
ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர் ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.
திலீபன்
காளிதாசர் தனது 30 ஆம் பாடலில் கூறுகிறார் :
மனு வம்சத்தில், திடீரெனப் பாற்கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப்போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்
திலீபனின் மனைவியின் பெயர் சுடாக்ஷிணா.
அவர்களுக்குக் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது.
மனைவி அருந்ததியுடன் ஆசிரமத்தில் இருந்தார் வசிஷ்ட மாமுனி.
ரகு வம்சத்தில்..அரசர்கள் வருவர்… அரசர்கள் மறைவர்… ஆனால் அனைவருக்கும் ஒரே ராஜ குரு வசிஷ்ட மாமுனி!
அவரை திலீபன் வணங்கி :
“ஸ்வாமி, எனக்குப் புத்திர பாக்கியம் இல்லை. நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்.
வசிஷ்டருக்கு இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் அடிக்கடி வருவார்கள் போலும்!
வசிஷ்ட முனிவர்: திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். காமதேனு ஒரு சாபம் கொடுத்திருந்தது. அந்த சாபம் விலக வேண்டும் . நீ தேவலோகத்துக்குக் கிளம்பிச்சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு சேவை செய்துகொண்டு அதற்குப் பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு மனமகிழ்ந்து உனக்குக் குழந்தை பாக்கியத்திற்கு அருள் தரக்கூடும்.
சாபங்கள் என்று ஒன்று இருந்ததால் அதற்கு விமோசனம் என்று இல்லாமலா போய்விடும்!
கதையை சற்று சுருக்குவோம்..
நந்தினி கூறியது :
நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். அதை அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை நீயும் உன் மனைவியும் குடிக்கவேண்டும்’
நந்தினி கூறியதுபோல திலீபனும் செய்தான்.
அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்ப்பமுற்றாள்.
இங்கு காளிதாசனுடைய வர்ணனை சிலவற்றைக் காண்போம்.
திலீபனின் மனைவி சுதட்சிணை கருவுற்று மகனைப் பெறுதல்:
- மங்கிய நிலவில், ஒரு சில நட்சத்திரங்களே சிதறிக் கிடக்கும் விடியும் தறுவாயிலுள்ள இரவுபோல, உடல் மெலிவால் குறைந்த அணிகளை அணிந்து, லோத்ர மலர்போன்று வெளுத்த முகத்துடன் அவள் இருந்தாள்.
- அவ்வேந்தன் தனிமையில் மண்மணம் கமழும் அவளது முகத்தை மீண்டும் மீண்டும் முகர்ந்து மகிழ்ந்தான்; வேனிற்கால முடிவில், மேகம் சிந்திய சிறுதுளிகளால் நனைந்த காட்டு நீர்த் தடாகத்தில் திருப்தியடையாத யானை போல.
- வானாளும் இந்திரன்போல, அவள் மகன் திசைகளின் எல்லைவரை செல்லும் தேர்கொண்டு, மண்முழுதும் ஆண்டு களிப்பான். அது கருதியோ அவள் மற்ற சுவைகள் அனைத்தையும் உதறி மண்மீது ஆசை வைத்தாள்?
- பழைய இலைகள் உதிர்ந்து மனம் கவரும் புது இளந்தளிர்கள் துளிர்க்கும் கொடிபோல, கருத் தாங்கும் சிரமங்கள் கடந்து அவளது அவயவங்கள் செழிப்புற்றன.
- நாட்கள் செல்லச்செல்ல, சற்றே கருத்த முகம்கொண்ட, பருத்த, அவளது இணைமுலைகள், வண்டு வந்தமர்ந்த அழகிய தாமரை மொட்டுக்களின் அழகை வென்றன.
- பெருநிதியைக் கருவில் சுமக்கும் கடலுடுத்த நிலமகளோ? கனலைத் தன்னுள் ஒளித்திருக்கும் வன்னி மரமோ? அல்லது உள்ளே நீரோடும் சரஸ்வதி நதியோ இவள்? எனத் தன் பட்டமகிஷியைக் கண்ட மன்னன் எண்ணினான்.
- பிறகு, உரிய காலத்தில், சூரியனைச் சேராமல் உச்ச ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து நின்று அவனது பாக்கியமாகிய செல்வத்தை முன்னறிவிக்க, இந்திராணியை ஒத்த அவள் புதல்வனைப் பெற்றாள்.
- அந்தக் கணம், திசைகள் தெளிந்தன. காற்று சுகமாக வீசியது. வேள்வித் தீச் சுடர் வலம் சுழித்து அவியை ஏற்றுக் கொண்டது. இவை அனைத்தும் சுப அடையாளங்களாகவே இருந்தன. உலகம் உய்யவன்றோ அத்தகையோர் பிறக்கின்றனர்!
- அக்குழந்தையின் இயல்பான தேசுடைய ஒளி பிரசவ அறையின் படுக்கையைச் சுற்றிப் பரவியது. அங்கிருந்த நிசி தீபங்கள் ஒளியிழந்து சித்திரத்தில் எழுதப்பட்டவை போலாயின.
- காற்றில்லாத மடுவில் பூத்த தாமரைபோல அசையாத கண்களால் தன் மகனின் முக அழகைப் பருகினான் மன்னன். நிலவைக் கண்டு, தன்னுள் அடங்காமல் பொங்கும் பெருங்கடலின் நீர்த்திவலைகள் போலப் பொங்கியது அவனது மகிழ்ச்சி.
- மகவு பிறந்த மகிழ்ச்சியில் கைதிகளை விடுதலை செய்யலாமென்றால், அக்காவலனின் அரசில் கைதிகள் என்று யாருமே இல்லை.
நாட்டில் இப்படியும் ஒரு பிரச்சனையா?
- சக்ரவாகப் பட்சிகள் போன்ற அந்த தம்பதியரின் அன்பு, உணர்வில் பிணைந்தது, ஒருவரையொருவர் பற்றியது. ஒரே பிள்ளை பிறந்து, அதைப் பிரித்தது. ஆயினும் அவர்களுக்கிடையில் அது இன்னும் அதிகமாக வளர்ந்தது!
- அப்புதல்வனின் மெல்லிய சருமத்தின் தீண்டல் அமுதம் பொழிந்தது. அவனை மடியில் ஏற்றிக் கடைக்கண்களை மூடிக் கொண்டான் அரசன். வெகுநாள் கழித்து மகனின் தொடுகையின் இன்பத்தை அறியும் தன்மையை அடைந்தான்.
பிறந்த அந்தக் குழந்தை ‘ரகு’!
ரகுவம்சத்தின் காரணகர்த்தா!
இனி ரகுவின் கதைக்குச் செல்வோம்.
காளிதாசனின் …
தேன் சொட்டும் வர்ணனைகள்!
உவமைகளின் உச்சக்கட்டம்!
கற்பனையின் சிகரம்!
மயங்கித் தவிக்கிறது மனது!
மீண்டும் அந்த அனுபவம் வேண்டும் போலிருக்கிறதல்லவா?
அது விரைவில்!
நிழலாட்டம் – இந்திரன்
painting by Salvador Dali
ரயில் ஜன்னலில்
என்னோடு பயணிக்கும் மலைகள்
உருமாறிக் கொண்டே இருக்கின்றன.
என் காதலியே என்று எழுதிக் கொண்டிருக்கும்போதே
அவள் கொடுத்த முத்தங்கள்
பாம்புகளாய் மாறி
விஷத் தீண்டலுக்காய்
என்னைத் துரத்தத் தொடங்கி விடுகின்றன.
இன்று என்பது விடிந்து
படுக்கையிலிருந்து புரண்டு எழும்போதே
அது நேற்று என்பதாய் மாறி
என் ஞாபக அடுக்கில் சென்று சிக்கிக் கொள்கிறது.
சிரியாவில் செத்த குழந்தைகளுக்காக
என் முகநூலில்
ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்போதே
என் தங்கை பதிவிட்ட
பிறந்தநாள் வாழ்த்துக்கு
நான் ரோஜாப்பூ ஏந்திய நாயின்
சிரிக்கும் படத்தைப்
பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
உண்மையாகச் சொல்வதெனில்
ஒவ்வொரு துக்கத்தின் பின் ஒளிந்திருக்கும் நிழலிலும்
ஒரு சந்தோஷம் கண்ணாமூச்சி விளையாடுகிறது.
ஒவ்வொரு மகிழ்ச்சியும் தன் கையில்
கண்ணீரில் நனைந்த ஒரு கைக்குட்டையை.
மறைத்து வைத்தே இருக்கிறது
எமபுரிப்பட்டணம் – (எஸ் எஸ்)
முதல் கதை: (சூரிய கதை )
சூரிய தேவனின் பற்றவைக்கும் நெருப்புச் சூடு காந்தசிகிச்சையில் முற்றிலும் குறைந்திருப்பதை ஸந்த்யாவின் உடம்பின் ஒவ்வொரு அணுவும் புரிந்து கொண்டது. அது காந்த சிகிச்சையா அல்லது காதல் சிகிச்சையா என்று புரியாமல் சூரிய தேவனும் ஸந்த்யாவின் உடலை இறுக்கப் பற்றினான். இருவர் இதயங்களிலும் காதல் என்ற அணை உடைந்து காட்டாற்று வெள்ளமாகப் பரவியது. பிற்காலத்தில் சூக்தி முக்தாவளி என்ற நூலில் காணப்படும் காதல் காட்சி இன்று ஸந்த்யா இருந்த கோலத்தை மனக்கண்ணில் பார்த்துத்தான் எழுதப் பட்டதோ என்னவோ?
அவளது கால்கள் புதிய மின்னல் போல் எழும்புகின்றன. அவளின் தாமரை மலர்கள் போன்ற பாதங்கள் வாழைத் தண்டுத் தொடைகளுக்குக் கீழே அழகாகப் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. மின்னலைச் சுற்றி வட்டமான ஆகாயம் போல் அவளின் மெல்லிய இடை மறைந்து உள்ளது. . . வானத்தில் .படிந்த மலைகள்போல் அவளது மார்பகங்கள் உள்ளன. அந்த இரு மலைகளின் அருகேயே ஒரு சங்குக் கழுத்தும் அந்த சங்கிலிருந்து எழுகின்ற வட்டமான சந்திரன் போல் அவளது முகமும் அமைந்திருக்க அவளது அழகு சொல்ல முடியா வண்ணம் அமைந்து பொங்கிப் பிரவாகித்தது.
வேணிதத்தர் என்ற பிற்காகாலக் கவியும் ஸந்த்யாவின் அழகுக் கோலத்தைத் தன் கற்பனைத் தூரிகையில் இப்படி வரைந்தார்.
அழகிய புருவத்தை உடைய அந்த அழகி, தனது மார்புக் கச்சை உயர்த்தி, தனது ஆடையின் நுனியால் மார்பகங்களை மூடிக் கொண்டு, தனது முகத்திரையைச் சற்றே உயர்த்தி, மனதிலே பிறந்த காதல் கடவுளின் மனதைக் கூடச் சலனப்படுத்துகிறாள்!
சிவ – பார்வதியின் காதல் கனிவை வார்த்தையில் அள்ளிக் கொட்டிய காளிதாசன் ஏனோ சூர்யதேவன் -ஸந்த்யாவின் காதல் சங்கமத்தைச் சொற்களால் வடிக்க மறந்துவிட்டான். ஆனால் அவன் எழுதிய காதல் வரிகள் அனைத்தும் இவர்களது முக வரிகளையே சொல்லாமல் சொல்லுகின்றன.
மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி இயற்கையாகவே ஓடுகின்றன ? பெருக்கெடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும் ? .
“நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! நீ அதிர்ஷ்டசாலிதான்!” என்று ஸந்த்யாவின் கமலவாய் முணுமுணுத்தது .
உண்மைதான்! ஸந்த்யா அன்று இன்பத்தின் உச்சியில் இருந்தாள்.
சூரியனை “ஹர்யஸ்வன்” என்று வேதம் கூறுவதற்கேற்ப, அவன் அன்று பசும்புரியாக இருந்தான். அவனது உடலில் வெப்ப உணர்ச்சிகள் காந்தக் கல் சிகிச்சையால் குறைந்து பசும் புல்லைப்போல் தேகம் சிலிர்த்து இருந்தான். கண்ணுக்கெட்டியவரை குவிந்து கிடக்கும் பசும் புற்களை வேண்டியமட்டும் பசுக்கள் தின்று மகிழட்டும் என்று காத்திருக்கும் புல்வெளியைப்போல் படுத்துக் கிடந்தான் சூரியதேவன்.
அவர்கள் சங்கமத்தில் மேகங்கள் ஒன்றோடொன்று மோதின. மின்னல்கள் மின்னின. இடி போன்ற கூக்குரல்கள் எழும்பின. ஆசைக்காற்று அனல் மூச்சாக வந்தன. மகிழ்ச்சி வெள்ளம் உடல்கள் இரண்டிலும் அலை அலையாய்ப் பாய்ந்தன. நதி நதியோடு இணைந்தது. நதி கடலோடு கலந்தது. மலையிலிருந்து வெள்ளம் வழிந்தது. புயலில் சிக்கிய மரங்கள் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப் பிணைந்து கொள்ளுமோ அது போல இடைவெளியின்றி நான்கு கரங்களும் நான்கு விழிகளும் நான்கு இதழ்களும் இரண்டு இதயங்களும் ஒன்றில் மற்றொன்று என்று வித்தியாசம் காண இயலாத அளவில் இணைந்து திளைத்தன.
எல்லா சுகங்களுக்கும் ஒரு உச்சம் இருக்கும். அது முடிந்ததும் சம நிலைக்கு வருவதுதானே இயற்கை. இயற்கையின் தலைவன் சூரியதேவனும் தலைவி ஸந்த்யாவும் புயல் அடித்து ஓய்ந்த கடல்போல, பொங்கி வழிந்த பிரவாகம் அடங்குவதுபோல, துள்ளிக் குதித்த அருவி சமதளத்துக்கு வந்ததும் இரு கரைகளுக்கிடையே அமைதியாக உறங்கும் நதியைப்போல மயக்கம் தீர்ந்து கிறக்கத்தில் கிடந்தார்கள்.
