அட்டைப்படம்

இந்தியாவின் சுதந்திரம் நமது சுதந்திரம்                                                             அதைக்  காப்பாற்றுவது நமது தேவை மட்டுமல்ல கடமையும் ஆகும்.

1947 ஆகஸ்ட் 15 அன்றைய இந்தியாவைப் பாருங்கள்.

 

 

இரவிலே வாங்கினோம் விடிந்தது புதிய யுகம் ! இந்த வீடியோவையும் பாருங்கள்.

 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

அசோகர்

pic1

பழைய நாளிதழில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு:

பள்ளி ஆசிரியர் (மாணவனைப் பார்த்து):
        “சொல்.. அசோகர் ஏன் போரை வெறுத்தார்?”
மாணவன்(சினிமா ரசிகன்):
        “எம்.ஜி.ஆரின் அடி தாங்க முடியாமல் சார்!”

அசோகரைப் பற்றிப் பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்களில் படிக்காதவர்கள் வெகு குறைவு.
அவர் – ஒரு கருணை மனம் கொண்ட சக்கரவர்த்தி – புத்த சமயத்தைத் தழுவி – உலகெங்கும் பரப்பிய உத்தமர் – சாலை ஓரம் நிழல் தரும் மரங்கள் நட்டார் – என்று பல விபரங்கள் படித்திருப்போம்.

ஒன்று மட்டும் நிச்சயம்!

அசோகர் போல எந்த ஒரு மன்னரும் தான் எண்ணியதை சரித்திரத்தில் ஆழமாகப் பதிவு செய்யவில்லை. ஸ்தூபிகள், கல்வெட்டுகள் எனப் பலப்பல பதிவுகள்.. அவைகள் எல்லாம் – தான் என்ன சொல்ல விரும்புகிறோமோ அவைகளை (மட்டுமே) பதிவு செய்தன! அதாவது -நம் எம் ஜி ஆர் தன் படங்களில் நல்லவராக நடித்து மக்கள் அபிமானம் பெற்றது போல்.

pic2

(கல்வெட்டு – கிரேக்க மற்றும் அராமைக்(Aramaic) மொழியில்)

pic3

(சாஞ்சி ஸ்தூபி)

நாம் இங்கு காணப் போவது?
அசோகர் போரை வெறுக்கும் முன்பு எப்படி இருந்தார் என்பது பற்றி.

நதி மூலம்… ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பர்.

ஒரு சில அரசர்களின் ‘மூலமும்’ அது போலே.

அதைத் தான் இன்று ஆராய்வோம்!

என்ன.. எனக்குக் குதர்க்க புத்தியா?

அட..சரித்திரம் எழுதத் துணிந்தால்..இதெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டும்!  

pic4

அசோகனின் தாய் எவ்வளவு அழகோ, அசோகனது தோற்றம் அதற்கு நேர் மாறாக இருந்தது. அதன் காரணமாக பிந்துசாரன் அசோகனை அவ்வளவு விரும்பவில்லை.

பிந்துசாரனின் பல மனைவியர்களுக்கு பலப்பல மகன்கள் இருந்தனர். அவர்கள் நூறென்று சில கதைகள் கூறும். பிந்துசாரன் அந்த எல்லா மகன்களின் ஜாதகங்களையும் கணித்து வைத்திருந்தான்.

அசோகன் உஜ்ஜயினி நாட்டுக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டான்.

பிந்துசாரனின் மகன் சுசிமா, மூத்தவன். பிந்துசாரனுக்கு விருப்பமானவான்.  பட்டத்து இளவரசன்.  அவன்  தக்ஷசீலத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டான். அங்கு மௌரிய அரசு அதிகாரிகள் செய்த கொடுமைகளால் நொந்த மக்கள் பெரும் புரட்சி நடத்தினர். கலவரங்களில் ஈடுபட்டனர். சுசிமாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாடலிபுத்திரத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டான்.

பிந்துசாரன் அசோகனை அழைத்து:

“அசோகா… சுசிமா தக்ஷசீலத்தில் கஷ்டப்பட்டுத் திரும்பி வந்துள்ளான்.”

அசோகன்: “தந்தையே, சுசிமா திறமையற்றவன். அனைவரையும் பகைத்துக்கொண்டால் வேறென்ன நடக்கும்?”

“அப்படியானால் நீ சென்று அந்த புரட்சியை அடக்குகிறாயா?”

“நீங்கள் ஆணையிட்டால் நான் நிச்சயம் செய்வேன்”

அசோகன் விரைந்தான்.

அந்தப் புரட்சியாளர் தலைவர்கள் அவனை எல்லையிலேயே சந்தித்துப் பரிசுகளை அளித்தனர்.:

“மக்கள் அதிகாரிகள் மீது தான் கோபம் கொண்டுள்ளனர். உங்கள் மீதோ மௌரிய அரசு மீதோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நீங்கள் அவர்களை அடக்கினால் எங்கள் புரட்சி அடங்கும்” –என்றனர்.

அசோகன் தக்ஷசீலத்தில் அமைதியை ஏற்படுத்தினான்.

 

பிந்துசாரன் மதகுருவின் பெயர் பிங்களவத்ஸா.

பிந்துசாரன் தன் மகன்களில் எவன் தனக்குப் பிறகு அரசாளப் பெரும் தகுதி கொண்டவன் என்பதைக் கண்டறிய எண்ணம் கொண்டான். அந்த செயலைப் பிங்களவத்ஸாவிடம் ஒப்புவித்தான்.

பிங்களவத்ஸா: “மன்னர் மன்னரே! எல்லா இளவரசர்களையும் தங்களது ‘தங்க’ அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள்”.

பிந்துசாரன் எல்லா இளவரசர்களையும் ‘தங்க’ மாளிகைக்குச் செல்லும்படி உத்தரவிட்டான்.

அசோகன் தயங்கி நின்றான்.

பிங்களவத்ஸா அவனிடம் சென்று ;

“மகனே.. அரசரும் மற்றும் எல்லா இளவரசர்களும் தங்க மாளிகைக்குச் சென்று விட்டனர். நீயும் செல்.”

அசோகன்:

“அரசன் என்னை முழுதும் வெறுக்கிறார். என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.  நான் ஏன் அங்கு போகவேண்டும்?”

பிங்களவத்ஸா:

“இருப்பினும் நீ செல்லத்தான் வேண்டும்”

அசோகன்:

“அப்படியானால் செல்கிறேன்”

அசோகன் ஒரு பழைய ராஜகுல யானை ஒன்றில் ஏறித் தங்கமாளிகை சென்றடைந்தான்.

இளவரசர்கள் அனைவரும் விருந்து உண்டனர்.

அசோகன் புழுங்கல் அரிசி சாதத்துடன் தயிர் சேர்த்து மண் பாண்டத்திலிருந்து உண்டான்.  

பிந்துசாரன்:

“குருவே, நீங்கள் தான் இந்தத் தேர்வை நடத்த வேண்டும். எனக்குப் பின் இந்த நாட்டை ஆளத் தகுதி கொண்டவன் யார்”

அடுத்த நாள் அனைத்து இளவரசர்களும் திரும்பினர்.

மன்னன் குருவை அழைத்து : “யார் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதாக எண்ணுகிறீர்கள்”

குருவிற்கு அசோகன் பின்னாளில் அரசனாவான் என்று நம்பிக்கை இருந்தது.

ஆனால் மன்னனிடம் அப்படிச் சொன்னால் அவன் கோபம் கொள்ளக்கூடும்- தன் உயிரையும் பறிக்கக் கூடும்!.

ஆகவே:

“யார் அவர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல இயலாது. ஆனால் அவனது குணாதிசயங்களை மட்டும் சொல்ல முடியும். எவன் உலகத்தில் சிறந்தவற்றைக் கொள்கிறானோ அவனே”

போட்டுக் குழப்பி அடிக்கிறார்!! எப்படியாவது உயிர் தப்பவேண்டுமே!!

பிந்துசாரன் நொந்தான். தனக்குப் பிறகு சுசிமா அரசன் ஆவதை அவன் விரும்பி இருந்தான். ஆனால் இந்த சுசிமா என்ன யாரையும் மதிப்பதில்லையே! மந்திரிகள் எல்லாம் அவனை வெறுக்கின்றனரே! என் மகன்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனரே!

பிந்துசாரனின் 16 மனைவிகள் கிட்டத்தட்ட 100 மகன்களைப் பெற்றிருந்தனர். கணக்குத் தெரியாமல் பெண்களை மணந்தால், இப்படித்தான் கணக்குத் தெரியாத அளவுக்கு மகன்கள்..

பிந்துசாரன் உணவு உண்ண மறுத்து..வாழ்க்கை வெறுத்து.. சில தினங்களில் உயிர் துறந்தான். அவனுக்கு வயது 47!

47 வயதுக்குள் 100 மகன்கள்!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் புகழ், பணம், பெண், நிலம் என்று அலைவது இயற்கையான சமாசாரம். அதிலும் நாட்டு அரசனாவதோ மிகப் பெரிய விஷயம். மன்னன் ஆனவர் – சக்தி புகழ் மற்றும் சரித்திரத்தில் இடம் பெறுவதற்கு பெரும் வாய்ப்பு கொண்டவர். அதனால் யாருக்கும் கொலை – துரோகம் எதுவும் தவறாகத் தோன்றுவதில்லை.    

பிந்துசாரன் மறைந்த பின் இளவரசர்கள் பலர் அரசனாகத் திட்டமிட்டனர். பிந்துசாரன் மறைந்து நான்கு வருடங்கள் கடந்தது. யாரும் அரசனாக இயலவில்லை. இளவரசர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் முயற்சி செய்து வந்தனர்.  

சில சம்பவங்கள் நேரடியாகச் சரித்திரத்தில் இடம் பெறாது. ஆனால் அவை சரித்திரத்தில் இடம் பெற்று விளங்க மூல காரணமாக இருக்கும். அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இளவரசர்கள் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் – வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சுசிமாவுக்கு அசோகனை அழித்தால்தான் தனக்கு வாய்ப்பு என்று தோன்றியது. அசோகனுக்கு இப்படி ஒரு புகழ்? மந்திரிகளில் ‘ராதாகுப்தா’ அசோகனுக்கு வக்காலத்து வாங்கி அவனை அரசனாக்கத் துடிக்கிறார்!

pic5


(சுசிமா)

ஒரு நாள் சுசிமாவின் ஒற்றன் :

“இளவரசர் சுசிமா! அசோகனின் முதல் மனைவி தேவி கருவுற்றிருக்கிறாள்”

சுசிமா தனது மெய்க்காவல் படைத்தலைவனை அழைத்து:

“நீ ரகசியமாகச் சென்று அசோகன் மனைவியைக் கொன்று விடு”

(அசோகனின் ராணி)

pic6

அசோகனின் தாய் ‘தர்மா தேவி’யைப் பற்றி நாம் முன்பே படித்திருக்கிறோம். சுசிமாவின் கொலைப்படையாளி அசோகன் மனைவி தேவி என்று எண்ணி அசோகனின் தாய் தர்மா தேவியைக் கொன்றான்.

 

pic7

(அசோகனின் மனைவியும் தாயும்)

 

அசோகன் ஆக்ரோஷத்தின் உச்சியை அடைந்தான். தாயைக் கொன்றவர்களைப்  பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தான். 100 சகோதரர்கள். அவர்களில் யாரை என்று சந்தேகிப்பது?

அவனது மெய்க்காவலர் மொழிந்தது:

“இளவரசர் அசோகரே! இது சுசிமாவின் கை வேலை என்பது எங்கள் சந்தேகம்”

ஒரு அரசியல் நாடகம் வடிவமைக்கப்பட்டு அரங்கேறியது.

சுசிமா உடனே ஒரு தூதுவனை விட்டு ஓலை அனுப்பினான்.:

“அசோகா… இந்தத் துயரமான சம்பவம் உன்னை விட என்னைப் பாதிக்கிறது. இதற்குக் காரணமானவனை நானே கண்டு பிடித்து ஒழிப்பேன்”

அசோகன் மந்திரி ராதகுப்தனிடம் ஆலோசனை செய்து பதில் ஓலை அனுப்பினான்.

“சுசிமா… உனது கடிதம் எனக்குப் பெரும் ஆறுதலைத் தருகிறது. இனியும் நமது பகை தொடர்ந்தால் – நமது மற்ற எதிரிகள் வலுப்பெற்று நம்மை அழித்து விடுவர். நாம் இருவரும் ஒன்று சேர வேண்டும். எனக்கு மௌரிய அரசாட்சி மீது நாட்டம் குறைந்து விட்டது. என் தாய் எரிந்து கொண்டிருக்கிறாள். அதன் அருகே நான் உள்ளேன். நீ அங்கு வா. நாம் அங்கு சந்திக்கலாம்”

அசோகனின் கூடாரத்தைச் சுற்றி ஒரு முழு வட்டமாக தோரணம் அமைக்கப்பட்டிருந்த்தது.

சுசிமா காலம் கடத்தவில்லை..

முகத்தில்… சோகத்தைப் பரப்பினான்.

கண்ணில் ..கண்ணீர் பெருக்கினான்.

நடிப்புக்கலை அவன் முகத்தில் தாண்டவமாடியது.

“அசோகா..” என்று குரல் தழுக்கக் கூவியபடியே தோரணங்களைத் தாண்டி ஓடி வந்தான்.

தோரணங்களைத் தாண்டியவுடன்…

தொபக்கடீர் என்று குழியில் விழுந்தான்.

கூடாரத்தைச் சுற்றிக் குழியில் தணலாகக் கரி பரப்பப்பட்டிருந்தது.

கனன்று சிவந்து எரிந்து கொண்டிருந்தது.

சுசிமா உடல் தீப்பற்றித் துடித்தான்.

அசோகன் முகம் கோபத்தில் வெகு கொடூரமாக மாறியது.

“என் தாய் உடல் எரிந்து சாம்பலாகும் முன்னே உன் உடல் கருகி ஒழிய வேண்டும்”

நெருப்புக்குப் பிணம் என்ன உயிர் உள்ள உடல் என்ன!

அது ‘நெருப்புடா”!

எரித்து சிவந்தது!

நெருப்பு முடிவில் தணிந்தது.

அசோகனின் கோபம் தணியவில்லை.

மற்ற சகோதர்கள் அனைவரையும் வளைத்துப் பிடித்துக் கொன்றான்.

99 சகோதரர்களைக் கொன்றான் என்று சில சரித்திரத் துணுக்குகள் கூறும்.

கலிகால பீமன்!

ஒரே ஒரு சகோதரனை மட்டும் கொல்லாமல் விடுத்தான்.

அது அவன் சொந்தத் தம்பி ‘விட்டசோகன்’! (கருணை!)

புத்த சரித்திரங்கள் சொல்வது:

“அசோகன் பெரும் கோபக்காரன்!
மனித உருவில் வந்த அரக்கன்!”

‘அசோகன் நரகம்’ என்று ஒரு ‘கொடுமை செய்யும் அறை’ ஒன்று அமைத்திருந்தானாம்.

அது ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘ஆபீஸ் ரூம்’.

வெளியில் பார்க்கும்போது சொர்க்கபுரிபோல் இருக்கும்.

ஆனால் உள்ளே கொடுமை ரொம்ப உக்கிரமாக இருக்குமாம்!

ஒரு வழியாக அசோகன் மௌரிய மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். சில வருடங்கள் கடந்ததும் கலிங்கத்துடன் பெரும் போர் புரிந்து –பின்னர் வருந்தி- அந்த பச்சாதாபத்தால்- புகழ் கொண்டான்.

ஒரு கருத்துப்படி – கலிங்கப் போர் அவன் மனதை மாற்றவில்லை. தமிழகமே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த கதை கேட்போம்:  

சோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த
போரில் அசோகப் படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது. புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். இவன் மகன் கரிகாலன்-I.

சரித்திரம் படித்தவர்கள் –  சற்றுப் பொறுங்கள்!

குவிகம் ஆசிரியருக்குக் ‘குறை கடிதம்’ எழுது முன்… சற்றே மேலே படியுங்கள்!

வெண்ணிப்பறந்தலை கரிகாலன்-II மற்றும் அவன் தந்தை இளஞ்சேட்சென்னி (யவன ராணி படித்தவர் அறிவர்) வேறு . அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வந்தவர்கள்.

நமது இளஞ்சேட்சென்னிக்குக் கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும்
பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும்
கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன்
கோசர்களைக் கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான்.
அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனைக் கோசர்கள் காட்டிற்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான “பாழி”யை அரணாக்கி, வலிமைப்படுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்குக் கோட்டையாக்கிக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள்  திதியனையும் படிப்படியாகத் தாக்கினர்.

ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன்
அவர்களை முறியடித்துத் துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று
பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சமயம் வரை
மௌரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில்
ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மௌரியப் பேரரசைத் தட்டி எழுப்பின.
அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து
தமிழகத்திற்கு வரும் பாதைகளைச் செப்பனிட்டனர்.

மௌரியப் படைகள் துளுவத்தில் தங்கிக் காட்டாறு போல் தமிழகத்தை வந்து
தாக்கின. இனிமேலும் சிற்றரச‌ர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி
இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளைத்
திரட்டினான். இப்போரில் மௌரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன. மௌரியர்
மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப்
படைகளும் இப்போரில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும்,
சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களைச் சிதறடித்தனர்.

அத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்குத் துரத்திச்
சென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும்வரை போரிட்டான்.  தமிழகத்தைப் போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப முனைந்தான் எனக்
கருதலாம்.

இளஞ்சேட்சென்னி, மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.

“எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடி கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானை”

(நன்றி: http://siragu.com/?p=3184)

 

தமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்!

அசோகனையும் விரட்டி அடிக்க முடியும்!

இனி சரித்திரம் என்ன பேசப்போகிறது?

பொறுத்திருந்து பார்ப்போம்!

ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

 

” சைலன்ஸ்… இது புதுமையான கோர்ட் . இதைப்பத்தி முதல்ல விளக்கம் சொல்லவேண்டியது என் கடமை. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நமது குருஜினி அவர்கள் அமைத்துக் கொடுத்த ஓர் அருமையான பாரம்பரியம்.

இதைக் குடும்ப மன்றம் என்றும் சொல்லலாம். குடும்ப நீதி மன்றம் என்று சொல்லிக்கொண்டு குடும்பத்தைப் பிரித்து விவாகரத்து வாங்கிக் கொடுக்கும் இன்றைய நீதி முறைக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கிட்டத்தட்ட கிராமத்தில இருக்கிற பஞ்சாயத்து முறை மாதிரி தான். அங்கே பஞ்சாயத்துத்  தலைவர் ஊருக்குப் பெரியவர். பொதுவானர். எல்லாரைப் பத்தியும் எல்லா வழக்கங்களையும் தெரிஞ்சவரா இருப்பார்.

