அட்டைப்படம் ஜனவரி 2021

குவிகம் மின்னிதழ் பற்றியும் அதன் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்ககளைப் பற்றியும் நிறைய  நண்பர்கள் வித்தியாசமான  கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். 

அவர்கள் கருத்துக்களை குவிகத்தில் விரைவில்  கொண்டுவர முயற்சிக்கிறேன். 

நன்றி -ஆசிரியர் 

உலக இதிகாசங்கள் 1 – முன்னுரை எஸ் எஸ்

இந்த இதழின் அட்டைப்படம் தயாரித்தவர் ஸ்ரீனி ராஜா!( நன்றி) 

மின்னிதழ் பற்றிய கருத்தரங்கில் வந்த  முதல் ஆலோசனை அட்டைப்படத்தை சிறப்பாக வடிவமைப்பது. 

அதன்படி இந்த இதழின் முக்கியக் கட்டுரையான உலக இதிகாசங்கள் தொடரை விளக்குவதுபோல அமைந்திருக்கிறது அட்டைப்படம் 

இனி தரமான சிறப்பான அட்டைப்படம் தொடர்ந்து வரும். 

 

Arjuna–Odysseus: Shared Heritage in Indian and Greek Epic - 1st EditBiography of Helen of Troy, Cause of the Trojan War10 International Epics Better than the IliadKalamour - Arabian Mythology (psytrance) free download by Kalamour vj

திகாசம் என்பது ஒரு நாட்டின் அடையாளச் சின்னம்.

அது சரி! இதிகாசம் என்பது எது?

ஒரு நாட்டின் அல்லது இனத்தின் செவி வழியாக வந்த பண்டைய நிகழ்வுகளை – குறிப்பாக கதையின் நாயகனின் வீரதீர சாகசச்  செயல்கள்   மூலம் விவரிக்கும் பெரிய பாடல்கள் நிறைந்த காவியம் இதிகாசம் ஆகும்.

பல சிறு கதைகளைக் கொண்ட பெரிய கதை. அதை ஒருவரே எழுதியிருக்கலாம். அல்லது பலர் சேர்ந்து அமைத்திருக்கலாம்.

பாடல்கள் அவற்றின் முக்கிய அம்சம்.

இதிகாசங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன.

அவை மனிதர்களின் மனத்திலிருந்து உதித்தவை என்பதில் ஐயமில்லை.

எப்படி அவர்கள் மனத்தில் இப்படி நம்ப இயலாத நிகழ்ச்சிகள் எல்லாம் தோன்றியிருக்கும்? இன்று நாம் படிக்கும் 

மனோதத்துவ நிபுணர் பிராய்டின் தத்துவத்தைக் கொண்டு  இதை  ஒருவர் விளக்க முயலுகிறார்.

மனதின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள நினைவுகளற்ற தொல்பொருள்களின் கூட்டுக் கலவையிலிருந்து வெளிப்படும் கற்பனைகளும், கதைகளும் தான் இதிகாசங்களாகின்றன என்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் மனத்தில் பதிந்த ஆழ்ந்த பழமையான நம்பிக்கைகளும் எண்ணங்களும்தான்  மந்திர தந்திரங்களாக மதங்களாக உருவெடுக்கின்றன.  பின்னர் அவை சொற்களில் வரும்போது இதிகாசங்களாக மாறுகின்றன என்று அவர்கள் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

இதனால் இதிகாசங்கள் என்பவை வெறும் கட்டுக்கதைகள் என்ற தவறான வரைமுறைக்குச் சென்றுவிடக்கூடும்.

அதீதமான கற்பனைகளுடன் பகுத்தறிவும் கலந்து படைத்தவையே இதிகாசங்கள் என்பது  ஆராய்ந்து அறிந்த அறிஞர்களின் கூற்று .

பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை ஆராய்ந்து அதன் மூலம் இதிகாசங்களின் மூலக்ககூற்றை வரையறுப்பது ஒரு வகை.

சமூக மானிடவியலை ஆராய்வது இரண்டாவது வகை. இதன்படி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கதைகளுடன் சேர்த்து ஆராய்வது முக்கியமாகிறது.

ஆனால் இவை எல்லவற்றையும்விட  இந்த தொன்மக் கதைகள் எல்லாம் மனித இனம் தங்கள்  அனுபவங்களின் துணை கொண்டு வெளிப்படுத்திய எறிகாட்சி என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.  அதாவது, மனிதன் தான் பெற்ற மற்றும் கற்ற அனுபவங்களை பெரிதுபடுத்தி நீட்டிப் பார்க்கும் (PROJECTIONS) முயற்சியின் விளைவே இதிகாசம் என்பது இவர்கள் வாதம்.  

இந்த முன்னுரையுடன் இதிகாசம் என்ற இலக்கிய வடிவின் குணங்களைப் பார்ப்போம்.

 1. இதிகாசம் என்பது நடுவில் ஆரம்பிக்கவேண்டும். அதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கதையின் போக்கில் பிறகு சொல்லலாம்.
 2. பல நாடுகள், உலகங்கள் கதையின் ஊடே வரவேண்டும்.
 3. துவக்கத்தில் கடவுளின் துதி இருக்கவேண்டும்.
 4. காவியத்தின் கருத்தை முன்னுரையாகச் சொல்ல வேண்டும்.
 5. கதை மாந்தர்களின் பட்டப்பெயர்களைச்ச சேர்த்துக் குறிப்பிடவேண்டும்.
 6. நீண்ட பேச்சுக்கள் இருக்கவேண்டும்.
 7. மனித முயற்சிக்கு கடவுள்  துணை வருதல் அவசியம்
 8. கதை நாயகன் அன்றைய நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்
 9. கதை நாயகன் வீர தீர செயல்கள் புரியவேண்டும்.
 10. தவறு இழைத்த முக்கிய கதை மாந்தர் கதை முடிவில் நரகத்திற்கோ பாதாள உலகத்திற்கோ செல்லவேண்டும்

நம் இந்தியாவில் ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள்  என்று போற்றப்படுகின்றன

உலகத்தின் மிகப் பிரபலமான  இதிகாசங்கள் என்று குறிப்பிடுபவை

 1. சுமேரியர்களின் கில்கமேஷ்
 2. ஹோமரின் இலியட்
 3. ஹோமரின் ஆடிஸி
 4. வால்மீகியின் ராமாயணம்
 5. வியாசரின் மகாபாரதம்
 6. வர்ஜிலின் ஏனிட்
 7. ஓவிட்டின் மெடமார்பசிஸ்
 8. ஃபிர்டௌசி
 9. பியோ உல்ஃப்   
 10. அரியோஸ்டோ வின் அர்லான்டோ

இவை தவிர நூற்றுக் கணக்கான இதிகாசங்கள் பல்வேறு நாடுகளில்  இனங்களில் கலாசாரங்களை விளக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகள்(எகிப்து),

தென்மேற்கு நாடுகள் ( பெர்ஷியா, அராபியா  ),

கிழக்கு ஆசியா ( கொரியா, துருக்கி, ஈராக்), தெற்கு ஆசியா ( இந்தியா,இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பர்மா),

ஐரோப்பா ( ரோமர்கள்,கிரேக்கர்கள், ஸ்பானிஷ், இங்கிலாந்து, ஐரிஷ், ஜெர்மனி)  

இப்படி எண்ணற்ற நாடுகள் தங்கள்  கலாசாரங்கள்  பிரதிபலிக்கும்படி பல இதிகாசங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. 

இவற்றுள் ஒரு மாபெரும் அதிசயம் என்னவென்றால் பல நாடுகளில் பவனிவரும் அந்த இதிகாசங்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன.

பிரளயம் பற்றி எல்லா இதிகாசங்களும் கூறுகின்றன.  நோவாவின் படகு –  மச்ச அவதாரம், மன்மதன் – குபிட் (CUPID), சீதையை இராவணன் கடத்துதல் – ஹெலன் பாரிஸால் கடத்தப்படல் , தேவர்களுக்கிடையே போட்டி, பொறாமை இப்படி  எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கின்றன.

மனிதர்கள் உலகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்திருப்பார்கள் என்ற தத்துவத்தை இது மெய்ப்பிக்கிறதோ? அப்படிப் புலம் பெயரும்போது தங்களுடன் இருந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றார்களா?  பின்னர் அந்தந்த நாடுகளுக்குத் தக்கவாறு அவை மாற்றி அமைக்கப்பட்டனவா?  இதிகாசங்கள் உண்மையில் நடந்தனவா? அதற்கு ஆதாரங்கள் உண்டா? இன்றைக்குக் கணிக்கவே கடினமாக இருக்கும் வானவியல் கூற்றுக்களை அவர்கள் அநாயசமாகச்  சொல்லுகிறார்களே, எப்படி? நிலம்,  நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற மூலப் பொருட்களையும், கிரகங்களையும்,  கடவுளராக மாற்றியது  ஏன்?  பயத்தினாலா ?

 உலகின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இவற்றையெல்லாம்  ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். 

(சமீபத்திய செய்தி:  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள ராமர் சேது பாலம்  தோன்றிய காலத்தை நமது ஏ எஸ் ஐ,  விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராயப்போகிறது) 

அவை என்னென்ன என்பதையும் பல நாடுகளின் இதிகாசக்  கதைகளையும் இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

நமது முன்னோர்களின் அனுபவங்களையும் கதை சொல்லும் திறனையும் நாம் வியந்து பாராட்டுவோம் என்பதில் சந்தேகமில்லை. 

படிக்கும்போதே நமக்கும் சிறகு முளைப்பது போன்ற அனுபவம் வரலாம். 

பயணத்திற்கு நீங்கள் தயாரா?

(தொடரும்)

(Ref : The Indian Theogony by Sukumari Bhattacharji)

தாயுமானவள் – யார் அவள்? – கிரிஜா

மகளின் `க்யூட்' மீசை! - குட்டி ஸ்டோரி #MyVikatan | Father shares about his daughter's candid moment in a short story

 

பச்சிளம் பருவத்தில் இன்னுமொரு தாயுமானவள்

பால்மணம் மாறாப்  பருவத்தில்  கதைகள்பல  கூறியவள்

பிள்ளைப் பிராயத்தில்  என்னுடன் பாண்டியாடினவள்

பள்ளிப் பருவத்திலே என்னுடன் பல்லாங்குழி ஆடினவள்

கல்லூரிநாட்களில்  என் எண்ணங்களுக்குக்  காவலாய் இருந்தவள்

தோளுக்குமேல் வளர்ந்த எனக்குத் தோழியுமானவள்

மணமான பொழுதில் மணியான யோசனைகள் கூறியவள்

இப்படிப் பல்வேறு முகங்களைக் கொண்டவள்

யார் அவள்?

வேறு யாருமில்லை

?

?

?

?

?

?

?

?

?

?

?

என் பாட்டிதான்!!!

ஹலோ...பாட்டியம்மா!- Dinamani

 

 

குவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா

 

vaikom muhammad basheer drawing with pastel color - YouTube

நீல வெளிச்சம்

மூலம் :  வைக்கம் முகமது பஷீர் [1908 –1994 ]

ஆங்கிலம் : மினிஸ்தி நாயர் [ Ministhy Nair]

தமிழில் : தி.இரா.மீனா

 

( இந்தச் சிறுகதையின் அடிப்படையில் பஷீர் அவர்களே திரைக்கதை எழுதி பிரேம் நசீர் , மது, விஜயநிர்மலா நடித்த ‘பார்கவி நிலையம்’ என்ற மலையாளப் படத்தை ஏ வின்சென்ட் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்)

Bhargavi Nilayam | Ekanthathayude song - YouTube

அந்த நாளையோ, மாதத்தையோ, வருடத்தையோ சொல்ல வேண்டியதில்லை. நான் ஒரு வீடு தேடிக் கொண்டிருந்தேன். அது ஒரு புதிய விஷயமல்ல. நான் எப்போதும் அந்த ஒரு தேடலில் இருந்திருக்கிறேன். ஒரு வீடு அல்லது அறை என்பது எனக்கு எப்போதும் திருப்தி தந்ததில்லை.அதில் முடிவில்லாத குற்றங்களைக் கண்டு பிடிப்பதிலேயே இருப்பேன். ’உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் விட்டுவிடுங்கள்!” ஆனால் நான் எங்கே போவது? நான் யாரிடம் இதைச் சொல்லமுடியும்.

நான் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு அதைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.பல வீடுகளும், அறைகளும் என் குறைகளுக்குப் பலியானவை. அது யாருடைய தவறுமல்ல.எனக்குப் பிடிக்காவிட்டால் காலி செய்வேன். யாருக்குப் பிடிக்கிறதோ அவர்கள் குடி வருவார்கள்.வாடகை வீட்டின் சரித்திரம் இந்தமாதிரி ஒடிக்கொண்டிருந்தது.

வீடுகள் கண்டுபிடிப்பதென்பது கடுமையானதாக இருந்த ஒரு காலம் அது.நல்ல இடத்திற்கு அதிக விலை தரவேண்டும்.இதில் உயர்வு, தாழ்வுமுண்டு.நான் ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன்.

நெரிசலான நகர்ப் பகுதியிலிருந்து விலகி, நகராட்சி எல்லை யில் இருந்த ஒரு சிறிய பங்களா– பார்கவி நிலையம்.’வீடு வாடகைக்கு’ என்று கதவில் ஒரு பழைய பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

மிகப் பழமையானதாக இருந்தாலும், அந்த வீடு என்னைக் கவர்ந்தது.என்னால் அந்த வீட்டில் இருக்கமுடியுமென நான் முடிவு செய்தேன். அடித்தளத்தில் நான்கு அறைகளும்,சமையலறையும்,குளியலறையுமிருந்தன. முதல் மாடியில் ஒரு முகப்பும், இரண்டு அறைகளுமிருந்தன. குழாய் வசதியிருந்தது.ஆனால் மின்சாரமில்லை.

சமையலறையருகே அருகே ஒரு பழைய கல் கிணறும்,ஓரத்தில் கழிவறையு மிருந்தது. வீட்டின் நான்கு பகுதிகளையும் இணைப்பதான ஒரு சுவர், பொதுச் சாலையின் அருகிலிருந்தது.

எப்படி அதுவரை யாரும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர வில்லையென்று எனக்கு மகிழ்ச்சியுடனான ஆச்சர்யம். துருவிப் பார்க்கிற கண்களிலிருந்து மறைக்கப்பட வேண்டிய ஒரு பெண் அது என்று எனக்குத் தோன்றியது.அவளை நான் புர்கா போட்டு மறைக்க வேண்டும்.

பணம் திரட்டுவதில் மும்முரமாக இருந்தேன்.இரண்டு மாத வாடகையை முன் பணமாகக் கொடுத்துவிட்டு வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டேன்.வீட்டைக் காலி செய்துவிட்டு மேல் மாடியில் குடியேறி விட்டேன்.என்னுடைய சாமான்களைத் தூக்கி வந்த கூலியாட்கள் அந்த இடத்தைப் பார்த்து பயந்து உள்ளே வராமல் கதவுக்கு வெளியே சாமான்களை வைத்துவிட்டுப் போய்விட்டனர்.

நான் குளியலறை உட்பட எல்லா அறைகளையும் பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தேன். எங்கும் ஏராளமான புழுதி படர்ந்திருந்தது. சுத்தம் செய்து கொண்டிருந்த போது பூட்டப்பட்டிருந்த ஓர் அறையைப் பார்த்து விட்டுக், குளிக்கப் போய் விட்டேன்.மிக லேசாக உணர்ந்தவனாக, கிணற்றைச் சுற்றி தடுப்பாக எழுப்பப்பட்டிருந்த கல்லில் உட்கார்ந்தேன். பரவசமாக இருந்தேன்.முடிவற்ற கனவுகள் காணலாம். பசுமையான காம்பவுண்டைச் சுற்றி ஓடலாம்.எனக்காக ஓர் அழகான தோட்டத்தை அமைக்கத் திட்டமிட்டேன்.அங்கு முழுவதுமாக ரோஜாப் பூக்கள் இருக்க வேண்டும். மல்லிகையும் தான்!

ஒரு சமையல்காரரை வேலைக்கு வைக்கலாமா என்று யோசித்துப் பின் வேண்டாமென முடிவு செய்தேன்.சிற்றுண்டி முடித்து விட்டுவரும் போது, பிளாஸ்கில் தேநீர் வாங்கி வந்து விடுவேன்.ஹோட்டலில் மதியவுணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அவர்களே இரவு உணவையும் அனுப்பலாம். தபால்காரரிடம் என் புதிய முகவரி குறித்துப் பேசவேண்டும்.

மற்றவர்களிடம் நான் இருக்கும் இடம் பற்றிச் சொல்லி விடக்கூடாதென்று எச்சரிக்க வேண்டும். அருமையான இரவுகளும், பேரானந்தமான பகல் பொழுதுகளும் எனக்காகக் காத்திருக்கின்றன! என்னால் எழுதிக் குவிக்க முடியும்.

மேலே சொன்னது போல பலவித எண்ணங்களில் ஆழ்ந்திருந்த நான்  கிணற்றுக்குள் வெறித்தேன். உள்ளே தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை; புதர் மண்டிக் கிடந்தது.நான் ஒரு கல்லை உள்ளே போட்டேன்.

ப்ளம்ம்ம்..ஒரு பெரிய எதிரொலி! உள்ளே தண்ணீரிருக்கிறது. அது காலை பதினோருமணி. முந்தைய நாளிரவு நான் தூங்கவேயில்லை. ஹோட்டலைக் காலி செய்து,வீட்டு சொந்தக்காரரைப் பார்த்து விட்டு, கட்டில், அலமாரி, நாற்காலி ஆவணங்கள், கிராமபோன், ரிக்கார்டுகள், என்று என் உடைமைகளை கவனமாகக் கட்டிவைத்தேன். விடியுமுன்பே புது வீட்டிற்குப் புறப்பட்டு விட்டேன்.

புது வீட்டின் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு,முன் கதவைப் பூட்டினேன். சாவியைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, சாலையில் சிறிது உலாவினேன். புது வீட்டில் எந்தப் பாடலைக் கொண்டு இரவுப் பொழுதை ஆரம்பிப்பது என்று யோசித்தேன். ஆங்கிலம்,அரேபியம், உருது, இந்தி,தமிழ்,வங்காளம் என்று நூற்றுக்கணக்கான பிரபல பாடகர்களின் இசைத்தட்டுக்கள் என்னிடமிருந்தன. மலையாள மொழி இசைத் தட்டுக்கள் என்னிடமில்லை. இசை வழிமுறைகள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை.

இப்போது புதிய டைரக்டர்களும், பாடகர்களும் அறிமுகமாகிக் கொண்டிருக் கின்றனர். மலையாளத்திலும் இசைத்தட்டுக்கள் வாங்க முடிவு செய்தேன்.

யார் பாடலை முதலில் கேட்பது? பங்கஜ் மாலிக்?திலிப் குமார் ராய்? சைகல்? பால் ராப்சன் ?அப்துல் கரீம்கான் ?கனன்தேவி ?குமாரி மம்ஜு தாஸ்குப்தா? குர்ஷித்? ஜோதி காரே? எம்.எஸ்.சுப்புலட்சுமி ?சில பெயர்களை மனதில் புரட்டிப் பார்த்தேன். ’தூர் தேஷ்கே ரெகனே வாலே’ என்றொரு பாடல்…பெண்? எனக்கு நினைவிலில்லை. திரும்பிய பிறகு பார்த்துக் கொள்ளலாம். தோளைக் குலுக்கிக் கொண்டேன்.

தபால்காரரைச் சந்தித்து என் முகவரியைச் சொன்ன போது அவர் திகிலடைந்தார். “ஓ…கடவுளே! சார்..அந்த வீட்டில் ஓர் அசாதாரணமான மரணம் நிகழ்ந்தது…அதனால்தான் இதுவரை யாரும் குடிவரவில்லை”

“அசாதாரண மரணமா? “நான் ஒரு கணம் திணறிவிட்டு அந்தச்சம்பவம் பற்றி விசாரித்தேன்.

“முற்றத்தில் ஒரு கிணறு இருக்கிறது…அதில் யாரோ ஒருவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.அதற்குப் பிறகு அந்த வீட்டில் அமைதியே யில்லை. பலர் வாடகைக்கு வர முயன்றனர். இரவில் கதவுகள் தானாகவே அடித்து மோதிக் கொள்ளும்…தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும்..

இரவில் கதவுகள் தானாகவே அடித்து மோதிக் கொள்ளும்! தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும் !தண்ணீர்க் குழாய்கள் பூட்டியிருந்ததைக் கவனித்திருந்தேன். வெளி மனிதர்கள் அதன் பயன்பாட்டைத் தவிர்க்க பூட்டியிருப்பதாக, வீட்டுச் சொந்தக்காரர் சொன்னார். குளியலறைக் குழாய்கள் பூட்டப்பட்டிருப்பதற்கான தேவை எனக்குப் புரியவில்லை.

“இரவில் யாரோ வந்து மூச்சுத் திணற வைப்பது போலிருக்கும். யாரும் உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா ?” அவர் சொல்லிக் கொண்டே போனார்.

நான் மிரண்டு போனேன்.” ஐயோ ,இரண்டு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்து விட்டேனே ’என்று நினைத்தேன்.” அது ஒன்றும் பெரிதல்ல, ஒன்றிரண்டு மாய மந்திரங்கள் செய்தால் சரியாகிவிடும். என் கடிதங்கள் அந்த முகவரிக்கு வந்து சேரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று பதில் சொன்னேன்.

தைரியமாகப் பேசினேன். நான் ஒருகதாநாயகனோ ,கோழையோ இல்லை. மற்றவர்களை எது பயமுறுத்துமோ அது என்னையும் பயமுறுத்தும். நீங்கள் என்னை கோழை என்று அனுமானிக்கலாம். என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

நான் மிக மெதுவாக நடந்தேன். வேண்டுமென்பதற்காக நான் அனுபவத்தைப் பின் தொடர்வதில்லை.ஆனால் அனுபவம் என்னை நோக்கி ஓடி வந்தால் என்ன செய்ய முடியும் ?என்ன நடக்கப் போகிறதென்று தெரியவில்லை.

ஹோட்டலுக்குப் போய்த் தேநீர் குடித்தேன். பசி செத்துப் போனது. வயிறு அக்னியானது…பயமெனும் கலவரம்.. மதிய உணவை அனுப்புவதற்காக என் வீட்டு முகவரியை ஹோட்டல் மேனஜரிடம் சொன்னேன். பகல் பொழுதில் உணவை அனுப்பி வைக்க எந்தக் கஷ்டமுமில்லை.ஆனால் இரவில் யாரும் ரமாட்டார்கள். ஒரு பெண் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். அவள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமில்லையா சார் ?” என்றார்.

என் நடுக்கத்தில் பாதி குறைந்தது. ஓ.. அது ஒரு பெண்! “எனக்கு கவலையில்லை. தவிர எனக்கு மாயமந்திரங்கள் தெரியும்” .

எனக்கு மாய மந்திரங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பெண் பேய் என்று தெரிந்ததும் நிம்மதி. அவள் சிறிது நட்பிணக்கமானவளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். அருகிலுள்ள வங்கியில் பணிபுரியும் என் நண்பர்களில் சிலரைச் சந்தித்தேன். என் புதிய வீடு பற்றிக் கேள்விப்பட்டதும் கோபமடைந்தனர்.

“என்ன முட்டாள்தனம் !அது பேய் வாழுமிடம்.குறிப்பாக ஆண்கள் தான் அதன் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவர்கள்.”

ஓ ! அவள் ஆண்களை வெறுத்தவள். அப்படியா ? “பார்கவி நிலையத்தில் குடியேறுவதற்கு முன்னால் எங்களிடம் ஏன் எதுவும் கேட்கவில்லை ?”

“அப்படி ஒரு கதை இருக்குமென்றே எனக்குத் தெரியாது. ஏன் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்?”

“காதல்தான். இருபத்தியோரு வயதான பார்கவி பி.ஏ.படித்தவள். ஆழமாகக் காதலித்தவளை ஒதுக்கிவிட்டு அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான்.அவள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.”

என் பயத்தின் எல்லை குறைந்தது.ஓ..ஆண்களை அவள் வெறுக்கக் காரணம் அந்த இரகசியம்தான் .

“பார்கவி என்னைத் துன்புறுத்த மாட்டாள் “.
“ஏன் ?”
“மந்திரம்,மந்திரம் “
“பார்க்கலாம். இரவில் அங்கிருந்து அலறத்தான் போகிறாய். “

எனக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை.வீட்டிற்குத் திரும்பிய பிறகு கதவுகள், ஜன்னல்களை எல்லாவறையும் திறந்து வைத்து விட்டு கிணற்றை நோக்கிப் போனேன்.

