Monthly Archives: April 2014
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்த் தாயின் பாடலைச் குவிகத்துடன் சேர்ந்து பாடுங்கள்!
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகம் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
Page -1-
மணிரத்னத்தின் மாபெரும் திரைப்படம்
“பொன்னியின் செல்வன் ”
அதன் திரை விமர்சனம் இங்கே!
இதை எப்போது எடுத்தார்? எப்போது ரிலீஸ் ஆயிற்று ?
என்பதை அறிய இந்த இதழின் கடைசிப் பக்கத்தைப் பார்க்கவும்!
தமிழ்ப் புத்தாண்டு
விழா நாட்களில் நம்ம வீடுகளில் போடப்படடும் தலைவாழை இலை சாப்பாட்டின் மகத்துவமே தனி!
அது சரி! தமிழ்ப் புத்தாண்டு அன்று என்ன ஸ்பெஷல் சாப்பிடலாம் ?
சாதம் – பருப்பு – நெய் – கல்யாண சாம்பார் – வடாம்
வேப்பம்பூ ரசம் – கோசுமல்லி – அவியல் -பப்படம்
தயிர்வடை – சக்கைப் பிரதமன்
புளியோதரை – மாங்காய் பச்சடி
தயிர் – இஞ்சி புளி – மோர் மிளகாய்
முக்கனி – வாழைப்பழம் – மாம்பழம்-பலாப்பழம்
வெத்திலை (கும்பகோணம்) – பாக்கு (ரசிக்லால்) -சுண்ணாம்பு (டிஎஸ்ஆர்)
சில ஸ்பெஷல் ஐட்டங்களை எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்!
(For authentic recipe view at : http://www.jeyashriskitchen.com/)
மாங்காய்ப் பச்சடி:
தேவையான பொருட்கள்:
மாங்காய் -1; வெல்லம் – ½ கப் ; உப்பு – ஒரு சிட்டிகை; எண்ணை : ¼ டீ . ஸ்பூன் ; கடுகு : ¼ டீ.ஸ்பூன் ; சி.மிளகாய் -1
செய்முறை:
மாங்காயின் தோலை உரித்துத் துண்டுகளாகப் போட்டுக்கொள்ளவும். வாணலியில் மாங்காய் துண்டுகளுடன் ½ கப் தண்ணீர் , உப்பையும் சேர்த்து மாங்காய் மிருதுவாகிற வரைக்கும் வேக வைக்கவும். (மாங்காய் தெரியாமல் இருக்க வேண்டுமென்றால் குக்கரில் வேக வைக்கவும்).
வெல்லத்தை குறைந்த அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, பிறகு வடிகட்டி ஐந்து நிமிடம் கொதிக்க வையுங்கள். இப்போது மாங்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கலந்து மேலும் 3-5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடுகையும் மிளகாயும் தாளித்து அதில் சேர்க்கவும்.
மாங்காய் பச்சடி ரெடி.
கோசுமல்லி
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு ¼ கப், கேரட் -1, வெள்ளரி -1, உப்பு, எண்ணை ½ டீ ஸ்பூன், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், எ.பழம் சாறு 1 டீ ஸ்பூன், கொத்தமல்லி தழை,
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பாசிப் பருப்பைப் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து வாயகன்ற பாத்திரத்தில் வெந்த பாசிப் பருப்பைப் போடவும். கேரட்டையும் வெள்ளரியையும் , துறுவி பருப்புடன் உப்பு சேர்த்து கலக்கவும். கடுகு,பெருங்காயம், ப.மிளகாய்,கொத்தமல்லி இவற்றைத் தாளித்து அதில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, எ.பழம் சாற்றையும் சேர்க்கவும். துருவிய தேங்காயை பரிமாறுமுன் சேர்க்கவும்.
கோசுமல்லி ரெடி !
தயிர் வடை:
தேவையான பொருட்கள்:
வடை-4; துருவிய தேங்காய்- 4 டேபிள் ஸ்பூன்; ப.மிளகாய்: 2; தயிர் -2 கப்; ஜீரகம்: ¼ டீ .ஸ்பூன்; உப்பு: தேவையான அளவு; காரட் துருவியது: ½ டேபிள் ஸ்பூன்;கொத்தமல்லி, கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை
வடையைத் தயார் செய்த பிறகு கொஞ்சம் ஆற வைக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பின் சூட்டைக் குறைத்து விட்டு ஒவ்வொன்றாக 6-8 செகண்ட் போட்டு எடுக்கவும். வடையில் இருந்த தண்ணீரை மெதுவாக கைகளில் அழுத்தி எடுக்கவும். இது வடைகளை மிருதுவாக வைக்க உதவும்.
தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதிலாக தயிரை விட்டு அரைக்கவும். பாக்கி தயிரை நன்றாக கடைந்து தேங்காய் பேஸ்ட், உப்புடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் சேர்க்கவும். பிறகு வடைகளை இதில் போட்டு, துருவிய கேரட், பூந்தி, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
தயிர் வடை ரெடி !
சக்கைப் பிரதமன்:
தேவையான பொருட்கள்:
பலாச் சுளைகள்: 10-15 ; வெல்லம் :½ கப்; திக்கான தேங்காய்ப் பால் : ½ கப்; முந்திரிப் பருப்பு: 5-7; நெய்: 1 டேபிள் ஸ்பூன்.
பலாச் சுளையை நன்றாக அலம்பி கொட்டை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அவற்றை லேசாக 2 நிமிடம் நெய்யில் வதக்கி, பிறகு குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு அவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ½ கப் தண்ணீர் விட்டு கரைத்து குப்பைகளை வடிகட்டி, 3 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும். அதில் பலாசுளைப் பேஸ்ட்டைக் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். தேங்காய்ப் பாலை அத்துடன் கலந்து மேலும் 2 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க விடவும். (ரொம்ப நேரம் கொதித்தால் கெட்டு விடும்). முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.
சக்கைப் பிரதமன் ரெடி.
சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.
