Monthly Archives: April 2022
வ வே சு வைக் கேளுங்கள் – கேள்வி பதில்
“வ வே சு வைக் கேளுங்கள்” என்ற தலைப்பில் ஒரு அங்கதம் (PUN) இருக்கிறது,
ஒன்று அவரிடம் கேள்விகளைக் கேளுங்கள் (ASK) என்ற பொருள். மற்றொன்று அவரது குரலைச் செவிமடுத்துக் கேளுங்கள் (LISTEN) என்று பொருள்.
மின்னிதழில் தானே இரண்டையும் தர இயலும்.
கேள்வி பதிலைப் படியுங்கள். விரிவான விளக்கங்களைக் கேளுங்கள் !
(முதல் 25 வினாடிகள் கழித்து நிகழ்வு ஆரம்பமாகிறது )
கேள்வி: தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ! நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ – பாரதியின் இந்த வரிகளுக்குப் பொருள் என்ன? (ராமமூர்த்தி , லாஸ் ஏஞ்சலிஸ் )
பதில்: காக்கைச் சிறகினிலே பாடலின் நாலாவது கண்ணி இது. எனவே அதே உணர்வில் இவ்வரிகளையும் அணுகவேண்டும். “காக்கைச் சிறகைப் பார்த்தால் கண்ணன் உருவம் வரும் என்பதை நம்பினால் இதையும் நம்பலாம். கவிஞர்கள் அதீதக் கற்பனை கொண்டவர்கள். காதலர்களோ கற்பனையில் கவிஞரையும் மிஞ்சுபவர். இங்கோ ஒரு காதல் உணர்வு கவிதையில் எழுதப்பட்டுள்ளது. எனவே தீயைத் தொட்டால் சுடுமே ..இப்படி எழுதுவார்களா எனக் கேட்ககூடாது. காரணம் காதல் இதனினும் சுடும். மேலும் இங்கே காதல் பக்தியாகக் கனிந்துவிட்டது. நீற்றறையில் ( சுண்ணாம்புக் காளவாய்) இருக்கும் போதன்றோ “ மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும்” என்று பாடினார் அப்பர் பெருமான். எனவே பக்தி காதல் இரண்டிலும் இதெல்லாம் சகஜமப்பா !
கேள்வி: முன்பெல்லாம் வாழ்த்துக்கள் என்றுதானே எழுதுவோம். இப்போது வாழ்த்துகள் என்று எழுதுகிறார்களே ? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? (கிரிஜா பாஸ்கர்)
பதில்: முன்பெல்லாம் எழுதினா அது சரியா இருக்கணும்னு சட்டமா ? “வாழ்த்துக்கள்’ என்று ககர ஒற்று சேர்த்து எழுதினால் அது எப்போதுமே தவறுதான். மாற்றம் ஏதுமில்ல. இலக்கணப்படி எழுதினா இக்கன்னா கிடையாது. க்- சேர்த்து எழுதினால் “வாழ்த்துக் கள்” என்று பொருள்படும். அதாவது வாழ்த்து என்ற கள்ளைத் தருகிறேன். குடிச்சுட்டு போதை ஏத்திக்கோன்னு அர்த்தம். .இனிமே ஒங்க சாய்ஸ் !
கேள்வி: சிலேடை கவிதை என்றாலே காளமேகப்புலவர் தான் நினைவில் வருகிறார். மற்ற கவிஞர்கள் சிலேடை கவிதை எழுதவில்லையா? (பானுமதி சென்னை )
பதில்: காளமேகம் போல, இன்னும் பல கவிஞர்கள் சிலேடை எழுதியுள்ளனர். சங்ககாலம் தொட்டே பலர் சிலேடை எழுதியுள்ளனர். இதன் இலக்கணம் “தண்டியலங்காரத்தில்” கூறப்பட்டுள்ளது . ஸ்லேஷை என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் சிலேடை. இரட்டுற மொழிதல் என்பது தமிழ்ப் பெயர். அப்படீன்னா
ஏதாவது உதாரணம் ?இதோ ஒரு தனிப்பாடல்.
கடகளிற்றான் தில்லை வாழும்
கணபதிதன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பரெலாம் விழித்திருந்தார்; அயில்வேல் செங்கை
.உடையஅறு முகவனுங்கண் ணீரா றானான்;
பம்புசுடர்க் கண்ணனுமோ நஞ்சுண் டான்; மால்
பயமடைந்தான் உமையுமுடல் பாதி யானாள்;
அம்புவியைப் படைத்திடுவ(து) அவம தே என்(று)
அயனுமன்னம் இறங்காமல் அலைகின் றானே!
( பொதுவாக வெண்பாவில் அமையும் சிலேடை இங்கே விருத்தத்தில் உள்ளது -புலவர் பெயர் தெரியவில்லை)
அடுத்த உதாரணம் வெண்பா. எழுதியவர், நியூ ஜெர்ஸியில் வசிக்கும் வி.சுப்பிரமணியன்
சிவன் – சாம்பார் – சிலேடை
தண்ணீரை ஏற்றுச் சமயத்தில் தானாகிக்
கண்ணீர் மிகுமாறு காணுமே – மண்ணோர்க்கு செம்பொருள் ஆகநெருப் பேறுமுகக் கும்சாம்பார்
எம்பெரு மானுக் கிணை.
கொஞ்சம் கஷ்டப்பட்டா அர்த்தம் புரிஞ்சிடும். ஆல் தி பெஸ்ட்.
அப்படீன்னா ஏன் சார் சிலேடை என்றால் காளமேகம் அப்புறம் கி வா.ஜ. என்றுதான் பேசறோம்னு கேட்டால் “ அதுதான் அவர்கள் பெருமை..சிறப்பு.
கேள்வி: தொலைக் காட்சியில் கவியரங்கம் நடத்திய அனுபவத்தில் நீங்கள் பெரிதும் ரசித்தது? (சந்திரசேகர், கோவை)
பதில்: 1980 என்று நினைக்கிறேன். ஒரு நகைச்சுவைக் கவியரங்கம். ”ஆடியன்ஸ்” பங்குகொள்ளும் நிகழ்ச்சி. கவிஞர்களுக்கு தொலைக்காட்சி அப்போது புதிது. நகைச்சுவையோடு கவிதை படித்து கரவொலிகள் வாங்கிய கவிஞரிடம் “ரெகார்டிங்’ சரியாக வரவில்லை மறுபடிப் படியுங்கள்” என்று தயாரிப்பாளர் சொல்ல, அக்கவிஞர் மறுபடியும் படித்தார்; ஏற்கனவே கேட்டுச் சிரித்த கவிதைக்கு மறுபடியும் அதே அளவு சிரிப்பு பார்வையாளர் பகுதியிலிருந்து வரவில்லை. மனமொடிந்து போன கவிஞர் தயாரிப்பாளரிடம் “ அந்த கைதட்டெல்லாம் என் கணக்கில் அப்பறம் சேர்த்துடுவீங்தானே “ என்றார். ஒரு குறும்புக் கவிஞர் “ அப்படீன்னா நான் படிக்கும் போதும் அதையே சேத்துடுங்க என்றார்”
இப்போதெல்லாம் இது போன்ற ஒட்டு வேலைகள் பழைய டெக்னிக்கா ஆகிவிட்டது.
கேள்வி: மிகைப்பாடல்கள் எல்லா இலக்கியங்களிலும் உள்ளனவா? (ராமசுப்பிரமணியன், சென்னை)
பதில்:ஆம் ! இருக்கின்றன. ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்ட பல நூல்களில் மிகைப் பாடல்கள் இருக்கும். காரணம் வெவ்வேறு சுவடிப் பிரதிகளில் இருந்து எடுத்துப் பதிப்பிக்கும் போது ஒருசிலவற்றில் மட்டுமே காணப்படும் செய்யுள்கள், மூலம் என்று ஒத்துக்கொள்ளப்பட மாட்டா. அவற்றை, மிகைப்பாடல்கள் எனக் குறித்துவிடுவார்கள்.
சென்னை கம்பன் கழகப்பதிப்பில் தனியாக ஒவ்வொரு காண்டத்தின் பின்னும் மிகைப்பாடல்கள் எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கலாம்.
1930-ல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த “புறத்திரட்டு” என்ற வெண்பா மாலையில் காணும் மிகைப்பாடல் இது:
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?
கேள்வி: ஆப்பிள், காபி போன்ற சொற்களை நாம் தமிழில் ஏற்றுக் கொண்டது போல , பேஸ்புக் (முக நூல்) வாட்ஸ் அப் ( புலனம் ) ஜும் ( குவியம்)…போன்ற சொற்களை அப்படியே எழுதினால் என்ன தவறு? ஏன் புதிய சொற்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும்? (மதுவந்தி )
பதில்: பெயர்ச் சொற்களை மொழிபெயர்த்து எழுத வேண்டிய அவசியமில்லை. ஜூம் போன்ற வகைகளுக்குப் பொதுப் பெயராக “குவியம்” போன்ற புதிய சொற்கள் வரலாம் அதில் தவறில்லை. வாட்ஸப்புக்கு இணையாக சிக்னல், த்ரீமா, டெலெக்ராம் போன்ற செயலிகள் வந்துள்ளன. அவற்றின் பெயரை மாற்றாமல் இவை போன்ற செயலிகளுக்கு “புலனம்” எனப் பொதுப்பெயர் கண்டுபிடிப்பதில் தவறில்லை.
ஒரு புதிய தமிழ்ச்சொல் பொதுப்பெயராக விளங்கினால் அதிலிருந்து பல புதிய சொற்கள் உருவாகும். “பஸ்” என்பதற்கு “பேருந்து” எனப் பெயர்மாற்றம் செய்த பின்னால் பேருந்து நிலையம், பேருந்து முனையம், பேருந்து பயணச்சீட்டு, பேருந்து நடத்துனர் என்று பல சொற்கள் பிறந்துவிட்டன. அதுதான் பயன்
சொற்களின் எண்ணிக்கை அதிகமாவது நிச்சயமாக ஒரு மொழியின் வளர்ச்சிக்குத் தேவை. பல பழைய சொற்கள் வழக்கொழிந்து போகும் போது புதிய சொற்கள் மொழிக்குப் புத்துணர்ச்சி தருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.
கேள்வி:இலக்கியத் தரம் என்பதை நிர்ணயிப்பவர் யார்? (சுந்தரராஜன்)
பதில்: வாசகர் படைப்பாளிகள் இருவருக்குமே அதில் பங்குண்டு. எது இலக்கியம் என்பதில் தெளிவு இருந்தால்தான் தரம் பற்றிய தெளிவு வரும். ”வாசகனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் எழுதுவேன் . விரும்பினால் படியுங்கள்” என்று ஒரு பிரபல எழுத்தாளர் பேசியுள்ளார். ( பல தரமான கதைகளுக்குச் சொந்தக்காரர்) . ”வாசகர் விரும்புவதால்தான் நான் இவ்வளவு கீழிறங்கி எழுதுகிறேன் என்கிறார் இன்னொரு படைப்பாளி.
எனக்கு இதுதான் வேண்டும் எனச் சொல்லும் வாசகனும், நான் இப்படித்தான் எழுதுவேன் எனச் சொல்லும் படைப்பாளியும் தரத்தை நிர்ணயம் செய்வதில்லை.
எடைக்கற்களே தராசாகிவிட முடியாது. அப்போ நிர்ணயம் செய்வது யார் என்றால் “காலம்” தான் பதில்.
கேள்வி: வாலிவதம் , அக்னிப் பரீட்சை, கர்ப்பிணி மனைவியைக் காட்டில் விடுதல் – இம்மூன்றும் ராமர் புகழிற்கு மாசு இல்லையா? (ரமணி , பெங்களூர்)
பதில்: நிச்சயமாக இல்லை. ( தெ.போ.மீ, கி,வா,ஜ,நீதியரசர் இஸ்மாயில், நீதியரசர் மகராஜன், பேரா.அ.சா. ஞானசம்பந்தம், கீரன், போன்றோர் பார்வையின் முடிவு இது).
கேள்வி: கொரோனா வின் தயவால் ஜூம் அரங்கில் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்தன. அறவே மறந்து போன “நேரடி நிகழ்ச்சிகள்” மறுபடியும் பழையபடி தலை எடுக்கும் வாய்ப்பு உண்டா? அவை வெற்றி அடையுமா? ( ராய. செல்லப்பா)
பதில்: நிஜத்துக்கு இருக்கும் வரவேற்பு நிழலுக்கு இருக்கமுடியாது. நேரில் நிகழும் கூட்டங்களுக்கு என்றுமே மதிப்புண்டு. ஆனால் கூட்டத்துக்கு வர இயலாதவர்கள் பங்கேற்பு கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் அறவே இல்லாதிருந்தது. ஆனால் தற்போது அனைவரும் பங்கேற்கும்படியான “ஹைப்ரிட்” கூட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. குவிகமும் அதை சாதித்துள்ளது. எனவே இனி இந்த “மாடல்” கூட்டங்கள் அதிகம் நிகழ வாய்ப்புண்டு. கண்டம் தாண்டி இருப்போரையும் காண வைக்கும் “அகண்ட” நிகழ்வுகளை அனைவரும் வரவேற்பார்கள் என நான் நம்புகிறேன்.
.கேள்வி: கப்பலோட்டிய தமிழனும் வீரபாண்டியக் கட்ட பொம்மனும் திரைப்படங்களாக வந்திராவிட்டால்? (ஜி.பி. சதுர்புஜன்)
பதில் :விடுதலைப் போரில் ஈடுபட்ட ஒரு மாபெரும் வீரனையும், வெஞ்சிறை கண்ட தேசப்பற்று மிக்க ஒரு தியாகியையும் தமிழகம் அறியாது போயிருக்கும். ( அதற்கு வித்திட்ட சிலம்புச் செல்வரை நான் வணங்குகிறேன்)
கேள்வி: பாரதியார் தம் சமகாலத்து தமிழ் கவிஞர் யாரையேனும் பாராட்டிக் கவிதையோ கட்டுரையோ எழுதியுள்ளாரா ? (கவிஞர் செம்பருத்தி)
பதில்: தேசப்பற்றும் விடுதலை உணர்வும் இல்லாத கவிஞர்களை அவர் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாமக்கல் கவிஞர் பாரதியாரோடு நிகழ்ந்த சந்திப்பைப் பதிவு செய்துள்ளார்
பாரதி சந்திப்பு – கானாடுகாத்தான் நண்பர் வீட்டில்
பார்த்தவுடன் “இவர் இராமலிங்கம் பிள்ளை-ஆர்டிஸ்ட் என்பதன் முன் “ ஓ ஓவியக் கலைஞரா ? வருக கலைஞரே..தமிழ்நாட்டின் அழகே கலையழகுதான்..’ எனச் சொல்ல நான் நமஸ்காரம் செய்யக் காலைப் பிடிக்கக் குனிந்தேன். அது பிடிக்காமலோ என்னவோ பாரதியார் என் கையைப் பிடித்து இழுத்து அருகே அமர்த்திக் கொண்டு, “பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும்; நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்.” என்று சொல்லிக் கலகலவெனச் சிரித்தார்.
”ஐயா தங்கள் பாட்டுகளில் ஏதாவது ஒன்றைத் தாங்களே பாடுவதைக் கேட்க வேண்டுமென்று வெகு ஆசை”
“அப்படியா ! என்னைப் பாடச் சொல்லுகிறீரா? பாட்டு “ஆர்டருக்கு” வராது..பாடும் போது கேளும்.
“இவரும் பாட்டுகள் செய்வார்” என்று பாரதியிடம் என்னைப் பற்றிச் சொன்னார் வெங்கடகிருஷ்ண ஐய்யர்.
“எங்கே சொல்லும் கேட்போம் ஏன் கூச வேண்டும் ?” என்றார் பாரதி.
வெங்கடகிருஷ்ணய்யரும் விட்டபாடில்லை “ அந்த ராமன் சோகப்படுகிற விருத்தத்தைச் சொல்லும்”
“தம்மரசைப் பிறராள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்” என்ற அடிகளைக் கேட்டதும் கவனமுடன் கேட்கத் தொடங்கினார். பிறகு” பலே பலே இந்த முதலடியே போதும்.பிள்ளை நீர் ஒரு புலவன் “ ஐயமில்லை” என்றார்.
–
.
சரித்திரம் பேசுகிறது! –யாரோ
ராஜராஜன்- காந்தளூர்ச்சாலை
இராஜராஜனை நாயகனாக வைத்து கதை சொல்வது என்பது –
ஜவ்வாது மேடையில் அமர்ந்து,
சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிய,
முக்கனியை தேன் அமுதத்தில் தோய்த்துச்
சுவைக்கும் அனுபவம் தான்!
சரித்திரத்துடன் கொஞ்சம் சொந்தச்சரக்கையும் சேர்த்து ஒரு விருந்து சமைப்போம்.
வருடம் கி பி 977
காந்தளூர்ச் சாலை இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் ‘வலிய சாலா’ என்னும் இடம். இது, அக்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கினார்கள். போர்க் கலைகள் மட்டுமின்றி போர் நுட்பங்களும், வியூகங்களும் கற்பிக்கப்பட்டன. வில்வித்தைப் பயிற்சி, களறிப்பயிற்சி, வர்மம் ஆகிய போர்க் கலைகள் போதிக்கப்பட்டன. இவற்றோடு ராஜாங்க நிர்வாகமும் பயிற்றுவிக்கப்பட்டது. நுட்பமான போர்த் தந்திரங்கள், தற்காப்புக் கலைகள், தாக்கும் நுட்பம் ஆகியவை அங்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில் இது போன்ற போர்ப் பயிற்சிக் கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. இங்கு வருடந்தோறும் போர் விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
அது அந்த வருட இந்திரவிழா நாள்.
காந்தளூர்ச்சாலையில் போர்ப்போட்டிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அப்போட்டிகளில், வெற்றிதனை மட்டுமே அடைந்து வந்தான் ஒரு வீரன்.
‘இந்த மாறனை வெல்பவர் யார்?’ – என்று விழாத்தலைவர் கூவினார்.
சில நொடிகள் கூட்டத்தில் அமைதி!
“‘நான் சற்றே சண்டையிட்டுப் பார்க்கலாமா?” என்ற குரல் கேட்டது. கூட்டத்திலிருந்து ஒரு வீரன் வந்தான். அவன் முகத்தில் சிவப்பு முகமூடி இருந்தது. கண்கள் மட்டும் அதன் நடுவே பளிங்கு போல பிரகாசித்தது.
கூட்டத்தில் உற்சாகம் கொப்பளித்தது.
விழா நடுவர் “சரி இரண்டு பேரும் சண்டையிடட்டும். இது வாட்போர். ஆயினும், இது வெறும் போட்டி மட்டும் தான். யாரும் யாரையும் கொல்லக்கூடாது. ஒவ்வொரு வீரனின் உயிரும் அவரவர் நாட்டைக் காப்பதற்குக் தேவை! நினைவிருக்கட்டும்.” என்று அறிவித்தார்.
வாட்போர் தொடங்கியது. மாறன் அந்த காந்தளூர்ச்சாலைப் பள்ளியின் மிகச்சிறந்த மாணவன். அவனது புகழ், சேர, சோழ, பாண்டிய நாடெங்கும் பரவிக்கிடந்தது. பாண்டியன் அமரப்புயங்கன் மாறுவேடத்தில் வந்து அந்தக் கூட்டத்தில் இருந்தான். பாண்டியப்படைக்கு வீரர்களை இந்தப்பள்ளியிலிருந்து தெரிவுசெய்ய வந்திருந்தான். இந்த மாறனைத் தனது பாண்டிய சைனியத்தில் ஒரு உபதளபதியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவனிருந்தான்.
போட்டி தொடங்கியது.
இருவரும் சமமாகவே போரிடுவது போலத் தோன்றியது. ஒரு நாழிகை இருவரும் சுழன்று சுழன்று வாளை வீசினர். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை என்று போலத் தோன்றினாலும், சிவப்பு முகமூடியான் முடிவில் வென்றான்.
மாறனின் முகம் குன்றிப்போனது. வெற்றி பெற்ற முகமூடியான் மாறனை அணைத்துக்கொண்டு அவன் காதில் ஏதோ சொன்னான். மாறன் – ‘தாங்களா? தங்களிடமா நான் சண்டையிட்டேன்” -என்று தவித்தான். முகமூடியான் தன் உதட்டில் விரல் வைத்து ‘உஷ்..” என்றான். ‘உனக்கு விருப்பமிருந்தால் எங்கள் படையின் சேரலாம்” என்று சொன்னான்.
நடுவர் முகமுடியானைப்பார்த்து ‘ நீங்கள் இந்த வருட விழாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!. தங்கள் பெயர்?” என்று கேட்டார்.
‘அவர் பெயர் என்னவாக இருந்தால் என்ன? நான் இவரிடம் சற்றே சண்டையிட்டுப் பார்க்கலாமா?” -என்ற ஒரு இன்னொரு குரல் கூட்டத்தில் ஒலித்தது. அவன் ஒரு பச்சை முகமூடி அணிந்திருந்தான். அவன் கண்களில் ஒரு மின்னல் பளிச்சிட்டது.
அவன் குரலோ கணீர் என்றிருந்தது. கூட்டம் உற்சாகத்தில் கூச்சலிட்டது.
சிவப்பு முகமூடியான், வந்தவனைப் பார்த்து: “உனக்கு இன்றைக்கு அதிருஷ்டம் அஸ்தமித்து போலும்” என்று மெல்லச்சிரித்தான் .
பதிலுக்கு, பச்சை முகமூடியான் சிரித்திருந்தான். அதை அவனது முகமூடி மறைத்திருந்தது. ஆனால் அவன் கண்கள் அவன் சிரிப்பைத் தடை செய்யவில்லை.
“எனக்கு அதிருஷ்டம் தேவையில்லை.. உனக்கு வேண்டுமானால் இன்று அது நிரம்பத் தேவைப்படுமோ என்னவோ . ஆனால், இன்று உனக்கும் அது உதவப்போவதில்லை” என்றான் பச்சையன்.
நடுவர் ‘போட்டி தொடங்கட்டும். புதியவர் தனக்கு வேண்டிய ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கலாம்’ என்றார். புதியவன், சிவப்பு முகமூடியானைப் பார்த்து “உனக்கு எந்த ஆயுதம் பழக்கமோ அதிலேயே போரிடலாம்” என்றான்.
சிவப்பு முகமூடியான் “ஆயுதமில்லாமல் சண்டை செய்யலாம்” என்றான்.
“அப்படியே ஆகட்டும்” என்றான் புதியவன்.
இந்தச் சண்டை துவங்கு முன், மாறனின் தோல்வியால் சற்றே துவண்டிருந்த பாண்டியன் அமரப்புயங்கன், ‘சரி..இந்த முகமூடி வீரர்களின் சண்டையைத் தான் பார்ப்போமே’ என்று நினைத்தான்.
‘சபாஷ் .. இது சரியான போட்டி’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். மாறனை அழைத்து ‘மாறா! நீ சிறந்த வீரன்! “என்று சொல்லிவிட்டு அவன் காதில் மெல்ல ஏதோ சொன்னான். ஏற்கனவே ஆடிப்போயிருந்த மாறன் மேலும் திடுக்கிட்டான்.”பாண்டிய மன்னரே! தாங்களா?” என்று திடுக்கிட்டான். மாறனும் அமரப்புயங்கன் காதில் ஏதோ சொன்னான். இப்பொழுது அமரப்புயங்கன் பெரிதாகத் திடுக்கிட்டுப்போனான். “என்ன உண்மையாகவா? அந்த சிவப்பு முகமூடியான் என் நண்பன் சேர மன்னன் பாஸ்கரனா?” என்று மெல்லக் கூறியவன், ”நீ தோற்றதும் தென் தமிழ் நாட்டு மாவீரனிடம் தானே! உனக்கு விருப்பமிருந்ததால் எங்கள் படையில் சேர்” என்று சொன்னான். மாறன் பாண்டியனுக்கு வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். அங்கிருந்து நகர்ந்தான்.
பாண்டியனுக்கு ஆச்சரியம் அதிகமாயிற்று. சேரனை அறைகூவி நிற்கும் இந்தப் புதிய இளைஞன் யாரோ? என் நண்பன் சேரனுக்குத் தெரியாத வர்மக்கலை ஒன்றுமில்லையே. இந்த முட்டாள் இளைஞன் இப்படி மாட்டிக்கொண்டானே”- என்று அவன் மீது பரிதாபமும் கொண்டான்.
இதுவரை கண்டிராத போர் அங்கு நடந்தது. சேரனின் வர்மக்கலை, களரி எதுவும் புதியவனிடம் ஒன்றும் நடக்கவில்லை. புதியவனும், ஏதோ மாணவனுக்குப் பயிற்சி அளிப்பது போல தற்காப்புப்போர் புரிந்தான். விரைவில் அவனது தற்காப்புப் போர் வலிந்து, தாக்குதலாக மாறத்தொடங்கியது. புதியவனின் பிடியிலிருந்து சேரன் தப்ப முடியவில்லை. சேரன் தோற்றான்!
அமரப்புயங்கன் பேரதிர்ச்சி அடைந்தான். சேரன், புலியிடம் பிடிபட்ட மான் போல ஆனானே!! ‘யாரவன் இந்த இளைஞன்’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். போரில் தோற்ற சேரன் வெட்கத்துடன் ஓடி அருகிலிருந்த தன் குதிரை மீது ஏறிப் பறந்தான்.
மாறனுக்கும் ஆச்சரியம் தாளவில்லை. தன்னை வென்ற மாவீரன் சேரனை வென்றது யாரோ என்றாவலில், புதியவன் அருகில் சென்று அவனைப்பாராட்ட கை நீட்டினான். புதியவனும் கைநீட்டினான். அந்தக்கரங்களைப் பார்த்த மாறனின் தலை கிறுகிறுத்தது. மனம் பதைபதைத்தது. அதிர்ச்சியில் சிலையாக சில நொடிகள் நின்றான். இந்தச் சங்கு சக்கர ரேகையுள்ள கரங்கள் தென்னிந்தியாவிலே பொன்னியின் செல்வருக்கு மட்டுமே உள்ளது என்பது தென்னிந்தியாவில் பிரசித்தமான செய்தி. புன்னகை கண்களில் தெரிய அந்த பச்சை முகமூடியான், ‘மாறா! சோழநாட்டுப் படையில் சேர்வாயா?. எங்கள் நண்பனாக வா! என்னுடன் சேர்ந்து பொன்னுலகம் புனைவோம்’ என்று கூறியவன் – கண்ணிமைக்கும் நேரத்தில் தன் குதிரையின் மீது ஆரோகணித்துப் பறந்தான். அருகிலிருந்த குதிரையில் காத்திருந்த மற்றொருவரும் இளவரசன் குதிரையைத் தொடர்ந்தார். அது நமக்குப் பரிச்சயமான ஒரு வீரர் தான். ஆம். வல்லவரையர் வந்தியத்தேவர் தான்.
பாண்டியன் அமரப்புயங்கன் ‘மாறா! யாரவன்” என்று அமைதியாகக் கேட்க, மாறன் “மன்னா! அது சோழ இளவரசன் அருண்மொழித் தேவன்” என்றான் மெல்ல. அமரப்புயங்கன் திகைப்பூண்டை மிதித்தவன் போனானான். “என்ன அருண்மொழியா?” என்று திகைத்தான்.
இனி மாறனின் சிறுகதை:
மாறன் தஞ்சையில் பிறந்திருந்தான். மதுரையில் வளர்ந்திருந்தான். சேர நாட்டு உதகையில் பள்ளி பயின்றிருந்தான். சேர, சோழ, பாண்டிய நாடு அனைத்திலும் எல்லா இடங்களுக்கும் போயிருந்தான். இன்று தமிழ் நாட்டின் மூவேந்தரையும் இந்தக் காந்தளூர் சாலையின் போரின் விளிம்பில் காண்பது என்னே பாக்கியம் எனறு வியந்தான். அந்த மூவரும் தன்னை தங்கள் படையில் சேர அழைத்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. சேரனிடம் தோற்றதைக் கூட சற்று மறந்தான்.
மாறன் ஒரே நொடிதான் யோசித்தான். பொன்னியின் செல்வர் மீது மனம் தாவியது. அருகிருந்த அவனது குதிரையில் தாவினான். பொன்னியின் செல்வர் குதிரை சென்ற இடம் நோக்கிப் பறந்தான். பொன்னியின் செல்வர் குதிரையில் சென்று கொண்டே “வந்தியத்தேவரே! இந்தக் காந்தளூர்ச் சாலையை நான் நன்கு சுற்றிப்பார்த்தேன். இவ்வளவு பயிற்சிபெற்ற வீரர்களை சேர-பாண்டியர்கள் அடைவதால்தான் – நமது சோழப்படைக்குத் தோற்றும், மீண்டும் மீண்டும், அவர்கள் துளிர்த்து ஆலமரம் போலத் தழைத்து நம்மை எதிர்த்து வருகிறார்கள். நான் அரசனானால் செய்யப்போக்கும் முதல் காரியம் ‘இந்தக் காந்தளூர்ச் சாலையைக் கலமறுப்பது தான்” என்றான் அருண்மொழி. அதற்குள் மாறனும் அவர்களை நெருங்கி வந்தான். அருண்மொழி அவனை வரவேற்றான். மாறன் சில ஆண்டுகளில் தமிழகத்தைக் கலக்கப்போகிறான் – மற்றும் ராஜராஜனின் புகழ் பரவ அவன் காரணமாகப் போகிறான் – என்பதை அன்று யாரும் ஊகிக்க முடியவில்லை. அவற்றை விரைவில் பார்ப்போம்.
இராஜராஜ சோழன் ஒரு ‘நாயகன்’. அதிலும் ‘உலகநாயகன்’. தமிழகத்தின் தளபதி! மன்னாதி மன்னன்! சூப்பர் ஸ்டார்! அவன் கதையை மேலும் அசை போட்டு சுவைப்போம்!
இந்த மாதக் கவிஞர் – கவிஞர் திலகம் மருதகாசி – டாக்டர் தென்காசி கணேசன்
கவிஞர் திலகம் மருதகாசி
காலத்தால் அழிக்க முடியாத வரிகள் தந்த காவியக் கலைஞர். பார்வையில் உறுதி, கம்பீரம், தன்னம்பிக்கை, மிடுக்கு, புலமை –
இவர்தான் மருதகாசி.
நேரிடையான எளிமையான சொல் அமைந்த பாடல்கள், இவரது தனித்துவம்.
அடிப்படையில் கிராமத்து விவசாயி. எனவே, பட்டுக்கோட்டைக் கவிஞர் போலவே, இவரது பாடல்கள் எல்லாம் ஜனரஞ்சகமானவை மட்டுமல்ல, கிராமங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. .
தமிழின் மரபு – தமிழின் அழகு – தமிழின் மிடுக்கு – இவற்றைப் பாடல்களில் தந்தவர். விலைக்கு எழுதும் வியாபாரியாக இல்லாமல், கலைக்கு எழுதும் கவிஞராக இருந்தார்.
மருதகாசி மிகப் பெரிய சாதனையாளர் மட்டுமல்ல – சுய மரியாதை மிக்கவர். சொந்தப படம் எடுத்து பண இழப்பு மற்றும், கண்ணதாசன், வாலி என திரையுலகம் மாறியபோது, மீண்டும் கிராமத்திற்கு வந்து விவசாயம் பார்த்தார். தேவையான நேரம் மட்டும் வந்து பாடல்கள் எழுதிக் கொடுத்தார். பின்னாட்களில், சிவகுமார், விஜயகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலர் நடித்த தேவரின் படங்களுக்கு, பாடல்கள் எழுதினார்.
இவரது வரிகளில், சொல்லவந்த கருத்தின் அழுத்தம், அருவியாய் வந்து விழும் வார்த்தைகள் என பிரமிக்கவைக்கும். மெட்டுக்குப் பாட்டு என்றால், இவரின் வேகத்திற்கு யாரும் எழுத முடியாது என்பார்கள். நல்ல மனிதர் – எல்லாக் கவிஞர்களிடமும் நட்பு கொண்டவர். ஆரம்பத்தில், உடுமலை நாராயண கவியிடம் உதவியாளராக இருந்தார். அந்தக் காலத்தில், பல படங்களில், இந்தி மெட்டிற்குப் பாடல் எழுதவேண்டிய நிர்பந்தம், குறிப்பாக 1960 வரை இருந்தது. அப்படி ஒரு படம், உடுமலையாருக்கு வந்தபோது, அவர், அசல் பாட்டு மட்டும் நான் எழுதுகிறேன், மெட்டுக்கு, இவன் எழுதுவான் என்று மருதகாசியை காண்பிக்க, 1950களில் தொடங்கியது இவரின் பயணம். அந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகின. அவற்றில் ஒன்று தான்,
‘மாசிலா உண்மைக் காதலே’ (அலிபாபாவும் 40 திருடர்களும்)
ஜி இராமநாதன், ஏ பி நாகராஜன், கே வி மகாதேவன், இவர்களுடன் மிக நல்ல புரிதல் இருந்ததால், பல அற்புத பாடல்கள் இவரால் தரமுடிந்தது.
சாரங்கதாராவில்,
“வசந்த முல்லை போலே அசைந்து ஆடும் வென் புறாவே “
இன்றைக்கும் அனைவரும் விரும்பும் சாருகேசி ராகப் பாடல்.
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே, என்றும்,
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே , என்றும்,
இன்றிரவில் நீயே – சந்திர ஒளி நீயே,
என்று TMS பாட, சிவாஜி நடிக்க, இந்த வரிகள் கண்ணில் நிற்கும்.
காவியமா இல்லை ஒவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
அன்பின் அமுதமே! அழகின் சிகரமே!
ஆசை வடிவமே! அழகின் அதிசயமே!
எந்நாளும் அழியாத நிலையிலே-காதல்
ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே!
என்ற பாவை விளக்கு பாடலின் வரிகள் நிலையான காதலைக் கூறும்.
இன்னொரு பாடலில்,
கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
என்றும்,
தென்றல் உறங்கியபோதும்
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா என்பார்.
இப்படியெல்லாம் காதலைப் பாடியவர், கற்புடன் விளங்கும் காதலை,
என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமா
மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்,
என்று ஒரு காதல் திருமணம் , மரபுப்படி எப்படி நடக்கவேண்டும் என்பதை எப்படிக் கூறுகிறார்.
( நல்லவேளை, கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போவோமா – ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா, என்ற பாடலை கேட்க அவர் உயிருடன் இல்லை)
அடுத்து, சம்பூர்ண இராமாயணம் என்ற ஒரு காவியப் படத்தில் இருந்து ஒரு பாடல். கவிஞரின் இலக்கிய அறிவு, அதை திரைப்படத்தில் கொண்டு வரும் நேர்த்தி – அடடா !
இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும்
நிலை இன்றே ஏன் கொடுத்தாய்..’
சிவபெருமான் முன்னால் கசிந்துருகி தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறான் ராவணன். ஒரே வார்த்தையில் இருபொருள் தொனிக்கும் சிலேடை வகையில் மருதகாசி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார். சாதாரணமாக ‘மண்மகள்’ என்ற வார்த்தை பூமாதேவியைக் குறிக்கும். ‘நிலம் நோக்கி தலை குனிந்து வரும் நிலையை எனக்கு ஏன் கொடுத்தாய்?’ என்று ராவணன் குமுறுவதாகப் பொதுப்படையாகப் பார்த்தால் அர்த்தம் தொனிக்கும்.
ஆனால் கம்பன், ராவணன் நாணத்தால் வருந்தக் காரணம் என்று சொல்வது எதைத் தெரியுமா? ‘வானவர் சிரிப்பார்கள். மண்ணில் உள்ள அனைவரும் நகைப்பார்கள். தனது கட்டுப்பாட்டில் உள்ள பகைவர்கள் எல்லாரும் தனது தோல்வியைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பார்களே’ என்று அதற்கெல்லாம் ராவணன் வருந்தவில்லையாம்.
‘வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் – நெடு வயிரத் தோளான்
நான் நகு பகைவர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்’
தான் கவர்ந்து வந்த சீதை ராமனிடம் தான் தோற்றதை அறிந்தால் சிரிப்பாளே’ என்றுதான் அவமானத்தால் புழுங்கினான் ராவணன் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இப்போது மருதகாசியின் பாடல் வரியை மறுபடி பார்த்தால், மண்மகள் என்ற வார்த்தைக்கு ‘மண்ணின் மகள்’ அதாவது பூமாதேவியின் மகளான சீதா தேவி என்ற அர்த்தம் கிடைக்கிறதல்லவா? அதாவது ‘மண்ணின் மகளான சீதாதேவியின் இளக்காரமான நகைக்கும் முகத்தைக் கண்டு மனம் அவமானத்தால் கலங்குகிறதே. இந்த நிலையை ஏன் கொடுத்தாய்?’ என்று கலங்குகிறான் ராவணன்
பொதுவாக, உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனுக்கு அவமானம் ஏற்பட்டால் அவன் தனக்குள் எப்படி மறுகிப்போவான், தனது சாதனைகளைப் பட்டியல் போடுவதில் தொடங்குவான் அல்லவா? இதில் சரணத்தில் முதல் இரண்டு அடிகளில் அப்படி ராவணன் பட்டியல் போடுவதாகத் தொடங்குகிறார் மருதகாசி.
‘எண்திசை வென்றேனே -( இந்த இடத்தில் பெரும் PAUSE இருக்கும்) அன்று
இன்னிசை பொழிந்துன்னைக் கண்டேனே’
அதற்கு மேல் பேச முடியாமல் அவனது தற்போதைய நிலை மனத்தில் உறுத்த மீண்டும் ‘மண்மகள் முகம் கண்டே’ என்று குமுறத் தொடங்கி விடுகிறான் அவன். அந்தக் குமுறலைப் துல்லியமாகக் கேட்பவரை உணரவைக்கும் வண்ணம் இசை அமைத்திருக்கிறார் என்றால் அதுதான் கே.வி. மகாதேவன்.
‘எண்திசை வென்றேனே…’ என்ற வார்த்தைகளை அவனது உயர்வைக் காட்டும் விதமாக உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், மெல்ல மெல்லக் கீழிறங்கி கடைசியில் ‘மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய் ஈசா ’ என்ற வரிகளுக்கு மீண்டும் வந்து முடிக்கும் போது, அவனது மனக்குமுறலைப் பிரதிபலிக்கும் வண்ணம் மறுபடி உச்சத்துக்கே கொண்டுபோய் நிறுத்திப் பாடலை அப்படியே முடித்திருக்கிறார் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். ‘திலங் ராகம் தான் எத்தனை பொருத்தமானது ? ஜாம்பவான்கள் !
அதே படத்தில், இராவணனை புகழ்ந்து பாடும் பாடலாக, பல்வேறு ராகங்களை இணைத்து எழுதிய அழகு. அதற்கேற்ப, திரை இசைத்திலகம் இசை அமைத்த அற்புதம்.
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது
காலையில் பாடும் ராகம் பூபாளம்
உச்சியில் பாடும் ராகம் சாரங்கா
மாலையில் பாடும் ராகம் வசந்தா
இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி
மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி
யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை
வெண்பா பாட சங்கராபரணம்
அகவல் இசைக்க தோடி
தாழிசைக்கு கல்யாணி
என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறார்.
தமிழில முப்பரிமாணச் சொல் என்று ஒன்று உண்டு. ஆண்டாள், திருப்பாவையில், ‘சிற்றம் சிறு காலை’ என்றும், மணிவாசகர், திருவெம்பாவையில், ‘வண்ணக் கிளி மொழியாள்’ என்றும், பாரதி , கண்ணம்மா கவிதையில், ‘பேசும் பொற் சித்திரமே’, கண்ணதாசன், பூ முடித்தாள் என்ற பாடலில், ‘வண்ணத் தேன் அருவி’ என்றும் பாடிஉள்ளர்கள்.
மருதகாசி, பாவை விளக்கு படப் பாடலில், பெண் அழகு. தமிழ்ப்பெண் அழகு. வண்ணம் சேர்ந்த தமிழ்ப்பெண் இன்னும் அழகு. என்று,’ வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள், என்று தொடங்கி, கண் எதிரே கோடிக் கோடி கற்பனைகள் தந்தாள் என்பார்.
