மார்ச் 2017 இதழில் …….

1 அட்டைப்படம்
2 எமபுரிப் பட்டணம் – எஸ் எஸ்
3 இலக்கியவாசல் 24
4 ஆதியோகி – வீடியோ
5 நந்து – ஜெயந்தி நாராயண்
6 கார்ட்டூன் – லதா
7 தூர்தர்ஷன் – வீடியோ
8 சரித்திரம் பேசுகிறது! – யாரோ
9 சுட்ட இட்லி – நன்றி வாட்ஸ் அப்
10 மணி மகுடம் – ஜெய் சீதாராமன்
11 ராவெசு கவிதைகள் – ராவெசு
12 கடிகாரம் – அழகியசிங்கர்
13 யானை – நன்றி ஸ்மைல் பிரபு
14 விதியை மாற்றுவது – நன்றி முகநூல்
15 விசித்திர உறவு – பொன் குலேந்திரன்
16 காமராஜர் ஒரு மகாத்மா – நன்றி முகநூல்
17 டிகாக்ஷன் போடும் கலை – சுஜாதா
18 கண்ணாடி நண்பன் – எஸ் எஸ்
19 யதார்த்தம் – நித்யா சங்கர்
20 நேபாளத்தின் புதுவித நீர்வீழ்ச்சி – ராமன்
21 அப்பாவின் கண்ணாடி – குறும்படம்
22 கேள்வியும் கவிதைப் பதிலும் – நடராஜன்
23 ராகவா லாரன்சின் சிவலிங்கா – டிரைலர்
24 தலையங்கம்
25 கடைசிப் பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

எமபுரிப் பட்டணம் (எஸ் எஸ் )

முன்னுரை!

எமபுரிப்   பட்டணம் என்ற இந்தத் தொடரை இரண்டு பிரிவாக எழுதப் போகிறேன்.

Image result for எமன்

 

முதல் பகுதி , புராணங்களை  மையமாக வைத்து அவற்றில்  குறிப்பிட்டுள்ள கதைகள் , கிளைக் கதைகள் போன்றவற்றை விளக்கும் கதைத்தொகுப்பு.  முக்கியமாக கருட புராணம், விஷ்ணு புராணம் ¸மார்க்கண்டேய புராணம், சிவபுராணம், கந்த  புராணம் , சாம்ப புராணம்  போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். அதில் வரும் கதைச் சம்பவங்கள் பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்தவையாக இருக்கக்கூடும்.  அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அந்த சிக்கலில் ஒரு சௌகரியமும் உள்ளது.

முதலில் சிக்கலைப் பற்றிச் சொல்லுவோம்.  ஒவ்வொரு புராணத்திலும் கதை கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . அவற்றில் வரும் பாத்திரங்கள் ஒன்றாக இருந்தாலும் அவைகளின் தன்மை மாறுபட்டு இருக்கின்றது. எது சரி , எது தவறு  என்பது யாருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

உதாரணங்கள் சொல்லி உங்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி ஓடச் செய்யப்போவதில்லை.

இதில்  என்ன சௌகரியம் என்றால்,  இந்தப் புராணப் பகுதியிலும்  கொஞ்சம் நமது கற்பனையைக் கலந்து கொள்ளலாம்.இந்தப் புராணத்தில் கொஞ்சம், அந்தப் புராணத்தில் கொஞ்சம் என்று எடுத்துக் கொள்ளும்போது  நம் கதை  ஒரு புதுப்  புராணம்போல் ஆகலாம். அதைத்தான் புராணக் கதைகளைத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கும் நண்பர்களும் செய்கிறார்கள். ராமாயணம் , மகாபாரதம் என்று நாம் அதிகமாகப் படித்துப் பழக்கப்பட்ட கதைகளைச் சொல்லும் போதும்,  ‘ இது மக்களை மகிழ்விப்பதற்காக மூலத்தை ஒட்டி சற்று மாறுபட்டுச் சித்தரித்துள்ளோம் ‘ என்று சுற்றி வளைத்து,    “பொறுப்புத் துறப்பு” என்ற பகுதியில் கோடிட்டுக் காட்டி விடுவார்கள்.

அந்தப் “பொறுப்புத் துறப்பின்” சௌகரியம் எனக்கும் கிட்டும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

ஆனால் நாம் காணப் போகும் எமபுரிப்பட்டணத்தின்  இரண்டாம் பகுதி முற்றிலும் புதியது. முழுக்க முழுக்க நம் கற்பனையே. இதற்கும் முதல் பகுதிக்கும் சில நிகழ்வுகள் இணையாக வந்தால் அவை தற்செயலாக நேர்ந்தது என்றே கொள்ளவேண்டும். இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ? பூலோகத்திலிருந்து அவனிடம் செல்லும்  மனிதர்கள்  –  அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், விஞ்ஞானிகள் ,  மன்னர்கள், சாமானியர்கள் எல்லோரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தப் பகுதி .

