குவிகம் ஐந்து ஆண்டுகள்

குவிகம் ஐந்து ஆண்டுகள்

 

 • 2013 நவம்பரில் துவங்கப்பட்ட குவிகம் மின்னிதழ்  இந்த இதழுடன் ஐந்து ஆண்டு நிறைவு பெறுகிறது.

 • 1500க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பக்கங்கள் இணைய தளத்தில் குவிகத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

 • எத்தனை பேர்  எதைப் படித்தார்கள் – விடுத்தார்கள் என்பதற்கான  புள்ளி விவரம் இருக்கிறது.

 • 200 பேரில் ஆரம்பித்துத்   தற்போது 2700 பேருக்கும் அதிகமான  நபர்களுக்கு அனுப்பி வருகிறோம்.

 • அர்ஜூன், விஜயலக்ஷ்மி, கிருபாநந்தன்  மூவரும் குவிகத்தின் மூன்று முக்கிய புள்ளிகள்.

 • கல்கண்டுபோல ஆரம்ப காலத்தில் இருந்த குவிகம் தற்போது குமுதம்மாதிரி இருக்கிறது.

 • பல நண்பர்கள்  தங்கள் சிறந்த படைப்புக்களை குவிகத்திற்கு  அனுப்பிப்  பேருதவி புரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த கரங்கூப்பு !

 • மின்னிதழில் தொடங்கிய குவிகம் இதழ், குவிகம் இலக்கியவாசல், குவிகம் பதிப்பகம், குவிகம் இல்லம், குவிகம் புத்தகப் பரிமாற்றம் , அளவளாவல் , என்று விரிந்து வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

2018 ஆம்  ஆண்டிலேயே  குவிகம் மின்னிதழைப் பெரும் அளவில் மாற்ற  எண்ணினோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அதைச் செயலாற்ற  முடியவில்லை.

இந்த ஆண்டு 2019 ஜனவரியிலிருந்து புதிய மாற்றங்கள் கண்டிப்பாக வரும்.

அதற்காக உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் வரவேற்கிறோம்.

குறிப்பாக, கீழ்க்கண்ட செய்திகளில் உங்கள் கருத்து அவசியமாகிறது.

 

 1. குவிகம் — தொடரலாம்/ நிறுத்தலாம்

 2. தலையங்கம் —- தேவை/தேவையில்லை

 3. சிறுகதைகள் – A4 அளவில் ஒரு பக்கம் போதும் / 4-5 பக்கங்கள் இருக்கலாம்.

 4. கட்டுரைகள் – அதிகம் வேண்டும் /வேண்டியதில்லை

 5. ஜோக்குகள் — தேவை/தேவையில்லை

 6. சினிமா விமர்சனம் /செய்திகள் — தேவை / தேவையில்லை

 7. குறும்படம் — அதிக அளவில் தேவை / ஓன்றிரண்டு போதும்

 8. ஆடியோ பக்கங்கள் — தேவை /தேவையில்லை

 9. ஆராய்ச்சிக் கட்டுரைகள் – தேவை/தேவையில்லை

 10. படங்கள் — தேவை/ தேவையில்லை/ இன்னும் அதிகம் வேண்டும்

 11. தொடர் கதைகள் —- தேவை/தேவையில்லை

 12. Font / Page Design — பரவாயில்லை/ மாறவேண்டும்

 13. குறுஞ்செய்திகள் : நிறைய வேண்டும் / வேண்டாம்

 14. மற்ற உங்களுக்குத் தேவையான செய்திகள்:

                1)

                2)

                3)

 

தங்கள் கருத்துக்களை   editor@kuvikam.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்பவும்.

நன்றி.

சுந்தரராஜன்

(ஆசிரியர், குவிகம் )

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

படம்: By សុខគឹមហេង – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=58228026

ஸந்த்யாவின் சாந்துக் குளியல் அறையில்  அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் விஷ்வகர்மாவின் குடும்பத்தை முற்றிலும் உலுக்கிவிட்டது என்றால் அது தவறில்லை.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர் விஷ்வகர்மாதான்.  அந்த அறையில் இருக்கவேண்டிய  ஸந்த்யா அங்கு இல்லை . அவளுக்குக் கொடுக்கும்படி தான் அளித்த மருந்து  கிண்ணத்தில் அப்படியே இருக்கிறது. சாளரத்தில் புறாவும் முட்டைகளும் எரிந்து கிடக்கின்றன. தரையில் ராகு தலை துண்டிக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். மனைவியோ கையில் வாளுடன்  நிற்கிறாள்.  

வேறு சாதாரணமானவர் யாராக இருந்தாலும் இந்த சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருப்பார்கள். ஆனால் விஷ்வகர்மா தேவ சிற்பி மட்டுமல்ல. எந்த இக்கட்டையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். பிரும்மாவிற்கே தெரியாமல் காரியம் செய்யத் துணிந்தவர் அல்லவா? 

முதலில் தலைவேறு முண்டம்வேறு என்று கிடக்கும் ராகுவை சரிசெய்து அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ராகுவின் தலை எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் கண்கள் சுழன்றுகொண்டேயிருந்தன. உடல் துடிப்பு எதுவும் இல்லாமல் அமைதியாக உறங்குவதுபோல் இருந்தது. இப்படி இருப்பது ராகுவிற்கு எந்தவித வேதனையும் தரவில்லை என்பதை அவனுடைய முகக்குறிப்பே உணர்த்தியது. 

