நாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்

Related image

Image result for beauty of kallidaikurichiImage result for beauty of kallidaikkurichi

Related image

 

உழுகிற மாடு வயலை – தன்
உழைப்பால் உயர்த்திப் பார்க்கும்
அழகிய எங்கள் கிராமம் – மலை
அருகில் அமைந்த சொர்க்கம்.

கொக்குடன் மைனா, கிளிகள் – சிறு
குருவி பறக்கும் வயல்கள்
திக்குகள் எங்கும் இளமை – நமைத்
தேடி அழைக்கும் எழில்கள்.

ஓட்டது கூரை மேலே – தினம்
துள்ளிக் குரங்கு ஓடும்
வீட்டது பின்னே நன்கு – குளிர்
வீசும் வாய்க்கால் பாயும்.

பம்பரம், கோலி, கிட்டி – கபடி
பந்தும் ஆடும் இளையோர்
கம்பினைச் சுற்றி வீச -உயிர்க்
காதல் புரிவர் வளையோர்.

பண்டிகைக் கால மெல்லாம் – இசைப்
பண்ணும் கூத்தும் சேர்த்து
கண்களுக் கின்பம் கூட்டும் – நற்
கலைஞர் நிறைந்த நல்லூர்.

அலைநிறை பொருநை நதியில் – மீன்
அலையும் காட்சி கண்டால்
அலைகிற எண்ணம் நிற்கும் – உள்
அமைதி மேலும் ஊறும்.

நெல்லிடை ஓங்கும் செல்வம் – அங்கு
நித்தம் வாசம் செய்யும்
கல்லிடைக் குறிச்சி ஊரை – நாம்
கல்யா ணபுரி என்போம்.

மணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு

மணி மணியா சம்பா நெல்லு…. 

(உழவர் பாட்டு)

ஏர்பிடிச்சு மாடுகட்டி
எருவடிச்சு மண் உழுது
பதுக்கிவெச்ச வெத நெல்லால்
நாத்து வெச்சு பாத்திகட்டி
மூச்செறைக்க நீரெறைச்சு
நாள்பாத்து நடவு செஞ்சு
மழைசெதும்ப பேயணும்னு
மாரியாத்தாவ வேண்டிக்கிட்டு

கருக்கலில் வயக்காடுவந்து
கம்மாத்தண்ணி வரத்திருப்பி
உரமடிச்சு மருந்தடிச்சு
உறங்காம களபறிச்சு
பட்டினியோ பழஞ்சோறோ
பாராமலே கிடந்துண்டு
கதிர்முத்தி தல சாஞ்சா
காவலுக்குத்தானிருந்து

கருத்த மேகம் பாத்துப்புட்டா
பதபதச்சு நாள்குறிச்சு
கருப்பசாமி துணைவேண்டி
களமெறங்கி வாளெடுத்து
கதிரறுத்து கட்டுகட்டா
இடுப்பொடிய கதிர்சுமந்து
களத்துமேடு கொண்டுவந்து
மாடுகட்டி போரடிச்சு

முறமெடுத்து புடைக்கயிலே
தங்கம்போல தகதகக்க
மணிமணியா சம்பா நெல்லு (என்)
மனசுபோல சம்பா நெல்லு
பதரில்லாத சம்பா நெல்லு
அளஞ்சளஞ்சு சம்பா நெல்லு
அளந்தளந்து மூடகட்டி
அள்ளிக்கொண்டு போகையிலே
கெடய்க்கும் சுகம் வெளங்கலியே

பட்டபாட்டுக்கு நட்டமில்லாம
வெலைகிடைக்குமா தெரியலியே
கந்துவட்டி கைமாத்து
பாங்குல வாங்கின நகைக்கடனு
ஆளான புள்ளய கட்டிக் குடுக்கணும்
ஆம்புளப்புள்ளய படிக்க வைக்கணும்
கருப்பசாமிக்கு படியளக்கணும்
மாரியாத்தாளுக்கு படையல் செய்யணும்

மிஞ்சுமா என்னமும்
ஏங்குதே ஏம்மனம்
சாப்பிட ஒக்காந்தா
சோறு எறங்கல
பெஞ்சாதி சொல்லுது
வீணாக்காதே சோறன்னு!?!