இது ஜாலியாக இருக்கும்.

இந்த இரண்டு பிரிவான கதை, புராணமும், நவமும் கலந்ததாக இருக்கும்.  புராணம் என்பது பழையது. நவம் என்பது புதியது. இரண்டும் கலந்து வருவது இந்தத் தொடரின் சிறப்பு.

இன்னொரு  முக்கியமான கருத்து. மனிதன்  இறந்த பின் எங்கு செல்கிறான், அவன் இந்த உலகில் செய்த நல்லது,கெட்டது அவற்றிக்குத் தண்டனைகளும், பரிசுகளும் கிடைக்கின்றனவா, அவன் மறு பிறவி எடுக்கிறானா, போன்றவை  மிகவும் ஆழமான தத்துவார்த்த எண்ணங்கள். எல்லா மதங்களும் இவற்றை வெவ்வேறு பாணியில் சொல்லுகின்றன. அவற்றை எண்ணிப் பார்க்கும் போது  அவை ஒரு திகில் கலந்த பயமாகவே இருக்கின்றன.

Related image

பயம் தான் மனிதனை ஆட்டிப்படைக்கும் முதல் சக்தி. அந்தப் பயத்தில் மனிதன் நல்லதும் செய்கிறான். கெட்டதும் செய்கிறான். பயம் ஒருவனை நல்லவனாக வைத்திருக்கின்றது என்றால் அந்தப் பயமே அவனுக்குத் தீங்காகவும் மாறிவிடுகிறது. பயப்படாத ஜீவ ராசியே உலகில் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பய உணர்ச்சியே மூலாதாரம்.மனிதனின் ஒவ்வொரு வெளிப்பாடும் பயத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பயத்தை மனிதன் ஒருகாலும் வெல்ல  முடியாது. வென்றது மாதிரி நடிக்கலாம். அது உள்ளூர அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும். எல்லா பயங்களிலும் மனிதன் அதிகமாகப் பயப்படுவது எம பயம் – அதாவது மரண பயம் ஒன்றிற்குத்தான். சாவைப் போல மனிதனைப் பயமுறுத்துவது வேறொன்றும் இல்லை. அது அவனை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். பிறந்த உடனேயே ஏன் அதற்கு முன்னாலேயே மரிக்கும் சிசுக்கள் உண்டு. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் துடிதுடித்து இறந்த மனிதர்களும் உண்டு. இந்த சாவு எப்போது யாரை எங்கு எவ்வாறு பிடிக்கும் என்பது தான் புரியாத புதிர். மனித வாழ்வில் அவிழ்க்க முடியாத மிகப் பெரும் புதிர் – சாவு .

Related image

இந்தப் புதிர்தான் – அத்துடன் இணைந்த பயம்தான் மனிதனுக்கு அவன் வாழ்வில் சுவாரஸ்யம் கூட்டுகிறது என்று சொன்னால்  ஏற்றுக்கொள்வீர்களா?

உண்மை அது தான்.

இந்த சுவாரஸ்யமான பய உணர்ச்சியுடன் எமபுரிப்  பட்டணத்துக்குச் செல்வோம் !

 

 

எமபுரிப் பட்டணம்

Related image

Related image

( படங்கள்  நன்றி :  ” சனி” தொடர் – கலர்ஸ் டி வி )

ஆதித்யன் என்ற பெயர்கொண்ட சூரிய தேவன்*  தன்  ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் தகதக என்ற பொன் கிரணங்களைப் பாய்ச்சிக்கொண்டு  பவனி வந்துகொண்டிருந்தான்.  கீழ்த் திசையில் அவன் உதிக்கும்போதே உலகைச் சூழ்ந்துள்ள இருள் விலகிச் சென்றன. அவன் தான் பிறந்த விதத்தை எண்ணிக் கொண்டே பவனி வந்து கொண்டிருந்தான்.

பிரளயத்திற்குப் பிறகு பகவான் விஷ்ணு உலகத்தைப் படைக்க எண்ணம் கொண்டு பிரும்மனைப் படைத்தார். பிறகு பிரஜாபதிகளைப் படைத்தார். மரீசி முனிவர் அதிதி  தேவியின் மூலம் மண்ணிலும் விண்ணிலும் பரவி இருக்கும்மாதிரி ஒரு அண்டத்தை ஏற்படுத்தினார். அந்த அண்டத்திலிருந்து சூரியன் தோன்றினான்.   அவனுக்குள் இருந்த இருபது பிரபைகளும், ஆயிரம் கிரணங்களும்  மழை , பனி , வேனில் என்று பல பருவங்களை ஏற்படுத்தி பூவுலகையும், வான் உலகையும் உய்வித்துக் கொண்டிருந்தன.

