Monthly Archives: August 2014
This gallery contains 10 photos.
திருப்பதி-திருமலையில் சேஷாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி.ஆகிய மலைகளைக் கடந்து ஏழாவது மலையான வெங்கடாத்ரியில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளைச் சேவிப்பதைத் தவிர வேற என்ன வேண்டும் என்று கேட்கிறீர்களா? பெருமாள் ஸ்ரீதேவி ஆகியோரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு கொஞ்சம் பூமாதேவியின் இயற்கை அழகையும் காணச் செல்லுங்கள்! புண்ய தீர்த்தங்களையும் தெளித்துக் கொள்ளுங்கள்! அதற்காகவே அமைந்திருக்கின்றன அருமையான இடங்கள் – – ஸ்வாமி புஷ்கரணி -பாபவிநாச தீர்த்தம் -ஆகாஷ் கங்கா – குமார தாரா தீர்த்தம் – ஜாபாலி ஆஞ்சநேயர் கோவிலும் … Continue reading
நான்கு
நான்கு என்றதும் நினைவுக்கு வரும் நால்வர்
நம்மைக் கடைசியில் தூக்கும் அந்த நால்வர்
நான்கு என்றதும் வணங்கத் தோன்றும் நால்வர்
நமக்கு தேவாரம் தந்த சமயக் குரவர் நால்வர்
அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்க வாசகர் !
நான்கு என்றதும் வழிகள் காட்டிடும் திசைகள்
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
நான்கு என்றதும் தெரியும் பருவம் நான்கு
வசந்தம் கோடை இலையுதிர் வாடை
நான்கு என்றதும் சர்ச்சைக்குரிய வகுப்பு நான்கு
பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன்
நான்கும் அன்றைய நாற்கரத்தில் நான்கு பக்கம்
உயர்ந்தவன் தாழ்ந்தவர் நான்கில் என்றும் கிடையாது
சீட்டுக் கட்டைப்போல அதுவும் நான்கு ஜாதி
உயர்ந்தது தாழ்ந்தது சீட்டுக் கட்டிலும் கிடையாது
நாம் போற்றித் துதிக்கும் பேர்களும் நால்வர்
மாதா பிதா குரு தெய்வம்
நாம் போற்றிப் படிக்கும் வேதங்கள் நான்கு
ரிக் யஜுர் சாமம் அதர்வணம்
மனிதரைக் கட்டிப் போடும் விலங்குகள் நான்கு
பெற்றோர் சுற்றார் துணை மக்கள்
மனிதரை உயர்த்திக் காட்டும் மையங்கள் நான்கு
தனம் குணம் கல்வி உழைப்பு ! !
இரவிலே வாங்கினோம் விடிந்தது புது யுகம் எஸ் எஸ்
இரவிலே வாங்கினோம் விடிந்தது புது யுகம்
(இது இந்திய அரசியல் நிகழ்வுகளைத் தழுவி, ‘ஏன் நம்நாடு பொன்னாடாக மாறக்கூடாது ?’ என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கதை. மற்றபடி எந்த மனிதரையும் மதத்தையும் இனத்தையும் நாட்டையும் நம்பிக்கையையும் குறிப்பிடுவதற்கோ குறை கூறுவதற்கோ எழுதப்பட்டதல்ல.)
சுதந்திர இந்தியாவின் வரலாறு தான் என் வரலாறும். ஒரே சமயத்தில் பிறந்த எங்கள் இருவருடைய வாழ்க்கையில் தான் எத்தனை ஒற்றுமைகள்.
பரதனூர். அழகு கொஞ்சும் அருமையான கிராமம்.அதன் சுகமோ சுவையோ மணமோ அலாதி..ஊருக்கு ஓரத்தில் மலை – அதில் விழும் அருவி. அதில் பெருகும் ஓடை. அந்த அருவியின் பெயர் பாலருவி. அது விழும் இடம் பூலோக சொர்க்கம்.- பூமழை என்று அந்த இடத்திற்குப் பெயர். ஓடைக்கு அப்புறம் அக்கரை;இப்புறம் இக்கரை. இரண்டிற்கும் இடையே வட்ட வட்ட பரிசில்கள்.
இயற்கை தரும் சுகங்களை பறிப்பதற்கென்றே மனிதன் பிறந்திருக்கிறான் போலும். இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே ஓடை மட்டுமல்ல வெறுப்பின் வாடையும் வீசும். மல்லிகைப் பூவிலும் காயிலும்,குதிரையிலுமே ஜாதியைப் பார்க்கும் மனிதன். அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அடிப்பது, வெட்டுவது, ஊரைக் கொளுத்துவது எல்லாம் சர்வ சாதாரணம். இக்கரைக்கும் அக்கரைக்கும் இதை மையமாகக் கொண்டு அடிக்கடி சண்டை அடிதடி வெட்டு குத்து கொலை தொடர்ந்து நடக்கும். ஓடையில் தண்ணீருக்குப் பதிலாக ரத்தம் ஓடும்.
நான் பிறந்த விதமே தனி. அக்கரையில் அப்பா. தீவிரவாதி. இக்கரையில் அம்மா காந்தியவாதி. காந்தீயம் தீவிரத்தை வென்றது. இரு கரைகளுக்கும் இது பிடிக்குமா? வெடித்தது முன்னூறாம் கிராமப் போர். நெற்களம் போர்க்களமாயிற்று. கதிர் அறுக்கும் அறுவாள் தலை அறுக்க ஆரம்பித்தது. நெல்மணிகளுக்குப் பதிலாகக் கண் மணிகள் சிதறின. என் தந்தை யாருக்கும் தெரியாமல் அம்மாவை அழைத்துக் கொண்டு டெல்லிக்குப் போய் விட்டார். இரு கரைகளும் இருவரையும் வெட்டிப்போடவேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமை காட்டினர். புதிய பிரச்சனை ஒன்றும் வந்தது.
பரதனூர் கிராமத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தார் வெள்ளைக்கார கலெக்டர். பூமழை சோலை ! இருவருமே சொந்தம் கொண்டாடினர். பிரித்தாள்வது புதிய பிரச்சனையைக் கொண்டுவந்தது. பூமழையை இக்கரைக்கே கொடுப்பது என்று முடிவு செய்தனர். இதனால் கலாட்டா கொள்ளை கொலை கற்பழிப்பு தாண்டவமாடியது பரதனூரில். இந்த சமயம் பார்த்து தன் மகன் தனது கிராமத்திலேயே பிறக்க வேண்டும் என்று முடிவு கட்டினார் என் தந்தை. அதற்காக நிறை மாத கர்ப்பிணியான என் அம்மாவை அழைத்துக் கொண்டு துணைக்கு டெல்லியிலிலிருந்து ஒரு மருத்துவச்சியுடன் பரதனூர் வந்தார். ஊரில் ஊரடங்கு. ஆனால் ஊர் அடங்கவில்லை.
அம்மா அப்பா ஆயிஷா -மருத்துவச்சி மூவரும் பூமழை சோலையில் தஞ்சம் அடைந்தனர். எப்படியாவது அம்மா வீட்டுக்குப் போய்விடவேண்டும் என்று இரவில் அப்பாவே படகை ஓட்டிக்கொண்டு மூவரும் சென்றனர். நடுநிசி. நடு ஆற்றில் அம்மாவுக்கு பிரசவ வலி. அம்மா வலியில் துடிக்க அப்பா என்ன செய்வது என்று அறியாமல் துடிக்க ஆயிஷாவின் பழகிய கரங்கள் என்னை இந்தப் பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தன. நான் உலகில் பிறந்தமைக்காக அழுத புனிதமான பொன்னாள். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14க்கும் 15க்கும் இடைப்பட்ட நள்ளிரவு. ஆம். இந்தியாவின் சுதந்திரம் பிறந்த அந்தப் புனிதத் தருணத்தில் தான் நானும் பிறந்தேன். என் பொல்லாத வேளை நான் பிறந்த உடனே பாரதி என்ற எனது மாதாவும் மறைந்தாள்.
