Monthly Archives: May 2015
வைகாசி மாத இலக்கிய வாசல்

குவிகம் இலக்கிய வாசலின் இரண்டாவது நிகழ்ச்சி இம்மாதம் 23 ஆம் தேதி. சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு
"நான் ரசித்த தி. ஜானகிராமன்"
என்னும் தலைப்பில் கலந்துரையாடலாக நடைபெறவிருக்கிறது.

இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை 600041 (திருவான்மியூர் சிக்னல் – திருவான்மியூர் பேருந்து நிலையம் வழியில் BOMBAY DYEING SHOW ROOM அருகில் )
நிகழ்ச்சி கலந்துரையாடலாக வடிவமைக்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் தாங்கள் ரசித்த ஒரு படைப்பைப் பற்றி ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வசதியாக, பேசவிருக்கும் படைப்பின் தலைப்பை (மூன்று தலைப்புகள் குறிப்பிடவும்) மின்னஞ்சல் மூலம் முன்பாகவே தெரிவிக்கவும்,
பலர் ஒரே ரசிப்பைப் பற்றிப் பேசுவதைத் தவிiர்க்கவே இந்த முன்னேற்பாடு.!
தங்களுக்கு அளிக்கப்படும் தலைப்பு முன்னதாகவே தெரிவிக்கப்படும்.
தங்கள் இலக்கிய நண்பர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன் சுந்தரராஜன் – கிருபானந்தன்
– குவிகம் இலக்கிய வாசல்
மினனஞ்சல் : ilakkiyavaasal@gmail.com
பக்கம் – 2
ஷாலு மை வைஃப்
சென்ற
மாதத்தில்

ஃபென்டாஸ்டிக்
ஷாலு! கோமாதா பூஜையைக் கலக்கிட்டே“ என்றேன்.
அவள்
அதற்குப் பதில் சொல்லாமல் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கோமாதா பூஜை
செய்ததற்கு உடனே பலன் வந்துவிட்டது என்றாள்.
’என்ன என்ன’ என்று ஆவலோடு கேட்டேன்.
மெல்லச் சிரித்துக் கொண்டே காதில் சொன்னாள்.
அதைக்
கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
இனி …..
நான் ஏதோ
கற்பனை செஞ்சதில் அவள் என்ன சொன்னாள் என்பது காதில் விழவே இல்லை. அதற்குள் தலை வேறு சுற்ற ஆரம்பித்து விட்டது. என்ன என்ன என்று கேட்பதற்குள் ஷிவானியின் ’அம்மா ’ என்ற அலறலைக் கேட்டதும் ஓடிவிட்டாள் ஷாலு.
என் கற்பனை
வாயு வேகத்தில் மனோ வேகத்தில் ஆட்டோ வேகத்தில் ஓடியது!
·
ஷிவானிக்குப்
பிறகு ஒரு தமிழ்ச்செல்வன் வேண்டும் என்று ஒரு ஜாலி இடைவேளை போது சொல்லுவாள். நான் ரெட்டை வால்களே போதும் என்று சொல்லுவதுண்டு! அது பலித்துவிட்டதோ?
·
இல்லை என்
மாமியாரும் மாமனாரும் இங்கே வந்து ஒரு வருஷம் டேரா போட வர்ராங்களோ?
·
அல்லது
பெரியவனை சைனிக் ஸ்கூலில் சேர்க்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தா! நான் தான் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். கோமாதா தயவால அது நடக்கப் போகுதா?
·
அல்லது
ஷாலுவுடன் பிளாட்
அஸ்ஸோசியேஷன் பொருளாளர் பதவிக்குப் போட்டி போட்டு ஜெயிச்ச சுழல் மாலு யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிட்டாளா?
( ஸ்பின்ஸ்டர்
என்பது சுருங்கி ஸ்பின் ஆகி அது தமிழ்ப் படுத்தப்பட்டு சுழல் ஆகிவிட்டது)
·
இல்லை எங்க
மானேஜர் கிழம் கோமாதாவைப் பாத்து ரொம்ப புல்லரிச்சு எனக்கு பிரமோஷன் ஏதாவது ரெகமண்ட் பண்ணிட்டாரா?
அதற்கு
மேல் என் கற்பனை ஓடவில்லை. அதற்குள் ஷிவானி ஓடி வந்து ’அப்பா ! அம்மா உன்னை சாமி ரூமுக்கு வரச் சொன்னா’ என்று கத்தி விட்டு விளையாட ஓடிவிட்டாள்.

ஷாலு
ஸ்வாமி படத்துக்கு முன்னாடி தொடர் நமஸ்காரம் செய்து கொண்டிருந்தாள். ஷாலு எப்பவும்
இப்படித்தான். அவள் நினச்சது நடந்தாலும் சரி அல்லது நினைக்காதது
நடக்காமலிருந்தாலும் சரி தொடர் நமஸ்காரம் ஆரம்பித்து விடுவாள். 13,26,39 என்று எண்ணிக்கை 13ன் வரிசையில் போகும். சில சமயம் ”இன்னிக்கு பதிமூணு பதிமூணு
ஆச்சு!
அப்ப மொத்தம் எத்தனை “என்று கேட்பாள். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு இந்த
பதிமூணாம் வாய்ப்பாடு ஒதறல். சாய்ஸ்ல விட்டுடிவேன். ஏதோ ஒரு நம்பரைச் சொல்லுவேன்.
அவளும் சரி என்று விட்டுவிடுவாள். அவளுக்கும் பதிமூணு தகராறு. எங்களுக்குள்ளே இருந்த ( நோட் மை லார்ட்! இருந்த) பதிமூணு பொருத்தம் தான் எங்க கல்யாணத்துக்கே காரணம். அந்த ப்ளாஷ் பேக்கைப் பின்னாடி தேவையானா பாத்துக்கலாம்.!
போறும்
ஷாலு! இப்படி ரொம்ப நமஸ்காரம் பண்ணினா ஆர்தோபோரோசிஸ் வரப் போகுது என்று பலமுறை
சொல்லிப் பயமுறுத்திப் பார்த்தேன். அவள் பனங்காட்டு நரி. ’இது எத்தனை சக்தி வாய்ந்தது தெரியுமா?
’ டிவி பாட்டியே சொல்லிட்டா? டிவி பாட்டி தான் அவளுக்கு சுப்ரீம் கோர்ட்.
தன்வந்திரி பாட்டி . எதற்கெடுத்தாலும் ஒரு பாட்டி வைத்தியம் சொல்வாள். அதனால் அவள்
பெயர் தன்வந்திரி ஆகி அதுவும் சுருங்கி டிவி ஆகிவிட்டது. அது தெரியாமல் இப்போ
புதுசா குடி வந்தவங்க பாட்டி டிவி சீரியல்ல நடிச்சதால அந்தப் பேர் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அது உண்மையோ என்று எங்களுக்கும்
சந்தேகம் வந்துவிட்டது.
’சஸ்பென்ஸ் தாங்கல ஷாலு. சொல்லித் தொலையேன்!’ அதற்கும் ஷாலு மசியல. இன்னும் ஒரு மணி நேரத்தில
சரியான்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன் என்று டென்ஷனை ஏத்திவிட்டு டென்ஷனே இல்லாமல் சொன்னாள்.
”உடனே தெரிஞ்சுக்கணுமா? காரை எடுங்க ! நம்ம ரெண்டு பேர் மட்டும்
கல்யாணி ஆஸ்பத்திரிக்குப் போவோம். அங்கே டாக்டர் லக்ஷ்மி கிட்டே கேட்டுட்டா சஸ்பென்ஸ் ஓடைஞ்சுடும்! “
சரி! இது –
’அடி
மூணாவது கள்ளி ’ கேஸ் தான்!
சந்தேகமேயில்லை! ஆனால் அவ பேசற தோரணையைப் பாத்தா அது இல்லை என்கிற மாதிரியில்ல
இருக்கு.

கல்யாணி
ஆஸ்பத்திரிக்குப் போனோம். அப்பாயிண்ட் மெண்ட் வாங்க வேண்டாமா? என்று கேட்டேன். இதுக்கெல்லாம் தேவையில்லை. நீங்க கொஞ்சம் வெளியே இருங்கோ! என்று சொல்லிவிட்டு . ’ஷாலு உள்ளே யாரோ இருக்காங்க போலே ’ என்று நான் சொன்னதைக் காதில் போட்டுக்
கொள்ளாமல் டாக்டர் ரூமுக்குள் சென்றாள் .
நான் அங்கே
உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த ஐடி பொண்ணுகளுக்கு என்ன பிராப்ளமா இருக்கும்னு யோசித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச
நேரத்தில் ஒரு மலையாள சேச்சி நர்ஸ் ஓடி வந்து ’ஷாலு மேடம் ஹஸ்பண்ட் யாருன்னு”
ஏலம்
போட்டுக்கொண்டே வந்தாள். அவர்கள் மத்தியில் என் இமேஜ் சைக்கிள் ஸ்டாண்டில விழுந்த சைக்கிள் மாதிரி மடமடென்னு சரிஞ்சது. (நன்றி: சித்து – Wickets
are falling like cycles in a cycle stand)
’ டாக்டர் உன்னை விளிக்குண்ணு ’ என்று செந்மலையாளத்தில் மரியாதையாய்க்
கூப்பிட்டாள். என் மரியாதையைக் காப்பாத்திக் கொள்ள வேகமாக ஓடினேன்.
உள்ளே ஷாலு
கூட குருஜினி. மற்றும் டாக்டர் லக்ஷ்மி . குருஜினி எப்போ வந்தார் .ஒன்றுமே புரியவில்லை.
’கங்க்ராஜூலேஷன்ஸ் ’
– டாக்டர்
லக்ஷ்மி என்னைப் பார்த்துக் கூறினார். எனக்குத் தலையும் காலும் புரியவில்லை.
உங்க மனைவி
ஷாலு..
ஷாலு?
குருஜினி
கூட சிங்கப்பூர் போகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நான் போவதாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு பெரிய டாக்டர் கான்பிரன்ஸ் இருப்பதாலே எனக்குப் பதிலா குருஜினியின் சீடரா ஷாலு போகிறார்கள்.
ஆ- தானம் வெற்றிகரமாக முடித்த உங்களுக்குப் பரிசு வேண்டாமா? இது தான் குருஜினி பம்பர் பரிசு. உங்களுக்கு ஒன்றும் ஆக்ஷேபணை இல்லையே?
“ஜஸ்ட் ஒரு மாதம் தான். குழந்தைகளை யெல்லாம்
இவரே நல்லா கவனித்துக் கொள்வார். ரொம்ப நன்றி குருஜினி! ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்! ’என்று சொல்லி விட்டு நான் இவருக்கு விளக்கமா
சொல்லறேன் ! வாருங்கள் போகலாம் என்று என்னை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் ஷாலு.
ரூமை
விட்டு வரும் போது சேச்சி நர்ஸ் மீது நான் தெரியாமல் மோதப் போக , ஐடி பொண்ணுகள் எல்லாம் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க, ஷாலுவும் அவளுக்கு இருந்த எக்ஸைட்மென்ட்டில் ’சாரி’ சொல்வதற்குப் பதிலா நர்ஸுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்ல சேச்சி தமிழில் விழித்தாள். !
’நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளா?’
ரஜினிக்காக
எஸ்பி பாலசுப்ரமணியன் எங்கோ கிண்டல் சிரிப்புடன் பாடிக்கொண்டிருந்தார்.
பக்கம் – 3
கோபுலு

தில்லானா மோகனாம்பாள் -வாஷிங்டனில் திருமணம் ,துப்பறியும் சாம்பு கதைகளுக்கு உருவம் கொடுத்து உயிரைக் கொடுத்தவர் கோபுலு அவர்கள். ஏப்ரல் 30ந் தேதி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
தில்லானா மோகனாம்பாள்:

துப்பறியும் சாம்பு:

வாஷிங்டனில் திருமணம்:

விளக்கெண்ணை குடிக்க வைக்கும் காட்சி:


ஸ்டேஷனில் ரயில் வருமுன் பிளாட்பாரக் காட்சி!

