குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டி முடிவுகள்

                  குவிகம் குறும் புதினம் 2023 -24 போட்டி முடிவுகள்

2023 -24 ஆம் ஆண்டுக்காக நடத்தப்பட்ட குறும் புதினப் போட்டியின் முடிவுகளை சென்ற 12 ஆம் தேதி நடைபெற்ற குவிகம் அளவளாவல் நிகழ்வில்  எழுத்தாளர்கள் , நடுவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில் மகிழ்வுடன் அறிவித்தோம் !

இந்தத் தேர்வில் எங்களுடன் பயணித்த நடுவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்!

ஏற்கனவே அறிவித்தபடி முதல் மூன்று குறும் புதினங்கள் சிறப்புப் பரிசுகள் (ரூபாய் 5000, 3000, 2000 ) பெறுகின்றன.

மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குறும் புதினங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அவை இந்த ஆண்டு குவிகம் குறும் புதின இதழில் வெளிவரும். 

வெற்றி பெற்ற அனைவருக்கும் குவிகம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

பங்கு பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கு எங்கள் சிறப்பு வந்தனங்கள்.

இதில் தேர்ந்தெடுக்கப்படாதாதால் உங்கள் படைப்பு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.  உங்கள் படைப்புகளுக்கு  மற்ற இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு நிறைய உண்டு. தொடர்ந்து குவிகத்துடன் இணைந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

நடுவர்கள் :

இறுதிச் சுற்று :திருப்பூர் கிருஷ்ணன்

இரண்டாம் சுற்று: வளவதுரையன்

முதல் சுற்று :

1. ராய செல்லப்பா
2. மதுவந்தி
3. ஒரு அரிசோனன்
4. கிருத்திகா சதீஷ்
5. மீ விஸ்வநாதன்
6. தென்காசி கணேசன்
7. சுவாமிநாதன்
8. முகில்

முதல் பரிசு ( 5000 ரூபாய்)

ஆ.ஆனந்தன் – கோழைகள்

இரண்டாம் பரிசு ( 3000 ரூபாய்)

க. இராஜசேகரன்  – பொலிகாளையும் கன்றுக்குட்டியும்

மூன்றாம் பரிசு  ( 2000 ரூபாய்)

சிக. வசந்தலெட்சுமி   –  நீ நீயாக இரு

பிரசுரத்திற்கு ஏற்கப்பட்ட குறும் புதினங்கள்

  1. கமலா முரளி –                            போண்டா வடையா …பாய்காட்டா ?
  2. சோ.சுப்புராஜ்                            மரணமென்னும் தூது வந்தது
  3. வசந்தா கோவிந்தராஜன்       தலைமுறைகள்
  4. கே.என் இராமகிருஷ்ணன்    ஏமாற்றாதே ஏமாறாதே
  5. சீத்தா வெங்கடேஷ் சங்கர     சுப்பு வாத்தியாரும், மூன்று பெண்களும்.
  6. சிவகுமார் கே                             போஸ்ட்மேன்
  7. சுதா திருநாராயணன்             காஞ்சனா +கார்டு +காதல் +கொலை
  8. ஹெச்.என்.ஹரிஹரன்            நீயின்றி அமையாது இவ்வுலகு
  9. ஆன்சிலா ஃபெர்னாண்டோ  தரை இறங்கும் பறவைகள்
  10. சந்துரு மாணிக்கவாசகம்      பெருமாள்சாமி எனும் நான்..
  11. புவனா சந்திரசேகரன்,            யுத்த காண்டம்
  12. மீ.மணிகண்டன்                        முதல் பயணம் …
  13. அனுராதா ஜெய்ஷங்கர்           உயிரில் மலர்ந்த சுடர்கள்
  14. சுரேஷ் ராஜகோபால்                சந்துருவின் எதிர்காலம்
  15. சு.ஸ்ரீவித்யா                                  மாத்ரு ஷோடஸி
  16. இந்திரநீலன் சுரேஷ்                 தேன் மல்லி பூ
  17. ஜே. செல்லம் ஜெரினா.            நிலவொன்று கண்டேன்
  18. யாரோ                                           பச்சைப்பெட்டி
  19. கலாவல்லி அருள்                      ஒரு புன்னகையும், ஓராயிரம் பதில்களும்
  20. எஸ் வி வேணுகோபாலன்       இந்திரா
  21. ஷைலஜா                                      எதிலும் அவள் குரலே!

சங்க இலக்கியம் – ஓர் எளிய அறிமுகம் – பாச்சுடர் வளவ. துரையன்

குறுந்தொகை

குறுந்தொகை புலியூர்க் கேசிகன் Kurunthogai Puliyur Kesigan Kurunthokai Puliyoor Kesikan Kurunthoagai Puliur Kecigan Kurunthoghai Puleyoor Kesighan

திருவிளையாடல் திரைப்படத்தில் குறுந்தொகை நூலிலிருந்து ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ,
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளதோ, நீ அறியும் பூவே”

என்பது அப்பாடலாகும். இது குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகும். “பல மலர்களிடத்தும் சென்று பூந்தாதினைத் தேடி உண்ணும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! என் விருப்பத்திற்கு ஏற்றபடி கூறாமல் நீ ஆராய்ந்து கண்ட உண்மையைக் கூறுவாய்; பிறவிகள் தோறும் என்னுடன் பொருந்திவரும் நட்பினையும், அழகிய  சாயலையும், நெருங்கிய பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலைப் போல நீ அறிந்த மலர்களிலே நறுமணம் கொண்ட மலர்களும் உளவோ” என்பது இப்பாடலின் பொருளாகும்.

இப்பாடல் தருமி என்னும் புலவனுக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுப்பதற்காக  மதுரை சொக்கநாதப் பெருமானால் பாடப்பட்டதாகும் என்பர். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டு என்று இப்பாடலில் கூறப்படுவது பொருட்குற்றம் என்று நக்கீரர் வாதிட்டதாகத் திருவிளையாடற் புராணம் கூறும். இறைவனே இயற்றிய பாடலாயினும் அதில் குற்றம் இருப்பின் துணிந்து எடுத்துரைப்பவர்கள் சங்க காலப்புலவர்கள் என்று இப்பாடலின் வழி அறிய முடிகிறது.

எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன என்று கூறும் பழைய வெண்பா ஒன்றில் ’நல்ல’ என்னும் அடைமொழியால் குறிக்கப்படுவதிலிருந்தே குறுந்தொகையின் சிறப்பினை உணரமுடிகிறது. குறுந்தொகை நூலின் பாடல்கள் நான்கு அடிகளிலிருந்து எட்டு அடிகள் வரை உள்ளன. 307 மற்றும் 381-ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகளில் அமைந்துள்ளன. பாடல்களின் அடியளவை நோக்கி இதைக் குறுந்தொகை என வழங்கலாயினர். இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு பாடலை இடைச்செருகலாக இருக்கலாம் என்பர். இப்பாடல்கள் 205 புலவர்களால் பாடப்பட்டதாகும். பூரிக்கோ என்பவர் இதைத் தொகுக்கச் செய்தார். தொகுத்தவர் உப்பூரிக்கிழார் ஆவார். இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடி உள்ளார்

இந்நூலின் பல பாடல்களை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. அப்பாடல்களில் கூறப்பட்டுள்ள உவமைகளின் பெயராலேயே, “செம்புலப்பெயல் நீரார், குப்பைக் கோழியார், பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/25 - விக்கிமூலம்மீனெறி தூண்டிலார் என்றெல்லாம் அவர்கள் அழைக்கப்பட்டனர். 1937-ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இதில் சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.

தலைவி தலைவனுடன் சேர்ந்து இல்லறம் நடத்தும் இனிய காட்சி ஒன்று. அதைக் கண்ணுற்ற செவிலித்தாய் அப்பெண்ணின் நற்றாயிடம் வந்து கூறுகிறாள். [செவிலித்தாய் என்பவர் வளர்ப்புத்தாய். நற்றாய் என்பவர் பெற்ற தாய்] அந்தக் காட்சி இதுதான்.

சமையலறையில் அத்தலைவி சமைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் புளிக்குழம்பு வைக்கப்போகிறாள். அக்குழம்பிற்கு முற்றிய தயிரைப் பிசைந்து கலப்பது அக்கால வழக்கம்போல் இருக்கிறது. எனவே கட்டித் தயிரைத் தன் கைகளால் பிசைகிறாள். அந்தக் கையை அப்படியே தன் புடவையில் துடைத்துக் கொள்கிறாள். அந்த ஆடையைத் துவைக்கவும் நேரமில்லை. அவ்வறையில் தாளிக்கும்போது கிளம்பும் புகையானது மை தீட்டப்பட்ட அவள் கண்களில் சென்று நிறைகிறது. அந்தக் கோலத்துடனேயே தன் கணவனுக்கு உணவு பரிமாறுகிறாள். தானே தன் கையினால் துழாவிச் சமைத்த அப்புளிக்குழம்பினை உண்ணும் அவன் பார்வையாலேயே ‘இனிது’ எனப் பாராட்டி உண்கிறான். அதைக் காணும் அழகிய நெற்றியை உடைய அத்தலைவியின் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

“தான் துழந்து அட்ட என்பது பணியாளர் பலரிருந்தும் தானே ஆக்கித்தரும் விருப்போடு சமைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது

”முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. [167]

இப்பாடலைப் பாடியவர் கூடலூர் கிழார் என்பவராவார்.

ஒரு பெண்குரங்கின் அன்புடை நெஞ்சின் இயல்பைக் காட்டித் தோழி தலைவியின் அன்பு மிக்க நெஞ்சத்தைத் தலைவனுக்கு உணர்த்துவதாகக் குறுந்தொகையின் 69-ஆம் பாடல் காட்டுகிறது.

“கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட! நடுநாள்
வாரல்! வாழியோ! வருந்துதும் யாமே!”

இப்பாடலைப் பாடியவர் கடுந்தோட் கரவீரனார் என்னும் புலவராவார். சங்க  இலக்கியத்தில் இவர் பாடியதாக இப்பாடல் ஒன்று மட்டுமே உள்ளது.

ஆண்குரங்கு இருளால் கருமை படர்ந்திருக்கும் இடங்களிலும் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருக்கும் இயல்பை உடையது. அப்படித்தாவும்போது ஒரு நாள் அந்த ஆண்குரங்கு கீழே விழுந்து இறந்துவிடுகிறது. அந்தக் குரங்கிடம் மிகுந்த விருப்புகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மந்தியானது கணவனில்லாமல் இனி வாழ விரும்பவில்லை. ஆனால் அதற்கொரு கடமை இருக்கிறது. அதாவது இன்னமும் தன் தொழிலைக் கற்காத தன் குட்டியை வளர்க்க வேண்டும் அல்லவா? அதனால் இப்பொழுது பெண்குரங்கு தன் குட்டியைத் தன் உறவுக் குரங்குகளிடம் அடைக்கலமாக விடுகிறது. பின் அந்த மந்தி ஓங்கி உயர்ந்த மலைமீது ஏறிக் கீழே குதித்துத்தன் உயிரை விடுகிறது.

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/237 - விக்கிமூலம்அப்படி மந்தியும் பிரிவாற்றாப் பேரன்புடன் விளங்கும் சாரலை உடைய நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். அவன் தலைவியை மணந்து கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான். ஆனால் அவளைக் காண இரவுப் பொழுதில் வருகிறான். அவனிடத்தில் தோழி கூறும் பாடல் இதுவாகும். “இனி இரவில் எம்மைக் காண வராதே. ஏனெனில் நீ அப்படி வரும்போது உனக்குத் துன்பம் உண்டாகுமே எனக்கருதி நாங்கள் வருந்தியிருப்போம்” என்று தோழி கூறுகிறாள். ஆண்குரங்கு இறந்த பின்னர் கைம்மையுடன் உயிர் வாழ விரும்பாத பெண்குரங்கு தன் உயிரைப் போக்கிக் கொண்டதைப் போல இரவில் வரும் உனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இத்தலைவியும் உன்னைப் பிரிந்து வாழ விரும்பாமல் இறந்து விடுவாள். எனவே நீ அவளை விரைவில் வந்து மணம் புரிந்து கொள் என்பது உள்ளுறை உவமமாகும்.

சங்க காலத்தில் நன்னன் என்னும் பெயரில் பல சிற்றரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் பெண்கொலை புரிந்த நன்னன் என்பவன் ஒருவன். அவனைக் குறுந்தொகை 292-ஆம் பாடல் சுட்டிக் காட்டுகிறது. இப்பாடலைப் பாடியவர் பரணர் ஆவார்.  

நன்னன் என்ற சிற்றரசன் மாமரம் ஒன்றைக் காவல் மரமாக வைத்திருந்தான். காவல் மரத்தின் காயையோ கனியையோ தின்றாலும் அம்மரத்திற்கு ஊறு செய்தாலும் கடுந்தண்டனைகள் வழங்கப்பட்டன. அக்காவல் மரத்திலிருந்து விழுந்த காய் ஒன்று ஆற்று நீரில் மிதந்து வந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாள்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேட்ட நன்னன், அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொன்னான். அப்பெண் செய்த குற்றத்திற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும், எண்பத்தோரு யானைகளையும் நன்னனுக்குத் அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாள்களைப் பணித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கப்பட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி புறநானூற்றுப் பாடல் 151 – இல் குறிப்பிடப்படுள்ளது.

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/309 - விக்கிமூலம்மறைவாக வந்து நிற்கும் தலைவனும் கேட்குமாறு தோழி இச்செய்தியைக் கூறுகிறாள். “ஒருநாள்,  மலர்ந்த முகத்துடன் விருந்தினனைப் போல் தலைவன் வீட்டுக்குள் வந்ததைக் நம் அன்னை கண்டாள். அதுமுதல்,  பகைவரின் போர்முனையில் இருக்கும் ஊர்மக்களைப் போல், அன்னை பல நாட்களாகத் தூங்காமல் இருக்கிறாள். நீராடுவதற்காகச் சென்ற, ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண்,  அந்த நீர் கொண்டுவந்த பச்சை மாங்காயைத் தின்ற  குற்றத்திற்காக, அவள் தந்தை எண்பத்தொரு ஆண்யானைகளோடு, அவளது எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்த பாவையையும் கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல், அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போல,  நம் அன்னை மீளமுடியாத நரகத்திற்குச் செல்வாளாக!”

வந்தவன் தலைவன் என்று அன்னைக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவள் தலைவிக்குக் காவலைப் பலப்படுத்துகிறாள். எனவே தோழி இவ்வாறு கூறுகிறாள்.

சங்க காலத்தில், ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள் இல்லை. தம்முடைய ஊருக்குப் புதிதாக வந்து, தங்க இடமில்லாமல் இருப்பவர்களுக்கு, அவ்வூரில் இருப்பவர்கள் அவர்களை விருந்தினராக உபசரிப்பது வழக்கம். அப்படித்தான் தலைவன் வழிப்போக்கன் போல் வந்தானாம்.

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை!-
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின், துஞ்சலோ இலளே. 

இப்பாடலில் உள்ள ‘வரையா  நிரையம் என்பது மீள முடியாத நரகம் என்பதைக் குறிக்கும்.

சங்க காலத்திலும் மக்கள் கூட்டுறவு முறையில் தொழில் செய்து வந்தனர். ஏழு ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு கருமாரப் பட்டறை வைத்துள்ளனர். அதில் உள்ள துருத்திக்கு ஓய்வே இருக்காது. ஏனெனில் அத்துருத்தி ஏழு ஊரைச் சார்ந்தவர்களுக்கும் பணிசெய்து கொண்டே இருக்கவேண்டும் அன்றோ? இடைவிடாது வேலை செய்வதால் அத்துருத்தி வருந்துவது போல என் நெஞ்சம் வருந்துகிறது என்று இப்பாடலில் தலைவி கூறுகிறாள். மாலைக்காலத்தைக்குறிக்க இப்பாடலில் வௌவால்கள் பறந்து செல்வதையும் இப்பாடல் காட்டுகிறது

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/163 - விக்கிமூலம் ”தோழி! வலிமையையுடைய அழகிய சிறகையும்,  மென்மையாகப் பறக்கும் இயல்பையும் உடைய வௌவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும் மாலைக்காலம் இது. மேலும் இது தனியாக இருப்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் காலமாகும்.  நாம் தனியாக இருக்கும்படி,   எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, எல்லையில்லாத் துன்பத்தை அடைந்து என் நெஞ்சு வருந்துகிறது” என்று தலைவி கூறுகிறாள். குறுந்தொகையின் 172-ஆம் பாடலான இதைப் பாடியவர் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்பவராவார்.

 

தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.

 ஆட்டனத்தி என்ற ஒரு நடனமாடும் இளைஞனைச் சோழமன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி காதலித்தாள். அவன் காவிரியாற்றுக் கரையில் நடனம் ஆடியபொழுது, காவிரியில் தோன்றிய வெள்ளப்பெருக்கு அவனைக் கவர்ந்து சென்றது.  ஆதிமந்தி அவனைப் பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், பின்னர் இருவரும் ஒன்று கூடியதாகவும் கூறுவர்.

இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை ”ஆட்டனத்தி – ஆதிமந்தி காவியம்” என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றை “சேர தாண்டவம் “ என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி – ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து ”மன்னாதி மன்னன்” என்ற திரைப்படம் 1960- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஆதிமந்தி தேடியதைக் குறுந்தொகையின் 31-ஆம் பாடல் கூறுகிறது. இதை எழுதியவர்  ஆதிமந்தியார் ஆவார்,  

பெருந்தோட் குறுமகள்- Dinamani“மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு,  ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த பெருமை பொருந்திய தலைவனும்  நாட்டியம் ஆடுபவன்தான்” என்று பல இடங்களிலும் தேடிய தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

இவ்வாறு குறுந்தொகை பண்டைய அரசர்கள் பற்றிய செய்திகள், சங்ககால வாழ்வு முறைகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதோடு சிறந்த உவமைச் சிறப்பும் கொண்டு விளங்குகிறது.

 

இடம் பொருள் இலக்கியம் – 3. வவேசு

 

கோயிலுக்குள் பிறந்த பதிகம்

Photo

” என்னம்மா ! பையனுக்கு அஞ்சு வயசாயிடுத்தா….ஒருநாள் கம்மியா இருந்தாலும் அடுத்த வருஷம்தான் சேர முடியும் புரிஞ்சுதா ?” என்பது அந்தக்கால ஆரம்பப் பள்ளியில் பெற்றோர்கள் செவிமடுக்கும் வாசகம். எல் கே ஜி , யு.கே.ஜி எல்லாம் இல்லாத காலத்தில், மூன்று வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளையும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத தாய் தந்தையர்க்கு இந்த அடிப்படை விதி பெரிய அழுத்தத்தையும் பிரச்சினையையும் தந்தது. எங்கள் அன்னையும் விதிவிலக்கல்ல.

ஆனால் இந்த விஷயத்தில் என் அன்னைக்கு உள்ள பிரச்சினை மற்றவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. காரணம் நானும் என் சகோதரனும் இரட்டையர்கள். தவழ ஆரம்பித்த பருவத்திலிருந்தே எங்கள் இருவரையும் சமாளிப்பது வீட்டில் மிகக் கடினமாக இருந்தது. கண் விழித்ததிலிருந்து உறங்கும் வரை எங்களுக்கு என்ன செய்தாலும் சீராட்டினாலும் , ஒரே மாதிரியாகச் செய்யவேண்டும். இல்லையென்றால் வீடே அதிரும்படி அழுகைதான். இருவருக்கும் ஒரே நேரத்தில்தான் பசி எடுக்கும்; தூக்கம்வரும், பாத்ரூம் போகவரும்; ஜுரம் வரும்; அழுகை வரும் ;கோபம் வரும், அத்தனையும் வரும். இன்று நினைத்தாலும் எங்கள் இருவரையும் வீட்டில் எப்படி சமாளித்தார்கள் என்ற பிரமிப்பு தீரவில்லை.

மேற்படி சிக்கல் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு பழக்கத்தால் சரி செய்யப்பட்டது. ! அது என்ன ? வயதை அதிகமாகச் சொல்லிப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்துவிடுவது ! இதன் விளைவாக நான் ஐந்து எனச் சொல்லப்பட்டு மூன்றரை வயதிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டு, ஒன்றரை வருடம் முன்னதாகவே பணி ஓய்வு பெற்றேன் என்பது என் வாழ்க்கைச் சரிதத்தில் வெளிப்படையாகச் சொல்லமுடியாத விஷயம்.

நிற்க. நான் சொல்லவந்த விஷயம் இதுவல்ல. மூன்றரை வயதே ஆன நான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த போது, பள்ளி செல்வது எனக்குக் கசப்பான விஷயமாக இருந்தது. நிறைய பயமும் இருந்தது. இதிலிருந்து எப்படி மீண்டேன் என்பதும் சுவையான விஷயம்.

என் வீட்டிலிருந்து தெருக்கோடிக்குச் சென்று அதாவது பத்து வீடுகள் தாண்டி வலதுபுறம் திரும்பி அதே தொலைவு சென்றால் எங்கள் பள்ளி வந்துவிடும். முதல் வகுப்புக்கு டெஸ்க் கிடையாது. நீண்ட பலகைகள் போட்டிருப்பார்கள். அதிலே அமரவேண்டும். எழுதுவதற்கு ஸ்லேட் இருப்பதால் வேறொன்றும் தேவையில்லை.

எங்களைப் போன்ற அழும் பிள்ளைகளுக்கு ஆதரவாக சில அன்னையர்கள் பள்ளி வளாகத்துள்ளேயே எங்கள் வகுப்பு எதிரிலேயே அமர்ந்துகொள்வார்கள். என் அன்னையாரும் இப்படி அமர்ந்திருப்பார்கள். சில நாட்கள், அன்னைக்கு பதிலாகப் பாட்டி வருவாள். முதல் மாதம் இப்படிக் கழிந்தது, பிறகு பள்ளிச் சூழலில் நாங்கள் ஒன்றிய பிறகு , யாரும் துணைக்கு வெளியே காவல் இருக்க வேண்டும் என்ற பரிதாபம் இல்லாமல் போயிற்று.

என்னைப் பொறுத்தவரை, இதன் முக்கியக் காரணம் என் அன்னை எனக்குக் காட்டிக் கொடுத்த “முப்பாத்தம்மன் கோயில்”

ஆம் ! எங்கள் ஆரம்பப் பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருந்த ஒரு சிறு கோயில். அன்னை பராசக்தி முப்பாத்தம்மனாக வீற்றிருப்பாள். கறுப்புவண்ணச் சிறு சிலை. பட்டுப் பாவாடை, காலில் கொலுசு; மிகப் பெரிய குங்குமப் பொட்டு.நான்கு கரங்கள். காலுக்குக் கீழே ஓர் அரக்கன் தலை கவிழ்ந்து கிடப்பான். தொடுத்த பூ மாலைகளும் சந்தண வாசனையும் மணக்கும். சன்னிதானத்தில் அன்னையின் அருகே இடப்புறம் ஒரு சரவிளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கும். வேறு எந்த சன்னதியும் கிடையாது. பிறகு அது நிறைய சன்னதிகளுடன் பெரிய கோயிலாகிவிட்டது.

அன்று எனக்கு அந்தக் கோயிலே ஒரு பெரிய ஆதரவாக மாறிவிட்டது. முப்பாத்தம்மன் எனக்கு இன்னோர் அம்மாவாகிவிட்டாள்; அவளே என் விளையாட்டுத் தோழி; அவளே என் பாதுகாப்பு; அவளே என் பயம் தீர்த்த நாயகி. அவளே என் ஆராதனை தெய்வம். தினம் பள்ளிக்கு வந்து வகுப்புக்குச் செல்லுமுன் அவளை தரிசனம் செய்வேன். எனக்கு மட்டுமல்ல; எங்கள் பலருக்கும் அவளே துணை. இடைவேளைகளில் அவள் பிராகாரத்தில் நாங்கள் நண்பர்களோடு அமர்ந்திருப்போம்.

மனப்பாடப்பகுதி மறந்துவிட்டதா ? வீட்டுப்பாடம் எழுதிவரவில்லையா ? நெருங்கிய நண்பனிடம் “டிபன் பாக்ஸ்” காரணமாகச் சண்டையா ? கபடி விளையாட்டில் கீழே விழுந்து காலிலும் கையிலும் காயங்களா ? எல்லாச் சிக்கல்களுக்கும் , பிரச்சனைகளுக்கும் அவளே துணை. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அவள் பலமுறை என்னைக் காப்பாற்றி இருக்கிறாள். என் நண்பர்களையும் காப்பாறியிருக்கிறாள். ஆம் ! அவளே எங்கள் காவல் தெய்வம்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புவரை உள்ள அந்த ஆரம்பப் பள்ளியின் நூற்றைம்பது குழந்தைகளுக்கும் அவளே புகலிடமாகிவிட்டாள்.

தேர்வு சமயங்களில் அவள் சன்னதியில் கூட்டம் அதிகமாகிவிடும். நாங்கள் எழுதிய விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்கள்தான் மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள் என்பதை அன்று நாங்கள் நம்பியதே இல்லை. எல்லாம் அவள் செயல். அவளை வேண்டிக் கொண்டால் பாஸ்; அவளை வேண்டிக்கொண்டால் ஐம்பத்துக்கு மேல்; அவளை வேண்டிக் கொண்டால் முதல் ரேங்க். அவரவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேண்டிக் கொள்வார். எனவே அம்மனுக்கும் பிரச்சினை இல்லை.

எங்கள் வகுப்பில் இருந்த மணி , பிரபு இருவரும் படிப்பில் மகாசூரர்கள்; இருவரும் முதலிடம் பெற வேண்டுதல் செய்திருப்பார்கள். அம்மன் சமாளித்துவிடுவாள். மணி கணக்கிலும் , பிரபு ஆங்கிலத்திலும் முதல் மதிப்பெண் பெற்றுவிடுவார்கள்.

இன்னொரு நண்பன் வேலு. அவன் வீட்டில் படித்தவர் யாரும் கிடையாது. அவன் தந்தை மெகானிக் வேலை பார்த்துவந்தார். முக்கால்வாசி நேரம் அவன் “பார்டர் லைன்” பாஸ் பெறுவான். இதற்கு முக்கிய காரணம் அம்மன் அருள் தான் என்று நாங்கள் அனைவருமே நம்பினோம்.

அம்மன் சிலையைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கட்டப்பட்ட கோயில் சிறு கோபுரம். வெளிப்புறப் பக்கச் சுவர்களிலும் பின்புறச் சுவரிலும் வெள்ளை அடித்திருப்பார்கள். குறிப்பாகப் பின்புறச் சுவரில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கறுப்பு மையிலோ, பேனா பென்சில்களினாலோ எழுதி வைப்பார்கள். போகப் போக நீண்ட வாக்கியங்கள் எழுத இடம் இல்லாததனால் பள்ளிச் சிறுவர் சிறுமியர் தங்கள் வகுப்பு தேர்வு எண் இரண்டை மட்டுமே எழுதிவிட்டுச் செல்ல ஆரம்பித்தனர். ஆமாம் ! அன்னைக்குத் தெரியாதா ஏன் நம்பரை எழுதிவிட்டுச் செல்கிறார்கள் என்று !

முப்பாத்தம்மன் கோயிலுக்கு கன்னியப்ப நாய்க்கர் என்பவர் உரிமையாளர். இன்று அவருடைய வாரிசுகள் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். கன்னியப்பன் சின்னச் சின்ன வேலைகளை மிக அருமையாகச் செய்பவர். சிறிய உபகரணங்களை வைத்துக் கொண்டு பம்பரங்கள் செய்து விற்பார்; நவராத்திரி நேரத்தில் மண்பொம்மைகள் செய்வார். தீபாவளி சீஸனில் பட்டாசுகள் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் அம்மனுக்குத் திருவிழா நடக்கும். கோயிலின் அருகே உள்ள எங்கள் பள்ளி மைதானத்தில் கலைவிழாக்கள் நடக்கும்.

ஒரு வாரம் நடக்கும் விழாவின் கடைசி நாளன்று அம்மன் வீதி ஊர்வலம் வருவாள். அம்மன் ஊர்வலம் கிளம்பும் போது பெரிதாக வெடி போடுவார்கள். அம்மன் அருமையாகச் சிம்ம வாகனத்தில் அமர்ந்து பலர் இழுத்துவரும் அலங்கார வண்டியில் இருப்பாள்; வண்டிக்கு முன்னால் ஆண் பெண் உருவங்களில் பெரிய திருஷ்டி பொம்மைகள் ஆடிவரும்; அதனைத் தொடர்ந்து கரகாட்டம், அதன் பின் நாதஸ்வரம்.

அம்மன் ஊர்வலம் கோயிலின் கிழக்கு முகமாக ஆரம்பித்து உஸ்மான் ரோடு, துரைசாமி ரோடு என்று திரும்பி பிரதட்சணமாக சுற்றிக் கடைசியில் எங்கள் தெரு வழியாகக் கோயிலுக்குத் திரும்பும். இரவு பத்து மணிக்கு ஆரம்பிக்கும் ஊர்வலம் வீடு வீடாக நின்று எங்கள் தெரு வந்து சேர இரவு பண்ணிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும்.

சிறுவர்களாக இருக்கையில் இரவு சாப்பிட்ட பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கப் போய்விடுவோம். அம்மன் திருவிழா ஊர்வலதினத்தன்று இரவு பன்னிரண்டுவரை தூக்கம் வராது. ” தூங்கிவிட்டால் எழுப்பிவிடு “ என்று அம்மாவிடம் சொல்லிவைத்திருப்போம். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது. ஊர்வலம் எங்கள் இல்லத்தைத் தாண்ட அரைமணி நேரம் முன்னேயே வெடிச் சத்தம் காதைப் பிளக்கும், பட்டாசு மத்தாப்பு வகைகளின் ஒளி இரவைப் பட்டபகலாக்கிப் பரவசம் அளிக்கும்.

நாதஸ்வர இசை கேட்கும்போது ஊர்வலம் எங்கள் வீட்டின் முன் நிற்கிறது என்று புரிந்துகொண்டு வெளியே ஓடிவருவோம். இதற்குள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தாம்பூலத் தேங்காய் கற்பூரத் தட்டுடன் என் அப்பா அம்மா அண்ணா அக்கா எல்லோரும் இருப்பார்கள். வண்டியின் பலகையில் அம்மன் உருவத்திற்கு அருகில் நின்றுகொண்டு குருக்கள் அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் தட்டைத் திருப்பிக் கொடுப்பார். சில நேரங்களில் கிட்டே நின்றால் குருக்கள் எங்கள் நெற்றி நிறை திருநீற்றையும் குங்குமத்தையும் வண்டி அளவு பூசிவிட்டுவிடுவார். தூக்கக்கலக்கத்தில் படுக்கையில் விழுந்து மறுநாள் எழுந்து பார்த்தால் தலையணை எல்லாம் விபூதி மணக்கும்.

நாங்கள் மாம்பலம் தெருவில் இருந்தவரை, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள், நாங்கள் தினம் முப்பாத்தம்மன் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். என் வாழ்வின் அழியாத தடங்களை இட்டு என்னை ஆளாக்கியது அந்தக் கோயில்.

அம்மன் கோவில் ஆராதனைகள். ஆடித் திருவிழாக்கள், கச்சேரிகள் ,இரவில் வெடிச் சத்தம் கேட்க அம்மன் கம்பீரமாக வீதி உலா வருதல், பொங்கல் படையல், பாம்புப் புற்றுக்குப் பால், என்று அம்மன் கோவிலை நினைத்தாலே பல பசுமையான நினைவுகள்.

எங்கள் குடும்பத்தின் வாழ்வுக்கும் வளத்திற்கும் நலத்திற்கும் அவளே துணை. 1970-களில் சின்னஞ்சிறியதாக  இருந்த அன்றைய  கோவில் பிராகாரத்தைச் சுற்றிவரும் போது, ஒருநாள் திடீரென மனத்துக்குள் ஓர் ஆரவாரம். ஏற்கனவே கவிதைகள் எழுதிவந்த எனக்கு, அம்மனைப் பற்றியும் அவள் அழகு அருள்  பற்றியும் பாடவேண்டுமென்று உள்ளே ஓர் உத்வேகம். பிராகாரத்தைச் சுற்றி வந்து நின்ற போது ஒரு பாடல் வந்தது. அடுத்த பாடல் அடுத்தநாள் பிறந்தது. இவ்வாறு ஒவ்வொருநாளும் ஒரு பாடலாகப் பத்து நாட்களில் “முப்பாத்தம்மன்  பதிகம்” பிறந்தது. 1975 -ல்  அதனை  ஒரு சிறு நூலாக  சைதை பாரதி கலைக் கழகம் வெளியிட்டது.

இந்த பக்திப் பனுவல்தான் எனது முதல் இலக்கியப்படைப்பு.