சூரிய தேவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. உதயகிரியிலிருந்து புறப்படும் சூரியன் ஜம்பூத்வீபத்தில் பிரகாசித்து ஈசான்யத்தில்  இருக்கும் பரமேஸ்வரனைத்  துதித்து,  அக்னியைப் போற்றி, மற்ற பிதுர்க்களுக்கு ஆசி  வழங்கி , நடுவில் இருக்கும் நாராயணன், பிரும்மா அவர்களை வணங்கி, இந்திரனுடைய அமராவதிப் பட்டணம் மற்றும் தேவர்களின் பட்டணங்களில் சஞ்சாரம் செய்து ஒவ்வொரு திக்குப் பாலகர்களும் வணங்கி வாழ்த்தத் தன் பயணத்தைத் தினமும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.   அதனால்,  அவன் தன்னைப்பற்றியும் தன் பொன்னிறக் கிரணங்கள் பற்றியும் அளவுகடந்த பெருமை கொண்டிருந்தான்.

அவன் கவனம் எப்போதும் எங்கும் சிதறவே சிதறாது. அவனது குதிரைகளும் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து அடி பிறழாமல் அமைதியாகவே சென்றுகொண்டிருக்கும். அவன் தேர்க்கால் படும் இடங்களைச் சுற்றி தேவர்களும் கந்தர்வர்களும், அசுரர்களும், மனிதர்களும் , நாகர்களும், அப்சரஸ்களும் , மற்ற விலங்கு, பறவை , புழு பூச்சி இனங்களும் அண்ணார்ந்து பார்த்து சூரியனுக்கு வணக்கம் சொல்லிவிட்டே செல்வார்கள்! தான் கர்வப்பட்டால் அது தப்பில்லை என்ற எண்ணம் அடிக்கடி சூரிய தேவனுக்குத் தோன்றும். அந்தப் பெருமை அவன் தேஜசை அதிகப்படுத்தியது.  தனக்கு நிகர் என்று சொல்ல யார் இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டே வந்த சூரியனின் கண்கள் திடீரென்று கூசுவதுபோல் ஒரு கணம் தோன்றியது. ‘சே ! சே ! என் கண்களாவது, கூசுவதாவது? நான்தான் மற்றவர்களைக் கூசும்படிச் செய்ய வல்லவன். இது ஏதாவது பிரமையாக இருக்கும்.’  என்று எண்ணினான்.

ஒரு வேளை என் கர்வத்துக்குப் பங்கம் நேரிட, யாராவது தேவ அசுரர்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. மீண்டும் கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பான்.   அப்போது  மறுபடியும் அதேபோன்று   அவன் கண்களை வேறு ஒரு கிரணம்  தாக்குவதை உணர்ந்தான். அது அவன் கண்களை அப்படியே கட்டிப்போட்டது. அதுவும் சில நொடிகள்தான். உடனே அது மறைந்து விட்டது. தன் ஒளிப் பாதைக்கு எதிராக மற்றொரு ஒளி வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அன்றைய தினம் அவன் பயணம் தொடர்ந்தது. அந்தக்  கிரணம் மீண்டும் வரவில்லை. அவன் மனமோ ஒரு நிலையில் இல்லை.

மறுநாள் அந்த  இடத்துக்கு வந்தபோது அதே போன்று கண் கூசும் நிலையை உணர்ந்தான். நிச்சயமாக அங்கு ஏதோ ஒரு தங்கமோ, வைரமோ, ரத்தினமோ மலை வடிவில் புதியதாக தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ணித் தேரை, ஒரு கணம் நிறுத்தி, கண்களை இடுக்கிக்கொண்டு  உற்றுப் பார்த்தான்.

இது தேவதச்சன் விஸ்வகர்மாவின் மாளிகையல்லவா ?  அது என்ன பொன்னால் ஆன தாமரைக் குளமா? அதில் இங்கும் அங்கும்  ஒரு பெண்  நீந்துகிறாளே ?  யார் அவள்? அடேடே ! அவள் தேக காந்தியிலிருந்தல்லவா அந்த ஒளி வருகிறது? என் பொன் கிரணங்களை மங்கச்செய்யும் அளவிற்கு அவள் தேக ஒளி மின்னுகிறதே ? யார் அவள்? 

juhi-parmar-in-shani-serial

சூரியனின் ரதத்தில் பூட்டியிருந்த ஏழு குதிரைகளும் சிலிர்த்துக் கொண்டன – தங்களுக்குள் சிரித்துக் கொண்டன. ரதம் மட்டும் தன் பாதையில் தொடர்ந்து சென்றது. சூரியனின் மனம் மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கும் குமரியின் முதுகுப்புறத்திலேயே தங்கிவிட்டது.

(தொடரும்)

 

நவம்:

எமபுரிப்பட்டணத்தில் அன்றைக்குத் தீபாவளிப் பண்டிகை. தீபாவளிக்கு முந்திய இரவு.

