அட்டைப்படம் – செப்டம்பர் 2022

கவிதை – தி மு நாகராஜன் 

உள்ளம் பொறுக்கவில்லை, பாரதியே- இன்றும்
      கெட்டலையும் மானுடரை நினைந்துவிட்டால்!
🔸
நஞ்சினையே அமுதமெனக் குடித்து, குடித்து,
       நிலைகுலைந்து, வாழ்வில் சரிந்திடுவார்!
பிஞ்சுவான இளசுகளையும் பாவமென விடாது
        கடித்துக் குதறிடும் கொடும் மிருகமாவார்!
அஞ்சாமல் அட்டூழியங்கள் செய்து – கணக்கில்
         அடங்காது சொத்துக்களை குவித்திடுவார்!
          
வஞ்சனைகள் பலபுரிந்து சமுகத்தை – மதம்
      குலம், சாதி, இனமெனப் பிய்த்திடுவார்!
🔸
வாய்குளறி ஒரு வார்த்தை பேசிடினும்- இல்லை
      அறியாமல் ஏதோ ஒன்று எழுதிடினும் 
ஓயாமலதை ஊதிப் புகைய வைத்து- பின்பு
      நெடுநாள் வரை ஓலமிடுவார்!
தீயொழுக்கம்  பூண்ட துறவிவேடனையும்
       மதகுருவா மதித்துப் போற்றிடுவார்!
மாயங்கள்பல புரிந்து மாநிலம் கெடுப்பாரை
       மண்டுகளாய் மனமார  ஆதரிப்பார்!
🔸
சாத்திரங்கள் நன்றாய் அறியார்- அறிந்தும்
      காழ்ப்புணர்ச்சி  உள்ளத்தில் ஊறிடவே
கோத்திரம் ஒன் றாயினும் – ஒரு 
      கொள்கையிற் பிரிந்தவனைக் குதறிடுவார்!
நாத்திறம் நிறைவஞ்சகனை நம்பிடுவார் -ஊழல்
      சூதுவாது புரிவாரைப் போற்றி டுவார்! மிகவே
ஆத்திரங்கொண் டேஇவன் ஆரியன் -இவன் 
      திராவிடன் என்றுபெருஞ் சண்டையிடு வார்!
🔸
மாறியே நாடும் வலியின்றி நலமுடன் – வளம்
      மிகுந்து செழிக்க வழிகாண்பது விடுத்து,
நாறிய பழங்கதைகள் தோண்டிக் கிளறி,
      ஆறிய புண்ணையும் ரணமாக்கிடுவார்!
மேடையும், ஏடுமா, ஏச்சுக்கும், பேச்சுக்கும்?
         சமூக வலை தளங்களும்  சாக்கடையாம்!
படுமட்ட சொல்லெடுத்து திட்டித்தீர்த்து
           பண்பற்று பொழுதினைப் போக்கிடுவார்!
🔸
எண்ணற்ற பெருமைகள் ஏந்தியது பாரதம்- நல்ல
              இயற்கை வளங்கள் நிறைந்தது நம்நாடு;
கண்ணிலாக் குருடராவார்; நெடுநோக்குப் பார்வையும்
                நிதானமும் அரசினரும் இழப்பார்!
மண்ணிலே வளர்ந்து வளங்கொழிக்கும் நாடாய்
               மன்னியே நிலவிட வழிவகுக்கார்!
புண்ணிய நாட்டினிலே வேற்றுமைகள் கலைந்து
                பொங்கும் மகிழ்வோடு ஒற்றுமையாய் வாழார்!
🔸
உள்ளம் பொறுக்கவில்லை, பாரதியே- இன்றும்
      கெட்டலையும் மானுடரை  நினைந்துவிட்டால்!

வ வே சு வைக் கேளுங்கள் – செப்டம்பர் 22

 1. Jalamma Kids - kelvi-pathilஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், எண்குலத்தான், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் அனைவரும் ஒருவரா? சுந்தரராஜன் சியேட்டில்

திருக்குறள் அதிகாரத் தலைப்பு “கடவுள் வாழ்த்து “ தானே ! அது ஒருமையில்தான் இருக்கிறது. எனவே அவை ஒரே கடவுளையே குறிக்கிறது . ஒரு கடவுளின் பல பண்புகள் .அது மட்டுமல்ல வள்ளுவர் எங்கெல்லாம் தெய்வத்தைக் குறிக்கிறாரோ அவை ஒரே கடவுளையே குறிக்கின்றது. “ தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் “ என்னும் போதும் “வகுத்தான் வகுத்த வகையல்லால்” எனும் போதும் ,ஒரே கடவுள் என்ற பேராற்றலைத்தான் அவர் கூறுகிறார் 

Jalamma Kids - kelvi-pathil

 1. . இன்று கவிஞர் என்று அறியப்படுபவர்களில் யாரைச் சிறந்த கவிஞராகத் தாங்கள் கருதுகிறீர்கள்?  ( ராமமூர்த்தி அமெரிக்கா)

மரபில் காலுன்றிப் புதுக்கவிதையின் பல வடிவங்களிலும் செழுமை அழியாமல் எழுதிக் குவித்துள்ள எனது இனிய நண்பர்  எண்பதைத் தாண்டிய பேராசிரியர்  கவிஞர் தமிழன்பன் , புதுக்கவிதையின் ஆற்றலை , அழகியல் கெடாது சின்னச் சின்னச் வரிகளில் சித்திரமாய்ப் படைத்துள்ள கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் இன்று வாழும் கவிஞரில் சிறந்தவராகக் கருதுகிறேன் .

Jalamma Kids - kelvi-pathil

 1. ஒரு மண்டலம் என்பதை சிலர் 48 நாட்கள் என்றும், சிலர் 45 நாட்கள் என்றும், சிலர் 40 நாட்கள் என்றும்கூறுகிறார்களே! (அன்னபூரணி )

ஒரு மண்டலம் என்பது மூன்று பட்சங்களைக் கொண்டது. ஒரு பட்சம் 15 நாட்களைக் கொண்டது. ( பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரை) எனவே 45 நாட்கள் சாத்திரப்படி சரியானது. சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம்  மருந்து உட்கொள்ள வேண்டுமென்றால் அது 48 நாட்களைக் குறிக்கும். மருந்து பூரணமாக செயல்பட மூன்று நாட்களை அதிகமாகச் சேர்த்துள்ளார்கள் என எண்ணுகிறேன் . நான் பல ஆண்டுகள்  சபரிமலை சென்று தரிசனம் செய்துவந்தவன். வழிபட்டு முறையில் என் குருசாமி எனக்குச சொன்ன மண்டலம் என்பது 41 நாட்கள். இதிலே 40 எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை

Jalamma Kids - kelvi-pathil

 1. கிளியோபாத்ராவின் மூக்கு மட்டும் சற்றேவளைந்திருந்தால், உலக சரித்திரமே மாறி இருக்கும் என்ற மேற்கோளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தேர்தல் முடிவுகள்வரும் போதெல்லாம் , கருணாநிதி இதைக் கூறுவார் (தென்காசி கணேசன்) . 

 

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்பது என் கருத்து. அதுவும் அழகிகள் விஷயத்தில்..நெவர்.! மூக்கு எப்படியிருந்தாலும், சீஸர் ஆண்டனி ஆகிய இருவர் கண்களுக்கும் அவள் பேரழகிதான். நீங்கள் குறிப்பிட்ட மெற்கோளை சொன்னவர் ப்ளேஸ் பாஸ்கல் ( Blaise Pascal)

(“The nose of Cleopatra: if it had been shorter, the whole face of the earth would have changed” ~ Blaise Pascal, )

Jalamma Kids - kelvi-pathil

 1. பாலன் தேவராயன் சுவாமிகள்எழுதியுள்ள கந்தர் சஷ்டி கவசத்தில், “சொக்கு சொக்கு சூர் பகை சொக்கு சூலை சயம் குன்மம்  சொக்கு சிரங்கு என்ற வரிகளில் வரும் சொக்கு என்ற சொல்லின் பொருள் என்ன?  மேலும், தூக்கம் கண்ணை சொக்கும், சொக்கும் அழகு! இந்த இரண்டு வாக்கியங்களில் வரும் சொக்கு என்ற சொற்கள் இரண்டும் ஒன்றா? இந்த சொற்களுக்கும் கந்தர்சஷ்டி கவசத்தில் வரும் சொல்லுக்கும் உள்ள  ஒற்றுமை  உண்டா ? (அன்னபூரணி ,சென்னை )

சொக்கு என்பதற்கு அழகு, மயக்கம் என இரு பொருள் உண்டு. கந்தர் சஷ்டிக் கவசத்தில் “சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு” என்பதற்கு “மயக்கம் தரக்கூடிய பகையை மயக்கில் ஆழ்த்துவாய் எனப் பொருள் கொள்ளலாம். சொக்குச் சிரங்கு என்பது இணையாயின்றி மயக்கம், சிரங்கு என்று இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.

Jalamma Kids - kelvi-pathil

 1. இது வரை வெளியாகி உள்ள பாரதியின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் எந்த புத்தகம் சிறந்தது (வத்சலா , சென்னை )

இராஜாஜி, சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ஆர்; முனைவர் பிரேமா நந்தகுமார், டாக்டர் சுந்தரம், உஷா ராஜகோபாலன் ( பாஞ்சாலி சபதம் முழுவதும்) போன்ற பலர் அங்குமிங்குமாக பல பாடல்களை மொழிபெயர்த்துள்ளனர். முழுமையான தொகுப்பு இன்னும் வரவில்லை. தமிழ் தெரிந்தால் தமிழில் படிப்பதே சிறந்தது. எந்தக் கவிஞனுடைய கவிதையையும் அவன் எழுதிய மொழியிலேயே படித்தால்தான் அவற்றை முழுமையாக உணர முடியும்

பாரதியை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிப்பதற்குமுன், பாரதி அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அவரது கவிதைகளையும், அவர் எழுதிய ஆங்கிலப் படைப்புகளையும் படித்துப் பாருங்கள் என்பது எனது வேண்டுகோள். அதற்கான குறிப்பு கீழே கொடுத்துள்ளேன்.

Mahakavi Subramania Bharati’s English writings, which includes his journalistic pieces, letters and translations, edited by Mira T. Sundara Rajan, the poet’s great-granddaughter and brought out by Penguin, is a sincere attempt to place him within the literary atlas of ‘Indian’ literature.

Jalamma Kids - kelvi-pathil

 1. ஐயா! விநாயகர் அகவல் சங்கப் புலவர் ஔவை பாடியது என அறிகிரோம். அதேசமயம் பல்லவ காலத்தில்பரஞ்சோதி என்ற சிறு தொண்டர் மூலம் வாதபி கணபதி முதன் முறையாக தமிழ் நாட்டில்எழுந்தியருளினார் என்கிறது ஒரு சரித்திரச் செய்தி. சற்று குழப்பமாக உள்ளதே!  (சந்திரமோகன் சென்னை )

இதில் குழப்பத்திற்கு ஏது இடம் ? விநாயகர் பழந்தமிழ்க் கடவுள் என்பது தமிழ்த் தோத்திரங்கள் மூலம் சங்ககால முதல் இருந்ததை அறிகிறோம். நமது நாட்டு தெய்வங்கள் எல்லாம் பாரத மண்ணை சார்ந்தவை. அந்தந்த இடத்திற்கு ஏற்பப் பெயர்கள் மாறும். மும்பையில் பணி புரியும் இளைஞனுக்குப் பெண்ணைக் கொடுக்கும் தமிழ்நாட்டு மாமனார் “மும்பை மாப்பிள்ளை” என மாப்பிள்ளையை அழைப்பது போலத்தான் இதுவும். வாதாபியிலிருந்து வந்ததால் அவர் வாதாபி கணபதி. ஆனால் அவர்தான் தமிழ்நாட்டின் முதல் கணபதி என்று சொல்ல இயலாது.

Jalamma Kids - kelvi-pathil

8            இன்றைய கல்வியின் தரம் அறிவியல் வழியாக முன்னோக்கி, மாணவர்களை அழைத்துச் செல்வது போல்தோன்றினாலும், நம் காலத்தில் நம் பள்ளியில் மாணவர்களின் திறமையை ஞாபகசக்தி, சுயமாகசிந்தித்தல்,   சுயனம்பிக்கை, நல்ல கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள், கேள்வின் பதில்கள்கலந்துரையாடல், உடனடியாக கதைகள் சொல்லுதல் என பலவகையில் மாணாக்கர்களின் திறமையை, மன உறுதியை, ஒற்றுமையை, அன்பு என்ற சங்கிலியால் ஒன்றாக இணைந்து வளர்ந்தோம். நம் காலத்தில்மாணவர்களுக்கு   கிடைத்த இத்தனை நல்ல வழிகளில் இன்றைய மாணவர்களின் பயணம்  இல்லாமல்இருப்பது போல் எனக்குள் ஒரு ஏக்கம். ஆசிரியராக தங்களின்    கருத்தும் தீர்மானமும் சொல்லுங்கள்.  (ஜெயரமணி. பங்களூர் )

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இதே கருத்தைப் பல மேடைகளில் நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். ஏற்கனவே நல்லொழுக்கம் சொல்லித்தரப் படாத சூழலில் வளரும் இளைய தலைமுறை தற்போது , குறிப்பாகத் தமிழகத்தில் மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது ,கூடுதல் கவலையாகும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே இதற்கு விடை.

Jalamma Kids - kelvi-pathil

 1. சங்கப் புலவர்கள் முதல் நாமறிந்த கண்ணதாசன், வைரமுத்து வரை திறன் வாய்ந்த புலவர்கள்மன்னனாலும் மக்களாலும் பாராட்டப் பட்டு   பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்று மதிப்போடுவாழ்ந்ததாக          அறிகிறோம். இடையே நம் பாரதிக்கு மட்டும் ஏன் வறுமை நிலை? (மோகன், மணப்பாறை)

பொன்னையும் பொருளையும் தங்களைப் புகழ்ந்து மகிழ்வித்த புலவர்களுக்கு அக்கால அரசர்கள் கொடுத்ததைப் போல் ,பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த குறுநில மன்னர்களும் ஜமீந்தார்களும் தம்மைப் பாடி மகிழ்வித்த புலவர்களுக்குப் பொருள் கொடுத்து வளர்த்தார்கள்.. மக்களாட்சி மலர்ந்த பிறகு திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்கும் கவிஞர்களுக்கு பேரும், செல்வமும், புகழும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நீண்ட பட்டியலில் இருந்து பாரதி விடுபட்டு நின்று வறுமையில் உழன்றதற்குக் காரணம், அவன் கொண்ட கொள்கை. ஆங்கிலேயருக்கு அடிமைகளாய்க் கிடந்த சிற்றரசர்களையும் ஜமீந்தார்களையும் அவன் பாடவிரும்பவில்லை.

“திமிங்கல உடலும் புன் சிறுமதியும் ஓரேழு பெண்டிரும் “ கொண்ட ஆண்மையற்ற சிறு மன்னர்களைப் பாட அவன் விரும்பவில்லை. அந்த சமஸ்தானத்திலே அப்படி அவனுக்கு என்ன வேலை ? எட்டயபுரம் ஜமீந்தாருக்கு சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களைப் பாடியும், செய்தித்தாள் படித்துக் காட்டியும், இன்னபிற இன்பக் கதைகள் உரையாடியும் மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும். இதைச் செய்திருந்தால் பாரதி வறுமையிலே வாடியிருக்கமாட்டான்.

“காற்றடித்த பக்கமவன் சாய்ந்திருந்தால் கனகமணித் தொட்டிலிலே வாழ்ந்திருப்பான்” என்றொரு கவிஞர் பாடினார்.

Jalamma Kids - kelvi-pathil

 1. அலெக்ஸாவை நீங்கள் விரும்புகிறீர்களா ? (சாய்நாத் கோவிந்தன், சென்னை )

Jules Verne (1828-1905),H. G. Wells (1866-1946) Robert Heinlein (1907-1988), Arthur C. Clarke (1917-2008), Frank Herbert (1920-1986) Isaac Asimov (1920-1992), Ray Bradbury (1920-2012) William Gibson (1948 – ) போன்ற பல ஸயின்ஸ் ஃபிக்‌ஷன் எழுத்தாளர்களைப் படித்திருக்கிறேன். அறிவியல் வளர்ச்சியைச் சொல்லும் போதே அதன் அபாயங்களையும் சொன்னவர்கள் இவர்கள். அவையெல்லாம் இன்று நிஜமாகிக் கொண்டு வருகின்றன. மனித குலத்தை முழுச் சோம்பேறியாக்கும் அபாயத்தின் தொடக்கம் அலெக்ஸா. 10,000 ரூபாய்க்கு அமேஸானில் கிடைக்கும் அலெக்ஸாவை வாங்கி, ஸ்மார்ட் போன், டிவி மின்விசிறி என வீட்டிலுள்ள அனைத்து மின்சார சாதனங்களையும் அவற்றோடு இணைத்துவிட்டால் எல்லா செயல்களையும் “ரிமோட்” நிலையிலேயே இயக்கலாம்.

 

எல்லாம் சரிதான். உடற்பயிற்சியின்றி, நோயாளிபோல் இந்த சுகத்தில் வாழ்த் தொடங்கினால், சீக்கிரம் உண்மையான நோயாளியாகவே ஆகிவிடும் ஆபத்து காத்திருக்கிறது.

நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் “ விரும்பவில்லை”

 

குவிகம் குறுக்கெழுத்து சாய்நாத் கோவிந்தன்

 

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

 செப்டம்பர்  மாதத்திற்கான குறுக்கெழுத்து இங்கே ! 

 

சரியான விடை எழுதும் அதிர்ஷ்டசாலி நண்பருக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 100 பரிசு! 

பதில் செப்டம்பர் 18   தேதிக்குள் வரவேண்டும்!

புதிர் காண இங்கே சொடுக்கவும்! 

 

http://beta.puthirmayam.com/crossword/325081A340

YOUR TIME STARTS NOW…….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இனி ஆகஸ்ட்  மாத புதிருக்கான விடையைப் பார்ப்போம் : 

சரியான விடை 

 • 1
  சு
  மை
  2
  தா
  ங்
  3
  கி
  4
  கு
  டை
  க்
  ழ்
  ளை
  ரு
  5
  சோ
  6
  கு
  றை
  பா
  டு
  7
  தி
  ம்
  ள்
  ர்
  8
  நா
  கை
  9
  ரு
  10
  ம்
  ல்
  ற்
  11
  கா
  கி
  12
  ம்
  13
  க்
  14
  கு
  லி
  15
  16
  சு
  ளை
  17
  தி
  ரை
  ல்

  சரியான விடை எழுதியவர்கள்: 9 பேர் 
  ராமமூர்த்தி , ராய செல்லப்பா, ஆரக்கே, துரை  தனபாலன், மனோகர், வைத்தியநாதன், தாமோதரன், சதீஷ், சாந்தி ரசவாதி 

       இவருள் அதிர்ஷ்ட சாலி குலுக்கல் முறையில் தேர்ந்தேடுக்கப்பட்டவர்: 

       தாமோதரன் ( சென்ற மாதமும் இவரே குலுக்கலில் வந்தவர் என்பது     

       குறிப்பிடத் தக்கது)

      இரட்டைப் பாராட்டுதல்கள் !! 

 

 

 

சிவசங்கரி -குவிகம் சிறுகதைத் தேர்வு – ஆகஸ்ட் 22 தேர்வாளர் – சுந்தரராஜன்

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு – ஆகஸ்ட் 2022

 

இம்மாத சிறந்த  கதை


 1. புதுத்திண்ணை – 29-Aug– ஊமைச்சாமி- ஷியாமளா கோபு

 

 • அந்திமழை ,.அமுதசுரபி ,.   அம்ருதா .   ஆனந்த விகடன்
 • உயிர் எழுத்து    உயிர்மை    கலைமகள் .   கல்கி    கணையாழி
 • காலச்சுவடு .குங்குமம் . குமுதம் . குவிகம் . சொல்வனம்
 • தினமணி கதிர், தினமலர் , பதாகை , புதுத்திண்ணை , புரவி
 • பூபாளம், விருட்சம்,  தளம்,  சங்கு,  சிறுகதை

 

ஆகஸ்ட் மாதம் சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒருவர் கதையைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது விருப்பு வெறுப்புகள் (SUBJECTIVITY) வராமல் தேர்ந்தெடுக்க முடியாது என்பது என் எண்ணம்.

நான் நிராகரித்த கதைகள் மற்ற அமைப்பில் முதல் பரிசும் பெறலாம். நான் தேர்ந்தெடுத்த கதைகளை மற்றவர்கள் நிராகரிக்கவும் செய்யலாம். 

எந்தத் தேர்விலும் தனி மனிதனுடைய தனிப்பட்ட உணர்வுகள், கோட்பாடுகள், எண்ணம், விருப்பு, வெறுப்பு ஆகியவை கலக்கத்தான் செய்யும் என்று நான் கருதுகிறேன்.

இருந்தபோதிலும் என்னால் முடிந்தவரை SUBJECTIVITY எண்ணங்களைக் குறைந்து OBJECTIVITY  அதிகரிக்கும்படி தேர்ந்தெடுத்திருக்கிறேன்..  

அதுமட்டுமல்லாமல் கதையின் தன்மையை மட்டும் ஆராய்ந்து கதை எழுதியவர் தெரிந்தவரா நண்பரா வேண்டியவரா என்ற எண்ணம் கலவாமல் தெரிவு செய்தேன் என்ற உறுதிப்பாட்டை மட்டும் இங்கே தர இயலும்.

    

ஒருபக்கக் கதைகள் , நீண்ட நெடுங்கதைகள் ஆகியவற்றைத் தவிர்த்து இம்மாதம் சிறுகதைத் தேர்விற்கு எடுத்துக் கொண்ட கதைகள் : மொத்தம் 69.

 

இவற்றுள் 39 கதைகள் சுமார் வகையைச் சேர்ந்தவை. இவையெல்லாம் நான் நிராகரித்தவை ! இந்தக் கதைகளில் முடிச்சு நன்றாக இருந்தால் நடை படு சுமார். நடை நன்றாக இருந்தால் கதையின் கருத்து மிகவும் சாதாரணம்   

 

கிட்டத்தட்ட 22 கதைகள் ‘பரவாயில்லை நன்றாக இருக்கிறதே’ என்று சொல்ல வைக்கும்  ரகம். இப்போது வரும் சிறுகதைகளில் தரம் இல்லை என்று சொல்பவர்களின் வாயை அடைக்கும் வகையான கதைகள். மக்கள் வித்தியாசமாகச்  சிந்தித்து புதுவித நடையில் எழுதுகிறார்கள். .

உதாரணமாக,

 

தனிமையில் இருக்கும் அம்மா தனக்குத் துணை தேவை பற்றி மகனுடன் பேசுவது,

போர்க்கைதியாகித் துவண்ட பெண் 3  தீர்மானங்கள் போட்டு செயல் படுத்துவது

கிராமப் பெண் ஒரு  கொலைகாரன் மேல் சபலப்படுவது  

சீனாவில் உயரமான கட்டிடங்களைத் துடைக்கும் கிராமத் தொழிலாளி பணம் சம்பாதிக்க தற்கொலை செய்து கொள்வது

வேலைக்காரன் முதலாளியின் அம்மாவின் உடலுக்கு ஆளுயர மாலை போடுவதை விரும்பாத முதலாளி

ஏழை நடிகனுக்கு பழைய பணக்கார நண்பன் உதவ மறுக்க புதியதாய் சந்தித்த உதவி இயக்குனர் உதவுதல்  

அம்மா இறந்தபிறகு அவளின் புடவை சொத்தே போதும் என்ற பெண்

 தொழிலின் சிரமத்தை நினைத்து அழும் பெண் டாக்டர் தன் உதவியால் பிழைத்த நோயாளியைப் பார்த்து மகிழ்தல்

தோழியின் மீன் தொட்டியைப்  பராமரித்தல்-வெறுப்பு பிரியமாக மாறுவது

ரேடியோ கேட்கக்கூடாது என்ற அப்பாவின்  கண்டிப்பு தன்னுடைய காது பிரச்சினை போவதற்கு என்று பின்னால் உணறுதல்

லஞ்சம் வாங்குவதை  விரும்பாத மலைவாசி மக்கள்

வெறுப்புக்காட்டும் கணவனை விட்டு நண்பனுடன் செல்லும் பெண்

மாணவனைப் பழி  வாங்கத்  துடிக்கும் ஆசிரியரைத் திருத்தும் சக ஆசிரியர்

கயாவில் அம்மாவின் பெருமை பற்றி வாத்தியார் சொல்வது

கடல் ஆமை இளவரசியை அதன் குடும்பத்தில் சேர்க்கும் பேண்டசி

கடவுளும் அவர் துணைவனும் வந்து ஒருபெண்ணின் உடலில் புகுந்து கொள்ளும் மேஜிகல்

கணவன்  சரியில்லாததால் ஆறுதல் வார்த்தை தேடும் பெண்ணை ஒதுக்கும் பள்ளி நண்பன்

கொரானா காலத்தில் பையனுக்கு முடி வெட்டிவிடும் அப்பா   

மதிக்காத மருமகள் – எச்சில் இலை சாப்பிடும் பெரியம்மா

கணவன் மீது சந்தேகப்படும் மனைவி தூக்குப்போட்டுக்கொண்டு சாவது  

 அடகுக் கடை ஆச்சி கணவன் செத்தாலும் நகைக்குரிய ரசீதைத் தருதல்

செய்வினை – குறளிவித்தை பற்றியது

 

இனி சிறப்பாக இருப்பதாக நான் கருதும் எட்டுக் கதைகளின் கதைச் சுருக்கம்.

 

 1. அம்ருதா- உணர்வோடு விளையாடும் பறவைகள்- பொ கருணாகரமூர்த்தி     

 

ஜெர்மனியில் ஒரு இந்தியனும் ஜெர்மானியப்  பெண்ணும் காதல் ,திருமணம் செக்ஸ் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவன் காதல் எண்ணம் எல்லாம் கொண்ட கட்டுப்பாடுடன் இருக்கும் ஆண். அவள் பாஷையில் துறவி மாதிரி . இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கும்போது அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

 

 1. புதுத்திண்ணை – 29-Aug– ஊமைச்சாமி- ஷியாமளா கோபு

அக்காவைக் காப்பாற்றக் கொலை செய்தவன் அதேபோல் அவனே இன்னொரு பெண்ணைக் கெடுக்க முயல அவள் சாகிறாள். பயந்துபோய் திருவண்ணாமலையில்  ஊமைச்சாமியாக வேடம் போடுகிறான். அவனை மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள். அப்படி வணங்கும்  ஒரு சிறுமியைக் காப்பாற்றக் கொடியவன் ஒருவனைக்  கொன்று சித்தராக இறக்கிறான். 

 1. ஆனந்த விகடன் – 22.08.22 – சஞ்சனா காத்திருந்தாள்       எம் கி கன்னியப்பன்   

வேலையில்லா ஒரு எழுத்தாளன் ஒரு முதலிரவுக்  கதையை எழுத விடாமல் மனைவி அவனைத் துப்பில்லாதவன் என்று வார்த்தையால் சுட்டு,  எழுத்துத் தொழிலுக்கு முடிவுகட்டச்  சொல்கிறாள். – எழுத்தாளன் சஞ்சனா காத்திருக்கும் கதையை விட்டு மனைவியைத் துப்பாக்கியால் சுடும் கதையை எழுதத் துவங்குகிறான்.

 1. உயிர் எழுத்து – எங்களூர்புளியமரத்தின் கதை       மகாலெட்சுமி

ஒரிஜினல் புளியமரத்தின் கதையைப் போல ஊரையே காப்பாற்றும் ‘புளியாமரம்’ – வெள்ளத்தில் பல குடும்பத்தைக்  காப்பாற்றுவது , வாயும் வயிருமா இருக்கிறவ செத்தா அதுக்குப்  பரிகாரமாக  புளியாமரத்தின் அடியில் சுமைதாங்கிக் கல் வைக்கவேண்டும். அதை பிசாசு என்று பயப்படும் குழந்தைகள், விற்குமுன் ஆட்டு வயிற்றில்தண்ணீர் ரொப்பும் இடம் புளியாமரம். கஜா புயலில் புளியாமரம் சாய்ந்துவிட்டது. அதன் நினைவுகள் மட்டும் பலர் மனதில் இருக்கிறது 

 1. குங்குமம் – 19.08.22 -பைரவ சாமியார் – எஸ் எல் நாணு  

கிராமத்திலிருந்து குறைவான விலைக்கு அபூர்வ ஓவியம் வாங்கி லட்சக்கணக்கில் அதை விற்க முயலும் பேராசைக்கார நண்பனை அது ஆபத்து தரும் பைரவ சாமியாரின் படம் என்று சொல்லி அதைத் திருப்பிக் கொடுக்கவைத்து  அதற்கான உண்மையான விலையைப்  பெற்றுத்தரும் கதை

 

 1. காலச்சுவடு -பியானோ – சிவ பிரசாத்     தன் அமெரிக்கப் பேத்தி பரத நாட்டியம் கற்றுக்கொள்ளுவதை விட்டு  பியானோ வாசித்து அமெரிக்கரைத் திருமணம் செய்து கொள்வாளோ என்று கோபம் கொள்ளும் பாட்டி . பின் இசையின் பெருமை அறிந்து திருந்துவது

 

 1. சொல்வனம் – விடுதலை –       பிரபு மயிலாடுதுறை  

காட்டில் , பேசாமலேயே மனதால் புரிந்து கொள்ளும் சீடர்களை வைத்து குருகுலம் நடத்தும் குடிலுக்குத் தன் குடும்பம் உறவினர் அனைவரும் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதைக் கண்ட ஒருவன் வலிப்பு நோயுடன் வருகிறான். ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளத்  தயங்கும் அவனிடம் கடைசியில் தனது தண்டத்தைக் கொடுத்துவிட்டு குரு வெளியேறுகிறார். குரு சீடர் அமானுஷ்யக் கதை

 1. புதுத்திண்ணை 15-Aug – முடிவை நோக்கி -ஜெயபரதன்

 

அமெரிக்காவில் அணு ஆயுதம் தயாரிக்கும் விஞ்ஞானக் கூடம். அரசு உத்தரவுப்படி ஹிரோஷிமா நாகசாகி மீது அணு குண்டு வீசி அழித்த 15 வது நாளில் அதன் தலைமை விஞ்ஞானிக்குக் கதிரியக்கம் தாக்குதல் –நடந்து  என்ன சிகிச்சை அளித்தும் பயனின்றிக் கொடூரமான முறையில் துடிதுடிக்கிறார். ஐன்ஸ்டீன் மற்றும் தன் சகாக்களை அழைத்து இனி அணுவாயுதம் செய்யும் அரசை எதிர்க்க விஞ்ஞானிகள் தயாராக வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.    

 

 

இந்த எட்டில் எது முதல் படியை எட்டும்?

எட்டும் வித்தியாசமானவைதான்.

முதல் சுற்றில் அணுவாயுதம், குரு -சீடர் அமானுஷ்யம் ,  பியானோ மூன்றும் விலகிக் கொள்ளலாம்.

இரண்டாவது சுற்றில் சஞ்சனா, புளியமரம் ஒதுங்கிக் கொள்ளலாம்

இருப்பவை மூன்று

.1. அம்ருதா – உணர்வோடு விளையாடும் பறவைகள்- பொ கருணாகரமூர்த்தி 

 1. புதுத்திண்ணை – 29-Aug– ஊமைச்சாமி- சியாமளா கோபு
 2. குங்குமம் – 19.08.22 -பைரவசாமியார் – எஸ் எல் நாணு  

 

இவற்றுள்  ‘பைரவா சாமியார்’ முடிவு கொஞ்சம் சினிமாடிக் ஆக இருப்பதால் அது வெற்றிமேடையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது.

‘உணர்வோடு விளையாடும் பறவைகள்’ சிறப்பாக இருந்தாலும் கதைக்களம் ஜெர்மனியாக  இருப்பதால் மனதைத்  தொடுவதில் சற்று தூரத்திற்குச் செல்கிறது. அதனால் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது.  

எந்தவித தயக்கமின்றி ஊமைச்சாமியை முதல் இடத்தில் வைக்கிறோம்.

வாழ்க்கையில் எத்தனை தவறுகள் புரிந்தாலும்  இறைவனை மனதில் நிறுத்தி நம்பிக்கையோடு ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி வணங்கினால் உலப்பிலா ஆனந்தம் அளித்து இறைவன் தன்னைச் சிக்கெனப் பிடிக்கும் வரம் தருவான் என்று கூறும் கதை. ‘Every Saint has a past and every sinner has a future’    என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கும் கதை!

இந்த மாதத்தின் சிறந்த கதை! சியாமளா கோபுவிற்கும், வெளியிட்ட புதுத் திண்ணைக்கும் வாழ்த்துகள்! 

-சுந்தரராஜன் 

 

சிவசங்கரி-குவிகம் சிறுகதைத் தேர்வு -ஜூலை 22 தேர்வாளர் – ம.சுவாமிநாதன்

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

எழுத்தாளர் சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – ஜூலை 22

இம்மாத சிறந்த கதை


“பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம் ’ என்னும் கதை மிக அருமை, அபாரம். கதாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன். (இதழ் உயிர்மை ஜூலை 2022)


 

 

கிட்டத்தட்ட 60 கதைகள் படித்தேன். பாதிக்குமேல் சுமார் ரகம். தானாகத் துணையைத் தேடுதல், கிராமத்தில் வயதான அப்பா-அம்மா நகரத்தில் அல்லது வெளிநாட்டில்  பிள்ளை, வரதட்சிணைக் கொடுமை … etc etc என ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் மாற்றுப் பிரதிகள்.

