அட்டைப்படம்

குவிகம் இதழ் தற்போது 10 ஆம்  ஆண்டில் பவனி வந்து கொண்டிருக்கிறது.  இவ்வருட இறுதியில் 10 வது ஆண்டைப் பூர்த்தி செய்வோம்!

இந்த  மாத இதழிலிருந்து WORDPRESS FREE  திட்டத்திலிருந்து  WORDPRESS PREMIUM திட்டத்திற்குச் சென்றுள்ளோம். இதனால் நமக்கு பல வசதிகள் உள்ளன. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிப்போம். 

இந்த இதழில் சென்ற இதழில் இல்லாத சில மாற்றங்கள் உள்ளன.  அவை என்னவென்று கண்டால் சொல்லுங்கள் !! 

இந்த இதழிலிருந்து சில அறிவியல் கதைகளை பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். அந்த வரிசையில் பானுமதி அவர்களின் திருவாதிரை கதை வந்துள்ளது. நண்பர்கள் சாதாரண கதை அனுப்புவதைவிட அறிவியல் கதை அனுப்பலாம். 

இதிகாசம் , சங்க இலக்கியம், சரித்திரம், இலக்கியம், அறிவியல், மனநலம், ஆன்மீகம், திரைப்படம் , மொழிபெயர்ப்பு , சொல் விளையாட்டு, சிறுகதைகள், கவிதைகள், காணொளி  என்று பல GENRE களில் நாம் பயணித்துக்கொண்டு வருகிறோம். 

ஜனவரி முதல் நாள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று ஆணையிட்டீர்கள் ! 

அதன்படி   இனி வரும் நாட்களில் சின்னச் சின்ன நகாசு வேலைகளுடன் குவிகம் இதழை இன்னும்  சிறப்பாகக் கொண்டுவருவோம். 

அதற்கு உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தேவை !

  • சுந்தரராஜன் 

 

பிரபா ராஜன் அறக்கட்டளை – குவிகம் சிறுகதைப் போட்டி முடிவுகள்

குவிகம் சிறுகதைப்போட்டி ...

பிரபா ராஜன் அறக் கட்டளை சார்பாக குவிகம் நடத்திய சிறுகதைப் போட்டி மாபெரும் வெற்றியடைந்திருக்கிறது. அனைத்தும் பெண்களை மையப்படுத்தி எழுதிய கதைகள். 

300 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டது இதன் வெற்றியின் ஒருபக்கம். 

அவற்றை  குறிப்பிட்ட நாளுக்குள் படித்து,  தரம் பிரித்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த  நடுவர்கள் பத்மினி பட்டாபிராமன், மீனாக்ஷி பாலகணேஷ்  இருவருக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும்! 

முதல் மூன்று பரிசுகளை வென்ற மூவருக்கும் பாராட்டுதல்கள்

முதல பரிசு          : ரூ 5000 –  பொன் ஆனந்தன்   – சோளக்காட்டு பொம்மை  என்ற கதைக்காக 

இரண்டாம் பரிசு: ரூ 3000 –  புவனா சந்திரசேகரன் – வேதாளம் சொன்ன கதைக்காக 

மூன்றாம் பரிசு :  ரூ 2000 – ஐரேனிபுரம் பால்ராசய்யா –  மனதில் உறுதிவேண்டும் கதைக்காக 

இவர்களைத் தவிர தேர்ந்தெடுத்த 11 கதைகளுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கத் திட்டமிட்டிருந்தோம்.

திரு ராஜன் இன்னும் சிலருக்குப் பரிசு கொடுக்கலாம் என்று கூறியதால் இன்னும் 16  பேருக்கு ரூபாய் 500 பரிசளிக்கிறோம். 

ஆக மொத்தம் ரூபாய் 30 கதைகளுக்கு  ரூபாய் 29000 பரிசுகளாக வழங்குகிறோம்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் ! 

பரிசு பெற்ற கதைகள் குவிகம் மின்னிதழில்  பிரசுரமாகும்.

முதல் பரிசு பெற்ற கதை இவ்விதழை அலங்கரிக்கிறது  

அதுமட்டுமல்லாமல் பரிசு வழங்கும் தினமான 15 ஜனவரிக்குள் இந்த 30 கதைகளையும் புத்தக வடிவில் கொண்டுவரவேண்டும் என்ற   கிருபானந்தன் அவர்களின் விடாமுயற்சியால் “சோளக்காட்டுப் பொம்மை”  என்ற தலைப்பில்  அவை  புத்தகமாக வெளிவருகிறது.

உடனுக்குடன் மெய்ப்புப் பார்த்து உதவிய நித்தியானந்தம் அவர்களுக்கு நன்றி. 

புத்தகக் கண்காட்சியின் அழுத்தம் இருந்தபோதிலும் மூன்றே நாட்களில் அச்சடித்துக் கொடுத்த அடையார் மாணவர் நகலகம்   மேலாண்மையாளர் நாகராஜன் அவர்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் குவிகம் – பிரபாராஜன் அறக்கட்டளை இருவர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் இந்தப் போட்டியில் பங்கு பெற்ற  எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

பரிசு  பெறாத மற்ற 270 கதைகளும் தரத்தில் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் இவற்றில் பல கதைகள் பிரசுரமாகும். ஏன் , பரிசுகளையும் வெல்லக்  கூடும்.

உலகில் நடைபெறும் எல்லாப் போட்டிகளுக்கும் எழுதப்படாத பொது விதி இது.

அதனால் பரிசு கிடைக்காத நண்பர்கள் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து எழுதி மேலும் பல  போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வெற்றியைச் சுடரைவிட  பங்களிப்பு என்னும் அகல் விளக்குகளின் பணி மிக முக்கியம்.   

தொடர்ந்து பயணிப்போம். 

பரிசு பெற்ற கதைகள்: 

 

 

இடம் பொருள் இலக்கியம் (1) – வவேசு

இடம் பொருள் இலக்கியம் – வவேசு

( இத்தொடரில் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். இவை கால வரிசைப்படி அமைந்தவை அல்ல. குறிப்பாக எனது இலக்கியப் பயணத்தில்  நான் மறக்காத சில சுவையான நிகழ்வுகளையும் , சந்திப்புகளையும், திருப்புமுனை மேடைகளையும் பதிவு செய்ய இருக்கிறேன். வாய்ப்பளித்த குவிகம் மின்னிதழ் ஆசிரியருக்கு நன்றி – வவேசு)

 

வகுப்புக்கு வெளியே ஒரு பாடம்.

“ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல ?”

1967-ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம் அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி. ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர்.; ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி, பொய்யே சொல்லத்தெரியாத புனிதர்., தேசபக்தர்.

தமிழ்த்துறைத் தலைவரான அவர் சீனியர் வகுப்புகளுக்கே அதிகம் செல்வார். ஓரிரண்டு முறைகள் ஏதோ ஆசிரியர் வரவில்லை என்று எங்கள் வகுப்புக்கு வந்துள்ளார். அவர் வகுப்பு எடுக்கிறார் என்றாலே என் மனதுக்குள் பெரிய உற்சாகம். ஆங்கிலக் கவிதைகளையும் தமிழ்க் காப்பியங்களையும் இணைத்து அவர் உரையாற்றும் போது நேரம் போவதே தெரியாது.

கணுக்கால் வரை ஏறியிருக்கும், துவைத்த வெள்ளைக் கதர் வேட்டி கதர் ஜிப்பா, சிவந்த மேனி; நெற்றியில் திருமண்; தலையில் சிறு குடுமி; பிரவுன் கலர் ப்ரேம் போட்ட தடிமனான மூக்குக் கண்ணாடி., முகத்தில் என்றும் வற்றாத புன்னகை. செருப்பு அணியாத தன் கால்களை ஒரு நோட்டமிட்டுவிட்டு  இளைய மாணவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அவர் கேட்டார்

“ ஏண்டா பசங்களா ! கோவிலுக்குள்ளே யாராவது செருப்பு போடுவாளா ?                                                      

“என்ன சார் சொல்லறீங்க ! கோவிலுக்குப் போனா செருப்பு வேண்டாம்; ஆனால் திருவல்லிக்கேணியிலிருந்து நமது காலேஜுக்கு செருப்புப் போடாமல் நடந்து வருகிறீர்களே ! அது ஏன் சார் ?”

“திருவல்லிக்கேணி மயிலாப்பூர் இதெல்லாம் சித்தர்கள் நடந்த இடம்;;;நடமாடிக் கொண்டிருக்கும் இடம்..இது எல்லாமே கோயில் போலத்தான்..ஏன் ! நம்ம காலேஜும் கோயில்தான்….அதனாலதான் நான் செருப்பே போட்டுக் கொள்வதில்லை” .

முழுதும் புரியாமல் தலையாட்டிக் கொண்டு நின்ற கூட்டத்தில் நானும் இருந்தேன். ஒரு அசட்டுத் துணிச்சலில்

“சார்! பிரஹலாதன் கதை போலத்தானே ! பெருமாள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் “ என்றேன். மற்ற மாணவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சம் ஆசரியத்துடன் சார் என்னைப் பார்த்து “ எங்க படிச்ச இந்தக் கதையை ?” என்றார்.

“ எங்க பாட்டி சொல்லியிருக்கா சார்” என்றேன்.

“ ஒங்க பாட்டி மட்டுமில்ல..கம்பனும் இந்தக் கதையைப் சொல்லியிருக்கான் தெரியுமா ? சரி ! சரி  எல்லோரும் வகுப்புக்குச் செல்லுங்கள் “ எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

எனக்குத் தெரிந்த அளவில் கம்பன் இராமாயணம்தான் எழுதியிருக்கிறான். அவன் எங்கே பிரகலாதன் கதையை எழுதியிருக்கிறான். நூலகத்திற்குச் சென்று கம்ப இராமாயணப் பதிப்புகளை எடுத்துப் பார்த்தேன். பொருளடக்கப் பக்கத்தைப் பிரித்து வைத்துப் பார்த்தேன். அரைமணி நேரத்திற்குப் பிறகு கிடைத்தது “இரணியன் வதைப் படலம்” உடனே அந்தப் பகுதியை எடுத்து பாடல்களைப் பார்த்தேன்.

‘ “சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.

என்ற பாடல் இறைவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்பதைக் குறிக்கிற செய்தியைச் சொல்கிறது என்று புரிந்து கொண்டேன். அதனை எனது நோட் புத்தகத்தில் எழுதி எடுத்துக் கொண்டு போய் பேராசிரியரிடம் காண்பித்தேன்.

“ சார் ! பாட்டி சொன்ன கதையைக் கம்பனும் பாடியிருக்கிறான் என்று நீங்கள் குறிப்பிட்டது இந்த இடம்தானே”  என்றேன்.

பேராசிரியர் மிகப் பெரிய கம்பன் இரசிகர். மற்றும் ஆய்வறிஞர். என அப்போது எனக்குத் தெரியாது. நானாக ஒரு கம்பன் பாடலைத் தேடி அவரிடம் சென்று காட்டியதை அவர் வெகுவாக இரசித்தார்.  பிற ஆசிரியர்களிடம் என்னைப் பாராட்டிப் பேசினார். வகுப்பறையில் இலக்கிய நயம் பாராட்டும் வினாக்களை என்னிடன் கேட்பார். நான் சரியான பதில் தந்தால் அனைவர் முன்னிலையிலும் என்னைப் பாராட்டுவார். ” என்ன பிரகலாதா !” என்றுதான் என்னை விளிப்பார்.

அந்த ஆண்டு கல்லூரி மலருக்காக விவேகானந்தர் மீது ஒரு அறுசீர் விருத்தப்பா எழுதி ஆண்டுமலரின் தமிழ்ப் பகுதிக்கான பொறுப்பை ஏற்றுள்ள தமிழாசிரியரிம் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டு பிறகு பார்க்கலாம் என்று அவர் சொல்லிவிட்டர். அடுத்த வாரம் அவரை சந்தித்துக் கேட்ட போது,

“கவிதை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சொல் சரியாக இல்லை. இரும்பெனத் திரண்ட தேகம் என்று இருக்கிறது. அதை “இரும்பென அமைந்த தேகம்” என்று மாற்று எனச் சொல்லிவிட்டு பிறகு இதே போலத் தேவையில்லாத சில மாற்றங்களையும் குறிப்பிட்டார்.

நான் பள்ளியிலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். ஓரிரண்டு பரிசுகளும் வாங்கியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை என் சொற்களே சிறப்பாக இருந்தன என நான் கருதினேன். என் கவிதையை யாரும் திருத்த முயலுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மேலும் துறைத் தலைவரான பேராசிரியரே என்னை அவ்வப்போது பாராட்டியது என் தலைக்குள் ஒரு மமதையைக் கொடுத்துவிட்டது. தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவந்தேன். தமிழ் யாப்பிலக்கணமும் அறிந்திருந்தேன் என்பதில் எனக்கு ஒரு பெருமை உண்டு. எல்லாம் சேர்ந்து என்னை உந்த நான் வாய்திறந்தேன்,

“சார்! நான் எழுதியதே சரியாக இருக்கு..நான் மாற்றமாட்டேன்” என்றேன்

நான் இப்படிப் பேசுவேன் என்று எதிர்பார்க்காத அவர் சற்றே கோபத்துடன் “ அப்படியென்றால் உன் கவிதையை நீயே வைத்துக் கொள். மலருக்குத் தேவையில்லை” என்று என் கவிதையை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஏமாற்றத்துடன் அவர் அறையை விட்டு வெளியே வந்த நான் மேலே என்ன செய்வதென்று யோசித்தேன். நிறைய யோசனைக்குப் பிறகு தமிழ்த் துறைத் தலைவர் ஜகன்னாதாச்சாரியாரிடம் இது பற்றி முறையிடலாம் என்று கொஞ்சம் அச்சத்தோடு அவர் அறைக்குள் சென்றேன்.

நாற்காலியில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தபடி “” யாரு ! பிரகலாதனா ?” என்று சிரித்துக் கொண்டே ”உள்ளே வா !” என்றார்.

எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. இத்தனை மாணாக்கர் இடையே ஆசிரியர் என்னை நினைவில் வைத்துள்ளர் என மகிழ்ச்சியடைந்தேன். ( அத்தனை மாணவர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் அவருக்குண்டு என்பதைப் பிறகுதான் அறிந்தேன்)

” சார்! நான் ஆண்டுமலருக்கு எழுதிய கவிதையில் ராமமூர்த்தி சார் ஒண்ணு ரெண்டு இடம் தப்புன்னு சொல்றார்..ஆனா அது அப்படியில்ல..திருத்தித் தரலேன்னா மலர்ல போட மாட்டேன்னு சொல்லறார் நீங்களே படிச்சு பாருங்க சார்”  என நான் கவிதை எழுதிய தாளை அவரிடம் நீட்டினேன்.

அவர் அதை வாங்கி வைத்துக் கொண்டு “ வாத்தியார் சொன்னா சரியாத்தான் இருக்கும். நீ கிளாஸுக்குப் போ “ என என்னை அனுப்பிவிட்டார்/

எனக்கு மனசுக்குள் மகா கோபம். என்னை எப்போதும் பாராட்டிப் பேசும் பேராசிரியர் இப்படி ஒரு பக்கமாய் முடிவெடுத்து விட்டாரே என ஆதங்கம். மலரில் கவிதை வராமல் போய்விடுமே என வருத்தம்  இனி இவரிடம் சென்று எதையும் கேட்கக் கூடாது என சிறுபிள்ளைத்தனமாக உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தேன்.

பதினைந்து நாட்களில் ஆண்டுவிழா. மலர் வெளிவந்தது. ஆர்வமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் நண்பர்கள் ஆண்டு மலரை எடுத்துவந்து என் கவிதை வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் நான் ஓடிச் சென்று ராமமூர்த்தி சாரிடம் நன்றி சொன்னேன்.

“ எனக்கெதுக்கு நன்றி. அப்படியே திருத்தாம மலர்ல போட்டுடு அப்படீன்னு ஒங்க பேராசிரியர்தான் சொன்னார்” எனக் கொஞ்சம் இறுகிய முகத்தோடு அவர் சொன்னார்.

அட்டா! பேராசிரியரைத் தவறாக நினைத்துவிட்டோமே என எண்ணிக்கொண்டு மாலை கல்லூரி முடிந்ததும் விரைவாக அவரது அறைக்குச் சென்றேன்,

“ சார் இப்பத்தான் மலரைப் பார்த்தேன். என் கவிதை அப்படியே வந்திருக்கு. ரொம்ப தேங்ஸ் சார் !”

“ ஒன் கவிதையில தப்பு இல்ல.. இருந்திருந்தா நானும் போடச் சொல்லியிருக்க மாட்டேன். அது சரி ! கவிதையிலே ஒரு வார்த்தை கூட மாத்தமாட்டேன்னு என்ன அடம்?”  

“கவிதை அப்படியே உள்ளேயிருந்து வர உணர்ச்சி சார் ! அது எப்படி வரதோ அப்படியே இருக்கணும் நான் ஒருமுறை எழுதிட்டா நானே கூட அத மாத்தமாட்டேன் சார். கவிதை புனிதம்”  என்றேன்

கடகடவென பலமாகச் சிரித்தவர் “ ஆமாம் ! இதெல்லாம் ஒனக்கு யார் சொன்னது ?” என்றார்.

பலமாக யோசித்தாலும் இந்தக் கருத்தை யார் சொன்னதுன்னு நினைவுக்கு வரல. ஒரு திரைப்படக் கவிஞர் பெயர் மனக்கண் முன் நிழலாடியது. சொல்வது பிழையாகிவிடும் என எண்ணிப் பேசாமலிருந்தேன்.

“ நன்னாக் கேட்டுக்கோ ! கவிதைக்கு உணர்ச்சி மட்டும் இருந்தா போறாது. அறிவும் வேணும். நெறையவே வேணும்..கம்பனும் அறிஞன் பாரதியும் அறிஞன். பாரதியார் பல இடங்களில் தான் எழுதிய கவிதையைத் திருத்தி எழுதியிருக்கார் தெரியுமா ? ஒரு உதாரணம் சொல்றேன்.

”சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று எழுதியதில் “உயர்வு” என்பதை அடித்துவிட்டு “சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே” என்ன மாத்தியிருக்கார். இது மாதிரி பல இடங்கள் இருக்கு… என்ன புரிஞ்சுதா?” ஒன்னோட தவறைச் சுட்டிக் காட்டுபவன் ஆசிரியருக்குச் சமம். ஒன் குறையையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுபவர்தான் ஒன் வளர்ச்சிக்கு ஆதாரம். நீ எழுதியதை மறுபடிப் பாக்கற வாய்ப்பு இதனால கிடைக்கும். அதன் பிறகு எதுன்னு நீயே தீர்மானம் பண்ணு..!” என்றார். இந்த உரையாடல் என் மனத்தில் நீங்காமல் நிலைத்துவிட்டது

வளரும் ஒரு கவிஞனுக்கு இந்த அறிவுரை எத்தனை முக்கியம் என்பது எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. தவறு கண்டுபிடிப்பவர்களை ஒதுக்கக் கூடாது. தவறு எனத் தெரிந்தால் திருத்திக் கொள்ளவேண்டும்; இதில் சின்னவன் பெரியவன் கிடையாது. கவிதை வாழ்க்கை இரண்டுக்கும் இது பொருந்தும். என்று புரிந்துகொண்டேன்.

 ஏன் பலர் இதைப் புரிந்துகொள்வதில்லை ?

எனக்குக் கிடைத்ததைப் போல் ஒரு பேராசிரியர் கிடைக்க வேண்டுமே !

 

( தொடரும்)

 

 

 

 

 

 

 

 

சங்க இலக்கியம்—ஓர் எளிய அறிமுகம்   பாச்சுடர் வளவ. துரையன்

முன்னுரை 

பதினெண் மேற்கணக்கு நூல்கள் | Pathinen Mel Kanakku Noolgal in Tamil

பொதுத்தமிழ் - இலக்கியம் எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்

”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்த பாடல் அடியாகும். இது புறநானூறு என்னும் சங்ககால நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் கணியன் பூங்குன்றனார். இதன் பொருள் “அனைத்து ஊர்களும் நம் சொந்த ஊரே! உலகமக்கள் அனைவரும் நமது உறவினர்களே!” என்பதாகும். அதாவது எல்லா ஊர்களையும் நம் சொந்த ஊராகக் கருதி அங்கு எந்தக் கருத்து மாறுபாடுமின்றி வாழ வேண்டும். எல்லா மக்களையும் நம் உறவினராகவே கருதி அவரிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதாகும்.

சங்க கால நூல்கள் பலவற்றுள் இது போன்ற வாழ்வியலுக்குத் தேவையான பல கருத்துகள் காணப்படுகின்றன. “இலக்கியம் என்பது காலக்கண்ணாடி” என்பர். சங்க கால நூல்கள் அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நன்கு படம்பிடித்துக் காட்டி உள்ளன. ”எத்தொழில் செய்தாலும் அதைத் தரத்தோடு செய்ய வேண்டும். பிறரை ஏமாற்றக் கூடாது. நம் உறவினரைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். நம்மால் முடிந்த மட்டும் பிறருக்குப் பொருள் கொடுத்து உதவ வேண்டும். செல்வத்துப் பயனே ஈதல் என்பதை உணர வேண்டும். குறிப்பாக அறம் சார்ந்த வாழ்வை நாம் வாழ வேண்டும்” என்பன போன்ற குறிக்கோள்களில் தமிழர் வாழ்ந்திருந்ததைச் சங்க நூல்கள்தாம்  எடுத்துக் காட்டுகின்றன.

சங்க காலம் என்பதை வரையறுப்பதில் பல பதிவுகள் உள்ளன. கி.மு. 50ஒ முதல் கி.பி 200 முடிய சங்ககாலம் என்று பேராசிரியர் முனைவர் ரா. சீனிவாசன் கூறுகிறார். சங்கம் என்பதற்குக் கூட்டம் என்று ஒரு பொருள் உண்டும். ஆண்டாள் சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் என்பார். அனைவரும் கூட்டமாய் வந்ததை இப்படிக் காட்டுவார். புலவர்கள் ஒருங்கு கூடித் தமிழ் ஆய்ந்த இடம் சங்கம் எனக் கருதலாம்.

பண்டைக்காலத்தில் மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. முதற்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில் அமைந்திருந்தது.  4449 புலவர்கள் அதில் பங்கு பெற்றுப் பல நூல்கள் எழுதினர். இது 4400 ஆண்டுகள் இருந்ததாம் கி.மு. 2387-இல் ஏற்பட்ட கடல்கோளினால் இது அழிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சங்கத்தில் அகத்தியர், முருக வேள், சிவபெருமான், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் போன்ற புலவர்கள் இருந்தனர். அச்சங்ககாலத்தில் முதுநாரை, முது குருகு, பெரும்பரிபாடல் போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. ஆனால் அவை கிடைக்கவில்லை.

இரண்டாவதான இடைச்சங்கம் கபாடபுரத்தில் அமைந்திருந்தது. இந்த நகரமும் கடலுக்குள் மூழ்கின குமரிக் கண்டத்தில்தான் இருந்தது. 3700 புலவர்கள் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர். இது 3700 ஆண்டுகள் நடைபெற்றிருந்தது. பெருங்கலி, வெண்டாளி, குருகு, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம் போன்ற பல நூல்கள் அக்காலத்தில் தோன்றின. அவற்றில் தொல்காப்பியம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் இருந்தது. 449 புலவர்கள் அதில் இருந்தனர். 449 ஆண்டுகள் அது செயல்பட்டது. நக்கீரனார், சிறுமேதாவியார், இளந்திருமாறன், நல்லந்துவனார் போன்ற புலவர்கள் அக்காலத்தில் இருந்து தமிழுக்கு அணிச் செய்தனர். நமக்குக் கிடைத்துள்ள எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் அக்காலத்தில் தோன்றியவை.

எட்டுத்தொகை  என்னும் தொகுப்பில் எட்டு நூல்கள் அடங்கி உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு நூலும் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டவையாகும்.

அந்நூல்கள் யாவை என்பதைப் பழம்பாடல் இவ்வாறு காட்டுகிறது.

 

”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு—பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று

இத்திறத்த எட்டுத் தொகை/

 

இதன் மூலம் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்கள் எனக் கொள்ள முடிகிறது. இவற்றில் நற்றிணை, குறுந்தொகை, அங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அகத்துறை சார்ந்தவை. பதிற்றுப் பத்தும் புறநானூறும், புறத்துறை வகையில் வருவன. பரிபாடல் இசை பற்றி அமைந்த நூலாகும்.

 

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.

என்னும் பாடல் பத்துப் பாட்டு நூல்களைப் பட்டியலிடுகிறது.

 

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப் பாட்டு நூல்களாம். இப்பத்தில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன. வள்ளலை நாடிப் பரிசில் பெற்று வருபவர். எதிரே வருபவரிடம், ”நீரும் சென்று அந்த வள்ளலிடம் பரிசு பெறுக” என்று கூறி அவ்வள்ளலின் இருப்பிடம் போகும் வழி எல்லாம் கூறி ஆற்றுப்படுத்தலே ஆற்றுப்படை நூல்களாம்.

இந்தச் சங்க இலக்கிய நூல்களைச் சுருக்கமாக ஒவ்வொன்றாகச் சுவைத்து அனுபவிப்பது நமக்கு  மிகவும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை

(தொடரும்)

 

(இனி வரும் மாதங்களில் தமிழின் பெருமை வாய்ந்த பதினெண் மேல்கணக்கு சங்க  நூல்கள்  ஒவ்வொன்றையும்  தனித்தனியே பிழிந்து அதன் சாறெடுத்து ரசித்து ருசித்து அருந்தி மகிழ்வோம். பின்னர் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களையும்  சுவைப்போம். இதனை நமக்குப் படைத்துத் தர முன்வந்த பாசச்சுடர் வளவதுரையன் அவர்களுக்கு அன்பான நன்றி ) 

 

 

 

குறுக்கெழுத்து – சாய்நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் புதிர் - விடைகளை அறியலாம்! - Seithi Mediacorp

 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஜனவரி மாதத்திற்கான குறுக்கெழுத்துப் போட்டியின் லிங்க் இதோ:

https://beta.puthirmayam.com/crossword/ED0B944612

 

இதற்கான சரியான விடை எழுதிய நண்பர்களில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 

இனி சென்ற மாதம் ( டிசம்பர் 22 )  வெளியிட்ட திருக்குறள் பற்றிய குறுக்கெழுத்தில்

பங்கு பெற்றவர்கள்: 16

சரியான விடை எழுதியவர்கள் : 12

1. இந்திரா ராமநாதன்

2. உஷா ராமசுந்தர்

3. ரேவதி ராமச்சந்திரன்

4. மனோகர்

5. ராமசாமி

6. கௌரி

7. ராஜாமணி

8. வைத்யநாதன்

9. கற்பகம்

10. ஜானகி சாய்

11. ராமமூர்த்தி

12. நாகேந்திர பாரதி

 

இம்மாத குலுக்கலில்  வெற்றி பெற்றவர் :

நாகேந்திர பாரதி

வாழ்த்துக்கள்

 

 

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத்தேர்வு – சாந்தி ரசவாதி

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – டிசம்பர்  2022 – சாந்தி ரசவாதி 

 


————————————————————————————————————————————

சிவசங்கரி-குவிகம்  சிறுகதைத் தேர்வில் டிசம்பர் 2022

மாதத்திற்கான என்னுடைய தேர்வு

முதல் இடத்திற்கு உரிய சிறுகதை 

“சாமி போட்ட பணம்” 

எழுதியவர் ஆர்னிகா நாசர்

தினமலர் வாரமலர்  4 டிசம்பர் 2022 

—————————————————————————————-

முதல் பரிசு வாங்கிய கதையைப் பற்றி: 

படிப்பறிவில்லாத பாமரன் மண்டை கசாயம் என்பவரின் கணக்கில் தப்பாக இருப்பு வைக்கப்பட்ட அரசாங்கப் பணம் மூன்று கோடி ரூபாய் எப்படி செலவானது ஒரு வித்தியாசமான கற்பனை

வங்கி மேனேஜரும் அந்த பணத்தின் உரிமையாளருமான அரசாங்க காண்ட்ராக்டர் வந்து மண்டை கசாயத்தை சாம பேத தான தண்ட முறையில் பணத்தை வசூல் செய்ய முயற்சிக்க மண்டை கசாயம் அந்த பணத்தை கிருஷ்ணாபுரம் கிராமத்து இளைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்து ஜே சி பி யால் கருவேல மரமகற்றும் பணியும் தார் ரோடு போடும் பணியும் குளங்களை தூர் வாரும் வேலையும் நடந்து கொண்டிருப்பதாக கூறி கை விரிக்கிறார் இந்த பணம் அரசாங்க காண்ட்ராக்டர் இடம் சென்றிருந்தால் ஒரு வேலையும் நடந்திருக்கப் போவதில்லை. நடந்ததாக கணக்கு மட்டுமே காட்டப்படும்.

தொட்டதற்கெல்லாம் வரி விதித்து ஒரு ரோடு கழிவு நீர் வடிகால் குப்பை ஆளுமை என்று எதையும் சரியாக பராமரிக்க தெரியாத கையாலாகாத அரசாங்கத்தையும் ஓட்டு போட்ட நம் கையறு நிலையையும் நினைத்து நீறு பூத்த நெருப்பாக இருக்கும் நம் கோபத்திற்கு ஆறுதலாக ஒரு வடிகாலாக இந்த கதை

மற்றும் ஒரு பெரிய தொகை கணக்கில் வைப்பு வைத்திருப்பதாக வந்த குறுஞ்செய்தி உடன் இந்த கதையை நிறைவு பெறுகிறது

கதை எழுதிய ஆர்னிகா நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த கதை மிக எளிய நடையில் இயல்பாக இருக்கிறது

மற்றும் சில கதைகள் தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்ட வை கீழே

1. உணர்வின் எல்லைகள் எழுதியவர் கே ஜி ஜவகர் – டிசம்பர்  பூபாளம் பத்திரிகை

ஒரு சிறுகதையை சினிமா மாதிரி கண் முன்னே விரித்து இருக்கிறார். சினிமா சான்ஸ் தேடி ஊரை விட்டு ஓடி வந்த பெண் திக்கற்று இரவில் ரவுடிகளால் துரத்தப்படும் பொழுது நமக்கு திக் திக் என்கிறது. அவளை, தசமதியை சமயோசிதமாக காப்பாற்றி ஒரு வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும் இளைஞன் வேலன்.