துணிந்தேன், சரி செய்தேன்!- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

 

Image result for old school teacher from tamilnadu

நான் மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்த காலம். நம் நாட்டின் மிகச் சிறந்த, மனநல அரசு மருத்துவமனை. அன்றாடம் ஒரு மருத்துவர் தன் டீம்முடன் நோயாளிகளைப் பார்ப்பது வழக்கம். இன்று எங்கள் முறை.

அன்று வந்திருந்தவர் ஒரு ஐம்பது வயதுள்ளவர், ஜானகி, நன்றாக வாரிய தலை, பச்சை நிற நூல் சேலை, கையில் பை. சற்று தடுமாறித் தள்ளாடியபடி என்னை நோக்கி வந்தார். அருகில் வர வர, அவர்களின் கைகளில், முகத்தில் பல தழும்புகள் இருப்பதைக் கவனித்தேன். நான் கவனித்ததால் தன்னுடைய தலைப்பினால் மறைத்து “கீழே விழுந்துவிட்டேன், ஒண்ணும் இல்ல” எனச் சொன்னாள். சொல்வதை ஏற்றுக்கொண்டேன்.

எதிர் நாற்காலியில் உட்கார்ந்ததும் ஜானகி கண்கலங்கி, தன் நிலையை விவரித்தாள். அவள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. வேலையிலிருந்து ஓய்வு பெற யோசிப்பதாகவும், முப்பது வயதுடைய மகன் ராஜாவுடன் இருப்பதாகவும் கூறினார். கடந்த நான்கு வாரமாக தனக்கு பசி மற்றும் தூக்கம் சரியில்லை என்றும், ஒரு இனம் தெரியாத பதட்ட நிலை உணர்வதாகவும், சட்டென்று அழுகை வருவதாகவும் கூறினாள். அவர்களின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் அம்மா சொன்னதால் வந்ததாகத் தெரிவித்தாள். தான் இங்கு வருவதை ராஜாவிற்குச் சொன்னதும் அவன் கோபத்தில் சத்தம் போட்டதாகவும், அதில் திகில் அடைந்து கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டதாக மெல்லிய குரலில் சொன்னாள்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “தப்பாக நினைக்காதீர்கள், ராஜா ரொம்ப நல்லவன்” என்றாள். அவனுடைய வேலை பளு, விரும்பிய பெண் ராதா அவனை விட்டு விலகிவிட்டது அவனுக்கு அவமானமாக இருக்கிறது, அதனால் கோபம் என விவரித்தாள்.

இதுவரையில் வீட்டு நிர்வாகம் பூராகவும் ஜானகி பொறுப்பில் தான் இருந்தது. சமீப காலமாக, ஏன் செய்ய வேண்டும் எனச் சலிப்பு வருவதாகக் கூறினார். அவர்களின் கணவர் மார் அடைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் மரணம் அடைந்த சம்பவத்தை விவரித்தார். மகனிடம் அதிக பாசம் இருந்ததால் அவர் மறைவை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவர் எப்பொழுதும் ஜானகியிடம் கோபித்து கொள்வார். குறிப்பாக அவள் ராஜாவுக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து தருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

அதே மூச்சில், ராஜா நல்லவன் இளகிய மனம் உள்ளவன் என்றும் சொன்னாள். எந்தத் தொந்தரவும் அவனை அணுகாமல் பார்த்துக் கொள்வதே தன் பிரதான பொறுப்பு என்றாள். இதற்காகவே ஜானகி புத்தகம் படிப்பது, பாட்டுக் கேட்பது, நடைப் பயிற்சி என்று ஒவ்வொன்றாக நிறுத்த வேண்டியதாயிற்று. நிறுத்தினாள். நாளடைவில் மந்தமாக ஆவது போல் தோன்றியது என்றாள்.