புளிக்காச்சல்:
தேவையான பொருட்கள்:
1) க. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்; உ.பருப்பு 1 டேபிள் ஸ்பூன் ; தனியா 1 ½ டேபிள் ஸ்பூன்; சி.மிளகாய்; 6-7; எள்: 1 டீ.ஸ்பூன்; மிளகு: 1 டேபிள் ஸ்பூன்;
2) எண்ணை : 4-5 டேபிள் ஸ்பூன்; கடுகு -¼ டீ ஸ்பூன்; வேர்க்கடலை -1 டேபிள் ஸ்பூன்; க.பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை;
3) திக் புளித்தண்ணி 1 ½ கப்; மஞ்சப் பொடி -¼ டீ.ஸ்பூன்; பெருங்காயம் : கொஞ்சம்; வெல்லம்: ¼ டீ.ஸ்பூன்
முதல் எண்ணில் குறிப்பிட்ட பொருட்களை நன்றாக வறுத்து (எள்ளைக் கடைசியில் சேர்க்கவும்), ஆற வைத்து, மிக்ஸ்யின் நன்றாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு நம்பர் 2ல் குறிப்பிட்டுள்ள மற்றவற்றைப் போட்டு தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறும் போது புளித்தண்ணியை விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கத் தொடங்கும் போது அரைத்து வைத்துள்ள பவுடர்களுடன், ம.பொடி, உப்பு, வெல்லம், பெருங்காயம் போடவும். குறைந்த நெருப்பில் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்து சரியான பதம் வந்ததும் இறக்கவும்.
புளிக்காச்சல் ரெடி.
சாதத்துடன், நல்லெண்ணை விட்டு தேவையான அளவு புளிக்காச்சலை விட்டு மெதுவாகப் பிசைந்தால் புளியஞ்சாதம் ரெடி.
கல்யாண சாம்பார்:
தேவையான பொருட்கள்:
1) து.பருப்பு – ½ கப்; புளி 1 எ.பழம் அளவு; சாம்பார் பவுடர் -½ டீ.ஸ்பூன்; நறுக்கிய கத்திரிக்காய், கேரட், கேப்சிகம், உ.கிழங்கு -1;
2) தனியா -3 டீ.ஸ்பூன்; உ.உ.பருப்பு -2 டீ ஸ்பூன்; ஜீரகம் – 1 டீ ஸ்பூன்; சி.மிளகாய் -4;பெருங்காயம்;
3) கடுகு, சி.மிளகாய் -1, கருவேப்பிலை, எண்ணை 3- டேபிள் ஸ்பூன் , உப்பு
புளியை ½ கப் தண்ணீர் விட்டு திக்காகக் கரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பைக் குக்கரில் வைத்து நன்றாக மசியும் வரை ( 4-5 விசில்) வேகவைக்கவும்.
நம்பர் 2 ல் குறிப்பிடுள்ளவற்றை லேசாக எண்ணை விட்டு வறுத்து மிக்ஸியில் பேஸ்டாகவோ,பொடியாகவோ அரைத்து வைக்கவும்.
பிறகு நறுக்கிய காய்கறிகளை நன்றாக வதக்கிய பின், புளித்தண்ணி , உப்பு,சாம்பார் பொடி, தண்ணீர்(தேவையான அளவு) சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். (3-4 நிமிடம்)
பிறகு பருப்பு மசியலைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
அதில், பொடித்து வைத்த பவுடர் (அல்லது) பேஸ்டைப் போட்டு பச்சை வாடை போகும் அளவுக்கு கொதிக்க வைக்கவும். திக்காக வேண்டும் என்றால் சிறிது அரிசி மாவைக் கலந்து கொதிக்க வைக்கவும்.
கல்யாண சாம்பார் ரெடி.
வேப்பம்பூ ரசம்:
சாதாரண தக்காளி ரசம் வைத்து விட்டு, அதில், காய்ந்த வேப்பம்பூவை நெய்யில் வறுத்துப் போட்டால் வேப்பம்பூ ரசம் ரெடி.
அவியல்:
தேவையான பொருட்கள்:
கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,வாழைக்காய்,சேனை,முருங்கைக்காய்,சௌ சௌ , வெள்ளை பூசணி,மஞ்சள் பூசணி, புடலை,பட்டாணி,(வேர்க்கடலை?), தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், தேங்காய் எண்ணை , கருவேப்பிலை, தயிர்
கடலையை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை ½ அங்குலம் நீளத்துக்கு வெட்டி, கொஞ்சம் உப்பைச் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் வேகவைக்கவும். புடலங்காய்,வெள்ளை பூசணி, முருங்கைக்காய் இவற்றை தனியாக வேகவைத்து சேர்த்துக் கொள்ளவும். கடலையும் சேர்க்கவும்.
மிளகாய்,தேங்காய்,ஜீரகம் இவற்றை மிக்ஸியில் பேஸ்டாக அறைத்துக் கொள்ளவும்.
கடாயில் வேகவைத்த காய்கறிகளுடன், அரைத்து வைத்த பேஸ்ட்டையும் மெதுவாக கலந்து,(காய்கள் குழைந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.). நன்றாகக் கொதித்தபின், ஸ்டவ்வை அணைத்து அவற்றுடன் தேங்காய் எண்ணையை நன்றாகக் கலந்து தயார் செய்யவும்.
அவியல் ரெடி.
1752, 1, ஏப்ரல் :
ராபர்ட் கிளைவ் டயரியிலிருந்து:
இன்று திருச்சி மலைக்கோட்டைக்கு கீழே உள்ள ‘கிளைவ் ஹவுஸ் ‘ என்ற எனது வீட்டில் தங்கியிருக்கிறேன். எதிரே அழகான குளம். அருகே மெயின் கார்ட் கேட் ! பாரக்ஸ் முழுதும் குதிரைப்படை வீரர்கள்! போர்த் தளபதிக்கான சரியான அறை. கடந்த வாரம் முழுதும் ஒரே அலைச்சல்! புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரே மூச்சில் குதிரையில் வந்ததன் களைப்பு என்னை முற்றிலும் ஆக்ரமித்திருந்தது அப்படியே தூங்கிவிட்டேன். திடீரென்று உப தளபதி எழுப்பினான். பிரஞ்சுப் படை மெயின் கார்ட் கேட் வரை வந்துவிட்டதாம். என் மனைவி, மகன் இருவரும் காலையில் தான் கல்லணைக்குப் போயிருந்தார்கள்! இன்னும் வரவில்லையே! பிரஞ்சுப் படை அவர்களைப் பிடித்திருக்குமோ?
