சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தேர்வு -பரிசளிப்பு விழா 27 ஜூலை 2023

 

How Tamil writer Sivasankari knitted India's diverse literature in four volumes - The Hinduஇலக்கியச் சிந்தனை அமைப்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழில் பத்திரிகைகளில் வெளியான சிறந்த சிறுகதைகளில்  சிறந்த கதை ஒன்றை ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்து வந்தது. பின்னர் வருட இறுதியில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட மாதச் சிறுகதைகளில்  மிகச் சிறந்த கதை ஒன்றை அந்த ஆண்டில் சிறந்த கதையாக முத்திரை குத்தி அதற்குத் தனி பரிசு வழங்கி கௌரவித்தது. அந்த ஆண்டில் 12 சிறுகதைகளையும் வானதி பதிப்பகம் தொகுத்துப் புத்தகமாகவும்  வெளியிட்டுவந்தது. 

இலக்கியச் சிந்தனை இந்தத் திட்டத்தை சென்ற ஆண்டு நிறுத்திவிடத் தீர்மானித்தது. குவிகம் அதனைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்து அதன்படி ஜூலை 2022 முதல் ஒவ்வொரு மாதமும் சிறந்த கதையை நடுவர் மூலம் தேர்ந்தெடுத்தது. அப்படித்  தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளில் மிகச் சிறந்த மூன்று கதைகளுக்கு ரூபாய் 10000 , 8000, 4000  பரிசுகளும், மற்ற 9 கதைகளுக்கு ரூபாய் 2000 பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கான மொத்தப் பரிசுத் தொகை 40000 ரூபாயையும் தருவதற்குத்  தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி சிவசங்கரி அவர்கள்    முன்வந்தது தமிழ் இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த மாபெரும் கொடை என்று தான் சொல்லவேண்டும்! இதனை இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செய்யமுன் வந்துள்ள சிவசங்கரி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தேர்வின்  பரிசளிப்பு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாக அரங்கில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது. 

மதிப்பிற்குரிய சிவசங்கரி அம்மையார் இதற்குப் புரவலராக இருப்பதுடன் முதல் மூன்று பரிசுக்காக கதைகளையும் தேர்ந்தெடுக்கிறார். அத்துடன் 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பரிசு வழங்கி சிறப்புரை வழங்கவும் இருக்கிறார். அதே நாளில் அதே மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய புத்தகமும் குவிகம் பதிப்பத்தின் மூலமாக வெளிவருகிறது. 

குவிகம் நண்பர்களும் மற்ற இலக்கிய ஆர்வலர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.                                                             

இந்தா ஆண்டின் சிறந்த கதைகள் பற்றி நடுவர்கள் கருத்தினை குவிகம் மின்னிதழில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியன்று வெளியிட்டோம்! அதன் தொகுப்பு இதோ!

ஜுலை 22  முதல் ஜுன் 23 வரை 

1. ஜூலை  22 – பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்.. சுப்ரபாரதிமணியன்  – உயிர்மை – நடுவர்  ம சுவாமிநாதன்

2. ஆகஸ்ட் 22 – ஊமைச்சாமி –   சியாமளா கோபு   – புதுத் திண்ணை நடுவர்  குவிகம் சுந்தரராஜன்

3. செப்டம்பர் 22 – ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன்  – சொல்வனம் 11-09 22 – நடுவர் லதா ரகுநாதன்

4. அக்டோபர் 22 – அனாதை மரங்கள் – கிறிஸ்டி நல்லரெத்தினம் -கல்கி 7 அக்டோபர் – நடுவர் ராஜாமணி

5. நவம்பர் 22 – தாயகக் கனவுடன்… குரு அரவிந்தன்  – திண்ணை 27 நவம்பர் 2022 – நடுவர் சுரேஷ் ராஜகோபால் 

6. டிசம்பர் 22 – சாமி போட்ட பணம் – ஆர்னிகா நாசர்   – தினமலர் வாரமலர்  4 டிசம்பர் 2022 – நடுவர் (சாந்தி ராசவாதி)

7.  ஜனவரி 23 – பிரம்ம சாமுண்டீஸ்வரி – இரா. சசிகலாதேவி – சொல்வனம் – ஜனவரி 8, 2023
 நடுவர் –  ஆன்சிலா ஃபர்னான்டோ) –

8. – பிப்ரவரி 23 – பாட்டுவெயில் – சாந்தன்  – காலச்சுவடு – நடுவர் அழகிய சிங்கர்

9. மார்ச் 23 – தாவரங்களுடன் உரையாடுபவள் – சோ சுப்புராஜ்   – உயிர் எழுத்து மார்ச் 2023  – நடுவர் கிரிஜா பாஸ்கர்

10. ஏப்ரல் 23  – மங்க்கி கேட்ச் – ஜார்ஜ் ஜோசப்  -உயிரெழுத்து  –  ஏப்ரல் 2023 – நடுவர் ஈஸ்வர் 

11. மே 23 ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்- மா காமுத்துரை    – ஆனந்த விகடன் 23-05-2023 – நடுவர் மதுவந்தி

12. ஜூன் 23 – விருது – அரவிந்தன்   – அம்ருதா  – நடுவர் மந்திரமூர்த்தி அழகு

 

‘மாற்ற முடியும்!’ – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

எனக்கு தெரிந்த ஒரு குடும்ப பெண் தவறான வழிக்கு சென்றுவிட்டார், அவரை நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? - Quoraஎனக்கு தெரிந்த ஒரு குடும்ப பெண் தவறான வழிக்கு சென்றுவிட்டார், அவரை நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? - Quoraஎனக்கு தெரிந்த ஒரு குடும்ப பெண் தவறான வழிக்கு சென்றுவிட்டார், அவரை நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? - Quoraஎனக்கு தெரிந்த ஒரு குடும்ப பெண் தவறான வழிக்கு சென்றுவிட்டார், அவரை நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? - Quoraஏதோவொரு காரணத்தினால் இக்கட்டான சூழ்நிலைகளில் சிலர் உறைந்து விடுவதும் உண்டு.‌ அதுபோன்ற தருணத்தில் தான் தாவரவியல் (botany) இளங்கலைப் படிக்கும் பதினெட்டு வயதான மாயா என்னை ஆலோசிக்க வந்திருந்தாள். அந்த காலகட்டத்தில் அவள் படித்திருந்த கல்லூரியில் வாரத்திற்கு மூன்று முறை நான் மனநல ஆலோசகராகப் போவதுண்டு.

இரு மாதங்களாகப் படிக்க ஆரம்பித்துமே மனம் அலை மோதியது என்றாள் மாயா. படிக்கும்போது ‘உதிர்ந்தது’ ‘மறைந்தது’ போன்ற சில வார்த்தைகள் வந்து விட்டால் அழுகையும் வந்துவிடுகிறதாம். பலரை உற்சாகப் படுத்துபவளுக்கு, துவண்டு போவது போலத் தோன்றியது என்றாள்.‌

வகுப்பிற்குச் சரியாகச் செல்லாமலிருப்பது, வார இறுதியில் வீட்டிற்குப் போவதைத் தவிர்த்தல் எனத் தன்னிடம் புது நடத்தைகள் கண்டுகொண்டாள். ஏன் எனத் தெரியவில்லை என்றாள். முடிவு செய்யும் திறன்கள் முரண்டு போவதை விவரித்தாள். இவ்வாறே இருந்து விட்டால்? என ஆரம்பித்த எண்ணம், போகப் போக இப்படியே இருந்துவிடுமோ எனத் தோன்றி விட்டது.
இவையெல்லாம் தனக்கு மட்டுமே, தன் வாழ்க்கைப் பாதையில் மட்டுமே நேர்கிறதாக எண்ணினாள் மாயா. எங்களது மனநலத் துறையில், “இது நிரந்தரமானது, இது என் வாழ்வில் பரவலானது, என்றும் எனக்கு மட்டுமே நேர்கிறது” போன்ற எண்ணங்களை “தனிப்பயனாக்கம்” (personalization) என்போம். இவற்றைத் தவிர்க்க வேண்டிய மூன்று என்போம். இவ்வகைக் கலவை, மன உளைச்சலுக்குத் தீனி.

மாயாவின் பாட்டி (அம்மாவின் அம்மா) பெரிய ஆராய்ச்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆராய்ச்சிக்கூடம் இவர்கள் இருப்பிடத்தின் பக்கத்திலிருந்ததால் இவர்களுடன் தங்கினார். அவரை அம்மா-பாட்டி என அழைப்பாள் மாயா. அவர் மாயாவுடைய அறையில் தங்கி இருந்ததால் ஒரு நெருக்கம்! மேலும் அவளுக்குப் பிடித்த மாமா, அம்மா-பாட்டியைப் பார்க்க அடிக்கடி வருவதுண்டு.

எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டு இருந்தது. திடீரென்று பாட்டி மரணம் அடைந்தார். வேலைப் பளுவினால் உடல் உபாதை மருந்துகளைத் தவறுதலாக எடுத்துக் கொண்டதால் இப்படி நேர்ந்தது. மருத்துவரிடமிருந்து மரணச் சான்றிதழ் வந்ததிலிருந்து மாயா மனம் தவித்தது. தன் பங்கிற்கு உதவவில்லையோ என்ற சிந்தனை வாட்டியது.

மாயாவின் பெற்றோர் பிரபலமான மருத்துவர்கள். அரசு மருத்துவமனை ஊழியர்கள். அம்மா-பாட்டியின் மரணத்தைத் தர்க்க ரீதியாக எடுத்துக் கொண்டு, பரபரப்பான வேலைகளில் துயரத்தைச் சமாளித்துக் கொண்டார்கள். மாயாவின் தம்பிக்குப் படிப்பு, விளையாட்டுப் பயிற்சி எனக் கவனத்தைச் செலுத்தியது உதவியது. ஆனால் மாயாவிற்கோ என்ன முயன்றாலும் துயரத்தைத் தாள இயலவில்லை. அவளுடைய கல்லூரியில் படிப்புடன் உடல் மனநலத்தைப் பிணைப்பு செய்ததால் அங்கிருந்த என்னை நாடினாள்.

மாயாவைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும் அவளுடைய இப்போதைய நிலையை மனதில் வைத்துக் கொண்டு ஸெஷன்களைத் துவங்கினேன். மாயாவின் சிந்தனை பற்றிய குறிப்புகள் அறிதல் போய்க்கொண்டு இருந்தது. அவளுடைய சிந்தனையை வரைபடமாகச் சித்தரித்ததை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டாள். அதிலிருந்து நினைவாற்றல் தெளிவுபடுவதாகக் கூறினாள். இந்த இரு மாதங்களாக மாயாவின் பார்வையில் மற்றவர்களின் சொல்லும் செயலும் தனக்குப் பேரழிவு தரும் எனத் தோன்றியது. எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்ததால் இவ்வாறு நிகழ்ந்தது. தனக்குப் பேரழிவு என்ற கண்ணோட்டம் கொண்டாள். இதைப்பற்றி மேற்கொண்டு உரையாட, மாயாவின் மனப்பான்மை இவ்வாறே இருந்தால் ஏன் உதவாது என்பதை மையமாக எடுத்துக் கொண்டோம்.‌

மாயாவின் வயதை மற்றும் புரிதலின் அளவை மனதில் வைத்து மனதில் வைத்துக் கொண்டு, இது அரைக் கோப்பை காலியாக இருப்பதைப் போன்ற கண்ணோட்டம் என்று உதாரணம் எடுத்துக் கூறினேன். அரைக் கோப்பையைப் பார்த்து சிலர் இதுவேனும் இருக்கிறதே என சந்தோஷப் படுவார்கள், மற்றவர் பாதி காலியாக இருக்கிறதே என வருத்தப் படுவார்கள். இதை எடுத்துச் சொன்னதுடன் மாயாவிற்குவிற்கு புரிதல் ஏற்பட்டது. மாயா தன்னுடைய அணுகுமுறையில் கோப்பையின் காலியான பகுதியில் கவனம் செலுத்தினாள். விளைவாக தன்னுடைய நிலை நிரந்தரமானது என்று நம்பி, மற்றவர்கள் தனக்கு நல்லது யோசிக்கவில்லை என நினைத்துக்கொண்டாள்.

நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள், கோப்பையின் நிரம்பிய பகுதிக்குக் கவனம் செலுத்துவார்கள். தனக்கு இருக்கும் வளங்களைக் கவனத்தில் வைத்திருப்பதால் சூழ்நிலைகளைச் சந்திப்பது, கையாளுவது சுலபமாக இருக்கும். வாழ்வின் நடப்புகளைத் தற்காலிகம் என உணர்ந்து இருப்பார்கள்.

இந்த கோப்பை உதாரணமே மாயாவிற்குத் தனது அம்மா-பாட்டி மறைவைப் பற்றியும் விளக்கியது. மாயா அவருடன் செய்திருந்த பல செயல்பாட்டை நினைவு கூறினாள். ஆழ்ந்த உணர்ச்சிகளை மனம் விட்டுப் பகிர நேர்ந்ததில் இருவரின் நெருக்கம் பொங்கி வெளிப்பட்டது. அவர் இல்லாதது மாயாவை வாட்டியதை விவரிக்க, அந்த வயதில் தன்னை புரிந்து கொண்டவர் பிரிந்ததினால் தவிப்பு ஏற்படுகிறது என உணர்ந்தாள். இந்த வயதினருக்கு தன் மனப்போக்கு ஒருவருக்குப் புரிகிறது என்றாலேயே பந்தம் மேம்பட்டுவிடும்.