என் தந்தை என்னை அழைத்துக் கொண்டு இக்கரையில் இருக்கும் என் மாமன்மார்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓடக்கரையிலே இருந்தார். பரதனூர் என்ற பெயரே மறைந்துவிட்டது. இக்கரை அக்கரை என்றே அழைக்கப்பட்டன. இரண்டு ஊரும் பிரிபட்டன. பூமழை சோலையோ இக்கரையுடன். இதனாலேயே அடிக்கடி இக்கரைக்கும் அக்கரைக்கும் கலவரம் வெடிக்கும். அப்பா யாருடனும் பேசுவதில்லை. தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியான அவரிடம் அனைவருக்கும் மதிப்பும் கோபமும் இருந்தன. இரண்டு ஊர்களும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று எல்லையம்மன் கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவரது நெருங்கிய பங்காளியே அவரைக் கோவிலில் வைத்துக் குத்திக் கொன்றான். அந்த சமயம் ஐந்து மாதக் குழந்தை நான். இறக்கும் முன் அவர் ‘ஏ ராம்’ என்று என்னைத் தான் அழைத்தாராம். .என் பெயர் ராம்.
நான் வளரத் தொடங்கினேன். என் பெரிய மாமா தான் என்னை வளர்த்தார். மிகவும் நேருமையானவர் அக்கரையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் அவருக்கு மதிப்பு. இக்கரைக்கு அவர் தான் தலைவர். ஊரைச் சிறப்பாக்க அவரை மாதிரி திட்டம் போட்டவர்கள் யாருமில்லை. என் வளர்ச்சியில் அவருக்கு தனி ஈடுபாடு. மற்ற மாமாக்களும் அவருக்குத் துணையாக இருந்து ஊரை விவசாயத்தில் சிறு தொழிலில் நெசவில் முன்னேற்றம் அடையச் செய்தனர். பூமாலைத் தண்ணீரைத் தேக்கி அணையும் கட்டினார். “நீங்கள் நாட்டுக்காக உழையுங்கள் நான் உங்களுக்காக உழைக்கிறேன்” என்று அடிக்கடி சொல்வார். என்னை டெல்லிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். பள்ளி கல்லூரி படிப்பெல்லாம் டெல்லியில் தான் படித்தேன்.
எனக்கு பதினைந்து வயது இருக்கும். அச் சமயத்தில் பெரியமாமாவின் துணை தேவை என்று மலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஆட்கள் வந்தார்கள். மாமாவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தார். ஊரின் செழுமையைப் பார்த்த அந்தக் கயவர்கள் ஊரையே கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல. மாமா கட்டிய அணையையும் உடைத்து விட்டார்கள். உடைந்தது அணை மட்டுமல்ல. மாமாவின் மனதும் கூட. இரண்டே வருடத்தில் மாமா துவண்டுவிட்டார்.சொந்த வாழ்க்கையிலும் மாமாவுக்கு ஆயிரம் பிரச்சினை. அவரது மனைவி காலமாகி விட்டாள். அவரது ஒரே மகள் இந்துவும் கணவனை இழந்து அவர் வீட்டுக்கே வந்துவிட்டாள்.
மாமாவுக்கு உடம்பு ரொம்ப முடியவில்லை என்று ஓடி வந்தேன். ‘இந்து இவனை நல்லா கவனிச்சுக்கோ’ என்று சொல்லி கண்ணை மூடினார். இந்தும்மா தான் எனக்கு அம்மா அப்பா எல்லாம்.
பெரியமாமாவுக்குப் பிறகு சின்ன மாமா கொஞ்ச நாள் நிலபுலன்கள் , ஊர் விவகாரம் எல்லாம் பார்த்தார். அக்கரையில் இருந்து ஆட்கள் தகராறு செய்ய வந்தார்கள். சின்ன மாமா பார்க்கத் தான் சின்னவர். ஆனால் கீர்த்தி பெரிது. அக்கரைக் கும்பலுக்குச் சரியான பாடம் கொடுத்தார். அதற்குப் பிறகு சமாதானம் பேச வந்த இடத்தில் அப்படியே நெஞ்சு வலியில் மறைந்து விட்டார். எல்லோரும் அதற்குப் பிறகு இந்தும்மாவைத் தான் எதிர்பார்த்தார்கள்- ஊரைப் பராமரிக்க.
இந்தும்மாவுக்குத் துணிச்சல் ஜாஸ்தி. என் மேல் ரொம்ப அக்கறை. ‘ராம் ! நீ இந்த உலகத்திலே பெரிய ஆளாய் வரணும்னு’ அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா இந்தும்மாவுக்கு பங்காளி பகையாளி எக்கச்சக்கம். கிராமத்திலே லேவாதேவி பார்த்துக்கொண்டிருந்து கொள்ளை அடித்த மக்களை விரட்டிவிட்டு கோவாப்ரேட்டிவ் பாங்க் ஆரம்பிச்சார். அக்கரையில் ஒரு சிறு காலனி இருந்தது. அக்கரைப் பெரிய மனிதர்கள் எல்லாம் அந்த காலனி மக்களை கொடுமைப் படுத்துவது தெரிந்ததும் அந்தக் காலனியை அக்கரையிலிருந்து பிரித்து தனி ஊராக மாற்றிவிட்டார். அக்கரை ஆட்கள் மறுபடியும் சண்டைக்கு வந்த போது அவர்களுக்கு சரியான பாடம் வரும் படிச் செய்தார்.
ஒரு பொம்பளைக்கு இவ்வளவு துணிச்சலா ? என்று பங்காளிக் காய்ச்சல் வேற! ஊர்ப் பெருசுகளெல்லாம் இந்தும்மாவை பதவியிலிருந்து இறக்கத் திட்டம் தீட்டினர்.’ஊருக்கு நல்லது செய்யறப்போ தடுக்கிறாங்களேன்னு இந்தும்மா ஊர்ப் பெரியவர்களை ஜெயிலில் போட ஏற்பாடு செய்தார். ஜனங்க கொதித்து இந்தும்மாவைப் பதவியை விட்டுத் தூக்கினார்கள். கொஞ்ச நாள் தான். இந்தும்மாவின் பெருமையை உணர்ந்து அவங்களையே திரும்ப வரவழைத்தார்கள். இந்தும்மாவுக்கு இமாலய வெற்றி. கூடவே ஒரு சொந்த சோகம். வளர்ந்த பிள்ளை சின்னப் பிள்ளையை ஒரு விபத்தில பறி கொடுத்தாங்க. பெரிய பிள்ளை ராஜா அண்ணா தான் அம்மாவுக்கு உதவியா இருந்தார். ராஜா அண்ணா வெளிநாட்டிலே சோனாவை கல்யாணம் செய்தபோது வாழ்த்துச் சொன்ன முதல் ஆள் நான் தான்.
நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பம்பாயில் அணு ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். ‘அணு ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் அதில் நம் நாடு ரொம்ப முன்னேறணும்’ என்று இந்தும்மா அடிக்கடி சொல்வார்கள். அவங்க சொன்னபடி 74இல் எங்கள் டீம் ராஜஸ்தானத்திலே அணுகுண்டு சோதனை நடத்தி உலகத்தையே அதிர வைத்தது. இந்தும்மாவுக்கு அதில் ரொம்பப் பெருமை. எனக்கு அணு ஆராய்ச்சியை விட மின்னணுத் துறை ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தியாவில் கலர் டிவி கொண்டு வந்தபோது நானும் அதில் பங்கேற்றேன். இந்தியாவே கலர் டீவியில் மின்னியது.
