Monthly Archives: June 2018
தலையங்கம் – கேட்டதில் என்ன தப்பு?



காலா -விமர்சனம்
காலா
ரஜினி -ரஞ்சித் கூட்டணியில் வந்திருக்கும் படம் காலா.
தளபதிக்குப் பிறகு ரஜினியை இவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்ததற்காக ரஞ்சித்தைப் பாராட்டலாம்.
தாதா தாத்தா குழந்தைகளுடன் விளையாடுவது, பழைய காதலியைப் பார்த்து பம்முவது, மனைவியுடன் கொஞ்சுவது, மகனிடம் கோபம் கொள்வது , இளவட்டங்களுடன் ஜாலியாக இருப்பது- ‘க்யா ரே செட்டிங்கா ? வாலே ஒத்தியா நிக்கறேன்’ – ரஜினி கலக்குகிறார். இப்படிச் சொன்னால் விமர்சகருக்கு வயது அறுபதுக்கு மேலே என்பது புரிந்துவிடும்.
தூள் பறக்கிற சண்டையில ரஜினியை ஓரங்கட்டிட்டியே ! தலைவருக்கு ஒரு டூயட் வைக்கலியே ! சூப்பர் ஸ்டாரோட பஞ்ச்சைக் காணமே ! இப்படி விமர்சனம் எழுதினால் நம்ம வயசு முப்பதுன்னு புரிஞ்சுப்பாங்க !
ராமர் ராவணன் எல்லாம் தேவையா என்றால் நமக்கு காவி கலர் பூசுவாங்க!
பாட்டு – பின்னணி இசை – நானாபடேகரின் அபார வில்லத்தனம் மற்றும் சின்னச் சின்னப் பாத்திரங்களின் அளவான நடிப்பு -ஜீப் எல்லாம் அருமையோ அருமை! என்று சொன்னால் ‘சரியா சொன்ன மச்சி’ என்று மில்லியனல்ஸ் எல்லாம் கை கொடுப்பாங்க!
‘கருப்பே அழகு காந்தலே ருசி’ என்பதை ஒப்புக் கொண்டாலும் ரஞ்சித்தின் காலா அப்படியில்லையே என்பதை நினைக்கும் போது து. தொ.அ.
(துக்கம் தொண்டையை அடைக்கிறது)
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
விதி என்ற ஒன்றைப் படைத்தது யார்? விதிக்கு இவ்வளவு சக்தியைக் கொடுத்தது யார்? இது மனிதர்களை மட்டுமன்றி கந்தர்வர்கள், தேவர்கள் ஏன் மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைப்பது எப்படி? விதி என்ற மாய வலைக்குள் சிக்காதது எதுவும் இல்லையா ? மனிதனைப் படைக்கும் முன்னே – உலகத்தைப் படைக்கும் முன்னே – கோள்களைப் படைக்கும் முன்னே – பிரும்மனைப் படைக்கும் முன்னே விதி என்று ஒன்று இருந்திருக்கிறது. விதியை மதியால் வெல்ல முடியுமா? இந்த விதியை மதியால் வெல்லலாம் என்று ஒரு விதி இருந்தால்தான் அந்த விதியை மதியால் வெல்ல முடியும். அதுதான் விதி.
அந்த விதி ஸந்த்யாவின் நிழலில் மறைந்து கொண்ட ராகுவின் வடிவில் சூரியதேவனை எப்படியெல்லாம் பிற்காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகிறது என்பது அந்தக் கணத்தில் யாருக்கும் தெரியவில்லை.
ராகுவை எரிக்க வேண்டும் என்று கோபாவேசத்தில் எரிவளையத்தைப் படைத்த சூரியதேவன் ஸந்த்யா வருவதைப் பார்த்ததும் ராகுவை மறந்தான். ஸந்த்யாவின் அருகில் நின்ற விஷ்வகர்மா அவன் புலன்களுக்குப் புலப்படவில்லை. அந்த அளவுக்கு அவள் அழகு அவனை ஆக்ரமித்திருந்தது. அந்த எழிலைப் பரிபூரணமாக அடையவேண்டும் என்பதற்காகத்தானே அவன் காந்த சிகிச்சைக்கே ஒப்புக்கொண்டான்.
ஸந்த்யாவின் நிலைமையோ இருதலைக்கொள்ளி எறும்புபோல இருந்தது. தந்தையின் கண்டிப்பான கட்டளையை மீறி காந்த சிகிச்சையின்போது சூரியதேவனுடன் உறவு கொண்டதால் என்னென்ன ஆபத்துக்கள் வருமோ என்ற பயத்தில் அவள் அழகு முகம் மேலும் வெளுத்தது.
தேவசிற்பியான விஷ்வகர்மாவிற்கு அந்த அறையைப் பார்த்த ஒரு கணத்திலேயே எல்லாம் விளங்கிவிட்டது. அவர் போட்ட கணக்கு தவறிவிட்டது. எதையும் திட்டமிட்டபடி செய்பவர் என்று பெயர் வாங்கிய விஷ்வகர்மா தன் திட்டத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
சூரியதேவனுக்காகத்தான் அவர் ஸந்த்யாவைப் பெற்றெடுத்தபோதிலும் அவர்கள் திருமணம்பற்றி மாபெரும் திட்டம் வைத்திருந்தார். அவர்கள் திருமணம் நடக்கவேண்டிய காலம் நேரம் இடம் எல்லாவற்றையும் துல்லியமாகக் கணித்து வைத்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்த அந்தக் காலம் கனிந்து வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருந்தன. தனுர் மாதத்திலிருந்து தை மாதம் என்று அழைக்கப்படும் மகர மாதத்திற்குப் போகும் ஸங்கராந்தித் திருநாள் தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து பகல் பொழுது ஆரம்பமாகும் புண்ணிய காலம். சங்கரம் என்றாலே நகர்தல் என்று பொருளல்லவா? சூரியனும் தக்ஷிணாயனத்தை முடித்துவிட்டு உத்தராயனத்துக்கு நகரும் புண்ணிய நாள். தெற்கின் பக்கம் சாய்ந்து இருந்த சூரியன் வடக்குப் பக்கம் சாயும் புனித நாள். தேவர்களுக்குப் பகல்பொழுது ஆரம்பிக்கும் புனிதமான உத்தராயனப் புண்ணியகாலம்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சங்கராந்தி வருவது வழக்கம். சித்திரையில் தொடங்கி பங்குனிவரை சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழையும்போது வரும் நாளை தான்ய சங்கராந்தி, தாம்பூல சங்கராந்தி, மனோரத சங்கராந்தி, அசோக சங்கராந்தி, ரூப சங்கராந்தி, தேஜ சங்கராந்தி, ஆயுள் சங்கராந்தி , சௌபாக்ய சங்கராந்தி, தனுஷ் சங்கராந்தி, மகர சங்கராந்தி, லவண சங்கராந்தி, போக சங்கராந்தி என்றே விஷ்வகர்மா கணித்து வந்தார். அதில் மகர சங்கராந்தியில் வரும் பலன் அபரிதமாக இருந்தது. பரமேஸ்வரன் தட்சிணாயனம் முழுவதும் புலிபோலக் கோபமுடன் இருந்து வருவார். உத்தராயனத்தில் அவர் அமைதிகொண்டு அனைவருக்கும் அள்ளித் தருவார்.
பிற்காலத்தில் பாரதப்போரில் பீஷ்மரும் இந்தப் புண்ணிய நாளில்தான் தன் உயிரைவிடக் காத்திருந்தார். கும்பமேளாவும் இந்தப் புண்ணிய நன்னாளில்தான் துவங்குகிறது.
ஆஹா! அந்தக் காலத்தில் மட்டும் அவர்கள் உறவு நிகழ்ந்திருந்தால் அவர்களுக்கு மும்மூர்த்திகளுக்கு இணையான மகன் பிறந்திருப்பான். அவன் சூரியனைவிடப் பலமடங்கு பெருமை வாய்ந்தவனாக இருந்திருப்பான். மும்மூர்த்திகளின் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்றையும் இவன் ஓருவனே செய்யும் அளவிற்கு உயர்ந்தவனாக இருந்திருப்பான். அவனுடைய தேஜஸ் மகாவிஷ்ணுவைவிடப் பிரகாசமாக இருந்திருக்கும். அவனுடைய மகோன்னதம் பரமேஸ்வரனைவிட அதிகமாக இருந்திருக்கும். அறிவு பிரும்மனைவிடப் பல மடங்கு சிறப்பாக இருந்திருக்கும். உண்மையில் அவன் மகாபிரும்மருத்ரனாக விளங்குவான்.
இந்தக் கனவை நிறைவேற்றவே விஷ்வகர்மா தன் வாழ்நாளெல்லாம் ஆவலோடு காத்திருந்தார். தன் மகள் ஸந்த்யாவைப் பொத்திப்பொத்தி வளர்த்தார். யாருடைய கண்களிலும்படாதவாறு அவளை வளர்த்து வந்தார். தங்கப் பொய்கையில் சூரியதேவன் தன் மகளுடன் காந்தர்வ விவாகம்போன்று கலந்து உறவாடியதில் அவருக்கு மனதில் சற்று வருத்தம் இருந்தாலும் அவர் அதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் சூரியனுக்குக் காந்த சிகிச்சை செய்வதுபற்றிய எண்ணத்திலேயே மூழ்கியிருந்தார். அதற்குக் காரணம் சூரியனின் குறைபாட்டை அவர் நன்கு அறிந்ததுதான். அதிகப் பிரகாசமும் வெப்பமும் அவனுள் குழந்தையை உண்டு பண்ணும் தாதுக்களை அழித்து விடுவதால் ஸந்த்யாவிற்குக் குழந்தை தரும் வீரியம் அவனிடம் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் அவனுக்கு உடனே நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துவிட்டு அவனது அதீத பராக்கிரமத்தைக் காந்த சிகிச்சை மூலம் குறைத்து அவனை ஸந்த்யாவிற்கு மணமுடித்தால் அவர் எதிர்பார்க்கின்றபடி வீர பராக்கிரம புத்திரன் கிடைப்பான் என்ற நம்பிக்கை விஷ்வகர்மாவுக்கு இருந்தது.
இன்று ஸந்த்யாவும் சூரியதேவனும் அந்தக் காந்தப்படுக்கை அறையும் அவர்கள் இருவருக்கும் உறவு நிகழ்ந்தது என்பதைத் தெளிவாகக் காட்டியது. அதுமட்டுமல்லாமல் காந்தசிகிச்சை முடிந்ததால் சூரியனின் வீரியமும் சரியான அளவில் இருக்கும். அதனால் அவர்களின் இந்த சம்பந்தமே முதல் குழந்தைக்கு வித்தாக அமைந்திருக்கும் என்பதையும் விஷ்வகர்மா முழுதும் உணர்ந்திருந்தார்.
ஆயினும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை.
இந்த உறவில் ஏற்பட்டுள்ள குழந்தையை அழித்துவிட்டால் பின்னால் அவர் எதிர்பார்க்கும் மகா பிரும்மருத்ரன் உதிப்பான் என்ற எண்ணம் தோன்றியது.
அதைச் செயல்படுத்தும் திட்டங்களை யோசிக்க ஆரம்பித்தார் விஷ்வகர்மா .
அதை உணர்ந்துகொண்ட மூன்று உயிர்கள் ஸந்த்யாவின் கருவில் அளவற்ற வேதனையில் துடித்தன.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
நாரதர் வாக்குச் சாதுர்யத்தில் அன்றைக்கு முழு வீச்சில் இருந்தார். எப்படியாவது அனைவரையும் குழப்பி காரியத்தை முடிக்கவேண்டும் என்ற தீவிரமான எண்ணமும் அவருக்கு இருந்தது உண்மை.
அதுமட்டுமல்லாமல் அவர் இதைப்போலப் பல பிராஜக்டுகளைப் பார்த்திருந்தவர். அதிலும் குறிப்பாக கிளையண்ட்டின் மனோபாவத்தைப்பற்றி நன்கு அறிந்தவர்.
இந்த கிளையண்ட்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதே தெரியாது. புது விஷயங்களும் புரியாது. வெகு காலமா ஒரு வேலையை ஒரே மாதிரி செய்து வந்ததால் அதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கும். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் அவர்களுக்குக் கிடையாது. மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டரை உபயோகிக்கிறார்களே என்று தாமும் அதை உபயோகிக்காவிட்டால் நம்மைப்பற்றி மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களே என்றுதான் அவர்கள் மாற்று வழிக்கு யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இதுநாள்வரை உபயோகித்த அதே வழியைத்தான் கம்ப்யூடரும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
எல்லாவற்றையும்விட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ளவேண்டும் என்பது மட்டும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அது தாங்கள்தான் எஜமானர்கள் என்பதில் வரும் ஒரு அசட்டு ஆணவம்.