மாயா பல நிகழ்வுகள், கடந்த கலந்துரையாடல்களைப் பற்றிப் பேசினாள். அம்மாவை விட பாட்டி நன்றாகப் புரிந்து கொண்டு, தன்னுடைய பல புரிதலையும் சிக்கல்களையும் சரி செய்ததை விவரித்தாள். மாயா மனதைத் தொட்டது பல.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாட்டி சந்தீப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள விவரித்த விதம். சந்தீப் இவளுடன் கூடப் படிப்பவன். அவன் மிக நெருக்கமாக உட்காருவதை, மாயாவை உரசிக் கொண்டு போவதை அம்மா கவனித்து அவனை எச்சரிக்கை செய்தாள். சந்தீப்பிற்குப் புரியவில்லை, எப்போதும் போல இருந்தான். அம்மா மாயாவைக் கோபித்துக் கொள்ள, மாயா பாட்டியிடம் பேசினாள். அவர் சந்தீப்பைச் சந்தித்து மாயாவின் தாய் செய்த எச்சரிக்கையைப் பற்றிய விளக்கம் தர முயன்றாள். அவர் சொன்ன விளக்கத்தால் சந்தீப் தான் இதுவரை இதைக் கவனிக்காததை உணர்ந்தான், வியந்து போனான். அன்றிலிருந்து, பெண்கள் உருவம் நிழல் விழுகிற இடத்திற்கு வெளியே உட்காருவதும் நிற்பதும் எனப் பழகிக் கொண்டான். பல வாரங்களுக்குப் பின் அம்மா கவனித்து சமாதானம் ஆனாள்.

இவையெல்லாம் கோப்பையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்பதை வரிசைப் படுத்தினாள். இதன் உட்பொருளை மாயா அறிய, தன்னுடைய நிலைமையைப் பற்றிப் பார்க்கத் துவங்கினாள். பாட்டி நினைவலைகள் கோப்பையின் மேல் பகுதியில் அதாவது அவர் இல்லாததின் மீது கண்ணோட்டம் என்று உணர்ந்தாள். கீழ்ப் பகுதியில் பார்த்தால் நினைவாற்றல், கடந்து போன ஞாபகங்கள். என்றென்றும் நிரந்தரமானது! நினைவுகளுக்கு மரணம் கிடையாது என மாயா உணர்ந்தாள்!

புரிந்தவுடன் மாயா சொன்னாள், தான் உணர்ந்திருந்த துயரம் தற்காலிகமே என்று. நினைவு, ஞாபகங்கள் சமாதானம் செய்யும் கருவிகள். இந்தப் புரிதல் மாயா அடுத்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்ததைக் காட்டியது. கோப்பையைப் பார்க்கும் விதம் நம் கையில்!

மாயா மேலும் புரிந்து கொண்டாள், மரணம் நேரும்போது இந்த விதமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகக் கூடும். நெருக்கமான சொந்தத்தின் மறைவுக்குப் பின் இவ்வகை பிரிவுகள் நேருமோ என்ற அச்சம் உருவாகலாம். தனக்கு நிச்சயமாக நேரக்கூடும் என நினைத்து விட்டதால், மாயா தன் குடும்பத்தினர், நண்பர்கள், எல்லோரிடமிருந்து விலகி இருக்க முடிவெடுத்திருந்தாள்.

இதை மையமாக வைத்து, ஸெஷன்கள் தொடங்கியது. தெரிந்த இரு உறவினர்கள், மிக நெருக்கமான நண்பர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, இவர்களின் வாழ்க்கையில் உறவுகள், பிரிவுகள், மறைந்து போனவர்கள், அதன் தாக்கம் இவற்றையெல்லாம் விவரிக்கச் சொல்லி, தீர ஆராய்ந்தோம்.

அதைச் செய்ததில், மாயாவால் ஒவ்வொருரின் வாழ்க்கையை ஆழ்ந்து காண முடிந்தது. அவர்கள் எல்லோரையும் நன்றாகத் தெரிந்திருந்தாலும், இப்படி உற்றுப் பார்க்கையில் எவ்வளவோ புரிய வந்தது. ஒவ்வொருவரும் எத்தனை வகை துயரம், பிரிவுகள் எதிர்கொள்கிறார்கள், தாங்குகிறார்கள் எனத் திகைத்துப் போனாள். ஒன்றை உணர்ந்தாள், தவிப்பும் பிரிவுகளும் நிதர்சனம். எல்லோருக்கும் பொதுவானது.

இந்த புரிதலினால் “எனக்கு மட்டுமே” என்றது சுக்கு நூறாக உடைந்து மறைந்தது. இதற்கு வேறு வழி வகுக்க, மாயாவை நேர்மறை எண்ணங்களை உபயோகிக்க ஊக்குவித்தேன்.

ஆங்கில வகுப்பில் சூசன் கூலிட்ஜ் கவிதையான “இலைகள் எவ்வாறு கீழே உதிர்ந்தது” (How the leaves came down, Susan Coolidge) மாற்றம் நிச்சயம் என்றதைப் புகட்ட, வாழ்க்கை என்றால் மாற்றம் என்றதை ஏற்றுக்கொள்கிறேன் என்றாள். இதற்கு அஞ்ச வேண்டியதில்லை.‌ மாறாக நமக்கு ஏற்படும் அச்சம், தவிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே உதவும்.

இதை மேலும் புரிய வைத்தது பாட்டி மரணத்தையொட்டிய சடங்குகள். கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளின் நோக்கம், மறைந்தவருடன் நம் உறவைப் புரிந்து கொண்டு, நடந்ததை ஒப்புக் கொள்வதற்கே. பலமடங்கு புரிதலில் மாயாவின் பக்குவம் கூடியது. கலாச்சாரத்தின் அருமையான தொகுப்பு புரிய, அதை மாயா புகழ்ந்தாள். அத்துடன் ஆசிரியையின் அனுமதியுடன் வகுப்பில் பகிர்ந்ததில் பலருக்கு உபயோகமாக இருந்தது!

அடுத்த இரண்டு வருடங்களில் மாயா பல மாற்றங்களைக் காட்டினாள். மீண்டும் தோழமையுடன், படிப்பிலும் மேம்பட நன்றாக மாறினாள்.
***********************************************************************

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

 

 

இரண்டாம் ராஜேந்திரன்-2

 

சோழ இளவல் வீரராஜேந்திரன் - 1 - YouTube

வீரராஜேந்திரன்

 

முன்கதை: இரண்டாம் ராஜேந்திரன் சோழ நாட்டை ஆண்டான்.. அவனுக்குப் பிறகு? தொடர்ந்து பேசுவோம்.

போர்களில் நேரடியாக ஈடுபடும் மன்னர்கள், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. வாழ்நாள் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன் இருவரும் பத்து வருடங்கள் தலா ஆண்டு காலமானார்கள். இரண்டாம் ராஜேந்திரன், தனது ஆட்சியில், தனது தம்பியும் மாவீரனுமுமான வீரசோழனை பட்டத்து இளவரசனாக்கினான். அவனுக்கு வீரராஜேந்திரன் என்ற பட்டமளித்துச் சிறப்பித்தான்.

கி பி 1002 ல் ராஜேந்திர சோழனுக்கும், மகாராணி முக்கோகிலம் அடிகள் இருவருக்கும் மகனாகப் பிறந்தான். ராஜராஜசோழன், இந்தப்  பேரனுக்கு வீரசோழன் என்ற பெயர் வைத்தான். தந்தை ராஜேந்திர சோழனின் பல வெற்றிகளுக்கும், மற்றும் அண்ணன்கள் ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன் இருவருக்கும் இவன் உதவியாக இருந்தான். ராஜாதி ராஜன் ஆட்சிக்காலத்தில், இலங்கைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டான். போர்கள் பல கண்டான். வென்றான். பின்னர் இரண்டாம் ராஜேந்திரன் ஆட்சியில், உறையூருக்கு அரசனாக நியமிக்கப்பட்டான். அண்ணன் இரண்டாம் ராஜேந்திரனின் மறைவுக்குப் பின், வீரராஜேந்திரன் சோழ மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

இவ்வாறு அடிக்கடி. முப்பது வருடங்களில், மூன்று சோழ மன்னர்கள் ஆண்டது, சுற்றி நின்ற பகைக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. துள்ளியெழுந்து தங்கள் ஆட்சியைத் திரும்பப் பெறத்துடித்தனர். முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மூன்று சோழ மன்னர்களும் போரில் சிங்கங்கள். பகைவர்கள் அனைவரும் சண்டையிட்டுத் தோற்றனர்.

வீரராஜேந்திரன் மன்னரான உடன், சேரநாட்டு மன்னன் பொட்டாபி அவனைச் சவாலுக்கு அழைத்தான். வீரராஜேந்திரன் நேரடியாக போர் புரிந்து பொட்டாபியைக் கொன்றான். அதேநேரம் பாண்டிய இளவரசர்கள் கலகம் துவக்கினர். அதை அடக்கப் போர் புரிந்தான். இந்த போர்கள் நடந்துகொண்டிருக்கும் போது, மேலைச்சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சோழநாட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டான்.

சோமேஸ்வரன், சாளுக்கிய மன்னர்களில் ஒரு தலைசிறந்த மன்னன். போர்களில், தோல்விகளால், அவன் துவளவில்லை. வெற்றிகளும் அவனுக்கு ஓய்வைத்தரவில்லை. தினமும் போரின் சுமைகளைத் தன் தோளில் இன்பமாகச் சுமந்து வந்தான். சோழன் ராஜாதிராஜனிடம் இருமுறை தோற்றாலும், அவனைப் போர்க்களத்தில் வில்லாளர்களை வைத்து கொன்றான். ஆயினும் இரண்டாம் ராஜேந்திரனின் சாகசத்தால், தோல்வியைத் தழுவினான். துவளாமல், மீண்டும் ராஜேந்திரனை வலுவுக்கு அழைத்துப் போரிட்டுத் தோற்றான். எத்தனைத் தோல்விகளைத் தழுவினாலும், தனது ஆட்சிப்பகுதிகளை சோழர்களுக்கு விட்டுக்கொடுக்காமல், தக்கவைத்துக் கொண்டான். மானியகெடத்திலிருந்து கல்யாணிக்குத் தலைநகரை மாற்றினான். சோழர்களிடம் பெற்ற தோல்வி, அவமானங்களுக்கு பதிலடி கொடுத்தே தீருவேன் என்று சபதம் செய்தான். வீரராஜேந்திரனின் வீரமும் அவன் அறிந்ததே. ஆயினும், அவனும் மனிதன் தானே. ராஜாதிராஜனை போல வேறொரு சந்தர்ப்பம் பிறக்காதா? அந்த சந்தர்ப்பத்தைத் தான் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தான். வீரராஜேந்திரன் ஆட்சியேற்ற முதல் வருஷம், சேரன் பொட்டாபி, பாண்டிய இளவரசர்களைத் தூண்டிவிட்டான். அவர்களுடன் வீரராஜேந்திரன் போரிடும்போது, தனது இளவரசர்கள் விக்கிரமாதித்தன் (VI), ஜயசிம்மன் இருவரையம் சோழநாட்டுக்குப் படையெடுக்க அனுப்பினான். கங்கைகொண்டசோழபுரத்தில் சாளுக்கியப் படைகள் ஊடுருவின. வீரராஜேந்திரன், செய்தி அறிந்ததும், பாண்டிய நாட்டுப் போரை விரைவில் முடித்து, தலைநகர் திரும்பினான். வீரராஜேந்திரன் சாளுக்கியப்படைகளையும் , சாளுக்கிய இளவரசர்களையும் தோற்கடித்துத் துரத்தினான். சோழன், சாளுக்கியத்தலைநகர் வரை அவர்களைத் துரத்தினான். அங்கு சோமேஸ்வரனை போர்க்களத்தில் சந்தித்தான். கடும்போரின் முடிவில், சோமேஸ்வரன் தோல்வியுற்றுத் தப்பியோடினான். சோமேஸ்வரன், வெங்கி மீது படையெடுக்கத் தன் மகன் விக்கிரமாதித்தனை அனுப்பி வைத்தான். வீரராஜேந்திரன், வெங்கி மீது படையெடுத்து, சாளுக்கியர்களைத் தோற்கடித்து, கல்யாணியை முற்றுகையிட்டு, எரித்துத் தீக்கிரையாக்கினான், சோமேஸ்வரனின் தளபதிகளை அழித்து, செல்வங்களைக் கொள்ளையடித்து, அவனது தலைமை ராணியை சிறையெடுத்து, குதிரைகளையும், யானைகளையும் கவர்ந்தான். இவ்வளவு நடந்த பிறகும், சோமேஸ்வரன் தளர்ந்தானில்லை. ஒருமுறையாயினும், இந்த சோழனை முழுதாக வென்று, நான் அடைந்த அத்தனைத் தோல்விகளையும் அழிப்பேன் என்று உறுதி கொண்டான்.

வீரராஜேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதினான்:
“வீரராஜேந்திரா! வெற்றி ஒருவருக்கு மட்டுமே என்றும் சொந்தமல்ல! இம்முறை நான் உனக்குக் குறி வைத்துள்ளேன். எந்த இடம் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறேன். அங்கு வந்து போர் புரிவாயாக! இதில் உயிர் உனக்குத் தங்குமா, அல்லது எனக்குத் தங்குமா என்பதை இந்தப் போர்க்களம் முடிவுசெய்யட்டும். இந்த போர்க்களம் ‘கூடல் சங்கமம்’ முன்பு நான் உன்னிடம் தோற்ற போர்க்களத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது. வெற்றி அல்லது வீரமரணம்! இது உனக்கா, எனக்கா? பார்த்து விடுவோம்” என்று எழுதினான். வீரராஜேந்திரன், சோமேஸ்வரனின் துணிவையும், விடாமுயற்சியையும் பாராட்டினான். சவாலை எதிர்கொள்ள, படையுடன் புறப்பட்டு, கூடல் சங்கமம் அடைந்தான்.