தசா கலக்கத்துடனும் சந்தேகத்துடனும் எதிர்கொள்ளும் அந்த வீடும் அதில் இருந்த பெண்ணும். ஆனால் நல்ல விதமாக அந்த வீட்டு பெண்ணின் பெற்றோர்கள் கதாநாயகியை அவள் ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள்.

உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வீட்டுப் பெண்ணின் கையில் வேலன் என்று பச்சை குத்தி இருக்கிறது

சினிமா உலக அபலைகளின் அவலம் இருள், பயம், மனிதநேயம், மென்மையான காதல் எல்லாம் அழகாக வெளிப்படுகிறது வர்ணனைகள் கச்சிதமாக பொருந்துகிறது உதாரணத்திற்கு புளிய மரத்தின் பின்னால் இருந்து பயத்துடன் வெளிப்படும் பெண் மேகத்திலிருந்து மெல்ல வரும் நிலவு போல் என்று குறிப்பிடுவது. வாழ்த்துக்கள்

2. எதுவும் என்னுடையது அல்ல ஜே பாஸ்கரன் – 22 12  22  பூபாளம் பத்திரிகை

ராஜ்ய பாரத்தினால் சலிப்படைந்த அரசன் எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி நிற்க குருவைத் தேடி வந்தான். குருவின் யோசனைப்படி ராஜபாரத்தை அவருக்கு தாரை வார்த்து கொடுத்து மகிழ்கிறான்.

வேலை தேடி செல்லும் அவனுக்கு அந்த ராஜ்யத்தை நிர்வாகம் செய்யும் வேலை தகுந்த சம்பளம் என்று குரு நிர்ணயிக்கிறார்.

அதே ராஜ்ய வேலைகளை அவன் ராஜாவாக இல்லாமல் ஊழியனாக நிறைவேற்றும் பொழுது நிம்மதியாக கவலை அற்றவனாக உணர்கிறான் எவ்வளவு உயர்ந்த தத்துவம். எல்லாமே மனம் செய்யும் மாயை. அதை மிக அழகாக கதையாக வடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்

3 இன்னொரு வானம் எழுதியவர் சங்கரி அப்பன் கல்கி இதழ் 22 12 21

எமிலி டிக்சன் அவர்களின் வரிகளில் , “இன்னொரு வானம் இருக்கிறது உனக்காக, எப்போதும் அமைதியாக அழகாக இன்னொரு சூரிய வெளிச்சம் இருக்கிறது நீ எப்போது வேண்டுமானாலும் இளைப்பாற வரலாம்”

தந்தையிடமிருந்து இந்த வரிகளின் பொருளை உணர்ந்த கதாநாயகி.

தன் மூத்த மாப்பிள்ளை மூலம் படும் வலிகளுக்கு மருந்து போடுவது போல அமையும் இரண்டாவது மாப்பிள்ளை அவளுக்கு மேற்கண்ட வரிகளை நினைவுபடுத்துகிறது சிறந்த கதை

4. அதெல்லாம் ஒரு சுகம் எழுதியவர் மயிலாடுதுறை ராஜசேகர் கல்கி பத்திரிகை

மாமனார் மாமியார் வருகை அதற்கு மருமகளின் வழக்கமான பிரதிபலிப்பு, சலிப்பு. மாமனாரின் இயல்பான குணமான வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை சாடும் மருமகள். இதைத் தாண்டி பையனின் தீர்மானமான சேவை பெற்றோருக்கு

மாமனாரின் பரோபகாரம் நற்பண்புகளால் மருமகள் மனம் மாறுவது, அவர்கள் தன்னுடன் தங்க விருப்பம் தெரிவிப்பது. ஆனால் அவரை நம்பி உணவுக்காகவும பாசத்துக்காகவும் ஊரில் இருக்கும் பிராணிகள் பறவைகள் இவைகளை நினைத்து திரும்பச் செல்ல முடிவு செய்யும் பெற்றோர்கள்.

சிறந்த கதை

5. அப்போதும் அவள் கருவுற்று இருந்தாள் எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் – டிசம்பர்  அந்தி மழை பத்திரிகை

ஒரு விழிப்புணர்வு கதையாக இது நம்மை கவர்கிறது -கலக்கமடையச் செய்கிறது.

முதல் குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஊர் விட்டு ஊர் வந்து பணத்துக்காக யாருடைய குழந்தயையோ சுமந்து வேதனை பட்டு பெற்ற குழந்தையைக் கூட பார்க்க முடியாமல் கவர்ந்து செல்லும் பயாலஜிக்கல் பெற்றோர். கையெழுத்துப் போட்ட பணம் என்ன ஆயிற்று என்று தெரியாத அறியாமை. நடுவில் விளையாடும் ஏஜெண்டுகள்.

மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்புடன் அவள் அப்போதும் கருவுற்றிருக்கிறாள் என்று முடியும் ஒரு கொடுமை.

இந்த வாடகை தாய் வியாபாரத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் எழுத்தாளர் வாழ்த்துக்கள்

6. அதிதி எழுத்தாளர் விஜி ரவி 22 12 கல்கி பத்திரிகை

வழக்கமான அதிருப்தி இளைய தலைமுறை மீது, சாமி கும்பிடுவதில்லை, வீட்டுக்கு வந்த அதிதி பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லை, எப்போதும் கணினி கைபேசி.

ஆனால் அந்த யுவதி பிருந்தா புறாவுக்களுக்கு தானியம், தெரு நாய்களுக்கு தயிர் சாதம், வெண்ணெய் சேர்த்து கோப்பையில் தண்ணீர் பறவைகளுக்கு, வண்டியில் அடிபடும் தெரு நாய்க்கு அரச வைத்தியம்.

கடவுள் படைப்பில் மனிதர்களைத் தவிர உள்ள ஜீவராசிகளை அதிதியாக கருதும் இந்த தலைமுறை கவனிக்கப்பட வேண்டியவர்கள் விஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

7. தர்ம கணக்கு ரெஃபரன்ஸ் 22 12 11 தினமலர் வாரமலர் பத்திரிகை

பதவி உயர்வு தட்டி தட்டி போகும் வருத்தம் கணவனுக்கு. கோயில் பயணத்திற்கு சுணங்குகிறான்

தான் கோயிலுக்கு கொடுத்த அளப்பரிய காணிக்கை பெற்றோர்களை அருமையாக பார்த்துக் கொண்டு கரை சேர்த்தது அவர்களது நினைவு நாட்களை முதியோர் இல்லத்தில் கொண்டாடுவது இதுபோன்ற தர்ம கணக்கை எடுத்துரைக்கிறான் இது எதுவுமே தனக்கு உதவி செய்யவில்லை என்று அங்கலாய்க்கிறான்

மனைவி அமைதியாக சுட்டிக்காட்டுகிறாள் ஏலச்சீட்டு நடத்திய நண்பர் இறந்ததும் அந்த மாத தவணை கட்டாமல் ஏமாற்றியது, வேலைக்காரி கன்னியம்மா புருஷனுக்கு தெரிந்த டாக்டரிடம் சிபாரிசு செய்யாமல் மெத்தனமாக இருந்து அவள் புருஷன் இறந்ததும் ஒரு உறுத்தல் இல்லாமல் உலா வந்தது இதெல்லாம் அவன் தர்மக்கணக்கை சூனியம் ஆக்கிவிட்டது என்று புரிந்து கொண்டு கோவில் பயணத்திற்கு கிளம்பத் தயாரானான்.

மக்கள் சேவை மகேசன் சேவை என்ற இந்த புது தர்ம கணக்கை புரிய வைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

8. தங்கத்தாமரைகள் எழுதியவர் ஜி.ஆர் சுரேந்திரநாத் விகடன் பத்திரிகை ரெஃபரன்ஸ் 22 12 28

சினிமா உலகின் குருவும் சிஷ்யனும் feature ஃபிலிம் படங்களை தேசிய விருதுக்காக அனுப்பி வைத்து முடிவுக்காக காத்திருக்கும் தருணம்.

விக்டர் நல்ல சிஷ்யன் சாதாரண மளிகை கடை சிப்பந்தியாக இருந்த அவனை செதுக்கிய குரு சூர்யா அவர் மேல் மதிப்பும் அவர் மனைவி வித்யா மேல் அளப்பரிய அன்பும் வைத்திருப்பவன்.

சிஷ்யர் விக்டருக்கு மிருக மனிதன் என்ற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் சிறந்த பீச்சர் ஃபிலிம் விருதுகள் கிடைக்கின்றன குரு சூர்யாவின் படைப்பிற்கு விருது கிடைக்கவில்லை. தான் உருவாக்கிய கலைஞன் என்றாலும் அவன் மேல் பொறாமையுடன் இருந்த சூர்யாவின் கண்களை அவர் மனைவி வித்யா திறக்கிறாள். மிருக மனிதன் படத்தை பார்க்குமாறு தூண்டுகிறாள்.

ஒரு தனிப்பட்ட திரையீட்டில் சூர்யா விக்டர் குடும்பம் மட்டும் அப்படத்தை பார்க்கிறார்கள் மதுரையில் ஒரு காலகட்டத்தில் நடப்பதாக சொல்லப்பட்ட அந்த திரைக்கதை அவரை அறியாமல் அவரை கவர்கிறது. அந்த கதை எடுத்த விதம் அதன் முடிவு அதிலிருந்த கலைநயம் அவரை கரைய ச்செய்ய, ஒரு நல்ல கலைஞனின் உயரிய படைப்பு அவரது பொறாமை அழுக்கை கழுவி அவரை அமைதிப்படுத்துகிறது சிஷ்யனைத் தழுவி மனதாரப் பாராட்டுகிறார் மனிதர்களுடைய மிக இயல்பான பலவீனமான பொறாமை உண்மையான கலைக்கு அடிபணிந்து தோற்றுப் போகிறது அருமையான படைப்பு எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்

இத்துடன் இந்த அலை வரிசையில் எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன
இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்த குவிகத்திற்கு  நன்றி
– சாந்தி ரசவாதி 

கவிதா மலை ஏழுமலை  – நாகேந்திர பாரதி

 

தமிழ் இலக்கிய உலகம் கொடுத்து வச்சது அவ்வளவு தான் சார் .ஆமா நான் இனிமே கவிதை எழுதுறதே இல்லை ன்னு முடிவு பண்ணிட்டேன். வருத்தப்படாதீங்க சார், உங்களுக்குத் தெரியறது மத்தவங்களுக்கு தெரியலையே .என்ன பண்றது .

இந்த ரமேஷ் இருக்கானே, அவனைப் பத்தி எவ்வளவோ உயர்வா நினைச்சி இருந்தேன். என்னோட கவிதைகளின் அரங்கேற்றம் எல்லாமே அவன் முன்னிலையில் தான். என்னோட ‘ஜீவாதாரண நுண்ணறிப்பு ‘ அப்படிங்கிற கவிதை முதல்ல அவனுக்கு புரியலைன்னாலும் பிறகு அரை மணி நேரம் ‘மிருதங்க விலாஸ் ஹோட்டல்’ல டிபன் வாங்கிக் கொடுத்து விளக்கம் சொன்னப்போ, ரொம்ப ‘ருசி’கரமான கதை ன்னு சபாஷ் போட்டான். இதே மாதிரி தான் என்னோட ‘முலங்கொன்று கேதாரம்’ கவிதையும் மிருதங்க விலாஸ் ஹோட்டல்ல தான் அவனுக்குப் புரிஞ்சது .

நான் என்னோட கவிதை வரிகளை அனுபவிச்சுச் சொல்றப்போ அவனும் அந்த பிளேட்டுல இருந்த அல்வாவை அனுபவிச்சுச் சாப்பிட்டு வாயிலே அல்வாவோட ‘ கழுதை நல்லா இழுக்குது’ அதாவது ‘கவிதை நல்லா இருக்குது’ ன்னு மதிப்புரை சொன்னபோது எனக்கு புளகாங்கிதமா இருந்தது . நான் அவனைப் பற்றி என்னவெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன். எல்லாவற்றையும் கெடுத்து விட்டானே. அவன் என் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவான். அதே கையோடு என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்குவான், என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படித் தகர்த்து விட்டானே பாவி.

‘அப்படி என்ன செய்துட்டான் ‘ ன்னு கேக்கிறீங்களா . மணி கிட்ட சொல்லி இருக்கான் சார். ‘என் கவிதை எல்லாம் ஒண்ணுமே புரியாதாம் . அவன் சாப்பிடுற நேரத்துல நான் சொல்லிச் சொல்லி அவனுக்கு வயித்து வலி வந்துருச்சாம் ‘. என்னங்க, கவிதையில காரம் இருந்தா அதுக்காக வயிற்றில் அல்சர் வருமா ‘.

பாரதியார் கிட்ட இது மாதிரி யாராவது சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பார், என்று எனக்குத் தெரியாது .ஆனால் நான் என் உணர்ச்சி வேகத்தை ‘கடுதாக சித்தி ‘என்கிற கவிதையில கொட்டித் தீர்த்துட்டேன் . அந்தக் கவிதையை மட்டும் அவன் படிச்சான்னா, நிச்சயம் தூக்கு போட்டுட்டு செத்துருவான் .ஆனா அதை அவனுக்குப் புரிய வைக்க அவன திரும்ப மிருதங்க விலாஸ் ஹோட்டலுக்கு நான் கூட்டிட்டுப் போக மாட்டேன்.

என்னமோ போங்க சார், எனக்கு உலகமே வெறுப்பு ஆயிடுச்சு. என்ன சார் இது, பாரதியாருக்கு அடுத்து இப்படி ஒரு நல்ல கவிஞனா நான் வந்து இருக்கேன். யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. இந்தப் பத்திரிகை ஆசிரியர்களை நினைச்சா பத்திண்டு வர்றது சார். நான் எழுதி அனுப்புற கவிதைகளை மட்டும் இல்ல, எவனோ எழுதின கவிதைகளை எல்லாம் கூட ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்திக் கிட்டு எனக்கே அனுப்பி விடுறாங்க. என்ன விஷயம்ன்னு கேக்குறப்போ ‘புரியாத கவிதைன்னு எது வந்தாலும் அது என்னோடது தான்னு நினைச்சு திருப்பி அனுப்பி விடுறாங்களாம்’. எல்லாம் என்னோட தப்பு தான் சார் .ஒவ்வொரு கவிதையோடவும் ஸ்டாம்ப்கள் ரெண்டு மூணு வச்சு அனுப்புறேன் இல்லையா . எனக்கு வேணும் . நான் என்ன அவங்க வீட்டு குப்பைக் கூடயா சார், என்ன சார் இது கிண்டல் பண்றாங்களா .

சரி அதை விடுங்க ,எங்க தெருவுல கூட நான் ஒரு பெரிய கவிஞன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அதனால நான் கொஞ்சம் நிமிர்ந்த மார்போடு அப்படி கம்பீரமா நடந்து போறது உண்டு. அதுக்காக , அதுக்காக இப்படியா சார் , அரை லூசுன்னா சார் சொல்றது. என் பையன் வந்து என்கிட்ட கேட்கிறான் .’அப்பா, அப்பா உங்கள அரை லூசுன்னு தெரு முழுக்க பேசிக்கிறாங்க . நீங்கதான் முழு லூசு ஆச்சேப்பா . எப்படி அவங்க அரை லூசுன்னு சொல்லலாம் . ‘

எனக்கு எப்படி இருக்கும் பாருங்க. நீங்களே சொல்லுங்க. ஒரு தலை சிறந்த கவிஞனுக்கு வீட்டிலேயே எவ்வளவு மரியாதை கிடைக்குது பாருங்க. இவங்களை என்ன செய்ய முடியும். எல்லாரையும் கண்டித்து ‘தூரப்பிரம்ம புஷ்பம்’ அப்படிங்கிற கவிதை எழுதினேன். வேற என்ன பண்ண முடியும் ஒரு கவிஞனால்ல . சொல்லுங்க .

,இந்த லட்சணத்துல, இவங்க எப்படி எனக்கு ‘கவிதாமலை’ன்னு பட்டம் கொடுப்பாங்க .’கவிதா மலை ஏழுமலை’ ன்னா எவ்வளவு நல்லா இருக்கு, இல்ல . அரை லூசு ஏழுமலைன்னா அசிங்கமா இல்ல . என்ன சார் இது, உங்களுக்குத் தெரியுது எனக்குத் தெரியுது . நான் அந்தப் பட்டத்திற்கு ரொம்ப பொருத்தமானவன்ன்னு. அரை லூசு இல்லே சார் , கவிதா மலை பட்டத்திற்கு. புரிய வேண்டிய உங்களுக்கே புரியலையே, நான் என்ன பண்றது .

இதே மாதிரிதான் , இந்த அடுத்த வீட்டுக் கிழம் , கிட்டுத் தாத்தா இருக்கே, இதுக்கு என்னோட கற்பனையை காப்பின்னு சொல்றதில்ல ஏக ஆனந்தம். நேத்து திடீர்னு ஒரு கற்பனை வந்துச்சு சார் . அருமையான கற்பனை. ‘நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே’ அப்படின்னு ஒரு அழகான வரி. என் கற்பனையைச் சுரண்டி வந்து கொட்டுறேன். இந்த கிட்டுக் கிழம் என்ன சொல்றது தெரியுமா. ஏற்கனவே சினிமா பாட்டில் வந்த வரியாம் இது. எனக்கு வந்த கோபம் இருக்கே, வயசானவர் என்கிறதால மரியாதையா விட்டுட்டு வந்துட்டேன்.

சரி நீங்க என்ன சொல்றீங்க, நம்ம மதிப்பு தெரியாத இடத்தில் ஏன் நம்ம கவிதையை விடணும் இல்லையா .ஆனா என்னோட மதிப்புத் தெரிஞ்சவங்க, உங்களைத் தவிர வேற ஒருத்தருமே இல்லையே சார், இந்த உலகத்திலே. ‘அதனாலதான் இனிமே கவிதையே எழுதப்போறதில்லை’ ன்னு முடிவு பண்ணிட்டேன் சார் . நீங்க புரிஞ்சு அழறீங்க. வேறு யாராவது படிச்சா வேணும்னே சிரிப்பாங்க. என்னோட அருமை தெரியாத ஜனங்க சார்.

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜேந்திரன் என்னும் பெயர் இந்திய சரித்திரத்தை அலங்கரித்தது.

Rajendra Chola I or Rajendra I was a Tamil Chola emperor - Tamil Heritage

அவனது இந்தியப்படையெடுப்பு, ஒருவழியாக முடிந்தது.

நானா திசையும் வெற்றிதான்!

ராஜேந்திரன் கங்கையைக் கொண்டான்!

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான்.

கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான்.

இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது.

ஒரு நாட்டின் வளத்திற்கும் பலத்திற்கும் வணிகமே அச்சாணி. சோழப் பேரரசு செழிப்புற்றிருக்க வேண்டுமெனில் இந்திய பெருங்கடலில் வல்லாதிக்கம் செலுத்த வேண்டும். இதற்கு இக்கடல் பாதையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ராஜேந்திரனின் கடலாட்சியை கடல்புறா போல காவியமாக எழுதாவிட்டாலும், ஒரு சிறுகதையாக எழுதுவது முறையாகும்.

இதோ:

கி பி 1025:

கங்கைகொண்ட சோழபுரம்.

அங்கு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோட்டை, அரண்மனை, மற்றும் மாட மாளிகைகள் புதுப்பொலிவுடன் இருந்தது. வானுயர்ந்த அந்த பெரியகோவிலின் மணி நகரெங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. மன்னன் ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தின் புதிய அரண்மணயில் மந்திராலோசனையில் இருந்தான்.

மந்திரிகள், படைத்தலைவர்கள், ஆலோசகர்கள், மற்றும் அரசியல் வல்லுனர்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.

யுவராஜன் ராஜாதிராஜன், ராஜேந்திரனுக்கு அருகில் பெரும் ஆசனத்தில் இருந்தான். அவனுக்கு அருகில் மற்ற இளவரசர்கள் இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் இருவரும் உயர் ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள்.

ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்:

“தந்தையார் மறைவுக்குப் பின்,  சோழ ஆட்சிப்பொறுப்பை ஏற்று, இன்றுடன் 11 ஆண்டுகள் முடிந்தது. தந்தையின் வீரமும், அறிவும், ராஜதந்திரமும், சிவபக்தியும் நமக்கு ஒரு உத்வேகமாக இருந்து நம்மை நடைபோட வைத்திருக்கிறது. அவர், சோழ நாட்டின் எதிரிகள் ஒருவரையும் விடாமல் அழித்து, நட்பு ராஜ்யங்களைப் போற்றி ஆண்டு வந்தார். அவரது தீர்க்கதரிசனத்தில், சோழக்கடற்படை பெரும் சக்தியுடன் பலப்பட்டது. அவருக்குப் பிறகு, என்னாட்சியில் அதே எதிரிகள் மீண்டும் கிளர்ச்சி செய்ய, நாமும் நமது படை கொண்டு, இந்தப் பத்தாண்டுகள் இடைவிடாது போர் புரிந்து, அனைவரையும் ஒடுக்கினோம். பாண்டிய நாட்டில், நம் சோழ இளவரசன், சுந்தர சோழ பாண்டியனாக இருக்கிறான். சாளுக்கிய, ஈழம் எல்லாம் அடங்கிவிட்டது. நாமும் ஒருபடி மேலே சென்று, கங்கை நாடுகளை வென்று, இங்கு கங்கை கொண்ட சோழபுரத்தையும் நிறுவினோம். இந்த படையெடுப்பில் பல செல்வங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், இதற்கு, நாம் செலவிட்ட மூலதனம் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த நகரத்தையும், சிவன் ஆலயத்தையும் நிர்மாணிக்க எத்தனை பொருள் தேவைப்பட்டது? மேலும், நமது படையில், 60000 யானைகள், 2 லட்சம் அராபியக் குதிரைகள், 20 லட்சம் காலாட் படைகள், ஆயிரம் கப்பல்கள் இத்யாதி!”

இதைச்சொல்லி நிறுத்தினான் ராஜேந்திரன்.

படைத்தலைவர்கள் இது அனைத்தும் அறிவார்கள்.

ஆயினும் இந்த எண்ணிக்கை அவர்களது உற்சாகத்தைக் கிளப்பி விட்டதால்,

“வெற்றி வேல், வீரவேல்’ என்று ஆர்ப்பரித்தனர்.

புன்னகையுடன் ராஜேந்திரன் தொடர்ந்தான்:

“இந்தப் பெரும் படைக்கு நாம் இத்தனை நாட்கள் வீர விருந்து கொடுத்தோம். இந்த வீரர்களுக்கு, நாம் என்றுமே வாழ்க்கை தரவேண்டும். அதற்கு எத்துணை செல்வம் தேவை! நாம் எல்லா திசைகளையும் வென்ற பின் இப்பொழுது சற்று அமைதியாய் உள்ளோம். அதாவது, நமது போர் வருமானம் குறைந்து விடும். கப்பத்தால் வரும் வருமானம் மட்டும் தான் கருவூலத்துக்கு ஓரளவுக்குப் பலம். இனி நமது நாட்டின் வருமானம் வணிகத்தில் தான் உள்ளது“ என்றான்.

மன்னன் ஏதோ முக்கியமான செய்திக்கு அடி போடுகிறான் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

ராஜேந்திரன் தொடர்ந்தான்:

“இன்று சோழர் வணிகம் என்பது சோழநாட்டிலிருந்து, இந்தோனேசியத் தீவுகளின் வழியாக சீனா வரைக்கும் மற்றும் தமிழகத்தில் இருந்து பாரசீக வளைகுடா வழியாக அரேபிய நாடுகளுக்குமாக நடக்கிறது. சில வணிகர் குழு ஆப்பிரிக்க மற்றும் ரோமாபுரி வரை சென்று வணிகம் செய்தது. தமிழகத்தில் நெய்த பருத்தி ஆடைகள், வாசனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை சீனாவிற்கு விற்பனை செய்து அங்கு கிடைக்கும் பட்டுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் மேற்கு மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அரேபிய வணிகர்களும் இவற்றை வாங்கி மேற்குலக நாடுகளுக்கு விநியோகிக்கிறார்கள்.

இதன் வரி தான் நமது வருமானம்”.

ராஜேந்திரன் சற்று நிதானித்தான்.

பிறகு தொடர்ந்தான்.

“சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னருக்கும் தந்தை இராஜராஜருக்கும் நல்ல நட்புறவு இருந்தது.

மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன். இதற்கு என் தந்தையின் முழு ஆதரவும் இருந்தது. என் ஆதரவும் இருந்தது. இதைக் கல்வெட்டு ஒன்றிலும் அறிவித்துள்ளேன்.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்திருக்கிறது. மேலும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கும் ஸ்ரீவிஜயம் உதவி வந்துள்ளது.

ஆயினும், இப்பொழுது இதில் பெரிய பிரச்சினைகள் வந்துள்ளது.
அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளது.

மார விஜயதுங்கவர்மன் மரணத்துக்குப் பின், அவன் மகன் சங்கரம விஜயதுங்கவர்மன் மன்னனானான்.

கம்புதேசத்தில் (இன்றைய கம்பூச்சியா) கெமர் அரசின் மன்னன் முதலாம் சூர்யவர்மன் நமது உற்ற நண்பன். (தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டு லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது கெமர் பேரரசு). அவன் தாம்பரலிங்கா நாட்டின் மீது போர் தொடுக்க நினைத்தான். இந்தச் சூழலில் தான் சூர்யவர்மன் என் உதவியை நாடினான். அவனது தூதுவன் நான்கு மாதம் முன் நம் அரண்மனைக்கு வந்து என்னிடம் இவை அனைத்தையும் கூறினான். நான் ஸ்ரீவிஜய மன்னன் மார விஜயதுங்கவர்மனுக்கு சூரியவர்மனுக்கு உதவி செய்யுமாறு ஒரு கடிதம் அனுப்பினேன். அதற்கு அவன் பதில் ஒன்றும் அனுப்பவில்லை.

அது மட்டுமல்ல, ஸ்ரீவிஜய அரசாங்கம், மலாக்கா நீரிணைக்கு (இந்தோனீசிய தீவுகளுக்கு) வரும் சோழ நாட்டு வணிகர்களுக்கு அதிகமாக வரிவிதிக்க ஆரம்பித்தது. இவ்வரிவிதிப்பின் மூலம் கீழைக்கடலில் ஸ்ரீவிஜய அரசு தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைந்தது. சோழர் வணிக வருமானம் குறையத்தொடங்கியது. ”

ராஜேந்திரன் இதைச் சொல்லிவிட்டு சபையினரைப் பார்த்தான்.

சபையினர் அனைவரும் பேராவலுடன் மன்னனின் அரசியல் கணிப்பை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அடுத்து என்ன வரப்போகிறது என்று ஆவலுடன் பார்த்தனர்.

மன்னன் தொடர்ந்தான்:

“அத்துடன்.. சென்ற மாதம் வேறு பல செய்திகள் வந்தது..தாம்ரலிங்கா மன்னன் ஸ்ரீவிஜய அரசிடம் உதவி கோரியதாகவும், அதன்படி அவர்கள் கூட்டணி அமைத்துள்ளதாகவும் உளவுச் செய்திகள் கூறுகின்றன.

தாம்பரலிங்கா (மலேசியா) அரசனுக்கு உதவியாக கடாரத்து (ஸ்ரீவிஜய) மன்னன் சங்கரம விஜயதுங்கவர்மன் படையுடன் புறப்பட்டுச் செல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. .
நேற்று, சூர்யவம்சனின் தூதன் வந்து என்னைச் சந்தித்தான். நாம் கேட்ட அந்தச்  செய்திகளை உறுதிப்படுத்தி, சூர்யவம்சனுக்கு உதவக் கோரிக்கை விடுத்தான்” என்று கூறி ராஜேந்திரன் நிறுத்தினான்.

சபையின் நிசப்தம் நிலவியிருந்தது.

‘மன்னனின் முடிவு என்னவோ?’ என்று அறியத்துடித்த அனைவரது இதயங்களும் சில நொடிகள் துடிப்பதை மறந்தன.

ராஜேந்திரன் முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது.

சொன்னான்:

“தந்தையின் கடற்படையெடுப்பில், நான் அரபிக்கடலில் கலந்து கொண்டது, எனக்கு ஒரு இனிமையான அனுபவம்” என்ற சொன்ன ராஜேந்திரன், ‘கடலென்னும் காந்தம் நம்மை மீண்டும் அழைக்கிறது’ என்றான்.

சபைக்கு மன்னனது குறிப்பு விளங்கியது.

ஆனாலும், ‘ஆயிரம் காதம் கடந்து ஒரு மாபெரும் அரசை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதா’ என்று சற்றே மலைத்தனர்.

“ஸ்ரீவிஜயப்படையெடுப்பு துவங்கட்டும்” என்று முழங்கினான் மன்னன்.

South-East Asia campaign of Rajendra Chola I - Wikipedia

அந்தக் குரலின் உற்சாகம் சபையினருக்குக்கும் பரவியது.

“வெற்றி வேல்.. வீர வேல்.. சோழமன்னர் வாழ்க” என்று அனைவரும் முழங்கினர்.

ராஜேந்திரன்:

“சபை கலையட்டும். இளவரசர்கள், படைத்தலைவர்கள், யுத்த மந்திரி இவர்கள் மட்டும் இங்கு இருக்கட்டும்” என்றான்.

மற்ற அனைவரும் கலைந்து சென்றபின் ராஜேந்திரன் தன் திட்டத்தை விளக்கினான்.
இளவரசர்கள், படைத்தலைவர்கள், யுத்த மந்திரி அனைவரும் அசந்தே போனார்கள்.

பிறகு நடந்தது உலக சரித்திரம் கண்டிராத அதிசயம்!

மாபெரும் சாகசம்!