“பார்கவிக் குட்டி, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். நான் புதிதாகக் குடி வந்திருப்பவன்.என் அபிப்பிராயத்தில், நான் நல்லவன், நித்திய பிரம்மாசாரியும் கூட.ஏற்கெனவே உன்னைப் பற்றி அவதூறான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.இரவில் குழாய்களைத் திறந்தும்,கதவுகளை மூடியும்,மனிதர்களின் குரல்வளையை நெறித்தும்..நீ மனிதர்களை இங்கே வசிக்கவே விடுவதில்லையாம்.ஏற்கெனவே முன்பணமாக இரண்டு மாத வாடகையைக் கொடுத்து விட்டேன்.நான் என்ன செய்யவேண்டும்? என்னிடம் பணமும் அதிகமில்லை.உன்னுடைய பெயரில் இருக்கிற இந்த வீடு பார்கவி நிலையம் எனக்குப் பிடித்திருக்கிறது.”

“நான் இங்குதான் வேலை பார்க்க வேண்டும்..நான் கதைகள் எழுதுவேன்.உனக்குக் கதைகள் பிடிக்குமா பார்கவி?நான் எல்லாக் கதைகளையும் உனக்குச் சத்தமாகப் படித்துக் காட்டுகிறேன். உன்னுடன் சண்டை போடவென்று எனக்கு எதுவுமில்லை. முன்பு இங்கு வந்தபோது ஒரு கல்லை கிணற்றுக்குள் போட்டேன். அது யோசிக்காமல் செய்தது.எதிர்காலத்தில் அது மாதிரி செய்ய மாட்டேன்.என்னிடம் அற்புதமான கிராம்போன் பெட்டி இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களுமிருக்கின்றன. உனக்குப் பாடல்கள் பிடிக்குமா பார்கவி?”

இதையெல்லாம் பேசி முடித்து விட்டு அமைதியாக உட்கார்ந்தேன். நான் யாரிடம் பேசினேன் ?எல்லாவற்றையும் விழுங்க வாயைப் பிளந்து கொண்டிருக்கும் கிணற்றிடமா ?மரங்கள்,வீடு, சூழ்நிலை, பூமி, ஆகாயம், அல்லது உலகம் என்று யாரிடம் பேசினேன்? என் மனதுக்குள்ளிருந்த கலக்கத்திடம் பேசினேனா ?உள்ளத்தோடுதான் பேசிக்கொண்டிருந்தேன் என்று முடிவு செய்தேன்.

(மீதி அடுத்த இதழில்)

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020

 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020

 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020

 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020

 5. எனது நாடு – செப்டம்பர் 2020

 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020

 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020

 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020

 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020

 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020

 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020

 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020                          
 ஜன கண மண !

ஜன கண  மண  என்றாலே
எழுந்து நிற்பேன் நான் !
எழுந்து நின்று நானும் சேர்ந்து
கூடப் பாடிடுவேன் !

ஜன கண  மண  என்பதே
எம் தேசிய கீதம் !
இந்தியாவை ஒன்று சேர்க்கும்
இனிய சங்கீதம் !

ஜன கண  மண  என்று சொன்னால்
வீரம் பொங்குமே !
நாடி நரம்பு எல்லாம் எனக்கு
சிலிர்த்திடும் எங்குமே !

ஆங்கிலேயர் எமை ஆண்ட
இருண்டது அந்நாள் !
எங்கள் நாடும் அடிமையாக
இருந்தது அந்நாள் !

காந்தி பின்னே அணி வகுத்து
சுதந்திரம் பெற்றோம் !
வீரர் பலர் ரத்தம் சிந்தி
விடுதலை பெற்றோம் !

இமயம் முதல் குமரி வரை
எங்கள் நாடே !
வங்கம் முதல் பெங்களூரும்
எங்கள் வீடே !

எங்கள் நாட்டை என்றும் நாங்கள்
போற்றியே காப்போம் !
ஜன கண  மண  ! ஜன கண  மண  !
பாடி நிற்போமே !


ஊருக்குப் போகலாமா ?

அடுத்த விடுமுறைக்கு
எந்த ஊர் போகலாம் ?
எத்தனையோ ஊர்களிலே
எத்தனையோ உறவெனக்கு !

மதுரை பெரியம்மா எனக்கு
மல்லிகைப் பூ கொடுத்தாங்க !
மயிலாப்பூர் பாட்டி எனக்கு
மைசூர் பாக் கொடுத்தாங்க !


திருநெல்வேலி தாத்தா எனக்கு
தட்டை முறுக்கு கொடுத்தாங்க !
பங்களூர் பாட்டி எனக்கு
சட்டை தைத்துக் கொடுத்தாங்க !

வேலூர் சித்தி என்னை
வெளியே கூட்டி செல்வாங்க !
பங்களூர் பெரியப்பா எனக்கு
பன் பிஸ்கட் தந்தாங்க !

திருச்சி போனா அத்தை வீட்டில்
திகட்டும் போளி தருவாங்க !
திண்டுக்கல்லு மாமா வீட்டில்
தினுசு தினுசா தருவாங்க !

எனக்குன்னு உறவு முறை

எத்தனையோ உண்டுங்க !
உங்களையும் கூட்டிப் போறேன் !
கூட நீங்கள் வந்திடலாம் !


 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

மூன்றாம் நந்திவர்மன் அல்லது

கழற்சிங்கனார்

(கி பி 847-869)

Nandivarman High Resolution Stock Photography and Images - Alamy

 

சென்ற நூற்றாண்டில் தமிழ்ப் புதினங்கள் வர ஆரம்பித்த காலம்.
ஒரு நாவலுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பது என்பது அன்று சாதாரணமாக இருந்தது.

‘சோமசுந்தரம் அல்லது தோலிருக்க சுளை முழுங்கி’ – என்ற என்ற வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை யாராவது படித்திருந்தால் ‘கையைத் தூக்கவும்! (சரி.. கை தூக்கியவர்களின் வயதை நான் துல்லியமாகக் கணித்துவிட்டேன்!).

அது போல் இன்றைய நமது கதை இன்று இரண்டு தலைப்புகளுடனும் வருகிறது.
தந்திவர்மனுக்குப் பிறகு மூன்றாம் நந்திவர்மன் அரசு கட்டிலில் ஏறினான்.

தந்தையின் இறுதிக்காலத்தில் காஞ்சியை மீட்ட நந்திவர்மன் – தந்தை அடைந்த தோல்விகளுக்குப் பரிகாரம் செய்யத் துணிந்தான்.

நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களுடனும், கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு சீவல்லபன் தலைமையிலான பாண்டிய மற்றும் சோழர் கூட்டுப் படையை திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் எதிர்கொண்டு தோற்கடித்தான். இதன் மூலம் ‘தெள்ளாறெறிந்த நந்திவர்மன்’ என்ற சிறப்புப் பெயரையும், பெரும் புகழையும் பெற்றான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு அப்போதைய பாண்டிய நாட்டு எல்லையான வைகையாறு வரை விரட்டிச் சென்றான். சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.

தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் (குடமூக்கு) தோற்கடிக்கவும் செய்தான். சரித்திரத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜமப்பா!

தெள்ளாறு தமிழக சரித்திரத்தை இரண்டு முறை புரட்டிப் போட்டுள்ளது.
பின்னாளில் சோழர்களது இறுதிகாலத்தை உறுதிப்படுத்தியதும் இந்தப் போர்க்களமே! இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களுக்குப் பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேளை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்ககக்கூடும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் ! தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் ஒரு வேளை (பின்னாளில்) காடவர்களுடன் நடந்த இரண்டாவது போரில் சோழன் வென்றிருந்தால்? அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை மேண்டும் சில நூற்றாண்டுகள் ஆண்டிருக்கக்கூடும்! 
யாரோ அறிவர்!

தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்ற நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது ‘ நந்திக் கலம்பகம்’.
இதுவே முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.

இது நந்திவர்மனது போர் , வெற்றி, வீரம், கொடை, கல்வி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுகிறது.

நந்திக்கலம்பகத்தைப் பற்றிய கதை பற்றி சற்று கதைப்போம்.:

நந்திவர்மனின் தந்தை தந்திவர்மனுக்குப் பட்டத்தரசிகள் நால்வர். நால்வர்க்கும் நான்கு ஆண் மக்கள். தந்திவர்மன் இறந்தபின்பு நந்திவர்மன் , தனது பேராற்றலால் பல்லவப் பேரரசைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். அதனை ஏற்றுக் கொள்ளாத உடன் பிறப்புகள், நந்திவர்மனை எவ்வழிகளிலாவது கவிழ்க்க வேண்டும்! அல்லது கொன்றுவிட வேண்டும்! என்று , சூழ்ச்சி செய்தனர். ஒன்றும் பலிக்க வில்லை! அந்த சூழ்ச்சியின் விளைவால் தோன்றியதே நந்திக் கலம்பகம் என்பது கதையின் களம்.

தனக்காகப் இயற்றப்பட்ட பாடலைக் கேட்பதற்காகவே, உயிர் துறந்த மன்னன்….! - Seithipunal

அந்தக் கதையின் படி… நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது.. அவனது மரணத்தைப் பற்றி நந்திக் கலம்பகம் எழுதுவது நமது மனத்தை முள்ளால் நெருடுகிறது.

வானுறு மதியை அடைந்தது உன் வதனம்
மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்தது உன் வீரம்
கற்பகம் அடைந்தது உன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்தது உன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயாபரனே

- கழற்சிங்கனார்

நந்திவர்மனுக்கு இன்னொரு பெயர் உண்டு- கழற்சிங்கனார். 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

அந்தக் கதை பெரியபுராணத்தில் வருகிறது.

இப்படி நடந்ததா? இல்லை இது என்ன கற்பனையா? என்று வாசகர்கள் கொந்தளிக்கக் கூடும். கதை சுவையாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். மற்றது சிவன் மயம்!

சரி நாம் கதைக்கலாம்..

கழற்சிங்கனார் (நமது மூன்றாம் நந்திவர்மன் தான்) மாபெரும் சிவபக்தர்.
தன் மகாராணியுடன் திருவாரூர் தியாகேசப் பெருமானைத் தரிசிக்க சென்றார்.
சிவனாரது சிலை முன் – தானும் ஒரு சிலையாக இருந்து தவத்தில் அமர்ந்தார்.
அரசியார் கோவிலைச் சுற்றி வலம் வர விழைந்தார்.

எழில் மிகுந்த மண்டபங்கள் அவள் மனதைக் கொள்ளையடித்தன.
அந்தப் பூங்காவிலிருந்த மலர்கள் சுகந்தத்தைக் கிளப்பி விட்டிருந்ததது.
அந்த மலர்கள் சிவனாருக்கு மட்டுமே அளிக்கத்தக்க மலர்கள்.
யாரும் அதைப் பறிக்கக் கூடாது.

அரசியாருக்கு அந்த மலர்மணம் மனதில் ஒரு இன்பப்புயலை ஏற்படுத்தியது.
ஒரு அழகிய மலரைப் பறித்து.. மோந்து பார்த்தாள்!
‘என்னே இந்த தெய்வீக மலர்!!’ என்று வியந்தாள்.

அரசியின் செயலை கூடியிருந்த தொண்டரில் ஒருவரான செருத்துணை நாயனார் கண்டார். ‘இறைவனுக்கு சொந்தமான மலரைப் பறித்து மோந்து விட்டாளே’ என்று சினங்கொண்டார்.

அரசியென்றும் பார்க்கவில்லை.
குறுவாளை எடுத்து ‘மலரை மோந்த’ மலர் மூக்கை சீவி விட்டார்.
குருதி கொப்பளிக்க தேவி மயங்கி விழுந்தாள்.

ஆலயத்தில் தவமாற்றிக் கொண்டிருந்த மன்னருக்கு செய்தி சென்றடைந்தது.
மன்னன் பதைபதைப்புடன் அரசியிடம் விரைந்தான்.
கண்ட காட்சியில் அவன் உறைந்து போனான்.
“அஞ்சாமல் இந்தக் கொடிய செயலைச் செய்தது யாரோ?” – மன்னன் கண்ணில் தீப்பொறி பறந்தது.

“அந்த யாரோ.. நான் தான்“ – என்று அமைதியாகக் கூறினார் நாயனார்.
சைவத்திருக்கோலத்துடன் இருந்த சிவனடியாரைப் பார்த்த மன்னன்:
“என்ன காரணத்துக்காக இந்த காரியம் செய்யத் துணிந்தீர்” – என்றான்.
நாயனார் : “இறைவனுக்குச் சாத்துவதற்கான மலரை மாதேவி மோந்து விட்டார்”

“என்ன?” – ஒரு நொடியில் .. மன்னன் கோபத்தின் வசமானான்.
உடைவாளை உருவிக்கொண்டான்.
தொண்டர்கள் அனைவரும் நடுங்கினர்.
நாயனார் உறைந்து போய் “சிவனே” என்று ஓலமிட்டார்.

மன்னன்: “நாயனாரே! குற்றத்தை சரியாக ஆராயாமல் முறைப்படி நடக்காமல் தண்டனை கொடுத்தது உம் தவறு.” என்றான்.
நாயனார் ஒன்றும் பேசவில்லை.

அரசன்: “எம்பெருமான் மலரைப் பறித்த கையல்லவா முதல் குற்றம் செய்தது. அதற்கல்லவா முதலில் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறி
சொன்னது மட்டும் இல்லாது அரசியின் மலர்க்கரத்தை வெட்டினான்.

மனைவியை தண்டித்த கழற்சிங்க நாயனார் || kalarsinga nayanar life history

( பாகுபலி இதன் காப்பியா? ) 

நாயனார் – மன்னரின் உயர்ந்த பக்தியைக் கண்டு தலைவணங்கினார்.
இந்தக் காட்சி சுபமாக முடிந்தது!

அது எப்படி என்று தானே அப்பாவித்தனமாக கேட்கிறீர்கள்?
சிவபெருமான் உமையோடு – காளையில் தோன்றி – அரசியின்

துயர் தீர்த்து – அருள் புரிந்து மறைந்தார்.

சுபம்!!

மன்னனுடைய சிவத்தொண்டு காரணமாக, மன்னனை நாயன்மார் கூட்டத்தில் ஒருவனாக கழற்சிங்க நாயனாராகச் சமய குரவர்கள் ஏற்று வழிபட்டார்கள்.

வாசகர்களே! எரியும் விளக்கு அணையுமுன்பு சற்றுப் பிரகாசமாக எரிந்து அணையும் என்று சொல்வார்கள். பல்லவரது ஜோதியில் நந்திவர்மன் தான் அந்த பிரகாசமான விளக்கு.

பல்லவர்களது ராஜ்யம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை காஞ்சியில் கோலோச்சியது.
வெற்றி தோல்வி எல்லாமே மாறி மாறி வந்தது.
வெற்றி பெறும் போது .. கல்லிலே கலை வண்ணம் கண்டு . கோவிலை வடித்தனர்.
தோல்வி பெறும் போதும் துவளாமல் போராடினர்.
அந்த ஆட்சியும் ஒரு முடிவுக்கு வரப்போகிறது.
மூன்றாம் நந்திவர்மன் அதன் கடைசிப் பேரரசன்.

பல்லவர்களைப் பிரியும் நேரம் விரைவில் வருகிறது என்று நினைக்கும் போது நெஞ்சு சற்றே கனக்கிறது.

பல்லவர்களது இறுதிச்சுற்று பல திருப்பங்கள் கொண்டது.

அதை விரைவில் காணலாம்.

என் பெயர் இல்லத்தரசி – செவல்குளம் செல்வராசு

எல்லாம் இருக்கிறது வீட்டில்

எனக்கென்று எதுவுமில்லை

பிடித்த உணவு, பிடித்த உடை,

பிடித்த பலகாரம், பிடித்த தேநீர்,

விழிப்பு வரும்வரை உறக்கம்,

பிடித்த புத்தகம், பிடித்த பாடல்,

பிடித்த திரைப்படம், பிடித்த கதாநாயகன்

எல்லாம் மறந்து பலகாலமாகிவிட்டன.

எனக்கு திருமணமாகிவிட்டது

விரும்பிய அலைவரிசை பார்த்து,

பாடல் கேட்டு, கூடவே பாடி,

சின்னதாய் ஆட்டம் போட்டு,

தூறல் ரசித்து, தூரிகை பிடித்து,

காதல் மொழிகள் கேட்டு, பேசி,

கையில் மருதாணி வைத்து

சில ஆண்டுகளாகிவிட்டன

எனக்கு இரண்டு குழந்தைகள்

 

உதிரிமல்லி வாங்கி

ரசித்துச் சரம் தொடுத்து

ஆசை தீர முகர்ந்து

தலையில் சூட அவகாசமில்லை

கோப்பை நிறைய

கொதிக்க கொதிக்க

சுக்குமல்லித் தேநீர் அருந்த

அவகாசமில்லை

அக்கம் பக்கம் நட்பு பாராட்ட

அம்மா, அக்காவிடம் அலைபேசியில் பேச

நாட்டு நடப்பு அறிய செய்திகள் பார்க்க

அவருக்கு வரும் இதழ்கள் படிக்க

எதற்கும் நேரமில்லை

எது எப்படிக் கிடந்தாலும்

கொஞ்ச மட்டுமே குழந்தைகளைத் தூக்குவார்.

எழுதும்போது குழந்தைகள் குறுக்கிட்டால்

கடுங்கோபம் வரும் அவருக்கு

வீடு திரும்பியதும் தேநீர் வேண்டும் அவருக்கு

வீடு திரும்பும் நேரம் மட்டும்

ஒருநாளும் சொல்லமாட்டார்

என்றாவது சொல்லிச் சென்றாலும்

சொன்ன நேரம் வரமாட்டார்

பண்டுவம் பார்ப்பது முதல்

பாடம் சொல்வது வரை

எல்லாம் செய்துமுடித்து

படுக்கையிலும் சிரிக்க வேண்டும்.

பரவசம் என்பதை உணர்ந்தே

பலகாலமாகிவிட்டது

  

அவதி அவதியாய் ஓடும் வாழ்வில்

இறந்த காலமே மறந்துவிட்டது

எதிர்காலமும் இறந்துவிட்டது

என் காலம் எதுவும்

என் கடிகாரப்படியில்லை

வீடு என்னும் தொழிற்சாலையில்

விடுமுறையே இல்லை

விலக்கு நாட்களிலும் விலக்கு இல்லை.

ஆனால் ஊரெல்லாம் சொல்லித் திரிவார்

அவ வீட்டுல சும்மாதான் இருக்குறா என்று

 


ஸூம் மேரேஜ் – ரேவதி ராமச்சந்திரன்

India's First (NOT) Big, Fat Zoom Video Call Wedding - Homegrown     

 ‘கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ ஆனால்  நடப்பது பூலோகத்தில்தானே! இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இந்த ஸூம் மேரேஜூம் (ZOOM MARRIAGE) . ஐந்து நாள் கல்யாணம், மூணு நாள் கல்யாணம், காதல் கல்யாணம், பதிவுத்திருமணம் மாதிரி இந்தக் கொரோனா காலத்தில் இதுவும் இப்போது ஒரு வித கல்யாணம்தான்.

வாட்சப்பில் ஒரு செய்தி வந்தது மேரேஜ் முடிந்து எல்லோர் வீட்டுக்கும் கேரியரில் சாப்பாடு என்று. அது எப்படி!

கல்யாண அழைப்பிதழை வாட்சப்பில் அனுப்பிவிட்டு அத்துடன் 100 ஜீபி டாடா பேக்கையும் இணைத்து திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாகவே பிக்பாஸ் வீடு மாதிரி ஸூமில் லைவ் ரிலேவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் என்று அழைத்தார்கள் சுமதி தம்பதியினர்.

சம்பந்தி ஆத்துக்கு தனி ஸூம் மீட்டிங் பெண்ணாத்துக்கு தனி ஸூம் மீட்டிங். ஆஹா என்ன ஒரு திட்டம்! நம்மாத்து கொணஷ்டை, மொகறைல இடிச்சுக்கறைதையெல்லாம் பிள்ளை ஆத்துக்காரா பார்க்க வேண்டாம். கல்யாணத்தை ஆன்லைன்லே அட்டெண்ட் பண்றதாக இருந்தாலும் டிரஸ்சை எல்லோரும் பார்ப்பார்களே! எனவே முதலில் சாரி செலக்ட் செய்ய ஆரம்பித்தோம். இது நேரில் போறதை விட கஷ்டமாக இருந்தது. இந்தப் புடவை நல்லா தெரியுமா ?  இராமர் பச்சை, நீலம் என்று கண்டுபிடிப்பார்களா என்று ரொம்பவும் யோசிக்க வேண்டி இருந்தது. பச்சை எத்தனை பச்சையடி! ‘ஸூம் மீட்டிங்கில் அவ்ளோதான் வரும் மாமி. சம்பந்தி மாமி புடவை கரு நீலமா நாவல் பழக்கலரா என்று கேட்கிறேளே நியாயமா’ என்று நீலா கல்யாணி மாமியிடம் அங்கலாயித்தது பின்னால் தெரிய வந்தது.       

கல்யாணம் ஆரம்பித்தாகிவிட்டது. மாலைகளும் பூவும் ஆன்லைனில் மிகவும் அழகாக ஜொலித்தன. மாப்பிள்ளை பெண்ணின் கையை அழுத்தமாகப் பிடித்து விட்டார் போலும் அவள் முகச்சுளிப்புக் கூட துல்லியமாகத் தெரிந்தது. பெண் புடவை மாத்திண்டு வர நேரம் ஆனதைப் பார்த்த கோகிலா மாமி ‘அம்புஜம் அவ மேடைக்கு வந்தான்னா பிங்க் பண்ணு, நான் அரிசியை ஊற வைச்சுட்டு வந்துடறேன்’ என்று சமையல் கட்டிற்குள் ஓடினாள். இது ஒரு சௌகரியம்தான். ஆனாலும் மாமிகளெல்லாம் டெக் ப்ரிண்டலிதான். சந்திரா மாமியோ ஒரு படி மேலே போய் ‘சாப்பாடோட ஊஞ்சல்ல சுத்தறத்துக்கு பச்சபுடியும் டோர் டெலிவரி செஞ்சுட்டா நேரில் கலந்துண்ட திருப்தி இருக்கும்’ என்று நொடித்தாள்.

சண்டை  இல்லாத கல்யாணமா அது எப்படி! பாச்சு மாமா வரது அத்தையைப் பற்றி சேகர் மாமா கிட்ட சொல்றதா நினைச்சு  அன்ம்யூட்ல சொன்னதைக் கேட்டு வரது அத்தை கோச்சுண்டு லாகாஃப் செய்துட்டாள். ஒரு ஜோக்கும் நடந்தது. கேமிராமேன் லைவ் ஆன்ல வெச்சுண்டே சமையல் இடத்துக்குப் போய் நாலைந்து லட்டு ஒருசேர  சாப்பிட்டதை எல்லோரும் பார்த்து சிரித்தனர்.

மாங்கல்ய தாரணம் ஆயிடுத்து. கெட்டி மேளம் வாசிக்கும்போது வாத்தியக்காரர் ம்யூட்ல போய்ட்டார், பயிஞ்சாயிரம் தண்டம் என்று அங்கலாயிற்றார் பெண்ணைப் பெற்றவர். அவர் கவலை அவருக்கு. கல்யாணி மாமியோட ஹஸ்பண்ட் ‘கல்யாணி, மானிட்டருக்கு அட்சதை போட்டயே, ஓரளவுக்கு நியாயம், ஆனா, ஹோமம் செஞ்ச எஃபக்ட் வரணும்னு வரட்டியெல்லாம் கொளுத்தறியே, இதெல்லாம் அடுக்குமா?’ என்றார். தாலி செயினோட டிசைனைப் பற்றி எல்லா மாமிகளும் ஒரு கலந்துரையாடல் பண்ணினார்கள். நல்ல வேளை அங்கே நீயா நானா கோபிநாத் இல்லை.