அதேபோல, குழந்தைகளுக்கு இவர் எழுதிய பாடல்கள் மிக அருமை.
தாலாட்டில், (பாலசரஸ்வதி குரலில் இதைக் கேட்டால், எந்த மனமும் மயங்கும்)
நீல வண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
பிள்ளை இல்லாக் கலியும் தீர
வள்ளல் உண்டன் வடிவில் வந்தான்
தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திரப் பிம்பம்
கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
இன்னொரு பாடல் – கைதி கண்ணாயிரம் படத்தில் இடம்பெற்ற,
கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பேரப் படித்து
உலகினில
பெரும்புகழ் சேர்த்திடடா
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எதுவந்தபோதும் எதிர்த்து நில்லு
நீலமலத் திருடன் படத்தில் இந்தப் பாடல் –
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
என்று பாரதியின் ஆத்திசூடியைபோல எழுதி இருப்பார். ( மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் இந்த முதல் வரிதான் ஓபனிங் பாடலாமே , உண்மையா?)
அதேபோல, ஒரு படத்தில், குறிப்பிட்ட காட்சிக்கு ஏற்ப, மெட்டிற்கேற்ப, வரிகள் வராதபோது, இந்தப் பாடல் அண்ணன் மருதகாசி எழுதட்டும் என்று கூறியவர், கவியரசு கண்ணதாசன். அந்தப் பாடலும் படு ஹிட். அந்தப் பாடல் தான் , லதாங்கி இராகத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும்,
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
என்று இலக்கியத்தை பிழிந்து தந்திருப்பார்.
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சிவாஜி நடித்த ராஜாராணி படத்தில் , சிரிப்பு பற்றி எழுதவேண்டும் என்றபோது, மருதகாசி எழுதிய பாடல் தான் , ‘சிரிப்பு சிரிப்பு’ என்ற பாடல் .
“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே,
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே”
என்ற பாடலில், குற்றாலத்து அத்தனை அருவிகளின் அழகை வர்ணித்து எழுதியிருப்பார், கவிஞர்.
எத்தனையோ பாடல்களை இவர் படைத்திருந்தாலும், இவர் எழுதிய ஒரு பாடல், மிகப்பெரிய சாதனைப் பாடல் என்றே கூறலாம். இதிகாச காவியத்தை, இவ்வளவு நேர்த்தியாக ஒருவர் எழுதுவது என்பது மிகவும் அதிசயம். லவகுசா படத்துக்காக, கண்டசாலா இசையில், முழு ராமாயணத்தையும் 12 நிமிடப் பாடலில் கொண்டு வந்திருப்பார். அந்தக் காலத்தில், மாணவனாக இருக்கும்போது, வானொலியில் கேட்டிருக்கிறேன். இரண்டு தடவை , அந்த இசைத்தட்டை மாற்றி போடுவார்கள். 4 பக்கங்கள் கொண்ட இசைத் தட்டு.
“ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே செவி குளிரப் பாடிடுவோம் -கேளுங்கள் இதையே,”
என்ற இந்தப் பாடல், சுசீலா, லீலா பாட, அற்புத ராகமாலிகையில் அமைந்த பாடல். படத்தில், ராமர்-சீதை இருவரின் மகன்கள் – லவனும் குசனும் போடுவதுபோல. வரிகளின் அழகு அப்படியே ராஜபாட்டையாய் போகும் –
மந்திரிகுமாரி படம் முடியும்போது, கிளைமாக்ஸ் பாடல் வேண்டாம் , மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று தயாரிப்பாளர், டிஆர் சுந்தரம் கூற, இயக்குனர், இசையமைப்பாளர் ஜி ராமநாதன் மற்றும் மருதகாசி மூவரும் இந்தப்பாடலைச் சேர்த்து, இரண்டுநாள் இந்தப் பாடலை மக்கள் ரசிப்பதைப் பார்ப்போம் – இல்லாவிட்டால் எடுத்துவிடுவோம் என்று கூறியபின், அப்படியே படம் வெளிவந்தது. ஆனால், அந்தப் பாடல் தான் – இன்று வரைக்கும், அல்ல அல்ல, என்றைக்கும் ரசிக்கப்படும் பாடலானது.
வாராய் நீ வாராய் பாடல்.வாராய்
நீ வாராய்…
போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய்…
இந்தப் பாடலில் இரண்டு அர்த்தம் – இருவரும் ஒருவரை ஒருவர் உயிர் இழக்கச் செய்வதை, மறைமுக வார்த்தைகளுடன் எழுதிருப்பது அழகு. இந்தப் பாடல், கவி காமு ஷெரீஃப் மற்றும் மருதகாசி இணைந்து எழுதியது.
அதேபோல தேவரின் துணைவன் படத்தில், கண்ணதாசனும் , மருதகாசியும் இணைந்தே எழுதிய பாடலும் மிகப்பெரிய ஹிட்..
‘மருதமலையானே ! நாங்கள் வணங்கும் பெருமானே’
என்ற பாடல் தான் அது.
மருதகாசி அவர்கள், விவசாயத்தை வலியுறுத்தி, பல படங்களில், பல பாடலகள் தந்துள்ளார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் என்றும்,
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏர் பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு
கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
இதுபோன்ற பல பாடல்களில் , வேளாண்மையின் பெருமையைப் பாடி உள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ எம் ராஜா, நடந்துகொண்ட முறை பிடிக்காததால், விடிவெள்ளி படத்தில் இருந்து வெளிவந்ததுடன், ஸ்ரீதரின் அடுத்த படமான தேன் நிலவு படத்தில் 3 பாடல்கள் எழுதிஇருந்தும், அவைகளை பயன்படுத்தவேண்டாம் என்று வந்துவிட்டார் , மருதகாசி.
அதேநேரம், கவிஞர் வாலி திரையுலகில் காலடி எடுத்து வைக்கத் துவங்கிய நேரம் – நல்லவன் வாழ்வான் என்ற படத்தில் வாலி பாட்டு எழுத, இரண்டு மூன்று முறை ஒலிப்பதிவில் தடை ஏற்பட, அதை அபசகுனம் என்று படக்குழு நினைத்து, வாலி என்ற புதுமுகம் வேண்டாம்,மருதகாசியை வைத்து எழுதலாம் என்று முடிவு செய்தார்கள். மருதகாசி , வாலியின் பாடலைப் பார்த்துவிட்டு, இதுவே நன்றாக உள்ளது – நான் எழுதத் தேவையில்லை என்று கூறிவிட்டார். அந்தப் பாடல் தான் ‘சிரிக்கிறாய் இன்று சிரிக்கிறாய் சிந்திய கண்ணீர் மாறியதாலே’
சொந்தப்படம் எடுக்கிறேன் என்று 4 பேர் சேர்ந்த கூட்டணி – 4M (மருதகாசி, மகாதேவன்(KV),மகாதேவன் (வயலின்),முத்துராமலிங்கம் (VKராமசாமி சகோதரர்) SS ராஜேந்திரனை வைத்து அல்லி பெற்ற பிள்ளை என்று படம் எடுத்து, இவரும் அதிகமாக மற்ற நிறுவனப் பாடல்களில் கவனம் செலுத்தாமல், தாமதமாகி, படம் தோல்வி. பொருள் நஷ்டம். சில வருடங்கள் கழித்து, இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், மருதகாசியை அழைத்து, ஒரு நல்ல கதை உள்ளது, தயாரிக்கலாம், ஜெமினி , சாவித்ரி, மெல்லிசை மன்னர்கள் படம் என்கிறார். மருதகாசி வேண்டாம் என்று கூறிவிட, அந்தப் படம் தான் பின்னாளில் கற்பகம் என வெளிவந்து, வெற்றிபெற்று, கே எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு, கற்பகம் ஸ்டுடியோ என்ற சொத்தை வாங்க வைத்தது.
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு .
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,
நீயே கதி ஈஸ்வரி,
ராதே உனக்கு கோபம் ஆகாதடி,
கண்ணை நம்பாதே,
வாய்மையே வெல்லுமடா,
சமரசம் உலாவும் இடமே,
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ,
மனுஷனை மனுஷன் சாப்பிடராண்டா,
சித்தாடை கட்டிகிட்டு,
மாமா மாமா,
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு,
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது,
அடிக்கிற கை தான் அணைக்கும் ,
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
ஒற்றுமையாய் வாழ்வதாலே கோடி நன்மையே,
போன்ற பாடல்கள் இவரின் திறமைக்குச் சில சான்றுகள்.
அடிப்படையில் விவசாயம் மற்றும் மண்ணின் மாண்பு இவற்றை நேசித்த கவிஞராக இருந்தாலும், காதல், தத்துவம், வாழ்வுநெறி, நகைச்சுவை, இசை , இறைநெறி, குடும்பம், என எல்லாவற்றையும் தனது பாடல்கள் மூலம், இந்த சமுதாயத்திற்கு, அள்ள அள்ளக் குறையாமல் தந்தவர், கவிஞர் திலகம் மருதகாசி அவர்கள்.
நாலாயிரம் பாடல்களுக்குமேல் எழுதிய மருதகாசி அவர்களின் பாடல்களில் சிலவற்றை இந்த வீடியோவில் கேட்டு மகிழுங்கள்!
அடுத்த மாதம், இன்னொரு கவிஞருடன் சிந்திப்போம்…
நுண்பல் எறும்பி அளைசேர்த்த சிறுபுல் உணவு! – மீனாக்ஷி பாலகணேஷ்
பொருள் தேடுவதற்காக இனிய மனையாளான தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். “இவள் அவனுடைய பிரிவைத் தாங்கிக் கொள்ளும் வலிமையற்றவள் எனத் தோழி நினைக்கிறாள். இவ்வாறு தோழி எண்ணுவது தலைவிக்குத் தெரிகின்றது. உடனே தன் எண்ணத்தைத் தோழிக்கு உணர்த்த, தனக்குத்தானே பேசிக்கொள்வது போலக் கூறுகிறாள்:
“என் கவலை என்னவென்று தெரியாமல் இவள் (தோழி) இருக்கிறாளே!
“தலைவர் சென்ற கொடிய வழியானது, பலவகைப்பட்ட வழிகளை உடையது. உலைக்கல்லைப்போலச் சுட்டெரிக்கும் பாறை மீதேறிக் கொடிய வில்லினை ஏந்திய எயினர்கள் அம்பினை எய்யும் வழிகளை உடையது. கைகளில் வில்லேந்திய அந்தக் கானகத்து மறவர்களை ஆறலைக்கள்வர் என்பார்கள். அவ்வழியானது எறும்பின் வளைகளைப்போல குறுகலாகவும் பலவாகவும் இருந்து அதன்வழியாகச் செல்பவர்களைக் குழப்பும். என்னுடைய கவலையெல்லாம் அதைப்பற்றியது தான். இந்த ஊர்மக்களோ (அதாவது தன் தோழியைப் பற்றித்தான் இவ்வாறு கூறுகிறாள் தலைவி) அந்த வழியின் கொடுமையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தலைவருடைய பிரிவினைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் வருந்துவதாகக் கூறுகிறார்கள்.
செல்லும் வழியின் மிகுதியான வெம்மையும், ஆறலைக் கள்வர்களால் படும் தொல்லையும், எறும்புகளின் வளை போலும் பலவான வழிகள் செய்யும் குழப்பமும் ஏற்படுத்திய கலக்கத்தால் தனக்குத்தானே பேசியவண்ணம் இருப்பவளின் எண்ணச் சிதறல்களை இந்த அழகான குறுந்தொகைப் பாடலாக வடித்துக் கொடுத்துள்ளார் புலவர் ஓதலாந்தையார் என்பவர்.
இன்னும் சிறிது உள்வாங்கிப் பொருள் கொண்டோமென்றால் இந்தக் கலக்கங்களே தலைவி பிரிவினால்படும் வருத்தத்திற்குக் காரணம் என உணரலாம். எத்தகைய நுட்பமான மன ஓட்டங்களை அழகான பாடலாக்கி நாம் ரசிக்கப் பதிவுசெய்து வைத்துள்ளார்!!
எறும்பின் அளையை இவ்வாறு பிறர் கூறக்கேட்டே தலைவி அறிந்திருக்கிறாள். இந்த வழக்கு அகநானூற்றிலும் காணப்படுகின்றது.
மிகுந்த வெம்மை பொருந்திய கோடைகாலத்தில், வறண்டுபோன நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் சிறிய புல்லரிசியை சின்னஞ்சிறு எறும்புகள் ஒழுங்காக எடுத்துச்சென்று தமது வளைகளில் அடுக்கித் தொகுத்து வைக்கும். தாம் விதைவிதைத்து விளைவிக்காத அந்த உணவை வில்லையுடைய இரக்கமற்ற மறவர்கள் எடுத்து உண்பார்கள், எனக் கோடைக்காலத்தின் கொடுமையையும் தலைவன் செல்லும் வழியின் அச்சத்தையும் இப்பாடல் விளக்குகிறது.
‘கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்’
– மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் (அகநானூறு-377)
இதில் புலவரின் கவிநயம் மட்டுமின்றி மற்றொன்றும் என்னைக் கவர்ந்தது. என்ன தெரியுமா? எறும்புகள் தம் வளைகளை பல நுணுக்கங்களைக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அமைக்கும் எனும் செய்தியை அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் விரிவாக அறிந்து வைத்துள்ளனர் என்னும் ஆச்சரியகரமான உண்மைதான் அது!
தற்காலத்தில் இந்த எறும்பு வளைகளைச் சேர்த்து வைப்போர் ஒரு பொழுதுபோக்காகவே இதனைச் செய்கிறார்களாம். எறும்புகள் வெளியேறி, விட்டுவிட்டுச் சென்ற வளைகளுக்குள் உருக்கின உலோகங்களைச் செலுத்திப் பின் அது உறைந்து குளிர்ந்ததும் அதனை எடுத்து வளைகளின் அமைப்பைப் பற்றி அறிகின்றார்கள். அற்புதமான வடிவமைப்புக் கொண்டது இந்த எறும்பு வளை. இதனை அமைக்கும் எறும்புகளின் புத்திசாலித்தனத்தையும், அவை அமைக்கப்படுவதற்கான காரணங்களையும் பற்றி அறிந்தால் பிரமித்து விடுவோம்.
அதன்முன்பு எறும்புகள் பற்றிய சில புள்ளிவிவரங்களைக் காணலாமே!
– உலகில் 12,000 வகை எறும்பினங்கள் உள்ளன.
– சில ராணி எறும்புகள் பல ஆண்டுகள் வாழ்ந்து கோடிக்கணக்கான எறும்புகளைப் பெற்றெடுக்கும்.
– எறும்புகள் சண்டையிட்டால், அது இறக்கும்வரை நடக்கும்.
– ராணி எறும்புகளுக்கு இறக்கை உண்டு. ஒரு புதுக் கூட்டை அமைக்கும்போது அந்த இறக்கைகளை அது கழித்து விடும்.
– எறும்புகள் பல்லாயிரக் கணக்கானவை சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழும்.
– ஒரு எறும்பு தனது உடலின் எடையைப்போல 20 மடங்கு எடையைத் தூக்க வலிமை கொண்டது.
ஒரு எறும்புப்புற்றில் மூன்றுவகை எறும்புகள் உண்டு: ராணி எறும்பு, பெண் வேலைக்கார எறும்புகள், ஆண் எறும்புகள். ராணிக்கும் ஆண்களுக்கும் இறக்கை உண்டு. ராணி எறும்பு மட்டுமே முட்டையிட வல்லது. ஆண் எறு
ம்புகள் இனப்பெருக்கத்திற்கு உதவிய பின் விரைவில் இறந்துவிடும். இனப்பெருக்கத்திற்குத் தயாராகும் ராணி எறும்பு, தன் வாழ்நாள் முழுதும் முட்டையிடுவதிலேயே கழிக்கும்!
படைவீரர்களான எறும்புகள் ராணியைக் காப்பாற்றுவது, புற்றினைக் காப்பது, உணவு சேகரிப்பது, எதிரி எறும்புகளை அழிப்பது எனப்பல வேலைகளைச் செய்யும். ஒரு எதிரிப் புற்றினை வென்றால் அதிலுள்ள முட்டைகளை எடுத்துக்கொண்டுபோய்ப் பொரித்து அந்தப் புது எறும்புகளை அடிமை வேலைக்குப்பழக்கும். இந்த அடிமைகள், முட்டைகளைக் காப்பது, சிறு எறும்புகளைப் பாதுகாப்பது, உணவு சேகரிப்பது, எறும்புப்புற்றினைக் கட்டுவது ஆகிய வேலைகளில் ஈடுபடும்.
எறும்புகளின் உணவு இறந்துபோன மற்ற பூச்சிகள், மாமிசம், எண்ணை, சர்க்கரை இவற்றாலான உணவுகள், பூவிலுள்ள தேன் முதலியனவாகும்.
எறும்பு வளைகள், அல்லது புற்றுகள் அனைத்து எறும்புகளும் வசிக்குமிடமாகும். இவை தரைக்குக் கீழோ, மரங்களிலோ, பாறைகளுக்கடியிலோ, அல்லது ஒரு சிறு உலர்ந்த காய்களுக்குள்ளோ இருக்கலாம். புற்று என்பது தரைக்குக் கீழே தோண்டிய வளையின் மண்ணை எறும்புகள் ஒரு குவியலாக வளையின் வாயிற்புறத்தில் குவித்திருப்பதன் பெயர்.
எத்தனை எறும்புகள் ஒரு வளையில் உள்ளன என்பதும் பல விஷயங்களைப் பொறுத்தது. ஒவ்வொரு விதமான எறும்பினமும் வளையில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கையில் அதிசயமாக வேறுபடும். சிலவகைகள் பல கோடி எறும்புகளைக் கொண்டிருக்கும். சில, ஒரு மரக்கிளையில் சில நூறு எண்ணிக்கையே இருக்கும்.
சூப்பர் காலனி என்பது ஒரு பெரிய பரப்பளவில் (பல மைல்கள்) பல எறும்புவளைகள் சேர்ந்திருப்பதனைக் குறிக்கும். ஜப்பான் நாட்டில் ஹொக்கைடோ எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்த எறும்புவளையே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட வளைகளுள் மிகப்பெரிதென்று அறியப்படுவது. இதில் 306 மில்லியன் வேலைக்கார எறும்புகள், ஒரு மில்லியன் ராணி எறும்புகள் ஆகியன 45,000 வளைகளுக்குள் இருந்தன. இவ்வளைகள் தரைக்குக் கீழான பாதைகளால் தொடர்பு கொண்டவையாக இருந்தன. இதுபோல எத்தனையோ ஆய்வுகள், கண்டுபிடிப்புகள். உலகிலேயே மனிதனுக்கு அடுத்தபடியாக, அதிகமான எண்ணிக்கை கொண்டு சேர்ந்து வாழ்வன எறும்புகளே!
எறும்புகளின் சமுதாய அமைப்பு பல படிகளைக்கொண்டது. எறும்புகளின் பணியானது வரையறுக்கப்பட்டது; ஆனால் அது வயதிற்கேற்ப மாறும். வயதாக ஆக, எறும்புகளின் வேலைகள் ராணி எறும்பின் அருகாமையிலிருந்து மாறும். இளம் எறும்புகள் ராணியைக் காப்பதையும், பொரித்த குஞ்சுகளை வளர்ப்பதிலும் ஈடுபடும். சில சமயங்களில் ராணி எறும்பு இல்லாவிட்டாலோ, இறந்துவிட்டாலோ வேலைக்கார எறும்புகளே முட்டையிடும்! ஆனால் வேலைக்கார எறும்புகளின் இந்தச் சந்ததி இனப்பெருக்கம் செய்ய இயலாதவையாகவே இருக்கும். ராணி எறும்பு மற்ற வேலைக்கார எறும்புகளுக்கு வேலை ஒன்றும் செய்யக் கட்டளையிடுவதில்லை! எறும்புகள் தாங்களே சூழ்நிலைக்கேற்றவாறு தங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளும். ஒரு வளையிலுள்ள எறும்புகள் அதிபுத்திசாலித்தனமாக வேலை செய்யும். ஒன்றையொன்று தொடர்பு கொண்டே உணவு பற்றிய செய்திகள், வளை அமைக்குமிடங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும். சில வகை எறும்புகளில், அடிமைகளை உண்டாக்கும் எறும்புகள் என ஒருவகை கூட உண்டு. இவை பக்கத்து வளைகளிலிருந்து புழுக்களைத் திருடிக்கொண்டு வந்து அடிமை எறும்புகளாகப் பழக்கும்!!
சரி! எவ்வாறு இவை வளைகளை அமைக்கின்றன என்பதுதான் மிக சுவாரசியமானது. மண், மணல், மரங்களிலிருந்து உதிரும் ஊசி போன்ற சிறு குச்சிகள், உரம், சிறுநீர், களிமண் இவற்றின் கலவையால் வளைகள் அமைக்கப்படும். வளைகளை ஒரு தேர்ந்த கட்டிட நிபுணனின் சாமர்த்தியத்துடன் அமைக்கும் எறும்புகள், தாம் தோண்டி எடுக்கும் மண்ணை வளைகளின் வாயிலில் அது வளைக்குள் சரிந்து அதனை மூடிவிடாமல் ஒரு பக்கமாகக் குவிக்கும். சிலவகை எறும்புகள் இந்த மண்ணைப் பலவிதமான வடிவங்களில் உருவமைத்து அந்தக் குவியலுக்குள் அறைகள் போன்ற அமைப்பினையும் உருவாக்குமாம்.
எறும்புகளைப் பற்றிப் பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டவன் படைப்பில் இவை மிக அற்புதமான ஜீவராசிகள் எனலாம். வேண்டுவோர் ‘E. O. Wilson, Anthill: A Novel’ எனும் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.
அறிவியலிலிருந்து ஆன்மீகத்திற்குத் தாவுவது நம் வழக்கமாயிற்றே!
திருச்சி பக்கம் உள்ளதொரு ஊர் திருவெறும்பூர் எனப்படும் திரு எறும்பியூர். இது ஒரு சிவத்தலம். இங்குள்ள சிவன் எறும்பீசர் எனப்படுவார். தேவேந்திரனும், தேவர்களும் தாரகாசுரனால் தொல்லை படுத்தப்பட்டபோது ப்ரம்மாவை வேண்டி நிற்கின்றனர். அவர் இங்குள்ள ஈசனை வணங்குமாறு கூற, தாரகாசுரன் அறியாமல் வந்து வழிபட வேண்டி, எறும்புருவம் கொண்டு இங்கு வந்து வழிபட்டனராம். எறும்புகள் தொழ சிரமப்பட்டதால் ஈசன் தனது உறைவிடத்தை ஒரு எறும்புப் புற்றாகவே மாற்றிக் கொண்டார்; ஆகவே எறும்பீசுவரர் என அழைக்கப்பட்டார். இது நாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
என்பது நாவுக்கரசர் பாடல். இதன் பொருள்:
சிறிது சிறிதாக நம்மைத் தின்று ஊர்ந்து கொண்டிருப்பன ஐம்பொறிகள். இவையுள்ள உடலில் மனத்தொடு மாறுபட்டுச் செல்வன அந்தக்கரணங்கள் முதலியன. பல அழுக்குகள் பொருந்தியதொரு கூடுபோன்ற உடலிடத்துள் என்னை அடைத்துவைத்து எறும்பியூர் அரன் செய்த செயல் இதுவே!
எறும்புகளும் அந்த இறைவன் போலவே எங்கும் உள்ளவை! ஆகவே அவன் ஒரு கட்டத்தில் எறும்பீசனாக மாறியதில் என்ன விந்தை!
மேலும் ஒரு சங்கப்பாடல் – அறிவியல் உண்மைகள் – ஆன்மீகப் பதிவுகளுடன் விரைவில் சந்திப்போம்.
காத்திருந்தவன் கடமை -நாகேந்திர பாரதி
அந்த ரயில்வே ஸ்டேஷன் ,அவனைப்போலவே மதுரை ரயிலுக்காகக் காத்திருந்தது . அதை ஸ்டேஷன் என்று சொல்ல முடியாது. அது ஒரு ரயில்வே ஸ்டாப். ஐந்து நிமிடம் நின்று போகும் ரெயில் .ஒரு கேட் கீப்பர் மட்டும் அங்கே தங்கியிருப்பார் டிக்கெட் கொடுக்க . ஊரை விட்டுத் தள்ளி அந்த ஊர்ப் பெயரோடு இந்த ரெயில் ஸ்டாப்.
அங்கும் இங்குமாய் சில ஒத்தைப் பனை மரங்கள் ஏதோ கோபத்தோடு தலை விரித்து ஆடிக் கொண்டு. ‘அவள் எங்கே இருக்கிறாளோ ‘ என்று கேட்டுக் கொண்டு . அந்த நேரத்தில் , வெளுப்பான வெயிலோடு வெறுப்பான வானம்.’ எப்படி அவர்களால் இப்படிச் செய்ய முடிந்தது ‘ என்று வெறுப்பை உமிழ்ந்து கொண்டு. டீக்கடைகள் ஓரத்தில் வரும் ,போகும் .மாட்டு வண்டிகள் ஒன்றிரெண்டு அவ்வப்போது கடந்து போகும். அவரவர் வேலை அவரவர்க்கு . தனியாக நீளமாகத் தகித்துத் தவித்துக் கிடக்கும் தார் ரோடு மட்டும் . உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இவனைப் போல.
அப்போது தூரத்தில் அந்த ஊர்க் கோயில் மணி அடிக்கும் சத்தம் மெதுவாகக் கேட்டது. தூரத்தில் தெரிந்தது அந்த ஏழு நிலைக் கோபுரம். ‘அந்தக் கோபுரத்தில் வசிக்கும் புறாக்கள் இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்கும். ஜோடி ஜோடியாகச் சேர்ந்து அந்தக் கோபுரப் பொந்துகளில் மகிழ்ச்சியாக. நாங்கள் என்ன பாவம் செய்தோம், எங்களை மட்டும் ஏன் பிரிக்க நினைத்தார்கள் ‘ ‘. ஒரு மணி நேரம் முன்பு அவை சிறகடித்துப் பறந்த காட்சியும் சப்தமும் அவன் கண்களிலும் காதுகளிலும் தேங்கி இருந்தன. .
வடக்கு ,தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பெயரிடப்பட்ட தெருக்களைத் தாண்டி ஒரு மூலையில் பெரிய கண்மாய்.மறு மூலையில் அம்மன் கோவில். பெரிய கண்மாய் சித்திரைத் திருவிழாவில் சாட்டையால் அடித்துக் கொண்டு தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு வருகின்ற மாயாண்டி தானே அவளைக் காப்பாற்றியதாகச் சொன்னான்.அவன் மதுரை சென்றிருந்தபோது நடந்தது அது. அந்த ஐந்து பேர் அவளைத் துரத்திய போது ,அவள் கால் தடுமாறி விழுந்த போது ஊரே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த போது ,அந்த அரிவாள் வீச்சு அவள் மேல் சரிந்த போது, ‘ எங்க பெரியவர் வீட்டுப் பையன் கேட்குதா உனக்கு ‘ என்று அவர்கள் கேட்டபோது. ரத்தக்குழம்பு தெறித்த போது, அவள் உடல் துடித்த போது , அவள் செத்து விடுவாள் என்று அவர்கள் விட்டுச் சென்ற போது , அவளைக் காப்பாற்றிக் கூட்டிச் சென்ற மாயாண்டி, ‘அவர்கள் குடும்பத்தோடு எங்கோ சென்று விட்டார்கள் ‘என்று அவன் திரும்பி வந்தபோது அவனிடம் சொன்னது.
‘எப்படித் துடித்திருப்பாய், ஒரு சின்னத் தூசி விழுந்தாலே , என்னிடம் கண்ணை விரித்துக் காட்டி ஊதி விடச் சொல்வாயே . எப்படித் தாங்கினாய் அந்த அரிவாள் வீச்சை .என்னை விட்டு விட்டு எங்கே சென்றாய் ‘ .பெற்றோரிடம் சண்டை போட்டு , ஒருவரிடமும் சொல்லாமல் ஊரை வீட்டுக் கிளம்பி பக்கத்துக் கிராமங்களில் எல்லாம் விசாரித்து, அவளைக் கண்டு பிடிக்க முடியாமல் மதுரை சென்று பிழைத்துக் கொண்டு கிடப்பது , அவளை என்றாவது மீண்டும் சந்திப்போம் என்ற நினைப்பில். தன்னால் அவளுக்கு மேலும் துன்பம் வந்து விடக்கூடாது என்று ஊருக்குத் திரும்பி வராமல் இருந்தவன், இப்போது மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் முகம் மறைத்த தாடி மீசையோடு. மீண்டும் அந்த ஊரில் . அந்தக் கோயிலில் ..
முன்பு அந்தக் கோயில் எவ்வளவு அழகாக இருந்தது. அவளோடு சேர்ந்து அந்தப் பிரகாரங்களைச் சுற்றியபோது எவ்வளவு இதமாக இருந்தது. ‘சடையை முன்னால் தள்ளி விரலால் சுற்றிச் சுழற்றிக் கொண்டு , விரிந்த கண்களோடு பிரகாரத்தில் இருக்கும் வாகனங்களை எல்லாம் வியப்பாகப் பார்த்துக் கொண்டு இவனோடு சேர்ந்து சுற்றிச் சுற்றி வந்தவள்’ . இப்போது அந்தப் பிரகாரங்கள் அழகாக இல்லை. அவள் இல்லை.
‘அவள் செய்த குற்றம் என்ன, வேறு சாதியில் பிறந்தது ஒரு குற்றமா,’ அவனது பெற்றோர் மேல் இருந்த கோபத்தில் அவர்களிடம் தொடர்பே இல்லை. அவர்களும் இப்போது மதுரைப் பக்கம் சொந்தங்களோடு சேர்ந்து இருப்பதாகக் கேள்வி. பார்க்க விரும்பவில்லை அவன்.
மாயாண்டி வீட்டுப் பக்கம் போனான் . வீடு இடிந்து சுவர் தான் . வேறு யாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கேட்பது. இன்னமும் சாதி வெறி தணியாத அந்த ஊரில் யாரை நம்பிக் கேட்பது. தன்னை அடையாளம் கண்டு கொண்ட ஓதுவார் யாரிடமும் சொல்லி விடக் கூடாதே என்ற கவலையும் இப்போது சேர்ந்து கொண்டது. மறுபடி கோயில் திரும்பி அவரைத் தனியாகச் சந்தித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது ‘ இந்த ஊரை எனக்குத் தெரியாதா தம்பி ‘ என்று கண் கலங்கிய அவர் குடும்பக் கதை இவனுக்குத் தெரியாது தான்.
திரும்பும் முன் அவனும் அவளும் விளையாடித் திரிந்த அவனது பழைய வீட்டுப் பக்கம் .அந்த வீடும்தான் இடிந்து நின்றபடி இவனைப் பரிதாபமாகப் பார்த்தபடி.அந்த வீட்டின் நடு முற்றத்தில் பெரிய அண்டாவில் நெல் அவித்தவள் அவள். முற்றத்து பிஞ்சுப் புடலைக்குக் கல்லுக் கட்டி விட்டவள் அவள். பக்கத்து வீட்டுக்குக் கொடுக்கல் வாங்கல் எடுத்துப் போனவள் அவள். விறகு அடுப்பை ஊதி ஊதிப் பற்ற வைத்தவள் அவள். தரையோடு அமுங்கி இருந்த ஆட்டுக்கல்லில் கையால் தள்ளித்தள்ளி இட்டிலி மாவு அரைத்தவள் அவள்.
வீட்டு வேலைக்காரப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே வளர்ந்தவளைக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்கு அவள் செய்த பாவம் என்ன. இவனோடு சிரித்துப் பேசியது. கோயிலில் சேர்ந்து சுற்றியது. மொட்டை மாடியில் அவனோடு சேர்ந்து ரேடியோ ஒலிச்சித்திரங்கள் ரசித்துக் கேட்டது.
வேதனையோடு நின்றவனிடம் ஒரு சிறுமியின் குரல். ‘அவிச்ச மொச்சை, அவிச்ச நிலக்கடலை. ஒரு பாக்கெட் அஞ்சே ரூபாய் சார்.’ பத்து ரூபாய் கொடுத்து இரண்டு பாக்கெட்டுகள் வாங்கியபடியே அவளைப் பார்த்தான். அந்த சிறுமி நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றையை அடிக்கடி ஒதுக்கி விட்டுக் கொண்டு முட்டு வாயை அடிக்கடி லேசாக உயர்த்திக் கொண்டு பேசிய அவள் சாயல். ‘செல்வி’ என்று அழைத்தவுடன் ‘ என் பேர் சுமதி சார் ‘ என்றவளை தூரத்தில் இருந்து ஒரு குரல் அழைத்தது .’அங்கே என்ன அரட்டை சீக்கிரம் வித்துட்டு, காசு வாங்கிட்டு வந்துக் கிட்டே இரு’ , என்று அழைத்த குரல்
அங்கே வெள்ளரிக் காய்ப் பிஞ்சுகளின் கூடையோடு , இடுப்பில் ஒரு அரை நிர்வாணக் குழந்தையோடு , வெளுத்த கலர்ச் சேலையோடு , கலைந்த தலையோடு , அவள் செல்விதான். நெருங்கிச் சென்றவனைக் கையெடுத்துக் கும்பிட்டு ‘ விட்டுடுங்க சாமி ‘ என்றாள் . ‘ உனக்கும் உன் குடும்பத்திற்கும் நான் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது ‘ என்று அழுத்தமாகக் கூறிய அவன் குரலை அமுக்கிக் கொண்டு பேரிரைச்சலோடு வந்து நின்ற மதுரை ரயிலில் அவன் ஏறவில்லை.
குறுக்கெழுத்துப்போட்டி – சாய்நாத் கோவிந்தன்
ஏப்ரல் மாதத்திற்கான குறுக்கெழுத்துப் போட்டி இந்த இணையதளத்தில் காணலாம்.
http://beta.puthirmayam.com/crossword/C30A09674A
ஏப்ரல் மாதப் போட்டி ஆரம்பித்ததிலிருந்து 48 மணிநேரத்திற்குள் சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு ரூபாய் 100 வழங்கப்படும்.
போட்டி ஆரம்ப நேரம் : 16.04.2022 6.00 AM ( இந்திய நேரம்).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மார்ச் மாத குறுக்கெழுத்தில் பங்கு பெற்றவர்கள்
1. ராமமூர்த்தி
2. நாகேந்திர பாரதி
3. சிறகு ரவிசந்திரன்
4. ராய செல்லப்பா
5. லக்ஷ்மிநாராயணன்
6. கல்யாணராமன்
7. ஜெய்சங்கர்
8. லில்லிகிருஷ்ணன்
9. ராஜாமணி
இந்த ஒன்பது பேரில் 6 பேர் சரியான விடை எழுதியிருக்கிறார்கள்.
அவற்றுள் முதலில் அனுப்பியவர் ராமமூர்த்தி ! அவருக்கான பரிசுத்தொகை காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
சரியான விடை:
1
உ
|
2
அ
|
3
கா
|
||||||
4
அ
|
றி
|
வு
|
5
அ
|
ண்
|
ணா
|
ம
|
லை
|
|
ய
|
6
ச
|
ணா
|
||||||
7
கே
|
டி
|
8
தி
|
ய
|
த்
|
ம்
|
9
ச
|
||
லீ
|
தே
|
து
|
||||||
10
ந
|
ந்
|
த
|
லா
|
லா
|
11
தீ
|
ர
|
ன்
|
|
வ
|
12
அ
|
ங்
|
||||||
13
ச
|
14
பா
|
ப
|
தி
|
15
வி
|
வே
|
க
|
ம்
|
|
பா
|
ரு
|
ம்
|
வாழத் தெரியாதவர்கள் – முனைவர் கிட்டு முருகேசன்
மூடிய மண்ணைக் கீறிக் கொண்டு வெடித்தது நெல்மணி. இளந்தளிர் பசுமையாய் முட்டி முன்நின்றது. அது! பனிக்காலம் துளிர்த்த தளிரில் பனிநீர், பட்டை தீட்டிய வைரமாய் மின்னியது. ஞாயிரும் தன் பங்கிற்கு கதிர் வீச்சால் பசுமையை விசாலமாக்கியது. வரப்பில் செல்வோர் வியந்து பார்க்கும் அளவுக்கு வரப்புயர நாற்றுகள் வளர்ந்து நின்றது.
இடுப்பில் மூன்று சுற்றில் ஒரு சிவப்பு அரைஞாண் கயிறு. இரு கால்களுக்கு இடையே வெள்ளை நிற கோவணம். கால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு நாற்றுகளை ஒவ்வொன்றாகப் பறித்து, சிறு சிறு கட்டுகளாய் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் மாயழகு. உட்கார்ந்தபடியே நகர்ந்து நகர்ந்து போய் நாற்றுகளை முழுவதுமாகப் பறித்து முடித்தார். அதன் பிறகு தொழியடித்த நிலமெங்கும் ஒவ்வொரு கட்டாகத் தூக்கி எறிந்தவாறு நின்றார்.
காலை பத்து மணி ஆகிவிட்டது. நடவு நடுவதற்கும் உழவு ஓட்டுவதற்கும் ஆட்கள் வரத் தொடங்கினர். பத்துப் பெண்கள் நான்கு ஆண்கள் என பதினான்கு பேர் வந்து சேர்ந்தனர். இவர் காலை ஆறு மணிக்கெல்லாம் நாற்று பிடுங்குவதற்கு வந்துவிட்டார். அந்த பத்து பெண்களில் மாயழகுவின் மகளும் வந்தாள். அப்பனுக்கு தூக்குச் சட்டியில் கஞ்சியும் மிளகாய் வற்றலும் கொண்டு வந்து கொடுத்தாள். வரப்பின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அதைக் குடித்து முடித்தார்.
ஆண்கள், மாட்டை ஏரில் பூட்டி தொழியடித்தனர். பெண்கள் நாற்றுக் கட்டுகளை எடுத்து இரு கை கூப்பி வருண பகவானை வேண்டி நடவு செய்யத் தொடங்கினார்கள்.
மாயழகுவின் ஒரே மகள் வள்ளி. தாய் இல்லாத குறை தெரியாமல் தகப்பனின் அரவணைப்பில் வளர்ந்தவள். சேதமடைந்த பழைய ஓட்டு வீடுதான் இவர்கள் வசிப்பிடம். அந்த வீட்டை சீர் செய்வதற்குக் கூட வருமானம் இல்லை. ஏதோ பள்ளிக்கூடம் போவதும் வீட்டு வேலைகள் பார்ப்பதும் அப்பனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்துவதுமாக, அவள் இளமைக் காலம் கடந்தது. படித்தது பத்தாம் வகுப்பு, அதுவே பெரும் பாட்டுக்கு இடையில் கிடைத்த அறிவு ஒளிதான்.
வள்ளிக்கு படர்ந்த முகம். மாநிறம்தான் என்றாலும் கார்மேகக் கூந்தலை ஜடையாகப் பின்னி முதுகில் போட்டு நடக்கும் போது, தெருவில் உள்ளவர்கள் கண்ணெடுத்துப் பார்க்காமலில்லை. ஒருமுறை மாயழகு வள்ளியைப் பார்த்து, என்னையப் பெத்தவ மாதிரி கவனிச்சுக்கிர ஆத்தா; உன்னைய பெத்ததுக்கு நான்தான் புண்ணியம் பன்னிருக்கணும் என்று நெகிழ்ந்து கூறினார்.
அதெல்லாம் ஒன்னுமில்லை அப்பா, இது என்னோட கடமை என்று சொல்லுவாள். பக்குக்குவமான பொண்ணு. தனக்கு வயதாகிறது என்று ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. நடவு நடும் பெண்களில், இவளைத் தவிர மற்ற எல்லோரும் கல்யாணம் முடித்தவர்கள். அந்தப் பெண்களின் வயதுதான் இவளுக்கும் இருக்கும்.