அவற்றைச் சற்றுப்பொறுத்திருந்து பார்ப்போம்.
 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

 

“ஹெலனையும் அவளுடன்  கவர்ந்துவந்த திரவியங்களையும் திரும்ப கிரேக்கர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.. அதுதான் நம் அழிவைத் தடுக்க ஒரே வழி” என்று டிராய் நாட்டு அமைச்சர் கூறியதும் அனைவர் கண்களும் பாரிஸையே பார்த்தன.

அவன் மறுமொழி டிராய் நகரத்தின் முடிவை நிர்ணயிக்கப்போகிறது என்பதை நன்கு புரிந்துகொண்ட மன்னர் பிரியம் மூத்த  இளவரசன் ஹெக்டர் அவனை உற்று நோக்கினான் .

“ அவள் என்னவள். அவளைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல இப்போதைய பிரச்சினை ஹெலன் அல்ல. வீரத்தில் சிறந்தவர்கள் டிரோஜன்களா அல்லது கிரேக்கர்களா என்பதை நிர்ணயிக்கும் தருணம். வீரர்கள் முடிவெடுக்கவேண்டிய நேரம்” என்று ஆணித்தருணமாகக் கூறினான்.

தன் தம்பி சொல்வதை ஹெக்டரும் ஆமோதித்தான்.

“நமது வீரத்தை நிரூபிக்க இதை விடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை. என் ஈட்டிக்கும் வாளுக்கும் முன் எந்த கிரேக்கத் தளபதியும் உயிருடன் தப்பிச் செல்ல முடியாது. இன்னொரு ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜீயஸ் கடவுளும் தற்சமயம் நம் பக்கம் இருக்கிறார். ஹீராவும் அதினியும் அவர் மனத்தைக் கலைப்பதற்கு முன் நாம் வெற்றி அடைந்து அகம்பாவம் பிடித்த கிரேக்கர்களை நம் எல்லையை விட்டே விரட்ட வேண்டும். என்னால் அது முடியும் “  என்று ஆவேசமாகக் கூறினான் ஹெக்டர்

இனி யுத்தத்தை யாரும் தவிர்க்க முடியாது  என்ற நிலை உருவாயிற்று.

கிரேக்கரும் டிரோஜன்களும் இதை உணர்ந்துகொண்டு அதற்கான பணியில் தீவிரமாக இறங்கினர்.

இறந்தவர் உடலை அப்புறப்படுத்தும் போர் நிறுத்த அவகாசம் முடிந்ததும் பயங்கரமான போர் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றின.

மற்ற கடவுளர்களும் நாம் எப்படி யாருக்கு எந்த விதத்தில் உதவுவது என்பதைத் தீர்மானித்து வைத்திருந்தனர்.

வீரத்தில் கடவுளையே ஜெயிக்கவல்ல பல தளபதிகள் தங்கள் பக்கம் இருப்பதால் கிரேக்கர்கள் தங்கள் வெற்றி உறுதி என்று நம்பி மதுவைக் குடித்து மித மிஞ்சிய மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

அதேசமயம் ஹெக்டரின் தலைமையில் உள்ள டிரோஜன்கள் தங்கள் நிலை என்னாகுமோ என்ற கவலையை மறக்க மதுவைக் குடித்து மயங்கினர்.

போர் நிறுத்தம் முடிவடையும் தருணம்.

கிரேக்கர்கள் தங்கள் படையைச் சுற்றி யாரும் புக முடியாத மாபெரும் அரண் ஒன்றை ஏற்படுத்தினர்.  

டிரோஜன்கள் தீப்பந்தங்களைத் தயார் செய்து அவர்கள் அரணை எப்படி உடைப்பது அதற்கான நல்ல தருணம் எது என்று  அதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டனர். கிரேக்கப் படையின் பலத்தையும் பலவீனத்தையும் அறிய ஒற்றன் ஒருவனை அனுப்பினர்.  ஆனால் அவர்களின் தூரதிர்ஷ்டம் அந்த ஒற்றன் கிரேக்கர்களிடம் மாட்டிக்கொண்டு டிராய் நகர உள்ளமைப்பைச் சொல்லிவிட்டு உயிர் துறந்தான்.

அதேசமயம் ஒலிம்பஸ் மலை உச்சியில் இருக்கும் கடவுளர் தலைவர் ஜீயஸ் படைக் காய்களை உருட்ட முடிவு செய்தார்.

அக்கிலிஸின் தாயான தன் முன்னாள் காதலி தன்னிடம் யாசித்ததை நினைவுபடுத்திக் கொண்டார்.

“இந்தப் போரில் அக்கிலிஸின் புகழ் நிலை நாட்டப்படவேண்டும். அவன் திரும்ப கிரேக்கர்களுக்கு ஆதரவாய் வரும் வரை டிராய் படை வெற்றிபெற வேண்டும். கிரேக்கர்கள் அக்கிலிஸிடம் கெஞ்சவேண்டும் . பின்னர் அவன் தலைமை ஏற்றபிறகு டிரோஜன்கள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும்”

விந்தையான விண்ணப்பம்! ஆனாலும் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணி “இனி டிரோஜன்கள் வெற்றிக் கனியைச் சற்று சுவைக்கட்டும் “ என்று சிரித்துக் கொண்டே ஜீயஸ் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

போர் நிறுத்தத்திற்குப் பின் ஆரம்பித்த இருபத்தைந்தாம் நாள் யுத்தத்தில் டிராய் நாட்டின் மாவீரன் ஹெக்டரின் அதகளம் ஆரம்பமாயிற்று.

Ancient Greek Trojan War, Greek Armament, The War, After the War

மாபெரும் குதிரைப் படையைக் கொண்ட டிராய் வீரர்கள் கிரேக்கர்களை அவர்கள் நாட்டிற்கே துரத்திவிடவேண்டும் என்ற வெறியுடன் போரிட்டார்கள்!

ஹெக்டர் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கு மேல் வெற்றி.

கிரேக்க தளபதிகள் அஜாக்ஸ் , டயாமிடிஸ், ஓடிசியஸ் மூவராலும் ஹெக்டரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.   அகெம்னனும் மெனியலிஸும் பின்வாங்கும் வீரர்களை முன்னே சென்று தாக்குமாறு உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தும் ஹெக்டரின் போர் வெறிக்கு முன்னாள் கிரேக்கத் தளபதிகள் ஒவ்வொருவராக  அடிபட்டுப் பின் வாங்கினர்.

அன்றைய நாள்  போரில் டிரோஜன்கள் கை ஓங்கியது. கிரேக்கர்கள் பின்வாங்கி அரணுக்குள் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். 

கிரேக்கர்களை இப்படி நிராதரவாக விட்டு விட்டாரே ஜீயஸ் என்று அவருடன் சண்டை போட அவரது மனைவி ஹீராவும் வேறு ஒருத்திக்குப் பிறந்த மகள்  அதினியும் சென்றனர். ஜீயஸ் அவர்களை எச்சரித்துவிட்டு  தன் செயல்களில் இருவரும் தலையிட்டால் அது அவர்களுக்கு அழிவாகிவிடும் என்று மிரட்டி அனுப்பினார். ஜீயஸுடன் நேரடியாக மோத முடியாத இருவரும் ரகசியமாகக் கிரேக்கர்களுக்கு உதவுவது என்று தீர்மானித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 

அன்று இரவு கிரேக்கப் படைத் தளபதிகள் அனைவரும் மந்திராலோசனையில் அமர்ந்திருந்தார்கள். இப்படிப்பட்ட தோல்வியை அவர்கள் சந்தித்ததே இல்லை.. படைவீரர்களின் மன வலிமையை நிலை குலையச் செய்துவிட்டது அன்றைய போர். வயதில் மூத்த நெஸ்டர் தன் தள்ளாத வயதிலும் போரிட்டு மரண காயத்தைப் பெற்று மற்ற தளபதிகள் ஆதரவால் தப்பி வந்தார். இனியும் கௌரவம் பாக்காமல் மாவீரர் அக்கிலிசை உதவிக்கு வரும்படி கேட்கவேண்டும் என்ற அவரது யோசனையை எல்லா தளபதிகளும் ஒப்புக்கொண்டனர்.  அகெம்னனுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றாலும் வேறு வழி எதுவும் தோன்றாததால் அவனும் ஒப்புக் கொண்டான். அதன்படி மிகச் சிறந்த தளபதிகளான அஜாக்ஸ் மற்றும் ஓடிசியஸ் இருவரையும் அக்கிலிஸ் இடம் சென்று அவன் உதவியைப் பெற்று வருமாறு ஆலோசனைக் கூட்டம் முடிவு செய்தது. இருப்பினும் அக்கிலிஸ் தங்களுக்குச் சாதகமாக போர் புரிய வருவானா என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருந்தது.

தன்னை அவமானப்படுத்தி அனுப்பிய அகெம்னனுக்கு ஆதரவாகப் போர் புரிய  அக்கிலிஸ் திட்டவட்டமாக  மறுத்துவிட்டான். வந்திருந்த கிரேக்கர்களின் மாபெரும் தளபதிகளிடம் அதை மிகுந்த மரியாதையுடன் கூறி அவர்களை அனுப்பி வைத்தான். இருப்பினும் கிரேக்கப்படை டிரோஜன்களால் தோற்கடிக்கப் படுவதை அவன் விரும்பவில்லை. தனது கப்பலிலிருந்தே போரின் நிலைமையை தீவிரமாகக் கவனிக்கவேண்டும் என்று அக்கிலிஸ் தீர்மானித்தான்.

அடுத்து நடைபெற்ற  போர்களிலும் டிரோஜன்கள் கை ஓங்கியே இருந்தது.

கிரேக்க வீரர்கள் டயாமிடிஸ்  ஓடிசியஸ் இருவரும் ஹெக்டரின் தாக்குதலில் படு காயமுற்றார்கள்.  மிகவும் வீராவேசத்துடன் அகெம்னன் போர்க்களத்தில் நுழைந்தான். அவனது போர் முறை நல்ல பலனை அளித்தது. முன்னேறிவந்த டிரோஜன்கள் அகெம்னனுக்கு ஈடு கொடுக்க முடியாமல்  பின்வாங்கத் துவங்கினர். ஆனால் ஹெக்டர் வந்து நேரடியாக அகெம்னனைத் தாக்கி அவனைப் படுகாயமடையச் செய்தான். மற்ற வீரர்கள் அகெம்னனை அழைத்துக்கொண்டு தங்கள் பாதுகாப்பு அரணுக்குள் வந்தார்கள்.  

அடுத்து அடுத்து கிரேக்கப்படை பின்வாங்கி தோல்வியின் பாதையில் போவதைப் பார்த்த அக்கிலிஸின் மனதில் கிரேக்கர்பால் இறக்கம் உண்டாயிற்று. இருப்பினும் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகத்  தன் உயிர் நண்பன்  பெட்ரோகுலசை கிரேக்கத் தளபதிகளைச் சந்தித்து வரும்படி அனுப்பினான்.

பெட்ரோகுலஸ் கிரேக்கப் படையின் மூத்த  தளபதியும் தற்போது மரண காயத்தில் துடித்துக் கொண்டிருப்பவருமான நெஸ்டரைச்  சந்தித்தான். நெஸ்டர் அவனுக்கு குரு போன்றவர்.  அவரிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் இருந்த நிலையைக் கண்டு அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் பெட்ரோகுலசிடம் திவிரமாக இருந்தது. ஆனால் அவர் கேட்ட யாசகம் அவனை நிலை குலையச் செய்தது.  

“ அக்கிலிஸ் கிரேக்கர்களுக்கு ஆதரவாக வர மறுப்பதில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. அதனால் மிகச் சிறந்த வீரனும் அக்கிலிஸின் நண்பனுமான நீ எங்களுக்கு ஆதரவாகப் போரிடவேண்டும்! அதுவும் அக்கிலிஸின் போர் உடையைப்போட்டுக் கொண்டு நீ எங்களுடன் போர் புரிந்தால் அதுவே எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். நான் உன்னிடம் யாசித்துக் கேட்கிறேன் எனக்காக நீ இந்த உதவியைச் செய்வாயா?  என்று நெஸ்டர்  கேட்டதும் பெட்ரோகுலஸ் திக்பிரமை அடைந்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

(தொடரும்)

  

திரை ரசனை வாழ்க்கை 21 – எஸ் வி வேணுகோபாலன்

Lal Singh Chaddha Tamil Movie Review | லால் சிங் சத்தா தமிழ் திரைப்பட விமர்சனம் | Aamir Khan | Naga Chaitanya | Lal Singh Chaddha Movie Review | Lal Singh Chaddha Review | Lal
லால் சிங் சத்தா 
யல் மொழிப் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. அதிலும் இந்திப் படங்கள் மிகவும் குறைவு. மிகவும் தற்செயலாகப் பார்த்த ஒன்று, அதைப் பேச வைக்கிறது. இத்தனைக்கும் அது ஆங்கிலப் படத்தின் அதிகார பூர்வ மறு உருவாக்கம், கொஞ்சமும் பிசிராது விசுவாசத்தோடு மூலக்கதையை ஒட்டியே எழுதப்பட்ட திரைக்கதை என்று சொல்லப்படுகிறது.
இந்த உலகம் சாமர்த்தியசாலிகள், நடுத்தரமானவர்கள், சராசரி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. ஏதுமறியாதவர்களாக உள்ளவர்களுக்கும் தான். படத்தின் ஒற்றை வரி இதுதான். ஆனால், அப்படியாகப் பட்டவர்களது வாழ்க்கையின் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், துயரங்களும் அடர்த்தியானவை. அவர்களாலேயே அதனளவில் அர்த்தப்படுத்திப் புரிந்து கொள்வதை வெளிப்படுத்த இயலாத அளவு அடர்த்தியானவை. லால் சிங் சத்தா இந்த உணர்வை மிகச் செம்மையாக வழங்கி இருக்கிறது.
எங்கோ பயணம் செய்ய ரயிலேறும் ஒருவன், தன்னெதிர் இருக்கையில் இருக்கும் பெண்மணி முகத்தைச் சுளிக்கும்படியும், கேலியாக நோக்கும்படியுமான சேட்டைகளோடு அமர்ந்து மடிமீது இனிப்புக் கடை அட்டைப்பெட்டி எடுத்துவைத்துக் கொண்டு மெல்லத் திறந்து அதனுள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பானி பூரிகளில் ஒன்றை எடுத்து, கவனத்தோடு குனிந்து பையிலிருந்து அதில் ஊற்றவேண்டிய ரசத்தை ஊற்றி அப்படியே வாயில் போட்டு நொறுக்கிச் சுவைத்துப் புருவம் உயர்த்தி நாக்கைச் சப்புக்கொட்டி ரசிக்கும் காட்சியில் தொடங்குகிறது படம்.  அந்தப் பெண்மணியின் ஷூவைப் பாராட்டும் அவன், நல்ல காலணி மனிதர்களின் குணத்தையும் பிரதிபலிக்கும் என்று தனது அன்னை சொல்வாள் என்கிறான். அவள் சலனமே இன்றி அழுக்கும் சகதியுமாக நைந்து தோன்றும் அவனது ஷூக்களை உற்றுப் பார்க்கிறாள். ‘அது வேறு கதை, ஆனால் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் ஜோடி ஷூக்கள் இவை’ என்கிறான்.
பரிகாசப் புன்னகையோடு அவன் கதையை அந்த எதிரிருக்கை பெண்மணி கேட்கத் தொடங்குகிறாள்.  கொஞ்சம் கொஞ்சமாக விரியும் அவன் கதையை இப்போது எதிர் வரிசையில், பின் வரிசையில், பக்கவாட்டில் என பயணிகள் பலரும் நெருக்கியடித்து அமர்ந்து கேட்கத் தொடங்குகின்றனர். ஒருவர், சும்மா கதை விடாதே என்று நம்பிக்கையின்றி நகர்ந்து போய்விடுகிறார். ஆனால், கதை நகர நகர சுற்றி இருப்போர் நெருக்கமாக அவனது கதையில் ஐக்கியமாகின்றனர், அவனோடு சேர்ந்து சிரிக்கின்றனர், சோக கட்டத்தை அவர்களும் சோகத்தோடு கடக்கின்றனர். அவனது துயரம் மிகுந்த நிகழ்வைக் கேட்கையில் விம்முகிறார் ஒரு முதியவர், அவருடைய மனைவி உடைந்து அழுதே விடுகிறார்.
மிக நீண்ட நேரக் கதை சொல்லல் அது. தனிப்பட்ட மனிதனின் கதையாக மட்டுமல்ல, அவனுக்கு நெருக்கமான பாத்திரங்களின் வாழ்க்கையும் இணையாகச் சொல்லப்படுகிறது. காலண்டர், டயரி, கடிகாரம் இவற்றுக்குப் பதிலாக தேசத்தின் வெவ்வேறு நிகழ்வுகளின் வழியாக அந்தந்த கால கட்டங்கள் அடையாளப்படுத்தப் படுகின்றன.  அவை நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்களோடு!
சுட்டியான குழந்தை இல்லை கதாநாயகன்.  சொந்தக் கால் நம்பாது சார்ந்து நிற்கவே பழகி இருப்பவன். பள்ளி தலைமை ஆசிரியர் படு மோசமான முறையில் அனுமதி மறுக்கிறார். ஆனால், அவனது தாயின் போராட்டத்தைக் கண்டு அசந்துபோய் பள்ளிக்கு அழைத்துக் கொள்கிறார்.  அவனோ நடக்க இயலாத குழந்தைகள் அணியும் முழங்கால் வரை இறுகப் பற்றிக்கொள்ளும் பிணைப்புகள் உள்ள காலணிகள் அணிந்து செல்கிறான் பள்ளிக்கு. வித்தியாசமாகப் பார்க்கும் சக மாணவர்கள் மத்தியில் அன்போடு கைப்பற்றும் ரூபா எனும் தோழி வாய்க்கிறாள். கால்களுக்கு அவனாக இட்டுக்கொண்ட விலங்குகள் அவளது உந்துதலில் ஒரு கட்டத்தில் உடைந்து தெறித்து அவனால் மிக வேகமாக ஓட முடியும் என்ற உண்மையை அவனுக்கே புரிய வைக்கின்றன. பின் எந்தச் சிறப்பு முயற்சியோ பயிற்சியோ இன்றி, ஓடு என்று ரூபா குரல் காதில் கேட்டாலே இலகுவாக ஓடி இலக்கைத் தாண்டுபவனாக, வெற்றி பெற்றது கூடப் புரியாமல் இலக்கைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருப்பவனாக இருக்கிறான் அவன்.
பண்ணையில் சளைக்காது பயிரிட்டு உழைத்துக் கொண்டிருக்கும் தாய் அவனை இயக்கிக் கொண்டே இருக்க, பரம்பரை வேலையாக இராணுவத்திலும் சேர்ந்து விடுகிறான் நாயகன். அங்கும் பொதுவான புறக்கணிப்பைச் சுவைக்கும் அவனுக்கு ஆந்திராவிலிருந்து வரும் ஒரு வெகுளி வாலிபன் பாலா அன்பைப் பரவ விடுகிறான். திருமணம் முடித்துக் கொண்டு திரும்பும் பாலா, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போது தங்களது பரம்பரை வர்த்தகத்தில் இவனையும் பங்குதாரர் ஆக்கிக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டாடுகிறான். ஆனால், கார்கில் போரில் பாலா கொல்லப்பட்டு விடுகிறான்.  கண்ணெதிரே நண்பனின் இறுதி மூச்சை உணரும் நாயகன் சத்தா, போரில் அடிபட்ட மற்றவர்களை சிகிச்சைக்காக மீட்டெடுக்கும் வேகத்தில் பாகிஸ்தான் போர் வீரன் ஒருவனையும் காக்கிறான். பலரது உயிரைக் காத்தவன் என்ற விருது, குடியரசுத் தலைவரிடமிருந்து  பெறுகிறான்.
குடிகாரக் கணவனுக்குக் கேட்கும்போதெல்லாம் கொடுக்கக் காசு இல்லாத கொடுமையால் அவன் கையாலேயே அடி வாங்கிக் கொலையுண்டு போகும் அம்மாவின் மரணத்தை அருகே பார்க்கும் சிறுமி ரூபா, காசு தான் உலகில் வாழ்வதற்கான முதல் தகுதி என்று மனத்தில் வாங்கிக் கொண்டுவிடுகிறாள். அதனாலேயே பருவ வயதில், மின்னுவதெல்லாம் பொன் என்ற கானல் வெளியில் காணாமல் போய்விடுகிறாள். ஆனால் நாயகனின் இதயம் தனது  அம்மாவுக்காகத் துடிப்பது ஒரு முறை எனில், அடுத்தடுத்த முறை ரூபாவுக்காகத் துடித்தபடி இருக்கிறது.
இராணுவ சகா பாலா சொன்னபடி ஆந்திரா சென்று அவனது குடும்ப வர்த்தகத்தைத் தொடர முயலும் நாயகனிடம், கணவனது மறைவின் அதிர்ச்சியில் இருக்கும் திருமதி பாலா தனக்கு அந்தத் தொழில் பற்றி யாதொன்றும் அனுபவமில்லை என்று சொல்லிவிடுகிறாள். அந்தச் சிற்றூரில் பாலாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பஞ்சாப் திரும்பும் சத்தா, தனது சிற்றூரில் அதே வர்த்தகத்தை எந்த முன் அனுபவமும் இன்றித் தானே தொடங்கி விடுகிறான். பனியன், ஜட்டி தொழிற்சாலையில் பண்டல்கள் குவிகின்றன. கடை விரித்தும் வாங்குவார் இல்லை. பாகிஸ்தான் போர் வீரனின் உதவியோடு அதிரடி விற்பனை தொடங்கி கொள்ளை லாபம் கிடைக்க அதில் சம பங்கை, பாலாவின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்க அவள் மூர்ச்சை அடைந்து விடுகிறாள் தாங்க மாட்டாது!
புற்று நோயால் மரிக்கிறாள் தாய். ‘என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே’ என்ற அவனது கெஞ்சுதலுக்கு வாழ்க்கையின் உண்மையை எடுத்துச் சொல்ல மட்டுமே முடிகிறது அவளுக்கு.
காலம் ரூபாவை அவன் சிற்றூருக்கு வரவழைக்கிறது. அப்போதும் விலகியே அமர்ந்திருப்பவளிடம் எந்த சாதுரியமும் அற்ற தனது இதயத்திற்கும் காதல் உணர்ச்சி உண்டு என்கிறான் சத்தா. அவள் மறுபேச்சின்றித் தன்னை அவனுக்கு வழங்கித் தானும் அவனது அன்பை ஏற்றுக் கொண்டுவிடுகிறாள். அதே காலம் அவளை அடுத்த சில தினங்களில் ஒன்றின் விடியலில் காவல் துறை தேடி வந்து கைது செய்து அழைத்துப் போவதையும் காட்டுகிறது.
ரூபாவை இழந்த சத்தாவின் உள்ளம் அவனது கால்களை வேகமாக இயக்கி தேசம் முழுக்க ஓடவிடுகிறது.  தான் சிக்கிய மாயப் பொறியில் இருந்து குறைந்தபட்ச தண்டனையோடு வெளிப்படும் ரூபா, அவனை சந்திக்க விடுக்கும் அழைப்பு கிட்டியதும் அவளுக்கு மிகவும் பிடித்தமான பானி பூரி சகிதம் அவன் ரயிலில் இடம் பிடிக்கும் இடத்தில் பின் கதை வந்து நிறைவு பெறுகிறது. வேகவேகமாக விடைபெற்று இறங்கியோடும் சத்தா, ரூபாவை மட்டும் கண்டடைவதில்லை, அவள் பெற்றெடுத்த தங்கள் மகனையும் காணப் பெறுகிறான். ‘என்னை மணந்து கொள்வாயா’ என்ற அவனது கேள்வியை, இந்த முறை ரூபா கேட்கிறாள் அவனை நோக்கி.  ஊர் திரும்புகின்றனர் மூவரும் கொண்டாட்டமாக. ஆனால், நோயொன்றின் தாக்குதலில் ரூபா அவனை நிரந்தரமாகப் பிரிந்துவிடுகிறாள்.
தன்னுடைய மகன் தன்னைப் போல் இராது சுட்டியாக இருப்பதன் பெருமையில் இழப்புகளின் வலியைத் துடைத்துக் கொண்டு, தாய் தன்னை அனுப்பிய பள்ளிக்கு அவனை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறான் மீதி வாழ்க்கைக்கு லால் சிங் சத்தா.
அபத்த மிக்க தருணங்களின் நகைச்சுவைக்குப் பஞ்சமற்ற படம். ஷாருக் கான் தனது நடன அசைவில் இருந்துதான் கற்றுக் கொண்டு புகழுக்கு உரியவரானார் என்று நாயகன் சொல்லிக்கொள்வது அதில் ஒன்று. தனது குறைபாடு என்று சமூகம் கற்பிக்கும் உண்மையை அறிந்தவராகவே இருக்கிறார் லால் சிங் சத்தா.  ஆனால் தான் எல்லோருக்கும் உண்மையாகவே இருந்துவிட்டுப் போவதில் யாதொரு நஷ்டமும் இல்லை என்று உணர வைக்கிறார்.
இந்திரா காந்தி காலத்தின் நெருக்கடி நிலை, பொற்கோவில் உள்ளே இராணுவம் நுழைந்தது, இந்திரா கொலையுண்டது, ராஜீவ் பிரதமரானது, மண்டல் கமிஷன், அத்வானியின் ரத யாத்திரை, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்….என்று தேசத்தின் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளின் வரிசை சத்தாவின் வாழ்க்கைக் குறிப்புகளின் பகுதியாகிறது. மதவெறி, கலவரம் இவற்றை ஒரு கொள்ளை நோயாகவே அவனது அன்னை அவனுக்கு உணர்த்தி இருக்கிறாள். அந்த வகைப்படுத்தலை அவன் பாகிஸ்தான் வீரனுக்குக் கையளிக்க, தாஜ் ஓட்டல் குண்டு வெடிப்பின் காட்சியில் தனக்குள் கொழுந்துவிட்டு எரிந்த வெறுப்புணர்ச்சியை அவன் அணைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு அன்பின் பாடம் நடத்தச் சொந்த நாட்டிற்கு இடம் பெயர்கிற காட்சி முக்கியமானது.
கதையின் முக்கிய பாத்திரமாகவே தன்னை உருக்கொள்ள வைப்பதில் அமீர் கான் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ரயில் பயணத்தில், ரூபாவை சந்திக்கும் தருணங்களில், சக வீரன் பாலாவுடன் கழிக்கும் பொழுதுகளில், மெனக்கெட்டுக் கருமமே கண்ணாகத் தையல் எந்திரத்தில் உழைக்கும் காட்சியில்…என்று நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.  ஆனால், மிகை நடிப்பு செய்துவிட்டார் என்ற விமர்சனமும் வந்துள்ளது. ஆங்கில மூலப்படத்தை முன்னமே ரசித்துப் பார்த்தேன் என்று சொன்ன எங்கள் மகன் நந்தாவுக்கும் இதே கருத்து இருக்கிறது. அவனது அலசல் அசர வைக்கிறது.
தாய் பாத்திரத்தில் மோனா  சிங், டிராக்டர் விவசாயியாக அருமையாகத் தோன்றுகிறார். ரூபாவாக வரும் கரீனா கபூர், இளமையின் பொலிவிலும், நோயின் பரிதவிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இளவயது லால் சிங் பாத்திரத்தில் கலக்கி இருக்கிறான் சிறுவன் ரோஹான் சிங்! பாலாவாக வரும் நாக சைதன்யா, பாகிஸ்தான் வீரராக வரும் மானவ் விஜ், எதிர் இருக்கை பெண்மணி ஆர்யா சர்மா, ரயிலில் நெகிழ வைக்கும் மூத்த தம்பதியினராக  அருண் பாலி, காமினி கௌஷல் என்று பாராட்டுக்குரியவர்கள் பலரது பங்களிப்பும் சொல்ல  வேண்டியது.
இந்தி திரைக்கதை அதுல் குல்கர்னி, இயக்கம் அத்வைத் சந்தன். சிறப்பான ஒளிப்பதிவு சத்யஜித் பாண்டே, கதைப்போக்கிற்கான இசை தானுஜ் திகு.
படத்தின் நீளம் (159 நிமிடங்கள்) சற்று அதிகம். ரூபாவின் வாழ்க்கைச் சூழல் யதார்த்தமானது. ஆனால் பணமே குறியாக மாறுவதற்காகச் சித்தரிக்கப்படும் காரணம் ஏற்றுக் கொள்ள சிரமமானது. தற்செயலாகவே அடுத்தடுத்த நிகழ்வுகள் நாயகனை வழி நடத்திச் செல்வது மூலக்கதையின் நேரடித் தழுவல் தான். தர்க்க பூர்வமான கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் கிடைக்காது, படத்தில்.
இருந்தாலும், ஐ க்யூ வைக் கணக்கிட்டு மனிதர்களை அறிவினால் அளக்கும் உலகில், அன்பையும் மெல்லுணர்வையும் கல்மிஷம் அற்ற பார்வையும் கொண்டு மானுடம் தழைக்க முடியும் என்ற இதமான காற்று வீசுகிறது படம் நெடுக. அந்த வகையில் லால் சிங் சத்தா உள்ளத்தைத் தொட்டு விடுகிறார்.
*************

குதூகலம் தரும் குழந்தைப் பாடல்கள் – சதுர்புஜன்

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
  25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
  26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
  27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
  28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
  29. மழையே வா ! – செப்டம்பர் 2021
  30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
  31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
  32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
  33. தமிழ் ! – நவம்பர் 2021
  34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
  35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
  36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
  37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
  38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
  39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
  40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
  41. என்ன மரம் ! – மார்ச் 2022
  42. சைக்கிள் ! – மார்ச் 2022
  43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
  44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
  45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
  46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
  47. மழை வருது ! – ஜூன் 2022
  48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
  49. என் சித்திரம் ! – ஜூலை 2022
  50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
  51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
  52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022
  53. பூனையாரே ! – செப்டம்பர் 2022
  54. எதைச் செய்தாலும் ! – செப்டம்பர் 2022
  55. கடைக்குப் போகலாமா ? – அக்டோபர் 2022
  56. பூ ! பூ ! பூ ! – அக்டோபர் 2022
  57. மிருகக்காட்சி சாலை ! – நவம்பர் 2022
  58. மாமா ஸ்கூட்டர் ! – நவம்பர் 2022
  59. மரங்கொத்தி ! – டிசம்பர் 2022
  60. காய் வாங்கலையோ ? – டிசம்பர் 2022

 

            ************************************************************

 

  1. டாக்டர் மாமா !

