Payanam | Scared | பய[ண]ம்

“Clueless Creations” ன் பய(ண)ம்! 

முதல் தரமான திகில் குறும்படம்!

அர்ஜுனனின் அபாரமான நடிப்பு! நல்ல ஒளிப்பதிவு! அளவான பின்னணி இசை! திறமையான இயக்கம்!

கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம்!  

(Click the above link to view the short film in youtube)

Payanam | Scared | பய[ண]ம்

Ponniyin Selvan (Tamil Historical Play)

1999ல் நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தைப் பற்றி youtubeல்  வெளியிட்ட காட்சித் தொகுப்பு!

(Click the above link to view the highlights of the play staged in 1999) 

Ponniyin Selvan (Tamil Historical Play)

ராஜராஜன் சோழன் உலா

image

சென்ற வார  முடிவில் …….

சிவாச்சாரியார் நடுநடுங்கி விட்டார். தனக்கு ஏன் இந்த விபரீத ஆசை வந்தது? இனி நம் கதி என்னாகுமோ என்று  தயங்கித்  தயங்கி அவர்கள் முன்வந்து கண்மூடி  கைகூப்பிநின்றார்.    

   ( தொடரும்)

இனி இந்த வாரம்   … .

image

அதற்குள் பெண்கள் வரிசையிலிருந்து செம்பியன்  மாதேவியார் முன்னால் வந்து, “ கவலைப்படாதீர்கள் சிவாச்சாரியரே! எம்பெருமானுக்கு தினமும் பூஜை செய்யும் உங்களை யாரும் ஒன்றும் செய்துவிட மாட்டார்கள் “ என்றார்.

சிவாச்சாரியாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

அப்போது வந்தியத்தேவன் குந்தவையின் காதில் ஏதோ ரகசியம் கூறுவது ராஜராஜன் கண்ணில் பட்டது.

“என்ன அக்கா! வந்தியத்தேவர் என்ன சொல்லுகிறார்? சத்தமாகத் தான் சொல்லட்டுமே! அனைவரும் கேட்போமே!”

வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “மன்னர் மன்னா! நீங்கள் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. இத்தனை பேர் இருக்க என்னைப் போய் நந்தியை நகர்த்தி சிவாச்சாரியாரை அழைத்து வரச் சொன்னீர்களே! இது நியாயமா? நந்திக்குப் பக்கத்தில் வந்தாலே என் கால் வெடவெடவென்று ஆடுவது உங்களுக்குத் தெரியுமா? – என்று கேட்டான்.

“ஏன் அப்படி?  நந்தியிடம் இவர் என்ன வாலை ஆட்டினார்?” – சிரித்துக்கொண்டே கேட்டாள் வானதி.

“குந்தவி நீயே சொல்லிவிடு! ஆயிரம் வருஷங்களாக நாம் கட்டிக் காத்த ரகசியம் இன்று சிவாச்சாரியாரால் உடையப் போகிறது – வந்தியத்தேவன் சொன்னான்.

அருண்மொழியும் அதற்கு மேலாக, “அப்படி என்ன ரகசியம் அக்கா எனக்குத் தெரியாமல்? சிதம்பர ரகசியத்தைவிட பெரியதாக இருக்கும் போல இருக்கே?” – சிரித்துக் கொண்டே கேட்டார்.

“சொல்லுங்கள் அத்தை!” ராஜேந்திரனும் சின்னக் குந்தவையும் கெஞ்சினார்கள்!