வாட்டசாட்ட கம்பீரத்துடன்  எமன் அட்டகாசமாகத் தன் அரியணையில் அமர்ந்திருந்தான். சித்திரகுப்தனுக்கும் கிங்கரர்களுக்கும்   நன்றாகத் தெரியும். எப்போதும் ஒருவித கோப முகத்துடனேயே இருக்கும் எமன் இன்று சிரித்து மகிழும் திருநாள். நரகபுரி,சொர்க்கபுரி இரண்டின் கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும். அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் அன்று பூலோகத்தைப் பார்க்கும் சந்ததர்ப்பம் கிடைக்கும். அவர்கள் வான வீதிக்கு வந்து அதன் விளிம்பில் நின்று கொண்டு பூலோகத்தில் நடக்கும் தீபத் திருநாளை மனம் திருப்தி அடையும்வரை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

“அதோ விளக்குகளை ஏற்றத்  தொடங்கிவிட்டனர்.பூமி ஜகஜ்ஜோதியாக மின்னுகிறது  பாருங்கள்! “ என்று கிங்கரன் ஒருவன் உரத்த குரலில் கூறினான். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று பூமியில் மக்கள் ஏற்றும் தீபம்  எமபுரிப் பட்டணத்தை நோக்கி  என்பதில் எமன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

“ தலைவரே! எம தீபம் ! எம தீபம் ஏற்றிவிட்டார்கள் ! ” என்று அவன் கணக்கன் சித்திரகுப்தன் கூறியதும் துணைத் தலைவன்  தர்மத்வஜன் அருகிலிருந்த கோட்டை மணியை அடித்தான். உடனே  நரகாபுரியிலிருந்து எண்ணை நிறைந்த கொப்பரையை  ஆயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் தூக்கிக் கொண்டு  வந்தார்கள். சொர்க்கபுரியிலிருந்து  ஆயிரம் அடி  நீளமுள்ள திரியும்  கொண்டுவரப்பட்டது. வழக்கமாக எமன் தன் கையாலேயே அந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவான்.

‘ இன்று ஏன் இன்னும் நம் தலைவர் தீபத்தை ஏற்ற முன்வரவில்லை? நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா? ‘ என்று அனைத்துக் கிங்கரர்களும் தவிக்க, தர்மத்வஜன் முன்வந்து கணீரென்ற குரலில் பேசினான்.

“ எனதருமை எமபுரிப் பட்டணவாசிகளே! நாளை சதுர்த்தசி ! தீபாவளிப்  பண்டிகை ! அதனால் இன்று பூலோகம் முழுதும் எம தீபம் ஏற்றி நம் தலைவரை வாழ்த்தி,  அவர் அருளை வேண்டி  பூஜை செய்கின்றனர். அதனை அங்கீகரிக்கும் வகையில் நாமும் இந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவோம்.  வழக்கமாக நம் தலைவரே  இந்த தீபத்தை ஏற்றி நமக்கெல்லாம் விருந்துகொடுப்பார். ஆனால் இன்று அவர் ஏற்றப்போவதில்லை. இந்த தீபத்தை ஏற்றுவதற்காக முதன் முறையாக நமது மதிப்பிற்குரிய விருந்தாளி ஒருவர் வருகிறார். அதோ அவரே வந்து விட்டார்! அவரை வாழ்த்தி வரவேற்போம்” என்றான் தர்மத்வஜன்.

வாசலில் அழகுத் தேவதையாக நின்று கொண்டிருந்தாள் யமுனா !!

(தொடரும்)

 


 • சூரியனின் பெருமையை உபபுராணமான சாம்ப புராணம் விவரிக்கிறது

 

 

 

 

 

குவிகம் இலக்கியவாசல் -24

 

 

வருகிற மார்ச் 25ந்தேதி நடைபெறும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு, நமது 24 வது நிகழ்வாகும்.

இரண்டு வருடங்களாக இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பெரிய சாதனை இல்லை என்றாலும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்துவந்த நிகழ்ச்சித் தொகுப்பாக உள்ளது.