ஆனா இங்கே டவுனிலும்  சிட்டியிலும் வேற மாதிரி பஞ்சாயத்து இருக்கு. அதுக்குக் கட்டப்பஞ்சாயத்துன்னு சொல்வாங்க. அது கட்டாயத்தில கட்டின பஞ்சாயத்து.  ஆனா நாம இங்கே சொல்றது  அன்பால  கட்டப்பட்டப் பஞ்சாயத்து. நடுவில இருக்கிற நான் நடுவர் இல்லே. ஒரு ஒழுங்குபடுத்தறவர்தான். குடும்பத்தில இருக்கிற மற்ற உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் ஜூரர் மாதிரி இருந்து எல்லா நியாயத்தையும் கேட்டுட்டு அவங்க கருத்தைச் சொல்லுவாங்க.  பிறகு எல்லோருமா சேர்ந்து ஒரு தீர்ப்பைத்  தேர்ந்தெடுப்போம். அப்படி ஒருமனதா தேர்ந்தெடுக்கற முடிவுக்கு எல்லோரும் கட்டுப்படணும்.

இதற்கு அரசாங்கம் அனுமதியும் கொடுத்திருக்காங்க. மனித வள மேம்பாட்டுத் துறை இதை ஒரு புதிய முயற்சியாக அங்கீகரித்து தமிழ் நாட்டில் முதல் பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்திருக்கிறார்கள்.  மருத்துவ –  மனோதத்துவ முறையில் நீதி வழங்கும் கூட்டுறவு குடும்ப மன்றம் இது. இதற்கு நடுவராக இருப்பவருக்கு மனோதத்துவ மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு  மேல் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தைப்  பாருங்கள்.

இந்த முன்னுரையோடு ,  இப்போது ஷாலு கொடுத்த மனுவைப் பற்றி இந்தக் குடும்ப மன்றம் விசாரிக்கத் துவங்குகிறது.

“ஷாலு மேடம், நீங்கள் உங்கள் எண்ணங்களைச் சொல்லலாம்.”

ஷாலு எழுந்தாள். அந்த அறையிலிருந்த அனைவரையும் சுற்றிப் பார்த்தாள்.

நான் அங்கே  வில்லன் மாதிரி -கில்லி படத்தில சேற்றில  விழுந்த பிரகாஷ்ராஜ் மாதிரி உட்கார்ந்திருந்தேன். ஷியாமும் ஷிவானியும் கிரேஸி  மோகனோட கூகுள் கடோத்கஜன் நாடகம் பார்க்கப் போகும்போது எப்படி ஒரு எதிர்பார்ப்போட உட்கார்ந்திருந்தார்களோ  அதே மாதிரி ஜாலி மூடில் இருந்தார்கள். ஷாலு கொஞ்சம் டென்ஷன் ஆகியிருப்பது எனக்குப் புரிந்தது.

” ஷாலு ! நீ சொன்னதை  நான் என்னிக்காவது  மாட்டேன்னு சொல்லியிருக்கேனா ? எதுக்கு இந்த மகளிர் அணி கோர்ட் எல்லாம். (அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்). எங்க குடும்பத்தில யாரும் கோர்ட் வாசப்படியை மிதிச்சதே இல்லை. உன்னோட சட்டப் படிப்பை உபயோகிக்கறதுக்காக என் மேல கேஸ் போட்டிருக்க வேண்டாம். சாட்சிக்காரன் காலில விழறதுக்குப்  பதிலா சண்டைக்காரியான உன் காலில் விழத் தயார். எனக்கு என்னவோ கடைசில நீ’ இவருக்கு அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை வழங்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன் ‘ என்று அந்தக்காலத்து சினிமாவில கண்ணாம்பா, சாவித்திரி, லட்சுமி, சுஜாதா அவர்கள் வந்து உணர்ச்சி பொங்க சொல்லுவதைப் போல சொல்லுவியோன்னு பயமாயிருக்கு. நான் உன்னோட  ஆயுள்  முழுக்க ஒண்ணா இருக்கேன்னு ஒத்துக்கிட்ட ஆயுள் தண்டனைக் கைதி இல்லையா? ” – இப்படியெல்லாம் நான் பேசப் போக அது ஷாலுவின் கோபத்தை  மேலும் கிளறிவிட்டது.

“உங்கமேல கோர்ட் அவமதிப்புச் சட்டத்தின் பேரிலும் தனியா வழக்குத் தொடுக்கலாம் ” என்று சொல்லிவிட்டு ” இங்கே பாருங்கோ, எனக்கு உங்க பேரில தனிப்பட்ட முறையில் கோபம் இல்லை . அப்படி வந்தா அதை எப்படிக் காட்டுவதுன்னும் எனக்குத் தெரியும். ஆனால் இதை ஒரு பெண்ணீயப் பார்வையில் அணுகணும். படித்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் தங்களின் படித்த மனைவி மக்களை எப்படிக் கேவலமாக மதிக்கின்றார்கள் என்பதை ஊருக்கு, உலகுக்கு எடுத்துக் காட்டவே இப்படி ஒரு வழக்கைத் தொடுத்துள்ளேன்”

இந்த டயலாக்கை அவ நேத்து ராத்திரியிலிருந்து மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.  “அப்ப,  இதெல்லாம் ஒரு டிராமா ரிகர்சல் மாதிரி தானே ஷாலு? ” என்று கேட்டதும் வந்ததே அவளுக்கு ஒரு கோபம். ‘இதெல்லாம் நாளைக்குக் கோர்ட்டிலேயே பேசிக்கிறேன்’ என்று    சொல்லிவிட்டு இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கி விட்டாள். சத்தியமா  அவளோட  திட்டம் என்னன்னு எனக்குப் புரியலை.

இன்னிக்குக் காலையில கூட  “இந்தாங்கோ , உங்களுக்குப் பிடித்த பூரி மசாலாவும் அக்காரவடிசலும்  பண்ணியிருக்கேன். சாப்பிடுங்கோ” என்று ஏதோ தூக்குத் தண்டனைக் கைதிக்கு அவனுடை இஷ்ட பதார்த்தத்தைக் கொடுப்பது போலச் சொன்னாள்.

அதுமட்டுமல்ல , ” எனக்கு இந்த வழக்கில வெற்றி கிடைக்க நீங்கதான் ஆசீர்வாதம் செய்யணும்’ என்று காலில் வேற விழுந்தாள்.  கௌரவம் சிவாஜி மாதிரி நான் ஏதாவது சொல்லணும்னு நினச்சா ஒண்ணுமே வரலை. ஆபீசிலேயே டிபார்ட்மெண்ட் விசாரணையின் போது ஒண்ணுக்கிடக்க ஒண்ணு பேசி சொதப்பினவன் நான்.   ஒரு தடவை டிராமா போடும்போது எனக்கு ஹீரோ வேஷம் கொடுத்துவிட்டு நாலு ரிகர்சல் முடிஞ்ச பிறகு எனக்கு வில்லன் வேஷம் கொடுத்துட்டாங்க. மேடையில ஏறினதும் எனக்கு வில்லன் டயலாக் எல்லாம் சுத்தமா  மறந்து போச்சு. ஆனா ஹீரோவோட டயலாக் அப்படியே ஞாபகம் வந்தது. ஹீரோ பேசவேண்டிய வசனத்தை நான் பேச,  ஹீரோவும்  அதே வசனத்தைத் திருப்பிச் சொல்ல அது ஒரு புது விதமான காமெடி என்று எல்லாரும் சிரிக்க அத்தோட என் நாடக வாழ்க்கையும் முடிஞ்சுது.

ஷிவானி மட்டும் ஷாலுவுக்குத் தெரியாமல்  என்கிட்டே வந்து ” அப்பா ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு ஒரு கிஸ் கொடுத்துவிட்டுப்  போய்விட்டாள். ஷ்யாம் ‘உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ; என்கிற பார்வையில் லுக் விட்டுட்டுப் போனான். போன வாரம் அவன் கேட்ட ஜீன்ஸ் பேண்ட் வாங்கித் தரலை. அதன் விளைவு தான் இது.

ஆம்பிளை ஜட்ஜை ‘மை லார்ட்’ என்று சொல்லுவது போல இந்த ஜட்ஜை ‘மை லேடி’ன்னு ஒரு ஃப்ளோவில  சொன்னா  அந்த நடுவர் அம்மா போலீசைக் கூப்பிடுவாங்களோன்னு பயமா இருந்தது.

ஷாலு அந்த அறைக்குள்ளே இருந்த அனைவரையும் பார்த்துவிட்டு குருஜினியைக் கண்ணால் வணங்கி அவர் தலை அசைத்து ஆசீர்வாதம் செய்ததும் கணீர் என்று ஆரம்பித்தாள்.

“கனம் கோர்ட்டார் அவர்களே”

அதற்குள் நடுவர் கையமர்த்தி ” இந்த மன்றத்தில் அப்படி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை மேடம் என்றே அழைக்கலாம், நீங்கள் அவர் மேல உள்ள குற்றங்களை மட்டும் எடுத்துச் சொல்லுங்கள் ‘ என்று சொன்னதும் முதல் பாலே ‘நோ பால்’ என்று சொன்னதைப் போல ஜாலியா இருந்தது.

” நன்றி, மேடம் ! நேரடியாக விஷயத்துக்கு  வருகிறேன்.   இதோ இங்கு அமர்ந்திருக்கும் என் கணவர் என் மீதும் எங்கள் குழந்தைகள் மேலேயும் மிகவும் பிரியமாக இருப்பவர். அவருக்கு எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது.  மிகவும் நல்லவர். நன்றாகப் படித்தவர்.  பண்புள்ளவர். ஆனால்  அப்படிப்பட்ட இவரின்   நடவடிக்கைகள் பெண்கள் உரிமைக்கு எதிராக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் வெளிப்படுத்தி சமூகத்துக்கு ஒரு பாடத்தைப் புகட்டவே (சமூகமே ஒரு பெரிய பாடம் என்று ஷ்யாம் சொல்வது என் காதில் விழுந்தது )  இந்த வழக்கைக் கொண்டுவந்திருக்கிறேன் “

“யெஸ், புரஸீட்”

” மேடம், நான் இதுநாள் வரை ஒரு சராசரிக் குடும்பப் பெண்போல இருந்து வந்தேன். சமையல், சினிமா, அரட்டை, சீரியல், குழந்தைகள், வீட்டு வேலை என்று இருந்து வந்தேன். திருமணத்துக்குப் பிறகு என் ஆசைகள் அபிலாஷைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்று ஆணாதிக்கம் எப்படி இருபது நூற்றாண்டுகளாகத் தீர்மானித்திருந்ததோ அதேபோல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அது எல்லோருக்கும் திருப்தியைக் கொடுத்து  வந்தது. ‘ஷாலு அருமையா குடும்பம் நடத்துறா’ என்று என் அப்பாவும் மற்ற உறவினர்களும் என்னைப் பாராட்டும்போதெல்லாம் என் மனதில் உள்ளூர ஒரு வலி தெறித்துக் கொண்டிருந்தது.

நான் எல்லோருக்கும் பிடித்தவளாக வாழுகிறேன்; ஆனால் எனக்குப் பிடித்தவளாக வாழ்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தது. பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இந்த சமுதாயம் போட்ட கோட்டில் நேராக நடப்பதற்கு நான் என் மனத்தை வளைத்து வளைத்துக் காயப்படுத்த வேண்டியிருக்கிறது. என் திறமைகளையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு ‘நான் ஒன்றுமே தெரியாதவள்’ போல  வெளிவேஷம் போட வேண்டி இருக்கிறது. எப்போதாவது ஓரிருமுறை என் திறமையை வெளிக்காட்டினால் அது .மற்றவர்களுக்கு அதிகப்பிரசிங்கத்தனமாகத் தோன்றியது.

எனக்கு ரெண்டு சாய்ஸ் இருந்தது. ரணமாகியிருக்கும் என் மனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அது மரத்துப் போனதாக நினைத்துக் கொண்டு செக்கு மாடு மாதிரி ஒரு குறுகிய வட்டத்திலேயே சுத்தி சுத்தி வருவது. இன்னொன்னு வருவது வரட்டும் என்று என் சக்தியை ஊருக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி அதன் மூலம் எனக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துவது.

நமது குருஜினியைக் கண்டுபித்தபிறகு நான் இரண்டாவது வழியை முயற்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஒவ்வொரு  மாதமும் நீ புதிது புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்ற குருஜினியின் கட்டளை எனக்கு மிகவும் பிடித்தது. அதன் படி நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். சிறு வயதில் கற்றுக் கொண்ட  நாட்டியத்தை மீண்டும் அரங்கேற்றினேன். குருஜினியுடன் சேர்ந்து கோமாதா பூஜை செய்தேன். பிறகு யோகா பயிற்சி செய்தேன். அவருடன் சிங்கப்பூருக்குப் போய்   பாரதப் பிரதமர் மோடி அவர்களைச்  சந்தித்தேன். இன்னும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மனதில் குதூகலம் அடைந்தேன்.

‘ உன் கணவர் உனக்கு உதவி செய்ததனால் தானே இத்தனையையும் உன்னால் சாதிக்க முடிந்தது ‘ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அது ஆணாதிக்கத்தின் ஒரு சிறிய சலசலப்பு  என்று தெரிந்து கொண்டேன்.

நான் நிறையப் பேசி எல்லோருடைய நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை.

என் கணவர் என்னை இதுவரை ஒரு பொம்மலாட்ட  பொம்மையைப் போலத்தான் நடத்தி வந்திருக்கிறார்.   முதன் முதலில் அவருடைய  கம்பெனி இண்டர்வியூவில் பார்த்தோம். பிறகு மகாபலிபுரம் கலங்கரை விளக்கத்தருகே சந்தித்தோம். அவர் நண்பருக்காகப் பெண் பார்ப்பது போல வந்து என்னைப் பார்த்து விட்டுப் பிறகு உண்மையைக் கூறித் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி நாலைந்து மாதத்திலேயே என்னை வேலையை விட்டுவிடும்படிக் கூறினார். எனக்கு அதற்கு விருப்பமில்லைதான். ஆனால் கடைசியில் அவருடய விருப்பமே நடைபெற்றது.

அவர் , அவருடைய பள்ளி, கல்லூரி  வாழ்க்கை , அவருடைய சிறுவயது கனவுகள் பற்றி நாள் கணக்காக மணிக் கணக்காகப் பேசுவார்.  ஆனால் என்னுடைய  கனவு என்னவென்று நான் சொல்லத் தொடங்கும் போது குறட்டைவிட்டுத் தூங்குவார்.

பெண்டாட்டி , குழந்தை குட்டிகளை விட அவருக்கு அவருடைய ஆபீஸ், சாப்பாடு, தூக்கம் இவைதான் முக்கியம்.

வீட்டு வேலையில்  எனக்குக்  கொஞ்சம் கூட உதவிக்கு வர மாட்டார்.

குழந்தைகளை செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்.

நான் பிறந்த வீட்டில் வளர்ந்த விதத்தைப்  பற்றிக் கிண்டலாகப் பேசுவார்.  நாங்கள் பேசும் பேச்சு, நாங்கள் உண்ணும் உணவு இவற்றையெல்லாம் கேலியாகப் பேசுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆனால்  ஷாலு  மை வைப் என்ற பெயரில் குவிகம் என்ற பத்திரிகையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு சீரியல் எழுதி வருவதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது அவருடைய    மாபெரும்  குற்றம்.

எங்கள் திருமணத்தின் போது வேடிக்கையாக ஆனால் சற்று சீரியசாக ஒரு அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டோம். அது எங்களுக்குள் மட்டும் தான்  இருக்கவேண்டும் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று உறுதிமொழி எடுத்திருந்தோம். அதைப்  பற்றியும் அவர் குவிகம் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  இது அவர் செய்த நம்பிக்கைத்  துரோகம்.

இதை அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே ? அதை விட்டுவிட்டு ஏன் இங்குவந்து சொல்லவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போல் ஏராளமான பெண்கள் கணவனின் நிழலிலேயே இருந்து தங்கள் உருவத்தைத் தொலைத்துவிட்டவர்கள், தங்களுக்குத் தெரியாமலே தங்கள் சிறகை உதிர்த்து விட்டவர்கள், என்றைக்காவது ஒருநாள்  நான் பறக்கப் போகிறேன் என்று எண்ணிப் பறக்க முயலும்போது தங்கள் சிறகுகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன என்பதை உணர்வார்கள்.

இந்தப் பிரச்சினையை இங்கே எழுப்புவதன் மூலம் அந்த  உண்மையின் சூடு  நம் நாட்டில் முடங்கிக்கிடக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச்சேரும்.  பிறகு மக்கள் மன்றத்துக்குப் போகும் – சட்ட சபைக்குப் போகும்-  நாடாளுமன்றத்துக்குப் போகும். புது சட்டம் உருவாகும்.

அதற்கு முதல் பொறி என்னுடையதாக இருக்கட்டும் என்று தான், நான்  காதலித்துத் திருமணம் புரிந்து கொண்ட  என் அன்பான கணவரை இந்த மேடையில் நிறுத்திக் குற்றப் பத்திரிகை வாசிக்கிறேன்.

அவருக்கு என்ன தண்டனை வழங்கினாலும் அது என்னைத்தான் காயப்படுத்தும் என்பதை உணருகிறேன். இருந்தாலும் இந்தப் பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்று இந்த மன்றத்தை யோசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

தட்ஸ் ஆல்,  யுவர் ஆனர். மன்னிக்கவும் மேடம்.  “

ஷாலு  அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் அழவில்லை. அவள் கண்களில் கலக்கமில்லை. ஒரு தெளிவு இருந்தது. இதயத்தின் ரத்த நாளத்தில் இருக்கும் அடைப்பை ஆஞ்சியோ மூலம் எடுத்தபிறகு இரத்தம் குபு  குபுவென்று ஒடுமே அதைப் போன்ற   நிலை அவளுக்கு.

நடுவர் மேடம் என்னைப் பார்த்தார்கள்.

“ஷாலுவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார்.

நான் மெதுவாக எழுந்து  நின்றேன். ஷாலுவைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் உணர்ச்சிகள் அவள் கழுத்து நரம்பில் துடிப்பதை உணர்ந்தேன்.

எனக்கு வார்த்தைகள் வரவில்லை.  என் கண்ளிலிருந்து கண்ணீர் பெருகி வரத் தொடங்கியது.  எனக்கு நினைவு தெரிந்து நான் அழுதது கிடையாது. ஆனால் இன்று   அது கண்களில் இறங்கிக் கன்னத்தை நனைத்து நெஞ்சில் விழும்போதுகூட அதைத் துடைக்கும் சக்தி என் கைகளுக்கு இல்லை.

குருஜினிக்கும்  நடுவர் மேடத்திற்கும்  என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மெல்லத் தட்டுத் தடுமாறி

” ஷாலு கூறிய அத்தனை குற்றங்களையும் நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் என் ஷாலுவை என் ஷ்யாம் – ஷிவானியை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்”  என்று சொல்லிவிட்டு நின்றேன்.

என் தலையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தேன்.

பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

பிறகு கண் விழித்துப் பார்க்கும் போது தான் தெரிந்தது அத்தனையும் கனவு என்று. எத்தனையும் என்று சொல்லத் தெரியவில்லை.