விவரங்களை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் மன உளைச்சல் என முடிவானது. மருந்துகள் இல்லாமல் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் அவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துக் கொண்டேன்.

வாரம் ஒரு முறை அவள் வருவதாக முடிவெடுத்தோம். வந்தாள். தான் சூழ்நிலைகளைக் கையாளும் விதம் சரியில்லாததால் சில நெருக்கடி நிகழ்ந்தன எனப் புரிய ஆரம்பித்தது. குறிப்பாக ராஜா இளைஞன் என்றாலும், ஜானகியே அவனுக்கு எது நல்லது கெட்டது என்று முடிவு எடுப்பதால், அவனுடைய முடிவு செய்யும் திறன்கள் எப்படி, ஏன் பாதிக்கப் படும் என்பதை ஆராய்ந்தோம். மேலும் ஜானகி தான் சூழ்நிலையைக் கையாளுவதை மையமாக வைத்துப் பல வழிமுறைகள் சிந்தித்தோம். அதே போல் மனதை அமைதி செய்ய என்ன செய்யலாம் என்பதையும் ஆராய்ந்தோம்.

மூன்று வாரங்களுக்குப் பின்பு குணமாகும் சாயல் எட்டிப் பார்த்தாலும் ஏதோ இடையூறாக இருப்பதை உணர்ந்தேன். எங்கள் சீஃப் இடம் பகிர்ந்தேன். நாங்கள் மாணவர்கள் என்பதால், செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு. அவர்களிடம் உரையாடி, தெளிவு பெற்றேன்.

அடுத்த சந்திப்பில் வெளிப்படையாக என் கணிப்பை ஜானகியுடன் பகிர்ந்தேன். அவள் முழு நலன் அடையாததை அவள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

ஜானகி மௌனமாக என்னைப் பார்த்து பல நிமிடங்களுக்குப் பிறகு ராஜாவைப் பற்றி பேசினாள். அவன் மது அருந்துவது பற்றி யாரிடமும் சொல்லாமல் அதை மறைத்தாள். அவனுக்குத் தான் விரும்பிய ராதா இல்லை என்றதும், சோகத்திலிருந்து மீள அதிகமாக அருந்தினான். ராஜா போதையில் விழுந்து கிடக்கும் தகவல் தெரிந்ததும் ஜானகி அவனை எப்படியாவது கூட்டி வந்துவிடுவாளாம். இதைச் செய்கையில் பல முறை கை கால் தவறி விழுந்து இந்தக் காயங்கள். தன் மகனிடம் வேறு எந்தக் குறையும் இல்லை என்பதை வலியுறுத்தினாள்.

இந்த வர்ணனைகள், இதற்கு முன்னால் வார்த்தைக்கு வார்த்தை ராஜா நல்லவன் எனச் சொன்ன சூழல்களை அவளுக்கு நினைவூட்டி, அதிலிருந்து அவள் செய்வதை புரிந்து கொள்ளச் செய்தேன்.

எங்கள் பாஷையில் இப்படி நடந்து கொள்வதை “கோ டிபென்டன்ஸீ” என்போம். அதாவது போதைக்கு அடிமையானவர்களுடன் கூட இருப்பவர்கள் அவர்களின் பழக்கத்தை மூடி மறைக்க முயல்வார்கள். கஷ்டமோ நஷ்டமோ போதையில் உள்ளவர்களுக்கு எல்லாம் அனுகூலமாகச் செய்வது என்று முற்படுவார்கள். அக்கம்பக்கத்தில், உறவுக்காரர்கள் யாருக்கும் போதை பழக்கம் தெரியக் கூடாது என முயல்வது. அப்படியாவது பழக்கம் அடங்கும் எனக் கருதுவார்கள். தங்களின் பொழுது போக்கைப் பலி கொடுத்து விடுவார்கள். தாங்கள் இப்படிச் செய்வதால் போதையினால் நிகழும் முழு மாற்றத்தையோ விளைவுகளையோ கண்டுகொள்ள மாட்டார்கள்.