 

 

 

 

 

உலக இதிகாசங்கள்- எஸ் எஸ்

Are Zeus and Hērā a dysfunctional couple? - Classical Inquiriesஜீயஸ் கடவுளைத் தன் மோகனாஸ்திரத்தில் மயக்கிய ஹீரா அவரை இன்னும் கொஞ்ச காலம் அதே மயக்க நிலையில் வைப்பதற்காக உறக்கக் கடவுளை வேண்டிக்கொண்டாள் . முதலில் மறுத்த அவன் கடைசியில் தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள உதவுதாக வாக்குக் கொடுத்ததும் சரி என்று ஒப்புக்கொண்டான்.

ஹீராவுடன் காதல் சுகத்தில் திளைத்த ஜீயஸ் பின்னர் உறக்கத்தின் மயக்கத்தில் துவண்டு விழுந்தார்.

தன்னைச் சுதாரித்துக்கொண்ட ஹீரா சந்தப்பத்தை முழுதும்  பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து பொசைடன் என்கிற கடவுளை அனுப்பி கிரேக்கர்களின் தைரியத்தை அதிகப்படுத்தி , தீவிரமாகப் போரிடச் செய்ய உத்தரவிட்டாள்.

ஹெக்டரின் அதி தீவிரத் தாக்குதலால் நிலை குலைந்து போன கிரேக்கர் படைக்கு பொசைடன் வந்தது மிகப் பெரிய தைரியத்தைக் கொடுத்தது. அகெம்னன், டயமிடிஸ், ஓடிசியஸ், அஜாக்ஸ் ஆகிய முக்கிய தலைவர்களை பொசைடன் அழைத்து டிராய் நாட்டை வெல்ல நல்ல தருணம் என்று உற்சாகப்படுத்த அனைவரும் வெறியுடன் திரண்டனர்.

பொசைடன் தனக்கு எதிரணியில் தலைமையேற்று வருவதைப் பார்த்து ஹெக்டர் ஒரு கணம் திகைத்தாலும் தனக்கு ஜீயஸ் கடவுளரின் முழு ஆதரவு இருக்கிறது என்பதை உறுதியாக நம்பிய அவன் தன் வீரர்களை முடுக்கிப் போரின் முன்னணிக்கு வரச் செய்தான்.

Ajax vs Hector : r/totalwar

அந்த சமயம் மாவீரன் அஜாக்ஸ் தன் திறமையெல்லாம் காட்டினான். போகும் இடமெல்லாம் டிராஜன் படையினரை நிர்மூலம் செய்து ஹெக்டரை நோக்கி முன்னேறினான். அனைத்துத் தளபதிகளும் பொசைடன் உதவியால் ஏக காலத்தில் தாக்கிட  டிராஜன் படை அதைச் சமாளிக்க முடியாமல் தவித்தது. ஹெக்டரை நெருங்கிய அஜாக்ஸ் நேரடியாக அவனைத் தாக்கும் பணியில் ஈடுபட்டான். ஹெக்டரின் வீரமும் ஆவேசமும் அந்தக் கணத்தில் ஏனோ அஜாக்ஸ் முன்னால் தோற்றுக் கொண்டிருந்தன. பாறைகளை எறிந்து ஹெக்டரை நகர விடாமல் செய்த அஜாக்ஸ் தனது திறமை வாய்ந்த ஈட்டியால் அவனைக் குத்தி படுகாயமடையச் செய்தான். கீழே விழுந்த ஹெக்டரின் கவசத்தைக் கழற்றி அவன் உடலைச் சின்னாபின்னமாக்க அஜாக்ஸ் அவனை நெருங்கினான். ஆனால் டிராய் நாட்டைக் காக்கும் கடவுளர்கள் அஜாக்ஸ் மற்ற கிரேக்க வீரர்கள் அவனை நெருங்காத வண்ணம் ஒரு வளையமாக நின்று ஒரு புகைப் படலத்தை ஏற்படுத்தினார்கள்.அந்தப் புகையைச் சாதகமாகிக் கொண்டு டிராய்நாட்டு வீரர்கள் ஹெக்டரைத் தேரில் ஏற்றி போர்க்களத்திலிருந்து பாசறைக்கு அப்புறப்படுத்தினார்கள்.

ஹெக்டர் மரண காயத்துடன் பதுங்கிவிட்டான் என்ற செய்தி பரவியதும் கிரேக்கப் படைக்கு உற்சாகம் தலைக்கு மேல் ஏறியது. முன்னேறி வந்த டிராஜன்களைக் கொன்று குவித்து அவர்களை விரட்ட ஆரம்பித்தனர். ஹெக்டருக்கு ஆதரவான  கடவுளர்கள் டிராஜன்களைத் திரட்டி கிரேக்கரைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் இரு படைகளுக்கிடையே உக்கிரமான போர் நிகழ்ந்தது.  இருபக்கத்திலும் முக்கியமான வீரர்கள் பலர் மாண்டனர். அன்றைய போர் நாயகனான அஜாக்ஸ் டிராஜன்களுக்கு சிம்ம சொப்பனமாகக் காட்சியளித்தான். டிராய் நாட்டு தளபதிகளைக் கொன்று அவர்களின் தலையைக் கொய்து பந்தாடினான். இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால் அன்றே அந்தக் கணமே அஜாக்ஸின் திறமையால் டிராய் நாடு கிரேக்கருக்கு மண்டியிட்டு அடிமைப்பட்டிருக்கும்.

ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.

உறக்க மயக்கத்தில் இருந்த ஜீயஸ் எதிர்பாராதவிதமாகப் பாதியில் கண் விழித்து நோக்க எல்லாம் தலை கீழாக மாறத் தொடங்கியது. தன் எண்ணத்திற்கு மாறாகக் கிரேக்கர் படை வெற்றிபெறும் நிலையில் இருப்பதைப் பார்த்து ஜீயஸ் திடுக்கிட்டார். ஹீராவைப் பார்த்த ஒரே பார்வையில் அவள் செய்த துரோகத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.அவளை அசையவிடாமல் செய்துவிட்டு போர்க்களத்தை  உற்று நோக்கினார்.  பொசைடன்தான் கிரேக்கர்களை வெற்றிப் பாதையில் இட்டுச்  செல்கிறான் என்பதை அறிந்ததும் அவனை  அங்கிருந்து புறப்படும்படி உத்தரவிட்டார்.ஹெக்டரின் மயக்கத்தை முறித்து அவனைப் போரின் முன்னணிக்கு வர அவரே நேரடி      முயற்சிகளும்  எடுத்தார். டிராஜன்களுக்கு புதிய உத்வேகத்துடன் போரிட ஊக்கத்தையும் அளித்தார். விளைவு கிரேக்கப் படைக்கு மரண அடிகளாக விழத் தொடங்கியது.

புதியதாக சாவாமருந்து குடித்ததுபோல எழுந்த ஹெக்டர்  இனித் தாமதிக்கக் கூடாது என்று புயல் வேகத்தில் புறப்பட்டான். ஜீயஸ் கடவுள் உத்தரவின் பேரில் அப்பல்லோ கடவுளும்  ஹெக்டருக்குத் துணையாக வந்தான். இருவரும் சேர்ந்து முன்னேறிவரும் கிரேக்கப் படையைத் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் கிரேக்கர்களை அவர்கள் அரணுக்குள் ஓடவும் வைத்தனர்.தாக்குதல் நடத்திய கிரேக்கப்படை தற்காப்பு வேலையில் ஈடுபடவேண்டியதாயிற்று. அஜாக்ஸ் மற்றும் தளபதிகள் டிராஜன்படை தங்கள் கப்பல்களுக்கு  வராமலிருக்க அனைத்துப் படைவீரர்களையும்  கப்பல்களின் முனைப்பில் நிறுத்திக் காவந்து செய்தார்கள்.

ஏனென்றால் அந்தச்  சமயம் அப்பல்லோ அவர்களின் தற்காப்பு அரண்களையும் அகழிகளையும் அழித்து நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தான். அரண்களைக் காப்பாற்ற நின்றிருந்த அஜாக்ஸ் மற்றும் அனைவரும் அப்பல்லோவின் சூறாவளித்  தாக்குதலால் கப்பலுக்குள் பின் வாங்க வேண்டி வந்தது. கிரேக்கப் படையினர் அனைவரும் கப்பலின் பின் புறத்திற்கு ஓடத் துவங்கினர்.

தான் எதிர்பார்த்ததைப் போல் டிராஜன்கள் கை ஓங்குவதைப் பார்த்த ஜீயஸ்  முகத்தில் குரூரப் புன்னகை மலர்ந்தது. ஹெக்டருக்கு  உற்சாகம் ஏற்படும்படி ஆசி கூறி அவனை இன்னும் தீவிரமாகத் தாக்கும்படியும் ஆணையிட்டார். தனக்குச் சாதகமான நிலை இருப்பதைக் கண்ட ஹெக்டர் பேய்ச் சிரிப்புடன் தன் படை வீரர்களுடன் கிரேக்கர் அரணுக்குள் நுழைந்தான்.

ஹெக்டர் வருவதைப் பார்த்த அஜாக்ஸும் தன் வீரர்களுடன்  முன்னணிக்கு வந்தான். இரு திறத்தினருக்கும் கடும் போர் நடந்தது. கப்பல் வரை வந்த டிராஜன் வீரர்களை கப்பல்களுக்குள் ஊடுருவிச் செல்ல இயலாத அளவிற்கு அஜாக்ஸ் மிகத் திறமையாகப் போராடி நிலைமையைச்  சமாளித்தான். ஆனால் டிராஜன் வீரர்கள் மேலும் மேலும் வந்துகொண்டே இருந்தனர். ஹெக்டருடன் நேருக்கு நேர் மோதுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அஜாக்ஸ் அவனை நோக்கி வந்தான். “ எதிரிகள் நம் கப்பலுக்கு வர முடியாத அளவிற்கு அவர்களைத் தாக்குங்கள்! இல்லையேல் நாம் அனைவரும் அழிக்கப்படுவோம்’ என்று ஆணையிட்டுக் கூறினான் அஜாக்ஸ்.  

ஏற்கனவே அஜாக்ஸால் தாக்கப்பட்டு மரண காயம் அடைந்ததை  எண்ணி அதனால் ஏற்பட்ட வெஞ்சினத்தால்  அவன் கொடூரமாக தாக்கத் தொடங்கினான். எல்லாவற்றையும் அழிக்கக் காத்திருக்கும் மரண தேவதை போலக் காட்சியளித்தான் ஹெக்டர். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே  கிரேக்கப்படை கலங்கியது.

போரின் உக்கிரம் அதிகமாகிக்கொண்டே இருப்பதைப் பார்த்து குரூரத் திருப்தியுடன் பார்த்துக்  கொண்டிருந்தார் ஜீயஸ். அகிலிஸின்  அன்னையான தன் முன்னாள் காதலிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நாம் தற்சமயம் டிராஜன்கள் முன்னேறும்படி செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும்தான் இந்த விளையாட்டு இருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.   ”இதோ அந்த எல்லைக்கோடு வரப் போகிறது. டிராஜன்கள் கிரேக்கர்களின் கப்பல்களுக்குத் தீ வைக்கும்வரைதான் அவர்கள் ஆட்டம் இருக்கும். அதன்பின் அக்கிலிஸ் அரங்கத்தில் நுழைவான் ! டிராஜன்கள் இனித் தலை தூக்கமுடியாத அளவிற்குத் தோல்வி அடைவார்கள்’. என்ற தனது திட்டத்தை மனதிலேயே நடத்திப் பார்த்து இறுமாப்புக் களிப்பில் மூழ்கியிருந்தார் ஜீயஸ் கடவுள்.

டிராஜன் வீரர்கள் கிரேக்கக் கப்பல் வரைக்கும் வந்ததைக் கண்ட அக்கிலீஸின்  நண்பன் பெட்ரோகுலஸ் இனியும் தாமதிக்காமல் அக்கிலீஸிடம் போருக்கு வரும்படி மன்றாட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அக்கிலீஸ் இருக்கும் கப்பலுக்கு விரைந்தான். 

பெட்ரோகுலஸ் வருவதற்கு முன்னரே விஷயத்தைப் புரிந்துகொண்ட அக்கிலிஸ்  அவன் சொல்வதை முழுதும் கேட்டுவிட்டு உரைத்தான் “ நண்பா ! இனியும் நான் கையைக் கட்டிக்கொண்டு  உட்கார்ந்திருந்தால் உலகம் என்னை ஏசும் . கோழை என்று தூற்றும். ! பெருமதிப்பிற்குரிய நெஸ்டர் அவர்கள்  கூறியதுபோல நீ என் கவச உடை அணிந்து கொண்டு போரிட முன் செல்! நான் மற்ற படை வீரர்களுடன் அணிவகுத்து வருகிறேன். அதுமட்டுமல்லாமல் உன் வெற்றிக்காக ஜீயஸ் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு உடனே பின்னால் வருகிறேன்!” என்று கூறினான்.

பெட்ரோகுலஸ் மனமகிழ்ந்து அக்கிலிஸின் போர்க் கவச உடை அணிந்து கப்பல்களைத் தாக்க வரும் இணைந்த படையை அழித்து சின்ன பின்னப் படுத்த புயலாகச் சென்றான். அவனது போர் வேகம் டிராஜன்களை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தியது. டிராய் நாட்டு பல உப தளபதிகளைக்  கொன்று குவித்தான்.  ஹெக்டர் எங்கிருக்கிறான் என்று தேடி அவனை நோக்கிச் சென்றான்.  அவன் வரும் வேகத்தைப் பார்த்து அவனை எதிர் கொண்ட ஹெக்டருக்கு  பெட்ரோகுலஸை சமாளிக்க முடியாதோ என்ற பயப்பிராந்தி கண்களில் தெரிந்தது. அதனால் பெட்ரோகுலஸ் உடன் போரிட தனக்குத் துணையாக வந்த ஜீயஸ் கடவுளின் மகனை ஏவினான். ஆனால் போர் வெறியின் உச்சக் கட்டத்தில் இருந்த பெட்ரோகுலஸ் ஜீயசின் மகனைத் தான் வாளால் வெட்டி வீழ்த்தினான்.

தன் மகன் பலியாவதை ஜீயஸ் கடவுள் விரும்பவில்லை . ஆனால் அவரது பிரியமான  மகன் அன்று இறக்கவேண்டும்  என்பது விதி. அந்த விதியை மாற்றி அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த ஜீயஸ்  விரும்பினது உண்மை . ஆனால் அவரைப் பின்பற்றி மற்ற கடவுளர்களும் தங்கள் மகன்களைக் காப்பாற்ற முயலுவார்களே என்ற எண்ணத்தினால் தன்  அன்பு மகன் சாவதைக் கண்ணீர் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜீயஸ் கடவுள்.  தன் மகன் சாவதற்குக் காரணமான பெட்ரோகுலஸை  அவமானப்படுத்தி அழிக்கும்படி அப்பல்லோவிற்கு உத்தரவிட்டார்.

Patroclus death hi-res stock photography and images - Alamy

ஜீயஸ் மகனைக் கொன்று  ஹெக்டரையும் கொல்ல அவனை  நோக்கிச் சென்றான் பெட்ரோகுலஸ். ஹெக்டருக்கும் அவனுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. ஹெக்டரின் கை சளைக்கத் தொடங்கியது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அப்போலோ பின்னாலிருந்து அவன் கவச உடையை  அவிழ்த்தான். அந்த ஒரு கணம் போதுமாயிருந்தது ஹெக்டருக்கு. தன் ஈட்டியால் பெட்ரோகுலஸைக்  குத்தினான். அப்போலோவும் அவனது உடைகளைக் களைந்து அவனை நிர்வாணப்படுத்தினான். அதன் பின் நடந்தது கொடூரம். அத்தனை டிரோஜன் தலைவர்களும் பெட்ரோகுலஸைக குத்தி அவனைச் சின்ன பின்னமாக்கினர்.கடைசியாக அவன் தலையைக் கொய்யவந்த ஹெக்டரிடம்” என உயிர் நண்பன் அக்கிலிஸ் என்னைப் போலவே உன்னையும் கொன்று பழி தீர்ப்பான்” என்று வீரமொழி கூறி உயிர் துறந்தான் பெட்ரோகுலஸ்!

அதே சமயம் கிரேக்க போர்க் கப்பல் ஒன்று டிரோஜன் வீரர்களால் எரிக்கப்பட்டு அதன் புகை அக்கிலிஸ் முகத்தில் படிந்தது.

இலியட் போரில் புதிய அத்தியாயம் துவங்கியது..     

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

ராஜேந்திரன்-சோழப்புலி

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை ஏன்? | Cambodia to unveil Rajendra  Chola statue - Vikatan

ராஜேந்திரன் பகைகளை அழித்துப் புகழ்க்கொடி நாட்டிய பின், கோவில்கட்டி, புதுத்தலைநகரை நிறுவியதனைத்தையும் பார்த்தோம்.

அவ்வளவு போர்களைச் செய்த ராஜேந்திரனின் அந்தப்புரமும் நிரம்பி வழிந்தது. அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறையில் இருந்தது. பழையாறை அக்காலத்தில் ‘முடிகொண்ட சோழம்’ எனப் பெயர் பெற்று இருந்தது.

இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் பஞ்சவன் மாதேவியார், திருபுவன மாதேவியார் எனப்பட்ட வானவன் மாதேவியார். முக்கோக்கிழான் அடிகள். வீர மாதேவியார் என்போர் குறிப்பிடத் தக்கவர்.

வீரமாதேவியார் இராசேந்திரனுடன் உடன்கட்டை ஏறினார். இராசேந்திரன் முதல் மனைவியான பஞ்சவன் மாதேவிக்கு அங்குப் பள்ளிப்படை அமைக்கப்பட்டது.

பிள்ளைகள் பலர் இருந்தனர். அவர் நமக்குத் தெரிந்தவரை இராசாதிராசன், இராசேந்திரதேவன், வீர ராசேந்திரன். இம் மூவருள் சடாவர்மன் சுந்தர சோழன் ஒருவனா அல்லது வேறானவனா என்பது விளங்கவில்லை.

பிரானார் எனப்படும் அருமொழி நங்கை ஒரு பெண்;அம்மங்கா தேவி ஒரு பெண்.இராசராசன் மகளான குந்தவ்வைக்கும் சாளுக்கிய விமலாதித்தற்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பவன் இராசேந்திரன் மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே பிற்காலப் பேரரசனான முதற் குலோத்துங்கன்.

இராசேந்திரன் தாய் வானவன் மாதேவி,. இராசேந்திரன் தாய்க்கு ஒரு படிமம் செய்தான்; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினான்.

அரசன் ஆசிரியர் : இராசராசன் காலத்தில் பெரிய கோவிலில் சர்வசிவ பண்டிதர் இராசராசேந்திரனின்  பெரு மதிப்புக்கு உரியவராக இருந்தார்.

முன்னர் இராசராசன் சீனத்துக்குத் தூதுக் குழுவைப் பரிசிற் பொருள்களோடு அனுப்பினாற் போலவே, இராசேந்திரன் கி.பி. 1033-இல் தூதுக் குழு ஒன்றைச் சீன அரசனிடம் அனுப்பினான். சீன அரசன் அவர்களை வரவேற்று வேண்டியன செய்தான்.. இந்த உறவால் சோழநாடு சீனத்துடன் கடல் வாணிகம் சிறக்க நடத்திவந்தது.

இராசராசன் தமக்கையான குந்தவ்வையார் கணவனான வல்லவரையர் வந்தியத்தேவன் வடஆர்க்காடு கோட்டத்தில் பிரம்ம தேசத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவனுடைய வேறொரு மனைவி குந்தள தேவி என்பவள்; மற்றொருத்தி குந்தா தேவியார் என்பவள். குந்தவ்வைப் பிராட்டியார் பழையாறையில் இருந்த அரண்மனையிலேயே இருந்தவர். வல்லவரையன் சாமந்தர் தலைவன் (பெரிய சேனாதிபதி)! இவன் பெயர்கொண்ட நாடு சேலம்வரை பரவி இருந்தது.

அரசனிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன; தேர்ப்படை இல்லை. தேர் இருந்ததாக ஒரு கல்வெட்டிலும் குறிப்பில்லை. எந்த வீரனும் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி வந்தான் என்னும் குறிப்பே இல்லை. அரசராயினார் யானை அல்லது குதிரை மீது இருந்து போர் செய்தனர் என்பதே காணப்படுவது.

ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தின் 9 அட்டகாச புகைப்படங்கள் |  gangaikonda cholapuram picturesராஜேந்திர சோழன் கைப்பற்றியவைகள்: ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி வழி மூலம் தான் வெற்றி கொண்டதும், வெற்றிகொண்ட இடங்களில் பெற்றுவந்த பொருட்களை பற்றியும் நம்மால் அறிய முடிகிறது. அப்படி அவன் கொண்டுவந்த வகைகள் மாற்றார்  அரசர்களுடைய முடிகள், அவர்களுடைய தேவியர்களின் முடிகள், மணிமுடிகள், அடிமைப்பெண்கள்,பண்டாரம் என்னும் கருவூலச் செல்வங்கள், குதிரைகள், யானைகள், மலை போன்ற நவ நிதிகள், மாற்றரசர் குலத்து செல்வம் போன்ற பலவும் கைப்பற்றினான். அதுமட்டுமல்லாது கடாரத்து அரசனை வென்று அவன் அரண்மனை வாசலில் இருந்த அழகிய தோரண மணிகள் கோர்த்த புதவம் ( வாயில்) சிறிய கதவு, பெரிய மணிகள் கோர்த்த கதவு என்று பலவும் இன்று நமக்கு காணக் கிடைக்கவில்லை.

ஆனால் நுளம்ப நாடு, போல நாடு, சாளுக்கிய நாடு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவந்த தூண்கள், சிற்பங்கள் அவனுடைய செப்பேடு முத்திரையில் உள்ள தோரணம் புதவம் போன்றவைகள் இன்று நமக்கு காணக் கிடைக்கிறது. நுளம்ப நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தூண்கள், திருவையாற்றில் இவனது மனைவி புதுப்பித்த தென்கைலாய கோயில் திருச்சுற்று மாளிகையில், 40க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்ட பகுதியாக சுற்று மாளிகை தாங்கிய வண்ணம் உள்ளது. இவை கருப்பு நிற மாக்கல்லால் ஆன நுணுக்கமான சிற்பங்களை உடைய அழகு தூண்கள் ஆகும்.

  • பால நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோயில் சந்நிதியின் முன்பாக ஒரு சிறு சன்னதியில் வைத்துள்ளனர்.
  • சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நவக்கிரக பீடம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மகா மண்டபம் முன் வடபுற மாளிகையில் சிறப்பு வழிபாடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட துர்க்கை சிற்பம், கங்கைகொண்டசோழபுரம் வீரா ரெட்டி தெருவில் அமைந்தது.
  • கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பைரவர் பைரவி சிற்பங்கள். கங்கை கொண்ட சோழபுரம் ஒட்டிய மெய்க்காவல் புதூரில் அச்சம் தரும் தோற்றத்தில் உயரமாக வைக்கப்பட்டுள்ளது.

சோழப்புலியான ராஜேந்திரன் பல மனைவிகளையும், பல மகன்களையும் பெற்று, பெரு வாழ்வு வாழ்ந்தான்.

அவனைவிட்டு நாம் சரித்திரப்பாதையில் நகருகிறோம். நமக்கு கூடிய விரைவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

சந்ததிச் சங்கிலிக்கு ஆபத்து.

அதை விரைவில் காண்போம்.

 

சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தேர்வு – பிப்ரவரி 2023 – அழகியசிங்கர்

 

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

 

பிப்ரவரி மாதத்தில் நான் தேர்ந்தெடுத்த கதை காலச்சுவடு என்ற பத்திரிகையில் வெளிவந்த பாட்டு வெயில் என்ற சாந்தன் கதை.- அழகிய சிங்கர்

நான் முதலில் சிறுபத்திரிகைகளிலிருந்து பிப்ரவரி மாதக் கதையைத் தேடத் தொடங்கினேன்.  நான் எடுத்து ஒரு பத்திரிகையிலிருந்து  கதையைப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குத் திருப்தி இல்லை.   சற்று ஏமாற்றமாக இருந்தது.

       பொதுவாக சில பத்திரிகைகளிலிருந்து நான் கதைகள் எடுக்க  வில்லை.  அவற்றிலிருந்து வெளிவரும் கதைகளை எப்படி வகைமைப் படுத்துவது? 

       பொழுதுபோக்கு அம்சத்தைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் அப் பத்திரிகைகள் கதைகள் என்று வெளியிடுவதை எப்படி ஏற்றுக் கொள்வது ?

       பிப்ரவரி மாதத்தில் நான் தேர்ந்தெடுத்த கதை காலச்சுவடு என்ற பத்திரிகையில் வெளிவந்த பாட்டு வெயில் என்ற சாந்தன் கதை.

       சலூன் கடையில் காத்திருப்பதைப்பற்றி தான் இந்தக் கதை. ஆனால் நினைவோடை (Stream of Consciousness) உத்தியில் எழுதப்பட்ட சிறப்பான கதையாக நான் கருதுகிறேன்.

       இலங்கையில் சாந்தன் என்ற எழுத்தாளர் சிறப்பாகக் கதை எழுதக் கூடியவர்.  தலை முடிவெட்ட ஒரு வயதானவர் அவருக்குத் தெரிந்த சலூன் கடைக்கு வருகிறார்.  விஜய் என்ற தலைமுடி வெட்டுபவனுக்காகக் காத்திருக்கிறார். ஏன் இன்னும் சிலபேரும் காத்திருக்கிறார்கள். 

       அங்கு இருந்துகொண்டு அவருடைய எண்ண அலைகள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. 

       அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையைப் பற்றி விவரம் வருகிறது.  அங்கு இப்படி விவரிக்கிறார்.  போர்க்காலத்தின் ஊரடங்கு, இடப்பெயர்வு இவற்றின் பிறகு இப்போதான் இப்படி அமைதி சேர்ந்த வெறுமையைக் காண முடிகிறது.

       சலூன் கடையில் காத்துக்கொண்டிருக்கும்போது தற்கால நினைவுகளும், பழைய நினைவுகளும் சேர்ந்து வருகின்றன. காத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மஞ்சள் நாயொன்று வருகிறது.  வாட்டசாட்டமாய் இருக்கும் அந்த நாயைப் பற்றிப் பயப்படுகிறார்.

       இறந்த காலம் நிகழ்காலம் என்று நினைவுகளின் தொடுப்பு இக் கதை.  சிறப்பாக அதை விவரிக்கிறார். ஒரு பெண்ணைக் கடை வாசலில் சந்திக்கிறார். அந்தப் பெண் ஏற்கனவே அறிமுகமானவள் போல் தெரிகிறார்.  இவருக்கு ஞாபகமில்லை. அவளுக்கு 60வயது இருக்கும்.  பேச்சு வாக்கில் அவள் சொல்கிறாள்.  அப்ப நீங்கள் நலல வடிவு என்று.  

       இவருக்கு ஒரு வாளி ஐஸ் தண்ணீரை யாரோ இருந்தாற்போல் தன் முகத்தில் வீசியடித்தது போலிருந்தது.

       துவைத்த துணியொன்றால் போர்த்தபடி சலூன்காரர்  விஜய் கேட்டார்.” ஐயா, தாடியும் எடுக்கிறதோ” என்று “இல்லை அது இருக்கட்டும்” என்கிறார் இவர்.  

       இந்தக் கதை உள் மன வெளியை வெளிப்படுத்தும் கதை.  சிறப்பான கதை.   

பிப்ரவரி மாதத்தில் நான் படித்த இன்னொரு கதை அன்பழகன் ஜி எழுதிய காலணி ஆதிக்கம்.  தினமணி கதிரில்  05.02.2023ல் பிரசுரமான  கதை. இந்தக் கதையின் விசேஷம் தேள் பற்றிய குறிப்பு வருகிறது.  தேள் பற்றி நான் படித்த மூன்றாவது கதை இது.  க.நா.சு, அசோகமித்திரன் அதன் பின் இவர் எழுதிய கதை.

            அம்ருதாவில் பிரசுரமான எஸ்.செந்தில்குமாரின் நீவல் என்ற கதையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.  குடை, மழை, தாரா இதுதான் இந்தக் கதை.  மூவரையும் பிணைத்து அற்புதமாக எழுதப்பட்ட கதை.

             தினமணி கதிரில் வெளிவந்த ஸிந்துஜாவின் அற்றக்குளத்து என்ற கதை குறிப்பிடும்படியான கதை.  எளிதாக சரளமாக எழுதுவதில் வல்லவர் ஸிந்துஜா.

        மற்றபடி நான் படித்த பல கதைகள் எனக்குத் திருப்தியைத் தரவில்லை.  ஆனந்தவிகடனிலிருந்து நான் படித்த கதைகளை என்னால் ஏற்க முடியவில்லை. 

        அதேபோல் சொல்வனம் இணையத்தில் வெளிவந்த கதைகளை என்னால் கொஞ்சங்கூட படிக்க முடியவில்லை.  

        நான் பெரிதும் எதிர்பார்த்த உயிர்மையில் வெளிவந்த கதை எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

        நான் தினமலரில் வெளியாகும் கதைகளை எப்போதுமே கதைகளாக எடுத்துக்கொள்வதில்லை.  அதே போல் குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளையும். சில கதைகளை சில வரிகள் படிக்கும்போதே அக் கதைகளின் தன்மை எனக்குப் புரிய ஆரம்பித்து மேலே படிக்கவிடாமல் செய்து விடுகிறது.

       மேலே குறிப்பிட்ட காலச்சுவடு கதை மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. அதைப் பதிவு செய்வது அவசியம். 

 

மனதில் உறுதி வேண்டும் – ஐரேனிபுரம் பால்ராசய்யா

விடிகாலை நான்கு மணிக்கு குளிர் குடிசைக்குள் கும்மாளமிட்டிருந்தது, அதை பொருட்படுத்தாமல் படுக்கையை விட்டு எழுந்து மிதமான சத்தத்தில் படிக்க ஆரம்பித்தாள் மேகலா.

பொழுது விடிந்திருந்தது. அவளது அம்மா பார்வதியம்மாள் காப்பி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.

“அம்மா, பள்ளிக்கூடத்தில ஸ்காலர்ஷிப் வாங்க நம்ம சாதி சான்றிதழ் கேக்கிறாங்க, வாங்கி குடுத்திடும்மா…”

“சரிம்மா, கூட்டுறவு வங்கியில போய் சொன்னா அவிங்க ஆன்லைன்ல விண்ணப்பம் அனுப்புவாங்க. அது வில்லேஜ் அப்பீசருக்குப் போய், ஆர்.ஐ.கிட்ட போயி தாசில்தார்கிட்ட போயிடும். அங்கிருந்து விசாரணைக்கு அதிகாரிங்க வருவாங்க, சான்றிதழ் கிடைக்கிறதுக்கு மூணு நாலு நாள் ஆகும்.”

“சரிம்மா” சொல்லி விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள் மேகலா.

நான்கு நாட்கள் கழிந்திருந்தது. அதிகாரிகள் யாரும் விசாரணைக்கு வரவில்லை. பொறுமை இழந்த பார்வதியம்மாள் கூட்டுறவு வங்கியில் போய் கேட்க, தாசில்தார் அலுவலகத்தில் கிடப்பில் இருப்பதாக சொன்னார்கள். பார்வதியம்மாள் தாசில்தார் அலுவலகத்துக்கு நடந்தாள்.

“நீ கிறிஸ்டியன் சாம்பவர்ன்னு சர்டிபிகெட் கேட்டிருந்தா உடனே கிடைச்சிருக்கும், நீ எஸ்.சி. இந்து சாம்பவர்ன்னு கேக்கறதனால நாளைக்கு உஙக வீட்டுக்கு அதிகாரிங்க வந்து விசாரணை பண்ணின பிறகுதான் சர்டிபிகெட் கிடைக்கும்!” சொல்லி விட்டு பதிலுக்குகூட காத்திருக்காமல் அறையை விட்டு வெளியேறினார் தாசில்தாரர்.

சலிப்போடு சற்று நேரம் நின்று விட்டு வீட்டுக்கு நடந்தாள்.

மறுநாள் மதியம் தாசில்தார் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் காரில் வந்து பஸ் நிறுத்தத்தின் அருகிலிருந்த டீக்கடையில் விசாரணை செய்தார்கள்.

“மேகலா, அம்மா பேரு பார்வதியம்மாள் இவங்க வீடு எங்கிருக்கிறது, அவங்க சர்ச்சுக்கெல்லாம் போவாங்களா?” என்று விசாரித்தார்கள்.

“எனக்குத் தெரியாது” கடைக்காரர் சொல்லவே, காரை விட்டு இறங்கினார்கள்.

“மூணு டீ போடுங்க” என்றார் அதிகாரிகளில் ஒருவர்.

“பால் தீர்ந்து போச்சு, வறக்காப்பி போடட்டுமா!” என்றான் டீக்கடைக்காரர்.