இந்த டீவி சமாசாரத்திற்கு கொழும்பு போன போது தான் சாந்தினியை சந்தித்தேன். அவளது யாழ் தமிழ் எனக்கு மிகவும் பிடித்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன் அவள் தான் என் வாழ்க்கைத் துணைவி என்று. என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்ல? சிங்களத்தவருக்கும் யாழ் தமிழருக்கும் போர் வெடித்துக் கொண்டிருந்த நேரம். (அப்போது நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில் என் மனைவியின் சொந்தக் காரர்கள் தான் என் ராஜா அண்ணாவின் மரணத்துக்குக் காரணமாவார்கள் என்று) இந்தும்மாவின் ஆசியுடன் என் திருமணம் நடந்தேறியது.
இதற்கு நடுவே கோவில் பேரைச் சொல்லி மக்களை பயமுறுத்தும் தீவிரவாதிக் கும்பலை இந்தும்மா அடக்கி வைத்தார். அதனால் இந்தும்மாவை கோவிலுக்கு எதிரி என்று சொல்லி அவர் வீட்டிலேயே வேலை செய்துகொண்டிருந்த காவல்காரனை வைத்தே கொலை செய்து ஊரையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். துடிதுடித்துப் போய் விட்டேன். எங்கள் இந்தும்மாவுக்கா இந்தக் கதி! ராஜா அண்ணாவின் கண்ணீரைத் துடைத்து விட்ட முதற்கரம் என்னுடையது தான்.
இந்தும்மாவிற்குப் பிறகு ராஜா அண்ணா எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டார். கம்ப்யூட்டர் தான் இந்தியாவை முன்னுக்குக் கொண்டு வரப்போகிறது என்பதை அறிந்த முதல் தீர்க்கதரிசி ராஜா அண்ணா தான். ‘”ராம் நீ அன்னிக்கு டீவியைக் கொண்டு வந்தாய். அதைவிட இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னுக்குக் கொண்டு வர நீ எல்லாம் செய்ய வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் பொருளாதாரம் எல்லாம் ஐடி துறையில் தான் இருக்கிறது “ என்று உறுதியாக நம்பி அதற்காகக் கோடு போட்டார்.
ராஜா அண்ணாவிற்கும் நிறைய எதிர்ப்புக்கள் இருந்தன. என் மனைவி சாந்தினிக்கு உதவப் போய் இன்னும் சிக்கலில் மாட்டிக் கொண்டார் . சாந்தினியின் உறவினர்களைக் காப்பாற்ற தன் ஊரிலிருந்து ஆட்களை அனுப்பினார். அதில் பிரச்சினை பெரிதாகி இரண்டு கூட்டமும் அவரை எதிர்த்தன. என் வீட்டுக்கு அவரை ஒருமுறை விருந்துக்கு அழைத்து விட்டு ராஜா அண்ணாவின் வருகைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம். நானும், சாந்தினியும், என் மகன் பிரேமும்,நாராயணனும்,மகள் லக்ஷ்மியும் காத்துக் கொண்டிருக்கும் போது எங்கள் கண் முன்னாலேயே எங்கள் வீட்டு வாசலில் ராஜா அண்ணாவை சாந்தினியின் ஊர்க்காரக் கும்பல் குத்திக் கொன்றனர். கொடூரக் காட்சி அது. துடிதுடித்துப் போனோம்
(இன்றைக்கு எனக்கு நூறு வயது ஆகப் போகிறது. அப்படியும் உடம்பில் தளர்ச்சி இல்லை. நடுக்கம் இல்லை. ஆனால் அந்த ராஜா அண்ணா கொலைக் காட்சியை நினைத்தால் தலை முதல் கால் வரை தன்னாலே ஒரு நடுக்கம் வரும்)
ராஜா அண்ணாவின் ஆசைகள் வீண் போக வில்லை. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா உலகமயமாக்க முதல் படி கட்டப் பட்டது. பிரேம், நாராயண்,லக்ஷ்மி மூவரும் என்னுடன் கடுமையாக உழைத்தனர் கம்ப்யூட்டர் துறையில் ஒரு கலக்குக் கலக்கினோம். உலகமே அதிசயத்தது. போட்டி போட்டுக் கொண்டு உலகத்தின் அத்தனை நாடுகளும் நம்முடைய சாஃப்ட்வேருக்காக மன்றாடும் நிலை வந்தது. நாட்டின் பொருளாதாரமும் அதற்கேற்ப முன்னேறிக் கொண்டே வந்தது.
BPO அவுட்சோர்சிங்க் என்ற மாபெரும் திட்டத்தைக் கண்டுபிடித்தேன். என் மகள் மகன் மூலம் அதை செயல்படுத்தவும் செய்தேன். உலகப் பொருளாதாரமே நடுங்க ஆரம்பித்தது. நாம் இந்தியாவின் காலனிகளாக மாறிவிடுவோமோ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் கவலைப் படத் தொடங்கின. அமெரிக்காவே இந்தியாவைத் தனக்குச் சமமான தேசமாகக் கருதத் தொடங்கியது. இதிலும் போட்டி இல்லாமல் இல்லை. சீனாவும் இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னணியில் வர ஆரம்பித்தது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு நின்றது போக இன்று இந்தியாவிற்கு வரத் துடிக்கும் அமெரிக்கர் ஏராளம். நமது மேனேஜ்மெண்ட் பள்ளிகளிலும் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் படிக்க உலகமெங்கும் போட்டி.
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் எனக்கு உதவத் தயாராய் இருந்தார்கள். எனக்கு எழுபது வயதாகும் போது தான் நான் புதியதாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதுவே என் பிறந்த நாள் விழா தலைப்பாயிற்று. அந்த நல்ல நாளிலே புதுமை ஒன்றும் நடைபெற்றது. பக்கத்து நாடான நேபாளம் நம்முடன் இணைந்து சிக்கிம் போல மாநில அந்தஸ்து பெற்றது. சொல்லுவதற்கு வெட்கமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் பணக்காரன் ஆனேன்.
அதற்குப்பின் நடைபெற்ற முப்பது ஆண்டுகளும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய நாட்கள். இந்தியாவின் அசுர முன்னேற்றம் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. ப்ரேம் இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தேவையான ரோடுகள், அணைகள், நதி இணைப்பு, கடல் வழி, போன்ற இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் பணியில் ஈடுபட்டு உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தான். நாராயண் ஒவ்வொரு கிராமத்தையும் பரதனூர் ஆக மாற்றினான். நகரத்து நெரிசலைக் குறைக்க மக்களைக் கிராமத்துக்கு அனுப்பினான். ஒவ்வொரு கிராமமும் ஒரு சாட்டிலைட் நகரம் போல செயல் பட்டதால் கிராமத்திலிருந்தே வேலை செய்வதை மக்களும் வரவேற்றனர். கிராமம் சொர்க்கமாயிற்று. லக்ஷ்மி இரும்புத் துறையிலும் மற்ற நிலக்கரித் துறையிலும் பெரிய சாதனை புரிந்தாள். பீகார் நிலக்கரிச் சுரங்கத்துக்குக் கீழே இருந்த வைரச் சுரங்கமும், கோலாரில் கிடைத்த புது தங்கக் கனிமன் பாறைகளும், அஸ்ஸாமில் புதிதாகக் கிடைத்த பெட்ரோலியம் எண்ணையும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது.
ப்ரேம், நாராயண், லக்ஷ்மி இவர்களுடன் ஓட முடியாததால் நான் வயற்காட்டைக் கவனிக்க ஆரம்பித்தேன். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இவற்றுடன் உணவுப் புரட்சியும், மருத்துவ புரட்சியும் ஆரம்பித்தேன். இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் அதிபர்களும் என்னுடன் இணைந்தனர்.
எனது 80 வது பிறந்த நாளை கொண்டாட என் குடும்பத்துடன் யாழ்ப் பாணம் சென்றிருந்தோம். அப்போது தான் எனக்குத் தகவல் கிடைத்தது எனக்கு பாரத ரத்னா கிடைத்திருக்கிறதென்று. அதைவிட மகிழ்ச்சியான செய்தியும் கொழும்பில் கிடைத்தது. இலங்கை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவெடுத்தது. இலங்கையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்த இலங்கை இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தது.