அவர்களின் இந்த அறியாமைக்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்லிவிடமுடியாது. அவர்களிடம் பிராஜக்ட் செய்ய வரும் கம்பெனிகளும் முதலில் அவர்களை ஆஹா ஒஹோ என்று புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். நீங்க செய்றவேலையைச் சுலபமாக முடிக்கத்தான் எங்கள் சிஸ்டம்; மற்றபடி உங்க அறிவுக்கும் திறமைக்கும் எந்த சூப்பர் கம்ப்யூட்டரும் கிட்டேநிற்கமுடியாது என்று டெண்டர் வாங்குவதற்காகப் புகழ்ந்து தள்ளுவார்கள். அவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ பிராஜக்டுக்குக் கொடுக்க நிறையப் பணம் இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தவர்கள்.
முதலில் குழி வெட்டுவோம் ; அதில் கரும்பு தென்னை ஓலையைப் போட்டு மூடுவோம். காட்டுயானை வந்து அம்ஸமா கரும்பைத்தின்னக் காலை வைக்கும்; அப்புறம் என்ன ‘ம்ம் . மாட்டிக்குச்சு’ குழிக்குள்ளே விழவேண்டியதுதான். குழிக்குள்ளே விழுந்த யானையை வெளியே எடுக்கிறோம் அப்படின்னு வர்ரவங்கதான் இந்தத் திட்டமேலாண்மை, கணினி மேலாண்மை கும்பல்.
குழிக்குள் விழுந்த யானை வெளியே வரவேமுடியாது. இந்த மேலாண்மைக் கூட்டம் குழியைப் பெரிசா செஞ்சு யானை குழியிலேயே இருக்கறதுதான் முன்னேற்றத்துக்கான வழின்னு அவர்களை நம்பவைப்பாங்க. வெளியே வரமுடியாத யானைக்கு அதை நம்புவதைத்தவிர வேற வழியும் கிடையாது.
ஒரு காலகட்டத்தில அவங்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இருப்பதுதான் அறிவுப் பாதையின் அடுத்தகட்டம் என்றெல்லாம் அறிக்கை விடுவார்கள்.
இப்படியே தங்கள் பணியைத் தொடரலாம் என்று அவர்கள் இருக்கும்போது இந்த மேலாண்மைக் கூட்டம் பக்கத்திலேயே இன்னும் கொஞ்சம் ஆழமா அகலமா பெரிய குழியைத் தோண்ட ஆரம்பிப்பாங்க. ஏன்னா யானை இருந்தாலும் இறந்தாலும் சொளையா வர்ற ஆயிரம் பொன்னு அவங்களுக்குக் கிடைக்குமே!
இந்தத் தத்துவங்களையெல்லாம் நன்றாகப் படித்தவர் நாரதர். அதனால் முதலில் சித்திரகுப்தனைப் பிடித்து அவர் வலையில் விழவைத்தார். வேலைப் பளுவில் வெந்து சாம்பலாகிக்கொண்டிருந்த அவனுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. அவனை பூலோகம், சத்யலோகம், மகரலோகம் என்று பல இடங்களுக்குக் கம்பெனி செலவில் திட்ட ஆய்வு என்ற பெயரில் ஜாலி டூருக்கும் ஏற்பாடு செய்தார். சில இடங்களுக்கு சித்திரகுப்தன் குடும்பத்தோடும் சென்றுவந்தான். டூர் முடிந்து வந்த பின்னர்தான் அவன் எமன் மூலமாக சிவபெருமானிடம் இந்தத் திட்டத்திற்கான முதல் அனுமதியைப் பெற்றான்.
அதுதான் இப்போது ஆதார் வரைக்கும் வந்துள்ளது.
” ஆதார் என்பது இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய திட்டம். இதன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு தனி எண் தரப்படும். அந்த எண்ணோடு அந்தக் குடிமகனின் அடையாளக் குறிப்புகள் அனைத்தும் இணைந்திருக்கும். அந்த எண்ணைக் கொண்டு அவரது பெயர், பிறந்ததேதி, கைரேகை, புகைப்படம் விலாசம் அலைபேசி எண், மின்னஞ்சல் எல்லாம் அறியமுடியும்.
நம்முடைய திட்டப்படி உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் எமபுரிப்பட்டணம் திட்டத்திற்கான எமதார் என்ற எண்ணை சேர்க்கவேண்டும். இதைச் செய்துவிட்டோம் என்றால் நம்முடைய டேட்டா பேஸ் தயாராகிவிடும். அதன்பின் யார் என்னென்ன பாவம் புண்ணியம் செய்கிறார்கள் என்பது ஆட்டமேடிக்காகவே இந்த டேட்டா பேசில் ஏறிக்கொண்டே போகும். அதன்பின் எம கிங்கரர் உயிரைப் பறிக்கும்போது ஒரு பட்டனைத் தட்டினால் போதும் . அந்த நரனுடைய கணக்கு அனைத்தும் சப்ஜாடா வந்துவிடும். “
நாரதர் திரிலோக சஞ்சாரி என்பது அவர் பேசிய ஸ்லாங்கிலிருந்து நன்றாகப் புரிந்தது. அவரால் மெட்ராஸ் பாஷையும் பேசமுடியும், தேவ பாஷையும் பேசமுடியும் என்பதை சித்திரகுப்தன் புரிந்துகொண்டான்.
ஆதார் எமதார் என்று நாரதர் எவ்வளவு குட்டையை குழப்பினாலும் எமன் ஏமாறத் தயாராயில்லை.
“அதெல்லாம் சரி தேவமுனி! டேட்டா பேசில் இருக்கும் டேட்டாவிற்கு என்ன பாதுகாப்பு? என்று ஆணித்தரமாகக் கேட்டான் எமன்.
” அதற்கு நீங்கள் சற்றப் பொறுக்க வேண்டும். இதைப்பற்றி விளக்க ஆரக்கிளிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார் . இதோ அவரை அழைக்கிறேன்” என்று நாரதர் கூறவும் அதுவரை அந்த அறையில் அரைத் தூக்கத்திலிருந்த அவை உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகக் கவனிக்க ஆரம்பித்தனர்.
(தொடரும்)
அடைந்திடு சீசேம் ! – சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
1. கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2. இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
3. தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
4. அடைந்திடு சீசேம் !
அடைய வேண்டியது எது
என்று கேட்டுக்கொண்டே இரு.
அடையும் வரை
அடங்காதே !
அடை பட்டுக் கிடக்காதே.
தடைகளை உடைத்து வெளியே வா.
விற்போர் மற்போர் போல்
பற்போர் செய்.
அட என்னடா இது என
அலுத்துக் கொள்ளாதே.
ஆக வேண்டியதைக் கவனி.
அடைந்தே தீருவேன் என
அடை கரகோஷம் செய்.
அவியலும் வெல்லமும் சேர்ந்தால்
அடைக்கும் உண்டோ தடை.
ஒன்றாய் இரண்டாய்
கடகடவென அரைத்து
மொறுமொறு மொறுவென்று…..
ஆகா !
அடையின் சுவையே தனி.
அடே………ய் !
இன்னுமா புரியவில்லை —
இந்தக் கவிதை
கரமுர அடையைப் பற்றியது என்று !
“புரிதல் பிறந்தது”! மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்
எங்களின் எளிமையானவர்களுக்கான மருத்துவமனைக்கு வந்திருந்தார் அரசு மேலதிகாரி தியாகராஜன். பளிச்சென்ற உடைகள், எனினும், அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சாதரணமானவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். தியாகராஜனை வரிசையில்தான் அழைத்தோம்.
அவருடைய நண்பர் பரிந்துரைத்ததால் எங்களை அணுகினார். இரண்டு மாதத்திற்குமுன் அவருடைய மனைவி ஜெயலஷ்மி காலமாகி விட்டார். எதிர்பாராத திடீர் மரணம். இவர்கள் அன்யோன்யமான தம்பதிகள். மனைவியை இழந்ததினால் கண் கலங்கியபடி இருந்தார். தியாகராஜனின் நெருங்கிய நண்பர், டாக்டரிடம் ஆலோசனை செய்வது உதவும் என நம்பி, எங்களிடம் அனுப்பி வைத்தார்.
தியாகராஜன் 57 வயதானவர். கௌன்ஸலிங் ஆரம்பமானது. துயரத்தின் வழிமுறைகள் இப்படித்தான் என்று புரியவர, மறுபடி வேலைக்குப் போக ஆரம்பித்தார். அவருக்கு டில்லிக்கு மாற்றல் ஆனது, எங்கள் சிகிச்சையில் தடங்கல் ஏற்பட்டது. அவருடைய இளைய மகன் துஷ்யந்த், தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு பள்ளிக்கூடம் திறக்க விரும்பினான். உல்லாசப் பயணம் போனபோது துஷ்யந்த், அங்குள்ள மக்களின் நிலையைப் பார்த்ததினால் இப்படி ஒரு முடிவு எடுத்தான்.
அப்பாவும் -பிள்ளையும் ஒன்றாகப் புறப்பட்டார்கள். தியாகராஜன் டில்லி சென்று, அவருடைய நிறுவனத்தின் க்வாடர்ஸில் குடியேறினார். ஆறு மாதத்திற்குப் பின்பு திரும்பியதும் எங்களைப் பார்க்க வந்தார். மகள் கெளரி வெளிநாட்டில் எம்.ஐ.டீ. என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், அஸிஸ்டன்ட்ஷிப் தொகை கிடைத்து, படிக்கப் போவதாக பெருமையுடன் சந்தோஷமாகச் சொன்னார். அன்று வந்த அனைத்து நோயாளிகளுக்கும் இனிப்பு கொடுத்து, அவர்களில் ஐந்து பேருக்கு மருந்து வாங்கிக் கொடுத்தார்.
இரண்டே வாரத்தில், தியாகராஜன் மறுபடி இனிப்புடன் வந்தார். அவர் மூத்த மகன் பாரிவள்ளல் இயற்பியல் (Physics) மேதை. வெளி நாட்டுக்குப் பெரிய ப்ராஜெக்ட்க்கு பொறுப்பு ஏற்கப் போவதைத் தெரிவித்தார். இந்த முறை மகனையே இனிப்பைத் தரச்சொன்னார். மாத்திரை வாங்கித் தந்தார்கள்.
அதே வருட இறுதியில், தியாகராஜன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். வேலையை நீடித்துக்கொள்ளச் சொன்னார்கள், ஆனால் இவர் ஒப்புக்கொள்ளவில்லை.
ஓய்வு பெற்றவருக்கு, திடீரென நெற்றியில் வலி இருப்பதுபோல் தோன்றியது. விக்ஸ், அமிர்தாஞ்சன் தடவி, காபி அருந்தினால், வலி குறைவதுபோல் இருக்கிறது என்றார். காலை வேளையில் வலி இல்லை, மாலை ஆறு -ஏழு மணிக்கு வருவதைக் கவனித்தார். சில நாள் இல்லாமலும் இருந்தது. வீட்டிற்கு விருந்தாளி வந்தால், அவர்களைக் கவனிக்கையில் தலைவலி தானாகப் போய்விடுவதையும் கவனித்தார். தலைவலி தினம் வர ஆரம்பித்ததும் ‘என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தார். ஓரிரு வாரத்தில் தூக்கம் குறைந்தது. பசி எடுப்பதில்லை என்பதையும் கவனித்தார்.
தியாகராஜன் சிந்தனை தன்னுடைய மூன்று பிள்ளைகள்பற்றியே இருந்தது. அவர்களைப் பார்த்துப் பார்த்து வளர்த்ததால் என்று கூறினார். தன் மனைவி, பிள்ளைகளை இவரிடம் விட்டுச் சென்றதைப் பொறுப்பாகக் கருதினார். சரியாக இதைச் செய்கிறோமா என்பது அவரை மிகவும் வாட்டியது. மூவருக்கும் தங்களைப் பார்த்துக்கொள்ளும் வயதுதான். பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளாதது, பெற்றோரின் கடமையிலிருந்து விலகிவிட்டோமே என மனம் துடித்தது. குழந்தைகள் வெவ்வேறு தேசங்களில் இருப்பதால், தன் கடமையில் குறைவு உள்ளது என்று நினைத்தார்.
இதனால் பெரும்பாலும் சோகமாக இருந்தார். தன்னால் யாருக்கும் உபயோகம் இல்லை என்ற எண்ணம்தான் அதிகரித்தது. தியாகராஜன், தன்னை ஒரு தகப்பனாராகப் பார்த்தாரே தவிர, வேறு எப்படியும் தன்னைப் பார்த்துக்கொள்ளவில்லை.