How to Draw a Doctor - Easy Drawing Art

டாக்டர் மாமா வருகிறார் –  என்

கண்ணைப் பார்த்து !

வெள்ளைக் கோட்டு போட்டு அவரும் –

வணக்கம்  எனக்கு சொல்கிறார் !

 

கையில் உள்ள ஸ்டெத்தஸ்கோப்பால் –

தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார் !

நாடி பிடித்துப் பார்க்கிறார் ! – அவர்

நாக்கை நீட்டு என்கிறார் !

 

வயிற்றை அமுக்கிப் பார்க்கிறார் !

வலிக்குதா என கேட்கிறார் !

வேடிக்கையாக கதைகள் சொல்லி – என்னை

சிரிக்கச் சிரிக்க வைக்கிறார் !

 

தித்திப்பாக மருந்து ஒன்றை –

தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார் !

ஊசியெல்லாம் வேண்டாமென்று –

முதுகைத் தட்டி விடுகிறார் !

 

இருமினாலும் தும்மினாலும் –

அம்மா அழைத்துப் போகிறார் !

டாக்டர் மாமா தொட்டுப் பார்த்தால் –

அனைத்தும் பறந்து போகுமே !

 

டாக்டர் மாமா வருகிறார் ! – என்

கண்ணைப் பார்த்து சிரிக்கிறார் !

வெள்ளைக் கோட்டு போட்டு அவரும்

வணக்கம் எனக்கு சொல்கிறார் !

 

 

    ************************************************************

 

  1. கிரிக்கெட் !

Is India's Cricket Team an Unstoppable Force?

 

 

 

 

 

பேட்டும் பந்தும் எடுத்து வா !

கிரிக்கெட் ஆடப் போயிடலாம் !

பாலு, பாஸ்கர், பழனிவேலு –

அத்தனை பேரும் ஆடிடுவோம் !

 

மைதானத்தில் நமக்கென்று –

இடத்தைத் தேடிப் பிடித்திடுவோம் !

இந்தப் பக்கம் அந்தப் பக்கம் –

ஸ்டம்ப்பை நன்றாய் நட்டிடுவோம் !

 

பாலு பந்தைப் போட்டிடுவான் –நான்

ஃபோரும் சிக்சரும் அடித்திடுவேன் !

ரன்கள் அடித்துக் குவித்திடுவேன் !

அவுட்டாகாமல் ஆடிடுவேன் !

 

சில நாள் வெற்றி எங்களுக்கு !

தோல்வியும் சிலநாள் வந்திடுமே !

விடாமல் முயற்சி செய்திடுவோம் !

வெற்றியும் தோல்வியும் சகஜம்தான் !

 

கிரிக்கெட் என்றால் குஷிதானே !

விளையாட்டென்றால் வேடிக்கை !

தினமும் நாங்கள் ஆடிடுவோம் !

ஜாலியாகவே கொண்டாடிடுவோம் !

 

     ********************************************************************************

 

     

 

முதல் பரிசு பெற்ற சிறுகதை – சோளக்காட்டு பொம்மை – பொன். ஆனந்தன் 

( படம் வரைந்தவர்: கிறிஸ்டி நல்லரெத்னம் ,ஆஸ்திரேலியா )

 

பிரபா ராஜன் – குவிகம் சிறுகதைப் போட்டி முதல் பரிசு பெற்ற கதை  

   சோளக்காட்டு பொம்மை

மும்மாரியூர் ஒரு மலையோர சின்ன கிராமம். மொத்தமாய் சில நூறு குடும்பங்களுக்கு மிகாமல் வாழும் இந்த ஊர், மரங்களும் தோட்டங்களும் நிறைந்த இயற்கையின் சின்ன குழந்தை. ஆடி மழைக்கு நிரம்பி வழியும் அம்மன் கோவில் குளமும், ஊரின் நடுவே நாயகமாய் வீற்றிருக்கும் முத்தாயம்மன் கோவிலும், அதனை யொட்டிய கம்பீரமாய் பரந்து விரிந்து நிமிர்ந்து நிற்கும் அரச மரமும், பச்சை பசேல் தோட்டங்களும், வளைந்தோடும் வாய்க்காலும், மும்மாரியூரின் சிறப்பு. ஒரு காலத்தில் மும்மாரி மழை பெய்து விவசாயத்தில் செழித்திருந்தது இந்த ஊர். அதனால் தான் மும்மாரியூர் என்று அழைக்கப்படுவதாக பெரிய தண்டக்கார தாதா அடிக்கடி சொல்வதுண்டு.

ஊரின் மரியாதையான நான்கு, ஐந்து குடும்பங்களில் மயிலுக்கவுண்டர் குடும்பமும் ஒன்று. மயிலுக்கவுண்டரின் அப்பா ஒரு மணியக்காரர், பிரிட்டிஷ் இந்தியாவில் மரியாதையான பதவியான ‘மணியக்காரர்’ ஆக இருந்தவர், ஒரு காலத்தில் பணக்கார குடும்பம். தற்போது விவசாயத்தை நம்பி வாழும் நடுத்தரமான குடும்பம்.

மயிலுக்கவுண்டரின் தோட்டத்திற்கு அதிர்ஷ்டமே அந்த கிணறு தான். எப்போதும் வற்றாமல் நிரம்பி அதிசயிக்கும். அதுவே கூட மற்றவர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது. அவர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவதில்லை. காரணம் இதெல்லாம் தன் செல்ல மகள் வளர்மதி பிறந்த அதிர்ஷ்டம் தான் என்பார். ஆனால் அவர் மனைவி சின்னமணியோ தான் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்த யோகம் தான் என்பார். மொத்தத்தில் உயர்ந்த உழைப்பும், ஆண்டவன் அருளும், அந்த குடும்பத்தை நன்றாகவே வைத்திருந்தது..

இதெல்லாம் ஒரு காலத்தில்…….

ஆனால் இன்றைய நிலையோ வேறு.

கரும்பும், சோளமும், வாழையுமாய் பயிர் செய்யப்பட்டு செழிப்பாய் இருந்த கிராமம், இப்போதெல்லாம் விவசாயப் பரப்பு குறைந்து போய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பச்சைப்போர்வைப் போத்திக்கொண்டிருக்கிறது. மற்ற நிலமெல்லாம் மெல்ல மெல்ல சிவந்து போய் வெறும் மண்ணாகி, விற்பனைக்குக் காத்திருக்கிறது.

“மரங்களை வெட்டி, வெட்டி மழை இல்லாமே செய்யறாங்களே பாவிங்க, இது நம்ம குழந்தையை நாமே கொல்றதுக்கு சமமில்லையா?” என்று அடிக்கடி அங்களாய்த்துக்கொள்வார் மயிலுக்கவுண்டர். மழையில்லாமல் வறண்டு போனது ஊரின் அம்மன் கோவில் குளம். எப்போதும் வற்றாமல் இருந்த அந்த மயிலுக் கவுண்டரின் கிணறும் வற்றத்தொடங்கியது. அக்கம் பக்கம் பல குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமே அந்த கிணறு தான்.

உறவுக்கார பணக்காரரான பொன்னுக்கவுண்டரிடம் ஒரு லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி போன வருடந்தான் கிணற்றை ஆழப்படுத்தினார்.

* * * *

காலங்கள் கறைந்தது….  நாட்கள் நகர்ந்தது…..

வளர்மதி, பெயருக்கேற்ப வளர்ந்து இப்போது பெளர்ணமி ஆகியிருந்தாள். கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி- விவசாயம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. படிப்பதிலும் சுட்டியாகவே இருந்தாள். ஊரை விட்டு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. இடை இடையே விடுமுறைக்கு மட்டுமே வந்து போக முடிகிறது.

வளர்மதியை போலவே கிராமமும், கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டே இருந்தது.

* * * *

திடீரென்று ஒரு நாள் வளர்மதியின் ஹாஸ்டலுக்கு ஒரு போன் வந்தது.

’’அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம், உடனே வரனுமாம்” -என்றார் ஹாஸ்டல் வார்டன் மேடம்.

பதறி கலங்கிய கண்களோடு பயந்து போய், “என்னவாம் மேடம்” என்றாள் வளர்மதி.

“மதி வேற எதுவும் டீடைலா சொல்லலைம்மா…. ஒன்னும் பயப்படாதே.. நீ உடனே கிளம்பும்மா” என்று அனுப்பி வைத்தார் வார்டன்.

* * * *

அப்பாவுக்கு ஒன்னும் ஆகியிருக்ககூடாது,…..என எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

அப்பாவின் அன்பை முழுமையாய் அருவடை செய்தவள், அன்புக்கு அம்மா என்றால், பாசத்துக்கு அப்பா என வளர்தவள் அவள்.

மயிலுக்கவுண்டர் கடமைக்காகத்தான் கண்டிப்பானவர் தவிர பாசமே அவருக்கு பிரதானம்.

வீட்டிற்குள் நுழையும் வரை, பல விதமான சிந்தனைகள், படபடக்கும் இதயம், பயம் கலந்த எதிர்மறை எண்ணங்கள், என்று பல்வேறு நிலைகளில், வளர்மதியின் மனம் அங்கும் இங்குமாய் அல்லாடியது.

ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தாள்.

* * * *

வளர்மதியை பார்த்தவுடன் அம்மா கண் கலங்கி, பீறிட்டு வந்த அழுகையை அடக்கி வெளியே காட்டாமல் நின்றாள்.

“அம்மா….. அப்பாவுக்கு என்னாச்சும்மா………?

“அப்பாவுக்கு ஒன்னுமில்லை நல்லாதான் இருக்காரு நீ ஒன்னும் பயப்படாதே” என்று முடிப்பதற்குள் கண்களில் தேங்கிய கண்ணீரை தடுக்க முடியவில்லை, தெறித்து விழுந்தது.

‘’அம்மா….. அப்பா எங்கம்மா” என சுற்றும் முற்றுமாய் தேடத் தொடங்கினாள். வழக்கமாக அப்பா உறங்கும் அறையில் அவர் இல்லை,

மற்றொரு அறையில்…. சுந்தரம் மாமா, சுசிலா அத்தை, அப்பாவின் நண்பர் சீனு வாத்தியார், என ஒரு பெரிய கூட்டமே அப்பாவை சுற்றி அமர்ந்து இருந்தனர்.

“அப்பா என்னாச்சுப்பா…” -என்றவாறே அருகே சென்றாள், கண்களில் தேங்கிய கண்ணீர் அப்பாவின் மார்பினில் மீது விழுந்தது.

அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை, எதோ சொல்ல வந்தார், முடியவில்லை. ஆனால் அவர் கண்கள் மட்டும் பேசியது கண்ணீரால்.

“வளர்மதி, அப்பாவால பேச முடியாதும்மா” என்ற சீனு வாத்தியார், மெல்ல வளர்மதியின் தலையை தொட்டு தூக்கினார்.

“நல்லாத்தான் இருந்தாரு திடீர்னு என்னவோ மாதிரி இருக்குன்னு சொன்னவரு அப்படியே சாஞ்சுட்டாரு, பக்கத்து டவுன் டாக்டர் கிட்டே கூட்டிட்டு போனோம், டாக்டர் பாத்துட்டு மைல்டு ஸ்ட்ரோக் வந்திருக்குன்னு சொன்னாரு, உயிருக்கு ஆபத்தில்லையாம்,… ஆனா என்ன இப்போதைக்கு ஒரு பக்கம் காலும் கையும்——–” என இழுத்தவர்,

“காலப்போக்கில் சரியான மருந்து மாத்திரைல சரி பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரும்மா.”

மெளனமாய் அப்பாவைப் பார்த்தாள்.

மயிலுக்கவுண்டரின் கண்களும் எதோ ஒரு ஏக்கத்தோடு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தது அது உன்னை எப்படிம்மா கரை சேர்ப்பேன்னு சொல்லாமல் சொல்லியது கண்ணீரால்.

* * * *

காலம் மெல்ல மெல்ல கரைந்தது. ஒரு மாதம் ஓடிப்போனது, அப்பாவின் நிலை மாத்திரையும் மருந்துமாய் அப்படியே இருந்தது. ஓடித்திரிந்த அப்பாவின் வாழ்க்கை அந்த அறையிலேயே முடங்கிப்போனது.

வளர்மதியும் கல்லூரிக்கு திரும்ப போகவில்லை. எல்லோரும் கல்லூரிக்குப் போகச்சொல்லி வற்புறுத்திய போதும் அப்பாவின் அருகிலேயே இருந்தாள்.

தூரத்தில் ஒரு மாட்டுவண்டி, அவர்களது வீட்டை நோக்கி வந்தது. உள்ளூர் பணக்காரர் பொன்னுக்கவுண்டர், அவரது மகனும் இறங்கி வருவதை அம்மா கவலையோடு கவனித்தாள்.

“வாங்கண்ணா….அண்ணி நல்லாருக்கா….?” — அம்மா.

“வர்றேம்மா அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்கா, மச்சான் எப்படிம்மா இருக்காரு” என்றவாறே அம்மாவோடு உள்ளே சென்றார்.

பத்து நிமிடங்கள், அம்மாவும் அவர்களும், பேசுவதை அப்பாவால் கவனிக்கமட்டுமே முடிந்தது. அம்மாவின் கெஞ்சலும், அவர்களின் கண்டிப்பான பேச்சையும் அவர் பார்வையில் தவறவில்லை. வெளியே வந்தனர்.

“அதாம்மா, நான் சொன்னமாதிரி தான், யோசிச்சு செய். உன்னோட நிலைமையும் நல்லா புரியுது, கஷ்டம் தான். ஆனா வாங்கின பணத்துக்கும் ஒரு கெடு வேணும்ல, மச்சான் நல்லாருந்தா இந்நேரம் நா படியேறி வருவனா, வெள்ளாமைக்கு வேணுங்கறது எல்லாந்தான் இருக்கு, எடுத்து செய்ய ஒரு சிங்ககுட்டி இல்லையே தாயி, இதோ நிக்குதே பொண்ணு, ஒரு ஆம்பிளயா இருந்தாலாவது வேட்டிய மடிச்சு கட்டி, சிங்கம் மாதிரி கழனியிலே இறங்கியிருப்பானே…… பயிறும் பாதிக்கும் மேல வந்திருக்கும், பணம் திரும்ப வருங்கிற நம்பிக்கையும் இருந்திருக்கும். உன்னோட நேரம் அதுவும் பொட்டப் புள்ளையா போச்சு.”

“எப்படியோ, கடனோ, உடனோ, வித்தோ, கித்தோ…. பணத்தை குடுத்திடும்மா” –

கண்களில் தேங்கிய நீரால் தூரத்தில் மாட்டு வண்டி மறைவதைக் கூட பார்க்க முடியவில்லை வளர்மதியால். உறைந்து போனாள் சின்னமணி, திரும்பி மகளைப் பாத்தாள்.

“வெண்ணை திரண்டு வர்ற நேரம், பானை உடைஞ்ச கதையா, இந்த வருஷம் வெள்ளாமை முடிஞ்சா மொத்த கடனையும் கட்டிடுவேன்னு இந்த மனுசன் அடிக்கடி சொல்லுமே, இப்படி ஆகும்னு யாரு கண்டா?” என்று புலம்பிக்கொண்டே சென்றாள்.

பெரியவரின் வார்த்தைகள் பெண்மையின் பெருமை இந்த பூமியில் இன்னும் மதிக்கப்படவில்லை என்பதை தெளிவாக்கியது.

* * * *

மறுநாள்….

வளர்மதி தன் தோட்டத்தில் காலார நடை நடந்தாள். நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அவளும் ஒரு விளையாட்டு விவசாயி தான்.

வரப்பு வெளிகளில் காலார நடக்கும் போது என்ன சுகம். எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும், செயற்கையாக செய்ய முடியாத இளம் தளிர், வெண் மேகம், நெடிய நீண்ட வானம், வெள்ளை நிலா, வாய்க்காலின் இரு புறகரை, துள்ளும் சின்ன மீன்கள்,….. கிராமத்தில் தான் எத்தனை அழகு.

கோடி பணம், தங்கம், வைரம் என எதைப் புதைத்து வைத்தாலும் மாற்றம் தராமல், சின்ன விதைக்கு வாழ்க்கை தரும் இந்த மண்…….. மனித குலத்தின் ஆதாரம்.

சின்ன வயது நியாபகங்கள் நெஞ்சில் உலா வந்தது. அப்பாவோடு வந்து ஓடி ஆடி விளையாட்டு விவசாயம் செய்த அனுபவம்.

’மருது’ எனும் தோட்ட ஆள் கட்டி வைத்த சோளக்காட்டு பொம்மை. தலையில் சட்டி, அதில் பயமுறுத்தும் மீசை ,கரிக்கட்டை கண்கள், குச்சிக்கைகால்கள், வைக்கோல் உடம்போடு, குண்டுவயிரோடு, ஒய்யாரமாய் நிற்கும் அந்த சோளக்காட்டு பொம்மை.

கொஞ்ச நாள் அந்த பக்கம் போகவே பயம், அதை அம்மா கூட சாப்பிட மறுக்கும் போது சாதகமாய் பயன்படுத்தியதுண்டு.

அதே பொம்மை, உடைகள் வேறுபட்டு, அங்கேயே இருந்தது.

சோளக்கொல்லை பொம்மை - சிறுகதை | solakkollai pommaiசோளக்காட்டு பொம்மையை உற்றுப் பார்த்தாள், அதுவும் அவளையே பார்த்தது. காக்காவையும், குருவியையும், விரட்ட வைக்கும் ஒரு பொம்மைக்கு கூட ஆண் வேஷம் தான் போடனுமா? எனக்கு தெரிந்து எந்த சோளக்காட்டு பொம்மைக்கும் பொன்னு துணி போடலையே ஏன்? பொன்னுன்னா அவ்வளவு கேவலமா? இதைத் தான் அந்த பெரியவர் சொல்லிட்டு போராரா?

“ இதோ நிக்குதே பொண்ணு, ஒரு ஆம்பிளயா இருந்தாலாவது வேட்டிய மடிச்சு கட்டி, சிங்கம் மாதிரி கழனியிலே இறங்கியிருப்பானே……” பெரியவரின் வார்த்தைகள் அவள் காதுகளில் இடித்துக்கொண்டே இருந்தது.

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி வாய்க்கா வரப்புல கூட பொன்னுகளை கேவலப்படுத்துவாங்க….? அவள் அவளையே கேட்டுக்கொண்டாள்.

* * * *

அன்று இரவு முழுவதும் உறக்கமே இல்லை.

உருண்டு உருண்டு படுத்தபோதும், திரும்பி திரும்பி படுத்தபோதும், உறக்கத்தோடு உறவின்றியே இருந்தாள்.

உறுதியான முடிவுக்கு வந்தாள். பின்பு தான் நிம்மதியாய் உறங்கிப் போனாள்.

* * * *

இரவு இறந்தது, பொழுது பிறந்தது.

சுக்கு காபியை நீட்டிய அம்மாவிடம் முடிவை சொன்னாள்.

 “அய்யோ என்னம்மா சொல்றே… வேண்டாம்மா, ஜாதி சனம் என்ன சொல்லும், உனக்கு எப்படி ஒரு நல்ல காரியம் நடக்கும்? முடியாது.” – என்றாள்.

வளர்மதியின் பிடிவாதம் அம்மாவை சம்மதிக்க வைத்தது.

காலையில் வழக்கமாய் வரும் வேலையாட்கள் வந்து சேர வரப்போகும் ஒரு புதிய விடியலை நோக்கி புறப்பட்டாள் வளர்மதி கையில் கலப்பையோடு………….

வழக்கமாய் சிரிக்கும் சோளக்காட்டு பொம்மை இப்பவும் சிரித்தது…. சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்துகொண்டு….முன்பை விட இப்போது கம்பீரமாய்.

 

பொன். ஆனந்தன்  radansus2006@gmail.com  9842062520

 

உறக்கமும் விழிப்பும் – மீனாக்ஷி பாலகணேஷ்

                              

           ‘தூங்காதே தம்பி தூங்காதே- நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே,’ என்ற பாடலை எல்லாரும் கேட்டிருக்கிறோம். இங்கு தூக்கத்தை சோம்பேறித்தனத்துடன் இணைக்கிறார் பாடலாசிரியர்.

           உறக்கம், அதாவது தூக்கம் எல்லா ஜீவராசிகளுக்கும் முக்கியமானது. உடல், மூளை இவற்றின் ஓய்வுக்கும், திசுக்களும் மற்ற உறுப்புக்களும் தங்களைச் சீர்படுத்திக்கொண்டு அடுத்தநாளை எதிர்கொள்ளத் தயாராவதற்கும் தூக்கமும் ஓய்வும் மிகவும் இன்றியமையாதது எனலாம். ஒருவர் உணவில்லாமல் கூட 48 மணி நேரம் இருந்து விடலாம்; ஆனால் 48 மணி நேரம் தூக்கமில்லாவிட்டால் இறந்துவிடக் கூடிய வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது.

           உயிரினங்கள் மட்டுமல்ல; செடிகொடிகளும் கூட இரவுகளில் உறக்கம் போன்ற ஒரு நிலைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.

           இதை எல்லாம் ஏன் இங்கு கூற வந்தேன் என நீங்கள் வியக்கலாம்.

           கண்ணுக்குத் தெரியாத உயிர்வாழினங்களான பாக்டீரியா போன்றவையும் உறங்கும். ஆனால் அவை எவ்வாறு இந்த ‘உறங்கும் நிலை’யைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அறிவியல் கூறுவதைப் பார்க்கலாமா? இந்த நுண்ணுயிரிகள் உயர்ந்த உயிர்களான, விலங்குகள், மனிதர்கள் ஆகியன செயல்படுத்தும் மூளை, இதயம், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், இன்னபிற எனப்பலவிதமான உறுப்புகளில் ஒன்றுகூட இல்லாதவை. ஒரேயொரு ‘செல்’ (cell) எனப்படும் உயிரணுக்களைக் கொண்ட நுண்ணுயிரிகள் எவ்வாறு இவ்விதமான உறங்கும் நிலையைச் சாதகமாகக்கொண்டு தம்மை நிலைப்படுத்திக்கொண்டு சாதிக்கின்றன?

           மிகவும் சுவாரசியமான நிகழ்வுகளால் இதனை அவை சாதிக்கின்றன எனலாம்.

           நுண்ணுயிரிகள் பலவிதம். வட்டவடிவமான, முத்துக் கோர்த்தது போன்ற அமைப்புடையவை,(cocci) நீண்ட அமைப்புடையவை,(bacilli) சீன எழுத்துக்கள் போலும் அமைப்புக் கொண்டவை, வளைவான அமைப்புக் கொண்டவை (comma-shaped) என்பன இவற்றுள் சில. இவற்றுள் நாம் நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். இது மிகப்பெரிய உலகம். புகுந்து விட்டால் தலைகால் புரியாது. ஆனால் பிரமிக்க வைக்கும். மேலும் சில நுண்ணுயிரிகள், தமது சுற்றுப்புற சூழல் சாதகமாக இல்லாவிடில் மனித உடலின் வேறு இடங்களில் ஒளிந்துகொள்ளக் கூடிய சாமர்த்தியம் படைத்தவை. இன்னும் சில, கஷ்டமான சூழலில் தம்மை ஒரு கடினமான உறைபோலும் அமைப்பினுள் ஒளித்துக்கொண்டு, (spores) சரியான சமயத்திற்காகக் காத்திருப்பவை.

           முதலில் நாம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டியவை:

  1. நுண்ணுயிரிகள் தான் பலவிதமான தொற்றுக்களுக்குக் காரணமானவை. (காலரா, டைஃபாயிடு, டி.பி. எனப்படும் காசநோய், அம்மை, கோவிட், வயிற்றுப்போக்கு, சொறி, சிரங்கு, படை, இன்னபிற)
  2. இவை பல காலகட்டங்களில் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த பாக்டீரியாக்கள் 4 பில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை விட எண்ணிக்கையில் அதிகமானவை.
  3. பல கடினமான ஆராய்ச்சிகளின் மூலமே இவை எவ்வாறு தொற்றுக்களை விளைவிக்கின்றன, எவ்விதமான ஆராய்ச்சிகளால் அவற்றைக் கட்டுப் படுத்த இயலும் என அறிந்தோம் என்பதெல்லாம் பெரிய நாவல் (நவீனம்) சமாசாரம்தான். அவ்வப்போது அவற்றையும் காண்போம்.

           முதலில் பாக்டீரியாக்களைப் பற்றிக் காண்போம். இவை சர்வாந்தர்யாமி! இல்லாத இடமில்லை!  காற்றிலும், உடலிலும், செடிகொடிகளிலும், உண்ணும் உணவிலும் இவை உண்டு. இவை வளரத் தேவையானதெல்லாம் சிறிது உணவுதான். அது சர்க்கரையாகவோ, சிறிது புரதமாகவோ இருக்கலாம். சிறு தேக்கங்களான நீர்நிலைகளிலோ, உணவிலோ, அவை இளஞ்சூடான நிலையில் இருந்தால் (மனித உடலின் சாதாரண வெப்பநிலையான 37.4 டிகிரி செல்சியஸ்) அமர்ந்து வளர ஆரம்பிக்கும். மளமளவென வளரும் இவை இருபது நிமிடங்களில் ஒன்று இரண்டாகும் 2-4, 4-8, 8-16 என்று சில மணி நேரங்களில் பல லட்சங்களாகப் பல்கிப் பெருகிவிடும். உணவுப்பொருள் முழுமையாகத் தீர்ந்த நிலையில், “வாழ்வா, சாவா?” என முடிவு கட்டவேண்டிய நிலையில் இவற்றில் பெரும்பாலானவை இறக்கும். இதெல்லாம் ஒரு குத்துமதிப்பாகச் சொல்வதுதான். எஞ்சியுள்ள  மற்றவை கொஞ்சம் சாமர்த்தியமாக தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறைகளைத் தேடும். ஏனெனில் தமது இனம் நிரந்தரமாக வாழ வகை செய்ய வேண்டுமல்லவா? இதை எல்லாம் நாம் எப்படி அறிந்தோம்?

           இவற்றுக்கெல்லாம் முதலில் எஸ்கெரீஷியா கோலை( Escherichia coli) எனும் பாக்டீரியாவை முன்னுதாரணமாகக் கொண்டு பரிசோதனைகள் நடத்தினார்கள். பின் நிஜமான, தொற்றை விளைவிக்கும் சால்மொனெல்லா டைஃபி, ஸ்ட்ரெப்டோகாக்கஸ், இன்ன பிறவற்றைக் கொண்டும் அதே ஆராய்ச்சிகளை நடத்தி முடிவுகளை அறிந்தனர்.

           இவை எவ்வாறு உறக்கம் எனும் நிலையைத் தம் வாழ்வுக்கு ஆதாரமாக்கிக் கொண்டுள்ளன?

           உதாரணமாக, ஏதாவது தொற்று பாக்டீரியா நமது உடலினுள் புகுந்தால், உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்புச் சக்திகள் (Body’s natural immunity) அவற்றை அழித்துக் கொன்றுவிடும். நம் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள பொழுதுகளில் அவற்றின் கை ஓங்கி அவை நம் உடலில் பல்கிப் பெருகும். சில பொழுதுகளில் அவை நம் உடலில் பெருகும்போது ஆன்டிபயாடிக்குகளை உட்கொண்டு அவற்றை அழிக்க வேண்டியிருக்கும். மருத்துவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மாத்திரை வீதம் ஐந்து நாட்களுக்குத் தருவார். அதைக் கட்டாயம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதல் வேளை மருந்தில் பெரும்பாலானவை கொல்லப்படும். பாக்கி சிறுபான்மை அடுத்தவேளை மருந்தை நாம் உண்பதற்குள் மேற்கூறியவாறு பல்கிப் பெருகும். அடுத்தவேளை மருந்தில் இவையும் பெரும்பான்மை கொல்லப்படும். இங்கு நாம் நினைவிலிருத்த வேண்டியது இது மருந்துக்கும்  பாக்டீரியாவுக்குமான போர். ஆனால் ஒவ்வொரு வேளை மருந்தாலும் கொல்லப்பட்டபின் எஞ்சியிருப்பவை தாம் உயிர்வாழத் துடிப்பதால் நம் உடலில் ஒளிந்துகொள்ள இடம் தேடும். ஆன்டிபயாடிக்கின் எதிர்ப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமல்லவா?

           இதற்குள் நான்குவேளை ஆன்டிபயாடிக்கைச் சாப்பிட்டபின் நாம் நலமாக உணர்ந்து நிறுத்திவிட்டோமானால் மிச்சம் மீதி இருப்பவை திரும்பப் பெருகி நம்மை திரும்பவும் நோய்வாய்ப்படுத்தும். இல்லாவிடில், தமது மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்துகொண்டு இந்த ஆன்டிபயாடிக்கின் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைக்கத் தயாராகிவிடும். இப்போது மருத்துவர் வேறு ஆன்டிபயாடிக்கை நமக்குத் தர வேண்டிய கட்டாயத்திலிருப்பார்.

           போதாக்குறைக்கு இந்த பாக்டீரியாக்கள் தமது செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டு ‘ஒரு உறங்கும் நிலை’க்குத் தயாராகி விடும் (dormant phase). எப்போது திரும்பவும் எழுந்து வளரலாம், நோய் தரலாம் எனவெல்லாம் தீர்மானிப்பதில் இவற்றின் பல மரபணுக்கள் பங்கு பெறும். தமது சுற்றுப்புறச் சூழல் தமக்கு சாதகமாக உள்ளதா எனக் கண்டறிந்தபின் மெல்ல வளர ஆரம்பிக்கும்.