ஸந்த்யாதான் முதலில் மயக்கத்திலிருந்து விடுபட்டாள். எந்தத் தவறு நடந்துவிடக்கூடாது என்று என்று தந்தை விஷ்வகர்மா எச்சரித்தாரோ அந்தத் தவறு நடந்துவிட்டது. இது தவறல்ல, இயற்கையின் வெளிப்பாடு என்று அவள் மனம் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தந்தை வந்து விடுவாரோ என்ற பயம் அவள் உள்ளத்தைப் பீடித்தது. அவசர அவசரமாக எழுந்தாள். தன்னைப் பிடித்திருந்த சூரியனின் கரங்களிலிருந்து விடுவித்துக் கொண்டாள். சூரியதேவனுக்கு அவனுடைய ஆடையைப் போர்த்த்திவிட்டுத் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் செல்லப்புறப்பட்டாள். ஆனால் அந்த அவசரத்தில் கழற்றிவைக்கப்பட்ட சூரியனின் மணிமுடி உருண்டு விழுந்தது. அதைக் கவனிக்காமல் தரையில் இருந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு ஸந்த்யா விரைந்து ஓடினாள்.
உருண்ட மணிமுடி மயங்கி விழுந்த சந்திரனின் மீது மோதி அவனைத் தள்ளிவிட்டது. அதனால் சந்திரனால் பொந்திலே மறைத்து வைக்கப்பட்ட ராகுவிற்கு விடுதலை கிடைத்தது.
ராகு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான்.
சூரியனும் மயங்கிக் கிடந்தான்.
ராகு சூரியனை விழுங்கும் நேரமும் கூடி வந்தது
(தொடரும்)
இரண்டாம் கதை ( எம கதை)
நாரதர் கொஞ்சமும் கலங்காமல் பார்வதி தேவியிடம், “தேவி, தங்கள் இரு புதல்வர்களும் மிகவும் சிறப்பாக எந்தக் காரியத்தையும் செய்யக் கூடிய வலிமை பெற்றவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
ஆனால் இந்த எமபுரிப்பட்டணம் பிராஜக்டைச் செய்வதற்குப் போட்டி மிகவும் பலமாக இருக்கிறது.
தேவேந்திரன் தன் மகன் ஜெயந்தனுக்கே இந்த பிராஜக்டைக் கொடுக்கவேண்டும் என்கிறான். தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்ராசாரியர் இருவரும் எழுத்து மூலமாகவே தங்களுக்கே இதைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வியாசரும் வால்மீகியும் கூட களத்தில் குதிக்கப் போவதாக நமக்கு ஒரு செய்தி வந்தது.
நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னை ஒருங்கிணைப்பாளராக நியமித்து விட்டீர்கள். அதனால் என் வேலை மிகவும் அதிகமாகி விட்டது.
இதனால் இந்த பிராஜக்டை யார் செய்வது என்பதற்கு ‘அனைத்துலக டெண்டர் ‘ அழைப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதுதான் முறை என்று நான் கூறினேன். அதற்கு சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் என் தந்தை பிரும்மாவும் ஒப்புக் கொண்டனர்.
இருந்தாலும் , இது மிக முக்கியமான பிராஜக்ட். ஆகையால் பத்து பேர் அடங்கிய முழு கமிட்டியும் சேர்ந்து முடிவெடுக்கவேண்டும் என்று தீர்மானித்து அனைவரையும் கூட்டியுள்ளோம்.
இந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் பிராஜக்டுக்கு ஆலோசனைகள் சொல்லவேண்டுமேதவிர அவர்கள் முழுப் பொறுப்பும் ஏற்று நடத்தக்கூடாது.
இப்போது இந்தத் திட்டத்தை எப்படி யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறலாம். அதன் பின்பு நாம் அனைவரும் திட்டத்திற்கான சிறந்த முடிவை ஒரு மனதாக எடுப்போம். முதலில் இந்தத் திட்டத்தின் செயல் தலைவர் என்ற முறையில் சித்திரகுப்தன் தன் கருத்தைக் கூறட்டும் ” என்று கூறினார்.
சித்திரகுப்தன் எழுந்தான்.
“ என் பொருட்டு இந்தத் திட்டத்தை செயலாற்ற முதல் அனுமதியைத் தந்த என் தலைவர் எமனுக்கும் மற்ற அங்கத்தினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகமிக முக்கியமான திட்டம். இத வெற்றிகரமாச் செய்தால் தான் நமது கடமையைச் சரியாகச் செய்தவர்கள் ஆவோம்” என்று கூறினான்.
எமனும் இந்ததத் திட்டத்துக்குத் தன் முழு ஒத்துழைப்பையும் தருவதாக வாக்களித்தான். மேலும் தன் சகோதரி எமியும் இதன் அமைப்புக் குழுவிற்கு செயலராகப் பணிபுரிய விரும்புவதாகவும் கூறினான்.
நாரதர் இந்தக் குழுவில் இருப்பவர்கள் நேரடியாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியதன் மூலம் தங்கள் கருத்து இனிமேல் எடுபடாது என்பதைப் பிள்ளையாரும் முருகனும் உணர்ந்துகொண்டார்கள். அதனால் இந்தப் பிராஜக்டை யார் செய்தாலும் அது சரிவரச் செயல்படுகிறதா என்று டெஸ்ட் செய்யும் குழுவிற்குப் பிள்ளையாரும், அதன் செயல்பாடுகளை மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் டிரெய்னிங் குழுவிற்கு முருகனும் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.
லக்ஷ்மிதேவி குபேரனுடன் சேர்ந்து பிராஜக்டுக்குத் தேவையான நிதி வசதிகள் செய்து தருவதாக ஏற்றுக் கொண்டார். கலைமகள் டாகுமெண்ட் சமாசாரங்களையும், பார்வதி தேவி இதற்குத் தேவையான கட்டமைப்புப் பணிகளைத் தயார் செய்வதாகவும் ஒப்புக் கொண்டனர்.
சிவன் விஷ்ணு பிரும்மா மூவரும் ஹை பவர் குழுவாக இருந்து பிராஜக்ட்டின் எல்லா செயல்பாடுகளையும் கண்காணித்து வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பதும் தீர்மானமாயிற்று.
அனைவரும் ஏகமனதாக சித்ரகுப்தனை பிராஜக்ட் மேனேஜராக நியமித்தனர்.
அப்போதுதான் நாரதர் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு பூலோகத்திற்கு அவுட்சோர்சிங் செய்யவேண்டும் என்ற தன் திட்டத்தை மெல்லக் கொண்டுவந்தார்.
நாரதர் எதிர்பார்த்தபடி அதற்கு முதல் எதிர்ப்பு எமனிடமிருந்து வந்தது.
(தொடரும்
அம்மா கை உணவு – “ஜி. பி. சதுர்புஜன்”
( நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.) “ஜி.பி.சதுர்புஜன்”
கடவுள் வாழ்த்து
ஆனைமுகன் தாள் போற்றி
அறுசுவையைப் பாடுகிறேன்!
தமிழ்க் கடவுள் தாள் போற்றி
தமிழுணவைப் பாடுகிறேன்!
நம் வீட்டு சமையல்தனை
நற்றமிழில் பாடுகிறேன்!
அன்னை தாள் போற்றி
அவள் ஆசி வேண்டுகிறேன்!
- கொழுக்கட்டை மகாத்மியம்
ஆனைமுகனின் தொந்திக்கு
அடி முதல் காரணமாம்;
அடிவயிறுவரை வழுக்கும்
அரிசிக் கொழுக்கட்டையாம்.
பிள்ளையார் சதுர்த்தி வரை
பொறுக்க முடியலையே!
ஆண்டிற்கொருமுறை
காத்திருக்க முடியலையே!
பார்த்தாலே கொழுக்கட்டை
பரவசமூட்டுதடா!
எத்தனை எடுத்தாலும்
விழுங்கிவிடத் தோணுதடா!
சுத்தமான அரிசியிலே
பதமான மாவு செய்து
நல்லெண்ணெய் தொட்டு தொட்டு
நறுவிசாய் சொப்பு செய்து
தும்பைப்பூத் தேங்காயும்
தெளிவானபாகு வெல்லம்
ஏலக்காய் மணமணக்க
பதமான பூரணமாம்!
பூரணத்தை சொப்பிலிட்டு
பிடித்து மூடி வேக வைத்தால்
அழகழகாய்க் கொழுக்கட்டை
ஆசையைக் கிளறுதடா!
வெல்லக் கொழுக்கட்டை –
வேகமாய் சாப்பிடுவோம்!
எள்ளுக் கொழுக்கட்டை –
எத்தனையும் சாப்பிடலாம்!
உப்புக் கொழுக்கட்டை
அவசியம் வேணுமடா!
அம்மிணிக் கொழுக்கட்டை
அள்ளி அள்ளி சாப்பிடலாம்!
அம்மா கை கொழுக்கட்டை
ஆயுள் முழுதும் வேணுமடா!
எதைக் கொடுத்தாலும் அதற்கு
ஈடு இணை இல்லையடா!
ஒரு குறும்படத்தில் கவிதை !
மிகச் சிறந்த குறும்படம்!
பார்ப்பவர்களைப் பரவசமாக்கும் படம்!
வாட்ஸ் அப்பில் பலர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது!
பார்த்து மகிழுங்கள்!
தெய்வத்துக்கு என்ன தெரியும்? – வைதீஸ்வரன்
” வயதான பிறகு எல்லோரும் கோவில் குளம் என்று போகிறார்கள்.. நீங்கள் எப்பொழுதாவது என்னைக் கூட்டிக் கொண்டு போகிறீர்களா? ” என்று என் மனைவி ஆதங்கத்துடன் போன வருடம் கேட்டாள்..
”வயதான பிறகுதானே! எனக்கு இன்னும் வயதாகவில்லையே!” என்றேன் சிரித்தவாறு.
“வாயில் சொல்லிக் கொண்டால் வயது குறைந்து விடுமா? உங்கள் ஆபீஸில் அப்படி நினைக்கவில்லையே… வயது கெடு முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டார்களே! அவர்கள் பொய் சொல்லுகிறார்களா?
நான் பேச்சை மாற்ற முயன்றேன்.
“சரி இப்போது கோவிலுக்குத்தானே போகவேண்டும், அதற்கும் வயசுக்கும் ஏன் முடிச்சுப் போட வேண்டும்? அடுத்த வாரமே நாம் போகலாம். எனக்கு மங்களூரில் உடுபி கிருஷ்ணனைப் பார்க்க வேண்டுமென்று வெகு நாட்களாக ஒரு ஆவல்.. கிளம்பு” என்றேன்.
ஆனால் அந்த உடுப்பி அனுபவம் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கே ஸாமி எனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்
உள்ளே சன்னிதிக்குள் தரிசனத்துக்காக சுமாரான வரிசை.. நானும் தோளில் பையை மாட்டிக்கொண்டு நின்றிருந்தேன். மனைவிக்கு மூட்டு வலி. அதனால் அவள் தூரத்தில் ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்
யாரோ ஒரு மாது கையில் குழந்தையுடன் என்னிடம் பணிவாக சிரித்துவிட்டு என் பின்னால் நின்று கொண்டாள்
க்யூவுக்கு வெளியே இரண்டு அழகான பெண்கள் கேரளா உடையில் மங்களமாக நின்றுகொண்டிருந்தார்கள்
ஸ்வாமி தரிசனம் வரிசை முடிந்து நான் சற்று முன்னே நகர்ந்தவுடன் பின்னாலிருந்த மாது என் மேல் ஒட்டியவாறு கைக்குழந்தையை என் முன் பக்கமாக நீட்டிப் பக்கத்து சுவரில் பதித்திருந்த சாமியைத் தொட்டுத்தொட்டு அதன் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தாள். என்னால் நகர முடியவில்லை {அந்த சமயம் என் தோள்பைக்குள் என்ன இருக்கிறது என்று சோதித்திருக்கிறாள்}
நான் சற்று பலமாக முன் நகர்ந்து இடப்பக்கமாக நகர்ந்து வெளியே நின்றதும் அந்த இரண்டு அழகான பெண்கள் ஒருத்தி பின்னாலும் இன்னொருத்தி முன்னாலும் வந்து நின்று கொண்டார்கள். நகராமல் நட்டு வைத்த மாதிரி நின்றார்கள். எனக்கு குழப்பமாக, அசூயையாக இருந்தது. அவர்களை விலகச் சொன்னாலும் ஏதோ கன்னடத்தில் சொல்லிச் சிரிக்கிறார்கள். நான் அசையவே
முடியவில்லை.
எனக்கு அவர்களைத் தொட்டுத் தள்ள சங்கடமாக இருந்தது. ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று புரியவில்லை. இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு திடீரென்று இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே என்னைவிட்டு அகன்றுவிட்டார்கள் நான்என் மனைவியிடம் சென்று இந்தப் பெண்களின் கேவலமான நடத்தையைப்பற்றிச் சொன்னேன்
கோவிலுக்குள் இப்படி ஒரு வெட்கங்கெட்ட செயல் நடக்கிறதே என்று சொன்னேன். பிறகு கோவிலுக்கு வெளியே வந்து ஏதோ வாங்குவதற்காக என் தோள் பையிலிருந்து பர்ஸை எடுக்க முயன்றேன். என் மனைவிதான் பார்த்தாள்.
“அய்யயோ பை திறந்திருக்கிறதே!…
தோள் பைக்குள் இருந்த மனைவியின் பர்ஸ், தனியாகக் கட்டாக வைத்திருந்த 10000/ ரேஷன் Card Voters cards for Identification எல்லாம் பறி போய்விட்டது.
அப்போதுதான் புரிந்தது அந்த மூன்று பெண்களின் கேவலமான நடத்தை.
மூச்சிரைக்க ஓடமுடியாமல் ஓடி உதவி கேட்டு இங்குமங்கும் பதைப்புடன் அலைந்தோம். இரண்டு மூன்று பேர் எங்களை ” அங்கே போய் சொல்லு இங்கே போய் சொல்லு” என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் கன்னடத்தில்.
கடைசியில் ஒருத்தன் சொன்னான் , “சிசிடிவி காமிரா உள்ள இடத்தில் போய் சொல்லுங்கள்” என்றான் அங்கே போனபோது உடனே அக்கறையுடன் கவனிக்க யாருமில்லை. கடைசியில் ஒருதமிழ் தெரிந்த அபிமானி யாரோ நிர்வாகியைக் கூட்டிவந்து, என்னிடம் சம்பவ நேரத்தைக் கேட்டு சிசிடிவி காமிராவை முடுக்கிப் பார்க்கும்போது ஒரு மகா திருட்டுத் திட்டமே விரிந்தது.