தஞ்சையில் பிறந்து தஞ்சை கலாசாரத்தில் திளைத்தவர். ஆனந்த விகடனின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டான மாலி அவர்களின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு விகடனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். . கதைகள், கார்ட்டூன், துணுக்கு, சிரிப்பு இவற்றிற்கெல்லாம் அவர் வரைந்தது அவரின் தனித் தன்மையைப் படம் பிடித்துக் காட்டியது.
கலைமாமணி பட்டம் பெற்றவர்.
சித்ர கலாரத்னா விருது, எம் ஏ சிதம்பரம் செட்டியார் பரிசு, முரசொலி பரிசு என்று பல விருதுகளைப் பெற்றவர். அதற்குத் தகுதியானவரும் கூட.
கோபுலு அவர்களின் சிறப்புக்களைப் பாராட்ட ஒரு அழகான கூட்டம், ஓவியர்கள் மணியம் செல்வன், நாகராஜன், மாருதி, ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் மாலன், ஜீவ சுந்தரி ( பெண் இனி பத்திரிகை ஆசிரியர் ),சுபாஷினி பங்குபெற திருவான்மியூர் பனுவல் புத்தகாலயத்தில் நடைபெற்றது. அதில் கேட்ட முத்துக்கள்:
– கோபுலு இரண்டு கையாலும் படம் வரைவாராம். அதுவும் ஸ்ட்ரோக் வந்து வலது கை முடியாமல் போன போது இடது கையால் வரைந்தாராம்.(ஸ்ட்ரோக் போடும் எனக்கே ஸ்ட்ரோக்கா? )
– சாவி -கோபுலு கூட்டணி ,( இங்கே போயிருக்கிறீர்களா?) ஜெயகாந்தன் – கோபுலு கூட்டணி (பாரிசுக்குப் போ , சில நேரங்களில் சில மனிதர்கள்,) கலக்கியதாம்.
– 20,000 க்கும் மேற்பட்ட ஜோக்குகளுக்குப் படம் வரைந்திருக்கிறாம்.
அழும் உலகத்திற்குச் சிரிப்பைப் பரிசாகத் தருவது தான் அவரது சித்தாந்தம்
அவரது குடும்பத்திற்கு குவிகத்தின் அஞ்சலி!!
.
பக்கம் – 4
ஆறு வீடும் பாழும் வீடு – நாட்டுப்பாடல் (யாரோ)

ஒரு ஊரிலே இருந்த வீடு ஆறு வீடு
ஆறு வீடும் பாழும் வீடு
அதிலொரு வீட்டுக்கு ஓலையில்ல
ஓலையில்லா வீட்டில் தான்
இருந்த பெண்கள் ஆறு பெண்கள்
ஆறு பெண்கள் பாழும் பெண்கள்
அதிலொரு பெண்ணுக்குக் காதே இல்ல
காதில்லாப் பெண்ணுக்குத் தான்
செய்த கம்மல் ஆறு கம்மல்
ஆறு கம்மலும் பாழும் கம்மல்
அதிலொரு கம்மலுக்குக்
கல்லே இல்ல
கல்லில்லாக் கம்மலைத் தான்
செய்த தட்டான் ஆறு தட்டான்
ஆறு தட்டானும் பாழும் தட்டான்
அதிலொரு தட்டானுக்குக்
கையே இல்ல
கையில்லாத தட்டானுக்கு
கொடுத்த பணம் ஆறு பணம்
ஆறு பணமும் பாழும் பணம்
அதிலொரு பணத்துக்கு அச்சே இல்ல
கேட்டதெல்லாம் கட்டுக் கதை
கட்டுக் கதையைக் கேட்டுக்கிட்டு
திட்டம் போட்டு வீடு செல்வோம்!
(எழுதியது: யாரோ)
பக்கம் – 5
மே 3 – எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்
சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்…
* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.
* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!
* முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!
* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!
* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!
* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!
* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!
* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!
* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!
* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!
* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!
* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!
* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!
* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!
* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!
* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண்பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!
* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!
* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!
* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் பரபரப்பு பெற்றது!
* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!
* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!
* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!
(நன்றி : முக நூல்)

டெய்ல் பீஸ் :
சுஜாதா மெக்சிகோ சலவைக்காரி ஜோக் செம ஜோக் என்று சொல்லிவிட்டு ரொம்ப காலம் அதைச் சொல்லாமல் டபாய்த்துக் கொண்டிருந்தார். பிறகு எப்போது சொன்னாரோ தெரியவில்லை நெட்டில் கிடைத்தது:
சென்சாருக்குத் தப்பினால் 25ம் பக்கத்தில் அதை நீங்கள் படிக்கலாம்.
இல்லையென்றால் நெட்டில் தேடிக் கொள்ளுங்கள்.
பக்கம் – 6
மக்கள் முதல்வர்! மீண்டும் முதல்வர் !!

படம் : நன்றி ; NDTV
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ,சுதாகரன்,இளவரசி உட்பட நால்வரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நீதிபதி குன்ஃகா வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி உள்ளது.
அ.இ.அ. திமுகவின் தொண்டர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி, பட்டாஸ் கொளுத்தி உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
செல்வி ஜெயலலிதா:
இந்தத் தீர்ப்பு மனநிறைவை தருகிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறைத் துடைத்த தீர்ப்பு. அரசியல் எதிரிகள் என் மீது சுமத்திய பழியை துடைத்திட்ட தீர்ப்பு. நான் எந்தத் தவறும் செய்யாதவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது
தமிழிசை சௌந்தரராஜன் (பி.ஜே.பி )
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். இந்தத் தீர்ப்பை மதிக்கிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். தீர்ப்பை அரசியலாக்கக் கூடாது
சுப்பிரமணியசாமி “அதிர்ச்சி”! மேல்முறையீடு செய்யப்போவதாகத் தகவல்! .
“இது இறுதித்தீர்ப்பல்ல”-கருணாநிதி
இது ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் கிடைத்த இழப்பு! – பா.மு.க. ராமதாஸ்
நீதிபதி குமாரசாமியின் கணக்கில் தவறு இருக்கிறது. அதனால் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று பப்ளிக் பிராசிக்யூடர் ஆச்சார்யா கூறினார்.
கர்நாடக அரசு, தீர்ப்பின் முழு விவரங்களையும் சட்ட நுணுக்கங்களையும் பரிசீலினை செய்த பிறகு மேல்முறையீட்டைப் பற்றித் தீர்மானிக்கப் படும் என்று கூறுகிறது.
மே 10 அன்னை தினம் மே 11 அம்மா தினம் – அது மட்டுமல்ல MUMMY RETURNS – நெட்டில் சுட்டது!
பக்கம் – 7
கொட்டடி கொட்டடி தாழம்பூ- நாட்டுப் பாடல் (யாரோ)

கொட்டடி கொட்டடி தாழம்பூ!
குனிஞ்சு கொட்டடி தாழம்பூ
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி ஏலக்கா
பய்யன் வருவான் பாத்துக்கோ
பணம் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்குப் பையில் போட்டுக்கோ
வீராப் பட்டணம் போகலாம்
வெள்ள இட்டிலி வாங்கலாம்
சவுக்குத் தோப்பு போகலாம்
சமச்சு வைச்சுத் தின்னலாம்
புளிய மரத்துப் போகலாம்
புளியங்கொட்டை பொறுக்கலாம்
பனைமரத்துக்குப் போகலாம்
பல்லாங்குழி ஆடலாம்
(எழுதியது யார் என்பது தெரியவில்லை)
பக்கம் – 8
ஜோக்ஸ்

டாக்டர் ! என் இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்யும் போது அதிலிருக்கும் என் முதல் காதலை எடுத்துவிடாதீர்கள்!

டாக்டர்! நீங்க கொடுத்த சிரப் சிறப்பு! எப்படி என் ஜோக்?
செருப்பு பிஞ்சிடும்! இது கி.வா .ஜ. அவர்களின் ஜோக்.

டாக்டர் ! எனக்கு அறிவு சுத்தமா இல்லாத மாதிரி தோணுது!
எப்பொழுதிலிருந்து இப்படி தோணுது?
விஸ்டம் டூத்தை எடுத்ததிலிருந்து!

டாக்டர்! என்கால்ல ஆபரேஷன் பண்ணும் போது கால் வலிச்சா என்ன பண்ணுவீங்க?
சேர்ல உட்கார்ந்துகிட்டு ஆபரேஷன் பண்ணுவோம்!