இவ்வளவு ஆண்டுகளாக, சதாகாலமும், “இவள் என்ன படிக்கிறாள்?”, “அவன் ஏன் பாட்டை நிறுத்தினான்?” “இவன் ஏன் டென்னிஸ் விளையாடலை” என்ற சிந்தனைகள் கவ்வும். இவர்கள் வெளிநாடு போகும் வேளையிலும் மிக மும்முரமாகச் செயல்பட்டார்.
இப்போது ஒரு வெறிச்சோடிய நிலைபோல் தோன்ற, வீடும் காலியாகத் தோன்றியது. எதைப் பார்த்தாலும், அவர்கள்பற்றிய நினைவாகவே இருந்தது. எப்பொழுதும் நன்றாக உடை அணிபவர், இப்பொழுதெல்லாம் கசங்கிய உடைகள், சவரம் செய்யாத முகமாக, தோழர்களைச் சந்திக்காமல், நாள் இதழைப் படிக்காமல் இருந்தார்.
தியாகராஜன் தான் இப்படி என்றும் இருந்ததில்லையே என்று தன்மேல் வியந்தார். அவர் அக்காவோ, தலைவலியின் காரணம் தலையில் ஏதேனும் கட்டி இருக்கலாம் என்றார். இதற்கு ஒரு பதில் காண எங்களிடம் வந்தார்.
தியாகராஜன் தனக்குக் கட்டி இருக்காது என்று சொன்னார். எங்கள் டிபார்ட்மென்ட் சீஃப் டாக்டர் இதைக் கேட்டு மகிழ்ந்தார். முழுதாகப் பரிசோதனை செய்து, அவர் சொன்னதுபோல் கட்டி ஒன்றும் இல்லை என்றார். பளிச்சென்று, “இதற்கு மாத்திரை வேண்டாம். நீங்கள் முதல்முறை பார்த்தவரிடமே அனுப்பி வைக்கிறேன்”என்று என்னிடம் அனுப்பி வைத்தனர். நான் ஸைக்காட்ரிஸ்ட் ஸோஷியல் வர்கர் என்பதால் நோயாளியின் திறன்கள், வளங்கள், குடும்பத்தினர் என அறிந்துகொண்டு விடை காண்போம்.
தியாகராஜன், இவ்வளவு நாளாகச் சுறுசுறுப்பாக இருந்தவர், திடீரென எல்லாவிதத்திலும் அவர் வாழ்க்கை மாறியது. வாழ்க்கைத் துணைவி மறைவு, அது ஆன சில மாதங்களில் அவர்களின் கடைக்குட்டி வெளிநாடு பயணம், அதே நேரத்தில் இவரும் ஜாகை மாறினார். திரும்பி வந்த சில மாதங்களில் அவரின் பெண்ணும், மூத்த மகனும் சிறிய இடைவெளியில் வெளிநாடு சென்று விட்டார்கள். மூவரும் வாழ்க்கையில் அடுத்த கட்டம், மேல் கட்டத்திற்குத்தான் சென்றார்கள். தியாகராஜன், தன் தனிமை, பெற்றோர் என்ற அந்த முத்திரையைத் தேடுகிற நிலையில் இருந்தார்.
இதைப்பற்றியே எங்கள் செஷன் ஆரம்பமானது. ஒவ்வொருவர் தயாராகும் தினங்கள், இவர்-அவர்களின் பயணம், அங்கே இருப்பதற்கு வேண்டிய தேவைகளைப் பார்த்துச் செய்ததை, எந்த மாதத்திலிருந்து என்பதை வரிசைப்படுத்திக் குறித்து வந்தோம். முழுதாக விவரிப்பு ஹோம்வர்க்கானது. தியாகராஜன், இவ்வளவு மாறுதல்களை எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார். நினைவூட்டிக் கொண்டதில் மெதுவாக நிஜத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
தூக்கம் தடைப்பட்டதால், ரிலாக்ஸேஷன் எக்ஸர்ஸைஸ் ஆரம்பித்தேன். இத்துடன் “விஷுவல் இமேஜரீ” (visual imagery) அதாவது, பிடித்ததைக் கற்பனைசெய்து, உடலைத் தளர வைப்பது. இவை இரண்டும் செய்ய, மூன்றே நாட்களில் தூக்கம் சரியானது. உற்சாகம் கூடியதில் தியாகராஜனுக்கு தன்மேல் நம்பிக்கை ஆழமானது!
இருந்தும் தனக்கு என்னவாயிற்று என்பதைப்பற்றிய உறுத்தல் இருப்பதைத் தயக்கத்துடன் பகிர்ந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் இது மன உளைச்சல் என்று சொன்னதாகக் கூறினார்.
இது டிப்ரஷன் (Depression) / மன உளைச்சல் அல்ல என்றும் இவருக்கு நேர்ந்ததைப் புரியவைத்தேன். தன் பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் படிப்பு, வேலை, என்று சென்றுவிட்டார்கள். அன்யோன்யமான மனைவி இறந்தார், ஓய்வு பெற்று ரிடையர் ஆனார். சுறுசுறுப்பான வாழ்வில் இப்பொழுது “எம்ப்டி நெஸ்ட்” (காலியான கூடு) ஆனதால் “எம்ப்டீ நெஸ்ட் ஸின்ட்ரோம்” என்ற நிலையில் இருந்தார். ஒரு நிகழ்வு நடந்தபின் அதற்கு இணங்கி அடுத்த கட்டம் வரும்வரை வரும் தவிப்புகளை இதில் வர்ணிக்கலாம். பல கேள்விகள், சந்தேகங்கள் எழும். வியப்புகள் வாட்டும். அதனாலேயே சுதாரித்து கொள்ளும்வரை பல இன்னல்கள் நிலவும். இது ஒரு நிலை, டையக்னோஸிஸ் அல்லவே அல்ல என்று விளக்கினேன்.
தியாகராஜனுக்கும், பிள்ளைகளுக்கும் இஸ்திரி போடுபவர் வேலு. தினம் வந்து துணிகளை எடுத்து, இஸ்திரி போட்டு, கஞ்சி தேவையானால் அந்தச் சலவை செய்து, மாலையில் துணிகளை திருப்பித் தந்துவிடுவது பல வருடப் பழக்கம். இப்போது, பிள்ளைகள் எப்படிச் சமாளிப்பார்கள் என்ற கவலை தியாகராஜனுக்கு.
இதையே எடுத்துக்கொண்டு அடுத்த சில செஷன்களில் ஆராய்ந்தோம். தன் வளர்ப்பு விதத்தை விவரிக்க, தான் செய்து கொடுத்ததையும், மூவரும் தானாகவே செய்வதையும் ஒப்பிடத் தொடங்கினார் தியாகராஜன். தன் பிள்ளைகள், தங்கள் வேலைகளைத் தானே செய்துகொள்கிறார்கள் என்பது புரிய, அவருடைய கவலை மறைந்துவிட்டது.
இந்த புரிதல் எந்த வித ராக்கெட் ஸைன்ஸ் அல்ல. தியாகராஜன் தன்னை, பெற்றோர் என்ற வட்டத்துக்குள் வைத்தே தன்னுடைய ஆசை, நிராசை, தேவை எல்லாவற்றையும் அடக்கினார். தந்தை என்ற பொறுப்பில் மூழ்கிய தியாகராஜன், தன்னைத் தனி மனிதனாகப் பார்வை இடவில்லை. மூன்று பசங்களுக்காகப் பல வருடங்களாக யோசித்து, செய்து, இப்போது தனக்கு என்று யோசித்துச் செய்வது உதயமானது. இதைச் பழக்கிக்கொள்ளவேண்டி இருந்தது.
மற்றவர்களைப்பற்றி யோசித்து, அதற்கு ஏற்றவாறு செய்வது இவருக்கு இயல்பானது. இதை நாங்களும் கவனித்து வந்தோம். தியாகராஜன் எங்களைப் பார்க்க வரும் நாட்களில், அவர் முதலாக வந்து விடுவார். இருந்தாலும் நாங்கள் கடைசியாகத்தான் பார்ப்போம் என்பதும் இவருக்கு நன்றாகத் தெரியும். ஸெஷன்ஸ்களுக்கு அதிக நேர அவகாசம் தேவையாக இருப்பதால் கடைசியாகப் பார்ப்பது வழக்கம்.
இதையே அவரைக் குணமாக்கும் வழியாக செஷனில் யோசித்து முடிவெடுத்தோம். அவருக்கான அழைப்பு வரும்வரை ஏதாவது மற்றவருக்கு உதவி செய்யமுடியுமா என்பதை யோசித்து, பல வழிகளை வகுத்தோம். அவரும் செய்ய ஆரம்பித்தார்: மருந்து சீட்டை படித்துப் புரியவைப்பது, மருந்து தரும் இடத்தில் உதவுவது, நாளடைவில் இவர் ஃபைனான்ஸ் துறையைச் சேர்ந்தவராக இருந்ததால், மருத்துவமனை நிர்வாகியின் அனுமதியுடன், கணக்கு வழக்கையும், டோக்கன் தரும் விதத்தையும் சீர் செய்தார். என்னுடைய ஸெஷன்ஸ் நேரத்தைத்தவிர பல நாட்கள் உதவி செய்தார். இதுவே தன் சுபாவத்தை அவர் அறிய ஒரு வாய்ப்பானது.
அடுத்த கட்டமாக, உடற்பயிற்சிபற்றி சிந்தித்து, காலை வேளை நடைப் பயிற்சி என்று முடிவானது. இதில் நான் இட்ட ஒரு கட்டளை, வழியில் தினம் சந்திப்பவருக்கு வாழ்த்துக் கூறவேண்டும். இதனால் மெதுவாக ஒரு குழு சேர்ந்தது. அடுத்த கட்டமாக, தியாகராஜன் அந்தக் குழுவில் யாருக்கு என்ன தேவை என்று புரிந்து, தன்னால் என்ன முடியுமோ அதைச் செய்வது என்று ஆரம்பமானது. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை தொடங்கியது, கறிகாய் வாங்குவது, மருந்து மாத்திரைகள் வாங்க, போஸ்ட் ஆபீஸ், பீச் போக என்று போக வர அவர்களுக்குள் பரிச்சயம் அதிகரித்தது.
காலைப்பொழுதை உபயோகமாகச் செலவழிக்க விருப்பப்பட்டார். இவரிடம் இருந்த மற்ற திறன்களை பட்டியலிட்டோம். வீட்டுப் பக்கத்தில் உள்ள சிறுவர்கள் பள்ளியில், குழந்தைகளுக்காகக் கதை சொல்லுவது, மூன்று நாட்களுக்கு அரசினர் பள்ளியில் கணக்கு, ஆங்கில பாடங்களின் சந்தேகம் தீர்ப்பது என்றும், வேலை வாய்ப்புபற்றிய ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டார். மற்ற நாட்களில் தன் நண்பர்களுடன் பேங்க், போஸ்ட் ஆபீஸ் செல்லும்பொழுது பல பேர் கஷ்டப்படுவதைப் பார்த்ததால் தியாகராஜன் மற்ற நாட்களில் அங்கு செல்வது என்று முடிவெடுத்தார். அவர்கள் நண்பர்கள் குழுவிலிருந்து சிலர் சேர்ந்துசென்று அரை நாளைக்கு உதவி செய்தார்கள்
இவை அனைத்தும் ஒரு உத்வேகத்தைத் தந்தது! புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினார். ஃப்ரெஞ்ச் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அப்பொழுது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையான்ஸ் ஃப்ரான்ஸெயில்மட்டும் இந்த வகுப்புகள் இருந்தன. காரை ஓட்டிக்கொண்டு போய்வந்தார். சனிக்கிழமை கர்நாடக வாய்பாட்டு கற்றுக்கொண்டார்.
முன்பைவிட சுறுசுறுப்பாக இருந்தார். தலைவலி இல்லை. பசி எடுத்தது ஆனால் சுவையாக சமைக்கத் தெரியாதது இடையூறாக இருந்தது. இதற்கு அவர் நடை குழுவினரான ரமாமணி, விஜயாவிடமும் சமைக்கும் விதமும், கூடவே மீனாட்சி அம்மாளின் புத்தக துணையுடன் சமையல் செய்தார். குடும்பத்தினருக்குப் பிடித்த வகைகளைச் செய்துபார்த்தார். சமைப்பதும் கலை என்பதால் மனதுக்கு ஆறுதலானது.