முதலில் குழந்தையுடன் நின்ற மாது என் தோள் பையை அமிழ்த்திப் பார்த்து உள்ளே ஒரு பர்ஸ் இருப்பதை ஊகித்துக் கொள்கிறாள். அருகே பார்த்துக் கொண்டு நின்ற அழகான பெண்களுக்கு சமிக்ஞை செய்கிறாள்.
உடனே அந்தப் பெண்கள் என்னை நகராமல் இறுக்கிக் கொள்கிறார்கள். அச்சமயம் குழந்தையுடைய மாது பின்புறம் என் தோள் பையில் கைவிட்டு உள்ளே இருந்த தடித்த பையை எடுத்துத் தன் இடுப்புக்குள் சொருகிக்கொண்டு மாராப்பை மறைத்துக் கொள்கிறாள். உடனே பெண்கள் மூவரும் சற்றும் பதற்றமில்லாமல் நடந்து மெதுவாகக் கோவிலுக்கு வெளியே போகிறார்கள்.
போகும்போதுகூட முகத்தில் எந்த விதமான பாவத்தையும் காட்டாமல் பசு மாடுகள்போல் போகிறார்கள்.
நிர்வாகி பார்த்துச் சொன்னான்,
” ஓ இந்தப் பொம்பளைகளா!…இதுங்க பழுத்த போக்கிரீங்க. கோவில்லே திருவிழா…பூஜை எது நடந்தாலும் இதுங்களைப் பார்க்கலாம்”
“பின் ஏன் இவர்களைப் பிடிக்கவில்லை?” என்ற என் கேள்விக்குப் பதில் இல்லை.
“நீங்க பேசாம போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு FIR கொடுத்திடுங்கோ” என்று பயணத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகளைப் பற்றி விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தான். பிறகுதான் புரிகிறது…அந்த திருட்டுப் பெண்கள் வெகுதூரம் போய் மறைந்து போவதற்கு அவன் ஒத்தாசை செய்கிறான் என்று…
பைக்குள்ளே எவ்வளவு பணம் இருந்தது என்பதை மட்டும் மறக்காமல் கேட்டுக் கொண்டான்
போலீஸ் ஸ்டேஷனில் அன்பாகப் பேசினார் இன்ஸ்பெக்டர். தமிழ் தெரியாது கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்றார். பேப்பரைக் கொடுத்து நடந்த சம்பவத்தை எழுதிக் கொடுக்கும்படி சொன்னார். CCTV காமிரா படமும் தனக்கு வந்துவிட்டது என்று சொன்னார். நான் கொடுத்த பிராதை நிதானமாகப் படித்துவிட்டு FIR போட்டு விடட்டுமா? என்று கேட்டார்.
“அதில் என்ன கஷ்டம் ?” என்றேன் .
“உங்களுக்குத்தான் கஷ்டம்……..நான் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை யாரையாவது பிடித்து வைத்துக் கொண்டு உங்களுக்குத் தகவல் கொடுப்பேன். ஒவ்வொரு முறையும் நீங்கள்தான் சென்னையிலிருந்து வந்து அடையாளம் காட்டவேண்டும். பிறகு கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது வரவேண்டும். அதுவும் இரண்டு மூன்று வாய்தா நிச்சயம் நேரிடும்…என்ன சொல்கிறீர்கள்? அதுவும் தண்டனை நிச்சயமாகுமாஎன்று சொல்லமுடியாது..நீங்கள்தொலைத்த பணத்துக்கு இந்தத் தொந்தரவுகள் ஈடாகுமா?” என்று கேட்டான்.
நான் கோபமாகக் கேட்டேன்
“குற்றவாளி பிடிபட்டு தண்டனை கொடுக்கும்போது இதனால் எங்களுக்கு ஆன செலவையும் சேர்த்துத் தானே கொடுப்பார்கள்?”
“நியாயமான எதிர்பார்ப்புத்தான்…ஆனால் உங்கள் வயது, சூழ்நிலை, தவிர உத்தரவாதமில்லாத நிரூபணம் இவற்றைக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்..முக்கியமாக உங்கள் பணம் நிரூபணம் ஆகாது..நீங்கள் 10000/ என்று சொல்லுவீர்கள் குற்றவாளி “பணமே அதில் இல்லை என்று சொல்லுவான் நிரூபிக்கமுடியாதல்லவா?
எனக்கு அப்போதுதான் என் பரிதாப நிலைமை உறைத்தது ..நான் மிகவும் வருத்தத்துடன்
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
” ஏன் ஸார்.! ஸாமி முன்னாலயே இவ்வளவு அக்கிரமத்தைத் துணிச்சலா பண்றாங்க? அவங்களுக்கு ஸாமியைப்பத்தி பயமே கிடையாதா?” நம்பிக்கையோட கோவிலுக்கு வர்ரதுக்கெ எனக்கு இப்பப் பிடிக்காம போச்சே…”
“யார் கண்டார்கள்? முதலில் பயமாக இருந்திருக்கலாம். யாரோ இவர்களை இப்படி இந்தத் தொழிலுக்கு விரட்டுகிறார்கள். யாரோ இவர்களுக்கான வசதியான பாதுகாப்பு வியூகத்தைக் கோவிலில் ஏற்படுத்துகிறார்கள். யாரோ இவர்களுக்கு இதனால் ஏற்படுகிற சுலபமான ஜீவனத்தைப்பற்றிய சௌகரியத்தில் உள்ள பிடிப்பை ஊன்றி விடுகிறார்கள்.. பிறகு பிடிபடாவிட்டாலும் பிடிபட்டு
வெளியே வந்தாலும் இவர்கள் இந்தத் தொழிலை விட்டு வெளியே வரமாட்டார்கள்!…”
“நல்ல சமூகம்! நல்ல கோவில் தரிசனம்… நீங்கள் சொல்வது சரிதான். ஸாமிக்கே இக்காலத்தில் பாதுகாப்பில்லாதபோது ஸாமியைப்பற்றி யார் பயப்படப் போகிறார்கள்? என் பிராதைக் கிழித்தெறியுங்கள்” என்றேன். அவர் தயக்கத்துடன் ஆனால் நிம்மதியடைந்தவராகச் சிரித்தார்.
நான் சொன்னேன்…..
“ஆனால் ஒன்று ..கண்ணுக்குத் தெரிகிற இந்தத் திருட்டுப் பெண்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு ஒட்டுமொத்த அதிகார கும்பலே இந்தத் திருட்டுக்கு உடந்தையாகப் பிடிபடாத வளையத்தில் பதுங்கிக் கொண்டு நடிக்கிறார்களே……அவர்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கவேண்டும்” என்றேன்
இன்ஸ்பெக்டர் முகத்தில் லேசாக ஒரு குற்றவாளியின் சாயல் மின்னி மறைந்தது.
சில வினாடிகள் மட்டும் …
பி.கு. நல்ல வேளை தோள் பையின் இன்னொரு பகுதியில் இருந்த என் பர்ஸை அவள் எடுக்கவில்லை. அதில் கொஞ்சம் பணமும் A T M கார்டும் இருந்தது. நாங்கள் ஊர் திரும்பினோம்.
இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல -ஈஸ்வர்
மேனனுக்கு மூச்சு நின்று விடும்போலிருந்ததது. ரமேஷ் கணிப்பொறியில் வந்த அந்தப் பெயரை மறுபடியும் படித்தான்..
“ஆர் யு ஷ்யூர் , ரமேஷ் ?” –மறுபடியும் வினவினார் மேனன்.
ஆமாம் சார்! இந்தப்பேர்தான் வருது.”
“மிஸ்டர் ரமேஷ்! இந்த லிஸ்டை எந்தெந்த மாதம் எடுத்திருக்கான்னு பார்த்துச் சொல்லமுடியுமா?”
ரமேஷ், இன்னும் கொஞ்ச நேரம் விரல்களால் மேனன் மேஜையில் இருக்கும் கம்ப்யூட்டரிடம் பேசினான்.
“சார்! கடந்த ஒரு வருஷமா இந்த லிஸ்ட் எடுக்கப்பட்டிருந்தாலும் இதை பிரிண்ட் அவுட் மூலமா எடுக்கலை. ப்ளாப்பிலதான் மாதா மாதம் வெளியிலேர்ந்து ஏத்தியிருக்காங்க.”
“அப்படின்னா ? ”
“இந்த விவரங்களை அப்படியே வெளில, அதாவது, பாங்கிங் ஹால்லயே இருக்குற பர்சனல் கம்ப்யூட்டர் உதவியோட , உள்ளே பிளாப்பி டிஸ்குல அப்படியே பதிவு பண்ணிக்கிறது. அப்படி எடுக்கப்பட்டிருக்கு.”
மணி உடனடியாகக் கேட்டார்.
“மிஸ்டர் ரமேஷ்! இது போல கம்ப்யூட்டர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்ங்கறது, உங்க கண்ட்ரோல் ரூமைத்தவிர வெளில இருக்குற ஸ்டாஃபுங்களுக்குத் தெரியுமா?”
ரமேஷ் கொஞ்சம் தயங்கினான்.
“சொல்லுங்க, மிஸ்டர் ரமேஷ்.”.
“எங்க சீனியர் மேனேஜர் மிஸ்டர் மேனனுக்கே இப்பத்தான் தெரியும்னா பார்த்துக்குங்களேன். கம்ப்யூட்டர் சிஸ்டத்தைக் கண்ட்ரோல் செய்யிறவங்க அப்படிங்கற முறையில நாங்கதான் எல்லாத்துக்கும் ரெஸ்பான்ஸிபில். அதனால அக்கவுன்ட்டபிலிடியும் எங்களுக்குத்தான். ஸோ, சிஸ்டத்தோட ஃபுல் ஃபங்ஷனைப்பத்தி நாங்க வெளில பேசறதில்ல.”
“ஓகே மிஸ்டர் ரமேஷ்! தாங்க்யூ ஃபார் தி இன்பர்மேஷன். பட், இனிமேதான் உங்க ரெஸ்பான்ஸிபிலிடி கூடறது. எங்களுக்கு இது ஒரு இம்பார்டன்ட் எவிடன்ஸ். இது கோர்ட்டுக்கும்கூடத் தேவைப்படும். அதனாலே எவிடன்ஸ் அழிஞ்சிடக்கூடாது. மிஸ்டர் மேனன்! அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை இனிமே நீங்கதான் செய்யணும். ஓகே. இப்போ அந்த கம்ப்யுட்டர்ல வந்த அந்தப் பேரு என்ன? ம்.. ரமணன். அவனை நாங்க உடனடியா பார்த்தாகணுமே?”
“ரொம்ப நல்ல பையன் சார்!. அவன் ஏன் இது மாதிரி ஒரு காரியத்துல ஈடுபட்டான்னு புரியலை”
“ கவலைப் படாதீங்க… கண்டுபிடிச்சிடுவோம்…”
“ காலமே சீக்கிரமே வந்துடுவான். சாயங்காலம்கூட லேட்டா உட்காரணும்னா முணுமுணுக்கவே மாட்டான். ..சின்சியர் பாய். .. கொஞ்சம் கஷ்டப்படற ஃபேமலி வேற.!.”
“சரி.. அந்தப் பையனைக் கொஞ்சம் கூப்பிடுங்க சார்..”, மல்ஹோத்ரா அதிலேயே குறியாக இருந்தார்.
“டி.எஸ்.பி. சார்… அவங்க அப்பா இன்ட்டன்சிவ்கேர் யூனிட்ல அட்மிட் ஆகி இருக்கார்னு தந்தி வந்தது. மெட்ராசுக்கு ப்ளைட்டுல போயிருக்கான் சார்..”
மணியும், மல்ஹோத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“மிஸ்டர் மேனன்.. அவனுடைய லோக்கல் அட்ரஸ், மெட்ராஸ் அட்ரஸ் ரெண்டும் உடனடியா எங்களுக்கு வேணும்..”
“சார், நான் அப்சர்வ் செஞ்ச சில விஷயங்களை இப்போ சொல்றேன். ஆனா எந்த அளவுக்கு அது உங்களுக்குப் பயன்படும்னு தெரியாது..”
“ சொல்லுங்க மிஸ்டர் ரமேஷ்..”
“ரமணன் நல்ல பையன்னு சார் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.. ப்ரில்லியன்ட்டுகூட… ஆனா.., அவன் போக்குல கொஞ்ச நாளா சில மாற்றங்கள் இருந்தது. ஒரு ஆறு, ஏழு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அவன் இருபத்தி அஞ்சு ஆயிரம் ரூபா அவங்க அப்பா பேர்ல டிராஃப்ட்டா, இந்த ப்ராஞ்சுலேர்ந்து வாங்கி அனுப்பினான். என்ன ரமணா! ஏதாவது லோன் போட்டியான்னு கேட்டேன்.. சிரிச்சுக்கிட்டே ஒண்ணும் சொல்லாம போயிட்டான். ரமணன் எந்த லோனும் பாங்குல அப்ளை பண்ணலேன்னாங்க. அதுக்கப்புறம் ரெண்டு மூணு மாசம் கழிச்சு எங்க பிராஞ்சு மூலமா இல்லாம, எங்க பாங்கோட, இதே மும்பைல இருக்குற இன்னொரு கிளை மூலமா ஒரு இருபத்தி அஞ்சாயிரம் ட்ராப்ட்டு அவன் சிஸ்டர் பேர்ல எடுத்து அனுப்பினது தற்செயலா தெரியவந்தது. மும்பைல தனியா இருந்துகிட்டு ஊர்ல இருக்குற குடும்பத்துக்குப் பணம் அனுப்பறது எவ்வளவு கஷ்ட்டமா இருக்குன்னு எங்கிட்ட மொதல்ல பொலம்பிக்கிட்டு இருந்தான் . ஆனா பணப் புழக்கம் வர ஆரம்பிச்சவுடனே ஒதுங்க ஆரம்பிச்சுட்டான். . பக்கத்துல இருக்குற கூரியர் ஆபீசுக்கும் அடிக்கடி போய்வந்துகிட்டிருநதான்…”
“இது, ஒரு முக்கியமான க்ளூவா இருக்கலாம். தேங்க் யூ.”