காக்கா முட்டை படத்துக்கு தேசியவிருது வழங்கப்படும் போது கக்கா மூட்டை என்று சொன்னார்களாம்!
பக்கம் – 9
முடியும் வரை தூங்கிவிடு (கோவை சங்கர்)

தொங்குகின்ற தூளியிலே தூங்குகின்ற பாப்பாவே
தொங்குகின்ற நிலைதானே யுனையீன்ற பெற்றோர்க்கும்
மண்ணுலகில் நடக்கின்ற சொல்லவொணா அவலங்கள்
கண்டுகண்டு வெதும்பியவர் தூங்கியே நாளாச்சு!
இவ்வுலகில் நாமெல்லாம் இருப்பதுவோ சிலகாலம்
இவ்வுண்மை புரிந்திருந்தும் பாரிந்த அலங்கோலம்
நான்பெரிது நீபெரிதென பணப்பேயு மாட்டிடவே
சண்டையிலே கழிக்கின்றோம் வாழ்க்கையிலே பெரும்பகுதி
கடவுளெலா மொன்றெனவே நன்றாகத் தெரிந்தாலும்
மதச்சண்டை ஜுவாலைகள் குழப்பங்கள் குமுறல்கள்
ஜாதிபேத மிலையென்று எத்தனைதான் சொன்னாலும்
ஜாதிகள் பெயராலே பலப்பல கட்சியிங்கு
மக்களா இலையிவ ரறிவற்ற மாக்களா
துக்கமான மனதினிலே துளிர்விடும் சந்தேகம்
இதையெலா முணர்கின்ற பருவம்நீ யடையும்வரை
மெதுவாக இப்போதே முடியும்வரை தூங்கிவிடு

பக்கம் – 10
ஏலாலம்பர ஏலு – நாட்டுப் பாடல்

ஆறு காசு எண்ணை வாங்கி ஏலாலம்பர ஏலு – நான்
அதிரசம் சுட்டுவைச்சேன்
ஏலாலம்பர ஏலு
மாமியாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மயிரப் பிடிச் சண்டை செய்வ
ஏலாலம்பர ஏலு
மூத்தாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மூக்கறுத்து நாயங் கேப்ப
ஏலாலம்பர ஏலு
மச்சினன் தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மண்டை ஓடச்சி சந்தா செய்வ
ஏலாலம்பர ஏலு
நாத்தனாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
ஓதட்ட அறுத்து நயம் கேட்ப
ஏலாலம்பர ஏலு
மாமனாரு தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
மண்டை ஓடைச்சி சந்தா செய்வ
ஏலாலம்பர ஏலு
ஆம்படையான் தொட்டிருந்தா
ஏலாலம்பர ஏலு
ஆளும் பொருத்தாச்சே
ஏலாலம்பர ஏலு
(வல்லியம்மாள் பாடியது )
பக்கம் – 11
தி.ஜானகிராமன் கதைச் சுருக்கம்
கங்கா ஸ்நானம்

சின்னசாமியின் அக்கா சாகும்போது தான் வாங்கின கடனை அடைக்கச் சொல்லி புருஷனின் நிலத்தை வித்து நாலாயிரம் ரூபாயை அவனிடம் கொடுக்கிறாள். மூவாயிரத்து சொச்சம் கடன். பாக்கியை அவன் காசிக்குப் போக உபயோகித்துக்கோ என்ற கட்டளை வேற.
சின்னசாமியும் பணத்தை எடுத்துக்கிட்டு துரையப்பாவின் வீட்டுக்குப் போகிறான். ராத்திரி ஆனதால் காலையில் வரவு வச்சுக்கலாம் என்று சொல்கிறார். பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அவரின் உபசரிப்பில் நிம்மதியாகத் தூங்கினான். காலையில் வரவு வைக்கும் போது ‘அவர் பணத்தை எடு ’ என்றதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. முதல் நாள் வாங்கி வைத்ததை மறந்துவிட்டாரா அல்லது விளையாடுகிறாரா? கடைசியில் அவர் வாங்கவே இல்லை என்று சாதித்துவிட்டார். பஞ்சாயத்து கோர்ட்டு என்று பலவாறு முயற்சித்தான் சின்னசாமி. ஊர்ப் பெரியவர் துரையப்பவாவை ஒண்ணும் செய்ய முடியவில்லை. கடைசியில் கடனோ கிடனோ வாங்கி அந்தக் கடனை மறுபடியும் அடைத்தான்.
அக்கா ஆசைப்படி சின்னசாமியும் அவன் மனைவியும் காசிக்குப் போகிறார்கள். ஒரு வாத்தியார் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் கங்கையில் குளிக்கும் போது கேள்விப்படுகிறார்கள் அந்த துரையப்பாவும் காசிக்கு வந்து அவர்கள் தங்கியிருக்கும் அதே வாத்தியார் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று.
திரும்ப அவன் முகத்தில் முழிப்பதா? அவன் பாவத்துக்கும் சேர்த்து கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு அவன் அங்கே இருந்தால் வேறு ஜாகைக்குப் போக வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள்.
பக்கம் – 12
சித்தர் பத்திரகிரியார்

பத்திரகிரியார் உண்மையில் ஒரு அரசர். பட்டினத்தாரின் பெருமைகளைக் கண்டு உணர்ந்து அவரது சீடராக திருவிடைமருதூர் கோவிலில் பிச்சைஎடுத்தவர். கிடைத்த உணவைக் குருவுக்குக் கொடுத்துத் தானும் உண்டு மீதியை ஒரு நாய்க்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்.
ஒருமுறை பட்டினத்தார் இவரைப் பற்றிச் சொல்லும் போது "சோற்றுக்கட்டியையும் நாயையும் வைத்துக் கொண்டு சம்சாரியாக வாழ்கிறார்’“ என்று சொல்ல, பிச்சை எடுக்கும் திருவோட்டை நாயின் தலையில் அடித்து அதற்கு முக்தி அளித்தார். அந்த நாய் ஒரு அரசகுமாரி வடிவில் வந்து அவரை மணந்து கொள்ள வேண்டியது. ” எனக்கும், என் எச்சிலை உண்ட இவளுக்கும் இந்தப் பிறவி நோய் வரலாமா “ என்று இறைவனை உருகி வேண்ட, ஒரு பெருஞ்சோதி வந்து இருவரையும் தன்னுள் ஒடுக்கி இருவருக்கும் முக்தி அளித்தது.
அவர் குரு பட்டினத்தாருக்கு அதற்குப் பின்னரே முக்தி கிடைத்தது.
இவரது 231 பாடல்கள்கள் அனைத்தும் இரு வரிக் கண்ணிகள். எல்லாக் கண்ணிகளும் ‘எக்காலம்?’ என்ற கேள்வியுடன் முடியும். இந்த உலக மோக வாழ்வைத் துறந்து இறைவன் அடிசேரும் காலம் எக்காலம் என்றும், அந்தக் காலம் விரைவில் வாராதா என்று ஏங்கும் சித்தர் தான் பத்திரகிரியார்.
அவரது நெஞ்சுருக்கும் கண்ணிகள் சிலவற்றைப் பார்போம்!
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
கால் காட்டி கைகாட்டி கண்கள் முகம் காட்டி
மால் காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும்
எக்காலம்?
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடக்காமல்
தேறாத சிந்தனையைத் தேற்றுவதும் எக்காலம்?
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனில் கண்டு திருக்கறுப்பது
எக்காலம்?
தித்திக்கும் தெள்ளமிதைச் சித்தாந்தத்து உட்பொருளில்
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது
எக்காலம்?
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது
எக்காலம்?
கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது
எக்காலம்?
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரை மறந்து தூங்குவதும்
எக்காலம்?
கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறது போல் உனை அடைவது
எக்காலம்?
பிறப்பும் இறப்பும் சுற்றுப் பேச்சும் அற்று
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது
எக்காலம்?
சித்தர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்!!
பக்கம் – 13
தாட்பூட் தஞ்சாவூர்னு தேட்டை போட வந்தான் !-சுரா

வீட்டு மேல யாருன்னு கேட்டுக்கிட்டு வந்தான்
கோட்டு சூட்டு போடாமலே ஊட்டுக்குள்ளே வந்தான்
தாட்பூட் தஞ்சாவூர்னு தேட்டை போட வந்தான்
இடுப்பு மேல கையைவைச்சுத் துடுக்குத் தனமா கேட்டான்
காட்டாமணி செடி ஓடச்சி தோட்டத்துக்கு வந்தான்
பட்டனைப் போடாமலே சட்டை போட்டு வந்தான்
வெட்டுக் கத்தி எடுத்துக்கிட்டுத் துட்டுப் பறிக்க வந்தான்
வேட்டுச் சத்தம் போட்டுக்கிட்டு ரோட்டுமேலே வந்தான்
பாட்டு ஒண்ணு பாடிக்கிட்டு ரூட்டுப் போட வந்தான்
ஆட்டுக்குட்டி கத்தும் போது முட்டுக்குத்தி நின்னான்
சட்டிப் பானை தயிரையும் சப்புக் கொட்டித் தின்னான்
இட்டுக் கட்ன பாட்டையெல்லாம் கட்டக் குரலில் சொன்னான்
கட்டி வைச்ச சோத்தை எல்லாம் வெட்டி வெட்டித் தின்னான்
ஈட்டிக்காரன் போலவந்து வட்டி போட்டுத் தின்னான்
எட்டி எட்டி பாத்துக்கிட்டு வெட்டித்தனமா நின்னான்
ஏட்டிக்குமேல் போட்டியாக பாட்டு படிச்சு நின்னான்
ஓட்டிவிட்ட மாட்டைப் போல சீட்டி அடிச்சு வந்தான்
கட்டை வண்டி ஓட்டிக்கிட்டு நெட்டப் பயலா வந்தான்
கூட்டுக்குள்ளே குடியிருக்க சேட்டை பண்ண வந்தான்
மேட்டுக் குடி பாட்டன் போல கிட்டக் கிட்ட வந்தான்
கிட்டக்கிட்ட வந்து என்னைத் தொட்டுகிட்டு நின்னான்
ஒட்டி ஒட்டி வந்து அவனும் கட்டிப் பிடிக்க வந்தான்
பொட்டப் பய போல அவனும் வெக்கம் கெட்டு நின்னான்
அட்டை போல ஒட்டிக்கிட்டு லூட்டியடிக்க வந்தான்
கோட்டை செவரைத் தாண்டி அவன் ஆட்டைப் போட வந்தான்
வேட்டு வைச்சப் பாறைபோல மாட்டிக்கிட்டுத் துடிச்சான்
சாட்டை ஒண்ணை வச்சுக்கிட்டு மாட்டை ஓட்ட வந்தான்
பட்டா சிட்டா இல்லாமலே வீட்டைக் கட்ட வந்தான்
சீட்டுக்கட்டு ராசா போல ஆட்டிக்கிட்டு வந்தான்
சிட்டுக்குருவி லேகியத்தைத் தொட்டு நக்கி வந்தான்
சுட்டுப்போட்ட மீனைப் போல சூட்டைக் கிளப்ப வந்தான்
திட்டம் போட்ட பயபுள்ளே ஆட்டம் ஆட வந்தான்
சேட்டையெல்லாம் காட்டிவிட்டு மூட்டைகட்டிப் போனான்
பொட்டப் புள்ளை என்மனசைத் துடிக்க விட்டுப் போனான்!
பக்கம் – 14
இனிதே திறந்தது இலக்கிய வாசல்
18.04.2015 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இலக்கிய சிந்தனையாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் குவிகம் இலக்கியவாசல் தொடக்க விழா இனிதே நடைபெற்றது !
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது !
குவிகம் இலக்கிய வாசலை முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் திறந்துவைத்தார் !
‘இலக்கியமும் நகைச்சுவையும்’ என்ற தனது முதல் நிகழ்ச்சியை “குவிகம் இலக்கிய வாசல்” முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அரங்கேற்றியது !
தனிநபர் புகழ்ச்சியை புறந்தள்ளி தமிழ்இலக்கிய நிகழ்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குவிகம் இலக்கியவாசல் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்தும் அமைப்பாளர்கள் .சுந்தரராசன், கிருபானந்தன் அவர்களின் முயற்சியை ஊக்குவித்தும் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் தமிழ் இலக்கியங்களிலே புதைந்துகிடக்கும் நகைச்சுவை நயங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்

அடுத்துப் பேசிய முனைவர் வ வே சு அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பிலே தான் இயற்றிய கவிதைகளை மன்றத்தில் படித்து அனைவரையும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினார் !
தனது பள்ளிப் பருவத்திலே நடந்த மறக்கவொண்ணா நகைச்சுவை நினைவுகளை அவர் கவிதையில் வடித்துப் படித்தது அரங்கத்தினரின் கரவொலியைப் பெற்றது !