விஷ்வகர்மா அவன் தலையை எடுத்து அவன் உடலருகே மெள்ளக் கொண்டுபோனார். காந்தத்தைக் கண்ட இரும்புபோல ஒன்றை ஒன்று ஆகர்ஷித்து ஒட்டிக்கொண்டன. ராகுதேவன் எழுந்து நின்று விஷ்வகர்மாவிற்குத் தலை வணங்கினான். தன் திட்டத்தை எல்லாம் அழித்தவன் அவன் என்றும் அவனை எப்படித் தண்டிக்கலாம் என்றும் யோசித்தார். 

“ஸ்வர்னபானு!” அவனைப் பழைய அசுரப் பெயர்கொண்டு அழைத்தார்.

“வேண்டாம் ஐயா! என்னை ராகு என்றே அழையுங்கள்! நான்  தற்போது அசுரன் அல்லன். தேவர்களுடன்  சேர்ந்து ராகுதேவன் ஆகிவிட்டேன். உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. உங்கள் திட்டத்தை முற்றும் தொலைத்தவன் நான். அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். ஆனால்  மகாருத்ரபிரும்மன் வரவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது எனக்கு இட்ட கட்டளை!” 

“சுக்கராச்சாரியாரின் கட்டளைதானே! ,அசுர குலத்தைக் காக்க அவர் செய்யும் முயற்சி!”

” அவர் மட்டுமல்ல. பிரும்மா, சிவன், விஷ்ணு மும்மூர்த்திகளின் கட்டளையும் அதுவே” 

விஷ்வகர்மா திடுக்கிட்டார்.  ” நான் அதற்காக முயலுவது மும்மூர்த்திகளுக்குத் தெரியுமா?” பயத்துடன் கேட்டார் விஷ்வகர்மா. 

” யார் அதை முயன்றாலும் அவர்களைத் தடுக்கவேண்டும் என்பது எனக்கு இட்ட கட்டளை. நீங்கள் முயல்வீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கிறார்கள்;  உனக்கு சூரியனை விழுங்க சரியான சந்தர்ப்பம் என்று அனுப்பி வைத்தவரே பிரும்மன்தான்” என்றான் ராகுதேவன். 

“ஆஹா! பிரும்மருக்கு எப்போதும் என் மீது ஒரு சந்தேகம். எப்படி இருந்தாலும் இன்று உன்னைத் தண்டிக்காமல் விடப்போவதில்லை. என் மனைவி பாவம்,  கத்தியால் வெட்டினால் நீ இறந்து விடுவாய் என்று நம்பியவள். இப்போது செய்வது அறியாமல் நிற்கிறாள். இதோ பாரம்மா! நான் ஆரம்பித்த இந்தப் பிரச்சினையை நானே தீர்த்து வைக்கிறேன். நீ போய் ஸந்த்யா என்ன ஆனாள் என்று கவனி. முடிந்தால் அவளை  ஏதாவது அறையில் கட்டிப்போடு.” என்று கூறினார் விஷ்வகர்மா. 

அவள் சென்றதும், அங்கே அமைதியாக நின்றுகொண்டிருந்த ராகுவிடம் ” எனக்கு உன்னிடம் பிடித்ததே இந்த நிதானம் தவறாத செய்கைதான். உன்னை நான் எப்படித் தண்டிக்கவேண்டும் என்பதையும் நீயே சொல்” என்று கூறினார். 

ராகுதேவன் மெல்ல சிரித்துக்கொண்டு , ” என்னைத் தண்டிக்க மும்மூர்த்திகளைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை அறிந்து கொண்டதால் என்னிடமே வழி கேட்கிறீர்கள் அல்லவா? நான் ஒரு வழி சொல்லுகிறேன். அது உங்களுக்குச் சம்மதமா என்று சொல்லுங்கள்” 

தன் அறிவை மயக்க ராகு  ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட விஷ்வகர்மா அவன் சொல்வதைக் கேட்டுவிட்டு முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தார். அது மட்டுமல்லாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அவன் தன்னை மீறி எதுவும் செய்யமுடியாது என்று  அசைக்க முடியாத நம்பிக்கை வத்திருந்தார். 

ராகு மெல்ல தன் வலையை விரிக்க ஆரம்பித்தான். 

” விஷ்வகர்மா அவர்களே! மகாபிரும்மருத்ரனைத் தோற்றுவிக்கவேண்டும் என்பது உங்களின்  ஆசை.  அதற்காக உங்கள் மகளையே பலி கொடுக்கத்துணிந்தீர்கள்!” 

” என்னது, என் மகள் பலியாவாளா?” 