காலை நேரம் என்பதால் சூரியன் சுல்லென்று வரத்தவரவில்லை. தண்ணீருக்குள் நிற்பதால் பாதச் சூடு இல்லை. அக்கா! இருங்க இதோ வாரேன் என்று வள்ளி தொழியில் இருந்து ரோட்டுக்கு வந்தாள். தன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து ரோட்டோரம் விரித்தாள். அதில் மூன்று நாற்றுக் கட்டுகளை வைத்து, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு மறுபடியும் நடவுப் பணியைத் தொடர்ந்தாள்.
அங்கிருந்த மற்ற பெண்கள் வள்ளியைப் பார்த்து இன்னைக்கு டீத் தண்ணிக்கு ஏதோ அச்சாரம் போட்டுவிட்டாள் என்று மனதில் மகிழ்ந்தனர். நாற்றுக் கட்டுகளை ரோட்டோரம் வைத்தால் அந்த வழியாகப் போவோர் வருவோர் தங்களால் இயன்ற ஏதேனும் ஐந்து அல்லது பத்து ரூபாய்களை போட்டுச் செல்வர். அதனை அங்கு வேலை செய்யும் அனைவரும் மாலை நேரம் வீட்டிற்கு போகும் போது வழியில் உள்ள கடைத்தெருவில் டீ, பண்ணு ஏதேனும் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
மாதங்கள் கடந்தன, நாற்று வளர்ந்து கதிர் பிடித்தது. ஊடே சில இடங்களில் களைகளும் வந்தன. அதனைக் களையெடுக்க வேலையாட்கள் வந்து வயலில் இறங்கினார்கள். தேவையற்ற களைகள் பிடுங்கி எரியப்பட்டன.
கதிர்கள் முற்றி நெற்பயிர்கள் அருவடைக்குத் தயாராக இருந்தது. கூலி ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கலாய் கட்டப்பட்டு, பெண்கள் தங்கள் தலையில் தூக்கியவாறு களத்துமேட்டுக்குக் கொண்டு வந்து சேர்ந்தனர். தலையில் துணியைக் கட்டிக்கொண்டதுடன் அனைவரும் தங்கள் கணவனின் சட்டைகளை எடுத்து வந்திருந்தனர், அதனைச் சேலையின் மீது அணிந்து கொண்டனர். அப்போதுதான் நெல் தாள்கள் பட்டு அரிப்பு வராது. வள்ளி மட்டும் தகப்பனின் சட்டையை அணிந்திருந்தாள்.
கட்டுகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்து உரல், கற்கள் மீது அடித்துக் கொண்டிருந்தனர். நெல் மணிகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டன. வள்ளி முரத்தில் நெல் மணிகளை அள்ளி, காற்றில் தூற்றி பதர் நீக்கிக் கொண்டிருந்தாள். மாயழகு மாடுகளை பிணைத்து நெல் தாள்களின் மீது பிணை ஓட்டிக் கொண்டிருந்தார்.
பிணையடித்துக் கொண்டிருந்த மாயழகு சற்று, பிணையை நிறுத்தி வள்ளியின் முகத்தைப் பார்த்தார். வியர்வைத் துளிகள் படர்ந்திருந்தது, அதைக் கைகளால் துடைத்துக் கொண்டிருந்தாள். இந்த வயல் காட்டில் நாற்று நட்டு, களையெடுத்து, முற்றிய கதிர்களை அறுத்து, கதிர் அடித்து வீட்டுக்கு வளம் சேர்க்கும் இவளின் வாழ்க்கையில் கல்யாணம் கனவாய்க் கரைவதை எண்ணி நொந்துகொண்டார். அவளுடைய அம்மா இருந்த இப்படி விட்டிருப்பாளா? வக்கற்றவனாக இருப்பதை நினைத்து நினைத்து கண்கலங்கினார்.
இவர் நின்றதைக் கவனித்த வள்ளி அருகே வந்து, என்ன ஆச்சு அப்பா! தூசி எதுவும் கண்ணுல விழுந்துரிச்சா? கதிர் சுனை எதுவும் அரிக்குதா? கதிர் நல்லா முற்றி இருக்கு அதான் தாள்கள் மிகவும் சுனை பிடித்திருக்கிறது. அந்தக் கயிற்றை குடு என்று வாங்கி, இவள் பிணை ஓட்ட ஆரம்பித்தாள்.
மாயழகு கண்களில் நீர் வடியத்தான் செய்தது. அவர் என்ன செய்யமுடியும். பல ஆண்டுகளாய் பண்ணையம் பார்த்து பழக்கப்பட்டு போச்சு. கூலி வேலை செஞ்சு வயத்த கழுவுரதுக்கே சரியா இருக்கு. இதுல எங்கே போய் நகை, நட்டு வாங்கி மகளுக்கு கல்யாணம் முடிக்கிறது.
அருகே இருந்த வேப்பமர நிழலில் வந்து உட்கார்ந்தார் மாயழகு. துண்டை உதறிவிட்டு தரையில் விரித்து அப்படியே சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். அருகே வந்து நின்ற பண்ணையார், என்ன மாயழகு அப்படியே படுத்துட்டீங்க. வேலை முடிஞ்சு போச்சா என்ன? என்று இயல்பான தொனியில் கேட்டார்.
இல்லைங்க அய்யா.. ஒரு மாதிரி இருந்துச்சு அதான்.. என்று இழுத்தார்.
‘மாயழகு நீயும் இந்த வயக்காட்டுல கிடந்து உழைச்சிக்கிட்டுதான் இருக்க, என்ன புண்ணியம். ஒரு பைசா கூட சேத்து வைக்க முடியிரதில்லை. உன்னுடைய மகள நெனச்சாத்தான் பாவமா இருக்கு’ என கரிசனம் காட்டுவது போல பேசினார்.
ஏற்கெனவே மனம் நொந்து இருக்குர மனுசனுக்கு, அவர் கூறும் ஆறுதல் மேலும் வேதனையைத் தந்தது. ‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்று சொல்வார்களே அதைப் போலத்தான், துன்பத்தில் உள்ளவனுக்கு ஆறுதல் என்ற பெயரில் மேலும் துன்பத்தைத் தூண்டும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பண்ணையார் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டு மறுபடியும் துண்டை எடுத்து உதறிவிட்டு பிணை ஓட்டச் சென்றார். பண்ணையாருக்கு வந்த வேலை முடிந்ததில் சந்தோஷம். இருக்காதா பின்னே முதலாளி ஆயிற்றே.
வேலை முடிந்தது. ஆட்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது உடன் வந்த முருகையன், மாயழகுவின் முகம் வாடியிருப்பது கண்டு அவரிடம் ஏன்? அண்ணே இப்புடி பட்ட மரம் காத்துல நடக்குர மாதிரி வர்றீங்க? என்று பேசத் தொடங்கியவர், இப்போதுள்ள சமூகம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை எதார்த்தமாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.
முருகையன் ஒரு கம்யூனிஸ சமூகப் போராளி நிறைய வீதி நாடகங்கள் போட்டு நடிப்பவர். அதில் ஒன்றும் வருமானம் இருக்காது, மன நிறைவுதான் கிடைக்கும். வயிற்றுக்கு ஏதாவது வேண்டுமே! அப்போதுதானே உயிர் வாழ முடியும், அதான் இந்தமாதிரி கூலிக்கு உழவு ஓட்டும் வேலை செய்து வருகிறார்.
சொத்து சொகம் இருக்குர பெண் பிள்ளைகளையே செவ்வாய் தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் அப்புடி இப்புடின்னு சொல்லுர காலத்துல வரதட்சணை இல்லாமல் கல்யாணம் முடிக்குறது சாத்தியமில்லைதான். யாரோ ஒரு ஜோதிடனால் சிறைக்குள் அடைக்கப்பட்ட கைதிகளாய் பெண்கள் கன்னியராய் காலம் கழிக்கின்றனர். தோஷம் இருப்பதானாலே, தங்கள் வாழ்வு இப்படி ஆகிவிட்டது என்று அவர்களே நொந்து கொள்ளும் அளவுக்குப் புறந்தள்ளப்படுகிறார்கள்.
சுத்தச் ஜாதகக்காரர்கள் என்று சொல்லி திருமணம் முடிந்து பிறகு ஒத்துவராமல் முறித்துக்கொண்டு சிலர் போவதை இந்த சமூகம் ஏன்? உணர மறுக்கிறது. இவர்களைப் பொருத்தளவில் திருமணம் என்பது முதலீடு இல்லாத வருமானமும் ஆடம்பமும்தான். இதை எத்தனை வீதி நாடகங்களில் நடித்துக் காட்டியிருக்கேன். இப்படியே முருகையன் பேசிக்கொண்டு வந்தார்.
மாயழகு ஒன்றும் பேசாமல் முருகையன் சொல்வதையெல்லாம் கவனித்தவாறு நடந்தார்.
சரிங்க அண்ணே! வீட்டுப் பக்கம வந்துட்டோம் நான் சொல்லுறத கேளுங்க, நல்ல வாழ்க்கைத் துணைகளைப் புறந்தள்ளிவிட்டு வாழத்தெரியாதவர்கள் வாழ்கிற சமூகம் இருக்கத்தான் செய்கிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஏழையாக இருக்கக் கூடாது என்ற எழுதப் படாத சட்டம் இந்தச் சமுதாயத்தில் ஆணிவேராக வேரூன்றியுள்ளது. அதில் வள்ளியைப் போன்று எத்தனை பேர் இருக்கிறார்களோ?. வரதட்சணை கேட்பவர்களை எந்தச் சட்டம் தண்டித்திருக்கிறது. யாராவது பெண் கேட்கும் போது இவ்வளவு விலை பேசுகிறார்களே என்று வழக்குத் தொடர்ந்தது உண்டா? நம்மால் அவ்வளவு கொடுக்க முடியாது என்று அப்படியே ஒதுங்கி விடுகிறார்கள். இந்த நிலை எப்போது மாறுமோ என்று கூறிவிட்டுச் சென்றார்.
******
வீட்டுக்கு வந்து சேர்ந்த மாயழகு, வீட்டின் வாசலில் உள்ள தொட்டியில் கால்களைக் கழுவிவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தார். ஏ…. ஆத்தா ஒரு செம்பு தண்ணி கொண்டு வா! என்று வள்ளியைக் கூப்பிட்டார். அவளும் தண்ணீர் கொடுத்துவிட்டு அரிசியை உலையிலே போட்டுருக்கேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனாள். அன்றைய பொழுது கழிந்தது.
மறுநாள் காலையில், இன்னைக்குக் கீழப்பட்டி பண்ணையார் வீட்டு வயல் வேலை இருக்கு நேரமாச்சு, நான் கிளம்புறேன் என்று துண்டை உதறி தோளில் போட்டு நடந்தார் மாயழகு. அவளுக்கும் மனதில் வருத்தம் இருக்கத்தான் செய்தது. அவள் வயதிலுள்ள பெண்கள் எல்லாம் பிள்ளை பெற்று தாயாகிவிட்டனர்.
முற்றிய கதிராய் வயலில் நிற்கும் வள்ளி கல்யாணம் பண்ணாமல் மண்ணுக்கு உரமாகிவிடுவாளோ? என்ற பயம் அப்பப்போ மாயழகுவுக்கு வந்துதான் போனது.
அப்பன் என்னைய நெனச்சுதான் கவலைப்படுது என்று கண்கலங்கி தாவணி முனையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். சரிப்பா நீ போ நான் கஞ்சி எடுத்துக்கிட்டு வாரேன் என்று சொல்லியவாரு வீட்டிற்குள் சென்றாள்.
தூக்குச் சட்டியில் சோற்று பருக்கைகளை அள்ளிப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்தாள். தலையை வாரிக்கொண்டு சீப்பை ஓட்டின் இடையே சொருகி வைத்துவிட்டு, அருகே இருந்த ஊறுகாய்ப் பொட்டலத்தை எடுத்து முந்தானையில் முடிந்து கொண்டு கிளம்பினாள். சூரிய உதயம் இருந்தது. அவள் முகம் மங்கலாய்த்தான் தெரிந்தது. நாற்றுகளுக்கிடையே உள்ள களைகளைப் பிடிங்கினாள். இவள் வாழ்க்கையில் உள்ள கவலைகளை யார் களைவார்கள்?. நாற்றுக்கே உணர்வெழுந்தது போல சில்லென்ற காற்றில் நடவுகள் அவள் பாதம் தொட்டுச் சென்றன தெய்வமென்றெண்ணி.
வள்ளியின் திருமணம் முருகனால் நிறைவேருமோ? தெரியாது. முருகனைக் காண அவள் இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டுமோ?…
திரை ரசனை வாழ்க்கை 14 – எஸ் வி வேணுகோபாலன்


கண்ணன் கதையமுது – 6- தில்லை வேந்தன்
( தேவகிக்கு எட்டாவதாய்ப் பிறந்த ஆண் குழந்தையைக் கோகுலத்தில் விட்டு விட்டு அங்கு யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையான மாயையை எடுத்து வர வசுதேவன் புறப்பட்டான்)
குழந்தையுடன்.வசுதேவன் புறப்படுதல்
மந்திர மயக்கில் ஆழ்ந்து
மதுரையும் நந்தன் ஊரும்
முந்தியே உறங்கிப் போக
மூண்டவை அறிய வில்லை.
தந்தையும் மகனை ஏந்தித்
தாங்கியே சுமந்து கொண்டான்
சிந்தையின் உறுதி யாலே
தெளிவுடன் நடந்து சென்றான்.
( மதுரை – வடமதுரை)
(நந்தன் ஊர்– கோகுலம்)
மழை பெய்ய, ஆதிசேஷன் குடைபிடித்தல்
எழுகின்ற ஒளிக்கொடிபோல் மின்னல் வெட்ட
இடியோசை நடுவானில் மேளம் தட்ட
விழுகின்ற பெருமழையின் துளிகள் கொட்ட
விளங்கரவு பைவிரித்துக் குடைபி டிக்க
வழுவறுநல் வசுதேவன் முன்ந டக்க
வானவரும் ஞானியரும் வியந்து நிற்கத்
தொழமவரின் துயர்நீக்கும் குழந்தைக் கண்ணன்
தூயோர்வாழ் கோகுலத்தை நோக்கிச் சென்றான்
( விளங்கரவு- ஆதிசேஷன்)
( பை – பாம்பின் படம்)
கவிக்கூற்று
மையின் நிறத்து முகில்வண்ணன்
வனப்பு மிகுந்த சிறுகண்ணன்
ஐயன் நனைய அவன்படுக்கும்
அரவும் விடுமோ? படம்விரித்துப்
பெய்யும் மழைக்குப் பெருங்குடையைப்
பிடித்துப் பிள்ளை பின்னொருநாள்
வெய்ய மலையைக் குடையெடுக்கும்
விந்தைச் செயலை முன்னுரைக்கும்
( வெய்ய — விரும்பத்தக்க).
வழியில் யமுனை ஆறு குறுக்கிடுதல்
தங்குபுகழ்க் காவியங்கள் போற்றிப் பாடும்
தண்ணருள்செய் பெருமுனிவர் வந்து கூடும்
பொங்குநுரை சுழித்தோடும் யமுனை ஆறு
புண்ணியம்செய் பூமிக்குக் கிடைத்த பேறு
பொங்கருடன் பூங்காவும் இரும ருங்கும்
பொலிவுடனே வளர்ந்திருக்கச் செழிப்பே எங்கும்
அங்கவர்கள் போம்வழியில் குறுக்கே செல்ல
அதைக்கடக்கும் முறைதேடும் உள்ளம் மெள்ள.
( பொங்கர் – மரங்கள் அடர்ந்த சோலை)
யமுனை ஆறு வழி விடுதல்
பாய்ந்து பெருகும் யமுனைநதி,
பணிவு, பக்தி, கொண்டவரின்
ஓய்ந்த மனம்போல் உள்ளொடுங்கி,
ஊடே வழியும் விட்டதம்மா!
ஆய்ந்த அறிவு வசுதேவன்,
அந்த இறைவன் செயலுணர்ந்தான்.
தோய்ந்த மறையின் முழுமுதலைச்
சுமந்து நதியைக் கடந்துசென்றான்
கவிக்கூற்று
யாரே அறிவார் இறைவழியை
யாவும் வகுத்த நெறிமுறையே
ஊரே உறங்கி மயங்கவைத்தான்
உலகைச் சுழற்றி இயங்கவைத்தான்
நீரை நிறுத்தி யமுனைநதி
நெகிழ்ந்து வழியை விடவைத்தான்
சேரும் இடத்துச் சொந்தமெனத்
தேர்ந்தான் ஆயர் குடியைத்தான்
கோகுலத்தின் சிறப்பு
மயிலணைந்து சோலைகளில் தோகைகளை விரிக்கும்
வண்பசுக்கள் வள்ளலெனப் பாற்குடங்கள் நிறைக்கும்
குயிலிணைந்து குக்குவெனக் கொஞ்சுகுரல் கொடுக்கும்
கோதையரின் கோற்றொடிகள் குலுங்கியிசை படிக்கும்
எயிலணைந்த குடுமிதொறும் துகிற்கொடிகள் பறக்கும்
இன்முகத்து விருந்தினரை வருகவென உரைக்கும்
அயிலணைந்த கூர்வேலன் நந்தகோபன் புரக்கும்
அழகுமிகு கோகுலத்தில் கலையனைத்தும் சிறக்கும்
( கோற்றொடி – வேலைப்பாடமைந்த வளையல்)
(எயில் – கோட்டை / மதில்)
( குடுமி – உச்சி)
( அயில் – இரும்பு)
( துகிற்கொடி- துணியாலான கொடி)
( புரக்கும் – காக்கும்)
குழந்தைகளை மாற்றுதல்
ஊருறங்க உயிருறங்கக் கோகு லத்தின்
உயர்மனைக்குள் வசுதேவன் சென்று சேர்ந்தான்
பேருயர்ந்த நந்தனவன் மனைவி யான
பெண்ணரசி யசோதையன்னை அருகில் அந்தச்
சீருலவும் கருமுகிலை மெள்ள வைத்துத்
திகழ்சிறுபெண் மகவெடுத்துத் திரும்பும் போது
நீருலவும் விழிமுகத்தைத் துடைத்துக் கொண்டான்
நெஞ்சமது விம்முவதால் புடைக்கக் கண்டான்
சிறை திரும்புதலும் காவலர் விழித்தலும்
வடமதுரை நகருக்குள் மீண்டும் வந்த
வசுதேவன் சிறைச்சாலை புகுந்த பின்னர்
மடமங்கை தேவகியின் அருகில் அந்த
மயிலனைய பெண்மகவைப் படுக்க வைத்தான்
உடனடியாய்க் கதவுகளும் மூடிக் கொள்ள
உயிர்பெற்றார் போலெழுந்தார் காவ லர்கள்
கிடக்கின்ற குழந்தையழும் குரலைக் கேட்டார்
கிடுகிடுவென்(று) ஓடினரே சேதி சொல்ல.
( தொடரும்)
தீர்ப்பு – மூலம் : பிரான்ஸ் காஃப்கா தமிழில் : தி.இரா.மீனா
வசந்தகாலத்தின் ஒரு ஞாயிறு காலைப் பொழுதில், ஜார்ஜ் பெண்டர்மென் முதல்மாடியிலுள்ள தனது சிறிய அறையில்உட்கார்ந்திருந்தான். தாழ்வான ஆற்றுப் பகுதியை ஒட்டி மிக மோசமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடம் அது. உயரத்தையும் ,நிறத்தையும் மட்டும் வைத்தே ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியும். அவன் அப்போது தான் வெளிநாட்டிலுள்ள தன் இளம்பருவத்து நண்பன் ஒருவனுக்கு கடிதம் எழுதி முடித்திருந்தான். எழுதும் மேஜையில் கையை ஊன்றி ஜன்னல் வழியாக ஆறு,பாலம், கண்ணுக்குத் தெரிகிற பசுமையான குன்றுகள் ஆகியவற்றை நிலையின்றிப் பார்த்தபடி கடிதத்தை ஒட்டினான்.
தனக்கு சாதகமான நிலை வீட்டில் இல்லாததால் அங்கிருப்பதை வெறுத்து சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவிற்கு ஓடிப்போன தன் நண்பனை நினைத்துப் பார்த்தான்.இப்போது அவன் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு தொழில் நடத்துகிறான். தொடக்கத்தில் நன்றாக நடந்த தொழிலில் இப்போது தள்ளாட்டம் இருப்பதால் ஊருக்கு வரவேண்டிய தன் நிர்பந்த நிலையை வருத்தமாகச் சொல்லியிருக்கிறான். வெளிநாட்டில் வேலை செய்வதால் எந்தப் பயனுமில்லை என்ற எண்ணம் ஜார்ஜுக்குள் எழுந்தது. தனது இளம்பருவ நாட்களிலிருந்து நினைவிலிருந்த அந்த முகம் இப்போது தாடியால் மறைக்கப்பட்டு,தோல் வெளிறி, நோயாளி போன்ற தன்மையைத் தந்தது. அவன் சொன்னதுபோல அவனுக்கு அந்தக் காலனியில் தன் நாட்டு மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. உள்ளூர்க் குடும்பங்க ளோடு அத்தனை நெருக்கமின்றி தன்னை ஒரு நிரந்தர பிரம்மச்சாரியாக நினைத்துக் கொண்டான்.
அப்படிப்பட்ட நண்பனுக்கு உதவி எதுவும் செய்யமுடியவில்லை. வருத்தம் தெரிவிப்பதைத் தவிர என்ன எழுதமுடியும். பழைய நட்பை,உறவுகளை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அறிவுரை சொல்லலாமா? உண்மையில் யாரும் தடை சொல்ல முடியாது. இங்கே வாழ்வதற்கு,நண்பர்களின் உதவியை நாட அறிவுரை சொல்லலாமா அப்படிச் சொல்வதும் அவன் நிலையைத் திரும்ப எடுத்துச் சொல்வது தானே—யாரோ சொன்னது போல அது அவனை மிகுதியாகக் காயப்படுத்தலாம் —முன்னாள் முயற்சிகள் வெற்றியடையாமல் போனதைச் சொல்லி அவன் அங்கிருந்து வரவேண்டும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரும்பும் அவனை ஊதாரியாக எல்லோரும் பார்ப்பார்கள். நண்பர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்துடன் தங்கியிருந்து, வெற்றிபெற்ற நண்பர்களின் பேச்சிற்குப் பணிந்து, வயதுவரம்பு கடந்தவனாக இருக்க வேண்டிய நிலைவரலாம்.அவனைக் குறை சொல்லியவர்களுக்கு இது சாதகமாகி விடும்.அவனைத் திரும்ப ஊருக்கு வரச்சொல்வது சரியான முடிவாக இல்லாமல் போகலாம்—அவனால் தன் ஊர் நிலையைப் புரிந்து கொள்ளமுடியாது.அறிவுரைகளால் வெறுப்படையும் அவன் நண்பர்களைப் பிரிந்திருந்தாலும் வெளிநாட்டிலிருப்பதே சரி ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
2
ஆனால் அவர்களின் அறிவுரைப் படி இங்கு வந்து மன அழுத்தம் அடைந்து – வேண்டுமென்றே இல்லை, ஆனால் அவனுடைய சூழ்நிலை யால்-– நண்பர்களுடனோ ,நண்பர்களில்லாமலோ ,வாழ்க்கையோடு இணங்க முடியாமல்,உண்மையில் நாடோ,நண்பர்களோ இல்லாமல் வருந்துவதை விட இப்போது இருப்பது போலவே வெளி நாட்டில் இருப்பது உசிதம். அவனால் உண்மையாகவே இங்கு வந்து முன்னேற முடியுமா?
உண்மை நிலையை வெளிப்படுத்தாமல் கடிதங்கள் மூலமாகத் நட்பை தொடர்ந்து கொண்டு, நெருக்கமானவர்களிடம் தடையின்றிப் பேசலாம். நண்பன் ரஷ்யா போய் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ரஷ்யா வின் நிலையற்ற அரசியல் பிரனைகள் காரணமாகத் தன்னால் வரமுடிய வில்லை என்று பொருத்தமில்லாத காரணத்தை அவன் சொல்கிறான். ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் உலகம் முழுவதும் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருக்க, சிறிய வியாபாரியான அவன் சில நாட்கள் கூட வரமுடியவில்லை என்பது ஏற்க முடியாதது தான்.
ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தாயின் மரணத்திற்குப் பிறகு ஜார்ஜ் தந்தையோடிருந்தான். நண்பனுக்கு செய்தி தெரிந்து கடிதத்தில் தன் இரங்கலைத் தெரிவித்திருந்தான். வெளி நாடுகளில் அது போன்ற நிகழ்வு அத்தனை வருத்தத்தை தராது என்பதால் அவன் கடிதம் உணர்ச்சியற்று இருந்தது.ஆனால் அந்தச் சமயத்திலிருந்து ஜார்ஜ் தன் தொழிலை தீர்க்க மான முடிவோடு கையாளத் தொடங்கியிருந்தான். ஜார்ஜ் தனக்கெனத் தனியாகத் தொழில் தொடங்கக் கூடாதென்பது அப்பாவின் எண்ணம்.தவிர அம்மா உயிருடனிருந்த வரை தொழிலில் அவன் எந்த அபிப்ராயம் சொன்னாலும் அப்பா அதற்குத் தடை சொல்பவராக இருந்தார்.அம்மாவின் மறைவிற்குப் பிறகு தொழிலில் இருந்தாரெனினும் ஒருவிதத் தளர்ச்சி அவரை ஆட்கொண்டது; அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் திரும்பியது. அது மிக அரியதுதான்.இந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்காமல் தொழில் நல்லவளர்ச்சி அடைந்தது. வேலையாட்களின் எண்ணிக்கை இரண்டு பங்காக அதிகரித்தது.வருமானம் பெருகியது. இன்னும் வரப்போகும் வருடங்களில் அது பெருகும் என்பதில் சந்தேக முமில்லை
அவனுடைய நண்பனுக்கு இந்த மாற்றங்கள் பற்றியெல்லாம் தெரியாது. கடிதத்தில் ஜார்ஜ் ரஷ்யாவில் குடியேறவேண்டும் என்றும் அத்தொழில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நன்றாக வளரக் கூடியது என்றும் குறிப்பிட்டிருந்தான்.அந்த நல்ல வளர்ச்சியை இப்போது இங்கேயே ஜார்ஜின் தொழில் பெற்றிருந்தது. ஆனால் தன் தொழில் ரீதியான வளர்ச்சியை நண்பனுக்கு தெரிவிக்க ஜார்ஜுக்கு விருப்பமில்லை.தவிர இவ்வளவு தாமதமாக இப்போது அதைச் சொல்வது நிஜமாகவே வினோதமாகவே இருக்கும். அதனால் மிக முக்கியமற்ற விவரங்களை மட்டும எழுதினான். தானில்லாத காலத்தில் ஊரில் நடந்தவைகள் தெரியாமல் தனது ஊரைப் பற்றிய கற்பனையில் அவன் வாழப் பழகிக் கொண்டு விட்ட நிலையை ஜார்ஜ் மாற்ற விரும்பவில்லை.
3
அதிகப் பரிச்சயமில்லாத ஒருவனின் நிச்சயதார்த்தம் குறித்து நண்பனுக்கு ஜார்ஜ் விரிவாகக் கடிதங்கள் எழுதினான்.ஜார்ஜின் எதிர்பார்ப்புக்கு மாறாக நண்பன் அந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.ஒரு மாதத்திற்கு முன்னால் தனக்கு ப்ரீடா பிராண்டன்லெட் என்ற பெண்ணோடு தனக்கு நடந்த நிச்சயதார்தத்தை எழுதி மன்னிப்பு கேட்பதை விட இப்படி யான சில விஷயங்களை எழுதுவதை விரும்பினான்.தபால் மூலமாக நண்பனுக்கு வித்தியாசமான கடிதங்கள் எழுதியது குறித்து அடிக்கடி தன் காதலியிடம் பேசியிருக்கிறான்.“அப்படியென்றால் அவர் நம் திருமணத்திற் குக் கண்டிப்பாக வர வாய்ப்பில்லை என்றாலும் உங்கள் எல்லா நண்பர்களையும் சந்திக்கும் உரிமை எனக்கிருக்கிறது ”என்று அவள் சொன்னாள்.“நான் அவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே.ஒருவேளை அவன் வரலாம் என்று நான் நினைக்கிறேன்.ஆனால் கண்டிப்பாக அவன் என்னைப் பார்த்து பொறாமைப் படலாம். மகிழ்ச்சியின்றி தனியாக வர நேர்ந்தது பற்றி வருத்தப்படுவான்.”
“தனியாக—உனக்கு அதன் அர்த்தம் புரிகிறதா?”
“ஆனால் நம் திருமணம் பற்றி அவர் வேறுவழியில் தெரிந்து கொள்ள முடியாதா?”
“ஆமாம்.என்னால் அதைத் தடுக்க முடியாது.ஆனால் அவன் வாழ்க்கை வசதிகளைப் பார்க்கும் போது அது இயலாதது என்றுதான் தோன்றுகிறது.”
“ஜார்ஜ், உங்களுக்கு அப்படியான நண்பர்களிருந்தால் நீங்கள் நிச்சயதார்தத்திற்கு உடன்பட்டிருக்கக் கூடாது.“சரி,எங்கள் மீது தப்புதான்,ஆனால் இப்போது எதுவும் மாறுவதை நான் விரும்பவில்லை.” என்று சொல்லி முத்தமிட்டான்.“ஆனாலும் இது எனக்கு வருத்தம் தருகிறது.”என்றாள் அவள்.’இப்படித்தான் நான். அவன் என்னை அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் .நட்பு என்பதற்காக நான் இன்னொரு மனிதனாக என்னை செதுக்கிக் கொள்ள முடியாது.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
உண்மையில் அவன் தனக்கு நடந்த நிச்சயதார்த்தம் பற்றி நண்பனுக்கு எழுதிய விரிவான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.”மிக அழகான, முக்கியமான இந்த விஷயத்தை கடைசியில் எழுதுவதற்காக நான் வைத்திருக்கிறேன். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பரீடாவை மணக்கப் போகிறேன் .நீ போனதற்குப் பின்னால் அவர்கள் குடும்பம் இங்கு குடியேறியது. எனவே அவர்களை உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.என் காதலியைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்ல எனக்கு வாய்ப்புகள் உண்டு. நான் அதிர்ஷ்டமானவன் என்று இப்போது உனக்குத் தெரிந்தால் போதும். நம் நட்பைப் பொறுத்த வரையில், இன்று நீ சந்தோஷமானவனாக இருக்கிறாய் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.என் காதலி தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னாள். உனக்கு அவள் விரைவில் கடிதம் எழுதுவாள். சாதாரணமாக ஒரு பிரம்மச்சாரிக்கு கிடைக்காத வகையில் உனக்கு ஓர் அருமையான பெண் தோழியாக இருப்பாள்.இங்கு நீ திரும்பி வருவதைத் தடுக்கும் வகையில் உனக்கு பல பிரச்னைகள் உண்டு என்றெனக்குத் தெரியும். ஆனால் ஒரு நண்பனின் திருமணத்திற்காக அவைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வருவது உனக்குச் சரியான வாய்ப்பாக இருக்குமல்லவா? ஆயினும் உனக்கு நல்லதென்று தெரிவதைக் கவலைப்படாமல் செய்”
ஜார்ஜ் ஜன்னலைப் பார்த்தபடி நீண்ட நேரம் இந்தக் கடிதத்தோடு உட்கார்ந்திருந்தான். தனக்குத் தெரிந்த ஒருவன் தன் நிலையைப் பாராட்டுவான் என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமாக இருக்க. தன்னை மறந்து சிரித்தான்.
4
கடைசியில் அந்தக் கடிதத்தை பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து எதிராக இருந்த தந்தையின் அறைக்குப் போனான். அவன் அங்கு போய்ப் பல மாதங்களாகிவிட்டன.அவன் அங்கு போகவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.ஏனெனில் அவன் தந்தையை அலுவலகத்தில் பார்த்து விடுவான். தினமும் இருவரும் ஒரே ஹோட்டலில்தான் மதியச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.மாலையில் இருவரும் அவரவருக்குப் பிடித்தமானதைச் செய்வார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜார்ஜ் தன் நண்பர்களுடன் அல்லது தன் காதலியுடன் இருப்பான்.எனினும் இரவில் ஹாலில் இருவரும் அவரவர் செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
அந்தக் காலை நேரத்திலும் தந்தையின் அறை இருட்டாக இருப்பதைப் பார்த்து ஜார்ஜ் வியப்படைந்தான். மிகக் குறுகியதாக இருந்த முற்றத்தின் மறு பகுதியில் உயர்வாக எழுந்திருந்த சுவர் அப்படி நிழல் விழக் காரணமாக இருந்தது. அவனுடைய தாய் பலவிதமாக அலங்கரித்து வைத்திருந்த பொருட்களின் ஞாபகம் எழும்படியாக இருந்த அந்த அறையில் ஜன்னலோரத்தில் ஒரு கண்ணுக்கு முன்னால் செய்தித்தாளை வைத்து ,தலையைச் சாய்த்து உட்கார்ந்து தந்தை படித்துக் கொண்டிருந் தார்.அங்கிருந்த மேஜையில் இருந்த மீதமான காலை உணவு அவர் அதிகம் சாப்பிடவில்லை என்று சொல்லியது.
“ஓ,ஜார்ஜ்,” கூப்பிட்டபடி அவர் அவனருகில் வந்தார். அவருடைய கனமான இரவு உடை அவரை முழுவதுமாகச் சுற்றியிருப்பது போலிருந்தது. இன்னும் அப்பா பலசாலிதான் ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“பொறுக்க முடியாத இருட்டு அங்கே” என்று சொன்னான்.
“ஆமாம், மிக இருட்டாகத்தானிருக்கிறது”அப்பா பதிலளித்தார்.
“நீங்கள் ஜன்னல் கதவுகளையும் மூடி விட்டீர்கள்?”
“எனக்கு அதுதான் பிடிக்கிறது.”
“வெளியில் வெம்மையாக இருக்கிறது.” தான் முன்பு சொல்லியதைத் தொடர்வது போலப் பேசிவிட்டு அவன் உட்கார்ந்தான்.
காலை உணவுத் தட்டை எடுத்து அப்பா சுத்தம் செய்துவைத்தார்.
“செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் என் நிச்சயதார்த்த விவரத்தை அனுப்பி யிருக்கிறேன் என்று உங்களிடம் சொல்ல வந்தேன்”அடிக்கடி மறந்து போகும் தநதைக்கு நினைவுபடுத்த விரும்பியவனாக ஜார்ஜ் அதைச் சொல்லிவிட்டு தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை வெளியே இழுத்து பின்பு திரும்பவும் உள்ளே வைத்தான்.
“ஏன் பீட்டர்ஸ்பர்க்கிற்கு? ” தந்தை கேட்டார்.
“என் நண்பனுக்கு “சொல்லிவிட்டு அவர் கண்களை ஊடுருவிப் பார்க்க முயன்றான்.தொழில் என்று வரும்போது அவர் மிக வித்தியாசமானவர் என்று நினைத்தான்.மார்பில் கையைக் கட்டிக் கொண்டு எப்படி உட்கார்ந்தி ருக்கிறார்.
“ஆமாம், உன் நண்பனுக்கு ”அழுத்தமாகச் சொன்னார்.
“அப்பா,முதலில் என் நிச்சயதார்த்தத்தை அவனிடம் சொல்லவேண்டாமென்றுதான் நினைத்தேன்.இதற்கென்று காரணம் எதுவுமில்லை. அவன் வித்தியாசமானவன் என்று உங்களுக்கே தெரியும். தனிமையில் வாழும் அவனுக்கு இது தெரிய வாய்ப்பில்லையென்றாலும் மற்றவர்கள் மூலமாக தெரிந்துவிடும் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதை என்னால் தடுக்கவும் முடியாது.ஆனால் ஒருபோதும் என் மூலம் அவனுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தேன்.”
“இப்போது நீ அதைப் பற்றி வித்தியாசமாக நினைக்கிறாய்? ” ஜன்னலின் கீழே செய்தித்தாளையும்,மேலே தன் மூக்குக் கண்ணாடியையும் வைத்தார்.
“ஆமாம், இப்போது நான் அதை மறுபரிசீலனை செய்கிறேன்”
(மீதி அடுத்த இதழில் )
———————————————-
பிரான்ஸ் காஃப்கா இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்க ளில் ஒருவர் என விமர்ச்கர்கள் மதிப்பிடுகின்றனர். நனவிலி நிலை, அந்நியமாதல், உடல் மற்றும் மன ரீதியிலான கொடூரம் உள்ளிட்டவை அவர் கதையின் கருப்பொருள்களாகின்றன.The Metamorphosis, The Trial, The Judgement ,The Castle ஆகியவை அவரது சிறந்த படைப்புகளில் சிலவாகும்.
நிறங்கள் – ரேவதி ராமச்சந்திரன்
(இந்தக் கட்டுரையைப் படிக்குமுன் இந்தப்பாடலைப் பார்த்துவிட்டுப் படியுங்கள்! எழுதியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஹோலியின் ஜோஷ் புலப்படும்)
இந்தியாவில் பண்டிகைகள் அநேகம். நமது முன்னோர்கள் மிகவும் பயனுள்ளதாகவும், காலத்துக்கேற்றவாறும் அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் பற்றியும், அதற்கேற்றவாறு பட்சணங்களை செய்வதைப் பற்றியும் வரையறுத்து வைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. பங்குனியில் ஸ்ரீராமநவமி அன்று வெயிலுக்குத் தகுந்தவாறு பானகம், நீர்மோர். சித்திரையில் கிடைக்கும் மாங்காய், வேப்பம்பூ போன்றவற்றை வைத்து பச்சடி என்று சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு நைவேத்யம். இதில் வட நாடு, தென்னாடு என்ற பிரிவிலேயும் அந்தந்த காலம், ருது, சமையல் என்று ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளன. எல்லோருக்கும் இந்தப் பண்டிகைகளைப் பற்றி தெரிந்திருந்தாலும் நான் இந்த வருடம் வட நாட்டில் கொண்டாடி ஆச்சர்யப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றித்தான் கூறப் போகிறேன்.
பத்து வருடங்களாக எனக்கு ரொம்ப ஆச்சர்யத்தைத் தந்த விஷயம் என்னவென்றால் பொதுவாக வடநாட்டுக்காரர்கள் எதையும் எளிதாக எடுத்துச் செல்வதும், வயது வித்யாசம் இல்லாமல் பாடுவதும், ஆடுவதும் தான். சென்னைக்கு தன் பெண் கல்யாணத்திற்கு வந்தவர்கள் தங்கள் அதிகப் பொருட்களுடன் ஒரு டோலக்கும் எடுத்து வந்து பாட்டும், டான்ஸுமாக ஜாலியாக இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எல்லாக் கவலைகளையும் தலை மேல் சுமந்து கல்யாண வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னையும் ஆட வைத்த அவர்களது அந்தப் பாங்கு எனக்கே பிடித்திருந்தது! எத்தனையோ பண்டிகை இருந்தாலும் அவர்களுக்கு முக்கியமான பண்டிகை இந்த ஹோலி. அவர்கள் இதனை சுமார் பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். தெற்குப் பக்கம் ஹோலி என்றால் வண்ண வண்ண பொடிகளைத் தூவுவதுதான். அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் 1993 என்று ஞாபகம். இரவு 8 மணிக்கு என் இரு குழந்தைகளும் அடையாளம் தெரியாதபடி வண்ணப் பொடிகள் மேனி முழுவதும் படர வந்தனர். அவர்களை அர்ச்சனை செய்தபடி குளிக்க வைத்தேன். இதுதான் எனக்கும் ஹோலிக்குமான முதல் இரவு (உறவு). அதற்கப்புறம் இந்த கலர் பொடிக்குப் பயந்து ஹோலி அன்று வெளியில் செல்வதையே விட்டு விட்டேன்.
பிறகு என் பையனால் இந்த ஆர்மி வாழ்க்கையில் இணைந்து வேறு வழி இல்லாமல் ஹோலிப் பொடியை மேனி முழுவதும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டேன்.அன்று எல்லோரும் நீல வண்ணக் கண்ணன் அல்லது செக்கச் சிவந்த ராதே தான். ஆனால் இந்த வருடம் இந்தப் பண்டிகையை முழுமையாக அனுபவித்து இரசித்தேன்.