மூன்றாவதாய் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கவிதைப் படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவைக் கவிதைகளை அரங்கத்தார் ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துகொண்டார் !
வாழ்வியலை ஒட்டிய அவரது கவிதைகள் அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.

சுந்தரராசன் அனைவரையும்வரவேற்றார் !

இலக்கிய ஆர்வலர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது

நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவிதைகள் படிக்கப்பெற்றுப்
பாராட்டைப் பெற்றன !




கிருபானந்தன் நன்றி நவில தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது !
பக்கம் – 15
வாலியின் பாடல்கள்

வாலி அவர்களின் நயமான பாடல் வரிகள் இவை. இந்தப் பாடல்களின் முதல் வரியையும் இடம்பெற்ற திரைப் படத்தையும் கண்டுபிடியுங்கள்!!
விடை 25ஆம் பக்கத்தில்
1) பொன்மேனி தேரசைய என்மேனி தாங்கிவர
ஒன்றோடுஒன்றாய்க் கூடும்
காலமல்லவோ
நில்லென்று நாணம் சொல்ல
செல்லென்று ஆசை தள்ள
நெஞ்சோடு நெஞ்சம் பாடும்
பாடல் சொல்லவோ?
2) பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பல நிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலைபோல் உருமாறும்
3) இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
-அதில்
எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன்புகழ்
பாடும்
எனக்கது போதும் வேறென்ன
வேண்டும்
4) பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும்பாட்டை ஒருபிள்ளை
ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
-இதில்
யார் கேட்டு என்பாட்டை முடிக்கின்றது?
5) பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே
6) ஆசையில் விளைந்த மாதுளங்
கனியோ
கனியிதழ் தேடும் காதலன்
கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை
மறந்தேன்
உறவினில் வளர்ந்தேன்
(இன்னும் வரும் )
பக்கம் – 16
ஔவையார் – ஆத்திசூடி

ச..சா.சி..
44. சக்கர நெறி நில் / Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் / Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் / Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / Seek out good friends.
52. சையெனத் திரியேல் / Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / Don’t be a lazybones.

பக்கம் – 17
16 – தரும . இராசேந்திரன் & சுசு

அது என்ன பதினாறு?
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென
வாழ்த்திவிட்டுபோனவரே
அது என்ன பதினாறு
அதைச் சொல்ல மாட்டீரோ !!
மணமக்கள் கேள்வியிது
மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல
வேதாந்த மகரிஷியின்
விளக்கமதை தெரிந்து கொள்வோம் !
இறையுணர்வும் ,
அறநெறியும்
கல்வியும்,
செல்வமும்
தானியமும் ,
இளமையும்
வலிமையும்,
துணிவும்,
நன்மக்கட்பேறும்
அறிவில் உயர்ந்தோர் நட்பும்
அன்பும் ,
அகத்தவமும்
அழகும் ,
புகழும்
மனிதமதிப்பு நறுந்தொழுகும் பண்பும்
பொறையுடமை [பொறுமை]யும்
எனும் பதினாறு பேறும் பெற்று
போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி
மறைவிளக்கம் உயர் வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து
மனையறத்தின் ஒளிவிளக்காய் வளம் ஓங்கி வாழ்க
இன்னொருவரின் லிஸ்ட்!!

அகிலமதில் நோயின்மை, கல்வி, தன, தானியம்,
அழகு, புகழ், அறம், வாழ்க்கைத் துணைநலம், இளமை,
அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, ஆண்மை, வெற்றி
ஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.

சரி, அபிராம பட்டர் அபிராமி அந்தாதியில் சொல்லும் பதினாறு பேறுகள் என்னென்ன தெரியுமா?
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணி யிலாத உடலும்,
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்,
தவறாத சந்தா னமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
துன்ப மில்லாத வாழ்வும்,
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் !
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி ! அபிராமியே !
காளமேகப் புலவரின் தொகுப்பு என்னவோ?
துதிவாணி ,வீரம், விசயம், சந்தானம், துணிவு, தன,
மதிதானியம், செளபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம், குலம், நோவகல், பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.
தேவநேயப் பாவாணர் தமிழுக்குக் கிடைத்த பதினாறு பேற்றைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்!
தொன்மை – பழமைச் சிறப்பு
முன்மை – முன்தோன்றிய சிறப்பு
எண்மை – எளிமைச் சிறப்பு
ஒண்மை – ஒளியார்ந்த சிறப்பு
இளமை – மூவாச் சிறப்பு
வளமை – சொல்வளச் சிறப்பு
தாய்மை – சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை – கலப்புறாச் சிறப்பு
செம்மை – செழுமைச் சிறப்பு
மும்மை – முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை – இனிய சொற்களின் சிறப்பு
தனிமை – தனித்தியங்கும் சிறப்பு
பெருமை – பெருமிதச் சிறப்பு
திருமை – செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை – இயற்கைச் சிரிப்பு
வியன்மை – வியப்புச் சிறப்பு

இந்தக் கணினி உலகில் புதிய பதினாறு பேறு !
கலையாத மென்பொருளும், தளராத இணைய தளமும்,
கபடு வாராத கணினியும், உடையாத ஐபேடும்,
காசு தொலையாத கைபேசியும், பகிர்வு கேட்காத முகநூலும்,
சுற்றாமல் தொடரும் யூட்யூபும் ,ஸ்பேம் இல்லாத மின்னஞ்சலும்,
தொடர்ந்து வரும் வைஃபையும்,ப்ரீயாய் வரும் ஆப்ஸும்,
தனியே பேச ஹேன்ஸ்ப்ரீயும், கேட்பதைக் கொடுக்க கூகிலும் ,
சா ட்செய்ய வாட்ஸ்அப்பும், எப்போதும் அனுப்ப எஸ்எம்எஸ்சும்
செல்ஃபி எடுக்க கேர்ள் பிரண்டும்
அனைத்தையும் சார்ஜ் செய்ய மின்சாரமும்
ஆகிய பதினாறும் பெற்று
வாழ்வீர் நீவிர் மின்னணு உலகில்!
பக்கம் – 18
இந்த மாத சிற்றிதழ்- சொல்வனம்
சொல்வனம் . ஓர் q அழகிய சிற்றிதழ் ! மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் !
இதுவரை 127 இதழ்கள் வந்துள்ளன.
அவர்கள் குறிக்கோள்:
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!
படிக்க ருசிக்க இந்த இணைய தளத்துக்குச் செல்லவும்

சொல்வனத்தின் ஆசிரியர்களில் ஒருவரான ரவிசங்கர் அவர்களை ‘விருட்சம்’ இலக்கியக் கூட்டத்தில் உரையாடக் கேட்டோம். அவர் நடத்திய ‘பிரக்ஞை’ என்ற பத்திரிகையைப் பற்றி விவரமாகக் கூறினார். சொல்வனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது உலகின் பல இடங்களிலிருந்து பலதரப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு மாத இருமுறை இதழாக வெளியிடுகிறோம் என்றார்.
அரசியல் என்ற தலைப்பில் ஈராக்கில் ஜனநாயகம், பங்களாதேஷ் பயணம் , சிங்கப்பூர் லீ குவான் இயூ , குகை ஓவியங்கள், ஜப்பானில் இந்திய வணிகம் உலக வர்த்தக மாநாடு என்று எழுதுகிறார்கள்.
அறிவியல் என்ற தலைப்பில் மாயத் தோற்ற ஊக்கிகள், நோலாவின் இண்டர்ஸ்டெல்லார், இரு சுருள் வளைய சர்ச்சை, இயற்கை விவசாயம், தூரயியங்கி,(டிரோன்கள் ),வீடியோ விளையாட்டுக்கள், ஆதி மானுட யோக முறைகள், எபோலா, ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்வது எப்படி என்று பல கோணத்தில் எழுதுகிறார்கள்.
இசை என்ற பகுதியில் இளையராஜாவின் ஷாமிதாப், டிசம்பர் சீசன் , ரஹ்மானின் திறமை, மன்னா டே,மாண்டலின் ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகியின் பத்மபூஷண் , இசை இல்லா இசை , கர்ணன் திரைப்படம், திமிறி நாயனம், காருக்குறிச்சி என்றெல்லாம் இசை மழை பொழிகிறார்கள்.
இலக்கியம் பகுதியில் அருமையான சிறுகதைகள்,கவிதைகள் கிடாவெட்டு, ஸ்வப்னா வாசவத்தம், ஜெயகாந்தனுக்கு அஞ்சலி, காகங்கள் சுட்ட வடைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கம்ப ராமாயணம் சித்திரங்கள், எஸ்.பொ , நாஞ்சில் நாதன் கவிதைகள், என்று எண்ணற்றவை
சமூகம் என்ற வலையில் புத்தக விமர்சனம், ஆண்-பெண் சிக்னல், பொறியியல் கல்விக்கு அப்பால், தஞ்சை விவசாயிகளின் சோகம், கூவம்- தாது வருஷப் பஞ்சத்தைப் போக்க வெட்டிய ஆறு, ஆபாச விளையாட்டு, செயற்கைக் கருவூட்டல் ,ஊழல் ஒழிப்பு என்று பல முகங்கள்.
சுருக்கமாகச் சொன்னால்
சொல்வனம் ஒரு – விளம்பரப் பத்திரிகை அல்ல.விவரப் பத்திரிகை அல்ல.
விளக்கப் பத்திரிகை ! .
கருத்துப் பெட்டகம். !!
பக்கம் – 19
நான் ரசித்த படைப்பாளி – சுப்பிரமணிய ராஜு —-(எஸ். கே. என்)
எழுபதுகளின் இளைய தலைமுறை எழுத்தாளரான
இவர் சுஜாதா, சாவி மற்றும்
பலரால் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக இனம் காணப்பட்டவர். சாவி இதழில் தமிழன் என்ற
பெயரில் கேள்வி-பதில் எழுதிக் கொண்டிருந்தவர். சாவி பத்திரிக்கைக்கு இவரும்
மாலனும் சேர்ந்து ஒரு இதழுக்கு ஆசிரியர்களாக இருந்ததாக நினைவு.

