இலக்கிய சிந்தனை + குவிகம் இலக்கிய வாசல்

இலக்கிய சிந்தனையின் அடுத்த நிகழ்வு மே மாதம் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.

இடம்: ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு , ஆள்வார்பேட்டை , சென்னை 18 

அதில், புதுவை ராமசாமி அவர்கள் கவியோகி சுத்தானந்த பாரதி பற்றி உரை நிகழ்த்துவார்!

குவிகம் இலக்கிய வாசல் சார்பில் திரு ஸ்ரீகுமார் “புத்தகங்கள் வெளியிட   எளிய வழி “ என்பதைப் பற்றிப் பேசுவார்!  இது Print on Demand என்ற புதுமையான முயற்சி பற்றிய தலைப்பு ஆகையால் புத்தகம் பதிப்பிக்க வேண்டும்  என்ற ஆசை உள்ள மக்கள் ( யாருக்குத் தான் அந்த  ஆசை இல்லை ? ) அனைவரும் வந்து   பயன் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

 

 

 

எமபுரிப்பட்டணம் அத்தியாயம் மூன்று (எஸ் எஸ் )

 

Image result for surya dev and sangya in shani serial

 

விஷ்வகர்மா வருவதற்குமுன் காரியம் எல்லை மீறி விட்டது.

சூரியனும் ஸந்த்யாவும் அந்தப் பொற்குளக் கரையில் ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்துக் காதல் மயக்கத்தில் இருந்தார்கள். சூரியனின் சூடு , குளிர்ந்த தண்ணீரில் சொட்டச் சொட்ட நனைந்த ஸந்த்யாவிற்கு கதகதப்பை ஊட்டியது. ஸந்த்யாவின் தேகக் குளிர்ச்சியும் கவர்ச்சியும் சூரியனுக்கு போதையை ஏற்படுத்தியது. அவனது வெப்பமான உதடுகள் அவளின் முகத்தில் பரவி முடிவில் அவள் இதழில் நின்றது. அவள் ஏதோ சொல்ல மெல்ல வாய் திறந்தாள் . அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சூரியன் அவளது இதழ்த்தேனை அருந்தினான். சூரியனின் இதழ் தந்த மயக்கத்தில் ஸந்த்யா கண்ணை மூடிக்கொண்டு அவனது தோளை ஆரத் தழுவினாள்.

தாமரைப்பூ போன்ற அவளது தேக வாசம் அவனுக்கு மயக்கத்தை அளித்தது. ஒரு சிறு குழந்தையைப் போல அவளைத் தன் இரு கரங்களாலும் தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் சோலைக்குச் சென்றான். அங்கிருந்த மலர்ப் படுக்கையில் அவளை மெல்லக் கிடத்தினான். அவளோ தேனில் ஊறிய பலாச் சுளை போல , பனியில் நனைந்த தாமரை போல , மழையில் மிதக்கும் சந்தனக் கட்டை போலத் துவண்டு கனிந்து இருந்தாள்.

அந்த மலர்ப் படுக்கை அவர்கள் இணைவதற்குக் காரணமாயிற்று. அவளது ஒவ்வொரு அசைவும், சூரியனுக்குச் சுகம் என்றால் என்ன என்பதை உணர்த்தியது. இருவருக்கும் காந்தர்வ மணம் அங்கேயே நிகழ்ந்தது.

அந்தச் சுக அனுபவத்தில் சூரியன் தன் கண்ணை மூடினான். சில நொடிகள்தான். ஆனால் அது விளைவித்த விளைவுகள் பயங்கரமாக இருந்தன.

உலகமே இருளில் மூழ்கியது. இடி உறுமியது. மின்னல் வெடித்தது. மேகம் பிளந்தது. மழை பொழிந்தது. பறந்து கொண்டிருந்த பறவைகள் உயிரற்றுக் கீழே விழுந்தன. எரிமலைகள் வெடித்துச் சிதறின. நதிகள் பாதை மாறின. கடல் அலைகள் ஆர்ப்பரித்து பூமிக்குள் புகுந்தன. மலை அருவிகள் பெருக்கெடுத்தன. நிலவும் நட்சத்திரங்களும் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.

a41ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று யோசித்துக் கொண்டே விஷ்வ கர்மா அங்கே வந்தார். உலகத்தையே ஸ்ருஷ்டிக்கும் அவரால் தன் மகள் ஸந்த்யாவிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையா உணர முடியாது?

தன் தந்தையின் காலடிச்சத்தத்தை உணர்ந்த ஸந்த்யா முதலில் கண்விழித்தாள். முதல் முறையாக அவளுக்கு நாணம் என்றால் என்ன என்பது புரிந்தது. சூரியனின் அணைப்பிலிருந்து சரேலென்று விடுபட்டு அருகில் இருந்த மாதவிப் பந்தலுக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டாள்.

தன் உடம்பில் கலந்து  திளைத்த சுகப்பதுமை தன் பிடியிலிருந்து விலகிச் சென்றதை உணர்ந்த சூரியன் மூடியிருந்த தன் கண்களைத் திறந்தான். உலகுக்கு அப்போதுதான் சமநிலை உண்டாயிற்று. தூரத்தில் விஷ்வகர்மா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த சூரியனுக்கும் சற்று வெட்கம் உண்டாயிற்று. மெல்லத் தன்னைச் சரி செய்துகொண்டு விஷ்வகர்மாவின் காலடியில் வணங்கி நின்றான்.

” தேவ சிற்பியே! நீங்கள் எத்தனையோ அதிசய உலகங்களைப் படைத்திருக்கிறீர்கள்! இன்னும் படைக்கப் போகிறீர்கள். ஆனால் தங்களின் இந்தப் படைப்புக்கு ஈடாக எந்த உலகத்திலும் இருக்க முடியாது. இந்த அழகுப் படைப்பை எனக்கே தந்து அருளவேண்டும்” என்று வேண்டி நின்றான்.

“சூரிய தேவா! உனக்குப்பொருத்தமானவள்தான் என் மகள் . உன்னைத் தன் கணவனாக அடைய அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் உன் நிறையே உனக்குக் குறையாக இருக்கிறது. அதைப் போக்காமல் நீ அவளை மணக்க முடியாது. “

திடுக்கிட்டுப் போனான் சூரியன். ” என்ன சொல்கிறீர்கள்? என்னிடமும் குறை உள்ளதா? ” என்று வினவினான் சூரியதேவன்.

(தொடரும் )

 

இரண்டாம் பகுதி :

Image result for சொர்க்கம்

 

 

“எமி ! வா இன்று உன்னைச் சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு சென்றான் எமன்.”

” அண்ணா! நீ என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றால் நான் நரகபுரிக்குக் கூட வரத் தயார்! . சிறு வயதில் நாம் சாயா சித்தியிடம் பட்ட கஷ்டத்துக்கு ஒரே ஆறுதல் நீ பக்கத்தில் இருந்ததுதான்”

“உண்மை தான் எமி ! அந்த நாட்களை நம்மால் மறக்கவே முடியாது. நாம் பட்ட வேதனைகள் ! அப்பப்பா! அவற்றையெல்லாம் நாம் திரும்ப எமபுரிப்பட்டணத்துக்கு வந்த பிறகு நினைவு கூர்வோம்!! இப்போது சொர்க்கபுரியின் அழகைப் பருகுவோம். “

“அண்ணா ! இந்த சொர்க்கபுரியும் நம் தாத்தா கட்டியதுதானே!”

“அதிலென்ன சந்தேகம்! அவர் தேவ சிற்பியல்லவா? ஆனால் சொர்க்கத்தில் அவர் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. அவர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது! –  “சொர்க்கபுரியை நிர்மாணிப்பது என் வேலையாக இருக்கலாம்! ஆனால் அதை உண்மையில் சொர்க்கபுரியாக மாற்றுவது அங்கு வரப் போகும் ஆத்மாக்கள்தான் “

Image result for சொர்க்க வாசல்

“அண்ணா! சொர்க்கபுரிக்கும் நாம் உன் வாகனத்தில்தான் போகப் போகிறோமா? “

” உன் கிண்டல் புரிகிறது, எமி! அதில் நாம் செல்லப் போவதில்லை. அதில் நான் சென்றால் நடக்கப் போகும் காரியமே வேறு! அதைப் பெரியகாரியம் என்றுதான் சொல்வார்கள்! ! நாம் நடந்தே பேசிக் கொண்டு செல்வோம். அப்போது தான் அதன் அழகை உணர முடியும்.

Image result for சொர்க்கம்

இருவரும் சொர்க்கபுரிக்குள் நுழைந்தார்கள்! அவர்களுக்கு என்றே காத்துக்கொண்டிருந்தன இன்பமான ஆனால் திடுக்கிடும் சம்பவங்கள்!

(தொடரும் )

 

 

 

 

 

 

 

 

பாகுபலி

ந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு சரித்திரப்படம் ஹாலிவுட் அளவிற்கு வசூலில் சாதனை செய்திருக்கின்றது என்றால் அதற்கு நாம் நன்றி  சொல்லவேண்டியது எஸ் எஸ் ராஜ்மவுலியையும் அவரது பாகுபலியையும்தான்.

Related image

Image result for baakupali stillsImage result for baakupali stills

Image result for baahubali stills

 

அதன் பிரும்மாண்டத்தை டிவியிலும் கம்ப்யூட்டரிலும் பிடிக்க முடியாது. தியேட்டரில் பார்த்தால்தான் அதன் அழகு புரியும்.

அந்தப்படத்தின் டீசர் இதோ!

பார்த்தவர்கள் பிரமிக்கிறார்கள் ! இந்தியாவையே ஓட்டு மொத்தமாக நிமிர்ந்து பார்க்க வைத்த ஒரு திரைப்படம் ! அன்று வாசன் சந்திரலேகா மூலம் செய்த புரட்சியை ராஜ்மௌலி பாகுபலி மூலம் செய்திருக்கிறார்! அவரை எப்படிப் பாராட்டினாலும் தகும். 

இனி மகாபாரதமும் , ராமாயணமும், பொன்னியின் செல்வனும் திரையில் நம்மைக் கவர  வரும்.

நல்ல தொடக்கம் !

 

குழந்தைகளைக் காப்பாற்ற என்ன வழி?

இது ஒரு ஆங்கிலக்  குறும் படம். ஆனால் இது சொல்லும் பாடம் நம் அனைவருக்கும் பொருந்தும்.

நாம் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் ?  

 

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

 

அத்தியாயம் 11. மணிமகுடம்.

 

 

செவ்வேந்தி, மாலுமிகள் மற்றைய வீரர்களுடன் விடியற் காலையில் கலத்தின் மேல் தளத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தான். பின் வந்தியத்தேவன் வந்து அவர்களுடன் கலந்து கொண்டான்.

வந்தியத்தேவன் ஒரு வீரனிடம் பெரிய பூட்டு, அதற்கான சாவி, மண் வெட்டிகள், கூடைகள், கடப்பாரைகள், அணைந்த சில தீப்பந்தங்கள், சில எண்ணைக் குடுக்கைகள், தண்ணீர் குடுக்கைகள், கயிறுகள் முதலியவற்றை சாக்குகளில் போட்டுக் கட்டி எடுத்து வரச்செய்தான். அவற்றைத் தவிர சில நீண்ட கம்புகளையும் எடுத்து வரச் செய்தான். கீழே தள்ளப்பட்ட படகில், எல்லோரும் பொருட்களுடன், மாலுமிகள் துடுப்பு வலிக்க, தீவை நோக்கிச் சென்றனர்.
மூட்டைகளைக் கம்புகளின் நடுவே கட்டி, இருவர் இருவர்களாக சில வீரர்கள் சுமந்து கொண்டார்கள். கடைசியாக அனைவரும் பயணத்தைத் தொடங்கினார்கள். இறுதியில் குன்று இருக்குமிடம் வந்து, ஏறி உருண்டைக் கல் முன்னால் வந்து நின்றார்கள்.

வந்தியத்தேவன் கல் இருந்த இடத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்பதை அறிய அங்கு நோட்டம்விட்டான். சிறிய கற்கள் நிறைந்த சற்று உயரமான இடம் ஒன்று தென்பட்டது. அந்த இடத்தையும் தற்போது கல் இருக்கும் இடத்தையும், இடையில் உள்ள இடத்தையும் நோக்கினான்.

கல் இருக்கும் இடம் ஓர் பள்ளம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கற்கள் இருந்த உயரமான இடத்திலிருந்து உருண்டைக் கல் பள்ளத்திற்கு, கீழ் நோக்கிய சரிவு இருப்பதையும் அறிந்து கொண்டான். இடையே உருண்டைக் கல்லின் அளவிற்கு ஒரு சாய்வான பாதை அமைக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

கல்லுக்குக் கீழேயும், மற்ற அதன் இரு பக்கங்களிலும் வெட்டப்பட்ட மரங்களின் கட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று ஆட்கள் உயரம் இருந்த கட்டைகளின் மேல் கல் உட்கார்ந்திருந்தது. மற்றும் கல்லைச் சுற்றிலும் கல்லின் கீழ் பாகத்தின் மேல் வரை, கட்டைகள் காணப்பட்டன. இதிலிருந்து கல் ஒரு கட்டைகளால் நிரப்பப்பட்ட பள்ளத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தோன்றின.
இவற்றையெல்லாம் கணித்த அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிய ஆரம்பித்தது!

‘கல்லைவிட பெரியதாகவும், ஆழமாகவும் குழியைத் தோண்டி முதலில் பள்ளத்தில் பொக்கிஷப் பெட்டியை வைத்திருக்கிறார்கள்..பின் மண் போட்டு நன்றாக மூடியிருக்கிறார்கள். கட்டைகளால் அடியிலும், சுற்றிலும் கல்லின் அளவுக்கு சமச் சீராகவும், கல் சரிந்து கீழே இறக்கத்தில் ஓடிவிடாமல் இருக்கச் சரிவின் முன்னால் அதிகமாகவும் நிரப்பியிருக்கிறார்கள்’ என்பதை அறிந்து கொண்டான்.

‘மேலும் உயரத்திலிருந்த கல்லைச் சுற்றிலும், வெடி மருந்துகள் வைத்து அதைப் பெயர்த்திருக்கிறார்கள். கல் அவர்கள் அமைத்திருந்த சாய்வான பாதையில் உருண்டு குழியில் விழ இந்த ஏற்பாடுகள். அதை வெற்றிகரமாக முடித்து சாதனையும் செய்திருக்கிறார்கள்!’ என்றும் வந்தியத்தேவன் வியந்தான்!

‘அப்பப்பா!எவ்வளவு பெரிய அருஞ்செயல்!’ என்று எண்ணி, மஹாபாரதத்தில் சொல்லப்படும் ஒரு கதையை நினைவுபடுத்திக் கொண்டான்.

மஹாபாரதத்தின் முடிவில் பாண்டவர்கள் வடக்கே இமாலயத் தொடர்களில் மானாஸ் வழியாகத் தேவ லோகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்களாம்! அப்போது சரஸ்வதி நதி குறுக்கிட்டது. எல்லோரும் கரையிலிருந்து மறு கரைக்குத் தாண்டிச் செல்லத்தயாராக இருந்தார்கள். ஆனால் திரௌபதி மட்டும் மறுத்தாள்! அப்போது பீமன் பிரம்மாண்டமான நீண்ட கல் ஒன்றைப் பெயர்த்து பாலம் அமைத்தானாம்! அதைப் போலல்லவா இருக்கிறது இந்த அரும் பெரும் செயல்! என்று கணித்ததையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டான்!
இப்போது வந்தியத்தேவன் கல்லைப் பெயர்ப்பதற்கான உபாயங்களைப்பற்றி ஏற்கெனவே சிந்தித்து வைத்திருந்த எண்ணங்களை ஞாபகப்படுத்திக்கொண்டான். அதைச் செயல்படுத்தத் தொடங்கினான்.

செவ்வேந்தியை அழைத்தான்.
“கல்லுக்கு அடியில் உள்ள கட்டைகளைக் கீழேயிருந்து அகற்றுவதுதான் நமது முதல் வேலை. பாறை குழியிலிருந்து வெளிப்பட்டு உருண்டு கீழே போய்விடும்! கட்டைகளை அகற்ற அவற்றை எரிப்பதுதான் மிகச் சிறந்த உபாயம்!” என்றான்.

