நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து செல்லும்போது உங்களுக்கு முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older entries என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப் பத்துப் பக்கங்களையும் பார்க்கலாம்.
அதேபோல்
click older entries
என்ற தலைப்பை அது தோன்றும் சமயத்தில் கிளிக் செய்தால் சென்ற மாதங்களின் குவிகம் இதழையும் படிக்கலாம்.
இதுவரையில் 528 டிஜிட்டல் பக்கங்கள் உள்ளன . அவற்றை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் !
நம்மைப் போன்ற சாமானிய
மனிதர்களின் மனதிலும் இடம் பெற்று, எல்லா தரப்பினரும் தாமாக முன்வந்து தங்கள் வேலைகளுக்கு ஒரு
நாள் விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தும் அளவுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த
படியாகத் தகுதி பெற்றவர், பெருமை பெற்றவர் அப்துல் ‘கலாம்’ !
அவருக்குக் கண்ணீருடன் நாம்
செய்வோம் ஒரு சலாம் !
ஆண்டு : 2 மாதம் : 8
Editor and Publisher’s office address:
S.Sundararajan B-1, Anand Flats, 50 L B Road, Thiruvanmiyur Chennai 600041 போன்: 9442525191 email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன் துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி இணை ஆசிரியர் :அனுராதா ஆலோசகர் :அர்ஜூன் தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா வரைகலை : அனன்யா
நீங்கள் உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு “இன்னும் சாப்பிடுங்கள் இன்னும் சாப்பிடுங்கள்” என்று உபசாரம் செய்வீர்களா?
விருந்தினர்களோ நண்பர்களோ ஒருமுறை ‘போதும்’ என்று சொன்ன பிறகும் “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்ளுங்கள் "என்று கேட்பீர்களா?
"போதும் வயிறு நிறைந்துவிட்டது” என்று கெஞ்சும் மனிதர்களிடம் " எனக்காக ஒண்ணே ஒண்ணு பிளீஸ் “ என்று கேட்கும் வர்க்கமா நீங்கள்?
"கூச்சப்படாமல் சாப்பிடுங்கள்” என்று சொல்லி அவர்கள் வயிறு முட்ட சாப்பிடச் சொல்லி வற்புறுத்தும் இனமா நீங்கள்?
குஜராத்தில் "ஆக்ரா" என்று ஒரு பழக்கம் உண்டு. அதில் விருந்தினர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்வார்களாம். நீங்கள் அந்த வகையா?
“இப்போது தான் வீட்டிலே காப்பி சாப்பிட்டு விட்டு வந்தேன்” என்று சத்தியம் பண்ணினாலும் , “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் காபி குடிச்சா ஒண்ணும் பண்ணாது” என்று போட்டுக் கொடுப்பவரா நீங்கள்?
‘அரை டம்ளர் டீ போதும்’ என்று கெஞ்சும் விருந்தாளிகளுக்குச் சின்ன டம்ளர் தான் என்று சொல்லி அரைச் சொம்பு காபியை அள்ளிக் கொட்டும் பரோபகாரியா நீங்கள்?
“சுகர் இருக்கு வேண்டாமே ஸ்வீட்” என்று பரிதாபமாகக் கெஞ்சும் விருந்தினர்களுக்கு “ பரவாயில்லை மாத்திரை ஒண்ணு சேர்த்துப் போட்டுக்கலாம்” என்று இலவச மருத்துவம் பார்த்து ஸ்வீட்டை அவர் வாயில் திணிக்கும் கொடுங்கோலரா நீங்கள்?
இந்தக் கேள்விக்கெல்லாம் ‘ஓகே’ ‘ஆமாம்’ ‘அதனாலென்ன தப்பு?“ "இது தான் உபசரிப்பு முறை” என்றெல்லாம் சொல்லும் மனிதர்களுக்கு இப்போது ஆப்பு வந்துவிட்டது.
பிள்ளையார் உருவில்.
நீங்கள் அனைவரும் பிள்ளையாரின் கடுங்கோபத்துக்கு – ஏன் சாபத்துக்கு உள்ளாவீர்கள்!
வாதாபியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிள்ளையார் புராணத்தில் இதைப்பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாம். ( வாதாபியிலிருந்து தான் பிள்ளையார் தமிழகத்துக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே)
அதன்படி “அதிதியோ பவ” என்றால் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். ஆனால் விருந்தினர்கள் வேண்டாம் அல்லது போதும் என்று சொன்ன பிறகும் தருவது பிள்ளையாருக்குச் செய்யும் துரோகம். ( இதற்கு ஒரு உப கதை உள்ளது : பிள்ளையார் பசி தாங்காமல் பார்வதியிடம் சாப்பாடு கேட்டபோது பார்வதி எவ்வளவு உணவு கொடுத்தும் அவர் பசி தீரவில்லையாம் . பரமசிவனிடம் பார்வதி கவலையுடன் கேட்ட போது , பூலோகத்தில் விருந்தினர்களுக்குக் கொடுத்தது போக பாக்கி இருக்கும் அனைத்து உணவும் பிள்ளையாருக்குப் போய்ச் சேரக் கடவது என்று அருளினாராம்).
இப்போது சொல்லுங்கள், வேண்டாதவருக்கு அள்ளி அள்ளிப் போடும் நீங்கள் பிள்ளையார் கோபத்துக்கு ஆளாவீர்களா இல்லையா?
தார்மீக முறைப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிச்சம் பிடிக்கும் உணவு ஒரு ஏழையின் பசியைத் தீர்க்கும் அல்லவா? உங்கள் விருந்தினரின் தொப்பையையும் குறைக்கும் அல்லவா?
ஆகையால் விருந்தினர்களே நீங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும் உணவை உங்கள் தட்டில் கொட்டும் அரக்கர்களிடம் “ போதும் ! போடாதீர்கள்!!பிள்ளையார் கோபித்துக்கொள்வார் ” என்று சொல்லுங்கள். நீங்களும் டைஜீன் தேடவேண்டாம்! சோடா குடிக்க வேண்டாம்.
இதற்காகவே இப்போது கோபப் பிள்ளையார் என்ற ஒரு ஸ்டிக்கர் வருகிறது. உங்கள் வீட்டின் டைனிங் டேபிள் , சென்டர் டேபிள் , சமையலறை ஆகிய இடங்களில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி எங்கள் வீடு பிள்ளையார் இணக்கம் ( pillaiyaar compliant) என்று விருந்தினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
ECO FRIENDLY என்பது போல உங்கள் இல்லத்தைப் பிள்ளையார் friendly ஆக மாற்றுங்கள்!!
குவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு “சிறுகதைச் சிறுவிழா”’ சென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் 18.07.2015 அன்று மாலை நடந்தது .
நடுவர்கள் :
நவீன விருட்சம் என்னும் காலாண்டு இதழைக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்திவரும் திரு அழகிய சிங்கர் அவர்கள்,
புகைப்படக் கலைஞரும், சிறுகதை எழுத்தாளருமான திரு, கிளிக் ரவி அவர்கள்,
எழுத்தாளர் திரு KG ஜவர்லால் அவர்கள்.
பகிர்ந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களும் அவர்கள் படித்த சிறுகதைகளும் :
சுபா சுரேஷ் – "அனுபவம்"
திரு. மலைச்சாமி “ஊமைக்கொலுசுகள்”
கவிஞர் ஆரா "எதிர்பாராதது"
திரு. குமரி அமுதன் “எழுந்து நில்”
திரு. ஸ்ரீதரன் "கண்ணாடிக் கதவுக்கு அப்பால்"
திரு. கொற்றவன் "வீரன் தந்த பரிசு"
திரு ராஜகோபாலன் "பிரேதத்துடன் ஒரு பயணம்"
திரு. சேது கோபிநாத் "தவிப்பு"
திரு. G B சதுர்புஜன் "நடிகன்"
திரு. சரவணன் “நிலாவின் பொம்மை”
திருமதி R வத்சலா "மூலை"
திரு. தொல்காப்பியன் "மேகதூதம்"
திரு J ரகுநாதன் “லாரா”
பரிசு பெற்றோர் முதல் பரிசு : திரு J ரகுநாதன்
இரண்டாம் பரிசு :: திரு கொற்றவன்
மூன்றாம் பரிசு : திரு சரவணன் – திரு GB சதுர்புஜன்
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக் கொண்டு ஒரு சிறுகதைப் பட்டறை முயற்சி செய்யலாம் என்று ஒரு யோசனை தெரிவித்தார்.
இது பற்றிய தங்கள் கருத்தைக் கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும் தெரிவிக்கக் கோருகிறோம்.
(குவிகம் இலக்கியவாசல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை).
( மேலே சொடுக்கினால் லாரா கதையை ஆசிரியரின் குரலிலேயேகேட்கலாம்)
அந்தப்பெரியவரின் கை நடுங்கிக்கொண்டிருந்தது.
முதலில் பஸ்சின் வேகத்திலோ என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சீக்கிரமே நீங்கியது.
இன்னொரு கையில் குடை வைத்துக்கொண்டிருந்தார். அதுவும் ஆடிக்கொண்டே இருந்தது
கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.
என் மகன் வீட்டிலிருந்து Marine Platz என்னும் இடத்திற்கு ஒரு Dinnerக்காகத் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன்.
“உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே?”
என் பக்கம் திரும்பினார். ஆனால் பதில் இல்லை.
நடுங்கும் கைகளுடன் ஜன்னல் வழியே பார்க்க
ஆரம்பித்துவிட்டார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சட்டென்று என் பக்கம் திரும்பி
துல்லியமான ஆங்கிலத்தில் “ நீ இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?” என்று கேட்டார்.
“ இந்தியாதான்”. தென் இந்தியா"
“ நினைத்தேன். You have Dravidian Features” என்று ஆச்சரியப்பட வைத்தார். “
என்னுடைய பள்ளிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்திருக்கிறேன். ஓடகமண்ட்
வெல்லிங்டன்”. என் அப்பா அங்குதான் C in C ஆக இருந்தார். எனக்கு வயது பன்னிரண்டு
அப்போது"
“அப்படியா”
“ இரண்டு வருடங்கள்தான். பிறகு
திரும்பிவிட்டேன்”
உங்களின் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது என்றேன்.
“I am English ”
மறுபடி ஜன்னல் வெளியே பார்வை. சில பிரயாண
நிமிஷங்கள்.
“ உங்களின் அரசாங்கத்துக்குத் திராணியே
இல்லை”
"ஏன்"
அதான் உங்கள் காஷ்மீரில் நடக்கிறதே".
நாங்களாக இருந்தால் அடித்துத் தீர்த்திருப்போம் இத்தனை நாட்களில். சும்மா
பேசிக்கொண்டு அதிகம் இழக்கிறீர்கள். எத்தனை பேர் இதுவரைக்கும். நாந்தான் விடாமல் BBCயில் பார்க்கிறேனே"
நான் மெளனமாக இருந்தேன்.
You know I am a second world war
veteran".
இதே ஜெர்மனியில் Hawker Demon ப்ளேன் ஓட்டி வந்து குண்டு வீசி
குப்பல் குப்பலாக மக்களைக் கொன்றிருக்கிறேன்".
இப்போது அவர் குரல் கொஞ்சம் வெறி ஏறினாற்போல
மாறியது.
“நானே பார்த்தேன். எவ்வளவு பெண்கள், குழந்தைகள். என் கை விரல் பட்டனில் பல
உயிர்கள் ஊசலாடியிருக்கின்றன. அப்படியே ஒரு கழுகின் பார்வையில் டைவ்.