” ஆம், உங்கள் அருமை மகள் சந்த்யாவிற்கு நீங்கள் கொடுத்த மருந்து வேலைசெய்து அதனால் அவள் வயிற்றில் ஜனித்த கருக்கள் கலைந்தால் அவள் சர்ப்பம் தீண்டி மரணமடையவேண்டும் என்பது விதியாகும். அவளுக்கு கர்ப்பம் ஏற்படக் காரணமே என்னுடைய ராகு தோஷம்தான். மற்றவர்களுக்கு அது தோஷம், எனக்கு அது யோகம். என் பார்வைபட்டால் அது யாராக இருந்தாலும் காமம் அதிகமாகிவிடும். அதுவும் அதீத காமம் ஏற்படும். அந்தக் காம நோயிலிருந்து அவர்கள்  மீளவேமுடியாது. என் பார்வை சூரியதேவன்மீது பட்டதால்தான் அவனுக்குத் தங்கள் மகள் மீது அளவில்லா காமம் பிறந்தது. இருவரும் தங்களை மறந்து உறவு கொண்டதற்குக் காரணம் என் திருஷ்டிதான். அப்படி ஒரு சாபம் எனக்கு. யார் கொடுத்தது தெரியுமா? என் மனைவிகள் நாகவல்லி நாககன்னி இருவரும் சேர்ந்து கொடுத்தது. அது ஒரு தனி காமக்கதை. 

அந்தக் கதையைச் சொல்லட்டுமா?  “

விஷ்வகர்மா கதையைக் கேட்கும் சுவாரசியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ராகுவின் வலையில் விழுகிறோம் என்பதை உணரவில்லை.

(தொடரும்) 

இரண்டாம் பகுதி 

Related image

நாரதர் நினைத்ததை சாதித்தார். 

தேவ உலகுக்கு  வாட்ஸ்அப் கிடைக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் ஒன்றுவிடாமல் செய்தார்.

முடிவில் பரமசிவன்  மிகவும் கோபத்துடன் எழுந்து நின்று ” நாரதா இது என்ன இந்த வாட்ஸ் அப்பைக் கொண்டுவந்து உன் நாடகத்தைத் துவக்குகிறாயா?”  என்று கேட்டதும் நாரதர் சற்று ஆடிப்போய்விட்டார். 

“மகாதேவா! ” என்று அவர் ஏதோ  சால்ஜாப் சொல்ல முயற்சி செய்யும்போது , மகாவிஷ்ணு  அவருக்கு வக்காலத்து வாங்கினார்.

“நாரதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நானும் கூகிளில் தேடிப்பார்த்தேன். நாரதன் சொன்னது முழுதும் சரி. பூமியில் மனிதர்கள் எது சரியான செய்தி, எது தவறான செய்தி என்று தெரியாமல்  தடுமாறுகிறார்களாம். உதாரணாமாக, சமீபத்தில் ஒரு பெரிய சிலை இந்தியாவில் திறக்கப்பட்டதாம். அதில் ஒரு கல்வெட்டில் ஏதோ சொற்பிழை ஏற்பட்டுவிட்டதாக ஒரு இலட்சம் வாட்ஸ்அப் குரூப் மெம்பர்கள் சாடியிருந்தார்கள். இன்னும் லட்சம் பேர் அப்படி தவறே  நடக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுதவிர, பொய்யான தகவல்களால் தவறே செய்யாதவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு கிழவியின் படத்தைப் போட்டு – இவள் குழந்தைகளைக் கடத்துகிறவள் என்று வாட்ஸ்அப்பில்  போட்டதும் அவளை , கும்பலாக சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட வாட்ஸ்அப் நம்ம பட்டணத்துக்கு  வந்தால் ‘அப்புறம் இந்திரன் அகலிகை வீட்டுக்குப் போனதையும் முனிவர் சாபம் கொடுத்ததையும் போட்டோ எடுத்து எல்லோருக்கும் ஷேர் பண்ணிவிடுவார்கள். அப்புறம் இந்திரன் பாடு ஆபத்துதான்.” என்றார்.

சபை ஏக மனதாக வாட்ஸ்அப்பை நிராகரித்தது. 

அதற்குள் மகாவிஷ்ணுவிற்கு வைகுண்டத்திலிருந்து போன் வந்தது.  பன்னிரண்டு ஆழ்வார்களும் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். 

” நீஙகள் இந்த மீட்டிங்கைத்  தொடர்ந்து நடத்துங்கள்! எனக்கு முக்கியமான வேலையிருக்கிறது.” 

மகாவிஷ்ணு அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். கூடவே லக்ஷ்மியும் வந்தாள். 

“அப்படி என்ன எனக்குத் தெரியாத வேலை வைகுந்தத்தில் ?” என்று லக்ஷ்மி கேட்டதும்  மஹாவிஷ்ணுக்குக் கோபம் வந்தது. 

” நான் எத்தனைதடவை சொல்லியிருக்கேன் லக்ஷ்மி!  இன்னிக்கு ஆழ்வார்களுடன் திவ்வியப்பிரபந்தம்பற்றி ஒரு கலந்துரையாடல் இருக்குன்னு”

” ஒஹோ! ஆழ்வார்கள் மீட்டிங்கா?  பொதுவா உப்புமா மீட்டிங்குன்னுதானே சொன்னீங்க! அப்போ அந்த ஆண்டாளும் வருவா இல்லே? அதை எங்கிட்டே சொல்லவே இல்லையே!”

” இங்கே பார்  லக்ஷ்மி ! ஆண்டாள் சமாசாரத்தைப்பற்றி நாம ஏற்கனவே  பேசி முடிச்சுட்டோம் ,அவ பன்னிரண்டு பேர்ல ஒருத்தி. அவ்வளவுதான். ” 

” இன்னும் பதினோரு பேர் இருக்காளா?”  

” இந்த பாரு!, நம்ம ரெண்டு பேரும்  நீ பாக்கற சீரியல்ல வர்ரவங்க மாதிரி பேசிக்கிட்டிருக்கோம். இது  கொஞ்சம்கூட சரியில்ல. நாம எல்லாம் ஸ்வாமி- தாயார் . அந்த மாதிரி நடந்துக்கணும். 