தாலி முடிஞ்சதுக்கு நாத்தனாருக்கு தங்கசெயின் போட்டதுக்கு எல்லோரும் வாய்ப்பிளந்தார்கள். பொரி போட்டதுக்கு பிள்ளை வீட்டுக்காரர்களும் அவள் தம்பிக்கு வைரமோதிரம் போட்டது எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சப்தபதி முடியும் வரை வாத்தியார் மாப்பிள்ளையை ம்யூட்ல போடச் சொல்லிட்டார். மாங்கல்ய தாரணம் ஆனதினால் பாக்கி எல்லோரும் அன்ம்யூட் பண்ணி ‘மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாச்சா’ என்று கேட்டுக்கலாம் என்றார். நடுவில் ஒரு குட்டி அநௌஸ்மெண்ட் ‘சம்பந்தி சண்டை தனி ஸூம்  மீட்டிங்க்ல நடக்கிறது. விருப்பப்பட்டவா இந்த லின்க்ல கிளிக் செஞ்சு கலந்துக்கலாம்இதற்குள் கனெக்க்ஷன் டெர்மிநேட் ஆனதைப் பார்த்து சண்டையினால் கல்யாணம் நின்று போவதாக வருத்தப்பட்ட காமு பாட்டிக்கு இன்டர்நெட் வேலை செய்யவில்லை, கல்யாணம் நடந்துண்டுதான் இருக்கு என்று புரிய வெக்கப் போராட வேண்டி இருந்தது.

என்னதிது! கல்யாண சாப்பாடு வீட்டிற்கே வந்து விடுமா! ‘அப்ப மாப்பிள்ளை அழைப்பிலிருந்தே லாகின் செஞ்சுடறோம். எங்காத்து கீழ் போர்ஷன்லே வயசான மாமா இருக்கார். அவருக்கும் சேர்த்து அனுப்பிடுங்கோ’ என்று உரிமையாக சொன்னாள் அத்தைப்பாட்டி அகிலாண்டம். அதற்குள் பெரியப்பா சம்பத் ‘சாப்பாட்டை ஸ்விகில அனுப்பிச்சுட்டேள் கட்டுச்சாதக் கூடையும் டோர் டெலிவெரி செய்வீர்களா’ என்று மிளகாய்ப்பொடி தடவின இட்லியையும் புளியஞ் சாதத்தையும் எண்ணி சப்புக்கொட்டினார். ஸ்விகிக்காரனும் எட்டு மணிக்கே சப்பாடைக் கொடுத்து விட்டு ‘நீங்கள்தான் முதல் பந்தி’ என்று குசும்பாகச்  சொல்கிறான். இந்த ஜெயந்தி சித்தி ரொம்ப மோசம். செலவானாலும் பரவாயில்லை என்று ஆத்துக்கே ஸ்விகில சாப்பாடு அனுப்பி வைச்சா டன்ஸோல ரெண்டு டிஃபன் கேரியர் அனுப்பி பிசிபேளாபாத்தும், ஸ்வீட் பச்சடியும், உருளைக்கிழங்கு கறியையும் ஃபில் செய்து அனுப்பச் சொல்கிறாள். பாகீரதி மாமி அதைவிட மோசம். பழக்க தோஷத்தில் வீட்டுக்கு வந்த சாப்பாட்டிலிருந்து பாதாம் அல்வாவை பொட்டலம் கட்டி முந்தானையில் முடிச்சு வைச்சுக்கறார். பத்மா மாமி எல்லோரையும் தூக்கி சாப்பிட மாதிரி ஸ்விகிகாரனையே பரிமாறச் சொல்கிறாள். அவனிடமே இலை நுனி எந்தப் பக்கம் போடணும்னு சந்தேகம் வேறு கேட்கிறாள். சாப்பாடு பிரமாதம் யார் கேட்டரிங்க்னு கேட்ட வாசு மாமாவிடம் ‘நீங்க எந்த ஏரியான்னு சொல்லுங்கோ அதுக்கேத்தமாதிரி கேட்டாரர் யாருன்னு  சொல்றேங்’கறான். பெரிய இடத்து கல்யாணம்தான் போல! தாம்பூலப் பையையும் ஸ்விகி மூலமாக அனுப்பி இருக்கா! ஆனால் ‘ஆன்லைன்   கல்யாணம், மொய் எழுத வேண்டாம்னு சந்தோஷப்பட்டால் ஈமெய்ல்ல பேமண்ட் லிங்க் அனுப்பறான் விடாக்கண்டனான பஞ்சாபகேசன்’ என்று அலுத்துக்கொண்டார் அலகேசன் மாமா. உஷா மாமி தன் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து கண்டு களித்தது இந்த டெக்னிகல் சாதனத்தினால் என்றால் மிகையாகாது.  

இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடுகிற மாதிரி கனகம் மாமி லலிதா மாமிக்குப் ஃபோன் பண்ணி ‘உனக்கு அரக்கு கலர் பார்டரா, உன்கிட்டேதான் இந்தக் கலர் இருக்கே, மாத்திப்போமா, என்னோடதை டன்ஸோல அனுப்பி வைக்கறேன், நீ உன்னோடதை அனுப்பி வை, புடவை வாங்கறப்ப கொஞ்சம் டேஸ்டோட வாங்கப்படாதோ!’ என்று அங்கலாயித்தாள். சரோஜா மாமி சச்சு மாமியிடம் ‘உன் பெண்ணுக்கு வரன் பார்க்கிறாயே, அதோ பார் அந்தப்  பையன் களையாக, துறுதுறு என்று  இருக்கிறான் அவனைப் பற்றி விசாரி’ என்று இன்னொரு கல்யாணத்திற்கு அங்கே அடி போட்டாள். இதுதான் கல்யாணம். எத்தனை இடர் வந்தாலும் இந்த சந்தோஷங்கள், சிணுங்கல்கள், எதிர்ப்பார்ப்புகள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

எந்த மாதிரி கல்யாணமாக இருந்தாலும் அதனை  ரசித்து  மகிழ்வோமாக!     

வாஷிங்டனில் திருமணம் - 11 | washingtonil thirumanam series - episode 11

                           

காத்திருப்பு -துரை தனபாலன்

காத்திருப்பு - காதல் கவிதை

மழலையெனும் பருவத்தில் மார்பூட்டும் தாய்க்காகக்
குதலைமொழி பேசுகின்ற குழந்தையது காத்திருக்கும்!
விடலையாம் பருவத்தில் விளையாடுந் துணைக்காக
வீதியிலே நட்புக்கு விழிதேடிக் காத்திருக்கும்!

இளமையெனும் பருவத்தில் இனிதான இணைக்காக
இமையிரண்டும் மூடாமல் இதயந்தான் காத்திருக்கும்!
திருமணத்துப் பருவத்தில் தேடிவந்த உறவொன்று
ஒருமனதாய் ஒன்றிவிட உள்ளந்தான் காத்திருக்கும்!

காத்திருக்கும் நேரமெலாம் கண்ணிரண்டும் பூத்திருக்கும்
பூத்திருக்கும் நீள்விழியில் நீர்முத்துக் கோர்த்திருக்கும்!
காதினிலே நெஞ்சத்தின் துடிப்போசை கேட்டிருக்கும்
ஓசையிலே உயிர்பாடும் ஆசையெனும் பாட்டிருக்கும்!

கால்களிலே அசைவின்றிக் கட்டையென மரத்திருக்கும்
காலமது ஓடுவதைக் கவனமது மறந்திருக்கும்!
காலமெலாம் அன்புக்குக் காத்திருக்கும் மானிடரைக்
காலனவன் காத்திருந்து கவர்ந்திழுக்கும் மாயமென்ன..?

Pratilipi | Read Stories, Poems and Books

 

தமிழக அரசின் விருதுகள் எஸ் எஸ்

Awardee_Groupimage6
தமிழக அரசின் விருது பெற்ற மூவர்  நமக்கு நன்கு அறிமுகமாவர்கள்! 
இளங்கோ அடிகள் விருது பெற்ற முனைவர் மா வயித்தலிங்கன் என்ற தமிழ் ஆசான் !  அவருக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துக்களும்! 
மற்றவர் வாணி நீச்சல்காரன் என்ற தமிழ் பிழை திருத்தியை அறிமுகப் படுத்திய இளைஞர் இராஜாராமனுக்கு  முதலமைச்சரின்  கணினித் தமிழ் விருது
! வாழ்த்துக்கள்! 
சி பா ஆதித்தனாரின் வார இதழ் விருது  ரமணன் அவர்களைப் பொறுப்பு ஆசிரியராகக் கொண்ட கல்கி இதழிற்கு வழங்கப் பட்டுள்ளது. வாழ்த்துக்கள் !
 
அவர்களுக்கும் விருதுகள் பெற்ற மற்றவர்களுக்கும் குவிகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  
================================================================
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்:
2021ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- முனைவர் வைகைச்செல்வன்
தந்தை பெரியார் விருது – அ. தமிழ்மகன் உசேன்
அண்ணல் அம்பேத்கர் விருது – வரகூர் அ. அருணாச்சலம், 
பேரறிஞர் அண்ணா விருது – அமரர் திரு. கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
பெருந்தலைவர் காமராசர் விருது – முனைவர் ச. தேவராஜ் 
மகாகவி பாரதியார் விருது -கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – அறிவுமதி (எ) மதியழகன்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – வி.என். சாமி
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது -முனைவர் வீ. சேதுராமலிங்கம்
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்:
2020ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது -வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
கபிலர் விருது -செ. ஏழுமலை
உ.வே.சா விருது – கி. இராஜநாராயணன்
கம்பர் விருது -மருத்துவர் எச்.வி. ஹண்டே
சொல்லின் செல்வர் விருது – நாகை முகுந்தன்
உமறுப்புலவர் விருது -ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
ஜி.யு.போப் விருது – செருமன் நாட்டைச் சேர்ந்த முனைவர் திருமதி உல்ரீகே நிகோலசு
இளங்கோவடிகள் விருது -மா. வயித்தியலிங்கன்
அம்மா இலக்கிய விருது- முனைவர் தி. மகாலட்சுமி
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது -ஆ. அழகேசன்
மறைமலையடிகளார் விருது – மறை. தி. தாயுமானவன் 
அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் கோ.ப. செல்லம்மாள்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார் விருது -முனைவர் மோ. ஞானப்பூங்கோதை
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது -தினமணி நாளிதழ்
சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது- கல்கி வார இதழ்
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது- செந்தமிழ் திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது-முனைவர் கு. சிவமணி
வீரமாமுனிவர் விருது- ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சு
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது: சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத்
2019ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது- சே. இராஜாராமன்
நன்றி : மாலைமலர் 15.01.2021 
முழு விவரம் அறிய தமிழக அரசின் செய்தி வெளியீடு எண்  22 (13.01.2021) ஐ கீழ்க்கண்ட இணையத்தில் பார்க்கவும். 

குட்டீஸ் லூட்டீஸ்- சிவமால்

Aval Vikatan - 14 July 2015 - அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?! | Healthy eating habits for childrens

ஸாம்பஸதா சிவ…!

கல்யாண விருந்து நடந்து கொண்டிருந்தது. நானும், என்
சுட்டி மகள் மிதிலாவும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்-
தோம். மிதிலாவுக்குப் பக்கத்தில் நெற்றியெல்லாம் விபூதி
இட்டுக் கொண்டு சிவப் பழமாக ஒரு பெரியவர் உட்கார்ந்து
கொண்டிருந்தார்.

‘ஸாம்பஸதா சிவ.. ஸாம்பஸதா சிவ.. சம்போமகாதேவ
ஸாம்பசிவா.. ஸாம்ப ருத்ர மகாதேவா.. ஸம்போருத்ர மகா-
தேவா..’ என்று அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மிதிலா, ‘ஸாம்பஸதா
சிவ.. ஸாம்பஸதா சிவ…’ என்று அவளும் சொல்ல ஆரம்-
பித்தாள். மகிழ்ச்சியோடு அவளை ஊக்குவிக்கும் விதமாக
அந்தப் பெரியவரும் அவளுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

பரிமாறிக் கொண்டிருந்த சிப்பந்திகள், சாம்பாரை
ஊற்றிக் கொண்டே வந்தார்கள்.

‘ஸாம்பஸதா சிவ.. ஸாம்பஸதா சிவ ஸம்போ மகாதேவ
ஸாம்ப சிவா.. ‘ என்று கூறிக் கொண்டிருந்த மிதிலா சிறிது
நிறுத்தி, ‘ஸாம்பார் ஊத்தற மகாதேவா.. இங்கேயும் கொஞ்-
சம் ஊத்து மகாதேவா’ என்றாளே பார்க்கலாம்..

அந்த ஹாலில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு
நேரம் ஆயிற்று.

 

வரம் – தீபா மகேஷ்

A father is often known as a son's first hero and a daughter's first love. Give the special man in your … | Portrait drawing, Father's day drawings, Pencil portrait

 

அமுதாவின் ஃபோன் ஒலித்தது. அகிலா என்று பெயர் பார்த்ததும் ஆர்வமுடன் ஆன் செய்து “சொல்லு அகில்” என்றாள்.

ஆனால் அகிலா சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அந்த ஆர்வம் எல்லாம் நொடியில் அடங்கி அவளுடைய படபடப்பு அதிகமாகியது.

“அச்சச்சோ… எப்போ? எங்கே? எந்த ஹாஸ்பிடல்? என்று அடுத்தடுத்து கேள்விகள்.

ஹாலில் ந்யூஸ்‌பேப்பர் படித்துக்கொண்டிருந்த சங்கரன் அவள் பதட்டத்தைக் கவனித்து அருகில் சென்றான்.

“நாங்க உடனே கிளம்பி வரோம்” என்று போனை வைத்தவள், சங்கரனைப் பார்த்து “அகிலா ஃபோன் பண்ணாங்க. மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட்டாம் . வாக்கிங் போற போது ஒரு ப்ளைன்ட் டர்ன்ல கார் வந்து இடிச்சு, கீழ விழுந்துட்டனாம் , தலைல அடிபட்டிருக்காம்.”

அவள் கண்களில் கண்ணீர் ததும்பி எந்நேரமும் வழிந்து விழுவதற்குத் தயாராக இருந்தது.  பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

அவள் சொன்னதைக் கேட்டு சங்கரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. கடவுளே, இது என்ன சோதனை. நெஞ்சில் ஒரு பெரிய கல்லை ஏற்றி வைத்தது போல் பெரும் பாரம் அழுத்தியது .

ஆனாலும் சமாளித்து, “அமுதா, இந்தா கொஞ்சம் தண்ணி குடி. நம்ம போய் முதல்ல அகிலாவைப் பார்க்கலாம். பாவம், குழந்தைப் பயந்து போயிருப்பா . அருணுக்கு ஒண்ணும் ஆகாது. நம்ப யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. நம்ப வேண்டுற தெய்வம் நம்பள கைவிடாது” என்றான்.

அமுதாவை சமாதானம் செய்தானே தவிர சங்கரன் மனதில் ஒரு பெரிய எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது.

ஹாஸ்பிடல் செல்லும் வழியெல்லாம் ஏதேதோ எண்ணங்கள், யோசைனைகள் .

பாவம், சின்னப்பெண். கல்யாணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி ஒரு சோதனையா. நாங்கள் யாருக்கு எந்த ஜென்மத்தில் என்ன தீங்கு செய்தோம்?

அமுதாவுக்கும் சங்கரனுக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் அகிலா.

 ஒரு குழந்தை வரம் வேண்டி அவர்கள் போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு நவராத்திரி சமயம் திருச்சியில் தங்கி திருவானைக்காவல் அகிலாண்டேச்வரியைத் தரிசனம் செய்தார்கள். அதற்குப் பின் பிறந்த பெண் குழந்தை என்பதால் அந்த அகிலாண்டேச்வரியின் பெயரையே அவளுக்கு வைத்தார்கள்.

அவள் பிறந்த வேளை எல்லா சந்தோஷமும் அவர்களைத் தேடி வந்தது. சங்கரனுக்கு ஒரு பெரிய மல்ட்டி நேஷனல் பாங்க்கில் வேலை கிடைத்தது. திருவான்மியூரில் கொஞ்சம் நிலம் வாங்கி அழகாக ஒரு வீடு கட்டினார்கள்.

பத்து நிமிட நடையில் மருந்தீஸ்வரர் கோவில். இந்தப் பக்கம் நடந்தால் கடற்கரை

இயல்பாகவே அப்பாக்களுக்கு மகள்களின் மீது இருக்கும் பாசத்தையும் ஒட்டுதலையும் தாண்டி, சங்கரனுக்கு அகிலாவின் மீது உயிர். அகிலாவும் அப்பா செல்லம்தான்.

இரவில் அப்பாவோடு தான் சாப்பிட வேண்டும். கடைக்குப் போனால் அப்பாதான் ட்ரெஸ் செலெக்ட் செய்ய வேண்டும். அவன் எங்கு போனாலும் வால் போல பின்னாலேயே ஒட்டிக் கொண்டு அவளும் போவாள்.

ஆபீஸிலிருந்து சீக்கிரம் வரும் நாட்களில் எல்லாம் அப்பாவும் மகளும் தவறாமல் கோவிலுக்குக் கிளம்பி விடுவார்கள். சனி, ஞாயிறுகளில் பீச்.

சங்கரன், கோவிலில் மாலை வேலைகளில் நடக்கும் திருவாசகப் பாராயணத்தில் கலந்து கொள்வான். அகிலாவும், அப்பாவிற்கு அருகில் அமர்ந்து மழலை மாறாமல் தனக்குத் தெரிந்தபடி “நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க” என்று பாடுவாள்.  மற்றவர்கள் அவளை ஆச்சிரியமாகப் பார்க்க சங்கரன் மனம் பெருமிதத்தால் நிறையும்.

எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது.

அகிலா படிப்பில் படு சுட்டி. பள்ளி நாட்களில் எல்லா முக்கிய ஃபைனல் பரீட்சைகளுக்கும்  சங்கரன் தான் கொண்டு போய் விட வேண்டும்.அவன் தான் ரிஸல்ட்  பார்க்க வேண்டும். அப்படி ஒரு சென்டிமெண்ட்.

அவளுக்காக எத்தனையோ முறை மீட்டிங்குகளை , வெளியூர் பிரயாணங்களை தள்ளிப் போட்டிருக்கிறான்

அவளுடைய நண்பர்கள் பலரும் என்ஜினீயர், டாக்டர் என்று கனவு கண்டு  சயன்ஸ் க்ரூப் எடுக்க, அவள் சி ஏ படிக்க வேண்டும் என்றாள்.  

‘காலேஜ் போனா சி. ஏ எக்ஸாம்க்கு ஃபோகஸ் பண்ண முடியாது. ஆர்ட்டிகல்ஷிப் வேற பண்ண வேண்டியிருக்கும். நான் பி.காம் கரெஸ்பான்டென்ஸ்லே படிக்கறேன்பா, ‘என்றாள்.

ஒவ்வொரு விஷத்திலும் ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்கும் தன் மகளை நினைத்து சங்கரனுக்குப் பெருமையாக இருக்கும்.

படிப்பு, வேலை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவளே யோசித்து முடிவெடுக்க அவளுக்கேற்ற துணையையும் அவள் சரியாகத்தான் தேர்ந்தெடுப்பாள் என்று அவன் நம்பினான்.

ஆனால் அங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது.

அருணைத் தான் விரும்புவதாக அவள் சொல்லிய போது, சங்கரனால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அருண் அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமானவன் இல்லை என்று அவன் நினைத்தான். அவனும் சி ஏ, அவளுக்கு சீ னியர், அது மட்டும் போதுமா?

அவளுடைய வருங்கால கணவனைப் பற்றியும் திருமண வாழ்க்கையைப் பற்றியும் சங்கரன் செய்து வைத்திருந்த கற்பனைகளில் அருண் கொஞ்சமும் பொருந்தவில்லை.

ஏன் என்று கேட்டால் சரியான காரணம் சொல்லத் தெரியவில்லை.

‘ஹாய்  அங்கிள்’, என்ற ஒற்றை விசாரிப்பில் அவன் தன்னை  கடந்து போகும் போதெல்லாம், தன் மருமகன் தனக்கு மகனாகவும் இருக்க வேண்டும் என்று அவன் ஆசை ஆட்டம் கண்டது.    

தானே வலிய போய் பேசிய சந்தர்ப்பங்களும் ஏமாற்றத்தையே கொடுத்தன.

ஒரு சமயம் பத்திரிகையில் வந்த ஒரு ஜோக்கைப் படித்து ரசித்து, சிரித்துத் கொண்டே அவனிடம் காட்டினான்.

“ஐ காண்ட்  ரீட் தமிழ், சாரி அங்கிள்,”  என்று சிரித்தான். டெல்லியில் படித்தானாம். சி ஏ படிக்கும் போதுதான் சென்னை வந்தானாம்.

அது கூட பரவாயில்லை. ஐ பி எல் பார்க்காத ஒருவன் இருப்பானா? கிரிக்கெட் பிடிக்காதாம். தலையில் அடித்துக்  கொள்ள வேண்டும் போல இருந்தது.

அப்படி என்னதான் கண்டாள் அவனிடம்? அகிலா மீது கோபம் கோபமாக வந்தது.

ஆனால் இதெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லி அவள் தேர்ந்தெடுத்தவனை எப்படி வேண்டாம் என்று சொல்வது. இது அவள் வாழ்க்கை அல்லவா?

எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் மனம் ஒப்புக் கொள்ளாமல் தவித்தது.  ஆனாலும், மகளின் விருப்பத்தை மதித்து திருமணம் செய்து வைத்தான்.

 சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இந்த பேரிடி.

ஹாஸ்பிடல் வந்து எமர்ஜென்ஸ்சி வார்ட் விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவனைப் பார்த்ததுமே ‘அப்பா’ என்று வந்துக் கட்டிக் கொண்டாள், அகிலா.

தன் மகளின் கண்ணீரைப் போல ஒரு ஆண் மகனைப் பலவீனப்படுத்தக் கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை.

சங்கரன் கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைத்துக் கொண்டான்.

“தலைல அடிப்பட்ட ஷாக்ல, பிரைன்ல க்ளாட் ஆகியிருக்கு. இப்போ கோமால இருக்கார். கொஞ்ச நாள் அப்ஸர்வ் பண்ணிட்டு தான் சர்ஜரி தேவையான்னு டிஸைட் பண்ணனும்” என்றனர் டாக்டர்கள்.

அதன் பின் ஹாஸ்பிடல் இன்னொரு வீடாகி போனது.

பகல் இரவு பாராமல் அருணுடன் இருந்தான்.

அவன் கைகளைப் பற்றிக் கொண்டு பேசினான். நம்பிக்கைக் கொடுத்தான். கந்த சஷ்டி கவசம் சொன்னான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தியோறு நாட்கள் ஒரு தவம் போல அவன் அருகில் அமர்ந்திருந்தான்.

மனதில் அன்பு பெருகும் போது  அதிசயங்கள் நிகழ்கின்றன.

அவை நடக்கும் போது அதன் வீரியத்தை நாம் பல சமயம் உணர்வதில்லை. பெரும்பாலும் அதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கடந்து போகிறோம்.

பின்னோக்கிப் பார்க்கும் போதுதான் அது ஒரு பூ மலருவது போல எவ்வளவு அழகாக நிகழ்ந்திருக்கிறது என்பது புரிகிறது.

மூன்று வாரங்கள் கழித்து டாக்டர்கள் சர்ஜரி தேவையில்லை என்றார்கள். ஆனாலும் அருண் நினைவில்லாமல் கோமாவில் தான் இருந்தான்.

இன்னும் எத்தனை நாட்கள் இப்படி ? ஒன்றும் புரியவில்லை.

ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா, அவன் கண் விழித்துப் பார்க்க மாட்டானா என்று மனம் ஏங்கியது.

கோவிலுக்குப் போனால் தேவலை என்று தோன்றியது.

மருந்தீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு திரிபுர சுந்தரி அன்னையின் சந்நிதியில் வந்து அமர்ந்தான்.

யாரோ ஒரு பெண்மணி அழகாக அபிராமி அந்தாதி பாடிக் கொண்டிருந்தாள் . அதில் மெய் மறந்து கண்கள் மூடினான்.

மணியே மணியின் ஒளியே….

ஒளிரும் மணி புனைந்த அணியே

அணியும் அணிக்கு அழகே

அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே..

என்று கேட்டதும் அவன் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. நீதான் இந்த நோய்க்கு மருந்தாக வர வேண்டும் என்று மனம் அன்னையிடம் மன்றாடியது.

நீ கொடுத்த குழந்தை அவள். இனியும் அவள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கும் படி வைக்காதே. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்துவிடு. அருணும் என் மகன் அல்லவா? உனக்கு உயிர்தான் வேண்டும் என்றால் என்னை எடுத்துக் கொள்.  அவனைத் திருப்பிக் கொடுத்துவிடு.

வேதனையில் மனம் ஏதேதோ பிதற்றியது . வேண்டியது.

தனம் தரும், கல்வி தரும்.

ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்

தெய்வ  வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்

…. நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே..