"விஷ்” என்னும் அந்த ஒரு மாயக்கணத்தில் தெறிக்கும் குண்டுகள். நான்
விமானத்தை மேலே எழுப்பிப் பின்னால் பார்ப்பேன். அந்தக்காட்சி…..வார்த்தைகளில்
சொல்ல முடியாது. பளிச்சென்ற ஒளி உமிழப்பட்டு அந்த இன்ப சப்தத்தில் உயிர்கள்
அழியும் அந்த கடவுள் கணங்கள்".
மறுபடியும் மௌனம். தான் பேசியதை அவரே
ரசிக்கிறார் போல கண்கள் இடுங்க ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.
எனக்கும் ஒன்றும் சொல்லத் தோணவில்லை.
“ ராணுவம் என்றால் நாங்கள்தான். அந்த discipline. ”
மறுபடி ஜன்னலுக்கு வெளிய பார்வை போய்விட்டது.
இப்போது ஜன்னலில் அந்தப்பெரியவர் ஏதோ மாதிரி
கையை மெதுவாக தடவிக்கொண்டிருந்தார். ஆர்வத்துடன் பார்த்தேன். ஒரு சின்ன பூச்சி
கண்ணாடி மேல் நகர்ந்து கொண்டிருந்தது. பெரியவர் அந்த பூச்சிக்கு அருகில் தன
கையை வைத்து அது தன் கை மேல் ஏற வழிபண்ணிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் தவித்த
பின் அந்தப்பூச்சி அவர் கை மேல் மெதுவாக ஏறியது. நடுங்கிக்கொண்டிருந்த கையை
ரொம்பவுமே ஜாக்கிரதையாக நகர்த்தி தன் மற்றொரு கைக்கு அருகின் கொணர்ந்து இன்னொரு
கையால் “பட்டென்று” அடித்து நசுக்கினார்.
கையைத் துடைத்துக்கொண்டு" ப்ளடி ஜெர்மன்
இன்செக்ட்" என்றார். .
ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன்.
“என்ன பார்க்கிறாய்? இன்றும் என்னிடம் ஒரு Hawker Demon தந்து பார். உங்கள் காஷ்மீரையே ஒரு
கலக்குக் கலக்கி அந்த பாகிஸ்தானியர்களை ஓட ஓட விரட்டிவிடுவேன்"
“நீங்கள் எங்கே இங்கே
ம்யுனிக்கில்” என்று பேச்சை மாற்றினேன்.
“போன வாரம் வந்தேன். என் மகள்
விஷயமாக”
“அப்படியா? உங்கள் மகள் இங்கேதான் இருக்கிறாரா?”
அவர் கண்ணில் பெருமை தெரிந்ததா என்று என்னால்
சொல்ல இயலவில்லை. மெளனமாக இருந்தார். அவரின் இந்த மௌன நிமிடங்கள் எனக்கு அதற்குள்
பழகி விட்டது.
“லாரா. அவள் ஒரு பச்சைக்கண் அழகி.
என்னைப்போல!”
இடுங்கின கண்களும் கோணின வாயும் அவர்
சிரித்தாற் போலப் பட்டது.
“இங்கிலாந்தில் பிரபுக்கள் அவளுக்காய்
காத்துக்கொண்டிருக்க, இந்த
ஊர் ஜெர்மன் பையனைக் கல்யாணம் செய்துகொண்டாள். காதலாம்! ஹக்”.
“ஏன் அவனை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
“அவன் ஒரு சாதாரண ஆர்கிடெக்ட். ஏதோ
கனவுகளை அவளிடம் விற்பனை செய்து அவளையே வாங்கி விட்டான். முட்டாள் பெண்”.
அவனுக்கு என் சொத்தின் மேல் ஒரு கண் இருந்திருக்கும்.
இவளுக்குப் புரியவில்லை.“
"இப்போது அவளைப் பார்க்க
வந்திருக்கிறீர்களா?”
“இல்லை. பார்க்க
முடியவில்லை”
‘ஏன்?“
"நான் வருவதற்குள் புதைத்து
விட்டார்கள்”
உறைந்தேன்.
“சால்ஸ்பர்கிலிருந்து காரில்
ஆட்டோபானில் வரும்போது விபத்து. ஸ்தலத்திலேயே மரணம் இருவரும்.”
“வருந்துகிறேன்”. தங்களின் சோகம்
மகத்தானது.“
வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
"ஜெர்மானிய …………” என்று
ஒரு கீழ்த்தரமான ஆங்கில வசவைப் ப்ரயோகித்தார்
“அவளுக்கு 50,000 யூரோக்கள்தானாம் இன்ஷுரன்ஸ். அவள்
கணவனின் தம்பி சுளையாக ரெண்டு லட்சம் யூரோக்களை பெற்றுக் கொண்டு விட்டான். என்ன
அபத்தமான விதிகள் இந்த பாழாய்ப் போன நாட்டில்”..
நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டிருக்க,
நான் எழுந்து இறங்கிவிட்டேன். அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
சொல்லிக்கொள்ளவும் இல்லை.
டின்னரின் போது என் பிசினஸ் சகா படு உற்சாகமாக
இருந்தார்.
“ரகு! தெரியுமா, நமக்கு எண்பதாயிரம் யூரோ காண்ட்ராக்ட்!”
“ஓ! சூப்பர்! எங்கிருந்து?”
“லண்டன், இங்கிலாந்து! வாவ்! On the banks of Thames!”
என் சகா பாடினார்.
அமெரிக்க
சாலையில் அவன் கார் தவழ்ந்து கொண்டிருந்தது. “ குறை ஒன்றும் இல்லை’ பாடல் எம் எஸ்ஸின் குரலில்
இழைந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலின் கருத்து
அவனுக்கு என்றைக்கும் தாரக மந்திரம்.
அந்த உறுதி தான் அவனை இன்று மேகத்தில் பறக்க வைத்திருக்கிறது. அவனது பதினைந்து வருட கனவு இன்று நனவாகிறது. எந்த
கூகிள் அலுவலகத்தில் ஒரு மென்பொருள் பணியில் அமர்ந்தானோ அந்த நிறுவனம் இன்று அவனை
முதன்மை அதிகாரியாக நியமித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல
அவன் மனைவியும் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே டாக்டரேட்டுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
இன்னும் ஒரு வருடத்தில் அதை முடித்து விடுவாள்..
பெரியவள்
பள்ளி இறுதி நிலையில். படிப்பில் சுமாராக இருந்தாலும் ‘ஸ்பெல் பி’ தேர்வில் மாகாணத்தில் மூன்றாவதாக
வந்தாள். அடுத்த மாதம் அவள் அதில் முதல் நிலைக்கு வரக் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறாள்.
சின்னவள்
கடைக்குட்டி. ஐந்து வயது தான். அதற்குள் அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவரையும்
வசீகரிக்கும். நண்பர்கள் வட்டாரத்தில் அவளுக்குப் பெயர் ‘டார்லிங்!’ போன வருடம் ஊருக்குப் போன போது அவள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள்
“பாட்டி! உன்கிட்டே ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா?.
‘சொல்லுடி
கண்ணு’
‘ஐ
லவ் யு ஸோ மச்!’ என்று சொல்லி மடியில் தொப்பென்று விழுந்தாள்.
அதே டெக்னிக்கை அவள் மற்றவரிடமும் செய்வாள். சொல்வது மட்டுமல்ல அவள் உண்மையிலேயே அப்படி
நினைக்கிறாள் என்பதை அவளது கண்களும் முகமும் அழகாகச் சொல்லும்.
அடுத்த பாட்டு
. ‘தந்தை தாய்
இருந்தால்’ பாடல் வசந்தகோகிலத்தின் குரலில் உருக்கமாக இழைந்து
கொண்டிருந்தது. அவனுக்கு அவனுடைய தந்தை தாயின் நினைவு வந்தது. எத்தனை முறை கூப்பிட்டாலும்
‘எனக்கும் உங்க அம்மாவுக்கும் அந்த ஊர் சரிப்படாது! நீ அடிக்கடி வந்து பாத்துட்டுப் போ! அது போதும்’ என்று சொல்லி அவனை மேலே பேச விடாமல் செய்து விடுவார் அந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.
ஆனால் இந்தமுறை
டார்லிங் குட்டி என்ன சொக்குப் பொடி போட்டதோ தெரியவில்லை. இருவரும் ஆறு மாதம் வந்து
இருக்க சம்மதித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்த நேரத்தில் தான் கூகிள் பணி வந்திருக்கிறது. அவர்களுக்குத் தான் எத்தனை சந்தோஷம்!.
அப்போது
தான் அவனுடைய கைபேசி ஒலித்தது. கூகிள் அலுவலகத்திலிருந்து அவனுடைய பாஸ் – மென்டரின்
குரல்’ உன் வருகைக்காக
நம் நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது’ இன்னும் சற்று நேரத்தில்
அங்கு வருவேன் என்று சொல்லிவிட்டு காரை மனோ
வேகத்தில் செலுத்தினான்.
மறுபடியும்
கைபேசி அழைத்தது. அவள் தான். “ ஹாய் சம்சாரம் ! என்ன சமாசாரம்” அவனுடைய வார்க்தைகளில்
துள்ளல் தெரிந்தது. அவள் ஏதும் பதில் சொல்லாமால், ‘அப்பா.. அப்பா .. ‘ என்று கேவினாள்!
‘என்ன
ஆயிற்று அப்பாவுக்கு?
அப்பா..
காலையில் தனியா வாக்கிங் போகும் போது மூணு போலீஸ்காரர்கள் அவரைச் சந்தேகித்து ஏதோ விசாரித்திருக்கிறார்கள்.
அவர் பதில் சொல்லுவதற்கு முன்னாடியே அவரை கையை
முறுக்கிக் கீழே தள்ளிக் காயப் படுத்தியிருக்கிறார்கள்!
அவருக்குத் தலையிலே பெரிய காயமாம். லிங்கன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம்.
எனக்கு இப்போது தான் நியூஸ் வந்தது. நானும் எங்க டீனும் இப்போ ஆஸ்பத்திரிக்குப் போய்க்
கொண்டிருக்கிறோம். நீங்க எங்க இருக்கீங்க? ‘
“கடவுளே!
இது என்ன சோதனை! அவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாது! இதோ நான் வர்றேன். நல்லா பாத்துக்கோ. ஆஸ்பத்திரி
போய் எனக்குப் போன்பண்ணு !”
கூகிள் அலுவலகத்திற்கு
தகவல் அனுப்பிவிட்டு காரைத் திருப்பி விரைவாக செலுத்தினான்.
“அப்பா!
உங்கள் ஊர் எனக்கு ஒத்துக்காதுன்னு அடிக்கடி சொல்வீங்க! அதையும் மீறி உங்களைக் கொண்டு
வந்ததுக்கா இவ்வளவு பெரிய அடி? கடவுளே அவருக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது”
லிங்கன்
ஆஸ்பத்திரியில் நேராக தலைமை மருத்துவரிடம் சென்றான்.
“தலையில்
பலமாக அடி பட்டிருக்கிறது. ஸ்கேன் எடுத்தோம் ஒரு சின்ன ஹெமரேஜ் இருக்கிறது. அதனால்
அவர் மயக்க நிலையில் இருக்கிறார். அவரது வலது கையிலும் காலிலும் பாதிப்பு தெரிகிறது.
நீங்கள் போய்ப் பார்க்கலாம்’ என்றார்.
ஓடினான்.
அவன் மனைவியும்
காலேஜ் டீனும் அங்கே இருந்தனர். “‘அப்பா.. அப்பா”.. அவன் கண்களில் கண்ணீர் பெருகியது
“ஒரு சின்ன
ஆபரேஷன் செய்து அவரது கிளாட்டை சரி செய்ய வேண்டும். சற்று வெளியில் அமருங்கள். சர்ஜரி முடிந்ததும் அழைக்கிறோம்.’ என்றார் டாக்டர்.