‘இன்னும் சிறிது நேர விசாரணைக்குப் பிறகு, சிவாஜி ராவ் உள்ளே வந்தான்.
(சஸ்பென்ஸ் தொடரும் )
பேங்க் ஜோக்
ராஜ நட்பு – 9 – ஜெய் சீதாராமன்
முன்கதை…..
வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பேஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காண வந்திருந்த, கடல் கடந்துவணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சார தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம்ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதைச் சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன்கேட்கின்றனர். அதில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் கட்டப்போகும் பெருவுடையார் ஆலயத்திற்குப் பணி செய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்வித்து உற்சாகப்படுத்த வாங்மெங் ஒப்புக் கொள்ளுகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் முதல் தளம் நிறைவு பெற்று இரண்டாம் தள வேலைகள்தொடங்கியிருக்கின்றன. ஒரு நாள் வாங்மெங் நார்த்தாமலை நிகழ்ச்சிகளை முடித்துத் திரும்பும்போது தற்செயலாக மாபெரும் சதிச்செயல் ஒன்றைப்பற்றித் தெரிந்து கொள்ளுகிறார். தஞ்சாவூருக்கு வடக்கேயுள்ள 10000 வேலி நெல்கதிர்களை தீக்கிரையாக்கும் நோக்கத்தையும் ராஜராஜனைக் கொலை செய்யும் திட்டத்தையும் பகைவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டு அறிகிறார். தஞ்சையை அடைந்து திருமந்திர ஓலை நாயகம் கிருஷ்னன் ராமனிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்.
தீக்கு இரையாக்கும் சதியை முறியடிக்க அவர் பொறுப்பேற்கச் சக்ரவர்த்தியைக் காக்கும் பணியை வாங்மெங் ஏற்கிறார். வாங்மெங் ஓலை முடிவடைகிறது. கிருஷ்னன் ராமன் ஓலையை அதிகாரி தொடர்ந்து படிக்கிறார். பயிர்கள் காக்கப்படுகின்றன. அரசரைக் காக்குங்கால் வாங்மெங் தன் உயிரைக்கொடுத்து ராஜராஜனைக் காக்கிறார். வாங்மெங்கின் நல்லடக்கம் சீன கலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்கிறது. அதிகாரி கிருஷ்னன் ராமன் ஓலையை மேலும் தொடர்ந்து படிக்கிறார்.
வாங்மெங் சிலை இரண்டாவது தளத்தில் பொருத்த ஏற்பாடாகிறது. கிருஷ்ணன் ராமன் ஓலை முடிந்து வருடம் 1010ல்ராஜராஜனால் எழுதப்பட்ட ஓலையை அதிகாரி படிக்கிறார். அதில் கோவில் கட்டி முடிந்ததையும் அதில் வாங்மெங் சிலைபொருத்தப்பட்டதையும் குறிப்பிட்டு வாங்மெங் தியாகத்தையும் பாராட்டி ஷேங்க்ஸானை விருந்தினராகச் சோழநாட்டிற்கு அழைக்கிறார். ஷேங்க்ஸான் ராஜராஜன் அனுப்பிய காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டு அதற்கு ஒப்புதல் அளிக்கிறார்.
வருடம் 1014. மறக்கமுடியாத அந்த நாள். ராஜராஜன் ஏதோ ஒரு இனந்தெரியாத மன உளைச்சலினால் தவிக்கிறார். கோவிலுக்குச் செல்லுகிறார். அங்கு அதற்கு விடை, வாங்மெங்பற்றிக் கல்வெட்டுகளில் பதிக்காமல் விட்டுப்போனது தெரியவருகிறது. ஈசனை வணங்குங்கால் இதைப்பற்றி மற்றவருக்குத் தெரிவிப்பதற்குமுன் மாரடைப்பினால் இறக்கிறார். நாளடைவில் வாங்மெங் சிலை விவரம் ஒருவருக்கும் தெரியாமல் கேள்விக்குறியாகிவிடுகிறது.
இவ்வரலாற்றை எழுதிய நான் அச்சிலையின் பின் உள்ள ஆதாரம் எனக்கு எப்படிக் கிடைத்தது என்ற உண்மையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சிறு வயதிலிருந்தே அச்சிலையின் மர்மத்தை அறிய என் மனதில் உதயமான வித்து இப்போது ஒரு வெறியாய் உருவெடுத்திருக்கிறது. அன்றொருநாள் தஞ்சை கோவிலுக்குச் செல்லும்போது என் உயிரைப் பணயம் வைத்து ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றினேன். கோவிலுள் சென்று சிலையை ஆராயத் தொடங்கினேன்.
இனி……
பெரியவர் சொன்ன வரலாறு
கோவிலை நோக்கி நடந்தேன். உள் சென்று விமானத்தைச் சுற்றி வலம்வந்து வடக்குப் பக்கம் வந்தடைந்தேன்.
தஞ்சையை சோழருக்குப் பின் ஆண்ட முக்கியமாக நாயக்கர்கள், மராத்தியர்கள் கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிலும் சிறு ஆலயங்கள் எழுப்பிப் பெரிய கோவிலின் அழகுக்கு மெருகேற்றியிருந்தார்கள். கோவிலைச் சுற்றிலும் மதிள்கள். அதைஒட்டி 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய நடைபாதை மண்டபம் கட்டப்பட்டிருந்தது. அதில் வடக்குப் பிரகாரத்தில் ஒரு விளிம்பில் உட்கார்ந்துகொண்டேன். அந்த இடத்திற்கு எதிரில் சண்டிகேஸ்வரர் கோவிலின் பின் பகுதி, வலப்பக்கம் முருகன் கோவில், அதன் முன் கருவூரார் ஜீவ சமாதியும் தென்பட்டன. முக்கியமாக மர்மநபர் சிலையை பைனாகுலர் மூலம் பார்ப்பதற்கு ஏற்றதாகவும் அமைந்திருந்தது. ஷோல்டர் பேகிலிருந்து பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்தி மர்மநபர் சிலையில் நிலைத்து ஆராயத் தொடங்கினேன்.
என் மனதில் தற்போதைய மர்மநபர் சிலை, அதற்குமுன் இருந்த வேறு சிலையை அகற்றி, அந்த இடத்தில் மெருகேற்றியவர்களால் பொருத்தப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் உதயமானது. கோவில் கற்கள் ‘Ball And Socket’ முறைப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கட்டப்பட்டிருந்ததை நான் அறிவேன். ஒரு கல்லையும் அகற்றவும்முடியாது அதை மாற்றி வேறு வடிவம் செதுக்கவும் இயலாது. எனவே அதற்குச் சாத்தியமே இல்லை என்று அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்.
தொப்பியணிந்த அந்த உருவத்தைத் துருவித்துருவிப் பார்த்ததில் அவர் ஏன் ஒரு சீனராக இருக்கக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் உதிக்க ஆரம்பித்தது. அவர் அணிந்திருக்கும் ஆடை ஐரோப்பியர்கள் அணியும் பாணி அல்ல என்றும், சீனர்கள் அணியும் வழக்கமான ஆபரணம்தான் என்றும் தெரிகிறது. சீனர்களின் அடையாளமான தொங்குமீசை இல்லையே என்ற ஒரு குழப்பம். வெவ்வேறு பகுதிகளில் வாழும் சீனர்களுக்கு அந்த அடையாளம் ஒருவிதிவிலக்காக இருக்கலாம் என்று எண்ணினேன். கடைசியில் மர்ம நபரின் தொப்பி பல பகுதிகளில் வாழும் சீனர்களின்பலவிதமான தொப்பிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் என் எண்ண அலைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தன.
மாலை நேரம்.
சிலையை நோக்குவதிலும் சிந்தனை அலைகளை வெவ்வேறு திசைகளில் திருப்புவதிலுமாக நேரம் சென்றுகொண்டிருந்தது. அதைக் கண்டுபிடிக்கும் என் ஆர்வம் மேலுக்குமேல் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஏதாவது ஒரு காரணம் இருந்தே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக என் சிந்தனைகளைத் தொடர்ந்தேன்.
என்னை யாரோ உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் இடையிடையே தோன்றிக் கொண்டிருந்ததை முதலில் நான் பொருட்படுத்தவில்லை. கடைசியாகப் பார்த்துவிடுவது என்று சுற்றுமுற்றும் கண்ணோட்டம் விட்டேன். ஒரு பெரியவர் கருவூரார் சன்னதிக்கு அருகாமையில் நின்றுகொண்டு என்னையே உற்றுப் பார்த்தவண்ணமிருந்தார்.
‘இவர் என்னை உற்று நோக்குவதன் காரணம் என்ன?’ என நானும் அவரை நோக்கினேன். இருவர் கண்களும் சந்தித்தன. அந்தச்சேர்க்கையினால் எனக்கு ஒரு இனந்தெரியாத ஆனந்த மகிழ்ச்சி ஏற்பட்டதை அறிந்தேன்.
பெரியவர் என்னருகில் மெதுவாக வந்தார். அவரது கால்களை அவரின் விசித்திரமான காவியாடை மறைத்திருந்தது. அவர் வருகையில் ஏதோஒரு வித்தியாசம். நடந்து வந்ததாகத் தெரியவில்லை. மிதந்து வந்தது போல் தோன்றியது. அவரை ஏறெடுத்துப் பார்த்தேன். முகத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மீசை தாடி. தலையில் ஜடாமுடி. சடைகள் தோளின் இருபுறமும். கழுத்தில் பெரிய உத்திராக்ஷத்தால் கோர்த்த மாலை. நெற்றியில் பட்டையான விபூதி. நடுவில் ஒரு வட்ட வடிவமான குங்குமப் பொட்டு. காவியினால் போர்த்தப்பட்ட உடல். என்னை அறியாமலே எழுந்தேன். என் உடலைத் தாழ்த்திக் குனிந்து, கைகளைத் தரையில் இருத்தி அவரை வணங்கினேன்.
‘நீ இன்று உன் உயிரைப் பணயம் வைத்து எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறாய். அதை நான் பார்த்தேன். நீ ஒரு எழுத்தாளன். அந்த மர்மமனிதராகக் கருதப்படும் சிலையைத் தற்சமயம் ஆராய்ந்து மர்மத்தைஉடைக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறாய். அவர் ஒரு சீனராக இருக்கலாம் என்றுகூட நினைக்கிறாய்’ என்று அந்தப் பெரியவர் கூறினார்.
நான் அதிசயத்தில் வாயடைத்துப் போனேன். என்னைப்பற்றியும், நான் நினைப்பதைப்பற்றியும் அவருக்கு எப்படித் தெரிந்தன? “பெரியவரே! தாங்கள் யார்? உங்களிடம் ஒரு தெய்வ சக்தி இருப்பதை உணர்கிறேன். தயவு செய்து என் ஐயத்தைப் போக்கவும்” என்று பக்தியுடன் வினவினேன்.
அதற்கான விடை ஒரு சன்னமான சிரிப்பு மூலம் அவரிடமிருந்து வந்தது.
‘உன்னைப்போலவே இங்கு ஒருவர் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால் அவர் தன் உயிரைக் கொடுத்து ஒரு மாபெரும் தியாகியாகினார். அது இருக்கட்டும்! உன் ஆராய்ச்சிக்கான விடையை உன்னாலும் வேறு எவராலும் அறிந்துகொள்ள முடியாத நிலைமை. அந்த நிலைமையைப் போக்கி உனக்கு விளக்கி எடுத்துரைக்க என் ஒருவனால் மட்டுமே இயலும். இன்று உன் வீரச்செயலால் என் மனம் நெகிழ்ந்தது. அதற்காகவே உன்னிடம் அதைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இங்கேஅமர்ந்து கொள்’ என்று உத்தரவிட்டு மண்டப விளிம்பில் அமர்ந்தார்.
அவரை அடி பணிந்தேன். அவருக்குப் பக்கத்தில் தரையிலிருந்து மண்டபத்தில் ஏறக் கட்டப்பட்டிருந்த படியில் பெரியவரின் கீழே அமர்ந்தேன்.
பெரியவர் சொன்னதை அப்படியே உங்கள்முன் வைத்துள்ளேன்.
பெரியவர் மேலே தொடர்ந்தார்.
‘இப்போது தெரிந்ததா வாங்மெங்கின் தியாகம் எப்படி மறக்கப்பட்டது ’ என்று சொல்லி நிறுத்தி, ‘மேலும் அவர் ஒரு சீனராக இருக்கலாம் என்ற உன் கணிப்பு சரியாகிவிட்டது பார்த்தாயா? அவர் முதலில் கூம்புவடிவில் இருக்கும் உயரமான தொப்பியைத்தான் அணிந்திருந்தார். இப்போது அப்படி இல்லை. ஏன் என்று உன்னால் கூறமுடியுமா?’ என்று கேள்வியை எழுப்பினார். உடனே நான் ‘உலகம் சுற்றும் வாங்மெங் மேலை நாடுகளின் பாணியைப் பார்த்து அதில் தனக்கு உவந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்’ என்று பதிலளித்தேன்.
‘சபாஷ்! சரியான ஊகம்! சரித்திர ஆராய்ச்சியில் உனக்கு நிறைந்த பக்குவம். தொடர்ந்து செய்’ என்று சொல்லி நிறுத்தினார்.
ஷேங்க்ஸான் நட்பு ஒப்புதல் அளித்தபின், ஏன் மன்னர் ராஜராஜன் மறைவுக்கு முன் அவரின் விருந்தாளியாகத் தஞ்சைக்கு வருகை தரவில்லை? இந்த என் சந்தேகத்தை தெளிவு படுத்தவும்’ என்று சித்தரை வேண்டினேன்.
‘ஷேங்க்ஸான் காங்க் ஜோவை முறியடித்தார். கொரியேவ் படை பயந்து ஓடியது. ஷேங்க்ஸான் உடன்படிக்கை நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மீண்டும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. அடுத்த பத்து ஆண்டுகள் படைதிரட்டுதல், முற்றுகை ஆயத்தம், எல்லைகளைப் பலப்படுத்துதல், பாதுகாப்பு முதலியவற்றில் ஷேங்க்ஸான் முனைந்திருந்தார். மூன்று முறைகள் படையெடுத்தும் பயனில்லை. கடைசியாக க்விஜு போரில் இருவருக்கும் வெற்றிதோல்வியில்லாமல் முடிவடையவே இருவரும் ‘அமைதி ஒப்பந்தம்’ செய்துகொண்டனர். இந்தச் சூழ்நிலையில் அந்த நட்புஉடன்படிக்கையை அவரால் பூர்த்தி செய்ய இயலவில்லை’.