அந்தப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி  இருந்தது

அன்னையிடம் அழுதானா, தொழுதானா , சண்டை போட்டானா, தெரியவில்லை.

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை ..

அண்டமெல்லாம் பூத்தாளை…

…..முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..

என்று பாடி முடிக்கும் வரை அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை.   

அடுத்து வந்த நாட்களில்  அருணின் உடல் நலம் வேகமாக முன்னேறியது. அவன் உடலும் மனமும் நன்றாகத் தேறிய பிறகு வேலைக்குப் போக ஆரம்பித்தான்.

அன்று அருணுக்குப் பிறந்த நாள். அமுதா அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்து தடபுடலாக விருந்து தயாரித்திருந்தாள் .

சாப்பிட்டு முடித்து மற்றவர்கள் தூங்கப் போக சங்கரன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் தன் அருகில் வந்தமர்ந்த அருணை ஆச்சரியமாகப் பார்த்தான். “தூங்கலியா அருண்” ?

“தூக்கம் வரல”, என்று சிரித்தான்.

‘நான் ஹாஸ்பிடல்ல இருந்த போது நீங்க எப்பவும் என் கூடவே  இருந்து என்னை எப்படி பாத்துக்கிட்டீங்கனு அகிலா சொன்னா’ .

பேசிக் கொண்டிருந்தவன், சட்டென்று அவன் கைகளைப் பற்றி “தாங்க் யூ அப்பா”. என்றான்.

 

சங்கரனுக்கு தன்னுள் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று உடைந்து மனம் லேசானது போல இருந்தது.

அவனை அப்படியே தழுவிக் கொண்டான்.

அவர்கள் சென்ற பிறகு கூட மனம் அந்த ஆனந்தத்திலேயே லயித்திருந்தது.

மறுநாள் சிவராத்திரி. காலையில் மார்க்கெட் போய் பூஜைக்குத் தேவையானதெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கச் சென்றான்.

அகிலாவின் செல் ஃபோன் ஒலித்தது.

யார் காத்தால ஃபோன் பண்றாங்க என்று யோசித்தபடி  எடுத்தாள்.

அம்மாதான். இன்று சிவராத்திரி என்று நினைவுபடுத்தத்தான் இருக்கும்.

அப்பா சாயங்காலம் பூஜை பண்ணுவார். நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வந்திடுங்க. அம்மா சொல்லப் போவதையெல்லாம் மனதில் சொல்லிப் பார்த்துக்  கொண்டே ஃபோனை காதில் வைத்தாள்.

‘அப்பா நம்ம விட்டுட்டு போய்ட்டாரு, அகில். தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு.

டாக்டர் வந்துப் பாத்துட்டு மூளைல ரத்தக் கசிவுனால மரணம்னு சொல்றாரு. ‘

தான் கேட்பதை நம்ப முடியாமல் “அப்பா” என்று அலறினாள் அகிலா.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

தயவு செய்து இப்படி உட்காராதீங்க!!! | Dr Raja | Royal Multi Care - YouTube
டாக்டர் ராஜா , ராயல் மல்டி கேர்  மூலம் சில சுலபமான உடற்பயற்சிகளைச் சொல்லித் தருகிறார். அவற்றைச் செய்தோம் என்றால் முதுகு வழி , கழுத்துவழி போன்றவை என்றைக்கும் உங்களைத் தொடாது என்று கேரண்டி கொடுக்கிறார்.
ஐந்து நிமிட வீடியோ தான் ! அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு இந்த நடுப்பக்கத்தைப் படியுங்கள் ! 
( இது விளம்பர நிகழ்ச்சி அல்ல ! உபயோகமாக இருப்பதால் பகிர்கிறோம்) 
அதன் பிறகு நிச்சயம் நீங்கள் இந்த உடற்பயிற்சியை ஆரம்பித்து விடுவீர்கள்.  
வீடியோ பார்க்க இந்த இணையத்தை அழுத்தவும். 
வீடியோவில் எலும்பு மருத்துவர் ஒருவர் உடல் முழுதுமான தசைகள் இறுகாமல் இருப்பதற்கு மூன்று எளிய பயிற்சிகளை கூறுகிறார்.
சில நாட்களாக அவைகளை பயிற்சி செய்து சில பலன்கள் தெரிவதன் விளைவுதான் இப்பதிவு.
நமக்கு சரியென்றை படுவதை சொல்லிவிட வேண்டும், சுமந்து செல்லக் கூடாது என்பதுதானே நம் கொள்கை.
முதலாவது கழுத்துக்கானது: இதுநாள் வரை நாம் தலை, முகம், கழுத்து பற்றி அதிகம் கவலைப் பட்டதில்லை.
மண்டையில எனக்கு  ஒன்றுமில்லை என கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்த்து டாக்டரே சொல்லி விட்டார்.
‘ அங்கம் குறைவில்லாதவனை, அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள்  நினைப்பதுண்டோ ’ என பாடித் திரிந்த காலத்திலே ஒரு அழகிய கிளி ஒன்று ஒட்டிக் கொண்டது. எனவே முகத்திலும் குறையில்லை.
கழுத்தில் இப்பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை. பின்னொரு நாள் வரலாம். சுலபமான பயிற்சிதான். எனவே தினமும் செய்கிறேன்.
இரண்டாவது (plank):  ஆரம்பத்தில் சற்று கடினமாக தெரிந்தது. டாக்டரே முப்பது விநாடிகள் செய்தால் போதும். 90 விநாடிகள் செய்தால் நார்மல் என்றார். என்னால் தற் பொழுது 120 விநாடிகள் கூட செய்ய முடிகிறது.
முன்னால் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து எழுந்தால் கால் ஊன்றி சரியாக நிற்க சில நொடிகளாகும். பின்னர் சில அடிகள் ஆதி மனிதன் போல குனிந்து நடக்க வேண்டி யிருக்கும்.
ஆனால் தற் பொழுது ‘படையப்பாவில்’ ரஜினி எழுவது போல துள்ளி எழுந்து நடக்க முடிகிறது.
மூன்றாவது நமக்கு நன்கு தெரிந்தது. நாமே வயதின் மேல் பழி போட்டு தவிர்த்தது. மிரட்டும் பெயர் சுகாசனம், தெரிந்த பெயர் சம்மனம்.
முன்னர் பூஜை அறையில் கால் மாற்றி, குத்திட்டு அமர்ந்த நிலை இன்றில்லை.
ஒரு சபையில் நீண்ட நேரம் சம்மனமிட்டு அமர முடியாமல் நெளியும் நிலை இல்லை.
ஒரு மணி நேரம் சம்மனம் இட்ட நிலையில் சிரமமின்றி அமர முடிகிறது.
ஒரு அடி மேலே சென்று பத்மாசனத்தில் பாதியாக ஒரு காலை வயிற்றை தொட்டு போட முடிகிறது.
வயசு காலத்தில் வாயை கட்டாமல் தின்ற தீனி, வயசான காலத்தில் தொப்பையாய் மாறி இரண்டாவது காலை போட விடாமல் தடுக்கிறது.
தனியாக முயற்சி செய்கிறேன். அனைத்திற்கும் ஆகும் நேரம் பதினைந்து நிமிடங்களே. நம் கையில்தான் நாளொன்றுக்கு 1440 நிமிடங்கள் உள்ளனவே.
இதை பார்த்து யாராவது ஒருவர் முயற்சிக்கலாம் என மனதில் நினைத்தாலே என் ஜென்மம் சாபல்யமடையும்.
அது சரி, ‘சாபல்யம்’ என்றால் என்ன?

குவிகம் அளவளாவல்

குவிகம் விநாடி வினா – தேர்வுச் சுற்று முடிவுகள்

குவிகம் இலக்கிய விநாடி வினா

தேர்வுச்சுற்று முடிவுகள்

ஜனவரி பத்தாம் தேதி வரை நடந்த முதல் சுற்றில் முதல் 12 இடங்களைப் பிடித்தவர்களில்  இறுதிச் சுற்றுக்கு வருவதாக ஒப்புக் கொண்டவர்கள்!

1. அனிதா 

2. RK ராமநாதன் 

3.  துரைசாமி தனபாலன் 

4. சிவராஜ்குமார் 

5. ராய செல்லப்பா 

6. அழகியசிங்கர் 

 

அவல் ஆச்சி – ந பானுமதி

        When the camera rolled, she lived the character' - The Hindu

 

காலமில்லாக் காலத்தில்  நேற்று மாலையிலிருந்து நல்ல மழை. முதலில் தயங்கிப் புதிதாக வேலைக்கு வருபவர்கள் போல் அடக்கமாக வந்தது. மொட்டைமாடியில் சிறு தூரல்; உடல் நனைக்க வேண்டும் என்று விபரீத ஆசை வந்தது எனக்கு. கண் இமைகளின் மேல், முகவாய்க் குழியில், அண்ணாந்த கழுத்தில், நீட்டித் துழாவிய இருகரங்களில் காதலனென முத்தமிட்டு முத்தமிட்டுச் சல்லாபித்த மழை. அது வலுக்க ஆரம்பிக்கையில் கணவனின் நினைவு ஏனோ வந்தது. அம்மா கீழ் முற்றத்தில் நனைந்தபடியே என்னைத் திட்டிக் குரல் கொடுத்தாள். இன்னமும் கூட நான் வெல்லம் போலக் கரைந்து விடுவேன் என்று பயப்படுகிறாள்.

“வொங் கொழந்தைக்கே நாலு நாள்ல ஆயுக்ஷோமம்; நீ மாட்டுக்கும் மழேல வெளயாட்ற; ஒன் ஆம்படையான் எல்லாரோடையும் நாளன்னிக்கு வந்திடுவானோல்யோ?”

‘வருவாம்மா, ஐஞ்சு பேரு வரா; ஐயோ எதுக்கு இப்போ என்னத் தொடைக்கற; ஜில்லுன்னு இருந்ததெல்லாம் போச்சு’

“நெருப்பு காங்கய இப்டி அணக்கறயாக்கம். சும்மா இருடி, நாளும் கெழமையுமா படுத்துண்டா, கொழந்தைக்கும் உன்னால ஜொரம் வந்துடும்.”

ஒருமுறை பறிகொடுத்தவளை அப்படியே என்று முத்திரை குத்திவிடுவார்கள் போலிருக்கிறது. அம்மாவின் கவலை ஊராரைக், குறிப்பாக, என் புக்ககத்தைப் பற்றியது. பாவம், கவலையினால் உடம்பு ஊதுகிறது அவளுக்கு. உனக்கும் மழை பிடிக்கவில்லையா என்ற வார்த்தைகளை விழுங்கி விட்டேன். மழை ஆக்ரோஷமாக அறைந்து கொண்டிருந்தது. மரங்கள், செடிகள், கொடிகள், தளிர்கள் எல்லாவற்றையும் நனைக்கும் மழை. வளைந்து குனிந்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அவைகளுக்கு. இரவு விளக்கின் மென்மையான நீல ஒளி, ஜன்னல் கண்ணாடியில் சிதறி வெளியே  தெறிக்கும் நீர்த்துளிகளில் ஒரு பக்கம் அவிழ்ந்த தூளியென கோட்டுரு வரைந்தது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆனால், கனவுகள், கனவுக்குள் கனவுகள், பாபத்தின் நிழல் கொத்தைக் காட்டும் அனுபவம், மாறாத கொடூரத்தில் என்னைத் தோலுரிக்கும் கேள்விகள், தன்னிரக்கத்தில் அலறும் மனது, அந்தச் சமயத்தின் ஆர்ப்பாட்டம் என்ற சமாதானம், அவல் ஆச்சியைப் பார்க்க முடியுமா, அவள் கால்களில் விழுந்து அழ முடியுமா, அவளிடம் மன்னிப்புக் கேட்க என் வறட்டுக் கௌரவம் இடம் கொடுக்குமா என்று கனவுக்குள் பதில் தேடும் கேள்விகள். என் கனவும்,நினைவும் அந்தத் தருணத்தில் பூத்து, வாடாமல் அப்படியே என்னைத் தின்று கொண்டிருக்கிறது.

கரு மலைப் பாம்பென நீண்ட சாலை இது. வடக்குத் தெற்காகப் பரந்த சாலையில் எதிரெதிராக வீடுகள். அரை கிலோ மீட்டர் தொலைவில் நடு நாயகமாக பூவாடை நாதர் திருக்கோயில். வில்வ தளப் பிரியரான அவர், ஒரு சிவயோகியின் கனவில் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி, தனக்குத் தினமும் வாசனைப் பூக்களால் ஆடை செய்து ஆவுடையிலும், தன் மேற்புறத்திலும் சார்த்தச் சொன்னாராம். சிவன் கோயில் நந்தவனம் பருவத்திற்கேற்றாற் போல், மருக்கொழுந்து, முல்லை, மல்லிகை, ரோஜா, நாகலிங்கம், நந்தியாவட்டை, கதிர்பச்சை, செண்பகம் எல்லாம் பூத்து எங்கள் தெருவே பூவின் மணத்தால் நிறையும். அவர் கோயிலை ஒட்டிய திருக்குளத்தில் ஆம்பல், தாமரை, அல்லி மலரும். ஆனால், அவருக்குத்தான் மலர்ந்த மலர்களைச் சாற்றுவார்கள்; அம்பாளுக்கு மொட்டரளி, விரியாத தாமரை மொட்டு போன்றவை. இந்த விசித்திரம் என்னை என்னவோ செய்யும், சிறு பெண்ணாக இருக்கையிலேயே. எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் நான் நம்பக் கூடியமாதிரி பதில் சொல்பவள் அவல் ஆச்சிதான்.

‘கௌரிக் கண்ணு, அம்மயே ஒரு பூவு. பேரும் மொட்டுக் கன்னி; அப்ப அதுதான மொற’

“ஆச்சி, அது முத்துக் கன்னி ஆச்சி. பேரயே மாத்திப்புட்டீயளே”

‘சரிதானே, பேருல கன்னி இருக்குதில்ல.’

அந்த வயதில் அது எனக்குப் போதுமானதாக இருந்தது. ஆச்சியிடம் ஒரு நளினமும், கம்பீரமும் எப்போதும் இருந்தன. அவள் நெடுநெடுவென்று உயரமாக இருப்பாள். கொஞ்சம் கருமை கலந்த மண் நிறம். முட்டி வரை நீளும் கைகளில் தேளை பச்சை குத்தியிருப்பாள். வெள்ளைச் சேலை, மார்பில் எதுவும் அணியாத போதும், முழுக்க உடலை மறைத்திருக்கும். செருப்பு அணிய மாட்டாள். பனைக் கொட்டான் கூடையில் தலைச் சுமையாக அவல்; தோல்பட்டையிலிருந்து தொங்கும் பனை நார்ப்பையிலும் அவல்தான். ஊருணிக்கு அப்புறம் உள்ள செங்கையூர் அவளுக்கு.

  ஐந்து நாட்களுக்கு ஒரு முறை அவளை நிச்சயமாக எங்கள் தெருவில் பார்த்துவிடலாம். அவளுக்கு கிலோ கணக்கெல்லாம் தெரியாது. படி, ஆழாக்கு என்று இன்று வழக்கில் இல்லாத பெயர்களைத்தான் சொல்வாள். நாங்கள் பள்ளியில் கிலோவைப் படித்தோம், வீட்டில் அம்மா படியால் அளந்தாள். அந்தத் தெரு முழுவதற்கும் எங்கள் வீட்டுப் படி ஆச்சியுடன் பயணிக்கும். எல்லாவற்றையும் விற்றுவிட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருவாள். மோர் மட்டும் தான் குடிப்பாள், சாப்பிட எது கொடுத்தாலும் வாங்க மாட்டாள். நான்கு நாட்கள் ஆகிவிட்டதென்றால் காலையில் சீக்கிரம் எழுந்து அவள் வருவதற்கென்றே நான் வாசலை, வாசலைப் பார்த்திருப்பேன். ‘இந்தக் குட்டியை, அந்த ஆச்சிக்குப் புள்ள இருந்தா கல்யாணம் செஞ்சுடலாம்’னு கேலி செய்யும் அப்பாவிற்குப் பின்புறமாக பழிப்புக் காட்டிக்கொண்டே நான் அலை பாய்வேன். சுமையை எங்கள் வீட்டுத் திண்ணையில் இறக்கி வைத்துவிட்டு, ‘பாத்துக்க கண்ணு, இந்தா வந்திடுதேன்’னு ஓட்டமா கோயிலப் பாக்க ஓடுவா ஆச்சி. அவ சொத்துக்கு நான் காவல்ன்னு நான் கர்வமா இருப்பேன்.

சீரகச் சம்பா நெல்லைப் புழுக்கி அவள் கொண்டு வரும் அவலுக்கு நாங்கள் அனைவரும் அடிமை. அம்மாவிற்குத் தெரியாமல், என் கைகள் நிறைய அவலும், பொடி வெல்லமும் சேர்த்து எனக்கு மட்டும் ஸ்பெஷலாகத் தருவாள். ‘கண்ணனும், குசேலனும்’ என்று அப்பா சிரித்துக்கொண்டே சொல்கையில் நாணிச் சிரிப்பாள். அவர்கள் இடத்தில் அவல் எப்படி செய்கிறர்கள் எனப் பார்க்க நான் ரகளை செய்தாலும் என் பெற்றோர்கள் விட்டதில்லை. ஆச்சியும் அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்ளவில்லை. சற்று வயதான பிறகு நான் ஒரு ட்ரிக் செய்தேன்-அந்த ஸ்பெஷல் அவலை வாங்காமல் உள்ளே ஓடிவிட்டேன் ஒரு நாள். நடு முற்றம் தாண்டி அன்றுதான் ஆச்சி உள்ளே வந்தாள். ‘பொளச்சுக் கிடந்தா நாளக்கி போயாரலாம். அம்மா, புள்ள எம் புள்ளயாக்கம், கூட்டிப் போயி கொணாந்தும் விட்டுடுதேன். வெசனப் படாதீய’

எப்போதும் நடந்து வரும் ஆச்சி மறு நாள்  மாட்டு வண்டியில் வந்தாள்; ‘பூவுக்க பொன்னு பாதமில்லா’ என்று அவள் என்னைத் தூக்கி வண்டியில் அமர வைத்த போது அம்மா கமறிய குரலில் ஏதோ சொன்னாள். அப்பா, அவசர அவசரமாக எடுத்துக் கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்தாள். ‘எனக்க மவ, நானும் பூவாடைக்காரியாக்கும்’

பயண வழியெங்கும் பாக்கு மரங்களும், புளி மரங்களும் நின்றிருந்தன. சற்றுத் தொலைவில் பனை மரங்கள் தெரிந்தன. வான் நீலம் சொட்டுச் சொட்டாக ஊருணியில் இறங்குவதைப் போல் ஒரு தோற்றம். அது நீல மேகங்களின் மாயம். ஊருணியைக் கடக்கையில் சொன்னாள்- ‘ஐயா, ஒரு நிமிசம் நிப்பாட்டு; வா மவளே, இந்தா இங்கண கையள்ளிக் குடி தாயி தண்ணிய, ஊருக்குள்ள வாரத் தண்ணிதான், அதில என்னமோ மருந்து அடிக்கான்.’ ஆம், இது தேனாய் இனித்தது, நெல்லிக்காயைச் சாப்பிட்ட பிறகு குடிக்கும் தண்ணீர் இனிக்குமே அது போல் இருந்தது.

ஆச்சியின் வீடு ஒரு சிறு தோட்டத்திற்குள் இருந்தது. இரு தென்னை, வாகை மரங்கள். கீரைப் பாத்தி சற்றுப் பெரிதாக இருந்தது. வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய், அவரைப் பந்தல், சில காய்கறிச் செடிகள்; கூரை முகப்பில் பூசணி படர்ந்திருந்தது. ஒரு மாடத்தில் அம்மனின் முகம் போல ஒன்று செதுக்கப்பட்டு அதில் இரு பிரிவுகளாக துளசியும், தும்பையும் இருந்தன; ‘எங்க மாமியா வூட்டு சாமி, கன்னி பரமேசுரி, கும்புட்டுக்க கௌரி.’ அந்த அம்மன் முகம் அசப்பில் ஆச்சி முகம் போலத்தான் எனக்கிருந்தது.

‘உங்க வீட்டாரு செய்ற மாரி செய்ய மாட்டோம்; இது சீனியும், துருவலும் போட்டு செஞ்ச சேப்பு அவல் புட்டு, எடுத்துக்க தாயி’

அம்மா நிறைய நெய் ஊற்றி  அரிசிப் புட்டு செய்வாள்; இந்த எளிமையில் ஏதோ இனம் புரியா ருசி இருக்கிறது-அது அன்பின் ருசியோ என்னவோ?

செங்கல் பாவி சிமெட்டிப் பால் ஊற்றி இறுக்கி வெள்ளை வண்ணம் பூசி விறகால் எரிந்து கொண்டிருந்த அடுப்புகளின் மேல் ஆறு சர்வங்களில் இருவர் நெல் புழுக்கிக் கொண்டிருந்தார்கள். என்ன ஒரு மணம்! பெரிய நான்கு அண்டாக்களில் நெல்லை ஊற வைத்தார் ஒருவர். புழுக்கிய நெல்லை சரேலென்று சரித்து வடிகட்டினார்கள் நால்வர். பெரும் கரண்டிகளால் வரிசையாக இருந்த பெரும்  வாயகன்ற சமச்சீரான தவளைகளில் போட்டு கும்மாடத்தால் அமிழ்த்திப் புடைத்து உமியை வெளியேற்றினார்கள் மூவர். அத்தனையும் உடலுழைப்பு. பின்னரும் முறத்தில் போட்டு புடைத்து எடுத்தார்கள். தொழுவத்தில் இருந்த எருமைகளும், ஒரு பசுவும் கன்றும் நெல் களைந்த நீரை ஆசையாகப் பருகுவதைப் பார்த்தேன். ஆச்சி என்னை மீளவும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டாள்; கண்ணாடி வளையல்கள், பருத்திப் பாவாடை, மேல்சட்டை, தாவணி, கண்மை பனைச் சிமிழில், குங்கமமும் அதைப் போலத்தான்.

அப்பா ரிடையர் ஆகப் போவதால் எனக்குப் பதினெட்டு வயதில் திருமணம். ஆச்சி தானே தன் கிராமத்திலிருந்து அனைத்து வேலைகளுக்கும் ஆட்களைக் கூட்டி வந்தாள். பதினெட்டு வண்ண பனைக் கொட்டான்களில் அனைத்து வகை அவல்கள்; ‘எம் மவளுக்கு, கட்டு சாதமில்ல கொடுக்கேன்’

எனக்கு அம்மா,அப்பாவை விட ஆச்சியைப் பிரிவது அவ்வளவு வேதனையாக இருந்தது. கிளம்புகையில் தனியே அழைத்துச் சொன்னாள் “கௌரிம்மா, மாசில்லாத ஊருணித்தண்ணி இனிச்சது நெனப்பிருக்கா; இந்தா இருக்காரே பூவாட நாதரு;அவரது கோயிலுக்குள்ளாற இருக்கே கேணித் தண்ணி, அது அம்புட்டு இனிக்காது; தலேல வக்குற பூவு வாசம், பதார்த்தத்ல எறங்கிடுச்சுனா உண்ண ஏலாது. நாவு இனிக்க ஒரு தண்ணி, ஊரே மணக்க ஒரு நீரு.” எனக்குப் புரிந்தும் புரியாததுமாக இருந்தது.

வாக்கப்பட்டு வந்த ஊரில் ஜீவனே இல்லாத தண்ணீர்தான். ருசி பேதங்கள் கடுத்தன. நான் கர்ப்பமானேன். வளைகாப்பு, சீமந்தம் முடிந்தவுடன் மீண்டும் பூவாடையூர். என் குழந்தைக்கு முதல் செவ்வெண்ணை ஆச்சிதான் வைத்தாள். அம்மா இதற்கெல்லாம் போட்டிக்கு வர மாட்டாள். ‘பசுவும், கன்னுமா போய் வாழயும் வரப்புமா வளரு தாயி’ என்று ஆச்சி சொல்கையில் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அது பெண் குழந்தை. என் புக்ககக் குடும்ப வழக்கப்படி அனன்யா தவழ்ந்து உட்காருகையில் காது குத்தும் விழா. குழந்தைக்கும் பதினோரு மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் பிறந்த ஊருக்கு வர, சீராட இதெல்லாம் நல்ல வாய்ப்பு அல்லவா?