” நான் தாயார், அவள் சின்னம்மாவாக்கும்.!  நான் எல்லாம் தாயார் மாதிரி நடந்துக்கறேன். எல்லாத்தையும் கண்டும் காணாததுமாதிரி இருக்கேன் . நீங்க ஸ்வாமியா லட்சணமா நடந்துக்கோங்க!. ஒவ்வொரு தடவையும் நீங்க பூலோகம்  போனீங்கன்னா எனக்கு திக்குன்னு இருக்கு” 

” சரி, சரி, நீயும் வாயேன். நல்ல தமிழ்ப்பாட்டு கேட்டுட்டு வரலாம்.” 

” நான்பாட்டுக்கு, சும்மா இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்கோ!  நானும் சரஸ்வதியும் பார்வதியும் எமபுரிப்பட்டணத்தை  சுத்திப்  பாத்துட்டு அப்படியே அந்த எமி வந்திருக்காளாம். அவ கிட்டே கொஞ்சம் பேசிட்டு வர்ரோம். ” 

” அடேடே ! நான் எமியை மறந்தே போயிட்டேன். நல்ல உசரமா வளர்ந்திட்டாளாமே? எமன் சொன்னான். அவ சின்னவளா இருந்தபோது பார்த்தது. நானும் வேணும்னா உங்ககூட வர்றேன்”

” அப்போ அந்த ஆழ்வார் மீட்டிங்?”

“அதை நாளைக்கு தள்ளிப்போடலாம். . இப்பவே கருடாழ்வார்கிட்டே சொல்லி அவங்களுக்குத் தகவல் குடுக்கச் சொல்லிடறேன்.”  

” ஐயே! ஒண்ணும் வேண்டாம். நீங்கபாட்டுக்கு போயிட்டு வாங்க. நாங்க பெண்கள் எல்லாம் கொஞ்சம் பேசிட்டு அப்படியே நரகாபுரிக்குப் போய் கொஞ்சம் புது டிசைன்ல துணி வாங்கிட்டு மெதுவா வர்ரோம். நம்ம வைகுந்தத்தில எல்லாம் பழைய ஸ்டாக் ”  என்று சொல்லி லக்ஷ்மி  கிளம்பிப்போனாள்.

 லக்ஷ்மி சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த நாரதர்,  மெதுவாக ” நாராயணா.. நாராயணா.. ” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார். 

” என்னாச்சு நாரதா! மீட்டிங் முடிஞ்சுடுச்சா? “

” எந்த மீட்டிங்பற்றி கேட்கிறீங்க? பிராஜக்ட் மீட்டிங்கா? ஆண்டாள்  மீட்டிங்கா? இல்லே  எமி  மீட்டிங்கா? “

” உனக்கு எப்பப் பார்த்தாலும் வம்புதான். அங்கே என்ன சத்தம் கேட்குது?” 

” அப்பாதான் அம்மாகிட்டே ஏதோ சத்தம் போட்டுகிட்டிருக்கார்”

” என்னாச்சு பிரும்மருக்கும்  சரஸ்வதிக்கும்?” 

” ஒண்ணுமில்லே ! அம்மாவை மீட்டிங்க்கோட மினட்ஸ்  எழுதச் சொன்னாராம். அம்மா கம்ப்யூட்டரில   அடிச்சுட்டு அதை சேவ் பண்ணலையாம்.” 

‘” இதுக்குத்தான் நான் கணபதியையே மினட்ஸ்   எழுதச் சொல்லலாம்னு சொன்னேன். அவன் ஷார்ட் ஹேன்ட்ல எல்லாம் எழுதிடுவான்.  இந்த பரமசிவன்தான் சரஸ்வதியே எழுதட்டும் என்றார்.” 

” அது ஒண்ணும் பிரச்சனை இல்லே. ஸ்வாமி தத்தாம்ஸானந்தா ரிக்கவர்  பண்ணித் தர்ரேன்னு சொல்லியிருக்கார்.” 

” ரொம்ப நல்லதாப் போச்சு. நான் போயிட்டு வர்றேன். கொஞ்சம் கருடனை வரச்சொல்லு.” 

” இதோ சொல்றேன். ஒரு சின்ன உதவி செய்யணும். போகும்போது மகாதேவரை கைலாசத்தில டிராப் பண்ண முடியுமா?” 

” ஏன் , அவரோட நந்தி  என்னாச்சு?” 

Image result for saraswathi sabatham 1966 cast” அது பார்வதிகூட எமபுரிப்பட்டணம் போகுது. கலைமகளும், மலைமகளும், அலைமகளும் அதிலதான் எமியைப் பார்க்கப் போறாங்க! நானும் அங்கதான் போயிட்டிருக்கேன்.” 

” ஜாக்கிரதையாய் போயிட்டு வா! மறுபடியும் சரஸ்வதி சபதம் அப்படீன்னு ஆரம்பிச்சுடப் போறீங்க!” 

” அதைவிட ஆபத்தான விஷயம் நடக்கப்போகுதுன்னு பரமசிவன் மாமா  அப்பாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தார்.” 

“அவர் சொன்னா  நிச்சயம் நடக்கும். நீலநாக்கு  ஆச்சே! ” 

பிரும்மா விஷ்ணு சிவன் பயந்தமாதிரியே நடந்தது.