செவ்வேந்தி வீரர்களிடம் தீப்பந்தங்களைக் கொளுத்திக் கையில் தயாராய் வைத்துக்கொள்ளுமாறு ஆணையிட்டான்.

வந்தியத்தேவன் மெல்லத் தன் கையிலிருந்த பந்தத்தை கல்லுக்கடியிலிருந்த கட்டைகளில் போட்டான். மற்றவர்களையும் அவ்வாறே வெவ்வேறு இடங்களில் போடச் சொன்னான்.
வெய்யிலில்நன்றாய் காய்ந்திருந்த கட்டைகள் சட்டென்று தீயைப் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தன! பெரிய ஜ்வாலையாய் வளர்ந்தது. பிறகு கட்டைகள் வேகமாக எரிந்து சாம்பலாகத் தொடங்கின. கல் மெல்ல மேலும் கீழுமாய் அசைய ஆரம்பித்தது அதன் ஆட்டம் அதிகமாயிற்று. கல்லைக் கீழே விழாமல் தாங்கிக்கொண்டிருந்த கட்டைகள் கருகத் தொடங்கின. பாரம் அதிகமாகிக் கல் பள்ளத்திலிருந்து வெளியில் வந்து, கீழ் நோக்கி உருள ஆரம்பித்தது.

அதன் வேகம் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. வேகமாகப் பெரிய சத்தத்துடன் சரிவில் கொடி செடி மரங்களைச் சாய்த்துக்கொண்டு உருண்டுபோய் மலையின் அடிவாரத்திற்குச் சென்று பிறகு நிலத்தில் உருண்டு கடலுக்குள் சென்று மறைந்தது!

ஒருவழியாகக் கட்டைகள் எரிந்து முடிந்தன! ஒரே புகைப்படலம்! சிறிது நேரம் ஒன்றும் புலப்படவில்லை! கட்டைகள் எல்லாம் சாம்பலாகி இருந்தன.

செவ்வேந்தி வீரர்களை மண்வெட்டிகள், கூடைகள், கடப்பாரை எடுத்து வரச் செய்து, மண்ணை வெட்டிக் கூடையில் எடுத்து, எரிந்த கட்டைகளின் மேல் தூவச் சொன்னான்.

புகை அடங்கிய பிறகு செவ்வேந்தி மறுபடி வீரர்களிடம் எல்லாவற்றையும் மண்வெட்டியால் அள்ளி, கூடையில் போட்டு, அகற்றச் சொன்னான். கட்டைகளின் கீழ் சுட்டுக்கொண்டிருந்த மணலையும் கடைசியில் அவர்கள் அகற்றினார்கள்.

செவ்வேந்தி மீண்டும் மண்வெட்டியால் அந்த இடத்தைத்  தோண்டச் சொன்னான். முடிவில் ஒரு தங்கப்பெட்டியின் மேல்பகுதி தென்பட ஆரம்பித்தது. பெட்டியின்மேல் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதிக கனமுள்ள பெரிய பூட்டுடன் கூடிய அந்தப் பெட்டியை வெளியில் வீரர்கள் எடுத்தார்கள்.

வந்தியத்தேவன் வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னான். அவ்வாறே பூட்டு உடைக்கப்பட்டது. பூட்டை அகற்றிவிட்டுப் பெட்டியைத் திறந்தான்.

அங்கே..!
கண்ணைப் பறிக்கும் அழகுடன் பாண்டியனின் பொக்கிஷங்கள் கதிரவனின் ஒளியில் தகதகத்து கண்களைக் கூச வைத்தன!
மணிமகுடத்தை முதலில் எடுத்தான். தங்கத்திலான மிகுந்த வேலைப்பாட்டுடன் பல வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த மகுடத்தைப் பக்கத்துக் கல்லில் வைத்தான்.

‘ஆகா.என்ன வேலைப்பாடு. எத்தனை வைரங்களும் கோமேதங்களும் வைடூரியங்களும்! இதன் அழகை எவ்வாறு வர்ணிப்பது?’ என்று வந்தியத்தேவன் அதிசயித்தான்.

அடுத்து கண்ணைப் பறிக்கும் இரத்தினங்கள் பதித்த வேலைப்பாடுகள் நிறைந்த ஹாரத்தை எடுத்து சிறிது நேரம் மெய் மறந்தான்.
இந்தப் பொக்கிஷங்களை அடைய அவன் சாதித்தவை அனைத்தையும் எல்லாம் நினைவு கூர்ந்தான். அவனுக்கே அவை அதிசயமாகத் தோன்றின!

‘பாதிக் கடலைத் தாண்டியாகிவிட்டது. முழுவதையும் தாண்டி வெற்றிகரமாய் அவற்றை சோழர்களிடம் சேர்ப்பித்தாக வேண்டும். அதுவரை இன்னும் என்ன என்ன சோதனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்குமோ? கையில் வாள் இருக்கிறது. நெஞ்சில் உரம் இருக்கிறது. நேர்மைத்திறன் இருக்கிறது. ஆகவே எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன்’ என்று உறுதி பூண்டான்.

பிறகு அவை இரண்டையும் உள்ளே வைத்துப் பெட்டியை மூடினான். பெட்டியிலிருந்த பூட்டை வெளியில் எடுத்துத் தூக்கி எறிந்தான்.
“இனி நாம் கலத்துக்குத் திரும்பலாம்” என்று அனைவருக்கும் கட்டளையைப் பிறப்பித்தான்.

பெட்டியை இருவர் தூக்கிக்கொண்டு வர மற்ற எல்லோரையும் அழைத்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி பள்ளத்தாக்கில் நடந்து வந்து, மறுபடி மேலேறி வந்தியத்தேவன் பாறையை வந்தடைந்தான்.

ஓர் அடர்ந்திருந்த புதருக்கு அருகில் பெட்டியைக் கீழே வைக்கச் சொன்னான். அங்கிருந்து சற்றுக்  கீழே எல்லோரும் வந்தபின் எல்லோரையும் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னான்.
அனைவரும், வந்தியத்தேவன் உள்பட அமர்ந்தார்கள்.

சற்று நேரம் கழித்து வந்தியத்தேவன் எதையோ மறந்து விட்டவன்போல் எழுந்து நின்றான்! பெட்டியை நோக்கி நடந்தான். மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்!

பெட்டி புதருக்குப் பின்னால் இருந்ததால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அது தென்படவில்லை! வந்தியத்தேவன் புதருக்குப் பின்னால் சென்று அவனும் மறைந்தான்!

அவர்கள் இருந்த இடத்திலிருந்து அவனைப் பார்க்க இயலவில்லை. அங்கு என்ன செய்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது! என்ன செய்திருப்பான் என்பதை யாமும் அறியோம்!!!

சிறிது ஓய்விற்குப் பின்..
செவ்வேந்தி முதலானோர் புதருக்குப் பின்னால் இருந்த வந்தியத்தேவன் பக்கம் வந்தார்கள்.

செவ்வேந்தி வந்தியத்தேவனைப் பார்த்து “ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
அதற்கு வந்தியத்தேவன்..
“இல்லை..இல்லை, பொக்கிஷங்களை மறுபடியும் பார்த்து மகிழ்ந்தேன், அவ்வளவுதான்” என்றான்.

வீரர்களிடம் சாக்கிலிருந்து பூட்டையும், சாவியையும் எடுத்து வரச் சொல்லி, வந்தபின் பெட்டியைப் பூட்டால் பூட்டினான். சாவியைத் தூர எறிந்தான்.

எல்லோரும் பெட்டியுடன் மறுபடி கரையை அடைந்தார்கள். வந்தியத்தேவன் கலம் இருந்த பக்கத்தை நோக்கினான். மூன்று கலங்கள் அவர்களின் கலத்திற்கு அருகில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தன!
வந்தியத்தேவன்செவ்வேந்தியிடம் “திருமலை, நமக்காக நான் கேட்டிருந்தபடி போர்க்கலங்களுடன் வந்திருக்கிறான். நாம் சீக்கிரமாக அங்கு சென்று அவர்களைச் சேர்வதுதான் நமக்கு நல்ல பாதுகாப்பு” என்றான்.

பெட்டியும் சாக்குகளும் படகில் முதலில் ஏற்றப்பட்டன. பிறகு மற்றோர் ஏறினர். மாலுமிகள் விரைவாகத் துடுப்பு வலித்து அவர்கள் கலத்தை அடைந்தார்கள். மேலிருந்து கீழே ஒரு கயிறு வீசப்பட்டது. பெட்டியை அதில் கட்டி மேலே இழுக்க, வந்தியத்தேவன் செய்கை காட்டினான். பெட்டி மேலே இழுக்கப்பட்டது! பிறகு அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்கள் ஏற்றப்பட்டன. மற்றவர்கள் கீழே வீசிய கயிற்று ஏணியின் மூலம், ஒவ்வொருவராக மேல்தளத்தில் ஏறினார்கள். வந்தியத்தேவனும் கடைசியில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

வந்தியத்தேவன் மேலே ஏறியதும் சடசடவென்று சில மாறுதலான நிகழ்ச்சிகள் வாயு வேகத்தில் நடந்தன. என்ன என்று தெரிந்து கொள்ளுமுன் அவனை  பத்துக்கும் அதிகமான போர்வீரர்கள் சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தார்கள்.

வந்தியத்தேவன் சுற்றிப் பார்த்தான். தூரத்தில் அவனுடன் வந்த சோழ வீரர்கள், மாலுமிகள், செவ்வேந்தி மற்றும் எஞ்சியிருந்த மற்றோர் அனைவரும் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டான்.

பொக்கிஷப் பெட்டி கீழே வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான்.
சுற்றியிருந்த போர்க் கலங்களை நோக்கினான். அவை போர்க்கலங்கள் அல்ல என்பதை அறிந்துகொண்டான். மேலே பறந்து கொண்டிருந்த புலிக்கொடிகள், மண்டை ஓட்டுச் சின்னம் கொண்ட கடல் கொள்ளைக்காரர்களின் கொடிகளாக மாற்றப்படுவதைப் பார்த்து அதை உறுதி செய்துகொண்டான்.

‘திருமலை போர்க் கலங்களுடன் வருமுன் கொள்ளைக்காரர்கள் முந்திக் கொண்டுவிட்டார்களே, இது என்ன கொடுமை!’ என்று எண்ணினான்.
ஒரு பயங்கர சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

கீழ்த்தளத்திலிருந்து ரவிதாசன் எக்காளமிட்டுக் கொண்டே, கருத்திருமன், சோமன்சாம்பவன் புடை சூழ வந்தியத்தேவனை நோக்கி வந்து நின்றான்.

“வந்தியத்தேவா, எப்படி எங்கள் இந்த சோழப் படைவீரர்கள் வேடம்? நீ எவ்வளவோதடவை எங்கள் வேலைகளில் பிரவேசித்து சீரழித்திருக்கிறாய்! ஆனால் இந்த முறை அது பலிக்கப்போவது இல்லை!. எங்கள் பொக்கிஷம் எங்களிடமே சேர்ந்துவிட்டது.. அதுவும் உங்கள் உதவியினாலேயே..” என்று கூறி “ம்..” என்று மற்றவர்களுக்கு ஓர் செய்கை செய்தான்.

பெட்டி கயிற்றினால் கட்டப்பட்டு, கீழ் இறக்கப்பட்டு, படகில் அவர்களின் ஒரு கலத்தில் ஏற்றப்படும்வரை ரவிதாசன் பார்த்து கொண்டிருந்தான்.
“இனி உன்னை இப்படியே விட்டு வைத்திருப்பது எங்களால் இயலாத காரியம்.உன்னுடைய கதையை இப்போதே முடிக்கிறேன்! உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்; போன முறை நாங்கள் உன்னை விட்டுவிட்டது மகாராணியின் தயவால்.. இந்த முறை.. அது நடவாது” என்று வந்தியத்தேவன் முன் சென்று கத்தியை இடுப்பிலிருந்து உருவப் போனான்.
“சோழர் போர்க் கலங்கள் மூன்று நம்மை நோக்கி விரைவாக வந்து கொண்டிருக்கின்றன” என்று ஒரு கொள்ளைக்காரன் பாய்மரத்தின் உச்சத்திலிருந்து கத்திச் சொல்லிவிட்டுக் கயிற்றின் மூலமாக வேகமாகக் கீழே இறங்கி வந்தான்!

ரவிதாசனின் கவனம் சிதறியது. அந்த ஒரு கணம்தான் வந்தியத்தேவனுக்குத் தேவைப்பட்டது.

கைகளை உதறிக்கொண்டு தலைகீழாக மேலே எழும்பி ஒரு சுற்று சுற்றிக் கொள்ளைக்காரர்களின் பின் சென்று சுதாரித்துக் கொண்டு கத்தியை இடுப்பிலிருந்து உருவினான்.

கொள்ளைக்காரர்கள் கத்தியுடன் அவன்மேல் பாய்ந்தார்கள். பயங்கர கைகலப்பு தொடங்கியது. வந்தியத்தேவன் இருவரை மேல் உலகத்திற்கு அனுப்பினான். அதே சமயம் அவன் மேல் எறியப்பட்ட கத்தி படாதவாறு இமைக்கும் நேரத்தில் விலகி நின்றான்.

சட் சட்டென்று சோழ போர் வீரர்களின் கைக்கட்டுகளை அறுத்துவிட்டான்.

அவர்களும் சண்டையில் கலந்தார்கள்.
சோழர்களின் பலம் அதிகரித்ததைக் கண்டு கொள்ளைக்காரர்களுக்குக் கேட்கும்படியான பெரிய குரலில் ரவிதாசன் “கடலில் உடனே குதித்து நம் கலங்களுக்கு விரையுங்கள்” என்றான்.

விருட்டென்று திரும்பி, கலத்தின் விளிம்பில் கட்டப்பட்டிருந்த ஒரு பாய்மரக்கம்பத்தின் கயிற்றைக் கத்தியால் ஒரு வெட்டு வெட்டி மறுகணத்தில் கடலில் குதித்தான்.

அவன் மேல் பாய்ந்த வந்தியத்தேவன் தரையில் குப்புற விழுந்தான். பாய்மரக் கம்பம் அவன் தலையின்மேல் சரிந்தது. நிமிர்ந்த வந்தியத்தேவனின் தலை மறுபடி தரையில் சாய்ந்தது! அவன் சுய நினைவை இழந்தான்!

ரவிதாசன் முதலியோர் அவர்கள் கலத்தில் ஏறியபின் கொள்ளைக்காரர்களுக்கு மற்றும் ஒரு சைகை செய்தான்.
அவர்கள் தீ பொருத்திய எரியம்புகளை சர்சர் என்று வந்தியத்தேவனின் கலத்தின் மேல் சரமாரியாய் பொழிந்தனர். தீ முதலில் பாய்மரப் பாய்களைக் கவ்வியது! பிறகு மற்ற இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.முடிவாக கலத்தின் மேல் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதில் மிகத்திருப்தி அடைந்த ரவிதாசன் “ஒழிந்தான் வந்தியத்தேவன்!” என்று பெருங்குரலில் கூறிவிட்டு அவர்களுடைய கலங்களை கிளம்புவதற்குக் கட்டளையிட்டான்! கலங்கள் அந்த இடத்திலிருந்து விரைவாக அகன்றன!

**********************************************************************

தொலைவில் வந்துகொண்டிருந்த சோழர் கலம் ஒன்றிலிருந்து திருமலை, வந்தியத்தேவன் தீவுக்குக் கொண்டு வந்திருந்த கலத்தின் பக்கத்தில் வேறு மூன்று பெரிய கலங்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு அவை கடற்கொள்ளைக்காரர்கள் என்று பார்த்தவுடனே அறிந்து கொண்டான்.
அந்த மூன்று கலங்களும் வந்தியத்தேவன் கலத்தைவிட்டு வேகமாக வேறுபக்கத்தில் செல்லத் தொடங்கியதையும் அவன் கண்டான்.
ஆனால்.. என்ன இது வந்தியத்தேவன் கலம் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறதே என்று பதறி, ‘வந்தியத்தேவனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ? கொள்ளைக்காரர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்’ என்று எண்ணி கலபதியிடம் “நாம் இப்போது எரிகின்ற நமது கலத்தைக் காத்தாக வேண்டும். அதில் இருப்பவர்களை தீயிலிருந்து மீட்டாக வேண்டும். உடனே மற்ற கலபதிகளிடம் இதைத் தெரிவியுங்கள்” என்றான்.
கலபதி சைகை விளக்கு மூலம் மற்ற கலபதிகளிடம் செய்தியைத் தெரியப்படுத்தினான்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படித் தீயை அணைத்து கலத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவது, என்பதில் கைதேர்ந்த வீரர்களைக் கொண்ட அந்தச் சோழர் கலங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தடைந்தன.