பல கதைகள் அபாரமாக இருக்கின்றன. மிகச் சிறந்த எழுத்து, அருமையான பாத்திரப் படைப்பு, யதார்த்தமான நடை இவை அந்த இடத்திற்கே நம்மைக் கொண்டுசெல்கின்றன.

அவற்றில் சில கதைகள் மிக மிகப் புதிய கதைக்களத்தைக் கண்முன்   கொண்டு வருகின்றன. சில கதைகளில்  இந்தப் பாத்திரங்களை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. இன்னும் சில கதைகளில் பாத்திரங்கள்  இப்படியும்   மனிதர்கள் இருக்கிறார்களா, இப்படியும் நடக்கிறதா, இவ்வளவு பிரச்சினைகளுடன் மனிதர்கள் வாழ்கிறார்களா என மனதைச் சங்கடப்படுத்தின.

இந்திரா பார்த்தசாரதி, வண்ணதாசன், டாக்டர். பாஸ்கரன்   இவர்களின் அபாரமான எழுத்துகளைப்பற்றி  நான் என்ன சொல்ல?

 1. தன்னறம்  சு. வெங்கட்     (  சொல்வனம் 10.7.22)

சரியான் பேப்பர் ஆதாரம் இல்லாத வெளிநாட்டவர் வேலை தேடவும், செய்யவும் படும் கஷ்டம். பெரிய ஸ்டோரில் வேலைசெய்யும் ஷான்சிங் கடை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு மாறும்போது உண்டாகும் பிரச்சனைகள். ஒரு இடம் வரும் அதில். ‘’நான் CCTV வைத்திருக்கிறேன் அதனால் எல்லோரும் நன்றாக வேலை செய்வார்கள்’ என்று புதிய தலைமுறை முதலாளி சொல்லுவார். பதிலாக சிங், ‘அதற்கு உங்க அப்பா வேறு ஒன்று வைத்திருந்தார்’ என்பார். அது என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிடுவார்.. அது ‘நம்பிக்கை’ என்பது நமக்கும் புரியும்

 

 1. டாக்டர் ஜே பாஸ்கரனின் ‘பனித்துளி’ (தினமணி கதிர் 10.7.22)

கேன்சர் நோயாளி வந்து சிகிட்சை பெரும் இடம்.. அதிலும் ஏழைகள். ஒருவர் காட்டும் அன்பு, செய்யும் உதவிகள் மனதைத் தொடுகின்றன.  really touchinng

 

 1. கார்த்திக் ஸ்ரீனிவாசின்     ‘மாணப்பெரிது’  ( விகடன் 22.07.22)

ஒரு பெரிய பணக்காரர் மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து வெளியேறப் போகும்போது ஒரு புது நோயாளியைப் பார்க்கிறார். அதிகம் செலவாக் கூடிய ஏதோ ஒரு  நோய்.  அவருக்கு என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் சென்று  பார்க்கும்போது, எப்போதோ எங்கேயோ பார்த்த மாதிரித் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பூனாவிலிருந்து சென்னைக்கு வரும்போது – waitting list கன்ஃபர்ம் ஆகாத நிலையில்,கையில் காசும் இல்லாத நேரத்தில் உதவியவர் என்பது பின்னர்  நினைவிற்கு வருகிறது  அவர் பெயரைக்கூடத் தெரிந்துகொள்ளவில்லை..  எவ்வளவு செலவானாலும் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிவிடுகிறார். மயக்க நிலையில் இருந்தவரின் கட்டில் அருகே செண்டு அவர் பெயரைப் பார்க்கிறார்… அருமை

 

 1. தனஞ்செயனின் சமையலறையில் சிப்பிகள். (உயிரெழுத்து)

யதார்த்தமான நடை/ நிகழ்வுகள். வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் நடுவயதுப்பெண் படும்  கஷ்டம். முடிவு வரி… ‘அவளால் சமையலறை ஜன்னலை மட்டுமே திறக்க முடிந்தது.

 

 1. சசியின் இரட்டை கோபுரம் (விகடன் -13.7.22)

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை தீவீரவாதிகள் விமானம் மூலம் தகர்த்து ஏராளமான அப்பாவிகள் கொல்லப்பட்டது ஒரு மாபெரும் சோகம்…  அதை வேறு ஒரு கட்டிடத்தில் இருந்து பார்த்ததை பெருமையாக, பாக்கியமாக சொல்லும் பெரிய மனிதர்;. இரட்டைக் கோபுர கேக் செய்து அதனை தற்கும் நிகழ்வில் பங்கு பெறும் மனிதன். இவர்களை, அந்த கொடூரத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய,    காலில் மட்டும் அடிபட்டு ஊன்றுகோலோடு நடக்கின்ற ஒருவர் எப்படிப் பார்பார்.?  அந்த  வெறுப்பு, கோபம் ஆகியவற்றை சொல்லும் கதை.

 

 1. மதுராவின் சடைப்பூ                                (  சொல்வனம் 10.7.22)

மிக நல்ல படைப்பு. தலையில் ஒரு கூடைப் பூ வைத்துக் கொள்ளவேண்டும் என ஆசைப்படும்  பூப்பெய்தாப் பெண். அந்த நிகழ்வின்போதுதான் அது கிடைக்குமோ? அப்படி என்றால் என்ன? அறியத் துடிக்கும் அறியா வயது. நல்ல எழுத்து. பாட்டியின் உதவியால் கூடைப்பூ வாங்கி வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தலையில் பூவுடன் இருக்க விரும்புகிறாள். ஆனால், வேறு ஒரு பெண்ணிற்கும் இந்த ஆசை என்று அறிந்ததும் பூக்களை கழட்டிக் கொடுத்துவிடும் மனசு,

 

 1. ஜனநேசனின்              சமத்துவர்          (உயிரெழுத்து)

ஒரு ஆந்திரக்காட்டில் ஆதிவாசிகள் கொண்டாடும் திருவிழா,, அவர்களின் நம்பிக்கை, பக்தி. மிக நல்ல எழுத்து. சமத்துவர் சிலை பார்ப்பதற்கு நுழைவுக் காடணம் என்று தெரிந்ததும், சிலையைப் பார்க்காமலேயே திரும்புகிறார்கள். முடிவைத் தவிர சிறப்பான எழுத்து. நாமும் அந்த விழாவில் கலந்துகொண்ட உணர்வு.

 

இவை தவிர சிறுகதை ஜாம்பவான்கள் இந்திரா பார்த்தசாரதியின் ‘பிரிவு’ (உயிர்மை ஜூலை) மற்றும் வண்ணதாசனின்  ‘முதலில் பார்ப்பவன்’ (அந்திமழை- ஜூலைi)

இயக்குனர் மணிபாரதியின் இரு கதைகள்.  இரண்டிலும் (அமுதசுரபி மற்றும் குமுதம்) நேர்மறை மனிதர்கள் பற்றியவை. எதிர்மறை எழுத்துக்களே இல்லை

சிலகதைகளில் சில குறிப்பிட்ட இடங்கள்/ வசனங்கள் மிக மிக அருமை

ஷாஜி:- “நூலகத்தில் எடுக்கும் புத்தகங்களையும் இரவல் வாங்கும் புத்தகங்களையும் படித்து விடுகிறோம், விலை கொடுத்து வாங்கிய புத்தகங்கள் படிக்கப்படாமலேயே தங்கிவிடுகின்றன,

சுப்ரபாரதிமணியனின் ‘பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்’

என்னுடைய கணிப்பில், மிக மிக புதிய கதைக் களத்தில் நாம் பார்த்திராத, அறியாத கோணத்தில் எழுதப்பட்ட “பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம் ’ என்னும் கதை மிக அருமை, அபாரம். கதாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன். (இதழ் உயிர்மை ஜூலை 2022)

ஒரு தன்னார்வக் குழுவில் பண்காரஐம் சித்ரா, ஒரு பஞ்சாலையில் தொழிலாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்து பாடம் எடுக்க விரும்புகிறாள். அதற்கான ஒப்பந்தத்தில் பஞ்சாலை நிர்வாகத்தினரின்  கையெழுத்தை வாங்க முயற்சிக்கிறாள்.

சுகாதாரம் தவிர, அடிப்படை உரிமைகள் பற்றி சொல்லித்தரலாம். பெண்கள் சுதந்திரமாக  பாலியல் ரீதியில் தொந்திரவு இன்றி பணிபுரிய பிரச்சாரம் செய்யலாம். ஒரு பெரிய விழாவில் அந்தப் பஞ்சாலை “பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசம்’ என்று அறிவிக்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறாள்.

ஆனால் 17 முறை அலைந்தும் பலனில்லை. கஷ்டத்தினைப் புரிந்துகொள்ளும் நல்லவரான ஒரு காவலாளியின் உதவியால் உள்ளே செல்கிறாள். பல முயற்சிகளுக்குப் பின் ஒரு அதிகாரியைச் சந்திக்கிறாள்.

நன்றி தெரிவிக்க அந்தக் காவலாளியிடம் செல்கிறாள்.  இவளை உள்ளே அனுமதித்ததற்காக அந்தக் காவலாளியின் வேலை  போய்விட்டது என்று அறிகிறாள். சித்ராவிற்கு அவருக்கு வேலைபோன வருத்தத்தைவிட, அடுத்த முறை வரும்போது உள்ளே செல்வது கஷ்டமாகிவிடுமே என்னும் கவலையே மேலோங்குகிறது.  மனித இயல்பு.

இடையே, செக்யூரிட்டி வேலைபார்க்கும் தொழிலாளிகளின் கஷ்டங்கள் மிக அழகாக சித்தரிக்கப்படுகின்றன. நாள் முழுவதும் நிற்கவேண்டிய வேதனையை அருமையாகப் பதிவு செய்கிறார். சித்ராவின் தந்தை கால்வலியால் வேதனையுற்று இறந்துபோனது, அவள் நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும்  நேரில் பார்ப்பது போல, (ஒரு திரைப்படம் போல)  வர்ணிக்கப்பட்டுள்ளது.

 

சுவாமிநாதன் 

 

 

உலக இதிகாசங்கள் – இலியட் – எஸ் எஸ்

பாகம் 2

தன் முன்னாள் காதலியும் தற்போது  பீலியஸின் மனைவியுமான தீட்டிஸ்  தன்னிடம் கிரேக்க – டிரொஜன் யுத்தத்தில் டிரோஜன்கள் கை  ஓங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும் முதலில் திகைத்த  ஜீயஸ் கடைசியில் அப்படியே செய்வதாக வாக்குக் கொடுத்தான். 

ZEUS AND HERA

இதைத் தன் மனைவி ஹீரா தெரிந்துகொள்ளக் கூடாது என்று மனதார விரும்பினான். ஆனால் தீட்டிஸ் மீது  தன் கணவனுக்கு இருக்கும் ஆசையை நன்குத் தெரிந்த ஹீரா ஜீயஸைச்  சாடினாள்.  அது ஜீயஸின் கோபத்தைத் தூண்டியது . ‘ என் சக்திக்கு முன் நீயோ வேறு எந்தக் கடவுளோ குறுக்கே நிற்க  முடியாது. எனக்கு எது சரியென்று தோன்றுகின்றதா அதைத் தான் செய்வேன்! ” என்று ஆணித்தரமாகக் கூறினார். ஹீராவின்   மகன்  தந்தையின் கோபத்தைக் கிளறவேண்டாம்  என்று வேண்டிக்கொள்ள ஹீரா அரை மனதுடன் சமாதானமானாள்.

ஜீயஸ் தான்  செய்யவேண்டியதைத் தீர்மானம் செய்துகொண்டார். அகிலிஸை ஏமாற்றிய கிரேக்க வீரர்களுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தார்.

கிரேக்கப் படைத் தளபதி அகெம்னன் கனவில் போய் ‘டிரோஜன்களைக்  கொன்று போரில் வெற்றிபெற இதுவே சரியான தருணம் ‘ என்று பொய்யான தகவலை அசரீரியாகக் கூறினார். அதை உண்மை என்று மனதார நம்பிய அகெம்னன் தன் முக்கிய ஆலோசகர்களை ஒன்று கூட்டினான்.

அவர்களிடம் ஜீயஸ் தன் கனவில் சொன்ன செய்தியைக் கூறினான்.  ஆனால் அதேசமயம்  தன் வீரர்களின் விசுவாசத்தைப் பரிசோதிக்கவேண்டும் என்று விரும்பினான் அகெம்னன்.  அதன்படி ஜீயஸ் கடவுள் தன்  கனவில்   கிரேக்கப்படைகள் தோல்வியைத் தழுவி ஹெலனை மீட்க இயலாமல் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியதாக அறிவித்தான். அதைக் கேட்டு ஊருக்குத் திரும்ப எத்தனிக்கும் வீரர்களை இந்த ஆலோசகர்கள் தடுத்து நிறுத்தி ஒற்றுமையை உண்டாக்க வேண்டும் என்பது அவனது திட்டம். 

அது போலவே வீரர்கள் அனைவரையும் அழைத்து ஜீயஸ் கடவுள் தம்மை  வஞ்சித்துவிட்டதாகக்  கூறினான்.

அதைக் கேட்ட அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்ப மிகுந்த உற்சாகத்தோடு தங்கள் கப்பல்களைச் சரிசெய்ய ஆரவாரத்தோடு புறப்பட்டனர்.    

இலியட் கதையின் போக்கே மாறியிருக்கும் இது இப்படியே நடந்திருந்தால்.. 

தன் கணவன் கிரேக்கருக்கு எதிராக சதி செய்வதை உணர்ந்த ஹீரா , தன்  கணவன் ஜீயஸின் தலை வழியாகப் பிறந்த தலைமகள் அதீனியைத் தன் துணைக்கு அழைத்தாள்.  அவள் அறிவும்  அழகும் தந்திரமும் போர்க் குணமும் நிரம்பியவள்.   அழகிப்போட்டியில் தன்னைத்  தேர்ந்தெடுக்காததற்காக  டிராய் நாட்டின் பாரிஸ் மீது வன்மம் கொண்டவள். டிரோஜன்களை அழிப்பதில்  ஹீராவைவிட அதிக ஆர்வம் கொண்டவள். அவள்  கிரேக்கரில் மாபெரும் தளபதி  ஓடிஸியூஸ்  எண்பனைச் சந்தித்து தனது திறமையெல்லாம் காட்டி ஓடிப்போகும் ஆசையுள்ள வீரர்களைத் திரும்பப் போருக்கு  வரவழைக்க உத்தரவிட்டாள்.  

The Odyssey Setting - How Did Setting Shape the Epic? - Ancient Literature

ஓடிஸியூஸ் அகெம்னனிடமிருந்து  செங்கோலை  வாங்கி வீரர்கள் அனைவரையும் சாம தான பேத தாண்டா முறைப்படி மீண்டும் போருக்கு வரும்படி அறைகூவல் விடுத்தான். அவன் பேச்சிலும் திறமையிலும் மயங்கிய கிரேக்கர் அனைவரும மீண்டும் பலவித உத்வேகத்துடன் டிரோஜன்களை அழிக்க உறுதி பூண்டனர்.  அகெம்னனக்கு எதிராகப் பேசிய தெர்சிடிஸ் என்ற வீரனைத் தாக்கிக் காயப்படுத்தித் தன் நிலைப் பாட்டை உறுதியாக்கினான்.  ஓடிஸியூஸ் மற்றும் நெஸ்டர் இருவரும் கிரேக்க மாண்பினைப் பற்றியும், ஹெலனைத் திரும்பக் கொண்டு வருவது தங்கள் மானப்  பிரச்சினை என்பதையும் வீரர் மத்தியில் நிலை நாட்டினர். வீரர்கள் அனைவரும் முன்னைவிட அதிக உத்வேகத்துடன் போருக்குத் தயாரானார்கள்.   

அப்போது அகெம்னனும் அவர்கள் உற்சாகத்தில் கலந்துகொண்டு தன் கனவை  நினைவில் கொண்டு இதுவே டிரோஜன்களை வெல்லச் சரியான தருணம் என்று  உறுதி கொண்டான். 

தீர்க்கதரிசி  கால்காஸ் என்ற கிரேக்கநாட்டு அறிஞன் போருக்குப் புறப்படும்முன் நடைபெற்ற பலி  நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்தான். அந்தப் பலி மேடையில் ஒரு பெரிய நாகம் வந்து அங்கே இருந்த தாய்ப் பறவையும் அதன் எட்டுக் குஞ்சுகளையும் விழுங்கியது. பின்னர் ஜீயஸ் அவரின் ஆணைப்படி ஒரு கல்லாக மாறியது. இந்தச் சம்பவத்தின் பொருள் என்ன என்பதையும் அவனே விளக்கினான். ஒன்பது  பறவைகளை விழுங்கியதால் ஒன்பது ஆண்டுகள் இவர்கள் போரிட்டாலும் வெற்றி காண இயலாது என்பதன்  சூசகமான அறிவிப்பு அது . பத்தாவது ஆண்டு இப்போது துவங்கிவிட்டது. டிரோஜன்களை வெற்றி கொள்ள இதுவே சரியான தருணம் என்பதை விளக்க வீரர்கள் வெறிக் குரல் எழுப்பினார். 

பின்னர்    அகெம்னன் வீரர்கள் அனைவரிடமும் பேசும்போது சில சமயங்களில் ஜீயஸ் கிரேக்கரைக் குழப்பப் பார்க்கிறார் என்றும் ஆனாலும் அவரது ஆசி எப்போதும் கிரேக்கர் பக்கமே என்று முழங்கினான். சற்று முன்னர் அக்கிலீசுடன் சண்டை போட்டதற்கும் இந்தக் குழப்பம் தான் காரணம்  என்றும் விளக்கினான்.

பின்னர் கடவுளர்களுக்குக் கொடுக்கவேண்டிய பலிகளையெல்லாம் மிகச் சிறப்பாக செய்து அனைவரையும் திருப்திப்படுத்தினான். ஆனால் பலிகளையெல்லாம் ஏற்றுக்கொண்ட ஜீயஸ் அவனுடைய பிரார்த்தனையை மட்டும்  ஏற்றுக்கொள்ளவில்லை.

அதினீ அவர்களுக்குத் துணைவர அகெம்னன் போருக்குத் தகுந்த வியூகங்கள் வகுத்தான்.  வீரர்கள் அனைவரும் கப்பல்களிலிருந்தும், பாசறைகளிலிருந்தும் புறப்பட்டு ஆற்றுச் சமவெளியை அடைந்தார்கள்.  

தன்னுடன் வந்திருக்கும் ஆயிரக் கணக்கான வீரர்களை நினைத்து மிகவும் பெருமையடைந்தான் மாபெரும் கிரேக்கத் தளபதி   அகெம்னன்.  படைத்தலைவர்களையும் அவர்களின் கப்பலைப் பற்றியும்  விளக்கமாகக் கூறி அவர்களையும்  பெருமைப் படுத்தினான். ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான வில்லாளிகள், வாள்  வீரர்கள் , வெண்கலக் கேடய வீரர்கள் புரவி வீரர்கள் அனைவரையும் போற்றினான் அகெம்னன்.  

அக்கிலிஸ் மட்டும் சினம் வசப்பட்டு வராமல் தன் கப்பலிலேயே அமர்ந்திருந்தான்.  அதனால் அஜாக்ஸ் என்பவன் அக்கிலிஸிற்கு அடுத்த சிறந்த தளபதியாக விளங்கினான். 

 

அதேசமயம், ஜீயஸ் கிரேக்கப் படை புறப்பட்டுவிட்டதை டிராய் நாட்டு மன்னனுக்கு அறிவிக்கும்படி  அய்ரிஸ் தேவதைக்கு  உத்தரவிட்டார் ஜீயஸ்.   

Troy, Trojan defenders, Greek attackers - a photo on Flickriver

 டிராய் நாட்டு சக்கரவர்த்தி பிரியம்  அவனது மூத்த  மகனும் தன்னிகர் இல்லாத  தளபதியுமான  ஹெக்டர் மற்றும் பல உப தளபதிகள் ,  மந்திரிமார்கள் ஆகியோருடன்   ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.    

அய்ரிஸ் தேவதை கிரேக்கப் படையின் முன்னேற்றத்தைக் கூறியதும் ஹெக்டர் தன் படை வீரர்கள் அனைவரையும் வந்து குவியுமாறு  உத்தரவிட்டான். தன் படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த ஹெக்டர் மனம் பூரித்தான். எண்ணற்ற வீரர்கள். தளபதிகள் தங்கள்  புரவிப்படை காலாட்படை, ஈட்டிப்படை அனைத்தும் தயார் நிலையில் அந்த மலைச் சிகரத்தில் குழுமியிருந்ததைப் பார்த்துப் பெருமிதமடைந்த ஹெக்டர் எத்தனை ஆயிரம் கிரேக்க வீரர்கள் வந்தாலும் சரி எத்தனைப்பெரிய தளபதி வந்தாலும் சரி அவர்களனைவரையும் கொன்று குவித்து டிராய் நாட்டின் பெருமையை நிலை நாட்டுவேன் என்ற உறுதியை மனதில் கொள்கிறான். 

கிரேக்கம் – டிராய் இந்த மாபெரும் நாடுகளின்  படைகளும் சரித்திரப் புகழ்பெற்ற  டிரோஜன் யுத்தத்திற்காகத் தயார் நிலையில் இருந்தன.   

(தொடரும் )

 

 

 

 

 

திரைக் கவிஞர் – முனைவர் தென்காசி கணேசன்

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி…. கவிஞர் பூவை செங்குட்டுவன் – வல்லமை

இம்மாதக் கவிஞர் – கவிஞர் பூவை செங்குட்டுவன்   

 

திருப்பரங்குன்றத்தில்  நீ சிரித்தால், 
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் 
எதிர்ப்பவரை முருகா உன் வேல் தடுக்கும் 

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை 
இது ஊர் அறிந்த உண்மை 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 
ஆயிரம் உறவினில பெருமைகள் இல்லை 
அன்னை தந்தையே அன்பின் இல்லை 

ராதையின் நெஞ்சமே 
கண்ணனுக்கு சொந்தமே 

காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 

இப்படி, காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்தவர் தான் கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன்.  கவிஞர்கள் திரு கண்ணதாசன், திரு மருதகாசி, திரு வாலி, திரு சுரதா என எல்லோரும் பாராட்டிய கவிஞர். 

ஏ பி நாகராஜன் அவர்கள் கூறுவார்கள் – திரு பூவை செங்குட்டுவன் என்னைத் தேடி வரவில்லை.  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலைக் கேட்டு நான் தான் சென்றேன்.  உவமைக் கவிஞர் சுரதா கூறுவார்  – இங்கே சிரித்தால் அங்கே எதிரொலிக்கும் என்பது அற்புத கற்பனை நயம். கண்ணதாசன் அவர்கள், இந்தப் பாடல் இந்தப் படத்தில் இருக்கட்டும் என்றாராம். 

திரு பூவை செங்குட்டுவன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தவர்.  லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களுக்கு உதவியாளர் ,  திமுக நாடகங்கள
 மற்றும் பாடல்கள்  , மு க முத்து, ஸ்டாலின் அவர்கள் நடித்த நாடகங்கள் என பலவற்றில் இவரின் பங்களிப்பு  நிறையவே உண்டு.  

இவர் எழுதிய, 
கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால் 
கருணாநிதியாகும் ,
என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம், திமுக பொதுக்கூட்டங்களில்  ஒளிபரப்பப்பட்டது. எம்எஸ்வி இசையில், பி சுசிலா அவர்கள் பாடியது. 

இப்படியெல்லாம் இருந்தபோதிலும்,  அவரை வெளியில் தெரிய வைத்தது – கந்தன் கருணை படத்தில் வந்த திருப்பரங்குன்றத்தில் பாடல் தான். அதனால் தான், அதே இயக்கத்தில் இருந்த மற்றொரு கவிஞர் ஆலங்குடி சோமு கூறினார் . 

கழகம் காட்டாத கருணையை, கந்தன் காட்டினான், என்று,

இயக்குநர் ஶ்ரீதர்,  வானொலியில் தேன் கிண்ணம் நிகழ்வில், இந்தப் பாடலின் வரிகள், மற்றும் இசை, தனது ஆன்மாவை தொட்டது  என்று கூறினார். 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்ற பாடலில் வரிகள் மிக அருமை. தயாரிப்பாளர் திரு வேலுமணி மிகவும் பாராட்டியதுடன், தனது  கௌரி கல்யாணம் திரைபடத்தில் அதை உடனே  பயன்படுத்திக்கொண்டார். 

நீ கொடுத்த தமிழ் அல்லவா 
புகழ் எடுத்தது – அந்தத் 
தமிழ் கொடுத்த அறிவல்லவா 
தலை சிறந்தது. 

கந்தன் எனும் பெயர் எடுத்ததால் 
கருனையானவன் – அந்தக் 
கருணையினால் தொண்டருக்கும் 
தொண்டனானவன் 

அதேபோல, 

வணங்கிடும் கைகளின் 
வடிவத்தைப் பார்த்தால் 
வேல்போல இருக்குதடி 

ஒரு வித்தியாசமான ஆனால் உண்மையான கற்பனை அல்லவா இது ?

கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து வந்தவரின், ஆன்மிக வரிகள் பிரமிக்கவைக்கிறது அல்லவா?  வயலின் மேதை திரு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான், கவிஞரை, ஆன்மிகத்திற்கு அழைத்து வந்தார் என்று நன்றியுடன் கூறுவார் கவிஞர். 

இறைவன் படைத்த உலகை எல்லாம் 
மனிதன் ஆளுகின்றான் 
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் 
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்தபோது
எண்ணம் வேறாகும் 
எத்தனை கோயில் இருந்தபோதும் 
இறைவன் ஒன்றாகும் 

என்ற அற்புத வரிகள்  தந்தவர்.  

1967ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் நடந்த இடைத் தேர்தலில்  திமுக வேட்பாளர் (தென்காசியில் வெற்றி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால்,)ஜெயித்து ஆகவேண்டும் என்று விரும்பிய கட்சிக்காக,வேட்பாளருக்காக, எழுதப்பட்ட பாடல். (புதிய பூமி என்ற இந்தப் படமும் தென்காசிக்காரரால் எடுக்கப்பட்டது) . நான் அப்போது தென்காசியில் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பாடல் தான் தொகுதி முழுவதும் ஒலித்தது. வேட்பாளர் கா  மு கதிரவன் வெற்றியும் பெற்றார். இந்தப் பாடல் வரிகள மிக அழகு மட்டுமல்ல  , வெற்றியைத் தேடித் தந்த பாடலும் கூட..                  

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை 
இது ஊர் அறிந்த உண்மை 
நான் செல்லுகின்ற பாதை 
பேரறிஞர் காட்டும் பாதை 

காலம் தோறும் பாடம் கூறும் 
மாறுதல் இங்கே தேவை 
ஏழை எளியோர் துயரம் போக்கும் 
செயலே எந்தன் சேவை 

கோவில் என்றால் கோபுரம் 
காட்டும் தெய்வம் உண்டு அங்கே 
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் 
எண்ணம் வேண்டும் இங்கே 

அகத்தியர் படத்தில் இடம் பெற்ற, தாயிற் சிறந்த கோயிலும் இல்லை பாடல் அப்போதெல்லாம் வானொலியில் தினம் பலமுறை ஒலிபரப்பாகும். திருமதி டி கே கலா அவர்களுக்கு முதல் பாடல் இது. சிறு வயதில் தாயை இழந்து, சித்தியின் கொடுமையை அனுபவித்த இயக்குநர் திரு ஏ பி நாகராஜன் அவர்களைக் கவர்ந்த பாடல். அதை விட வருத்தமான விஷயம் – தாய் இறந்த தந்தி, கவிஞர் பணி புரிந்த அலுவலகத்தில் இருக்க, மறுநாள் தான் அந்த செய்தி தெரிந்து இவர் ஊர் செல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அந்த துயரில் எழுதிய பாடல் தான் இது என்பார் கவிஞர். 

 ராஜராஜசோழன் படத்திற்காக, ஏற்கனவே நடராஜர் மீது எழுயிருந்த ஆடுகின்றானடி தில்லையிலே பாடலை அப்படியே, ஏடு தந்தானடி என்று மாற்றி எழுத, அந்தப் பாடல் அப்போது மிகப் பெரிய ஹிட் ஆனது. 

காதலைக் கூட – 

வசந்த காலம் தேரில் வந்ததோ 
காதல் ராகம் பாடுகின்றதோ 

ஓராயிரம் நூறாயிரம் 
சுகமோ சுகம் 
கவி கம்பனின் கவி நா நயம் 
ரவிவர்மனின் உயிரோவியம் 

வலையோசையில் எனதாசைகள் 
வரவேற்கும் உனை என்றுமே 

என்றும், 

சிந்து நதியோரம் 
தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும்  கன்னி உறவும் 
காதல் கீதம் பாடும் 

மொட்டவிழ்ந்த முல்லை 
கட்டழகின் எல்லை 
தொட்டுத் தழுவும் போது
சொர்க்கம் வேறு ஏது 

என்றும் எழுதுவார். 

அதேபோல, வடிவங்கள் என்ற படத்தில்

தண்ணீரில் மீன் அழுதால் 
கண்ணீரைக் கண்டது யார் 
தனியாக நான் அழுதால் 
என்னோடு வருவது யார் 

பின்னாட்களில
இதே வரிகளை டி ராஜேந்தர் அவர்கள் தனது பாடலில் கையாண்டிருந்தார்கள்.

எட்டாம் வகுப்பு  வரை தான் படித்தவர். வசதியான குடும்ப பின்னணி கொண்டவர், திரைக் கவிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, மிகவும் கஷ்டப்பட்டார். ஆனாலும்,இவர் அடைய வேண்டிய நிலையை, புகழை  அடையவில்லை என்பது மிக வருததமான  ஒன்று.  திமுகவின் ஆரம்ப கால நாடகங்கள், மற்றும் இளைய ராஜாவின் ஆரம்ப நாட்களில் உடன் இருந்தவர். பலரைக் கை தூக்கி விட்டவர். ஆனால், அவருக்கு, உரிய இடம், பொருள் கிடைக்கவில்லை. அதற்குப்பதில் – கடவுளா, காலமா, இவரின்  நேர்மையான அணுகுமுறையா, பொய் உரைக்கத தெரியா மனதா – பட்டி மன்றம் தான் விடை கூறவேண்டும். 

என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பை திரு பூவை செங்குட்டுவன் அவர்கள்  எனக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். அது – 1991ஆம் வருடம், நான் சென்னைக்கு பணி நிமித்தம் மாறி வந்தபோது என்னுடன் ஆட்கோவில் , கேன்டீனில் பணிபுரிந்தவர் தான்திரு முத்து சேகர். நான் நண்பர்களிடம்  எப்போதும் நடிகர்திலகம் சிவாஜி பற்றிப் பேசுவதைக் கேட்ட அவர், ஒருநாள் என்னிடம் வந்து, சிவாஜியை சந்திக்க ஆசையா என்று கேட்க, நான் ஐயோ, முதலில் அதை செய்யங்கள் என்றேன். அப்போது தான் தெரியும் அவர், கவிஞரின்  மருமகன  என்று. உடனே ஒருநாள், கவிஞரை வீட்டில் சந்திக்க, அவர் தனது மகன் திரு தயா அவர்களை உடன் அனுப்ப, அன்னை இல்லத்தின் கதவு திறந்தது. நடிகர் திலகத்தை முதன் முதலில் சந்தித்தேன் – பேசினேன் – புகைப்படம் எடுத்துக்கொண்டேன் – அவரின் ஆட்டோகிராஃப் வாங்கினேன். பிறந்து, 30 வருடங்களாக எண்ணி இருந்த கனவு நனவானது. 

திரு பூவை அவர்களின் இல்லம் எல்டாம்ஸ் சாலையில் இருக்கிறது. உள்ளே சென்றவுடன், அவரும் துணைவியாரும் அன்புடன உபசரித்தார்கள்.  நான் அவரிடம் உதவி கேட்டு போய் இருக்கிறேன. அவரோ என்னை விருந்தினராக உபசரித்தார். இலக்கியப் புலமையுடன், எளிமையும் அவரிடம் இருந்தது. அப்புறம்  பல வருடங்கள்  கழித்து அவரின்  பிறந்தநாள் விழாவிற்கு சென்றேன்.  என்னால் மறக்க முடியாத நல்ல கவிஞர் – நல்ல மனிதர்.

இந்தக் கட்டுரையை,அவர் வரிகளையே எழுதி நிறைவு செய்கிறேன் :  

அவன் 
தாளத்துக்குப் பாடல் எழுதத் தெரிந்தவன் 
ஆனால் 
தாளம் போடத் தெரியாதவன் 

அவன் பாட்டுக்கு 
இப்போதும் மவுசு இருக்கிறது.
அதனால் தான் 
அவன் பாட்டுக்கு எழுதிவிட்டு,
அவன் பாட்டுக்கு இருக்கிறான். 

என்ன செய்வது ? சினிமாவும் ஒரு போதை தானே !!

இவரது பாடல்களை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பாடி ஆல்பமாக வந்துள்ளது.  அதேபோல, திருக்குறளை எளிய வடிவில் பாடல், இசையுடன் ஆல்பமாக வெளியிட்டுள்ளார். 

தாகம் என்ற படத்தில் இசை அமைப்பாளர் எம் பீ சீனிவாசன் அவர்கள் இசையில் எஸ் ஜானகி பாடிய, பாடல் அற்புத வரிகளைக் கொண்டது. அப்போது வானொலியில் அதிமாக ஒலிபரப்பப்பட்டது.

வானம் நமது தந்தை 
பூமி நமது அன்னை 
உலகம் நமது வீடு 
உயிர்கள் நமது உறவு. 

பெற்றோர் அற்ற குழந்தைகள் பாடும் பாடலில், அனாதை என்ற வார்த்தை வராமல் எழுத முடியுமா என்று கேட்க, கவிஞர் எழுதிய அற்புத வரிகள் இவை. 