விபாபாரத்தை முடித்துவிட்டு வந்தாளென்றால், குழந்தையை மடியை விட்டு இறக்க மாட்டாள் ஆச்சி. ‘ஆச்சி, ஊருக்கு வந்துடுங்க,உங்க மக, பேத்தி எல்லாரோடையும் இருக்கலாமில்ல’ என்று சொல்வேன், சிரிப்பாள் ஆச்சி. மறுப்பதை மறைக்கும் சிரிப்பு அது.

அந்த ஒரு நாள் ஏன் அப்படி விடிந்தது? எந்தக் கணக்கில் முத்துக் கன்னி ஒர் உயிரைக் கொண்டு வந்தாள், பதினோரு மாதம் சொர்க்கத்தை எனக்குக் காட்டினாள்? எந்தக் கணக்கில் என்னையும் ஆச்சியையும் பிரித்தாள்? அந்தக் கணத்தை ஏன் கனமானக் கல்லாக என் மனதில் ஏற்றினாள்?

அனன்யாவை முன் வராந்தா தரையில் சிறு மெத்தையின் மேல் படுக்க வைத்து இரு பக்கமும் தலையணையை அண்டக் கொடுத்துவிட்டு நான் முகப்பில் பிச்சிப்பூ பறிக்கப் போனேன். கொட்டு மேளம் கேட்டது. அம்மையும், அப்பனும் ஆனித் திருமஞ்சண ஊர்வலத்தில். சங்கொலி, உடுக்கை சத்தம், நாகஸ்வரம்; எல்லாவற்றிற்கும் மேலாகப் பரவி வரும் பூ வாசம். ஆச்சி தலைச்சுமையை வராந்தாவில் வைத்துவிட்டு ‘சின்னப் பூவு வொறங்குது, கனா கண்டு சிரிக்குது’ என்றவாறே  என் அருகில் வாசலில் வந்து நின்றாள். எங்கள் வீட்டுத் திண்ணையிலும் போவோர் வருவோர் ஏறி தரிசனத்திற்காக நின்றார்கள். ஜவ்வாதும், மருக்கொழுந்துமாக முன் வாசம்; வெட்டி வேரில் பின் வாசம். ‘வாசலுக்கு சாமி ஏன் வருது தெரியுமா? கிழடு, சிறுசு எல்லாம் நடந்து போய் பாக்க முடியாதில்ல;’ என்றாள் ஆச்சி. நான் குழந்தையை எடுத்துவர உள்ளே ஓடினேன். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அனன்யா தட்டுத் தடுமாறி நடந்து வந்து  அவலை அள்ளி அடைத்துக் கொண்டிருக்கிறாள்; அது மூச்சுக் குழாயில் சிக்கிச் சொருகி அடைத்து என் குழந்தை காற்றிற்குத் திணறி இறந்திருந்தாள்; ‘ஐயோ,ஆச்சி கொன்னுட்டீங்களே’ என்று அலறிவிட்டேன்.

ஆச்சி திகைத்து நின்றாள். ஒரு வார்த்தை பேசவில்லை. வாசலுக்குச் சென்றாள். ‘மொட்டுக் கன்னி, உம்மேல ஆண-இனி அவல் செய்ய மாட்டேன், விக்க மாட்டேன்.’

ஆச்சி இந்தக் குழந்தையைப் பார்க்க வர வேண்டும்; கொஞ்ச வேண்டும். எனக்கு அவள் வீடு தெரியும்.ஆனால்…..

 

 

 

குண்டலகேசியின் கதை -6 – தில்லைவேந்தன்

Tamil Kundalakesi for Android - APK Download

 

 

முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவித்தான்.
இனி, அவர்களின் திருமணத்தைக் காண்போம்……..

 

 

கதிரவன் தோற்றம்

பேரெழில் பத்தி ரையாள்
பெட்புடன் காளன் தன்னைச்
சீருடன் மணக்கும் காட்சிச்
சிறப்பினைக் காண்ப தற்குத்
தேரினில் குதிரை ஏழு
செலுத்தியே கிழக்கு வானில்
காரிருள் பகைவி ரட்டிக்
கதிரவன் வந்தான் மாதோ!

திருமண ஊர்வலம்

ஈர்ந்தண் முழவு ததும்பிடவும்
யாழும் குழலும் விளங்கிடவும்
ஆர்ந்து முரசம் அதிர்ந்திடவும்
ஆழி சங்கம் முழங்கிடவும்
சேர்ந்து முத்து வெண்குடைகள்
திசைகள் தோறும் எழுந்திடவும்
ஊர்ந்து மணநாள் ஊர்வலமும்
ஊரே வியக்கச் சென்றதம்மா

மணவிழாவிற்கு வந்த பல்வகை மக்கள்

பெடையன நடையார் வந்தார்
பேரிளம் பெண்கள் வந்தார்
விடையன இளையோர் வந்தார்
மெய்தளர் முதியோர் வந்தார்
உடைப்பெரும் செல்வர் வந்தார்
உயர்நிலை இருப்போர் வந்தார்
நடைமெலி நல்கூர்ந் தாரும்
நாட்டமே மிக்கு வந்தார்
( பெடையனம்- பெண்அன்னம் )

( பேரிளம் பெண்கள் — வயது முதிர்ந்த பெண்கள்)
( நல்கூர்ந்தார் — வறியவர்)

திருமண விருந்து

காலை வந்த ஊர்மக்கள்
களித்துப் பொங்கல், வெண்சோறு,
சாலச் சிறந்த கறிவகைகள்,
தயிர்சேர் இனிய புளிப்பாகர்
ஞாலம் விரும்பும் நறுங்கனிகள்,
நாவை மயக்கும் நல்லினிப்பு
மேலும் மேலும் கேட்டுண்டு
மேவும் விருந்தின் சுவைபுகழ்ந்தார்!

(தயிர்சேர் இனிய புளிப்பாகர் — தயிர் கலந்து செய்த , இனிய புளிப்பையுடைய மோர்க்குழம்பு)

மணவிழா மண்டபம்

மண்டபத்தின் வாயிலிலே இரும ருங்கும்
வாழையுடன் கமுகுமரம் தலைவ ணங்கும்
கண்டவர்கள் மனமயங்கும் நீலப் பட்டின்
கவின்மிகுந்த விதானத்தில் முத்துத் தொங்கும்
வண்டினங்கள் மொய்க்கின்ற மணக்கும் பூக்கள்
வண்ணவண்ண மாலைகளாம் இங்கும் அங்கும்.
பண்டையர்தம் முறையினிலே அலங்க ரித்த
பாங்கினுயர் மணவறையில் மகிழ்ச்சி பொங்கும்.

மணமக்கள் மண்டபம் வந்தடைதல்

வெண்புரவி மீதேறித் திண்தோள் காளன்
மேன்மைமிகு மண்டபத்தை வந்த டைந்தான்
மண்புகுந்த நிலவனைய பத்தி ரையாள்
மகிழ்ச்சியுடன் மணிச்சிவிகை ஊர்ந்து வந்தாள்
பண்புகுந்த இன்னியங்கள் முழங்க மேளம்
பருவரைமேல் இடியொலிபோல் அதிர ஆங்குக்
கண்புகுந்த மணக்கோலக் காட்சி யாலே
கண்பெற்ற பயனடைந்தார் நகர மாந்தர்

( இன்னியங்கள் — இசைக்கருவிகள்)
( பருவரை — பெரிய மலை)

திருமணம்

வெள்ளி முளைக்கும் வைகறையில்
வேள்வித் தீயை வலம்வரவும்
அள்ளிப் பூக்கள் அவர்மேலே
ஆன்றோர், பெரியோர் சொரிந்திடவும்
கள்ளி ருக்கும் மலர்க்கூந்தல்
காதல் மங்கை பத்திரைக்கும்
துள்ளும் இளமைக் காளனுக்கும்
தூய மணம்தான் சிறந்ததுவே!

(தொடரும்)

 

கம்பன் கவிநயம் – தங்க தனசேகரன்

Ramayanam story in tamil | Kamba ramayanam in tamil | கோசல நாட்டின் செழிப்பு | Part -1. - YouTube

ஒரு நாட்டில் இயற்கை மரணங்கள் தவிர்த்து செயற்கை மரணங்கள் இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும்?

நமது நாட்டில் விதிமுறைகளை மீறுவதால் நிகழும் விபத்து மரணங்கள் ஏராளம்.

மதவேற்றுமைகளை மையமாக வைத்து நடக்கும் வன்முறை மரணங்கள் ஏராளம்.

அமைதி போராட்டங்களினூடே ஊடுருவி சமூக விரோதிகளால் ஏற்படும் வன்முறை மரணங்கள் ஏராளம்.

கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் உருவாகும் கோஷ்டி மோதல்களில் நடைபெறும் வன்முறை மரணங்கள் ஏராளம்.

மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்படும் சண்டைகளால் ஏற்படும் துர்மரணங்கள்.

பெண்களை போகப்பொருளாக எண்ணி பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் மரணங்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். குற்றங்கள் பெருகும் ஒரு நாட்டில் இத்தகைய துர்மரணங்களுக்குஅளவு இல்லை;முடிவும் இல்லை.

ஆள்வோர் யாராக இருந்தாலும் குற்ற செயல்களைத்  தடுக்கத்  தவறி விடுகின்றனர்.

அங்கே கூற்றுவனுக்கு இடையறாத கூடுதல் வேலை. எமதர்மனுக்கு அந்நாடு களிப்பு களமாக திகழ்கிறது. குற்றங்கள் குறைந்து விட்டால் அல்லது குற்றச்செயல்களே இல்லாத ஒரு நாட்டில் எமனுக்கு அதிக வேலை கிடையாது. அவன் நன்கு ஓய்வெடுக்கலாம்.

நாடு என்பது நாட்டில் உள்ள இடங்களையும் இயற்கை வளங்களையும் மட்டும் குறிப்பதன்று. நாட்டு மக்களையும் உள்ளடக்கியே நாடு எனப்படும். மக்களின் தகைமை கொண்டே நாட்டின் தன்மை தீர்மானிக்கப்படும். செழுமையான சிந்தனை மற்றும் நேர்மையான எண்ணங்களை உடைய மக்களைக் கொண்ட நாடு நல்ல நாடு என்று பகிரப்படும். அங்கு அமைதி தவழும். சகோதர உணர்வு மிளிரும். சகிப்புத்  தன்மைக்கு குறைவிருக்காது. எனவே மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுருங்கக் கூறின் அதுவே பாருக்குள்ளே நல்ல நாடாக இருக்கும்.

அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை தசரதன் ஆண்டு வந்தான்.

கோசல நாட்டின் சிறப்பை கம்பன் கீழ்க்கண்ட பாடலில் விவரிக்கிறான்:

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லாமையால்
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்
ஆற்றல் நல்அறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது இழித்தகவு இலையே. (பாடல் 70)

கோசல நாடு:

குற்றங்கள் இல்லை — எமனுக்கு வேலையில்லை
நற்சிந்தனையுடை மக்கள் — மகிழ்ச்சியான வாழ்க்கை
அறவழி செயல்கள் — சிறப்பு மிக்க நாடு

மேலும் கம்பன் சொல்வான்:

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்
வண்மை இல்லை பல்கேள்வி மேவலால். (பாடல் 84)

தாராள மனப்பான்மை கொண்டு தானம் செய்வோர் அங்கில்லை. ஈகை நெஞ்சம் கொண்டோர் யாருமில்லை என்ற பொருள் இல்லை.  அந்நாட்டில் வறுமை இல்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வறியவர் இல்லை. கையேந்திப் பிழைப்போர் எவருமில்லை. அதனால் வாரி வழங்கும் வள்ளல்களுக்கு வேலையில்லை.

குடிமக்கள் பலசாலிகளாக இல்லை. சுகவாசிகளாக வாழும் மக்கள் உடற்பலம் மிக்கவர்களாக இருப்பதில்லை என்பது உலக இயல்பு. கோசல நாட்டை எதிர்க்கும் துணிவுடைய பகைவர்கள் இல்லாததால், அந்நாட்டு மக்கள் பதட்டமற்ற இனிதான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உடல் வலிமையை அதிகரிக்க வேண்டிய சூழல் எழவில்லை.

மேலும் உண்மை பேசுவோர் இவர்கள் என்று குறிப்பிட்டு சிறப்புற சொல்வதற்கான தேவை கோசல நாட்டில் எழவில்லை . ஏனென்றால் பொய் பேசுவோர் எவரும் இல்லை .

இறுதியாக, அந்நாட்டு மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் “நான் மட்டுமே அனைத்தும் அறிந்தவன்” எனும் அறியாமை இருள் இல்லை. இதனால் யாரும் யாருக்கும் அடிமையில்லை எனும் சமத்துவமும் சமதர்மமும் தழைத்தோங்கியது.

கம்பன் கண்ட கோசலநாட்டின் சிறப்புகளை மீட்டெடுத்து இந்நாளில்  ‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்கிற பெருமை சேர்க்க நாமனைவரும் அவரவர் வழியில் முயற்சிப்போம்.

 

 

 

 

 

குமார சம்பவம் – எஸ் எஸ்

ஏழாம் சர்க்கம்

நன்றாக வந்திருக்கிறது 'நண்பன்' ! : ஷங்கர் | Lord ganesha paintings, Hindu art, Shiva parvati images

குறித்த நான்காம்நாளில் பூர்வாங்க காரியம் செய்திட இமவான் துவங்கினன்

நகரமாந்தர் தம் பெண்ணின் மணவிழா போல் மங்கள காரியம் செய்தனர்

பட்டுவிதானம் அமைத்து வாயிலில் தோரணம் கட்டி  பூக்களையும்  தூவினர்

பார்வதியை உயிரெனக் கருதிய இமவான்  வேண்டியதனைத்தும் செய்தனன்

உறவினப்பெண்டிர் பார்வதிக்கு அணிகலன் பூட்டி  ஆசி வழங்கி அருளினர்    

சுமங்கலிப்பெண்கள் நல்ல நேரத்தில்  அலங்காரம் செய்யத் துவங்கினர்

எண்ணெய்  ஸ்நானம் செய்திட வேண்டி தக்க உடையும் பாணமும் தந்தனர்

குளிப்பதற்கு முன்னரும்  வளர்பிறை மதியம்போல் அழகுடன் கொழித்தாள்

வாசனைப் பொடி தடவி கஸ்தூரி மஞ்சள் பூசி  நீராட அழைத்துச் சென்றனர்   

ரத்தினக் குளியலறையில் தங்கக்குடநீர் பெய்து மங்கள ஸ்நானம் புரிந்தனர்

மங்களக் குளியலுக்குப்பின் வெண்பட்டு அணிந்து பொலிவுடன் இருந்தாள்    

மணிகள் பதித்த அலங்கார மண்டபத்துக்கு அவளை அழைத்துச் சென்றனர்

அலங்காரம்  புரியவந்த பெண்கள் பார்வதியின் எழிலில் மயங்கி நின்றனர்  

அகிற்புகையிட்டு மலர்செருகி  பூச்சரம் தொடுத்து கூந்தலை முடிந்தனர்

மேனியெங்கும் வெண்சாந்து பூசி அழகு வரிகளையும் ஆங்காங்கே எழுதினர்

மேகக்கூந்தலில் அழகுமுகம் சந்திரபிம்பமோ வண்டு குவிந்த தாமரையோ

சாந்து பூசிய கன்னம் பூக்கள் பதித்த செவிகள் பார்த்த கண்கள் மயங்கின   

செம்பஞ்சுண்ட இதழ்கள் தேன்மெழுகிட்டதும் அசைந்து அசைந்து துடித்தன

செம்பாதத்தில் சிவன்சிரசு படும்போது சந்திரகலையை எட்டி உதைப்பாளோ

கண்ணே இத்தனை கருத்திருக்க மேலும்  அதற்கு மையிடல் தேவையோ

ஆபரணங்களை அவள் மேனி அணிவது நட்சத்திரங்கள்  உதிக்கும் வானமோ

தன்எழிலை ஆழியில் கண்டதும் அதனை ரசிக்கவரும் சிவனை நினைத்தாள்

முடிவில் மேனை பார்வதிக்கு தந்தக் காதணி அணிவித்து உச்சி முகர்ந்தாள்

நல்லவரன் அமைந்ததென  மகளை ஆனந்தக் கண்ணீரால் அலங்கரித்தாள்

மங்கலநூலை மகள்கையில் கட்டும்போது  கண்ணீர் பெருகத் தடுமாறினாள்   

வெண்பட்டு உடுத்திய பார்வதி பாற்கடல் புரளும் நுரைபோல் பொங்கினாள்

அலங்காரம் முடிந்த பார்வதி தெய்வத்தையும் பெண்டிரையும் வணங்கினாள்

பதிவிரதைப் பெண்டிர் பார்வதிக்குக் குறைவின்றி ஆசிகள் வழங்கினர்

பெண்ணை மணமகளாய்க் கண்ட இமவான் மணமகன் வரக் காத்திருந்தான்

hinducosmos | Lord shiva painting, Lord shiva, Shiva parvati images

சிவனுக்கும் அதே சமயம் அலங்காரம் செய்விக்க ஆடை அணிகலன் வந்தன

சிவனின் உடலைத் தழுவிய பொருட்கள் தாமே அணிகலன்களாய் மாறின

விபூதி சந்தனமாக கபாலம் தலையணியாக  தோலாடை பட்டாயிற்று   

நெற்றிக்கண் ஹரிதாள திலகமாய் மாறி முகத்திற்கு அழகு சேர்த்தது    

கழுத்தில் கையில் தோளில் இடுப்பில் இருந்த பாம்புகள் ஆபரணங்களாயின

ஒளிவீசும் சந்திரகலை சிரசை அலங்கரிக்க வேறொரு ரத்தினம் எதற்கு ?

தன் சக்தியால் அழகு பெற்ற சிவபிரான் கத்தியில் தம் அழகைக் கண்டார்

நந்திகேஸ்வரர் கைபிடித்து ரிஷப வாகனத்தின் மீதேறி சிவனும் புறப்பட்டார்

தாய்மார்கள் எழுவர்  சிவபிரான் பின் தத்தம் வாகனத்தில் உடன் சென்றனர்

பொன்னிறத் தாய்மார்கள்பின் கருத்த மேகம் போன்று பத்ரகாளி சென்றாள்

சிவசேவகர் பிரானுக்கு முன் வாத்யம் முழங்கி தேவர்புடைசூழ சென்றனர்   

விஷ்வகர்மா குடைவடிக்க சூரியன் பிடித்திருக்க சிவபெருமான் சென்றார்

கங்கையும் யமுனையும் தேவவடிவம் கொண்டு வெண்சாமரம் வீசி வந்தனர்

பிரும்மரும் விஷ்ணுவும் சிவபிரானை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றனர்

வேதநாயகன் விவாக சுபதினத்தில் மும்மூர்த்திகளும் பேதமின்றி  இருந்தனர்

இந்திராதி தேவரும் நந்திதேவர் அருள்பெற்று சிவபெருமானை வணங்கினர்

பிரும்மருக்குத் தலையசைப்பு விஷ்ணுவுடன் உரை சிவனின் சபைகௌரவம்

வந்திருந்த சப்தரிஷிக்களிடம் விவாகம் நடத்தித்தர   சிவனும் வேண்டினார்  

கந்தவர்கள் பிரானைப் பாடித்துதிக்க  சிவனும் செவிமடுத்து மேலேசென்றார்

சிவபிரான் இவர்ந்த ரிஷபவாகனம் அசைந்துஅசைந்து அழகாய்ச் சென்றது

ஔஷதிப்ரஸ்தம் சென்ற பிரான் பொன்னகரைப்  புன்னகையுடன் பார்த்தார்

 திரிபுர வதையின்  பாணமென சிவன் விண்ணிலிருந்து கீழே இறங்கினார்

இமவானும்   வாசலில் வந்த சிவனை வரவேற்க சுற்றம் சூழச்  சென்றான்

சிவசேவகரும்  இமவான் உறவும் நீரோடு நீர் கலந்தார்போல கலந்தனர்

உலகே வணங்கும் சிவன் தன்னை வணங்கக் கண்டு வெட்கினான் இமவான்

மருகனாய்வந்த பிரானை மலரிட்ட பாதையில் தானே அழைத்துச்சென்றான்   

 

உலாவரும் சிவனைக் கண்ணால்காண பெண்களின் துடிதுடிப்பு அம்மம்மா

அவிழ்ந்த கூந்தலை முடியாமல் விரைந்து சன்னலருகு சென்றாள் ஒருத்தி

காலில் செம்பஞ்சு பூசிடும்போது பூச்சு வழிய  ஓடினாள் மற்றொருத்தி

ஒரு கண்ணுக்கு மையிட்டு மறு கண்ணை மறந்து ஓடினாள் இன்னொருத்தி

அவிழ்ந்த ஆடையை இழுத்துச் சொருகாமல் அப்படியே ஓடினாள் ஒருத்தி

நூலில் ரத்தினம் கோர்ப்பவள் அவை சிதறுவது அறியாமல் சாடினாள் ஒருத்தி

ஜன்னலில் பூத்த மலர் போல் அழகுப் பெண்கள் சிவனைப் பார்த்து நின்றனர்

அனைவரும் ஆவலாய்ப் பார்த்திருக்க தோரண வீதியில் சிவனும் வந்தார்

பிரானின் திருவுருவைப் பார்த்த பெண்டிர் பார்த்த வண்ணமே நின்றனர்

அழகியசிவனை அடைய பார்வதியின் தவம் நியாயமே எனப் பகர்ந்தனர்  

அழகும் அழகும் இணையாவிடில் அழகுக்கே  பொருளில்லை என்றனர் சிலர்

சிவன் எழில் கண்ட மதன்  நாணித்  தானே சாம்பலானான் என்றனர் சிலர்

உயர்ந்தஇமவான் சிவன் மருகனானபின்  இன்னும்உயர்வான் என்றனர் சிலர் 

 

பெண்டிர் சொல்கேட்ட  சிவன் புன்னகையுடன் இமவான்இல்லம் அடைந்தார்

விஷ்ணு கைகொடுக்க பிரும்மன் வழிகாட்ட சிவன் மணவறை  சென்றார்

தேவரும் ரிஷிக்களும் சேவகரும் மற்றையோரும் அவர் பின் தொடர்ந்தனர்

இமவான் சிவபிரானை சாஸ்திரப்படி பட்டாடை கொடுத்து வரவேற்றான்   

 

புத்தாடை உடுத்திய சிவபிரானை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்

பூத்திருக்கும் பார்வதியைக்  கண்ட சிவனின் கண்கள் மகிழ்வில் மலர்ந்தன

காணத்துடித்த இருவர் கண்களும்   பிறர் காணாதபோது கண்டு மகிழ்ந்தன     

பார்வதிகரத்தை இமவான்  தந்திட சிவனும் பற்றிட இன்பம் அங்கே பிறந்தது 

பார்வதி மயிர்க்கூச்செறிய சிவன் கைவியர்க்க கரஸ்பரிசம் காரணமாயிற்று

அழகே உருவான இருவரும் தங்கள்  மணநாளில் அழகுக்கு அழகு சேர்த்தனர்

தம்பதிகள் இருவரும் மற்றவர் கைபற்றி மின்னும்  அக்னியை வலம் வந்தனர்     

உணர்ச்சியில் துடித்த இருவரும் அக்னியில் பொரியிட்டு ஹோமம் செய்தனர்

 புரோகிதர் ஆணைப்படி ஓமப்புகை கையெடுத்து முகர்ந்தனள் பார்வதி

பார்வதி கண்மை புகையில் கரைய சூடிய மலர்களும் புகையில் வாடின

விவாகம் முடித்த புரோகிதர் சிவபார்வதி இருவருக்கும் ஆசி வழங்கினர்

புரோகிதர் கூறிய  ஆசி வார்த்தைகளை மனதினில் பதித்தாள் பார்வதிதேவி

துருவநட்சத்திரம் பாரென சிவன்கூற  பார்த்தேன் என பார்வதி உரைத்தாள்       

உலகின் தாய்தந்தை  சிவபார்வதி பாட்டன் பிரும்மமரை வணங்கினர்

பார்வதிக்கு ஆசி வழங்கிய பிரும்மர் சிவனிடம் சொல்வதறியாது நின்றார்

சிவ பார்வதி இருவரும் பொன்மணை அமர்ந்து அட்சதை ஆசிகள் ஏற்றனர் 

லட்சுமிதேவி வெண்தாமரை மலரெடுத்து தம்பதியர்க்குக் குடை பிடித்தாள்

சரஸ்வதிதேவி சிவ பார்வதியரை  தனித்தனி மொழியில் வாழ்த்தினாள்

தம்பதியர் இருவரும்  தேவமகளிர் நடித்த நாடகம் பார்த்து மகிழ்தனர்

தேவர்கள் அனைவரும் தம்பதியரிடம் மன்மத சேவையை ஏற்க வேண்டினர்

சிவனும் உளம் மகிழ்ந்து  மன்மத பாணங்கள் தம்மிடம் வருவதை ஏற்றார்

பார்வதி கரம்பற்றிய சிவன்  அலங்கார சயனஅறைக்கு அழைத்துச்சென்றார்   

வெட்கத்தில் தவித்த பார்வதிக்கு ஹாஸ்யரசம் தந்து வெட்கம் விடச் செய்தார்

 

நமப்  பார்வதி பதையே !   ஹர ஹர மகாதேவா !   