அடுத்த ஐந்து வருடங்களில் பங்களாதேஷும் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவை மாபெரும் நாடாக மாற்றியது. சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இருந்ததைப் போல் இந்தியாவும் சீனாவும் உலக வல்லரசுகளாகத் திகழ்ந்தன.
நான் பிறந்த நேரத்தின் சந்தோஷத்தை வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.பாரத ஜனாதிபதியாக நான் இருக்கவேண்டும் என்று இந்தியாவின் எல்லா கட்சிகளும் ஏக மனதாக என்னைக் கேட்டுக் கொண்டன. நான் மறுத்துவிட்டேன்.
இந்தியாவில் மேலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்தன. வானத்தில் மிதக்கும் வீடுகள். கடலுக்கடியில் தொழிற்சாலைகள், இமயப் பனிமலையிலிருந்து மின்சாரம், கேரளாவில் கிடைத்த யுரேனியம் கொண்டு அணுவின் ஆக்கபூர்வ சேவை. நமது இந்தியா சிகரம் தொட்டது.
இன்னும் ஓரே வருடம் செஞ்சுரி அடிக்க முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் பிறந்த நாளுக்காக இல்லை. இந்தியாவின் நூறாவது சுதந்திர நாளுக்காக. அப்போது தான் என் வாழ்க்கையில் இதுவரை அறியாத புது ரகசியம் ஒன்று வெளிப்பட்டது. திரைப் படங்களில் தான் இந்த மாதிரி க்ளைமாக்ஸ் கடைசியில் வரும். அதுபோல எனக்கு 99 வருடம் கழித்து வந்த செய்தி என்னை திக்குமுக்காடச் செய்தது. அதுவும் என் மகன் நாராயண் மூலமாக அது தெரிய வந்தது.
பாகிஸ்தான் பிரதமரின் தந்தை ரஹீம் எனது இரட்டைச் சகோதரராம்.பரதனூர் ஓடையில் என்னுடன் படகில் பிறந்தவராம். என் தந்தை மருத்துவச்சி ஆயிஷா பேகத்திடம் ஒரு குழந்தையையும் என் அம்மாவின் நகைகளையும் கொடுத்து அனுப்பினாராம். ஆயிஷா பாகிஸ்தான் சென்று ரஹீமை வளர்த்து பிறகு இறக்கும் போது உண்மையை சொல்லிவிட்டு சென்றாளாம்.ரஹீம் பாகிஸ்தானில் கடவுள் போல கருதப்படுபவர். இஸ்லாமை ஆக்கப் பணியில் உயர்த்தி உலகமே வணங்கும் அளவிற்கு உயர்ந்தவர். அவருக்கு இந்த உண்மை பல வருடங்களாகத் தெரிந்திருந்தும் யாருக்கும் சொல்லாமல் இருந்தார். என் மகன் நாராயண் கராச்சி சென்றபோது அவர் அவனை அழைத்து என்னை சந்திக்க விரும்பவதாகவும் கூறினார். இரு சகோதரர்களும் காஷ்மீரில் சந்திதோம். பரதனூர் கதைகளைக் கூறினேன். ‘அல்லாவின் கருணை’ என்று புன்னகை பூத்தார். இரு பெரும் கிழவர்களும் ஒரு மாபெரும் சதித்திட்டம் தீட்டினோம். அதற்காக ரகசியமாக உழைத்தோம். அந்த உழைப்பிற்கான பலன் கிடைத்தது. 2047 ஆகஸ்ட் 15 அன்று நூறு வருடங்களாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்தனர்.
விடிந்தது புதுயுகம்.
இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், இணைந்த ‘இந்திய ஐக்கியக் குடியரசு’ என்ற மாபெரும் வல்லரசு.
பொன்மகள் வந்தாள் (கோவை சங்கர்)
நான்மறை வேதங்கள் வடிவையும் பொருளையும்
அருளிய தேவிநின் திருநாமம் போற்றி !
அன்பர்கள் செய்துவரும் நல்வினைப் பயன்களையே
அள்ளியள்ளி அருளுகின்ற அன்னையே போற்றி !
மென்மையுடை குணத்தோடு எழில்கொஞ்சும் ரதிதேவி
திருவுருவாய் வந்துநின்ற அஞ்சுகமே போற்றி !
மன்பதையைக் காப்பவளே மாலனவன் மனையாளே
கமலத்தி லிருப்பவளே தேவிநின்தாள் போற்றி !
அன்றலர்ந்த மென்மையுடை இதழ்கொண்ட தாமரைபோல்
வசீகர வதனத்தாள் திருமகளே போற்றி !
அன்பார்ந்த தேவர்கள் கரமோங்க அறம்வாழ
பாற்கடலில் அமுதமொடு உதித்தவளே போற்றி !
மன்பதை மாந்தர்கள் தேவர்கள் ஒருமுகமாய்
அடிபணிந்து துதிபாடும் அன்னையே போற்றி !
என்னீசன் மாலனவன் பள்ளிகொண்ட பெருமாளின்
இதயத்தில் குடிகொண்ட நாயகியே போற்றி !
மின்னுகின்ற தங்கத் தாமரை மலரின்மேல்
உறைகின்ற தேவியாம் திருமகளே போற்றி !
மன்பதை மாந்தர்கள் ஜீவன்க ளனைத்திற்கும்
முழுமுதல் தலைவியாம் திருமகளே போற்றி !
வானவர் மாந்தர்கள் துதிபாடி அடிபணியும்
முழுமுதல் கடவுளாம் திருமகளே போற்றி!
அன்பனவன் திருமாலின் துணைவியாய் என்றென்றும்
உடனிருக்கும் நாயகியே திருமகளே போற்றி !
(தொடர்ந்து வரும்)
வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்கிய முதல் நாள்!
15 ஆகஸ்ட் 1947
அன்று பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு கொடியேற்றிவைத்து பேசிய பேச்சைக் கேளுங்கள்!
நன்றி இன்டெர்நெட்
சுதந்திரம் ஆகஸ்ட் 15
:ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே நாம் ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!
67 ஆண்டுகள் பறந்துவிட்டன. நாம் சுதந்திரம் பெற்று!
அரசியல்வாதிகளின் ஊழல்கள், ஏழ்மை,பட்டினிச் சாவு, ,வேலையின்மை மதப் போராட்டங்கள் எல்லாவற்றையும் மீறி நாம் உலக அளவில் வல்லரசாக மாறும் பயணத்தில் முன்னேறி இருக்கிறோம்.
முதல் முறையாக நரேந்திர மோடி கொடியேற்றப் போகிறார்.
மற்றவர்கள் எத்தனை முறை கொடியேற்றி இருக்கிறார்கள் தெரியுமா?