“பெரியதாக ஒன்றும் இல்லை தம்பி! எனக்கும் இவருக்கும் திருமணம் ஆன புதிதில் இலங்கைக்கு ஒரு மாதம் போய் விட்டு வரலாம் என்று கோடிக்கரைக்கு வந்தோம். அங்கே குழகர் ஆலயத்துக்குச் சென்று வந்தோம். அப்போது இவர் என்னை பயமுறுத்துவதற்காக அங்கிருந்த நந்திக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்! நான் பதறிப்போய் எல்லா இடத்திலும் தேடிக் காணாமல் கடைசியில் நந்தி தேவரை வேண்டிக் கொண்டு அவர் தலையில் கை வைத்தேன். நந்தி பகவான் என் வேண்டுகோளைக் கேட்டுப் பொத்தென்று கீழே விழுந்தார் – இவரது கால் கட்டை விரல் மேலே. அப்போது இவர் அலறிய ஆந்தை அலறல் இன்றும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து இவர் நந்தி கிட்டேயே போக மாட்டார். அப்படி ஒரு பயம். அந்த பயத்தைப் போக்கத்தான் தஞ்சைக் கோவிலில் ஒரு பெரிய நந்தியை வைக்கச் சொன்னேன்!”

image

"அதுதான் திருமணம்  ஆன புதிதில் வந்தியத்தேவர் கால் கட்டுப் போட்டுக்கொண்டுத்  திரிந்தாரா? ” – வானதியின் கேலி தொடர்ந்தது.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிவாச்சாரியாருக்கும் இவர்களின் உரையாடலைக் கேட்டு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் உணர்ந்தார்.

“மன்னர் மன்னா! தங்கள் சதயத் திருநாள் உலா பற்றிக் கர்ண பரம்பரையாகக் கதை ஒன்று இருந்து வந்தது. ஆனால் யாருக்கும் அது உண்மையா என்று பார்க்கத் துணிவு இல்லை. இன்று மாலையிலிருந்து ஓர் அமானுஷ்யக் குரல் ‘‘நடுநிசியில் கோவிலுக்குப் போ’  என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்த பிறகு தான் நான் பெற்ற பாக்கியம் புரிந்தது.”

image

“சிவபெருமானைத் தொட்டுத் தடவி அபிஷேகம் செய்து, அர்ச்சனை கூறி அலங்கரிக்கும் திருக்கரங்கள் அல்லவா தங்களுடையது! தங்களைக் காண்பதில் நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம். நீங்களும் எங்கள் உலாவில் கலந்து கொள்ளுங்கள்” என்றார் ராஜராஜன் .

‘நீர் தான் எனக்குச் சரியான தோழன்! என்று சிவாச்சாரியார் அருகில் வந்தார் மதுராந்தக உத்தம சோழன்! “ என்ன திகைக்கிறீர்? நானும் உம்மை மாதிரி சிவ கைங்கர்யம் செய்து நிம்மதியாக இருந்தேன்! அருண்மொழி என் கையில் செங்கோலைக் கொடுத்துவிட்டு ஓடி விட்டான். அதை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க எத்தனை வருடம் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?

வராகி அம்மன் சிலை அருகே உலா வந்ததும் அனைவரிடத்தும் கூச்சல் கும்மாளம். ‘இன்றைக்கு வந்தியத்தேவன் தான் முதலில்’ என்ற ராஜராஜனின் ஆலோசனையை வந்தியத்தேவன் மறுத்தான். “முடியவே முடியாது! நான் சுவற்றில் முட்டிக்  கொள்வதை நீங்கள் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்க வேண்டுமா?” என்று ஆவேசமாக மறுத்தான்.  

“சரி சரி பெண்கள் முதலில்” என்று குந்தவை சொன்னதும் அனைவரும் ஒப்புக் கொண்டனர். ‘அப்பாடா’ என்று வந்தியத்தேவன் பின்னால் ஓடிப் போனான்.

கருவூர் ஸ்வாமிகளே! நீங்கள் சொன்னபடிப்  போட்டி ஒன்று இங்கு வைப்போம்! கண்ணைக்  கட்டிக் கொண்டு கையில் பதும மலரை எடுத்துக் கொண்டு வராகி அம்மன் எதிரிலிருந்து பிராகாரத்தில் உள்ள ஐந்து முழப் பாதையில் அடி பிசகாமல் கோடியில் உள்ள துர்க்கை சிலை வரைக்கும் செல்ல வேண்டும். பாதை தவறி வந்தவர்கள் தோற்றவர்கள். வெற்றி பெற்றவருக்குப்  பதும மலர்! சரியா? என்று ராஜராஜன் வினவினார்.

