அட்டைப்படம் – மார்ச் 2024


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த குவிகம் இதழ் ( ஏப்ரல் 2024) நகைச்சுவைச் சிறப்பிதழ் !

நீங்கள் ரசித்த ஜோக்குகள்  5 அனுப்பி வையுங்கள்  – சிரிப்புக் கொத்து என்ற பெயரில் ( editor@kuvikam.com or WhatsApp – 9442525191 )

வாய் விட்டு சிரிக்க வைக்கும் சிறந்த 10 சிரிப்புக் கொத்து ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 100 பரிசளிக்கப்படும் ( நடுவர்  தீர்ப்பே மகேசன் தீர்ப்பு)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குவிகம் குறும் புதினம் போட்டி முடிவுகள் (2024-25)

(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

17.03.24  அன்று குவிகம் அளவளாவல் நிகழ்வில் திரு அரவிந்த் சுவாமிநாதன்  அறிவிப்பின் படி 

1. சங்கரி அப்பன்   – முதல் பரிசு  –    Rs.10000  – உறவின் மொழி

2.  மைதிலி நாராயணன் (ஷைலஜா )  – Rs. 6000 – இரண்டாம் பரிசு –                  கங்கை உள்ளம்.

3. அன்புக்கரசி ராஜ்குமார் – மூன்றாம் பரிசு  – Rs. 4000 – கொட்டு முரசே

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

குவிகம் குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 24 முதல் மார்ச் 25 வரை பிரசுரமாகும் கதைகளுக்கான போட்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் துவங்கியது . டிசம்பர் 31 ஆம் தேதி போட்டிக்கான கதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 

இந்த ஆண்டு ,  மூன்று சிறந்த குறும் புதினங்களிற்கான பரிசுத் தொகை 10000 ,6000, 4000 ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது. 

இந்த வருடம் 109 கதைகள் போட்டியில் பங்கேற்றன. 

முதல் சுற்று நடுவர்கள் , 

1. ராய செல்லப்பா 

2. சு ஸ்ரீவித்யா 

3. JC கல்லூரி மாணவர் குழு 

ஆகியோர் வந்திருந்த  கதைகளை அலசி ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பெண் இட்டு அனுப்பி வைத்தனர். 

மூவருடைய மதிப்பெண்களையும் சராசரிப்படுத்தி 109 கதைகளில் முதல்  24 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட   24 கதைகள்  மாதம் இரண்டு கதைகள் வீதம் நமது குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 25 வரை வெளிவரும். அதற்கான சன்மானம் 1000 ரூபாய் வழங்கப்படும். 

இவற்றுள்  மூன்று சிறந்த கதைகளுக்கு சன்மானத்திற்குப் பதிலாக சிறப்புப் பரிசுகள் 10000, 6000, 4000 ரூபாய்  வழங்கப்படும். 

அதைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவில் வெளிவரும் ‘தென்றல்’ பத்திரிகையின் சென்னை ஆசிரியர்  அரவிந்த் சுவாமிநாதன் அவர்களை வேண்டிக் கொண்டோம். 

அவரது முடிவு 17 ஆம் தேதி நடைபெறும் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

பிரசுரிப்பதற்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கதைகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுதல்கள்! 

போட்டியில் பரிசுகளை வெல்லப்போகும் 3 பேருக்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் !

109 கதைகளில் 24 கதைகள் போக மீதமுள்ள 85 கதைகளை எழுதிய ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் கதை வெற்றி பெற்ற கதைகளைவிட எந்த விதத்திலும் குறைவானது அல்ல. வேறு பத்திரிகைக்கு அனுப்பினால் அவர்களுக்கு இதைவிட சிறந்த அங்கீகாரமும் பரிசுகளும் கிடைக்கலாம். அதனால் அவர்கள் தொடர்ந்து நம் குவிகம் அமைப்பிற்குத் தங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.  

 

குவிகம் குறும் புதினம் 24-25 ஆண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

எண்  பெயர்  புனைப்பெயர் குறும் புதினம் 
1 எஸ்.கௌரிசங்கர் எதிர்பாராதது
2 இலக்குவனார் திருவள்ளுவன்  இளவல், குவியாடி விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
3 சுஜாதா நடராஜன்   நயன்தூக்கின்!
4 கல்பனா சன்யாசி சூப்பர் மார்க்கெட்
5 ராஜேஷ் வைரபாண்டியன் ஓணான் குழி
6 ஆர்.பாலஜோதி பாலஜோதி ராமச்சந்திரன் தாழம்
7 மைதிலி நாராயணன் ஷைலஜா  கங்கை உள்ளம். 
8 கொற்றவன் பொன்னியின் காவலன்
9 அன்புக்கரசி ராஜ்குமார் கொட்டு முரசே 
10 இராஜலட்சுமி பூமரப்பாவை
11 வசந்தா கோவிந்தராஜன் வேர்களும் விழுதுகளும்
12 சு. இராஜமாணிக்கம்  அண்டனூர் சுரா செம்புலம்
13 வா.மு.கோமு மாடு மேய்க்கும் கரடியார்
14 இ.மணி அபிமானி இரண்டாவது இடம்
15 ஈ. ரா.மணிகண்டன் ஈ ரா இறைவன் பப்புன் பேராசிரியர்
16 ரா.ராஜசேகர் பியானோ வாசிக்கும் பூனை
17 மஞ்சுளா  சுவாமிநாதன் கொஞ்சம் ஆசை கொஞ்சம்  கனவு கொஞ்சம் பட்ஜெட் 
18 எச். நஸீர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் மனச்சிடுக்கு…
19 புவனா சந்திரசேகரன் மூன்று புள்ளிகள்
20 சங்கரி அப்பன்  உறவின் மொழி 
21 துரை. அறிவழகன் காத்தப்ப பூலித்தேவன்
22 கே.எஸ்.சுதாகர் நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
23 ஜமுனா ஜகன் மியாமி மிதவை
24 அஷ்ரப் பேகம் பெஷாரா குழலினிது யாழினிது

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

 

escape of Odysseus from one eyed giant at cyclops using goats

(picture from Image Creator Microsoft bing)

ஓடிசியஸின்  வேண்டுகோளைக்  கேட்ட மன்னர்  அவனுக்கு வேண்டிய உதவி செய்வதாக உறுதி கூறிவிட்டு அவனை நிம்மதியாக படுக்கும்படி சொல்லிவிட்டு தன் அரண்மனைக்குச் சென்றார்.

மறுநாள் மன்னர்  ஓடிசியசை தனது  குடிமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவன் பயணம் செய்வதற்கு உதவியாக சிறந்த கப்பல் ஒன்றையும்  கப்பலை செலுத்துவதற்காக மாலுமிகளையும்  ஏற்பாடு செய்யுமாறு மன்னர்  குடிமக்களுக்கு கட்டளையிட்டார்.

குடிமக்களும் மன்னர் கட்டளைப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு அரண்மனைக்கு வந்தனர்.  மன்னர் ஓடிசியசிற்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமக்களுக்கும் பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்தார்.  அந்த விருந்தில் டிரோஜன் போரைப் பற்றிய பாடல் ஒன்றை ஒரு கவிஞர் பாடினார், ஓடிசியஸ்  அதைக் கேட்டுவிட்டு  முகத்தை மூடிக்கொண்டு அழுதான். அதைப் பார்த்த மன்னர்  வீர  விளையாட்டு போட்டிகளைத் துவங்கும்படி ஆணையிட்டார்.  ஓடிசியஸூம்   அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தான்.

குடிமக்களும் மன்னரும் ஓடிசியஸின் வீரத்தைப் பாராட்டினர்.  இப்படிப்பட்ட வீரனுக்கு உதவுவது தனது கடமை என்றும் மன்னரும் மனதில் தீர்மானம் கொண்டார்.

விளையாட்டுப்  போட்டிக்கு பிறகு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  ஓடிசியஸ் தனது துயரத்தை அடக்க வழியில்லாமல்  தவித்தான். இதைக் கண்ட மன்னர் ஓடிசியஸ்  வாழ்வில் பல துயரமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை ஊகித்து அவனது  முழு வரலாற்றையும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் .

இதுவரை அவன்  ஏற்றுக்கொண்ட பயணத்தில் எந்தெந்த நாடுகளை பார்த்தான்  என்றும் அங்கெல்லாம் அவனுக்கு  நேர்ந்த துயர் அனுபவங்கள் என்னென்ன என்பதையும்  விளக்கிக் கூறும்படி அன்புடன் வேண்டிக் கொண்டார். அது மட்டுமல்லாமல்  டிரோஜன் போரில் அவன்  ஆற்றிய வீர தீரச் செயல்களைப் பற்றி தனக்கும் தனது குடிமக்களுக்கும் விளக்கிச் சொல்லுமாறும் பேரன்புடன் கேட்டுக்கொண்டார்.

ஓடிசியஸ்  தனது நீண்ட கதையைக் கூறத் தொடங்கினான்.

மன்னர் மன்னா! என் மீது அன்பு கொண்ட இந்நாட்டு மக்களே! வீரமும் தீரமும் விவேகமும் வெற்றியும் நிறைந்த என் வாழ்க்கையில் துயரமும் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருந்தன.

இதாக்கா என்னும் புகழ் பெற்ற ஊரே என் நாடு. அதன் மன்னன் நான்.  டிராய் நாட்டில் நடைபெறும் போரில் கிரேக்கருக்கு ஆதரவாக ஹெலனை மீட்டு வரும் பணிக்கு என்னை அர்பணித்த வீரத் தளபதியும்  நான். வீரர் அக்கிலிஸ் ஹெக்டரைக்  கொன்ற பின்னரும் டிராய் நாட்டுக் கோட்டைக்குள் செல்ல இயலாமல் தவித்தோம். பின்னர் ஒரு மாயக் குதிரையை நான் வடிவமைத்து அதன் மூலம் கோட்டைக்குள் சென்று டிராய் நகரைக் கைப்பற்றினோம்.

ஹெலனை மீட்டு மன்னர்   மெனிலியசிடம் ஒப்படைத்தோம். வெற்றிக் களிப்புடன் அனைவரும் தங்கள் நாட்டிற்குப் புறப்பட்டோம். நாங்கள் செய்த மாபெரும் தவறு வெற்றியின் மிதமிதப்பில் கடவுளர்களுக்குச் சரியான பலிகள் கொடுக்கத் தவறியதுதான்.

விளைவு எங்கள் கடல் பயணம் மிகவும் கொடுமையாக இருந்தது. காற்று எங்களுக்கு எதிராக வீச ஆரம்பித்தது.    எங்கள் கப்பல்களை நாங்கள் செல்ல வேண்டிய பாதைக்குப் பதிலாக வேறொரு தீவில் கொண்டுபோய் சேர்த்தது.  அந்தத் தீவில் இருந்த வீரர்கள் எங்களைத் தாக்க வந்தனர். வீரத்தில் யாருக்கும் சளைக்காகத் நாங்கள் அந்த வீரர்களை வென்று வெற்றிவாகை சூடினோம்.

நாங்கள் உடனே அந்த தீவை விட்டு புறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அங்கிருந்த மதுவின்  மயக்கத்தில் என் வீரர்கள்  சற்று காலதாமதம் செய்தார்கள். விளைவு தீவின் உள்  பகுதியிலிருந்து பெரும்படை வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டது. நாங்களும் துணிந்து தாக்கினோம். இருப்பினும் என் வீரர்களில் பலர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள்  கப்பலில் ஏறி அதனை விரைவாகச் செலுத்தி தப்பித்தோம் .

ஆனால் சிறிது தூரம் செல்வதற்குள் கடவுளர்கள்  எங்கள் கப்பல்களுக்கு எதிராகப் பெரிய புயலை ஏவினர். அதனால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் எங்கள் பாய் மரங்கள் உடைபட்டன. பாய்கள் கிழிபட்டன. அதன் பின் நாங்கள் லோட்டஸ்களின் நாட்டை அடைந்தோம். அங்கிருந்த லோட்டஸ் பழங்களைத் தின்ற சில மாலுமிகள் அதற்கு அடிமையாகி அந்தத் தீவை விட்டு வர மறுத்தனர். அவர்களை அங்கேயே விட்டுவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அதன் பின்  சைக்ளோப்பியர் வசிக்கும் தீவை அடைந்தோம். அது நல்ல வளமான தீவு. நிறைய ஆடுகள் இருந்தன. வயல்களும் பழ மரங்களும் நிறைய இருந்தன. புயலிலும் துயரிலும் தவித்த எங்களுக்கு அந்தத் தீவு சொர்க்க புரியாக இருந்தது. அந்த நாட்டிலிருந்து எங்கள் பயணத்திற்குத் தேவையான் உணவுப்  பொருட்களையும் ஆடுகளையும்  எடுத்துச் செல்லவேண்டும் என்று முடிவு கட்டினோம்.

அதற்காக  மற்றவர்களை கப்பல் அருகேயே காவல் இருக்கச் சொல்லி , நான்  ஆறு மாலுமிகளை  அழைத்துக்கொண்டு  தீவுக்குள் சென்றேன் .

அங்கே ஒரு பெரிய குகை தென்பட்டது. அது ஒரு மன்னனின் உணவு குவிக்கப்பட்டிருக்கும் களஞ்சியம் போல் இருந்தது. எண்ண  முடியாத அளவிற்கு ஆடுகளும் அங்கே இருப்பதைப் பார்த்தோம். குகைக்குள்ளே பல தரப்பட்ட உணவு வகைகளும் இருந்தன. அந்த இடத்தின் தலைவனைச் சந்தித்து அவனிடம் வேண்டி உணவுப் பொருட்களைப் பெற்றுச் செல்லலாம் என்று காத்திருந்தோம்.

மாலையின் அந்த இடத்தில் தலைவன் வந்தான். அவன் சாதாரண மனிதன் அல்ல மாபெரும் ராட்சதன் என்பதை அறிந்தபோது நடு நடுங்கிவிட்டோம். அவன் பாலிபீமஸ் என்ற நெற்றியில் ஒரே கண்ணை உள்ள அரக்கன் என்பதை அறிந்தோம். எங்களைப் பார்த்துவிட்டு “யார் நீங்கள்?” என்று இடி போல் அவன் கத்தியதைக் கேட்டதும் எங்களது பயம் அதிகரித்தது. இருப்பினும் நான் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு , ” நாங்கள் டிராய் நாட்டுப் போரை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். உங்களிடம் கேட்டு உணவுப் பொருள் வாங்கிச் செல்ல வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் ” என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அந்த ராட்சசன் பதில் எதுவும் சொல்லாமல் குகையின்  கதவை ஒரு பெரிய பாறையை வைத்து மூடினான் .   என்னுடைய மாலுமிகள் இருவரைக் கொன்று அவர்கள் உடலைச் சாப்பிட்டுவிட்டு ஆட்டுப்பால் குடித்துவிட்டு    “எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. நாளை காலை மற்றவர்களைக் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு ஆடுகள் மத்தியில் படுத்து உறங்கினான்.

odysseus-and-the-cyclops

எங்களால் அந்த ராட்சசனைக் கொல்வது அதிக சிரமமிருக்காது. ஆனாலும் அந்த வாயிலில் உள்ள பாறையை எங்களால் அகற்ற முடியாது. அது அவனால் மட்டுமே முடியும். அதனால் அடுத்த நாள் காலை வரை காத்திருந்தோம். காலையில் அவன் பாறைக்  கதவைத் திறந்து ஆடுகளை வெளியே செல்ல உத்தரவிட்டான்.   எங்களைப் பார்த்து  ஒவ்வொரு வேளைக்கும் இருவரைச் சாப்பிட்டுவிட்டு கடைசியாக என்னைச் சாப்பிடப் போவதாகக் கூறி ‘அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு’ என்று சொல்லிவிட்டு எங்களை  உள்ளே வைத்து கதவை மூடி ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றான்.

அவன் திரும்பி வந்ததும் அவனைக் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டினேன். அதன்படி நானும் என் சக மாலுமிகளும் ஆளுக்குக்கொரு  மரக் குச்சியை  உடைத்து அங்கிருந்த நெருப்பில் அதன் முனையை கருக்கி சூட்டுக்கோலைத்  தயார் செய்திருந்தோம் .

அன்று மாலை அந்த ராட்சசன் குகைக்கு வந்ததும் நான் அவனுக்கு என்னுடன் கொண்டுவந்த மதுவை ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன். அவன் அதை ரசித்துக் குடித்து இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கிக் குடித்தான்.  இருப்பினும் எங்கள் வீரர்களில் இருவரைக் கொன்று சாப்பிட்டுவிட்டு  குகைக் கதவை மூடுமுன் நான் எஞ்சியிருந்த நான்கு வீரர்களை அழைத்துக் கொண்டு நாங்கள் ஐவரும்  தயார் செய்த குச்சியைக் கொண்டு எங்கள் பலம் முழுவதையும் உபயோகித்து அவனுக்கிருக்கும் ஒரே கண்ணில் பாய்ச்சினோம். அப்படியும் அவன் தனது கண்ணில்  குத்தப்பட்ட குச்சிகளை எடுத்து வீசினான். அவனால் எங்களைப் பார்க்க முடியவில்லை. ஓடிப்போய் குகை வாசலில் நின்று கொண்டான். அதன் வழியாக நாங்கள் தப்பித்துச்  செல்ல வேண்டும். அவனுடைய ராட்சசக் கைகளுக்குள் அகப்படாமல் அந்த வாசலைக் கடக்க முடியாது. எங்களைப்  பிடிப்பதற்காகவே கண்தெரியாத அந்த ராட்சசன் வழியை மறைத்துக் கொண்டு கையை அகல விரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். 

Odysseus And The Sheepஅப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கிருக்கும் ஆடுகளை வெளியே செல்லும்படி விரட்டி அடித்தேன். ராட்சசன் தன்னைத் தாண்டிச் செல்லும்  ஆடுகளின் முதுகைத்  தடவிப் பார்த்து அது மனிதர்கள் அல்ல என்று தெரிந்து அவைகளை வெளியே போக விட்டான். நானும் என் கக மாலுமிகளும் கொழுத்த ஆடுகளில் மூன்று ஆடுகளை அவன் படுப்பதற்காக வைத்திருந்த செடி கொடிகளால் ஒன்றாகக் கட்டி அவற்றின்  வயிற்றுப்புறத்திற்குக் கீழே தொட்டில் போல் கட்டிக் கொண்டு அதில் படுத்துக் கொண்டு சென்றோம்.  ஆடுகளுடன் ஆடுகளாக  குகை வாசலுக்குக் சென்றோம். அவன் ஆடுகளின் முதுகை மட்டும் தடவிப் பார்த்ததால் அதுவும் நடு ஆட்டின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கும் எங்களை அவனால்  கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக அந்தக் குகையிலிருந்து தப்பினோம்.

பிறகு விரைவாகச் சென்று மற்ற மாலுமிகளுடன் சேர்ந்து கப்பலில் ஏறிக்  கொண்டோம். போகும்போது அங்கிருந்த உணவூப்  பொருட்களையும்  ஆடுகளையும் கப்பலில் ஏற்றிக்கொள்ளத் தவறவில்லை.

கப்பல் அந்தக் குகை வழியாகச் செல்லும் போது அங்கே குகை வாசலில் அந்த ராட்சசன்  நின்றுகொண்டு தன்னிடமிருந்து தப்பிய எங்களைத் தேடி கண் தெரியாமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தான். 

எங்களைத் துன்புறுத்தி சக மாலுமிகளைக் கொன்றுத் தின்ற அவன் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. அவனைப் பார்த்து ” அடேய்! அற்பப் பதரே ! உன் கண்ணை யார் சிதைத்தது என்று கேட்டால் இத்தாக்காவின் மன்னன் ஓடிசியஸ் என்று கூறு ” என்று வீராவேசமாகக் கத்தினேன். 

அவன் அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தவனைப் போல் நின்றான். ” நீ தான் ஓடிசியஸா ! என்னால் நம்பவே முடியவில்லையே ! நான் யார் தெரியுமா? கடல் தேவன் பொசைடன் அவர்களின் மகன்.   உன்னால்தான் இந்த ஆபத்து நடக்கும் என்று ஒரு ஜோதிடன் எனக்கு முன்னமே கூறினான். நீ ஒரு மன்னனைப் போல்  வருவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு கோழையைப் போல் எனக்கு மது கொடுத்து மயங்க வைத்து என் கண்ணைப் பறித்தாய்! இருப்பினும் மன்னன் என்பதால் உன்னை மதிக்கிறேன்! நீ மறுபடியும் என் குகைக்கு வா ! நீ கேட்டபடி உனக்கு உணவும் ஆடுகளும் தருகிறேன் ” என்று கூறினான். 

எனக்கு அவன் மீது உள்ள ஆத்திரத்தில் மேலும் கத்தினேன் ” பொசைடன் மகனாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை!  உன்னைக்  கொன்று நரகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினேன்.

அப்போது அவன்  வானத்தைப் பார்த்து ” பொசைடன் தந்தையே! என்னைத் தாக்கிய ஓடிசியஸ் அவன் சொந்த நாட்டிற்குத் திரும்பப் போகவதற்குள் அவனுக்குத் தீராத துயரங்களையும்  துன்பங்களையும் தந்து   அவனைத் துடிதுடிக்க விடுங்கள்! அவனுக்கு ஏராளமான விபத்துக்களும் சிக்கல்களும் அவமானங்களும் வரவேண்டும். ” என்று உரத்த குரலில் வேண்டியது எங்கள் அனைவரது காதுகளிலும் விழுந்தது. 

தன் மகனின் குரல் தந்தை பொசைடனிற்குக் கேட்டிருக்க வேண்டும்.  அந்த சைக்ளாப்ஸ் அரக்கனிடமிருந்து தப்பினாலும் பொசைடன் எங்களை விடாமல் துரத்தித் துரத்தி அடித்தார். 

நாங்கள் அடுத்ததாக அயோலியா தீவை அடைந்தோம்! 

(தொடரும்) 

 

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

விக்கிரமசோழன்

Vikrama Cholan - YouTube

குலோத்துங்க சோழனின் கதையை முடிப்பதற்கு முன் சில நிகழ்வுகளை நாம் பார்த்தே ஆகவேண்டும்.

வருடம் 1076:

ஆட்சியேற்ற ஆறு வருடங்களில், குலோத்துங்கனின் ஆட்சி, சோழ நாட்டை மீண்டும் சாம்ராஜ்யமாக்கியிருந்தது. வேங்கியில், சோழன் ஆதரவில் விஜயாதித்தன் ஆண்டுவந்தான். அங்கு அமைதி நிலவிவந்தது. மேற்கே, சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனும் அமைதி காத்து வந்தான் என்றே கூறவேண்டும். விஜயாதித்தன் இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்தச் செய்திகள் தஞ்சைக்குச் சுடச்சுட வந்தவண்ணமிருந்தன. முடிவில் அந்த முடிவுச் செய்தி வந்தது. விஜயாதித்தன் காலமானான்.

கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனையில், குலோத்துங்கன் மந்திராலோசனைக் கூட்டம் கூட்டினான். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், இளவரசர்கள் குழுமியிருந்தனர். படைத்தலைவர்களில் கருணாகர பல்லவன் இருந்தான். காளிங்காராயன் இருந்தான். இருங்கோவேள் இருந்தான். இளவரசர்களில், ராஜேந்திரன், ராஜராஜ சூடங்கன், வீரசோழன், விக்கிரமசோழன் நால்வரும் இருந்தனர்.

இந்த நான்கு இளவரசர்களைப்பற்றிச் சிறுகுறிப்பு வரைந்து விட்டு, மந்திராலோசனைக்குத் திரும்புவோம்.

முதல் மகன் இளவரசன் ராஜேந்திர சோழன்: இவன் யானைப் படைகளைக் கைக்கொள்வதில் சிறந்தவன். வாள் பயிற்சியில் இவனை வெல்ல அன்று சோழ நாட்டில் எவரும் இல்லை. ராஜேந்திரன் இலங்கைக்கு யுத்தத்துக்கு சென்று அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓடச் செய்து வென்றான்.

இரண்டாவது மகன் ராஜராஜசோழன். ஸ்ரீவிஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக பெரும் படையுடன் இருந்தான்.

மூன்றாவது மகன் வீரசோழன். பெயரிலேயே வீரத்தை வைத்துக்கொண்டு போர் புரியாமலா இருந்திருப்பான்? எனினும் நமக்குக் குறிப்புகள் எதுவுமில்லை.

விக்கிரம சோழன் நான்காவது இளவரசன். இவனைப்பற்றி நாம் சிறு குறிப்பு எழுதப்போவதில்லை. ஏனெனில், இவனைப் பற்றி நாம் நிறைய எழுதவுள்ளோம்.

எங்கே விட்டோம்? மந்திராலோசனை!

குலோத்துங்கன் சொன்னான்: “மேலைச் சாளுக்கியம், கலிங்கம் இந்நாடுகள் நம்முடன் பகையோடு உள்ளன. தெற்கே பாண்டியநாடு, சேரநாடு, ஈழம் இவைகளும் – எப்பொழுது வாய்ப்புக்கிடைக்கும், நாம் மீது படையெடுக்கலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம், வேங்கியில் நமது ஆதிக்கம் நிலையாக இருப்பதால்தான் வட திசை அமைதியாக உள்ளது. இந்நேரம், நமது கூட்டாளியான விஜயாதித்தன் காலமானது, பிரச்சினையை உருவாக்கிவிட்டது” என்றான். யாரும் ஒன்றும் பேசவில்லை. மன்னனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தனர். மன்னர், வேங்கியின் முன்னாள் இளவரசர் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதது நமக்கு என்ன தெரியப்போகிறது என்று அமைதியாக இருந்தனர்.

மன்னன் தொடர்ந்தான். “விக்கிரமாதித்தன் இந்த சமயம் மேலைச்சாளுக்கியத்திலிருந்து படையெடுத்து வேங்கியை ஆக்கிரமித்துக்கொள்ள முயற்சிகள் செய்வான். வேங்கி நம் கையை விட்டுப்போகாமல் இருக்கவேண்டுமானால், அங்கு நமது நேரடி ஆட்சி நடக்கவேண்டும்” என்றவன் மேலும் தொடர்ந்தான்: “இளவரசர்கள் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி இம்முறை இளவரசன் ‘இராசராச மும்முடிச் சோழனை’ வேங்கி நாட்டை ஆளும்படி அனுப்புகிறேன். அவன் அங்கு அமைதியை நிலை நாட்டி, எதிரிகளைக் கட்டுக்குள் வைத்து, ஆட்சி புரியவேண்டும்” என்றான். அத்துடன் சபை கலைந்தது என்பதற்கு அறிகுறியாக கையை உயர்த்தினான்.

ராசராசன், வேங்கியில் தன் கடமையைச் செய்யத் துவங்கினான். ஆயினும், சோழநாடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஓராண்டு முடியும் போது, தந்தைக்கு தனது மனநிலையை எழுதினான்.

கி.பி.1077-ல் குலோத்துங்கன், ராசராசனை சோழநாட்டுக்கு வரவழைத்து, தன் அடுத்த மகன் வீரசோழனை அந்நாட்டை ஆண்டுவர அனுப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் வேங்கியை ஆண்டான். அவனுக்கும் சோழநாடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஆறாண்டு முடியும் போது, தந்தைக்கு தனது மனநிலையை எழுதினான்.

கி.பி.1084 -ல் குலோத்துங்கன், வீரசோழனை சோழநாட்டுக்கு வரவழைத்து, தன் மூத்த மகன் இராசராச சோழ கங்கனை அனுப்பினான். அவன் வேங்கி நாட்டை ஆண்டான்.

கி.பி.1089-இல் மீண்டும் வீர சோழனே வேங்கி நாட்டை ஆண்டுவர அனுப்பப்பட்டான். அவன் கி.பி. 1093 வரை அந்நாட்டை ஆண்டுவந்தான்.

குலோத்துங்கன், கி.பி.1093ல் கடைசி இளவரசன் விக்கிரம சோழனை வேங்கி நாட்டை ஆள அனுப்பிவைத்தான். விக்கிரமசோழன் இருபத்தைந்து வருடம் அங்கிருந்து வேங்கியை ஆண்டுவந்தான்.

இடையில், குலோத்துங்கனின் ஆட்சியின் 26ஆம் ஆண்டில் (கி.பி. 1096 இல்) அரசியல் களம் சூடுபிடித்தது. விக்கிரமசோழன் வேங்கியின் அரசுப் பிரதிநிதியாக இருந்து வந்தான். தென் கலிங்க வீமன் தன்னாட்சி பெறுவதற்காக வேங்கியின்மீது படையெடுத்தான். விக்கிரமசோழன் பெரும்படையுடன் சென்று வீமனோடு போர் செய்து அவனை வென்றான். தோல்வியுற்ற வீமன் சிற்றரசனாகவே இருந்து வேங்கிக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டான். இது முதல் கலிங்கப்போர்.

முதல் மூன்று இளவரசர்களும், அந்த ஐம்பது வருடத்தில், காலத்தால் கரைக்கப்பட்டு மறைந்து போயினர். சோழமகுடத்துக்கு உரியவன் விக்கிரமன் தான் என்பதை  மன்னன் உணர்ந்தான். தனது மூப்பும், தள்ளாமையும் குலோத்துங்கனை முடிவெடுக்க வைத்தது. விக்கிரமனின் வீரம் குலோத்துங்கனைக் கவர்ந்திருந்தது.

குலோத்துங்கன் விக்கிரம சோழனுக்கு பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டுவதற்காக கி.பி. 1118 இல் அவனை வேங்கியிலிருந்து சோழநாட்டுத் தலைநகருக்கு வரவழைத்தான். இருவரும் சேர்ந்து சோழநாட்டை ஆளத்தொடங்கினார். வேங்கியில், விக்கிரமசோழன் இருந்த இடத்தில் தெலுங்குச் சோழர்களில் ஒருவனை அரசு பிரதிநிதியாக நியமித்து வேங்கி நாட்டை ஆண்டு வரும்படி செய்தான். குலோத்துங்கனின் இச்செயலை, வேங்கி நாட்டு மக்கள் விரும்பவில்லை. இதனால் வேங்கி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. வேங்கியை மேலைச் சாளுக்கிய நாட்டோடு இணைத்துக்கொள்ள வேண்டுமென்று நெடுங்காலமாக முயன்று கொண்டிருந்த ஆறாம் விக்கிரமாதித்தன் இதைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான். வேங்கி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை எளிதாக வென்று கைப்பற்றிக் கொண்டான். குலோத்துங்கன்மேல் இருந்த தன் பரம்பரை வஞ்சத்தை ஆறாம் விக்கிரமாதித்தன் தீர்த்துக்கொண்டான்.

கி.பி. 1120 இல் முதலாம் குலோத்துங்கன் மறைந்ததும் விக்கிரம சோழன் சோழப் பேரரசின் மன்னனாக முடி சூட்டிக்கொண்டான். நான்காவது மகனாக இருந்தாலும், அதிர்ஷ்டம் இருந்தால், அனைத்துத் தடைக்கற்களும் தானே விலகும் என்பதற்கு அவன் வாழ்க்கை ஓர் உதாரணம்.

சோழநாடு பொற்காலத்தில் தொடர்ந்து பயணிக்கிறது. அதை நாமும் தொடர்ந்து பார்ப்போம்.

 

“பிரிவின் தாக்கம்” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Happy Indian grandfather and grandson spending quality time Stock Photo |  Adobe Stock 

பதினெட்டு வயதான அமர் வடக்கிந்திய மாநிலத்தில் வசதியான வாழ்வியல்கொண்ட வாரி வழங்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் ஆகாஷ்-தயா, தம்பி ப்ரேம். அமரின் தவிப்புகளைக் கவனித்தது மருத்தவரான டாக்டர் நித்தின்.

அமர் படித்துக் கொண்டிருந்த  கல்லூரி நகரத்தின் எல்லையிலிருந்தது. அதன் அருகே ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. அந்த பகுதியில் மருத்துவ உதவி மிகக் குறைவாக இருந்ததால் இந்த தொழிற்சாலை முதலாளி சிகிச்சையகம் ஒன்றைத் துவக்கினார். அங்கு ஐந்து மருத்துவரில் ஒருவரான டாக்டர் நித்தின் கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் எடுப்பதும் உண்டு.

பல வகுப்புகளுக்கு உடலமைப்பு, அமிலம் எனப் பல பாடத்திட்டம் நடத்தினார். இதனால் மாணவர்களுக்கும் இவருக்கும் நல்ல பரிச்சயமானது. பல பயன் உருவாகியது. எந்த விதமான நலனைப் பற்றியும் மாணவர்கள் இவரிடம் பேசித் தீர்வு அடைய நேர்ந்தது. தன்னிடம் வருவோரின் பிரச்சினையை யாரிடமும் சொல்ல மாட்டார் டாக்டர் நித்தின்.

முந்தின வருடத்திலும் அமரின் வகுப்பிற்குச் சில பாடங்களை நடத்த நேர்ந்தது. மற்ற மாணவர்களைப் போலவே அமரும் தன் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது டாக்டர் நித்தினிடம் வந்தான். இந்த வருட ஆரம்பத்திலும் அதேதான் நேர்ந்தது. இந்த முறை எங்களையும் கலந்தாலோசனையில் சேர்க்க டாக்டர் நித்தின் முடிவுசெய்தார்.

எங்கள் தன்னார்வ அமைப்பு நகரத்தின் நடுவில் அமைந்திருந்தது. நாங்கள் ஐவருமே ஸைக்காட்டிரிக் ஸோஷியல் வர்க் பட்டதாரிகள் அதாவது மனநல பிரிவில் மேல்படிப்புப் பயிற்சி, தேர்ச்சி பெற்றவர்கள். பலதரப்பான வேலைப்பாடுகளுக்காக நாங்கள் தொழிற்சாலை மருத்துவமனையிலும் வாரம் மூன்று முறை வருவதுண்டு. அந்த மாதம் முழுவதும் நான் மட்டுமே போய் வந்ததால் அமர் பற்றிய தன்னுடைய கணிப்பை மருத்துவர் நித்தின் என்னுடன் பகிர்ந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விடுமுறைக்குப் போய் வந்ததிலிருந்தே அமர் மிகச்சோர்வுடன் தெரிகிறான், கேட்டால் மழுப்பி விடுகிறான், அதனால்தான் இதைப் பகிர்வதாகக் கூறினார்.

அடுத்த கட்டமாக, அமர் மறுமுறை அவரை அணுகியதும், எங்களைப் பற்றி விவரித்து, சொல்லப்படும் விவரங்களை அவனுடைய அனுமதியின்றி யாரிடமும் பகிர மாட்டோம் என்றதையும் விளக்கினார். இதைப் புரிந்த பின்பே அமர் எங்களுடன் பகிரத் தொடங்கினான்.

முதல் ஆண்டில் சேர்ந்தபோது கல்லூரி மிகவும் பிடித்திருந்தது. மதிப்பெண்கள் நன்றாக வாங்கியதும், பல நல்ல நண்பர்களின் பழக்கம் கிடைத்தது. வீட்டில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனது ஏதோ ஒரு பழைய காலத்தில் நடந்ததைப் போலத் தோன்றுவதாக அமர் சொன்னான். இது ஏன் என்று புரியவில்லை என்றும் கூறினான்.

மாற்றத்தைப் புரிந்துகொள்ள, மேலும் விவரிக்கச் சொன்னேன். சேர்ந்த புதிதில் படிப்பில் மட்டுமே மனம் நிலவியது. பாடத்திட்டங்களில் ஆர்வம், மாலையில் கூட பெரும்பாலும் நண்பர்களுடன் நூல்நிலையத்தில்தான் என இருந்தது. படிப்படியாக அரை இறுதியாண்டுக்குப் பிறகு இப்படிச் செய்ய மனதிற்கு லயிக்கவில்லை.

கல்லூரி விடுமுறையில் வீடு சென்றதும் அவர்கள் தன்னை அதிகமாகக் கோபித்துக் கொள்வது, தான் வீட்டினருடன் குதர்க்கமாகப் பேசுவது என்று இருந்தது. அமருக்குத் தன் செயல் எதுவும் பிடிக்கவில்லை, வெறுப்புடன் பார்த்தான். இதுவரையில் கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடம்பு, சோம்பலானதாக மாற்றம் கண்டது. இந்த மாற்றங்களால் தூக்கம் குறைந்தது.

கல்லூரி திரும்பியதும் மதிப்பெண்கள் குறைந்ததில் ஆசிரியர்கள் வருத்தப் படுவது தனக்கு மேலும் கோபத்தைத் தந்தது என்றான் அமர். இதைத் தன்னுடையச் சுதந்திரத்திற்கு இடையூறாகக் கருதினான். ஆனால் கல்லூரி விடுதியில் எப்போதும் போலிருந்தான், நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் அதே பாசத்துடன் இருந்தான்.

விடுமுறைக்கு வீடு செல்லத் தவிர்ப்புச் சொன்னான் அமர். உடல் சோர்வும், முகச் சவரம்கூடச் செய்யாததும் தன்னாலேயே பொறுத்துக்கொள்ள முடியாமல் அமர் டாக்டர் நித்தினிடம் ஆலோசிக்க வந்தான்.

வீட்டின் விவரங்களை மேலும் வர்ணிக்கச் செய்தேன்.