பிரதமராக இருந்தும் கொடியேற்றாதவர்கள்
சந்திரசேகர் , குல்ஜாரிலால் நந்தா
மந்திரம் – தந்திரம்
பெ: கறுப்புப் பூனையே உன் கண்ணில் என்ன மந்திரம்
ராத்திரியிலும் உனக்குக் கண் தெரியுதே
ஆ: குட்டி நாய்க்குட்டி உன் மூக்கில் என்ன தந்திரம்
தூரத்திலே ஆள் வந்தாலும் மோப்பம் தெரியுதே
பெ: சீறும் புலிக்குட்டி உன் நகத்தில் என்ன மந்திரம்
கீறிக் கீறி தினமும் என்னை இம்சை செய்யறே
ஆ: வெள்ளை முயல் குட்டி உன் நெஞ்சில் என்ன தந்திரம்
பந்து போல பாய்ந்து என்னை மயங்க வைக்கிறே
பெ: செல்லக் காளையே உன் கொம்பில் என்ன மந்திரம்
குத்திக் குத்தி என்னை நீயும் துவம்சம் செய்யறே
ஆ: குள்ள நரிக்குட்டி உன் முகத்தில் என்ன தந்திரம்
முழிச்சுப் பாத்து என்னை நீயும் உசுப்பி விடுகிறே
பெ: நெட்ட மலைப்பாம்பே உன் உடம்பில் என்ன மந்திரம்
முறுக்கிப் போட்டு என்னை நீயும் முழுங்கப் பார்க்கிறே
ஆ: ஆட்டுக் குட்டியே உன் காலில் என்ன தந்திரம்
குதித்துக் குதித்து என் மனசைக் கூளம் ஆக்குறே
பெ: கள்ளக் குரங்கே உன் வாலில் என்ன மந்திரம்
வளைச்சுப் போட்டு என்னை நீயும் மலைக்க வைக்கிறே
ஆ: கண்ணுக் குட்டியே உன் இதழில் என்ன தந்திரம்
கவ்விப் பிடித்து என்னை நீயும் ஜவ்வு ஆக்குறே
பெ: கரடிக் குட்டியே உன் மேனி எங்கும் மந்திரம்
ரோம ராஜ்ஜியத்தில் என்னை அடிமை ஆக்குறே
ஆ: காட்டுப் பன்றியே உன் மூச்சில் என்ன தந்திரம்
முகர்ந்து முகர்ந்து என்னை நீயும் மலரச் செய்யிறே
பெ: ஆசைச் சிங்கமே உன் அங்கம் என்ன மந்திரம்
தஞ்சமென்று விழுந்த போதும் கடிச்சுத் தின்னுறே
ஆ: அழகு மயில் குட்டி உன் தோகை என்ன தந்திரம்
விரித்து விரித்து என்னை நீயும் சொக்க வைக்கிறே
பெ: துள்ளும் சுண்டெலி உன் வேகம் என்ன மந்திரம்
துள்ளித் துள்ளி ஓடிக் களைத்து வளையில் பதுங்குறே
ஆ: கள்ள மான் குட்டி உன் மேனி எங்கும் தந்திரம்
தடவத் தடவ நெதமும் நீயும் சிலிர்த்துப் போகிறே
பெ: கொல்லும் புலிக்குட்டி உன் பார்வை என்ன மந்திரம்
பாத்த உடன் என் உடம்பை வேர்க்க வைக்கிறே !!
*************************
படங்களுக்கு நன்றி ; குமுதம்,விகடன்,கல்கி,தினமலர்
ஆடி ஸ்பெஷல்


ஷேக்ஸ்பியரின் மாக்பெத் -விமர்சனம் by கிருபானந்தன்
ஷேக்ஸ்பியர் காமெடி,ட்ராஜிடி நாடகங்கள் பற்றிக் கேள்விப்பட்டது தவிரப் படித்தது கிடையாது.
ஷேக்ஸ்பியரின் படைப்பான ‘மாக்பெத்’ நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது
‘வியட்நாம் வீடு’ சுந்தரம் அவர்கள் தனது அறுபது ஆண்டு பேனா அனுபவத்தைக் கொண்டாடும் வகையில் “MACTRICS” குழுவினருடன் இணைந்து . 5.08.14 மற்றும் 06.08.14 இரு தினங்களிலும் ‘மைம்’ (மௌன மொழி) வடிவத்தில் மயிலாப்பூரில் அரங்கேற்றிய நாடகம் அது.
ஷேக்ஸ்பியரும் அவரது மனைவியும் தவிர மற்ற கதாபாத்திரங்கள் பேசுவது இல்லை. ஒரு மணிநேரத்திற்குக் குறைவான இந்த நாடகத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.
- சுமார் 30 இளைய நடிகர்களின் ஆர்வம் மற்றும் "ENERGY LEVEL"
- மௌன நாடகத்திற்குத் தேவையான சரியான அளவில் மிகை நடிப்பு
- அற்புதமான ஒருங்கிணைப்புடன் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகள்.
- ஷேக்ஸ்பியரையே சூத்ரதாரியாக உபயோகிக்கும் டெக்னிக்
- சோகமாக ஆரம்பித்து மகிழ்ச்சியாக உருமாறும் நடனம்.
எதுவுமே குறைசொல்லமுடியாத இந்த நாடகத்தைக் கதை முன்பே தெரிந்திருந்தால் இன்னமும் ரசித்திருப்பேனோ என்று தோன்றுகிறது
மதிப்பு (கோவை சங்கர்)
லஞ்சமே வேண்டாம் என்றேன்
அமைச்சர் பதவி பறிபோனது
ஓரினம் ஒர்குலம் என்றேன்
கட்சியெனைக் கழட்டி விட்டது
பணத்தாசை வேண்டாம் என்றேன்
உறவுமெனை உதறி விட்டது
கோவை கோவில்கள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
மருதமலை முருகன் கோவில்
கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில்
வெள்ளிங்கிரி கோவில்
தண்டு மாரியம்மன் கோவில்
ஈச்சனாரி பிள்ளையார் கோவில்
புளியகுளம் பிள்ளையார் கோவில்
சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில்
ஈஷா தியானலிங்கம்
கோவை தலை சிறந்த கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் பெயர் போனது!
அமிர்தா விஷ்வ வித்யாபீடம்
அவனாசிலிங்கம் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
காருண்யா பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
PSG தொழில் நுட்பக் கல்லூரி
கோயம்புத்தூர் தொழில் நுட்பக் கல்லூரி (CIT)
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி
குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி
PSG மருத்துவக் கல்லூரி
நேரு மகாவித்யாலயா கலைக் கல்லூரி
PSG கலைக் கல்லூரி
அரசினர் கலைக் கல்லூரி
கிருஷ்ணா கலைக் கல்லூரி
ராமகிருஷ்ணா வித்யாலயா கலைக் கல்லூரி
கற்பகம் பல்கலைக் கழகம்
இன்னும் பல!
சுந்தர ராமசாமியின் சிறுகதை
தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் (1931-2005) ஒருவர். மூன்று நாவல்களும் 60 சிறுகதைகளும் எழுதியவர். கனடாவில் இலக்கிய சாதனைக்காக ‘இயல்’ விருதைப் பெற்றவர். காலச்சுவடு என்ற இதழை நிறுவியவர். இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவரின் ஒரு கதையை அறிமுகப்படுத்துகிறேன்!
கோவில் காளையும் உழவு மாடும்
ஒரு கோவில் பண்டாரம். அன்னக் காவடி எடுத்துக் கொண்டு மக்களிடம் காசு பொருள் வாங்கி ஒரு இடிந்த மாடன் கோவில் அருகே தங்கி சமைத்துச் சாப்பிடும் யதார்த்த மனிதன். தரையில் கால் வைத்தால் நெருஞ்சி முள் அப்பிவிடும் கோவில் தான் பண்டாரத்தின் புகலிடம்.அவனுக்குத் துணை ஒரு கிழ நாய். கோவில் சன்னிதானத்திற்கு அருகில் இருக்கும் ஒரு மரப்பெட்டி தான் அவனது சொத்து சம்பத்து.
ஒரு நாள் ராத்திரி அந்தக் கோவிலில் தலை சாய்க்கப் .போக்கிடமில்லாத ஒரு கிழவர் வருகிறார். கருவாடு மாதிரி உடம்பு. லாபத் தேவதைக்கு சத்தைக் காணிக்கை கொடுத்து மிஞ்சிய சக்கை.காது கொஞ்சம் மந்தம் தான். அந்தக் ‘களை ’ முகத்தில் தெரிந்தது. பண்டாரம் பரிதாபப்பட்டு நாய்க்கு வைத்திருந்த சோற்றை அவருக்குப் போடுகிறான் .
நாய்க்கு ஏமாற்றம் தான்.
