thanks anu
Monthly Archives: January 2015
தலையங்கம்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்..
2014 போய் 2015 வந்துவிட்டது. காலண்டர் மாறிவிட்டது.
அந்த மாற்றம் நமது வாழ்விலும் வரவேண்டும்!
நமது உடலின் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கும். இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை இறந்து விடும்.
மாற்றம் என்பது தேவையான ஒன்று. மாற மறுப்பவர்கள் மரிக்க வேண்டும். இது தான் இயற்கையின் நிதி.
மாற்றம் என்பது எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்.
உங்கள் மாற்றம் (x ) உங்களுக்கோ மற்றவருக்கோ தீமை விளைவிக்கும் என்றால் அதற்கான எதிர் மாற்றமும் பல மடங்கு பெரியதாக (-10 x ) உருவாகும்.விளைவு எதிர்மறை -9 x. இந்த நெகடிவ் மாற்றங்களால் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு அநியாயம் ஆக்கிரமிப்பு போர் எல்லாம் தோன்றுகின்றன. .
அதற்குப் பதிலாக உங்கள் மாற்றம் .(x ) உலகுக்கு நன்மை தருவதாக இருந்தால் அதற்கான எதிர் மாற்றம் (- .0.1 x. ) சிறிய அளவு இருக்கும் விளைவு + 0.99 x . இந்த பாசிடிவ் மாற்றங்கள் உலகுக்கு அமைதி, இன்பம், மகிழ்ச்சி, முன்னேற்றம், பெருமை எல்லாம் தருகின்றன.
ஆகமே நாம் பாசிடிவ் ஆக மாற முயலுவோம்.
அதன் முதற் படி தான் புத்தாண்டு தீர்மானங்கள்!
தீர்மானியுங்கள்!
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
கிராபிக்ஸ் : அனன்யா
(மாறும் கண்ணோட்டம் – சுழலும் கண்ணாடி -நன்றி TUMBLR)
பக்கம் 2/25
அஞ்சலி! அஞ்சலி! புஷ்பாஞ்சலி!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு எங்கள் இதய பூர்வமான அஞ்சலி !
பக்கம் 3/25
This gallery contains 2 photos.
2014ல் 117 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 30 படங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை சில கலைத் திறம் கொண்ட திரைப்பட ரசிகர்களுக்கு அனுப்பி 30 படங்களுக்கும் மதிப்பெண் வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். அவற்றுள் 10 படங்கள் வியாபார ரீதியான படங்கள். 20 படங்கள் வித்தியாசமான கருத்து அமைந்த படங்கள். அவர்கள் வழங்கிய மதிப்பெண்களுக்கு இணங்க முதல் மூன்று படங்களை குவிகம் தமிழ்ப்பட வரிசையாக வெளியிட்டுள்ளோம். Commercial movies: முதல் இடம் … Continue reading
நாம் தொலைத்த விளையாட்டுகள்!
ஒரு காலத்தில் நம் கிராமங்களில் இந்த விளையாட்டுக்கள் நம்முடன் பின்னிப் பிணைந்து கொண்டிருந்தன ! எங்கே போயிற்று அந்த விளையாட்டுகள் எல்லாம்?
நாம் தொலைத்து விட்டோமா?
கில்லி தாண்டா
பல்லாங்குழி
நொண்டி
பாண்டி -ஏரோப்ளேன் பாண்டி
நாலு மூலைத்தாச்சி
ஐஸ்பாய்
திருடன் போலீஸ்
தாயம்
பரமபதம்
சாக்கு ரேஸ்
செதுக்கு முத்து
கோலி
பம்பரம்
காத்தாடி
பட்டம்
சைக்கிள் டயர் ஓட்டம்
கயிறு இழுக்கும் போட்டி
கிச்சு கிச்சு தாம்பாளம்
சப்பரம்
அம்மானை
கபடி
மண் வீடு
மரக்குதிரை
கோலாட்டம்
கும்மி
கண்ணாமூச்சி
கோபி பீஸ்
மஞ்சத் தண்ணி தெளித்தல்
உறியடி
சிலம்பாட்டம்
கரகாட்டம்
கூட்டாஞ்சோறு
குழந்தைகள் ரயில்
பூவரசன் பீப்பி
சறுக்குப் பலகை
சீ -சா
தட்டா மாலை
சாட் பூட் த்ரீ
ஆல மரத்தில ஊஞ்சல்
மாங்காய் அடித்தல்
குரங்கு பெடல்
குளத்தில் மூச்சுப் பிடிக்கிறது
வில் அம்பு
டமாரம்
பூனைக்கு வால் வரைவது
கொலைகொலையாய் முந்திரிக்காய்
ரேக்ளா ரேஸ்
கோலம்
பச்சைக்குதிரை
கம்ப்யூடரும் டிவியும் இந்த விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தடுத்துவிட்டன. ஒன்றிரண்டு வேண்டுமானால் இன்னும் இருக்கலாம்.
ஆனால் கோமாவில் இருக்கும் மற்ற விளையாட்டுகளுக்கு எப்பொழுது உயிர் கொடுக்கப் போகிறோம்?
பக்கம் 5/25
ஷாலு மை வைஃப்!
இது ஒரு புது மாதிரி தொடர்..
என் மனைவி . ஹவுஸ் வொய்ஃப் . பெயர் ஷாலினி. கூப்பிடும் பெயர் ஷாலு. வயது சொல்லக்கூடாது. என்னைவிட மூன்று வயது சின்னவள். எனக்கு 36 . இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஷ்யாம். ஒரு கழுதை வயது – 7 . இரண்டாவது ஷிவானி நாலடி நீளம் வாயும் வாலும். வயதா? 4 அப்படியே பாட்டி சொன்னதை உள்வாங்கிப் பேசும் சாமர்த்தியம்.
ஷாலு! இந்தத் தொடரின் நாயகி!
கல்யாணமான புதிதில் நான் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் ஷாலு கலகலவென்று சிரிப்பாள். எனக்கு என் ஜோக்கைப் பற்றிப் பெருமையாக இருக்கும்.
அதே ஜோக்கை ஒரு வருடம் கழித்து சொன்னேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு.
இன்னும் ஒரு வருடம் கழித்து.. .ம்ம்ம்ம் என்று சிரிப்பே இல்லாத அமானுஷ்யக் குரல்.
இன்னும் ஒரு வருடம் கழித்து ..‘இதெல்லாம் ஒரு ஜோக்கா என்கிற பார்வை.
அடுத்த வருடம் ஸ்ஸ்.. இப்ப ஜோக் ஒரு கேடா?
அடுத்த வருடம் ‘உங்க ரோதனை தாங்க முடியலையே?
இப்பெல்லாம் நான் வாயைத் தொறந்தாலே ஆரம்பிச் சுட்டார்டா உங்கப்பா!
இதுக்கும் மேலே ஜோக்கடிச்சா பறக்கும் தட்டு தான் !