(தொடரும்) 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

களப்பிரர்கள்

Image result for களப்பிரர்கள்

 

 

குப்த சாம்ராஜ்யம் அழிந்தது.

ஹூணர்களும் அழிந்தனர்.

புயலாகத் தோன்றி மின்னலாக மறைந்தான் யசோதர்மன்!

பேரரசுகள் மறைந்தன… சிற்றரசுகள் துளிர்த்தன…

இந்திய சரித்திரம் – வழி தெரியாமல் … தலைவனில்லாது… நத்தை போல் ஊர்ந்தது…

நாமும் தவிக்கிறோம் … யாரைப் பற்றி எழுதுவது?

சரி … வட இந்தியாவிற்கு இந்த நிலை வந்தது…

என்று… தெற்கு நோக்கிச் சென்று பார்க்கலாம் என்று பார்த்தால்..

அங்கும் இருண்ட காலமாக இருந்தது.

காதல், மானம் , வீரம் என்று சங்கம் சிறப்பித்துப் பாடிய சேர, சோழ , பாண்டியர் எங்கே?

பெட்டிப்பாம்பு?

தென்னகத்தை ஆளும் மன்னர்கள் யார்?

 

கி பி 300- 700:

இருண்ட காலம்?

அது இருட்டடிக்கப்பட்ட காலம் என்று சிலர் கூறுகின்றனர்.

களப்பிரர்  தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பதுபற்றித் தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில்  ஜைன சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்தனர். எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால்..ஒரு முன்னூறு வருட சரித்திரத்தை ஒரு சிலர் அழித்து விட முடியுமா?

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

ஆனால்  என்ன செய்வது – பூசணிக்காயைக் காணவில்லையே!

எதை நம்புவது?

ஒரு வேளை – எதிர்காலம்  இதற்கு சான்றுகள் அளிக்கக் கூடும்.

நாம் அறிந்ததை வைத்து நமது கதையைப் பார்ப்போம்.

Image result for களப்பிரர்கள்

சங்ககால இறுதியில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை, ‘களப்பிரர்’ என்ற பெயர்கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை, தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். அந்த இனக்குழுவினர் எங்கிருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும், சரியாக அறியமுடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், அவர்களைப்பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ, நாணயவியல் ஆதாரங்களோ கிடைக்கவில்லை. 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வேள்விக்குடி’ செப்பேட்டில், களப்பிரர்களைப்பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய அரசனால் வெளியிடப்பட்டது.

சாதவாகனப் பேரரசர் வீழ்ச்சியுற்றபின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலைபெற்று, தனி அரசுகளாகச் செயல்பட்டன.தமிழ்நாட்டின் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலை வாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் தமிழகத்தைத் தாக்கியிருக்கக்கூடும்.

 

ஒன்று மட்டும் தெரிகிறது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

யசோதர்மன்- குப்தருடன் கூட்டு சேர்ந்ததால் சக்தி வாய்ந்த ஹூணர்களையே அழிக்க முடிந்தது.

ஆனால்.. கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் காலத்திற்குப்பிறகு பல மன்னர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழிந்தனர். ஒரு சோழன் மற்றொரு சோழனைக் கொன்றான்.

மேலும் சங்க இலக்கியங்கள் வீரத்தை மிகவும் உயர்த்தி…’சண்டையிட்டால் தான் நீ வீரன்’  என்று பாடி … மன்னர்களை உசுப்பேத்தி அவர்களை அழித்தது!!

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுவது:

இது இருண்ட காலம் அல்ல…

இது ஒரு விடியல் காலம்..

 

களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும் அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும், நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும், மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியவைகளே ஆகும்.

 

ஒரு கதை புனைவோம்…கற்பனை சிறிதுதான் … ஆனால் சரித்திரம் பெரிது..

 

களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் !

எல்லா மன்னர்களும் விக்ரமாதித்யன் என்று பட்டம் சூட்டிக்கொண்டதுபோல் – எல்லா களப்பிர மன்னர்களும் அச்சுதன்தான்!

சேர சோழ பாண்டியர் மூவரையும் போரில் வென்றான்.

மூவேந்தர்கள் தங்கள் வீரத்தை விட்டாலும்…புலமையை மட்டும் விடவில்லை…

அச்சுதன் கூறினான்:

“தமிழ் நாட்டின் மூவேந்தர்களே! கரிகாலன்,செங்குட்டுவன், நெடுஞ்செழியன்  பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்… வீரம் … வீரம் என்று ஆர்ப்பாட்டம்போட்டு உங்களுக்குள்ளே சண்டைபோட்டீர்கள். இன்று உங்கள் வீரம் எங்கே?…உங்கள் புலமை மட்டும் ஒடுங்கவில்லை. நாட்டின் தலை சிறந்த கவிகள் நீங்கள்தான். உங்கள் கவிகளை நீங்கள் பாடவேண்டும்… எனக்கு மகிழ்ச்சி தந்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்கும் …ஆனால் உங்கள் உடல் மட்டும் எனது சிறையில்தான் தங்கும்”.

அட்டகாசமாகச் சிரித்தான்.

அவர்களைத் தளையிட்டு – சிறையிட்டான் – தில்லை நகரில்.