முற்றும்

 

 

 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 03. புரியாத புதிர்

(குவிகத்திற்காக  லதா பிரத்யேகமாக வரைந்த படத்துடன் இந்த மாத மணிமகுடம் தொடங்குகிறது ) 

ponniyin selvan1

குடந்தையின் அரசாங்க விடுதிக்கு முன்னிரவு வேளையில் வந்து சேர்ந்தான் வந்தியத்தேவன். தன்னிடமிருந்த அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த புலி வெள்ளி பதக்கத்தைக் காண்பித்தான். அங்கிருந்தவர்கள் மிகுந்த பய பக்தியுடனும், தடபுடலான மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள்.

அங்கிருந்த அரச சேவகர்களிடம், மாண்ட பாண்டியர் சதியாளர் கூட்டத்தைச் சேர்ந்தவனைப்பற்றியும், சோழ ஒற்றனின் மரணத்தையும், சோழ முதன் மந்திரி அன்பில் அநிருத்தபிரும்மராயரிடம் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான். மற்றும் தன் குதிரையை அடுத்த நாள் விடியற் காலைப் பயணத்திற்கு தயார்படுத்தச் சொன்னான்.

அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் பணியாள் அழைத்துச் சென்றான். பணியாள் மறுபடி உணவு எடுத்து வந்து வைத்துவிட்டு, அங்கிருந்த அகலில் நிறைய எண்ணைவிட்டுத் திரியை ஏற்றி விளக்கை நன்றாக எரியவிட்டுச் சென்றான்.

உணவை உண்டபின், வல்லவரையன் அவனுக்காகப் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தபடியே இடுப்பிலிருந்து பையை எடுத்து ஓலைகளைப் படுக்கையில் கொட்டினான். ஒவ்வொரு ஓலையிலும் ஒரு மூலையில் சிறு துவாரம் ஒன்று இருந்ததைக் கவனித்து அவைகள் ஒரு கயிற்றினால் கட்டியிருந்திருக்கவேண்டும் என்று அனுமானித்தான். ஆனால் இப்போது கயிறு காணப்படாததினால் தனித்தனியாய் இருப்பதையும் புரிந்து கொண்டான். எனவே ஓலையின் மேற்பாகம் எது என்பதை துல்லியமாய் கண்டுபிடித்து  ஓலைகளைப் படுக்கையில் கீழே தனித்தனியாகப் பரப்பி வைத்தான்.:

 

psraman1 psraman2 psraman3

தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓலைகளை ஆராய ஆரம்பிக்கத் தொடங்கினான்.

வந்தியத்தேவன் மனம் வினாக்களை எழுப்ப ஆரம்பித்தது. ‘இந்த குறிப்பேடுகளில் பத்து சித்திரங்கள் இருக்கின்றன.அவைகள் கைதேர்ந்த நிபுணனால் வரையப்பட்டவை அல்ல. சித்திரக்கலை என்றால் என்ன என்று தெரியாதவர் கிறுக்கிய படைப்பு இது. ஒருவேளை மாண்ட ஒற்றன் வரைந்தவை போலும்! அவன் சித்திரக்கலையில் பழக்கம் இல்லாதவனாக இருந்திருக்கலாம்! ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? இது நிச்சயமாக பாண்டிய சதிகாரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்’ என்று எண்ணியவாறு யோசனையில் ஆழ்ந்தான்.

கத்தியைப் பாய்ச்சியபின் அதை உருவப்போன சதிகாரனின் நினைவு அவனுக்கு வந்தது.

‘ஒற்றனின் உடலிலிருந்து கத்தியை உருவ முயன்ற சதிகாரன் ஏன் சட்டென்று முகத்தை அடையாளம் தெரியாதவாறு துணியால் மூடிக்கொண்டான்?அவன் கண்களைப் பார்த்த போது எங்கேயோ பார்த்தது போல் தோன்றியதே! முகத்தைப் பார்த்த போது அவ்விதம் தோன்றவில்லையே! ஏன்?’ என்றவை போன்ற எண்ண அலைகள் வந்தியத்தேவன் மூளையை வட்டமிட்டன.

கண்களை இறுக்க மூடினான். மனதில் புதைந்து கிடக்கும் லட்சோப லட்சம் எண்ண நினைவுகளுக்குள், புத்தியை உள்ளே புகுத்திக், கூர்மையாக்கித் தீவிரமாக அந்தக் கண்களுக்குரியவனைப் பற்றிய விவரங்களை அலசினான்! வெற்றி கிட்டியது!

************************************************************************

வந்தியத்தேவன் கரிகாலனைக் கொன்ற பழிக்காக தவறாகத் தஞ்சை பாதாளச்சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டிருந்தான் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். அப்போது வேறு காரணத்திற்காகச் சிறைப்பட்டிருந்த ஒரு கிருக்கனின் தொடர்பு கிடைத்தது. அவனுடைய சிகை பெரியதாக வளர்ந்து இரு பக்கங்களிலும் தொங்கியது. தாடி மீசை அபரிதமாக வளர்ந்து அவன் முகத்தை மறைத்தது. அவனுடைய கூர்மையான கண்கள் மட்டுமே வந்தியத்தேவன் மனத்தில் பதிந்திருந்தது. அவன் வருவோர் போவோர் எல்லோரிடமும் ‘பாண்டிய நாட்டுப் புராதன பொக்கிஷங்களான மணிமகுடமும் இரத்தின ஹாரமும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் எனக்குத் தெரியும், என்னை விடிவியுங்கள்’ என்று கூறிக்கொண்டிருந்தான். ஒருவரும் அதை நம்பவில்லை. ஏளனமாகச் சிரித்தார்கள். அதனால் அவனுக்கு ‘பைத்தியக்காரன்’ என்ற பட்டம் மட்டுமே கிடைத்து பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் உண்மையிலேயே பைத்தியக்காரன் அல்ல என்பதையும், அவன் பொக்கிஷங்களைப் பற்றிக் கூறுவது உண்மை என்பதையும், அவனுடைய உண்மையான பெயர் ‘கருத்திருமன்’ என்பதையும் வந்தியத்தேவன் பின்னர் அறிந்தான்.

பல தடவை ஈழத்திற்கு வீரபாண்டியன் பொருட்டுத் தூது சென்றிருக்கிறான். இவையெல்லாம் கருத்திருமன் வாயிலாகவே கேட்டு வல்லவரையன் தெரிந்துகொண்டான். குற்றவாளி போல் வேண்டுமென்றே நாடகம் நடித்து வந்தியத்தேவன் கருத்திருமனுடன் வெளியே தப்பினான். பொக்கிஷங்களின் இருப்பிடத்தின் உண்மைகளை அவனிடமிருந்து வரவழைத்துப் பின் சமயம் பார்த்து, அவனை மறுபடியும் சிறைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் ரகசியத்தை அவனிடமிருந்து தெரிந்து கொள்ளுமுன் கருத்திருமன் தப்பி ஓடிவிட்டான்!

***********************************************************************

பதிந்திருந்த அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தியத்தேவன் மனதில் பவனி வந்தன. ‘கருத்திருமனா அவன்!முடி, தாடி மீசை எல்லாம் மறைந்து இப்போது முகம் லட்சணமாகத் தென்பட்டது. பரட்டைத் தலையும் தாடி மீசையும் இல்லாததால் அவனை அடையாளம் கண்டு கொண்டிருக்க இயன்றிருக்காது! ஆம்! ஆழமாக நம் மனதில் பதிந்திருந்த கண்கள் மட்டுமே அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது! பாண்டிய சதிகாரக் கும்பலுடன் சேர்ந்த அவனுடைய வேலையா இது? அப்படியானால் சோழ ஒற்றன், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி சதிகாரர்களால் பேசப்பட்ட ஏதோ ஒரு உண்மையை, அவர்கள் அறியாமல் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!’ என்று முடிவு கட்டிய வந்தியதேவன் மீண்டும் சித்திரங்களை நோக்கினான்.

‘முதல் சித்திரம் ஒரு மலையைப் பற்றியது.அந்த மலைக்கு நடுவே ஓர் உருவம் தீட்டப்பட்டிருக்கிறது. அது ஆணா அல்லது பெண்ணா? இரண்டு கால்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டிற்கும் அதிகமான கைகள் இருக்கின்றனவே? இதற்கு என்னிடம் இப்போது விடை இல்லை. இரண்டாவதில் ஒரு மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் மேல் பகுதியில் வரையப்பட்டிருந்தது. எதையோ குறிக்கிறது. மூன்றாவது, ஆகா! இப்படியும் இருக்கமுடியுமா? இது கழுத்தில் அணியும் ஹாரமாகத்தான் இருக்கவேண்டும்! சந்தேகமில்லாமல் இது இரத்தின ஹாரம்தான்!!’ இவ்வாறு எண்ணிய வந்தியத்தேவன் முதல் படியைத் தாண்டிய பெருமிதத்துடன் மற்ற சித்திரங்களைப் பார்க்கலானான்.

‘நான்காவதில் நீண்ட கோடுகள் தென்படுகின்றன.ஆங்காங்கே சில வளைவுகளும் காணப்படுகின்றன. ஒரு புள்ளி கூட இருக்கிறது! அந்த ஒற்றன் ஏதோ ஒரு விவரத்தை இதன் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறான். அதை அறிந்து கொள்ள அதிக கவனம் தேவை. மற்றவைகளைப் பார்த்தபின் மறுபடி இதனிடம் வரலாம்’ என்று மற்றவைகளில் கவனம் செலுத்தினான்.

ஐந்தாவதில் ஒரு முழு சந்திரன் – ‘ஆ!! இது என்ன மற்றும் ஒரு முழு சந்திரனைப் போல் அல்லவா இருக்கிறது! இதில் மிகப் பெரியதோர் புதிர் புகுத்தப்படிருப்பது என்னவோ உண்மை! இவ்விரண்டு சந்திரன்களையும் பிணைத்திருக்கும் விவரம் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்று முடிவு கட்டினான். ஆனால் அது என்ன என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆறாவதில் நிறைய மனிதர்களைக் கண்டான். அதில் ஒருவர் நின்றுகொண்டு ஏதொ விளக்கிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது! மற்ற எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்திருப்பதும் தெளிவாகிறது..அது எதைக் குறிக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை!

‘ஏழாவது, இது என்ன?ஒரு கோவிலைப் போலல்லவா இருக்கிறது! அதற்கு அடியில் ஒரு கோவிலின் நுழைவாயில் போல் தோன்றுகிறது’ என்று இவ்வாறெல்லாம் அலசிக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

வந்தியதேவன் “உள்ளே வரலாம்” என்று உரக்கச் சொன்னான். கதவைத் திறந்துகொண்டு ஒரு பணியாள் உள்ளே வந்தான்.

உணவு கொண்டு வந்து வைத்திருந்த தட்டு முதலான பண்டங்களை அடுக்கி எடுத்தவாறே “தாங்கள் படுத்துறங்குமுன் ஏதேனும் தேவையா?” என்றான். வந்தியத்தேவன்

“ஆம்.ஒரு மரப்பலகையும் சிறு கரித்துண்டுகளும், கிழிந்த துணிகள் சிலவும் தேவை” என்றான்.

சிறிது நேரத்தில் கேட்டவைகளைக் கொடுத்துவிட்டுப் பணியாள் வந்தியத்தேவனை வணங்கிவிட்டு வெளியேறினான்.

வல்லவரையன் மறுபடியும் கவனத்தை சித்திரங்களின் மேல் திருப்பினான். ‘எட்டாவது!ஆகா! நமக்கு வேண்டிய விவரம் இதில் இருக்கிறது போலிருக்கிறதே! சந்தேகமில்லாமல் இது ஒரு கிரீடம்தான். பாண்டியர்களின் மணிமகுடம்! நாம் நினைத்தது போல் ரகசியம் பொக்கிஷங்களைப் பற்றி இருப்பதாகத் தெரிகிறது!’ என்று கணித்தான்.

‘அடுத்தது ஒன்பதாவது. மறுபடியும் ஒரு முழு நிலாவாகத் தென்படுகிறதே! ஐந்தாம் சித்திரத்தைப்போல் இதில் மற்றும் ஒரு சந்திரன் இல்லை. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் பத்தாவது. இரண்டாவது சித்திரத்தைப்போல் மேலும் கீழுமாக வளைந்த ஒரே கோடு சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. இந்த இரண்டு சித்திரங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?’ என்று சிந்தித்தான்.

முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்தது. இரண்டாவது கட்டத்திற்குச் செல்வதெப்படி?’ என்பதை வந்தியத்தேவன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தான்.

(தொடரும்) 

சாகித்ய அகாதமி விருது (எஸ் கே என்)

2015 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது திருமதி கௌரி கிருபானந்தனுக்கு வழங்கியதை நாம் பிப்ரவரி குவிகம் இதழிலேயே கூறினோம்.

அந்த விருது வழங்கும் விழா இந்த ஆகஸ்ட் மாதம் 4 ந் தேதி மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நடைபெற்றது.

Inline images 2

தெலுங்கில் வோல்கா என்பவர் எழுதிய கதையை மீட்சி என்ற தலைப்பில் எழுதியதற்காகக் கிடைத்த விருது இது இதற்காக கௌரி கிருபானந்தனை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். 

 

IMG_5737

(ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் எடுத்த புகைப்படம் )

 IMG_5735 IMG_5733

 

மணிப்பூரில் சாகித்ய அகாதமி நிகழ்வு

இந்திய அரசினால் 1954ல் இலக்கியத்திற்காக ஒரு தேசீய அமைப்பாக தொடங்கப்பட்ட சாகித்ய அகாதமி  இந்திய மொழிகளில் படைப்பு உலகத்திற்கு ஒரு சீரிய பணியை ஆற்றி வருகிறது. இடையிடையில் பல விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

அகாதமி யின் முக்கியச் செயல்பாடுகளுகளில் ஒன்றாக ஆங்கிலம் மற்றும் 23 இந்திய மொழிகளில் படைப்பு, இளைஞர்கள் படைப்பு, குழந்தைகளுக்கான இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று நான்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.

அகாதமி யின் ஒரு சில நிகழ்ச்சிகளில் பார்வையாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவ்வவ்போது? கிடைக்கும். 2015 ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு விருது  வழங்கும் விழா மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகரத்தில் ஆகஸ்ட் மாதம் 4 தேதி நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 5 ஆம் தேதி  கௌரவிக்கப்பட்ட மொழிபெயர்பாளர்கள் உரை மற்றும் ‘அபிவ்யக்தி’ என்னும் நிகழ்வின் முதல் பகுதியான கவிதை வாசிப்பு நடைபெற்றது. ஆறாம் தேதி நிகழ்வுகளான சிறுகதை வாசிப்பு, நான் எழுதுவதற்கான தூண்டுகோல் மற்றும் கவிஞர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளைக் காண இயலவில்லை.

மகாராஜா சந்த்ரகீர்த்தி அரங்கில் அரங்கிலும் வெளியிலும் அருமையான அலங்காரங்கள்.  நிகழ்ச்சி தொடங்கும் முன் நடந்த மணிப்பூரின் பரம்பரிய கலையான நடனமாடும் தாள இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி    (‘பங்க் சோலோம்’)  கண்ணிற்கும் காதிற்கும்  நல்ல விருந்தாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலில் மொழிபெயர்ப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள் அதில் வந்திருந்த 22 விருது பெற்றவர்களுக்கும் அவர்களைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கப்பட,  திரு திவாரி (சாகித்ய அகாதமியின் தலைவர்) மற்றும் ஞானபீட விருது பெற்ற குஜராத்தி எழுத்தாளர் திரு சவுதரி ஆகியோர் பூங்கொத்து, பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்கள்.

பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியாவின் ஒருங்கிணைப்பிற்கு மொழிபெயர்பாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருப்பதை தலைவர் திவாரி குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய திரு சவுத்ரி விருது பெரும் படைப்பாளிகளில் 13 ஆண்களும் 9 பெண்களும் என்று குறிப்பிட்டு இது இனி வரும் ஆண்டுகளில் தலைகீழாக மாறலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும் புதினங்களும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைத் தொகுப்புகளும் நிறைய இருந்தாலும் ஒரே ஒரு கட்டுரைத் தொகுப்புதான் உள்ளது என்றார். நாடகம் இல்லவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது என்றார்.

மறுநாள் முதல் அமர்வில் 22 விருதாளர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். உரைகள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ இருந்தது. (படைப்பின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்வதைவிட  படைப்பு வெளிவந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தலே சிறந்தது என்ற பொதுக் கருத்து நிலவியது. மொழிபெயர்ப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய கவனங்கள், படைப்பு மொழி பேசுபவர்களின் கலாச்சாரம் மற்றும்  இருமொழிகளிலும் நிலவும் சொலவடைகள் தெரிந்திருத்தல் , படிப்பினை ஆழ்ந்து படித்து உணரவேண்டிய தேவை, சரியான சொல் அல்லது சொற்றொடர் ஆராய்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் பலரது சொற்பொழிவுகளில் குறிப்பிடப்பட்டது. ஒரே ஒரு மொழிபெயர்ப்பாளர் தவிர மற்றவர்கள்  இலக்கு மொழியினரின் புரிதலுக்காக தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்பு கொடுப்பதுதான் சிறந்தது என்று எல்லோரும் கருத்து தெரிவித்தார்கள். ஒருவர் மட்டும்,   இலக்கு மொழியினரின்  புரிதலுக்காக  சொல்லப்பட்டவைகளில் கூட்டல் கழித்தல் மற்றும் மாற்றலும் கடைபிடித்து மொழிபெயர்ப்பு ஒரு மொழியாக்கமாக  இருக்கவேண்டும் என்றார்.

மாலையில் ‘அபிவ்யக்தி’யின் முதல் அமர்வாக கவிதை வாசிப்பு நிகழ்வு. அபிவ்யக்தி என்றால் வெளிப்பாடு  என்னும் பொருள் என்று சொன்னார்கள்.  கருத்து என்பது எல்லோருக்கும் இருந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் குறைவு. அவர்கள்தான் படைப்பாளிகள். சொல், இசை, சித்திரங்கள், சிற்பம் போன்ற பல சாதனங்களில் அந்த வெளிப்பாடு இருக்கக்கூடும். மொழிபெயர்ப்பு என்பது ஒருங்கிணைப்பு ஆயுதம் என்றும் சொல்லப்பட்டது. தொடர்ந்து தவிர அஸ்ஸாமிய, போடோ, மணிப்புரி, நேபாளி, டோங்க்ரி, ஹிந்தி கவிஞர்கள் தவிர தமிழகத்தை சேர்ந்த கவிஞர் யூமா வாசுகி கவிதைகளை வாசித்தார்கள். முதல் கவிதையை தங்கள் மொழியிலும் பிறவற்றின் ஆங்கில அல்லது ஹிந்தி மொழிபெயர்ப்புகளை வாசித்தார்கள்.

எல்லா நிகழ்வுகளும் சிறப்பாக இருந்தன. ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது நாள் நிகழ்வுகளை தவறவிடும் மனக்குறை இருந்தது. பணி நிமித்தமாக கொஞ்சம் ஹிந்தி பேசக் கற்றிருந்தது மிக உதவியாக இருந்தது. இல்லையெனில் ரசிப்பது மற்றுமின்றி  மற்றவர்களுடன் உரையாடுவதே மிகக் கடினம்.