இவரது பல கதைகளின் நாயகன், படித்த, பெரும்பாலும் வேலையற்ற அல்லது குறைந்த வரவில் வேலை பார்க்கும்
புத்திசாலியான தர்கரீதியாக அக்கால வாழ்க்கை நடைமுறைகளை எதிர்த்து வாதாடும் – (anti establishment)- இளைஞன் ஆக
இருப்பான். அதனால் அந்த காலகட்ட இளைஞர்கள் மிகவும் கவரப்பட்டார்கள் எனக் கூறலாம்.
இவரது “இன்று போய் ….” கதை
தன் அண்ணனைப்பற்றி தம்பியின் பார்வையில் சொல்லப்படுகிறது.
கல்யாணம் முடிந்து மனைவியுடன் வரும்
அண்ணாவைப் பற்றிய தம்பியின் கருத்தோடு கதை ஆரம்பிக்கிறது.
(வாழ்க்கையில்
எல்லாத்தையும் தோத்துட்டு, மன்னியை
மட்டும் கை பிடிச்சு அழைச்சுண்டு வந்த மாதிரி தோன்றியது)
கல்யாணத்திற்கு முன்பு இருந்த அண்ணா ..
தலை நிறைய முடி சிகரெட், எப்பவும்
ஏதாவதொரு புஸ்தகம்.
(ஆயிரம்
புஸ்தகமாவது படிச்சிருப்பான்)
வெளியில் கினம்பும்போதே தனக்குத் தெரிந்ததையெல்லாம்
இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல நினைப்பது போலிருக்கும். மீட்டிங் எல்லாம்
பேசுவான். சமூகம், சினிமா, பத்திரிக்கை, இளைஞர்கள் எல்லாவற்றையும் தாக்குவதாக அவன் பேச்சு இருக்கும். கதையும்
எழுதுவான். இவன் கதையைப்பற்றி அம்மாவுடன் சண்டை. அப்பாவின் பூஜை ஸ்லோகம குறித்து
அவருடன் வாக்குவாதம்.

(உனக்குப்
புரியாத ஒரு மந்திரத்தை நீயும் சாமி, பூதம்னு இருபது வருஷமா சொல்லிக்கொண்டிருக்கியே.)
அண்ணா படிப்பை முடித்து இரண்டு வருடம்
ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அப்பாவும் ரிடையர் ஆகிவிடுகிறார். எல்லோரும் அவனுக்கு
வேலை கிடைப்பதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
(அப்பா ரிடையராகி, சம்பளம் பென்ஷனாகி, ராத்திரியில் தயிர் மோராச்சு)
சகோதரியான சாந்திக்கு பி.யூ.சி. உடன்
படிப்பு நிறுத்தப்படுகிறது. சமயத்தில் சாந்தியின் கல்யாணத்திற்காக வைத்திருந்த
வெள்ளிப் பாத்திரங்களும் தங்க நகைகளும் அடகுக்கோ விலைக்கோ போகிறது.
இந்த சரிவுக்கெல்லாம் முன்பு, அதே தெருவிலிருக்கும் காயத்ரி என்ற
பெண் அண்ணாவால் ஈர்க்கப்படுகிறாள். தம்பி மூலமாக புத்தகம் வாங்குவதும் அதில் காதல்
கடிதம் வைத்து அனுப்புவதுமாக முயற்சி செய்கிறாள். அண்ணா கண்டுகொள்ளவே இல்லை. ஒரு
கடிதத்தையே தம்பி மூலம் கொடுத்து அனுப்புகிறாள்.
படித்துவிட்டு அலட்சியமாகச் சிரித்த
அண்ணா, தம்பியிடமே அவளைப் பார்க்கிற்கு
மாலையில் அழைத்து வரச் சொல்கிறான்.
பார்க்கில், தனக்கு அவளும், அவளுக்குத் தானும் லாயக்கில்லை என்றும், அவள்
எதிர்பார்ப்பது போன்ற கணவனாகத் தானிருக்க முடியாது என்றும் கூறிவிடுகிறான்.
(உன்னுடைய நடை, டிரெஸ் எல்லாமே, உனக்கு ஹெரால்ட் கார்
வெச்சுண்டிருக்கிற, தினம்
ஆபீசிலேந்து வந்த உடனே உன்னை ஷாப்பிங் அழைச்சுண்டுபோற, உன் சிரிப்புக்குத் தவம் கிடக்கிற, தன் கழுத்தில பட்டையைக் கட்டிண்டு உன் கையில் சங்கிலியைக் குடுத்துட்ட
ஒரு ஆம்பிளை தான் வேணும்! நீ அந்த மாதிரி டைப். நான் வேறு. நீ எதிர்பார்க்கிற
ஆளும் இல்லை நான். ஐ’ம்
சிம்பிள்!)
அண்ணாவிற்கு வேலை கிடைக்கவில்லை. இது
குடும்பத்தையே ஆட்டிவைக்கிறது. தெரு பூரா கடன். ஒருநாள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே
இல்லை என்னும் நிலையும் வந்தது.
தானே முன்னுக்கு வந்த ஒரு பணக்காரர், தன் மகளுக்கு கஷ்டப்படுகிற
புத்திசாலியான கணவனைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், வேலையும் வாங்கிக்கொடுத்து தன் பெண்ணையும் தர விரும்புகிறார் என்று
அப்பாவின் நண்பர் கூறுகிறார்.
அண்ணா வழக்கம் போல வள் என்று
விழுகிறான்.
திடீரென்று ஒரு நாள் இரவு வீட்டுக்கு
வந்தவன் “நான் அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து
விட்டேன். நாளையிலிருந்து வேலைக்குப் போகிறேன்” என்கிறான்.

எல்லோருக்கும் அதிர்ச்சி, ஆனால் நிம்மதி. அண்ணா வேலைக்குப் போக
ஆரம்பிக்கிறான். அந்த பெரிய பணக்காரனின் ஒரே மகளுடன் திருமணமும் ஆகிவிடுகிறது.
அண்ணா மாறிவிடுகிறான். அடிக்கடி
முன்பக்கத்திலே இருக்கும் அறையில் மனைவியுடன் பேச்சு. ஒவ்வொரு நாளும் சாயங்காலம்
வெளியே அழைத்து போகிறான். மாதம் ஒரு புடவை. எல்லா வாரப் பத்திரிக்கைகளும்
வாங்கிப்போடுகிறான். எந்த மாதிரிப் படங்களை பார்க்கக்கூடாது என்று முன்பெல்லாம்
சொல்வானோ, அந்த மாதிரிப் படங்களுக்கு மனைவியோடு
போனான். எல்லோருடனும் அன்பாகப் பேசலானான். அண்ணா மாறிப்போய்விட்டான்.
(இடியட்! எனக்கு
தீடீர்னு அவனைப் பிடிக்காமல் போயிடுத்து. அவனிடம் இருந்த கோபம், கர்வம், அலட்சியம் இதெல்லாம்தான் அவனுக்குப் பொருத்தமா இருந்துதுங்கறது என்
அபிப்பிராயம். அப்போ அவன் முகத்தில ஒரு தேஜஸ் இருந்தது. இப்போ அசட்டுச் சிரிப்பு)
மனைவியின் தந்தை வந்தால் மிகவும்
மரியாதையாய் பேசுவான். அடிக்கடி ஐஸ் வைப்பான்.
(எல்லார்கிட்டேயும்
சண்டை போட்டு ஜெயிச்சவன், இப்ப ஒவ்வொரு ராத்திரியும் தோல்வியடைஞ்சு, காலையில் தலை குனிவாத் திரும்புற மாதிரி, ஒவ்வொரு ராத்திரியும் மன்னி ‘ இன்று போய் நாளை வா’ என்று
சொல்கிறமாதிரி எனக்குப்பட்டது.)
ஒருநாள் சிகரெட்
பிடித்துக்கொண்டிருக்கும் தம்பியின் எதிரில் அண்ணன் வந்து விடுகிறான். கையில்
சிகரெட்டை மறைத்துக்கொண்டு தம்பி சிரிக்கிறான். அண்ணனும் சிரித்துக்கொண்டே கடந்து
போகிறான். அவன் கையில் மல்லிகைப்பூ. குண்டு குண்டா வாழையிலைக்கு வெளியே
எட்டிப்பார்க்கும் மல்லிகை.
‘ நான் மீண்டும்
சிரித்தேன்’ என்று கதை
முடிகிறது.

ஆதர்சங்களும்,
தார்மீகக் கோபங்களும் யதார்த்தத்தில் எப்படி
அடிபட்டுப் போய்விடுகின்றன என்பதைத் தன் பாணியில் சித்தரிக்கிறார்.
குறிப்பிடும்படியாக எழுதிவந்த இவர் இளம் வயதிலேயே ஒரு விபத்தில் மரணமடைந்தது
சிறுகதை இலக்கியத்திற்கு ஓர் பேரிழப்பு.
இவரது மற்றொரு கதையை இணையத்தில் படிக்க
பக்கம் – 20
திருஷ்யம் மோகன்லாலா? பாபநாசம் கமலா?
உங்கள் ஓட்டு யாருக்கு?
பக்கம் – 21
மீனங்காடி – நிறைவுப் பகுதி
அடுத்து
வந்தது ‘ ஒண்ணா
இருக்கக் கத்துக்கணும் ‘ அணி !

அவர்கள்
மிகவும் விசித்திரமாகச் செய்தார்கள்!
முதல் இரு
அணிகள் போல ஜாலியான கத்தல் – கூச்சல் எதுவும் இல்லாமல் அமைதியாக
ஆரம்பித்தார்கள்.! பின்னணி இசை கூட மெதுவாக இழையோடிக் கொண்டிருந்தது. அந்த அணியிலிருந்து ஒரு பெண் மெதுவாக மேஜிக் – மெஸ்மெரிஸம் செய்பவள் போல வந்து நின்றாள் !