இந்த கால கட்டத்தில் தான் மேல் பிளாட்டுக்கு புதியதா ஒரு மாமா மாமி வந்தனர். அவர் முகத்தைப் பார்த்தாலே ஒரு தனி தேஜஸ். மனைவி போட்ட மழைக் கோட்டைக் கூடத் தாண்டியதே இல்லை என்பதை சுத்தமாக எடுத்துக் காட்டும் முகம். அந்த மாமி கண் ஜாடையிலேயே மாமாவை ரிமோட் கண்ட்ரோலில் வைத்திருப்பவர் என்பது அவர்களைப் பார்த்த ஒரு நிமிடத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்.
அவர்களின் பையன் அம்மாவின் கொத்தடிமையாக இருந்தான். மாமி செய்த ஒரே தப்பு ! அவனை அவர்களிடமிருந்து தப்பி ஓடச் செய்தது. அப்படி என்ன தப்பு செய்தார் என்று கேட்கிறீர்களா? அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். அப்பாவின் ஜீன் அப்படியே அவனுக்கு. கல்யாணம் ஆன மறு நாளே பொண்டாட்டி சொற்படி கேட்டு அம்மா அப்பாவை தனிக் குடித்தனம் போக வைத்தான். நான் தான் கொழந்தைகளைத் தனியே இருக்கச் சொன்னேன் என்று மாமி சொல்வாள்! நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். அதனால் மாமா மாமி எங்கள் வீட்டுக்கு மேல் பிளாட்டில் குடி வந்தனர்.
விட்ட குறையோ தொட்ட குறையோ மாமியைப் பார்த்ததுமே அவர் தான் தன் நண்பி.. தத்துவ மேதை. வழிகாட்டி என்று ஷாலு தீர்மானம் செய்துவிட்டாள். அவள் இதில் விஜய் ஸ்டைல். ஒரு தடவை தீர்மானம் எடுத்துட்டான்னா அப்பறம் அவ பேச்சையே அவ கேட்கமாட்டா! என் பேச்சை எப்போதும் கேட்க மாட்டா -அது வேற விஷயம்.
இந்த வருடம் புத்தாண்டில் அவள் புது தீர்மானம் எடுத்தாள். . அவளது கனவுகளை யெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதினாள். உபயம் அவளுக்குக் கிடைத்த புது குரு -சுவாமினி குசலா தேவி. ஒவ்வொரு மாதமும் தனது ஒவ்வொரு கனவை நிறைவேற்ற முயல வேண்டும். அதன் வெற்றி தோல்விகளை மாதக் கடைசியில் சுவாமினியிடம் சொல்ல வேண்டும்!
சும்மா இருந்த ஷாலுவை சந்திரமுகி ஸ்டைலுக்கு உசுப்பி விட்டார் அந்த சுவாமினி. அவரை அறிமுகப் படுத்தியது மேல் வீட்டு மாமி.
இந்த கால கட்டத்தில தான் நீங்க வர்ரிங்க எங்க வீட்டுக்கு -நான் கொடுத்த போர்வையைப் போர்த்திக் கொண்டு – கண்ணுக்குத் தெரியாத மனிதராய்! எனக்கு மட்டும் தான் நீங்க தெரிவீங்க! வேற யாருக்கும் தெரிய மாட்டீங்க. குறிப்பா ஷாலுவுக்குத் தெரிய மாட்டீங்க. உங்களால் பார்க்க கேட்க மட்டும் தான் முடியும். மற்றபடி பேசவோ தொடவோ சாப்பிடவோ காபி குடிக்கவோ முடியாது. சுருக்கமாகச் சொன்னால் டிவியில் சீரியல் பார்க்கும் ஒரு ஜடம் மாதிரி தான் இருப்பீர்கள்.
முதல் மாதம். அவளது குறிப்பு நோட்டில் முதல் கனவு..
“நான் சிறு வயதில் கற்றுக் கொள்ள முடியாத பரத நாட்டியத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்…….”
.
( தொடரும்)
பக்கம் 6/25
அன்று பாரதி .. இன்று நிர்கதி .. நாளை ? (E S விஜயலக்ஷ்மி)
அன்று பாரதி ! இன்று நிர்கதி ! நாளை?
அன்றுபாரதி: ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
இன்றுநிர்கதி: ஐ பாட் வாங்கித்தா அப்பா – அதில்
ஆங்க்ரிபேர்ட்ஸ் லோட் பண்ணு அப்பா
நெட்கனெக்ஷன் வேணுமே அப்பா – நீ
Outdated ஆகாதே அப்பா
அன்றுபாரதி: காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா
இன்று நிர்கதி: காலை எழுந்தவுடன் ட்யூஷன் – பின்பு
நாள் முழுவதும் பள்ளிடென்ஷன்
மாலை வந்ததும் போகோ – இதில்
ஓடி ஆட நேரமெங்கே அப்பா
அன்று பாரதி: பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா – ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா
இன்று நிர்கதி: பொய்யே எமக்கு வேதம் அப்பா – இன்று
அடுத்துக் கெடுப்பதே அரிச்சுவடி அப்பா
கூகிள் நமக்குத் துணை அப்பா – அதில்
கிட்டாத விஷயமே இங்கில்லை அப்பா
அன்று பாரதி: பாரத நாடு பழம் பெரும் நாடு – நீர்
அதன் புதல்வர் அந்நினைவகற்றாதீர்
இன்று நிர்கதி: பாரத நாடு பழம் பஞ்சாங்க நாடு – அந்நிய
நாட்டின் குடியுரிமையே எங்கள் தேவை.
அன்று பாரதி: தீரத்தி லேபடை வீரத்திலே – நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு – இந்த ( பாருக் )
இன்று நிர்கதி: பேரத்திலே லஞ்ச பேரத்திலே – ஊழலிலே
பலகோடி ஊழலிலே
ஆட்சியிலே சுயநல ஆட்சியிலே
வன்முறையிலே உயர் நாடு – இந்தப்
பாருக்குள்ளே பழம் பஞ்சாங்க நாடு.
அன்று பாரதி: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி
இன்று நிர்கதி: பப்புக்குப் போவதும் பார்களில் குடிப்பதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
கெட்டுப் போவதில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
அன்று பாரதி: காதலொருவனைக் கைப்பிடித்தே – அவன்
காரியம் யாவிலும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!
இன்று நிர்கதி கண்டதும் மயங்கிக் கைப்பிடித்தே – பின்
அவன் வேண்டாமென்று ரத்து செய்து
அன்னியர் வாழ்வில் மோகம் கொண்டு
நம் பாரதத்தின் பேரைக் கெடுப்போமடி.
அன்று பாரதி: வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்- எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
இன்று நிர்கதி: மலையை அழித்துக் கிரானைட் கொள்ளை அடிப்போம் –அடி
மேலைக் கடலில் கழிவு நீரைக் கலப்போம்
பள்ளிக் கருகினிலே பார்கள் திறப்போம் – எங்கள்
பாரத தேசத்தின் பெருமை அழிப்போம் – எங்கள்
பாரத தேசத்தை நாசமாக்குவோம்.