நாங்கள் விடுமுறை கழிப்பதற்காக வடநாடு சென்றோம். சரியாக அப்போது ஹோலிப் பண்டிகை நேரம். எங்களது மூட்டையை இறக்கியவுடனே அந்த வீட்டுப் பெண்மணி ‘குளித்து சீக்கிரம் கிளம்புங்கள்’ என்றார். ஹோலிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருந்ததால் ‘எங்கே’ என்றோம். ‘பார்வதி வீட்டு ஹோலிக்கு’ என்றார். இதென்ன பார்வதி வீட்டு ஹோலி ஹேமா வீட்டு ஹோலி. புரிபடாமலேயே கிளம்பினோம். அப்போதுதான் புரிந்தது ஹோலியை பத்து நாட்கள் முன்பே வரவேற்கிறார்கள் என்று. இருந்த பத்து நாட்களும் ஹோலி கொண்டாட்டம்தான். உங்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியுமோ, எனக்கு இது ரொம்பவும் புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.
‘பாட்டுப் பாடும் ஹோலி’ என்று பத்து நாட்கள் ஒவ்வொரு வீட்டிலேயும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழைப்பு வந்தவுடன் காலை பத்து மணி அல்லது மதியம் மூன்று மணியளவில் எல்லோரும் சேருகிறார்கள். டோலக் வாசித்துக் கொண்டே பாடுதல் ஆடுதல். அச்சச்சோ வயது ஒரு பொறுட்டேயில்லை. ஒவ்வொரு பாட்டிற்குப் பிறகும் ‘ஹோலி வந்தாச்சு ஹோலி வந்தாச்சு’ என்று சந்தோஷமாகக் கூவுகிறார்கள். பாட்டுக்கேற்ற மாதிரி டான்ஸ். அதுவும் கேலியும் கிண்டலும். மேல் சால்வையை தலையில் கட்டிக் கொண்டு சிலர் ஆண் மாதிரியும், பெண் மாதிரியும் உடனே மாறி டான்ஸ் ஆடுகிறார்கள். டான்ஸ் ஆடக் கூப்பிடணும் என்று எதிர்பார்க்காமல் அவரவர் எழுந்து நின்று டான்ஸ் ஆடுகிறார்கள். சில சமயம் அதற்கு வரிசையில் நின்று தம் முறை வந்தவுடன் ஆடுகிறார்கள். இப்படி அவர்கள் ஆட்டம் பாட்டம் என்று தம் மனத்தை ஒருமைப்படுத்தி எல்லோருடனும் சகஜமாக சிரித்துப் பேசி தம் மனத்தையும் இலகுவாக்குகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
நடு நடுவில் தொண்டையை நனைக்க ஏலக்காய், முந்திரி, கல்கண்டு என்று தரப்படுகிறது. பாசிப்பருப்பு ¾ பங்கு, உளுந்து பருப்பு ¼ பங்கு என்று அரைத்து சின்ன சின்ன போண்டா சுட்டு எடுத்து தயிர், வெல்ல புளித் தண்ணீர், புதினா கொத்தமல்லி சட்னி போட்டு அது ஒரு கப், வித வித நிற வடாம், சமூஸா, குடிக்க ஜூஸ் அல்லது அவர்களுக்கே உரித்தான சாய் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் முடிய கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரம் ஆகிறது. பிறகும் வீட்டிற்குச் செல்ல வேண்டும், வீட்டிலுள்ளவர்களை கவனிக்க வேண்டும் என்று அவசரம் எல்லாம் படாமல் பேசி சிரித்து மகிழ்கின்றனர். இந்த பாட்டு, ஆட்டம், நிதானம் நிச்சயமாக வட நாட்டவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஹோலிக்கு முதல் நாள் நமது போகி மாதிரி ஹோலிகாவை எரிக்கிறார்கள். இரண்யகசிப்புவின் தங்கைக்கு ஒரு வரம் தீ அவளை எரிக்காது. ஆகையால் பிரகலாதனை எரியூட்ட தன் மடியில் அவனை இருத்துக்கொண்டு தீயில் உட்காருகிறாள். ஆனால் விஷ்ணு பெருமாள் பிரகலாதனை விடுத்து ஹோலிகாவை எரித்து விடுகிறார். இதுதான் ‘ஹோலிகா தகனம்’. இதனைத் தான் முதல் நாள் எரியூட்டி கொண்டாடுகிறார்கள்.
மறு நாள் எல்லோரும் மற்றவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை வித வித கலர் பொடிகளைப் பூசி, அந்த சின்ன போண்டா, பக்கோடா, சோமாசி (குஜியா), ஜூஸ், ஆண்கள் பீர் என்று சாப்பிட்டு எப்போதும் போல டோலக், பாட்டு, டான்ஸ் என்று மதியானம் வரை சந்தோஷமாக இருக்கிறார்கள். கல்யாணமான பிறகு வரும் முதல் ஹோலி என்றால் கூடுதல் சந்தோஷம்தான்!
தெற்கு பக்கமும் நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தாலும் எனக்கு இந்த மனதை லேசாக்கும் வித்தை மிகவும் பிடித்துள்ளது. ஹோலி என்றில்லை, திருமணம், கர்ப்பம் தரித்தல், குழந்தை பிறத்தல் இப்படி எந்த விசேஷத்திற்கும் இந்த பாட்டும், டான்ஸும் கட்டாயம் உண்டு. அந்தந்த நேரத்திற்குத் தகுந்தவாறு இந்தப் பாட்டுக்கள் இருக்கும். சில சமயம் என்னையும் ஆடக் கூப்பிடுவார்கள். ஆனால் நான் ஆட்டுவித்திருக்கிறேனே தவிர ஆடினதில்லையே! இப்பப்ப இதனால் மனசு சந்தோஷம் மட்டுமல்லாமல் லேசாகி இறக்கைக் கட்டிப் பறக்கிறது கண் கூடாகிறது. பாட்டும் பரதமும் நமது வாழ்க்கை என்ற நாடகத்தில் இணைந்ததல்லவா!
அபூர்வங்கள் -4 – பானுமதி
படியில் குணத்து பரதன்
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, இயந்திர மொழி கற்றுப் பகுத்தாயக்கூடிய ஒன்று, உங்களை இந்தியத் திரு நாட்டின் முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுத்துள்ளது. மாலைகள், சால்வைகள், வாழ்த்துகள், கோஷங்கள், இவற்றினிடையே உற்றார்கள், நண்பர்களின் பெருமிதம். அனைத்து சேனாதிபதிகளும், காவல் துறையும், குண்டு துளைக்காத வாகனமும், நிறைவான வசதியுடன் கூடிய தனி விமானமும், முழுதும் நடந்து மாளாத மிகப் பெரிய வசிப்பிடமும் உங்களுக்கே, உங்களுக்கே.! நீங்கள் ஆணையிட்டால் தான் இந்திய அரசே இயங்க முடியும். இப்படிப்பட்ட வாய்ப்பை நாம் யாரேனும் நழுவ விடுவோமா?
ஆனால், அதை வேண்டாமென்று மறுதலித்தவன் பரதன்.
“தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன
நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி போயினை என்ற போழ்து
புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் ராமர் நின்
கேழ் ஆவரோ? தெரியின் அம்மா!
கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதனைப் பற்றி குகன் இவ்வாறு பேசுகிறான். ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ என்று வியக்கிறான். இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும், மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை ஒத்த ராமன், தனக்குரிய அரசினை விட்டுக் கானகம் சென்ற அந்தத் தியாக இராமன், பரதனின் மாண்பின் முன்னர் ஆயிரத்தில் ஒரு பங்குதான் என்று காட்டில் வசிக்கும் ஒரு வேடன் சொல்கிறான் என்றால் பரதனின் சிறப்பினை நாம் அறிந்து கொள்ளலாம். ராமன் அறக்கடல், தர்ம சீலன். ஆனால், அவனினும் சிறந்தவன் பரதனே என்று கம்பர் பல இடங்களில் சொல்கிறார்.
“தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும் பள்ளம் எனும்
தகையானைப் பரதனென்னும் பெயரானை எள்ளரிய குணத்தாலும்
நிறத்தாலும் இல்லிருந்த வள்ளலையே அனையானைக்
கேகயர் கோன் மகள் பயந்தாள்.”
இதை விஸ்வாமித்திரர் கூற்றாகக் கம்பன் எழுதுகிறார். ஜனகரின் புதல்வியான மாண்டவியை மணம் செய்து கொண்டவன் பரதன். அந்தப் பரதனைப் பற்றிச் சொல்லும் போது, நற்குணங்கள் சங்கமிக்கும் அரிய குணக்கடல், இராமனை ஒத்த மாண்புடையவன் என்று முனிவரே சொல்கிறார்.
பரதனைக் கண்டவுடன் முதலில் கொள்ளும் சீற்றம், அவனது தோற்றத்தைக் கண்டதும் மாறும் சிந்தனை, அவனை வியந்து பணிவது என்றெல்லாம் குகனின் வாயிலாக கம்ப நாடகம் நடக்கிறது.
சீற்றத்தில் அவன் சொல்லாக வெளி வருவது என்ன ஒரு வீரச் சந்தத்தில் அமைந்திருக்கிறது பாருங்கள்:
“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லோளா?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ?”
‘என்னைத் தாண்டி இந்தப் பரதனைப் போக விட்டு விடுவேனா நான்? அவருடைய சேனைகள் எனக்குப் பொருட்டா என்ன? தோழன் என்று என்னை உயர்த்திய அந்தப் பரமனின் சொல் வேதச் சொல்லல்லவா? பரதனை இராமர் இருக்கும் இடத்திற்குச் செல்லவிட்ட இந்தக் கீழ்மையான வேடன் இன்னுமா இறக்கவில்லை என்று இராமர் நினைப்பாரே? நான் ஒருக்காலும் பரதனை அனுமதியேன்’ என்று ஆவேசமுற்ற குகன், பரதனின் தோற்றத்தப் பார்த்தவுடன் தன் நினைப்பை மாற்றிக் கொள்கிறான்.
“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவம் வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்றான்..”
‘பரதனும், சத்ருக்கனனும் இராம இலட்சுமணரை ஒத்திருக்கின்றனர். தவக் கோலத்தில், கண்ணீர் ஆறாகப் பெருக, இராமர் இருக்கும் திசை நோக்கி கூப்பிய கரங்களுடன் நிற்கும் இவன் இராமனுக்குப் பின் பிறந்தவனில்லையா? அவனிடத்தில் தவறுகள் வருமா என்ன என்று சிந்திக்கிறான் குகன்.’
கம்பர் இங்கே ஒரு செய்தியை நுணுக்கமாகச் சொல்கிறார்: முன்னேர் வழி பின்னேர் செல்லும் என்பதுதான் அது.
“வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நல்கலை இல்மதி என்ன நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் களிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
வில் கையின் நின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்.”
பேரரசினைப் பெற்றவனாகவா பரதன் காட்சி அளிக்கிறான்?
“அறங்கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்
பிறன் கடை நின்றவன் பிறரைச் சீறியோன்
மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மாதவர்க்கு அருந்துயரம் சூழ்ந்துளோன்”
என்றெல்லாம் அரற்றியவன் பரதன். உலகின் அத்தனை பழிகளும் என்னைச் சேரட்டும், நான் அரசில் ஆசை வைத்து அண்ணனைக் காட்டிற்கு விரட்ட நினைத்திருபேனாகில் என்ற பரதனின் மன உளைச்சலைக் கம்பரைத் தவிர யார் இப்படிப் பாட முடியும்?
பரதன், இராமரை கங்கையைக் கடந்து அக்கரையில் பார்க்கும் போது அண்ணல் காட்டில் இருக்க தான் நாட்டில் இருப்பதா என ஏங்குகிறான். அவன் எப்படிப் போனான், என்னென்ன செய்தான் என்பதையும் கவிஞர் விட்டு வைக்கவில்லை.
“கார் எனக் கடிது சென்றான்; கல் இடைப் படுத்த புல்லின்
வார் சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்.
பார் மிசை பதைத்து வீழ்ந்தான்;படுவரல் பரவை புக்கான்
வார் மணிப் புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்.”
அரியணை வேண்டாம், அதிகாரம் வேண்டாம், செல்வச் சுகமும் வேண்டாம், மனைவியுடன் வாழ வேண்டாம், அயோத்தி மாநகர் வேண்டாம், சிம்மாசனத்தில் அமர வேண்டாம், உந்தன் பாதுகையைத் தலையில் தாங்கிச் சென்று அதைப் பீடத்தில் அரசனென வைத்து உன் அரசை நடத்துவேன். பதினான்கு ஆண்டுகளில், அண்ணா, நீ வரவில்லையென்றால் நான் தீக்குளிப்பேன் என்ற பரதனை விட உயர்ந்தவரா இராமர்?
பிறர் தன்னைப் பார்த்துவிடக் கூடாதென்று புலர் பொழுதிற்கு முன்னர் சென்று ஆற்றில் குளித்து விட்டு ஓடி வருவான் அவன். செய்யாத செயலுக்காக வருத்தப்பட்டு, தன் நிலையைத் தாழ்த்திய பரதன் எங்கே? கற்பரசி எனத் தெரிந்தும் தீக்குளிக்க வைத்த இராமன் எங்கே?
பதினான்கு ஆண்டுகள் கடக்கப் போகின்றன. இந்நேரம் இராமர் வந்திருக்க வேண்டும்.. இல்லை, அவர் வரவில்லை என்று கலங்கிய பரதன் சத்ருக்கனனை தீ மூட்டச் சொல்லி அதில் இறங்கி உயிர்த் தியாகம் செய்வதற்காக அதை வலம் வருகையில் உயிர் காக்கும் உத்தமனாகிய அனுமன் ‘ஐயன் வந்தான்; ஆரியன் வந்தான்’ என்று நற்செய்தி சொல்லி கைகளால் தீயை அணைக்கிறார். அடையாளமாகக் கணையாழியைக் காட்டுகிறார். அதை வாங்கிக் கொள்ளும் பரதன் அடைந்த பரவசம் சொல்லில் அடங்காது. கம்பர் பாடுகிறார்:
“மோதிரம் வாங்கித் தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்.”
என்ன ஒரு காட்சி! இராமரைப் பிரிந்ததால் மெலிந்த உடலாகி, அவர் வரும்போது அந்த மகிழ்ச்சியை இவரால் தாங்க முடியுமா எனப் பேசியவர்கள் நாணும் படியாக பரதனின் உடல் பூரித்தது. இராமரின் மோதிரத்தை தன் முகத்தில் அணைத்துக் கொள்கிறான்; தன்னைத் தொழும் அனுமனை மீள மீளத் தொழுது துள்ளுகிறான்.
அரசு வேண்டாம், அதன் அதிகாரமும் வேண்டாம் என்ற உன்னத எண்ணம் கொண்ட பரதன் அதற்கு உடையவர் வருகையில் பெறும் மகிழ்ச்சி பொருளாசை மிகுந்த இந்த உலகிற்குச் சிறந்த படிப்பினை.
இராமர் காட்டிற்குப் போவதற்கு விடை பெறுகையில் அவன் குணநலன்களை அறிந்து தான் கௌசலை பேசுகிறாள் ‘இராமா, மூத்தவனுக்கு உரியதுதான் பட்டம். ஆயினும் பரதனோ மும்மையின் நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லவன்.’
‘முடி ஒன்றி மூவுகங்களும் ஆண்டு உன் அடியேர்க்கு அருள் செய்து அவன் பின் தொடர்ந்து படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற, அயோத்திய கோமானைப் பாடிப் பற.’-பெரியாழ்வார்.
நடுப்பக்கம் சந்திரமோகன்
திருவாரூர்- வீதியுலா
திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள திருவாரூர் கிளம்பிக் கொண்டிருந்தேன். அச்சமயம் பார்த்துதானா அந்த நண்பர் வரவேண்டும். வந்தவர் “என்ன திருவாரூரா! தியாக ராசரை தரிசித்து வாருங்கள்” என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் “ திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி” எனக் கூறி வைத்தார். நாம் திருவாரூரில் பிறக்கவில்லை, காசி போகவே வாய்ப்பில்லை. அப்ப முக்தியே கிடையாதா என்ற கவலை.
நல்ல வேளை உடன் இருந்தவர் ‘ தில்லையை காண முக்தி திருவண்ணாமலையை நினைக்க முக்தி’ என்றதோடு அல்லாது திருவெண்காடு தலத்திற்கு இந்த நான்கு சக்தியும் உண்டு என முடித்தவுடன்தான் முக்தி பெற்ற நிம்மதி. நினைப்பதற்கென்ன சிரமம். தினசரி அண்ணாமலையாரை நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் திருவண்ணாமலை சென்ற அப்பர் பெருமானோ “ இப்பூவுலகில் பிறந்து வாழ்ந்து மகிழ்தலே முத்திப் பேறு அடைதலை விட சிறந்தது” என்கிறார்.
அதுவும் சரிதான். இங்கு இன்னும் காண, கேட்க, கற்க உலகளவு நல்ல விஷயங்கள் உள்ளன. முக்தி பற்றி பின்னர் யோசிக்கலாம்.
ஓரு சில தடவைகள் ஆரூர் சென்றுள்ளேன். நினைத்தாலே ‘உடம்பு சிலிர்க்கும்’ என்பார்களே அந்த உணர்வு திருவாரூர் என்ற பெயர் கேட்டால் உண்டாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பெருமைகள் இருக்கும். ஆனால் ஊரே பெருமை பெற்றது என்றால் அது திருவாரூர்.
என் சிலிர்ப்புக்கு முதல் காரணம், ஆரூர் சென்றால் சுந்தரருக்காக ஈசனே பரவை நாச்சியாரிடம் ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் நள்ளிரவில் நடந்து தூது சென்ற வீதியை மிதிக்கும் புண்ணியம் கிடைக்கும்.
அன்றே நட்புக்கு இலக்கணம் வகுத்தான் ஈசன். நட்பிற்காக, நண்பனை மனதிற்கினியவளுடன் சேர்த்து வைக்க பரவையாரிடம் முதல் தடவை தனியனாய் இரண்டாவது தடவை பூத கணங்களுடன் தூது சென்றான்.
சுந்தரரும் இறைவனை நண்பனாக பாவித்து வேலை வாங்கினார். சுந்தரர் நண்பனாய் அன்பு காட்டி பாடிய தேவாரத்திற்கு ‘ஸக மார்க்கம்’ என்பது பெயராம்.
பிள்ளை போல் அன்பு காட்டி ஞான சம்பந்தர் பாடியது ‘புத்ர மார்க்கம்’
ஊழியனாய் அன்பு காட்டி அப்பர் பாடியது ‘தாச மார்க்கம்’.
மாணாக்கனாய் அன்பு காட்டி மாணிக்க வாசகர் பாடியது ‘சிஷ்ய மார்க்கம்’ என்றனர் பெரியோர்.
சுந்தரரை நண்பனாய் உலகிற்கு காட்ட திருமணத்தை நிறுத்தி, பொய் சாட்சியாக ஏடுகளை உண்டாக்கி ஆடிய நாடகத்தை நினைத்து அசை போடலாம்.
ஈசன் தன் நண்பனாகிய சுந்தரர் சங்கிலியாரை ( அநிந்திதையார்) திருவொற்றியூரில் மணம் செய்து பின் நீங்குவதை தடுத்து நிறுத்த கருவறையிலிருந்து மகிழ மரத்தடியில் வந்தமர்ந்த விளையாட்டை நினைந்து மகிழலாம்.
சுந்தரர் சேகரித்த பொற்குவியலை பத்திரமாக விருதாசலத்திலிருந்து ஆரூர் கொண்டு செல்ல, ஈசன் விருதகிரி மணிமுத்தாற்றில் வீச வைத்து திருவாரூர் கமலாலயம நீரில் கொண்டு சேர்த்த அற்புதம் கொண்ட தெப்ப குளத்தை தரிசிக்கலாம். கோவிலின் பரப்பளவு 32 ஏக்கர் நிலமெனில், கமலாலயம் திருக்குளத்தின் பரப்பும் 32 ஏக்கராம். “ கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி” என பெருமையாக கூறுகிறார்கள்
நண்பர்கள் மட்டுமல்ல தன் தொண்டர்களும் என் உயிரே என உலகிற்கு உணர்த்த சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு மூல நூலான திருத்தொண்டத்தொகை பாட ஈசன் தன் வாயால் “ தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்து அடியவர்களின் பெருமையை பாட வைத்த ஊர் ஆரூர்.
உமையவளின் தோழிகளான அநிந்திதை, கமலினி என்ற இருவருள் பரவை நாச்சியார் என்றரியப்பட்ட கமலினியார் அவதரித்த ஊர்.
சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம், பெரிய கோவில் என்றால் திருவாரூர். கோவில் தோன்றி 5000 ஆண்டுகளுக்கும் மேல் என்கின்றனர். இறைவன் வந்தமர்ந்தது எப்பொழுது என ஞான சம்பந்தாராலேயே கூற முடியாமல் பாடல்களில் ‘நீ எப்பப்பா இங்கே கோவில் கொண்டாய்’ என கேட்கிறார். அங்கு பாடும் தேவாரத்தில் “திருச்சிற்றம்பலம்” கூறப்படுவதில்லையாம், காரணம் சிதம்பரத்திற்கும் முன்னர் ஈசன் அமர்ந்த இடமாம். நாம் யார் கோவிலின் வயதை அளப்பதற்கு. பெரியவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வோம்.
பஞ்ச பூத தலங்களில் பூமிக்கு உரியது ஆரூர். காஞ்சிபுரம் என்று எங்கோ படித்த ஞாபகம்.
இங்கும் ஈ்சன் ஆடினார். அவர் ஆடும் நடனத்திற்கு ‘அஜபா நடனம்’ என்பது பெயராம். இன்றும் விஷேச காலத்தில் ஆடி மகிழ்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க ஆசை.
திருவாரூரில் அதிசயங்கள் பல நிகழ்த்திய ‘ தியாகராசர்’ ஊருக்கே ராஜாவாம். அந்த ராசருக்கு ஆசியாவிலேயே பெரிதான ‘ஆழித் தேர்’. திருவாரூர் தேரழகு என படித்துள்ளோம், தேர் ஆடி அசைந்து வரும் அழகு மேனி சிலிர்த்தலுக்கு மற்றொரு காரணம்.
அவர் நகர் வலம் தனியே வரமாட்டார். அனைத்து பரிவாரங்களுடன்தான் வருவார். கண்கொள்ளா காட்சி.
வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர் தேரழகு
திருவடை மருதூர் தெருவழகு
மன்னார்குடி மதிழலகு
என அனைத்தையும் அனுபவித்தவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
ஈசன் அரசாட்சி செலுத்துமிடம்.
வேறென்ன பெருமை? இசை அரசர்களான மும்மூர்த்திகளும் அவதரித்த ஊர் திருவாரூர். ஒருத்தர் திருச்சியிலும் அடுத்தவர் கோவையிலும் பிறந்திருக்க கூடாதா, இல்லையே. மூவரும் அவதரித்த மண். அதுதான் திருவாரூர் மண்ணின் பெருமை.
தன் வாரிசுகளுக்காக எதையும் தியாகம் செய்யும் ஆட்சியரை நாம் இன்று காண்கிறோம். ஆனால் நீதி காக்க மனு நீதிச்சோழன், தன் வாரிசையே தியாகம் செய்தது திருவாரூர் வீதியில்.
ஈசன் பீடு நடைபோட்டு நடந்த வீதி,
சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரின் கால் தடம் பதிந்த வீதி.
எந்தை அருணகிரி நாதர் வலம் வந்த வீதி.
சங்கீத மும்மூர்த்திகள் பரமன், திருமால் புகழ் பரவசத்துடன் பாடி நடமாடிய வீதி.
நீரில் விளக்கேற்றிய நமிநந்தியடிகள் முதலான நாயன் மார்கள் ஓடியாடி தொண்டு செய்த வீதி.
மனுநீதிச் சோழன், அமைச்சர் தயங்கியதால் தானே தன் மகனை தேரேற்றி கொன்ற வீதி.
தேவேந்திரனும், தேவர்களும் ஈசனை காண நடந்த வீதி.
உமையவளின் உன்னத தோழி கமலினி அவதரித்த மாளிகை கொண்ட வீதி.
இவ்வளவு புண்ணியம் பெற்ற வீதியில் நான் வீதியுலா செல்ல உள்ளேன்.
‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன் யான்” என ஞான சம்பந்தரே கூறும் பொழுது, திருவாரூர் மண்ணை மிதித்தால் மேனி சிலிர்ப்பது நியாயம்தானே.
குறைகள் இருந்தும் புன்னகை! – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
அந்தக் கல்வி நிலையத்தில் எல்லாவிதமான குழந்தைகளையும் பார்க்க முடியும். அதாவது, அங்கங்கள் நன்றாக இருப்போருடன், ஏதோவொரு அங்கங்களிலோ, அல்லது மூளை வளர்ச்சியிலோ குறைபாடு உள்ளவர்களும் சேர்ந்திருப்பார்கள். இந்த கல்வி ஆலயத்தைப் பொருத்தவரை, பிள்ளைகள் ஆரம்பக் காலத்திலேயே வித்தியாசமானவர்களோடு ஒருவருக்கொருவர் கூடிப் பழகப்பழக, மனிதநேயத்தோடு வளருவார்களே தவிர. குறைபாட்டைப் பார்த்து வேறுபடுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த வகையான கல்விக்கூடமே “இன்க்ளுஸிவ் ஸ்கூல்” (Inclusive School) எனப்படும்.
அதனால் தான் இங்கே கிரி, உத்திரா சகோதர-சகோதரியைப் பார்க்க முடிந்தது. வெளி உலகத்தினர், இருவரின் மூளை வளர்ச்சி குன்றி இருப்பதையே பார்த்தார்கள். அங்கு நான் கல்வி மற்றும் மனநல ஆலோசகராக இருந்ததால் எனக்கு இவர்களைக் கண்டு பழக வாய்ப்பு கிடைத்தது..
எந்நேரமும் புன்னகை பூத்த முகங்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைப் பார்த்தால் கிரி-உத்திரா இரட்டைக் குழந்தைகளோ என்று தோன்றும். ஒருவேளை உத்திரா ஒன்பது வயது, கிரி எட்டு வயது என்பதினால் இந்த நெருக்கமோ? ஒருவருட வித்தியாசம் உள்ள குழந்தைகள் இவ்வாறு இருப்பார்கள் எனச் சொல்வதுண்டு. இங்கு வேறொரு அம்சமும் உண்டு. சட்டென உத்திரா தடுக்கி விழுந்து விடுவாள். அக்காவைப் பாதுகாக்க, கூடவே கிரி இருப்பான். உத்திரா தன் தம்பியின் வலிப்பு நோய் மருந்தைக் கையோடு வைத்துக் கொள்வாள். கிரியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என இவளுடைய நோக்கம்.
இருவரையும் பார்ப்பதிலேயே ஒரு அலாதியான சுகம்!
இவர்களின் தந்தை அச்சகம் வைத்திருந்தார். கோபக்காரர். அதுவும் அவர் கணித மேதை, இருப்பினும் இதுபோன்ற மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள். அவருக்குக் கணிதத்தை மேற்கொண்டு படிக்கவோ பயிலவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மாறாக, குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்த அச்சகத்தை அவர் நடத்தி வந்தார்.
அம்மா பாட்டு டீச்சர். வீட்டில் ஏதேனும் நல்லது, உயர்வானது என்றால் அது கணவனால் தான் என்பாள். தாழ்வு, குறைபாட்டைத் தன் தோளில் சுமந்து கொள்வாள். ஊர் உலகத்திற்குத் தான் செய்த ஏதோ தவறால் தான் கிரி, உத்திரா இவ்வாறு பிறந்தார்கள் என்பாள்.
நான் பெற்றோருக்கென, இதுபோன்ற பலரை உள் அடங்கிய கல்வி நிலையத்தின் தேவைகள், அதனால் உருவாகும் மனப்பான்மை பற்றிய உரையாடல்கள் நடத்துவேன். ஆசிரியர்கள் மட்டுமின்றி செவிலியர், பிஸியோதெரபிஸ்ட், ஆக்கேப்பேஷனல் தெரப்பிஸ்ட், ஸ்பெஷல் எட்யூக்கேட்டர், மற்றும் மன நல ஆலோசகராகிய நான் அனைவரும் இணைந்து உருவாக்கும் கல்வித் திட்டங்களை வர்க்ஷாப்பில் கண்ணோட்டமாகக் காட்டினோம். அப்படி ஒரு உரையாடலுக்கு கிரி-உத்திராவின் பெற்றோர் வந்தபின், அவர்களை இங்குச் சேர்க்க முடிவெடுத்தார்கள்.
இதுவரை கிரி-உத்திரா இணைந்து இருந்ததால், அவர்களிடையில் வயது வித்தியாசம் இருந்த போதிலும், அவர்களை நாங்கள் பிரிக்க விரும்பவில்லை. இருவரும் நல்ல உயரம். அவர்களின் மனநிலை ஆறு-ஏழு, உயரமோ அதற்கு மேற்பட்ட நிலை. அதனால் ஒன்றாம் வகுப்பு சரிவராது என்று இரண்டாவது வகுப்பில் அமர்த்தினோம்.
மற்ற வகுப்பு போலவே இங்கேயும் கிரி-உத்திரா போல் வகுப்பில் மற்றும் மூன்று பேர் இருந்தார்கள். அவர்களின் தேவைகளைப் பார்த்துக் கொள்ள, ஆசிரியருடன் ஸ்பெஷல் எட்யூகேட்டரும் இணைந்து செயல்பட்டார். வகுப்பின் ஒவ்வொரு குழந்தையின் திறன்கள், வளர்ச்சி விகிதம் என எடுத்துக் கொண்டு அவர்களின் பிரத்தியேக பாடத்தின் தாள்கள் தயாரிப்பார்கள். தினந்தோறும் கலந்துரையாடி இந்தத் தயாரிப்பு நடந்துவரும். ஒவ்வொரு வகுப்புக் குழந்தையைப் பற்றிய முழு தகவல்கள், நிலைமையைப் புரிந்து வைத்திருந்ததால் என்னுடைய பங்களிப்பும் எப்போதும் இருக்கும்.
வீட்டைப் பொருத்தவரை கிரி-உத்திரா உதவுவது மிகச் சிறிய அளவில் மட்டுமே. தந்தைக்கு இருவரைப் பார்த்தால் வெறுப்பு தட்டும். தாயாருக்கு வீட்டு வேலை, பாட்டு வகுப்பில் நேரம் ஓடி விடும். அதனால் இவர்களுக்கு பியர் ஷெடோயிங் (Peer Shadowing) அதாவது நிழலைப் போல மற்றொரு சமவயதினரோடு கூடிச் செய்து, அதிலிருந்து கற்றுக் கொள்வது – கற்றுத் தருவது என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். இதில் என்ன அழகு என்றால், எந்த மாணவரை கிரி-உத்திராவுடன் அவ்வாறு அமைத்தோமோ, அவர்களுக்கும் இந்த இருவரைப் போல முகம் புன்னகை பூக்க ஆரம்பித்தது!
கிரி-உத்திரா தாங்கள் கற்பதில் மற்ற மாணவர்களை விடப் பின்தங்கி இருப்பதை உணர்ந்தார்கள். இருவரும் முயற்சி செய்வதில் கொஞ்சமும் சலித்துக் கொள்ளாமல் செய்பவரே. எதைப் படித்தாலும் அதற்குக் கூடுதலான பயிற்சி செய்பவர்கள். அவர்கள் ஆர்வத்தைப் பார்த்து, சில புது மார்க்கத்தை உருவாக்கப் பரிந்துரை செய்தேன்.
அவற்றை உபயோகிக்க, மற்றும் இந்த “இன்க்ளுஸிவ் ஸ்கூல்” அமைப்பின் தேவையைப் புரிந்து பணிபுரிய, மாதாமாதம் ஆசிரியர்களுக்குப் பல வகையான நிபுணர்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் ஆராய்ச்சி விதிவகைகளை அறிந்து உபயோகிப்பது என்று வடிவமைத்தேன்.
வகுப்பில் உள்ள நளன், சம்யுக்தா குறிப்பாக உத்திரா விழும்போது நகைப்பதுண்டு. பல முறை அவளைச் சீண்டுவதற்காகத் தள்ளி விடுவதும் நடந்துகொண்டு இருந்தது. அன்றொரு தினம் அவர்கள் வகுப்பில் எனது பயிற்சி இருந்ததால் இதைப் பார்க்க நேர்ந்தது. விசாரித்ததில், நளன்-சம்யுக்தா இருவரின் பெற்றோரும் இவ்வாறு நடக்கும் போது சிரிப்பதால் குழந்தைகள் இருவரும் இது தவறில்லை என்றே எடுத்துக் கொண்டார்கள் என்று தெரிய வந்தது.
இதைத் திருத்தி அமைக்க, நளன்-சம்யுக்தா இருவருக்கு மட்டும் இல்லாமல், அதேபோல் கிரி-உத்திராவை மையமாக வைக்காமல், முழு வகுப்பிற்கு இதைப் பற்றிய பல தரப்பு விஷயங்களைச் சொல்லித் தரத் தேவை எனத் தொடங்கினேன். குறிப்பாக, இவ்வாறு செய்கையினால் நேரும் உணர்வுகள், விளைவுகளை, பாதிப்பை எடுத்துச் சொன்னேன். இவற்றைப் புரியவைக்கப் பல விளையாட்டுகள், கலந்துரையாடல்கள், விளக்கங்கள் மூலமாக மற்றவரைப் புண்படுத்தும் என்று உணர்த்தி, முழு வகுப்புக்கும் பல ஸெஷன்கள் செய்தேன்.
பலன் தென்பட மெதுவாகக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் ஒரு வாரத்திற்குப் பிறகு, மீண்டும் நளன், சம்யுக்தா அதே மாதிரி செய்ய ஆரம்பித்தார்கள். வேறு எங்கேயோ பிரச்சினை உருவாகிறது என யூகித்து அவர்கள் இருவரின் தாய்மாரை அழைத்துப் பேசினேன். என் கணக்கு சரியாக இருந்தது. அவர்கள் இருவரும் பலகாலமாகத் தோழிகள். இருவரும் தான் படிக்கும் காலத்தில் வகுப்பில் மற்றவரைக் கேலி-கிண்டல் செய்து வந்ததைப் பெருமையாகப் பகிர்ந்தார்கள். பிள்ளைகள் செய்வதை ஊக்குவித்தார்கள்.
இவர்களைப் போல வேறு யாரெல்லாம் இருக்கக் கூடுமோ என்ற எண்ணத்தில், பள்ளி ப்ரின்ஸிபாலுடன் உரையாடி அனைத்துப் பெற்றோரையும் ஸெஷனுக்கு அழைக்கச் செய்தேன். இது மட்டுமில்லாமல், முழு பள்ளியும் இதில் கலந்து கொள்ள ஒரு திட்டம் தீட்டி பள்ளி நிர்வாகிகளுக்கும் காட்டுவதற்குத் தயார் செய்தேன். எங்கள் துறையில் மிக மேதாவியும் நிபுணருமான மைக்கேல் ரட்டர் (Michael Rutter) அவர்களுக்குச் செய்தி அனுப்பி வைத்தேன். அந்தக் காலத்தில் கடிதம் தான். பரப்பாக இருப்பவர்கள் எப்போதுமே காக்க வைக்க மாட்டார்கள் என்பதற்கான முன் உதாரணம் இவர். எழுதியதைப் படித்து, செயலைப் பாராட்டி, தன்னுடைய அபிப்பிராயம் கூறி பதிலளிக்க, மனநிறைவுடன் ஆரம்பித்தேன்! பல மாதங்களுக்கு இதைச் செய்ய, ரட்டரின் அறிவுரையுடன், பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது.
இனி வரும் பெற்றோருக்குப் புரிதல் இருக்க ஒரு கற்றல் குழுவை உருவாக்கினேன். வாரம் ஒரு முறை சந்தித்துப் படித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இதை வரவேற்றேன். என்னுடைய குறிக்கோள் எப்போதுமே, என்னை அணுகுவோரைத் தானாக இயங்கச் செய்வதே! நான் நினைத்ததைவிட நன்றாக வளர்ந்ததால் நாளடைவில் கல்வி நிலையத்தில் இந்த பகிர்தலுக்கு ஒரு மூலையை ஒதுக்கி விட்டேன். பகிரப் பகிர, நாளடைவில் ஆசியர்களும் பங்கு கொள்ள ஆரம்பித்தார்கள். தீட்டிய திட்டம் கண்ணெதிரில் உருவெடுத்தது.
நளன்-சம்யுக்தா பெற்றோரின் மாறுதல் பிள்ளைகளிடமும் தென்பட ஆரம்பித்தது. இப்போதெல்லாம் இவர்கள் கிரி-உத்திரா இருவருடனும் மட்டும் அல்லாமல் மற்றவருடனும் சுமுகமான முறையில் நடந்து கொண்டார்கள்.
நளன், சம்யுக்தா சுதாரித்தது ஒரு பாதி. மறு பாதி, சிரிக்கும் பூக்களான கிரி உத்திரா பெற்றோரிடமும் மாறுதல் தென்பட்டது! குழந்தைகள் இருவரும் ஆசிரியர் வகுத்த வகுப்பு மாணவர்களுடன் எழுதுவது, படிப்பது, கைவேலை எனக் கூடிச் செய்தார்கள். இதனால் சுகாதாரம், சமூகத்தில் நடந்து கொள்வது எனப் பல வகையான கற்றல் நேர்ந்தது.
இதன் எதிரொலியாக வீட்டிலும் கிரி-உத்திராவிடம் மாற்றத்தைப் பெற்றோர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். தேர்ச்சி பெற, அவர்களுடன் உரையாடத் தயாரானார் அப்பா. அம்மாவும் தன்னால் முடிந்தவரை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசனைகளுடன் முன் வந்தாள்.
கிரி-உத்திரா பக்கத்தில் உள்ள கோயில் சென்றால், அங்கிருந்து அழைத்து வருவது கடினமாக இருப்பதாகப் பெற்றோர் கூறினார்கள். அங்கு கன்றுக்குட்டிகளுக்குப் புல் தருவதை இவர்கள் ஆசையாகச் செய்வதைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.
இதையே மையமாக வைத்து இருவரும் அந்த வயதில் என்ன உதவு முடியும் என்பதைப் பெற்றோரிடம் கவனித்துக் குறித்து வரப் பரிந்துரைத்தேன். செய்து வந்தார்கள். அதிலிருந்து பூக்களை விற்பனை செய்பவர்களுக்கு பூ, பழம், வெற்றிலையை அன்றைய கணக்குப் பாடத்தில் எந்த எண்ணை கற்றுத் தந்தாரோ அவ்வாறே அடுக்கி வைப்பது என்ற பழக்கும் உருவானது. பக்கத்திலுள்ள ஐவருக்கும் குழந்தைகள் இவ்வாறு செய்து கொடுத்தார்கள். பெற்றோரையே அவர்களிடம் பேசி விவரிக்கச் செய்தேன்.
அது வாரத்தில் நான்கு முறை. மற்ற நாட்களில் தந்தையின் அச்சகத்தில் இது போன்ற சேகரிப்பு, வருவோரை உட்காரச் சொல்வது, என்று செய்தார்கள். முதலில் அவர்களால் செய முடியுமோ என்ற சந்தேகம் இருந்தாலும், போகப் போகக் குழந்தைகளுக்குப் பொறுப்பு கொடுத்தால் எத்தனை நேர்த்தியாகச் செய்கிறார்கள் என்பதைத் தந்தை மட்டும் அல்ல ஊழியர்களும் பார்த்தார்கள்.
இத்துடன் நிறுத்தி விடாமல் வளர்ச்சி அடைய வேறு எவற்றை இவர்களைச் செய்ய வைக்கலாம் எனப் பட்டியல் தீட்டப் பரிந்துரை செய்தேன். கிரி-உத்திராவின் பல திறனைக் கவனிக்க நேர்ந்தது.