கல்யாணியில், சோமேஸ்வரனின் இரு மகன்களுக்கிடையே ஆட்சிப்பூசல் தொடங்கியிருந்தது. விக்கிரமாதித்தன், சோமேஸ்வரன்-2 இருவருக்கும். விக்கிரமாதித்தன், வீரராஜேந்திரன் உதவியை நாடியிருந்தான். வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுக்குத் தன் மகளை திருமணம் செய்துவைத்து, அவள் வழி மகனை சாளுக்கிய மன்னனாக ஆக்க வழி வகுத்தான். இதன் காரணங்களால், சோமேஸ்வரன் கூடல் சங்கமத்தில் வீரராஜேந்திரனை எதிர்க்க, விக்கிரமாதிதனை அனுப்ப முடியவில்லை. சோமேஸ்வரன்-2 ம் போர் செல்ல மறுத்துவிட்டான். சோமேஸ்வரன் ‘யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க’ என்று சொல்லி போர்க்களத்துக்குத் தானே செல்ல முடிவெடுத்தான். போராடைகளை அணிந்து கவசங்களைப் பூட்டி, தன் ராஜக்குதிரையில் மேல் ஏறுமுன், மயங்கி விழுந்தான். பல வருடம் போரில் ஈடுபட்ட உடலில், ஏதோ அறியாத நோய் அவனை அரிக்கத் தொடங்கியது. உடனே அவன் அரண்மனைக்குத் திரும்ப நேரிட்டது. நாட்கள் நகர்ந்தன. அவனது நிலை மோசமாகியது. கூடல் சங்கமத்தில் வீரராஜேந்திரன் காத்திருந்தான். சோமேஸ்வரன் கோழையல்ல என்பது வீரராஜேந்திரனுக்கு நன்றாகத் தெரியும். நாட்கள் நகர்ந்து மாதமாயிற்று. வீரராஜேந்திரன் படைகள் அருகிலிருந்த கிராமங்களை அழித்தது. வீரராஜேந்திரன், துங்கபத்திரா நதிக்கரையில் வெற்றித் தூண் நாட்டித் திரும்பினான். சோமேஸ்வரன், அரபிக்கடற்கரையில் முகாமிட்டான். ‘சாவதென்றால், ராஜாதிராஜன் போல போரில் யானையில் அல்லவா சாகவேண்டும், இப்படி வியாதியிலா சாகவேண்டும்?’ என்று நொந்து கொண்டான். முழு நிலவு பொழிந்தது. அலைகள் தாவி, வா வா என்று அழைத்தது. சோமேஸ்வரன் கரையிலிருந்து நீரை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஸ்ரீராமன் போல நானும் ஜலசமாதி கொள்கிறேன். என்று எண்ணினான். சரித்திரத்திலிருந்து மறைந்து போனான்..

வீரராஜேந்திரன் காலத்தில் இன்னொரு காவியம் பிறந்தது, அந்த காவியப்புறா பற்றி விரைவில் பேசுவோம்.

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Achilles and trojans hi-res stock photography and images - Alamy

கடவுளர்களின் தலைவர் ஜீயஸ் தன் சதுரங்கக் காய்களை வித்தியாசமான கோணத்தில் உருட்ட ஆரம்பித்தார். கிரேக்கர்களுக்கும் டிராஜன்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் அனைத்துக் கடவுளர்களையும் ஒதுங்கி இருக்கும்படி ஆணையிட்ட ஜீயஸ் தன் திட்டத்தை மாற்றி அமைத்தார். ” நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பிடித்த மனிதர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு உதவச் செல்லுங்கள். இல்லையென்றால் அக்கிலிஸ் ஒருவனாகவே ஒரே நாளில் இலியட் நகரை அழித்து விடுவான். அதனைத் தாமதப் படுத்துங்கள். பிறகு போர் நான் எதிர்பார்த்தபடி முடியும்” என்று அனைவரையும் விரட்டினார்.

அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல ஹீராவும் அதினியும் பொசைடனும் மற்றும் பலரும் கிரேக்கர்களுக்கு ஆதரவாகப் போரிட விரைந்தனர். அதேபோல் ஈரிஸ், அப்போலோ வீனஸ் போன்றார் டிரோஜன்களைக் காக்கப் புறப்பட்டனர். விளைவு போரின் உக்கிரம் அதிகமானது.

அக்கிலிஸின் வீரம் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த வெப்பத்தில் இலியட் நகரமே சுடுகாடாக மாறிவிடும் போல் இருந்த நிலையை மாற்ற நதிக் கடவுள் அக்கிலிசுக்கு எதிராக இறங்கினான். டிரோஜன்களை தன் வெள்ளப் புனலில் மறைத்து வைத்துக் கொண்டான். கோபம் கொண்ட அக்கிலிஸ் நதி வெள்ளத்திற்குள் பாய்ந்து டிரோஜன்களைக் கொன்று குவித்தான். நதிக் கடவுளின் மகனும் டிரோஜன்களுக்கு ஆதரவாகப் போரிட்டபோது கொஞ்சமும் தயக்கமின்றி அவனையும் தன் ஈட்டியால் குத்தி அவன் உடலைச் சின்னா பின்னாவென்று கிழித்தான். அதனால் மிகவும் கோபம் கொண்ட நதிக் கடவுள் தன் சுழலில் அக்கிலிசை அமுக்கி அழித்துவிடத் திட்டம் திட்டினான். ஆனால் ஹீரா தன் மகன்களில் ஒருவனான நெருப்புக் கடவுளை ஏவ நதி பின்வாங்கவேண்டி வந்தது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏரிஸ் மிகவும் கோபமடைந்து டிராஜன்களைக் காப்பாற்ற முன்வந்தான். டிராஜன் நகரை அழித்துத் தீக்கிரையாக்க விரும்பும் அதினிக் கடவுளுடன் போரிட தானே முன்வந்தான். தன் ஈட்டியால் அதினியைக்  கொல்லவும் முயன்றான். ஆனால் அதினியின் பராக்கிரமத்திற்கு முன் ஏரிஸ் ஒன்றுமில்லை என்பதை அந்தக் கணம் தீர்மானித்தது. அதினி எறிந்த மலைப் பாறை ஈரிசைத் தாக்க அவன் மயங்கி விழுந்தான். ஈரிசைக் காக்க வந்த வீனசையும் மார்பில் அடித்துக் காயப்படுத்தினாள் அதினி. அப்போலோ ஏரிசைப் போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தி அவன் உயிரைக் காப்பாற்றினான்.

அதே சமயம் நிலநடுக்க நாயகன் பொசைடன் டிராஜனுக்கு ஆதரவாக இருக்கும் அப்போலோவைப் பார்த்து , ” ஜீயஸ் ஆணையை மேற்கொண்டு டிராய் நாட்டைச் சுற்றி யாரும் புக முடியாத மதிலைக் கட்டியவர்கள் நாம் இருவரும்! அப்படியிருந்தும் அவர்கள் நம்மை அவமதித்து அனுப்பினார்கள். நீ கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவர்களுக்கு ஆதரவாக வந்திருக்கிறாயே? வா நாமிருவரும் போரிடலாம்” என்று அறைகூவல் விடுத்தான். தன் பெரியப்பாவுடன் போரிட விரும்பாத அப்போலோ ” வினாடியில் அழியும் மானிடப் பதர்களுக்காக நாம் ஏன் சண்டையிடவேண்டும்” என்று கூறி விலகிச் சென்றுவிட்டான். இருப்பினும் பொறாமையும் கோபமும் கொண்ட மற்ற கடவுளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி டிராஜன் யுத்தத்தை நீட்டிக் கொண்டிருந்தனர்.

அக்கிலிஸ் தன் யுத்த திறமையை அனைத்தையும் அந்தப் போரில் காட்டினான் . ஈவு இரக்கம் தயை தாட்சண்யம் கொஞ்சமுமில்லாமல் டிராஜன் வீரர்களையும் தளபதிகளையும் கொன்று குவித்தான். அரச குடும்பத்தினர் பலரைச் சிறைப்படுத்தி அடிமைகளாக விற்கக்  கப்பலுக்கு அனுப்பினான். கொஞ்சம் தளர்ச்சியுறும்போது தன் நண்பனின் கொடூரக் கொலை நினைவுக்கு வரும். முன்னைவிடப் பன்மடங்கு கோப வெறியுடன் தாக்கி இலியட் கோட்டையைப் பிடிக்க முன்னேறி வந்தான்

அக்கிலிஸின் கொடூரத்தைக் கண்ணுற்ற டிராய் நாட்டு வேந்தனும் ஹெக்டர் பாரிஸ் ஆகியோரின் தந்தையுமான பிரியம் தன் பிள்ளைகளையும் டிராஜன் வீரர்களையும் எப்படியாவது கடவுளர்கள் நிர்மாணித்த மதிர்சுவருக்குள் வரவழைத்து கதவை மூடினால்தான் அவர்கள் தப்பமுடியும் என்று எண்ணிக் கொண்டான். அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தான். ஆனால் கொலைவெறியுடன் வரும் அக்கிலிஸ் கோட்டைக்குள் புகுந்துகொண்டான் என்றால் பிறகு டிராய் நாட்டு அழிவை எந்தக் கடவுளும் காக்கமுடியாது என்று தெரிந்துகொண்டான். அப்போது அவர்களுக்கு உதவுவதற்காக அப்போலோ முன் வந்தான்.

டிராய் நாட்டு வீரத் தளபதிகளில் ஒருவனை அக்கில்லிசுடன் நேரடிப் போருக்குச் செல்லும்படி உத்தரவிட்டு அவனுக்குத் துணையாகத் தான் இருப்பத்தாக வாக்களித்தான் அப்போலோ . அக்கிலிஸ் அந்தத் தளபதியைக் கொல்ல வரும் சமயத்தில் அப்போலோ அந்தத் தளபதி உரு எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். அக்கிலிஸ் அவனைத் துரத்திக்கொண்டு வர அப்போலோ அவனை சாமர்த்தியமாக போர்க்களத்திலிருந்து வெகு தூரம் அப்பால் கொண்டுவந்துவிட்டான். அந்த நேரத்தில் டிராய் நாட்டு வீரர்கள் அனைவரும் கோட்டைக்குள் புகுந்து அக்கிலிஸ் வர இயலாமல் கதவை இறுக்கப் பூட்டிக்கொண்டார்கள்.

ஆனால் கோழையைப் போல அக்கிலிஸுக்கு பயந்து கோட்டைக்குள் புகுந்து தப்பிக்க விரும்பாத ஹெக்டர் தன் மரணம் அல்லது அக்கிலிஸின் மரணம் இரண்டில் ஒன்று நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து சுத்த வீரனாக கோட்டைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

கோட்டைக்குள்ளிலிருந்து அவனது தந்தை பிரியம் , தாய் மற்றும் மற்ற உயிருடன் இருக்கும் சகோதரர்கள் அனைவரும் ஹெக்டரை உள்ளே வரச்சொல்லிக் கெஞ்சினர். போர் வெறி பிடித்த அக்கிலிசுடன் சண்டை போட இது நல்ல தருணம் அல்ல என்று மன்றாடினார். ஆனால் தன் சேனையில் பெரும்பகுதி போரில் அழிவதற்குக் காரணமான தான் மட்டும் தப்பித்து உள்ளே சென்றால் தனக்கு எந்த மரியாதையும் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்ட ஹெக்டர் வெற்றி அல்லது வீர மரணம் இந்த இரண்டில் எது வந்தாலும் அது தனக்குப் புகழைத் தரும் என்று தன் முடிவில் உறுதியாக நின்றான்.

அக்கிலிசை ஏமாற்றி அலைக்கழித்த அப்போலோ,  அனைத்து டிரோஜன் வீரர்களும் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டதும் ஓடாமல் நின்று ஏளனப் புன்னகை புரிந்தான். ” அக்கிலிஸ் நான் கடவுளரில் ஒருவன் சாதாரண தளபதி அல்ல என்பதை நீ உணர்ந்து கொண்டிருந்தால் இந்நேரம் டிராய் உன் வசம் ஆகியிருக்கும். இப்போது உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று விஷமமாகக் கூறினான்.

 ” நீ எல்லாம் ஒரு கடவுளா? எனக்கு மட்டும் சக்தியிருந்தால் கடவுள் என்றும் பார்க்காமல் உனக்குச் சரியான தண்டனையை அளித்திருப்பேன் ” என்று கூறி டிராய் கோட்டையை நோக்கி விரைந்தான் அக்கிலிஸ்.

அங்கே காத்துக்கொண்டிருக்கும் ஹெக்டரைப் பார்த்ததும் அக்கிலிஸின் மனதில் அவன் கிரேக்கப் படை வீரர்களுக்குச் செய்த கொடுமையையும் குறிப்பாகத் தான் நண்பன் பெட்ரோகுலஸை பின் பக்கமாகத் தாக்கிக் கொன்று அவனை நிர்வாணமாக்கி அவனுடைய கவசத்தையும் அறுத்து எடுத்துக் கொண்டவன் என்பதை எண்ணியதும் அவன் உள்ளத்தில் குரோதம் கொழுந்துவிட்டு எரிந்தது.

இருவரில் யார் எவர் கையால் மரணம் அடையப்போகிறார்கள்? கடவுளர்கள் விதித்த விதி என்ன?

இலியட் என்ற மகா காவியத்தின் முடிவு இதுதானா?

(அடுத்த இதழில் முடியும்)

இடம் பொருள் இலக்கியம் – 7. – முனைவர் வவேசு

நான் போற்றும் நாகநந்தி

 

Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA

 

 

மகாகவி பாரதியார் அல்லது திருவள்ளுவர் பற்றிப் பேசும் போது பேராசிரியர் நாகநந்தி அவரைக் குறிப்பிடாமல் நான் பேசியது கிடையாது. பொதுவாக இப்பேச்சுகள் முடிந்த பின் என்னை வந்து சந்திப்பவர்கள் ஒவ்வொருமுறையும் கேட்பது “ சார் ! ஒங்க பேச்சில நீங்க அடிக்கடி பாரதிக்கும் வள்ளுவருக்கும் விளக்கங்கள் கொடுத்த உங்கள் பேராசிரியர் “நாகநந்தி எனக் குறிப்பிட்டீர்களே அவர் யார் ?” என்பதாம்.

இந்த இதழில் நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருப்பது “பேராசிரியர் நாகநந்தி” என்ற அந்த மிகப் பெரும் ஆசானைப் பற்றிய நினைவுகள்தாம்.

பின்னோக்கித் திரும்பிப்பார்க்கிறேன். எப்போது அவரை முதலில் சந்தித்தேன்.?
நான் பிறந்து வளர்ந்த எங்கள் இல்லம் இருந்தது மாம்பலம் ஹை ரோடு எனப்படும் வீதி. தாம்பரம் பீச் மின்வண்டி இருப்புப்பாதையில் மாம்பலம் ஸ்டேஷன் அருகே கிழக்குப்பக்கம் உள்ளது. துரைசாமித் தெரு முனையிலிருந்து, ரயில்வே லயனை ஒட்டி கோடம்பாக்கம் ஸ்டேஷன் வரை செல்லும் நீண்ட வீதி. எங்கள் தெருவில் ஒருபுறம்தான் வீடுகள் எதிர்ப்புறம் இருப்புப்பாதைதான். காலை 4.30 முதல் இரவு 12.00 மணி வரை மின்சார ரயில்கள் எதிரும் புதிருமாகச் சென்றுகொண்டே இருக்கும். இவை தவிர இரவு பகல் எந்நேரமும் தெற்கில் திருச்சி, மதுரை, நெல்லை, கன்யாகுமரி ஆகிய இடங்களுக்கு விழுப்புரம் வழியே செல்லும் அனைத்து தொலைதூர ரயில் வண்டிகளும் அவ்வப்போது சென்றுகொண்டே இருக்கும்.