அன்று பாரதி: சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
இன்று நிர்கதி: சிங்களத்தில் தமிழரைக் காவு கொடுப்போம்
சேதுவைக் காட்டியே ஓட்டு வாங்குவோம்
காவிரியில் ஓடிவரும் நீரைத் தடுத்து
ஏழை உழவரின் வாழ்வை அழிப்போம்.
அன்று பாரதி: ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் பள்ளிச் சாலைகள் வைப்போம்:
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
இன்று நிர்கதி: வெடிகுண்டுகள் செய்வோம் டிரெயினில் வெடிக்கவும் செய்வோம்
பணத்தினைச் சேர்க்க கல்விக்கூடம் திறப்போம் குப்பையைச் சேர்ப்போம் பிளாஸ்டிக் குப்பையைச் சேர்ப்போம்
சுத்தம் தொலைப்போம் கொடிய நோயினைச் சேர்ப்போம்
பாரதி: நெஞ்சு பொறுக்குதிலையே
நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால், நெஞ்சுபொறுக்குதிலையே
பெண்: பகவானே! அறியாமையாலும் ஆணவத்தாலும் அன்று பாரதி சொன்ன நல் வாக்குகளை மறந்தும், மாற்றியும் செய்து நம் நாட்டை இன்று இந்த நிர்க்கதியான நிலைக்கு ஆளாக்கி விட்டோம். நாங்கள் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும். நாளைக்கு வைகுண்ட ஏகாதசி ! பெருமாளே நீங்கள்தான் எங்கள் நாட்டைநலம் பெறச் செய்து எங்களுக்கும் வழி காட்ட வேண்டும்! நாளைக்கு எங்கள் நிலைமை என்ன ? பகவானே !
விஷ்ணு: பக்தர்களே உங்கள் பக்தியை மெச்சினோம். நீங்கள்தான் ஏற்கனவே swacha ஆனந்த் தொடங்கி நாட்டை சீர் திருத்தத் தொடங்கிவிட்டீர்களே பின் என்ன கவலை?நாளை நிம்மதி .நாளை நிம்மதி நாளை நிம்மதிதான்!
பெண்: நம் தாய்த்திருநாட்டை மேம்படுத்த, நாளை நிம்மதியான வாழ்வைப் பெற, நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் என்ன செய்ய வேணும்?
ராகம்: ஏக் தோ தீன், சார் ஒத்துக்கடி படம்: அஞ்சான்
அடி மேல் அடி வைத்து முன்னே செல்வோம்
நாம் ஒண்ணொண்ணா சரி செய்து காட்டிடுவோம்.
வீட்டை சுத்தம் செய்திடுவோம்
நாடு தானா மாறிடுமே ஏ ……….ஏ ( அடி )
நீ பள்ளியிலே நல்லொழுக்கம் கத்துக்கிடணும்
நீ பண்பான இளைஞனாய் வளர்ந்திடணும்
நல்ல நேர்மையான தலைவன் ஆள வந்திடணும்
அவன் சட்டம் நீதி ஒழுங்குதனைக் காத்திடணும்
லஞ்சம் எனும் பேயினை விரட்ட வேணும்
நீயும் அஞ்சாமல் நல்லதை செய்து செய்து காட்டணும் ( அடி )
மது விலக்கை கொண்டு வந்து காட்ட வேணும்
பதுக்கல் கொலை கொள்ளை எல்லாம் தொலைக்க வேணும்
ஜாதி மத பேதம் எல்லாம் அழிக்க வேணும்
அட ஊழலதை நாட்டை விட்டே ஒழிக்க வேணும்
ஏய் வானத்திலே நிலவைத் தொட வேணும்
தாயைப் போல பெண்ணை நாமும் மதிக்க வேணும் .( அடி )
நாம் உலகில் முதலாய் வந்திடணும்
யாரும் போற்றும்படி யாய்மாறிடணும் ( அடி )
பக்கம் 7/25
நாய்கள் ஜாக்கிரதை – சிவமால்
பக்கம் 8/25
ஒன்பது
ஒன்பது – பத்தின் இளையவள் !
ஒற்றை – நாடிகளில் பெரியவள் !
ஒன்பதை நவம் என்று சொல்வர் !
நவரத்தினம் நவ கிரகம்
நவ தானியம் நவ நாயகியர்
நவ ராத்திரி நவ பாஷாணம்
நவமி திதி ஸ்ரீ ராம நவமி
ஒன்பது என்று திருநங்கைகளைச் சொல்வதேன்?
பைனரி படி 1 ஆண் 0 பெண்
ஒன்றும் பூஜ்யமும் இணைந்து பத்தானால்
ஆணும் பெண்ணும் வாழும் இல்லறமோ ?
ஒன்றும் பூஜ்யமும் சேர்ந்து ஒன்பதானால்
இரண்டும் இணைந்து வாழும் உடலமைப்போ ?
நவ கோளும் நவ அம்சமும்
நம்மை நிலை நிறுத்தும் ஜாதகமோ ?
மனித உடலைத் தான் சித்தர் எப்படிச் சொல்லுவார் ?
ஓட்டை உடம்பு ஒன்பது வாசல் !
உடம்பின் உயிர் பிரிவதும் ஒன்பதில் ஒன்றில் !
உத்தமர் உயிர் நாசியில் பிரியுமாம் !
ஞானிகள் உயிர் கண்ணில் பிரியுமாம் !
அதமர் உயிர் பின்புறம் பிரியுமாம் !
பக்கம் 9/25
சன்ஞ்னாவின் பெயிண்டிங்க்ஸ்
லலித் கலா அகாடெமியில் தனது ஓவியப் படைப்புகளை அலங்கரித்த சன்ஞ்னாவுக்கு குவிகத்தின் பாராட்டுதல்கள்!
பக்கம் 10/25
ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)
இந்த மாத எழுத்தாளர் : கு ப ரா
வறுமையில் வாடிய -ஆனாலும் துளிர் விட்டு பிரகாசமாக இருந்த மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா. என்று அழைக்கப்படுகிற கு.ப.ராஜகோபாலன். (1902-44)
பெண் விடுதலை பெண்ணின் சமூக மேம்பாடு இவற்றையே தன் கதைப் பொருளாக வைத்து எழுதியவர்.
நாடகம், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல வடிவங்களிலும் வாசகர்களைக் கவர்ந்த கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா), ஏராளமாகக்ச் சிறுகதைகள் எழுதி உள்ளார். எல்லா சிறுகதைகளும் (அக்கால வழக்கத்திற்கு மாறாக) பக்க அளவில் குறைவாக இருக்கும். தாக்கம் எவ்விதத்திலும் குறையாது
அக்காலத்தில் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்கிய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் கு ப ரா வும் தான். “கு.ப.ரா மாதிரி ஒரு வரியாவது என்னால் எழுத முடியுமா என்று எனக்கு ஆதங்கம்" என்று தி.ஜானகிராமன் சொன்னதாகச் சொல்வார்கள்
சிறந்த சிறுகதைகள் பட்டியல் என்று நான் பார்த்த எந்த பட்டியலிலும் இவரது "விடியுமா?” இல்லாத பட்டியல் என் கண்ணில் படவில்லை. பல பட்டியல்களில் “கனகாம்பரம்” தென்படுகிறது.