அமர் தன் குடும்பத்தைப் பற்றிய விவரத்துடன் துவங்கினான். செல்வச்சிறப்புடைய வசதியானவர்கள், காலங்காலமாக ஏழைக் குடும்பங்களுக்குப் படிப்பிற்கு உதவி செய்வார்கள். சிறுவர்களுக்கான ஆரம்பப் பள்ளிக்கூடம் துவக்கினார்கள். போகப் போக மருத்துவத் தேவைக்கு வெகு தூரம் போகவேண்டியதால், தங்களது பண்ணையில் ஓரிரு அறைகளில் ஒரு மருத்துவரை வரவழைத்து நோயாளிகளைப் பார்க்கச் செய்தார்கள். மிகச் சமீபத்தில் ஊர்மக்கள் விளைச்சலையும் தங்கள் விளைச்சலுடன் கூடச் சேர்த்து விற்பனை செய்து வருவதை அமர் பெருமையாகக் கூறினான். இந்தப் பொறுப்புகளை அமர் மற்றும் அவனுடைய தம்பிக்குப் பிரித்துத் தந்திருந்தார் தாத்தா. அவர்கள் வளரும் பருவத்திலிருந்தே இது நடந்துகொண்டு இருந்தது. பிள்ளைகளுக்குப் பொறுப்பு வரத் தாத்தா-பாட்டி இந்த பரோபகாரங்களில் தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டார்கள். அண்ணன் தம்பி பொறுப்பாகச் செய்து வந்தார்கள்.

அன்று அமரின் தம்பி ப்ரேம் என்னைப் பார்க்க வந்தான். கடந்த இரு விடுமுறைகளிலும் அமர் மூன்று நாட்களிலேயே கல்லூரிக்குத் திரும்பியதாகவும் வீட்டில் விட்டேற்றியாக இருப்பதாகவும் வருத்தத்துடன் விளக்கினான். வீட்டில் நடந்த சம்பவங்களை விவரிக்கச் சொன்னேன்.

அதில் மூலகாரணங்கள் மேலும் புரிந்தது, இல்லத்தில் உள்ள பழங்காலக் கோயில் பணிகளைத் தாத்தா பார்த்துக்கொண்டார். தாத்தாவுடன் அமர் எப்போதும் போய் உதவ, கோயில் காரியங்களில் பரிச்சயம் கூடியது. தாத்தா வெளியூர் சென்றுவிட்டால் அன்றையக் கோயில் வேலை அமரின் மேற்பார்வையில் தான் நடக்குமாம். தெய்வ சம்பந்தப்பட்ட சுலோகம், பூஜை விதிகளைக் காத்து வந்தான் அமர். ஆர்வமாகச் செய்து வந்தான். தாத்தா மறைந்த பிறகு இப்போதெல்லாம் இந்த ஆர்வம் சுருங்கியது.

அமரிடம் இதை எடுத்துக் கொண்டேன். விவரங்களில், சம்பவங்களில் கவனம் தராமல் அமரைக் கடந்த வருடங்களை நினைவுகூர மாற்றிக் கொண்டதும், தாக்கத்தையும் உறவுகளைப் பற்றியும் பகிரச் செய்தேன்.

சில ஸெஷன்களுக்கு பின் இறந்து போன தாத்தாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். தனக்கு ஒரு பக்கம் துயரம் தாக்கியதாகக் கூறினான். அவருடைய திடீர் மரணம் மிகப் பெரிய இடியாக இருந்ததாகக் கூறினான். சமாளிக்கத் தெரியாமல் தத்தளித்ததாக அமர் விவரித்தான்.

அந்தச் சம்பவ நாளிலிருந்து நடந்ததை நினைவூட்டி விவரிக்கச் செய்தேன். கூடவே அவற்றை எதிர்கொண்ட விதத்தையும். இவை வீட்டிலிருந்த போதும், கல்லூரியில் வந்த பின்பும்.

பல ஸெஷன்களுக்குப் பிறகே தன் செயல்பாட்டை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, தாத்தா மரண படுக்கையில் இருக்கும் போது தான் பக்கத்தில் இல்லாததைப் பழி உணர்ச்சியாக எடுத்துக் கொண்டதால் உள்ளூரத் தத்தளிப்பு.

கடந்த மாதங்களில் உணர்வை அலசி ஆராய்ந்து பார்க்கையில், விட்டுச் சென்று விட்டாரே என்று அவர் மீதான கோபம் என்பதை அமர் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதாவது வெளிப்படையாகத் துயரத்தைக் காட்ட மறுத்த நிலையில், வீடு சென்றதும் துக்கம் பீரிட்டது. அதைத் தடுக்க அங்குச் செல்ல மறுத்தான்.

ஸெஷன் இதை மையமாக வைத்துச் செல்ல, விரிவின் பல்வேறு தாக்கம் இருந்ததை உணர ஆரம்பித்தான். தன் பல மாற்றங்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அமர்  புரிந்து கொண்டான். துயரம், அதிலிருந்து பிறந்த கோபத்தினால் கோவில் காரியங்களில் ஈடுபாடு குறைந்தது.

சிறுவயதிலிருந்தே தாத்தாவுடன் கோவில் செல்வதும் அதன் தேவைகளைக் கவனிப்பதும் இணைந்து இருந்தன. அவர் இல்லையேல் இவை இல்லை என்றதற்குக் காரணத்தைப் புரிந்து கொண்டான். அந்தப் பிரிவைத் தாள முடியாமல் அந்த உறவுக்குச் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தான் தூரத்தில் தள்ளப் பார்க்கிறோம் என்று அடையாளம் கண்டான்.

இவை யாவும் தன் இயல்பான நிலை இல்லாததால் தன்னை வேதனை வாட்டியதைப் பார்க்க முடிந்தது. அமர் தன் நடத்தையைச் சுதாரித்துக் கொள்ளத் தயாராக இருந்தான். முன்பைப்போல காலை வேளையில் ஆறு கிலோமீட்டர் ஓடுவது, பூஜை செய்து, மாலையில் படிப்பது என எப்போதும் போன்ற வழக்கத்தைச் செய்யத் தொடங்கினான்.

தன்னிடம் மாற்றங்களை அமர் கவனிக்கத் தொடங்கினான். இந்த நிலை அடுத்த கட்டமான வளர்ச்சிப் பாதையில் கூட்டிச் சென்றது. ஆகக் கோவில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க முன் வந்தான். தாத்தா தன்னைக் கோவில் பொறுப்பிற்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இதை ஆராய, புரிந்தது, கோவிலுக்கும் தாத்தாவுக்கும் தொடர்பும்,  அவர் மேலான பாசம் பக்தி சிறுவயதிலிருந்தே ஈடுபாடும் இவ்வாறு முடிவு செய்ய உதவியது என.

இதனால் வந்த மனோதைரியத்தை வைத்து, வீட்டினரைப் புறக்கணித்ததைச் சரி செய்ய ஸெஷன் மேற்கொண்டோம்

எதேச்சையாக டாக்டர் நித்தினைச் சந்தித்ததில், அமர் வகுப்பில் பழைய ஆர்வத்தைக் காட்டுவதாகவும் முழு மனதோடு படிப்பதையும் விவரித்தார்.

                                                        ************************************

 

 

பிரமிக்க வைத்த புத்தகங்கள்-3 – மீனாக்ஷி பாலகணேஷ்

                                                            Orphan Train- Christina Baker Kline (432 பக்கங்கள் )

Orphan Train: A Novel

அநாதை ரயில்வண்டி- கிறிஸ்டினா பேக்கர் க்ளைன்.

சில சமயங்களில் புத்தகக் கடைகளுக்குப்போய் ‘சும்மா’ பார்வையிடுவோம். அப்போது நமது கண்களில் அபூர்வமாகச் சில புத்தகங்கள் தட்டுப்படும். எனக்கோ அப்படிப் பார்க்கும் புத்தகங்களின் தலைப்பு கவர்ச்சிகரமாக, உள்ளத்தை எதாவது வகையில் சுண்டியிழுத்தால் உடனே பின்னட்டையிலுள்ள குறிப்புகளைப் படிப்பேன். அது தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆர்வத்தை மேலும் வளர்க்கும். பின் என்ன? வாங்கி விடுவேன்; வீடு வந்து படித்தும் விடுவேன்; அவை நீண்ட நாட்களுக்கு உள்ளத்தின் ஒரு மூலையில் இருந்துகொண்டு என்னை என்னவோ செய்து கொண்டிருக்கும். இப்போது எனக்கு ஒரு வடிகால் கிடைத்துவிட்டது; அதைக் குவிகம் மின்னிதழ் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள!

அப்படித்தான் ‘கிருஷ்ணாயண்’ கிடைத்தது.

இப்போது இந்த அநாதை ரயில்வண்டி (Orphan Train). மூன்றாண்டுகளின் முன்பு அமெரிக்கா சென்றபோது, நாங்கள் வழக்கமாகச் செல்லும் பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble) புத்தகக்கடை மூடப்போவதாக அறிந்தோம். கடைசி முறையாகச் சென்றோம். பத்து டாலருக்கு மூன்று புத்தகங்கள். முத்து முத்தானவை; ஆனால் பெயர் தெரியாத ஆசிரியர்கள் / எழுத்தாளர்கள். உண்மைகளைக் கதைகளாக்கி வழங்குவதில் மன்னர்கள் / மன்னிகள்.
இந்தப் புத்தகம் 19-20ம் நூற்றாண்டு அமெரிக்காவின் ஒரு இருண்ட துயரகரமான சகாப்தத்தைக் கண்முன் விரிக்கிறது. தற்போதைய தலைமுறைக்கே தெரியாத ஒரு இருண்ட சகாப்தம்! ஆச்சரியமாக இல்லை?

ஆம். அதைப்பற்றி முதலில் கூறுகிறேன்.

1854-1929 வரை அநாதை ரயில்வண்டி (Orphan Train) எனப்படும் இது, தொடர்ச்சியாக வடஅமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையிலிருந்து (நியூயார்க்) மத்திய மேற்கு நகரங்கள் வரை ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட அநாதைக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஓடியது. இவர்களுடைய எதிர்காலம் வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. அப்படி என்றால் என்ன?

இக்குழந்தைகள் கருணையுள்ளமும் அன்பும் நிரம்பிய குடும்பங்களால் தத்தெடுத்துக் கொள்ளப் படுவார்களா அல்லது இவர்களது குழந்தைப்பருவமும், இளமையும் கடினமான உழைப்பிலும், அடிமைத்தனத்திலும் கழியுமா என்பது பெரிய கேள்விக்குறி. நியூயார்க்கில் மூன்று கருணை இல்லங்கள் (Charitable Institutions) அமைக்கப்பட்டு, இவற்றின் மூலம், அனாதையான, கைவிடப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, வீடற்ற குழந்தைகள் (இவர்களுள் பலர் மற்ற கண்டங்களிலிருந்து, முக்கியமாக ஐரோப்பா – வந்தவர்கள்) அமெரிக்காவின் மற்ற மாநிலங்களுக்கு இந்த ரயில்வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு, குடும்பங்களால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டனர். பெரும்பாலான குழந்தைகள் அடிமைச் சேவகத்துக்கும் உட்படுத்தப்பட்டனர். 1930 வாக்கில் இந்தக் குழந்தைகள் இவ்வாறு செல்வது ஒரு முடிவுக்கு வந்தது; ஏனெனில் மற்ற மாநிலங்களில் வயல்வேலைகள் குறைந்தன.

எவ்வாறு இக்குழந்தைகள் அநாதைகளானார்கள்? டைபாயிட், மஞ்சள் சுரம், ஃப்ளூ (Typhoid, Yellow Fever, Flu) ஆகிய தொற்றுகளால் பெற்றோர்கள் இறந்துவிடும்போது குழந்தைகள் அநாதைகளாயினர். (நம்மூரில் இப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் உறவினர் குடும்பங்களால் அரவணைத்துக் கொள்ளப்பட்டு வளர்ந்தனர்.) இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, தெருக்களில் பத்திரிகைகள் விற்றும், இன்னபிற சில்லறை வேலைகள் செய்தும் வாழ்ந்தனர். தங்களுக்குள்ளே குழுக்களை தற்காப்புக்காக அமைத்தும் கொண்டனர்.
இந்தப் புத்தகம், எவ்வாறு ஒரு ஐரிஷ் குடும்பம் பெரும் கனவுகளுடன் அமெரிக்கா வந்து நியூயார்க்கில் வாழ்ந்து என்னென்ன சோகங்களைச் சந்திக்கின்றனர் என்றும், அவர்களில் உயிர் பிழைத்த ஒரு சிறு பெண்குழந்தையின் வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றியும் படரும் கதை, கடைசிவரை நம்மை நாற்காலியின் விளிம்பில் இருத்திப் படிக்க வைக்கும் வலிமை வாய்ந்தது.

ஓரு ஏழை ஐரிஷ் குடும்பம் அயர்லாந்திலிருந்து பசுமையான வளமான வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் அமெரிக்கா நோக்கிக் கிளம்புகிறது. ஆறு வயது விவியன் தனது ஆறுமாத தங்கைப்பாப்பா மெய்ஸியை அவளுடைய ஒன்றாம் மாதத்திலிருந்து பார்த்துக் கொள்கிறாள்; அவர்களுடைய அம்மா, மெய்ஸி பிறந்தபின் மிகவும் நோய்வாய்ப்படுகிறாள். நியூயார்க்கில் இருண்ட, ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் இரு தம்பிகளுடன் இச்சிறு பெண் தங்கைப்பாப்பாவுடன் உறங்குகிறாள். இரவின் கும்மிருட்டில் ‘குருடு’ என்றால் இப்படித்தான் இருக்கும் போல என எண்ணிக் கொள்கிறாள். குளிரைத் தவிர்க்க சிறுவர்கள் ஒருவரையொருவர் நெருக்கி அணைத்தபடி உறங்குகின்றனர்.

பரிதாபகரமான ஒரு தீ விபத்தில் தந்தை, இரு சகோதரர்கள் இறக்க, தாயும், குட்டித் தங்கைப் பாப்பாவும் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடும் நிலையில் விவியன் மட்டும் தப்பிப் பிழைக்கிறாள். அவர்களும் இறக்க அவள் ஏழெட்டு வயதில் அநாதையாகிறாள்.
‘அக்கரைப்பச்சைக்’ கனவுகளுடன் அவர்கள் குடும்பம் அமெரிக்கா வந்தது. ஆனால்…. ‘வேலைக்குப் பஞ்சமேயில்லை,’ ‘ஆப்பிள் மரத்தில் குலுங்கும் பழங்களைப்போல் வேலை கொட்டிக் கிடக்கிறது,’ இவ்வாறெல்லாம் அமெரிக்கா பற்றிக் கூறப்பட்டது. ஆனால் வேறொன்று அல்லவோ உண்மை!

அந்தச் சிறுபெண்ணின் எண்ண ஓட்டம் நம் இதயத்தைப் பிழிகிறது: ‘அட்லான்டிக் கடலின் இப்பக்கம் எனக்கான ஒரு பெரியவளோ/னோ இல்லை, என்னைப் பற்றிக் கவலைப்படுவதற்கு. யாரும் ஒரு கப்பலுக்கும் எனக்கு வழிகாட்ட மாட்டார்கள் அல்லது எனது பயணத்திற்குச் செலவு செய்ய மாட்டார்கள். நான் இந்த சமுதாயத்திற்கு ஒரு சுமை, எவருக்கும் என்மீதான பொறுப்பு இல்லை.” துயரம் பொங்கும் சிந்தனை.

இருபது குழந்தைகளுடன் ரயிலில் ஏறும் நியாமுக்கு (ஆம், நியாம் தான் அவள் உண்மைப்பெயர்) பதினான்கு மாதங்களேயான ஒரு ஆண்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அளிக்கப்படுகிறது. அவளிடமும் மற்ற குழந்தைகளிடமும் கூறப்படும் சொற்கள்: “இதுதான் அநாதை ரயில்வண்டி, குழந்தைகளே, இதில் ஏறும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் அறியாமை, ஏழ்மை, கொடுமை ஆகியவை நிறைந்த ஒரு கொடிய இடத்திலிருந்து நல்ல மனிதர்கள் வாழும் நாட்டுப்புறத்திற்குச் செல்கிறீர்கள்.” என்று மேலும் நீண்ட ஒரு சொற்பொழிவு.

ரயில் நிற்கும் வெவ்வேறு இடங்களில் தம்பதிகளால் குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்யவும், சமையலில் உதவவும், சிறு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் வேலைக்கு வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆண்குழந்தைகளும், சிறுவர்களும், மாடு, குதிரை லாயங்களைப் பராமரிக்க, வயல்களில் வேலைசெய்ய எனப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறார்கள்.

பள்ளிக்கூடம் என்று ஒன்றுமில்லை. வெகுசில குழந்தைகளே இந்த நல்வாய்ப்பைப் பெறுகிறார்கள். மனைவிகள் குழந்தைகளைப் பராமரிப்பதால், தனிமையில் உழலும் குடிகார ஆண்கள் சிலர் தத்தெடுத்த சின்னஞ்சிறுமிகளைப் பாலியல் கொடுமைக்கும் ஆளாக்குகின்றனர். இதனால் சிறுமிகளும் சிறுவர்களும் வீடுகளை விட்டு ஓடவும் செய்கின்றனர்.

இவ்வாறு பல வீடுகளுக்கு மாற்றப்பட்ட விவியன் கடைசியில் எவ்வாறு வளர்ந்து, என்ன செய்கிறாள், தன் காதலனைக் கண்டடைகிறாள், யார் அவளுக்கு உதவுகின்றனர் என்றெல்லாம் கதையில் விறுவிறுப்பான திருப்பங்கள்.

கதை உண்மையாக நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை விவரிக்கிறது. அந்த உண்மைத்தனம் நம்மை உறுத்துகிறது. வருத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் நம் பாரத தேசத்தில் நடந்திருக்குமா? கூடுமா என எண்ணுகிறோம். சமீபத்தில் திருமதி கௌரி கிருபானந்தனால் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு அருமையான கதையைப் படித்தேன். பணம்கொடுத்துப் பெண்ணை வாங்கித் திருமணம் செய்து கொள்வதென்பது அக்காலத்து ஒரு வழக்கமாம். ஆனாலும் திருமணம் செய்துகொண்டு ஒரு அந்தஸ்தைக் கொடுக்கிறார்களே அதுவரை எத்தனையோ பரவாயில்லை என எண்ணத் தோன்றியது.

இந்தக் கதையில் சில சிறுசிறு நிகழ்வுகள் உள்ளத்தைக் குடைகின்றன. மனிதாபிமானமே இல்லாத மனிதர்கள். ‘தங்கள் குழந்தைகள் உயர்வு; இந்தக் குழந்தைகள் ஆடுமாடுபோல நடத்தப்பட வேண்டியவர்கள்’ என எண்ணியிருப்பவர்களே இவ்வுலகில் ஏராளமானோர் போலும்! ஓர் தம்பதியரிடையே ஆன சம்பாஷணை:

டச்சி எனவொரு பெரிய பையன். விவியனுடன் அநாதை ரயில்வண்டியில் சிநேகிதமாகிறான். அவனை வேலைக்காக எடுத்துக்கொள்ள வரும் தம்பதியர். கணவன் டச்சியின் வாயில் விரலை விட்டுப் பார்க்கிறான். டச்சிக்கு அது பிடிக்கவில்லை. “முரடனாக இருக்கிறானே” எனக் கணவன் சொல்ல, மனைவி, “நாம் குதிரைகளைப் பழக்கவில்லையா? இந்தப் பையன் எம்மாத்திரம்?” என்கிறாள்.

இவ்வாறு நகரும் கதையோட்டத்தில் பல இடங்கள் மாறி, பலவிதமான மக்களைச் சந்தித்து, உலகை எடைபோடப் பழகிக் கொள்கிறாள் விவியன். கடைசியாக ஒரு தயாள குணமுள்ள தம்பதியின் வீட்டில் தன் கன்னிப்பருவத்தைக் கழிக்கிறாள். அவர்களுக்குப் பலவிதத்திலும் மகளாகவே இருக்கிறாள். இங்கு ஒரு காதலன் கிடைக்கிறான். அவன் யார்? இதையெல்லாம் படித்தேதான் அறிந்துகொள்ள வேண்டும். இக்கதையும் விவியன் வாயிலாகவும், விவியனுடைய முதுமையில் அவளுக்கு உதவ வந்துசேரும் மாலி (Molly) எனும் இளம் பெண்ணாலுமே நகர்ந்து செல்கிறது.

என்னை ஏன் இந்தப் புத்தகம் பிரமிக்க வைத்ததெனச் சொல்லவில்லையே! ஒரு சமுதாயத்தில் பொருளாதார, கால, தேச சந்தர்ப்பங்களால் நிகழும் சில அநியாயங்கள் நியாயப் படுத்தப்பட வேண்டியவையா? இன்று இளைஞர்கள் பலரும் போக வேண்டும் எனத் துடிக்கும் அமெரிக்காவில் இப்படியுமொரு இருண்ட காலம் இருந்தது எனும்போது உள்ளம் துணுக்குறுகிறது. அதனைப் பற்றி ஒரு நிகழ்வாக சரித்திரம் பதிவுசெய்து வைத்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இவற்றைக்கொண்டு புனையப்பட்ட உண்மைத்தனம் நிரம்பிய இக்கதை போன்ற தோலையுரித்துக்காட்டும் பதிவுகள் உள்ளத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றன. துயரத்தில், பச்சாதாபத்தில் விளைந்த பிரமிப்பு இது. இதனை எழுதிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.

இப்போது பல சட்டங்கள் இயற்றப்பட்டு இப்படிப்பட்ட நிலைமை யாருக்கும் வராமல் தடை செய்யப்பட்டிருக்கலாம். இதனை நிறையப்பேர் படிக்க வேண்டும். சரித்திர ஆதாரங்களை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட புதினங்கள் சரித்திரத்தை நமக்கு அழுத்தமாக உள்ளத்தில் பதிய வைக்கின்றன என்பது என் கருத்து.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சோழர் ஆட்சியின் வல்லமை வாய்ந்த மன்னனின் பெருமையை நமக்குக் கூறவில்லையா? அப்புதினம் இல்லாவிடில் எத்தனைபேர் ராஜராஜனைக் கொண்டாடிப் பெருமைப் படுவோம்? அது போன்றதே இதுவும்.

மீண்டும் சந்திப்போம்.

 

சுடுபனியும் குளிர் நெருப்பும் பாகம் – 2 – இந்திரநீலன் சுரேஷ்

முதல் அத்தியாய சுருக்கம்:

ஐஸ்லாண்டிற்கு இரவு 12 மணிக்கு அடைந்து   அங்கு புக் செய்த டைம் ஷேர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்து பின்னர், வீட்டின் சொந்தக்காரரைப் போனில் பிடிக்க இயலாமல் துடித்து  , கடைசியில் ஒரு வழியாக டாக்ஸி ஒட்டியின் உதவியால் உள்ளே சென்று நள்ளிரவில் சூரிய உதயத்தைக் கண்டு அதிசயித்துப்  படுக்கப் போனார்கள்…. 

The Complete Guide to the Midnight Sun in Iceland | Guide to Iceland

 

சரி, உறங்கலாம் என்று 1:30AM படுத்தோம்.

அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது, எங்கள் கதவு வேகமாகத் தட்டப்பட்டது………..

                                ********************************
சற்று கவலை ஏற்பட வாசல் விளக்கை ஏற்றி ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தால், ஒரு தம்பதி கைக்குழந்தையுடன் நிற்கிறார்கள்.

“நான் இந்த டைம் ஷேர் ஓனர்தான், கதவைத் திறக்கலாம்”

கதவைத் திறந்தவுடன், குளிருக்கான ஜாக்கெட்டை விலக்கியபடி,

“இப்படி அர்த்தராத்திரியில் வந்து கதவைத் தட்டியதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். நாங்கள் அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் என்பதால் ‘வாசல் விளக்கின் மேல் சாவி உள்ளது’ என்ற குறும் செய்தியை அனுப்பி இருந்தேன். அது உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அவசரமாக டாக்டரிடம் போகும்படி ஆகிவிட்டது”, மனிதர் முகத்தில் நிஜ வருத்தம் தெரிந்தது (செய்தி தாமதமாகக் கிடைத்தது. அவர் மீது குற்றமில்லை)

குழந்தை சோர்வுடன் அம்மாவின் தோளில் சாய்ந்து கண்ணை இடுக்கிப் பார்த்தது. ஒரு பையிலிருந்து பிஸ்கட், சாக்லேட்டுகளை எடுத்து மேசையில் பரப்பி, “ஏதும் சாப்பிட்டீர்களா?” என்றார் மிகவும் கனிவாக.

“காலை 9 மணிக்கு வந்து விடுகிறேன். நீங்கள் தங்கியிருக்கும் நாட்களில் என்ன பார்க்கலாம்? என்பதை ஷெட்யூல் போட்டு வைத்திருக்கிறேன். காலையில் விவாதிப்போம். டூர் ஆப்பரேட்டரிடம் சொல்லிவிட்டேன்” என விடை பெற்றார்.

அவர் காலையில் வருவதற்குள், ஐஸ்லாந்து பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்;

ஐஸ்லாந்து என்னும் இந்த தீவு, நீரும் நெருப்பும் கலந்த வியத்தகு நிலப்பரப்பைக் கொண்டது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பனிப்பாறை அடுக்குகளையும், இன்னும் வெந்து தணியாத எரிமலைகளையும், தாகம் பொங்கும் வெந்நீர் ஊற்றுகளையும், கருஞ்சிவப்பு லாவா படுகைகளையும், பசுமை தோட்டங்களையும், சரம் சரமாய்க் கோர்த்த மணிகளைப் போல குட்டித் தீவுகளையும் உள்ளடக்கி அழகிய கடற்கரை எல்லைகளைக் கொண்டது.

வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் ஆலிலை மிதப்பது போல அழகிய வடிவம் கொண்டது இந்த தீவு. இதற்கு அருகில் கிரீன்லாந்து 286 கிமீ மற்றும் ஸ்காட்லாந்து 795 கிமீ, நார்வே 950 km தொலைவிலும் உள்ளது. ஐஸ்லாந்தை விமானம் மூலம் அடைய நியூயார்க்கிலிருந்து ஐந்து மணி நேரமும், ஐரோப்பா நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணி (Nonstop) நேரமும் பிடிக்கும்.

சுமார் 1,03,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் பதினோராயிரம் சதுர கிமீ அளவிற்கு எரிமலை படுகைகளும், 12000 சதுர கிமீ பனிப் படுக்கைகளும் இடம் பிடித்துக் கொண்டுள்ளன. மக்கள் தொகை சுமார் 4 லட்சம். நம் ஆவடி, அம்பத்தூரை விடக் குறைவு.

ஜூன், ஜூலை மாதங்களில் கிட்டத்தட்ட 22 முதல் 24 மணி நேர சூரிய வெளிச்சம், டிசம்பர் மாதத்திலோ வெறும் 5 மணி நேர மட்டுமே வெளிச்சம் (11:00AM to 3:00PM) – என்கிற விசித்திர பருவகால அட்டவணையைக் கொண்டது. அவ்வப்போது மழை அல்லது பனிப்பொழிவின் போது காற்றின் வேகமும் தன்மையும் அடிக்கடி மாறும்.

அதனால், சுற்றுலாப் பயணிகளின் எத்தகைய சிறப்பான திட்டமிடலைக் கூட வானிலையின் சூழ்நிலை முற்றிலும் மாற்றி அமைத்து விடும். அவ்வப்போது நேரம் பார்ப்பது போல வானிலை நிலவரத்தையும் பார்த்துக் கொள்வது நல்லது.

ஐஸ்லாந்தில் தலைநகரம் ரெய்க்ஜாவிக் (REYKJAVIK). ரேக்கவிக் என்பது சொல் மொழி. ஒரு பொடிநடையாய், பூகோளத்தின் வட துருவத்தை நோக்கி வாக்கிங் சென்றால் கடைசியாக நாம் காணும் நகரம் இந்த ரேக்கவிக் ஆகத்தான் இருக்கும்.

********************************

காலை 7:30 மணிக்கு, வேர்க்கடலை வெண்ணெய் தடவிய டோஸ்டட் பிரெட்டை ருசித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் வந்தார் ஹவுஸ் ஓனர். அவரிடம் அமர்ந்து பார்க்க வேண்டிய இடங்களுக்கான அட்டவணையை முடிவு செய்தோம்.

“அருகில் உள்ள பழங்கால லைட் ஹவுஸ் பகுதிக்குக் காலையில் சென்று வாருங்கள். மதிய உணவு எங்கள் வீட்டில். உங்களுக்காக என் மனைவி பிரத்தியேகமாக ஹக்கார்ல் (Hakarl) சமைப்பதாகச் சொல்லியிருக்கிறாள்”

‘அக்காள் ?’ – அப்படி என்ன ஸ்பெஷல் அதில் ? என்றாள் மனைவி. ஐஸ்லாந்து கடல் உணவிற்குப் பெயர் பெற்றது. அரிதாகக் கிடைக்கக்கூடிய சுறாவைச் சுத்தப்படுத்தித் தயாரிக்கும் உணவு, ஹக்கார்ல் !

மீன், மீட், காளான் தவிர மற்றவைதான் நாங்கள் உண்போம் என்று சொல்ல, வித்தியாசமாக எங்களைப் பார்த்து, “இங்குத் தலைநகர் ரேக்கவிகில் இந்திய உணவகம் இருக்கிறது. உங்களுக்கு அதை அறிமுகப்படுத்தச் சொல்கிறேன்”

“கவலைப்படாதீர்கள். நாங்கள் எங்களுக்குத் தேவையான ரெடிமேட் உணவு வகைகளைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்றோம்.

எங்களுக்குக் கிடைத்த டிரைவர் கம் கைட் மிகவும் உற்சாகமானவர். ஐஸ்லாந்து பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தார். நீளமான ஒரு பெயரைச் சொன்னவர், “ஜோன் என்று கூப்பிடுங்கள், என் அம்மா என்னை அப்படித்தான் கூப்பிடுவாள்” என்றார்.

“அம்மாவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ? “

“ஆம் என் தேசம் போல! ” என்றார் புன்னகையுடன்.

வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பினோம். முதலில் காரடுர் (GARDUR)  கலங்கரை விளக்கம் இருக்கும் இடத்திற்கு நாம் போகப் போகிறோம் என்றார் ஜோன். சிறிது தூரம் கடந்ததும் எதிரில் வந்த கார், எங்களை நிறுத்தியது.

பார்த்தால் இரண்டு பெரிய கூடை நிறையப் பழங்களைத் தாங்கிக்கொண்டு இறங்கிய ஹவுஸ் ஓனர் எங்கள் வண்டியின் பின் டிரங்கைத் திறக்கச் சொல்லி அதில் கூடைகளை ஏற்றினார். நாங்கள் சிரித்துக் கொண்டே “ஐஸ்லாந்தில் பழமண்டி வைக்கும் அபிப்பிராயம் ஒன்றும் எங்களுக்கில்லை” என்றோம்.

“இப்பொழுது தேவைப்படாது நடக்க, நடக்கப் பசிக்கும்” என்றார் அன்போடு.

Gardskagi Lighthouses | Guide to Icelandஇயற்கை எழிலை ரசிக்க விடாமல் செய்யும் கான்க்ரீட் கட்டிட மறைப்புகள் இங்கு மிகவும் குறைவு என்பதால் கலங்கரை விளக்கம் தூரத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. அதன் பக்கத்திலேயே பழைய குட்டி கலங்கரை விளக்கமும் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

ரேக்கவிக் தீபகற்பத்தின் தென் முனையில் உள்ள இந்த இந்த ஊர், கெஃப்ளவிக் ஏர்போட்டிலிருந்து 12 கிமீ. தொலைவில் உள்ளது. 120 வருடங்கள் பழமையானது. அட்லாண்டிக் பெருங்கடலில் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியான இடமாக, பல வருடங்களாக இருந்து வருகிறது.

வாகனத்தை விட்டு இறங்கி கடல் ஓரத்தில் நடந்தோம்.

ஸ்படிகம் போன்ற நீலக் கடலின் தெளிவான நீரில் துள்ளித் திரியும் மீன் கூட்டங்கள். கரையோரங்களில் தேங்கி நிற்கும் வெள்ளை பனிப் படலங்கள். பழுப்பு நிறத்தில் மணல். அதற்கு அணி சேர்ப்பது போல் கருப்பு நிறக் கூழாங்கற்கள், ஆங்காங்கே மீன் பிடி படகுகள். அதன் உச்சிக் கொம்புகள் மீது அரட்டையடிக்கும் ஸீகுல் நாரைகள், அவைகளை உற்றுப் பார்த்தபடி வானில் பறக்கும் வெள்ளை வால் கழுகுகள். சிவப்பு, வெள்ளை வர்ணம் அடித்த கலங்கரை விளக்கம், அதன் மீது ஓட்ட வைத்தது போல மஞ்சள் வண்ண சூரியன்!

மொபைல் கேமரா வளையத்தில் தவறி விரல் பட்டாலும் அற்புத ஒளிப்படமாக மாறக்கூடிய ரம்மியமான இடமாக இருந்தது. அழகில் ஜொலித்துக் கொண்டிருந்த இந்த சூழலுடன், உலகின் வட துருவ ஆர்டிக் வட்டத்திற்கு அருகில் இருக்கிறோம் என்கிற அற்புதமான மன உணர்வும் சேர்ந்து கொண்டது. பழைய லைட் ஹவுஸ் அருகில் ஒரு தரை தட்டிய மீன் பிடிக் கப்பல். அதை ஒட்டி ஒரு சிறிய ரெஸ்டாரண்ட். இதமான குளிருக்கு ஷார்ட் பிரட் பிஸ்கெட்டுடன், சூடான காபியும் அருந்தினோம், ஏகாந்தம்!

Fagradalsfjall Volcano, Iceland : Geology, Eruptions

அங்கிருந்து 35 மைல் தொலைவில் GELDINGADULUR பள்ளத்தாக்கில் உள்ள FAGRADAISFJALL எரிமலையைக் காணச் சென்றோம். 2022 ஆம் ஆண்டு கூட தனது உக்கிரத்தைக் காட்டியுள்ள இந்த எரிமலையைக் காண வானம் தெளிவாக இருப்பது அவசியம். உங்களுக்கு அதிர்ஷ்டம் என்றார் ஓட்டுநர்.

The incredible blue-eyed horses of Iceland | Horses, White horses, Pretty horsesதிரும்பும் வழியில் ஒரு வீட்டின் வாசலில் வெள்ளை வெளேர் என்று ராஜகுமாரி போல நின்றிருந்த குட்டி குதிரையைப் பார்த்தோம். அந்த போனியின் (pony) பின்னணியில் ஒரு ஒளிப்படம் வேண்டும், என்றாள் மனைவி. இங்குள்ள குதிரைகள் அளவில் சற்று சிறியவை, ஆனால் அவை போனியல்ல.

குதிரையின் அருகில் போக, சுஜாதாவின் திருச்சி புத்தூர் வண்டி ஸ்டாண்ட் ‘குதிரை’ ஞாபகம் வர, எங்கே கடித்துவிடுமோ? என்று பயம். அதெல்லாம் ஒன்றும் ஆகாது. குதிரை தன் எல்லை தாண்டி வராது. எலக்ட்ரானிக் இன்விசிபில் வேலி இட்டிருப்பார்கள். நீங்கள் தைரியமாகப் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் ஜோன்.

உங்களுக்குத் தெரியுமா? முதலில் ஐஸ்லாந்தில் நரிகள் மட்டுமே விலங்குகளாக இருந்தன. பிற்காலத்தில் கலைமான் (Reindeer) வந்து சேர்ந்தது. பிறகு வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன என்றார்.

வழியெங்கும் நிலப்பரப்பில் துணி போர்த்தியது போல் மஞ்சள் நிற திட்டுக்களும், இயக்குநர் இமயம் பாரதிராஜா படத்தில் வருவது போல ஆங்காங்கே புகை மண்டலங்களும் காணப்பட்டதைப் பற்றி விசாரித்தோம்.

ஐஸ்லாந்தின் நிலம் கரிம மற்றும் கனிம வளம் நிறைந்தது. அதனால்தான் இந்த மஞ்சள் படுகை. அது மட்டுமல்லாமல் உலகில் சல்ஃபட்டரா (SOLFATARA) எனப்படும் எரிமலையின் நீராவி துளைகள் அதிகம் உள்ள பூமி இது. இந்த துளை வழியாக எரிமலையின் கந்தக வாயு அவ்வப்போது வெளியேறும். அதுதான் இந்த மாயாஜால காட்சிகளுக்குக் காரணம் என்றார்.

அதே போல வெந்நீர் ஊற்றுக்களும், இந்த நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றன. நிலத்தடி ஊற்று நீர், உருகும் எரிமலைப் படிவம் (MAGMA) வழியாக வரும் போது நீர் சூடாக்கப்பட்டு, ஹாட் ஸ்ப்ரிங் ஆக வெளியேறுகிறது. இந்த வெந்நீர் ஊற்றுகள் இந்த நாட்டிற்கு வருபவர்களுக்குப் பெரிய ஒரு அட்ராக்ஷன்!

நாளை காலை நாம் Blue lagoon போகப் போகிறோம் என்றார் ஜோன்.

உடன், 1980களில் வெளிவந்த ‘ப்ளூலகூன்’ திரைப்படம் ஞாபகத்துக்கு வந்து மனைவியிடம் சொல்ல, சமீபத்தில் மாம்பலம் பஜனை மண்டலியில் பாடிய நாமசங்கீர்த்தனம் ஒன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளாதீர்கள். நாற்பது வருஷம் ஆனாலும் தேவையில்லாத விஷயங்கள் மட்டும் ஞாபகம் இருக்கு, எனத் தலையில் தட்டினாள்.

இது வேறு Blue lagoon…! அதில் கிடைக்கப் போகும் அனுபவத்தையும் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டீர்கள் என்றார் ஜோன் சிரித்துக் கொண்டே..