“இந்தச் சத்தத்தில் எப்படிடா இருக்கீங்க ? தூங்கறீங்க ?” என்றெல்லாம் நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனாலும் எங்கள் வீட்டிற்கு விளையாட வரும் நண்பர்கள் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ரயிலைப் பார்த்து இரசித்து நிற்பார்கள். எனக்கும் அப்படித்தான். மொட்டை மாடியில் நின்றுகொண்டு வீதியைப் பார்ப்பதும், இயந்திரப் பாம்பு ஊர்வதுபோல் செல்லும் ரயில் வண்டிகளைப் பார்ப்பதும்தான் என் இளமைப் பருவத்தில் என்னை மிகக் கவர்ந்த பொழுதுபோக்கு.

எங்கள் வீட்டிற்கும் இரயில் தடத்திற்கும் நூறு அடிகள் தொலைவே இருந்ததால் , வீட்டு மதில்சுவர் அருகில் நின்று பார்த்தாலும், அல்லது வெளி அறை ஜன்னல் மூலம் பார்த்தாலும் அல்லது மொட்டைமாடியில் நின்று பார்த்தாலும், ரயில் மிகத் தெளிவாகத் தெரியும்; கொஞ்சம் வேகம் குறைந்து செல்லும்போது ரயில் “கம்பார்ட்மெண்டில்” உள்ளவர்களை நன்றாகவே பார்க்கமுடியும்.

எக்மோரிலிருந்து “சவுத்” பக்கம் இரயிலில் செல்லும் உறவுகள் நட்புகள் ஆகியோருக்கு நாங்கள் வீட்டிலிருந்தே ”கை ஆட்டி பை பை சொல்வோம்”. இள வயதில் இதெல்லாம் பெரிய சாதனை.
இரவு நேர இருளில் கம்பார்ட்மெண்டில் விளக்குகள் ஒளிவீச மின்னலைப் போல் ஓடும் மின்வண்டிக்குள் இருப்பவர்கள் திரைப்படப் பாத்திரங்களாய்த் தெரிவார்கள்.

இரவு பத்து மணிக்கு மேல் ஓடும் “எலெக்ட்ரிக் ட்ரெயினில்” ( இதுதான் தமிழில் அந்தக்காலப் பெயர் !!) கூட்டம் இருக்காது; அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலரே இருப்பர். “ என்ன வேலையோ பாவம். இத்தனை நேரத்துக்கு மேல் வீடு திரும்புகிறார்கள். இனி வீடு சென்று கை கால் முகம் கழுவியோ அல்லது குளித்தோ முடித்துவிட்டுச் சாப்பிடும் போது இரவு பதினொன்று ஆகிவிடுமே ! மனைவிதான் விழித்திருந்து உணவு படைக்கவேண்டும், குழந்தைகள் தூங்கி இருப்பார்கள் ! அடே அதோ ஒரு நடுத்தர வயது மாது அமர்ந்திருக்கிறாரே ..இவர் திரும்பிய பிறகுதான் வீட்டிலுள்ள அனைவருக்கும் உணவு சமைக்கவேண்டுமோ ?” என்றெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன். பின்னாளில் வளர்ந்த என் இலக்கியப் படைப்பார்வத்திற்கு

இவையெல்லாம் ஓர் தூண்டுதலா ? இல்லை அறிகுறியா ?

இதையெல்லாம் நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு, இவ்வாறு வீதியையே மறக்காமல் தினம் பார்த்துக் கொண்டு பழக்கமானதால், எங்கள் தெருவில் நடமாடும் மக்களின் முகங்கள் எனக்குப் பழக்கமாகிவிட்டன. கோடம்பாக்கம் மாம்பலம் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயில் வே லயனை ஒட்டி இருக்கும் நீண்ட தெரு என்பதால், மாம்பலம் ஸ்டேஷனுக்குச் செல்லும் பலர் எங்கள் தெருவின் வழியாகத்தான் செல்வார்கள். புதிய முகங்கள் ஆனோ பெண்ணோ தென்பட்டால் உடனே எனக்குத் தெரிந்துவிடும். அவர்கள் தொடர்ந்து எங்கள் தெருவைப் பயன்படுத்தினால் அவர்களைப் பற்றிய விவரங்களும் அருகிலுள்ள நாடார் கடை, அல்லது தெருவின் வடக்குப் பக்கத்தில் இருந்த “சிறு குடிசைப்பகுதி அல்லது அதைத் தாண்டி இருந்த “வண்ணான் கடை” ஆகிய இடங்களின் மூலமாகத் தெரியவந்துவிடும்.

அப்படி நான் தெரிந்துகொண்ட நபர்தான் “நாகநந்தி”.

கண்னைப் பறிக்கும் வெள்ளை வேட்டி, ஜிப்பா, நல்ல உயரம், சிவந்த நிறம், கொஞ்சன் முன் வழுக்கைக்கு இடம் விட்டுப் பின்னால் குவிந்திருக்கும் நரையிடை கண்ட சுருள்முடி., கொழுவிய கன்னம் கொண்ட கம்பீரமான முகத்தில் வீரமே உருவான முறுக்கு மீசை..காலை வீசிப்போட்டு நடக்கும் பாங்கு, தோளில் ஒரு நீண்ட பை. இந்த அங்க அடையாளங்களோடு தொடர்ந்து ஒருவர் காலை எட்டுமணிக்கு மாம்பலம் ஸ்டேஷன் நோக்கியும் மாலை ஐந்து மணிக்கு வீடு நோக்கியும் எங்கள் தெருவில் சென்றால் அவர் என் கண்களுக்குத் தப்புவாரா ? இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவரை நான் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை.

நான் கல்லூரிப் பணியில் சேர்ந்த பிறகு ஒருநாள் “பாரதி கலைக் கழகத்தில்” அவர் ஒரு பார்வையாளராக எங்கள் கவியரங்கிற்கு வந்து அமர்ந்தார். அவர்தான் தி. வேணுகோபாலன் என்ற நாகநந்தி; சென்னை ஏ.எம். சமணக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்.
மனத்தில் பதிந்த உருவமல்லவா ? அவரிடம் நான் கேட்டேன் “ சார் நீங்க மாம்பலம் தெரு அருகில் குடியிருந்திருக்கிறீர்களா ? உங்களை என் தெருவில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் உங்களை அங்கே பார்ப்பதில்லையே ! நான் விவேகானந்தா கல்லூரியில் பணிபுரிகிறேன்.” என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

முறுக்கு மீசையை வருடிக் கொண்டே புன்னகையோடு ( பேசத் தொடங்குமுன் அவர் எப்போதும் செய்வது) “ ஆமாம் ! அங்கே வண்டிப்பாதைத் தெருவில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பிறகு இப்போது நங்கநல்லூரில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டேன்” என்றார்.

அவர் வந்து அமர்ந்த அந்தக் கவியரங்கம் எங்கள் பாரதி கலைக் கழகத்தின் திருப்புமுனை. பாரதி கலைக் கழகத்தின் செயல்பாடுகளில் உண்மையான இலக்கியப் பார்வையின் ஊற்றுக்கண் திறப்பினைச் செய்தவர் நாகநந்தி என்றல் மிகையாகாது.

பாரதிமேல் பக்தி கொண்ட இவர், பாரதியைப் போலவே தனது பத்தாவது வயதில் பூணூலை அறுத்தெறிந்துவிட்டு எல்லோருமை் ஒரே சாதியினர்தாம் என்று புரட்சிக் கொடியெழுப்பியவர். தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடிந்ததுடன், அந்நாளைய இடைநிலை வகுப்புகளை (Intermediate) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் படிப்பினை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார்.

பின்னர் சில ஆண்டுகள் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் (Accountant General’s Office) பணிபுரிந்த பின், 1965ல் சென்னை A. M. ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1975ல் தனது M. Phil பட்டத்தினை ‘புறநானூறு, திருக்குறளில் அன்றைய அரசியல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றார். ‘கம்பராமாயணத்தில் நாடகவியல்’என்ற தலைப்பில் முனைவர் (கலாநிதி) பட்டத்திற்கான ஆராய்ச்சியையும் செய்துள்ளார்.

‘பாரதி கலைக்கழகம்’என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திருக்குறள் வகுப்புகளில் ‘திருக்குறள் இன்றைய வாழ்க்கை நெறியில் எவ்வாறு பொருந்தும்’ (Present day application of Thirukkural) என்ற கண்ணோட்டத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேல் நிகழ்த்திய சொற்பொழிவுகள் திருக்குறளை அணுகிக்க கற்க முயல வேண்டும் என்று இவர் விளக்கியது பலருக்குப் பெருத்த பயனுடையதாக அமைந்தது. இந்த மூன்றாண்டுகள் அவர் வகுப்பில் கற்றதுதான் என்னை ஒரு திருக்குறள் மாணவனாக உயர்த்தியது என் நினைவில் நிற்கும் ஆசானாக அவர் அமைந்ததற்கு இதுவே காரணம்.

பாரதியை ஆழ்ந்து படித்து ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னவர் நாகநந்தி. அதற்கான பல உதாரணங்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தவர். ஒன்றைச் சொல்கிறேன் “காணி நிலம் வேண்டும்” என்ற பாடலில் “காணி” என்பதன் பொருள் என்ன என்று ஒருமுறை கேட்டார்.நாங்கள் விழித்தோம். பிறகு கணக்குப் போட்டு விளக்கி ஏறக்குறைய “ஒண்ணேகால் ஏக்கர் ” அளவு என்று நிறுவினார். அதுமட்டுமல்ல ! இப்படிப் புரிந்துகொண்டால்தான், “பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களுடன், மாளிகை கேணி எல்லாம் இருக்கக் கூடிய இடமாக அது இருக்கும்.” என்று விளக்கினார். காணி என்பதற்கு இன்னொரு பொருள் “சொந்தமானது” என்று பொருள். பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து தரும் நிலத்திற்கு மஞ்சக் காணி நிலம் என்று பெயர். எனவே பாரதி தனக்கே உரிமையான ஓரிடத்தை வேண்டினான் என்றும் கொள்ளலாம் என்பார்.

ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை எழுதியவர் பல நாடகங்கள் எழுதி, சிலவற்றில் தானும் நடித்தவர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தை அப்படியே கவிதை நாடகமாக நாங்கள் போட்ட போது அதன் இயக்குனராக இருந்தவர். அதில் துரியோதனன் வேடமும் ஏற்றவர். ( அதில் நான் ஏற்றது பாரதி வேடம்)

 

எத்தனை முறைகள் சந்தேகங்கள் கேட்டாலும் தெளிவாக விளக்கம் தந்து செம்மை செய்யும்

நல்லாசிரியர்களில் நான் கண்ட முதன்மை ஆசான்.

அவர் மறைந்த போது எங்கள் அன்பு நண்பர் இலந்தை சு. இராமசுவாமி எழுதிய இரங்கற்பா.

எங்களின் அருமை ஆசான், இனியவர் நாக நந்தி
இங்கிலை என்னும் செய்தி இடியென இறங்க, வீரக்
கங்கினை அணைத்து விட்ட காலனைச் சினந்தேன், ஆய்வுச்
சிங்கமும் போமோ, நாதச் சீவனும் அடங்கப் போமோ?

இலக்கியம் உருவம் பெற்றால் இப்படி இருக்கும் என்ன
உலவிய நாக நந்தி, உளத்திலே உயர்ந்த மேதை
பலமெனக் கொண்ட அந்தப் பாரதி தன்னைப் பார்க்க
உலகினை நீத்து வேறோர் உலகினுக் கேகினாரோ?

வெண்ணிற ஜிப்பா, வேட்டி, வீரமே விளைக்கும் மீசை
கண்ணிலே காந்தக் கூர்மை, காளைபோல் நடையின் வீச்சு
எண்ணிய வஞ்சியாமல் எடுத்துரைக் கின்ற நேர்மை
புண்ணியர் நாக நந்தி புனிதரைக் காண்ப தெங்கே!

எழுத்தினால், பேச்சால், உண்மை எழுச்சியால், அன்பர் நெஞ்சம்
வழுத்திடும் வண்ணம் வாழ்ந்த மாண்புள நாக நந்தி
எழுத்திலே வாழ்வார், அன்பர் இதயத்தில் வாழ்வார், உண்மை
தழைத்திடும் தமிழில் வாழ்வார், சரித்திர மாக வாழ்வார்

இலந்தை சு இராமசாமி
15-6-1997

கட்டுரையை நான் நிறைவு செய்யும் முன் , உங்களுக்குள் இருக்கும் ஒரு கேள்விக்கு விடை சொல்லிவிடுகிறேன்.

அவருக்கு நாகநந்தி என்ற புனைபெயர் எப்படி வந்தது என்று அவர் மனைவியிடம் ஒருமுறை கேட்டேன். “ அது கல்கியின் “சிவகாமியின் சபத்த்தில்” வரும் ஒரு கதாபாத்திரம். “ அந்த கேரக்டரின் வில்லத்தனம் அவருக்கு மிகப் பிடிக்கும்” என்றார் திருமதி வேணுகோபாலன்.

 

 

சங்கத் தமிழ் – கலித்தொகை – பாச்சுடர் வளவ. துரையன்

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள், பற்றியும், கலித்தொகை, தொழில்,  மக்கள், கொண்டு, பல்வேறு, உள்ள, சங்க, செய்தனர், மனிதன், மூலம் ...

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை “கற்றார் ஏத்தும்” என்னும் அடைமொழி கொடுத்துக் கற்றார் ஏத்தும் கலித்தொகை என்றழைக்கப்படுகிறது. கலித்தொகை அகப்பொருள் பற்றிய நூலாகும். இது ’கலி’ என்றும், ‘கலிப்பா’ என்றும், ’கலிப்பாட்டு’ என்றும், ’நூற்றைம்பது கலி’ என்றும், அக்காலத்திய உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளது.