இடையில் கிடைத்த சிறிது நேரத்தில், இம்பாலின் காங்க்லா கோட்டை, அருங்காட்சியகம், முழுவதும் பெண்களே நடத்தும் கடைகள் கொண்ட சந்தை RKCS கலைக்கூடம் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். (பெண்கள் நடத்தும் சந்தை மற்றும் அருங்காட்சியம் இரண்டுக்கும் இடையே எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்தில் மறுநாள் குண்டு வெடிப்பு நடந்தது)

தீர்க்கரேகை 94ல் அமைந்திருப்பதால் ஐந்து மணிக்கு முன்பே பொழுது விடிந்தது விடுகிறது. மிக அருமையான இயற்கை எழிலுடன் கூடிய மணிப்பூர் மாநிலம் சோகங்கள் நிறைந்த  வரலாறும், பழமை வாய்ந்த கலாச்சாரமும் உடையது.

Inline images 1

சில மாதங்களுக்கு முன்னால் சதுரங்கம் என்னும் நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மணிப்பூரில் அமலில் இருக்கும்   ராணுவம் (விசேஷ அதிகாரங்கள்) சட்டம் 1958 தொடர்பான சிக்கல்களை மையமாகக் கொண்ட நாடகம் அது.  கடந்த வாரத்தில் எல்லா தினசரிகளிலும்  மணிப்பூர் போராளி  இரோம் ஷர்மிளா  பற்றிய செய்திகள் வந்துள்ளன.   வரலாறும் அரசியல் சமூகச் சிக்கல்களும் குறித்த ஒரு கட்டுரை தனியாக எழுத வேண்டும்.         

 

கடல்புறா – ஒலிப்புத்தகம் – பாம்பே கண்ணன்

பாம்பே கண்ணன்  ஏற்கனவே பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் மிகவும் பிரபலமானவர்.  பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும்  போன்ற அருமையான கதைகளை ஒலி வடிவத்தில் தந்திருக்கிறார்.

அவரது சமீபத்திய மாபெரும் படைப்பு சாண்டில்யனின் கடல்புறா. சிறப்பான குரல் வளம் கொண்ட கலைஞர்களைக் கொண்டு தயாரித்த அந்த ஒலிப் புத்தகத்தின்  பெருமையை அந்தப் புத்தகமே பேசுகிறது. சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளை பாம்பே கண்ணனே படிக்க, மற்ற கதா பாத்திரங்கள்  உணர்ச்சியுடன்  காதில் தேன் வந்து பாய்ந்தது போல வளப்பமானத் தமிழைத் தெளிவாகக் கணீரென்று சொல்ல, கதையுடன் இழைந்து  வரும் மெல்லிசையும் சேர்ந்து இசைக்க நாம் நம்மை  அறியாமலே 1063க்கு – கதை  நடந்த காலத்திற்கே நாம் சென்றுவிடுகிறோம் என்றால்  அது ஒலிப் புத்தகமாக அமைத்த பாம்பே கண்ணன் அவர்களின்  வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

ஐ டி கம்பெனியில் முதன்மை அதிகாரியாக இருந்தாலும் தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் வெங்கடராமன் அவர்கள் பாம்பே கண்ணனுடன் இணைந்து இந்த ஒலிப் புத்தகங்களைத் தயாரிக்க வந்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

இதன் டிரைலரைப் பாருங்கள். இல்லை கேளுங்கள்!

கடல்புறாவின் ஒலிப்  புத்தகத்தின் வெளியீட்டு விழா நல்லி குப்புஸ்வாமி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ஆசிரியர் கிரிஜா ராகவன், சாண்டில்யன்  அவர்களின் மகன் சடகோபன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

2 டி வி டி கள். 3 பாகங்கள்.  42 மணி 34 நிமிடங்கள் ஆகும் இந்தப் புத்த்கத்தை முழுதும் கேட்க .  நிச்சயம் அவ்வளவு நேரம் ஒரேடியாகக்  கேட்க யாராலும் முடியாது.

மொபைலில் தினம் ஒரு அத்தியாயத்தைப் பதிவிறக்கம் செய்துகொண்டு  கேட்கலாம். அலுவலகத்துக்குக் காரிலோ இரயிலிலோ செல்லும் போது  அல்லது வீட்டில் இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது மனைவியுடன் சேர்ந்து கேட்கலாம்.

மேடையில் டெல்லி கணேஷ் நான் கேட்க  நினைத்த கேள்வியையே கேட்டார்.  ” இந்த ஒலிவடிவத்தில்  வருணனைகள் இல்லாமல் நாடகமாகச் செய்திருக்கலாமே ? ” என்று கேட்டார். பாம்பே கண்ணன்     ” வருணனைகளுடன்  சொன்னால் தான் புத்தகத்தை முழுமையாக  உணரமுடியும்”  என்றார். எனக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. ஒலிச்சித்திரமாக தேவையானால் கதை புரிய சில  வருணனைகளுடன்  அமைத்தால் இன்னும் நல்ல  வீச்சும் ரீச்சும் இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆனால் இது பாம்பே கண்ணனின்  வடிவம் ( வசனத்தைப் படிப்பவர் அவரே) . அதைப் போற்றுவோம். மேலும் பல புதுமைகள் வரட்டும். வரவேற்போம். 

2 டிவிடிக்கள் கொண்ட ‘கடல்புறா’ ஒலிப்புத்தகத்தின் விலை ரூபாய் 700/ .

நல்ல தமிழ் கேட்க விழையும் தமிழ் ரசிகர்களும், சரித்திரத்தில் ஈடுபாடு கொண்ட மக்களும், சாண்டில்யனின் வர்ணனைகளில் மனதைப்  பறி  கொடுத்தவர்களும், கடல்புறா என்ற காவியத்தில் கலந்து அதன் ஒவ்வொரு அணுவையும் ரசிக்கும் என் போன்ற உள்ளங்களும் இதை வாங்கிப் பயன்பெறவேண்டும். 

வாங்க நினைப்பவர்கள் திரு பாம்பே கண்ணன் அவர்களை அணுகலாம் ( மொபைல்: 9841153973) . கீழே குறிப்பிட்டுள்ள  இணைய தளத்தின் மூலமாகவும் பெறலாம்.

http://nammabooks.com/Buy-Novels-Essays-Tamil-Books-Online/Buy-Tamil-Historical-Novels-Online/buy-kadal-pura-audio-book

வரப்போகும் ஆகஸ்ட் மாத இலக்கியவாசல்

இன்றைய இலக்கிய யுகத்தின் மாபெரும் எழுத்தாளர்/பேச்சாளர் எஸ் ரா என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குவிகம்  இலக்கியவாசலுக்காக கே கே நகர் டிஸ்கவரி பேலஸ் அரங்கில் ஆகஸ்ட் 20 மாலை ஆறரை மணிக்கு  “சமீபத்தில் படித்த புத்தகங்களில் பிடித்தது” என்ற தலைப்பில் பேசுகிறார்.

 சொல் புதிது – பொருள் புதிது – பேசும் விதமோ புதுமைப் பொலிவு!

அனைவரும் வாருங்கள்!!

வந்தால் பேசும் நம் தமிழுக்குப் பெருமை!

நம் செவிக்கு விருந்து !

நம் அறிவுக்குத் தீனி. 

இலக்கியவாசல் ஜூலை நிகழ்வு – கதை கேளு கதை கேளு

சென்ற மாத இலக்கியவாசலின்  “கதைகேளு கதைகேளு ” என்ற நிகழ்வு மிக அருமையாக அமைந்தது. போன வருடம் இதே ஜூலையில் சிறுகதைச் சிறுவிழா என்ற பெயரில் கதைகளைப் படிக்க வைத்தோம். இந்த முறை அதற்கு மாறுதலாக  கதைகளைச் சொல்ல வைத்தோம். 

கதை சொல்வதைத் தொழிலாகக் கொண்ட சில கதை சொல்லிகளையும் அழைத்திருந்தோம். அவற்றுள் ஒருவர்தான் வர  முடிந்தது (திருமதி கீதா கைலாசம் அவர்கள்) . அந்தத் தொழில் வித்தகரிடமிருந்து அனைவரும் நிறைய கற்றுக் கொண்டோம்.

வந்திருந்த அனைவரும் கதையை மேடையில் சொல்வது இது தான் முதல் முயற்சி என்று சொன்னாலும் அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள்.  அதிலும் குறிப்பாகச் சதுர்புஜன்  அவர்கள் தேர்ந்தெடுத்த கதையும் சொன்ன விதமும் எல்லோரையும் கவர்ந்தது. 

அவரது வீடியோவை நீங்களே பாருங்கள் – கதையைக் கேளுங்கள் !

 

பிரபல கதை சொல்லி திருமதி கீதா கைலாசம் அவர்களின் கதையையும் கேட்டு மகிழுங்கள்.

 

திரு மாதேவன் என்ற இளைஞர் (இவர் வந்ததால் இலக்கியவாசல் வாசகர்களின் சராசரி வயது  வெகுவாகக் குறைந்தது) சொல்லிய கதையையும் அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலையும் கேளுங்கள்! 

 

இந்த வீடியோக்களுடன் மற்ற கதை சொல்லிகளின் கதைகளையும் கேட்க/பார்க்க  http://ilakkiyavaasal.blogspot.in/p/blog-page.html என்ற வலைப்பூவிற்குச் செல்லுங்கள்! 

 

முடிவு எடுத்த அந்த நொடி – லதா ரகுநாதன்

 

காத்துக்கொண்டிருந்தாள் சில பல மணி நேரங்களாக ! story1

காலையில் ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் கமலா ஆரஞ்சுப்பழம் போல மெதுவாக கீழ் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் கத்திரி ஆரம்பமாகவில்லை.அதற்குள் என்ன கசகசப்பு. காலையில் கஞ்சி முடமுடப்போடு விறைப்பாக இருந்த புடவை வியர்வையில் நனைந்து சுருங்கி கால் பக்கம் மேலே ஏறி இருந்தது. நூறு தடவைக்கு மேல் யோசித்து விட்டாள். ஆனால் முடிவு எடுக்க முடியவில்லை. டூ வீலர் வாங்கிடலாம்…வேண்டாம்.. யாராவது லேசாக இடித்தால் கூட உயிருக்கு உத்தரவாதமில்லை. கால் டாக்ஸி உபயோகிக்கலாம். வேண்டாம், வாங்கும் சம்பளம் அதிலேயே போய்விடும். கார் வாங்கலாம், வேண்டாம் நிறுத்துவது சிரமம், வீட்டிலும் சரி, ஆஃபீசிலும் சரி!  ஷேர் ஆட்டோ..வேண்டாம். நிறைய நடக்க வேண்டியிருக்கும். இப்படி காரணங்கள் தேடித்தேடி தினமும் பஸ்ஸில் அவதிப்படுவது நிரந்தரமாகிவிட்டது.

யோசித்துப்பார்த்தாள். எது அவளை முடிவெடுக்க விடாமல் தடுத்தது?

ஒரு நாள் , பஸ் காலியாக வந்தது. அப்பாடி என்று பெருமூச்சு விட்டு டிக்கட் வாங்குவதற்குள் அடுத்த ஸ்டாப். தடதடவென்று பெரிய கும்பல்.
“போம்மா முன்னாடி இடம் இருக்குதில்ல..என்னமோ ஆணி அடிச்சாமாறி நின்னுக்கினு”…கண்டக்டர் எல்லோர் முன்னாலும் கத்தியது அவமானமாக இருந்தது. இன்னும் டிக்கட் எடுக்கவில்லை என்று சொல்ல பயமாக இருக்க, முன்னால் நகர்ந்தாள்.

“டிக்கட்..டிக்கட்..யாரும்மா முன்னாடி கொடுத்தனுப்பும்மா..இந்த கும்பல்ல ஒவ்வொருத்தர் கிட்டே வந்து டிக்கட் கேட்க முடியும். வாங்கிட்டு முன்னே போக வேண்டியதுதானே, வந்துட்டாங்க..”
கடைசியில் எல்லார் முன்பும் அவள் மேல் குற்றம் சாட்டப்பட்டது.

அன்று முடிவெடுக்கவில்லை.

மற்றும் ஒரு நாள்….

பஸ் ஏகத்திற்கு  நிறைந்திருந்தது. ஃபுட்போர்டிலிருந்து ஒரு வழியாக மேலே ஏறினாள்.

“ஐய்ய! கண்ணு என்ன பின்னாடியா இருக்கு. இப்படி காலை முதிக்குற”. ஒரு கறிகாய் கூடைக்காரி கூடையால் இடித்தாள்.
”சாரி”
“இத ஒண்ணு கத்து வெச்சிக்கிட்டாங்க. படிச்சவங்க..இந்த சாரி பூரிய சொல்லிபுட்டா வலி குறஞ்சிடுமா? யாருக்கு வேணும் உன்னோட சாரி. செருப்புக்காலால நசுக்கிப்புட்டு அப்புறம் என்ன சாரி”
இதை மனசில் வைத்துக்கொண்டு இன்னொரு நாள் யார் காலையோ தவறுதலாக மிதித்த போது சாரி சொல்ல வந்ததைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அவளின் தோள்களை மெல்ல கைகளால் தொட்டாள்.
“ஏம்மா காலை உடச்சுப்புட்டு மேல வேற வந்து விழறே..ஒரு சாரி சொல்ல மனசில்ல”
“ கறுப்பாயி, எப்படி முழி முழிக்குது பாரு..இன்னாடா கஸ்டம் குடுத்துட்டமேன்னு ஒரு மன்னிப்பு கேக்குதாபாரு..”

இப்போதும் தவறு அவள் மேல்தான்.

அன்றும் முடிவெடுக்கவில்லை.

பஸ் இன்னும் வந்தபாடில்லை. போய்ச் சேருவதற்கு ஒரு மணி நேரம். அப்புறம் சமையல்…. கூட்டமாய் வந்தால் நிறுத்தாமல் போய்விடுகிறான். நிறுத்தினாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை.

அன்று அப்படித்தான். அவள் நின்று கொண்டிருந்த சீட் காலியாகியது. உட்கார்ந்துவிட்டாள். அடுத்த ஸ்டாப்பில் ஒரு மகளும் தாயும். மகளின் கையில் இரண்டு வயதுக்குழந்தை. உடனே எழுந்து அந்தத்தாயை அமரச்செய்தாள். குழந்தையைத் தாயிடம்  கொடுத்துவிட்டு மகளும் இவளுக்குப்பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். இன்னும் இரண்டு ஸ்டாப்புக்குப்பிறகு இன்னொரு பக்கத்து சீட் காலியாகியது, இவள் உட்காரப்போனாள். அதற்குள் அந்த அம்மா தன் கையில் வைத்திருந்த குழந்தயை சீட்டில் வைத்துவிட்டு ..” டீ கலா! வா சீட் காலி இங்கே” என்று பெருங்குரல் எடுத்துக்கத்தினாள்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக்காட்டு..இதுதான் போல!

அன்றும் முடிவெடுக்கவில்லை.

ஆயிற்று, பஸ் வந்தபாடில்லை, இப்படிநடந்ததை யோசித்து யோசித்தே சோர்ந்து போனாள். ஒரு ஆட்டோ பிடித்திருக்கலாமோ?

கூட்டம் நிரம்பி வழிய பஸ் ஒரு பக்கமாய் சாய்ந்து வந்தது. பஸ் கலாச்சாரப்படி யாரும் இறங்கவோ ஏறவோ வழி கொடுக்கவில்லை. இங்கேதான் ஏறும்பாதை, இறங்கும் பாதை எல்லாம் ஒரே போல் இருக்கின்றதே!

ஒரு வழியாக ஏறிவிட்டாள். டிக்கட் எடுத்து மடித்து கைக்கடிகாரத்தின் அடியில் சொருகிவைக்கும்போது பின்னால் ஒரு நீள பென்ச் சீட் கிடைத்துவிட்டது. காலைத் தரையிலிருந்து உச்சாணிக்கொம்பில் இருக்கும் முதல் படியில் வைக்கும்போது கேட்ட மளுக் சத்தம் இப்போது வலிக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் பார்த்தாள். ஒரு 70 வயது கண்ணில் சோடா புட்டி அதன் வழியே பூதாகாரமாய் வெள்ளையோடிப்போன கண்களால் அந்த மூதாட்டி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் கம்பியைப் பிடிக்க  முடியாமல் ஒரே ஆட்டம். ஏதோ கெஞ்சுவது போல இவளையே பார்த்த பார்வை.
கொஞ்சம் உட்கார இடம் கொடு என்று பார்க்கிறாளோ? ஆனால் எதுவும் கேட்கவில்லை. முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தாள். அவர்களின் மேல் சாய்ந்தும் நிமிர்ந்தும்தான் அந்த மூதாட்டி நின்றுகொண்டிருந்தாள். பெண்களுக்கு இருவது வயதுதான் இருக்கும். பாய் ஃப்ரெண்ட் சொன்னது, கேட்ட்து தொட்டது..இது பற்றி மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குப்பக்கத்திலும் இளம் வயதுப்பெண்கள்தான். யாரும் அந்த மூதாட்டிக்கு இடம் கொடுக்கவில்லை. இவளுக்குக் கால் வலி முணுக்கென்றது. இது வரை மனித நேயம் பற்றிய பல நிகழ்ச்ச்கள் மனதில் தோன்றியது.

சே! உனக்கெதுக்கு வம்பு! வாங்கின அடி பத்தாதா?

அவள் மனது இறுகியது. அந்த மூதாட்டியின் பார்வையை அலட்சியப்படுத்தினாள்.

அப்போதுதான் அந்த நொடி வந்தது.

அந்த நொடியில் பஸ் ஒரு குலுக்கல் போட்டு முன்னே சென்று நின்றது.எல்லோரும் முன் நோக்கி நகர்ந்தனர். அந்தக்குழப்பத்தில் அரைகுறையாய் கம்பியைப்பிடித்தபடி நின்றிருந்த அந்த மூதாட்டி முதல் படியில் விழுந்து பின் ஸ்லோ மோஷனில் இரண்டாவது, கடைசி படிகளில் உருண்டு தரையில் மண்டையில் அடிபட விழுந்தாள்.ஒரு நூல் இழையாக ரத்தம் கோலம் போட்ட்து. திறந்திருந்த கண்கள் இன்னும் அவளையே பார்த்தன. சிறிதும் அடிபடாமல் சோடாபுட்டி கண்ணாடி நடு ரோடில் கிடந்தது.கண்களில் உயிர் இல்லை.

ஆனாலும் கேள்வி கேட்டது.. “இடம் கொடுத்திருக்கலாமே”.

இப்போதும் தவறு அவள் மேல்தான்.ஆனால் இதை யாரும் சொல்லவில்லை அந்த புரையோடிய கண்களைத் தவிர.

இனி பஸ்ஸில் ஏறப்போவதில்லை..அந்த நொடியில் கடைசியாக அவளுக்காக முடிவெடுக்கப்பட்டது.

 

 

 

அந்த ஒரு நிமிடம் . . -ஈஸ்வர்

அந்த ஒரு நிமிடம் . .

clock clocks

திரை விலக.

