துலாக் காவேரி மகாத்மியம்

Related image
(காவேரி துலாக் கட்ட ஸ்நானம் – மயிலாடுதுறை)

ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம். தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

ஒரு முடவன் துலா மாதத்தில் நீராட மாயவரம் வரும் போது ஐப்பசி மாதம் முடிவடைந்துவிட்டது. ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் புனிதநீராட முடியவில்லை. எனவே அவர் அந்த தலத்து இறைவனான மயூரநாத ஸ்வாமியிடம் “ஐப்பசி மாதமும் முடிந்து விட்டது. ஆனால் என்னால் காவிரியில் நீராட முடியாமல் போனதே” என்று முறையிட்டார். பிறகு மனக்கவலையுடன் அன்று இரவு அங்கே உள்ள மண்டபத்தில் உறங்கினார்.

அவனது கனவில் தோன்றிய இறைவன் அந்த முடவனுக்குக் காட்சி தந்து, மனம் வருந்தவேண்டாம். கார்த்திகை முதல் தேதியாகிய நாளை காலை நீ காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடிய புனித பலனை அடையலாம் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டாராம். அதன்படி அந்த முடவன் கார்த்திகை மாதம் முதல் நாளன்று காவிரியில் புனித நீராடி முக்தியடைந்தார் என்றும் இதுவே “முடவன் முழுக்கு‘ பெயர் வரக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதுமுதல் ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராட இயலாதவர்கள் கார்த்திகை முதல்தேதி அன்று துலாக்கட்டக்காவிரியில் நீராடினால் அதே பலனைப்பபெறலாம் என்ற ஐதீகம்.

துலா காவேரி புராணம்

சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை “சோறுடைய” நாடாகச் செய்கிறாள். “சோறு” என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது

 

துலா காவேரி மகாத்மியம்

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன் , மேலும் கூறலானார்: கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும்,தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம்,தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்” என்றார்.அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை , முனிவர்கள் , பிராயச்- சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

காவிரியின் பெருமையை யாரால் சொல்ல முடியும்?

நாத சன்மா என்பவன் , பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் , கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள்,தங்கள் பத்திநிகளுடனும்,புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து,பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

கவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், “உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்” என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை,நாதசன்மா விளக்கினார்: உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேச்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு,ஆயுள், ஆரோக்கியம், செல்வம்,கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும். “

பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும்,தரிசித்து, மோக்ஷம் பெற்றனர்.

நதி தேவதைகளிடம் பிரம்ம தேவர் மேலும் கூறுகின்றார்: “காவேரி மகிமையை கேட்டாலோ நினைத்தாலோ பாவங்கள் அகலும். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவனும் துலா மாதத்தில் கௌரி மாயூரத்தைஅடைந்து காவிரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் . ஒரு சமயம் , அத்திரியின் மகனாகப் பிறந்த எனக்கும் ஊர்வசிக்கும் காவேரி மகளாகப் பிறந்தாள்அவளைத்தான் காவேர ராஜனுக்கு மகளாகக் கொடுத்தேன். அவளே இப்பொழுது நதியாக வந்துள்ளாள். நீங்கள் துலா ஸ்நானம் செய்து உங்களிடம் படிந்துள்ள பாவங்களை நீங்கப் பெறுவீர்களாக.” என்று அருளினார்.

காவேரி ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த இரு வேதியர்களிடம் பாவங்கள் பல செய்த ஒரு பெண் , பேய் வடிவம் கொண்டு எதிரில் வரவே, அவளுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்ற கருணையோடு, அவ்வேதியர் இருவரும், அவளை துலா மாதத்தில் கௌரி மாயூரம் சென்று காவேரி ஸ்நானம் செய்யச் சொன்னார்கள். அவளும் அவ்வாறு செய்யவே, பேய் உருவம் நீங்கியது.

துலாகாவேரி மகிமையைக் கேட்டவாறே உயிர் நீத்த சந்திரகாந்தை என்ற மகா பாபிக்கும் விஷ்ணு லோகம் கிடைத்தது. அவளது கணவனான வேத ராசி என்ற அந்தணன் புண்ணியசாலி. துலா ஸ்நானத்தைத் தவறாது செய்து வருபவன். அதன் பலனாகத் தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லப் பட்டான். வழியில், யம கிங்கரர்கள், பாபிகளைக் கட்டி இழுத்துக்கொண்டு போவதையும் கண்டான். அவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள். அருணோதய காலத்தில் நித்திரை செய்தவர்கள். கர்மானுஷ்டானங்களைச் செய்யாதவர்கள். பசியுடன் வந்தோருக்கு அன்னம் அளிக்காதவர்கள். செய்யக்கூடாதவைகளை செய்தவர்கள். பித்ரு தர்ப்பணம் செய்யாதவர்கள். தெய்வ கதைகளைக் காது கொடுத்துக் கேட்காதவர்கள். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்யாதவர்கள். ஸ்தல யாத்திரையும் தான தர்மங்களும் செய்யாதவர்கள். பகலில் நித்திரை செய்தவர்கள். என்னைவிட மேலானவன் யாரும் இல்லை என்று பெரியவர்களை அவமதித்தவர்கள். சத்தியமே பேசாதவர்கள். சிவ பூஜை,விஷ்ணு பூஜை செய்யாதவர்கள். இவர்கள் நரகத்துக்குச் செல்வதைக் கண்டு ,வேத ராசிக்கு அவர்கள் மீது கருணை மேலிட்டது. ” நரகத்தை அனுபவிக்கும் உங்களுக்கு எனது ஒரு நாள் துலா ஸ்நான பலனை அளிக்கிறேன் ” என்றான். அடுத்த கணமே, நரகம்,சுவர்க்கமாக மாறியது. இதனைக் கண்ட வேத ராசி, பகவன் நாமாக்களைக் கூறிக்கொண்டே ஆனந்தக் கூத்தாடினான். இதனால் கோபத்துடன் வந்த யமனால் வேத ராசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அப்பொழுது அவன் விஷ்ணு கவசத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். யமனும்,அவனை வணங்கிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தான்.

பாரத்வாஜ மகரிஷியின் அருளால் அவரது ஆசிரமத்தில் இருந்த கிளியும் பூனையும் துலா ஸ்நானம் செய்து,சுவர்க்கத்தை அடைந்தன. அகத்திய முனிவரின் சாபத்தால் பாம்பாகிய நகுஷன் என்பவன், கிருஷ்ணனின் அருளால் துலா காவேரிக்கு சென்று ஸ்நானம் செய்து பழைய உருவம் பெற்றான். வாங்கிய கடனைத் திருப்பித்தராத பாவத்தால் குதிரையாகைப்பிறந்து, வசிஷ்டரின் உரைப்படி, கௌரி மாயூரத்தை அடைந்து, துலா ஸ்நானம் செய்து தேவலோகம் பெற்றது. முற்பிறவியில் கொலை செய்த பாவத்தினால் குள்ள நரியாகவும் , முனிவர்களின் ஆசிரமத்திலிருந்து பழங்களைத் திருடித் தின்றதால் குரங்காகவும் மாறியவர்களைக் கண்டு , காசிப முனிவர் அவர்களைத் துலா காவேரியில் ஸ்நானம் செய்யும்படி அருளினார். அதன்படி செய்ததால், அவை, தேவ உருவம் பெற்றன. சிங்கத்துவஜன் என்ற வேடர் குல அரசன், ஓடி வரும் வழியில், பாரத்வாஜ முனிவர் மீது அவனது கால் படவே, அவனைக் கழுதையாக மாறும் படி அம்முனிவர் சாபமிட்டார். அதன்படி கழுதையாகத் திரிந்த அவனுக்கு எதிரில் பகவான் தோன்றி , காவேரி ஸ்நானம் செய்து சாபம் நீங்கப் பெறுவாய் என்று அருளினார். ஸ்ரீ ராமனிடம், வசிஷ்டர், சுதர்சனன் என்ற அந்தணன் , பாபியாக இருந்தபோதிலும் விதிவசத்தால் துலா காவேரி ஸ்நானம் செய்து, கௌரி மாயூர நாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்து, இறுதியில் சிவலோகம் பெற்றதையும், தனது தவத்தைக் கெடுத்ததால் விஸ்வாமித்திரர் ரம்பையை கல்லாக்கியதும், பிறகு அக்கல்லை வியாழ பகவான் காவேரியில் இட்டவுடன் பழைய உருவம் பெற்றதையும் விவரமாகச் சொன்னார். அதைகேட்ட ராமனும் , கௌரி மாயூரத்தை அடைந்து, பல தான தர்மங்களைச் செய்து, மாயூரனாதரையும், மயிலம்பிகையையும் வணங்கிவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார்.

மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன் என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.

நியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டவ்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, “சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்” என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, “அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்” என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.

நியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்துவரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன்.

யமலோகம் செல்லும் வழியில் இரண்டு சண்டாளர்கள் வழிமறித்து, “எங்களிடம் செருப்பு வாங்கிவிட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்துவிட்டுப் போக வேண்டும்”என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள்,தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக்கொடுத்தார்கள். சண்டாளர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி , இரு பிரம்மச்சாரிகளும்,”நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது.நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்.” என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

யமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன் ,அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.

(யம சுலோகம்;

தர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;

தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:

யமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:

சூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே…. )

இதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந்து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.

மீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை,தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி,எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது ,அவளுக்கு சுமங்கலியாக, திவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.

விதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா, எல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகத்திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள்,சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார். அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.

திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, ” செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. ” என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, “அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்” என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்.” என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.

சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், ” எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். ” என்றார். சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, “காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்.” என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான – தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.

துலா மாதக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் . காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், ” தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு.” என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.

தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.

இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று,மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம் , அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .

” கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி “

 

துலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.


நன்றி – சிவபாதசேகரன் சென்னை.

 

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

இரண்டாம் புலிகேசி

Image result for chalukya pulikesi

பெயருக்குத் தகுந்தபடி வாழ்ந்தவன் அவன்!

அவன் பெயரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல..

‘புலி  வருது.. புலி வருது’ – என்று சொன்னால் ஒரு நாள் புலி வரும் என்பார்கள்.

ஆமாம். புலி தான் வருகிறது.

இரண்டாம் புலிகேசி! இன்று நமது ஹீரோ!

மகேந்திர பல்லவன், ஹர்ஷன் என்று பல ஜாம்பவான்கள் ஆண்ட காலத்தில்… அவர்களுக்கே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தவன்..சிம்ம சொப்பனம் என்பது தவறு.. புலி சொப்பனம் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்னுரை:

கர்நாடகத்தைசேர்ந்த கடம்ப அரசின் சிற்றரர்களாக இருந்தவர்கள் சாளுக்கியர்கள்.

முதலாம் புலிகேசி காலத்தில் கடம்பர்களை அடித்துவிரட்டிவிட்டு ஆட்சியைப்பிடித்தார்கள். கிபி 540ம் ஆண்டு முதலாம் புலிகேசி மன்னர் ஆட்சிக்கு வருகிறார். ஆட்சிக்கு வந்த புலிகேசி செய்த முதல் வேலை அஸ்வமேத யாகம் செய்தது. அஸ்வமேத யாகம் செய்தால் அவர் மாபெரும் சக்ரவர்த்தி எனப்பொருள். அந்த யாகத்தைசெய்து முடித்து சுற்றுவட்ட சிற்றரசுகளை எல்லாம் தன் ஆட்சியில் சேர்த்துவிட்டு நிமிர்ந்தால் வடக்கே வலிமையான ஹர்ஷரின் ராஜ்யமும், தெற்கே பல்லவரின் ராஜ்ஜியமும் தான் இருக்கிறது. இப்படி ஒரு பேரரசை உருவாக்கிவிட்டு அவர் மறைந்தார்.

அவரது மகன் கீர்த்திவர்மன்.

கீர்த்திவர்மனின் மகன்- பெயர் எறெயா (இறையா).

தலைநகரம் வாதாபி.

கிபி 597 ஆம் ஆண்டில் இறையாவின் தந்தை கீர்த்திவர்மன் இறந்தபோது இவனுக்கு  8 வயது. இதனால் இவனது சிற்றப்பனார் மங்களேசன் ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான். மங்களேசன் திறமையான ஆட்சியாளனாக இருந்தான். அவனது காலத்தில் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன.

பதவி மோகம் – யாரை விட்டது?

ராமாயண காலத்திலிருந்து – இந்நாள் வரை பதவிக்காக மோசம் செய்வது என்பது  நடைமுறையில் உள்ளது தானே!

எரேயா (இறையா) வளர்ந்தான்.

வருடம் 610:

இறையா 21 வயதினன்.

போர்க்கலைகளில் பெரும் திறமை அடைந்தான்.

பாகுபலியைப் போல வீரமென்பதை உதிரத்தில் கலந்தான்.

மக்களின் மனத்திலும் இடம் பிடித்தான்.

அரசனானவுடன் தான் வெற்றிகொள்ளப் போகும் அரசுகளை எண்ணி இன்பக்கனவு கண்டான்.

மங்களேசன் யோசித்தான்: ‘இறையாவின் செல்வாக்கு பெருகிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் அவனே ஆட்சியில் வந்து விடுவானோ’ என்ற பயம் ஏற்பட்டது.

தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு என்ன வழி என்று யோசித்தான்.

உடனே தனது மகன் கோவிந்தனை  முடிக்குரியவனாக அறிவித்து யுவராஜாவாக்கினான்.

இறையா: ‘இது சதி- சித்தப்பன் துரோகி’ – என்றான்.

மங்களேசன் இறையாவை ரகசியமாக கொன்றுவிட ஏற்பாடுகளைச் செய்தான்.

இறையா அதை அறிந்து கொண்டு வாதாபியை விட்டுத் தப்பிச்சென்று பாணா (கோலார்) பகுதியில் மறைந்திருந்தான்.

தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டினான்.

இறையா பயம் என்பதை சற்றும் அறியாதவன்.

மங்களேசன் மீது போர் தொடுத்தான். எலப்பட்டு சிம்பிகே (இளப்பட்டு சிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்தான். கொல்லப்பட்டான்.

இறையா இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான்.

தோள்கள் தினவெடுத்தது என்று சொல்வார்கள்.

புலிகேசி அப்படிப்பட்ட மனிதன்.

மங்களேசன் காரணம் உள்நாட்டுக் குழப்பங்கள் இருந்ததால் – அருகிலிருந்த சிற்றரசர்கள் துணிவு பெற்றனர். பாதாமியை வெல்ல இது தருணம் என்று படையெடுத்தனர். புலிகேசி அவர்கள் அனைவரையும் பீமா நதிக்கரையில் போரிட்டான். மங்களேசன் மகன் கோவிந்தன் சரணடைந்தான். இன்னொரு மகன் அப்பாயிகா தப்பிப் பிழைத்து ஓடிப்போனான். ஐஹோலே என்ற இடத்தில ஒரு பெரிய தூணை நிறுவி இந்த வெற்றியைப் பறைசாட்டினான்.

வெற்றி ஒரு போதை மருந்து! வெல்ல வெல்ல மேலும் தினவெடுக்கும் தோள்கள். பாணா, கடம்பர்கள், தலைக்காடு கங்கர்கள், கொங்கண மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் –அனைவரையும் போரில் வெற்றி கொண்டான். கோசலம், கலிங்கம் எல்லாம் எதிர்ப்பின்றி சரணடைகின்றன. ஆந்திராவில் வெங்கிபகுதியில் தன் தம்பி விஷ்ணுவர்த்தனை ஆட்சியில் அமர்த்த்கிறான். விஷ்ணுவர்த்தன் கீழைசாளுக்கிய ஆட்சியை ஏற்படுத்துகிறான்.

இங்கே தான் ஒரு சிறு காதல் கதை மலர்கிறது.

இந்த ரணகளத்திலும் நமக்கு ஒரு கிளுகிளுப்பு கிடைக்கிறது.

கங்கா நாட்டைப் படையெடுக்கும் பொழுது…

நதிக்கரையில் ஒரு பெண் தாமரை! சுற்றிலும் அல்லி மலர்கள் போல பணிப்பெண்கள்! நிலவைச் சுற்றி நட்சத்திரங்கள்!

ஒரு புலி பூனையாகிறது.

‘யார் அந்த நிலவு…ஏன் இந்தக் கனவு’ – என்று மயங்கினான்.

காதல் எப்பேர்ப்பட்ட வீரனையும் குழைத்து விடுகிறது.

அவள் கங்கா மன்னன் துர்வினிதாவின் இளைய மகள்.

கங்கா மன்னனை போரில் வென்றதும்.. புலிகேசி கங்கா மன்னனிடம்..

“மன்னா! எனக்கு ஒரு பரிசு வேண்டும்.” – உறுமும் குரல் இப்பொழுது கெஞ்சுகிறது.

அது காதல் படுத்தும் பாடு!

“உங்கள் இளைய மகள் எனக்கு மகாராணியாக வேண்டும். அவள் மூலம் பிறக்கும் என் மகன் விக்ரமாதித்யன் உலகை ஆள்வான்.” – இப்படி பிறக்காத மகனுக்குப் பெயருமிட்டான்.

திருமணம் சிறப்பாக நடந்தது.

சுபம்.

சில வருடங்கள் … அமைதிக்காலம்.

பாரசிக மன்னன் குஸ்ரு அரண்மனைக்கு தூதனை அனுப்புகிறான்.

அவர்களும் புலிகேசி மன்னரின் அரண்மனைக்கு தூதனை அனுப்புகிறார்கள்.

அந்த பாரசீக தூதனை புலிகேசியின் அரண்மனையில் வரவேற்கும் காட்சி அஜாந்தாவில் ஆசாகிய சித்திரமாக இன்றும் காட்சியளிக்கிறது.

Image result for chalukya pulikesi

வாதாபியின் கணபதி பிகப்பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்தது.

அரண்மனையில் ஆஸ்தான கவிஞன் ‘ரவிக்கிருதி’!

சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் அவன் எழுதிய கவிதைகள் ஒரு மிகச் சிறந்த இலக்கியத் தொகுப்பு.

புகழ் பெற்ற சீன யாத்திரிகர்  புலிகேசியின் அரண்மனைக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார்.

அவரும் புலிகேசியையும் அவனது ஆட்சியையும், பாதாமி (வாதாபி) நகரத்தின் சிறப்பையும் பாராட்டி எழுதுகிறார். புலிகேசியின் தொலைநோக்கு அறிவையும் – அனைவரிடமும் அன்பு செலுத்தும் தன்மையையும் வெகுவாக சிலாகித்துள்ளார்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக தங்க நாணயத்தை புலிகேசி வெளியிடுகறான்.

அதில் சாளுக்கிய சின்னமான ‘வராஹா’ (காட்டுப்பன்றி) பொறித்தான்.

அந்நாளிலிருந்து தங்க நாணயங்களுக்கு வராஹன் என்ற பெயர் இலக்கியத்தில் நிலைத்தது.

இன்றும் திருமணங்களில் ‘ ஆயிரம் கட்டி வராஹன்’ – என்று சொல்வது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்!

ஐந்து மகன்கள் பிறந்தனர்.