அவரது “காமுவின் கதை” இப்படிப் போகிறது
விடிந்ததுமே மனைவி காமு டைப்ரைட்டரில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் கணவன். அவள் லாகவத்துடன் சர்வசாதரணமாக டைப் அடிப்பதைவிட, பல்கூட தேய்க்காமல் ஆரம்பித்தது தான் ஆச்சரியம்.
என்னவென்று கேட்டதற்கு, இரவில் ஒரு கதை மனதில் உருவானதாகவும் அது கலைவதற்குள் அடித்து முடித்துவிட்டதாகவும் சொல்கிறாள். கதையைப் படிக்கலாம், ஆனால் அபிப்ராயம் சொல்லக்கூடாது என்கிறாள்.
காமு எழுதிய கதை
தாய்தந்தையற்ற, மாமாவினால் வளர்க்கப்படும் மோஹத்திற்கு அம்மையினால் ஒரு தழும்புகூட இல்லாவிட்டாலும் கண்பார்வை போய்விடுகிறது. அவள் பார்வை இல்லாமலேயே வாழக் கற்றுக்கொண்டுவிடுகிறாள்.
[…… இந்த இடத்தில் ஒரு வர்ணனை – காக்கைச் சிறகு போன்ற புருவங்கள், சர்பம்போன்ற பின்னல்,:- கண்விழிகள் மட்டும் கருவிழிகளற்ற இரண்டு கண்ணீர் ஊற்றுக்கள்.- இதைப்படித்ததும் "இந்த வர்ணனையை என் மனதிலிருந்து எப்படித் திருடினாய்?“ என்று கேட்கிறான் கணவன். அதற்கு "அதான் அப்பொழுதே சொன்னேனே, கேலி செய்யக் கூடாதென்று?” என்கிறாள் காமு ]
காமு எழுதிய கதை தொடர்கிறது
ஆனால் திருமண வயது வந்தபோது எப்படி அவளைக் கரையேற்றுவது என்று மாமாவும் அத்தையும் கவலைப்படுகிறாகள். .ஒருநாள் மாமனும் அத்தையும் உறங்கியபிறகு மாமனின் மகன் ரமணி, மோஹம் கண்ணீருடன் படுத்திருப்பதைப் பார்க்கிறான். பெரியவர்களின் துயரமும் கவலையும் தன்னால்தான் என்ற சோகம் அவளுக்கு. தானே அவளை திருமணம் செய்துகொள்கிறேன் என்று ரமணி.சொல்கிறான். பெற்றோரின் அரைமனச் சம்மதத்துடன் செயலாற்றவும் செய்கிறான்.
ஒருநாள், “என்னைக் கல்யாணம் செய்துகொண்டதால் எவ்வளவு சிரமம் உங்களுக்கு?” என்று மோஹம் கேட்கிறாள். தனக்கொன்றும் சிரமமோ, குறையோ இல்லை என்று ரமணி சொல்ல,. – ‘அனாதையான என்னைக் கைப்பிடித்த என் அத்தானை கண்குளிரப் பார்க்க முடியவில்லையே’ என்கிற குறை தனக்கிருப்பதாக மோஹம் சொல்கிறாள். அதற்கு “உன் மனம் குளிர இப்படியே நீ இருந்துவிட்டால் போதும் போ” என்கிறான் ரமணி..
காமு எழுதிய கதை முடிகிறது.
கதையைப் படித்துவிட்டு “அதிருக்கட்டும் "என் மனத்தை எப்படி ஊகித்தாய் சொல்லு… என் மனமே இந்தக் கதையா யிருக்கிறதே. நீ ‘மாயாவி’ தான்” என்று கணவன் ஆச்சரியப் படுகிறான்.
இந்த இடத்தில்தான் காமு எழுதியது தன் சொந்தக்கதைதான் என்று நமக்கு உறைக்கிறது. திரும்பவும் படிக்கும்போதுதான் , அதற்குண்டான சங்கேத வார்த்தைகள் நம் கண்ணில் படுகின்றன. உத்தியிலும், சரளத்திலும் மிகச் சிறந்த கதை.
முன்னே குறிப்பட்ட கதைகளின் லிங்க்
“விடியுமா" http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_30.html
"கனகாம்பரம்" http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_15.html
பக்கம் 11/25
பக்கம் 12/25
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள் (கோவை சங்கர்)
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள்
உயர்ந்தோங்கும் பயிர் கண்டு பூரிப்பு கொள்கின்றாள்
தங்கமன்ன நிலமகளின் செழிப்போங்கச் செய்கின்ற
பண்புமிகு மாந்தர்க்கு வாழ்த்துகள் கூறுகிறாள்
சிங்கமென வானோக்கி நிற்கின்ற பயிரே போல்
நேர்மையொடு மனிதருமே வாழ்ந்திடவே சொல்கின்றாள்
மங்காத பூமகளின் ஈரமுடை நெஞ்சம்போல்
ஈரமிகு நெஞ்சினராய் பயின்றிடவே கூறுகிறாள்!
உணவதுவும் உடையதுவும் ஏருழவன் உதவியினால்
சீர்பெற்ற வாழ்க்கையுமே ஒழுக்கத்தின் தயவதனால்
பணிவுநிறை உழவர்தம் கள்ளமிலா உள்ளம் போல்
வெள்ளையுள்ளம் கொண்டவராய் புகழோடு வாழ்ந்திடுவீர்
மணங்கொண்ட மலரே போல் ஒளிவீசும் தீபம்போல்
குணங்கொண்ட குடும்பத்தில் இன்பங்கள் நிறையட்டும்
எண்ணங்கள் ஈடேற ஆசிபல கூறிடவே
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள்
பக்கம் 13/25
வைகுண்ட ஏகாதசி
இந்த வருடம் ஜனவரி முதல் தேதியே வைகுண்ட ஏகாதசி. கோவில்களில் கூட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்? அதுவும் ஸ்ரீரங்கத்தில்! ரங்கநாதரின் ரத்னாங்கி சேவையும் முத்தங்கி சேவையும் பரமபத சொர்க்க வாசலும் ராப்பத்தும் பகல் பத்தும் நம்மைப் பக்தியில் மூழ்கடிக்கும் என்பது நிதரிசனம்.
பக்கம் 14/25
ஆனந்த் நகர் குழந்தைகளின் வண்ண வண்ணப் படங்கள்!!
பக்கம் 15/25
ஆனந்த் நகர் புத்தாண்டு தமிழ்க் கவிதைப் போட்டி
ஆனந்த் நகரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற கவிஞர்களின் அருமையான வரிகள்!
தலைப்பு!
வாருங்கள் தமிழை வளர்ப்போம்!
முதல் பரிசு : சு. ராகுல்
ஆதியே இல்லா தமிழைக் கொண்ட நாமெல்லாம் ஒளிதரும் பெரும் ஜோதியே!
உணர்வோம் நாமும் உரைப்போம் தமிழை, வெல்வோம் உலகை வருவாய்த் தமிழ்ப் படையே!