மாறாக, போதை பழக்கம் இன்னும் அதிகரிக்கும். இப்படிக் கூட இருப்பவர்கள் பொறுத்துக் கொள்வது அவர்களுக்கு உதவுவதை “கோ டிபென்டஸீ” எனப்படும். இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணிப் பார்க்க பல வாரமோ, வருடங்கள் கூட ஆகலாம்.

கடைசியில் உதவி தேடி வந்ததே பாராட்டப் பட வேண்டியது! ஜானகிக்கு தன்னுடைய கோ டிபென்டஸீ, அதன் தோற்றம், விளைவுகளை பற்றிப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.

ராஜாவும் அவ்வப்போது “என் அம்மாபோல் யாரும் இல்லை” எனப் புகழாரம் சூட்டுவதாகச் சொன்னாள். இது தான் ஜானகிக்கு டானிக் என்றாள். இதைப் பெறுவதற்காக தன் பங்குக்கு அவனுக்கு எல்லாம் செய்தாள். அவள் தன் நிலைமையை மேலும் புரிந்து கொள்ள, மாற்ற யோசித்தேன்.

இப்படித் தான் செய்வதின் விளைவுகளைப் புரிய அவளை ஆல் அனோன் (Al Anon) ஏ ஃப் ஜீ (AFG, Alcoholics Anonymous Family Group) என்று அழைக்கப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ள பரிந்துரைத்தேன். போதைக்கு அடிமையானவர்களின் மனைவி, பெற்றோர், கூடப் பிறந்தவர்கள், நண்பர்கள் எனப் பாதிக்கப்பட்ட நபர்கள் குழுவாகும். இதற்குக் கட்டணமோ, அனுமதிக் கடிதமோ தேவையில்லை. இந்தக் குழுவில் எல்லோரையும் ஒன்று படுத்துவது வீட்டில் ஒருவரின் போதைப் பழக்கம், அதனால் நேரிடும் சஞ்சலங்கள். குழுவில், அவரவர் தங்களின் அனுபவங்களைப் பகிர, தாங்கள் செய்யும் தவறுகளை அறிய, மாற்றி அமைக்கச் சிறந்த வாய்ப்பாகிறது.

இப்போது ஜானகி அணுகியது மாற்றத்தின் முதல் கட்டம். மிக முக்கியம். ஆல் அனோன் (Al Anon)யில் பங்கேற்புடன் ஆரம்பித்து மெல்ல பேசத் தொடங்கினார், ஜானகி. அதே நேரம் தானாக நிறுத்திய தன் பொழுதுபோக்கை மறுபடி ஆரம்பிக்க நாங்கள் கலந்துரையாடினோம்.

தன் அம்மாவின் மாற்றத்தைக் கண்டு, ஆச்சரியப் பட்டு எங்களைக் காண வேண்டும் என ராஜா கூறியதை ஜானகி என்னிடம் பகிர்ந்தாள். அடுத்த படியாக ராஜாவை அழைத்தேன். தன் அம்மாவிற்காக என எண்ணி வந்தான். முப்பது வயதுடையவன், ஏனோதானோ என உடை.

ஜானகி பற்றிக் கேட்க, அவனைப் பற்றி சொல்லச் சொன்னேன். தனக்கு எந்த வித பிரச்சினை இல்லை என்று சொன்னான். இவன் ஒத்துழைப்பிற்கு அவன் போக்கில் போக முடிவெடுத்தேன்.