வீட்டில் பல உதவிகளைச் செய்வதைக் கவனித்தார்கள். தானாகச் சாப்பாடு எடுத்து வைக்க உதவுவது, சாப்பிட்டு எழுந்திருக்க உத்திரா-கிரி ஒருவரையொருவர் உதவத் தட்டுகளைச் சுத்தம் செய்து வந்து வைப்பது. தூசி தட்ட முயல்வது, காய்ந்த துணிகளை மடிக்க முயல்வது, வாசலில் கோலம் போடுவது எனப் பல. கிரி-உத்திரா போன்ற பிள்ளைகள் செய்யச் செய்யத் தேர்ச்சி பெறுவார்கள். அதற்குப் பல திட்டங்களை வகுத்து அதனைத் தொடர்ந்து செய்ய ஊக்குவித்தேன். பெற்றோர்கள் தங்களது பங்களிப்பை வழங்க, கல்வி நிலையத்திலும் தீட்டிய திட்டங்களை எடுத்துச் செல்ல, அதை நான் மைக்கேல் ரட்டருடன் பகிர்ந்து கொண்டேன். இனிமேல், என் பங்கு பின்னணியில் தான்!
மனமிருந்தால் மார்க்கமுண்டு – நித்யா சங்கர்
‘
ஓ மை காட்.. அருணாவும், அகிலேஷ¤ம், குழந்தை நிம்-
மியும் ‘எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில்
அட்மிட் பண்ணியிருக்காங்கன்னு’ நேற்றைக்குத்தான் வந்தது
போல் இருக்கு.. ஆனா இரண்டு வாரம் ஓடி விட்டது’ என்றார்
மாதவன்.
‘ஆமாம்..’ என்றாள் அவர் மனைவி மீனாட்சி.
மாதவனும், மீனாட்சியும், மகள் அருணாவும், மாப்பிள்ளை அகிலேஷ¤ம், பேத்தி நிம்மியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘ஆமாம் அப்பா.. நாட்கள் போனதே தெரியலே.. பட், என்ன.. டென்ஷன் மிகுந்த நாட்கள்’ என்றாள் அருணா.
‘ஆமாம்..’ என்றான் அகிலேஷ்.
‘அப்பா… நீங்களும், அம்மாவும் இங்கே வைன்ட் அப் பண்ணி சென்னைக்கு வந்து எங்க கூடவே இருந்துடுங்க..’என்றாள் அருணா திடீரென்று.
‘எஸ் மாமா… அருணா சொல்றது ஸென்ட் பர் ஸென்ட் கரெக்ட்..’ என்றான் அகிலேஷ்.
திடுக்கிட்டு ஒரு நிமிடம் அவர்களையே பார்த்தார் மாதவன்.
‘என்னம்மா.. திடீரென்று… இதப் பார் அருணா.. எனக்காகட்டும்,அம்மாவுக்காகட்டும்.. உடம்பு ஒரு நாள் போல் இன்னொரு நாள் இருக்கிறதில்லே.. வயசாயிடுத்து இல்லையா. ஏதோ பிராப்ளம் கூடவே வந்துட்டிருக்கு..’
‘அதனாலதான் அப்பா நான் இதை ஸஜஸ்ட் பண்ணறேன்.. நீங்க எப்படி இருக்கீங்களோ.. அம்மா எப்படி இருக்காங்களோன்னு டெய்லி அங்கே உட்கார்ந்து கவலைப் பட்டுட்டு இருக்கிறதுக்கு நீங்க எங்க கண் முன்னாலேயே இருந்தால்
ரொம்ப நிம்மதியா இருக்கும் இல்லையா..?’
‘இதோ பாரம்மா.. இப்போ நீங்க ஹாயா பெரிய கவலைகள் ஒண்ணும் இல்லாம காலத்தை ஓட்டிட்டிருக்கீங்க.. நாங்களும் இந்த உடம்போட அங்கே வந்து இருந்தோம்னா உங்களுக்குப் பெரிய தொந்தரவு ஆகிடும்மா..”
‘அப்படி ஒண்ணும் இல்லேப்பா.. சென்னையில் மெடிகல் ·பெஸிலிடீஸ் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி.. அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்..’
சில நிமிடங்கள் யோசித்தவாறு அமர்ந்திருந்தார் மாதவன்.
‘என்ன மாமா… ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்களே..’ என்றான் அகிலேஷ்.
மெதுவாகச் சிரித்தார் மாதவன். ‘அருணா.. அகிலேஷ்.. இதுலே விந்தையான விஷயம் என்னன்னா மனுஷன் வயதாக வயதாக குழந்தையாக மாறி விடுகிறான்.. குழந்தையைப் போல் பிடிவாதங்கள்.. கோபங்கள்.. அடம் எல்லாம்
வந்துடுது..’
‘குழந்தையா மாறினா ரொம்ப ஈஸி தானேப்பா.. நானும் நிம்மியை வளர்த்திட்டுத்தானே இருக்கேன்.. அவளை மானேஜ் பண்ணலியா..? அவள விடவா நீங்க அடம் பிடிக்கப் போறீங்க..’ என்று சிரித்தாள் அருணா.
அவர்களைப் பார்த்து மெதுவாகச் சிரித்தார் மாதவன்.
‘அருணா.. எங்களுக்கு ப்ராக்டிகலா ஒரு வேலையும் இல்லையா.. ஐடில் மைன்ட் ஈஸ் டெவில் வர்க்ஷாப்ங்கற மாதிரி வேண்டாததையெல்லாம் நினைச்சுக்கிட்டே
இருக்கும். அதன் தாக்கம் சுற்றியிருக்கிறவங்களையும் தாக்கும்..’
‘அப்படி என்னதான்பா தாக்கும்?’
‘வயதாகறதாலே உடம்புலே ஹார்மோன், ப்ரஷர் கோளாறுகள் வந்து போகும். சட் சட்டுன்னு ஒண்ணுமில்லா ததற்கெல்லாம் கோபம் வரும். நாங்க ஒரு தடவ சொல்லி நீங்க உங்க மற்ற வேலை பளுவினாலே உடனே செய்யா விட்டால் கோபம் வரும், எரிச்சல் வரும். கத்தத் தோணும். சில நாட்கள் உங்க வேலை பளுவினால் எங்களுடன் பேசாமலே இருக்கலாம். அப்படி இருந்திட்டா ‘பார்த்தியா.. நம்மள அலட்சியப் படுத்தறாங்களோ..’ன்னு தோணும். ஏன் டி.வி.யையே எடுத்துக்கோயேன். எனக்கும், அம்மாககும் சில ப்ரோக்ராம்களைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோணும். சின்னஞ் சிறிசுகளான உங்களுடைய டேஸ்ட் வேறயா இருக்கும். ஒரு நாள் விட்டுக் கொடுப்பீர்கள். ரெண்டு நாட்கள் விட்டுக் கொடுப்பீங்க..பெர்மனன்டா விட்டுக் கொடுக்கணும்னா நேச்சுவரலா உங்களுக்கும் கோபம் வரும்.
அதே போல் நாங்கள் விட்டுக் கொடுக்கணும்னா எங்களுக்கும் கோபம் வரும். மனஸ்தாபங்கள் உண்டாகும். எங்க ரெண்டு பேருக்கும் காதுலே கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. அதனாலே டி.வி.யை கொஞ்சம் பெரிதாக வைத்துக் கொள்ள வேணும். அது படித்துக் கொண்டிருக்கிற நிம்மிக்கும், ஏன் ஏதாவது முக்கியமா வேலை செய்து கொண்டிருக்கிற உங்களுக்கும் சங்கடமாகப் போய் விடும். சொல்லப் போனால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. இருந்தாலும் இப்படியே ஒரு நிர்ப்பந்தத்துலேயே இருக்கணும்னா யாருக்குமே நிம்மதியா இருக்க முடியாது. ப்ரஷர் ஜாஸ்தியாகி ஜாஸ்தியாகி ஒருநாள்
வெடித்துச் சிதறி விடும்.
‘இன்னொரு வயசுக் கோளாறு.. மறதி.. உன்னிடம் ஒரு வேலையைச் சொல்லி இருப்பேன். அரை மணி நேரத்திலே நான் சொல்லி இருந்தது மறந்து விடும். எகெய்ன் சொல்வேன் வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உனக்கு ‘இந்த அப்பா எத்தனை தடவை சொல்வார்’ என்று அலுப்பு தோன்றும். அதை நீ சிறிது கடுமையாக ‘அதைத்தான் சொல்லிட்டீங்களே.. எத்தனை தடவை சொல்வீங்க’ன்னு எரிச்சலோடு சொல்லி விட்டால், என் இதயம் ஒரு நிமிடம் நின்றது போல் ஆகி விடும். சில சமயம் என் இயலாமையை நினைத்து அழுகையே வந்து விடும். உங்களுக்குப் பிடித்த டிஷஸ் எங்களுக்கு ஒத்துக்காது. எங்க பத்தியச் சாப்பாட்டையே நீங்க சாப்பிட்டிருக்க முடியாது.
நாங்க படுத்துட்டிருக்க நேரத்திலே உங்களுக்கு டி.வி.யை அலற விடத் தோணும். நீங்க மும்முரமாக ஆபீஸ், பள்ளி வேலை செய்து கொண்டிருக்கிறபோது எங்களுக்கு டி.வி. பார்க்கலாம்னு தோணும். இதெல்லாம் ப்ராக்டிகலா நடக்கலாம்னு சட்டென்று எனக்குத் தோணின சில விஷயங்கள். மேல்வாரியாப் பார்த்தா உப்புப் பெறாத விஷயங்கள். ஆனால் காலப் போக்கில் ஒருவனுடைய உள்ளத்தையே உலுக்கக் கூடிய விஷயங்கள். இதைப் போல தினப்படி ஏதாவது மோதல்கள் வந்து கொண்டே இருக்கும். போகப் போக எதற்கடா அனாவசியமா இப்படி ஒரு முடிவு எடுத்தோம்னு உங்களுக்கு தோண ஆரம்பிச்சிடும். இதெல்லாம் வேணுமா,,? உங்க நிம்மதி குலையணுமா..?’ என்றார் மாதவன்.
பெரிதாகச் சிரித்தாள் அருணா. ‘நீங்க சொன்ன மாதிரி குழந்தைத்தனமான விஷயங்கள்தானப்பா நீங்க சொன்னதெல்லாம். வயதாக வயதாக உங்களுக்கு குழந்தையின் குணம் அதிகம் இருந்தாலும் நீங்கள் குழந்தையில்லையப்பா.
நல்ல பக்குவம் கொண்ட பெரிய மனுஷன்… என்ன.. நாங்க அந்தக் குழந்தையை சிறிது தட்டி உட்கார வைத்து விட்டு உங்க அடல்ட் குணத்தை எழுப்பணும் பக்குவமாக… அவ்வளவுதான்.. அதையெல்லாம் சமாளிச்சுக்கலாம்.. அப்பா திறந்த மனதோடு உட்கார்ந்து பேசினா தீர்க்க முடியாத பிரச்னைகளே இந்த உலகத்துலே இல்லே…’ என்றாள்.
‘எனக்கும் நீங்க சொன்னதெல்லாம் ஈஸியா மானேஜ் செய்யக் கூடியதுதான்னு தோணுது.. அதனாலே கவலையே படாதீங்க.. பாக் பண்ண ஆரம்பியுங்க.. சென்னைக்கு வந்து எங்களுடனேயே இருந்துடுங்க..’ என்றான் அகிலேஷ்.
ஒரு நிமிடம் அவர்கள் இருவரையுமே மாறி மாறிப் பார்த்தார் மாதவன்.
பின் திடீரென்று. ‘நீங்க ரெண்டு பேரும் வரப் போகும் பிரச்னைகளை பக்குவமா, சுமுகமா தீர்க்கலாம்னு திடமா சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.. ஆனாஎனக்கு ஒரு குறை.. ‘பக்குவமா மானேஜ் பண்ணலாம் நீங்க எங்களோடு வந்துடுங்க’ என்று அகிலேஷின் பாரென்ட்ஸைப் பார்த்து உங்க ரெண்டு பேருக்கும் ஏன்மா சொல்லத் தோணலே.. அவங்களுக்கும் வயசாயிடுச்சு.. அவங்களும் எங்க நிலைமையிலேதானே இருப்பாங்க’ என்றார் மெதுவாக.
சுருக்கென்றது அருணாவிற்கு. ‘ஆமாம்.. இதுவரை நமக்கேன் தோணவே இல்லை.. அகிலேஷின் பாரென்ட்ஸ் அங்கே கிராமத்திலே இருக்கும்போது நாம் மட்டும் எப்படி அவர்களுடன் இருப்பது என்று சங்கடப் படுகிறாரோ அப்பா..’
இந்தத் திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை அகிலேஷ். ‘நான் என்னுடைய பாரென்ட்ஸை நம்முடனே வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னால், அருணா என்னவெல்லாம் பிரச்னைகள் உண்டாகும்னு சொல்வாளோ, அதை அப்ப-
டியே இப்ப மாமா சொல்ல அவள் எல்லாத்தையும் மானேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டா.. ஸோ லைன் ஈஸ் க்ளியர்.. கடவுளே.. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அவர்களும் நம்முடன் இருக்க மாட்டார்களா..’ என்ற ஏக்கம் அவன் மனதிலே இருக்கத்தான் செய்தது.
அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார் மாதவன். அவர்கள் மனதினிலே ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை ஒருவாறு அனுமானித்து கொண்டு, ‘அதற்கும் ஒரு வழிஇருக்கு.. உங்க வீட்டு மாடி போர்ஷன் காலியா இருக்கு இல்லையா.. அதுவும் டூ பெட் ரூம் வீடுதானே.. நீங்க அதை வாடகைக்கு வெளியில் கொடுக்க வேண்டாம்.. நீங்க மாடி போர்ஷனை யூஸ் பண்ணிக்குங்க.. கீழ் போர்ஷனை எனக்கும் சம்மந்திக்கும் விட்டுக் கொடுத்துடுங்க. நாங்க அங்கே இருந்துக்கறோம்.. நீங்க வேலைக்குப் போன டைம்லே எங்களுக்கும் போரடிக்காது.. நாங்களும் பாலிடிக்ஸ், ஸ்போர்ட்ஸ் பத்தி பேசிக் கொண்டு காலத்தை ஓட்டுவோம்.வித் ஒன் கன்டிஷன்..
நாங்க இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிற வாடகையை நிம்மி பேர்லே ஒரு அக்கவுன்ட் ஓபன் பண்ணி மாதா மாதம்டெபாஸிட் பண்ணுவேன்.. அது அவள் கல்யாணத்துக்கும், மத்த விசேஷங்களுக்கும் உதவியா இருக்கும். கூட்டு குடும்-
பமா இருந்தாலும், நீங்க ஆஸ் யூஷ்வல் தனியா மாடியிலே டிஸ்டர்பன்ஸ் இல்லாம இருக்கலாம். அகிலேஷ் நீங்க உங்க பாரென்ட்ஸ் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணுங்க.. எந்த டெஸிஷன் ஆனாலும் எமோஷனலா எடுக்காதீங்க.. ப்ராக்டிகலா முடியுமான்னு யோசித்து முடிவு பண்ணுங்க. கடைசியிலே புலி வாலைப் பிடித்த கதையா இருக்கக் கூடாது.. நல்லா யோசித்து முடிவு பண்ணுங்க..’ என்று சொல்லி எழுந்து அவர் அறைக்குப் போனார். மீனாட்சியும் உடன் சென்றாள்.
‘என்னங்க.. சம்மந்திகள் ஒரே வீட்டில் இருப்பது சரியா வருமா?’ என்றாள் மீனாட்சி சிறிது கவலையோடு.
‘ஏன் வராது மீனாட்சி.. நம்ம சம்மந்திகள் ரெண்டு பேரும் நல்ல மனுஷங்க.. அவர்களுக்கு ஒரே பையன்.. நமக்கு ஒரே பெண்.. வயதாக வயதாக நாம் யாராவது கூட இருந்தால் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். அருணா சொன்ன மாதிரி ஊரிலே பெற்றவங்க எப்படி இருக்காங்களோன்னு கவலைப் பட்டுட்டு இருக்காம, அவங்க கண் முன்னாலே இருந்தா அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும். நமக்கும் கூப்பிட்ட குரலுக்கு நம்மவர்கள் யாரோ இருக்கிறார்கள்னு தைரியமும், ஒரு பலமாகவும் இருக்கும்.. முயற்சித்துத்தான் பார்ப்போமே.’ என்றார் மாதவன்.
ஹாலில் ஏதோ பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார் மாதவன். அருணாவும், அகிலேஷ¤ம் வாயெல்லாம் பல்லாக வந்தார்கள்.
‘அப்பா.. அகிலேஷோடு அப்பா, அம்மா கிட்டே டிஸ்கஸ் பண்ணினொம். அவர்களுக்கு பரம சந்தோஷம். க்ரீன் ஸிக்னல் கொடுத்துட்டாங்க. நாங்க ஊருக்குப் போனதும் ரெண்டு ·பாமிலியையும் ஷிப்ட் பண்ணற வேலைகளைப்
பார்க்கறோம்’ என்று சொல்லியபடி, அம்மாவிடம் விஷயம்
சொல்ல சமயலறைக்குப் போனாள்.
‘மாமா.. தாங்க் யூ வெரி மச்..என்னை ஒரு சங்கடமான, இக்கட்டான நிலையிலிருந்து ரொம்ப சுலபமா காப்பாத்திட்டீங்க..’ என்று மாதவனை அப்படியே அணைத்து கொண்டான் அகிலேஷ்.
மனதிலே உள்ள ஒரு பெரும் அழுத்தம் குறைந்ததால் ஏற்படும் இன்ப உணர்வினால் அவன் உடம்பில் ஒரு சிறு நடுக்கம் தெரிந்தது. இரு கண்களிலும் நீர் தேங்கி இருந்தது.தன்னை அணைத்துக் கொண்ட அகிலேஷின் இந்த இன்ப உணர்வை உணர்ந்து கொண்ட மாதவன் அவன் முதுகை ஆதூரத்தோடு தடவிக் கொடுத்தார்.
மனதிருந்தால் மார்க்கமுண்டு.
தமிழ்ப் புத்தாண்டுக் கவிதைகள் – கோவை சங்கர் / ராஜாமணி
வேண்டியே வரவேற்போம்– கோவை சங்கர்
கொரொனா வைரஸால் வாழ்வதுவும் சீரழிய
வாராதோ விடியலென தவித்துநின்ற நம்முன்னே
வருகின்றாள் சுபகிருது கொடியிடை யசைந்தாட
தீராத துன்பங்கள் தீர்த்திடவே வருகின்றாள்
வருணனவ னாசியினால் விளைச்சலும் பெருகிடவே
உழவர்க ளில்லினிலே பொன்மாரி பொழிந்திடுவாள்
ஆர்ப்பரிக்கு மாலைகள் வணிகமும் விண்முட்ட
நாட்டுவள மோங்குமென கட்டியம் கூறுகிறாள்!
ஜாதிபல இருந்தாலும் மதங்கள்பல இருந்தாலும்
மொழிகள்பல இருந்தாலும் கருத்துபல இருந்தாலும்
கெத்தாக நின்றிடுவோம் இந்தியர்நாம் ஒன்றாக
பாரினிலே பாரதத்தை முதலாக ஆக்கிடுவோம்
சித்தத்தில் நல்லெண்ணம் நலமாக நிறைந்திடவே
எண்ணிய எண்ணியாங்கு சுபமாக முடிந்திடவே
புத்தாண்டு தேவியவள் சுபகிருது நங்கைதனை
பாசமொடு நேசமொடு வேண்டியே வரவேற்போம்!
புத்தாண்டு திருநாள் – கொண்டாட ஓடிவா – ராஜாமணி பாலாஜி
இயற்கையின் மலர்ச்சி ஆதவனைக் காண
இரவின் மாற்றம் புலர்ந்தது பொழுது
புள்ளினங்கள் ஓசை இனிமையாக கேட்க
தூரத்தே அருவி சப்தம் தாலாட்டு போட்டது – (1)
மலர்களின் மகிழ்ச்சி மலர்ந்தன மொட்டுக்கள்
மரத்தின் அசைவாய் கிளை(இலை)களின் நடனம்
சில்வண்டின் ரீங்காரம் சுருதியாக மாறிட
பல்வகை விலங்குகள் தம்மொழியில் ஆர்த்தன – (2)
ஹே மனிதா !! இன்னும் ஏன் உறங்குகிறாய்..
எழுந்திரு.. இன்றைய நாள் பிறந்துவிட்டது…
எங்களைப் பார்த்தாவது விழித்திடு இனிமேல்
ஏற்றம் கண்டிடவே வீறுகொண்டு எழுவாய்.. – (3)
இன்று புத்தாண்டு திருநாள் – கொண்டாட ஓடிவா
தூக்கத்தை விலக்கிடு காலைக்கடன் முடித்திடு
தூயநீராடிடுவாய் புத்தாடை உடுத்திடுவாய்
இறைவணக்கம் அவசியமே இனிதாக வாழ்ந்திடவே
இயன்ற தருமம்நன்று – இல்லாதவர்க்கு ஈந்திடுவாய் – (4)
மாம்பூவும் வேம்பூவும் இணைந்த தித்திப்பு
மானிடர்க்கு கூறிடும் பொருளை அறிந்திடுக
துவர்ப்பு கசப்புடன் வாழ்வில் இனிப்புமுண்டு
துவளாதே மனமே துயர்வந்து சேர்ந்தால் – (5)
புத்தாண்டு சூளுரை
அலைகளைப் போலே முயன்றிடவேண்டும்
துணிந்து நின்றால் பாதைகள் தெரியும்
கருத்தினில் ஊன்றி தொடர்ந்திட வேண்டும்
கனிந்திடும் காலமே – நம்துயர்களும் மறையும் – (6)
பகல்கனவு காணாதே கற்பனையில் வாழாதே
பசியால் வாடினாலும் மதிமயங்கி செல்லாதே
”முயலாமை” கதையல்ல சோம்பித் திரியாதே
முயன்று பார்க்காமல் முடியாதென சொல்லாதே – (7)
மூங்கில் போலின்றி நாணலாய் இருத்தல்நன்றே
மூத்தோர் வழிகாட்டல் நல்வாழ்விற்கு அவசியம்
உற்றவர்தம் துயர்களைய உனக்கும் பங்குண்டு
பெற்றவரை மறந்தாலே ஏதுபயன் உன்வாழ்க்கை – (8)
பொறாமை கோபம் பொய்மைதனை விட்டொழிப்போம்
பொறுமையினைக் கைகொண்டு ஏமாற்றத்தை தவிர்ப்போம்
அறிவாற்றல் தேவையில்லை அதிகாரம் நிலையில்லை
அன்பாலே அரவணைப்போம் பகுத்துண்டு வாழ்ந்திடுவோம் – (9)
புத்தாண்டு பிறக்கையிலே சூளுரை ஏற்றுக்கொள்
புன்னகைக்கு ஈடான பொருளேதும் இங்கில்லை
புரியாத இடத்திலும் புன்னகையே வழிகாட்டும் – பின்
புரிந்துகொண்ட உறவுகளாய் நம்மை உருமாற்றும் – (10)
இன்று புத்தாண்டு திருநாள் – கொண்டாட ஓடிவா
தமிழில் திருப்புமுனை நாடகங்கள் அ ராமசாமி
தமிழில் திருப்புமுனை நாடகங்கள்
தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு மொழி இ¤லக்கிய ஆசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் தந்து விளக்கம் சொல்ல முயலும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலவாறாக உள்ளன. ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப்படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். தமிழ்¢ அலை வரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன. இந்தக் குழப்பம் பின் நவீனத்துவக் குழப்பம் என்று நினைத்து விட வேண்டாம்.
முப்பது நிமிட நேரத்திற்குள் விளம்பரங்களுக்கான மூன்று இடைவேளைகளோடு ஒவ்வொரு நாளும் மூன்று நிகழ்ச்சித் துணுக்குகளைத் தமிழ் அலைவரிசைகள் தொடர்களாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தான் தமிழ்ப் பெண்மணிகள் அதிக அளவிலும் ஆண்கள் குறைந்த அளவிலும் நாடகத் தமிழாகக் கருதிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதே போல் திரைப்படங்களின் பெருக்கத்தால் பல பத்தாண்டுகளாக இசைத் தமிழாகக் கிடைப்பவை திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்கள் தான். வானொலியின் வழியாகவும் ஒலிபெருக்கிக் குழாய்களின் வழியாகவும் பாடலாக மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த நிலையையும் நமது தொலைக் காட்சி அலைவரிசைகள் மாற்றி விட்டன. தொலைபேசி வழியே உங்கள் விருப்பப் பாடலைச் சொல்லி விட்டால் உடனே காட்சி ரூபமாகவே பாடலையும் இசையையும் வழங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன இசை அலைவரிசைகள். இதனை இசைத் தமிழுக்குக் கிடைத்த வரமெனச் சொல்வதா? சாபம் எனக் கருதுவதா? என்று தீர்மானித்துக் கொள்ளும் முடிவை உங்களுக்கே விட்டு விடுகின்றேன்.
கேட்டுப் பெறும் திரைப்படப் பாடல்கள் என்று இசைத் தமிழையும், தொடர்களின் வழியாக நாடகத் தமிழையும் புரிந்து வைத்திருக்கும் தமிழர்களிடம் இயல் தமிழையும் கூடத் திரைப்படங்களின் வழியாகத் தான் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலை ஏதோ பொதுப்புத்தி சார்ந்த ஒன்று என்று கருதி விட வேண்டாம். தினசரிகளையும் வாராந்திரிகளையும் மட்டும் வாசித்து விட்டுத் தங்கள் இலக்கிய அளவுகோலை உருவாக்கிக் கொண்டிருக்கும் வெகுமக்களின் நிலையை விடச் சற்றும் உயர்ந்ததாக இல்லை தமிழ் இலக்கியக் கல்வி.
இக்காலக் கவிதையில் ஆராய்ச்சி செய்ய வரும் இளநிலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களின்¢ இலக்கியப் பரப்பிற்குள் முதலிடத்தில் இருப்பவர்கள் வைரமுத்துவும் பா.விஜயும் தான். புனைகதைப் பரப்பில் விமலாரமணி யும் இந்திரா சௌந்திரராஜனும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள்.இப்படிச் சொல்வதால் வைரமுத்துவும் பா.விஜயும்,விமலாரமணியும் இந்திரா சௌந்திரராஜனும் ஆய்வு செய்யத் தக்க படைப் பாளிகள் அல்ல என்று கருதுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பரபரப்பாக- வெகு மக்கள் மனதிற்குள் இடம் பிடிப்பவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கருதப்படும் ஆபத்து இருக்கிறது என்பதைச் சொல்வது தான் இங்கு நோக்கம். இவர்களைத் தாண்டி தொண்ணூறு களில் எழுதத் தொடங்கித் தங்கள் படைப்புகளால் தீவிர வாசிப்புத் தளத்தில் சலனங்களை உண்டாக்கி வரும் பின் நவீனத்துவப் படைப்பாளி களையோ, அவர்களுக்கு முந்திய நவீனத்துவப் படைப்பாளிகளையோ அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் ஆர்வமில்லாதவர் களாக உள்ளனர் என்பதுதான் கவலை தரும் விசயம்.
வெகுமக்களின் மனநிலையிலிருந்து பெரிய அளவு மாறுபடாமல் இயல் தமிழையும், இசைத் தமிழையும் புரிந்து வைத்திருக்கும் தமிழ்க் கல்விப் புலத்தினர் நாடகத் தமிழின் பக்கம் திரும்புவதே இல்லை. நாடகம் சார்ந்த- அரங்கியல் சார்ந்த ஆய்வுத் தலைப்பைத் தேர்வு செய்ய ஒருவரும் முன்வருவதே இல்லை. இந்த உண்மை களையெல்லாம் சொல்வது அதிர்ச்சிகளால் உறைய வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நிகழ்காலத் தமிழின் மீது அக்கறை கொண்டவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளவும், இந்நிலையை மாற்றவும் முயல வேண்டும் என்பதற்காகத் தான். அத்தோடு தமிழியல் கல்வியில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்துள்ள விநோத முரண் ஒன்றைச் சுட்டிக் காட்டவும் வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழியல் பகுதியாக இருந்து பின்னர் தனித்து வளர்ந்து ஏதாவது பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ தனித் துறைகளாக ஆகிவிட்டன என்பதற்காக நாடகத் தமிழையும் இசைத் தமிழையும் தமிழியல் துறையினர் ஒதுக்கி விட்டனர். இப்படியொதுக்கிய ஒன்றாக மொழியியலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதே நேரத்தில் சமூக அறிவியல் துறையுடன் அதிகம் தொடர்பு கொண்ட நாட்டார் வழக்காற்றியல் புலத்தையும், இதழியல் மற்றும் தொடர்பியல் புலத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்வதில் இதே தமிழியல் துறையினர் ஆவலாகவும் உள்ளனர். கலை மற்றும் இலக்கியத்துறையோடு நேரடித் தொடர்பு கொண்ட நாடகம், இசை, ஓவியம், மொழியியல், ஆகிய வற்றை ஒதுக்கி வைப்பதும்,சமூகஅறிவியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், கலை இலக்கியத்துடன் நேரடித் தொடர்பு அற்றன வாகவும் உள்ள இதழியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் துறை களைக் கற்பதில் ஆர்வமாகவும் இருப்பது ஒருவிதத்தில் வியப்பானவை மட்டும் அல்ல; முரணான நிலைப் பாடும் கூட. இப்படியான முரண்நிலைகள் தோன்றியதன் பின்னணி என்ன? என்று தேட வேண்டியுள்ளது. விடை காண வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; அந்நிலையை மாற்ற வேண்டும் என்பதும் தான் எனது நோக்கம். இந்த முன்னுரையையும் வேண்டுகோளையும் இத்தோடு நிறுத்தி விட்டு நாடகத் துறையில் திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாடகங்களையும் அவை ஏற்படுத்திய திருப்பங்களையும் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளைத் தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலம் எனச் சொல்ல வேண்டும். சிறுபத்திரிகை சார்ந்த படைப்பாளிகளாலும் சிந்தனையாளர் களாலும் முன் மொழியப் பட்ட நவீனத்துவம் அதன் தாக்கத்தை எல்லாப் படைப்பு வகைகளிலும் தீவிரமாக வெளிப் படுத்தி முடித்து விட்டுக் கடைசியாக அரங்கக் கலையின் பக்கம் திரும்பியது. எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த நாடகப் பட்டறைகள், நாடகக் குழுக்களின் தோற்றம், மெல்ல நகர்ந்து பெரும் நாடக விழாக்களை நடத்தும் நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. 1988 இல் மூன்று நாள் நாடக விழாவொன்றை நடத்தியதின் மூலம் நாடக விழாக்கள் என்னும் நிகழ்வைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது மதுரை நிஜநாடக இயக்கம். மு.ராமசாமியின் பொறுப்பில் செயல்பட்டு வந்த நிஜநாடக இயக்கம் நாடக விழாவுக்கான உத்வேகத்தைத் தேசிய அரங்கக் கலை அமைப்பான சங்கீத நாடக அகாடெமி யிடமிருந்து பெற்றது.இந்திய நாடகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட இளம் இயக்குநர் திட்டத்தின் கீழ் தனது முதல் மேடை நாடகத் தயாரிப்பான துர்க்கிர அவலத்தைப் பெங்களூரில் நடந்த தென்மண்டல நாடகவிழாவிலும் (1985) பின்னர் டெல்லியில் நடந்த தேசிய நாடக விழாவிலும் அரங்கேற்றியது . பெங்களூரில் நடந்த மண்டல விழாவில் பங்கேற்ற போதும் சரி, பின்னர் தேசிய நாடக விழாவில் பங்கேற்ற போதும் சரி , மாநில மொழி இதழ்களிலும், ஆங்கில மொழி இதழ்களிலும் நிழல் படங்களுடன் விமரிசனக் கட்டுரைகள் வந்தன. இந்திய அரங்கியல் வரைபடத்தில் தமிழ் நாடகத்தின் இடத்தைப் பதிவு செய்த அந்த நாடகம் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு மைல் கல் எனப் பல திறனாய்வாளர்களால் பாராட்டப்பெற்றது.
மிகப் பழைய நாடகப்பிரதியான சோபாக்ளிஸின் ஆண்டிகோனி நாடகத்தின் தழுவல் தான் துர்க்கிர அவலம் . ஆனால் அந்தத் தழுவல் தற்கால இந்திய வரலாற்றின் கரை படிந்த சில நினைவுகளைப் பார்வையாளர்களின் மனதில் எழுப்பும் விதமாகக் காட்சி அமைப்புகளையும் மொழிப் பயன் பாட்டையும் கொண்டதாக ஆக்கப் பட்டிருந்தது. தனக்கு எதிராகக் கிளம்பிய போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க எண்ணி அவசர நிலையை அமுல் படுத்திய இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சிக் கால நிகழ்வுகள் குறியீடுகளாகவும் காட்சிப் படிமங்களாகவும் ஆக்கப்பட்ட நிலையில் நிகழ்காலத் தன்மையைக் கொண்டு வந்தது.
தமிழ் அரங்கக் கலையான தெருக்கூத்துவின் சொல்முறையையும் தேவராட்டத்தின் நடன அசைவுகளையும் பயன் படுத்தி உருவாக்கப் பட்ட மேடை மொழி பார்வையாளர் களைப் பெரிதும் ஈர்த்தது. அதுவரை நவீன நாடகங்களின் நிகழ்வுகளைக் கண்டு ஒதுங்கிச் சென்ற பார்வையாளர்களை நெருங்கிச் சென்று காட்சி இன்பம் தந்த துர்க்கிர அவலம் மதுரையில் மட்டுமே பத்துக்கு மேற்பட்ட மேடை ஏற்றங்களைக் கண்டது. அது தொடங்கி வைத்த காட்சி இன்பத்தைப் பின் வந்த பல நாடகங்கள் தனதாக்கிக் கொண்டன என்ற நிலையில் துர்க்கிர அவலம் ஒரு திருப்பு முனை நாடகம் என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.மு.ராம்சாமியின் இயக்கத்தில் துர்க்கிர அவலம் பெற்ற சிறப்பை விடவும் கூடுதல் சிறப்பைப் பெற்ற நாடகம் ஒன்று உண்டு. திருச்சி தூய வளனார் கல்லூரி வளாகத்தில் நடந்த பாதல் சர்க்கார் நாடக விழாவில் (1991) அந்த நாடகம் அரங்கேறியது. கல்லூரி விளையாட்டு மைதானத்தின் புல் தரையில் காட்சி அமைப்புகள் எதுவும் இன்றி நடிகனின் உடலையும் குரலையும் மட்டும் பயன்படுத்தி ஏறத்தாழ 100 நிமிடங்கள் நடந்த அந்த நிகழ்வு சர்க்காரின் மூன்றாம் அரங்கின் அசாத்திய சாதனைகளின் உச்சம் என்று சொல்ல வேண்டும்.
கிரேக்க நகர அரசுகளின் பின்னணியைக் கொண்ட ஸ்பார்ட்டகஸ் நாவலைத் தழுவி வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் உருவாக்கிய நாடகத்தின் பெயரும் ஸ்பார்ட்டகஸ் தான். இந்தியாவில் நாடகத்தை மேடை நிகழ்வாக நடத்துவதை மறுதலித்து ஏழைகளின் அரங்கான மூன்றாம் அரங்கை முன் மொழிந்த பாதல் சர்க்காரின் நாடகங்கள் [இந்திய சரித்திரம், மீதி சரித்திரம், ஊர்வலம், பிறகொரு இந்திரஜித், போமா, ஸ்பார்ட்டகஸ் ] அந்த விழாவில் நிகழ்த்தப்பட்டன. நிகழ்த்தப் பட்ட மற்ற நாடகங்களைக் காட்டிலும் ஸ்பார்ட்டகஸ் ஏற்படுத்திய அனுபவங்களும் விளைவுகளும் தாக்கமும் காத்திரமானவை. ஸ்பார்ட்டகஸ் உருவாக்கிய திருப்பு முனையை அதற்குப் பின்னர் அரங்கேறிய எந்தவொரு மூன்றாம் அரங்க நிகழ்வும்¢ தமிழ் நாட்டில் உண்டாக்கியதில்லை. அந்நாடகம் தமிழ் நாட்டின் பெருநகரங்களில் இருக்கும் கல்லூரி மைதானங்கள் பலவற்றிலும் அரங்கேறிப் பல்லாயிரம் பார்வையாளர்களைச் சந்தித்தது.
ஸ்பார்ட்டகஸ§க்குக் கிடைத்த பார்வையாளர் எண்ணிக்கையை முறியடித்த இன்னொரு நாடகத்தையும் மதுரை நிஜ நாடக இயக்கம் தான் தயாரித்தது. கலகக்காரர் தோழர் பெரியார் என்ற அந்த நாடகம் 2005 இல் மேடையேறி ஓராண்டு காலத்திற்குள் ஒவ்வொரு மாவட்டமாக இருபத்தைந்து முறை நடத்தப்பட்டது என்ற தகவலை அவ்வியக்கத்தின் தகவல் சிற்றேடு தந்தது. மேடை ஏற்றத்திலும் தயாரிப்பு முறையிலும் தனித்துவம் எதுவும் கொண்டிருக்க வில்லை என்ற போதிலும் அதிகமான மேடை ஏற்றங்களையும் அதிகமான பார்வையாளர் களையும் சந்தித்த நாடகங்களில் முதல் இடம் கலகக்காரர் தோழர் பெரியாருக்கு உண்டு. அந்தப் பிரதி தமிழ்நாட்டில் இன்னும் பெரியார் என்ற ஆளுமைக்கு இருக்கும் செல்வாக்கை உணர்த்தியது எனலாம்.
மதுரை நிஜநாடக இயக்கத்திற்கும் மு.ராம்சாமிக்கும் இம்மூன்று நாடகங்களும் பெற்றுத் தந்த பெயரையும் புகழையும் ஒரே நாடகத்தின் வழியாகப் பெற்றவர் வ. ஆறுமுகம். அவரது கருஞ்சுழி தமிழ் நாடகத்தை இந்திய எல்லைகளைத் தாண்டி சர்வதேச வரைபடத்தில் கொண்டு போய்ச் சேர்த்த நாடகம். ஆனால் அந்நாடகம் தயாரிக்கப்பட்ட நிலையில் இதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் உருவான ஒன்று என்பதைத் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.அரங்கக்கலையைக் கல்வித்துறைப் படிப்பாகப் பயிலவரும் மாணவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளில் முக்கிய மானவைகளாக இருப்பவை உடல், குரல், மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் பயிற்சிகள். மனதையும் உடலையும் தனது கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பயிற்சிகள் அரங்கக் கலை மாணவர்களின் அடிப்படைப் பயிற்சி என்பதை விட நடிப்புத்துறையில் தேர்ச்சி அடைய விரும்பும் ஒருவருக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளாகும். அத்தகைய பயிற்சிகளிலிருந்து உருவான நாடகம் கருஞ்சுழி.