“சார்ஜ்” என்று ஆணையிட்டு என் குதிரையில் பாய்ந்தேன்! என்னுடன் 500 குதிரை வீரர்களும் வந்தனர். மெயின் கார்ட் கேட் திறக்கப்பட்டது. “மார்ச்” என்று கத்திக்கொண்டே பாய்ந்தேன். என்ன ஆச்சரியம்! எதிரே வெறும் பொட்ட வெளி! பிரஞ்சுப் படை வீரன் ஒருவனையும் காணோம். பக்கத்தில் மரத்தின் மறைவிலிருந்து இரு குதிரைகள் மெதுவாக வரும் சத்தம் கேட்டது! இருவர் கரங்களிலும் அழகிய பூங்கொத்துக்கள்!“வாழ்க ராபர்ட் கிளைவ் என்று என்மனைவி தமிழில் சொன்னாள். “இல்லையம்மா வாழ்க லார்ட் கிளைவ்” என்று என் மகன் சத்தமாக ஆங்கிலத்தில் கூறினான்.
இருவரும் என் அருகே வந்து மெதுவாக “இன்று ஏப்ரல் ஒன்று -முட்டாள்கள் தினம்’ என்று சொல்லிச் சிரித்தனர். 500 வீரர்களுடன் குதிரைகளும் சேர்ந்து சிரித்தன- அவர்கள் தளபதி முட்டாளாக்கப்பட்டதற்கு!
வேற வழி! நானும் சிரித்தேன்!. .
பெரிசு
பச்சைப் பசேல் என்று வயல்வெளி! வைகைத் தண்ணி பாய்கிற பூமி!நெல்லும் கரும்பும் மாத்தி மாத்தி போடுவான் மாடசாமி. "இந்த வருஷம் நல்லா விளையட்டும். உனக்கு வளையல் வாங்கி போடறேன் வள்ளிக்குட்டி!“ என்று கொஞ்சினான்.
"நீ மாடு மாதிரி உழைக்கிறே! உனக்கு மாடசாமின்னு சரியாத்தான் பேரு வைச்சிருக்காங்க” வள்ளி அவனிடம் கொஞ்சினாள்.
“கட்டின புருஷனை பேரு சொல்லியா கூப்பிடறே ? எடு கருக்கருவாளை ! நாக்கை அறுக்கணும் ! என்று செல்லமா கோபித்தான் மாடசாமி.
"அறுவேன்” என்று சொல்லி கிட்டே வந்து அவனுக்கு எதிரில் நாக்கை நீட்டி நின்றாள் வள்ளி! அந்த உடம்பும் அவள் நின்ற கோலமும் அவனை என்னவோ செய்தது. அவளை அப்படியே பிடிச்சு இழுத்து ….
“எலே! மாடசாமி! வயக்காட்டுப் பக்கம் மாடு மேயுது பாருடோய்” பெரிசு – அப்பத்தா! எப்பவும் எதினாச்சும் சத்தமா பேசிக்கிட்டே வர்ரதினாலே வள்ளியும் மாடசாமியும் சுதாரிச்சு எழுந்தாங்க. வள்ளியின் கலைஞ்ச தலையையும் சேலையையும் பார்த்த அப்பத்தாவுக்கு புரிஞ்சிட்டது.
“ அட சே ! கூறு கேட்ட செருக்கி !இனிமே இந்த மாதிரி செய்வியா? சின்னஞ்சிறுசுக இருக்கிற இடத்துக்கு வருவியா? பீடை!” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு மேட்டுப் பக்கம் போனாள் அப்பத்தா!
பொன்மகள் வந்தாள் ( நித்யா சங்கர்)
(ஆதி சங்கராச்சார்யார் அவர்களின் கனகதாரா ஸ்தோத்ரங்களைப் படித்தால் லக்ஷ்மி தேவியின் அருட்பார்வை உங்களுக்குக் கிட்டும் என்பதில் ஐயமில்லை.)
மீதமுள்ள பாடல்கள் அடுத்து வரும் குவிகம்
இதழ்களில் வரும்.
மீனங்காடி ( ஐந்தாம் பகுதி)
வழக்கத்திற்கு மாறாக …………….
மேரி படிகளில் இறங்கி வழக்கம் போல ஏரிக்கரைக்கு மதிய உணவிற்காகச் சென்று கொண்டிருந்தாள். கால்கள் நடந்தன. ஆனால் மனம் மட்டும் பிரசாத் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் அதிகம் நடந்தால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. ‘குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்ட்’ – அந்தப் பெயர் அவள் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. குப்பைத் தொட்டியை எப்படித் தூக்கி எறிவது? ஏதாவது செய்யணும் !
யோசித்துக் கொண்டே நடந்ததில் மேரி இதுவரை வராத புதுப் பகுதிக்கு வந்து விட்டாள். ‘ஹோய். ஹோய்’ என்று பலர் சிரிக்கும் சத்தம் கேட்டபிறகு தான் அவளுக்குப் புரிந்தது – தான் மீன் மார்க்கெட் பக்கம் வந்து விட்டோம் என்று. அது ஒரு பிரபலமான மீன் மார்க்கெட். அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மிக உயர்ந்த ரக மீன்கள் எல்லாம் கிடைக்கும் என்று.ஆனால் அவள் பொருளாதார நெருக்கடி – இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு அவளை அங்கு வர விடுவதில்லை.ஜானுக்காக வாங்கிய கடனைக் கட்டிய பிறகு தான் மற்ற வசதிகள் எல்லாம்.