(தொடரும்) 

அசட்டுக்கு வந்த அதிர்ஷ்டம்..! நித்யா சங்கர் – நாடகம்

காட்சி – 1.

Related image

 

(பூமா தெருவில் போய்க் கொண்டிருக்கிறாள். நீலமேகம் அவள்
பின்னால் போகிறான்.)

பூமா : (கோபமாக) மிஸ்டர்.. ஏன் என் பின்னாலே வந்துட்டிருக்கீங்க..?

நீல.. : நன்றி காட் நன்றி.. (மூச்சு இரைக்க).. ஐயோ.. எங்கே மிஸ்ஸ
மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்தேன்… நல்ல வேளை..
நன்றி காட் நன்றி….

பூமா : மிஸ்டர் ஐ வார்ன் யூ… இனி என் பின்னாலே வந்தீங்களோ..
உங்களுக்கு ஆபத்து.. ஆமா..

(பூமா விசையாக நடக்கிறாள்.. நீலமேகம் அசட்டுச் சிரிப்போடு
பின்னால் செல்கிறான்.. ரவி ஒரு பெட்டிக் கடையருகில் நின்று
கவனித்துக் கொண்டிருக்கிறான்)

பூமா : (எரிச்சலோடு) ஏன் ஸார்..? உங்களுக்கு சூடு, சுரணை, மானம்னு ஏதாவது இருக்கா..?

நீல : (அசட்டுச் சிரிப்போடு) ஓ…

பூமா : (திடுக்கிட்டு) என்ன..!

நீல : சூடு நார்மலுக்கு மேலே அதிகமாகவே இருக்குன்னு டாக்டர் கூட
ஸர்டிஃபை பண்ணி இருக்கார். ‘எல்லோருக்கும்’ நார்மல் 98.4
டிகிரி.. உனக்கு 98.8 டிகிரிதான்டா நார்மல்னு அவரே
சொல்லிட்டார்.

பூமா : ஆங்…

நீல : சுரணை கூட எனக்கு அதிகமா உண்டு. திடீர் திடீர்னு எனக்குக்
கோபம் வந்துடும். ஒண்ணு ரெண்டு மாசத்துக்கு முன்னாலே
உங்களை மாதிரி ஒரு பொண்ணு — சீச்சீ.. உங்களை மாதிரி
இருந்தா பரவாயில்லையே – அவலட்சணம்.. என் பின்னாலே
சுத்திட்டு கன்னா பின்னான்னு பேசிட்டா.. எரிச்சல்லே அவளை
கைநீட்டி அடிக்கக் கூடச் செஞ்சுட்டேன்.. ஆனா அது இப்போ
எங்கே போச்சு தெரியலையே.. ஏ.ஸி தியேட்டர் மாதிரி குளு
குளூன்னு இருக்கு.. அதுவும் ஸ்டிரைக் பண்ணிடுத்து போலிருக்கு..

பூமா : (எரிச்சலோடு) உம்….

நீல : மானம் இருக்கான்னுதான் தெரியலே.. அதெ நீங்கதான்
சொல்லணும். நோட் பண்ணி வெச்சுக்கறேன்.

பூமா : (எரிச்சலோடு) ஏன் ஸார்..? பார்த்தா படிச்சவர் மாதிரி
இருக்கீங்க…

நீல : ஆமா.. பி.ஏ.தேர்டு இயர்.. பி.ஏ. படிக்கிறவன் இப்போ பஞ்சாய்ப்
பறந்துட்டிருக்கேன்..

பூமா : எதுக்கு..?

நீல : (அசட்டுச் சிரிப்போடு) அன்பு அகத்துக்குத்தான்…

பூமா : (கோபத்தோடு துள்ளி) என்ன சொன்னே..?

நீல : ஐயோ… ·புல் ஸ்டாப்.. ·புல் ஸ்டாப்.. இங்கே அன்பு அகம்
லாட்ஜுன்னு இருக்குன்னு சொன்னாங்க.. அதைத் தேடிட்டிருக்கேன்னு சொல்ல வந்தேன்..

பூமா : (கோபம் தணிய) ம்…

நீல : ஷண்முகானந்தா காலேஜ்லேதான் படிச்சிட்டிருக்கேன். இங்கே
நாளைக்கு ஏதோ குவிஸ்  ப்ரோக்ராம் நடக்கப் போறதுன்னு
சொன்னாங்க.. அதுக்குத்தான் வந்திருக்கேன்.. என்
லெக்சரர்ஸெல்லாம் ‘டேய் அசடு.. நீ போக வேண்டாம்..
காரியத்தையே கெடுத்துடுவே.. ‘ அப்படீன்னாங்க.. நீங்க
அனுப்பலேன்னா என்னான்னு நானே தனியா வந்துட்டேன்.

பூமா : சரி.. எனக்கு டைமாச்சு.. உங்க வழியைப் பாத்துட்டுப்
போங்க.. உங்க அதிகப் பிரசங்கித்தனத்தையெல்லாம் இந்த
பூமாகிட்டே வெச்சுக்காதீங்க….

நீல : ஆஹா… பூமாவா.. பிக் ·பிளவர்.. பியூட்டி·புல் நேம்..

பூமா : மிஸ்டர்.. என்ன நெனச்சிட்டிருக்கீங்க..? பக்கத்துலே பாருங்க..
அங்கே ஒருத்தர் நின்னுட்டிருக்கிறாரில்லே.. நான் குரல்
கொடுத்தாப்போதும். அவர் வந்து ரெண்டுலே ஒண்ணு
பார்த்துடுவார்… ஜாக்கிரதை…!

நீல : யாரு..(அங்கு பார்த்தபடியே) ஓ.. அவனா..? இன்னிக்கு
வந்ததும் அவனை அறிமுகப்படுத்திட்டேன்.. ராமானந்தா
காலேஜ்.. அதுதான் உங்க காலேஜ் போலிருக்கு.. பேரு..
ரவியோ என்னமோ சொன்னான்.. மிஸ். பூமா.. இந்தக்
காலத்துலே பெற்ற தாய் தந்தையைக் கூட உதவிக்கு வரு-
வாங்கன்னு நம்ப முடியறதில்லே.. இவனைப் போய்
நம்பிக்கிட்டு… பரிதாபம்… பரிதாபம்….

பூமா : ஒங்ககிட்டே ஒபீனியன் ஒண்ணும் கேட்கலே… இங்கிருந்து
போகப் போறீங்களா… இல்லையா…?

நீல : ஐயோ.. அவசரப்படறீங்களே… மணிக் கணக்கா பேசிட்-
டிருக்கணும்னு மனசு துடிக்குது…

பூமா : மிஸ்டர் இனி ஏதாவது பேசினீங்கன்னா அந்த நெஞ்சத்
துடிப்பையே நிறுத்திடுவேன்.. ஜாக்கிரதை…

நீல : ஹிஹி… நீங்க கேள்விப்பட்டிருப்பீங்களே..ப்ளூ க்ளௌடு..

பூமா : (திடுக்கிட்டு) ஆ…..

(தலையில் கை வைத்துக் கொண்டு ஓடுகிறாள்)

நீல : (திடுக்கிட்டு) மிஸ். பூமா… ஏன் ஓடறீங்க….?

(ரவி அவனருகில் வருகிறான்)

ரவி : என்ன நீலமேகம்..? ஏன் ஓடறா..?

நீல : ஓ.. ரவியா..? ஏன் ஓடறான்னு புரியலையே. ப்ளுக்ளௌடுன்னு
சொன்னேன்.. என் பேர் நீலமேகம் பாருங்க.. அதையே
இங்க்லீஷிலே ப்ளூ க்ளௌடுன்னு சொன்னேன். அதைக்
கேட்டதும் தலை தெறிக்க ஓடறா.. ஏன் மிஸ்டர்..? நீங்க
யாரையாவது காதலிச்சிருக்கீங்களா..?

ரவி : உம்.. நான் காதலிச்சிருக்கேன்.. ஏன்..? காதலித்துக்
கொண்டுதான் இருக்கேன். ஆனா அந்தப் பக்கம் காதல்
இருக்கிறதாத் தெரியலியே..!

நீல : என் அப்ரோச்லே என்ன தப்பு..? எல்லாம் சரியாத்தானே
இருந்தது… இனிமையாத்தானே பேசினேன்.. ஏன் பின்னே
ஓடிட்டா.. காதலர்கள் நேரம் போவது தெரியாமல் பேசிக்
கொண்டிருப்பார்கள்னு படிச்சிருக்கேனே.. ம்.. ஆ…
ஐயோ… போச்சு… போச்சு…

ரவி : (திகைப்போடு) ஏனய்யா அலரறே..?

நீல : பண்ணிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்.. அன்பு அகத்துக்கு
அலைஞ்சிண்டிருக்கேன்னு சொன்னேனா.. கோபத்தாலே
துள்ளினா… ·புல் ஸ்டாப்.. ·புல் ஸ்டாப்னு கத்திட்டேன்..
அவள் காதலுக்கும் ·புல் ஸ்டாப் போட்டுட்டாளோ..?
(தலையிலடித்துக் கொண்டு) இடியட்.. இடியட்.. ஸெமி-
கோலனோ, கமாவோ போட்டிருக்கக் கூடாதோ.. அப்பத்-
தானே தொடரும்.. மிஸ்டர் ரவி… மன்னிச்சுக்குங்க…
எனக்குத் தனிமை தேவை.. அப்புறம் பார்க்கலாம்..

(போகிறான்)

Image result for padosaan

ரவி : அசடுன்னா வடிகட்டின அசடா இருக்கானே.. எனக்குப்
போட்டியா வரணும்னு பார்க்கறான். இடியட்.. இன்னிக்கு
பூமாவை சந்திக்கணும்னு நெனச்சேன்.. அதையும் கெடுத்-
துட்டான்.. ஆனா ஒரு க்ளூ கொடுத்திருக்கானே.. ப்ளூ
க்ளௌடு… இதை யார் கிட்டேயும் சொல்லக் கூடாது…
நாளைக்கு லேடீஸ¤க்கு தலைமை தாங்கி வருவா பூமா…
நான் ஜென்ட்ச் லீடர்… ஒரு க்ளூ கிடைச்சாச்சு… மத்த-
தையும் கண்டு பிடிச்சு அவள இம்ப்ரஸ் பண்ணனும்..

காட்சி – 2.

(ரவியின் அறை.. இரவு நேரம். நண்பர்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)

Image result for college boys in a hostel

குமார்: டேய் சேகர்… நான் அப்பவே சொன்னேன் இல்லே..
ரவி ஒரு விளக்கெண்ணெய்.. அவனாலே முடியாதுண்ணு..
கேட்டீங்களா..?

சேகர்: ரவி.. பாருடா.. உன்னை ஸ்ப்போர்ட் பண்ணினதுக்கு நான்
படும் அவஸ்தையை…

ரவி : நானென்னடா செய்யட்டும்..? பூமாவை எப்படியாவது
இன்னிக்கு மடக்கிக் குவிஸ் ப்ரோக்ராத்துக்கு அவங்க கேட்கப்
போற கேள்விகளை தெரிஞ்சுக்கணும்னு திட்டம் போட்டோம்..
ஆனா அந்த அசட்டுப் பய நீலமேகம், இடியட், நடுவுலே
பூந்து என்னை சந்திக்கக் கூட முடியாம பண்ணிட்டானே…

குமார்: போடா.. உனக்கு கையாலேயும் ஆகாது.. வாயாலேயும்
ஆகாது.. முந்திக்கத் தெரியலே.. மணி.. நீ என்னடா
ஒண்ணும் சொல்லலே…

மணி : (சலிப்போடு) ச்… என்னடா சொல்றது..? சாப்பாட்டுக்கு நல்லா
முந்திக்கத் தெரியும். அன்னைக்கு ஹாஸ்டல் டே போது
எல்லோருக்கும் முதல்லே அந்தக் கூட்டத்திலே முண்டியடிச்சு
சாப்பாடு வாங்கி வந்துட்டான் இல்லே… இதுக்கு முந்திக்கத்
தெரியலே…

ரவி : எல்லாம் சொல்றீங்களே… நீங்க யாராவது போறதுதானே..?

சேகர்: டேய் ராஸ்கல்.. நீ அவளை லவ் பண்ணறேன்னு எங்களுக்குத்
தெரியும் இல்லே.. ரெண்டு பேரும் பி.எஸ்.ஸி. ஒரே வகுப்புலே
வேறே படிக்கறீங்க..

மணி : எக்ஸாக்ட்லி… நான் கூட நெனச்சேண்டா.. நான் போய்ப்
பார்க்கலாம்னு… நான் அவள் கிட்டே போய்ப் பேசினா என்
பேச்சைப் பார்த்து மயங்கி அவள் என்னைக் காதலிக்க
ஆரம்பிச்சுட்டா ரவிக்கு துரோகமாகவல்லவா போயிடும்.?

குமார்: டேய்… (எரிச்சலோடு) மணி.. போடா இடியட்.. மூஞ்சியைப்
பாரு மூஞ்சியை… இவர் இருக்கிற பர்சனாலிட்டிக்கு அவள்
இவனைக் காதலிப்பாளாம்…

சேகர்: குமார்.. மணி.. ரவியோட காதலை நாம எப்படியாவது
நிறைவேற்றணும்டா… என்ன சொல்றீங்க..?

குமார்: ஆமாண்டா…

மணி : ஆமாண்டா…

சேகர் : என்ன ஆனாலும் சரி.. அவள் கால்லே விழுந்து கெஞ்சி-
யாவது இவங்க திருமணத்தை நடத்தணும். ம்.. இப்போ
என்னடா செய்யறது..? இது நல்ல சான்ஸ்.. நாளைக்கு
பூமாவுடைய அப்பா ஜட்ஜ் சாம்பசிவம்தான் தலைமை
வகிக்கப் போறார். ‘தலைவி’ என்ற முறையிலே பூமா
கேட்கற கேள்விகளுக்கு ரவி நம்ம ‘தலைவன்’ என்கிற
முறையிலே ஆன்ஸர் சொல்லிட்டா…

குமார்: டேய்.. ஜட்ஜ் நாடியையே ஆட்டிடலாண்டா.. நல்ல சான்ஸ்
என்னடா பண்ணறது..? குறுக்கு வழியிலே போலாம்னு
நினைச்சோம்… அதுக்கும் தடை போட்டுட்டானே அந்த
அசடு..

மணி : அதுக்கு ஒரே ஒரு வழிதாண்டா இருக்கு.. டேய் நம்ம
கலெக்ட் பண்ணி இருக்கோமே அந்த ஜெனரல் நாலெட்ஜ்
புக்ஸை கொண்டு வாடா.. அதுலே எல்லாத்தையும் பத்தி
இருக்கு… டேய் ரவி… உனக்கு பூமா வேணும் இல்லையா..?

ரவி : ஆமாம்…

மணி : இப்போ மணி எட்டாச்சு.. நாளைக்குக் காலேலே எட்டு
மணிக்கு நாம புறப்படணும்.. இதுலே பன்னிரண்டு புக்ஸ்
இருக்கு… ஒவ்வோண்ணுலேயும் ஆயிரம் பக்கங்கள்தான்
இருக்கு.. எப்படியாவது மணிக்கு ஒண்ணா முடிச்சுடுடா..
தலைகீழா நின்னாவது மனப்பாடம் பண்ணிடு…

ரவி : டேய் அதெப்படீடா முடியும்..?

சேகர்: ஆமா ரவி.. வேறே வழியில்லே…

ரவி : (பரிதாபமாக) பூமா இல்லாட்டியும் வேண்டாம். டேய்
வேண்டாண்டா….

குமார்: நோ பிரதர்.. நாங்க ஒங்க ரெண்டு பேரையும் மணக்
கோலத்துலே பார்க்கணும்னு முடிவு  பண்ணிட்டோம்..
மரியாதையா மனப்பாடம் பண்ணிடு..