“வேண்டாம்” என்றபடி மேகலாவின் வீட்டை நோக்கி நடந்தார்கள். வழியில் ஒரு கல்லறையில் சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகளில் ஒருவர் அந்த கல்லறையில் எழுதியிருந்த பெயரையும் பிறப்பு, இறப்பு வருடங்களையும் ஒரு காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டு மேகலாவின் வீட்டை அடைந்ததார்கள்.

“‘சார் சாயா குடிக்கிறீங்களா?” பார்வதியம்மாள் மெல்லக் கேட்டாள்.

“வேண்டாம், இப்பத்தான் குடிச்சுகிட்டு வர்றோம்!” அவளது வீட்டிலிருந்து சாயா குடித்தால் தீட்டு பட்டு விடுமோ என்று பயந்தபடி மறுத்தார் வந்த அதிகாரிகளில் ஒருவர்.

“வழியில கல்லறை கிடந்துதே யாரோடது?”

“என் கொழுந்தனாரோடது!”

“ஒரே குடும்பத்துல அண்ணன் கிறிஸ்டியன், தம்பி பொண்டாட்டி நீ இந்துவா? யார ஏமாற்றப் பார்க்கிற?” வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் குரலைச் சற்று உயர்த்திச் சொன்னார்.

“சார், என் கொழுந்தனார் முதல்ல இந்து தான். அப்பறம் கிறிஸ்டியனா மாறீட்டார். ஆனா நாங்க அப்பிடி இல்ல, இதுவரைக்கும் எந்த சர்ச்சுக்கும் போனதில்ல, நானும் என் பொண்ணும் பக்கத்து இசக்கி அம்மன் கோவில்லதான் சாமி கும்பிடப் போவோம் சார்!” யதார்த்தமாய் சொன்ன அவளது வார்த்தைகள் அதிகாரிகளின் காதில் ஏற மறுத்தது.

“கிறிஸ்டியன் சாம்பவர்-ன்னு சர்டிபிகெட் தர்றோம். நாளைக்கு வந்து வாங்கிக்க!’ சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அதிகாரிகள்.

“சார், சார், சார் நீங்க அப்பிடி எழுதி தந்தா அது பிற்படுத்தப்பட்டவர் பட்டியல்ல வந்துடும். பரம்பர பரம்பரையா எங்க குடும்பம் தாழ்த்தப்பட்ட இந்து குடும்பம் சார், இந்துன்னு எழுதி குடுத்தா நாங்க தாழ்த்தப்பட்டவங்க பட்டியல்ல வந்துடுவோம், தயவு செஞ்சு எங்க மேல கருணை காட்டி இந்துன்னு எழுதி குடுத்திடுங்க சார்!” அதிகாரிகள் பின்னால் ஓட்டமும் நடையுமாய் கேட்டாள். அவர்கள் திரும்பிப்கூட பார்க்காமல் காரில் ஏறிக் கொள்ள கார் விரைந்தது.

இதயம் கனக்க கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது பார்வதியம்மாவிற்கு. ஸ்காலர்ஷிப் கிடைத்தால் குடும்பச் சுமை குறையும் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிகாரிகளின் பேச்சு அச்சமூட்டியது.

மறுநாள் காலை பத்து மணிக்கே தாசில்தார் அலுவலகம் சென்று பியூனிடம் அதிகாரிகளைப் பற்றி விசாரித்தாள்.

“தாசில்தாரை நேரில் சென்று பார்த்துப் பேசு, சர்டிபிகெட் கிடைக்கும்” தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் பியூன். பார்வதியம்மாள் தாசில்தாரைப் போய் பார்த்தாள்.

“வேற எது வேணுமுன்னாலும் என்னால செய்ய முடியும். ஆனா சாதிச் சான்றிதழ் விஷயத்துல என்னால எதுவும் செய்ய முடியாது!” தாசில்தார் கையை விரித்தார். பார்வதியம்மாவுக்கு கண்கள் நிறைந்தது. அங்கேயே விங்கி விங்கி அழ ஆரம்பித்தாள்.

“நான் சொல்றபடி நடந்தா இந்துன்னு எழுதி எஸ்.சி. சர்டிபிகெட் குடுத்திடுறேன்!” அவரது வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடியில் அவளது கண்ணீர் காணாமல் போனது. கண்களை துடைத்தபடியே ஆர்வமாய் தாசில்தாரைப் பார்த்தாள். ஒரு துண்டு காகிதத்தில் எதையோ எழுதி அவளிடம் நீட்டினான் தாசில்தார்.

“நாளைக்கு சனிக்கிழமை உன் பொண்ண கூட்டிக்கிட்டு இந்த அட்றஸ்சுக்கு வந்துடு, உன் பொண்ணு ஒரு மணி நேரம் என்கூட இருந்தாப் போதும், நீ கேட்டபடி சர்டிபிகெட் குடுத்திடுறேன்!”

“டேய்” என்ற அலறல் சத்தம் பலமாய்க் கேட்க, தாசில்தாரின் சட்டையைப் பிடித்து பலமாய் உலுக்கினாள் பார்வதியம்மாள். அலுவலகமே ஸ்தம்பித்துப் போனது.

“உன் கூட படுத்தாதான் சாதி சான்றிதழ் கிடைக்குமுன்னா அப்படியொரு சான்றிதழே எனக்கு தேவ இல்ல. எங்களப் பாத்தா தீட்டு, தொட்டா தீட்டுன்னு நினைக்கிற நீங்க, படுத்தா மட்டும் தீட்டு காணாம போயிடுமா” சொல்லி விட்டு அவர் எழுதிக் கொடுத்த முகவரி எழுதிய துண்டு காகிதத்தைச் சுக்கு நூறாக கிழித்து தாசில்தார் முகத்தில் எறிந்து விட்டு கண்கள் சிவக்க அறையை விட்டு வெளியே நடந்தாள்.

அலுவலகமே வாயடைத்துப் போனது. அவமானத்தில் நெளிந்த தாசில்தார் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு தலை குனிந்தார்.

‘நீதாண்டி மானமுள்ளவ’ என்று மானம் பார்வதியம்மாவைப் பார்த்து கம்பீரமாய் கைதட்டியது. விரக்தியோடு வீடு வந்து சேர்ந்தாள் பார்வதியம்மாள்.

மாலை நான்கரை மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வந்து சேர்ந்தாள் மேகலா.

“என்னம்மா, சாதி சான்றிதழ் கிடைச்சுதாம்மா?” கேட்டாள் மேகலா.

“நமக்கு ஸ்காலர்ஷிப் வேண்டாம், இந்த தாசில்தார் மாறிப் போகட்டும். வேற தாசில்தார் வரும்போ சாதி சான்றிதழ் வாங்கிக்கலாம். இல்லையின்னா பேசாம நாம கிறிஸ்டியன்னு சொல்லிக்குவோம் எந்த கேள்வியும் கேக்காம சாதிச் சான்றிதழ் குடுத்திடுவாங்க.”

“அப்பிடி வாங்குனா பி.சி.ன்னு தான் கிடைக்கும், ஸ்காலர்ஷிப், ஸ்கூல் பீஸ், எதுலயுமே நமக்கு சலுகை கிடைக்காது.”

“கிடைக்காட்டியும் பரவாயில்லம்மா, நான் வயல் வேலை செஞ்சாவது உன்ன படிக்க வைப்பேன்.”

அவளது அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட மேகலா அமைதியானாள்.

“அம்மா, தாசில்தார் ஏன் சாதிச் சான்றிதழ் தரமாட்டேன்னு சொன்னாரு. காரணத்தச் சொல்லும்மா?” அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

“நீ அவன்கூட ஒரு நாள் இருக்கணுமாம். படிக்கிற பொண்ண சொந்த மகளா நினைக்காத அவனெல்லாம் உருப்படவே மாட்டான். அவனுக்கு நல்ல சாவே வராது.” பார்வதியம்மாவின் கோபம் எகிறியது.

மறுநாள் பள்ளிக்கூடம் சென்றாலும் அவளின் முகம் சோகமாகவே இருந்தது.

“என்னடி ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” கேட்டாள் அவளது தோழி வித்யா.

“சாதிச் சான்றிதழ் வாங்க அம்மா தாசில்தார் அலுவலகத்துக்குப் போனாங்க, அது கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க.”

“கிடைக்காதா, ஏன்?”

“நாங்க இந்து குடும்பம், எங்களுக்கு கிறிஸ்டியன் சாதிங்கிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் தான் கொடுக்க முடியுன்னு சொன்னார்.”

“நீ இந்துவா இருக்குறப்போ ஏன் கிறிஸ்டியன் சான்றிதழ் கொடுப்பாராம்?”

“அதாவது இந்துன்னு சான்றிதழ் தருவாராம், ஆனா அதற்கு ஒரு நிபந்தனை வைச்சுட்டார்.”

“என்ன நிபந்தனை?”

“சொன்னா அசிங்கம், வேண்டாம் விட்டுவிடு.”

“ஏய் சும்மா சொல்லுடி, தெரிஞ்சுக்கலாம்.”

“அந்த தாசில்தார் கூட ஒருநாள் நான் இருக்கணுமாம்” சொன்ன மேகலாவின் கண்கள் கலங்கியது, வார்த்தைகள் தடுமாறியது.

“வருத்தப்படாத, நான் சொல்றபடி நீ நடந்தா உனக்கு இந்து சான்றிதழே கிடைக்கும்”

“என்னடி சொல்ற?”

“ஆமாண்டி, நீ அவர் கூட இருக்க தேவையில்ல. நான் சொல்றபடி நீ நடந்துகிட்டா மட்டும் போதும். அவரே உன்னை கூப்பிட்டு இந்து சான்றிதழ் கொடுத்துடுவார்.”

“நான் என்ன பண்ணணும்?”

“நீ அந்த தாசில்தாரைப் போய் பார்க்கணும். சார் அம்மா தப்பா பேசினாங்க, உங்க கண்டிஷனுக்கு நான் சம்மதிக்கிறேன். உங்க கூட ஒருநாள் இருக்கவும் சம்மதிக்கிறேன்னு சொல்லணும்.”

“லூசாடி நீ, அவன் கூட இருக்கணும்னு சொல்றான்.”

“நான் சொல்றதக் கேளு, அப்படி நீ சொல்லு. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு, நீ பயப்படாத. உன்ன எங்க வரச் சொல்றாரோ அந்த இடத்துக்கு உன்கூட நானும் வர்றேன்.”

“இது ஆபத்தாச்சே.”

“நான் இருக்கும்போது நீ எதுக்கு பயப்படுற? நீ தைரியமா போய் பேசு. ஏற்கனவே உன் அம்மா குடுத்த சாதிச் சான்றிதழ் மனு பெண்டிங்லதான் இருக்கும், நீ போய் பேசின மறுநாள் உன் சாதிச் சான்றிதழ் உன் கைக்கு வந்துடும்.”

“பயமா இருக்குடி.”

“உனக்கு சாதிச் சான்றிதழ் வேணுமா? வேண்டாமா?”

“வேணும்.”

“அப்போ நான் சொல்றபடி கேளு, இன்னைக்கு புதன்கிழமை. மதியம் லீவு போட்டுட்டு தாசில்தார போய் பார்த்து, நான் சொன்னது மாதிரி பேசு. நாளைக்கு உன்னை எங்கேயாவது வரச் சொல்லுவார். நீ சரின்னு சொல்லு, மீதியை நான் பார்த்துகிறேன்.”

“சரிடி” மேகலா பயத்துடனே சம்மதித்தாள்.

மதியம் இரண்டு மணிக்கு தாசில்தார் அலுவலகம் வந்து சேர்ந்தாள் மேகலா.

“என் பேரு மேகலா, நேத்து அம்மா சாதி சான்றிதழ் கேட்டு உங்கள பார்க்க வந்திருந்தாங்க. அம்மா கிட்ட நீங்க துண்டுச்சீட்டு எழுதி கொடுத்ததும் கோபத்தில கிழிச்சு உங்க மேல வீசிட்டாங்க. அம்மா அப்பிடி செஞ்சதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன், எனக்கு இந்து சாம்பவர் சான்றிதழ் தந்துடுங்க சார்” கேட்ட தாசில்தார் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. தன் ஆசைகளைத் தணித்துக் கொள்ள வலிய வந்து சம்மதிக்கிறாளே என்று புன்னகையோடு உறுதி அளித்தார். அவர் மேசை டிராயரைத் திறந்து சாவியை எடுத்து அவளிடம் நீட்டினார்.

“திற்பரப்பு அருவிக்கு போற வழியில எனக்கொரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நாளைக்கு காலையில பள்ளிக்கூடம் புறப்பட்டு வர்றது மாதிரி பஸ் ஏறி வந்து, இந்த முகவரியில இருக்குற கெஸ்ட் ஹவுச கண்டுபிடிச்சி கதவைத் திறந்து உள்ளே இரு. நான் ஒரு பத்தரை மணி வாக்கில வந்துடுறேன். மதியம் ஒரு மணிக்குள்ள நீ திரும்ப போயிடலாம். இரண்டரை மணிக்கு ஆபீஸ் வந்தா உன்னோட இந்து சாம்பவர் சான்றிதழ் ரெடியா இருக்கும்” பற்கள் தெரிய சிரித்தபடியே சொன்னார் தாசில்தார். அவர் தந்த முகவரி எழுதிய துண்டையும், சாவியையும் வாங்கிக் கொண்டு வெளியேறினாள் மேகலா.

மறுநாள் காலை மார்த்தாண்டம் வந்தபோது, வித்யா அவளுக்காக காத்து நின்றாள். இருவரும் திற்பரப்புக்கு பஸ் ஏறினார்கள். அவர் குறிப்பிட்ட அந்த முகவரியைக் கண்டுபிடித்து கதவைத் திறந்து இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

“நீ என்ன பண்ற, சமையல் கட்டுல மறைஞ்சு இருக்கிற. உனக்குப் பதில் நான் ரூம்ல வெயிட் பண்ணுறேன். அவர் கதவைத் திறந்து உள்ளே வந்து என்னப் பார்த்ததும் எப்படி நடுங்குறார்ன்னு மட்டும் பாரு” அவள் தைரியமாகச் சொன்னாலும் ஒருவித தயக்கத்தோடும் நடுக்கத்தோடும் சமையலறையில் மறைந்திருந்தாள் மேகலா.

சரியாகப் பத்தரை மணிக்கு சாத்தியிருந்த வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் தாசில்தார். அறையில் இருந்த வித்யா எழுந்து ஹாலில் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது தாசில்தாருக்கு. அவர் கண்கள் சொருகியது, வார்த்தைகள் பாதாளத்தில் போய் விழுந்தது.

“இந்த இடத்தில என்ன பார்த்ததும் அதிர்ச்சியா இருக்காப்பா. உங்க மக நான், என் வயசு தானே அந்த மேகலாவுக்கும். உங்க மக மாதிரி தானே அவளும். அவ கேட்ட சான்றிதழ் கொடுக்காம அவ கூட இருக்கணும்னு விரும்பினீங்களே, இது நியாயமாப்பா?” வித்யாவின் வார்த்தைகள் கேட்ட தாசில்தார் வெட்கி தலை குனிந்தார்.

“என்ன மன்னிச்சிடும்மா, புத்தி கெட்டுப் போய் இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிஞ்சிட்டேன், என்ன மன்னிச்சிடும்மா. மேகலாவும் எனக்கு மக தான், அவ கேட்ட சான்றிதழை கையெழுத்து போட்டு கொடுத்திடுறேன். சாரிம்மா இங்க நடந்தது எதையுமே அம்மா கிட்ட சொல்லிடாதம்மா, ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்.”

“மேகலா என் கிளாஸ்மெட், சான்றிதழை கொடுங்கன்னு வீட்டில வெச்சு சிபாரிசு பண்ணியிருந்தா ஒருவேளை நீங்க சான்றிதழ் கொடுத்திருப்பீங்க. ஆனா, உங்க மனசில இருக்கிற தவறான புத்தி உங்கள விட்டு போயிருக்காது. தொடர்ந்து இதுமாதிரி தப்ப செஞ்சுகிட்டே இருப்பீங்க. உங்களுக்கு ஷாக் குடுத்தாதான் இனிமே இந்த மாதிரி தப்ப செய்ய மாட்டீங்க. அதனால தான் மேகலா கூட நானும் வந்தேன். சரி போங்க, சான்றிதழ் ரெடி பண்ணி மதியத்துக்கு மேல அவ வந்து கேட்டா கொடுத்துடுங்க. இனிமே யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்துக்காதீங்க” முதிர்ந்த அனுபவசாலியாய் அவள் சொன்ன வார்த்தைகள் கேட்டு தலையாட்டினார் தாசில்தார்.

சமையலறையில் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன் தோழி வித்யா தாசில்தாரின் மகளா? என்று வியந்தபடி ஓடி வந்து அவள் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

“ரொம்ப தேங்க்ஸ்டி, நீ அவரோட பொண்ணுன்னு எனக்குத் தெரியாது, ரொம்ப தேங்ஸ்டி.”

“எப்படியோ உனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கப் போகுது. இத வச்சு ஸ்காலர்ஷிப் வாங்கி படிச்சு பெரிய ஆளாக வரணும்.”

“கண்டிப்பா” இருவரும் கெஸ்ட் ஹவுஸ்சை பூட்டி விட்டு திற்பரப்பு பஸ் நிறுத்தம் நோக்கி நடந்தார்கள். இதமாய் வீசிய அருவியின் குளிர் காற்று அவர்கள் உடலைப் பற்றிப் படர அதை அனுபவித்தபடி நடந்தார்கள். மனதில் உறுதி வேண்டும்.

* * * * *

paulrasaiya6@gmail.com
9746486845

திரைக்கதம்பம் ( பிப் 2023) – சிறகு இரவிச்சந்திரன்

பிப்ரவரியில் வெளிவந்த தமிழ் /தமிழில் மொழி மாற்றப்பட்ட படங்களின் விமர்சனம்

 

டாடா

டாடா | Dinamalar

கல்லூரியின் கடைசி வருடத்தில் காதலில் மூழ்கிய மணிகண்டனும் சிந்துவும் ஒரு கட்டத்தில் முத்தைத் தாங்கும் கட்டத்தை நெருங்கி விடுகிறார்கள். அந்த சின்ன மழலையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மணிக்கு வந்துவிட என்னாச்சு என்பதை உணர்வும் சிரிப்புமாக சொல்லத் தெரிந்திருக்கிறது இயக்குனர் கணேஷ் கே. பாபுவுக்கு! கவின் செம்மையாக பாத்திரத்தில் பொருந்திப் போகிறார். சிந்துஅபர்ணா தாஸ் சில இடங்களில் அழுவாச்சியாக இருந்தாலும் மொத்தத்தில் ஈர்க்கிறார். அவருக்கும் கவினுக்குமான காதல் ரசாயனம் நறுமணம். மழலை-இளம் தந்தை நெருக்கக் காட்சிகள் நெகிழ்வும் மகிழ்வும். இப்படியான விமர்சனம் டைம்ஸ் கணிப்பில்!

விபத்தாக உண்டாகும் சிசுவின் கதையும் எதிர்பார்க்காத இளம் தாயும் தந்தையும் என்பது ரசிக்கத் தக்க முடிச்சு! நன்றிக்கடனாக கே.பாக்யராஜை இணைத்திருப்பது புத்திசாலித்தனம். பாக்யாவின் முடிச்சை ஒட்டி நவீன மொஸ்தரில் படம் இருப்பது டூ கே கிட்ஸைக் கவரும்! இப்படி பாராட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

      ஒரு காதல் கதையை, விரசம் இல்லாமல், உணர்வு பூர்வமாக சொல்ல முடியுமா? டாடா இதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. அதோடு சமமாக நாயகன் நாயகிக்கு தனித்துவம் கொடுத்த வகையில், இது ஃபீல் குட் படமாக மாறி இருக்கிறது என்பது இந்தியா டுடேயின் ஷொட்டு!

அருமையாக எழுதப்பட்ட கதை, திரைக்கதை என்பது சினிமா எக்ஸ்பிரஸின் கைத்தட்டு! புதிய பாதை என்றெல்லாம் இல்லை! ஆனால் நெகிழ வைக்கும் காட்சிகள் இதை மேலெடுத்துச் செல்கிறது – சினிமா எக்ஸ்பிரஸ்!

இந்த டோரா டோராவில் அழுத்தமாக மனதில் பதிபவர்கள் கவினும் அபர்ணா தாஸும்! புதுமுக இயக்குனர் முதல் படத்திலேயே அழுத்தமான முடிச்சை எடுத்தது பாராட்டுக்குரியது – தி ஹிந்து!

#

பகாசூரன்

February 2023 Tamil Movies Release Date, Schedule & Calendar - Filmibeatஇணைய வழி விபச்சாரம் தான் மையக் கரு. அதை நிறுத்த நடத்தப்படும் கொலைகள். ஒரு கட்டத்தில் தங்கையை பறி கொடுத்த மேஜர் அருள்வர்மன், இணைய வழியாக கொலைகாரனைத் தேடும் வித்தியாச முடிச்சு. கூத்துக் கலை கலைஞர் பீமராசு செய்யும் கொலைகள்..செல்வராகவன் இந்தப் பாத்திரத்தில் பொருத்தமாக இருப்பது படத்திற்கு பலம், நட்டி நடராஜனும் அருள் வர்மன் பாத்திரத்தில் சோடையில்லை. மோகன் ஜியின் படங்கள் எப்போது வில்லங்க விசயங்களைக் கையில் எடுக்கும். இதுவும் அப்படி ஒரு படம் தான்! சில இடங்களில் புத்திமதி எனும் பெயரில் சொல்லப்படும் வசனங்கள், அறிவுரையாக மாறி விடுவது இந்தப் படத்தின் பலவீனம். எதிர்பார்க்கக் கூடிய நேர்வழி திரைக்கதை, வரப்போகும் காட்சிகளை யூகிக்க வைத்து விடுகிறது. ஃபரூக் பாஷாவின் ஒளிப்பதிவும் சாம் சி.எஸ்ஸின் இசையும்  சில கட்டங்களை உயர்த்தும் ஏணியாகிறது. நீண்டு கொண்டே போகும் படம் திரில்லருக்கு உகந்ததல்ல. கடைசியில் லேசான ஈர்ப்புடன் வெளியேறுகிறான் சினிமா ரசிகன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

காலம் கடந்த க்ரிஞ் என்கிறது இணைய விமர்சன தளம் மூவி க்ரோ! ஆனாலும் செல்வராகவனையும் நட்டியையும் பாராட்டத் தவறவில்லை. இங்கு பழைய சோற்றை விரும்பிச் சாப்பிட யாருமில்லை!

திரைக்கதை நாடகத் தன்மையுடனும் எளிதில் யூகிக்கும்படியும் இருப்பது படத்தின் பெரிய குறை – குமுதம்!

#

வாத்தி

Upcoming Tamil Movies 2023 List Release Dates - Bollymoviereviewzசாட்டை, அப்பா படங்களின் வரிசையில் இன்னொரு கல்வி படம்! ஆனாலும் நிறையப் பேசினால் ஆவணப்படமாக மாறி விடும் என்பதை உணர்ந்து, இதன் இயக்குனர் வெங்கி அட்லூரி திரைக்கதையில் சில சுவாரஸ்யங்களைச் சேர்த்து ரசிகனைக் கட்டிப் போட்டு விடுகிறார். முக்கியப் பாராட்டு இந்த கதையில் நடிக்க சம்மதித்த தனுஷுக்கு. காதல் மிக மெல்லியதாக நாகரீகமாக காட்டப்பட்டிருப்பது! அனாவசிய ஹீரோ பில்ட் அப் இல்லாமல், முக்கியமாக, சண்டைக் காட்சிகள் இல்லாமல், அவசியமில்லாத விரச ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் இருப்பது ஆரோக்கிய சினிமாவுக்கான முதல் படி! மொழி மாற்றுப் படம் போல இல்லாமல் நேரடியாக தமிழிலும் தெலுங்கிலும் தனித்தனியாக எடுக்கப்பட்டதால் உதட்டசைவோடு வார்த்தைகள் ஒத்துப் போகின்றன. இவ்வளவு கவனத்தை மேற்கொண்ட தயாரிப்பு நிறுவனம், சாலைகளையும் ஓடும் பேருந்துகளையும் தமிழ் எழுத்தோடு படமாக்கி இருக்கலாம். துணை நடிகர்கள் கூட பல தெலுங்கு முகங்கள் என்பது நெருடல்!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும் வெகு பாந்தம். படத்தின் உணர்வை மேல் எடுத்துச் செல்லும் பாதையில் இசை பயணித்திருக்கிறது!

ஒரே ஒரு காட்சியில் தோன்றும் இயக்குனர் இமையம் பாரதிராஜா, தன் நடிப்பால் ரசிகனை கைத்தட்ட வைக்கிறார்.  சம்யுக்தா மேனன் முதல் படத்திலேயே உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார். முதல் இருபது நிமிடங்கள் வக்கிரமாக தோன்றும் இரு ஆசிரியர்களை நீக்கி விட்டால் படம் இன்னும் கேட்குமே மோர்!

நான் லீனியராக படத்தை எடுத்ததில், கடைசி காட்சி முதல் வகுப்பிலேயே வந்து விட்டதால், க்ளைமேக்ஸ் என்ன என்பது முதலிலேயே புரிந்து விடுகிறது.! இது ஒரு குறை!

2018ல் வந்த கொரியன் படமான லிட்டில் பிட் மாஸ்டரின் சாயல் சில காட்சிகளில் உண்டு! அதோடு ஹிரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30! அதன் தாக்கத்தையும் இதில் ஏற்படுத்த தவறவில்லை. – டைம்ஸ் ஆஃப்  இந்தியா.

வாத்தி, கல்விக்கான உரிமை எல்லோர்க்கும் உண்டு என்பதை அடி நாதமாகக் கொண்டிருக்கிறது. தொண்ணூறுகளில் கல்வி, சில சாதிகளுக்கு மறுக்கப்பட்டதையும் அதை தகர்க்க நாயகன் போராடுவதாகவும் கதை என்றாலும், நிகழ் கால அவலத்தை கையில் எடுத்து சொன்ன வகையில் பா.ரஞ்சித்தின் காலாவும் லோகேஷின் மாஸ்டரும் தந்த தாக்கத்தை இந்த படம் தரவில்லை என்பதே உண்மை – இந்தியன் எக்ஸ்பிரஸ்!

தனுஷ் மட்டுமே இதைக் காப்பாற்றும் ஒரே நல் அம்சம் என்று போட்டு உடைத்திருக்கிறது இண்டியா டுடே! ஜோதிகாவின் ராட்சசியை தனுஷாக மாற்றியது போல் இருக்கிறது! தொல்லு பிரேமா எனும் பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் வெங்கி அட்லூரி, தமிழ் ரசிகனை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்பதும் அதன் வாதம்! தனுஷை நீக்கி விட்டால் இந்தப் படத்தில் ஒன்றுமில்லை என்பதும் உண்மை!

வாத்தி மசாலா ஜாஸ்தி என்று முத்தாய்ப்பு வைக்கிறது குமுதம். கூடவே பாடம் எடுப்பதை விட  ரவுடிகளைப் புரட்டி எடுப்பதே தனுஷுக்கு வேலையாக இருக்கிறது என்று புட்டு வைக்கிறது! தெலுங்கு ரசிகர்களே தெறித்து ஓடும் அளவிற்கு பல காட்சிகள்!

#

மாளிகைபுரம் ( மலையாளம்/தமிழ் )

பதான் முதல் மாளிகப்புரம் வரை... தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்ன படம்  பார்க்கலாம்! | This week theatre and ott release movies full list - Tamil  Filmibeat

பத்து வயதாகும் கல்லு எனும் கல்யாணிக்கு சுவாமி அய்யப்பன் மீது தீராத பக்தி! விலக்காகும் வயதுக்குள் சபரிமலைக்கு போகும் திட்டம் தள்ளிப் போய் விட, பள்ளித் தோழன் பிரகாசனுடன் தன்னந்தனியாக பயணம் மேர்கொள்ளும் இந்த சுட்டிகளைக் காப்பாற்றி மலை சேர்க்க சுவாமியே ஒரு பயணியாக அவர்களுடன் பயணிக்கும் ஃபான்டசி முடிச்சு!

சிறுமி தேவ நந்தா கல்லுவாக வெகுளித்தன்மையுடன் வெகு பாந்தம். காக்கும் அய்யப்பனாக உன்னி முகுந்தன் அளவாக தைத்த சட்டை. கடைசியில் மதவாதிகள் எதிர்ப்பு வரும் என்று கடவுளை காவலராக ஆக்கி விட்டனர்! உன்னி முகுந்தனின் திரை வரலாற்றில் ஒரு மாதத்தில் ஐம்பது கோடிகள் கல்லாக் கட்டிய படம் இது ஒன்று தான்!

இதற்கு வசனம் எழுதியவர் அபிலாஷ் பிள்ளை! அவரைக் கூப்பிட்டு ஒரு படம் இயக்கச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளராகி இருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்! வேறு சொல்லவும் வேண்டுமோ இது நல்ல படம் என்பதற்கு!

இறை நம்பிக்கையை மனதில் வைத்து எடுக்கப்பட்ட சிறுவர் படம்! சம்பத் ராமின் மாயா எனும் வில்லன் பாத்திரத்தைக் என்ன செய்வது தெரியாமல் பாதியிலேயே கழட்டி விட்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு சசி ஷங்கர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

உன்னி முகுந்தன் திரையில் பார்க்க அம்சமாக இருக்கிறார். முதல் பாதி உங்களுக்கு வெளியில் போக வாய்ப்பு தரும். அதோடு கதையின் மையப் புள்ளியை நெருங்க வெகு நேரமாவது இதன் குறை- கோல்மால் டாட் காம்!

அரை வேக்காடான ஒரு முயற்சி மத நம்பிக்கைத் துளிர்க்கச் செய்ய! மதமென்பது அர்த்தமற்றதாக ஆகிவிடக் கூடாது எனும் பதைப்பு படம் நெடுக! சரியாக எழுதப்படாத படம் – லென்ஸ்மென் ரிவ்யூஸ் டாட் காம்!

#

ரேஸ் குர்ரம் ( தெலுங்கு/ தமிழ் )

racekuthiraitamildubbedmovie - YouTube

பழைய எங்க வீட்டுப் பிள்ளை தான்! உத்தம புத்திரர்களாக ராம் மற்றும் லட்சுமணன்! ஒருவன் காவல் துறை டிஜிபி! இன்னொருவன் அலப்பறையாக ஊர் சுற்றும் தம்பி! கடைசியில் ஒரு நாள் முதல்வர் போல், ஒரு நாள் காவல் அதிகாரியாகி சேட்டைக்காரர்களை தம்பி லட்சுமணய்யா வேட்டையாடும் ஃபினிஷ்!

ஷாம், ராம் வேடத்தில் பொருந்திப் போகிறார். அளவான பாவங்கள். அமைதியான நடிப்பு. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் லட்சுமணாக அல்லு விடறார். கவர்ச்சிக்கு லூஸுப் பொண்ணாக சுருதி ஹாசன். அவர் காட்டில் சிரபுஞ்சி! ஒரே வருடத்தில் அடுத்தடுத்து சிரஞ்சீவி காரு,, ஜூனியர் என் டி ஆர் என்று கலந்து கட்டி அடித்து இப்ப அல்லு அர்ஜுனுடன் செமை குத்து போட்டிருக்கிறார்.

வசூல் ராஜா எம் பி பி எஸ்ஸுக்குப் பிறகு பிரகாஷ் ராஜுக்கு காமெடி வேடம். டப்பிங் குரல் சற்று அண்டா சுரண்டல். இன்னும் பிரம்மானந்தம், அலி என்று காமெடி ஸ்டார் காஸ்ட்! சில திருப்பங்கள் நேர்க்கோடு என்றாலும் பார்ப்பது தெலுகு தமிழ் டப்பிங் படம் என்பதை நினைவில் கொண்டால் ரசிக்கலாம்!

சரியான விகிதத்தில் மசாலா சேர்த்த பொழுதுபோக்கு சித்திரம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா!

இது ஏதோ காவியம் என்று பம்மாத்து காட்டவில்லை இந்தப் படம்! இது முழுக்க முழுக்க அல்லு அர்ஜுன் முத்திரைகள் நிறைந்த படம் – தி ஹிந்து.

அரங்கை விட்டு வெளியே வரும்போது கொடுத்த காசுக்கு நட்டமில்லை என்று உணர வைக்கும் முழு கேளிக்கை படம் – 123தெலுகு டாட் காம்!

#     

பல்த்து ஜன்வார் ( மலையாளம் / தமிழ் )

Palthu Janwar (2022) - IMDb

அக்மார்க் மலையாளப் பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து! அறியப்படாத முகங்கள் பாத்திரங்களாய்! கூடவே அறிமுக இயக்குனர் என்று கலந்து கட்டி ஹிட் அடித்திருக்கிறது இந்தப் படம். களம் புதிது! பாத்திரங்கள் அன்றாட வாழ்வில் காண முடியாதவை. ஆனாலும் படம் முடியும்போது கனத்த இதயத்துடன் விலகுகிறோம்!