தகுந்த விடை கிடைத்ததில் திக்கு முக்காடிப் போன நான் ‘வாங்மெங் சிலையின் மர்மத்தை உலகிற்கு எடுத்துரைக்கஎன்னைத் தேர்ந்தெடுத்து உணர்த்தினீர்களே. அதற்கு உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்? பெரியவரே, தாங்கள் யார்?’ என்று அவர் கால்களிலே விழுந்தேன். மறுபடியும் அவர் வாயிலிருந்து ஒரு மர்மச் சிரிப்பு உதயமாயிற்று. கைகளைக் கூப்பியவாறே எழுந்தேன். எதிரில் அவரைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். கருவூரார் சன்னதிப் பக்கம் அவர் போய்க்கொண்டிருந்ததை – இல்லை மிதந்து சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். சன்னதிக்குள் சென்று பார்வையிலிருந்து மறைந்தார்.
இருட்டத் தொடங்கியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனித நடமாட்டம் இல்லை. கருவூரார் ஜீவ சமாதிக்கு ஓடினேன். அது வெறிச்சோடிக் கிடந்தது. உள்ளே அவரைக் காணோம்.
திடுதிடுப்பென்று துக்கிவாரிப் போட்டது. கையில் பைனாகுலருடன் சிலையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்ததையறிந்தேன். அப்படியே கண்ணயர்ந்திருக்க வேண்டும். நடந்தது என்ன கனவா அல்லது நிஜமா என்று தெரியாமல் தவித்தேன். பெரியவரைச் சந்தித்தது, சிலையின் ரகசியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டது, கருவூரார் ஜீவசமாதியில் மறைந்தது எல்லாம் என் மனதின் கண்முன்னே பவனி வந்தன. எப்படியிருப்பினும் சிலையின் மர்மத்திற்கான விடைஇப்படி ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்!
(முற்றிற்று)
ஒரு வரிக் கவிதைப் போட்டி – முடிவு
சென்ற மாதம் இந்த அழகான படத்தைப் போட்டு அதற்குக் கவிதை வரிகள் எழுதும்படிக் கூறினோம்.
அதற்கு வந்த பல்லாயிரக்கணக்கான (???) கவிதைகளில் நாம் தேர்ந்தெடுத்தது இதுதான்:
“புன்னகை அழகியின் பின்னணியில் புத்தக ரசிகை…புத்தகப்புழுவாய் நெளிவதென்ன…?”
இதற்கான Rs. 100 பரிசு பெற்றவர்:
B. Prem Anand
Senior IT Network Manager (SNM),
Macons System Technologies (P) Ltd.
வாழ்த்துக்கள்!
ஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (9) (புலியூர் அனந்து)
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வெட்டிச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்கள் வரதராஜன், மகேந்திரன், ஏகாம்பரம், சந்துரு, சீனா ஆகியோரோடு நான் போய்ச் சேர்ந்தது, சீனாவைக் காட்டிலும் ‘ரெகுலர்’ என்று ஆனது, எப்படியோ ஏற்பட்டுவிட்டது. அவர்கள் பேசும்போது சில பெயர்கள் அடிபடும். ஒருசில மாதங்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தவர்கள் வராமல் நின்றுவிடுவதும் உண்டு. அதில் பெரும்பாலும் வேறு ஊருக்குப் போய்விட்டவர்கள். சிலர் தானாகவே வருவதைக் குறைத்துக்கொண்டு நாளடைவில் வராமலேயே இருந்துவிடுவார்கள்.
நிரந்தர உறுப்பினர்கள் ஒருபுறம் இருக்க, நான் பார்த்து விலகிப்போனவர் ராஜதுரை. அவரைத் தவிர துரைராஜ் என்று ஓருவர் வருவாராம். நான் துரைராஜைப் பார்த்ததில்லை. பெயரில் இருந்த ஒற்றுமை (இல்லை வேறுபாடா?) அவர்களிடம் கிடையாதாம். இவர் சிவாஜி ரசிகர் என்றால் அவர் எம்ஜியார் ரசிகர். இவர் காங்கிரஸ் அனுதாபி என்றால், அவர் திமுக. இவர் டீ- அவர் காப்பி. இவர் ஒல்லியாக சற்று உயரமாக இருப்பார் என்றால் அவர் குள்ளமாகச் சற்று குண்டாக இருப்பார். வரதராஜன் அவர்களை ‘ஆக்டிவ் வாய்ஸ்’ – ‘பாஸிவ் வாய்ஸ்’ என்றோ ‘இட வல மாற்றம்’ என்றோ சொல்வாராம். அடித்துப் பேசும் ராஜதுரைதான் ‘ஆக்டிவ் வாய்ஸ்’
நான் சங்கத்திற்குப் போக ஆரம்பித்த காலத்தில் பெரும்பாலும் ராஜதுரை இருப்பார். சற்றுத் தாமதமாக வருவார். துரைராஜ் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டார். நான் சேர்ந்து ஓரிரு மாதங்களிலேயே ராஜதுரை வருவதும் நின்றுபோனது.
ராஜதுரை இங்கு வரக் காரணமாக இருந்ததே துரைராஜ்தான். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஊர் ஊராகக் கிளைகளைத் திறந்துகொண்டு வந்த காலம் அது. எங்கள் ஊரில் ஏற்கனவே இருந்த வங்கி ஒன்று தேசியமயம் ஆக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து இன்னொரு வங்கி திறக்கப்பட்டது. அதற்கு மாற்றலாகி வந்தவர்தான் ராஜதுரை. துரைராஜ் அந்த வங்கியின் ஆரம்ப வாடிக்கையாளர்களில் ஒருவர். மேலும் புதிய ஊரில் வீடு தேடிக்கொடுத்தது, மற்றும் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், கடைகள், எலக்ட்ரீஷியன், ப்ளம்ர் போன்றோரை ஏற்பாடு செய்து கொடுத்ததும் துரைராஜ்தான். வங்கி வேலைகள் முடிந்து வீட்டுக்கு வந்து பொழுதுபோக என்ன செய்வது என்ற கேள்விக்கு ‘வெட்டிச்சங்கம்’ என்று விடை தேடிக் கொடுத்ததும் துரைராஜ்தான்.
துரைராஜ் ஒரு ‘சிட்பண்ட்’ நிறுவனத்தில் மேலாளர். அவரது ஊரே இதுதான். அவர் தாய்மாமன் தனது ஊரில் ஒரு சிட்பண்ட் நடத்திவந்தார். அவர் மூலமாக துரைராஜுக்கு இந்த வேலை கிடைத்தது. சொந்த ஊரிலேயே ஒரு நல்ல வேலை.
ராஜதுரை வந்து சேர்ந்த சில நாட்களிலேயே துரைராஜ் வேறு ஊருக்குக் குடிபெயர நேர்ந்தது. மாமாவின் உடல்நலம் சரியில்லாமல் போனது. தனது தொழிலைப் பார்க்க நம்பகமான ஆள் தேவைப்பட்டதால் துரைராஜை அங்கு வரவழைத்துவிட்டார். அதில் ‘டைரக்ட’ராகவே சேர்த்துக்கொண்டார். இப்போது மாமா இல்லை. இவர்தான் நிறுவனத்தில் ‘ஆல் இன் ஆல்’.
எனக்கு துரைராஜ் பழக்கமில்லை. ஏகாம்பரம், சீனா, சந்துரு ஆகியோருக்கு முன்னால் ராஜதுரையைப்பற்றிக் கொஞ்சம் சொல்லலாம்.
பேச்சு எந்த விஷயத்தைப்பற்றி இருந்தாலும் அதில் சொல்வதற்கு ஏதாவது இருப்பதாக ராஜதுரை நினைப்பார் போலும். தெரிந்தது தெரியாதது எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தைச் சற்று ஆணித்தரமாகச் சொல்வார். பல ஊர்களில் வேலை பார்த்ததால் ‘அனுபவஸ்தர்’ என்ற நினைப்பு. அனுபவங்கள் ஏற்படாமல் இல்லையென்றாலும் தனக்குத் தெரிந்ததுதான் எல்லாவற்றிக்கும் சிகரம் அல்லது ‘அல்டிமேட்’ என்பதுபோலத்தான் அவர் பேசுவார்.
அவர் ஆரம்பிக்கும் விதமே அந்த எண்ணத்தைத் தெரியப்படுத்தும். தான் பார்த்த ஒரு விபத்தைப்பற்றி யாராவது சொன்னால் இவர் இப்படித்தான் ஆரம்பிப்பார். … “இதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் காஞ்சீபுரத்தில இருந்தபோது….”
என்ன சைக்கிள் வாங்கலாம் என்று ஏகாம்பரம் பேசிக்கொண்டிருந்தபோது, இவர் ஆரம்பித்தார், “உங்களுக்கு ஒன்றும் தெரியாது.. நான் சொல்வதைக் கேளுங்கள். வாங்கினால் ‘…..’ சைக்கிள்தான் வாங்கணும்.” அப்போதே கட்டாயம் வேறு கம்பெனி சைக்கிள்தான் வாங்குவது என்று ஏகாம்பரம் தீர்மானித்து இருப்பார் என்று தோன்றியது.
அவர் பேசுகின்ற முறையும் அதில் தொனிக்கும் ஆணவமும் மகேந்திரனுக்குச் சற்று எரிச்சலையே ஏற்படுத்தி இருந்தது. ஒரு சமயம் மூக்குக் கண்ணாடிபற்றி பேச்சு வந்தது. மகேந்திரன் “ராஜதுரை சாரைக் கேளுங்கள் அவர்தான் ‘ஐ’ ஸ்பெஷலிஸ்ட்.”
எனக்குப் புரியவில்லை. ஆனால் ராஜதுரையைத்தவிர மற்றவர்கள் சிரித்துவிட்டார்கள். ராஜதுரை சங்கடத்துடன் பேசாமல் இருந்துவிட்டார்.
திரும்பிப் போகும்போது, சீனா விளக்கினான். எப்போதுமே ‘நான்’ ‘எனக்கு’ என்றே பேசுபவர்களை ‘I’ ஸ்பெஷலிஸ்ட் என்பார்களாம். யார் எது சொன்னாலும் எதிர்வினையாக contest செய்பவர்களை ‘கண் டெஸ்ட் செய்யும் ‘I’ ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்வது பொருத்தம் தானே? இரண்டு வரையறைகளிலும் ராஜதுரை பொருந்துகிறார்.
வேலையில் திறமைசாலியாக இருந்தாலும் அலுவலகத்தில் இவருக்கு நல்லபெயர் இல்லாமல் போனதற்கு இதுவும் காரணம் என்று ஏகாம்பரத்தின் உறவினர் ஒருவர் சொன்னாராம். அதே வங்கியில் வேறொரு ஊரில் வேலை பார்த்து வருபவர் அவர். மேலும் குறைந்த காலத்தில் நிறைய மாற்றல்களைச் சந்தித்ததும் இதனால்தானோ?
இப்போதும் அப்படித்தான் ஆயிற்று. ராஜதுரை வேறு மாநிலத்திற்கு மாற்றல் ஆகிப் போய்விட்டார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் போயிருந்தோம். தானே மாற்றலைக் கேட்டுப் பெற்றதாக அவர் சொன்னாலும் மற்றவர்கள் நம்பியதாகத் தெரியவில்லை.
மேலே சொன்ன பாட்டை ராஜதுரை எழுதியிருந்தால் நாதத்தால் வென்றிடுவேன் என்பதை வாதத்தால் வென்றிடுவேன் என்று எழுதியிருப்பாரோ?
சந்தக் கவிதை – தில்லை வேந்தன்

வாட்ஸ் அப்பில் வந்த அருமையான கதை .. எழுதியது யார் ?
இதை நான் படிக்கும்போதே கண்ணீர் வழிந்தோடியது.
தொடர்ந்து படியுங்கள். . .
இதை எழுதியது யார் என்று தெரியவில்லை. இதற்குப் பொருத்தமான தலைப்பு :
தாயுமானவன்
pic : spice and sugar
ஓர் அனைத்துலகப் பள்ளியில், அனலையும் தூசியையும் பொருட்படுத்தாமல், பூங்காவிலுள்ள செடிகளுக்கு, நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் தோட்டக்காரர் ஒருவர்.
” கங்கா தாஸ், தலைமையாசிரியை உன்னை உடனே வரச்சொன்னார்” . . .
அந்த அலுவலகப் பையனின் அந்தக் கடைசி இரு சொற்களின் தொனி அழைப்பின் அவசரத்தைச் சுட்டிக் காட்டியது.
உடனே தன் கை கால்களை அலம்பிக்கொண்டு, .. அறையை நோக்கி விரைந்தார்.
அன்று என்னவோ பூந்தோட்டத்திலிருந்து அலுவலதத்திற்குச் செல்வது நெடுந்தூர நடையாய்த் தோன்றியது. அவரது இதயம், நெஞ்சாங் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து விழுவது போன்ற ஓர் உணர்வு.
அவர் மனத்தில் பலவாறான எண்ணங்கள் அலைமோதின. ஏன், என்ன நடந்திருக்கும்? இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்ற கேள்விக் கணைகள். . .
அவர் நேர்மையான தொழிலாளியாவார். எத்தருணத்திலும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை. . .
அறைக் கதவைத் தட்டினார். . .
“என்ன கூப்பிட்டீங்களா மேடம்?”
“உள்ளே வா . . .” என்ற அந்த அதிகாரக் குரல் அவரது படபடப்பை மேலும் அதிகரித்தது. . .
பாதி நரை விழுந்த மயிர், சீராய் சீவி முடிச்சுப் போடப்பட்ட தலை, நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சாரியைப் பாரம்பரியமான வழக்கில் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பேருக்கேற்ப அவர் மூக்கின்மேல் அமர்ந்துகொண்டிருந்தது.
மேசை மேலிருந்த தாளைச் சுட்டிக்காட்டி, “இதைப் படி”. . . என்றார்.
“ஆனால், மெ..மெ மேடம் எனக்குப் படிப்பறிவு இல்லிங்க மேடம்.