ரவி : டேய் பைத்தியம் பிடிச்சிடும்டா…

சேகர்: டோண்ட் வோர்ரி… முதல்லே பூமாவைக் கவர்ந்திடு..
அதற்கப்புறமா உனக்குப் பைத்தியம் பிடிச்சாலும்
நாங்க பார்த்துக்கறோம்.. நாங்களாச்சு க்யூர் பண்ண..

ரவி : இதை நெனச்சாலே கண் எல்லாம் எரியுதடா…

மணி : கொஞ்சம் விளக்கெண்ணெய்  தடவிக்கோ.. டேய் சேகர்..
குமார், இன்னிக்கு ஷிப்டு வெச்சுக்கலாம்..ஒருத்த-
ரொருத்தரா மாறி மாறி கண் முழிச்சு இவன் ஒழுங்கா
மனப்பாடம் பண்ணறானான்னு பார்த்துக்கணும். ஆல்
ரைட் ரவி… யூ காரி ஆன்….

ரவி : டேய் என்னாலே முடியாதுடா….

மணி : முட்டாள்… நல்ல சான்ஸ¤டா… மிஸ் பண்ணாதே…
பூமாவை நெனச்சுக்கடா… கஷ்டமே தெரியாது… கமான்..

ரவி : ஐயோ.. ஆண்டவா இது என்னடா சோதனை..?
(ரவி வெற்றி வாகை சூடி பூமாவின் கை பிடித்தானா..
அடுத்த இதழில்……)

 

லிங்காஷ்டகம் – இடம் பொருள் பாடல்

 

Related image

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த ஸ்லோகம் லிங்காஷ்டகம். இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது பாராயணம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும்.

#ப்ரஹ்ம_முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (01)

நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#தேவ_முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (02)

தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#ஸர்வ_ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (03)

எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.”

— — — — — — — — — — —
www.fb.com/Deivatharisanam
— — — — — — — — — — —

#கனக_மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (04)

மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#குங்கும_சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (05)

குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#தேவ_கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (06)

தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

— — — — — — — — — — —
www.fb.com/Deivatharisanam
— — — — — — — — — — —

#அஷ்ட_தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (07)

எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
— — — — — — — — — — —

#ஸுரகுரு_ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே. ….. (08)

தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

நன்றி : ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்

 லிங்காஷ்டகம் – புது வடிவில் 
 
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

 

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமணம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

நன்றி: மாலைமலர்

Image result for lingashtakam song

எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இழைந்த குரலில் லிங்காஷ்டகம் கேட்கவேண்டுமா?  கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள் !
 

சரித்திரம் பேசுகிறது -” யாரோ”

Image result for இந்திய வரலாறு

ருத்ரதாமன்

 

இருண்ட காலமென்று கூறப்படும் வட இந்திய சரித்திரத்தை…
சற்றே சிறு விளக்கு ஒன்று கொண்டு தேடுகிறோம்.
ஏதேனும் சித்திரங்கள் கிடைக்காதா என்று…
அந்த தேடலில்…

இன்று நமக்கு புதையல் ஒன்று கிடைக்கிறது!
அப்படிப்பட்ட ஒரு ‘நாயகனின்’ கதை இது!

சாதவாகன மன்னர்களைப் பார்த்தோம்.
அதில் சக சாம்ராஜ்யத்தையும் கோடி காட்டினோம்.
இன்று சக மன்னன் ஒருவனது கதை கேட்போம்.

ருத்திரதாமன்.

‘அட இது யாரு புது ஆளு… கேள்விப்படாத பேராயிருக்கே!’
-இந்த ஐயம் உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும் இருந்தது – சரித்திரக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கும் வரை.

சரி… நீங்களும்…
‘முத்துக்குளிக்க வாரியளா’?
வருடம் கி பி 2015 டிசம்பர் மாதம்:
இடம்: சென்னை

இது அச்சுப்பிழை அல்ல.
ஒரு சிறு காட்சியை சொல்லி விட்டு நமது முதல் நூற்றாண்டு செல்வோம்.

புயல் ஒன்று புறப்பட்டது.
வானம் பொழிந்தது.
பொழிந்து தள்ளியது.
பூமி வழிந்தது.
தூர்வாரப் படாத ஏரிகள் நிரம்பியது.
தளும்பும் பொழுதில் அவைகள் திறந்து விடப்பட்டு…
நீர்….
சீறிப்பாய்ந்து நகரத்தை சூறையாடியது.
அரசாங்கம் திகைத்து நின்றது.

இயற்கையின் இதைப்போல அனைத்துப் பிரச்சினைகளையும் சரித்திரம் முன்பே சந்தித்திருக்கிறது.
ஒரு முறை மட்டுமல்ல.
ஒரே இடத்தில மூன்று முறை நடந்தது.

சரித்திரத்தை நன்கு படித்திருந்தால்… அதை நடைமுறைப்படுத்தியிருந்தால்… அரசாங்கம் இந்தப்பிரச்சினை வராமல் தடுத்திருக்கலாம்….

சந்திரகுப்த மௌரியர் காலத்திற்கு சற்று செல்வோம்.
இன்றைய குஜராத் மாநிலம்.
பாடலிபுத்திரத்திலிருந்து வெகு தொலைவு.
அங்கு சந்திரகுப்தனின் ஆளுநர் – வைஸ்ய புஷ்யகுப்தா.
அவன் ஆளும் மாநிலத்தில்..
உர்ஜயாத் என்னும் ஒரு மலை.
அங்கு…
ஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளும், அதன் மூன்று கிளை நதிகளும் மலையிலிருந்து கும்மாளமிட்டு புறப்படும்…
மணம் நிறைந்த மலர்கள் நதி நீரை ஆடையிட்டு அலங்கரிக்கும்…
ஐந்து சிறு நதிகளும் மலையிலிருந்து இறங்கி…
மோதிரங்கள் அணிந்த விரல் கொண்ட மலர்க்கரம் ஒன்று மலையை விட்டு நாட்டைத் தொடும் காட்சி…
வர்ணனைக்குக் காளிதாசன் இன்னும் பிறக்கவில்லை…
ஒரே வார்த்தை சொல்வோம்… ரம்யம்…

அந்த நதிகள் நாட்டில் தவழ்ந்து இன்பமாகக் கடலில் கலக்கும்.

ஆயினும் இயற்கை சீறிய பொழுது ….

மணமலர்களுக்கு மாறாக சேற்றைப் பூசிக் கோபம் கொண்டிருந்த நதிகள்..
வெறி கொண்டு … கண் மண் தெரியாமல்… கரை தெறித்து… ஓடி… வழியில் உள்ள நகரங்களை அழித்தது.

சந்திரகுப்தன் ஆளுனரை அழைத்தான்.
‘வெகு விரைவில் அந்த மலையில் ஒரு அணை கட்டி இது போல் அனர்த்தம் நிகழாது செய்’ – என்று பணித்தான்.
புஷ்யகுப்தன் அணை கட்டி அந்த நதிகளின் கோபத்தைத் தணித்தான்.
அந்த அணை ‘சுதர்சனா ஏரி’!
அது மக்கள் உயிர் காத்தது.
பின்னாளில் அசோகர் அந்த அணைக்கு பல கால்வாய்கள் – குழாய்கள் (conduits) அமைத்து அந்த அணையை வலுப்படுத்தினான்.
அவனது ஆளுநர் ஒரு யவன ராஜா ‘துசாபா’ அதை நிறைவேற்றினான்.

எந்த படைப்புக்கும் பராமரிப்பு வேண்டும்.
செம்பரம்பாக்கத்திலிருந்து … சுதர்சனா வரை எல்லா ஏரிகளுக்கும் இது பொருந்தும்.
மக்கள் நலம் கொண்ட அனைத்து அரசுகளுக்கும் இதை செய்யும் கடமை உண்டு.

சில நூற்றாண்டுகள் கழிந்தன.
இப்பொழுது முதல் நூற்றாண்டுக்குச் செல்வோம்.
நாள்: கி பி 72
அது ஒரு முன்பனிக்காலம்.
நமது கதாநாயகன் ருத்திரதாமன் சக மன்னன்.

(ருத்திரதாமன்)

ஒரு நாள்…
கருமேகங்கள் பெருத்து வந்து குவிந்தது..
மழையை பொழிந்தது..
நதி போல நீர் வானத்திலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்தது.
நாட்கள் சென்றன…
வானம் நிறுத்தவில்லை.
வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்தது.
ஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளிலிருந்தும், மேலும் அதன் மூன்று கிளை நதிகளிலிருந்தும் பொங்கிய வெள்ளத்தை பூமி தாங்க இயலவில்லை.
மரங்கள் உடைந்தன.
கரைகள் கரைந்தன.
மலைகள் மண்ணரிப்பால் சேற்றை எங்கும் பரப்பியது.
மண்ணுலகமே மகா சமுத்திரம் போலக் காட்சி அளித்தது.
யுகம் முடிந்துவிட்டது போன்ற தோற்றம்.
ருத்திரதாமன் பல முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் –இந்த ஆழி பேரழிவை நிகழ்த்தியது.

சுதர்சனா ஏரி 100 அடி ஆழம் கொண்டிருந்தது.
அது முழுதும் உடைந்தது.
ஏரியின் அனைத்து நீரும் வற்றி அது ஒரு மணல் பாலைவனம் போல் காட்சி அளித்தது.
அழகான ஏரி அன்று பார்க்க காணத்தகாமல் அலங்கோலமாக இருந்தது.
சுதர்சனா என்ற ஏரி.. துர்தர்சனா என்று அழைக்கப்படும் நிலை.
மக்கள் அடைந்த துயரத்திற்கோ அளவில்லை.

ருத்திரதாமனின் மந்திரிகளும் ஆலோசர்களும் அந்த அவலத்தைக் கண்டனர். மன்னரிடம் சென்று ஒரே குரலில் கூறினர்:

‘என்ன பேரழிவு..இந்த அணையை செப்பனிடுவது என்பது முடியாத காரியம்’
மன்னன் அதை ஒப்பவில்லை.

‘அணை முழுமையாக் கட்டப்படவேண்டும்..
நாட்டின் பசுக்களுக்கும், மக்களுக்கும் இன்னும் ஓராயிரம் ஆண்டிற்கும் இந்த கஷ்டம் வரலாகாது. இதுவே என் ஆணை’ – என்றான்.

தனது ஆட்சிக்குக் கீழ் இருந்த ‘அனர்த்த’ நாட்டு மன்னனை அழைத்தான்.
அவன் பெயர் ‘அமத்யா சுவிசாகா’.
அமத்யா நேர்மையான, மக்கள் நலம் விரும்பும், சிறந்த ஆட்சியாளன்.

ருத்திரதாமன்:
‘அமத்யா, இதைச் செய்வதற்கு நீயன்றி யாரும் இல்லை’

அமத்யா:
‘இதைச் செய்வது எனக்கும் கடமைதான் மன்னா! வெகு விரைவில் செய்து முடிப்பேன்’

அந்த அணையை முன்பிருந்ததை விட மூன்று மடங்கு பெரியதாகவும் ஆழமாகவும் விரைவில் செப்பனிட்டான்.

இதில் என்ன சிறப்பு என்றால்:
ருத்திரதாமன் இதை  அருகிலிருந்த நகர, கிராம வாசிகளுக்கு எந்த வித தொந்தரவு இல்லாமலும், மக்களைக் கட்டாய வேலை செய்விக்காமலும், வேறு வரி விதிக்காமலும் செய்தான். எந்த வித நன்கொடையும் பெறப்படவில்லை. மொத்த செலவும் அரண்மனைக் கருவூலத்திலிருந்து சென்றது.

(பின் குறிப்பு: பின்னாளில் ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்கந்தகுப்தன் என்ற குப்த மன்னன் காலம்.. இந்த அணை பெரும் மழையின் தாக்குதலால் மீண்டும் உடையவே, மன்னன் அதைச் சீர்திருத்தி செப்பனிட்டான்)
அசோகரது கல்வெட்டுகள்
ஜீனாகத் கல்வெட்டு

அணையைத் தவிர ருத்ரதாமன் வேறு என்ன செய்தான் – என்று கேள்விக்கு சரித்திரம் பதில் சொல்கிறது:

குஷானர் மேலோங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு அடி பணிந்த சிற்றரசர்களாக சக வம்சத்தினர் ஆட்சி செலுத்தி வந்தனர். கனிஷ்கருக்குப் பின் வந்த குஷானர்கள் திறமையற்றவர்களாக இருந்தமையால், இந்த சக மன்னர்கள் உஜ்ஜயினியை தலை நகராகக் கொண்டு மன்னன் என்று பட்டம் சூட்டிக்கொண்டு வாழ்ந்தனர்.
சதவாஹன அரசின் கவுதமிபுத்திரன் என்ற மன்னனைப் பற்றி நாம் படித்திருந்தோம்.
அவன் சக நாட்டை வென்ற பின் – சக நாட்டில் சாஸ்தானா என்ற மன்னன் சக நாட்டை மீண்டும் அமைத்தான்.
அந்தப் பரம்பரையில், சாஸ்தானாவின் பேரன் முதலாம் ருத்திரதாமன்.

ருத்ரதாமன் அரசுரிமை ஏற்ற பொழுது நாடு நிலைமை – புயலுக்குக்குப் பின் சுதர்சனா ஏரி அப்படியிருந்ததோ- அவ்வளவு மோசமான நிலையில் இருந்தது.

ருத்ரதாமன் –
மாவீரன்…
அறிவாளி…
நேர்மையான நிர்வாகி…
தர்மத்தைக் கொள்கையாகக் கொண்டவன்…
வாள்வீச்சில் சிறந்தவன்…
குத்துச்சண்டையில் மாமல்லன்.
குதிரை, ரதம் மற்றும் யானை அனைத்தையும் செலுத்துவதில் வல்லவன்…
ஏழைக்குப் பொருள் வழங்குவதில் வள்ளல்…
இசை வல்லுனன்…
விஞ்ஞான அறிவுடையவன்…
அழகிய கவிதைகள் , உரைநடை எழுதிய கவிஞன்.
சம்ஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்று சிறந்தான்.
முதன் முறையாக சரித்திரத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அமைத்தவன்…
(அதற்கு முன் பிராகிருத பாணியில் பாலி, மற்றும் மகதி மொழிகளில் மட்டும் தான் அமைந்திருந்தது)

சகலகலாவல்லவன்.


ருத்ரதாமனது வெள்ளி நாணயம்.

குஷானர்களைப்போலவே சக அரசர்களும் கிரேக்க மற்றும் மத்திய ஆசியாவின் வம்சத்தில் வந்தவர்கள்.
அப்படிப்பட்ட ருத்திரதாமன் சம்ஸ்கிருத பண்டிதனாகியது அவன் தனது மக்கள் (பிராமண மக்கள் சேர்த்து) மீது கொண்ட அன்பைக் காட்டியது…..
இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தானும் இந்து சமயத்தவராக மாறினான்.
ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருந்தான். தன் மருமகனான வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு திருமணப் பரிசாக, அபராந்தா எனும் நிலப்பரப்பை வழங்கினான்.
ருத்திரதாமன் தற்கால அரியானாவின் யௌதேயர்களை வென்றதாக கிர்நார் மலைக் கல்வெட்டுகள் கூறுகிறது.
ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் இருமுறை போர் புரிந்து வெற்றி கொண்டான். தோற்கடிக்கப்பட்ட தனது மருமகன் வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு தீங்கு வராமல் மன்னித்து அனுப்பினான்.
தோற்கடிக்கப்பட்ட எல்லா மன்னர்களுக்கும் ஆட்சியைத் திரும்பக் கொடுத்துப் புகழ் பெற்றான்.

கல்வியா.. செல்வமா.. வீரமா..?
இவை மூன்றும் சேர்ந்த மன்னன் ருத்திரதாமன்…

ருத்ரதாமன் அவையை  மிகப்பெரிய கிரேக்க எழுத்தாளர் ‘யவனேஸ்வரா’ அலங்கரித்தார். அவர் தான் கிரேக்க மொழியிலிலிருந்து சமஸ்கிருதத்தில் யாவனஜாதகா என்ற நூலை எழுதியவர்! 

அவன் சரித்திரக் கடலில் ஆழத்தில் ஒளிவிட்ட மாபெரும் முத்து!
அவனது கதை கூறி சரித்திரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டது…
இன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் அந்த அழகு ஜெகஜ்ஜோதியாக நவரத்தினங்களாக ஜொலிக்கவிருக்கிறது.