(தொடரும்)

 

 

 

குவிகம்- சிவசங்கரி மாதாந்திர சிறுகதைத் தேர்வு – பிப்ரவரி 2024


இந்த மாதம் ,  60 சிறுகதைகளில், ‘தப்பு தப்பு தான்’ என்னும் தலைப்பில் ராகவன் மாணிக்கம் எழுதி தினமணிகதிரில் வெளிவந்த சிறுகதை பிப்ரவரி மாத சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. – ரேவதி பாலு
—————————————————————————————————————————————-

ஒரு மாதத்தில் அச்சுப் பத்திரிகைகள், மின்னிதழ்கள் ஆகியவற்றில் வெளியான 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து அதில் ஒரு சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு சுவாரசியமான அதே சமயத்தில் ஒரு சவாலான பணி. குவிகம் அமைப்பினர் இந்தப் பணியை எனக்குக் கொடுத்தபோது, முந்தைய வருடங்களில் ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பு இந்த பணியை நடத்தி சிறந்த 12 சிறுகதைகளை ஒரு வருடத்திற்கு தேர்ந்தெடுத்தது, அதை வானதி பதிப்பகம் ‘இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகள்’ என்று அந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வருடத்தையும் குறிப்பிட்டு ஒரு சிறுகதை தொகுப்பு நூலாக வருடா வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒரு விழா நடத்தி ஏ.வி.எம். ராஜேஸ்வரி ஹாலில் வெளியிட்டது என்று அலையலையாக பல கடந்த கால நினைவுகள் மேலெழும்பி வந்தன. நான் இந்த நினவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள ஒரு பிரத்யேக காரணம் உண்டு. எனக்கு இரு முறை இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதாந்திர சிறந்த சிறுகதை பரிசு கிடைத்துள்ளது.

எத்தனையெத்தனை மின்னிதழ்கள், அவைகளில் எத்தனை எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று பார்த்தபோது பிரமிப்பாக இருக்கிறது. அவர்களில் நிறைய பேர் புதிதாக எழுதுகிற இளம் எழுத்தாளர்கள். மடை திறந்த வெள்ளம் போல அவர்களில் மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொட்டி எழுதும் பாணியை நிறைய புது எழுத்தாளர்கள் கடைபிடிப்பது போலத் தோன்றியது சில கதைகளைப் படித்ததும்.

இந்த 60 சிறுகதைகளில், ‘தப்பு தப்பு தான்’ என்னும் தலைப்பில் ராகவன் மாணிக்கம் எழுதி தினமணிகதிரில் வெளிவந்த சிறுகதை பிப்ரவரி மாத சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

கவனத்தைக் கவர்ந்த வேறு சில சிறுகதைகள்:

சங்கு இதழில் வெளியான ‘பிரியாணி’ என்னும் சிறுகதை, ‘மண்வெட்டி’ என்பவர் எழுதியது. நாம் அடிக்கடி சொல்லும் வாசகமான “நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடந்தே தீரும்” என்பதற்கு உதாரணமாகவும் சிறந்த மனிதாபிமானத்திற்கு எடுத்துக் காட்டாகவும் உள்ளது. ஒரு ஒப்பந்தாரருக்கு அரசாங்க அலுவலகத்தில் அவர் சாலை போட்ட ஒப்பந்தத்திற்கு எந்த வித லஞ்சமும் வாங்காமல், கமிஷன் அடிக்காமல் சரியான தொகை உடனடியாக காசோலை மூலம் வழங்கப்படுகிறது. அவர் மிக்க நன்றியுடன் அங்கேயுள்ள அலுவலர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் பிரியாணி, லஞ்சுக்கு வாங்கித்தருகிறார். வாசலில் ஒரு வயோதிகர் அந்த பிரியாணி வாசனையால் ஈர்க்கப்பட்டு தன் பசிக்கு சிறிதளவு பிரியாணி கொடுக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறார். பிரியாணி பொட்டலங்கள் அலுவலர்கள் எண்ணிக்கையை கணக்கு செய்து வாங்கப்பட்டதால் கூடுதலாக ஒன்று கூட இல்லை. கடைநிலை ஊழியர் ஆறுமுகம் அந்தப் பெரியவர் மேல் பரிதாபப்பட்டு தன் பிரியாணி பொட்டலத்தை அவருக்குக் கொடுத்து விட்டு தன் பசியை தண்ணீர் குடித்து ஆற்றிக் கொள்கிறார். அப்போது அஜ்மல் என்னும் ஊழியர் தான் ரமலான் நோன்பு அன்று ஆரம்பித்திருப்பதாகச் சொல்லி தன் பொட்டலத்தை ஆறுமுகத்திற்குக் கொடுக்கிறார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி தன் பிரியாணி பொட்டலத்தை பசியாக இருக்கும் ஒருவருக்கு மனமாரக் கொடுத்த புண்யமே ஆறுமுகத்தின் பசியை ஆற்றுகிறது என்று அஜ்மல் சொல்கிறார்.

சு.வெங்கட் எழுதிய ‘சுழல்’ என்னும் கதை சொல்வனத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் வாழ்க்கையின் சில போக்குகளை தொட்டுக் காட்டிவிட்டு மற்றதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுவதில் ஆசிரியரின் புத்திசாலித்தனம் நமக்குத் தெரிகிறது. சினிமா துறையில் ஒரு காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றும் ரோஹிணி என்னும் பெண்ணுக்கு குழந்தைகளில்லை. குழந்தைப்பேறு சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவரிடம் செல்ல நேரிடுகிறது. மருத்துவரிடம் செல்லும்போது சுழல் கதவு வழியே வெளியே வரும்போது உள்ளே கர்ப்பிணிகளாகச் செல்பவர்கள் கையில் குழந்தையுடன் சுழல் கதவு வழியே வருவதைக் கண்டு தான் மட்டும் சுழல் கதவின் மறுபக்கமே இன்னும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறாள். ரோஹிணி அடிக்கடி சினிமா படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்ல நேர்கிறது. மஞ்சு என்னும் பெண் அவள் வீட்டில் எல்லா வேலையும் செய்கிறாள். ரோஹிணி ஊரில் இல்லாதபோது அவள் கணவன் சந்திராவுக்கு சமைத்துப் போட்டு அவனை கவனித்துக் கொள்கிறாள். அவள் கணவன் செல்வம் சரியான குடிகாரன். ஒரே வீட்டில் வசித்தாலும் அவனுடன் ஒட்டோ உறவோ இல்லை என்று மஞ்சு கூறுகிறாள். ஒரு நாள் செல்வம் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. ரோஹிணி ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கே மஞ்சு எங்கே என்று கேட்கிறாள். அவளுக்கு மயக்கமாக இருப்பதால் அவள் வேறு அறையில் சிகிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அவள் கர்ப்பமாக இருப்பதால் மயக்கம் என்று கூறப்பட, நம்மால் நடந்ததை ஊகிக்க முடிகிறது. ரோஹிணிக்கு, தான் இன்னும்அந்த சுழல் கதவின் அந்தப்பக்கமே நிற்பது போலத் தோன்றுகிறது.

வருங்காலக் கணவன் என்னும் தலைப்பில் ‘சகா’ தினமணிகதிரில் எழுதிய கதை. இதில் தன் வருங்கால வாழ்க்கையை மாப்பிள்ளை, பெண் என்று சம்பந்தபட்டவர்களே தான் முடிவு செய்ய வேண்டும், அவர்கள் சரியாக முடிவு செய்வார்கள் என்னும் சிறப்பான கருத்து சொல்லப்படுகிறது.

‘தப்பு தப்பு தான்’ ராகவன் மாணிக்கம் எழுதி தினமணிகதிரில் வெளிவந்த சிறுகதை சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. சிறு சிறு தப்புகள் தான் வாழ்க்கையில் பெரிய தப்புகள் செய்யும் தைரியத்தைக் கொடுக்கிறது என்னும் முக்கியமான கருத்து அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் தச்சு வேலையில் இருக்கும் உத்திராபதி சொந்த வாழ்க்கையில் வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றாலும், நேர்மை, நியாயம் என்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர். ப்ளஸ் டூ முடித்து விடுமுறையில் இருக்கும் இளைய பிள்ளை ரகுவை தன்னுடன் வேலைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே தன் தந்தைக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை எல்லாம் பார்த்து ரகுவிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. அப்போது முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு வர உத்திராபதி அன்றைய வேலைகள் முடிந்தவுடன் மாலையில் ரகுவையும் அழைத்துக்கொண்டு அங்கே செல்கிறார். அங்கே உத்திராபதி வேலைக்கு வைத்த பக்கிரி என்னும் ஒருவன் முதலாளியை ஏமாற்றி கட்டுமானத் தொழிலில் தப்பு தண்டாவெல்லாம் செய்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. அவனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட வேலையை அவன் கைக்காசைப் போட்டே முடிக்க வேண்டும் அப்படி செய்யா விட்டால் போலீசில் பிடித்துக் கொடுக்கலாம் என்று தீர்ப்பு கூற, முதலாளி உத்திராபதியின் நியாயமான கருத்தைப் பாராட்டி அப்படியே செய்யலாம் என்று முடிவு செய்கிறார். உத்திராபதி வீட்டினுள் ஏதோ வேலையாகச் சென்ற போது சட்டென்று ரகுவின் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து, “உங்கப்பா கிட்ட கொடுத்தா வாங்க மாட்டார். நீ வீட்டுக்குக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு!” என்று சொல்லிக் கொடுக்கிறார். ரகுவிற்கு அப்பாவை நினைத்து பயமாக இருந்தாலும் ‘வீட்டு வாடகை’ கொடுக்க வேண்டிய சூழ்நிலையை நினைத்து அதை வாங்கிக் கொள்கிறான்.

வீட்டிற்கு போகும்போது உத்திராபதி ரகுவிடம் சொல்கிறார், “நேர்மையில்லாம நடந்து கிட்டதால அந்த பக்கிரி இன்னிக்கி எப்படி அசிங்கப்பட்டு நின்னான் பார்த்தியா?” என்று

ரகு மெதுவாக, “அவுரு கொஞ்சம் அளவுக்கு அதிகமா தப்பு பண்ணிட்டாரு. அதான் அவர் செய்த தப்பு!” என்கிறான்.

“எப்போதுமே தப்பு தப்புதான். கொஞ்சமா செய்தா தப்பு நல்லதா ஆயிடுமா? சின்ன தப்புகள் தான் பெரிய தப்புகளை பண்ற தைரியத்தைக் கொடுக்கிறது. ஒரு மனுஷனுக்குத் தேவை நாணயமானவங்கிற நல்ல பேரு தான். அதனால சுத்தி நடக்கிற விஷயங்களைப் பாரத்து கவனத்தை சிதற விடாம எப்போதும் நியாயமா, நேர்மையா வாழக் கத்துக்க. அதுதான் உனக்கும் நல்லது, நிம்மதி. நீ தனியா இருக்கும்போது இதை யோசித்துப் பார்த்தியானா நீயே புரிஞ்சிப்பே!” என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக நேர்மையே நிம்மதி என்னும் விஷயத்தை தன் மகன் உணர்ந்து கொள்வான் என்ற எண்ணத்தில் ஏதோ நாட்டின் உயரிய விருதைப் பெற்ற கம்பீரத்துடன் நடையைத் தொடர்ந்தார் என்று முடிகிறது இந்த சிறுகதை. இந்த காலத்தில் அரிதாகிப்போன நேர்மையை வலியுறுத்துவதோடு எப்படி ஒரு சின்ன தப்பு தான் பெரிய பெரிய தப்புகள் செய்யும் தைரியத்தைக் கொடுக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் விதத்தில் இது சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெறுகிறது.

குவிகம் குறுக்கெழுத்து – மார்ச் 24 – சாய் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி: 353

 

பிப்ரவரி மாதத்திற்கான  குவிகம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:  

https://beta.puthirmayam.com/crossword/29291A6637

சரியான விடை எழுதியவர்களில்  அதிர்ஷ்டசாலி ஒருவருக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒருவருக்கு ரூபாய் 100 வழங்கப்படும். 

 

சென்ற மாதம் சரியாக விடை எழுதிய நண்பர்கள்:

1. மகேஷ் 

2. ரேவதி ராமச்சந்திரன் 

3. உஷா ராமசுந்தர் 

4. கீர்த்திகா  சுரேஷ் 

5. மதிவாணன் 

6. விஜி செல்லப்பா 

7. ரேவதி பாலு 

8. ஜானகி சாய் 

9. சரண்குமார்

10. ராமமூர்த்தி 

11. மனோகர் 

12. கமலா முரளி 

 

இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி : விஜி செல்லப்பா 

அவருக்குப் பாராட்டுதல்கள். மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !

 

 

 

 

குவிகம் கவிதைப் பக்கம்

 

பால் .. தமிழ்ப்பால் -எஸ் எஸ்

 

பாலைக் குடித்திடும் குழந்தையின்
குறுஞ்சிரிப்பில் வழிவது புதுக்கவிதை

பாலில் விழுந்த பழத்தைக் கிளிக்கு
உண்ணக் கொடுப்பது பழங்கவிதை

பாலை முழுதும் பசுவின் குட்டிக்கே
குடிக்கத் தந்தால் அது செங் கவிதை

பாலைக் குறுக்கி சர்க்கரை கலந்து
இளஞ்சூட்டில் உண்டால் திரட்டுக் கவிதை

பாலில் துடிக்கும் காதலர் களிவெறியில்

உறவில் இணைந்தால் அது மரபுக் கவிதை

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
கலந்து படைத்தால் அது பிள்ளைக்கவிதை

பாலே அருவியாகி கருவறையில் அமர்ந்த
பிரான் தலையில் சொரிந்தால் சிவகவிதை

பாலும் பழமும் கலந்து காதலிஇதழில்
காதலன் தந்தால் அது குலவுகவிதை

பாலில் மிளகிட்டு இளஞ்சூட்டில் அருந்தி
கமகத்துடன் பாடுவது இசைக்கவிதை

பாலை பானைக்குள் சுற்றம் சூழவந்து
தெளித்துக் கரைப்பது முடிவுக் கவிதை

 

நெஞ்சம் மறப்பதில்லை? –   கவிமணி *இரஜகை நிலவன்*

                   காற்றுக்கு கற்றுக்
       கொடுக்கவா முடியும்
காலத்திற்கு கடிவாளம்
        கொண்டு கட்டமுடியுமா?
வாழ்வின் வயலில்
         விதைத்த விதைகள்
வாழைமரமாய் செழித்தே
         விரிந்து நின்றிட
வானவில் வந்து
     வானை அழகாக்கிட
வார்த்தைகள் திரும்பவும்
      வாதிட்டுச் செல்ல…
அலைகளுக்கு சொல்லி
         அரற்றும் முயற்சியாய்
அறைந்து செல்லும்
அணிஅணியான நினைவுகள்
இன்னிசை கலவா
      இன்னொருபுறப் பாடல்கள்
இசைய மறுக்கம்
       இன்னொரு கனவுகள்…
வந்தவைகவைகளை தக்க
       வைக்கும் முயற்சியில்
வற்றிப் போனவைதான்
        வரவேண்டியவை ஆகின..
இன்முகம் காட்டி
      இன்னமும் நினைவலைக்குள்
இன்னும் தவிக்கும்
        இருபுற சிறகுகள்…
 சிக்கிக் கொண்ட
         பறவையாய் சிந்தனைகள்
சிந்தைக்குள் அலையாய்  
          நெஞ்சம் மறப்பதில்லை?
%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%^%
* *விதி தேவன் புன்னகை* – சசிகலா விஸ்வநாதன்

*தன்முனையியைபு அந்தாதி*

 

விதியை மதியால்
வெல்லல் ஆகுமா?
மதி விதி
வழியே போகும்

போகும் மதி
போக்கிடம் அறியாது
மந்தியின் மதி
விதியும் அறியாது

அறுப்பானா பனை
தினை விதைத்தவன்
மதியுள்ளவன் விதையிட்டவன்

தானென்றே  துணிவான்

துணிந்து முயலாமல்
நொந்து  கொள்வான்
மதியீனன் விதியன்
புன்னகைத்துக் கொள்வான்.

——————————————————————————————————————————
காதல் – பானு நாச்சியார்  ( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை) 

உன்னழகால் நானும் உண்மைதனைச் சொல்லுவேன்
எங்கே விழுந்தேன் என்பதும் மறந்தேன்

எடுப்பான மச்சம் இதயத்தைத் தொட்டதோ
கன்னத்தின் குழிதான் தென்றலாய் வீசியதோ

கவர்ந்தது என்னைப் புறத்தோற்றமா இருக்காது

கண்வழி வந்த காதல் கண்டேன்
அகத்தில் தெரிந்த அக்கறை உணர்ந்தேன்

மௌனம் கூட ரகசியமாய் பேசியதே
பூர்வ ஜென்ம பந்தம் இதுவே

உன்னை சுற்றிய நினைவுகள் ஆயிரம்
அருகில் இருந்தாலும் தொலைவில் போனாலும்
நெருக்கத்தில் இருப்பதுபோல்
உணர்வது சரியே உணர்ந்தேன் சகியே

அங்கும் இங்கும் எங்கும் உன்னுருவம்
என்னில் உறைந்தாய் எண்ணம் நிறைந்தாய்

காதலை இயம்ப காலம்தான் பார்க்கிறேன்
இயம்பாது போனாலும் காதலுண்டு நமக்குள்….

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அஞ்சறைக் காதல் – மகாராணி சாத்தூரப்பன் ( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை)

வெகுளியால் கடுகு போல் பொரிந்தாள் என் கண்மணி.
அவள் அகம் சீராக இல்லை என்பதை உணர்ந்தேன்.
மிளகு கண்களால் என்னை மிரட்டினாள்.
நேற்று வரை நாங்கள் கடுகு உளுந்து.
இன்று என்ன கடுப்பு என்று தெரியவில்லை.
என்னவென்று விளங்காமல் விரல்களை பிசைந்திருந்தேன். விரலில் தட்டுப்பட்ட மோதிரம் விவரத்தைச் சொன்னது.

அவளிடம் நான் மண்டியிட்டு இல்லை…
மாட்டிக்கொண்ட, இல்லை இல்லை..
எங்கள் மணநாள் என்று!!
மரியாதையாய் மன்னிப்பு கேட்டு,
மஞ்சள் குங்குமம் இட்டு
என் மணவாட்டியின் மனம் கவர்ந்தேன்..

மீண்டும் கடுகு உளுந்தாய் அஞ்சறையில்…
நான், என் அஞ்சுகத்தின் அகத்தில்!!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% 

காதல் . .. எம் ரவி  ( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை) 

நீ ஒட்டுகிற பொட்டின்
பின்புற ஸ்டிக்கராக
நீ விளக்கேற்றும் போது
இறக்கிற தீக்குச்சியாக
நீ படிக்கிற புத்தகத்தின்
முக்கோண மூலையாக
நீ தொடுக்கிற பூமாலையின்
நீளமான நாராக
நீ கட்டுகிற கைக்கடிகாரத்தின்
அடியில் பயணச் சீட்டாக
எவ்வாறேனும்
இருந்து தொலைத்துவிட்டுப் போகிறேன்
உன் செங்காந்தள் விரல்கள்
தினம் தினம் எனைத் தழுவுமே
அது போதாதா?

*************************************************************************************
மழைத் துளியின் காதல்  கே ஜி எம் பிரியா -( காதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிதை) 

என்னை அன்றாடம் கடந்து போகும் மயிலே!
உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து,
மழையாய் பொழிந்தேன்!!

என் எண்ணம் அறிந்தவள் போல,
அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில்!
நானும் அவளை ஏமாற்றி நின்றேன்!!

துள்ளி வந்தவளிடம், தூறலாய் சேர்ந்தேன்!
குழலில் ‘முத்து’ போல் படிந்து, மழையாகிய நான் ,
அவளின் “மணி மகுடம்” ஆனேன்!!

கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து,
‘கண் அடித்தாள்’ !
அவள் என்னை நுகர்ந்திட,
மூக்கின் நுனியில் விழுந்தேன்!!

இறுதியில், மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்!
என்னைப் பருகி வாழ்வளித்தாள்!!

பிரபஞ்சத்தில் காதல் உணர்வு பொதுவானது!
மனிதர் போல்,
மழைத் துளிக்கும் துளிர்த்தது “காதல்”!!

 

 

 

 

பிரபா ராஜன் -குவிகம் சிறுகதைப் போட்டி – அழுக்கு மூக்குத்தி – நேசா – இரண்டாம் பரிசு பெற்ற கதை

அழுக்கு மூக்குத்தி

( IF YOU HAVE TEARS SHED THEM NOW ! என்ன ஒரு அபாரமான கதை  எழுதிய நேசா அவர்களுக்கு  நெஞ்சார்ந்த வணக்கங்கள் – குவிகம் ஆசிரியர் )

Chennai - small Tea shop near hospital - old lady above 80 years - tea shop owner - another rich man - a few people drinking tea other

(திருமதி நேசா  அவர்கள் எழுதி இரண்டாம் பரிசு Rs 3000 பெற்ற கதை) 

தனக்கு எதிரே உட்கார்ந்து டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த பாட்டியின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே மற்றொரு டீயை தயார் செய்தான் மாணிக்கம். நகரின் முக்கிய இடத்தில் இருந்த அரசு மருத்துவமனையின் அருகில் இருந்தது அவனது டீ கடை.

அதற்கு முன் வரை மார்கெட்டில் எடுபிடி வேலை செய்து தன் பிழைப்பை நடத்தி வந்தான். இவனது உழைப்பைக் கண்டு தான் இவனுக்கு பெண் கொடுத்தார் இவனது மாமனார். இப்போது அவருக்கு முடியாமல் போகவே, கடையை இவனுக்குக் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

கடையில் வியாபாரம் செய்யும் மொத்த நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார்.  அதில் முக்கியமான ஒன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்பது. அதனால் இவனும் அந்த விஷயத்தில் சற்று கறாராகவே இருந்தான். கடன் என்று பேச்சை எடுப்பவர்களை உடனே அங்கிருந்து வெளியேற்றினான். ஒருமுறை கடைக்கு வந்த இவனது மாமனாரும் கூட அதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆனால் போன வாரம் வந்த இந்த பவளமல்லி பாட்டி தான் இவனிடம் எப்படியோ பேசி கடனில் தினமும் டீ, பிஸ்கட்டு, பன் என வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அதை கொடுக்காமல் போய் விடுவாளோ என மாணிக்கத்திற்கு கலக்கமாய் இருந்தது.

டீயை ஆற்றி, வந்தவர் கையில் கொடுத்தவன், திரும்பி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை சுளையாய் முன்னூற்றி நாற்பது ரூபாய் ஆயிற்று. ஆறுக்கு எட்டு அடியில் சிறிய அளவிலான கடை வைத்திருக்கும் இவனுக்கு அது பெரிய தொகை தான்.

டீயைக் குடித்துக் கொண்டிருந்த பவளமல்லிக்கு வயது அறுபது இருக்கும். கையில் அழுக்கு படிந்த பை ஒன்றை வைத்திருந்தாள். சதை வற்றி ஒட்டிப் போய் இருந்த உடலில் பழைய சேலையைச் சுற்றி இருந்தாள். உள்ளங்கைகளும், பாதங்களும் வெளிறி காய்ப்பு காய்ச்சி இருந்தது.

ஒருவேளை இதைப் பார்த்து பரிதாபப்பட்டு தான் இவளுக்கு கடன் கொடுத்து விட்டோமோ என அவனுக்குத் தோன்றியது. இதுமட்டுமா இவளது கதையும் பரிதாபத்துக்குரியது தான். முதல் நாள் பார்த்ததில் இருந்து இன்று காலை வரையில் அவளிடம் பேசித் தெரிந்து கொண்ட விஷயங்கள் அவன் ஞாபகத்திற்கு வந்து போயின.

பவளமல்லிக்கு சொந்த ஊர் தூத்துக்குடி, ஒரே மகன். மகன் பிறந்த சில வருடத்திலேயே கணவர் இறந்து விட்டார். அங்கே உப்பளத்தில் வேலை செய்து மகனைப் படிக்க வைத்தாள். ஆனால் அவனோ சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

இப்போது அவனும் அந்த உப்பளத்தில் தான் வேலை செய்கிறான். வாரத்தில் ஒருநாள் வேலை செய்தால் மற்ற நாட்களில் சினிமா, நண்பர்கள் என வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

போன மாதம் நண்பனுடன் வண்டியில் போகும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து கடந்த ஒரு மாதமாக அங்கிருந்த ஆஸ்பத்திரியில் இருந்தான். இடுப்பில் பலமான அடி, எழுந்து நடக்க முடியவில்லை. மேலும் அடிக்கடி மயக்கம் வந்தது. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூலையில் ரத்தக் கசிவு இருப்பதாகச் சொல்லி, ஆஸ்பத்திரியில் அவர்களே ஆம்புலன்சில் இங்கே அனுப்பி வைத்தார்கள்.

கூடவே வந்த பவளமல்லி இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு மருத்துவர்களும் வந்து பார்த்து ஏதேதோ சொல்கிறார்கள், இவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாள். நேற்று அவனது உடல் நிலை மேலும் மோசமடைந்து விட்டதாகவும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்லி இருப்பதாகவும் சொன்னாள்.

மற்ற நாட்களில் பையன் தனியாக இருக்கிறான் என அவசரப்படுத்தி, கொதிக்க கொதிக்க இருக்கும் டீயை மடக்கென்று குடித்து விட்டு, போகும் போது பிஸ்கட்டோ, அல்லது ஒரு பன்னையோ வாங்கிக் கொண்டு வேகமாக ஓடுவாள்.

ஆனால் இப்போது என்றைக்கும் இல்லாதவிதமாக மிகவும் மெதுவாக டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தாள், ஒருவேளை ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறதோ அதுதான் சாவகாசமாகக் குடிக்கிறாள் போலும் என எண்ணினான் மாணிக்கம். இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறாளோ, எவ்வளவு கடன் ஆகப் போகுதோ என உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.

இருந்தாலும் ஏனோ அவனுக்கு மற்றவர்களிடம் காட்டுவது போல் இவளிடம் முரட்டுத்தனத்தைக் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காகக் கேட்காமலும் இருக்கவில்லை. தினமும் அவள் செல்லும் போது கணக்கைச் சொல்லி தான் அனுப்புவான். கேட்டு விட்டு லேசாகச் சிரித்து விட்டுச் செல்வாள்.

நேற்று மாலை அவள் போகும் போது, “ஊருக்குப் போற நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன் தம்பி” என்று மட்டும் சொல்லிச் சென்றாள்.

அப்போதிருந்து தான் இவனுக்கு கலக்கம் அதிகரித்தது. தனக்கு தர வேண்டிய பாக்கியைத் தந்து விட்டு செல்லுவாளா அல்லது தராமல் போய் விடுவாளா என சந்தேகம் வந்து விட்டது. சந்தேகம் என்று வந்து விட்டால் யாருக்கு தான் நிம்மதி இருக்கும். அதேபோல் தான் மாணிக்கத்தின் மனதும் இப்போது அவளைப் பார்த்ததும் நிம்மதி இல்லாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது.

டீ குடிக்க வந்த மற்ற ஆட்கள் அனைவரும் சென்று விட்டனர். இப்போது பவளமல்லி மட்டும் தான் இருந்தாள். குடித்து முடித்து டம்ளரை வைத்தவள், இடுப்பில் துலாவி எதையோ எடுத்து மாணிக்கத்திடம் நீட்டினாள். அவள் பெஞ்சில் உட்கார்ந்தபடியே நீட்டியது மாணிக்கத்திற்கு சரியாகத் தெரியாததால் எழுந்து எட்டிப் பார்த்தான். அது மூன்று கல் வைத்த சிறிய மூக்குத்தி. அதிகமாக அழுக்கு படிந்து அதன் பழமையைப் பறைசாற்றியது.

இப்போது தான் அவளை நன்றாகப் பார்த்தான் நேற்று வரை அவளது மூக்கில் இருந்தது இப்போது கையில். மூக்கில் மூக்குத்தி இருந்ததற்கான தடயம் நன்றாகத் தெரிந்தது.

“என்ன இது?” என்றான் மாணிக்கம்.

“மூக்குத்தி. என்கிட்ட காசு இல்ல அதான் இந்த மூக்குத்தியை வெச்சிக்கோ” என்றாள்.

“ஆமா நா என்ன அடகு கடையா நடத்தறேன்? எனக்கு இதெல்லாம் எதுவும் வேண்டாம். நீயே யார் கிட்டயாவது கொடுத்து காசு வாங்கிட்டு வந்து குடுத்துட்டுப் போ” என்றான்.

“எனக்கு இங்க யாரையும் தெரியாதுப்பா.” அவள் பேச்சில் கெஞ்சல் இருந்தது.

“அதுக்காக நான் எப்படி மூக்குத்தியை வாங்கிக்கறது?” இவனுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

அப்போது உள்ளே ஆஸ்பத்திரி ஊழியன் ஒருவன் வந்தான், “ஏம்மா நீ இங்கயா இருக்க? சார் அந்தம்மா இங்க தான் இருக்கு சார்” என்று பின்னால் திரும்பிக் குரல் கொடுத்தான்.

அப்போது அங்கு நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவர் உள்ளே வந்தார். அவரது தோற்றத்திலேயே அவரது செல்வச் செழிப்புத் தெரிந்தது. இவளைக் கண்டதும் வந்தவர் நிம்மதியடைந்தார். மருத்துவமனை ஊழியன் தலையைச் சொரிந்தான். சில ரூபாய் தாள்களை அவன் கையில் திணித்து அனுப்பி வைத்தார்.

“ஏம்மா முத்தரசன்கிறது உங்க மகன் தானே?” ஆர்வத்தோடு கேட்டார்.

“ஆமா” என தலையை அசைத்தாள்.

வேகமாக தனது கையில் இருந்த பையைத் திறந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்து, “இந்தாம்மா இதை வெச்சுக்கோ” என திணித்தார்.

மாணிக்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை, என்ன நடக்கிறது என்று யூகிக்கவும் முடியவில்லை. திகைத்து நின்றான்.

பவளமல்லி பணம் இருந்த கையை அப்படியே திருப்பி அவர் கைகளில் பணத்தை வைத்து தனது கையை எடுத்துக் கொண்டாள்.

“தப்பா எடுத்துக்காதம்மா, என் பேரு ராஜன். எனக்கிருக்கும் ஒரே பையனுக்கு கல்லீரலில் பிரச்சினை, ரொம்பவும் சிரமப்பட்டான். இப்ப உங்க பையனோட கல்லீரல் தான் என் பையனுக்கு வெச்சி இருக்காங்க, அதுக்கு ஒரு நன்றி கடனாதான் தரேன். உங்களை எவ்வளவோ சிரமப்பட்டு தான் தேடி கண்டுபிடிச்சி வந்திருக்கேன், மறுக்காதீங்கம்மா” என மன்றாடினார்.

“என் பையனுக்கு மூளை சாவு வந்துட்டுதுன்னு சொன்னாங்க. இனிமே பிழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க. மத்தவங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்தா அதனால் நாலு பேருக்கு நல்லது நடக்கும்னு சொன்னாங்க, அதான் ஒத்துக்கிட்டேன். மத்தபடி எனக்கு அதுக்காக பணம் கெடைக்கும்னு ஒத்துக்கலை” அமைதியாகச் சொன்னாள்.

மாணிக்கத்திற்கு பகீர் என்றது. ‘என்னது பாட்டியோட பையன் செத்துட்டானா? அவனோட உறுப்புகளை தானமா கொடுத்துடுச்சா இந்த பாட்டி.’ திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐயய்யோ, நான் உங்களுக்கு பயன்படுமேன்னு தான் குடுக்கறேன்மா” என்றான் ராஜன் மென்மையாக.

“அதுதான் எனக்கு கையும் காலும் நல்லா இருக்கே, இது எனக்கு வேணாம் சாமி.”

“என்னோட ஆத்ம திருப்திக்காக வாங்கிக்கக் கூடாதாம்மா?” மனிதர் இப்போது கெஞ்சினார்.

“தானம்னு சொல்லி தானே நான் குடுத்தேன் அப்புறம் எப்படி நான் பணம் வாங்குவேன். உயிரோட இருந்த வரைக்கும் என் மகனால எனக்கு தான் பிரயோசனம் இல்லை, இறந்த பின்னாடி ஒரு நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எனக்கு அதுவே போதும், பணம் எதுவும் வேணாம்பா.” ராஜன் முகம் வாட துவண்டு போய் தலையைத் தொங்கப் போட்டார்.

சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்திருந்த மாணிக்கம், “அதான் பெரிய மனசு பண்ணி குடுக்கறாரே வாங்கிகிட்டா தப்பில்லை பாட்டிமா” என்றான்.

“நான் என்ன என் பையனை கூறு போட்டா வித்தேன்? இப்ப நான் பணம் வாங்கிக்கிட்டா அதுக்கு அப்படிதானே அர்த்தம் ஆகும்” என்று அவள் சொல்லியதைக் கேட்டதும் ஆண்கள் இருவரும் அதிர்ந்தனர்.

ராஜனின் கண்கள் கலங்கி கண்ணீர் அருவியாகக் கொட்டியது. மனம் கனத்து கலங்கிப் போய் நின்றார். பின்னர் கையெடுத்து கும்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பவளமல்லிக்கும் இப்போது இரண்டு நீர் துளிகள் திரண்டு கன்னம் வழியே கோடு இழுத்துச் சென்றது. பின்னர் தனது முந்தானையில் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் ஏதோ நினைவு வந்தவளாக, “நீங்க ஒரு சின்ன உதவி செய்யணும்.”

அவள் கேட்டதும் ஒரு நிமிடம் கண்களில் சந்தோஷம் மின்ன நிமிர்ந்தார் ராஜன், “சொல்லுங்கம்மா.”

தன் கையில் இருந்த மூக்குத்தியை அவர் கையில் வைத்து, “இதை வெச்சிகிட்டு எனக்கு ஒரு ஐநூறு ரூபா கொடுங்க,  அது போதும்” என்றாள்.

“மூக்குத்தி இல்லாமலே நான் உங்களுக்கு பணம் தரேன், கடனா கூட நீங்க நினைச்சுக்கோங்க” என ஆர்வமுடன் சொன்னார்.

“கடனுக்கு தான் இந்த மூக்குத்தியைத் தரேன், இல்லைனா எனக்கு பணம் வேண்டாம்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

”சரி” என அவளிடம் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தவர், கையில் இருந்த மூக்குத்தியை பயபக்தியுடன் கண்ணில் ஒற்றி தன் பாக்கேட்டில் போட்டுக் கொண்டார்.

பணத்தால் நன்றி சொல்ல வந்தவர், இப்போது கண்ணீரால் நன்றி சொல்லி விட்டுச் சென்றார்.

பின் மாணிக்கத்திடம் திரும்பிய பவளமல்லி, “இந்தாப்பா உனக்கு நான் குடுக்க வேண்டிய பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சத்தைக் குடுப்பா.”

தனது மகனின் உறுப்பை தானமாகக் கொடுத்து விட்டு சாதாரணமாக நிற்கும் பாட்டியின் முன் மாணிக்கம் தன்னை எண்ணி வெட்கி நின்றான். இப்போது பாட்டியிடம் பணம் வாங்க அவனுக்கு விருப்பமில்லை. “பரவாயில்லை பாட்டி எனக்கு பணம் வேண்டாம்” என்றான்.

“உனக்கு தான் மூக்குத்தியையும் வாங்கிக்க மனசு வரலியே. அதனால தான் அவருகிட்ட இந்த பணத்தை வாங்கினேன். எனக்கும் ஊருக்கு போறதுக்கு பணம் தேவையாயிருக்கு. இதுல உனக்கு தேவையான பணத்தை எடுதுட்டுகிட்டு மிச்ச பணத்தைக் குடு. அதுல நான் ஊருக்கு போயிடுவேன்” என்று கணக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.

முதலில் பணம் தருவாளா என கலங்கிக் கொண்டிருந்தவன் இப்போது தருகிறாளே என தவித்தான். இதை வாங்காமல் போகவும் மாட்டாள் என தெரிந்தது, அரைமனதோடு கல்லாவில் ரூபாயைப் போட்டு சில்லறையை எண்ணிக் கொடுத்தான்.

பணத்தை வாங்கிக் கொண்டு தளர்ந்த நடையுடன் சென்றாள் பாட்டி. அவள் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு கல்லாவில் மூக்குத்தியைப் போல நீட்டிக் கொண்டிருந்தது.

 

 

 

கைக்கிளை  –      சித்ரூபன்  

கைக்கிளை - YouTube 

     ‘ந்த வீணைக்குத் தெரியாது.. இதைச் செய்தவன் யாரென்று..’ பாடலை ராகத்தோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் செல்வி.

     “’ரயில் சிநேகம்’ பார்க்கறயாடி..” கயல்விழி கேட்டாள்.

     “புதன்கிழமை ராத்திரி ஏழரை மணிக்கு வீட்டுல எல்லாரும் ஆஜராயிடுவோம்.. தூர்தர்ஷன்ல இந்த சீரியலுக்காகவே..”

     “ஜேசுதாஸ் குரல்.. மனசை உருக்குது இல்ல..”

     “சொல்ல மறந்துட்டேன் கயல்.. ஸாலிடேர் கலர் டிவி வாங்கிட்டோம்..”

     “நாங்க இன்னும் டயனோரா பிளாக் அன்ட் ஒயிட்டை மாத்தவேயில்லடி..”

     இருவரும் திண்டுக்கல்லில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் தனியார் பேருந்தில் அருகருகே உட்கார்ந்திருந்தனர். மின் வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்து இணைபிரியாமல் செல்வதும் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது. ஒருத்தி விடுப்பு எடுத்தால் மற்றவளும் அலுவலகத்திற்கு வர மாட்டாள். நட்பில் அப்படியொரு நெருக்கம்.

     “ஏன் வாட்டமா இருக்கே.. உடம்பு சரியில்லயா..”

     “இன்னிக்காச்சும் அந்தக் கடன்காரன் வராம இருக்கணும் செல்வி..” பதற்றத்துடன் நாக்கைச் சுழற்றி உதடுகளை ஈரமாக்கிக் கொண்டாள் கயல்விழி.  