அனிமேஷன் தொழிலில் மெல்ல முன்னேறி வரும் பிரசூன் கிருஷ்ணகுமார், அப்பாவின் அகால மரணத்தால் அரசு வேலையை ஒப்புக்கொள்ளும் நிர்பந்தம். கிடைத்த வேலை கிராமத்தில் கால்நடை மருத்துவமனையில் உதவியாளர். மிருகங்களை அனிமேஷனில் மட்டும் அறிந்த பிரசுன் வெற்றி பெற்றானா என்பது இந்த வித்தியாச முடிச்சு!

தவறான வழிகாட்டலால், மிகுதியாக மருந்தைச் செலுத்தி, காவல் துறை மோப்ப நாய் இறக்க காரணமாகும் பிரசூன், வேலையை விட்டு விலகத் தீர்மானிக்கும்போது, டேவிஸின் மோலிக்குட்டி எனும் பசு, கரம்பில் மயங்கி விழுந்து விட, அதைக் காப்பாற்றும் பொறுப்பு இவன் தலையில் விழுகிறது. பிரசூன் மோலிக்குட்டியை காப்பாற்றினானா? கண் விழித்த மோலிக்குட்டி பிரசவ வேதனையில் துடிக்க, அதன் சிசுவையும் காப்பாற்ற செய்த அவன் முயற்சி வெற்றி பெற்றதா?

பாஸில் ஜோசப் அதகளம் செய்கிறார் பிரசூனாக! எங்கும் நடிக்கவில்லை என்பது அவருக்கான பாராட்டு. இன்னும் இன்னொசென்ட்ஸ், ஜானி ஆண்டனி, திலீஷ் போத்தன் என்று சில ஆழமான பாத்திரங்களில் வலம் வரும் தெரிந்த முகங்கள்!

சங்கீத் பி ராஜனின் இயக்கமும், ஜஸ்டின் வர்கீஸின் இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அருமையான படம் என்று சொல்வதற்கு, கேக் மேல் வைத்த பிளம் பழம் போல், இதை தயாரித்தது பாகத் பாசில் என்பது தான் தகவல்!

#

வசந்த முல்லை

February 2023 Tamil Movies Release Date, Schedule & Calendar - Filmibeat

பல நாள் கிடப்பில் இருந்த படம்! சற்று பெயர் கிடைத்தவுடன் மளமளவென்று பாபி சிம்ஹா அள்ளிப் போட்டுக் கொண்ட படங்களில் ஒன்று, அவரது அணுமுறையாலும் காசு பிரச்சினையாலும் தள்ளி போய் விட்டது. ஆங்கிலப் படத்தின் தாக்கம் கொண்ட கதை! காதலியுடன் உல்லாசமாக இருக்க அத்வானத்தில் தங்கிய வசந்த முல்லை விடுதி, ஹாரரை விதைக்கிறது எனும் முடிச்சு!

பாதி ரஜினி! மீதி விஜய் சேதுபதி எனும் வித்தியாச கலவை பாபி சிம்ஹா! நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும் குழப்படி திரைக்கதை பார்வையாளனை ஈர்க்காமல், வாசமற்றுப் போகிறது என்பது குமுதம் விமர்சனம். ஆர்யா சில காட்சிகளில் வந்தாலும் படம் நெடுக வந்தது போன்ற உணர்வு அவருக்கான அப்ளாஸ்!

எவ்வளவோ பாபி முயன்றும் இந்த சுமார் திரில்லரை தூக்கி நிறுத்த முடியவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சுவாரஸ்யமான கரு இருந்தும் அதை திரையில் காட்சிகளாக கொண்டு வரத் தெரியவில்லை இயக்குனர் ரமணன் புருஷோத்தமனால்! அதோடு அனாவசிய திருப்பங்கள் படத்தின் பயணத்தை பாதாளத்தில் தள்ளுகின்றன – இந்தியா டுடே!

வெண்ணைத் தாள் மாதிரி மெலிசான கதைக்கு, இறுக்கும் சுருக்கென திரைக்கதை வேண்டும். அதன்றி படம் தோல்வியைத் தழுவுகிறது – சினிமா எக்ஸ்பிரஸ் .

மொத்தத்தில் பாபி சிம்ஹா எனும் நல்ல கலைஞர் நல்ல கதைகளை தேர்வு செய்யும் பக்குவம் பெற வேண்டும்!

#

8..தக்ஸ்

February 2023 Tamil Movies Release Date, Schedule & Calendar - Filmibeat

சுவந்திரம் அர்த்த ராத்திரியில் எனும் 2018 படத்தின் மறு உருவாக்கம் இந்தப் படம். இயக்குனர் பிருந்தா சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் செல்கிறார். பின் பாதியில் சிறையை விட்டு தப்பிக்கும் சேதுவும் கூட்டாளிகளும்.. அவர்களைத் துரத்தும் காவலர் குழுவும் எனும் பரபரப்பு நிமிடங்களும் நன்றாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. முதல் பாதியில் கதைக்கு நெருக்கமாக வர நிறைய நேரம் செலவிடுகிறார் இயக்குனர். சிறையிலிருந்து தப்பிக்க வேண்டிய நோக்கம் என்ன கைதிகளுக்கு என்று தெளிவாகச் சொல்லவில்லை! பாபி சிம்ஹாவும் ஆர் கே சுரேஷும் கொடுத்த பாத்திரங்களை சேதாரம் இல்லாமல் செய்திருக்கிறார்கள். ஹிர்து ஹரூன் தன் பவர் ஹவுஸ் நடிப்பால் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார்!  இவர் புதுமுகம் தானா எனும் சந்தேகம் வரும் அளவிற்கு பங்களிப்பு – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரின் முதல் இயக்கம் ஹே!சினாமிகா! ஓரளவு பேசப்பட்ட அந்தப் படம், இவரது இரண்டாவது படமாக வந்திருக்கும் இந்தப் படத்தின் மேல் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

#

9..சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்

Single Shankarum Smartphone Simranum Tamil Movie Review | சிங்கள் ஷங்கரும்  ஸ்மார்ட்போன் சிம்ரனும் தமிழ் திரைப்பட விமர்சனம் | Mirchi Shiva | Anju  Kurian | Megha Akash | Single Shankarum ...

காமெடியா சீரியஸா இல்லை நல்லதொரு செய்தி சொல்லும் படமா? இது எதுவும் இல்லாத மூணுங்கெட்டான் படம் என்று சொல்கிறார் யூட்யூப் அருண்!

ஷங்கராக மிர்ச்சி சிவா தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். அவரது காமெடி ஒன் லைனர்ஸ் அருமை. அவரது நண்பனாக வரும் ம.கா.பா ஆனந்த், தன் பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார். செயற்கை அறிவு கொண்ட செயலி சிம்ரனாக மேகா ஆனந்துக்கு அதிக வேலையில்லை என்றாலும் வந்த வரையில் சோடையில்லை. யோசிக்காமல் ஒரு காமெடி படம் பார்க்க வேண்டுமா? இதுவே ரைட் சாய்ஸ் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

#

10..தங்கம் ( மலையாளம் / தமிழ் )

தங்கம் படத்தின் ஓடிடி திரை விமர்சனம்... அமேசான் சப்ஸ்கிரைபர்களுக்கு  பரபரக்கும் க்ரைம் த்ரில்லர்! | Thankam Malayalam movie OTT film review -  Tamil Filmibeat

ஓரு நிசமான திரில்லர். வித்தியாசமான கதைக்களம்! பிஜு மேனனும் வினீத் சீனிவாசனும் அழுத்தமான நடிப்பு களஞ்சியம்! கடைசி சில நிமிடங்கள் வரும் கலையரசன் மனதில் நிற்கும் பாத்திரம். எங்கேயும் அதிக நடிப்பைக் கொட்டாத அபர்ணா பாலமுரளி வெகு பாந்தம்.

குடும்பத்தில் பாசத்தைக் கொட்டும் கண்ணனுக்கு சாந்தா எனும் மனைவி! தங்க வர்த்தகத்தில் சேச்சியுடன் ஏஜன்டாக பணிபுரியும் முத்துவுக்கு நெருக்கமான நண்பனாகவும் கண்ணன். மும்பைக்கு போன இடத்தில் எடுத்துச் சென்ற தங்கமும் காணாமல் போக, கண்ணனும் சடலமாக, துப்பு துலக்கும் மும்பை காவல்துறையும் அதன் விசாரணை பயணமும் தான் படம்!

பல அடுக்குகள் கொண்ட திரில்லர்! காவல் துறை அணுகுமுறை விஸ்த்தாரமாக சொல்லப்பட்ட படம்! தங்க விற்பனையில் ஈடுபவர்களின் உளவியலை சரியாக படம் பிடித்த விதத்தில் இது வித்தியாசமான முயற்சி – தி ஹிந்து!

ஒரு கடனாளியின் மன உளைச்சலை பார்க்க வற்புறுத்தும் படம்! படங்களின் திருப்பங்களும் கடைசி முடிவும் எதிர்பார்க்க முடியாதது! – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

ஃபாகத் பாஸில் கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல படம் என்று உறுதியாகச் சொல்லலாம். வினித், பிஜுவைத் தாண்டி மும்பை காவல் அதிகாரியாக வரும் கிரீஷ் குல்கர்னி, வெறும் கண்களாலேயே மிரட்டி விடுகிறார். சரியான திரில்லர்! – இந்தியா டுடே.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது இந்த அற்புதப் படம்!

#

 

 

 

 

 

 

        

 

    

பூஞ்சிட்டு – குழந்தைகளுக்கான மாத மின்னிதழ் – அன்னபூரணி தண்டபாணி

பூஞ்சிட்டு இதழைப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டவும் !

http://poonchittu.com

முன்னுரை

இந்த மின்னிதழில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது முழுக்க முழுக்க பெண்களாலேயே தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் மின்னிதழ்.

தொடக்கம்

கனவு காணுங்கள். உங்கள் கனவுகள் உங்களை தூங்க விடாது என்றார் டாக்டர் அப்துல் கலாம். அப்படி ஒரு கனவை டாக்டர் வித்யா அவர்கள் கண்டார். அந்தக் கனவை எங்களுக்கும் கடத்தினார். அந்தக் கனவு இன்று நிஜமாய் மாறியுள்ளது.

டாக்டர் வித்யா செல்வம், ஒரு மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர். சென்னையில் வேலை பார்க்கிறார்.

அவர் இதன் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

“நிஜமா மூன்று வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு குழுவில் உறுப்பினராகி, பெரிய எழுத்தாளர்களோடு, குழந்தைகளுக்கான இதழ் மாதாமாதம் கொண்டு வருவோம்னு சொல்லியிருந்தா நான் நம்பியிருக்கவே மாட்டேன். எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் சொல்றேன், பூஞ்சிட்டு என்னைப் பொறுத்தவரை ஓர் அழகிய கனவு.

எங்க குழு ஒரு கதை சொல்லும் குயில்கள் நிறைந்த பறவை கூட்டம். அந்த கூட்டத்துக்குள்ளே இருக்கிற சேவல் நான். பால் மாற்றி சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு . அதை அப்புறம் சொல்றேன். முதலில் இந்த பறவை கூட்டம் எப்படி ஒன்று சேர்ந்ததுன்னு சொல்றேன். எங்க கூட்டம் தானா சேர்ந்த கூட்டம்.

கொரோனா காலத்தில் கொரோனாவாலோ, அதன் கட்டுப்பாடுகளாலோ நம் இயல்பு வாழ்க்கை ரொம்பவே பாதித்திருந்தது. அதே 2020ல் அண்ணா குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டி நடந்தது.

நிறைய எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள, ஒரு முகநூல் குழு ஆரம்பித்துக் கொடுத்தார்கள். அந்த குழுவில் எல்லோரும் தங்கள் கதைகளைப் பகிர்வோம். கதைகள் பற்றிய கருத்துகளைப் பகிர்வோம்.

நாம் ஒவ்வொருவருக்கும் வாசிக்க ஆரம்பித்த பருவம், அந்த வாசிப்பு அனுபவம் நம் வாசிப்பு உலகத்தை வெவ்வேறு விதத்தில் விரியச் செய்யும். இப்போ என் பிள்ளைகளுக்கான வாசிப்பு உலகத்தைத் தேடும்போதுதான் ஆங்கிலத்தில் மேஜிக் பாட், டின் டின் போன்ற பல புத்தகங்கள் கிடைச்சது. ஆனா தமிழில் ரொம்பவும் குறைவான வாய்ப்புகளே இருக்கு. ஒரு குழந்தையின் சிந்தனை மற்றும் கற்பனை தாய்மொழியில் இருத்தல் அவசியம்கிற கருத்தை இன்று உலகம் முழுக்க உள்ள அறிஞர்கள் முன்னிறுத்துறாங்க.

தமிழில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான, அவர்கள் அறிவைத் தூண்டி விடுற மாதிரி, ஜாலியா நல்லவிதத்தில் பொழுது போக்குற மாதிரி பகுதிகள் கொண்ட புத்தகம் தமிழில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும். அது போல் நாம் ஏன் தொடங்கக் கூடாதுன்னு ஒரு போஸ்ட் போட்டேன்.

ஒத்த மனமுடைய பலர் கமென்ட்டில் ஆமோதிச்சாங்க. செய்யலாமேன்னு சீரியசா யோசிக்க ஆரம்பிச்சோம். ஆர்வமாய் இருந்தவர்களை இணைத்து தனியாகக் குழு ஆரம்பித்தோம். கலையரசியம்மாவும் அகிலாண்டபாரதி மேடமும் ஆசிரியர் பொறுப்பை எடுத்துகிட்டாங்க. முதல் முன்னெடுப்பு என்னுடையதுனால பெரிசா எழுத்துலகில் பெயர் இல்லாத நானும் ஆசிரியரானேன். என்ன பெயர் வைக்கலாம்னு பயங்கரமா யோசிச்சி பூஞ்சிட்டுன்னு முடிவு பண்ணினோம்‌. வெப்சைட் உருவாக்கினோம்‌. என்னென்ன பகுதிகள் வைக்கிறதுன்னு பேசி முடிவு செஞ்சோம். நிலா சோறு சாப்பிடும்போது அவங்கவங்க தனக்கு என்ன விருப்பமோ அதை சமைச்சி கொண்டு வருவாங்க, இல்லையா? அது போல ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கு எந்த பகுதியில் ஆர்வம் அதிகமோ அதற்கு பொறுப்பெடுத்தாங்க.

நான் ஏன் என்னைச் சேவல் சொன்னேன் தெரியுமா. ஒன்றாம் தேதி ஆனால் என்னோட வேலை கொக்கரக்கோன்னு கூவி குயில்களை எல்லாம் எழுப்பி அவங்க கிட்ட இருந்து அவர்கள் படைப்புகளை வாங்குவது. ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவுக்கு நடுவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம தங்கள் படைப்புகளை அனுப்புவாங்க.
இந்த பறவை கூட்டத்தில் இருக்கிற மயில்தான் அப்புசிவா சார். படைப்புகள் அவருக்கு அனுப்பப்பட்டு அவரோட வண்ண ஓவியங்களால் கதைகள், நம் எழுத்தாளர்களின் கற்பனைகள் மேலும் மெருகு பெறும்.

அப்புறம் அந்தந்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த மாத இதழ் ஆசிரியர் குழுவின் பரிசீலிப்பிற்கு பிறகு தளத்தில் வெளியிடப்படும்.

இந்த டெக்னிக்கல் பார்ட் செய்வது என் கணவர் திரு. செல்வம் மற்றும் நண்பர்கள்.

இன்னும் பல குழந்தைகள் கைகளுக்கு எங்க பூஞ்சிட்டு போகனும்னு எங்க எல்லோருக்கும் ரொம்பவே ஆசை. அது நடக்கும்போது எங்களுக்கு பெரிய உற்சாகம் வரும். சேலஞ்சை எல்லாம் அழகாய் சமாளித்து வெற்றி பெற எங்கள் இதழுக்கு கிடைக்கும் அங்கீகாரம் நிச்சயம் உதவும். அதற்கு இந்த குவிகத்தின் கலந்துரையாடல் பெரிதும் உதவி செய்யும்னு நம்புறேன்.” என்றார் டாக்டர் வித்யா.

வளர்ச்சி

பூஞ்சிட்டில் ஓவியம் வரைதல், கதை சொல்லல், பாட்டுபாடுதல், கைவேலை செய்தல் போன்ற போட்டிகள் பல நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளும் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள். திறமை இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு பெரிய மேடையாக பூஞ்சிட்டு இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.

பூஞ்சிட்டுக்கு தனி யூட்யூப் சேனல் உள்ளது. ஆரம்ப இதழ்கள் அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பூஞ்சிட்டின் பெரிய பலம் குழந்தைகள்தான். அவர்கள் உலகைப் பற்றி நன்றாகப் புரிந்த பெண் எழுத்தாளர்களின் எதிர்காலம் மிகவும் சவாலானதாகவே இருக்கும். குடும்பம், குழந்தைகள், அவர்கள் படிப்பு, தேர்வுகள், வேலை, படிப்பு, எழுத்துப்பணி என்று அவர்களுக்கு இருக்கும் இருபத்துநான்கு மணி நேரத்தில் பூஞ்சிட்டுக்கும் கொஞ்சம் நேரம் உண்டு.

ஆசிரியர் குழு

பூஞ்சிட்டு மின்னிதழில் ஒற்றுமையாகப் பல்வேறு நண்பர்கள் சேர்ந்து உழைப்பது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஆத்மார்த்தமானது. எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காத உன்னதமான பங்களிப்பை இவர்கள் அனைவருமே தருகிறார்கள்.

குழந்தைகளுடைய உலகம் மிகவும் விசித்திரமானது. அவர்களுடைய சிந்தனைகள் வேறு மாதிரியானவை. அதுவும் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மை அதிகம். வெளியுலக எக்ஸ்போஷரும் அதிகம். எதையுமே மிகவும் வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய அதீத ஆர்வத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவர்களுடைய ஆர்வத்தை சரியான வழிகளில் நாம் திசை திருப்ப வேண்டும். சேனலைஸ் செய்ய வேண்டும்.

அவர்கள் கேட்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு நாம் பொறுமையாக விடை தரவேண்டும். தட்டிக் கழிக்கக் கூடாது. கேள்விகள் மூலமாகவே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் அவர்கள்.

அவர்களுக்கு அறிவுரைகளைக் கூட மறைமுகமாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நேரடியாக சொற்பொழிவு தரமுடியாது. உட்கார்ந்து கேட்பதற்கு அவர்களிடம் நேரமோ, பொறுமையோ இல்லை.

அதற்காகவே அவர்களுடைய உலகத்தில் புகுந்து அவர்களுக்கு சரிசமமாக உட்கார்ந்து அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதைத் தான் பூஞ்சிட்டு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

இதுவரை பலமுறை குழந்தைகளுக்காக ஓவியப் போட்டிகள், சிறுகதைப் போட்டி , விமர்சனப் போட்டி என்று பல்வேறு போட்டிகளை நடத்தியிருக்கிறோம். குழந்தைகளைப் பல்வேறு வகைகளில் ஊக்குவிக்கும் முயற்சியை அவ்வப்போது செய்கிறோம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் நேரத்தைத் தன்பால் இழுத்து அடிமைகளாக்கி வைக்கும் டெக்னிகல் அரக்கர்கள் நிறைய நடமாடும் போது , குழந்தைகளுடைய கவனத்தைப் புத்தகங்களின் பக்கம் திருப்பி அவர்களை வாசிப்பை நேசிக்க வைப்பது பூஞ்சிட்டின் முக்கிய குறிக்கோள். பெரிய சவாலான விஷயம் இது.

பகுதிகள்

பூஞ்சிட்டு மின்னிதழில் இருக்கும் பகுதிகள் பற்றி அதன் ஆசிரியர்களுள் ஒருவரான டாக்டர் அகிலாண்டபாரதி அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்.

“கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் மிகுந்த ஆசையுடன் செல்லக் குழந்தை மாதிரி நடத்தி வரும் இதழ் இந்த பூஞ்சிட்டு.

ஒரு சிறுவர் இதழ் என்றால் கதைகள் புதிர்கள் ஓவியங்கள் இதெல்லாம் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

பூஞ்சிட்டு இதழில் பிற மொழிகளில் வெளிவந்த பிரபல சிறுவர் கதைகளை மொழி பெயர்த்து எளிமையான தமிழில் பிறமொழி கதைகள் என்ற பெயரில் கொடுக்கிறோம். இதில் நாடோடிக் கதைகள் முதல் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் வரை வெளியிடுறோம். நான் இதுவரைக்கும் உலக சிறுவர் இலக்கியங்களான Wizard of oz, five children and it, phenix and the carpet, wind in the willows, சீக்ரெட் கார்டன் போன்ற இலக்கியங்களைத் தொடராக நான்கு முதல் ஐந்து இதழ்களுக்கு வருவது போல் கொடுத்திருக்கிறேன்.

டாக்டர் வேலாயுதம். அவர் ஒரு சிறந்த உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மற்றும் பறவைகள் ஆர்வலர். அவர் மாதா மாதம், தான் எடுத்த சிறப்பான புகைப்படத்துடன் ஒரு பறவையைப் பற்றிய அறிமுகத்தையும் நம் தோழன் என்ற பகுதியில் கொடுக்கிறார். திருமதி கலையரசி அவர்களும் ஒரு பறவை நல ஆர்வலர் தான். அவங்களும் பறவைகள் பற்றிய அறிமுகம், டைனோசர் பற்றிய ஒரு தொடர் தந்திருக்கிறார்கள் .

நம்ம ஒவ்வொருத்தருக்கும் நம்ம வேலை சம்பாத்தியம் இது தாண்டி மனசுக்குப் பிடிச்ச விஷயம்னு ஒன்னு இருக்கும் இல்லையா? அதை குழந்தைகளுக்கு சொல்வது நமக்கு எப்பவுமே பிடிக்கும். உதாரணமா நாம விளையாடிய விளையாட்டுக்கள், நாம தேடி தெரிஞ்சுகிட்ட விஷயங்கள், கஷ்டப்பட்டு படித்த சமையல் குறிப்புகள் இதெல்லாம் அப்படிப்பட்டவை தானே! அத நம்ம வீட்டுக்கு குழந்தைகளுக்கு சொல்ற மாதிரி பூஞ்சிட்டு வாசகர்களுக்கும் சொல்றது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.

சுட்டி மித்துவம் பட்டாபி தாத்தாவும் என்கிற பெயரில் பாரம்பரியமா நாம விளையாடிய விளையாட்டுகளை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்த பகுதி இருக்கு. எண்ணும் எழுத்தும் என்ற பகுதியில் எளிமையா கணிதத்தை விளையாட்டு, புதிர்கள் மூலமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து கணக்கு நாளே வேப்பங்காய் கசக்கிற நிலைமையை மாற்றி அதிக ஆர்வத்துடன் படிக்கிற சூழ்நிலையை உருவாக்கும் தொடரிது.

புதிர்வனம் பகுதி சிக்கலான தமிழ் வார்த்தையை எளிமையாக குழந்தைகள் புரிந்து கொள்கிற வண்ணம் அறிமுகப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஊர்களுடைய பெயர் காரணத்தை சுவாரசியமான குறிப்புகளுடன் விளக்கும் பகுதி கதை கதையாம் காரணமாம்! கடந்த இதழில் பொய்மான் கரடு, மீமிசல் ஆகிய ஊர்களுக்கு எப்படி அந்த பெயர் வந்திருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நிறைவடையும்போது அது ஒரு மிக முக்கியமான தொகுப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

சிலருக்கு நடந்த கதைகளை அப்படியே சொல்வது பிடிக்கும், சிலருக்கு கற்பனைகள் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் ஃபேண்டஸி கதைகள் எல்லாருக்குமே பிடித்த ஒன்று. மாயவனம் என்ற தொடரில் ஷிவானி என்கிற சிறுமி, எப்படி சாக்லேட் மலையைப் பார்த்தாள்; அதில் ஐஸ்கிரீம் அருவி எப்படி கொட்டியது என்றெல்லாம் விளக்கும்படியாகவும் வியக்கும்படியாகவும் அருமையான தொடர் கதைகள் கதைத்தோரணம் பகுதியில் உள்ளன. அதே போல் கதைத்தோட்டம் பகுதியில அழகழகான குட்டி கதைகள் அறிவுரை கதைகள் இயற்கை பற்றிய கதைகள் உள்ளன.

அப்துல் கலாம் பக்கங்களில் வீட்டில் கிடைக்கிற பொருட்களை வைத்து எப்படி பல அறிவியல் தத்துவங்களை புரிந்து கொள்ளலாம் என்ற விளக்கம் உள்ளன.

சின்னக் குழந்தைகளுக்கான இதழ்தானே? பெரியவர்கள் பங்களிப்பு மட்டும் போதுமா? ஆமாம். குழந்தைங்களின் பங்களிப்பும் நிச்சயமாக உள்ளது. பத்து வயதான அனுகிரகாவின் நாலு கால் நண்பர்கள் என்ற கதை, பூஞ்சிட்டில் தொடராக வந்தது. பரிசாக வரும் ஒரு டி-ஷர்ட்டில் இருந்து படமாக இருக்கும் நான்கு மிருகங்கள் உயிரோடு வந்து குழந்தைகள் கூடவே உலவுவது போல ஒரு கதை. அது பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகமாக வெளிவந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எல்லா புத்தக கண்காட்சிகளிலும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக மிகக் குறைந்த வயதில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர் இவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவளை விட சிறியவனான யூகேஜி படிக்கும் கவின் கிருஷ்ணா சொன்ன கதைகள், கவின் சொன்ன கதை என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இவர் யார் தெரியுமா, பகுதியில் நமக்குத் தெரிந்த ஆளுமைகள், அவர்களை பற்றிய தெரியாத விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது சிறியவர் பெரியவர் என அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எளிமையான உணவுப் பொருட்களை குழந்தைகளே செய்து பார்க்கும் வகையில் அமைந்த பகுதி கூட்டாஞ்சோறு.

ஜிகினா பக்கங்களில் எளிய கைவேலைகள் நிறைய செய்து காட்டப்பட்டுள்ளது.

கற்றல் இனிது என்ற ஒரு வித்யாசமான பகுதி. அதாவது வளரும் குழந்தைகளுக்கு நம் வீட்டுக்குள்ளேயே நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக அந்தத் தொடர் உள்ளது. நம் வீட்டில வெள்ளை நிறத்தில் என்னென்ன பொருட்கள் உள்ளது; காலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் போன்ற நல்ல பண்புகளை சொல்லிக் கொடுக்கும் வகையில் இந்தத் தொடர் உள்ளது.

ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் நம்ம ஊர் மாமல்லபுரம் தொடங்கி அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட் உட்பட பல பகுதிகளை நமக்கு சுற்றிக் காட்டுவது போல் சிறுவர்களுக்கான அருமையான பயண கட்டுரைகள் உள்ளன.

குழந்தை பாடல்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பகுதி இது. பழைய மழலையர் பாடல்களையே பாடிக் கொண்டிருக்கும் பள்ளிகளில் இந்தப் பாடல்களை பாடச் சொல்லிக் கொடுத்தால் அது குழந்தைகளுக்கு புதுமையான அனுபவமாக அமையும்.

குட்டி பீமா அறிவியல் உண்மைகளை விளக்கக்கூடிய கற்பனை கதைகள் கொண்ட பகுதி இது. முதல்லில் ஒரு கற்பனைக் கதையைச் சொல்லி அதன் பின் அதில் இருக்கும் அறிவியல் உண்மைகளை உணர்த்தும் விதமாக அமைந்தது.

வழிகாட்டி

சிறுவர் எழுத்தாளர் விழியன், நண்பர்கள் கபிலன் காமராஜ், ரவிசங்கர் அய்யாக்கண்ணு போன்றவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறந்த புகைப்படக் கலைஞரும் மற்றும் பறவை ஆர்வலருமான டாக்டர். வேலாயுதம் அவர்களின் பங்களிப்பிற்கும் பூஞ்சிட்டு குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய மின்னிதழில் தொடராக வந்த ஒரு கதையும், டாக்டர். அகிலாண்டபாரதி எழுதிய பிறமொழிக் கதை, மாமல்லபுரம் பற்றிய சுற்றுலாத் தொடர் பிரேமா ரவிச்சந்திரன் எழுதியது இவை இரண்டும் தனிப் புத்தகங்களாக ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன.

குழந்தை அனுக்ரஹா கார்த்திக் எங்கள் இதழில் எழுதிய தொடர்கதை, நாலுகால் நண்பர்கள், பாரதி புத்தகாலயம் வாயிலாகப் புத்தகமாக வந்துள்ளது. பூஞ்சிட்டு இதழில் தொடர்களாக வெளிவந்த பல கதைகள் தற்போது அச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் எதிர்பார்க்கிறோம். இதற்காகவே முயற்சி எடுத்து எங்களுக்கு உதவி செய்கிற புலம் லோகநாதன் அவர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றி.

பூஞ்சிட்டையும் அச்சில் கொண்டு வருவதற்கு அகிலாண்டபாரதி தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விரைவில் எங்களுடைய கனவு நனவாகும் என்று நம்புகிறோம்.

முடிவுரை:

நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன. புதிது புதிதாக நிறையப் பகுதிகளை அறிமுகம் செய்ய வேண்டும். குவிகம் குழுவில் இருக்கும் அனுபவமிக்க எழுத்தாளர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், உங்களுடைய கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் சுவாரஸ்யமான பகுதிகள், புதிர் விளையாட்டுகள் , அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள் இவை போன்ற பகுதிகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் அவர்களின் வரிகளையும்,
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும் , நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும் என்ற பாரதியின் வரிகளையும் நினைவில் நிறுத்திக் கொண்டு புதிய உற்சாகத்துடன் நிச்சயமாக செயல்படுவோம். காரியத்தில் உறுதியை நிச்சயமாகக் காட்டுவோம்.

♥♥♥♥♥

 

குறுக்கெழுத்து -சாய் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி

 

இந்த மாதத்திற்கான குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இங்கே :

https://beta.puthirmayam.com/crossword/925EE1E17C

உங்கள் விடையை 18 ஆம் தேதிக்குள் அனுப்பிவிடுங்கள். சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல்  முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட   ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும். 

 

சென்ற மாதத்தின் சரியான விடை : 

 சரியான விடை எழுதியவர்கள்: 

1. ஆர்க்கே

2. நாகேந்திரபாரதி 

3. மனோகர் 

4. ஜெயா ஸ்ரீராம் 

5. ரேவதி ராமச்சந்திரன் 

6. வைத்தியநாதன் 

7. உஷா ராமசுந்தர் 

8. மெய்யழகி    

9. கல்யாணராமன் 

10. தாமோதரன் 

11. ராமமூர்த்தி

12. கற்பகம் 

13. துரை தனபாலன்  

 

இவர்களில் குலுக்கல் முறையில் வென்றவர் : மெய்யழகி    

வாழ்த்துக்கள் 

 

ஆஸ்கார் 2023 – இரண்டு பரிசு இந்தியாவிற்கு

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில்  ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் வரும்  ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. பாடல் எழதிய  கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவருக்கும் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. 

இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு இந்தியப் படத்தில் வந்த  பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இதில் பாராட்டப்படவேண்டியவர்கள்  இயக்குனர் ராஜமவுலி ,பாடல் எழுதியவர்கள் கீரவாணி  & சந்திரபோஸ் , இசை கீரவாணி , நடித்தவர்கள் என் டி ராமராவ் ஜுனியர் & ராம் சரண், பாடியவர்கள் ராகுல் சிப்ளிகஞ் ,& காலா பைரவா  , நடனம் அமைத்தவர் பிரேம் ராக்சித் 

 

அதேபோல் முதன்முறையாக  ஆவண குறும்படத்திலும் இந்தியா பரிசு பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

சிறந்த ஆவண குறும்படம் (Best Documentary Short) பிரிவில் ‘The Elephant Whisperers’ விருது வென்றுள்ளது. தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் யதார்த்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதுமலையில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை இயக்கியவர் கார்த்திகி கோன்சால்வாஸ் . தயாரிப்பாளர் குனீத் மோங்கா ! 