வெளியே வந்ததும்
அவன் நண்பர்கள் எல்லாரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ‘அப்பா! தாத்தாவிற்கு என்ன ஆயிற்று? என்று கேட்டுக் கொண்டே பெரியவளும் சின்னவளும் அழுது கொண்டே வந்தனர்
‘.உங்களுக்கு
எப்படித் தெரிந்தது?
“அப்பா!
தாத்தாவைப் போலீஸ் தள்ளிவிட்டதை வீடியோவாய் என் வகுப்புத் தோழன் எடுத்திருந்தான். என்னிடம்
காட்டும் முன்பே அவன் அதை யூடியூபில்
போட்டுவிட்டான். அது இப்போது வைரலா உலகம் பூரா
பரவியிருக்கு”.
அவன் நண்பர்களும்
அதை ஆமோதித்தனர். ‘ஆமா! நாங்களும் அதைப் பார்த்துவிட்டுத் தான் இங்கே வந்தோம்!’ அவனும் தன் கைபேசியில் அந்தக் காட்சியைப் பார்த்தான்.
‘அவரது
ஒரே குற்றம் கறுப்புத் தோல் தான்’ ஒரு நண்பர் உறுமினார்.
‘இது
மனித உரிமை மீறல்’
‘அமெரிக்க
போலீசின் நிறவெறி’
அவனுக்கு
தொடர்ந்து போன் வந்துகொண்டே இருந்தன .யாரிடமும் பேசும் மனநிலையில் அவன் இல்லை. கூகிளிலிருந்து
அவனுடைய மென்டரும் பேசினார்.
லாபியிலிருந்த
டிவியிலும் அந்தக் காட்சி செய்தியாக வந்தது. போலீஸ்காரர்களின் அத்து மீறிய தாக்குதல்
மிகவும் கொடுமையாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னவள் திடீரென்று “ ஐ ஹேட் தெம்! ஐ ஹேட் தெம்! “
என்று ஹிஸ்டீரியா வந்தது போல திரும்பத் திரும்பக் கத்தினாள். மகளை இறுக்க அணைத்து ஆறுதல் கூற முயற்சித்தான். பெரியவளும் மெல்ல வந்து, ‘அப்பா நாம நம்ம ஊருக்கே போயிடலாம்’ என்று அழுது கொண்டே சொன்னாள். அம்மாவும் மனைவியும் திக்பிரமையில் பேசமுடியாமல்
நின்றனர்.
தந்தைக்கு
நேர்ந்த கதியை நினைத்து நினைத்துக் கலங்கினான். ‘அவருக்கு ஏன் இந்தக் கொடுமை? என்று மனதுக்குள் புழுங்கினான். அந்த
வீடியோ காட்சியை பலமுறை பார்த்துக் கண்ணீர்
விட்டான்.
சர்ஜரி நல்ல
படியாக முடிந்து. ஒரு வாரம் கழித்து ஆஸ்பத்திரியிலிருந்து
வீடு வந்து சேர்ந்தார். ஆனால் அவரால் முன்புபோல்
சரியாகப் பேச முடியவில்லை. பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்பது டாக்டரின் கணிப்பு.
அவர் ஆஸ்பத்திரியில்
இருந்த அந்த ஒரு வாரமும் அவனது குடும்பத்தினர் அனைவரும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய
கூகிள் தலைமைப்பதவி, அவளுடைய டாக்டரேட், பெரியவளுடைய ‘ஸ்பெல் பி’ , சின்னவளுடைய ‘ஐ லவ் யு ஆல்’ எல்லாம் இரண்டாம் பட்சமாகத் தோன்றியது.
இந்தியாவிற்குத் திரும்பப் போய் விடலாம் என்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். நண்பர்கள்
எத்தனை முறை கூறியும் அவர்கள் அனைவரும் தங்கள் கொள்கையில் தீர்மானமாக இருந்தனர்.
அதற்குள்
இந்த செய்தி ஒரு உலகச் செய்தியாக மாறிவிட்டது. பாரதப் பிரதமர் அமெரிக்க அதிபருக்கு இது பற்றி விசாரிக்கக்
கேட்டுக் கொண்டார். இந்திய தூதராலயத்தின் அதிகாரியும் வந்தார். இந்தியாவில் எல்லா ஊடகங்களிலும்
இந்த செய்தி அடிபட்டது. அமெரிக்காவிலும் நிறைய வெள்ளையர் அமைப்புக்கள் இதைக் கண்டித்தன.
போலீஸ் தலைமை அதிகாரி வருத்தச் செய்தியைக்
கூறிவிட்டு ‘அந்த
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அறிக்கை
விட்டார்.
அமெரிக்கப்
பத்திரிகைகளும் ‘வொய் திஸ் கொலைவெறி?’ என்று எழுதின. உலகின்
எல்லா நாடுகளிருந்தும் பேஸ்புக், ட்விட்டரில் அவர்களுக்கு ஆதரவாக
எண்ணற்றவர் எழுதினர்.. இந்த இழப்பிற்குப் பத்து மில்லியன் டாலர் இழப்பீடு கேட்கவேண்டும்
என்று நண்பர்களும் மனித உரிமை அமைப்புகளும் கூறினர். கூகிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்
போவதில்லை என்றும், குடும்பத்துடன் இந்தியா திரும்பப் போகிறோம்
என்ற அவனது செய்தி அனைவரையும் ஆச்சரியப் பட வைத்தது.
நண்பர்கள், உறவினர்கள், கூகிள் நிறுவன அதிகாரிகள் அனைவரும் அந்த முடிவிலிருந்து மாற்றிக்கொள்ளும்படி
வேண்டினர். ஆனால் அவர்கள் ஒரே தீர்மானத்திலிருந்தார்கள்.
அந்தத் தந்தையின்
நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. தன்னால் தன் மகனுக்கும், மருமகளுக்கும், பேத்திகளுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறதே என்று அவர் கவலைப்பட ஆரம்பித்தார்.
‘ இல்லை அப்பா! அவர்கள் செய்த தவறுக்கு இது தான் தண்டனை! நான்
என்னுடைய உழைப்பை இனிமேல் அமெரிக்காவிற்கு விற்கப் போவதில்லை. வாருங்கள், நாம் எல்லோரும் நம் ஊருக்குப் போவோம். அங்கே கஷ்டமோ நஷ்டமோ ஒன்றாக இருந்து
சந்தோஷமாக இருப்போம். இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் நடக்கலாம். ஆனாலும் அது
நமது தேசம். அங்கேயே போவோம். எங்களுக்கு இதில் எந்த விதக் கஷ்டமும் இல்லை உங்கள் உடம்பு சரியானவுடன் நாம் புறப்படுவோம்’ உறுதியாகக் கூறினான்.
அப்போது
அவர்கள் வீட்டு அழைப்பு மணி அடித்தது. வாசலில் ஒரு பெரிய கார். அதில் அவனது மென்டர்
– கூகில் நிறுவனத்தின் தலைவர் தனியாக வந்தார். அவரது அழைப்புகளைப் பலமுறை நிராகரித்திருந்தும்
அவர் இப்படி அதிரடியாக – அறிவிப்பு எதுவும் இல்லாமல் வருவார் என்று அவன் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை.
‘நீ
தான் என்னைப் பார்க்க விரும்பவில்லை நான் உன் தந்தையைப் பார்க்க வரலாமல்லவா? எங்கே உன் தந்தை?
என்று வினவினார்.
“மன்னிக்கவும்.!
நான் கோபத்திலும் ஆத்திரத்திலும், வேதனையிலும் எடுத்த முடிவு அல்ல அது. அனைவரும் தீவிரமாக ஆலோசித்து எடுத்த
முடிவு அது. கூகிளுக்கு நிறைய தலைவர்கள் கிடைப்பார்கள் .ஆனால்
எங்களுக்கு நாங்கள் வேண்டும்.”
“இதையெல்லாம்
கேட்க நான் வரவில்லை உன் தந்தையைப் பார்க்கவேண்டும். அதுவும் தனியாக.! அதற்கு உன் அனுமதி
எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்’’
தந்தையை
விட ஆயிரம் மடங்கு மதிப்பு வைத்திருந்த அவரிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எவ்வளவு பெரிய மனிதர். ஆரம்பத்திலிருந்தே அவனுடைய வளர்ச்சிக்கு
அடிகோலினவர். அவனுடைய ஆதர்ச குரு. அவன் இந்த அளவு வளர்ந்ததற்கு அவரது பணி மகத்தானது.
அவரது வார்த்தைகளை மீறுவது கடினம் என்பதை உணர்ந்திருந்தான். அதனால் தான் அவரைச் சந்திக்கவும்
தயங்கினான்.
“மன்னிக்கவும்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அவருக்கு பேச உதவவாவது நான் வரட்டுமா?”
“நீ வேண்டாம்.
எனக்குத் துணையாக இவளை அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லி அவனுடைய சின்ன மகளைத்
தூக்கிக் கொண்டு ’உன் தாத்தா இருக்கும் இடத்திற்கு இந்தக் கிழவனை
அழைத்துப் போ’ என்று
உத்தரவிட்டார். அங்கு சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டார்.
‘இது
என்ன விபரீத விளையாட்டு’ என்று அவன் குடும்பத்தினர் அனைவரும்
நினைத்தனர். அரை மணி நேரம் அனைவரும் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சின்னவள் தான் முதலில் ஓட்டமும் நடையுமாக வந்தாள் . அவளைத் தொடந்து
அந்த பெரிய மனிதர். ‘அப்பா! அப்பா..! ஐ லவ் ஹிம் ஸோ மச்’ என்று சொல்லி அந்தப்
பெரியவரின் காலைக் கட்டிக் கொண்டாள்.அவரும் அவளைத் தூக்கி முத்தமிட்டுவிட்டு ‘ யங்மேன்!
நான் உன்னை பிறகு சந்திக்கிறேன் உனக்கு விருப்பமிருந்தால்.- .அதுவரையில் குட்பை’ என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலைக் கூட
எதிர் பார்க்காமல் கிளம்பிவிட்டார். கார் கிளம்பும் சத்தம் கேட்டது.
நேரே தந்தையிடம்
ஓடினான். கூடவே அவன் மனைவியும் குழந்தைகளும் அம்மாவும் அவன் பின்னால் சென்றனர். அங்கே
அவன் தந்தையின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
‘அப்பா’ என்று அலறிக் கொண்டு அவர் அருகில் போனவனை, ‘ நோ டாடி.. தாத்தா அழவில்லை. அவர் ரொம்ப ஹேப்பியாயிருக்கார்!’ என்று சின்னவள் குதித்துக் கொண்டே கூறினாள்.
“என்ன ஆயிற்று
அப்பா? அவர் என்ன
சொன்னார்?
எல்லோரும்
அவருடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார்கள்.
“என்னால
இப்போ ஓரளவு நல்ல படியா பேச முடியுது! அதுக்குக் காரணம் அந்த வெள்ளைக்காரர் தான்.
அவர் என்ன செஞ்சார் தெரியுமா? ‘உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதுக்காக அமெரிக்காவில
இருக்கிற மக்கள் சார்பில் உங்க கிட்டே மன்னிப்புக் கேட்கிறேன்! அதுவும் உங்க ஊர் வழக்கப்படி’ என்று சொல்லி என் காலடியில் பிரார்த்தனை செய்வது போல மண்டியிட்டு மன்னிப்புக்
கேட்டார். அவர் கண்களில் கண்ணீர் இருந்தது. நான் பதறிப்போய் “வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லும் போது தான் எனக்கு முழு ஸ்மரணையும் வந்தது.