சந்திராதித்யா, ஆதித்யவர்மா, விக்ரமாதித்யா, ஜெயசிம்மா, அம்பேரா!

புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? சரி! நாம் சண்டைகளைத் தொடர்வோம். சரித்திரம் என்றாலே சண்டை என்று ஆகிவிட்டது!

617–18இல் இரண்டாம் புலிகேசி வேங்கி மீது படையெடுத்து அதனைக் கைப்பறினான்.

பல்லவர்களின் நட்பு நாடாக இருந்த விஷ்ணுகுண்ட இராச்சியத்தை சாளுக்கியப் பேரரசை விரைவாக விரிவாக்கும் நோக்குடன் இரண்டாம் புலிகேசி கவர்ந்தான். இதனால் சினமுற்ற பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பகையுணர்ச்சி வளர்ந்த்தது .புலிகேசிக்கு பல்லவன் மகேந்திரவர்மன் மீது அப்படி ஒரு கடுப்பு!

கி பி 620:

புலிகேசி முப்பது வயது இளைஞன்!

பல்லவன் மேல் படைஎடுக்கிறான். பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேல் புலிகேசி படையெடுத்து வந்தான்.

புள்ளலூர்ப் போர் (Battle of Pullalur) 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் இருந்து பத்துக்கல் (15 கி.மீ.) தொலைவில், அரக்கோணம் சாலையில் திருமால்பூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் என்னும் இடத்தில் நடந்தது. கங்க மன்னன் புலிகேசிக்கு உதவி செய்தான். இந்தப் போரில் பல்லவ இளவரசனாகிய நரசிம்மவர்மனும் போர் செய்திருந்தான். புலிகேசியின் ஆறுமடங்கு படைகளுடன், பாரம்பரியப் படைகளும் மற்றவர்களுமாக, நூறு கொடிகளுடனும் குடைகளுடனும் இருட்டில் அப்பழுக்கற்ற யானைகளுடன் வீரத்துடனும் ஆற்றலுடனும் எதிரிகளின் படைகளைக் கடைந்தனர்; அவனது மேலெழும் அதிகாரத்தை எதிர்த்த பல்லவ மன்னனின் சிறப்பு, அவனது அழிபட்ட படைகளின் தூசியால், காஞ்சிபுரத்தின் சுவர்களுக்குப் பின்னால் மறைந்தது.

(வரலாற்றில் ..புள்ளலூர், பின்னர் பொள்ளிலூர், என்ற இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12இல் பல்லவர்களும் சாளுக்கியர்களும் மோதிய இதே இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஐதர் அலிக்கும் ஆங்கிலக்  கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள் நடந்தேறின.)

புள்ளலூர் வெற்றியைத் தொடர்ந்து புலிக்கேசி காஞ்சியைத் தாக்கினான். ஆனால் பல்லவத் தலைநகரின் கோட்டையைத் தகர்க்க இயலவில்லை. பின்னர் தெற்கு நோக்கிச் சென்று தமிழ்நாட்டின் வடக்கு, நடுப் பகுதிகளில் காவிரி ஆறு வரை சென்றான். சேர, சோழ,பாண்டிய மன்னர்களின் அடிபணிதலைத் தொடர்ந்து வாதாபி திரும்பினான்.

இங்கு ஒரு சிறுகதை:

வாதாபி திரும்பும் புலிகேசியின் படைகள் – புள்ளலூர் வழியாக செல்லும்போது மகேந்திரவர்மனது படைகள் தாக்கி பெரும் சேதம் விளைவித்தது. எஞ்சியோர் வாதாபி தப்பியோடினர் – அன்று இப்படி ஒரு கதையும் உள்ளது.  

இன்னொரு மாற்றுக் கிளைக்கதை கதை இங்கு விரிகிறது..

காஞ்சிக்கு அருகே 15 மைல் தூரத்தில் உள்ள புள்லலூரில் போர் நடந்தது. மகேந்திரவர்மன் தோற்றுப்போய் காஞ்சிகோட்டைக்குள் பதுங்கிகொள்கிறான்.கோட்டையை முற்றுகையிட்டு அது வீழும் சமயம்.

மகேந்திரவர்மன் அவமானத்தில் துடிக்கிறான். சேனாபதியின் மகன் பரஞ்சோதி! இறையருள் பெற்ற பாலகன். பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் என்று பிரசித்தி பெற்றவன். இளவரசன் நரசிம்மனுடைய தோழன். போர்ப்பயிற்சிகளை நரசிம்மனுடன் சேர்ந்து பயின்றவன். மகேந்திரனைச் சந்தித்து…’அரசே…இன்று நிலைமை கடினம் தான். எனினும் ஆண்டவன் அருளிருக்கும் போது நமக்கு எந்த ஆபத்தும் வராது. சிவபெருமான் நம்மைக் காப்பார்” .

இறையருள் விசித்திரமாக வேலை செய்யும் போலும்..

அந்நேரம் புலிகேசி பல்லவனைத் தாக்கச் சென்றிருப்பதை அறிந்த ஹர்ஷன் – சாளுக்கிய  நாட்டின் மீது படையெடுத்தான். புலிகேசி ‘காஞ்சிக் கோட்டை எப்பொழுது விழும்’ என்று காத்திருக்கும் நேரம் ..புறா ஒன்று ஓலை கொண்டு வந்தது.. வடக்கே நர்மதை ஆற்றைக் கடந்து ஹர்ஷரின் படைகள் வருவதாக செய்தி.

புலிகேசி காஞ்சி முற்றுகையை முடித்துகொண்டு வடக்கே விரைகிறான். பெரும்போருக்குபின் வடக்கே நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை தோற்கடிக்கிறான். அதன்பின் குஜராத், மராட்டியம்,கோவா எல்லாம் அவன் ஆட்சியின்கீழ் வருகிறது.

இங்கு  மகேந்திரவர்மன் தப்பித்தான்.

இந்த மாற்றுக் கிளைக்கதை முடிந்தது.

 

மகேந்திரவர்மன் தப்பிப்பிழைத்த போதும், அது பல்லவர்களுக்கு தீராத அவமானமாக மாறுகிறது.

ஹர்ஷன்- புலிகேசி போர் பற்றி சற்று கோடி காட்டினோம். சற்று விரிவாகப் பார்ப்போம்.

Image result for defeat of Harsha at the hands of pulikesin

ஹர்ஷன் தனது பெரும் படையுடன் தானே படைகளின் முன்பு வந்து தென் திசையில் தாக்கத் துவங்கினான்.

இந்தியாவில் பெரும் யானைப்படை அன்று ஹர்ஷனிடம் இருந்தது. நர்மதா ஆற்றங்கரையில் புலிகேசியின் படைகள் அவனை எதிர்கொண்டனர். நதிக்கரையில் ஒட்டியிருந்த தோப்புகளில் புலிகேசியின் படை பல பிரிவாகப் பிரிந்து மறைந்து தாக்கியது. ஹர்ஷனுடைய யானைகள் இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்தது. பெரும்பாலான யானைகள் இறந்து போக – ஹர்ஷன் பின் வாங்கினான்.

வெற்றி பெற்றாலும் புலிகேசி ஹர்ஷனுடைய படை வலிமையை நன்கு அறிந்திருந்தான். ஹர்ஷனுடன் எப்பொழுதும் பகைமை கொண்டிருந்தால்- பிறகு தெற்கில் இருக்கும் பல்லவர்களை வெல்வது எப்படி? ஆகவே- ஹர்ஷனிடம் உடன்படிக்கை செய்து கொள்ள முன் வந்தான். ஹர்ஷனுக்கு இதில் சந்தோஷமே. தோற்று ஓடினோம் என்ற பேச்சுக்கு பதில் – சமாதான உடன்படிக்கை செய்தோமே என்ற பெயர் சிறந்தது தானே.

அந்த உடன் படிக்கையின் படி- நர்மதா நதி இரு நாடுகளுக்கும் இடையே எல்லையாகிறது.

அத்துடன் சமாதானமும் ஏற்படுகிறது. ஹர்ஷன் உத்தரபாதேஷ்வரன் என்ற பட்டம் கொண்டிருந்தான்.

இந்த வெற்றிக்குப் பிறகு புலிகேசி தக்ஷிணபாதேஷ்வரன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான்!

புலவன் ரவிக்கிருதி எழுதுகிறான்:

ஹர்ஷாவின் ஹர்ஷா(ஹர்ஷா என்றால் மகிழ்ச்சி என்று பொருள்) பயத்தினால் உருகியது!

மேலும் தக்ஷிணபாதேஷ்வரன் – உத்தரபாதேஷ்வரனை வென்றான்!

புலிகேசி இப்படி ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடியணையற்ற மன்னராக விளங்குகிறான்.

இங்கே சுபம் என்று போட்டு கதையை முடித்திருக்கலாம்.

ஆனால் துவக்கம் ஒன்றிருந்தால் முடிவு என்று ஒன்று இருக்குமே!

 

பத்து வருடங்கள் கழிகின்றன.

கிபி 630:

பலப்பல போர்களில்..சாளுக்கிய கஜானா காலியானது.

இப்ப பிரச்சினை என்னவென்றால் – மீண்டும் போர் செய்ய பணமில்லை.

ஆனால் பணம் வேணுமென்றால் போர் செய்து வென்ற நாடுகளிடமிருந்து கறப்பது தான்.

பல்லவ காஞ்சி செல்வக் கொழிப்பில் இருந்தது.

‘என்ன செய்யலாம்’ – புலிகேசி காத்திருந்தான்.

பல்லவ நாட்டில் ..மகேந்திர வர்மன் காலமானார்.

நரசிம்மவர்மன் ஆட்சிக்கு வருகிறான்.

 

பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடியது.

கி பி 642:

நரசிம்மன் படைகளைத் திரட்டி சக்தி உள்ளதாகச் செய்திருந்தான்.

புலிகேசிக்கு கஜானா காலியான கஷ்டம்.

இனியும் பொறுப்பதில்லை.

காஞ்சி தான் நமது பணப்பொக்கிஷம்- புலிகேசி படையோடு கிளம்பினான்.

பல்லவர்களுடைய நண்பர்களான பாணர்களை வென்றான்.

பின்னர் காஞ்சியை நோக்கி நகர்ந்தான். முன்பு போலவே – காஞ்சியை நெருங்கினான். வயோதிகனானாலும் – புலிகேசியின் வீரம் குறைய வில்லை. ஆனால் நரசிம்ம பல்லவன் – சக்தியைப் பெருக்கியிருந்தான்.

பரியாலா, சுரமான, மணிமங்கலம் என்று மூன்று இடங்களில் நடந்த போர்களில் நரசிம்மன் படை புலிகேசி படையை வெல்கிறது. தோல்வியை கண்டறியாத புலிகேசியின் படைகள் வாதாபி நோக்கி ஓடத் துவங்குகிறது. விடாத நரசிம்மவர்மர் பற்றும் அவனது படைத்தலைவன் பரஞ்சோதி  -அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார்கள். கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. நரசிம்மனும் புலிகேசியும் நேராகப் பொருதுகின்றனர். புலிகேசி மன்னர் போரில் மரணக் காயமடைகிறான். நரசிம்மன் அவன் அருகில் செல்கிறான்.

‘நரசிம்மா! இந்த யுத்தம் முடிந்ததென்று எண்ணாதே. எனக்குப்பிறகு என் ஐந்து மகன்களில் ஒருவன் காஞ்சியைப் படையெடுத்து வெல்வான். காஞ்சியைக் கைப்பற்றுவான். இது சத்தியம். நான் செல்கிறேன் வீர சுவர்க்கம்’ 

புலிகேசி மாண்டான்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை வீரத்தையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவன் இந்த மாவீரன்.

அவனது பராக்கிரமங்கள் சரித்திரத்தால் என்றும் பேசப்படும்.

(இன்னும் பேசுவோம்) 

பாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி

 

பாம்பே கண்ணன் அவர்களின் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் & பிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவான ஒலிப்புத்தகங்கள் !
புதிய வெளியீடு ! கல்கியின் கள்வனின் காதலி !
கேட்டு  மகிழுங்கள் !
மற்ற நண்பர்களுக்கும் சொல்லுங்கள் !!
   
1.  கல்கியின் பொன்னியின் செல்வன்                           ₹ 600 /-
2. கல்கியின்  பார்த்திபன் கனவு                                    ₹ 250 /-
3. ரமணர் சரித்திரம்                                                       ₹ 200 /-
4. சாண்டில்யனின் கடல்புறா                                         ₹ 700 /-
5. கல்கியின் சிவகாமியின் சபதம்                                 ₹ 300 /-
6 .ரா கி ரங்கராஜனின் நான் கிருஷ்ணதேவராயன்    ₹ 350 /-
7. மஹா பெரியவா                                                           ₹ 500 /-
8.கல்கியின்  சோலைமலை இளவரசி &
  மோகினித்தீவு                                                               ₹ 300/-
9. பாரதியாரின் பகவத் கீதை                                       ₹ 350/
10 பாம்பே கண்ணனின் கிரேண்ட் ரிகர்சல் –            ₹ 175 /
ஒலிப்புத்தகங்கள் வாங்க பாம்பே கண்ணன் அவர்களை  9841153973 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for தேவசிற்பி

விஸ்வகர்மா தேவ தச்சராகவும் சிற்பியாகவும் இருப்பதால் அவருக்கு எண்ணற்ற வேலைகள் இருந்தன. பிரம்மனின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களை இவர்தான் அமைத்தார். ஆயுதங்கள் செய்வதில் அவர் ஒரு விற்பன்னர். கதன் என்ற அசுரனைத் திருமால் வதம் செய்தார். அந்த அசுரனின் எலும்பிலிருந்து ஒரு ஆயுதத்தை விஸ்வகர்மா உருவாக்கினார். அந்த ஆயுதமே ‘கதாயுதம்’ என்று பெயர் பெற்றது. அதே போல் அசுரர்களை எதிர்த்துப் போராட இந்திரனுக்குச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. அதற்காக ததிசி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து உருவாக்கப்பட்டதே வச்சிராயுதம். ஏற்கனவே இவர் சிவபெருமானுக்குப் பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்குச் சாரங்கம் எனும் வில்லையும் வடிவமைத்தவர். இந்திரனுக்காக அவனது தலைநகராம் அமராபதிபுரியையும் புதுப்பித்தவர்.

நீதி நியாயம் சத்தியம் இவற்றின் பிரதிநிதியாகத் தன் பேரன் எமதர்மராஜன் இருப்பான் என்று முதல் பார்வையிலேயே கணித்தவர். மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன் அல்லவா எமன்.? மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காசியபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமன். அத்துடன் அவனுக்குச் சிவபெருமானின் அருளாசியும் கிடைத்திருக்கிறது. அதனால் அவனை எப்படியாவது தென்திசைக் காவலனாக்கி பூவுலக வாசிகளுக்கு அவர்கள் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்ப சுவர்க்க நரக பதவிகளை வழங்கும் நீதியரசனாக ஆக்கவேண்டும் என்ற எண்ணம் விஸ்வகர்மாவின் மனதில் உதித்தது. நரகலோகம் என்னும் எமலோகத்தை உண்டாக்கி அதற்குத் தன் பேரனை அதிபதியாக்கவேண்டும் என்கிற ஆசையும் அவர் முகத்தில் விரிந்தது. அத்தோடு மட்டுமல்லாமல் தன் பேரன் எமனுக்காக எமபுரிப்பட்டணம் என்ற ஊரையும் நிர்மாணிக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்துவிட்டார்.

அதைப்போல் வைவஸ்வத மனு பூலோகத்தின் மனித வர்க்கம் தோன்றுவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருக்கவேண்டும் என்றும் எண்ணினார். மனுவின் வழித்தோன்றலாக வருபவர்கள் மனுஷன் மனுஷி என்று கருதப்படுவார்கள் என்று விஸ்வகர்மா உறுதியாக நம்பினார். அதைச் செயலாற்றவும் தான் முயலவேண்டும் என்று தீர்மானித்தார்.

அழகுப் பெண் எமி, யமுனா நதியாக ஓடி பூலோகத்தவர் பாவங்களைத்தீர்க்கும் புண்ணிய நதியாகப் பிரவாகம் எடுத்துச் செல்லும் வடிவம் இன்றே விஸ்வகர்மாவின் மனக்கண்ணில் விரிந்திருந்தது.

இந்த மூன்று குழந்தைகளையும் நன்றாகப் போஷித்து வளர்க்க தன் மகள் சந்த்யா அவள் கணவன் சூரியதேவனுடன் சேர்ந்து வாழவேண்டும்.

எவ்வளவு விரைவில் சூரியதேவனின் சுடு வெப்பத்தைக் குறைக்க இயலுமோ அவ்வளவு விரைவில் அதைச் செய்து முடித்தால்தான் சந்த்யா மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்த இயலும் என்பதை உணர்ந்துகொண்டதால் அவர் வேலையின் பளு அதிகமாயிற்று. சூரியதேவனின் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கிறபடியால் விஸ்வகர்மா அதை உடனே செயலாற்றத் தொடங்கினார்.

Image result for திரிசூலம்திரிசூலமும் சக்ராயுதமும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பிரம்மர் தனித்தனிக் கட்டளைகளையும் பிறப்பித்திருந்தார். 

ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சக்தி வடிவானதாக சூலப்படை அமையவேண்டும். அதுமட்டுமல்லாமல் சூலத்தில் இச்சா சக்தி , கிரியாசக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் இணைந்து வரவேண்டும். அப்போதுதான் சிவபெருமானின் திருக்கரத்தில் திரிசூலம் இருக்கும்போது அவரைத் துதிக்கும் மக்கள், தேவர், அசுரர் என்ற மூன்று உலகவாசிகளின் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் அழிக்கும் சக்தி வாய்ந்ததாக அது அமையும். சிவனுக்கு உகந்த மூன்று இலைகள் சேர்ந்த வில்வ இலைவடிவில் திரிசூலம் அமையவேண்டும். சிவன் விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம், கனவு காணும் நேரம் என மூன்று நிலையையும் குறிப்பதாகவும் அமையவேண்டும். சத்வ ரஜோ தமஸ் குணங்களின் நீட்சியாகவும் அது இருக்கவேண்டும். மேலும் திரி சூலையின் அமைப்பில் வாரசூலையையும் இணைக்க வேண்டும். அதாவது மக்கள் பயணிக்கக்கூடாத திசையைத் திரிசூலம் சுட்டிக்காட்ட வேண்டும்.திங்கள், சனிக்கிழமைகளில் கிழக்கு திசை,செவ்வாய், புதனில் வடக்கு, வியாழனில் தெற்கு,வெள்ளி, ஞாயிற்றில் மேற்கு திசைகளில் சூலை இருக்குமாறு படைக்கவேண்டும். அந்தந்த திசைகள் பயணிக்கக்கூடாத திசைகள் என மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.