எங்கள் துறையில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம், அவரவருக்கு ஏற்றவாறே சிகிச்சை முறையை அமைப்பது. நான் இதைக் கடைப்பிடிப்பதுண்டு. ராஜாவிற்கு அவர் போக்கு வழியில், ஊக்குவிக்கும் முறையைக் கையாண்டேன்.

ராஜா தன் சூழ்நிலையை விவரித்தான். வேலைப் பளுவை சமாளிக்க 30 எம்.எல் மது அருந்துவதைத் தொடங்கியதாக சொன்னான். அவன் விரும்பிய ராதா விலகியதும் எம்.எல் அதிகம் ஆனதாகச் சொன்னான். ராதா, மது அருந்துவதைத் தடுக்கத் தோல்வி பெற்றதும் விலகியதாகத் தெரிவித்தான். தன்னால் சமாளிக்க, தாங்க முடியவில்லை என்றால் மது அருந்துவானாம். அப்படி என்றால் சமாளிக்கும் திறன் தரைமட்ட நிலையில் இருப்பதை அவன் கவனத்திற்கு கொண்டு வந்தேன். பல நாட்கள் தூக்கம் சரியில்லை, பசி எடுப்பதில்லை, கவனித்து வேலை செய்ய முடியவில்லை என்பதால் வேலைக்குப் போகவில்லை என்றான்.

மது அருந்துவது பிடிக்கவில்லை என்றும் விளக்கினான். மது அருந்தினால் தான் மனோதைரியம் வருகிறது போலத் தோன்றியது என்றும் கூறினான். இதன் அடிப்படையாக வைத்து, ராஜாவை தன் எண்ணம், உணர்வு, நடத்தை எல்லாமே எவ்வாறு தான் மது அருந்த வசதிப்படுத்தி ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கிறது என்பதைக் கவனிக்கச் சொன்னேன். அவனால் புரிந்துகொள்ள முடியாததால் இவற்றை மூன்றாகப் பிரித்து: நிலை-உணர்வு-எண்ணம் என வரிசைப் படுத்தி எழுதி வரச்சொன்னேன்.

இதே தருணத்தில் அம்மாவுடன் ஒரு வாரம் அவர்கள் ஊர், குலதெய்வம் தரிசனமும் ஆனது. அந்த முழு நேரமும் மது ஞாபகம் வரவில்லை, அருந்தாமல் இருந்தான். இந்த நிலையைப் பற்றி விளாவரியாக உரையாடியதில் தன்னுடைய சமாளிக்கும் திறனைப் பற்றி, நலத்திற்கு ஏற்றவாறு எவையெல்லாம் செய்தால், மது அருந்தும் பழக்கத்தை வெட்டி வீச முடியும் என்பதில் கவனம் செலுத்தினோம். இதைத்தான் சற்று முன் சொன்னது, அவர்கள் போக்கில் போனால் எதிர்ப்பு இல்லாமல் அவர்களாகச் சரி செய்ய முயல்வார்கள்.

இந்த யுக்தியை இன்னொரு தெளிவு பெறவும் உபயோகித்தேன். ராஜா தான் உறுதி கொள்ள, அவமானம் மறக்க மது அருந்துவதாகக் கூறியிருந்தார். ஏன் இப்படிக் கருத வேண்டும் என்பதை ஆராய்ந்தோம். இங்கே ஜானகியை உடன் சேர்த்து கொண்டேன். அவர்களும் ராஜாவுக்குத் தானாக முடிவுகளைச் செய்ய வாய்ப்பளிக்கும் தேவையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால். வீட்டு நிலவரங்கள், அனுபவங்கள் என வரிசைப் படுத்தி முடிவுகள் எடுக்கும் திறன், பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதங்களை அம்மா பிள்ளை இருவரும் தெளிவு பெறும் வரை, வெவ்வேறு கோணங்களில் பல ஸெஷன்களில் பயிற்சி செய்தோம்.