     “யாரு.. சேதுவா.. அங்க கைத்தறி நெசவு பண்றானே..”

     “ஆமான்டி.. ஒருத்தனுக்கு தெனமும் ‘ஈபி’ ஆபீஸ்ல என்ன வேலை.. மாசத்துக்கு ஒரு தடவை கரண்ட் பில்லு கட்ட வந்தா சரி.. அடிக்கடி ஏதாவது சாக்குல எங்கிட்ட வந்து பேச்சு குடுக்கறான்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி.. ‘வழக்கமா எங்களுக்கு நுப்பது யூனிட்தான் ஆகும்.. இந்த முறை கூட வந்திருக்கு.. மீட்டர்ல ஏதோ கோளாறு’னு புலம்பினான்.. ‘ரீடிங் எடுக்கறவங்ககிட்ட போயி கேளு’ன்னு சொல்லி அனுப்பிட்டேன்..”  

     “அவன் வர்றதே உன்னை பார்க்கதான் கயல்..” என்றாள் செல்வி. “இருவத்து மூணு வயசு.. கன்னிப்பொண்ணு.. அழகா இருக்கே.. வாலிப பசங்க உன்னை சுத்ததான் செய்வாங்க..”     

      பாலன் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் ஜிகினா வேலைப்பாடுகளுடன் வண்ண விளக்குகள் அணைந்தணைந்து எரிய, ‘புது வசந்தம்’ பாட்டு உச்ச ஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தது. “வத்தலகுண்டு டிக்கெட் எடுத்தவங்க எந்திரிச்சி வாங்க..” என்ற நடத்துநர் பயணிகளிடம் “அண்ணே.. படிக்கட்டை மறிச்சுட்டு நிக்காதீங்க.. அங்கிட்டு போய்டுங்க..” என்று சத்தம் போட்டார்.

      கயல்விழி “அந்த சேதுவை நினைச்சாலே எரிச்சலா இருக்குடி.. அவன் மீசையும் தாடியும்.. போன வாரம் ‘மௌனம் சம்மதம்’ ஆடியோ கேஸட்டை என் டேபிள்ல வெச்சுட்டு போயிருக்கான்..” என்றாள்.

      “அன்னிக்கி கொடை ரோடுக்கு போயிருந்தேன்னு சொல்லி.. சிறுமலைப்பழம் ஒரு டஜன் குடுத்தானே.. எதுக்குன்னு நெனைக்கறே..” செல்வி கேட்டாள். “ஒனக்கு மட்டும் கொடுத்தா வெளிப்படையா தெரிஞ்சுடுமேன்னு.. அசிஸ்டென்ட் இஞ்சினியர்ல ஆரம்பிச்சு லைன்மேன் வரைக்கும் எல்லாருக்கும் வாழைப்பழ விநியோகம் பண்ணியிருக்கான்..”

      “எனக்கு இங்க வேலை பார்க்கவே பிடிக்கலடி.. சீக்கிரமா திண்டுக்கல்லுக்கு டிரான்ஸர் கிடைச்சா நிம்மதியாயிருக்கும்..”

     “உங்கப்பாவுக்கு மேலிடத்துல யாரையோ தெரியும்னு சொன்னியே.. என்னாச்சு கயல்..”

    “மெட்ராஸ் செக்ரடேரியட்ல.. எலக்ட்ரிசிட்டி அமைச்சரோட ‘பிஏ’கிட்ட பேசியிருக்காங்களாம்.. அடுத்த வருஷம்.. அதாவது.. தொண்ணூத்தி ஒண்ணுல நிச்சயமா மாத்தல் வந்துடும்னு சொல்லியிருக்காரு..”

     “எனக்கும் சேர்த்து ட்ரை பண்ணச் சொல்லு..”

*********

     லகநாதன், தாரா தம்பதியினரின் ஒரே செல்லப்பெண் கயல்விழி. மகளுக்கு கூடிய விரைவில் மணமுடிக்க வேண்டுமென்று தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்லில் பிரபலமான பூட்டு வியாபாரியின் மகன் ஜாதகம் பொருந்தி வந்தது. தாமரைப்பாடி, பெரியகுளம் போன்ற இடங்களிலிருந்தும் நல்ல வரன்கள் வந்தன. பெற்றோர் மீதான அளவற்ற பாசத்தினால் அவர்களை விட்டுப் பிரிய கயல்விழிக்கு மனமில்லை. ஏதேதோ காரணம் சொல்லி எல்லாப் பையன்களையும் மறுத்து விட்டாள். இனி அவளைக் கேட்காமலேயே நிச்சயம் செய்து விடுவதென்று பெற்றவர்கள் தீர்மானித்தனர்.

    டிவியில் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்தபடியே பிச்சிப்பூவைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் தாரா.

     “அம்மா.. நான் டெலிபோன் பூத் வரைக்கும் போயிட்டு வரேன்..” என்று புறப்பட்டாள் கயல்விழி. இடுப்புப் பகுதி தெரியாமலிருக்க புடவையை மேலே உயர்த்தி ரவிக்கையுடன் சேர்த்து ‘பின்’ போட்டுக் கொண்டாள். தனக்கு வந்த கடிதத்தை ரகசியமாக எடுத்துக் கொண்டாள்.

     “இந்த ராத்திரி வேளையில யாருகிட்டடி பேசப் போறே..”

    “செல்விக்கு ஆபீஸ் விஷயம் ஒண்ணு சொல்லணும்மா..” என்று புளுகினாள்.

     ‘சாவி’ வார இதழைப் படித்துக் கொண்டிருந்த உலகநாதன் “நான் ஸ்கூட்டர்ல கூட்டிட்டு போகட்டுமா..” என்றவாறே எழுந்தார்.

    “வேண்டாம்ப்பா.. இங்க.. தெருமுக்குல தானே..“

    சந்தை ரோடில் வழக்கமாகப் பேசும் மளிகைக் கடை ‘காயின் பூத்’தைத் தவிர்த்து விட்டு சற்று தள்ளியிருக்கும் ‘பிஸிஓ’க்குச் சென்றாள்.

    செல்வியின் வீட்டு லேன்ட்லைன் நம்பரை முயற்சித்தவுடன் அவளே பேசினாள் “என்ன இந்த வேளையில.. எதாவது பிரச்னையா..”

    “அந்த ராஸ்கல் எனக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியிருக்கான்டி..”

    “சேதுவா.. அவனுக்கு எப்படி உன் விலாசம் தெரியும்..”

    “அதுதான்டி எனக்கும் புரியலை.. “

    “என்ன எழுதியிருக்கான் படி..”

    “மிஸ் கயல்விழி, 1229, சந்தனக்காரத் தெரு, நாகல் நகர், திண்டுக்கல்-624003..”

    “அதைக் கேக்கலை.. கிரீட்டிங்ஸ் கார்டு உள்ள என்னயிருக்கு..”

    “இதயத்தை அம்பு துளைக்கற மாதிரி படம் வரைஞ்சு.. கீழே ‘நேசத்துடன்’னு எழுதி  கேள்விக்குறி போட்டிருக்கான் செல்வி..”

     “சேதுதான் அனுப்பினான்னு எப்படி சொல்றே..”

     “அவன் கையெழுத்து நல்லாவே ஞாபகமிருக்கு.. நேத்தி கூட ஆபீஸ்ல யாருக்கோ ‘சிங்கிள் ஃபேஸ்’ கனெக்‌ஷனை ‘த்ரீ ஃபேஸா’ மாத்தணும்னு லெட்டர் எழுதி என்கிட்ட தான் குடுத்தான்..”

     “இந்த விஷயம் உங்க அப்பா அம்மாக்கு தெரியுமா..”

     “இல்லடி.. நல்ல வேளையா.. நான் வீட்டுக்குள்ள நுழையும்போதே லெட்டர் பாக்ஸ்ல இதைப் பார்த்து எடுத்து வெச்சுகிட்டேன்.. எங்கப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.. கொன்னே போட்டுருவார்.. “

    “சரி.. பதறாதே.. நாளைக்கு ஆபீஸ்ல ‘ஏஈ’ சார்கிட்ட சொல்லலாம்..” என்றாள் செல்வி. “உனக்கு பிடிச்ச கமலஹாசனோட படம்.. ‘மைக்கேல் மதன காமராஜன்’ தீபாவளி ரிலீஸ் ஆகுதாம்.. நாகா தியேட்டர்ல.. அடுத்த சனிக்கிழமை செகண்ட் ஷோ நாங்க போலாம்னு இருக்கோம்.. உனக்கும் சேர்த்து ரிசர்வ் பண்ணவா..”

    “எங்கம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்டி..” என்று போனை வைத்தாள் கயல்விழி.

********

     ண்டிப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் அன்று மாதத்தின் இரண்டாம் நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மின் கட்டணம் செலுத்துவோர் கொடுத்த கசங்கிய ரூபாய் நோட்டுக்களை ஒழுங்குபடுத்தி, நுகர்வோர் அட்டையில் பதிந்து, ஒவ்வொருவருக்கும் ரசீது எழுதி,.. ஓய்ந்து போய் விட்டாள் கயல்விழி.

    அவளுடைய பேனா திடீரென்று எழுத மறுத்தது. எழுந்து போய் புது ரீஃபில் வாங்கிவர நேரமில்லை. ஆங்கிலப் புத்தாண்டுப் பரிசாக சேது கொடுத்துவிட்டுச் சென்ற பால்பாயின்ட் பேனாவைக் குப்பைத் தொட்டியில் வீசியது நினைவுக்கு வந்தது. அவசரத்திற்கு அதிலிருந்து உருவிக் கொள்ளலாம் என்று குனிந்து எடுத்தாள். உள்ளே ரீஃபிலைச் சுற்றியிருந்த மெல்லிய காகிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். ‘ஐ லவ் யூ’ என்று எழுதியிருந்ததைப் படித்தவுடன் படபடப்பாக உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்தாள்.

     செல்வியிடம் “ஒரு நிமிஷம் வாயேன்..” என்று நடுங்கும் கைகளுடன் அவளை இழுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்றாள். அங்கே 1991ஆம் வருடத்திற்கான புது காலண்டர்களும், கேபிள்களும், ரப்பர் கையுறைகளும் இறைந்து கிடந்தன. மூலையில் மீட்டர், ஃப்யூஸ் போன்ற மின் சாதனங்கள் மீது ஒட்டடை படிந்திருந்தன.

     “என்ன கயல்.. ஏன் மூஞ்சி எல்லாம் வேர்த்திருக்கு..”

     “படுபாவி சேது பண்ண காரியத்தை பாருடி.. “ என்று தாளைக் காண்பித்து விஷயத்தைச் சொன்னாள்.

    “ஓ.. இதுக்குதான் ஆபீஸ்ல எல்லாருக்கும் பேனா சப்ளை பண்ணானா.. இப்பதான் புரியுது..” என்றாள் செல்வி. “தீபாவளி சமயத்துலயே அவனைக் கூப்பிட்டு கண்டிச்சோம்.. அப்படி இருந்துமே சேட்டை பண்ணிட்டே இருக்கான்..”

    “இவனாலே ரொம்ப உளைச்சலா இருக்குடி.. இந்த விவகாரம் வீட்டுல தெரியாது.. எனக்கு மும்மரமா கல்யாணத்துக்கு பார்த்துட்டு இருக்காங்க.. நான்தான் தட்டி கழிச்சிட்டேயிருக்கேன்.. “

    “உன் கழுத்துல மஞ்சக்கயிறு ஏறிடுச்சின்னா இவன் வாலாட்டறதை நிப்பாட்டிடுவான் கயல்..”

     “எனக்கும் அதுதான்டி தோணுது.. இந்த வருசம் டிரான்ஸரும் வந்துட்டா நிம்மதியா இருக்கும்..”

     “கிடைச்சிடும்.. கவலைப்படாதே..” என்று பேச்சை மாற்றினாள் செல்வி. “நாங்க புதுசா ‘வீஸிஆர்’ வாங்கியிருக்கோம்.. ஞாயித்துக்கிழமை அதுல ‘கேளடி கண்மணி’ பார்க்க போறோம்.. நீயும் வா.. உனக்கு எதாச்சும் படம் வேணும்னா சொல்லு..”

     “கமல் நடிச்ச ‘வெற்றி விழா’.. தியேட்டர்ல பார்க்க முடியாம போயிடுச்சி.. “

    “அவ்வளவுதானே.. ரெண்டு கேஸட்டையும் எடுத்துடுவோம்..” என்றாள் செல்வி.

**********

  Tamil Nadu Governor to answer mercy petittion of convict involved in Rajiv  Gandhi's assassination - India Today   ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை தூர்தர்ஷனில் ஷோபனா ரவி வாசித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குள் டிவி திரையில் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ அறிவிப்பு அலைபாய்ந்தது. சலித்துக் கொண்ட உலகநாதன் ‘ஜுனியர் போஸ்ட்’ பத்திரிகையைப் புரட்டத் தொடங்கினார்.

    அன்று ஏதாவது அரசியல் கலவரம் நடக்கலாம் என்பதனால் கயல்விழி ஆபீசுக்குப் போகவில்லை. காலையில் சமையல் வேலைகளில் அம்மாவுக்கு உதவினாள். கோடை வெய்யிலின் தாக்கத்தால் மதியம் செல்வியின் வீட்டிற்கு பாரதிபுரம் வரை நடந்து போக மனமின்றி சோம்பலாகப் படுத்துக் கிடந்தாள்.

     பேனா சம்பவத்திற்காக ஆபீசில் எல்லோரும் சேதுவை மிரட்டிய பிறகும் அவன் ‘இதயம் பேசுகிறது’ புத்தகத்தைக் குறியீடாகக் கொடுத்ததும், அலுவலக தொலைபேசியில் அவளை அழைத்து மின்தடை பற்றி விசாரித்ததும் நினைவுக்கு வந்து வருத்தின. அவனுடைய தொல்லைகளால் வேலையை விட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

     இரவு டேப் ரிக்கார்டரில் ‘அஞ்சலி’ படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது “கயல்விழீ..” என்று தாரா அழைத்தாள்.

    “என்னம்மா..” என்றபடியே ஹாலுக்கு வந்தாள்.

     “காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு வைச்சுட்டா எங்க கடமை முடிஞ்சுடும்.. இதுவரைக்கும் நிறைய பேரை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வேண்டாம்னுட்டே.. ”

    “மெட்ராஸ்ல இருந்து ஒரு ஜாதகம் வந்திருக்கு.. எட்டுப் பொருத்தம் இருக்காம்.. ஜோசியர் சொல்லிட்டார்.. பையன் ரயில்வேயில வேலை பார்க்கறான்..” என்றார் உலகநாதன். “நாங்க முடிவு பண்ணிட்டோம்..”

    “அவனுக்கு அம்மா கிடையாது.. ஒரே மகன்.. அப்பாவும் அத்தையும் இருக்காங்க..”

    கயல்விழி மனதளவில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.

   “சொந்த வீடு இருக்கு.. வசதியானவங்க.. நீ வேலைக்கு போகணும்னு கட்டாயம் இல்லேன்னு சொல்லிட்டாங்க.. “

    “இதுதான் பையன் போட்டோ..” என்று தபால் உறையிலிருந்து எடுத்துக் காட்டினாள் தாரா.

    மீசையில்லாமல் நெற்றியில் சந்தனப் பொட்டுடன் அவனைப் பார்த்தவுடன் ‘சுந்தரி நீயும்..’ பாடல் கயல்விழியின் மனதுக்குள் ஒலித்தது. ஆண்டிப்பட்டி விவகாரத்திலிருந்து விடுதலை பெற திருமணம் ஒன்றே தீர்வு என்று தோன்றியது. பெற்றோரையும், செல்வியையும் விட்டுப் பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்திற்கு தானாகவே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

    “ஜூன் மாசம் பொண்ணு பார்க்க வர்றாங்களாம்..”

    “சரிப்பா.. எனக்கும் சம்மதம்..” என்றாள் தலையைக் குனிந்தபடியே. “பையன் பேரு என்ன.. “

    “சேதுராமன்.. வீட்டுல ‘சேது’ன்னு கூப்பிடுவாங்களாம்..

பயம் – கௌரிசங்கர்

Elderly Couple Drawing Stock Illustrations – 1,894 Elderly Couple Drawing Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

ஏழாவது தளத்தில் லிஃப்ட் நின்று கதவு திறந்ததும் வெளியே வந்து, வராந்தாவைக் கடந்து, 7-D வீட்டு வாசலுக்கு வந்தார் வீரராகவன். வாசலில் பலர் சிறு சிறு குழுக்களாக கூடி நின்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசலின் இரு புறத்திலும் நூறுக்குக் குறையாமல் செருப்புகளும், ஷூக்களும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. வீரராகவன் தன் செருப்பை பத்திரமாக தனியே ஓரமாக ஒரு இடத்தில் கழட்டிவிட்டு, வாசல் வழியே வீட்டுக்குள் நுழைந்தார்.

உள்ளேயும் பெரிய கூட்டம். சுற்றிப் பார்த்ததில் ஒரு முகமும் தெரிந்த முகமாக இல்லை. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு கூட்டத்தில் தன்னைச் செருகிக் கொண்டு  மெதுவாக முன் நகர்ந்து கூடத்தின் மையப் பகுதியை அடைந்தார். அங்கே நடுவில் ஒரு கண்ணாடிப் பேழையில் அந்த உடல் வைக்கப்பட்டிருந்தது. சுற்றி பலர் அமர்ந்திருந்தார்கள். நடுவில் கருப்புப் புடவை அணிந்த ஒரு ஐம்பது வயது பெண் இருந்தாள். அவள் முடி கலைந்திருந்தது. கண்கள் சிவந்து நீர் தளும்பி நின்றன. நிறைய அழுதிருக்க வேண்டும் என்று தோன்றியது. இவள்தான் இறந்தவரின் மனைவியாக இருக்க வேண்டும் என்று வீரராகவன் நினைத்துக் கொண்டார்.

கண்ணாடிப் பேழையின் மேல் சாற்றப்பட்டிருந்த ஒரு ஆளுயர ரோஜா மாலையை ஒருவர் அகற்றிக் கீழே போட்டார். இப்போதுதான் வீரராகவன் இறந்தவரை முழுதாகப் பார்க்க முடிந்தது. நேற்றுவரை “சுந்தரவதனம்” என்ற பெயரில் இருந்த அவர் இன்று வெளிறிய வதனத்துடன் இருந்தார்.    உடலுக்கு முழுச்சட்டையும் வேட்டியும் அணிவித்திருந்தார்கள். கை, கால்களின் கட்டை விரல்கள் சிறு கிழிந்த துணியால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தன. நெற்றியிலும் கைகளிலும் பட்டையாக திருநீறு பூசப்பட்டு மூக்கின் இரு துவாரங்களிலும் பஞ்சு வைத்து அடைக்கப்பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை, மூடிய கண்களுக்கு மேல் ஒரு மூக்குக் கண்ணாடியும் அணிவித்திருந்தார்கள்.

யாரைப் பார்த்து என்ன கேட்பது என்று வீரராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக அவருக்குப் பக்கத்தில் இருந்தவர், மாலையை அகற்றியவரைப் பார்த்து, “என்ன ஆச்சு? நேத்து கூட நல்லா இருந்தாரே?’ என்று கேட்க, அவரும்,  “மாஸிவ் ஹார்ட் அட்டாக். நேத்து ராத்திரி பத்து மணிக்கு. ஹாஸ்பிடல் போயும் ஒண்ணும் பிரயாசனமில்லை” என்று பதில் சொன்னார். உடனே கேட்டவரோடு வீரராகவனும் சேர்ந்து “த்ஸு” கொட்டிவிட்டு, தானும் ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக “எப்போ காரியமெல்லாம்?” என்றார்.

“பையன் பெஹ்ரின்லே இருக்காரு. அவரு வந்தப் பிறகுதான் எல்லாம். சாயந்திரத்துக்கு மேலே ஆயிடும்” என்று பதில் வந்தது.

இதற்கு மேல் வீரராகவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. அந்த இடமும், சூழ்நிலையும் அவரை என்னமோ வேதனை செய்தன. கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. சட்டென்று ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பி, வீட்டுக்கு வெளியே வந்து விட்டார். செருப்பை அவசரமாக மாட்டிக் கொண்டு லிஃப்ட்க்குக் கூட நிற்காமல் படியிறங்கத் தொடங்கினார்.

அன்று காலை எழுந்தவுடனே காஃபியைக் கொடுத்துவிட்டு ரேணுகா, “இன்னிக்கு வாக்கிங் போக வேண்டாம். 7D ஃப்ளாட்லே இருக்காரே சுந்தரவதனம், அவர் நேத்து இறந்து போயிட்டாராம். நான் போய் பார்த்துட்டு வந்துட்டேன். நீங்களும் போயிட்டு வந்துடுங்க” என்றாள்.

“ஏன் என்ன ஆச்சு?’

“தெரியலை. ராத்திரி பதினோரு மணிக்கு நெஞ்சை வலிக்கிறதுன்னு சொன்னாராம். ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரி போயும் பிழைக்கலையாம்”

“அடடா! சரி, நீதான் போயிட்டு வந்திட்டியே? நானும் எதுக்கு?’

“ஒரே ஃப்ளாட்லே இருக்கோம். இதுக்குக் கூட போகலைன்னா எப்படி?”

“எனக்கு அவங்க வீட்டிலே யாரையும் தெரியாது”

“தெரியாட்டி என்ன? போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துடுங்க…போங்க”

ரேணுகா விரட்டியதால்தான் வீரராகவன் வேண்டா வெறுப்பாக அங்கே போய் ஒரு கும்பிடும் போட்டுவிட்டு வந்தாயிற்று. நேராகக் குளியல் அறைக்குப் போய் தலைக்கு முழுகிவிட்டு, வெளியே வந்து பூஜை அறையில் நுழைந்தார். மனது ஒரு நிலையில் இல்லை. நினைவுகள் 7D வீட்டையே சுற்றி வந்தன. வழக்கமாகச் சொல்லும் தேவாரமும் சிவபுராணமும் இன்று தப்புத் தப்பாக வாயில் வந்தன. அதை நிறுத்திவிட்டு கீழே விழுந்து கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் அறைக்குப் போய் லுங்கி அணிந்து கொண்டார்.

“சாப்பிட வாங்க. டிஃபன் ஆறிப் போகுது” என்ற ரேணுகாவின் உத்தரவுக் குரல் கேட்டு வெளியே வந்தவர் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தார்.

“சாப்பிடவே பிடிக்கலை ரேணுகா. ரொம்பச் சின்னவர் போல இருக்கு”

“ஆமாம். அம்பத்தி மூணு வயசுதானாம். உங்களை விட பதிமூணு வயசு சின்னவர்”

தன்னை விட பதின்மூன்று வயசு சின்னவரா? வீரராகவனுக்கு பக்கென்றது.

“இவ்வளவு சின்ன வயசுன்னா ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம் இருக்கும் ரேணுகா”

”ம்ஹும். B.P. சுகர் எதுவும் கிடையாதாம். தினம் ஒரு மணி நேரம் ஜிம்லே எக்ஸர்சைஸ் பண்ணுவாராம்”

”அப்போ வேறே கெட்ட பழக்கங்க  இருந்திருக்கும்”

“எல்லாம் விசாரிச்சுட்டேன். குடி, சிகரெட் எதுவும் கிடையாதாம். ம்….ஏதோ தலைவிதி”

’நம்மை விட பதிமூணு வயசு சின்னவர். நோய் நொடி ஒன்றும் இல்லை. கெட்ட பழக்கம் கிடையாது. பிறகு, இவ்வளவு சீக்கிரம் இறப்பு என்றால்?’

வீரராகவனுக்கு வயிற்றில் லேசாகப் புளியைக் கரைத்தது. ’B.P கொஞ்சம் இருக்கு. மாத்திரை சாப்பிட்டு கட்டுப்பாட்டில் இருக்கு. நல்ல வேளை சர்க்கரை வியாதி இல்லை.  தினமும் (சனி, ஞாயிறு தவிர) ஒரு மணி நேரம் வாக்கிங். இருபது வருடத்துக்கு முன்னாலேயே சிகரெட்டை நிறுத்தியாச்சு. மது, எப்போவாவது நண்பர்கள் கூடத்தான். வருடத்துக்கு இரண்டு மூன்று முறை. இது தப்பா? ஆனாலும் இதெல்லாம் இல்லாதவங்களுக்கே விதி இப்படி என்றால்…..?’

“என்ன முழுசா சாப்பிடாம எழுந்துட்டீங்க? நாலுலே இரண்டு இட்லி அப்படியே இருக்கு”

“இறங்கலை ரேணுகா”. எழுந்து கையைக் கழுவிக் கொண்டு சோபாவுக்கு வந்து பேப்பர் படிக்க உட்கார்ந்தார் வீரராகவன். பிரித்தவுடன் முதல் பக்கத்திலேயே, “விக்கிரவாண்டி அருகே பஸ், லாரி மோதி விபத்து. இரண்டு பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் மரணம்” என்று கொட்டை எழுத்தில் செய்தியைப் பார்த்தவுடன் சட்டென்று பேப்பரை மூடி வைத்து விட்டார்.  மேலே என்ன செய்வதென்று புரியாமல், ரிமோட்டை எடுத்து டி.வியை “ஆன்” செய்தார். பேப்பரில் வந்த அதே செய்தியை இப்போது டி.வி.யில் வண்ணத்திரை காட்சிகளாக காட்டிக் கொண்டிருந்தார்கள். “சே” என்று வாய் தானாக முணுமுணுத்து, கை விரல் ஒரு பொத்தானை அழுத்த டி.வி. ஒளியிழந்து உறங்கப் போயிற்று.

’என்ன இன்னிக்கு நாள் நல்லாவே இல்லையே! எல்லாமே கெட்ட செய்தியாகவே இருக்கு. ஏதாவது அபசகுனமா?’

வீரராகவனுக்கு மனத்தில் இலேசாக கலக்கம் தோன்றியது. மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. எதைப் பற்றி யோசிப்பது, எதைச் செய்வது என்று புரியாமல் ஒரே குழப்பம். மௌனமாகத் தன் அறைக்குப் போய் படுக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

சிறு வயதிலிருந்தே வீரராகவனுக்கு இறப்பு என்றால் ஒரு வித பயம். இறந்த உடலைப் பார்க்கப் பிடிப்பதில்லை.  சிறுவனாக இருந்த போது சாலையில் ஏதாவது இறுதி ஊர்வலம் வந்தால் கூட வீட்டின் உள்ளே எங்காவது அறையில் ஒளிந்து கொள்வார். அந்த சங்கு சப்தமும், மணியோசையும், பறை வாத்திய ஒலியும் காதில் நுழைந்து விடாமல் இரு காதுகளையும் கைகளால் நன்றாகப் பொத்திக் கொண்டு விடுவார்.

இரண்டு வயதாயிருக்கும் போதே, தந்தை இறந்து போனதால் அவரை அந்தக் கோலத்தில் பார்த்த நினைவில்லை. அம்மா இறந்தது அவரின் நாற்பத்தைந்தாவது வயதில். அப்போது கூட அம்மாவின் உடலை அடிக்கடிப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறார். ரேணுகாவின் அம்மா இறந்து போன போது அவர் ஷில்லாங்கில் இருந்து வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டன. மற்றபடி தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள், நண்பர்கள் இழப்பின் போது கூட அவர் உடனே சென்றதில்லை.  அடுத்த நாளோ, அடுத்த வாரமோ, அடுத்த வருஷமோதான். ஆனால் இன்று…?

 “என்ன காலை வேளையிலே தூங்கறீங்க?” என்றாள் ரேணுகா அறையில் நுழைந்து கொண்டே.

“கொஞ்சம் தலை வலிக்குது. அதான்….’

“மாத்திரை போட்டுக்கிறீங்களா? இல்லை, டீ தரட்டுமா?”

“இல்லை, வேண்டாம். ”

“சாவுக்கு பயமா? இல்லை சாவை பார்த்ததிலே பயமா? யாரோ செத்துப் போனதுக்கு எல்லாம் இந்த மாதிரி பயப்படாதீங்க”

“பயமெல்லாம் ஒண்ணுமில்லை”

“அதான் முகத்திலே தெரியுதே! ஹும்.. பேருதான் ’வீர’ ராகவன்.  மத்தபடி ’பயந்த’ ராகவன்” என்று  சொல்லி சிரித்து விட்டு ஒரு புடவையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள் ரேணுகா.

‘ரேணுகா சொன்னது நிஜந்தான். பயந்துதான் போயிருக்கிறேன். அந்த வீட்டு மரணத்தைப் பார்த்து இல்லை. எனக்கு அது வந்தால் என்ன ஆகுமோ என்றுதான். நான் மரணத்துக்குத் தயாராயிருக்கிறேனா?’

வீரராகவன் யோசிக்க ஆரம்பித்தார்

’அறுபத்தாறு வயதாகி விட்டது. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு இருபது வருஷம். அதுவும் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். நான் தயார்…. இல்லை… இப்போது போய்விட விருப்பம் இல்லை. செய்ய வேண்டியது இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது. முதலில் மகன் திருமணம்.  அவனுக்கு அமெரிக்காவில் வேலை. ஆனால்  முப்பத்தைந்து வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமலிருக்கிறான். அது முடியவேண்டும். அப்புறம் பேரன், பேத்தி. அவர்களோடு போய் ஒரு ஆறு மாதம் தங்கிவிட்டு அனுபவித்துவிட்டு வர வேண்டும். அப்புறம் ஒரு முறை ரேணுகாவோடு காஷ்மீர் போய் ஒரு பத்து நாள் சுற்றிப் பார்த்து விட்டு வரவேண்டும். அப்புறம்….”

அதற்கு மேல் எதிர்காலத் திட்டம் எதுவும் போட மனது இணங்கவில்லை.

’எதிர்காலம் என்று ஒன்று உண்டா என்ன? இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றிற்கும் உடம்பு நலமாக இருக்க வேண்டும். மனது நிம்மதியாக இருக்க வேண்டும். இருக்குமா?’

அவசரமாக கட்டிலை விட்டு இறங்கி, அலமாரியைத் திறந்து தன் மெடிகல் ரிபோர்ட் ஃபைலை எடுத்து பக்கங்களைப் புரட்டினார்.

’ஆ…இதோ கடைசியாக ஏப்ரலில் எடுத்த சோதனை விவரங்கள். ரத்த அழுத்தம், 150/90.  அதிகம் என்று டாக்டர் அடியில் கோடிட்டிருக்கிறார். ஆனால் மாத்திரை விடாமல் சாப்பிடுகிறேன். பயமில்லை. கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகம். இனி எண்ணை பதார்த்தங்களை தொடவே கூடாது.  ஹோட்டல்? ம்ஹும், கூடவே கூடாது. வேறு பெரிய உபாதை இல்லை. ஆனால் நம் வீட்டிற்கு இரண்டு மாடி படியேறினாலே கொஞ்சம் மூச்சு வாங்குகிறதே? அப்புறம் ராத்திரி படுக்கையில் படுத்த பிறகு மார்பின் இடது மூலையில் லேசால வலிக்கிற மாதிரி இருக்கிறதே? ஒரு வேளை வாய்வுத் தொந்தரவோ? இல்லை, ஏதாவது வால்வ் தொந்தரவா? அடுத்த வாரமே டாக்டரிடம் போய் கேட்டு விட வேண்டும்’

வீரராகவன் எண்ண ஓட்டம் அவருக்கே கொஞ்சம் பயமாயிருந்தது. எண்ணத்தை திசை திருப்ப  அருகில் மேஜை மேலிருந்து “புதிய மலர்கள்” புத்தகத்தை எடுத்து நேற்று விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார். அவர் அதிர்ஷடம் அவர் படிக்க ஆரம்பித்த நாலாவது வரியிலேயே, கதையின் நாயகன் ராஜலிங்கம் இறந்து போனான். வெறுப்புடன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, சும்மா மேலே சுழலும் மின் விசிறியை பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தார்.  நேரம் மெதுவாக ஊர்ந்து சென்றது. மொபைலை கையில் எடுத்து வாட்ஸ் அப், முகநூல் என்று என்று ஏதோ மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர மனம் எங்கெல்லாமோ சுழன்று சுழன்று சென்று கொண்டிருந்தது.

’வாழ்க்கையின் முடிவு என்பதுதான் என்ன? உடலை விட்டு உயிர் பிரிந்து போவது மட்டும்தானா? உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாதாமே? அது எங்கே போகும்? எங்கே நிற்கும்? எங்கே வாழும்?’

’மருந்து பாட்டில் மேலே expiry தேதி எழுதி வைத்திருப்பது போல நம் உடம்பிலும் எங்காவது முடிவுத் தேதியை குறித்து வைத்திருந்தால் நல்லதுதானே? ஆனால்… அது நல்லதா? முடிவு தேதி தெரிந்துவிட்டால் அதை எதிர்பார்த்தே வாழும் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்க வேண்டும் இல்லையா? வேண்டாம். அந்தத் தேதி தெரியவே வேண்டாம். ரகசியமாகவே இருக்கட்டும்’

வீரராகவனின் சிந்தனைப் பந்து வெடித்து சிதறல்கள் எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தன.

மதியம் ஏதோ அரை வயிற்றுக்கு சாப்பிட்டுவிட்டு, படுத்துக் கொண்டார். மூளை அதிகம் வேலை செய்து களைத்துப் போயிருந்தது. வழக்கத்துக்கு மாறாக மாலை நான்கு மணி வரையில் எப்படித் தூங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை.

மாலையில் எழுந்து டீ குடித்துவிட்டு பால்கனியில் வந்து அமர்ந்த போது வெளியில் ஏதோ பெரிய கூச்சல் சப்தம் கேட்டது. ரேணுகா அவசரமாக வந்து பால்கனிக்கு வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, தலையைத் திருப்பி, “அவரு பையன் பெஹ்ரின்லேருந்து வந்துட்டார் போலிருக்கு. ஊர்வலம் கிளம்பி கிட்டு இருக்கு. வந்து பாருங்க” என்றாள்.

“இல்லை அதையெல்லாம் நான் பார்க்க வேண்டாம்.”

சற்றுப் பொறுத்து, “சரி… நமக்கு ஏதாவதுன்னா நம்ம ராஜேஷ்  அமெரிக்காவிலிருந்து கிளம்பி வர எவ்வளவு நேரமாகும் ரேணுகா?” என்றார்.

”குறைஞ்சது இருபத்து நாலு மணி ஆகும். ஓ.. அதான் இப்போ கவலையா?”

“இல்லை சும்மா கேட்டேன்”

ரேணுகாவுக்கு வீரராகவனின் மன உளைச்சல் நன்றாகப் புரிந்து போயிற்று.

“அதையெல்லாம் நினைச்சு கவலைப் பட்டுகிட்டு இருந்தா, உசிரோட இருக்கிற ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்க வேண்டியதுதான்”

’ரேணுகா சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனாலும், திடீரென்று நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரேணுகாவின் கதி?  ரேணுகாவுக்கு நல்லபடியாக ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும். பாங்க் டெபாசிட் நிறைய இருக்கிறது. எல்லாவற்றிலும் வாரிசு அவளைத்தான் போட்டிருக்கிறேன்.   குடும்பப் பென்ஷன், நான் வாங்குவதில் பாதியாவது வரும். பாங்க் வட்டி, பென்ஷன் இதுவே போதும்.’

’ஆனால்.. ஆனால் அவள் தனியே வாழ்வது எப்படி? போய் மகனோடு அமெரிக்காவில் வாழப் பிடிக்குமா அவளுக்கு? கேட்டு விட வேண்டும்’

சமையல் அறையில் இருந்த ரேணுகா அருகில் போய்,  “பேசாம நீயும் நானும் ஒரு சீனியர் சிடிஸன் ஹோம்லே போய் தங்கிடலாம்னு தோணுது. கோயம்புத்தூர்லே நிறைய இருக்காம். என்ன சொல்றே?”

“இப்போ ஏன் இந்தக் கேள்வி?”

“இல்லை…. நீயோ நானோ அமெரிக்காவுக்குப் போய் அவனோட இருக்கப் போறதில்லை. வயசாயிடுச்சுன்னா ஒருத்தரை ஒருத்தர் கவனிச்சுக்கிறதே கஷ்டமாயிடும். அதிலும் நாம இரண்டு பேர் ஒருத்தர் ஆயிட்டா இன்னும் கஷ்டம். அந்த மாதிரி ஹோமுக்கு போயிட்டா நமக்கு இப்போலேருந்தே பழகிப் போயிடும் இல்லையா?”

ரேணுகா அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.  கணவனின் எண்ண ஓட்டம் அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது.

“இங்கே பாருங்க! இப்போ உங்களுக்கு ஒண்ணும் வயசாயிடலை. ஆரோக்கியமாத்தான் இருக்கீங்க. எனக்கும் உடம்பிலே தெம்பிருக்கு. ராஜேஷ் கல்யாணம் முடிஞ்சு அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு அதைப் பத்தி யோசிக்கலாம். இப்போ வேண்டாம்”

வீரராகவன் மௌனமாக அங்கிருந்து வெளியேறினார். மாலையும் முன்னிரவும் ஏதோ நினைவுகளில் கடந்தன.

இரவு சாப்பிடும் போதும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. சாப்பிட்டு முடிந்து, ரேணுகா வழக்கம் போல் டி.வி.யில் நெடுந்தொடரில் ஆழ்ந்தாள். கதையில் மருமகள் மாமியாரின் தம்பியை குடும்பத்தோடு வேரறுப்பதாக முப்பத்து நாலாவது வாரத்தில் நாற்பதாவது தடவையாகச் சூளுரைத்தாள். வெறுத்துப் போய் அவள் டி.வி.யை அணைத்து விட்டு படுக்கையறைக்கு வந்த போது, தன் கணவன் ஏற்கனவே விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு, தானும் அருகில் படுத்துக் கொண்டாள். உடனே தூங்கியும் போனாள்.