Related imageஅதேபோல் சுதர்சன சக்கரத்துக்கும் பலவிதமான முன்னெச்சரிக்கைகள் உண்டு. சுதர்சன சக்கரம் நூற்றெட்டு வெட்டும் நுனிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும் அவை மாறுபட்ட திசைகளில் சுழலக்கூடியதாகவும் இருக்கவேண்டும். சுதர்சனம் செல்லும் பாதை தனியாக அமையவேண்டும். அதனால் அது எந்த இடத்திற்கும் எளிதில் செல்லும் திறன் கொண்டதாக அமையவேண்டும். அதில் ஒன்பது முக்கோணங்கள் நவகிரகங்களை உருவகப்படுத்துமாறு இருக்கவேண்டும். அது காலச்சக்கரம் என்றும் கருதப்படும். அதனால் அதில் 12 மாதங்களுக்கு ஏற்ப 12 ஒளிக்கற்றைகளும் ஆறு பருவங்களுக்கு இணையாக 6 மையங்களும் இருத்தல் அவசியம். ஏவியபின்னும் கூட பகவான் கட்டுப் பாட்டிலேயே இருக்கவேண்டும்.அதன் வேகம் விஷ்ணு பகவான் செல்லும் வேகத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிக்கணக்கான யோசனை தூரம் செல்லும்படி இருக்கவேண்டும். மற்ற ஆயுதங்களைப் போல் இதனை எறிய அல்லது அடிக்கவேண்டிய அவசியம் இருத்தல் ஆகாது. விஷ்ணு பகவான் மனத்திற்குக் கட்டுப்பட்டு ஏவிய வேலையை முடித்துவிட்டு அவரிடமே திரும்ப வரக்கூடியதாக இருக்கவேண்டும். ஏற்கனவே தயாரித்த வஜ்ராயுதத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றையும்விட அது சக்கரத்தாழ்வார் என்று உருவகிக்கப் போகிறபடியால் அதற்கேற்ற திவ்விய தரிசனத்தோடு அமைவது மிக மிக முக்கியம்.

Image result for புஷ்பக விமானம்குபேரனுக்காகச் செய்யப்படும் சிவிகை ஒரு பறக்கும் விமானமாகச் செயல்படவேண்டும். தேவர்களும் மனிதர்களும் உபயோகிக்கும் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமான வகைகளை விட வித்தியாசமானதாய் அமையவேண்டும். அவைகளில் இருப்பது போல இடஞ்சுழி வலஞ்சுழி இருத்தல் ஆகாது. விமானத்தைச் செலுத்துபவர் எண்ணப்போக்கின்படி மனோவேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கவேண்டும். வலவன் என்கிற விமான ஓட்டி இருத்தல் கூடாது. அதாவது ‘வலவன் ஏவா வான ஊர்தியாக’ அது அமையவேண்டும்.

பரத்வாஜ முனிவர் எழுதிய யந்த்ர சர்வஸ்வம் என்ற மூல புத்தகத்தின் அடிப்படையில்தான் விஸ்வகர்மா ஆயுதங்களைப் படைத்து வந்தார். அதில் ஒரு பகுதி வைமானிக சாஸ்திரம். பலதரப்பட்ட விமானங்கள் எவ்விதம் தயாரிக்க வேண்டும் அவை எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைப்பற்றி அவர் விரிவாகக் கூறியுள்ளார். விஸ்வகர்மா அவற்றையெல்லாம் தன் மனத்திரையில் எண்ணிப்பார்த்தார்.

வானத்திலிருந்தே எரிபொருளைச் சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம். பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் விமானம். தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம். கிதோகமா : மரங்களை எரித்துப் பெரும் எண்ணெய்யில் இயங்கக் கூடிய விமானம். ஹம் சுவாகா : சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம். தாரமுஹா : எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம். மாணிவஹா : செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம். மாராதசாஹா காற்றை உறிஞ்சி சக்தியை எடுத்து இயங்கும் விமானம். மற்றும் ஷக்டிங்கர்ப்பம், விக்யுதம், துருபதம், குண்டலிகம் போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் கூறியுள்ளார்.

இப்போது புதியதாக வடிவமைக்கப்போகும் புஷ்பக விமானம் இவை எல்லாவற்றிற்கும் மேலானதாக அமைய வேண்டும் என்பதை பிரம்மர் சொல்லாமலே ஏற்றுக்கொண்டார் விஸ்வகர்மா.

விஸ்வகர்மாவிற்குத் தனது அரண்மனையிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கும் இயந்திரத்தை வரவழைத்தார். அதனைச் சூரிய மண்டலத்தில் சூரியதேவன் அரண்மனைக்கு வெளியே உள்ள பரந்த வாசல் அருகே நிறுவினார். இயந்திரத்தின் உட் பக்கத்தில் சூரியன் சுலபமாக அமர்ந்துகொள்ளும் இருக்கையை அமைத்தார். அதற்குள் அவர் சூரியதேவனின் ஒளிச் சக்தியை மாற்றும் பெரிய முப்பட்டைக் கண்ணாடி ஒன்றைப் பொருத்தினார். சூரியதேவன் தனது அதிகபட்ச வெப்பத்தையும் ஒளியையும் சில நாழிகைகள் ஒருங்கே வெளியிடவேண்டும். அப்போது முப்பட்டையிலிருந்து வரும் அதீத ஒளியிலிருந்து ஆயுதங்கள் செய்ய அதிலேயே தோன்றும் சீரொளியை உபயோகிக்கவும் திட்டமிட்டார். ஆற்றல் மிக்க ஓளி விலகியதும் சூரியதேவனின் ஒளியும் வெப்பமும் மங்கும். அதன் பிறகு அவருடைய கிரணங்களால் ஸந்த்யாவிற்கு எந்தவித பாதகமும் இருக்காது. ஆனால் இது காந்த சிகிச்சை மாதிரி பலமாதங்கள் தொடர்ந்து பலன் தராது. முதல் முயற்சியில் ஒளியும் வெப்பமும் ஆயுதங்களாக மாற்றப்படும். அதன்பின்னர் அவன் தினமும் ஓர் ஊடகக் கதவின் வழியாகத் தன் அரண்மனைக்கு வரவேண்டும். அப்போது தான் அவன் ஒளியும் வெப்பமும் சந்த்யாவிற்கு ஏற்றபடி இருக்கும்.

அந்த ஊடகக் கதவை சந்த்யாவின் அரண்மனை வாயிலில் வைக்கத் தீர்மானித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது.

(தொடரும்)

 

இரண்டாம் பகுதி

 

மும்மூர்த்திகள் மூவரும் சிரித்துக்கொண்டே மேடைக்குச் சென்றார்கள். அவர்கள் மேடைக்கு வரும்போதே அவர்களுக்கான ஆசனம் தயாராகியிருந்தது. மேடையில் இருந்த சாலமன் பாப்பையா பாரதி பாஸ்கர், ராஜா, திண்டுக்கல் லியோனி அனைவரும் எழுந்து நின்றார்கள். நாம் வணங்கும் தெய்வங்களுடன் ஒரே மேடையில் இருப்பது என்பதை அவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. காண்பது கனவா நனவா என்பது புரியாமல் மயக்க நிலையில் அவர்கள் நால்வரும் இருந்தார்கள்.

Image result for பிரும்மா சரஸ்வதி விஷ்ணு லக்‌ஷ்மி சிவன் பார்வதி” நாரதா! மேடைக்கு வா !” என்று தந்தை பிரம்மர் அழைத்ததும் வேறு வழியின்றி  நாரதரும் மேடைக்கு வந்தார். மும்மூர்த்திகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பது அவர்கள் முகத்தில் விரிந்த புன்னகை உணர்த்தியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சிபெருக்கில் கரவொலி எழுப்பி எழுந்து நின்றனர். பிரம்மர் அனைவரையும் அவரவர் ஆசனத்தில் அமரும்படிக் கூறினார். விஷ்ணு மாறு வேடத்தில் அமர்ந்திருக்கும் முப்பெரும் தேவிகளைப் பார்த்துப் புன்னகை புரிந்து அவர்களையும் மேடைக்கு வரும்படி ஜாடையில் அழைத்தார். அவர்கள் தங்கள் இருக்கையில் நெளிவது புரிந்தது. கூட்டம் அவர்களையும் அடையாளம் கண்டு அதிகப்படியான கரவொலியை எழுப்பினர்.  அருகில் இருந்த எமியிடம்  முப்பெரும்தேவிகளிடம் ஏதோ கூற அவள் வெட்கத்தில் நெளிந்தது நாரதருக்கு மட்டும் புரிந்தது.  மேடையில் பிரம்மரும்- சரஸ்வதியும்,  விஷ்ணுவும் – லக்‌ஷ்மியும் சிவனும் – பார்வதியும் அமர்ந்திருக்கும் காட்சி  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மூன்று காலங்களையும் உணர்ந்த நாரதருக்கு எதை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. கல்விக்கரசி கலைவாணி – நாரதரின் அன்னை , மகன் படும் பாட்டைக் கண்டு அவனுக்கு உதவும் வகையில் பேச ஆரம்பித்தார். 

“பெருமதிப்பிற்குரிய நடுவர் அவர்களே”  என்று  சரஸ்வதிதேவி அழைத்தபோது தான் பெற்ற பிறவிப்பயனை அடைந்த மகிழ்ச்சியில் திளைத்தார் சாலமன் பாப்பையா.

Image result for அர்னாப் கோஸ்வாமிபட்டிமன்றப்பாணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த   இந்த விவாத மேடையைத் தற்போது உங்கள் தொலைக்காட்சிகளில் நடக்கும் குழு விவாதமாக மாற்றி விட்டீர்கள். நாரதனைக் கிட்டத்தட்ட அர்னாப் கோஸ்வாமி அளவிற்கு மாற்றிவிட்டீர்கள். நாரதனுக்கு  ஒரு கோட்டை மாட்டிவிட்டால் குறைந்த பட்சம் உங்கள் நீயா நானா கோபினாத் மாதிரியாவது பேசிக்கொண்டிருப்பான். நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நாரதன் நடுவர் கூறியபடி நெறியாளாராக இருந்து எங்கள் ஆறு பேரையும் கேள்விகள் கேட்டு அதன்மூலம் நடுவர் அவர்களுக்குச் சரியான  தீர்ப்பு வழங்க உதவும்படி கேடுக்கொள்கிறேன். ” என்று கூறியதும் விவாதமேடை

தொலைக்கட்சி மேடையாகிவிட்டது.

அந்த சமயத்தில் மேடையில் இருந்த ராஜா  பக்கத்தில் இருந்த பாரதி பாஸ்கரிடம் ” ஆஹா! இது சரஸ்வதி சபதம் கிளைமாக்ஸ் செட்டிங் போல இருக்கே” என்று  மெதுவாகத்தான் கூறினார்.

ஆனால் அது  ஆப் செய்யப்படாத மைக்கின் வழியாக அரங்கம் முழுவதும் கேட்டு சிரிப்பலைகளப் பரப்பியது. அந்த சிரிப்பு அலையின் வேகம் அடங்குவதற்குள் தன்னை முழுதுமாகச் சுதாரித்துக் கொண்ட நாரதர் தான் எப்படிப் பயணிக்கவேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டார்.

” நடுவர் அவர்களே! நேரடியாகவே நானும் விஷயத்திற்கு வருகிறேன். இன்று இந்த எமபுரிப்பட்டணம் மட்டுமல்ல அனைத்து உலகங்களில் உள்ள ஜீவராசிகள் எல்லாரும்  தெரிந்து கொள்ள ஆசைப்படுவது  ”  எது சிறந்தது ? ஆக்கலா? காத்தலா? அழித்தலா?” என்ற கேள்விக்கான விடைதான். ”

அர்னாப் கோஸ்வாமி என்று கூட்டம் கத்தியது. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்களை விட அதிக சத்தத்தில் நாரதர் பேச ஆரம்பித்தார். 

” அகில உலக மக்கள்  மட்டுமல்ல. நானும் அதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன். மும்மூர்த்திகள்  முப்பெருந்தேவிகளின் அருளாசிகளுடன் அவர்களைக் கேள்விகள் கேட்கும்  நெறியாளனாக மாறுகிறேன்.”

முதல் கேள்வியை  பிரம்மதேவரிடம் கேட்டார். 

“தந்தையே! தாங்கள் படைப்புக் கடவுள். தங்களிடமிருந்துதான் எல்லாம் பிறக்கிறது. எல்லா ஜீவராசிகளும் உருவாகக் காரண கர்த்தா நீங்கள்!  நீங்கள் படைத்தால்தான் காக்கமுடியும் அழிக்கவும் முடியும். அப்படியிருக்க  காத்தலும் அழித்தலும் வாதத்திற்குக் கூட ஆக்கலுடன் போட்டிபோட முடியாது என்பது அறிவுசால் பெருமக்கள் பலரின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை நீங்கள் எப்படிப் பெருந்தன்மையுடன்  ஏற்கிறீர்கள்? என்று முதல்கொக்கிக் கேள்வியை வீசினார்.

பிரும்மர் புன்சிரிப்புடன் ” நான் இதற்குப் பதில் கூறுவதற்கு முன்னால் தேவி சரஸ்வதியின் கருத்தை அறிந்தபிறகு கூறுவதுதான் முறை!  அதுமட்டுமல்லாமல் அவள் கல்விக்கே அதிபதி! அத்தோடு மகளிர் முதலில்!  சரிதானே தேவி! ” என்று கேட்டதும் சபையில் சலசலப்பு உண்டாகியது.

சரஸ்வதி தேவியும் சிறு புன்முறுவலுடன் தன் கருத்தைக் கூற ஆரம்பித்தார்.

” படைப்புக் கடவுள் கூறியது போல முதலில் நான்  முதலில் பெண், பிறகு மனைவி, அதன்பின் தாய், அதற்குப்பிறகுதான் கலைவாணி, கல்விக்கு அதிபதி எல்லாம். இதில் யாருக்கும் அழித்தல் என்றால் பிடிக்காது என்பதுதான் உண்மை. பிறப்பது எல்லாம் அழியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அழிவைச் சிறந்தது என்று யாராலும் எண்ணமுடியாது. அதலால் மீதம் இருப்பவை ஆக்கலும் காத்தலும். இப்போதும் பெண் என்கிற  அளவுகோலை வைத்துப் பார்ப்போம். ஒரு பெண் மணம் புரியும் வரை பெற்றோராலும், மணத்திற்குப் பிறகு கணவணாலும் கடைசிக்காலத்தில் பிள்ளைகளாலும் காப்பாற்றப்படுபவள் என்று பொது நீதி கூறுகிறது.  ஆக, ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர் காத்தல் தொழிலைச் செய்ய வாழ்கிறாள் என்று ஆகிறது. அவள் குழந்தைகளைப் பெறும் போது அவள் ஆக்கல் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் அந்தக் குழந்தையைப் பேணி வளர்க்கும்போது காக்கும் பணியில் ஈடுபடுகிறாள். ஆக, பெண் என்பவள் காத்தல் என்ற இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள். எனவே ஒரு பெண்ணின் பார்வையில் காத்தல்தான் சிறந்தது என்று கூறவேண்டும்.

இப்போது கலைவாணியின் நிலையில் பேச விரும்புகிறேன்.

பிரபஞ்சத்தில் ஆக்கல் ஒரு புள்ளி , காத்தல் ஒரு கோடு அழித்தல் ஒரு புள்ளி. கோடு என்பது என்ன? புள்ளிகளால் ஆனதுதானே! ஆக படைத்தல்  முதற்புள்ளி, காத்தல் அடுத்தடுத்த பல புள்ளி, அழித்தல் முற்றுப்புள்ளி.  அதன்படியும் பல புள்ளிகள் கொண்ட கோடு தான் காத்தல் . ஆகவே காத்தலே சிறந்தது என்று கூறுகிறேன். நான் பிரும்மபுரியில் இருந்தபோதிலும், என் கணவர் படைக்கும் தொழிலான ஆக்கல் தொழிலைச் செய்பவர் ஆயினும் என் கருத்துப்படி  காத்தலே சிறந்தது.” 

” தந்தையே இது என்ன? உங்கள் ஆக்கல் தொழிலுக்கு அன்னையின் மதிப்பீடு என்ன என்பதைக் கேட்டீர்களா? நீங்கல் ஒரு சிறு புள்ளியாமே? தங்கள் கருத்தும் இதுதானா? அல்லது அன்னையின் கருத்தை மறுக்கப் போகிறீர்களா? அவர்கள் கோடு போட்டால் நீங்கள் ரோடு போடுவீர்களா? அல்லது அந்தக்கோட்டைத் தாண்டாமல் கூட்டணி தர்மம் என்று அன்னையின் கருத்துதை ஆமோதிப்பீர்களா?  அப்படியானால் படைப்புத் தொழில் புனிதமானதில்லையா? வெறும் பம்மாத்துதானா? ” நாரதர் கிடுக்கிப்பிடி போட்டார்.

எல்லோரிடமும் கலகம் செய்யும் நாரதர் இன்று   குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குகிறாரே என்று அனைவரும் ரசிக்க ஆரம்பித்தனர். புருஷன் பொண்டாட்டி சண்டை அல்லது கூட்டணியில் தகறாறு என்றால்  வேடிக்கை பார்க்கும் மற்றவர்களுக்கு குஷி தானே?

“நாரதா கேள்! சபையோரும் கேட்கட்டும்!”  என்று ஆரம்பித்து  பிரும்மர் பதில் கூற முன்வந்தார்.

சபையோருக்கு இப்போது சற்று குழப்பம் வந்தது. முதலில் ஒருமுகமாகப் பேசிய பிரும்மர் இப்போது நான்முகனாக நான்கு முகங்கள் வாயிலாகவும் பேச ஆரம்பித்தபோது எந்த முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்பது என்கிற  குழப்பம்தான்.

எமிக்கு,  இப்படி குடும்பத்தில் கும்மி அடிக்கிறார்களே என்ற கவலை வாட்டத் தொடங்கியது. 

(தொடரும்) 

 

.

குவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி

வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 7:41 AM | வகை: கதைகள், சா.கந்தசாமி 

மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது.

நான்காம் தடவையாக, “எலே ராமு” என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, “இப்பத்தான் 
வெளியே போனான்” என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள்.

ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை.

ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.
அவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.
“தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது…” ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.

மாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.

ஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது.

“அந்தப் பக்கமா போறேன், தாத்தா.” என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து ஆனைச்சரிவில் இறங்கி, புன்னை மரத்தடியில் நின்று தூண்டிலை வீசினான். சற்று நேரம் தக்கை அசையவில்லை. போட்டது போலவே கிடந்தது. பிறகு மினுக் மினுக்கென்று ஓர் அசைவு; சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது.

அவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன.

தூண்டிலை எடுத்துக்கொண்டு கரைக்குச் சென்றான். பெரிய கொட்டாங்கச்சியிலிருந்து மண்ணைத் தள்ளி ஒரு மண்புழுவை எடுத்துக் கோத்து தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினான்.

இப்படி இடம் மாறும் பழக்கமெல்லாம் தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார்; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும், கம்பீரமாகவும் நின்று தூண்டிலை வீசுவார்.

“ஒரு மீனும் பிடிக்காமல் போகமாட்டேன்” என்ற உறுதியுடன் தக்கையைப் பார்த்தான். தக்கை குதித்துத் திடீரென்று மேலே எழும்பியது. அவன் முழுக் கவனமும் தூண்டிலில் விழுந்தது. கையைத் தளர்த்தி நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது.

மீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம் மலரும். நரையோடிய மீசை ஒரு பக்கமாக ஒதுங்க சிறு புன்சிரிப்பு ஒன்று வெளிப்படும். பதற்றமில்லாமலும் ஆர்பாட்டமின்றியும் நேராகத் தூண்டிலை இழுப்பார். மீன் துடிதுடித்து மேலே வரும் அநேக சந்தர்பங்களில் தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு.
ஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது, “கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா” என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கொண்டாய் ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.
அவன் தூண்டிலில் சிக்கிய மீன் தப்பித்துக் கொண்டாட முடியாது; சாதுரியமாகவும், கனமாகவும் இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை.
ராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது.
தூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக்கும் மயிலையைப் பார்த்தான் ராமு. மனதிற்குள்ளே சந்தோசம்.

தன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்துவிட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது – ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும், மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியாகக் கவனம்.அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்துத் தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.

“நீதான் பிடிச்சியா?” என்று கேட்டுக் கொண்டு தாத்தா அருகில் வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். “பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ ” மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார்.

ராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலிருந்து அவன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வது மாதிரி மாணிக்கத்திற்குத் தோன்றியது.

அந்நினைவு வந்ததுமே அவர் எரிச்சலுற்றார். இருக்கையை விட்டு விரைவாக எழுந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து  இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
சற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். முற்றத்திற்கு ஓடிக் கையை அலம்பிக்கொண்டு வந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்தான்.

இடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக்கொண்டு, “செத்த முன்னே எங்கே போயிருந்தே?” என்று கேட்டார் மாணிக்கம்.
“அந்தப் பெரிய மீனு…”

கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.

“அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ?” அவர் குரல் திடீரென்று உயர்ந்தது.

“அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது”.

ராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.

அவன் கொடுத்த வெற்றிலையை வாங்கி அடக்கிக்கொண்டு, பெரிய தூண்டிலுடன் குளத்தை நோக்கிச் சென்றான். அந்தத் தூண்டிலை ஒரு மீனும் அருத்ததில்லை. அநேகமாக மீனால் அறுக்க முடியாத தூண்டில் அது.

ராமுவும் கூடச் சென்றான்.

கயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது.

ராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின்ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தான்.

“அதுக்குள்ளே அம்புட்டுக்கிச்சா” என்று வந்த மாணிக்கம் புன்னை மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துப் பிடித்து தக்கையை நோட்டமிட்டார். பெரிய தக்கை பொய்க்கால் குதிரை மாதிரி ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழுத்தது. அனுமானம் சரி, தூண்டில் முள் தொண்டையிலே குத்திக் கொள்வதற்கு நூலைத் தளர விட்டு மீன் ஆர்பாட்டத்தைத் துவங்குவதற்கு முன்னே இழுத்துப் போடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார் மாணிக்கம்.

அவர் கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாணிக்கம் சறுக்கிக்கொண்டே  குளத்தில் போய் விழுந்தார்.

ராமு ஓடிவந்து தாத்தாவைத் தூக்கினான். கணுக்காலுக்குக் கீழேயிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான்.
“மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா. செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா.”

மாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.

“எதுக்காக இங்கேயே நிக்கறே?” என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான்.

மாணிக்கம் கரைக்கு வந்தார். அவர் மனம் முறிந்துவிட்டது. குலைத்த ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு இருட்டிய பின்னால் வீட்டிற்க்குச் சென்றார். ராமு சின்னத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு.
பெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபளக்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும், விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது.

குளத்தில் ஒரு விரால் தன குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பவனி வந்தது. பெரிய விரால். அநேகமாக நான்கைந்து ரூபாய் பெறும். அதே மாதிரி இன்னொரு விரால் கீழே வரலாம். இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால் மாணிக்கம் இரண்டிலொன்றை வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்று விட்டதோ என்ற எண்ணமும் தோன்றியது. விளக்கைச் சற்றே பெரிதாக்கி எட்டிய வரையில் குளத்தை ஊடுருவி நோக்கினார். தெற்கு முனையைத் தாண்டும்போது வாளை கண்ணில் பட்டது. வேகமாக வாலைச் சுழற்றி ஒரு கொண்டைக் கூட்டத்தைச் சாடியது.

மாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம்.

அவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச்சத்தை உமிழ்ந்தது. நிலவும் பளிச்சென்று இருந்தது. சரியான நேரம் வாளை இரையை அவசரமின்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டடி முன்னே சென்று ஈட்டியை மேலே உயர்த்தினார்.

நீரின் ஒரு சுழிப்பு. எங்கிருந்தோ ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.

மீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட்டையும் காணோம். மாணிக்கம் கால்கள் சோர்வுறக் கரையோரமாகச் சுற்றி வந்தார். மீன் குளத்தில் இருப்பதற்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. சலிப்பும், சோர்வும் மிகுந்தன. கோழி கூவும் நேரத்தில் விளக்கும் ஈட்டியுமாகத்  தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம்.
அடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும், கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார்.

“ஒண்ணு நான்; இல்லே அது… ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்.”

பரண் மீது ஏறி இரண்டாண்டுகளுக்கு முன்னே கட்டிப்போட்ட தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார்.
குளத்தங்கரையில் பெரிய மீன் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும், அடுத்து ராமு மீதும் விழுந்தது.

தலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில், “என்ன பண்ணிக்கிட்டிருக்கே” என்று வினவினார்.

அவன் மெளனமாக இருந்தான்.

“உன்னைத்தான் கேக்கறேன்”. காதைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தார். “எம்மா நேரமா தேடிக்கிட்டிருக்கா. நீ இங்கே வந்து குந்தியிருக்கே…” என்று தள்ளினார். கீழே விழுந்து எழுந்த ராமு தாத்தாவின் விகாரமான முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றான்.
அவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்ணீர் நாளா பக்கமும் சிதறியது.
“எவ்வளவு பெரிய மீன்… ராஜா மாதிரி…” மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார்.
மீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர அவசரமாகக் கலயத்திலிருந்து ஓர் உயிர்க் கொண்டையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சரியாக வளர்ச்சியுற்ற இரை. முள்ளில் கொத்து விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்கும். மீன் இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து, நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு, நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி, தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வலுவடைந்து கொண்டே வந்தது.
சப்தம் செய்யாமல் நீரில் இறங்கி தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினார். தக்கை வேகமாக அசைந்தாடிப் போய் அல்லி இலையில் சொருகிக் கொண்டது. ஒரு பக்கமாக இழுத்து விட்டார். மெல்ல மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீரில் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது.

வெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ராமுவை இழுத்து வந்து நான்கு அறைகள் கொடுத்துத் தண்ணீரில் மூச்சுத் திணற அமுக்க வேண்டும் போல தோன்றியது. அதே நினைப்போடும், ஆத்திரத்தோடும் இன்னொரு கொண்டையை எடுத்துச் செருகிக் குளத்தில் வீசினார்.

தூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார்.

வழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.

“இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயிட முடியாது” என்று மீனுக்கு அறைகூவல் விட்டார். உல்லாசமான சீழ்கையொலி அவரிடமிருந்து பிறந்தது.

தக்கை அசைந்தது. பெரிய மீன் வந்துவிட்டது.

மாணிக்கம் எழுந்து நின்றார்.

மீன் வாலால் தண்ணீரை அடித்த்தது. மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது.

தெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது.

மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விறாலோ கொண்டையோ வராமல் இருந்தால் பெரிய மீனைப் பிடித்துவிடலாம்.

கரையேறி வடக்குப் பக்கமாக நடந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது.

கொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது.

மாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன்

“எலே எப்ப சொன்ன வேலை. இப்பத்தான் செய்யிறியா?” என்று உறுமினார்.

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாகத் தலைகுனிந்தபடியே குதிரை மயிருக்கு எண்ணெய் தடவிச் சிக்கலைப் பிரித்துக் கொண்டிருந்தான்.

“எலே கேக்கறது காதிலே உளுவுதா” சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார்.

அவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது.

“நேத்தியிலேருந்து என்ன பண்ணினே?” தலையை அசைத்து மேலே தூக்கினார்.

“எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்றீங்க” என்று கேட்டாள் அவன் மனைவி.

“பின்ன, தரித்திரத்தைத் தலையிலா தூக்கி வச்சிக்குவாங்க”

“இப்படி அடிச்சிக் கொல்ல நாதியில்லாமலா போயிட்டோம்?”

“எட்டுக்கட்டு சனமுண்டு உனக்கு?”

“மவ செத்த அன்னைக்கே தெரிஞ்சிச்சே”

“என்னடி சொன்னே திருடன் மவளே” என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.

“நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு.” என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள்.

“வாயை மூடு.”

அவள் குரல் உயர்ந்தது.

மாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார்.

“போ உள்ளே.”

”என்னைக் கொல்லு. உன்னைத்தான் கட்டிக்குவேன்னு சாதி சனத்தையெல்லாம் வுட்டுட்டு வந்தேனே. அதுக்கு இந்தப் பச்சை மண்ணோடு என்னையுங் கொல்லு.”

“பெரிய ரம்பை இவ; நா இல்லாட்டா ஆயிரம் பேரு வந்திருப்பான்.”

அவர் பெல்ட் மார்பிலும், கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவள் சொன்னது அவர் மனதைத் தொட்டு இரங்க வைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விட்ட சண்டையை மறுபடியும் துவங்கியதற்காக வருத்தமுற்றார்.
அவருடைய ஒரே மகள் கல்யாணமான இரண்டாம் வருடம் ராமுவை விட்டுவிட்டுக் காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூரம் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.

மகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி. தான் உயிருக்கு உயிராக நேசித்த மகளின் நற்பண்புகள் விவரிக்கப் படுகையில் அவரால் தாள முடியவில்லை. மெல்ல எழுந்து நடக்கலானார். கால்கள் குளத்தை நோக்கிச் சென்றன.
குளம் அமைதியாக இருந்தது. தூண்டில் அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார்.

குளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியாக இருந்தது. சீழ்க்கை அடித்துக்கொண்டு கொன்றை மரத்தடியில் அமர்ந்தார் மாணிக்கம். களைப்பும், சோர்வும் மிகுந்தன. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. ‘உம்’ என்று உறுமிக்கொண்டு மரத்தடியில் சற்றே சாய்ந்தார். சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது.

கண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பாதிக் கயிற்றை மீன் அறுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படிச் சென்றது விராலா, வாளையா என்பது தெரியவில்லை. இரண்டும் இல்லாமல் ஆமையாகக் கூட இருக்கலாம். உறுதிப்படுத்திக் கூறும் தடயம் ஏதுமில்லை. எதுவானாலும் சரி, இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன.

சாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற, ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அறுந்துவிடும் போலப்பட்டது.

“அப்பா கும்பகோணம் ஒருவாட்டி போய் வரணும்” என்று சொல்லிக்கொண்டே முள்ளைக் காட்டினார். கட்டியதும் கயிறு தாளுமா என்ற ஐயம் வந்தது. கடைசிப் பகுதியை இரு கைகளிலும் சுற்றிக்கொண்டு ஒரு வெட்டு வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது.

‘சை’ என்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார்.

முன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிறது. மாணிக்கம் எம்பி மீன் மீது உட்கார்ந்து கொள்கிறார். கீழே கீழே என்று பாதாளத்திற்கு மீன் செல்கிறது. மூச்சு திணறுகிறது. தாள முடியவில்லை. ‘ஹா’ என்று அலறுகிறார். எல்லாம் கனவு என்றதும் மனதில் திருப்தி உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி, அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார்.

கோழிகள் கூவின.

“வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி.

கிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.

“நம்ப வாண்டு எம்மாஞ் சமத்துப் பாத்திங்களா.”

மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.

“ஆத்தா” என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.

 

***************************************************************************************************************************

இந்தக்கதையை குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்!  பாருங்கள்!!

அம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for அம்மா செல்லம்

அந்தக் காலத்தில் எங்கள் தன்னார்வ நிறுவனம் (NGO) காவல்துறை நிலையத்தில் அமைக்கப் பட்டிருந்தது. பெண்கள் வீட்டில் அனுபவிக்கும் வன்முறைகளுக்கு ஒரு விடிவு காணக் கருதி அமைத்திருந்தார்கள். முதலில் பெண்களுக்கு என்றதை சில வருடங்களுக்குப் பிறகு உறவுகளின் இடையில் நேரும் வன்முறையைக் குறித்து உதவுதற்கு விஸ்தரிக்கப் பட்டது.

ஒரு நாள் எங்களிடம் திலக் என்பவர் வந்தார். அவருடைய நண்பன் ஜோஸ் அவருடன் வந்திருந்தார். அந்த நண்பன், “எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டான்” எனத் தன் ஆதங்கத்தைச்  சொன்னார். திலக் ஏற்கனவே வந்தவர், தன் மனைவி தாராவின் காரணமாகத்தான். சில மாதங்களுக்கு முன்பே தாராவையும் அவள் அம்மா ஜமுனாவையும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சரோஜஜையும்  எங்களிடம் அழைத்து வந்திருந்தாள்.

பல நாட்களாக ஜமுனா சமையற்கட்டில் விசும்பி அழுவதைக் கவனித்து சமாதானம் செய்யப் பார்த்திருந்தாள் சரோஜ். தாராவின் இல்லற வாழ்வின் சிக்கலைப் பற்றி அறிந்தாள். தன்னுடையக் குடியிருப்புப் பகுதியில் வன்முறை சகித்துக் கொண்டு இருக்கும் பெண்கள் பலரை எங்களிடம் அழைத்து வருவதால் சரோஜிற்குத் தெரியும், நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யாமல் சிக்கல்களைச் சரிசெய்பவர்கள் என்று.

எங்களிடம் வந்த சமயத்தில், தாரா ஐந்து மாத கர்ப்பிணி. விவரங்களை ஜமுனா விளக்குகையில் தாரா அவள் பின்னே நின்று, கையிலிருந்த செய்தித் தாளில் சுடோகு போட்டுக் கொண்டு இருந்தாள்.

தாரா இருபத்தி எட்டு வயதுடையவள், ஐடீ நிர்வாகத்தில் வேலை, மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர் என எல்லோரும் வசதியாக, கூட்டுக் குடும்பமாகக் கூடி வாழ்ந்து வந்தார்கள். எல்லோரும் வீட்டு வேலைகளில் பங்களிப்பு செய்து வந்தார்கள். திலக்-தாரா மணமான பிறகு தாரா மீண்டும் மீண்டும் சொன்னதில் வீட்டைச் சுத்தம் செய்ய,, துணிகளைத் துவைக்க (வாஷிங் மெஷினில்), பாத்திரங்களைத் துலக்க சரோஜ் நியமிக்கப் பட்டாள்.

தாரா சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வதின் காரணம் அவளின் பணக்காரக் குடும்பம், படிப்பு, சம்பளம். நிச்சயம் செய்யும் போதே தன்னுடைய நிலை, படிப்பு இத்யாதிகளுக்கு திலக் குடும்பத்தார் ஈடல்ல என்று அவளுக்கு நன்றாகத் தென்பட்டது. முதலில் சங்கடப் பட்டு, வேண்டாம் என்று சொல்லத் துடித்தாள். இருமுறை திலக்கைச்’ சந்தித்த பிறகு  மனதை மாற்றிக் கொண்டாள். தன் தோழிகள், கூட வேலை செய்வோர், உறவினர்கள் யாருக்கும் இதைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மாறாக, திலக் வேலையை உயர்த்தி விவரித்து விட்டாள். தன் வசதி அந்தஸ்து, படிப்பு, வேலை ஒரு படி மேலாக இருப்பதினால் புகுந்த வீட்டில் மரியாதை கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. இதன் பின்னரே ஒப்புக் கொண்டாள். இதற்கு ஏற்றாற்போல் அவள் கேட்டது, சொன்னது நடந்தது.

உள்ளூரிலேயே வாழ்க்கை அமைந்ததால் ஒவ்வொரு வாரமும் அவள் தன் அம்மா ஜமுனா வீட்டிற்குப் போவது பழக்கமானது. சமீபத்தில், பல தடவை தாரா மட்டும் போவாள். சனி-ஞாயிறு மட்டும் என்று நினைப்பார்கள் ஜமுனாவும் அப்பா திவாகரும். பல முறை அது நீடிக்கும். தாராவின் மாமனார்-மாமியார் திங்கட்கிழமை தொலைப்பேசியில் அழைத்து விசாரிப்பார்கள். பெற்றோர் கூச்சம் அடைய, புதன்கிழமை வாக்கில் திரும்புவாள். ஜமுனா-திவாகருக்கு தாரா இந்த மாதிரி செய்வது தம்பிக்குத் தவறான எடுத்துக் காட்டு என்பதால் பிடிக்கவில்லை. இப்படித் தோன்றியும், உடன்பாடு இல்லை என்றாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை வேலையிலிருந்து அம்மா வீட்டிற்கு வந்தாள் தாரா. வேலைப் பளுவைச் சமாளிக்க என்றாள். திலக்கிடம் சொன்னதாகத் தெரிவித்தாள். ஜமுனா-திவாகர் ஒன்றும் கேட்கவில்லை. ஒரு வாரம் சென்றது, அடுத்த வாரமும். மாப்பிள்ளையும் வரவில்லை, தாரா போவதாகவும் தெரியவில்லை. பெற்றோர் பதறிப் போனார்கள்.

அத்துடன், தாரா உணவு சரியாக’ சாப்பிடாததும் ஒரு கவலை. யாரோ சொன்னதால் வயிற்றைக் கட்டிக் கொண்டு இருந்தாள், வளரும் கருவைப் பற்றி யாராவது கேட்டு விட்டால் அன்று சாப்பிட மாட்டாள். உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொண்டாள். தாராவை பார்த்தால் கர்ப்பிணி எனச் சொல்வது கடினம். எவ்வளவோ சாதிக்க வேண்டிய வயதில் குழந்தை சுமக்கிறோமே என்ற ஆதங்கம். அந்தக் கோபத்தில், தன்னுடைய சம்பளத்தைக் கணவர் வீட்டில் கேட்பதாகப் பெற்றோரிடம் புகார் செய்தாள்.

ஜமுனா குழப்பம் அடைந்தாள். உள்மனத்தில் அவளுக்கு திலக்கைப் பற்றி நல்ல அபிப்பிராயம். இருந்தாலும் முதல் மூன்று-நான்கு முறை இவர்களே திலக்குடன் சமாதானம் செய்யக் கலந்துரையாட நேர்ந்தது. தாரா வராமல் இல்லை, வந்தாள். அவர்களை அழைத்த சில நொடிகளில் வேலை வந்ததாகச் சொல்லி வெளியில் சென்று எப்போதும் எடுத்து வரும் மடிக்கணினியில் (laptopல்) மும்முரமாக இருப்பாள். அம்மாவின் முந்தானையில் இப்படி ஒளிய, குழந்தையா என்ன? அம்மாவே செய்யட்டும் என்ற எண்ணம் !