அதற்கு அவர்’ “தயவு செய்து என்னைப் பேச
விடுங்கள்! உங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக நீங்கள் அனைவரும் அமெரிக்காவை விட்டு இந்தியா
செல்ல முடிவு எடுத்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பிறகு கூகிளுக்கு
தலைவனாக வரும் தகுதி உங்கள் மகனுக்கு இருக்கிறது. அவன் இந்தப் பிரச்சனையால் அதை உதறிவிட்டு
இந்தியா செல்லப் போகிறான். அவன் என்னுடன் பணி புரிந்தபோதே அவனுடைய கொள்கைப் பிடிப்பையும்
பாசத்தையும் நான் அறிந்திருக்கிறேன். நான் உங்களிடம் வேண்டுவது என்னவென்றால் நீங்கள்
எங்களை மன்னிக்கவேண்டும் ! உங்களுக்குப் பிடித்த உங்கள் மொழியிலேயே சொல்லுகிறேன் என்று
‘எழுதிவைத்ததைத் தப்பின்றி
சொன்னார். ‘ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம்
செய்துவிடல்’ என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள்
அனைவரை விட உங்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகப் புரியும். தயவு செய்து எங்களையும் எங்கள் நாட்டையும் மன்னித்துவிடுங்கள்! இப்போது நீங்கள் போனால் நாங்கள்
எப்போதும் குற்ற உணர்ச்சியிலேயே இருப்போம்”
என்று சொல்லிவிட்டு ‘டார்லிங்கை’ அவர் சொன்னதை
விளக்கச் சொன்னார். அதற்குப் பிறகு எனக்கு நன்றி சொல்லிவிட்டு என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல்
சென்று விட்டார்!
அதனால் இப்போ
என் முடிவைச் சொல்லுகிறேன். திருக்குறளை அவர் வாயில் கேட்டபிறகு நான் பதில் மரியாதை
செய்யவில்லை என்றால் நான் மனிதனே அல்ல! நாம் அனைவரும் இந்தியா செல்லப் போவதில்லை. இங்கு
தான் இருக்கப் போகிறோம். நீ அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொள். அது தான் நீ அவர்களை
மன்னித்ததின் அடையாளம்! நானும் என் பங்கிற்கு
அந்தப் போலீஸ்காரர்களை மன்னித்து அவர்கள் மீது நண்பர்கள் போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்
போகிறேன். எவ்வளவு கோர்வையாக பழைய மாதிரி பேசுகிறேன் பார்த்தாயா? திருக்குறள் என்னை முழுதும்
குணப் படுத்திவிட்டது.’
அடுத்த நாள் கூகிள் அலுவலகத்தில் …
“வெல்கம்
யங்மேன்! நீ கட்டாயம் வருவாய் என்று எனக்குத் தெரியும்”
ஷாலுவை ஸ்வாமினியுடன் சிங்கப்பூருக்கு பிளைட் ஏற்றிவிட்டு வந்த
எனக்கு “ஏர்போர்ட்டில் பரபரப்பு என்ற செய்தியைக் கேட்டதும் டென்ஷன்
ஆகிவிட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்ளுமுன் கரெண்ட் கட்டாகி டிவி , இன்டெர்நெட் எல்லாம் ஆப் ஆகிவிட்டது.
மறுபடி ஷாலுவின் அப்பாவிடமிருந்து போன்.” மாப்பிள்ளை !
ஷாலுவைப் பாத்தேளா? “ அதற்குள் போன் கட்டாகி என்
டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தது. இன்வர்ட்டரும் ஓடவில்லை. ஓர் நிமிடம் தலையைச்
சுற்றியது.
ஷாலு பிளைட் பிடித்திருக்க மாட்டாள். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. டிங். ஷாலுவிடமிருந்து
.மெஸேஜ் வந்தது. ‘டி வி பாருங்கோ ’ என்ற
சிம்பிள் வார்த்தை. முடியாதைத் தான் எப்பவும் ஷாலு சொல்வாள்.
இன்னிக்கு ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்துடுங்கோ’ என்பாள். அன்றைக்குன்னு பார்த்து ஒரு மீட்டிங்
இருக்கும். சாயங்காலம் வரும்போது கொத்தமல்லி கருவேப்பிலை வாங்கிட்டு வாங்கோ ன்னு
சொல்லுவாள். சரி, வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற கடையில
வாங்கிக்கலாம்னு வருவேன். அன்னிக்குன்னு பார்த்து ‘ரெண்டும்
பழசாயிடுச்சு சார்! நாளைக்கு தர்ரேனே’ என்று பாசத்தோடு
சொல்லுவான் கடைக்காரன். திரும்ப ஆபீஸ் பக்கத்தில இருக்கற கடைக்குப் போக
சோம்பேறித்தனம். சரி பார்த்துக்கலாம்னு வீட்டுக்கு போனா கருவேப்பிலை கூட வாங்கத்
தெரியாதவன்னு ஒரு லுக் விடுவாள் ஷாலு. அது போதும் நாலைந்து நாளைக்கு எதையும்
மறக்கத் தோணாது.
மெஸேஜ் வந்ததினாலே ஒரு திருப்தி. மேஜர் பிராப்ளம் ஏதும் இல்லை.
மொபைலில் 3ஜி இருக்கான்னு பார்த்தா நெட்வொர்க்கே
இல்லை. மாசத்தில மூணு நாளைக்கு எங்க காலனி மொபைல் எல்லாம் அஞ்ஞான வனவாசம் போயிடும். வீட்டுக்குள்ளே நெட்வொர்க் வராது. போன் லேசா அடிச்சா அவனவன் அவசர அவசரமா போனை எடுத்திக்கிட்டு வாசலுக்கு ஓடுவாங்க. டமால் டுமீல் என்று கதவு திறந்து மூடும் சத்தம் கேட்கும். அந்த சமயத்தில எங்க காலனியில
எந்தவித ரகசியமும் இருக்காது.
மாடி வீட்டு சேஷனோட மாட்டுப்பொண் குளிக்காம இருக்கறதிலிருந்து,
கீழ் வீட்டு சரோஜா மாமியின் ஓர்ப்படி கஜானாவில வளையல் வாங்கின
சேதியும்,
பக்கத்து வீட்டு லைலா அவ பிரண்டு
( பாயோ கர்லோ ) கூட ஓகே கண்மணி படத்துக்குப் போற சேதியும்
லக்ஷ்மி மாமி நாராயணீயம் கிளாசுக்குப் போறாள் என்ற சேதியும்
மூன்று மெஸேஜுக்குப் பதில் போடவில்லை என்றால் ஷாலு அவள் அவளாகவே
இருக்க மாட்டாள். அந்தக் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். விளைவுகளுக்கு
அவள் ஜவாப்தாரி ஆக மாட்டாள். இப்படித்தான் போன மாதம் நான் ஆபீஸில் கொஞ்சம் பிஸியாக
இருந்த போது மூணு தடவை அவளோட போனை எடுக்கலை. நேரா எங்க மேனேஜருக்கே போன்
செஞ்சுட்டாள். அவ்ர் கிட்டே என்ன சொன்னாளோ தெரியலை அவர் அஞ்சாவது நிமிஷத்தில ஆபீஸ்
காரைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிச்சு வைச்சார்னா பாத்துக்கங்களேன்.
பிராப்ளம் ஒண்ணும் இல்லையே என்று திருப்பி மெஸேஜ் அனுப்பினேன்.
பதில் ஒன்றும் இல்லை. வராது என்பதுவும் எனக்குத் தெரியும்.
டிவி பார்க்க என்ன வழி என்று தீவிரமா யோசிக்கும் போது கரண்ட்
வந்தது. ஆஹா என்று சுடச்சுட செய்திகளை சன் டிவி தானே தரும் என்று அதைப் போட்டேன்.
தமிழ் நாட்டில் எந்த மூலையில் கொலை கொள்ளை கற்பழிப்பு என்று விளக்கமாகச்
சொன்னார்களே தவிர ஏர்போர்ட் சமாசாரம் ஒண்ணும் வரவில்லை. .சானலைத் திருப்பிக்
கொண்டே வந்தேன்.பொதிகை வந்ததும் இன்று சென்னை ஏர்போர்ட்டில் நடைபெற்ற பரபரப்பான
சம்பவத்தை விளம்பர இடைவேளைக்குப் பிறகு காணலாம் என்று சொன்னார்கள். நானும்
நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
விளம்பரம் முடிந்தது. ஆஹா ! என்ன இது ? ஷாலு டிவியில் வருகிறாளே ! மெயின் போகஸ் குருஜினி
தான். இன்று உலக யோகா தினம். ராத்திரி பன்னிரண்டுக்கு மேல் ஆரம்பமாகி விட்டது. அதைக் கொண்டாடும் வகையில் குருஜினி யோகா பயிற்சியை ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் அனைவரையும் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படி சரியாகச்
செய்யவேண்டும் என்பதற்கு ஷாலு தான் டெமோ கொடுத்து வந்தாள். இதெல்லாம் அன்று சென்னையிலிருந்து துபாய் செல்ல வந்த பி ஜே பி எம்.பி ஒருவர் மற்றும் அவரது பரிவாரங்கள் எல்லாம் பார்த்தன. அவரை பேட்டி காண வந்த பிரஸ் மக்களை உள்ளே அழைத்து அவர்கள் முன்னிலையில் அவரும் அந்த யோகா உத்சவத்தில் கலந்து கொண்டு ’ மோடி ஜிந்தாபாத்! யோகா ஜிந்தாபாத்’ என்று குரல் எழுப்பிக் கொண்டு இருந்தார். குருஜினிக்கு அவர் முன்பே
தெரிந்தவராக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
இது திடீரென்று நடந்ததா
அல்லது திட்டமிடப் பட்டதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஷாலுவுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மத்தியானம் கூட குழந்தைகளுக்கெல்லாம் யோகா சொல்லிக்
கொடுக்கணும் என்று சொன்னாள். அப்பாவையும் சிரசாசனம் – யோகா எல்லாம் பண்ணச்
சொல்லணும். அவரோட முழங்கால் வலி குறையும் என்று சொன்னாள். அவருடைய மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
ஏன் முடிச்சு போடுகிறாய் என்று நான்
ஜோக்காய்க் கேட்டேன். (அவள் அதை ரசிக்கவில்லை என்பது, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு பாத்திரம்
தேய்க்கிற ஸ்டைலிலேயே தெரிந்தது.). அதற்குப் பிறகு யோகாவைப் பற்றிப்
பேசவில்லை. அதனால தான் அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கும்னு
எனக்குத் தோன்றியது.
குழந்தைகளை எழுப்பி அம்மா டி வி யில வந்திருக்கான்னு சொல்லலாம்னு
நினைச்சேன். இப்ப தான் ரெண்டும் தூங்கப்போச்சு. இப்ப எழுப்பினா அம்மா திரும்பி
வந்துட்டாளான்னு நினைச்சு ஏடா கூடாமா ரியாக்ட் செய்யுங்கள். சரி, நாளைக்கு
இதை மறுபடியும் மறு ஓளிபரப்பு வைப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.