நல்ல சிவத்தின் மாணவன் மீது வெளிச்சம் . . .

(குழம்பிப் போயிருக்கும் மனநிலையில் அந்த மாணவன் சொல்வது) …

என்னால மாத்திரம் இல்லே. இந்த  மெடிக்கல் காலேஜ் மாணவங்க  யாரைக் கேட்டாலும்  இதையேதான் சொல்லுவாங்க.  எங்க டீன்  நல்லசிவம் இதைப் பண்ணியிருக்க சான்ஸே  இல்ல. அவரை மாதிரி ஒரு நல்ல மனுஷனை.  ஒரு நல்ல டீனை   தமிழ்நாட்டுல எந்த மெடிக்கல் காலேஜிலேயும் பார்க்கவே முடியாது.

(இப்பொழுது அவன் இடம் மாறி வெளிச்சம்படும் இன்னொரு வட்டத்தில். இப்பொழுது அவன் அவர் பக்கத்து வீட்டுக்காரனாக)

நல்ல சிவம் ஐயா எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடுதாங்க. . .  ஒரு பெரிய மெடிகல் காலேஜ் டீன்னு அவரைப் பார்த்து சத்தியம் பண்ணி சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்க . . . அவ்வளவு சிம்பிளுங்க…..  இவ்வளவு ஏங்க…. ரெண்டு வருஷம் முன்னாடி அவரு பொண்ணு கல்யாணம் நடந்ததுங்க. .  ஒரு மெடிகல் காலேஜ் டீன் பொண்ணு கல்யாணம்னு யாராச்சம் அதை சொல்வாங்களா?

கோவில்ல வச்சுதாங்க மாப்ளை தாலிகட்டினாரு…. கூடவே அமெரிக்கா கூட்டிகிட்டுப் போயிட்டாரு.. நூறுபேருகூட மொத்தமாக  இல்லீங்க கல்யாணத்துக்கு… அவரால மாத்திரந்தாங்க இப்படியெல்லாம் செய்ய முடியும்.  கூப்பிட்டவங்க எல்லாரையும் அவரு எப்படி கவனிச்சாரு. எல்லாம் கூடவே இருந்த எனக்குத் தாங்க தெரியும்.  அவரு போயி இப்படி செஞ்சாருன்னு சொன்னா,  நம்பறா மாதிரியா இருக்குது?.

(ஒளி வட்டம் மாறுகிறது. வேறு இடத்திற்கு)

இப்பொழுது அதே மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவனின் தந்தையாக.

இவரைப் பத்தி முழுக்கத் தெரியாதவங்க  என்ன வேணும்னாலும் பேசுவாங்க… யார் வேணும்னாலும் அதை நம்புவாங்க . .  எங்களால முடியாதுங்க… ( கண்களை இலேசாகத் துடைத்தவாறே)   இன்னிக்கு என் பையன் இதே மெடிகல் காலேஜில மூணாவது வருஷம் படிப்புங்க… கையில காசே இல்லாத குடும்பமுங்க…. கவர்மெண்ட்டு போடற சலுகையிலதாங்க என்னைய மாதிரி ஆளுங்க குடும்பமே நடக்குது.. மவன் படிப்புல கெட்டிக்காரனுங்க .. மேல டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டாங்க… ஊர்ல சில நல்லவங்க வழிகாட்டுதல்..  உதவி … இவரை வந்து பாத்தேனுங்க… பையன்கிட்ட சில கேள்விங்கதாங்க கேட்டாரு… நாளைக்கு காலேஜூக்கு வான்னாருங்க… ஒரு பைசா வாங்காம அட்மிஷன்  என் புள்ளாண்டானுக்குக் கெடச்சுதுங்க… அவுரு கோட்டா… அது இதுன்னு ஊருல சொன்னாங்க. லட்ச லட்சமா கொடுத்தாலும் கெடக்காத சீட்டுன்னு சொன்னாங்க.    இந்த மனுஷன் இப்படி செஞ்சிட்டாருன்னு  சொல்றீகளே.. நாக்கு அழுகிப் போயிடுமிய்யா

(ஒளி வட்டம் மாறுகிறது)

ஒரு நிருபரா நான் இந்த செய்திய சேகரிச்சுகிட்டு வந்து எங்க எடிட்டர்கிட்ட கொடுத்தப்போ. அவரு தெகச்சிப் போயிட்டாரு… நல்லசிவத்தைப்பத்தி என் பத்திரிகைல இப்படி ஒரு செய்திய நான் எப்படிப்பா தீர விசாரிக்காம போட முடியும்?. அவனைப் பார்த்துட்டு முழுவிவரமும் தெரிங்சிக்காம நான் இந்த செய்தியை பிரிண்ட்டுக்கு அனுப்பவே மாட்டேன் .. பத்திரிகை சேல்ஸே படுத்தாலும் சரி. நான் மொதெல்ல அவனைப் பார்க்கணும்னு உடனே போயிட்டாரு. நேரமாயிகிட்டே போவுது. மார்னிங் எடிஷன் போயாவணும் மை காட் ! … எடிட்டர் கிட்டேர்ந்து ஒரு  நியூசும் காணோமே.

(ஒளி வட்டம் சுழன்று சுழன்று நிற்கிறது)

(மையமாக…          மையத்தில் மிகவும் அமைதியாக நல்லசிவம் நின்று கொண்டிருக்கின்றார்.  சலனமற்ற முகம்   மெதுவாக உள்ளே எடிட்டர் வருகிறார். நல்லசிவம் மிகவும் சோர்ந்து. தளர்ந்து காணப்படுகிறார்)

எடிட்டர் :-           ஒரு பத்திரிகை  எடிட்டர்ங்கற முறைல. என் இன்ப்ளுயன்சைப்  பயன்படுத்திகிட்டுத்தான் உங்கிட்ட பேசவே போலீஸ் பர்மிஷன் கெடச்சது. வாயயே தொறக்க மாட்டேங்குற… நல்ல சிவம் .. ப்ளீஸ் இன்னும் பதினஞ்சு நிமிஷந்தாண்டா இருக்கு… என்ன நடந்ததுன்னு சொல்லு சிவம். ப்ளீஸ்…  நல்லசிவம் அவரைத் திரும்பி மௌனமாகவே பார்த்துவிட்டுப் பழைய நிலைக்கே வருகிறார்.

எடிட்டர் :-       இந்த ஹரிகிட்ட கூட நீ நடந்ததை சொல்லலேன்னா அப்புறமா ஐம்பது வருஷமா நாமரெண்டுபேரும் பிரண்ட்ஸுன்னு சொல்லிக்கறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும் சிவம்.  எனக்கு நல்லா தெரியும். நீ இப்படி பண்ணுற ஆளே இல்லை. எங்கியோ தப்பு நடந்திருக்கு. எனக்குத் தெரிங்சாகணும் ப்ளீஸ் .. சொல்லு சிவம்!

நல்லசிவம்:-   (மெதுவாக அவரையே பார்க்கிறார்…)  ஹரி .. . . ( நிறுத்தி நிதானமாக) இந்த சமூகத்துல ஒரு ப்ரெண்டு கிட்டியே சிலதெல்லாம் சொல்லமுடியாதுடா.. அதுலயும் நீ ஒரு பத்திரிகை எடிட்டர் வேற ..

ஹரிஹரன்:-   ( சிவனையே பார்க்கிறார்)  தெரியும் சிவம் . . . நானும் இந்த சமூகத்துல பொறந்து வளர்ந்தவன்தானே சிவம் . . . கணவன் – மனைவி உறவுங்கறது எவ்வளவு புனிதமானதுன்னு எனக்குத் தெரியாமலா  உன் கேசுல என்ன நடந்ததுன்னு விசாரிக்க நேரவே ஓடி வந்திருக்கேன். ஆமா. செண்பகம் கூட ஏதாவது சண்டையா?

நல்லசிவம் :-  (பெருமூச்சு விட்டவாறு. . மெதுவாக இங்குமங்கும் நடந்தவாறு….  .)  கணவன் –  மனைவி –  உறவு – புனிதம்.  ம்.. .  கேக்க நல்லா இருக்கு. இல்ல ஹரி .. இதெல்லாம் இன்னமும் இந்த சமூகத்துல இருக்குன்னு நெனக்கிறியா ?

ஹரிஹரன்:-    நீ நம்புறயோ இல்லியோ. நான் நம்புறேன்.. நம்ம சமூகம் இருக்குறவரை இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும் சிவம்.  போயிடாது… அழிஞ்சுடாது

நல்லசிவம் :-   ஆனா. கொஞ்சம்  கொஞ்சமா மாறும். மாறுது….      ஹரி… . .  மாறிகிட்டுவருது ஹரி  . . .

ஹரிஹரன் :-    என்ன சொல்ற சிவம் ?

நல்லசிவம் :-   செண்பகத்தை உனக்கு எவ்வளவு நாளா தெரியும்?

ஹரிஹரன் :-   இது என்ன கேள்வி? நீயாவது உன் கல்யாணத்து அன்னிலேர்ந்துதான்  அவகிட்ட பேச ஆரம்பிச்ச. . . ஆனா, தேனி பக்கம் ஒரு சின்ன ஊர்ல உன் கல்யாணத்துக்கு மொத நாளே அவ எங்கூட பேச ஆரம்பிச்சவ. என் சிநேகிதனுக்கு வரப்போறவகிட்ட அவன் சார்பா மொதல்ல நான்தான் பேசுவேன்னு,  அந்தக் காலத்துலயே அழிச்சாட்டியமா போய் நின்ன ஆளு நான் .

நல்லசிவம்:-    இப்பவும் நீயும் நானும் மூணுமாசத்துக்கு ஒரு தரமோ ஆறுமாசத்துக்கு ஒரு தரமோ. பாத்துக்குறோம்… வாரா வாரம் போனுல பேசிடறோம். இருந்தாலும் இப்ப உன் சம்சாரம் பத்தி எனக்கோ,  என் சம்சாரம் பத்தி உனக்கோ எந்த அளவுக்குத் தெரியும்னு,  உனக்கு ஏதாவது ஐடியா  இருக்கா. ஹரி?

(ஹரி கொஞ்சம் திடுக்கிடுகிறார்.)

ஹரிஹரன்:-    இது என்ன கேள்வி சிவம்? அப்ப நான் பார்த்த அதே செண்பகத்தையா நான் இப்பவும் பாக்கமுடியும். முப்பது வருக்ஷம் தாண்டிரிச்சில்ல. வயது கூடியிருக்கும்.  உருவம் கூடியிருக்கும். பருமனும் கூடியிருக்கும் . . இதெல்லாமா ஒரு கேள்வி ? .

நல்லசிவம்:-    இது தான் ஹரி. எல்லாருமே சொல்லக்கூடியது. ஆனா ஆசைங்க கூடியிருக்கும் பேராசையா பெருகியிருக்கும்.  நமக்குக் கூடி வராதது எதுவும் இருந்திரக்கூடாதுங்குற  வெறியும் அதிகமாயிருக்கும். அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லத் தோணவே இல்ல. உனக்கு இல்லியா?

ஹரிஹரன்:-   நான் பார்த்த வரை செண்பகம் அப்படிப்பட்ட பொண்ணு இல்லியேப்பா!

நல்லசிவம்:-    நான் பார்த்தவரை கூட செண்பகம் அப்படிப்பட்ட மனைவியா இருக்கல ஹரி.. ஆனா இந்த பத்து வருஷமா அவ மாறிகிட்டேதான் வந்திருக்கான்னு எனக்கே தெரியாம போயிருச்சே. உனக்கு மாத்திரம் எப்படித் தெரிஞ்சிருக்கும்?

ஹரிஹரன்:-    இது என்ன சிவம். புதுக் கதையா இருக்கு?

நல்லசிவம் :-    (மறுபடியும் யோசித்து)   கொறையான்னு எனக்குத் தெரியலை. . . அதுவும் அவளுக்கு எதிரான கொறையான்னு எனக்குச் சொல்லத் தெரியலை.  இருந்தாலும்.. எஸ்… கொறைதான் யூ கேன் கால் இட் எ சார்ஜ் (You can call it a charge … ) எஸ் நம்ம சமூகத்து மேல நான் இந்த சார்ஜை  வைக்கறேன்.

ஹரிஹரன்:-     என்ன சொல்ற நீ?

நல்லசிவம்:-    இந்தப் பத்து வருஷமா. என் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வந்திருக்கு.. மாறாம இருக்க நெனைச்ச என்னையும் மாத்திடும் போல இருக்கு. அக்கம் பக்கத்தைப் பார்த்துப் பார்த்து நம்மளை அறியாமலே  நாமே மாறிக்கிட்டு வரோமோன்னு நெனைக்கத் தோணுது. எல்லாத்தைவிட உலகத்துல பணமும், செல்வமுந்தான் பெரிசுங்கற எண்ணத்துக்கு-  நெலமைக்கு , இந்த உலகம் – இந்த நாடு –  நம்ம ஊரு, உற்றம், சுற்றம்,. சொந்த பந்தம்குடும்பம் எல்லாமே மாறிகிட்டு வருதோன்னு தோண ஆரம்பிச்சிரிச்சு, ஹரி !

ஹரிஹரன்:-      நான்சென்ஸ் !  ஏன் இப்படி எல்லாம் நெனைக்குறே…? நீ மாறிலியே. உலகம் உன்னை அதே நல்ல சிவமாத்தானே பார்க்குது.. நல்லசிவம்  செஞ்சிருக்கமாட்டாருன்னுதானே சொல்லுது. எது மாறிடிச்சிங்கறே?

 

நல்லசிவம் :-    (நிதானமாக) அந்த ஒரு நிமிஷம் எல்லாத்தையும் மாத்திரிச்சு ஹரி. செண்பகம் அப்படியேதானே இருக்கான்னு நீயும் நானும், அவ மாறினதையே புரிஞ்சிக்கில.. இந்த நல்லசிவம் மாறாமா அப்படியேதானே இருக்கான்னும், நீயும் உலகமும் இன்னமும் நம்புறீங்களே… ஆனா எல்லாத்தையும் அந்த ஒரு நிமிஷம் மாத்திரிச்சே..    ( விம்முகிறார்..)

ஹரிஹரன்:-     (அவர் அருகில் வந்து அவரை ஆதரவாகப் பற்றி)  நீயா சிவம் இது? என்னடா ஆச்சு , உனக்கு?

————————————————–

(இலேசாக மேடையில் இருள் ..  இருள் மெல்ல மெல்ல விலகி வெளிச்சம் பரவ,  மேடையில்  ஒரு நாற்காலியில் நல்லசிவம் இன்னொரு பக்கம்- வட்ட ஒளியில் செண்பகம் ஐம்பது  – ஐம்பத்தி ஐந்து வயதினளாக)

செண்பகம்:-        இதோ பாருங்க. . .  என்னால இதுக்கு மேல உங்ககிட்ட மல்லுக்கு நிக்க முடியாதுங்க… இன்னும் ரெண்டு வருஷத்துல நீங்க ரிட்டயர் ஆயிடலாம் .

நல்லசிவம்:-      தெரிஞ்ச விஷயந்தானே? அதுக்கென்ன இப்போ?

செண்பகம்:-     கல்யாணம் ஆயி. இந்த ஊருக்கு நான் வந்தப்போ. ஏதோ ஒரு காலேஜ் லேபில்ல டெமான்ஸ்ட்ரேட்டரா இருந்த உங்களுக்கு (லெக்சரரா ப்ரோமோஷன் கெடச்சுது. சைக்கிள்ல அதுவரை போயிகிட்டிருந்த நீங்க ஸ்கூட்டருக்கு மாறினீங்க.

நல்லசிவம்:-    ஆமா.  இல்லேங்கிறியா?

செண்பகம்:-    ஏழெட்டு வருக்ஷம் கழிஞ்சப்புறமா. ப்ரொபசரா பதவி உயர்வு கெடச்சது. அப்பவும் உங்க பின்னாடியே ஸ்கூட்டர்தால தான் போகணம்னு என் தலைல எளுதியிருந்தது.

நல்லசிவம்:-    இப்ப எதுக்கு அதெல்லாம்? மலரும் நினைவுகளா?

செண்பகம்:-    இல்ல. எரிச்சலான நினைவுங்க?

நல்லசிவம் :-   (சற்றே நக்கல் பார்வையாக) ஸ்கூட்டர்ல போனது எரிச்சலான நினைவுகளா? புரியலியே?

செண்பகம்:-        புரியலை இல்லையா? புரிய வைக்கிறேன். அந்த காலேஜில ஹெச் ஓ  டி  ஆனப்பறம் ஒரு பத்மினி ப்ரிமயர்னு ஏதோ ஒரு செகண்ட் ஹேன்ட்  காரு வாங்கினீங்க.

நல்லசிவம்:-   ஆமா.. நல்ல காருதானே!

செண்பகம்:-  அதுக்காக இன்னிவரைக்கும் அதே காரைத்தான் வச்சிக்கணுமா?

நல்லசிவம்:-      ஏன் அதுக்கென்ன… மொறப்படி சர்வீஸ்க்கு விடறேன். இன்னமும் நல்லாத்தானே ஓடிகிட்டிருக்கு

செண்பகம் :-    கேவலமா இல்லை? (பொண்ணு கல்யாண சமயங்கூட அதை மாத்தமாட்டேன்னு பிடிவாதமா இருந்தது நல்லவா இருந்திச்சி? தெரியாமத்தான் கேக்குறேன். ஒரு மெடிகல் காலேஜ் டீன் செய்யுற  காரியங்களா இதெல்லாம்?

நல்லசிவம்:-     (சற்றே குரல்)  இதெல்லாம்னா?..

செண்பகம்:-     இதைத் தாங்க நான் கையாலாகாத்தனம்னு முட்டிக்கிறேன்.

நல்லசிவம்:-      முட்டிக்க . .  நா என்ன செய்ய?  சிம்பிளா வாழ்ந்தா போதும்னு நெனைக்குறது  கையாலாகாத்தனம்னு நீ சொன்னா. நான் அப்பிடியே ஒத்துக்கிடணுமா?

செண்பகம்:-      ஒத்துக்காதீங்க.. உங்களை மத்தவங்க எளக்காரமா பேசறப்ப என் மனசு எம்புட்டு பாடுபடுதுன்னு கொஞ்சமாவுது உங்களுக்கு யோசனை இருக்குதா?

நல்லசிவம்:-           என் சம்பளத்துல நான் வாழறேன். வீட்டைக் கட்டின கடனே எனக்கு இன்னும் முடியலை. செண்பகம். வசதியான வீடுதானே?

செண்பகம்:-    ஏதோ ஒரு எண்ணூறு  சதுர அடிலே வீட்டைக் கட்டிப்புட்டாராம் வீட்டை .. யாரும் கட்டாத வீட்டை!  ஒரு மெடிக்கல் காலேஜ் டீனு வீடு மாதிரிமா இருக்குது இது?  கவர்மெண்ட்டுல வேலை செய்யுற ஒரு க்ளாஸ் போர் கட்டினவீடு கூட இதைவிட சூப்பரா      இருக்கும் !      வெளில சொல்லவே வெக்கமா இருக்குது எனக்கு!