நன்றி. அடுத்தமாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். 

நவராத்திரி பண்டிகை – ஜெயரமணி.                                                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதிதாக கட்டிய தனிப்பங்களா மாதிரியான குடியிருப்பு ஒன்றிற்கு புதிதாக வந்தவள்தான்   புனிதா.  வருவதற்கு முன்பாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பெங்களூரில் வசித்து வந்தாள்.  அங்கு நிறைய தென் மாநிலத்து மக்கள் குடியிருந்ததால், பண்டிகைகளில் கலகலப்பும் கொண்டாட்டமும் அதிகம்.  எல்லாருடைய குழந்தைகளும் வித்தியாசமில்லாமல் ஒரே வீடுமாதிரி பழகியதால்,  பண்டிகை காலங்கள் எல்லாமே மிகுந்த சந்தோஷத்துடனும் தினமும் ஒவ்வோரு வீட்டிற்குச் சென்று விதவிதமான அலங்காரங்கள், விளக்கு அமைப்புகள் எனப் பார்க்கவே  கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

                புதிதாக வந்த இடத்தில் இன்னும் நிறைய மக்களுடன் பழகவும் இல்லை. இந்த அமைப்பில் இந்தியாவில் எல்லா மானிலத்து மக்களும் நிறையவே வாழ்கிறார்கள்.  எல்லாருடைய வீட்டிலும், குழந்தைகள், பெரியவர்கள் என நிறைந்துதான் இருந்தார்கள்.  ஆனாலும், புதிதாக வந்ததால், இன்னும் பிறருடன் கூடி பேசிப் பழகவும் காலம் ஆகவில்லை. 

                பண்டிகை நாளில் அக்கம் பக்கத்து மக்களுடன் இனைந்துபழக வேண்டுமென்ற ஆவலும் அவளுக்குள் இருந்தது.  கணவரிடம் கேட்டாள் “இந்த வருஷம் இங்குதான் நவராத்திரி கொலு அடுக்க வேண்டும்.  இங்கு இன்னும் அதிகம் பேருடன் பழக வில்லையே.  யாரைப் போய்க் கூப்பிடுவது.ஒன்றும் புரியவில்லையே” என தன் மன வருத்தத்தைச் சொன்னாள்.

                கணவரும் சிரித்துக் கொண்டே “அசடுமாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப் படுவதே உன் பழக்கமாச்சே?  போய் உள்ளே இருக்கும் என் அத்தையைக் கேட்டுப் பார்.  அவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லுவார்” எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

                குழப்பத்துடனே புனிதாவும்  அத்தையைத் தேடிப் போனாள்.  வந்தவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, “என்னம்மா வேணும் உனக்கு” எனப் பரிவாகக் கேட்டார்.  “அத்தை   வரும் திங்கட்கிழமைமுதல் நவராத்திரி ஆரம்பம்.   நாம் பழைய குடியிருப்பில் வருஷா வருஷம் நன்றாகவே வைத்து, எல்லாரையும் கூப்பிட்டு தாம்பூலம், சின்னப் பெண்களுக்கும் பரிசுகள் என வகை வகையாகக் கொடுத்தோம்.  ஆனால், இங்கு வந்து இரு மாதங்கள் கூட ஆகவில்லை.  இன்னும் அதிகம் பேருடன் பழகவும் இல்லை.  இங்கு வைத்து, எப்படி யாரைக் கூப்பிடுவது, கூப்பிட்டால் தப்பாக நினைக்காமல் வருவார்களா,  நம் கலாச்சாராத்தை அவர்கள் புரிந்து கொள்வார்களா என்றெல்லாம் குழப்பமாக இருக்கு.  உங்கள் மருமகரிடம் கேட்டால் வழக்கம்போல் என்னை அசடு எனச் சொல்லிச் சிரிக்கிறார்.  உங்களிடம் வந்தால் நீங்கள் உங்களின் அனுபவத்தைச் சொல்வீர்கள் என்றார்.  என்னவென்று சொல்லுங்கள் அத்தை” எனவும் கேட்டுக் கொண்டே, அத்தையுடன் அமர்ந்தாள்.

                அத்தையும் சிரித்துக் கொண்டே “மிகவும் பழைய சம்பவம்.  இப்ப நடப்பதுபோல்தான் இன்னும் என் மனதில்  பசுமையா இருக்கு.   எனக்கு இருபது வயதில், என் அப்பா வழியில் ஒருவருக்கு வாக்கப்பட்டேன்.  முதலில் அவர் கொச்சினில் ஒரு அமெரிக்க நாட்டு கம்பெனியில் வேலை பார்த்தார்.  கலியாணம் ஆன உடனேயே, அவருக்கு அந்தக் கம்பெனியில் தலைமை இடமான அமேரிக்காவுக்கு மாற்றல் கிடைத்து விட்டது. அவருக்கு வேலை செய்யும் ஊரான ஹூஸ்டன் என்று ஒரு இடம்.  எல்லா நாட்டு மக்களும் நிறைந்து வாழும் ஒரு சின்ன அழகான ஊர்தான்.   கூடவே என்னையும் கூட்டிக் கொண்டு போக வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, என்னையும் அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

                காலேஜில் ஒரு வருடம் படித்திருந்தாலும், சரளமாக என்னால் ஆங்கிலம் பேச கஷ்டப்பட்டேன்.  என் கணவர்தான் எனக்கு முறையாக மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் சொல்லிக் கொடுத்தார்.  தினமும் என்னைக் கட்டாயப்படுத்தி அங்கு இருக்கும் பார்க்குக் கூட்டிக் கொண்டு போவார்.  அங்கு வரும் மற்றவர்களுடன் சிரித்தபடியே முகம் காட்டி எப்படி அறிமுகம் செய்து கொள்ளவேண்டும், எப்படிப் பேச வேண்டும் எனவும் கற்றுக்கொடுத்தார்.  கொஞ்சம் கொஞ்சமாக நானும் அவர்களுடன் பழகவும் ஆரம்பித்தேன்.  அவர்களுக்கு என் பெயர் திரிபுரசுந்தரி எனக் கூப்பிடுவது கஷ்டமாக இருக்கும்.  அதனால் அவர்கள் என்னை “த்ரீ த்ரீ” என்றே அழைக்கவும் செய்தார்கள்.  முதலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது.  அதே சமயம், என்னுடைய பெயரை அவர்களால் உச்சரிக்க கஷ்டமாக இருப்பதால், என்னைக் சுலபமாகவும் சினேகமாகவும் கூப்பிட த்ரீ த்ரீ எனறழைக்கலானார்கள்.  எப்படிக் கூப்பிட்டாலும் அதில் உள்ளார்ந்த அன்பும்பாசமும் இருந்ததுதான் முக்கியம்.

                அன்று மாலையிலேயே, நாங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மாலுக்குப் போனோம்.  அங்கே இந்தியா என்றே ஒரு பிரிவும் இருந்தது. அதில் விதவிதமான கடைகளும், அதில் இருந்த பொருட்களையும் பார்த்து நான் முதலில் சென்னைக்கு  வந்து விட்டோமோ எனவும் பிரமித்து நின்றேன்.  பக்கத்தில் இருந்தவர் என்னிடம் “என்ன பார்க்கிறாய், இருப்பது ஹூஸ்டனில்தான். இங்கும் இந்தியர்கள் அதிகமாக இருப்பதால், இங்கும் இந்திய வியாபாரிகள் தங்களின் பொருட்களை வியாபாரத்திற்காக அனுப்பி வைப்பார்கள்.  இங்கும் இதே போல் பல இடங்களில், இந்தியா டிபார்மென்டல் ஸ்டோர் என இந்தியாவில் கிடைக்கும் அத்தனை தரமான உணவுப் பொருட்கள், பூஜைக்குத்தக்கவாறு  சந்தனம், ஊதுபத்தி, விளக்குகள் என எது வேண்டுமானாலும் கிடைக்கும்.  உனக்கு நவராத்திரிக்குத் தேவையான எல்லாவற்றையுமே இங்கேயே பார்த்து வாங்கிக் கொள்” எனவும் சொன்னார்.

பொம்மைக் கடைகள், அலங்கார விளக்குகள், நம் ஊரில் இருப்பதுபோல் விதவிதமான  குத்து  விளக்கு என நிறையவே இருந்தது.  அவையிலாமல் நம்மூரில் இருப்பது போலவே வித்விதமான புடவைகள், பாவாடை. சின்னக் சின்னக் குழண்டைகளுக்கு ஏற்றமாதிரி ரெடிமேட் ஆசைகள் எல்லாமே இருந்தது. அவரும் அங்கேயே எனக்கு இரண்டு பட்டுப் புடவைகளும், அத்தைக்கு ஒரு புடவை எனவும் வாங்கினார்.  நானும் நவராத்திரிக்கு வைப்பதற்கான பொம்மை செட், அலங்கார விளக்குகள், விதவிதமான தோரணங்கள், எனவும் பார்த்துப் பார்த்து வாங்கி வந்தேன்.  எனக்குப் பிடித்ததெல்லாவற்றையும்  வாங்கி வந்தோம்.

                கொலு படிக்கும் தரமான ஒரு ஸ்டாண்டும் வாங்கி வந்தார்.  அதில் வீட்டில் ஒரு அறையில் கிழக்கு பக்கமாக கொலு படிகள் வைத்து, வாங்கி வந்திருந்த பொம்மைகளை வரிசை வரிசைகளாக வைத்து விட்டேன்.  கூடவே, சின்னச்சின்னதாக  பார்க், சின்னக் சின்னக் குழந்தைகள் விளையாடுவது போல அலங்காரங்கள், மேடைகள், பூத்தொட்டிகள், வகை வகையான பறவைகள், சின்னச் சின்ன அணில், முயல், வாத்து, கிளி, குருவி, கோழி சேவல், மாடு ஆடு நாய் பூணை என எல்லா விலங்கு பொம்மைகளையும் அலங்கரித்து விட்டோம்.

                பக்கத்தில் ஒரு மேஜையில் கலியாண செட், கச்சேரி செட், பரத நாட்டியம் ஆடும் பெண்கள்,  கிருஷ்ணருடன் கோபிகைகள் ஆடுவது, புன்னை மரத்தில் ஆடைகளைத் கட்டி விளையாடுவது போன்றவற்றையும் என் கணவர் ஆசையாகச் செய்து விட்டார். அலங்காரத் தோரணங்களையும் கட்டி விட்டோம்.   பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.

                கொலு வைத்தாகி விட்டது.  தினமும் இரு பெண்களையாவது அழைத்துத் தாம்பூலம் கொடுத்து  தேவியைக்  கொண்டாட வேண்டாமா?  என்ன செய்வது எனவும் தவித்தேன்.  மாலையில் வழக்கம்போல் பார்க்குக்கும் போகும் போய், என் கை நிறைய ஒரு கத்தை பேப்பர்த் துண்டுகளை என் கணவர் கொடுத்தார்.நானும் அவர் சொல்லிய படியே, வழியில் பார்த்தவர்களிடம் அந்தப் பேப்பரைக் கொடுத்து விட்டு, “பிளீஸ்  கம் டு அவர் ஹௌஸ் சன் டே: எனவும் அழைத்து வந்தேன். அதில் எங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலு பற்றிய சிறிய விளக்கமும், நம் பண்டிகையின் சிறப்பையும் சின்னதாக எழுதியிருந்தார்.  நம்முடைய இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக நவராத்திரி கொலு என்பதையும் குறிப்பிட்டும் எழுதி இருந்தார்.

                அடுத்த நாள், என் கணவர் ஒரு சின்ன மேரிமாதா, ஏசுகிறிஸ்து, சிலுவை என கிருஸ்துவமதத்தின் பெருமையை விளக்கும் சர்ச், ஏசுநாதரின் பொம்மை என கொண்டு வந்து, அழகாவும் வைத்து விட்டார்.  அதைப் பார்த்து நான் அவரிடம் கேட்டேன், “என்னயிது, நம்ம சுவாமிகளுடன் அவாளுடைய ஏசு, மேரி என கொண்டு வந்து வைத்திருக்கேள்”அவரும் .  சிரித்துக் கொண்டே, “இப்ப நாம் எங்கே வாழுகிறோம்?  அவர்கள் நாட்டில்தானே.  அவர்களுடன் வாழும் போது அவர்களுடைய கலாசாரத்தை, நம் கலாச்சாரம் மாறாத வகையில் ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் நல்ல நாகரீகம்.   எல்லாருமே ஆண்டவனின் குழந்தைகள் தான்.  நாளைக்கு அவர்களை எல்லாம் நம் வீட்டிற்கு அழைத்திருக்கிறோம்.  அவர்கள் வந்தால், நம் இந்திய சுவாமிகள் பொம்மையை மட்டும் பார்த்தால், அவர்களுக்கு சின்ன ஏமாற்றம் வருமல்லவா?  இப்ப, இந்தக் கொலுவில் அவர்களுடைய சுவாமி பொம்மையைப் பார்த்தவுடன், அவர்கள் மனதும் சந்தோஷப்படுமல்லவா?  பண்டிகை கொண்ட்டாடுவதின் அர்த்தம் என்ன?  எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்க வேண்டும் என் பதுதானே” என எனக்குப் புரியும்படிச் சொன்னார்.

                ஞாயிற்றுக் கிழமை வந்தவர்கள் எல்லாருமே அவர் சொன்னபடியே அந்தக் கொலுவில் ஏசு, மேரிமாதா, சர்ச்  என எல்லாம் இருப்பதைப் பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் நம் சுவாமி பொம்மைகளைப் பார்த்து ஒவ்வோன்றும் எந்த சுவாமி, பெயர், ஏன் அப்படி இருக்கு என எல்லா விபரங்களையும் ஆசையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.  போகும் போது நான் கொடுத்த பழங்கள், பரிசுகள் என எல்லாவற்றையுமே மிகவும் ஆசையோடும் ஒவ்வோன்றும் கொடுப்பதில் உள்ள பொருள் என்னேன்னும் தெரிந்து கொண்டார்கள்.  உண்மையிலேலே, நம்மூரில் கொலுவுக்கு வருபவர்களைவிட அவர்களுக்குத்தான் நம் கலாசாரத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருந்ததையும் நான் உணர்ந்து கொண்டேன். 

                அதே வருஷம் கிருஸ்த்மஸ் கொண்டாட்டத்தின் போது எங்களையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்தார்கள்.  சென்று பார்த்து அசந்து விட்டேன்.  அவர்களும், நான் நவராத்திரி நாளில் வைத்திருந்த பொம்மைக் கொலுவைப்போலவே, கிறிஸ்து பிறந்த நாளையம்  அழகாக மாட்டுத் தொழுவத்தில் அன்னை மாதாவுக்கு குழந்தை ஏசு பிறந்திருப்பதைப் போலவே அலங்காரம் செய்து த்திருந்தார்கள்.   எங்களைப் சிரித்துக் கொண்டே, நம் வீட்டில் வைத்த கொலுவைப் பார்த்தவுஅடனே அவர்களுக்கும் தங்களின் தெய்வக் குழந்தையான ஏசுவின் பிறந்த  நாளை இப்படி புதுன்விதமாகக் கொண்டாட் வேணுமெனு அவர்களின் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அந்த வருஷம் அவர்கள் வீட்டில்  சிறிஸ்த்மஸ் அன்று கொலுவைத்துக் கொண்டாட் மகிழ்ந்தார்கள்.  மரபு வழக்கம் என்பதெல்லாம் நம் மன சந்தோஷத்துக்குத்தானே.புரிந்து கொண்டேன் எங்கிருந்தாலும் நாம் நாமாக இருந்தால் நமக்கும் நல்லது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதே.  முப்பது வருஷம் அந்நய  நாட்டில் வசித்தோம் எங்கிற உணர்வே இல்லாமல், இந்தியாவில் இருப்பது போலவதான் சந்தோஷமாக வாழ்ந்தோம்.

                அந்த வருஷத்திலிருந்து, நாங்கள் முப்பது வருடங்கள் அங்கேயே அவர்களில் ஒருவராக வாழ்ந்து முடிந்து, இந்தியா திரும்பும் வரையில், ஒவ்வோரு வருஷமும் மறக்காமல் என்னிடம் எந்த மாதம் நவராத்திரி கொலு வரும், பொம்மைகள் வைப்பீர்கள் என்றும் ஆவலோடு கேட்பது மட்டுமல்ல, வருஷந்தோறும் அவர்களும் ஆர்வமாக வந்து, என்னுடன் எல்லா அலங்காரம், கொலு படிக்கட்டுகள் வைப்பது, விளக்குகள் ஏற்றுவது  என எல்லாவற்றிலுமே பங்கும் கொண்டார்கள். 

                இப்பத் தெரிந்து கொள்.  நாம் எங்கிருந்தாலும்  இருப்பவர்கள் எல்லாருமே நல்லவர்கள்.  மனிதர்கள்.  கலாச்சார பரிமாற்றத்தின்  மூலமே நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மற்ற மதத்தில் உள்ள நல்ல சத்தாக விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் முடியும்.  இப்ப என்ன, புதிதாக வந்து, இரண்டு மாதங்கள்தான்  ஆயின.  அதிகம் பழக வில்லை என்றுதானே  உனக்கு தயக்கம்.  இப்பத்தான் உங்களுக்கு வாட்ஸ்யப் குரூப்  என்று வசதி இருக்கே.  அதன் மூலம் நம் விட்டுக் கொலுவின் படத்தை அனுப்பு, சின்னதாக நவராத்திரியின் மகிமை என்ன என்பதையும் எழுதி அப்படியே அவர்கள் எல்லாரையும் நம் வீட்டிற்கு வரும்படியும் அழைத்து விடும்.  அதிலேயே, வருபவர்களின் வசதிப்படி, என்று எத்தனை மணிக்கு வர முடியும் எனவும் கேட்டு, அதற்குத்தகுந்தபடி, நீயும் அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையையும் செய்து விடு.  அவர்கள் வரும்போது நீயும் அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் மொழியிலேயே தெரிந்த சுவாமி பாட்டுக்களைச் பாடச் சொல்.  உனக்கும் தெரிந்திருந்தால் கூடவே பாடு.  பின் என்ன நவராத்திரியும் களைகட்டி விடும்.  எல்லாம் அம்பாள் துணையிருப்பான்.  நீ ஒன்றும் செய்வதாக எண்ணாதே, எல்லாமே அம்பாள் தன் நவராத்திரியை நடத்திக் கொள்வாள்.  மனதை தெளிவாக வைத்துக் கொண்டு, மேற் கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்” எனவும் பரிவோடு சொன்னார் அத்தை.

                புனிதாவும் அத்தையின்  புத்திமதியைக் கேட்டு, நாம் செய்வது எதுவும் இல்லை.  எல்லாமே அம்பாளின் அருளால் நன்றாகவே நிறைவேறும்,  நாமும் நம் கலாசாரத்தின் அருமை பெருமைகளை, மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்லி, அப்படியே, அவர்களுடைய பண்டிகை, கொண்டாடும் முறை என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால், எல்லாருமே சந்தோஷமாக வாழலாம். பண்டிகைகள் என்பது, ஒருவரையோருவர்  பாசத்துடன் அணைத்துக் கொண்டு வாழ்வதுதானே.   கலாசார பரிமாற்றம் ஒன்றுதான் மனித நேயம் வளர்வதற்காக வழியாகும்.” எனவும் மனதிற்குள் நினைத்து, பெரியவர்கள் இருப்பதும் எத்தனை நன்மையாக இருக்கு எனவும் மனதிற்குள் அத்தைக்கும் நமஸ்காரமும் செய்து கொண்டாள்.

                அந்த வருஷமும் புனிதா வீட்டு நவராத்திரி கொலுவும் களை கட்டியது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன.   மனித நேயம் வளருவதற்கு ஒரே நல்ல வழி, கலாசார பரிமாற்றங்கள் தான்.  எந்த மதமானாலும், அடிப்படை கொள்கைகள் ஒன்றுதான்.  மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.  அன்பு, பாசம், பரிவு போன்ற உணர்வுகளுடன் இனைந்து வாழும் வாழ்க்கைதான் பிறந்ததற்காக பயனாகும்.

திரை ரசனை வாழ்க்கை 19 – கருத்தம்மா – எஸ் வி வேணுகோபாலன் 

             Watch Karuththamma | Prime Video   Karuthamma (Original Motion Picture Soundtrack) - Single by A.R. Rahman | Spotify
ரண்டு வயது குழந்தை எங்கள் மகள் இந்து, அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் உள்ளே முழுமையாக உட்கார்ந்து திரைப்படத்தைப் பார்க்க விடவில்லை.  உள்ளே இருப்பதும், வெளியே சமாதானப்படுத்த அழைத்து வருவதுமாக கண்ணாமூச்சி.  என்னப்பா…முக்கியமான சீன்ல எழுந்து போயிடறீங்க என்று அன்று பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார் இணையர் ராஜி. அடுத்த நாட்களில் படத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.  அது ஆண்டு 1994. கருத்தம்மா மறக்க முடியாத திரைப்படம்.
வையம்பட்டி முத்துச்சாமியின் ‘பொண்ணு பொறுக்குமா ஆணு பொறுக்குமா…பத்து மாசமா போராட்டம், இதுவும் பொண்ணாப் பொறந்தா கொன்னுடுவேன்னு புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்’ என்கிற உள்ளத்தை உருக்கி வார்க்கும் இசைப்பாடலை அண்மையில் மறைந்த திரைக்கலைஞர் ‘பூ’ ராமு அவர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவு மேடையில் பாடியது ஜனவரி 1993 விடியலில்!  ‘……அருமை மாமி உறுமுறா  அம்மிக் குழவியால் அடிக்கிறா, ஆகாசத்துக்கும் பூமிக்கும் அவ எகிறி நின்னே குதிக்கிறா, நாத்தி பழிக்கிறா ஏத்தி இறைக்கிறா, பரம்பரையே வம்புக்கிழுக்கிறா, ஆத்திரம் கோபமா எழுது, அவை அத்தனையும் கண்ணீர் விழுது….’  என்று போகும் அந்தப் பாடலை, வைகறை கோவிந்தனின் உருக்கமான குரலில் யூ டியூபில் இப்போதும் கேட்க முடியும்.   
பொட்டல்பட்டியின் கடுமையான உழைப்பாளி ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கிறார். அரசியல்வாதியின் மகனை ஃபெயில் போட்டதற்குத் தண்டனை மாற்றலில் அந்த ஊருக்கு வரும் ஆசிரியர் அவர் மூலமாக ஊரைப் பற்றி அறிய உரையாடலில் அமர்ந்து, அதிர்ச்சியான ஒரு சமூக நடப்பைக் கேட்டு திடுக்கிட்டுப் போகிறார். அந்த ஏழை விவசாயி, இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று சாதிக்கிறார். தூளியில் அழுவதும், அதை ஆட்டித் தூங்க வைத்துக் கொண்டிருப்பதும்  இரண்டும் பெண் குழந்தைகள், இப்போது மனைவி ஐந்தாவது பிரசவத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள், கோடங்கி அடித்துச் சொல்லி இருக்கிறான், இந்த முறை ஆண் தான் என்று! அப்படி என்றால் இடையே மூன்றாவதும், நான்காவதும் எங்கே என்று ஆசிரியர் கேட்க, இரண்டுமே பெண் சிசு என்பதால் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லச் சொன்னது எந்த பாதிப்பும்  காட்டிக் கொள்ளாதவாறு சொல்ல முடிகிறது மொக்கையனுக்கு.
இப்படித் தான் தொடங்குகிறது கருத்தம்மா திரைக்கதை. மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறக்கும் நேரத்தில், சினைப்பட்டிருக்கும் வீட்டு மாடும் கன்று போடுகிறது. ‘சாமக் கோடங்கி குடித்துவிட்டுக் குறி சொல்லிட்டான்’ போலிருக்கு என்று அலுப்போடு பேசும் செவிலி மூலி, மொக்கையனுக்கு ஐந்தாவதும் பெண் குழந்தை தான் என்று சொல்லிவிடுகிறாள்.  பெண் கன்று எதிர்பார்க்கும் மாடோ ஆண் கன்றை ஈனுகிறது. மாட்டை விற்றுப் போடு என்கிற வேலையாளிடம், அதை விக்கலாம், பெண்டாட்டிய எங்க விக்கறது என்று விக்கித்துப் பேசுகிறார் மொக்கையன். கன்று விற்ற காசை மூலியிடம் கொடுத்துச் ‘சின்ன உசுரு கதையை முடிச்சி வுட்ரு’ என்கிறார். 
காலகாலமாக நஞ்சு புகட்டி இப்படி பெண் சிசுக்களை வழியனுப்பிய அதே திசையில், ‘தாய்ப்பால் நீ குடிக்கத் தலையெழுத்து இல்லையடி, கள்ளிப்பால் நீ குடிச்சுக் கண்ணுறங்கு நல்லபடி’ என்று தாலாட்டுப் பாடத் தொடங்குகிறாள் கணவனாலும் மகனாலும் கைவிடப்பட்ட மூலி. அங்கே தற்செயலாக வருகிற ஆசிரியர், குழந்தையைத் தனக்குப் பிச்சை போடுமாறு கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.
பிழைக்க வழியில்லாத மக்கள், அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார் என்றிருக்க, பெண் குழந்தைக்கு ‘சீரு செனத்தி செஞ்சி சீரழிவதற்குப் பதிலாகப்’ பிறப்பிலேயே அதன் கதையை முடித்துவிடுவது என்று தலைமுறை தலைமுறையாக வழக்கப்படுத்திக் கொண்டு விடுகிற சமூக அவலத்தை பாரதிராஜா, ஓர் உண்மைக் கதையின் தாக்கத்தில் இருந்துதான் படமாக எடுத்து முடித்தார் என்று சொல்லப்படுகிறது. 
நகரங்களில் கூட இப்போதும், பெண் குழந்தையின் வருகை எப்படி வரவேற்கப்படுகிறது என்பது உரத்த உண்மை. நண்பர்களுக்கு வெறும் செய்தி மட்டும் சொல்லி இனிப்பு தராது நகரும் இளம் தந்தையர் இருக்கவே செய்கின்றனர்.  
திரைக்கதையில், தாயும் மரித்துவிட, பொழுதன்றைக்கும் பெண் பிள்ளைகளைக் கரித்துக் கொண்டிருக்கும் தகப்பனுக்குக் கஞ்சி காய்ச்சி வீட்டைப் பராமரித்து வரும் பெண் குழந்தைகள் வளர்ந்து ஆளானதும், முதலாமவளைத் தங்கை மகனுக்குத் தாரை வார்க்கிறார் மொக்கையன். பேராசை பிடித்த கொடுமைக்கார மாமியாருக்கு வாய்க்கும் இந்த மருமகள் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளையே பெற்றுப் போடுகிறாள். மூன்றாவதும் பெண் என்றானதும் வீசும் புயல் சூறாவளியாகி அவள் உயிரையும் குடித்துவிடுகிறது. 
உயிருக்குயிரான அக்கா மரணத்திற்கு அப்பனையும் அழைத்துக்கொண்டு அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து கதறும் இளையவள் கருத்தம்மா, அக்கா உடலைக் குளிப்பாட்டும் நேரத்தில் இரத்தக்கறை பார்த்து உணர்ந்து விடுகிறாள், அது தற்கொலை அல்ல, கொலை என்று! பெரும்பாடெடுத்து  அக்காவின் கணவன், மாமியார் இருவரையும் சிறைக்குள் தள்ளிவிட அவள் காதல் வயப்பட்டிருக்கும்  கால்நடை மருத்துவர் ஸ்டீபன் உதவுகிறார். 
ஆனால், கிராமத் தலைவரிடம் மொக்கையன் ஏற்கெனவே பட்டிருக்கும் கடனும், கருத்தம்மா மீதே காமவெறி பிடித்தலையும் அந்தத் தலைவரது குறுக்கு புத்தியும் (பெயிலில் வரும்) அக்காவின் கணவனுக்கே அவளை இரண்டாம் தாரமாக்க சதி தீட்டி விட வைக்கிறது. கை கால்கள் செயலற்று வீழ்ந்துவிடும் மொக்கையனின் தலையசைப்பு கூடத் தேவைப்படுவதில்லை. 
நோய்வாய்ப்பட்டிருக்கும் அவருக்குத்  தற்செயலாக அந்த ஊருக்கு வந்து சேரும் வாத்தியார் வளர்ப்பு மகள் ரோஸி சிகிச்சை அளிக்கிறாள். அவரது சொந்தத் தந்தை தான் அவர் என்கிற உண்மையை மூலி உணர்த்திவிடுகிறாள். ஸ்டீபனின் மீதான ஒரு தலைக் காதல் தோல்வியில் துவளும் அவளை, இந்த உறவுமுறைகள் திக்குமுக்காட வைத்து ஆற்றுப்படுத்தி அவளுக்குள் இருக்கும் மருத்துவரையும், மனுஷியையும் மீட்டெடுத்துக் கொடுக்கிறது. தான் கொல்ல அனுப்பிவைத்த பெண் குழந்தை தன்னைக் குணப்படுத்த வந்து நிற்கிறாள் என்று உணர்ச்சி வசப்படும் மொக்கையன், தனக்கு கஞ்சி ஊற்றிய கருத்தம்மாவைக் கொன்று விட்டேனே என்று உடைந்து கதறுகிறார்.
அக்காவின் குழந்தைகளுக்காகவும், அப்பாவின் கையறு நிலைக்காகவும் தனது காதலைப் பொசுக்கிப் போட்டுவிட்டுப் புறப்படும் கருத்தம்மா  அடுத்தடுத்த மோசமான நடப்புகளின் கொடுமைகள் தாளாது குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டு, அக்காவின் கணவனையும் ஊர்த் தலைவனையும் கொன்றுபோட்டுவிட்டுச் சிறைக்குப் போகிறவள் ஆகிறாள்.  அந்த ஊர் முழுக்கக் காத்திருக்கிறது அவள் திரும்பி வரும் நாளுக்கு.
வணப்படமாக நின்றுவிடக் கூடாது. பரவலான மக்கள் பார்வைக்கும், விவாதங்களுக்கும், விசாரணைக்கும் இந்த சமூக அவலம் உட்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சுற்றி நிகழும் கதையாக ரத்னகுமாரின் அருமையான திரைக்கதை வசனத்தில் கருத்தம்மாவைத் திரைக்கு வழங்கி இருக்கிறார் பாரதிராஜா.
ஆழமான கருத்தாக்கத்தை இயல்பான முறையில் வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சியில் அபாரமான நடிப்பை வழங்கும் அரிய வாய்ப்பு, பல திரைக்கலைஞர்கள் ஒருசேரக் கிடைக்கப் பெற்ற படம் கருத்தம்மா.  
பிறந்த வீட்டைக் குறை சொல்லும் மாமியாருக்காக குடும்பத்தோடு வந்திறங்கும் மகளைப் பார்க்கவும், இந்த முறை என்ன கேட்டு வந்திருக்காளோ என்று மொக்கையன் அஞ்சுமிடம். தனக்குத் தாயில்லாமல் போனாளே என்று புலம்பும் அக்காவிடம் உண்டியல் உடைத்துக் காசு எடுத்து நீட்டி, ‘நான் இருக்கேன் உனக்கு’ என்று சொல்லும் தங்கையைப் பார்த்து, ‘கருத்தம்மா…என்னைப் பெத்தவளே’ என்று அக்கா கரையுமிடம் என்று நெகிழ வைக்கும் இடங்களும், கண்ணீர் சிந்த வைக்கும் இடங்களும் படம் நெடுக உண்டு. 
பேராசிரியர் பெரியார் தாசனுக்கு மிகவும் புகழ் பெற்றுத் தந்த பாத்திரம் மொக்கையன். கன்னச் சதைகள் துடிக்க வேண்டும் என்பதற்காக, ஓங்கி ஓர் அறை விட்டார் இயக்குநர் என்று அவரே சொன்னதாக வாசித்த நினைவு. சரண்யாவின் நடிப்பு அபாரமானது, தனது குழந்தையைக் காக்கப் போராடி உயிர்விடும் இடம் அதிரவைப்பது. கருத்தம்மா பாத்திரத்தில் அறிமுக நடிகை ராஜ்ஸ்ரீ சிறப்பாகச் செய்திருப்பார் – படம் முழுக்கவே. ரோஸியாக மகேஸ்வரியும்! மாமியாராக வில்லி பாத்திரத்தில் வடிவுக்கரசி அசத்தி இருப்பார். அவள் மகன் தவசியாக பொன் வண்ணன் மிகவும் சிறப்பாகச் செய்திருப்பார். ஜனகராஜ் வாழ்ந்திருப்பார் -நேயமுள்ள மாமனார் வேடத்தில்: ‘மருமக இல்ல, அவ மக, அவளைப் போய் வச்சிருக்கேன்னு சொல்றியே உன் நாக்குல பாம்பு கொத்த’ என்று அவர் புலம்புமிடம் உருக்கமானது.ஸ்டீபன் வேடத்தில் ராஜா அளவாகச் செய்திருப்பார். ஆசிரியர் சூசையாக இயக்குநர் சுந்தரராஜன் முக்கிய பங்களிப்பு. மூலியாக எஸ் என் லட்சுமி அபாரம். நகைச்சுவைக்கும் இடமிருக்கும் காட்சிகளில் வடிவேலு சிறப்பாக வருகிறார்.
ரத்னகுமார் வசனங்களும், வைரமுத்து பாடல்களும் மண்ணில் இருந்து நேரே எடுத்துப் பரிமாறப்பட்ட வாசத்தோடு மிகவும் சிறப்பாக ஒலிப்பவை. கிராமியக் கதைக்கான இசையை வழங்க முடியும் என்று ஏ ஆர் ரகுமான் இந்த வாய்ப்பில் ரசிகர்களை மேலும் நெருக்கமாகச்  சென்றடைந்தது குறிப்பிட வேண்டியது.  ‘போறாளே பொன்னுத் தாயி’, மறைந்த சொர்ணலதாவின் புகழ் பெற்ற பாடல்களில் முக்கியமானது. எப்போது கேட்டாலும் உருக்கிப் போடுவது. அதன் இன்பியல் வடிவத்தில் உண்ணி மேனன், சுஜாதா மோகன் அருமையாகப் பாடி இருப்பார்கள். ‘தென் மேற்குப் பருவக் காற்று’ ஒரு தென்றலின் தழுவல் (உன்னிகிருஷ்ணன், சித்ரா) எனில், ‘பச்சைக்கிளி பாடும் ஊரு’ (சாகுல், மின்மினி) துள்ளாட்ட மெட்டு.  பாரதிராஜா குரலெடுத்து, அந்த மண்ணின் வாழ்க்கையை (மலேசியா வாசுதேவனோடு)  இணைந்து பாடும் ‘காடு பொட்டக்காடு’ எனும் பாடலும் சிறப்பானது.   ‘யார் பெத்த பிள்ளை’ என்ற நிறைவுப் பாடலை ஜெயச்சந்திரன் மிகவும் அருமையாக இசைத்திருப்பார். 
பி கண்ணன் அவர்களது செம்மையான ஒளிப்பதிவும், பழனிவேல் படத்தொகுப்பும் முக்கியமானவை. தனிப்பட்ட கதையாடல் தான் என்றாலும், சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையைப் பேசியது என்கிற விதத்தில் படம் பேசப்படுவதாகிறது. சூழலின் வார்ப்புகளாக உள்ள மனிதர்களது வாழ்முறைகளைக் கடந்து பிரச்சனைகளின் வேர்களைத் தேடுவதாக இந்தக் கதைக்களம் சிந்திக்கப்பட்டு இருந்தால், இன்னும் காத்திரமான ஒரு படைப்பு தமிழ்த் திரையில் சாத்தியமாகி இருந்திருக்கும். 