ஷாலுவை டிவியில் பாத்தா ரெண்டு குழந்தைக்கு அம்மா மாதிரி தோணலை. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே
இருந்துவிட்டேன். இந்த களேபரத்தில ஷாலுவுக்கு மெஸேஜ் கொடுக்க மறந்து விட்டேன். லேண்ட்
லைனையும் சரியாக வைக்காததால் அதுவும் ஆஃப் ஆகிக் கிடந்தது. அவளிடமிருந்து மூணாவது மெஸேஜ் வந்து நான்கு நிமிஷம் ஆகிவிட்டது. நான் பரபரப்போடு அவளைப் போனில் பிடிக்க
முயற்சி செய்யும் போது பார்த்தால் என் போனில் சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. அதைச்
சார்ஜில் போட்டு விட்டு ஷாலுவின்
நம்பருக்கு போன் செய்ய முயலும் போது என் வீட்டு காலிங் பெல் அடித்தது. ஷாலு தான்
வந்துவிட்டாளோ என்று பார்த்தால் பக்கத்து
வீட்டு சில்க் ஸ்மிதாவின் கணவன் நிற்கிறான். அவன் தெலுங்கையும் தமிழையும்
இங்கிலீஷையும் கலந்த ஒரு திராவிட பாஷையில ஏதோ சொன்னான். எனக்குப் புரிஞ்சுடிச்சு.
ஷாலு தான் சில்க்குக்கு போன் பண்ணியிருக்கணும். “ரொம்ப தேங்க்ஸ், நானே பாத்துக்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பி
வைத்தேன்.
அதற்குள் ஷாலுவிடமிருந்து எனக்கே நேரடியாக லேண்ட் லைனில் போன்
வந்தது.
“ஹாய் ஷாலு கங்கிராட்ஸ்”
“கங்கிராட்ஸ் எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். என்னாச்சு உங்க
போனுக்கு?
“ வழக்கம் போல சார்ஜ் இல்லே. அத்தே விடு. சூப்பரா இருந்தது யோகா எல்லாம். நீயும் உங்க குருஜினியும்
கலக்கிட்டீங்க” என்றேன்.
“ நான் போன் பண்ணினது எதுக்குத் தெரியுமா? கிளம்பற அவசரத்தில பாலை உரைகுத்த மறந்துட்டேன்.
மறக்காம பண்ணிடுங்கோ. இல்லேன்னா நாளைக்கு குழந்தைகளுக்குத் தயிர் சாதம் இல்லாம
போயிடும்”
காரில் வரும் போதே “அப்பா
நாளைக்கு தயிர் சாதம் வேண்டாம். பேசாம சரவண பவனிலிருந்து வெஜ் பிரியாணியும்
பன்னீர் பட்டர் மசாலாவும் வாங்கித் தாப்பா” என்று கெஞ்சினார்கள். நானும் உசேன்
பாய் மாதிரி வாக்குக் கொடுத்திட்டேன்.
“டோன்ட் வொரி ஷாலும்மா! இப்பவே உரை குத்திடறேன். வேற ஏதாவது
மறந்திட்டியா “ என்று சாதாரணமாகத் தான் கேட்டேன்.
“ ஏன் நீங்க இப்படி குத்திக் காட்டிப் பேசறீங்க” என்று ஷாலு
பிடிச்சுட்டா.
“ பிளைட் என்னாச்சு ஷாலும்மா? டிலேயா
என்று கேட்டேன்.
“ யோகா டெமோவெல்லாம் முடிச்சுட்டுத் தான் நாங்க செக்யூரிட்டி
செக்குக்கே போகப்போகிறோம்” என்றாள்.
என் நாக்கில் சனி.
“அது சரி. இது நீங்க முதலிலேயே பிளான் பண்ணினது தானே “ என்று
கேட்டுவிட்டேன்.
“நீங்களும் அந்தப் பத்திரிகை நிருபர்களும் ஒரே மாதிரி தான்
கேட்கறீங்க. குருஜினிக்கு மோடி கிட்டேருந்து நேரடியா மெஸேஜ் வந்தது. ‘உலக யோகா தினத்தைச் சிறப்பா கொண்டாடுங்கோ’ என்று. அதனால தான் ஏர்போர்ட்டில்
12 மணியிலிருந்து 12.15 வரை யோகா டெமோ பண்ணினோம்.
பிரைம் மினிஸ்டர் ஆபீசிலிருந்து இந்த மாதிரி மெஸேஜ்
எல்லாருக்கும் வரும் என்பது அவளுக்குத்
தெரியவில்லை. எனக்கும் வந்திருந்தது.
“என்ன பேச்சே இல்லை! தூக்கம் வருதா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு நீங்கள் சிங்கப்பூர் போய் எப்படி
கலக்கப் போறீங்கன்னு நினைச்சுப் பார்த்தேன். அது சரி ஷாலு! சிங்கப்பூரில் உங்க
புரோகிராம் என்ன? ”
“அதெல்லாம் அங்கே போய் சொல்லறேன். இப்போ போர்டிங் கால்
கொடுத்துட்டாங்க! குழந்தைகளை ஜாக்கிரதையாய்ப் பாத்துக்கங்க! நீங்களும் கண்ட கண்ட
இடத்தில சாப்பிடாதீங்க! பன்னீர் பட்டர் மசாலா பக்கமே போகாதீங்க. வயத்துக்கு ரொம்ப
கெடுதலாம் குருஜினி சொல்லியிருக்கார் ” என்று சொல்லி போனை வைத்தாள்.
ஷாலு! உன்னோட பொஸ்ஸஸிவ்
இண்டெல்லிஜன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று மனதுக்குள் சொல்லிக்
கொண்டே படுக்கப்போனேன். ஏனோ அந்த சமயம் ஃபர்ஸ்ட் நைட்டில அவள் பேசின பேச்சு ஞாபகம்
வந்தது. “ ஐ லவ் யு ஷாலு’ என்று சொல்லிக் கொண்டே தூங்கிப்
போனேன்.
“ மாலா .. நான் முடிவா சொல்றேன்…. தியாகு அவன்
ரெண்டாவது பெண் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலே.. அதனாலே நாளைக்கு அந்தக்
கல்யாணத்துக்கு நாம் போகப் போறதில்லே … எனக்கு முக்கியமா ஒரு மீட்டிங்
இருக்கு. நான் போய் அதை அட்டெண்ட்
பண்ணறேன் ..” என்றான் ரவி தீர்மானமாக. அரை
மணி நேரமாக அவளிடம் விவாதித்துக் களைத்துப் போயிருந்தான்.
“ இல்லீங்க.. நான் என்ன சொல்ல வரேன்னா..” என்று இழுத்தவளைத்
தடுத்து நிறுத்தினான்.
“ ஓகே… ஒண்ணு செய்.. நீ வேணா போய் அட்டெண்ட் பண்ணிட்டு வா ..
நம்ம பேரக் குழந்தை ரித்திக்கையும் கூட்டிட்டுப் போ ‘ என்று சொன்னபடியே
கிளம்பி வெளியே சென்று விட்டான்.
திருமண மண்டபம்.
நாதஸ்வரம் ஒலிக்க ஜே ஜே என்றிருந்தது.
மாலா ரித்திக்குடன் மண்டப வாசலில் ஆட்டோவில் சென்று இறங்கினாள்.
மண்டப வாசலில் தியாகு அவன் உறவினர் யாருடனோ பேசிக்
கொண்டிருந்தான்.
ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து விட்டு ஒரு புன்சிரிப்புடன் மண்டப
வாசலை நோக்கி நடந்தாள்.
தியாகுவின் அருகில் வந்ததும், ‘ குட்
மார்னிங் ..’ என்றாள் அவன்
கவனத்தைத் திருப்ப.
திரும்பிப் பார்த்த தியாகு, “ ஓ.. மாலாவா.. உள்ளே
போம்மா…. முகூர்த்த நேரம் நெருங்கிட்டிருக்கு..’ என்று கூறியபடியே, அவன் உறவினரிடம்
உரையாடலைத் தொடர்ந்தான்.
ஒரு நிமிடம் சலனமின்றி நின்றாள் மாலா… தியாகுதானா இது? கல்யாணத்துக்கு
வந்தவளை வாய் நிறைய ‘ வா ‘ வென்று கூப்பிட மாட்டாரா.” ரவி ஏன் வரவில்லை என்று கேட்கக்
கூடவா மாட்டார்? என்ற குழப்பத்துடன் மெதுவாகத் திருமண மண்டபத்துக்குள்
சென்றாள்.
அவளும் ரித்திக்குடன் ஒரு வரிசையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து
கொண்டாள். தியாகுவின் மனைவியும், முதல் பெண்ணும், மாப்பிள்ளையும் பம்பரமாகச்
சுழன்று, அவர்கள் உறவினர்களையும், நண்பர்களையும்
உபசரித்து டிபன் சாப்பிட அழைத்துக் கொண்டு சென்றனர். இவளுக்குப் பரிச்சயமான முகம் அந்தக்
கூட்டத்தில் யாரும் இல்லை. பக்கத்தில்
பேசக் கூட ஆளின்றி ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் முகூர்த்தமும், மற்ற சடங்குகளும்
நல்லபடி நடந்தேறின. வந்திருந்த
விருந்தினர் அனைவரும் மணமக்களை வாழ்த்தப் பரிசுடன் கியூவில் நின்றனர். இவளும் போய் அந்தக் கியூவில் நின்று கொண்டாள். மணமக்களை வாழ்த்திப் பரிசையும் கொடுத்து விட்டு
மேடையிலிருந்து கீழே வந்தாள்.
‘ அம்மம்மா எனக்கு பாத்ரூம் போகணும் ‘ என்று அடம் பிடிக்க
ஆரம்பித்தான் ரித்திக்.
பாத்ரூமைத் தேடிக் கண்டு பிடித்து அவனை பாத்ரூம் போகவிட்டு , மண்டபத்தை நோக்கித்
திரும்பியவள், தியாகு யாரோ ஒரு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு
ஒரு நிமிடம் நின்றாள். தியாகு அவளைக்
கவனிக்கவில்லை.
“ என்ன.. தியாகு.. நீ உனக்கு ரொம்ப நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் தான்
கூப்பிட்டிருக்கேன்னு சொன்னே.. நீ சொன்ன பேர்கள்ளே ரவியின் பெயர் இருக்கலையே.. ஆனா
அவர் மனைவி வந்திருக்காங்க போல் இருக்கு “ என்றார் அந்த உறவினர்.
‘ அட.. ஏன்பா.. கேட்கறே? இந்த ரவிக்கு ஒரு விவஸ்தையே இல்லே.. நான் அவனை
உண்மையா அழைக்கணும்னு நினைச்சிருந்தா, அவன் இருக்கிற தெருவுக்கு அடுத்த தெருவிலே இருக்கிற நம்ம
சொந்தத்தைக் கூப்பிடப் போனவன் அவனையும் கூப்பிடப் போயிருக்க மாட்டேனா..? இதை ஒரு மனுஷன்
புரிஞ்சிக்க வேண்டாமா.? அவனால் வர முடியலே போலிருக்கு.. அவன் மனைவியை அனுப்பி
இருக்கான். முடிஞ்சிருந்தா, அழைப்பு இருக்கோ இல்லையோ, நட்பு என்ற பெயரில்
ஒரு படையோடு வந்திருப்பான் “ என்று கூறியபடியே அந்த உறவினருடன் மண்டபத்துக்குள்
சென்றான் தியாகு.
திக்கென்றது மாலாவிற்கு.
கண்களில் ‘களுக்’கென்று நீர் கோர்த்தது.
ரவி சொன்னது எத்தனை உண்மை? அந்தக்
கண்ணீருக்குள்ளே முன் தினம் அவளுக்கும் ரவிக்கும் நடந்த வாக்குவாதம் திரைப்படம்
போல் ஓடியது.
“ என்னங்க.. நாளைக்குத் தியாகுவின் ரெண்டாவது பெண் கல்யாணம். எப்போ
போகலாம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க..’ என்றாள்
மாலா, பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரவியிடம்.
‘ என்ன சொல்றீங்க..? அவர் உங்க
நண்பர்ங்க.. அதுவும் ரொம்ப வருஷமா இருக்கிற நட்பு.. அப்படி இருக்கும்போது அவர்
கூப்பிடலேங்கறதுக்காக நாம போகாம இருக்கலாமா..? ஏதோ கல்யாண வேலைகள்ளே
கூப்பிட மறந்திருக்கலாம்..’