கலிப்பா வகையில் அமைந்துள்ள பாக்கள் தொகுக்கப்பெற்று இந்நூல் அமைந்துள்ளது. எனவே இது கலித்தொகை என்று வழங்கப்படுகிறது. இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். இந்நூலில் பாலைக் கலி 35 பாடல்களையும், குறிஞ்சிக் கலி 29 பாடல்களையும், மருதக் கலி 35 பாடல்களையும், முல்லைக் கலி 17 பாடல்களையும், நெய்தற் கலி 32 பாடல்களையும் ஆக 148 பாடல்களைக் கொண்டு திகழ்கின்றது.

கலித்தொகை: மூலமும் உரையும்- Kalithogai: Moolamum Uraiyum | Exotic India Artபாலைக் கலியினைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியினைக் கபிலரும், மருதக் கலியினை மருதன் இளநாகனாரும், முல்லைக் கலியினைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியினை இதைத் தொகுத்த நல்லந்துவனரும் பாடி உள்ளனர். இந்நூலின் பாடல்கள் இனிய ஓசையை உடையன. மேலும் நாடகப் பாங்குடைய நிகழ்ச்சிகள் அமையப் பெற்றுள்ளது கலித்தொகையின் தனிச்சிறப்பாகும்.

கலித்தொகைக்கு முதன் முதல் உரை எழுதியவர் நச்சினார்க்கினியரே ஆவார். இந்நூலின் ஏடுகளை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தேடி முதலில் பதிப்பித்துத் தந்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். அப்பதிப்பை வைத்துக் கொண்டு மேலும் சில குறிப்புகளுடன் மீண்டும் அச்சேற்றியவர் இ.வை. அனந்தாராமையர் ஆவார்.

பாலைக்கலி:

தலைவன் பொருள்தேடச் செல்லும்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணுகிறான். அவளும் உடன் வருகிறேன் என்கிறாள். அவன் இசைவு தர மறுக்கிறான். அதற்கு அவள், “கொலை செய்யும் எண்ணத்துடன் வேட்டை நாய்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. அவற்றிடையே தவித்த மானானது, தப்பி ஓடுகிறது. ஆனால் ஓடிச் சென்று வேடனின் வலையிலே வீழ்கிறது. அதே போல உன் செயலாலும் சொல்லாலும் துன்பம் அடைந்து தவித்த என் நெஞ்சம் இப்பொழுது உன்னிடமே சென்று நிலைத்து விட்டது. அதற்கு எந்தத் துன்பமும் வராமல் காத்துக் கொள்வது உன் பொறுப்பு” என்று கூறுகிறாள்.

பிரிகிறேன் என்னும் தலைவனின் சொல், பிரியும் அவன் செயல் இவை வேட்டை நாய்களாகவும், அவனையே வேடனாகவும் இங்கே காட்டப்பட்டுள்ளது. இனி என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதை அவன் கையில் தலைவி விட்டு விடுகிறாள்.

”……………………………………………………………………………………………….
கொலை வெங் கொள்கையோடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மடமான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே” [பாலைக்கலி 22]

குறிஞ்சிக் கலி

எல்லாரும் நன்கு அறிந்த கதை இது. தலைவி தோழியிடம் கூறுகிறாள். “சிறுவனாக இருந்த பொழுது நாம் சிற்றில் கட்டி விளையாடியதை எல்லாம் சிதைத்தானே ஒருவன். அப்படி நம்மை அழவிட்டவன் ஒரு நாள் எம் இல்லத்தின் வாசலுக்கு வந்தான். உள்ளே நானும் அன்னையும் மட்டுமே இருந்தோம். வந்தவன் ”குடிக்க நீர் வேண்டும்” எனக் கேட்டான். என் அன்னை, “பொன்னால் செய்தக் கலயத்திலே கொண்டுபோய்க் கொடு” என்றாள். நான் அவ்வாறு தரும்போது அவன் என் முன்னங்கையைப் பற்றி மெதுவாக இழுத்தான். நான் நடுங்கி, “அம்மா! இவன் செய்ததைப் பார்” என்று கத்தினேன்.

அன்னை ஓடி வந்தாள். அவன் அன்னையின் சினத்திற்கு ஆளாகாமல் இருக்க அவனைத் தப்பிக்க வைக்க, “இவன் நீர் குடிக்கும்போது விக்கினான்” என்றேன். உண்மை தெரியாத அன்னை அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். அப்பொழுதும் அவன் சும்மா இருக்கவில்லை. கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்து மகிழ்ச்சியுடன் நகைத்தான் அக்கள்வன் மகன்” அவன் மீது அவளுக்கு அன்பும் உள்ளது. அதனால்தான் அவன் மீது பழிச்சொல் வராமல் காக்கிறாள். இறுதியில் வரும் பாடல் அடிகள் மட்டும் மிகவும் சுவை தருகின்றன.

………………………………………………………………………………………………………………………
”அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா
அன்னை அலறிப் படர்தா, தன்னை யான்
’உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்” [குறிஞ்சிக் கலி 15]

சங்க காலம் – தாரகைமருதக் கலி

மருதத் திணை ஊடலினைக் குறிக்கும். தலைவன் பரத்தையர்பால் சென்று மீண்டு வருகிறான். அவனிடம் தலைவி, “பெருமழையை நாடி இருக்கும் நெற்பயிர் போல நாம் இருக்கிறோம். இங்கு சிறுதூறல் பயன் தருமோ? அது வெப்பத்தைக் கிளப்பிவிட்டுத் துயரையே தரும். அதுபோல ஆண்டுக்கு ஒருமுறை நீ வந்து அருள் செய்தது போதும். நீ முழுதும் மனந்திருந்தி வரும்வரை நாம் காத்திருப்போம். அவர்கள் வருந்தப் போகிறார்கள். நீ அவர்களிடமே செல்” என்று கூறுகிறாள். தலைவனுடன் நீண்ட நாள் இன்பம் அனுபவிக்க விரும்பும் அவள் தன்னைப் பெருமழையை நோக்கி இருக்கும் நெற்பயிருக்கு உவமையாகக் கூறுகிறாள். அவன் இப்பொழுது தரும் சிறிது நேர இன்பம் மீண்டும் ஆசையைக் கிளப்பி விட்டு விடும் என்றும் கூறுவது நல்ல நயம்.

”……………………………………………………………………………………………………
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வருநாள்போல் அலைகுவம் யாம்;புக்கீமோ
மாரிக்கு அவாவுற்றுப் பின்வாடும் நெல்லிற்கு, ஆங்கு
ஆறாத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு. [மருதக்கலி 6]

முல்லைக் கலி

தலைவியும் தோழியும் உரையாடுவது போல ஒரு பாடல் அமைந்துள்ளது. தலைவி, “என் பெற்றோருக்கு என் களவு வாழ்க்கை தெரிந்துவிட்டதடி” என்கிறாள். அதற்குத் தோழி,”எப்படி?” என வினவுகிறாள். “அன்று அவன் வந்தபோது முல்லைச் சரம் அளித்தான். நான் அதனை என் கூந்தலில் சூடிக் கொண்டேண். என் செவிலி எனக்குத் தலைவாரி முடிக்கும்போது அம்மலர் என் கூந்தலிலிருந்து கீழே விழ செவிலித்தாய் கண்டுவிட்டாள். உடனே நான் அச்சம் கொண்டு இக்குறுங்காட்டிற்கு ஓடிவந்து ஒளிந்திருக்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.

அதற்குத் தோழி, “அதற்கு ஏன் அஞ்சுகிறாய்; நீ அவன் தந்த முல்லைச்சரம் சூடியதால் உன் பெற்றோர் உன்னை அவனுக்கே மணம் செய்விக்க முடிவு செய்து விட்டனர். அதோ நம் வீட்டு முற்றத்தில் புதுமணல் பரப்புகின்றனர். பந்தல் இட்டு அங்கேதான் மணம் நடத்துவர்; இத்தனை நாள் எண்ணியிருந்தது இப்பொழுது நடக்க உள்ளது. ஏன் இன்னமும் பதுங்கிக் கொண்டிருக்கிறாய்” என்று சொல்லி அவள் அச்சத்தைத் தவிர்க்கிறாள். இப்பாடல் மூலம் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்ததும் புது மணலைப் பரப்பி அதில் பந்தல் வைத்து மணம் நிகழும் என்பது தெளிவாகிறது.
“……………………………………………………………………….
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல்—அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும்
இடம் அவன்கண் அடைசூழ்ந்தார் நின்னை; அகன்கண்
வரைப்பில் மணல் தாழப்பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்,
அல்கலும் சூழ்ந்த வினை” [முல்லைக் கலி 15]

நெய்தற் கலி

”……………………………………………………………………………………………………
எறிதிரை தந்திட, இழிந்த மீன்இன் துறை
மறிதிரை வருந்தாமல் கொண்டாங்கு நெறி தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய்பரிக் கடுந்திண்தேர் களையினோ இடனே” [நெய்தற் கலி 4]

இவை பாடலின் இறுதி அடிகள். நீர்த்துறையின் அலை மீனைக் கொண்டுவந்து கரையிலே போடுகிறது. அந்த மீன் துயருற்று வருந்துகிறது. திரும்பி வரும் அலை அம்மீனை நீருக்கு எடுத்துச் செல்கிறது. இக்காட்சியினைக் காட்டித் தோழி தலைவனுக்குத் தலைவியின் நிலையைக் கூறுகிறாள். பிரிந்து சென்ற அவன் இன்னும் வரவில்லை. தோழி அவனைக் கண்டு தலைவியின் நிலையைப் பற்றி எடுத்துரைக்கிறாள். ”கொண்டுவந்து போட்ட மீனை மீண்டும் அலை எடுத்துச் செல்வதைப் போல கூந்தல் அவிழ்ந்து விழ, உடல் மெலிந்து வருந்துகின்றவளின் பிரிவுத் துயரைப் பாய்ந்துவரும் குதிரைகள் பூட்டப்பட்ட உன் தேரில் சென்று நீ போக்கினால் அதுவே அவளுக்கு நல்ல காலமாகும்”

பாய்ந்து வரும் குதிரைகள் என்பதால் அத்தேர் விரைவாக செல்லும் என்பதும் தலைவியின் துன்பம் விரைவில் தீரும் என்பதும் புலனாகிறது.

இவற்றைப் போன்று பொருட் சிறப்பும் உவமைச் சிறப்பும், பண்டைத் தமிழர் வாழ்க்கையை அறிவிக்கும் பாடல்கள் உள்ள நூல்தான் “கற்றோர் ஏத்தும் கலித்தொகையாகும்.

 

அதிசய உலகம்-11 – -அறிவுஜீவி

மாயக்கண்ணாடி

I made the official James Webb poster into a phone wallpaper/background : r/jameswebb

“மாமி! ‘மாயக்கண்ணாடி’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள் அல்லிராணி.

“கேள்வியாவது ஒண்ணாவது? பார்த்தே இருக்கிறேன். சேரன் எடுத்து நடித்த படம் தானே!” என்றாள் அங்கயற்கண்ணி மாமி.

“மாமி! நீங்கள் சரியான சினிமாப்பைத்தியம்! நான் சொல்வது JWST பற்றி”

“நானாவது சினிமாப்பைத்தியம். நீ ஒரிஜினல் பைத்தியம்! அதென்னடி ஏபிசிடி?” -என்றாள் அங்கயற்கண்ணி மாமி.

“மாமி! JWST! இது ஒரு ராக்ஷச டெலெஸ்கோப். இது தான் இன்றைய வானவியலைப் புரட்டி எடுக்கும் சமாச்சாரம்.”

“மேலே சொல்” என்றாள் மாமி.

“பிரபஞ்சத்தை அறிவதற்கு, கலிலியோ 16 ம் நூற்றாண்டில் டெலெஸ்கோப் கண்டுபிடித்தார். அந்நாளிலிருந்தது டெலெஸ்கோப் பல வடிவமும் பொலிவும் பெற்று சக்தி கொண்டு விளங்குகின்றன. நமது வளிமண்டலம் இடையூறாக இருப்பதால், டெலெஸ்கோப்பை முதலில் பெரும் மலை உச்சியில் வைத்தனர். அதைவிட சிறப்பாகச் செய்வதற்காக, அதை ஒரு செயற்கைக் கோளில் பொருத்தி பூமியின் ஆர்பிட்டில் சுற்றி வரச் செய்து வானத்து நட்சத்திரங்களை ஆராய்ந்தனர்.” என்றாள்.

மாமி உடனே “அது ஹப்பல் (Hubble) டெலெஸ்கோப் தானே?” என்றாள்.

“ஆஹா.. சூப்பர் மாமி. நான் இன்று சொல்லப்போவது அதுக்கும் மேலே” என்றாள் அல்லி.

மாமி உற்சாகமடைந்தாள். அல்லி தொடர்ந்தாள்.

“’JWST என்பது ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்’(James Webb Space Telescope). இது வானத்தை ‘இன்ப்ரா ரெட்’ ஒலி அலைகளை வைத்து படமெடுத்து அளக்கிறது. ஹப்பல் டெலெஸ்கோப் பூமியைச்சுற்றி வருகிறதென்றால்,இந்த JWST சூரியனைச்சுற்றி வரும்.” என்றவளை மாமி குறுக்கிட்டாள்.”அப்ப அது ‘பூமியின் தங்கை’ என்று சொல்லு.” என்றாள்.

அல்லி தொடர்ந்து சொன்னாள். “மாமி, JWST 400000 கிலோமீட்டர் தள்ளி, நம்மைப்போலவே சூரியனைச்சுற்றி வருகிறது. அதற்குக்காரணம் JWST, ரொம்பக் குளிர் வெப்ப நிலையில் இருக்கவேண்டும். அதாவது 50 K (−223 °C; −370 °F). அதன் கண்கள் (கண்ணாடி) வானத்தை நோக்கியிருக்கவேண்டும், பின்புறம் சூரியனை நோக்கியிருக்கவேண்டும். சூரியனையோ அல்லது வெகு வெப்பமுள்ள எதையாவது பார்க்கநேர்ந்தால் அதன் கண் சிவந்து எரிந்து விடும்.” என்றாள் அல்லி.

“சரிடி. இது என்ன கண்டு பிடித்தது?” கொஞ்சம் பொறுமை இழந்தாள் மாமி.