நாம்  கடந்து வந்த பாதை : நிகழ்வைப் பற்றிய முழு விவரம் அறிய கோடிட்டவற்றைக் கிளிக்குங்கள் :

 1. இனிதே திறந்தது இலக்கிய வாசல்  – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு , ஜெயபாஸ்கரன்  – ஏப்ரல் 2015
 2. நான் ரசித்த ஜானகிராமன் – கலந்துரையாடல் – மே 2015
 3. திரு பிரபஞ்சன் நேர்காணல் – ஜூன் 2015
 4. சிறுகதைச் சிறுவிழா   – ஜூலை 2015
 5. முகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம் – நீரை அத்திப்பூ  – ஆகஸ்ட் 2015
 6. திரைப்பாடல்களில் இலக்கியம் – கலந்துரையாடல் –  செப்டம்பர் 2015
 7. அசோகமித்திரன் படைப்புகள் –  சாரு நிவேதிதா –  அக்டோபர் 2015
 8. பாண்டிய நெடுங்காபியம் – திருமதி ஸ்ரீஜா  – நவம்பர் 2015
 9.  நூல் அறிமுகம்- நேர்பக்கம் – அழகிய சிங்கர் –  டிசம்பர் 2015
 10. புத்தக உலகம் – ஒரு பதிவு – ரவி தமிழ்வாணன் –  ஜனவரி 2016
 11. பொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்- பாம்பே கண்ணன் – பிப்ரவரி 2016
 12. நாடகம் – “நேற்று இன்று நாளை”-  ஞானி – மார்ச்  2016
 13. முதலாம் ஆண்டுவிழா – இயல் -இசை – நாடகம்  : அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, வில்லுப்பாட்டு, ‘மனித உறவுகள்’ நாடகம் – ஏப்ரல் 2016
 14. நானறிந்த சுஜாதா” – சுஜாதா தேசிகன் + ரகுநாதன் – மே  2016
 15. லையில் சிக்கும் இலக்கிய மீன்கள்  – கலந்துரையாடல்  -ஜூன்  2016
 16. “கதை கேளு.. கதை கேளு” – சிறுகதை சொல்லும் நிகழ்வு – ஜூலை  2016
 17. சமீபத்தில் படித்த புத்தககங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்  – ஆகஸ்ட்  2016
 18. இன்று … இளைஞர் … இலக்கியம் –  செப்டம்பர்  2016
 19. இணையத்தில் கோமலின் சுபமங்களா – திருப்பூர் கிருஷ்ணன் -அக்டோபர்  2016
 20. எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்; ஜெயகாந்தன் ஆவணப்படம் – ரவி சுப்ரமணியன் – நவம்பர்  2016
 21. நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்- இந்திரன் -டிசம்பர்  2016
 22. லா ச ராவின் ” அபிதா”  – ஸப்தரிஷி & கலந்துரையாடல் – ஜனவரி 2017
 23. சிறுகதைகள் அன்றும் இன்றும் – ரகுநாதன் -பிப்ரவரி 2017
 24. இளைஞர் விரும்பும் இலக்கியம் – சரஸ்வதி  – மார்ச் 2017 (25ந்தேதி நடைபெறும்)

நந்து – ஜெயந்தி நாராயண்

 

Image result for srirangam streets in 1970s

“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே”

ஒவ்வொரு தடவையும் அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போய் பெருமாளை சேவிச்சு ராத்திரியே ஊர் திரும்பற மாதிரி ஆயிடறது. அதனால இந்த தடவை நாலு நாள் தங்கி, தண்ணி இருக்கோ இல்லியோ, கொள்ளிடம் போய் ஒரு குளியல், காட்டழகிய சிங்கர் கோயில், காலாற அம்மா மண்டபம், போற வழில ராகவேந்திர மடம், அப்புறம் தெற்கு வாசல்ல அந்த பக்கோடா கடை இருக்கான்னு பாக்கனும், ரெங்கராஜா தியேட்டர்ல ஒரு படம், தேவில ஒரு படம், அப்புறம் கிடைத்த நேரமெல்லாம் ஸ்ரீரங்கம் கோயிலையும் வீதிகளையும் சுத்திச்சுத்தி சுவாசிக்கனும்.

பாய்ஸ் ஹைஸ்கூல் போய்ட்டு அப்டியே மறக்காம ஆர் எஸ்வி பாத்துட்டு வரனும். என்ன மனுஷம்ப்பா.. கணக்கை அப்டியே ரத்தத்துல ஏத்தினவராச்சே.

யாரையும் துணைக்கு கூட்டிக்கல. தனிமைல அப்டியே பழைய நினைவுகளோட சஞ்சரிக்கறச்ச யார் கூடஇருந்தாலும் தொல்லைதான்.

“என்ன திடீர்னு” என்று கேட்ட கீதாவிடம்

“தினசரி வாழ்க்கைல இருந்து ஒரு மாற்றம் வேண்டிருக்கும்மா. ரொம்ப நாளா நினச்சுண்டு இருந்தேன். நேத்து சடார்னு தோணித்து. போயிட்டு வந்துடலாமேன்னு கெளம்பிட்டேன்”.

தானும் கூட வரட்டுமான்னு கீதா கேக்கல. எனக்கான இடத்தை அவளும், அவளுக்கானத நானும் ஆரம்பத்துல இருந்தே கொடுத்துப் பழகிட்டோம்.