ராஜா தான் சிந்திக்கும் விதத்தைப் பார்த்ததில், எவ்வளவு சுலபமாக ஒரே ஒரு நிகழ்விலிருந்து எப்போதும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி விடுகிறோம் என்று பளிச்சென்று புரிய வந்தது. இதிலிருந்து ராஜாவிற்கு தன்னுடைய இன்னொரு குணாதிசயம் பற்றியும் தெளிவானது. அவனைப் பொறுத்தவரை ஒன்றை அனுபவித்தால் எப்பொழுதும் அப்படியே என்று இருந்து விடுவான். வேறு விதத்தில் இருக்கலாம், நடந்து கொள்ளலாம் என யோசிக்கத் தோன்றாது. அதாவது எல்லாவற்றையும் நல்லது அல்ல கேட்டது என்று அச்சு போட்டு விடுகிறோம் என்று. இந்த மனப்பான்மை கடிவாளம் போடும் என்று ராஜா அனுபவ உதாரணங்கள் வைத்துப் பல ஸெஷன்களில் ஆராய்ந்து புரிந்து கொண்டான்.

தான் மாற்றம் அடைவதை வெளிப்படையாகக் கூறினான். மனதில் ராஜாவிற்குச் சஞ்சலம், இதுவரையில் சந்தித்த சிக்கல்கள் இனி சந்திக்கக்கூடுமே? அபாய நிலைகளை வரிசைப் படுத்தினோம். ஸெஷன்களில், ஒவ்வொன்றையும்
அவனுடைய அனுபவம் மற்றும் கதைகள் உபயோகித்துப் புரிய வர; இவற்றுடன் தானாக எழுதி மற்றும் ஜானகியுடன் கலந்து உரையாடினான். தெளிவு பிறக்க ஆரம்பித்தது.

ராஜாவும் ஜானகியும் எங்களைத் தாம் ஏன் அணுகினோம், என்னவாயிற்று, எங்கு இருக்கிறோம் என்ற சுய பரிசோதனை செய்ய விரும்பினார்கள்.

அதற்கு அவர்களை ஆராயச் சொன்னது- எதனால் அவன் மது அருந்தல் வெற்றியின் பரிசாக எண்ணியது, தன் சோகத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் மது குடித்து அதை முழுக வைத்தது, மற்றும் தோழமை மற்றவர்களுடன் இருக்கவில்லை என ஆராயப் பரிந்துரைத்தேன். ஜானகி விட்டுக் கொடுத்தது ஏன் உதவவில்லை என்பதையும் தைரியமாக ஆராய்ந்தார்கள்.

இத்துடன் முடியவில்லை. இங்குப் பகிர்ந்தது சிலவற்றே. அவர்கள் மறுபடியும் ராதாவைச் சந்தித்து, வாழ்வில் பல மாற்றங்கள் நேர்ந்தது; அது நீண்ட தொடர்…

இந்தக் கேள்விகளோ, பதிலோ முக்கியம் இல்லை. நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல் துணிச்சலாகத் தன்னை, தன் செயல், சிந்தனைகளை ஆராயத் தயாராக இருப்பதே மாற்றத்தின் ஆரம்பம் என்பேன். என்ன செய்வது என்ற கேள்வி கேட்கும் எண்ணங்கள் பக்குவத்தைக் காட்டுகிறது. அதனால் தான் எங்கள் துறையில், ஒருவர் “சரி செய்யப் போகிறேன்” என்ற “தயார்” நிலையிலிருந்து ஆரம்பித்தால் எந்தப் பிரச்சினையும் பெரியது அல்லவே அல்ல. நம்பிக்கை மிகப் பெரியதே!
**********************************************************************

தென்றலே தூது செல்ல மாட்டாயோ..! — கோவை சங்கர்

Related image

இன்பமெனும் நினைவூற்றை யெழுப்பிவிடும் மென்காற்றே
துணையின்றி நிற்குமெனைக் கேலிசெயு மிளந்தென்றல்
அன்பே ஆரமுதே கற்கண்டே நற்கனியே
அன்னநடை மின்னிடையா லுளங்கவருந் தண்மயிலே
பொன்னே பொற்றொளிரே நெறிதவறாப் பெட்டகமே
பேதையெனைப் பித்தனாய்ச் செய்துவிட்ட பெண்ணெழிலே
என்றெல்லாங் கூறிடவே துடிக்கின்ற வுள்ளத்தை
என்னருமைக் கன்னியிடம் நீகூற மாட்டாயோ!