“மாமி. ஜனவரி 2022 ல் இது செயல்படத்துவங்கியது. பல நட்சத்திரங்களை, கறுப்பு ஓட்டை (black hole ) என்று பல வானக் கோளங்களை படமெடுத்தது, ஆராய்ச்சியாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. பிரபஞ்சம் துவங்கியதாகக் கூறப்படும் 13.7 பில்லியன் வருட சமயம் பெரும் வெடிப்பு (Big Bank) நிகழ்ந்து சில மில்லியன் வருடம் வரையுள்ள வானத்தை அளந்து சொல்கிறது. கூடியவிரைவில், பிரபஞ்சத்தின் பல ரகசியங்கள் வெளிப்படுமென்று நம்பப்படுகிறது.” என்றாள் அல்லி.

“வானம் நமக்கொரு போதி மரம்.. நாளும் நமக்கொரு சேதி தரும்” என்று பாடி முடித்தாள் மாமி.

இது ஒரு அதிசய உலகம்!

https://en.wikipedia.org/wiki/James_Webb_Space_Telescope

 

5.

 

நாய்ப்பொழப்பு – தீபா மகேஷ்

A Stray Problem | The India Forum

இனிமே நான் தனியா வாக்கிங் போக மாட்டேன்.  நீங்க யாராவது ஒருத்தர் என் கூட வரணும், இல்லனா நான் போகல.

“இன்றைய முக்கிய செய்திகள்”, என்று டீ.வி ந்யூசில் சொல்வது போல அறிவித்தாள் கவிதா.

அனிருத் ஒரு நமுட்டுச் சிரிப்போடு அப்பாவைப் பார்த்தான். அதை கவிதாவும் கவனித்தாள். என் கஷ்டம் உங்களுக்கு கிண்டலா இருக்குல்ல, என்று மனதில் நினைத்துக் கொண்டாள். அவள் கோபமும், படபடப்பும்  அதிகமானது.

“என்ன ஆச்சு கவி? இந்தா, முதல்ல கொஞ்சம் தண்ணி குடி.  எந்த பக்கம் வாக்கிங் போன?  இன்னிக்கும் அதே பிரச்சனையா?” ராகவன் அவளை சமாதானப்படுத்தப் பார்த்தான்.

ஒரு சொம்பு தண்ணீரை ‘மடக் மடக்’ என்று ஒரே மூச்சில் குடித்து விட்டு,  “எந்த பக்கம் போனா என்ன, எல்லா தெருவுலயும்தான் நாய்ங்க இருக்கே”, என்றாள்.

அவள் உடல் இன்னும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

“இன்னிக்கு சன்டேதானே, மெயின் ரோடு கடைசில இருக்கிற பார்க்குக்கு போலாம்னு கெளம்பினேன். நல்லா அரை மணி நேரம் வாக் பண்ணிட்டு, திரும்பி வர போது,  ரெண்டு நாய், என் பின்னாடியே வந்து குரைக்க ஆரம்பிச்சிடுத்து. நான் பயந்து கத்த, அங்க பக்கத்துல, டீ கடைல இருந்தவங்க வந்து  , நாயைத் துரத்தி விட்டாங்க. கூடவே, எனக்கு ஃப்ரீ அட்வைஸ் வேற – நீங்க பயந்து ஓடினீங்கனாதான்மா, அது துரத்தும். இல்லாட்டி, ஒண்ணும் பண்ணாதுன்னு.”

பொத்தி வைத்திருந்த கோவம் பொங்கி, வார்த்தைகளாக வெடித்தது.

அவர்கள் சொல்வதெல்லாம் கவிதாவுக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால், இது போன்ற சமயங்களில் மனமும், புத்தியும், இரு வேறு திசைகளில் அல்லவா போகின்றன? இதை யாரிடம் சொல்ல முடியும் ? இல்லை சொன்னால்தான் எல்லோருக்கும் புரிந்து விடுமா?

அவளுக்குச் சில மாதங்களாக குதிகால் வலி. கை வைத்தியம், மருந்துகளுக்கு எல்லாம் சரிப்பட்டு வரவில்லை. கொஞ்ச நாள் வலி இல்லாமல் இருக்கும், திரும்பவும் ஆரம்பித்துவிடும். அப்புறம், ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் “இத ‘ப்ளான்டார்  ஃபாஸீடிஸ்’ னு சொல்லுவோம். எக்ஸர்ஸைஸ், யோகா, வாக்கிங் எல்லாம் தினம் பண்ணி, கொஞ்சம் உடல் எடையையும் குறைச்சா, கொஞ்ச நாள்ல தானா சரி ஆகிடும்”, என்று அறிவுரை சொன்னார்.

 

அதனால், கடந்த சில வாரங்களாக கவிதா வாக்கிங் போக ஆரம்பித்திருக்கிறாள். ஆனால், தெரு நாய்கள் பிரச்சனை, பெரும் பிரச்சனையாக இருந்தது. இன்று நடந்தது போல, ஏற்கனவே இரண்டு முறை நடந்திருக்கிறது.

ஸ்ட்ரெஸ் குறைய வாக்கிங் போனது போய், இப்போதெல்லாம் வாக்கிங் போவதே அவளுக்கு ‘ஸ்ட்ரெஸ்ஃபுல்’  ஆன விஷயமாகி விட்டது. அதனால்தான் இந்த முடிவு. அப்பாவோ, பிள்ளையோ யாராவது ஒருத்தர் இனிமே என் கூட வரட்டும் .

அவள் இன்னும் கோபமாகத்தான் இருந்தாள். யார் மேல் கோபம் என்று தான் தெரியவில்லை – தன்னைத் துரத்திய நாய்கள் மீதா, அட்வைஸ் செய்த அன்னியர்கள் மீதா, இல்லை வீட்டில் இருப்பவர்கள் மீதா?

ராகவன் சட்டென சுதாரித்துக் கொண்டான். இதைக் காரணம் காட்டி, அநாவசியமாக, ஞாயிற்று கிழமையைப் பாழாக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில், “ஓ.கே கவிதா. இனிமே, நானோ, அவனோ உன் கூட வரோம்”, என்று அனிருத்துக்கும் சேர்த்து பதில் சொல்லி, அப்போதைக்கு அந்த ‘டாபிக்’குக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

சொல்லி விட்டானே தவிர, அது ‘நடக்கிற’ கதையாக இல்லை.

ராகவன் அதிகாலையில் எழுந்து காபி குடித்தவுடன் வாக்கிங் கிளம்பி விடுவான்.

நான் உங்க கூட வாக்கிங் வந்துட்டா, அப்புறம், காத்தால ப்ரேக்ஃபாஸ்ட் , உங்க ரெண்டு பேருக்கும் லஞ்ச் எல்லாம் யாரு பண்ணுவா.

ஒரு விஷயத்தை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா, அதைப் பண்ண நூறு காரணம் கெடைக்கும். ஆனா, பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா, ரெண்டாயிரம் காரணம் கெடைக்கும்.

கவிதாவிற்கு பதில் சொல்ல, வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கிவிட்டு, “சரி” என்று ஒற்றை வார்த்தையில் தலையாட்டினான்.

“டேய் அனிருத், நீயாவது அம்மா கூட சாயங்காலம் வாக்கிங் போலாம்ல, எனக்கு தான் ஆஃபீஸ் வொர்க் முடியவே லேட் ஆகுது”

“ஐ காண்ட் , ஐ ஆம் பிசி”,  என்று அவனும் தவிர்த்து விட்டான்.

அதோடு, அந்த வாரம் முழுக்க கவிதாவின் ‘நடை’, ‘நின்றது’.

சனிக்கிழமை காலையில் ராகவனும்,  கவிதாவும் பார்க்குக்கு போனார்கள். நல்ல வேளையாக போகும் போது நாய் எதுவும் கண்ணில் படவில்லை.

ஆனால், திரும்பி வரும் போது, “இந்தத் தெரு வேணாம், அங்க பாருங்க, ஒரு கருப்பு நாய் படுத்திண்டு இருக்கு.

அது சும்மா தானே படுத்திண்டு இருக்கு, ஒண்ணும் பண்ணாது, வா.

வேண்டாம், அடுத்த தெருவுல போலாம்.

அங்கேயும் நாய். ஒன்றல்ல, இரண்டு நாய்கள். அவள் ரியாக்ஷன் தெரிந்து அவனே, அடுத்த தெருவுல போலாம் என்றான்.

இப்படியே, பார்க்கில் இருந்து ஐநூறு மீட்டர் தள்ளி இருக்கும் வீட்டிற்கு, ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றி வந்தார்கள்.

இதுவாவது பரவாயில்லை. சில சமயம், நாய் இல்லை என்று ‘நம்பி ‘ தெருவில் நடக்க ஆரம்பிப்பார்கள். எங்கிருந்தோ, ஒரு நாய் ஓடி வரும், அல்லது குரைக்க ஆரம்பிக்கும். அது என்னவோ, அதன் நண்பனையோ (அல்லது நண்பியையோ!) பார்த்துதான் குரைக்கும். ஆனால், கவிதா அது தன்னைப் பார்த்து தான் குரைக்கிறது, ஓடி வருகிறது, என்று நினைத்து பயந்து, அப்படியே உறைந்து போய் நின்று விடுவாள், இல்லை, கத்த ஆரம்பித்து விடுவாள்.

“என் கூட வராம, நீங்க பாட்டுக்கு முன்னாடி போறீங்க. நான்தான் பயப்படறேன்னு தெரியுதுல, கையப் பிடிச்சு கூட வந்தா என்ன குறைஞ்சா போய்டுவீங்க? என்று ராகவனுக்கு ‘ஸ்பெஷல் அர்ச்சனை’ நடக்கும். “

கையைப் பிடிச்சு கூட்டி வர நீ என்ன சின்ன குழந்தையா என்று எதிர் கேள்வி எல்லாம் கேட்டு விட முடியாது.

ஒரு விஷயம் ராகவனுக்கு தெளிவாக புரிந்தது. கவிதா நிஜமாகவே ரொம்பவும் பயப்படுகிறாள். அவளுக்கு நாய்கள் என்றால் எப்போதுமே பெரிதாக பிடித்தது  இல்லை. ஆனால் இந்த பயம் புதிது. ஏன் இப்படி பயப்படுகிறாள் என்றுதான் தெரியவில்லை.

அவளை உசுப்பேத்துவது போல அன்றைய செய்தித்தாளில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வளவு, அதிகரித்துள்ளது என்பது பற்றி, புள்ளி விவரங்களோடு விரிவாக செய்தி  போட்டிருந்தார்கள்.  ரெண்டு நாள் கழித்து, கார்பொரேஷன், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னொரு செய்தி. டூ வீலரில் போன ஒரு பெண்ணை, நாய் துரத்தி அவள் கீழே விழுந்தது, கேரளாவில் தெரு நாய் கடித்து ஒரு சிறுவன் இறந்து போனது, என்று அவள் பயத்தை அதிகரிக்கும் செய்திகளாகவே வந்தன.

நான் சொன்னா ஒத்துக்க மாட்டீங்களே, இப்ப பேப்பர்லயே போட்டிருக்கான் பாத்தீங்களா, இப்ப தெரியுதா, இது எவ்ளோ பெரிய பிரச்னைனு.

நாம எதைப் பத்தி எப்பவும் நினைக்கிறோமோ, அது சம்பந்தப்பட்ட விஷயம்தான் நம்ம கண்ணுல படும். கம்ஸனுக்குத் தான் சாகப் போற பயத்துல, பாக்கறது எல்லாம் , கிருஷ்ணனா தெரிஞ்சிதாம் . அது மாதிரி. நீ நாய் பத்தியே நினச்சிண்டு இருக்க.

ஓஹோ, உங்களுக்கு, நான் கம்ஸன், நாய் கிருஷ்ண பகவானா? என்று அவன் சொல்ல வந்ததை, கரெக்டாக, தப்பாக புரிந்து கொண்டு கோபப்பட்டாள்.

இது என்னடா புது வம்பு, என்று ராகவன் வாயை மூடிக் கொண்டான்.

அடுத்த ரெண்டு வாரம் அவன் ஆஃபீஸ் டூர் போக வேண்டி இருந்தது.

அனிருத், அம்மா கூட கொஞ்சம் வாக்கிங் போடா, பாவம், கால்வலில கஷ்டப்படறால.

ஓகே, ஓகே, ஐ வில் ஸீ. என்னவோ பண்ணுங்க ரெண்டு பேரும் என்று ராகவன் கிளம்பி விட்டான்.

அனிருத் உஷாராக, பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அம்மாவை பைக்கில் அழைத்து சென்றான்.

வீ வில் ஜஸ்ட் வாக் இன்‌ஸைட் த பார்க், ஓகே? கவிதாவும் அனிருத் சொல்வதெற்கெல்லாம் இசைந்து கொடுத்தாள்.

ஒரு நாள் இரவு, அம்மாவும், பிள்ளையும், நல்ல மூடில், டீ.வி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அனிருத், “அம்மா, நீ ஏன் நாயைப் பார்த்து இவ்வளோ பயப்படறே ,  யூ வேர் நாட் லைக் திஸ் பிஃபோர். என் ஃப்ரண்ட் அருண் வீட்டு நாய் கூட எல்லாம் நீ வெளையாடிருக்கே, ஞாபகம் இருக்கா?”

“அது ஒரு குட்டி ‘பக்’டா , கடிக்காது. க்யூட்டா இருக்கும். ‘பீமா’தான அது பேரு, அத கொஞ்சிருக்கேன், ஞாபகம் இருக்கு. நாய் கட்டிப் போட்டிருந்தா, ‘லீஷ்’ல இருந்தால்லாம் எனக்கு அவ்வளவு பயம் இல்ல.

அதுவும் நம்மள மாதிரி ஒரு உயிர் தானே, அதுக்கும் பசிக்கும், சாப்பாடு வேணும், தூங்கணும், அன்பு காட்ட மனுஷங்க வேணும். இதெல்லாம் எனக்கும் தெரியும்.