           இந்த பாக்டீரியாக்களில் இன்னொரு சாரார், நிலைமை பாதகமாகும்போது தம்மைச்சுற்றி ஒரு கடினமான உறையை (spores) உருவாக்கிக் கொண்டு விடுவர். அமைதியாக அதனுள் இருந்துகொண்டு இறந்துவிட்டது போலும் ஒரு நிலையை உருவாக்கிக் கொள்ளும் (dormancy). இதனை உடைத்து இவற்றை அழிப்பது கடினம். அதிகப்படியான நீண்ட சூட்டினால் (பிரஷர் குக்கர் போன்ற அமைப்புகளில்) மட்டுமே இவற்றை அழிக்க முடியும். இதுவும் உறக்கத்திற்கு சமானம். இந்த உறக்கம், இவை தம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. பிறகு இவை எப்படி எப்போது விழித்தெழும்? அதுதான் அதிசயம். சுற்றுப்புற சூழல் சாதகமாகி, விழித்துக்கொள்ளலாம் எனும் நிலைமையைக் கண்டறியவென்றே சில புரதங்களை தம்மில் இவை கொண்டுள்ளன. இவை சாதகமான சூழலை மோப்பம் பிடித்தறிந்து கொள்ளும்! இங்கு உறக்கம் என்பது இவை தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறையாகின்றது.

           இன்னுமொரு வினோதமான நடைமுறை காசநோய்த் தொற்றை (tuberculosis) உண்டாக்கும் பாக்டீரியாக்களில் காணப்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களிடமிருந்து தொற்றுகலந்த காற்றை நாம் சுவாசிக்கும்போது இவை நம் உடலின் உள்ளே நுழைந்துவிடுகின்றன; ஆனால் எல்லா மனித உடல்களிலும் உடனே நோயை உண்டுபண்ணுவதில்லை. தாம் புகுந்த மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போதோ, அல்லது மற்ற எதனாலோதான் நோய் உருவாகும். மற்றபடி ஆண்டுகள் கணக்கில் ஒரு தொந்தரவையும் பண்ணாமல் சமர்த்தாக அமைதியாக இருக்கும். இது இன்னும் ஒருவித மோனநிலை! உறக்கம் போன்றது! இதுவும் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் உத்தியே! எகிப்திய மம்மிகளின் உடல்களில் எல்லாம் இந்த டி. பி. பாக்டீரியாக்கள் இருந்துள்ளன எனக் கண்டறிந்துள்ளனர். உறக்கம் என்பது இவை முக்கியமாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு செயலாக இவற்றிற்கு உதவுகின்றது தானே!

           இப்படிப்பட்ட பல விநோத நிகழ்வுகளைக் கொண்டது நுண்ணுயிரிகளின் உலகம்!

           விநோதங்களைத் தொடர்ந்து காணலாம்.

                     ~~~~~~~~~~~~~~~~~~~

                               

 

 

 

 

 

நடுப்பக்கம் – பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-6 சந்திரமோகன்

பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-6

From Land of the Pallavas: சமணர் கழுவேற்றம்

சம்பந்தரும் சமணர்களும்.

புத்தரும், மகா வீரரும் மக்களுக்கு அன்பைப் போதித்து அறவழி காட்ட வந்த மஹான்கள். அவர்களை மற்ற மதங்களை அழிக்க வந்தவர்களாக்கிய பழி பல நூறாண்டுகளுக்குப் பின் வந்த அவர்களது மத குருக்களையே சேரும்.

அதுபோல ஞான சம்பந்தரை சமணத்தையும் சமணர்களையும் அழிக்க வந்தவராக்கிய பழி அவருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய சைவ அடியாரையே சேரும்.
முன்னர் கண்டது போல தொண்டை நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் மட்டுமே பரவிக்கிடந்த சமண மதக் கொள்கைகளை தமிழ் கூறும் நல்லுலகம் மட்டும் தான் வாழ்ந்த 16 ஆண்டுகளில் கொண்டு சேர்த்தவர் சம்பந்தர்.

சம்பந்தரை சமணர் என்று கூறுகிறாயா? கேள்வி என் காதில் விழுகிறது.

சமண மதத்தின் தலையாய கொள்கையான புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை பேரறமாய் நாடெங்கும் சைவர்களிடமும் பரவியது சம்பந்தரால்.

அறவொழுக்கத்தை கடைப் பிடிக்காதவருக்கு வீடு பேறில்லை பரப்பியவர் சம்பந்தர்.

வேள்விகளை உயிர்ப் பலியில்லா யாகமாக மாற்றியவர் சம்பந்தர்.

கள்ளையும் புலாலையும் ஒழித்து, மாவும் அப்பமும் உண்டு களித்து சைவரோடு சேர்ந்து பலர் தீ வடிவில் சிவனைத் தொழ வைத்தவர் சம்பந்தர்.

கோவிலில் நுழையக்கூடாத பிரிவைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்பாண நாயனார் தோள் மீது கைபோட்டு கோவில்களுக்குள் அழைத்துச்சென்று தன் பாடல்களுக்கு அவரை யாழ் இசைக்க வைத்தார். இறுதியில் ஈசனுடன் கலந்த பொழுது யாழ்பாணரையும் உடன் அழைத்துச் சென்றார்.

மேலே கூறியவை அனைத்தும் சமண மதக் கொள்கைகள். நாளடைவில் சைவ, வைணவ மதத்தைச் சார்ந்தவர்களும் அவைகளை தமதாக்கிக் கொண்டனர்.

சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் பௌத்தர்களும், சமணர்களும் நற் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு அறம் பிறழ்ந்தமையால் சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்க வாசகரும் அவர்களுடன் வாதிட்டு அறத்தை நிலை நாட்ட வேண்டிய தேவை வந்தது.

‘அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை” என திடமாக நம்பிய சம்பந்தர், சமணமும், புத்தமும் ஈசனால் ஆக்கப்பட்டவை எனவும் நம்பினார். அவர்கள் வழிபாடும் சிவ வழிபாடே, அவர்கள் உரையாடலும் இறைவனுரையே, அவர்கள் மறவுரையும் அறவுரையே, அவர்கள் கொள்கையை நிலை நாட்டியவனும் ஈசனே. அதுமட்டும் அல்லாது எல்லாம் ஈசன் வடிவெனும் பொழுது சமணரும் புத்தரும் மற்றையோரும் அவன் வடிவே அன்றோ’ என்று பாடுகிறார் சம்பந்தர். எனவே சம்பந்தர் சமணர்களுடைய கொள்கைகளை அழிக்கப் பிறந்தவரல்லர்.

சேக்கிழாரோ பெரிய புராணத்தில் சம்பந்தரின் தந்தை சமணரை அழிக்க ஒரு பிள்ளை வேண்டுமென வேண்டிப் பெற்றார் என்கிறார். சம்பந்தரும் தனது திருக்கடைக் காப்புகளில் பத்தாவது பாடல் தோறும் புத்தர்களையும் சமணர்களையும் பழித்துப் பாடுகின்றார்.

ஒரே குழப்பமாக உள்ளதே?

சமண புத்த கொள்கைகள் நம் மண்ணிற்கு உகந்த தமிழர் கொள்கையேயாகும். அவை களைகளால் மூடப் பட்டு வாடத் துவங்கின. களைகளை நீக்கி பயிரைச் செழித்து வளரச் செய்யவே சம்பந்தர் தோன்றினார்.

சம்பந்தர் காலத்தில் புத்தர்கள் சீரும் செல்வாக்கும் பெற்று விளங்கவில்லை. அழிவின் விளிம்பில் இருந்தனர். எனவே சம்பந்தர் அவர்களை அதிகம் சாட வில்லை. சமணர்களில் வெள்ளை உடுத்திய சுவேதாம்பரர், உடையிலாது திரிந்த திகம்பரர் ஆகியோரில் பின்னவரே தலைவிரித்து ஆடினார்கள். பின்னவரின் கூடா ஒழுக்கத்தையே சம்பந்தர் பழித்தார்.” அவர்களை அமணர் என்றே அழைக்கிறார்.

அன்றைய சமணரும் புத்தரும் உடையைத் துறப்பதாலும், போர்த்துவதாலும் வீட்டு நெறியை அடையலாம் என கூறித் திரிந்ததையே பழித்தார். அத்துறவிகள் உடலையும் கண்களையும், வாயினையும் கழுவாது மாசு படிந்த மேனியராய் திரிந்தனர். குளிப்பது காமத்தினை தூண்டும் என்பது அவரது கொள்கை. உணவு உண்ணும் பழக்கத்தைச் சாடினார். உடலில் துணியிலாது பெண்டிர் முன் நடமாடியதை வெறுத்தார்.

சம்பந்தர் சமண கொள்கைகளை வெறுக்க வில்லை. பின் வந்த சமணர்களின் வெறுப்பூட்டும் நடவடிக்கைகள வெறுத்தார். சமணத் துறவிகளின் நடவடிக்கைகளே சமணம் அழிவதற்கும் காரணமாய் இருந்தன.

சம்பந்தர் வரலாற்றில் நடந்த பல சம்பவங்களில் அதிகம் பேசப்படுவைகளில் ஒன்று எட்டாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய கதை.

பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை தம் வயப்படுத்திய சமணர்கள் சைவர்களை சமணர்களாக்கிக் கொண்டிருந்தனர். சோழநாட்டின் இளவரசியும் பாண்டிய நாட்டின் அரசியுமான மங்கையற்கரசி, அமைச்சர் குலச்சிறையர் உடன் சேர்ந்து மன்னனையும் மக்களையும் சைவத்தை நோக்கி திருப்ப ஞான சம்பந்தரை அழைத்து வந்தனர். மன்னனின் சூளை நோய் சமணத்தையும் சைவத்தையும் சோதிக்கும் கருவியாக அமைந்தது. பல சோதனைகளை தாண்டி சம்பந்தர் மன்னனின் நோய் தீர்த்தார். சமணர்களால் நோய் தீர்க்க முடிய வில்லை. பின்னர் சம்பந்தரை சமணர்கள் அனல் வாதம், புனல் வாதம் என மன்னர் முன் போட்டியிட அழைத்தனர். இரண்டிலும் சம்பந்தர் வென்றார். வாதங்களில் தோற்றபின் பல சமணர்கள் திருநீறு பூசி சைவராய் மாறினர். பலர் கடலில் விழுந்து மாய்ந்தனர். மீதம் எட்டாயிரம் சமணர்கள் நாற்பது ஆயிரம் சைவர்கள் முன்பு கழுவில் ஏற்றப்பட்டனர். இது கதை.

சமணர்களின் கழுவேற்றம் ஒரு பார்வை – வரலாற்றைத் தேடிஇக்கதையை சம்பந்தரின் தேவாரம் கூற வில்லை. சம காலத்தில் வாழ்ந்து சம்பந்தரை பிரமிப்பாக பார்த்து வணங்கி சம்பந்தரின் பல்லக்கைச் சுமந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர் பெருமையாக பாட வில்லை. திருத் தொண்டத் தொகை பாடிய சுந்தரர் கூற வில்லை. அவர்கள் மறைந்து சில ஆண்டுகளில் புத்த மதத்தின் வேரைத் தேடி வந்து காஞ்சியில் சில காலம் தங்கி சரித்திரம் எழுதிய சீன யாத்ரிகர் யுவான் சுவாங் பேச வில்லை.

இக்கதையை சில நூறு ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலில் வழங்கியவர், மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிதம்பரம் கோவிலில் செல் அரித்திருத்த தேவாரம், திருவாசகம் ஏடுகளை நமக்குத் தேடித் தந்த நம்பியாண்டார் நம்பி ஆவார். அவர் கூட சுந்தரரின் திருத் தொண்டத் தொகை தழுவி எழுதிய திருத் தொண்டர் திருவந்தாதியில் இக்கதையை கூற வில்லை. பின்னர் எழுதிய திருஞான சம்பந்தர் திருவந்தாதியில் இக்கதையை கூறுகிறார்.

நம்பியாண்டார் நம்பியின் படைப்பை மூலமாக வைத்து தான் சேகரித்த தகவல்களையும் இனைத்து நாயன் மார் வரலாற்றை விரிவாக்கிய சேக்கிழாரும் இக் கதையை பெரிய புராணத்தில் சற்று மாற்றிக் கூறுகிறார். சேக்கிழாருக்கு சம்பந்தர் எட்டாயிரம் உயிர்களை கொன்றவர் என்ற பழி கூடாது என்ற ஆதங்கம். பின்னர் வந்த திருவிளையாடல் புராணம் இக்கதையை வேறு வடிவில் கூறுகிறது.

அறத்தையும், அன்பையும் போதித்த சம்பந்தர் தன் பதின்ம வயதில் எட்டாயிரம் உயிர்களை போக்க உடன் பட்டிருப்பாரா என்ற முதல் கேள்வியே அந்நிகழ்வு ஒரு கற்பனை கதை என எண்ண வைக்கிறது.

பாண்டியன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பில் பலியான ஓர் உயிர்க்கு ஈடாக பற்றி எரிந்தது மதுரை மாநகர். அப்படியிருக்கையில் எட்டாயிரம் உயிர்களை பரிப்பது அவ்வளவு சுலபமா?

கழுவேற்றும் முறையை நாமறிவோம். எட்டாயிரம் கழு முணைகள் தயாரித்து ஒரே சமயத்தில் கழுவேற்றுதல் அன்று சாத்தியமா?

பாரதத்தின் இன்றைய மக்கள் தொகை 130 கோடி, நூறாண்டுகளுக்கு முன் பாரதி வாழ்ந்த காலத்தில் 30 கோடி. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நாற்பதாயிரம் சைவர்களும் எட்டாயிரம் சமணர்கள் குடும்பங்களுடன் வைகைக் கரையில் கூடியிருக்க முடியுமா?

ஒரே சமயத்தில் பல்லாயிரம் உயிர்களை ஒரு மன்னனால் பலி வாங்க இயலுமா? சரித்திரம் அவனை கொடுங்கோலனாகக் காட்டியிருக்குமே?

கேள்விகள் சரியா? தவறா? தெரிய வில்லை. ஆனால் கேள்விகள் எழாமல் இல்லை.

சமணத்தின் பிடிப்பால் சைவத்திற்கு மாறாது கழுவேர உடன் பட்டிருந்தால் கொள்கைப் பிடிப்பால் உயர்ந்தவர்களாக அல்லவா சமணர்கள் போற்றப்பட வேண்டும்.

நிகழ்வு நடந்த காலத்திற்கும் முதலாவதாக பதிவிடப் பட்ட காலத்திற்கும் இடையே பல நூறு ஆண்டுகள் இடைவெளி. சிறு வயதில் நான் படித்த கதை ஒண்று ஞாபகம் வருகிறது. தெருவின் முதல் வீட்டின் முன்னர் செறிமானக் கோளாரில் ஒருவன் எடுத்த வாந்தியில் கறுப்பாக மிளகு ஒன்று வந்து விழுந்தது. பல வீடுகள் தள்ளி கடைசி வீட்டை அடைந்த செய்தியில் முதல் வீட்டுக் காரன் எடுத்த வாந்தியில் காகா ஒன்று வந்து விழுந்ததாக இருந்தது. அதுபோல செவி வழிச் செய்தி பல நூறு ஆண்டுகள் கழிந்த பின் கழுவேற்றப் பட்டவர்கள் எட்டாயிரம் ஆகியிருக்கலாம்.

எது எப்படியோ? சமயக்குரவர்கள், ஆழ்வார்கள் காலத்திற்கு பின்னர் சைவமும் வைணவமும், முன்னர் தோன்றிய வைதீக மதம், சமணம், பௌத்தம், ஆசிவகம் ஆகியவற்றின் வேண்டாத கொள்கைகளை ஒதுக்கி வேண்டிய நல்ல கொள்கைகளைக் கொண்டு ஒன்றாக கலந்த ஒரு கலவை மதமாக மக்களை நல் வழிப் படுத்தி வருகிறது என்றால் தவறில்லை.

https://www.pazhasulapudhusu.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/

ஆசிவகம் என்ற மதம் பற்றி தலைப்பில் கோடிட்டு விட்டு அதைப் பற்றி பேசாது சென்றால் சரியில்லை. அடுத்த பதிவில் ஆசிவகம் பற்றி பார்ப்போம்.

அழகி அஞ்சலை – ரேவதி ராமசந்திரன்

முல்தானி மிட்டி | Multani Mitti Face Pack in Tamil | Multani Mitti Powder  For Face In Tamil - YouTube

 

என்றும் போல அன்றும் அஞ்சலை ‘அம்மோவ் ஆப்பி நியூ யார்’ என்று உள்ளே வந்தாள். ‘புது வருஷ வாழ்த்துகள். என்ன அதிசயமாக சீக்கிரம் வந்து விட்டாய்! மழைதான் வரப் போகிறது’ என்று சொன்ன புவனா அவசர அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள். ஆம், அஞ்சலைக்கு வந்தவுடன் சூடான காபி தேவை. அது உள்ளே சென்றவுடன் சிறிது வம்பாக வெளி வரும். அதற்கப்புறம்தான் அவளுக்கு வேலையே ஓடும். புதிது புதிதாக அவள் அவற்றை விவரிக்கும் அழகே அழகு! நாம் சிறிது காது கொடுத்து கேட்கிறோம் என்று தெரிந்தால் அவ்வளவுதான் நாட்டிய பாவத்துடன் அரங்கேற்றம் செய்து விடுவாள். இன்று என்ன பிரச்சனையோ!

ஆனால் இன்று விஷயம் வேறு விதமாக இருந்தது. ‘அம்மோவ், பக்கத்து வீட்டு கருப்பு கமலா எப்படி இப்படி சிவப்பாகிப் போனாள்! அவளைக் கேட்டதற்கு ஏதோ மெட்டி என்கிறாள். அது எப்படியம்மா சிவப்பாக்கும்!’ என்று அரையும் குறையுமாக கேட்டாள். அவளுக்கு தான் கருப்பு என்பது இவ்வளவு வருத்ததைக் கொடுக்கும் என்று நல்ல சிவப்பான புவனாவிற்குத் தெரியாது.

புவனா சிரித்திக் கொண்டே ‘ஓ அது முல்த்தானி மிட்டி, அது உனக்கு எதற்கு!’ ‘என்னம்மா இப்படி கேட்குறை. நானும் உன்னை மாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது அழகாகணும்னு ஆசையாக இருக்காதா! அதுக்கு என்ன பண்ணலாம்!’ என்று அப்பாவித்தனமாகவும் ஆசையாகவும் கேட்டாள். ஓ அவளுக்குள் இப்படி ஒர் ஆசையா! இம் அவளும் பெண்தானே!’ சரி அவள் ஆசையையும் கெடுப்பானேன் என்று ‘பார்லருக்கு வருகிறாயா. கூட்டிப் போகிறேன்’ என்று வினயமாகவும் அவள் ஆசையைத் தூண்டும் விதமாகவும் கேட்டாள் புவனா. ‘அய்ய அங்கெல்லாம் வர வெக்கமா இருக்கு. நீ வீட்டிலேயே எனக்கு ஏதாவது செய்து விடு’ என்று சின்னக் குழந்தை மாதிரி கொஞ்சினாள்.

சரி என்று புவனா தான் எங்கோ படித்ததை நினைவில் கொண்டு சிறிது கடலை மாவில் பால் ஏடு, தயிர், மஞ்சள் தூள், சந்தனப் பொடி, வாழைப் பழம் எல்லாம் போட்டு ரோஸ் தண்ணீரில் கலக்கும் போது ‘என்னம்மா நான் ஏதோ கேட்டால், நீ பாட்டுக்கு பஜ்ஜிக்கு மாவு பிசைகிறாயே’ என்று அவசரமாகக் கேட்டாள். புவனா சிரித்துக் கொண்டே ‘இது ஒரு வகையான மூலிகை. இதை தினந்தோரும் முகத்தில் பூசினால் முகம் சிவப்பாகவும், பளபளப்பாகவும் ஆகும்’ என்று அதை அவளை முகத்தில் பூசச் சொன்னாள். கண்களை மூடிக் கொள்ளச் சொல்லி அதன் மீது வெள்ளரி துண்டு இரண்டை வைத்தாள். ‘இதை அப்புறமா  சாப்பிடனுமா’ என்று கேட்டாள். இது அப்பாவித்தனமா, ஆசைத்தனமா, ஆர்வத்தானமா என்று தெரியவில்லை! பத்து நிமிடம் கழித்து முகம் அலம்பச் சொன்னாள். அவளுக்கு ஒரே சந்தோஷம் பத்து நிமிடம் வேலை செய்ய வேண்டாம்! முகம் அலம்பியவுடன் பளிச்சென்று இருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒரே சந்தோஷம். ‘ஓ அம்மோவ் இப்படி தினம் செய்தால் நானும் சினிமா இஷ்டார் ஆயிடுவேன் இல்லையா’ என்று பெருமைப்பட்டுக் கொண்டாள். இரண்டு மூன்று நாட்கள் வேலை ஆச்சோ இல்லையோ வந்தவுடன் முகத்திலும் கைகளிலும் விதவிதமாக அப்பிக் கொள்ள மட்டும் மறப்பதில்லை, தவறுவதில்லை. புவனாவும் அவளது குழந்தைத்தனமான ஆசையைப் பார்த்து சிரித்துக் கொண்டே உதவி செய்தாள்.

ஒரு நாள் புவனாவிற்கு அவசரமாகக் கடைக்குப் போக வேண்டி வந்தது. அதனால் கிளம்பி விட்டாள். வீட்டிற்கு வந்த அஞ்சலை அம்மாவைக் காணாமல் சிறிது வருத்தப்பட்டாள். ஆனால் அவளது உற்சாகம் சிறிதும் குறையாமல் புவனா செய்கிற மாதிரி செய்ய ஆரம்பித்தாள். மாவு, பால் ஏடு, தயிர், மஞ்சள் தூள், சந்தனப் பொடி, வாழைப் பழம் எல்லாம் போட்டு கலந்தாள். முகத்தில் பூசினாளோ இல்லையோ சிறிது நேரத்திலேயே எரிய ஆரம்பித்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். தாங்க முடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்த புவனா அஞ்சலையைப் பார்த்து பயந்து விட்டாள். எரிச்சலில் கத்திக் கொண்டிருந்த அஞ்சலையை உடனேயே முகம் அலம்பச் சொல்லி ஏன் இப்படி என்று விசாரிக்க ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் காட்டி இதை எல்லாம் கலந்தேன் என்று சொன்னவுடன் புவனா ‘ஐயோ இதையாக் கலந்தாய்! என் தப்புதான். மஞ்சள் தூள் டப்பாவும் மிளகாய் தூள் டப்பாவும் ஒரே மாதிரி வைத்து விட்டேன். நீ தப்பாக எடுத்து விட்டாய். ஆனால் உனக்கு மஞ்சள் தூளுக்கும் மிளகாய்த்தூளுக்கும் கூடவா வித்யாசம் தெரியாது? சரி சரி நன்றாக முகம் அலம்பிக் கொண்டு நான் தருகிற கிரீம் தடவிக் கொள். எரிச்சல் அடங்கி விடும்’ என்று பரிவோடு கூறினாள்.

‘அம்மோவ் எனக்கு எந்தக் கிரீமும் வேண்டாம். பயமாக இருக்கிறது. நான் இப்படியே இருந்து விடுகிறேன். இதுவே அழகாகத்தான் இருக்கிறது. கருப்புதான் எனக்குப் பிடித்த கலறு. நம்ம தலைமுடி கூட கருப்புதான், வெள்ளையானாத்தான் கவலை. நம்ம தலைவரு ரஜனி ஐயா கூட கருப்புதான். கருப்பும் காந்தலும் எல்லோருக்கும் பிடித்தமானதுதான்’ என்று இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். புவனாவிற்கு என்ன செய்வது, சொல்வது என்றே தெரியவில்லை. ‘சரி இன்று காப்பி வேண்டாம் பால் தருகிறேன்’ என்று சமாதானப் படுத்த முயன்ற போது ‘அம்மோவ் என் காபியில் கை வைக்காதே. என்  முகத்தில் நீ கை வைத்ததே போதும்’ என்று சிரித்தாள்.

புவனாவும்  அதில் சேர்ந்து கொண்டாள்.

 

 

 

j

அறிவியல் கதைகள் – 1 திருவாதிரை – பானுமதி

 

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

 

 
தீபாவளித் திரு நாளைப் போல அப்பா இன்று அதி காலையிலேயே எழுந்திருக்கச் சொல்லி விட்டார். பனியும், குளிருமான இந்த வேலையில் தானென்ன செய்ய வேண்டும் என்றே சரவணனுக்குப் புரியவில்லை. அப்பா அதற்குள் குளித்துவிட்டு, விபூதியை இட்டுக் கொண்டு சிவப் பழமாக பூஜையறையில் இருந்தார். அம்மாவோ, தலையில் கட்டிய துண்டுடன், புது மடிப் புடவை கட்டிக் கொண்டு இனிய நறுமணத்துடன் வெண்கலப் பானையில் கொதித்து வரும் வெல்ல நீரில் அரிசி ரவையைக் கொட்டிக் கிளறி விட்டுக் கொண்டே மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு, கொத்தமல்லி விரை, சிவப்பு மிளகாய் வற்றல், கீறின தேங்காய்த்துண்டுகளை வறுத்துக் கொண்டிருந்தாள். “சரூ, சீக்கிரம் குளித்து விட்டு வா; அப்பாவிற்குப் பூஜையில் ஹெல்ப் செய்” என்றாள்.

அவனும் குளித்துவிட்டு, வேட்டி அணிந்து கொண்டு பூஜையறைக்குள் உதவச் சென்றான். வில்வம், ரோஜா, முல்லை, மல்லிகை, ஜாதி, செவ்வந்திப் பூக்களை பரபரவென்று ஆய்ந்து தனித்தனியே பிரம்புத் தட்டுக்களில் வைத்தான். அப்பா, சிவ லிங்கத்திற்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தண்ணீர் இவற்றால் சிவ ஸ்துதி சொல்லிக் கொண்டே அபிஷேகம் செய்தார். பின்னர் நடராஜரின் சிலைக்கும் இந்த அபிஷேகத்தோடு சந்தன அபிஷேகமும் செய்தார். ருத்ரம், சமகம், சிவ சகஸ்ர நாமம், பூக்களால் அர்ச்சனை எல்லாமும் நடந்தன. சமையலறையிலிருந்து நெய்யில் அம்மா முந்திரியை வறுக்கும் வாசமும், பச்சைக் கற்புரத்தை பாலில் கரைக்கும் வாசமும், ஏலத்தைப் பொடி செய்யும் வாசமும் காற்றில் கலந்து வந்தன. அம்மாவும் உடனே பூஜையறைக்கு வந்து விட்டார். தூப தீப ஆராதனைகள், நைவேத்தியத்துடன், திருவாசகமும், திருவெம்பாவையும் மூவரும் படித்தார்கள். அம்மா கூந்தலைக் காய வைத்து அழகாகப் பின்னி சிறிது ஜாதிப்பூவை தலையில் வைத்துக் கொண்டிருந்தார். மூவரும் அர்ச்சனைக் கூடையுடன் அருகிலிருந்த சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

போர்டிகோவில் அம்மா வரைந்திருந்த நடராஜர் கோலம், வாயிலில் போட்டிருந்த தேர் கோலம் கண்களைக் கவர்ந்தன.

‘அம்மா, தினமும், களியும், கூட்டும் செய்யேன். சாப்பிடச் சாப்பிட ஆசையாக இருக்கிறது.’ என்றான் சரவணன்.

அப்பா சிரித்தார். “ஏன்டா, சாப்பாட்டு ராமா? இன்னிக்கி என்ன விசேஷம்னு தெரியுமா உனக்கு?”

‘ஓ, இன்னிக்கு திருவாதிரை நக்ஷத்ரம். சிவனோட பிறந்த நாள்.’

‘சிவனுக்குப் பிறந்த நாளென்று பொதுவாச் சொல்வா. அவருக்கு பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்றெல்லாம் ஏதுமில்லை. அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடிய திரு நாள் இது. அதுவும், பதஞ்சலிக்காகவும், தேவர்களுக்காகவும், ஒடாத தேரை ஓட்டி, களியமுது படைத்த சேந்தனாருக்காகவும் ஆடிய தெய்வீக நாள் இது.’என்றார் அம்மா.

“சரூ, சிவ தாண்டவம் எதைக் குறிக்குதுன்னு தெரியுமா?”

‘அப்பா, அணுக்களின் இயக்கம். அவர் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம். இது ஃபீல்ட்ஸ் தியரிய ஒத்து வரதுப்பா.’

“சபாஷ், சரி, திருவாதிரைக்கு என்ன பேர்  வானவியலில்?”

‘அது வந்து, அது வந்து…’

‘பீடெல்க்யூஸ்’ (Betelgeuse) என்ற அம்மா தொடர்ந்து அத, அராபிக்கில பேட் அல ஜாசாவ் (Bat al Jawza) அப்படின்னு சொல்லுவாங்க. அதைத்தான் பீடெல்க்யூஸ்ன்னு இப்ப சொல்றாங்க.’ என்றார்

“சரூ, அது ஏதாவது விண்மீன் கூட்டத்ல இருக்கா?”

‘ஆமாம்ப்பா, அது மிருக சீர்ஷ கூட்டத்தில இருக்கு. (Orion) ஓரியன் கூட்டம்ன்னு சொல்றாங்க. இந்த நக்ஷத்ரம் மட்டும் சிவப்பா இருக்கும்.’

“கரெக்ட், அது எவ்வளவு தூரத்ல இருக்குன்னு தெரியுமா?”

‘அது 724 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்குப்பா.’

“ஓளி ஆண்டுன்னா?”

‘ஒரு நொடில சுமாரா மூணு லட்சம் கி மீ ஒளி பயணிக்கும். அப்படின்னா பாத்துக்குங்க.’

“குட், அதோட ஆரம் தெரியுமா உனக்கு?” இந்தக் கேள்வி அம்மாவிடமிருந்து.

“ஐயையோ, களியே கேட்க மாட்டேம்மா. இதெல்லாம் எனக்கு ஞாபகத்ல இருக்கறதே இல்ல.’

“அப்படியில்ல சரூ, பல விஷயங்களத் தெரிஞ்சுக்கணும். 617.1 கி மீ அதன் ரேடியஸ். அதோட வெப்பம் எவ்ளோன்னு தெரியுமா? 3500 கெல்வின். நம்ப சூரியனப் போல அதோட விட்டம் நூறு மடங்கு. அதோட ஒளிர்வு இருக்கே, அதான்டா ‘லூமினாசிடி’ சூரியன விட ஒரு இலட்சம் மடங்கு. அப்படின்னா பாத்துக்க.”