உதவி – எஸ் எல் நாணு

உறவு - சிறுகதை

செய்தி கேட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினேன்..

ஜெனரல் வார்ட் கட்டிலில் சோர்வாகப் படுத்திருந்தான் மாசிலாமணி.. அருகில் கவலையான முகத்துடன் அவன் மனைவி..

என்னைப் பார்த்ததும் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்..

“சார்.. சார்..”

அதற்கு மேல் பேச்சு வரவில்லை..

ஆசுவாசப் படுத்த முயன்றேன்..

“அழாதீங்க.. கொஞ்சம் கூட அலட்டிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு”

அவன் மனைவி கலவரத்துடன் கெஞ்சினாள்..

மாசிலாமணியைப் பார்த்தேன்..

காலை ஒன்பது மணிக்கே எல்லாருக்கும் முன்னதாக அலுவலகம் வந்து எல்லா மேஜைகளையும் சுத்தப் படுத்தி, தண்ணீர் பிடித்து வைத்து, மற்றவர்கள் வந்ததும் அவர்கள் இடும் கட்டளைகளை உடனே செய்து முடித்து, கூடவே பேங்க் சென்று செக் டெபாஸிட் செய்து, மாலையில் பொது மேலாளர் கிளம்பும் வரை முகம் சுளிக்காமல் காத்திருந்து அவர் கிளம்பிய பிறகு அலுவலகத்தைப் பூட்டி.. இப்படி பம்பரமாகச் சுழலும் மாசிலாமணி இப்போது ஹாஸ்பிடல் கட்டிலில் துவண்டு கிடக்கிறான்..

“ரெண்டு சிறுநீரகமும் வேலை செய்யலையாம்.. டாக்டர் சொல்லிட்டாரு.. உடனே ஆபரேஷன் பண்ணி மாற்று சிறுநீரகம் பொருத்தலைன்னா..”

முடிக்க முடியாமல் மாசிலாமணியின் மனைவியின் குரல் கம்மி தாரை தாரையாகக் கண்ணீர்..

அந்தத் தருணம் என்னை என்னவோ செய்தது.. மனதில் பாரம் ஏறியது போலிருந்தது..

”கவலைப்படாதேம்மா.. மாசிக்கு ஒண்ணும் ஆகாது.. ஆபரேஷன் முடிஞ்சு நல்லபடியா எழுந்து வந்துருவான்”

“எப்படிங்க.. எப்படி ஆபரேஷன் பண்ண முடியும்.. லட்சக்கணக்குல செலவாகுமாமே.. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்?”

இதைக் கேட்டு சற்று யோசித்தேன்.. பிறகு ஒரு தீர்மானத்துடன்..

“ஆபீஸ்ல நாங்க ஏற்பாடு பண்ணறோம்.. டாக்டரை டோனர் பார்க்கச் சொல்லு.. நான் நல்ல செய்தியோட வரேன்”

மறுநாள் அலுவலகம் சென்றவுடன் பொது மேலாளரை சந்தித்து விவரம் சொன்னேன்..

“சார்.. ஆபீஸ்ல எவ்வளவு பணம் ரிலீஸ் பண்ண முடியும்?”

பொது மேலாளர் யொசித்து..

“நான் ரெகமெண்ட் பண்ணி ஒரு லட்சம் வரை வாங்கித் தரேன்.. அதைத் தவிற என்னால முடிஞ்ச அளவுக்கு லோன் சேன்க்‌ஷன் பண்ணறேன்.. மே பி.. இன்னொரு அம்பதாயிரம்”

“போறாதே..”

“அதுக்கு மேல முடியாது.. கம்பெனி ரூல்ஸ்”

“ம்ம்..”

“என்ன பண்ணலாம்?”

யோசித்தோம்.. தர்மசங்கடமான மௌனம்..

சட்டென்று நான்..

“ஆபீஸ்ல எல்லார் கிட்டயும் கலெக்ட் பண்ணலாம் சார்.. மாசிக்குன்னு சொன்னா யாரும் தயங்க மாட்டாங்க.. உடனே கொடுப்பாங்க”

“ஓக்கே.. கோ அஹட்.. அந்த லிஸ்டுல முதல்ல என் பேரை எழுதிக்குங்க.. நான் இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுக்கறேன்”

பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தேன்..

உடனே மாசிலாமணியின் நிலமையையும் தேவையையும் குறிப்பிட்டு இயன்ற அளவு பண உதவி செய்யக் கோரி அலுவலகத்தில் எல்லோருக்கும் சுற்றரிக்கை அனுப்பினேன்..

நான் நினைத்தபடியே மாசிலாமணிக்கு என்றவுடன் மேனேஜர், டெபுட்டி மேனேஜர், கணக்கதிகாரி, அக்கௌண்டண்ட், குமாஸ்தாக்கள்.. இவ்வளவு ஏன் மீதி இருந்த இரண்டு பியூன்கள் கூட தங்களால் இயன்ற அளவு தயங்காமல் பணம் கொடுத்தனர்..

மாசிலாமணிக்கென்றால் யார் தான் கொடுக்க மாட்டார்கள்?

அந்த பண்பு கலந்த மரியாதை.. அனாவசிய வம்பு தும்புகளுக்குப் போகாத பக்குவம்.. எதையும் பாஸிடிவாக யோசிக்கும் குணம், நடக்காததையும் சாமர்த்தியமாகப் பேசி நடத்தி முடிக்கும் லாவகம்..

மொத்தத்தில் மாசிலாமணி எங்கள் அலுவலகத்தின் மாபெறும் சொத்து.. அவனை இழக்க யாரும் தயாராக இல்லை என்பது எல்லோரும் தயங்காமல் செய்திருக்கும் பண உதவியில் நிரூபணமாகியது..

நாங்கள் நினைத்ததை விட அதிகமாகவே வசூலாகியிருந்தது.. வசூல் பட்டியலை ஒரு முறை பார்வையிட்டேன்..

அதில் இன்வெண்டரி பிரிவு சேகரின் பெயர் மட்டும் இருக்கவில்லை.. ஒரு வேளை அவன் நான் அனுப்பிய சுற்றரிக்கையைப் பார்க்கவில்லையா.. அல்லது அப்புறம் பணம் கொடுக்கலாம் என்று நினைத்து மறந்து விட்டானா?

எதற்கும் கேட்டுவிடுவது நல்லது..

சேகர் மும்முரமாக கம்ப்யூட்டரில் ஸ்டாக் லிஸ்ட் பார்த்துக் கொண்டிருந்தான்..

“சேகர்.. மாசிலாமணியோட கண்டிஷன் தெரியும்ல?”

“ம்ம்.. தெரியும்.. பாவம்பா”

“அவனுக்கு கிட்னி டிரான்ஸ்பிளாண்ட் ஆபரேஷனுக்கு பண உதவி பண்ணச் சொல்லி சர்குலர் அனுப்பியிருந்தேனே.. பார்த்தியா?”

மறுபடியும் மானிட்டரில் பார்வையை செலுத்தி..

“ம்ம்…”

“லிஸ்டுல உன் பேர் இல்லையே”

சேகர் பதில் சொல்லாமல் மானிட்டரை வெரித்தான்..

“சேகர்.. உங்கிட்டத் தான் கேட்கறேன்.. லிஸ்டுல உன் பேர் இல்லையே”

சட்டென்று திரும்பி கொஞ்சம் கடுப்பாக..

“என்னால முடியாதுப்பா”

எனக்கு அதிர்ச்சி..

“என்னப்பா சொல்றே? கல்யாணத்துக்கு மொய் எழுத உங்கிட்டப் பணம் கேட்கலை.. ஒரு உயிரைக் காப்பாத்த.. நம்ம மாசியைக் காப்பாத்த.. ஆபீஸ்ல எல்லாரும் கொடுத்திருக்காங்க”

“தெரியும்.. அதே சமயத்துல என் நிலமையும் உனக்கு நல்லாவேத் தெரியும்.. எங்கப்பா என் பொறுப்புல விட்டுட்டுப் போன மூணு தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டு அந்த கடன் சுமைகளோட பிடில மூச்சு திணறிட்டிருக்கேன்”

”சரிப்பா.. யாருக்குத் தான் பணப் பிரச்சனை இல்லை? எனக்குக் கூடத் தான் ஏகப் பட்ட கமிட்மெண்ஸ்.. அதுக்காக ஒரு நூறு ரூபா கூடவா கொடுக்கக் கூடாது?”

“என்னால முடியாது”

“டேய்.. வெறும் நூறு ரூபாய்”

“அந்த நூறு ரூபா இல்லைன்னா பத்து நாளைக்கு நான் ஆபீசுக்கு நடந்து வரணும்.. இதப் பாரு.. இதுக்கு மேல என்னை வற்புருத்தாதே.. என்னால பணம் கொடுக்க முடியாது”

“சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனே இல்லை.. மிருகத்தை விட கேவலமானவன்.. மிருகங்களுக்குக் கூட மத்த உயிர் மேல பரிவு.. பாசம் உண்டு.. ஆனா நீ.. சே போடா..”

சேகரைப் பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது..

உடனே என் சீட்டுக்குப் போனேன்..

இன்னும் படபடப்பு அடங்கவில்லை..

“சே.. என்ன மனுஷன்.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம.. மாசியை அந்த ஸ்டாக்கைப் பாரு.. இந்த ஸ்டாக்கைப் பாருன்னு எப்படியெல்லாம் வேலை வாங்குவான்.. ஆனா இப்ப அந்த மாசிக்காக நூறு ரூபாய் கூடக் கொடுக்கத் தாயாரா இல்லை.. எப்பப் பாரு தன்னைப் பத்தியே யோசிச்சிண்டு.. எப்பவும் சுய பச்சாதாபம்.. சே.. இவனை மாதிரி ஆளுங்க இருக்கறதே வேஸ்ட்”

மனதுக்குள் புலம்பினேன்..

சேகர் உதவாவிட்டாலும் பொது மேலாளரின் சிபாரிசின் பேரில் அரிமா சங்கம் வேற ஓரளவு உதவ முன் வந்திருந்தார்கள்..

மாசிலாமணியிடமும் அவன் மனைவியிடமும் விஷயத்தைச் சொன்னதும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்கள்..

“சார்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.. நீங்க தெய்வம்”

காலில் விழப்போனவளைத் தடுத்து..

“என்னம்மா நீ.. என் காலுல போய் விழுறே?.. நான் எதுவும் பண்ணலை.. எல்லாம் மாசியோட நல்ல மனசுக்கு தானா நடந்திருக்கு.. எனக்கு ரஜினிகாந்த் சொன்ன டைலாக் தான் நினைவுக்கு வருது.. கடவுள் நல்லவங்களை சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான்.. இப்ப மாசி கேஸ்ல அது எவ்வளவு உண்மையா இருக்கு பாரு”

இதற்கு நடுவில் நர்ஸ் வந்து மாசிக்கு இஞ்சக்‌ஷன் போட்டுக் கொண்டே..

“சீக்கிரம் ஆபரேஷன் பண்றது நல்லதுன்னு டாக்டர் பேசிட்டிருந்தாரு.. ஏற்பாடு பண்ணிட்டீங்களா?

கேள்வி கேட்டு பதிலை வாங்குவதற்குள் “சிஸ்டர்” என்று அபயக் குரல் ஒலிக்கவே அங்கிருந்து நகர்ந்தாள்..

“டாக்டர் எப்பம்மா வருவார்?”

மாசியின் மனைவியிடம் கேட்டேன்..

“வந்திட்டுப் போயிட்டாரு.. இனிமே நாளைக்குத் தான் வருவாரு..”

“அப்படியா? டாக்டர் வந்தா உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு.. நாளைக்கே வந்து பணம் கட்டிடறேன்.. ஆனா உடனே டோனர் கிடக்கணுமே.. அதான் கவலையா இருக்கு”

இதைக் கேட்டு மாசிலாமணி முடியாமல் பேசினான்..

“எனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தணம்னு சொன்ன அன்னிக்கே டோனர் கிடைச்சாச்சு”

எனக்கு ஆச்சர்யம்..

“அப்படியா? வெரி குட்.. வெரி குட்.. ஆமா யாருப்பா டோனர்?”

“நம்ம சேகர் சார் தான்”

எனக்கு அதிர்ச்சி..

“என்னது சேகரா?.. நம்ம சேகரா?.. என்னப்பா சொல்றே?”

மாசிலாமணிக்கு தொடர்ந்து பேசமுடியாமல் போகவே அவன் மனைவி தொடர்ந்தாள்..

“ஆமா சார்.. இவருக்கு உடம்பு முடியலைன்னு இங்க அட்மிட் ஆன உடனே சேகர் சார் தான் முதல்ல இவரைப் பார்க்க வந்தார்.. அப்பத் தான் இவருக்கு மாற்று சிறுநீரக ஆபரேசன் பண்ணணும்னு டாக்டர் வந்து சொன்னார்.. உடனே டோனர் கிடைக்கணும்னு வேற சொன்னாரா.. சேகர் சார் கொஞ்சம் கூட யோசிக்காம தன்னோட ஒரு கிட்னியைக் கொடுக்கறதா டாக்டர் கிட்டச் சொன்னார்.. டாக்டரும் ஏதோ டெஸ்ட் பண்ணிப் பார்த்திட்டு அவரு சிறுநீரகம் இவருக்கு பொருந்தும்னு சொல்லிட்டார்”

“அப்படியா?”

ஆசுவாசப் படுத்திக் கொண்ட மாசிலாமணி மீண்டும் ஆரம்பித்தான்..

“ஆமா சார்.. நான் நன்றி சொன்னப்ப சேகர் சார் என்ன சொன்னார் தெரியுமா? மாசி.. என்னால பணம் காசு கொடுத்து உதவ முடியாது.. ஏதோ.. என்னாலான சிறு உதவி.. அப்படின்னாரு.. நான் ஆடிப் போயிட்டேன்.. இவ்வளவுக்கும் கண்ணாலம் கூட ஆவாதவர்.. எப்பேர் பட்ட மனசு சார் அவருக்கு?”

சொல்லும்போதே மாசிலாமணியின் கண்கள் பனித்து விட்டன..

மறுநாள் அலுவலகத்தில் சேகரின் நேரடிப் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்தேன்..

குற்ற உணர்ச்சி மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது..

 

வலி பெரியதா சிறியதா – ரேவதி ராமச்சந்திரன்

Dads: being present at your baby's birth - BabyCenter India

   ‘குமுதா ஏனிப்படி சோபாவில் உட்கார்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று எதிர் வீட்டு ஹேமா பரிவுடன் விசாரித்தாள் அதிசயமாக காலை எட்டு மணிக்கு அவசரமாகப் பறக்கும் குமுதா சோபாவில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து. ஆம், ஒன்பது மணிக்குள் கணவர், இரண்டு பிள்ளைகளை பள்ளி அனுப்பிவிட்டு தானும் ஒரு காட்டன் புடவையுடன் சிறிய ஒப்பனையுடன் ஆபீஸ் செல்பவள் இப்படி உட்கார்ந்திருந்தால் யாருக்குத்தான் அதிசயமாக இருக்காது! அது அபார்ட்மெண்ட் ஆகையால் எதிரும் புதிரும் உள்ள குமுதாவும் ஹேமாவும் நல்ல நண்பர்கள். ‘என்ன செய்வது ஹேமா வேலை செய்ய விடாமல் இப்படி சப்பாத்தி மாவு மாதிரி பிசைகிறது. இதோடு இரண்டு மூன்று முறை இப்படி ஆகி விட்டது. பெருங்காயம் போட்டு தண்ணீர் குடிப்பேன். சரியாகி விடும். ஆனால் இன்று அதற்கும் மசியவில்லை’ என்று ஹீன ஸ்வரத்தில் முனகினாள். ‘ஆமாம் சொன்னால் கேட்டால்தானே! எல்லா வேலையும் முடித்த பிறகுதான் சாப்பிடுகிறாய். கேஸ் நன்றாக பிடித்துக் கொண்டிருக்கும்’ என்று சொல்லிவிட்டு லிப்ட் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அதிசயமாக குமுதாவின் கணவர் மாதவன் வீட்டிற்கு வரவும் இவள் தன் வீட்டிற்குள் சென்று விட்டாள். மாதவன் தனியார் கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பதால் நேரத்திற்கு வீட்டிற்கு வர மாட்டார். சில சமயம் இரண்டு நாட்கள் கூட கம்பெனியிலேயே இருந்து விடுவார். எல்லா உள் வெளி வேலைகளும் குமுதா தலையில்தான். அதனாலேயே வேலைகளுக்கு நடுவில்  அவள் தன் சாப்பாட்டைத் துறந்து விடுவாள். பிறகென்ன இந்த மாதிரி அவஸ்தைதான். ஆனால் இன்று மிகவும் துடித்து விடுகிறாள். அருகில் வந்து மாதவன் கவலையுடன் ஆனால் கோபமாகப் பார்த்தான். ‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய். எத்தனை தடவை இப்படி துடிக்கிறாய். வா டாக்டரிடம் சென்று ஒரு முழு செக் அப் செய்து விடலாம்’ என்று வாத்சல்யம், கோவம், அன்பு எல்லாம் ஒரு சேரக் கூறினார். ‘இல்லை நான் டாக்டரிடம் வர மாட்டேன். இப்ப குழந்தைகள் வர நேரம். அவர்களுக்கு சாப்பாடு போடணும், இன்று வேலைக்காரி வர மாட்டாள் அந்த வேலை வேற இருக்கிறது’ என்று சிறிது அலுப்புடனும், பொறுப்புடனும் கூறிக் கொண்டே வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். அதோடயே கேஸ் ஸ்டவ்வை துடைத்துக் கொண்டிருந்த போது வலி அதிகமாகவே டாக்டரிடம் செல்ல ஒத்துக் கொண்டாள். வேறு வழி!

டாக்டர் சந்திரசேகர் கிளினிக் ஒன்றும் தூரமில்லை. எதிர்ப்புறம்தான். கைராசிக்காரர். அங்கே இருக்கும் பலர் அவரிடம்தான் செல்வார்கள். சுற்று வட்ட ஜனங்களெல்லாம் செல்வதால் எப்போதும் கூட்டம் இருக்கும். குமுதாவிற்கு அதுதான் பிடிக்காது. சமயங்களில் இரண்டு மணி நேரம் கூட காத்திருக்க வேண்டி வரும். குமுதாவிடம் ஆபீஸ் விஷயம், அரசியல் எல்லாம் பேசுவார். அது இன்னமும் நேரம் எடுக்கும். ஆனால் டாக்டரிடம் சென்று விட்டு வந்தாலே பாதி வியாதி குணமாகி விடும். குமுதா கூட வேடிக்கையாக ‘டாக்டர் உங்கள் கிளினிக்குக்கு வந்தாலே சரியாகி விடுகிறது. உங்களைப் பார்க்க வேண்டியது கூட இல்லை. வாசலில் ஓர் உண்டியல் வைத்து விடுங்கள். திருப்பதி மாதிரி காணிக்கை செலுத்தி விடுகிறேன்’ என்பாள். ‘அதெப்படி ஆபீஸ் கதையெல்லாம் பிறகு யார் இவ்வளவு அழகாகச் சொல்லுவார்கள். எனக்கு அது வேண்டுமே’ என்று கேலி செய்வார். எப்படியோ கிளினிக் வந்தார்கள். நினைத்த மாதிரியே நல்ல கும்பல். காத்திருந்தார்கள். அவர்கள் முறை வந்தவுடன் நன்கு பரிசோதித்து விட்டு ‘இப்படி இரண்டு மூன்று முறை ஆயிற்று. ஆகையால் ஹாஸ்பிடலில் சேர்த்து அப்சர்வ் செய்கிறேன். நாளை வீட்டிற்கு போய் விடலாம் ஒன்றும் இல்லையென்றால்’ என்று ம்ருதுவாகச் சொன்னார். மாதவனும் ‘அதுதான் சரி இங்கேயே இரு. நான் போய் துணிமணிகள் எல்லாம் எடுத்து வருகிறேன்’ என்று கிளம்பி விட்டார்.

குமுதாவிற்கு ரூம் கொடுத்து விட்டார்கள். அவள் மெதுவே கட்டிலில் படுத்துக் கொண்டாள். மேலே மின்விசிறியைப் போல் அவள் நினைவும் வீட்டைச் சுற்றின. ‘இப்போது வலியும் குறைந்து விட்டது, பாவம் குழந்தைகள் (10, 8 வயசு). தானே போட்டு சாப்பிட கூடத் தெரியாது, தட்டெல்லாம் வேறு தேய்க்க வேண்டும், வீடும் குப்பையோடு இருக்கிறது, இவருக்கு காப்பி இல்லாவிட்டால் ஆகாது, டிகாஷன் போட செண்டும், யூனிபார்ம் அயர்ன் பண்ண வேண்டும், ஷூ பாலிஷ் போட வேண்டும் இத்யாதி’ என்று மனசு வட்டமிட ஆரம்பித்ததோ இல்லயோ வெளியில் வந்தாள். சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினாள். தன் துணிகளே எங்கு இருக்கிறது என்று தெரியாத மாதவன், எப்படியோ குமுதாவின் துணிகளை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் ரூமீல் பார்த்தான். பின் அங்குள்ள நர்ஸைக் கேட்டால், ‘அட்மிஷன் இன்னும் போடவில்லை, இதோ வருகிறேன்’ என்று இப்போதுதான் சொல்கிறாள். குழம்பிய மாதவன் வேறு வழி தோன்றாமல் வீட்டிற்கு வந்தால் அங்கு அவன் காண்பது என்ன! குமுதா பாத்திரத்திற்கு வலி  ஏற்றிக் கொண்டிருக்கிறாள்!

                              

ஒரு சென்டிமீட்டர் சீனமொழியில் -பிஷுமின் – தமிழில் : தி.இரா.மீனா

(சென்ற இதழ் தொடர்ச்சி )

One Centimeter by Bi Shumin - Summary and Details in Hindi - YouTube

“இல்லை. அவன்அந்த உயரம் இல்லை” அவள் இன்னமும் சிரித்தபடி இருந்தாள். அங்கிருந்தவர்கள் அந்தத் தாயைச் சந்தேகத்தோடு பார்த்தார்கள்.
“அவன் அந்தக் கோட்டைக் கடந்து விட்டான். நான் நன்றாகப் பார்த்தேன்” உறுதியாகச் சொல்லி சுவரில் இருந்த சிவப்புக் கோட்டை காட்டினான். பெரிய மழைக்குப் பிறகு மண்புழு சாலையைக் கடக்கும் போது இருப்பது போல அது சிறிய கோடாக இருந்தது.

“அம்மா!ஏன் இவ்வளவு நேரம்? உங்களைத் தொலைத்து விட்டேனோ என்று நினைத்தேன்.” அன்பாகச் சொன்னபடி தாயை நோக்கி ஓடி வந்தான், அவனுடைய மிகப் பிரியமான பொம்மையைப் பார்க்க வந்தது போல
இப்போது சாட்சி இருக்கிறது. உண்மை தெரிந்து விடும்.இளைஞன் லேசாகக் கலங்கினான். அவன் தன் வேலையைச் செய்கிறான்.அவனுக்குத் தான் செய்தது சரி என்றுதான் தோன்றுகிறது.ஆனால் இந்தப் பெண் ரொம்பவும் நம்பிக்கையாக இருக்கிறாளே.

டாவ் அமைதியாக இருந்தாள்.யீக்கு இது மாதிரியான வேடிக்கை பிடிக்கும். இது எப்படி போனாலும் அவனை உற்சாகப்படுத்தும்.

“இங்கே வா” என்று இளைஞன் அழைத்தான். கூட்டம் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றது.

அம்மாவைப் பார்த்தான். அவள் தலை அசைத்தாள்.கூட்டம் கவனிக்க தன் கோர்ட்டைச் சரி செய்தபடி, கனைத்தபடி அவன் இளைஞனை நோக்கிப் போனான். கூட்டம் அவனை ஒரு கதாநாயனைப் போல பார்க்க அவன் புழு அருகே போனான்.

பிறகு.. அந்தப் புழு அவன் காது வரை வந்ததைக் கூட்டம் பார்த்தது.
எப்படி இது சாத்தியமானது?

யீங் அவளுக்கு அருகில் இருந்தான். அவள் கை அவன் தலையில் பலமாக சத்தத்துடன் விழுந்தது..

அவன் அம்மாவை வெறித்தான். அழவில்லை.வலியால் அதிர்ச்சியானான். அதுமாதிரி அவன் அடிக்கப் பட்டதில்லை.

கூட்டம் மூச்சு விட்டது.

“ குழந்தையைத் தலையில் அடித்தது கொஞ்சமும் சரியில்லை.எப்படி ஒரு தாய் அப்படி நடந்து கொள்கிறாள்…இன்னொரு டிக்கெட் வாங்கினால் என்ன?நம் தவறுகளுக்கு குழந்தைகளை அடிப்பது அநாகரிகம் ..” ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்ராயம் இருந்தது.

அவளுக்குக் கோபம் வந்தது. யீயை அடிப்பது அவள் நோக்கமல்ல.அவன் தலையைச் சரி செய்யவே நினைத்தாள். அவன் வழுக்கையாக இருந்தால் கூட இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் புழுவை தாண்டி இருப்பான்.

“ யீ ! விரல்களால் நிற்காதே” கடுமையாகச் சொன்னாள்.

“ இல்லையம்மா..” அழ ஆரம்பித்தான்..உண்மைதான்.அவன் அப்படி நிற்கவில்லை.அந்தப் புழு அவனுடைய இமைகளைத் தழுவவதாக இருந்தது.
இளைஞன் சோம்பல் முறித்தான். அவன் கண்கள் கூர்மையானவை. டிக்கெட் வாங்காமல் ஏமாற்றியவர்களில் சிலரைக் கண்டு பிடித்திருக்கிறான். “ போய் டிக்கெட் வாங்கி வா” கத்தினான். கௌரவம் புழுவால் தகர்க்கப் பட்டுவிட்டது.

“ என் மகன் 110 செ.மீ விடக் குறைந்தவன்.” தனியாக நின்ற போதும் டாவ் உறுதியாகச் சொன்னாள்.

“ காசு கொடுக்காமல் தப்பிக்க விரும்புபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் உன்னையும், என்னையும் நம்புவார்கள் என்று நினைக்கிறாயா? இது எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்ட அளவு கோல். பிளாட்டினத்தால் உருவாக்கப் பட்ட சர்வதேச அளவு கோல்.பாரீசில் இருக்கிறது. அது உனக்குத் தெரியுமா?”

அவளுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு மீட்டர் எண்பது சென்டிமீட்டர் அவள் ஆடைக்குத் தேவை என்பதுதான். சர்வதேச அளவுகோல் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது. அவள் ஆச்சர்யப்பட்டதெல்லாம் புத்தர் சில நிமிடங்களுக்குள் அவள் மகனை எப்படி சில சென்டி மீட்டர்கள் வளரச் செய்தார் என்றுதான்.

“ இப்போதுதான் பஸ்சிலிருந்து வந்தோம்.அவன் அவ்வளவு உயரமாக இல்லை..”

“ சந்தேகம் வேண்டாம்.அவன் பிறந்த போது உயரமாக இருந்திருக்க மாட்டான்” இளைஞன் பரிகாசம் செய்தான்.கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்த டாவ் முகம் அவள் டிக்கெட்டைப் போல வெளுத்திருந்தது.

“ அம்மா! என்ன ஆயிற்று?” அளவு பார்த்து விட்டு வந்த யீ அம்மாவின் உறைந்த கையைப் பற்றிக் கொண்டு கேட்டான்.

“ ஒன்றுமில்லை! அம்மா உனக்கு டிக்கெட் வாங்க மறந்து விட்டேன்” அவள் பேச முடியாமல் சொன்னாள்.

“ மறந்து விட்டீர்களா? சொல்வதற்கு அழகாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு பையன் இருக்கிறான் என்பதையும் நீங்கள் ஏன் மறக்கக் கூடாது?” இளைஞன் கேட்டான்.சில நிமிடங்களுக்கு முன்னால் அவளிடம் இருந்த அமைதியான நம்பிக்கையை அவன் மன்னிக்கத் தயாராயில்லை.

“ உனக்கு என்ன வேண்டும்?” அவள் கோபம் அதிகமானது. குழந்தையின் முன்னால் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

“ உனக்கு தைரியம்தான். நீ கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.இந்த டிக்கெட் உனக்கு எப்படிக் கிடைத்தது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். டிக்கெட் இலவசமாகக் கிடைத்தது போதாதென்று இன்னொரு ஆளையும் நீ உள்ளே நுழைக்கப் பார்க்கிறாய். உனக்கு வெட்கம் இல்லையா? நீ தப்பித்து விட முடியும் என்று நினைக்கிறாயா? போ, ஒரு செல்லுபடியாகும் டிக்கெட்டை வாங்கி வா” சுவரில் சாய்ந்து கூட்டத்தைப் பார்த்தபடி ஏதோ உத்தரவு போல சொன்னான்.

டாவின் கைகள் நடுங்கின.அவள் என்ன செய்ய வேண்டும்?இன்னொரு விவாதம் செய்ய வேண்டுமா? அவள் சண்டைக்கு வெட்கப்படுபவள் இல்லை. ஆனால் தன் குழந்தை இதில் சாட்சியாவதை விரும்பவில்லை. அவனுக்காக அவள் விட்டுத் தரத்தான் வேண்டும்.

“ அம்மா டிக்கெட் வாங்கி வருகிறேன். நீ இங்கேயே இரு.ஓடி விடாதே” சிரிக்க முயன்றாள். வெளியில் வருவது என்பது அபூர்வம்தான். என்ன நடந்தாலும் தன் பொறுமையை இழக்கக்கூடாது .எல்லாவற்றையும் சரி செய்ய முடிவு செய்தாள்.

“ அம்மா! உண்மையாகவே நீங்கள் டிக்கெட் வாங்கவில்லையா?” நம்பாமலும், வியப்பாகவும் யீ அவளைப் பார்த்துக் கேட்டான்.அவன் பார்வை அவளுக்கு பயம் தந்தது.

அவள் அந்த டிக்கெட்டை இன்று வாங்க முடியாது.அவளால் தன் நிலையை மகனிடம் விளக்கவும் முடியாது.

“வா போகலாம் “ அவள் யீயை தள்ளிக் கொண்டு போனாள்.நல்ல வேளை குழந்தை எலும்பு பலம் உள்ளவன்.இல்லாவிட்டால் விழுந்திருப்பான்.

“ பார்க்கில் போய் விளையாடலாம் .” மகனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி னாள். ஆனால் அவன் அமைதியாகி விட்டான். திடீரென்று அவன் வளர்ந்து விட்டான்.

நடக்கும் போது ஐஸ்கீரிம் விற்பவன் அருகே நின்று “ அம்மா! சிறிது பணம் கொடுங்கள் !” என்றான்.அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு கடையின் பின்புறம் இருந்த முதிய பெண்மணியின் அருகே ஓடினான். “என் உயரத்தைப் பாருங்கள் ”, அவன் சொன்ன பிறகு தான் டாவ் உடல் உயரம், எடை காட்டக் கூடிய அளவு கோலோடு ஒரு முதியவள் உட்கார்ந்திருந்தைப் பார்த்தாள். அந்தப் பெண்மணி அளவு கோலை மெல்ல விரித்தாள்.

“ ஒரு மீட்டர் ,பதினொன்று” என்று யீங்கைப் பார்த்துச் சொன்னாள். ஏதாவது பிசாசு அவளுடன் சண்டை போடுகிறதா ?அல்லது ஒவ்வொரு முறை அவள் பார்க்கும் போதும் யீ உயர்கிறானா என்று வியந்தாள்.

யீயின் கண்கள் கசிந்தன.அவன் அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் ஓடினான். ஒரு கணம் பறவையாய் காற்றில் பறப்பது போல ஓடி விழுந்தான். அவனைத் தாங்கிப் பிடிக்க அவள் போவதற்குள் எழுந்து ஓடி விட்டான். டாவ் பின் தொடர்வதை நிறுத்தி விட்டாள்.அவள் பின் தொடர்ந்தால் அவன் விழுந்து கொண்டே இருப்பான்.மறையும் தன் மகனின் நிழலைப் பார்த்து மனம் உடைந்தது. “ யீ !அம்மாவைப் பார்க்க மாட்டாயா?”