 

95th Oscars See the academy awards 2023 Full List of Winners Here

 

 

சேட்டை ஜேப்படியுடன் ( chat  gpt ) யுடன் ஒரு நேர் காணல் ) – நாகேந்திர பாரதி

Is ChatGPT The End Of Traditional Search Engines—Web3 Innovation - OmiSoft

தமிழும் ஆங்கிலமும் கலந்த இந்த நேர்காணலில் chatgpt யின் வெளிப்படைத் தன்மை என்னைக் கவர்ந்தது . அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . நன்றி – நாகேந்திர பாரதி 

நாகேந்திர பாரதி:

Please write a tamil poem on love

CHATGPT: 

காதல் பாடல்

பார்த்தால் கண்கள் நடுவில் உயிர் வாழும்

மற்றும் உன் நினைவுகள் என் உயிரை மூடும்

பாடாமல் பேசிப் பார்க்க முடியாத நெஞ்சம்

உன்னிடம் இருக்க வேண்டும் நேரம் காதல் நேசம்

 

நான் உன்னை காண என் வாழ்வின் மூலம்

நீ உயிரை வாழ என் காதல் வார்த்தைகளின் மூலம்

என் கண்கள் உன் கண்களை பார்க்க வேண்டும்

உன்னிடம் இருக்க வேண்டும் நேரம் காதல் நேசம்

 

போராட்டம் இன்றும் காதலின் போராட்டம்

உன் நினைவுகள் இன்றும் என் உயிருக்கு சாய்ந்தால்

என் கண்கள் உன் கண்களை பார்க்க வேண்டும்

உன்னிடம் இருக்க வேண்டும் நேரம் காதல் நேசம்

 

உன் கண்கள் உன்னை காண என் உயிர் நான் என்னை காண வேண்டும்

நீ உ

நாகேந்திர பாரதி:

Thank you

CHATGPT: 

You’re welcome! It was my pleasure to write a Tamil poem on love for you. If you have any other questions or requests, feel free to ask!

நாகேந்திர பாரதி:

What is that நீ உ at the end of the poem

CHATGPT: 

I apologize for the mistake in my previous response. The phrase “நீ உ” was mistakenly left incomplete and it has no meaning on its own. It was a typo that occurred due to an interruption in my system. Here’s the corrected version of the last stanza of the poem:

உன் கண்கள் உன்னை காண என் உயிர் நான் என்னை காண வேண்டும்

நீ உயிரை வாழ என் காதல் வார்த்தைகளின் மூலம்

 

The correct meaning of the stanza is:

“My eyes should see you, and my soul me.

You should live for me, through the words of my love.”

நாகேந்திர பாரதி CHATGPT இருவருக்குமான உரையாடல் இதற்குப் பிறகு  நிறைய நடை பெற்றது.

அவற்றை நாம் நமது அடுத்த மாதம் (ஏப்ரல் ) நடைபெற இருக்கிற குவிகம் அளவளாவல்   CHATGPT HANDS ON  நிகழ்வில் காணலாம்.!

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

 வலி கொடியது

 

sundararajan | குவிகம் குழுமம் - குவிகம் மின்னிதழ் | Page 25ஒரு மாலை நேரம். உயர்ந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. அகன்ற அறையில் அந்த அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் வயது ஐம்பதுக்குள் இருக்கும். பெரிய மேஜையும் அவரைச்சுற்றி இருந்த தொலைபேசிகளும் அவர் பதவியை பறை சாற்றின.

சமீப காலத்திய பழக்கம் என்றாலும் எங்கள் இருவருக்குள் தொழிலையும் மீறிய ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது.அன்று எனது வேலை முடிந்தவுடன் பேச்சு சமீபத்திய என் மனைவியின் மரணம் பற்றி திரும்பியது.

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் முகத்தில் ஒரு இனம் புரியாத சோகத்தினையும் கண்களில் சில துளிகள் நீரையும் பார்க்க முடிந்தது. ஏற்கனவே சில முறை இதைப்பற்றி பேசி இருக்கிறோமே ஏன் திடீரென உணர்ச்சி வசப்படுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சார்?என்ன ஆச்சு?” என்றேன்.

“மரணத்தின் வலியை நான் ரொம்பவும் அனுபவிச்சிருக்கேன் சார்” என்றவர் தொடர்ந்தார்.

எனக்கு சிவகங்கையிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம் தான் சொந்த ஊர்.

என் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்தேன். அதன்பின் எல்லாமே என் தாய்தான். வறுமையான குடும்பம். என் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு  பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். எனக்கு எப்படி என் தாய்தான் உலகமோ அதுபோல அவருக்கும் நானே உலகம். பள்ளி விட்டவுடன் என் வயதினர் விளையாட ஓடும் பொழுது நான்அம்மாவைப் பார்க்க ஓடுவேன். அம்மாவின் அன்பிலும் ஸ்பரிசத்திலும் நான் வறுமையை உணரவில்லை.

உறவுகளின் துணையோடு தொழில் கல்வி முடித்தேன். அத்தருணத்தில்தான் உழைத்து ஓய்ந்த என் அம்மாவின் தள்ளாமையை கண்டேன். அம்மாவை உட்கார வைத்து இளைப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.  என் போன்று வளர்ந்த அனைவர்க்கும் தோன்றும் மனதின் வெறியே.

ஊரிலோ அருகிலோ என் தொழில் கல்விக்கு ஏற்ற வேலை யில்லை. நண்பர்கள் அறிவுறுத்தலோடு சென்னை செல்ல முடிவெடுத்தேன்.

 “கவலைப்படாதீர்கள் அம்மா நம் துயரம் இன்னும் சில காலம் தான் வேலையோடு சேர்ந்து ஒரு வீட்டையும் பார்த்து  வருகிறேன்” என்றேன் அம்மாவிடம்.

அம்மா என்றும் மாறாத புன்னகையுடன் என் உச்சியில் முத்தமிட்டு,நெத்தியில் விபூதியிட்டார். பின் புடவையில் முடிந்திருந்த நூறு ரூபாவை என் பையில் தினிக்கும் பொழுது அவர் கண் கலங்கியது. என் கண்களும்தான்.

கையில் பையுடனும் ஒரு நண்பரின் முகவரியுடனும் சென்னை வந்திறங்கினேன்.

நண்பரின் முகவரி சரிதான். ஆனால் நண்பர்தான் அங்கில்லை. எங்கெங்கோ தங்கி சில நாட்களில் என் கணவுக்கேற்ற வேலையும் அழகிய சிறு வீடும் வாடகைக்கு கிடைத்தது.

பையில் முதல் மாத சம்பளம், அம்மாவிற்கு நான் ஆசையுடன் வாங்கிய புடவை. மனதில் சந்தோஷத்தோடு பயணித்தாலும் பத்துமணி நேர பயணம் பல நாட்களாக பயணிப்பது போலிருந்தது அம்மாவைக் காண ஆவலில்.

அதிகாலை பஸ்ஸிருந்து இறங்கி தெருவில் நடக்கிறேன். மூன்றாவது வீடே என் மாமாவின் வீடுதான். மாமா திண்ணையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். என்னைப்பார்த்தவுடன் இறங்கி வீதிக்கு வந்து என் கையைப்பிடித்துக்கொள்கிறார்.

“என்ன ராஜா, ஒரு கடுதாசியாவது போடக்கூடாதா? எவ்வளவு தவிச்சுப்போயிட்டோம்.” என்றார்.

“என்ன ஆச்சு மாமா”  என்றேன்.

“ஒன்றுமில்லை, வா வீட்டுக்கு போகலாம். இரு சாவியை எடுத்து வருகிறேன்.” என்று உள்ளே சென்று சாவியை எடுத்து வந்தார்.

சற்று குழப்பத்துடன் அவர் பின்னே சென்று வீட்டினில் நுழைகிறேன்.

அங்கு அம்மா போட்டோவில் மாலையுடன்.

மாமாவின் குரல் கிணற்றிலிருந்து கேட்டது

“தங்கச்சி, திடீரென மயங்கி விழுந்ததுப்பா. ஆஸ்பத்திரிக்கு போரதுக்குள்ளே முடிஞ்சிருச்சு. உன்னை பட்டினத்தில கண்டு பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். நீ இருக்கிற இடத்த கண்டு பிடிக்க முடியல. நாங்களே எல்லாம்தையும் முடிச்சிட்டோம்பா”  என்றார்.

இப்ப சொல்லுங்கள் சார். மரணத்தின் வலியை என்னை விட யாராவது அனுபவிச்சிருக்க முடியுமா என அவர் கேட்ட போது என் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது…

“நிராகரிப்பும் கவனிப்பும்!” – மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Aval Vikatan - 21 February 2017 - சிறுகதை - விடிவெள்ளி | Short Story - Aval  Vikatan - Vikatan

“கருப்பட்டி வெல்லம்” என்று செல்லப் பெயரிட்ட எட்டு வயதானவனை அவன் அம்மா தேன்மொழி அழைத்து வந்திருந்தாள். அலுவலக மருத்துவர் பார்க்கச் சொன்னதாக அலுத்துக் கொண்டு தெரிவித்தாள். பள்ளிக்கூடம் தந்திருந்த கடிதத்தையும் தந்தாள். மறுவினாடி மேஜையில் தின்பண்டங்களைப் பரப்பி, பையனைப் பார்த்து “கருப்பட்டி வெல்லம் சரியாகப் பதில் தந்தால் தான் இதெல்லாம்.” வியப்புடன் தலையை அசைத்தான்.

மூன்றாம் வகுப்பில் படிக்கும் இவனுடன் எளிதாகப் பரஸ்பர ஒத்துணர்வை ஏற்படுத்த முடிந்தது. “கருப்பட்டி வெல்லம்” தனது பெயர் மணி என்று தொடங்கியவன் அம்மாவைப் பார்த்த மறுகணமே நிறுத்திவிட்டான்.‌ ஒரு கடலை மிட்டாய் எடுத்து தேன்மொழி அவனுக்குத் தந்து, “என்னைக் கேட்காமல் எதையும் சொல்லவோ செய்யவோ மாட்டான். செய்தால் இது எதுவும் கிடையாது” எனக் கூறினாள்.

தேன்மொழியிடம் அழைத்து வந்த காரணத்தை விளக்கச் சொன்னேன். நிலவரத்தைச் சொல்ல ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில், “கருப்பட்டி வெல்லம்” என்றதும் “சொல்ல மாட்டேன்” என மணி சொன்னான்.‌ அமைதியாக இருந்துவிட்டாள் தேன்மொழி. உரையாடல் பலவற்றைச் சொன்னது.‌ தேன்மொழியை வெளியே உட்காரச் சொன்னேன்.

மணியைப் பள்ளிக்கூட அனுபவங்கள், இன்னல்களை  விவரிக்கச் சொன்னேன்.‌ ஆரம்பிப்பதற்குள் தேன்மொழி உள்ளே நுழைந்தாள். மேஜை மீது கை போனது. சாப்பிட எதையும் தரவேண்டாம் என்றேன். திகைத்துப் பார்த்தாள்.

மணி ஆங்கிலம் பேச, எழுதக் கடினம் என்றான். ஏன் அவ்வாறு என்று விளக்கச் சொன்னேன். அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் ஒன்றும் சொல்லாததால் பேசாமல் இருந்தான். தேன்மொழியிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா எனக் கேட்டதற்கு,‌ இல்லை என்றதும் மணியிடம் அம்மாவிற்குத் தெரியாததால் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

உடனே மணி, ஆங்கிலத்தில் பேசப் பார்த்தால் அம்மா கோபமடைவதை விவரித்தான். அம்மாவிற்குத் தலை சுற்றுவது போல தனக்கும் நேருகிறது என்றதும் தேன்மொழி அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். அதைக் மணி கவனிக்காததால் தழதழத்த குரலில் ஆங்கில வகுப்பில் பலகையில் எழுத அழைத்ததுமே, பிழை நேர்கிறது,  அம்மாவுக்குத் தெரிந்து விடுமோ என்று நினைத்ததுமே தலைசுற்றுமாம்.

தவறுகள் நேர்ந்தால் தின்பண்டங்கள் கிடையாது. “சிவா அப்பா போலவே நீ ” எனச் சொல்லி அடிப்பதால், ஆங்கிலத்தால் ஆகிறது என்று ஆங்கிலம் விரோதமானது.

தலைச் சுற்றல் விடுமுறைகளில் வருவதில்லை! பள்ளி நாட்களில் படிப்பதை அம்மா கவனித்தபடி இருப்பாள். மணிக்குத் தலைச்சுற்றல், உடல் உபாதை வந்துவிடும். இதனால் பள்ளிக்குப் போகாமலிருந்தால் அம்மா கூடவே இருப்பாள். இரவு பத்து மணி வரை பாடம் படிப்பது தொடரும்.

பள்ளிக்குப் போவதால் படிப்பு, அம்மா கூர்ந்து கவனிப்பதும் அடிப்பதும்.‌ பள்ளி இல்லையேல் இவை நேராது என மணி புரிந்து கொண்டான்.

பள்ளிக்குப் போகாமலிருப்பது அதிகமானது. தேன்மொழியும் வீட்டிலிருந்தாக வேண்டும்!  வேலை இடத்திலும் பள்ளிக்கூடத்திலும்  எச்சரித்ததால் மணியை அழைத்து வந்தாளாம். தின்பண்டங்களைச் சேகரித்து “மணி உனக்கு கிடையாது” என்றாள். மணி விவரித்தவற்றை இப்போதுதான் கேட்பதாகக் கூறி, முகம் கடுகடுக்க, “என் கருப்பட்டிக்கு இல்லை. நீ சிவா” என்றாள். அம்மாவின் கோபத்தைப் பார்த்து மணி பயந்தான்.

கவனத்தைத் திருப்ப, மேஜையிலிருந்த பண்டங்களை மணியை மீண்டும் பையில் வைத்து, வெளியே உட்கார்ந்தபடி பண்டங்களை வரைந்து, தெரிந்த பாஷையில் பெயரிடச் சொன்னேன்.

ஏழு நிமிடத்தில் ஆர்வமாக உள்ளே ஒடி வந்த மணி எழுதியதைக் காட்டினான். ஓரிரண்டு ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் பார்த்துப் பாராட்டினேன். தேன்மொழி முகம் சுளித்தாள். மணி வருத்தத்துடன் வெளியேறினான்.

தேன்மொழியிடம் பிடிக்காத பத்தை எழுதச் சொல்லிவிட்டு மணியுடன் ஸெஷன் தொடங்கினேன். தன் நண்பர்கள் ஸாகேத், ரூபேஷின் அம்மாவின் செயல்களை விவரித்து, தேன்மொழி என்றைக்குமே அன்பாகப் பாசமாக ஆசையாகப் பார்த்துக் கொண்டதில்லை என வருத்தப் பட்டான் மணி. தன்னைப் பிடிக்கவில்லையோ?

ஒன்றைப் பெறுவதற்கு வேறொன்று செய்தால், எங்கள் துறையில் லஞ்சம் என்போம்! அம்மா விருப்பம் போல நடந்தால் மட்டுமே தனக்கு நன்மை. நண்பர்களுடன் பழகத் தடை ஏன் என்று  அம்மாவைக் கேட்கக்கூடப் பயம்!

பொருத்தமான சிறிய பாட்டுகளை வர்ணிப்புடன் அறிமுகம் செய்தேன். பாடப் பாட, உச்சரிப்பில் கவனம் செலுத்தினோம். கடுகளவு தைரியம் தென்பட்டதும் எமிலீ டிக்கின்சன், ஆர். எல். ஸ்டீவென்ஸனின் குழந்தைகள் கவிதை, கதைகளைப் படித்ததை, நிழலாக மணி ஆங்கில வரிகளைக் கூட்டிப் படித்தான். முயற்சிகளைப் பள்ளியில் பாராட்டினார்கள். நாட்கள் ஓடின. புரியாத ஆங்கிலத்தைப் படித்து, எழுதினான். விளக்கம் கேட்க முடிகிறது என மணி மகிழ்ந்தான்!

கூடவே தேன்மொழியுடன் ஸெஷன்கள் போய்க் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது பிழைகளால் தண்டனைகளைச் சந்தித்ததால் தவறு செய்யவே கூடாது என எண்ணி, அதுவே கொள்கையானது. மணியின் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதலித்துக் கணவனான சிவா போல வளர்ந்து விட்டால்? இந்த ஆதங்கங்கள் கோபமானது. சரிக்கட்டத் தின்பண்டங்கள்.

சிவாவை விரும்பி காதலித்து மணந்திருந்தாள். இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

கணவனைப் பற்றி மேலும் பேசுகையில், சிவாவின் பெற்றோரும் உற்றுக் கவனிக்கும் கண்டிப்பானவர்கள் என்று கூறினாள். அவர்களுக்குத் தெரியாமல் சிவா செய்ய முடிந்தது, காதலிப்பதுதான். செய்தான். பெற்றோரிடம் கூறாமல் கல்யாணம். தன் வெற்றி என்றான்.

கல்யாணத்திற்கு பிறகே சிவாவிற்கு எழுதப் படிக்க இயலாததைக் கவனித்தாள். தன்னை விட மந்த புத்தி எனத் தோன்றியதும் வீட்டிலிருந்து வெளியேற்றினாள். வெளி உலகினருக்கு ஓடி விட்டான் என்றாள்.

கசப்பான பள்ளி அனுபவங்களுப்பின் மணி வீடு திரும்பியதும் படிக்க, செய்ய வேண்டியவற்றின் பட்டியல் உண்டு. பலமுறை சொன்னால் மட்டுமே செய்வான். தேன்மொழி தனக்குத் திருப்தி தரும் வரை மணியைச் செய்ய வைப்பாள்.  ஸெஷனில் இதை ஆராய்ந்ததில் இது பர்பெக்ஷனிஸம் (perfectionism) என அடையாளம் கண்டுகொண்டாள்.  இதனால் மணிக்கு ஏற்படும் சிரமம், சலிப்பைப் புரிந்து கொள்ளவில்லை. மணிக்கு உடன்பாடு இல்லை என்பதால் செய்ய வைக்க லஞ்சம் கருவியானது.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதைப் போல் செயல்படுகிறோம் என்றதை உணர்ந்து வந்தாள். தேன்மொழி உபயோகிக்கும் கருவிகளை வரிசைப் படுத்தினோம்.

மணிக்கும் அவளைப் போலவே தலைச்சுற்றல் போன்ற உடல், மன உபாதைகள் உண்டாகுவதை கற்றுத் தரும் பாடங்களை உபயோகித்து விவரித்தேன். 

அடுத்ததாக மகனைக் கருப்பட்டி வெல்லம் என அழைப்பது மணிக்குச் சம்மதமா? தேன்மொழி, இவ்வாறு அழைக்கும் போது மணி கூச்சப்படுவது பிடிக்கும் என்றாள். உடல் நிறத்தைக் குறிப்பிடுவதால் சிந்திக்கச் செய்தேன். கணவன் வைத்த பெயரைச் சொல்ல நா வரவில்லை, அவன் ஞாபகம் வருவதாலும், நிறம், சாயல் கணவனைப் போல இருப்பதாலும் உள்மனத்தில் மணியைப் பிடிக்கவில்லை என்றதால் மணியின் அவஸ்தை மனதைத் தொடவில்லையாம்.

மணியுடன் ஸெஷன் சென்று கொண்டிருந்தது. அவனும் அம்மாவிற்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதற்குப் பல நிகழ்வுகளை உதாரணம் கூறினான். இந்நாள் வரை அவனைக் குளிப்பாட்டி, சாப்பாட்டு ஊட்டுவதும் தேன்மொழிதான். அவனாகச் செய்ய முயன்றால் கோபித்துக் கொள்வதால் செய்வதில்லை. பாடங்களுக்கு விளக்கம் கேட்டால் எப்போதும் அப்பன் சாயல் எனக் கேலி, கிண்டல் செய்வாள்.

எங்கள் மனநல துறையில் பிரபலரான எரிக் எரிக்சன் (Erik Erikson) சொல்வது, பள்ளி வயதான ஆறிலிருந்து பன்னிரண்டு வயதுவரை திறன்கள் உருவாகும் நிலை. அதற்குக் குழந்தைகள் பலவித உழைப்பில் ஈடுபடுவது  நன்கு. தாயால் ஒரு வழியில் நிராகரிக்கப்படுவதை மணி உணர்ந்து, அது அவனுடைய நிலைக்குக் காரணியானது.

தேன்மொழி ஸெஷனில் தனது வாழ்க்கை நினைவுகள், மகிழ்ச்சியான காலங்கள், மனவலி, பற்றிப் பகிர்ந்தாள். மணியின் கர்ப்பத்தின் போது கணவனின் குறைபாடுகளைக் கவனித்தாள். வெறுக்க ஆரம்பித்தாள். கர்ப்பமான நிலையில் கணவனின் சம்பாத்தியம் தேவைப்பட்டது. இருக்க விட்டாள்.‌ பிரசவ வலி கணவரால் என வெறுத்தாள். மணி பிறப்பதும் பிடிக்கவில்லை.‌ மருத்துவமனையில் மருத்துவர்கள் வற்புறுத்தியதால் தாய்ப் பால் தந்தாள். இரண்டாவது மாதத்தில் நிறுத்திவிட்டாள்.

Kalathur Kannamma (1960) - IMDbமணி உடல்நிலையில் உபாதைகளைச் சந்ததிக்கும் போதெல்லாம், ஏன் பிறந்தான் என வருந்தினாள். மனம் குறுகுறுத்தது. ஈடுகட்ட, அவனுக்கு எல்லாம் செய்வதும் தின்பண்டங்கள் திணிப்பதும், தன் உள்ளுணர்வை யாரும் அறியாமல் இருக்கவே! தன் செயலால் மணியைக் கணவனைப் போல உருவாக்கி அவளுடைய எதிர்பார்ப்பை எட்ட முடியாத நிலை உருவாக்கி வருவதை அறியவில்லை.

அவர்கள் தெருவிலேயே வேரொரு வீட்டில் மணியைத் தேன்மொழி அடிக்கடி விட்டு விடுவாள். வருடங்கள் போக, மணியை நாங்களே வளர்க்கவா எனக் கேட்டார்கள். கணவன் சாயலான மணியைக் கொடுத்துவிடத் தேன்மொழி நினைத்தாள்.

அதே சமயம் ஸெஷனுக்கு அழைத்து வரும்போது பரபரப்பாக வருவதும், காலில் சுடுதண்ணீர் விழுந்தது போலத் திரும்புவதையும் உணர்ந்தாள். தன் கட்டுப்பிடிப்பை விட்டு விட விருப்பப்படவில்லை.

தன்மேல் அக்கறை கொள்ளாததை மணி அறிந்துகொண்டது தேன்மொழியை ஆச்சரியப் படுத்தியது. பள்ளியில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தேன்மொழியிடம் சொல்லும் போது, ஆறுதல் சொன்னதில்லை.

சிவா போலவே இருப்பதே காரணி என்றாள். அதனால் தான் அவனைப் பக்கத்தில் விட்டுவிடுவதாகக் கூறினாள். நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இவனுக்கு ஈடான வயதில் மகன் உண்டு. மணியை வளர்ப்பதைச் சொன்னதும் முறையாக எடுத்துக்கொள்ள எங்கள் குழுவின் வக்கீலைச் சந்திக்கப் பரிந்துரைத்தேன்.

வளரும் வயதில் சூழலுக்கு முக்கிய பங்குண்டு. உடல் மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் நிராகரிக்கப்பட்ட மணிக்கு இவர்களின் அன்பு, பாசம் தேவையே!

 

கால(ன்)ச்சக்கரம் – ரேவதி ராமச்சந்திரன்

காலண்டரில் தேதி கிழித்த கீதா சந்தோஷமடைந்தாள். இன்று மார்ச் 8. உலக மகளிர் தினம். போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் அவள் கணவர் சங்கர் என்ன பரிசு வாங்கி வரப் போகிறார். ஆவலுடன் சாயங்காலம் வரை காத்திருப்போம். அதோடு இந்த வருஷம் பிளாட் மாடியில் நடக்கும் சின்ன விழாவிற்கு தேங்காய் சாதம் செய்வதாகக் கூறியுள்ளோம். அதற்கு தேங்காய் திருவ வேண்டும் என்று தேங்காயைக் கையில் எடுத்தாள்.        

காலண்டரில் கண் மறுபடி போயிற்று. அடடா இன்னும் இரண்டு மாதங்களில் எழுபதாவது பிறந்த நாள். கீதாவிற்கு வியப்பு! ‘நமக்கா, எழுபதா, கிடுகிடு கிழவியாகிறேனா! சின்ன வயதில் ஒவ்வொரு பிறந்த நாளையும் எவ்வளவு சந்தோஷமாகக் கழித்தேன்! பிறகு என் அக்கா கொடுக்கும் சின்ன சின்ன அழகான (எல்லாமே புதிதாக, அழகாக இருக்கும்) பரிசுகளுக்காகக் காத்திருந்தேன். அதன் பிறகு என் பிள்ளைகள் நடு இரவில் எழுப்பி வாழ்த்துச் சொல்வதை தூக்கக் கலக்கத்தோடு கேட்டு மறுநாள் இரசிப்பேன். இப்போது பேரன் இராத்திரி பன்னிரெண்டு (நாம் என்ன மேல் நாட்டிலா இருக்கிறோம்?) தன் பிஞ்சு கைகளால் கண்ணைப் பொத்தி அழைத்துக் கொண்டு போய் கேக்கை தான் வெட்டி (யார் பிறந்த நாளாக இருந்தாலும் சரி) டேஸ்ட் பார்க்கிற மாதிரி பாதி கேக்கை முடித்து விடுவான். இந்த வருடம் 6 லிருந்து 7 க்குத் தாவப் போகிறான்’ என்றெல்லாம் எண்ண அலைகள் மனத்தில் ஓடின. கணவரும், பிள்ளையும், பெண்ணும் கூடி கூடிப் பேசி ஏதோ ஏற்பாடுகள் செய்வது தெரிகிறது. சந்தோஷமாக இருந்தாலும் சிறிது அச்சமும். கீதாவிற்கு நம்ப முடியவில்லை. இந்த வருடம் ஏதாவது புதிதாக, அரிதாக, மனித இனத்திற்குப் பயன்படும் வகையில் செய்ய வேண்டும். யோசித்து அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.

கண் திறந்து பார்த்தால் எதிரே ஒரு வட்டமான பெரிய உலோகத்தட்டு கண் முன்னே இருந்தது. ஏதோ எழுதியிருந்தது. கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தாள் ‘இது காலச் சக்கரம். இதன் மீது ஏறி நின்று கொண்டு ஒரு முறை சுற்றினால் பத்து ஆண்டுகள் பின்னே போகும்’. ‘ஓ எனக்குக் கூட இதில் ஏறி சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது’ என்று எண்ணிக்கொண்டே ஏறி ஆசையில் வேகமாக ஆறு முறை சுற்றினாள். ஓ இதென்ன 10 வயதுக் குழந்தை. 5 பைசே (இந்தக் காலத்தவர்கள் யாரும் அதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்) அப்பாவின் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போய் பொட்டுக்கடலை (வேர்க்கடலை 5 பைசேவிற்கு 5 கூட வராது) வாங்கித் தங்கையுடன் உடன்படிக்கை (யாருக்கும் சொல்லக் கூடாது என்று) செய்து பகிர்ந்து கொண்டாள். பக்கத்து வீட்டுப் பையனுக்கு, வீட்டில் யாருக்கும் தெரியாமல், தன் நோட்டிலிருந்து இரண்டு பேப்பர் கிழித்துக் கொடுத்தாள் (நோட்டிலிருந்து கிழிப்பது பெரிய குற்றம்). இவை குழந்தைப் பருவத்து விளையாட்டு என்றாலும் சொர்க்கத்தில் இருக்கும் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மறுபடியும் சக்கரத்தில் ஏறி நின்று ஒரு சுற்று சுற்றியதில் 20 வயது. வருஷத்திற்கு ஒருமுறை அழைத்துச் செல்லும் சினிமா ‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றி பக்கத்து வீட்டுப் பையனுடன் அம்மாவிற்குத் தெரியாமல் ஒரு சின்ன அரட்டை. இப்போது போலவா எப்போதும் காதில் ஒட்டிக்கொண்டு செல்போன்! (அப்போதெல்லாம் நண்பி (நண்பனது பெண்பால்) வீட்டிற்கு செல்வதற்கு அனுமதி வேண்டும்). இதற்கும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மறுபடியும் ஒரு சுற்று. 30 வயது. கல்யாணம், கணவர், குழந்தைகள். எதையும் ஒளிவு மறைவின்றி செய்யும் சுதந்திரம். ஆனால் வீடு, ஆபீஸ், வேலைக்காரி லீவு, வேறோர் உதவியின்மை என்று கஷ்டப்பட்டதில் கத்தல் ஆரம்பமாயிற்று. ஆபீஸில் காட்டமுடியாத ஆதங்கத்தை வீட்டில் காட்டலாயிற்று. பாவம் குழந்தைகளும், கணவரும். இதற்கு அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் வீட்டில் இருந்தால் மிகவும் உதவி செய்வார்கள்.

மறுபடியும் ஒரு சுற்று. 40 வயது. மெதுவான முதுமை. இயலாமை. ஆனால் மன திடம். சிறிது சிறிதாக வாழ்க்கை புலப்படலாயிற்று.

 மேலும் ஒரு சுற்று. 50 வயது. தேகத்தில் தெம்பு குறைய மனத்தில் தைரியம், உறுதி, புரிந்து கொள்ளல், நேர்மறை எண்ணங்கள் என்று மேம்படலாயிற்று.

ஒரு சுற்று. 60 வயது. பேரனை அழைக்கும்போது நம் மேல் மோதி அழ ஆரம்பித்தான். அவனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஆனால் மெல்ல வாழ்க்கை புரிபடலாயிற்று. இத்தனை சின்ன விஷயத்திற்கா கோவப்பட்டோம், ஆசைப்பட்டோம்! சரி யாரிடமெல்லாம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கீதா நினைக்க ஆரம்பித்தாள். அப்பா அம்மா, அக்காள், தம்பி, கணவர், எதிர் வீடு, அடுத்த வீடு, அவசரமாக சில நாட்கள் பூஜை செய்ததில் கடவுள் இப்படி நீண்டு கொண்டே போகிறது. திடுமென்று ஒரு சத்தம் கேட்கவும் எழுந்து உட்கார்ந்தாள். ஓ இது வரை கண்டது கனவோ! பரவாயில்லை. இதுவும் நல்லதிற்குத்தான்.                   

நடு கூடத்தில் ஆசை ஆசையாகப் போட்ட ஊஞ்சலில் ஆடிக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். ‘மன்னித்து விடு’ இது இப்போது சகஜமாகி விட்டது. தப்பு செய்து விட்டு பிறகு மன்னிப்பு கேட்பது எந்த விதத்தில் நியாயம்? சரி அதற்காக தப்பே செய்யாமல் இருப்பது இயலுமா? முடியாது. ஏனெனில் தப்பு என்பது தெரிந்து செய்வதில்லை. நடந்து முடிந்த பிறகுதான் தப்பு புலப்படுகிறது. அதுவும் இல்லாமல் நமக்கு சரி என்று படுவது மற்றவருக்கும் சரியாக இருக்க வேண்டியது என்று இல்லை. ஆனால் நாம் ஒன்று நினைக்க அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு விட்டால் அதற்கு யாரைப் பொறுப்பாக்க முடியும்! உதாரணத்திற்கு ‘பேரனது பள்ளி பெயர் என்ன’ என்று கேட்டதற்கு  பெண் “ஜெம்ஸ் மெட்ரோபோல்’ என்று சொன்னாள், ஆனால் அவனது பாட்டி அவனுக்கு பள்ளியில் ‘வசந்த் நாராயணன்’ என்று பெயர் என்று சொன்னால் கேட்ட கேள்வி எப்படி தப்பாக முடியும்? ஆகவே தப்பு எது சரி எது என்பதற்கு என்ன அளவுகோல்!

ஆனால் அவளுக்கு இப்போது புரிந்து விட்டது இதற்கெல்லாம் மேலானது வாழ்க்கை. இது ஒரு முறைதான் வரும். கோபப்படவோ, வருத்தப்படவோ, பொறாமைப்படவோ அல்ல இது. கீதாவிற்கு நேற்று படித்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி கிரகம் தொடர்பான ஒரு முக்கியமான விண்வெளி மர்மத்திற்கான (ஸ்பேஸ் மிஸ்டரி) விடையை கண்டுபிடித்துள்ளனர். என்றாவது ஒருநாள் நம் பூமி கிரகத்தின் மீது சந்திரகிரகம் வந்து மோதும் அப்போது நம் பூமி என்னவாகும் என்று தெரியாது! ஆகவே நாளை என்றிடாமல் இன்றே செய்ய நினைத்ததைச் செய்ய வேண்டும். நமது எண்ணங்களைச் சீராக்க வேண்டும்.

“வினை பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்”

 மன்னிப்பதும், மறப்பதும் நாம் மற்றவர்களுக்கு மட்டுமல்ல இந்த மனித இனத்திற்கே செய்யும் அறிய செயலாகும். அவளுக்குத் தோன்றியது மறப்பது ஓர் எதிர்மறையான எண்ணமல்ல. அது ஒரு நல்ல குணம். அதுவும் மற்றவர்கள் நமக்கு செய்யும் எந்த ஓர் எதிர்மறை செயலையும் மறக்க வேண்டும். அதே மாதிரி மன்னிப்பு கேட்பதும் ஓர் உயர்ந்த பண்பாகும்.