‘ இல்லேம்மா.. நமக்குத் தெரிஞ்ச பலபேரைக் கூப்பிட்டவன் நம்மை
மட்டும் கூப்பிடாம இருந்தது, நம்மள கூப்பிடற ஐடியா இல்லேன்னு தான்னே தோணுது’
‘ ஆமா.. அப்படிச் சொல்றீங்களே.. உங்க நண்பர் முரளி கூட அவர்
பெண் கல்யாணத்துக்கு நம்மைக் கூப்பிட மறந்து போயிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு
மட்டும் நீங்க எடுத்துக் கட்டிண்டு போகலையா..?’
“
நாம முரளி கல்யாணத்துக்குப் போனோம். ஆனா
நாம அங்கே போனதும் அவன் ரியாக்ஷன் எப்படி இருந்தது கவனிச்சியா.. அவன் ஓடி வந்து
என்னைக் கட்டிப் பிடித்து ‘ டேய் ஸாரிடா .. கல்யாண வேலைகள்ளே உன்னை வந்து கூப்பிட
மறந்துட்டேன். அப்படி செய்திருந்தாலும்
மனசுலே வெச்சுக்காம குடும்பத்தோடு வந்திருக்கியே.. எனக்கு ரொம்ப சந்தோஷம்டா..
ரொம்ப சந்தோஷம்டா.. என்று சொன்னானே ஞாபகம் இருக்கா.. கல்யாணம் முடிஞ்சு நாம்
கிளம்பும் வரை எத்தனை தடவை வந்து வருந்தி மன்னிப்புக் கேட்டிருப்பான்.. ஞாபகம்
இருக்கா..?
“ அது வாஸ்தவம் தான்… ஆனா முரளியை விட, தியாகு நம்ம
குடும்பத்துக்கு இன்னும் க்ளோஸ் இல்லீங்களா? எத்தனை நாள் வந்து ‘ இதைச் செய்து
கொடுங்க.. அதைச் செய்து கொடுங்க’ என்று உரிமையோடு கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் மறந்து போயிருக்கலாம் அல்லவா..?”
‘ இல்லம்மா மாலா… உயிருள்ள இனங்களை அதுவும் மனிதர்களை ஒரே
அளவு கோலால் அளக்கக் கூடாது. மனுஷங்க, உணர்வுகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு, கட்டாயத்துக்கு
அடிமைங்க.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா இருப்பாங்க.. குணாதிசயங்கள், பேட்டேர்ன் ஆஃப்
பிஹேவியர் வேற வேற விதமா இருக்கும்.
அன்னிக்கு முரளி கூப்பிட மறந்தாலும் அவன் பெண் கல்யாணத்துக்குப்
போனோம். ஆனா தியாகு கேஸ் வேறே. அவன் ஒவ்வொண்ணும் ஒரு கணக்கோடு செய்யறவன். அதனாலே, அவன் கூப்பிடலேன்னா, ஏதோ ஒரு கணக்குலே
அவன் நமக்கு அழைப்புக் கொடுக்கலே.. அவ்வளவுதான்… ஸோ இட் ஈஸ் பெட்டர் டு ஸ்டே எவே… ’ என்றான் ரவி.
“ இல்லீங்க.. நாளைக்கு தியாகு வந்து.. ‘ நான் ஏதோ வேலைகள்
பிஸியிலே மறந்துட்டேன் . ஆனா, ஆஸ் எ ஃப்ரெண்ட், நீ வந்திருக்க வேண்டாமா..? என்று கேட்டால் நாம
என்ன பதில் சொல்வோம்?”
‘ அந்தப் பிரச்சினையே வராது. அப்படி வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.”
“ இல்லீங்க..”
விவாதித்து, விவாதித்து, இதோ இங்கு வந்து
மூக்குடைபட்டு நிற்கிறாள் மாலா.
“ என்ன.. ஆன்டி.. இங்கேயே நின்னுட்டீங்க..
இப்போதுதான் முதல் பந்தி ஆரம்பிச்சிருக்காங்க.. டைனிங் ஹாலுக்குப் போங்க.. என்ற
குரல் கேட்டு இவ்வுலகிற்கு வந்தாள்.
தியாகுவின் முதல் பெண் புன்முறுவலுடன்
அவளிடம் கூறியபடியே மண்டபத்துக்குள் சென்றாள்.
அவள் புன்முறுவலில் சிறிது நக்கலும் சேர்ந்திருந்ததோ?
மாலா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லோரும் அவசர அவசரமாகச் சாப்பிட இடம் பிடிக்க
டைனிங் ஹாலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.
மாலா ரித்திக்கையும் கூட்டிக் கொண்டு மண்டபத்துக்கு வெளியே வந்து
வீட்டிற்குச் செல்ல ஆட்டோ பிடித்தாள்.
அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார். தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் முனிவர் கேட்டார் யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை.
கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் ..
சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ).
இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)
அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..
அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்படி என்றே எனக்குமறந்து போயிருக்கும்..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்படி ஊதுவது என்று மறந்து போயிருமே ”. என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
அலைபேசியில் எண்களை அழுத்தினான் .“இந்த சந்தாதாரர் வேறு ஒரு இணைப்பில் உள்ளார் சற்று பின்னர் அழைக்கவும்”.
கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன.கைக்கடிகாரத்தைப்
பார்த்தான். மறுபடியும் அலைபேசியில் அழைத்தான் .குரல் மாறாத அந்த மாதரசி மறுபடியும் அதையே சொன்னாள்
ஓ, புது எண் எடுக்கமாட்டான் போலிருக்கு.அவளிடம் அலைபேசி இல்லை.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் .“சந்திரரே,சூரியரே” பாட்டு ஒலித்தது.ஐந்து முறை சந்திரனும் சூரியனும் வந்து விட்டு போனார்கள்.
விசாலிக்கு இப்போ பத்து வயது. போன வருஷம் ஒரு சுமாரான வரனுக்கு இளையாளா கல்யாணம் ஆனவள்.அவள் அப்பாவுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை ப் பற்றி எப்பவும் ஒரு இளக்காரம். அதனால் அவளை அவர்கள் வீட்டில் இன்னும் கொண்டு போய் விடவில்லை. விசாலி தோழியுடன் சோழி விளையாடிக் கொண்டு ஜாலியாக இருக்கிறாள்.
திடீரென்று ஒருநாள் அவள் பெரிய மாமனாரும் மச்சினர்மார்களும் வந்து அந்த க்ஷணமே அவளை அழைத்துப் போகவேண்டும் என்று நிற்கிறார்கள். வீட்டில் அப்பா இல்லை. அத்தை ஆன மட்டும் சொல்லிப் பார்க்கிறாள். முடியாது என்று மறுக்கிறாள். அப்போ விசாலிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு பெரிய துணியில் அவளுடை துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு ‘அப்பா வந்ததும் சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு அவர்கள் வண்டியில் ஏறிக் கிளம்பிப் போய்விட்டாள். அவள் அப்பா வந்ததும், சாப்பிடக் கூட விடாமல் அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று தெரிந்ததும் உடனே ஒரு ஜட்கா எடுத்துக்கொண்டு அவர்களைத் துரத்திப் பிடித்தார்.
மாப்பிள்ளை வீட்டுக்காரகளிடம் ஒன்றும் பேசவில்லை. “சாப்பிடாமல் கிளம்பிவிட்டாயே அம்மா! வா சாப்பிடலாம் "என்று அவளை அழைத்து அவளுக்கு ஊட்டி விட்டார். பாக்கி சாதம் அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். தூக்கி ஆத்தில் போட்டார். ‘எப்பப்பா வருவேள்?’ என்கிறாள் விசாலி. ‘நான் எதுக்கு வரணும்? நீ வந்து போ ! நீ வரவேண்டாம்னு நான் சொல்லலை” என்றார் அவர். விசாலி புக்காத்து வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.
பெரிய மாமனாரும் மற்ற இரு மச்சினர்களும் பேசவில்லை . உலகத் தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன.
போகர் பதினெட்டு சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார்.
பழநி முருகன் சிலை
பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை. நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாடாணம் மருத்துவக் குணமுள்ளதால், பூசை செய்பவர்கள் சிலையைச் சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றதாக பரவலாகப் பேசப்படுகிறது.
போகர் நூல்கள்
போகர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம் , முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன் அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000 என்ற நூலில் இப்படி கூறுகிறார்.
காணவே மூலம் அஃது அண்டம் போலக் காரணமாய்த் திரிகோண மாக நிற்கும் பூணவே மூன்றின்மேல் வளைய மாகும் புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும் நாணவே நாற்கமலத்து அட்சரங்கள் நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும் மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே – போகர் 7000
மூலாதாரமானது ஒரு வட்டம் போல் இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம் ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு வளையமும், அதனை சுற்றிலும் நான்கு இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள் இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும் மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம்.
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர் அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும் உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள் ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப் பூவாய்ப் புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி பெண்பாம்பு போல் சுருட்டிச் சீறிக் கொண்டு சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள் துரியாதீதம் என்ற அவத்தை தானே. – போகர் 7000
அகாரத்தில் மேலே கணேசர் நிற்பாராம் அதன் மற்றொரு புறமான உகாரத்தின் மேல் வல்லபை என்ற சக்தி நிற்பாளாம் இதில் வாழைப் பூவை போல் கீழ்நோக்கி ஒன்று விரிந்திருக்கும். அதில் பெண் பாம்பு போல் குண்டலினி சக்தி சுருட்டிக் கொண்டு சுழிமுனையில் ஊடுருவி சீறிக் கொண்டு இருப்பாளாம்
அவத்தைதனக் கிருப்பிடம்மும் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டி தழாய் நிற்கும் நவத்தைக்கு நந்தி அதன் வாயில் நிற்பார் நற்சிவமரம் சிகார மல்லோ கோடி பானு அவத்தைக்கு வாய் திறவாள் மலரால் மூடும் மைந்தனே எட்டு இதழில் எட்டு சத்தி பவத்தைக்குச் சக்தி எட்டின் பேர் ஏது என்றால் பாங்கான அணிமவும் லகிமாத் தானே – போகர் 7000
இதுவே மூலதாரத்தின் இருப்பிடமாகுமாம் முக்கோணத்தின் கீழ் முனையில் உள்ள வாழைப் பூ போன்ற அமைப்பு எட்டு இதழ்களை கொண்டது. அந்த எட்டு இதழ்கள் ஒவ்வொன்றிலும்எட்டு விதாமான சக்திகள் அடங்கிஇருக்குமாம் அதன் நடுவே நந்தி நிற்பாராம். நந்திக்கு பிறகு கோடி சூரிய பிரகாசத்துடன் நற்சிவமும் இருக்குமாம்.
தானான மகிவாவும் கரிமா வோடு தங்கும்ஈ சத்துவமும் வசித்து வமாகும். பூனான பிராத்திபிரா காம்யத் தோடு புகழ்எட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே ஏனான இதழாலே மூடிக் கொள்வார் ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல் – போகர் 7000
அந்த எட்டு சக்திகள், அணிமா, லகிமா, மகிமா, கலிமா, ஈசத்துவம்,வசித்துவம்,பிராப்தி மற்றும் பிராகாமியம்மாகும் அந்த அட்டமா சக்திகளுக்கான தேவர்கள் அங்கு நின்று நந்தியை பார்க்க விடாமால் எட்டு இதழ்களால் மூடிக் கொள்வார்களாம். இதுவே மூலாதாரத்தின் அமைப்பாக போகர் சித்தர் கூறுகிறார்
மூலாதாரத்தை எப்படி விழிக்கச்செய்வது என்று போகர் கூறியிருக்கிறார் இந்த நிலைகளை அடைவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..