 

இடம்: தில்லை நகர் – அச்சுதன் அரண்மனை…

அச்சுதன் அரியாசனத்தில் வீற்றிருந்தான்.

சிறைத்தலைவன் அரண்மனைக்கு வந்தான்:

“மன்னர் மன்னா! சிறையிலிருந்து செய்திகள்!” – மன்னனிடம் மூன்று ஓலைச்சுவடிகளைக் கொடுத்தான்.

“என்ன சிறைத்தலைவரே இது?”

“மூவரும் … தங்களது விடுதலைக்காக விண்ணப்பித்து எழுதிய கவிகள் இவை”.

அச்சுதன் அதை வாங்கிப் படித்தான்:    

 

சேரன் பாடிய வெண்பா:

தினை விதைத்தார் முற்றம் தினையுணங்கும் செந்நெல்

தனை விதைத்தார் முற்றமது தானாம் – கனைசீர்

முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த்தானை

அரசுணங்கும் அச்சுதன் தன் முற்றத்து.

 

அச்சுதன் மகிழ்ந்தான்:

“ஆஹா! அற்புதம்!சேரனை விடுதலை செய்க”

 மேலும் படித்தான்.

 

சோழன் பாடிய வெண்பா:

அரசர் குல திலகன் அச்சுதன் முற்றத்தில்

அரசரவதரித்த அந்நாள் – முரசதிரக்

கொட்டிவிடும் ஓசையினும் கோவேந்தர் காற்றளையை

வெட்டி விடும் ஓசைமிகும்.

 

அச்சுதன் மகிழ்ந்தான்:

“மகிழ்ச்சி! சோழனையும்  விடுதலை செய்க”

 

சேரனும் சோழனும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு இறைஞ்சி வேண்டியது அச்சுதனை மகிழ்வித்தது. சோழன், களப்பிரனை “அரசர் குல திலகன்” என்றே பாடியது கண்டு – மனம் மகிழ்ந்த அச்சுதக் களப்பாளன் அவ்விருவரையும் உடனே விடுதலை செய்தான்.

 

பாண்டியன் பாடிய வெண்பா:

குறையுளார் எங்கிரார் கூர்வேலி ராமன்

நிறையறு திங்களிருந்தார் – முறைமையால்

ஆலிக்குந்தானை அலங்குதார் அச்சுத முன்

வாலிக் கிளையான் வரை

 

அச்சுதன் மகிழ்ச்சி திடீரென தடைப்பட்டது.

குருவிகளை வேட்டையாடும் கழுகு போல் … முகம் பயங்கரமாக மாறியது.

“எனக்குப் பிடிக்கவில்லை … பாண்டியனின் தளை இன்னொன்று ஏற்றப்படட்டும்”.

சிறைக்காவலருக்கும், மந்திரிமார்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

“பாண்டியன் பாட்டில் என்ன குறை கண்டீர்கள் மன்னா?” – மந்திரியார் வினவினார்.

அச்சுதன் :

“பாண்டியன் சிறைப்பட்டிருந்த நிலையிலும் பெருமிதம் குறையாமல் தன்னை இராமனுடன் ஒப்பிட்டுக் கொண்டு பாடியிருக்கிறான். அதனாலே அவனுக்கு கூடுதல் விலங்கு”!

சிறையில் பாண்டியன் “நமது பெருமிதம் நமது எதிரியாயிற்றே!.. “ – என்று நொந்தான்.

மிகவும் பணிந்து வேறொரு வெண்பா பாடினான் .

“காவலரே! மாமன்னர் அச்சுதனிடம் இந்த வெண்பாவைச் சேர்த்து எனது பணிவைக் கூறுங்கள்”

 

பாண்டியன் பாடிய வெண்பா:

குடகர் குணகடலென்றார்த்தார் குடகர்க்

கிடகர் வடகடலென்றார்த்தார் – வடகடலர்

தென்கடலென்றார்த்தார் தில்லையச்சுதானந்தன்

முன்கடை நின்றார்க்கும் முரசு

 

அச்சுதன் முகமலர்ந்தான்:  “இது.. இது…சரியான பாட்டு… பலே பாண்டியா! உனக்குத் தந்தேன் விடுதலை”

பாண்டியனும் விடுதலை பெற்று ஓடினான்.

 

இந்த பாண்டியன் வம்சத்தில் 300 ஆண்டு காலம் கழிந்து ‘கடுங்கோன்’ என்ற மன்னன் இந்த களப்பிர மன்னனைத் தோற்கடித்து மீண்டும் பாண்டிய ஆட்சியைத் தொடங்குவான். அது போல விஜயாலய சோழனும்  களப்பிர முத்தரையனை தஞ்சையில் வென்று சோழநாட்டை ஸ்தாபிப்பான்.

 

அதுவரை அவர்களுக்கு இருண்ட காலமே!

 

சரித்திரம் இந்தியாவில் அலைகிறது…வேறு என்ன சுவாரஸ்யமான கதைகள் உள்ளன? தேடுவோம்..

 

 

 

 

 

TSUNDOKU – சுண்டோகு- தில்லைவேந்தன்.

Image result for tsundoku

தலைப்பு புரியவில்லையா? கவிதையைப் படியுங்கள் ! தானே புரியும்.