இரண்டாம் பரிசு : ரெ .நா. ராஜன்
அறிவுப்புப் பலகையில் அனுதினமும் திருக்குறளை நாம் எழுதிடுவோம்!
தமிழ் கற்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் நாம் வளர்த்திடுவோம்!
மூன்றாம் பரிசு: தே.பத்மஜா
தொன்று தொட்டு வந்த மொழி நம் சங்கத் தமிழ் – அதை
இன்று நாம் பேசும் அளவோ வெறும் குங்கமச் சிமிழ்!
சங்கீதமாய் நம் காதில் ஒலிக்க வேண்டிய தமிழ் – போலி
இங்கிதம் பார்த்து கைவிடப்படும் நிலை ஏன்?
முதல் பரிசு (சிறுவர்) : விஷ்ணு
பிறப்பால் எனது தாய்மொழி தமிழ் இல்லை -எனினும்
பிறந்த மண்ணின் மொழி -நான் பிறந்ததும் கேட்ட மொழி ….
மூன்றே வருடங்கள் முனைப்புடன் தமிழ் படித்தேன்
முழு மூச்சுடன் தமிழைக் கற்றேன் பெற்றேன் மகிழ்ச்சியை!
மற்ற கவிதைகள்
கஸ்தூரி:
கைகூப்பி வணங்குவது நம் பழக்கம்
தலையில் அடித்துக் கொள்ளல் பிறர் பழக்கம்!
தமிழ்ச்செல்வி :
தமிழன்னையை முதியோர் விடுதியில் விட்டுவிடாமல்
நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பேணிக் காப்போம்!
ஜெயலக்ஷ்மி :
தமிழின் வேரில் வெந்நீராய் அந்நிய மொழிக் கலாச்சாரம்
மெல்லத் தமிழ் இனி வேகமாய்ச் சாகுமோ?
போதும் தமிழா! கணிணி விட்டு நிமிர்ந்து பார்!
அலை பேசிக்கு செவி தவிர்!
தமிழன்னை விசும்பலுக்கும் செவிகொடு!
விஜி:
என்னவளே….உன்னைவிடவும் அழகான ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் …..
அவள் என் அன்னையால் அறிமுகம் செய்யப்பட பேரழகி….
அவள் பெயர் “ தமிழ் ”
அனன்யா ;
நம் பிள்ளைகளுக்கு தமிழை இழக்காமல் கொடுப்போம்!
அனைவருக்கும் குவிகத்தின் பாராட்டுதல்கள்!
பக்கம் 16/25
வாதி
அவர்கள் பரம்பரைக்கு ஒரு வியாதி. புதுமையான வியாதி. யாரும் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். ‘வாதி வியாதி ’.
கொள்ளுப் பாட்டன் காந்தியவாதி..
பாட்டன் இலட்சியவாதி !
அப்பன் அரசியல்வாதி!
மகனோ தீவிரவாதி!
இன்னும் என்ன புது மாதிரி வியாதி வரப் போகிறதோ?
பக்கம் 17/25
மன்னர் ஜோக்ஸ்
பக்கம் 18/25
பொங்கலோ பெண்கள் !
பொங்கலோ பெண்கள் !
பெண்களோ பொங்கல் !
அரிசி பருப்பு இரண்டும் சேர்ந்தால் பொங்கல் !
வெல்லம் சேர்த்தால் அது சக்கரைப் பொங்கல் !
உப்பு சேர்த்தால் அது வெண் பொங்கல் !
இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தால் பெண்கள் !
தியாகம் சேர்த்தால் அது தாய் !
தாபம் சேர்த்தால் அது தாரம் !
பொங்கலுக்குத் தேவை முந்திரி ஏலக்காய் நெய் !
பெண்களுக்குத் தேவை நகை அலங்காரம் பொய் !
சூடான போது பொங்கி வழிந்திடும் பால் பொங்கல் !
சூடான போது பொங்கி வழிந்திடும் காதல் பெண்கள் !
அடுப்பில் கிளறிட இளகிடும் பொங்கல் !
இடுப்பில் கிளறிட இளகிடும் பெண்கள் !
சுவைக்க மணக்கும் இனிப்புப் பொங்கல் !
சுவைக்க மணக்கும் இனிப்புப் பெண்கள் !
பொங்கல் சமைத்தால் அள்ளித் தின்னும் ஆடவர் !
பெண்கள் சமைந்தால் அள்ளிக் கொள்ளும் ஆடவர் !
கருப்பு மிளகுப் பொங்கலில் காரம் அதிகம் !
கற்பு மிகுந்த பெண்களில் பெருமை அதிகம் !
மஞ்சள் கொத்தை கட்டிக் கொள்ளும் பொங்கல் !
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும் பெண்கள் !
பொங்கலுக்குத் துணை ஆலையின் செங்கரும்பு !
பெண்களுக்குத் துணை காளையின் கரமிரும்பு !
கரம் பட்டதும் தன்னையே தந்திடும் பொங்கல்!
கரம் பட்டதும் தன்னையே தந்திடும் பெண்கள் !
பசித்தவன் இதழ்களில் சேர்ந்திடும் பொங்கல் !
மணந்தவன் இதழ்களில் சேர்ந்திடும் பெண்கள் !
தப்பான கைபட்டால் கெட்டுவிடும் பொங்கல் !
தப்பான கைபட்டால் கெட்டுவிடும் பெண்கள் !
தின்னத் தின்ன திகட்டாதது பொங்கல் !
அள்ள அள்ள திகட்டாதது பெண்கள் !
திருவிழா முடிந்ததும் வருவது மாட்டுப் பொங்கல் !
மணவிழா முடிந்ததும் வருவது மாட்டுப் பெண்கள் !
அடங்காத காளையை அடக்கும் மாட்டுப் பொங்கல் !
அடங்காத காளையை அடக்கும் மாட்டுப் பெண்கள் !
ஆதவனுக்கு உணவைப் படைத்திடும் கனுப் பொங்கல் !
காதலனுக்கு தன்னையே படைத்திடும் காதல் பெண்கள் !
சுற்றம் பார்த்து உறவை நாடும் காணும் பொங்கல் !
சுற்றிப் பார்த்து உறவை நாடும் நாணும் பெண்கள் !
தங்கத் தமிழ் நாட்டில் பொங்கலுக்குத் தனிச் சிறப்பு !
தங்கத் தமிழ் நாட்டில் பெண்களுக்குத் தனிச் சிறப்பு !
பொங்கலோ பெண்கள் !
பெண்களோ பொங்கல் !
பக்கம் 19/25
ஜோ டி க்ரூஸ் -சாகித்ய அகாடெமி விருது பெற்றவர்
ஜோ டி க்ரூஸ், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி என்னும் கடலோர ஊரில் பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் எம் ஏ பட்டம் முடித்தார். திருச்சியில் உள்ள செய்ண்ட் ஜோசப் கல்லூரியில் தனது எம் ஃபில்லை முடித்தார். மனைவி சசிகலா, இரண்டு குழந்தைகள் உண்டு. ஷிப்பிங் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.