இதுவே அம்மா-பெண் இடையே நடப்பதை நான் எடுத்துக் காட்ட, உதாரணமாக ஆயிற்று. தாராவுக்காக தான் செய்யும் ஒவ்வொன்றையும் ஜமுனாவை விவரிக்கச் சொன்னேன். அவள் சொல்லச் சொல்ல, அவளைச் சிந்தனையின் அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றேன். இப்படிச் செய்வதில் உதவி புரிகிறதா என்பதையும், யாருக்கு உதவி, அப்படிச் செய்வதனால் தாரா எதை அடைந்தாள், எவற்றைக் கோட்டை விட்டாள் என்பதை ஆராயும் வகையில் கலந்துரையாடலை வைத்தேன். தாரா தன்னுடைய நிலைமையைப் பற்றிப் புரிந்து கொண்ட போதிலும் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது, வீட்டில் தன் நிலைக்குப் பெற்றோரே பொறுப்பு எனச் செய்வது இவற்றைப் பற்றி ஜமுனாவை யோசிக்க வைத்தேன்.

ஊரிலும்  உறவினர்களும் கேட்டதனால் தாராவிற்கு தாங்கள் கல்யாணம் செய்து வைத்ததை ஜமுனா பகிர்ந்தாள். கல்யாணம் நிச்சயம் ஆன அதே நேரத்தில் தாராவிற்கு வெளிநாட்டு வாய்ப்பு வந்திருந்தது. கல்யாணம் முடிவானதில் அதை விட்டு விட நேர்ந்தது. இன்று வரைக்கும் அந்த வாய்ப்பையும் தன் இல்லற வாழ்வையும் தாரா ஒப்பிட்டுக் கல்யாண வாழ்வை இழிவாகப் பேசுவது வழக்கம்.

இதற்கெல்லாம் ஜமுனா தன்னையே பொறுப்பாகக் கருதினாள். குற்ற மனப்பான்மை மனதைக் குடைந்தது. மேலும் தாரா இதைக் காரணியாகச் சொல்லி வீட்டில் இருக்க, ஜமுனா குற்ற உணர்வுடன் வாழ்ந்தாள். அதனால் தான் இங்கு வரும் பொழுது கூட தாரா வேலை பார்ப்பதை ஏற்றுக்கொண்டாள்.

இதை மையமாக வைத்துக்கொண்டு அம்மா என்றவளின் பொறுப்பையும், தாரா என்றவளின் பொறுப்புகளையும் பிரித்துப் பார்க்கப் பல உரையாடல்கள். ஜமுனா இதில் தன்னை மறந்து விட்ட நிலையில் பல துன்பங்களைச் சுமந்து, பிள்ளையுடைய பொறுப்புகளை தன்னுடைய என்று செய்வதினால், பிள்ளையுடைய பொறுப்பு மங்கலாகி, அவள் அம்மாவையே எல்லாவற்றுக்கும் பொறுப்பாளி என ஆக்கி விட்டாள். இதனால் பிள்ளை தன் தாம்பத்திய வாழ்வின் பல விதிகள், பொறுப்புகளைத் தவிர்த்ததை ஜமுனா உணர, தன்னுடைய கையாளும் விதங்களை மாற்றி அமைக்க யோசிக்க ஆரம்பித்தாள்.

அந்த நிலையில் தான் திலக் எங்களிடம் வந்தான். அப்படி வருவதற்கான தேவையைக் குறிக்கவே அவனை அவனுடைய இன்றைய நிலையை முதலில் விவரித்தேன். அவன் நண்பன் ஜோஸ் கடந்த ஒரு வருடமாக திலக்கின் தன்நம்பிக்கை சரிந்திருப்பது, முகவாட்டம் முன் போல் இல்லாதது, அதிக சலிப்பு என்று தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்தார். திலக்கிற்கு தான் படித்த எம். பி. ஏ படிப்பு இப்போதைய நிலையில் போதவில்லை என்று தோன்றியது. வேலையில் அடுத்த நிலைக்குப் போகப் பரிட்சை எழுத வேண்டிய சமயத்தில் கல்யாணம் நிச்சயமாக, அடுத்த தடவை அதை எழுத முடிவானது. இதை அறிந்த தாரா முதலில் இதை கலாட்டாவாகச் சொல்ல ஆரம்பித்து, நாட்கள் நகர அதில் நக்கல் அதிகரித்தது. நாளடைவில் திலக் தன்னம்பிக்கை ஆடிப் போவதை உணர்ந்தான்.

இல்லற வாழ்வை நன்றாக இருக்க தங்கள் அறையில் பல மாற்றங்களைச் செய்து, மனைவிக்குப் பல வசதிகளைச் செய்து, ஆசையாக காத்துக்கொண்டதிருந்ததாகச் சொன்னான். தாரா இவற்றைத் தன் வீட்டுடன் ஒப்பிட்டுச் சிரித்து நிராகரித்து விடுவதை முதலில் அவன் ஏற்றுக்கொள்ள, அத்துடன் துச்சமான சொற்கள் சேர, திலக் தன் உணர்வுகள் புண்பட்டு அழுகையும் வந்ததாகச் சொன்னான்.

பல முறை இருவரின் சம்பள வித்தியாசத்தைப் பற்றி தாரா நாசுக்காக “பாவம் உங்கள் சம்பாத்தியத்தில் இது தான் முடியும், எனக்கு இத்தோட நன்றாக இருக்கிறது” என்று சொல்வதைக் கூறும்போதே அவன் கண்கள் கலங்கி விட்டது. தன்னுடைய ஆண்மையைச் சோதிக்கும் பலவற்றைச் சொல்லி, அவர்கள் தாம்பத்திய உறவை வைக்கும் தருணத்தை அவள் தான் முடிவு செய்வாளாம். அந்த நேரங்களில் மிக அவமானமாக இருப்பதை உணர்ந்தாக பகிர்ந்தான்.

தனக்கு நேருவது உணர்வு சம்பந்தப்பட்ட டோமெஸ்டிக் வையலன்ஸ் அதாவது வன்முறை (Emotional Abuse, Domestic Violence) என்பதைப் புரிந்து கொள்ள திலக்கிற்குப் பல ஸெஷன்கள் ஆயின. அதைப் புரிந்து கொண்டதுமே தன்மேல் குவித்து வைத்திருந்த அத்தனை பழியும் தன்னுடையதுதான் என்பதிலிருந்து விலகிப் பார்க்க ஆரம்பித்தான். மனத்திடத்தின் முதல் கட்டத்திற்குள் திலக் நுழைந்தான்!

இங்கு துவங்கி, ஒவ்வொன்றாய் எடுத்து ஆராய்ந்ததில் திலக்கிற்கு மிக மெல்லப் புரிந்து வர, முதல் முறையாக தாரா அவனைக் கொச்சையாக பேசம் பொழுது, அவளை பாதி வாக்கியத்தில் நிறுத்தி, அவள் தன் உணர்வுகளைக் காயப்படுத்துவதாகச் சொன்னான். அவள் அந்த தோரணையில் பேசுவதை நிறுத்தியதை அடுத்த நாளே என்னிடம் சொன்னதுடன், தனக்குள்ளே “என்னால் தன்னைப் பாதுகாக்க முடியும்” என்ற எண்ணம் அவனுக்குள் உதயமானது. எடுத்த எடுப்பிலேயே செய்து விட்டதால், மனதிடம் வலுவாவதற்கு உதவியது.

இவ்வகை சூழ்நிலைகளில் என்னுடைய அணுகுமுறை, முதலில் தனியான ஸெஷன்கள், பிறகு அத்துடன் இதே நிலையில் உள்ள மற்றுவருடன் குழுவாகக் கலந்துரையாடல் (group therapy). அந்த நேரத்தில் எங்களிடம் வந்தவர்கள் ஏழெட்டு பேர்களுடன் குழு தெராபி நடந்து கொண்டிருந்தது. இந்த குழு செஷன்களில் திலக் பங்கேற்றார். அதற்குப் பிறகு பல க்ளையண்ட்களுக்கு ஊக்குவிக்க, உதவத் தனது நேரத்தை ஒதுக்கினார்.

திலக்கின் பல மாற்றங்களைப் பார்த்ததும், ஜமுனாவும் முன் போல் எல்லாவற்றையும் செய்யாததும் தாராவை வியக்க வைத்தது. ஜமுனா, தன் மகள் தாராவிற்காக ஒன்றைச் செய்தால் அதன் விளைவுகளையும், அதனால் தன்னுடைய இரட்டை குழந்தைகளான அதுல்-அணில் இருவருக்கும் என்ன பாதிப்பு ஏற்படும், தாராவிடம் பாரபட்சமா எனப் பல கோணங்களில் ஆராய, அவளால் தான் செய்யும் விதங்களை மாற்ற முடிந்தது. மொத்தத்தில் தாரா இருவரின் மாற்றங்களையும் பார்த்து, அனுபவித்து தானும் ஸெஷன்களுக்கு வருவதாக முடிவு எடுத்தாள். அவளுடன் துவங்கினேன்.

அவள் முதல் குழந்தை, ரோசாப்பூ நிறம். சலுகைகள் குவிந்தது. படிப்பில் கெட்டிக்காரி. எப்படிச் சிங்காரித்தால் எடுப்பாக இருக்கும் என்பதைத் தெரிந்தவள்.இவை எல்லாவற்றினாலும் தாரா முழு சுதந்திரத்துடன் உலாவினாள். 

விளைவு, மிடுக்கு. அதைத் தன் அடையாளமாகக் கொண்டாள். அப்படி இல்லாதவர்களைத் துச்சமாக நினைத்தாள். இதனால் அவர்களுக்குக் காயங்கள், அதனால் தழும்புகள் என்பதை ஸெஷன்களில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு திலக்கையும் இவ்வாறு அணுகியதை எடுத்துக் கொண்டோம்.

இதில் தாராவுடன் பல ஸெஷன்கள், அத்தோடு தம்பதியாகவும் பல. இப்போது இருவரும் ஒரே வீட்டில் வாழவில்லை. தாரா அவர்கள் வீட்டின் பல வழக்கங்கள் தன் சுதந்திரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதை விவரித்தாள், காலையில் வாசலில் கோலம் போடுவது, குளித்து சமையலறைக்குப் போவது, ஆறரை மணிக்கு எழுந்து கொள்வது. இப்படி எந்த பழக்கமும் அம்மா வீட்டில் செய்யாததால் திணறினாள், அதிகம் முயலவும் இல்லை. திலக் குழந்தைக்காக ஒன்றாகத் திரும்ப வாழ வேண்டும் என விரும்பியதால், அவ்வாறு முடியுமா என்று ஆலோசிப்பதற்காக, ஒப்புக் கொண்டு இருவரும் வந்தார்கள்.

தாரா முந்தைய நாட்களில் கர்ப்பமாவது பற்றி நினைத்து வியந்து இருக்கிறாள். ஒரு அனுபவம் என்ற அலட்சியத்தில் கர்ப்பமானாள். தன்னுடைய கர்ப்ப நிலை தெரிந்தும், அவள் அதைக் கையாளும் விதத்தைப் பார்த்து ஜமுனா ஆச்சரியம் கலந்த வெறுப்புடன் இருந்தாள். கருவை இப்படி எல்லாம் பார்த்துக் கொள்ளாமல் இருந்தால் வளருவதில் பாதிப்பு ஏற்படும் எனப் பலமுறை எடுத்துச் சொன்னாள். ஆனால் தாரா ஏற்றுக்க மறுத்தாள். டாக்டர் கருவை ஆசையோடு கவனிக்கச் சொன்னதைக் காற்றோடு விட்டாள். 

அதன் பிரதிபலனும் சிசு ஒன்றை கிலோ மட்டுமே. தான் சாப்பிட மறுத்தது, கருவைத் திட்டுவது, தன் வயிற்றை அடித்துக் கொள்வது இவற்றின் விளைவு என்பதைத் தாரா உணர்ந்தாள். அந்தப் பிஞ்சு பல நாட்களுக்கு சிசுக்களுக்கு என்ற பிரத்தியேக அவசர சிகிச்சை அறையில் இருக்கும் போது அங்கு உள்ள மூத்த செவிலியர், ஜமுனா, அவள் மாமியார் ஒவ்வொருவரும் பாப்பாவைக் கண்ணும் கருத்துமாக அரவணைப்பதைப் பார்த்தாள். செவிலியர் எவ்வாறு, ஏன் என்று தாராவிற்கு விவரித்தது, குழந்தையைப் பூ போல் பார்த்துக் கொண்டது தாராவை என்னமோ செய்தது. நெஞ்சு துடித்தது.

தாராவிற்கு தான் மிகவும் புத்திசாலி என்ற கர்வம் எப்போதும். அந்தத் திறனை மையமாக வைத்து இந்த நேரம் வரை நடந்ததைப் பட்டியல் போடப் பரிந்துரைத்தேன். அவள் “மைன்ட் மேப்” செய்வதில் கெட்டிக்காரி என்பதால் ஒன்றை விடாமல் சித்திரித்தாள். அவற்றின் ஒவ்வொரு பாகங்களையும் சிறிது சிறுத்தாக எடுத்து ஆராய ஸெஷன்கள் ஆரம்பம் ஆனது. அதற்கு நேரக்காலத்தையும் குறிக்கப்பட்டுள்ளது. ஆம், பல மாதங்கள் ஆகும் எனத் தாரா புரிந்து கொண்டாள். தயாராகினாள், தொடங்கினோம்.

தான் செய்வது தவறு, திருந்த வேண்டும் என்று ஒப்புக் கொள்வதே மாற்றத்தின் முதல் படி.

 

அவியல் அகவல் ! – சதுர்புஜன்

 

அம்மா கை உணவு (20)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
 17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
 18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
 19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
 20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019 

 

அவியல் அகவல் !

Image result for அவியல்

 

அவியல் ! அவியல் ! அவியல் !

அவியலைப் போல ஒரு சுவையொன்று இல்லை – இதனை

தெளிவீர் ! தெளிவீர் ! தெளிவீர் !

 

ருசிகளில் உயர்ந்தது அவியல் – இதனை

உலகம் முழுவதும் உரைப்பேன் !

உரைப்பு, தித்திப்பு என்று சுவை

சொல்லமுடியாமல் தவிப்பேன் !

கையில் எடுத்தது தெரியும் – அது

வாயினில் விழுவது அறியேன் !

வாயில் உணரும் முன்னே – என்

உடலே புல்லரிக்குமென்பேன் !

 

அவியல் நாக்கினில் படரும் – அப்போது

அறுசுவையும் நான் உணர்வேன் !

காயினைக் கடிக்கும்போது – அது

கரையும் ; நானும் கரைவேன் !

குழைந்த பருப்பு சோறும் – அவியல்

கலந்து வாயில் மோதும் !

கரையில் மோதும் கடல் போல் – என்

கற்பனை சிறகடித்து ஆடும் !

 

கத்திரிக்காய் பிஞ்சுகள் நான்கு – கூட

அவரைக்காய் கைப்பிடி ஒன்று !

பூசணிக்காய் சிறு துண்டு – ஒற்றை

முருங்கையும் சேர்ந்தால் நன்று !

உருளை நிச்சயம் வேண்டும் – கூடவே

மொச்சையும் சேர்ந்தது இன்று !

 

தேங்காயும் நல்தயிரும் தேவைக்கேற்ற உப்பும்

மிளகாயும் சேர்ந்திடும் உடனே !

அத்தனையும் சேர்ந்து ஓர் அருமைப் பதத்திலே

அன்னையும் தருவாள் அவியல் !

 

அவியலின் பெருமையை அளந்திட முயன்றேன் –

தோற்றது கவிதையே அன்றோ !

அன்னையின் கை மணம் அளவிட முயன்றேன் –

தோல்வி கவிஞனுக்கன்றோ !

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்

முதல் பகுதியைப் படிக்க விரும்புவர்களுக்கு இதோ இணைப்பு:

“எம்பாவாய்” சிறுகதைபற்றி …..  (தொடர்ச்சி)

 

Image result for எஸ் ராமகிருஷ்ணன் எம்பாவாய்

அபிமான எழுத்தாளர் வாஹினி காலை உணவருந்த வீட்டிற்கு வருகிறாள் என்பதை நன்மதியால் நம்பமுடியவில்லை. மைத்துனர் விநாயகம் சொல்லியபடி கேசரி, வடை, இட்லி, பொங்கல் என்று செய்துவிடலாம்.  ஆனால் வாஹினியுடன் என்ன பேசுவது?

விருந்து தயார். கணவர் (நல்லவேளையாக) கடை திறக்கச்  சென்றுவிட்டார். தனக்குப் பிடித்த புடவையை அணிந்துகொள்கிறாள். இருவருக்கும் சேர்த்தே மல்லிகை தொடுத்து வைக்கிறாள்.

வாஹினியை வாசலிலேயே வரவேற்கிறார்கள். நேற்றையக் கூட்டத்துக்கு வந்த ஒரே பெண்மணி என நன்மதியை அடையாளம் காண்கிறாள் வாஹினி. சற்று நேரம் கழித்துச் சாப்பிடலாம் என்கிறாள் வாஹினி. உரையாடல் நடக்கிறது.

“எவ்வளவு நாவல் படிச்சிருப்பீங்க?”

“நூறு இருநூறு இருக்கும். கையில் கிடைக்கிறது எல்லாம் படிச்சிடுவேன். லைப்ரரியில் இருந்து கண்ணன் எடுத்துக்கிட்டு வந்து கொடுப்பான் என்றாள் அம்மா.

“நீங்கள் லைப்ரரிக்குப் போக மாட்டீங்களா?”

“இந்த ஊர்ல எந்தப் பொண்ணும் லைப்ரரிக்குப் போக மாட்டாங்க”

“ஏன் போன பூதம் பிடிசிக்கிடுமா?”

“போகணும்னு ஆசைதான். ஆனா விடமாட்டாங்க.”

மாதவிடாய் தினங்களில் இருக்க வேண்டிய இருட்டு அறை, கழிப்பறையில்லாத  வீட்டில் ஒதுங்குவதற்கான குட்டிச்சுவர், எதற்கும் தேவைப்படும் கணவரின் அனுமதி போன்றவை வாஹினிக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் கொடுக்கின்றன..

வெளிநாட்டுக் கணவர், அவரைப் பேரிட்டு அழைக்கும் வாஹினி, கல்கத்தாவில் தனித்துவாழும் வாழ்க்கை … இவை நன்மதிக்கு வியப்பைக் கொடுக்கின்றன..

வாஹினியின் கட்டாயத்தின்பேரில் சேர்ந்தே உணவருந்துகிறார்கள்.

“நல்ல சாப்பாடு. இப்படி சாப்பிட்டா தூக்கம்தான் வரும். அப்புறம் வைட் போட்டிடும்.”

அம்மா சிரித்தபடியே சொன்னாள்

“கோவில் வரைக்கு ஒரு நடை போயிட்டு வந்தா பசிச்சிடும்”

“போகலாமா? எனக்கு யானை பாக்கணும்” எனக்கேட்டாள் வாஹினி.

கோவில் அருகே டீக்கடையில் டீ குடிக்கிறார்கள். பால்கோவா வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஆண்டாள் பாசுரத்தை நன்மதியைப் பாடச்சொல்லி கைதட்டி ரசிக்கிறாள் வாஹினி.

எல்லோராலும் எழுத முடியுமா என்று நன்மதி கேட்கிறாள். நீகூட எழுதலாம் என்கிறாள் வாஹினி. நன்றாகப் பாடுகிறாய்.. பெரிய குடும்பம்… நிறைய அனுபவங்கள்.. கட்டாயம் எழுதமுடியும் என்கிறாள். “உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று கூறி கையசைத்து விடை பெறுகிறாள் வாஹினி.