இவ்வாறு முடிவு செய்த கீதா நிம்மதியுடனும், புன்முறுவலுடனும்  தனது அலுவல்களைத் தொடர்ந்தாள். 

                                     

ஏமாத்தாம கஞ்சி குடிக்கணும் – கோவில்பட்டி கு மாரியப்பன் 

Ananda Vikatan - 23 February 2022 - கடைசி விவசாயி - சினிமா விமர்சனம் | kadaisi vivasayi movie review

தாத்தா வேலைக்கு வரியா? 

 

நான் என்னத்தப்பா இனிமே வேலை செய்ய? 

சும்மா வா தாத்தா! வந்து ஆளோட ஆளா நில்லு.  உன்ன மாதிரி வயசானவங்க  வாராங்கள்ள! மம்பட்டிய  பிடிச்சுக்கிட்டு  கொஞ்ச நேரம் நில்லு.  நேரத்தோட வந்திடலாம். நல்ல சம்பளம் தருவாங்க உன் பேரு இருக்குல்ல. 

எனக்கு வேண்டாம் அப்பா அந்தக் காசு! வேலை செய்யாமலே காசு வாங்க மனசு வரலை. 

சரி ஒன்னோட இஷ்டம். 

கிழவர் அந்தக் காலத்தை அசை போட ஆரம்பித்தார். 

“அந்தக் காலத்துல கோழி கூப்பிட எல்லாரும் கிராமத்திலே எந்திரிச்சிடுவோம். விடியும் முன்னால  முதலாளி தொழுவுக்குப் போய், சாணி அள்ளி, குப்பையைப் போட்டுட்டு,  மாட்டுக்குப் பொட்டு போட்டு தண்ணீகாட்டத் தொட்டியில் ஆட்டின பருத்திக்கொட்டையைக் கலக்குவோம்.  தண்ணீர் காட்டிக் கூளம்  போட்டுட்டு  பகலுக்கு கொஞ்சம் கூளம் புடுங்கி வைப்போம்.  பலபலன்னு விடிஞ்சிரும்.  வீட்டுக்குப் போயி கஞ்சியைக் குடிச்சிப்போம்.  மதியத்துக்குக் கஞ்சியைக் கலையத்துல ஊத்தி கடிச்சிக்க ரெண்டு வெங்காயமோ மொளகாயோ வச்சிக் குடுப்பா பொண்டாட்டி. வேகமாக வந்து மறுபடியும் ஒரு தடவை மாடுகளுக்குத் தண்ணி காட்டி ஏர்க் கால்ல மாட்டினா வெயில் ஏறிவிடும். 

சீக்கிரம் கிளம்புங்க ! பொழுது உச்சிக்கு வர முன்னாடி காட்டுக்கு கிளம்புங்க! முதலாளி சத்தம் கேட்கும். கலையத்த தலையில வச்சுக்கிட்டு கோட்டேரோட  நடப்போம். காட்டிலும் வெயிலுக்கு ரெண்டு தடவை நிப்பாட்டுவோம். மாடுகளும் அந்த நேரம் படுத்துக் கொள்ளும். சூரியன் உச்சியை தாண்டி மேக்காம நகண்டா ஏரை நிறுத்திட்டு கஞ்சி குடிப்போம். 

சாயங்காலம் வந்தவுடன் முதலாளி கேட்பார். 

ஒவ்வொருத்தரும் ஒரு ஏக்கராவது உழுதாத்தான் முதலாளி கிட்டப் பேச்சு வாங்காம வீட்டுக்குப் 
போகலாம். 

இல்லேன்னா  மரத்துக்கு அடியில படுத்துகிட்டியா?.  சம்சாரி வேலைக்கு வந்தா வளைஞ்சி வேலை செய்யணும்,  நாளைக்கு வேற இடம் பாத்துக்க அப்படின்னு தாறுமாறு பேசுவாக. 

அதுக்கு பயந்துகிட்டு வேலை நடக்கும் .  சாயங்காலம் வந்து மாட்டுக்கு தண்ணி காட்டி கூளம் போடணும்.  பருத்திக்கொட்டை நனையப் போட்டுட்டு வீட்டுக்குக்  கிளம்பினால் பொழுது சாய்ந்துவிடும்.  சில சம்சாரிக சோளம், கேப்பை, குதிரைவாலி, சாமை, கம்புன்னு கொத்தை நெரந்து குடுப்பாக.  ஆனா எங்க முதலாளி வீட்டுல எப்பவும் கம்மம் புல்லு தான். அதுவும் சிந்தச் சிந்த அளந்துபோடுவாக. 

 அதான் நீ, நான்னு  அடிச்சு கிட்டு அவுக வீட்டுக்கு வேலைக்கு வருவாங்க.  கம்பு சோராக்குறதோ லேசு.  கம்ப இடிச்சி சோறு கவுத்திட்டா சாப்பிடச் சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். அஞ்சாறு கத்திரிக்கா, நெத்திலிக்  கருவாடு போட்டு புளி குழம்பு வச்சு என் பொண்டாட்டி அன்னைக்கிப் போட்ட சோறு தான் இன்னைக்கும்  என்னை நடமாட விடுது. ஆஸ்பத்திரி என்னன்னு தெரியாது. 

இன்னைக்குப் புள்ளைக இம்முன்னா ஆஸ்பத்திரிக்கு ஓடுதாங்க!  காடுக அன்னைக்கு அப்படி விளையும். குப்பை அடியே ஒரு மாசம் நடக்கும். கோடை உழவு கிட்டப் பிடிச்சி உழுவோம். 
விதைச்சா நாலாம் பக்கம் முளைத்துவிடும் .  களை எடுக்க பக்கத்து ஊரு ஜனங்களெல்லாம் வரும். வெளைச்சல் அப்படி இருக்கும்.  வெளைஞ்சதைக்கொண்டு போய் வீட்டில் போட்டா வீடு பிடிக்காது. பருத்தி அடைஞ்சா தாட்டுகளை பிடிச்சு மிதித்து வண்டியில காட்டில் இருந்து கொண்டு வரணும் .

இன்னைக்கு ஊர்ல ஒரு ஜோடி உழவுமாடு கிடையாது .  முத்தம் தொழிக்க கூட பால்காரர் வீட்டுல தான் சாணி எடுக்க வேண்டியது இருக்கு. உழவு மாடு போயி டக்கரு வண்டி வந்து உழவு, விதைப்பு எல்லாம் அதுல தான் . மூடை உரத்தைப் போடுதாக !கண்ட கண்ட மருந்த அடிச்சு நெலம் கெட்டுப் போச்சி. மகசூலும் முந்தி மாதிரி இல்லை.  களைக்கு அடிக்கும் மருந்து பயிரைத்தாக்காம இருக்குமா?  மழை பழைய மாதிரிப் பெய்யுதா?  காட்டுல உள்ள மரத்தைப் பூரா வெட்டி தீப்பெட்டி ஆபீசுக்குப் போகுது! கரி மூட்டம் போடுதாங்க!  மழையை எப்படி வரும்? இன்னைக்கு ஒன்பது மணிக்கு  களை எடுக்கப் போய் மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து இருக்காங்க  அதுல காட்டுக்காரர் வடை வாங்கி கொடுக்கணும்! சேவு வாங்கி கொடுக்கணும்!!  காப்பி தண்ணி வேற! வெத்தல பாக்கு! பாக்கெட் பாக்கு!! 

எல்லாம் சம்சாரி தாங்க முடியுமா? 

அதான் கிடைக்கும் மருந்து அடிக்காக!!! மாசூலும் நாலுக்கு ஒன்று ஆயிடுச்சு! சோறு சாப்பிடாமல் எத்தனை நாளைக்கு காப்பி தண்ணி குடிச்சு உழைக்க முடியும் இல்லையா? அப்படித்தான் ஆயிருச்சி  பொழப்பு!   அன்னைக்கு மூணு படி கொத்துக்கு  நீ நானுன்னு அலைஞ்சோம  இன்னைக்கி மருந்து அடிக்கவும் செடி புடுங்கவும் களத்து வேலைக்கும் வேலையாள் தேடி சம்சாரி வேலைக்கு ஆள் கிடைக்காம  சுத்திகிட்டு இருக்காங்க நிலத்துக்காரங்க. எவனுக்கும்  சம்சாரி வேலை செய்ய சம்மதம் இல்லை. உடம்புல தெம்பு இல்லை! 

மினுக்காக்  கடையில நாலு இட்லியை சாப்பிட்டுட்டு, ரேஷன் அரிசி சோத்தை சாப்பிட்டால் உடம்புல  வலு எங்க இருந்து வரும்?  நிழல்ல வேலை பார்க்க டவுனுக்கு போயிடு தாங்க!  பொம்பளைங்க தீப்பெட்டி ஆபீசுக்கு பாட்டு கேட்டுகிட்டு வேலை செஞ்சி பாக்கறாங்க .  இப்பதான் அந்த கட்சி இந்த கட்சின்னு 1008 பேர். அன்னைக்கு எலக்சன்னா ஒரு பெரிய முதலாளி கூப்பிட்டு இந்த சின்னத்தில் குத்தும்பாங்க. குத்திட்டு வருவோம். 

அன்னைக்கு ஓட்டு போட்டுட்டு அவங்க கொட்டாயில தான்  சாப்பாடு.  மதிய சாப்பாடு நெல்லு சோறு சாம்பார் கூட்டுனு  வயிறு நிறைய சாப்பிடுவோம்  பிறகு ஒரு நாள் சம்பளத்தையும் கொடுத்தாக. இளவட்டாங்க தல எடுத்த பிறகு அவங்க சொல்ற படத்துக்கு குத்த சொல்றாங்க . ஊருக்குள்ள பல சாதி இருந்தாலும் குழப்பம் இல்லாமல் தாயா புள்ளையா இருந்தோம்.  இப்ப சாதிக்கு சாதி கட்சி ஆகி ஊருக்குள்ள எலக்சன்னா வெட்டு குத்து தான் . ஒத்துமை போயிடுச்சு . 
ஆள்கள்ட துட்டு பெருத்துப் போச்சு! துட்டு இருந்தாத் தான்  எதுவும் நடக்கும் என்று ஆகிப் போச்சி! 

அப்போல்லாம் ஏக்கர் கணக்குல புஞ்சை காடு இருந்தாதான் மரியாதை! முதலாளி பட்டம்!!  இன்னைக்கு ரோட்டு அடியில் விளைஞ்ச காடு பூராவும் கல்லா நட்டிருக்கான். 
பிளாட்டாம்? காட்டில் வீடு கட்டினா  எங்கே போய் சாப்பிட? 

நாள் பூரா உழைச்சா மூணு படி புல்லு இல்லையென்றால் சோளம் கொத்தா  கிடைக்கும். இன்னைக்கு சும்மா போய் ஆளாநின்னு  சம்பளம் வாங்க கூப்பிடுறாங்க. ஊரோட போறாங்க. வேலை லேசு!  ஆளா போய் வர வேண்டியதுதானே ன்னு கூப்புடுதாங்க.  

ஊரைச் சுற்றி வேப்ப மரம். நல்ல நெழல். சைக்கிளில் வடை, காபி டயத்துக்குள்ள கொண்டு வாரான். சொல்லுங்க நம்ம கையில இருந்து சம்பளம் கொடுத்தால் இப்படி இருக்க விடுவமா? 
சொல்லுங்க!  

வேலை வாங்காமல் விடுவோமா? விவசாயம் பார்க்க வர மாட்டேன் என்கிறார்கள்! 
வெயில்ல உழைக்கணும் இல்ல! 

நான் கம்பை  ஊனிக்கிட்டே  நடக்கேன். 

இதுல போய் வேலை செஞ்சைன்னு ஏமாத்தி சம்பளம் வாங்க  மனசு கூசுது இல்லே!

 கிடைக்கிற கஞ்சியே  கொஞ்சம்னாலும்  ஏமாத்தாம குடிக்கிறது தானே மனுஷனுக்கு மரியாதை! நிம்மதி!  அதானே உடம்புல  ஒட்டும்!
 
நீங்க என்ன சொல்லுதிக?

அறிவியல் சிறுகதை- 3 – சந்திப்போமா?- பானுமதி ந

வக்கிரம் பெறும் கிரகங்களும் அதன் பலன்களும்!- Dinamani

சரவணன் வீட்டினுள் நுழையும் போதே உற்சாகமான பேச்சுக் குரல்கள் கேட்டன. நிச்சயமாக அப்பாவின் நண்பர் இராகவன் தான் வந்திருப்பார். அப்பாவின் அறையினுள்ளே போகலாமா என அவன் நினைக்கையில் அப்பா, உல்லாசமாக ஒரு பாடலை சீட்டி அடித்தார். அவன் அறைக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். அந்தப் பாடலைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நடக்கிறது போலும். ராகவனுக்குத் தெரியவில்லை. ‘சரியான ஞான சூன்யம்டா நீ; நீங்க சொல்லுங்க மிஸஸ். ராகவ்’ என்றார் அப்பா. அந்த மாமி பாடியே காட்டினார். ‘மாசி மாசம்தான், கெட்டி மேள தாளம் தான்; மாத்து மாலைதான் வந்து சேரும் வேள தான்.” இப்போது அந்த மாமி சீட்டி அடித்தார். இராகவன் மாமா ‘எங்க பேட்டல ரௌடி இவ’ என்றார் செல்லமாக. அம்மா சரியாக அந்தப் பாடலைச் சொன்னார் “மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு; பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு.’  ‘இப்ப பாருடா, நான் பாட்ற ட்யூன உங்களால கண்டே பிடிக்க முடியாது’ என்ற மாமா பாடியது யாருக்குமே புரியவில்லை. அவர் பாடியது ‘மாசில் வீணையும், மாலை மதியமும்’. அப்பா விளையாட்டாக அவரை அடிக்கப் பாய்ந்தார். ‘கூல், கூல், மாசி வரதில்லயா அதுல?’ என்றார் மாமா. ‘ மாசிக்கும் மாசிற்கும் வித்தியாசம் தெரியாத நீ என்னத்தான் சொல்லித் தரியோ காலேஜ்ல.’ என்றார் அப்பா.

‘தப்பு ஒண்ணுமில்லடா, இந்த மாசம் தான மஹா சிவராத்ரி, காரடையார் நோன்பு, மகத் தெப்பம், பூச்சொரியறது, தீர்த்தவாரி எல்லாம் வரது. அதனால் சிவனைப் பத்தின பாட்டு சரி தான்’ என்றார் மாமா.

‘கரெக்ட் தான் மாமா நீங்க சொல்றது. அம்பிகை பொய்கைல வலம்புரிச் சங்காப் பொறந்து சிவன நோக்கி தவம் செஞ்சது இந்த மாசி மாசத்ல. மாசிப் பௌர்ணமி அன்னிக்கு கடல் நீராடறதுன்னு நல்ல வழக்கமெல்லாம் இருந்திருக்கு.. நம்ம மூதாதையர்கள் இயற்கையோட சேந்துதான் அத்தனயும் கொண்டாடி இருக்கா.’ என்றார் அம்மா.

சரவணன் இடையில் புகுந்தான். ‘அம்மா, அப்ப மாசி மகத்தன்னிக்கும் விருந்து சாப்பாடா?’ என்றான் சப்புக் கொட்டிக் கொண்டே.

“அதான பாத்தேன். சாப்பாட்டு ராமன் இன்னும் வாயத் தொறக்கலயேன்னுட்டு. ஏன்டா, இந்த மார்ச்ல ஒன்னு நடக்கப் போறதே, நடக்க ஆரம்பிச்சுடுத்தே, அது என்னன்னு தெரியுமா?”

‘குருவும் சுக்கிரனும் இணயப் போறதுதானப்பா, அது’

“சமத்து, சரூ.” என்றாள் மாமி

நாமெல்லருமா மாடிக்குப் போயி தொலநோக்கியில அதப் பாக்கப் போறோம் என்று சொன்னார் அப்பா.

‘அப்பா, நான் ஓடிப் போயி, சஞ்சய், பவானி, ஜமால், அல்போன்ஸ் எல்லாரையும் கூட்டிண்டு வரேம்ப்பா; ப்ளீஸ். அவாளும் பாக்கட்டுமே.’

“தாராளமா வரட்டும். நான் ‘நொறுக்ஸ்’ நெறய வாங்கி வச்சிருக்கேன். மாடில சூர்யன் மறஞ்ச ஒரு மணி நேரத்ல இந்த ‘கன்ஜங்க்ஷனப்’ பாக்கலாம்.

சரூ குதித்துக் கொண்டு ஓடினான். பட்டாளம் திரண்டு விட்டது. மேலை வானில் ஆதவன் தன் சிவப்பு நிறத்தை மஞ்சள் வர்ண ஆரஞ்சு நிறமாக்கி எழில் மிகு கோலங்களை வானில் வரைந்து கொண்டிருந்தான். வெறும் கண்களில் தென்படும் இந்த இயற்கை வண்ணக் கண்காட்சி துல்லிய நீல நிறப் பின்னணியில் எத்தனை அழகோவியமாய்த் தென்படுகிறது.

பவானி தான் முதல் கேள்வியைக் கேட்டாள். ‘மாமா, இணைப்பு, இணைப்பு அப்படிங்கறிங்க, அது என்ன?”

‘குருவும், சுக்கிரனும் இப்ப ஒன்னுக்கொன்னு சமீபத்ல ஒரே பகுதில தெரியறதே அதுதான்.’

“ஐ, எவ்ளோ அழகா இருக்கு. ரெண்டு பிரகாசமான நட்சத்திரம் போல”

ஜமால் கேட்டான், ‘இப்படி ரெண்டு கோள்கள் இணையறது அபூர்வமா சார்?’

“அடிக்கடி நடக்காததெல்லாம் அபூர்வம் தான். ஆனா, குருவும் சுக்கிரனும் கிட்டத்தட்ட 13 மாசத்துக்கு ஒருமுற ஒருத்தருக்கொருத்தர் கிட்டக்க வருவாங்க. ஆனா, ஒவ்வொரு 3.7 ஆண்டுகள்ல இவ்வளவு நெருக்கமா வரதும், வெறும் கண்ணாலக்கூட அதப் பாக்க முடியறதும், அதுவும் நம்மால பாக்க முடியறதும் பெரிய விஷயமில்லையா?” என்றார் மாமா.

‘இது எப்படி நடக்கறது, சார்’ என்றான் அல்போன்ஸ்

“சஞ்சய், நீ சொல்லலாமே?’

‘நம்ம சூரியக் குடும்பத்ல, கோள்கள், அதச் சுத்தி வரது. குரு கோள் இருக்கே, அது, பூமியோட சுற்றுப்பாதைக்கு வெளில சூரியனைச் சுத்தறதால, பூமில இருக்கற நமக்கு அது வெளி கிரகம். ஆனா, சுக்ரன் இருக்கே, அது நம்ம பூமியோட சுற்றுப் பாதைக்கு உள்ளயே ஆதவனச் சுத்தறது. குரு நல்ல வெயிட்டான கிரகம். வெள்ளியோ பாறைகள் நெறஞ்ச சின்னக் கிரகம்.’

பவானி இடை புகுந்தாள் “ஆமாம். குரு கோள்ல நெறய வாயு இருக்கு. அது ஒரு வருஷம் எடுத்துக்கறது சூரியனச் சுத்த.”

‘கரெக்ட். அப்ப, எப்படி சூரியன ஒட்டியே போற வெள்ளியும், தள்ளி இருக்கற வியாழனும் சந்திச்சுக்கும்?’

“நாம் சொல்றேன், நான் சொல்றேன். இந்தக் கோளெலெல்லாம் முட்ட வடிவப் பாதல தான் சுத்தறது. ஒன்ன ஒன்னு சந்திக்க முடியறது அதனாலத்தான்.’ என்றான் சரூ.

‘வேற கோள்கள் இப்படியெல்லாம் சேராதா, சார்?’ என்றான் அல்போன்ஸ்.

‘சேரும்ப்பா, வியாழனும், சனியும் சேர்றது இருவது ஆண்டுக்கு ஒரு முற நடக்கும். எல்லாம் கதி வேகத்தப் பொறுத்தது.’

“ஐயோ, மோதிட்டா என்னாகும்?” என்றாள் கலவரமாக மாமி.

இராகவன் சிரித்தார். “எல்லோருக்கும் மோக்ஷம் தான். அப்படியெல்லாம் நடக்கல. இன்னொன்னும் புரிஞ்சுக்கணும். மார்ச்1, 2 தேதிகள்ல நல்ல பிரகாசமா மேக்கு வானத்ல வியாழனும், வெள்ளியும் வெறும் கண்ணுக்கே தெரிஞ்சுது. பூமிலேந்து பாக்கறப்போ நெருக்கமா இருக்கும். ஆனா, ரெண்டுக்கும் இடைல பல லட்சம் கி மீட்டர் இடவெளி இருக்கும். 29.4 ஆர்க்மினிட்னு அதச் சொல்வா. அளவைப் பாத்தோம்னா -2.1 வெள்ளிக்கும், -4 குருவுக்கும் இருக்கும். இந்தக் கணக்கெல்லாம் அஸ்ட்ரானமி கணக்கு. அவன் அறைக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். இன்னும் கொஞ்சம் வருஷம் போனா உங்களுக்குப் புரியும்.”

அம்மா சொன்னார் “மார்ச் 24-ம் தேதி சந்திரன் வெள்ளிய மறைப்பான். அது தற்காலிகமானது. ஆசியா, ஆப்பிரிக்காவுல நன்னாத் தெரியுமாம். இந்த இணைப்பு இருக்கே நம்ப மீனராசின்னு சொல்றோமே அதுலதான் வரது.”

‘பாரேன், நம்ப ஜோசியத்ல, பஞ்சாங்கத்ல குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, கிரகணம், மட்டுமில்ல, செவ்வாய், வெள்ளி, புதன் இதோட சஞ்சாரமும்னா சொல்லியிருக்கா’ என்று அதிசயித்தாள் மாமி.

வானம்  நமக்கொரு போதி மரம்; நாளும் நமக்கது சேதி தரும் என்று பாடினார் மாமா.

அம்மா, மாடியிலேயே, சாம்பார் சாதம், அப்பளம், வறுவல், தயிர் சாதம், வத்தக் குழம்பு என்று அனைவருக்கும் அளித்தார்.

சிறு வயதினர் செவிக்கும், மூளைக்கும், வயிற்றிற்கும் உணவு கிடைத்ததல்லவா? நாமும் ஏன் இதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது?

 

ஒரு மருத்துவரும் அவருடைய மைக்ரோஸ்கோப்பும்…   – மீனாக்ஷி பாலகணேஷ்


          

 

 

 

 

“எம்மா (Emma), நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? உன்னைக் கப்பலில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வேன்,” மருத்துவனாகப் படிக்கும் ராபர்ட் கேட்டான். எம்மா புத்திசாலி. “இல்லை ராபர்ட், நீ ஓரிடத்தில் தங்கி ஒழுங்காக உன் படிப்புக்கேற்ற வேலை செய்வதானால் நான் உன்னை மணந்து கொள்வேன்.” எம்மா தான் ஜெயித்தாள்.       ராபர்ட்டின் காதல் அத்தனை வலுவானது. 24 வயதில் இருபது வயதான எம்மாவை மணந்தான் ராபர்ட். சில நூறு குடும்பங்களே இருந்த ஜெர்மானிய ஊர்களில் மருத்துவராக வேலை பார்த்தான்; பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க மருத்துவ உதவி செய்தான். வயதான தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் வைத்தியம் செய்தான். சுரத்தே இல்லாமல் தான் இவையனைத்தும் நடந்தன. கப்பலில் ஏறி இலக்கின்றிப் பயணித்துப் புது நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மனது கொள்ளாத ஆசை அவனுக்கு. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டு எவர்தானில்லை? ஆனால் நிலையான வருமானம்தானே குடும்பத்தைப் பராமரிக்க உதவும்?

           எம்மா ராபர்ட்டின் மனதை அறிவாள். அவனுக்காக ஒரு அரிய பரிசை அவனது 28வது பிறந்தநாளன்று வழங்கினாள். அதுதான் ஒரு மைக்ரோஸ்கோப். ஐரோப்பாவின் அருமையான கண்டுபிடிப்பு. நோயாளிகளைப் பார்த்த நேரம்தவிர மற்ற நேரத்தை அந்த  அருமையான கண்டுபிடிப்பை உபயோகிப்பதில் செலவழித்தார் ராபர்ட் காச் (Koch). 18ம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் நோய்கள் எவ்வாறு உண்டாகின்றன என அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தினர். ராபர்ட் காச் அதற்கு விதிவிலக்கல்ல. ஆந்த்ராக்ஸ் (Anthrax) எனும் ஒரு வியாதி (கொள்ளைநோய்) கால்நடைகளைப் பெருமளவில் அழித்து வந்தது. எல்லா ஆராய்ச்சியாளர்களும் அது எதனால் என அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். ‘நோய் நாடி நோய்முதல் நாடி,’ என்பதல்லவா முறை?

           கையில் கிடைத்தவற்றையெல்லாம் மைக்ரோஸ்கோப்பில் பார்க்கும் ஆர்வம் உண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு. காச்சின் அடிமனதில் ஒரு எண்ணம். இந்த வியாதிகள் எல்லாவற்றிற்கும் காரணம் நுண்ணுயிரிகளே என்று. ஏனென்றால் ஒட்டுவாரொட்டியாக ஆந்த்ராக்ஸ் நோய் கால்நடைகளை அழித்து வந்தது. முதலில் ஒரு ஆடோ, மாடோ, பின் இரண்டு, மூன்று, நான்கு என மந்தையின் பெரும்பகுதி இறந்து அழியும். மனிதர்களையும் இந்நோய் விட்டுவைக்கவில்லை. எப்படி அதை நிரூபிப்பது? ஒருநாள்……

           தனது மைக்ரோஸ்கோப்பில் ஆந்த்ராக்ஸால் இறந்துபோன சில ஆடுமாடுகளின் இரத்தத் துளிகளை ‘ஸ்லைட்’ (Slide) எனப்படும் கண்ணாடித் துண்டுகளின்மீது பரப்பி, அவற்றை மைக்ரோஸ்கோப்பில் பார்வையிடலானார் காச். சிவப்பு இரத்த அணுக்களின் இடையே அதென்ன கட்டுக்கட்டாகக் குச்சிகள் போலக் காண்கின்றன? நோய்வாய்ப்படாத மாட்டின் ரத்தத்தில் இந்தச் சிறு குச்சிகள் இல்லை! சொல்லிவைத்ததுபோல நோய்வாய்ப்பட்ட அத்தனை மிருகங்களின் ரத்தத்திலும் அவை காணப்பட்டன. இவைதான் நோய்க்குக் காரணமோ? இதனை எப்படி நிரூபிப்பது?

           சில பரிசோதனை வெள்ளெலிகளை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு இந்த குச்சிகள் இருக்கும் இரத்தத்தைச் செலுத்தினார். சில எலிகள் குச்சிகள் இல்லாத இரத்தத்தைப் பெற்றன. ஆச்சரியம். அடுத்தநாள் காலை குச்சிகள் இருக்கும் ரத்தம் செலுத்தப்பட்ட எலிகள் அனைத்தும் இறந்திருந்தன. திரும்ப இதே பரிசோதனையைச் செய்தார். திரும்ப அதே முடிவுகள். உள்ளம் துள்ளிக் குதித்தது. இந்தக் குச்சி போன்றவைகள் ஒருவிதமான நுண்ணுயிரிகள் என முடிவு செய்தார்.

           ஒரு நாள் மாலை…. பரிசோதனைகளைத் தொடர, சில ஸ்லைடுகளை மைக்ரோஸ்கோப்பின் அடியில் பார்க்க முற்பட்டார். அப்போதுதான் வாசற்கதவு தட்டப்பட்டது. மிகவும் சீரியஸான ஒரு நோயாளியை அவர் உடனேசென்று பார்க்க வேண்டியிருந்தது. சென்று, பார்த்து, மருந்துகொடுத்துவிட்டு, வீடுதிரும்ப வெகுநாழியாகி விட்டது. வீட்டினுள் நுழைந்தததும் தான் தனது ஸ்லைடுகளைப் பற்றிய ஞாபகம் வரவே, உடனே அங்கு சென்றார். எல்லாம் காய்ந்து உலர்ந்து போயிருந்தன. என்ன செய்யலாம் என யோசித்தவர், கசாப்புக்கடையிலிருந்து மிருகங்களின் உடல் திரவங்களைச் (Body fluids) சிறிது வாங்கிவந்து அவற்றைக் காய்ந்த ஸ்லைடுகளில் கவனமாகச் சேர்த்தார். பின் பார்த்தபோது, அந்தக் குச்சி நுண்ணுயிரிகள் காணாமல் போயிருந்தன. எங்கே போய்விட்டன? இப்போது புதியதாகப் பல பளபளப்பான முட்டைவடிவ மின்னும் அமைப்புகள் நிறையக் காணப்பட்டன. குச்சிகள்தாம் இவ்வாறு மாறிவிட்டனவோ? எப்படி இதனை நிரூபிப்பது?

           இவற்றை எடுத்து இப்போது எலிகளுக்குள் ஊசியால் செலுத்தினார். அடுத்தநாள் காலை வழக்கம்போல அவை இறந்திருந்தன. அவற்றின் ரத்தத்தை ஆய்ந்தபோது குச்சிவடிவ நுண்ணுயிரிகள் காணப்பட்டன. அவை ரத்தம் காய்ந்துவிட்டபோது (சூழ்நிலை தங்களுக்கு அனுகூலமாக இல்லாதபோது) மின்னும் முட்டைவடிவங்களாக மாறின. இவற்றைப் பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்போர்’கள் (spores) எனக் குறிப்பிட்டனர். (ஜனவரி 2023 குவிகம் இதழில் எனது கட்டுரையில் இவை பற்றிய விளக்கத்தைக் காணலாம்) இந்தப் பரிசோதனைகளைப் பலமுறைகள் செய்துபார்த்தபின்பே ராபர்ட் காச் தமது முடிவுகளை உலகத்தாருடன் பகிர்ந்துகொண்டார்.

           இதுவே நுண்ணுயிரிகள் நோயுடன் தொடர்பு கொண்டவை எனும் முதன்முதல் கண்டுபிடிப்பு. இவையே ‘காச்சின் அடிப்படை நிபந்தனைகள்’ (Koch’s Postulates) எனக்கூறப்படுகின்றன. அக்காலத்தில் இது எத்தனை பெரிய கண்டுபிடிப்பு தெரியுமா? உலகையே புரட்டிப்போட்டது. ஒரு பயங்கர நோயின் காரணத்தைக் கண்டுபிடிப்பது சாமான்ய விஷயமா?

           ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களின் ஆராய்ச்சியாளர்கள் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

           இன்னொரு பயங்கரமான வியாதி மனிதர்களைச் சாகடித்துக் கொண்டிருந்தது. அதுதான் காசநோய் என்னும் டி. பி. டியூபர்குலோஸிஸ் (Tuberculosis). முதலில் இந்த வியாதி இருப்பது பெருமையாகக் கருதப்பட்டது!! ஒரு வெள்ளைக் கைக்குட்டையை வைத்துக்கொண்டு இருமும்போது வாயை மூடிக்கொண்டு பின் அதில் சிவந்த இரத்தக்கறை இருப்பது ஒரு நாகரிகமாகக் கருதப்படடது!!            ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் விரைவில் இறந்து விடுவதும் அவர்கள் குடும்பத்தோர் இந்த நோய்க்கு உள்ளாவதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆராய்ச்சியாளர்கள் இது பற்றிய ஆராய்ச்சியில் களமிறங்கினர்.

           காச் தன் பங்கிற்குத் தானும் களமிறங்கினார். சிறிய உருவம் கொண்ட, அந்த சாதாரணமான மருத்துவர் தனது பங்களிப்பு, கண்டுபிடிப்பு என்னவென்று அப்போது அறிந்திருக்க சாத்தியமில்லை; தன்னடக்கம், ஒரே மனதான முனைப்பு, விடாமுயற்சி இவையே அவருடைய தாரக மந்திரம் ஆயிற்று.

           டி. பி. ஒரு கொடூரமான தொற்றுநோய். உடனிருந்து கொல்லி. இந்த நோயினால் இறந்தவர்களின் நுரையீரல்களில் சிறு சிறு மஞ்சள்நிற முடிச்சுகள் போன்றிருக்கும். இவற்றை டியூபெர்க்கிள் (tubercle) என்பார்கள். காச் இவற்றைத் தமது மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முயன்றார். ஒரு நுண்ணுயிரியையும் அதில் காண முடியவில்லை. தனது ஆந்த்ராக்ஸ் முயற்சியிலிருந்து நுண்ணுயிரிகள் எந்த வடிவிலும் இருக்கலாம் என உணர்ந்திருந்தார் அவர். பலவிதமான சாயங்களால் (dyes) அவற்றிற்கு நிறமூட்டிப் பார்க்க முயன்றார். பல நாட்களுக்குப் பின் அவரால் கொத்துக் கொத்தான மெல்லிய குச்சிகளைப் போன்றவற்றைப் பார்க்க முடிந்தது. ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவைவிட ஐந்துமடங்கு சிறியதாக இவை இருந்தன.