அந்த நாட்கள் விரைவில்…

செஞ்சுரி ! குறும்படம்

 

Image result for tendulkar and virat kohli

கிரிக்கெட்டில் செஞ்சுரி போடும் டெண்டுல்கர், விராட் கோலி பற்றி நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.

ஆனால் இவரது செஞ்சுரியைப்    பாருங்கள். இதைப் பார்த்தபின்  நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றினால் இந்தப் படத்தை எடுத்தவருக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் வெற்றி!

படம் சுலபமான ஹிந்தியில் உள்ளது!

 

தொலைத்துவிட்டோம்

இந்த முதல்  கார்ட்டூன் கருத்தை நாம் தொலைத்துவிட்டோம் ! 

நம்ம குழந்தைகளுக்கு இந்த சுகம் கிடைக்குமா?

இது கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்? 

நாம் தான்.  நம் ஆசைகள்  குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன என்பதை  இரண்டாவது படத்தை விடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது.

சம்மர் கேம்பும் கோச்சிங்க் வகுப்பும் போட்டுக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக்  கொலை செய்யும் நமக்கு என்ன தண்டனை கொடுப்பது? 

இது மாறவேண்டும். அதற்கு நாம் மாறவேண்டும். 

மாற்றுவோமா?  மாறுவோமா? 

 

 

 

வண்ணத்துப்பூச்சி – ஜெயந்தி நாராயண்

 

இன்னிக்கி காலைல சாத்விய ஸ்கூல்ல விடப் போன போது, “அம்மா இவங்கதாம்மா என்னோட மிஸ்” என்று அவள் காட்டியவளை எங்கியோ பார்த்த மாதிரி இருந்தது…

வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்த பின்னும், மனசு அந்த டீச்சரையே சுத்தி வந்து கொண்டிருந்தது… ஃபெமிலியரான முகமா இருக்கே… மூளையில் உள்ள அனைத்து ந்யூரான்களும் ஓவர் டைம் வேலை செய்ததில், அவளா இருக்குமோ என்ற முடிவுக்கு வந்தேன்… அடுத்த நாள் பள்ளி முடிந்து அவள் வெளியே வரும் வரை , அம்மா பசிக்கறது என்று கையை பிடித்து  தொங்கிக் கொண்டிருந்த சாத்வியை சமாதானப் படுத்திய படியே காத்திருந்தேன்…

வெளியே வந்தவுடன், ” நீ,..நீங்க ஹரிணி தானே”
ஆமாம் நீங்க”
ஹோலி க்ராஸ்ல தானே படிச்சீங்க”
யெஸ்”
“2000
10த் பாஸ் அவுட்தானே”
ஆமா நீங்க யாரு தெரியலயே”
நீங்க ஏ செக்‌ஷன், நான் சி செக்‌ஷன்… நான் ஆவ்ரேஜ் ஸ்டூடெண்ட் அதுனால உங்களுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இல்ல… ஆனா எப்பவும் முதல்ல வர உங்கள ஸ்கூல்ல எல்லாருக்குமே தெரியுமே”..
ஓ சாரி… ஒரே செட்ல தான் படிச்சுருக்கோம்… வா போன்னே பேசலாமே… சாத்வி உன் பொண்ணா… செம்ம ஸ்வீட் சைல்ட்..”

படு வாலாச்சே … க்ளாஸ்ல மேனேஜ் பண்ண முடியறதா.. ஆமா நீ எங்க குடியிருக்க..”

முதல்ல அண்ணா நகர்ல இருந்தேன்.. இப்ப இங்க பக்கத்துலயே அக்‌ஷயா அபார்ட்மெண்ட்ஸ்ல ஒரு ஃப்ளாட்டுக்கு வந்துட்டேன்… நாலு நாள் ஆச்சு”

அட அக்‌ஷயாவா… நானும்   அங்கதான் இருக்கேன்..”

அம்ம்மா, வீட்டுக்கு போலாம் என்று கிட்டத்தட்ட அழ ஆரம்பித்த சாத்வியை தூக்கிக் கொண்டு, “இதுக்கு மேல இவள என்னால சமாளிக்க முடியாது.. நீ எந்த ப்ளாக்ல இருக்க.”

டி ப்ளாக்…டி-5 ஞாயித்துக் கிழமை ஃப்ரீயாதான் இருப்பேன்  வாயேன்.. சாரி உன் பேர் கூட எனக்கு தெரியல”

மதுமிதா… கண்டிப்பா வரேன்”

இரவு வேலையிலிருந்து வந்த அருணிடம் எல்லாத்தையும் சொல்லிட்டு, “ஏங்க எப்பவுமே அவ டாப்பர் 10த் ல யும் அவதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்… அதுக்கப்புறம்தான் அப்பாக்கு ட்ரான்ஸ்வர் ஆகி நாங்க பங்களூருக்கு மூவ் ஆகிட்டோம்… இவ பெரிய டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிருப்பான்னு பார்த்தா நர்ஸரி ஸ்கூல் டீச்சரா இருக்கா… எனக்கு ஒண்ணுமே புரியலயே…”

இப்பல்லாம் லேடிஸ்க்கு ரொம்ப ஆபிஸ் ப்ரெஷர் தாங்க முடியறதில்லை… ஸ்கூல், பேங்க்குன்னு செட்டில் ஆகிடறாங்க,.”

இல்லீங்க அவ…” என்றவளை இடை மறித்து,
காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும் பேசாம தூங்கும்மா”

எனக்கென்னவோ அருணின் பதில் சமாதானமாக இல்லை…

ஞாயித்துக் கிழமை வேகமாக வேலயெல்லாம் முடிச்சுட்டு, “ஏங்க சாத்விய பார்த்துக்கங்க.. நான் ஹரிணி வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்”

ஏண்டி சும்மா ஒரு பேச்சுக்கு கூப்டா..  உடனே இப்டி ஓடணுமா… சரி குழந்தையும் கூட்டிண்டு போயேன்.. நான் கிரிக்கெட் மேட்ச் பாக்கணும் “


அவள கூட்டிகிட்டு போனா என்னால ஃப்ரீயா பேச முடியாது… சண்டே ஒரு நாளாவது குழந்தை கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க”

இன்னிக்கி இந்தியா பாகிஸ்தான் மேச்டி.. நிம்மதியா பாக்கனும்” என்ற அருணின் கதறலை காதில் வாங்காமல் செருப்பை மாட்டியபடி கிளம்பினேன்..

டி- 5 பெல்லை அடித்து விட்டு காத்திருந்தேன்… வெளிர் நீல சுடிதாரில் கதவை திறந்த ஹரிணி, நேற்று பார்த்ததை விட இன்னும் இளமையாக இருந்தாள்.. எனக்கு நீளமான ரெட்டை பின்னலுடன் ஸ்கூல் கேட்டில் காத்திருக்கும் அம்மாவை நோக்கி சிரிப்புடன் துரித நடையுடன் செல்லும் ஹரிணி நினைவுக்கு வந்தாள்.

அரை மணி நேரம் பொதுவான விஷயங்கள் பேசிய பிறகு, பொறுக்க முடியாமல் என் சந்தேகத்தை கேட்டே விட்டேன்..

சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்..
எதாவது தப்பா கேட்டனா..”

சே சே…அப்டில்லாம் இல்ல… எப்டி தொடங்கறதுன்னு யோசிக்கறேன்..  நீ குழந்தையா இருக்கறச்ச ஃப்ரெண்ட்ஸ் கூட விளயாடியிருக்கியா”

ம்..நிறைய..”

ஸ்கூலுக்கு எதுல போவ”

வேன்..செம்ம கலாட்டாவா இருக்கும்… ஆமா இதெல்லாம் எதுக்கு கேக்கற..”

Image result for school going child in tamilnadu

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.. வெளியே போக அனுமதி கிடையாது… தேவையானது எல்லாம் கிடைக்கும்.. ஆனா எது தேவைன்னு முடிவு பண்றது அப்பா அம்மா… ரெண்டு பேரும் என் கிட்ட உயிராத்தான் இருப்பாங்க.. ஆனா அவங்க ரெண்டு பேர தவிர யார் கிட்டயும் பழக விட மாட்டாங்க.. சின்ன வயசுல இந்த கட்டுப்பாடு பெருசா தெரில.. எப்பவும் செல்லமா கொஞ்சற அப்பா, அம்மா… சாப்ட வித விதமா கிடைக்கும்., அது தாண்டிய சந்தோஷங்கள் அதிகம் எனக்கு தெரியாமலே வளர்த்தார்கள்…  ஸ்கூல்ல யார் கிட்டவும் எதுவும் பேச மாட்டேன்… டீச்சர் சொல்றத கவனமா கேட்டு நல்லா படிக்கனும்… நிறைய மார்க் வாங்கனும்… பக்கத்துல யார் கூடயும் பேசக் கூடாது என்ற நிபந்தனைகள் ஒரு கட்டம் வரை பெருசா தெரியல… எப்பவும் க்ளாஸ் ஃபர்ஸ்ட்..
ஸ்கூல் வாசலிலேயே அப்பா அம்மா ரெண்டு பேரும் வெயிட் பண்ணுவாங்க…  நிறைய மார்க் வாங்கினா நல்ல பெரிய ஹோட்டல் கூட்டிண்டு போய் விதவிதமா சாப்ட வாங்கி தருவாங்க…  எனக்கும் அது ரொம்ப ஜாலியாத்தான் இருந்தது.. பத்தாவதிலும் நல்ல மார்க்.. நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்,.  நிறைய பரிசுகள்… பாராட்டுகள்..
நான் அதிகமாக யாரிடமும் பேசும் பழக்கம் இல்லாததால் எனக்கு ஃப்ரெண்ட்டுன்னு யாரும் கிடையாது,. நான் அதை ஒரு பொருட்டாவும் நினைத்ததில்லை,.

ரொம்ப போரடிக்கரேனோ.. இரு கொஞ்சம் ஜூஸ் கொண்டு வரேன்” என்றபடி கிச்சனுள் நுழைந்தவளை பின் தொடர்ந்தேன்..

இங்க தண்ணி வசதி எல்லாம் நல்லா இருக்கே… மார்க்கெட் கூட பக்கத்துல… நீ ரொம்ப வருஷமா இருக்கியா..”

ம்..நாலு வருஷம் ஆச்சு… நாங்க வந்தப்ப இருந்ததவிட இப்ப நல்லா டெவலப் ஆய்டுச்சு”

ஆளுக்கொரு க்ளாஸில் ஜூஸை ஊற்றி எடுத்தபடி ஹாலுக்கு வந்தோம்..

புன்னகையுடன்… “எங்க விட்டேன்… ஆங்..

ப்ளஸ் ஒன்ல வேற ஸ்கூல்லேர்ந்து வந்த ஆர்த்தி என் பக்கத்துல உட்கார்ந்ததோடல்லாமல் என் கிட்ட ரொம்ப பேச்சு கொடுக்க ஆரம்பிச்சா.  அவ பேசறத கேக்க எனக்கு ரொம்ப பிடிச்சது… சிரிக்க சிரிக்க பேசுவா.. நிறய ஜோக் சொல்லுவா..நான் இது வரை சினிமாவே பார்த்ததில்லை, என் வீட்டில் டி.வி கிடையாது, இது வரை எனக்கு ஃப்ரெண்டுன்னே யாரும் கிடையாது என்று நான் சொன்னதை முதலில் நம்பவே இல்லை.. அவளோட கம்பெனி எனக்கு ஒரு புது அனுபவத்த தந்தது,.  அவளுடைய வாக்கு எனக்கு தேவ வாக்கானது.. கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் கவனம் குறைய தொடங்கியது… வீட்டில் எப்பவும் போல கெடுபிடிதான் படிக்க.. ஆனால் வகுப்பில் எதையும் சரியாக கவனிக்காததால், வீட்டில் என்ன படித்தாலும் மண்டையில் ஏறவில்லை… கால் பரிட்சையில் ரெண்டு சப்ஜெக்ட்டில் ஃபெயில் என்றவுடன் அதிர்ந்து போனேன்… வாழ்வில் முதல் முறையாக தோல்வி… அப்பா அம்மா கேக்கவே வேணாம்.. கட்டுப்பாடு இன்னும் இறுகியது.. ஆர்த்தியின் நட்பையும் நல்ல மதிப்பெண்ணையும் பேலன்ஸ் செய்ய தெரியாமல், வீட்டிலும் நல்ல பெயர் எடுக்க முடியாமல்… புத்தகத்தை பார்த்தாலே ஒரு பயம் வர ஆரம்பித்தது.. படிக்க சொன்னால் ஓவென்று அழ ஆரம்பித்தேன்… வீடு நரகமானது… ப்ளஸ் ஒன் ஃபைனல் எக்ஸாம் எழுத போய்ட்டு பயந்து வெளில ஓடி வந்துட்டேன். அப்புறம் ஒரு வருஷம் ஒரே டென்ஷன் தான் வீட்ல… “

காலிங் பெல் அடிக்கவே பாதியில் எழுந்து போனாள்..

வீட்டை மிகவும் அழகாக வைத்திருந்தாள்… சுவரில் ஒரு பெரிய பெயிண்டிங்… கூட்டுப்புழு தன் கூட்டிலிருந்து வெளியே வண்ணத்துப் பூச்சியாய் பறப்பது போல்…

வந்த வேலைக்காரிக்கு தேவையான இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு, மதியம் சமையலுக்கு தேவையான காய், மற்றும் கத்தியுடன் வந்தாள்..  கேரட்டின் தோலை சீவியபடியே,

விஷயம் கேள்விப்பட்டு கோயம்புத்தூரிலிருந்து வந்த என் சித்தி அம்மாகிட்ட சண்டை போட்டு தன் கூட கூட்டிகிட்டு போனாங்க… அவங்களோட அன்பும், அவங்க கொடுத்த சுதந்திரமும் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்தித்து., ப்ரைவேட்டா ப்ளஸ் டூ எழுதி பாஸ் பண்ணினேன்… எனக்கு பிடித்த இங்லீஷ் லிட்ரெச்சர் படிச்சேன்… அப்புறம் விருப்பப்பட்டு மாண்டிசரி ட்ரயினிங்… ஆசைப்பட்ட இந்த வேலை… எப்பவும் குழந்தைகளோட குழந்தைகளா இருக்கும் போது, நான் இழந்த குழந்தை பருவத்தை மீட்டெடுக்க முயற்ச்சிக்கறேன்..” என்று புன் சிரிப்பு மாறாமல் முடித்தாள்..

உங்க வீட்டுக்காரர்” என்று நான் கண்ணை வீட்டின்  உள்ளே விட்ட போது 

Image result for an aged un married girn in tamilnadu chennai

இல்ல… கல்யாணம் பண்ணிக்கல… நாளைக்கு எனக்குன்னு ஒரு குழந்தை வந்தவுடன, என்னயறியாம என்னுடைய  நிறைவேறாத கனவுகளை குழந்தை நிறைவேத்தனும்னு அத படுத்துவேனோன்ற  பயத்துல பண்ணிக்கல..


இப்ப எல்லா குழந்தைகளயும் என் குழந்தையா நெனச்சு அதே சமயத்துல எந்த குழந்தை மேலயும் என் விருப்பத்த திணிக்காம… சந்தோஷமா போறது வாழ்க்கை”..

என்னுடைய கண் என்னயும் அறியாமல் சுவரில் இருந்த வண்ணத்துப் பூச்சியை நோக்கி சென்றது… கூட்டிலிருந்து தானாக வெளியே வர விடாமல்  கூட்டை குத்தி கிழித்து அவசரமாக பட்டாம்பூச்சியை அடைய விரும்பினால் என்ன ஆகும்…..

அப்புறம், என் மண வாழ்க்கை, கணவரின் வேலை, சாத்வி குட்டி, என பல டாபிக் பேசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..

மறுநாள், சாத்வியை ஸ்கூல்ல விடப் போன போது, குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தாள் ஹரிணி. .. இந்த அளவு இல்லாவிட்டாலும், போட்டிகள் நிறைந்த இன்றய  சமூகத்துல, குழந்தைகளுக்கு, அவர்கள் வயதுக்கான மகிழ்ச்சியும் கும்மாளமும் சரியான அளவு கிடைக்காமல் போய் விட்டதென்னவோ நிதர்சனம்…

விழியோரத்தில் துளிர்த்த நீரை சுண்டி விட்டபடி வண்டியை கிளப்பினேன்.