அவன் நீண்ட நேரம் ஓடி விட்டு நின்றான்.அம்மாவை அவள் பார்க்காத போது பார்த்தும்.. அவள் பார்க்கும் போது கண்களை விலக்கிக் கொண்டும்..
டாவுக்கு அந்தச் சம்பவம் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.அவள் அந்த முதிய பெண்மணியிடம் போனாள். “ நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல்..”

“என் அளவு கோல் உங்களை மகிழ்ச்சிப் படுத்தத்தான்.உங்கள் மகன் உயரமாக வளர்வதை நீங்கள் விரும்பவில்லையா ? ஒவ்வொரு தாயும் தன் மகன் உயரமாவதை விரும்புவாள்.ஆனால் அவன் வளரும் போது உங்களுக்கு வயதாகி விடும். என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. என்னுடைய அளவு கோல் பொய்யானது. அவ்வளவு துல்லியம் இல்லாதது.” அவள் மென்மையாக விளக்கினாள்.ஆனால் டாவ் இன்னமும் குழப்பமாகவே இருந்தாள்.

“ என்னுடைய அளவுகோல் பழையது. மிகச் சரியான அளவு உடையது இல்லை. உடல் எடையை அவர்கள் இருப்பதை விடக் குறைவாகக் காட்டும். உயரத்தையும் சிறிது அதிகமாகத் தான் காட்டும். அப்படி நான் அதை அமைத்திருக்கிறேன். இந்த நாட்களின் நாகரிகம் என்பது உயரமாகவும், மெலிதாக இருப்பதும் தான். என் அளவு கோல் பொருத்தமானது.” அந்த முதியவள் அன்பானவளாக இருக்கலாம்.ஆனால் சாமர்த்தியமானவளும் கூட.

ஓ..அதுதான் காரணமா ? யீ அந்தப் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் வெகு தூரத்தில் இருந்தான். கேட்டிருந்தாலும் அதிலுள்ள நியாயம் அவனுக்குப் புரிந்திருக்குமா?

யீ இன்னமும் அம்மாவை சந்தேகக் கண்களோடு தான் பார்க்கிறான். வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவன் உயரத்தை அளந்து பார்க்க வரும்படி கெஞ்சினாள். “ வர மாட்டேன்! உங்களைத் தவிர எல்லோரும் நான் உயரம் என்று ஒப்புக் கொள்கிறார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள். நீங்கள் அளந்தால் குட்டையாகத்தான் தெரிவேன். நான் உங்களை நம்ப மாட்டேன்” அவள் கையில் உள்ள டேப் விஷப் பாம்பு போலானது.

“ உங்கள் கேக்குகள் எல்லாம் கரிந்து போயிருக்கின்றன.” ஒரு வாடிக்கையாளர் கத்தினார்.அவை கரிந்திருந்தன. அவள் குற்றமாக உணர்ந்தாள். தன் வேலையில் எப்போதும் மிக கவனமாக இருப்பாள். ஆனால் இந்த நாட்களில் பல சமயங்களில் கவனம் சிதறுவதை உணர்ந்தாள்.
அவள் இதிலிருந்து விடுபட வேண்டும். யீ தூங்கிய பிறகு அவனை நீட்டிப் படுக்க வைத்து அளந்தாள் ஒரு மீட்டர் ஒன்பது சென்டி மீட்டர்

கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுத முடிவு செய்தாள். “ அவர்களுக்கு கடிதம் எழுதுவதால் என்ன ஆகும் என்று நினைக்கிறாய்” என்று கணவன் கேட்கிறான். அதனால் ஏதாவது நடக்குமா என்று அவளுக்குத் தெரியாது. தன் மகனின் கண்ணில் உறைந்திருக்கும் பனிக்கட்டியை உருக்க அவள் ஏதாவது செய்தாக வேண்டும்.

அவள் கடிதம் எழுதி விட்டாள். தன் தொழிற்சாலையில் பணிபுரியும் ’ரைட்டர் “என்ற பட்டப் பெயர் உடைய அவரிடம் காண்பித்தாள்.அவர் சிறு சிறு கட்டுரைகள் எழுதுபவர். படித்து விட்டு “ இது ஓர் அலுவலகச் செய்தி போல உள்ளது. உற்சாகம் தரும் செய்தியாக இல்லை. “என்றார். அவள் ஒப்புக் கொண்டாள்.

“ வலிமையான,உரிமைகளை வெளிப்படுத்தும் தன்மையில் செய்திகள் இருந்தால் தான் அது பத்திரிகை ஆசிரியரைக் கவரும். பிரசுரம் செய்யப் படும். செய்தி மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும்.’ வருந்தும் சிப்பாய்கள் தான் எப்போதும் வெற்றி பெறுவார்கள் ’ என்ற பழமொழியைக் கேள்விப் பட்டதில்லையா?” என்றார். அவள் தலை ஆட்டினாள். கடிதம் இப்படித் தொடங்கட்டும். ’ புத்தரின் சக்தி நிச்சயமாக எல்லையற்றது. கோவில் வாசலைத் தொட்டவுடன் ஒரு ஐந்து வயது சிறுவன் இரண்டு சென்டி மீட்டர் உயரமாகி விட்டான். அதே நேரத்தில் புத்தரின் சக்தி எல்லை உடையதும்தான். சிறுவன் வீட்டிற்குத் திரும்பிய பிறகு இரண்டு சென்டி மீட்டர் குறைந்து பழையபடி ஆகி விட்டான்.’ இது சரியாக இல்லை என்று எனக்குத் தெரியும்.ஆனால் இந்த முறையில் யோசித்துப் பாருங்கள் ” என்றார்.

அவள் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க விரும்பினாள். ஆனால் மறந்து போனது. சில மாற்றங்களைச் செய்து அனுப்பினாள்.

’ ரைட்டர்’ மதிய சாப்பாட்டு நேரத்தில் வருவார். பிரேமுக்குள் வைக்கப் பட்ட படம் போல டாவ் முகம் சிறிய ஜன்னலில் தெரியும்.ரசீதுகளைச் சேகரித்தபடி இருப்பாள். ’ ஒரு நிமிடம்’ என்று சொல்லி விட்டுப் போவாள். கேக்குகள் எரிந்திருக்கும். என்று அவருக்குத் தோன்றும். அதிகம் எரியாமல் இருந்த கேக்குகளை எடுத்து வந்தபடி அவருக்கு நன்றி சொல்வாள்.

“ இது உங்களுக்கு . சர்க்கரையும்.வெண்ணையும் அதிகமாக..” இதுதான் ஒரு கேக் தயாரிப்பவர் தன் நண்பருக்கு நன்றி சொல்லும் வகையில் தரக் கூடிய மிகப் பெரிய பரிசு..

நீண்ட காத்திருப்புகள்…

டாவ் தினமும் செய்தித்தாள்களைப் படிப்பாள் .சிறு செய்தி, விளம்பரம், படம் என்று .. ரேடியோவும் கேட்பாள். நல்ல குரலில் அறிவிப்பாளர் அவள் கடிதத்தைப் படிப்பார் என்ற கற்பனையில்.. பிறகு தபால் அலுவலகம் போவாள் தனது கடிதத்திற்கு மன்னிப்பு கேட்டு ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க.. நூறு விதங்களில் அவள் கற்பனை..ஆனால் உண்மை நிலை…

எல்லா நாட்களும் ஒன்று போலவே கழிந்தன .யீ கொஞ்சம் பழைய நிலைக்குத் திரும்பியது போலத் தெரிந்தான். ஆனால் அவன் அதை மறக்கவில்லை என்று டாவ் நினைத்தாள்.

கடைசியாக ஒரு நாளில் “ தோழர் டாவின் வீடு எங்கே இருக்கிறது?” என்று யாரோ கேட்டு வந்தனர்.

“ வாருங்கள்.எனக்குத் தெரியும் “ யீ உற்சாகமாகச் சொல்லியபடி சீருடை அணிந்த இரண்டு முதியவர்களை அழைத்து வந்தான். “அம்மா ! யாரோ வந்திருக்கின்றனர்” என்றான்

அவள் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள். சோப் நுரை எங்கும்.
“ நாங்கள் கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்திருக்கிறோம்.உள்ளுர் செய்தித்தாள் உங்கள் கடிதத்தை எங்களுக்கு அனுப்பி இருந்தது. உண்மையை விசாரித்து அறிய வந்திருக்கிறோம்.”

டாவுக்கு கொஞ்சம் பதட்டமாகவும் ,சோர்வாகவும் இருந்தது.முதலாவதாக வீடு அன்று அவ்வளவு சுத்தமாக இல்லை. சுத்தம் செய்ய நேரம் இல்லை. அவள் சோம்பேறி என்று அவர்கள் நினைத்தால் அவள் மீது நம்பிக்கை வராதே.

“ யீ நீ விளையாடப் போ” இதுவரையான டாவின் கற்பனைகளில் யீ உண்மையை தெரிந்து கொள்ள தன் அறையில் இருப்பான். இன்று அந்த நேரம் வந்து விட அவள் அவன் அங்கிருப்பதை அசௌகரியமாக நினைத்தாள்.என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இவர்கள் அந்த இளைஞனை வேலைக்கு அமர்த்தியவர்கள். என்ன விதமான நியாயத்தை இவர்களால் தர முடியும்?

“ நாங்கள் அந்த இளைஞனை விசாரித்தோம். அவன் தான் சரியாக நடந்து கொண்டதாகச் சொல்கிறான். நாங்கள் சிறுவனின் உயரத்தைப் பார்க்கப் போகிறோம். அவனை வெளியே அனுப்ப வேண்டாம் ” என்று இருவரில் இளையவராகத் தெரிந்தவர் சொன்னார்

யீ சுவரின் அருகே பவ்யமாய் நின்றான். அந்த வெள்ளைச் சுவர் மிக வெண்மையானதாக யீயின் ஓவியத்தை நிரப்புவது போல இருந்தது.சுவரில் அவன் சாய்ந்து நின்ற போது பழைய பயமான நினைவுகள் அவனுக்குள் வந்தன.

அவர்கள் இருவரும் மிக கவனமாக இருப்பவர்களாகத் தெரிந்தனர். யீ யின் தலைக்கு மேல் சுவரில் ஒரு கோடு வரைந்தனர். உலோகத்தால் ஆன டேப்பை தரையில் போட்டு கீழிருந்து அளவு பார்த்தனர். அந்த டேப் சூரிய ஒளியில் மின்னியது.

டாவ் அமைதியாக இருந்தாள்.

“என்ன அளவு?”

ஒரு மீட்டர் பத்து சென்டி மீட்டர் .அவ்வளவுதான்.” இளையவர் சொன்னார்.
“ இது அவ்வளவுதான் என்கிற விஷயம் இல்லை. ஒரு மாதம், ஒன்பதுநாள் தாமதமாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் ஒரு மாதத்திற்கு முன்னால் அவன் இவ்வளவு உயரமாக இல்லை.”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இந்த பேச்சை மறுக்க முடியாது.

ஐந்து டாலர் பில்லை அவர்கள் தந்தனர். அது ஒரு கவரில் இருந்தது. அவர்கள் தயாராகத்தான் வந்திருக்கின்றனர். கோவிலை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு அவர்கள் அந்தப் புழுவின் உயரத்தை அளந்து பார்த்து அது சரியான அளவில் வரையப்படவில்லை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

“ நீங்களும் ,உங்கள் மகனும் அன்று கோவிலுக்குள் போக முடியவில்லை. அந்த சூழ்நிலையைச் சரியாக்க இது ஒரு சிறு கொடை “ இருவரில் மூத்தவர் மென்மையாகப் பேசினார்.

அவள் அசையாமல் இருந்தாள். அந்த நாளின் மகிழ்ச்சி திரும்பப் பெற முடியாதது.

“ உங்களுக்குப் பணம் தேவையில்லை என்றால் இந்த இரண்டு டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.நீங்களும்,உங்கள் மகனும் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வரலாம்.” இளைய மனிதர் சொன்னார்.

இது கொஞ்சம் ஆசையைத் தூண்டும் சந்தர்ப்பம் தான். ஆனால் டாவ் தலையாட்டி மறுத்தாள். அவளுக்கும், மகனுக்கும் அந்த இடம் இனி எப்போதும் சோகமான நினைவுகளைத்தான் தரும்

“ எதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்?” இரண்டு பேரும் கேட்டனர்.
அவளும் இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

இயற்கையாகவே அவள் மென்மையானவள். அந்த இளைஞன் இன்று மன்னிப்பு கேட்க வந்திருந்தால் அவள் அவனைக் கண்டிப்பாக அவமதித்து இருக்க மாட்டாள்.

அவளுக்கு என்ன வேண்டும்?

அவள் யீயை அந்த அதிகாரிகளின் முன்பு தள்ளிக் கொண்டு போனாள்

“ தாத்தா சொல்லு” என்றாள் யீயிடம்.

“ தாத்தா ” அவன் இனிமையாகச் சொன்னான்.

“ ஐயா ! தயவு செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். டிக்கெட்டையும்…. அந்த இளைஞனை எதற்காகவும் தண்டிக்காதீர்கள். அவன் தன் வேலையைத்தான் செய்தான்..”

அந்த அதிகாரிகள் குழம்பினர்.”

டாவ் மகனை அணைத்துக் கொண்டாள். “ ஐயா ! அந்த நாளில் என்ன நடந்தது என்று என் மகனுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். அவன் அம்மா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை தயவு செய்து அவனுக்குச் சொல்லுங்கள்….
————————————
பிஷுமின் என்ற சீன மொழி பெண் படைப்பாளி பதினாறு வயதில் இராணுவத்தில் சேர்ந்து மங்கோலியாவில் பணி புரிந்தவர். ஒரு மருத்துவராக நாட்டு நலப் பணி செய்ததோடு மட்டும் இன்றி இடைப்பட்ட காலத்தில் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சீன இலக்கியத்தில் தலை சிறந்த எழுத்தாளராக மதிப்பிடப்படுபவர். அவர் படைப்புகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. சீனாவிலும், தைவானிலும் பல இலக்கிய விருதுகள் பெற்றவர். தன் அடையாளத்தை உணர்த்தும் ஒரு பக்குவப் பட்ட பெண்ணின் மன வெளிப்பாடு இச்சிறுகதை.

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும் | எழுத்தாளர் ஜெயமோகன்

பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-2

எச்சரிக்கை: சரித்திரம் பேசப் போவதால் தூக்கம் வரலாம். ஒரு ஆறுதல். ஆழ்ந்த தூக்கம் வருவதை தவிர்க்க ஆழமாகப் பேச வில்லை.

உலகத்தில் அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அவதியுறும் காலத்தில் மக்களை நல் வழி படுத்த சுமார் 25 புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களில் கடைசியாக வந்தவர் கௌதம புத்தர் என்பதும் பௌத்த சமய கொள்கை. இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தராம்.எனினும் சரித்திரத்தில் அறியப்பட்டவர் கௌதம புத்தர் மட்டுமே.

புத்தர் வாழ்ந்த காலத்தில் பல மதங்கள் இருந்தாலும் ஜைன(சமண) மதம் வெகுவாக பரவியிருந்தது.ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் புத்தரின் சம காலத்தவர். சற்று வயதில் மூத்தவர்.

அதேகாலத்தில் வாழ்ந்த கோசலி மக்கலி என்பவர் ஆசீவகம் என்றழைக்கப்பட்ட மதத்தை தோற்றுவித்தவர் ஆவார். ஆசீவகம் தமிழ் நாட்டிலும் கால் பதித்து பின்னர் தானே அழிந்தது.

அதேகாலத்தில் இருந்த இன்னொரு முக்கியமான மதம் பிராமண மதம் எனப்பட்ட வைதீக மதமாகும். அம்மதத்தை பற்றி கடந்த பதிவில் பார்த்தோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் பாரத நாட்டில் இன்னும் வேறு சில மதங்கள் இருந்தாலும் போரும் போட்டியும் பௌத்த, சமண, ஆசிவகம் மற்றும் வைதீக மதங்களுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

கி மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டுக்குள் இந்த நான்கு மதங்களுமே தமிழகத்தை தமதாக்கிக் கொள்ள போராட துவங்கி விட்டன.
புத்தரும், மஹாவீரரும் மக்களை அன்பு வழிப்படுத்தி சமுதாய சீர் திருத்தம் செய்த பெரியோர்கள் ஆவர்.
அவர்கள் சமுதாயத்தை அழிக்க வந்தவர்களாக்கிய பழி அவர்களுக்குப் பின் வந்த அவர்கள் மதத்தினரையே சேரும்.

மதங்கள் தோன்றி வளர்ந்தமைக்கு அவற்றின் கொள்கைகளும், தோற்றுவித்தவரின் ஈடுபாடும் காரணம் என்றால் அவை அழிவதற்கும் காரணம் காலத்திற்கு ஒவ்வாத சில கொள்கைகளும் பின்னால் வந்த மத தலைவர்களின் செயல்களுமே.

மேலே கூறிய நான்கு மதங்களும் தமிழ் இந்தியாவை தமதாக்கிக் கொள்ள உழைத்தாலும் போட்டியில் முதலில் வென்றது பௌத்தமே.

பௌத்த மதம் தமிழ்நாட்டிற்குள் வந்த கதை, வாழ்ந்த கதை மற்றும் அழிந்த கதையை சற்று பார்ப்போம்.

பௌத்த மதத்தை தோற்றுவித்த சித்தார்த்தர் என்ற கௌதம புத்தர் கி மு 563 ல் தோன்றி 483 ல் (கிமு 6-5 நூற்றாண்டு) நிர்வாண மோஷம் அடைந்தார்.

அவர் நிறுவிய பௌத்த மதத்தை இந்தியா முழுதும் மட்டுமல்ல அருகில் உள்ள நாடுகளுக்கும் கொண்டு சேர்த்த பெருமை அசோக சக்ரவர்த்தியையும் அவரது சகோதரர் மகேந்திரனையும் சேரும்.

அசோக சக்ரவர்த்தி கி மு 273 முதல் 232 வரை தமிழ் இந்தியா தவிர ஏனைய இந்தியா முழுதும் ஆண்டார். கடல் கடந்து இலங்கையில் புத்த மதத்தை நுழைத்த அவர் சோழ, சேர, பாண்டிய மன்னர்களிடம் போராடி மதத்தைத் தினிக்க வில்லை.

தமிழ் இந்தியாவில் அவர் அறத்தை போதித்து அனைவரின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் இந்தியாவில் புத்த பிக்குகளை கொண்டு இலவச மக்கள் மருத்துவம், கால் நடை மருத்துவம், பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.

ஒவ்வொறு கிராமத்திலும் புத்த பிக்குகள் தங்கிய விகாரை அல்லது பள்ளிகளின் கூடத்தில் கல்வி போதிக்கப் பட்டது. அது அனைவருக்குமான கல்வி. எளியவருக்கு உணவளிக்கப் பட்டது. புத்த மதத்தை மறந்தாலும் அவர்கள் கொடுத்த பள்ளிக் கூடம் என்ற பெயரை இன்றும் நாம் மறக்க வில்லை.

எளியவர்க்கு உணவு, சீறுடையுடன் கூடிய இலவச கல்வியை மீண்டும் தொடர்ந்த காமராசர்தான் 26 வது புத்தரோ?

அதற்கு முன் கல்விக் கூடங்கள் இல்லையா என்றால் இருந்தது. குரு குலமாகவும், திண்ணைப் பள்ளிகளாகவும் இருந்தன.
வெகு சிலருக்கென இருந்த கல்வியை வெகு ஜன கல்வியாக்கியது பௌத்தம்.

அசோகர் அறச்சாலைகள் அமைத்து மாற்றுத்திறனாளிகட்கும் எளியவர்க்கும் இலவச உணவு வழங்கச் செய்தார். பௌத்த காப்பிய நாயகியான மணிமேகலை அனைவர்க்கும் உணவு வழங்கி சிறைக் கூடத்தை அறக் கூடமாக மாற்றியதாக படித்தோம். அவை அசோகரின் செயலே.

இது போதாதா மக்களின் மனதில் புக. இப்பொழுதுதான் தெரிகிறது இலவசங்களின் பெருமை.
அன்று மதம் இன்று அரசியல்.

இலவசங்களால் எப்பொழுதும் ஏமாற்ற முடியாதே. மற்ற மதங்களை பின் தள்ளி முதலிடத்தில் நிற்க அனைவரும் மதிக்கும் கொள்கைகள் வேண்டுமே.
ஆம் மற்ற மதங்களை பின் தள்ளி சுமார் 500-600 ஆண்டுகள் பௌத்தம் தமிழ் இந்தியாவை தனதாக்கிக் கொள்ள ஒப்புயர்வற்ற அதன் கொள்கைகளே காரணம்.
கௌதமர் மதத்தை நிறுவி துறவிகளாகிய பிக்குகளும், பிக்குனிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார்.
பிக்கு சங்கத்தின் சட்ட திட்டங்களை வகுத்தார்.
பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும், பள்ளிகளையும் பிரபுக்களும் அரசர்களும் தானமாக வழங்கினர்.
திரிபடகம் என்ற விதிகள் தொகுக்கப்பட்டு எழுதா மறையாக ஓதப்பட்டு வந்தன.

துன்பத்திற்கு காரணமான 12 சார்புகளை அறுத்து, பிறப்பு-இறப்பு நீங்கி நிர்வாண மோஷம் எனும் வீடு பேற்றினை அடைவது பௌத்த மதத்தின் நோக்கம்.

அந்நிலையை அடைய பஞ்ச சீலம்(5), அஷ்ட சீலம் (8), தச சீலம் (10) என் இல்லறத்தார்க்கும், உயர் நிலை மக்களுக்கும், துறவிகளுக்குமான கொள்கைகள் வகுக்கப் பட்டது.

அடுத்த பதிவில் தமிழினத்தை தலை வணங்க வைத்த பௌத்த மத கொள்கைகளை பார்ப்போம்.
அவற்றைப் பார்த்தவுடன் நானும் புத்தரோ என எனக்குத் தோன்றியது. உங்களுக்கும் தோன்றலாம்.

( தொடரும்)

அப்பாவின் சொத்து – ராஜன்

பத்தாம் நாள் காரியம் முடிஞ்சது.

நெருங்கிய சொந்தங்கள் எல்லோரும் ஒவ்வொருத்தாரா கிளம்பிட்டாங்க.
இப்போ அம்மாவும் கார்த்திக்கும் மட்டும்தான் வீட்டில்.
அப்பா இல்லாத வெறுமையை உணர ஆரம்பித்து விட்டார்கள் இருவரும்.

அவர் பணி ஓய்வு பெற்றதில் இருந்து, எப்போதும் வீட்டில் கூடவே இருந்தார்.
காலையில் எழுந்து சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வார்.

டிவியில் பிரார்த்தனை பாடல்களை அந்தந்த நாட்களுக்கு ஏற்ப போட்டு விடுவார்.

திங்கள் என்றால் ருத்ரம், சமகம், ரமேஷ் ஓஜா அவர்கள் வித்யாசமான குரலில் பாடும் சிவ மானசபூஜா, லிங்காசகடகம் போன்ற பாடலகள் ..

செவ்வாய் என்றால் கந்தசஷ்டி , வேல் மாரல் ..

புதன் முழுதும் கணபதி பாடல்கள்..

வியாழன் அன்று குரு, சாய் பாபா..

வெள்ளி- அம்மன் பாடல்கள்

சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் (தினமும் கூட உண்டு) ஹனுமான் சாலிஸா ..

ஞாயிறு அன்று ஆதித்ய ஹ்ருதயம்

என்று அவரது பட்டியல் வரிசை பிசகாமல் பாடல்கள் ஒலிக்கும்.
அப்புறம் அம்மாவின் சமையலுக்கு உதவி.

எல்லாம் முடித்து விட்டு அவரது லாப்டப்பில் உட்கார்ந்தால் அதற்கப்புறம் லேசில் எழுந்திருக்க மாட்டார்.

பலசமயம் கார்த்திக் அப்பாவை கடிந்து கொண்டு இருப்பான்.
” அப்பா.. எப்ப பார்த்தாலும் மொபைல், கம்ப்யூட்டர் அப்பிடின்னு இருக்கேளே .. வேற ஏதாவது பண்ணுங்களேன்.”
அந்த சமயத்தில், அம்மாவும் அடுப்பறையில் இருந்து வெளியே வந்து இவனோடு சேர்ந்து கும்மி அடிப்பாள் .
அப்பா முணுமுணுப்பார். ” எனக்கு பொழுது போக்குன்னு என்னடா இருக்கு? .. உன் அம்மாவுக்கு சமையல் கட்டு வேலை . உனக்கு ஆபீஸ் வேலை ..
முன்ன மாதிரி என்னால புத்தகம் எல்லாம் இப்ப படிக்க முடிலடா.. 

” அப்பா , நாங்க எல்லாம் உங்க நன்மைக்குதான் சொல்ரோம் .. மூணு வருஷம் முன்னாடி உங்களுக்கு பயங்கரமா கழுத்து வலி வந்து துடித்தது மறந்து போச்சா.. ? கழுத்துப் பட்டை போட்டுண்டு அஞ்சு மாசம் சுத்திண்டு இருந்தேளே .. எப்படியோ போங்கோ ” என்று சொல்லிவிட்டு போய் விடுவான்.

இப்போ அவருடைய லேப்டாப் கம்ப்யூட்டர் எல்லாம் கேட்பாரற்று கிடந்தது. கார்த்திக் கண்களில் கண்ணீர்.
அவர் திடீரென்று பிரிந்து விடுவார் என்று யாரும் எதிர் பார்க்கவே இல்லை.

எல்லா சடங்குகளும் முடிந்து , கொஞ்சம் கொஞ்சமாக வீடு யதார்த்த சூழ்நிலைக்கு வந்து கொண்டு இருந்தது.

அப்பா பேரில் என்னென்ன சொத்துக்கள் வைத்து இருந்தார் என்று இவர்களுக்கு அவர் சொன்னது இல்லை.

அவராக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

சொல்வதற்கான சந்தரப்பமும் அவருக்கு கிடைக்கவில்லை.

” அம்மா, அவருடைய பாங்க் டெபாசிட், ஷேர் , ம்யூச்சுவல் ஃபண்ட் எல்லாம் பெயர் மாத்தனும் . உன் கிட்ட இந்த விவரங்கள் எங்கே அப்பிடின்னு எப்போவாவது சொல்லி இருக்காரா?

நானும் எதுவும் கேட்டு வெச்சுக்கலையே .. “

” கார்த்திக், நாங்க அதைப் பத்தி எல்லாம் பேசிக்கவே இல்லைடா..
எல்லாம் அவரே பாத்துக்கட்டும்னு விட்டுட்டேன்.. வங்கிக் கணக்கு, எலக்ட்ரிசிட்டி பில் , வீட்டு வரி எல்லாமே அவர் கம்ப்யூட்டர் மூலம் பண்ணிடுவார்.
நீ ஆபீஸ் வேலையில் ரொம்ப பிஸியா இருக்கரதாலே உன் கிட்டேயும் அவர் சொன்னதில்லை.

வீட்டுப் பத்திரம் கூட அவர் எங்க வெச்சு இருக்காருன்னு தெரியாது. அவரும் எனக்கு இந்த ATM ல பணம் எடுக்கறது, ஆன் லைன்ல பில் பணம் கட்டரது எல்லாம் சொல்லித் தரல .. நானும் ஒதுங்கியே இருந்துட்டேன்…

பல வருஷங்களுக்கு முன்னாடி நானும் அவரும் வங்கிக்கு நேராகவே சென்று டெபாசிட் போடுவோம். அப்போது கிடைத்த டெபாசிட் ரசீது எல்லாம் மட்டும் எங்கே என்று எனக்கு தெரியும். அப்புறம் சில வருடங்களாக அவர் எல்லாமே ஆன்லைன் மூலமா தான் .. ரசீது இல்லை.”

கார்த்திக்குக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பல விவரங்கள் அவனுக்கு வீட்டில் தேடியதில் கிடைக்கவில்லை.

அன்றுதான் பல கோடிக்கான பணம் வாரிசுகளால் கோரப்படாமல் ஃபிக்ஸ்ட் டெபாசிட் என்று வங்கியிலும் ஷேர், ம்யூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட் என்று மற்ற இடங்களிலும் கேட்பாரின்றி பல வருடங்களாக முடங்கி இருப்பதாக அவனுக்கு ஒரு குறும் செய்தி வாட்சப்பில் வந்திருந்தது.

பாடுபட்டு சேர்த்த அப்பாவின் சொத்தும் அப்படி கேட்பாரின்றி வீணாக போய் விடுமோ என்ற கவலையில், இரவு முழுவதும் அம்மாவும் அவனும் இதைப்பற்றியே பேசிக் கொண்டு இருந்தனர்.

காலையில் எதற்கும் அப்பாவின் கம்ப்யூட்டர் திறந்து பார்க்கலாம் என்று உட்கார்ந்தான்.
நல்ல வேளை அது அவன் ஏற்கனவே உபயோகித்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் என்பதாலும், அதை அவர் பாஸ் வோர்ட் மாற்ற வில்லை என்பதாலும் அது வழி விட்டது.

கம்ப்யூட்டர் உள்ளே ‘கார்த்திக்’ என்ற ஒரு கோப்பகத்தில் சொத்து பற்றிய அத்தனை விவரங்களையும் ஒன்று விடாமல் ஒரு எக்சல் ஷீட் டில் போட்டு வைத்திருந்தார்.

வீட்டு வரி , மின்சார கட்டணம் செலுத்துவதற்கான முறைகள், அதற்கான கடவு சொற்கள் ( பாஸ் வோர்ட்) எப்போது எந்த இணய தளத்தில் போய் கட்ட வேண்டும், எந்தெந்த வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கிறார், எத்தனை ஷேர் , ம்யூச்சுவல் ஃபண்ட் எங்கு உள்ளது. அதன் கணக்கு எண்கள் போன்ற விவரங்கள் தெளிவாக இருந்தன. தனது பென்ஷன் விவரங்கள் , எப்படி அதை மனைவிக்கு மாற்றுவது என்ற விவரங்களும் ஒரு டாக்குமென்ட்டில் எழுதி இருந்தார்.

சிலவற்றின் ஒரிஜினல் சான்றிதழ்கள் வீட்டில் எந்த பையில் போட்டு வீட்டில் எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்றும் எழுதி இருந்தார்.

வீட்டுப் பத்திரம் எந்த வங்கியில் இருக்கிறது, அந்த லாக்கர் எண் அதன் சாவி எண் கூட எழுதி இருந்தார் ( வங்கியில் லாக்கர் எண்ணும் , சாவி எண்ணும் வேறு வேறாக இருக்கும்)

அதிசயம் என்னவென்றால், தர்ப்பணம் செய்ய கோத்திரம், மூன்று தலைமுறையினர் பெயர்கள் எல்லாம் கூட ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

கடைசி வரியில், ஒரு சிகப்பு டைரியை வீட்டில் எங்கே வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு ‘அம்மாவுக்கு அந்த தகவல் ‘ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

” அம்மா.. , அப்பா கம்ப்யூட்டர் ல சும்மா பேஸ்புக் யுட்யூப் தான் பார்த்துண்டு இருந்தாரோ அப்பிடின்னு நினைச்சேன்.. எவ்வளவு விஷயங்களை டாக்குமென்ட் செஞ்சி என்னோட வேலையை சுலபம் ஆக்கி இருக்காரு பாரு ..

இப்ப எல்லா சொத்துக்களையும் ஈஸியா க்ளைம் பண்ணலாம்.. எதுவும் வீணாகாது “

” கார்த்திக் எனக்கு கம்ப்யூட்டர் எல்லாம் பாக்கத் தெரியாதுன்னு இந்த டைரியிலேயும் சொத்துக்கள் பற்றிய எல்லா விவரங்களையும் எழுதி இருக்கார் டா.. அந்த கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் , இன்னும் பல பாஸ்வேர்ட் கூட குறிச்சி எங்கேயோ பத்திரமா வெச்சிருக்கார் . ஒரு நாள் இந்த டைரி பத்திக் கூட சொல்ல வந்தார் . நாந்தான் காதுல வாங்கிக்கவே இல்லை…”

என்று கண்ணில் கண்ணீரும், கையில் தேடி எடுத்த சிவப்பு டைரியுமாக அம்மா வந்தால்.

” சரிம்மா .. இனிமே நீ கூட இதெல்லாம் தெரி ஞ்சிக்கணும்.. இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்.. சாயந்திரம் ATM ல பணம் எடுக்கப் போறேன். என கூட வாங்க..
நீங்களும் கூட இதை எல்லாம் சுலபமா பழகிக்கலாம். நான் வெளியூர் போனா கூட நீங்க இதெல்லாம் தனியா செய்யலாமே ..” என்றான்.

படத்தில் மாலைக்கு நடுவே அப்பா நிம்மதியாக புன்னகை செய்வது போல கார்த்திக் உணர்ந்தான்.

 

கிருஷ்ண லீலை -ராஜன் வெங்கட்

” என்னங்க, கிருஷ்ண ஜயந்தியும் அதுவுமா கிருஷ்ணருக்கும் நம்ப குட்டிப்பையனுக்கும்   சீடை,  முறுக்கு எதுவுமே இல்லையே.. ? “

காலையில் சுமதி வருத்தப்பட்டாள்.

 ஒப்பனைக் கலைஞனான  ஸ்ரீதர்  தொழில் நலிந்ததால், ஏதேதோ செய்து  பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருந்தான்.  

இப்போ   கோவிட் காரணமாக ரொம்பவே  பண நெருக்கடி.