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகப்பள்ளியைத் தொடங்கி முதல் கட்டமாகப் பயிற்சிகளைத் தொடங்கிய போது தெருக்கூத்துக் கலைஞர் புரிசைக் கண்ணப்பத் தம்பிரானின் மருமகன் என அறியப் பட்டவர் வ.ஆறுமுகம். அவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான கருஞ்சுழி அதுவரை இருந்த முறைகள் எதனையும் பின்பற்றாத ஒரு நாடக மேடை ஏற்றம் என்றே சொல்ல வேண்டும். மாணவர் களுக்கு அரங்கக் கலையின் எல்லாக் கூறுகளையும் கற்றுத் தரும் விதமாக ஒரு நாடகத்தயாரிப்பு அமைய வேண்டும் என்ற நோக்கம் நாடகப் பள்ளிகளுக்கு உண்டு. அதனால் அவை நாடகத் தயாரிப்பு களில் எப்போதும் ஒருவிதமான திட்டமிட்ட அறிவியல் பாங்கான முறைகளைப் பின்பற்றுவதுண்டு. ஆனால் கருஞ்சுழி அப்படியொரு திட்டமிடலையோ, முறையியலையோ பின்பற்றித் தயாரிக்கப்பட்ட நாடகம் அல்ல. இன்னும் சொல்வதானால் அதன் தயாரிப்பு, நாடகத் தயாரிப்பு என்ற பிரக்ஞை நிலையின்றியே உருவாக்கப் பட்ட ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். உலகத்தோற்றம், பிரபஞ்ச அழிவு, மனிதர்களைக் காத்து அடுத்த பிரபஞ்சத்தை உருவாக்குவது என்ற காட்சிகளை விரித்துச் சொன்ன கருஞ்சுழியின் ஆதாரச் சொற்கள் இவை தான்; ஒருவன் படுக்க முடியும் என்கிற அளவில் இருக்கும் இடத்தை இன்னொருவனுடன் உட்கார்ந்து பகிர்ந்து கொள்ளத் தயாராவதும், மூன்றாவது ஒருவனுடன் நின்று பகிர்ந்து கொள்ளத் தயாராவதும் ஒரு தன்னலமற்ற பயணம். அந்தப் பயணத்தை முடித்து வைக்க நான்காவது ஒருவன் வருவான் அவன் தான் கடவுள். அம்மூவரும் நான்காமவனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் நிகழப்போகும் பிரபஞ்ச அழிவுக்குப் பின்னும் அவர்கள் காப்பாற்றப் படுவார்கள் என்பதை அந்நாடகம் காட்சி ரூபமாகச் சொல்லி விட்டு, மனிதர்கள் இதற்கு மாறாக உலகத்தைத் தங்களுக்கு மட்டுமே சொந்தமாகத் தரப்பட்டதாகக் கருதிச் சண்டைகளையும் ஆக்கிரமிப்பு களையும் செய்து அழிவுப் பாதைக்குள்ளும் சகிப்பின்மைக்குள்ளும் பயணம் செய்கின்றனர் எனச் சொன்னது.
தத்துவத் தன்மை கொண்ட இந்தக் கருத்துக்காகவும், உயர்ந்து பரவிய குத்துநிலைக் கோடுகளால் உருவாக்கப் பட்ட அரங்க அழகியலுக்காகவும் கவனிக்கவும் பாராட்டவும் பட்ட கருஞ்சுழியின் தொடக்கம் மாணவர்களுக்கு அளித்த ஒரு பயிற்சிதான். மிகக் குறுகிய இடத்திற்குள் தனது உடலை அடக்கிக் காட்டுவது என்பது அப்பயிற்சியின் நோக்கம். போர்வை அளவிற்குள் அடங்கிக் காட்டும் மனித உடல்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறிய துணி என்ற நிலைக்குக் கொண்டு போவது அதன் பரிமாண விரிவு. இப்படியான ஒரு பயிற்சியை எல்லா நாடகப் பள்ளிகளும் வெவ்வேறு விதமாக வழங்குவதுண்டு. அந்த வகுப்பில் இருந்த ஆறு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்த ஆறுமுகம் துணியின் அளவை மாற்றி மாற்றி அளித்துக் கொண்டிருந்த பயிற்சி பார்த்தவர்களை நின்று கவனித்துப் பார்க்கச் செய்தது.
ஒரு கட்டத்தில் பயிற்சி முடிந்து மாணவர்கள் தளர்நிலையில் இருந்த போது உரையாடிய பள்ளியின் இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி இடத்தைப் பயன்படுத்துவது தொடர்பான அந்த தொன்மக் கதையைச் சொன்னார். சொல்லி விட்டு ‘’கடவுள் எந்த இடத்தில் இருப்பார்? என்று கேள்வி கேட்டால் தனக்கெனக் கிடைத்த இடத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் மனிதர்கள் வாழும் இடத்தில் என்பது தான் சமயத்தின் பதில்’’ என்று அதன் சாரத்தையும் விளக்கினார். ஒரு தொன்மத்தின் சாரம் நாடகத்தின் கருவாகவும் காட்சிகளாகவும் மாற்றப்பட்டு கருஞ்சுழி நாடகம் விரிவடைந்தது. அதன் இயக்குநர் வ. ஆறுமுகத்தைத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனிக்கத் தக்க ஒருவராக மாற்றியது. அதன் இயக்குநருக்கு உலகப் புகழையும் பல்வேறு நாடுகளின் நாடகவிழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தது. வெறும் புகழ் மட்டும் அல்ல; அந்நாடகம் ஈட்டித்தந்த பணவரவும் கூட சில பத்துலட்சங்களுக்கும் மேல் இருக்கும் என்றால் பலர் ஆச்சரியம் அடையக் கூடும். வ.ஆறுமுகத்தின் கருஞ்சுழி அத்தகைய சாதனைகளைப் படைத்ததொரு நாடகமாக விளங்கியது என்பதை உடன் பார்த்தவன் நான்.ஆனால் அவரே மிகவும் திட்ட மிட்டு உருவாக்கிய ஊசி,¢ தூங்கிகள் போன்றன பிரதி என்ற நிலையிலும், மேடை ஏற்றம் என்ற அளவிலும் ஏமாற்றங்களையே தந்தனவ.
ஆறுமுகத்தின் கருஞ்சுழியின் மையச் சிந்தனையை உருவாக்கித் தந்த இந்திராபார்த்தசாரதியின் நாடகப் பிரதிகள் பலதரமானவை; பலதளங்களில் விவாதங்களை முன் வைப்பவை.டெல்லிப் பல்கலைக்கழகத்திலும் போலந்து நாட்டு வார்சா பல்கலைக் கழகத்திலும் பணியாற்றிய காலத்தில் உலக நாடகங்கள் பலவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்ற இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் தமிழகப் பார்வையாளர்களாலும் திறனாய் வாளர்களாலும் கவனிக்கப் பட்ட நாடகமாகச் சொல்லத் தக்கது நந்தன் கதையே. இந்திய சமூகத்தில் நிலவும் சாதீயப் படிநிலைகளை விவாதப் பொருளாக்கும் வகையில் முரண்பாட்டை முன் மொழிந்த நந்தன் கதை அரங்கக் கலையின் நுட்பங்களை அறிந்த இயக்குநருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் ஒரு பிரதி. அதே போல் பார்வையாளர் களுக்கும் மேடையேற்றப்படும் சூழலுக்கேற்ப அர்த்தத்தளங்களை உருவாக்கிக் காட்டும் இயல்பும் கொண்டது. திருநாளைப்போவார் புராணமாகவும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை யாகவும் வாசிக்கப்பட்ட பிரதிகளை நந்தன் கதையாக வடிவமைத்த இந்திரா பார்த்தசாரதி ஆதிக்கக் கருத்தியலும் அடக்கப்படும் கருத்தியலும் சந்திக்கும் புள்ளியாக அழகியல் ஈடுபாட்டை நாடகத்தில் முன் மொழிந்துள்ளார். அம்முன் மொழிவின் வெளிப் பாடாக நந்தன் கதை நாடகம் அபிராமி என்ற நடனக்காரியை உருவாக்கி நிறுத்தியுள்ளது. அபிராமியின் பரதக் கலையிலும் உடல் அழகிலும் ஈடுபாடு கொண்ட நந்தன் அவைகளின் கடவுளான தில்லை யம்பல நடராசன் மீதும் ஈடுபாடு கொண்டவனாக மாறினான்¢ என்பதாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
1986 இல் சங்கீத நாடக அகாடமியின் மண்டல விழாவிற்காக நந்தன் கதையைத் தயாரித்த இரா.ராசு கடந்த இருபதாண்டுகளில் வெவ்வேறு அரசியல், சமுதாயப் பின்னணிகளைக் கொண்ட பார்வையாளர்களின் முன்னால் மேடை ஏற்றி நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். ஒவ்வொரு நிகழ்வின் போதும் அம்மேடை ஏற்றம் புதிய புதிய அர்த்தங்களுடன் பார்வையாளர்களால் உள்வாங்கப்பட்டு ரசிக்கப்பட்டது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் போதும் கடலூரில் நடத்திய மாநில மாநாட்டின் போதும் அந்நாடகம் பிராமணX பிராமணரல்லாதார் முரண்பாட்டின் வெளிப்பாடாகப் புரிந்து கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டது. அதே போல் நெய்வேலியில் நடந்த தலித் கலைவிழா வில் பறைக்கும் X பரதத்திற்கும் இடையேயான போராட்டமாகப் புரிந்து கொள்ளப் பட்டு பாராட்டைப் பெற்றது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வேறு வேறு காலங்களில் வேறு வேறு அர்த்தங்களைத் தரும் விதத்தில் எழுதப்பட்ட பிரதி என்ற வகையில் இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதையின் எழுத்து வடிவமும் அதை இயக்கி மேடையேற்றிய ரா. ராசுவின் அரங்கச் செயல்பாடும் இணைந்து தமிழக நாடக வரலாற்றில் நந்தன் கதையை ஒரு திருப்பு முனை நாடகமாக ஆக்கியது எனலாம்.
தமிழ்நாட்டில் புதுவகை நாடக இயக்கங்கள் தோன்றி புதுவகை நாடகங்களை மேடையேற்றக் காரணமாக இருந்தவர் பேராசிரியர் சே.ராமானுஜன். டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் படித்துவிட்டு வந்திருந்த ராமானுஜன், பி.வி.காரந்தின் தூண்டுதலின் பேரில் காந்திகிராமத்தில் இரண்டு மாதகால நாடகப் பட்டறையை நடத்தியவர். அவரது இயக்கத்தில் பலரது நாடகங்கள் தமிழிலும் மலையாளத்திலும் மேடையேற்றம் கண்டுள்ளன. பேராசிரியர் ஜி.சங்கரப்பிள்ளை, ஜி.ஜே.தாமஸ் போன்ற மலையாள நாடக ஆசிரியர்களின் நாடகங்களையும் இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி போன்ற தமிழ் நாடகாசிரியர்களையும் மேடையேற்றியவர் ராமானுஜன். இவைகளை யெல்லாம் விட அவரே எழுதி இயக்கிய வெறியாட்டம் நாடகமே திருப்புமுனை யாகவும் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்ற நாடகமாகவும் அமைந்தது.
வெறியாட்டம் கவனிக்கப் பட்டதின் பின்னணியில், அது மேடையேற்றம் பெற்ற சூழலும் காரணமாக இருந்தது. கிரேக்கத் துன்பியல் நாடகமான ட்ரோசன் பெண்கள் நாடகத்தின் கட்டமைப்பையும் உணர்வு வெளிப் பாட்டையும் தனதாக்கிக் கொண்ட வெறியாட்டம,¢ தனது மேடை நிகழ்வுகளில் வேறொன்றாக வெளிப்பட்டது. போர்களும் அவற்றால் ஏற்படும் இழப்புகளும் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தும் துயரத்தைத் தனது மொத்த நிகழ்வின் உணர்வுப் பின்னணியாகக் கொண்ட வெறியாட்டம், மேடையில் ஒரு நிமிடம் கூட போர்க்களக் காட்சியை உருவாக்கவில்லை. போரின் பின்னிகழ்வுகளைக் காட்டியதன் வழியாகவே அதன் துயரத்தைப் பார்வையாளர்களிடம் கடத்திக் காட்டிய அற்புதத்தைச் செய்தது.
தமிழக மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத தாலாட்டு மற்றும் ஒப்பாரியின் இசைக் கோலத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் பெருவெற்றிக்குப் பின்னால் அந்நாடகம் தயாரிக்கப்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் களின் போராட்டம் போராக மாறி, சிங்களப்படைகளாலும், இந்திய அமைதி காக்கும் படையினராலும் உச்சத்தில் இருந்தது. நாடகப்பிரதிக்குள் ஈழம் குறித்த ஒரு வார்த்தை கூட இடம் பெறாத நிலையிலும் வெறியாட்டம் ஈழத்தில் நடக்கும் வெறியாட்டமாகப் பார்க்கப் பட்டது. அதனால் அந்த நாடகம் சூழலில் அர்த்தமாகும் திருப்பத்திற்கு உதாரணமாகவும்ஆனது .
வெறியாட்டம் போர்க்களக் காட்சிகளைக் காட்சிப் படுத்தாமல், பின்னணி மற்றும் குறியீடுகளின் வழியான அர்த்தத் தளங்களை உருவாக்கி ஈழப்போராட்டத்தை நினைவூட்டியதென்றால் இளைய பத்மநாபனின் தீனிப்போர் நிகழிடத்தில் உருவாக்கிக் காட்டிய போர்க்களக்காட்சியின் வழியாகவே ஈழப்போரையும் அதனையொத்த பிறவகைப் போர்களையும் உள்ளடக்கமாக்கியது. ஈழப்போர் அடையாளங்களுக்கான போர் மட்டும் அல்ல; ஆதாரமான உணவுக்கான போராகவும் இருக்கி¢றது என்று பேசியது தீனிப்போர். இலங்கையின் நாட்டார் நிகழ்த்துக் கலைவடிவமான வசந்தன் கூத்தின் இசைக் கோலங்களையும், தமிழ்நாட்டின் தெருக்கூத்து அடவு களையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட தீனிப்போர் மிகுந்த கவனத்துடன் படச்சட்டக மேடையைத் தள்ளி வைத்த நாடகம். கபடி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் நடக்கும் மைதானத்தை ஒத்த அரங்க வடிவையும் பாத்திரங்களின் அசைவையும் தனதாக்கிக் கொண்டு இருபுறமும் பார்வையாளர்களை இருக்கச் செய்து அந்த நாடகம் நடந்தது. பண்டைக்காலப் போர் நிகழ்வையொத்த காட்சிகள் கிடைநிலையிலும் குத்து நிலையிலும் காட்சி அலைகளை உருவாக்கிக் காட்டிப் பார்வையாளர்களுக்குக் களிப்பூட்டின.
மனிதக் கதாபாத்திரங்களைத் தவிர்த்துவிட்டு காட்டு விலங்குகளையே பாத்திரங்களாக்கி அமைக்கப்பட்ட நிகழ்வில் விலங்குகளின் குணாம்சத்தோடு மனிதர்களின் இயல்பு பொருத்திக் காட்டப்பட்டு, அதிகாரத்திற்கு எதிரான யுத்தத்தைத் தீனிப்போர் முன்னிறுத்தியது. இலங்கையில் நடக்கும் யுத்தத்தில் சிறுபான்மை X பெரும்பான்மை என்ற முரணும் , வலிமைக்கும் எளிமைக்கும் இடையிலான முரணும் மோதிக் கொள்கின்றன எனப் பேசியது. அகதியாக வந்து தங்கியிருந்த ஈழத்தின் நாடகவியலாளர் இளையபத்மநாதனுடன் இணைந்து மங்கை இயக்கிய தீனிப்போர் நிகழ்த்தப்பட்ட முறையாலும் உருவாக்கப்பட்ட குத்துநிலை அசைவுகளாலும் புதிய அழகியலை முன் வைத்த நாடகம்.
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகப்பள்ளி ஆசிரியர்களில் அரங்கியலில் நுட்பங்களைச் செய்து தனிக்கவனம் பெற்ற வ.ஆறுமுகம்,ரா.ராசு ஆகியோர் ஒரு வகையினர் என்றால் டாக்டர் கே.ஏ.குணசேகரனும் அ.ராமசாமியும் நிகழ்காலச் சமூக இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும், அவற்றின் போக்கோடு தொடர்பு கொண்ட பிரதிகளை மேடை யேற்று வதில் கவனம் செலுத்துபவர்களாகவும் விளங்கினர். மரபான கம்பன் விழா மேடையில் பிரபஞ்சனின் அகல்யாவை மேடையேற்றிய அ.ராமசாமி எதிர்கொண்ட சிக்கல்கள் கண்ணுக்குப் புலப்படாதவை. இந்திரனின் மீது காதல் கொண்டவளாகவும், வந்தவன் அந்நிய ஆடவன் என்று தெரிந்தே தனது உடலை அவனுக்கு வழங்கியதாலும் அகல்யா கௌதமனின் சாபத்திற்கு ஆளானாள் என்ற இராமாயணக் கிளைக் கதையைப் பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர். எழுத்தாளர் பிரபஞ்சன் தான் எழுதிய நாடகப் பிரதியில் எழுப்பிய கேள்வி இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் கேள்வி. கல்லான அகலிகை ராமனின் கால்பட்டு சாப விமோசனம் பெறுகிறாள். அப்போது ராமன் அருகில் இருந்த முனிவர் விசுவாமித்திரர் சொல்லும் வார்த்தை , ‘தீர்க்க சுமங்கலி பவ’. இதைக் கேட்டு அகல்யா திரும்பவும் ஒரு கேள்வி கேட்கிறாள்.
அந்தக் கேள்வி இது தான். ‘சரி யாரோடு ? இந்திரனோடா? கௌதமனோடா?’. மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டு இன்னொருவனுடன் வாழ நேரும் பெண்ணின் கேள்வியாக அகலிகையின் கேள்வியை மாற்றிய பிரபஞ்சனின் சிறு பிரதி, முன்னும் பின்னும் சிறிய சேர்க்கைகளுடன் மேடையேற்றம் கண்டது.தாடகை என்ற மலையினப் பெண்ணின் போராட்டத்தைத் தடை செய்தவனாகவும், ஆணாதிக்கக் கருத்தியலுடன் தன்னை இணைத்துக் கொண்டவனாகவும் ராமனைக் காட்டிய அந்த மேடையேற்றம் பின்னணி இசையாலும், இந்திரன், அகலிகை என்ற பாத்திரங்களை ஏற்று நடித்த நடிப்புக் கலைஞர்களின் திறமையாலும் பார்வையாளர்களால் கைதட்டி ரசிக்கப்பட்டது. ஆனால் கம்பன் விழா ஏற்பாட்டாளர்களின் முகச் சுளிப்பையும் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டது. பெண்ணியம் சார்ந்த கேள்விகளை முன் வைத்த வகையில் அ.ராமசாமி/ பிரபஞ்சன் கூட்டில் உருவான அகலிகை ஒரு முன்னோடி நாடக நிகழ்வு என்று சொல்லலாம். இதன் வீச்சில் ஈர்க்கப்பட்ட பெண்ணிய வாதிகளும் ஆதரவாளர்களும் திருத்துறைப் பூண்டி, கடலூர், நெய்வேலி, மதுரை போன்ற இடங்களில் மேடை ஏற்றும் வாய்ப்பை வழங்கினர்.
பெண்ணிய நாடகத்தின் முன்னோடி நாடகமாக அ.ராமசாமி மேடையேற்றிய அகல்யாவைச் சொல்லலாம் என்றால் தலித்திய நாடகத்தின் சிறந்த மாதிரியாகக் கே.ஏ. குணசேகரனின் பலியாடுகளைச் சொல்ல வேண்டும்.நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவராயிருந்த பொ.வேலுசாமி வாசித்துக் கண்டுபிடித்த ஒரு கல்வெட்டுச் செய்தியிலிருந்து உருவாக்கப்பட்ட நாடகம் பலியாடுகள். ஓடாத கோயில் தேரை ஓடச் செய்வதற்காக மனிதர் களைப் பலியிடும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது என்பதைச் சொன்ன அந்தக் கல்வெட்டு, பலியிடப்படும் நபர்களாகப் பெரும்பாலும் சேரியில் வாழ்ந்த தலித்துகளே இருந்தனர் என்றும், ஒரு ஊரில் அப்படிப் பலியிடப் பட வேண்டிய தலித் ஆண் கடைசி நேரத்தில் தனது மனைவியை அதற்கு வழங்கி விட்டுத் தான் தப்பித்துக் கொண்டான் என்னும் தகவலைத் தருகிறது. இந்தச் செய்தியை நாடகமாக்கிட முயன்ற கே.ஏ. குணசேகரன் தென்மாவட்டங்களில் பிரபலமாக இருந்த சங்கரதாஸ் சுவாமிகள் பாணி நாடகக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொண்டு பிரதியை வடிவமைத்தார்.
நாடக நிகழ்வுகளை எடுத்துக் கூறி நடத்திடக் கோமாளி என்ற பாத்திரத்தைப் பயன்படுத்தினார். அத்துடன் பிரக்டின் அந்நியமாதல் உத்தியையும் பயன்படுத்தி, டாக்டர் அம்பேத்கருக்கும் நாவலாசிரியர் முல்க்ராஜ் ஆனந்திற்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றின் பேச்சு வடிவத்தை ஒலிநாடாவில் ஓடவிட்டு நாடகக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்ததன் மூலம் வரலாற்று நாடகத்தை நிகழ்காலத்திற்குரியதாக மாற்றினார். இந்நாடகம் அந்தக் காலகட்டத்தில் வேகமாக எழுந்த தலித் இயக்கங்களின் கவனிப்பைப் பெற்றுத் தமிழ் நாடெங்கும் மேடை ஏற்றம் கண்டது. பெண்ணிய அடையாளம், தலித்திய அடையாளம் என்பதை நாடகப் பிரதிகளும் மேடையேற்றங்களும் சோதனை செய்து வெற்றி பெற்றதைப் போலக் குழந்தைகள் அரங்கு மற்றும் சூழலியல் அரங்கு ஆகியனவற்றைப் பரிசோதனை செய்து கவனத்தை ஈர்த்த இருவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களில் தனித்த அடையாளங் களை நிறுவியுள்ள வேலுசரவணன் குழந்தைகள் அரங்கிற் காகவும்,முருகபூபதி இனவரைவியல் அடையாளங்களோடு கூடிய சூழல் அரங்கிற்காகவும் தமிழ்நாட்டில் குறிப்பிடத் தக்கவர்களாக வலம் வருகின்றனர்.
பனிவாள் என்ற ஒருமணி நேர நாடகத்தைக் குழந்தைகள் நாடகமாக மேடையேற்றியுள்ள வேலுசரவணன் பிரதிகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அயல் தேசத்துச் சிறார்கதை களிலிருந்தும், வேடிக்கை மற்றும் விநோதக் கதைகளிலிருந்தும் நாடகவெளியை உருவாக்கிக் கொள்ளும் அவர் அந்த வெளி தரும் உணர்வையும் குதூகலத்தையும் சிறார்களுக்குத் தனது நிகழ்விப்பின் மூலம் கடத்துகிறார். குழந்தைகளின் உலகத்தைக் குதூகலம், கொண்டாட்டம், விநோதம், வேடிக்கை, பாசம், அன்பு ஆகியவற்றால் நிரப்பிக் காட்டும் வேலு சரவணன் திருப்புமுனைகளை உருவாக்கிக் காட்டுவதில் ஆர்வம் அற்றவர் என்பதையும் சொல்ல வேண்டும்.
முருகபூபதி இதற்கு மாறானவர். தொடர்ந்து பரிசோதனைகள் செய்வதன் மூலம் திருப்பு முனைகளை உருவாக்க வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர். பார்வையாளர்களை நோக்கி நாடக நிகழ்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கைக்கு எதிராகத் தனது நாடகங்கள் நிகழும் கிராமம் மற்றும் காடுகளுக்குப் பார்வையாளர்களை வர வைக்க வேண்டும் என நினைப்பவர். அவரது நாடகங்கள் பெரும்பாலும் எதோவொரு கிராமத்தின் பின்னணியிலேயே ஒத்திகை பார்க்கப்பட்டு அங்கேயே நிகழ்த்தப்படுவதை நோக்கமாகக் கொண்டவை. அந்தக் கிராமத்தின் சூழல் மற்றும் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட மொழியையும் தனதாக்கிக் கொண்டவை. அந்த வகையில் முருகபூபதியின் நாடகங்கள் சூழலியல் அரங்கின் சாயல் கொண்டவை.சூழலியல் சார்ந்த அரசியல் குறியீடுகளைக் கொண்ட முருகபூபதியின் பிரதிகள் நிகழ்காலச் சூழலில் மொழிக் குறியீடுகளின் வழியாக நவீனத்தை முன் வைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தன்னகத்தில் உள்ளடக்கிய பிரதிகள் என்றும் சொல்லலாம். விருதுநகர் மாவட்டம் தேரிக்காட்டில் நிகழ்த்தப் பெற்ற செம்மூதாய் நாடகம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.
நவீன விவசாயம் என்ற பெயரில் தமிழகக் கிராமஙகள் சிதைக்கப்பட்ட சமீபத்திய வரலாற்றை நினைவுபடுத்தும் செம்மூதாய், ஆங்கிலேயர்களின் வரவால் நிகழ்ந்த அனைத்தையும் எதிர்நிலை மனத்துடன் விமரிசிக்கும் தொனியுடன் தீவிரமாக வெளிப்பட்டது.தேரிக்காட்டின் மண்ணையே நிகழிடமாகக் கொண்ட அந்த நாடகம் நிகழ்ந்து முடியும் போது நடிகர்களின் ஒப்பனையுடன் அந்த மண்ணும் கலந்து உருவாக்கும் உணர்வெழுச்சிகள் பார்வையாளர்களின் மனத்திற்குள் ஆழமாகப் பதிந்து விடும் என்பது இயக்குநர் முருகபூபதியின் எண்ணமாக இருந்தது.
இங்கே விவரிக்கப்பட்ட நாடகங்கள் பெரும்பாலும் நவீன நாடகம் என்னும் கருத்துருவம் தமிழில் வளர்ச்சி அடைந்த காலகட்டத்திற்குப் பிந்திய 1980 -களுக்குப் பின்னாள் மேடை ஏற்றம் கண்ட நாடகங்களாகும். இவற்றோடு ந.முத்துச்சாமியின் நாற்காலிக்காரர் நாடகத் தையும் சேர்த்தே பேச வேண்டும். ஆனால் அந்நாடகத்தின் மேடையேற்றத்தை மையப்படுத்திப் பேசுவதில் தடைகள் உள்ளன. ஏனென்றால் நாற்காலிக்காரர் நாடகத்தை சே.ராமானுஜம், கே.எஸ். ராசேந்திரன், வ. ஆறுமுகம், பென்னேஸ்வரன், எனப் பிரபலமான நாடக இயக்குநர் களோடு பல இளம் இயக்குநர்களும் நாடகப்பள்ளி மாணவர்களும் மேடைஏற்றியுள்ளனர். நானே எட்டு விதமான மேடை ஏற்றத்தைப் பார்த்திருக்கிறேன். இந்திய நடுத்தர வர்க்கத்தின் இயலாமை மற்றும் பொறுப்பின்மையைக் கடுமையாகச் சாடும் அந்த நாடகம் ஒவ்வொருவரின் மேடை ஏற்றத்திலும் ஒவ்வொருவிதமாக அர்த்தப் படுத்தப்பட்டது என்பதைத்தான் அதன் சிறப்பாகச் சொல்ல வேண்டும்.
தமிழின் நவீன நாடகப் பிரதியை உருவாக்கிய முன்னோடி ந.முத்துச்சாமி. அவரது நாற்காலிக்காரர் ஐரோப்பிய நவீனத்துவ வெளிப்பாடான அபத்தவியலை உள்வாங்கிய இந்திய மாதிரி. அதுவரை இருந்த முன் மாதிரி எதையும் பின்பற்றாத பிரதியாக எழுதப்பட்ட நாற்காலிக்காரரோடு, இந்திரா பார்த்தசாரதி யின் போர்வை போர்த்திய உடல்கள், ஜெயந்தனின் மனுஷா.. மனுஷா, ஞாநியின் பலூன், ஞான ராஜசேகரனின் வயிறு, பிரபஞ்சனின் முட்டை , பிரேம் ரமேஷின் அமீபாக்களின் காதல், எம்.டி.முத்துக் குமாரசாமியின் குதிரைக்காரன் போன்ற பிரதிகளையும் திருப்புமுனை நாடகங்கள் என்ற பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆனால் இவை எல்லாம் போதிய மேடையேற்றங்களைக் காணவில்லை என்பதையும் தனியாகச் சொல்ல வேண்டியுள்ளது. நவீனத் துவத்தைச் சரியான அர்த்தத்தில் உள்வாங்கிய இப்பிரதிகளை இயக்கி மேடையேற்றும் இயக்குநர்கள் தமிழில் இல்லை என்பதைக் குறையாகவே நான் கருதுகிறேன்.
இந்தப் பட்டியலோடு நாடகப் பிரதிகளைத் தேடிப் படிக்கும் விருப்பம் கொண்ட ஒரு மாணவனுக்கு நான் சில நாடகப் பிரதிகளைப் பரிந்துரை செய்யவும் விரும்புகிறேன். அவை எல்லாம் அரிஸ்டாடிலிய நாடகக் கட்டமைப்போடு கூடிய நல்திறக் கட்டமைப்போடு இருந்த போதிலும் இக்காலச் சமூகத்தோடு நெருங்கிய தொடர்புடைய முரண்பாடுகளை நாடக அழகியலுடன் தருவன என்பதில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. அந்த பட்டியலில் சங்கரதாஸ் சுவாமிகளின் பிரகலாத சரித்திரத்திற்கும், பம்மல் சம்பந்த முதலியாரின் சபாபதி, சி.என். அண்ணாதுரையின் வேலைக்காரி, சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண், சுஜாதாவின் ஊஞ்சல், கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர், தி.ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் தேரோட்டி மகன், எம்.ஆர். ராதாவின் ரத்தக்கண்ணீர் போன்ற தமிழ் நாடகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இப்சனின் பொம்மை வீடு, ஷேக்ஸ்பியரின் மேக் பெத், மோலியரின் கஞ்சன், ஆண்டன் செகாவின் செர்ரித்தோட்டம்¢, டென்னஸி வில்லியமஸின் கண்ணாடிச் சிற்பங்கள், அயனஸ்கோவின் காண்டாமிருகம், ழான் பால் சார்த்தரின் மீளமுடியும், பெர்ட்டோல்ட் பிரக்டின் கலிலியோ கெலிலி, சாமுவேல் பெக்கட்டின் கோதாவுக்குக் காத்திருத்தல் போன்ற ஐரோப்பிய நாடகங்களையும், கிரிஷ் கர்னாடின் நாகமண்டலம், விஜய் டெண்டுல்கரின் அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது., மோகன் ராகேஷின் அரையும் குறையும், சி.ஜே.தாமஸின் க்ரைம் நம்பர் 21, ஜி.சங்கரப்பிள்ளையின் கறுப்புத் தெய்வத்தைத் தேடி போன்ற இந்திய நாடகங்களையும் எழுதிப் பட்டியலிட்டுத் தருவேன்.
=======================================================
– அ.ராமசாமி நேரம் சனி, டிசம்பர் 08, 2007
இதை மின்னஞ்சல் செய்க BlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
வீடு பெற நில்! – ஒரு அரிசோனன்
ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார். அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள்.
“வாங்க ஸ்ரீநிவாஸ் ஓனர் சார் , எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி நிலைய உரிமையாளர்.
அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே!
“என்னத்தைங்க சொல்லறது? பொழுதுபோய் போழுதுவந்தால் இங்கே வந்து நாம பேசறோம். அலுத்துக்கறோம். வேற என்னாங்க சொல்றது!” அலுத்துக்கொண்டார் ஸ்ரீநிவாஸ்.
“அண்ணாச்சி, ஏன் அலுத்துக்கறீக? இங்கே வந்து பேசுனாத்தானே வீட்ட ஒழுங்கா வச்சுக்கத் தாவலை!” என்றார் அப்துல்லா.
“நீங்க சொல்றது சரித்தான் பாய்! ஆனா, வீட்ட ஒழுங்கா வச்சுகனுமின்னு புது வீட்ட கட்டாம இருக்காகளே! அப்படி இருந்தா புள்ள குட்டிகளுக்குக் குடி இருக்க வீடு கிடைக்குமா?” என்று தன்பங்குக் குறையைச் சொன்னார் தேவநாயகம்.
“ஏங்க, வாடகை வீடு கிடைக்காதா?” என்று அப்பாவித்தனமாக ஒலித்தது ஒரு இளம் குரல்.
அனைவரும் தலையைத் திருப்பிப் பார்த்தால், சுரேஷ் என்ற ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவன் முகத்தைக்கண்ட அனைவருக்கும் சிரிப்பு வந்தது.
“நீ எங்கே இங்கே வந்தே?” ஒருமித்த குரல் எழுந்தது.
“நானும் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரன்தானே! கேள்வி கேட்கக்கூடாதா?” மழலை துள்ளி விளையாடியது.
“ஆமாம், இவன் எங்கே இங்கே வந்தான்?” ஒரு முணுமுணுப்பு எழுந்தது.
“வரவேண்டிய வேளை வந்தால் வரவேண்டியதுதானே! கேள்வி கேட்டால் நாமும் பதில் சொல்லவேண்டியதுதானே!” என்று ஸ்ரீநிவாஸ் சொல்லிவிட்டுத் திரும்பிப்பார்த்தால், சுரேஷ் மாயமாக மறைந்துவிட்டிருந்தான்.
“எங்கே போயிட்டான், இந்தப் பிள்ளையாண்டான்? கேள்வி கேக்கவேண்டியது, அப்பறம் பதில் சொல்லறதுக்குள்ள ஓடிப்போயிடவேண்டியது!” அம்புஜம் மாமியின் குரலில் சலிப்புகலந்த எரிச்சல் இருந்தது.
“விட்டுத்தள்ளுவீகளா மாமி. சின்னப்புள்ள, புதுவீடு, அதுதான் அடிக்கடி ஓடிப்போகுது.” என்றார் அப்துல்லா.
“ஆமாம். விட்டுத் தள்ளுங்க!” என்று அப்துல்லா சொல்வதை ஆமோதித்தார் தேவநாயகம்.
“சொல்லுங்க, ஏன் வாடகை வீட்டுல இருக்கக் கூடாது?”
மீண்டும் அதே குரல், சுரேஷ்தான்!
“சுரேஷ் கண்ணா. ரூல் அப்படித்தாண்டா! எல்லோரும் சொந்த வீட்டில இருக்கணும்தானே சட்டம்! அதை நம்ப எப்படி மாத்த முடியும்?” புதுக் குரல் ஒலித்தது. சுரேஷின் அம்மா சரஸ்வதியுடையதுதான் அது.
“சரிம்மா!” பழயபடியும் மறைந்துவிட்டான் சுரேஷ்.
தூரத்தில் கூக்குரல் ஒலித்தது. அனைவரும் அப்பக்கம் திரும்பினார்கள். நூற்றுக்கணக்கான பேர்கள் – உருவம்கூடச் சரியாகத் தெரியாத தூரத்தில் நின்றுகொண்டு – கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தார்கள்.
“யாருங்க அவங்க? ஏன் இப்படிக் கத்தறாங்க?” காமாட்சி கேட்டாள்.
தொண்டையைச் செருமிக்கொண்டார், புதிதாக உள்ளே நுழைந்த வரதராஜுலு.
“அவங்கல்லாம் வீடு இல்லாதவங்க! புதுசா வீடு கிடைச்சாத்தானே குடிபோகமுடியும்? அதுதான் இங்கே நிக்கறாங்க!”
பார்க்கப்பார்க்க, வீடில்லாதவர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போவதாக அவர்களுத் தோன்றியது.
அங்கு மழை பெய்துகொண்டும் இருந்தது. பலர் வழுக்கி விழுந்துகொண்டிருந்தார்கள். விழுந்தவை எழவே இல்லை.
“ஏன் அவா கும்பல் ஜாஸ்தியாப் போயிண்டே இருக்கு?” அம்புஜம் மாமி குரல் ஒலித்தது.
“இப்பத்தான் புச்சா வூடு கட்றது கொறஞ்சு பூட்டுதே, மாமி! தெரியாத்த மாறி கேக்குறே!” பின்னால் இருந்த முனியாண்டி உரக்கக் கத்தினான்.
“எல்லாம் சோம்பேறித்தனம், சொயநலமுங்க! தங்களோட வீட்டை நல்லப் பாத்துக்கணும்னு வீடு கட்டமாடேங்கராணுவ! ஆனாப்பாருங்க, நான் நாலு வீடு கட்டினேனுங்க!” என்றார் அப்துல்லா.
“உங்கமாதிரி இருக்கறவங்க கொஞ்சப்பேருதானுங்க.” இது ஸ்ரீநிவாஸ்.
“எங்க தாத்தா பத்து வீடு கட்டினார். எங்க அப்பா அஞ்சு கட்டினார். நானும் எங்களவரும் ரெண்டுதான் கட்டினோம்.” அன்புஜம் மாமி கணக்குச் சொன்னாள்.
“எனக்கும் ரெண்டு வீடுதாங்க.” தேவநாயகம் தலையைச் சொரிந்து கொண்டார்.
“அந்தக்காலத்துல நிறைய வீடு கட்டணும்கற ஆசை இருந்துது. கட்டினாங்க. சரியாப் பராமரிக்க வசதி இல்லை. அதுனால எல்லா வீடும் ஸ்ட்ராங்கா இல்லை. ஒரு சிலதான் நிலைச்சு நின்னுது. இப்ப அப்படியா? நம்ம வீட்டையும், நாம கட்டின வீட்டையும் நிறைய நாள் இருக்கும்படி பாத்துக்கறோம். அதுனால ரெண்டு வீடுக்குமேல கட்ட வசதி இல்லாம போறது.” ஸ்ரீநிவாஸ் விளக்கம் கொடுக்க முனைந்தார்.
“அதோட மட்டுமில்லீங்க. கலியாணம் ஆனவங்கதான் வீடுகட்டலாம்னு வேற சொல்றாங்க. போறாததுக்கு, பொறக்கற ஒரொரு குழந்தைக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுக்கணும்னும் ரூல் போட்டாச்சு.” காமாட்சி தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.
“இது பிற்போக்குத்தனம். திருமணம் செய்துகொண்டுதான் வீடு கட்டவேண்டுமா? இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான, பகுத்தறிவுக்கு ஒப்பாத சட்டதிட்டங்களால்தான் நாடு முன்னேறாமல் நிற்கிறது. மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சட்டங்கள் இல்லை. அதனால்தான் அங்கு வீட்டுப் பற்றாக்குறை இல்லை!” என்று சிங்கமாக முழங்கினார் சிங்காரவேலர்.
“அதுசரி, அங்கே ரெண்டுபேர் சேர்ந்து வீட்டைக் கட்ட ஆரம்பிக்கறாங்களாம். வேண்டாம்னா இடிச்சுப் போட்டுப் போயிடறாங்களாமே?” என்று வினவினார் தேவநாயகம்.
“இங்கிட்டு மட்டும் என்ன வாழுதாம்? கண்ணாலம் கட்டாம வூட்டக் கட்ட ஆரம்பிச்சுடறாங்க. அப்பால, சட்டத்துக்குப் பயந்துகினு இடிச்சுத்தள்ளிடறாங்க. இன்னும் சிலபேரு கட்டின வூட்டை வுட்டுட்டு ஓடியே போயிடறாங்க.” முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினான்.
“இடிக்கறதுக்கு அது பரவயில்லைக! யாராவது வந்து குடி இருக்கலாமில்ல!” இது அப்துல்லா.
அதை தேவநாயகமும், ஸ்ரீநிவாசும் ஆமோதித்தார்கள்.
“அதனால்தான் இந்த மூடத்தனமான, குருட்டுத்தனமான சட்டதிட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும், உடைத்தெறியப்பட வேண்டும் என்கிறேன். விரைவிலேயே ஒரு போராட்டமும் நடத்தலாம் என்று இருக்கிறேன்.” மேடைப்பேச்சுத் தொனியில் மீண்டும் முழங்கினார் சிங்காரவேலர்.
“ஊரோட ஒத்து வாழவேணும், இல்லையா! இப்படி எதுக்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்னா எப்படி? சட்டம் போட்டவங்க இதெல்லாம் தெரியாமலா போட்டிருக்காங்க? நினைச்சவங்க நினச்சபோதேல்லாம், கண்ட இடத்திலே, ஒரு விதிமுறை இல்லாம விடுகட்டினா அதுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாமா?” என்று கனிந்த குரலில் கேட்டார் கல்யாணராமன்.
“ரெண்டுபேர், ரெண்டுபேர்னா, என்னைமாதிரி ரெண்டு சின்னப்பசங்க வீடுகட்டலாமா?” திடுமென்று அங்கேவந்து குதித்து, கேள்வியைக் கேட்ட சுரேஷ் ஓடியே போய்விட்டான்.