 

 

 

 

 

 

 

கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு

நீலிமா டால்மியா ஆதார் எழுதிய ” கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு “

The Secret Diary of Kasturba

 

சுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்று உலகமே தலை வணங்கும் பெயர் பெற்றவர்.

ஆனால் தன்னை விட 6 மாதம்  சிறியவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 13 வயதிலேயே   மணந்து  62 வருடம் அவருடன் காலம் கழித்த கஸ்தூரிபாவிற்கு அவர் எப்படிப்பட்ட கணவராக இருந்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி! 

அதனால்தான் கஸ்தூரிபாவின்  பார்வையில் அன்று நடந்த சம்பவங்களை தன்னிலையாக ஒரு டயரியின் வடிவில் கற்பனையாக நீலிமா டால்மியா ஆதார் எழுதியிருக்கிறார். 

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மறுபக்கம்  இருக்கும். இது காந்தியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம்.

மகாத்மா என்ற அவரது முகமூடியைக் கழற்றி உண்மையான முகத்தைக் காட்டும் நூல். 

ஒரு பெண்ணாக  கஸ்தூரிபா எப்படிப் போராடித் தோற்றார் என்பதை விளக்கும் அருமையான நூல். 

அன்பு, பாசம், துயரம், விரக்தி,பயம், கோபம், உணர்வு, பொறுமை, காமம்,  காதல் , உறவு  போன்ற எல்லா உணர்ச்சிகளையும் கஸ்தூரிபாவின் முகத்தில் காட்டும் நூல் இது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

காந்தியை நாம் தேசப்பிதாவாகத்தான் பார்த்தோம். ஆனால் இந்த நாவலில் அவரை ஹரிலாலின் தந்தையாக கஸ்தூரிபாவின் கணவனாக ஒரு சாதாரண மனிதனாகப் பார்க்கிறோம். 

நமது நண்பர் ஒருவர் இந்த ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். 

அது வெளிவந்ததும், கஸ்தூரிபாவின்  நாட்குறிப்பைத் தமிழிலிலேயே படிக்கலாம். 

அதுவரை ஆங்கிலத்தில் படியுங்கள் : ” The Secret Diary of  Kasthurba” 

Product details

 

ஸ்ரீ ராம ஜெயம் – சிந்தனை – வலையில் வந்தது

 

Image result for பகவான் சனி ஆஞ்சநேயர்

விட்டு விட வேண்டும்- மாலதி சுவாமிநாதன்

Related image

க்ளினிக் வந்து சேர்ந்தேன். கண்ணுக்குப்பட்ட முதல் காட்சி – ஒரு 35 (?) வயதுள்ள பெண்மணியின் பூப்படர்ந்த புடவையின் தலைப்பை அவளை ஒட்டி உட்கார்ந்த பையன் இழுத்து, இழுத்து, அவள் தலைப்பை சரி செய்ய, அவன் அதை இழுத்து விட்டு, “போடி போடி” என முணுமுணுத்து, அவளைக் கிள்ளி, மடியில் இருந்த பையைத் தட்டி விட்டான். பக்கத்து நாற்காலியில் ஒருத்தர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

இவர்களே, அன்று, என்னுடைய முதல் க்ளையன்ட். உள்ளே அழைத்தேன். அந்தப் பெண்மணியை அட்டைபோல் ஒட்டிக் கொண்டு அந்தப் பையன், அவளைக் கிள்ளியபடியே (பளிச்சென்று பல வடுக்கள் அவள் வெளிர் சருமத்தில்) உள்ளே வர, அந்தப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் “குட் ஈவ்னிங் மேடம்” என்றபடி ஜம்முனு சென்ட் மணக்கக் கையில் புத்தகத்துடன் “ஐ யாம் ஹிஸ் ஃபாதர்” என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்தார். அந்தப் பெண்மணி, அம்மா என யூகித்தேன்; கசங்கின புடவை, ஜூன் வெப்பத்தின் வியர்வை, பொட்டை கலைத்துச் சிவப்பாக வழிந்தபடி இருந்தது.

Image result for mother father and a problem son taken to psychiatric assistance in chennai

விவரிப்பில், பள்ளி கொடுத்த கடிதம் தந்தார்கள். அதில் சுனிலின் விவரம் புரியவந்தது. சுனில், ஆறாவது வகுப்பு வந்திருக்கிறான். அம்மா தன்னுடன் இருந்தால் மட்டுமே வகுப்பு செல்லத் தயாராம். இல்லா விட்டால் TV, ரிமோட், அம்மாவின் கருகுமணி தாலி, மேசையின் கண்ணாடி எனக் கையில் கிடைப்பதை உடைப்பானாம். அம்மா மீனா, குழந்தை என்று விட்டு விடுவாளாம். இந்த இரண்டு மாதங்களாக பள்ளி போனால், ஒரே இடத்திலேயே நிற்பது, துப்புவது, இல்லை சிணுங்குவது. ஆசிரியர், மன நல உதவி தேவை என்று கருதி, என்னிடம் (ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர்) அனுப்பி வைத்திருந்தார்.

சுனில், இங்கு வர இஷ்டப் படவில்லை. அதனாலேயோ என்னவோ, முழுதாக விவரித்திருந்த ரிப்போர்டை waiting hallலில் கிழித்துக் கடாசி விட்டான் என அவன் அம்மா வந்த சிரிப்பை அடக்கி விவரித்தாள். அப்பா குமார் “சுனில்” என்று குரல் உயர்த்தினார். முப்பது வினாடி அவகாசம் கொடுத்த பின் “சரி, உனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவைதானே?” என்றேன். தலை அசைத்தவாறு “ஸோ” என்றான். கிழித்த பேப்பரை ஒட்டி தரச் சொன்னேன். “ஐயோ, நானே” என்று அவன் அம்மா குறுக்கிட்டாள். குமார் “நன்னா நாலு சாத்து சாத்தணும். Fool” என்றார். இருவருக்கும் சேர்த்தாற்போல்  சொன்னேன், “சுனில் இந்தக் கடிதத்தை மதிக்கவில்லை. ஸோ கிழித்தான். சுனிலே ஒட்டுவான், ரைட் சுனில்?” அவன் இதை எதிர்பார்க்கவில்லை, முறைத்தான். அமைதியில் இரண்டு வினாடி நகர்ந்தது. கோந்து பாட்டிலை சுனில் எதிரே வைத்தேன். ஒட்டி, ஸாரீ சொல்லித் தந்தான். பிறகு வருவாயா என்று கேட்டதற்கு, “சரி” சொன்னான்.

மறு வினாடி, அம்மாவைக் கிள்ளி “பாப்பின்ஸ் தாடி” எனக் கேட்டான். அவள் புன்முறுவலுடன் பசையான அந்தப் பாப்பின்ஸ் பேப்பரை கிழித்து அவனுக்கு வாயில் போட்டாள். அப்பாவைப் பார்த்து சுனில் “ஏய், வரியா”? பதிலுக்கு அவர், “வாடா குழந்தை ” என்று சொல்லி அழைத்துக் கொண்டுபோனார்கள். சில சமயங்களில் நெருக்கங்கள் நம்மைப் பலவீனம் ஆக்கலாம், இங்கு இடையூறானதோ?

சுனில் ஏன் இப்படிச் செய்கிறான்? இந்தச் சூழலின் தன்மைகள், பராமரிப்பில் விதங்கள், கட்டுப்பாடுகள், குடும்பத்தினரின் உறவுமுறை, வலிமைகள், இடையூறுகளை அறிந்து, அவன் செய்யும் துன்புறுத்தல் ஏன்-எப்போது உருவாகியது, அது அமைந்து-நிலவுவதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

மீனா, மதிய உணவு இடைவேளைக்கு இரண்டு பீரியட் முன்பு சென்று, 2 பீரியட் பின்பு வீடு திரும்புவாள். இது நல்ல கவனிப்பு என்றே எண்ணினாள். குமாரும், வீட்டில் இருப்பதற்கு, சுனில் பள்ளியில் எப்படிப் படிக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வது நன்றேயென ஆமோதித்தார். அவருக்குப் படிப்பு நன்றாக இருக்க வேண்டும். அது போதும். இவன் படிக்கும் பள்ளியின் சுவர் சற்று குட்டையாக இருந்ததால் தன் அம்மாவை க்ளாஸில் இருந்தபடி பார்க்க முடிந்தது. இந்த வருடம் க்ளாஸ் பின்புறம் அமைய, அவனால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அதனால்தான் பக்கத்தில் இருக்க வற்புறுத்தினான்.

வீட்டில், இவன் ஒரே பையன், கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. குமார் பூனேயில் தனி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தபோது சுனிலின் அக்காக்கள் ரேகா, ராகி பிறந்தார்கள். குமார்,1972இல் துபாய் போக நேர்ந்தது. மீனா தன் கணவரைப் பிரிய விருப்பப் படவேயில்லை. அவரும், மீனாவை தன்னோடு வந்தாக வேண்டும் என்றார். 11 வயது ரேகா, 9 வயது ராகி, மதுரையில் பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டார்கள்.

துபாய் சென்று,1978இல், மீனா சுனிலைப் பிரசவிக்க மதுரை திரும்பினாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகே அம்மா-மகள்கள் சந்தித்தார்கள், அந்நியர்கள்போல். ஆறு மாதங்கள் கழித்து, குமாரும் திரும்பினார். மதுரையில் 6 மாதம் வசித்தார்கள். பிறகு, பூனேயில் வீடு வாங்கி 5 பேரும் குடி ஏறினார்கள். 1982யில் டில்லி, மும்பை, குவைட் என்று குமாரின் வேலை அமைந்தது. இவர் இன்ஜினியர்; சீனியர் மேனேஜர், தாராள மனசு, படிப்பு விஷயத்தில் மிகக் கண்டிப்பு. வேலையில் இங்கும் அங்குமாக இருந்ததால் வீடு சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளும் மீனாவுடையதே – முழு சுதந்திரம் இருந்தும் ரசிக்கவில்லை. இவற்றை, பாரம், சலிப்பு, எரிச்சல் என்று விவரித்தாள். மீனாவுக்கு முடிவுகள் செய்வது, குடும்பத் தேவைகளை பார்த்து – பூர்த்தி செய்வதே பிடிக்கவில்லை.

இவள், சுதந்திரமாகத் திரிந்தவள். மீனா தன் அம்மாவின் செல்லக் குழந்தை. பி.யூ.சி முடித்து, 19 வயதில் கல்யாணம். இதுவே அம்மாவிடமிருந்து முதல் பிரிவு. அவள் மாமியார் “புக்காமே உன் ஆம்” என்று சொல்லியதால், மீனா அம்மா வீட்டுப் பக்கம் போகவே இல்லை. வேலை செய்யத் தவிப்பாள். அம்மா கூடவே செய்து பழக்கம். மாமியார், பருப்பு கேட்டால், முழிப்பாள், எது எந்தப் பருப்புனு தெரிய வாரங்கள் ஆயின. வெண்ணெய், நெய் காய்ச்சும் படலம் மீனாவுக்கு ஒப்பாது. பல தடவை மீனா இட்லி வாத்து, குக்கருக்கு whistle போட்டதும் உண்டு. குழந்தை பிறந்தவுடன், எதை, எப்போது செய்வது என்று தடுமாறினாள். மாமியார் உதவிக்கு வரமாட்டாள். “நீயே செய், அப்போதுதான் வரும்” என்று இருப்பாள்.

சுனிலின் குழந்தைப் பருவத்தில், குமார் தன் குடும்பத்தை பூனேயில் விட்டுவிட்டு 8 வருடத்திற்கு குவைட் சென்றார். தன் அம்மா வீட்டுக்குப் போகவில்லை என்றாலும், இவர் பக்கத்தில் இருந்தது பக்கபலமே. இந்தப் பிரிவின் துக்கத்தை அவளுக்கு சமாளிக்கத் தெரியவில்லை.

ரேகா, மூத்தவள். சின்ன வயதில் பெற்றோரால் ஆன பிரிவில் யாரையும் நம்பிவிடக் கூடாது என்று தன் வேலைகளைத் தானே செய்து பயின்றாள். பருவம் அடைந்த வயதில் வீட்டில் தம்பிப் பயல் பிறந்தான். “இவன் என் தம்பி” என சொல்லக் கூச்சமாக இருந்தது. பிறந்த குழந்தையின் கூச்சல், தூக்கப் பழக்கம், அவனுக்குச் செய்யும் சிஷ்ருஷையாலேயே பத்தாவதில் மதிப்பெண் குறைந்தது. இவளுக்கும், சுனிலுக்கும் 14 வயது வித்தியாசம் ஒரு உறுத்தலாகவே இருந்தது. இவள், படிப்பில் மிகக் கெட்டி, கை வேலையில் சிறந்தவள், சமைப்பது ருசியாக இருக்கும்; இருந்தும் தன் குறைகளேயே அதிகமாகப் பார்ப்பாள்.

ராகி, வெட்கப்படும் சுபாவம். யாரிடமும், எதையும் சொல்லமாட்டாள். சுனில் அவள் பொருளை எடுப்பான், கிழிப்பான், உடைப்பான். “குழந்தைதானே” என்று விட்டு விடுவார்கள். இவளுக்கு யாரும் ஆறுதல் சொன்னதில்லை. 11 வயது இடைவேளை இருந்தும், அவனைத் தூக்கினதோ, தன்னுடன் கூட்டிக்கொண்டு போனதோ இல்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, இன்ஜினியரிங்கும், விஸ்காமும் படித்தாள். பல பரிசுகள் பெற்றாள்.

அக்காக்களிடமிருந்து சுனில் விலகியே இருந்தவன், அம்மாவிடம் ஒட்டினான். கல்யாணம், மீனாவை அம்மாவிடமிருந்து பிரித்தது, வேலையினால் கணவரைப் பிரிய நேர்ந்தது. தன்னுடன் இருக்கத் தானோ, சுனிலுக்கு சோறு ஊட்டி, குளிப்பாட்டி, உடை அணிவித்து அக்கறை என்று 7-8 வயது வரை, மறைமுகமாக 9-10 வரை செய்தாள். அவன் விளையாட்டு தோழனும் ஆனாள். அவளுடன் தூங்கினான். அவள் எங்குச் சென்றாலும், அவனும் கூடவே போவான். இவளுக்கு இது இதமாகவே இருந்தது.

குமார் பூனே திரும்பினார். வீட்டைப் பார்த்து வியப்பும், கோபமும் சூழ்ந்தது. அவர், சுனில் தன் வேலையைத் தானேசெய்யவும், விலகித் தூங்கவும் சொன்னார். அவனால் முடியவில்லை. மீனாவும் மறுத்தாள். இதனால், வாக்குவாதம் நீண்டது, கூச்சல் குழப்பம் உண்டானது.

ரேகா, ராகி, சுனில் படிக்கும் நேரம் குமார் கேள்வி கேட்பார். பதில் தவறாக இருந்தால், மீனா, சுனில் பக்கத்தில் இருப்பவளைப் பார்த்து “வேறு என்ன வேலை?” என்றும், தொடர்ந்து “முட்டாள், அதான் மேல படிக்கல, முட்டாள்” என்பார். பசங்களும் “அப்படியென்றால் அம்மா மக்கு”, என்று நினைத்தார்கள். சுனில் அவளை “ஏய் மக்கம்மா” எனக் கூப்பிடுவான். மரியாதை வலுவிழந்தது.

இருந்தும், மீனா, சுனில் எதைச் செய்தாலும் சபாஷ் சொல்வாள், முழு பாப்பின்ஸ் பேக்கட் தருவாள். ரேகா, ராகி இவளிடமிருந்து என்றும் பாராட்டு பெற்றதில்லை. ஈடு கட்டுவதுபோல் பள்ளியில் பாராட்டு குவியும். எல்லா ஸப்ஜெக்டிலும் நன்றாகச் செய்ய, ஆசிரியர்கள் அன்பாக அழைத்துப் பேசுவார்கள். வீட்டில் சலிப்பு தட்டி இந்த மூன்று பெண்களும் விலகியே இருந்தார்கள்.