“எல்லோரும் வெற்றி பெற்றுவிட்டால்?” – இது சின்னக் குந்தவையின் கேள்வி.

“யாருமே வெற்றிபெறாவிட்டால்?” – இது ராஜேந்திரனின் சந்தேகக் கேள்வி.

“எல்லாவற்றிற்கும் ஒரே பதில்! பதும மலர் சிவபெருமானின் திருவடியைச் சேரும்! அதற்கு சிவாச்சாரியார் உதவுவார்.” –என்றார் ராஜராஜன் .

image

அதற்குப் பின் நடந்த கண்கட்டு வித்தையைக் காணக் கண் கோடி வேண்டும். எவ்வளவு பெரிய மனிதர்கள் சிறு குழந்தை போல நடந்து பாதை விலகி அனைவரின் சிரிப்புக்கும் ஆளாகும் போது – சிவாச்சாரியார் தான் பெற்ற இப் பேற்றை  எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார்.

போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை. ராஜராஜன் கடைசி வரையில் சரியாக வந்து கொண்டிருந்தபோது வந்தியத்தேவன் ‘களுக்’ கென்று சிரித்ததால் தடுமாறித் தோல்வியுற்றார்.

“நான் போட்டியில் கலந்து கொள்ளலாமா?” என்று கேட்டுக் கொண்டு வந்தான் அப்பொழுது தான் உலாவில் கலந்துகொண்ட ஆதித்த கரிகாலன்.

“ஆஹா! வாருங்கள் அண்ணா! வாருங்கள்! பல ஆண்டுகள் வராமல் இருந்த தாங்கள் இந்த ஆண்டும் வரவில்லையோ என்று சற்று முன் தான் பேசிக் கொண்டிருந்தோம். தாங்கள் வந்து இந்த உலாவைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள்!” மனதார வரவேற்றார் ராஜராஜன்.

“இல்லை தம்பி! ஒவ்வொரு வருடமும் வரவேண்டும் என்று தான் நினைப்பேன்! ஆனால் ஏதோ ஓரு நினைவு தடுத்து விடுகிறது. இன்று தாமதமானாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓடோடி வந்தேன்!” என்றான் கரிகாலன்.

பதும மலரை வாங்கிக் கொண்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு சிங்க நடை போட்டு நடந்தான் ஆதித்த கரிகாலன். பதங்கள்  இம்மி பிசகவில்லை. நேராக வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல சரியாக இலக்கை அடைந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தார்கள்!

“எப்படி அண்ணா! உங்களால் வெற்றி பெற முடிந்தது? – ராஜராஜன் வினவினார்.

“எல்லாம் என் தோழன் வந்தியத்தேவன் கொடுத்த உபாயம் தான்.”

“ஆனால் அவர் தோற்று விட்டாரே!

“அவனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தான் தெரியும்! எனக்கு ஜெயிக்கத் தெரியும்”!

“சரி சரி! நானே சொல்லி விடுகிறேன்! கரிகாலரிடம் துர்க்கை அம்மன் சிலைக்குப் பின்னால் வீரபாண்டியன் ஒளிந்து இருக்கிறான் என்று சொன்னேன். அவ்வளவு தான். நேரே சென்று கொன்று விட்டார்.. இல்லை வென்று விட்டார். “

‘அருமை! அருமை! என்று அனைவரும் சிரித்தனர். அந்த சிரிப்பு அலை அறுந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது சிவாச்சாரியார் கேட்ட அடுத்த கேள்வி!

 (அடுத்த இதழில் முடியும்)

.

சில்மிஷம்

image

அவன்      ஓர்   ஆனந்த     ஊற்று
அவள்       ஓர்   சந்தனக்     காற்று
இருவர்       இடையில்   இடைவெளி ஏனோ ?
கரையது கடந்திட கடை திறமீனோ?