தியாகராஜன் தன் நினைவுகளைப் பகிரும்போது கண்ணீர் அருவியாகக் கொட்டியது. இவரின் குடும்பம் மிக நெருக்கமானதாக இருப்பதால் நேர்ந்தது. பசங்களுடன் வாராவாரம் பேசிவர இது குறைந்தது. இவர்களின் பாசத்தினாலும் பாரிவள்ளல், துஷ்யந்த், கெளரி என்று ஒவ்வொரு வாரமும் இவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியின் தொலைபேசியில் அழைத்து விவரங்களைக் கேட்டுக்கொண்டார்கள்.
தியாகராஜன், தன் வெறுமையைச் சமாளிக்கும் விதத்தை, தான் தினம் செய்துவருவதை அவர்களுடன் கடிதத் தொடர் செய்யப் பரிந்துரைத்தேன். அவர்களுக்கும் அப்பாவின் நிலை தெரியவரும், பகிர்ந்து கொள்ள மனம் லேசாகும், பந்தம் அதிகரிக்கும். இதைச் செய்துவர, என்னுடைய செஷனை மெதுவாக முடித்துக்கொண்டேன். தியாகராஜன், தன்னுடைய தனித்துவத்தை உபயோகப்படுத்தும் தருணமாக இந்தக் காலகட்டம் அமைந்தது. அவர் உள்ளத்தில் இருந்த பாசத்தைச் செயல் மூலமாகப் பலபேருக்குக் காட்டினார்.
சரித்திரம் பேசுகிறது ! –யாரோ
காளிதாசன்-ரகுவம்சம்4
‘குவிகம் ஆசிரியர்’ எச்சரிக்கிறார்:
“இனியும் சரித்திரம் நகரவில்லை என்றால் …” என்று சொல்லாமல் மிரட்டுகிறார்..
சரி..ரகுவம்சத்தை இப்பொழுது முடித்துவிடுவோம்.
காளிதாசனையும் விட்டு நகர்வோம்…
இது சத்தியம்…
(இந்த பத்திரிகை ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருக்கே … தாங்க முடியலப்பா)
சரி…நம் கதையை எங்கே விட்டோம்?
முன்கதை:
ரகுவம்சத்தில் – திலீபன் , ரகு, என்று தொடங்கி அயன்வரை கதை படித்துக்கொண்டிருக்கிறோம்…
அயன் தன் மனைவி இந்துமதியுடன் பூங்காவில் மகிழ்ந்து இருக்கும்போது… வானத்தில் இருந்து விழுந்த மாலை ஒன்று… இந்துமதியின் மார்பில் விழ… அவள் மரணமடைகிறாள். இனித் தொடர்ந்து கதைக்குச் செல்வோம்.
அயனும் மூர்ச்சை அடைந்து விழுந்தான். பிறகு கண் விழித்தான். இறந்துகிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திடுக்கிட்டு, துக்கம் தாளாமல் அழுது புலம்பினான்.
‘தேவி, என்னே விதி இது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ …உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே……பிரியமானவளே ….. நாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே… அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்… தேவி….உயிர் பிழைத்து எழுந்துவந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம் மீது உன்னை எரிக்கப் போடப்படும் கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?’ என்றெல்லாம் கூறிக்கூறிக் கதறினான்.
இந்த இடத்தில் நாம் சற்று நின்று, காளிதாசனின் கவிதையைக் கேட்போம்:
அந்த தெய்வ மாலை, தேனும் நறுமணமும் திகழும் சோலைக் கொடிகளில் மலர்ந்த வசந்தகாலப் பூக்களின் அழகை நிராகரித்து, மன்னனது மனைவியின் செழித்த முலைகளின் நுனியில் சென்று பொருந்தியது.
எழிலுற எழுந்த முலைகளுக்கு ஒரு கணம் முன்பு கிடைத்த தோழியான அவளைப் (மாலையை) பார்த்து தன்வசமிழந்தாள் இந்துமதி. ராகு கவர்ந்த சந்திரன்போல கண்மூடினாள்.
உணர்வு நீங்கிய உடலுடன் கீழே விழுகின்ற அவள், கணவனையும் வீழ்த்தினாள். கீழே சிந்தும் எண்ணெய்த் துளியுடன்கூட, விளக்கின் சுடரும் மண்ணில் வீழுமன்றோ? அயன் மயங்கி விழுந்தான்.
தந்தி தளர்ந்து அறுந்த வீணையைப்போலக் கிடந்த அழகியை, அளவற்ற அன்புகொண்ட அவன் எடுத்து அவள் பழகிய மடியில் வைத்துக்கொண்டான்.
அவன் தனக்குரிய இயல்பான தீரத்தையும்விட்டுக் கண்ணீரினால் தழுதழுத்த குரலில், புலம்பலானான். நன்கு காய்ச்சிய இரும்பும் மென்மையை அடைகிறது. எனின், மனிதரைப்பற்றி என்ன சொல்வது?
மலர்களும் கூட உடல்மீது விழுந்து உயிர் போகக் கூடுமோ? அந்தோ, அழிக்கத் துணிந்த விதிக்கு எப்பொருள்தான் கருவியாகாது?
பனித்துளி வீழ்ந்ததும் தாமரை அழிகிறது. அந்தகன் மெல்லியலை மெல்லியலாலேயே கொல்லத் துணிந்தானோ?
இந்த மாலை உயிரைக் கவரும் இயல்புடையதானால், இதனை மார்பில் சூடிக் கொண்டும் என்னை ஏன் கொல்லவில்லை? தெய்வத்தின் இச்சையால், சிலபோது விஷமும் அமுதமாகும். அமுதமும் விஷமாகுமோ?
என்ன துர்ப்பாக்கியம்! இம்மாலையை தெய்வம் இடியாகக் கற்பித்து விட்டது. இந்த இடியால் மரம் வீழவில்லை, அதைச் சுற்றியிருந்த கொடிமட்டும் அழிந்து விட்டதே.
அழகி, வண்டுகள்போன்று நிறமுடைய, மலர்கள் சூடிய, உன் சுருண்ட முன்னெற்றிக் கூந்தலைக் காற்று அசைக்கிறதே. நீ உயிரோடு எழுவாய் என்று எனக்கு அது நம்பிக்கை ஊட்டுகிறதோ?
அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்றுவிட்டது. கலைந்த கூந்தலோடு, பேச்சடங்கிய உன் முகம்!
உனது முதல் அந்தரங்கத் தோழி இந்த மேகலை – அழகிய நடையழிந்து, ஒலி இழந்து போயிற்று. அதுவும் உன்னுடனே சோகத்தால் இறந்துவிட்டதோ?
நீ இந்த அசோகமரத்தை உன் மெல்லியகால்களால் உதைத்தாய். இது பூக்கப் போகிறது. உன் கூந்தலுக்கு அணிகலனாக வேண்டிய அம்மலரை, ஐயோ, எப்படி உனக்கு தர்ப்பண புஷ்பமாகத் தருவேன்?
நீ எனக்கு மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்கையில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத்தான் அபகரிக்கவில்லை?
நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே! என் கண்ணீரைக் கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?
வர்ணனையில் மயங்கிக் கிடக்கும் நாம் விழித்தெழுந்து.. கதைக்குச் செல்வோம்.
அவனை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறியபின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள்.
ஒரு பிளாஷ்பேக் விரிகிறது…
மறுபடியும்… இந்திரனுடைய ‘விக்டிம்’ கதை!
பதவி மோகம் … அது இந்திரனை ஒரு சீரியல் கில்லர் லெவெலுக்குக் கொண்டுசெல்கிறது.
“மன்னா எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்குச் சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்துபோன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக இருந்தாள். அவள் இந்திரனின் சபையில் ஒரு அப்ஸரஸ் ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம்கொண்டு அவளை மானிடப் பெண்ணாகப் பிறவி எடுத்து பூமியிலேயே சென்று வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு , தான் வேண்டும் என்றே எந்தத் தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் அவள் மீது இரக்கப்பட்டு ‘அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்துகொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின்மீது கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திரலோகத்துக்குச் சென்றுவிடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுறவேண்டும் என்று அவளுக்குத் தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.”
வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள், “மன்னா இதனால்தான் பூர்வ ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்குத் திரும்பச் சென்றுவிட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வரமாட்டாள். ஆகவே மனதைத் தேற்றிக்கொண்டு உன் கடமையை வழுவாமல் செய்து வா” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
ஆனாலும் அயனினால் இந்துமதியை மறக்க முடியவில்லை.
மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே உருமாறிக் கொண்டுஇருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரை காத்திருந்தான். தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவனை அரியணையில் அமர்த்திவிட்டு ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்துவிட்டுப் பல காலம் உபவாசம் இருந்து…
ஒருநாள்… சரயு நதிக்கரைக்குச் சென்று சரயு நதியில் விழுந்து உயிரைத் துறந்துகொண்டான்.
அது கிட்டத்தட்டத் தற்கொலையாகும்.
பின்னாளில் இராமபிரான் இந்த வம்சத்தில் பிறந்து தனது முடிவைத் தேடும் சமயம்…
இதேபோல் சரயு நதியில் விழுந்து ‘ஜல சமாதி’ கொள்கிறார்!
அயனுக்குப் பின்…
தசரதன் கதை…
அதன் பிறகு…
ராமன் கதை…
இவை இரண்டும் வாசகர்கள் அறிந்ததே!
ஆதலால் அதைக் கூறாது தொடர்வோம்!
‘அப்பாடா…’ என்று வாசகர்கள் விடும் பெருமூச்சின் வெப்பம் என்னைத் தாக்குகிறது!
அவசரப்படாதீர்கள்..அவ்வளவு சுலபமாக என்னிடமிருந்து தப்ப முடியுமா?
ராமனுக்குப் பின் நடந்ததை சொல்லியே ஆகவேண்டும்..
சுருக்கமாகச் சொல்லி முடிப்போம்.
(தொடரும்)
நடிகையர் திலகம் – கோமல் தாரிணி
தெலுங்கில் மஹாநடி , தமிழில் நடிகையர் திலகம்.
இப்படியும் ஒரு bio pic எடுக்கமுடியுமா?
கொம்மாரெட்டி சாவித்திரியாக வளர்ந்து , புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெமினி கணேசனைக் காதலித்து திருமணம் புரிந்து சாவித்திரி கணேசனாகமாறி தென்னிந்திய திரைப்படத்துறையில் ஒரு கதாநாயகனுக்கு இணையாகப் பேசப்பட்ட, மதிக்கப்பட்ட மாபெரும் நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
சித்தார்த் சிவசாமியின் தொய்வில்லாத திரைக்கதையில், நாக் அஸ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷின் அர்ப்பணிப்பில், துல்கரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் ஒரு அற்புதமான திரைப்படம், ரசிகர்களுக்குக் கோடை விருந்தாகக் கிடைத்திருக்கிறது.
மனிதர்களின் உண்மை வாழ்க்கையை சொல்லும்போது போரடிக்காமல் விறுவிறுப்பாக சொல்வது ஒரு தனிக்கலை. அந்த விதத்தில் பத்திரிகையாளர்கள் (சமந்தா, விஜய் தேவரகொண்டா) என்கிற கதை சொல்லிகள் மூலம் இக்கதையை சுவாரசியமாக நகர்த்தியிருக்கும் புத்திசாலித்தனமான உத்திக்குத் திரைக்கதை ஆசிரியருக்கும், இயக்குனருக்கும் மிகப்பெரிய பாராட்டு. (விருதுகள் காத்திருக்கிறது).
ஒரு வெகுளியான கிராமத்துச் சுட்டிப் பெண்ணாக அறிமுகமாகும் நாயகி, ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகையாக வெற்றிக்கொடி நாட்டி, திருமண உறவில் ஏற்படும் மன அழுத்தத்தினால் , குடி போதைக்கு அடிமையாகிக் கோமா நிலைக்குச் செல்கின்ற முடிவில், நாம் மிகப்பெரிய மனபாரத்துடன் வெளியே வருகிறோம்.
சாவித்திரியின் வாழ்க்கை நமக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் , இத்திரைப்படம் அவரின் பல மென்மையான உணர்வுகளை வெளிக்கொணர்ந்து, அவரின் உண்மையான கதா பாத்திரத்தை நம் மனதில் ஆழமாக பதிக்கிறது.
இது உண்மைக்கதை என்றாலும், ஒரு பெண் எத்துறையில் இருந்தாலும் தனக்கு மிஞ்சிய அவளின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆணின் ஈகோவைப் பட்டவர்த்தனமாக்கும் ஒரு கதை.
என்னதான் மிகச்சிறந்த நடிகையாகத் திரைத்துறையில் வெற்றி கொண்டாலும், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உற்சாகமடையும் ஒரு குழந்தை மனதுடன், யாரையும் சுலபமாக நம்பிவிடும், அதிகம் உலக நடப்புகள் தெரியாத , பிறர் துன்பம் கண்டு இளகும் பெண்ணாக, தான் காதலித்த ஆண்மகனின்மீது கொண்ட உண்மையான காதலின் பொய்த்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சராசரி வெகுளிப்பெண்ணாக வாழ்ந்தவரின் இறுதி வாழ்க்கை நம்மை நிலை குலையச் செய்கிறது.