ஆனா, நாயைக்  கட்டிப் போடாம, ஃப்ரீயா விட்டா பயம். அதுவும், தெரு நாய்னா ரொம்ப பயம். அத பார்த்தாலே, என் பின்னாடி ஓடி வந்து என்ன துரத்தப் போறது, கடிக்கப் போறது அப்படினு தோணும். ஐ நோ தட் டாக்ஸ் கேன் ஸ்மெல் ஃபியர். நான் பயப்படறேன்னு அதுக்குத் தெரியும்னு, எனக்கும் தெரியும். அதனால இன்னும் ஜாஸ்தி பயம்”, என்று சொல்லி சிரித்தாள்.

“அம்மா அம்மா” என்று அனிருத் கொஞ்சலாக அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

அன்று அப்பாவும் பிள்ளையும் அதிசயமாக சாயங்காலம் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்த கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் அடித்தது.

யார் இந்த நேரத்தில் என்று யோசித்த படியே, கவிதா கதவை திறந்தாள்.

அருண் தன் செல்லப் பிராணி பீமாவை கையில் தூக்கி வைத்துக் கொண்டு  நின்றிருந்தான்.

ஹாய் ஆன்ட்டி, நாங்க ரெண்டு நாள் ஊருக்குப் போறோம், பீமாவை இங்க விட்டுட்டு போலாம்னு வந்தேன், அனிருத் எங்க?

அருண் கையில் இருந்து தாவிக் குதித்த பீமாவைத் தடவிக் கொடுப்பதா , இல்லை, அனிருத்தை திட்டுவதா என்று முடிவு செய்ய முடியாமல் நின்றாள் கவிதா.

 

 

குவிகம் குறுக்கெழுத்து – ஜூலை 2023 – சாய்நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி: 353

 

ஜூலை மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:

https://beta.puthirmayam.com/crossword/7695B6A879

சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் அதிர்ஷ்டசாலி நேயருக்கு ரூபாய் 100 கிடைக்கும்

 

 

சென்ற மாதத்தில் வெளிவந்தக்   குறுக்கெழுத்துப் போட்டியின் சரியான விடை

சரியான விடை எழுதியவர்கள் :

1. மெய்யழகி                                            9. ஜெயா ஸ்ரீராம் 

2. வாணி ஜயராம்                                  10. இந்திரா ராமநாதன்

3, ரேவதி ராமச்சந்திரன்                      11. எம் ராமசாமி 

4. ரேவதி பாலு                                          12. தயாளன் 

5. ஜானகி ஸ்ரீநிவாசன்                           13, ராமமூர்த்தி 

6. ராசியில்லாத பெயர்                         14. கமலா முரளி 

7. கதிர்  கண்மணி                                    15. வைத்யநாதன் 

8. உஷா ராமசுந்தர்                                   16. மனோகர் 

 

இவர்களுள் அதிர்ஷ்ட சாலி நண்பர் கதிர் கண்மணி அவர்கள். 

உங்கள் வங்கிக் கணக்கு விவரம், IFSC CODE / அல்லது GPAY Account details அனுப்பவும். 

 

 

 

பெற்றால் தான் பிள்ளையா?- சரண்யா ஸ்வேதாரண்யம்

    இறந்து போன குழந்தை பிறந்த பின், தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும்? |  Husband's Responsibilities During Stillbirth - Tamil BoldSky     “அம்மா! நீ பாட்டியாகப் போற…….”

           தன் அம்மாவின் முகத்தில் கண்ட ஆனந்தத்தைப் பார்த்து ரேணுகா வெட்கம் கலந்த மகிழ்ச்சி கொண்டாள்.  24 வயதில் தனக்குள் இன்னொரு உயிர் துடிப்பதை உணர்கையில் பிரமிப்பு ஏற்பட்டது.  ஐந்தாம் மாதம் நெருங்கியது.  இரு வீட்டாரும் சீமந்தத்திற்கு நாள் குறித்து சத்திரம் முடிவு செய்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவு கொஞ்சம் அசௌகர்யமாக உணர்ந்தாள்.  வயிற்றுக்குள் சுருக் சுருக்கென்று முறுக்கிப் பிழியும் வலி.  தூங்க ஆரம்பித்தவள் வலியின் தீவிரம் தாங்காமல் எழுந்து உட்கார்ந்தாள்.  மணியைப் பார்த்தாள்.  நள்ளிரவு 12 மணி.   ரேணுகா தூங்கவில்லை என்பதை கவனித்த ரமேஷ் எழுந்து விளக்கைப் போட்டான். அவள் முக பாவத்திலிருந்தே அவள் படும் அவஸ்தையை உணர்ந்த ரமேஷ்,

           “என்ன?  என்னாச்சு ரேணு….” என்றான்”  அவள் பேச முடியாமல் வயிற்றை முறுக்கும் வலியில் நெளிய…

           “பயப்படாதே! ஒண்ணுமிருக்காது! இருந்தாலும் வா! என்னன்னு  டாக்டர் கிட்டவே கேட்டுடலாம்!” என்று அவள் பதிலுக்குக்குக் காத்திராமல் காரை எடுக்கக் கீழே விரைந்தான். 

           இவர்களிடம் விஷயத்தைக் கேட்டறிந்த தலைமைச் செவிலியர் முதலில் டாக்டருக்கு ஃபோன் செய்து செய்தியை சொன்னாள்.  பிறகு டாக்டர் வந்து கொண்டே இருக்கிறார் என்ற தகவலை இவர்களுக்குச் சொல்லி விட்டு, ஆஸ்பத்திரியில் தலைமைச் செவிலியர் அவளை பரிசோதிக்கப் படுக்க வைத்தாள்.

           அந்த நேரத்தில் ரேணுகாவிற்கு இருந்த ஒரே சிந்தனை. ‘இந்த பொறுக்க முடியாத வலி, வேதனை எப்போ முடிவுக்கு வரும்’என்பது தான்.  பாவம்! அவளே சின்னப் பெண்! இந்த சிசு உயிருடன் பிறக்க வேண்டுமே  என்ற எண்ணமே அவள் மனதில் தோன்றவில்லை. எப்போது இந்த வேதனையிலிருந்து விடுபடுவோம் என்ற எண்ணம் மட்டுமே மனதில் வலுவாக இருந்தது.  என்ன நடக்கிறது என்று புரியாமல் வலியால் துடித்துக் கதறிக் கொண்டிருந்த ரேணுகாவின் கண் முன்னே அந்த சிசு அவசரமாக இந்த பூமியைக் காண வெளியே வந்தது.   ஐந்து மாதக் குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதெல்லாம் பிறகுதான் அவள் அறிந்து கொண்டாள்.  கருச் சிதைந்து விட்டது என்று தெரிந்ததும் தான் ரேணுகாவிற்கு தன் இழப்புப் புரிந்தது. ‘ஐயையோ! என் குழந்தை, அஞ்சு மாசம் என் வயத்துக்குள்ள வளர்ந்த குழந்தை போயிடுத்தா?’  மனதளவில் இந்த இழப்பினால் ரேணுகா மிகவும் பாதிக்கப்பட்டாள்.  ஆசை ஆசையாக எதிர்பார்த்த முதல் குழந்தையாயிற்றே?  ரமேஷ் தன் வருத்தத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.

            இந்த நேரத்தில் அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது.  அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு வெளிநாட்டு ப்ரொஜெக்ட் வந்தது. அவள் முதலில் அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் பிடிவாதமாக, “போக மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  ரமேஷ் தான் அவளிடம் இதமாகப் பேசி அவளை அந்த மூன்று மாத ப்ரொஜெக்ட்டுக்கு வெளிநாடு சென்று வரச் சொன்னான்.  கடைசியில் அவளும் ஒத்துக் கொண்டு சென்றாள். உண்மையிலேயே அந்த வெளிநாட்டு அனுபவம் அவளுக்கு நல்ல உற்சாகத்தையும் மன மாறுதலையும் கொடுத்தது.  உடலும் மனமும் தேற ஆரம்பித்தது. 

           இரண்டு வருடங்கள் ஓடின.  மறுபடியும் அவள் கருத்தரித்தாள்.  அவள் கணவனும் புகுந்த வீட்டினரும் அவளை உள்ளங்கையில் வைத்து கவனித்துக் கொண்டனர்.  ஐந்தாவது மாதம், நள்ளிரவு, அதே போல வயிற்றை முறுக்கியெடுக்கும்  வலி. என்னவோ கால்களுக்கிடையில்  திரவமாகக் கசிவது போல வேறு ஒரு உணர்வு.  ரேணுகாவுக்கு வலி மிகுதியில் பேச்சே வரவில்லை. ஒன்றும் புரியாமல் ஆனால் மிகுந்த பயத்தோடு அதே போல் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.  அந்த நேரத்துக்கு மருத்துவர் எவரும் ஆஸ்பத்திரியில் இல்லை.

           பரிசோதிப்பதற்காக ஆஸ்பத்திரியில் படுக்க வைத்த உடனேயே தலைமைச் செவிலியர், “சாரிம்மா! கரு கலைந்து விட்டது.  இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது!” என்று கை விரித்து விட்டாள். 

           ரேணுகா இந்த முறை வலி வேதனையை பொருட்படுத்தவில்லை.  வலியை மீறி தன் சக்தியையெல்லாம் திரட்டிக் கூச்சலிட்டாள்.  “எப்படியாவது என் குழந்தையை காப்பாத்துங்க!” என்று கதறினாள்.  துடித்தாள்.

           இந்த இரண்டாவது கருச்சிதைவிற்கு பிறகு அவள் மனதளவில் மிகவும் உடைந்து போனாள். அவள் அம்மாவிற்கு பெண்ணைத் தேற்றுவது பெரும் சவாலாக இருந்தது. 

           ஒரு வருடம் ஓடியது.  ஒரு நாள் ரேணுகாவின் தந்தை தன் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு திடீரென்று திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்று தன் முடியைக் காணிக்கையாகக் கொடுத்து மனமுருக தன் பெண்ணிற்கு ஒரு குழந்தை உருப்படியாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வந்தார். 

           அடுத்த மாதமே ரேணுகாவிடமிருந்து நற்செய்தி.  இந்த முறை அவள் அம்மா அவளைப் பூப்போல பாதுகாக்க எண்ணி அவளைத் தன் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.  இதற்குள் இரண்டு கருச்சிதைவு ஆகி விட்டது என்பதால் அவளை மேலும் பல பரிசோதனைகளுக்கு உள்ளாக்கினார்கள்.   கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால்  கருவின் கனம் தாங்க முடியாமல் ஐந்து மாதம் ஆனதும் கரு தன்னாலேயே நழுவி வெளி வரும் சாத்தியம் இருப்பதைக் கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து ‘செர்கிளேஜ்’ என்று கூறப்படும் முறையில் கர்ப்பப்பையின் வாயைத் தைத்து விட்டார்கள் ஐந்தாவது மாதத்தில்.

           ஆயிற்று! ஐந்தாவது மாதம் தொடங்கியது.  என்னதான் கர்ப்பப்பை வாய் தைக்கப்பட்டிருந்தாலும் முந்தைய அனுபவங்களினால்  எல்லோருக்கும் பயமும் பரபரப்பும் ஏற்பட்டது.  இரவு வந்தாலே பதற்றமாகிவிடும்.  அவளுக்காக வேண்டாதவர்களே கிடையாது. எத்தனையெத்தனை பிரார்த்தனைகள்! வேண்டுதல்கள்! உலகத்தின் எல்லா கோடிகளிலிருந்தும் நண்பர்கள், உறவினர்கள் அவளுக்காக நல்ல அதிர்வுகளை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.  ஒருவழியாக எட்டரை மாதம் முடிந்தது.  இதற்கு நடுவில் சின்ன அளவில் ஒரு வளைகாப்பு சீமந்தமும் பண்ணியாகி விட்டது. 

           ஒரு நாள் நள்ளிரவில் திடீரென்று பனிக்குடம் உடைந்து  படுக்கையறையிலிருந்து ஹால் வரை நீர் வழிந்தோடியது.  வீட்டில் அனைவருக்கும் பயத்தில் சப்த நாடியும் ஒடுங்கியது. ‘என்ன நேருமோ கடவுளே!’   ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே பயமாக இருந்தது.  எல்லோர் உதடுகளிலும் ஏதேதோ ஸ்லோகம், பிரார்த்தனை.  மருத்துவமனைக்கு விரைந்தனர். 

           ஆனால் இந்த முறை  ரேணுகா மிக்க தைரியத்துடன் இருந்தாள்.  சிறு துளி கூட பயமோ கலக்கமோ இல்லை. மூன்றாவது முறை பிரசவ வலியில் துடித்த போதிலும் இந்த முறை அது ஒரு நல்ல விதத்தில் முடியும் என்னும் துணிவு அவளுக்கு நிறையவே இருந்தது.

                 ஐந்து மணி நேர வலிக்குப் பின் ஒரு அழகிய தேவதை சுகப்பிரசவத்தில் வெளிப்பட்டதைக் கண்டு  எல்லோரும் மெய்சிலிர்த்து இறைவனை நினைத்து நன்றியுடன் கை கூப்பினர். 

                 இது தான் முதல் குழந்தை என்றாலும் முதல் இரண்டு சிசுக்கள் தந்த நினைவு, வலி அவளை மனதை விட்டு நீங்காமல் தான் இருந்தது. 

                 தான் கருவுற்ற காலத்தில் இருந்த குழப்பம், பயம் முதலியவற்றைக் கண்டு அஞ்சி இன்னொரு குழந்தையை பற்றி யோசிக்கவே ஏழு வருடங்கள் ஆயின.  தன் பெண்ணின் ஏழாவது பிறந்த நாளில் அவளிடம் “உனக்குக் கூடிய விரைவில் ஒரு தம்பியோ, தங்கையோ வரப் போகிறது” என்ற செய்தியை சொன்னாள்.  அந்த சின்ன தேவதை அளவில்லா மகிழ்ச்சியில் தத்தளித்தது.