எனக்கு இங்கிலிஷ்கூடப் படிக்க வராது.
மேடம்! நான் தவறேதும் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். . .எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். . .
என் மகள் இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வாய்ப்பு தந்தீங்க. அதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாவேன். . .என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பினை நான் கனவில்கூட காண முடியாது.”
இப்படிக் கூறிக்கொண்டே அவர் தேம்பினார். நடுக்கமும் அவரை ஆட்கொண்டது.
” போதும் நிறுத்து. நீ ரொம்பதான் கற்பனை செய்கிறாய். நான் ஆசிரியர் ஒருவரைக் கூப்பிடுகிறேன். அவர் இதை உனக்கு, வாசித்து மொழிபெயர்த்துக் கூறுவார். . . இது உன் மகள் எழுதியது. இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்.”
விரைவிலேயே அங்கு வந்த ஆசிரியை ஒருவர் அதனை வாசித்து ஹிந்தியில் ஒவ்வொரு வரியாக மொழிபெயர்த்துக் கூறினார்.
“இன்று அன்னையர் தினம் தொடர்பாய் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னோம். இதுதான் அக்கட்டுரைகளில் ஒன்று.
“நான் பீஹாரிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். அந்தக் கிராமத்தில் மருத்துவ வசதியோ கல்வியோ இல்லை. அதைக் கனவில்கூட காண முடியாது.
பிரசவத்தின்போது பல பெண்கள் மரணித்துள்ளனர். என் தாயாரும் அவர்களுள் ஒருவர். என்னை அவர் கைகளில் ஏந்தும் பாக்கியத்தைக்கூடப் பெறவில்லை. என்னை முதன்முதலில் தன் கைகளில் ஏந்தியவர் என் அப்பாதான். . .சொல்லப்போனால் அவர் ஒருவர் மட்டும்தான்.
நான் ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டேன். பிறக்கும்போதே என் தாயாரை விழுங்கிவிட்டேன் என்று உறவினர் குறைபட்டுக்கொண்டனர். அதனால், எல்லோரும் கவலையடைந்தனர். உடனே மறுமணம் செய்துகொள்ளும்படி என் தந்தையை வற்புறுத்தினர். ஆனால், என் அப்பா அதை மறுத்துவிட்டார்.
என் தாத்தாவும் பாட்டியும் அவரைச் சம்மதிக்க வைக்க எல்லாவித யுத்திகளையும் கையாண்டனர். அறிவுப்பூர்வமான வாதங்களையும் முன் வைத்தனர்.
என் தாத்தா பாட்டிக்கு ஒரு பேரன் வேண்டுமாம். ஆகவே, அவரை மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தினர். அப்படி அவர் இணங்காவிட்டால் அவரைத் தள்ளி வைத்துவிடுவதாகவும் அச்சுறுத்தினர்.
என் அப்பா சற்றும் தயங்காமல் நிலம், நல்ல வாழ்க்கை, சொகுசான வீடு, கால்நடைகள் மற்றும் அக்கிராமத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ அவருக்கு இருந்த அனைத்து சலுகைகளையும் துறந்தார்.
கையில் சல்லிக் காசுகூட இல்லாமல் – ஆனால் என்னை மட்டுமே கையில் ஏந்தியவாறு, இந்த மாநகரில் குடியேறினார். வாழ்க்கை மிகவும் சிரமமானதாகவே இருந்தது. அப்பா இரவும் பகலும் கடுமையாக உழைத்து என்னைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்த்தார்.
நான் விரும்பிச் சாப்பிட்ட உணவுப் பண்டங்களைத் திடீரென தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வார். அதன் காரணம் எனக்கு அப்பொழுது புரியவில்லை . . . தட்டில் இருக்கும் அந்த ஒரு துண்டை நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்துள்ளார் என்பதை நான் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
அவர் சக்திக்கு மீறிய ஒரு வசதியை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இப்பள்ளி அவருக்குப் புகலிடமளித்துச் சிறப்பு செய்துள்ளது. இப்பள்ளி இன்னொரு மாபெரும் பரிசையும் தந்துள்ளது. ஆம், நான் இப்பள்ளியிலேயே சேர்ந்து பயில வழங்கியுள்ள வாய்ப்புதான் அது.
அம்மா என்றால் அன்பும் அரவணைப்பும் எனின், என் அப்பா அதற்குப் பொருத்தமானவர். . .
அம்மா என்பவர் இரக்கமிக்கவர் எனின், என் அப்பா அதற்கும் பொருத்தமானவரே. . .
அம்மா என்பவர் தியாகி எனின், நிச்சயமாக என் அப்பா அதையும் ஆக்ரமிக்கின்றார். . .
சுருங்கக்கூறின், தாய் ஒருவரின் வடிவம் அன்பு, பராமரிப்பு, தியாகம், இரக்கம் எனின்
*என் அப்பாதான் இவ்வுலகிலேயே மிகச் சிறந்த தாய்*
அன்னையர் தினத்தில் இம்மண்ணில் மிகச் சிறந்த பெற்றோராக இருக்கும் என் அப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். . .
இப்பள்ளியில் கடின உழைப்பாளியாகத் திகழும் தோட்டக்காரருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து அவர்தான் என் அப்பா என்பதைப் பெருமையோடு அறிவிக்க விரும்புகிறேன்.
இதை வாசிக்கும் என் ஆசிரியை எனக்கு நல்ல புள்ளிகள் தரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் தன்னலமற்ற அப்பாவுக்கு ஒருவர் வழங்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.
அந்த அறை நிசப்தமானது. . .
கங்கா தாஸ் தேம்பி அழுவது மட்டுமே கேட்டது. . .
கடும் வெயில்கூட அவரின் ஆடையை வியர்வையால் ஈரப்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால், தன் மகளின் சொற்கள் அவர் உள்ளத்தையே ஈரப்படுத்தியது. . .
அவர் கைகட்டி, வாயடைத்து அங்கு நின்றுகொண்டிருந்தார். . .
ஆசிரியையிடமிருந்து அந்தத் தாளை வாங்கி தன் நெஞ்சின்மேல் வைத்துக் கண்கலங்கினார். . .
தலைமையாசிரியை தன் இருக்கையிலிருந்து எழுந்தார். . . கங்கா தாஸை அமரச்சொன்னார். அவர் பருக ஒரு கோப்பை நீர் வழங்கி அவரிடம் ஏதோ சொன்னார். அவர் குரலில் ஒரு கனிவு வெளிப்பட்டது.
கங்கா தாஸ் உன் மகளின் இக்கட்டுரைக்காக 10/10 புள்ளிகள் வழங்கியுள்ளோம். இப்பள்ளி வரலாற்றிலேயே அன்னையர் தினம் தொடர்பில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். நாளைக்கு இப்பள்ளியின் *அன்னையர் தின விழா* வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இப்பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகஸ்தரும் உன்னையே சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவுசெய்துள்ளனர்.
பிள்ளையை வளர்த்தெடுப்பதில் ஆண் ஒருவன் காட்டும் அன்பு, அர்ப்பணிப்பினை கௌரவிக்கவும் ஒரு சிறந்த பெற்றோராகத் திகழ பெண் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதல்ல என்ற உண்மையை உலகறியச் செய்யவும் நாங்கள் இம்முடிவைச் செய்துள்ளோம்.
அதற்கும் மேலாக, உன் மகள் உன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை மறு உறுதிப்படுத்துவதுடன் போற்றி அங்கீகரிக்கவும் உன் மகளுக்குப் பெருமை சேர்க்கவும் உன் மகள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வுலகிலேயே தலைசிறந்த பெற்றோரை இப்பள்ளி பெற்றிருப்பதற்காக இப்பள்ளியிலுள்ள அனைவரும் பெருமைகொள்ளவும் இம்முடிவைச் செய்துள்ளோம். . . .
“நீ பூங்காவை மட்டும் பராமரிக்கவில்லை. மாறாக உன் வாழ்வின் விலை உயர்ந்த மலரை அழகிய முறையில் பேணி வளர்த்துள்ளாய். நீதான் உண்மையான தோட்டக்காரன்.”
” கங்கா தாஸ், அந்த நிகழ்ச்சிக்கு நீ சிறப்பு விருந்தினராக வருவாயா?”
இதற்கு இணையாகச் சொல்லவேண்டும் என்றால் ” ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாட்டைத் தான் சொல்லவேண்டும்.
கார்ட்டூன் – லதா
டாக்டர் ஏ கே ராமானுஜன் – 300 ராமாயணம்
ஏ கே ராமானுஜன் (1929-1993)
மைசூரில் பிறந்த தமிழர்
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மொழியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
சிகாகோ, ஹார்வர்ட், பெர்க்லி போன்ற பல்கலைக் கழகங்களில் ஆசிரியராக இருந்தவர்.
பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லுனர்
ஒரு கவிஞர், மொழி பெயர்ப்பாளர், நாட்டுப்புரவியல் மற்றும் மொழியியல் வித்தகர்,
ஏராளமான கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இவரது சிறப்பு சங்கத் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகத்துக்கு அறிமுகப் படுத்தியவர்.
உதாரணத்துக்கு ஒன்று :
முரண்கொள் துப்பில் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோர் அன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோர் அன்னள் வைகறை யானே.
My love is a two-faced thief.
In the dead of night
she comes like the fragrance
of the Red-Speared Chieftain’s forest hills,
to be with me.
And them, she sheds the petals
of night’s several flowers,
and does her hair again
with new perfumes and oils,
to be one with her family at dawn
with a stranger’s different face.
A K Ramanujam
அதெல்லாம் இருக்கட்டும்.. அதென்னா 300 ராமாயணம் என்று தலைப்பில் போட்டிருக்கிறதே என்று கேட்கிறீர்களா?
2011இல் இவருடைய கட்டுரை டெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து தலைமை நீதி மன்றம் வழியாக உலக அரங்கிற்குப் போனது!
கூகில் சர்ச்சில் தேடிப்பாருங்கள்! அந்த சர்ச்சை புரியும்!
(அல்லது ஏப்ரல் குவிகத்திற்காகக் காத்திருங்கள்)
தேவி … ஸ்ரீதேவி …
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்த ஸ்ரீதேவி பிப்ரவரி 28 இல்
துபாயில் அகால மரணமடைந்தார்.
அவரது பிரிவால் வாடும் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும்
இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
“காதல் நெரித்தால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்
டாக்டர் அழைப்பில் சுமதியைப் பார்க்க வந்தேன். இளம் வயதானவள். ஒரு அமைதியற்ற நிலை, தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தாள். சாயம் போன ஜீன்ஸ், கச்சிதமான சட்டை, அடர்த்தியான கூந்தல் பாதி முகத்தை மறைத்திருந்தது.
அவளுடன் வந்தவள், “நான் இவள் அம்மா” என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, “எப்படி இருக்கா, பாருங்க” என்று விசும்பினாள். சுமதி அவள் பக்கம் திரும்ப, கூந்தல் விலகியது. வீங்கிய கன்னம், சிவந்த கண்கள், நெற்றியில் காயமும் தெரிந்தது. நான் பார்த்துவிட்டதைக் கவனித்ததும், சுமதி அழத் தொடங்கினாள். அம்மா கன்றிப் போயிருந்த காயங்களைக் காட்டி, “காதலித்துக் கல்யாணம் ஆச்சு. இப்போ, மாப்பிள்ளையின் சந்தேகத்தால் அடிபட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கா.” என்றாள்.
சுமதிக்கு MNC வங்கியில் டீம் லீடராக வேலை. 27 வயது. நவீன தோற்றம், உடல்சாரக் கொடுமையின் (Physical Abuse) பல அடையாளங்கள். அவளுடைய முகத்தில் துயரம், சஞ்சலம். டாக்டர், மருத்துவ ரீதியாக பார்த்துக் கொள்ள, அவளின் ஆபத்து காரணிகளின் (ரிஸ்க்) மதிப்பீட்டை ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் தொடங்கினேன்.
சுமதி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அம்மா இல்லத்தரசி, அப்பா ஸேல்ஸ் மேனேஜர், தம்பி நவீனுடன் சொந்த வீட்டில் வாழ்ந்தாள். பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்தார்கள். பொட்டு வைத்து, பாவாடை தாவணி அணிய வேண்டும். காலை-மாலை சாமி கும்பிடுவது, இதற்காகவே ஆறு மணிக்குள் இருவரும் வீடு திரும்ப வேண்டும். தாமதித்தால், வீட்டிற்கு வெளியே அரைமணி நேரம் நின்று, இரவு அரை சாப்பாடு, பாத்திரம் தேய்க்க வேண்டும். இருவரும் படிப்பில் கெட்டி. தெருவில் எடுத்துக்காட்டாக இருந்தார்கள், எல்லோரும் புகழ்ந்தார்கள்!
படிப்புதான் பெற்றோரின் கவனம். பாட்டு சொல்லித் தந்தார்கள், ஆனால் வெளியே எங்கும் பாடக்கூடாது. ஸ்கூலில் இருக்கும்வரை இவை பெரிதாகத் தெரியவில்லை. காலேஜ் சேர்ந்ததும் வித்தியாசங்களை சுமதி கவனிக்க ஆரம்பித்துத் தத்தளித்தாள். தன் ஆதங்கத்தைப் படிப்பின்மீது காட்டினாள். பெற்றோருக்கு மார்க் முக்கியம் என்பதால், படிக்காமல் மார்க்கைத் தவறவிட்டாள். அவள் பீ.ஈ. முடித்தவுடன் வேலையில் சேரச்சொன்னார்கள், அதை நிராகரித்து விட்டு, எம்.பீ.ஏ. சேர்ந்தாள். மற்ற விஷயத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாலும் படிப்பு என்பதால் சுமதியின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுத்தார்கள்.
எம்.பீ.ஏ. இரண்டாம் ஆண்டில் எதேச்சையாக அவளுடைய சீனியர், சுரேஷை சந்தித்தாள். கால் பந்து வீரர், இப்பொழுது மேனேஜர் வேலை. நாளடைவில் பழகத் தொடங்கினாள். கருணை உள்ளவனாக, சுதந்திர மனப்பான்மை உடையவனாகத் தோன்றினான். கட்டுடல் கொண்ட அழகன். பல பெண்கள் பேச்சுக் கொடுக்கப் பார்த்தாலும், அவர்களை தட்டிக் கழிப்பதைக் கவனித்தாள். காதல் வளர, சுமதி பூரித்துப் போனாள். நான்கு மாதங்கள் இந்த உல்லாசத்தில் போனது.