வஸ்துவை பானம் பண்ணி வங்கென்று கும்பித்து மூச்சை மேலும் செலுத்தி ஊது.
ஊதினால்என் வாசத்து இலகி ரியாலே உலாவுவார் இதழ் எல்லாம் திறந்து விட்டுப் போதினால் ஆயிசொன்ன ஏவல் கேட்பார் புகுந்து பார் நந்தி கண்டால் யோகமாகும் வாதினால் பத்தான வருடத் துக்கும் வாசலையே திறவாமல் மூடிக் கொள்வார் ஏதினால் இதற்குள்ளே வாசி மாட்டே இடத்தோடில் வங்ஙென்ன உள்ளே வாங்கே ( போகர் 7000 – 15)
பொருள்:
அப்படி ஊதினால் எட்டு சக்திகளும் இதழ்களை திறந்துவிடுமாம். அந்த எட்டு சக்திக்கான தேவர்கள் வெளியே வந்து உலாவுவார்கள் என்கிறார். நம் ஏவல்களையும் செய்வார்கள் என்று சொல்கிறார். எட்டு இதழ்களையும் திறந்தவுடன் நந்தி தெரிவாராம். அவரை கண்டதும் யோகம் வாய்க்கும் என்கிறார். இது நிகழவேண்டும் என்றால் இடைவிடாமல் சாதகம் செய்ய வேண்டும் பத்து வருடங்கள் கூட செய்ய வேண்டியது வருமாம்
வாங்கியே நந்தி தனில் யங்ஙென்று கும்பி வலத்தோடில் சிங்ஙென்று உள்ளாக வாங்கித் தாங்கியே யங்ஙென்று இருத்திக் கும்பி தளமான தெருவாறும் வெளியாய்க் காணும் ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மை காணும் தேங்கியே வல்லபையாம் சத்தி தாணும் சிறந்திருப்பாள் பச்சைநிற மாகத் தானே – போகர் 7000 – 16
மூச்சை உள்வாங்கி நந்தியை நினைத்து யங் என்று கும்பித்துப்பார் வலுது நாசியில் மூச்சை விடும்போது சிங் என்று மூச்சை உள்ளே வாங்கி யங் என்று மூச்சை கும்பிப்பாயாக (கும்பகம் – சிறிது நேரம் மூச்சை நிறுத்துவது) . இப்படி செய்யும்போது ஆறு ஆதாரங்களுக்கும் வழித்தோன்றுமாம். மாணிக்க ஒளிப்போல் தோன்றுமாம் மூலத்தின் உணமையும் தெரியுமாம். பச்சை நிறமாக வலை தாய் சக்தி காட்சித்தருவாள் என்கிறார்.
பச்சைநிற வல்லபையைப் பணிந்து போற்று பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள் மொச்சையாம் மூலமது சித்தி ஆனால் மூவுலகும் சஞ்சரித்துத் திரிய வாகும் கச்சைநிறக் காயமுமே கனிந்து மின்னும் கசடு அகன்றே ஆறுதலங்கண்ணில் தோன்றும் துச்சைநிற வாதம்சொன் னபடி கேட்கும் துரியததின் சூட்சம் எல்லாம் தோன்றும் பாரே. – போகர் 7000 – 17
பொருள்:
பச்சை நிற வாலை தாயை பணிந்து போற்று, ஆறு ஆதாரங்களையும் கடப்பதற்கு உரிய காலத்தை உனக்கு உணர்த்துவாள் என்கிறார். மூலம் என்ற முதல் படி சித்தியாகி விட்டாலே மூவலகங்களிலும் சென்று திரியலாம் என்கிறார். உடல் கனிந்து மின்னுமாம். உடலில் படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று ஆறு ஆதாரங்களும் கண்களுக்கு காட்சியளிக்கும் என்கிறார். துரியத்தின் சூட்சமம் எல்லாம் தெரியும் எனகிறார். துரியம் என்பது தலை உச்சியில் உள்ள ஓம் சக்கரம்.
மூச்சுபயிற்சி மூலமாக மூலாதாரத்தை விழிக்க செய்யும் முறையை இங்கு போகர் கூறுகிறார். நல்ல குருவை தேர்ந்தெடுத்து அதாவது இந்த மூச்சுபயிற்சியில் நன்கு தேர்ந்தவர்களின் மூலம் கற்று கொள்வதே சிறந்தது. மூச்சுபயிற்சி செய்பவர்கள் அனைவருக்கும் இது வாய்க்கும் என்றும் சொல்லமுடியாது ஆனால் உங்கள் உடல் நல்ல ஆரோக்கியம் அடையும். ஒழுக்கத்துடனும் தன்நலம் இன்றி வாழ்பவர்களுக்கு இது கண்டிப்பாக வாய்க்கும்.
இவர் தமிழில் வெளியாகும்
அனைத்து அச்சு இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள்,
குறுநாவல்கள்,
கவிதைகள்
என்று நிறைய எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய நூல்களில் “நீர்வலை”
எனும்
நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த
நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இவர் கணையாழியில் எழுதியவை
மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றன. அவரது
வார்த்தைகளிலேயே
எனக்குப்
பின்னால் இரு ஆச்சர்யமான அடையாளங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டன. ஒன்று கணையாழி
எழுத்தாளன் என்பது. நான் கணையாழியில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். எழுத வந்த
சூட்டோடு பெருஞ்சுற்று இதழ்களில் பவனி வந்து கொண்டிருந்த போதுகளில், நண்பர்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரில், சரியான முடிவுதானா என்ற சம்சயத்துடன், எனக்கு ஓர் இலக்கிய முத்திரை கிடைக்க வேண்டும் என அவர்கள்
எதிர்ப்பார்ப்பின்படி, கணையாழியில்
என் முதல் கதை ’மறதி’ எழுதினேன். திலீப்குமார் பார்வையில் அது பாராட்டுப்
பெற்றது. இலக்கியச் சிந்தனை அமைப்பின் ’சிறந்த
மாதக்கதை’ எனப்
பரிசு பெற்றது. அந்தக் கதையைப் படித்து இயக்குநர் பாலசந்தர் என்னிடம் நட்பு
கொண்டார்.. தான் தயாரித்த ஒரு குமுதம் இதழில்
சிறப்புச் சிறுகதை வாய்ப்பும் தந்தார் சிகரம். சிநேகி தர்கள் வாழ்க. கணையாழிக்கு
நன்றி.
இவரது கதைக்களங்களும் கதை
மாந்தர்களும் நாம் எப்போதோ எங்கேயோ பார்த்தவர்களாகத் தோன்றும். சொல்லாடல்கள் நறுக்.
உதரணமாக
வெளி
உபயோகத்திற்காக ஒரு சைக்கிள் வாங்கினார். வீடு உபயோகத்திற்காக கல்யாணம்
பண்ணிக்கொண்டார்.
பொதுவாக
அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை மெச்சிக்
கொள்வதில்லை. கணக்கில் 98 வணங்கினால் கூட ’இன்னும்
இரண்டு மார்க் என்ன ஆச்சு சனியனே’ என்று
கத்துகிறார்கள்
வீட்டோடு இருந்து
வேலைசெய்யும் சிறுமி ‘குட்டி’யின்
பார்வையில் சொல்லப்படும் வம்சம் என்னும் கதை இப்படிப்போகிறது.
அவள் வேலைபார்க்கும் வீட்டில்
தேவகி அக்கா, நடராஜன் அண்ணா, அப்பா அம்மா மற்றும் தாத்தா.
தேவகி அக்காவை பெண்பார்க்க
வருகிறார்கள். அதற்காக கேசரி, பஜ்ஜி, காப்பி எல்லாம் தயார் செய்கிறாள். இன்னும் தோய்த்த துணிகளை
காயப்போடவேண்டும். விருந்தினர் வரவிருப்பதால் குட்டியையும் உடை மாற்றிக்கொள்ளச்
சொல்கிறார்கள் போன வருடம் தீபாவளிக்கு இவர்கள்
எடுத்துக் கொடுத்த சின்னாளப்பட்டி பாவாடையும் அதற்கு மாட்சாக பிளவுசும்.
அந்த உடைகளைப் பார்த்து அவள்
தங்கை கோகிலா
‘ஏய். நா ஒரே ஒரு தடவை போட்டுப்.. " என்று கேட்டு முடிவதற்குள் ‘முடியாது’ என்று பதிலளித்ததும் ’ இந்த
தீபாவளிக்கு எனக்கு ஒன்னுமே எடுக்கலை’ என்று கோகிலா சொன்ன தும் நினைவுக்கு வருகிறது.
மேலும் ஒவ்வொரு முறையும்
அம்மா வந்தால், இவளது உடைகளை ஊருக்கு கொண்டு போய்விடுவாள். மறுத்துச் சொல்ல முடியாமல் வெறுமனே
பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடிகிறது. ஒரு உபாயமும் செய்கிறாள்.
பழந்தமிழ் நூல்களை மின் எழுத்தில் மாற்றும் முயற்சிகளில் ஒன்றே பிராஜக்ட் மதுரை. புத்தகங்களைத் தட்டச்சு செய்தோ அல்லது அதன் பக்கங்களை பிம்பமாக அமைத்துப் பாதுகாப்பதே இதன் முக்கிய பணியாகும்.
500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் PDF முறையிலும் , யுனிகோட் வடிவிலும் , கிண்டில் வடிவிலும் இருக்கின்றன.
இதில் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகத் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்; தங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.
இது முழுக்க முழுக்க ஆர்வலர்களின் துணையோடு நடத்தப் படுகிறது.
பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பாடல்
தலைவன் அல்லது தலைவியை முதலாக வைத்துப் பத்து பருவங்களை உருவாக்கி நூறு ஆசிரிய
விருத்தங்களால் பாடப்படுவது பிள்ளைத் தமிழ்.
இதில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு
வகையில் பாடுவார்கள்.
பெண்பால் பிள்ளைத் தமிழில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என பத்து பருவங்களை வைத்துப் பாடுவார்கள்.
1) காப்புப் பருவம்: இது இரண்டு மாதக் குழந்தையைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது.
2) செங்கீரை: ஐந்தாம் மாதம் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கரங்களால் நிலத்தில் ஊன்றி தலை நிமிர்ந்து முகம் அசைய ஆடுதல்.
3) தாலப் பருவம்: எட்டாம் மாதம் ‘தாலேலோ’ என்று நாவசைத்துப் பாடுதல்.
4) சப்பாணி: ஒன்பதாம் மாதம் இரு கரங்களையும் சேர்த்து கைதட்டும் பருவத்தைப் பாடுதல்.
5) முத்தப் பருவம்: பதினொன்றாம் மாதம், குழந்தையை முத்தம் தர வேண்டிப் பாடுதல்.
6) வருகைப் பருவம்: ஓராண்டு ஆகும்போது குழந்தை தளிர்நடை பயிலும்போது பாடுதல்.
7) அம்புலிப் பருவம்: ஒன்றேகால் ஆண்டு ஆகும்போது குழந்தைக்கு நிலவைக் காட்டிப் பாடுதல்.
பெண் குழந்தைகளுக்கான மற்ற மூன்று பருவப் பாடல்கள்:
8) அம்மானை: குழந்தையை அம்மானை ஆடும்படியாகப் பாடுதல்
8. சிற்றில் இழைத்தல் : அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அவற்றை அழிக்க வேண்டாம் என்று பெண் குழந்தைகள் பாடும் பாடல்கள் இவை.