வாசலில்  சோகமாய் உட்கார்ந்து இருந்தவன், இரண்டு பேர் பேசிக் கொண்டு போவதை கேட்டான்.

திடீரென்று  மேக்கப்புடன்   விறுவிறு என்று  எங்கோ போனான். 

அன்று  காலை அடையாறு ஆனந்த பவன் கடைக்குள் சீடை முறுக்கு பலகாரங்கள் வைத்துள்ள பகுதியில் அழகான கிருஷ்ணர் உட்கார்ந்து இருந்தார்.

அவரைப் பார்க்க வந்த ஏகப்பட்ட கூட்டம், முறுக்கு சீடை பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு நடந்தன.

கடை சூப்பர்வைசர் ,  வேஷம் போட்ட கிருஷ்ணரிடம் சொன்னார் ” ஸ்ரீதர் கவலைப் படாதீங்க , உங்க வீட்டுக்கு முறுக்கு, சீடை , இனிப்பு  எல்லாம் கொடுத்து அனுப்பி விட்டோம்.

 ராத்திரி கடை சாத்தியதும் உங்களுக்கான பணத்தையும் வாங்கிக்கொண்டு நீங்கள் வீட்டுக்கு போகலாம்”

 குறிப்பு: 

நான் Thursday, 25 August, Krishna Janmashtami 2016 க்கு முதல் நாளன்று வேளச்சேரி அடையாறு ஆனந்த பவனில் இந்த  வித்யாசமான  போட்டோ எடுத்தேன்.

அதை வைத்து இந்த கதை எழுதி இருக்கிறேன்.

“உறவின் ரணங்கள்!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் - சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள் - தமிழினி

சில சமயங்களில் மட்டுமே டாக்டர் இவ்வாறு செய்வதுண்டு. நோயாளியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே என்னை அழைத்துக் குறிப்பிட்ட நபரைப் பார்க்கச் சொல்வதுண்டு. அன்றும் அங்கு உட்கார்ந்திருந்த இளம் பெண்ணை காண்பித்து, “இவ மித்ரா, உன்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறேன். நீ ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்றதையும் தான். இரண்டு வருஷமா. ஆன்ட்டி கன்வல்ஸன்டஸ் (Anticonvulsants) எடுத்துண்டு இருக்கா.” மித்ரா பக்கத்தில் இருப்பவரைக் காண்பித்து “மித்ராவின் அம்மா, வசந்தா” என்றார். அம்மா அலங்காரத்துடன் பளிச்சென்று இருந்தாள். மித்ரா மிகச் சாதாரணமாக! நாளைக் குறித்துக் கொடுத்தேன்.

குறித்த நேரத்திற்கு மித்ராவுடன் அலங்காரமாக வசந்தாவும் வந்தாள். முதல் முறை என்பதாலும் மித்ராவின் இன்னல்கள் என்னவென்று தெரியாததாலும், குடும்பத்தினரையும் பார்க்க வேண்டும் என்பதாலும் அனுமதித்தேன்.

வசந்தா துவங்கினாள். முப்பத்து நான்கு வயது இல்லத்தரசி, டப்பர்வேர் பொருட்கள் விற்பனை. மித்ராவை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், சில மாதங்களாக ஆன்ட்டி கண்வல்ஸண்ட்ஸை மித்ரா நேரத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறினாள். அதனால் போன மாதம் மறுபடியும் ஒரு முறை வலிப்பு வந்தது, அப்படி வரும்போது மித்ரா ஒரே இடத்தைப் பார்த்தபடி இருப்பாள் என்றாள்.

மித்ராவை அருவருப்பாகப் பார்த்து, டாக்டர் வலிப்பைப் பற்றித் தெளிவுபடுத்தியதை, தனக்குப் புரிந்ததை விவரித்தாள். மூளை நரம்புகளின் இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கு இயல்பாகவே உடலில் மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகும். அபரிமிதமாக உற்பத்தியானால் மின் புயல் போலாகி, உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, வலிப்பாகச் சில நிமிடங்களுக்குத் தோன்றும். மித்ரா கல்லூரியில் சேரும் போது ‌இது ஆரம்பித்தது என்றாள். தானும், மித்ராவின் அப்பா ரகுவும், டாக்டர் சொன்னபடிச் செய்வதாகவும் சொன்னாள். மித்ராவை எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை என்றாள். இருவரின்  உடல்மொழி உறவில் பாசம் இல்லாததைக் காட்டியது.

ஒரு நிமிட இடைவேளை கொடுத்து, வசந்தாவிடம் மித்ராவைத் தனியாகப் பார்க்க வேண்டும் என எடுத்துச் சொல்லி வெளியே உட்காரப் பரிந்துரைத்தேன்.

அம்மா வெளியேறியதும்,  கண்கள் தளும்பி இருந்த மித்ராவிடம் அவள் பகிர்வதைத் தேவையின்றி யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற எங்கள் தொழில் தர்மத்தை விளக்கினேன். இன்னல்களின் விவரிப்பைக் கேட்கும் போது, மூன்றாம் மனிதரிடம் பகிரப் பலருக்கு சங்கோஜமாக இருக்கும். மித்ராவைத் தன் இன்னல்களை முழுமையாகப் பகிரப் பரிந்துரைத்தேன்.

சில நிமிடங்களுக்குப் பின், டாக்டர் வலிப்பு குணமாகும் வரை கூறிய எச்சரிக்கைகள்: நீச்சல், வண்டி ஓட்டுவது, நெருப்பு அருகே போகக்கூடாது என்பதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன் என்றாள். ஆரம்பத்திலிருந்து ஆன்ட்டி கண்வல்ஸண்ட்ஸ் சாப்பிடுவது தன் பொறுப்பாகத் தான் இருந்தது. ஆறு மாதமாக, அம்மா அதைத் தன் பொறுப்பாக்கினாளாம்.

மாத்திரை விவரங்களை விரிவாக விளக்கச் சொன்னேன். மாத்திரையைத் தவறாமல் எடுப்பது மிக அவசியம் என  மித்ரா அறிந்திருந்தாள். வசந்தா பொறுப்பேற்ற பின் மாத்திரைகள் தவறான நேரத்தில் கொடுக்கப்பட்டது. தாமதமாகிறதே என அம்மாவிடம் சொன்னால் கோபிப்பாளாம்.  டாக்டரிடமோ மித்ரா மாத்திரை எடுத்துக்கொள்ள மறுப்பதாகச் சொல்லிவிடுவாளாம். டாக்டர் மித்ராவிடம் அப்படிச் செய்யாதே எனச் சொல்வாராம்.

வசந்தாவைப் பார்ப்பது முக்கியமென அவளுடன் ஸெஷன்களைத் தொடங்கினேன். தனக்குக் கல்லூரிப் படிப்பு வராததால் இரண்டாவது ஆண்டிலேயே நிறுத்திக் கொண்டாள். திருமணமாகிவிடும் என எதிர்பார்த்தாள். ஆகவில்லை. வரன்கள் அமையாததால் உறவினர்கள் பேச்சு அதிகரித்தது. முப்பது வயதானது. குழந்தை மித்ராவுடன் இருந்த ரகு இரண்டாம் தாரமாக ஏற்றுக் கொண்டான். தனக்கு வரப் போகிறவன் இப்படி- அப்படி இருக்க வேண்டும் என நினைத்திருந்தபடி ரகு இல்லை. வழுக்கை, கரு நிறம், வசந்தாவின் காதுவரை உயரமுள்ள, அமைதியானவன். வசந்தா ஒப்புக்கொண்டதோ ரகுவின் வசதி, சொத்து, சம்பளம், சேமிப்பு தகவல்களை அறிந்ததும். மனதில் ஏக்கம் இருந்து கொண்டிருந்தது. மித்ராவுடன் பற்று வளராததால் அவளை பாரமாகக் கருதினாள்.

இதை அறிந்திருந்த ரகு மித்ராவை பார்த்துக் கொண்டான். கடந்த எட்டு மாதங்களாக வேலை பொறுப்புகள் அதிகரித்தது. வசந்தாவை டாக்டரிடம் மித்ராவை அழைத்துச் செல்ல விண்ணப்பித்தான்.

டாக்டரிடம் போகும் போதெல்லாம் அம்மா புதுப் புடவை, கூடுதலான அலங்காரத்துடன் வருவதும் தேவையில்லாத சந்தேகங்கள் கேட்பதும் தர்மசங்கடமாக இருந்தது என்றாள் மித்ரா. அப்பாவிடம் சொல்லலாம் என்றால் அவர்கள் உறவு அதுபோல் இல்லை. வீட்டிற்கு வந்ததும் மித்ராவை அறையிலிருந்து “படி”, “படி, டி.வி. பார்க்கக் கூடாது” என்பாளாம் வசந்தா.

மித்ராவுடன் ஸெஷனைத் தொடங்கினேன். மித்ராவிடம் கவிதை கட்டுரை எழுதும், வண்ணங்கள் தீட்டும் திறன்கள் இருந்தன. தன் எண்ணங்களை எழுதிச் சித்தரித்து, வண்ணங்கள் தீட்டுவதைச் செய்ய வேண்டும் என முடிவானது. விளைவு, கல்லூரி ஆண்டு இதழிற்கு எழுதியது பிரசுரமானது! மகிழ்ச்சியில் பொங்கினாள்.

வசந்தாவுடனும் ஸெஷனைத் தொடர்ந்தேன். தன்னைப் பற்றி விவரிக்க மறுபடி மறுபடி டாக்டரைச் சந்திக்க மனம் ஏங்கியது, அவரிடம் ஈர்ப்பு உருவானதை விவரித்தாள். மித்ரா நன்றானால் டாக்டரைப் பார்க்கக் காரணம் இல்லாமல் போய்விடுமோ எனத் தவித்தாள். ரகுவையோ பிடிக்கவில்லை. மற்றொருவனைப் பார்க்க மனம் வில்லங்கமாக யோசித்தது. மாத்திரையைத் தாமதித்தால் டாக்டரைப் பார்க்கலாம்! செய்தாள்.

அச் செயலினால் ஏற்படும் விபரீத பாதிப்பைப் புரிய வைக்கப் பல ஸெஷன்கள் எடுத்தன. கட்டுரைகள், ஆய்வுப் படங்கள் படிக்க, வசந்தா மனம் குறுகுறுத்தது.

தன் மன நிலையை வெளிப்படுத்தினால் டாக்டர் தன் மேல் பரிதாபப் படுவார் என நினைத்தாள். அன்று நான் வருவதற்கு முன்பே வசந்தா வந்து டாக்டரைச் சந்தித்து, மனதில் தோன்றியதை வெளிப்படுத்த, நான் வரும்வரை வெளியே உட்காரச் சொன்னார். டாக்டர் நன்கு அறிந்ததுதான், என்னிடம் சொல்வதைப் பகிர்வதில்லை என்று. வந்ததுமே விவரத்தை அறிந்தேன். வசந்தாவும் ஸெஷனில் பகிர்ந்தாள், டாக்டரைத் தன் பக்கம் இழுக்கவே அலங்காரங்கள் செய்திருந்தும், அவர் மித்ராவை ஆசுவாசப்படுத்திப் பேசியது பொறாமையைத் தூண்டியது.

தன் சுய மரியாதையைத் தவிக்க விடுவது வரும் சந்திப்புகளில் வெளியானது. ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளைப் பல தரப்பில் ஆராய்ந்தோம். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரகுவின் பங்களிப்பு தேவைப்பட அவனிடம் பகிர்ந்தேன்.

ரகு ஆரம்பித்தது வசந்தாவின்மேல் தனக்கு இருக்கும் விருப்பத்தைப் பற்றி. மித்ரா பிறந்த மறுநாளே முதல் மனைவி இவனுடன் வாக்குவாதம் செய்தாள். ஆண் குழந்தைக்கு ஏங்கினாள். ஆண்களிடமிருந்தே பெண்பால்-ஆண்பால் அணு வருவதால் ரகுவால்தான் பெண் பிறந்தது, ஏமாற்றம் என்று இவர்களை விட்டுச் சென்றாள்.

கைக்குழந்தை இருந்ததால் மறுமணத்திற்குப் பெண் கிடைக்காததால் மித்ராவை வெறுத்தான். பல தேடலுக்குப் பின்னரே வசந்தாவின் வரன் வந்தது. சுதந்திரம் வேண்டும், தான் இளம் வயதானவள், வெளியே செல்லும் போதெல்லாம் மித்ராவை அழைத்துச் செல்லக் கூடாது என்று வசந்தா இட்ட நிபந்தனைகளை எல்லாம் மித்ராவைப் பிடிக்காததால் ரகு ஒப்புக்கொண்டான். வெளிப்படையாக, மித்ராவின் கல்யாணத்திற்குப் பிறகு அவள் வீட்டிற்கு வரத் தேவை இருக்காது என ரகு கருதினான்.

அவசரமாக வெளிநாட்டில் வேலை என்று ரகு சென்றான்.

வசந்தா-மித்ரா உறவில் ரணங்களால் விரிசல் இருந்தது! மித்ராவால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.

ஸெஷன்களில் இவற்றுக்குத் தீர்வு காண, மாத்திரைப் பொறுப்பாளி மித்ரா மட்டுமே என்று வலியுறுத்த, மாற்றங்களைக் காண முடிந்தது. ஆறு மாதங்களாக மித்ரா வலிப்பு வராமல் இருந்தாள்.

இந்த சூழ்நிலையில் மித்ரா தனது கல்லூரியில் மாணவர்களைத் தேர்ந்து எடுக்கும் நிறுவனங்கள் வருவதாகச் சொன்னாள். ஒரு நாள் மாலை என்னைச் சந்திக்க நேரம் குறித்துக் கொண்டவள், பிறகு. வர இயலவில்லை எனத் தகவல் சொன்னாள். இவ்வாறு செய்தது முதல் முறை.

அவள் வராததற்குக் காரணம், கல்லூரியில் நடந்த ப்ளேஸ்மென்டிற்காக நிர்வாகத்திலிருந்து வந்தவர்கள் இன்னொருவர் வரக் காத்திருந்ததில் நேரமாகிவிட்டது.

மறுநாள் மித்ரா மூவருடன் வந்தாள்.‌ டாக்டரிடம் பேசிவிட்டு, என்னையும் சந்திக்க வந்தார்கள்.‌

வந்தவர்களை மித்ரா அறிமுகம் செய்தாள், கிருஷ்ணா, அவனுடைய தாயார் ரமா, மற்றும் தந்தை ராகவ் என. இவளைப் பெண் பார்க்க வந்தவர்களாம். மித்ராவைப் பிடித்து விட்டதாம்.

அன்று கல்லூரியில் நடந்ததும் தெளிவாயிற்று. மாணவர்களைத் தேர்வு செய்ய வந்தவர்களின் டீம் லீட் கிருஷ்ணா! வந்த பிறகே மித்ரா அங்கு இருப்பதை அறிந்தான். தான் அவளுடைய நேர்காணலில் இருப்பது நெறிமுறை ஆகுமா என மேல் அதிகாரிகளிடம் பேசினான். கிருஷ்ணா மித்ராவைப் பெண் பார்க்கப் போவதின் விவரம் அறிந்ததும் வேறொருவரை அனுப்பி வைத்தார்கள்.

நேர்காணலில் மித்ரா வெளிப்படையாக, நேர்மையாக  தனக்கு வலிப்பு இருப்பதாகவும், மாத்திரை தவறாமல் சாப்பிட்டுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விளக்கினாள். எடுத்திருந்த மதிப்பெண்கள், ஓ.ஜீ.பீ.ஏ, டாக்டரின் சான்றிதழ் பார்த்துப் பாராட்டினார்கள்.

பெண் பார்க்க வருவதை அவர்கள் வர அரைமணி நேரத்திற்கு முன்பு தான் வசந்தா மித்ராவிடம் சொன்னாள். வந்தவர்களிடம் மித்ரா வலிப்பு பற்றித் தானே பகிர்ந்து கொண்டாள். மறுநாள் டாக்டரையும் என்னையும் சந்திக்கப் பரிந்துரைத்தாள்.

சந்தேகங்களைத் தெளிவு செய்ய டாக்டர் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாகக் கூறினார். வேலை, பொறுப்பு எடுப்பதைத் தெளிவுபடுத்த, திருப்தி ஆனார்கள். வெளியேறும் போது ரமா மித்ராவின் கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு போனது இதமான உறவைக் காட்டியது!

மறுநாள், மித்ராவுடன் ராகவ், ரமா  கிருஷ்ணா என்னைப் பார்க்க வந்தார்கள். முன்பு போல ரமா கையில் மித்ராவின் கரம்! திருமணத்தை எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வைப்பதாகச் சொன்னார்கள். இனியும் மித்ரா இந்த நச்சு சூழலில் இருப்பதை அவர்கள் விருப்பப் படவில்லை. இந்தத் தருணத்தில், ரமா, மித்ரா அனுமதி கேட்டு உள்ளே வந்தார்கள்.

கல்யாணத்திற்காக ரகு வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும், மீண்டும் திரும்புவதாகவும் மித்ரா கூறினாள். ஆக, வசந்தா ரகு மேற்கொண்டு ஸெஷன்களுக்கு வருவது சாத்தியம் இல்லை. மித்ராவைச் சம்பந்தப்பட்டவை, எதற்காக முயல?

மித்ரா உறவில், சூழலில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்க, இந்த மூவருமே வரப்பிரசாதமே! எடுத்த எடுப்பிலேயே அக்கறை ஆசையாக இருப்பதினால் பல ரணங்களுக்கு மருந்தாகிவிடும் என நம்பினேன்.‌

தலைத் தீபாவளி புகுந்த வீட்டில் கொண்டாடி குடும்பத்தினருடன் வந்தாள் மித்ரா. நினைத்தது போல் அவ்வாறே வாழ்க்கை பூத்துக்குலுங்கியது! டாக்டரிடம் தனது நிலையை ரெவ்யூ செய்ய வந்திருந்தாள். இப்போதெல்லாம் வலிப்பு வருவதில்லை. பரிசோதனைகள் சரியாக இருந்தது. மாத்திரையைக் குறைக்கும் கட்டம் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னார். குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது!

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
 13. ஜன கண மன ! – ஜனவரி 2021
 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
 15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
 16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
 17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
 18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
 19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
 20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
 21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
 22. சிட்டுக் குருவி – மே   2021  
 23. ஆகாய விமானம் – ஜூன் 2021
 24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
 25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
 26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
 27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
 28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
 29. மழையே வா ! – செப்டம்பர் 2021
 30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
 31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
 32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
 33. தமிழ் ! – நவம்பர் 2021
 34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
 35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
 36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
 37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
 38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
 39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
 40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
 41. என்ன மரம் ! – மார்ச் 2022
 42. சைக்கிள் ! – மார்ச் 2022
 43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
 44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
 45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
 46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
 47. மழை வருது ! – ஜூன் 2022
 48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
 49. என் சித்திரம் ! – ஜூலை 2022
 50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
 51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
 52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022

 

          பூனையாரே !

பூனையாரே ! பூனையாரே !

எங்கே போறீங்க ?

புலியைப் போல பதுங்கி பதுங்கி

எங்கே போறீங்க ?

 

காலை நக்கும் பூனையாரே !

எங்கே போறீங்க ?

பாலைத் தேடி இங்குமங்கும்

எங்கே போறீங்க?

 

மீசை துடிக்க முழிச்சுக்கிட்டு

எங்கே போறீங்க?

உடம்பை நெளிச்சு வளைச்சுக்கிட்டு

எங்கே போறீங்க?

 

கருப்பு வெள்ளை குட்டிகளே !

எங்கே போறீங்க?

குடும்ப சகிதமாய் நீங்கள்

எங்கே போறீங்க?

 

கதவு பின்னால் காத்திருந்து

எங்கே போறீங்க?

ஜன்னல் வழியே எம்பிக் குதித்து

எங்கே போறீங்க?

 

குறும்புக்கார பூனையாரே !

எங்கே போறீங்க?

கூட என்னை சேர்த்துக்குங்க –

கொஞ்சம் நில்லுங்க !

 

எதைச் செய்தாலும்……..

எதைச் செய்தாலும் நன்றாகச் செய் என

என்னிடம் சொன்னாள் அம்மா.

முதல் தடவையே முழுதாகச் செய் என

அறிவுரை சொன்னார் அப்பா.

 

எல்லாரிடமும் அன்பு செலுத்து என்று

அன்பாய் சொன்னாள் பாட்டி.

பெரியவர்களிடம் மரியாதை வேண்டும் என

வழிகாட்டினார் என் தாத்தா.

 

இறைவனை எண்ணி எல்லாம் செய்தால்

நல்லது என்றார் ஆசிரியர்.

இளமையிலேயே கல்வியைக் கற்றால்

உயர்வாய் என்றார் ஆசிரியை.

 

இவர்கள் சொல்வதை நானும் கேட்பேன் !

வெற்றிகள் நானும் பெற்றிடுவேன் !

நல்ல வழியில் நடந்து நான் போவேன் !

பெருமைப்படும் விதம் வாழ்ந்திடுவேன் !

 

அங்கே ஓடும் நதி – பானுமதி

Woman by the river Painting by Asu Berdikova | Saatchi Art

வானம்செம்மை நிறம் பூண்டு அதையும் மாற்றிக் கொண்டது. தயங்குவது போல் நடித்து மெல்லக் காலடிகள் வைத்து இருள் தேவதை வானில் நுழைந்தாள். அவளின் கம்பீர யௌவனத்தைக் கலைக்கக் கூடாதென்று சில விண்மீன்கள் தமக்குள் முணுக் முணுக்கென்று பேசியபடியே எட்டிப்பார்த்தன. ஆர்வம் தாளாது மற்ற வான்பூக்களும் தாங்களும் இந்த இரகசியப் பேச்சில் சிறிது சிறிதாக இணைந்து கொண்டன. வைர ஊசிகளென மின்னிய அவற்றை அவள் உடல் முழுதும் ஏற்றுக் கொண்டாள். அவளின் கருமை படரப் படர அவைகளின் ஒளிச்சிதறல்கள் நீலம் இறைக்கும் பூக்களாய் மிளிர்ந்தன. கண்ணிற்கு எட்டும் திசையெங்கும், அவள் மேனியில் நகைகளென, சிற்பச் செதுக்கல்களென, எழில் சிற்பங்களென, உருவ நிழல்களெனக் காட்சிகள் சொல்லித் தீர்வதில்லை.

அவைகளை வான் நதியில் அங்குள்ளோர் மிதக்கவிட்ட தீப ஒளித் துணுக்குகள் என்று கூட நான் நினைத்தேன். கடல் நின்ற குமரியின் மூக்குத்தி கடலின் அலைகளில் பயணித்து வானின் பரந்த விரிப்பில் சிறிதும், பெரிதுமாய் மின்ன, அவள் மாட்சிமையைப் போற்றிப் பாடிய மென்குரல் கவிதைகளை காற்று அள்ளி எடுத்து வந்து என் காதுகளில் பாடியது.

‘ஆகாயக் கனவுகளே, வானதியின் சொல்லோ, அல்ல

இரவு விசும்பின் முகவரிகளோ நீங்கள்?

உறவின் விதிர்ப்புகளால் மனிதம் தவிக்கிறது

சிறிதும் பெரிதுமாய் சுமந்து  அலைகிறது

அரிதைப் பெறுவதற்கு ஆயிரம் யோசிக்கிறது

பிறந்த காலையிலும் கவலை

மயக்கும் மாலையிலும் தவிப்பு

இரவின் மடிகளிலும் பதைப்பு

இயல்பாய் இருக்க மறந்து ‘

சாம்பல் நிறக் குன்றுகளின் அந்தப் புறத்தில் ஒடும் நதியின் ஓசைகளை நானறிவேன். தொடர் குன்றின் ஒரு எல்லையிலிருந்து ஒரு சிணுங்கலென அவள் வெளிப்படுவதை நான் கேட்டதாகச் சொல்லி விட்டு, இரவின் பகுப்புகள், அதிகாலை நோக்கி விரைவதை அவளால் தடுக்க முடியுமா எனத்தான் கேட்டேன்.

சிறு பாறைகளை அணுகி அடித்து அவள் சிரித்தாள்.

அவன் பரவத் தொடங்கினான் என் மீது..

அல்லது மாற்றாக ஒளி தன்னை முற்றாக இருளிடம் ஒப்படைப்பதையாவது? தன்னைத் தானே உமிழ்வதும், விழுங்குவதுமான இந்த விளையாட்டில், நீ தோன்றித் தோன்றி, நானென்று நானென்று, நம்பி ஏமாறுவதற்கு ஏற்ற நியதிகள் உன்னால் விலக்க முடியாத விலங்குகள் என்றாவது பதில் சொன்னாலென்ன?

எங்கே உன் கவனம்?” என்றான். உன்னைத்தான் கேட்கிறேன்.

கருமையிலிருந்து சாம்பல் பூக்கத் தொடங்கிவிட்டது இப்போதே. பொல்லென்று வெளுக்கையில் சாயங்கள்  மாற்றி விளையாடும், உன் காலின் கீழ் .

‘நல்லது’ என நான் சொன்ன போது அவளும் நகைப்பொலியுடன் நடந்தாள்

எதற்கு என்ன பதில்?” என அவன் கேட்டான்.

எனக்கு அவன் கேள்வியே ஒரு பொருட்டல்ல என நான் நினைப்பதை அவள் இரகசிய ஒலிக் குறிப்பில் உணர்த்தினாள்.

அவன் பார்வை மிகச் சுத்தமாகக் கேள்விக் குறியைக் காட்டியது. மற்றவர்கள், பயந்து அகல்வது என் கண்களின் மேல் நடந்தல்லவா என்று என்னுள் எண்ணம் கிளைத்தது. ஆனால், சலசலக்கும் நதியின் ஓசையில் அது அடங்கி அடங்கி எழுகிறது.

கைகளை இறுகப் பற்றி அவன் வாழ்த்து சொல்கையில் கூழாங்கற்களின் மீது ஏறி விளையாடும் நதியின் குரலில் நான் சிரித்தேன். முதலை வந்த நதியின் நிழல் ஒரு கோடென அவன் முகத்தில் வந்து போனது.

நம்மைப் பிரிப்பதற்கான சதி இது.” என்றான்.

சுலபமாக மாற்றல் கொடுத்திருக்கலாமே என்ற என் எண்ணத்தின் வெளிச்ச மொழியாக அவள் கரையோர அலைகளில் வெள்ளி ஜரிகை வந்தது.

உன் மௌனத்தின் அர்த்தம் எனக்கும் புரியும்.”

‘எனக்கு மூச்சு முட்டுகிறது, கொஞ்சம் இறங்கேன்’ என்று சொல்ல நினைக்கையில் அவள் புரண்டு படுத்து நெளிவது காட்சியில் விரிந்தது.

என்ன தீர்மானித்திருக்கிறாய்? “.

அவள் ஆழ் சுழலின் அமைதி என்பது போல் நான் இருந்தேன்.

எனக்குத் தெரியும், என்னை விட்டு நீ போகமாட்டாய். “

அவள் மீது ஓடும் நீர்த்துளி ஒவ்வொன்றும் புதியது என நான் அறிவேன்.

 

நாளைக்கு ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போகலாம். திருமணப் பதிவிற்கு என்ன வேண்டுமோ அதைச் செய்ய ஆரம்பிக்கலாம்.

அவள் மேனியில் மிதக்கும் தீபங்களென என் கண்கள் மின்னியது.

பதில் சொல்என அவன் என் தோளை உலுக்கிய போது ஆழ் பாறையில் மோதும் தோணியென சுழன்றது என் உடல்.

திருமணத்திற்குத் தேவையென்ன என்ற என் கேள்வியில் அவன் ஆயுதமற்ற கோழையைப் போல் பரிதவித்தான்.

அவள் வட்டச் சுழல்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நானே மேரேஜ் என்கிறேன். உனக்குக் கேவலமாக இருக்கிறதா?”

அவள் கரையோரத்துத் தவளைகள் பாடும் கொக்கரிப்பினைக் கேட்டேன். பின்னர் சொன்னேன். ‘வானம் கரைத்த நீலமென நாம் பார்த்த ஆற்றின் பெருக்கை நினைவில் கொள். எக்காலத்திலும் நான் மனைவி என்றாவதில்லை எனச் சொன்னேன், நீயும் ஒத்துக்கொண்டாய்.’

பிதற்றல்; உன் நதி வந்து சாட்சி சொல்லுமா என்ன?” என்றான்.

அவள் தன் மீது கலக்கும் மாசுகளைப் பார்த்திருந்தாள்; ஆனாலும் ஓடினாள்.

‘நான் ப்ரமோஷனை ஒத்துக் கொண்டு போகப் போகிறேன்’ என்றேன் நிதானமாக.

அவள் மெதுவே சிறு பாய்ச்சலென முன்னேகினாள்.

கம் அகெய்ன். என்ன ஒரு துணிச்சல்? எனக்குக் கிடைக்காததை நீ பெற்றுவிட்ட ஆணவமா? என்னை நாளைக்கு ஆஃபீஸில் மதிப்பார்களா?”

‘என் ப்ரமோஷனுக்கும், உன் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? அப்படியே இருந்தாலும், எனக்குக் கிடைத்தது, உனக்குக் கிடைக்கவில்லை என்பதை மாற்றமுடியுமா என்ன?’

இந்த என் கேள்விக்கு அவள் அலைக்கரங்கள் தாளம் கொட்டுவதைக் கேட்டேன்.

நதியற்ற ஊர்களில் கூட நான் நதியைக் கேட்பதுண்டு. ஒரு கரையிலிருந்து மறு கரைமரம் நோக்கி சிறகுகள் அசைத்து புள்ளினங்கள் பறப்பதை நான் வகுப்பறைகளிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். எல்லா வகுப்புகளும் எனக்குப் பிடித்திருந்தன. தமிழாசிரியர் நடத்திய செங்கால் நாரையின் கால்களில் நான் தென்திசைக் குமரிக்கடலின் நீர் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘சத்தி முத்தி வாவியுள் தங்கி’ என்று படிக்கையில் குளிர் பொய்கைக் கரைகளில், சிறகு உதறும் நீர்த்துளிகளில் நனைந்தேன். ‘கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்’ என்ற தொடருடன் இசைச் சங்கிலியின் நீர் பாய நெடு மனம் பணியக் கேட்டேன். நான் பயணித்துக் கொண்டிருந்தேன் என்னுள்ளே இருந்த ஆற்றுடன்.

ஆய்வக வகுப்புகளில் மல்லாத்தி அறையப்பட்ட தவளைகளை அறுத்து பகுக்கும் போதே அவை நின்ற ஏரிகளை, குளங்களை, கிணறுகளை, ஆறுகளைச் சேர்த்தே எண்ணுவேன்.

ஆற்று நீர் ஏத்தங்களை, மதகின் கதவுகளைத் தட்டும் நீர்க்கரங்களை, அவை திறக்கையில் பாய்ந்து வரும் ஓசைகளைக் கேட்டுக்கொண்டேதான் இயற்பியலில், அதிர்வுகள் பற்றிப் படித்தேன்.

என்னுள் தங்கியவளை சக களத்தி எனச் சொல்லலாமோ என வியந்தேன். ஈரமற்ற, குட்டைகள் கூட இடம் பெறாத இந்த மனிதனுடன் கூடி வாழ நான் தேர்ந்தெடுத்ததே கூட நான் கேட்டுக் கொண்டேயிருந்த நதியின் மொழியால்தான்.

நாங்கள் பழகத் தொடங்கிய போது அவனுக்கு மழையின் ஈரம் மிகப் பிடித்திருந்தது. சூல் கொண்ட மேகங்கள் கனிந்து பொழியும் பொழுதை அவன் கணித்து கவிதைக் கணங்களில் இருப்பான். ஆனால், அவை இன்று கணிதக் கணங்களாய் மாறியுள்ளது தான் புதிராக இருக்கிறது.

உனக்கு அறிவு போதாது.”

நான் மெதுவாகச் சிரித்தேன்.

அவள் காதோடு கேட்கும் ஒரு பாடலைப் பாடினாள்.

மண்ணில் காலூன்றாமல் விண்ணில் எழ முடியாது.”

‘உள்ளிழுக்கும் புதை மணலுக்கும் இது பொருந்துமா?’ என்றேன்.

தன் மேனியில் அவள் அனுமதிக்கும் நிழற் சித்திரங்களை, மாறி வரும் கோலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தர்க்கங்கள் வாழ்வாவதில்லை.”

‘இருக்கலாம்; எனக்கு நான் உண்மையாக இருப்பது முக்கியம்’ என்றேன்.

சொல், ஏன் நான் முக்கியமில்லை?”

ஓடும் மீன் ஓட உறு மீனும் வரப்போவதில்லை என அறிந்தவள் போல் அவள் கொக்கினைப் பார்த்தாள்.

‘எனக்கு எதுவுமே முக்கியமில்லை; மனிதர்கள் எனக்கு சலிப்பைத் தருகிறார்கள்.’ என்றேன்.

வாழும் அனைவரும் முட்டாள்கள், நீ மட்டும் தான் விலக்கு.”

நீர்க்களிம்பேறிய அந்தப் பாறையை இடமும், புறமும், மேலும் கீழுமாக அவள் சுற்றிச் சென்றாள்.

‘ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன். நான் விலக்கு என்பதை மட்டும்.’

அதில் என்ன பெருமை இருக்கிறது?”

‘ஒன்றுமில்லை; சற்று விடுதலை அதிகமாகக் கிடைக்கும்.’

தான்தோன்றியாய் வாழும் பெண்களுக்கு சமூக மதிப்பீடு என்ன என்று தெரியுமா? எத்தனை இழிவு தெரியுமா?”

நீர்க்களிம்புப் பாறையை அவள் மழைக்கரங்களைக் கொண்டு ஓங்கி அடித்தாள்.

‘அது என்னை பாதிக்காது’ என்றேன்.