அதற்குப்பின், சுமதி ஏதேனும் ஆணுடன் பேசுகையில் சுரேஷ் அங்கு இருந்தால், முறைத்துப் பார்ப்பான். தன்னை எந்த அளவிற்கு நேசித்தால் இப்படிச் செய்கிறான் என்று எடுத்துக்கொண்டாள். இதன் தொடர்ச்சியாக, தோழிகளுடன் அவள் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. தோழிகள் அவளை எச்சரிக்கை செய்ய முயன்றார்கள். சுமதியைப் பொறுத்தவரை, ‘காதலிப்பவருக்காக இதைக் கூட செய்யா விட்டால் எப்படி?’ என்றே தோன்றியது. சுரேஷுடன் நேரம் கழிக்க வீட்டில் விதவிதமான பொய்களைச் சொன்னாள், வருத்தமும்படவில்லை.
இப்படி உறவுகளைச் சுருக்கி விடுவதே உடல்சார் கொடுமையின் ஆரம்பமாகும். பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் இதைப் புரிந்து கொள்ளப் பல மாதங்கள் ஆகலாம்.
சுமதி தன்னுடன் இல்லாத நேரங்களில், சுரேஷுக்கு அவள் தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்ற எண்ணம் ஆட்கொள்ளும். தன்னை ஆசுவாசப்படுத்தவே குறுஞ்செய்தியில் அவள் எங்கே, யாருடன், என்ன பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று கேட்பான். இவளும் பதில் அனுப்புவாள். கொஞ்சம் தாமதித்தால் சுமதியை அழைத்துப் பேசுவான். சுமதி இதைத் தன்னை அரவணைப்பதாக எடுத்துக்கொண்டு தன் காதலன்மேல் கர்வம் கொண்டாள்!
தன் பிடியில் எப்போதும் இருக்கச் செய்வது, துரத்துவது, எமோஷனல் (உணர்ச்சிகளின்) கொடுமை சார்ந்ததாகும். இவர்கள், தன்னுடைய பதட்டத்தையும், அவநம்பிக்கையும் கையாளத் தெரியாததால் வருவதே. சுமதி போன்றவர்கள் இதைச் சுமந்து கொள்வார்கள்.
ஒரு நாள், சுமதி தன் கைப்பேசியை வீட்டில் மறந்துவிட்டு கடைக்குச் சென்றுவிட்டாள். திரும்பி வந்ததும் பார்த்தாள், சுரேஷ் 50 குறுஞ்செய்தி, 20 முறை அழைத்திருந்தான். அவள் அம்மா, சுரேஷ் பதட்டப்பட்டு தன்னை அழைத்ததைச் சொல்லி, அவனுக்குப் பரிந்து சுமதியைத் திட்டினாள். சுமதி உடனே சுரேஷை கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டாள். அவன் தாங்க முடியவில்லை என்றான். ஒரு வாரத்திற்கு அவளிடம் பேசவோ, பார்க்கவோ மறுத்தான்.
ஆதரவை மறுப்பது, அன்பைக் காட்டாமல் இருப்பது எல்லாம் ஸைக்கலாஜிகல் கொடுமையே. இவை, தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதம். வெளிப்படையாகத் தெரியாது.
ஒரு வாரத்திற்குப் பின், சுரேஷை நேரடியாகச் சந்தித்து சுமதி மன்னிப்புக் கேட்டாள். சுரேஷ் மிகச் சோகமாக இருந்தான். திரும்பத் திரும்ப “எப்படி ஈடு கட்ட போகிற? எப்படித் தவித்தேன்!” என்று சொல்லி, பளாரென்று கன்னத்தில் அறைந்தான். அவள் தோளை குலுக்கி “சாரீ” என்றான். “எந்த அளவுக்கு நான் காயப்படுத்தியிருக்கேன்? ” என்று நினைத்து சுமதி ஏற்றுக் கொண்டாள்.
இது எல்லை மீறுவதின் அடையாளமாகும். உடல் + உணர்ச்சி வசப்பட்ட கொடுமை: மற்றவர் முன் தாழ்த்துவது, தகாத முறையில் கோபம் காட்டுவது, பிறகு பாசமாக பேசுவது.
சுமதியின் வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது. வந்து தேடுவது, கைப்பேசியில் அவள் நலனைக் கேட்பதிலிருந்து சுரேஷைபற்றி அவள் பெற்றோருக்கு நல்ல அபிப்ராயம். தங்களுக்கும் மேலான பாசம் என்று எண்ணி ஒப்புக் கொண்டார்கள். சுரேஷ், “பணத்தைப்பற்றி பேசி ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?” என்று சொல்லி வரதட்சிணை வாங்கவில்லை.
சுமதி சந்தோஷமாகக் கணவன் வீட்டிற்குச் சென்றாள். வீ.ஆர்.எஸ் பெற்ற மாமனார், இல்லத்தரசியான மாமியார், காலேஜ் படிக்கும் தங்கை. ஆரம்பத்தில் மிக இதமாகப் பொழுது போனது. பல சுதந்திரங்கள். ஸ்கர்ட், பான்ட்-ஷர்ட் அணிந்தாள். பாடவும் அனுமதித்தான்.
கல்யாணமாகி முதல் மாசச் சம்பளத்தில் தன் பெற்றோருக்கு இனிப்பு வாங்கி சுரேஷுடன் போய் கொடுக்க விரும்பினாள். சுரேஷை அழைத்தாள். சுரேஷ் “யாரைக் கேட்ட?”என்றான். மாமனார், “பிச்சைக்காரி போல வந்தே, இப்ப எங்க துட்டுல..” சொல்லி வாங்கினதைத் தூக்கி எறிந்தார். எல்லோரும் வெளியே சாப்பிடச் சென்றார்கள், சுமதியை வீட்டில் விட்டுவிட்டு. கேட்காமல் செய்ததின் விளைவு என்று சுமதி தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
அவள் அம்மா வீட்டிற்கு சுரேஷ் வாரம் ஒரு முறை போவதால் (வேலை இடம் பக்கம்) சுமதியைப் போகவேண்டாம் என்றான். அவன் மாப்பிள்ளை உபசாரம் வேண்டாம் என்றதால் அவர்களும் அப்படியே விட்டார்கள். திரும்பி வந்து சுமதியிடம் அவர்கள் கவனிக்காததைச் சொல்வான். நாளடைவில் சுமதிக்குத் தன் பெற்றோர் மீதான மரியாதை, பாசம் குறைந்தது. அவர்களைப் பார்க்க நேராததால் எதையும் யாரிடமும் கேட்கவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை.
ஒரு நாள், சுமதி ஆடை அணியும்பொழுது, அவள் மாமனார் உள்ளே வந்தார். சுரேஷிடம் சொன்னதும், அவரை அடித்து விட்டான்.
சுமதி ஒரு முறை தாமதமாக வீடு திரும்பியபோது சுரேஷ் அவளைக் கொச்சையாகப் பேசி, அடிக்கப் போவதற்குக் கையை ஓங்கினான், அவன் அம்மா “டேய் அப்பா மாதிரி மிருகமாகாதே” என்று கூச்சல் இட்டதும், சுமதியைத் தன் பிடியிலிருந்து விட்டான். அவளை ஆறு மணிக்குள் வீடு வரச் சொன்னான். அம்மா வீட்டுக் கண்டிப்பை நினைத்து, சலித்துக் கொண்டாள்.
மற்றொரு நாள் 6 மணிக்குள் சுமதியால் வர முடியாதபோது சுரேஷ் அவளைச் சந்தேகித்து பல கேள்விகள் கேட்டான். வீட்டில் வேறு யாரும் இல்லை. அவன் நம்புவதாக இல்லை என்று அவளுக்குத் தோன்றியதும் பயந்தாள், மௌனமானாள் (அப்படியாவது அமைதி ஆவான் என்று நினைத்தாள்). சுரேஷ் கோபம் அதிகரிக்க, அவளைக் கீழே தள்ளி, பெல்ட்டால் அடித்தான், காலால் உதைத்தான். தாங்க முடியாமல் அம்மா வீட்டிற்கு வந்தாள். அங்கு அவள் அப்பா அவளைத் திட்டி, அடித்துவிட்டார். இதன் பிறகே எங்களைப் பார்க்க நேர்ந்தது.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில், காயம் அடைந்தவரின் கண்ணோட்டத்திலிருந்து அவர்களின் பிரச்சினைகள், சிக்கல்கள், சம்பவங்கள், இதற்கு முன் பட்ட காயம், குடும்பத்தினரைப்பற்றி விசாரிப்போம். இதிலிருந்து அவர்கள் தாக்குதலுக்கு ஆளானதை, அவர்களுடைய அச்சம், கோபம், சமாளிக்கும் திறன்கள், திக்கற்ற நிலை, குடும்பத்தினரின் பங்கேற்பு, ஒத்துழைப்பு, என்ற பல நுணுக்கங்களைப் புரிந்துகொள்வோம்.
இது, உடல்-உணர்ச்சி கொடுமைகள் சார்ந்ததே என்பதை அவளுக்குப் புரிய வைக்கவே அவள் கைகளின் ஒவ்வொரு வடுக்களை வைத்து, நிகழ்ந்ததை விவரிக்கச் சொன்னேன். நிகழ்வுகளை நினைவூட்ட, “ஏன் பொறுத்துக் கொள்ளவில்லை” என்று அவள் மனத்தில் இருந்த சஞ்சலம் நீங்கித் தெளிவு பெற, மெதுவாக தன் சுதந்திரம் சுருங்கியதை, உறவுகள் முறிந்ததைப் பார்க்க தைரியம் வந்தது.
ஆதங்கங்ளைக் கையாளும் முறைகளை ஆலோசித்தோம். சுமதிக்குத் தெளிவாயிற்று, அவள் சுரேஷை தேரந்தேடுத்ததே பெற்றோரின் கண்டிப்பு, வீட்டில் விதித்திருந்த சட்டங்களிலிருந்து விடுபடுவதற்கே என்று. சுரேஷ், கொடுத்த சுதந்திரத்தில் தன்னுடைய விருப்பப்படி ஆடை, அலங்காரம், பாட்டு் வாழ்வில் வந்ததால், சுரேஷ் மீது ஈர்ப்பு என்றாள்.
அம்மா வீட்டிற்கு வந்தபின், முதலில், கணவர் வீட்டிற்குப் போக பயம் என்றாள். அவன் அழைப்பிற்குப் பதில் பேசாமல் இருந்தாள். சுரேஷ் அவளை வீட்டில் சந்தித்து, கெஞ்சி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அம்மா வீட்டில் அதே சட்டங்கள், கண்டிப்பு, உடைத் தடைகள் இருந்ததால் சுரேஷுடன் சென்றாள். எங்களை ஆலோசிக்கவில்லை, தானாகச் சிந்திக்கவில்லை. மூன்றாவது நாள் அடி வாங்கியதும், திரும்பி வந்தாள்.
தன் நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளாததால் இப்படி இயங்க நேரிடும்.
சுமதி, சுரேஷுக்கு எடுத்துச் சொன்னதால், அவனும் எங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டான். தன்னுடைய மனநிலையைப்பற்றி விவரித்தான். தன் அப்பா அம்மாவை அடிப்பதைப் பார்த்து, இப்படிச் செய்தால்தான் மரியாதை, பேச்சைக் கேட்பார்கள் என்ற எண்ணம். சுமதி தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சம். தன் வளர்ப்பு, அச்சத்தைப்பற்றிச் சொல்ல அவனுடைய நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சுரேஷ் போன்ற நடத்தை, அவர்களின் குறைந்த சுய மதிப்பிடு / சமாளிக்கும் திறன்களினால் நேரலாம்.
சுரேஷின் பயங்கள், அவற்றைச் சந்திக்கும் முறைகளை உரையாடலுக்கு எடுத்துக் கொண்டோம். சுரேஷுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது கடினமாக இருக்கிறது என்பதை மையமாக வைத்து, அவன் உறவை உருவாக்கும் முறைகள், வெறுப்புகளைக் கையாளும் விதங்கள் என்னவென்று ஆராய்ந்தோம். பல வாரங்களுக்குப் பின் சுரேஷ் தெளிவு பெற்றான். ஆனால் மாற்றங்களை எப்படி செயல்படுத்த முடியும் என்ற அச்சம் இருந்தது.
முதல் கட்டமாக, சுமதி என்னைப் பார்க்க வரும் நேரத்தில் அவளைத் தொலைபேசியில் அழைக்கக் கூடாது. மனதை திடப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பட்டியலிட்டோம். சுரேஷ் உடற் பயிற்சியை தேர்ந்தெடுத்தான். உட்கார்ந்து இருந்தால், அந்த மனநிலையிலிருந்து விடுபட அச்சத்தைத் தாளில் எழுதிக் கொள்ளலாம். சுரேஷ் வியந்தான், இவ்வளவு வழிகள் உள்ளதே என்று!
அதேபோல், தான் என்னைப் பார்க்க வரும் நாட்களிலும் இதையே கடைப் பிடிக்க வேண்டும் என்றேன். அடுத்தது, சுமதியை வேலையில் அழைக்கவோ, பேசவோ கூடாது என்று.
சுமதியின் காயங்களைக் குறித்து உரையாட, இருவரையும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் தங்கள் உறவு, மனக்காயங்கள்பற்றிப் பேசி, வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நேரத்தில் ஒரு ஹோம் வர்க் – தங்களைப்பற்றி இல்லாமல், கைகளைக் கோர்த்துக்கொண்டு வேறு ஏதாவது பேச வேண்டும். பிரச்சினைகள் குறைந்து வருவதை கைகளின் வெப்ப நிலை மாற்றத்தில் உணர்ந்தார்கள்.
மாற்றங்கள் ஊக்கம் அளிக்க, இருவரும் தவிர்க்க வேண்டிய நடத்தைகள், சொற்களைப் பட்டியலிட்டோம். சுரேஷ், தான் மாமனார், மாமியார்பற்றி சொன்ன தவறான தகவல்களைப்பற்றியும் பகிர்ந்து கொண்டான். அவரவர் கசப்புகளை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
மனம்விட்டுப் பேசியதால், நெருக்கம் வளர்ந்தது. விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டதால், மன்னிக்க மனம் வந்தது.