இரவில் ஏதோ தூக்கம் கலைந்து பார்த்த போது, வீரராகவன் அருகில் இல்லை. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு, கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்த போது வீரராகவன் சோபாவில் அமர்ந்து ஏதோ பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார்.

”என்ன தூங்கலையா? நடு ராத்திரியிலே எழுந்து என்ன படிச்சுகிட்டு இருக்கீங்க?”

“உயில்”

“உயிலா?”

“ஆமாம். எப்பவோ எழுதி வைச்சேன். எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துகிட்டு இருக்கேன்”

ரேணுகாவுக்கு இப்போது உண்மையாகவே பயம் தொற்றிக் கொண்டது.

“ஏங்க….. என்ன ஆச்சு உங்களுக்கு? இப்போ இதுக்கு என்ன அவசரம், அவசியம்?”

“இல்லை… ஏதாவது ஆச்சுன்னா தேவைப்படுமே”

“யாருக்கு?’

“உனக்குத்தான்”

ரேணுகாவுக்கு எப்படி தன் கணவனைத் தேற்றுவது என்று புரியவில்லை.

“இதுக்கெல்லாம் இப்போ தேவைப்படாது. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாம உள்ளே வந்து படுங்க”

“இல்லை ரேணுகா இதை இன்னும் ரெஜிஸ்டர் பண்ணலை”

“அதையெல்லாம் காலையிலே பேசிக்கலாம். இப்போ எழுந்து வாங்க”

ரேணுகா அவர் கையைப் பிடித்து எழுப்பி, மெதுவாக அவரை நடத்தி, படுக்கை வரை கொண்டு வந்து படுக்க வைத்தாள். விளக்கை அணைத்தாள். சிறிது நேரத்தில் அவர் பலமாக மூச்சு விடும் சப்தம் கேட்டது. அவளுத்தான் தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் வீரராகவன் பத்து மணிக்குத்தான் எழுந்தார். காஃபி குடிக்கும் போது, அவர் எதிரே அமர்ந்து ரேணுகா, “நான் 7C, வீட்டு அம்மாகிட்டே விசாரிச்சேன். சுந்தரவதனத்துக்கு லாரி பிஸினெஸாம். கொரோனா சமயத்திலே வண்டியெல்லாம் ஓடாம ரொம்ப பெரிய நஷ்டமாம். அம்பது லட்சமாம். அதிலே ரொம்ப பெரிய கடனாம். அப்புறம் அவங்களுக்கு பொண்ணு ஒண்ணு இருக்காம். அதுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிகிட்டு இருந்தாங்களாம். ஆனா அது லண்டன்லே படிக்கும் போது வீட்டுக்குச் சொல்லாம ஒரு சைனாக்காரனை  கட்டிகிடுச்சாம். அதுலேருந்து அது பேசறதே இல்லையாம். அவர் அதிலேயே மனசு உடைஞ்சு போயிட்டாராம். ஒரு வருஷமாவே டிப்ரெஷன்லே இருந்தாராம். அதான் சட்டுன்னு ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிட்டாரான்னு அந்த அம்மா சொல்றாங்க”

“அதான்  நான் சொன்னேல்லே ரேணு… சட்டுன்னு செத்துப் போறதுக்கு ஏதாவது காரணம் இருக்கணும்ன்னு”

 “ஆமாங்க.. காரணம் இருக்குங்க. இந்தக் காரணமெல்லாம் உங்களுக்கு கிடையவே கிடையாது. ஆனா நீங்கதான் ஏதோ இன்னிக்கே செத்துப் போயிடற மாதிரி பயந்துகிட்டு இருந்தீங்க”

கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணிக்குப் பிறகு, கணவனின் முகத்தில் மலர்ச்சியைக் கண்டாள் ரேணுகா.

“ஆமாம் ரேணு! தப்புதான். நான் கலவரப்பட்டதோடு நிக்காம உன்னையும் சேர்த்து கலவரப்படுத்திட்டேன்”

‘சரி, காலையிலே மாதவன் ஃபோன் பண்றாரு. இன்னிக்கு உங்க ஃப்ரெண்ட் பாலச்சந்திரன் பிறந்த நாளாமே. அதுக்கு உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போறதா ப்ளானாம். ராத்திரி பார்ட்டி இருக்காம். நீங்க வரீங்களான்னு கேட்டாரு. நீங்களே ஃபோன் பண்ணி பேசுங்க”

வீரராகவன் மொபைலை எடுத்து டயல் செய்து, ”மாது! நீ ஃபோன் பண்ணினியாம். சாரி…நான் தூங்கிட்டேன்..… ஆ.. வரேன்.. நிச்சயமா வரேன். பார்ட்டிலே எல்லாம் உண்டுல்லே?”

கணவன் சந்தோஷமாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டே ரேணுகா மகிழ்ச்சியாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.  அவள் காலையில் அவரிடம் சொன்னதில் எவ்வளவு தூரம் உண்மை கலந்திருந்தது என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்.

 

 

 

திருகு வலி! – லக்ஷ்மி நாராயணன்

” ராகவா! நேத்து பெண் பார்க்கப் போயிருந்தியே. பெண் பிடிச்சிருக்கா? டெர்ம்ஸ், கண்டிஷன்ஸ் ஓ.கே.யா ?” உணவு இடைவேளையும்போது நண்பன் பாலா கேட்டான். அலுவலக கேண்டீனில் ஓரமாக எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.

” பிடிச்சிருக்கு ..ஆனா பிடிக்கல்லை !” என்று பட்டென்று பதில் சொன்ன ராகவனை
சற்று அசூயையுடன் ஏறிட்டான் பாலா. பிறகு, ” வரும், ஆனால் வராது ‘ ன்னு ஒரு சினிமாவுல வரும் வசனம் மாதிரி இருக்கு உன்னோட பதில். ” என்றான் கொஞ்சம்
கடுப்புடன்.

” யெஸ்…அதாவது என்னன்னா பெண்ணை எங்கப்பா அம்மாவுக்குப் பிடிச்சிருக்கு. எனக்குப் பிடிக்கல்லை.”

” உனக்குப் பிடிக்கல்லைன்னு உங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா ?”

“ இன்னும் நான் சொல்லல்லை . ரெண்டு நாள் கழிச்சு அபிப்ராயம் சொல்றதா பெண் வீட்டாரிடம் பேசியிருக்கோம். “

“ சரி, ஏன் பிடிக்கல்லை ; பெண் அழகா இல்லையா ?”

” சே சே..மாநிறமா இருந்தாலும் மூக்கும் முழியுமா நல்லாவே இருக்கா! ஹைட்டும் அஞ்சே கால் அடிதான்.”

” பெண்ணுக்குப் படிப்பு போதல்லியா ?”

” நீ வேற…எம்.ஏ. ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கா! காலேஜூல மெடல் கூட வாங்கியிருக்காளாம். “

” ஒருவேளை நடை உடை பாவனையில வித்தியாசம் ஏதாவது…ஐ மீன்..நான் கேட்குறது உனக்கு புரியும்னு நினைக்கிறேன். “

” நல்லாவே புரியுது. நீ நினைக்குற மாதிரி இல்ல. நளினமான பெண்மையுடன் கூடிய நடை ! கிளி கொஞ்சும் பேச்சு…அப்புறம் பாட்டுக்கூட பாடினா. குரல் அற்புதமா இருக்கு. “

” சரி. அப்புறம் ஏன் பிடிக்கல்லேங்குறே?”

” என்னவோத் தெரியல்லை…அவளை என் மனைவியா ஏத்துக்க மனசு ஒப்பமாட்டே ங்குறது பாலா !”

” ரெடிகுலஸ் ! முன்ன பின்ன அவளைப் பார்த்திருக்கியா?”

‘ இல்லை ‘ என தலையாட்டினான் ராகவன்.

” முதன் முதலா அவளைப் பார்க்குறே . எல்லாத்திலேயும் தகுதியா இருக்காள்னு வேற சொல்றே. அப்புறம் ஏன் பிடிக்காமல் போச்சு?”

மலங்க மலங்க சிறிது நேரம் விழித்தான். பிறகு ” எனக்கு சொல்லத் தெரியல்லடா.” என்றான்.

” ஓ.கே. உன்னோட விருப்பம்! நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல! ஆனால் நல்லா யோசிச்சு முடிவு எடு. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்ங்குற மாதிரி நடந்து கொள்ளாதே. அதுவும் ஜாதகம் பொருந்தியிருந்து பெண் அம்சமா இருக்கும் பட்சத்தில் பாஸிடிவான முடிவை எடுக்கறதுதான் உத்தமம் ! அதுக்கப்புறம் உன் இஷ்டம்!”

” அப்போ பெண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்றியா ?”

” இதோ பார் ராகவா ! நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல்ல. ஏன் மனசுக்கு பிடிக்கல்லேன்னு நல்லா திங்க் பண்ணு….உன் பெற்றோரை கலந்து ஆலோசி. அவங்க அறிவுரைபடி நடந்துக்க. “

‘சரி’ என தலையாட்டிவிட்டு பாலாவுடன் சென்றான் ராகவன். அன்று இரவு பூராகவும் குழப்பத்தில் இருந்தான். பெண்ணிடம் குறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சீர் சினத்திகள் அவர்கள் இஷ்டத்திற்கு விட்டாகி விட்டது. வரதட்சணையும் வேண்டாமெ ன்று சொல்லியாயிற்று. இப்படி எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போன பிறகு ஏன் மறுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் மறுபடியும் மனக் குரங்கு தாவியது.

மறுநாள் அலுவகம் வந்த ராகவன் முகம் தொங்கிப்போயிருந்தது. வழக்கமாக காணப்படும் சுறு சுறுப்பு இல்லை. எதையோப் பறிகொடுத்தவன் போல் காணப்பட்பான்.

” என்னப்பா டல்லடிக்குறே ! என்னாச்சு?” பாலா விசாரித்தான்.

” நேத்து நீ சொன்ன மாதிரி நான் நல்லா திங்க் பண்ணிப் பார்த்தேன். ஒரே குழப்பமாயிருந்தது. திடீர்னு ஒரு யோசனை தோணிச்சு. அந்த யோசனைபடி இன்னிக்கு காலையில் குளிச்சிட்டு பூஜையறையில சீட்டுக் குலுக்கி போட்டுப் பார்த்தேன்… “

” சீட்டுக் குலுக்கிப் போட்டயா ?” என கோபத்துடன் கேட்ட பாலா, “ என்ன வந்தது ?”

‘ நெகடிவ் ‘ என்பது போல் தன் உதட்டைப் பிதுக்கினான் ராகவன்.

ஒரு புழுவைப் பார்ப்பது போல் ராகவனை பார்த்த பாலா, ” சே ! உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா. எக்கேடாவது கெட்டுப் போ ” என வெறுப்புடன் வார்த்தைகளைக் கொட்டி விட்டு விடு விடு வென்று நடையைக் கட்டினான் .

‘ஸாரி பாலா ! இன்னிக்கு காலையில் பெண்ணோட அப்பா எங்கப்பாவுக்கு மொபைல் மூலம் தன் பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை, அதனால் வேற இடம்பார்க்கும்படி சொல்லிட்டாரு. நான் மனசுல நினைச்சிக்கிட்டிருந்ததை பெண் வாயைத் திறந்து சொல்லிட்டா. ஆனாலும் நறுக்குன்னு அவ நெகடிவ்வா சொன்னது மனசுக்கு கஷ்ட மாயிருக்கு. தனக்கு வந்தால்தான் தெரியும் தலை வலியும் திருகு வலியும்ங்குறத நல்லா புரிஞ்சுக்கிட்டேன். மற்றபடி சீட்டுக் குலுக்கிப் போட்டதாக நான் சொன்னது அப்பட்டமான பொய் நண்பா ! என்னை மன்னிச்சிடு. ‘ மனதில் வேதனை யுடன் நினைத்துக் கொண்டான் ராகவன்.
……………………………..

ஒரு ரோஜாப் பூவின் எட்டு இதழ்கள் – ரேவதி ராமச்சந்திரன்

 

HAPPY women's DAY MESSAGE CARD Template | PosterMyWall


“பெண்ணே நீ கலங்குவதற்காக பிறக்கவில்லை

கதிரவன் போல் ஒளி வீசுவதற்காக பிறந்துள்ளாய்!”

“நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பெண்ணின் பெருமையைப் பற்றி. எல்லா தொழில்களிலும் நேரம், காலம், லீவு எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்டிர்களுக்கு இவை ஒன்றும் தரப்படாவிட்டாலும் இவர்களை மதித்து ‘பெண்கள் தினம்’ என்று உலகம் பூராவும் கொண்டாடப்படுகிறது.

எல்லா நாட்களும் பெண்கள் தினம் ஆனாலும் இப்படி ‘பெண்கள் தினம்’ என்று ஒன்று கொண்டாடப்படுவதால் இந்த நன்னாளை முன்னிட்டு எட்டு பெண்களைப் பேட்டி கண்டு எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

 

பெண்களில் எந்த வித பாகுபாடும் இல்லாதெனினும் நமது மூன்று விதமான எல்லைப் படையில் இருக்கும் வீரர்களின் பெண்டிர்களின் சுமை சிறிது அதிகம் என்பதால் அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எண்ணியுள்ளேன்.

எல்லாப் பெண்களுக்கும் கடின காலம் இருக்கும் என்றாலும் இவர்களது நிலைமை ஒரு துளி அதிகம். கணவரது அருகாமை இல்லாதது என்பது ஒரு புறம் என்றால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடமாற்றம், அந்த சூழ்நிலைக்கேற்ப தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தயார்ப்படுத்துதல்,   மூலைக்கு மூலை செல்போன் வந்து விட்ட இந்தக் காலத்தில் கூட கணவர் சீனா எல்லையில் கடுங்குளிரில் ஃபோன் கூட செய்ய முடியாத நிலையில் இருத்தல் போன்றவை இவர்களுக்கே உரித்தானது.

ரோஜாப் பூவில் நிறைய இதழ்கள் இருந்தாலும் மார்ச் 8 ஐ முன்னிட்டு நான் எட்டு இதழ்களை இங்கு நோக்கலாம் என்று எண்ணுகிறேன். வாருங்கள் என்னுடன் நீங்களும் அதன் மணத்தை அனுபவிக்கலாம்.

மிருதுவான கூந்தல் கிடைக்கனுமா? ரோஜா இதழ் தெரபி யூஸ் பண்ணுங்க!! | rose petal  hair mask for super soft silky hair - Tamil BoldSky

 

முதல் இதழ் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றுள்ள அப்போலோ மருத்துவ மனையில் உணவியல் நிபுணராகவும், மூன்று இடங்களில் முதன்மை வகுப்பு ஆசிரியராகவும் பணி புரிந்துள்ள கர்நாடகாவைச் சார்ந்த நம்ரதா பட். 24 வருடங்கள் ‘ஆர்மி பெண்கள் நலக் குழு’வைத் திறம்பட நடத்தியுள்ளார். தற்போது பூனாவில் இருக்கும் இவர் மாற்றுத் திறனாளிகளுக்காக உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி கொடுக்கும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவரது கணவர் ஆர்மியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பதால் தனியாளாக எல்லாவற்றையும் சமாளிப்பதுடன் விசேஷங்களுக்கும் செல்ல வேண்டி வருகிறது. அப்படி ஒரு சமயம் ஒன்றரை வயதுக் குழந்தையுடன்  பரோடாவிலிருந்து மங்களூர் செல்லும் போது இரவில் மனம் ஏதோ கலக்க எட்டிப் பார்த்தால் ஸூரனுர் டொமிவில்லி என்ற ஓர் இடத்தில் இரயில் வண்டி நின்று விட்டது. கடுங்குளிர், இருட்டு. வண்டி எப்போது கிளம்பும் என்று தெரியாததால் இதற்கு மேலும் வண்டியில் உட்கார்ந்து இருப்பது ஊசிதமல்ல என்று இறங்கி, பஸ்ஸில் சென்றால் விசேஷத்திற்கு நேரம் ஆகும், மேலும் இந்த இருட்டில் சிறு குழந்தையுடன் எத்தனை நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்ய முடியும் என்று யோசித்து ஒரு வாடகைக்  காரைப் பிடித்துள்ளார். அதுவும் கொஞ்சம் அபாயகரமானதுதான். தெரியாத வண்டியில் ஏறி அவரிடம் ஃபோன் செய்ய வேண்டும் என்று கூறியதற்கு, சிறிது பொறுங்கள் பத்திரமான பூத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். பயந்து கொண்டே இருந்தவுடன் தனக்குத் தெரிந்த பூத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு பேசியபோது அவர்கள் திட்ட ஆரம்பித்தவுடன் பூத்தின் உரிமையாளர் ஃபோனை வாங்கி ‘நீங்கள் கவலைப் பட வேண்டாம், எனக்குத் தெரிந்த நல்ல ஓட்டுனர்தான்’ என்று இரண்டு பக்கமும் சமாதானப்படுத்தினார். வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி ‘ஏன் பஸ்ஸில் வராமல் வாடகைக் காரில் வந்தாய்?’ இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! பத்திரமாக வந்து சேர்ந்ததிற்கு ஒரு பாராட்டு வேண்டாம், ஆறுதல் கூட இல்லையே! பள்ளியில் சிறந்த ஓட்டப்பந்தைய வீரர். வரைதல், மெழுகுவர்த்தி செய்தல், கேக் செய்தல் மற்றும் தோட்டத்தைப் பராமரித்தல் என்று பல கலை வித்தகர். தத்துவம், ஊட்டச்சத்து சம்பந்தமான புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் இவர் தற்போது படித்து முடித்துள்ள ட்டுயுடில் பதிப்பகத்தின் பிரான்செசகோ மிரல்ஸ் மற்றும் ஹேக்டர் அவர்களால் எழுதியுள்ள ‘இகக்காய் ஜர்னி’ மிகவும் பிடித்தமான புத்தகம் என்கிறார். இது வாழ்க்கையில் சந்தோஷத்தை அடைவதைப் பற்றி விவரித்துள்ளது என்று கூறும் இவர் இது வாழ்க்கையை முழுமையாக்குவதையும், நீண்ட வாழ்விற்கு ஓர் அர்த்தத்தை உண்டாக்குவதையும் உணர்த்துகிறது எனவும், வாழ்வின் இரகசியத்தைத் தெரியப்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.

 

இரண்டாவது இதழ் பஞ்சாப்பைச் சார்ந்த பிஎஸ்சி பிஎட் படித்து பள்ளியில் ஆசிரியராக வேலை செய்த நந்தினி டாண்ட். கணவர் லேயில் இருந்த போது பத்தாவது, எட்டாவது படிக்கும் தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு கொரோனா காலத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்ட மாமியாருக்குத் தனி அறையில் மருத்துவ ஏற்பாடுகள் செய்து, மூக்கின் வழியாக உணவு கொடுத்து காப்பாற்றியதில், எப்போதும் தளர்ந்து போகக் கூடாது, கடமையைச் செய்ய வேண்டும், எங்கே மனமோ அங்கே மார்க்கமுண்டு என்று அறிந்து கொண்டேன் என்கிறார். தற்போது சண்டிகரில் இருக்கும் இவருக்கு டான்ஸில் மிகவும் விருப்பமுண்டு, ஆகவே முடிந்தவரை டான்ஸ் வகுப்புகளுக்குச் செல்வார். மனத்திற்கு இரம்யமான, இலகுவான புத்தகங்களைப் படிக்கும் இவருக்கு மிகவும் பிடித்த புத்தகம் பெங்குவின் பதிப்பகத்தாரின் டிவிங்கிள் கன்னாவால் எழுதப்பட்ட ‘மிஸ்ஸெஸ் ஃபன்னி போன்ஸ்’. மிக பணக்காரரும், பிராபல்யமானவருமான இந்த ஆசிரியர் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகளையும், குழந்தைகள் செய்யும் அட்டகாசங்களையும், வாழ்க்கையின் பலவிதமான காலங்களையும் ஹாஸ்யமாகச் சொல்லி நம்மை மகிழ்விப்பதால் இந்தப் புத்தகத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரசிக்கலாம் என்று வாழ்வை எளிதாக்குகிறார்.

 

மூன்றாவது இதழ் ஜெய்ப்பூரைச் சேர்ந்த லைப் சைன்ஸில் எம்எஸ்ஸி யும் சைகாலாஜியில் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ள  தருணா சிங். பிள்ளை பத்து வயதாகும்போது விமானப் படையில் பணிபுரிந்து கொண்டிருந்த கணவர் ஒரு விபத்தில் படுகாயமடைந்து விட இருவரையும் காப்பாற்றப் போராடினார். தற்போது ஜோத்புரில் இருக்கும் இவரது அரிய பண்பு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்குப் படிப்பிற்காக பண உதவி செய்வதும், அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதும், பெண் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதும், போலியோ தாக்கப்பட்டவர்களுக்கு ஆபரேஷனுக்கு பண உதவி செய்வதும் ஆகும். உலகம் சுற்றும் வாலிபியான இவர் 28 நாடுகளுக்குச் சென்றுள்ளார். கடினமான மலைகளில் ஏறுவதில் அதிக விருப்பம். அதிகப் புத்தகங்களைப் படிக்கும் இவருக்கு பீகான் பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ‘விக்டோர் இ பிரங்கிள் அவர்களுடைய சுயசரிதை’ மிகவும் பிடித்துள்ளது என்று கூறுகிறார். இது வாழ்க்கையின் நேர்மறை எண்ணங்களை தோற்றுவிப்பதாகவும், எந்த நிலைமையிலும் ஒருவருடைய நம்பிக்கையை மற்ற எவரும் தகர்க்க முடியாது எனக் கூறுவதாகவும், போராடுவதே வாழ்க்கைப் படகை ஓட்டும் என்று உணர வைப்பதாகவும் எண்ணுகிறார்.

 

நான்காவது இதழ் பஞ்சாப்பைச் சார்ந்த ஆங்கிலத்திலும், அரசியல் அறிவியலிலும் எம்ஏ பட்டம் பெற்ற பூஜா சேச்சி. பத்தாம் வகுப்பு வரை உள்ள சலுகை பெற்ற மாணவர்களுக்கு கோச்சிங் வகுப்பு எடுப்பதும், உடற்பயிற்சி வகுப்பு நடத்துவதும், பேட்மிட்டன் விளையாடுவதும் இவருடைய முக்கியமான அம்சங்களாகும். ஆர்மி வாழ்க்கையில் 1998 இல் முதன் முதலாக அடி எடுத்து வைத்தவுடன் மே, 1999 இல் கார்கில் போர் ஆரம்பமானது. சாதரணமானச் சூழ்நிலையில் வளர்ந்த இவருக்கு இந்தப் போர் செய்தியும், ஆர்மி சூழ்நிலையும் சிறிது பதட்டத்தைக் கொடுத்தது. மே 8 ந் தேதி பிறந்த குழந்தையை விட்டு விட்டு 28 ந் தேதி கணவர் கார்கில் போருக்காக எல்லைக்குச் சென்று விட, தினந்தோறும் டிவியில் வீர மரணம் எய்திவர்களின் பெயர்களைப் பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாராம். அதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செறியும் இவர் ஆனால் அந்த நேரத்தில் இறை நம்பிக்கை ஒன்று தான் தனக்கு எல்லா பலத்தையும், திடத்தையும் கொடுத்தது என்கிறார். அந்தக் காலம் தான் தனக்கு இப்போதிருக்கும் உறுதி மனப்பான்மைக்குக் காரணம் என்கிறார். தற்போது சண்டிகரில் இருக்கும் இவர் சைமன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ராண்டா பைய்ர்னே எழுதிய ‘பகவத் கீதா மற்றும் அதன் பவர்’ என்ற புத்தகம் தமக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் என்று கூறுகிறார். இது நாம் விரும்பும், எதிர்பார்க்கும் எல்லாம் நம்மால் அடைய முடியும் என்றும், நல்ல செயல்களைச் செய்தால் அது நம் மீதே  பிரதிபலிக்கும் என்றும், நல்ல வாழ்க்கைக்குத் தேவையான நேர்மறை எண்ணங்களும், அன்பும் எல்லோர் மீதும் பொழிய வைக்கும் என்றும் உணர்த்துவதாக கூறுகிறார். நல்ல செயல்களைச் செய்து விட்டு பலனை கடவுளிடம் விட வேண்டும் என்று சுட்டுகிறது இப்புத்தகம் என்றும், இது ஒருவரது வாழ்க்கை முறையை மேலும் செம்மைப்படுத்தும், அழகாக்கும் என்றும், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புது எண்ணங்கள் ஏற்படும் என்றும், அறிவு சம்பந்தமான இந்தப் புத்தகம் நல்ல சிந்தனையைத் தூண்டும் என்றும், வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது இதைப் படிக்க வேண்டும் என்றும்  பரிந்துரைக்கிறார்.

ஐந்தாவது இதழ் டெல்லியைச் சேர்ந்த ஆங்கில இலக்கியத்தில் எம்ஏ பட்டம் பெற்றுள்ள, வர்ணம் தீட்டுவது, துணியில் வேலைப்பாடு, தோட்டம் பராமரித்தல், தையல், கவிதை புனைவது இவைகளில் ஆர்வமுள்ள தற்போது பூனாவில் இருக்கும் பூர்வா பாலி டான்டன். இவருடைய தந்தை ஆர்மியில் இருந்ததால் சிறிய வயதிலேயே நிறைய இடங்களைப் பார்த்துள்ளார். பெண்ணிற்கு 3 1/2 வயதாகும்போது, கணவர் வெளி இடத்திற்கு மாறுதல் ஆன போது ஒரு விபத்தில் அடிபட்ட கனுக்காலில் ஆபரேஷன் நடந்ததால் வாக்கரை வைத்துக் கொண்டு நடந்து, கார் ஓட்டி பெண்ணை ஸ்கூலில் கொண்டு விட்டு அழைத்து வந்து மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தூண்டுகோலாக அமைந்தது என்று  திட மனதுடன் கூறுகிறார். புத்தகமும் கையுமாக இருக்கும் இவரைக் கவர்ந்த புத்தகம் அநேகம் இருந்தாலும் டபுள்டே பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சித்ரா பானர்ஜீ திவாகருனி அவர்களால் புனையப்பட்ட ‘தி பேலஸ் ஆப் இல்லூஷன்ஸ்’ மிகவும் பிடித்த புத்தகம் என்று கூறும் இவர் மேலும் திரௌபதியின் கண்களால் பார்க்கப்பட்ட மகாபாரதம் இது என்றும் போருக்கான சூழ்நிலை எப்படிப்பட்ட கடினமான சூழலையும் எதிர் கொள்ள ஆற்றலைத் தருவதாகவும், இந்த நாட்டையும், மனித உறவுகளையும் மதித்துப் பார்க்கும் கண்ணோட்டத்தைத் தருகிறது என்றும் மனந்திறந்து கூறுகிறார்.

ஆறாவது இதழ் தற்போது ராஞ்சியில் இருக்கும் கணக்கிலும், கல்வியிலும் எம்ஏ பட்டம் பெற்று கல்வியில் ஆராய்ச்சிப்படிப்பு மேற்கொண்டிருக்கும் டெஹ்ராடூன், உத்தரகாண்டைச் சேர்ந்த ஜோதி ஜோஷி டட். இப்போதும் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு கணிதம் இணையதள வகுப்பு நடத்துகிறார். கணவர் பார்டருக்குச் சென்றுவிட 4 வயது குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு விடுதியில் தங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டார். புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பௌலோ கோயில்கோ எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஹார்பர் டார்ச் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘தி ஆல்கெமிஸ்ட்’ புத்தகத்தை மிகவும் விரும்புகிறார். இந்தப் புத்தகம் ஒருவரைத் தன்னுள் பார்க்குமாறு செய்கிறது என்றும் அதனால் இது சுய உதவிகரமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

 

 

ஏழாவது  இதழ் மருந்தகம் படிப்பு படித்த பெல்காம், கர்நாடகாவைச் சேர்ந்த மண்டல ஆர்ட், பேப்பர் அலங்காரத்தில் விருப்பமுள்ள தற்போது பூனாவில் இருக்கும் கீதா சம்பத்குமார் பாடில். 2013 இல் ஸ்ரீநகரிலிருந்து 30 கிமீ தூரத்திருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த போது 5 மாத கர்ப்பிணியான இவர் சோதனைக்காக மருத்துவமனை செல்ல வேண்டி வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அஃப் சல் குருவைச் சேர்ந்தவர்கள் ஆர்மி வண்டி மீது கல்லடித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் பகலில் எந்த வண்டியும் போக முடியாது. இரவிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு 500 மீட்டருக்கும் நின்று நின்றுதான் வண்டிகள் போகும். கேட்கப்படும் துப்பாக்கிச் சத்தம் அருகில் இல்லை என்று சொன்னாலும் எங்கே துப்பாக்கிகுண்டு வயற்றில் விழுந்து விடுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டும், இந்தச் சூழ்நிலையில் வயிற்றில் வளரும் புது உயிரை நினைத்து அழுது கொண்டும் 30 கிமீ தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடந்து காலை 6 மணிக்கு மருத்துவமனைச் சென்று அடைந்தார்கள். அப்போது வாழ்க்கை என்பது எப்படி நிலையில்லாதது என்று உணர்ந்ததாகவும், எப்போதும் அந்த நாட்களை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும், அதை இப்போது நினைத்தாலும் பயமாகவும், ஜிப்சியில் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டே எவ்வாறு அதனை எதிர்கொண்டேன் என்று ஆச்சர்யமாக இருப்பதாகவும் சொல்கிறார். இதுதான் ஆர்மீ வாழ்க்கை. ‘க்ருஹ ஷோபா’ என்ற கன்னட பத்திரிகையை விரும்பிப் படிக்கும் இவர் பிரபாத் பிரகாஷன் பதிப்பகத்தின் ஹிந்தியில் முகேஷ் நாடன் எழுதியுள்ள ‘ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கைக் கதைகளை’ மிகவும் ஆழ்ந்து படிப்பாராம். வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக இருக்கும் இந்தப் புத்தகம் வாழ்க்கையின் நடைமுறை வழிகாட்டியாக இருக்கிறது என்று மனந்திறந்து கூறுகிறார்.

எட்டாவது இதழ் எம்ஏ பிஎட் பட்டம் பெற்று வரைவதிலும், தோட்ட வேலையிலும் ஆர்வமுள்ள ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவைச் சேர்ந்த தற்போது பூனாவில் வசிக்கும் தீக்க்ஷா பதக். கணவரின் மாறுதலால் குழந்தையையும் கவனித்துக் கொண்டு வேலைக்குச் செல்ல முடியாததால் தனது விருப்பமான வேலையை விட வேண்டி வந்துள்ளது என்று கூறும் இவர் இதற்காக பொறுமையைக் கடைப்பிடித்தும், வேறு அலுவல்களில் தம் மனத்தைச் செலுத்தியும் இந்தக் காலக் கட்டத்தை கடந்துள்ளதாகக் கூறுகிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் எம்ஏ படித்துக் கொண்டிருந்த போது ஒரு பாடம் பெண்ணியத்தைப் பற்றியது. அப்போது அவருடைய ஆசிரியர் பரிந்துரைத்த பெங்குவின் பதிப்பகத்தின் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட ‘லஜ்ஜா’ என்கிற புத்தகம் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளது என்கிறார். இது பாப்ரி மஸ்ஜித்தில் நடந்த கலவரங்களைப் பற்றிய நெடுங்கதையாகும். பாமர மக்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி இதன் ஆசிரியர் ‘மதத்தின் மற்றொரு பெயர் மனிதத்தன்மை’ என்று எடுத்துக்காட்டுவதால் தன்னை இது வெகுவாக ஈர்த்துள்ளது என்கிறார்.

 

இந்த எட்டு இதழ்கள்தானா என்றால் இல்லை கானகத்தில் நான் தேடி எடுத்த ஒரு பூவின் சில இதழ்கள் இவை. எட்டு இதழ்கள் தனித்தனியாக இருப்பதில்லை. அவை ஒன்று சேர்ந்து ஒரு ரோஜாவாகிறது. பல ரோஜாக்கள் சேர்ந்த ஆரம் பகவானுக்குப் போடப்படும் மாலை ஆகிறது. எடுத்தவை இவை. இவைத் தவிர மாணிக்கங்கள், வைடூரியங்கள் என்று பலவும் உள்ளன. அதிலும் நமது எல்லையைக் காக்கும் வீரர்களின் துணைவிமார்கள் எந்த ஒரு உதவியும் இல்லாமல், குளிரிலும் பனியிலும் தனியாகப் போராடி கணவரது சுமையைத் தன் தோளில் தாங்குவது போற்றற்குரியது. ‘மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டா” என்ற உலக நீதி படி ‘நான் மறந்தாலும் எனை தானே நீ ஆள்கிறாய், நீ மறைந்தாலும் எனில்தானே நீ வாழ்கிறாய்’ என்பது சத்ய வாக்கு. “விடிந்து வரும் உலகத்துக்கே நீ ஒளி விளக்கடி, ஆணும் பெண்ணும் சமம்தான் இதனை அறிந்து கொள்ளடி, தான் யார் என்பதை உணர்ந்து கொண்டால் உலகம் உனதடி, பெண்ணே உணர்ந்து கொள்ளடி” என்று ஒரு கவி பாடிய பாட்டு எவ்வளவு பொருத்தம்! பல்வேறு தேசம், நாடு, மதம், கலாச்சாரம் இவைகளைத் தாண்டி இவர்கள் எல்லோரும் ஒரே மனித ஜாதி என்ற அடிப்படையில் மனிதத்தன்மையின் புனிதத்தைக் காப்பாற்றும் பெண்ணினம். இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் நாம் தலைவணங்கிப் பாராட்டுகின்றோம். இவர்கள் பல்வேறு இடங்களில் பரவி இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் மனித நேயத்திற்கும் அதனை எடுத்துரைக்கும் நூல்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம். வாழிய பாரத நம் நாடு! வந்தே மாதரம்! பாரதி சொன்ன மாதிரி “தையலை உயர்வு செய்ய வேண்டும். “போற்றி போற்றி பல்லாயிரம் போற்றி”! “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று பாரதி அவர்களைக் கொண்டாடுகிறார்.

 

 

 

.

 

 

 

ஆட்டுப்பசி – எஸ் எல் நாணு

 

பல வருடக் கனவு..

Baby goat fence hi-res stock photography and images - Alamy

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும். அது இப்போதுதான் பலித்தது.

கொஞ்சம் தொலைவுதான்.. சோழிங்கநல்லூரின் அந்தப்புரத்தில் பல சந்துகள் கடந்து அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஓர் அத்வானத்தில் நிலம் வாங்கத்தான் என் பொருளாதார நிலமை ஒத்துழைத்தது. அதில் எண்ணூறு சதுரடியில் வீடு. வீட்டைச் சுற்றி நான்கு பக்கங்களும் முள் வேலி.

தனி வீடு வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதற்கு முக்கிய காரணமே சிறுவயதிலிருந்தே செடிகள் மீதான எனக்கிருக்கும் காதல். அதற்கு முக்கிய காரணம் என் பாட்டி சிவகாமுதான். பள்ளி விடுமுறை நாட்களில் நான் கிராமத்துக்குப் போகும்போதெல்லாம் பாட்டி செடிகளுடன் பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்,

“நீ பயாலஜி பாடத்துல படிப்பே பாரு.. செடிகளுக்கும் உசிர் உண்டு. மனுஷங்க கூட பேசற மாதிரி செடிங்ககூடவும் பேசணும். அப்பத்தான் அதுங்களுக்கும் நம்ம கூட ஒரு பிணைப்பு ஏற்பட்டு இன்னும் நல்லா வளரும்”

பாட்டி ஒவ்வொரு செடியுடன் பேசும் அழகே தனி. அதுவும் ரோஜா செடியுடன் ஒரு மாதிரி பேசுவாள். முல்லை செடியுடன் வேறு மாதிரி பேசுவாள். அவரைக் கொடியுடன் குரலே மாறிவிடும். இப்போதெல்லாம் சொல்கிறார்களே வாய்ஸ் மாடுலேஷன்.. பாட்டியின் குரலில் அனாயாசமாக அது வெளிப்படும்.

செடிகளின் மீது பாட்டிக்கு இருக்கும் காதலைப் பார்த்துப் பார்த்து என் மனதிலும் அது பதிந்து விட்டது. வீட்டுக்கு முன்னால் ஒரு தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் விஸ்வருபம் எடுத்து நின்றது.

”காணி நிலம் வேண்டும்” என்று பாரதி பராசக்தியை வேண்டியது போல் என் மனதும் வேண்டியது.

ஆனால் சென்னையில் நாங்கள் முதலில் குடியிருந்த வீட்டில் வாசல் படியை விட்டு இறங்கினால் தெரு. மற்ற மூன்று பக்கங்களிலும் ஒரு அங்குலம் இடைவெளி கூட இல்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் தீப்பெட்டியளவு வீடுகள். இதில் தோட்டத்தைப் பற்றி நினைக்க முடியுமா? சில வருடங்களுக்குப் பிறகு அப்பா வாங்கின பலமாடி குடியிருப்புக்கு மாறினோம். அங்கும் தோட்டம் அமைக்க வாய்ப்பே இருக்கவில்லை.

ஆனால் பத்திரிகையிலோ டிவியிலோ தோட்டத்தைப் பார்த்தால் உடனே மனம் ஏக்கத்துக்குத் தாவி விடும்.

இத்தனை வருடங்கள் காத்திருந்து.. எனக்கு திருமணமாகி.. மத்திய அரசு வேலையில் இருக்கும் என் சம்பளத்தையும் பேங்கில் பணிபுரியும் என் மனைவியின் சம்பளத்தையும் சேர்த்து பட்ஜெட் போட்டு இதோ இந்த தனி வீட்டைக் கட்டியாகிவிட்டது.