சுனில் எது கேட்டாலும் கிடைத்துவிடும். கேட்டதை அக்காக்கள் கொடுக்காவிட்டால், திட்டுவான், எச்சில் துப்புவான், கடிப்பான். மீனா கொடுக்க வற்புறுத்துவாள். அப்படியும் மறுத்தால், சுனிலிடம் “எப்படியானும், நாம வாங்கிடலாம். அடிச்சி வாங்கி தரேன்”, என்பாள். இதன் பல வடுக்களை அக்காக்கள் அணிந்திருந்தார்கள். சுனில், எது செய்வதற்கு முன்பும் “டேய், பாப்பின்ஸ், ஃபிங்கர் சிப்ஸ் தரேன், பண்ணு.” எனக் கெஞ்சுவாள். பெற்றோர் பிள்ளைக்குத் தரும் லஞ்சம்: ஒரு ஆயுதமே!

ரேகா, 22ல் மேல் படிப்பு முடித்து, கேம்பஸ் ப்ளேஸ்மென்டில் கெளரவமான உத்தியோகம் அமைந்ததும்,கல்யாணம் செய்து விட்டார்கள். தன்னை மறுபடியும் தள்ளி விட்டார்கள் என்றே தோன்றியது. கணவர் மூர்த்தி மீதும், அவர் குடும்பத்தினரிடமும் அன்பயைம், கவனிப்பையும் பொழிந்தாள். இவள் இல்வாழ்வு கனடாவில் அமைந்தது. கல்யாணமான முதல் 6 மாதம் அம்மாவிடம் பேசமறுத்தாள். கடிதங்களுக்குப் பதில் எழுதவில்லை. தள்ளிவிட்டார்கள் என்ற தர்க்கத்தை மூர்த்தி ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் தூண்டுதலில் கடிதப் போக்கு தொடங்கியது. முதலில், குற்றச்சாட்டுகள் குவிந்தது, தொடர்ந்து “ஐயோ, தப்பு, மன்னித்துக்கொள்”, பிறகு கருணை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

Related image

இருந்தும், சுனில் மேல் வெறுப்பு வாட்டியது. அம்மா விவரித்தபின், க்ளினிக் போகவேண்டிய சூழ்நிலையை அறிந்து கொண்டாள். முதல் நாளின் நிகழ்வுகளை மீனா விவரித்தாள். அவன் துப்பினான், கத்தினான் ,ஆனால் சுத்தமும்படுத்தி, கேள்விகளுக்கும் பணிவாக பதிலும் சொன்னான் என்று.

மீனாவுக்கு “இப்படியும் செய்ய முடியும்” என்று தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் கூட சின்ன அச்சம்,எங்கே சுனில் தன்னை விட்டு விலகி, மேடம்மேல்  பாசம் கொள்வானோ என? அக்கறையாக, க்ளினிக் செல்வதற்கு முன், இப்படி இருக்கலாம், அப்படி ஆகலாம் என சுனிலைத் தயாரித்துக் கூட்டிச் சென்றதில் அடம் அதிகமானது. அம்மா-மகனை வெவ்வேறு நாட்கள் பார்க்க முடிவானது.

சுனிலுடன் என்னுடைய பரிமாற்றம், கதைகள், க்ளே மாடலிங், எனக் கலந்ததாக இருந்தது. அம்மா பக்கத்தில் இருந்தாக வேண்டும் என்றான். முதலில் கதவருகில் உட்கார்ந்தாள், பின்னர், கதவு திறந்து பார்த்தவாறு; ஐந்து செஷனில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கருடன்மட்டும் என ஆனது. மீனா அடம் பிடிப்பதை  சுதாரிப்பதை அணுகும் முறைகளைப் பார்க்கலானது.

குமாருக்கோ, அவர் பங்குக்கு, படிப்பைத் தவிர, சுனி்லுடன் ஆலோசித்து, இருவருமாகச் சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும். இது, டென்னிஸ் விளையாடத் தொடங்கி, சைக்கிளில் டபுள்ஸ், தோட்ட வேலை, கேரம் எனக் கூடிக்கொண்டேபோனது. தன் வயதுள்ளவர்களுடனும் சுனில் விளையாடத் தொடங்கினான்.

இதே சமயத்தில், சகோதரிகள் அவனுடன் க்ளினிக் வர ஆரம்பித்தார்கள், அம்மாவை விட்டுப் பழகவும், இவர்களின் இடையே இடைவெளி குறைப்பதற்காகவும். அம்மா தன் பக்கம் இல்லாமல் பள்ளியில் இருக்க முடியும் என்ற ஆலோசனை தொடங்க, மீனாவும் நானும் பள்ளிக்குச் சென்று விவரித்தோம்.

பள்ளியில், மிகக் கனிவுடன் சுனிலை வரவழைத்து, தகவலைப் புரிந்து, ஒத்துழைத்தார்கள். முதல் நாள் அவன் தட்டுத்தடுமாறி, முழித்து, கை பின்னி நின்றான். இப்படி ஆகக் கூடும் என்றே முன்னாலேயே அவன் க்ளாஸில் பொதுவாக, கனிவு-பதட்டம், பயம்- ஆதரவு ஜோடிகளைப் பற்றிய வர்க்க்ஷாப் நடத்தினேன். அதன் பிரதிபலிப்பு – சுனில் முழித்தபோது நான்-நீ என அவனுக்கு ஆதரவு குவிந்தது. தினம், முன்றைய தினத்தை விட, அம்மாவின்றி பள்ளியில் இருக்கும் நேரம் கூடியது. பள்ளி பழக ஆரம்பித்தான்; தயக்கமும், தைரியமும் கலந்து இருந்தது. மீனா சுனிலைப் பிரிந்து தத்தளித்தாள். அவளுக்குப் பிடித்த பூத்தையல் கை வேலையானது, கவலை கவ்வாமல் காத்தது.

வெவ்வேறு பரிமாணங்கள் அமைந்ததால், தயங்கி-தயங்கி பாசம் காட்டி, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியானார்கள். பெற்றோருக்குள் கருத்து வேறுபாடு எழுந்தால், கதவை மூடிக் கொண்டோ, பிள்ளைகள் இல்லாத இடத்திலோ தங்கள் தர்க்கத்தை வைத்துக் கொண்டார்கள். சுனில்-ரேகா-ராகி பரிச்சயம், அம்மா-பெண்களின் நெருக்கம், மாப்பிள்ளை மூர்த்தி வரப்பிரசாதமானது இன்னொரு கதையே!

பாதுகாப்பின்மையின் தோற்றங்கள்

முடியவே முடியாது என்போம், சஞ்சலத்தில்!

கூடவே கூடாது என்போம், சந்தேகத்தில்!

என்னுடையது, எனக்கு மட்டும் என எண்ணுவோம்!

பாரபட்சம் காட்டுவோம், பகிர்ந்து கொள்ளவே மாட்டோம்!

பிடிவாதம், கோபம், நம் பாதுகாப்பின்மையின்

நிலையற்ற நிலையின் “வார்த்தைகள்”!

 

 

 

துருப்பைத் தொலைத்தேனே ! (எஸ் எஸ் )

 

Image result for கவிஞனின் சோகம்

(இது கண்ணதாசன் எழுதியதுமில்லை ! அவரைப்பற்றிய கவிதையும் இல்லை . பின்னே அவர் படம் எதுக்கு? யாருக்குத் தெரியும்? ) 

கல்லைக் காலில் கட்டிக் கொண்டு 
   கிணற்றில் குதித்த எருமை போல்
மஞ்சக் கயிற்றைக் கட்டிக் கொண்டு 
   வாழ்க்கைக் கிணற்றில் விழுந்தேனே!

நெய்யை உடம்பில் தோய்த்துக் கொண்டு 
   நெருப்பில் குதித்த  விட்டில் போல் 
பொய்யை உடம்பில் போர்த்திக் கொண்டு 
   வாழ்க்கை நெருப்பில் விழுந்தேனே!

மலையில் வெடித்த பாறை உருண்டு
   மடுவின் அடியில் விழுந்தாற்  போல்  
தலையில் அட்சதை போட்டுக் கொண்டு 
   வாழ்க்கைச் சரிவில் உருண்டேனே! 

குளத்தில் பூவைப் பறிக்கச் சென்று 
   புதையும் குழியில் அழுந்தாற் போல் 
உளத்தில் உள்ள அழுக்கில் வழுக்கி  
   வாழ்க்கைச் சேற்றில் விழுந்தேனே !

பரந்த  கடலில் படகில் சென்று 
   துடுப்பை நடுவில் தொலைத்தாற் போல் 
பிறவிக் கடலில் நீந்தி  நானும் 
   வாழ்க்கைத் துருப்பைத் தொலைத்தேனே!

நஞ்சைக்  கலந்த  நீரை மொண்டு 
   அள்ளிக் குடித்த மாடு போல் 
நெஞ்சைப்  பிசைந்த துன்ப வலியில் 
   வாழ்க்கைத் துயரை முடித்தேனே! 

Related image

படம் சொல்லும் பாடம் என்ன ?

முதலில் எழுத்தாணி – 

பிறகு சிலேட்டு, கரும்பலகை, இறகுப் பேனா , பவுண்டன் பேனா , பென்சில்,  பிரிண்ட்,  பால்பாயிண்ட் பேனா,   ஸிலைட் ரூல் , ஸிடென்சில், செராக்ஸ் , கால்குலேட்டர், கம்ப்யூட்டர், லேப்டாப், ஐபேட்

படிப்பதற்கு இத்தனை உபகரணங்கள்!  

Image result for writing on a palm leaf

Image result for school kids slates in india

 

chalkboard

Image result for quill pen

 

Image result for first fountain pen invented

pencil

overhead-project

ballpoint-penSlide rule and case

 

photo-copier

 

calculator

 

plato-computer

 

whiteboard

xo-laptop

ipad

‘கண்டதை’ எழுதுகிறேன் – ரகுநாதன்

Image may contain: 1 person

 

”என்னை ஒண்ணும் பேசச்சொல்லமாட்டாங்களே?”

சிரித்துக்கொண்டே கேட்டார்.

” நானும் லதாவும் சரியா ரெண்டரைக்கு வந்துடறோம்!”

தயாராக வாசலிலேயே காத்திருந்தார். அவர்வீட்டிலிருந்து அண்னா நூலகம் வரும் வரை சிரிக்காமல் வரவே முடியவில்லை. பட் பட்டென்று தெறித்த யதார்த்த நகைச்சுவை.

“ இந்த Gucci அப்புறம் Leno Perosஆமே, நான் என்னத்த கண்டேன்! அமெரிக்காவுல பசங்க வாங்கிக்கொடுத்தாங்க நான் வெச்சுண்டு சுத்திண்டு இருக்கேன்!”

“ அத்தன தூரம் போணுமேன்னு தயக்கமா இருந்தது. எனக்கோ 70க்கு மேல ஆயிடுத்தே. இங்க தனியா இருக்கறத விட தேவலைன்னு குரூப்போட நானும் முக்திநாத்துக்கு கிளம்பிட்டேன். ஏர் போர்ட் போனாத்தான் தெரியறதுப்பா, வந்த குரூப்புலயே நாந்தான் சின்னவ! எல்லாம் தொண்டு கெழமான்னா இருந்தது!”

சரமாரியாகப் பேசிக்கொண்டு வந்தார்.

”சுஜாதா என்னும் பன்முக ஆளுமை – ஒரு அமர்வு”

நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக மேடம் சுஜாதாவை அழைத்துக்கொண்டு போயிருந்தோம்.

நாள்  முழுவதும் நடந்த அபார நிகழ்ச்சி. அவரின் நாவல்கள். சிறுகதைகள். கவிதைகள் , நாடகங்கள், சினிமா என சுஜாதாவின் ஆளுமை பற்றிப்  பலர்  பேசிய அருமையான நிகழ்வு.

இரா முருகன் சிறுகதைகள் பற்றியும், எம் பி மூர்த்தி நாடகங்கள் பற்றியும், அடியேன் கட்டுரைகள் பற்றியும் பேசினோம்.

இன்னும் பாஸ்கர் சக்தி, சாம்ராஜ், ஹாலாஸ்யன் ஆகியோரும் பேசினார்கள்.

மேடம் சுஜாதாவை பேசச்சொன்னபோது முதலில் தயங்கிப்  பின்னர் சுருக்கமாகப்பேசினார்.

எல்லா அப்ளாஸையும் அவரே வாங்கிக்கொண்டுவிட்டது சந்தோஷமான சம்பவம்!

வெளியே வரும்போது மேடம் சுஜாதாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளப் பெரிய க்யூ!!.

வந்திருந்த அவையோரில் Rangarathnam Gopu மற்றும் நகுபோலியன் Balasubramanian Natarajan , Vijayaraghavan Uppilly வந்திருந்தது எதிர்பாராத சந்தோஷம்.

அபாரமாக நடத்தின வாசகசாலை அமைப்புக்கும் கார்த்திகேயனுக்கும் நண்பர்களுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும்.

ஹலோ……. அழகியசிங்கர்

Image result for bank staff photo
எனக்கு ஹலோ சொல்லப் பிடிக்காது. யாரையாவது பார்த்து ஹலோ சொல்வது குட்மார்னிங் வைப்பதையெல்லாம் நான் வெறுக்கிறேன்.

அதற்கு முதல் காரணம் எனக்கு இப்படிச் சொல்வது இயல்பாக இருப்பதில்லை. ஏன் இன்னும் கேட்டால், யாருக்கும் இயல்பாக இல்லாத விஷயம்தான் என்று எனக்குத் தோன்றும்.

நான் அலுவலகத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன. நான் யாருக்கும் ஹலோ சொன்னதில்லை. அதாவது இயல்பாகச் சொன்னதில்லை. செயற்கையாகத்தான் சொல்லியிருக்கிறேன். அல்லது சொல்வதற்குமுன் ரொம்பவும் யோசித்திருக்கிறேன். அதனால் அதிகாரிகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். மரியாதை தெரியாதவனாக இருக்கிறான் என்று திமிராகச் சிலர் நினைக்கக்கூடும். அதேபோல் என்னைப்பார்த்து யாராவது ஹலோ சொன்னால் எனக்கு சிரிப்புதான் வரும். அதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்பதும் எனக்குத் தெரியாது.
ஆனால் உண்மையில் நான் எல்லோருக்கும் ஹலோ சொல்லி சௌஜன்யமாய் இருக்க நினைப்பதுண்டு. ஆனால் அப்படி இருக்கும்படியான சூழ்நிலை ஏற்படுவதில்லை.
உண்மையில் பல ஆண்டுகள் இது ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை. என் இயல்பை அறிந்து பலர் அதைக் கண்டுகொள்வதில்லை.

கடந்த பத்தாண்டுகளாக இந்த வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். பல அதிகாரிகளுக்குக் கீழ் நான் இருந்திருக்கிறேன். ஒரு சமயத்தில் நான் தினமும் தாமதமாக வருவதைப் பார்த்து ஒரு அதிகாரி என்னைப் பார்த்து ஏன் தாமதமாக வருகிறாய் என்று கேட்டதில்லை. நான் தினமும் எதிர்பார்ப்பேன். தாமதமாக வருவதைப் பார்த்து என்னைக் கண்டிப்பாரென்று. ஆனால் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவருக்குக் கூட நான் ஹலோ சொன்னதில்லை.

ஒருமுறை அவரைப் பார்த்துக் கேட்டேன். “ஏன் நீங்கள் என்னைக் கேட்கவில்லை? தாமதமாக வருவதைப் பற்றி,”  அவர் சிரித்துக் கொண்டாரேதவிர, கேட்கவில்லை.

ஆனால் அவரிடம் எனக்குப் பிடிக்காத ஒன்று உண்டு. அவர் அடிக்கடி சிகரெட் பிடிப்பார். அவரிடம் அந்தச் சிகரெட் ஸ்மெல் தாங்கமுடியாமலிருக்கும். சிலசமயம் அவர் அதிகாரியாக இருப்பதைவிட அந்தச் சிகரெட் ஸ்மெல்லாக மாறிவிட்டிருப்பாரோ என்று தோன்றும். ஏன் இவ்வளவு சொல்கிறேனென்றால், ஒருவர் ஹலோ சொல்ல வேண்டுமென்றால் அதற்குத் தகுதியான நபர் அவர்தான் என் அலுவலகத்தில். ஜென்டில்மேன் .