அந்த மார்க்கெட் பக்கம் போவது இதுதான் முதல் தடவை.
அங்கே இருக்கிற எண்ணற்ற மீன் கடைகளில் ‘மீனங்காடி’ என்ற கடையில் மட்டும் ஏராளமான கும்பல் இருப்பதைக் கவனித்தாள். அங்கிருந்துதான் அந்த ‘ஹோய் ஹோய்’ சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கடையைச் சுற்றிக் கத்திச் சிரிக்கும் அவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. அவளுக்கும் அந்த சிரிப்பு அலை தொற்றிக் கொள்ளும்படி இருந்தது. ஆனாலும் தன் மண்டையில் ஓடும் எண்ண அலைகளினால் சீரியஸாகவே இருந்தாள்.
கொஞ்சம் ஆர்வத்துடன் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தாள். சரி ஏதோ வித்தை காட்டி தமாஷ் பண்ணுகிறார்கள் என்று அவர்களை விட்டு விலகிப் போகப் பார்த்தாள். அப்போது தான் அவள் மண்டையில் தட்டுப்பட்டது – அட நமக்கும் கொஞ்சம் வேடிக்கை, சிரிப்பு தேவைப் படுகிறது என்று. கும்பலின் மையத்துக்குப் போனாள்.
அங்கே மீன் விற்றுக் கொண்டிருந்த ஒருத்தன் சத்தமாகக் கத்தினான். “ஹாய் ! டீ கப் வீரர்களே !” அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் தங்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் டீ கப்பைத் தூக்கி உயர்த்தி ‘ஹாய்’ என்று கத்தினார்கள் – நன்றாக டை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த பத்து இருபது பேரும். ‘இதென்ன கூத்தாயிருக்கு?’ என்று மேரி மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.
(தொடரும்)
குழந்தைக் கவிதை
குழந்தைக் கவிஞர்கள் – அழ வள்ளியப்பாக்கள்
ஆயிரம் பேர் வந்துவிட்டனர் எழுதிக் குவிக்க!
சொல்வனத்திலும் கவிதைப் பூங்காவிலும்
குழந்தை கவிதைகள் ஆயிரம் ஆயிரம்!
குழந்தையையும் கடவுளையும் இணைத்து எத்தனை வரிகள்!
சூரியன் உதிப்பது குழந்தையின் கண்மணி காண
நிலா வருவது குழந்தைக்கு சோறு ஊட்ட!
பூமிக்கு ஒத்தடம் குழந்தையின் காலடி!
கரடிப் பொம்மை குழந்தையை அணைத்த கடவுள்!
எச்சல் தெறிக்கும் குழந்தை குற்றாலத்து சாரல்!
கொட்டாவி விடும் குழந்தை காற்றுக்கு குதூகலம்!
நடை பழகும் குழந்தை நில மடந்தைக்கு வருடல்!
விம்மும் குழந்தை கடவுளின் உயிர்த் துடிப்பு!
எல்லாம் சரி! பின்னர் ஏன் இந்த வசனம்!
“அழுகையை நிறுத்து சனியனே!
அறைஞ்சு கொன்னுடுவேன்!”
ஈஶ்வர உவாச ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே ஶ்ரீராம னாம வரானன ஓம் னம இதி
திங்கள்!
ஏன் பிறந்தாய் என்று உனைத் திட்டுபவர் பலர் !
வார முதல்நாளே ! தடுமாறும் என் தாளே!
இரவில் மட்டும் வரும் இரவு ராணியே!
இரவில் மட்டும் பூக்கும் புதுமலரே
உன் கன்னக் கதுப்பில் அப்படி என்ன கறை ?
கலை மாறா கதிரவன் கடித்தவடுவா ?
பருவக் கோளாறில் வெடிக்கும் பருக்கூட்டமா ?
பாடல் பல கோடி பெற்ற திருத்தலமே !
சூடேற்றும் குளிர் பானமே!முரண் தொடையே !
இருட்டிலும் காய்கிறாய்! காய வைக்கிறாய் !
மேக மேலாடை இன்றி அடிக்கடி பவனி வருகிறாய்!
நட்சத்திர சேடிகளுடன் உலா வருகிறாய் !
வானமென்னும் வீதியில் பூனை நடை புரிகிறாய் !
ஒளிந்து ஒளிந்து என்னை எட்டிப் பார்க்கிறாய் !
எங்கள் கால் உன் மேனியில் பட்டதில் வருத்தம் தானே !
உன்னைக் காட்டி சோறு ஊட்டிய நாங்கள்
உன்மடியில் அமர்ந்து சோறு உண்பது எப்போது ?
வெள்ளி முலாம் பூசிய கருப்பு நிற அழகியா இல்லை
கருப்புச் சாயம் பூசிய வெள்ளைக் காரியா ?
பித்தனுக்கு நீ பிறை! சித்தனுக்கு நீ சிறை !
கவிஞனுக்கு நீ கலை! காதலனுக்கு நீ சிலை !
பௌர்ணமிப் பார்வையில் வெறி ஊட்டுகிறாய்!
அம்மாவாசைப் போர்வையில் காதல் சல்லாபம்!
ஒரே ஒரு சந்தேகம்!
நீ பூமிக்குக் காவலா இல்லை பாலுக்குத் தோழியா ?
ஒன்று
அன்று முதல் இன்று வரை ஒன்று நன்று !
என்றும் இதைக் கண்டு கொண்டால் நன்று ஒன்று !
கடவுள் ஒன்று காட்சி ஒன்று காதல் ஒன்று
உலகம் ஒன்று உண்மை ஒன்று உணர்வு ஒன்று
கணவனும் மனைவியும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – மழலை
எண்ணமும் எழுத்தும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – கவிதை
இதயமும் இதயமும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – காதல்
இதழும் இதழும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – முத்தம்
கையும் தூரிகையும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – ஓவியம்
சித்தியும் புத்தியும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – பக்தி
பரமனும் பக்தனும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – முக்தி
கனவும் கருத்தும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – காவியம்
குரலும் பயிற்சியும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – கானம்
செயலும் முயற்சியும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – வெற்றி
ஆறும் ஐந்தும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – ஆரஞ்சு
ஐந்தும் ஆறும் ஒன்றாகும்போது
பிறப்பது ஒன்று – பதினொன்று
தலையங்கம்
ஏப்ரல் 2014
பூ : ஒன்று ———————- இதழ் : ஐந்து
வரப் போகிறது என்ற பாராளுமன்றத் தேர்தல் வந்தேவிட்டது.