வீட்டுக்கு முன்னால் பதினஞ்சுக்கு பத்து இடத்தைக் காலியாக வைத்திருந்தேன்.

“ஏன் சார் இவ்வளவு இடத்தை வேஸ்ட் பண்ணறீங்க? உங்க பட்ஜெட்குள்ளயே இன்னொரு ரூமோ சிட்-அவுட்டோ எழுப்பிரலாமே”

நான் மறுத்துவிட்டேன்.

சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் இடது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் வந்தால் அங்கே ஒரு நர்சரி இருந்தது.

முதல் கட்டமாக துளசி, ரோஜா, எலுமிச்சை செடிகளுக்கான கன்றுகளை வாங்கிக்கொண்டேன்.

மறுநாள் சீக்கிரமே எழுந்து மம்முட்டியுடன் காரியத்தில் இறங்கினேன்.

ஒரு மணி நேரத்துக்குள் இடம் பார்த்து பள்ளம் தோண்டி மூன்று கன்றுகளையும் பிரதிஷ்டை செய்தாகிவிட்டது.

என் நீண்டநாள் கனவு..

திருப்தியுடன் பார்த்தேன்.

என்னுடைய திருப்தியைப் பார்த்து என் மனைவிக்கும் சந்தோஷம். உடனே மொபைலில் மூலக் கன்றுகளுடன் என்னை ஃபோட்டோ எடுத்தாள்.

அன்று முழுவதும் சந்தோஷமாக இருந்தது. மாலையில் வழக்கம்போல் மனைவியையும் அழைத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து திரும்பியவனுக்கு அதிர்ச்சி.

மூன்று கன்றுகளையும் காணும்..

சுற்று முற்றும் பார்த்தேன்.. சுவடே தெரியவில்லை.

நெருங்கிப்போய் பார்த்ததில் யாரோ பலமாக வேரோடு பிடுங்கியிருப்பது தெரிந்தது. யாராக இருக்கும்?

என் முகம் வாடியிருப்பதைக் கண்டு என் மனைவி..

“யாராவது பசங்க விளையாட்டுத்தனமா பண்ணியிருப்பாங்க.. விடுங்க.. நாளைக்கு வேற வாங்கி நட்டாப் போச்சு”

மறுநாளே மறுபடியும் மூன்று கன்றுகளை வாங்கி வந்து நட்டேன்..

ஆனால் மீண்டும் மாலையில் வரும்போது அவை காணாமல் போயிருந்தன..

என்னவென்று புரியாமல் கன்றுகள் நட்ட இடத்தையே வெரித்துக் கொண்டிருந்தேன்.

அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் வம்பு பேசும் ஆவலோடு..

“என்ன சார்..”

யாரிடமாவது சொல்ல மாட்டோமா என்ற ஆதங்கத்தில் கொட்டினேன்..

அவர் பொறுமையாக கேட்ட பிறகு..

“அதுவா?.. ஆடு சார்”

“ஆடா?”

“ஆமா சார்.. இந்த ஏரியாவுல உங்க வீடு இருக்கிற இந்த இடத்துல மட்டும் தான் பச்சைப் புல்லு இருக்கும். முன்னால இங்க சுத்தி ஒரு ரசாயன ஃபேக்டரி இருந்தது. ஜனங்க எதிர்க்கவே அதை இழுத்து மூடி கட்டிடத்தையே இடிச்சிட்டாங்க.. சுத்தி எல்லா இடத்துலயும் இன்னமும் சிமெண்டும் கான்க்ரீட்டும் கொஞ்சம் ரசாயனமும் இறைஞ்சு பூமி வரண்டுதான் இருக்கும். அதனால இங்க சுத்திட்டிருக்கிற எல்லா ஆடுகளும் உங்க இடத்துலதான் மேய வரும். வீடு கட்டும்போது கூடப் பார்த்திருப்பீங்களே.. அதே பழக்கத்துலதான் இன்னமும் இங்க மேஞ்சிட்டிருக்கு”

அட ஆமாம்.. வீடு கட்டுமானத்தின் போது பார்வையிட வந்தபோதெல்லாம் இங்கே சில ஆடுகள் மேய்வதைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

“”ஒண்ணுமில்லை சார்.. உங்க வேலியைக் கொஞ்சம் பலப் படுத்துங்க. கம்பிலாம் வேணாம். கொஞ்சம் கயிறு வாங்கி அதிக இண்டு விழாம கட்டிருங்க. அப்ப ஆடு உள்ள வர முடியாது. உங்க செடியும் தப்பிச்சுரும்”

உடனே செயலில் இறங்கினேன். கொஞ்சம் தடிமனான சணல் கயிறு வாங்கி வந்து எவ்வளவு நெருக்கமாகக் கட்ட முடியுமோ அவ்வளவு நெருக்கமாக நான்கு பக்க வேலியிலும் கட்டினேன். சுற்றிப் பார்த்ததில் திருப்தியாக இருந்தது.

மீண்டும் துளசி, ரோஜா, எலுமிச்சை கன்றுகள் நடப்பட்டன.

அலுவலகம் கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்தேன். வேலி திடகாத்திரமாகத்தான் இருந்தது.

நிம்மதியுடன் கிளம்பினேன்.

மாலையில் வந்து பார்த்தவனுக்கு மீண்டும் அதிர்ச்சி.

கன்றுகளைக் காணவில்லை.

சோதித்துப் பார்த்ததில் வேலியின் ஒரு மூலையில் சணல் கயிறு சின்னாபின்னமாகியிருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தேன்.

“இதப்பாருங்க.. இதெல்லாம் சரிப்பட்டு வராது. செலவோட செலவா வீட்டை சுத்தி காம்பௌண்ட் சுவர் எழுப்பிரலாம்.”

மனைவி சொன்னதும்..

“ஆனா.. அதுக்குப் பணம்..?” 

“எங்க பேங்க்குல தானே ஹவுசிங்-லோன் வாங்கியிருக்கோம். கூட கொஞ்சம் லோன்.. பிரச்சனையிருக்காது”

இஞ்சினியரைக் கூப்பிடவில்லை. அவர் செலவை இழுத்து விடுவார். மேஸ்த்ரியைக் கூப்பிட்டு வேலையை ஒப்படைத்தேன். பத்து நாட்களில் கனகச்சிதமாக காம்பௌண்ட் சுவர் எழும்பி சுண்ணாம்பு அடித்து தயாராகிவிட்டது.

ஒரு சின்ன பொந்து கூட இல்லாமல் பார்த்துக்கொண்டேன். வாசல் கேட்டிலும் டின் ஷீட் அடித்து மறைத்து விட்டேன்.

மீண்டும் மீண்டும் துளசி, ரோஜா, எலுமிச்சை கன்றுகளை வாங்குவதைப் பார்த்து அந்த நர்சரிகாரருக்கு சந்தேகம்..

“ஒருவேளை இவன் நம்மகிட்ட வாங்கி அதிக விலைக்கு வெளில விக்கறானோ?”

நான் விவரம் சொன்னவுடன்..

“எந்த ஏரியா?”

சொன்னேன்.

“அப்ப சரி.. ஆடுங்கதான்.. சுவரு கட்டிட்டீங்கல்ல? இனிமே தொல்லை இருக்காது”

இந்தமுறை துளசி, ரோஜா, எலுமிச்சையோடு ரொம்பவே துணிச்சலுடன் அரளி, சங்கு புஷ்பம், நந்தியாவட்டை ஆகிய கன்றுகளையும் வாங்கியதில் நர்சரிகாரருக்கு ரொம்பவே திருப்தி. வாழை, மாங்கன்று அடுத்த முறை வாங்குவதாகச் சொன்னவுடன் ரொம்பவே சந்தோஷமாகிவிட்டார்.

எல்லா கன்றுகளுமே தோட்டத்தில் சமர்த்தாக அமர்ந்து விட்டன. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அந்தப் பச்சைத் தளிர்கள் காற்றில் ஒய்யாரமாக ஆடுவதைப் பார்க்கவே பரவசமாக இருந்தது..

மறுநாள் விடுமுறை என்பதால் அன்று இரவு ஓடிடியில் “அயலான்” பார்த்துவிட்டு படுக்கப் போக இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. விளைவு மறுநாள் ஒன்பது மணிக்குத்தான் கண் விழித்தேன்.

நிதானமாக பல் விளக்கி, சூடான காப்பியை உறிஞ்சியபடி மொபைலில் வாட்ஸ்-ஏப்பை அலசிக் கொண்டிருக்கும்போது சட்டென்று கன்றுகளின் நினைவு வந்தது.

உடனே எழுந்து வாசலுக்கு வந்தேன்.

கன்றுகள் என்னைப் பார்த்து முகமலர்ந்து சிரித்தன.

“குட்மார்னிங்”

அருகில் சென்று மெதுவாகத் தடவிக் கொடுத்தேன்.

“என்ன செட்டில் ஆயிட்டீங்களா?”

பாட்டியின் ஞாபகத்தில் பாசத்தோடு கேட்டேன்.

“மே.. மே..”

மதிற்சுவருக்கு பின்னாலிருந்து ஆடுகளின் குரல்.

என் மனதில் வெற்றி மிதப்பு.. உதட்டில் ஆணவப் புன்னகை..

அலட்சியத்தோடு மதிற்சுவருக்கு மேல் எட்டிப் பார்த்தேன்.

ஆடுகளின் பசி கலந்த ஏக்கப் பார்வையை சந்திக்க முடியாமல் மனம் கனத்தது.

 

 

 

 

 

 

 

நடுப்பக்கம் – திருவாரூர்- வீதியுலா- சந்திரமோகன்

          La Grande Voiture De Temple Devant Le Temple Thyagarajar De Sri De Thiruvarur Image éditorial - Image du fleuri, découpé: 119572395திருவாரூர் தியாகராஜர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியாதிருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் - பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புது கட்டுப்பாடு | Thiruvarur Thiagarajar Temple Azhi Therottam - New Control by Corona ...
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் மே 4ஆம் தேதி ஆழித்தேரோட்டம் | Thiruvarur Sri Thiyagarajar temple Panguni festival 2020 - Tamil Oneindia
திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள திருவாரூர் கிளம்பிக் கொண்டிருந்தேன். அச்சமயம் பார்த்துதானா அந்த நண்பர் வரவேண்டும். வந்தவர் “என்ன திருவாரூரா! தியாக ராசரை தரிசித்து வாருங்கள்” என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் “ திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி” எனக் கூறி வைத்தார். நாம் திருவாரூரில் பிறக்கவில்லை, காசி போகவே இல்லை  அப்ப முக்தியே கிடையாதா என்ற கவலை.

நல்ல வேளை உடன் இருந்தவர் ‘ தில்லையை காண முக்தி திருவண்ணாமலையை நினைக்க முக்தி’ என்றதோடு அல்லாது திருவெண்காடு தலத்திற்கு இந்த நான்கு சக்தியும் உண்டு என முடித்தவுடன்தான் முக்தி பெற்ற நிம்மதி. நினைப்பதற்கென்ன சிரமம். தினசரி அண்ணாமலையாரை நினைத்துக் கொள்ளலாம்.

ஆனால் திருவண்ணாமலை சென்ற அப்பர் பெருமானோ “ இப்பூவுலகில் பிறந்து வாழ்ந்து மகிழ்தலே முத்திப் பேறு அடைதலை விட சிறந்தது” என்கிறார். அதுவும் சரிதான். இங்கு இன்னும் காண, கேட்க, கற்க உலகளவு நல்ல விஷயங்கள் உள்ளன. முக்தி பற்றி பின்னர் யோசிக்கலாம்.

ஓரு சில தடவைகள் ஆரூர் சென்றுள்ளேன். நினைத்தாலே ‘உடம்பு சிலிர்க்கும்’ என்பார்களே அந்த உணர்வு திருவாரூர் என்ற பெயர் கேட்டால் உண்டாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பெருமைகள் இருக்கும். ஆனால் ஊரே பெருமை பெற்றது என்றால் அது திருவாரூர்.

என் சிலிர்ப்புக்கு முதல் காரணம், ஆரூர் சென்றால் சுந்தரருக்காக ஈசனே பரவை நாச்சியாரிடம் ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் நள்ளிரவில் நடந்து தூது சென்ற வீதியை மிதிக்கும் புண்ணியம் கிடைக்கும்.

அன்றே நட்புக்கு இலக்கணம் வகுத்தான் ஈசன். நட்பிற்காக, நண்பனை மனதிற்கினியவளுடன் சேர்த்து வைக்க பரவையாரிடம் முதல் தடவை தனியனாய் இரண்டாவது தடவை பூத கணங்களுடன் தூது சென்றான்.

சுந்தரரும் இறைவனை நண்பனாக பாவித்து வேலை வாங்கினார்.
சுந்தரர் நண்பனாய் அன்பு காட்டி பாடிய தேவாரத்திற்கு ‘ஸக மார்க்கம்’ என்பது பெயராம்.
பிள்ளை போல் அன்பு காட்டி ஞான சம்பந்தர் பாடியது ‘புத்ர மார்க்கம்’
ஊழியனாய் அன்பு காட்டி அப்பர் பாடியது ‘தாச மார்க்கம்’.
மாணாக்கனாய் அன்பு காட்டி மாணிக்க வாசகர் பாடியது ‘சிஷ்ய மார்க்கம்’ என்றனர் பெரியோர்.சுந்தரரை நண்பனாய் உலகிற்கு காட்ட திருமணத்தை நிறுத்தி, பொய் சாட்சியாக ஏடுகளை உண்டாக்கி ஆடிய நாடகத்தை நினைத்து அசை போடலாம்.

ஈசன் தன் நண்பனாகிய சுந்தரர் சங்கிலியாரை ( அநிந்திதையார்) திருவொற்றியூரில் மணம் செய்து பின் நீங்குவதை தடுத்து நிறுத்த கருவறையிலிருந்து மகிழ மரத்தடியில் வந்தமர்ந்த விளையாட்டை நினைந்து மகிழலாம்.

சுந்தரர் சேகரித்த பொற்குவியலை பத்திரமாக விருதாசலத்திலிருந்து ஆரூர் கொண்டு செல்ல, ஈசன் விருதகிரி மணிமுத்தாற்றில் வீச வைத்து திருவாரூர் கமலாலயம நீரில் கொண்டு சேர்த்த அற்புதம் கொண்ட தெப்ப குளத்தை தரிசிக்கலாம். கோவிலின் பரப்பளவு 32 ஏக்கர் நிலமெனில், கமலாலயம் திருக்குளத்தின் பரப்பும் 32 ஏக்கராம். “ கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி” என பெருமையாக கூறுகிறார்கள்

நண்பர்கள் மட்டுமல்ல தன் தொண்டர்களும் என் உயிரே என உலகிற்கு உணர்த்த சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு மூல நூலான திருத்தொண்டத்தொகை பாட ஈசன் தன் வாயால் “ தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்து அடியவர்களின் பெருமையை பாட வைத்த ஊர் ஆரூர்.

உமையவளின் தோழிகளான அநிந்திதை, கமலினி என்ற இருவருள் பரவை நாச்சியார் என்றரியப்பட்ட கமலினியார் அவதரித்த ஊர்.

சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம், பெரிய கோவில் என்றால் திருவாரூர். கோவில் தோன்றி 5000 ஆண்டுகளுக்கும் மேல் என்கின்றனர். இறைவன் வந்தமர்ந்தது எப்பொழுது என ஞான சம்பந்தாராலேயே கூற முடியாமல் பாடல்களில் ‘நீ எப்பப்பா இங்கே கோவில் கொண்டாய்’ என கேட்கிறார். அங்கு பாடும் தேவாரத்தில் “திருச்சிற்றம்பலம்” கூறப்படுவதில்லையாம், காரணம் சிதம்பரத்திற்கும் முன்னர் ஈசன் அமர்ந்த இடமாம். நாம் யார் கோவிலின் வயதை அளப்பதற்கு. பெரியவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வோம்.

பஞ்ச பூத தலங்களில் பூமிக்கு உரியது ஆரூர். காஞ்சிபுரம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

இங்கும் ஈ்சன் ஆடினார். அவர் ஆடும் நடனத்திற்கு ‘அஜபா நடனம்’ என்பது பெயராம். இன்றும் விஷேச காலத்தில் ஆடி மகிழ்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க ஆசை.

திருவாரூரில் அதிசயங்கள் பல நிகழ்த்திய ‘ தியாகராசர்’ ஊருக்கே ராஜாவாம். அந்த ராசருக்கு ஆசியாவிலேயே பெரிதான ‘ஆழித் தேர்’. திருவாரூர் தேரழகு என படித்துள்ளோம், தேர் ஆடி அசைந்து வரும் அழகு மேனி சிலிர்த்தலுக்கு மற்றொரு காரணம்.
அவர் நகர் வலம் தனியே வரமாட்டார். அனைத்து பரிவாரங்களுடன்தான் வருவார். கண்கொள்ளா காட்சி.

“ வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர் தேரழகு
திருவடை மருதூர் தெருவழகு
மன்னார்குடி மதிழலகு”

என அனைத்தையும் அனுபவித்தவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். ஈசன் அரசாட்சி செலுத்துமிடம்.

வேறென்ன பெருமை? இசை அரசர்களான மும்மூர்த்திகளும் அவதரித்த ஊர் திருவாரூர்.
ஒருத்தர் திருச்சியிலும் அடுத்தவர் கோவையிலும் பிறந்திருக்க கூடாதா, இல்லையே. மூவரும் அவதரித்த மண். அதுதான் திருவாரூர் மண்ணின் பெருமை.

தன் வாரிசுகளுக்காக எதையும் தியாகம் செய்யும் ஆட்சியரை நாம் இன்று காண்கிறோம். ஆனால் நீதி காக்க மனு நீதிச்சோழன், தன் வாரிசையே தியாகம் செய்தது திருவாரூர் வீதியில்.

  • ஈசன் பீடு நடைபோட்டு நடந்த வீதி,
  • சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரின் கால் தடம் பதிந்த வீதி.
  • எந்தை அருணகிரி நாதர் வலம் வந்த வீதி.
  • சங்கீத மும்மூர்த்திகள் பரமன், திருமால் புகழ் பரவசத்துடன் பாடி நடமாடிய வீதி.
  • நீரில் விளக்கேற்றிய நமிநந்தியடிகள் முதலான நாயன் மார்கள் ஓடியாடி தொண்டு செய்த வீதி.
  • மனுநீதிச் சோழன், அமைச்சர் தயங்கியதால் தானே தன் மகனை தேரேற்றி கொன்ற வீதி.
  • தேவேந்திரனும், தேவர்களும் ஈசனை காண நடந்த வீதி. 
  • உமையவளின் உன்னத தோழி கமலினி அவதரித்த மாளிகை கொண்ட வீதி.

 

இவ்வளவு புண்ணியம் பெற்ற வீதியில் நான் வீதியுலா செல்ல உள்ளேன்.

‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன் யான்” என ஞான சம்பந்தரே கூறும் பொழுது, திருவாரூர் மண்ணை மிதித்தால் மேனி சிலிர்ப்பது நியாயம்தானே.

இடம் பொருள் இலக்கியம்  15. பள்ளித் தோழ”ர்” – முனைவர் வ வே சு

இடம் பொருள் இலக்கியம்  15. பள்ளித் தோழ”ர்”

சென்னையிலிருந்து கிளம்பிய கோவை எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டையைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. யார் அந்த சுவாமிஜி ? எதற்காக என்னைக்  கூப்பிட்டிருக்கிறார் ? என்ன தகவலோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே ரயிலின் பெட்டிகளுடே “வெஸ்டிப்யூல் “ வழியாக , சுவாமிஜி இருக்கும் “கேபினை” அடைந்தேன்.

இரண்டு விரல்களால் கதவைத் தட்டி “எக்ஸகியூஸ் மீ வரலாமா “ என்றேன்.

“வாருங்கள் உங்களத்தான் எதிர்பார்த்திருந்தேன் “ என்று சொல்லி மெல்லப் புன்னகைத்தார்.

மாநிறம்; நல்ல உயரம் , சாந்தமான முகம்; சிரிக்கும் கண்கள். இராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் அணியும் காவி உடை.. என் கண்களில் தெரியும் குழப்பத்தைப் பார்த்தபடி, “ என்ன வி வி எஸ் தானே ! என்னை அடையாளம் தெரிகிறதா?”

“ நோ மகராஜ் “ இல்லையென்று தலையாட்டினேன்.

“நான்தான் ஒங்களோட ஸ்கூலில் படித்த ரகு “ என்று மறுபடியும் புன்னகைத்தார்.

திடீரென ஐம்பது ஆண்டுகள் காலடியில் நழுவி ஓடின. அடே! ஆமாம் ! இவர் .. இவன்  .. ரகு . பள்ளியில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த நண்பன் (ர்) இத்தனை வருடங்களுக்குப் பின் என்னை எப்படிக் கண்டுபிடித்தான்.. மனத்துக்குள் கேள்விகள் மண்டின.

“ என்ன வி வி எஸ் .. ஞாபகம் வந்துவிட்டதா?”

“ஏய் நீ நம்ம பழையமாம்பலம் ரகுதானே ! எப்படி மறக்கும்? ரொம்பத்தான் மாறிட்ட “ என்று சொல்ல வந்தவன் , கொஞ்சம் நிதானித்து, “ எஸ் மகராஜ் ! நவ் ஐ ரிமெம்பர் .. ஆமாம் நீங்க எப்படி என்னைக் கண்டுபிடிச்சிங்க?” என்று வினவினேன்.

“ நான் ரொம்ப வருஷமா ஒங்க அக்ட்டிவிட்டீஸ் எல்லாம் அவதானித்துக் கொண்டுதான் வரேன். நம்ம மடத்துல நீங்க பேசற நிகழ்ச்சி எல்லாம் ஃபாலோ பண்ணுவேன். நான் போன பத்து வருஷமா ஸ்ரீ லங்கா இராமகிருஷ்ண மடத்தில் பணியாற்றிவிட்டு , போன மாதம்தான் கோயமுத்தூர் பெரிய நாயக்கன் பாளையம் இராமகிருஷ்ண வித்யாலயாவிற்கு  மாற்றலாகி வந்திருக்கேன். சென்னை மடத்துல ஒரு அலுவல் காரணமா வந்திருந்தேன். இன்று கோவை எக்ஸ்பிரஸ் வண்டியில் திரும்பறேன். காலையில் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் ஏறும் போது உங்களப் பார்த்தேன். சார்ட்ல பேரைப் பார்த்து கன்பர்ம் பண்ணிக்கொண்டேன். பிறகு டி டி ஆர் மூலமா கூப்பிட்டனுப்பினேன்.”

“ ரொம்ப மகிழ்ச்சி. காப்பி சாப்பிடலாமா? “

“ ம்.. சாப்பிடலாமே”

ரகு ரொம்ப சாதுவான பையன். நான் “பி” செக்ஷன் ;அவன் “ஹெச்” என்று நினைவு வெஸ்ட் மாம்பலத்தில் இருந்து எங்க வீட்டு வழியாகத்தான் ஸ்கூலுக்குப் போவான். தி. நகரில் நான் வசித்த மாம்பலம் சாலைக்கு அருகில் தான் துரைசாமி ரோடில் ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளி ஹாஸ்டல் இருந்தது. அங்கே பெரிய பிரார்த்தனைக் கூடமும் , சிறு நூலகமும் உண்டு.. ரகு,சுந்தர், பிரபு, பாலகிருஷ்ணன், என் சகோதரன் கணேஷ் நான் எல்லோரும் இந்த ஹாஸ்டலில் மாலை நேரங்களில் கூடுவதுண்டு. அதற்குக் காரணம் இரண்டு பெரியவர்கள். ஒன்று எங்களுக்கு இராமகிருஷ்ண இலக்கியத்திலும் சுவாமிஜி மேலும் மிகுந்த ஈடுபாட்டை உண்டாக்கிய எங்கள் ஆசிரியர்பிரான் திரு வே. மு. மந்திரமூர்த்தி; இரண்டாவது எங்களை ஹாஸ்டல் வளாகத்தில் எந்நேரமும் வந்து செல்ல அனுமதி அளித்த தலைமை சுவாமிஜி நந்தானந்தா ஜி. ( இவர்கள் இருவரைப் பற்றியும் தனியே எழுத நிறைய செய்திகள் உண்டு. ).

1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா; நாங்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். அப்போதிலிருந்தே ஸ்ரீ இராமகிருஷ்ணா இயக்கத்தில் எங்களுக்கெல்லாம் ஈடுபாடு வந்துவிட்டது. நாங்கள் ஹாஸ்டல் நூலகத்திலேயே பல மணி நேரங்கள் செலவு செய்வோம்; பல புத்தகங்கள் படிப்போம். என் தமிழ் ஆங்கில அறிவுக்கு நல்ல அடித்தளம் போடப்பட்ட நாட்கள் அவை. பிறகு மந்திரம் சாருடன் பல விஷயங்களை விவாதிப்போம். இந்துமதம், பக்தி, அத்வைதம் போன்ற தத்துவங்களைப் பற்றியும் பேசுவோம். சில நீண்ட மாலைப் போதுகளில் , இவற்றைப் பற்றியெல்லாம் பேசிப் பேசி முடியாமல் நான் ரகு வீடு வரை சென்று அவன் வீட்டு வாசலிலும் நின்று பேசி முடித்துவிட்டு வர இரவு வந்துவிடும்.

அப்போதே ரகுவுக்கு இராமகிருஷ்ண மடத்தில் ஈடுபாடு எங்களைவிடவும் அதிகம் உண்டு என்று தெரிந்தாலும் , அவன் மடத்தில் துறவியாகச் சேர்ந்தது எங்களுக்குத் தெரியாது.. பல ஆண்டுகளுக்குப் பின்னே இந்த சந்திப்பு- ஓடும் இரயிலில்; எப்படிப் பேசுவது ? துறவியாகி விட்ட நண்பனை எப்படி விளிப்பது? பழைய கதையைப் பேசுவது சரியாக இருக்குமா?

“ காப்பி வந்தாச்சு.! இன்னும் என்ன யோசனை?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

“ ஹி . ஒண்ணும் இல்ல . பழைய ஞாபகங்கள் “ என்று குரலை இழுத்தேன்.

“ ஓ ! அதெப்படி இல்லாம போகும் . சரி கோவையில என்ன வேலை? கொஞ்ச நாள் இருப்பிங்களா .. மடத்துக்கு வரணும்.”

“யூனிவர்சிடி வேலை .. ஒரு வாரம் இருப்பேன்”

“அப்படின்னா வர திங்கள் காலையிலே எங்க வித்யாலயா  ஸ்டூடண்ட்ஸ் க்கு ஒரு லெக்சர் கொடுக்கணும்.

“சரி”

“அப்ப ஒண்ணு பண்ணுங்க. ஞாயிறு மாலையே வந்துவிடுங்கள். வித்யாலயா கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. ராத்திரி தங்கிட்டு காலை ஒன்பதுலேந்து  பத்து மணிவரை லெக்சர் முடிச்சிட்டு நீங்க யூனிவர்சிட்டி போயிடலாம்” என்றார்.

அதே போல ஞாயிறு மாலையே சென்ற நான் கெஸ்ட் ஹவுஸில் அன்று இரவு வெகு நேரம் “ரகு மகராஜ் அவர்களோடு  பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தேன் . . துறவியா ? இல்லறத்தானா? என்பதெல்லாம் “பள்ளி நட்பின்” முன்னால் கரைந்து போய்விடும் செயற்கை அடையாளங்கள் என்று அன்று புரிந்துகொண்டேன்.

ரகு மகராஜ் அவர்களை சந்தித்து ஒரு சில ஆண்டுகளில் நான் கல்லூரி முதல்வர் பணியை ஏற்றுக் கொண்டேன். அவர் எனக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்போது தெரியாது அவர் ஒருநாள் எங்கள்  கல்லூரி செயலராக வருவார் என்று; அவர் கல்லூரி செயலராகப் பொறுப்பேற்ற போது நான் முதல்வராக இருந்தேன். ஆறு மாதங்களில் ஓய்வு பெறவேண்டும். எனினும் அந்த ஆறு மாதங்கள் மிக இனிமையான மாதங்கள். பள்ளித் தோழருடன் இணைந்து பணி செய்யும் வாய்ப்பு. இட் வாஸ் அ ரேர் பிரிவிலேஜ் அண்ட் கோயின்ஸிடென்ஸ்.

ரகு மகராஜ் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் பணி புரிந்த இராமகிருஷ்ணா மடத்துக் கிளைகளில் மாலை தோறும் நிகழும் பஜனைகளில் தவறாமல் கலந்து கொண்டு பாடுபவர். இதன் தொடர்பாக எங்கள்  அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது.

2014-ல் சென்னை விவேகானந்தா இல்லத்துக்கான குத்தகை முடிவடையும் தருவாயில் அப்போது  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அதனை மீண்டும் 99 ஆண்டுகளுக்கு நீட்டுவித்து அரசாணை விதித்தார். இந்த மகிழ்ச்சியான அரசாணையைத் தொடர்ந்து , பல புதிய கட்டுமான வேலைகளை இராமகிருஷ்ண மடம் அங்கே தொடங்கியது. மாணவர்களுக்கான சில பயிற்சி வகுப்புகள் அங்கே தொடங்கப்பட்டன. அந்த இடத்தில் ஒரு தியான மண்டபமும் , சுவாமிஜி வரலாற்றை விளக்கும் கண்காட்சியும், சிறிய நூலகமும் அமைக்கப்பட்டன.

விவேகானந்தா இல்லத்தின் வரலாறு சுவை மிக்கது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது, சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் ஒன்றினை தொடங்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. கொல்கத்தா திரும்பிய சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் தலைமையில் இந்த கட்டிடம் தென் இந்தியாவின் முதலாவது ராமகிருஷ்ணர் மடமாக செயல்படத் துவங்கியது.

சுவாமிஜி 1897 ம் ஆண்டில் இங்கே தங்கியிருந்த நாட்களை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி மாதத்தில் “ விவேகானந்தா நவராத்திரி” விழா கொண்டாடப்படும். ஒன்பது நாட்கள் மாலை முதல் இரவு எட்டரை மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Day – 6
5.30 p.m : Readings from Swami Vivekananda’s Teachings
5.40 p.m : Bhajans by SKNSPMC Vivekananda Vidyalaya Junior College, Perambur
6 15 p.m : Talk on “Alasinga Perumal – Unique disciple of Swami Vivekananda” by Dr. Venkatakrishnan, Editor. ‘Geethacharyan’

6.45 p.m : Kaviyarangam on Vivekanandar – Oru Panmuga Paarvai Lead by Kavimaamani V.V.S

8 00 p.m : Vote of Thanks and Presentation of Mementoes
8 15 p.m : Distribution of Prasad

 

இந்த நிகழ்வில் 2015-ம் ஆண்டு விழாவில் ஒருநாள் நாங்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். குருமகராஜ் சுவாமிஜி பிரார்த்தனைப் பாடல்களில் சிறந்த ரகு மகராஜ் பாடல்களை இசைக்க அப்பாடல் வரிகளுக்கு நான் பொருள் சொன்னேன். அப்படிச் சொல்லும் போதே அவருடைய வாழ்க்கை வரலாற்று விவரங்களையும் இணைத்துப் பேசினேன். மிகவும் சுவையான “பரோக்ராம் “ என்று பலர் பாராட்டினார். துறவு வாழ்க்கையில் பயணிக்கும் பழைய பள்ளித் தோழருடன் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தியதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. கோவையில் இருக்கும் அவரோடு இன்றும் தொடர்பில் இருக்கிறேன்.

பள்ளி நண்பர்களைப்  பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் , என்ன பதவியில் யார் இருந்தாலும் “வாடா போடா “ விளிச்சொல் தான் என்பதை நாம் அறிவோம் . ஆனால் ரகு மகராஜ் விஷயத்தில் இது எப்படி சரியாக இருக்கும் ?. நான் அவரை “வாங்க போங்க “என்றுதான் விளித்தேன். அவர் யாரையுமே ஒருமையில் அழைப்பதில்லை.

எனது பள்ளி நண்பர்கள் வரிசையிலே “பள்ளித் தோழர்”  என்று “ர்” விகுதியோடு நான் அழைக்கும் ஒரே நபர் ரகு மகராஜ் அவர்களே !

 

குவிகம் இலக்கியத் தகவல்கள்

குவிகம்  அளவளாவல் : (ஞாயிற்றுக் கிழமைகளில்)

18.02.24 –

72 ஆண்டுகளாக சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் மகாத்மா காந்தி நூலகம் இயங்கி வருகிறது.  அதைப் பராமரித்து வரும் நித்தியானந்தம் அதனை மேம்படுத்திப் புதிய வடிவில் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் . அதற்காக திரு ரமணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நட்பு வட்டத்தினரிடமும் புரவலரிடமும் நன்கொடை பெறும் முயற்சி நடை பெற்று வருகிறது.  இந்த அளவளாவல்  மூலம்      குவிகம் நண்பர்களிடம் இந்தப் புனிதப் பணிக்கு உதவும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ( ஒரு மாதத்தில் 94000 ரூபாய் நம் நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்) . இன்னும் பல நண்பர்கள் தரும் உதவியால் இந்த நூலகம் புதிய கட்டடத்தில் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது 

25.02.24 

என் புத்தகங்கள் வரிசையில் அன்னபூரணி தண்டபாணி மற்றும் சுரேஷ் ராஜகோபால் இருவரும் தாங்கள் எழுதி வெளியிட்ட புத்தக்காகங்களைப் பற்றிக் கூறினார்கள் 

03.03.24 

தஞ்சாவூரக் கவிராயர் தன் வாழ்வில் சந்தித்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய நினைவுகளையும்  தான் எழுதிய கவிதைகள் சிவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். 

10.03.24  

 மொழிபெயர்ப்பில் தன் வரலாறு என்ற தலைப்பில் கௌரி கிருபாநந்தன் அவர்கள் மொழிபெயர்த்த நூலைப் பற்றி ராஜாமணி அவர்கள் பேசினார் . 

 

நேரடி நிகழ்வு : 24.02.24 

அழகியசிங்கர் தலைமையில் நமது ஆஸ்தான இடமான ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் 12 கவிஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கவிதைகளை மூன்று சுற்றாகப் படித்தனர்.   நேரடியாகவும்  ஜும் அரங்கிலும் நிறைய நண்பர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.  

கலந்து கொண்ட கவிஞர்கள்:   அழகியசிங்கர், வத்சலா, லாவண்யா சத்யநாதன், செந்தூரம் ஜெகதீசன் , நாகேந்திரபாரதி, பானுமதி, சுரேஷ்  ராஜகோபால், மீ விஸ்வநாதன் , எஸ் வி வேணுகோபால், ஆர் கே ராமநாதன், முபீன் சாதிக் , டாக்டர் பாஸ்கரன் ( வ வே சு அவர்களின் கவிதைகளைப் படித்தார் )  

மகாகவியின் மந்திரச் சொற்கள் : (புதன் கிழமைகளில் )

ஞானப் பாடல் வரிசையில் அழகுத் தெய்வம் என்ற பாடலில் விளக்கத்தை வ வே சு அவர்களுடன்  பிப்ரவரி 21,  28, மார்ச் 6, 13  ஆகிய நான்கு வாரங்கள்  தொடர்ந்து பயணித்து வருகிறோம். குறிப்பாக மது நமக்கு என்ற பாரதியார் பாடலும், மழை பற்றிய பாரதியாரின் கதையும் கேட்போர் மனதில் ஆழப் பதிந்தன .  

 

மகாத்மா காந்தி குறுந் தொடர் ( 5 வாரங்கள்)

திரு மோகன் , தலைவர் சென்னை காந்தி பயிலகம் ஜனவரியில் துவக்கிய காந்தி சிந்தனைகளுக்குப் பிறகு பிப்ரவரி 8, 15,22,29, மார்ச் 7 ஆகிய ஐந்து நாட்கள் காந்தியத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட  பெருமக்கள் ஐவர் தங்கள் காந்திய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.   

  1. முனைவர் பிரேமா – கஸ்தூரி பாய் 
  2. பாவண்ணன் – காந்தியம் மாணவர்களுக்கு 
  3. கன்யூட்ராஜ் – இன்றைய காந்தியம் 
  4. விப்ரநாராயணன் – கீதையும் காந்தியும் 
  5. சரவணன் – கதை வழியே காந்தி  

குவிகம் நண்பர்களும் காந்தியத்தில் தோய்ந்த பலரும் இந்த உரைகளை நெகிழ்ச்சியுடன்  கேட்டு மகிழ்ச்சியடைந்தனர் 

இதன் காணொளிகள் கீழே தரப்பட்டுள்ளன: 

 

 

 

 

 

புதிய பிள்ளைப் பருவங்கள் – புத்தக அறிமுகம்

வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும் … (புதிய பிள்ளைப் பருவங்கள்)

                                             ஆசிரியர் : மீனாக்ஷி பாலகணேஷ்

அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

பிள்ளைத்தமிழ் நூல்கள் தொல்காப்பியர் வகுத்த இலக்கணப்படி மூன்றுமாதம் முதல் பெண்மகவானால் அவள் பருவம் அடையும் வரையும், ஆண்மகவானால் அவன் அரசுகட்டில் ஏறும்வரையும் பத்துப் பருவங்களாக (இருபால் பிள்ளைத்தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என ஏழும், பெண்பால் பருவங்களாகக் கடை மூன்று பருவங்களும் அம்மானை, நீராடல், ஊசல் என்றும், ஆண்பால் பருவங்களாக, சிற்றில் (சிதைத்தல்), சிறுபறை (முழக்குதல்), சிறுதேர் (இழுத்தல்) எனவும்  பாடப்பட வேண்டும் என்பது வழக்கு.