‘அம்மாடியோவ். எத்தன எத்தன அற்புதங்கள் வானத்ல.. நான் படிச்சேம்ப்பா. பூமிலேந்து பிரகாசமாத் தெரியற 10 விண்மீன்கள்ல இது 10 வது இடத்ல இருக்காம்.’

“இப்ப மாறிடுத்துடா; 24 வது இடம்னு சொல்றாங்க.”

‘எதனால அப்படி ஆச்சும்மா?’

“2019ல் ஒன்னு நடந்தது. ஒரு தும்மலப் போட்டது அது. அப்ப உள்ளேந்து வந்த வாயு, அதோட வெளிப்புறத்த குளிர வச்சுடுத்து. அந்தக் குளிர்ச்சியினால கருப்பு மேகமாயிடுத்து; ஃபுல்லா இல்ல; கால்பகுதின்னு சொல்லலாம். ஆனா, பாரு திரும்பவும் பிரகாசம் ஏப்ரல்ல உண்டாச்சு. ஆனாலும், முன்ன இருந்த பிரகாசம் இல்லன்னுட்டு வானவியலாளர்கள் சொல்றா.’

‘அது ஏம்ப்பா தும்மித்து?’

“சரூ, அளவுல பெரிசா சில நக்ஷத்ரம் இருக்கும். ஊதிண்டே வந்து கொஞ்சமாவோ, ஃபுல்லாவோ வெடிச்சுடும்.”

‘இதுக்கு புராணக் கதை இருக்கு. சிவன் நெருப்பாக, அடியும், முடியும் யாராலும் பாக்க முடியாம, மார்கழி திருவாதிரைல வந்தார். அதுனால இதுக்கு மகிம. திரேதாயுகான்னு ஒரு பொண்ணு. அவ பார்வதியோட பக்த. கல்யாணம் ஆன மூணாம் நாள்ல அவ ஹஸ்பென்ட் செத்துப் போயிட்றார். அவ பார்வதி தேவிக்கிட்ட கதற சிவனும், பார்வதியும் அந்த உயிர மீட்டுக் கொடுத்த நாளும் திருவாதிரை நாள் தான்டா. பாம்பு கடிச்சதனால செத்துப் போன பூம்பாவாய்க்கு நம்ம மைலாப்பூர்ல பதிகம் பாடி திருஞான சம்பந்தர் உயிர் கொடுக்கறார். அப்போ பாட்றார் “ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்”.

“சரூ, நான் உனக்கு ஒரு ஃபோடோ அனுப்பியிருக்கேன், பாரு. முழு சந்திரனுக்கு தெக்கால ஓரியன் கூட்டமே க்ளியரா இருக்கு அதுல. அது தாண்டவ போஸ், சிவ நடனம்னு நாம காலங்காலமா சொல்றோம். அதுவும் அப்படித்தானே இருக்கு?”

‘அம்மா, இதெல்லாம் வானத்ல ரொம்ப தூரத்ல இருக்கு. அப்படியிருக்கச்சே, அளவு, வேகம், இதெல்லாம் எப்படிச் சொல்ல முடியறது?’

“நிறைய அஸ்ட்ரானமி லேப்ஸ் இருக்குடா, நல்லத் தெளிவா காட்ற டெலஸ்கோப் இருக்கு. கம்ப்யுட்டர் சிமுலேஷன்ஸ் இருக்கு. இதப் பத்தி நீ கூகுள்லயோ, வேறு எதுலயோ படிச்சு, என்ன புரிஞ்சுண்டேன்னு சொல்லு.”

‘நான் படிச்சுட்டு வேகமா வரேம்மா. களியும், கூட்டும் எனக்காக சேவ் பண்ணி வச்சுட்டு, மீதிய யாருக்கு வேணும்னாலும் கொடு’ என்ற சரவணன் தன் கணினியில் படிப்பதற்கு தன் அறைக்குச் சென்றான். நீங்களும் படியுங்களேன்.

 

அதிசய உலகம் – நினைக்கத் தெரிந்த மனமே – அறிவு ஜீவி

 

“அடியே அல்லி! இன்னைக்கு என்ன சூடான சயன்ஸ் நியூஸ்?” என்று கேட்டாள் அங்கயற்கண்ணி மாமி!

“சாகும் போது மனதில் என்ன தோன்றும் தெரியுமா மாமி?” என்றாள் அல்லிராணி.

“எனக்கு என்னடி தெரியும்? நான் என்ன செத்தாப் பார்த்திருக்கேன்” என்று சிரித்த மாமி,

“சாகும் போது சங்கரா என்று சொன்னால் புண்ணியம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கேன்” என்றாள்.

“மாமி சயன்ஸ் அதை ஆராய்ச்சி செய்து, ஒரு ரிப்போர்ட் ஒன்று வந்திருக்கிறது” என்றாள் அல்லி.

“சொல்.. சொல்.. சொல். “என்றாள் மாமி.

“உயிர் போகும் முன், வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் மனதில் விரியுமாம்”

“அது என்ன, T20 ஹைலைட் வீடியோ போலவா?” என்றாள் மாமி.

“மாமி.. நீங்கள் சினிமாப்பைத்தியம் மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்ப தான் தெரிந்தது நீங்கள் கிரிக்கெட் பைத்தியம் என்பதும்” என்று சொல்லிய அல்லி சிரித்தாள்.

“சரி.. மேலும் சொல்” என்றாள் மாமி.

“இதயம் நிற்பதற்கு முன்னர், 30 நொடிகளிலிருந்து இதயம் நின்ற பின் 30 நொடிகள் வரை, மனிதனுடைய மூளை அலைகள் காட்டும் நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்து ஆய்ந்துள்ளனர்.   அதன் படி அது ஒரு கனவு நிலை,  நினைவின் முன்னோட்டம் (memory recall) மற்றும் ஒரு தியான நிலை.” என்றாள் அல்லி.

“அது ‘மலரும் நினைவுகள்’ என்று சொல்லு” என்றாள் மாமி.

அல்லி தொடர்ந்தாள்:

“ஆராய்ச்சியாளர்கள், செத்துக்கொண்டிருக்கும் மனிதனின் கடைசி 15 நிமிடங்களில் மூளை அதிர்வுகளைப் பதிவு செய்ததில், அந்த ‘ஒரு நிமிடம்’ இப்படி வெளியிட்ட காமா (gamma waves) அலைகள் வாழ்க்கை அலைகளைக்  (life recall) காட்டியுள்ளது.” என்றாள்.

“ஷாருக்கான்-ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் இந்திப்படம் பார்த்திருக்கியா” என்று கேட்டாள் மாமி.

அல்லி, “பார்த்திருக்கிறேன். இப்ப அந்தக் கதை எதுக்கு என்றாள்”.

மாமி, “அதில் தேவதாஸ் சாகும் சமயம், அவன் மனதில் அவனது வாழ்க்கை நிகழ்ச்சிகள் விரிவதாகக் காட்டியிருந்தார்கள். அப்புறம் இதைத்தான் கண்ணதாசனும் பாடினானோ ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்றாள் மாமி!

அல்லி சிரித்தாள்! 
   

இது ஒரு அதிசய உலகம்!

 

https://www.livescience.com/first-ever-scan-of-dying-brain

 

நன்மை தரும் நவகிரகத் தலங்கள் ( நிறைவுப் பகுதி) – ம நித்தியானந்தம்

 

7. திருநள்ளாறு (சனீஸ்வரன்)

நிரந்தர அதிகாரியை எதிா்நோக்கும் திருநள்ளாறு கோயில்..?- Dinamani

நிடத நாட்டு அரசன் நளனுக்கு ஏழரைச் சனி பிடித்ததால், அவன் அரச பதவி உள்ளிட்ட அனைத்து சுகங்களையும் இழந்து, இத்தலத்துக்கு வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி தனது தோஷம் நீங்கப் பெற்றான். நளன் வழிபட்டதால் ‘நள்ளாறு’ என்று பெயர் பெற்றது. அதனால் இத்தலம் சனி பகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலமாகக் கருதப்படுகிறது.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல முக்கிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. பேரளம் – காரைக்கால் ரயில் பாதையில் திருநள்ளாறு ரயில் நிலையம் உள்ளது.

இத்தலத்து மூலவர் ‘தர்ப்பாரண்யேஸ்வரர்’, கோரைப்புல்லை சேர்த்துக் கட்டியது போன்ற லிங்க மூர்த்தி. தர்ப்பை – கோரைப்புல். அம்பிகை ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்றும் ‘பொற்கொடியம்மமை’ என்றும் அழைக்கப்படுகிறாள். அழகிய சிறிய வடிவம். உள்ளே நுழைந்தவுடன் அம்மன் சன்னதி உள்ளது. அருகில் கிழக்கு நோக்கி சனீஸ்வரர் சன்னதி உள்ளது.

சிவபெருமான் ஏழுவகை நடனமாடிய சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலம் நாகவிடங்கத் தலம். இங்கு ஆடிய நடனம் உன்மத்த நடனம். திருவாரூர், திருக்குவளை, திருக்கராவாசல், திருவாய்மூர், வேதாரண்யம், நாகபட்டினம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் அனல் வாதம் செய்தபோது, இத்தலத்தில் பாடப்பட்ட பதிகமான ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்னும் பதிகத்தைத்தான் தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் இருந்ததால் இப்பதிகம் ‘பச்சைப் பதிகம்’ என்று பெயர் பெற்றது.

இத்தலத்தில் நளன் உண்டாக்கிய தீர்த்தம் வடக்கு மாடவீதியில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள குளம் சரஸ்வதி தீர்த்தம். அகத்திய தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. தல விருட்சம் தர்ப்பை.

திருமால், பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், வசுக்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காசியபர், அருச்சுனன், நளன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் நான்கு பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

8. திருநாகேஸ்வரம் (ராகு)

திருநாகேஸ்வரம் கோவில் | Thirunageswaram temple details Tamil

ஒருசமயம் நாகங்களுக்கு தலைவனான ஆதிசேஷன், இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவபெருமானை நோக்கி தவம் செய்து வந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சி தந்து அருளினார். நாகங்களினால் ஏற்படும் தோஷங்களை நீக்கியருள ஆதிசேஷன் பிரார்த்திக்க, இறைவனும் அவ்வாறே அருளினார்.

எனவே, நவக்கிரகங்களில் இத்தலம் இராகு பரிகாரத் தலம். இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தனி சன்னதியில் தனது துணைவியர்களான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் இராகு பகவான் மங்கள இராகுவாக மனித வடிவில் காட்சி தருகின்றார். ஆதலால் நாக தோஷம், இராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு. இவருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது அந்த பால் அவரது உடலின் மீது படும்போது நீலநிறமாக மாறும் அதிசயம் நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி இங்கு விசேஷம்.

கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்துக்கு முந்தைய இரயில் நிலையம் திருநாகேஸ்வரம்.

மூலவர் ‘சண்பகாரண்யேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். சண்பக மரங்கள் நிறைந்த வனத்தில் இருந்ததால் சுவாமிக்கு இப்பெயர். நாகராஜன் வழிபட்டதால் ‘நாகேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகின்றார். மகாசிவராத்திரியின்போது சுவாமிக்கு இரண்டாம் கால பூஜையை ராகு பகவான் செய்வதாக ஐதீகம். அம்பிகை ‘பிறையணி வாணுதலாள்’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

மற்றொரு தனி சன்னதியில் ‘கிரிகுஜாம்பாள்’ என்னும் ‘குன்றமுலைநாயகி’ தரிசனம் தருகின்றாள். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது. இவருடன் கலைமகள், திருமகள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். பிருங்கி முனிவருக்காக மூன்று சக்திகளும் ஒன்றாக காட்சியளித்ததாக ஐதீகம். மேலும் இச்சன்னதியில் பால சாஸ்தா, சங்கநிதி, பதுமநிதி ஆகியாரும் உள்ளனர். இவர்களை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

விநாயகர், பார்வதி, மகாவிஷ்ணு, பிரம்மா, நந்திதேவர், தேவேந்திரன், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், கார்கோடகன், வாசுகி, கௌதம முனிவர், பராசரர், வசிஷ்டர், நளன், பாண்டவர், சம்புமாலி ஆகியோர் வழிபட்ட தலம்.

இக்கோயிலின் தீர்த்தங்களாக நாக தீர்த்தம், சூர்ய புஷ்கரணி ஆகியவை உள்ளன. தல விருட்சமாக சண்பக மரம் உள்ளது.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

9. கீழப்பெரும்பள்ளம் (கேது)

கால சர்ப்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில்- Dinamani

நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் கேது தலமாகும். அசுரனான கேது இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் கேது தோஷ நிவர்த்தி தலமாக வணங்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவு.

மூலவர் ‘நாகநாதர்’ என்னும் திருநாமத்துடன், லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘சவுந்தர்ய நாயகி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, வாசுகி என்னும் நாகத்தைக் கயிறாகக் கட்டி கடைந்தனர். ஒரு கட்டத்தில் களைப்படைந்த வாசுகி தனது விஷத்தை உமிழ்ந்தது. சிவபெருமான் அதைப் பருகி தேவர்களைக் காத்தார். வாசுதி தனது தவறுக்கு வருந்தி, சிவபெருமானை வழிபட்டதால் இத்தலத்து மூலவர் நாகநாதர் என்ற பெயர் பெற்றார்.

மூலவர் சன்னதிக்கு இடப்புறம் கேது பகவானுக்கு தனிச் சன்னதி உள்ளது.

இக்கோயிலின் தீர்த்தமாக நாக தீர்த்தம் உள்ளது. தல விருட்சமாக மூங்கில் மரம் உள்ளது.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

ஓயிட் காலர் வேலை – கோவில்பட்டி கு மாரியப்பன்

 

Bank manager hi-res stock photography and images - Alamy

வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களைப் பேசி அனுப்பிவிட்டு சோனல் ஆபீஸ் தபால்கவரைப் பிரித்தேன். ஒரு கணம் என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியம் ஒருபக்கம்! கை லேசாக நடுங்கியது.

பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு தேர்வுக்குப் போக சீனியர் மேனேஜராகப் பதவி உயர்வு. இன்று கையில் இடமாறுதல் உத்தரவு. கோயமுத்தூர் வந்து ஒருவருடம் முடியும்முன் பதவி உயர்வும்ää இடமாறுதலும்.

மனம் பின்னோக்கி நகர்ந்தது.

கல்லூரியில் எம்.எஸ்.ஸி படிக்கும்போது அப்பா காலமாகிவிட்டார். வேலை பார்த்ததால் அம்மாவுக்கு பென்ஷன் வந்தது.

என் கூடப்பிறந்த அண்ணணுக்கு பெங்களுரில் ஐ.டி. கம்பெனியில் வேலை. உடன் வேலைபார்த்த பெண்ணையே விரும்பிக் கட்டிக்கொண்டார்.

கொஞ்ச நாளில் அமெரிக்காவுக்குச் சென்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டான்.
என்னைவிட ஐந்து வயது மூத்தவன். இந்தியா வந்தால் மாமனார் வீட்டில் வந்து இறங்குவான்.

அமெரிக்கா திரும்பும் போது ஒருநாள் எங்களைப் பார்க்க வருவான்.

எனக்குப் படித்தவுடன் வங்கியில் தேர்வு எழுதி வேலை கிடைத்தது. சென்னையிலேயே வேலை என்பதால் பழைய வீட்டிலேயே நானும் அம்மாவும். வாடகை வீட்டுதான் என்றாலும் நீண்ட வருடங்கள் அங்கு வாழ்ந்ததால் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம்.

திருமணப்பேச்சு வந்தது.

பையனின் அப்பா என் அம்மாவுக்கு தூரத்து சொந்தம். பையனின் அம்மாää அப்பா இப்போது இல்லை. அப்பாவின் தம்பி சித்தப்பா சித்திதான் பெரியவர்கள்.

பையன் போஸ்டல் டிபார்ட்மென்டில் நல்ல பதவி. சென்னையில் உத்தியோகம்.
அம்மா சம்மதம் கேட்டாள். சரியென்று சொல்லிவிட்டேன்.

திருமணத்திற்குப் பிறகு அம்மா எங்களோடு என்று திருமணத்திற்கு முன்பே பேசிவிட்டேன். அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்குபவர் என்பது திருமணத்திற்கு பிறகு புரிந்தது.
என் கேபின் கதவு தட்டப்படும் சப்தம்.

அஸிஸ்டண்ட் பிராஞ்ச் மேனேஜர்(எ.பி.எம்) வந்தார்.

விஷயத்தைக் கூறினேன்.கிளையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புமாறு உத்தரவு.

ஜாயினிங் டயத்துக்கு விண்ணப்பித்து விட்டு புதிய இடம் குளத்துப்பட்டு என்ற பெரிய கிளைக்கு மேனேஜராகப் போட்டதால் அங்கு வீடு பார்த்தோம்.

பாங்கில் மேனேஜர் என்றாலே பொதுவாக வாடகைக்கு வீடு உடனே கிடைக்கும். மாதா மாதம் வாடகை கேட்காமல் வந்துவிடும் அல்லவா!.

ஜாயினிங் டயத்தில் கோயமுத்தூர் வீட்டைக் காலி செய்து வீட்டு சாமான்கள் கொண்டு செல்ல லாரி ஏற்பாடு செய்திருந்ததால் வீட்டுச் சாமான்களை ஒழுங்குபடுத்தினோம்.

என் கணவருக்கு கோயமுத்தூர் பிடித்துப் போய் விட்டதால் மாறுதல் என்று சொன்னவுடன் கோபம். என் மாறுதலுக்கு அட்ஜஸ்ட் செய்து அவருக்கு இடமாறுதல் வாங்குறார். எத்தனை முறை இடமாறுதல். அவர் பொறுமையைச் சோதிப்பது போல் உணர்ந்தார்.

பதவி உயர்வுக்காக இப்படிப் பெட்டியைத் தூக்கிகிட்டுக் காலம் பூராவும் அலைய முடியுமா?. பையன் படிப்பு வருடத்திற்கு ஒரு ஊர் என்றால் எப்படிப் படிப்பான்?.

எங்களைச் சென்னையில் உள்ள நம்ம வீட்டில் விட்டுவிடு நான் அங்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கிறேன். நீ பதவி உயர்வுடன் சுத்திவா. எனக்கு இப்பவே இடுப்புவலியும் முழங்கால் வலியும் தாங்க முடியவில்லை. வயதான என் சித்தி தனியாக உள்ளார். அவரைக் கூட்டி வந்து விடுகிறேன் எங்கள் சாப்பாட்டுக்கு. நம்மளை மாதிரி சென்னையில்; கடன்வாங்கி வீடுகட்டிப் பக்கத்திலிருந்தவர்கள். பதவி உயர்வுன்னு போகாம அங்கேயே இருந்தால் அலைச்சல் இல்லை. பெட்டியை தூக்கிட்டு ஊர் ஊராகச் சுத்தாமல் நிம்மதியாக ஓரே தண்ணீயைக் குடிச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்க புள்ளைகளும் ஓரே இடத்தில் படிக்கிறாங்க.

உனக்கு பதவி உயர்வால் வர்ற கூடுதல் சம்பளம் எல்லாம் அலைச்சல்ல காலியாகிப் போகுது.
முதல்ல பையன் படிப்பை நினைச்சிப்பாரு. ஓரே பள்ளிக்கூடத்தில் படிச்சா சூழ்நிலை கூடப்படிக்கிறவங்களோட போட்டிப் போட்டுப் படிக்கிற மனசு எல்லாம் இருக்கும்.
நம்மபிள்ளை கால்வச்சி நெலைச்சி நிக்கிறதுக்குள்ளே அடுத்த ஊருக்குன்னா அவன் எப்படிப் படிப்பான்;?. உனக்கு உன் ஆபீஸ்தான் முக்கியம்னா என்ன செய்வது? மனத்தில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தார்.

காலம் கடந்த புலம்பல் என்பதால் நான் பதில் பேசவில்லை. அவ்வப்போது இது வெளிப்படும். வீணாவாக்குவாதம்தான் மிஞ்சும். கொஞ்ச நேரம் புலம்பிவிட்டு அமைதியாகிவிடுவார். என்ன செய்யறது?.

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறமுடியாதுன்னு சொல்ல முடியுமா?. அவருக்கும் இது தெரியும்.

ஜாயினிங் டயம் எடுத்து வீட்டைக் காலி செய்து சாமான்களைக் கொண்டு செல்லமுதலில் கேஸ் சரண்டர் பண்ண ஸ்கூட்டியில் கேஸ் ஏஜென்ஸிக்குப் போகும்போது ராங்சைடில் எதிரில் வந்த பைக்காரர் செல்போனில் பேசியபடி எங்கோ பார்த்துக் கொண்டு வந்து மோதினார்.
நானும் எவ்வளவோ ஒதுங்கியும் வாய்க்கால் ஓரத்தில்போய் வண்டியோடு விழுந்தேன். காலில் பலத்த அடி. வலி தாங்கமுடியவில்லை.

வீட்டுக்காரர் இந்நேரம் பார்த்து ஆடிட் என்று வெளியூர் சென்றுவிட்டார். நாளைத்தான் திரும்புவார்.
மோதியவர் பயந்துபோய் ஓடிவந்து “திருதிரு”வென்று முழித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச வயசுப் பையன். “சாரி மேடம்” என்று அழாத குறையாக மன்னிப்புக் கேட்டார்.

“என்ன செய்ய? மோதியாகிவிட்டது. விழுந்தாகிவிட்டது”. இனியாவது திருந்தினால் சரியென்று நினைத்துக் கொண்டு அவரைக் போகச் சொல்லிவிட்N;;டன்.

பக்கத்தில் நின்றால் இன்னும் கொஞ்சம் நமக்குதான் பிரஷர் ஏறும். கூட்டம் கூடிவிட்டது.

கேஸ் சிலிண்டரை ஆட்டோக்காரர் பின்னாலேயே கொண்டு வந்ததால்ää சிலிண்டரை மீண்டும் வீட்டின் வராண்டாவில் வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னேன். அம்;மா கதவை உள்ளே தாள்போட்டுக் கொண்டு இருப்பாள்.

நான் வேற ஒரு ஆட்டோவில் பழக்கமான ஆஸ்பத்திரிக்குச் சென்று “எக்ஸ்ரே” எடுத்துப் பார்த்தால் லேசான எலும்பு முறிவு. ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று கட்டுப்போட்டுää ஊசிப்போட்டுää மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்.

வண்டிக்கு அதிகம் சேதம் இல்லையாம். பைக்கை அருகிலிருந்த தெரிந்தவர் ஒருவர் பிராஞ்சில் விட்டுவிட்டார்.

பையனை ஒரு வாரத்திற்குள் கூட்டி வருவதாகப் பள்ளியில் பர்மிஷன் வாங்கியிருந்தோம். முதலிலேயே டி.சி.வாங்கி லீவுபோட்டு வீடு பார்க்கக் குளத்துப்பட்டு சென்றபோது பள்ளிக்கூட அட்மிஷனையும் முடித்துவிட்டு வந்திருந்தோம்.

பையன் ஒன்பதாம் வகுப்பு என்பதால் கொஞ்சம் கெஞ்சித்தான் அட்மிசன் கிடைத்தது. அந்த பிராஞ்ச் கேசியர் பையன் அங்கு படித்ததால் அவரும் கூட வந்து உதவினார்.

“நீங்க இன்ஸ்சூரன்ஸ் போட்டிருப்பாங்க வண்டிக்கு வேற சேதாரம். அவங்கக்கிட்ட நஷ்டஈடு கேட்க முடியாதா?.” பக்கத்திலிருந்தவர் கேட்டார்.

நான் அடிபட்டுää வலியால் ஆஸ்பத்திரி போயி மருத்துவம் பார்க்கனும். வண்டியை பிராஞ்சுக்குக் கொண்டுவிட்டதால் வங்கி நண்பர்கள் ஓர்க்ஷாப்புக்கு போன் செய்து வண்டியை சரிபண்ணிவிடுவார்கள். இதில் இன்ஸ்சூரன்ஸ்காரர்களை வரச் சொல்லி போட்டோ எடுத்து அவர்கள் பார்மாலிட்டியை முடித்துää நான் எப்போது ஆஸ்பத்திரிக்கு போவது?.

உடம்புக்கு சரியானதும் புது இடத்துக்கு கிளம்ப வேண்டும். வேறு வேலையில் அலைய முடியாது. மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் லீவுக்கு விண்ணப்பித்தேன். ஆயிற்றுää பத்துநாட்கள் வேகமாக ஓடிவிட்டன.

காலில் சிறிய வலி இருந்தாலும் சமாளித்து வீட்டுச்சாமான்களுடன் வந்து குளத்துப்பட்டு வந்தோம். லாரி சாமான்கள் வந்து சேர. இறக்கிவிட்டு வீட்டுக்காரர் திரும்பிவிட்டார்.

இரண்டு நாளில் ரிலீவ் ஆகிவருவார்.

கேஸ் கனெக்ஷன் வாங்கியாகிவிட்டது.

அப்பாடா! இனி என் வீட்டுக்காரர் புலம்பிக் கொண்டே சாமான்களை அடுக்கிவிடுவார். ஒவ்வொரு முறையும் இதுதான் கதை.

இன்றுதான் ஆபிஸ் வந்தேன். அஸிஸ்;டண்ட பிராஞ்ச் மேனேஜர்(எ.பி.எம்) வந்து இரண்டுவாரத் தபால்களைக் கிளிப்பில் போட்டுக் கையில் கொடுத்தாh.

இரண்டு வாரத்தில் நடந்த நிகழ்வுகளையும் சங்கடங்களையும் சமாளித்தவிதத்தையும் விவரித்தார்.
பாரத்தை இறக்கிய நிம்மதியுடன் “மேடம் நீங்க வந்தவுடன் சோனல் மேனேஜர் பேசச் சொன்னார்” என்றார்.

பேசினேன்.

“ மேடம் ஆக்ஸிடெண்ட்ன்னு சொன்னாங்க சரியாகி நல்லாயிருக்கீங்களா?

“ஆமாசார்”. கொஞ்சம் வலியிருக்கு பாத்துகிடறேன்சார்”

“அப்புறம் உங்க கிளை நெகட்டிவ்ல இருக்குஇ டெப்பாஸிட்டும் அட்வான்ஸ{ம் இறங்கிகிட்டே இருக்கு. இந்தக்காலாண்டில் என்ன பண்ண முடியும்னு சொல்லுங்கää அதோட வாராக்கடன் ஏறிக்கிட்டே போகுது.

உங்களை ஐத்தராபாத் சோனுக்கு அலாட் பண்ணியிருந்தாங்க உங்க பெர்பாமன்ஸ் பழைய பிராஞ்சில் நல்லா இருந்ததாலே இந்த சோன்லயே கேட்டு வாங்கிட்டேன். நல்லா பண்ணுங்க ஆல்தபெஸ்ட்”.

“சரிசார் முடிஞ்ச அளவுக்கு நெகட்டிவ்ல இருந்து வெளியே வரப்பாக்குறேன். அடுத்த காலாண்டுகளுக்குள் டார்கெட்களை அடைய எல்லா முயற்சியும் எடுக்கிறேன் சார்”
போன் கட்டானது.

எழுந்தேன்.

கால் வலி இருப்பதை உணர்த்தியது. கடிகாரம் மதியம் 12 மணியைத்தாண்டி ஓடியது.
காலையில் சாப்பிட வேண்டிய மாத்திரைகளைப் போட்டுக்கொண்டேன்.

போன் மணி அடித்தது.

டீ பையன் டீயை வைத்தான்.

தலைமை அலுவலகத்திலிருந்துதான் போன்.

“லீகல் டிபார்ட்மெண்டிலிருந்து பேசுறேன். சந்திரன் இண்டஸ்ட்ரீஸ் மேலே ஒரு வாராக்கடன் கணக்குக்கேஸ் கோர்ட்டில் இருந்ததே? இப்ப என்ன நிலைமை?”.

“சார் பைலைப்பார்த்துட்டு நானே கூப்பிடுறேன். நான் இன்னைக்குத்தான் புதுசா ஜாயின்பண்ணியிருக்கேன் சார்”.

ஏ.பி.எம்மிடம் கேட்டேன் பைலைக் கொடுத்தார்.

நாலுவருஷத்துக்கு முன்னாலயே கோர்ட்டுக்கு வெளியில் கடன் முகாமில் கடன் தீர்வுகண்டு கணக்கு முடிக்கப்பட்டிருந்தது.

தலைமை ஆபீஸ்க்கும் சோனல் ஆபீஸ்க்கும் கணக்கு முடிந்த விவரம் தெரிவிக்கப்பட்ட விவரமும் இருந்தது.

லீகல் டிபார்ட்மெண்ட்டுக்குப் போன் செய்து விவரங்களைக் கூறினேன்.

“சரி இன்னைக்குத் தனிக்கவரில் முந்தைய கடிதங்களை ஜெராக்ஸ் எடுத்து விவரமாக எழுதி அனுப்பியிருங்க ரொம்ப அவசரம் புதுசாவந்த ஜெனரல் மேனேஜர் கேட்கிறார்”. என்றார்.
போனை வைத்துவிட்டு எழுந்தேன்.

மீண்டும் போன். சோனல் ஆபீஸிலிருந்து

“தலைமையகத்திலிருந்து போன் வந்தது. சந்திரன் இண்டஸ்ட்ரீஸ் என்கிற கணக்கு பற்றிக்கேக்கறாங்க உடனே பதில் எழுதுங்க அனுப்புற பதிலில் ஒரு காப்பி எங்களுக்கு அனுப்பி வைங்க இன்னைக்கே பதிலை அனுப்பனும்”.

“உடனே அனுப்புகிறேன் சார்”. ஜெராக்ஸ் எடுக்க பேப்பர்களைப் பிரித்தேன்.

டீ யைத்தொட்டுப் பார்த்தேன் ஆறிவிட்டது. குடிக்க முடியாது.

தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதி சோனல் ஆபீஸ்க்கு காப்பி போட்டுப் பழைய கடிதங்களின் நகலுடன் அனுப்பிவிட்டு உட்கார்ந்தேன்.