“ உங்கள்
அனைவருக்கும் எங்கள் வந்தனங்கள் ! இதுவரை ஆடி ஓடிக் களைப்படைந்திருப்பீர்கள்.! சற்று அமைதியாக உட்காருங்கள் ! நன்றாக ‘ ரிலாக்ஸ் ‘ செய்து கொள்ளுங்கள் ! தயவு செய்து நான்
சொல்கிறபடி செய்யுங்கள் !
உங்கள்
கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்.! நன்றாக ஒருமுறை மூச்சை இழுத்து விடுங்கள்.!
அப்படியே அமைதியாக ரிலாக்ஸ்டாக இருங்கள் ! நிகழ்ச்சி முடிகிற வரை கண்களை மூடிக் கொண்டே இருங்கள் ! சாதாரணமாக மூச்சு விடுங்கள் ! எங்கள் அணி நண்பர்கள் இப்போது உங்களுக்காக சில நிகழ்ச்சிகளை வழங்குவார்கள் ! அவை உங்கள் மனத்தை எங்களுடனும், எங்கள் மனத்தை உங்களுடனும் ‘ ஒண்ணா இருக்கச் ‘ செய்யும்.!
நாங்கள்
சொல்லப் போகிற கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள் ! அப்படியே அமைதியாக – ரிலாக்ஸ்டாக – கண்ணை மூடிக் கொண்டு – சாதாரணமாக மூச்சு விட்டுக் கொண்டு கேளுங்கள்!
முதலில்
இந்தப் பொன்மொழியைக் கேளுங்கள் !
‘
நேற்று
என்பது சரித்திரம் – மறந்து விடுங்கள் !
‘ நாளை என்பது புதிர் – கவலை விடுங்கள் !
இன்று
என்பது இன்பம் – அதில் வாழுங்கள் !
பிறகு
சேகர் வந்தான்.! தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். அதில் ஒரு சோகம் இழைந்தது. “ நான் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த காலம்.
இரண்டு வேளை சாப்பாட்டிற்காக நான்கு வேளை உழைத்தேன். அந்த சமயங்களில் எல்லாம் என்
ஒரே பெண் அடிக்கடி என்னிடம் கெஞ்சுவாள் , “ அப்பா! வாயேன்! ப்ளீஸ்! நாம் அந்தப்
பூங்காவிற்குப் போய் விட்டு வரலாம் “ என்று அடிக்கடி கேட்பாள் ! நானும் அவள்கிட்டே ‘ இன்னிக்கு அப்பாவுக்கு வேலை இருக்கும்மா! என்
செல்லமில்லே ! இன்னொரு நாளைக்குப் போகலாம் ‘ என்று சொல்லி ஆபீசிற்கு ஓடிக் கொண்டிருந்தேன்.
நாள் வாரமாயிற்று; வாரம்
மாதமாயிற்று: மாதம் வருஷங்களாகி விட்டன ! நான் இன்னும் அவளை அந்தப் பூங்காவிற்குக்
கூட்டிக் கொண்டு போகவே இல்லை. இப்பொழுது என் பெண்ணிற்கு பதினைந்து வயதாகிறது.
பூங்காவிற்குப் போகும் ஆசை எல்லாம் போய் விட்டது. நான் நேற்றையையும், நாளையையும் எண்ணி எண்ணி இன்றையைக் கோட்டை
விட்டேன்.

நான்
மீனங்காடிக்குப் போனபோது அங்கே இருந்த ஒருத்தர் கூடப் பேசினேன். என் சோகம் என்னை அறியாமல் வெளியே வந்தது. அவர் அடுத்த நாளைக்கு மீனங்காடிக்குக் குறிப்பா
பெண்ணோட வரும்படி சொன்னார் ! என் பெண் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்!
நான்
கெஞ்சிக் கூத்தாடி அவளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன் ! எங்களுக்கு ஒரு சுகமான அனுபவம் மீனங்காடியில் கிடைத்தது. ஆபீஸ் வேலை என்று இல்லாமல் அன்றைய முழு நாளையும் எங்களுக்காகவே
வாழ்ந்தோம் ! ஒரு நிமிஷம் தனிமை கிடைத்ததும் என் பெண்ணிடம் ‘விளையாடக் கூப்பிட்ட போது வராத மோசமான அப்பாவாக
இருந்திருக்கேனே ‘ என்று
சொல்லி மன்னிப்புக் கேட்டேன். இனிமேல் ஆவலோடு அவள் தேவைப்படும் போதெல்லாம் இருப்பேன் என்றும் சொன்னேன். “ நீ ஒன்றும் அவ்வளவு மோசமான அப்பா இல்லை. என்னோட நீ ‘ ஒண்ணா இருந்தா ‘ போதும் “ என்று சொன்னாள். அப்பொழுதுதான் ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ‘ என்ற தத்துவத்தின் முழு அர்த்தத்தையும்
உணர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து நான் நிகழ் காலத்திற்காக வாழ முடிவு செய்து
விட்டேன் ! நான் இழந்து விட்டேனோ என்று கலங்கிய என் மகள் எனக்குத் திரும்பக் கிடைத்து விட்டாள் ! “
டோனி மெல்ல
மேரியின் காதில் சொன்னான். “ சேகர் குறிப்பிட்ட ஆள் தினகர் ! புதிதாக
மீனங்காடியில் சேர்ந்தவன். அன்றைக்குத் தான் முதன் முதலில் மற்றவருக்கு உதவ
ஆரம்பித்திருக்கிறான். என் கிட்டே சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டான் ‘ டோனியின் குரலில் சந்தோஷம் கொப்பளித்தது.
அடுத்துப்
பேசின சுரேன் தன் முந்தைய வேலையில் தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணின் கதையைக்
கூறினான். கேட்கவே சோகமாயிருந்தது. “ அந்தப் பெண் சமீபத்தில்தான் வேலைக்குச்
சேர்ந்தவள். எனக்குப் பக்கத்து சீட் தான். அடிக்கடி என்கிட்டே ஏதோ சொல்ல வருவாள் ! நான் வேலை மும்முரத்தில் அவளை அலட்சியம் செய்தேன். ‘ தொந்தரவு செய்யாதே ‘ என்று மூஞ்சியில் அடித்தாற் போல்
சொல்லியிருக்கேன். திடீரென்று ஒரு நாளைக்கு ஆபீஸே அல்லோலகல்லோலப் பட்டது. அந்தப்
பெண் தப்பும் தவறுமாக பல காரியம் செய்திருக்கிறாள். தெரியாமல் தான்
செய்திருக்கிறாள். வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் கம்பெனிக்கு மிகவும் நஷ்டம். சரிப்படுத்த முடியாத அளவிற்குப் போய் விட்டது. அவளை வேலையை விட்டு நீக்கினார்கள். அது மட்டுமல்ல, அவள் செய்த தவறினால் மார்க்கெட்டிலும்
கம்பெனியின் பெயர் கேட்டுப் போய் விட்டது. அதன் தொடர் விளைவாக எங்கள் டிபார்ட்மெண்டில் இருந்து பத்து பேர் வேலையும் போயிற்று, என்னையும் சேர்த்து. நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் சரியான நேரத்தில் அவள் கூட பேசி அவள் பிரச்சனை என்ன என்று கேட்டு இருந்திருந்தால் இந்த கெட்ட பெயர், நஷ்டம் எல்லாவற்றையும் தடுத்து இருக்கலாமே என்று ! என் மனம் வேலையில் இருந்தது. ஆனால் கூட இருந்த மனிதர்களுடன் ஒண்ணா இருக்கக் கற்றுக் கொள்ளவில்லை அன்று.!
அடுத்து
வந்தாள் பாத்திமா ! அவள் தன் வீட்டில் நடந்த கதையைச் சொன்னாள். நல்ல பாஸிடிவ் ஆன கதை !
அவள் வெகு
மும்முரமாக டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அவள் பையன் அவள் அருகே உட்கார்ந்து எதுவும் பேசாமல் ‘ உர் ‘ என்று இருந்தான். அப்பொழுது அவளுக்குப்
புரிந்து விட்டது – அவனுக்கு
ஏதோ பிரச்சனை என்று. டிவியை அணைத்து விட்டு அவன் கூட ஒரு மணி நேரம் பேசினாள். அன்றைக்கு ஆபீஸுக்கு வருவது கூட லேட்டாகி விட்டது. ஆனால் அவனுடன் மனம் விட்டுப் பேசியது சந்தோஷமாக இருந்தது. டைவர்ஸ் வாங்கிக் கொண்டு தனி ஆளாக இருக்கிறவர்களுக்கு மற்றவர்களின் உணர்ச்சிகள் நன்றாகவே புரியும். அவன் பள்ளிக் கூடத்தில் ஏகப்பட்ட அடிதடி சண்டை. எல்லார் மேலேயும் அவனுக்குக் கோபம்
வந்தது. அம்மா கூட பேசி முடிந்ததும் அவனுக்கும் தன் மன பாரம் இறங்கியது போல்
தோன்றியதாம். சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே விளையாடப் போனான். அவன் கூட அன்றைக்கு
‘ ஒண்ணா
இருந்தது ‘ இரண்டு
பேருக்குமே மிகவும் திருப்தியாக இருந்தது.
இன்னும்
ஓரிருவர் தங்கள் சொந்தக் கதை, ஆபீஸ் கதைகளை உருக்கமாகவும், அழுத்தமாகவும் சொன்னார்கள். அனைவரும் இனிமேல் வாடிக்கையாளர்களுடன் ஒன்றிப் போவோம் என்று உறுதி பூண்டார்கள். மனதும் செயலும் ஒன்றோடு ஒன்று இணையும் போது தான் மற்றவர் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பிக்கிறோம். மற்றவர் நம்மிடம் கேள்வி கேட்க வரும்போது அவர்களுடன் ‘ ஒண்ணா ‘ இருந்தால் தான் அவர்கள் பிரச்சனை நமக்குப்
புரியும். அதற்கான சரியான விடையும் கிடைக்கும்.
அலுவலகத்தில்
நண்பர்கள் ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால் செல்லமாக அவர்களைத் தட்டி விட்டு “ எங்கே இருக்கிறாய் டியர் “ என்று கேளுங்கள். அவர்கள் நிகழ் காலத்துடன்
ஒன்றிப் போவார்கள். யாரை சந்தித்தாலும் ‘ என்ன சௌக்கியமா ‘ என்று கேட்பதற்குப் பதிலாக ‘ ஒண்ணா இருக்கியா ? ‘ என்று கேட்டு அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்
என்றும் யோசனை சொன்னார்கள்.
அதைப் போல
மனமும் செயலும் ஒன்றாமல் இருக்கும் நண்பர்களிடம் மற்றவர் முன் தட்டிக் கேட்கத்
தயக்கம் வரும் போது ‘ அலை பாயுதே
‘ என்று
குறிப்பாகச் சொல்லலாம், என்றும்
அப்படிச் சொல்லும்போது அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்றும் வேண்டிக்
கொண்டார்கள் ! மற்ற மக்கள் எல்லோரும் அவற்றை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
வாடிக்கையாளர்களுடன்
போனில் பேசும்போது ஈமெய்ல் படிப்பது, மற்ற பேப்பர் படிப்பது என்ற வேலைகளில்
ஈடுபடாமல் அவர்கள் பேச்சிலேயே ஒன்றாக இருப்பது என்றும் முடிவு எடுத்தனர்.
எண்ணத்தைத்
தேர்ந்தெடு
கடைசியாக
வந்தது ‘ எண்ணத்தைத்
தேர்ந்தெடு ‘ அணி ! அவர்கள் கருத்துரை சுருக்கமாக இருந்தது. இதைச் செயலாற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
இதனால்
நமக்கு நாமே பொறுப்பாளி என்ற எண்ணமும், ஆக்க பூர்வமாகச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தோன்றும். இவை நமக்கு – மூன்றாம் மாடிக்கு ஒரு புது சக்தியையும்
உத்வேகத்தையும் அளிக்கும் என்பது உறுதி !
நம்
எண்ணத்தை நாமே தேர்ந்தெடுப்பதினால் மற்றவர் நம்மை மட்டமாக நினைக்கிறார்கள் என்ற
எண்ணமே தோன்றாது !
இதனால்
நாம் நமது முழுத் திறமையையும் வேலையில் காட்ட முடியும் ! விரும்புகிற வேலை செய்வதை
விட செய்கிற வேலையை விரும்பினால் சிரமமே தோன்றாது. இது ஒன்றை மட்டும் நாம் செயலாற்றினால் போதும், மூன்றாம் மாடி ஒரு அழகான, இனிமையான, சந்தோஷமான, புதுமையான இடமாக மாறும் என்பதில் சந்தேகமே
இல்லை.
இனி இந்த ‘ எண்ணத்தை ‘ எப்படி அமுல் படுத்துவது என்று அணியின்
கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைக்க வந்தாள் அனு !
“ ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடு ‘ என்பது மிகவும் சொந்த விஷயம் ! பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையையே மறந்து விட்டோம். மற்றவர் திணிக்கும் எண்ணப்படியே செயலாற்றி வருகிறோம். இனி அதை மாற்றுவோம். ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருப்போம். அது சமயம் நமது சொந்த எண்ணத்திற்கு மதிப்புக் கொடுத்து அதன்படி நடக்க உறுதி பூணுவோம் ! நீங்கள் செய்யும் வேலையில் – உங்கள் எண்ணத்தில் நம்பிக்கை இல்லை என்றால்
அல்லது நம்பத் தயார் இல்லை என்றால் அதைச் செய்யாதீர்கள் ! நம்மில் பலர் பலவிதமான கஷ்டங்களில் இருக்கிறோம். இதை முயற்சி செய்வதே பெரிய கஷ்டமாகவும் இருக்கும். நாம் முயலுவோம் – வெற்றியும் பெறுவோம்”
என்று
சொல்லி விடை பெற்றாள் அனு.
அடுத்து
வந்த அந்த அணித் தோழர், “ நாங்கள்
இதை உபயோகப் படுத்த இரண்டு வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறோம்.
முதலாவதாக, ஷிவகேராவின் ‘ YOU CAN WIN ‘ – நீங்களும் வெற்றியடையலாம் என்ற புத்தகத்தை
உங்கள் அனைவருக்கும் எங்கள் அணியின் பரிசாகத் தருகிறோம். அதை அனைவரும் படிப்போம்.
அடுத்த மாதம் நாம் அனைவரும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஆலோசித்து நம்மால்
எவற்றை உபயோகப் படுத்த முடியுமோ அவற்றை எடுத்துக் கொள்வோம். அது போல மேலும் நிறைய புத்தகங்கள் வாங்கி அலசி ஆலோசித்து கருத்து முத்துக்களை எடுப்போம். அவை நமது எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கப் பெரிதும் உதவும்.
இரண்டாவதாக, நமது எண்ணம் பற்றிய ‘ மெனு கார்டை ‘ நோட்டீஸ் போர்டில் தினமும் போடுவோம். முதல் கார்டு யார் போட்டார்களோ தெரியவில்லை ! அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி ! அது போல தினமும் எங்கள் எண்ணப் பாதை தொடரும் !
இதோ ஒரு ‘ சாம்பிள் ‘ கார்டை ஸ்லைடில் பாருங்கள் !