படிக்க வேண்டும் என்றெண்ணிப்
பலநூல், பலநாள் சேர்த்துவைத்தேன்
அடுக்கி வைக்க இடமில்லை;
ஆனால் ஆர்வம் விடவில்லை.
இடுக்கும் இண்டும் செருகிவைத்தேன்
எல்லாப் பரணும் அடைத்துவைத்தேன்
தடுக்க இயலா மனநோயா ?
தாளா விருப்பா ? தெரியவில்லை !

இலக்கியங்கள் இலக்கணங்கள்
என்றோ படித்த பாடங்கள்
கலக்கும் கரிய பேய்க்கதைகள்
காதல் கதைகள் , போர்க்கதைகள்
விலக்க முடியாப் புராணங்கள்,
விரும்பித் தொகுத்த இதழ்க்கதைகள்.
நலக்க ருத்து நவில்நூல்கள்
நானே அறியாப் பலநூல்கள்.

இங்கும் அங்கும் சிலவற்றை
எடுத்துப் பிரித்துப் பார்த்தாலும்
எங்கு நேரம் இருக்கிறது ?
ஏறும் வயதோ சிரிக்கிறது.
மங்கும் கண்ணோ மறைக்கிறது
மாறா ஆர்வம் மறைகிறது.
தெங்கம் பழம்கொள் நாயைப்போல்
திகைப்பு நெஞ்சில் விரிகிறது.

  இதன் தலைப்பு : படிக்கச் சேர்த்தல்          

சுண்டோகு - TSUNDOKU - ஜப்பானிய வார்த்தை - TSUN + DOKU என்ற இரு பதங்களின் சேர்க்கை. TSUN என்றால் சேர்த்தல் -
to pile up ; doku என்றால் படிக்க - reading ஆக, TSUNDOKU என்றால் படிக்க வேண்டும் என்ற ஆசையால் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம்'
( இதனால் தான் புத்தகக் கண்காட்சியில் 10-15 கோடி ரூபாய் புத்தக விற்பனையோ? )

Related image

TSUNDOKU வியாதிக்கு இருவகை மருந்து உண்டு !

ஒன்று இயற்கை வைத்தியம்: புத்தகங்களைப் படிப்பது.

இரண்டாவது, இன்றைய வைத்தியம்:  குவிகம் புத்தகப் பரிமாற்றம்.

 

 

வைதீஸ்வரன் விரும்பிய கவிதைகள் – டாக்டர் என் கோபி

எனக்கு பிடித்த கவிதைகள் –  வைதீஸ்வரன்

Image result for வைதீஸ்வரன்

Acharya Gopi.jpg

இங்கே தரப்படும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தெலுங்கு மொழியிலிருந்து பெறப்பட்டவை. எழுதிய கவிஞர் கோபியை நான் பிரபலமாக அறிந்தவனில்லை. அவர் கவிதைகள் அருமையாக உள்ளன. பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்புகிறேன்.

துன்பங்களின் போது
தாயாரின் முந்தானைக்குள் பதுங்கியது போல்
நான் கவிதைகளுக்குள் புதைந்து கொள்கிறேன்

**
வியர்வை எறும்புகள்
எத்தனை தட்டினாலும் விலகுவதில்லை

**
அவள் மரணம் நொடியில் நிகழ்ந்தது
எங்கள்மரணம்
நொடிக்கு நொடி நிகழ்கிறது.

**
காலண்டர்களை தின்று கொழுத்த
காலத்துக்கு
இயக்கம் மட்டும் உண்டு
இலக்குகள் இல்லை

**
கண்களிலிருந்து
உதிர்வதால் அவை
கண்ணீர் போலாகுமா?

**
அதோ
அந்தப்பையன்
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தெறிகிறான்!!

டாக்டர் என் கோபிபற்றி மேலும் பல  தகவல்கள் ( இணைய தளத்திலிருந்து) 

தெலுங்கு கவிதைத் தளத்தின் அதி நவீன கவிதை வடிவம் “நானிலு”.  “தெலுங்கு பல்கலைக்கழகத்தின்” முன்னாள் துணை வேந்தரும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான முனைவர். என். கோபி அவர்களால முதன் முதலாய் வடிவமைக்கப்பட்ட “நானிலு” வெகு எளிதாய் புரிந்துகொள்ளப்படும் தன்மையிலேயே தெலுங்கு இலக்கிய உலகின் இன்னொரு பரிமாணமாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நாலடிக் கவிதைகள் இலக்கிய இலக்கண வரையறைகளுக்கப்பாற்பட்டவை.

ஹைகூக் கவிதைகள்போல இறக்குமதி செய்யப்பட்டதல்ல இது. 

நானிலு கவிதைகளின் சில அடையாளங்கள்… நான்கு வரிகள். சுமார் பத்து முதல் இருபது வார்த்தைகள். முதல் இரு வரிகளில் ஒரு செய்தி….தகவல் அல்லது குறீயிடாக அமைத்து அடுத்த இருவரிகள் அதைச் சார்ந்தோ எதிர்த்தோ தொடர்புபடுத்தியோ அமைவது இதன் பிரதான அடையாளம். மரபு, புது, ஹைகூ என எல்லாவகைக் கவிதை வடிவங்களுமே மேற்சொன்ன அடையாளம் கொண்டதாகவே அமைகிறதென்றாலும் “நானிலு” கவிதைகளில் பொருள் சார்பு சற்று அழுத்தமாய் விழுகிறது. அணுகுமுறை அதாவது வெளிப்பாடு அதி எளிமையாயினும் பொருட்செறிவு வீரியமானது.