இதற்கும் மேல் சில பருவங்களும் இலக்கண நூல்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக, மொத்தம் 24 பருவங்களைப்பற்றி எனது பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களும் நானும் எழுதியுள்ள ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனும் நூலில் விரிவாகக் காணலாம்.

பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை.   இப்பாடல்களையும் கட்டுரைகளையும்   பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்.   ஐயா அவர்கள் எனது பிள்ளைத்தமிழ் ஆய்வினைப் பெரிதும் ஊக்குவித்து வழிநடத்தியவர்; எனது பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரியவர்.) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர்கள் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்பினேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

இப்பாடல்களை இயற்ற அவ்வத் தெய்வங்களே வழிநடத்தினர் எனல் மிகையன்று. பிள்ளைத்தமிழால் போற்றப்படாத அன்னைத் தெய்வங்கள் மீது பாடல்களை எழுத விரும்பி அவ்வண்ணமே எழுதியுள்ளேன். இத்தெய்வங்கள் மீது பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டு அவை கிடைக்காமலும் போயிருக்கக் கூடும். ஆனால் எனது பேரன்பிற்குரிய மீனாட்சியம்மையையும், சிவகாமித் தாயையும் பாடாமலிருக்க இயலவில்லையே!

இப்பாடல்களைக் கட்டளைக் கலித்துறையாகவோ, (அறு, எழு, எண்சீர்) ஆசிரிய விருத்தமாகவோ அமைக்க முயன்றுள்ளேன். நான் கவிதை புனைவதில் பெரும் புலமை பெற்றவளல்ல. இருப்பினும் பாடவேண்டுமெனும் ஆசையால் புனைந்த பாடல்கள் இவை. சில தமிழ்ச்சான்றோர் பார்த்தும் படித்தும் மெச்சியவை எனும் துணிவில் வெளியிடத் துணிந்தேன்.

ஆகவே கோலம் வரைதல், மருதோன்றி அணிதல், வளையல் அணிதல், கூந்தல் அலங்காரங்கள் செய்து கொள்ளுதல், பாடல் ஆடல் பயிலுதல், உண்மையாகவே சமையல் கலையைக்  கற்றுக்  கொள்ளுதல், போர்க்கலை பயிலல், கல்வி பயிலல் எனும்  பருவங்களைப் பற்றி, இதுவரை எவருமே பாடாததனால், பாட முயன்றுள்ளேன்.

அன்பிற்குரிய இளம் நண்பர் திருமதி உபாசனா கோவிந்தராஜன் (Illustration Artist, பாஸ்டன், அமெரிக்கா) பிரத்யேகமாக வரைந்தளித்த அட்டைப்படம் மனதிற்குக் களிப்பூட்டி, மீனாட்சியன்னைபால் பேரன்பைப் பெருக்கிடச் செய்யும். இப்படத்தில் சிறுமி மீனாட்சி வளையல்களணிந்து மகிழ்வதனைக் கனிவோடும் களிப்போடும் பார்க்கும் அன்னை காஞ்சனமாலை, காணும் நமக்கும் ஆனந்தத்தைத் தருவாள்.

இனி என்ன சொல்வது? தமிழன்னையாம் மீனாட்சியின் திருவருளும், என் ஆசானின் குருவருளும் கூடியதால்தான் இது சாத்தியமாயிற்றதனால் அவர்கள் திருவடிகளைப் பணிகிறேன்.

உலகத்துக் குழந்தைகளனைவருக்கும் இதனைச் சமர்ப்பணம் செய்கிறேன். முனைவர் வ. வே. சு. அவர்கள் அன்போடு அளித்த அணிந்துரையை உங்கள் பார்வைக்குப் பெருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.

திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்கள் திறம்பட இதனை வடிவமைத்து pustaka.co.in -ல் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்குப் பல நலன்களையும் அருள ஆண்டவனை வேண்டுகிறேன். இது மின்னூலாகவும், வேண்டுவோருக்கு அச்சுப் பிரதியாகவும் pustaka.co.in-ல் விலைக்குக் கிடைக்கும்.

                                                                                   

அணிந்துரை

பேராசிரியர் முனைவர் கவிமாமணி வ.வே.சு.

 

இந்நூலுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அணிந்துரை அளிக்கிறேன். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம், தமிழ் இலக்கியப் பரப்பிலே சிற்றிலக்கியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவை. பண்டை இலக்கியத்திற்கும் பின்னால் வந்த பக்தி இலக்கியங்களுக்கும் இடையே தனிச்சிறப்போடு  பரந்து கிடப்பவை; இன்னும் வளர்ந்து வருபவை; அவற்றுள் காணப்படும் யாப்பு வகைகளும் கருப்பொருளும் கற்பனை வீச்சுகளும் அளவற்றவை; தொண்ணூற்றாறு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அந்த எண்ணிக்கைக்கும் மேலே இவை உள்ளன என்பது அறிஞர்கள் கருத்தாகும். தமிழின் இரத்தினக் கருவூலங்களுள் ஒன்றான இதனுள் கிடக்கும் ஒப்பற்ற முத்து “பிள்ளைக்கவி” எனப்படும் பிள்ளைத்தமிழ் ஆகும். இதிலுள்ள மொழியழகும், சொல்லழகும், உணர்வு நெகிழ்ச்சியும் தமிழ் படிக்கும் நெஞ்சங்களுள் உடனே பற்றிக்கொள்ளும் திறம் கொண்டவை.

என் பிள்ளைப் பருவத்தில் நான் இரசித்துப் படித்த தமிழ் இலக்கியம் பிள்ளைத் தமிழ். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழும், பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழும் என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவை.

நூலை முழுதும் படித்து முடித்துவிட்ட பிறகு பிறந்தது இரண்டாவது காரணம். அதுதான் நூலாசிரியரின் செழுந்தமிழ்ப் பல்லக்கில் பவனிவரும் புதிய பார்வை.

“பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன” என்ற குறிப்புரையோடு, சில புதிய பிள்ளைப் பருவங்களை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார். நிச்சயம் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றங்கள் என வழிமொழிகிறேன்.

நிற்க, பிள்ளைத்தமிழின் மரபு சார்ந்த இலக்கண முறைமைகளோடு சில புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வது தவறல்ல. ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பொதுவாகப் பிள்ளைத் தமிழ் நூல்கள் ஆசிரிய விருத்தத்தாலேயே பாடப் பெறுகின்றன. எனினும் பன்னிரு பாட்டியல், ஆசிரிய விருத்தத்தோடு கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், பஃறோடை வெண்பா முதலிய யாப்பு வகைகளையும் பிள்ளைத் தமிழுக்கு உரியவையாகப் பலர் பயன்படுத்தி உள்ளனர்.

பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் முதற்பாடல் திருமாலுக்கு உரியது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் இரண்டும் இதற்கு விதிவிலக்கு.

பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில்தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்பட்டுள்ளன. ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் பதினோரு பருவங்களையும், தில்லை  சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன.

காப்புக்கும் முதலாக “பழிச்சுநர்ப் பரவல்” என்ற பகுதியை ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணலாம். இது அடியவர்களை வணங்குவது.

எல்லா இலக்கிய இலக்கண மரபுகளும் அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டவை. பிள்ளைத்தமிழ் பருவம் குழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்தே தொடங்கக் காரணம், தமிழர் பண்பாட்டில் முதல் இரண்டு திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள்.

எனவே நூலாசிரியர் காட்டும் புதிய பிள்ளைப் பருவங்கள் இலக்கிய இலக்கண அமைதிக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவையே.

இது ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலா, புதிய பிள்ளைத்தமிழ்ப் பாடல் விளக்க நூலா அல்லது ஆய்வுநூலா என்று பிரித்துக் கூற இயலாத வண்ணம் இந்நூல் மும்முனைச் சிறப்பினைப் பெற்றுள்ளது. நூலாசிரியாரின் கற்பனைத் திறம் அவரது பாடல்களிலும், ஆழங்கால் பட்ட இலக்கிய அறிவு அவரது உரைநடையிலும், செழுமையான ஆய்வுப் பின்புலம் அவரது பார்வை நூல் பட்டியல்களிலும் தெளிவாகத் தெரிகின்றது.

கோலம் வரையும் பருவம், வளையல் அணிதல், கூந்தல் அலங்காரங்கள், மருதோன்றி அணிதல், ஆடல் பாடல் பயிலல், சமையல் பழகுதல் ஆகிய ஆறு தலைப்புகளைப் பெண்பாற் பருவங்களாகவும், போர்க் கலைகள் பயிலல், குருகுலவாசம் /கல்வி பயிலல் ஆகிய இரண்டு தலைப்புகளை ஆண்பாற் பருவங்களாகவும், வில், வாள், ஆயுதம் பயிலல் என்ற தலைப்பை இருபாலருக்கும் உள்ள பொதுப் பருவமாகவும் பிரித்து மொத்தம் ஒன்பது தலைப்புகளில் இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. புதிய பிள்ளைப் பருவங்களாக அமைந்த அத்துணைப் பருவங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.

எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றிய விளக்கம், அதனைத் தொடர்ந்து தான் எழுதிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள்; நிறைவாகப் பார்வை நூல் பட்டியல் என்று ஒரு கட்டுக்கோப்பில் ஒன்பது பகுதிகளையும் ஆசிரியர் படைத்துள்ளார்.

முத்திறம் படைத்த இந்நூலில் ஆசிரியர் முத்திரை பதித்த பகுதிகளில் ஒரு சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோலம்வரையும் பருவம் மிக அழகாக எடுத்தாளப்பட்டுள்ளது. பெண் பிள்ளைகள் வரையும் கோலம் எத்தனை செய்திகளைக் கூறுகின்றது! இணைக்கப்படும் வரை அவை வெற்றுப் புள்ளிகள்தாம். இணைந்தால் தான் கோலம். கோலத்தின் எழிலோ புள்ளிகளின் வரிசையைப் பொறுத்தே அமைகின்றது. இதிலே கணக்கு இருக்கிறது. தத்துவம் இருக்கிறது. அழகியல் இருக்கிறது. அறிவியலும் இருக்கிறது. கோலம் வரையும் செய்கை மூளைக்கும் உடல் இயக்கத்திற்கும் உள்ள ஒருங்கிணைப்பிற்குப் பயிற்சியாகின்றது என இன்றைய மருத்துவமும் சொல்கின்றது. பிள்ளை வளர்ப்பில் நமது பண்பாட்டின் சிறப்பினை எடுத்துக் கூற “கோலம் வரைதல்” ஒன்று போதாதா?

“எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.” என்கிறார் ஆசிரியர். மேலும் இதற்கான அகச்சான்றை “’தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள் ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து” என்ற நாச்சியார் திருமொழியால் விளக்குகிறார்.

சிறு பெண்ணான அறம்வளர்த்த நாயகி கோலமிடும் அழகை

“காந்தள் போதனைய கையால் கோலப்பொ டியதனை யள்ளிப்புள்ளி களிட்டு” என்று பாடுகிறார். அம்மை குனிந்து அமர்ந்து கோலமிடும் போது கையின் அசைவும், விரல்களின் அசைவும் எழிலோடு இருப்பதை “காந்தள் மலர் அரும்பாக” வருணித்திருப்பது அருமை.

கோலமிடும் பெண் அறம் வளர்த்த நாயகியல்லவா! அவளிடும் கோலம் மண்ணில் மாடக்குள சித்திரமாய் பரந்து வளர்வதைப் போல அவளருளால் முப்பத்திரண்டு அறங்களும் அன்றோ வளர்கின்றன! இதனை “வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி வழுவாதுவர மருளுந்தேவி” என அழகாய் எடுத்துரைக்கிறார். (எனது துணைவியார் பிறந்து வளர்ந்த ஊரான செங்கோட்டையில் அருள் பாலிக்கும் தேவி “அறம்வளர்த்தநாயகி” என்பதால் இந்தப் பாடலைக் கொஞ்சம் அதிகமாகவே இரசித்தேன்)

வளையல் அணிதல் பகுதியில், இன்றைய “மால் நாகரீகத்தில்” காணாமல் போய்விட்ட  வளையல் வியாபரியை நினைவுகூரும் ஆசிரியர் “வாரும் வளைச்செட்டியாரே! வந்திறங்கும் திண்ணையிலே! கொச்சிட்ட திண்ணையிலே! கோலமிட்ட வாசலிலே!” என்ற பழைய பாடலை முழுதும் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில இசைப்பாடல்களில் தலைப்பின் கீழ் “வாரும் வளைச்செட்டியாரே மெட்டு” என்று போட்டிருப்பதை நான் படித்திருக்கிறேன். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து நேற்றைய எம். ஜி. ஆர். திரைப்படம் வரை ஆட்சி செய்த வளையல் செட்டியை அவ்வளவு எளிதாக மறக்கலாமா? கூடாது எனப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

கூந்தல் அலங்காரப் பகுதியில் “பின்னி எடுத்து” விடுகிறார் ஆசிரியர். அடடா! பைப் பின்னல், அகத்திக்கட்டு என்று பல தகவல்கள். கூந்தல் என்றாலே தருமியின் கதை நினைவுக்குவரும். அதையும் சுட்டுகிறார்.

“முகமதியூடெழு நகைநிலவாட, முடிச்சூழியமாட” என்ற மீனாட்சிப் பிள்ளைத்தமிழ் அடிகளில் இருந்து, இது பற்றிப் பாடும் பழந்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் வரை தொட்டுக்காட்டுகிறார்.

நீராடி, கூந்தலை உலர்த்தி, புகைகூட்டி, காலெடுத்துப்  பின்னி, கொண்டையிட்டு, மலர் சூட்டி, அணிகலன்கள் பூட்டி என்றெல்லாம் விவரமாகப் பாடலில்  எழுதியுள்ளதைப் படிக்கும்போது, மகாகவி பாரதி கலைமகளை வருணிக்கும் இடத்தில் “சிந்தனையே குழல் என்றுடையாள்“ என எழுதியதை மீண்டும் அசை போட்டு இரசித்தேன். சிந்தனைக்கும் கூந்தலுக்கும்தான் எத்துணை ஒற்றுமை!

பெண்களின் எழிலுக்கும் நளினத்திற்கும் விரல்களில் வைக்கும் மருதாணிக்கு இணையுண்டோ! ”மருதோன்றி அணிதல் பகுதி“ செம்மை பூண்டு சிறக்கின்றது.

“நல்ல நிறம் வருவதற்காக இலைகளைப் பறித்து அரைக்கும்போதே உடன், மஞ்சள்கிழங்கு, செப்புக்காசு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்து வைத்தரைப்பர். அந்தப்பூச்சு சிலமணி நேரங்களில் தானே உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். நன்கு நீரால் கழுவிவிட்டு எண்ணையைப் பூசுவர் சிலர். ஆக மொத்தம், ‘கைக்கு அழகு, கண்ணுக்குக் குளிர்ச்சி, மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, விளையாட்டு; வேறென்ன வேண்டும்?” என்று செய்முறையையே விளக்குகிறார் ஆசிரியர்.

“தன்மையுடன் தண்ணளிசெய் கைக்கு மருதாணி” என்று கற்பகவல்லித் தாயாருக்கு மருதாணி இட்டுப் பாடும் போது நம் நெஞ்சமெல்லாம் குழைகிறது.

தமிழிசை கர்நாடக இசை இரண்டிலும் பயிற்சி பெற்ற பாடகியான நூலாசிரியர் “ஆடல் பாடல் பயிலல்” பகுதியில் படைத்துள்ள ஒரு பாடலில் பண்ணிசைக் கூறுகளையும் இராகங்களையும் இனிமையாகப் பொருத்தியுள்ளார். ஏழிசையாய் இசைப்பயனாய் என்று தேவார மணத்துடன் தொடங்கும் இப்பாடலில் உள்ள இசைக் கூறுகளை நீங்களே கண்டுபிடித்து மகிழுங்கள்.

ஏழிசையா யிசைப்பயனாய் இலங்கிடு மீசன்பங்கில்

ஏந்திழையே நீயுறைந்தாய்

எழிலோங்கும் உன்நாவில் குரலொடு துத்தம்கைக்

கிளையுழை இளிவிளரிதாரமெனு

மேழிசையாற் பண்ணனைத் தும்பாங்கா கப்பாடுவாய்!

மேகராகக்கு றிஞ்சியினுமேற்செம்

பாலைப்பண் ணினிலும் மூண்டெழுந்த புகழ்மாலை

பெருமான்மேற் சாற்றிடுவா

யாழிசூழ னைத்துலகு முன்னருளிலு மிசையிலும்

ஆரபியெனகௌரி மனோகரியெனவ

சந்தபைரவி யெனவகுளா பரணமென சுந்தரத்

தோடியென நிறைக்குமுன்றன்

தாளிணை தான்பணிந்து தரணியெ லாஞ்செழிக்க

தவங்கள் தானியற்றும்

தாபதருக் கருளுநல் தர்மவதி சிவகாமீ

தீங்குரற்றே னிசைபொழிகவே!8

வில் வாள் ஆயுதம் பயிலல் பகுதியில் குமரகுருபரரின் அற்புதமான அடிகளைத் தொட்டுக் காட்டுகிறார்.

“அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும்’ ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!

கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு

கைவிற்குனித்துநின்ற

போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்

பொன்னூசல்ஆடியருளே6!”

சமையல் பழகுதல் பகுதியில் பொருத்தமாக காசி நகர் வாழும் தேவி அன்னபூரணியை முன்நிறுத்துகிறார் ஆசிரியர். “முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்” என்ற சிறப்பான சங்கப் பாடலை மேற்கோள் காட்டி ஓர் அற்புதமான இல்லறக் காட்சியை நமக்கு நினைவுபடுத்துகிறார். (இன்றைய சூழலில் இந்த சமையல் பழகுதல் பருவத்தை ஆண் பெண் இருவருக்கும் பொதுவாக்கலாமே!)

“நானொரு பாவையெனை நன்றாகச் சீராட்டி

நானிலத்தே நலம்பலவு மளித்து

நாளும் பொழுதும் நம்பிக்கை யொளிதந்து

நல்லெண் ணங்கூட்டி வைத்து”

என்ற பாடல் வரிகள் “நானொரு விளையாட்டு பொம்மையா” என்ற பாபநாசம் சிவன் பாடலை நெஞ்சில் சுருதி கூட்டியது.

`இவை போல இன்னும் பல சுவையான இடங்களைக் குறிப்பிட எண்ணம் இருந்தாலும், விரிவஞ்சியும், வாசகர்கள் அவரே படித்து இன்புற இடம்கொடுத்து நகரவேண்டும் என்பதாலும் நிறைவு செய்கிறேன்.

நூலாசிரியர் மீனாட்சி பாலகணேஷ் அவர்களை நேரில் சந்தித்தது இல்லை எனினும் எங்கள் “குவிகம் இலக்கிய அமைப்பு” மூலமாக இணையதளத்தில் சந்தித்துள்ளோம். அறிவியல், தமிழ் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்ப் புலமையும் இசை ஞானமும் மிக்கவர். இந்நூலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அவரது செழுந்தமிழை சந்திக்கலாம்.

இவரது பிள்ளைப் பாடலில் “பொன்மயிலாக மயிலையம் பதியினில் வந்து” என்ற பாடலை திருமதி காயத்ரி வெங்கடராகவன் பாடக் கேட்டு அந்த பெஹாக் – சிந்துபைரவி சுவையில் எனை மறந்தேன். இதிலிருந்து ஒன்று திண்ணமாகப் புரிந்தது. இப்பிள்ளைப் பாடல்களை இசையமைத்து அரங்கேற்றினால் தமிழும் இசையும் அறிந்த அன்பர்கள் மகிழ்ச்சி அடைவது உறுதி.

மரபில் காலூன்றி புதுமை படைப்பது எப்படி என்பதை இவர் காட்டும் புதிய பிள்ளைப் பருவங்களைக் கொண்டு அறியலாம். இவரது பாடல்களில் நிலவும் யாப்பமைதியும், சொல் தேர்வும் பண்டை இலக்கியத்தின் பசுந்தமிழை மீண்டும் பார்வைக்கு அளிக்கின்றது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள  புதிய பருவங்களையும் இணைத்து ஒரு முழுமையான பிள்ளைத் தமிழை, தமிழன்னைக்கு இவரே சூட்டவேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

பேராசிரியர் முனைவர் கவிமாமணி வ.வே.சு.

 

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? – ஜி பி சதுர்புஜன்

                                                   

 

புத்தகம் :  100 Thoughts That Lead To Happiness ( English)

எழுதியவர்: Len Chetkin

Published by : Jaico Publishing House, Mumbai 400 001 (2007)

 

      சென்ற மாதம் ( பிப்ரவரி 2024) பெங்களூரில் வெர்ட்சுவோசோ  ரிடையர்மென்ட் கம்யூனிட்டியில் உள்ள வாசகசாலையில் நான் படித்த புத்தகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த சிறிய புத்தகமும் அதே நூலகத்தில்தான் என் கண்ணில் பட்டது.

    “மகிழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் 100 எண்ணங்கள்” என்னும் தலைப்பே என்னை உடனே கவர்ந்தது. கல்லூரி பருவத்திலும் அதைத் தொடர்ந்து பணி வாழ்வின் தொடக்க நாட்களிலும்  நான் நிறைய சுய முன்னேற்ற புத்தகங்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அப்போது அது ஒரு விதமான பைத்தியமாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து சில வருடங்களில் என் மனம் பரபரப்பை எல்லாம் விட்டு சற்றே அமைதி அடைந்தவுடன், அத்தகைய நூல்களைப் படிக்கும் பழக்கம் தானாக உதிர்ந்து விட்டது. வெற்றியைத் தேடும், வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் நூல்களை நான் விட்டுவிட்டாலும், மகிழ்ச்சியை நாடுவது நிற்கவில்லை. அது தொடர்பாக நூல்களைப் படிப்பதின் மூலம் மகிழ்ச்சியின் புதிய கதவுகள் திறக்காதா என்ற ஆதங்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  லென் செட்கினின் இந்த நூல்  அத்தகைய 100 எண்ணங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்ற எண்ணமே படிக்கும்போது மகிழ்ச்சியைத் தந்தது.

   பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பது போல, நாம் சந்திக்கும் சில மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு சிக்கல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் இடையே விழுந்து எழுந்தாலும், எப்படியோ மகிழ்ச்சியுடனேயே காட்சி தருகிறார்கள். வேறு சிலரோ, எவ்வளவு இருந்தாலும் சந்தோஷப்பட 100 விஷயங்கள் இருந்தாலும், எதையோ பறி கொடுத்தது போலவே காணப்படுகிறார்கள்.

   என்ன நடக்கிறது இங்கே ? மகிழ்ச்சியாக எப்போதும் தங்களை வைத்துக் கொள்கிறவர்களின் மகிழ்ச்சியின் பின் உள்ள மர்மம் என்ன ?

   இந்தக் கேள்விக்கு மிக எளிமையான விடை ஒன்றை அளிக்கிறார் ஆசிரியர்.

   நமக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரே ஒரு எண்ண தூரம் தான் இருக்கிறது. அதை நாம் கடந்து விட்டால் போதும் ; மகிழ்ச்சி எப்போதும் நம் வசப்பட்டுவிடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.  நூறு எண்ணங்கள்,  எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து அவற்றின் சக்தியை விளக்க 100 உதாரணங்கள் என்று கோர்வையாக நம்மை உடனழைத்துச் செல்கிறார் செட்கின்.

   ஒவ்வொரு அத்தியாயமும் ஓரிரண்டு பக்கங்கள்தான். முதல் 10 அத்தியாயங்களின் தலைப்புகளை குறிப்பிட்டால், உங்களுக்கு நூலைப் பற்றிய ஐடியா கிடைத்துவிடும். 

 

  1. Send love to someone you feel has wronged you in some way.
  2. There are no bad guys.
  3. Using our creativity rids us of depression.
  4. Don’t hurry – Don’t worry – Don’t think too much.
  5. There is an inner voice speaking to you at all times. You’ll never hear it if you don’t quiet your mind. Listen – Meditate.
  6. Feeling down in the dumps? Read about love.
  7. No matter what your situation in life, you can catapult yourself into the place of your dreams.
  8. You teach best what you must need to learn.
  9. Live never to be ashamed of anything you’ve ever done. Then you can go about your life without fearing something might surface that you are’nt proud of.
  10. We are always in a healing mode – physically, spiritually and mentally.

 

      இந்த நூல் படிப்பதற்கு மிகவும் எளியது, பயனுள்ளது. மகிழ்ச்சியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

      வேறு என்ன வேண்டும் ?

 

 

*ஆழ்வார்களும் கண்ணதாசனும்* *பகுதி 7* – *ஆண்டாள்* – சௌரிராஜன்

 Kannadasan | by artist venkatesan | Venkatesan Purushothaman | FlickrPin by ஷர்மி on Amman | Kalamkari painting, Buddhist art drawing, Indian  folk art
ஆண்டாள் எனும் கோதை நாச்சியாரின் அருளிச்செயல்கள் *திருப்பாவை* மற்றும் *நாச்சியார் திருமொழி*

பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோயிலுக்கு அருகே நந்தவனம் அமைத்து தினந்தோறும் மாலை கட்டி , பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்தார், என ஏற்கனவே, இத்தொகுப்பின் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்தோம்.
ஒருநாள் துளசிச் செடி அருகில் ஒரு பெண் குழந்தையை கண்ட ஆழ்வார், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் பெருமாளே ஒரு புத்திரியை அனுப்பி வைத்ததாக மகிழ்ந்து *கோதை* என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

கோதை என்றால் தமிழில் *பூ மாலை* என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம்.

மிகச் சிறிய வயதில் இருந்தே, கண்ணனின் லீலைகளையும் பராக்கிரமத்தையும் பெரியாழ்வார் சொல்லக் கேட்டு, கண்ணன் பால் பிரேமை கொண்டு, அவன் நினைவாகவே இருந்தவள் கோதை நாச்சியார்.
தினந்தோறும் பெரியாழ்வார் பெருமாளுக்கு கொடுக்கும் மாலையை தான் அணிந்து அழகு பார்த்து, பிறகு எம்பெருமானுக்கு அனுப்பி வந்தாள் கோதை. இதை ஒருநாள் பார்த்துவிட்ட பெரியாழ்வார், இது அபச்சாரம் ஆயிற்றே என்று மிகவும் வருந்தி கோதை அணிந்து களைந்த அந்த மாலையை பெருமாளுக்கு சூட்டாமல் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்.‌ பெருமாள் அவர் கனவில் வந்து, உன் மகள் சூடிக்கொடுத்த மாலையே எனக்கு உவப்பானது என்று சொல்லி மறைந்ததும், தன் மகள் பிராட்டியின் அம்சம் என்பதை உணர்ந்தார், பெரியாழ்வார். இதை ஒட்டியே கோதை நாச்சியாரை *சூடிக்கொடுத்த சுடர்க்கொடி* என்றும் அழைக்கிறோம்.

கோதையின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்த பொழுது, ” மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் ” என்று சொல்லி, திருவரங்கத்துப் பெருமாளையே மணக்க விரும்புகிறேன் என்றும் சொல்லிவிட்டார் கோதை. பெரியாழ்வார் கனவில் மறுபடியும் பெருமாள் வந்து, ஸ்ரீரங்கத்திற்கு கோதை நாச்சியாரை அழைத்து வர பணித்து, அதன்படி அனைவரும் ஸ்ரீரங்கம் செல்ல, எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, கருவறைக்குள் சென்று அரங்கனுடன் இரண்டற கலந்து விட்டாள், அந்த அரங்கன் மனதையும் நம் எல்லோருடைய மனதையும் ஒருசேர ஆண்ட அந்த கோதை எனும் ஆண்டாள்.

திருப்பாவை ஆகட்டும், நாச்சியார் திருமொழி ஆகட்டும் ஆண்டாளின் பாசுரங்களை படிக்கும் பொழுது இதில் பக்தி தலை தூக்கி நிற்கிறதா அல்லது தமிழின் சிறப்பு தலை தூக்கி நிற்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.‌

*ஆழ்வார்களும் கண்ணதாசனும்* தொகுப்பில் நான் இதுவரை எழுதி வந்த பகுதிகள் ஒரே மாதிரியான கட்டமைப்பு ( structure ) கொண்டிருக்கும்.‌ முதலில், எடுத்துக் கொண்ட ஆழ்வாரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம், பிறகு அவருடைய ஏதேனும் ஒரு பாசுரம் , அதன் பொருள், பிறகு அந்த பாசுரம் கவிஞர் கண்ணதாசனின் எந்த பாடலை என் நினைவுக்கு கொண்டு வந்தது என்பதாக, ஓர் ஒழுங்கு ( order ) இருக்கும்.

இப்பகுதியில், அக்கட்டமைப்பிலிருந்து சற்றே விலகுகிறேன் .
ஆண்டாளின் எந்த ஒரு பாசுரத்தையும் எடுத்து சொல்வதற்கு முன்னால், ஆண்டாளின் பெயரில் கண்ணதாசனுக்கு இருந்த அபரிமிதமான பக்தியையும் அபிமானத்தையும் முதலில் சொல்ல விழைகிறேன்.‌

கவிஞர் கண்ணதாசனுக்கு வைணவம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார்கள், என்று பொதுவாக மிகுந்த ஈடுபாடு.‌ இதை அவர் தன் சுயசரிதமான *மனவாசம்* புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
இருந்தாலும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அவர் மனதில் ஆண்டாளை சிம்மாசனம் போட்டு அமர்த்தி இருந்தார் என்று சொல்லலாம்.

ஆண்டாளைப் பற்றி குறிப்பிடும் பொழுது கண்ணதாசன் கீழ் வருமாறு கூறுகிறார் :

*நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன.‌ …*
*நானும் என்னை காதலியாக்கிக் கொண்டு கண்ணனை நினைத்து உருகி இருக்கிறேன்…..*
*இசைக்காக ஏதேதோ புலம்பி இருக்கிறேன்.*
*ஆனால் இசைமங்கலம், சொல் மங்கலம், பொருள் மங்கலத்தோடு*
*புது தமிழ் சொற்களை தூக்கிப்போட்டு*
*பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி,*
*எனது சிறுமையை‌ எண்ணி எண்ணி*
*என்னை வெட்கப்படவே வைத்தது.*

கண்ணனை கூடும் வேளை இன்னும் வரவில்லையே என்று அவனை நினைத்து உருகும் ஆண்டாளின் பாசுரங்களை படித்துவிட்டு, கண்ணதாசன் மேலும் இவ்வாறு எழுதுகிறார் :

*நாச்சியார் துடிக்கிறார்*
*நாமும் துடிக்கிறோம்*

*நாச்சியார் உருகுகிறார்*
*நாமும் உருகுகிறோம்*

*நாச்சியார் கெஞ்சுகிறார்*
*நாமும் கெஞ்சுகிறோம்*

*நாச்சியார் கொஞ்சுகிறார்* *தமிழும் கொஞ்சுகிறது*

கடைசியில் *தமிழும் கொஞ்சுகிறது* என்று முத்தாய்ப்பு வைத்திருப்பது நமது கவிஞரைத்தவிர வேறு யாருக்கு வரும்‌ ?!

கண்ணதாசனின் பாடல்களில், ஆண்டாள் *பாசுரங்களின் தாக்கம்* என்பதைத் தாண்டி , *ஆண்டாளின் நேரடி தாக்கம்* வெளிப்படும் ஒரு பாடலை இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.

சிவாஜி கணேசன் நடித்த *அண்ணன் ஒரு கோவில்* படத்தில் **எம் எஸ் விஸ்வநாதன்* இசையமைக்க ,டி எம் சௌந்தரராஜன்* பாடிய *கண்ணதாசன்* பாடல் .

இதில் தன் தங்கைக்கு நல்ல வரன் தேடி திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசை, அண்ணனுக்கு கனவில் ஒரு பாட்டாக விரிகிறது. அதில் ஒரு சரணத்தில் தன் தங்கையை ஆண்டாளாக நினைத்து அண்ணன் பாடுவதாக கவிஞர் எழுதியிருப்பார்.

*மல்லிகை முல்லை*
*பொன் மொழி கிள்ளை*
என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலின் குறிப்பிட்ட சரணம் :

*சூடிக் கொடுத்தாள்*
*பாவை படித்தாள்*
*சுடராக எந்நாளும்*
*தமிழ் வானில் ஜொலித்தாள்*

*கோதை ஆண்டாள்*
*தமிழை ஆண்டாள்*
*கோபாலன் இல்லாமல்*

*கல்யாணம் வேண்டாள்*

*கன்னித் தமிழ் தேவி*
*மைக் கண்ணன் அவள் ஆவி*
*தன் காதல் மலர் சூடி*

*மாலையிட்டாள்*

பாடல் காட்சிப்படுத்தப்பட்ட வகையிலும், கதாநாயகனின் தங்கை, ஆண்டாள் அலங்காரத்தில், மணக் கோலத்தில் வருவதாக காட்சி விரியும்.

ஆண்டாளின் எந்த *பாசுரம்* , கண்ணதாசனின் எந்த பாடலை நினைவுபடுத்துகின்றது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இம்மாதக் கவிஞர் (26) – பிறை சூடன் – முனைவர் தென்காசி கணேசன்

popular tamil lyricist kavignar Piraisoodan passed away

தஞ்சை மாவட்டம் நன்னிலம் ஊர். கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர், திரைக் கவிஞர் ஆகும் எண்ணத்தில், சென்னை வந்தவர். கண்ணதாசனின் அபார ரசிகர். கவிஞர், நடிகர், வசனகர்த்தா, ஆன்மிகவாதி எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் கவிஞர் பிறைசூடன்.
எந்தவித பழக்கமும் இல்லாத ஒரு நேர்மையான மனிதர். அவரைச் சந்தித்துப் பேசியபோது, நான் இதை உணர்ந்தேன். அவரும் நல்ல உயரம் – அவரின் எண்ணங்களும உயரம்.

1984ஆம் ஆண்டு ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளியானசிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். மெல்லிசை மன்னர் தவிர, இளையராஜா , தேவா, ரஹ்மான் என்று பலரின் இசையில் பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

திரைப்படங்களில் 2,000 பாடல்கள், தனிப் பாடல்கள் 7,000 பாடல்கள் என சுமார் 10,000 பாடல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர்.

ரஜனி நடித்த `ராஜாதி ராஜா’ படத்தில் ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா’
‘பணக்காரன்’ படத்தில் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’
கேளடி கண்மணி’யில் ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’
ஈரமான ரோஜாவேயில் `கலகலக்கும் மணி ஓசை சலசலக்கும் குயில் ஓசை மனதினில் பல கனவுகள் மலரும்’
‘கோபுர வாசலிலே’ படத்தில் ‘காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’
என இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

1991-ல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில்
‘சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா’
என்ற பாடலுக்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றார்.
‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் இவரின் வரிகள் காதல் தோல்வியின் வலியில் நனைத்தது. ,
உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேனில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’,எனப் பல பாடல்கள் இவரின் கைவண்ணம்.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் ‘நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் எனும் பாடல், வாழ்வின் யதார்த்தத்தை கூறுகிறது.

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

ராஜாதி ராஜா படத்தில் இடம் பெற்ற மீனம்மா பாடல் நல்ல மொழி அழகு கொண்டது

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம்…
உருவாகும் வேளை நாணுமே…
இதமாக சுகம் காண…
துணை வேண்டாமோ
இட்ட அடி நோகுமம்மா…
பூவை அள்ளி தூவுங்கள்…
மொட்டு உடல் வாடுமம்மா…
பட்டு மெத்தை போடுங்கள்…
சங்கத்தமிழ் காளை இவன்…
பிள்ளை தமிழ் பேசுங்கள்…
சந்தனத்தை தான் துடைத்து…
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்…
பள்ளியறை நேரமிது…
தள்ளி நின்று பாடுங்கள்…
சொல்லி தர தேவை இல்லை…
பூங்கதவை மூடுங்கள்…

இட்ட அடி நோகுமம்மா, பூவை அள்ளித் தூவுங்கள்’ என்று தொடங்குகையில், சட்டென்று ஒரு சிலிர்ப்பு எழுந்தடங்கும். கம்பன் மகனும் கூத்தனும் சோழனும், தெருவழியே கொட்டிக்கிழங்கு விற்க வந்த கலைமகளும் நினைவில் வந்து போவார்கள்

பிறைசூடனின் தனித்த முத்திரைகளில் இதுவும் ஒன்று. பழந்தமிழ்ப் பாடல் வரிகளின் உள்ளுறை உவமங்களை எடுத்தாள்வதில் வல்லவர் அவர். எடுத்தாளும் விதம் துருத்தலாய்த் தெரியாமல் வெகு இயல்பாக அமைந்திருக்கும்.

‘நடந்தால் இரண்டடி’ (செம்பருத்தி) பாடலைக் கேட்டால் சித்தர்களின் ஞானக் கும்மிகள் நினைவில் எழும். நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்களை நினைவிலிருந்தே சொல்லக்கூடியவர் பிறைசூடன். அவற்றின் தாக்கமும் நோக்கமும் மேற்சொன்ன திரைப்பாடலிலும் ஒன்றுகலந்திருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு ஜிங்கில்ஸ் எழுதிய இவர், அவர் இசை அமைத்த ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா’ என்ற பாடலையும் எழுதினார்.

‘ஸ்ரீராம ராஜ்யம்’ உட்பட சில மொழிமாற்றுப் படங்களுக்கு பாடல்களோடு வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
நிறைய பக்திப் பாடல்களையும் எழுதியுள்ள இவர், அவருடைய கவிதைகளை ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இது ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு.
தமிழ் மொழிப் புலமையையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங்களை விளக்கும் திறமையையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்.