காலையில் எழுந்ததும் பண்டாரம் காவடியை எடுத்துக் கொண்டு போய்விட்டான். கிழவர் தூங்கிக் கொண்டிருந்தார். மாலையில் பண்டாரம் வந்தபோது கோவிலைச் சுற்றி புல் பூண்டு இல்லை. துப்புரவாக இருந்தது. கிழவனாரின் கைவண்ணம் தான் என்று தெரிந்தது.
கிழவனுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்! ஒரு பையன் பன மரத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போனான். வீட்டை விட்டு ஓடிப் போன இரண்டாம் பையன் அம்மாக்காரி செத்ததும் காதிலிருந்த பாம்படத்தைக் காதை வெட்டியாவது எடுக்கணும்னு வந்தான். “லேய்! அவ காதெத் தொட்டியோ என் அய்யாவாணே, துண்டு துண்டாக் கொத்திப் போட்டிடுவேன்” என்று கிழவர் கத்தினதும் ஓடிப் போனவன் தான்..
கிழவர் பண்டாரத்து கூடவே தங்கிவிட்டார். கிழவர் தனக்குத் தானே ஒரு வேலையைத் தேடிக்கிட்டார். பக்கத்து கிராமத்தில மக்கள் எல்லாம் தண்ணியில்லாம கஷ்டப் படுவதைப் பார்த்து ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்.
‘ஒன்னாலே கிணறு தோண்டக் களியுமா? அட பயித்தியாராக் கிளவா!’ என்று பண்டாரம் சொல்லியும் கிழவர் கேட்கவில்லை. தினமும் போய் கிணறு வெட்டிக்கிட்டே இருந்தார். அந்த ஊர் மக்கள் கூட கிண்டல் செய்வார்கள். .
“ஒனக்கு வயசு காலத்திலே சிவனேன்னு இருக்கப்படாதா?”
“நான் நாப்பது வருஷம் சளைக்காம வேலை செஞ்சவன். ஒரு நா குந்தியிருந்து தின்னவனில்லை.எனக்கு அது பழக்கமில்லை”
ஒரு நாள் கிழவர் துணி மூட்டையில் மண்ணை எடுத்து வருகிறார்.
‘ஈரமா இருக்கில்லே ! ஊத்து கண்டுடுத்து.’
பண்டாரம் கிழவர் தோண்டிய கிணத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போகிறான்.
அட பாவி மனுசா! இந்த தள்ளாத வயதிலே ராட்சஷ வேலையில்ல செய்திருக்கே! மனுஷ காரியமா அம்மாடி?
இன்னா பாரு என்று கிழவர் ஒரு கல்லைத் தூக்கி கிணத்தில் போடுகிறார். ’ களுக்’ சத்தம். நிறைய தண்ணி கிடக்கு!
அடுத்த நாள் கிழவனுக்குக் காய்ச்சல்! பண்டாரம் பரிதவித்தான். மருந்து எதுவும் வேண்டாம் அந்தக் கிணத்திலிருந்து ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். தானும் குடித்துவிட்டு பண்டாரத்துக்கும் கொடுத்தார். அமிர்தமா இருந்தது பண்டாரத்துக்கும்..
ஒரு கல்யாண கோஷ்டி வந்து அந்தக் கிணத்தையும் அதன் தண்ணீரின் சுவையையும் பற்றி ரொம்ப ஆச்சரியப் பட்டுப் போனார்களாம். ஒரு கிளவன் தன்னந்தனியா தோண்டிபூட்டான்னு ஆச்சரியம். வேற. தங்கள் செலவிலே கல்லும் சுவரும் கட்டி கயிறும் பாட்டையும் போட்டு தர்ரேன்னு சொன்னாராம்.
அதை சந்தோஷமாக் கேட்டுட்டு கிழவன் ஒரேயடியா கண்ணை மூடினார் .
மறுநாள் இரவு பண்டாரம் வழக்கம் போல் சோறு பொங்கிக் கொண்டிருந்தான் . ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை ஏதோ ஒரு மகத்தான சம்பத்தை இழந்தது போன்ற நினைவுகள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. திடீரென்று அவனுக்கு உணர்ச்சி பொங்கிற்று. கல்தூணில் தலையை சாய்த்துக் கொண்டு அழுதான்.
நாய்க்கு மட்டும் அன்று ஏமாற்றமில்லை.
————————————————————–
ஷேக்ஸ்பியரின் வரிகள் கண்களில் தெரிகிறது!
If you have tears shed them now!
சென்னை கிறிஸ்தவ கல்லூரி
இன்னும் பசுமை நிறைந்த கல்லூரி வளாகம் !
செடிகளும்,கொடிகளும்,மரங்களும்,பழைய ஆனால் உறுதியான கட்டிடங்களும் அதன் அழகுக்குக் கட்டியம் கூறுகின்றன.
ஹீபர் ஹால் என்று சொல்லப்படும் ஹாஸ்டல் அரை நூற்றாண்டுகளாகினும் அப்படியே என்றும் இளமையோடு காட்சியளிக்கிறது!
அந்த ஹீபர் காலில் தேசியகீதத்திற்கு சமமாகக் கருதப்படும் பாடல் ஒன்று உண்டு!
41 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு பழகித் திரிந்த தோழர்கள் மறுபடியும் அங்கேயே சந்தித்துப் பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோட்டுப் பாடும் பாடலும் காட்சிகளும் மேலே!
அந்தப் பாடலின் வரிகள் கீழே!
Come to Heber Hall
Heber is a paradise, Fish Pond and all
Ulunthuvadai, Masalvadai anything you want
Mess bills as big as hills
Heber is our haunt
Way down in Tambaram
There’s old Heber Hall
Is there another like it?
No-not at all.
Travelling in the trains
Get the Heber lads to meet you:
They’ve got the brains:
If you want to marry my darling
And to marry well
Stick to a Heber lad
And send the rest to Hell!
See me run the mile,
High jumping, hurdling – In the Heber style
Some of us are fat and some of us are thin
But Heber is a sporting Hall
Whether we lose or win!
(Chorus)
Of the Heber family
Kachia moru, pachai moru eating happily
The Tamilian, the Telugu, the Coorg, the Malayalee
We are the Sons of Heber
Home of the free
(Chorus)
மீனங்காடி (ஒன்பதாவது வாரம்)
எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்
மேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினாள்.
‘எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை. ஆனால் எந்த வேலையை எப்படிச் செய்வது என்ற முடிவு நிச்சயமாக நமது கையில் தான் இருக்கிறது. ‘
மேரி யோசித்தாள். ‘ ஏன் எந்த வேலையைச் செய்வது என்ற முடிவு நம் கையில் இல்லை?
‘சரியான கேள்வி மேரி ‘
நாம் வேலையை எப்போது வேண்டுமானாலும் விட்டு விடலாமே ! அந்த வகையில் பார்த்தால் முதல் கருத்துக்கான முடிவு நம் கையில் தானே இருக்கு . ஆனால் அது புத்திசாலித்தனமாகுமா ? நமக்குக் கிடைத்த வாய்ப்பையும், திறமையையும் நழுவ விடுவது போல அல்லவா அமையும் ! அதனால் தான் மறுபடி சொல்கிறேன். வேலையைத் தேர்ந்தெடுக்கிற முடிவு நம் கையில் இல்லை. ஆனால் கிடைத்த வேலையில் நாம் கொண்டு வருகிற ஆர்வம், முயற்சி , கவனம் எல்லாம் நம்ம கையில் தான் இருக்கு. ‘
டோனி தொடர்ந்தான். “ நான் ஒரு பாட்டி கதை சொல்றேன் ! என் பாட்டி எப்போதும் சந்தோஷத்தோடு தான் எல்லா வேலையையும் செய்வாள். நாங்களும் வீட்டிலே அவளுக்கு ஒத்தாசையா தட்டு கழுவறது, பாத்திரம் எடுத்து வைக்கிறது இந்த வேலையெல்லாம் ஜாலியா செய்வோம். அதுக்குக் காரணம் பாட்டியோட ஈடுபாடு. ஒரு குஷி ! ஒரு விளையாட்டு போல இருக்கும். எங்கள் வீட்டு அடுப்படி தான் எங்கள் விளயாட்டு மேடை. இப்ப புரியுது. பாட்டிக்குப் பாத்திரம் தேய்க்கிற வேலையெல்லாம் பிடிக்காமல் இருந்தாலும் அதை ஜாலியா செய்யும்படி தன்னை மாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஜாலியா செய்ய வைத்தாள் .