உன் அம்மாவைப் போல் தான் நீ இருப்பாய். உன் அப்பா குமைந்து குமைந்து செத்ததுபோல் நான் சாக மாட்டேன்.”

வாலைச் சுழற்றி ஓங்கி நீரிலடித்து கரை ஒதுங்கும் முதலையைப் பார்த்தேன்.

நானாவது நதியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; ஆனால், அம்மா கேட்டது கடலல்லவா? அவளைப் பித்து என்று சொன்னவர்களைப் பார்த்து வலம்புரிச் சங்கில் அவள் கடலின் சீற்றத்தை அல்லவா ஊதினாள்?

‘என் அப்பா, அம்மாவின் கணவன் மட்டுமே; நீ எனக்கு அது கூட இல்லை’ என்றேன்.

பூவும், இளந்தளிரும், சருகுமாகச் சுமந்து கொண்டு அவள் ஓடினாள்.

அதற்குத்தான் பதிவுத் திருமணம் செய்யலாம் என்கிறேன்.”

‘நான் பந்தங்களில் சிக்காதவள். மூலைகள் இல்லாத வட்டம்; கோட்டுக்குள் ஆடாத ஆட்டம்.’

மலையில் தொடங்கி மேடு பள்ளமெனப் பயணித்து அருவியாய் வீழ்ந்து, ஆறாய் நடந்து, வரும் போக்கில் எந்தத் துணையாறையும் ஏற்று நான்ஒரு நதி.

காற்றின் இசையை ஏற்று அவள் சப்தமிட்டாள்.

நதி கூட கடலில் கலக்கிறது.”

‘அத்தனை அனுபவங்களுக்குப் பிறகு அது நடந்தால் நடக்கட்டும்; இல்லை வற்றிப் போய்விடட்டும்.’

நான் கணங்களில் வாழ்பவள் என்று அவள் சொல்வது எனக்குக் கேட்டது.

வெறும் வாய்ப்பேச்சு.”

இல்லை, உள்ளே குமைந்து பொங்கியவள்; அவன் தலை மீதிருந்தோ, பாதத் திறப்பிலிருந்தோ வெளிப்பட்டு ஓடுவாள். அவளை நீ அறியவே முடியாது. நீ அணை கட்டுவாய், தேக்குவாய்; அவள் கட்டுடைப்பாள், தன் வழி ஏகுவாள். மரணமும் அவளது சிரிப்பே. வட்டக் காலத்தின் சுழற்சி அவள். எங்கும் ஓடும் நதி. அவளை அணுகி கேட்டுப் பார். புரிந்த பிறகு சொல்.

 

 

 

 

ஜப்பான்  பார்க்கலாமா-1   – மீனாக்ஷி பாலகணேஷ்

          சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று நான்கைந்து தினங்களுக்கு  ஜப்பான் செல்ல வாய்ப்புக் கிட்டியது. நான்கு தினங்களில் என்னதைப் பெரிதாகப் பார்த்து விட முடியும் என்று மனது எண்ணினாலும், ‘நம் வயதில் தினப்படி காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக அலைய முடியாது அப்பா,’ எனும் எண்ணமும் எழுந்தது. ‘சரி, முடிந்ததைப் பார்க்கலாமே,’ எனக் கிளம்பியாயிற்று.

          வழக்கமான ஹோட்டல்களுக்குப் பதிலாக, ஒரு சிறிய அபார்ட்மென்ட் (AIR BNB) வாடகைக்குக் கிடைத்தது. புதுமையான அனுபவம்! இணையதளம் மூலமாகத்தான் பதிவு செய்தோம். ஒரு சின்ன ஹால், சமையலறை, பாத்திரங்கள், ஃப்ரிஜ், பாத்ரூம், படுக்கையறையில் மெத்தைகள் தரையில் தான்! நம்மூரில் தரையில் படுக்க எத்தனை அலட்டல் செய்வோம்!

          எனக்கோ முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்த கால்! தரையில் அமரவே முடியாது. பின் எப்படி படுப்பது? எண்ணித் துணிக கருமம் என்று துணிந்து வந்தாயிற்று.  பின் எண்ணுவது இழுக்கல்லவா? தினம் இரவு ஒருவிதமான சர்க்கஸ் செய்து படுக்கையில் விழுவதும் பின் காலையில் வேறுவிதமான பிரயத்தனம் செய்து எழுவதுமாக இருந்தது. கவலை எதற்கு? தினம் காலையில் கையைப் பிடித்து இழுத்து எழுப்பக் கணவர் (கை கொடுக்க தெய்வம்!) தயாராக இருந்தார். ஆனால் நம் சுய கௌரவம் இடம் தரவில்லையே! எப்படியோ சமாளித்தேன் என்று சொல்ல வேண்டும்.

          மேலும் இங்கு நமக்கு அவர்கள் வைக்கும் இன்னொரு சின்ன வேண்டுகோள்- அதாவது காலணிகளை அபார்ட்மென்டினுள் நுழைந்ததுமே, வெளியிலேயே கழற்றி வைத்து விட வேண்டும். வீட்டினுள் அணிந்து கொண்டு போகக் கூடாது என்பது தான் அது. ‘யாராவது பார்க்கப் போகிறார்களா என்ன’ என்று யாருமே இந்த வேண்டுகோளைப் புறக்கணிப்பதில்லை. நுழைந்ததும் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் வைத்துள்ள மென்மையான துணிச் செருப்புகளை அணிந்து கொண்டு விடுவோம்.

          சமையலறையில் சமைக்க வசதி இருந்தது. ஆனால் எங்களுக்கு நேரம் தான் இல்லை. தேநீர் (அவசர முறையில் தான்! ஜப்பானிய முறையில் அல்ல) தயாரித்துக் கொள்வதுடன் சரி. கொண்டு போன MTR- ரவை உப்புமா, அவல் உப்புமா பாக்கெட்டுகளை வெந்நீர்  ஊற்றித் தயார் செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டு தன் வெளியே கிளம்பினேன்.

          டெம்புரா (Tempura) எனும் ஒரு பதார்த்தம் மிகவும் பிரசித்தம். மதிய உணவு சமயம் எல்லாரும் இதை ஒரு கை பார்க்கிறார்கள். எண்ணையில் நீச்சலடித்து வறுபட்ட மீன் முதலான சமாச்சாரங்கள். ஆனாலும் ஒரு பிரபல உணவகத்தில் காய்கறிகளைப் போட்டும் தயார் செய்திருந்தனர். அதனுடன் சாப்பிட என்னவெல்லாமோ ‘ஸாஸ்’ வகையறாக்கள். சும்மா சொல்லக் கூடாது; நன்றாகவே நம்மூர் பஜ்ஜி மாதிரி இருந்தது. இருந்தாலும் எத்தனை தான் சாப்பிடுவது? எண்ணைப் பதார்த்தம் அல்லவா? சத்தம் போடாமல் கொஞ்சம் வெள்ளை சாதம் (white rice) ஆர்டர் செய்து, கையோடு கொண்டு போயிருந்த புளியோதரைப் பவுடரை அதில் கலந்து (யாரும் ஆட்சேபிக்கும் முன்- வெளி உணவுக்கு அனுமதி இல்லை!) ஐந்தாறு வாய்கள் சாப்பிட்டதும் தான் திருப்தி ஆயிற்று.

          அன்று ஒரே மழை! நல்ல வேளையாக அன்று நாங்கள் பார்க்க வேண்டியவை எல்லாமே கட்டிடங்களுக்குள் தான். டோக்கியோவின் ஐந்து நட்சத்திர இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பானின் பிரபலமான, கலாச்சாரப் பெருமை வாய்ந்த ‘தேநீர் உபசாரச் சடங்கி’னைக் (Tea ceremony) கண்டு அதில் பங்கு கொள்ளச் சென்றோம் (!?).

          இதைப்பற்றி ஒரு அறிமுகம் தேவை!

          தேநீர்ச் சடங்கு என்பது, ‘விருந்தினரும் அவரை உபசரிப்பவரும் தினசரி வாழ்க்கையின் பழகிப்போன சுவையற்ற நடப்புகளிலிருந்தும் வழக்கமான பரபரப்புகளிலிருந்தும் விலகி நின்று, சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு, சம்பிரதாயமானதும் மிகவும் நாகரிகமானதுமாகக் கருதப்படும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து, அதன் மூலம், ஆன்மீக ரீதியான ஒருவகை மனநிலையை அனுபவிப்பது,’ என்பதாகும். வாழ்வின் முறையற்ற மன அழுத்தங்களிலிருந்து விடுபட இது ஒரு வடிகால் போன்றதாம். இத்தகைய ஒரு எண்ணத்தைத் தழுவி, முழுமையானதும், சிக்கலானதுமான ரசிகத்தன்மை நிறைந்த இந்தச் சடங்கு உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

          இது 1500-களில் நடைமுறைக்கு வந்ததாம். ஜப்பானியர்கள் சீனர்களிடமிருந்து பசுமையான தேநீர் (Green tea) அருந்துதலை தங்கள் வழக்கமாக ஏற்றுக் கொண்டதை அடுத்து ஜென் புத்த (Zen Buddha) மதத்தின் நம்பிக்கையாக இந்தத் தேநீர் சடங்கு உருவாயிற்று. 1521-1591 வரை வாழ்ந்த சென் நோ ரிக்யு (Sen no Rikyu) என்பவர் ஜப்பானின் தேநீர் சடங்கைத் துவக்கி வைத்த முக்கியமான ஒருவராவார்.

          சம்பிரதாயமான தேநீர் சடங்கானது, தேநீர் என ஒரு பானத்தை அருந்துவது மட்டுமல்ல; அது ஆன்மீக பூர்வமான ஒரு அனுபவம் – அது ஒற்றுமை, மற்றவர் மேல் மரியாதை, தூய்மை, அமைதியான மனநிலை இவை அனைத்தும் சேர்ந்த கலவையான ஒருவிதமான அனுபவம்.

          நான் முன்பே இதைப்பற்றிப் படித்து சிறிது அறிந்திருந்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் போய்ச் சேர்ந்தேன். எப்படி முழங்காலிட்டு அமர்வது என்பது தான் பெரிய யோசனை. ஆனால் தற்காலத்தில் தரையில் அமர இயலாத வெளிநாட்டு (அமெரிக்க, ஐரோப்பிய) யாத்திரீகர்களுக்கு, பின் வரிசையில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் என அறிந்ததும் சிறிது நிம்மதியாயிற்று.

          தேநீர்ச் சடங்கை நடத்துபவர் முன்கூட்டியே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும். அவருடைய கை, கால் அசைவுகள் எல்லாமே ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டதாக இருப்பது முக்கியம். இதற்காகவே அந்நாட்களில் தனிப்பட்ட தேநீர் இல்லங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும், வீடுகளிலும், வெளியிடங்களிலும், தோட்டங்களிலும் கூட இதனை நிகழ்த்தலாம். எளிமையாகத் தோற்றமளிக்கும் இந்தத் தேநீர் இல்லங்கள், விலையுயர்ந்த மரவேலைப்பாடுகள், கற்கள், காகிதங்கள், கதவுகள் எனப் பலவற்றைக் கொண்டிருக்கும். பருவ காலங்களுக்கேற்ப, ஒரு பகுதியில், இகபானா (Ikebana) என்னும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஒரு படம், தொங்க விடப்பட்டிருக்கும். சுகியா (Sukiya) முறைப்படி பகுக்கப்பட்ட மூன்று Ulagam Sutrum Valiban - JungleKey.in Imageபாகங்களைக் கொண்டது இந்தத் தேநீர் இல்லம்.

          விருந்தினர்கள் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு வளைவான பாதையில் நடந்து, தேநீர் இல்லத்தின் வாயிலை அடைய வேண்டும். குறுகிய வாயிலினுள் குனிந்து தான் நுழைய முடியும். நம்மை விருந்தோம்புபவர், பாரம்பரிய உடையணிந்து (கிமோனோ- Kimono) குனிந்து வணங்கி வரவேற்பார். எல்லாரும் வரிசையாக ஒரு பக்கம் டடாமி பாய்கள் (tatami mats) விரித்த தரையில் அமர்ந்த பின் (நல்ல வேளை, எனக்கு ஒரு சிறு மர முக்காலி கொடுத்தார்கள்!), விருந்தோம்புபவர் அனைவருக்கும் ஒரு விதமான கோணத்தில் மடிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து பச்சை நிற பீன்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஒருவிதமான அல்வாவை (Green bean pudding) உண்ண வழங்கினார். எடுத்து உண்பதற்கு ஒரு சிறு குச்சியும் கூடத் தரப்பட்டது.

          பின்பு அவர் தேநீர் தயாரிப்பில் முனைந்தார். எங்களுக்கு அதற்குண்டான சாமக்கிரியைகளை ஒவ்வொன்றாகக் காண்பித்தார்- தேநீர்க் கிண்ணங்கள், தேயிலைத்தூளை எடுக்கும் கரண்டி, அதனை நீரில் கலக்கும் ஸ்ப்ரிங் (whisk) போன்ற கரண்டி- பின் அவற்றை நளினமான அமைதியான அசைவுகளுடன், அழகாகச் சுத்தம் செய்தார். ஒவ்வொரு கிண்ணம் தேநீருக்கும் மூன்று கரண்டிகள் ‘மட்சா பச்சைத் தேயிலைப் பொடி’யை  (Matcha green tea powder) அளந்து போட்டார். வெந்நீரை ஊற்றி ஸ்ப்ரிங் போன்ற கரண்டியால் அதனைக் கலந்தார். இன்னும் நீரை ஊற்றிக் குடிக்கும் பக்குவத்திற்குக் கொண்டு வந்து நமக்குக் குடிக்கத் தருகிறார்.

          இதனித் தரப்பட்ட உடனே எல்லாம் குடித்து விடக் கூடாது. முதலில் அந்தப் பீங்கான் தேநீர்க் கிண்ணத்தின் வடிவமைப்பையும், அதில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள், முதலியனவற்றையும் பார்த்து நமது ரசிப்பையும் ஆமோதிப்பையும் தெரிவிக்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாகத் தேநீரை (பச்சை நிற ஸூப்பை!) அருந்த வேண்டும்! நாங்கள் உடனே கஷாயம் குடிப்பது போலக் குடித்தோம். பழக்கம் இல்லையானால் குடிப்பது கடினம் தான். ஆனால் வீணாக்கினால் விருந்தோம்புபவர் மனது வருந்துமோ என எண்ணிக் குடித்து விட்டோம்!

          3-4 மணி நேரம் நடப்பதாகக் கூறப்படும் இந்தச் சடங்கு, இங்கு 30 நிமிடங்களிலேயே முடிந்து விட்டதால், நிறைய சம்பிரதாயங்கள் குறுக்கப் பட்டோ, மறக்கப்பட்டோ (மறுக்கப்பட்டோ?) விட்டன! பின்பு, இந்தக் கிண்ணங்களை அவர் நம்மிடமிருந்து வாங்கி, நிதானமாகக் கழுவி வைப்பதும் ஒரு கலை! அப்போது அதைக் காண நம்மை இருக்கச் சொல்லவில்லை!!

          தேநீர் அருந்தி முடித்த பின்பு, விருந்தினர்கள் திரும்பக் குனிந்து வணங்கி விட்டு வெளியே செல்ல வேண்டும். ஒரு வயதான அம்மையார் இவ்விதம் தேநீரைத் தயாரித்து எங்களுக்கு வழங்கினார். வெளியே செல்லும் போது அணிந்து கொள்ள வாகாக எனது காலணிகளைத் திருப்பி நேராக வைத்தார். எனது உள்ளம் பதறி விட்டது. நான், “எங்கள் கலாச்சாரப்படி, ஒருவர் காலணியை மற்றவர், எடுத்துக் கொடுக்கக் கூடாது, அவ்வாறு நான் எதிர்பார்ப்பது  மரியாதை ஆகாது,” எனக் கூறிப் புரிய வைத்தேன்.

          மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற ஒரு நிகழ்வு, சுமாராகவே இருந்ததால் எங்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான். எல்லாமே பணத்திற்காக ஓடும் இந்த அவசர உலகில், இந்த ஆன்மீக உணர்வு ததும்புவதாகக் கூறப்படும், அமைதி நிறைந்த தேநீர்ச் சடங்கும் குறுக்கப்பட்டு, அவசர கதியில் நடத்தப்பட்டதைக் கண்டு வருத்தம் தான் மேலிட்டது.

          இந்த உணர்வுடனே நாங்கள் அடுத்த நிகழ்ச்சியான கபுகி (Kabuki) என்னும் ஜப்பானிய இசை நாடகத்தைக் காணச் சென்றோம்.

 

(நன்றி – தாரகை மின்னிதழ்)

 

                                                                                       (தொடரும்)

 

 

 

 

_

 

கண்ணன் கதையமுது -11 – தில்லை வேந்தன்

No photo description available.

( கண்ணன் பிறந்து மூன்று மாதம் ஆன பிறகு அதைக் கோகுலத்தில் கொண்டாடும் நேரத்தில், அவனைக் கொல்லக்  கம்சன் அனுப்பிய சகடாசுரன் வருகிறான்)

                         கோகுலக் காட்சிகள்

மூன்று மாதக் குழந்தையான கண்ணன் குப்புறத்திக் கொள்ளல்

 

செப்புயர் மூன்று திங்கள்

      சென்றபின் குழந்தைக் கண்ணன்

குப்புறத் திரும்பும் போதும்

     குளிர்தரை தவழும் போதும்

கப்பிய அழகில் உள்ளம்

     களித்தவக்  கோகு லத்தார்

இப்புவிப் பிறவிப் பேற்றை

     எளிதினில் அடைந்தார் ஆங்கே!

 

                                கவிக்கூற்று   

 (கவிஞர்,தன்னை யசோதையாகக் கற்பனை செய்து பாடியவை )       

Krishan's mother telling bedtime stories to Krishna. | Krishna painting, Bal krishna, Lord krishna images

                   

          1)    விளையாட அம்புலியை அழைத்தல்

(குழந்தைக் கண்ணன் தவழ்ந்து போய் நிலவைக் காட்டுகிறான்.

அவனோடு விளையாட வருமாறு  அம்புலியை அழைத்தல் )

 

தவழ்ந்து தவழ்ந்து சிறுகுட்டன்

     தரையில் புழுதி அளைகின்றான்

அவிழ்ந்த வெள்ளை  விண்மலராய்

     அழகு தோன்றும் அம்புலியே

கவிழ்ந்து கொண்டு கைகாட்டிக்

     கண்ணன் அழைத்தல் காணாயோ

குவிந்த முகிலின் கூட்டத்தைக்

      கொஞ்சம்  விலக்கி வாராயோ

 

குழலை யாழை ஒத்திருக்கும்

     குதலைச் சொல்லால் அழைக்கின்றான்

அழவும் அவனை விடுவாயோ

     அங்கே நின்று கெடுவாயோ

முழவு மேளம் வரிசங்கம்

      முழங்க ஆடல் பாடலென

விழவு மன்னும் கோகுலத்தில்

     விரும்பி ஆட  உடனேவா

          ( குதலை  – மழலை,)

 

குழந்தை என்று மதியாமல்

       குளிர்ந்த முகிலுள் உறங்குதியோ

செழுந்த ளிர்க்கை நீட்டியுனைச்

      சிரித்து மகிழ அழைக்குமவன்

எழந்து வெகுண்டால் பாய்ந்துன்னை

     இழுத்துப் பற்றிக் கொடுவருவான்

விழுந்த  மதியாய்  ஆகாமல்

     விரும்பும் மதியாய் விளையாடு

 

மழலை மிழற்றும் கிண்கிணியின்

     வளரும் ஓசை செவிமடுத்து

நழுவி இறங்கும் உன்வரவால்

     நகைத்துக் கண்ணன் மகிழ்வானேல்

முழவை வான இடியொலிக்கும்

     மூடும் முகிலை மினல்கிழிக்கும்

உழவும் சிறக்க மழைபிறக்கும்

     ஊரும் உலகும் நனிசெழிக்கும்

 

 2)குழந்தையின் தளர்நடை கண்டு மகிழ்தல்

 

காலின் சதங்கை மணியொலிக்கக்

     களிற்றின் கன்றாய் அசைந்துசெலும்

ஆலின் இலையாய் குறுநடையாய்

     ஆடல் வெல்லும்  அணிநடையாய்

பாலின் கடலில் பாம்பணைமேல்

      படுத்துக் கிடந்த  பரந்தாமா

சால அழகுத் தடம்பதிக்கும்

      தளிரே மயக்கும் தளர்நடையாய்!

 

                     3)  நீராட்டல்

உடல் அழுக்கு நீங்க நீராடச் சொல்லல்

 

 காராடும் வண்ணா உன்றன்

      களைத்தவுடல் முழுதும் பூழி

ஊரோடி உண்ட ளைந்த

      உறிவெண்ணெய் நாறும் மேனி

தாராடும் தேய்வை மார்பில்

      தரையுருண்டு  சேர்ந்த சேறு

நீராட  வேண்டும் வாராய் 

      நிற்பாயே ஓட வேண்டா!

 

     (காராடும் – கருமை தங்கும்)

                ( பூழி ,-  புழுதி)              

                 (தார் மாலை)

       (தேய்வை,- சந்தனக் குழம்பு)

 

 

இளம் பெண்கள் கேலி பேசுவர் என்று கூறுதல்

நிற்பரே  கூட்ட  மாக

       நின்னுடல் புழுதி கண்டு

பொற்றொடி சிறிய பெண்கள்

      புறத்திலே கேலி  பேசி.

இற்புறம் போக வேண்டா

      இன்றுநீ ராட வாவா

பொற்புறு சுவைசேர் அப்பம்

      புசிக்கலாம் குளித்து விட்டு!

 

 ( பொற்றொடி- பொன்வளையல்)

  ( இற்புறம் – வீட்டை விட்டு வெளியே)

 

கண்ணன் ஜன்ம நட்சத்திர விழா

 

பேரைச் சொல்ல வந்தபிள்ளை

     பிறந்த நாள்மீன் சிறப்பாக

ஊரை அழைத்துக்  கொண்டாடி

     உவகை அடைந்தாள் யசோதையன்னை.

ஓர  மாகத்   தோட்டத்தில்

      உயர்ந்த வண்டி ஒன்றின்கீழ்ச்

சீராய் அமைந்த தொட்டிலிலே

      சின்ன மகனை  உறங்கவைத்தாள்!

 

  (பிறந்த நாள்மீன் – ஜன்ம நட்சத்திரம்)

              (நாள்மீன்- நட்சத்திரம்)

 

     கம்சன் சகடாசுரனை ஏவுதல்

 

குழந்தைக் கண்ணன்  அரக்கியுயிர்

     குடித்த செய்தி கேட்டவுடன்

செழுந்தீச் சினத்தால் ஆத்திரத்தால்

     சிந்தை மிகுந்த அச்சத்தால்

உழந்தான் கம்சன், சக்கரத்தின்

     உருவம் எடுத்துப் பெருங்கொலைகள்

விழைந்து புரியும்  கொடியவனை

     விரைவாய் உடனே வரச்சொன்னான்.

    

சக்கரத்தான் தனைக்கொல்லச் சகடத்தான் துணைகொள்ள

அக்கணத்தில் முடிவெடுத்த அரக்கனவன்  ஆணையிடக்

கொக்கரித்து வந்தடைந்தான் குழந்தையுயிர் போக்குதற்குத்

தக்கதொரு வழியுண்டு  தவறாமல் முடிப்பனென்றான்

    (சக்கரத்தான் — சக்கரப் படை கொண்ட கண்ணன்)

                            ( சகடத்தான் – சகடாசுரன்)

 கோகுலம் வந்த சகடாசுரன் வண்டிச் சக்கரத்துள் புகுதல்

enter image description here

 

விருந்தினர் பேண மங்கை

      விழைவுடன் சென்றாள். வஞ்சப்

பருந்தென அரக்கன் வந்தான்

      பாலகன் உறங்கக் கண்டான்.

குருந்தினைக் கோழிக் குஞ்சாய்க்

      கொல்லவே எண்ணி அங்குப்     

பொருந்தியே வண்டிக் காலுள்

      புகுந்தவன் மறைந்து கொண்டான்

 

                 ( மங்கை – யசோதை,)

                 (குருந்து – குழந்தை)  

    ( வண்டிக் காலுள் – வண்டிச் சக்கரத்துள்)

 

(தொடரும்)

 

 

 

 

 

 

ஆரணங்கா அல்லது ஆக்ரோஷப் புலியா ? – தமிழில் கமலா முரளி

மூலக்கதை : ப்ரான்க் ஸ்டாக்டன்              தமிழில் : கமலா முரளி

 

The Lady, or the Tiger? Study Guide

 

Amazon.com: The Lady, or the Tiger? eBook : Frank R. Stockton: Kindle Store

[ ஒரு கதவுக்குப் பின்னே கொலைப்பசியுடன் காத்திருக்கும் புலி. மற்றொரு கதவுக்குப் பின்னாலோ மனம் மயக்கும் அழகி ]

முன்னொரு காலத்தில் , விசித்திர குணங்கள் கொண்ட, மிருகத்தனம் பொருந்திய மன்னன் ஒருவன் இருந்தான். எந்த அளவுக்கு மிகச் சிறந்த மனவுறுதியும், பிடிவாதமும் கொண்டு இருந்தானோ அந்த அளவுக்கு கடுமையான , மோசமான கற்பனையும் கொடுரமும் நிறைந்தவன் அவன்.

ஒவ்வொரு நாளும் அவன் தர்பாரில் நியாய ஆலோசனை நடக்கும்.அவனும் அவனுமே அந்த ஆலோசனையில் பங்கு பெறுவர் ! ‘அவனாகிய’, ‘அவர்கள்’ எடுக்கும் முடிவுகள் உடனடியாக அமல் படுத்தப்படும். ஏனெனில், அவன் தானே மாட்சிமை பொருந்திய, சகல அதிகாரங்களும் கொண்ட மன்னன் !

ஒரு சில மக்கள் மன்னனின் செயல்கள் விசித்திரமாக, கொடுரமாக இருக்கிறதே எனச் சொல்வதுண்டு ! அவர்களும் மிக மிக மென்மையாகத் தான் சொல்லுவர்  ! அவர்கள் சொல்வது எவர் காதுகளுக்கும் கேட்காது.

குறிப்பாக பொது மைதான அரங்க நிகழ்வு குறித்து இந்த மன்னனின் கருத்து அலாதியானது. பிற நாடுகளில், பொது மைதானத்தில் வீர விளையாட்டுகள் நடைபெறும். மக்கள் கண்டு மகிழ்வர். மதயானைகளுடனும், சிறுத்தை, சிங்கம், புலி போன்ற மிருகங்களுடனும், வீரமிகு இளைஞர்கள் சண்டை செய்வதும் முக்கிய நாட்களில் நடக்கும்.

ஆனால், இந்நாட்டிலோ, இந்த மன்னன், இந்த பொது மைதான அரங்கைக் கூட விசித்திரமாகத் தான் உபயோகித்தான். குற்றவாளிகளைத் தண்டிக்கும், நிரபராதிகளை கௌரவிக்கும் வினோத நிகழ்ச்சி !

ஒருவன் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. அந்தக் குற்றம் மன்னனின் தனிக் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்றால்,தனி அறிவிப்பு வெளியிடப்படும் – நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்குமான அறிவிப்பு. எந்த நாளில் குற்றம் சாட்டப்பட்டவன் விசாரிக்கப்படுவான் என்பது பற்றிய அறிவிப்பு ! அந்நாளில் நாட்டு மக்கள் அனைவரும் அரங்கில் கூட வேண்டும் என்பதும் அறிவிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட நாளில் மைதானத்தில் திரள் திரளாக மக்கள் கூடுவர். குடிமக்கள் நிறைந்த அரங்கத்தில்,மந்திரிமார் புடை சூழ மன்னவன் நுழைந்து, மக்களின் உற்சாக வரவேற்பில் மகிழ்வுற்று, ஓங்கி நிற்கும் தன் சிம்மாசனத்தில் அமர்வான். மந்திரிகளும் அரசவையைச் சார்ந்தவர்களும் தத்தம் இருக்கையில் அமர்வர்.

மன்னனின் சமிஞ்ஞை கிடைத்ததும், குற்றம் சாட்டப்பட்ட மனிதன் அரங்கத்துள் வருவான். மன்னவனின் சிம்மாசனத்தின் எதிர்புறத்தில் இரண்டு கதவுகள் இருக்கும்.அடுத்தடுத்து அமைந்திருக்கும் இரு கதவங்களும் ஒரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே மாதிரியாக இருக்கும்.

குற்றம் சாட்டப்பட்டவன் அந்த இரு கதவுகளுக்கு அருகே சென்று, ஏதேனும் ஒரு கதவைத் தேர்ந்தெடுத்து திறக்க வேண்டும். அவன் விருப்பம் தான் ! இரண்டில் எதை வேண்டுமானாலும் திறக்கலாம்.எந்தக் கதவைத் திறக்கலாம் என்பதற்கு யாரும் அவனுக்கு உதவ மாட்டார்கள்.

அந்த இரு கதவுகளின் ஒன்றின் பின்னால் ஆக்ரோஷமான கொலைவெறியுடன் கூடிய புலி இருக்கும். அந்தக் கதவை அவன் திறந்து விட்டால், புலி சீறிப் பாய்ந்து, அவனைச் சின்னா பின்னமாக்கி, அடித்துக் கிழித்து எறியும். அது அவன் செய்த குற்றத்துக்குத் தண்டனையாகக் கருதப்படும். இரும்பு மணிகளின் சத்தத்துடன், சோகக் கதறல்களுடனும் ஒரு கோரமான நிகழ்வைக் கண்டதனால், நெஞ்சை அடைக்கும் பீதியுடன் மக்கள் தலையைக் குனிந்தபடி வெளியேறுவர்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவன் இன்னொரு கதவைத் திறந்து விட்டால், அங்கே அவன் வயதுக்கும் தகுதிக்கும் ஏற்ற பெண்ணொருத்தி காத்திருப்பாள். மன்னவன் கைகளைத் தட்ட உடனடியாக மதகுரு அங்கே வந்துவிடுவார். அம்மனிதனுக்கும் அப்பெண்ணுக்கும் உடனடி விவாகம் அங்கே ! அப்போதே ! பொது அரங்கில் ! எல்லோர் முன்னிலையில் ! இன்னிசை முழங்கும், மக்கள் கூட்டம் உற்சாகமாய் குரல் கொடுத்து, மணமக்கள் வரும் பாதையில் மலர் தூவுவர்.

அம்மனிதன் முன்பே மணமுடித்தவனா ? அவன் குடும்பம் என்ன ? வேரு யாரையாவது மணமுடிக்க விரும்புகிறானா ? – இந்தக் கேள்விகளைப் பற்றி ஆணையிட்ட மன்னனுக்குக் கவலையில்லை.

சிறை பிடிக்கப்பட்டவன் குற்றமுள்ளவன் என்றால், தண்டனையாக, புலியின் பிடியில் அகப்பட்டுச் சாக வேண்டும். நிரபராதி என்றால், அதற்குப் பரிசாகத் திருமணம். இதுவே மன்னனின் விசித்திரமான குருரமான நீதி வழங்கும் முறை !

மன்னன் இந்த நீதி வழங்குதலை மிக நியாயமானது எனக் கருதினான். இதில் எந்த பாரபட்சமும் இல்லை ! தெளிவான தீர்ப்பு ! எந்தக் கதவுக்குப் பின் என்ன இருக்கும் என்பது பரம ரகசியம் ! ராஜ ரகசியம் !

குற்றம் சாட்டப்பட்டவனுக்கு எந்தக் கதவைத் திறக்க வேண்டும் என்பதற்கு எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. உறுதியான கதவுகள் மற்றும் இரும்புத்திரைகள் கொண்ட அந்த கதவுகளுக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறியவே முடியாது.

சுதந்திரமாக,சுயாதீனமாக அவன் எடுக்கும் முடிவின் படி அவனாகவே ஒரு கதவைத் திறக்கிறான்.

“ஆரணங்கோ … ஆக்ரோஷப் புலியோ… அதை அவன் விதி முடிவு செய்யும்.

 

மக்களும் இந்த தீர்ப்பு வழங்கும் முறையை சற்று ரசித்தனர் என்றே சொல்ல வேண்டும். என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது – கதவு திறக்கும் வரை ! கோரமான கொலையா அல்லது கோலாகலமான கல்யாணமா ?  யாருக்கும் தெரியாது !

அந்தக் காட்டுமிராண்டி ராஜாவுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். தந்தையைப் போலவே துடிப்புள்ள, அதீத கற்பனையுள்ள , மிருக வெறித்தனம் உள்ள பெண். தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தான் மன்னன். அவளோ, தன் தந்தையின் சொற்படி நடப்பதில்லை. முக்கியமாக, தன் மனம் விரும்பிய மணாளனைத் தேர்ந்தெடுக்க நினைத்தாள் ! மன்னனின் விருப்பத்துக்கு மாறாக ! அவள் காதலனை, அவர்கள் காதலை மன்னன் ஏற்கவில்லை.

 

அந்த இளைஞன் மன்னனின் அடிமைகளில் ஒருவன். வீரமும் அழகும் பொருந்தியவன். அடிமை மீது இளவரசிக்கு ஆழமான காதல் !

அவர்களது காதல், சில மாதங்களை எவ்வித பிரச்சினையும் இன்றி கடந்தது. ஆயினும், மன்னன் அனைத்து விவரங்களையும் அறிந்தவுடன், அந்தக் கட்டழகனைச் சிறையில் தள்ளிவிட்டான். பொது மைதான அரங்கத்தில் ‘தீர்ப்பு வழங்கும் நாள்’ அறிவிக்கப்பட்டது.

எல்லா வழக்குகளையும் விட, இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.- மன்னனுக்கும் , மக்களுக்கும் !- இதுவரை எந்த அடிமையும் இளவரசியைக் காதலித்ததில்லையே !