 

முற்றும் 

திரை ரசனை வேட்கை 3 – என் உயிர்த் தோழன் – எஸ் வி வேணுகோபாலன் 

உயிர்த்திருக்கும் உற்ற தொண்டன் 
பாரதிராஜாவின் ‘ என் உயிர்த் தோழன் ‘ 
En Uyir Thozhan Video Jukebox | Ilayaraja | Malaysia Vasudevan | Chithra | Pyramid Glitz Music - YouTube
ரசியல் கதைகள் அதற்குமுன்பும் திரையில் பார்த்ததுண்டு. அதற்குப் பிறகும் நிறைய. அப்பாவிகளின் வாழ்க்கையை அப்பட்டமாக சித்தரிக்கும் படங்கள் அதற்கு முன்பும் பின்பும் பார்க்கவே செய்ததுண்டு. உள்ளத்தை உருக்கி விடுகிற படங்கள் இதை விடவும் வலுவான திரைக்கதையில் வேறு எத்தனையோ பார்ப்பது உண்டு தான். ஆனால், என் உயிர்த் தோழன் நெஞ்சை விட்டு அகலாது உள்ளேயே உட்கார்ந்திருக்கிறான். பாரதிராஜா படைப்புகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான கதைக்களம் இந்தப் படம்.
கட்சிக்காக உயிர் கொடுக்கும் வெகுளியான ஒரு தொண்டனின் தியாக வாழ்க்கை என்று ஒற்றை வரியில் எழுதிப் படித்தால், அதில் எந்த நியாயமும் இல்லை. அரை மணி நேரத்தில் ஒரு கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியேறுவது போன்றது தான் அது. 
ண்மையில் தேசம் என்றால் என்ன என்ற வரையறை பற்றி ஒரு பொருளாதார நிபுணரின் அசத்தலான கட்டுரை வாசித்தது நினைவுக்கு வருகிறது. பதினேழாம் நூற்றாண்டு போல ஐரோப்பிய கண்டத்தில் புழக்கத்தில் வந்த அந்தச் சொல், உடைமை வர்க்க மக்களைக் குறிப்பதாக பொருளில் தான் பொதுவான சொல்லாக தேசம் உருவாக்கப்பட்டது. அது, பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிதி மூலதனத்தின் ஆளுகை வேகமாகப் பரவத் தொடங்கிய பொழுதில், அதன் நலன் சார்ந்த கடமைகளுக்கே தேசம் என்ற அடையாளம். ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திற்கு எதிராகத் திரண்ட போராட்ட காலத்தில், தேசம் என்பது மறு வரையறைக்கு உட்பட்டது. தேசம் என்றால் மக்கள். உழைப்பாளி மக்கள். ஆனால், நவீன பொருளாதார இந்தியாவில் மீண்டும், தேசம் என்றால் பெருந்தனக்காரர்கள், பெருந்தொழில் இல்லங்கள் இவர்களே என்று விதி மீண்டும் நிறுவப்பட்டுவிட்டது என்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.
ட்சி என்றால் தலைவர், தலைவர் என்றால் கட்சி என்று புரிந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தொண்டர்களில் ஒருவன் தருமன். அவர் சிறையில் இருந்தால் இவன் நிம்மதி இழக்கிறான். தனக்காக யாராவது தீக்குளிக்க வேண்டும் என்று அவர் உள்ளே விரும்பினால், இவன் கெரசீன்   டின்னோடு காந்தி சிலை நோக்கிப் போய் நின்றுவிடுகிறான். அவர் விடுதலை ஆனது தன்னால் தான் என்று உளமார நம்புகிறான். குயிலு குப்ப மக்களுக்குத் தனது நற்பணிகளால், நன்னடத்தையால், அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஆதரவான இன்னோர் அன்றாடங்காய்ச்சி என்றாலும் அவர்களுக்கான தாதாவாகக் காத்து வரும் சேவையால் மொத்த 15,000 வாக்குகளையும் அவனறியாமல் அவன் இடுப்பில் சரியாமல் அள்ளிச் செருகிக் கொடுத்திருக்கிறது வாழ்க்கை. கட்சிக்கு, அதாவது, தலைவருக்குக் கண்ணாக தருமன் உருமாறுவது அந்த வாக்குகளுக்காகத் தான் என்பது அறியாமல் அவருக்காக உழைக்கிறான், அலைந்து திரிகிறான், இறுதியில் மரிக்கிறான்.
நாடகக் கதாநாயகனை நிஜ நாயகனாக நம்பி, சிற்றூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு வந்து பாதிவழியில் அவனால் கைவிடப்பட்டுச் சென்னை வந்து இறங்குகிற கதாநாயகி, ரிக்ஷா ஓட்டி தருமனிடம் அடைக்கலமாகி குயிலு குப்பம் வந்து சேருவது முக்கியமான இடம்.  அந்த நாடக நடிகன் திரையில் ஜொலித்து நட்சத்திரமாகி  தருமனின் கட்சி தலைவரது ஆசியோடு அரசியலுக்குக் குடிபெயர்ந்து வேட்பாளராகி, வாக்கு சேகரிக்க அதே குயிலு குப்பத்தில் நுழைவது அடுத்த முக்கியமான கட்டம். அவனது துரோகத்தால் எரிகிற நாயகியின் உள்ளத்து நெருப்பில் 15,000 வாக்குகள் சாம்பலாகி விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கட்சி தலைவர் ‘என் உயிர்த் தோழா’ என்று தருமனை விளித்து அவனுக்குள் அவர் ஏற்றி வைக்கும் நெருப்பு, கூடுதல் வெம்மையாக இருக்கிறது. வாக்குகள் பத்திரம் காக்கப்பட்டுவிடுகிறது, ஆனாலும், தலைவருக்கு வேறு சில தொகுதிகளில் இருக்கும் ஊசலாட்டம் கடைசி கட்ட உயிர்ப்பலி கேட்கிறது, தருமனைத் தவிர அதை யாரிடம் கேட்பார் தலைவர், ஆனா ல், அதையும் கூடக் கேட்காமலே பறித்துக் கொள்கிறது அரசியல்.  
இயற்கைத் தூரிகை தீட்டிய ரம்மியங்களில் திளைத்து இருந்த நான், ஒரு பொது மனிதனாக ஜன்னல் வழி தரிசித்தேன், சமூகத்தில் ஒரு கலைஞனுக்கு உள்ள தார்மீகக் கடமை என்ன என்று யோசித்தேன், அது தான் இந்தக் கதை என்று நுழைவாயிலில் பேசுகிறார் பாரதிராஜா.
இப்படி ஓர் உயிர்த் தோழன், கட்சித் தலைவருக்குக் கிடைத்தாலும் கிடைப்பான், தருமன் பாத்திரத்திற்கு, பாபு மாதிரி ஒரு நடிகர் கிடைப்பது அரிது.  சென்னை குப்பத்து வாலிபனாக அவரது உடல் மொழியும், குரலும், நடிப்பும் அமர்க்களமாக இருக்கும். குயிலு குப்பத்தின் அசாத்திய உருவாக்கம், சென்னை மாநகரின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பின் அச்சு அசலான பிரதி. 
சாலையோரத்தில் இட்லிக் கடை, வட்டிக்கு கடன் கொடுத்தல், அலைச்சலுக்கு இளைப்பாறுதலாகக் கொஞ்சம் போல சாராயம், தம்பி தருமனுக்கான முரட்டுப் பாசம் என்ற எளிய வாழ்க்கையை ஒரு நடுத்தர வயது பெண்மணியாக வடிவுக்கரசி கலக்கி இருப்பது அவரது திரை வாழ்க்கையில் முதல் மரியாதை படத்தில்  வாய்த்ததை விடவும் கூடுதல் பெருமை கொள்ளத் தக்க நடிப்பு. 
பாபுவும், வடிவுக்கரசியும் சென்னைத் தமிழில் மிக இயல்பான உடல் மொழியோடு  தோன்றி இருப்பது படத்தின் ஆகச் சிறந்த வலு. ‘யெக்கா’ என்ற தருமனின் விளிப்பு, குடிக்கறதை விட்டுவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லும் அக்காவிடம், ‘சாராயத்தைக் குடிச்சு சாவறத விட அத குடிக்காம சாவு’ என்று சொல்ல, அவள் அதைத் தாங்க மாட்டாது ‘குடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்யும் இடம், அடுத்த நாள் காலை, தேநீர்க் கடையிலிருந்து  தனக்காக வரும் பாலில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பது அறியாமல், ‘சாராயத்தை விட்டுட்டே, இந்தப் பாலைக் கொஞ்சம் குடி’ என்று சொல்லிக் கொடுக்க, அவள் செத்து விழும்போது கதறி அழும் தருணம் நெகிழ வைப்பது.
நாயகி ரமா (சிட்டு), புது முகம். கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கு மேலதிகம்  வழங்கியிருக்கக் கூடிய சாத்தியங்கள் அவருக்கு ஏனோ கை கூடவில்லை. அளவோடு நிற்கிறது அவர் பங்களிப்பு. நடிகர் அரசியல்வாதி தென்னவனும் அப்படியே. அவருக்கு டப்பிங் குரலைத் தான் தந்திருப்பதை அவசியம் தவிர்த்திருக்க வேண்டும், பாரதிராஜா.  நாடகத்தனம், போலி வாக்குறுதி, ஏமாற்று அரசியல் இவற்றை குரல் ரீதியாக உருவகப்படுத்த அதை அவர் கையாண்டிருக்கக் கூடும். 
பாலியல் தொழிலில் மாமா பாத்திரம், அரசியலில் இடைத்தரகர் என லிவிங்ஸ்டன் அசத்தல் நடிப்பை வழங்கி இருப்பார். அவரது முகபாவம், வசன உச்சரிப்பு, உடல் மொழி எல்லாம் செதுக்கி வைத்தது மாதிரி அமைந்திருக்கும். காவல் நிலையத்தில், குப்பத்தில், கட்சி தலைவர் அலுவலகத்தில் அவரது ராவடிகள் அத்தனை அசாத்திய நம்பகத் தன்மை வாய்ந்தவை. காரியவாதியாக காசுக்கு எதையும் செய்யும் பாத்திரத்தில் சார்லி. உற்ற நண்பன் தருமனின் உயிரை மாய்க்கும் பொறுப்பைக் கூட காசு ஏற்க வைக்கிறது. இந்தக் காட்சிகள் யாவும் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருப்பவை.
இளையராஜா இசையில் இடம் பெற்றுள்ள பாடல்களில்  ஏ ராசாத்தி, குயிலு குப்பம் பாடல்கள் அமர்க்களமானவை.   இரண்டுமே மலேசியா வாசுதேவன், இரண்டாவதில் சித்ராவுடன் இணைந்து. ஏ ராசாத்தி பாடலில் ஒயிலும், தாளக்கட்டும், இசையும் இழைக்க மலேசியா குரல் சிறந்து ஒலிக்கும். குயிலு குப்பம், ராஜாவின் தனி முத்திரையோடு ததும்பும் காதல் பாடல். கோரஸ் சகிதம் இனிமையாக அமைந்திருக்கும்.
தருமன் கையில் இருந்து பாட்டில் பறந்தால் எதிரிகள் பறந்தோடுவது, தருமன் இல்லாம உள்ளே நுழையாதே என்று குப்பத்து மக்கள் கட்சி ஆட்களை விரட்டி அனுப்புவது, மக்கள் சக்தி வலுவாக இருந்தால் இடைத்தரகர்கள் ஜகா வாங்குவது, வேறு வழி கண்டுபிடித்து மீண்டும் நுழைவது எல்லாமே நிஜ நிகழ்வுகளுக்கு நெருக்கமான புனைவுகள்.
நம்பகத் தன்மை உள்ள ஏராளமான காட்சி அமைப்புகளின் தொகுப்பில், நம்ப முடியாத இறுதிக் காட்சி கூட, திரைப்படம் அவ்வளவாக மக்களை அதிகம் சென்று சேர முடியாமல் போனதற்கு ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். திரைக்கதையை இன்னும் கூடுதல் நேரம் எடுத்து விவாதித்து அமைத்திருந்தால், படம் வேறொரு தளத்திற்குப் போயிருக்க அதிகம் சாத்தியங்கள் உண்டு.  
இன்னொரு வருத்தம், கதாநாயகனாக நடித்த பாபு, பின்னர் வேறு ஒரு படத்திற்காகத் தானே ஸ்டண்ட் காட்சியில் நடிக்கையில் ஏற்பட்ட விபத்தில் கடுமையான காயங்களோடு பெரும்பாதிப்புக்கு உள்ளாகிப் படுத்த படுக்கையாக இருப்பது. 
‘கட்சின்றது ஆலமரம் மாதிரி..அதுல ஒரு குருவி வந்து அசிங்கம் பண்ணிச்சின்னு மரத்தை வெட்டக்கூடாதுன்னு தலைவரு சொன்னாரு சிட்டு. வரலாற்றுல விழுந்த கீறலை வரலாற்றை வச்சே சரி செய்யலாம்னாரு சிட்டு …நான் கெலிச்சா கட்சி கெலிக்கும்னு தலைவரே சொன்னாரு சிட்டு ‘ என்ற வசனம், செயற்கையற்று படத்தில் ஒலிப்பது, இப்போதும், இன்றும் பொருத்தமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
(ரசனை பரவும்…) 

நாட்டிய மங்கையின் வழிபாடு-5 கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்  

Tagore paintings | Silhouette art, Dark art drawings, Amazing art painting

          முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்; தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.

          பிம்பிசாரன், இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். இதனை விரும்பாத அரசி லோகேஸ்வரி  மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.

          மாலதி என்றொரு கிராமத்துப்பெண் அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அவள் தன் அனுபவங்களை ஸ்ரீமதியிடம் விளக்கிக்கொண்டிருக்கும்போது இளவரசிகள் வந்து இருவரையும் கேலி செய்து துன்புறுத்துகின்றனர். அப்போது உள்ளே வரும் அரசி லோகேஸ்வரி தனது துயரங்களைக் கூறிப் புலம்புகிறாள். ஒரு சேவகன் வந்து இளவரசன் சித்ரா அவளைக்காண வந்திருப்பதைத் தெரிவிக்க அவள் விரைகிறாள். அங்குவரும் பிட்சுணி உத்பலா அன்றுமாலை வழிபாட்டிற்கான காணிக்கைகளை ஸ்ரீமதியே செலுத்துவாள் எனக்கூற, இளவரசிகள் திகைக்கின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                         

Searching for Srimoti- Tagore's Heroine Today | Pulse Connects

பிட்சுணி: ஆமாம். இந்த நாட்டிய மங்கையேதான்.

ரத்னாவளி: பெரியவர்களிடமிருந்து உமக்கு இந்தக் கட்டளை வந்ததோ?

பிட்சுணி: ஆம்! அவர்களே இவ்வாணையைப் பிறப்பித்தது.

ரத்னாவளி: யார் அவர்கள்? அவர்கள் பெயர்களைக் கூறுங்கள்.

பிட்சுணி: ஒருவர் உபாலி.

ரத்னாவளி: அவர் நாவிதர் ஜாதியைச் சேர்ந்தவர்!

பிட்சுணி: மற்றொருவர் பெயர் சுனந்தா.

ரத்னாவளி: அவர் மாடுமேய்ப்பவரின் மகன்!

பிட்சுணி: ஆ! இளவரசி! அவர்கள் ஜாதி அனைத்தும் ஒன்றே. பெருந்தன்மை மிக்கவர்களின் பதவி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

ரத்னாவளி: ஒன்றும் இல்லை! வேண்டுமானால் இந்த நாட்டியக்காரி அதனை அறிந்திருக்கலாம். அவர்கள் அவளுடைய ஜாதியைச் சேர்ந்தவர்களோ என்னவோ, அதனால்தான் அவர்களுக்கிடையே இந்தவிதமாக நட்புரிமை கொண்டாடுகிறார்கள்.

பிட்சுணி: இருக்கட்டும். நமது தந்தையான அரசர் பிம்பிசாரர் இன்று தனது ஏகாந்தமான தனியிடத்தைவிட்டு நமது வழிபாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார். நான் சென்று அவரை வரவேற்க வேண்டும். (பிட்சுணி செல்கிறாள்)

அஜிதா: ஸ்ரீமதி, நீ எங்கே செல்கிறாய்?

ஸ்ரீமதி: அசோக மரத்தடியே உள்ள வழிபாட்டு மேடையைக் கழுவி சுத்தம் செய்யச் செல்கிறேன்.

மாலதி: சகோதரி,உங்கள் சேவையில் உதவி புரிவதற்காக என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

நந்தா: நான் உன்னுடன் வருகிறேன்.

அஜிதா: நானும் கூட ஒருவேளை உன்னுடன் சேர்ந்து கொள்வேன்.

வாசவி: அதனைக் காண நானும் ஆவலாக இருக்கிறேன்.

ரத்னாவளி: எத்தனை அழகாக இருக்கிறது இது! ஸ்ரீமதி வழிபாட்டைச் செய்வாள், விசுவாசமுள்ள உதவியாளர்களாகிய நீங்கள் அச்சமயம் அவளுக்கு விசிறியால் விசிறிவிடுவீர்கள்!

வாசவி: அச்சமயம் நீ விடும் மூச்சுக்காற்று உஷ்ணமான சாபங்களை இங்கிருந்து எங்கள்மீது வாரியிறைக்கும்! ஆனால் அது அசோக மரக்காட்டை எரித்துவிட முடியாது; ஏன் ஸ்ரீமதியின் உள்ளத்து அமைதியையும்கூடக் குலைக்க இயலாது…

          (ரத்னாவளியையும் மல்லிகாவையும் தவிர அனைவரும் செல்கின்றனர்).

ரத்னாவளி: இது தொடர முடியாது; தொடரவே முடியாது.  இது இயற்கைக்குப் புறம்பானது. ஓ, மல்லிகா, நான் ஏன் ஒரு ஆணாகப் பிறக்கவில்லை? சீ! இந்தக் கங்கணங்களுக்குப் பதிலாக என் கையில் ஒரு வாள் மட்டுமிருந்தால்…! நீயுந்தான் மல்லிகா, ஏன் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை? நீயும் அந்த நாட்டியக்காரியின் பணியாளாவதற்காக ஏங்குகின்றாயா?

மல்லிகா: நான் வேண்டினால்கூட அது எனக்குக் கிடைக்காது.  அவள் என்னை நன்கு அறிவாள்!      

ரத்னாவளி: நீ மௌனமாக இந்தக் கொடுமையை அனுபவிப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பொறுமை என்பது இழிவானவர்களுக்கும் உதவியற்றவர்களுக்குமேயான ஆயுதம்; அரசகுடும்பத்து வாரிசுகளுக்கு அல்ல.

மல்லிகா: நம் செய்கைகளின் பலன்களை அனுபவிக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆகவே நான் எனது பலத்தை வீணடிக்கப் போவதில்லை.

ரத்னாவளி: உனக்கு நிச்சயமாகத் தெரியுமா? 

மல்லிகா: ஆம்; உண்மையாகவே நிச்சயமாக.

ரத்னாவளி: அது ரகசியமாக இருக்க வேண்டுமானால் என்னிடமிருந்து அதனை மறைத்துவிடு. எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், அந்தக் கேடுகெட்ட நாட்டியக்காரி சந்நிதியில் வழிபாட்டை நடத்தும்போது நாம் எல்லா இளவரசிகளும் கூப்பிய கரங்களுடன் நிற்கவேண்டுமா என்பதுதான்.  

மல்லிகா: இல்லை, அப்படி இருக்காது, அதை மாத்திரம் என்னால் சத்தியமாகக் கூற முடியும்.

ரத்னாவளி: நமது அரச குடும்பத்தைக் காக்கும் கடவுள் உனது சொற்களை உண்மையாக்கட்டும்.     

                                       

 

                                                                  அங்கம்- 2

              காட்சி: மாற்றமில்லை.

          அரசி லோகேஸ்வரியும் மல்லிகாவும் உள்ளே நுழைகின்றனர்.

மல்லிகா: மகாராணி, தாங்கள் தங்கள் மகனைப் பார்த்து விட்டீர்களே, இன்னும் ஏன்.. ?

அரசி: மகனைப் பார்த்தேனா? எங்கே இருந்தான் அவன்? ஓ, இது சாவை விடக் கொடுமையானது. நான் இதனை எதிர்பார்க்கவேயில்லை.

மல்லிகா: என்ன சொல்கிறீர்கள்?

அரசி: இதனை விடக் கொடுமையானது என்ன இருக்க முடியும்? ஒரு தாயிடம் மகன் வருகிறான், ஆனால் மகனாக அல்ல. ஆ, அந்தக் கண்களில் நான் கண்டது, அவனுடைய தாய் ஒரு சிறு அடையாளத்தைக்கூட விடாமல் மறைந்து போய்விட்டாள் என்பதனைத்தான். உருத்தெரியாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்ட எனது இத்தகையதொரு பேரழிவை நான் கனவிலும் எண்ணிக்கூடப் பார்க்கவியலாது.       

மல்லிகா: நற்குணங்கள் நிரம்பிய வாழ்வைத் தான் ஏற்றுக்கொள்வதற்காக, தசையும் குருதியுமான தனது வாழ்வை ஒரு பிட்சு தாழ்மைப்படுத்திக் கொள்கிறார்.        

அரசி: ஐயோ பாவம்! பரிதாபத்துக்குரிய தசையும் குருதியும்! பாவம்! வலிமிகுந்த பசியுடனான பொறுக்கமுடியாத வேதனை! தசை, குருதியுடனான நமது போராட்டம், வெறுமையைத் தேடும் அவர்களது தேடலைவிடக் குறைவான சிரமம் படைத்ததா?

மல்லிகா: இருந்தால் என்ன? எத்தகையதொரு அழகை (தேஜஸை) அவன் (இளவரசன்) அடைந்திருக்கிறான் என எண்ணிப் பாருங்கள். அவன் ஒரு தெய்வீக ஒளியின் வடிவாகக் காணப்பட்டான்!

அரசி: ஆம்; அது அவனது தாயை, அவளது தாய்மையை அவமானத்திற்குள்ளாக்கிய வடிவு – அவனுக்கு நான் அளித்த பிறப்பிற்கும் அவனது தற்போதைய பிறப்பிற்கும் இடையேயான ஆழ்ந்ததொரு பிளவு! மல்லிகா, இது ஆண்களுக்கு மட்டுமேயான மதமென்று நான் இன்று உணர்ந்துகொண்டேன். இதில் பெண்களே எங்கும் இல்லை!- மகனுக்குத் தாய் தேவையில்லை, கணவனுக்கு மனைவி தேவையில்லை. இருப்பினும், இரந்துகொண்டு வரும் இந்த பிட்சுக்களுக்கு- மகனல்லாத, கணவரல்லாத, சகோதரர்களல்லாத, வீட்டைத் துறந்தவர்களுக்கு- தர்மம் கொடுப்பதற்காக நாம் நமது வெறிச்சிட்ட வீடுகளில் சருகாகிப்போன வாழ்க்கையை வாழ வேண்டும்! இந்த ஆண்களின் மதம் நம்மைப் பாழடித்து விட்டது, மல்லிகா! நாம் இப்போது அதனை அழிக்க வேண்டும்.

மல்லிகா: ஆனாலும், மகாராணி! நாள்தோறும் திரள்திரளாகப் பெண்கள் எவ்வாறு புத்தபிரானுக்குத் தங்கள் வழிபாட்டைச் செய்கிறார்கள் என்று நீங்களே பார்க்கிறீர்கள் அல்லவா?

அரசி: முட்டாள்கள்! அவர்களுடைய பக்திப்பசிக்கு எல்லையே இல்லை. எது அவர்களை மிகவும் ஆழமாக வருத்துகிறதோ அதனையே வழிபடுவார்கள்! அவர்களுடைய தவறுகளை ஆதரிக்க நான் மறுக்கிறேன்.