அந்த மாதிரி தான் நானும் என் நண்பர்களும் இந்த மீனங்காடியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது உற்சாகத்தைக் கொண்டு வருகிறோம். சோகமா வந்து ஏனோ தானோ என்று வேலை செய்வதில் யாருக்கு லாபம்? அதுக்குப் பதிலா சந்தோஷமா – குஷியா – ஜாலியா வேலை செஞ்சா ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய நாளாக இருக்கும். இந்த எண்ணத்தைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாய் அமைய இந்த ‘ எண்ணம் ‘ ஒன்று இருந்தால் போதும். நான் சொல்வது சரி என்று உனக்குப் படுகிறதா? “
“ நிச்சயமா “
எங்களுடைய எண்ணங்களைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கே ரொம்பப் பெருமையாக இருக்கு. உலகமே எங்கள் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப் பட வேண்டும் என்று முடிவெடுத்தோம். இப்படி முடிவு எடுத்த பிறகு ஒவ்வொரு நாளும் குஷி நாள் தான். சாதாரண நாள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்வது உனக்குப் புரியுதா? மீன் கடை வேலை என்பது ஈரம், குளிர், நனைந்த உடை, நாற்றம், வழுக்கல் எல்லாம் கலந்த கஷ்டமான வேலை. ஆனால் அந்த வேலையில் எப்படி எங்கள் எண்ணத்தைக் கொண்டு வந்தோம் என்பதுதான் எங்கள் வெற்றி.”
“ புரியுது டோனி! ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு வேலை செய்கிறீர்கள். அந்த எண்ணம் தான் உங்க வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நாம் செய்யற வேலையை ஏன் சாதாரணமாகச் செய்யணும்? உலகமே பாராட்டுற அளவிற்குப் பெரிசா செஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்? ரொம்ப சரியாய்ப் படுது டோனி!”
“ புரிந்து கொள்வது சுலபம் மேரி! ஆனால் செய்யறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஒரே நாளிலே இந்த மாதிரி மாத்திக்க முடியாது. எங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு. நான் சொன்னேன் இல்லே? முன்னாடி நானும் சொந்த வாழ்க்கையை வேலையோடு போட்டுக் குழப்பி நானும் குழம்பிக்கிட்டிருந்தேன். உலகமே என் கிட்டே மோசமா நடந்துக்கிற மாதிரி ஒரு எண்ணம். அதைப் பழி வாங்க நானும் மத்தவங்க கிட்டே படு மோசமா நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் என்னைத் தனியா கூப்பிட்டு அறிவுரை சொன்னார். “ ஏன் இப்படி வெறுப்போடு வேலை செய்யறே? விருப்பத்தோடு , அதுக்கு மேலே ஆர்வத்தோடு அதுக்கும் மேலே எண்ணத்தோடு செய்! சொர்க்கமே உன் காலடியில் கிடக்கும்” என்று. நானும் தீவிரமா யோசித்துப் பார்த்தேன். ‘நாம் ஏன் அவர் சொன்னபடி மாறக் கூடாது? ‘ என்று. அவர் சொன்ன விதத்திலே, வார்த்தைகளிலே எனக்கு முழு நம்பிக்கை பிறந்தது. மனிதன் தன் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்ற தத்துவத்தைக் கண்டு கொண்டேன்.”
மேரிக்கு டோனியின் பேச்சு மட்டுமல்ல, அவனையும் ரொம்பப் பிடித்து விட்டது. பகல் கனவில் ஆழ்ந்து கொண்டிருந்த அவள் சட்டென்று விழித்துக் கொண்டாள் . டோனி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “ சரி டோனி! நானும் நிச்சயமாய் முயற்சிப்பேன் ! இந்த வெற்றிக்கு ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற ஒரு மருந்து தானா? இல்லை, இன்னும் வேறு மருந்து இருக்கா? – ஆர்வத்தோடு கேட்டாள் மேரி.
“ இந்த வெற்றிக்கு மொத்தம் நாலு காரணம் கண்டு பிடிச்சோம். இந்த ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்’ தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இது இல்லாமல் மற்றது எல்லாம் இருந்தும் பிரயோஜனமில்லை. இன்னிக்கு இத்தோட நிறுத்திக்குவோம். மற்ற மூன்றையும் அப்புறம் பார்த்துக்கலாம். உனக்கு எப்போ நேரமிருக்கிறதோ அப்போ கூப்பிடேன். நாம் பேசலாம். என் போன் நம்பர் தெரியுமில்லையா? “
“ உங்க மீனங்காடியில தான் ஒவ்வொரு மூலையிலும் பெரிது பெரிதாக எழுதி வைத்திருக்கிறீர்களே !
ஆமாமில்லே! நாங்க ஏன் வெட்கப்படணும்? உன்னை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம் மேரி ! மீண்டும் பார்க்கலாம்.”
(தொடரும்)
குட்டீஸ் லூட்டிஸ்
(சிவமால் )
கம்ப்யூட்டரில் வேலை முடிந்த பின் ஷட்டௌன் பண்ணினேன். கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருந்த என் பேத்தி ‘தாத்தா இந்தக் கம்ப்யூட்டருக்கு இங்கிலீஷே தெரியல . விண்டோஸ் என்கிறது ப்ளூரல் தானே.. விண்டோஸ் ஆர் ஷட்டிங் டவுன் தானே வரணும். விண்டோஸ் ஈஸ் ஷட்டிங் டவுன்னு வறது பார். " என்றாள். ஒரு நிமிஷம் அவளையே பார்ததுக்கொண்டிருந்த நான் அவளை அப்படியே அணைத்துக் கொண்டேன்!
குழந்தை யேசு
ஏம்மா.. ஏசுவை சிலுவையில அறைஞ்சாங்க? யுகேஜி படிக்கும் லக்ஷ்மி கேட்டதும் சரோஜாவுக்குக் கோபமா வந்தது. இதுக்குத் தான் இந்த கான்வெண்ட்டே கூடாது. என்கிறது. சின்னக் குழந்தைக்கு கொஞ்ச கொஞ்சமா மத போதனை செய்யறாங்க! இப்படியே விட்டா மதத்தையே மாத்திடுவாங்க! சரோஜா பொறுமினாள் . இந்த ஆனந்தன் எதை சொன்னாலும் காதிலே போட்டுகிறதே இல்லை. காலையிலிருந்து ராத்திரி வரை மாடு மாதிரி உழைப்பான். பாத்திர வியாபாரம் துணி வியாபாரம் எல்லாம் சைக்கிளில் தான். சரோஜாவுக்கு அவன் சம்பாதிப்பது போதலையே என்ற குறை எப்போதும் உண்டு. ‘ஏசுவும் நம்ம அப்பா மாதிரி தானேம்மா? நமக்காகக் கஷ்டப் பட்டாராமே! அப்போ அப்பா தான் ஏசுவா? பொறிதட்டியது சரோஜாவுக்கு.
பள்ளிக்கூடம்
மாபெரும் அமெரிக்கன் பள்ளி! அஸ்திவாரத்திலிருந்து உருவாகிக் கொண்டிருந்தது. பத்து மாதமாகக் கட்டப்படும் கட்டடம். நூற்றுக்கணக்கான தொழிளாளர்கள் அங்கேயே குழந்தை குட்டிகளுடன் தங்கி கட்டிடத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
எட்டு வயசு வேலு அங்கே செங்கல் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். ‘மச்சான் !நம்ம வேலுவை இந்த வருஷம் ஸ்கூலிலே கட்டாயம் போடணும் ! ’ ராமாத்தா கெஞ்சினாள். கவலைப் படாதே ராமாத்தா! அதிர்ஷ்டம் இருந்தா வேலுவுக்கு இந்த ஸ்கூலிலேயே இடம் கிடைக்கும்! ’ நடக்கற காரியமா பேசு மச்சான்! ராமாத்தா அலுத்துக் கொண்டாள்.