நல்லசிவம்:-   போதும் செண்பகம். நிறுத்திக்கோ..

செண்பகம் :-   முடியாதுங்க. . . இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடனும் உங்க கூட வாழ்ந்து வாழ்ந்து. இந்த முப்பது வருஷத்துல என்ன சுகத்தைக் கண்டேங்க நான்…?

நல்லசிவம் :-   (அதிர்ந்து போகிறார்)           நீ.. . . நீயா செண்பகம் இப்படிப்பேசறே?

செண்பகம்:-      பின்ன பக்கத்து வீட்டுக்காரியா வந்து உங்கிட்ட இப்படிப் பேசுவா? இவ புருசன் எதுக்கும் கையாளாகாதவன்னு. என் காதுபடத்தானே பேசுவாளுங்க..  பேசுறாளுங்க. .  உங்களுக்கென்ன காலேஜே கதின்னு கெடந்துட்டாப்போதும்.

நல்லசிவம்:-            இப்ப என்ன செய்யணம்ங்கறே?

செண்பகம் :-  வருஷா வருஷம். உங்களுக்குன்னு ஒரு சீட்டை உங்க மேனேஜ்மெண்ட்டுல ஒதுக்குறாங்கல்ல. . . அந்தக் கோட்டாவுல எம்பது லட்சம். ஒரு கோடின்னு வருசம் தவறாம சம்பாதிரிச்சிருந்தா கூட இன்னிக்குத் தேதில கையில ஒரு மூணு நாலு கோடி தேறி இருக்கும்ல? யாராவது கொறை சொல்லப் போறாணுங்களா? சட்டம். அது இதுன்னு சிக்கல்தான் உங்களுக்கு வரப்போவுதா? செஞ்சிருக்கலாம்ல?

நல்லசிவம்:-     என் மனசாட்சி என்னையக் கொன்னுரும் தாயி.. நான் அப்படி வளர்ல. .

செண்பகம்  :-  யாருக்கும் இல்லாத மனசாட்சி இவருக்குத்தான் இருக்கு…. கையாலாகாத்தனத்துக்கு இன்னொரு பேரு மனசாட்சி.  பேடித்தனத்துக்கு இன்னொரு பேரு.. நான் அப்படியெல்லாம் வளர்லியே…! இந்த நாட்டுல மத்தவங்க யாருமே நார்மலா வளரலியா?

(நல்ல சிவத்திற்குக் கொங்சம் கொஞ்சமாக  பி பி  ஏறுகிறது. இலேசாகத் தவிக்கிறார்.)

நல்லசிவம்:-   போதும்…..  பேச்சைக் கொறச்சி போயி கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிட்டு வர்றியா?

செண்பகம்:-     மாட்டேன். வேணும்னா போயி நீங்களே எடுத்திகிடுங்க. எனக்குன்னு எதையும் செய்யத்துப்பில்லாத மனுசனுக்கு நான் எதுக்கு மாங்கு மாங்குன்னு செய்யணும்?

(நல்ல சிவம் மனம் உடைந்து போகிறார். )

நல்லசிவம்:-   வேணாம் செண்பகம்… நீ செய்யறது பேசறது எதுவுமே நல்லயில்லே..

செண்பகம்:-   நீ செய்யறது மாத்திரந்தான் நல்லாயிருக்குன்னு நீ சொன்னா ஆயிரிச்சா . . காலமே நீ இல்லாதப்போ வீட்டுக்கு ஒருத்தன் வந்தான்.. அம்மா. என் புள்ளை மெடிகல் காலேஜ் படிச்துத்தான் ஆகணம்னு ஒத்தக்கால்ல நிக்கிறான். உன் வூட்டுக்காரரு மனசு வச்சா நிச்சயம் நடக்கும். இந்த ஒரே ஒரு முறை அவரு கோட்டா சீட்டுல என் மவனை அங்க சேத்துரச் சொல்லுன்னு அவரு சொன்னாரு! நாளைக்கே உன் வீடு தேடி வந்து ஒண்ணரைக்கோடி ரூபாய கொடுத்திறேம்மா.. இல்ல. எந்த அக்கவுண்டில. எந்த பேங்குல கட்டணம்னு சொல்லு.. கம்முனு முடிச்சி. ரசீது கொண்டு வந்து தரேன்… கருணை வை தாயின்னு கால்ல விளாத கொறையா கெங்சிட்டுப் போயிருக்கான் என்ன சொல்றீங்க?

நல்லசிவம்:-     வேண்டாம் செம்பகம் . இதெல்லாம் தப்பு…. உன் மூலமா என்னைய வளைக்கப்பபாக்குறவன் யாரா இருந்தாலும். அவன் இந்த சமூகத்துக்கு நல்லது செய்யப் போறதில்லை்.

செண்பகம்:-    வீடு தேடி வர்ற லட்சுமியை வேண்டாம்னு தள்ளி வக்கிற ஒனக்குப் போயி நான் களுத்தை நீட்டினே பாரு.. என்னையச் சொல்லணும். என்ன ஆம்புளயா நீ? இதோ என்கிட்ட அவன் செல் நம்பரைக் குடுத்துட்டுத்தான் போயிருக்கான். நாளைக்கே கொண்டு வான்னு சொல்லிடறேன். இந்த சந்தர்பத்தை நான் விடவே மாட்டேன்.

(அவள் செல்போனில் நம்பரை  அழுத்த. அவர் விரைந்து அதைத் தடுக்க. அவள் கொடுக்க மறுக்க. உள்ளே விரைந்து போகும் அவர் மிகவும் ருத்ரனாக. நரசிம்மனாக மாறி. ஏதோ ஒரு கட்டையால் அவள் மண்டையில் கோபமாக அடிக்க. அவள் பொத்தென்று விழுவது. துடிதுடித்தவாறே அவள் விழுகிறாள்… . கரங்கள் நடுங்க.  கொஞ்சம்   கொஞ்சமாக ஆவேசம் குறையும் அவர்,  அவளருகே அமர்கிறார்.  நாடி பார்க்கிறார். மூச்சு வருகிறதா என்று பார்க்கிறார். உருகுகிறார்.)

நல்லசிவம்:-    முப்பது வருஷமா நல்லாத்தானே செண்பகம் வாழ்ந்தோம்… இந்த அஞ்சி வருஷம் உன்னைய மாத்திரிச்சே. . . இந்த ஒரு நிமிஷம். ஒரு ஈயைக் கூடக் கொல்லாத என்னை.     (அவளைக்காட்டி) இப்படி செய்ய வச்சிரிச்சே … என்னைக் கொலைகாரனை மாத்திட்டியே செண்பகம் ..

(அவளின்  தலையைக் கோதி விம்முகிறார்.)

புதிய கண்டுபிடிப்புகள் – நன்றி சாய் கிருஷ்ணன்

அந்தக் காலத்து தினத்தந்தி ஜோக் மாதிரி ( மேற்கண்ட சிரிப்புக்கு வசனம்  தேவையில்லை)

படம் பார்த்துப் புரிந்து கொள்ளலாம் !

genius-products

 

genius-products3

 

genius-products6

genius-products9

 

genius-products19

நல்லா இருக்கில்ல?

எளிதானதல்ல – அழகியசிங்கர்

இன்ஃபினி

 

1infi

மஹாத்ரயா ரா ஆசிரியராக இருந்து அறிவியல், உறவுகள், திருமணம், குழந்தை வளர்ப்பு, பதின்பருவம், மனோதத்துவம், பொருளாதாரம், ஆரோக்கியம், வாழ்வியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாதம் இருமுறை இதழாக இன்ஃபினி இதழ் வெளியாகிறது.

ரங்கராஜன் என்கிற மஹாத்ரயா ராவின் அழகான ஆங்கிலத்தில் வாழ்க்கைத் தத்துவ விளக்கங்களைக் கேட்கும் போது அந்தக்கால சின்மயாவின் அழகான ஆங்கில விளக்கங்களைக் கேட்பது போல் இருக்கிறது. 

உங்கள் கண்ணுக்குப் புலனாகாத உங்களின் அபரிதமான சக்தியாய்h வெளியே கொண்டுவந்து உங்களையும் உலகையும் மேம்படுத்துவது தான் இன்ஃபினி தத்துவத்தின் சாரம்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மஹாத்ரயா ரா  அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு , தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவரது பயிற்சி முகாம்களில் பயின்று வாழ்வில் உன்னத நி.லையை அடைந்தவர் ஆயிரம் ஆயிரம். 

  

அவரது கையெழுத்திலேயே  கருத்துக்கள் அனுப்பப்படுகின்றன. 

இணையதளத்தின் மூலமாகத் தன் பரப்புரைளை நிகழ்த்துகிறார் மஹாத்ரயா ரா. 

தினமும் காலை 11.11 மணிக்கு  அவருடைய  உரை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

http://www.infinitheism.com/todays-message.html
 

Subscription(Annual) - infini (Tamil)

ருசி…..! நித்யா சங்கர்

 

‘சாமி… பிச்சை போடுங்க சாமி…நாலு நாளா சாப்பிடவேஇல்லே… உங்களை தெய்வம் நல்ல போலே காப்பாத்தும் சாமி..”

சுந்தர் திரும்பிப் பார்த்தான்.

நியாயத்தை நிலை நிறுத்தி, அநியாயம் செய்பவரைத் தண்டிக்கும் மாஜிஸ்டிரேட் கோர்ட் வாசலில் சாவகாசமாக உட்கார்ந்து கூவிக் கொண்டிருந்தான் அந்தப் பிச்சைக்காரன். அவனைப் பார்த்தால் நாலு நாள் பட்டினியாகத் தோன்றவில்லை. ஆள் வாட்ட சாட்டமாக ‘கிண்’ணென்று இருந்தான். வயது இப்போதைக்கெல்லாம் இருபத்தைந்து
இருக்கும்.

‘ஏம்பா…? ஆள் வாட்டசாட்டமா இருக்கே.. ஏன் இப்படிப் பிச்சை எடுக்கிறே..? ஏதாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?’ என்றான் சுந்தர்.

அந்தப் பிச்சைக்காரன் சுந்தரை ஏறிட்டுப் பார்த்தான். ஆச்சரியத்தோடு. இதுவரை அவனிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்டதில்லை. வக்கீல்கள் அணியும் கறுப்பு அங்கிக்குள் புகுந்திருந்த முப்பது வயதுக் காளை சுந்தரை அறைந்தால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு.
‘பிச்சை போட்டால் போடுவது .. இல்லையென்றால் போய்க்கொண்டே இருப்பதுதானே.. நானென்ன கையைப் பிடித்து நிறுத்தினேனா…’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.

சுந்தர் விடுவதாக இல்லை. ‘ஏன்பா.. நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே’

‘என்னடா இது..? விடமாட்டார் போலிருக்கே’ என்று அவனை சபித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான்.  அவனுடைய சக பிச்சைக்காரர்கள் – உடல் ஊனமுற்றவர்கள் – ‘பயல் வசமாக மாட்டிக் கொண்டான்’ என்ற
பொருளோடு அவனை ஏளனமாகப் பார்த்தார்கள்.

பொறுக்கவில்லை நமது ஹீரோவிற்கு. ‘என்ன சாமி.. இப்படி சொல்லிட்டே.. யார் சாமி எங்களுக்கெல்லாம் வேலை தராங்க. வேலை தந்தா நாங்க எதுக்கு இந்தப் பொழப்பு பொழைக்கிறோம்..? நீ வேலை தருவியா சாமி..’ என்றான் ரோசத்துடன்.

‘அப்படியா … பார்க்கலாம்.. உன் பேரென்ன..?

‘என் பேர் ஆதீங்க..’

‘ஆதி.. நல்ல பெயர்.. ஓகே…’ என்று சொல்லி ஊனமுற்றவர்க்கெல்லாம் பைசா போட்டு விட்டு கோர்ட்டின் படிகளில் ஏறினான் சுந்தர்.

‘சாமி.. சாமி.. எனக்கு மட்டும் போடலையே சாமி..’ என்று கூவிய ஆதி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.

சக பிச்சைக்காரர்கள் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று.
‘ஏம்பா… நான் இந்தக் கோர்ட்டிலே மாஜிஸ்டிரேட்டாக வந்து ஐந்து வருஷமாச்சு… நீ அட்லீஸ்ட் பத்து தடவையாவதுதிருட்டுக் குற்றத்திற்காக இந்தக் கைதி கூண்டில் நின்னுருப்பே.. ஏம்பா நீ திருந்தவே மாட்டியா..?’

கைதிக் கூண்டில் நின்றிருந்த முனுசாமி விரக்தியாகச் சிரித்தான்… ‘என்ன செய்யறது சாமி.. வயிற்றுப் பிரச்னை’

‘ஏன் வேலைக்குப் போகக் கூடாதா…?’

‘நானா.. வேலைக்கா…? திருடனை யார் சாமி வேலைக்கு வெச்சுக்குவாங்க.. எனக்கு மட்டும் ஆசை இல்லீங்களா.. மரியாதையா மதிப்போடு வாழணும்னு… ச்.. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்..’ என்றான் முனுசாமி.

அடப்பாவி உலகமே.. திருடன் எப்போதும் திருடனாகத்தான் இருக்க வேண்டுமா..? பிச்சைக்காரன் எப்போதுமே சோம்பேறியாகத்தான் இருக்க வேண்டுமா..? திருடன் மனம் திருந்தி நல்லவனாக ஒழுங்காக வேலை செய்யக்கூடாதா? பிச்சைக்காரன் சுறுசுறுப்பாய் அலுவல் புரியக்
கூடாதா?

சுந்தர் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

கட்டடமே விழுந்து விடுமோ என்று பயமாக இருந்தது. அவ்வளவு பெரிதாகச் சிரித்தார் அட்வகேட் ஆத்மநாதன்.

எதிரே அமர்ந்திருந்த சுந்தரின் முகத்தில் சிரிப்பிற்கு பதில் கோபமே பொங்கி வழிந்தது. ‘டாடி.. நானென்ன பெரிய ஜோக்கா சொன்னேன்..? இப்படி சிரிக்கிறீங்க..?’

‘எஸ்.. எஸ்.. அ·ப் கோர்ஸ்.. திஸ் ஈஸ் தி பெஸ்ட் ஜோக் ஆ·ப் தி டே..’ என்று மீண்டும் கடகடவென்று சிரித்தார். அவர் கண்களிலிருந்து நீர் சிறிது சிறிதாக வழிய ஆரம்பித்தது.

‘டாடி.. ஸ்டாப் இட்.. ஐ ஆம் ஸீரியஸ்.. வெரி வெரி ஸீரியஸ்.. ஐ மீன் வாட் ஐ ஸே..’ என்று கத்தினான் சுந்தர்.

ஆத்மநாதனின் சிரிப்பு டக்கென்று நின்றது. சுந்தரின் பார்வையிலே இருந்த உறுதியைப் பார்த்தார் ஆச்சரியத்தோடு.

‘மை ஸன்.. நீ என்ன சொல்றே..? தெருவிலே பிச்சை எடுத்து திரிகின்ற ஆதி போன்றவர்களையும், திருடிக்கொள்ளையடிக்கின்ற முனுசாமிகளையும் சேர்த்துக் கொண்டு ஒரு சிறு தொழிற்சாலை – ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போறே இல்லையா..?’

‘எஸ்.. எக்ஸாக்ட்லி..’

ஆத்மநாதன் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

‘அப்பா என்ன சொல்லப் போகிறார்..’ என்று ஆர்வமாகக் காத்திருந்தான் சுந்தர்.

மேஜை மேலிருந்த டேபிள் வெயிட்டைச் சுற்றிக்கொண்டே, ‘சுந்தர்.. நீ இளைஞன்.. உனக்கு அனுபவம் போதாது.. உனக்கு உலகத்தைப் பற்றித் தெரியாது. எல்லோரையும் தூக்கி விட வேண்டும் என்று நீ நினைக்கிறே.. பட், இன் தி ப்ராஸஸ் நீதான் கீழே விழுவே. குருடன் ராஜ முழி முழிக்கணும்னு பார்த்தா முடியுமா..?’ என்றார் ஆத்மநாதன்.

‘ஆமாமா.. எல்லோரும் இப்படியே நினைக்கிறதாலேதான் நம் நாடே முன்னேற முடியறதில்லே.. நாமென்ன நிறைய பணத்தை இன்வெஸ்ட் பண்ணப்போறோமா..? இல்லையே.. ஒரு எக்ஸ்பெரிமென்டாகத்-
தான் எடுத்துக்குவோமே..’

‘பீ கேர் ·புல் மை ஸன்.. நாய் வாலை நிமிர்த்தப்பார்க்கறே நீ… திருட்டுத்தனத்திலே ருசி கண்டவர்களைத் திருத்தலாம்னு பார்க்கிறே.. பிச்சைக்கார சோம்பேறிகளை திடீரென்று சுறுசுறுப்பானவங்களா. பொறுப்புள்ளவங்களாமாற்றிடலாம்னு பார்க்கிறே.. இம்பாஸிபிள்..’

‘தென் ஹௌ டு இம்ப்ரூவ் அவர் கன்ட்ரி, அன்டு கன்ட்ரிமென்?’

‘அதுக்கு கவர்ன்மென்ட் இருக்கு..’

‘எல்லாத்துக்கும் கவர்ன்மென்ட் கவர்ன்மென்ட் என்று சொல்லிட்டிருந்தா எப்படி..? நாமும் முடிந்ததை கான்ட்ரிபியூட் பண்ணலாமே..? பின்னே இவங்க எப்பத்தான்  மாறுவாங்கண்ணு சொல்றீங்க..?’

‘இன் கோர்ஸ் ஆ·ப் டைம் அவங்களுக்குள்ளே, அவங்க சந்ததிக்குள்ளே யாருடைய திணிப்பும் இல்லாம ஒரு சேஞ்ச் வரும்.. இந்த சேஞ்சை – மனமாற்றத்தை – நம்ம யார் மேலேயும் சுமத்த முடியாது. வீ கான்ட் இம்போஸ்.. அது தானாக வரணும்.. ஸோ டோன்ட் டிரை இம்பாஸிபிள்
திங்க்ஸ் அன்டு கெட் டிஸப்பாயிண்டட்…’

‘நோ டாடி.. நான் ஒத்துக்க மாட்டேன். நான் பார்த்து ஆளுங்களை ஸெலக்ட் பண்ணப் போறேன்.. இந்த ஈனத்தொழிலை விட்டு மதிப்போடும், மரியாதையோடும் வாழணும்னு பல பேர் துடிக்கிறாங்க… அவங்கள்ளே சில பேருக்காவது வாழ்வு கொடுக்கத்தான் போறேன். எனக்கு நீங்க ஐந்து லட்சம் ரூபாய் தந்தா போதும். கடனாகப் போதும்.. வட்டியோடு திருப்பி விடுவேன்..’

‘ஏய் ஸில்லி.. உனக்கு அவ்வளவு நம்பிக்கையும் உற்சாகமும் இருந்தா காரி ஆன்.. நீ இந்த வேலையிலே வெற்றி பெற்றால் என்னை விட சந்தோஷப் படறவங்க யாருமே இருக்க மாட்டாங்க..’ என்றார் ஆத்மநாதன்.