தவிப்புதருந் தனிமை எங்குமிலை இனிமை
தொலைதூரங் காதலியும் போவதிது புதுமை
புவனமதை எழிலாக்கும் வெண்ணிலவைக் காண்கையிலே
பளிங்குபோல் சிரிக்குமென் னல்லிமுகம் பார்க்கின்றேன்
உவகையொடு புத்தகமும் கருத்துடனே படிக்கையிலே
உளங்கவரும் மீன்விழியாள் பார்வையினா லழைக்கின்றாள்
செவ்வியதாய் கண்மூடி அரைத்தூக்கம் போடுகையில்
கனவில்வருங் கன்னியவள் தொட்டுதொட்டு எழுப்புகிறாள்!

என்னிதயங் கொளைகொண்ட பெண்மானைப் பிடித்தற்கு
இவ்வுலகில் பயின்றுவரும் போலீஸின் துணையில்லை
என்னுயிரின் நிம்மதியைக் குலைத்துவருங் கன்னிக்கு
ஆயுள்சிறை கொடுத்திடவே நீதிபதி இங்கில்லை
தனிமையிலே மனம்நோக படுத்திருக்கும் வேளையிலே
தண்கையு மென்னுடலில் பட்டதுபோ லிருந்திடவே
அன்புடனே ஆவலொடு அவள்கரத்தைப் பிடித்தற்கு
எழுந்தெழுந்து பிரமையென்று ஏமாற்றம் கொள்கின்றேன்!

கயல்விழி கொடியிடை நன்னுதல் பூங்குழல்
தண்கரம் பவளவாய் மென்னுடல் மலரிதழ்
மயக்குநல் மதிமுகம் ஈர்த்திடும் முன்னழகு
தயங்காது என்நினைவி லகலாது நின்றிடவே
ஐயகோ பூங்கொடியே சோதனைகள் போதாதோ
என்மனதை வாட்டுதலும் உனக்கென்ன விளையாட்டோ
மெய்யன்பன் ஓர்கணமும் பொறுத்திடவே முடியாது
தேன்சுவையு மளித்திடவே யோடியோடி வாராயோ!

போதுமுன் சோதனை நான்படும் வேதனை
பைங்கிளியே என்னருகு விரைந்துநீ வாராயோ
பேசுதற்கு பலவுண்டு தேன்குரலைத் தாராயோ
பிர்ந்துநிற்குங் கொடுமைதனை யழித்திடவே வாராயோ!

சரித்திரம் பேசுகிறது – யாரோ

மகேந்திரவர்மன்

 

Image result for மஹேந்திர பல்லவன்

சரித்திரத்தில் பொதுவாக – ஒரு காலக்கட்டத்தில் – ஒருவன் பெரு நாயகனாக இருப்பான் – அருகில் இருக்கும் மன்னர்கள் அவனிடம் தோற்றிருப்பர் – அல்லது அடங்கியிருப்பர்.

ஒரு சிறு கற்பனை செய்து பாருங்கள்: அலெக்சாண்டர் – ஜூலியஸ் சீசர் – சமுத்திர குப்தன் அனைவரும் ஒரே சமயத்தில் ஆண்டால்?

அது போல ஒரு காட்சிதான் அன்று இந்தியாவில் விரிகிறது…

மகேந்திர பல்லவன் (நரசிம்ம பல்லவன்), இரண்டாம் புலிகேசி , ஹர்ஷவர்த்தனன் – மூவரும் ஒரே சமயத்தில் ஆண்டு – போரிட்டு – பெருமையுடன் நாட்டையும் ஆண்டனர். ஒவ்வொருவரும் ஒரு நாயகர் தான்.