தெலுங்கு கவிதைக்களத்தில் ஒரு நவீன கவிதை முயற்சியை துணிவுடன் மேற்கொண்டு ஒரு “ட்ரெண்ட் செட்டர்” ஆன திரு. கோபி அவர்களின் முதல் சீடர் திரு. எஸ்.ஆர்.பல்லம். கவிஞர் பல்லத்தின் தொகுப்பிலிருந்து தன் குருவுக்குக் காணிக்கையாய் படைத்த நானிலுக்களில் சில

விளக்குடன்
ஒப்பிடத்தேவையில்லை
மண்ணெண்ணெய்க்கு
தாரைவார்க்காமாலிருந்தால் போதும்

சொல்வது
புரியாததற்கு
மொழி மட்டுமல்ல
மனமும் காரணம்தான்

யாத்திரை என்றால்
பயணமல்ல
உன்னுள்ளேயே
நீ செல்லும் பிரவாகம்

அரிசிமணி மீது
சித்திரம் அழகுதான்
அது சோற்றுப்பருக்கையாகும்போது
இன்னும் அழகு

நன்றி: திசைஎட்டும் அக்-டிசம்பர் 2005 இதழ்

இதைப்போன்று தமிழில் அந்தக்காலத்தில் அம்மானை என்று ஒரு வகை பிரபலம். அதைப்பற்றி அடுத்த பக்கத்தில் பார்க்கலாம். 

 

அம்மானை – எஸ் எஸ்

Image result for அம்மானை

அம்மானை என்பது மூன்று பெண்கள் ஆடும் கல்  விளையாட்டு.  இன்றும் கிராமங்களில் மூன்று கல்  , ஐந்து கல்  என்று கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து ,  பெண்கள் ஆடும் ஆட்டம் நடைபெற்று வருகிறது.  ஆனால் பழங்காலத்தில் இந்த விளையாட்டு ஆடும்போது இலக்கிய நயம் ததும்பும் பாடல்களைப்  பாடி விளையாடியதால்  அந்தப் பாடல் முறைக்கே அம்மானை என்று பெயர் வந்தது.

முதல் பெண் ஒரு செய்தியைப்  பாட்டாகக்  கூறிவிட்டு,    கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள்.  அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ  இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும்.

இரண்டாவது பெண் ,  முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள். 

மூன்றாவது பெண் அந்த வினாவிற்கு  விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.

இதுவே ‘அம்மானை’ விளையாடும் முறையாகும்.

உதாரணமாக ,  திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,

முதற்பெண் (பொதுச்செய்தி)

“தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளுமானவர் தாம் ஆண்பெண் அலியலர் காணம்மானை

வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.

இரண்டாவது பெண் (வினா)

“ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில் சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை?

அவ்வாறு  திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும்  அல்லாதவரானால்  சீதையை மணந்தது ஏன்.?

மூன்றாவது பெண் (விடை)

“ “தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை” ”

சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் (சாபம் என்றால்  வில்  என்று பொருள் )என்னும் இருபொருள்பட விடைகூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.

இந்த அம்மானை வடிவில்  சிலப்பதிகாரத்திலும்  இளங்கோ அடிகள் பாடியிருக்கிறார்.

மாணிக்கவாசகர் திருவாம்மானை என்று பத்துப் பாடல்கள் சிவபெருமானைப்பற்றிப் பாடியுள்ளார். இதில் மூன்று பெண்கள் பாடுவதுபோல் இல்லாமல் , வினா-விடையும் இல்லாமல் ஒரு பெண்ணே சொல்லவேண்டியதைக் கூறி அம்மானை என்று முடிப்பதுபோல் அமைத்திருப்பார்.

இராமப்பையன் என்பவர் எழுதிய அம்மானைப் பாடல்களால் நாயக்கர் வம்சத்தைப்பற்றித்   தெரிந்துகொள்ள முடிகிறது.

கிறித்துவத் தமிழ்த் தொண்டரான வீரமாமுனிவர் ‘கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை’ என்ற நூலை எழுதியுள்ளார். 

இசுலாமியத் தமிழ்த் தொண்டரான உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர்  சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக்கொண்டு ‘பரத்தியர் அம்மானை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.

‘லாவணி’ என்றழைக்கப்படும் சமீபத்திய கதைப்பாட்டும் அம்மானைக் கதைப் பாட்டுப்போலவே அமைந்திருக்கும். குதிரை லாவணி போன்றவை அன்றாடப் பேச்சு வழக்குத் தமிழில் குறிப்பிட்ட இலக்கணம் ஏதுமின்றி அமைவதைப் பார்க்கலாம்.

“அம்மானை என்னும் செய்யுள் வகை சிலப்பதிகாரத்தில் பிறந்து, மணிவாசகரின் திருவம்மானையில் தவழ்ந்து, சிற்றிலக்கியம் பிரபந்தங்களில் முழு வளர்ச்சியுற்று, அண்மைக்கால அம்மானைக் கதைப் பாட்டுக்களைத் தன் குழந்தைகளாகப் பெற்று நம்மிடையே இன்னும் இளமை குன்றாத் தமிழ் இலக்கியமாகத் திகழ்கிறது ” என்று கனடாவில் இருக்கும்  அறிஞர்  அனந்த் எழுதுகிறார்.