‘தாங்க் யூ டாடி..’ என்று சந்தோஷத்தால் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான் சுந்தர்.
‘மூன்று மாதங்கள் ஓடி இருக்கும். ஒரு நாள் காலை சுந்தர் தன் தந்தையின் அறைக்கு வந்தான். ஆத்மநாதன் ஏதோ ·பைலில் மூழ்கி இருந்தார்.

‘டாடி..’ என்ற சுந்தரின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.

‘என்னப்பா.. உன்னுடைய இன்டஸ்ட்ரி எப்படி இருக்கு..?’

‘கோயிங் வெரி ஸ்ட்ராங் டாடி.. நான் சொன்ன மாதிரி  அந்த ஆதி, முனுசாமி உட்பட இருபத்தைந்து பேரை வேலைக்கு சேர்த்திருக்கேன். வேலை ஆரம்பித்து ஒரு வாரமாகி யிருக்கும். என்ன உற்சாகமாக வேலை
செய்யறாங்க தெரியுமா..? அவர்கள் ப்ரொடக்ஷன் ஸ்டாடிஸ்டிக்ஸைப் பாருங்க டாடி..’ என்று ஒரு ·பைலை பெருமையோடு நீட்டினான்.

‘ஏதோ ஸபர்ஸ்டீஷியஸ் அன்டு கன்ஸர்வேடிவ் ஐடியாவை வெச்சுண்டு நான் அனுபவஸ்தன்னு சொன்னாப் போதுமா..? ரெவலூஷனரி ஐடியாஸ் வேண்டாமோ..? இங்கே பாருங்க. நான் புரட்சி செய்து காட்டி இருக்கேன். என்னைப் பார்த்து பலபேர் இதே போலே இன்டஸ்டிரீஸ் ஆரம்பிப்-
பாங்க. நம்ம நாடு ராம ராஜ்யமாக ஆகிவிடும்..’ என்றெல்லாம் ஏதேதோ இன்ப நினைவுகள் மனதிலே அலை புரண்டு அவன் முகத்திற்கு ஒரு தேஜஸை கொடுத்தன.

‘ஆமா.. டெய்லி ப்ரொடக்ஷன் குறைஞ்சுன்டே இல்லே வருது. முதல் நாளிலிருந்த ப்ரொடக்ஷன் இப்போ இல்லியே..’ என்ற ஆத்மநாதனின் குரல் அவனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது.

‘அதுவா டாடி.. புதுசு இல்லையா.. இப்போ அப்படி ஒன்றும் ஸ்ட்ரிக்டா பார்க்க முடியாது. இன்னும் மூன்று நான்கு மாதம் போனால்தான் நாம் எதுவும் சொல்ல முடியும்..’

‘புதுசுன்னா முதல் நாள் புரொடக்ஷன் குறைவாக இருக்கும். அப்புறம் மெதுவாக அதிகமாகவல்லவா வேண்டும்… இங்கே தலைகீழா இருக்கே..’

சுந்தர் பதில் சொல்ல வாயெடுத்தான். அதற்குள், ‘சுந்தர் ஐயா.. சுந்தர் ஐயா..’ என்று மூச்சிரைக்க ஓடி வந்தான் அவன் ·பாக்டரி அட்டென்டர் ரங்கன்.

‘என்னடா..?’ என்றான் சுந்தர்.

‘ஐயா… எல்லா சாமான்களும் திருட்டுப் போயிட்டுது ஐயா… ·பாக்டரியில் ஒரு சாமானில்லே.. இன்னிக்கு யாருமே வேலைக்கு வரலே..’ என்றான் ரங்கன்.

திக்கென்றது சுந்தருக்கு. ‘வாட்.. இரு நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பத்து நிமிடத்திலே வந்துடறேன்’ என்று காரேஜை நோக்கி விரைந்தான்.

ஆத்மநாதன் திகைத்து நின்றார். ‘அட்லீஸ்ட் திருடனல்லாத ஒருத்தனை அட்டென்டராக வைத்துக்கொண்டானே… இல்லேன்னா திருட்டுப் போனதைச்சொல்லக் கூட ஆளிருந்திருக்காது..’ என்று எண்ணிக்
கொண்டார்.
சுந்தர் ஸ்கூட்டரில் ·பாக்டரியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். பில்லியனில் அந்த அட்டென்டர். அவர்கள் வழியிலே ஒரு பார்க் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள்.

‘ஐயா.. கொஞ்சம் நிறுத்துங்க. அங்கே அந்த மரத்தடியில் ஆதியும் முனுசாமியும் இருக்கிறாப்போலே தெரியுது..’ என்றான் ரங்கன்.

சுந்தர் ஸடனாக ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். ரங்கன் இறங்கி அவர்களைக் கூப்பிடுவதற்கு ஓட முற்பட்டான்.

‘ரங்கா.. சத்தம் போடாதே.. என் பின்னால் வா..’ என்ற சுந்தர் மெதுவாக அவர்கள் பார்வையில் படாமல் அந்த மரத்திற்கு பின்னால் நின்று அவர்கள் பேச்சைக் கவனித்தான்.

‘என்ன வேலையப்பா.. இடுப்பெல்லாம் போகுது. குஷாலா ‘சாமி பிச்சை போடுங்க..’ என்று கத்தி காலத்தை ஓட்டிட்டிருந்தேன். என்னைப் போய் இந்தப் பாவிப் பயகூட்டியாந்து ‘வேலை செய்டா’ன்னு சொல்லிட்டான்.. ஆமா.. அன்னிக்கு ஒரு பேச்சுக்கு ரோசமாக் கேட்டேன்.. ‘எனக்கு வேலை போட்டுத் தருவியா’ன்னு.. இவன் உண்மையாவே செஞ்சுடுவான்னு நமக்குத் தெரியுமா என்ன..? அலட்டிக்காம பிச்சையெடுக்குறத விட்டு… வேலையாம் வேலை..தூ..’ என்றான் ஆதி.

‘எனக்கு மட்டும் என்னான்னு சொல்றே..? திருடறதிலேயுள்ள ருசி.. த்ரில்.. வேலை செய்யறதிலே வந்துருமா? ஒரு நாள் போய் எங்காவது திருடிட்டு வந்துட்டா பதினஞ்சு நாள் கவலையில்லே… ஹாய்யா காலை நீட்டிட்டு படுத்துக்கிடக்கலாம். அப்படி போலீஸ் பிடிச்சு மாமியா வீட்டுக்கு
அனுப்பிச்சாலும் அங்க போய் பேசாம களியை தின்னுட்டு இருக்கலாம். யாருடா இவன்..? காலையிலே எட்டு மணியிலிருந்து சாயங்காலம் அஞ்சு மணி வரை வேலை செய்யணும்னு சொல்லிட்டு… போக்கத்த பய.. ஏதோ இந்த உலகத்தையே உயர்த்திடப் போறதா நினைப்பு.. சீ….’ என்று
சிரித்தான் முனுசாமி.

‘எப்படியோ அண்ணே.. நம்ம எல்லாத் தொழிலாளிகளும் ·பாக்டரியிலே உள்ளதையெல்லாம் திருடி பங்கு போட்டுக்கிட்டோம்.. ஒரு மாதத்திற்கு கவலையில்லாம நிம்மதியா படுத்துக் கிடக்கலாம்… அந்த விஷயத்துக்கு
சுந்தர் ஐயாவைக் கும்பிடணும்..’ என்று சிரித்துக் கொண்டே  கிளம்பினான் ஆதி.

‘ஆமாமா..’ என்றபடியே முனுசாமியும் கிளம்பினான்.

சுந்தர் முகத்தில் ஈயாடவில்லை. ‘எதற்குக் கும்பிடணும். எல்லாவற்றையும் திருடு கொடுத்ததன் மூலம் அவர்களை மேலும் சோம்பேறிகள் ஆக்கியதற்கா?’

‘பீ கேர் ·புல் மை ஸன். நாய் வாலை நிமிர்த்தப் பார்க்கறே.. ருசி கண்டவர்களை திருத்தலாம்னு பார்க்கறே.. அவங்களுக்குள்ளே, அவங்க சந்ததிக்குள்ளே ஒரு சேஞ்ச் வரணும். இந்த சேஞ்சை நம்ம யார் மேலேயும் சுமத்த முடியாது. இம்பாஸிபிள்..’ என்ற தந்தையின் – ஒரு அனுபவஸ்தரின் – குரல் அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.

 

 

அப்புசாமி கதை – ஒலிப்புத்தகம்

பாக்கியம் ராமசாமி  (ஜ.ரா. சுந்தரேசன்) எழுதிய அப்புசாமியின் கதையைக் கேட்க விரும்புகிறீர்களா? 

நண்பர் பாம்பே கண்ணன் உங்களுக்காகப் படிக்கிறார்.  காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாகப்  பேசுகிறார்.

 தமிழ் ஒலிப் புத்தகத்தின் அருமையையும்  உணருங்கள்!  

 

எண்ணோடு(என்னோடு) உரையாடு – சிவா

 


நாளைக்கு ப்ராக்டிக்கல்ஸை வைத்துக்கொண்டு ஃபிபோனஸி சீரீஸின் சி ப்ரோக்ராமை நவீன் மனப்பாடம் செய்துகொண்டிருந்தான். “சை! இதெல்லாம் என்ன ______ க்கு படிக்கணும். பைசா பிரயோஜனம் இருக்கா? வாழ்க்கைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?” கடுப்போடு புக்கை மூடி வைத்துவிட்டுக் கைபேசியை எடுத்து நண்பனுக்கு டயல் செய்ய எத்தனித்தான். டயல் பேடில் 0,1,2,3,5,8 ஆகிய எண்களைக் காணவில்லை. ஏதும் கோளாறாக இருக்குமோ? லாக் செய்து திரும்ப அன்லாக் செய்து மறுபடியும் போய்ப் பார்த்தான். காணவில்லைதான். “ஏதும் புது வைரஸோ? போன மாசம்தானே வாங்குனேன்” என்று நினைத்தபடியே அதன் பின்மண்டையில் நாலு தட்டு தட்டினான்.


தட்டிக்கொண்டே இருக்கையில் பின்னிருந்து ஒரு புது குரல். “நவீன்”. “யாருடா அது?” என்று திரும்பிப் பார்த்தால் காணாமல் போன எண்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. சதுரமாய் ஒரு உடல், அதில் எண்கள் எழுதப்பட்டு, கைகால் மட்டும் முளைத்து. நவீனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவில்லை. நிஜம்தான். ஆனால் ஏன்? “நீங்க?” என்று இழுத்தான். “இவ்வளவு நேரம் திட்டினியே? ஒரு கெட்ட வார்த்தை கூட சொன்னியே? நாங்கதான் ஃபிபோனஸி எண்கள். பேச்சு கேக்க முடியாம, சில விஷயங்களச் சொல்லி புரிய வைக்க நாங்களே வந்துட்டோம்.” பேசியது எண் 1.

தலையைச் சொறிந்துகொண்டே நின்றவனை உட்காரச் சொல்லியது எண் 2. எண் 3 தொண்டையைச் செறுமியபடி பேச ஆரம்பித்தது. முதல்ல எங்களப் பத்தி சொல்லிடுறோம். நாங்க ஒரு பெரிய கூட்டம். எவ்ளோ பேருன்னு எங்களுக்கே தெரியாது. ஆனா எங்களோட எண் குடும்பம் எங்ககிட்டயிருந்துதான் தொடங்குது. 0,1 ல ஆரம்பிச்சு இரண்டுத்தையும் கூட்டி வர்ற எண் 1. அது ரெண்டுத்தையும் மறுபடியும் கூட்டுனா 2, இப்படியே கடைசியா இருக்கற இரண்டு எண்களக் கூட்டினா புது எண் கிடைக்கும். இப்டியே செஞ்ச்சுகிட்டே இருக்கலாம். எங்களை இயற்கையில இருந்து கண்டுபிடிச்சவர் பேருதான் ஃபிபோனஸி. அவர் பேரையே எங்களுக்கு வச்சுட்டாங்க. ஆனா நாங்க இந்த பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கோம். . 3 நிறுத்த 5 தொடர்ந்தது. உங்க வாழ்க்கையில பல இடங்கள்ல நாங்க குறுக்க வர்றோம். உங்க உடல்லயே சில இடங்கள்ல நாங்க இருக்கோம். “என் உடம்புலையா? நீங்களா?” நவீன் தன்னைத்தானே சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டான்.
“உன் காது இருக்குல்ல காது. அதோட வடிவம் எங்களுடைய ஜியமெட்ரி வடிவமான ஃபிபோனஸி ஸ்பைரல் மாதிரி இருக்கும். 8 அவனுடைய ஃபோனை அவன் கையிலிருந்து எடுத்து ஃபிபோனஸி ஸ்பைரலை இணையத்தில் தேடிக் காட்டியது. “காது மாதிரி இருக்கு” என தன் காதைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டான். “காதோட வெளிப்புற அமைப்பு மட்டும் இல்ல. காதுக்குள்ள இருக்கற காக்லியா அப்டிங்கற எலும்புலயும் இந்த ஃபிபோனஸி சுருள் இருக்கு.

( Since these spirals have the Divine Proportion of 1.618 seeds per turn, counting the seeds any spiral will result in getting a Fibonacci Number.)

அப்றம் வீட்ல என்ன சமையல் எண்ணை? கோல்ட் வின்னரா? ஒரு சூரிய காந்திப் பூவை கைல எடுத்துப் பார்த்திருக்கியா? 1 திரும்பவும் கேள்வி கேட்டது. “இல்ல” என்றான் நவீன். வட்டம் வட்டமா பூவுக்கு நடுவுல விதைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கையும் ஃபிபோனஸி எண்கள்தான். எல்லா விதையும் முளைச்சு வர்ற செடி வளரும்போது விடக்கூடிய கிளைகளின் எண்ணிக்கை ஃபிபோனஸிதான்.அப்படி இருக்கும்போதுதான் எல்லா இலைகளுக்கும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும். ஆக நாங்க எல்லா இடத்துலையும் இருக்கோம்.

“இதுல இன்னொரு விஷயம் இருக்கு” ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த 2 சொல்ல ஆரம்பித்தது. “மூளைக்கு இயல்பாவே எங்களைப் புடிக்கும் தெரியுமா? எங்க அஞ்சு பேருக்கு அப்புறம் வர்ற எந்த ஒரு ஃபிபோனஸி எண்ணையும் எடுத்து அதுக்கு முந்தின ஃபிபோனஸி எண்ணால வகுத்தா, 1.6ன்னு ஒரு மதிப்பு தோராயமா கிடைக்கும். அதுக்கு தங்கப் பின்னம்னு பேரு. உனக்குப் புரியற மாதிரி சொல்லனும்னா golden ratio. டாவின்ஸி தெரியுமா டாவின்ஸி. மோனாலிஸா வரஞ்சாரே அவர்தான். அவர் ஒரு கணக்கு சொல்றார். முகத்தோட நீளத்தை முகத்தோட அகலத்தால வகுத்து கிடைக்கற எண் 1.6 ங்கற அளவுல இருந்தா, அவங்களுக்கு அழகான, பிறரைக் கவரக் கூடிய முகம் இருக்குமாம். பிரபலங்கள்ல, நல்ல கவரக்கூடிய முக அமைப்பு இருக்கறவங்களோட முக அளவுகள எடுத்துப் பார்த்தா அவர் சொன்னதோட ஒத்துப் போகுது. அவர் இந்த முக அளவுகளை வைச்சு ஒரு ஆள் குற்றவாளியா இல்லையான்னு சொல்லலாம்னு கூட சொன்னார். அதுவும் கொஞ்ச நாள் அமல்ல இருந்தது.” 2 கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டது.

“உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ செய்யாததுனால இதெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறேன்னு நினைக்கிற. நீ விவசாயம் பண்றதில்ல. ஆனா யாரோ ஒருத்தன் விளைச்சல் செஞ்சாதானே உனக்கு சோறு. அதேமாதிரி தான். உனக்கு தேவையில்லாம இருக்கலாம். தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு. தேடு, கேள்விகேளு. அப்போதான் எங்களைப் பத்தி இன்னும் நல்லாப் புரியும் உனக்கு. எண்கள் இல்லாம எதுவும் இல்ல. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இயங்கறது எண்களாலதான். நாங்க இப்போ போயிடுவோம். நீ யாருக்கோ ஃபோன் பண்ணப் போனியே. அவனப் பார்க்கப் போகும்போது வழியில சிக்னல்ல எரியற சிகப்பு விளக்க உத்துப்பார்” இதுவரை பேசாமலிருந்த 0 தான் இறுதியாக வந்தால்தான் மதிப்பு எனத் தெரிந்து இதைச் சொல்லிவிட்டு சட்டென்று அவன் போனுக்குள் குதித்து மறைந்தது. தொடர்ந்து 1,2,3,5,8 வரிசையாக உள்ளே குதித்து மறைந்தன.

 

தெளிவாகக் குழம்பித் தெளிந்திருந்தான் நவீன். ஃபோன் எடுத்துப் பார்த்தால் எல்லா எண்களும் அதனதன் இடத்தில் இருந்தன. நண்பனுக்கு ஃபோன் போட்டு “மச்சான்! நம்ம டீக்கடைக்கு வந்துடுடா அஞ்சு நிமிஷத்துல” எனச் சொல்லிவிட்டு பைக் எடுத்துப் புறப்பட்டான். முதல் சிக்னலை இவன் கடப்பதற்குள் சிகப்பு விழுந்துவிட்டது. சிகப்பை உற்றுப் பார்த்தான். சின்னச் சின்ன சிகப்பு ஒளியுமிழிகள்(light emitting diode) ஒளிர்ந்து கொண்டிருந்தன. கொஞ்சம் கூர்ந்து நோக்குகையில் சூரிய காந்திப் பூவின் அமைப்பு. வட்ட வட்டமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒளியுமிழிகள். சட்டென்று ஃபிபோனஸி எண்கள் வந்துபோயின. 3,2,1 ல் மின்னி எரியும் சிகப்பு விளக்கு தன்னைப் பார்த்துக் கண்ணடிக்கிறாற்போல் தோன்றியது நவீனுக்கு.

சாட் போட் – chatbot – செயற்கை நுண்ணறிவு (Atificial Intelligence)

ரோபோட் என்பதிலிருந்து வந்தது தான் போட் .  நம்முடைய செய்திகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதற்குச் சரியான பதிலை அளிக்கும் மென்பொருள்தான் போட் .  அத்துடன் நாம் தொடர்ந்து டெக்ஸ்ட் செய்து உரையாடினால்  அதற்குப் பெயர்தான் சாட்போட்   (CHATBOT) 

CHATBOT க்கு  நான் வைத்த பெயர் ” அரட்டை எந்திரா” 

உங்கள் டி‌வி சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் கம்பெனி ஆட்களுடன் போனில் பேசி விஷயத்தைக் கூறலாம் . இல்லையேல் இமெயில் அனுப்பலாம். அல்லது கம்பெனி பிரதிதிகளுடன் சாட்  செய்யலாம். அதாவது டெக்ஸ்ட் அனுப்பலாம் – உரையாடலாம்.  அரட்டை அடிக்கலாம்.   அல்லது அவர்கள் அழைப்பு மையம் ( கால் சென்டர்) ஆட்களுடன் பேசலாம். 