           மேலும் கினிபிக் (guinea-pig) எனப்படும் சில சீமைப்பெருச்சாளிகளுக்கும் இவற்றை உடலில் செலுத்தியிருந்தார். அவை நோய்வாய்ப்படுகின்றனவா எனவும் தினம் கண்காணித்தார். சில உருளைக்கிழங்குகளைக் குறுக்கில்வெட்டி, (அவற்றில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்வதற்காக) வேகவைத்து பின் அவற்றில் இந்த டியூபெர்க்கிளைப் பரப்பி அவற்றை மனித உடலின் வெப்பத்திற்கேற்றபடி வைக்கப்பட்ட இன்குபேட்டர்களில் வைத்தார். வீட்டிலேயே இதற்காக ஒன்றை அவரே தயாரித்திருந்தார்!! ஒருநாள், இரண்டு, மூன்று, ஒன்றும் நடக்கவில்லை. நமது மருத்துவரோ விடாக்கண்டர். மிகுந்த பொறுமை காத்தார்.

           கிட்டத்தட்ட 20 நாட்களின்பின், சீமைப்பெருச்சாளிகள், நோய்வாய்ப்பட்டன, அடுத்த சில தினங்களில் ஒவ்வொன்றாக இறந்தன. அவற்றின் நுரையீரல்களிலும் டியூபெர்க்கிளைப் பார்க்க முடிந்தது. உருளைக் கிழங்குகளிலும் வெண்ணைபோன்ற மென்மையான ஒன்று படர்ந்திருந்தது. மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது அவை அந்த டி.பி. பாக்டீரியாக்களே என அறிந்தார். பரிசோதனைகளைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்து உறுதிப் படுத்திக் கொண்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்பரிசோதனைகள் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டன. பிற்காலத்தில், பல ஆண்டுகளின்பின், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைப்பற்றி ஆராய்ந்தவர்கள் கண்டு கொண்டதென்ன? பல பாக்டீரியாக்கள் இருபது நிமிஷங்களில் ஒன்று இரண்டாகவும், இரண்டு நான்காகவும் ஆகிவிடும்போது டி.பி. பாக்டீரியா மட்டும் ஒன்று இரண்டாக 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இவை பல மில்லியன்களாக ஆகும்போது பாக்டீரியாக் காலனி (bacterial colony) என்ற வட்டமான ஒரு அமைப்பைத் தான் வளருமிடத்தில் உண்டாக்குகிறது.

           சரி, இப்போது ராபர்ட் காச்சிடம் திரும்ப வரலாம். தனது அதிசயமான அற்புதமான கண்டுபிடிப்பை உலகிற்குத் தெரிவிக்க வேண்டாமா? மார்ச் 24ம் தேதி, 1882ம் வருடம். ஜெர்மனியின் பெர்லின் நகரில் முக்கியமான விஞ்ஞானிகளின் கூட்டம் நடைபெறப் போகின்றது. ஒரு அறையில் புகழ்வாய்ந்த பல விஞ்ஞானிகள் – பால் எர்லிஷ், (Paul Ehrlich) ருடால்ஃப் விர்ஷோ (Rudolph Virchow), இன்னும் பலர் குழுமியிருந்தனர். இவர்களுள் ருடால்ஃப் விர்ஷோ மற்றவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார். “பாக்டீரியாக்கள் நோய்களுக்குக் காரணமா. என்ன பிதற்றல்,” என்று கூறிக்கொண்டிருந்தார் அவர்.

           மீட்டிங் தொடங்கிற்று. தனது மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு, கையிலிருந்து நழுவும் பேப்பர்களைப் பிடித்துக்கொண்டு எழுந்தார் ராபர்ட் காச். அவரை நோக்கி நக்கலும் அலட்சியமும் கலந்த பார்வையை வீசினார் விர்ஷோ. ஆனால் ராபர்ட் காச் தனது மெல்லிய, அழுத்தமான குரலில், முறையாகத் தான்செய்த பரிசோதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக விளக்கினார். நடுவில் யாரும் கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் அவை அழகாக விளக்கப்பட்டன. எவ்வாறு தான் டி. பி. பாக்டீரியாக்களைக் கண்டறிந்தேன் என்று விவரித்தார். இவை எவ்வாறு வளரும், எப்படி மனித உடலில் ஒளிந்து கொள்ளும், எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது எனவெல்லாம் கூறக் கூற அனைவரும் மணிக்கணக்காக ஆவலுடன் அவர் கூறியனவற்றைக் கேட்டனர்.     

           பேச்சின் முடிவில் நன்றிகூறிவிட்டு காச் அமர்ந்தார். அடுத்தபடியாகக் கேள்விகளும் விவாதங்களும் தொடரும். ஆனால் பேச்சு மூச்சில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். ருடால்ஃப் விர்ஷோ, அறிவியல் உலகின் முடிசூடா மன்னர், கூட வாய் பேசவில்லை. பல நிமிடங்களின்பின்பு அவர் எழுந்தார்; தன் தொப்பியைத் தலையிலணிந்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினார். அது அருமையான ஒரு ஆராய்ச்சிக்கு / கண்டுபிடிப்புக்கு அவர் தந்த மரியாதை.

           ராபர்ட் காச்சின் புகழ் உலகெங்கும் பரவியது. நீண்டநாட்கள் கழித்து இந்த மார்ச் 24 ஐ, இந்தக் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் வண்ணம் உலக டி. பி. தினமாக அறிவித்தனர். வருடாவருடம் ஒரு இலக்கான வாக்கைக் (slogan) கொண்டு வரும் நாள் இது. இவ்வாண்டு “ஆம், நாம் டி.பி.யை ஒழித்து விடலாம்,” (Yes, we can end TB) என்பது அந்த சொற்றொடராகும்.

           இந்தக் கட்டுரையை எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் பெருமை கொள்கிறேன். ராபர்ட் காச் எனது அறிவியல் உலக ஹீரோ! என் ஆராய்ச்சிப் பணியின் பெரும்பான்மையான ஆண்டுகளை டி. பி. மருந்து கண்டுபிடிப்பில் செலவழித்தேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

                      

அதிசய உலகம்-7 – நிலவே என்னிடம் நெருங்காதே..-அறிவுஜீவி

“நிலவே என்னிடம் நெருங்காதே?” என்று மெல்லப்பாடினாள் அல்லிராணி.

“என்னடி அல்லி? நீயும் சினிமாப்பாட்டில் இறங்கிட்ட? உன்னுடைய சயன்ஸ் சரக்கு எல்லாம் காலியா?” என்று சீண்டினாள் அங்கயற்கண்ணி மாமி.

“கேளுங்க மாமி! இந்த கண்ணதாசன் பாட்டுக்கு ஏற்ப, நிலா நம்மை விட்டு விலகிக் கொண்டிருக்கிறதாம்!” என்றாள் அல்லி.

“இது என்னடி புதுக்கதையாக இருக்கு. அப்படின்னா, கொஞ்சநாளில, சந்திரன் காணாமப் போயிடுமா? என்றைக்கும் அமாவாசைதானா?” என்று சொல்லிவிட்டு “சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?” என்று அல்லியைப்பார்த்து கண்சிமிட்டினாள் மாமி.

“அவசரப்படாதீங்க மாமி! சயன்ஸ் சொல்வது இதுதான். வருஷா வருஷம் நிலா பூமியை விட்டு 3.8 சென்டிமீட்டர் தொலைவு செல்கிறதை அளந்திருக்கிறார்கள்!” என்றாள் அல்லி.
“அடப் பூ.. இவ்வளவுதானா? இதுக்கா இத்தனை பில்டப்? “என்றாள் மாமி. அல்லி தொடர்ந்தாள் “விஷயத்துக்கு வருகிறேன். பூமி சூரியனை சுற்றி வருவது போல், நிலா பூமியை சுற்றி வருகிறது. பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நிலவு பூமியினை சுற்றி வருகிறது. அதே நேரத்தில், நிலவில் இருக்கும் புவி ஈர்ப்பு விசையும் பூமியை ஈர்க்கும். இதனால், பேரலைகள் உருவாகும். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழும் போது ‘கிக் பேக் எபெக்ட்’ காரணமாக நிலவு விலகிச் செல்கிறது” என்று சொன்ன அல்லியை இடைமறித்த மாமி,

“நிலவில் உள்ள ‘புவி ஈர்ப்பு’ என்று சொன்னாயே ,அது எப்படி சரியாகும்? ‘நிலவு ஈர்ப்பு’ என்று தானே சொல்லவேண்டும்” என்று ஒரு ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பினாள்.

 

அல்லி, “மாமி, அது சொற்குற்றம்! தொடங்கிய பிரச்சினைக்கு, அதாவது சயன்சுக்கு வருவோம். நிலா தோன்றிய போது அது நம்ம பூமிக்கு ரொம்பப் பக்கத்தில் இருந்ததாம். அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில் இருந்ததாம். ஆனால் தற்போது, 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் தொலைவில் வந்துவிட்டதாம். இந்த விகிதத்தில் நிலா விலகிச் சென்றால் அது முழு நிறைவாக கதிரவனை மறைத்து – முழு நிறைவான சூரிய கிரகணம் ஏற்படாது; நமது கடல்கள் அலைகளின்றியும் போகலாம்; இது பூமியின் பல்லுயிர் சூழலை பாதிக்கும்”

மாமி சொன்னாள்: ”அப்ப, நிலா தோன்றிய சமயத்தில் நாமெல்லாம் அமெரிக்கா போறது போல, வெறும் ஏரோப்ளேனிலேயே போய்ட்டு வந்திருக்கலாம்’ என்று ஜோக்கடித்தவள், “அப்புறம், முக்கியமாக, நிலாவைக்காட்டி குழந்தைளுக்கு சோறு ஊட்டும் அம்மாக்கள் பாடு தான் திண்டாட்டம்” என்றாள் முத்தாய்ப்பாக.

இது ஒரு அதிசய உலகம்!
https://www.gearrice.com/update/the-moon-has-begun-to-move-away-from-earth-what-does-this-situation-indicate/

 

திரைக் கவிஞர்  –  தஞ்சை ராமையாதாஸ்  – முனைவர் தென்காசி கணேசன்

 

அமரகவி' தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை! | Thanjai Ramaiah Das 106th Birthday - hindutamil.inதஞ்சை ராமையாதாஸ் – கவிஞர் – தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் – வசனகர்த்தா என பல பரிமாணங்களைக் கொண்டவர். பாமரர்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாய மற்றும் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை தந்தவர். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்.

கண்ணதாசனுக்கு முன்பு, கம்பதாசன், உடுமலை நாராயண கவி ,தஞ்சை ராமையதாஸ் என்ற மூன்று கவிஞர்களே பிரபலமானவர்கள் என இருந்தார்கள்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கதராடை அணிந்து பள்ளி வரக் கூடாது என்று பள்ளி ஆய்வாளர் கூற, வேலையை ராஜினாமா செய்து, நாடகம், திரை என வந்துவிட்டார். தவத்திரு

சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

இவரின் பல பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, இன்னும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறன.

● பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ (மிஸ்ஸியம்மா)
● தெரிந்து கொள்ளணும் பெண்ணே (மிஸ்ஸியம்மா)
● அழைக்காதே நினைக்காதே அவைதனிலே எனை (மணாளனே மங்கையின் பாக்கியம்)
● சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு (குலேபகாவலி)
● மயக்கும் மாலை பொழுதே நீ போ போ… (குலேபகாவலி)
● கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
● என்னதான் உன் பிரேமையோ (பாதாள பைரவி)
● ஏறாத மலை தனிலே வெகு ஜோரான (தூக்கு தூக்கி)
● வாராயோ வெண்ணிலாவே (மிஸ்சியம்மா)
● ஆண்டவனே இல்லையே தில்லைத் தாண்டவன் உன்போல் தரணி மீதிலே(ராணி லலிதாங்கி)
● காளை வயசு கட்டான சைசு (தெய்வப்பிறவி)

● எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்)
● புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
● வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க (மதுரை வீரன்)
● வனிதா மணியே
● கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே (அடுத்த வீட்டுப் பெண்)

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இவரின் முதற் படம். தொடர்ந்து, திகம்பர சாமியார் , சிங்காரி ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
ராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950-இல் சென்னைக்கு அழைத்தார்.

அந்த ராசியோ என்னமோ, தயாரிப்பாளர் திரு நாகி ரெட்டியின் “பாதாள பைரவி” படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதியவர், தொடர்ந்து நாகி ரெட்டியின் மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.
கிட்டத்தட்ட, 140 படங்களில் சுமார் 800 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும் எழுதியுள்ளார்.

திருக்குறள் இசை அமுதம்” என்ற இவரின் நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர்

இவரின் அந்தக் காலப் பாடல்கள், ரசிகர்களை தாளம் போட வைத்ததுடன், விசில் அடிக்கவும வைத்தது.

ஜாலிலோ ஜிம்கானா
டோலிலோ கும்காநா என்றும்

முக்காலும் காலும் ஒன்னு
உன் அக்காளும் நானும் ஒன்னு என்றும்

மேலே பறக்கும் ராக்கெட்
மின்னில் பூச்சி ராக்கெட்

என்றும் எழுதினார். இந்தப் பாடல்களை பலர் விமர்சனம் செய்ததும் உண்டு .

அதற்கு அவரும்,

தில்லா டாங்கு டாங்கு
திருப்பிப் போட்டு வாங்கு
என்று எழுதினால் தான், வசதியற்ற பாமர மக்கள் மனம் திறந்து சிரிப்பார்கள். அதை விட்டு, வண்டார்குழல் பூச் செண்டாட – அழகு கொண்டாட என்று எழுதினால எவ்வளவு பேர் ரசிப்பார்கள் என்பாராம்.

ஆனாலும, நல்ல தமிழில் அற்புத பாடல்களும் தந்திருக்கிறார்.

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா

ஓம்காரமாய் விளங்கும் நாதம்
அந்த ரீங்காரமே இன்ப கீதம்
என்ற பாடல் தெய்வீகம் நிறைந்தது.

குணசுந்தரி படத்தில்,
கலையே உன் விழி கூட கவி பாடுதே – தங்கச்
சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே

அடுத்த வீட்டுப் பெண் படத்தில்,
கண்களும் கவி பாடுதே
கண்ணே உன் கண்களும் கவி பாடுதே
விண்மணி போல ,மண்மேலே விளையாடும்
கண்மணி நீயே – பெண்மானே செந்தேனே

மக்களைப் பெற்ற மகராசியில்,
போறவளே போறவளே பொண்ணுரங்கம்
புரிஞ்சிக்காம போரயேடி சின்னரங்கம்

மலைக்கள்ளன படத்தில,
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்

மதுரை வீரன் படத்தில்,
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிபாருங்க,
என்று எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் நடித்த, வணங்காமுடி படத்தில இடம்பெற்ற, ஐம்பெரும் காப்பியங்களையும் இணைத்து எழுதி, சங்கீத சாகரம் ஶ்ரீ ஜி ராமநாத அய்யர் அவர்களின் அற்புத இசையில், சங்கீத வாணி எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடிய சுத்த தன்யாசி இராகப் பாடல், மிக அருமை.

சிகரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால்தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
கண்கண்ட ஐம்பெரும் காவியத் திலகமே !
வா வா வளர்மதியே வா – கலைமதியே வா

அதேபோல, வணங்காமுடி படத்தில இன்னொரு பாடலிலும் தமிழின் அழகைத் தருகிறார்,

மலையே உன் நிலை எண்ணிப் பாராய்
கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான
மலையே உன் நிலை எண்ணிப் பாராய்

நடிகர் திலகம் நடித்த, ஹரிச்சந்திரா படத்தின் பாடல்கள் வெளிவரும்போது, இவர் உயிருடன் இல்லை. ஆனால் பாடல்கள் மிக அருமை

உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை

இன்னொரு பாடலும் மிகச் சிறப்பான வரிகள் கொண்டது.

ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே

இப்படிப் பல கவித்துவமான பாடல்களை தந்திருக்கிறார்.

மிகத் தைரியமான மனிதர். எம்ஜிஆரை வைத்து ராணி லலிதாங்கி படம் எடுத்து, பாதியில் இருவருக்கும் தகராறு வர, மீண்டும் சிவாஜியை வைத்து எடுத்து , அதே படம் வெளி வந்தது. அதோடு, எம்ஜிஆர் மீது வழக்குப்போட்டு, வெற்றியும் பெற்றார்.

நிறைய பட வாய்ப்புக்களும், பணமும் சேர, வடபழனியில் பெரிய தோட்டம் (வாத்தியார் தோட்டம் என் இன்னும் இருக்கிறது) பங்களா, கார் என வசதிகள் சேர, உடன் அதிகமான குடிப் பழக்கமும் சேர, 50 வயதுக்குள் மறைந்தும் விட்டார். அவர் மகளை ஒருமுறை vintage நிகழ்வு ஒன்றில் சந்தித்துப் பேசினேன்.

கல்லூரிக்குச் சென்று தமிழ் படித்த, நல்ல கவிஞர் திரு தஞ்சை ராமையதாஸ் அவர்கள்.

மீண்டும் அடுத்த மாதம், இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி
 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

விபத்தில் காலில் காயம் அடைந்ததால் தம்பியை, பிளஸ்-2 தேர்வு எழுத தூக்கி வந்த அண்ணன்

                                      நீ நடந்தால் நடையழகு…!

      ‘ஏன்பா.. அந்த டாக்டர் ரொம்ப ஸக்ஸஸ்ஃபுல்லா உன் கால் எலும்பு முறிவை ஆபரேட் பண்ணி ரொம்ப அழகா செய்துட்டாரே… பின்னே ஏன் அவரை இப்படித் திட்டறே…?’

      ‘அட, நீங்க ஒண்ணு.. ஆபரேஷன் முன்னாலே நான் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பேன்.. அப்போ என் ஃப்ரண்ட்ஸெல்லாம்   ‘மச்சான்,, உன் நடைதான் உனக்கே அழகு’ என்று பாராட்டுவாங்க… இந்த டாக்டர் ஆபரேஷன் செய்யற போது அந்தக் குறையையும் சரி செய்துட்டாரு… இப்போ எங்கே என்னுடைய அந்த அழகான நடை..?’

       ‘!!!!!’

குட்டீஸ் லூட்டீஸ்:

துயில்! THUYIL! • A podcast on Anchor

                                                                        குண்டக்க  மண்டக்க..  !

          என் நண்பன் ஆபீஸ் வேலையாக இரண்டு நாள் டூர் வந்து என்னுடன்  தங்கியிருந்தான். 

          காலையில் எழுந்து வந்தவனிடம், ‘என்னப்பா.. நல்லா தூங்கினியா?’ என்றேன் சம்ப்ரதாயமாக.

          ‘’எங்கேப்பா.. புது இடம்ங்கறதாலோ என்னமோ… சரியா தூங்கவே இல்லே..’ என்றான் யதார்த்தமாக.

          என்னருகிலிருந்த என் மகள் மிதிலா அவனைக் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

          ‘அடக் கடவுளே… இவளொன்றும் குண்டக்க மண்டக்கன்னு ஏதாவது கேட்காமல் இருக்க வேண்டுமே’ என்று எனக்குத் தெரிந்த கடவுள்களையெல்லாம் வேண்டிக் கொண்டேன்.

             என் பிரார்த்தனை கடவுள்களை சென்றடையவில்லை போலும்.

             ‘அப்பா.. ராத்திரி கண் விழித்துக் கொண்டிருந்தால் குறட்டை விடுவாங்களா..” என்றாள்

             ‘அதெப்படீம்மா.. நன்னா தூங்கிட்டிருக்கும்போதுதான் குறட்டை விடுவாங்க… எதுக்கும்மா கேட்கறே…’ என்றான் என் நண்பன் என்னை  முந்திக் கொண்டு.  வேண்டுமா அவனுக்கு…?

             ‘ஓ அப்படியா… இல்லே.. நேத்து ராத்திரி நீங்க படுத்திட்டிருந்த ரூமிலிருந்து வந்த குறட்டைச் சத்தத்தாலே ஹாலில் படுத்திட்டிருந்த அப்பாவும், நானும் தூக்கம் வராம தவிச்சிட்டிருந்தோம்.  அதனாலேதான் கேட்டேன்’ என்று சொல்லி விட்டு சமயலறைக்கு சென்றாள்.

             மேலாகச் சிரித்தாலும் தர்ம சங்கடத்தில் நெளிந்தோம் நானும் என் நண்பனும்.

             ‘அட.. ஏதோ சம்ப்ரதாயமா பதில் சொன்னதை வைத்து என்னை மடக்கிட்டாளே அந்தச் சுட்டிப் பெண்..’ என்ற தர்மசங்கடம் நண்பனுக்கு.

             ‘தேவையில்லாம குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேட்டு நண்பனை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாளே என் பெண்’ என்ற தர்மசங்கடம் எனக்கு.

 

 

. கண்ணன் கதையமுது-17 – தில்லைவேந்தன்

(பாம்பின் உருவில் வந்த அகாசுரனைக் கொன்று மாடுகளையும் சிறுவர்களையும் கண்ணன் காப்பாற்றினான்.
பிறகு அவர்கள் மாடுகளை யமுனை நதிக்கரையின் அருகில் இருந்த புல்வெளியில் மேய விட்டு, அங்கிருந்த மணல்திட்டில் விளையாடினர்……)

Krishna, child, flower, flute, friendship, krish, little krishna, lord  krishna, HD phone wallpaper | Peakpx

கண்ணன் குழலிசைத்தல்

பூமரங்கள் சீராட்டப் பொன்வண்டு பாராட்டக்
காமருவு கிளைகளிலே கருங்குயில்கள் தாலாட்டத்
தாமரையின் முகத்தழகன் தளிர்விரல்கள் குழல்தடவத்
தேமதுரப் பண்ணிசையால் திசையனைத்தும் மயங்கினவே

குறுநகையான் கோவிந்தன் குழல்கொண்டு பண்ணிசைக்க
நறுமலர்கள் தேன்பிலிற்ற நனிமழையாய்த் தரைபொழியப்
பறவைகளும் கூடுகளுள் பார்ப்புடனே தாம்மயங்கக்
கறவைகளும் கால்பரப்பிக் கற்சிலைபோல் ஆயினவே

( பார்ப்பு- பறவைகளின் குஞ்சுகள்)

நெற்றியின்வீழ் நீர்வியர்வை நீணிலத்தில் கோலமிடப்
பற்றுகுழல் விரல்தடவிப் பரவியதில் நடனமிடச்
சுற்றிநின்ற சிறுவரெலாம் சொல்மறந்து செயல்துறக்க
மற்றவனும் முல்லைப்பண் மனங்களிக்க ஊதினனே

(முல்லைப் பண்- முல்லை நிலப் பண்- மோகனம்)

 

 

காமயங்கும் காய்மயங்கும் கனிமயங்கும் காணழகுப்
பூமயங்கும் புள்மயங்கும் பொலிநதியின் புனல்மயங்கும்
ஆமயங்கும் அவைமேய்க்கும் அச்சிறுவர் அணிமயங்கும்
கோமகனாம் கோபாலன் கோவிந்தன் குழலிசையில்.

அசைவனவும் அவனிதனில் அசையாத அவையாவும்
இசையினிலே இயைந்ததனால் இயல்புநிலை இழந்தனவே
மிசையுலவு மேகநிற மேனியனின் வேய்ங்குழலில்
வசையின்றி வழியினிமை வார்த்தைகளின் வசப்படுமோ

 

ஆயர் சிறுவர் விளையாட்டு

புல்வெளியில் மாடுகளை மேய விட்டுப்
பொழுதெல்லாம் அங்கிருந்த மணலின் திட்டில்
எல்லொளியில் விளையாடிக் களித்தி ருந்த
எல்லாரும் மாடுகளை மறந்து விட்டார்.
ஒல்லையிலே கதிரவனும் வெம்மை காட்டி
உச்சிக்குச் சென்றதனால் உடல்க ளைத்தார்.
நல்லநிழல் சென்றமர்ந்து கொண்டு வந்த
நாவூறும் உணவுண்டு மகிழ்ந்தார் உள்ளம்.

(எல்லொளி- சூரிய ஒளி)
(ஒல்லையில்- விரைவில்)

 

மாடு கன்று காட்டுக்குள் மறைதல்

புல்லை மேய்ந்த மாடுகன்று
புதிய புல்லைத் தேடுதற்கு
மெல்ல மெல்லக் காட்டுக்குள்
விழைந்து சென்று மறைந்தனவே.
இல்லை பசுக்கள் என்றறிந்தே
ஏங்கித் தவித்தார் இடைச்சிறுவர்
இல்லம் செலுமுன் கண்டறிவேன்
என்று கண்ணன் வனம்புகுந்தான்.

 

மாடுகளும், சிறுவர்களும் காணாமல் போதல்

தேடிப் பார்த்தும் கிடைக்காமல்
திரும்பி வந்து பார்க்கையிலே
ஆடிப் பாடி மகிழ்சிறுவர்
அவரை அங்குக் காணவில்லை.
மாடும் கன்றும் மறைந்தனவே,
வந்த சிறுவர் மறைந்தனரே.
ஈடும் இணையும் இல்லாதான்
எல்லாம் அறிந்து புன்னகைத்தான்.

 

நான்முகன் கர்வம் அடக்குதல்

(கண்ணனைச் சோதிக்க எண்ணிய பிரமன்,மாடுகளையும், சிறுவர்களையும் ஒரு குகையில் அடைத்து வைத்தான் . கண்ணனோ மறைத்து வைக்கப்பட்ட அத்தனை வடிவமாகத் தானே ஆனான். தான் மறைத்தவற்றை வெளியிலும், குகைக்குள்ளும் கண்ட நான்முகன், கண்ணன் ஆற்றல் அறிந்து அடங்கிப் பணிய, எல்லாம் முன்பிருந்த வண்ணம் ஆயின)

மறையை ஓதும் நான்முகனே
மறைத்தான் குகையில் என்றறிந்தான்.
மறையும் முன்னே அங்கிருந்த
வடிவம் அனைத்தும் தானானான்.
சிறையில் பிரமன் மறைத்தவெலாம்
திகழக் கண்டான் இரண்டிடத்தும்
இறையின் ஆற்றல் அறிந்தடங்க,
எல்லாம் முன்போல் ஆயினவே!

( தொடரும்)

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

 

 

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
47. மழை வருது ! – ஜூன் 2022
48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
49. என் சித்திரம் ! – ஜூலை 2022
50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022
53. பூனையாரே ! – செப்டம்பர் 2022
54. எதைச் செய்தாலும் ! – செப்டம்பர் 2022
55. கடைக்குப் போகலாமா ? – அக்டோபர் 2022
56. பூ ! பூ ! பூ ! – அக்டோபர் 2022
57. மிருகக்காட்சி சாலை ! – நவம்பர் 2022
58. மாமா ஸ்கூட்டர் ! – நவம்பர் 2022
59. மரங்கொத்தி ! – டிசம்பர் 2022
60. காய் வாங்கலையோ ? – டிசம்பர் 2022
61. டாக்டர் மாமா ! – ஜனவரி 2023
62. கிரிக்கெட் ! – ஜனவரி 2023
63. நிலா ! நிலா ! நிலா ! – பிப்ரவரி 2023
64. லீவு விட்டாச்சு ! – பிப்ரவரி 2023

 

சினிமா ! சினிமா ! சினிமா !

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களின் பட்டியல்! இடம் பிடிக்காத நடிகர் விஜய் - சினிஉலகம்

 

சினிமாவுக்கு போகலாமா அம்மா ? நாம்
பெரிய திரையில் பார்க்கலாமா அம்மா ?
சினிமாவைப் போல ஒரு மேஜிக் – இந்த
உலகத்தில் வேறு எதுவும் இல்லை !

தியேட்டர் பக்கம் போய்விட்டால் போதும் – என்னை
பரபரப்பு பற்றியே கொள்ளும் !
சொகுசான இருக்கையிலே அமர்ந்து –
சுகமாக சினிமா பார்க்க வேணும் !

விளம்பரம் எல்லாம் முடிந்து – பின்னர்
மெயின் படம் போடும்போது ஜாலி !
ஹீரோவின் பெயர் போட்டால் போதும் – அங்கே
விசில் சத்தம் காதுகளில் மோதும் !

பாட்டு டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும் – என்
வாயும் கூட வரிகளை முணுமுணுக்கும் !
சண்டைக்காட்சி என்று வந்துவிட்டால் – நான்
சீட்டின் நுனிக்கு வந்து வந்து விழுவேன் !

எத்தனை முறை பார்த்தாலும் சினிமா –
அலுக்கவே அலுக்காது அம்மா !
இப்போதே நீயும் நானும் சும்மா –
சினிமாவுக்குப் போகலாமா அம்மா ?

 

 

குரங்கு மாமா !

குரங்கு மாமா ! குரங்கு மாமா !
குறுக்க வராதீங்க !
கார் வருது ரோட்டு மேலே –
குறுக்க வராதீங்க !
மலை மேலே ஏறி வரோம் –
குறுக்க வராதீங்க !
சர்ருன்னு சறுக்கி வரோம் –
குறுக்க வராதீங்க !

கூட்டம் கூட்டமா நீங்க எல்லாம் –
குறுக்க வராதீங்க !
குட்டியை குட்டியை சுமந்துக்கிட்டு –
குறுக்க வராதீங்க !
ஈறும் பேனும் பார்த்துக்கிட்டு –
குறுக்க வராதீங்க !
இங்கிட்டு அங்கிட்டு பாய்ஞ்சுக்கிட்டு –
குறுக்க வராதீங்க !

மரத்துக்கு மரம் தாவிக்கிட்டு –
குறுக்க வராதீங்க !
மங்கி ஜம்ப் பண்ணாதீங்க –
குறுக்க வராதீங்க !
கோயிலுக்குப் போக வேணும் –
குறுக்க வராதீங்க !
கும்பிட்டு நான் கேட்டுக்குறேன் –
குறுக்க வராதீங்க !

 

 

 

 

உன் கண்ணில் நீர் வழிந்தால்! கிறிஸ்டி நல்லரெத்தினம்

 

 

அந்தக் குடியிருப்பில் ஞாயிறு என்றும் போல் அமைதியாகவே விடிந்தது. செங்கல்பட்டு  சந்தையின் பின்னால் அமைந்திருந்த அக்குடியிருப்பில் கல்வீடுகள் இல்லை. தொடர்மாடிக் கட்டிடங்களின் எச்சங்களாக அடிமட்ட வாழ்க்கைப் போராளிகள் நாள் நகர்த்தும் சந்து வீடுகள் அவை.

இங்கும் உரிமைப் போர்கள் நிகழ்வதுண்டு.

இப்படி வெடிக்கிறது போர்……..

“ஏயா, இப்பிடியா பச்சப்புள்ளைய போட்டு அடிப்பாக. பாரு, வரி வரியா கம்பளி புழு மாதிரி சும்மா வீங்கியில போச்சு. என்ன மனுஷன்யா நீ? புள்ள என்னா குத்தம் செஞ்சிதாம்? ஆசைக்கு ஒரு பொம்மைய தொட்டதுக்கு…..”. அதற்கு மேல் வார்த்தைகள் கண்ணீராய் மாறி பொன்னம்மாளின் உலர்ந்த கன்னங்களை நனைத்தன.

“உம் பேத்தி சனியன நீதா கொஞ்சி கொஞ்சி….. ” நாக்கை மடித்து கடித்துக் கொண்டு, ஒரு கோழிக்குஞ்சு தாய் கோழியின் செட்டையின் கீழ் அடைக்கலமான பாவனையில், பொன்னம்மா பாட்டியின் சேலைத் தலைப்புக்கள் ஒளிந்து கொண்டு விக்கி விக்கி அழும் மகள் சாருலதாவை நெருங்கினான் மாரிமுத்து. பொம்மை கிடைக்கவில்லையே என்ற தன் பொசுக்கப்பட்ட அசையை இன்னும் அவள் நினைத்து ஏக்கமாய் பார்ப்பது மாரிக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

‘என்னமா அந்த நாயி  கேட்டான்?  “ரோசம் இருந்த உம் புள்ளைக்கு வாங்கி குடுடா சோம்பேறி. எம் புள்ள பாப்புளைய  இனி தொட்டா அவ தோலு உரியும்.”