மல்லிகா: நிச்சயமாக நீங்கள் இதை மனப்பூர்வமாகக் கூறவில்லை, மகாராணி! உங்களுடைய வீட்டைவிட்டுச் சென்ற உங்கள் மகன் உங்கள் உள்ளக்கோவிலில் குடியேறிவிட்டான் என்று எனக்குத் தெரியும்.

அரசி: நிறுத்து! இனியும் இவ்வாறு பேசாதே! ஒரே ஒரு இரவை தன் தாயின் அறையில் கழிக்குமாறு நான் அவனிடம் கெஞ்சினேன்; அவனுடைய அன்னையின் கூரை திறந்த வானமே என்று அவன் கூறினான். நீ ஒரு தாயாக இருந்தால், மல்லிகா, அவனுடைய இந்தச் சொற்கள் எத்துணை கொடூரமானவை எனப் புரிந்து கொள்வாய். இடியும் மின்னலும் கடவுளின் கையினின்றும் வந்தால்தானா, எப்படியானாலும் அது இடியும் மின்னலும் தானே! அது என் இதயத்தைப் பிளக்கவில்லையா? அந்தக் காயத்தின் மூலம் தெருக்களில் திரிந்தலையும் பிட்சுக்களின் குரல்கள் எனது உள்ளத்தினுள் புகுந்து எனது விலா எலும்புகளின் வெற்றிடத்தில் எதிரொலிக்கிறதே:

                     எனது அடைக்கலம் புத்தபிரானிடமே!

                     எனது அடைக்கலம் தர்மத்திடமே!

                     எனது அடைக்கலம் சங்கத்திடமே!

மல்லிகா: என்ன இது மகாராணி, தாங்கள் இப்போதும் இச்சொற்களைக் கூறும்போது தலையைத் தாழ்த்துகிறீர்கள்?

அரசி: அங்குதான் ஆபத்து உள்ளது. தீனமானவர்களின் மதம் மற்ற மனிதர்களையும் தீனமாக்குகிறது. அதன் குறிக்கோளே ஆத்மாவை பலவீனப்படுத்துவதாகும்; ஒருகாலத்தில் உயர்ந்திருந்த தலைகளைத் தாழச் செய்வதாகும்; பிராமணனுக்கு அடிபணியவும், க்ஷத்திரியனுக்கு பிச்சையெடுக்கவும் சொல்லிக் கொடுப்பது அதுதான். இந்தக்கொள்கையை நீண்ட நாட்களாக நான் எனது ரத்தத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறேன், அதனால் அதனைக்கண்டு மிகவும் பயப்படுகிறேன்.

அட! யார் இங்கு வருவது?

மல்லிகா: இளவரசி வாசவிதான். அவள் வழிபாட்டுக்குச் செல்லும் வழியில் இங்கு வந்துள்ளாள்.

          (வாசவி உள்ளே நுழைகிறாள்)

அரசி: (அவளிடம்) நீ வழிபாட்டிற்குச் செல்கிறாயா?

வாசவி: ஆம்.

அரசி: ஆனால் நீ இன்னும் குழந்தையல்ல!

வாசவி: என்ன குழந்தைத்தனத்தை நீங்கள் என்னிடம் காண்கிறீர்கள்?

 

                                                                                  (தொடரும்)

 

                    

 

 

 

 

 

 

 

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

கி. ராஜநாராயணன்

பேசும் புத்தகம் | கி. ராஜநாராயணன் சிறுகதைகள் *பேதை* | வாசித்தவர்: ப.காளீஸ்வரி - Bookday

 

ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்னும் இயற்பெயர் கொண்ட கி.ரா கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1923ல் பிறந்தவர். அண்டை வீட்டுக்காரரான கு.அழகிரிசாமி இவரது பால்ய சிநேகிதர். இருவரும் சாகித்ய அகதமி விருது பெற்றவர்கள்.

கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையைச் சொற்களால் படம் பிடித்துக் காட்டியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த, அதிகம் படிக்காத இவர்,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எண்ணற்ற விருதுகள் பெற்ற இவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்துவருகிறார்.   

**  ** ***

Ki Raa காய்ச்ச மரம் - YouTubeஇவரது “காய்ச்ச மரம்” என்னும் கதை

நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக்காடு,  நாலு சோடி உழவு மாடு. தொழு நிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமைக் குடியிருக்கும் வீடு. பூர்வீக வீடு போக மூணு கார வீடுகள்.

என்று தொடங்குகிறது.

நிம்மாண்டு நாயக்கரின் மனைவி பேரக்காள்.  நான்கு பெண் மக்களுக்கும்  நான்கு ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல குடும்பங்களில் சம்பந்தம் செய்து… பேரப்பிள்ளைகள் எடுத்து .. பெரிய ஆலமரம்தான் அவர் குடும்பம்.   பேரக்காள். கொண்டுவந்த 1௦௦ பவுன் நகைகள் பெண்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் போட்டாயிற்று    

சொத்தைப் பிரித்துத் தந்துவிடவேண்டும் என பிள்ளைகள் விரும்புகிறார்கள். நேரடியாகக் கேட்காவிட்டாலும் பெரியவர் காதிற்கு எட்டிவிடுகிறது. பருத்திக்காடு  சென்று திரும்பும்போது, ஒரு மரத்தடியில் பெரியவரும் அவர் மனைவியும் அமர்கிறார்கள். அப்போது பையன்கள் ஆசைப்படுகிறார்களே என்ன செய்யலாம் என மனைவிடம் கேட்கிறார் நிம்மாண்டு.

“இதிலே என்ன இருக்கு? எப்ப இருந்தாலும் அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டிய பாரம்தானே, பிரிச்சுக் கொடுத்திட வேண்டியது தானே? நமக்கும் வயசாகிப் போச்சு. கிட்ணா, ராமான்னு உட்கார்ந்து சாப்பிட வேண்டிய காலத்திலே ஏன் இப்படி லோலோன்னு அலைஞ்சு திரியணும்” என்றாள் பேரக்காள்.

பையன்களை அழைத்து முடிவினைத் தெரிவிக்கிறார். ஒரு மத்யஸ்தரை அழைத்து வரச் சொல்கிறார். நீங்களே பிரித்துவிடுங்களேன் என்று பிள்ளைகள் சொல்ல கட்டாயம் மத்தியஸ்தர் வேண்டும்  என்று  சொல்லிவிடுக்ரர் நாயக்கர்.  

பையன்கள் நால்வரும் பாறைப்பட்டி கந்தச்சாமி நாயக்கரைக் கூட்டி வந்தார்கள். பாறைப்பட்டி நாயக்கர் எல்லோருக்கும் பொதுவானவர். ஊர்ப் பெரிய மனுசன். தெற்கு வடக்கு போய் வரும் மனுசன். விபரம் தெரிந்தவர்.

பாறைப்பட்டி நாயக்கர் வந்தார். “வாங்க பாறைப்பட்டி மாப்ள!” என்று சிரித்தபடி நிம்மாண்டு நாயக்கர் வரவேற்றார்

வெற்றிலை எச்சில் துப்ப வசதியாக் தொழுவத்திலேயே அமர்ந்துகொண்ட கந்தச்சாமி, பேரக்ககாள் கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு  விவரம் கேட்டுக்கொள்கிறார்.

வீட்டிலிருந்த பருத்தி, வத்தல், மல்லி, தானியங்கள் உட்பட மொத்த சொத்தும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டன. எல்லாம் வாய்க்கணக்காகவே. சரி தானே என்று கேட்டார் பாறைப் பட்டி. பையன்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று கலந்து பேசினார்கள். பின்பு வந்து சரி என்றார்கள்.

நான்கு பாகங்களையும் நான்கு துண்டிச் சீட்டில் எழுதி குலுக்கிப் போடப்படுகிறது. ஒவ்வொரு பையனும்  எடுத்த சீட்டில் உள்ளது அந்தப் பையனுக்கு.  அதில் ஆளுக்கு ஒரு வீடு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் சில சௌகர்யங்களும் சில அசௌகர்யங்களும் இருந்தன. கிடைத்த வீட்டின் அசௌர்யங்கள்தான் அந்தந்த மருமகளின் கண்களில் பட்டன.   பூர்வீக வீடு அண்ணனுக்குக் கிடைத்ததில் தம்பிகளுக்கெல்லாம் வயத்தெரிச்சல்.

பாகப்பிரிவினை ஒருவழியாக முடிந்தது.  என்றாலும் நிம்மாண்டு பூர்வீக வீட்டுக்குள் சென்று பெரிய வெங்கலத் தவலையைத்  தூக்கி வந்தார். எல்லாம் வெள்ளைக்காரன் காலத்து வெள்ளிக் காசுகள் 2000 இருந்தன. அவற்றையும் சம பங்காக பிள்ளைகளுக்குக் கொடுத்தார். நிம்மாண்டு. (இந்த இடத்தில் ஒரு கணக்கு 12 வெள்ளிக்காசுகள் ஒரு பவுன் தங்கத்திற்கு சமமாம்.)

அந்தக் காலத்தில் 12 வெள்ளிக் காசுகளுக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். மொத்த‌ம் 2000 காசுகள் இருந்தன. காசுகளையும் சரிசமமாகப் பகிர்ந்தார்கள்.காசுகளை மகன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது நிம்மாண்டு நாயக்கரின் முகத்தைப் பார்க்கணுமே . மனுசன் முகத்திலே ஒரே சந்தோசம்.

மகன்களுக்கும் மகிழ்ச்சி. என்றாலும் ‘பொல்லாத கிழவரு’ மேலும் பணத்தை புதைத்து வைத்த்திருக்கலாம் என்கிற சந்தேகமும் இல்லாமலில்லை.  

பணத்தைப் பகிர்ந்தது சரியில்லையே  என்று பாறைப்பட்டி கவலைப்படுகிறார்.

“இப்போ இந்தக் கிழவர் பண்ணியது வம்பான வேலை. பையன்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவு கொடுத்திருக்கு. வத்தல், பருத்தி, உளுந்து, மல்லி முதல் கொண்டு அவ்வளவும் கொடுத்தாச்சு. இப்பப் போயி இவரு ஏன் பணத்தையும் பகிர்ந்து கொடுக்கணும். நோக்காடு, சாவுன்னா பிரயோசனப்படுமே” என்று பாறைப்பட்டி நினைத்துக் கொண்டார்.

நிம்மாண்டு, பாறைப்பட்டியைப் பார்த்து சொன்னார், “இத்தனை நாள் பிள்ளைகள் என் கையை எதிர்பார்த்து இருந்தாங்க . இனி நான் அவங்க கையை எதிர்பார்த்து இருக்கணும்” என்று சொன்னார்.

இருக்கிறது எல்லாத்தையும் கொடுத்தாகிவிட்டது. மூணு வேளைக் கஞ்சி, கட்டிக்கிடத் துணி, தலைக்கு எண்ணெய் இவைதான் இனி  தேவை என்று பிள்ளகளிடம் சொல்லிவிடுகிறார். மாதம் ஒரு பையனிடம் என்று முறை. முதல் சுற்று நல்ல கவனிப்போடு சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நாளாக நாளாக நிலைமை மோசமானது.

மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும்  நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு, உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு.

இருவரும்  வற்றி, மெலிந்து, சாயம் போன கந்தல் துணி போலாகிவிட்டார்கள்.  எண்ணெய் காணாத  தலை பிசுபிசுவென்று ஆகிப்போனது.

அப்பா அம்மாவைப் பார்த்துப் போக வந்த சின்ன மகள் நிலைமையைப் புரிந்து கொள்கிறாள். கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அண்ணன்களையும் மதினிகளையும் திட்டித் தீர்க்கிறாள். பெற்றோர் குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் வடிக்கிறார்கள்..

தன்னோடு வந்து விடும்படி மகள் சொல்ல  ‘சம்மந்தக்காரங்க’  வீட்டுல போய் இருக்கிறது சரியில்லை என்று சொல்லிவிடுகிறார் நிம்மாண்டு.

“எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிருவோமா?” என்று யோசிக்கிறார்கள். நடுவுள்ள மகள் வருகிறாள். அப்பா, அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் பண்டமெல்லாம் கொண்டு வருகிறாள். கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள்.

ஒரு நாள் அதிகாலை வயசாளிகள் இருவரும் கோவில்பட்டி புறப்பட்டுப் போனார்கள். தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் பயந்து பயந்து நடந்தார்கள். கம்மலையும், வெள்ளி அரணாக் கயித்தையும் விற்றார்கள். சாமியைக் கும்பிட்டு ரயிலேறி மதுரைக்குப் போனார்கள்.

மதுரை ரயில்வே ஸ்டேசனில் கணக்கு வழக்கில்லாத கூட்டம்.  என்ன செய்வது, எங்கே  போவதென்று  தெரியாமல் திண்டாடுகிறார்கள். பேரக்காவிடம்  ஒரு சின்ன குழந்தை வந்து ஒட்டிக்கிகொள்கிறது. குழந்தையின் குடும்பம் இராமேஸ்வரம் போகிறது.. இவர்களும் ராமேஸ்வரம் போகலாம்னு முடிவு செய்கிறார்கள்.

கண்காணாமல் போன சமாச்சாரம் முதலில் ஊருக்குத் தெரிந்து, பிறகுதான் பிள்ளைகளுக்குத் தெரிகிறது.  பிள்ளைகள் மனசு பதறுகிறது. மருமக்கமார்கள் ‘எங்கனயாவது கிடக்கும்’னு எரிச்சலோடு சொல்கிறார்கள்

கிணத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பிணமாக மிதப்பதாகச் செய்தி வருகிறது. ஓடிப்போய் பார்த்ததில் வேறு யாரோ என்று தெரிகிறது. பிள்ளைகள் கொஞ்ச நாள் தாய் தகப்பனை ஓடி ஆடித் தேடுகிறார்கள். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள்  கழிந்து விடுகின்றன. இவர்களை ஊரே மறந்து போய்விடுகிறது.

வேண்டுதலுக்காக ராமேஸ்வரம் போன பாறைப்பட்டி நாயக்கர் கோவில் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பிச்சைக்காரர்கள் இடையே நிம்மாண்டுவையும் பேரக்காளையும்  பாத்து திகைக்கிறார்.  பாறைப்பட்டி நாய்க்கர் தற்செயலாகத் திரும்பிப் பார்க்கிறார்.

ரெண்டு பேர் தலையும் மொட்டை போட்டிருக்கு. பாறைப்பட்டியால தாங்க முடியல. தலையில தலையில அடிச்சுக்கிட்டார். ‘கோன்னு’ அழுதார்.

வயசாளிகள் இருவரும் அழவில்லை. கண்ணில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணீர் வரலை. நிம்மாண்டு நாயக்கர் பாறைப்பட்டி நாயக்கரை முன்னப் பின்ன தெரியாத ஆளைப் பார்ப்பது போல் பார்த்தார்.

பேர்க்காளுக்கு பாறைப்பட்டி நாயக்கரை அடையாளம் தெரிந்தது. வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசினாள்.

“எம்பிள்ளைக எல்லாரும் நல்லா இருக்காகளா?”

என்று முடிகிறது கதை.

** ** ** ** **

‘முதுமக்கள்’ என்று இன்னொரு கதையும் உண்டு. சொத்தை ஐந்தாகப் பிரித்து  ஒரு பங்கை தங்களிடமே வைத்துக்கொண்டு மற்ற நான்கு பாகங்களை நான்கு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்து நிம்மதியாக வாழ்ந்த தம்பதியரின் கதை இது. தங்கள் வசமிருந்த தோட்டம் துறவு மற்றும் கால்நடைகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறையும் வராமல்  பார்த்துக் கொள்கின்றன. வந்திருந்த விருந்தாளிக்கு ஆட்டுப்பால் காப்பி கொடுத்து உபசரிக்கும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.

கரிசல் வட்டார வழக்கில் இவரது பல படைப்புகள் இருந்தாலும்,  எளிய நேரடியான மொழியில் குறிப்பிடத்தக்க பல கதைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய கதைகளில் ’இடக்கர் அடக்கல்’ அற்ற,  வட்டர வசைச் சொற்கள் விரவிய  கதைகளாகத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தது ஒரு பிரபல வாரப் பத்திரிகை. அதனால், கி ரா என்றாலே வட்டார வழக்கு, கொச்சையான படைப்புகள்  என்று மாயை நிலவி வருகிறது என்று சொல்லலாம்.

இவரது கோபல்ல கிராமம் கதையின் ஒரு அத்தியாயத்தைப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது,  பல முறை வாய்விட்டுச் சிரித்தததும், சக பயணிகள் கேலிப் பார்வைகளை என் முதுகில்  உணர்ந்ததும் … அது வேறு அனுபவம்.  

மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான கதை மாந்தர்களும் இவர் கதைகளின் சிறப்பம்சம்.

 

                                                                                        எஸ். கே என்.  

 

 

 

குப்பை – S L நாணு

Although today is education growth day ,,Still there are students picking up something in garbage| கல்வி வளர்ச்சி நாளான இன்றும் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ...      

ரொம்பவே அவசரமாகக் குப்பையைத் துழாவித் துழாவிப் பொறுக்கினான் ஜனா.. அவனுக்குத் தெரியும்.. எவ்வளவு சீக்கிரம் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு போய் சிங்காரம் கடையில் கொட்டுகிறானோ.. அவ்வளவு சீக்கிரம் அவன் குடிசையில் அடுப்பு எறியும்.. விபத்தில் முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா.. காச நோய் முற்றிய நிலையில் அம்மா.. இருவரையும் பார்த்துக் கொள்ளும் தங்கை.. சூழ்நிலைக் காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு வேறு வேலை கிடைக்காமல் சிங்காரத்தின் அறிவுரைப் படி இந்த குப்பைப் பொறுக்கும் வேலை.. கஷ்டமாக இருந்தாலும்.. தன் குடும்பத்தை நினைத்து விடாமல் குப்பையைக் கிளறினான்.. தினமும் நூறு நூற்றைம்பது தேறுகிறது.. அதிருஷ்டம் இருந்தால் சில நாட்கள் போனசாக மேலும் ஐம்பது நூறு கிடைக்கும்..

       இன்று நான்கு தெருக்கள் சுற்றியாகி விட்டது.. உருப்படியாக எதுவும் தேறவில்லை.. சில நாட்கள் இப்படியும் இருக்கும்.. இன்று கிடைத்ததை வைத்துப் பார்த்தால் ஐம்பது கூடத் தேறாது போலிருந்தது.. நான்கு பேர் சாப்பிட இது போதாதே..  மனதில் வேகம் ஏற ஏற.. கண்கள் இன்னும் வேகமாக அலைபாய்ந்தன.. அறுந்த செருப்பு.. அழுகின பழங்கள்.. காய்கள்.. ஈரத்தில் நனைந்த காகிதங்கள்.. கிழிந்த நாராகத் துணிகள்..

       “சே.. இன்னிக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?”

       அலுத்துக் கொண்டு நிமிர்ந்தான் ஜனா.. இந்த குப்பை மேட்டை விட்டால் பெரிதாக வேற எந்த குப்பைத் தொட்டியும் அவன் போகும் பாதையில் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்..

       என்ன செய்வது என்று புரியாமல் சில கணங்கள் சிலையாக நின்றான்.. வெயிலின் தாக்கத்தில் வியர்வை கசிந்து தொண்டை வரண்டது.. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது..

       தன்னையுமறியாமல் குப்பை மேட்டில் அப்படியே உட்கார்ந்தான்.. கீழே சாயாமல் இருக்க இரண்டு கைகளையும் ஊன்றியபடி கண்களை  மூடிக் கொண்டான்.. சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவனுக்கு சற்று ஆசுவாசப் பட்டது போல் இருந்தது..

       மெதுவாக எழுந்திருக்க முயன்றான்..

       குப்பையில் புதைந்திருந்த அவனுடைய இடது கையில் ஏதோ சிக்கியது.. எடுத்துப் பார்த்தான்..

       மணி பர்ஸ்..

       அவசரமாக அதைத் துழாவினான்.. உள்ளே பத்து இரண்டாயிரம் நோட்டுக்கள்.. நான்கு நூறு.. மூன்று ஐம்பது.. மிச்சபடி சில கசங்கிய காகிதங்கள்..

       இவ்வளவு பணத்தை ஒன்றாகப் பார்த்தவுடன் ஜனா முதலில் மிரண்டு போனான்.. நம்பாமல் அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்து மறுபடியும் மறுபடியும் தடவிப் பார்த்தான்.. எண்ணிப் பார்த்தான்..

       நிஜம் தான்..

       என்ன செய்யலாம்?

       மறுபடியும் பர்ஸை துழாவினான்.. அதில் சொந்தக் காரரின் பெயரோ விலாசமோ குறிக்கும் கார்ட் எதுவுமில்லை.. போட்டோ கூட இல்லை.. தவறுதலாக யாரோ இதைத் தொலைத்திருக்க வேண்டும்..

       ஜனா ஒரு முடிவுக்கு வந்தான்..

       தன் பிராத்தனைக்குக் கடவுள் கொடுத்த வரமாகவே அவனுக்குப் பட்டது..

       இந்தப் பணம்.. இன்னும் பல நாட்களுக்கு அவர்கள் குடிசையில் அடுப்பு எறிய உதவும்.. அவன் அப்பாவின் முதுகுத் தண்டுக்கு தைலம் வாங்க  உதவும்.. கிழிந்த பாவாடையை சுற்றிக் கொண்டு அலையும் தங்கைக்குப் புதுப் பாவாடை சட்டை வாங்கிக் கொடுக்க உதவும்.. அவனுக்கும் வேறு எங்காவது வேலை தேட கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்..

       பணம் கிடைத்தவுடன் அவனுடைய சோர்வெல்லாம் ஒரு நொடியில் விலகியது போலிருந்தது..

       சுற்று முற்றும் பார்த்தான்.. யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த்துக் கொண்டான்.. பர்ஸை சட்டைக்குள் மறைத்துக் கொள்ள முயன்றவனின் மனதை ஏதோ குத்தியது..

       ”ஜனா.. நீ பண்றது சரியா?”

       ஒரு கணம் திடுக்கிட்டான்.. ஆனால் உடனே அவனுடைய புத்தி அவனுக்கு ஆதரவாக வந்தது..

       “என்ன தப்பு? நானா எடுத்தா திருட்டுன்னு சொல்லணும்.. இது எனக்கு எதிர்பாராத விதமாக் கிடைச்ச பணம்.. எடுத்துக்கறதுல என்ன தப்பு?”

       மனம் விட வில்லை.

       “இல்லை ஜனா.. எப்படி இருந்தாலும் நீ செய்யறது திருட்டு தான்.. இதை சொந்தக் காரர் கிட்ட சேர்க்க வேண்டியது உன் கடமை”

       ”ஏய்.. பைத்தியம் மாதிரி பேசாதே.. பர்ஸை துழாவியாச்சு.. இதோட சொந்தக் காரர் யாருங்கறதுக்கு எந்த அடையாளமும் இல்லை”

       “சரி.. அப்ப நேர போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்க கிட்டக் கொடு.. அவங்க சொந்தக் காரனைக் கண்டு பிடிச்சு அதைக் கொடுத்துருவாங்க”

       “வந்து.. “

       “யோசிக்காதே ஜனா.. இந்தப் பர்ஸை போலீஸ் கிட்ட ஒப்படைக்கறது தான் தர்மம்.. நியாயம்.. அவங்க கிட்ட இதை நீ ஒப்படைச்சா உன் நேர்மையைப் பாராட்டி அவங்க உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்.. அது தான் உனக்குப் பெருமை.. கௌரவம்..”

        “இல்லை.. வந்து..”

        ”உடனே எழுந்திரு.. போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பு”

        “சரி.. சரி.. கத்தாதே.. போலீஸ் ஸ்டேஷன் போறேன்”

         என்று எழுந்து குப்பைப் பையைச் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் ஜனா..

          “நான் ஆசைப் பட்டது தப்பு தான்.. போலீஸ் கிட்டத் தான் பர்ஸைக் கொடுக்கணும்.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. அவங்க அதை சொந்தக் காரர் கிட்ட ஒப்படைச்சுருவாங்க.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. போலீஸ்..”

          ஜனாவின் மனதில் பரபரப்பு ஏறியது.. வேகமாக நடக்க ஆரம்பித்தான்..

          ஆனால் கால்கள் தன்னிச்சையாக அவன் குடிசையை நோக்கி நகர்ந்தன..

நடனமும்  மருத்துவமும் – சுரேஷ் ராஜகோபால்

Dance Medicine | Sports Medicine & Training Center

“அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது” – ஔவையார்

 

நமது சுவாசம், குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சரியான தூக்கம், அமைதியான மனநிலை (தியானம்), உடல் பற்றிய அக்கறை, உடற்பயிற்சி முதலானவை நமது உடலைப் பராமரிக்கும் காரணிகள். 