இப்படிப்பட்ட ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு , தன் பாதையில் வெற்றி நடை போட்ட பெண்கள் தான் அதிகம். இவரும் அப்படிச் செய்திருக்கலாமே என்கிற ஆதங்கம் எழாமலில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சராசரிக் கதை, திரைப்படமாக ஆகியிருக்காது என்பதும் புரிகிறது.
திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்க்கத்தவற விடக்கூடாத ஒரு திரைக்காவியம்.
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்…புலியூர் அனந்து
வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா?
வேலையில் சேர்ந்தபிறகு நடந்ததைச் சொல்வதற்குமுன் நான் வேலையில் சேர்ந்த கதையைச் சொல்கிறேன்.
நான் நேர்முகத் தேர்வுக்குப் போன நாள் இந்த என் எஸ் கிருஷ்ணன் பாட்டுதான் மனதில் சுற்றிச்சுற்றி வந்தது. அவர் சொன்ன நிலை அந்த 1939 ஆம் வருஷத்திற்குப் பொருத்தமாக இருந்தது. நான் வேலைக்குப் போகும்போது நிலைமை வேறு. நான் வேலைக்குச் சேர்ந்த கதையை நம்புவது கடினம்.
ஏறக்குறைய எல்லாக் குடும்பங்களிலும் வேலை இல்லாத இளைஞர்கள் இருந்தார்கள். படிப்புக்கேற்ற வேலைதான் வேண்டும் என்று வீம்பு பிடிப்பது குறைந்திருந்தது. நானோ வெறும் எஸ்.எஸ்.எல்.ஸி. தட்டச்சுத் திறமையும் ஒன்றும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. லோயர் எனப்படும் முதல் டெஸ்டிற்குக்கூட அதுவரை தகுதி அடையவில்லை. எப்போதோ அப்பா சொன்ன ஒரு நண்பரிடம் நான் எழுதிக் கொடுத்த விண்ணப்பம் (பெறுனர் என்னும் இடம் காலியாக விடப்பட்ட நான்கைந்து விண்ணப்பங்கள் ) ஒன்றிற்கு ஒரு நேர்முகத் தேர்வு கடிதம் வந்தது.
எல்லா சர்டிபிகேட்டுகளுடன் அவற்றின் நகல் ஒன்றும் கொண்டுவரச் சொல்லியிருந்தார்கள். அப்போதெல்லாம் வழக்கத்தில் இருந்ததைப்போல கெஜட்டட் ஆபீசர் அட்டெஸ்டேஷன் தேவையில்லை என்றும் சொல்லியிருந்தார்கள்.
ஒரு வேலை மிச்சம். எங்கள் ஊரில் பச்சை மசி கையெழுத்திட ஒரு அதிகாரிதான் இருந்தார். கையெழுத்து வாங்க வீட்டிற்குத்தான் செல்லவேண்டும் . ஆனால் ரப்பர் ஸ்டாம்ப் வீட்டில் வைத்திருக்க மாட்டார். மறுநாள் ஆபீசில் அவரது உதவியாளரிடம் கொடுத்தால், அந்த அதிகாரிக்குத் தெரிவித்துவிட்டு முத்திரையைக் குத்தி எடுத்துவந்து கொடுப்பார்.
பஸ் பிடித்து மாவட்டத் தலைநகர் போய் அந்த அலுவலகத்திற்கு நேரத்திலேயே போய்ச்சேர்ந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. அந்த நிறுவனம் அரசாங்கமும் இல்லாத தனியாரும் இல்லாத ஒரு நிறுவனம். நான் சென்ற அலுவலகத்தில் அதிகபட்சம் இருபது பேர் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். என்னைப்போல இன்னும் ஒரே ஒரு விண்ணப்பதாரர்தான் வந்திருந்தார்.
முதல் டேபிளில் இருந்தவரிடம் கடிதத்தைக் காட்டினேன். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ‘டீ கே ஆர்.. “ என்று சத்தமாகக் கூப்பிட்டார். இன்னொருவர் அவசர அவசமாக வந்து என்னையும் மற்றொரு விண்ணப்பதாரரையும் வேறு அறைக்குக் கூட்டிப் போனார். அங்கிருந்த இன்னொரு நபர் சர்டிபிகேட்டுகளையும் அதன் நகல்களையும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் எங்கள் இருவரிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.
சற்று நேரம் வெளியில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். ஊரும் பெயரும் பரஸ்பரம் தெரிந்து கொண்டதைத்தவிர அதிகம் பேசிக்கொள்ளவில்லை. என்ன கேட்பார்கள், என்ன பதில் சொல்லவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வரச் சொன்ன நேரம் பதினொரு மணி. அங்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆகியிருந்தது. அந்த டீ.கே.ஆர் வெளியில் வந்து பக்கத்தில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அரைமணியில் திரும்பி வாருங்கள் என்று சொன்னார். நானும் கேசவனும் (அந்த இன்னொரு விண்ணப்பதாரர்) சேர்ந்துதான் போனோம், ஏதோ அரைகுறையாகச் சாப்பிட்டோம். உடனே திரும்பியும் வந்துவிட்டோம்.
இருவரையும் சேர்த்தே கூப்பிட்டார்கள். நாங்கள் போன அந்த அறை ஒரு விசாலமான அறை. ஒரே ஒரு பெரிய மேஜைதான் இருந்தது. அது அந்தத் தலைமை அதிகாரியின் மேஜை. இருவரையும் உட்காரச் சொன்னார்கள். மூன்று நாற்காலிகளில் ஒன்றில் சர்டிபிகேட் வாங்கிக்கொண்ட அந்த அலுவலர் அமர்ந்திருந்தார்.
“உங்களில் யார் கேசவன்?” என்று அவர்தான் கேட்டார். நான்தான் என்று சொன்ன கேசவனிடம் ஒரு கட்டுக் காகிதங்களையும் அதேபோல் இன்னொரு கட்டுக் காகிதங்களை என்னிடமும் கொடுத்தார். எங்கெல்லாம் அப்ளிகண்ட் என்று உள்ளதோ அங்கெல்லாம் கையெழுத்திடச் சொன்னார். நாங்களும் அவ்வாறே செய்தோம். எல்லாவற்றையும் திரும்ப வாங்கிக்கொண்டு சரி பார்த்துவிட்டுத் தலைமை அதிகாரியைப் பார்த்தார். அவர் சரி என்பதுபோல் தலையை அசைத்தார்.
ஒரே போன்ற கடிதத்தின் இரு நகல்களை இருவரிடமும் கொடுத்து, ஒன்றில் பெற்றுக்கொண்டேன் என்று எழுதிக் கையெழுத்திடச் சொன்னார். அவரவர் பெயரில் இருந்த அவற்றின் ஒரிஜினல் கடிதத்தைக் கையில் கொடுத்து “திங்கட்கிழமை அன்று கடிதத்திலுள்ள ஊரில் உள்ள அலுவலகத்தில் வேலைக்குச் சேருங்கள். நீங்கள் போகலாம்.” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
ஒரே ஆச்சரியம். கேசவனாவது ‘நான்தான்’ என்று ஒரு வார்த்தை சொன்னான். நான் அந்த அலுவலகத்தில் ஒரு வார்த்தை யாரிடமும் சொல்லவில்லை. ஊர், பெயர் பரிமாறிக்கொண்டதுகூட வெளியில் உட்கார்ந்திருந்தபோதுதான்.
ஊருக்குத் திரும்பும்போது பஸ்ஸில் அந்தக் கடிதத்தைப் படித்தேன். என்ன வேலை, அடிப்படைச் சம்பளம், எந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று எல்லாம் அந்தக் கடிதத்தில் இருந்தது . அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு மொத்த சம்பளம் எவ்வளவு வரும் என்று புரியவில்லை. வேலைக்குச் சேரவேண்டிய ஊர் எங்கள் மாவட்டத்திலேயே இருந்தது. ஆனால் எனது ஊரிலிருந்து தினமும் போய்வர முடியாது. எங்கே தங்குவது? வேலை செய்யவேண்டிய ஊரிலேயே தங்கமுடியுமா? பக்கத்து டவுனிலேயா? கட்டாயம் பஸ் கிடைக்கும் மாவட்டத் தலைநகரிலேயா? கேசவனுக்கு மாவட்டத் தலைநகர் அருகிலேயே இருந்த ஒரு புறநகர் அலுவலகம் கொடுத்திருந்தார்கள்.
ஊர் போய் சேரும்போது நான்கு மணிதான் ஆகியிருந்தது . நேரே அப்பாவின் அலுவலகம் சென்றேன். விஷயம் தெரிந்து மிகவும் சந்தோஷப்பட்டார். பர்மிஷன் சொல்லிவிட்டு என்னுடனேயே புறப்பட்டுவிட்டார். இன்டர்வியூவில் ஒரு கேள்வியும் கேட்கவில்லை என்றெல்லாம் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொன்னார். (அதற்குப் பிறகு இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. இதைத் தெரிந்துகொள்ளும் முதல் ஆள் நீங்கள்தான். அதுவும் இப்போது சொல்வதில் ஏதும் கெட்டுப் போய்விடாது என்பதால்தான்.)
திங்கட்கிழமை இராகு காலத்திற்கு முன்பே கிளம்பி பஸ்பிடித்து மாவட்டத் தலைநகர் போய் பஸ்மாறி அந்த ஊரை அடைந்தேன். தினம் எப்படிப் போவது எங்கே தங்குவது என்றெல்லாம் முடிவு செய்யவேண்டும்.
அலுவலகத்தில் மொத்தமே ஆறு பேர்தான் இருந்தார்கள். நான் ஏழாவது. அதில் ஒரு தலை, மற்றவர் எல்லாம் வால்கள்தான். இன்சார்ஜ் பெயர் சேஷையன். வயதானவர். சில ஆண்டுகளில் ஓய்வுபெறப் போகிறவர். மற்றவர்கள் பல வயதினராக இருந்தார்கள். அதில் மிகவும் இளைஞன் என்னைப் பார்த்த பார்வையிலேயே ஒரு கடுப்பு தெரிந்தது. என்னென்ன வேலை என்பதை சொல்லிக் கொடுத்தவர் சகஜமாகத்தான் இருந்தார். முதல் நாள் பொழுது கழிந்தது.
அதிர்ஷ்ட வசமாகத் தங்கவும் சாப்பிடவும் உள்ளூரிலேயே வசதி இருந்தது. அன்று இரவிலிருந்தே தங்குவதற்கும் மறுநாள் முதல் சாப்பிடுவதற்கும் ஏற்பாடாகிவிட்டது
வேலைக்குச் சேர்ந்துவிட்டு மாலையில் மாவட்டத் தலைநகர் பேருந்து நிலையம் அருகே ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருந்தார் அப்பா. நான் வேலைக்குச் செல்லும் ஊரில் வசதி இல்லாவிட்டால் வேறு ஏற்பாடு செய்ய வேண்டுமே, அதற்குத்தான் இந்தத் திட்டம். மாற்று ஏற்பாடு தேவைப்படவில்லை. என் பஸ் கிளம்பும்வரை காத்திருந்துவிட்டு அப்பா தனது பஸ் பிடிக்கப்போனார்.
பழகின ஊர், பழகின மக்கள், சொந்தம் எல்லாவற்றையும் விட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் தற்காலிகம் தானே! வாரக் கடைசியில் வீட்டிற்குப் போய்விட்டு வரலாமே. எனக்கு அப்போதிருந்த உணர்வு, பிரிவின் ஏக்கமா, புது அனுபவ எதிர்பார்ப்பா, சம்பாதிக்கத் தொடங்கும் உற்சாகமா? எல்லாம் சேர்ந்த குழப்பமா? எதையும் சாதிக்காவிட்டாலும் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருந்தது.
‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறார்’ என்று சொல்லப்படுவதுபோல நானும் வேலைக்குப் போனேன்.
.
கலன் – தீபா இளங்கோ
யாரிடமேனும் இருக்கிறதா?
கலன்…
ஆயுதமென்றும் அறியப்படும்.
ஆக்கவும், காக்கவும் அழிக்கவும் ;
தாக்கவும், தற்காக்கவும்,தடுக்கவும் – ஆயுதம்
சேதப்படுத்தவும்
வேதனையளிக்கவும்
அச்சமூட்டவும்
ஆபத்தில் காக்கவும்-ஆயுதம்
ஆயுதங்கள் அபாயகரமானவை..