‘ஆழி சூழ் உலகு’ என்னும் நாவல் மூலம் இவர் பெரிதும் கவனம் பெற்றார். ஆழி சூழ் உலகு நாவல், மீனவர்களின் (பரதவர்களின்) வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் ஒரு நாவல். மீனவர்கள் வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளையும் அவலங்களையும் பேசும் வெகு சொற்ப தமிழ் நாவல்களில் முதன்மையானது ‘ஆழி சூழ் உலகு’. அந்நாவலின் வட்டார மொழி தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றது. இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதைப் பெற்றது.
அவரது இரண்டாவது நாவல் ‘கொற்கை’ சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘கொற்கை’ நாவல் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மீனவர்களின் நூறாண்டு கால வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.
இவரது இரண்டு நாவல்களுமே மிகப்பெரிய ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது முக்கியமானது.
‘மரியான்’ என்னும் தமிழ்த் திரைப்படத்துக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள் எல்லாமே மீனவர்களைச் சுற்றியே அமைந்துள்ளது. விடியாத பொழுதுகள், எனது சனமே போன்ற குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
கடற்கரையில் மீனவர்களுக்காகப் பாடுபடும் ஓர் ஆக்டிவிஸ்ட் என்று தான் அழைக்கப்படுவதையே க்ரூஸ் விரும்புகிறார்.
மீனங்காடி
திங்கள் காலை
மேரி ஆபீஸுக்குள் நுழைந்து லிப்டில் ஏறும் போதே அவள் பாஸ் பிரசாத்தைப் பார்த்து விட்டாள். “ சரி ! தனியாக அவர் கிட்டே போய் விவரமா சொல்கிற வேலை மிச்சம ‘ என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் லிப்டில் எக்கச்சக்கமான கூட்டம். பேச முடியவே இல்லை. மூன்றாவது மாடி வந்ததும் வெளியே செல்லப் போவதற்கு முன்னால் “ மிஸ்டர் பிரசாத் ஒரு சின்ன பரிசு ! இதுக்குப் பேர் சிரிக்கும் சிங்காரி “ “ என்ன மேரி இது ? “ அவர் கேட்கு முன் மேரி வெளியே வந்து விட்டாள். லிப்ட் கதவு மூடிக் கொண்டது..
அவள் நாற்காலியில் உட்கார்ந்த உடன் போன் அடித்தது. பிரசாத் தான். அதை அவள் எதிர் பார்த்திருந்தாள். ‘ வேடிக்கையான பரிசு மேரி “ அவர் பேச்சிலேயே ஒரு சிரிப்பு தெரிந்தது. அவர் கிட்டே சனிக்கிழமை மீனங்காடிக்குச் சென்றது – கண்டது – படித்தது எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னாள்.
“ நீ செய்ய நினைக்கிறதைச் செய் மேரி ! மீனங்காடி சமாசாரம் நம்ம நிதிக் கம்பெனிக்கு எப்படி ஒத்து வரும் என்று புரியவில்லை. ஒண்ணு மட்டும் நிச்சயம் ! டென்ஷனோட வந்த என்னை உன் ‘ சிரிக்கும் சிங்காரி ‘ சிரிக்க வைத்தது என்றால் உன்னால் அதுக்கு மேலேயும் ஏதாவது செய்ய முடியும் !”
போனை வைத்ததும் அவளுக்கே அவள் பேச்சு செயல் எல்லாம் பிடித்திருந்தது. மற்ற மேனேஜர் எல்லாம் பிரசாத் கூட இப்படிப் பேச யோசிப்பார்கள்.! எப்போதும் ‘ ஆமாம் சார் ! சரி சார் ! ‘ என்று தான் பேசுவார்கள். நாம் இப்படி வெளிப்படையாப் பேசினது அவருக்குப் பிடித்திருக்கு என்று தான் அவரது குரலே சொல்லிற்று.!
ஜாலியா ஒரு பயணம்
அடுத்த இரண்டு வாரங்களிலும் திங்கட்கிழமை காலை மீட்டிங்கில் மேரி இதைப் பற்றித் தான் பேசினாள் ‘ ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் நம்முடைய எண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நீங்கள் போட்ட ‘ மெனு கார்ட் ‘ அழகாக எடுத்துக் கூறியது. நீங்கள் துணிச்சலாகச் செய்த அந்த நிகழ்ச்சி நம்ம கம்பெனியில் மிகவும் பிரபலமாகி விட்டது என்ற சேதி உங்களுக்குத் தெரியுமா ? இப்போது நாம் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும். நீங்கள் எல்லோரும் அதை மனப்பூர்வமாக, அனுபவ பூர்வமாக, நேரடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மதியம் சாப்பாட்டு இடைவெளி போது நாம் அனைவரும் ஒரு குட்டி பயணம் போகிறோம். இரண்டு குரூப்பாகப் பிரிந்து செல்வோம். ஒரு குரூப் புதன் கிழமை மதியம். அடுத்த குரூப் வியாழக்கிழமை மதியம். அன்றைக்கு யாரும் சாப்பாடு கொண்டு வர வேண்டாம். கம்பெனி செலவில் சாப்பாடு ஏற்பாடு செய்யப் படும்.
நாம் ‘ அவுட்டோர் ‘ பயணம் போகிற இடத்திற்கு உங்களில் சிலர் ஏற்கனவே போயிருக்கக்கூடும். நாம் போகிற மீனங்காடி தனி விதம். அங்கு கொப்பளிக்கும் சந்தோஷத்தை – சக்தியை உணரவே நாம் அங்கே போகிறோம். அங்கே இருக்கிற தொழிலாளிகளும் முதலில் நம்மை மாதிரியே பிரச்சினையில் தவித்து முடிவாக இந்த புதுப் பாதையைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதை அனுபவ பூர்வமாய் உணருவது, பிறகு அதை எப்படி நமது கம்பெனியில் பயன் படுத்துவது ஆகிய இரண்டும் தான் நமது ‘ அவுட்டோர் ‘ பயணத்தின் முக்கிய நோக்கம் !”
“ ஓ ! மேடம் ! அன்றைக்கு எனக்கு பல் டாக்டர் கிட்டே போகணும் “ “ எனக்கு வேற இடத்தில் லஞ்ச் ஏற்பாடு செய்திருக்கிறேன் “ இப்படி சில குரல்கள் எழாமல் இல்லை.
ஆனால் மேரி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். “ நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது.! உங்கள் மற்ற திட்டங்களை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு எல்லோரும் மீனங்காடிக்கு வருகிறீர்கள். ! வர வேண்டும் ! இது மிக மிக முக்கியம் .”
மேரிக்குத் தன் குரலில் இருந்த உறுதியை எண்ண ஆச்சரியமாக இருந்தது.
புதன் கிழமை மதியம் முதல் குரூப் தயாராக இருந்தார்கள். “ நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.! போகும் போது கையில் டீ கப்புடன் போங்கள்.” என்று மேரி டி.வி. விளம்பரத்தில் வருவது போல் சொன்னதைக் கேட்டு அனைவரும் ‘ பக பக ‘ என்று சிரித்து விட்டனர். நல்ல ஆரம்பமாகத் தோன்றியது மேரிக்கு.