எல்லா
அணிகளும் அவர்களுடைய பணியைச் சிறப்பாக முடித்ததும் மேரி மேடையில் ஏறி அவர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நன்றி கூறினாள். தனித் தனியாக அழைத்துப் பாராட்டுதல்களையும் தெரிவித்தாள் ! டோனியும் கூட வந்து அவர்களை வாழ்த்தினான் ! மேரி ஆகாயத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளுக்கு நன்றாக விளங்கி விட்டது, இனி மூன்றாம் மாடி ஒரு கலக்கல் டிபார்ட்மெண்டாக
மாறும் என்பதில் ! குப்பைத் தொட்டியைக் கடாசி விடுவார்கள் என்பதில் முழு நம்பிக்கை
பிறந்தது !
டோனியும் மேரியும் ஒன்றாக நிதிக் கம்பெனிக்கு வந்தார்கள் ! அவர்களைக் கம்பெனியில் பலர் – மற்ற டிபார்ட்மெண்ட்காரர்கள் ஆச்சரியத்துடன்
பார்த்தனர். அவர்களில் பலருக்கு டோனியைத் தெரிந்திருந்தது.
“ மேரி !
உனக்கு வந்த புது வேலை பற்றி உன் பாஸுக்குத் தெரியுமா ? டோனி கேட்டான். இரண்டு வாரம் கழித்து நிதிக்
கம்பெனியின் முக்கியமான போட்டிக் கம்பெனி மேரிக்கு நிறைய சம்பளத்தோடு சௌகரியமான
இடத்தில் வேலை கொடுத்து அவள் சம்மதத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.!
“ எங்க
கம்பெனியின் பழைய பாஸ் கிட்டே பேசியிருக்காங்க ! நான் அந்த வேலையைப் பற்றி நிதிக் கம்பெனியில் யார் கிட்டேயும் பேசவில்லை.!”
“ பின்னே ஏன்
அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாய்? எனக்குப் புரியுது மேரி ! நீ ஆரம்பித்த இந்தப்
புதிய திட்டத்திற்கு உன்னை நீயே அர்ப்பணித்து விட்டாய் ! புதிய வாழ்க்கை ஆரம்பிக்க
இருக்கிற மக்களை விட்டுப் போக மனசில்லை. சரியா? “
“ அது ஒரு
விதத்தில் சரி தான் டோனி ! இங்கேயே அதே சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்றிருக்கும் போது
நான் எதற்காகப் புது வேலையைத் தேடணும் ? நல்ல நாட்கள் வந்திடுச்சு டோனி ! வந்திடுச்சு !”
ஒரு வருடத்திற்குப் பிறகு

பிப்ரவரி 7 . ஞாயிற்றுக் கிழமை. மேரி தன்னுடைய ‘ எளிமையான நினைவு ‘ புத்தகத்தைப் பிரித்தாள். போன வருடம் பிப்ரவரி 7 ந்தேதி எழுதினதை நினைவு கூர்ந்தாள் !
போன வருடம்
எப்படி குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்டில் குப்பை கொட்டுவது என்று கவலைப் பட்டுக்
கொண்டிருந்தேன். என் சொந்த
வாழ்க்கையும் ஒரு பிரச்சனையாக இருக்கும்போது எப்படி ஒரு பெரிய டிபார்ட்மெண்டைத்
திருத்துவது என்று பயந்து கொண்டிருந்தேன் !
‘ தாஜ்
ஹோட்டலில் ‘ நான்கு
அணிகளும் அவர்கள் தொகுத்து வழங்கிய விதமும் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தன.
மக்கள் அதற்கு மேலும் பல படிகள் போக முடியும் என்று நிரூபித்தார்கள் ! மீனங்காடித் தொழிலாளர்கள் காட்டிய பாதையில் இவர்கள் பல படிகள் சென்றார்கள் ! மூன்றாவது மாடி இப்போது மிகமிக வித்தியாசமான இடமாய் மாறி விட்டது. இப்போது ஒரு புதுப் பிரச்சனை உருவாகி உள்ளது. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் அனைவரும் இதில் வேலை செய்ய
விரும்புகிறார்கள்.! அந்த புது சக்தி – புது ஒளி எரிந்து கொண்டே இருக்கிறது !
எல்லாவற்றிற்கும்
மேலே கம்பெனியின் சேர் உமன் கொடுத்த ‘ பரிசு ‘ ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் கிடைத்த
சர்ட்டிபிகேட்டின் நகல் நிறைய வேண்டும் என்று கேட்டபோது அம்மையார்
ஆச்சரியப்பட்டுப் போனார்கள் ! அதன் நகலை தனக்கும், டோனிக்கும், பிரசாத்துக்கும், மற்ற டிபார்ட்மெண்ட் தொழிலாளர் அனைவருக்கும் – அது மட்டுமல்ல மீனங்காடித் தொழிலாளர்
அனைவருக்கும் கொடுத்தாள் மேரி. மீனங்காடியில் கேஷ் கவுண்டருக்கு மேலே அதை ‘ பிரேம் ‘செய்து மாட்டியிருந்தார்கள். டோனியின் அறையிலும் தனியே இடம் பெற்றிருந்தது.
தன்னையறியாமலே
அவளுக்கு பா. விஜய்யின் வரிகள் மனதில் தாளத்தோடு வந்தன !
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு !
மேரி தனது
கண்களிலிருந்து வழியும் நீரை மெல்லத் துடைத்துக் கொண்டாள் ! அவளது சந்தோஷக் கீற்றுக்களை ஊக்குவிக்கும் கருத்துக்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை மெல்ல மூடினாள்.!
***********************
“ டோனி! அந்த
‘ சிப்ஸ் ‘ தட்டை இப்படி நகர்த்து ! நீயே எல்லாவற்றையும்
சாப்பிட்டு விடாதே !’
டோனி
அவளுக்கு எதிரில் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அந்தத் தட்டை அவளிடம் நீட்டினான் . மேரி புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே தட்டில் இருந்து ‘ சிப்ஸ் ‘ எடுக்கப் பார்த்தாள். ஏதோ வித்தியாசமாகத் தட்டுப்
பட்டது.! நிமிர்ந்து பார்த்தாள் !
அதில் சிப்ஸுக்குப் பதிலாக ஒரு அழகான மீன் பொம்மை ! அதன் வாயினுள் ஜொலிக்கும் வைர மோதிரம் ! ‘ எங்கேஜ்மெண்ட் மோதிரம் ‘
டோனியை
நிமிர்ந்து பார்த்தாள் ! ‘ மேரி !
என்னை ஏற்றுக் கொள்வாயா ?’ என்ற
கேள்விக் குறி அவன் கண்களில் தெரிந்தது. சந்தோஷத்தில் அவளுக்குத் தொண்டை அடைத்தது ! “ ஓ ! டோனி !” வார்த்தைகளே வரவில்லை. கண்களில் நீர் தெறிக்கக் கேட்டாள் “ உன் விளையாட்டுக்கு எல்லையே இல்லயா டோனி ?”