திடீர்னு புறப்பட்டதால ட்ரெயின்லாம் யோசிக்கல. பஸ்ஸப் பிடிச்சு திருவானைக்கால இறங்கி ஆட்டோ பிடிச்சு ஸ்ரீரங்கம் வந்து ரூம் போட்டாச்சு.

பல்ல தேச்சுட்டு, தோள்ள துண்டப் போட்டுண்டு கொள்ளிடம் கிளம்பினேன். கீழ வாசல்கிட்ட போறச்ச,

“டேய் கண்ணா எப்டிடா இருக்க” என்று தோளில் தட்டியவரை திரும்பி பார்த்தேன்.
நெரச்ச தலையும் ஒரு மாச தாடியோட அடையாளம் தெரியல.

“என்னடா முழிக்கற? நாந்தாண்டா ரெங்கன்… ரெங்குடு”

அஞ்சாறு வருஷம் முன்னால ஊருக்கு வந்தப்ப பாத்தது. அதுக்குள்ள இப்டி கெழவனா போய் அடையாளமே தெரியலயே.

“ரெங்குடுவா என்னடாது தாடியும் வேஷமும்”

“சோம்பேறித் தாடிதான். வி.ஆர்.எஸ் கொடுத்துட்டேன்.. ஆபிஸா கொள்ள போறது தினமும் ஷேவ் பண்ண அதான் அப்டியே விட்டாச்சு. ஆமா, நீ எங்கடா இந்தப் பக்கம்?”

“சும்மா நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டு போலாம்னு”

“சும்மா நாலு நாளா?” நம்பிக்கையில்லாமல் பார்த்தான்.

“ஆபிஸ் இல்லியோ”

“அது எப்பவும்தான் இருக்கு. சும்மா ஒரு மாறுதலுக்கு”

“ஏகாதசிம் போது இப்டி நாலு நாள் வந்திருக்கப்டாதோ. பெருமாள நன்னா ஆயிரக்கால் மண்டபத்துல சேவிச்சுருக்கலாம். வேடுபறி மாதிரி கம்பைன் பண்ணிண்டு வந்திருக்கலாம்”

“இல்ல சாதாரண நாள்ல வந்து இங்க தங்கிட்டு போலாம்னுதான்” என்றவனை விசித்திரமாக பார்த்து விட்டு

“சரிடா நா வரேன். மத்யானம் கும்மோணம் கிளம்பறேன். மச்சினி பொண்ணுக்கு ரெண்டு நாள்ள கல்யாணம். நாந்தான் எல்லா ஏற்பாடையும் கவனிச்சுக்கறேன்”

அவன் போன பின் கிழக்கு ரெங்கா தாண்டி, கொள்ளிடம் நோக்கி போறச்ச கண்லபட்ட கழுதைய கூட பாசமா பார்த்தேன்.

எப்பவும் போல் கணுக்கால் தண்ணியில் கொள்ளிடம். அங்கே காய்ந்திருந்த புல்வெளியில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். நந்து போட்ட பவுன்ஸர்ல வடக்கு சித்திரை வீதி மொட்ட முரளி மண்டைல அடி பட்டு அவன் பொழச்சதே பெரிய விஷயமா போச்சு. அவனோட அப்பா வந்து எங்க வீதில போட்ட சத்தத்துல நானும் நந்துவும் அப்பலேர்ந்து கிரிக்கெட் மட்டயக்கூட தொடபயந்தோம்.

ஏதோ நினைவுகளுடன் தண்ணீரிலேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து விட்டு பின் நிதானமாக ஒரு குளியல் போட்டு கரையேறினா ஒரே பசி. ரூமுக்கு போய் ட்ரஸ்ஸ மாத்திண்டு சாப்டுட்டு அப்டியே படுத்தவன் நல்லா தூங்கிட்டேன்.

Srirangam olden days vaganam

ரெண்டு மணி நல்ல வெயில். இப்ப போனா பெருமாள் சேவையாகுமேன்னு கிளம்பினேன். பெருமாள் சன்னதில நல்ல கூட்டம். இது வேலைக்காகாதுன்னு கம்பத்தடி ஆஞ்சனேயர் கிட்ட சித்த நாழி உட்கார்ந்திருந்திட்டு அப்டியே ப்ரதக்‌ஷனமா வந்து சொர்க்கவாசல் கிட்ட பல்லிய பார்த்துட்டு தாண்டினப்ப, சின்ன வயசுல அந்த வழியா இராப்பத்தும் போது ஆழ்வார ஏளப் பண்ணிண்டு போனது ஞாபகம் வந்தது. அரைப் பரீட்சை லீவு, நானும் நந்துவும் கோயிலே கதின்னு இருப்போம். அப்ப மட்டுமே கிடைக்கற செல்லூரப்பம்க்கும் பல்லை உடைக்கும் உருப்படி என்ற பட்சணத்துக்கும் ஏக டிமாண்ட். தாத்தாக்கு கூட அம்மா அம்மியில் பொடி பண்ணிக் கொடுப்பா.