எதிர் வீட்டு பிச்சை தன் நாலு வயது மகளை வைதது மாரிக்கு பெரிதாய் படவில்லை. இத்தனைக்கும் அப்படி ஒன்றும் பெரிய தவறு நடந்து விடவில்லையே.  சாருலதா பிச்சையின் குழந்தையின் பொம்மையை பிடுங்கிக்கொண்டு வந்ததால் வந்த வினை. ஆனால் மகளின் செயலால் பிச்சை முன் தன் மானம் மண்டியிட வேண்டியதாயிற்றே என்ற கசப்பு அவனை உறுத்திற்று. பிச்சைக்கும் தனக்கும் உள்ள நெடுநாள் குரோதப் போட்டியில்  இத் தலைகுனிவு பிச்சைக்கு ஒரு புள்ளியை வழங்கியதாகவே அவனுக்கு பட்டது. இந்த தெருச்சண்டையை வேடிக்கை பார்த்த முகமற்ற மனிதர் முன் தான் சிறுமைப்பட்டதை எண்ணி வெதும்பினான் மாரி.

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சாதாரண வேலிச் சண்டை புரையேறி இரு குடும்பங்களுக்கும் நடுவே ஒரு நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்தது. கசப்பான முறுகல்களின் சாரம் சிலேற்றில் எழுதப்பட்டு சீட்டுக்கட்டாய் இவர்கள் மனதில் அடுக்கி வைக்கப்பட்டு  உரசல்களின் போது மீண்டும் அவை இவர்கள் கண்களின் முன்  திணிக்கப்படும் போது எழும் வலி  கொடியது. அப்போது பேசப்படும் வார்த்தைகளின் வலிமை எவரையும் சிறுமைப்படுத்தும். தினக்கூலியில் வாழும் சாமானியர்களின் வாழ்வில்  இது ஒன்றும் புதிதல்லவே?

நான்கு வருடத்திற்கு முன் மாரியின் மனைவி மகப்பேற்றில் மரித்த சோகம் அவனை விட்டுப் போகவில்லை. இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாமல் அவள் உயிர் பிரிந்த சோகம் மாரியின் ஆத்மாவையே பிராண்டி எடுத்து எங்கோ தூர எறிந்து விட்டது. அவன் முகத்தில் குடியேறிய கவலைக் கோடுகள்…..அவை வறுமையோ வயதோ வரைந்த வரிகள் அல்ல. மனைவி சாருலதாவின் பிரிவால் அவன் நெஞ்சில் சாத்திய சோகச்சுமையின் வடுக்கள்.

செருப்பை கால் மாற்றி அணிந்து நடப்பவனின்  சங்கடம் மாரிக்கு …..ஒவ்வோரு அடியையும் நினைத்து நிதானித்து வைத்து நகரும் நத்தை வேகம் அவன் வாழ்வில்.

அவனுக்கிருந்த எல்லா சுகங்களையும் மனைவி உறிஞ்சி எடுத்துப் போனாளோ என்ற ஒரு பிரமை.

குழந்தையை கையிலேந்தி நார்ஸ்  ‘என்னா பேரு வைக்கீக?’  எனும் கேள்விக்கு கிழவி முத்திக்கொண்டு ‘அவ அம்மா பேரயே வச்சுக்க….. மகராசி,  பச்ச புள்ளய பெத்து கையில கொடுத்துட்டு போயிடிச்சி. அவ போனாலும் பேரு நிக்குமில்ல’. கிழவியின் வாதம்  மாரிக்கும்  சரியாகவேபட்டது.

‘சாசாருலதாதாதா…’. கிழவி பெயரை ரப்பராக இழுத்து நீட்டி பொக்கை வாய் நிரப்பி குழந்தையின் காதருகே குனிந்து ஒரு இரகசிய மந்திரம் போல் மெதுவாய் ஓதினாள்.

நாட்கள் மாதங்களாகி  மாதங்கள் வருடங்களாகி…… ஓ! நான்கு வருடங்கள் என்னமாய் ஓடிவிட்டன?

மாரிக்கு மனைவி விட்டுச்சென்ற வெற்றிடம்  இன்னும் தரிசு நிலமாகவே பட்டது. ‘சாரு, நீ என் உசிரு புள்ள’  என மனைவியை அணைக்கும் போது இருந்த அந்த நேசத்தின் சூடு இன்றில்லை.

அவளிடம் பகிர்ந்த அந்த அன்பு இன்று தேங்கிக் கிடக்கிறது. அது அவன் நெஞ்சை நிறைத்து தொண்டை குழியை அடைத்து கண்வழி வழிந்து கன்னங்களை நனைப்பதுண்டு. சோகம் என்பதும் செல்ல இடமில்லாத அன்புதானே!

ஆனால் அந்த காதலை அன்பாக உருமாற்றி தன் குழந்தை மீது செலுத்த அவன் மனம் மறுத்தது. ‘ என் சாருவோட உயிர குடிச்ச இந்த சனியன்……’.

கிழவி குழந்தையை ‘சாரு…, சாரு குட்டி… என் குஞ்சு’  என்று பல பெயர் சொல்லி கொஞ்சினாலும் அவனுக்கு அவள் சாருலதாதான். தன் சாருவுக்கு இருந்த அந்த ஸ்தானத்தில் வேறு ஒருவருக்கும், பெயரளவில் கூட,  இடமில்லை. 

மனைவி சாருவை நினைக்கும் போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன் அவளை முதலில் சந்திந்த நினைவை அசை போடுவான். மாரி ஒன்றும் பெரிய குமாஸ்தா வேலை செய்து மாசச்சம்பளத்தில் நாட்களை நகர்த்துவபன் அல்ல. 

செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள லக்ஷ்மி விலாசின் கக்கத்தில் பிளாஸ்டிக் துப்பட்டியில் கூரை கட்டி இணைத்து கடை என்ற பெயரில் இயங்கும் ‘டெயிலர் சாப்’. அங்கு ஒரு தையல் மெஷின், துணி அடுக்க கண்ணாடி போட்ட ஒரு அலுமாரி, வாடிக்கையாளர்கள் ‘ஃபிற் ஓன்’ பார்க்க ஒரு பலகை மூடிய மறைவிடம்…..லக்ஷ்மி விலாசின் முதலாளியின் பரந்த மனதில் மாரிக்கும் ஒரு சின்ன இடம். தையல் மெஷினுக்கு மேல் மினுங்கும் மின்குமிழக்கு மட்டும்தான் ‘கறண்ட் பில்’ என்ற பெயரில் சிறு வாடகையை முதலாளி மாசா மாசம் வசூலித்துக் கொள்வார். தினமும் வேலை முடிந்ததும் வெளியே கிடக்கும் துணிமணிகளை அலுமாரிக்குள் போட்டு மூடி அதையும் மெஷினையும் மெதுவாய் தள்ளி கடைக்குள் வைத்த பின்  கடையை பெருக்கி சுத்தம் செய்து ‘வரேன் சாமி’  என்று விடை பெற்று வீதியில் இறங்கி செங்கல்பட்டின் சமூகக்கும்பலுக்குள் கலந்து மறைவான்.

அவன் இவற்றை விரைவாக செய்து கடையை விட்டு வீதிக்கு வந்தாக வேண்டும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ‘மாரி, என்னா அவசரம்…. உனக்கென்ன பொண்டாட்டியா குடும்பமா? சும்மா ஒரு ஐஞ்சு நிமிஷம் இருந்துண்ணு போறது…. ” என்று முதலாளி  பேச்சுத்துணைக்கு பிடித்துக் கொள்வார்.  மாரிக்குத் தெரியும் அந்த ஐந்து நிமிடங்கள் ஐம்பது நிமிடங்களாய் நீளும் என்று. முதலாளி ஒரு நல்ல கதை சொல்லி. நல்ல  வாசிப்பனுபவம் உள்ளவர். மாரி எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படியை  மறந்தவன். ஆனால் முதலாளி தன் கல்லாப்பெட்டியில்  இருந்தவாறு படிக்கும் இலக்கிய நயமுள்ள புத்தகங்களை பார்த்திருக்கிறான். “மாரி நீ புதுமைப்பித்தன் படிக்கணும்டோய். என்னா துணிவா மனுஷன் எழுதிவச்சான்? அது முப்பதுகளில எழுதுதினது கண்டியோ…. என்னா எழுத்து…. என்னா துணிவு”  என சிலாகித்துக் கொள்வார்.

மாரியின் காதுகள் முதலாளியின் வார்த்தைகளின் பாதியை கிரகித்தாலும்  கண்கள் கடைச்சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்திலும் அதன் இரு மருங்கிலும் மாட்டியிருக்கும் புதுமைப்பித்தன், பாரதி, ஜெயகாந்தன் படங்களிலும் பதிந்திருக்கும்.  தன் இலக்கிய நாட்டத்தை ஊருக்குச் சொல்லவே  அவரின் இந்த சோடனை. ஆளுமை, படைப்பாளி, இலக்கிய சந்திப்பு,  வாசிப்பனுபவம் போன்ற சொற்களை தம் பேச்சில் ஆங்காங்கே தூவி தானும் ஒரு இலக்கியவாதி என்ற காட்டிக் கொள்வார்.

“இந்தா இந்த வடைய கடிச்சுக்கோ”  என தட்டை தள்ளி  அவர் கல்லாப்பெட்டிக்கு அருகில் இருந்த கதிரையில் அவனை அமர்த்தி இறுதியாய் படித்த சிறுகதையொன்றை சொல்லத் தொடங்குவார். அவருக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. கடையின் மேல் மாடியில் குடியிருப்பெனில் அது பற்றி கவலை ஏனாம்?

மாரிக்கு சாதகமானது ஒன்று இல்லாமல் இல்லை. முதலாளி நாவல்கள் படிப்பதில்லை…. அவர் வாசிப்பு சிறுகதைகளுடன்  சரி. எனவே முதலாளியின் ‘கதை கேட்போம் வாரீர்’ அங்கங்கள் ஒரு மணி நேரத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

” பொன்னகரத்தின்ட முடிவில  பித்தன்  என்னமா கேட்டான் கண்டியோ?…. என்னா புரட்சி!…’என்னமோ கற்பு கற்புணு கதைக்கிறீங்க… இதுதான்யா பொன்னகரம்’  அப்பிடீனு போட்டானே ஒரு போடு. இப்போ இப்படி எழுதிப் பார்க்கட்டும்… கொழுத்திப்போடுவானுக!” என விமர்சனத்தை முடிப்பார்.

‘ஜெயகாந்தனும் கொஞ்சம் துணிவாத்தான்  எழுதிவச்சான். ‘புது செருப்பு கடிக்குமுணு’  ஒரு கத…. கல்யாணமாகி முத இரவில  மாப்பிள கட்டின பொண்டாட்டிய விட்டுணு வேற பொண்ண தேடி போனானா… அந்த பொண்ணு கால் விரல்ல காயத்துக்கு  எண்ண தேச்சிண்டு சொல்லறா… “புது செருப்பில… அதான் கால கடிச்சிரிச்சி”. மாப்பிளைக்கு மூளையில செருப்பால அடிச்சாப்பல புத்தி வந்திடிச்சா…. சைக்கிளல ஏறி ஊட்டுக்கு போறான்…. அதான்யா கத……. கத பேரிலேயே கத  முழுசா அடங்கிசிரிச்சில்ல?”  என்று கேட்டு விட்டு பதிலுக்காய் காத்திருக்காமல்  “மாரி, இதெல்லாம் படிச்சிப்பாத்து  அனுபவிக்கணும் மாரி” என்பார்.

” சும்மா எழுதிக்குவிச்சா எல்லரும் படிப்பானுகணு  நினைக்க வேணாம் மாரி. இலங்கையில மல்லிக ஜீவாணு எழுத்தாளரு….. புத்தகத்த அச்சடிச்சு தோள்ல சுமந்து இலக்கியம் வளர்த்தாரு கண்டியோ?”

முதலாளி மறைந்த  படைப்பாளிகளை மட்டுமல்ல சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்களையும் மாரிக்கு அறிமுகப்படுத்த தவறுவதில்லை.

“மாரி, நவீன இலக்கியமெங்கிறது மரித்துப் போகல…… இப்போ ஜெயமோகன்னு ஒருத்தர் நல்லா எழுதுறாரு. அவரோட ‘குருவி’ எங்கிற கதயில் மாடன் பிள்ளைனு  ஒரு எலட்றீசன். கத கடைசீல ஒரு தூக்கணாங் குருவி ஒயரில் பின்னின கூட்ட நெஞ்கோட அணைச்சிணு  கதறி அழுது ஒரு புது மனுஷனா மாறி….ஒரு சடப்பொருளும் மனுஷாள மாத்தலாமுணு தெரியுமோ?’  என கேள்வியிலேயே கதை முடிப்பார்.

மாரியை வாசிப்பின் பக்கம் சாய்த்துவிட  அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தாலும் அவனும் ஒரு நாள் வாசகனாவான் என்ற நம்பிக்கை அவருள் இருந்தது.

நாள் முழுவதும் குனிந்த தலை நிமிராமல் முயலைத் துரத்தும் வேட்டை நாய் போல் துணி மீது  நூல்கோலம் போட்டு ஓடும் ஊசியின் நடனத்தை கண்ணயராமல் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வாசிப்பில் எப்படித்தான் காதல் வரும்? ஒரு டெயிலரின் தலைகுனிவில் கைகோர்த்து வரும் கழுத்து வலியையும் கண்ணயர்வையும் புரிந்தவரில்லை. ஆனால் வேலை முடிந்ததும் நடைபெறும் முதலாளியுடனான இலக்கியப் பகிர்வு அவனுக்கு ஒரு கட்டாய விடிவாகவே பட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன் தீபாவளிக்கு ஒரு பிளவுஸ் தைப்பதற்காய் சாருலதா மாரியின் கடைக்கு வந்ததை கல்லாப் பெட்டியில் இருந்தவாறே  முதலாளி கவனித்திருந்தார். பரந்த நெற்றியின் நடுவில் ஒரு சிறு கரும்பொட்டு, துரு துரு என எதையோ தேடும் கண்கள்…ஒற்றைப்பின்னல்  கட்டிய சடையில் சொருகிய மல்லிகைச் சரம். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சந்தண நிறம்.

“டெயிலர்ண்ணா, துணி எடுக்க லேட்டாகிடுது. தீபாவளியும் வந்திற்று… இத முடிச்சித்தர ஏலுமா?”

 

தலையை நிமிர்த்தி பார்த்த மாரிக்கு அவள் கண்களில் இருந்த அந்த தவிப்பை உணர முடிந்ததது. கீழே இழுத்துக் கொண்ட அவள் உதடுகளில் இருந்த தாபம் அவனுக்குப் பிடித்திருந்தது.

“டெயிலரண்ணா இல்ல….. மாரி…. மாரி”  என கூறி தம்மிடையே இருந்த உறவை ஒரு புன்முறுவலுடன் தட்டி நிமிர்த்திக்கொண்டான்.

அதை புரிந்தது போல் தலையை இருபுறமும் அசைத்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாள் சாருலதா.

அவர்கள் உறவின் முதல் அங்கீகர முத்திரை அது.

முதல் சந்திப்பில்…. அந்தக் கணத்தில்…. ஒரு தீப்பொறிபோல் தோன்றி மறையும் அந்த மகிழ்ச்சிக் கண்ணிவெடி அவன் – அவள் மட்டுமே புரிந்து அனுபவிக்கும் ஒன்று. அக்கணம் பற்றி அவர்கள் இன்னும் எத்தனையோ முறை நனவிடை தோய்ந்தாலும் ஒரு மத்தாப்பு, ஒளி எச்சம் உதிர்த்து வான் ஏறி வெடித்து விரிந்து ஒரு அரக்கனின் குடை போல் வண்ணத்தூவானத்தை  வானில் பரப்பி  மறையும் அந்த மகிழ்ச்சிப் பிரவகம் ஒரு முறைதான் எவர் வாழ்விலும் தோன்றி மறையும்! அந்த மகா மத்தாப்புக்காய் ஏங்கியவர் பலர். சிலர் வாழ்வில் தீக்குச்சி தொடாத திரியாய் அது மறைந்து போவதுண்டு.

தீபாவளியைத்  தாண்டியும் மாரியைப் பார்க்க சாருலதா வருவதை முதலாளியின் கழுகுக்கண்கள்  கவனிக்கத் தவறவில்லை.

ஒவ்வொரு சந்திப்பிலும் சாருலதாவின் கைகளில் இருக்கும் புத்தகங்களையும் அவர் பார்த்திருந்தார்.

“என்னா மாரி, அந்த பொண்ணு தினம் வர்ராப் போல?…. ஏதுண்ணா  நமக்கிட்ட சொல்லலாமில்லையோ?” என தூண்டிலைப் போட்டார்.

”இல்லீங்க….. சும்மா ….” ஆணுக்குரிய அரை வெட்கத்துடன் ஒரு அசட்டுச் சிரிப்பை  உதிர்த்துவைத்தான் மாரி.

முதலாளி அடுத்த கேள்விக்கணையை தொடுக்கும் முன்னரே   “சாரு நாவல் எல்லாம் படிக்குமுங்க….. பார்த்தசாரதி, அகிலன் … “

“ஓ! சாருவா பேரு?….. நாவல் படிக்கற பொண்ணுணா உனக்கு கத சொல்ல ஆள் கிடைக்கிரிச்சிணு  சொல்லு”  என்று ஒரு கண் சிமிட்டலுடன் அவர்கள் உறவை அங்கீகரித்தார் அவர்.

நாவல் படிப்பதற்கு  நேரத்தின் அர்ப்பணிப்பு தேவை என்பது அவர் வாதம். நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒன்றித்து ஒரு சகபயணியாய் அவர்களுடன் பயணித்து  அலைக்கழிந்து அவர்களின் சுக துக்கங்களில் மூழ்கி எழுந்து ஒரு உணர்ச்சிக்குழம்பில் குளித்து வரும் அனுபவம் உன்னதமானது என்பார்.

ஒரு வாசிப்பனுபவம்  உள்ள ஒரு துணை மாரிக்கு கிடைத்ததில் முதலாளிக்கு ஒரு பெருமை.  மனித நேயத்தை அளவிடும் அளவுகோல் அவருக்கு வாசிப்பு மட்டுமே. படிப்பும் பட்டங்களும் அவருக்கு கடைசி வாங்கு வாசிகள்.

மணமான புதிதில் மாரி கடையை மூடிவிட்டு முதலாளியின்  ‘கதை நேரத்தை’  குறுக்கிக் கொண்டு    செங்கல்பட்டு  சந்தையின் பின்னால் அமைந்திருந்த   சந்தில் நுழைந்து மறைவான். போகும் வழியில் சாருவிற்காய் ஒரு மல்லிகைச்சரத்தை வாங்கத் தவறுவதில்லை.  “இந்தா புள்ள….. வச்சுக்க” என அவன் கையில் அதைத் திணித்து அவள் அதை லாவகமாய் கூந்தலில் சொருகுவதை பார்த்து  “ஆயிரங் கண் போதாது செல்லக் கிழியே……”  என ஒரு நாடகக்காரனின் பாணியுடன் கைகளை உயர்த்திப் பாடி அவளை கட்டிக் கொள்வான். அவன் பிடிக்குள் சாரு சங்கமமாவாள்.

இவ்வகை குட்டிக்குறும்புகள்தானே இவர்களைப் போன்ற சாமானியர்கள் சிமிழில் அடைத்துவைத்து அவ்வப்போது தூவிக்கொள்ளும்  இன்பப்பொடி? 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

“ஏம்பா,  இண்ணைக்கி என்னா தேதிணு தெரியுமில? இண்ணையோட உம் மகளுக்கு ஐஞ்சு வயசு  ஆயிடிச்சு.  இண்ணைக்கு ஞாயிற்று கிழம…. உனக்கும் கட மூடி…. கொழந்தைய எங்காச்சும் கூட்டிண்ணு  போறது….. பாவம்… பச்ச புள்ள… பொறந்த நாள் இல்ல?”  எனும் கேள்வி நிரம்பிய தன் வேண்டுதலை மாரியிடம் நாசுக்காக சொல்லி அவன் பதிலிற்காய்  காத்து நின்றாள் கிழவி. தன் மகன் தன் வேண்டுதலை நிராகரித்துவிடக் கூடாதே என்ற  தாபத்தை அவள் கண்கள் சொல்லிற்று.

“எங்கா போறதாம்?” என்ற மாரியின் பதில் கேள்வி பொன்னம்மாவின் கண்களில் ஒரு நம்பிக்கை கீற்றை விதைத்தது.

“அவதான் ஆன, சிங்கம், புலி எல்லாம் பாக்கணும்ணு ஒரே சொல்றா… மிருகக்காட்சி காட்ட கூட்டிப் போறது?”

கிழவியின் பதில் மாரிக்கு சரியாகவே பட்டது.

வாழ்வின் மடிப்புகளுக்குள் ஒளிந்துள்ள அந்த ஈரத்தின் வலிமை  என்றும் ஒரு புதிர்தான்!  அது அவனை ஆட்கொண்டு  அவனின் மூடப்பட்ட இதயத்தின் கதவுகளை சாவியின்றியே அகலத் திறந்து குடிபுகுந்ததை  அவன் அப்போது உணரவில்லை!

கிழவிக்கு எல்லை மீறிய மகிழ்ச்சி.

“சாரு…. சாரு குட்டி…..அப்பாவோட சிங்கம் ஆன எல்லாம் பாக்க போயிற்று வாம்மா…..

…….. புதுச்சட்ட போட்டு தல சீவி …. பொறந்த நாளில்ல…. பொறந்த நாள்”  என அவசரமாய் ஆயுத்தங்களை செய்யத்  தொடங்கினாள்.  தன் மகன் மனம் மாறும் முன் அவர்களை பஸ் ஏற்றி அனுப்பிவிட வேண்டுமே என்ற அவசரம் அவளுக்கு.

மாரியும் மகளும் செங்கல்பட்டு  பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து செல்வதை வீட்டு வாசவில் நின்று பர்த்து ‘புள்ள கைய புடிச்சி  கொண்டுபோப்பா’  என நாக்கு நுனியில் வந்த வார்த்தைகளை  வெளியே விடாமல் விழுங்கி சீரணித்துக்கொண்டாள்.

சென்னை பஸ் ஏறி வண்டலூரில் இறங்கி  அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவினுள்  நுழையும்வரை மாரி  அமைதியாகவே எண்ணங்களில் லயித்தவனாய்  ஒரு நடைபிணம் போல் நிழல் நகர்த்தினான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாருலதா ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்தாள். 

இன்னும் இரு நாட்களில் அவன் மனைவி குழந்தை சாருலதாவைப் பெற்றெடுத்து அவன் கையில் கொடுத்து விட்டுப் பிரிந்த நாளின்  ஐந்து வருட பூர்த்தி. என்னமாய் இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை இப்படியானதே  எனும் வலி அவனை சுட்டுப்பொசுக்கியது.

ஒரு பொடிநடையாய் இருவரும் விலங்கியல் பூங்காவுக்குள் நுழைந்தனர்.

குழந்தை சாருலதா மிருகங்களின் விசித்திர தோற்றங்களை  தன்னை மறந்து லயித்து முக பாவனைகள் செய்து ஒரு இன்பக் கூத்தாடலில் மூழ்கியிருந்தாள்.

அவளின் லயிப்பில் கலந்து கொள்ளாமல் ஒரு சகபயணியைப் போல் அவன் அவளுடன் நடந்து சிம்பன்சி வகை மனிதக்குரங்குகள் இருக்கும்  காப்பகத்தின் முன் வந்து நின்றான்.

அரைவட்டமாய் ஒரு தீவு போல் சீமேந்து அரை சுவர் எழுப்பிய களம். அதன் எல்லையை சுற்றி உள்ள இடைவெளியில் தேங்கிநிற்கும்  பாசிப்பச்சை கலந்த நீர் அகழி. அந்த வானரங்கள் பார்வையாளர்களை நெருங்காமல்  இருப்பதற்காகவே  இந்த ஏற்பாடு. தீவின் நடுவில் ஒரு பெரிய மரம். அதன் கீழ் அவை விளையாடிக்கழிக்க கூரை போட்ட கம்பி மேடைகள், கயிற்று ஊஞ்சல் மற்றும் மரக்கட்டை இருக்கைகள். அவைகளின் குடியிருப்பு அந்த அகழியில்  அக்கரையில் இருந்த  சீமேந்து பூசிய போலிக் குகைகள்.  தீவில் இருந்து அகழியை கடந்து குகைக்குள் செல்ல ஒரு மரக்கட்டைப்பாலம். இதுவே இவர்கள் உலகம்.

மூன்று குரங்குகள் ஒரு குடும்பமாக சோம்பலுடன் ‘இங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற பாவனையில் அரைத்தூக்கத்தில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தன.

சாருலதா கண்களை அகலத்திறந்து அவற்றின் ஒவ்வொரு அங்கஅசைவையும்  கிரகித்துக்கொண்டிருந்தாள். அங்கிருந்த பெயர் பலகையில் அப்பா, அம்மா குரங்குகளின் பெயர்கள் கொம்பே, கோகோ எனவும் குட்டிக் குரங்கு பெயர் சுட்டி எனவும் எழுதி மாட்டியிருந்தார்கள்.

அவற்றிற்கான மதிய உணவு பகிரும் நேரமது. திடீரென வளர்ந்த இரு விலங்குகளும் உஷாராகி எழுந்து நின்று கைகளை நெஞ்சிலடித்து  உதடுகளை சுருக்கி தம் பழுப்பு நிற பற்களைக் காட்டி ஆட்டம் போட்டன. தமக்கு படைக்கப்பட இருக்கும் பழங்களின் நறுமணம்  நாசியில் நுழைந்து மேடையேற்றிய ஆனந்த நர்த்தனம் அது. சுட்டிக்கு இந்த சடங்கு புரிந்ததாய் தெரியவில்லை. குகையின் கதவுகள் திறக்கப்பட கொம்பேயும் கோகோவும் ஒரு பாய்ச்சலில் உள்ளே நுழைந்து மறைந்தன. அந்த கணத்தில் இணைப்புப் பாலத்தில்  நின்று ஒரு குட்டிக்கறணமடித்து  தன் குதூகலத்தை காண்பித்த சுட்டி கால்தவறி கீழே இருந்த அகழியில் தொபீர் என விழுந்து நீரில் மறைந்தது.  அப்போது எழுந்த அந்த சப்தம் கோகோவின் காதுகளுக்கு எட்டியிருக்க வேண்டும்…. தொப்பிள்கொடி உறவல்லவா?  குகை வாசலில் தோன்றி சுட்டி எங்குதான் போயிருக்கும் என கண்களால் அளவெடுத்து பின் கீழே குனிந்து  நீரில் தத்தளிக்கும் தன் செல்வத்தை காப்பாற்றும் நோக்குடன் மேலிருந்து அகழிக்குள் ஒரு நீண்ட கீச்சல் ஒலியெளிப்பியபடி பாய்ந்து நீருள் மூழ்கி மறைந்தது.

பார்வையாளர் எல்லோரும் தம் கண்முன் விரியும் அந்த பாசம் பிணைப்பின் புதிய பரிமாணத்தின் சாட்சிகளாய் வாயடைத்து நின்றனர்.

சிலர் ‘ சாப்பாடுண்ணா பிள்ள என்ன குட்டி என்ன?’  என சமூக நீதி பேசினர்.

எங்கும் அமைதி!

அந்த சில வினாடிகள் மணிகளாக தோன்றிற்று!

அகழி நீரில் ஒரு அலைவட்டம்!

மெதுவாய் தெப்பமாய் நனைந்த கோகோவின்  தலை  முதலில் தோன்றிற்று.

கோகோவின் கைகளில் தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்துவிட்டதுபோல்  சுட்டியின் ஈர உடல் ஒரு பந்தாக சுருண்டு கிடந்தது, ஒரு பொக்கிஷத்தை கைகளில் சுமக்கும் கவனத்துடன் மெதுவாக கோகோ அகழியை விட்டு வெளியேறி  அந்த புத்தரையில் தன் செல்வத்தைக் கிடத்தி எழுந்து நின்று நெஞ்சிலடித்து ஒரு கர்ஜனையை எழுப்பிற்று.

கைகளில் பப்பாளிப் பழங்களை நெஞ்சுடன் அணைத்தவாறு குகை வாசலில் தோன்றிய கொம்பேவின் கண்களுக்கு புல்தரையில் கிடக்கும் தன் செல்வத்தின் ஈர உடலையும்  அதன் அருகில் தெப்பமாய் நனைந்த மேனியுடன் எக்காளமிடும் தன் துணையின்  இயலாமையையும் பார்த்து நிலமையை புரிந்து கொண்டது.

ஒரே பாய்ச்சலில்  புல்தரைக்கு வந்து ‘உவ்… உவ்… உவ்… உவ்’  என ஒலியெமுப்பி ஒரு தந்தையின் கரிசனையுடன் தன் செல்வத்தை ஒரு பஞ்சுமிட்டாயை சுமக்கும்  மென்மையுடன் தூக்கி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டது. அந்த அன்பின் சூடு அந்த காப்பக வேலியை தாண்டி பல இதயங்களை  தொட்டுக்சென்றது.

“குட்டி தப்பிடிச்சி…..  .. அங்க பாருங்க… … அதோட கால் ஆடறத “.

மாரி தன் கண் முன் விரியும் அந்த காட்சியின் ஆழத்தை புரிந்து கொண்டான். தன் குட்டி பிழைத்துவிட்டது எனும் பெருமிதம் நிறைந்த கண்களுடன்  கூட்டத்தை நிமிர்ந்து பார்த்த கொம்பேயின் கண்களின் கரைகளில் திரண்டு நின்ற கண்ணீர் மாரியின் நெஞ்சை நனைத்தது. ஒரு மிருகத்திடம் இருந்த அந்த பாசப்பிணைப்பு அவன் வாழ்வில் எங்கே போனதாம்?  சீ, ஒரு பிராணியிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்ற குற்ற உணர்வு அவனை கடைந்தெடுத்தது.

மனைவி சாரு  ஒரு முறை அவன் மார்பில் சாய்ந்து  வாசித்த  “உன் கண்ணில் நீர் வழிந்தால்…..”   கவிதை வரிகள் அவன் எண்ணத்தில் பளிச்சிட்டு மறைந்தன.

தன்னை கூட்டிலடைத்து மிருகங்கள் வேடிக்கை பார்ப்பதாய் அவனுக்கு தோன்றிற்று.

முதலாளி  சொன்ன ‘குருவி’  கதையின் நாயகன் மாடன் பிள்ளை ஒயரால் பின்னிய தூக்கணாம் குருவிக்கூட்டின் நுட்பத்தைப் பார்த்து மனமுடைந்து அழுத புள்ளிக்கு தன்னை இந்த விலங்குகள் என்னமாய் இழுத்து வந்து உட்காரவைத்துவிட்டன என எண்ணி வெதும்பினான் மாரி.

உணர்ச்சி மேலீட்டால், நடுங்கும் தன் கைகளால், குனிந்து சாருலதாவின்  தோள்களை பற்றினான் மாரி.

அவன் பிடியில் இருந்த இறுக்கம் சாருவிற்கு இதமாகவே இருந்தது. பாட்டி ஒரு முறை சொன்ன கதையில் வரும் மலைப்பாம்பின் பிடியின் இறுக்கம் அல்ல அது என அவள் உள்உணர்வுகள் சொல்லிற்று. இந்தத் தொடுகைக்காக அவள் பிஞ்சு மனது எத்தனை ஆண்டுகள்தான் காத்திருந்தது?

ஒரு அன்பின் மீட்டெடுதல் அங்கு அமைதியாய், ஒரு ஊமைப்படம் போல், அப்போது  ஓடி முடிந்தது!  அவர்களிடையே இருந்த ஒரு பெரு இடைவெளியில், வெற்றிடத்தில், அன்பு எனும் ஆறு ஓடி நிறைந்து பரிபூரணமானது!  ஓடிய ஆறு அவன் கண்வழி வழிந்து கன்னங்களை நனைத்து துளியாய் திரண்டு மண்ணில் வீழ்ந்து மாண்டது.

தூரத்து பட்சிகளின் கூவல்களைத் தவிர எங்கும் அமைதி. வார்த்தைகளை விரையப்படுத்தாத அந்த கணங்களை மெளனம் ஆட்கொண்டது. வரிசைகட்டி நின்ற வார்த்தைகள் மாரியின் தொண்டைக்குழியில் பாசம் எனும் குண்டடிபட்டு வீழ்ந்து மாண்டன!

வாழ்க்கையில் தவறவிட்ட தருணங்களை மீட்டெடுக்கும் வேட்கையில் மாரி குனிந்து சாகுலதாவை தூக்கியெடுத்து  அணைத்து  “நீ என் உசிரம்மா….ஊட்டுக்கு போவமா சாரு?”  என நா தழுதழுக்க கொஞ்சலாக கேட்டான்.

தன்னை ‘சாரு’ என முதல் முறையாக அப்பா அழைத்ததை அவள்  பரிபூரணமாக ஆட்சேபிப்பதைப்போல்  தலையை பலமாக ஆட்டி அங்கீகரித்தாள்.

அவர்களின் துயரக்காவியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த தருணத்தை கொண்டாடுவது போல் எங்கோ  ஒரு யானை ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்து அதை பிளிறலாக்கி  வெளிக்கொணர்ந்து பின் மௌனித்தது!