 
தடைகளை  அகற்று      படைகளை        ஏற்று
உடைகளை  மாற்று      மடைகளை        தூற்று
அடைமழை பொழிந்திட   இடை மட்டும்     நடுங்கிட
எடைகளும்  குறைந்திட  விடைகளும்       பிறந்திட
கயலது துள்ளிட வயலது பொங்கிட
துயிலது துஞ்சிட கடை திறமீனோ?

அவள்             ஓர்         அழகிய      பூச்செண்டு
அவன்            ஒரு        சீரிய        சில்வண்டு
இருவர்          இடையே    இழைந்திடும்   பொன்வண்டு
கருக்கல்       வரையில்  சில்மிஷம் தினம் உண்டு !!

https://www.tumblr.com/audio_file/kuvikam/85702282862/tumblr_n5d1qytM7w1sp6th0?plead=please-dont-download-this-or-our-lawyers-wont-let-us-host-audio

 எங்க அம்மா தங்க அம்மா 

( Click the Play Button to listen to the audio version of the poem) 

image

எங்க  அம்மா தங்க அம்மா – அது 
எங்க  அம்மா தங்க அம்மா  


இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள சட்னி தருவா
சட்டினி கூட சேர்த்து அவ சாம்பார் தருவா
சட்டினியும் சாம்பாரும் தீர்ந்து போனா
மொளகாப்பொடி எண்ணை ஊத்தித் தருவா
அது எங்க அம்மா தங்க அம்மா !

தொட்டிலில் கிடக்கும் போது பாலைத் தருவா
பட்டினி கிடக்கும் போது பாத்துத் தருவா
பருப்பு சோறும் பாலு சோறும் தீர்ந்து போனா
ரத்தத்தையே பாலாக ஊட்டி விடுவா 
 அது எங்க அம்மா தங்க அம்மா !

காலை முதல் மாலை வரை காத்துக் கிடப்பா 
நேரமானா கண்ணிரண்டும் பூத்துக் கிடப்பா
ரா முழுதும் நான் அழுதா தானும் அழுவா – அட
கண் முழிச்சு நான் சிரிச்சா தானும் சிரிப்பா
 அது எங்க அம்மா தங்க அம்மா !
  
சுரம் வந்து அவதிப் பட்டா ரொம்பத் துடிப்பா
பால் எடுத்து துணியில் ஒத்தி பத்துப் போடுவா
நான் எடுத்த வேலை யெல்லாம் வெற்றி பெறவே
எல்லா ஊரு கோயிலுக்கும் முடிச்சு போடுவா
அது எங்க அம்மா தங்க அம்மா !

மடியில் இட்டு முதுகில் தட்டிப் பாட்டுப் படிப்பா
இட்டுக்  கட்டி மெட்டுப் போட்டு ராகம் பிடிப்பா
சின்னச் சின்னக் கதையா கோடி சொல்லுவா
கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிக் கொள்ளுவா  
அது எங்க அம்மா தங்க அம்மா !

நல்ல சேதி சொல்லி வந்தா ஆரத்தி எடுப்பா
உப்பு மொளகாய் எடுத்து சுத்திப் போடுவா
தப்புத் தண்டா எதுவும் நானுஞ் செஞ்சா
அப்பா கிட்ட சொல்லாம மறைச்சிடுவா !
அது எங்க அம்மா தங்க அம்மா !!

ஓடி ஓடி ஓடாய்ப்போன அம்மாவுக்கு
கோடி கோடி கொடுத்தாலும் ஈடாகுமோ ?
அள்ளி அள்ளித் தந்தாளே  எங்க அம்மா  – அவளுக்கு
கொள்ளி மட்டும் வைச்சேனே இது  தகுமோ ?
 அது எங்க அம்மா தங்க அம்மா !

திருடன்

image

கடைசி பஸ். ஓடி வந்து ஏறினாள் நளினி.