குடும்பத்தினரையும் ஒவ்வொருவராகச் சந்தித்தேன். பிறகு இணைந்து பார்க்கையில், அவர்களின் பங்கேற்பையும், பொறுப்பையும் வரிசைப்படுத்தினோம்; அவர்கள் கடைப்பிடித்து வர, என் பங்கு முடிவடைந்தது.
காதல் என்பது ஒருவர் மேல். ஆனால் கல்யாணமோ இரு குடும்பத்தினருடன். கலாச்சாரங்கள், உறவுகள் இணைந்து மலர, விட்டுக் கொடுக்கும் சுபாவம் உறவை மேம்படுத்தும், ஏற்ற-தாழ்வு தெரியாது.
ஆனால், இன்னல்களை, கசப்புகளை, வெறுப்புகளை ஒருவர்மேல் மட்டும் குவித்தால் அது கொடுமையே. எப்பொழுதும், “என்ன நடந்து விடுமோ?” என்ற பதட்டத்துடன் இருப்பதும் கொடுமையின் அடையாளமாகும். அடிமை போல் கெஞ்சி, மறு நிமிடம் கையாலோ, சொல்லாலோ அடித்து, “நான் சொல்வதே சட்டம்” என்பதும் கொடுமை.
கொடுமை கலந்திருந்த உறவைப் புதுப்பித்தார்கள் சுமதி-சுரேஷ் ஜோடி! மாற வேண்டும் என்ற உறுதி இருந்தால்தான் மாற முடியும்!
PIPER- இதற்கு விளக்கம் தேவையில்லை – பார்த்து மகிழுங்கள் !
மார்ச் 8 -உலக மகளிர் தினம்
நீங்க சொல்லுங்க குருஜி…! நித்யா சங்கர்
‘நீங்க சொல்லுங்க குருஜி… இது எந்த ஊர் நியாயம்..?’
அந்த ஆசிரமத்தின் அமைதியான, தெய்வீகமான, நிசப்தமான
சூழ்நிலையைக் கிழித்துக்கொண்டு சென்றது அந்தக் குரல்.
கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இருந்த குருஜி
மெதுவாகக் கண்ணைத் திறந்து குரல் வந்த திசையை நோக்கினார்.
சரவணன்…. அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து குருஜியிடம்
ஆசி வாங்கிச் செல்பவன்.
‘என்னப்பா சரவணா…? இன்னிக்கு என்ன குழப்பம்..? யாருக்கு
என்ன அநியாயம் நடந்து விட்டது..?’ என்றார் குருஜி புன்முறுவலோடு.
‘குருஜி… உங்களிடம் முன்பே சொல்லியிருக்கேன்.. இரண்டு
வருடமா நான் செய்யும் வேலையிலே எனக்கு அமைதியில்லே…
பிரச்னைகள் வந்துட்டே இருக்கு. எப்படா இந்த வேலையிலிருந்து
மாறி வேறு இடத்துக்குச் செல்வோம் என்று துடிச்சிட்டிருக்கேன்..’
‘ஆமா.. சொல்லியிருக்கே.. இப்போ என்ன ஆச்சு..?’
‘ஒரு ஆறு மாதம் முன்னாலே ஒரு ஜோசியரைப் பார்த்தேன்.
என் பிரச்னைகளைச் சொன்னேன். அவர் என் ஜாதகத்தைப்
பார்த்து சில பரிகாரங்கள் பண்ணச் சொன்னார். ஸ்ரீரங்கம் சென்று
ரங்கநாதனுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து, ஆராதனை பண்ணி
வேண்டிக்கொள்ளச் சொன்னார்.
பின் பழனி சென்று அந்தப் பழனிஆண்டவனுக்கு பால் காவடி எடுத்து, அபிஷேகம் பண்ணி, ஆராதனைசெய்து மனமுருக வேண்டிக் கொள்ளச் சொன்னார். முழு நம்பிக்கையோடு எல்லா புகழ் பெற்ற கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போடச் சொன்னார். அவர் சொன்னபடியே ஸ்ரீரங்கம் சென்றேன். ரங்கநாதனையும், தாயாரையும் வேண்டிக் கொண்டேன்.
அந்தப் பழனி ஆண்டவனையும் தரிசித்து மனமுருக வேண்டிக் கொண்டேன். எல்லாக் கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போட்டேன்…. ஒரு மாசமாச்சு .. இரண்டு மாசமாச்சு… மூன்று மாசமாச்சு..
ஒரு தகவலும் இல்லை… என் மனதிலிருந்த நம்பிக்கையும் கரைஞ்சு
போகத் தொடங்கிடுச்சு… என் வேண்டுதல்களுக்கு பலனில்லாமல்
போயிடுச்சோ என்ற வேதனை வாட்டத் தொடங்கிடுச்சு….
பதினஞ்சு நாட்களுக்கு முன்னாலே என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அம்மன்
கோவிலுக்குச் சென்றேன்.. அம்மனை நமஸ்கரித்து நின்றேன்…
அக்கோவிலிலிருந்த சிவபெருமான் சந்நிதியையும், பிள்ளையார்
சந்நிதியையும் மூன்று முறை வலம் வந்தேன். ஏனோ அப்போதிருந்த
மனக்குழப்பத்தில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளத் தோன்றவில்லை..
‘கடவுளே காப்பாற்று… நல்லதே நடக்கட்டும்.. நல்லபடியாயிருக்கட்டும்..’
என்று நினைத்துக்கொண்டு அந்தத் தெய்வங்களை நமஸ்கரித்தேன்.
அக்கோயிலுக்குப் போய் வந்த இரண்டாம் நாள் ஒரு பெரிய கம்பனியிலிருந்து
எனக்கு இன்டர்வியூ கார்டு வந்தது.. இன்டர்வியூ அட்டென்ட்
செய்ய, நல்ல பொஸிஷனில் எனக்கு வேலையும் கிடைத்தது.. இதோ
அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்…’ என்றார் சரவணன் ஒரே மூச்சில்.
‘ சரி.. அதுதான் எல்லாம் நல்லபடியா நடந்து விட்டதே… இதிலென்ன
குழப்பம்..?.. இப்போதுதான் உனக்கு அது அமைய வேண்டிய காலம்
கனிந்து வந்திருக்கு…’ என்றார் குருஜி புன்னகையோடு.
‘ஸ்ரீரங்கம் வரை சென்று ரங்கநாதருக்கும், தாயாருக்கும் அபிஷேகம்
ஆராதனை பண்ணினேன். பழனி சென்று முருகனுக்குக் காவடி எடுத்து,
அபிஷேகம் செய்தேன். அந்த மாலவனோ, முருகனோ உதவிக்கு
வரவில்லை. வீட்டுப் பக்கத்திலேயுள்ள கோவிலுக்குச் சென்று,
அம்மனையும், சிவபெருமானையும், பிள்ளையாரப்பனையும் தரிசித்தேன்.
வேண்டிக் கொள்ளக் கூட இல்லை… அவர்கள் என் பிரச்னைகள் புரிந்து
உடனே உதவி இருக்காங்க… இதுக்கென்ன குருஜி அர்த்தம்..?’
மெதுவாகச் சிரித்தார் குருஜி.. ‘உன் ஜாதகப்படி இப்பொழுதுதான்
அதுக்கான நேரம் வந்திருக்குன்னு அர்த்தம்.. எதெது எப்படி எப்படி
எப்போது நடக்கணுமோ அதது அப்போது அப்படி நடக்கும்னு அர்த்தம்’
‘அப்படின்னா அந்த ஜோசியர் சொன்னது தப்புன்னு சொல்றீங்களா..?’
‘இல்லை… அவர் சொன்னது கரெக்ட்தான்… நீ அவரைப் போய்ப்
பார்க்கும்போது ரொம்ப மன உளைச்சலில் இருந்திருக்கே… உனக்கு
தன்னம்பிக்கையே இல்லாமல் இருந்தது… உன் மனதுக்குச் சற்று ஆறுதலும்
நம்பிக்கையும் தேவைப்பட்டது. அதுக்குத்தான் உன் தன்னம்பிக்கை
லெவலை அதிகமாக்கத்தான் ரங்கநாதனுக்கும் முருகனுக்கும் அபிஷேகங்கள்.
நீ போய் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுத் தன்னம்பிக்கையோடு
எல்லாக் கம்பனிகளுக்கும் மும்முரமாக அப்ளிகேஷன்ஸ் போட்டே…
உன் ஒரே குறிக்கோள்..’நல்ல வேலை தேடிக் கொள்வது’ என்று
இருந்தது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம்
செய்தே….’
‘ஆமாம் குருஜி… இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற வேலைக்குத்
தேவையான ஒர் எக்ஸாம் பாஸ் பண்ண வேண்டியிருந்தது. அதையும்
இரண்டு மாசம் முன்னே எழுதி பாஸ் பண்ணிட்டேன்…’
‘பார்த்தியா… அதைத்தான் சொல்ல வந்தேன்.. சரவணா.. ஒன்று
மட்டும் நினைவில் வெச்சுக்கோ… நீ கடவுளைப்பற்றி நினைக்கும்
நினைப்புகளும் நாமாவளிகளும் உன் புண்ணியக் கணக்கில் சேர்ந்து
கொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் பலன் நிச்சயமாக உண்டு.
நீ செய்த அபிஷேகங்கள் உனக்கு இந்த வேலை கிடைக்கப் பாதையை
ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வேலைக்கு வேண்டிய எக்ஸாமை பாஸ்
பண்ணிட்டே… அதேபோல் இந்தப் புதிய கம்பனியில் உனக்குக் கிடைத்த
இந்த பொஸிஷனில் இருந்தவருக்கு வேறு நல்ல வேலையை அமைத்துக்
கொடுத்தது. இதற்கெல்லாம் சிறிது காலம் ஆகுமல்லவா.. அதுதான்
ஆகியிருக்கு…’
‘ஆமாம் குருஜி… நீங்க சொல்றது சரிதான்… நான் ஸ்ரீரங்கத்திலேயும்,
பழனியிலேயும் மனமார வேலைக்காக வேண்டிக் கொணடேன்.. ஆனால்
அம்மன் கோயிலில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளவில்லையே’ என்றான்
சரவணன் குழப்பத்தோடு..
‘சரவணா… நீ கடவுள் முன்னே நின்று கண்களை மூடி சில
நிமிடங்கள் அவரை மனதில் நிறுத்தி தியானம் செய்தாலே போதும்.
உனக்கு என்ன வேண்டும்… எப்போது, எப்படி அதை நிறைவேற்ற
வேண்டும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும். நீ தனியாக வேண்டிக்
கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லெ.. அந்தக் கடவுள்
நிறைவேற்றிக் கொடுப்பார்..’ என்றார் குருஜி.
கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தான் சரவணன்.
—————————————————–
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:——சிவமால்
மோகன் : டேய் மதன்.. உன் ·ப்ரண்டு என்ன லூஸா..? என்கிட்டே
சௌக்கியமான்னு கேட்டார்… ‘ரொம்ப சௌக்கியம்னு’
சொன்னேன். கோபமா மூஞ்சியைத் திருப்பிட்டுப் போறார்..!
மதன் : (நக்கலாக) டேய்.. அவர் ஒரு டாக்டர்.. எல்லோரும்
சௌக்கியம்னு சொன்னா அவருக்குக் கோபம் வராதா..?
நம்ம உடம்புக்கு ஏதாவது வந்தாத்தானே அவர் நாலு காசு
பார்க்க முடியும்..!
மோகன் : !!!
திருக்கருகாவூர்த் தாயே! – சு ரவி
தருப்பையை ஏந்தும் முனியின்
தகித்திடும் சாபம் வந்து
கருப்பையைத் தாக்கும் நேரம்
கதறிய வேதிகைக்குக்
கருவினைக் காத்துத் தந்த
கருணையே! முல்லைப் பூக்கள்
அரும்பிடும் கருகா வூரின்
அன்னையே, அழகே, போற்றி!
இல்லறம் பேணிக் காத்தும்
இன்னமும் மழலைச் செல்வம்
இல்லைஎன் றேங்குவோர்தம்
இதயதா பத்தைப் போக்கி
நல்லதோர் பிள்ளைச் செல்வம்
நல்கிடும் தாயே! வாச
முல்லைசூழ் கருகா வூரின்
முழுமுதற்பொருளே, போற்றி!
தாயவள் கருவில் ஜீவன்
தரிக்கின்ற நேரம் தொட்டு
சேயினைக் கர்ப்பத் திற்குள்
செவ்வனே புரந்தச் சேய்க்கும்
வாயுவும், உணவும் தந்து
வாழவைப் பாயே, தாயே!
வாயவிழ் முல்லைக் காட்டின்
வண்ணமே, பாதம் போற்றி!
சந்ததம் உந்தன் பாதம்
சரணமென் றடைவோர் வாழ்வில்
சந்ததி தழைக்கச் செய்வாய்!
சத்கதி அமையச் செய்வாய்!
சந்தனத் தென்றல் சூழும்
சந்தமே! தாய்மைப் பேறே!
வந்தனை செய்தோம் முல்லை
வனத்துறை வாழ்வே, போற்றி!
விரிதரும் வானம், ஆங்கே
விளங்கிடும் கோள்கள், மீன்கள்
எரிதழல் என்னச் சுற்றும்
எண்ணரும் தீக்கோளங்கள்
திரிதரும் அண்டம் யாவும் தேவியுன் கருவே அன்றோ? திரிபுர சுந்தரீ! எந்தன்
திருக்கரு காவூர்த் தாயே!
தலையங்கம்
(நன்றி: தந்தி )
16 உயிர்களைப் பலிவாங்கியது போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதி. மலை ஏறுவதற்காக உற்சாகமாகச் சென்ற இளைஞர்களும், பெண்களும், குழந்தைகளும் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரை இழந்திருப்பது கொடுமையிலும் கொடுமை!
அரசு இயந்திரம் சரியில்லை, அனுமதி பெறவில்லை, தவறான பாதையில் சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் கூறுவதில் எந்தவிதப் பயனும் இல்லை.
காட்டு இலாக்கா தன் பொறுப்பை சரிவரச் செய்ய அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதரவேண்டும்.
உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் மட்டுமன்றி இழப்பீடும் தர அரசு முன்வர வேண்டும் !