9. சிறுபறை முழக்கல் : . இப்பருவத்தில் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து மகிழ்விப்பதே இப் பருவமாகும்.
10 சிறு தேர்ப்பருவம் : மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப் பாடுவது இப் பருவமாகும்.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது. காலம் 17 ஆம் நூற்றாண்டு
இதன் கடைசிப் பாடலில் ஊஞ்சலாடும் மீனாட்சியின் அழகைச் சிறப்பிக்கிறார்.
அதைவிட, எங்கள் மனது வேகம் அம்மா!…..உன்னிடம் பறி கொடுத்த மனது வேகமோ வேகம்!
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் அருமையான பாடல் இது!
குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்! திருமலை
நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்! மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்! இறங்கி
வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு…..ஓடியே போகிறாள்!
CNN நடத்திய எது மிகவும் சுவையான உணவு ? என்ற வரிசையில் வியட்நாமின் ஃபா (PHO ) 2011 ல் 28 வது இடத்தில் இருந்தது. ( நம்ம மசாலா தோசைக்கு 49 வது இடம் . முதல் இடம் தாய்லாந்தின் கறி )
ஃபா மிகவும் ஹெல்த்தியான உணவு! மேலே சொன்னது நான்-வெஜிடேரியன்
ஃபா.
சரி! வெஜிட்டேரியன் ஃபா செய்வது எப்படி?
முதல்ல ‘பிராத்’ செய்யணும் !. அது என்னன்னு கேக்குறீங்களா? Too many cooks spoil the broth என்று சொல்வார்களே அது தான்.
பிராத் செய்ய ஒரு வாணலியில் பாதியா வெட்டின பெரிய வெங்காயம் 1-2,, இஞ்சி இரண்டையும் நல்லா கரிய ர வரைக்கும் சூடு பண்ணுங்க . அதை எடுத்து அலம்பி வைச்சுக்கங்க. பிறகு பட்டை, பூண்டு , கொத்தமல்லி விதை , லவங்கம், ஸ்டார் அனைஸ் ( என்னன்னு யாருக்குத் தெரியும்?) எல்லாத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு போட்டுட்டு வதக்கி நல்லா சூடு பண்ணுங்க ! பிறகு இஞ்சி வெங்காயம் கலவையை ஸோய் சாஸோடு அந்தப் பெரிய பாத்திரத்தில் சேர்த்து நல்லா கொதிக்க வையுங்க ! அப்பறம் 25 நிமிஷம் மிதமான சூட்டிலே சூடு பண்ணுங்க ! அதிலிருக்கிறதை புளி வடிகட்டற மாதிரி வடிகட்டி தெளிவை ஒரு பாத்திரத்தில கொட்டி லேசான சூட்டில எப்பவும் சூடா இருக்கற மாதிரி வையுங்க!
அத்தோட
4/5 கேரட்டை கொஞ்சம் பெரிசா வெட்டி நல்லா வேகவைச்சு அந்த வடிகட்டின பிராத்தில சேருங்க !
பிராத் கொதிக்கும் அதே நேரத்தில் , அரிசி நூடுல்ஸை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிக்கிற தண்ணியை அதில் முழுகும் அளவுக்கு விடுங்கள். பிறகு அதை 20 நிமிஷம் ஊற விடுங்கள் !
பாட்சா அப்படிங்கர முட்டைகோஸ் மாதிரி இருக்கிற காயைக் கூட வேகவைச்சு வெச்சுக்கங்க !
சாப்பிடத் தயாரான போது ‘டோஃபூ’ என்று நம்ம ஊரு பன்னீர் மாதிரி இருப்பதை சின்ன சின்னதா 1" சைசுக்கு வெட்டி லேசா அதன் நிறம் மஞ்சளாகும் வரை வதக்கி எடுத்து வைச்சுக்கங்க !
பிறகு நாலைஞ்சு கிண்ணத்தில (BOWLS) நூடுல்ஸை தண்ணீர் இல்லாமப் போட்டு , டோஃபுவையும் தனித்தனியா போட்டு ரெடி பண்ணுங்க! இதிலே சூடா இருக்கிற பிராத்தைச் சேர்த்தால் ஃபா என்கிற சூப் ரெடி !
மிளகாய் சாஸ் , பாக்சாய் , பீன்ஸ் ஸ்ப்ரவுட் , எலுமிச்சம் பழம் ஹோய்ஸின் சாஸ் , பச்சிலை போன்றவைகளை சீசனிங் மாதிரி சேர்த்துக் கொள்ளலாம்!
சும்மா சொல்லக்கூடாது! டேஸ்டாகவும் இருக்கும் . வயிறும் நிறைஞ்ச மாதிரி இருக்கும் !
இங்கிலீஷில் ரெசிபி வேண்டுமென்றால் கீழே படிக்கவும்:
To make the broth, heat a pan over high heat – add halved onions ( 1- 2) and ginger (2" long) and dry roast it until the onions begin to char. Remove from heat and wash and keep aside. Heat a large pot over medium-high heat. Add cinnamon sticks, star anise, 1 tsp coriander seeds and cloves and dry-roast until there is aroma from the spices. Add the onions, ginger, stock and soy sauce and bring to a boil over high heat. Turn the heat down to medium-low, cover, and simmer for about 25 minutes. Strain into a clean pot and discard the solids. Taste the broth and add salt if necessary. Keep warm over low heat. Boil 4 chopped carrots and add to the filtered broth.
While the broth is simmering, prepare the rice noodles. Place the noodles in a large bowl. Pour boiling water over the noodles to cover and soak for 20 minutes.
Cut Tofu into small pieces and saute in a pan until the outer layer turns brown.
When you are ready to assemble the soup, drain the soaked rice noodles and divide evenly among 4 to 6 large bowls. Distribute tofu among the bowls. Ladle the hot broth over the noodles. Serve the bowls of pho with the bok choy, scallions, bean sprouts, herbs, lime wedges, hoisin sauce and chili sauce on a separate platter so that everyone can season their own soup as they wish.
என்ன நீ மாசத்துக்கு அஞ்சாறு நாள் வீட்டிலேயே இருக்கிறதில்லை?
ஆமாம். ஜூலை- ஆகஸ்ட் மாசத்தில ஷேர்கோல்டர்ஸ் மீட்டிங் கொஞ்சம் நிறைய இருக்கும். அதனால வெளியூர் போயிட்டு வர்றேன் !
நெட்-நெட் முதலீடு பத்தி நல்லா சொன்னாய். அது சம்பந்தமா படிக்கறதுக்கு ஏதாவது புத்தகம் இருக்கா?
கண்டிப்பா ! பெஞ்சமின் கிரஹாமோட ரெண்டு புத்தகம் இருக்கு. .“The Intelligent Investor” மற்றும் “Security Analysis”. முதல் புத்தகம் வெளிவந்தது 1949ல. ரெண்டாவது புத்தகம் வெளிவந்தது அதுக்கு முன்னாடி. 1939ல.
அடேங்கப்பா ! இவ்வளவு வருஷமா ஆச்சு? இத்தனை நாள் யாரும் வேல்யூ இன்வெஸ்டிங்கை பயன் படுத்தலையா ?
உண்மையா சொல்லணும்னா இந்த
வேல்யூ இன்வெஸ்டிங் கொஞ்சம் ‘கடி’ சமாசாரம். போர் அடிக்கற வேலை. தினமும் ஷேர் மார்க்கெட்டைப் பாக்க வேண்டாம். ஆனால் நிறையப் படிக்கணும். சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கணும். ஷேர் வாங்கினப்பறம் நாம எதிர்பார்த்த மதிப்பு வர வரைக்கும் சும்மா உக்காந்திருக்கணும்.
The Intelligent Investor ரொம்ப சின்ன புத்தகம் தான். ஆனா அதைப் படிக்க எனக்கு ரெண்டு மாசம் ஆச்சு.
“Security Analysis” ரொம்பப் பெரிய புத்தகம். ரெஃபரென்ஸ் புத்தகம் மாதிரி.
நீ ரொம்ப தான் பயமுறுத்தறே ! சிம்பிளா படிக்க ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லேன் !
உன்னை மாதிரி ஆட்களுக்காகவே ஒரு சிம்பிள் புத்தகம் இருக்கு.. படிக்கறவங்களுக்கு நல்லாவே புரியற மாதிரி இருக்கும். "தாந்தோ * இன்வெஸ்டர்” என்று அந்தப் புத்தகக்தின் பெயர். மோக்னிஷ் பாப்ராய் அப்படின்னு ஒரு இந்திய-அமெரிக்க ஆளு எழுதின புத்தகம். இந்த பாப்ராயைப் பத்திச் சுருக்கமா சொல்லணும்னா -வாரன் பஃப்ஃபேட் டோட சிஷ்யர்னு சொல்லலாம் !
வெரி குட் ! இன்னொரு கேள்வி. எல்லோரும் இப்ப பிரபலமான கம்பெனியின் ஷேரை வாங்கறாங்களே ! இன்போஸிஸ், விப்ரோ , ஸ்டேட் பேங்க் இந்த மாதிரி கம்பெனி ஷேரை வாங்கினா பின்னாடி அதெல்லாம் நல்லா விலை ஏறுமாமே ?
நீ பேங்கில லோன் ஆபிசரா எத்தனை வருஷம் வேலை பாத்திருக்கே ? லோன் டார்கெட்டை அடையறது எவ்வளவு கஷ்டமுன்னு உனக்குத் தெரியுமில்லே ?
ஆமாம்
அதே மாதிரி எந்த ஷேர் எவ்வளவு விலைக்குப் போகும்னு . யாராலும் சொல்ல முடியாது. அது பின்னாடி போகாமலிருந்தா சரி .வளர்ச்சி முதலீடு (growth investing ) அப்படின்னு ஒரு ம்யூச்சுவல் பண்ட் கூட இருக்கு. ஆனா அவங்க கிட்டே முதலீடு பண்ணினாலும் நம்ம பணம் வளராம அப்படியே இருக்கும். சமயத்தில குறையவும் செய்யும்.
இப்போ நான் என்ன பண்ணணும்?
சும்மா தானே வீட்டிலே உட்கார்ந்துக்கிட்டு இருக்கே !
“தாந்தோ இன்வெஸ்டர்” புத்தகத்தைப் படி. அடுத்த வாரம் வா. இன்னொரு புத்தகம் தர்றேன்.
அதோட பேர் என்ன?
நீங்களும் பங்குச் சந்தையில் ஜீனியஸ் ஆகலாம்!
என்னைச் சொல்றியா? தேங்க் யு .
புத்தகத்தின் பேரைச் சொன்னேன். “
நீங்களும் பங்குச் சந்தையில் ஜீனியஸ் ஆகலாம்!”
அப்படியா? சூப்பர்!
* Dhandho (pronounced dhun-doe) is a Gujarati word. Dhan comes from the Sanskrit root word Dhana meaning wealth. Dhan-dho, literally translated, means “endeavors that create wealth.” The street translation of Dhandho is simply “business.”
கோவை மாவட்டத்தில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்பட்ட பின்பு இந்தப் பாடல் ஒலி பரப்பபடுகின்றது .
இந்தப் பாடலை இரு பாடகர்கள் மிக அருமையான நயத்துடன் பாடி இருக்கின்றார்கள் .
இந்தப் பாடலைக் கேட்டபின்பு பாடல் எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது பாடிய விஜய்ஏசுதாஸ் மற்றும் சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.
நண்பர்கள், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள் மறைந்தபோது இந்தப் பாடலை அவருக்கு அஞ்சலியாக இசைத்தார்கள். அவரை நினைத்துக் கொண்டு மேலே உள்ள லிங்க்கில் இந்தப் பாடலைக் கேளுங்கள். உங்கள் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.