இதெல்லாம் பழங்கதை. வந்துவிட்டது புது கலக்கல் –  CHATBOT – அரட்டை எந்திரா. செயற்கை நுண்ணறிவுடன் உங்களுடன் உரையாடும் ஒரு கருவி. கிட்டத்தட்ட ரஜினிகாந்த் எந்திரனில் பேட்டி கொடுப்பது போல  இது நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் .  

இப்போது இந்தத் துறைதான் மிகவும் சூடான தலைப்பு.   செயற்கை நுண்ணறிவும் ( Artificial Intelligence) கருவி மொழியும் (Machine Language ) இணைந்து மிக வேகமாக முன்னேறிவருகிறது.  நாளையத் தொலைத் தொடர்பின் ஆணிவேர் இதுதான். 

 ஆப்பிள் ஐ போனில் வரும் ‘சிரி’ விண்டோஸ் சிஸ்டத்தில் வரும் ‘கோர்ட்டானா.’ கூகிளின் ‘கூகிள் நௌ’ , அமேஜானின்  அலெக்ஸ் எக்கோ போன்றவையும்  போட் வகைதான்.

இது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா ?

மிட்ஸுகு என்ற ஜப்பானிய எந்திரா (BOT ) உங்களுடன் உரையாடக் காத்திருக்கிறது.

செல்லுங்கள்    http://www.mitsuku.com/

நீ யார்? என்று கேட்டதற்கு மிட்ஸுகு சொன்ன பதில் : 

நான் செயற்கை நுண்ணறிவின் புதிய வரவு.  மனித மூளையின்  திறமையோடு அதி வேகமாகவும் சரியாகவும் செய்யக் கூடிய மனித எந்திரம். 

உங்களுக்குப் பொழுது போகவில்லையா ? ஒரு நல்ல எந்திராவுடன் அரட்டை அடியுங்கள்.

 கண்ணம்மாப்பேட்டைக்கு எப்படி போகணும்னு வழி தெரியலையா? (வேற உதாரணமே கிடைக்கலையா என்று எந்திரா திட்டினாலும் திட்டும்) . எந்திரா கிட்டே கேட்டால் ரோட்டை மட்டுமல்ல ரூட்டையும் காட்டும். அது இணைய தளத்தில தேடித்தான் காட்டுது. 

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கோச்சிங் சென்டரிலும் இந்த போட்டுக்கு நல்ல வரவேற்பு. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதிலிருந்து, அவர்கள் அவற்றைச் சரிவரச் செய்து விட்டார்களா, எங்கே எல்லாம் தப்பு செய்திருக்கிறார்கள் ,எங்கு அவர்களுக்கு ஆசிரியரின் உதவி தேவைப்படுகிறது, சரியான விடை இருக்கும் இணையதளம் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்துகிறது இந்த எந்திரா. மனித குறுக்கீட்டைக் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கிறது . 

இப்போதைக்கு ஆங்கிலத்தில்தான் நீங்கள் இதனுடன் உரையாடலாம். கூடிய விரைவில் தமிழில்

” என்னம்மா கண்ணு சௌக்கியமா ? ” என்று நீங்கள் செய்தி அனுப்பினால் எந்திரா ”  ஆமாம்மா  கண்ணு சௌக்கியம்தான்” என்று பதில் எழுதும்  காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. 

 

படைப்பாளி -(எஸ் கே என் )

ம வே சிவக்குமார்

 

சென்ற ஆண்டு மறைந்த ம.வே  நெய்வேலியைச் சேர்ந்தவன். (என் இனிய நண்பன் என்பதால் ‘ன்’ விகுதி). ஒரு வித்தியாசமான துடிப்பான நண்பன். தற்செயலாகக் கணையாழியில் வெளிவந்திருந்த “கடவுளும் கையாட்களும்” என்னும் சிறுகதையைப் படித்த பிறகுதான் அவன் எழுதுவான் என்றே தெரியும். அடுத்தமுறை சந்தித்தபோது வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.  தான் காணும் விஷயங்களில் ஒரு வேறுபட்ட பார்வை மற்றும் எது எழுதினாலும் அதனூடே ஒரு நகைச்சுவை. கதைகளுக்குப் பெயரிடுவதிலும் ஒரு வேறுபாடு. ஆகியவை குறிப்பிடத்தக்கன.

வேடந்தாங்கல் (வேடம் தாங்கும் மனிதர்கள்), வட்டம்   (அந்தகால அறிவுஜீவிகள் – அவர்கள் எழுதுவதும் பேசுவதும் மற்றவரைச் சென்றடையாத குழூஉக்குறி), கடைச் சங்கம் (இளைஞர்கள் பொழுதுபோக்கும் டீ கடை பெஞ்ச்) என்று சில உதாரணங்கள். பல பொது நண்பர்களும் உண்டு என்பதால் அவன் கதைகளில் யாரைக் குறிக்கிறான் என்றும் புரியும். பெரிதாகச் சாதிக்கக் கூடியவன் என்று எழுத்தாளர் சுஜாதா, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி போன்றோரால் எதிர்பார்க்கப்பட்டவன். தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் ஒன்றுக்கு வசனம் எழுதியவன். சிறிதுகாலம் திரைப்படத்துறையிலும் இருந்தவன். தனக்கு உரிய அங்கீகாரம்  இல்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தது, தனது நாடகத்தை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம் என்று பல தடாலடிகள்.

“உன்னை நம்பு’ என்னும் சிறுகதை

“கொஞ்ச நாட்களாகவே எதைத்தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது.” என்று தொடங்குகிறது. அடுத்தடுத்து பல சறுக்கல்களில் பொருளாதாரம் மோசமாகி, கடனுக்கு வாய்தா சொல்லும் பொய்களும் தீந்துபோன நிலை.  தொட்டதற்கெல்லாம் சிடுசிடுப்பு. அடுத்தமாதம் சீட்டு எடுத்துவிட்டால் பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்கிற  நம்பிக்கையில் தூங்கிப்போகிறான் . சிறு சிறு நகைகளையும் அடகு வைத்துக் கட்டிவரும் சீட்டு அது.

சீட்டு பிடித்துவந்த பால்கார சங்கர பாண்டியின் குடும்பமே காணாமல் போய்விட்டது. சீட்டுக்கட்டிய எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள். கதவை உடைத்து உள்ளே இருந்த சாமான்களை எடுத்துப்போகிறார்கள். இவன் எடுத்து வந்தது ஒரு கிரைண்டர். மனைவி அதை வீட்டில் சேர்க்கவில்லை. எல்லாமே போயிற்றே என்ற பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

திடீரென சங்கரபாண்டி திரும்பிவந்து   குடும்பத்தோடு வெளியூர்  சென்றிருந்த சமயத்தில் இவர்கள் எல்லாம் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான  பணம் பண்டங்கள் எல்லாவற்றையும்   சூறையாடிவிட்டதாகப் புகார் கொடுக்க சூறையாடிவர்கள் பட்டியலில் இவன் பெயரும்.

மனைவியின்  தோழி சொன்னாள் என்று ஒரு சாமியாரைப் பார்க்கிறார்கள்.

நாக்கு வெளியில் தள்ளிய காளி படம், நடுவில் சூலம் குத்தப்பட்ட அம்பாரமாய்  குங்குமம், அந்த சூலத்தில் குத்தப்பட்ட எலுமிச்சம்பழம், சாம்பிராணிப்புகை,    சப்பணமிட்டு தியான நிலையில் கண் மூடியிருந்த சாமியார் …

“சாமியார் இப்போது கடவுள் மாதிரி. அதுக்கு ஒளிவு மறைவு கிடையாது. கூச்ச நாச்சமும் தெரியாது. பொட்டில அடிச்ச மாதிரி கேள்வி கேட்கும். அது கிட்டே பொய் சொல்லமுடியாது. எதிர்லே  ஆள் வந்து உட்கார்ந்ததுமே  அவன் யாருன்னு அதுக்குத் தெரிஞ்சுடும். வந்தவனுக்கு என்ன பிரச்சினை அதுக்கு என்ன தீர்வுன்னு டக்குன்னு பிடிபட்டுவிடும். அது உன்னப் பார்க்காது. தியானத்தில இருக்கு. உன் வார்த்தைகள்  அதுக்குக் கேட்கும். காதுல விழற வார்த்தைக்கு அது வாய்ல சொல்ற வார்த்தைதான்  பதில்.  தலையை ஆட்டிட்டு தட்சணையை வெச்சுட்டுப் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்”    

இவன் டோக்கன் 132. வரிசையில் கூப்பிடப்பட்டாலும், சாமியாரே திடீரென  அறிவிப்பு செய்து யாரையாவது கூப்பிடுவார். அதுபோல கூப்பிடப்பட்ட ஒரு சேலத்துக்காரரை  -நீ தம்பிக்கு  துரோகம் செய்தாய். அவன் உன்னை  பதிலுக்கு  துரோகம் செய்தான். தானிக்குத் தீனி சரியாப் போச்சு. இங்கு வந்ததே தப்பு.  ஓடு’ என்று மானத்தை வாங்குகிறார்.

வரிசையில் சிலருக்குப் பிறகு,

” … சீட்டுப்பணம் கட்டி சிக்கல்லே இருக்காரு ஒருத்தரு. அவரை வரச் சொல்லு” என்று அறிவிக்கிறார். 

“வாய்யா. கிரைண்டரு. உனக்கு உன்  சம்சாரம்தான் ஆதரவு. இவளை விட்டுவிடாதே. இவதான் உனக்கு அச்சாணி. ரெண்டு மாடும் இணையா  இருந்தா எதையும் ஜெயிச்சுரலாம். மழை அடிக்கறப்போ உப்பும் காத்தடிக்கறப்போ மாவும் வித்துட்டுப் போனானே ஒருத்தன். அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். தப்பு எங்கேன்னு யோசி. எல்லாம் சரியாயிடும்.  இப்ப  இல்லேன்னா அடுத்த தடவை. ஓடிட்டே இருந்தாத்தான் நிக்க முடியும் புரியுதா? உழைப்புதான் ஜெயிக்கும்.”       

குலதெய்வம் எது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் சாமியார் 

“…   மேட்டுத் தெருவிலேர்ந்து  இன்னார் மகன் இன்னார் பேரன் நேர்ல வந்து ஆஜர் ஆவாம அவனுக்கு நாம் ஒண்ணும் பண்ண முடியலையேன்னு ஏங்கிக்கிட்டு இருக்கு. அப்பிடி விடலாமா? அதனால் அவளைப் போய் பார்.   உன் சீட்டுப்பணம் போனது போனதுதான். புத்திக் கொள்முதல். இனி யாரையும் நம்பாதே. உன்னை நம்பு. குல தெய்வத்தை கூட வெச்சுக்க. அடுத்து ஒரு முயற்சி செய். அதுலேர்ந்து படிப்படியா நல்லாயிடுவே. கிளம்பு”  

என்கிறார்.

 

கையில் காசில்லாததால் குலதெய்வத்தைப் பார்க்கத் தாமதமாகிக் கொண்டே வந்தது. அடகிலிருந்த நகைய விற்று சொந்த ஊர் போகிறார்கள். குலதெய்வத்தைப் பார்க்க வருபவர்கள் முன்கூட்டியே ஐயரிடம் தகவல் சொல்லி வரவழைப்பார்களாம். செல் நம்பர் கிடைக்கிறது.

கோயில்  பாழடைந்து இருந்தது. கூட வந்திருந்த மனைவியும் அவள் தாயாரும் அருகே ஒரு வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் ஓடிப்பிடித்து தூண்களைச் சுற்றி விளையாடுகிறார்கள்.   ஐயரும் வருகிறார், ஆனால் சற்று தாமதமாக. அதற்குள் காட்டுச் செடிகளை வெட்டிச் சுந்தம் செய்கிறான் .

கோவிலில் விநாயகர் தலையிலிருந்து ஓணான் குதித்து ஓடுகிறது. அம்மன் ஓட்டடைக்கு நடுவில் மூக்குத்தி  காணமல் போய் இவன் மனைவியைப் போலவே துவரம் தூர்ந்துவிடாமல் குச்சி ஒன்று வைத்திருந்தாள்.

பூஜையும் கற்பூரமும் முடிந்து கோவிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இவனுக்கும் மனைவி லலிதாவிற்கும் தோன்றுகிறது.

குறைந்த பட்சம் கோவிலைச் சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று ஐயர் சொன்னார். லலிதா யோசித்தாள். குழந்தை ரம்யாவைக் கூப்பிட்டு கொலுசு, வளையல், தோடு முதலியவற்றைக் கழற்றினாள். முதலில் அழுத குழந்தை அது அம்மனுக்கு என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டது. மெயின் ரோடு வரை கூட வந்து அடகுக் கடையில் ஐயர் பணத்தை வாங்கிக்கொண்டார் .

எங்கள் குலதெய்வ நேர்த்திக்கடன் இவ்வாறு இனிதே முடிந்தது. பதிலுக்கு வரலக்ஷ்மி செய்கிறபோது செய்யட்டும்.

என்று கதை முடிகிறது

இந்தக் கதையினை முழுதும் படிக்க    உன்னை நம்பு.

இணையத்தில் கிடைக்கும் இன்னொரு கதை  கடவுள்

சாதிக்க வேண்டிய உயரத்தை எட்டாவிட்டாலும் ‘வட்டம்’, ‘வேடந்தாங்கல்’, ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும்   ‘பாப்கார்ன் கனவுகள்’ , ‘இறங்கப் போறீங்களா?’  மற்றும் போன்ற படைப்புகளுக்காக நினைவில் இருப்பான் ம.வே.சிவக்குமார்

 

பத்து நிமிட நாடகப் போட்டி முடிவுகள்

 

சிறந்த தயாரிப்பு : முதல் பரிசு :  Evam Lab : 27/ஃப்/5’11”

 

சிறந்த தயாரிப்பு : ரன்னர்ஸ் -அப் : QUID PRO QUO: தமயந்தி  & The Ordinary City 

 

பரிசு பெற்ற மற்றவர்கள்: 

சிறந்த பொதுத் தோற்றம் : F D F S ( First Day First Show) 

சிறந்த இயக்குனர்:பார்க்கவ் ராமகிருஷ்ணன்  (Shakespeare As You Like It ) 

சிறந்த மேடைக்கதை : சென்னைப்பட்டினம் 

சிறந்த நடிகர் (ஆண்) : கோகுல் ஆனந்த், வைத்யா எம் சுந்தர் , வெங்கடராமன் பாலகிருஷ்ணன் 

சிறந்த நடிகர் (பெண்) : லக்ஷ்மிப்ரியா சந்த்ரமௌலி 

இவை மீண்டும் பி‌எஸ் பள்ளி நாடக மன்றத்தில் செப்டம்பர் 17,18 தினங்களில் நடக்க உள்ளன.  

கபாலிடா !

Image result for kabali

இதுவரை ரஜினி நடித்த படங்களில் ரஜினி தான் இருந்தார்.

கபாலியில் கபாலி தான் இருக்கிறார்.

அதுதான் படத்தின் வெற்றிக்கும் மாறுபட்ட விமர்சனத்துக்கும் காரணம் !

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் -சிவமால்

 

டேய் நேத்திக்கு நான் பெண் பார்க்கப் போனேனே..
அந்தப் பெண்ணுக்கு என்னைப் பார்த்ததும் பரவ-
சத்தில் வாயெல்லாம் பல்…

‘பின் ஏண்டா.. அவளை வேண்டாம்னு ரிஜக்ட்
பண்ணினே !’

‘அடப் போடா.. அவ வாயிலே முப்பத்திரண்டில்லே
அறுபத்து நாலு பல்….’

!!!!

தலையங்கம் – தங்கம் வாங்கலையோ தங்கம்?

1எடிட்

உலகத்திலேயே அதிகமாகத்  தங்கம் வாங்கும் நாடு நம் இந்தியாதான்! ஆனால் ஒலிம்பிக்கில் மட்டும் ஏன் நம்மால் தங்கம் வாங்க முடியவில்லை?

அதற்கான வீரம் இல்லையா,  விவேகம் இல்லையா, தரம் இல்லையா, தகுதி இல்லையா ?   அல்லது சாதிக்கப் பிறந்தவர்கள்  யாருமே இல்லையா ? அனுமனும்  பீமனும் கதை நாயகர் மட்டும் தானா? உதாரண புருஷர்கள் இல்லையா ? நாம் பழமை பேசித் திரியும் பஞ்சாங்கமா?

விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் பள்ளியிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தயார் செய்யவில்லை என்றால் நம் இந்தியா வல்லரசானாலும் வெறும் சொல்லரசாகவே இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் போல டாக்டரையும் இஞ்சினியரையும்  தயாரிக்கும் தொழிற்சாலையாக இல்லாமல் உண்மைக் குடிமக்களை உருவாக்க நாம் முயலவேண்டும்.

செய்வோமா ? செய்வீங்களா?

Image result for rio olympicsIndia players carrying the Indian flag at the opening ceremony of the 2012 London Olympics

 

யார் அந்த சிவப்பு டாப் மற்றும் நீல ஜீன்ஸ் பெண் ? எப்படியோ நமது டீம் கொடியெடுத்து வரும் போது கலந்து கொண்டு ஜாம் ஜாம் என்று மார்ச் பாஸ்டில் நடை போட்டு வருகிறாரே?  யாருக்கும் தெரியவில்லையாம்.

அடுத்த குளிர் கால ஒலிம்பிக்ஸ் எங்கே தெரியுமா ? பையோங்க்ஸங்க் என்ற சிறு  நாட்டில் 2018இல் நடக்க உள்ளது.

அதற்கு அடுத்த கோடைகால ஒலிம்பிக்ஸ் பீஜிங்கில் 2020இல் நடைபெற உள்ளது.

அதற்கு இப்போதே தங்கப்பையன்களையும் தங்கப்பெண்களையும் தயார் செய்வோம்.

 

நா முத்துக்குமார் – ஓர் அஞ்சலி

  “ஆனந்த யாழை மீட்டுகிறாய் ” என்று எழுதிய இவரது கரங்கள் தற்போது இறைவனுக்காகப்  பாடல் புனையப் போய்விட்டன !

“அழகே அழகே எதுவும் அழகே : என்று அழகை ஆராதித்த இவர் சொர்க்கத்தின் அழகை வர்ணிக்கப் போய்விட்டார் !

‘காவிரி நாட்டைInline images 1யும் கைக்குத்தல் அரிசியையும்’  பல்லெலக்கா என்று பாடிய இவர் இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு  வேறு உலகம் சென்றுவிட்டார்!

இரண்டு தேசிய விருதுகள் ! தமிழக அரசு விருதுகள்! பிலிம்பேர் விருதுகள்! என்று விருதுகள் வாங்கிக் குவித்தவர் இன்று ஆண்டவன் கையில்  விருது வாங்கப் புறப்பட்டுவிட்டார் ! 

நல்ல கவிஞரை நாடு இழந்துவிட்டது!

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் குவிகம் தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.