Image result for சிறுகதை

அந்தச் ‘சட்டைக்காரி’யை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டதற்காக சீறுகிறார் நன்மதியின் கணவர். புத்தகம் படிப்பது நிறுத்தப்படுகிறது. புதிய புத்தகங்கள் வாங்கிவரமட்டேன் என்று மைத்துனரும், நூலகத்திலிருந்து கொண்டு வரமாட்டேன் என்று மகனும் உறுதி அளித்த பிறகு  கோபம் குறைகிறது.  இரண்டு  மாதங்கள் கழித்து புத்தகங்கள் வீட்டிற்கு வர்த்தொடங்குகின்றன..

நன்மதியின் பெயரில் சிறிய பார்சல் வருகிறது. வாழ்க்கையிகேயே அவள் பெயருக்கு வந்த ஒரே தபால்  அதுதான். நட்பைப் பாராட்டி வாஹினி எழுதியிருந்தாள். கூடவே ஒரு கைக்கடிகாரம். கடிதத்தை கண்ணீர்  பொங்கப் படிக்கிறாள் நன்மதி.

அன்றிரவு அப்பா அம்மாவோடு மறுபடி  சண்டை போட்டார். “உனக்கு எதுக்குடி அவள் வாட்ச் அனுப்பிவைக்குறா? ஏதாவது பணம் கிணம் குடுத்தியா” என்று திட்டினார். அம்மாவிற்கு வாஹினி எழுதிய கடிதத்தை  கிழித்துப் போட்டுவிட்டு கடிகாரத்தை தூக்கி வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். அம்மா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம்  இடம் பெயர்ந்து தென்காசி போய்விடுகிறது. வாஹினியும் ஸ்ரீவில்லிபுத்தூரும் நினைவுகளில் இருந்து மறையத் தொடங்குகின்றன.

ஆனால் இன்று அம்மாவின் கடிதத்தைப் படித்தபோதுதான் அவள் வாஹினிக்கு நன்றி தெரிவிக்க பதில்  கடிதம் எழுதியிருந்தாள் என்பது புரிந்தது. இதை எப்படி எழுதினாள், எப்படி அனுப்பிவைத்தாள் எதுவும் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அம்மாவின் கடித வரிகளைப் படிக்கப் படிக்க அது என் மனதை வதைப்பதாக இருந்தது.

கடிதத்திலிருந்து சில  வரிகள் …

உன் நாவல்களைப் படிக்கும்போது நீ எப்படிப் பேசுவாய் என நானாக உன் குரல் ஓன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சரியம், அதே குரலில்தான் நேரிலும் நீ பேசினாய்……

நீ மேடையில் பேசும்போதுகூட எவ்வளவு அறிவாளி நீ என்று நினைத்திருந்தேன். ஆனால் உன்னோடு பழகியபோதுதான் நீயும் என்னைப் போலவே பிரிவை, தீராத தனிமையை அனுபவிக்கிறாய் என்பதைப் புரிந்துகொண்டேன். நீயும் நிராகரிக்கப் பட்டிருக்கிறாய். பரிகசிக்கப்பட்டிருக்கிறாய்.. உனக்குள் பீறிடும் அன்பிற்கான ஏக்கத்தை என்னால் உணரமுடிகிறது…..

நீ எழுதப் போராடுபவள். நான் படிக்கப் போராடுபவள். என்னைப் போலுள்ள பெண்கள் எழுத வருவதற்கு இன்னும் நூறு வருஷமாகிவிடும்.

இனி எனக்கு கடிகங்கள் எழுதாதே. முடிந்தால் உன் கதையில் என்னை கதாபாத்திரமாக்கிவிடு.

எனக்கு இனி நீ தேவையில்லை. உன் நாவல்களே போதும்…  

நன்மதியின் மகனான கதைசொல்லிக்குத் துக்கமும் வேதனையும் ஏற்படுகிறது. வாஹினி மறைந்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. அம்மாவின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கான நூலகத்தை உருவாக்கவும் வாஹினியின் எல்லாக் கதைகளையும் படித்து, அம்மாவை கதாபாத்திரமாக ஆகியிருக்கிறாளா என்று தெரிந்துகொள்ளவும்  தோன்றுகிறது.

அம்மா புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் கூட  என்னிடமில்லை என்பது அந்த நிமிடம் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

என்று கதை முடிகிறது.

இந்தக் கதைக்கு வைக்கப்பட்டுள்ள பொருத்தமான கவித்துவமான தலைப்பு கதைக்கு அழகூட்டுகிறது. மகனின் வார்த்தைகளில் கதை சொல்லப்படுவது தாக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.

 

மனதைக்கவரும் சங்கீதம்

நல்ல இனிமையான சங்கீதம் – அழகான தமிழ் வரிகள் – காதில் தேன் வந்து பாயும். கேட்டு மகிழுங்கள்!! 

Image result for குழலூதி மனமெல்லாம் lyrics

ராகம் – காம்போஜி          

தாளம் – ஆதி

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்

பாடியவர்: பித்துக்குளி முருகதாஸ் 

 

பல்லவி

குழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ – சகி ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ –

அனுபல்லவி

அழகான மயிலாடவும் – (மிக மிக ) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் –

மத்யம காலம்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமிதி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)

சரணம்

மகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ……..
மிகவும் எழிலாகவும் ……. காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ….

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)

 

 

குவிகம் இல்லச் செய்திகள்

 

குவிகம் அக்டோபர் மாத நிகழ்வுகள்

அக்டோபர் 6 அன்று குவிகம் இல்லத்தில் இலக்கிய அமுதம் சார்பில் கோமல் ஸ்வாமிநாதன் பற்றி  திரு இந்திரன் அவர்கள் பேசினார்கள்.

இந்திரன் அவர்களுக்கும் கோமல் அவர்களுக்கும் தொடர்பு சுபமங்களா இதழ் காரணமாகவே இருந்தது. ஒரு மாத  இதழை ஒரு இலக்கிய இதழாக மாற்றியதோடு கலை இலக்கியம் சார்ந்த வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட பலரை ஒரே பத்திரிகையில் எழுதவைத்து சாதனை படைத்த கோமல்  ஒரு ‘டெமோக்ராட்’ என்றார் இந்திரன்.

எந்த கடுமையான விமர்சனத்தையும் (கண்ணியம் குறையாதிருந்தால்)  வெளியிட கோமல் தயங்கியதே இல்லை என்றார். கோமல் மறைவிற்குப்பின் இதழைத் தொடர அதன் பதிப்பாளர்களுக்கு எண்ணம் இல்லை. எனவே சுபமங்களா கோமலுடன் உடன்கட்டை ஏறிவிட்டது என்று சொல்லப்பட்டது என்றார்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

அக்டோபர் 13 அன்று ஊடகவியலாளர் மற்றும் சினிமா விமர்சகர் செந்தூரம் ஜகதீஷ் அவர்கள் கலந்துகொண்டார்.

ஒரு சிற்றிதழ் மிகக்குறைந்த சந்தாதாரர்களுக்காகவே வெளிவரும். மற்ற வார மாதப் பத்திரிகைகள் போல் கடைகளில் காசுகொடுத்து வாங்கப்படுவது மிக அரிது. இவர் ‘செந்தூரம்’ தொடங்கியபோது திரு பெரியார்தாசன் இவருக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சிற்றிதழ் எத்தனை பிரதிகள் அடிக்கலாம் என யோசித்துக்கொண்டு இருந்தபோது 500 பிரதிகள் அடிக்க வைத்திருக்கிறார் பெரியார்தாசன். அவர் பங்குபெறும் கூட்டங்கள் தோறும் ‘செந்தூரம்’ இதழ்  விற்க வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு சிறுபத்திரிகை விற்கப்பட்டது பெரிய ஆச்சரியம், செந்தூரம் சினிமா சிறப்பிதழ் கமலஹாசன், கலைஞர் உட்பட பல பிரமுகர்களின் நூலகத்தில் இருந்தது என்பது அந்த இதழுக்கு ஒரு பெருமைதான்.

ஜகதீஷ் அவர்களின் இன்னொரு ஆர்வம் ஓஷோ  பற்றியது. பல விஷயங்களுக்கு  ஓஷோ அளிக்கும் விளக்கங்களும் வழிகாட்டுதலும் தன்னை முற்றிலும் கவர்ந்தது  என்றார்.

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அக்டோபர் 20 அன்று நடந்த அளவளாவல் நிகழ்வில் கல்யாணமாலை நிறுவனர்கள் திரு மோகன், திருமதி மீரா நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்,

தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் செய்து வருகையில் “கல்யாணமாலை” நிகழ்வுக்கான எண்ணம் உருவாகியது. அதை நடத்திவைக்க அப்போது பிரபலமாக இருந்த சிலரை அணுகியிருக்கிறார்கள். நிகழ்வினை வடிவமைக்கும் அடிப்படை கருத்துகள் இவர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. சில வாரங்கள் கழித்து மோகன் அவர்களே உரையாடல் நிகழ்த்துபவராக பணி செய்ய “கல்யாணமாலை”  பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரே தொலைக்காட்சியில்  இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் ஒரே நிகழ்வு என்னும் பெருமையைப் பெற்றது.

அனுபவத்திலிருந்து குறிப்பிட்ட செய்திகளில் ஒன்று ..

மிக அதிகமான நிபந்தனைகளுடன் வரன் பார்க்கத் தொடங்குபவர்கள் பல சம்பந்தங்களை தட்டிக் கழித்து பல வருடங்கள் செலவழித்துவிடுகிறார்கள். கடைசியில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை முதலில் உறுதியாக இருந்த பல நிபந்தனைகளுக்கு மாறாகவே இருப்பதுதான்  முரண்.

=======================================================================================

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591

“தொண்டரடிப்பொடி ஆழ்வார்”
சிறப்புரை :-திரு தேவராஜ ஸ்வாமிகள்

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55

“கலந்துரையாடல் “

எழுத்தாளர்  உஷா சுப்ரமணியன்  அவர்களுடன்

 

வழக்கமாக கடைசி சனிக்கிழமை நடைபெறும்  இலக்கியச் சிந்தனை- குவிகம் இலக்கியவாசல் மாத நிகழ்வு அக்டோபர் 29 அன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்திற்குப் பதிலாக குவிகம் இல்லத்தில் நடைபெற்றது.

இலக்கியச் சிந்தனை நிகழ்வாக திரு தேவராஜ சுவாமிகள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பற்றி உரையாற்றினார். விப்ரநாராயணா வாழ்க்கையின் நடுவில் இறைவன் சேவையை விட்டு சிலகாலம் விலகி இருந்திருக்கிறார். பின்னாளில் தொண்டர் அடிப்பொடியாழ்வாராக மலர்ந்தார். அவரது பங்களிப்பான  திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருமாலையின் சிறப்புகளை தேவராஜ சுவாமிகள் எடுத்துரைத்தார்.

குவிகம் இலக்கிய வாசல் சார்பில் எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன் தன்னை எழுத்தாளர் என்பதே பலருக்கு மறந்துபோயிருக்கும் என்று தொடங்கினார்.    எப்போதாவது தான் எழுதிவருகிறேன் என்று சொன்னார்.. பெண்ணியக் கதைகள் பல எழுதியிருந்தாலும் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்தும் பெண்களை கண்டித்தும் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்.

எழுபதுகளில் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிவந்த அவர் நிறுவனங்களுக்காகவும் விளம்பரங்களுக்காகவும் படங்கள் எடுக்கும் தொழிலில் முழுமையாக ஈடுபட்டதால் எப்போதாவது எழுதும் எழுத்தாளர் என்று ஆகிவிட்டதாகத் தெரிவித்தார்.

 

 

அன்றும் இன்றும் … ! — கோவை சங்கர்

Image result for வாழ்க்கை

காதலெனும் சிறகடித்துப் பறந்தே னன்று
சாதலெனும் திசைநோக்கி செல்கிறே னின்று
மெய்க்காத லென்காத லென்றே னன்று
பொய்க்காதல் மயக்கமென உணர்ந்தே னின்று!

தேனமுது அளித்தனளே கன்னி அன்று
வன்சொல்லுந் தெளிக்கின்றாள் நங்கை இன்று
கிடைக்குமென நம்பினேன் மகிழ்வே அன்று
கிடைத்ததோ தாளாத துயரம் இன்று!

அணைத்திடுவா ளெனவெண்ணம் கொண்டே னன்று
பிணங்குகிறா ளுளம்நோக நங்கை யின்று
பேறுசெய்தே னவள்கிட்ட என்றே னன்று
குற்றமென்ன செய்தேனென குழப்பம் இன்று!

பிறருக்கு மாலையிடேன் சொன்னா ளன்று
பிறனுக்கு மாலையிட நின்றாள் இன்று
மணமென்றா லெனையேதான் என்றாள் அன்று
பணங்கொண்ட மாப்பிள்ளை பிடித்தாள் இன்று!

உயிரிற்கும் மேலாகக் கொண்ட நேசம்
மையலொடு காதலிலே துவண்ட கோலம்
கட்டிய கற்பனைக் கோட்டை யெல்லாம்
கட்டோடு மறந்தனளே பாவி இன்று!

தற்கால காதலெலாம் உதட்டின் மேலே
பற்றின்றித் தள்ளிவிடும் சேற்றின் கீழே
எழில்நோக்கிக் காதல்கொளும் மக்காள் நீவீர்
உழலுமென் வாழ்க்கையைச் சான்றாய்க் கொள்வீர்!

 

கலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..

அருவம் என்ற சமீபத்தில் வந்த படத்தில் கலப்படம் எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஒரு கொடுமையான பதிவு. 

எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் என்று  பார்த்துத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் இவற்றிலிருந்து நாம் எப்படித்

தப்பிப்பது என்றும் நாம் யோசிக்கவேண்டும். 

கலப்படம் செய்யும் துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களை வேரருக்கவும் வேண்டும்.

செய்வோமா? 

 

கமலின் சிறந்த படங்கள்

 

கமல்ஹாசன் சமீபத்தில் தனது  65 ஆவது பிறந்த நாள் விழாவையும் 60 ஆண்டுகள் திரைப்படத்துறையில் தொடர்ந்து பணிபுரிந்துவரும் பெருமித நாலையும் ஒன்றாகக் கொண்டாடினார். இது உலக (நாயகன்) சாதனை !!

Image result for கொலேஜ் கமல்ஹாசன்கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள் (களத்தூர் கண்ணம்மா, இந்தியன், நாயகன், மூன்றாம்பிறை) , 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.

சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் இவர் ஒருவர்.

இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்ப்டத்தில் நடித்தற்காக ஜனாதிபதிவிருது பெற்றார்.

1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கியது.

1990 இல் இந்திய அரசு பத்மஶ்ரீ விருதும், 2014 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கியது.

2016 இல் செவாலியே விருது பெற்றார்

 

ஒரு சின்ன போட்டி : இதில் உள்ள அத்தனைப் படங்களையும் பார்த்தவர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசு! 

இந்தப் பக்கத்தில் கமெண்ட்ஸ் பகுதியில் பதில் போடவும்!

 1. நாயகன்
 2. அன்பே சிவம்
 3. மகா நதி
 4. மூன்றாம் பிறை
 5. பேசும்படம்
 6. அபூர்வ சகோதரர்கள்
 7. தேவர் மகன்
 8. இந்தியன்
 9. மைக்கேல் மதன காம ராஜன்
 10. சலங்கை ஒலி
 11. குணா
 12. குருதிப்புனல்
 13. விஸ்வரூபம்
 14. விருமாண்டி
 15. பதினாறு வயதினிலே
 16. சிகப்பு ரோஜாக்கள்
 17. பாபனாசம்
 18. ஹே ராம்
 19. பஞ்சதந்திரம்
 20. வறுமையின் நிறம் சிவப்பு
 21. தெனாலி
 22. அவ்வை ஷன்முகி
 23. உன்னைப்போல் ஒருவன்
 24. வேட்டையாடு விளையாடு
 25. உன்னால் முடியும் தம்பி
 26. தசாவதாரம்
 27. எக் துஜே கே லியே
 28. மரோ சரித்ரா
 29. ராஜபார்வை
 30. சத்யா
 31. அபூர்வ ராகங்கள்
 32. வசூல் ராஜா எம் பி பி எஸ்
 33. காதலா காதலா
 34. புன்னகை  மன்னன்
 35. இந்திரன் சந்திரன்
 36. நம்மவர்
 37. விக்ரம்
 38. ஆளவந்தான்
 39. நிழல் நிஜமாகிறது
 40. வாழ்வே மாயம்
 41. அவள் அப்படித்தான்
 42. மீண்டும் கோகிலா
 43. ஒரு கைதியின் டயரி

 

 

வெறியாடல்   – வளவ. துரையன்

Image result for வெறியாடல்

Image result for உடுக்கு ஆட்டம்

வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே  நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும்  செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

பழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்களும் அவரவர் நிலத்திற்குரிய தெய்வங்களுக்குப் படையலிட்டுக் குறையைத் தீர்த்தருளுமாறு வெறியாடி வழிபட்டு வந்திருக்கின்றனர். இது பெரும்பாலும் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனே ஆவான். வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளும் உண்டன்றோ? முருகனை வழிபடும் இடத்தே மிக்க மணமுள்ள பூக்களும் இலைகளும் புகையும் சூழ்ந்திருப்பதால் அந்த இடத்தை வெறிக்களம் என்னும் சொல்லால் அழைத்தனர். “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” என்று நற்றிணையில் [43] பார்க்க முடிகிறது. அக்களத்தின் நடுவே வேலை நட்டு அதைச் சுற்றி மக்கள் வட்டமாக அமர்ந்து கொள்வர்.

அடுத்துத் தம்மால் தீர்க்கமுடியாத மனச்சிக்கல் அல்லது உடற்குறைகளை அதற்குரியோர் முன்மொழிந்து கூறுவர். முருகனை மனத்தில் வரித்து வழிபட்டு வெறியாட்டம் நிகழ்த்திக் ‘குறி’ சொல்வோனுக்கு வேலன் என்று பெயர். அவன் முருகன் பெயரை வாழ்த்தித் தன் மேல் முருகன் வந்து நிற்பதாக ஆடுவான். அவனின் ஆட்டத்திற்கேற்ப பலவகை வாத்தியங்கள் மிகுதியான ஒலியுடன் ஒலிக்கும். அவன் சிக்கலுக்கும் காரணம் சொல்லித் தீர்வு சொல்வான்.

தம் மகளிரின் உடல்நலம் குன்றி உடல் அழகும் வேறுபடும்போது காரணமும் தீர்வும் அறிய அவர்தம் தாயர் இதை நிகழ்த்தும் வழக்கம் பெரும்பாலும் காணப்படுகிறது. அம்மகளிரை நீராட்டி ஒப்பனை செய்து வெறியாடும் களத்தில் நிறுத்துவர். அப்போது வாத்தியங்கள் முழங்க வேலன் ஆடும்போது அம்மகளிரும் உடல்நடுங்கி மருண்டு ஆடுவதும் உண்டு. இதை ‘வெறியுறுநுடக்கம்’ என்று பதிற்றுப்பத்து [51] காட்டும்.