யாருக்கு எவ்வளவு சொத்து – எந்த வேட்பாளர் மனு தாக்கல் செய்தபிறகு கட்சி மாறினார்- எந்தக் கட்சிக்கு வேட்பாளரே இல்லாத கொடுமை – இதெல்லாம் நமக்கு கிடைக்கிற சில்லறை சிரிப்புகள்!
காமெடியின் உச்ச கட்டம் – 2ஜி புகழ் ராஜாவுக்கு எதிரான பி.ஜே.பி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
பல கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தமிழ் நாட்டில் ஏப்ரல் 24 ந் தேதி நடைபெறப் போகிறது.
கருத்துக் கணிப்புகளும் அரசியல் ஆரூடங்களும் கிளி ஜோசியர் கணக்கில் வந்துகொண்டிருக்கின்றன.
முடிவு வரும் போது சென்னை வெயிலும் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்பப் போகிறது!
ஜெயித்தவர்கள் கெத்தாகப் பேசுவதும், தோற்றவர்கள் சதவீதக் கணக்கில் புள்ளி விவரமாகச் சொல்லுவதும், ஓட்டைப் போட்டவன் தொடர்ந்து ஓட்டாண்டியாகத் திரிவதும் நமக்கு வாடிக்கையாகப் போய்விட்டது,
காங்கிரஸ் கலயத்தில் கஞ்சி குடித்த நாம் இனி பி.ஜே.பி சட்டியில் குடிக்க நேரலாம். ரெண்டும் ஓட்டை தான். கிழிஞ்ச சட்டையைத் தூக்கி எறிந்து விட்டு நைந்த சட்டையை போட்டுக்கப் கொள்ளப் போகிறோம் . ரெண்டும் ஓட்டை தான். பழைய ஓட்டைப் போட்டு புதிய ஓட்டையை வாங்கப் போகிறோம்.
2G ,நிலக்கரி, ஹெலிகாப்டர் போன்ற ஊழலுக்குப் பதிலாக ரயில்,கடல்,ஆகாயம் என்று வேறு ஏதாவது புதியதாக ஊழல் வரும்.
இப்படி நம்பிக்கை இல்லாமல் பேசுவது சரியா என்று கேட்கலாம்!
என் கருத்து தவறு என்று காலம் நிரூபித்தால் என்னை விட சந்தோஷம் அடைபவர் . யாரும் இருக்க மாட்டார்.
===================================================
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
===================================================
.
ரெண்டு!
அன்பு வழியும் விழிகள் ரெண்டு
ஆசை பொழியும் விழிகள் ரெண்டு
இன்ப மூட்டும் விழிகள் ரெண்டு
ஈடில்லா விழிகள் ரெண்டு
உண்மை பேசும் விழிகள் ரெண்டு
ஊஞ்சல் ஆடும் விழிகள் ரெண்டு
என்னை ஈர்க்கும் விழிகள் ரெண்டு
ஏக்கம் தீர்க்கும் விழிகள் ரெண்டு
ஐயமில்லா விழிகள் ரெண்டு
ஒற்றிக் கொள்ளும் விழிகள் ரெண்டு
ஓங்கார விழிகள் ரெண்டு
ஔவை கண்ட விழிகள் ரெண்டு
யார் சொன்னார் உனக்கு விழி பன்னிரண்டு?
முருகா உனக்கு விழி கோடி கோடி உண்டு !
2014 ல் வெளியான தமிழ்ப் படங்கள்!
அம்மோடியோவ்! எத்தனை தமிழ்ப் படங்கள் மூணு மாதத்தில் !
அகடம் 03-01-2014
என் காதல் புதிது 03-01-2014
கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு 03-01-2014
நம்ம கிராமம் 03-01-2014
ஜில்லா 10-01-2014
வீரம் 10-01-2014
கலவரம் 14-01-2014
விடியும் வரை பேசு 14-01-2014
கோலி சோடா 24-01-2014
மாலினி 22 பாளையங்கோட்டை 24-01-2014
நேர் எதிர் 24-01-2014
இங்கே என்ன சொல்லுது 30-01-2014
நினைவில் நின்றவள் 31-01-2014
ரம்மி 31-01-2014
பண்ணையாரும் பத்மினியும் 07-02-2014
புலிவால் 07-02-2014
உ 07-02-2014
சந்த்ரா 14-02-2014
இது கதிர்வேலன் காதல் 14-02-2014
மாதவனும் மலர்விழியும் 14-02-2014
ரெட்டை கதிர் 14-02-2014
ஆஹா கல்யாணம் 21-02-2014
பிரம்மன் 21-02-2014
வெண்மேகம் 21-02-2014
அமரா 28-02-2014
பனி விழும் மலர்வனம் 28-02-2014
தெகிடி 28-02-2014
வல்லினம் 28-02-2014
வெற்றிமாறன் I.P.S 28-02-2014
என்றென்றும் 07-03-2014
எதிர் வீச்சு 07-03-2014
நிமிர்ந்து நில் 07-03-2014
வீரன் முத்து ராக்கு 07-03-2014
ஆதியும் அந்தமும் 14-03-2014
காதல் சொல்ல ஆசை 14-03-2014
ஒரு மோதல் ஒரு காதல் 14-03-2014
குக்கூ 21-03-2014
கேரளா நாட்டிளம் பெண்களுடனே 21-03-2014
பனி விழும் நிலவு 21-03-2014
விரட்டு 21-03-2014
யாசகன் 21-03-2014
இனம் 28-03-2014
மறுமுனை 28-03-2014
நெடுஞ்சாலை 28-03-2014
ஒரு ஊர்ல 28-03-2014 )=
எப்போதும் வென்றான் 04-04-2014
மான் கராத்தே 04-04-2014
ஒரு கன்னியும் மூணு களவாணியும் 04-04-2014
கூட்டம் 04-04-2014
வரப் போகும் படங்கள்!
கோச்சடையான்
தெனாலிராமன்
முருகாற்றுப்படை
நான் சிகப்பு மனிதன்
வாயை மூடிக் கொண்டு பேசவும்
ராமானுஜன்
சைவம்
மஞ்சப்பை
வாராயோ வெண்ணிலாவே
மெல்லிசை
உத்தம வில்லன்
நன்றி: தணிகை பஞ்சாங்கம் -ஜய வருஷம் – 2014 – 2015
விஷுக் கொண்டாட்டங்கள்!
மாங்காடுப் பாடல்! நான்காம் வாரம்
—————- ———–
நவில்தொறும் நூல்களைப் படிக்கணும் தாயே!
நாவினில் நின்பெயர் நிலைக்கணும் தாயே!
நினைவினில் நின்னுரு இருக்கணும் தாயே!
நீயின்றி நானில்லை என்றாகணும் தாயே!
நுங்கினைப் போலநான் இனிக்கணும் தாயே!
நூபுர கங்கைபோல் பெருகணும் தாயே!
நெஞ்சினில் ஈரம் கசியணும் தாயே!
நேர்மை வடிவாய் விளங்கணும் தாயே!
நைடதம் போல்நூல் படிக்கணும் தாயே!
நொந்த மனமது மாறணும் தாயே!
நோன்புற்று வந்தேன் மாங்காட்டுத் தாயே!
ஔஷதம் போலதினம் உதவணும் தாயே!
ந்யாயமாய் இவைதந்து காத்திடுவாய் நீயே!
ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை
ராணியை ஆணி ஆக்கி
சுவத்திலே அடித்திடுவோம்
ராஜாவை கூஜா ஆக்கி
ஆணியில் மாட்டிடுவோம்
மந்திரியை முந்திரி ஆக்கி
சிப்பாயை சிப்பி ஆக்கி
கூஜாக்குள் போட்டுடுவோம்
ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !
வானத்தை வில்லாய் மாற்றி
கைகளில் எடுத்திடுவோம்
பூமியை அம்பாய் மாற்றி
வில்லிலே தொடுத்திடுவோம்
சந்திரனை சூரியனாக்கி
சூரியனை சந்திரனாக்கி
காலத்தை மாற்றிடுவோம் !
ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !
மேகத்தைக் கையில் பிடித்து
தண்ணீரைப் பிழிந்திடுவோம்
கிரகத்தைப் பையில் அடைத்து
கண்ணீரைத் துடைத்திவோம்
நட்சத்திரப் பூக்கள் சேர்த்து
வானவில் நாரில் கோர்த்து
மாலையாய் கட்டிடுவோம் !
ஜாக்கிரதை ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !
ராஜராஜ சோழன் உலா
தஞ்சைப் பெரிய கோவிலின் சிவாச்சாரியார் பரம்பரை பரம்பரையாகச் சிவனுக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றவர். அவர் அன்று மாலை முதல் சற்று பதட்டத்துடன் இருந்தார். அர்த்த ஜாமம் முடிந்து கோவிலின் கருவறையைப் பூட்டிவிட்டு வரும் போது அன்று இரவில் ஏதோ ஓர் அமானுஷ்ய செயல் நடக்கப் போகிறது என்று அவரது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.
வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்துப் புரண்டாலும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. அன்று சதயத் திருநாள். பெரிய கோவிலைக் கட்டிய தமிழ் சக்ரவர்த்தி ராஜராஜனின் பிறந்த நட்சத்திரம். அரசன் காலத்தில் அந்தச் சதயத் திருநாள் ஒரு வார காலம் படு விமரிசையாக நடைபெற்று வந்தது. இன்றைய காலத்திலும் அந்த நன்னாளில் சிறப்பு அபிஷேகங்களையும் வழிபாடுகளையும் சிவாச்சார்யார்கள் செய்வதுண்டு.
இரவு பன்னிரண்டைத் தாண்டியும் தூக்கம் வராமல் தவித்தார் சிவாச்சாரியார். சதயத் திருநாள் இரவைப் பற்றி அவருக்குப் பலவித சந்தேககங்கள் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஒவ்வொரு முறை சதயத் திருவிழா முடிந்த மறுநாள் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் பிரகாரத்தில் – கோபுரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அடுத்த வருடமாவது அது என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் நினைப்பார். ஆனால் அதற்கான தைரியம் மட்டும் வந்ததில்லை. இன்றைக்கு அந்தத் தைரியம் அவருக்கு வந்ததைப் பற்றி அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
கோவில் சாவியை இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்டார். நேர் வாசலில் சென்றால் மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமே என்று பயந்து நந்தவனத்தில் அருகே இருக்கும் ஒரு ரகசிய வழி மூலம் பிரகாரத்துக்குள் சென்றார். நந்தியின் பின்புறம் மறைந்து கொண்டு அகன்ற வெளிப் பிரகாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
.
சந்திரனின் சாய்ந்த கிரணங்கள் அந்தப் பிரகாரத்தை நடுநிசியிலும் அழகு ததும்பும் இடமாக மாற்றியிருந்தது. கருங்கல்லில் கட்டப்பட்ட ஒவ்வொரு தூணும், சுவரும், கோபுரமும், விமானமும், மண்டபங்களும் அப்படியே வெள்ளியில் இழைத்தது போல இருந்தன. பெருவுடையார் கோவில், ராஜராஜேஸ்வரம், பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெரிய கோவில் அந்த இரவு வேளையில் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அங்கே பிராகாரத்தில் நடை பெற்ற காட்சி சிவாச்சாரியாரைத் திக்கு முக்காடச் செய்தது. அந்த மகோன்னதக் காட்சி அவருக்குப் பயத்தையும் ஆவலையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தியது. கனவா நனவா என்று புரியாத நிலையில் இருந்தார் சிவாச்சாரியார்.
ஆகா! அது என்ன! ஊர்வலமா? யாரிவர்கள்? முப்பது நாற்பது பேருக்கு மேல் இருப்பார்கள் போலத் தோன்றுகிறதே! தூரத்தில் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் நடை, உடை, பாவனை, சந்தோஷம் , உவகை, துள்ளல், சிரிப்பு எல்லாவற்றையும் அவரால் உணரமுடிந்தது.
சிவாச்சாரியாருக்குத் தன் பாட்டனார் கூறியது ஞாபகம் வந்தது. ஆம்!. அது ‘ ராஜராஜன் உலா’ தான். கொஞ்சம் கூடச் சந்தேகமேயில்லை.அதோ அந்தக் கூட்டத்தின் நடு நாயகனாக வருவது சாட்சாத் ராஜராஜ சோழனே தான். தஞ்சை கோவிலில் இருக்கும் சிற்பம் போலவே இருக்கிறார். அவர் கூட வருவது யார்? உன்னிப்பாகக் கவனித்தார். சிவாச்சாரியரால் எல்லாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ராஜ களையுடன் நடுவில் வருபவர் திரிபுவனச் சக்ரவர்த்தி – கோப்பரகேசரி – மும்முடிச் சோழன் – திருமுறை கண்ட சோழன் – கலிங்கம் முதல் இலங்கை வரை ஒரு குடையில் ஆண்ட மாபெரும் மன்னர் ராஜராஜன் என்ற அருண்மொழித்தேவர். உடன் வருபவர்கள் – அவரது மனைவியர் –தமக்கை குந்தவை, அவருடன் வல்லவரையன் வந்தியத்தேவன் –கூடவே ராஜேந்திர சோழன், சின்னக் குந்தவை, அநிருத்தர், பழுவேட்டரையர், சம்புவரையர், மலையமான்,மற்றும் பல சேனைத் தலைவர்கள், சேவகர்கள், தோழிகள்.
ஆகா! சிவாச்சாரியாருக்குத் தான் பாட்டனார் இறக்கும் போது திரும்பத் திரும்பக் கூறியது நினைவுக்கு வந்தது. “சதயம் – இரவு- கோவில் – ராஜராஜன் உலா”. அதன் பொருள் அன்று விளங்கவில்லை. இன்றைக்குத் தான் தெரிந்தது.
பேரரசன் ராஜராஜன் காலத்தில் அவன் பிறந்த நட்சத்திரமான சதயத்தை ஒட்டி வருடா வருடம் பிறந்த நாள் விழா ஒரு வார காலத்துக்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் சதய நட்சத்திர நாளன்று ராஜராஜனும் அவனுடைய குடும்பத்தினர்களும் நண்பர்களும், மற்றும் முக்கியமான சிற்றசர்களும் இரவில் நடுநிசிக்குப் பிறகு ஊர் உறங்கிய பிறகு விடியும் வரை பெரிய கோவில் பிராகாரத்தில் உலா வரும் வழக்கம் இருந்து வந்தது என்பது ஒரு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாமல் இருந்தது. தான் கட்டிய கோவிலில் உற்றார் உறவினர் புடை சூழ வருவது ராஜராஜனுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.
ராஜராஜனின் கனவுக் கோவிலது! ஈழ நாட்டில் அவன் கண்ட கனவை நனவாக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆயிரமாயிரம் சிற்பிகள் – கட்டமைப்பு வித்தகர்கள் சேர்ந்து அமைத்த கோவில் அது! அதி உயரமான கோபுரம் ,ஒற்றைக் கல்லில் விமானம், நிழல் கீழே விழாத வடிவமைப்பு – கல்லில் இழைத்த காவியம்! ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி ராஜராஜேஸ்வரம்’ என்று பெருமிதத்துடனும் அவை அடக்கத்துடனும் செப்பேட்டில் பதித்த ராஜராஜனுக்குக் குட முழுக்கு செய்த நாளை விட அவன் பிறந்த சதயத் திருநாளில் உற்றார் உறவினருடன் பிரகாரத்தில் உலா வருவதையே பெருமையாகக் கருதினான்.
ஆனால் யாருக்கும் தெரியாத ரகசியம் என்னவென்றால் , ராஜராஜன் இறந்த பின்னும் சோழ வம்சாவளி மறைந்த பின்னரும் அவர்கள் திரு உருவம் உலா வருவதை, ராஜேந்திரன் , குலோத்துங்கன் என்ற மற்ற மன்னர்கள் அனுபவ பூர்வமாகக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் பங்கு பெற்றும் இருந்திருக்கிறார்கள். கலிங்கத்துப் பரணியில் கூட இது பற்றி குறிப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது! மூவர் உலா என்ற நூலிலும் இது பற்றிக் குறிப்புகள் உள்ளன. கோவிலில் பணி புரியும் சிவாச்சார்யார்களுக்கு இந்த உலா பற்றி அரச புரசலாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் யாருக்கும் இன்று சிவாச்சாரியாருக்கு வந்த தைரியம் வந்ததில்லை.
ஆஹா! அதோ வருகிறது ராஜராஜன் உலா! சிவாச்சாரியார் ஒளிந்து கொண்டிருக்கும் நந்தி அருகில் உலா வரத் தொடங்கியது. தான் கனவிலும்,படத்திலும், பொன்னியின் செல்வன் கதையிலும் கண்டதைப் போலவே அவர்கள் இருந்தார்கள். ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் இருவர் முகத்தில் தான் எத்தனை கம்பீரம்! அழகு ராணிகளின் நடையும் நாட்டியம் போலவே இருந்தது. ஒருவரை ஒருவர் துரத்துவதும், பிடிப்பதும், விளையாடுவதும் கிட்டத்தட்ட திருமண ஊர்வலம் போலவே மெல்ல சென்று கொண்டிருந்தது அந்த ஊர்வலம். குதூகலத்துடன் அவர்கள் வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஓரிரு காவலாளிகள் சிறிய தீப் பந்தங்களை எடுத்துச் சென்றார்கள். ஆனால் அவற்றிலிருந்து ஒளி வந்ததே தவிரப் புகை ஏதும் வரவில்லை. அதே போல் மேளம்,மத்தளம்,நாதஸ்வரம் இவற்றின் ஒலி மட்டும் வந்ததே தவிர வாசிப்பவர் யாருமில்லை.
ஒவ்வொரு சிலைக்கு அருகில் கூட்டம் வந்ததும் யாராவது ஒருவர் சிலை வடித்த விதத்தைப் பற்றியும் யார் அதற்குப் பிம்பமாக இருந்தார்கள் என்பதைப் பற்றியும் சொல்ல மற்றவர்கள் அவற்றைக் கேட்டு மகிழ்வதும் அற்புதமான காட்சியாக இருந்தது. சிவாச்சாரியார் தன்னை மறந்து அவர்களை முழுவதுமாக ரசிக்க ஆரம்பித்து விட்டார். சிலைக்கு முன்னால் ராஜராஜன் அந்தச் சிலை போல நிற்பதும் சிலர் அவனைக் கேலி செய்வதும் சிலர் ஆஹா! ஆஹா! என்று பாராட்டுவதும் காண்பதற்கு ரம்மியமாக இருந்தது. தான் பெற்ற பிறவிப் பயனை சிவாச்சாரியார் அந்தக் கணத்தில் அடைந்தார்.
திடீரென்று சிவாச்சாரியாருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. தன்னால் அவர்களைக் காண முடியும் என்றால் அவர்களும் அருகில் வந்தால் தன்னைக் கவனித்து விடுவார்களோ என்ற பயம் தோன்றியது. அவர் உடல் கிடு கிடுவென்று நடுங்கத் தொடங்கியது. அவர் பயந்ததே நடந்தது.
உலா நந்தியைத் தாண்டும் போது சட்டென்று நின்றது – எதிரே வரும் உருவத்தைப் பார்த்து. அவர் வேறு யாரும் இல்லை.கருவூர்த் தேவர் தான்
.
ராஜராஜ சோழனின் ஞானக் குரு. அனைவரும் அவருக்குத் தண்டனிட்டு வணக்கத்தைத் தெரிவித்தார்கள். தஞ்சை கோவிலை உருவாக்கியதில் அந்தச் சித்தரின் பங்கு தலையானது. அவரும் மன்னனையும் மற்றோரையும் வாழ்த்தினார்.
“மன்னர் மன்னா! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் பதும மலர் ஒன்றை உனக்கு இன்று தருகிறேன். கோவில் குடமுழக்கு செய்யும் போது இது போன்ற மலரைக் கொடுத்தேன். அதைக் கொண்டு தான் சிவபிரானுக்கு மருந்து செய்து அவரைப் பிரதிஷ்டை செய்தோம். இன்றும் இதன் மூலம் நமக்கு நற்கதி ஏற்படப் போகிறது. இதை யார் மூலம் சிவனுக்கு சாற்றுவது என்று சென்ற முறை மாதிரி இப்போதும் ஒரு சோதனை நடத்து! ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்! நான் நாரதரும் அல்ல. இது ஞானப் பழமும் அல்ல.”- இடி இடியென்று சிரித்தார். அதன் மகிழ்ச்சி அலை அனைவரையும் தொற்றிக் கொண்டது! அந்த சந்தோஷ வலையை அறுத்தெரிந்தது அவரின் அடுத்த சொல்!
“மன்னா! ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை வருவது பதும மலர் மட்டுமல்ல ஒரு மானிடனும் கூட!”
“குருநாதர் அவர்களே! நான் முதலிலேயே அவரைக் கண்டு கொண்டேன் ! வந்தியத்தேவரே! நமது பெரிய நந்தி தேவரை சற்று விலகச் சொல்! சிவாச்சாரியார் நம் முன் வரட்டும்! “என்றார் ராஜராஜன்!
சிவாச்சாரியார் நடுநடுங்கி விட்டார். தனக்கு ஏன் இந்த விபரீத ஆசை வந்தது? இனி நம் கதி என்னாகுமோ என்று தயங்கித் தயங்கி அவர்கள் முன் வந்து கண் மூடி கை கூப்பி நின்றார்.
(தொடரும்)
இந்தப்பெண் எழுதுவது பெண்ணுரிமை
பற்றிய புதுக் கவிதையா ?
அடிமைக்கு எதற்கு உரிமை என்று
திமிர் பேசியது முந்தா நாள்!
நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை என்று
ஒப்புக் கொண்டது நேற்று!
உன்னால் மட்டுமல்ல என்னாலும் முடியும் என்று
செயலிலும் காட்டுவது இன்று!
அதனால் தான் முப்பத்து மூன்றைத்
தரத் தயங்குகிறான் அவன்!
யார் சொன்னார் பெண்ணுக்கு உரிமை இல்லை என்று?
தந்தை தாயுடன் இருக்கும் வரை அவர்
சொன்னபடி கேட்கும் உரிமை உண்டு!
கணவனுடன் இருக்கும் போது தற்காத்து
சொற்காத்து இருக்கும் உரிமை உண்டு!
மகன் தயவில் வாழும் நிலையிலும்
தன்னிலை எண்ணிக் கலங்கும் உரிமை உண்டு!
வீதிவரை நிறுத்திவிட்ட மனிதனிடம்
அவள் கேட்பது ஒரே ஒரு உரிமை!
என்னை மனுஷியாக உன் துணைவியாக
என்று நீ ஏற்றுக் கொள்வாய்?
(ஆனந்த் ஸ்த்ரீ சக்தியின் புத்தாண்டு விழாவில் படிக்கப் பெற்ற கவிதை!)
உலகெங்கும் ஏப்ரல் 1 ந் தேதி முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மணி ரத்னம் பொன்னியின் செல்வன் எடுத்ததாகக் கூறுவதும் இதற்காகத் தான் !
ராபர்ட் கிளைவின் டயரியும் ஏப்ரல் ஃபூல் கதை தான்!