அந்த டொண்டணக்கா பஸ்ஸில் ரெண்டு மீன்கார கிழவிகளைத் தவிர வேற யாரும் இல்லை. கண்டக்டரும் டிரைவரும் வயசானவர்கள்.

கொஞ்சம் திக்கென்றிருந்தது. டவுனுக்குப் போக ஒரு மணி நேரம் ஆகுமே என்று கவலைப் பட்டாள்.

போதாக்குறைக்கு அடுத்த ஸ்டாப்பில் தடியன் ஒருவன் ஏறினான். கண்ணெல்லாம் சிவந்து இருந்தது. அவ்வளவு இடம் இருக்க இவள் சீட்டுக்கு அடுத்த சீட்டில் உட்கார்ந்து அவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். பயந்து நடுங்கியபடி வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டாள் நளினி.

நல்ல வேளையாக அடுத்த ஸ்டாப்பில் வாட்ட சாட்டமா சரத்குமார் ஸ்டைலில் ஒருவன் ஏறினான். நளினிக்கு அப்பத் தான் மூச்சு வந்தது.

image

டவுன் அருகே வந்ததும் ’ இறங்குடா நாயே’ன்னு சொல்லி நாலு அறை  கொடுத்து இறக்கினான்.

குடிகாரன் மாதிரி இருந்தவன் இன்ஸ்பெக்டராம். டிப்டாப் பேர்வழி கற்பழிப்பு ஸ்பெஷலிஸ்ட்டாம்.

  நளினிக்கு ஆச்சரியம்! 

நிலவு பொழியும் இரவு – பவுர்ணமிக்குச் சிறப்பு!

சித்ரா பவுர்ணமிக்கு என்றுமே தனிச் சிறப்பு!!

ஸ்வாமிஜி

ஸ்வாமிஜி

image image

“….  ஆகவே மனித வாழ்க்கை நிலையற்றது. நமது கர்மங்களும் கிரியைகளும் தொடர்ந்து வரும். பகவானோட பாதார விந்தத்தைப் பணிந்தால் தான் மனசில் அமைதி உண்டாகும். அதுக்கு முதலில் ஆசையை  அடக்கணும். ஆசை தான் மனிதனின் மூலச் சத்துரு. ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் கேளுங்கோ! நான் சின்னப் பையனா இருக்கறச்சே கடலை உருண்டைன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அதைச் சாப்பிட்டால்  வயத்திலே வலியும் வரும். இருந்தாலும் அந்த ஆசையை விட  முடியலே. அதைத் தர மாட்டேன்னு சொன்னதுக்காகப்  பெத்த அம்மாவையே அருவாமணையால வெட்டப் போயிட்டேன். ஒரு சின்ன ஆசை எவ்வளவு பெரிய பாவச் செயலுக்கு…  “

“சாமிநாதன்.. என் சாமிநாதன்! “

கூட்டம் அவளைத் திரும்பிப் பார்த்தது. ‘ஏ  பாட்டியம்மா  சும்மா உட்காரு. “ அவள் உட்காரவில்லை. தட்டுத் தடுமாறி ஸ்வாமிஜி பிரசங்கம் செய்துகொண்டிருந்த மேடைக்கு அருகே சென்றாள்.

“சாமிநாதா! என்னைத் தெரியலையாடா?”  கிழவியின் குரலில் இருந்த வேகம் ஸ்வாமியைத் திரும்ப வைத்தது. “ யார் அந்த பைத்தியம் ஸ்வாமிஜி கிட்டே  தகராறு பண்ணறது? கிழவியை விரட்டு’ கூச்சல் எழுந்தது.

‘சற்று அமைதியாக இருங்கள்’ – ஸ்வாமிஜியின் கணீரென்ற குரல் அனைவரையும் அமைதிப்படுத்தியது. அம்மா! மேடைக்கு வா! நான் உன் சாமிநாதன் தான்’ என்றார். கண் தெரியாமல் கை கால் வெட வெடவென்று நடுங்கிக் கொண்டிருக்கும் அவளை  ஸ்வாமிகளே கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவளோ சுற்றுப்புறத்தை மறந்தாள்.