தற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன.

இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார். அப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் வெறியயர்தல் பற்றிய செய்திகளே வருதலால் அதற்கு வெறிப்பத்து என்று பெயர் வந்தது. தலைவி தலைவனுடன் களவுறவு கொண்டதால் அவள் உடல்நலன் குறைந்து போக, அதை நோய் என்றும், அணங்கு பிடித்து விட்டதென்றும் கருதிய அவளின் தாயர் வெறியாட்டு நிகழ்த்த முற்படுதலும் அது தொடர்பான செய்திகளும் இப்பத்துப் பாடல்களில் விரவி வருவதைக் காணலாம்.

தலைவி ஒருத்தி, தலைவனைச் சந்தித்து களவுறவு கொண்டாள். அதனால் அவள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஊராரும் அதுபற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். எனவே அவளை வீட்டிற்குள் பெற்றோர் சிறைப்படுத்தினர். அவனைச் சந்திக்க முடியாமல் அவள் உடல் மெலிந்தாள். அதனால் அவளது செவிலித்தாய் காரணமும் தீர்வும் அறிய வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்பொழுது தோழி தலைவியிடம் செவிலியும் கேட்குமாறு சொல்கிறாள்.

”செறிவான பற்களை உடையவளே! நாம் பிரிவால் வாடித் துன்பப்படுவதைக்கண்டு, நம் செவிலியானவள் வெறியாட்டம் நடத்த வேலனை அழைக்கிறாள். அவன் தலைவனுடன் நாம் கொண்டுள்ள நட்பை அறிந்து கூறிவிடுவானோ?”

வேலனாகிய தெய்வம் வந்து உண்மையைக் கூறிவிட்டால் அதைச் செவிலி  அன்னையிடம் சொல்லி மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வாள் என்பது அவள் உள் மனத்தில் இருக்கிறது. அதையே இப்படி மறைமுகமாக உணர்த்துகிறாள்.

தலைவன் பிரிவால் ஒருத்தி உடல் மெலிந்தாள். ஆனால் தன் மகளை அணங்கு ஒன்று பிடித்துக் கொண்டு விட்டது என எண்ணிய அவள் தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது தோழி, “நம் தாய் இது காதலன் பிரிவால் வந்த நோய் என அறியாமல் தெய்வக் குற்றம் என் எண்ணி வருந்துகிறாள். ஆதலால் அன்னையிடம் இனியும் உண்மையைக் கூறாமல் இருப்பது கொடுமையாகும்” என்று தலைவிக்கு அறிவுரை சொல்கிறாள்.

தன் மகளுக்காக வெறியாட்டம் நடத்திய தாய் வெறியாடிய வேலன் ”இது தெய்வக் குற்றம்” எனச் சொன்னதை நம்பி விடுகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி சொல்வதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

”கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி

அறியா வேலன், வெறிஎனக் கூறும்

அதுமனம் கொள்குவை, அனையிவள்

புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே”    [243]

தலைவியின் கண்கள் புதுமலர் போன்று உள்ளனவாம். அது பிரிவுத் துயராலே கலங்கி நீரோடு இருப்பதால் மழைக்கண் என்று காட்டப்படுகிறது. ‘கறிவளர் சிலம்பு என்பது மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்று பொருள் தரும். அன்னையிடம், தோழி, “அன்னையே! புத்தம் புது மலர் போன்ற இவள் கண்கள் அழுது புலம்பும் நோய்க்குக் காரணம் சொல்ல வந்த வேலன், மிளகுக்கொடி வளர்கின்ற மலைவாழ் முருகனைப் பாடி, இது தெய்வக் குற்றம் என்று மொழிந்தான். நீயும் அதை உண்மையென மனத்தில் கொள்கிறாயே”

அது உண்மை இல்லையெனில் வேறு காரணம் உள்ளதென உணர்த்த வருகிறாள் தோழி. மேலும் தானே வளர்ந்து படரும் மிளகுக்கொடி வளரும் மலைப்பக்கம் என்றதால் இவளும் தானே தன் தலைவனைப் பற்றிப் படர்ந்து உறவு கொண்டாள் என்பதையும் தோழி மறைமுகமாகக் கூறுகிறாள். இவ்வாறு வெறியாடலிலும் வேலனால் உண்மையை அறிய முடியாது என்பதும் உணர்த்தப்படுகிறது.

வெறியாடும் வேலன் முதலில் மலையை வாழ்த்திப் பாடவேண்டியது மரபாகும். அது தலைவியின் மனம் கவர்ந்த தலைவன் குடிகொண்ட குன்றாகும். அப்படி அவன் அம்மலையைப் பாடினால் அது கேட்டு தலைவி மகிழ்ந்து முகமும் அகமும் மலர்வதைக் கண்ட செவிலித்தாய் உண்மை அறிந்து அவனுடன் மணத்திற்கு ஏற்பாடு செய்வாள் என்றும் தோழி ஒரு பாடலில் கூறுகிறாள். ”ஒருவேளை அவன் மலையைப் பாடாவிட்டால் அந்த வெறியாடல்தான் என்ன பயன் செய்யும்?” என்னும் பொருளில்,

”குன்றம் பாடான் ஆயின்

என்பயன் செய்யுமோ—வேலற்கு அவ்வெறியே?” [244] என்று பாடல் அமைந்துள்ளது.

தலைவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தினம் வந்து செல்வது தலைவிக்குக் கவலை அளிக்கிறது. தாய் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். வெறியாடும் வேலனும் கழங்குக் காய்களை நிறுத்தி, கையில் மந்திரத் தகடு வைத்த தாயத்தைத் தலைவி கையில் கட்டினான். இவள் நோய்க்குக் காரணம் முருகனே என்று அவன் கூறிவிட்டான். அடுத்த நாள் தலைவியைச் சந்திக்கத் தலைவன் வந்து மறைவாக நிற்கிறான் அப்பொழுது அவன் கேட்கும் படிக்குத் தோழி சொல்கிறாள். “வெறியாடிய வேலன் உன் நோய்க்கு முருகன்தான்  காரணம் எனச் சொன்னானே; அது நம் தலைவனுக்கும் பொருத்தம்தானே”

வெறியாட்டத்தில் முருகன் என்று சொன்னது தம் தலைவனுக்கும் உரியது எனக் கூறி அவன் விரைவில் வந்து மணம் புரிய வேண்டும் என்று தோழி உணர்த்துகிறாள்.

வெறிப்பத்தின் ஆறாம் பாடலில் ஒரு காட்சியே புனைந்துரைக்கப்பட்டுள்ளது.

மலையில் இருக்கும் புன்செய் நிலத்தில் கானவர்கள் தினைப்பயிர் விளைவிப்பார்கள். அப்பயிர் கதிர் முற்றும்போது அவற்றைப் பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமல் இருக்க உண்மையான புலியைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்புலிப் பொம்மையை நிலத்தில் வைப்பார்கள். இதைக் காட்டும் ஒரு பாடல் இது.

”வெறிசெறித் தனனே, வேலன் கறிய

கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉம்

புன்புலம் வித்திய புனவர் புணர்ந்த

மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து

மன்றில் பையுள் தீரும்

குன்ற நாடன் உறீஇய நோயே”          [246]

[செறித்தல்=ஏற்பாட்டைச் செய்தல்; கறிய=மிளகுக்கொடியை உடைய; கல்முகை=கல்குகை; வயம்=வலிமை; வித்திய=விதைத்த; புன்புலம்=புன்செய்; புனவர்=குறவர்; உறீய=உற்ற]

தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது. அப்பொழுது அன்னை வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். தலைவியைக் காணவந்து மறைந்து நிற்கும் தலைவனும் கேட்குமாறு தோழி சொல்கிறாள்.

”புன்செய் நிலங்களில் முற்றிய கதிரைப்பறவைகளும் விலங்குகளும் வந்து சேதப்படுத்தாமலிருக்க அவற்றை அச்சுறுத்த பெண்புலிப் பொம்மையை கானவர்கள் வைப்பார்கள். அந்தப் புலிப்பொம்மையை உண்மையென நம்பிய ஆண்புலி அத்துடன் இணைந்துவிட்டுக் களைப்பைப் போக்கிக்கொள்ளக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன் நம் தலைவன். அவனால்தான் நமக்கு இந்த நோய் உண்டாகியது. அதைத் தணிக்க வெறியாடும் வேலன் இதோ ஏற்பாடுகளைச் செய்கிறான்.”

அந்த ஆண்புலிபோல அவனும் கள்ள உறவையே நாடி மகிழ்கிறான். அவன் உடன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனெனில் வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் உடல் மெலிவுக்கு உண்மையான காரணத்தைச் சொல்லிவிட்டால் தலைவிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என்பதைத் தோழி குறிப்பாக உணர்த்துகிறாள்.

”வெறியாடற வேலன் தனக்கு வந்திருக்கும் நோய் முருகனால்தான் வந்த்தெனச் சொல்வான். அதுவும் சரிதான்; என் தலைவன் பெயரும் அதுதானே” என்றுஒருத்தி வெறியாடல் பற்றிச் சொல்வதாகவும் ஒரு பாடல் கூறுகிறது.

தோழி ஒரு பாட்டில் வெறியாடும் வேலன் உண்மையைக் கண்டுபிடித்துக் கூறினான் எனில் இவள் கற்பின் மாண்பு வெளிப்படும் என்று மகிழ்கிறாள்.            ”பெய்ம்மணல் முற்றம் கவின்பெற இயற்றி

மலைவான் கொண்ட சினைஇய வேலன்

கழங்கினான் அறிகுவது என்றால்

நன்றால் அம்ம, நின்றஇவள் நலனே!”        [248]

“புதுமணல் பெய்த வீட்டின் முற்றத்தே வெறியாடு களத்தை நிறுவி மலையையும், வானையும் கொண்ட அத்துடன் சினம்  மிகுதியான வேலினையும் கொண்ட முருகனை வேண்டி கழற்சிக்காயைக் கொண்டு வெறியாடி உண்மையை வேலன் கூறினால் அதுவும் உண்மையானால் இவளிடத்து நிலைபெற்ற கற்பின் மாண்புதான் நன்று” என்பது பாட்டின் பொருளாகும்.

வெறியாடிய வேலன் தலைவியின் உடல் மெலிவிற்கு முருகக்கடவுளே காரணம் என்று உரைக்கிறான். அதை அவளின் அன்னையும் உண்மையென்று நம்பினாள். அப்பொழுது தோழி, “அந்த வேலன் அருவிகள் விளங்கும் அச்சம் கொண்ட மலைக்கு உரியோனான உன் காதலனை அறியவில்லை போலும்” என்று கூறி வெறியாடுபவனின் சொல்லையே மறுக்கும் பாடல் அடிகளும் காணப்படுகின்றன.

”——-இலங்கும் அருவிச்

சூர்மலை நாடனை அறியாதோனே” [249]

என்னும் பாடல் அடிகள் அதை உணர்த்துகின்றன.

பத்தாம் பாடல் ஓர் அஃறிணைப் பொருளை முன்னிலைப் படுத்திக் கூறுவது போல் அமைந்துள்ளது. வெறியாடும் வேலன் கழற்சிக்காய்களை களத்தில் இட்டு எடுத்தெண்ணிக் குறி சொல்லுவான். அக்காய்களைக் கழங்கு என்றும் சொல்வர். ஒரு தலைவியின் உடல் தலைவனின் பிரிவால் மெலிகிறது ஆனால் அன்னை இது நோய் என்று எண்ணி வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த ஆட்டத்தில்  அக்காய்கள் ”இவளுக்கு வந்த நோய் முருகனால் தந்தமை” என்று காட்டின. அப்பொழுது தோழி அக்கழங்கை முன்னிலைப்படுத்தி செவிலித்தாய் கேட்கும்படிச் சொல்வது இப்பாடல்.

”பொய்படுபு அறியாக் கிழங்கே! மெய்யே

மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்

மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்;

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்

பூண்தாங்கு இளமுலை அணங்கி யோனே.  [250]

[கட்சி=காடு; ஆலும்=ஆடும்; விறல்=வெற்றி; வேள்=முருகன்; பொய்படு அறியா=பொய்யை அறியாத]

”பொய் சொல்லுதலை அறியாத கழங்கே! நீலமணி போல விளங்கும் மலை உள்ள காட்டின் உள்ளே, இளமயில்கள் ஆடிக்கொண்டிருக்கும்; நிறைய வள்ளிக்கொடிகள் இருக்கும்; அக்கானகத்திற்கு உரியோன்தான், அணிபுனைந்த இவள் முலைகளைத் தழுவி நோய் வரும்படிச் செய்தவன். ஆண்தன்மை மிகுந்த வெற்றிவேலை உடைய முருகன் அல்லன்” என்பது பாடலின் பொருளாகும்.

பழங்காலத்தில் இருந்த தெய்வ நம்பிக்கைகளில் இது போன்ற வெறியயர்தலும், குறி காணலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஐங்குறு நூறு இன்றும் சாட்சியாக இருந்து வருகிறது.

 

பிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்

Image result for blockchain

நாணயம் ஒரு உலகப் பொதுப்பணம் என்பது நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கும். (உதாரணம்: பிட்காய்ன்) ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நாணயம் இருப்பது போல நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு நாணயத்தைக் கொண்டுவரும் முயற்சி தான் இந்த கிரிப்டோ நாணயம். சரி, இந்தப் பொது நாணயத்தைச் செயல்படுத்த ஒரு வங்கி வேண்டுமல்லவா?அதன் சர்வர்களில் தானே உந்த உலக நாணயத்தின் மையப்படுத்தப்பட்ட தகவல் (டேட்டா பேஸ்) இருக்கமுடியும்? இரண்டும்  தேவையில்லை என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பார்கள். யார் வேண்டுமானாலும் தங்கள் சர்வரில் இந்த நாணய மாற்றங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு? அங்குதான் வருகிறது பிளாக் செயின் என்ற புதிய தத்துவம். மையப்படுத்துவற்குப் பதிலாக பரவலாக்கப்பட்ட சர்வர்களில் கொடுக்கல் வாங்கள்களைப் பதிவுசெய்யமுடியும் என்கிறார்கள்.

ஒரு புதிரை வெளியிட்டு அதை யாரெல்லாம் விரைவில் சரியான விடை கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் தங்கள் சர்வரில் இந்த நாணயப் பரிமாற்றங்களை வத்துக்கொள்ளலாம். அவர்களுக்குத் தங்கள் சர்வரில் பதிவாகும் நாணயப் பற்றுவரவைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும். இதுதான் பிளாக் செயின் தத்துவத்தின் ஆணிவேர். 

அதைபற்றி அழகு தமிழில் விசைப்பலகை நண்பர் விளக்குகிறார். புரிகிறதா என்று பார்ப்போம். 

(தற்போது டுவிட்டருக்குப் பதிலாக வர இருக்கின்ற மாஸ்டடோன் என்ற செயலியும் இந்த பிளாக் செயின் தத்துவத்தின் அடிப்படையில் தான்  இயங்கப்போகிறதாம். )

 

இன்னொரு நண்பர் பிட்காய்ன் பற்றி அழகு தமிழில் விளக்குகிறார். பாருங்கள் !! 

 

அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று சான்பிரான்ஸிஸ்கோ நகரின் எம்பார்க்கடெரோ என்கிற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மிகவும் பாதுகாப்பான கப்பலை அவர்கள் எப்படி எல்லாம் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் தெரியுமா?

வழக்கம்போல  அடையாள அட்டை மற்றும் எக்ஸ் ரே சோதனைகளுக்குப் பிறகு   25 பேர்கள் கொண்ட குழுக்களாகப் பார்வையாளர்களைப் பிரித்து ஒவ்வொரு குழுக்கும் ஒரு அதிகாரியை வழிகாட்டியாக நியமித்து கப்பலை சுற்றிக் காண்பிக்கிறார்கள். பார்வையாளர்களுக்குப் பரிபூரண சுதந்திரம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் போட்டோ வீடியோ எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் ட்ரக் , ஹெலிகாப்டர், ஜீப் மற்றும் படகு எதில் வேண்டுமானாலும் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து கப்பல்படை வீரர்கள் போல பவனி வரலாம். அங்கிரிக்கும் துப்பாக்கி, மெஷின் கன், ( குண்டு இல்லை – மற்றபடி அனைத்தும் ஒரிஜினல்) டெலெஸ்கோப் போன்றவற்றை நம்மை உபயோகிக்கச் செய்கிறார்கள். கப்பல் வீரர்கள் அவற்றை செய்து காட்டி நம்மை அவர்களின் ஆயுதங்களுடன் நம் போனிலேயே போட்டோவும் எடுத்து உதவுகிறார்கள்.

நாமும் நமக்குப் பிடித்த இடங்களில் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கப்பல்வீரர்களுக்கு பொதுமக்கள் தரும் மரியாதையையும் அவர்கள் பொதுமக்களுக்குத் தரும் மரியாதையையும் பார்க்கப் பிரம்மிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன.

நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.

அந்தக் கப்பலில் எடுத்த புகைப்படங்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு!

 

 

தூரத்து உறவுகள்! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Image result for தூரத்து சொந்தம்

உன் உயர்நிலை கண்டு
உதடுகளால் வாழ்த்தி
உள்ளத்தால் பொறாமை
தீயை மனதில் வளர்க்கும்
உன் தூரத்து உறவானாலும்
என்றும் துரத்தும் உறவுகளே!

உன் துன்பநிலை கண்டு
உள்ளம் உருகி ஆறுதல்கூறி
கண்ணுக்கு தெரியாத
கடவுளிடம் முறையிடும்
கள்ளமில்லா உள்ளங்கள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!

உறவுக்கு கை கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
இன்னா செய்தாருக்கும்
இனியவைகள் செய்
அன்புடன் வேண்டி நிற்கும்
உன் இனிய நட்பு உறவுகள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்

Image result for காதல்

‘ஏன்பா… காலிலே விழுந்த அந்த இளம் ஜோடியை
அந்த பெரியவர் வாயார வாழ்த்தினாரே… அதுக்கு
ஏன் அந்தப் பெண் பெரியவரை அப்படிக் கத்தறா..?

‘அதையேன் கேட்கறே..! ஆயுள், ஆரோக்கியம்,
ஐஸ்வர்யத்தோடு பல்லாண்டு வாழணும்னு சொல்-
றதுக்கு பதிலா வாய் குழறி ‘ஆயுள், ஆரோக்கியம்,
ஐஸ்வர்யாவோடு பல்லாண்டு வாழணும்னு சொல்-
லிட்டார்…’

‘ஐஸ்வர்யாவா..?’

‘ஆமா… ஐஸ்வர்யா அந்தப் பையனுடைய செக்ரடரி..!’

 

 

இம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்

Image result for சா கந்தசாமி

திரு சா கந்தசாமி அவர்களை விருட்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழாவிலும் மற்றும் பல இலக்கியமேடைகளிலும் சந்தித்திருக்கிறோம். நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட. அழகு தமிழில் அவர் கூறும் ஆணித்தரமான கருத்துக்களைக் கேட்பதற்கென்றே ரசிக உள்ளங்கள் வருவதுண்டு.

அவரைப்பற்றிய தகவல்கள்:

(நன்றி : விக்கிபீடியா)

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968ல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்.”இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.அவர் மேலும் மேலும் கூறுகிறார், “எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும்.

தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது

விருதுகள் – சிறப்புகள் 

சாயாவனம் புதினம் வீடியோ படமாக ஆக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்ப ட்ட கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டு உள்ளது. தூர்தர்ஷனில்  ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொலைந்து போனவர்கள் புதினம் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சுடுமண் சிலைகள் பற்றிய டாக்குமெண்டரி சர்வதேச விருது பெற்றது.

தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன்  தொலைக்காட்சி ‘காவல் தெய்வங்கள்’ என்னும் 20 நிமிட ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

 சாயாவனம் ,சூர்யவம்சம்,  விசாரணைக் கமிஷன் என்ற புதினங்கள் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 தக்கையின் மீது நான்கு கண்கள் (சிறுகதை), விசாரணைக் கமிஷன், சாயாவனம் போன்ற புதினங்கள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

கலை வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக, தமிழ்நாடு அரசாங்கத்தின் லலித் கலா அகாடமி, மார்ச் 1995 இல் அவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது.

1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது

 2009 ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.

(மோனிக்கா மாறன் எழுதிய விமர்சனக்குறிப்பு – ஜெயமோகன் இணையதளத்திலிருந்து )

1

தமிழின் முக்கியமான சிறிய நாவல்களில் ஒன்று சாயாவனம். சா.கந்தசாமியால் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நநாவலை ஒரு குறுநாவல் என்றே சொல்லலாம். சூழியல் கொள்கைகள் பிரபலமாகாதிருந்த காலத்தில் ஒரு காட்டின் அழிவை மட்டும் சுருக்கமான நேரடியான மொழியில் சொன்ன நாவல் இது. அந்த அடர்த்தியினாலேயே குறியீட்டுப்பொருள் கொண்டு பலவகையான அழிவுகளையும் இழப்புகளையும் காட்டுவதாக ஆகியது.

தமிழின் நவீனத்துவ இலக்கியத்தின் உச்சப்படைப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படவேண்டியது. உணர்ச்சிகரம் அற்றமொழிநடை. புறவயமான சித்தரிப்பு. செறிவான கதைநகர்வு. குறியீட்டுத்தளத்தில் மட்டுமே அனைத்து அர்த்தவிரிவையும் வைத்திருக்கும் அமைதி.

நாற்பதாண்டுகளுக்கு முன் ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே தன் சவால்’ என்று அறிவித்தபடி தமிழிலக்கியத்திற்குள் புகுந்தவர் சா.கந்தசாமி. நவீனத்துவத்தின் உச்சகட்ட அறைகூவல் அது.

வெறும் நிகழ்வுகளே இலக்கியத்திற்குப் போதுமானது, கட்டுக்கோப்பான கதை என்பது ஒரு அறிவுசார்ந்த உருவாக்கம், அதில் வாழ்கைக்கு அர்த்தத்தையும் மையத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சி உள்ளது. வாழ்க்கைக்கு அப்படி ஓர் அர்த்தமும் மையமும் இல்லை என்று கந்தசாமி சொன்னார்

அவரது புனைவுலகம் அந்த தரிசனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. மிக எளிய நேரடியான மொழியில் எழுதப்பட்ட அவரது கதைகள் பெருவாரியான வாசகர்களுக்குரியவை அல்ல. அவை பெரும்பாலும் மேல்தளத்தில் மிகத்தட்டையானவை. வாசகன் வாழ்க்கையைப்போலவே அந்நிகழ்வுத்தொகுதியையும் தன் சொந்த கற்பனையால் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பவை

பிரபல எழுத்தாளர் இமையம் அவர்கள் கருத்து:

சா.கந்தசாமியின் 172 சிறுகதைகளை ஆரம்பகால, பிற்கால கதைகள் என்று பிரிக்கலாம். இந்த பிரிவுகளிலிருந்து கிராமத்தை பின்புலமாகக் கொண்ட சமூக நிகழ்வுகளை, பொருளாதாரப் பிரச்சனைகளை, தனிமனிதப் பிரச்சனைகளை, சிறுவர்களை, அரசியலை மையமாகக் கொண்ட கதைகள் என்றும் பிரிக்கலாம். ஒவ்வொரு கதையும் சமூகத்தின் ஒவ்வொரு முகத்தையும் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் மட்டும் காட்டவில்லை. சமூகத்தின் சகலவிதமான மனிதர்களையும் காட்டுகிறது. இந்தக் கதைகளின் வழியே நாம் அந்தந்த கால சமூகத்தின் உயிர்நாடியை அறிந்துகொள்ள முடியும்.

தினமணி கொண்டாட்டம் வாரப் பத்திரிகையில் ” என்றும் இருப்பவர்கள்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர்கள் – ஆளுமைகள் பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார். நகுலன், சுத்தானந்த பாரதியார், சுந்தர ராமசாமி, கல்கி, சிலோன் விஜேந்திரன், லா சா ரா மற்றும் பலரைப் பற்றி சுருக்கமாக ஆனால் மனதைத் தொடும்வரையில் எழுதியிருக்கிறார்.

சா கந்தசாமியைப் பற்றிய ஆவணப்படத்தைப் பாருங்கள்!!

 

 

திரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்

மனதை உருக்கும் பாடல் 
பெண் குழந்தையைப்  பெற்ற ஒவ்வொரு தகப்பனும் கண்ணில் நீர் ததும்ப ரசிக்கும் பாடல் வரிகள்! 
படம்: விஸ்வாசம்
பாடல்: தாமரை 
இசை : இமான் 
பாடியவர்: சித் ஶ்ரீராம் 
நடிப்பு: அஜித்
பாடலைப் படித்துக்கொண்டே பாடலைக் கேளுங்கள் ! 
Image result for கண்ணான கண்ணே விஸ்வாசம் mp3 download
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமாஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னைவிண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே

 

சிறக்கும் வாழ்க்கை! – தில்லை வேந்தன்

Image result for வாழ்க்கை
உதிர்ந்து போகும் என்பதனால்
     ஒளிர்பூ மலர  மறுப்பதுண்டோ?
கதிரும் நாளும் மறைவதனால்
     காலை  உதிக்க வெறுப்பதுண்டோ?
நதியும்  வறண்டு விடுவதனால்
     நளிர்நீர்  வராமல் இருப்பதுண்டோ?
மதியும் தேய்ந்து குறைவதனால்
      வளர மீண்டும் மறப்பதுண்டோ?
உதிர்ந்த  பூவும்  உரமாகும்
     உரத்தால் வித்தும் மரமாகும்
முதிர்தல்  இயற்கை நெறியாகும்
     முழுதும்  புரிந்தால் சரியாகும்.
புதிதாய்ப் பிறந்தோம் இன்றென்று
     போகும் நாளை அனுப்பிடுவோம்
எதிலும் பொறுமை, நம்பிக்கை
     இருந்தால் சிறக்கும் நம்வாழ்க்கை!

குவிகம் குரல் – கண்ணதாசன் உரை

இனி மாதாமாதம் ஒரு பிரமுகரின் உரையை ஆடியோ வடிவில் கேட்கலாம் ! 

இம்மாதக்குரல் கண்ணதாசன் !

 

தவத்துக்கு ஒருவரடி ; தமிழுக்கு இருவரடி; சவத்துக்கு நால்வரடி!!

கண்ணதாசனின் நகைச்சுவை ததும்பும் உரையைக் கேளுங்கள்! 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

“பிள்ளையவர்கள் – ஐயரவர்கள் – கி.வா.ஜ” (குரு – சீடர் பரம்பரை)

புத்தக அறிமுகம் : தமிழ் மூவர். ஆசிரியர்: கீழாம்பூர் – கலைமகள் பப்ளிகேஷன்ஸ்).

தமிழுக்கு எப்போதுமே மூன்று ராசியான எண்! முத்தமிழ், முக்கனி, முப்பால், படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்யும் மூன்று தெய்வங்கள், தமிழ் மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவி, மாரிமுத்தாப் பிள்ளை, தேவாரம் பாடிய மூவர் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞான சம்பந்தர் – இந்த வரிசையில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் எழுதியுள்ள புத்தகம் “தமிழ் மூவர்”!
குரு – சீடர் பரம்பரையை அழகான தமிழில் தந்துள்ளார். மிகச் சுருக்கமாக ஆனால் மிக சுவாரஸ்யமாக மூன்று தமிழ்க் காவலர்களின் – மகாவித்துவான் திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மகா மகோபாத்யாய தாக்‌ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் மற்றும் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் – வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமைக்குரிய மாணவர் உ.வே.சா. உ.வே சா அவர்களின் பெருமைக்குரிய முதல் மாணவர் கி.வா.ஜ. பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார். உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலைத் தொடர்ந்து ‘என் ஆசிரியப் பிரான்’ என்று ஐயர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. அவர்கள் – இந்த குரு – சீடர் பரம்பரையை எளிய நடையில் எல்லோரும் படித்து அறியும் வகையில் எழுதியுள்ள கீழாம்பூர் பாராட்டுக்குரியவர்!
மீனாட்சிசுந்தரம் பிள்ளை: (1815 – 1876):
மலைக்கோட்டை மெளன ஸ்வாமிகள் மடத்தில் தங்கியிருந்த வேலாயுத முனிவர் அவர்களைக் காலை மாலைகளில் தவறாமல் சென்று, முயன்று, வழிபட்டுப் புதிய நூல்களைப் பிரதி எடுத்தும், படித்தும், படித்த நூல்களில் உள்ள ஐயங்களை வினாவித் தெளிந்தும் வருவாராம் பிள்ளையவர்கள் (தமிழ் மூவர்களின் எழுத்து நடையைப் பல இடங்களில் அப்படியே கையாண்டுள்ளார் கீழாம்பூர் – அந்த நடை வாசகனைப் பிரமிக்க வைக்கிறது!).
வீடுதோறும் பிச்சை (பிட்சை) எடுக்கும் பரதேசி ஒருவர், தண்டியலங்காரத்தில் நல்ல பயிற்சி உள்ளவராம் – ஆனால் அவர் யாரையும் மதிக்காமலும், பாடம் சொல்லிக்கொடுக்காமலும் இருப்பாராம். அவருடன் தெருதோறும் சென்று, அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து, அவரிடம் இருந்த அந்தப் புத்தகத்தைப் பெற்று, எழுதிக் கொண்டு பாடமும் கேட்டாராம் பிள்ளையவர்கள் – என்னே ஒரு தமிழ்ப் பற்று, மெய்சிலிர்க்க வைக்கிறது.
நூல்களைத் தொகுத்து வைப்பது, முத்துக் கோர்த்தாற்போல் அழகிய எழுத்துக்களில் எழுதி வைப்பது என வருங்கால மாணாக்கர்களுக்காகச் செய்துள்ளார். கம்பராமாயணத்தை மூன்று முறை எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினார்.
பாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனதில் ஒழுங்குபடுத்திக்கொண்டு, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடுவாராம் பிள்ளையவர்கள்!
தல புராணங்கள், சரித்திரம், மான்மியம், பிற காப்பியங்கள், பதிகம், பதிற்றுப் பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி, சிலேடை வெண்பா என இவர் எழுதியவை தமிழுக்குச் சேர்த்து வைத்திருக்கும் பெருஞ்சொத்து ஆகும்!
‘பிள்ளையவர்கள்’ என்றாலே, வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான் என்பது இவரது தமிழ்த் தொண்டுக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம்!
உ.வே. சாமிநாதையர்; (1855 – 1942):
பிள்ளையவர்களின் நிழல் போலத் தொடர்ந்து அவரிடம் கல்வி பயின்று வந்தவர்! ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுதும் அலைந்து சுவடுகளைத் தேடிப் பிடித்து, பதிப்பித்துத் தந்த உ.வே.சா அவர்களைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று அடைமொழி தந்து அழைத்தவர் எழுத்தாளர் கல்கி !
பாஸ்கர சேதுபதி இவருக்கு, இவரது தமிழ்த் தொண்டுக்கு, ஒரு கிராமத்தையே எழுதி வைக்க முன்வருகிறார்!
ஓவியத்திலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டு. ஒரு நிலையில், இலக்கியமா, சங்கீதமா என்ற போது, பிள்ளையவர்களின் அறிவுரைப் படி, கோபாலகிருஷ்ண பாரதியிடம் பயின்று வந்த சங்கீதத்தைக் கைவிடுகிறார். ஆனாலும் பின்னாளில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்போது, செய்யுட்களைப் பாட்டாகவே பாடுவார்!
“ஐயர் அவர்களுடைய பதிப்புக்களால் தமிழ்மொழியானது எந்த மொழிக்கும் தாழ்ந்தது அல்ல என்பது நிரூபணம் ஆகிறது” – ஜி.யூ.போப் அவர்களின் குறிப்பு!
தனக்கு வேலை வாங்கி கொடுத்த தியாகராச செட்டியாரின் மேசையை தேடிக் கண்டுபிடித்து, தனக்காக வாங்கிக்கொள்ளும் உ.வே.சா. அவர்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைப்பது.
மகாகவி பாரதியுடனான சந்திப்பு, நீண்ட காலம் வேலை செய்து பதிப்பித்த “பெருங்கதைப் பதிப்’பைத் தன் ஆசிரியருக்கு உரிமையாக்குவது, தாகூருடன் ஆன சந்திப்பு என பல சுவாரஸ்யங்களை சொல்கிறார் கீழாம்பூர்!
பாரதியார், தாகூர் ஆகிய இரு மகா கவிகளும் ஐயரவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாம் உலகப் போர் காலம் – சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்றபோது அரை மனதுடன் ஒத்துக்கொள்கிறார். அங்கு சென்றாலும் மனமும் உடலும் சோர்ந்தே இருக்கிறார் – தனது புத்தகங்களைப் பிரிந்து வந்த துயரம். எனவே ஏட்டுச் சுவடிகள், குறிப்புகள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றைச் சென்னையிலிருந்து எட்டு வண்டிகளில் ஏற்றித் திருக்கழுக்குன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மகிழ்ச்சியும், மனத் தைரியமும் அடைகிறார் ஐயர் அவர்கள்!
தன்னால் பல குறிப்புகளைப் பார்வையிடாமல் போன வருத்தமே ஏப்ரல் 10, 1942 அன்று அவர் அமரர் ஆகக் காரணமாயிற்று என்று உ.வே.சா. அவர்களின் மகன் கல்யாண சுந்தரையர் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
‘ஐயர் பதிப்பு’ என்றே வழங்கப்படும் அவரது பதிப்புகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் கீழாம்பூர் – ஐங்குறு நூறு, கபாலீஸ்வரர் பஞ்சரத்னம், குறுந்தொகை, கோபால கிருஷ்ண பாரதியார் வரலாறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, தமிழ் விடு தூது, நல்லிரைக் கோவை (நான்கு பகுதிகள்), பத்துப்பாட்டு மூலம், பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, பெருங்கதை, மணிமேகலை, மான் விடு தூது, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (2 பகுதிகள்), வித்துவான் தியாகராசச் செட்டியார் ஆகியவை அவற்றில் சில!
கி.வா.ஜகந்நாதன்: (1906 – 1988)
பல தமிழ்ப்பாக்களுக்கு விளக்க உரை எழுதியவர் கி.வா.ஜ. அதனால்தானோ என்னவோ அவருக்குச் சின்ன வயதிலேயே பிடித்த இனிப்பு, பொருள்விளங்கா (பொரிவிளங்காய்) உருண்டை என்கிறார் கீழாம்பூர்!
குளித்தலைப் பள்ளிக்கூடத்தில் இவரது முதல் பாடலைப் பாராட்டிய தமிழாசிரியர் கொங்கணாம்பட்டி நரசிம்மையர் – தன் ஆற்றலைப் பாராட்டிய அந்தத் தமிழ்ப் பண்டிதரை கி.வா.ஜ. அவர்கள் மறந்ததேயில்லை!
காந்தமலை முருகன் சந்நிதியில் அருணகிரிநாதர் ஜெயந்திக்கு “அன்பு” என்ற தலைப்பில் பேசியதே இவரது கன்னிப் பேச்சு!
பெரும்பாலும் சட்டை போடாமல் இருந்த காலத்தில், ‘பூஜ்யர் த்ரோவர் துரை’க்கும் அவர் மனைவிக்கும் தமிழ் சொல்லிக்கொடுக்கப் போகும்போதுதான் முதன் முதலாகக் கதர் ஜிப்பா ஒன்று தைத்துக்கொள்கிறார். பின்னர், வாழ்நாள் முழுவதும் கதராடையையே அணிந்து வந்தார் கி.வா.ஜ.!
சிறந்த முருகனடியாரான கி.வா.ஜ. தனது இருபத்தி இரண்டாம் வயதில், தேவாரம் பாராயணம் செய்யும் சிறந்த சிவனடியாரான ஶ்ரீமத் ஐயருடன் (வயது எழுபத்திரண்டு) இணைந்தது தமிழர் செய்த நல்வினைப் பயனே என்றுதான் சொல்ல வேண்டும்!
கலைமகள் ஆசிரியர் குழுவில் கி.வா.ஜ. வை இஅணைத்து விட்டதும் ஐயர் அவர்களே – இவரது கலைமகள் வாழ்த்து, முதல் இதழில் முதல் பக்கத்தையே அலங்கரித்தது!
கி.வா.ஜ. அலமேலுவைப் பெண்பார்க்கும் வைபவத்தையும், அதற்குக் காரணமான நிகழ்வுகளையும், ஐயர் அவர்கள் வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்தத்தையும் மிக சுவாரஸ்யமாக, ஒரு சிறுகதை போல எழுதியுள்ளார் கீழாம்பூர்!
1934 ல் கலைமகள் ஆசிரியர் திரு டி எஸ் ராமச்சந்திரையர் காலமாகி விட, ஆர்.வி சாஸ்திரி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், பதிப்பாசிரியர் நாராயணசாமி ஐயர், உ.வே.சா. அவர்களுடன் கலந்து பேசி, ஆரம்பத்திலிருந்து உதவி ஆசிரியராகப் பணி புரியும் கி.வா.ஜ. வே இந்தப் பொறுப்புக்கு ஏற்றவர் என முடிவுசெய்கிறார். அன்று கலைமகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர், தன் காலம் முடியும் வரை கலைமகள் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார் கி.வா.ஜ.
காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர்களால் ‘வாகீச கலாநிதி’, ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்று கெளரவிக்கப் பட்டவர் கி.வா.ஜ.
சிறுகதைப் புதினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலக்கியத்தை வளர்த்தவர். அகிலன், மாயாவி, அநுத்தமா, ராஜம்கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, பி.வி.ஆர்., எல் ஆர் வி. போன்றவர்களின் சிறுகதைகளை வெளியிட்டு, இவர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தவர் கி.வா.ஜ.!
சிலேடைக்கும், நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற கி.வா.ஜ. 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, ஒரு நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உடனிருந்து அனுபவிக்கும் உணர்ச்சி ஏற்பட்டது.
சின்ன ‘கேப்ஸ்யூல்’ என்று சொல்லக்கூடிய அளவில், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான மூன்று ஆளுமைகளைப் பற்றி கீழாம்பூர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது – அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது!
டாக்டர் ஜெ.பாஸ்கரன்.