அதிலும் அணுஆயுதம்
காலனைப் பரிசளித்து
காலத்தையும் வென்று
அழிவை நிலைநாட்டும்..
வேல்,வாள்,ஈட்டி,அம்பு
கத்தி,சுத்தி,கோடாரி, கம்பு,
ஆணி முதல் ஏவுகணை வரை
ஆயுதமென்றே அறிவீர்….
தேடித்தேடி ஓய்ந்து போனேன்.
எங்கும் எழுதிவைக்கப்படவில்லை..
யாரும் முன்பே சொல்லவுமில்லை…
அனுபவித்தே அறிய
அனுக்கிரகிக்கப்பட்டவர்கள் நாம்…
சிறுகச்சிறுக வதைத்து,
நினைவிலும் கூட எரித்து,
கணந்தோறும் மரித்து – விழ
வைக்க வல்லதோர் பிரமாஸ்திரம் உண்டு..
எப்பட்டியலிலும் காணாத…
“நாக்கு என்றறியப்படும் நாவு”
என்பதான ஆயுதம்.
நாவு துளைக்கா கேடயம் ஒன்று
யாரிடமேனும் இருக்கிறதா?
பக்தி வெள்ளம் – மகானுபாவர்
ஒரு பிராமண ஐயர் ,,,தினமும் வீதி வழியாகக் கிருஷ்ண பஜகோவிந்தம் 11வது பாவத்தைப் பாடியபடியே வீடு வீடாகச் சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர்.
ஒரு நாள் இப்படி வீதி வழியாக அவர் பாடிக்கொண்டு வரும்போது 10 வயது சிறுமி ஒருத்தி அந்த ஐயரை அழைத்தாள்,,,”சுவாமி என் வீட்டுக்கு வருகிறீர்களா உங்களுக்கு அன்னமிடக் காத்திருக்கிறேன்” என்றாள்.
ஐயர் அந்த சிறுமியை உற்று பார்த்தார்.
அவள் கிழிந்த ஆடையை நேர்த்தியாய் பெயர்த்து அழகாக உடுத்தி இருந்தாள். ஏழ்மையிலும் பால் மனம்கொண்ட அழகான முகம்.
ஐயர் –“யாரம்மா நீ ! என்னைக் குறிப்பாக உன் வீட்டிற்கு அழைத்து அன்னமிடக் காரணம் என்ன என்று சொல்லம்மா” என்று அன்புடன் கேட்டார் ,
சிறுமி –“சுவாமி நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனைப் பாடல்களை ரசித்துக் கேட்பேன், இப்படி அனுதினமும் கேட்டுக்கேட்டு எனக்குத் தாங்கள் பாடிய முழுப்பாடலும் மனப்பாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.
அவளது பேச்சில் இருக்கும் அன்புக்குக் கட்டுப்பட்டு அந்தச் சிறுமியின் இல்லத்திற்குச் சென்றார் ஐயர், (சின்ன குடிசை,மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்கள்.
அந்தச் சிறுமியின் தாயும் தந்தையும் நெசவாளர்கள். அந்த நேரம் அவர்கள் சந்தைக்குச் சென்றிருந்தார்கள் .
இந்தச் சிறுமியும் தனக்கு ஒரு சிறிய நெசவு இயந்திரத்தை வைத்திருந்தாள்).
ஐயர் சிறுமியின் இல்லத்திற்குள் நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்துக் கழுவிப் பூக்களால் பூஜைசெய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்தச் சிறுமி ,
அவளது அன்பான விருந்தோம்பலில் ஆனந்தமாக உணவருந்திய ஐயர்,
பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து ஆங்காங்கே கிடப்பதைப் பார்த்து ,,”அம்மா ,,,சுத்தமான இந்த வீட்டில் எதற்கு இந்தச் சிக்கலான நூல்களை எல்லாம் குப்பைபோல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்க,
சிறுமி –“ஐயோ சாமி அது குப்பை இல்லை! எல்லாம் கண்ணன் தன் பிஞ்சுக் கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .
ஐயர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?
சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையைப் பாடிக்கொண்டே ராட்டினம் சுற்றுவேன். அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான். நான் சொல்லச்சொல்லக் கேட்காமல் என் பாட்டை ரசித்தபடியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான், பின் மறைந்து விடுவான்”.
இதைக் கேட்டதும் ஐயர் திகைத்து, ‘இத்தனை நாள் நான் பாடிய பாடலுக்கு வராத கண்ணன் ,,,,நான் பாடிக் கேட்டு மனப்பாடம் செய்த இந்த சிறுமி பாடியா வந்திருப்பான் ,,,,,சரி பார்த்து விடுவோம் ,அதையும் ‘
ஐயர் அந்த சிறுமியைப் பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடிக்கொண்டே ராட்டினம் சுற்று,கண்ணன் வருகிறானா என்று பார்க்கிறேன்” என்றார்.
சிறுமியும் பாடிக்கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோசமாகக் கத்தினாள், “சுவாமி கண்ணன் வந்து விட்டான்” என்று.
ஐயர் —-“எங்கே என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார்.
சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள்.
கண்ணன் – “உன் குருநாதர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளைப் பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி,பாவம் ,,உள்ளன்பு ,,எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர் கண்ணுக்குத் தெரியவே மாட்டேன் “என்றான் கண்ணன்.
கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன் குருநாதரிடம் சொன்னாள்.
அதற்கு ஐயர் “நான் உன் குருதானே எப்படியாவது எனக்குக் கண்ணனைக் காணச் செய்யேன்” என்றார் கெஞ்சலாக சிறுமியிடம்.
குரு சொன்னதைக் கேட்ட மாயக் கண்ணன் ,சிறுமியிடம் “தோழியே நீ பாடு உன் பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன் ,,நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்குத் தெரியும்படி செய்கிறேன், அதைப் பார்த்து அவரை மகிழச் சொல். இதுவும் நீ அன்பாகக் கேட்டதால்தான் செய்கிறேன் ,,ம்ம் நீ பாடு” என்றான் கண்ணன்.
சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள்.
அவரும் .,”சரி நீ பாடம்மா இந்தப் பாவி அதையாவது பார்த்துப் புண்ணியம் தேடிக்கொள்கிறேன்” என்றார்.
சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதைப் பார்த்தார் ஐயர் ,,,,அப்படியே பரவசமாகித் தான் செய்த தவறுக்குக் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கிப் பாடிக்கொண்டே சென்றார்.
இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை.
பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன் .
“ஸ்ரீ கிருஷ்ணா! உன் திருவடிகளே சரணம்”
குவிகம் இலக்கியவாசல் 38 வது நிகழ்வு “மாறி வரும் சிறுகதைக் களம் “
இலக்கியச் சிந்தனையின் 576 வது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசலின்
38 வது நிகழ்வு “மாறி வரும் சிறுகதைக் களம் “
இடம் : ஸ்ரீனிவாச காந்தி நிலையம் 26-05-2018 சனிக்கிழமை
முதலில் திரு லக்ஷ்மணன் ஐயா அவர்கள் சிறுகதைகளை இலக்கிய சிந்தனை எப்படிப் பல ஆண்டுகளாகத் தேர்ந்தெடுத்து வந்தது என்பதை விளக்கினார்.
திருமதி காந்தலக்ஷ்மி சந்திரமௌலி தன் கருத்து நிறைந்த உரையால் சிறுகதைகளின் பல தளங்களை அழகாகத் தொட்டுக் காட்டினார்.
நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தவிதம் மிகவும் அழகாக இருந்தது.
அளவளாவல்
அலைகடலும் அலைவதேன்? – – ராம்சு
அலைகடலும் அலைவதேன்?
ஆர்ப்பரித்து ஓடிவரும் கடலலையே
அவசரமாய் வருவதுமேன் சொல் அலையே
வீருடனே சீறி வரும் கடலலையே
சீறுவதன் காரணமேன் தெரியலையே
நண்டுவளை தூர்ப்பதுமேன் கடலலையே-நண்டு
துரத்திடவே பின்வாங்கி ஓடுவதேன்?
சிப்பிகளை உமிழ்ந்து வரும் கடலலையே
தெப்பமாக நனைத்து விட்டாய் உடைகளையே
கால் நனைக்கத் தயங்கிடும்தம் மழலையரை
கைப்பிடித்து கவனமுடன் அழைத்து வந்தால்
ஆசையுடன் ஓடிவந்து தழுவிடுவாய்
அரைநனைய மணல் முழுதும் அப்பிடுவாய்
நேசமுடன் சிறுவர்களும் சிரித்திடுவார்
சிப்பிகள்தேடித் தன்பை நிறைத்திடுவார்
கரைமணலில் வீடுகட்டி விளையாடி
களிப்புடனே மனமின்றிப் பிரிந்திடுவார்
பணிமுடித்துக் களைத்துவரும் பகலவனும்-உன்
மடியினிலே முகம்புதைய அமைதி கொள்வான்
விடிந்திடவே ஊர்ஜனங்கள் விழிக்குமுன்னே-அவன்
அவசரமாய் முகம் சிவக்க வருவதென்ன?
ஆயிரமாம் உயிரினமுன் அரவணைப்பில்
ஆதரித்துக் காத்திடுவாய் கடலன்னையே
அரவணைப்பை மீறித்துள்ளும் மீன்களுமே-ஐயோ
மீனவரின் வலையினிலே பிடிபடுமே
தோணியிலே துடுப்பெடுத்து வலைவீசி
காத்திருக்கும் மீனவர்க்கும் வளமளிப்பாய்
சிப்பிக்குள்ளே பூட்டிவைப்பாய் முத்தினையே-ஆனால்
மொத்தமாக தூக்கி விற்பார் மனிதருமே
பாறையிலே விளைத்திடுவாய் பவழமதை
பறித்துச்சென்று அணிந்திடுவார் மாந்தருமே-ஆயினும்
பெருமனதாய் ஆசிகளைத் தெளிக்கின்றாய்
மனிதர்களும் மனக்கவலை மறக்கின்றார்
வேதனையைச் சுமந்துவரும் மனிதர்களின்
குமுரல்களை ஆதரவாய்ச் செவிமடுத்தாய்
பகிர்ந்திடவே தெரியாமல் விழிக்கின்றாய்
பரிதவித்து நீரைவாரி இறைக்கின்றாய்
அனைத்துலகும் அடங்கிவிடும் இரவினிலும்
ஆரவாரம் ஓயாமல் சலிக்கின்றாய்
பரசிவத்தின் முழுவுருவாய் பரவிநிற்பாய்-உனை
பார்ப்பவர்தம் கவலைகளை மறக்கடிப்பாய்
ஆழ்கடலில் நீர்மூழ்கி முத்தெடுப்பார்
அகக்கடலில் மூழ்கியவர் சிவம்பெறுவார்!
கோமல் தியேட்டர்
கோமல் தாரிணி அவர்கள் தன் தந்தை கோமல் ஸ்வாமிநாதன் அவர்கள் நினைவுநாளில் பல புதிய நாடகங்களை அறிமுகப்படுத்த உள்ளார். இதைப்பற்றிய அறிவிப்பைக் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இதோ அதற்கான அறிவிப்பு!
தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நாடக வடிவில் தருவதற்கு முன்வந்துள்ளார்.
கல்கி, புதுமைப்பித்தன், தி ஜானகிராமன், சூடாமணி,ஜெயகாந்தன் இவர்களின் கதைகள் நாடகமாக உலாவ வருவது இயல் நாடகம் இரண்டிற்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றே கூறவேண்டும்.
இந்த முயற்சிக்குக் குவிகம் தன்னால் முடிந்த உதவியைச் செய்யக் காத்திருக்கிறது!
சமர்த்து..! — நித்யா சங்கர்
கைபேசி சிணுங்கியது.
பேப்பர் படித்துக்கொண்டிருந்த கைலாசம் கைபேசியை
எடுத்து அதன் திரையை நோக்கினான்.
தம்பி முகுந்தன்.
கைபேசியைக் காதுக்குக் கொடுத்துக்கொண்டே,
‘சொல்லுடா முகுந்தா…’ என்றான்.
‘……….’
‘அப்படியா ரொம்ப சந்தோஷம்.. நான் போய் அப்பா அம்மாவை ரிஸீவ் செய்துக்கறேன்’ என்று சந்தோஷமாகக்
கூறி கைபேசியை அணைத்தான்.
‘ உமா..உமா… சீக்கிரம் வாயேன்’ என்று சமையலறையை நோக்கிக் கூவினான்.
‘அடாடா… எதுக்கு இப்படிக் கத்தறீங்க..? என்ன ஆச்சு? என்ன விஷயம்?’ என்றபடியே உமா ஹாலுக்கு வந்தாள்.