கடைசியில் அவன் சொன்ன படி வேலுவுக்கு அந்த ஸ்கூலில் இடம் கிடைக்கத் தான் செய்தது. .
எப்படி?
1. பாசிடிவ் முடிவு
பள்ளி திறப்பு விழாவின் போது அங்கு வைத்திருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து அப்புறப் படுத்தியதற்காக பள்ளி நிர்வாகம் வேலுவைத் தத்தெடுத்து அங்கேயே படிக்க இடமும் கொடுத்தது.
2. நெகட்டிவ் முடிவு
பள்ளி திறப்பு விழாவின் போது அங்கு வைத்திருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து அப்புறப் படுத்திய போது நடந்த விபத்தில் வேலு சிதறிப் போகிறான்.. அவனது படத்திற்குப் பள்ளி மெயின் ஹாலில் இடம் கிடைத்தது.
கொஞ்சிடு தாயே
தேவீ !
தேவ தேவதை நீ தானே ! மலர்
தூவும் பக்தனும் நான் தானே !
கண்களைத் திறந்ததும் பெய்திடும் பொன்மழை
புன்னகைக் கீற்றினில் பொங்கிடும் தேன் இதழ்
உருவே ! தினமும் உருகும் திருவே !
கனவே ! கணமும் மறவேன் உனையே !
பக்தனுக்கு ஒரு வரம் தந்திடுவாய் ! உன்னை
பக்தியால் பாடிட வரந்தருவாய் !
கவிதாபிஷேகம் செய்திட வந்தேன்
கற்பனை மலர்களை வார்த்தையில் தொடுத்தேன்
தேவியின் இளநலம் தேடினேன் கவிநயம்
தூவினேன் கண்மலர் தாளடி பணிந்தேன்
அஞ்சுதல் அகண்டு நெஞ்சமே துள்ளும்
கெஞ்சியே வந்தேன் கொஞ்சிடு தாயே !
This gallery contains 7 photos.
சென்னையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் தக்ஷின் சித்ரா. சென்னை கிராஃப்ட் பவுண்டேஷன் ஆரம்பித்த கலாசாரங்களைப் பாதுகாக்கும் கூடம் இது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பத்து ஏக்கரில் E C R ரோட்டில் முட்டுக்காட்டிற்கு அருகில் இருக்கும் அருமையான இடம் தக்ஷின் சித்ரா. நுழைவுக் கட்டணம் 120 ரூபாய். குழந்தைகளைக் கவர நிறைய வைத்திருக்கிறார்கள். நாட்டுப்புற நடனங்கள் மேஜிக் காட்சி, மற்றும் அம்ஃபி தியேட்டரும் உண்டு. கேண்டீன் ,ரெஸ்டாரெண்ட்டும் உண்டு. தமிழ்நாட்டில் செட்டியார் … Continue reading
This gallery contains 2 photos.
ஆனந்த விகடன் 52 மார்க் கொடுத்து கவுரவித்திருக்கும் படம் சதுரங்க வேட்டை. மிரட்டும் வசனம். எதார்த்த நடிப்பு. கச்சிதமான திரைக்கதை. எழுதி இயக்கிய வினோத்தையும் தயாரித்த லிங்குசாமியையும் எததனை முறை பாராட்டினாலும் போதாது. மனசில குற்ற உணர்வே இல்லாமே மற்றவரை ஏமாத்தறது தப்பே இல்லை! பொய்யைச் சொல்லும் போது கொஞ்சம் உண்மையையும் கலந்து சொல்லணும். வெள்ளைச் சட்டையைப் போட்டாலே மத்தவனை ஏமாத்தணும்னு தோணுதில்லே ! பணம் சம்பாதிக்க ஈசியான வழி ஆயிரம் இருக்கு மண்புழு விற்பனை , … Continue reading
படங்களுக்கு நன்றி ; குமுதம்,விகடன்,கல்கி,தினமலர்
தலையங்கம்
பெங்களூரில் 6 வயது பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த அந்தப் பாவிகளை எப்படித் தண்டிப்பது? இந்தக் கொடுமைக்கு வேற வழியே இல்லையா?
எப்போது பேப்பரைத் திருப்பினாலும் கற்பழிப்பு, பாலியல் கொடுமைகள்!
டெல்லியில் அன்று ஒரு நிர்பயா! காட்டுத்தீ போல பரவியது. அதற்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தலித் பெண்களுக்கு எதிராக இந்த மாதிரிக் கொடுமைகள்! இன்று பெங்களூரில்! இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது குறைச்சல் இல்லை!
எந்த மாநிலத்தில் இது அதிகம்?! சிறுவர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனை தரலாமா கூடாதா? இந்தியாவில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பலாத்காரம் நிகழ்கிறது! இப்படி எத்தனையோ புள்ளி விவரங்கள்!
இதற்கு நாம் தீர்வு காண எங்கே போவது?
திரைப்படத் துறையினர் – இவர்கள் தான் மூலப் பொருள் -மூல காரணம் என்ற மாபெரும் குற்றச்சாட்டு!
அரசியல்வாதிகள் – இவர்கள் தான் இதற்கு ஆரம்ப காரணம் ! இரவினில் ஆட்டம் பகலிலும் ஆட்டம் இது தான் இவர்கள் உலகம்!
காவல்துறை – இவர்கள் பாலுக்குக் காவலா பூனைக்குத் தோழனா?
ஆசிரியர்கள் – அவர்கள் சிறுமியரைக் கூட விடுவதில்லை
ஆன்மீக வாதிகள் – அறையில் ஆடியவர்கள் இப்போது அம்பலத்தில் ஆடுகிறார்கள்!
மாணவர்கள் – டேட்டிங் என்ற பெயரில் அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கிறார்கள்!
அலுவலகங்கள் – ஒரு காலத்தில் அரச புரசலாக இருந்தது இன்று அதனாலென்ன? இருப்பது சில நாள் அனுபவிப்போமே என்கிறார்கள்
ஐடி கம்பெனிகள் – இவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமும் வாய்ப்பும் பயணங்களும் இவர்கள் செய்வதைத் தவறு என்று எண்ண முடியாதபடி செய்து விடுகின்றன!
கிராமங்கள் – வெளியே வராமல் இவை தொடர்ந்து நடக்கின்றன! அவற்றைத் தவிர சில பஞ்சாயத்துக்களும் இதையே தீர்ப்பாகத் தருகின்றன.
நீதித்துறைகள் – உயர்ந்த இடங்களிலும் இவ்வகை வியாதி பரவியிருக்கிறது.
சமுதாயத்தில் பரவியிருக்கும் இந்த நச்சு வேரை எப்படிக் களையெடுப்பது? மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமா? இன்டெர்நெட்டில் பொங்கிய விஷமா? அல்லது இது தான் விஞ்ஞான முன்னேற்றத்திற்கும் மாறி வரும் சமுதாயத்திற்கும் நாம் தரும் விலையா?
பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றத்திற்கு முக்கிய உடந்தை- கள்,சாராயம்,மது,கஞ்சா,போதைப் பொருள்கள்! மற்றும் ஆபாசக் களஞ்சியங்கள்! இவற்றிற்குத் தடையிடுங்கள்! பாலியல் குற்றங்கள் பாதியாகக் குறைந்துவிடும்!
பெண்களே! நீங்களே சொல்லுங்கள்! இந்தக் கொடுமை தீர வேறு என்ன வழி இருக்கிறது!
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா