பிர் ஏக் பார் மோடி சர்க்கார் !

Image result for மோடி வெற்றி

மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இந்தியாவை உலக அரங்கில் உயர்த்துவதற்காக வந்துள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் அவரது அமைப்பான பாரதிய ஜனதா கட்சியையும் போற்றி வணங்கி வரவேற்கிறோம்!

 

கிரேஸி மோகனுக்கு அஞ்சலி

 

Image result for கிரேஸி மோகனுக்கு அஞ்சலி

இந்த சாக்லேட் கிருஷ்ணா இன்று நம்மிடம் இல்லை !

 

 

இதை வரைந்தவர் இன்று இல்லை !

tn-political-leaders-condolence-for-crazy-mohan-death

மேடை நாடகங்களிலும்  திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் விரசமில்லாத நகைச்சுவையை அள்ளி வழங்கிய

நகைச்சுவை மேதை இன்று இல்லை.

ஆயிரக்கணக்கான வெண்பாக்களைப் பாடிய கிரேஸி மோகனும் இன்று இல்லை.

கிரேஸி மோகன்Image result for கிரேஸி மோகன் அஞ்சலி

புகழ் மாலை ஈட்டிய  இவருக்கு அஞ்சலி மாலை சூட்டப்பட்டுவிட்டது.

அவர் பிரிவால் வாடும் நகைச்சுவைக் குடும்பங்கள் அனைத்திற்கும் குவிகத்தின் அஞ்சலி !

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (24) – புலியூர் அனந்து

Related image

வாழ்வில் வளமும் அவாளால்  வருமே

தனிமை மறைந்திடுமே

பெற்றோர் வருந்தும் சீதனம் வேண்டாம்

பெண்ணே சீதனமாம்

கற்றோர் வாழும் உலகமிது

காலத்தை உணர்ந்திடுவோம்  

 

இந்தப் பின்னணியில் நான், என் அலுவலகம், கொஞ்சம் நூலகம் என்று நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தன, ஒருமுறை தீபாவளி பண்டிகைக்கு சென்னை வரச் சொன்னார்கள். பெரும் அளவில் விடுப்பு எடுத்ததில்லை என்பதால் விடுப்பு சேர்ந்துகொண்டே வந்தது. எடுக்காத விடுப்பு நாளடைவில் காலாவதி ஆகிவிடும் என்று அலுவலகத்தில் சொன்னார்கள்.

இருபது நாள்  விடுப்பில்  சென்னை சென்றேன். ஒருமாத விடுப்பை காசாக்கிக் கொண்டேன். விடுப்பு மற்றும் பயணத் திட்டத்தில் அப்பா அம்மா இருவரையும் கர்நாடக மாநிலத்தில் இருந்த இரண்டு மூன்று கோயில்களுக்கு அழைத்துப் போனேன்.    எங்கு போவது  போன்ற முடிவெல்லாம் அப்பாதான். அந்த ஸ்தலங்களுக்குப் போகவேண்டும் என்பது அவரது நெடுநாளைய ஆசை என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன். 

பயணத்தின்போது எனக்குப் பெண் பார்க்கலாமா என்று அம்மா கேட்டாள். எனக்கு அந்தச் சமயத்தில் யோசனை ஒன்றும் இல்லை. பெரும்பாலும் அந்தச் சமயத்தில் இப்போது  என்ன அவசரம் என்று மகன் பதிலைக்க வேண்டுமாம். நான் எனது வழக்கமான வெற்றுப் பார்வையைத் தான் பதிலாக அளித்தேன் என்று நினைவு.

தங்கைக்கு மணமாகி வேற்றூர் போனாள். அண்ணனுக்கு மணமாகி  அண்ணி வந்தாள்.  மிக இயல்பாக இரு பெண்களும் புதிய குடும்பத்தில் ஒன்றிப் போனார்கள். திருமண காலத்தில்  அண்ணனும் மாப்பிள்ளையும் முன்னேறத் தயாராக இருந்த இளைஞர்கள். எளிதாக குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஓரிரு முறை அம்மா என் திருமண விஷயத்தை பேச்சில் கொண்டு வந்தாலும் ஒரு முன்னேற்றமும் இன்றி இருபதுநாள் விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பிவிட்டேன்.

ஓருநாள் வழக்கம்போல அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, சக ஊழியர் ஒருவர் என்னைத் தேநீர் அருந்த உடன் வரமுடியுமா என்று கேட்டார். பொதுவாக அப்படி யாரும் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நானும் போனேன். போகும்போது இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். தன் ஊரைச் சேர்ந்தவர்  என்று தேநீருக்கு அழைத்த நண்பர் சொன்னார்.

உணவகத்தில் ஒரு மேஜையில் சென்று அமர்ந்தோம். சமூசாவும் தேநீரும் ஆர்டர் கொடுத்தார், அந்த மூன்றாமவர். நான் இந்த ஊரில் தனியாகத்தான் தங்கிவருகிறேன் என்று  அலுவலக நண்பர் அந்த மூன்றாமவரிடம் சொன்னார். அப்படியே எனக்கு எந்த ஊர், குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேச்சு வந்தது. நான் பேசவே இல்லை. அலுவலக நண்பர் ஒரு தகவலைச் சொல்லிவிட்டு சரிதானே என்பதுபோல் என்னைப் பார்ப்பார்.  எனக்குத் தலையை அசைப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. என் தம்பி வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரை தவறாகச் சொல்லிவிட்டார். நான் திருத்தினேன்.

“பரவாயில்லையே .. உங்கள் நண்பர் பேசிவிட்டாரே!” என்று அந்த மூன்றாமவர் நண்பரிடம்  முணுமுணுத்தது எனக்கும் கேட்டது. இந்த நிகழ்வை நான் மறந்தே போயிருந்தேன். 

ஒருநாள் பேச்சுவாக்கில் தன் மகளுக்காக மாப்பிள்ளை தேடி வந்தவர் அந்த மூன்றாமவர் என்ற விஷயம் தெரியவந்தது. ஐந்து நிமிடங்களிலேயே புரிந்துகொண்டு நல்லவேளையாக என்னை விட்டுவிட்டார் அந்த புத்திசாலி.

எங்கள் சமூகத்தில் அந்தச் சமயத்தில் மாப்பிள்ளை கிடைப்பது எளிதல்ல என்று சொல்வார்கள். காதில் விழுந்த இளைஞனைப் பற்றி விசாரிப்பது, சரியென்று பட்டால் மேற்கொண்டு குடும்பத்தாரைத் தொடர்புகொள்வது என்பது வழக்கமே. என்னைப் பற்றிய செய்தியை நான் வேலைபார்த்த அந்த ஊரில் ஒரு திருமணத் தரகர் மற்றவர்களுக்குச் சொல்லி வந்தார் என்று தெரிந்தது.

அதனால்  யாரேனும் என்னைப்பற்றி விசாரிக்க வருவது அடிக்கடி நேர்ந்தது. நான் உஷாராகிவிட்டேன். நான் அவற்றைத் தவிர்க்க முயல்வது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொள்வேன். பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குப் போய், திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்று…  பிறகு பிள்ளைகள் வளர்ந்து படித்து … என்கிற தொடர்தானே  வாழ்க்கை.   ஆனால் திருமணத்தைத் தள்ளிப்போட நான் விரும்பியது ஏன் என்று இப்போது விளங்கவில்லை.

என் வயதையொத்த அலுவலக நண்பர்கள் ஒருவர் ஒருவராக தீர்மானம் புரிந்துகொண்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல ‘எப்போது நீங்க  சாப்பாடு போடப்போகிறீர்கள்’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.  திருமணத்தைப் பற்றி தீர்மானமான எண்ணம் எதுவும் எனக்கில்லை.  

பொதுவாக அப்போதெல்லாம் வெளியூரிலிருந்து  தொலைபேசியில், அவசரச் செய்தி இருந்தால் தவிர, அழைக்க மாட்டார்கள். செலவு அதிகம்.  ஒலியின் தரமும் அவ்வளவு உயர்வாக இருக்காது. சத்தமாகப் பேசவேண்டும். பேசுவது யார் எது சம்பந்தமாக பேசுகிறார்கள்  என்று புரிவதற்குள்  பெண்மணி குறுக்கிட்டு மூன்று நிமிடம் முடியப் போகிறது என்று சொல்வார்.

ஒரு வெள்ளிக்கிழமை அப்பா தொலைபேசியில் அழைத்தார். நான் வேலைபார்க்கும் ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஊருக்கு அப்பாவும் அம்மாவும்  ஞாயிறன்று  வரவிருப்பதாகத் தகவல். அங்கே எனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கவிருப்பதாகச்  சொன்னார். என்னைக் கட்டாயம் ஞாயிறு காலை பத்துமணிக்குள் அங்கு வந்து சந்திக்கவேண்டும் என்றும் சொன்னார். அந்தத் திடீர் விஜயம் எதற்காக  என்று சொல்ல மறந்துவிட்டார் போலிருக்கிறது. ஆனால் தவறாமல் முகச் சவரம் செய்துகொண்டு வா என்று சொல்லியிருந்தார்.

நல்ல பிள்ளையாக நானும் சென்றேன். என் தம்பியும் கூட வந்திருந்தான். எனக்குச் சம்பந்தம் பேச ஒருவர் அங்கு வருவதாகத் தெரிந்தது. இரு தரப்பினரையும் நன்கு தெரிந்தவர்  அந்த உறவினர். பெண் வீட்டார்கள் அந்த ஊரில் தான் இருக்கிறார்கள்.

பெண்வீட்டார் வந்தார்கள். ஏதேதோ பொதுவாகப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. நான் எனக்குச் சம்பந்தமில்லாத விஷயம் போல் மௌனமாக இருந்தேன். பெண்ணின் புகைப்படம் ஒன்று கொண்டு வந்திருந்தார்கள். அப்பா, அம்மா இருவரும் பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்தார்கள். நான் ஒரு நொடி  பார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்துவிட்டேன்.

 அப்போது தம்பி என்னைத் தனியாக அழைத்தான். திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது ஏன் என்று கேட்டான். அவன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் என் திருமணத்திற்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் மணம் புரிந்துகொள்ள   இருவரும் காத்திருப்பதாகவும் சொன்னான்.

நந்தி விலகக் காத்திருக்கிறார்கள். நந்தியும் விலகிவிடத் தீர்மானித்தது. எனது  திருமணப் பேச்சு அடிபடத் தொடங்கிய சமயத்தில் ஒரு தினசரியின் வார இதழில் வந்த  ஒரு கதையில் இருந்த கருத்து எனக்கு அற்புதமகப் பட்டது. அந்தப் பக்கத்தைக் கிழித்து வைத்துகொண்டேன்.  ஒரு வாலிபன் தனது திருமணத்திற்குச் சில நிபந்தனைகளைச்  சொல்வான்.

தற்செயலாக அந்த காகிதம் என் கைப்பையில் இருந்தது. அதைத் தம்பியிடம் கொடுத்துவிட்டேன்.

1)         அந்தப்  பெண்ணுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் எனக்கும் சம்மதம்.

2)         எக்காரணம் கொண்டும் ஒரு குடும்பம் தொடங்க அத்தியாவசிய பொருட்கள் தவிர எந்தச் சீதனமும் வாங்கக் கூடாது. மாப்பிள்ளை வீட்டாருக்கு  உடைகள் வாங்குவது போன்று எந்த அதிகப்படி செலவும் கூடாது.

3)         குடும்ப பழக்க வழக்கம் எப்படியானாலும்  திருமணச் செலவு முழுவதும் என்னுடையதுதான்.

வேலைக்குச் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. தங்கையின் திருமணச் செலவு தவிர பெரிய செலவு ஏதும் செய்யவில்லை. சொந்தச் செலவுகளும் குறைவுதான். வங்கிக் கணக்கில் கணிசமான தொகை இருந்தது. திருமணத்தின் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ளப் பெரிய சிரமம் ஏதும் இல்லை.

தம்பி அப்பாவிடம் விவரம் தெரிவித்தான். பெண்வீட்டார் தன் பெண்ணைக் கலந்துகொண்டு குடும்பத்தில் பெரியவர்கள் இருவரிடம் அனுமதியும் வாங்கிக் கொண்டு மேற்கொண்டு தொடரலாம் என்று சொன்னார்கள். அப்பா, அம்மா, தம்பி மூவரும் சென்னை திரும்ப, நான் ஊருக்கு வந்துவிட்டேன்.

இரண்டு மூன்று மாதங்கள் எந்தத் தகவலும் இல்லை. சரி, இதுவும் கழண்டு கொண்டுவிட்டது என்ற முடிவிற்கு நானும் வந்திருந்தேன். திடீரென்று ஒருநாள் காலை பெண்ணைப் பெற்றவர் நான் குடியிருந்த வீட்டிற்கே வந்துவிட்டார். அதைவிட பெரிய ஆச்சரியம் அந்தப் பெண்ணும் வந்திருந்தாள்.

அந்த காலகட்டத்தில் இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை. அந்தப் பெண் என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள். “உங்கள் நிபந்தனைகளில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?”

மிகச் சுலபமாக பதிலளிக்கக்கூடிய கேள்விதானே! வாயைத் திறக்க வேண்டாமே! ஆமென்று தலையை அசைத்தேன். அவள் தன் தந்தையைப் பார்த்தாள். அவர் என் இருகரங்ககளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு “ரொம்ப சந்தோஷம். வருகிறேன் மாப்பிள்ளை.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். என் வருங்கால மனைவியை ஓரிரு நிமிடங்கள் பார்த்தது அன்றுதான்.

ஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு கைகுலுக்கல் – இதற்காக இரண்டு  மணிநேரம்  பயணம் செய்து வந்திருந்தார்கள். ஆனால் மூவருக்கும் தெளிவும் தைரியமும் ஏற்பட்டது என்னவோ உண்மை.

ஒரு மாதத்திற்குள் திருமணம் எங்கள் ஊரில் நடந்தது. குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேலைபார்க்கும் ஊருக்கு வந்துவிட்டேன். – மன்னிக்கவும் வந்துவிட்டோம் என்று சொல்லவேண்டுமல்லவா?

அதற்குள் மனைவியின் அண்ணன், அவர் மனைவி இருவரும் என் வீட்டிற்கு வந்து பொருட்களை எல்லாம் வைத்து குடும்பம் நடத்தத் தயாராக வைத்திருந்தார்கள். எனது நிபந்தனையின்படி தவிர்க்கமுடியாத பொருட்களையே வாங்கியிருந்தார்கள்.  அன்று மதியத்திற்கு இரு பெண்களுமாகச் சேர்ந்து விருந்து சாப்பாடு தயாரித்தார்கள். அன்று மாலையே அண்ணனும் அண்ணியும் விடை பெற்றுக்கொண்டார்கள்.

அப்போதெல்லாம் வெளிநாட்டில்   வேலை செய்பவர்கள் என்றால்  சிங்கப்பூர் அல்லது மலேசியா தான் செல்வார்கள். வளைகுடா நாடுகளுக்கு வேலை பார்க்கப் போவது கேரளத்தில் மட்டுமே அதிகம். அப்படி சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் டூ இன் ஒன் என்று சொல்லப்படும் வானொலி மற்றும் காஸெட் இயக்கும் கருவி கொண்டுவந்து விற்பார்கள். இலங்கை வானொலி மிகப் பிரபலம்.

அவர்கள் வைத்திருந்த  பொருட்களில் அந்த டூ இன் ஒன் ஒன்றும் இருந்தது. ஒரு கேள்விக்குறியுடன் மனைவியைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு காஸெட்டை சுழல விட்டாள்.

இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் குரலில் மேலே சொன்ன அந்த வார்த்தைகள் ஒலித்தன.

சொல்ல மறந்து போனேனே சீதாராமனின் புதல்வியான தனம்,  அதாவது சீ தனம் எனக்கு மனைவியாக வாய்த்தது தற்செயல்தானே?

(திருமணத்தில் வந்து சுப முடிவாக முடித்துவிட்டேன். சுபம் என்று போட்டுவிடலாம். இனி மற்றவை அடுத்த பாகத்தில்தான் அதுவும் ஒரு இடைவெளிக்குப் பிறகுதான்)

 

 

 

 

 

குவிகம் பொக்கிஷக் கதைகள் – தீர்வு – திலீப்குமார்

நன்றி: அழியாச் சுடர் 
Image result for old gujarati lady

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும்.

வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளில் இந்தத் தங்கச்சாலைத் தெரு மட்டும்தான் கொஞ்சம் அகலமாகவும், நடக்கச் சௌகரியமாகவும் இருப்பது. இது வடஇந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் அதிகமாக வாழ்கிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும், அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. மற்றபடி அசிங்கம் என்றது, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும் வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் இந்தக் குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள். மேலும், அழுக்கான சூழ்நிலைகளுக்குத் தங்கள் மனத்தையும், மூக்குகளையும் பழக்கப்படுத்திக் கொள்வதில் இணையற்றவர்கள்.

மணி 8-45. கடைகளும் ஆபிஸ்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடக் குழந்தைகள் விரைந்து கொண்டிருந்தனர். ஜனங்கள் ‘பளிச்’சென்று சுத்தமாகக் காட்சி அளித்தனர். காந்திக்குல்லாய் சேட்ஜிக்களும், நாகரீகமாக உடுத்திக்கொண்ட அவர்களது மக்குப் பிள்ளைகளும் நிறையவே குழுமத் தொடங்கிவிட்டனர். பரவலாக, வெளிநாட்டுக் கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து நின்றன.

நிச்சயமாக இந்தக் குஜராத்திகள் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்!

புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்தத் தங்க சாலைத் தெருவில்தான் இருக்கிறது. தெப்பக்குளம் உள்ள பெரிய கோவில் இது. இந்தக் கோவிலின் பிரதானப் பிரகாரம் அளவில் மிகப் பிரமாண்டமானது. சிலைகளுடன், பெரிய பெரிய ஸ்தூபிகளுடனும், அவைகளில் அழகான சிற்பக் கலைகளுடனும் மிகக் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். நகரத்தில் உள்ள மற்ற எல்லாப் புகழ்பெற்ற கோவில்களைப்போல் இதுவும் வழக்கமாகப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யமற்றதாகவும், போகாதவர்களுக்குப் பேரழகாயும் காட்சியளிக்கும். கோவில் வாசலில், இடப்பக்கம் பலகாரம் விற்கிற ஒரு சேட்ஜிக்கும் வடப்பக்கம் தேங்காய் விற்கிற செட்டியாருக்கும், பூ விற்கிற பட்டிணத்துக் கவுண்டச்சிக்கும், வளையல் விற்கிற ஒரு சேட்டுக்கும், விற்றாலும் தீராத கொள்முதலாகிய வியாதிகளைக் கடை விரித்த சில பிச்சைக்காரர்களுக்கும் புகலிடம் கொடுத்திருந்த ஏகாம்பரேஸ்வரர் அமைதியாய் உள்ளே உட்கார்ந்தார். இந்தக் கோவிலைச் சுற்றிப் ‘ப’ வடிவில் நெளிகிற மூன்று சின்னச்சந்துகளின் ஒட்டுமொத்தமான பெயர்: ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம். என் மாமா வீடும், நான் சொல்லப்போகிற கதையின் களமும் இங்குதான்.

நான் இடது பக்கம் திரும்பி அந்தப் ‘ப’வில் நுழைந்தேன். இந்தச் சின்னச் சந்தின் மூலையில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே திணறி, ஒளிந்துகொண்டிருக்கும் என் மாமா வீடு. ஒரு பக்கம் கோவில் சுவர். மறுபக்கம் வீடுகள்.

ஒன்றிரண்டதைத் தவிர எல்லாம் திண்ணைகளற்ற பெரிய வீடுகள். இங்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் ஒரு ஆரம்பப்பள்ளியும் உண்டு. அதனால் தெருவில் இப்போது நிறையச் சிறுவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். இன்றியமையாத ஐஸ்காரனுடன்.

நான் மனத்தில் எதையும் வாங்கிக்கொள்ளாமல், வேகமாக நடந்தேன். மாமா வீட்டுவாசல் தெரிந்தது. ஏனோ அவர் முகம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவர் குடும்பத்தினர் முகங்கள் அனைத்தும் மனத்தில் தோன்றி மறைந்தன. வாசலில் சில குஜராத்தி இளம்பெண்கள் குழாயுடன் மல்லாடிக்கொண்டிருந்தார்கள். எனது வரவை அவர்கள் கடுமையான மௌனத்தை அனுஷ்டித்துக் கொண்டாடினார்கள். நான் அவர்கள் அனைவரையுமே பார்த்தேன். எல்லா முகங்களும் சுமாராகவே இருந்தன. இத்தனைக்கும், அந்தக் கட்டிடத்தில் மட்டுமே முப்பது குடும்பங்கள் இருந்தன. இருந்தும் மருந்துக்குக்கூட ஒரு அழகி இல்லை. மேல்மாடியில் வசிக்கிற ஊர்மிளாவைத்… நிற்க. முதலில் இந்தக் கட்டிடத்தின் பூகோள ரீதியான அமைப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குமேல் இருக்கிற வானத்தைச் சதுரமாக வெட்டிக் காட்டும் இது. மாடிகளில் வசிக்கிறவர்கள் கல்கத்தா பீடாக்களைக் குதப்பி உமிழ்வதற்காகவும் மற்றபடி வருணனுக்காகவும், சூர்யனுக்காகவும் கட்டப்பட்டது! இந்த முற்றத்தைச் சுற்றி எதிரும் எதிருமாக, எதிரும் புதிருமாக, புதிரும் புதிருமாக ஆறு வீடுகள். முற்றத்தின் நடுவே நடந்தால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிறு முற்றங்கள். இடதுபக்க முற்றத்தின் கடைசியில் இரண்டு கழிவறைகள்; வலதுபக்க முற்றத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதை அடுத்து, இன்னும் இரண்டு வீடுகள். இன்னும் சற்று நகர்ந்தால், மேலே செல்லும் அழுக்கான மாடிப்படிகள். இதே மாதிரி மேல்மாடியிலும். மொத்தம் முப்பது குஜராத்தி குடும்பங்கள் வாழ்கின்ற அழுக்கான கட்டிடம் இது.

அந்த முற்றத்தையும், அந்த ஆறு வீடுகளையும் பிரித்து, 21 அடி அகலமுள்ள ஒரு நடைவெளி சுற்றி ஓடும். அநேகமாக இந்த நேரத்தில் அந்த ஆறு வீட்டுக் கதவருகேயும் பெண்கள் உட்கார்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு பெண் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருப்பாள். இன்னொருத்தி துணிகளைத் துவைத்துகொண்டிருப்பாள். மற்றவர்கள் அரிசியையோ, கோதுமையையோ சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கமாக, திருமணத்திற்குப் பின் ஊதிப்போகிற உடல்வாகு உடையவர்களாக இருந்தாலும், இந்தப் பெண்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் அறிவற்றவர்களும் அடங்காப்பிடாரிகளும்கூட. எல்லாப் பெண்களையும்போல் இவர்களும் சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடையவர்கள். மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும், உணவு வகைகளிலும், அழகிய உடைகளிலும் தங்கள் உலகை அடக்கிக்கொண்டவர்கள். இதைத் தவிர, பிரக்ஞையே இல்லாமல் இனத்தைப் பெருக்குகிற பழக்கமும் உண்டு. இந்தக் கட்டிடத்தில் உள்ள முப்பது குடும்பத் தலைவிகளுக்குத் தலா ஒவ்வொருத்திக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாரிசுகளாவது இருக்கும். (என் மாமாவுக்குக்கூட 5தான்.) முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்கிற இங்கே இந்த ஜனத்தொகைப் பெருக்கம் இயல்பான ஒன்று. தவிர்க்க முடியாததும்கூட.

இங்கு வாழ்கிற ஆண்கள், மிக சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்துகொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவி வருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள். சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி, வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர, நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே!

பொதுவாக, இந்த குஜராத்திகள் தமிழர்களைப்பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயங்கள் உடையவர்கள்.

உள்ளே நுழைந்ததும் என்ன ஆச்சரியம்! முற்றம் வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்தது. நடைவெளியும் சுத்தமாக இருந்தது. ஓரங்களில் பிளாஸ்டிக் கம்பிகளில் நேற்று உலரப்போட்ட துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ரொம்பவும் அமைதியாய் இருந்தது. நான் முற்றத்தைத் தாண்டி மாடிப்பக்கம் பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஒரே கும்பல். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தனர். என் மாமா அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிக சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கியதும் ஒரு கணம் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மாமாவும் என்னைப் பார்த்து முதலில் ஒரு கணம் வியப்படைந்து பின் லேசாக முறுவலித்தார்.

“நீ மேலே போயிரு, நான் இதோ வந்துவிட்டேன்” என்று குஜராத்தியில் கூறினார்.

ஆவலை அடக்கியபடி மேலே போக மாடிப்படிகளை அடைந்தேன். எதிரில்ன் இறங்கி வந்த கோபால் பாயிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.” என்று குஜராத்தியில் சொல்லி வருத்தப்பட்டார், வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பின் நகர்ந்துபோய் கும்பலுடன் ஐக்கியமானார் அவர்.

நான் மேல்மாடியை அடைத்து வீட்டுக்குள் நுழைவதற்கும், சந்திரா, என் மாமாவின் மூத்த மகள், பெருக்கி முடித்து நிமிர்ந்து என்னைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் மகிழ்ச்சியுடன் சிரித்து என்னை உபசரித்தாள். மாமி

சமையல்கட்டிலிருந்து வந்து, “வா, வீட்டாரின் ஷேம நலத்தை விசாரித்தாள். நான் பதில் கூறிவிட்டு, ரெயிலின் தாமதமான வரவைப் பொதுவாக முறையிட்டுக்கொண்டேன். எனக்காக அவள் ‘டீ’ போட உள்ளே சென்றாள். என் மாமா வீடு ரொம்பவும் கச்சிதமான, ஆனால் சிறிய வீடு. ஒரு பெரிய ஹால். அதன் கோடியில் இடப்பக்கம் ஒரு அறையும், வலப்பக்கம் ஒரு அறையும் இருக்கும். இடப்பக்க அறை சமையலறை. வலப்பக்க அறை, குளியலறை, சயன அறை, ஸ்டோர் ரூம், எல்லாம் அதுதான். ஆண் குழந்தைகள் விளையாடச் சென்றிருக்க வேண்டும். மாமாவுக்கு இரண்டு பெண்கள் (பூர்ணா சமையல்கட்டில் இருந்தாள்) மூன்று பையன்கள். கனு, வ்ரஜேஷ், தீபக். பாட்டி கோயிலுக்குப் போய்விட்டிருந்தாள். காலை ஐந்து மணிக்குப் போய் 10 1/2 அல்லது 11 மணிக்குத்தான் வருவாள். பாட்டி ரொம்பவும் மடி, ஆசாரம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவள். ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது எனது உயரத்தை உத்தேசித்து இவள் செய்கிற முதல் காரியம், மடிகோலால் மேலே உலர்த்தி இருக்கும் துணிகளை, ஓரங்களுக்கு நகர்த்துவதுதான். அப்படியும் தப்பித்தவறி, அவளது ஆடைகளை நான் தொட்டுவிட்டால் அவைகளை மீண்டும் துவைக்கச் சென்று விடுவாள். இந்தக் கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவலாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

நான் கழிவறைப்பக்கம் பார்த்தேன். என்ன அதிசயம், காலியாகக் காத்திருந்தது. பொதுவாக, இந்த மேல்மாடியில் வாழ்கிற அறுபது ஜீவன்களின் உபயோகத்திற்காகக் கட்டப்பட்ட இரண்டே இரண்டு கழிவறைகள் இந்த ஒன்பதேகால் மணி உச்சகட்டத்தில் இப்படிக் காலியாய் இருப்பது ரொம்பவும் அரிது.

ஆசாரம் மிகுந்த என் மாமா வீட்டு நியதிப்படி இந்தக் கழிவறையை உபயோகிக்கச் சில கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கழிவறைப் பிரயாணம், வெகு நேர்த்தியான ஒரு அனுபவம்.

முதலில், தண்ணீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் செம்பில் உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து எடுத்து தண்ணீர் வராத ஒரு குழாயடியின் சின்னச் சுற்றுச் சுவர் மேல் வைத்துவிட வேண்டும். மாடியின் ஓரச் சுவரின் மூலையில் ஒரு நாலு கிலோ டால்டா டின் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை இடது கையால் எடுத்துக் கொண்டு சென்று கழிவறைக்குப் போகிற ஒரு சின்ன நடைவெளியின் முகட்டில் வைத்துவிட்டு, வலது கையால் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மீண்டும், உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு அந்த டின்னை நிறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த டின்னை இடது கையால் சுமந்து அந்த நடைவெளியெங்கும் அந்த மேல்மாடிக் குழந்தைகள் கழித்து உண்டாக்கிய சிறுநீர்த் தீவுகளை லாவகமாகத் தாண்டி, முதலில் தென்படுகிற – கழிவால் நிறைந்து வழிகிற, ஒரு மாதத்திற்கு அருவருப்பு ஊட்டவல்ல – கழிவறையைத் தவிர்த்து, அடுத்ததில் வழுக்காமல் உட்கார்ந்து, (என்னை மாதிரி) ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ, டி.எஸ். எலியட்டையோ நினைத்து லயித்துவிட வேண்டும். அதாவது, அடுத்த வீட்டுப் பெண், தவிப்பும் வேதனையும் தொனிக்கிற குஜராத்தியில், “அந்தர் கோன் ச்சே? ஜல்தி நிக்ளோ!” (உள்ளே யார் இருக்கிறீர்கள்? சீக்கிரம் வெளியேறுங்கள்!) என்ரு கெஞ்சி எழுப்பிவிடுகிறவரை.

தலையைக் குனிந்து வெளியே வந்து நடைவெளியைக் கடந்து, காத்திருக்கிற பெண்ணைத் தவிர்த்து, நேரே சென்று டால்டா டின்னை இருந்த இடத்தில் இருந்த மாதிரி வைத்து, அதன் அருகில் இருக்கும் தேய்ந்துபோன 501ஐயோ, ரெக்ஸோனாவையோ, லைஃப்பாயையோ எடுத்து குழாயடி சுற்றுச் சுவரில் நிறைத்து வைத்த பிளாஸ்டிக் செம்பை இரண்டு மணிக்கட்டுகளினாலும் இறுக்கி, லேசாகக் கவிழ்த்து, கைகளைக் கழுவிக்கொண்டுவிட வேண்டும். பிறகு செம்பைச்  சாதாரணமாக எடுத்துச் சென்று கால்களைக் கழுவிக்கொள்ளலாம். நான் இந்தச் சடங்குகளை மிக அலட்சியமாகச் செய்து முடித்துவிட்டு வந்தேன். மாமி எனக்காக ‘டீ’ தயாராக வைத்திருந்தாள். அவள் வெளிறிப்போன நீலப் புடவை உடுத்தியிருந்தாள். மாமியின் சிவந்த மேனிக்குப் பிரகாசமான நிறங்கள் எடுப்பாக இருக்கும். ஆனால் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரி ஏதோ ஒரு வெளிறிப்போன நிறத்தில் உடுத்திக்கொண்டிருப்பாள். நான் மனதுக்குள் மாமாவின் புடவை ரசனையைச் சபித்துக்கொண்டேன்.

கிணற்றடியில் இப்போது கூட்டம் குறைந்து காணப்பட்டது. பெண்கள் போய்விட்டிருந்தனர். ஆண்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் ஒரு சில குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் அனைவரும் பாக்கெட் வைத்த, லாங்கிளாத் பனியன்களும், வெள்ளை பைஜாமாக்களையும் அணிந்திருந்தனர். மாமா மட்டும் ஒரு நைந்துபோன, கையில்லாத ஸ்வெட்டரும், வேட்டியும், அதைப் பிடித்து நிறுத்த ஒரு மட்டமான தோல் பெல்ட்டையும் அணிந்திருந்தார்.

மாமா எல்.ஐ.சி.யில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்கிறவர். இந்தக் கட்டிடத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மோகத்தில் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர். குறிப்பாக, இங்கே இவருடைய ஜம்பம் நூற்றுக்கு நூறு பலிக்கிறது.

இப்போது அவர் கிணற்றில் லயித்திருந்தார். கிணற்றுக்கு மேலே ஒரு தகரக் கூரை போடப்பட்டிருந்தது. அதனால் கிணற்றுக்கு வெளிச்சம் வராமல் மிக இருட்டாக இருந்தது. ஒரு இளைஞன் டார்ச் விளக்கால் கிணற்றுக்குள் ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். கிணற்றில் கருப்பாக ஏதோ மிதந்துகொண்டிருந்தது. அதை எலி எண்று ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

இறந்துபோன எலியை எடுக்கத் தங்களுடைய வாளிகளைத் தர யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் ஒரு பழக்கூடையைக் கயிற்றில் கட்டி கீழே இறக்கியிருந்தார்கள். கூடையின் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டிருந்ததால், கூடை ஒரு பக்கமாக சாய்ந்துவிடப்பத்திருந்தது. நீரின் அழுத்தத்தால் அது மேலும் கதகதப்பாகிப்போனது. என்றாலும், எலியை எடுக்கும்போது தண்ணீர் கூடையில் இருந்தது, எலி மட்டும் சிக்கிவிடும். என்று இவர்கள் கூறினார்கள், இதில் இருக்கும்

சௌகரியத்திற்குப் பின்னால் ஒரு சாமார்த்தியமும் ஒளிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக இது மாமாவின் யோசனையாகத்தான் இருக்கவேண்டும். சுயநலத்திற்காக மனிதன் கையாளும் சாம்ர்த்தியம் சில சமயம் இந்த மாதிரி சுவாரஸ்யமாகவும் இருப்பது உண்டு.

எலி இப்போது கிணற்றின் ஓரத்தில் மிதந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரமாக இது அங்கேயே இருப்பதாகக் கூறினார்கள். இந்த விஷயத்தை மற்றவர்கள் என்னிடம் கூறும்போது மாமாவுக்குத் தனது திறமையை மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற கற்பனை வந்து, கூடவே கோபமும் வந்தது. என்றாலும், அவர் மிகப் பொறுமையாகச் செயல்பட்டார். அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

காந்திலாலும் சந்திரகாந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். இடையிடையே இவர்கள் ஷு(த்) தயூ(ந்) பாபு பாய்? ஷு(த்) தயூ(ந்) என்று குஜராத்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் கேட்கிற ஒவ்வொரு முறையும் மாமா தனது கண்களையும் புருவங்களையும் சுருக்கி, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபட்டார்.

போராட்டம் நீண்டது.

கடைசியில் அவர் பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக ஆனால் வெகு நேர்த்தியான சில சேஷ்டைகளைச் செய்தார். உலக்கையால் இடிக்கிற மாதிரியும், மாவை ஆட்டுகிற மாதிரியும், பட்டம் விடுகிற மாதிரியும், கடைசியாக ஒரு மாலுமியைப்போலவும் பல வித்தைகள் செய்தார்.

வித்தை பலித்தது.

எலி கிணற்றின் மையத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அதை வெளியே எடுப்பது சுலபம் என்று எல்லோருக்கும் பட்டது. எல்லோருக்கும் மனதுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. மாமா ஒரு கப்பற்படை அதிகாரியைப் போல் விளக்கு பிடிப்பவனுக்கு ஆணைகள் பிறப்பித்தார். அலட்சியமாக அருகில் நின்றவர்களை விலகச் சொன்னார். பிறகு, கயிற்றைக் கீழே இறக்கினார், மிக நிதானமாக. பின் மெல்ல, மிக நயமாகக் கயிற்றைச் சரியாக எலிக்கு அருகே கொண்டு வந்தார். மறுகணம்! ஒரு அசாத்திய வேகத்துடன் கயிற்றை மேலே இழுத்தார்.

எல்லோரும் ஆர்வமாய்க் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து ஏமார்ந்தார்கள். கூடை காலியாகவே மேலே வந்திருந்தது. எலியோ மீண்டும் கிணற்றின் ஓரத்திற்கே போய்த் தேங்கிவிட்டது. மாமா அசடு வழிந்தார். எலியின் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

மாமா மீண்டும் மீண்டும் அசடு வழிந்தார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான்.

மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார். தொடர்ந்து, அவர் தன்னைச் சுற்றியிருந்த ஏழெட்டு குஜராத்தி இளைஞர்களுக்குத்தான் அந்த எலியை வெளியே எடுத்த விதத்தைப் பற்றி, ஒரு அரசியல்வாதியின் சொல்லாடம்பரத்துடனும், ஒரு கட்டிட இயல் நிபுணரின் அபிநயங்களுடனும், பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கினார்.

மாமாவின் விரிவுரை முடிந்த பின், காந்திலாலும் ஜெயந்திலாலும் மற்ற சிலரும், இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கலக்கத்துடன் கேட்டார்கள். இதுவரை இதைப்பற்றிச் சிந்திக்காத மாமாவோ சற்று அதிர்ந்துபோனார். அவரது மனத்தின் பின்னணியில் வேகமாகப் பாய்ந்த பயங்கள் அவர் முகத்தில் நன்கு தெரிந்தன. என்றாலும், உடனே சமாளித்துக்கொண்டார். தனது தயக்கம் இந்த சிஷ்யர்களிடையே தனக்கிருக்கும் குரு ஸ்தானத்திற்கு ஊறு விளைவித்துவிடும் என்று கருதிய அவர் உடனே “இல்லை, இல்லை, அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும்.” என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார். எல்லோரும் தலைகளை ஆட்டி அதை ஆமோதித்தாலும் அவர்கள் முகத்தில் கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன.

தஞ்சாவூர் குஜராத்தியான சந்திரகாந்த், மாமாவிடம், “ஹெல்த் பீஸ் மா தமே ஜஷோ? அம்நே கா(ந்)ய் ஆமா சமஜ் ஞ படே பாபு பாய் (ஹெல்த் ஆபீஸுக்கு நீங்கள் செல்வீர்களா? எங்களுக்கு இதில் ஒன்றும் புரியாது பாபு பாய்) என்று கெஞ்சல் குரலில் கேட்டார். மாமா அதில் தனக்குச் சிரமம் ஏதும் இல்லை என்றாலும் தனக்கு அந்த வட்டத்து ஹெல்த் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும், மேலும் தனக்கு ஆபீஸ் செல்ல ஏற்கனவே தாமதமாகிவிட்டிருந்ததாகவும் கூறி நழுவிவிட்டார். தனது வீட்டிலும் குடிக்கத் தண்ணீர் அரைக் குடம்தான் இருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் இந்தக் காரியத்தை செய்யத் தனக்கு அவகாசம் இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார். மாமா என்று மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லோரும் இதே மாதிரி ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி ஹெல்த் ஆபீஸுக்குப் போவதையும், அங்கு இருக்கப்போகிற அதிகாரியை எதிர்கொள்வதையும் தவித்தார்கள்.

தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.

இதர்கிடையில், மேலே இருந்து கீழே வந்த கோவிந்த்ஜி சேட் என்கிற பணக்கார, T.V.வைத்திருக்கிற கிழவர், மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து  பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனை கூறி, அதை மற்றவர்கள் மூலம் செயல்படுத்தவும் செய்தார். மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது பெரிய முதிர்ந்த சரீரத்தைச் சுமந்துகொண்டு, கைத்தடியுடன் பாட்டி வாசல் பக்கமாக வருவது தெரிந்தது. வெள்ளையில், சிறிய கருப்புப் பூக்கள் நெருக்கமாக அச்சிட்ட சேலையை உடுத்தியிருந்தாள். கழுத்தில் துளசி மாலையுடனும், முகத்தில் தெளிவோடும் வந்துகொண்டிருந்தாள். இந்த களோபரத்தில் யாரும் பாட்டியைக் கவனிக்கவில்லை. அருகில் வந்த பின், அவளாகவே விஷயத்தை விசாரித்தாள். விஷயமும் பிரச்சனையும் அவள் முன் வைக்கப்பட்டன. பாட்டி சிறிது யோசித்தாள். பிறகு ச்சாலோஹு(ந்) தம்னே ஏக் ரஸ்த்தோ பதாவூ(ந்) (வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்) என்று கூறினாள். எல்லோரும் அவளைப் பிந்தொடர்ந்து, மேலே வந்தனர்.

ஹாலில் கனுவும் வ்ரஜேஷும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த பாட்டி சாதகமான கோணத்தில் இருந்த கனுவின் புட்டத்தில் லேசாக, ஆனால் வலிக்கிற மாதிரி கைத்தடியால் அடித்து ஏசிவிட்டு சமையலறைக் கதவருகே  இருந்த ஒரு தேக்குப் பீரோவின் முன் உட்கார்ந்துகொண்டாள். பிறகு அதை மெதுவாகவே திறக்க ஆரம்பித்தாள். பீரோவினுள் சின்னச் சின்ன விக்ரஹ்ங்கள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின் மேல் உட்கார்ந்திருந்தன. ஒரு மூளையில் காவித் துணியில் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருந்தது. பாட்டி அதை நிதானமாக எடுத்து அவிழ்த்தாள். அதனுள் மிகச் சிறிய மண்குடம் இருந்தது. அதன் வாய் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. பாட்டி ‘பூர்னாவுக்கு குரல் கொடுத்து ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது. எல்லோரும் அவளையே பொறுமையின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டியோ சிறிதும் அவசரமில்லாமல் அந்த பீரோவை நன்றாக மூடிவிட்டுத் திரும்பினாள்.

கதவருகேயும், கதவுக்கு வெளியேயும் குழுமி நின்றவர்களில் முன்னால் இருந்த பிரான்ஜிவன்லாலை சமிக்ஞையால் அழைத்தாள் பாட்டி. சிறிது நேரமாகத் தலையைக் குனிந்திருந்ததால் பாட்டியின் மூக்கு கண்ணாடி மூக்கின் மையத்திற்கு நழுவிவிட்டிருந்தது. அவள் கிண்ணத்தைச் சிறிது முன்னால் நகர்த்தி, தலையை லேசாக உயர்த்தி, விழிகளை இன்னும் சற்று உயர்த்தி மூக்குக் கண்ணாடிக்கப்பால் பார்வையைச் செலுத்திப் பேசினாள், “ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.

பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யானி’ல்* லயிக்கத் துவங்கினாள்.

*** 
*ஜன் கல்யான் – தெய்வீகமான விஷயங்கள் தாங்கி வருகிற குஜராத்தி மாத சஞ்சிகை

எழுதப்படாத குறிப்புகள் – செவல்குளம் செல்வராசு

Related image

வயதும் நினைவிலில்லை

காரணமும் நினைவிலில்லை

அன்றொரு நாளில்

அப்பாவிடம் அடிவாங்கி

கால் சட்டை நனைத்தது

மூன்றாம் வகுப்பு ஆசிரியருக்குப் பயந்து

இரண்டாம் வகுப்பிலேயே

இரண்டாண்டுகள் இருக்க நினைத்தது

ஊர்ப்புற நூலகத்தில்

சிறுவர் மலர் புத்தகத்தைத்

தெரியாமல் திருடியது

துவக்கப் பள்ளி நாட்களிலே

தோழி அவள் விரல்கள்

என் உள்ளங்கை வருடியது

தும்பி பிடித்து நூலில் கட்டி

கல்தூக்க வைத்து மகிழ்ந்து சிரித்தது

வாலறுந்து அது இறந்து போக

தனியாய்ச் சென்று தேம்பி அழுதது

கடவுளுக்கு நீர் தர மறுத்ததாய்

ஓணான் மீது குற்றம் சாட்டி

அதற்கு தூக்கு தண்டனை

நிறைவேற்றிய சிறுவர் கூட்டத்தில்

நானும் இருந்தது

பள்ளி முடிந்து வீட்டிற்கு

வேகமாய் ஓடும்போது

சுவரில் மோதி முன்பற்கள்

உடைந்து விழுந்தது

ஆடை அவிழ்ப்பு நாடகமொன்றை

அறியாமல் நான் காணநேர்ந்தது

அறியாத வயதில் எனக்கு

அவள் மேல் காதல் வந்தது

அம்மன் கோவில் திருவிழாவில்

அவளை முதலாய்த் தாவணியில் ரசித்தது

அன்றொரு நாளில் அவசரமாய்

அவளிடம் ஒருமுறை முத்தம் ருசித்தது

இப்படியாய் இன்னும்

எத்தனையோ நிகழ்வுகள்

இன்றுவரை என் தினசரிக் குறிப்பேட்டில்

எழுதப்படாத குறிப்புகளாக… ….

“அப்படியே என நம்பிவிட்டதால்” ஜூன், 2019 மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for தாழ்வு மனப்பான்மை

மதன் திருமணம் அவன் பெற்றோர் பார்த்துச் செய்தது தான். வாய்த்த மனைவி ரூபவதி மீது அவனுக்கு மிகவும் பிரியமும், பெருமையும் உண்டு. தனியார் ஐ.டீ. அலுவலகத்தில் வேலை செய்பவன். மற்றவர்களைப் போல் தானும் பொறியியல் முடித்துவிட்டு வேலையில் இருப்பதைப் பெரிதாகக் கருதவில்லை.

தன் ரூபவதி செய்யும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலையை மிக உயர்த்தியாக நினைப்பதுண்டு. அவள் விவரிக்கும், எடுத்துச் சொல்லும் விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் அணியும் ஆடைகள், அதற்கு ஏற்றாற்போல் அலங்கரித்து, நடப்பதை ரசனையோடு பார்ப்பது வழக்கமானது.

அவர்கள் அவனுடைய பெற்றோருடன் ஒரே வீட்டிலிருந்தார்கள். இவர்கள் இருவரும் வேலையிலிருந்ததால் நான்கு வயதுடைய மகள் நிலா பெற்றோரின் கவனிப்பில் அதிகம் இருந்தாள். ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு பாசம்!

திடீரென ஒரு நாள், மதன் வழக்கம் போல் தன் அலுவலக பேருந்தில் வீடு திரும்பி வரும் போது நெஞ்சு அடைப்பது போல் தோன்றியது. கூடவே தூக்கி வாரிப் போட்டது. உடனே பேருந்தை நிறுத்தச் சொல்லி, இறங்கி விட்டான். ரூபவதியை கைப்பேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லித் தான் பக்கத்தில் இருக்கும் டாக்டரைப் போய் பார்ப்பதாகத் தெரிவித்தான். அவளும் ஆலோசிப்பது நல்லது என ஆமோதித்தாள்.

டாக்டரைப் பார்ப்பதற்குள் மதன் தனக்கு என்னவாயிற்று, ஏன் இவ்வாறு நேர்ந்தது என யோசித்து, விடை கிடைக்காததால் அமைதியற்ற நிலையிலிருந்தான். டாக்டரைப் பார்த்ததும் தன் நிலையை விவரிக்க முயன்றான். சொல்ல வந்த வார்த்தைகள் சிக்கிக் கொண்டு வந்தது. டாக்டர் ஆசுவாசப் படுத்தினார். அவன் நிலையைப் புரிந்து கொள்ளப் பல கேள்விகள் கேட்டார்.

இந்த முறை ஆனது போல் எப்போதாவது லிஃப்டில், விமானத்தில், நடந்ததா என விசாரித்தார். மதன் அப்படி எதையும் தான் அனுபவிக்கவில்லை என்றதும் டாக்டர் பயப்படத் தேவையில்லை என்றார். பல முறை இப்படிக் குறுகிய இடங்களில் நேர்ந்தால் அப்பொழுது அதற்காகச் சிகிச்சை தேவைப் படும் என்றார். எதனால் அப்படி என்று மதன் கேட்க, டாக்டர், அப்படி நடந்தால் அது “க்ளாஸ்ட்ரோ ஃபோபியா” (claustrophobia)வின் அறிகுறி என்றார். இப்போதைய நிலைமைக்கு ஓரிருநாளைக்கு மாத்திரைகள் எழுதிச் சாப்பிடச் சொன்னார்.

மதன் வீடு திரும்பும் வழியிலேயே தன்னுடைய ஸ்மார்ட்போனில் க்ளாஸ்ட்ரோ ஃபோபியா பற்றி குறிப்புகளைத் தேட ஆரம்பித்தான். தற்சமயம் டாக்டரிடம் போகும் முன்னும், அதன் பின்னும் வலைப்பூ (Google) பார்த்து விளக்கம் தேடுவது, கௌண்டமணி சொல்வது போல், “இதுவெல்லாம்…சகஜம்ப்பா” என ஆகிவிட்டது. எதையோ படித்து என்னமோ புரிந்து கொள்வது, இதனால் பயன் உண்டோ இல்லையோ, துன்புறுத்தல் அதிகம்

மறுநாள் எழுந்ததும் மதன் வலைப்பூவில் படித்த குறிப்புகள் தன்னிடம் இருக்கிறதா எனக் கவனித்துப் பார்த்தே ஆக வேண்டும் என முடிவு செய்தான். கவனிக்கக் கவனிக்க,”இது இருக்கிறதோ?”, “இதுவும்?” என்று, வார முடிவில் “ஆம் எல்லாமே இருக்கிறதே” எனத் தோன்றியது. வியந்து, ஸ்தம்பித்துப் போனான். பயம், கலக்கம் மேலோங்கியது. தனக்கு க்ளாஸ்ட்ரோ ஃபோபியா உண்டு என்று தானே தீர்மானித்துக் கொண்டு விட்டான்.

ரூபவதி மதன் சொல்வதைக் கேட்டதும் வழக்கமாகப் போகும் குடும்ப டாக்டரிடம் போகலாம் என ஆலோசனை சொன்னாள். நிராகரித்து விட்டான் மதன். தான் படித்ததைப் பட்டியல்போட்டு அடுத்த வார முழுவதும் கவனிக்கப் போவதாகக் கூறினான். மறுபடியும் எல்லாமே இருக்கிறது என்ற முடிவிற்கு வந்தான். உடனே, திடீரென்று, அன்று போல் அதே பீதியை உணர்ந்தான். ரூபவதி மதனைப் பார்த்ததும் பயந்து விட்டாள். இரவை எப்படியோ கழித்தார்கள்.

மறுநாள் அவர்கள் எப்போதும் பார்க்கும் டாக்டரிடம் வந்து விவரித்தார்கள். விவரங்களைக் கேட்டவுடன் மதனுக்கு “க்ளாஸ்ட்ரோ ஃபோபியா” இல்லை என்றார். பயம் மேலோங்கி இருப்பதைப் புரிந்து கொள்ள என்னைப் பார்க்கப் பரிந்துரைத்தார்.

மதனும் ரூபவதியும் சிலை போல் உட்கார்ந்து என்னை உற்றுப் பார்த்தார்கள். நடந்ததை முழுமையாக விவரிக்கச் சொன்னேன். ஆரம்பித்தான் மதன். குறிப்பாக அந்த முதல் அனுபவத்தை உன்னிப்பாகக் கவனித்துப் பல கேள்விகள் கேட்டேன்.

ஆலோசிப்பவர்களின் அனுபவங்களை, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டு உட்கொள்வது எங்கள் கடமையாகும். இதிலிருந்து எங்களுக்குப் பல ஆதாரங்கள் கிடைக்கும், அவர்கள் அனுபவித்ததை வைத்தே அவர்களுக்குப் புரிய வைக்க உதவும். நடந்த சூழல், அதற்கு முன் நடந்தவை, அவர்களின் சூழ்நிலை (context) எல்லாம் முக்கியமானவை.

மதனுடைய டீம் லீட் ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் மற்றவர்கள் செயல்களின் ஒருங்கியக்குனர் (coordinator) என்ற பொறுப்பை அவரிடம் தந்திருந்தார். தன் உழைப்பிற்கு இது ஒரு சான்றிதழ், கவனமாகச் செய்து தர வேண்டும் என மதன் எண்ணினான். மனதின் ஓரத்தில் “தன்னால் செய்ய இயலுமா” என்ற கவலை ஒலித்துக் கொண்டே இருந்தது.

பலருடன் பேசி, ஒவ்வொருவர் செய்வதையும் அறிந்து கொண்டு மற்றவரின் செயலுடன் ஒற்றுப் போகிறதா என்று ஆராய்ந்து, இடுக்குகளையும் முட்டல்களையும் கண்டெடுத்து, கலந்து பேசி சரி செய்வது எனப் பல பொறுப்புகளைக் கையாள வேண்டி இருந்தது. ஆரம்பக் கட்டத்தில் தனக்குக் கிடைத்த பரிசு போல் உற்சாகமாக மதன் செய்தான். போகப் போக ஓரிரு இடையூறுகள் சந்தித்ததில் சந்தேகங்கள் எழ ஆரம்பித்தது. “அடடா, இதைச் சரியாக முடிப்போமா?” போன்ற கேள்வி மனதைக் குடைந்தது.

குறிப்பாக, ஒவ்வொருவரிடமும் தன்மையாகப் பேசி புரியவைப்பது மதனை வதைத்தது. சுபாவத்தில் மற்றவரிடம் அதிக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதவன். இப்போது நிறையப் பேச வேண்டியதாயிற்று. தன்னிடம் பேச்சுக்குறை எனக் கருதியவன் மதன். கல்யாணம் செய்ததிலிருந்து ரூபவதியின் பேசும் திறன் அவனை ஈர்த்தது. இந்த ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பித்ததும் அவள் பேசுவதை உற்றுக் கவனிப்பான். அவள் இவ்வளவு எளிதாகப் பேசுகிறாளே என்பதே அவனை வாட்டியது. சட்டென்று அவளை ஏசுவான்.

கடந்த சில நாட்களாக அவன் பெற்றோர் சொல்வதும் மதனை வாட்டியது. கல்யாணம் ஆனதிலிருந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை ரூபவதி செய்து முடிப்பாள். ஒரு உரையாடலில் அவர்கள் “ரூபவதியிடம் சொன்னால், அலட்டிக்காம செய்வா” என்றார்கள். மதனை இது சுருக்கெனக் குத்தியது.

அன்றைக்குத் தான் மதனும் கவனித்தான், வீட்டில் யாரும் அவனிடம் எந்த வேலையையும் தருவதில்லை என்று. இதை உணர்ந்ததும் தன்நம்பிக்கை ஊசலாடியது. தன் மேல் சந்தேகங்கள் அதிகரித்தது. அப்போதிலிருந்து தினசரி வேலைகளைச் செய்யவே “முடியுமா?” என்றே ஆரம்பித்தான். சமீபகாலமாக எதையும் முழுதாகச் செய்ய இயலவில்லை.

மொத்தத்தில் மதனுக்கு தன் அவநம்பிக்கை, சந்தேகம் இவை தென்பட்ட விதங்கள் தாம் பதட்டம், வியர்வை, கை நடுக்கம், படபடப்பு. இந்த கலவையை மதன் புரிந்து கொள்ள, முதல் அனுபவத்தில் ஆரம்பித்தோம்.

டாக்டர் வர்ணித்ததை வைத்து, “இது எனக்கு இருக்கா?” என்ற தேடலில் “ஆம், இருக்கிறது” என்றே மதன் முடிவெடுத்தான். எதனால் இப்படி நேர்ந்தது என்று புரிய அவன் வலைப்பூவில் தேடியதை, பட்டியலிட்டதை வைத்துக் கொண்டு அவற்றை எவ்வாறு கணித்தான் என்று ஆராய்ந்தோம்.

முன் போலவே தான் செய்வதைக் கூர்ந்து கவனித்து, அவைகளில் எது இருக்கிறது என்றும், எது இருக்கக் கூடும் என்றும் பதிவிடச் சொன்னேன். அரை மணி நேரத்தில் முடிந்தவரைக் குறித்ததில், பதட்ட நிலைக்குப் பிறகு ஆனதை குறித்துக் கொள்ளப் பரிந்துரைத்தேன்.

முதலில் பதிவுகள் சடசடவென செய்ததில் பூரண தகவல்கள் இல்லாததால் உபயோகப் படவில்லை. இதன் காரணி எங்கள் உரையாடலில் புரிய வந்தது.

மதன் செய்து வந்ததை உன்னிப்பாகப் பார்த்து வர்ணிப்பு கூட்டி விவரிக்க ஆரம்பித்தான். இதை ஒவ்வொரு ஸெஷன்களில் எடுத்துப் பார்க்கையில் மதனுக்குத் தன்னை மனக்கண்ணாடியில் பார்ப்பது போல் தோன்றியது என்றான். இதில் தெளிவாகியது, எவ்வாறு வலைப்பூவில் படித்ததைத் தீவிர ஆராயாமல், பொதுவான அனுபவத்தையும் ஏதோ என எண்ணி, “ஆம், தனக்கு மெய்யாக அந்த ஃபோபியா உள்ளது” என்று தீர்மானித்து விட்டோம் என்று. இவ்வாறு செயல் பட்டான் என உணரப் பல வாரங்கள் ஆயிற்று. கொஞ்சம் மெதுவாக நடந்தாலும், தெளிவு பிறந்தது.

இப்போது ஏற்றுக்கொள்ள மதன் தயாராக இருந்தான். குறுகிய இடங்களில் சிலருக்கு உபாதை இருக்க நேரிடலாம். அதன் ஒரு தோற்றம் ஃபோபியா. மதனுக்கு நேர்ந்ததோ சஞ்சலம், அதிலிருந்து பதட்டம். படித்ததை ஒரு வகையில் புரிந்து கொண்டுஅவை எல்லாம் தனக்கு இருக்கிறது எனத் தவறாக ஒப்புக் கொண்டு விட்டான். நோய்களைப் பற்றிப் படிக்கும் போது சிலருக்குப் படிப்பதெல்லாம் தங்களுக்கு இருப்பதாகத் தோன்றுவதுண்டு. வலைப்பூவில் பார்த்து கோளாறு, சிகிச்சை முடிவு செய்வது சரியல்ல.

மதனுக்கு தன்னிடம் குறைகள் இருப்பதாகத் தோன்றியது. தன்னால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தான். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கி நின்றது. அடுத்ததாக, இதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம்.

தனக்கு வரும் மனைவியை எல்லோரும் புகழ வேண்டும் என்பது மதனின் விருப்பம். அப்படியே நிகழ்ந்தது. அதனால் தன் பெருமையும் மேலோங்கும் என்று நினைத்தான். தற்சமயத்தில் தன் திறமைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்து, தன்னை ரூபவதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனம் தளர்ந்தான். இதை மையமாக வைத்து ஆராய்ந்தோம்.

அவனுடைய எதிர்பார்ப்பு என்ற கண்ணாடியில் இப்படிப் பட்ட மனைவி வேண்டும் என்றான், கிடைத்தாள். அவள் அழகு, திறமை, எல்லாம் ஏ ஓன்! எல்லா வேலையையும் அருமையாக முடித்ததில் எல்லோரும் அவளைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

இப்போது மனதிற்குள் பொறாமை. இந்த நேரம் பார்த்து தன் வேலைக்குத் தேவையான திறன் சற்றுப் பின்தங்கி இருந்ததால் வேலையைச் சமாளிக்கச் சிரமப்பட்டுத் தளர்ந்து போகையில் பயந்தான், வேதனை அடைந்தான். தான் ரூபவதி அளவிற்கு இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு அந்த கண்ணோட்டத்திலேயே இருந்தான். மதன் தன்னுடைய இந்த உணர்வையும் எதிர்பார்ப்புடன் சேர்த்துப் பார்க்க வைத்தேன். வாரங்கள் ஓடின.

உணர்வுகள் நம் நிலையைக் காட்டும் யுக்தி. அதைக் கண்டு கொள்வதே நிலையைச் சரிசெய்யும் முதல் கட்டமாகும். படிப்படியாக எதிர்பார்ப்பு-உணர்வைப் பற்றி மேலும் பேசினோம். பொதுவாகப் பொறாமை உணர்வு நம்மிடம் உள்ளது என ஏற்றுக்கொள்வதே அபூர்வம். மதன் இதை ஒப்புக் கொண்டது பாராட்டத்தக்கது. தன்னால் ரூபவதி போல் செய்ய இயலவில்லை என்றதே இந்த ஒப்பீட்டிற்கு ஆரம்பமானது. இதை ஆராய்ந்தபின் ரூபவதியை ஸெஷனுக்கு வர அழைத்தேன்.

மதன் தன் நிலையை விவரித்தான். அவனுடைய மனக்கலக்கம் தெளிய, அவள் செயல்படும் விதத்தை விவரிக்க வைத்தேன். ரூபவதி செய்த வெவ்வேறு ஈவென்டுகளை எவ்வாறு செய்தாள் என்றும், செய்த முன்னேற்பாடுகளைக் குறித்துப் பல விவரங்களையும் கேட்டேன்.

அதிலிருந்து மதன் தன் அணுகுமுறையைப் பற்றிப் பேசத் தொடங்கினான். அவன் செய்யாததை அடையாளம் காண ஆரம்பித்தோம். சூழ்நிலைகளைச் சந்திக்கும் சமயங்களில் நிலைத்த தன் மனோநிலை, அதை வெளிப்படுத்தும் விதங்களைப் பார்க்க, மதனுக்கு தன் மனோபாவங்களால் தன் மனத்தின்-உடலின் நிலையை இன்னும் நன்றாக அறிந்து, அதனால் விளைந்த பயம், பதட்டத்தை அடையாளம் காண முடிந்தது. இந்த புரிதல் பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது என்றான்!

அடுத்த படியாக ரூபவதி தான் வடிவமைப்புகள் செய்வதை வர்ணித்தாள். மதன் தனக்குப் புரிந்து கொள்ளப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டான். சலிக்காமல் விளக்கம் அளித்தாள். அவள் திறமையைச் சோதனை செய்வது போல் கேட்டதிலிருந்து எப்படிச் செயல் பட்டாள் என அறிந்து கொள்வதில் மாறியதில் போட்டியோ பொறாமையோ இன்றி பார்த்தான். அவன் அடுத்த கட்டத்திற்குச் செல்வதை உணர்ந்தேன்.

ரூபவதியுடன் ஒரிரு ஸெஷன்கள் தேவையானது. அவள் தன் பங்கிற்கு ஏதாவது உதவ வேண்டும் எனச் சொன்னாள். மதன் அவளை இப்படி உயரத்தில் வைப்பது தனக்குக் கூச்சமாக இருப்பதாகக் கூறினாள். அவள் மாமியார் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாள். அவர்களுக்குத் தான் ஒத்துழைப்பு தராததை உணர்ந்தாள். இதுவரையில் அவள் இல்லத்தரசியாக இல்லாமல் ஒரு விருந்தாளி போல் சாப்பிடுவது தூங்குவது என இருந்தாள்.

இதன் விளைவுதான் மதன் அவளைச் சக ஊழியராகப் பார்த்தானோ? அதை மாற்ற அவள் வீட்டின் பொறுப்புகளில் பங்கெடுக்க முடிவெடுத்தோம். மாமியாரும் புரிந்து கொள்ள, அவர்களை அழைத்து விவரித்து, எப்படிச் செய்யப் போகிறார்கள் என ஆராய்ந்தோம். பல பாதைகளை வகுத்தோம். அதைத் தினசரியாக்க, இரண்டு வாரத்திற்குப் பிறகு வரச் சொன்னேன்.

இந்த இடைவேளையில் மதனுடன் ஸெஷன்கள் சென்றது. இதே நேரத்தில் தன் வேலையில் பல மாற்றங்களைச் செய்ய முயன்றான். வெற்றிகரமாக அந்த ப்ராஜெக்ட் முடிக்க முடிந்தது. வேலையும், உடற்பயிற்சிகளும் செய்து வர, மதனின் உடல் மனம் இரண்டும் நன்றாக, தாழ்வு மனப்பான்மை நகர்ந்தது.

வேலை இடமாற்றம் ஏழாவது மாடியில் என ஆயிற்று. லிஃப்டில் எந்த இடைஞ்சலும் உணராமல் போவதை மிக உற்சாகத்துடன் சொன்னான். வீட்டிலும் ரூபவதியை வீட்டு வேலைகளை அவ்வளவு அழகாக அம்மாவுடன் செய்வதைப் பார்ப்பது வித்தியாசமாகவும் இருக்கிறது, அவளிடம் இன்னும் அன்புடன் பார்ப்பதாகவும் கூறினான்!

காணாமல் துடிக்கின்றேன்! – தில்லை வேந்தன்

Image result for காதல் பெண்ணே

காதல்புரி விண்மீன்கள் கதைகள் பேசிக்
கண்ணடித்துக் கண்ணடித்துக் களிக்கும் வேளை,
பாதிநிலா, மீதிநிலா தன்னைத் தேடிப்
பால்போன்ற ஒளிவீசித் தவிக்கும் வேளை,
மோதுகுளிர் வாடையிலே துளிர்க்கும் வேளை,
முல்லைமணம் தொல்லைமிக வளர்க்கும் வேளை,
காதளவு நீண்டவிழிப் பெண்ணே, உன்னைக்
காணாமல் துடிக்கின்றேன், உடனே வாராய்!

நீரோடும் ஆற்றுவெள்ளம் நித்தி லம்போல்
நிலவொளியில் பளபளத்துச் சிரிக்கும் வேளை,
தேரோடும் நெடுவீதி அமைதி காக்கத்
தென்னையெலாம் குளிர்நடுங்கிச் சிலிர்க்கும் வேளை,
ஊராரும், களைத்திருக்கும் உறவும், நட்பும்
உறக்கத்தில் திளைத்திருக்கும் இரவு வேளை,
காரோடும் முகில்கூந்தல் பெண்ணே, உன்னைக்
காணாமல் துடிக்கின்றேன், உடனே வாராய்!

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

திருஞானசம்பந்தர்-தொடர்ச்சி

Image result for மந்திரமாவது நீறு

 

(முன் கதை: பாண்டியமன்னன் நெடுமாறன் வெப்புநோயால் துடிக்கிறான்..அவனைக் குணப்படுத்த சமணர்களும் திருஞானசம்பந்தரும் முனைகிறார்கள்)

 

சமணர்கள்- மந்திரங்களை ஓதினர்.. மன்னனது இடப்பகுதியின் வெப்பு பன்மடங்காக அதிகமாயிற்று..  

துடி துடித்த மன்னன் திருஞானசம்பந்தரைப பார்வையாலே வேண்டினான்.

திருஞானசம்பந்தர் ‘மந்திரமாவது நீறு..’ என்ற பதிகம் பாடி..திருநீறை எடுத்து மன்னனது வலது பக்கம் தடவினார்..

தொட்ட இடம் குளிர்ந்தது!

அதே சமயம் இடப்பக்கம் மேலும் கொதித்தது.

‘கடவுள் பாதி..மிருகம் பாதி’ – போல மன்னன் உணர்ந்தான்.

அருகிலிருந்த சமணர்கள் – அந்த வெப்பத்தின் வீரியம் தாங்காது – சற்றே விலகி நின்றனர்.

மன்னனுக்கு திருஞானசம்பந்தர் மீது அன்பும் –சமணர்கள் மீது கடுங்கோபமும் வந்தது.

மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்து : “ஞான வள்ளலே! இந்த இடப்புறத்திலும் நோயை அகற்றி அருளவேண்டும்”

திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்து – திருநீரை மன்னனது இடப்புறத்தில் தடவினார்.

மன்னன் முழுக் குணம் அடைந்தான்.

திருஞானசம்பந்தரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்.

சமணர்கள் வெட்கித்தலை குனிந்தனர்.

ஆயினும் விடுவதாயில்லை!

“மன்னரே! அவரவரது சமயக் கொள்கைகளை ஏட்டில் எழுதி நெருப்பில் இடவேண்டும். யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவர். சம்பந்தரே!  நெருப்புப் போட்டிக்குத் தயாரா?“

மன்னன் அதை நிறுத்து முன், திருஞானசம்பந்தர் : “மகிழ்ச்சி! உங்கள் எண்ணம் அதுவானால் மன்னர் முன்பே அது நடக்கட்டும்”

சூப்பர் சிங்கர் பைனல்ஸ் போல… ஒரு அரங்கம் அமைக்கப்பட்டது.

தீ மூட்டப்பட்டது.

திருஞானசம்பந்தர் தனது பதிகப் புத்தகத்திலிருந்து ..’போகம் ஆர்த்த பூண் முலையாள்’ என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை எடுத்து ‘தளிர் இள வளர் ஒளி’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி ஏட்டை அனலில் இட்டார்.

அனலில் விழுந்த ஏடு .. எரியாமல் பளபளப்பாக மின்னியது..

சமணர்கள் முகம் கருத்தது..

அவர்கள் தீயிலிட்ட ஏடு எரிந்து சாம்பலானது.

அதை எடுத்து தண்ணீரில் குழைத்துப் பார்த்தனர்..

“அரித்துப் பார்க்கிறீர்களோ?” – நெடுமாறன் நகைத்தான்.

“வெப்புநோய் தீர்க்க இயலாமல் முன்பே தோற்றீர்கள்.. அனல் வாதத்திலும் தோற்றீர்கள். சென்று விடுங்கள்”.

திருஞானசம்பந்தர்: ”இனி என்ன வாதம் செய்ய வேண்டும்’ – என்றார் அமைதியாக.

சமணர்கள் பிடிவாதத்தில் :”புனல் வாதம்..அவரவர் ஏடுகளை நதி நீரில் விடவேண்டும். யாருடைய ஏடு நீரை எதிர்த்து செல்கிறதோ அவரே வென்றவராவர்”.

மன்னன் பொறுமை எல்லை கடந்தது.

மந்திரி: “இந்தப் போட்டியிலும் சமணர்கள் தோற்றால் அவர்களை என்ன செய்யலாம்?”-என்றார்.

சமணர்கள் அவமானத்தில் குறுகினாலும்..

“இம்முறை தோற்றால் எங்களைக் கழுவிலேற்றுங்கள்”

அவர்களது நாக்கில் சனியன் போலும்!

கார்காலம்.. வைகை நதி.. கரைபுரண்ட வெள்ளம்..

கரைதனில் மக்கள் வெள்ளம்..

மன்னன் சமணர்களிடம்:”முதலில் உங்கள் ஏடுகளை நீரில் எறியுங்கள்”

சமணர்கள் எறிந்த ஏடு நீரின் வழியே சென்று மறைந்தது..சமணர்கள் நட்டாற்றில் நின்றனர்.

திருஞானசம்பந்தர்  ‘அந்தணர் வானவன் ஆனினம்’ என்று தொடங்கும் பதிகத்தை ஏட்டில் பதித்து…வைகையில் இட்டார்.. ஏடு நீரை எதிர்த்து சென்றது..

ஆனந்தம் பொங்க கூன்பாண்டியன் நெடுமாறன் எழுந்தான்…

அக்கணமே..அவனது ‘கூன்’ நிமிர்ந்த்தது..

திருஞானசம்பந்தர் – அந்த (நீரில் இட்ட) பதிகத்தில் ‘வேந்தனும் ஓங்குக’  -என்று எழுதியிருந்தார்..

இப்பொழுது  ஒரு சின்னப் பிரச்சினை..

திருஞானசம்பந்தர்  போட்ட ஏடு நதியை எதிர்த்து ஓடிக்கொண்டே இருந்தது.

மந்திரி குலச்சிறையார் குதிரையில் ஏறி அதன் பின்னர் கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்.

திருஞானசம்பந்தர்  மந்திரியாரின் நிலைமை அறிந்து – வேறு பதிகம் பாடி அந்த ஏட்டை நிறுத்தினார்.

மந்திரி அந்த ஏட்டை – திருஞானசம்பந்தரிடம் கொணர்ந்தார்.

கூன் பாண்டியன் – ‘நின்றசீர் நெடுமாற நாயனார்’ என்று பெயர் பெற்று உலகு போற்ற வாழ்ந்தான்.

சமணம் மெல்ல அழிந்தது. சைவம் தழைத்தது..

திருஞானசம்பந்தர்.. மதுரையை விடுத்து… தமிழ்நாட்டின் பல சிவத்தலங்களைத் தரிசித்து பல அற்புதங்கள் செய்து- சீர்காழி வந்தார்.

பூம்பாவை என்ற சிவ பக்தை அரவம் தீண்டி இறந்து போனாள்.

திருஞானசம்பந்தர்  பூம்பாவை கதையை கேள்வியுற்றியிருந்தார்.

அவளது எலும்புகள் வைக்கப்பட்ட குடம் முன் நின்று.. பதிகம் பாட… பூம்பாவை உயிருடன் வந்தாள்.

பூம்பாவையின் தந்தை திருஞானசம்பந்தரிடம் “தாங்கள் என் மகளை மணந்து கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பித்தார்..

திருஞானசம்பந்தர்   ‘மறுவாழ்வு பெற்ற இந்த பூம்பாவை என் மகள் போல’- என்று மறுதளித்தார்.

 

இன்னொரு நாடகம் அரங்கேற உள்ளது..

இடம்:சீர்காழி

திருஞானசம்பந்தரின் பெற்றோரும் – சுற்றத்தினரும்:” சம்பந்தா! உனக்கு பதினாறு வயதாகிறது..மண வாழ்வு கொண்டு முறைப்படி வேள்விகள் செய்வாயாக”

திருஞானசம்பந்தர்  மறுத்தார்.

அடி மேல் அடி வைத்தால்..அம்மியும் நகரும் என்பார்கள்..

திருஞானசம்பந்தர்  ஒருவழியாக திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்.

திருப்பெருணா நல்லூர் நம்பியாண்டார் நம்பியின் மகளை திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க முடிவு செய்தனர். திருமண நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தது..நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தரின் கரத்தில் மங்கள நீரை மும்முறை வார்த்து தன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தார். திருஞானசம்பந்தர்   மங்கையின் கரம் பற்றி ஓமத்தை சுற்றி வலம் வந்தார்..

அப்பொழுது.. அவர் எண்ணங்கள் அலை மோதியது.

‘எனக்கு ஏன் இந்த இல்வாழ்க்கை வந்தடைந்தது?சிற்றின்பத்தில் உழலுவதை விட இறைவனது திருவடி  நிழலில் பேரின்பம் காண்பதல்லவா உத்தமம்’ –என்று எண்ணமிட்டார்..

அனைவரும் கோவிலை அடைந்தனர்.

சிவனை மனதில் நிறுத்தி..அவர் திருவடியில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பம் வைத்து ‘நல்லுர்ப்பெருமணம்’ என்று திருப்பதிகம் பாடினார்.

வானில் அசரீரி : “நீயும், நின் மனைவியும்,திருமணத்துக்கு வந்தவர் அனைவரும் எம்மிடம் சோதியாகக் கலந்துகொள்ளவும்”

அங்கு உடனே பெரிய ஒளிவடிவில் ஜோதிலிங்கம் காட்சியளித்தது. அதில் ஒரு வாயிலும் தென்பட்டது.

திருஞானசம்பந்தர்  :

‘காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,

ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே’

என்று பதிகம் பாடினார்.

திருமணத்துக்கு வந்த அனைவரையும் பார்த்து :”சிவஜோதியில் கலந்து கொள்ளுங்கள்.இந்த வாயில் வழி செல்லுங்கள்” – என்றார்.

அனைவரும் சென்ற பின், திருஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த ஒளிவாசலில் சென்று சிவஜோதியுடன் கலந்தார். அந்த வாயில் மூடியது..சிவஜோதியும் மறைந்தது..

இத்தனை அற்புதங்கள் செய்து சைவத்தை நிலை நாட்டிய திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ‘பதினாறு வருடங்கள்’ மட்டுமே!

இப்படிப்பட்ட மகான்களைப் பற்றி எழுதி சரித்திரம் தன்னை புனிதமாக்கிக் கொள்கிறது..

விரைவில் வேறு கதைகள்..

 

 

 

 

திரைக்கவிதை – பனி விழும் மலர் வனம்

 

பனி விழும் மலர் வனம் – ரம்மியமான பாடல் வரிகள் மற்றும் இசை

படம் : நினைவெல்லாம் நித்யா  

இயக்குனர் : ஸ்ரீதர் 

பாடல் : வைரமுத்து 

இசை: இளையராஜா 

பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன் 

 

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்(பனி விழும்………..)காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

(பனி விழும்………)

பூரி ப்ரேயர் ! – சதுர்புஜன்

Image result for அம்மா தரும் பூரி

அம்மா கை உணவு (16)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
5. ரசமாயம் – ஜூலை 2018
6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019

16. பூரி ப்ரேயர் !

அதி காலைப் பொழுதினிலே அடிவயிறு பேசும் –
அன்றைக்கு எது வேண்டும் என்றழகாய் சொல்லும் !
அம்மா என்ற தெய்வம் எந்தன் முகம் பார்ப்பாள் –
இன்று என்ன தேவை என்று சொல்லாமலே செய்வாள் !

ஒரு சில பொழுதுகள் அமைதியாக விடியும் –
இட்டிலியும் சட்டினியும் போதும் என்று தோன்றும் !
வேறு சில நாட்களிலே நா நமநமவென நீளும் –
முறுகலான தோசை இரண்டு தின்றால்தான் தீரும் !

பூரிக்கென்றே சில நாட்கள் பூரித்தே நிற்கும் ;
புருபுருவென உடலெல்லாம் புதிய நாதம் கேட்கும் !
பரபரவென பூரியினை உடலும் மனமும் தேடும் ;
கேட்டது கிடைத்தால்தான் ஆசைத்தீயும் அடங்கும் !

உருளை இரண்டு போதும் அவை உறுபசியைப் போக்கும் ;
அம்மா கையை வைத்தால் அதில் மணமும் ருசியும் சேரும் !
வெங்காயம் இல்லாமலே விறுவிறுவென்று இருக்கும் ;
இருந்து விட்டால் சேர்த்திடலாம் – ருசியும் மணமும் கூடும் !

மசால் மசால் என்று சுவைகள் பல இருந்திடினும் –
அம்மா செய்யும் மசாலா தான் பூரி கேட்டு வாங்கும் !
அப்பப்பா என்ன சுவை – நான் என்னவென்று சொல்வேன் !
ஒன்றிரெண்டு, மூன்று பூரி கணக்கில்லாமல் தின்பேன் !

கரகரவென பூரியென்றால் சிறு வயதில் பிடிக்கும் !
மெத்தென்ற பூரி சிலர் நாவில் மெல்லக் கரையும் !
பார்த்தாலே பூரிக்கும் எந்தன் மனம் என்றும் –
புசுபுசுவென பூரி பொங்க மனமும் கூட பொங்கும் !

எனக்குப் பிடித்த பூரி எந்தன் அம்மாவுக்கும் பிடிக்கும் –
என்றைக்கும் அவள் வளர்ந்த சிறு பிள்ளை போல் தான் !
என்ன வேண்டும் என்றாலே பூரி என்று சொல்வாள் –
ரசித்து ருசித்து உண்பாள் ; ஆஹா என்றே சொல்வாள் !

பூரி பூரி பூரி இன்று பூரி எனக்கு வேண்டும் !
எண்ணெய்ச் சட்டி ஏற்று – அதில் இரண்டு பூரி போடு !
மசாலா வாசம் வந்து என் மூக்கைத் துளைக்க வேண்டும் !
மூக்குப் பிடிக்க உண்டு எந்தன் மூளை மறக்க வேண்டும் !

***********************************************

ஜி.பி. சதுர்புஜன்
E Mail: kvprgirija@gmail.com
Ph: 98400 96329

நீ கண்ணென்றால் நான் இமையாவேன்..! — கோவை சங்கர்

அம்மம்மா என்னென்பேன் திவ்யாவி னழகுதனை
அந்நங்கை யுடலுருவை யெங்கனமே எடுத்துரைப்பேன்!
கன்னங்கரு பாம்புகளோ சிரத்திலுள்ள கருங்கூந்தல்
கன்னமென்ன தித்திக்கும் மாம்பழக் கதுப்புகளோ?
கண்ணென்ன கருமீனோ இதழென்ன செம்மலரோ
திலகமிட்ட நெற்றிதனைத் தொட்டிடவே தோன்றாதோ?
செம்பவளம் திறந்திட்டால் குயிலினொலி வாராதோ
செவ்வடி யெடுத்திட்டால் அன்னத்தைப் பழிக்காதோ?
முன்னழகு காளையரின் நெஞ்சத்தை வாராதோ
பின்னழகு பார்க்கையிலே பாடிடவும் தோன்றாதோ?
பல்வரிசை கடலோடிக் கண்டெடுத்த முத்துகளோ?
பளிங்கொத்த மேனியது மயிலழகைத் தாராதோ?
இடையென்ன கொடியோ உளமென்ன கடலோ
இயற்கையெழில் கூடிடவா அணிகலன்கள் பூட்டியது?

எழுபதாண்டு நிறைவான முதியவராம் குருசாமி
எத்தகைய குறையுமின்றி காத்துவந்த நங்கையவள்
தந்தைதாய் சுற்றமின்றி தவித்துநின்ற வேளையிலே
தந்தையாய் நிறைந்திருந்து போற்றிய நங்கையவள்
குழந்தைப் பருவம்முதல் சோறூட்டித் தாலாட்டி
இருபது வருடங்களாய் வளர்த்துவந்த பொக்கிஷமே
பங்கயமும் பருதியும் மலரும் மணமும்போல்
பிரியாது அவளோடு இருந்தவர் கண்ணன்றோ?
எழுபதாண்டுக் கிழவரவர் வாலிபருள முணராரோ
எவ்விடத்து சென்றாலும் திவ்யாவொடு செல்கின்றார்
வைத்தவிழி வாங்காது நோக்குமந்த வாலிபர்கள்
வஞ்சக விழிகளுமே யவள்மீது பாயாதோ
பொருட்டில்லை பலவயது கடந்திட்ட கிழவருக்கு
பயமின்றி யவளுடனே தன்வழியே செல்கின்றார்!

தண்ணிய மலரவளைக் கண்ணுற்ற சுந்தரமும்
தன்னுள்ளம் பறிகொடுத்துப் பார்த்ததிலே வியப்பேன்ன!
இன்பக் கனவுகளில் கண்டுவந்த கன்னியவளை
தன்னுடமை யாக்கிடவே விழைந்ததிலே வியப்பென்ன!
எத்துணையும் கேட்டாலும் கொடுத்திடவே மனங்கொண்டு
எழுபதாண்டுக் கிழவரையும் துணிவுடனே அணுகுகிறான்
‘ஐயன்மீர்.. ஐயன்மீர் அப்பெண்ணி னழகேயழகு
ஐயன்மீர்.. அவள்கரத்தை யென்கரத்தில் சேர்த்துவிடும்
எத்துணைச் செல்வங்கள் கேட்டாலும் கொடுத்திடுவேன்’
எழுபதாண்டுக் கிழவருமே சிரிப்புடனே கூறுகிறார்:

‘தம்பீநீ சொல்வதைச் சிந்தித்துப் பார்த்தாயா
தங்கம்நிகர் மங்கையவள் இக்கிழவனின் பொக்கிஷம்
இருபதாண்டு போற்றிக்காத்த எனதன்பு சாகரம்
இகமதனில் இருக்கின்ற செல்வங்கள் அளித்தாலும்
நிகராமோ திவ்யாதன் செவ்வடி தூசிற்கே’
நயமுடனே சொன்னவக் கிழவருடைச் சொற்களையே
செவியுற்ற சுந்தரத்திற்கு கோபமே வரவில்லை
செவ்வியதாய் வளர்த்திட்ட பிரிக்கவொணா பெரும்பாசம்
கிழவரையு மிவ்வாறு பேசிடவே செய்ததுவே!
நயமுடனே தன்கட்சி யவரிடமே வாதிட்டு
அடைந்திடுவோம் தங்கம்நிகர் மங்கையவள் திவ்யாவை

அசையாத நம்பிக்கை மனதிலே யெழுந்திடவே
கிழவருடன் பேசுகிறான் காளையவன் சுந்தரமும்
‘கற்றறிந்த முதியோரே யனுபவத்தில் பெரியவரே
புரிந்தது தங்களுடை மேல்நின்ற பாசங்கள்
பரிவுடனே என்வார்த்தை சிலகணங்கள் கேட்பீரே
இன்றிலையேல் மற்றோர்நாள் வேறொருவன் கரங்களிலே
இந்நங்கை கரங்களையே சேர்த்தெடுத் தளிப்பீரே
எப்போது மித்தைய லும்மோடு இருந்திடவும்
எஞ்ஞான்றும் பிரியாது இருந்திடவே யியன்றிடுமோ?
உம்மிறுதிக் காலத்தில் கண்டொருவன் கரங்களிலே
உயிரான மங்கைதனை யொப்படைத்தல் முறையாமோ?
ஒப்புவித்த மனிதனுமே திவ்யாவைக் காப்பானோ?
அவ்வைய மும்முயிரை நிம்மதியாய் விட்டிடுமோ
ஆசையுற்ற மனிதனுமே நானாக இருக்கின்றேன்
அஞ்சாது என்கையில் தந்திடுமே திவ்யாவை
இடரின்றி யாளமர்த்தி திவ்யாவைக் காத்திடுவேன்
இக்கண்ணி னிமையேபோல் நானவளைக் காத்திடுவேன்
வேண்டியன செய்வித்து இதமுடனே பார்த்திடுவேன்
தயங்காது என்கையில் ஒப்படைக்கும்’ என்றானே

காளையவன் வார்த்தைகளும் கிழவரது சிந்தனையை
கனிவோடு எழுப்பியது சிந்தித்தார் கிழவருமே
‘எழிலுக்கே யெழிலினது மேன்மைகள் புரிந்துவிடும்
எழிற்கன்னி திவ்யாவை யவனுக்கே தந்துவிட்டால்
கலங்காது காத்திடுவான் வேண்டியன செய்திடுவான்
காளையவன் பார்வைக்கு அழகாக இருக்கின்றான்
தளுக்கான வுடையுடனே ஆண்மையு மொருசேர
தன்னிகர் நானேயென யரும்புமீசை தலைகாட்ட
அழகிய முகத்துடனே யெழில்சோர நிற்கின்றான்
அழகிய திவ்யாவை வைத்திடத் தகுந்தவனே
பரந்தவுளம் கொண்டவனாய் காட்சிவேறு தருகின்றான்
இக்கட்டை வீழுங்கால் கண்டவனுக் களிப்பதினும்
ஆண்மைமிகு இவனுக்கே திவ்யாவைத் தந்திடுவோம்
ஆணழக னிவனைப்போல் மற்றொருவன் காண்பதரிது’

என்றெல்லா மெண்ணிய கிழவரும் பேசுகிறார்
‘என்னுயிரை யுன்கையில் தந்திடவே முடிவெடுத்தேன்
கலங்காது காப்பதுவே காளையுன் பொறுப்பேயென’
கூறிநின்ற கிழவரது கண்களும் குளமாக
‘கலங்கேல் ஐயன்மீர் கலக்கம் கொள்ளற்க
கருணையொடு யானளிக்கும் பத்தாயிரம் ரூபாயை
அன்புப் பரிசேபோல் ஏற்றுக் கொளவேண்டும்
அந்திமச் சின்னாளை யமைதியாய்க் கழித்திடவே
உம்முயிர் திவ்யாவை மாதத்திற் கொருதடவை
உடனழைத்து வந்திடுவேன் உம்மையே கண்டிடுவேன்
கலக்கம் கொளாதீ’ ரென்றானே சுந்தரமும்

கலங்கிய கண்களொடு திவ்யாவை யருகழைத்து
‘கண்ணேயென் திவ்யாவே யுன்னைநா னித்தம்பியிடம்
கலங்காது தந்திடவே யோசித்து முடிவெடுத்தேன்
அஞ்சாது வுன்னெண்ணம் கூறிடுநீ’ யென்றாரே
அந்நங்கை யாதொன்றும் பேசாது நின்றாளே

கடைக்கண் பார்வையினால் சுந்தரத்தைத் துளைத்தாளே
கட்டழகு சுந்தரத்தை முறுவலினால் வதைத்தாளே
கன்னியின் மனந்தனையே தப்பாது நோக்கியபின்
கட்டழகி யவள்கரத்தை யவனிடமே தந்துவிட்டு
நீர்வார்த்த கண்களையே மறுபுறமே திருப்பிட்டார்
நயமான வார்த்தைகள் துன்பங்கள் தனைச்சேர்க்கும்
என்றெண்ணி சுந்தரமும் பத்தாயிரம் ரூபாயை
அக்கிழவர் முன்வைத்து ‘வருகிறே’ னெனக்கூறி
ஆசையுடன் நங்கையினை யள்ளியே யணைத்திட்டு
திவ்யாவெனும் பதுமையொடு வழிநோக்கி நடந்தானே!
குறைவில்லா மகிழ்ச்சியும் அடங்கிடா பெருமையும்
கொண்டவன் திவ்யாவை யணைத்தபடி சென்றானே!

 

Image result for இலக்கியக் காதல்

மூன்றாம் பத்து – என் செல்வராஜ்

Image may contain: 1 person

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

 

 

திலீப்குமார்

குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் மீது பற்று கொண்டவர். இவருடைய கதைகள் யதார்த்தத்தின்

களத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவபூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். மூங்கில் குருத்து, கடவு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடவு சிறுகதை தொகுப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து சிறப்பாக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்யக்கூடியவர். சிறந்த தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இரண்டு நூல்களாக தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் மூங்கில் குருத்து, கடிதம், அக்ரஹாரத்தில் ஒரு பூனை, மனம் எனும் தோணி பற்றி

கோணங்கி

சுதந்திர போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் பேரன் கோணங்கி. இவரது இயற்பெயர் இளங்கோ. இவரது அண்ணன் ச தமிழ்ச்செல்வன். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோணங்கி “கல்குதிரை” என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். இவரது மொழி நடை தனித் தன்மையானது.இவரின் சிறுகதைகளில் மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள் சிறப்பானவை. சலூன் நாற்காலியில் சுழன்றபடி என்ற முழு தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் மதினிமார்களின் கதை, கருப்பு ரயில், கோப்பம்மாள்

ஜெயமோகன்

1987 ல் கணையாழியில் நதி சிறுகதை அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தமிழ்ப் புத்தகாலயம் இந் நாவலை வெளியிட்டுள்ளது. 1998 முதல் 2004 வரை “சொல்புதிது” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற நாவல் புகழ் பெற்றது. ஜெயமோகன் சிறுகதைகள் என்ற முழு தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்புக்குப் பின் ஊமைச்செந்நாய், அறம், வெண்கடல் ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சங்க சித்திரங்கள் ஆகிய கட்டுரை நூல்கள் சிறப்பானவை. இவரின் சிறந்த சிறுகதைகள் திசைகளின் நடுவே பத்ம வியூகம், நதி, மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்

லா ச ராமாமிர்தம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தவர் லா ச ரா. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டும் எழுதிவந்த லா ச ரா தனது ஐம்பதாவது வயதில்

புத்ர நாவலை எழுதினார். தினமணிக்கதிரில் சிந்தாநதி என்ற வாழ்க்கைத்தொடரை எழுதினார். சிந்தாநதி நூலுக்காக 1989 ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றார். அவருடைய பாற்கடல் முக்கியமான படைப்பு. ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். லா ச ரா தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும்.தமிழின் முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங்களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். ‘அபிதா, ‘புத்ர’. ‘செளந்தர்ய’ ஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. ஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. இவரின் சிறந்த சிறுகதைகள் பாற்கடல், ஜனனி, பச்சை கனவு

சுப்ரபாரதி மணியன்

இவர் சிறுகதைகள் , நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல தளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். கனவு என்ற இலக்கிய சிற்றிதழை முப்பது வருடங்களாக நடத்தி வருபவர். இவரது சாயத்திரை, மற்றும் சிலர், ஆகிய நாவல்கள் சிறந்த நாவல்களாகும். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை சுப்ரபாரதி மணியன் கதைகள் என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.சுப்ரபாரதி மணியனின் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே சமகால வாழ்வியல் தரிசனத்தின் பன்முகக்கூறுகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. நகரமயமாதலின் விளைவான சூழல் பாதிப்பு, பொருள் மயமாதலின் காரணமாக மனித உறவுகளில் ஏற்படும் முரண்கள் இவை இரண்டும் இவரது கதைகளில் துலக்கம் பெறுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும், வாக்கு

இந்திரா பார்த்தசாரதி

கும்பகோணத்தைச்சேர்ந்த இந்திரா பார்த்தசாரதி சிறந்த நாவலாசிரியர். சிறந்த நாடகாசிரியர். இவர் படைப்பாளியாகவும் ,பேராசியராகவும் ஒருங்கே

செயல்படும் வாய்ப்பு பெற்றவர். குருதிப்புனல் என்ற நாவலுக்காக 1977ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். குருதிப்புனல் , தந்திர பூமி, சுதந்திர பூமி போன்ற இவரது நாவல்கள் அரசியல் சார்ந்தவை. இராமானுஜர் நாடகத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர். இவரது நாடகங்கள் ஔரங்கசீப், நந்தன் கதை, இராமானுஜர் ஆகியவை சிறந்த படைப்புக்களாகும். கணையாழி இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். 39 ஈழத்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை எஸ் பொவுடன் இணைந்து ” பனியும் பனையும் “என்ற தொகுப்பை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு கப் காப்பி, தொலைவு,

இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல், பயணம்

எம் வி வெங்கட்ராம்

கும்பகோனத்தில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்த இவர் பல சிறுகதைகளை எழுதி உள்ளார். தேனீ என்ற சிற்றிதழை சில காலம் நடத்தினார்.

இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வெங்கட்ராம் கதைகள் என்ற தொகுப்பாக கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் வெளியிட்டுள்ளது. நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் 50 க்கு மேற்பட்ட நூல்களை சிறுவர்களுக்காக இவர் எழுதி பழனியப்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரது நித்ய கன்னி அழியாப்புகழ் படைத்த நாவலாகும். இவரின் சிறந்த சிறுகதைகள் பைத்தியக்கார பிள்ளை, தத்துப்பிள்ளை,

சார்வாகன்

சார்வாகன் என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன் ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.இவர் எழுத்துக்கள் முழு தொகுப்பாக சார்வாகன் கதைகள் என்ற பெயரில் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவரின் சிறந்த கதைகள் கனவுக்கதை, சின்னூரில் கொடியேற்றம்

எஸ். சம்பத்

சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. 1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று

அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின் ‘இடைவெளி சம்பத்’ என்றே அறியப்பட்டார். சிறுகதைப் பரப்பில் சம்பத் எழுதிய கதைகள் அதிகம் இல்லை. ஆனால் எழுதிய கதைகள் எதிர் மரபு சார்ந்தவை.அங்கீகரிக்கப்பட்ட கதைகூறல் மரபுக்கு, கருத்துக்கு எதிராகப் புனைவு செய்யப்பட்டவை. இவரது கதைகளை இரண்டு தொகுதிகளாக நவீன விருட்சம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சாமியார் ஜூவுக்கு போகிறார், இடைவெளி

நகுலன்

டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது

கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். ‘எழுத்து’ இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த ‘குருஷேத்திரம்’ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள். அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரின்சிறந்த சிறுகதைகள் ஒரு ராத்தல் இறைச்சி, அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

 

வெள்ளித்தட்டு – ந பானுமதி

Image result for சிறுகதைImage result for வெள்ளித்தட்டு

நீலப் பின்ணணியில் உலா வந்த மேகங்கள் உரசிக்கொண்டும், விலகிக்கொண்டும்,இலேசாக ஓரங்களில் சாயும் கதிரவனின் நிறங்களைப் பெற்றுக் கொண்டும்,சிறுத்தும் பெருத்தும், வண்ணங்களை நொடிக்குள் மாற்றியும் நிலையற்று சென்று கொண்டிருந்தன.பார்க்கப் பார்க்க அலுக்காத கோலங்கள். நேற்றைப் போல் இன்றில்லை;இன்றைப் போல் நாளையும் இருக்கப் போவதில்லை. ஆனால்,பார்க்கையில் சட்டென்று மாறும் நிறத் துளிகள்,தொடு வானில் அவை எழுதும் கிறுக்கோவியங்கள்,காலத்தின் கணக்குகள் யாரிடம் என்று வானமும், பூமியும் நடத்தும் இரகசியப் போர்கள்,இவைகள் தனக்கென எதைக் கொண்டிருக்கும்? மேகங்கள் தம்மை மிதக்க வைத்த இயற்கைக்கு நன்றி சொல்லுமா, கோபம் கொள்ளுமா?பஞ்சு போல் வெளுத்த மேகங்களை மானுடர் விரும்பாத போது அதே நிறத்திலுள்ள மக்களை மேம்பட்டவர்களாக அவர்கள் நினைக்கும் விந்தை என்ன?கருமை கொண்டு சரமழை என இறங்குகையில் அதே நிறத்தவரை இந்த உலக மனிதர்கள் வெறுப்பதும் தான் என்ன?

உஷா தன் எண்ணங்கள் போகும் போக்கை நினைத்து சிரித்துக் கொண்டாள்.மனம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு காட்சியையும், பொருளையும் தன்னால் பார்க்கவே இயலவில்லை என்பது அவளுக்குக் கசப்பாக இருந்தது.மற்றவற்றில் புகுந்து அதன் சிந்தனை ஓட்டத்தை தான் அனுமானிக்க முயல்வது தவறல்லவா?இதில் என்ன தவறிருக்கிறது என்றது அக மனம்.தன்னை விட்டுவிட்டு பிறவற்றில் எண்ணங்களை ஏற்றித் தானே பார்த்து சிரிக்கும் வரம் அல்லது சாபம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றது அது.

சங்கர் மூச்சிரைக்க மேல் மொட்டைமாடிக்கு ஓடி வந்தான்.’அம்மா,உன்னத் தேடிண்டு யாரோ சேதுவாம் வந்திருக்கார், வாசல்ல நிக்கறார்’ என்றான்

“சேதுவா, யார்டா அது? எனக்கு அப்படி யாரையும் தெரியல்லயே?”

‘அம்மா,உனக்கு உங்க ஊர்ல ‘ஊசி’ன்னு பேராமே?அதைச் சொல்லிக் கேட்டார்.பாக்க ரொம்ப சுமாரா இருக்கார்.நான் ஏதோ யாசகக் கேஸ்ன்னு நெனைச்சேன்’

“ஊசின்னா சொன்னார்,தம் பேரு சேதுன்னா சொன்னார்,அவனாடா வந்த்ருக்கான்?” சொல்லிக்கொண்டே வயதையும் மீறி படிகளில் விரைவாக இறங்கினாள்.

வாசல் படிகளைத்தாண்டி ஒரு வளைந்த நிழலென அவர் உருவம் தெரிந்தது.”சேதூ’ என்றாள் கரகரத்த குரலில்.அவனை உள்ளே வா என்று கூடத் தான் சொல்லவில்லை என்று  உறுத்தியது. ஆனால், என்று அவன் எவர் வீட்டிற்கும் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறான்?ஏழைகளை யார் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள்? சுதாரித்துக்கொண்டு”வாடா சேது, ஏன் அங்கயே நிக்கற? உள்ள வா” என்றாள்.கிழியாத ஆனால் பழசான எட்டு முழ வேட்டி,சந்தனக் கலரில்  மேல்சட்டை, கைகளில் சிறிய மற்றும் பெரிய பைகள்.கண்கள் மிரள மிரள விழித்தன.ஆனாலும்,ஆதுரத்துடன் அவளைப் பார்த்தன.

‘உம் பொண்ணா ஊசி,அப்டியே உன்னப் பாக்கற மாரி இருக்கு;என்ன பேரு வச்சிருக்க?’

“சேது மாதவி; இவன் புள்ள ஹரிசங்கர்”

‘வாங்கோடா, கண்ணுகளா, மாமாடா நா’ என்று இருவரையும் அணைத்துக் கொண்டான்.கண்களில் கண்ணீர் அவனறியாமல் சுரந்து பெருகியது.வாங்கி வந்திருந்த மாம்பழங்களைக் கொடுத்தான்.

‘ஆத்துக்கார் இன்னமும் ஆஃபிஸிலேந்து வல்லயா?’ என்றான்.

“அவர் டூர் போயிருக்கார் சேது, உக்காரு,காஃபி போட்றேன்”என்றவாறே அவள் உள்ளே போனாள்.எண்ணங்கள் அலைபாய்ந்தன.

இப்போ எதுக்கு வந்திருக்கான்?ஆள் பார்வையாவே இல்லையே? கடன் கேப்பானோ?திருட்ற பழக்கம் இன்னும் இருக்கோ?இந்தக் கொழந்தேளுக்கு சமத்துப் போறாது.கண்ணெதிர்க்கவே அவன் எதையாவது எடுத்து வச்சுண்டாலும் தெரியாது.கைல மூட்ட இருக்கு, டேரா போட்றுவானோ, அவர் வேற ஊர்ல இல்ல.என்ன சொல்லி அவனக் கெளப்பறது.நீண்ட மூச்சு எடுத்து தன்னை அமைதியாக்கிக்கொண்டு அவள் அவனுக்கு மாம்பழத் துண்டுகளும் காஃபியும் கொடுத்தாள். அவன் கவனிக்காத போது ஹாலில் பொருட்கள் ஏதேனும் காணவில்லையா என அவசர அவசரமாகப் பார்த்தாள்.

‘உங்க அம்மா காஃபி ஞாபகம் வரதுடீ.நீ வேலய விட்டுட்டியா என்ன?’ என்றான்.

“ஆமாண்டா, எப்படி இந்த இடத்த கண்டு பிடிச்சே?”

‘உன் ஆஃபீஸ்ல போய்க்கேட்டேன். அவா தான் அட்ரஸ் கொடுத்தா.’

“சேது,நீ என்ன பண்ற?எங்க இருக்க?குடும்பம் இருக்கா? அம்மா எப்டி இருக்கா?”

‘அம்மா போய்ச் சேந்து கனகாலம் ஆய்டுத்து.கெடக்கற வேலயப் பாக்கறேன்.கல்யாணம் ஒண்ணுதான் கொறச்சல் எனக்கு.

“சுமதி, ருக்கு, கணேஷ் சௌக்யமா இருக்காளா?”

‘நன்னாருக்கா.கொழந்த குட்டின்னு செட்டில் ஆயிட்டா.அப்பப்பப் பாப்பேன்.உங்காத்துக்கு வந்து போன ஒட்டோ வொறவோ எனக்கு யார்ட்டயும் இல்லடி.உங்கம்மா இருக்காளே,என்ன ஒன்னுவிட்ட ஓர்ப்படி புள்ளன்னா பாத்தா,வரச்ச எல்லாம் அப்டி கவனிப்போ.எனக்குன்னு மோர்க்கூழ் பண்ணுவோ.எஞ்சுழி,அவளப் படுத்திட்டேன்.’

“அதெல்லாம் இப்ப என்னத்துக்கு? ராத்ரி இங்க சாப்ட்றியா? என்ன பண்ணட்டும்?”

‘உங்கம்மா மாரியே கேக்கற.சாம்பார், ரசம், கூட்டு, கறி எல்லாம் பண்ணு. மாகாளியும், மாவடுவும் இருக்கா.முடிஞ்சா அப்ளம் பொரிச்சுடு.’

“நீ இப்டி கேக்கறதே சந்தோஷமா இருக்குடா.வெண்டக்கா சாம்பார், கத்ரி ஸ்டஃப்ட் கறி, மிளகு ரசம், அப்ளம் இல்ல, வடாம் வறுத்துட்றேன் ஊறுகாயெல்லாமிருக்கு.மாது, சங்கு மாமாவோட பேசிண்டு, வெளயாடிண்டிருங்கோ;அம்மா நிமிஷத்ல வந்துட்றேன்”

கைகள் பரபரவெனெ இயங்கினாலும், காதும், கவனமும் ஹாலில் தான் இருந்தன.அவன் சாப்பாடு மெனு சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தாலும் என்ன ஒரு துணிச்சல், வெக்கமே இல்லாம என்றும் எண்ணம் ஓடியது. மேல் மாடியின் வெட்ட வெளியில் அவள் பார்த்த விளிம்புகள் மடிந்த அந்த வெள்ளை மேகம் இவன் திருடிச் சென்ற அப்பாவின் வெள்ளித்தட்டு போல் தோன்றியதை அவள் வியப்புடன் இப்போது நினைவு கூர்ந்தாள்.அவன் குழைந்தைகளுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.

அவளுடைய பிறந்த வீட்டிற்கு அவன் கடைசியாக வந்த நாளை அவள் எப்படி மறப்பாள்?அவளுக்கு அன்று மறுதினம் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப் போகின்றன.கொட்டிலில் கட்டியிருந்த ‘கனகா’விற்கு பிரசவ நேரம்.இடையன் வந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். அம்மா கனகாவைத் தடவித்தடவி ஏதேதோ சொல்கிறாள்.கால் மாற்றி மாற்றி நின்று பசு தவிக்கிறது.நந்தினி இனம் புரியாத தாபத்தில் முளையிலேயே சுற்றிச் சுற்றி வருகிறது.புண்ணாக்கை ஒரு கை பார்க்கும் கனகா அந்தத் தொட்டியைத் தொடக்கூட இல்லை. மட்டைத் தேங்காயும், உரித்த காயும், சீப்புப் பழமும், வெள்ளிக் குத்து விளக்கில் மின்னும் தீபமும், சரம் சரமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகை மாலையும் அம்மா ஒரு தாம்பாளத்தில் தயாராக வைத்திருக்கிறாள்.அம்மாவை அப்படி ஒரு தீவிரத்துடன், ஒரு தபசியைப் போல் பார்ப்பதே நெகிழ்த்துகிறது.அவளது கன்னத்திரளில் உருளும் வியர்வை முத்துக்களில் அவளின் மூக்குத்தி ஒளிச் சிதறல்களை அள்ளி வீசுகிறது.அவளை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.பருத்திக்கொட்டையுடன் வேறு ஏதோ ஸ்பெஷலாகக் கலந்து ஒரு மரத் தொட்டி நிறைய மாட்டிற்கான தீவனம் சற்றுத் தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது.இப்போது கூட அம்மாவின் அந்தக் குரல் கேட்கிறது அவளுக்கு.

‘ஹாலுக்குப் போய் படிச்சுண்டே பாத்துக்கோ, கன்னு போட்றச்சே கூப்ட்றேன்.கவனமா இரு.ஜில்லோன்னு எல்லாம் தொரந்திருக்கு’

அவள் போக்குக் காட்டிவிட்டு அங்கேயே சற்று மறைந்து நின்றாள்.முன்னங்கால்களில் முகத்தைப் பதித்துக்கொண்டு கன்று வெளி வருகையில் அம்மா கூப்பிட்டாள். கற்பூரம் ஏற்றிக் காட்டினாள்;அவள் கன்னங்களில் கண்ணீர் முத்துக்கள் வழிந்தோடின.யாருக்குக் குழந்தை பிறந்தது என அதிசயித்தது நினைவு வருகிறது.’லஷ்மி பொறந்திருக்கா’என்ற குரல் அம்மாவின் வழக்கமான குரலில்லை. அதில் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று இருந்தது.பிறந்ததும் துள்ளிக் குதித்தது கன்று.மாந்தளிரின் பழுப்பு நிறத்தில் மான்களைப் போன்ற விழிகளோடு நெற்றியில் வெள்ளையாக சுட்டி போல அமைப்புடன் இருந்த அதை பசு நக்கித் தீர்த்தது.

சிறிது நேரம் கழித்துதான் சேது வீட்டில் இல்லாதது தெரிந்தது.எப்படியும் ராச்சாப்பாட்டிற்கு வந்துவிடுவான் என நினைத்தார்கள்.தட்டுக்களைச் சாப்பிடுவதற்காகக் கழுவி வைக்கையில் அப்பா சாப்பிடும் வெள்ளித்தட்டு இல்லை.சேது இல்லை, தட்டுமில்லை.கோபமே வராத அப்பாவிற்க்கு அன்று வந்த சினம் அவள் அதுவரை அறியாத ஒன்று.ஓவல் வடிவில் சீரான மழுங்கடிக்கப்பட்ட வளைவுகளோடு ஒரு விரற்கடை ஆழத்தோடு(அம்மாவின் சொற்பிரயோகம்) கீழ்ப்புறத்தில் நான்கு குமிழ்களோடு அது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ எடை.அவருக்கு மாமனார் கொடுத்த சீதனம்.அவர் போலீஸில் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் அவனைத் தட்டோடு பிடித்துவிட்டார்கள்.சொந்தக்காரன் என்பதால் வீட்டிற்கே அழைத்தும் வந்துவிட்டார்கள்.அம்மா அப்போது செய்த காரியம் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

‘என்னத்துக்கு இப்ப அவனத் திருடன்னு சொல்றேள்?நான்னா அவனுக்குக் கொடுத்தேன்;ஏன்டா, வாய்ல என்ன கொழக்கட்டையா, சொல்றதுதானே,சித்தி தான் வச்சுக்கோன்னு கொடுத்தான்னு.அடிச்சேளா என்ன,தப்பில்லையா,சரி சரி, உங்க வழிமுற வேற.என்னது,இவர் கம்ப்ளைன்ட் பண்ணாரா?தப்புத்தான்,அவருக்குத் தெரியாம அவர் தட்ட தூக்கிக் கொடுத்தது தப்புதான்.உங்க நேரமெல்லாம் வேஸ்டாப் போச்சு, மன்னிச்சுடுங்கோ’

“அம்மா….. உங்கள மாரியும் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.அதுக்கு இந்த தம்பிக்கும் ஐயாவுக்கும் நன்னி சொல்லணும்” காவலர் போய் விட்டார்.

“போடா, தட்ட எடுத்துண்டு போய்டு” என்ற அப்பா,அம்மாவைக் கட்டிக்கொண்டார்.

நினைவுகளிலிருந்து மீண்ட உஷா அனைவரையும் சாப்பிடக் கூப்பிட்டாள்.

‘என் தட்லயே சாப்ட்றேன்’ என்ற சேது அந்த வெள்ளித்தட்டை வெளியில் எடுத்து வைத்த போது உஷாவின் கண்கள் பிதுங்கின.

‘இது என்னோட கடசி சாப்பாடுடி.தேசாந்த்ரியா போப் போறேன்.எத்தனையோ பணக்கஷ்டம் வந்த போதெல்லாம் இத மட்டும் விக்காம வச்சிருந்தேன்.உன்னப் பாத்து உங்க அம்மாவை நெனைச்சுண்டு உங்கையால ஒரு வாய் சாப்டுட்டு இதை உங்கிட்ட சேத்துட்டுப் போலாம்னுதான் வந்தேன்.நான் திருடினேன்டி,சித்தி திருத்தினாடி’

உணவறையின் சட்டகத்தின் வழியே நிலவின் வெண் ஒளிக் கண்ணிகளைத் தாங்கி வெள்ளித்தட்டென அதே வெண் மேகம் இப்போது காண்பதாக உஷாவிற்குத் தோன்றியது.

கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

எதிர் மரியாதையும் சுதாமன் குபேர செல்வமும்!

திருமணங்களில் எதிர் மரியாதை செய்வது என்பது ஒரு சாங்கியம்! சம்பந்திக்கு, புடவை, வேட்டி, வெற்றிலைப் பாக்கு, பழம் எல்லாம் வைத்துக் கொடுப்பது ஒரு வழக்கம்! அதுபோலவே, திருமணத்திற்கு வந்திருப்பவர்கள், திரும்பிச் செல்லும் போது, கையில் ஒரு தாம்பூலப் பை கொடுப்பது – அவர் மொய் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும்! – ஒரு வகையான எதிர் மரியாதை, வந்து வாழ்த்தியதற்கு ‘நன்றி’ கூறுதல்!!  

தாம்பூலப் பைகள், பல வகை – துணிப் பை, காகிதப் பை, அலங்காரக் கைப் பை என. மணமக்கள் பெயர், மண நாள், ஏதாவது சுவாமி படம் அல்லது கூப்பிய கரங்கள், தேங்க் யூ  என பையின் மேல் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும். சிலர் தங்கள் ‘கெத்’தைக் காண்பிக்கும் வகையில் மிக ஆடம்பரமான தாம்பூலப் பைகளைக் கொடுப்பதுவும் உண்டு! சுவாரஸ்யம் பையின் உள்ளே இருக்கிறது – தேங்காய், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் குங்குமம் போன்றவைதான் வழக்கமாக இருக்கும். செலவைக் குறைக்க, தேங்காய் இடத்தில் சின்ன சாத்துக்குடி அல்லது ஒரு ஆரஞ்சு (சீசனுக்குத் தக்கபடி) வைப்பதுவும் உண்டு. வீட்டில் வந்து, அது நார்த்தங்காயா அல்லது வாடிய சாத்துக்குடியா என பட்டி மன்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்! 

சில பைகளில் சாக்லேட்டுகள், திருமண பட்சணம், வளையல் என வித்தியாசமான வஸ்துக்களும் இடம் பெறும்.  மிகத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு ஸ்பெஷலாய் சில பரிசுப் பொருட்களை, தனியான பையில் போட்டுக் கொடுப்பவர்களும் உண்டு – ‘ரிடர்ன் கிஃப்ட்’ – பெண்களுக்குத் தனியாகவும், ஆண்களுக்குத் தனியாகவும் (என்ன உபயோகிப்பார்கள் என யோசித்து) கிஃப்ட் பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதற்காக எல்லோரையும் தெரிந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் வாசலில் டியூடியில் இருப்பார்!

சஷ்டி அப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில், புத்தகங்கள் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் – இதை, காரைக்குடி செட்டியார்கள் வீட்டு திருமணங்களில், நிச்சயமாக நடைபெறும் ஒரு வழக்கமாகவே பார்த்திருக்கிறேன்! வாழ்த்துரைகள், பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகங்கள், சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள், முதுமையில் மகிழ்ச்சி, பகவத் கீதை, மகான்களின் பொன்மொழிகள் இப்படிப் பல தலைப்புகள், நமக்குக் கிடைக்கும்! 

சமீபத்தில் நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்தில், அருமையான புத்தகம் ஒன்றை, தாம்பூலப் பையுடன் கொடுத்தார்கள் – டாக்டர் டி எஸ்.நாராயணஸ்வாமி தொகுத்திருந்த, ”தெரிந்த புராணம் தெரியாத கதை”என்ற புத்தகம். சுவாரஸ்யமாக இருந்தது!  வாசிக்கும் பழக்கம் தொலைந்து வரும் இந்த நாட்களில், இப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுப்பது, வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கொள்ளலாம். இரண்டு வயது குழந்தைக்குக் கூட ‘யூ ட்யூபி’ல் கார்டூன் காண்பித்து சாதம் ஊட்டும் பெண்கள் / ஆண்கள் கதை சொல்லி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கலாம் – இந்தப் புத்தகம் அதற்கு ஒரு நல்ல முன்னோடி என்பேன் நான். இராமாயண, மகாபாரதக் கதைகள் நல்ல வாசிப்பானுபவத்தையும், வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பார்வையையும் அளிக்க வல்லவை என்பது என் எண்ணம். அதை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெரியவர்களின் கடமை!

குசேலசர் கதை நாமெல்லாம் அறிந்ததுதான். இந்தப் புத்தகதில் அந்தக் கதையிலிருந்து:

துவாரகையில் ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பாத பூஜை செய்யும் ருக்மணி, கண்ணனின் பாதங்களில் வழியும் இரத்தம் கண்டு திடுக்கிட்டு, காரணம் கேட்கிறாள். ”வறுமையில் வாடும் என் நண்பன் சுதாமன் என்னும் குசேலன், என்னைக் காண பசியிலும், உடல் தளர்ச்சியிலும் வாடி வந்துகொண்டிருக்கிறான். அவன் கால்களில் குத்தும் முட்களையும், இரத்தத்தையும்தான் இங்கு நீ காண்கிறாய். அதனால் அவன் கால்களில் முட்கள் தைத்ததை அறியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறான்” என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

குசேலனை நன்கு உபசரித்து, பாத பூஜை எல்லாம் செய்து மகிழ்கிறான் கண்ணன். அவன் கொடுக்கும் அவலில் இரண்டு பிடிகளைத் தின்பதின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் குசேலனுக்கு அளிக்கிறார். மூன்றாவது பிடி அவலை தின்னுமுன், ருக்மணி அதனைத் தடுத்து விடுகிறாள்! எங்கே இருக்கும் மற்ற செல்வங்களையும், தன்னையும், தன் பரிவாரங்களையும் தானமாக்க் கொடுத்து விடுவானோ கண்ணன் என்று தடுத்து விடுவதாகச் சொல்லிவருகிறார்கள் கதை சொல்பவர்கள் – தர்மத்தை, கணவன் செய்யும் தர்மத்தை, அதுவும் மஹாலக்‌ஷ்மியின் அவதாரமான ருக்மணி தடுப்பாளா? என்ற கேள்வி எழுகிறது. ஶ்ரீகிருஷ்ணன் கேட்கும்போது, ருக்மணி, “ ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல் அனைத்தையும் தாங்களே சாப்பிட்டு விட்டால், அந்தப் பிரசாதத்திற்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்திற்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே என்றுதான், மூன்றாம் பிடி அவலை தங்கள் கைகளைப் பிடித்துத் தடுத்தேன்” என்கிறாள்! ருக்மணி தர்மத்தைத் தடுக்கவில்லை – தர்ம பலன் எல்லோருக்கும் கிடைக்கவே அவ்வாறு செய்தாள்!

தன் வறுமை நீங்கியது அறியாமல் சுதாமன், கண்ணனின் கருணையால் பேரானந்தத்தில் இருந்தான். அவன் மனம் சலனமேதுமின்றி இருந்தது. வந்த வழியே நடந்து ஊர் திரும்புகிறான். இதைக் கண்ட ருக்மணி, “அவருக்குத் தெரியாமலே சகல செல்வங்களையும் கொடுத்துவிட்டு, திரும்பவும் வந்த வழியே நடந்து செல்ல வைத்துவிட்டீர்களே?” என்று கேட்கிறாள். அதற்கு ஶ்ரீகிருஷ்ணர் கூறும் விளக்கம் நாம் அனைவரும் உணர்ந்து விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று!  பகவான் சொல்கிறார்: “சுதாமன் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. வீட்டிற்குச் சென்று குபேர செல்வத்தால் ஏற்படும் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்ற பேரவா போன்ற புதிய பிரச்சினைகளால் சுதாமன் வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அதனால்தான், அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பரமானந்தத்தை சிறிது நேரம் அவனிடம் இருக்க, திரும்பவும் நடந்து செல்ல அனுமதித்தேன்” என்கிறார்.

பக்தியின் பேரானந்ததையும், குபேர செல்வத்தால் ஏற்படும் தீமைகளையும் எளிமையாகச் சொல்கிறார் ஶ்ரீகிருஷ்ணர். 

இப்படி 31 புராண, இதிகாசக் கதைகள் உள்ளன – வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் வரையப்பட்டுள்ள கோட்டோவியங்கள் மிகச் சிறப்பு (ஓவியர் ஜே.பாலாஜி)!  தாம்பூலப் பைகளில் இப்படிப்பட்ட புத்தகங்கள் கொடுப்பதை வரவேற்கிறேன் – வாசிப்பது அவரவர் விருப்பம்!

(தெரிந்த புராணம் தெரியாத கதை – டாக்டர் டி எஸ் நாராயணஸ்வாமி. LKM Publication, Chennai 600 017.  Phone : 24361141).