பக்தி இலக்கியங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். திருவாவடுதுறை ஆதீனப் பள்ளியில் பயின்றதை அதற்குக் காரணமாகக் கூறுவார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘போர்க்களம் இங்கே’ (தெனாலி), ‘ரசிகா ரசிகா’ (ஸ்டார்) ஆகிய பாடல்களை எழுதியிருக்கிறார். ‘ரசிகா ரசிகா’ பாடலில் ‘இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும், அதன் மணம் இனிக்கும்’ என்பது போன்ற காதல் மொழிகள் கவனத்தை ஈர்த்தன. இளையராஜாவின் இசையில் எழுதிய ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்), .

தினந்தோறும் நாம் பயணங்களில் கேட்டபடி சாதாரணமாகக் கடந்துபோகிற இந்தப் பாடல்களில் தொட்டுத் தொடரும் தமிழ் மரபுகளை விளக்கிச் சொல்ல பிறைசூடனைப் போல இன்னும் நமக்குப் பல கவிஞர்கள் வேண்டியிருக்கிறது.

இளையராஜா திரைப்படங்களுக்காக இசையமைத்துப் பாடிய பிரபலமான தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்களில் சிலவற்றை பிறைசூடன் எழுதியிருக்கிறார். ‘மன்னவன் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே’ (பொங்கி வரும் காவேரி) என்ற தாலாட்டு, பெண் குழந்தையை ‘பூமஞ்சள் கொத்தே’ என்று வர்ணிக்கையில் சிறப்புறுகிறது.

எழுதா இலக்கியங்களின் சாரத்தையும் உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடுகள் அவை. ராஜ்கிரண் நடித்த ‘சோலப் பசுங்கிளியே’ (என் ராசாவின் மனசிலே) பாடல் கேட்டோர் யாவரையும் கண்கலங்க வைப்பது. ‘பந்தக் காலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலையே’ என்பதும்கூட ஒப்பாரிப் பாடல்களிலிருந்து டுத்தாளப்பட்ட வார்த்தைகள்தான். .

தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மனமின்றி வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தவர் .
2017ஆம் ஆண்டு, நான் எனது ரசிகாஸ் அமைப்பு நடத்திய, இயக்குனர் ஶ்ரீதர் நிகழ்விற்கு, அவரை அழைக்க, அவர் இல்லம் சென்றேன். அன்புடன் பேசியதுடன், அவர் எழுதிய புத்தகங்கள் தந்தார். ஶ்ரீதர் விழாவிற்கும் வந்து மிகச் சிறப்பான உரை தந்தார். என்னிடம் பேசியபோது, தான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை என்று உண்மைக் கவிஞனுக்கே உரிய கர்வத்துடனும், கம்பீரத்துடனும் கூறினார். சினிமாவில் நிலைத்து நிற்க நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் , தனக்கு அந்த மன நிலை இல்லாததால், கிடைப்பது இறைவன் தருவது என்றே வாழ்வதாகச் சொன்னார். அவரின் தோற்றமும், சொன்ன விதமும் அது உண்மைதான என்பதை உணர்த்தியது.

இளையராஜா இசையில் அவரின் பாடல்கள் பல ஹிட்டாய், அவர் வாய்ப்பு தந்தாலும, நாம் நண்பர்களாக இருந்து கொள்வோம் – பாடலாசிரியர் – இசை அமைப்பாளர் என்ற உறவு வேண்டாம் என்றாராம். காரணம், அவரின் எழுத்துக்களில் தேவை இல்லாமல் திருத்தம் கூடாது என்ற சுய மரியாதை. தான். (one line change என்றாலும, என் line ஆக இருக்கவேண்டும் என்று கூறிய கவிஞர் வாலியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது)

பிறைசூடன். மொழிமாற்றுப் படங்களுக்கு வசனங்கள் எழுதியும் பாடல்கள் எழுதியும் அந்த இழப்பை ஈடுகட்டிக்கொண்டார். ஆயிரக்கணக்கில் பக்திப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

ஆன்மிகத்திலும் ஆழம் கண்ட பிறைசூடன் மஹா பெரியவரின் ஆன்மிக சேவைகளை விளக்கி, ‘மஹா பெரியவா’ எனும் கவிதை நூலை எழுதி, வெளியிட்டார். டப்பிங் படங்களுக்கும் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார். ஏராளமான பட்டிமன்றம், கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பல முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய பிறைசூடன் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களைப் பரிந்துரைக்கும் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். கரோனா காலத்தில், எதிர் பாராமல் மரணம் அடைந்தவர்களில் இவரும் ஒருவரானது இலக்கிய உலகிற்கு பெரிய இழப்பு என்பதே உண்மை.

திருமண வீடுகள் எதுவென்றாலும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான் வாழணும்’ (பணக்காரன்) என்று வாழ்த்திக்கொண்டிருப்பார் பிறைசூடன். அவரது குருநாதர் கண்ணதாசனின் ‘வாராயென் தோழி வாராயோ’ (பாசமலர்) பாடலும் அதற்கு முன்போ, பின்போ ஒலிக்கும். குருவை வியந்து நாளும் பொழுதும் போற்றிய ஒரு சீடனுக்கு அதைவிட என்ன பெருமை வேண்டும்?

அடுத்த வாரம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.

 

சங்க நூல்கள் ஓர் எளிய அறிமுகம் – மதுரைக்காஞ்சி – பாச்சுடர் வளவதுரையன்

மதுரைக் காஞ்சி | மௌவல் தமிழ் இலக்கியம்

பத்துப் பாட்டு நூல்களில் ஆறாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது மதுரைக்காஞ்சி ஆகும். இதைப்பாடியவர் மாங்குடி மருதனார். இவர் இந்நூலில் பாட்டுடைத்தலைவனாக தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் மன்னனை வைத்துப் பாடி உள்ளார். அகவல்பா (ஆசிரியப்பா), மற்றும் வஞ்சிப்பாவினால் எழுதப்பட்ட இந்நூல் மொத்தம்  782 அடிகளைக் கொண்டதாகும்.

இந்நூலுக்குத் திருமிகு பொ. வே. சோமசுந்தரனார் எழுதி உள்ள உரையைச் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.  நச்சினார்க்கினியர் எழுதியுள்ள  உரையை சென்னை – உ. வே.  சாமிநாதையர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது.

இந்நூலை எழுதிய புலவர் பெருமான் மாங்குடி கிழார், மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவர் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுகின்றார்.  இவர் எழுதிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. .

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற சோழ நாட்டின் ஊரில் சோழ மன்னரையும், சேர மன்னரையும், ஐந்து வேளிர் மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) தோல்வியடையச் செய்தான்.  இப்போர் பற்றின குறிப்புகள் அகநானூறு 36, 175-11, 209-6, நற்றிணை 387, புறநானூறு 19, 23-16, மதுரைக்காஞ்சி 127 ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.  பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையில் பாடப்படுபவனும் தலைவனும் இவரே ஆவார்.

இந்நூல் காஞ்சித்திணையில் அமைந்ததாகும்.  இந்த உலகம் நிலையில்லாததாகும். இந்த உலகில் நிலைபேறுடைய புகழை நாடிச் செயல்படும் நிகழ்ச்சிகளைக் கூறுவது காஞ்சித்திணை எனப்படுகிறது.  காஞ்சித்திணை என்பது  வீடுபேறு நிமித்தமாக அறம் பொருள் இன்பம் என்னும் பொருட்பகுதியாலும் அவற்றின் உட்பகுதியாகிய உயிரும் உடலும் செல்வமும் இளமையும் நிலைபெறாத உலகின் இயற்கையைப் பொருந்திய நல்ல நெறியினை உடையது ஆகும்.  மதுரைக்காஞ்சி என்பதற்கு ‘மதுரையிடத்து அரசர்க்குக் கூறிய காஞ்சி’ எனப் பொருள் கூறினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

பாண்டியன் நெடுஞ்செழியனைச்  சிவபெருமானின் வழித்தோன்றல் என்று  மாங்குடி மருதனார் புகழ்ந்து பாடுகின்றார். மன்னனின் வள்ளல் தன்மை, ஆலங்கானம் போரில் பெற்ற வெற்றி, பிற போரின் வெற்றிகள், கைப்பற்றிய பகைவர்களின் நாடுகளை சிறந்த முறையில் ஆட்சிபுரிதல், மன்னனை வாழ்த்தி அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தல், பாண்டிய நாட்டின் ஐந்து வகை நிலங்கள், மதுரை நகரின் சிறப்புகள், அங்கு வாழும் மக்களைப் பற்றிய செய்திகள், மதுரை நகரின் கடை வீதிகள், உணவுப்பொருள்கள், செல்வர்களின் மாளிகைகள், நால்வகைப் படைகளின் இயக்கம், பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, அறங்கூறு அவையம், மதுரையில் இரவு வாழ்க்கை, ஓண நாள் விழா, மன்னனின் நிலை, போர் மறவர்களை மன்னன் வாழ்த்துதல், மன்னனைப் புலவர் மிகச் சிறப்பாக வாழ்த்துதல் ஆகியவற்றைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது.

“அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந்துப்பின்,
தொல்முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந!”

என்று மன்னன்  கடவுளுக்கு  நிகராகப் போற்றப்படுகிறான்

போரினில் வெற்றி பெறும் படையினை உடைய ‘தென்னவன்’ என்னும் பெயரையுடைய, பகைவர்கள் நெருங்க முடியாத வலிமையையுடைய, பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றலும், பக்கமலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனுமாகிய வீரர் பெருமானே!

 அடுத்து மன்னனின் வள்ளல் தன்மை கூறப்படுகிறது. ”அங்கே   ஒரு பக்கத்தில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதனால் எழுந்த ஓசைகள் நிறைந்த  ஊர்களில் இருந்து, முழவுபோலும் தோளினையுடைய பொருநர் தடாரி எனும் இசைக்கருவியை இசைத்துப் பாடுகின்றனர். அவர்களுக்கு  அச்சம் பொருந்திய தலைமை உடைய கன்றும், பிடியும் கொண்ட கூட்டத்துடன், ஒளியுடைய தந்தங்களை உடைய களிற்று யானைகளைக் கொடுத்தும், பாணர்க்கும் விறலியர்க்கும் பொன்னால் செய்த தாமரை மலர்களைச் சூட்டியும், அழகிய அணிகலன்களை எல்லார்க்கும் கொடுக்கும், பல குட்ட நாட்டில் உள்ளவர்களை வென்ற வேந்தனே!”என இப்பாடல் அடிகள் காட்டுகின்றன

”ஒரு சார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு
உருகெழு பெருஞ்சிறப்பின்
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந்தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்,
பல் குட்டுவர் வெல் கோவே!

கீழ்க்கண்ட பாடல் அடிகள் தலையாலங்கானப்போர் பற்றிக் காட்டுகின்றன.

”ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட,
அடுதிறல் உயர் புகழ் வேந்தே!”

 ”தலையாலங்கானம் என்ற ஊரில் பகைவர்களுக்கு அச்சம் தோன்றுமாறுப் போரிட்டு, சேர சோழ மன்னர்களையும் ஐந்து குறுநில மன்னர்களையும் தோற்கடி த்ததோடு, அவர்களின் முரசைக் கைப்பற்றிக் களவேள்வி விரும்பிப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்க உடைய உயர்ந்த புகழையுடைய வேந்தனே!” என்பதே இப்பாடல் அடிகளின் பொருளாகும்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்,சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, என்னும் சேர மன்னனையும், கிள்ளிவளவன் எனும் சோழ மன்னனையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும்  ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான். இச்செய்தியை அகநானூறு, நற்றிணை, புறநானூறு நூல்களும் காட்டுகின்றன.

நூலின் இறுதியில் மாங்குடி மருதனார் மன்னனுக்கு அவன் புகழ் நிலைக்க அவன் செய்ய வேண்டியனவற்றைக் கூறுகிறார். இந்த நகரில், மரத்தடிகளில் எல்லாம்  செம்மறிக் கிடாக்கள் கொல்லப்படுகின்றன.  கொழுப்பையுடைய அவற்றின் தசைகளைச் சுடுவதால் அக்கொழுப்பு உருகவும், நெய்யுடன் பொரியல்கள் உண்ண விரும்புவோர் ஆரவாரிக்கின்றனர். தாளிக்கும்போது எழுந்த நிறத்தையுடைய புகை முகில்கள் போல் திசைகளில் பரவுகின்றது. அப்படிப்பட்ட இந்த ஊரில், பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று நீயும் நல்ல வேள்வித் துறையில் ஈடுபடுவாயாக!

பண்டைய ஆணையையுடைய விளங்கிய நல்ல ஆசிரியர்கள் தம்முள் சேர்ந்து  நுகர்ந்த செந்தமிழ் வழங்கும் காலம் எல்லாம் உன் புகழ் விளங்க வேண்டும். அதற்காகத் தமிழ்ச் சங்கம் நிறுவுக! அச்சங்கத்தில் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினை உடைய நிலந்தரு திருவின் நெடியோன் போல, வியப்பும் சான்றான்மையும் உடைய செவ்விதான சான்றோர் பலரை அமர்த்துக. குற்றம் இல்லாத சிறப்புடன் தோன்றி, அரிய பொருட்களைக் கொண்டு வந்து குடிமக்களின் நலம் பெருக்குக! நூல்களைக் கற்று நின் புகழை நிலைநிறுத்துக! கடல் நடுவில் தோன்றும் கதிரவன் போலவும், பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள நிலவு போலவும், பொலிவு பெற்ற சுற்றத்துடன் பொலிந்து இனிது விளங்கி, உண்மையான நல்ல புகழை உலகில் நிறுத்துக!, பகைவர்களை வென்று கொல்லும் தவறாத வாளையுடைய இளைய பல கோசர்கள், நெறி முறையின் மரபில் நின்னுடைய மெய்மொழியைக் கேட்டு நடக்க, பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்த ஐம்பெரும் அமைச்சர்களும் (ஐம்பெரும் குழுக்களும்), பிறரும் நிறைந்து, பொலிவு விளங்குகின்ற புகழினை உடைய அவை நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ ஆட்சி செய்வாயாக! மகளிர் பொன்னால் செய்த வட்டில்களில் நறுமணம் மிகுந்த தேறலை நினக்குத் தர, அதனைப் பருகி, நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்து இனிதாக இருப்பாயாக!

நூலின் மையமே மன்னனுக்கு அறிவுரை கூறும் இப்பகுதியாகும். இந்நூலில் பல்வகை உணவு வகைகள் சொல்லப்படுகின்றன.

“சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய தேமாங்கனியும்,
பல்வேறு உருவின் காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்,
இன்சோறு தருநர் பல்வயின் நுகர,

சாற்றாலும் மணத்தாலும் வேறுபட்ட அழகு கொண்ட பலாவின் சுளைகள், இனிய மாவின் பழங்கள், ஆகியவற்றுடன்  பல்வேறு வடிவில் உள்ள காய்கள், பழங்கள் உண்ணப்படுகின்றன. முகில்கள் மழைபொழிந்து வளர்த்த கொடிகள் அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய கீரைகள் சமைக்கப்படுகின்றன. அமுதை வார்த்தார்ப்போல் உள்ள  கற்கண்டுத் துண்டுகளையும், பலரும் புகழும்படி சமைத்த பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோற்றையும்,  கிழங்குகளுடன் உண்பார்கள்.

மாங்குடி மருதனார் மனன்னுக்கு நிலையாமையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.

”பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படுகண் முரசம் காலை இயம்ப,
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்த்
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே! ”

பருந்துகளும் பறக்கமுடியாத உயர்ச்சியுடைய அரண்மனைகள் இருக்கும். அங்குள்ள பாசறைகளில் பள்ளியெழுச்சி முரசம் அதிகாலையில் ஒலிக்கும். மன்னர்கள் பகைவர்களுக்குக் கேடு உண்டாகும்படி வென்று, வேண்டிய நிலங்களில் சென்று தங்குவார்கள். அவர்கள் வெற்றி முரசுகளையுடைய பல வேல்களை உடைய மன்னர்கள் ஆவர். அவர்களின் எண்ணிக்கை கரையை இடித்து முழங்கும் செறிந்த கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலினும் பலர் ஆவார்கள், தங்கள் புகழ் எங்கும் பரவும்படி, அகன்ற இடத்தையுடைய இந்த உலகை ஆண்டார்கள். ஆனாலும் பிறவியை நீக்க முயலாது மாண்டவர்கள் ஆனார்கள்” என்பது இந்த அடிகளின் பொருளாகும். இதன்மூலம் அரசனுக்கு உலகில் எதுவும் நிலையானதன்று என விளக்குகிறார்.

நாட்டு மக்களின் குறைகளையும். வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்க அறம் கூறு அவையம் என்னும் அமைப்பி மதுரையில் இருந்ததாம். அதைப்பற்றிச் சொல்லும்போது,

”அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகிச்,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்”

என மாங்குடி மருதனார் காட்டுகிறார்.

அந்த அவையத்தில்  நடுவுநிலைமையுடன் கூறுவார்களா அல்லது கூறமாட்டார்களா என வந்தவர்களின் அச்சத்தையும் வருத்தத்தையும் ஆர்வத்தையும் நீக்கும் பெருமக்கள் இருந்தார்கள். மேலும் அவர்கள் சினமும் மகிழ்ச்சியும் கொள்ளாத நடுநிலையில் இருந்தார்கள். அவர்கள் துலாக்கோலை ஒத்த நடுவுநிலைமை உடையராய் இருந்தார்கள். அப்படிப்பட்ட சிறந்த கொள்கையுடையவர்கள் அறம் கூறும் அவையில் இருந்தார்கள்.

மேலும் மதுரை மாநகரில் பெரும்பாணர் வாழிடம், அந்தணர்ப் பள்ளி, பௌத்தப் பள்ளி, அமணப் பள்ளி எனப் பலர் வாழும் இடங்கள் தனித்தனியாய் இருந்தன. அவற்றில் அந்தணர்ப் பள்ளியக் காட்டும்போது,

“சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி

உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்” என்று மங்குடி மருதனார் காட்டுகிறார்.

அங்கே இருந்த அந்தணர்கள்  சிறந்த வேதங்களைப் பொருள் விளங்கப் பாடத்தகுந்தவர்கள். அவர்கள் மிகச் சீரிய தலைமை அடைந்த ஒழுக்கத்துடன் இருந்தார்கள், அவர்கள் நால்வகையான நிலங்கள் கொண்ட இந்த உலகத்தில், இறை பணியினால் உயர்ந்த நிலையை இவ்வுலகத்தில் இருந்தே அடைய எண்ணிய பெருமக்கள் ஆவர்.  அறநெறியிலிருந்து தப்பாது அன்புடைய நெஞ்சம் உடையவர்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். மேலும்  மலையைக் குடைந்தாற்போல்  அந்தணர் இருப்பிடம் இருந்தது எனவும் மதுரைக்க்காஞ்சி காட்டுகிறது.

சங்ககால மதுரையை மட்டுமன்றி அங்கு வாழ்ந்த மக்களின் பல்வேறு நிலைகளையையும், இந்தப் பத்துப் பாட்டு நூல் விளக்குகிறது எனத் துணிந்து கூறலாம்.

 

 

நாயன்மார் வெண்பா-3 – தில்லை வேந்தன்

 

(ஓர் அடியார் – ஒரு வெண்பா) 

அரிவாட்டாய நாயனார் குருபூஜை | Arivatthaya Nayanar Gurupuja

12) அரிவாட்டாய நாயனார்

சோழ நாட்டிலுள்ள கணமங்கலம் என்ற ஊரில், வேளாண் குடியில் பிறந்த தாயனார் என்ற அடியார் வாழ்ந்து வந்தார். அவர், நாள்தோறும் சிவபெருமானுக்குச் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார், அவரது இயல்பினை உலகுக்கு அறிவிக்க எண்ணிய இறைவன், அவர் வறுமை அடையுமாறு செய்தார். தாயனார் கூலிக்கு நெல் அறுத்துக் கிடைத்தவற்றை இறைவனுக்குப் படைத்து வந்தார், வீட்டுக் கொல்லையில் வளர்ந்த கீரையைப் பறித்து மனைவி சமைத்துத் தர அதை உணவாக உண்டார்.
ஒரு நாள், அவர் செந்நெல் அரிசியையும், பசிய மாவடுவையும், மென்மையான கீரையும் ஒரு கூடையில் சுமந்து இறைவனுக்குப் படைக்க எடுத்துச் சென்றார். அவருடைய மனைவியார் ஒரு மட்கலத்தில் பஞ்சகவ்வியத்தை எடுத்துக்கொண்டு அவர் பின்னால் சென்றார்.. அப்போது தாயனார் பசி மயக்கத்தால் தளர்வுற்றுக் கீழே விழப்போனார். மட்கலம் மூடிய கையால் மனைவி அணைத்தும் கூடையில் இருந்தவை கீழே தரையில் விழுந்தன. இறைவனுக்குப் படைக்கக் கொண்டு சென்றவை தரையில் விழுந்ததால் வருந்திய தாயனார் அரிவாள் கொண்டு தன் கழுத்தை அரிய முற்பட்டார்.

அப்போது நிலத்தின் வெடிப்பினின்று வெளிப்பட்ட இறைவனது திருக்கை, கழுத்தை அரியும் தாயனாரின் கையைத் தடுத்து் நிறுத்தியது. இறைவன் மாவடுவை ‘விடேல்’ ‘விடேல்’ என்று கடிக்கும் ஓசையும் எழுந்தது.

நாயனாரின் கழுத்தில் ஏற்பட்ட ஊறும் நீங்கியது.

இடப வாகனத்தில் காட்சி கொடுத்த இறைவன்,”நீ செய்த செயல் நன்று. உன் மனைவியுடன் என்றும் என் உலகில் வாழ்வாயாக”என்று அருளிச் செய்தார்.

அரிவாளால் கழுத்தை அரியத் தொடங்கியதால் தாயனார், அரிவாள் தாயர்( அரிவாட்டாயர்) என்று பெயர் பெற்றார்.

அரிவாட்டாயர் வெண்பா

தரையில் அமுதுவிழத் தாயன் கழுத்தை
அரிய முனைய அதனை- விரைவில்
தடுத்த விடையவன் தான்மகிழ்ந்து காட்சி
கொடுத்தருள் செய்தகதை கூறு!

*******************

13)ஆனாய நாயனார்

இசையால் ஈசனை வசப்படுத்திய நாயனார் | tamil news 63 nayanar
மழ நாட்டைச் சேர்ந்த திருமங்கலம் என்ற ஊரில் ஆயர் குளத்தில் தோன்றியவர் ஆனாயர். தம் ஏவலரின் துணை கொண்டு பசுக் கூட்டத்தைக் காட்டுக்குக் கொண்டு சென்று மேய்த்து வந்தார் இவர் குழல் ஒன்றைக் கையில் ஏந்தி இறைவனுடைய ஐந்து எழுத்தை இசையுடன் கலந்து வாசித்து இன்புறுவார். மந்தரம், மத்திமம், தாரம், ஆகிய மூன்று ஒலிநிலைகளிலும் இறைவனுடைய ஐந்து எழுத்தை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். இசை வகைகள் பலவற்றில் தாளம் பொருந்த இவர் வாசித்த பண் எல்லாப் புறங்களிலும் பரவும்.

கார்காலத்தில் ஒரு நாள் பசுக் கூட்டங்களை ஓட்டிக்கொண்டு முல்லை நிலமாகிய காட்டுக்குச் சென்றார். அங்கு, மாலை போல் தொங்குகின்ற அழகிய பூங்கொத்துக்களைக் கொண்ட கொன்றை மரம் ஒன்றைக் கண்டார. தாழ்ந்த சடைகளைக் கொண்ட சிவபெருமானைப் போல் அக்கொன்றை மரம் விளங்கியதால்,ஆனாயர் உள்ளம் உருகினார். சிவபெருமானிடத்தில் ஒன்றுபட்ட உள்ளத்தில் இருந்து எழும் அன்பின் மடையைத் திறந்தார். திருவைந்தெழுத்தைக் குழல் இசையில் இசைத்தார். அந்த இசை, கற்பக மரத்தில் விளைந்த தேனை அமுதத்துடன் கலந்து கேட்போரின் செவிகளில் வார்த்தது. பசுக் கூட்டங்கள், மேய்ந்த புல்லை அசை போடாமல் மெய்ம்மறந்து நின்றன. கன்றுகள் பால் குடிப்பதை விட்டு இசையைக் கேட்டு நின்றன. காட்டு விலங்குகளும் மயிர்க் கூச்செறிந்து, பக்கத்தில் வந்து நின்றன. ஆடும் மயில்கள் ஆடலை மறந்து வந்து கூடின. கோவலர், தம் தொழிலை மறந்தனர். நாகர்கள், தெய்வ மகளிர், விஞ்சையர், கின்னரர் போன்ற தேவகணங்களைச் சேர்ந்தோர் குழல் இசையின் வசப்பட்டு அங்கு வந்து சேர்ந்தனர். பாம்பும் மயிலும், சிங்கமும் யானையும், புலியும் மானும், பகைமை மறந்து ஒன்று சேர்ந்து வந்து அங்குக் கூடின. காற்று இயங்கவில்லை; மரங்கள் அசையவில்லை; அருவிகள் வீழவில்லை; காட்டாறுகள் பாயவில்லை; மேகங்களும் மழையைப் பொழியவில்லை,: ஏழு கடல்களும் துளும்பவில்லை.

ஆனாயரின் குழலிசை வையத்தை நிறைத்து, வானத்தையும் வசமாக்கியது. இறைவனின் திருச்செவியின் அருகில் சென்று பெருகியது. அந்த இசையைக் கேட்ட சிவபெருமான், உமை அம்மையாருடன் காளை ஊர்தியின் மேல் வந்து காட்சியளித்தார்.

“குழல் வாசிக்கும் இந்த நிலையிலேயே நீ என் உலகத்தை வந்து அடைவாயாக” என்று அருளிச் செய்தார்.

ஆனாயர் வெண்பா

தூங்கிணர்க் கொன்றையைத் தூய்சிவன் என்றெண்ணி
வேய்ங்குழல் பண்ணிசைத்த வேளையில் – ஓங்கும்
இனிமையில் ஈடுபட்ட ஏறூர்ந்தான் சொன்னான்
இனியெனைச் சேர்ந்திருப்பாய் என்று!

(தூங்கிணர்- தொங்கும் கொத்து)

 

**********************

14)மூர்த்தி நாயனார்

அரனால் கிடைத்த ஆட்சிப் பொறுப்பு | Moorthy Nayanar gurupooja
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் தோன்றியவர் மூர்த்தி நாயனார். சிவபெருமான் திருவடிகள் மீது பற்று வைத்த இவர், ஏனைய பற்றுகளை முற்றிலும் அறுத்தவர். திருவாலவாயில் உறைகின்ற சொக்கலிங்கப் பெருமான் திருமேனி மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார்
இப்படி அவர் திருப்பணி செய்து வந்த நாளில், வடுகக் கருநாடக அரசன் ஒருவன் பெரும் படையுடன் வந்து பாண்டியனோடு போர் செய்து பாண்டிய நாட்டின் அரசாட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்

அவன் சமண சமயத்தைச் சார்ந்தவனாக இருந்ததால் சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்குத் துன்பங்கள் இழைத்து வந்தான். சமணத்திற்கு உட்படுத்த எண்ணி மூர்த்தியாருக்குப் பல கொடுமைகளைச் செய்தான். மூர்த்தி நாயனார் தமது வழக்கமான திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார் கொடியவனான அரசன், மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான்.

மனம் வருந்திய மூர்த்தி நாயனார் ,”இக் கொடிய மன்னன் இறந்து, சைவ சமயம் தழைக்கச் செய்யும் மன்னன், நாட்டை அற வழியில் ஆளும் நாள் எந்நாளோ?” என்று ஏங்கினார்
ஒரு நாள், பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் அவருக்குக் கிடைக்கவில்லை. “இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு உண்டாயிற்று, ஆனால் என் கை மூட்டுக்குத் தடை வராது” என்று சந்தனக் கல்லில் முழங்கையைத் தேய்த்தார். தோல் தேய்ந்து, நரம்பும் தேய்ந்து, எலும்பு தெரிந்தது.இதைக் கண்ட இறைவன் அவர் கனவில் தோன்றி, “இனி இச்செயலைச் செய்யாதே. நாட்டின் அரசன் இறப்பான். பின் நீயே அரசன் ஆவாய்.அதன் பிறகு உன் எண்ணப்படித் திருத்தொண்டு செய்து, என் உலகத்தை அடைவாயாக!” என்று அருள் செய்தார்.

அன்று இரவே அந்தக் கொடிய மன்னன் இறந்தான். அமைச்சர்கள் கூடி அவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தனர். அவனுக்கு மைந்தன் இல்லாததால், யானை ஒன்றின் கண்ணைக் கட்டி விடுவதென்றும் அது யாரைத் தன் மீது ஏற்றிக் கொள்கிறதோ அவரே அரசன் என்று முடிவு செய்தனர். யானையின் கண்ணைக் கட்டி அவர்கள் விட்டபோது அந்த யானை கோயிலின் முன்பு நின்று கொண்டிருந்த மூர்த்தியார் முன் பணிந்து, அவரை எடுத்துத் தன் பிடரி மேல் வைத்துக் கொண்டது

மூர்த்தியாரை அரசனாக்க எண்ணிய அமைச்சர்களிடம், “சமண சமயம் நீங்கிச் சைவ சமயம் ஓங்குமானால் நான் இந்நாட்டை ஆள்வேன்,” என்று கூறினார். அமைச்சர்கள் அதற்கு இசைந்தனர்

திருவெண்ணிறே முடிசூட்டாகவும், , உருத்திராட்சமே அணிகலனாகவும், சடை முடியே அரச முடியாகவும் கொண்டு மூர்த்தியார் சைவ நெறி தழைக்க நாட்டை ஆண்டு பின்னர்ச் சிவபதம் அடைந்தார்.

மூர்த்தியார் வெண்பா

சந்தனம் தானரைத்துச் சாத்தியவர் மன்னவன்
தந்தத் தடைகளால் தன்முழங்கை – முந்தியே
தேய்க்க இறைதடுக்கச் சீர்களிறு தேர்ந்தெடுக்க
ஆக்கினார் சைவ அரசு!

 

*******************

 

15)முருக நாயனார்!

முருகநாயனார் - சாய் சுந்தரம்
சோழ நாட்டைச் சேர்ந்த திருப்பூம்புகலூர், பூஞ்சோலைகளும் நீர் நிலைகளும் நிறைந்த அழகிய ஊராகும். அவ்வூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். அவர் நாள்தோறும் வைகறையில் எழுந்து நீராடி, இறைவனுக்குச் சூட்டுதற்குப் பல் வகையான மலர்களைப் பறிக்கக் கூடைகளுடன் செல்வார்.

கொம்பிலே பூக்கும் கோட்டுப்பூ, குளிர்ந்த நீரில் மலரும் நீர்ப்பூ, கொடிகளில் குவிந்திருக்கும் கொடிப்பூ, நிலத்தில் நிறைந்திருக்கும் நிலப்பூ ஆகிய நால்வகை மலர்களைப் பறித்துக் கோவை, இண்டை, மாலை, கண்ணி, பிணையல், தொடையல் போன்ற பல்வகை மாலைகளை முறையாகத் தொடுப்பார். அவற்றை அன்புடன் புகலூர் ஈசனுக்குச் சாத்தி, ஐந்தெழுத்தை ஓதி மகிழ்வார்.

உமையம்மையின் ஞானப்பாலை உண்ட ஞானசம்பந்தருக்கு இவர் பெருமை உடைய நண்பராகத் திகழ்ந்தார்.

முன்பு செய்த பூசையின் பயனாக ஞானசம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பேறு பெற்றார்.

சிவபெருமானின் திருவருளால் அவன் திருவடி நீழலில் நிலைபெற்ற தன்மையை அடைந்தார்.

முருக நாயனார் வெண்பா

கோட்டுப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ, நிலத்தின்பூ
வாட்டமின்றிப் போய்ப்பறித்து வைகறையில்- சூட்டிப்
புகலூரான் தாள்பணிந்து போற்றுவார், அன்பு
மிகலுண்டு சம்பந்தர் மேல்!

 

*******************

 

16) உருத்திர பசுபதி நாயனார்

இன்று உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை! | Dinamalar
பொன்னி நதி பாய்ந்து வளம் பெருக்கும் சோழநாட்டில் திருத்தலையூர் என்ற ஊரில் வேதியர் குடியில் பிறந்தவர் பசுபதியார். அவர், சிவபெருமான் திருவடிகளில் வைத்த அன்பினையே பெரும் செல்வம் ஆகக் கொண்டவர்.பசுபதியார், பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ஓசையும் கேட்கின்ற அழகிய செந்தாமரை மலர்களை உடைய குளிர்ந்த பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு, இரண்டு கைகளையும் தலைமீது குவித்து, வேதத்தின் பயனான உருத்திர மந்திரத்தை ஓதுவார். இவர் இவ்வாறு இரவு பகலாக ஒன்றுபட்ட உணர்வுடன் உருத்திர மந்திரத்தை ஓதி வந்த போது, உமையம்மையை இடப்பக்கம் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து அவருக்குச் சிவலோக வாழ்வினை அளித்தருளினார்.

உருத்திரத்தை ஓதியதால் “உருத்திர பசுபதி நாயனார்” என்று அவர் வழங்கப்பெற்றார்.

உருத்திர பசுபதியார் வெண்பா

புள்ளொலிக்கும் தாமரைப் பொய்கை புகுந்ததன்
வெள்ளம் கழுத்தளவு மேவுகையில் -உள்ளம்
மகிழ உருத்திரம் வாய்மொழிய ஈசன்
நெகிழ்ந்தளித்தான் மேலாம் நிலை!

(புள்- பறவை)

 

***********”***********”

 

17)திருநாளைப் போவார் நாயனார்.

திருநாளைப் போவார் நாயனார் - சாய் சுந்தரம்

கொள்ளிட நதி பாய்ந்து வளம் பெருக்கும் வயல்களை உடைய மேற்கா நாட்டைச் சேர்ந்த ஊர் ஆதனூர். அவ்வூரில், புலையர் குலத்தில் தோன்றிய சிவபக்தர் நந்தனார். உணர்வு தோன்றிய நாளிலிருந்து சிவபெருமானிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார். கோவிலில் இருந்த பேரிகைகளுக்காகப் போர்வைத்தோல், விசிவார் போன்றவற்றைக் கொடுப்பார். வீணை, யாழ் முதலிய கருவிகளுக்கு நரம்புகள் தந்து வந்தார்.

திருநாளைப் போவார் நாயனார் | Dinamalar

ஒரு நாள், அருகிலுள்ள திருப்புன்கூருக்குச் சென்று, அக்கோவிலில் உறையும் சிவலோகநாதனை வழிபட விரும்பினார். வழியை மறைத்திருந்த நந்தியை விலகச் செய்த இறைவன், தரிசனம் அளித்தான்.

மிகவும் மகிழ்ந்த நந்தனார் கோவிலின் அருகில் இருந்த ஒரு பள்ளத்தைக் குளமாக வெட்டினார். இப்படிப் பல திருக்கோவில்கள் சென்று சிவனை வணங்கினார்.

தில்லையில் உள்ள கூத்தப் பெருமானை வணங்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் அது தம் குலத்துக்குப் பொருந்தாது என்று ஆசையைக் கைவிடுவார். பிறகு அவருக்குத் தில்லைக்குப் போக வேண்டும் என்ற ஆசை மீண்டும் எழும்.

“நாளைப்போவேன்”, “நாளைப்போவேன்” என்று கூறியவாறு நாள்களைக் கழித்தார். இதனால் அவர் “திருநாளைப் போவார்” என்று அழைக்கப்பட்டார்.

நாள்கள் கழிதல் பொறாதவராய், ஒருநாள் தில்லைத் திருத்தலத்துக்குச் சென்று அதன் எல்லையில் நின்று வணங்கினார். உள்ளே நுழைவதற்குத் தயங்கிய நந்தனார், அத்தில்லையை இரவு பகலாகப் பலமுறை வலம் வந்தார். அவரது வருத்தத்தை நீக்கத் திருவுளம் கொண்டான் தில்லைக் கூத்தன். நந்தனாரின் கனவில் தோன்றி, “இப்பிறவி நீங்க, எரியிடை மூழ்கி, முப்புரி நூல் மார்புடன் முன் வந்து என்னை அணைவாய்!” என்று மொழிந்தார். அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படித் தில்லைவாழ் அந்தணருக்கும் கனவில் தோன்றி ஆணையிட்டார். அந்தணர்கள் நந்தனாரை வரவேற்று, இறைவன் ஆணைப்படி வேள்வித்தீ அமைத்துத் தந்தனர். வேள்வித்தீயை வலம் வந்து, அதனுள் புகுந்த நந்தனார், புண்ணிய மாமுனி போன்ற பொலிவான தோற்றத்தோடு வெளிவந்தார். வானவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்து மலர் மாரி பொழிந்தனர். தில்லைவாழ் அந்தணர்களும் உடன் வரச் சென்ற நந்தனார், திருக்கோபுரத்தைத் தொழுது வணங்கி விரைவாக உள்ளே புகுந்தார். இறைவன் அருள்நடனம் ஆடுகின்ற எல்லையை அடைந்து உள்ளே போனார். அதன் பின்பு அவரை எவரும் பார்க்கவில்லை.
தன்னை அவர் என்றும் வணங்கித் தொழுத வண்ணம் அருகிலேயே இருக்குமாறு ஆனந்தக் கூத்தன் அவருக்குத் திருவருள் செய்தான்.

திருநாளைப் போவார் வெண்பா

நந்தனார், தில்லை நடமாடும் ஈசனருள்
முந்தவெரி மூழ்கி முனிவரென- வந்து
புகுந்தார் பொலன்மன்றுள் போயுட் கலந்தார்
தகுந்தபுகழ் பெற்றடைந்தார் தாள்!

(பொலன்மன்று- பொற்சபை,)

(தொடரும்)