‘சந்தோஷமா இருக்காதா பின்னே..? முகுந்த் போன் பண்ணினான்.. அப்பா அம்மாவை எர்ணாகுளம் இன்டர்ஸிடியில்
நாளைக்கு ஏற்றி விடுகிறானாம்.. நான் போய் கூட்டிண்டு வரணுமாம்’
‘அப்படியா.. எக்ஸெலன்ட்… என்னங்க, அப்பா அம்மா ஒரு வருஷத்துக்கப்புறம் வராங்க இல்லே… அவங்க ஸ்டே
கம்·பர்டபுளா இருக்கறமாதிரி பார்த்துக்கணும். அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். நாம
சாப்பிட்டிருக்கிற கொட்டை கொட்டையான ரேஷன் அரிசி வேண்டாங்க… நீங்க போய் நல்ல உயர்ந்த ரக அரிசியா
வாங்கிட்டு வந்திடுங்க… நான் ஸ்பெஷலா ஒரு மளிகை சாமான் லிஸ்ட் போட்டுத் தரேன்.. அதையும் வாங்கிட்டு
வந்துடுங்க. அவங்களைக் கூட்டிட்டு வர டாக்ஸிக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.. நான் படுக்கையெல்லாம் ரெடி பண்ண-
னும்..’ என்றாள் உமா குதூகலத்தோடு.
‘ஸ்டாப்… ஸ்டாப்… விட்டா தாம்தூம் பண்ணிடுவே போலிருக்கே… இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா.. மாசக்
கடைசி வேறே…’
‘எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான்.. மாதா மாதம் நீங்க வீட்டுச் செலவுக்குத் தர பணத்துலே கொஞ்சம்
சேமித்து வெச்சிருக்கேன். போதாதற்கு யார்கிட்டேயாவது கைமாத்து வாங்குங்க… அடுத்த மாதம் திருப்பிடலாம்..
அவர்களுக்கும் உங்க தங்கை பூரணிக்கும் ஜவுளியும் எடுத்துக் கொடுத்தனுப்பணும்…’
‘இட் ஈஸ் டூ மச்.. கொஞ்சம் நிதானமா இரு..’
அவள் கூறுகின்ற செலவினங்களுக்கான லிஸ்டைக் கேட்டுப் பயந்தாலும், கைலாசத்துக்கு அவளை நினைத்துச்
சிறிது பெருமையாக இருந்தது. மாமனார், மாமியார் வருகிறார்கள் என்றாலே முகத்தைச் சுளிக்கும் இந்தக் காலத்து
மருமகள்கள் நடுவிலே இப்படி ஒரு மருமகளா..? மாமனார், மாமியார், நாத்தனாரிடம் எத்தனை அன்பு வைத்திருக்கிறாள்..!
கைலாசமும், அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உமா பரிமாறிக் கொண்டிருந்தாள்.
‘இப்படீங்கறதுக்குள்ளே பதினைந்து நாள் ஓடிடிச்சு. நாளைக்கு ஊருக்கு கிளம்பிட்டிருக்கீங்க.. பதினைந்து நாளும்
கலகலப்பா இருந்தது. நாளைக்கு வீடெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கும்.’ என்றாள் உமா.
‘ஆமாம் உமா… எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்யறது..? பூரணி அங்கே ஊர்லே தனியே
சமையலையும் பார்த்துண்டு வேலைக்கும் போய்ட்டு இருக்காளே.. ‘என்றாள் அம்மா.
‘ஒண்ணு சொல்றேன் உமா… உன் கைப் பக்குவமே தனி. இந்தப் பதினஞ்சு நாளும் ரொம்ப சுவையா. விதவிதமாச்
சாப்பிட்டோம். அதுவும் நீ ஆசையாபண்ணி அன்போடு போட்டது சாப்பாட்டின் சுவையை ஒரு படி அதிகமாகவே
ஆக்கிடுத்து…’ என்றார் அப்பா ரொம்ப சந்தோஷத்தோடு திருப்தியாக.
‘சும்மா என் சமாதானத்துக்காகச் சொல்லாதீங்க அப்பா.. மீராவின் சமையலை விடவா என் சமையல் ருசியாக இருந்-
தது..?’
‘இல்லேம்மா.. நான் நிஜமாத்தான் சொல்றேன்..’என்று சில விநாடிகள் நிதானித்தவர், ‘டேய்..கைலாசம்.. நாம எல்லோரும்
முகுந்த் நல்லா சௌகரியமா இருக்கான்னு நினச்சிட்டிருக்கோம். ஆனா பத்துநாள் அவன் வீட்டிலே இருந்ததுலே
எனக்கு அப்படித் தோணலே.. நாங்க அவன் ஊர்லே போய் இறங்கியதும்.. டாக்ஸி வேண்டாம்.. அட்லீஸ்ட் ஆட்டொவிலேயாவது வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான்னு நெனச்சோம். பஸ்ஸ¤க்காக அரைமணி நேரம் காத்திருந்து பஸ்ஸ¤லே கூட்டிட்டுப் போனான்…மீரா நல்லா சமைக்கிறாள்.. சரிதான்.. ஆனா சாதம் நல்லா இருந்தாத்தானே சாப்பாடு ருசிக்கும். கொட்டை கொட்டையா ரேஷன் அரிசியிலே சாப்பாடு. பின் எப்படி சுவையா இருக்கும்.. ஸோ.. நாம நினைக்கற மாதிரி இல்லே.. அவன் ·பினான்ஷியலா சௌகரியமா இல்லேன்னு நினைக்கறேன்.. இங்கே பார்.. நீங்க உயர்ந்த ரக அரிசியை யூஸ் பண்ணிட்டிருக்கீங்க.. சாதமும் நல்லா வருது.. சாப்பாடும் ருசியா இருக்கு.. நீயும் அவன்கிட்டே பேசி மெதுவா விசாரி. நாம ஏதாவது செய்யணும்..’ என்றார் அப்பா.
துணுக்குற்று கைலாசமும், உமாவும் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர். ‘முகுந்தன்
நல்ல வேலையில்தானே இருக்கிறான்.. நல்லா சம்பாதித்துக்கொண்டுதானே இருக்கிறான்.. பின் ஏன் இப்படி..?’ புரியவில்லை அவர்களுக்கு.
‘கைலாசம்.. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்.. பூரணிக்குக் கல்யாணத்திற்கு வரன் பார்த்துட்டிருக்கேன். சில
வரன்கள் பக்கத்துலே வந்துருக்கு. நான் ஒரிஜினலா நீங்க ரெண்டுபேரும் சம்பாதிக்கறீங்கங்கற தைரியத்துலே ஒரு
பதினைந்து லட்சம் பட்ஜெட் போட்டிருந்தேன். இப்போ உங்க ரெண்டுபேர் நெலமையையும் பார்த்தா ஏழு.. எட்டு
லட்சத்துக்குமேல் முடியாது போலிருக்கு. அதுபடி நான் பட்ஜெட்டை ரீவர்க் பண்ணனும். இப்போ உள்ள நெலமையிலே முகுந்த் அவ்வளவா கான்ட்ரிபியூட் பண்ணமுடியும்னு தோணலே… நீதான் மேஜர்பார்ட் செலவை ஏத்துக்கணும்..’ என்று கூறியபடியே கைகழுவ போனார். அம்மாவும் எழுந்து கூடப்போனாள்.
‘மை காட்… உமா இப்போ என்னடி பண்ணறது..?’
‘உங்க ஒரே தங்கச்சி.. அருமைத் தங்கச்சி.. செய்யத்தானுங்க வேணும். எப்படியோ சமாளிக்கலாம்.. யோசிப்போம்..’ என்றாள் உமா ஆறுதலாக.
கைபேசியை அணைத்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தான் முகுந்தன்.
ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த மீரா, ‘எதுக்கு இப்படிச் சிரிக்கிறிங்க..?’ என்றாள்.
‘விஷயத்தைச் சொன்னா நீயும் சிரிப்பே.. அண்ணா ·போன் பண்ணி இருந்தான். அப்பாவும், அம்மாவும்
இன்னிக்குக் கிளம்பி ஊருக்குப் போனாங்களாம். அப்பா பூரணிக்கு வரன் பார்த்துட்டிருக்காராம். நாங்க ரெண்டுபேரும்
சம்பாதிச்சிட்டிருக்கோம்ங்கற நம்பிக்கையிலே பதினைந்து லட்சம் பட்ஜெட் போட்டிருந்தாராம். இங்கே வந்து நெலமையைப் பார்த்தப்புறம் அவ்வளவு தேறாது. அதனாலே எட்டு லட்சத்துக்குள்ளே பட்ஜெட்டைக் கொறச்சுக்கலாம்னு இருக்காராம்.. பார்த்ததுலே எங்க ரெண்டுபேர்லே நான் ரொம்ப கஷ்டத்துலே இருக்கேனாம்.. அதனாலே அண்ணாதான் மேஜர்பார்ட் செலவை ஏத்துக்கணும்னு சொல்லியிருக்காராம்’ என்று சிரித்தான் முகுந்தன்.
‘எனக்கு அவமானமா இருக்கு. நாம ரொம்ப மோசமான நிலைமையிலே இருக்கோம்னு ஒரு இம்ப்ரெஷனைக் கிரியேட்
பண்ணிட்டீங்களே.. அதுவும் நம்ம எவ்வளவு நல்ல அரிசி வாங்கி நார்மலா சமைக்கிறோம்..அதை விட்டுவிட்டு ரேஷன்
அரிசி வாங்கி சமைச்சுப்போட்டு.. சேச்சே..’ என்றாள் மீரா.
‘போடி.. அசடு.. எல்லாம் ஒரு காரணமாகத்தான், நீ அப்ஜெக்ட் பண்ணியும் அப்படிச் செய்தேன். நீ சொன்னபடி
நாம தாம்தூம்னு இருந்திருந்தா கல்யாண பட்ஜெட் பதினைந்துலேருந்து இருபத்தஞ்சு ஆகி இருக்கும்…’ என்றான்
முகுந்தன் சிரித்தபடியே.
‘இருக்கட்டுமே… ஒரே தங்கச்சி.. நல்லா பிரமாதமா ஜாம்ஜாம்னு கல்யாணம் நடத்தி இருக்கலாமே..’
‘மீரா.. எமோஷனலா அகலக் கால் வெச்சோம்னா மூவாயிரம் ரூபாய் செலவு பண்ணவேண்டிய இடத்துலே
முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்யத் தோணும். அங்கேயும் இங்கேயும் அளவுக்கதிகமா கடன் வாங்கிச் செஞ்சோம்னா
அப்புறம் கஷ்டம் நமக்கு எல்லோர்க்கும்தானே..’
‘அப்போ தங்கைக்கு.. அஸ் எ பிரதர் தாம்தூம்னு கல்யாணம் பண்ணனும்னு ஆசையில்லையா உங்களுக்கு..’
‘டெபனட்லி… ஆனா வீ மஸ்ட் ஹவ் எ லிமிட்.. கல்யாணம்ங்கறது ஜாம்ஜாம்னு ஐந்து லட்சம் ரூபாயிலும்
பண்ணலாம்.. ஐம்பது லட்சம் ரூபாயிலும் பண்ணலாம். பட் அகலக் கால் வைக்காம நம்ம சக்திக்கு உட்பட்ட வகையிலே
கல்யாணத்தை ஜாம்ஜாம்னு ஒரு குறையும் இல்லாம நடத்தலாம். அப்பா எட்டு லட்சம் பட்ஜெட் போட்டிருக்கார்.
கல்யாணம்ங்கறதாலே அது பத்துலே வந்து நிற்கலாம். அதை ஈஸியா சமாளிச்சுக்கலாம். அண்ணா முடிஞ்சதைக் கொடுக்கட்டும். மீதியை நாம் காண்ட்ரிபியூட் பண்ணுவோம்.. ஓகே சந்தோஷம்தானே…’
ஒரு நிமிடம் பெருமைபொங்க அவனைப் பார்த்தாள் மீரா. பின்னர் ‘ஸோ ஸ்வீட் ..சமர்த்து..’ என்று அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
வா உடனே ! – தில்லைவேந்தன்
யாருமே அற்றவர்க்கும் –உன்
அருளினை நம்பியே உற்றவர்க்கும்
நேரிடும் துயர்கண்டு — நீ
நேரினில் ஓடியே வருவதுண்டு.
போரினை மிகவிரும்பி — மகன்
புகன்றவோர் அறவுரை தனைப்பழித்தான்
சீறிடும் சிங்கமெனத் — தூணில்
சென்றுநீ அரக்கனின் உடல்கிழித்தாய்.
தோழனாம் வறியவனின் — அவல்
சுவையென உண்டுஅவன் மிடிகளைந்தாய்.