“சாமிநாதா! நீ செஞ்சது உனக்கே நல்லா இருக்காடா ? செல்லத்தையும் குழந்தையையும் அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டியேடா பாவி! “ அவளுக்கு மூச்சு இரைத்தது.ஆனால் அவள் வீசிய சொல்லம்பு மைக் வழியாக அனைவர்  காதிலும்  விழுந்தது. மறுபடியும் குழப்பம் ஏற்படும் போல இருந்தது. ஸ்வாமிஜி தன் ஒற்றைக் கரத்தாலே அனைவரையும் அடக்கினார்.

‘அம்மா! நீ சொன்னது சரி தான். என் மனைவியையும் குழந்தையையும் உன்னையும் விட்டுவிட்டு நான் போனது உண்மை தான். ஆனால் அது தான் விதி – கர்ம பலன். அதை நீயோ நானோ யாருமோ மாற்ற முடியாது. எல்லாம் அவன் செயல்! – ஸ்வாமி பெற்றவளுக்கு உபதேசம் செய்தார்.

“எதுடா அவன் செயல்? சோத்துக்கு வழி இல்லாம செல்லமும் குழந்தையும் துடிதுடிச்சுச்  செத்தாளே !அதுவா  அவன் செயல்? கை ஓடிஞ்சு போற அளவுக்கு ஹோட்டல்லே பாத்திரம் தேச்சு வயத்தைக்  கழுவிக்கிட்டு வர்ரேனே இதுவா அவன் செயல்? இல்லேடா! இதெல்லாம் உன் செயல். நீ ஒழுங்கா எங்களோட இருந்திருந்தா இந்த கதி எங்களுக்கு வருமா? நீ பொறந்த அன்னிக்கு கையையும் காலையும் உதைத்துக் கொண்டு  அழுத போது அவன் பாத்துப்பான்னு விட்டுட்டுப் போயிருந்தேன்னா தெரிஞ்சுருக்கும்!. உனக்கு மாந்தம் வந்தப்போ சுடற வெயில்லே உன்னைத் தூக்கிட்டு ஓடினேன் பாரு! உன்னை வளர்த்துப் பெரிய மனுஷனா ஆக்கினேன் பாரு! அதுக்குப் பலன் என்னை அனாதையா விட்டுட்டு ஓடினே! இது நியாயமா? இங்கே இருக்கிற அத்தனை பக்தர்களும் சொல்லுங்கோ! சொல்லுடா? சொல்லு! “

ஊழித்தீ வெடித்தது.

‘அம்மா! அம்மா!’ ஸ்வாமிகளின் கண்களில் கண்ணீர் பெருகியது. "நான் செய்தது தவறு தான். என் கடமையை விட்டுட்டுப் போனது மாபெரும் தவறு . அதுக்கு மன்னிப்பே கிடையாது. இப்பொழுதே அதற்குப் பரிகாரம்  தேடறேன்! இந்த நிமிடம் முதல் நான் ஸ்வாமிஜி இல்லை. வெறும் சாமிநாதன் தான். வா! அம்மா போகலாம்! “

நடந்தார்கள்!

இரண்டு

image

இரண்டு   மனம்    கேட்டான்    இதயக்  கவிஞன்  அன்று
இரண்டில் ஒன்று  கேட்டான்    இதயத்  திருடன் இன்று
இரண்டு     வரம்   கேட்டாள்    இதயமற்ற சித்தி
இரண்டு   கண்ணும்  தந்தான்  இதயமுள்ள வேடன்