அந்த இரவு
வெளியில் மிகவும் குளிராக, இருட்டாக, வாட்டமாக இருந்தது. ஆனால் மேரி, டோனி இருவர் உள்ளத்திலும் அதற்கு நேர் மாறாக
உவகையும் இன்பமும் துள்ளிப் பாய்ந்தன !
சேர்மன் அம்மையார் பரிசளிப்பு விழா
நிதிக் கம்பெனியின்
தலைவி மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார் !
“ இதை விடப்
பெருமை தரும் இரவு எனக்கு இதுவரை இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. மிகமிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நமது கம்பெனியில் சமீபகாலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேரியும் அவளது சக தொழிலாளர்களும் மூன்றாம் மாடி டிபார்ட்மெண்டை ஒரு சந்தோஷமான – சௌகரியமான – திருப்திகரமான இடமாக மாற்றி இருப்பதை நான்
இன்று என் கண்களால் கண்டேன். இன்றைக்கு என்ன புது விசேஷம்? என்று நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில்
சொன்ன விதம் என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது ! அவர்கள் சொன்ன பதில்
என்ன தெரியுமா ? ‘ இன்றைக்கு
ஒரு மிகப் பெரிய சந்தோஷமான நாளாய் இருக்க நாங்கள் முடிவு செய்து விட்டோம் “ என்று.
அது
மட்டுமல்ல ! வெகு காலம் சர்வீஸ் போட்ட சீனியர் தொழிலாளர்கள் எல்லாம் நேற்றைக்கு
வேலைக்குச் சேர்ந்தது போல் உற்சாகத்தில் இருப்பதைக் கண்டேன் ! வழக்கமான வேலை என்று
இருந்ததை மதிப்புள்ள வேலை என்று மாற்றி விட்டார்கள் ! இதற்கான மந்திரத்தை அவர்கள்
மீனங்காடியில் கண்டு பிடித்ததாகவும் கூறினார்கள்.! மீன் மார்க்கெட்டை ஒருவர் ஜாலியான இடமாக மாற்றும்போது நமது
கம்பெனியை ஒருத்தி சந்தோஷமான இடமாக மாற்றுவதில் அதிக சிரமம் இருந்திருக்காது என்று
நான் நம்புகிறேன் !
இந்த
மாறுதலை ஒரு சலவைக் கல்லில் ஓவியமாக – இல்லை காவியமாகத் தீட்டி அழகான வார்த்தைகளில்
பொறித்து நமது தலைமை அலுவலகத்தின் நுழை வாயிலில் அனைவரும் முதலில் பார்க்கும்
இடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளேன் ! அதில் பொறிக்கப் போகும் வார்த்தைகள் என்ன தெரியுமா ?
நமது பணிக்கூடம்
“ இந்த நுழை வாயிலில் செல்லும் ஒவ்வொருவரும் ‘ இன்றைய நாளை மிகச் சிறப்பான நாளாக மாற்றுவோம் ‘ என்ற உறுதியுடன் உள்ளே காலெடுத்து வையுங்கள்.!
உங்களது அன்பு கலந்த நன்றி உங்களுக்கும், சக தொழிலாளர்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் உரித்தாகட்டும் ! சந்தோஷமாக ஆட்டம் கொண்டாட்டத்துடன் இருக்க புது வழிகளைக் கண்டு பிடியுங்கள் ! கவலைகளை மறந்து விட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் கவனம் செலுத்துங்கள் ! மற்றவர்கள் உங்கள் சேவைகளைத் தேடி வரும்போது அவர்களுடன் எப்போதும் ஒன்றாக இருங்கள் ! உங்கள் உற்சாகம் குறைவது போல இருந்தால் இந்த மருந்தை
எடுத்துக் கொள்ளுங்கள் ! உதவி தேவைப்படும் ஒருவரைக் கண்டு பிடித்து அவருக்கு உதவுங்கள் ! சேவை தேவைப்படும் மனிதர்களைத் தேடிப் பிடித்து சேவை வழங்குங்கள் ! அந்த நாள் அவர்கள் நெஞ்சிலே நிலைக்க உதவி செய்யுங்கள் ! இவை என்றென்றைக்கும் நம்மையும் மற்றவரையும்
மகிழ்ச்சியில்திளைக்க வைக்கும் என்பது உறுதி “
(முற்றும் )
பக்கம் – 22
ஒரே பக்கத்தில் மூன்று மாங்காய்!! உத்தம வில்லன் , காஞ்சனா -ii & வை ராஜா வை ( மைக்)
உத்தம வில்லன்

எம்ஜியார் கண்ணைக் கவர்ந்தார் என்றால் சிவாஜி கண்ணைக் கலங்க வைத்தார். அவர்களின் அடிச் சுவட்டில் ரஜினியும் கமலும் மாஸ் – கிளாஸ் என்ற வரைகோட்டில் பயணித்து வந்தனர். லிங்கா ரஜினிக்குச் சறுக்கல் என்றால் உத்தம வில்லன் கமலைப் பதம் பார்த்து விட்டது.
கமல் படம் என்றதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். கமலே எழுதாமல் எழுதி, பாடாமல் பாடி, இயக்காமல் இயக்கி, தயாரிக்காமல் தயாரித்து வெளியிட்ட படம். இத்தனை பாரத்தை தாங்காத அவரது முதுகு முறிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
தாங்க முடியாத சோகம் என்னவென்றால் கமல் தன் குருநாதர் கே பாலச்சந்தரையும் தேவையில்லாமல் கத்தவிட்டு சாகடித்துவிட்டார். இன்றைய மாமேதை கே விஸ்வநாத் இறுதிக் காட்சியில் கண்ணீர் விட்டு கமலின் காலில் விழத் துடிப்பது ‘இந்த மாதிரி படம் எடுக்காதே’ என்று சொல்லத் தானோ என்னவோ?
கதை என்னவென்றால் – திரைப்பட நாயகன் திரைக்குப் பின்னால் செய்யும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தான்.
பிரபல நடிகை ஒருவர் கூறியது ஞாபகம் வருகிறது ’ திரையில் நாயகன் -வாழ்க்கையில் வில்லன். திரையில் வில்லன் உண்மையில் நல்லவன்.
கமல் கோடிகளை இழக்கலாம். கோடான கோடி ரசிகர்களை இழக்கலாமா?
காஞ்சனா -2

இந்த இரண்டாம் த(தா)ரப் பேய்க்கு முதல் த(தா)ரப் பேயே தேவலை. அதுலே குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரக் கொஞ்சம் சமாசாரம் இருந்தது.
இதில் காமெடி என்ற பெயரில் விரசத்தின் எல்லைக்கே போயிருக்கிறார் லாரென்ஸ்.
இந்த திகில் படத்தில் மிகப் பயங்கரமான காட்சி க்ளைமாக்ஸ் தான். காஞ்சனா -3 வரப் போகிறது என்பது தான் பயத்தின் உச்ச கட்டம்.
மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த மாதிரி தூசுப் படங்களுக்குத் தடை விதித்தால் நல்லது.
வை ராஜா வை

பணக்கார அப்பாவும் பிரபலமான கணவனும் இருந்தா எப்படி வேணும்னாலும் படம் எடுக்கிறதா என்ன?
அம்மா தாயே! உங்களுக்கு ஏன் இந்த ஐடி பசங்க மேல இவ்வளவு கோவம்?அவிகளை ஏன் குடிகாரனா – பொம்பளைப் பொறுக்கியா காட்டறீக!
போதும்டா சாமி!
பக்கம் – 23
தலையங்கம் – நேபாளத்கில் பூகம்பம்

ஏப்ரல் 25, இந்தியாவின் அருகாமை நாடான நேபாளத்தில் மிகவும் கடுமையான பூகம்பம் தாக்கியது. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் பட்டு வீடுகளை இழந்து உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல பாரம்பரியம் மிக்க கட்டிடங்கள் இடிந்து போயின.
தொடர் நிலநடுக்கம் , கடும் மழை போன்றவை மீட்புப் பணியைத் தாமதப் படுத்தவும் செய்தன. இதன் எதிரொலியாக எவரெஸ்டில் பனிப்புயல் வேறு. சுற்றுலாப் பயணிகளின் தவிப்பு!
இந்திய அரசு முழு மூச்சில் உதவிப் பணியில் ஈடுபட்டுள்ளது.
20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு நலமாக வந்தனர்.
விஞ்ஞானிகள் இப்போது சொல்கிறார்கள்- நேபாளம் நிலநடுக்கத்தால் தாக்கப்படும் என்பது முன்பே தெரிந்தது என்று. விஞ்ஞானிகளே! இனி இது போன்றவற்றைச் சற்று உரக்கச் சொல்லுங்கள்! மக்களாகிய நாமும் அவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்போம்!!
குவிகமும் இயற்கை அளித்த வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதோடு ஐயாயிரம் ரூபாயை நமது பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளது.
ஆண்டு : 2 மாதம் : 5

Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
பக்கம் – 24
This gallery contains 2 photos.
வாலி பாடல் புதிர் விடை: 1) குயிலாக நீ இருந்தென்ன – செல்வமகள் 2) நான் தன்னந் தனிக் காட்டு ராஜா – எங்க மாமா 3) பாட்டு வரும் – நான் ஆணையிட்டால் 4) காதோடு தான் நான் பேசுவேன் – வெள்ளி விழா 5) அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன் 6) ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – அன்பே வா சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்: மெக்ஸிகோவில் ஒரு … Continue reading