“என்னது, இந்தக் குழந்தை திடும்திடும்னு வந்து நின்னு, கேள்வியைக் கேட்டுட்டு ஓடியே போயிடறது!” என்று முகத்தை தோளில் இடித்துக்கொண்டாள் அம்புஜம் மாமி.
“சும்மா குழந்தையைத் திட்டதீங்க, மாமி. அதுக்கென்ன தெரியும்? குட்டியும், நாயும் குடிபோன இடத்தை விட்டு வருமா?” என்று சமாதானம் சொன்னார் வரதராஜூலு.
“ஆமாம்! என்னைத் திட்டாதீங்க மாமி. மாமா, நீங்களே சொல்லுங்க. என்னைமாதிரிச் சின்னப்பசங்க ஏன் வீடு கட்டுக்கூடாது?” கல்யாணராமனின் கையைபிடித்து உலுக்கினான் சுரேஷ்.
“அதுக்கு வயசு வரணும். நீ சின்னப்பையன் இல்லையா. உனக்கு வீடு கட்டத் தெரியாது.” என்று இருக்கும் இடத்திலிருந்தே சுருக்கமாகச் சொன்னார் ஸ்ரீநிவாஸ்.
“சொல்லித்தந்தா கட்டிடப் போறேன்!” என்று சிரித்த சுரேஷ், வழக்கப்படி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காணாமல்போய்விட்டான்.
தூரத்தில் ஒரு பனிபடர்ந்த மலையின்மேலே கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் எதோ ஒன்று தெரிந்தது. உருவம் புலப்படாத பலர் அந்த மலையின் மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் அங்கிருந்து உருண்டு விழுந்து கூட்டமாக நின்று கத்திக்கொன்றிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்களில் பலர் எங்கோ போவதும், அதற்கும் அதிகமானவர் அங்கு வந்து சேர்ந்து கொள்வதுமாக இருந்தது.
இதை வியப்புடன் பார்த்த சரஸ்வதி, “ஏன் அந்த மலையில் ஏறிப்போகிறார்கள்? ஏன் உருண்டு விழுகிறார்கள்?” என்று கேட்டாள்.
“அதுங்களா! அந்த மலைமேலதாங்க ஒரு பெரிய நகரம் இருக்குது. அங்கே ரொம்ப வசதியான வீடுக இருக்காப்பல. தோட்டம், துரவு, மத்த வசதிக்கெல்லாம் கொறச்சலே இல்லீக. அங்கிட்டு வீடு எத்தன காலமானாலும் அப்படியே புதிசா இருக்குமாங்க.” என்று சொன்னார் அப்துல்லா.
“நீங்க போய் பாத்திருக்கீங்களா?”
இல்லை என்பதுபோல தலையைக் குறுக்கவாட்டில் ஆட்டினார்.
“நாம் இங்கு வீட்டை எப்படி வைத்துக்கொள்கிறோம் என்று கணக்கு எடுக்கப்படுகிறது. அதைப் பொறுத்து அங்கு வீடுகள் கொடுக்கப்படுகின்றன. வீட்டை ஒழுங்காக வைத்துக்கொள்ளாமல் பாழடையவோ, சேதமாகவோவிட்டவர்கள் உருட்டித் தள்ளப்படுகிறார்கள்!” என்று தனக்குத் தெரிந்ததைத் சொன்னார் தேவநாயகம்.
“உங்களுக்கு எப்பாடித் தெரியும்?” இந்தமுறையும் கேள்வியை எழுப்பியவர் சிங்காரவேலர்தான்.
“புஸ்தகத்திலே படிச்சிருக்கேன்.”
“எந்தப் புத்தகம்?”
“எங்கிட்ட இருக்கற புத்தகம்.”
“உங்ககிட்டே இருக்கிறது என்பதால் அது உண்மையா? அதில் எழுதி இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமா?” சிங்காரவேலர் அதட்டும் குரலில் கேட்டார்.
“மாமா, நீங்க எதையும் ஒப்புக்க மாட்டேங்கறீங்களே! எதை ஒப்புக்குவீங்க?” பின்னாலிருந்து சுரேஷ் கேட்டது சிங்காரவேலரைத் திடுக்கிடவைத்தது.
“நான் என் அறிவையும், கண்ணால் காணுவதையும், காதால் கேட்பதையும், தகுந்த சான்றுகளுடன் சொல்வதையும்தான் ஒப்புக்கொள்வேன். அதுசரி, நீ என்ன பெரிய மனிதன்மாதிரி என்னைக் கேள்வி கேட்கிறாய்?” அவர் குரல் உஷ்ணமாக இருந்தது. ஒரு சிறுவன் தன்னை மடக்குவது மாதிரி கேள்வி கேட்பதா என்ற எரிச்சலலும், கோபமும் அவர் குரலில் கலந்திருந்தன.
“தம்பி சரியாத்தானே கேக்குறான். நீ ஏன் சாரு சும்மா வெடய்க்கிறே! யாரு எதைச் சொன்னாலும் நீதான் குறுக்கே வந்து அது சரியில்லே, இது சரியில்லேங்கறே. நீதான் சொல்லேன், பாப்பம். அந்த மலைக்கப்பால என்னதான் கீது?” முனியாண்டி தூரத்தில் இருந்து கத்தினாலும் எல்லோரின் காதிலும் அது ஒலிக்கத்தான் செய்தது.
“ஆமாம். சொல்லுங்க!” பல குரல்கள் ஒலித்தன.
“அங்கே போய்ப் பார்க்காதவரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. நாம் காண்பதெல்லாம் வெறும் மனப் பிரமை. கண்ணைக்கூசும் வெளிச்சம் பலவிதமான இல்லாத தோற்றங்களை உண்டுபண்ணுகிறது.” சிங்காரவேலர் தான் சொல்வதுதான் சரி என்பதுபோன்ற திட்டவட்டமான குரலில் அறிவித்தார்.
“ஒரு விதத்திலே அப்துல்லா சொன்னதோ, தேவநாயகம் சொன்னதோ சரியாக இருக்கலாம். அதுனால, நாம அங்கே என்ன இருக்குன்னு மனசை ஒருநிலைப்படுத்தி யோசித்தால் எல்லாம் விளங்கும்.” என்றார் கல்யாணராமன்.
”நீங்க என்ன சொல்றேள்?” என்று கேட்டாள் அம்புஜம் மாமி.
“நீங்க சொல்றது புதிர்போடறமாதிரி இருக்கு.” இது சரஸ்வதி.
“ஒண்ணைப் பார்க்காதாதுனாலே அது இல்லேன்னு நம்ம சிங்காரவேலர் சொல்றார். அந்த மலைலே ஏறி வெளிச்சத்திலே போய் மறையரவங்க யாரும் திரும்பி வரதாக் காணோம். மலைலேந்து உருண்டு விழறவங்க தூரத்திலே வீடு வேணும்கற கூட்டத்தில கலந்துடறாங்க. அதைப் பார்த்து நாம நம்ம மனசுக்குத் தோணினதைச் சொல்றோம்.” என்று அனைவர் சொன்னதையும் சுருக்கிச் சொன்னார், வரதராஜுலு.
“நான் மேலே சொல்றேன்.” என்று துவங்கினார் ஸ்ரீநிவாஸ். “மலைக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாம வெளிச்சம்தான் நம்ம கண்ணை மறைக்குது. அந்தக் கூச்சம் தெரியாம இருக்க ஒரு நல்ல கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கிட்டா அங்கே என்ன இருக்கும்னு தெரியும் இல்லையா?”
“அது மட்டும் போதுமா? இங்கேந்து பார்த்தா தெரியற விஷயமா இது?” சரஸ்வதியிடமிருந்து கேள்வி பிறந்தது.
“ஒரு பைனாகுலர் இருந்தா…?”
“ஏன்? நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?” முனியாண்டியின் குரல் காதில் விழுந்த அடுத்தகணமே சுரேஷின் குரல் பெரிதாகக் கேட்டது.
“பை, பை, அம்மா, மாமா, மாமி, எல்லோருக்கும், பை,பை. நான் வரேன். உங்க எல்லோரோட வீடுகளும் இடிஞ்சு போயிடுத்து. பை, பை!” உற்சாகமாகக் கையை ஆட்டிவிட்டு ஒடி மறைந்தான் சுரேஷ்.
முனியாண்டி மட்டும் மலையில் ஏறும் கும்பலில் இருந்தான். மற்றவர்கள் வீடில்லாமல் கூச்சலிடும் கும்பலில் தாங்கள் இருக்கக் கண்டார்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“டாக்டர்! மினிபஸ் ஆக்சிடென்ட்லேந்து கொண்டு வந்தவங்கள்ல இந்தப் பையன் சுரேஷ் மட்டும்தான் பிழைச்சுக்கிட்டான். அவனுக்கு வைட்டல் சைன்ஸ் போயிட்டுபோயிட்டு வந்துட்டே இருந்திச்சு. நினைவும் வந்துவந்து போயிட்டே இருந்துது. கண்ணைத் திறந்துட்டான். இப்ப அவனது வைட்டல் சைன் எல்லாம் ஸ்டெடியாக ஆயிடுச்சு. இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் நார்மல்.” என்று நர்ஸ் டாக்டரிடம் தொலைபேசியில் சொன்னாள்.
“மத்தவங்க.?...”
“ஆக்சிடென்ட் ஆன மினிபஸ்லேந்து கொண்டுவந்த அத்தனை பெரும்…. பேரைப் படிக்கறேன், டாக்டர் – ஸ்ரீநிவாஸ், காமாட்சி, அப்துல்லா, தேவநாயகம், அம்புஜம், முனியாண்டி, சரஸ்வதி, கல்யாணராமன், வரதராஜுலு, சிங்காரவேலர் – இவங்க யாரும் பிழைக்கலை. ஒரு நிமிஷம் முன்னாலேதான் ஒருத்தருக்கு அப்பரம் ஒருத்தரா சில செகண்ட்ஸிலேயே போயிட்டாங்க…”
(அடுத்த மாதம் ‘வீடு பெற செல் ‘ என்ற இதன் தொடர்ச்சியைக் காணலாம் !)
இரண்டும் இல்லை – மும்பை வீ வீ ஜீ
காலிங் பெல் சத்தம் கேட்டுக், கதவைத் திறந்தாள் காமாட்சி. மகன் கல்லி . நின்று கொண்டிருந்தான். ஐந்து மணி தான் ஆகியிருக்கு அதுக்குள்ளே ஆபீஸிலிருந்து வந்து விட்டானே என்று யோசித்துக் கொண்டே, ” டிரெஸ் மாத்திண்டு வா. காபி கொண்டு வருகிறேன் என்று சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.
கல்லி காமாட்சியின் ஒரே மகன். கணவர் ஐந்து வருடங்களுக்குமுன்பு மாரடைப்பில் இறந்து விட்டார். கல்லி என்ற நம் கதாநாயகனுக்கு பெற்றோர் வைத்த பெயர் கல்யாணராமன். இந்த நல்ல பெயரை சுருக்கி கல்லி என்று கூப்பிடுவதால்தானோ, என்னவோ நாற்பது வயது ஆகியும் பிரம்மசாரியாகவே இருக்கிறான். பார்க்க வாட்டசாட்டமாக நன்றாகவே இருப்பான். சிரிக்க சிரிக்கப் பேசுவான். இருந்தாலும் இதுவரை ஒன்றும் தகையவில்லை. அவன் ஆபீஸில் ஐந்து பெண்கள் வேலை செய்கிறார்கள். எல்லோருமே கல்யாணமானவர்கள். இவனைப் போல கல்யாணமாகாத மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் முப்பதுக்கு கீழே தான். இதுவரை ஐம்பது ஜாதகங்கள் பார்த்து விட்டார்கள். ஒன்றும் அமையவில்லை.
கல்லி கையில் காபியைக் கொடுத்து விட்டு காமாட்சி, பேச ஆரம்பித்தாள். ” நீ சீக்கிரமா ஆபீஸிலிருந்து வந்ததும் நல்லதாப் போச்சு. நானே ஒன்ன போன்ல கூப்பிடணம் என்று இருந்தேன். இன்னிக்கிக் காலை கல்யாணத் தரகர் வெங்கடேசன், திருவண்ணாமலை ஜோசியரோடு வந்திருந்தார். ஒன் ஜாதகத்துல தோஷம் இருக்காம். ஏழாம் வீட்ல செவ்வாய், சனி, ராகு கேது எல்லாம் சேர்ந்து இருக்காம். அதனாலேயே கல்யாணம் தள்ளிப் போகிறதாம். அதனால பரிகாரம் செய்யணும். ஒரு கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடுமாம் ” என்றாள்.
கல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. ” கல்யாணம் ஆகிவிட்டால், பிறகு பரிகாரம் எதற்கு என்று யோசித்தான். காமாட்சி விளக்கினாள். கல்லிக்கு ஒரு குட்டி போட்ட கழுதையோடு பொம்மைக் கல்யாணம் செய்து வைத்தால், இரண்டு மாதத்திற்குள் நிச்சயமாக அவனுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நிச்சயம் ஆகும் என்றார். மற்ற நிபந்தனைகள் ;
- வரும் வெள்ளிக் கிழமை 12 மணி ராகு காலத்தில் நடக்க வேண்டும்.
- சம்பவ தினத்தன்று, இல்லை இல்லை, கல்யாண தினத்தன்று மாப்பிள்ளையும் பெண்ணும் (?) காலையிலிருந்து பச்சை தண்ணி பல்லில் படாமல் விரதம் இருக்க வேண்டும்.
- வெள்ளிக் கம்பியில் தாலி செய்து கழுதையின் கழுத்தில் கட்ட வேண்டும். கல்லிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிற வரை அதை கழட்டக் கூடாது.
கல்லிக்கு இதைக் கேட்டு தலை சுற்றியது. சிறு வயதில் ஒரு கழுதையின் வாலில் சரவெடி கட்டப் போய், அது உதைக்க, பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று அன்றையலிருந்து கழுதையென்றால் அவனுக்கு பயம். ” அம்மா கழுதைக்குப் பதில் பசு, ஆடு இப்படி ஏதாவது ” , சொல்லி முடிக்கவில்லை, காமாட்சி கண்ணைக் கசக்கிக் கொண்டு , அப்படி எல்லாம் சொல்லாதே. சாமி குத்தம் ஆயிடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோப்பா. கூடவே வெங்கடேசனும் அவன் மச்சினனும் இருப்பார்கள் ” என்றாள். ‘ பிரச்சினையே அது தானே என்று நினைத்த , கல்லி ” நீ நினைச்சா, நடத்தாமல் இருப்பயா. ஏதோ செய் ” என்று கூறி தன் ரூமுக்கு சென்று விட்டான்.
தரகர் வெங்கடேசனின் மச்சினன் கண்ணன் ஒரு மேரேஜ் காண்டிராக்டர். அவனிடமே இந்த கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாட்டை செய்யச் சொன்னாள் காமாட்சி. மொத்த செலவு கிட்டத்தட்ட ஐம்பது ஆயிரம் ஆகுமாம். முக்கியமான செலவு கழுதை வாடகையும் , சாஸ்திரிகள் தட்சிணையும் தான். வண்ணாரப்பேட்டை பக்கத்தில் ஒரு சின்ன குளம் இருக்கிறது. அங்கே சலவைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நிறைய கழுதைகளும் அங்கு இருக்கும் . கண்ணன் அங்கே போய், கழுதை சொந்தக்காரன் காபலியிடம் , “ வர வெள்ளிக் கிழமை, ஒரு, குட்டிபோட்டக் கழுதை இரண்டு மணி நேரம் வாடகைக்கு வேண்டும் ; வெள்ளி தாலி கட்டுவார்கள். மற்றும் கண்டிஷன்கள் எல்லாம் சொன்னான். கபாலி மப்பில் இருந்தான். ஐந்தாயிரம் ரூபாய் அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு, வெள்ளிக் கிழமை கழுதையோடு வருகிறேன் என்றான். அடுத்து, கண்ணன் நாதஸ்வரம் ஏற்பாடு செய்யக் கிளம்பினான்.
திருமணநாள் நெருங்க நெருங்க கல்லிக்குக் கவலை அதிகரித்தது. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று. கண்ணன் போட்டோக் காரனிடம் போன போது அவன் பணம் வேண்டாம். எடுத்த வீடியோவை மீடியாவில் போட அனுமதி வேண்டும் என்று கேட்டான். காசு மிச்சம் என்று கண்ணன் சரி என்றான் . காமாட்சி , இனிப்பு காரம் முதலியவைகளை கடையிலிருந்து வரவழைத்து வைத்துக் கொண்டாள். எப்படி இருந்தாலும் வீட்டில் நடக்கும் முதல் கல்யாணம் அல்லவா. ஒன்றும் குறை வைக்கக் கூடாது என்று நினைத்தாள். மணப் பெண்ணிற்காக கொஞ்சம் பழைய நியூஸ் பேப்பர் வாங்கி வைத்தாள்.
வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே வீட்டில் கல்யாணக் களை கட்டி விட்டது. கல்லி ஆபீஸில் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. சிடியிலிருந்து தள்ளி இருக்கும் காலனி ஒன்றில் அவர்கள் தனி வீட்டில் இருக்கிறார்கள். அதனால் கல்லி – கழுதை கல்யாணம் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. பத்து மணிக்கே சாஸ்திரிகளும், தரகர் வெங்கடேசனும் வந்து காலை சிற்றுண்டி காபி எல்லாம் முடித்து விட்டு, இந்த மாதிரி கல்யாணத்திற்கு என்ன மந்திரம் சொல்வது என்று தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். கல்லி காலையிலிருந்தே உபவாசம். கொஞ்சம் காபி சாப்பிடலாமா என்று கேட்க, அப்போது தான் உள்ளே வந்த காமாட்சி, சித்த பொறுத்துக்கோடா , எல்லாம் உன் நன்மைக்குத்தான் “ என்றாள்.
நேற்று ராத்திரி அடித்த தண்ணியால் கபாலி பத்து மணிக்கு தான் எழுந்தான் . இன்றைக்குத் தான் கழுதையை கல்யாணத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று ஞாபகம் வந்தது. வெளியே வந்து பார்த்தால் முனியம்மா எல்லா கழுதைகளையும் மூட்டை ஏற்றி குளத்துக்குக் கொண்டு போய் விட்டாள். கபாலிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கை நீட்டி பணமும் வாங்கிட்டான். வீட்டில் , நடக்க முடியாமல் படுத்துக் கிடந்த கிழட்டுக் கழுதையை தட்டி எழப்பி, அவசர அவசரமாக ஓட்டிச் சென்றான். ஒரு வழியாக 11.30 க்கு மாப்பிள்ளை கல்லி வீட்டை அடைந்தான். கண்ணன் கோபத்தை அடக்கிக் கொண்டு ,” கபாலி , பொண்ணுக்கு சீக்கிரமாக அலங்காரம் பண்ணு. இன்னும் இருபது நிமிஷத்துக்குள்ள தாலி கட்டணம் “ என்றான்
கழுதையை சுத்தம் செய்து அதன் மீது மஞ்சள் நீர் ஊற்றி மண்டபத்துக்கு ஓட்டிக் கொண்டு வந்தான் கபாலி. காமாட்சி அதை வாஞ்சையுடன் பார்த்து நெற்றியில் குங்குமம் வைத்தாள். ( என்ன இருந்தாலும் மாட்டுப் பொண்ணாச்சே: இல்லை கழுதை பொண்ணாச்சே. கபாலி கண்ணனைப் பார்த்து மீதி பணம் எப்போது என்று கண்ணாலேயே கேட்டான். கண்ணன் பதில் சொல்லாமல் எரித்து விடுவது போல அவனைப் பார்த்தான். மணி 11.50
சாஸ்திரிகளுக்கு நேரம் ஆக ஆக சந்தோஷம். கொஞ்ச மந்திரம் சொன்னால் போதுமே. புது பட்டு வேஷ்டி சட்டையுடன், கல்லி , கில்லி மாதிரி நின்றான். காமாட்சி கையில் வெள்ளிக் கம்பியோடு, அதாவது தாலியோடு நின்றாள். வீடியோ ஆள் நல்ல பொஸிஷன் பார்த்து நின்று கொண்டான். கண்ணன் மாப்பிள்ளைத் தோழனாக அவதாரம் எடுத்து கல்லியை கழுதைக்கு எதிரே கொண்டு வந்தான். கழுதைக்குப் பின் பக்கம் கபாலி, தந்தை ஸ்தானத்தில் நின்று கொண்டான். நாதஸ்வரம் பீ பீ என்று ஓசை எழுப்பியது. தவில் டும் டும் என்று ரீங்காரித்தது. மாங்கல்யம் தந்து நாமேண “…..சாஸ்திரங்களின் கணீர் குரல்..மணி 12.00..கல்லி கழுதை கழுத்தில் வெள்ளித் தாலியை அம்மாவிடமிருந்து வாங்கிக் கட்டி, மாலை போட்டான் . பெண் பக்கத்திலிருந்து கபாலி கல்லி கழுத்தில் மாலை போட்டான். ” மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் ” என்று நாதஸ்வரத்தில் பாட்டு களை கட்டியது. இந்த களேபரத்தில் உதைத்து ஓட வேண்டிய கழுதை வயதான காரணத்தினால் கீழே படுத்து விட்டது. காமாட்சி ஓடி வந்து , பாவம் காத்தாலேந்து பட்டினி. பச்சை ஒடம்பு வேற. கபாலி ஏதாவது சாப்பிடக் குடு என்றாள். கபாலி ஏதோ சொல்ல வந்து , கண்ணனைப் பார்த்து , வாயை மூடிக் கொண்டு தலையாட்டினான். சாஸ்திரிகள் தன் பங்குக்கு , பாலும் பழமும் கொடுக்கலாமே என்றார். கல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு , பலகாரங்களை ஒரு கை பார்க்க ஆரம்பித்தான். கண்ணன் எல்லோருக்கும் செட்டில் செய்து அனுப்பிக் கொண்டிருந்தான். தரகர் வெங்கடேசன், எல்லாம் நல்ல படியாக நடந்தது என்று பார்ட்னர் திருவண்ணாமலை ஜோசியருக்கு போன் செய்து சொல்லிக் கொண்டிருந்தார் . கபாலி ரொம்ப சிரமப்பட்டு, கழுதையை உதைத்து எழுப்பி கொண்டு போக அல்லாடிக் கொண்டிருந்தான். “ பாருடா, நம்ம வீட்டை விட்டு போறதுக்கு அதுக்கு விருப்பமில்லை போலிருக்கு” என்று சிலாகித்தாள் காமாட்சி. நல்ல வேளை முதலிரவு இல்லை என்ற அல்ப சந்தோஷத்துடன், தன் அறையை நோக்கி நடந்தான் கல்லி . ” “இன்னும் இரண்டு மாசதுக்குள்ள கல்லி கல்யாணம் நிச்சயம் ஆயிடும் பாருங்கோ” என்று சொல்லி, வெங்கடேசன், காமாட்சியிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
திருமணம் முடிந்து பத்து நாட்களுக்குள்ளேயே, கல்லியிடம் பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. புது டிரெஸ் வாங்கிக் கொண்டான். சென்ட் அடித்துக் கொண்டான். ஆபீசுக்குப் போகும் போது அழகு செய்து கொள்ள அரை மணி அதிகமாக எடுத்துக் கொண்டான். ஆபீஸிலிருந்து லேட்டாக வர ஆரம்பித்தான். வந்த ஜாதகங்களை எல்லாம் பார்க்காமலே பிடிக்க வில்லை என்றான். பெற்றவளுக்கா புரியாது. சிரித்துக் கொண்டாள். கல்லிக்கு காதல் துளிர்விட ஆரம்பித்து விட்டது என ஆனந்தப் பட்டது அந்த தாயுள்ளம். திருவண்ணாமலை ஜோசியரை நன்றியுடன் நினைவு கூர்ந்தாள். இன்னும் ஒரு மாதம் ஓடியது. கல்லி தன்னுடைய அறையில் ம்யூசிக் சிஸ்டம் போட்டு ஆட ஆரம்பித்தான். “ ஆபீஸில் வேலை செய்யும் மூன்று பேரை வரும் சனிக்கிழமை டின்னருக்கு கூப்பிட்டு இருக்கிறேன். சாப்பாடு எல்லாம் வெளியிலிருந்து வரவழைத்து விடலாம் “ என்றான். வந்தவர்களை காமாட்சிக்கு அறிமுகம் செய்தான். ஆதித்யா , அனுஷ்கா , திவ்யா. அவர்கள் டின்னர் முடிந்து போன பின்பு காமாட்சி கல்லியிடம் கேட்டாள். ” நீ காதலிக்கறவளை வீட்டுக்கே அழைத்து வந்தது சந்தோஷம் தான். சீக்கிரமாக கல்யாணம் பண்ணி நிரந்தரமாக கொண்டுவர நாள் பாருடா. ஆமாம் அனுஷ்காவா இல்ல திவ்யாவா , யாரு ? “ என்றாள்.
கல்லி, தயங்கிக்கொண்டே கொண்டே, “ இரண்டும் இல்லை. ஆதித்யா “ என்றவுடன் காமாட்சி , அதிர்ச்சியில், உறைந்து போய் நின்று விட்டாள். புட்டி போட்டுவிட்டு , லேட்டாக எழுந்த கபாலியின் , கவனக்குறைவால் ,, குட்டி போட்ட கழுதைக்குப் பதிலாக தன் மகன், ஒரு கிழட்டு ஆண் கழுதைக்குத் தாலி கட்டிவிட்டதின் விளைவுதான் இது , என்ற உண்மை அவளுக்கு எப்படித் தெரியும் !!!
திருப்பூரில் புலி – எஸ் எஸ் -யாரோ -வசவுராஜ்
இது ஓர் இலக்கியக் குறிப்பு குழு! வாட்ஸ் அப்பில் இருப்பது! தினமும் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பதிவுகள் பதிவாகும் . ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுதான் இதன் நோக்கமோ என்று பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் வரும்.
அட்மின் ஓர் அப்பிராணி! அவர் சொல்வதை மற்றவர் மட்டுமல்ல அவரே கேட்கமாட்டார். இவர் தொல்லை பொறுக்க முடியாமல் வாட்ஸ் அப்பை விட்டே போனவர் பலர்.
யார் அந்த முதுகெலும்பில்லாத அட்மின் என்று கேட்கிறீர்களா? அடியேன்தான்.
இன்னொரு முக்கியமான செய்தி. இதற்கும் குவிகம் இலக்கியத் தகவலுக்கும் சம்பந்தமில்லை ! சம்பந்தம் இருப்பதாகத் தோன்றினால் அது தற்செயலாக ஏற்பட்டதே தவிர வேறொன்றும் இல்லை பராபரமே!
இப்பவாவது விஷயத்துக்கு வருவோம்.
ஒருநாள் என் மாமியார் வீட்டுக்குப் (கே கே நகர்தான் )போய்விட்டுத் திரும்பும்போது மனைவியை விட்டுவிட்டு என் மந்தைவெளி வீட்டுக்கு. புறப்பட்டுவிட்டேன்.. வரும்போது பஸ்சில் செம கூட்டம். இறங்கி பாக்கெட்டில் கையைவிட்டால் கைபேசியைக் காணோம். பக்கத்தில் அண்ணாச்சி கடைக்குப்போய் அவர் போனை வாங்கி என் போனுக்கு டயல் செய்தேன். மூன்று முறை முயற்சிசெய்தும் யாரும் எடுக்கவில்லை. என் BP அதிகமாகிக்கொண்டே போனது. நாலாவது தடவை அடித்ததும் எனக்குத் தெரிந்த குரல் கேட்டது. என் மனைவிதான். ‘போன் தொலைஞ்சு போச்சோன்னு நினச்சேன். உன்கிட்டதான் இருக்கா அப்பாடா ‘ என்று பெருமூச்சு விட்டேன்.
‘நீங்க கிளம்பும்போது நான்தான் விளக்கமா சொன்னேனே ! என் போனை நம்ம வீட்டில மறந்து வைச்சுட்டேன். உங்க போனை இங்க வைச்சுட்டுப்போங்க! நாளைக்குக் கொண்டு வரேன்னு’ நீங்களும் சரின்னு சொன்னீங்களே ! மறந்து போச்சா? என்று கேட்டாள். அவள் சொன்னமாதிரி ஞாபகம் இல்லை.
ஆனால் அந்த ஒருநாள். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாகிவிட்டது.
மறுநாள் மாலை என் சகதர்மிணி வரவை – மன்னிக்கவும் என் செல்போன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.உள்ளே நுழையும் போதே. ‘உங்களைக் கைது பண்ணப் போறாங்களாமே ? உங்க போனில ஒரு எஸ் எம் எஸ் வந்திருக்கு’ என்று மிகவும் கேஷுவலாக சோல்லிவிட்டு போனை என் மூஞ்சியில் கிட்டத்தட்ட விட்டெறிந்து விட்டு உள்ளே போனாள் என் அருமை பத்தினி.
போனை வாங்கி அவசர அவசரமாகப் பார்த்தேன். ‘ உங்கள் இலக்கியக் குறிப்பு வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஆகிய நீங்கள் தேசத் துரோகம் மற்றும் சைபர் கிரைம் ஆகிய இரண்டு குற்றங்களைச் செய்திருக்கிறீர்கள் ! நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால். உங்களைக் கைது செய்ய நேரிடும் –எனவே இன்னும் 24 மணி நேரத்தில் நேற்றைய வாட்ஸ் அப் பிரிண்ட் அவுட் ஒன்றை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவும்” – கமிஷனர் சைபர் கிரைம்
நான் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.
இலக்கியத் தகவல் வாட்ஸ் அப்பை பய பக்தியுடன் திறந்தேன். நேற்று மட்டும் 247 பதிவுகள். இதுக்கே அட்மினைக் கழுவில் ஏற்றலாம். அவசர அவசரமாகப் படித்தேன். வழக்கம்போல காமா சோமான்னு பதிவுகள். பயத்தில் படித்ததால் ஒன்றும் புரியவில்லை. பிரிண்ட் அவுட் ஒன்று எடுத்து நிதானமாகப் படிக்க ஆரம்பித்தேன்.
அந்தப் பதிவுகளை இங்கே தந்திருக்கிறேன். அவசர அவசரமாக பிரிண்ட் எடுத்ததால் யார் பதிவிட்டது என்ற பெயர் வரவில்லை. பெயரா முக்கியம் ? என்ன எழுதியிருக்கிறார்கள் என்னை அரெஸ்ட் செய்யும் அளவிற்கு ?
1. திருப்பூரில் புலி இருந்ததாமே ! ( இதுதான் ஆரம்பம் )
2. அது புலித் தோல் போத்திய பசுவாக இருக்கலாம்
3. புலி என்றதும் எனக்கு அசோகமித்திரன் எழுதிய புலிக்கலைஞன் கதை ஞாபகம் வருகிறது
4. புலி பக்கோடா தின்ற கதையா
5. அந்தப் புலிக் கலைஞன் ஆக நடிக்க ஆசை என்று நாகேஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
6. புலியைக் கொன்று விடுவோம் என்ற தலைப்பில் அடுத்த வாரம் கவிதைக் கூட்டம் நடைபெறும்
7. என்னது?
8. சாரி புலியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில்
9. புலிக் கவிதையில் பிழையா அது சொற்குற்றம் அல்ல! பொருள் குற்றம்.
10. வாட்ஸ் அப்பில் எழுதினால் எதுவும் குற்றம் ஆகாது. திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார் ‘பொய்மையும் வாட்ஸ் அப் உடைத்து’ என்று
11. திருக்குறளில் புலி என்று 3 தடவை வருகிறது
12. அது தவறான தகவல்
13. வந்த புலிக்குக் காய்ச்சல் ஏதாவது இருக்குமோ? அதுதான் புலிக்காச்சலா?
14. இதோ என் புலிக் கவிதை!
புலிக்குப் புள்ளி உண்டு
மானுக்குப் புள்ளி உண்டு
புலி மானை உண்டால்
.
15. எதற்காக கடைவரியில் வெறும் புள்ளி .
16. அது வெறும் புள்ளி அல்ல முற்றுப்புள்ளி.
17. மானின் கதை முடிந்தது என்பதைப் படிமமாகக் கூறியுள்ளார்.
18. இந்தக் கவிதையில் முதல் மூன்று வரிகளை எடுத்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.
19. மொத்தமே மூன்று வரிகள்தானே . அப்போது ஒன்றுமே இருக்காதே
20. இல்லை முற்றுப்புள்ளி மட்டும் இருக்கும். அது தனியே பேசும்
( இதற்குப்பின் 195 பதிவுகள் . புலிக்கவிதையைப் பாராட்டி -திட்டி விமர்சகர்களைப் பாராட்டி திட்டி பாராட்டுக்கு நன்றி கூறி நன்றிக்கு நன்றி கூறி.! ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டார்களே தவிரத் தேசத்தையோ அரசையோ யாரும் திட்டவில்லையே .. மேலே தொடருவோம்)
21. திருப்பூரில் புலி என்று சொல்லியிருக்கிறார். அதை விடுத்து புலிக் கவிதை என்று புதுக் கவிதைக்குப் போய் விட்டீர்கள். கள் தோன்றி சாராயம் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த ‘குடி’யின் மரபில் வந்தவர் நாம். இதோ ‘பனியன் போட்ட புலி’ என்ற ஈற்றடியில் நான் எழுதிய நேரிசை வெண்பா . என் முக நூலில் பதிவிட்டிருக்கிறேன். அதன் லிங்க் இதோ.. ( இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ/)
22. பாரதி சொல்லாத புலிப்பாட்டா? ‘தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய் நன்நெஞ்சே’ என்று புலிக் குரலில் பேசுகிறான் பாரதி
23. புலிகளைப் பற்றி இத்தனை வரிகளா இது என்ன வரிப்புலியா? இந்தத் தன்மானச் சிங்கம் இனி இந்தத் தளத்தில் இருக்காது. புலி நடப்பு – வெளி நடப்பு செய்கிறேன்.
24. (999999999 left)
25. திருப்பூரில் புலியா ? சான்ஸே இல்லை. பெரிய பூனையாகத்தான் இருக்கும். புலியும் பூனையும் ஒரே ஜாதி தானே?
26. இதிலும் ஏன் ஜாதிப்பிரச்சினையைக் கொண்டு வருகிறீர்கள்? புலியும் பூனையும் ஒரே இனம். தமிழ் இனம். தமிழ் இனத்தைக் குறை சொல்வோர் கைபர் போலன் கணவாய் வழியே திரும்பப் போகட்டும்.
27. நான் என்ன புலி ஹிந்தி, பூனை தமிழ் என்றா சொன்னேன்?
28. ஒரே ஜாதியாக இருந்தாலும் புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?
29. ஏன் அம்மாவாசைக்கும் அப்துல் கலாமுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?
30. அப்துல் கலாம் நாம் மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி பழமொழியில் வருவது அப்துல் காதர்.
31. புலியின் நகச்சுவையை உணர்ந்து இருந்தீர்கள் என்றால் இப்படி நகைச்சுவையாகப் புலியைப் பற்றிப் பேசியிருக்க மாட்டீர்கள்.
32. விடுதலைப் புலி ஐயா அது! உறங்கும் புலியைச் சீற வைக்காதீர்கள் ( இதுவா இருக்குமோ)
33. ஐயோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
34. நீங்கள் சொல்லாவிட்டால் என்ன நாங்கள் அப்படித்தான் புரிந்துகொள்வோம். அதைத் தடுக்க உங்க பாட்டன் வந்தாலும் முடியாது
35. புலி இந்தியாவில் தேசிய மிருகம். அதைக் கேவலமாகப் பேசுபவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தாலும் செய்யலாம். என்பதை இந்தத் தளத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ( இதைக் கொஞ்சம் தீவிரமாக ஆராய வேண்டும்)
36. ஏன் இப்படி இலக்கியக் கூட்டங்களில் எல்லோரும் பதிவு செய்கிறீர்கள்? தேவையானால் ரிஜிஸ்டர்ட் ஆபீஸ் போய் அங்கே பதிவு செய்யுங்கள்.
37. சாரி ஜென்டில்மேன் , உங்கள் அனைத்து விவரங்களும் தவறு. இது ஐயப்பன் பூஜைக்காக .. கட்சிக்காரர் அழைத்து வந்த நிஜப் புலியாம். ( இதுவாக இருக்குமோ?) ஒரு மண்டலம் அது விஜிடேரியன். புல் மட்டும்தான் சாப்பிடுமாம்.
38. புல் சாப்பிடாது . விஜிடேரியன்களை மட்டும் சாப்பிடும்.
39. அந்தக் காலத்தில் புலிப் பல்லைக் காட்டியே திருமணம் செய்வார்களாம். இன்றைக்கு வெறும் பல்லைக் காட்டியே திருமணம் செய்கிறார்கள்.
40. முறத்தால் புலியை அடித்தவர் தமிழப் பெண்மணி!
பனியனால் புலியை விரட்டியவர் திருப்பூர் அம்மணி!
41. இப்போ ஒரு நிருபர் விவரமா இதைப் பத்தி வேறொரு வாட்ஸ் அப்பில்ல சொல்லியிருக்கிறார். புலியை வைத்து ஜட்டி விளம்பரப்படம் எடுக்கப் போறாங்களாம்.
42. எந்தப் பத்திரிகை நிருபர்? தினமலரா? தினத் தந்தியா தினமணியா தமிழ் ஹிந்துவா ? அதை வைத்துக் கொண்டுதான் அது எவ்வளவு உண்மை என்று கண்டுபிடிக்க முடியும்
43. இந்தப் பின்னூட்டம் நேயர் பிடித்த புலிவால் மாதிரி போகிறதே . அட்மின் தூங்குகிறாரா? நான் கரடி மேட்டரைப் போட்டதுக்குக் கரடியாய்க் கத்தினாரே ! இலக்கியக் கூட்டத்தில் புலியை விட்டவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்.
44. ஐயா! நான்தான் தெரியாமல் போட்டுவிட்டேன்.உண்மையில் திருப்பூரில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த புலிக்குத்துப் பல் ஒன்றை ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் கண்டுபிடித்தார்களாம். அதைப் பற்றி வழக்கம் போல நான் கொஞ்சம் கிரிப்டிக் ஆகப் போட்டது தப்பாகிவிட்டது. அதே சமயத்தில் திருப்பூரில் ஒரு கோடவுனில் புலி இருந்தது என்று ஒரு செய்தியும் வந்ததா? கன்யூஷன் ஆரம்பமாகிவிட்டது. இத்துடன் நான் ஆரம்பித்த திருப்பூர் புலிக் கதை முடிவுற்றது. இந்தப் பதிவுகளில் நிறைய ஆட்சேபணைக் கருத்துக்கள் இருந்ததால் சில முன்னாள் நண்பர்கள் (?) இதைவைத்து விவகாரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வந்தது. அட்மின் ஏன் நடுவில் பதிலே போடவில்லை அவரும் ஆட்சேபனைக் கருத்துக்களுக்கு உடந்தையா?
இவ்வளவுதான் பிரிண்ட் அவுட்டில் இருந்தது.
அட்மின் ஆகிய நான் தீர்மானம் எடுத்து குழுவில் பதிவு செய்தேன். இல்லை போட்டேன்.
ஒருநாள் ஒரேஒரு நாள் நான் வாட்ஸ் அப்பில் கலந்து கொள்ளாதது எவ்வளவு பெரிய குற்றமாகிவிட்டது. என்னை அரெஸ்ட் செய்யப் போவதாக மிரட்டல் எஸ்எம் எஸ் வேறு வந்துள்ளது. நான் பனங்காட்டு நரி , எந்த சலசப்புக்கும் அஞ்ச மாட்டேன். ஏனென்றால் என மனைவி மாமியார் இருவரும் லா படிக்காத வக்கீல். அதுமட்டுமல்ல கேரளா ஹை கோர்ட், வாட்ஸ் அப்பில் வரும் பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பாளி அல்ல; பதிவு போட்டவர்கள்தான் பொறுப்பு என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இது இலக்கியத் தகவல் களம் , மற்ற எதுவும்போடவேண்டாம்’ என்று நான் எருமையாக் கத்தினாலும் யாரும் கேட்கவில்லை. அதனால் நான் இப்போது இந்தக் குழுவைக் கலைக்கப் போகிறேன்.