மிக மிக ஆக்ரோஷமான புலியைத் தேடி வர ஆட்கள் அனுப்பப்பட்டனர். அது போலவே, கட்டிளங்காளைகேற்ற வனப்பு மிகுந்த அழகியும் தேர்ந்தேடுக்கப்பட்டாள். அந்தச் சிறந்த ஆணழகனைப் புலி  அடிக்காவிட்டால், அவன் மணக்க வேண்டிய பெண் பேரழகியாக இருக்க வேண்டுமே ! அலசி ஆராய்ந்து ஒரு பேரழகியும் தெரிவு செய்யப்பட்டாள்.

அவனது குற்றம் என்ன என்று நாடே அறிந்திருந்தது. இளவரசியின் மீது காதல் ! தன் காதலை அந்த இளைஞன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தான். ஆனால், மன்னன் அதைக் குற்றமாகக் கருதினான். பொதுத் தீர்ப்பாக அரங்கத்தில் நடக்கும் நிகழ்வின் நடுநிலைத்தன்மை பற்றி மன்னனுக்கு மாறாத நம்பிக்கை ! பிரியம் ! பெருமை ! மேலும், அந்த இளைஞன் புலியால் கொல்லப்படுவான் அல்லது வேறொரு அழகியைத் திருமணம் செய்து கொள்வான். இரு வழிகளிலும், அவன் இளவரசி வாழ்வில் இருந்து வெளியேற வேண்டியது தான்.

நிர்ணயித்த நாளும் வந்தது. அரங்கில் வரலாறு காணாத கூட்டம் இடிபாடுகள், நெரிசல்கள். உள்ளே வர இயலாமல், அரங்கின் வெளியேயும் மக்கள் வெள்ளம், என்ன நடக்கிறது என்பதை அறிய முண்டியடுத்துக் கொண்டு… ! மன்னனும் அரங்கத்துக்குள் வந்தாயிற்று. அரசவைப் பரிவாரங்கள் இருக்கைகளில் அமர்ந்தாயிற்று. மன்னனின் உத்தரவு கிடைத்ததும், இளவரசியின் காதலன், அரங்கத்துக்குள் வந்தான்.

அடிமையா ? இல்லவே இல்லை . ஆணழகன். இளமையும் வீரமும் பொருந்திய கட்டழகன் ! என்ன துர்ப்பாக்கியம் ! இந்த அரங்கத்தில் நிற்கிறானே ! சில நொடிகளில் அவன் வாழ்வு முடிந்திடுமோ? மைதானத்தில் அவன் நடந்த அழகில் அரங்கமே சொக்கியது.

மன்னனின் சிம்மாசனத்துக்கு எதிரில் வந்து வணக்கத்தைச் சொன்ன அவன் கண்கள், அவன் முழுக்கவனம், மன்னன் அருகில் இருந்த இளவரசியின் மீது இருந்தது.

பல வாரங்களாக இளவரசி வேறெந்த நினைவுமின்றி, இந்த பொது அரங்க தீர்ப்பு நாளைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தாள். யோசித்து, யோசித்து, இதுவரை இந்நாட்டில் யாரும் செய்யாத ஒன்றை இளவரசி செய்திருந்தாள்.

ஆம் ! பரம ரகசியத்தை … ராஜ ரகசியத்தை அவள் தெரிந்து கொண்டுவிட்டாள். அவளுக்குத் தெரியும், அந்த இரு கதவுகளில் எந்தக் கதவுக்குப் பின் என்ன இருக்கும் என்பது ! ‘இளவரசி என்ற அதிகாரமும், அவள் தந்த பொன்னும் அவளுக்கு அந்த ரகசியத்தைத் தந்துவிட்டது.

எந்தக் கதவின் பின்னால் ஓர் ஆரணங்கு இருக்கிறாள் என்ற ரகசியம் மட்டுமல்ல, அந்த அழகி யார் என்ற உண்மை கூட இளவரசிக்குத் தெரியும். அரண்மனையின் அழகிகளில் அவளும் ஒருத்தி ! இளவரசிக்கு அவள் மேல் வெறுப்பு இருந்தது.

தனது காதலனாகிய அந்தக் கட்டழகு இளைஞனை, அந்த அழகி அடிக்கடி பார்க்கிறாள், ஏன், தன் காதலனின் கண்கள் கூட அந்த அழகியை நோக்குகிறதோ என அவள் சில வேளைகளில் நினைத்துண்டு .

ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறாள். ஒன்றுமில்லா விஷயமாகவும் இருக்கலாம். “பற்றிக்” கொள்ளும் விஷயமாகவும் இருக்கலாமே ? யாருக்குத் தெரியும் ? இன்று அவள் தான் ஒரு கதவின் பின்னால் நிற்கிறாள்.

அரங்கில், அந்தக் கட்டழகன், இளவரசியின் காதலன், இளவரசியை நோக்க, அவனது மின்னல் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்தது. “ அவளுக்குத் தெரிந்துவிட்டது—கனவுகளின் ரகசியம்” என்பதை உணர்ந்தான்.  

காதலர்களுக்கே உரித்தான ப்ரத்யேக ஊரறியா கண் ஜாடை !

“எது ?”

நேரம் கடத்த முடியாது. உடனடியாகப் பதில் வேண்டும்.

அந்த அரை நொடி வேளையில், இளவரசியின் கை சற்றே உயர்ந்து, வலது திசைப் பக்கம் வளைந்ததை, பரபரப்பான, திகிலான சூழலில், மதி மயங்கிய அனைவரும் கவனிக்கவேயில்லை ! அவள் காதலனுக்கு மட்டும் அவள் ‘பதில்’ புரிந்தது.

தனது நடையில் எந்தவித தயக்கமுமின்றி, இளைஞன் கம்பீரமாக நடந்து, வலது பக்கத்துக் கதவைத் திறந்தான்.

கதையின் திருப்பம் – முடிவு என்ன ? – ஆக்ரோஷமான புலியா – ஆரணங்கா ?

_ இதைப் பற்றிச் சிந்திப்பதும் ஒரு முடிவு எடுப்பதும் மிகக் கடினம் தான் . மனித மனத்தின் இயல்புகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வது கடினம் அல்லவா ?

 

 

_ சிந்தித்துப் பாருங்களேன் !

மன்னனின் மகள் ! விசித்திரமான, குரூர எண்ணங்கள் உள்ள மன்னனின் மகள் ! அதே குணங்கள் அவளுக்கும் உண்டு !

அவள் மனதிலோ அந்த ஆரணங்கைப் பற்றிய வெறுப்பு ! தனக்குக் கிடைக்காத தன் காதலன், இன்னொருத்தியுடன், அதுவும் இந்த அழகியை மணமுடிப்பதை இளவரசி மனம் ஏற்குமா ?

புலியின் கதவு திறக்கப்பட்டு, புலியும் காதலனும் மைதானத்தில் புரண்டு, புரண்டு, புலி அந்த ஆணழகனைப் பிய்த்து எறிவதை மனக்கண்ணில் பார்த்து, பார்த்து, முகத்தை மூடிக்கொண்டு, “ இல்லை, இல்லை”, “கொடுரம்” என இளவரசி பலமுறை “ஐயகோ” என அழுதிருக்கிறாள். தாங்க முடியாத் துயரம் அல்லவா அது ! தன் அன்புக் காதலன் மடிவதை மனம் தாங்குமா ? அவனது காதல் ”குற்றம் ” எனக் கருதப் படுமோ ? மன்னனாகிய தந்தை எக்களிப்பாரோ ?

அந்த ஆரணங்கு இருக்கும் கதவைத் திறந்தால், தன் காதலன் மகிழ்வுறுவானோ ! மதகுரு திருமணத்தை நடத்தி வைக்க, மக்கள் உற்சாகமாகக் கூச்சலிட, தான் மட்டும் இலவு காத்த கிளியாக அமர நேருமோ?

 

_ இதையெல்லாம் நினைத்து தவித்துப் போயிருக்கிறாள் இளவரசி.

அந்தப் பொது அரங்கில், தன் காதலன் “ரகசிய சம்பாஷணையில்”, கண் அசைவில், “எந்தக் கதவு ?” எனத் தன்னைக் கேட்பான் என்பதை அவள் அறிந்திருந்தாள். அதற்கு என்ன பதில் கூற வேண்டுமெனவும் அவள் முடிவும் செய்து வைத்திருந்தாள்.

குழப்பமின்றி, தயக்கமின்றி அரை நொடியில் தன் பதிலைத் தந்துவிட்டாள். காதலனும் அவள் சொன்னக் கதவைத் திறப்பதற்கு எந்த வித சலனமும் இன்றிச் செல்கின்றான்….

வாசகர்களே ! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்  ! அந்தக் கட்டழகன் கதவைத் திறந்ததும், வெளியே வந்தது…

“ஆரணங்கா ? ஆக்ரோஷப்புலியா ?”

                                       

 

 

 

குட்டீஸ் லூட்டீஸ் – கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்

Himanshul Bansal, 24, Dies Racing Superbike In Delhi, Accident Caught On Camera

 

அதுவும் சரிதானே…!

‘நான் ஆன மட்டும் சொன்னேன் என் நண்பன் சாரதியிடம் அவன் பார்த்து வைத்திருந்த பையன் வேண்டாம். என்னுடைய மாமா பையனுக்கு அவன் பெண்ணைக் கட்டிக் கொடுன்னு.. அவன் கேட்கலே.. இப்போ அந்த மாப்பிளைப் பையன் ஒரு ஆக்ஸிடன்ட்லே போய்ட்டானாம். என் மாமா
பையனைக் கட்டிட்டிருந்தா அந்தப் பெண் நல்லா இருந்திருப்பா பாவம்’ என்றேன் என் மனைவியிடம் ஆதங்கத்தோடு.

அருகில் இருந்த மிதிலா, ‘அப்பா.. அந்த அக்காக்கு இது மாதிரி ஆகணும்னு விதிச்சிருக்கு. அதனாலே அந்த அங்கிள் ஆக்ஸிடன்ட்லே போய்ட்டாரு… இப்போ உங்க மாமா பையனுக்கு கட்டிக் கொடுத்திருந்தா உங்க மாமா பையனுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கலாம்.. எதெது எப்படி எப்படி நடக்-
கணுமோ அதது அப்படி அப்படி நடக்கும்பா..’என்றாள் பெரிய மனுஷித்தனமாக.

நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது எனக்கு.

அதுவும் சரிதானே..!!

 

————————————————————————————

‘தொட்டுக் கொள்ள…!!’

மனைவி : அட ராமா.. அப்பளாத்தைப் பொரித்து பை மிஸ்டேக் யூஷ¤வலா போடற டப்பாவுலே போடாம வேறே புதிய டப்பாவுலே போட்டு வெச்சிருக்கேனே.. என்னங்க மதியம் சாப்பாட்டுக்கு என்னத்த தொட்டுட்டு சாப்பிட்டீங்க

கணவன் : லஞ்ச் அவர்லே நீ ·போன் பண்ணி என்ன சொன்னே.. ‘சாதம் குக்கருக்குள்ளே இருக்கு. குழம்பு ·ப்ரிட்ஜ்லே இருக்கு. தொட்டுக்க..
மறக்காம கிச்சன் ஷெல்·ப்லே உள்ள அப்பளா டப்பாவை எடுத்து வெச்சுக்கங்க’ன்னு சொன்னியா.. அப்பளா டப்பாவை எடுத்துப்
பார்த்தேன்.. அதிலே அப்பளாம் இல்லே.. ஒரு வேளை அப்பளா டப்பாவை அப்படியே தொட்டுட்டு சாப்பிடுங்க’ன்னு சொன்னியாக்கும்னு ஒரு கையாலே அப்பளா டப்பாவைத் தொட்டுண்டு இன்னொரு கையாலே எப்படியோ சாப்பிட்டு முடிச்சேன்..

மனைவி : !!!

 

————————————————————————————

சரித்திரம் பேசுகிறது – யாரோ

Rajendra Cholan being blessed by his father,Gangaikanda Cholapuram,1014AD

ராஜேந்திரன்

 

புலிக்குப் பிறந்தது என்ன?
புலிதான்.
இந்தப்புலியும் பாய்ந்தது.
இந்தியாவை வென்றது।
கடல் கடந்தும் வென்றது.!
சென்ற இடங்களெல்லாம் புலிக்கொடி நாட்டியது।
ராஜராஜன் பதினாறு அடி பாய்ந்தான்.
ராஜேந்திரன் முப்பத்திரண்டு அடி பாய்ந்தான்.
ராஜராஜன் செய்தது இமாலயச் சாதனை.
ராஜேந்திரனும் அதே போல சாதனைகள் செய்தான்.
அவன் சரித்திரத்தைப்பற்றிப் பேசலாமா நேயர்களே?
பொன்னியின் செல்வனுக்கும், வானதிக்கும் பிறந்தவன் ராஜேந்திரன்.
ராஜராஜன் தன் மகனுக்கு மதுராந்தகன் என்று தனது சிற்றப்பன் பெயரை வைத்தான். தாத்தா சுந்தர சோழர் போலவே, அவன் அழகில் மன்மதன் போல இருந்தான். 1012 வருடத்தில் ராஜராஜன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மதுராந்தகன் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றான். அப்பொழுது அவனுக்கு ‘ராஜேந்திரன்’ என்ற பட்டாபிஷேகப் பெயர் வழங்கப்பட்டது. ராஜேந்திரன், ராஜராஜனுடன் சேர்ந்து நாட்டின் ஆட்சியை நிர்வாகம் செய்தான்.

வருடம்: 1014.

ராஜராஜன், புகழுடன் பிறந்து, புகழுடன் வளர்ந்து, புகழுடன் காலமானான். ராஜேந்திரன் மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டான். பதவி ஏற்ற எட்டாம் ஆண்டில், தனது மூத்த மகன் ராஜாதிராஜனை யுவராஜாகப் பட்டமளித்து, நாட்டு ஆட்சியைப் பகிர்ந்து கொண்டான்.

ராஜேந்திரன் படையெடுத்து வென்ற இடங்களைப்பற்றிப் பேசுவது என்பது சில அத்தியாயங்களில் அடங்காது. ஈழம், பாண்டிய நாடு, சேர நாடு, மேலைச்சாளுக்கிய நாடு, வட நாடு, வங்காளம், மற்றும் கடல் கடந்து ஸ்ரீவிஜயம் வரை அவன் வென்ற இடங்கள் எண்ணிலடங்காது. பொன்னியின் செல்வன் கதையில் குடந்தை சோதிடர் சொன்னது போல -வானதியின் மகன் சென்ற இடங்களெல்லாம் புலிக் கொடி பறந்தது.

ராஜேந்திரனின் மெய்கீர்த்தி – பெரிய மெய்கீர்த்தி. மெய்கீர்த்தியில் ராஜேந்திர சோழன் போரிட்டு ஜெயித்த நாடுகளின் பட்டியல் இருக்கிறது. என்னென்ன நாடுகள் என்று தெரிந்துகொள்வதற்கே ஒரு ஆய்வு தேவை..

ராஜேந்திரன் ஆட்சிக்கு வந்த மூன்றாம் வருடம்:
ராஜேந்திரன் வென்ற இடங்களைப் பட்டியல் போடுவோம்.

Rajendra Chola I |

 • கிருஷ்ணா-துங்கபத்ரா ஆறுகளுக்கு இடைப்பட்ட ‘இடைதுறை நாடு’ (இன்றைய ராய்ச்சூர் மாவட்டம்)
 • வனவாசிப் பன்னீராயிரம்: மைசூருக்கு வடமேற்குப் பகுதி.
 • கொள்ளிப்பாக்கை: இன்றைய ஹைதராபாத்துக்கு வடக்கே குல்பாக் என்ற ஊர்.
 • மண்ணைக்கடக்கம்: சாளுக்கியரின் தலைநகரமான மானியகேடா
 • ஈழ நாடு
 • பாண்டிய நாடு
 • சேர நாடு
 • வட நாடு
 • வங்காளம்
 • ஸ்ரீவிஜயம்

முதலில் ஈழ நாட்டு வெற்றியை சற்று விளக்கிவிடுவோமா?

ஆட்சிக்கு வந்த மூன்றாம் வருடம்:
ராஜராஜன் காலத்தில் தோற்று ஓடிய சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் ரோகண நாட்டில் ஒளிந்திருந்தான். பிறகு படைபெருக்கி, ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர் மீது படையெடுத்து, தான் இழந்த ஈழப்பகுதிகளை மீட்க முயன்றான். ராஜேந்திரன் ஈழம் மீது படையெடுத்தான். வென்றான். சிங்கள மன்னருக்கு வழிவழியாக வந்த முடியையும், அன்னவர் தேவியாராது அழகிய முடியையும் (முடி என்றால் தவறாக நினைக்க வேண்டாம்!! அது கிரீடம் தான்!!) கொண்டு வந்தான்.

நூறு வருடத்துக்கு முன், பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன், பாண்டியரின் மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் ஈழமன்னரிடம் அடைக்கலாமாகக் கொடுத்து வைத்திருந்தான். அப்பொழுது, பராந்தகசோழன், அந்த மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் ஈழத்திலிருந்து கொண்டு வருவதற்காகவே படையெடுத்துச் சென்றான். கிடைக்காமல் ஏமாற்றமடைந்தான். அதன் பிறகு வந்த எல்லா சோழர்களும் ஈழத்தில் அதைத் தேடி கிடைக்காமல் சோர்ந்தனர். பொன்னியின் செல்வனின் கதையிலும் அந்த தேடல் நடந்திருந்தது. ராஜராஜ சோழனுக்கும் கிடைக்கவில்லை. ராஜேந்திரன் அவற்றைக் கைப்பற்றினான்.
சோழர் கல்வெட்டுகள் சோழர் பெருமையாக கூறும்.
அதுபோல ஈழத்தின் மகாவம்சம் என்ற நூல் சிங்களப் பெருமையைப் போற்றிக் கூறும். ஒரே வெற்றியை இரு தரப்பும் தங்கள் பாணியிலும் கூறுவர். சரி.. கொஞ்சம் மகாவம்சம் ராஜேந்திரன் படையெடுப்பைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

“ராஜேந்திரனின் படைவீரர்கள் ஈழநாட்டின் பல இடங்களில் கொள்ளையிட்டு, பொன்னும், மணியும், அணிகலன்களும், பல பொற்படிமங்களும் கவர்ந்தனர். மேலும் போரில் சோழ வீரர்கள் புறங்காட்டி ஓடி ஒளிந்து, சிங்கள வேந்தனை உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அழைப்பது போல வருவித்துச் சிறைப்பிடித்து, அப்பொருட்களோடு சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டனர்.”

இது மகாவம்சத்தின் கூற்று.
இதைப்படிக்கும் தமிழ் வாசகர்கள் கோபம் கொள்ளவேண்டாம்.
நான் சதாசிவப்பண்டாரத்தார் எழுதியதைத் தான் சொல்கிறேன்.
சோழர் கல்வெட்டுகள் சோழரின் வீர வெற்றியைத்தான் குறிக்கிறது.

சரி.. நாம் தொடர்வோம்.
ஈழவெற்றிக்குப் பிறகு, சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன், சிறைப் பிடிக்கப்பட்டு, சோழ நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டான். சோழ நாட்டில், பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து 1029 வருடத்தில் மாண்டான். ஈழ நாடு முழுவதும் சோழர் வசப்பட்டது.

மகாவம்சம் மேலும் சொல்கிறது (ஆஹா ..மறுபடியும் மகாவம்சமா? வாசகர்களே, சற்று சாந்தமாகப் படியுங்கள்).
மகிந்தன் மகன் காசிபனை ஈழத்து மக்கள் மறைவாக வளர்த்து வந்தனர். அவன் தந்தை மகிந்தன் 1029ல் சோழநாட்டில் இறந்த போது, ஈழ மக்கள் காசிபனை மன்னனாக முடி சூட்டினர். காசிபனும் படைதிரட்டி ஆறு மாதம் சோழப்படைகளுடன் போர் செய்து, ஈழத்தின் தென் கிழக்கில் இருக்கும் ரோகண நாட்டைக் கைப்பற்றினான், விக்கிரமபாகு என்ற பட்டப்பெயருடன் 12 வருடம் ஆட்சி செலுத்தினான்.
இதைச் சொல்வது மகா வம்சம்.

ஈழக்கதை முடிந்தது. இன்னும் எத்தனையோ போர்கள் பற்றியும் அந்த வெற்றிகளைப் பற்றியும் எழுதவேண்டும்.

நான் காத்திருக்கிறேன்.
நீங்களும் காத்திருங்கள்!

 

அதிசய உலகம் -அறிவுஜீவி

‘என் மருந்து என்னிடம்’

Seeing Wonder Through the Eyes of Science - WSJ

‘தலை வலிக்கிறதா?

ஸ்ட்ரெஸ்-ஆ?

அமாய்யா  ஆமாம் .. 

ஆஸ்பிரினை எடுத்துக்கொள்ளுங்கள்!

தலைவலி போய்விட்டதா?’

இது சினிமா ஆரம்பிக்கும் முன் வரும் விளம்பரம் அல்ல.

ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid)) என்பது ஒரு மருந்து. இது பொதுவாக வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

சரி! உங்களுக்கு ஆஸ்பிரின் கிடைத்தது.
அதனால் உங்கள் வலி போயிற்று!

ஆனால் மற்ற உயிரினங்கள், தங்களுக்கு அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) வந்தால் என்ன செய்யும்?

உதாரணத்துக்கு, ஒரு தாவரம் என்ன செய்யும்?

சரி .. நேரடியாகவே கேட்கிறேன்.

‘தாவரங்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் வந்தால், ஆஸ்பிரினுக்கு எங்கே போகும்?’

‘ஒரு பைத்தியக்கார டாக்டருக்குப் பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியக்கார டாக்டர் எந்த பைத்தியக்கார ..’ என்று வரும் நகைச்சுவை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மேலும், என்னை ஒருமாதிரியாக நீங்கள் பார்ப்பது வேறு என் மனக்கண்ணில் விரிகிறது.
‘இப்படி லூசுத்தனமான கற்பனை ஏன்?’ என்றும் நீங்கள் கேட்கலாம். ஆனால் இது இயற்கையில் ஒரு அதிசயம்!

‘தாவரங்கள் தங்கள் உபாதைகளுக்குத் தேவையான ஆஸ்பிரினைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும்!’

‘இந்த ஆட்டத்துக்கு நான் வரல’ என்று தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்.

இதைச் சொன்னது நான் அல்ல!

இதைச் சொல்வது உயிரியல் ஆராய்ச்சி!

‘Nature’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற அறிவியல் பத்திரிகையில் வந்த ஆய்வுக்கட்டுரை சொல்வது இது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் உயரியல் ஆய்வாளர் ‘வான் டி வென்’ சொல்வது:
“தாவரங்கள் அழுத்தத்துக்கும், ‘வலி’க்கும் உதவும் பொருட்டு, தாங்களே தங்கள் வலிநிவாராணிகளை உருவாக்கி, உபயோகப்படுத்திக் கொள்கிறது” என்கிறார்.

இயற்கை தான் உயிரினங்களின் தற்காப்புக்கு எத்தனை அம்சங்களைத் தந்திருக்கிறது?

இது ஒரு அதிசய உலகம்!

REFERENCE: 
https://www.sciencealert.com/these-stressed-out-plants-can-self-medicate-by-producing-their-own-aspirin

மன் கீ பாத்! – ரேவதி பாலு

Woman Dentist at Work with Patient Stock Photo - Image of clean, hygiene: 69985394

பல்லாண்டு வாழ்க! என்று மனதிற்குள் வாழ்த்தியபடியே உள்ளே நுழைந்தேன். பல் டாக்டராச்சே! அப்படித்தானே வாழ்த்த வேண்டும்.

இன்று மகத்தான நாள் என்பதால் கூட ஒருவரை கட்டாயம் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்கள். என் கணவரை கட்டாயப்படுத்தி என்னுடன் இழுத்துக் கொண்டு போனேன். அவருக்கு ஆஸ்பத்திரி என்றாலே அலர்ஜி. ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வந்து விடும். இங்கேயும் ரத்தம் வரும். ஆனால் உங்களால் பார்க்க முடியாது என்றெல்லாம் சமாதானம் சொல்லி அழைத்து வந்து டாக்டருக்கு பின்பக்கம் ஒரு சோஃபாவில் உட்கார்ந்தார். அங்கேயிருந்து பார்த்தால் என்ன நடக்கிறதென்று தெரியும்.

இன்று முக்கியமான நாள். ‘ரூட் கெனால்’ என்று சொல்லப்படும் பல்லின் வேர் சிகிச்சை எனக்கு செய்யப் போகிறார்கள், இரண்டு அடுத்தடுத்த பல்லுக்கு. அதற்கு நடுவே ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது. அதை இரண்டு முறை பில்லிங் முறையில் நிரப்பியாயிற்று. ஒன்றும் பலிக்கவில்லை. நிற்கமாட்டேன் என்கிறது. அவ்வப்போது விழுந்து விடுகிறது. டாக்டர் இந்த சிகிச்சை பற்றி மிகச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொன்னார். பல் சொத்தையானது அஸ்திவாரம் வரை சென்று விட்டால் அதை சரி செய்ய இந்த ‘ரூட் கெனால்’ சிகிச்சை செய்வார்கள். பல் கூழ் வரை ‘டிரில்’ செய்து பல்லில் இருக்கும் சொத்தை, சீழ் ஆகியவற்றை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிடுவார்களாம்.

“அப்போ பல் செத்துப் போய் விடுமே டாக்டர்!” என்று வெகுளித்தனமாகக் கேட்டேன் நான். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் முழித்த டாக்டர் சுதாரித்துக் கொண்டு, “அதனாலென்ன? அந்தப் பல்லைத் தான் காப்பாற்றி விடுகிறோமே?” என்றார்.

‘செத்த பல்லுக்கு காரியங்கள் செய்து அனுப்பி வைக்காமல், காப்பாற்றுவாராமே?’ என் மைண்ட் வாய்ஸ் தான் – என்று இகழ்ச்சியுடன் அவரைப் பார்த்தேன். அவருக்கு அது கேட்டு விட்டதோ?

‘அம்மா! உங்களுக்கெல்லாம் சிகிச்சை செய்யணும்னா, நான் இன்னோருமுறை டாக்டருக்குப் படித்து விட்டு வந்தால் தான் உண்டு!’ இது டாக்டருடைய மைண்ட் வாய்ஸ். அவர் முகபாவத்திலிருந்து நான் புரிந்து கொண்டது.

‘இந்த முறையாவது சரியாகப் படித்து விட்டு வாருங்கள்!’ இது கீழ் உதடை சுழித்து நான் என் மைண்ட் வாய்ஸில் பதிலளித்தது.

டாக்டர் மரத்துப் போகப் போடப்படும் ஊசி போடும் முன்பே சொல்லி விட்டார். இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்தால் உங்களால் பேச முடியாது. ஏதாவது சொல்ல வேண்டுமானால் கையை தூக்குங்கள் என்று. அதைச் சொல்லும்போது அவர் சந்தோஷமாக சொன்னது போல எனக்கு ஒரு பிரமை. சற்று நேரம் இந்த அம்மா நம்மைக் கேள்வி கேட்டுக் குடையமாட்டார்களேயென்ற சந்தோஷம்.

நரம்பை அறுத்து பல்லின் உயிர் போய் விட்டாலும் அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி குழியை நிரப்பிவிட்டு மேலே ஒரு மூடியைப் போட்டு விடுவார்களாம். ஈறிலேயே ஊசி போட்டு அந்த இடத்தை மரக்க வைத்தார். வாயை நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு டாக்டர் வேறு வேலையாக உள்ளே சென்று விட்டார்.

சுபாவத்திலேயே எல்லோருக்கும் ஓயாமல் அறிவுரைகள், ஐடியாக்கள் சொல்லும் வழக்கமுள்ள என் கணவருக்கு அந்த நேரத்தில் என்னிடம் நிறைய பேச வேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டது. முக்கியமாக நான் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி. கையை ஆட்டி ஆக்ஷன் செய்து சப்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து எனக்கு ஏதோ புரிய வைக்க முயன்றார்.

ஆஸ்பத்திரியில் சப்தம் போடக் கூடாது என்பதாலும், என்னால் பேச முடியாததாலும் அங்கே ஒரு ‘மன் கீ பாத்’ செஷன், அதாங்க ‘மைண்ட் வாய்ஸ் செஷன்’, ஆரம்பித்தது.

மூட முடியாமல் திறந்த வாயுடன் இருந்த எனக்கு உதட்டை சுழித்து, “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை” என்று கூட பாவனையாக சொல்ல முடியவில்லை. கையை விரித்து கீழும் மேலும் அசைத்து என் நிலைமையை சொன்னேன்.

அதற்குள் உள்ளே போன டாக்டர் வந்து விட்டார். “ஊம்! இன்னும் பெரிசா… இன்னும் பெரிசா….” என்று வாயை அகலப் பிளக்க வைத்தார். சர்க்கஸில் சிங்கத்தின் வாய்க்குள் புகும் நிபுணரின் நினைப்பு தான் எனக்கு வந்தது.

அப்புறம் ஆரம்பித்தது தான் கொடுமை. ஏதோ கூர்மையான இன்ஸ்ட்ருமெண்ட்டை உள்ளே விட்டு ராவும் வேலை ஆரம்பித்தது. நாக்கை வேறு மிகக் கஷ்டப்பட்டு ஒரு பக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மூடவே முடியாத வாய்! ஒரு பக்கமாக நாக்கு! நான் எப்படி இருக்கேன்னு கண்ணாடியில் பார்க்கலாமான்னு ஒரு நெனைப்பு வேறு மனதில் ஓடிற்று. டாக்டர் அசந்தர்ப்பமாக என்னைப் பார்த்து பெரிதாக ஒரு புன்னகை பூத்தார்.

“உங்களுக்கு க்ரௌன் வைக்கப் போறோமே!” என்றார் பெருமிதமாக. எனக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. நான் எந்த அழகிப் போட்டியிலும் கலந்து கொள்ள வில்லையே, அப்படியிருக்க ஒரு கிரீடம் எனக்கு எப்படி சாத்தியம்? என்ற கேள்வி என் அகல விரிந்த கண்களில் வியப்பாகத் தொக்கி நிற்க, அதைக் கண்டு பிடித்த என் கணவர், ‘இப்படியெல்லாம் வேற உனக்கு ஆசையா?’ என்று மைண்ட் வாய்ஸ் ஒலிக்க, ஏளனமாக முகத்தில் ஒரு பாவம் காட்டினார்.

வாய் முழுவதும், கன்னங்கள், உதடு, நாக்கு என்று எல்லாமே மரத்துப் போக நல்ல வேளை அந்த நேரத்தில் வலி தெரியவில்லை. ஆனால் உள்ளே பெரிய ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த நான் அவ்வப்போது, அந்த ராவுகிற வேலையை வெளியே இருந்து செய்கிறாரா அல்லது வாயின் உள்ளேயே வந்து விட்டாரா என்ற சந்தேகத்திற்கு மட்டும் கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு அரைமணி ராவு ராவென்று ராவி விட்டு பெருமூச்சு விட்டு நிமிர்ந்த டாக்டர், “இன்னும் கொஞ்ச நேரந்தான். முடிந்து விடும்!” என்றார் என்னைப் பார்த்து ஆறுதலாக. திரும்ப ஒரு முறை உள்ளே போனார். நான் தொய்ந்து போய் சேரில் சாய்ந்தேன்.

திரும்ப உற்சாகமாக வந்த டாக்டர், “உங்க பல்லில ஒரு இடைவெளி இருக்கு இல்லே? அதனால அதையும் சேர்த்து ஒரு பிரிட்ஜ் கட்டிடலாம்னு நினைக்கிறேன்.”

எனக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை. மொதல்ல கிரௌன் என்றார், இப்போ பிரிட்ஜ் என்கிறார். திரும்ப வேடிக்கையாக மனதில் ஒரு எண்ணம். இந்த பிரிட்ஜை திறந்து வைக்க யாரைக் கூப்பிடலாம்? மந்திரி லெவல்ல யாரையாவது கூப்பிடலாமா? வாயை மூட முடியாததால் கண்களில் மட்டும் தெரிந்த என் எண்ணத்தைப் புரிந்து கொண்ட என் கணவர் வாயை இகழ்ச்சியாக வைத்துக் கொண்டு முஷ்டியை கீழ் நோக்கி குத்தி ‘ஆசையைப் பார்த்தியா இவளுக்கு?’ என்று மைண்ட் வாய்ஸில் பேசினார். நான் முடிந்த மட்டும், மூட முடியாத வாயைக் கோணி, மூக்கை விடைத்து, கண்களை அகல விரித்து என் கோபத்தைக் காட்டினேன்.

ஒரு வழியாக ‘ரூட் கெனால்’ முடிந்து அடுத்த நாள் ‘பிரிட்ஜுக்கு’ அளவெடுத்து ரெண்டு நாட்களில் ‘பிரிட்ஜ்’ கட்டி முடித்து விட்டார் டாக்டர்.

“முறுக்கு மட்டும் சாப்பிடாதீங்கம்மா! ஹார்டா எதையும் கடிக்கக் கூடாது கொஞ்ச நாளைக்கு. வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்!” என்று என் சந்தேகங்களுக்கு டாக்டர் விடை சொல்லிக் கொண்டிருந்தபோது அன்று நல்ல வேளை என் கணவர் வராததால்,

“இவ கிட்டே போய் சொன்னீங்களே! நல்லா தினமும் நொறுக்குத் தீனி தின்னு தின்னு பழக்கம். அதைப் போய் விட முடியுமா என்ன?” என்ற நேரடி டயலாக்கை கேட்க வேண்டிய அவசியம் டாக்டருக்கு இல்லாது போயிற்று.