உலகின்  வளர்ச்சி     ஒன்று  இரண்டாவது
உலகில்  சமன் செய்ய தேவை  இரண்டாவது

ஆண்  பெண்   இரண்டு  உடல்   உயிர்  இரண்டு
இன்பம் துன்பம்   இரண்டு   உயர்வு தாழ்வு  இரண்டு  
பிறப்பு  இறப்பு  இரண்டு  உறவு பகை  இரண்டு
வெற்றி தோல்வி  இரண்டு  உண்டு  இல்லை  இரண்டு
கொடுக்கல் வாங்கல்  இரண்டு நேர்  எதிர்  இரண்டு
உள்ளே வெளியே  இரண்டு மேலும் கீழும் இரண்டு
பரமன் பக்தன்  இரண்டு   இரவு பகல்  இரண்டு

கண்  இரண்டு  காது  இரண்டு    
கரம்  இரண்டு  கால்  இரண்டு
நாசி   இரண்டு  இதழ் இரண்டு
மூளை  இரண்டு  குடல் இரண்டு
கன்னம்  இரண்டு சிறுநீரகம் இரண்டு
தாடை இரண்டு நுரையீரல் இரண்டு 
தொடை இரண்டு குதம் இரண்டு 
தோள் இரண்டு பல்வரிசை இரண்டு 
விதை இரண்டு மார்பகம் இரண்டு 

இதுதான்

இரண்டின்   உருபும்      பயனும்
உடன்       தொக்கத்    தொகையோ ?

தலையிலே ஒரு குட்டு (கோவை சங்கர்)

தலையிலே ஒரு குட்டு (கோவை சங்கர்)

image

ஹெயின்ஸ் கொலையென்று வந்தது செய்தி
ஐயையோ அநியாயம் என்றேன்  கூவி
மதசார்பிலா  பண்பாளன் என்றே  கூறி
பரந்த முதுகிலே கிடைத்ததோர்   ஷொட்டு!

மஸ்ஜீத்  வீழ்ந்தநாள்  இந்தியருக்கு துக்கநாள்
கோபமாய் கோஷமிட்டு கொடிபிடித்த என்னிடம்
சபாஷ்  மகனேநீ  காட்டும்வழி  அன்புநெறி
களிப்போடு மகிழ்வோடு புகழாரம் சூட்டினரே!

கோத்ரா ரயிலினிலே பலியானர் இந்துக்கள்
கொடுமை கொடுமையென கூவிய என்னையே
மதவெறியன் சிறுபான்மை மக்களுக் கெதிரியென
கூறியே எந்தலையில் வைத்தனரே ஒரு குட்டு! 

image

ராஸ லீலை

 image

வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !
சத்திய வார்த்தை   இது  நித்தமும் நான் சொல்வேன் !
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !

எத்தனையோ பெண்களின்  மனத்தை மயக்கி விட்டு
அத்தனைக்   கண்களையும் நின்பாற்  ஈர்த்து விட்டு
சித்தினிப்   பெண்களின்  சித்தம் கலக்கி விட்டு
பத்தினிப்    பெண்களின்  பாதம்  பிறழ  விட்டு
மத்தினில் கடைந்த  தயிரென  மாற்றி
கத்தியின்றி  ரத்தமின்றி  மனதைப்  பறித்து விட்ட
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !

பத்தினில்  முத்தான  பரமன்  நீயன்றோ?
வித்தினில்  விளைந்த புத்தளிர்  போல
நெத்தியில் குறுவாய்  முத்தமும் பதித்தாய்
மத்தள  மனத்தினில் சத்தத்தை  எழுப்பி
சத்தினைப்  பிழிந்த  சக்கையாய்  மாற்றி
சத்தமின்றி  அத்துமீறி  என்னுள்  புகுந்து  விட்ட
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !

மெத்தென  யமுனை  மெத்தையில் கவிழ்த்து
வித்தைகள் யாவையும்  சுத்தமாய்ப்     பதித்து
சித்துக்கள்  பலசெய்து  தலைசுத்த   வைத்து
தித்திக்கத்  தித்திக்க  முத்தங்கள்  தந்தாய்
அத்துடன்  முடிந்திடும் கதை இது   இலையே !
பத்திரமாய்  சித்திரமாய்  வித்தினை   விதைத்து  விட்ட
வித்தகன்    நீ     ஒருத்தன்    தானே !