அதன்பின் வந்த பல அதிகாரிகள் திமிர் பிடித்தவர்கள். அவர்கள் எனக்கு முன்னால் வங்கியில் சேர்ந்து, எந்தவிதமான திறமைகளையும் வளர்த்துக்கொள்ளாமல், பதவி உயர்வு பெற்றவர்கள். அதனாலேயே அவர்கள் உலகத்தில் எதையோ சாதித்துவிட்டதாக நினைத்துக் கொள்பவர்கள். அவர்களைப் பார்த்து ஹலோ மட்டுமல்ல, பேசக் கூடப்பிடிப்பதில்லை.

உண்மையில் நான் மரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன். அந்தக் காரணத்தினாலேயே புதிதாகச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒரு நாள் நான் ஹலோ சொன்னேன். அவரோ அதைப் பற்றி சிறிதும் கவனிக்கவில்லை. அவருடைய அந்தத் திமிரைப் புரிந்துகொண்டபிறகு நான் அவருக்கு ஹலோ சொல்வதை நிறுத்திவிட்டேன். இப்படி சில பிரகிருதிகள் உண்டு. என்ன செய்வது? நிறுத்திவிட்டேன்

ஒரு சமயத்தில், நான் ஸ்பெஷல் அசைன்மென்டிற்காக ஒரு ஓய்வுபெற்ற அதிகாரிக்கு உதவியாளராக இருந்தேன். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கான பணி அது. அவருக்கென்று பிரத்தியேகமான அறை. இன்னும் இரண்டு மூன்று அதிகாரிகளுடன் அவர் பந்தா பண்ணுவதற்கு ஏற்பாடாயிற்று. அவர் வங்கி சம்பந்தமான எல்லாப் புத்தகங்களையும் தருவித்து அதிலிருந்து பக்கம் பக்கமாகக் குறித்துக்கொண்டு அப்படியே என்னை அடிக்கச் சொல்வார். பின் அது குறித்து எதோ யோசனை செய்வதுபோல் பாவனை செய்வார். அவருக்கும் இன்னொரு குட்டி அதிகாரிக்கும் அடிக்கடி சண்டை வரும்.
முதன்முதலாக அவர்தான் என்னைப்பார்த்து, “ஏம்பா நான் இந்த வங்கியில் பல வருஷமா டிஜிஎம்மா இருந்திருக்கிறேன். அதுக்கு மதிப்பு தந்தாவது, ‘ஹலோ’, ‘குட் மார்னிங்’ சொல்லக்கூடாதா?” என்று கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டவுடன், குட்மார்னிங் சொல்கிறது முக்கியம்னு தோன்றியது. ஆனால், நான் வழக்கம்போல் அவரைப் பார்த்து ஹலோ சொல்ல மறந்துவிடுவேன்.

ஒருமுறை அவரைப் பார்த்துச் சொன்னேன் : “எனக்கு இது இயல்பா வருவதில்லை,” என்று. ஆனாலும் அவர் விடாமல் அலுவலக அறைக்கு நுழைந்தவுடன், என்னை குட்மார்னிங் சொல்ல வைத்துவிடுவார்.

பொதுவா அலுவலகம் மட்டுமல்ல, வெளியில் கூட நான் ஹலோ சொல்வது கிடையாது. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என் வீட்டில் யாராவது விருந்தாளி வந்தாலும், என் இயல்பா இருந்துவிடுவேன். ஆனால் என் மனைவி, மரியாதைத் தெரியாதவன் என்று கோபித்துக் கொள்வாள். ‘என்ன மனுஷனோ யாராவது வந்தால் விசாரிக்கக் கூடத் தெரியாது,’ என்று பலமுறை அவள் முணுமுணுத்திருக்கிறாள். நான் என்னைச் சரி செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், பழையபடியே இருந்துவிடுவேன்.

Image result for grand father and grand daughter in tamilnadu

மடிப்பாக்கத்திலிருந்து என் பேத்தி மதுவந்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். என்னைப் பார்த்து மதுவந்தி,” என்ன தாத்தா நீ யாருக்கும் ஏன் குட்மார்னிங் சொல்ல மாட்டேங்கறே?”என்று கேட்டாள்.

“யார் சொன்னா?”
“பாட்டிதான்..”
“எப்ப சொன்னா?”
“அது இருக்கட்டும்..நான் ஸ்கூல் போனாக்கா எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்லணும்னு மிஸ் சொல்லியிருக்கா…அது நல்ல பழக்கமாம்..”

“நான் படிக்கும்போது யாரும் என்கிட்ட அதுமாதிரி சொல்லலை..”
“நான் உன்கிட்டே இனிமே குட்மார்னிங் சொல்லித்தான் பேசுவேன்..”

அன்று தூங்கும்போது என் கனவில் மதுவந்தி குட்மார்னிங் குட்மார்னிங் என்று பலமுறை சொல்வதுபோல் கனவு.

வழக்கம்போல் அலுவலகம் சென்ற நான், ஒவ்வொருவரையும் பார்த்து குட்மார்னிங் குட்மார்னிங் என்றேன்.

என்னை எல்லோரும் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

தலையங்கம்

Related image

ஆர்‌கே நகர் திரைப்படம் பார்ட் 2 (பாகுபலி மாதிரி ) வருவதற்கு முன் கொடநாடு படம் வந்து சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதன் விமர்சனத்தைப் பார்ப்போம்.

Related image

முதல் சீனில் ஜெயாவும் சசியும் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! (லலல்லா பாட்டு). சிம்பாலிக்காக ஜெயா விடும் பட்டம் மாஞ்சா தடவிய சசிகலாவின் நூலால் அறுந்துவிடுகிறது.

அடுத்தது போயஸ் கார்டென் மாடிப்படி சீன் !

தொடர்ந்து வருவது மணிரத்தினத்தின் இருட்டடிப்பு சீன் மாதிரி அப்பல்லோ மருத்துவமனை சீன்! ஜெயா முகத்தையே காண்பிக்காமல் ஆட்கள் ஓடுவது, தலைவர்கள் வருவது, கட்சிக்காரர்களின் பிரார்த்தனைக் கூட்டம் இப்படிக் காட்டியே விறுவிறுப்பை ஏற்றுகிறார்கள். நடு நடுவில் சசிகலாவின் முகத்தைக் காட்டும்போது கொடுக்கப்படும் திகில் மியூசிக் !

அடுத்த சீன் ஜெயாவின் மரணக்காட்சி! பார்ப்பவர் கண்களைக் குளமாக மாற்றிவிடுகிறது. சசியின் மேக்கப் , தோற்றம், உடல்மொழி கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது நல்ல எடிட்டிங். இறுதியில் சசியின் ஒவ்வொரு உறவினர்களும் ஜெயாவைச் சுற்றி வளைத்துக் கொண்டு நிற்பது அபாரமான காட்சி!

Image result for ஜெயலலிதா மரணம் சசிகலா உறவினர்கள்

ஜெயாவின் இறுதி ஊர்வலக்காட்சியின்போதே சசிக்கான பதவி ஏற்பு ஏற்பாடுகளைக் காட்டுவது படம் வேகமாகப் போவதை உணர்த்துகிறது.

சசி பெங்களூர் சிறைக்குப் போனவுடன் கொடநாட்டு பங்களாவில் கத்தும் ஆந்தையின் அலறல்! அப்படியே இடைவேளை!

Image result for கொடநாடு

பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்தால் பன்னீரும் தினகரனும், பவர் ஸ்டாரும் சந்தானமும் போல வந்து போகிறார்கள் ! (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆர்‌கே நகர் எலெக்ஷன் , தினகரன் கைது கதைக்குச் சூடு ஏற்றுகிறது.

இடை இடையே கொடநாட்டு ஆந்தையின் அலறல்.

அந்த அலறல் நிற்கிறது. அப்படியே கழுத்துத் திருகப்பட்டு ஆந்தை மரத்திலிருந்து கீழே விழுகிறது.

Image result for கொடநாடு

அதற்குப்பின் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகிறது. காவலாளி கொலை, பணப் பெட்டிகள் திருட்டு. காவல்துறை தேடல். இவற்றில் சம்பந்தப்பட்ட  இருவர் ஆக்ஸிடெண்டில் இறக்கும் கொடூரமான காட்சி.

காவல்துறை சிலரைக்  கைது செய்து விசாரிக்கிறது. ஏன் அந்தக் கொலைகாரர்கள் காவலாளியைக் கொன்றார்கள் என்பது “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” என்பதைவிட திரில்லிங்காக இருந்தது.

அப்படியே படத்தை முடித்துவிட்டு காவலாளியை யார் எதற்காகக் கொன்றார்கள் என்பதுதான் கொடநாடு பாகம் இரண்டு.

அது எப்போது வருமோ?

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

மனமென்னும் குரங்கு!

 

dr1

 

 

Image result for மனம் ஒரு குரங்கு

அந்தப் பெண்ணிற்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். படிய சீவப்படாமல், விரல்களால் கோதிவிட்டாற்போல் ஒதுக்கப்பட்ட சுருட்டைத் தலைமுடி. கண்களைச் சுற்றிக் கருவளையம். கணவன் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டபடி உடன் வர, சின்னச் சின்ன அடிகளாய் வைத்து, பாலன்ஸ் செய்தபடி நடந்து வந்தாள். – தயக்கத்துடன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் உடல் குலுங்கியது. எங்கே விழுந்து விடுவாளோ என்ற பயம் கணவனின் இறுகிய கைப்பிடியில் தெரிந்தது. அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்து சிறிய பெருமூச்சுடன் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் – எதிரே கணவன் அமர்ந்தான்.
 
“என்ன ப்ராப்ளம்?” என்றேன்.
 
”ஒரு மாதமாக இப்படி நடப்பதற்கு சிரமப்படுகிறாள். காரணம் தெரியவில்லை – பொது மருத்துவர், ஆர்த்தோ, நியூரோ மற்றும் ஆயுர்வேதம், யுனானி எல்லோரையும் பார்த்து விட்டோம். அநேகமாக எல்லா டெஸ்டுகளும் எடுத்து விட்டோம் – எல்லாம் நார்மல்!”
 
“கீழே விழுந்தார்களா? ஜுரம், ஜலதோஷம் ஏதாவது?”
 
“அதெல்லாம் ஒன்றுமில்லை – திடீரென்று இப்படி ஆகிவிட்டது – தெய்வக் குற்றமோ எனப் பரிகாரமெல்லாம் கூடச் செய்துவிட்டோம்”
 
எனக்குத் தெரிந்த அளவில் இந்த நடை எந்த வியாதியுடனும் பொருந்திப் போகவில்லை. இரத்தப் பரிசோதனைகள், ஸ்கான்கள் என எல்லா டெஸ்டுகளும் முகத்தில் அறைந்தாற்போல ’நார்மல்’ என்றன!
 
மீண்டும் நடக்கச் சொன்னேன் – இம்முறை கணவனின் உதவியில்லாமல்  நடந்தாள் – அதே நடை, எப்போதுவேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடிய அபத்திரமான குலுங்கும் நடை – கிட்டத்தட்ட முகமது பின் துக்ளக் படத்தில் சோ நடப்பதைப் போல – ஆனாலும் விழுந்துவிடவில்லை.
 
என் மனதின் மூலையில் சன்னமாகப் ‘பட்சி’ கூவியது.
 
”கவலைப்படாதீர்கள் – சீரியஸாகத் தெரியவில்லை – என் சைக்காலஜிஸ்ட்டைப் பாருங்கள்” என்றேன்.
 
”சைக்கியாட்ரி டாக்டரா?” சிறிது அதிர்ச்சியுடன் கேட்டார் கணவர்.
 
“சைக்கியாட்டிரிஸ்ட் இல்லை, சைக்காலஜிஸ்ட் – மருந்து கொடுக்கும் மருத்துவர் இல்லை – உளவியல் நிபுணர்”
 
மனமும், அதன் தன்மைகளும் வியக்க வைப்பவை. உடலை இயக்க வல்லவை! மகிழ்ச்சியில் சுதந்திரமாகப் பறக்கும் மனது, காயப்படும்போது இறுக்கத்தில் உடலைக் கட்டிப்போடும் – மனவலியின் வெளிப்பாடு உடல் உபாதைகளாக முன்னிருத்திக் கொள்ளும் வலிமை உடையது!
 
நோய்களைவிட, அவற்றால் ஏற்படும் மன இறுக்கமும், உளைச்சலும் தீவிரமானவை. நோய்க்கான சிகிச்சை இந்த மனவலியைத் தீர்க்காமல் முழுமையடைவதில்லை.
 
விவேகானந்தர் இதையே ‘நீ என்னவாக நினைக்கின்றாயோ, அதுவாகவே ஆகின்றாய்’ என்றார். ஆழ்மனதை கட்டுப்படுத்தி, மயக்க மருந்துகள் ஏதுமின்றி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மகான்களைப் பற்றி நாம் அறிவோம்.
 
மனதால் ஒரு நோயை உருவாக்க முடியும் – அதே போல மனக்கட்டுப்பாடு ஒரு நோயின் வீரியத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
 
ஒரு நிலையில் நில்லாமல் தாவும் குரங்கு மட்டுமல்ல; சமயத்தில் உடல் நலத்தையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் ரிங்க் மாஸ்டரும் ஆகும் மனது!
 
மனது இறுக்கமாய் உள்ளபோது, பசியில்லை, உறக்கமில்லை, உடலில் பல வலிகள், எளிதில் எரிச்சலடைவது போன்ற பல உபாதைகள் – மனதால் உடலுக்கு வரும் நோய்கள் – PSYCHO SOMATIC DISORDERS – தீவிரமானவை, சிகிச்சைக்கு அடங்காதவை!
 
ஹிப்னாடிஸம் – (மெஸ்மெரிஸம்) – என்பது ஒரு வகை மனோவசியக் கலை! ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் மார்டின் ஷார்கோ இந்த மனோவசிய முறையில் பல நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தமுடியும் என்றார்.
 
சைக்காலஜிஸ்ட் ரிப்போர்ட் என் சந்தேகத்தை உறுதிப் படுத்தியது. தீவிர மன இறுக்கத்தாலும், உளைச்சலாலும் அந்தப் பெண் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த விநோதமான நடை! ஒரு வகையான மனோவியாதி.
 
நடந்தது இதுதான் – அவசரத் தேவைக்காகக் கடனாக வாங்கி எடுத்து வந்த பணம் – ரூபாய் ஐம்பதாயிரம் – வரும் வழியில் பஸ் பிரயாணத்தில் தொலைந்து விடுகிறது. கண்டிப்பான கணவன், மாமியார் மற்றும் பணத்தின் அவசரத் தேவை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பெண் மனதை உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன – தன் இயலாமை, பொறுப்பற்ற தன்மையாகத் தன்னையே குத்திக் காட்டும் குற்ற உணர்ச்சியாக விஸ்வரூபம் எடுக்கிறது – மனக் குரங்கு, இப்போது ரிங்க் மாஸ்டராகி விடுகிறது – உடலை நோய்வாய்ப்பட வைக்கிறது – வினோதமாக நடக்க வைக்கிறது!
 
இதைத்தான் கண்ணதாசன் ‘ மனித ஜாதியின் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா ‘ என்றான்!
 
இரத்தப் பரீட்சைகள், எக்ஸ்ரே, ஸ்கான் இவற்றால் இந்த மனம் என்னும் ரிங் மாஸ்டரை வெளிப்படுத்த முடியாது.
 
நடந்தவற்றைக் கூறி, கவுன்சலிங் மூலம் வாழ்வின் அநித்தியங்களையும், தவிர்க்கமுடியாத துயரங்களையும் விளங்க வைத்த பிறகு, சிறிது சிறிதாக அவள் நார்மலாக நடக்க ஆரம்பித்தாள் – மனது அமைதியானது!
 
ஒரு வகுப்பில் இந்த கேஸ் ஹிஸ்டரியைக் கூறி, மாணவர்களைக் கேட்டேன்:
‘இதற்கு என்ன தீர்வு – எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?”
ஒரு நீண்ட அமைதி.
பின் பெஞ்சிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“யாராவது ஒரு ஐம்பதாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து விடலாம்!”
மனம் ஒரு குரங்கு – ஒத்துக்கொள்கிறீர்களா?!!
Image result for மனம் ஒரு குரங்கு