“மேடம்” ஒருவர் கும்பிடுபோட்டு நின்றார்.

“என்னங்க”

மேடம் நான் பழைய மேனேஜர் இருக்கும் போது “தொழில் விரிவாக்கம் பண்ண “கண்ணன் இண்டஸ்ட்ரீஸ்” என்ற பெயரில் ரூ.10 லட்சம் லோன் கேட்டிருந்தேன். இங்கிருந்து எல்லாம் அனுப்பிட்டதாகச் சொன்னார். சோனல் ஆபிஸிலிருந்து இன்னும் சாங்ஷன் வரலை” என்று சொன்னார்.

“சரிசார்  கொஞ்சம் இருங்க சோனல் ஆபீஸில் கேட்டுக் சொல்கிறேன்”.

போன் மணி அடித்துக் கொண்டேயிருந்தது.

மணி ஒன்று நாற்பது.

சாப்பாட்டு நேரமாக இருக்கலாம்.

“வெளியில் உட்காருங்க கேட்டுச்சொல்றேன். சுகர் லெவல் குறைந்துவிட்டிருந்தது.
லேசான நடுக்கம். ரெண்டு பிஸ்கட் கடலை மிட்டாய் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தேன்.
சாக்லேட்டை மென்றேன்.

கஷ்டமர் வெளியில் உட்கார்ந்தார் .

எப்படியாவது பதிலைப்பெற வேண்டுமென்ற உறுதியோடு. மணி இரண்டே கால்
போன் பண்ணினேன்.

“சார் நான் குளத்துப்பட்டு மேனேஜர் பேசறேன் அட்வான்ஸ் செக்ஷன்ல பேசனும்” என்றேன்.

“அவரு புதுசா வந்திருக்கார் ஜாயினிங் டயத்துல இருக்கார். ஒருவாரம் கழித்துப் பேசுங்க”
வாடிக்கையாளரிடம் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.

கடுப்புடன் போலியாகச் சிரித்தார்.

போய்விட்டார்.

மீண்டும் போன் சத்தம்.

சோனல் மேனேஜர் லைனில் வந்தார்.

“உங்க கிளையிலேயே வாரக்கடன் வசூல் ரொம்ப மோசமாயிருக்குன்னு ரெக்கவரி ஜி.எம் வெரட்டுரார். என்ன செய்வீங்களோ இன்னைக்கு வாரக்கடன் கணக்குகள்ள வசூல்காட்டுங்க. நீங்க வெளியே கிளம்புங்க. மாலை 6 மணிக்கு எனக்கு எவ்வளவு வசூல்ன்னு சொல்லனும். ஒருவாரத்துக்கு மத்தியானத்துக்குப்பிறகு வாராக்கடன் கணக்குகள்ள வசூலுக்குக்கிளம்பீடுங்க.
அப்புறம் நாளை மதியம் 1 மணிக்கு சோனல் ஆபீஸில் மீட்டிங் இருக்கு. வாராக்கடன் கணக்குகள் பற்றி விரிவான விவரங்களோட வாங்க”.

சாப்பிட்டு டப்பாவை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தேன். கடைநிலை ஊழியர் வேகமாக வந்தார்.

“மேடம் சோனல் ஆபீஸிலிருந்து உங்களைக் கூப்பிடுறாங்க”

போனை எடுத்தேன்.

“தலைமை ஆபிஸ்லிருந்து அவசரமாக ஒரு விவரம் கேக்கறாங்க. நீங்க உடனே எல்லா கிளையிருந்து விவரம் சேகரித்து 4 மணிக்குள்ள சோனல் மொத்தத்துக்கும் அனுப்பனும். குறித்துக்கோங்க.” என்று சொல்லி அனுப்ப வேண்டிய விவரங்களை பட்டியலிட்டார்.

கண்ணைக் கட்டிக்காட்டில் விட்டதுபோல் இருந்தது. அவர் கேட்ட விவரங்களைச் சேகரிக்க குறைந்தது ஒரு நாளாகும்.

ஒரு மணிநேரத்துக்குள் எப்படிக் கொடுப்பது?.

அவசர அவசரமாக பைல்களைப் புரட்டினேன். கிடைத்ததை வைத்து எழுதி வைத்தேன்.

மூன்றறை மணிக்கு போன். விவரங்களைப் படிக்கும்படி கூறினார்.

முடிந்ததும் டைனிங் டேபிளுக்கு நடந்தேன்.

டப்பாவை திறந்தேன். சாப்பாட்டில் ஒருமாதிரியான வாடை.

சாப்பிட மனமில்லை. காலையில் 8 மணிக்கு சமைத்தது. அம்மா சமையல். குப்பையில் தட்டி விட்டேன்.

வீட்டுக்குக் கொண்டு சென்றால் அம்மா வருத்தப்படுவார்.

டீ பையன் டீ வைத்தான். மீண்டும் கொஞ்சம் பிஸ்கட்டும் கடலை மிட்டாய்களும். டீயைக் குடித்தேன். உயிர் வந்தது போல் இருந்தது. பசி அடங்கிவிட்டது.

மணி 4. இந்த நேரத்தில் எங்கேயும் சாப்பாடு கிடைக்காது. எங்கும் பரோட்டாதான்.

பையன் ஸ்கூல் பஸ்ஸில் வந்துவிடுவான். அம்மா பார்த்துக் கொள்வார்.
முகத்தைக் கழுவிவிட்டு வாராக்கடன் கணக்குள்ள பட்டியலுடன் உள்ளுர்காரரான கடைநிலை ஊழியரை முன்சீட்டில் உட்கார வைத்துக் கொண்டுää அவர் வழிக்காட்ட டாக்ஸியில் கிளம்பினேன்.

பெயரும் விலாசமும் படித்தேன்ää ஆட்கள் அவருக்கு தெரிந்திருந்தது. 6 மணிக்குள் வாராக்கடன் வசூலை முடித்துதிரும்ப வேண்டும். வசூலை ரிப்போர்ட் செய்ய வேண்டும். வழியில் டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டோம். 6 மணிவரை தாங்க வேண்டுமே.

என் கால்வலிக்கான மத்தியானம் சாப்பிட வேண்டிய மாத்திரை பையில் பத்திரமாக இருந்தது.

நல்ல வேளை நாளை சோனல் ஆபீஸ் மீட்டிங் ஞாபகத்துக்கு வந்தது.

காரில் போகும்போதே எ.பி.எம்-மிடம் வாராக்கடன் கணக்குகள் பைல்களை என் மேஜையில் அடுக்கி வைத்துவிட ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

ரெக்கவரி முடிந்ததும் ஆபிஸ்க்குப் போய் பைல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துக் குறிப்பு எடுக்க வேண்டும்.

காலையில் ஆபீஸ் போனால் அதைத் தொடமுடியாது. மறுபடியும் 11 மணிக்கு சோனல் ஆபீஸ் கிளம்ப வேண்டும். அம்மாவுக்கு போன் பண்ணி சாதம் வைக்கச் சொன்னேன்.

“டிபன்தானே சாப்பிடுவாய்”

“இன்னைக்கு நிறைய வேலை நிறைய பசி. அதனால் சாப்பாடு வேணும். வரலேட்டாகும்”

“சரிம்மா”

அம்மாவுக்கும் பழகிப்போச்சி.

எடை பாரமானது! – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

அட.. எப்படி இருந்த நடிகர் பிரபு இப்படி மாறிட்டாரே! இதெல்லாம் எதற்காக?  புகைப்படத்தைக் கண்டு ஷாக் ஆன ரசிகர்கள்!! - Tamil Spark

நான் ஆரம்பித்திருந்த “வாத்ஸல்யா ஃபார் யூமன் என்ரிச்மென்ட்” அமைப்பின் தகவல் அட்டையில் நான் ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்றதோடு “மனநலம் திடமாக்க உடல், உணர்வு, சமூக ரீதி” என்ற சொல்லைப் பார்த்து முப்பது வயதான விட்டல் வந்திருந்தார். கணினி வரைகலை வேலை, சிறப்பான படைப்புத்திறன் உள்ளவர். தான் இப்போது இருப்பதையும், மாறினால் எவ்வாறு இருக்கும் என்றதையும் கேலிச்சித்திரமாக வரைந்து காட்டினார்.

இவ்வாறு செய்தாலும், விட்டல் எங்குப் போனாலும் எதைச் செய்தாலும் தன் அளவுக்குமீறிய எடை கூச்சம் தருவதைச் சொன்னார். எப்படியோ இதைத் தாங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் சென்ற வாரம் நிச்சயமான ஜோதி இவரை வேண்டாம் என்றது ஆட்டிவிட்டது. நிச்சயம் ஆனதும் அந்த மகிழ்ச்சியில் இவர் எடை ஏறியது. எடை ஏறியதால் ஜோதி இவனைப் பொறுப்பு இல்லாதவன் என எடுத்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம். இப்போதே இப்படி என்றால் கடமை மேல் அக்கறை இல்லையோ? மூன்றாவது முறையாக இப்படியே நடந்திருக்கிறது.

பெற்றோர் இல்லை. தாத்தா பாட்டியுடன் இருக்கிறார். கல்யாணமான அக்காக்களுக்கும் இவரைப் பற்றிய கவலை. என்ன செய்வது என்று புரியவில்லை.

வேலை சம்பந்தமாக மனநலம் பற்றி என்னுடைய கட்டுரை ஒன்றைப் படித்ததும், தனக்குள் நேர்வதை இணைத்ததால் வந்தேன் என்றார்.

பெற்றோர் விபத்தில் இறந்ததாகக் கூறினார். தாத்தா பாட்டி இவனையும் அக்காக்களையும் வளர்த்தார்கள். எழுபது வயதான தாத்தா புத்தகங்களை பிழை திருத்துவதில் பெயர்பெற்றவர். சுறுசுறுப்பானவர். அதனால்தான் அவருக்குக் கச்சிதமான உடல்வாகோ என்று விட்டல் நினைப்பாராம். அதைப் பார்த்து ஏங்கியதுண்டு. இந்த எண்ணத்தை அறிந்திருந்த அறுபத்து மூன்று வயதான பாட்டி ஆறுதலாக இருப்பாள்.

மூன்று நிராகரிப்பிற்குப் பிறகு தாத்தா பாட்டி படும் கவலை விட்டலின் மன அமைதியைப் பாதித்தது. அக்காக்களின் மன வருத்தம் வேறு மனதைத் துளைத்தது. அவர்களிடம் சொல்லாமல் வந்திருக்கிறேன், வீடு சென்றதும் சொல்ல நினைத்தேன் என்றார்.

பாசம் பொங்க, மறுநாள் இவருடன் தாத்தா, அக்காக்களும் வந்தார்கள். மூவரும் விட்டல் தன்னலமற்ற பரோபகாரி, அக்கறையாக இருப்பவர் என்று விஸ்தாரமாக விவரித்தார்கள். விட்டல் தன்னடக்கத்துடன் தன்னால் ஆனதைச் செய்கிறேன் என்றார்.

விட்டலின் வாழ்நிலை, பழக்க வழக்கம், அவருள் நேர்வதை அறிய ஆரம்பித்தேன். பெற்றோர் படைப்பாற்றல் உள்ளவர்களாக இருந்திருந்ததால் ஏதோவொரு கலை வடிவத்தை உபயோகித்து பாடங்களை கற்றுத் தருவார்கள். படிக்கும் நேரமும் சுகமான அனுபவமானது. எளிதாகப் புரிந்தது. அந்த ஞாபகத்தை மனம் உருக வர்ணித்தார். இவ்வாறு நினைவலைகள் ஓடிவருகையில் அவர் மனம் வருந்துவதைப் பாட்டி அறிவாள். அவருக்கு எப்போதும் முறுக்கு, ரிப்பன், தட்டை செய்து வைப்பாள். வருத்தம், சோகம் உணர்ந்ததும் அதைச் சாப்பிடுவார். கணக்குப் போடும் போதும், பாசமான தாய்தந்தையை சினிமாவில் பார்க்கையிலும் சாப்பிடுவாராம்.

அதே சமயம், தாத்தா-பாட்டி பார்த்துப் பார்த்து பாசமாகச் செய்யும் போது இவ்வாறு தோன்றுவது அவர்களைக் குறை கூறுவதுபோல் ஆகிறதோ என மனம் உறுத்தியது.

அலுவல வேலை விட்டலுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடிக்கடி ஏதோவொரு பாராட்டு, புகழாரம், கூடவே சம்பள உயர்வு. அக்காக்களுக்கும் ஆசிரியர் வேலையில் இவ்வாறே. அம்மாவின் ஆசி என எடுத்துக் கொண்டார்கள்.

விட்டலைத் இயங்கும் விதங்களைக் கவனித்துக் குறித்து வரச் சொன்னேன். நாள் முழுதும் செய்வதை, உணர்வதை, உட்கொள்ளுவதைக் கண்காணித்துக் குறித்துக் கொண்டு வருவது என முடிவாயிற்று.

விட்டல் தன் உணர்வுகளையும், சாப்பிடும் உணவையும் ஒப்பிட்டுப் பார்த்ததும் திடுக்கிட்டார். தனக்குச் சோகம், சந்தோஷம், கோபம், அழுத்தம் என ஒவ்வொரு உணர்விற்கும் ஓர் வகையான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகிறோம், அதைச் சாப்பிட்டால் மட்டுமே மனச்சாந்தி வருவதாகப் பழக்கப் படுத்தி விட்டோம் என்பது புலனாயிற்று.

இதேபோல் அடிக்கடி சிறு காரணிகளுக்கு ஹோட்டல் செல்வதே அத்துமீறி சாப்பிடுவதற்காக என்று புரிந்து கொண்டார். தன்னுடைய சமூக உண்ணுதலையும் சேர்த்துக் கொண்டார். இதை மையமாக வைத்து ஸெஷன்களில் மேலும் உரையாட, உடற்பசி அல்ல, உணர்வுகளின் தூண்டுதலைத் தாம் எதிர்கொள்ளும் விதமே எடை ஏறுவதற்குக் காரணம் என்பது தெளிவாயிற்று. தன் போக்கைப் பற்றிப் பேசப் பேச வியந்தார்.

இதை மாற்றி அமைக்க, உணர்ச்சி வசப்படும்போது சாப்பிடுவதற்குப் பதில், நடப்பது, பாட்டுக் கேட்பது போன்ற வேறு விதங்களில் ஆறுதல் பெறப் பழக்கிக் கொள்வது எனத் தீர்மானித்தோம். உணர்ச்சி வசப்படும்போது கார்ட்டீஸால் ரசாயனம் அதிகரித்து, சோகமாக்கும். ஏதோவொரு உடற்பயிற்சி செய்தால் ரசாயனம் குறையும். வேகமாக மூன்று நிமிடங்கள் நடந்தால் கூடப் போதும். விட்டல் இதைச் செயல்படுத்த, வித்தியாசம் தெளிவானது. எவை எடையைப் பாதிக்கின்றன என்ற தெளிவு பிறந்தது.

பெற்றோரைப் பற்றிப் பேசும்போது, பார்க்கும்போது, நினைக்கும்போது விட்டல் உணர்ச்சி வசப்படுவார். இதை மையமாக வைத்துச் சில செயல்பாட்டைச் செய்ய நியமித்தேன். எப்போதெல்லாம் நேரிலோ, திரைப்படத்திலோ பெற்றோர்களைப் பற்றி ஏதோ காண்கிறானோ, அதில் பெற்றோரைப் பாவிக்கும் விதத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். மாதத்தின் முடிவில் ஆராய்ந்து கலந்துரையாடுகையில், விட்டல் புரிந்து கொண்டார். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தன் பெற்றோரின் அரவணைப்பை, அவர்கள் செய்ததை நினைத்துக் கொண்டு போற்றும் விதம், அவர்கள் தன்னுடன் இருப்பதாகவே பாவிக்கச் செய்கிறது. அதே சமயத்தில், மற்றவர்கள் பந்தத்தைப் பார்ப்பதும் திருப்தி அளிக்கிறது. இதை ஏற்றுக் கொண்டதும், ஒப்பிட்டு ஏங்குவதை நிறுத்தியதும், விட்டலுக்கு அந்த பெற்றோர் ஞாபகம் வரும் தருணங்கள் சந்தோஷமானதாக மாறியது.

இந்தப் பெற்றோர் உறவை மையமாக வைத்து விட்டல் தயாரித்த குறும்படம் ஒன்று முதலிடம் பெற்றது!

விட்டலிடம் மற்றவர்களிடம் இல்லாத நற்குணம் ஒன்றைக் கவனித்தேன், அவருக்கு வற்றாத நன்றி உள்ளம் என. என்ன உன்னதமான வளர்ப்பு, கொள்கை!!

அடுத்தபடியாக, விட்டலின் எடையைச் சரிசெய்வதில் ஈடுபட்டோம். எங்கள் ஸெஷன்களில் டையட்டிஷியன் ஒருவரை ஆலோசிக்கச் சேர்த்துக் கொண்டேன். அவர் உணவைப் பற்றிய தகவல்கள் அளித்து, விட்டல் கையாளுவதைப் பார்த்துக் கொண்டார். விட்டல் அவற்றை மூன்று வாரங்களுக்குச் செயல் படுத்த, அதுவே பழக்கமாகியது.

விட்டலின் பாட்டியை டையட்டிஷியனுடன் சந்திக்கச் செய்தேன். பாட்டி தன்னால் விட்டலின் தவிப்பைப் பார்க்க இயலாததால் உணவாக அன்பைக் காண்பித்ததை விவரித்தாள். டையட்டிஷியன் தெளிவு செய்ததில் தன் பேரனுக்கு உணவுகளை உடல் நலனுக்கு ஏற்றவாறு எப்படிச் செய்வது என்று புரிந்து கொண்டாள்.

விட்டல் தனியாக இல்லை என்று தாத்தா பாட்டி இருவரும் எடை சரிசெய்வதில் பங்கு கொள்ள விருப்பம் தெரிவிக்க, அதைப் பற்றி ஆலோசித்தோம். விட்டல் தினசரி செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டோம். நடப்பது, நீச்சல், பாட்டியுடன் மாடிப்படி ஏறுவது, தாத்தாவுடன் சைக்கிளில், மூவருமாகத் தோட்ட வேலை எனப் பல ஒவ்வொன்றாகச் சேர்ந்து கொண்டது. உறவுகள் கைகொடுத்தால் வெற்றி பெற உதவும், நீண்ட காலம் செய்து வர உதவும் என்று படித்ததைச் சொந்தமாக அனுபவிக்கிறேன் என்று விட்டல் மகிழ்ந்து பகிர்ந்தார்.

இது போய்க்கொண்டிருக்கையில், விட்டல் தன்னைப் பற்றி மிகத் தாழ்த்தி நினைப்பதைச் சரி செய்யவும் ஸெஷன்கள் அமைத்தோம். நெடுநாளாக, மிகுந்த எடையினால் பள்ளி, கல்லூரி, வேலையில் பல பேர்களின் கிண்டல். போகப்போக, மற்றவர்கள் தன்னைப் பற்றி எப்படிச் சொன்னார்களோ, தான் அது மட்டுமே என விட்டல் எடுத்துக் கொண்டார். தன் தனித்துவத்தைத் தொலைத்து விட்டார். மீண்டும் மீண்டும் முயன்றும் எடையை வகையாக வைத்துக் கொள்ள முடியாதது தன்மானத்தைப் பாதித்திருந்தது எனப் பகிர்ந்தார்.

விட்டல் தன் உணவு, செயல்பாட்டைச் சரி செய்யச் செய்ய, உடலில் மாற்றம் தென்பட்டது. கூடவே, இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. எப்போதும் பலருக்குக் கற்றுத் தர வேண்டும் என்ற ஆசை, தன் டீம்லீட்டுடன் பேசி உற்சாகமாகப் பல வர்க்ஷாப் செய்தார். வந்தவர்கள் கற்றலோடு, இவருடைய உற்சாகத்தையும் சேர்த்து எடுத்துச் சென்றார்கள்.

இந்த தருணத்தில், ஜோதி தன் பெற்றோருடன் மீண்டும் விட்டல் வீட்டிற்கு வந்தாள். விட்டலின் உடல், நடத்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு திடுக்கிட்டார்கள். அப்போது நிச்சயம் செய்ததை நிராகரித்தபின், வேறு யாருக்கும் ஜோதி சம்மதம் சொல்லவில்லை என்றார்கள். அந்த ஓரிரு சந்திப்பில் விட்டலிடம் கிடைத்த மன நிம்மதி தன்னை இப்போது இழுத்து வந்ததாகக் கூறினாள் ஜோதி. மேலும், அவருடைய வர்க்ஷாப் ஒன்றில் ஜோதியும் பங்கேற்றிருந்தாள், அனைவரும் உற்சாகமாகக் கற்றுக் கொண்டதைப் பார்த்து வியப்புற்றாள். வர்க்ஷாபில், வாழ்க்கையில், விட்டு ஓடுவது சுலபம், நின்று செய்வது கடினம்,, ஆனால் செய்தால் அதில் இருக்கும் மணம் என்றென்றைக்கும் என்று விட்டல் சொன்னது தன் மனதை மாற்றி விட்டது என்றாள் ஜோதி.

ஆகாசராஜனும் சின்னப் பறவையும்- கன்னடக் கதை தமிழில் தி.இரா.மீனா

IndianNovelsCollective on Twitter: "One of the foremost writers in  #KannadaLiterature, #Vaidehi's work—spanning over 40 books in poetry, short  stories and novels—is known for having a firm and frank feminist voice,  that has

 

மொழிபெயர்ப்பு  :  கன்னடச் சிறுகதை

மூலம்          :  வைதேகி [ Vaidehi ]

ஆங்கிலம்       :  சுகன்யா கனரல்லி [Sukanya Kanarally ]

தமிழில்         :  தி.இரா.மீனா

 

அந்தச் சிறிய பறவைக்கு இறக்கைகள் முளைக்க மற்ற பறவைகளை விட அதிக நாளானது. இன்னும் அது வானத்தில் பறக்கவில்லை. ஏனப்படி? ஏனெனில் அந்தச் சிறிய பறவை தன்னுடைய ஆகாசராஜனை கண்டுபிடிக்கவில்லை. மற்ற எதற்கும் அந்தப் பறவை இணங்காது. அதனால் அந்த சிறகுகள் வீணாகத்தானிருந்தன.

சிறகுகளின் மடிப்பிற்குள் உஷ்ணம் தகித்தது.அந்தச் சிறகு உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது. சிறகுகளை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்பதுதான் அந்தச் சிறிய பறவையின் ஒரே விருப்பம்.

வைகறைப் பொழுதில் ,மற்ற பறவைகள் பறந்து போய்விடும்.ஆனால் அந்தச் சிறிய பறவை ஏக்கத்துடன் கூட்டிற்குள்ளேயே இருக்கும்.’எப்போது என் ஆகாசராஜன் வருவான்? எப்போது என் சிறகுகள் படபடக்கும்?’ என்று ஒரு கனவைப் பின்னியபடி இரவும், பகலும் பாடிக் கொண்டிருக்கும்..

’என் ஆகாசராஜனே ,என்னிடம் வா ! நண்பனே இங்கே வா! நான் காத்திருப்பது உனக்குத் தெரியாதா?’

பாடிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய பறவையை மற்ற பறவைகள் கேலி செய்தன.தாமதமாக இறக்கைகள் வளரும் பறவைகளின் விதி , மற்றவைகள் பெருமை பேசிக் கொள்ளும் நிலையைக் கேட்பதுதான்.சில சமயங்களில் ,அவைகள் பறப்பதற்கு முன்பாக அந்தச் சிறிய பறவையின் கூட்டிற்குள் எட்டிப் பார்த்து அலகால் குத்தி ’பறவையே ,பறவையே, எங்களுடைய  தினப் பயணத்திற்குப் புறப்பட்டுவிட்டோம் “என்று பரிகாசம் செய்யும்.அந்தப் பறவை தன் வாயைத் திறக்காது. பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும்.அவைகள் எல்லாம் புறப்பட்டுப் போன பிறகு, சின்னப் பறவை கூட்டைப் பெருக்கி சுத்தம் செய்து ,கோலம் போட்டு , கனவுகள் என்ற உடையணிந்து காத்திருக்கும். இப்படியாக அந்தச் சின்னப் பறவைக்கு வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

மாலையில்,அந்தப் பறவைகள் திரும்பும் போது சின்னப் பறவையின் கூட்டருகே சிறிது நேரம் நின்று தங்களுடைய அலகின் அழகு, சிறகுகள், ஆகாயம் மற்றும் பிறவற்றைப் பற்றி விலாவாரியாக விவரிக்கும்.

.அவை எந்த அளவிற்கு விவரிக்கின்றனவோ அந்த அளவிற்கு தங்களின் மீதும், தங்கள் வானத்தின் மீதும் காதல் கொண்டிருந்தன. சின்னப் பறவைக்கு மேலும் கேட்கவேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் அதற்கு எதிராக மிக இறுக்கமாகவும்,சுருங்கியும் உட்கார்ந்திருக்கும்.அது சோகமே உருக்கொண்டதாகிவிட்டது. விடியல் தன் கண்களைத் திறக்கும் போதும், இரவு கண் மூடும்போதும் ,அந்தப் பறவை பாடிக்கொண்டும், சுருங்கிக் கொண்டுமிருந்தது.

நாட்கள் உருண்டன.ஓர் அருமையான நாளில்  சூரியன் கதிர்கள் மின்னிக் கொண்டு கண்  விழித்தன. அப்போது..

அதன் கூட்டைப் பொலிவான ஒளி தொட்டது! ’ என்ன ஒளி !’  என்று சின்னப் பறவை திகைப்பாய்க் கூவியது.

’ பார் ! உன் ஆகாசராஜனை! அவனுடைய ஒளி உன் கூட்டின் விளிம்பை  முத்தமிடுகிறது ! ’

அந்தக் குரல் எங்கிருந்து வருகிறதென்று கவனிக்கக் கூட அந்தப்

பறவைக்குப் பொறுமையில்லை. ’என் ஆகாசராஜனா ? அவன் எங்கே ?’

’அந்த ஒளியைக் கடந்து பார். கோட்டின் இறுதியில் அவனைப் பார்க்க முடியும்.’

அந்தச் சின்னப் பறவை நிமிர்ந்து உட்கார்ந்தது.கழுத்தை நீட்டி இங்கு மங்கும் பார்த்தது. ஒளியின் இழையோடு  சேர்ந்தாடியது.கூட்டின் குறுக்கே நடை போட்டது. தன்னிருப்பில் மகிழ்ந்தது.நின்ற இடத்திலிருந்தே உடலைச் சுழற்றியது.இது அதன் சொந்த இறக்கை !அந்த எண்ணம் அதன் மனதுக்குள்ளும்,உடலுக்குள்ளும் கிளர்ச்சி  அலைகளைத் தூண்டியது.

’ ஓ, என் ஆகாசராஜனே ! ’ ரகசியமாகச் சொன்னது.

ஆகாசராஜனிடமிருந்து பதிலில்லை.

அதன் உடலில் அடைபட்டிருந்த சிறகுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தானாகவே விரிந்தன. வயிற்றின் கீழிருந்த சிறகுப் பகுதியில் குளிர் பரவியது.கிச்சுகிச்சு மூட்டுவதாக சின்னப் பறவை உணர்ந்தது.ஆகாசராஜன் என்னைப் பார்க்க வந்து விட்டானா ?அல்லது நான் அவனிடம் போயிருக்கி றேனா? இந்த இரண்டில் எது நிஜம்? இந்தக் கேள்வி அதற்குச் சிரிப்பை வரவழைத்தது.சின்னப் பறவை நடந்தது.கடைசியில் அது ஆகாசராஜனிடம் போய்விட்டது.

’ஆகாசராஜனே !’சின்னப் பறவை உடனே கூப்பிட்டது. ’என் சிறகுகளைப் பிரிக்காமல் ஏன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? எவ்வளவு காலமாக நான் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்! உனக்கு என்னை அடையாளமாவது தெரிகிறதா?’ தன் கழுத்தைக் குலுக்கியபடி கேட்டது.

இன்னும் அந்த ஆகாசராஜனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

’அது என்னை ஆழமாக உற்றுப் பார்க்கிறதோ ? ’என்று அந்தப் பறவை நினைத்தது. ’ ஆகாசராஜனின் பார்வைக்குள் இந்த பூமி முழுவதுமே சுற்றி மூடப்பட்டு இருக்கிறதோ ? ’ பறவை யோசனையில் தன் இருப்பையே மறந்து போனது. ’ஐயோ ! நான் எப்போது பூமியானேன் ?’ சின்னப் பறவை பரவசமானது.’ஆகாசராஜன் என்னைத் தான் உற்றுப் பார்க்கிறானோ? அல்லது என் பின்னாலிருக்கும் யாரையாவது பார்க்கிறானோ? என்று வியப்படைந்தது. பிறகு சட்டென்று கழுத்தைத் திருப்பிப் பார்த்தது. யாரோ ஒருவரின் நிழல் பின்னால்  தெரிந்தது. ’அது யாரென்று  நான் பார்க்க வேண்டுமா? அதில் அர்த்தமில்லை.எனக்கு ஆகாசராஜன் வேண்டும். இந்த ஆகாசராஜன்  மட்டுமே,வேறு யாருமில்லை. எனக்கு அதுதான் முக்கியமான விஷயம்.’

இதற்குள் அதனுடைய இறக்கைகளின் ஒவ்வொரு மடிப்பும் பிரிந்தது.பரந்த வெளியில் பறக்க வேண்டும் என்ற வேகமான உந்துதல் அதற்குள் எழுந்தது.அங்கே ஆகாசராஜனும் இருந்தான்.’ஆனால் நான் எப்படிப் பறப்பேன்?’ பறவை சிந்தித்தது. ’ஏன் இன்னும் என் ஆகாசராஜன் அமைதியாக  இருக்கிறான் ? ’

’ஆகாசராஜனே, நான் இங்கே இருக்கிறேன் !’ கவலையில் தொண்டை அடைக்கச் சொன்னது.

ஆகாசராஜன் பேசினானா ? இல்லை. வெறிப்பதை அவன் நிறுத்தவு மில்லை.