மெல்லிய புன்னகையுடன் வெளியேவந்து வலது புறமாகவந்து மேலப்பட்டாபிராமன், தன்வந்திரி  தாண்டி தாயார் சன்னதிக்குப் போனால், ப்ராட்டி, பெருமாள் அளவு ரொம்ப பிகு பண்ணிக்காமல் அருமையான தரிசனம் தந்தாள். மஞ்சக் காப்பை தாமரை இதழில் சுத்திக் கொண்டு வெளியே வந்தபோது பங்குனி உத்திர மட்டயடி உத்ஸவ நினைவுகளில் புன்னகையுடன் படிகளில் அமர்ந்தேன். தாயார் சன்னதி கோஷ்டி, பெருமாள் மேலே பழங்ளை விட்டு எறிந்த போது, ஒரு முறை பெருமாள் பக்கத்திலிருந்த என் மேல் சொடேரென்று மேலே விழுந்த பழக்கலவையும், அந்த வேகத்தில் அதிர்ந்து பிறகு அன்று முழுவதும் நினத்து நினைத்து நானும் நந்துவும் சிரித்துக் கொண்டே இருந்ததும் ஞாபகம் வர என் புன்னகை இன்னும் விரிந்தது.

“நீ..நீங்க கண்ணனில்ல”

லேசாக காதுகளிடை நரை, வைரத்தோடு, வைர மூக்குத்தி மினுமினுக்க, அந்த பளீர் சிரிக்கும் கண்கள். அட கமலா.

“கமலாதானே “

“ஆமா நீங்க எங்க இருக்கேள் இப்ப? ஆத்துல அழச்சுண்டு வரலியா” என்றபடியே, கண்கள் என்னைச் சுற்றித் தேடின.

“இல்ல நா மட்டும்தான் வந்தேன். சென்னைலதான் இருக்கேன். நீ எங்க இருக்க? எத்தன பசங்க?”

“ நா பெங்களூருல இருக்கேன். ஒரே பொண்ணு. போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு”

அவள்  ஏதோ கேள்விகள் கேக்க இயந்திரத்தனமா பதில் சொல்லிண்டே இருக்க மனசு பழய நினைவுகளில்.

நந்து ரொம்ப ஆசைப்பட்டான் கமலா மேல. ஆனா சொல்ல பயம். அவ பார்வைல இருந்து எங்களால எதுவும் கண்டு பிடிக்க முடியல. வேலை கிடச்சவுடனவேணா அம்மாகிட்ட சொல்லி அவாத்துல கேக்க சொல்லலாமாடான்னான். நா அவனுக்கு மேல பயந்தாங்குள்ளி. ஆமாண்டா வேலைகூட இல்லாம எப்டீன்னேன். அவன் வேலையோட வரதுக்குள்ள அவளோட கல்யாண பத்திரிகை வந்துடுத்து. அவ மனசுல என்ன இருந்ததுன்னு கடைசிவரை தெரியல. நந்துவோட சொல்லாமல்போன காதல் கதை முடிவுக்கு வந்தது.

“நந்து என்ன பண்றான்” னு அவ கேள்விக்கு நா பதில் சொல்றதுக்குள்ள,

“உன்னை எங்கல்லாம் தேடறது” என்றபடியே வந்த  இளம் பெண் அவளுடைய மகளாக இருக்கலாம்.

“சரி அப்புறம் பார்க்கலாம்” என்றபடியே நகர்ந்தாள்.

பழசை அசைபோட்டுண்டே ரொம்ப நேரம் தாயார் சன்னிதியிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு, வெளியேவந்து சாப்டுட்டு ரூமுக்கு வந்தேன்.

“சீசந்திக்கு காசு”

ரெண்டு பசங்க என்னைக் கடந்து சென்றார்கள். அட இன்னும் இந்தப் பழக்கம் இருக்கா?

Image result for sapparam in srirangam

நானும் நந்துவும் சின்ன வயசுல ஸ்ரீஜெயந்தியப்ப வீடு வீடா ஸ்ரீஜெயந்திக்கு காசுன்னுபோய் , வசூலித்த காசுல கலர் பேப்பர், க்ருஷ்ணர் படம், கோந்துல்லாம் வாங்கி, ஆத்துல இருந்த அட்டை, அத்தோட சிராய் அதிகம் இல்லாத விறகை தரையில் தேய்த்து மொழு மொழுன்னு ஆக்கி, அழகா ஒரு சப்பரம் பண்ணி தூக்கிண்டு, நாலு வீதியும் கோலாகலமா கத்திண்டே போனது ஞாபகம் வந்தது. என்ன க்ருஷ்ணருக்கு விளக்கு இல்லை, ஆத்துல இருந்த டார்ச்லைட்ட சப்பரத்துக்குள்ள வைக்கலாம்னு நைசா எடுத்துண்டு போனப்ப அண்ணா பார்த்து பிடுங்கிவச்சுட்டான். அதெல்லாம் அவ்ளவ் நாழி எரிஞ்சா பேட்டரி தீந்துபோயிடும்னு.