ஒவ்வொருவரும் சரித்திர நாயகர் தான்.

இவ்விதழில் நமது நாயகர் ‘மகேந்திரவர்மன்’.

Image result for harsha pulikesi and mahendra varman

 

சண்டை சமாச்சாரங்களை முதலில் ஆராய்வோம்:

சாளுக்கிய – பல்லவ யுத்தங்கள் எப்படி நடந்தன என்பது பற்றி பல கருத்துக்கள் – மாறுபட்ட கருத்துக்கள் – சரித்திரத்தில் – தாறுமாறாகச் சிதறிக்கிடக்கிறது.

சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தான். அய்ஹொளே கல்வெட்டு “அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரும் படைக் கடலைக் கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.”- என்று கூறுகிறது. புலிகேசியை காஞ்சி அருகில் வரும் வரை விட்டு விட்டதால் அது ஒரு தோல்வி என்று ஒரு கூற்று.

புலிகேசியை காஞ்சிக்கருகில் வரவிட்டு – மகேந்திரன் – அவனைத் துரத்தினான் –என்பது பல்லவர் கூற்று. ( பின்னாளில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது). புலிகேசியை காஞ்சி வரையில் வரவிட்டு – அவனைத் துரத்தியது ராஜதந்திரம் என்பது பல்லவர் கூற்று.

சாளுக்கியன் கல்வெட்டு:

Image result for mahendra varman

 “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பனியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” –என்கிறது.

காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினான். போர்நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. தன் நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றி வளைத்துக் கொண்டான்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருத்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான்.

கங்க அரசனான துர்விநீதன் புலிகேசியுடன் சேர்ந்து மகேந்திரனுடன் போரிட்டான். துர்விநீதன் காடு வெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுகட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா’வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர் செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்”  என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத் தம்பி மகன்; கங்க-துர்விநிதனுக்கு மகள் வயிற்றுப்பேரன். எனவே அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும். அப்பொழுது நடந்தபோர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.

சரி! சண்டை போதும்.

சமயத்துக்கு வருவோம். சமயத்தில் அன்று தென்னிந்தியாவில் பெரிய திருப்பு முனை ஏற்பட்ட காலம். சமணமதம் கோலோச்சி வந்த காலம்.

மன்னர்கள் பெரும்பாலோர் சமணத்தை ஆதரித்த காலம்.

சிம்மவிஷ்ணு வைணவத்தை ஆதரித்தாலும் – மகேந்திரன் பட்டத்துக்கு வந்தவுடன் சமணத்தைத் தழுவினான்.

சைவத்திருமுறையில் சிங்கமென வந்த திருநாவுக்கரசர் மகேந்திரனின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக்

கொண்டுவந்தார்.

அது என்ன?

 

சைவசமயம்  மறுபிறப்பு அடைந்த பொற்காலம் பிறந்தது.

மகேந்திரன் அதற்கு பெரிய காரணமாயிருந்தான்.

 

மகேந்திரன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன்.

இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன்.

சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன்.

Related image

மகேந்திரன் மாமல்லபுரத்தில் செய்தது என்ன?

நாடகத்துறையில் மகேந்திரன் செய்தது என்ன?

என்ன என்ன என்ன?

 

விரைவில்..

 

திரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்

 

Image result for செந்தமிழ்த் தேன் மொழியாள்

Related image

 

 

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே

 

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

 

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ – அவள்  (செந்தமிழ்த் தேன் மொழியாள்)

 

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ – அவள் ( செந்தமிழ்த் தேன் மொழியாள்)

 

மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ – (அவள் செந்தமிழ் தேன்மொழியாள் )