பகல்பொழுது மெதுவாகத் தன் வர்ணத்தை இழந்து கொண்டிருந்தது. ’இருட்டுவதற்கு முன்னால் நான் பறந்துவிட முடியுமென்று எவ்வளவு ஆசையாய் நினைத்தேன். ஆனால் இங்கே ஆகாசராஜன் அமைதியாக இருக்கிறானே’ சின்னப் பறவை நம்பிக்கையிழந்தது.தன் சமநிலையிலி ருந்து தவறி ,திடீரென அது அதிகம் பேசத்தொடங்கியது.தன்னைச் சுற்றியுள்ள பறவைகள் தன் காயத்தைக் குத்திக் கிளறியது, தான் ஏக்கத்தோடு காத்திருந்தது உள்ளிட்டவற்றைச் சொன்னது. புதிய கனவுகளைப் பின்னத் தொடங்கியிருந்த இந்த நேரத்தில்  பயனின்றிப் போன தன் வீணான கடந்த காலக் கனவுகளைச் சொல்லிச் சிரித்தது. மகிழ்ச்சியோடு தன்னால் முடிந்த அளவு தான் உயரப் பறக்க நினைத்ததை, காத்திருப்பு வீணானதை விவரமாகச் சொன்னது. சொல்ல முடியாதவற்றை கூடச் சொல்லியது. எல்லாம் குழப்பம்தான்.

ஆகாசராஜன் பேசினானா  ?

இல்லை. பேசவில்லை.பொம்மையைப் போல ஊமையாகவும், கல்லைப் போல செவிடாகவுமிருந்தான் .இறக்கைகளோடு  கூடத் தன்னால் பறக்க முடியாது என்பது போல .ஏதோ பெரிய குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது போல. ஒரு முறை தன் கண்களைத் தேய்த்து ,மூக்கைச் சொறிந்து கொண்டான். பிறகு பறவையின் உடலை நீவிவிட்டு, சிறகுகளைத் தடவி்னான்.’ ’எவ்வளவு தெய்வீகமாகத் தன் உணர்வை வெளிப்படுத்துகிறான் ! ’ என்று  நினைத்து பறவை மெய்மறந்து போனது.ஆனால் ஒரு கணத்திற்குள், அவன் கவனம் வேறெங்கோ போய்விட்டது. பறவைக்கு தூக்கிவாரிப் போட்டது ; திக்பிரமை அடைந்தது. ’எதைத் தொலைத்தாய்?’ என்று கேட்க நினைத்தது.ஆனால் தன் உந்துதலை அடக்கிக் கொண்டு ,அவனைப் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தது.அவனைப் பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற  ஆசை அதிகமானது.

’ நான் அதிகமாகப் பேசிவிட்டேனா ? என்னால் என்ன செய்யமுடியும்?’ பறவை  குழப்பமாக உணர்ந்தது. அவன் மிக அமைதியாக இருந்தான். அந்த நேரம் அர்த்தமில்லாமல் கழிந்தது. பாத்திரத்தின் அடியில்

திரண்டிருந்த தூசிக் குவியலான  சின்னப்பறவையின் கடும் மௌன உளைச்சலை அவை வெளியேற்றிவிட்டன. அதன் முடிவென்ன ? பறவையால்  இன்னும் பறக்க முடியவில்லை என்பதுதான் !அந்தச் சோகம் இன்னும் நீடித்தது. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வாழத் தான் தயாரென்னும் நம்பிக்கையை அது  அவனுக்குள்  எப்படி ஏற்படுத்த முடியும்? அந்தப் பறவை தொண்டைக்குள்ளேயே முனகிக் கொண்டது.அது ஒன்றும் அழு மூஞ்சியல்ல.

ஆகாசராஜன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அந்தச் சின்னப் பறவையும் அவனைப் போலவே.

ஒரு மென்மையான காற்று அவர்களைக் கடந்தது. அப்போது தனது இறக்கைகளை  படபடத்துக் கொண்டு காலதேவன் வந்தான்.அந்தச் சின்னப் பறவை கூர்மையாக கவனித்தது. நம்பிக்கையின்மை வளர்ந்தது.’ ஏய் ஆகாசராஜனே , காலம் நம்மைக் கடப்பதற்கு முன்னால் ஒரு தடவை என்னுடன் பேசு. இப்போது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இங்கிருந்து பறந்து போ.’

ஆகாசராஜன்  என்ன சொன்னான்? ஒன்றும் சொல்லவில்லை.

அவன் வார்த்தைகளைத் தொலைத்து விட்டானா? அதிகம் பேசியவனைப்  போலச் சோர்வாக இருந்தான்.அந்தச் சின்னப் பறவை எழுந்து அருகே போய் அவன் முகத்தைத் துடைத்துத் அவன் அலகை ஆட்டியது. ’ என் அலகு உன்னைக் காயப்படுத்தியதா ? ’ஆதரவாகக் கேட்டது. அவனுக்கு என்னதான் வேண்டும் ?

ஆதரவின்றி,அந்தச் சின்னப்பறவை குறுக்கி உட்கார்ந்து கொண்டு ஆகாசராஜனையே வெறித்துக் கொண்டிருந்தது. அந்தச் சின்னப் பறவை இப்போது எவ்வளவு  கனமாகி விட்டது ! தியானத்தில் தன்னை மறந்து பூமி அடுக்கில் சூழப்பட்ட  துறவி போல ஆகாசராஜனும் பாதி மூடிய கண்களுடன் உட்கார்ந்தி்ருந்தான்.

பிறகு,

’பறவையே ..சின்னப் பறவையே..மெல்லிய பறவையே ..”

இப்போது இது யார் ? மூப்பின் எல்லையிலான காலதேவன்!

ஞாபகங்களை இருமிக் கொண்டு வருபவன் ! இந்த இருமல்  தீரக்கூடியது என்று யார் இவனிடம் சொன்னது ? பழங்காலத்தின் தஸ்தாவேஜுக்களை மாத்திரைக்குப் பின் மாத்திரையாக விழுங்கியவன். இருமல்தான் மோசமாகிப்  போனது.கால்களைக் குறுக்காகப் போட்டபடி காலதேவன் தன் தேய்ந்து போன இறக்கைகளைச் சரிசெய்து கொண்டான்.

’யாரது! காலதேவனா ?’

’சின்னப்பறவையே, உன்னை இப்படி ஒரு சோகமான நிலையில் என்னால் எப்படிப் பார்க்கமுடியும் ? அதனால்தான் வந்தேன்.ஏன் உன் கண்களில் ஈரம் கசிகிறது ? நீ பயங்கரமாக கலங்கிப் போயிருக்கிறாயோ?’ வாத்ஸல்யம் வெளிப்படும் தொனியில் கேட்டான்.

அந்தச் சின்னப்பறவை தன் வாயைத் திறக்கவில்லை.உடைந்து போகவுமில்லை.

’இப்போது, கல் போல இருப்பதில் அர்த்தமில்லை. அழுதுவிடு’ பறவை அழவில்லை.

’நான் உன் பேச்சைக் கேட்டேன்.ஆகாசராஜனோடு நீ கழித்த நேரம் வீணாகி விட்டதா? என்னிடம் விட்டுவிடு .நொடியில் நான் அதைத் தணலாக்கி விடுகிறேன்.’

அந்தக் கணம் கடந்து விட அனுமதிக்காமல்,அந்தப் பறவை ஞாபகங்க ளுக்குள் ஒட்டிக் கொண்டது. காலதேவன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். அவன் மீசை அந்த தாளத்திற்கேற்றது போல ஆடியது.

’அது போகட்டும்.பறவையே ,உனக்கு இந்த ஆகாசராஜனின் கதை தெரியுமா?’

பறவையின் கண்கள் பிரகாசித்தன.எதுவாக இருந்தாலும்,அது

ஆகாயத்தின் கதை.தனக்கு அது கண்டிப்பாகத் தெரியவேண்டும்.ஆனால் ஏன் அதன் இதயம் அப்படி உக்கிரமாக அடித்துக் கொள்கிறது?படபடக்கும் இதயமாவது இருக்கிறதே. அந்தப் பறவைக்கு மயிர்கூச்செறிந்தது. இருமியபடியே காலதேவன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

இதே ஆகாசராஜன் ஒரு காலத்தில் ,இவ்வளவு பெரிதாக அல்லது அகலமாக இருக்கவில்லை.அவனுடைய இறக்கைகள் வலிமையாக இருந்தன. தனக்கு எங்கு பறக்க விருப்பமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் இறக்கைகளைப் படபடவென அடித்தபடி சுற்றி வருவான்.ஒரு நாள் அழகான நிலத்தில் ஓர் அழகிய பறவையைப் பார்த்தான்.அடுத்த கணம், அந்தப் பறவையின் பின்னால் பறக்கத் தொடங்கினான்.’

அந்தப் பறவையின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது போலிருந்தது. இல்லை,இதயம் துடிக்க மறக்கவில்லை.இவ்வளவையும் அதுதான் கேட்கிறதா? ஓர் அற்புதமான காட்சியின் ஒரு பகுதியாக அது இப்போது  இருக்கிறதா? அந்தப் பறவை யோசிக்க முயன்றது.’ஏன் ?ஒரு பறவையின் பின்னால் போக ஆகாயம் முயன்றிருக்குமா ?’மென்மையாகக் கேட்டது.

’என்னை நம்பு .நான் சொல்வது உண்மைதான்.என்னால் கூட உண்மைகளை அழித்துவிட முடியாது.’

அவர்களிருவருக்கிடையே மௌனம் நுழைந்தது.அதைத் தன் கையால் விலக்கியபடி காலதேவன் தொடர்ந்தான்,’அந்தப் பறவையோடு ஒன்றாக சேர்ந்திருக்க வேண்டுமென்பதில் அவன் எவ்வளவு தீவிரமாக இருந்தான் ! விருப்பம் என்பது அப்படி ஆழமாக இருக்க வேண்டும்.அவ்வளவு அருமை! அந்த நாட்களின் ஆகாசராஜனைப் பற்றி உன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது!’

’மேலே சொல் , காலதேவனே ,’ என்று உயிரற்ற குரலில் பறவை சொன்னது.

’என்ன சொல்வது ?காலம் என்ற புராதன  தேவனுக்கு மரணமென்ப தில்லை.எல்லா துக்கங்களையும் பார்க்கிற பார்வையாளனாக நான் தொடர்ந்து கொண்டிருப்பேன்.அந்தப் பறவைக்கான கூடு வேறெங்கோ இருந்தது.தான் எங்கிருந்து வந்ததோ அந்த இடத்திற்கு அது திரும்பிப் போய்விட்டது.தன் இறக்கைகள் வெட்டப்பட்டது போல ஆகாசராஜன் உணர்ந்தான்’.

கேட்கும் இயல்பே  இனி மறந்து போகும் என்பது போல அந்தப் பறவை இருந்தது. வெகுகாலமானது போல உணர்ந்தது. அப்படியானால்? யதேச்சையாகத் தான் பார்த்த அந்த நிழல் மற்ற பறவையினுடையது தானா ? அது அதை நம்ப முயற்சிக்கக் கூடாது.

’ நீ ஒரு சின்னப் பறவை.! உனக்குத் துக்கம் வந்தால் , நீ கூட அதைப் பற்றி கவலைப்படுவாய் , அதை உனக்குள் அடக்கிக் கொள்வாய். அடுத்து என்ன நடந்ததென்று கேள். அதிலிருந்து ,இந்த ஆகாசராஜன் தன் இறக்கைகளை திரும்ப மடக்கிக் கொள்ள மறந்துவிட்டான்.பறப்பதும் கூட அவனுக்கு மறந்து போனது. சிக்கி நின்றுவிட்டான்.ஆனால் அவன் நீளமும், அகலமும் வளர்ந்து கொண்டே போனது.’

அந்தச் சின்னப் பறவை இப்போது அழுதது.

அதன் கண்ணீர் சிறகுகளின் மடிப்புகளில் பட்டுப் பரவ ,அவை

உறுதியாகி பறப்பதற்குத் தயாரானது. அவை உடலோடு கெட்டியாக ஒட்டிக் கொண்டன  ’

’சின்னப் பறவையே ! பின் வாங்காதே. நீ அவ்வளவு சீக்கிரம் மனம் தளர்ந்துவிடக் கூடாது.என்னுடன் வா.வானத்தில் உனக்குப் பிடித்த இடத்தைப்  பார்த்துச் சுதந்திரமாகப் பற.’

தன் பொக்கை வாயைத் திறந்து காண்பித்து காலதேவன் சிரித்தான்.

கண்ணிமைகள் படபடக்க அந்தச் சின்னப்பறவை ஆகாசராஜனை மீண்டும் பார்த்தது. அவனுடைய  நீளம்,அகலம்,ஆழம் எல்லாம் இன்னமும் வளர்ந்திருக்கிறதா ? உற்றுப் பார்க்க கண்களில் நீர்த்திரையிட்டது. பிறகு அவனுடைய இறக்கைகளின் மடிப்பிற்குள் அது புகுந்தது ,இந்த உலகத் தையே மறந்தது.

காலதேவன் ஊமையாக நின்றான்.அவனைக் கூடச் சட்டை செய்யாமல் அந்தச் சின்னப்பறவை வானத்தில் தனக்குப் பிடித்த பரந்த வெளியை நோக்கி நடந்தது.பின்பு அந்தக் களங்கமற்ற அமைதியில் தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு, ஒரு சின்னச் சத்தமுமின்றி பறந்து போனது.

 


 

Vaidehi - India - Poetry International

வைதேகி [ ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி ] நவீன கன்னட இலக்கியப் பெண் படைப்பாளி.ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள்,மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,பதினைந்து சிறுவர் நாடகங்கள்,ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல பங்களிப்புகள் உடையவர்.

அனுபமா விருது, மாஸ்தி விருது, எம்.கே.இந்திரா விருது,நிரஞ்சனா விருது, தனசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர்.

’ கிரௌஞ்ச பட்சிகள் ’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கண்ணன் கவியமுதம் – தில்லை வேந்தன்

  அதீதம் : வன போஜனம்! - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48                

மருத மரங்கள் முறிந்து கிடப்பதைப் பார்த்த நந்தகோபன், அவை குழந்தையின் மீது விழவில்லை என்பதால் சற்று நிம்மதி அடைந்தான்.

தொடர்ந்து பல இன்னல்கள் கோகுலத்தில் ஏற்பட்டதால், பாதுகாப்பைக் கருதி, மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியான பிருந்தாவனம் சென்று குடியேற முடிவெடுத்தான் …..

பிருந்தாவனம் செல்ல முடிவெடுத்தல்

 

படர்ந்து  மரங்கள் தரைகிடக்கப்

     பார்த்த நந்தன் கவலுற்றான்

தொடர்ந்து தொல்லை துன்பங்கள்

     தூய தங்கள் கோகுலத்தில்

நடந்து வரவே வாழ்விடத்தை

     நல்ல பிருந்தா வனமென்னும்

அடர்ந்த மரங்கள் செறிந்தவிடம்

    அடைந்து  வாழ  முடிவெடுத்தான்

                      

பிருந்தாவன வருணனை

 

பொழிலிருக்கும் மணமிறைக்கும் புதுநிறத்துப் பூவிருக்கும்

நிழலிருக்கும் நெடுமரங்கள் நிறைந்துயர்ந்து  வளர்ந்திருக்கும்

புழலிருக்கும் காலாம்பல் பொய்கைபல பொலிந்திருக்கும்

குழலிருக்கும் கோவலர்கள் குடிபுகுந்த குளிர்வனமே

                       (புழல்- உள்துளை//hollow)

 (புழலிருக்கும் காலாம்பல் –உள்ளே துளை பொருந்திய தண்டினையுடைய ஆம்பல்/அல்லி)

.

அலையிருக்கும் யமுனையெனும் அணிநதியும் சூழ்ந்திருக்கும்

மலையிருக்கும் ஆபுரக்கும் மாண்புயர்ந்த பெயரிருக்கும்

கலையிருக்கும் கால்நடைகள் களிக்கும்புல் வெளியிருக்கும்

நிலையிருக்கும் அமைதியின்பம் நெஞ்சங்கள் நிறைந்திருக்கும்

                     (ஆபுரக்கும் பெயர்— கோவர்த்தனம்)

(கோவர்த்தனம் என்றால் பசுக்களின் செழுமைக்கு உதவுவது என்று பொருள்)

.

விண்ணின்று கருமுகில்கள் மிகமகிழ்ந்து பெயல்சுரக்கும்

தண்ணென்ற வாவிகளில் தாமரைகள் இதழ்விரிக்கும்

பண்ணெடுத்துக் குழலிசைத்துப் பசுமேய்க்கப் பசிபறக்கும்

அண்ணனொடு கண்ணனவன் அக்கதையால் மெய்ம்மறக்கும்

.

    தொடர்ந்த கம்சனின் தொல்லை

Om Namo Narayanaya: 2015Om Namo Narayanaya: 2015

பிருந்தா வனத்தில் கோகுலத்தார்

     பெரிதும் உவந்து வாழ்ந்திருந்தார்

திருந்தா  மனத்துத்  தீயவனும்

      தீமை தொடரத் திட்டமிட்டான்

வருந்தா வாழ்வு தானுறவே

     மாய  வேண்டும் மகவென்ற

பொருந்தா எண்ணம் நிறைவேறப்

     பொல்லா அரக்கர் அனுப்பிவைத்தான்

                  (மகவு- கண்ணன்)

.

.

   கன்றாய் வந்த அரக்கன்

              ( வத்சாசுரன்)

கன்றின் உருவில் ஓரரக்கன்

      கறவைக் கூட்டம் தனில்புகுந்தான்

சென்று கண்ணன் அக்கன்றைச்

      சீறும்  குணிலாய் விளாமரத்தில்

நன்று புடைத்துக்  கனியுதிர்த்தான் 

      நடுங்கிச் சிதைந்தான் அவ்வரக்கன்

வென்றி வென்றி வென்றியென

       வியந்து சொன்னார் நண்பர்கள்

                 (குணில்– குறுந்தடி)

 

அசுரர்கள், அரக்கர்கள் அகராதி | Tamil and VedasOm Namo Narayanaya: 2015

 

  

கொக்கின் உருவில் வந்த அரக்கன்

 

(கொக்கின் உருவில் வந்த பகாசுரனைக் கொல்லுதலும், அவன் தம்பி அகாசுரன் பழிதீர்க்க வருதலும் )

 கொத்தும் புள்ளாம் கொக்குருவில்

      கொல்ல வந்தான் ஓரரக்கன்

தத்திப் பாய்ந்து வந்தவனைத்

      தனல்போல் சுட்டான் அக்குழந்தை

குத்தும் அலகைப் பிளந்தெறிந்தான்

      கொடிய அரக்கன் உயிரிழந்தான்

மெத்த வருந்தி அவனிளையோன்

      விரைந்து வந்தான் பழிதீர்க்க.

(தொடரும்)

யார் முதல்வன்? – மனோகர்

இன்டர்வியூவில் வெற்றி பெற இந்த டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினால் போதும்..! |  Nerkanal Tips in Tamil

பிரபல கம்பெனியின் வளாக தேர்வு மையத்தில் பாலன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். ஒரே ஒரு போஸ்ட்.  சுளையாக சம்பளம். முதல் வடிக்கட்டுக்கு பிறகு 100 பேர் அடுத்த நிலையான போட்டித் தேர்வுக்கு தயாராக இருந்தனர்.

            தேர்வு அலுவலர் தோன்றியதும் ஹாலில் இருந்த கசமுசா சப்தங்கள் அடங்கியது. அலுவலர் மைக்கில் உரக்க ” உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் . இந்த தேர்வு முறை வழக்கத்துக்கு மாறானது. ஓபன் புக் தேர்வின் மறு வடிவம் இது. உங்கள் முன்னாள் உள்ள லேப்டாப்பில் இணையதள வசதி உண்டு. அதை பயன் படுத்தி பதில் கண்டுப் பிடித்து எழுதலாம். 150 வினாக்கள். 150 நிமிடம். தேர்வு முடிந்ததும் பக்கத்து ஹாலில் காத்து இருக்கவும். அரை மணியில் உங்களில் யார் இந்த தேர்வில் முதல்வன் என்று அறிவிப்போம். “

தேர்வு முடிந்து  வெளி வந்த எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி காணப் பட்டது. ஒரு சிலரில் அதிகமாகவே மகிழ்ச்சி தென் பட்டது. எல்லோரும் இன்னொரு ஹாலுக்கு வந்து அவர் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். நினைத்ததை விட தேர்வு எளிதாக இருந்தது ஒரு விதத்தில் கவலை அளிப்பதும் கூட. யாருக்கு முதல் இடம் கிடைக்கும்? இல்லை, இது முன்னரே யாருக்கு என்று முடிவு செய்ய பட்டதா?. எல்லோர் மனங்களில் வகை வகையான எண்ணங்கள். 30 நிமிடம் கழித்து அதே தேர்வு அலுவலர் ஹாலில் நுழைய, மறுபடியும் அமைதி சூழ ஆரம்பித்தது. இதயங்கள் பட படக்கச்  செயதன.

தேர்வு அலுவலர் மைக்கில் தோன்றி பேச ஆரம்பித்தார். “பத்தாயிரம் நபர்கள் வடிகட்டப் பட்டு நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இந்த நூறு நபர்களில் ஒரு நபர் மட்டுமே நாங்கள் வேண்டுவது. ஆனால் 100ல் 9 பேர்கள் முதன்மை மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள்.  ஒன்பதில் ஒருவரை தேர்வு செய்வது எங்களுக்கு அது சவாலாக இருந்தது. உங்கள் தேர்வின் போது நீங்கள் எத்தனை முறை கூகிள் சர்ச்-யை யூஸ்  பண்ணி பதில் கண்டு பிடித்துள்ளீர்கள் என்று அலசித்தோம்.   அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவர் மட்டும் இரண்டே தடவை இன்டர்நெட்டின் உதவியை நாடி உள்ளார். தன்னம்பிக்கையின் சிகரமாக அவர் உள்ளார். எனவே அவர் தான்  உங்களில் முதல்வன்.  வாழ்த்துக்கள், மிஸ்டர் பாலன் அவர்களே.”

 பாலன் எழுந்து கொள்ள ஹால் ஆர்ப்பரித்தது. 

ஜனவரி முதல்தேதி குவிகம் அளவளாவல்!!!

This gallery contains 1 photo.

ஜனவரி முதல்தேதி குவிகம் அளவளாவல்!!! குவிகம் குழுமத்தின் கீழ் இந்த 13 திட்டங்கள் உங்கள் அன்பாலும் ஆதரவாலும் சிறப்பாக நடை பெற்று வருகின்றன! 1. குவிகம் மின்னிதழ் 2. குவிகம் பதிப்பகம் 3. குவிகம் குறும் புதினம் 4. குவிகம் அளவளாவல் இணைய வழி 5. பாரதி – வ வே சு – குவிகம் – மாகாகவியின் மந்திரச் சொற்கள் 6. குவிகம் இலக்கியவாசல் நேரடி நிகழ்வு 7. சிவசங்கரி – குவிகம் கதைத் தேர்வு … Continue reading

திரை இசைக் கவிஞர் – மதுரகவி பாஸ்கரதாஸ் – முனைவர் தென்காசி கணேசன்

தமிழ்த் திரை உலகின் முதல்  படமான காளிதாஸிற்கு(1931) அனைத்துப் பாடல்களையும் எழுதியதால், தமிழ்த் திரை உலகின்  முதல் கவிஞர் என்ற பெருமை கொண்டவர் – மதுரகவி பாஸ்கரதாஸ்.

காந்தியடிகள் மதுரை வந்தபோது, இவர் பாடிய பாடலைக் கேட்டு , கை தட்டி ரசித்தாராம். இவருடன் தான், தமிழ் சினிமாப் பாடல் வரலாறு தொடங்குகிறது. 10 படங்களில், சுமார் 200 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். நாடகங்களுக்கும் சேர்த்து, இவரின் 700 பாடல்கள் வரை இருக்கின்றன.

அன்றைய நெல்லை மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்த இவர், கவிதை கற்கவில்லை. ஆனால் சிறு வயதினிலே பாடல் புனைய தொடங்கிவிட்டார். தேசிய இயக்கத்தின் தாக்கத்தில், விடுதலைப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

வெள்ளைச்சாமி என்பது இவரது இயற்பெயர். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று வசித்தார். அங்கு நாடகக் கலைஞராய் மலர்ந்தார். ராமனாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாசு” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பாஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும்.

தமிழ்த் திரைஉலகில், இவரைப் பார்த்துத்தான், பல தாசர்கள் உருவானார்கள் – பாரதிதாசன, கம்பதாசன், ராமதாசன், வாணி தாசன், கண்ணதாசன, என பட்டியல் தொடர்ந்தது.

நாடக மேடைகளில் இவரின் தேசபக்தி பாடல்கள் நிறைய ஒலித்தன. இன்னும் கூறப் போனால், பாரதிக்குப் பின், தேசியப் பாடல்கள் நிறைய எழுதியவர் இவர்.

இவர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கைவரப்பெற்றவராக இருந்துள்ளார். இதனால் திரைக்கதை, உரையாடல், பாடல்களை எழுதுபவராகவும், நாடக நடிகராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இத்துடன் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராகவும், புதிய இசையுருக்களை அமைத்தவராகவும் உள்ளார்.

என் பாட்டெல்லாம் காங்கிரஸ் வட்டத்துடன் சரி. பாஸ்கரதாஸ் பாடல்கள் ஊரெங்கும் பரவி உள்ளது. அவர் மீசையை முறுக்கி எழுந்து வந்தாள், சபையே எழுந்து வரவேற்கும் என்றும் கூறுவார் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள்.

வீர ரசத்துடன், நவரசமும் சொட்டும் பாடல்கள் தந்தவர் – மதுர கீதங்களைத் தந்தவர், மதுரகவி என்பார் கவிஞர் சிலோன் விஜயேந்திரன்.

வெட்கம் கெட்ட வெள்ளை கொக்குகளா

விரட்டி அடித்தும் வாரீகளா   என வெள்ளையனை எதிர்த்தும்,

வளையல் வாங்கலையோ வளையல்

ஒரு மாசில்லாத இந்து சுதேசி  வளையல், என சுதேசியை ஆதரித்தும், பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.

சாதிச் சண்டை சமயச் சண்டை

சற்றும் ஓயவில்லை

சாராயங்கள் குடிப்போர் சண்டை

தாங்க முடியாத தொல்லை

என்ற வரிகள் இன்றைக்கும் பொருந்துகிறது.

சகுந்தலா, ராஜா தேசிங்கு (1934,1936 படங்கள்) படங்களில் இவர் பாடல்கள் எழுதினார். 1935ல், போஜராஜன் படத்தில் 45 பாடல்கள் எழுதினார். அன்றைய சங்கீத வித்வான், முத்தையா பாகவதர் பாடினார்.

பாடல்களில் ஹாஸ்யமும் எழுதி உள்ளார்.

புருஷர்களை நம்பலாமா

வெறும் போக புகலும் சொல்லிப்

பூவையரை மயக்கும்

கரும்பு போல பேசுவார்.

காணாவிடம்  ஏசுவார்

குறும்பாய் முகஸ்துதி கொட்டிக் கூசுவார்.

 

உஷா கல்யாணம் படத்தில்,

மானே மதுரக்கிளயே – மாமணித்தேனே

மாணிக்கமே மடமானே

நறு மலரணை தனில் வருவாய்

முத்தம் தருவாய் – வாடினேன் நானும்

நெஞ்சக் கவலையற கிளியே

நீயோர் குதலை சொல்வாய் ,

என்று எழுதுவார்.

 

ஒடோடிப் பாடுபட்டு உழைத்தேன

ஓகோ பேய்ப் பிழைப்பு பிழைத்தேன்

காசெல்லாம் யார்க்கோ போகுது

யோசிக்கத் துக்கமாகுது கடவுளே

என்று தொழிலாளியின் துயரத்தைப் பாடுவார்.

 

இவர் எழுதிய பாடலை சந்திரஹாசன் என்ற படத்தில், கவிக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள பாடி உள்ளார்கள்,

தேசியத்தில் பாரதியைப் போலவே இருந்திருக்கிறார். 1919ல் பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி எழுதிய பாடலுக்காக, 3 முறை சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.

பக்தி, தேசியம், சீர்திருத்தம், காதல் என எல்லாத் தலைப்புகளையும் பாடல்களில் கையாண்டுள்ளார். இவர் பாடல்களை கே பீ சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ், அரியக்குடி, எம் எஸ் சுப்புலட்சுமி என்று பல மேதைகள் பாடி இருக்கிறார்கள்.

இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார்.

அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. தமிழ் நாடகக் கலையின் ஆன்மா எந்தவகை மனிதர்களால் உருவானதென்பதையும் நாடகக் கலைஞர்களின் பேதமற்ற உறவும் வாழ்வும் எவ்விதம் செயல்பாடுகளானது, எளிய மனிதர்களுக்குள் உலவிய கலையின் உத்வேகமும் அர்பணிப்பும் எத்தகையது என்பதை அவரின்  நாட்குறிப்புகள் பேசுகின்றன.

காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட பாஸ்கரதாசு கதராடையையே அணிந்தார். கடைசி வரை பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் காவலர்களால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தக்காலத்தில் நாடக உலகிற்கும், திரை உலகிற்கும் விடுதலை உணர்வை அளித்து, ஒரு பாலமாக விளங்கினார், என்பார் ஆராய்ச்சியாளர் வாமனன் அவர்கள்.

தேசப்பற்றும், சமூக பிரக்நையும் கொண்டு,  இமயமாகத் திகழ்ந்த இந்தக் கவிஞரின   வீட்டின் பெயர் – தமிழகம்.

பாஸ்கர தாஸ் பத்து திரைப்படங்களுக்கு திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

  1. காளிதாஸ் – 1931
  2. வள்ளி திருமணம் – 1933
  3. போஜராஜன் – 1935
  4. சந்திரஹாசன் – 1936
  5. ராஜா தேசிங்கு – 1936
  6. உஷா கல்யாணம் – 1936
  7. தேவதாஸ் – 1937
  8. சதி அகல்யா – 1936
  9. ராஜசேகரன் – 1937
  10. கோதையின் காதல் – 1941
  11. நவீன தெனாலிராமன் – 1941

 

அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி

 

 

,