கார்த்தால எழுந்து விஸ்வரூப தரிசனம். பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் மற்றும் உபரி சன்னதிகள் சேவிச்சுட்டு கால் ஓஞ்சு கருட மண்டபத்துல உக்காந்தேன். அப்படியே அங்க ப்ரசாதம் வாங்கி காலை உணவ முடிச்சுண்டேன்.

இப்ப போனா ஆர் எஸ் வி ய பாக்கலாம். ட்யூஷன்லாம் முடிச்சு ஃப்ரீயா இருப்பார். போனப்ப சார் எங்கயோ வெளிலபோய்ட்டு அப்பத்தான் உள்ள நுழஞ்சார்.

“சார் நான் கண்ணன், கீழச் சித்திரை வீதி, 1986 பேட்ச்”

“ஆங்.. ஞாபகம் இருக்கு !உங்க செட்ல நீங்க ஆறு பேர் செண்டம் வாங்கினீங்களே”

“ஆமா சார் எல்லாம் உங்களாலதான்”

எப்பவும்போல லேசான வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா உங்க திறமை. வாங்கினீங்க”

இப்பவும் தினம் நாலு பேட்ச்க்கு ட்யூஷன் எடுக்கறார்.

அவர்கிட்ட அரை மணி பேசிட்டு போஸ்ட் ஆபிஸ்தாண்டி திட்டி வழியா சிந்தாமணிகிட்ட வரச்ச ஸைக்கிளில் போஸ்ட்மேன் கடந்து போனபோது சுப்பையா ஞாபகம் வருவதை தடுக்க முடியல. நீளமான தாடி, நெற்றியில் பளீரென்ற குங்குமம் விபூதி, இதுதான் சுப்பையா. போஸ்ட் இருக்கான்னு கேக்கற யாருக்கும் இல்லைன்னு சொல்ல மாட்டார். “நாளைக்கு கண்ணு” ம்பார்.. அப்ப கடிதம்தான் முக்கிய தகவல் சாதனமா இருந்தது. ஊர்லேர்ந்து மாமா, சித்தி போடற கடிதங்கள், வேலைக்கு காத்திருந்த அண்ணாவுக்கான நேர்முகக் கடிதம், இப்படி எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். திட்டி பக்கத்தில் ஒரு ஆத்துல வச்சு அவர் கட்ட பிரிச்சதுமே பாதி பேர் அங்க போய் தபால வாங்கிண்டு வந்திடுவோம்.

ஸ்ரீரங்கத்துல மட்டும் எப்பவுமே ஒரு நாளைக்கி 36 மணி நேரம் இருக்கறாப்ல எனக்கு தோணும். நீண்ட பகல். எனக்கும் வசதியா இருந்தது. வெயிலப் பாக்காம என் இஷ்டப்படி சுத்தினேன்.

Related image

மூன்று நாட்கள் வேகமா போய்டுத்து. நெனச்சபடியே காலாற ஸ்ரீரங்கம் முழுக்க நடந்து அந்த மண்ண சுவாசிச்சு கடைசியா வேணாம் வேணாம்னு நெனச்ச கீழச் சித்திரை வீதி – எங்காத்துக்கு பக்கத்துல வந்தேன். நிறைய மாறிப் போயிருந்தது. எங்காகம் அடையாளமே தெரியல. அடுத்தாப்ல நந்துவாகம் மாற்றம் ஏதுமில்லா அதே திண்ணையுடன் பூட்டப்பட்டு இருந்தது. நாங்க எல்லாம் வாடகைக்கு இருந்த வீடுகள்தான்னாலும், எங்களுடைய இளமைப் பருவம் முழுதும் கழிந்த அந்த வீட்டின்மேல் எனக்கு அலாதி ப்ரேமை.

பூட்டியிருந்த நந்துவாத்து வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன். ரொம்ப நாளா நானும் நந்துவும்தான் இப்டி நாலு நாள் இங்க வரனும்னு யோசிச்சுண்டு இருந்தோம்.

“இப்படி எனக்கு துணைக்கு வரமுடியாதபடி போய்ட்டயேடா. மூணு நாளா மனசுக்குள்ள பொங்கி வந்த துக்கம் பீரிட்டுவர, போன மாசம் ஆக்ஸிடெண்ட்ல இறந்துபோன நந்துவ நெனச்சு உடஞ்சு போய் அழ ஆரம்பித்தேன்.

பகல் ஒரு மணிக்கு யாருமில்லாத வீதியில் நிழலுக்கு படுத்திருந்த ஆடு என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டது.