ஆழமாம் கடலினையே — ஓர்
அணையினால் கடந்தபின் இகல்மலைந்தாய்.
வேழமும் அழைத்திடவே — அன்று
விரைந்தனை அதனுயிர் பிழைத்திடவே.
சூழுமக் களம்நடுவே — கீதை
சொல்லினை அடியவன் மருள்கெடவே.
மாந்தரில் கொடியவனின் — தம்பி
மங்கையின் உடையினை உரித்தெடுத்தான்
வேந்தனாம் துருபதனின் — மகள்
விம்மினாள், வேண்டினாள், உனைஅடுத்தாள்.
ஆந்துணை ஆகவந்தாய் — கடல்
அலையென ஆடைகள் அவைதந்தாய்.
ஏந்தலே வடமதுரைக் — கண்ணா
என்குறை தீர்த்திட வாஉடனே !
சாவித்திரியின் அழகு முகம் பாடல் வழியே! -குவிகம் தயாரிப்பு (உதவி : துதிகர்)
புதிதாக வந்த நடிகையர் திலகம் சினிமாவைப் பார்த்ததும் தமிழ் சினிமாவில் சாவித்திரி கோலோச்சிய படங்கள் நினைவிற்கு வந்தன. அதன் விளைவு இந்தச் சிறு வீடியோ. பார்த்து மகிழுங்கள்!
( தொழில்நுட்ப உதவி : துதிகர்)
உன் வாழ்க்கையே ஒரு புத்தகம் ! – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
உன் வாழ்க்கையே
ஒரு புத்தகம்
உன் பெயரே அதன் தலைப்பு
உன்னை உலகிற்கு
அறிமுகம் செய்வதே
உன் புத்தகத்தின் முகவுரை !
நீ
நாள்தோறும்
சந்திக்கும் சோதனைகள்
சிந்திக்கும் சிந்தனைகள்
செய்யும் முயற்சிகள்
அனுபவிக்கும் இன்பங்கள்
உன் புத்தகத்தின் பக்கங்கள் !
உன்
இறுதி நாளில்
கட்டாயம் முடிக்கவேண்டும்’
சுபம் என்னும்
உன் புத்தகத்தின் முடிவுரை !
உன்
வாழ்க்கையே ஒரு புத்தகம்
உயர்ந்த கொள்கையாக
இனிய வரலாறாக
புனித செயல்களாக நீ
வாழும் சுயசரிதையென
உலகம் உன்னை
நாளும் பாராட்ட வேண்டும் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்
கொஞ்சம் த்ரில்லர் – கொஞ்சம் அமெச்சூர் – குறும்படம்
தாகூரின் பிரார்த்தனை – கீதாஞ்சலி
கீதாஞ்சலி (36)
This is my prayer to thee, my lord - strike, strike at the root of penury in my heart. Give me the strength lightly to bear my joys and sorrows. Give me the strength to make my love fruitful in service. Give me the strength never to disown the poor or bend my knees before insolent might. Give me the strength to raise my mind high above daily trifles. And give me the strength to surrender my strength to thy will with love.
என் பிரார்த்தனை
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
இதுவே நான் செய்யும்
பிரார்த்தனை இறைவா!
நெஞ்சில் முளைக்கும் தாழ்ச்சி
எண்ணத்தின்
வேரை நோக்கி அடி!
ஓங்கி அடி!
இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட
எனக்குப் பொறுமை அளித்திடு!
நற்பலன்கள் விளையும் பணிகளை
நான் பாசமுடன் புரிய
நல்கிடு உறுதி!
வறியோரை என்றும் மறவா திருக்கவும்,
நெறியிலா மூர்க்கர் முன்பாக
முழங்கால் மடக்கி
என்றும்
வணங்கா திருக்கவும், எனக்கு
வைராக்கியம் கொடுத்திடு!
தினச் சச்சரவி லிருந்து விடுபட்டு
மனம் அப்பால் சென்று,
எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
மனத் தெளிவைத் தந்திடு!
அத்துடன்
எனது ஆற்றல் முழுவதையும்
ஒப்படைத்து
உன் ஆசைப் பணிக்கு
பாசமோடு உழைத்திட
எனக்குச்
சக்தியை அளித்திடு!
கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்
சுழலும் பம்பர நினைவுகள்!
எப் எம் ரேடியோவில் ‘பம்பரக் கண்ணாலே’ பாட்டுக் கேட்டு முடித்தபோது, மனதில் பம்பரமாய்ச் சுழன்றன பழைய நினைவுகள் –பம்பர நினைவுகள்!
எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் –
கொத்தங்குடி மணித் தாத்தா(அப்பா வழி) தான் எனக்கு முதன் முதல் பம்பரம் வாங்கிக் கொடுத்தார்! நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும்! காலையில் கையில் எடுத்ததும் முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா! பம்பரம் ஆக்கர் வாங்குவது அவ்வளவு வருத்தத்திற்குரிய சமாசாரம் அந்த வயதில்!
மண்டையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என வட்டங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட சின்னப் பம்பரமும், அதைச் சுழல வைக்க, இரண்டடி நீள சிவப்புக் கயிறும் – சாட்டையும் என் முதல் பம்பரம், மறக்க முடியாதது.
இரண்டு மூக்கிலும் சளி ஒழுக, நாக்கை மடித்து மேலுதட்டில் அழுத்திக்கொண்டு, இடது கையில் பம்பரத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கீழே ஆணியிலிருந்து வரி வரியாகச் சாட்டையைச் சுற்றுவதில் இருக்கிறது சாமர்த்தியம். சாட்டை வழுக்குவதும், பம்பரம் நழுவுவதும் (சில சமயம் ஏடாகூடமாக, டவுசர் இடுப்பிலிருந்து நழுவுவதும் உண்டு உடுக்கையை விட்டு பம்பரத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளும் விரோதக் கைகளும் உண்டு!) ஆரம்ப நிலை சறுக்கல்கள்!
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சாட்டை சுற்றிய பம்பரத்தைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு, மற்ற விரல்களில் சாட்டையின் முடிச்சு போட்ட நுனியைச் சுற்றிக்கொண்டு, கையை முன்னும் பின்னும் இழுத்து, சாட்டையை உருவி, பம்பரத்தைச் சுழல விடுவது, ‘இழுப்பு பம்பரம்’ விடுதலின் பால பாடம்!
தலைக்குமேல் கையை உயர்த்தி, பம்பரத்தைத் தரையில் குத்துவதைப்போல செலுத்த, சாட்டையை இழுத்துச் சுழல விடுவத “குத்து” அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடம் –
எல்லாவகைப் பம்பர விளையாட்டுகளுக்கும் இம்முறையே பயன்படும்! இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல! இப்படி ‘மட்டையடித்தல்’ சில சமயங்களில் வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை வெளிக்கொணர உதவும் –அதெல்லாம் தேர்ந்த பம்பர ஸ்பெஷலிஸ்டுகளுக்கே உரிய பண்பு!
இழுப்புபோலக் காற்றில் சாட்டையை இழுத்து, சுழலும் பம்பரத்தைத் தரையிறங்க விடாமல், உள்ளங்கையில் ஏந்திக் கொள்வதற்குக் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் வேண்டும்! சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி, காற்றிலிருந்து பம்பரத்தைக் கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள்! (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம் சரித்திரப் பிரசித்தம்!)
கொய்யா, கருவேல மரங்களில் செய்யப்படும் பம்பரங்கள் – மெஷினில் சுழலவிட்டு, சீராக செதுக்கப்பட்டவை! அழகிய வண்ணங்களில் எங்கும்கிடைக்கும்.
(பெரிய கோயில் வாசல்களில், பனை ஓலைப் பெட்டிகளில் பல வண்ணங்களில் சாட்டையுடன் விற்பனை!).
தனியாக ஆசாரியின் மரப் பட்டறைகளில் ‘கடைந்து’ செய்யப்படும் பம்பரங்களுக்கு மவுசும், விலையும் கூடத்தான். ரோஸ்வுட் / தேக்கு மரஃபினிஷ், அழகான சாட்டை சுற்றும் வரிகள், பெரிய மண்டை, குறைந்தஉயரம், தடி ஆணி தரையிலோ, கையிலோ சுழலும்போது, ஒருவித அமைதியுடன் மயங்குவதைப்போலத் தோன்றும் காதருகே கொண்டுவந்தால், சன்னமான ‘ஹம்மிங்’ கேட்கும்!
சிதம்பரத்தில், மேல சன்னதி ஃபேன்சி ஷாப்பில் கலர்ப் பம்பரங்களும், சின்னகடைத் தெருவில் கடைந்த பம்பரங்களும் கிடைக்கும்! அதைவாங்கக் காசுதான் கிடைக்காது!
அவசரத்துக்குச் செய்தாற்போல், ஏதோ ஒரு கட்டையில் சீவி, கொஞ்சம் நீளமான ’கோம்பை’ (இந்த வார்த்தையின் பொருள் அறிய பம்பரப் பண்டிதர்களை அணுகவும்!) போல செதுக்கப்பட்ட பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால், தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச் சுற்றும் – ”தொகுறு” பம்பரங்கள்! நம்ம ஊரில் சில பிரபலங்கள்கூட இப்படித் தொகுறும் பம்பரங்களாக குதித்துச் சவுண்டு விடுவதைக் காணலாம்!!
அதிக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள் (தோற்று, மற்ற பம்பர ஆணிகளால்‘குத்து’ப் பட்டவை) அம்மை வடு முகம்போல இருந்தாலும், சுழலும் போது அழகாகவும், மயங்குவதாகவும் இருக்கும். அடிபட்டால்தானே அமைதியும், அழகும் வருகிறது!
“அப்பீட்” எடுப்பது தெரிந்திருக்க வேண்டும், அதுவும் விரைவாக எல்லோருக்கும் முன்பாக எடுக்கவேண்டும். (இரண்டு மூன்று சுற்றுக்களில் பம்பரத்தைச் சுழலவிட்டு, தரையிலிருந்து சாட்டையால் தூக்கிக் ’காட்ச்’பிடிப்பது ’அப்பீட்’ (அ) கோஸ்’) கடைசியில் எடுப்பவர் தன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்க,, மற்றவர்கள் ’குத்து’ விட, பம்பரம் வெளியே வரவேண்டும் (ஆக்கர் வாங்குவதும், உடைவதும் உள்ளிருக்கும் பம்பரத்தின் தலைவிதியைப் பொறுத்தது!). மீண்டும் எல்லோரும் அப்பீட் – கடைசீ அப்பீட் வட்டத்தின் உள்ளே – ஒரு வட்டம், இரு வட்டம்,
”தலையாரி” ஆடஇரண்டு அரை வட்டம் எனப் பல வகை ஆட்டங்கள்!
பம்பரத்தின் மண்டையில் தகர ஸ்லீவுடன் ஒரு ஆணி, அடித்து, சாட்டையைக் கட்டி, தரையிறக்காமல், அதிலேயே சுற்றுவது “தொங்கிச்சுற்றும் பம்பரம்” – குழந்தைகளுக்கானது சில சிறுமிகளுக்கும்! ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க! நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொன்னேன், பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது!)
இராமாயணத்தில் ‘பம்பரமாய்ச் சுழன்றான்’ என்று வருகிறது! பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா? ஆணியால் குத்துவதாலா? என்ற பட்டிமன்றம் நடத்தலாம்!
தரையில் விடும் பம்பரங்கள் சிறுவர்களுக்கு, வித்தியசமாக, நாயகியரின் தொப்புளைச் சுற்றி, கிச்சு கிச்சு மூட்டும் பம்பரங்கள் தமிழ்க் கதாநாயகர்களுக்கு!
ஆணியின்றி மரத்தில் கூம்பு வடிவில் செதுக்கப்படும் பம்பரங்களும்,பிளாஸ்டிக் தட்டு வடிவில் பம்பரங்களும், ஒன்றன்மேல் ஒன்றாக இரட்டை பம்பரங்களும் இப்போது கிடைக்கின்றன வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட அன்று தெருவில், புழுதியில் ஆடிய பம்பரங்களுக்கு இவை ஒருபோதும் இணையாக முடியாது!
பம்பரம் இப்போது யாராவது விளையாடுகிறார்களா, தெரியவில்லை.கிராமங்களில்கூட போஸ்டர்களில் கட்சிச் சின்னமாகத்தான் பம்பரம் தென்படுகிறது!
எஃப் எம் ரேடியோவில் சந்திரபாபு பாடிக்கொண்டிருக்கிறார் – ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’! கண்களைத் தவிர இன்று வேறெதுவும் நம்மிடையே இல்லை!!