இதில் உடற்பயிற்சியில் நடனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நடனம் பார்க்கும்  போதும் சரி  ஆடும் போதும் சரி பல உடல் நலம் பேணும் கருவியாக இருக்கிறது. 

நடனம் என்பது ஒரு கலை, உடலிலே அசைவு கொடுத்து தாளத்துக்கும் இசைக்கும் ஏற்ப ஆடுவது, அதில் சில நடனங்களில் நளினமிருக்கும் சில நடனங்களில் மூர்க்கமிருக்கும். உலகில் பல்வேறு பாகங்களில் பல்வேறு நடனங்கள் அவரவர் கலாச்சாரத்தை ஒட்டியும் பழக்க வழக்கங்களைச் சார்ந்திருக்கும்.

 சில செய்திகளைச் சொல்லவும், கருத்துக்களைப் பரிமாறவும் இந்தக் கலை பயன் பட்டிருக்கிறது  .நடனம் என்பது பலவற்றை உள்ளடக்கியது, குறிப்பாக சமூகம், பண்பாடு, அழகியல் , கலை அனைத்தையும் விளக்கவும் முடியும் .

சில நாட்டுப்புறக் கலைகளில் தனியாக ஒவ்வொரு காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்றார்போலப் பல வித்தியாசமாக நடன அசைவுகளிருக்கும். அவை கூத்து, ஆட்டம், பாட்டம் என்று அழைக்கப் படுகிறது ..

 நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இலக்கணங்களை , இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

 தமிழ் கலாச்சாரத்தில் இயல் இசை நாடகம் எனப் பிரிக்கப்பட்ட ஆய கலை அறுபத்து நான்கினில், தென்னகத்தின் சிறப்புக் கூறும் பரதமும் ஒன்று  . இந்த நாட்டியம் உடலில் மனம் முதல் உடல் வரை அனைத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது. மருத்துவ ரீதியில் இது ஒரு உடல் பயிற்சி. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிடும். உளவியல் ரீதியாக .உள்ளத்திற்கும் பயிற்சி. ஆடல் கலையில் சிறப்புப் பெற்றது ரம்மியமான ஆடல், முகத்தில் நவரசமும் காட்டமுடியும், பாடலுக்கு ஏற்ற மாதிரி வளைவு சுளிவு நெளிவு வெளிப்படுத்த முடியும். .

 மிக மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள்,  கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்றிருக்க சான்றுகள் கிடைத்துள்ளன.. . சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

 மனிதன் தனக்குள்ளே  முதலில் சங்கேத முறையில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கலாம்  . பிறகு பேச்சு வழக்கு , பாட்டு, ஆட்டம், நடனம் என்று பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது .  தற்போதைய காலகட்டத்தில் நடனம் பெரும்பாலும் பெண்களுக்கு உரித்தானதாகப் பார்க்கப் படுகிறது. முன்னொரு காலத்தில் இதை ஆண்களும் ஆடி வந்தது வரலாற்றில் தெரிய வருகிறது, ஆனால் அதிலும் ஆண்கள் பங்கு சொற்பமே.

மனித குலமட்டுமல்ல மற்ற மிருகங்கள், தேனீ போன்ற பூச்சிகள், பறவைகள் கூட நடனம் போன்ற அசைவுகளை வெளிப் படுத்துகின்றன.

தில்லை நடராசரின் பரதம் மிகவும் பிரபலம். “Cosmic Dance” என்று விஞ்ஞானிகளால்  விவரிக்கப்படும் தில்லை நடராசப் பெருமானின் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் குறிப்பிடத்தக்கவை. நடனத்திற்கென தமிழகத்தில் பொன்னம்பலம் சபை, வெள்ளி சபை, தாமிர சபை முதலான சபைகள் இருந்துள்ளன. அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்கள் விவரித்துக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த இந்திய நாட்டில் பலவகையான நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன.

 ஆடல் பாடல் என்பவை எல்லா இந்து தெய்வங்களும் தொடர்புப் படுத்தி, நடன சபாபதி,  கண்ணன் காளிங்க நர்த்தனம்  , பார்வதி தேவியின் நடனம் , நர்த்தக  விநாயகர், காளிதேவியின் கூத்து இப்படி கலாச்சாரத்தோடு கலந்த வருகிறது.  நடனம் சீமந்தமாகப் பல நூல்கள் தமிழில் எழுதப் பட்டுள்ளன, அதில் பரத சாஸ்திரம் என்ற நூல் பரத முனிவரால் எழுதப்பட்டது . சிலப்பதிகாரத்தில் பரதம் பற்றிய பாடல்கள் இருக்கின்றன.  

 தமிழ்நாட்டில் பரதம், கேரளாவில் கதகளி (ஆண்களுக்கானது), மோகினியாட்டம் (பெண்களுக்கானது)  ஆந்திராவில் குச்சுப்பிடி,ஒடிசாவில் ஒடிசி, மணிப்பூர் மணிப்புரி , வட இந்தியாவில்   கதக் , அசாமில் சத்ரியா இப்படி பல நடனங்கள் நமது நாட்டில் மட்டுமே ஒவ்வொரு பகுதிக்கும் என்று  வித்தியாசமாக ஆடப்படுகின்றன

எந்த வகை நடனமும் ஆடுவதற்கு, பார்ப்பதற்கும் உடலில் சில எழுச்சிதனை நிச்சயமாகக் கொடுக்கிறது. அந்தக் கலை எப்படி மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்று பார்ப்போம் .

நடனம் என்பது எல்லா வயதினருக்கும், வடிவங்களுக்கும், அளவிற்கும் பொருந்தக்கூடியதாக இருக்க ஒரு வழியாகும். இது உடல்நலம்  மற்றும் மனநலத்திற்கு என்று  பலவிதமான   நன்மைகளைச்  செய்யும் வல்லமை பெற்றது.

உடல் சார்ந்தது 

 

Seattle Dance Medicine - Home | Performance art, Art, Seattle-இதயம் மற்றும் நுரையீரலின் மேம்பட்ட நிலை, (சீரான இரத்த ஓட்டம்)

-அதிகரிக்கும்  தசை வலிமை,  சகிப்புத்தன்மை மற்றும் இயங்கு சக்தி (மோட்டார்) உடற்பயிற்சி

-அதிகரித்த ஏரோபிக் உடற்பயிற்சி

-மேம்பட்ட தசை தளர்வு மற்றும் வலிமை

-எடை மேலாண்மை

-வலுவான எலும்புகள் மற்றும் எலும்பு தேய்தல் (அல்லது) எலும்பு நொறுங்குதல்  (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தைக் குறைப்பது

-சிறந்த ஒருங்கிணைப்பு, சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை

 

மனம் சார்ந்தது 

-மேம்பட்ட சமநிலை மற்றும்  விழிப்புணர்வு 

-அதிகரிக்கும்  உடல் மற்றும் மன  நம்பிக்கை

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள் | தமிழ்ஹிந்து | Mobile Version-மேம்பட்ட மன செயல்பாடு, மனோதைரியம்

-மேம்பட்ட பொது மற்றும் உளவியல் நல்வாழ்வு,  (மனோ தத்துவ ரீதியாக முன்னேற்றம்.)

–அதிக தன்னம்பிக்கை மற்றும் மனவளம்

-சிறந்த சமூக நோக்கம், செயல்பாடு, ஈடுபாடு ..

கிடைத்த நல்ல உடலைப் பேணி பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும்.  அந்த முயற்சியில் நடனத்தின் பங்கு மகத்தானது.  எல்லோருக்கும் கிட்டிவிடாது ஆனால் கிடைத்தவர்கள் பொன்போல பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

 

உயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ஆசிரியரை வாழ்த்துவது எவ்வளவு அசல். வசனத்தில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அழகான வாழ்த்துக்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு ...

பள்ளி முதல்வருக்கு தன் பிறந்த நாள் வந்தாலே சங்கடம் தான். ஒவ்வொரு ஆசிரியரும் போட்டிப் போட்டுக் கொண்டு விலை மிகுந்த பொருட்களை வாங்கி, பரிசு அளித்து, கேக் வெட்டி, அமர்க்களப்  படுத்தி விடுவார்கள்.

ஆளுக்கு ஆள், இப்படியே… ஏதோ எதிர்பார்ப்பு. ரசிக்க முடியவில்லை.

இதற்கு நேர் மாறகப் பள்ளியின் ஸ்பான்சர்ஷிப் தேவதையும் உண்டு!

“மேடம், மன்னிக்கவும்”.   வெளியே ஸ்பான்சர்ஷிப் தேவதையின் குரல்.

“மிஸ்? உள்ளே வரலாமா?” அமைதியற்ற நிலையிலிருந்து திரும்பிப் பார்த்தார். அந்த சிறுமியைப் பார்த்ததுமே மனநிலை மாறியது. மாய வித்தைதான்!

“என் வகுப்பு அறையைக் கொஞ்சம் திறந்து தருவீர்களா?”

பள்ளி முதல்வருக்கு இது பரிச்சயமான வேண்டுகோள். அதே வேண்டுகோள், வருடத்தில் மூன்று நான்கு முறை. எப்பவும் போல! 

வகுப்பின் அறையைத் திறந்தார். வெகு கவனிப்புடன் அந்த சிறு கைகள் தன்னிடம் இருந்த பையின் உள்ளே கையை விட்டு, ஒவ்வொன்றாகத் தானே கையால் செய்த காகித பொம்மைகளை எடுத்து, அதன் மேல் இருந்த பெயர் பார்த்து, அதன் இடத்தில் வைத்து வந்தாள்.  கடுகு அளவும் கர்வமோ, பாசாங்கோ இல்லை.

ஆசிரியர் தன்னை மறந்து மகிழ்ந்தாள்.  ஸ்பான்சர்ஷிப்பில், யாருடைய ஆதரவிலோ படிக்கும் இந்த இளநெஞ்சுக்கு எத்தனை பெரிய உள்ளம்! இன்றைக்கு எந்த விசேஷமும் இல்லை. இது ஒரு “ஜஸ்ட் லைக் தட்” பகிர்தல்.

ஆசிரியருக்கு இவளுடைய பெற்றோரைப் பற்றித் தெரியும். வறுமையில் இருப்பவர்கள். எனினும், அக்கம் பக்கம் பசியில் வாடுவோருக்குக் கஞ்சி, கூழ், சோறு என்று ஏதோ போடுவதுண்டு. அங்கே தான் இவள் கற்றுக் கொண்டாளோ?

இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில், சிறுமி பொருட்களை வைத்து விட்டு, ஆசிரியருக்கு நன்றி கூறி சென்று விட்டாள். இருவருக்கும் இந்த தருணம்  மிகவும் பிடிக்கும். உள்ளுக்குள் அவ்வளவு பரவசம்!

பள்ளி மணி அடித்தது.  பிள்ளைகள் எல்லோரும் இறை வணக்கம் செய்து விட்டு வகுப்பிற்கு வந்தனர். 

இந்த மூன்றாம் வகுப்பின் ஒவ்வொரு பிள்ளையும் தன் இடம் வந்தவுடன், அங்கே தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆச்சரியத்தைக் கண்டனர்.   வண்ண வண்ணமான காகித பொம்மையைப் பார்த்து “ஆ”, “ஏ”, “ஓ” என்று ஒரே கூச்சல்!

வகுப்பு ஆசிரியர் சிறுமியைப் பார்த்து சமிக்ஞை செய்து கேட்டாள் “உனக்கு?” என்று. குழந்தையின் கண் மின்னியது. வகுப்பைச் சுற்றிப்ப் பார்த்து, அவர்கள் சந்தோஷத்தை உள் வாங்கியவள், “இதோ இவர்களின் சந்தோஷமே போதும்” என்பது போல் காட்சி அளித்தாள். தன்னுடைய “மௌனமான இன்பம்!”

அன்று முழு தினமும் பள்ளி முதல்வருக்கும் இவளைப் பற்றிய நினைவே.

வீடு வந்தாள்.  அவள் குழந்தை ஓடி வந்து பெருமையாக, “அம்மா, இதோ உனக்கு”.  கடையில் வாங்கிய அழகாக கிஃப்ட் ராப் செய்யப் பட்ட விலை உயர்ந்த அன்பளிப்பு!

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

எலியாயணம்!

 

 

 

 

 

 

 

 

அசோகமித்திரனின் ‘எலி’ கதை வாசித்துக்கொண்டிருந்தேன் – சமையலறையில் ‘படார்’ என்ற சத்தம் கேட்டு, ‘விழுந்திருச்சு’ என்று கத்தியபடி புத்தகத்தைப் போட்டுவிட்டு ஓடினேன் – மர எலிப்பொறியின் கம்பிகளுக்குப் பின்னால், புதிதாய் ஜெயிலுக்கு வந்த கைதியைப் போல ’திரு திரு’ என முழித்தபடி ஓர் எலி தன் கூரிய மூக்கால் கம்பிகளைத் துழாவியவாறு நின்றிருந்தது. முகம் முழுதும் மரண பயம் அப்பியிருந்தது!

மேற்பக்கக் கம்பிகளின் வழியே ‘டாப் ஆங்கிள்’ வியூவில், சுமாரான பெரிய எலி, ஆசைப்பட்ட வடையை மறந்து, பரிதாபமாக வெளியேற வழியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது! யாரோ திருமணங்களை எலிப்பொறியுடன் ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது – வெளியிலிருக்கும் எலிக்கு உள்ளே வர ஆசை – வடையின் வசீகரம்!. உள்ளே மாட்டிக்கொண்ட எலிக்கோ வெளியே ஓடி விட ஆசை – ஆனால் வழியில்லை, வடை கூட தேவையில்லை!

வீட்டில் எலிகளின் லூட்டி இரவில்தான் அதிகமாயிருக்கும்! அந்தக் காலப் பரண்கள், நெல் பத்தாயம் என எல்லா இடங்களிலும் புழங்கும் எலிகள், இரவானால், இரையைத் தேடி, வீடு முழுவதும் வித விதமான ஓசைகள் எழுப்பியபடி, வலம் வருவது நம் தூக்கதைக் கெடுப்பது! எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடும்! இரவில் துணி உலர்த்தும் மூங்கில் கோல், பித்தளைத் தாம்பாளம், செய்தித்தாள்கள், பரண், பீரோ காலித் தகர டின்கள், எண்ணெய் ஜாடி என எலிகள் உருட்டும் சத்தம் எந்த ஒரு மர்மப் படத்தின் பின்னணி இசையையும் தோற்கடிக்கக் கூடியது!. மாவு டப்பாக்கள், ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய்த் தூக்குகள் என எல்லாவற்றையும் உருட்டித் தரை முழுதும் மாடர்ன் எண்ணெய்க் கோலங்கள்! விளக்குத் திரிகளை இழுத்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால், கிராமங்களில், இரவில் எண்ணெய் விளக்குகளை அணைத்து விடுவது பழக்கம்! ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்று பாடாத குறைதான்!

சுண்டெலி, வெள்ளெலி (அடிப்பக்கம் மட்டும் வெள்ளையாக இருப்பது – சோதனைக் கூடங்களில் புதிய மருந்தையோ, வாக்ஸினையோ போட்டுக் கொள்ளும் தைரியசாலி – சில ஊர்களில் உணவாகவும் …..), ‘கீச் கீச்’ சென்று குரலெழுப்பும் வீட்டு எலி – மூஞ்சூறு, பெருச்சாளி (பெரிய சைஸ் எலி! சாக்கடை, டிரெய்னேஜ் வாசம், பெரிய மளிகைக் கடை, ஓட்டல்களில் ராவேட்டை!), வயல் எலி, கல்லெலி (தன் வளைகளைக் கற்களால் முடி வைக்கும் உஷாரு பார்ட்டி!) என எத்தனை வகை எலிகள்!

‘சரவெலி’ கொஞ்சம் சுவாரஸ்யமானது – பனை, தென்னை, ஈச்ச மர உச்சிகளில் கூடு கட்டி உயரே வாழ்பவை! இரவில் கீழே இறங்கி இரைக்கு அலையும்போது மட்டும் எல்லா எலிகளையும் போலத்தான் – சில மனிதர்கள் எவ்வளவு உயரம் போனாலும், வாழ்க்கை கீழேதான் என்பதை மறந்து விடுகிறார்கள், இந்த ‘சரவெலி’களைப் போல! (‘இன்னா, தத்துவமா?’ என்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் – தூக்கத்தில் பாதத்தைத் தேங்காய்ப் பத்தையைப் போல வருவும் எலிகள் ஏவிவிடப்படும்!).

சிறிய தலையும், நீண்ட வாலும், சற்றுப் பருத்த வயிறும் உள்ள ‘கொறி’ விலங்கு – பாலூட்டிகள் வகையில் அடங்கும் எலிகள்! உலகத்தின் எலிகளையெல்லாம் ‘கருப்பு எலி’, ‘மண்ணிற (பிரவுன்) எலி’ என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம் என்கிறது கூகிளைக் க்ளிக்கும் ‘மவுஸ்’! எந்தப் பொறியிலும் மாட்டாவிட்டால், பிரவுன் எலி இரண்டு வருடங்களும், கருப்பு எலி ஒரு வருடமும் வாழும் சாத்தியம் உண்டாம்.

எலி பாஷாணம் – எலிகள் கொறிக்கும் உணவுப்பொருட்கள் போலவே இருக்கும் – ஆர்செனிக், சல்ஃபர், கொமாரின் போன்ற பல வகை ரஸாயனக் கலவை – கேக் மற்றும் பேஸ்ட் ஆகக் கிடைக்கின்றன. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஆபத்தானவை, மிக அதிகமான கவனம் தேவை. எலிகள் எங்கோ விஷத்தைத் தின்றுவிட்டு, வேறெங்கோ இறந்து கிடக்கும். உடல் நிலை சரியில்லை யென்றாலும், இறக்கும் தறுவாயில் இருந்தாலும், எலிகள் தங்கள் வளைக்குள் வந்து விடவே விரும்புமாம்.

‘கிரீச்’ எனக்கத்தும் எலிக்கு, வலி அல்லது பயம்தான் காரணமாம் – எதிர்பாராமல் நம் மீது பாயும் எலியைக் கண்டு நாம் கத்துவதற்கும் அதேதான் காரணம்! (வீட்லெ எலி, வெளீலெ புலி க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது!)

எலிப்பொறிகள் எண்ணெய்ப் பண்டங்களை வைத்து எலியைப் பிடிக்க உதவுபவை. மர எலிப்பொறிகளில் உயிருடன் மாட்டிக்கொள்ளும் எலிகள்! இரும்புப் பற்கள் (பீமன் பொறி), தடித்த இரும்பு வளையங்கள் கொண்டு எலிகளைப் பிடிப்பது மனதிற்கு வலியைத் தருவது – இரத்த வெள்ளத்தில் அல்லது இரும்பு வளையத்தில் இறந்துகிடக்கும் எலிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கும்.

பொறியிலிருந்து வெளியே விடப்படும் எலிகள் (சண்டை போடும் பக்கத்து வீட்டு அல்லது எதிர் வீட்டு வாசலில் விட்டு விடுவது பெரிய ராஜதந்திரம் – ‘யூ’ டர்ன் அடித்து, நம் கால்களுக்கிடையே ஓடி, திரும்பவும் நம் வீட்டுக்குள்ளேயே வராத வரையிலும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!), ஓடித் தப்பிக்கலாம்; நாய்களாலோ, பூனைய்களாலோ துரத்திப் பிடிக்கப் (கடிக்க!) படலாம்; செங்குத்தாகப் பறந்து வரும் காக்கையினால் கொத்திச்செல்லப்படலாம்! எலியின் விதியைப் பொருத்தது. வெளியே வரும் எலியை ஒரு சாக்கில் பிடித்து, கண நேரத்தில், துணி துவைப்பதைப் போல சாக்கைத் தரையில் அடித்துக் கொல்வது அராஜகமான கொலைக்குச் சமம்! வயல்களில் எலிகளுக்காகக் காத்திருக்கும் பாம்புகள், தப்பித்து வளைக்குள் ஓடும் எலிகள் – வாழ்க்கைப் போராட்டத்தின் குறியீடுதான்!

நாற்பது வகை வியாதிகளைப் பரப்ப வல்லவை எலிகள்! மழைநீர், உணவுப் பொருட்கள் இவற்றில் கலந்துவிடும் எலியின் சிறுநீர், எச்சல் போன்றவைகளால், எலிக் காய்ச்சல் (leptospirosis), ப்ளேக் போன்ற வியாதிகள் பரவலாக வரக்கூடும்.

ஒருமுறை என் காரில் வேலூர் செல்லும்போது, ஏசி வேலை செய்யவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு, எஞ்சினில் கோளாறு என்று டேஷ் போர்ட் ஸ்க்ரீன் கண் சிமிட்டியது. ஸ்டீரிங் வீல் இறுகிப் போக, வண்டி, மாப்பிள்ளை ஊர்வலக் கார் போல, இஞ்ச் இஞ்சாக நகர்ந்தது. வண்டியை ஓரங்கட்டி, போனில் தொடர்பு கொண்ட சர்வீஸ் டீம், இரண்டு மணி நேரத்தில் வந்து, வலது முன் டயருக்கு உட்புறம் எஞ்சினின் அடிப்பக்கத்தில் சில ஒயர்களை எலி கடித்துத் துண்டாக்கியிருப்பது தெரிய வந்தது! வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, செக்யூரிடி, தேங்காய்த் துண்டுகளை காருக்கருகில் காயவைக்கிறார் என்று – பிறகு என்ன, காரின் அடிப்பக்கத்துக்கு எலி ஸ்ப்ரே, புகையிலைக் கட்டு, வலை என்று ஏக காபந்து!

‘எலிக்கு மரணவலியாம், பூனைக்குக் கொண்டாட்டமாம்’, ‘எலி வளையானாலும் தனி வளை தேவை’, ‘அறுப்பு காலத்தில் எலிக்கு ஏழு பொண்ணாட்டியாம்’, ‘சிங்கம் இளைச்சா, எலி மச்சான் முறை கொண்டாடுமாம்’ – இந்தப் பழமொழிகள் எலிகள் எப்படி நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன என்று சொல்கின்றன!

அசோகமித்திரனின் ‘எலி’ கதையைப் படித்ததால் வந்த எண்ண எலிகள் இந்தக் கட்டுரை – அவசியம் வாசிக்க வேண்டிய கதை ‘எலி’! தி.ஜா. வின் ‘சங்கீத சேவை’ – ஒரு சங்கீத எலியின் மேல் நாட்டு அனுபவத்தைப் பகடி செய்கிறது!

‘எலிப்பத்தாயம்’ (தமிழில் பத்தாயம் என்றால் எலிப் பொறியாம்) அடூர் கோபாலகிருஷ்ணனின் தேசீய விருது பெற்ற மலையாளப் படம்.

உலகின் எல்லா வயதினரும் சிரித்து மகிழும் கார்டூன் –

டாம் அண்ட் ஜெர்ரி’!  எலியும்பூனையும் அடிக்கும்கொட்டம் விலா நோக வைக்கும் சிரிப்பு – எலியின் சாமர்த்தியமும்சுறுசுறுப்பும்,புத்திசாலித்தனமும்அபாரமாயிருக்கும்இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய வில்லியம் ஹன்னாஜோசஃப் பார்பெராபாராட்டுக்குரியவர்கள்

“சுவாமியால் தான் வாகனத்துக்குக் கெளரவம் – அந்த கெளரவத்தைக் கொடுக்க, மூஞ்சூறுக்கேற்றபடி கனம் இல்லாமல் நெட்டியில் செய்த மாதிரி இருக்கிறாராம் பிள்ளையார். ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறாராம்!” – தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா.

பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடுதனை விளைவிக்கும். ஆதலின் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கிறது. இவற்றை அடக்கி நம்மை ஆட்கொள்பவர் பிள்ளையார் என்பதைப் புலப்படுத்தவே தனது காலின் கீழ் பெருச்சாளியை வத்திருக்கிறார் என்ற ஒரு வியாக்கியானமும் உண்டு!

ஏதோ தம்ப்ளர் உருளுகிற சத்தம் வரவே, கிச்சன் பக்கம் தாவிச் சென்றேன் – டைனிங் டேபிள் மேல், கூடையில் இருந்த ஆப்பிளின் மேல் பக்கம் வருவியிருந்தது – நான் எழுதி முடிக்கும் வரை காத்திருந்ததோ என்னவோ!

ஜெ.பாஸ்கரன்