அதற்குமுன்,
இவ்வளவு பேர் திருப்பூரில் புலியைப் பற்றி விசாரித்ததால் அதைப் பற்றி விவரம் சேகரித்து விரிவான கட்டுரை எழுதும்படி நமது திருப்பூர் நண்பர் வசவுராஜ் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவரது கட்டுரை நம் மின்னிதழில் வரும்.
அதைப் போல புலிக்குத்துக்கல் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்து சரித்திரக் கதை ஒன்று எழுதும்படி நமது ஆஸ்தான சரித்திரப் பேராசிரியர் ‘எவரோ” அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதுவும் மின்னிதழில் வரும்.
இத்துடன் இந்த வாட்ஸ் அப் குழு கலைக்கப்படுகிறது.
(குறிப்பு: ‘இலக்கியத் தகவல் மட்டும்’ என்ற புது வாட்ஸ் அப் குழு நாளை ஆரம்பிக்கிறேன். அதில் உங்கள் அனைவரையும் இணைத்துக் கொள்கிறேன். )
எவரோ கதை
திருப்பூரில் புலியைப்பற்றி சரித்திர ஆராய்ச்சி செய்யாலமென்று, திருப்பூர் நூலகத்துக்குச் சென்று ‘(நீலகண்ட) சாஸ்திரி, (சதாசிவ) பண்டாரத்தார்’ என்று எல்லா சரித்திர ஆய்வாளரின் புத்தகங்களைப் படித்து முடித்தேன். அதில் கிடைத்த தகவல் சோழரகளின் புலிக்கொடி ‘இரண்டாம் புலிகேசி’ இவை மட்டும் தான்.
சரி.. நாம் நேரடியாக ஆராய்ச்சியில் இறங்கலாம் என்று முடிவெடுத்தேன். திருப்பூர் பனியன் கம்பெனியிலிருந்து ஒரு வலைபனியன் வாங்கிக் கொண்டேன். திருப்பூர் புலியைப்பற்றி சாஸ்திரி, பண்டாரத்தார் இருவரும் அறியாத ஏதேனும் புதிய கல்வெட்டுகள் கிடைக்கிறதா என்று தேட திருப்பூரில் ‘வலை’ போட்டுத் தேடினேன். வலையில் ஒன்றும் சிக்கவில்லை.
இளங்கோ நகரில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அருகில் ஒரு தடயம் கிடத்தது. கோவிலின் எதிரில் ஒரு வீடு – இரட்டை மாடி.. பச்சை வண்ண சுவர்.. அங்கு ஒரு பெண் ஒரு புலிக்குப் பால் ஊற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டேன். ஆகா.. இதுதான் திருப்பூர் புலியோ? தமிழ்ப்பெண்கள் முறத்தை வைத்துப் புலியைத் துரத்தியது பற்றி சரித்திரம் பேசியது.. பனியனால் புலியை விரட்டிய அம்மணி திருப்பூரில் உள்ளார் என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் புலிக்கே பாலா? அதுவும் கொஞ்சம் மெய்டன் ஓவராக அல்லவா இருக்கிறது. சற்றே அருகில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது. அது புலியல்ல .. பூனையென்று! அட சட்! பாலூற்றின பெண்புலியும் வேறு யாருமல்ல. திருப்பூர் நிருபர் வசவுராஜ் அவர்கள்தான்.
தன் முயற்சியில் சற்றும் தளராத நான் – வேதாளம் மாதிரி அங்கிருந்து புறப்பட்டேன். பெருமாநல்லூர் அருகே பொங்குபாளயத்தில் சிறுத்தை வந்ததாகச் செய்தி வந்தது. முதலில் அது கார்த்தி நடித்த சிறுத்தை படத்தைப் பற்றிய செய்தி அல்ல என்பதை உறுதிப் படுத்திக்கொண்டேன். அடுத்து சுடச்சுட வந்த செய்தி! ‘பிரேக்கிங் நியூஸ்!’ அவிநாசி அருகில் பாப்பான்குளத்திலிருந்து நேரே அந்தப் புலி அங்கு வந்திருந்தது. அங்கு அதன் கழிவு கிடைத்தது. அதை ஆராய்ச்சி செய்ததில் புலிக்கு டயேரியா என்பது நிரூபணமாயிற்று.
வனத்துறையினர் புலியைத் தேடியதில், அதன் எச்சம் தான் கிடைத்தது. பொதுவாகவே, எனகக்கு இலக்கிய அறிவு கொஞ்சம் அதிகம். அதன் காரணமாக, ‘நாட்டில் புலியிருப்பது அதன் எச்சத்தால் அறியப்படும்’ என்று வள்ளுவர் சொல்லியிருப்பதை நான் அங்கு நினைவு கூர்ந்தேன். புலி தென்படாமையால், வனத்துறையினர் ஒரு நூதனமான திட்டத்தை வரைந்தனர். அது என்ன? கண்களில் விளக்கெண்ணை போட்டுத் தேடுவது. பிரச்சினை அங்கு தான் உருவாயிற்று. பொங்குபாளையத்தில் விளக்கெண்ணை கிடைக்கவில்லை. வனத்துறை அதிகாரி கோபப்பட்டுவிட்டார். தன் உதவியாளரைக் கூப்பிட்டு: “யோவ் விளக்கெண்ணை! திருப்பூர் சந்தைக்குப் போய் விளக்கெண்ணை வாங்கிட்டு வாய்யா! விளக்கெண்ணை இல்லாமல் புலியை எப்படிப் பிடிப்பது?”
விளக்கெண்ணை இல்லாமல் புலியைக் கண்டு பிடிக்கத் தாமதமானது. புலியும் ‘அண்ணாத்த ஆடுரார் ஒத்திக்கோ’ என்று கமல் போல அங்குமிங்கும் திரிந்தது.
ஓருவழியாக விளக்கெண்ணை வந்ததோ! வனத்துறையினர் பெருமூச்சு விட்டனரோ!. எல்லா வனத்துறையினரும் தங்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டனர். இப்பொழுது அவர்களுக்கு இப்பொழுது புலி ஒரு சுவருக்குப் பின் மறைந்திருந்தது தெள்ளந்தெளிவாகத் தெரிந்தது.
பிறகு அந்தப்புலியை மயக்க மருந்து தோய்ந்த அம்பினால் அடித்தனர். மயக்கத்தால் புலி விழுந்தது. அதைக் கைது செய்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. புலிக்கு விலங்கு போடுவது அப்படி என்ற ஒரு கேள்வி எழுந்தது. வனத்துறை அதிகாரி அதற்கு அற்புதமான ஒரு பதிலைச் சொன்னார்:
‘புலியே ஒரு விலங்கு.. அதற்கு ஒரு விலங்கு தேவையா?’ என்றார். கூடியிருந்த மக்கள் அனைவரும் கைகொட்டிச் சிரித்தார்கள்!
புலி பிடிபட்ட இந்தச் சேதியை வாட்ஸ்அப்பில் ‘வசவுராஜ்’ மற்றும் இலக்கிய சேதியின் முன்னாள் அட்மின் இருவருக்கும் அனுப்பினேன். அந்தச் செய்தி பின் வருமாறு:
‘விளக்கெண்ணையும் கிடைத்தது .. புலியும் கிடைத்தது”.
உடனே அட்மினிடம் இருந்து பதில் வந்தது.
‘தேசிய மிருகமான புலியைப்பற்றி தவறான செய்தியைப்பரப்பியதற்காக.. கம்பியை எண்ணிக்கொண்டிருக்கிறேன். விரைவில் எண்ணி முடித்து .. ஒருவேளை விடுதலையானால். உங்கள் புலிக்கதையை நிச்சயம் மின்னிதழில் போடுகிறேன்’
நம் கதை வந்தமாதிரிதான் என்று எண்ணிக்கொண்டேன்.
நான் அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போது அட்மினும் ‘கம்பி’யை எண்ணிக்கொண்டிருக்கிறார்.
வசவுராஜிடமிருந்து பதில் வந்தது:
‘பூனை என்று இப்ப பால் ஊத்தப்போனேன்.. நிஜமாகவே புலி வந்திருக்கு.’
இன்னொரு புலியா?
திருப்பூரில் புலிக்குப் பஞ்சமில்லை போலும்.
வசவுராஜா கதை :
பூனை என்று நினத்து புலிகக்குட்டிக்குப் பால் ஊத்தினேன். பாலைக்குடித்த பின்னர் வீட்டுக்குள் வந்து சோபாவில் சோம்பல் முறித்து படுத்துத் தூங்கிவிட்டது.
குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
காந்தி தாத்தா கதை சொல்றேன் –
கந்தா, நீயும் கேள் ! கேள் ! கேள் !
தேசத் தந்தையின் கதை சொல்றேன் –
கிரிஜா, நீயும் கேள் ! கேள் ! கேள் !
நம் நாட்டின் குஜராத் மாநிலத்தில் –
கத்தியவார் எனும் சிற்றூராம் !
புத்திலி பாய்க்குப் பிறந்துவிட்டார் ! – நம்
தேசத்தைக் காக்க பிறந்துவிட்டார் !
வக்கீலுக்குப் படித்தாலும் –
வேறு தேசங்கள் போனாலும் –
விடுதலை வேட்கை வந்ததடா !
வந்தே மாதரம் பிறந்ததடா !
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் –
இனவெறியை அவர் எதிர்கொண்டார் !
இந்தியா திரும்பி வந்துவிட்டார் !
சுதந்திரம் வேண்டும் என்றிட்டார் !
உண்மை வழியில் நின்றிட்டார் !
சத்தியாகிரக வழி இறங்கி விட்டார் !
போராட்டங்களில் முன் நின்றார் !
பலமுறை சிறையினில் வாடி நின்றார் !
அந்நியப் பொருட்களை அழிக்கச் சொன்னார் !
ஆங்கிலேயருக்கும் அன்பு காட்டி நின்றார் !
வெள்ளையனே வெளியேறு என்றிட்டார் !
வழிகாட்டியாய் நமக்கு வாழ்ந்திருந்தார் !
அன்றைய தியாகிகள் தியாகத்தால் –
இன்றைய பாரதம் உருவாச்சு !
என்றும் இதனை நினைவில் கொள்வோம் !
காந்தி தாத்தாவை மனதில் வைப்போம் !
மோகன், ஆனந்த், மோனா, ராம் !
என்றும் நினைவில் வைக்கணும் நாம் !
காந்தியின் நினைவைப் போற்றிடுவோம் !
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம் !
*************************************************************
44. சிறகுகள் இருந்தால்……..
எனக்கு மட்டும் சிறகுகள் இருந்தால்
உயரப் பறந்திடுவேன் !
மேலே மேலே மேலே என்று
பறந்தே போயிடுவேன் !
மரங்களின் தலையைத் தடவிக்கொண்டே
மலையைத் தொட்டிடுவேன் !
மலைகளின் நடுவே பறந்து பறந்து
மிதந்தே நின்றிடுவேன் !
மேகக்கூட்டம் நடுவே சென்று
முகத்தை மறைத்திடுவேன் !
மழையே மழையே பொழிவாய் என்று
கீழே தள்ளிடுவேன் !
நட்சத்திரக்கூட்டம் நடுவே நின்று
நாட்டியம் ஆடிடுவேன் !
நிலாவைப் பந்தெனப் பிடித்துப் போட்டு
நன்கு விளையாடிடுவேன் !
பறவைகள் கூட்டம் தொடர்ந்து சென்று
கூடுகள் சென்றிடுவேன் !
கூடுகள் சென்று குஞ்சுகளோடு
குஷியாய்க் குதித்திடுவேன் !
காடுகள் மேலே பறந்து சென்று
கண்டு களித்திடுவேன் !
ஆறுகள் ஓடும் அழகைக் கண்டு
ஆடிப் பாடிடுவேன் !
இறைவா எனக்கும் உடனே நீயும்
இறக்கைகள் தருவாயா ?
பறந்து போக எண்ணுகிறேன் நான்
வரங்கள் தருவாயா ?
இன்னும் இன்னும் சுதந்திரம் வேண்டும்
இன்றே தருவாயா ?
பறவைகள் போல பறக்க நினைப்பது
சரிதான் என்பாயா ?
சீட்டுக் கச்சேரி – சுரேஷ் ராஜகோபாலன்
கல்யாண மண்டபத்தில், பெரிய பவானி ஜமக்காளத்தின் மேலே, ஒரு தனியறையில், தனியாகச் சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்து அன்று அதிகாலை முகூர்த்தமானதால், எல்லா களேபரங்களும் முடிந்து மண்டபம் அமைதியாக இருந்தது. எல்லோரும் கொஞ்சம் நிதானமாக இருந்ததால் இது சாத்தியப் பட்டது.. அங்கங்கே பலர் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.
அடுத்து நலங்கு, அப்பறம் மாலை சுவீட் காரம் காபி, அதற்குப் பிறகு தடபுடல் வரவேற்பு,மெல்லிசைக் கச்சேரி பவ்வே விருந்து … ஹும்ம், நிறைய வேலை, சடங்குகள் இருக்கின்றன அதில் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மணமகளின் தந்தையும் சீட்டுக்கச்சேரியில் லயித்து விட்டார், வேறு வேலையில்லை சீட்டுக்கச்சேரிக்கு அடிமை, வழியில்லை.
சீட்டு விளையாடுவார் அப்பப்ப.. ஆனால் இன்று அதிர்ஷ்டம் இவர் பக்கமே இல்லை… ஒரு மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் தோற்றுப் போய் விட்டார். கையில் இருந்ததெல்லாம் முதலிலேயே இழந்து விட்டார்.
கூட விளையாடியவர்கள் அனைவரும் பந்தியில் பரிமாறுபர்கள்.
நாதன், அவரைத் தேடி அவர் மகன் “ஜிம்பிளி” . தேடி வந்தான், “அப்பா உன்னைத் தேடிக் கொண்டிருக்காங்க , நீ இங்கே ஆனந்தமா விளையாடிட்டு இருக்கே, ஏம்ப்பா இப்படி?'”
“ஏ ஜிம்பிளி, ஒரு கை குறையுது, நீ வந்து உக்காரு”
“போப்பா எல்லோரும் போங்கு ஆட்டம் ஆடறவங்க, மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே” அப்படினு சொல்லிக்கொண்டே அம்மாவிடம் இதைப்பற்றி சொல்லிவிட போய்விட்டான்.
நாதன் நினைத்தது, அவர் மகன் விளையாடினால் தான் தோற்ற பணத்தை அவனை விட்டுக் கட்டச் சொல்லலாம் , ஆனால் அது நடக்கலை .
நாதன் மனைவி சித்ரா கோபத்துடன் வந்தாள் . “என்ன நீங்க செய்யறது நல்லாவே இல்லையே, இப்ப சீட்டாட்டம் ஒரு கேடா, ஏப்ப பாரு சீட்டு விளையாடி எல்லாத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கீங்க, மண்டபத்தில் எல்லோரும் உங்களைத் தான் தேடறாங்க,” அவர் தோளைத் தட்டி கூப்பிட்டாள் .
அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒருவன், “அதெப்படி, தோத்துப் போயிருக்காரு, பணத்தை கொடுக்கணும் இல்லை விளையாடி ஜெயிக்கணும், இப்படி பாதியில் போக முடியாது”
இந்தக் திருமணமே நாங்க தான் நடத்தறோம், நீங்கச் சமையல் வேலைக்குக் கூலி வாங்கித்தான் வந்திருக்கிறீர்கள் , துட்டு எல்லாம் கொடுக்கமாட்டோம்”
“அதெப்படி உழைப்புக்குக் கூலி அது தனி, இங்க ஆட்டத்தில் தோத்ததிற்கு பணம் கொடுக்க வேண்டியது தனி”
“இங்க தோத்தப் பணத்தைத் தந்துவிட்டு அழைத்து போங்க” அவனே தொடர்ந்தான்
“அப்படியா இதோ வரேன்” என்று வெளியே போனாள்.
கச்சேரி தொடர்ந்தது.
ஒரு காவல்துறை ஆய்வாளர், காவல்துறை உடையில் வந்து நின்று கதவை அதிரடியாகத் திறந்தார். பின்னால் சித்ரா வந்தாள் சத்தமாகவே “இங்கே காசு வச்சி விளையாடறாங்க சார்”
காலுக்கு அடியில், வேட்டி சீட்டுகளுடன் அப்படியே அள்ளிக் கொண்டு போட்டதை விட்டபடியும், விட்டதைப் போட்டபடியும் எல்லோரும் ஓடினார்கள்.
காவலர் தாவி ஒரு சமையல் காரனைப் பிடித்தார்.
“மத்தவங்களையும் கூப்பிடு, உங்க முதலாளியை நான் இப்ப பாக்கணும் ” பிடித்தவனை ஒரு அரை விட்டு இழுத்துக் கொண்டே போனார், “இனிமே இந்த மாத்தி ஜனம் கூடுமிடத்தில் காசு வச்சு விளையாடுவீங்களா?”.
“மாட்டேங்க” கேவலுடன் அழுதான்.
#
நாதனுக்குக் கொஞ்சம் கேவலமாக இருந்தாலும் இப்ப தப்பித்தோம் அப்படினு ஒரு பெரிய மூச்சு விட்டான்.
சித்ரா நாதனைப் பார்த்து ” ஏன் என் மானத்தை இப்படி வாங்கின ?”, “ஏம்பா நீதானே பொண்ணோட அப்பா கொஞ்சம் பொறுப்பா இன்னிக்கு ஒருநாள் கூட பொறுப்பா நடந்துக்க மாட்டியா?”
“ஏன் போலீஸ் அளவுக்கு இதைப் போய்க் கொண்டு போனே? என் மானத்தை நீதான் வாங்கின? எங்கிட்ட ஏன் எப்படி நடத்துகிற?”
“அந்த காவல் ஆய்வாளர் என் அலுவலக தோழி சுகுமாரியின் கணவர், வேலை நடுவிலே இங்க திருமணம் விசாரிக்க வந்திருக்கிறார், அவரைத் தான் நான் உங்க கச்சேரிக்கு அழைத்து வந்தேன், அதுவே ரொம்ப நல்லதாப்போச்சு, அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் அப்படினு அடம் பிடிச்சியே, அதுனாலத் தான் எனக்கு வேறு வழி தெரியல, அதான் உங்க கூட்டத்தை கலைக்க அந்த வழியை பயன் படுத்தினேன்”
“அப்படியா செய்தி, அவரு என்னைத் தேடி மறுபடி வரமாட்டாருல்ல…? அப்பாடி!”
சித்ரா தன் கணவரை இளக்காரமாகப் பார்த்தாள். “திருந்த மாட்டியா நீ?
“திருமணம் விசாரிக்க நிறையப் பேர் வருவாங்க, தெருஞ்சுக்கப்பா”
பல்லை எடுக்க வாரீயளா? – எஸ் எல் நாணு
அதுல விஷயம் என்னன்னா..
வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு மாசமா..
எனக்கு சாதாரணமாவே டாக்டர் கிட்டப் போகறதுன்னா எதிர்கட்சிக்-காரங்களுக்கு மோடியைப் பிடிக்காததை விட பத்து மடங்கு பிடிக்காது.. முடிஞ்ச வரைக்கும் மருந்து சாப்பிடாம கழிப்பேன்.. மீறிப் போனா ரொம்பக் கஷ்டப் பட்டு வல்லாரைலாம் சாப்பிட்டு யோசிச்சு எங்க பாட்டி சொன்ன ஏதாவது வைத்தியம் நினைவுல சிக்குதான்னு பார்ப்பேன்.. அப்படி பாட்டி எப்பவோ சொன்னது நினைவுக்கு வந்து தான் இந்தப் பல்லு வலிக்கு அடிக்கடி கிராம்பை பல்லுக்கு இடைல வெச்சுக் கடிக்க ஆரம்பிச்சேன்.. ஆனா என்ன.. மாச மளிகை பட்ஜெட்டுல கிராம்புச் செலவு அதிகமாயிருத்துன்னு என் சகதர்மணி கொஞ்சம் விட்டா முதலமைச்சர் கிட்டயே புகார் மனு கொடுத்திருவா போலருந்தது.. அப்புறம் இல்லதரசிகளுக்கு இலவச கிராம்பு வழங்கும் திட்டம்னு அவர் அறிவிக்க வேண்டி வருமேன்னு கரிசனப்பட்டு உடனே கிராம்பைக் கடிக்கறதை நிறுத்தினேன்.. யாரோ சொன்னான்னு கிரம்புத் தைலம் வாங்கி (இது மளிகை பட்ஜெட்டுல சேராது) அதுல கொஞ்சம் பஞ்சை முங்க வெச்சு வலிக்கிற பல்லுல வெச்சிண்டேன்.. அது என்னடான்னா அரசியல் வாதிகள் கொடுக்கிற வாக்குறுதிகள் மாதிரி அந்த சமயத்துக்கு வலி நிவாரணியா இருந்தது.. ஆனா கொஞ்ச நேரத்துலயே மறுபடியும் பல் வலி ஆரம்பிச்சு வலது பக்க மேல் மண்டை வரை எக்ஸ்டெண்ட் ஆகி அநியாயத்துக்கும் வலிச்சுது..
அது பாட்டுக்கு வலிச்சிட்டுப் போறதுன்னு விடலாம்னா.. முடியலை.. எந்த வேலையையும் செய்ய விடாம மூளையே நமுத்துப் போன மாதிரி ஆயிடறது..
“அதென்ன டாக்டர் கிட்டப் போக மாட்டேன்னு அடம்? காலம் முழுக்க இப்படிப் பல் வலிலயே அவஸ்தைப் படப் போறீங்களா? இதப் பாருங்க.. பிரசவ வலியைக் கூடத் தாங்கிண்டுரலாம்.. ஆனா பல் வலியைத் தாங்கிக்கவே முடியாது..”
என் சகதர்மணி சொன்ன பஞ்ச் டைலாக்.. நான் அவளை “ஞே”ன்னு பார்த்தேன்..
“நான் பிரசவ வலி அனுபவிச்சது இல்லையே.. கம்பேரிஸன் எனக்கு எப்படித் தெரியும்?”
“ரெண்டையும் அனுபவிச்ச நான் சொல்றேன்.. போறுமா? மொதல்ல பல் டாக்டர் கிட்டப் போற வழியைப் பாருங்க”
தீர்மானமாச் சொல்லிட்டா.. இதுக்கு மேல அவ பேச்சை நான் கேட்கலைன்னா.. இனிமே கேஸ் காலியாறதுலேர்ந்து, குழாய் ரிப்பேர் ஆறதுலேர்ந்து, பால் கெட்டுப் போறதுலேர்ந்து, வேலைக்கு ஆள் வராததுலேர்ந்து, மின் வெட்டு ஆறதுலேர்ந்து வீட்டுல என்ன நடந்தாலும் அதுக்கு அவ பேச்சைக் கேட்காம நான் பல் டாக்டர் கிட்டப் போகாதது தான் காரணம்னு அடிச்சு சொல்லிருவா..
எதுக்கு வீண் தலைவலின்னு பல் வலிக்கு டாக்டர் கிட்டப் போறதுன்னு முடிவு பண்ணினேன்..
எங்க ஏரியாவுல யாரு பல் டாக்டர்ன்னு பார்க்க கூகிள்ள தேடினேன்..
அது ரொம்ப நேரம் யோசிச்சு பெருங்குளத்தூர் பக்கத்துல ஒரு டாக்டரை சொல்லித்து.. இல்லைன்னா ரெட்டை ஏறி பக்கத்துல ஒரு டாக்டர்..
ஆனா நான் இருந்ததோ மைலாபூர்ல.. பெருங்குளத்தூரும், ரெட்டை ஏறியும் மைலாபூர் பக்கத்துலயா இருக்கு? ஏன்.. இதுக்கு நடுவுல பல் டாக்டரே இல்லையா? இது கூகிளுக்குத் தெரியலையா? இல்லை என் லேப்-டாப்புல இருக்கிற கூகிளுக்கு என்னைப் பழி வாங்கற நோக்கமா? அடுத்த தடவை சுந்தர் பிச்சையை சந்திக்கும் போது கண்டிப்பா விசாரிக்கணும்..
இந்த சமயத்துல தான் எதிர்த்த வீட்டு பொக்கை வாய் தாத்தா.. டாக்டர் பல்லுண்டராவை.. மன்னிக்கணும்.. டாக்டர் நஞ்சுண்டராவை சஜஸ்ட் பண்ணினார்.. அவர் பல்லையெல்லாம் அதிக செலவு இல்லாம நஞ்சுண்டராவ் தான் பிடுங்கினாராம்..
சொல்லிண்டே ஈன்னு தன் ஈரை வேறக் காட்டி அவர் ரொம்ப நல்ல டாக்டர்ன்னு மருத்துவ பல்கலைக் கழகத்தை மீறின சர்ட்டிபிகேட் கொடுத்தார்..
ஆனா என்ன.. பல் இல்லாததுனால அந்தத் தாத்தா தமிழை ஆப்ரிகா பாஷைல பேசினார்.. அதைப் புரிஞ்சுக்கறது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது..
சகதர்மணி கிட்ட இதைச் சொன்ன உடனேயே என்னை டாக்டர் நஞ்சுண்டராவ் கிட்ட கிளம்ப வெச்சிட்டா..
“உங்களுக்குப் போறாது.. என்ன ஏதுன்னு விவரம் எதுவும் சரியாக் கேட்டுக்க மாட்டீங்க.. நானும் கூட வரேன்”
“ஐயையோ.. அதெல்லாம் வேண்டாம்.. உனக்கு ஆன் லைன்ல ஸ்லோக கிளாஸ், சான்ஸ்க்ரிட் கிளாஸ், பாராயணம்லாம் இருக்குமே.. நானே போய் டாக்டர் கிட்ட எல்லாம் விவரமாக் கேட்டு வந்து சொல்றேன்.. காட் பிராமிஸ்”
அப்படின்னு அவசர அவசரமா அவளைக் கழட்டி விட்டுட்டேன்..
அவ வந்தா எங்க டாக்டரைப் பேச விடுவா? எப்.எம். ரேடியோ ஜாக்கி மாதிரி இவளே விடாமப் பேசி என் பல் வலியைக் குணப்படுத்தரதுக்கு முன்னால டாக்டருக்கு தலைவலியைக் கொடுத்துருவா..
டாக்டர் நஞ்சுண்டராவ் க்ளினிக்கில கொஞ்சம் சுமாரா இருந்த ரிசப்ஷனிஸ்ட் என் பேர் முகவரி போன் நம்பர் எல்லாம் கேட்டு எழுதிண்டு ஒரு டோக்கனைக் கொடுத்தா..
டோக்கன் 75..
ஐயையோ.. நமக்கு முன்னால எழுபத்தி நாலு பேர் இருக்காங்களா? உகும் என்னால வெயிட் பண்ண முடியாதுன்னு நினைச்சுண்டே திரும்பிப் பார்த்தேன்.. அங்க என்னைத் தவிற வேற யாருமே இல்லை..
“ஏம்மா.. எனக்கு எழுபத்தஞ்சாம் நம்பர் டோக்கன் கொடுத்திருக்கியே.. மீதி எழுபத்தி நாலு பேர் எங்க?”
”சார்.. டாக்டர் நாலு மாசம் முன்னால தான் இந்த இடத்துல க்ளினிக் ஆரம்பிச்சார்.. நீங்க தான் எழுபத்தஞ்சாவது பேஷண்ட்.. கங்ராட்ஸ்.. இந்தாங்க”
அப்படின்னு ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட்டை நீட்டினா..
“எதுக்கு இது?”
”நீங்க எழுபத்தஞ்சாவது பேஷண்ட் சார்.. செலிப்ரேஷன்.. எடுத்துக்குங்க”
சாக்லேட்டை வாங்கிண்டே..
“இதுக்கான விலையை என் மொத்த பில்லுல சேர்த்துருவீங்களா?”
மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் வாய் திறந்து நான் கேட்கலை..
“அந்த ரூம் சார்.. போங்க”
அப்படின்னு ஒரு ரூமைக் காட்டினா..
அதோட முகப்புலயே “டாக்டர் நஞ்சுண்டராவ், பி.டி.எஸ்.” அப்படின்னு தங்க நிற பிளேட்டுல எழுதியிருந்தது..
கதவை லேசாத் தட்டிட்டு உள்ளே போனேன்..
சில்லுன்னு ஏ.ஸி. காத்து தாக்கித்து..
எதிர ஆஜானு பாகுவா.. ஆறடி உசரத்துக்கு.. உச்சிலேர்ந்து பாதம் வரை தார் ட்ரம்மை கவுத்தின மாதிரி கலர்ல.. கிட்டத்தட்ட பெருமாள் கோவில் மூலவர் சிலை மாதிரி ஒருத்தர் நின்னுண்டிருந்தார்.. இருக்கலாம் ஒரு அம்பது வயசு.. முன் மண்டை வழுக்கை.. பின் மண்டைல சுமாரான முடி.. அவர் முகத்துல பளிச்சுன்னு இருந்தது தங்க பிரேம் போட்ட கண்ணாடி மட்டும் தான்.. அந்தக் கண்ணாடியை கூர்ந்து பார்த்தா அவர் பார்வைல அரை குறைச்சலா இருக்கறது தெரியும்.. வெள்ளை டாக்டர் கோட், அதுக்குள்ள நீல கலர் சட்டை, கருப்புப் பேண்ட், கருப்பு ஷூ.. கையில ஏதோ புஸ்தகத்தை வெச்சுக்கிட்டு தன் உதவியாளி (!) கிட்ட ஏதோ சொல்லிட்டிருந்தார்.. இல்லை சொல்ற மாதிரி பாவ்லா காட்டிட்டிருந்தார்.. (ஒரு வேளை நான் வரேன்னு தெரிஞ்ச உடனே ஒரு பில்ட்-அப்போ?)
அவரை நிமிர்ந்து பார்க்கும் போது அவர் முகம் முதல் மாடில இருக்கற மாதிரியும் நான் கீழ் தளத்துல இருக்கற மாதிரியும் எனக்குப் பட்டது.. (ஹி..ஹி.. நான் கொஞ்சம் குள்ளம் தான்.. கவாஸ்கர் மாதிரி, விஸ்வநாத் மாதிரி.. ஏன் சச்சின் டெண்டுல்கர் மாதிரின்னு கூட வெச்சுக்குங்களேன்)
அவர் முதல் மாடிலேர்ந்து என்னைப் பார்த்தார்..
“ம்.. பல்லு வலியா?”
“பின்ன கால் வலியா?.. என்ன மடத்தனமான கேள்வி? பல் வலிக்குத் தானே இங்க வருவாங்க”
கரெக்ட்.. இதுவும் என் மைண்ட் வாய்ஸ் தான்.. எதையும் வெளிப்படையாச் சொல்ல நமக்கேது தைரியம்.. (எல்லாம் வீட்டுப் பழக்கம் தான்)..
“உட்காருங்க”
நாற்காலி மாதிரி ஒரு வஸ்துவுல என்னைப் பிடிச்சுத் தள்ளினார்..
“நல்லா சாஞ்சுக்குங்க”
சொன்னதைப் பண்ணினேன்.. ஒரு பட்டனைத் தட்டினார்..
திடீர்னு அந்த நாற்காலி பின்னால சாஞ்சுது.. அதுவரை உட்கார்ந்திருந்த நான் திடீர்னு அனந்த சயனன் மாதிரி அரை குறை சயனனானேன்..
உடனே ஸ்விட்ச் போட்டு போகஸ் லைட், ஹேலோஜன் அது இதுன்னு வித விதமா லைட்டுகளை எறிய விட்டார்.. அந்த இடமே திருவிழா நடக்கற இடம் மாதிரி ஜகத் ஜோதியா மாறிடுத்து.. போதாத குறைக்கு கூட இருந்த உதவியாளி கிட்ட டார்ச் லைட் வெளிச்சத்தை வேற காட்டச் சொன்னார்..
சாதாரண நாற்பது வாட் வெளிச்சத்துக்கே என் கண்ணு கூசும்.. இந்த வெளிச்சத்துக்கு நான் கண்ணையேத் திறக்கலை.. ஆனா அதை டாக்டர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு..
“பயப்படாதீங்க.. ஒண்ணுமில்லை.. ஜஸ்ட் செக் பண்றேன்.. கண்ணைத் திறங்க”
“மொதல்ல லைட்டையெல்லாம் அணைய்யா”
நான் மைண்ட் வாய்ஸ்ல சொல்றது அவருக்கு எப்படிக் கேட்கும்?
சட்டுன்னு ஒரு பீச்சாங்கோலால என் வாய்க்குள்ள ஏதோ ஒரு திரவத்தைப் பீச்சினார்..
”ம்.. கொப்பளிங்க”
பக்கத்துல வாஷ்பேஸின் மாதிரி இருந்த பீங்கான் கோப்பையைக் காட்டினார்..
ஒரு நீள எவர்சில்வர் குச்சி.. அதோட அடில மைரோஸ்கோப் மாதிரி லென்ஸ்..
“இப்ப நல்லா வாயைத் திறங்க.. ஆ.. ஆ…”
நான் வாயைத் திறந்த உடனே அந்தக் குச்சியை என் வாய்குள்ள நுழைச்சார்.. உடனே டாக்டர் கண்ணுல ஆச்சர்யம்..
ஒரு வேளை வெண்ணை தின்ன குட்டிக் கிருஷ்ணர் வாயில யசோதா உலகத்தையேக் கண்ட மாதிரி என் வாயிலயும் டாக்டர்..
அப்படின்னு நான் புளங்காகிதமாகறதுகுள்ள..
”என்னய்யா இது.. பல்லா இல்லை பாதாள சாக்கடையா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் நடுவுல பிளை ஓவர் கட்டி டிராபிக் விடலாம் போலருக்கு.. அவ்வளவு பெரிய கேவிட்டி.. எதுக்கு இவ்வளவு பெரிய கேவிட்டியை வளர்த்துண்டே?”
“ம்.. வேண்டுதலை”
மைண்ட் வாய்ஸ் தான்.. கடுப்புல வாய் திறந்து சொல்லணம்னு நினைச்சாக் கூட முடியாதே.. ஏன்னா என் வாய் இன்னும் “ஆ” வாத் தான் இருந்தது..
“இதுல பல்லுக்கு நடுவுல கோடோன் மாதிரி ஏதேதோ பதுக்கி வேற வெச்சிருக்கே.. உகும்.. மொதல்ல பல்லை ஒரு எக்ஸ்ரே எடுத்திட்டு வா.. அதைப் பார்த்துத் தான் எதுவும் முடிவு பண்ண முடியும்”
அப்படின்னு என்னை எழுந்திருக்கச் சொல்லி..
“இதே தெருவுல “அன்பு எக்ஸ்ரே க்ளினிக்” இருக்கு.. கண்டிப்பா அங்கயே எக்ஸ்ரே எடு..”
ஒரு சீட்டுல எழுதிக் கொடுத்தார்..
“ஏன் டாக்டர்.. அங்க தான் உங்களுக்கு கமிஷன் கிடைக்குமா?”
சத்தியமா மைண்ட் வாய்ஸ் தாங்க..
மறுநாளே எக்ஸ்ரே எடுத்து (சாதாரண எக்ஸ்ரேயை விட தம்மாத்தூண்டு பல்லை எக்ஸ்ரே எடுக்க ரேட் அதிகமா இருக்கு.. என்ன கொடுமை இது சரவணன்?) அதை டாக்டர் நஞ்சுண்டராவ் கிட்ட காட்டினேன்..
காதலியோட போட்டோவை காதலன் பார்க்கிற மாதிரி வெவ்வேற ஆங்கிள்ள என் பல்லு எக்ஸ்ரேயைப் பார்த்தார் டாக்டர்..
“கண்றாவி.. கண்றாவி.. இப்படிப் பல்லை வெச்சிட்டிருக்கிறதுக்கு நீ பிறந்த உடனேயே பல் செட் மாட்டிட்டிருக்கலாம்”
மைண்ட் வாய்ஸைக் கொஞ்சம் அடக்கி வெச்சதுனால இதுக்கு கௌண்டரா எதுவும் சொல்லலை..
“உகும்.. ரூட் கெனால் ஸ்டேஜ்லாம் தாண்டியாச்சு.. வேற வழியில்லை.. பல்லை புடுங்கிரவேண்டியது தான்.. எக்ஸ்ட்ராக்ஷன்”
நான் சம்மதம் சொல்றதுக்கு முன்னாலயே என்னை மறுபடியும் அரை குறை சயனத்துக்குத் தள்ளி.. இருக்கிற விளக்கையெல்லாம் போட்டு.. மேல் தாடைல ஒரு இஞ்செக்ஷனைப் போட்டு.. நிமிஷத்துல மரத்துப் போன உடனே ஒரு கொரடாவை வெச்சு என் பல்லைப் புடுங்க ஆரம்பிச்சார்..
அதுவும் சாதாரணமாப் புடுங்கினாப் பரவாயில்லை..
“பல்லு போகப் போவுதய்யா சின்னக் கௌண்டரே – உன்னை
பொக்கை வந்து சேருதய்யா சின்னக் கௌண்டரே”
அப்படின்னு பாடி முடிச்சு புடுங்கின பல்லை ஏதோ புதை பொருள் ஆராய்ச்சில கண்டு பிடிச்ச பொக்கிஷம் மாதிரி காட்டினார்..
அப்புறம் வாயில பஞ்சை அழுத்தி..
“இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எச்சத் துப்பக் கூடாது.. எதுவும் சாப்பிடக் கூடாது.. அப்புறம் கோல்டா ஜூஸ் சாப்பிடலாம்.. சாலிடா வேண்டாம்.. நான் எழுதிக் கொடுக்கிற மருந்தை மறக்காம சாப்பிடணும்.. மருந்தை கண்டிப்பா க்ளினிக்குக்கு முன்னால இருக்கிற பார்மஸிலயே வாங்கிரு”
இந்தக் களேபரம்லாம் முடிஞ்சு வீட்டுல உட்கார்ந்திருந்தேன்..
சும்மாச் சொல்லக் கூடாது.. டாக்டர் ஒரு மாதிரி பேசினாலும் நல்ல வேலைக்காரர்..
அப்படின்னு என் மனசுல ஓடிண்டிருக்கும் போதே காலிங் பெல் அடிச்சது..
என் சகதர்மணி தான் போய் கதவைத் திறந்தா..
எதிர்த்த வீட்டு பொக்கை வாய் தாத்தா..
“என்ன.. பழ்ழு புழுங்கியாச்சா?”
என்னைப் பேசாதீங்கன்னு அடக்கிட்டு என் சகதர்மணி தான் பதில் சொன்னா..
“ஆமா.. இப்பத் தான் வந்தார்.. உங்களுக்குத் தான் தேங்ஸ் சொல்லணும்.. நல்ல டாக்டரைக் காட்டினீங்க.. இல்லைனா இவர் பல் வலியோடயே உட்கார்ந்திருப்பார்”
தாத்தா என் பக்கத்துல வந்து..
“சழியான பல்லைத் தானே டாக்டர் பிழுங்கினார்?”
எதுக்குக் கேட்கறார்? என் குழப்பைத்தை சகதர்மணி புரிஞ்சுகிட்டு..
“எதுக்குக் கேட்கறீங்க தாத்தா?”
“இல்லை.. நழ்ழ டாக்டர் தான்.. ஆனா அவழுக்கு அரை பார்வை கம்மி.. அதனால அவசரத்துல தப்பான பல்லைப் பிழுங்கிருவார்.. இப்பழித்தான் எனக்கு ஒவ்வொழு தழவையும் தப்பான பழ்ழைப் பிழுங்கிப் பிழுங்கி.. கழைசில வலி இருக்கிழ பழ்ழு தான் மிஞ்சித்து.. அப்ப அதை சழியாப் பிழுங்கிட்டார்”
ஆப்ரிக்க பாஷைல சொன்னாலும் தாத்தா சொன்னது புரிஞ்சு அவசர அவசரமா என் வாய்க்குள்ள விரலை விட்டுத் தடவிப் பார்த்தேன்..
“ஐயையோ.. வலி கொடுக்கற என் பல்லு அப்படியே இருக்கே”
உலக இதிகாசங்கள் – ஹோமரின் இலியட்