வழக்கம் போல மீனங்காடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய கும்பலில் நிதிக் கம்பெனியின் கும்பல் கலந்து வெவ்வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எப்படி உணருகிறார்கள் என்று மேரி அவர்களின் முகத்தையே அடிக்கடி அவர்களுக்குத் தெரியாமல் பார்த்து வந்தாள். பலர் ஜாலியாக அனுபவிப்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. ஜானும், ஸ்வேதாவும் ஒரு மீன்காரனிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த மீன்காரன் தன் அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தான். மக்கள் உங்கள் கடைக்கு – ஆபீஸுக்கு வரும் போது அவர்கள் முகத்தைப் பாருங்கள். ஒரு நாள் நண்பன் வந்தால் எப்படி ஆர்வத்தோடு பார்ப்பீர்களோ அது மாதிரி பாருங்கள்.! மற்ற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவர்களை மட்டும் கவனியுங்கள். “ ஜானும், ஸ்வேதாவும் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது மேரிக்குப் பிடித்திருந்தது.
வியாழக் கிழமை இரண்டாவது குரூப்பும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் போய் விட்டு வந்தார்கள். யாரும் அதிகமாகக் கேள்விகள் கேட்கவில்லை. சாதாரணமாக மீனங்காடி நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதான் ஒரு புது திருப்பம் நிகழ்ந்தது. சுஜாதா – ரொம்ப வருஷமா வேலை செய்கிற சீனியர் டைப்பிஸ்ட். அவளிடம் மீனங்காடி ஆள் வந்து “ மேடம் ! நீங்கள் அந்த தடுப்புக்குப் பின்னால் இருக்கும் இடத்திற்குப் போய் அந்த மீனைப் பிடிக்கிறீர்களா ? “ என்று கேட்டான். சுஜாதா முதலில் தயங்கினாலும் பிறகு ‘ சரி ‘ என்று மெதுவாகப் போனாள் . ரெண்டு மூன்று தடவை பிடிக்க மீன் நழுவி நழுவிப் போவது கூட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் குஷியாக இருந்தது. அங்கிருக்கும் அனைவரும் சுஜாதாவையே பார்த்துக் கொண்டு ‘ ஆய் ! ஊய் ! ‘ என்று கத்தினார்கள். மூன்றாவது தடவை ‘ கபால் ‘ என்று வெறும் கையால் அந்த மீனை சுஜாதா பிடித்ததும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தாற்போல் கை தட்டி ஆரவாரித்தனர். விசில் சத்தம் வேறு ! மீன் மாதிரியே சுஜாதாவும் அன்று சந்தோஷ வலையில் மாட்டிக் கொண்டு ரசித்தாள். !
சுஜாதா மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டியாக விளங்கினாள். அன்றைக்கு நிதிக் கம்பெனி ஆட்கள் டீ கப்பைத் தூக்கிக் கொண்டு ‘ போகுது பார் ! போகுது பார் ! என்று சொல்வதை விட துள்ளிக் குதித்து மீனைப் பிடிக்கும் ஆக்ஷனில் இறங்கி இருந்தார்கள்.
வெள்ளி மதியம் மீட்டிங் .
வெள்ளிக் கிழமை மதியம் மேரி இரண்டு குரூப்புகளையும் தனித் தனியே சந்தித்தாள். “ நாமும் அந்த மீனங்காடி தொழிலாளிகள் மாதிரி ஜாலியாக வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? “ என்று பேச்சைத் துவங்கினாள். சிலர் தலை ஆட்டினர். சிலர் மீன் தலைக்கு மேல் பறப்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சுஜாதாவின் அவுட்டுச் சிரிப்பு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது.
இரண்டு குரூப்புகளிலும் எதிர்ப்புகள் வராமல் இல்லை. ‘ நாம் என்ன மீனா விற்கிறோம்?
‘ இது ஆபீஸ் ‘ அது ஆம்பளைங்க சமாசாரம் ‘ ‘ நம்ம வேலை எப்படிச் செய்தாலும் போர் தான் ‘ “ “ நாம் எதைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது ? கரன்சி நோட்டையா ?’
“ நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ! இது மீன் மார்க்கெட் இல்லை. அவர்கள் வேலையை விட நமது வேலை வித்தியாசமானது தான். இருந்தாலும் நான் ஒன்று கேட்கிறேன்.. நாமும் ஏன் அவர்களைப் போல ஜாலியா சந்தோஷமா வேலை செய்யக் கூடாது ? மனம் விட்டுச் சிரிக்கணும் ! வேண்டா வெறுப்போடு இல்லாமல் மன நிறைவோடு வேலை செய்ய வேண்டும் .
‘ ஏண்டா ஆபிசுக்கு வருகிறோம்’ என்று இல்லாமல் ‘ஆபிசுக்கு வருவதே ஜாலி ‘ என்ற நினைவு வர வேண்டும். ஏற்கனவே மெனு கார்ட்போட்டு உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். ! அதற்கு அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டாமா ?”
சுஜாதா எழுந்தாள். எனக்கு அந்த மீனங்காடி சூழ்நிலை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இங்கே நம்ம ஆபீசுக்கு வேலைக்கு வருவதே பிடிக்கவில்லை. மூச்சு முட்டுது இங்கே ! உயிரே இல்லாத இடத்தில் இருப்பது போன்ற உணர்வு தான் எனக்கு இங்கு வருகிறது. நான் உண்மையைச் சொல்லுவதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நான் வேறு வேலைக்குப் போக வேண்டும் என்று போன மாதமே முடிவு எடுத்து விட்டேன். இந்த இடத்தில் உயிரும் உணர்வும் கொண்டு வர முடிந்தால் இங்கேயே இருப்பதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லை.!
“ ரொம்ப நன்றி சுஜாதா ! “ உண்மையைச் சொன்னதற்காக “ சுரேஷ் எல்லாரையும் பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னான் “ நான் இந்த இடத்தை ஜாலியான வேலை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். “
ரமேஷ் கையைத் தூக்கினான் ! “ சொல்லு ரமேஷ் “ “ மேடம் ! அன்றைக்கு நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொன்னீர்கள்.! எந்த மேனேஜரும் இது மாதிரி சொன்னது இல்லை . நானும் உங்களை மாதிரி தனி ஆளாக இருந்து கொண்டு என் பையனை வளர்த்தி வருகிறேன். எனக்கும் இந்த வேலை , சம்பளம், பாதுகாப்பு எல்லாம் அவசியம். நானும் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறேன். நான் மற்ற டிபார்ட்மெண்ட் ஆட்கள் வந்தால் எரிந்து எரிந்து விழுந்திருக்கிறேன். காரணம் அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
நாம் மட்டும் இங்கே இந்த டிபார்ட்மெண்டில் அவதிப் படுகிறோமே என்ற வெறுப்பு, கோபம், ஆத்திரம். நீங்கள் அன்று பேசின பிறகு உணர்ந்தேன். – எவ்வளவு தவறான எண்ணம் என்னுடையது என்று. நாம் நம்ம டிபார்ட்மெண்டை குப்பையா நினைத்தால் இது குப்பைத் தொட்டிதான். நாம இதை கோபுரமா நினைச்சா அது கோயிலாக மாறாதா ? இதைப் பத்தி தீவிரமாக யோசித்தேன். நாமும் முயற்சிப்போம். நம்மால் இங்கேயே ஒரு ஜாலியான – சந்தோஷமான ஆபீஸை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.”
“ ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ் ! அவனை மிகவும் நன்றியுடன் பார்த்தாள் மேரி ”
“ இன்னும் சிலர் ரமேஷின் வார்த்தைக்குத் தலை ஆட்டுவது எனக்குப் புரிகிறது. நீங்கள் சொல்கிற வார்த்தைகள் எல்லாம் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள். இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் ! அவற்றை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி ! நாம் நமது ஆபீஸை நாம் விரும்புகிற ஒரு இடமாகக் கூடிய சீக்கிரம் மாற்றுவோம்.! இதில் கொஞ்சங்கூட சந்தேகமில்லை.!” கை தட்டல் பிறந்தது
. “ வருகிற திங்கட்கிழமை முதல் மீனங்காடித் தத்துவத்தை நமது மூன்றாம் மாடியில் அமுல் படுத்துவோம். அதுவரை நீங்கள் உங்களுக்கு மீனாங்காடியில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் அவை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றியும் யோசியுங்கள் ! உங்கள் எண்ணம், கருத்து, சந்தேகங்கள் அனைத்தையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள்.! நாம் அடுத்த தடவை சந்திக்கும்போது மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தீர்மானிப்போம்.! அதுவரைக்கும் ஜாலியா யோசியுங்கள்.”
“ சரி ! நாம் கரன்சி நோட்டைத் தூக்கிப் போடா விட்டாலும் இங்கே இருக்கிற குப்பைத் தொட்டியை தூக்கி எறியலாமா ?” ஜேக்கப் கேட்டதும் அனைவரும் சிரித்தார்கள்.! சிரிப்பு அலை போல தொடர்ந்து வருவது அனைவருக்கும் புரிந்தது.
“ என்னென்ன செய்யலாம் ‘ என்று கோடு போட்டுக் காட்டினாள் மேரி ! எல்லோரும் அந்த வார விடுமுறையில் அதைப் பற்றி நன்றாக யோசித்து விட்டு புதுப் புதுத் திட்டங்களுடன் வர வேண்டும் “ என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் மேரி !
எல்லோரும் சென்ற பிறகு தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள் மேரி ! கொஞ்சம் சோர்வாகத் தோன்றியது. சனி ஞாயிறு நாட்களில் யோசித்து விட்டு வாருங்கள் என்று சொன்னோமே ! செய்வார்களா ? பெரிய நம்பிக்கை தோன்றவில்லை மேரிக்கு. பெருமூச்சு தான் வந்தது.
ஆனால் அந்த வார சனி ஞாயிறு விடுமுறையில் அவர்களில் யார் திரும்பவும் அந்த மீனங்காடிக்கு குழந்தை குட்டிகளுடன் போனார்கள் என்பது மேரிக்கு சத்தியமாகத் தெரியாது.
(தொடரும்)
பக்கம் 21/25
பக்கம் 22/25
நான் நானானால்
நான் விதையானால் என்னைப் புதைத்துவிடு
நான் கதையானால் என்னை எழுதிவிடு
நான் செடியானால் என்னைப் பதித்து விடு
நான் கொடியானால் என்னை ஒடித்துவிடு
நான் மண்ணானால் என்னுள் புதைந்துவிடு
நான் பெண்ணானால் என்னுள் முடங்கிவிடு
நான் பொன்னானால் என்னுள் உருகிவிடு
நான் விண்ணானால் என்னுள் பறந்துவிடு
நான் மழையானால் என்னைப் பொழியவிடு
நான் பனியானால் என்னை சிலிர்க்கவிடு
நான் கடலானால் என்னைச் சீறவிடு
நான் அலையானால் என்னைத் தவிக்கவிடு
நான் பண்ணானால் என்னைப் பாடிவிடு
நான் புண்ணானால் என்னைக் கீறிவிடு
நான் கள்ளானால் என்னைப் புளிக்கவிடு
நான் புள்ளானால் என்னைப் பறக்கவிடு
நான் அமிழ்தானால் என்னை விழுங்கிவிடு
நான் தமிழானால் என்னை முத்தமிடு
நான் உடலானால் என்னுள் கலந்துவிடு
நான் உயிரானால் என்னைப் பறக்கவிடு
நான் நீயானால் என்னை வென்றுவிடு
நான் நானானால் என்னைக் கொன்றுவிடு
பக்கம் 23/25
ஞாயிறு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
சுட்டெரிக்கும் சூரிய கண்ணே !
கதகதப்பூட்டும் காந்தச் சுடரே !
மேகத் திரையில் முடி விலகித் தாபமூட்டுகிறாய் !
கோடையில் வியர்வை ஆற்றைப் பெருக்குகிறாய் !
சூட்டைப் போட்டு என் சூட்டைக் கிளப்புகிறாய் !
உனக்கென்ன ஆசை என்னை நிர்வாணப் பக்கிரியாக்க
உன் கரங்கள் என் மேனி தழுவ வருவது D வைட்டமினோ
வாடையில் உன் கிரணம் பட மேனி தவிக்கிறதே !
மார்கழிப் பனித் துளியில் வைரமென மின்னுகிறாய் !
பார்வையில் பனிப் போர்வை விலக்கும் கண் உனக்கு !
காலையில் கன்னம் சிவந்து குழந்தையாய் கொஞ்சுகிறாய்
மாலையில் கன்னம் கனிந்து குமரியாய் ஒளிகிறாய்
இடையில் மட்டும் ஏன் இப்படி சுட்டு எரிக்கிறாய் !
அண்ட வெளியின் பழம் பெரும் பூதமே !
பாரதி தொட்ட சுட்டும் விழிச் சுடரே !
பூமி ராதை உன்னைக் கொஞ்ச சுற்றிச் சுற்றி வருகிறாள் !
கண்ணன் நீயோ கோபியர் கிரகங்களுடன் நடனமாடுகிறாய் !
உன் கண்ணின் பிரதிபலிப்பு தானே சந்திர ஒளி !
அவள் மீது உனக்கு ஏன் தனிப்பட்ட ஆசை !
மாதம் ஒரு நாள் உன் நெஞ்சில் ஒளித்து வைக்கிறாய்!
மலை முகட்டில் கடற் கரையில் வயல் வெளியில்
நீ துயில் கொள்ளும் துயில் எழும் காட்சியே சாட்சி !
மூன்று வேளையும் உணவு உண்ண நீ அடுப்பூட்டுகிறாய் !
மூன்று வேளையும் செய்ய வேண்டும் உனக்கு வந்தனம்
நீ ஒரு உருளும் சக்கரம் !
உன் கிரணமே சரணம்
பக்கம் 24/25