           மீண்டும் கருவுற்ற பின் ரேணுகாவை பதற வைக்கும் அதே ஐந்தாம் மாதம்! டாக்டர் இந்த முறையும் ‘செர்கிளேஜ்’ செய்து கருவைக் காப்பாற்ற வேண்டியிருக்கும் என்று சொல்ல அதற்கு முன் ஒரு ஸ்கேன் எடுத்தார்கள். ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர் அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் மிகுந்த குறைபாடுள்ளது, ஒரு வேளை பிறந்தாலும் எத்தனை நாட்கள் உயிரோடு இருக்கும் என்று சொல்ல முடியாது, என்று சொல்லி இந்தக் கருவை வளர விடுவது உசிதமல்ல.  கலைப்பதே  சரி என்று சொல்லிவிட்டார்கள்.  ரேணுகா உடைந்து  எரிமலை போல் பீறிட்டு அழத் தொடங்கினாள்.  ரமேஷ் டாக்டரிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான்.  குழந்தை பிறந்த பின் அதற்குள்ள குறைபாட்டை ஏதாவது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா என்று கேட்டு.  டாக்டரின் ஒரே பதில். “வாய்ப்பேயில்லை!” என்பது தான்.  அது மட்டுமல்ல. 

            “இதெல்லாம் இப்போ ஒரு வரப்பிரசாதம் சார்!  பிறந்த பின் வளர்க்க முடியாது அளவுக்கு வளர்ச்சிக் குறைவான குழந்தை என்று முன்னதாகவே தெரிவதால், என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடலாமே?” என்று நாசுக்காகக் கூறினார்கள்.

           முதல் இரண்டு இழப்பின் போது அது ஒரு விபத்தாக இருந்தது.  இம்முறை இன்னும் ஒரு வாரத்தில் தனக்குள் இருக்கும் உயிரைப் பிரியப் போகிறோம் என்ற எண்ணம் ரேணுகாவை மிகவும் ஆட்டிப் படைத்தது.  அந்த ஒரு வாரம் அவள் நரக வேதனையை அனுபவித்தாள்.  “நீ என் குழந்தையா என் மடியில தவழற பாக்கியம் எனக்கில்லையா?  நான் அப்படி என்ன பாவம் பண்ணினேன்?’ வயிற்றிலிருக்கும் சிசுவோடு பேசினாள்.  மனமுடைந்து அழுது கொண்டே இருந்தாள்.

           இந்த முறை கருக்கலைப்பு முடிந்து ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததும் ரேணுகா  “பெற்றால் தான் பிள்ளையா? பாதியில் இழக்க நேரும் சிசுக்களும் என் பிள்ளைகள் தானே?” என்று ரமேஷைப் பிடித்து உலுக்கினாள். அதையே சொல்லிச் சொல்லி அரற்றியபடி அழுதுக் கொண்டேயிருந்தாள்.  அவள் சொல்வது உண்மைதான் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தாலும்  ரமேஷ் அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். நடப்பதெல்லாம் ஒன்றும் புரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பெண் ப்ரீதி அம்மாவைப் பார்த்துக் கேட்டாள், “அம்மா! தம்பிப் பாப்பா எப்போ வரும்?” என்று.

           ரேணுகா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போக ரமேஷ் தான், “பாப்பா சாமி கிட்டே போயிடுத்து கண்ணு! ” என்றான்.

           குழந்தை உடனே, “ஓஹோ! வேற யாரோ  பாப்பா வேணும்னு கேட்டிருப்பாங்க.  அதுக்காக சாமி எடுத்துக் கிட்டாரா அம்மா?  நீ தானேம்மா சொன்னே? நிறைய பேரு வீட்டில ஒரு பாப்பா கூட இல்லேன்னு?” என்றாள் கண்கள் அகல.

           ‘உனக்கு நான் இருக்கேனே அம்மா!’ என்று  சொல்வது போல தன் கழுத்தை வந்து கட்டிக் கொண்ட  ப்ரீதியைப் பார்த்து ரேணுகா விசும்பி விசும்பி அழ ஆரம்பிக்க குழந்தை இன்னும் இறுக அம்மாவை அணைத்துக் கொண்டாள்.  ரேணுகா அந்த சின்ன தேவதையை தன்னோடு இருக்கிக்கொண்டு முத்தமழை பொழிந்து தன் கண்ணீரை அவள் மேல் தேய்த்து துக்கத்தைக் கரைக்க முயன்றாள்.

வானிலிருந்து பூமி (அறிவியல் கதைகள்) – ந பானுமதி

சந்திராயன்-3

 

விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-3  விண்கலம்! ( 14 ஜூலை ) 

இந்த செய்தி வந்திருக்கும் இந்த சமயத்தில்  இந்தக் கட்டுரைக்கதை வருவது மிகவும் பொருத்தம் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சரவணன் வீட்டிற்குள் வரும் போது இனிமையான நறுமணம் அவன் நாசியை நிறைத்தது. அம்மா, என்னவோ, ஸ்பெஷலாகச் செய்திருக்கிறார் என்று நினைத்தான். அம்மா, ஃப்ளாஸ்க், ஓரு எவர்சில்வர் தூக்குப் பாத்திரம், மற்றும், வாயகன்ற, மூடியுள்ள ஒரு எவர்சில்வர் டப்பா ஆகியவைகளை பிரம்புக் கூடைக்குள் வைத்துக் கொண்டிருந்தார். அப்பா, மற்றொரு கூடையில் தரை விரிப்புகளும், குடி தண்ணீர் நிரம்பிய போத்தல்களையும் வைத்துக் கொண்டிருந்தார். சரூவிற்குப் புரிந்து விட்டது. ‘ஹையா’ என்று குதித்தான். அவர்கள் பீச்சிற்குப் போகப் போகிறார்கள், அதுவும் தின்பண்டங்களோடு. அங்கே அதிக நேரமும் இருக்கப் போகிறார்கள். அதெல்லாம் சரி, அம்மா வாசனை, வாசனையாக என்ன செய்திருக்கிறார், நாவில் நீர் ஊறுகிறதே!

“சரூ, கை கால் அலம்பிண்டு, ட்ரெஸ்ச மாத்திண்டு ஓடிப் போய், சஞ்சையையும், பவானியையும் கூட்டிண்டு வா. நாமெல்லாரும் மெரினா போறோம்.”

‘ஒரே நிமிஷம்மா, என்ன தீனி செஞ்சுருக்க, வீடே மணக்கறதே, எனக்குக் கொஞ்சம் தாயேன்.’

“நீ கேப்பேன்னு எனக்குத் தெரியாதா, என்ன? ஒரு வடை வச்சுருக்கேன் டேபிள்ல. அத எடுத்துக்கோ. மீதியெல்லாம் முழு நிலாவப் பாத்துண்டு நல்ல காத்துல பீச்ல சாப்படலாம்.”

அம்மா ஆனாலும் கஞ்சம். இன்னும் ஒண்ணு தரப்படாதா? ஆமா, வழக்கமான வட மாதிரியில்லையே; சரி, அப்றமா அம்மாவே சொல்லுவா என்ற சரூ தானும் தயாராகி, தன் நண்பர்களை அழைத்து வரவும், அப்பா காரை வெளி வாசலிற்கு எடுத்து வருவதற்கும் சரியாக இருந்தது.

அம்மா, அத்தனை கூடைகளையும் உள்ளே வைத்துவிட்டு தானே காரோட்ட அமர்ந்தார். சரூவிற்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். ‘எப்பம்மா கத்துண்ட?’

“அதெல்லாம் ஆச்சுடா. இப்ப ‘எல்’ அட்டை மாட்டியிருக்கேனே பாக்கலியா” என்றார் அப்பா.

‘சும்மா உனக்கு சர்ப்ரஸ் தரணும்னு தான் சொல்ல.’

பவானி அந்தக் காரில் இருந்த வழிகாட்டித் தடத்தைப் பார்த்துக் கொண்டே வந்தாள். சரூ அதைக் கவனித்துவிட்டு, ‘இது ஜி பி எஸ் (GPS-Geographical Positioning System) அதாவது, புவியியல் நிலை அமைப்போட உதவியோட நாம பயணம் செய்யறதுக்கு உதவும் வழிகாட்டி’ என்றான்.

“தெரியும், சரூ. முதல்ல இத வடிவமைச்சது யாருன்னு சொல்லு பாக்கலாம்.”

“அது வந்து.. வந்து”

‘க்ளேடிஸ் வெஸ்ட்’ (Gladys West) என்ற கறுப்பினப் பெண். ரொம்ப ஏழைக் குடும்பம். விவசாயக் கூலிகள் அவங்களும், அவங்க அம்மா, அப்பாவும். ஆனா, க்ளேடிஸ் படிப்புல நல்ல திறமசாலி. பெண், அதுலயும் கறுப்பினம், அதனால அவங்கள பாராட்ட யாருமே இல்ல; ஊக்கம் தரவும் ஆளில்ல. ஆனா, அவங்க மெரிட்ல கணிதக் கல்வில இடம் கிடச்சுப் படிச்சாங்க; அப்றம் முதுநிலை பட்டம்; அமெரிக்காவுல, அவங்க, வர்ஜீனியாவச் சேந்தவங்க, கப்பல் ஆயுதத் துறைல, வேலைக்குப் போனாங்க. மேல மேல உயர்ந்தாங்க. கிரகங்கள் ஒன்றின் மேல ஒண்ணு என்ன பாதிப்ப ஏற்படுத்துதுன்னு அவங்க செஞ்ச ஆய்வு பலரால பாராட்டப் பட்டது.’

“ஆமாண்டா, சரூ, முக்கியமா, ப்ளூடோ, நெப்ட்யூன் இயக்கங்கள். ‘சீசேட்’ (Seasat) என்ற கடல் சார்ந்த செயற்கைக் கோளை ஐ பி எம்ல (IBM) மறு சீரமைச்சதுல பெரும் பங்கு அவங்களுக்கு. பூமி எப்போதுமே இயங்கிண்டிருக்கு, அது மேல அலைகளின் தாக்கம், புவியீர்ப்பு விசைன்னு பல சக்திகள் தொடர்ச்சியா செயல்படுது. இந்த நிலைல பூமியோட பொசிஷன எப்படி சரியா கணிக்கிறது? அதுலதான் அவங்க மூணு முக்கிய செயல்களச் செய்தாங்க. அதுக்குப் பேரு ‘ஜியோடெடிக் மாதிரி’. (Geodetic Model) பூமியோட நிலவியல், வெளியை நோக்கிய அதன் இடம் சார்ந்த கோணம், (Earth’s space Orientation) ஈர்ப்பு விசை இதைத்தான் அவங்க கச்சிதமா கணக்கிட்டாங்க.”

‘அமெரிக்காவுல 31 செயற்கைக் கோள்கள் இந்த மூணையும் கண்காணித்து பூமில உள்ள ரிசீவருக்கு அனுப்பும். அதுக்கும் முன்னாடி இது எதையெதை சொல்லும்னு பாக்கலாம். முக்கியமா ஐந்து விஷயங்கள்:

நான் எங்கிருக்கிறேன்? எங்கே போகிறேன்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? அங்கே நான் வருவதற்கு சிறந்த வழி என்ன? நான் அங்கே எப்போது வந்து சேருவேன்?’

“வான வெளியில 11,000 கடல் மைல்கள் தூரத்ல தங்களோட சுற்று வட்டப் பாதையில அந்த செயற்கைக் கோள்கள் இருக்கு. இது பூமில எந்த இடம் என்பதச் சரியாகக் கணிக்கும். நான்கு கோள்கள் சொல்லும் செய்திகளை கட்டுப்பாட்டு அறை சரி பார்க்கும். அந்தத் தகவல் நம்மோட கை பேசிக்கோ. இப்போ ஆன்டி ஒட்ற கார்ல இருக்கற ரிசீவருக்கோ வந்து சேந்து நமக்கு வழி காட்டும்.”

‘சரி, சஞ்சய், நான் நம்ம நாட்டோட ஜிபிஎஸ் என்னன்னு சொல்லவா? அதுக்குப் பேரு ‘நேவிக்’ (NAVIC) அதாவது, ‘நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன்- (Navigation with Indian Constellation) நம்ம இஸ்ரோ (ISRO) செஞ்சது இது. கார்கில் போரின் போது ‘பொசிஷனிங்கிற்காக’ இது தயாரிக்கப்பட்டது. பிஷாரத் ராமா பிஷாரதி என்ற கேரள விஞ்ஞானி நமது இந்திய ஜி பி எஸ்சின் தந்தை எனக் கருதப்பட்றார். பர்சனல், கமர்ஷியல், இராணுவம்னு மூணு பிரிவு இருக்கு. ஜிபிஎஸ் செயற்கைக் கோள்கள்ல அணுக் கடிகாரம் (Atomic Clock) இருக்கு. அதனால், நேரம் துல்லியமா இருக்கும். அம்சமான விஷயம் என்னன்னா, நம்ம நேவிக்ல இரட்டை அலவரிச, அதனால, நம்ம ‘பொசிஷனிங்’ தரம் இருக்கே அது 10 மீட்டருக்குள்ள எந்த இடம்னு துல்லியமாக் காட்டிடும். ஆனா, ஜிபிஎஸ்ன்னு பொதுவா அமெரிக்கவோடத சொல்றோமே அது 20 மீட்டர் துல்லியத்ல தான் காட்டும். இப்ப, எல் 5 அலைவரிசைல இயங்குறதால, நம்ம அலைபேசிகள்ல நேவிக் வரதில்ல. எல் 1 அலைவரிசைக்கு அது 2024-25ல வந்துடும். அப்போ நம்ம அலைபேசிகள்ல நேவிக் வந்துடும்னு இஸ்ரோ சொல்லியிருக்காங்க.’

“நல்ல விஷயம் ஒண்ணு, சஞ்சய். மே 29, 2023ல் இஸ்ரோ வெற்றிகரமா ஜி எஸ் எல் வி-எஃப் 12/ என் வி எஸ்-01ஐ (GSLV-F12/NVS-01) நிறுவியிருக்கு. அந்த என் வி எஸ்(Navigation Satellite) என்ற செயற்கை கோளோட வெயிட் எவ்வளவுன்னு தெரியுமா? 2,232 கிலோ. இந்தத் தொடர்ல எல் 1 L1)பேன்ட் (Band) வரும். இந்தியாவுல தயாரித்த அணுக்கடிகாரம் இதுல இருக்கு. நாம எல்லாருமே சைன்ஸ், டெக்னாலஜி, இங்ஜினீரிங், கணிதம் (STEM) எல்லாத்தையும் நன்னாப் படிக்கணும், நம்ம நாட்டுக்குப் பெரும தரும் கண்டுபுடிப்புகளச் செய்யணும்.”

கடலும், வானும் கவிதை பாடி அவர்களை வரவேற்றன. வானில் வைகாசி விசாக பூரண நிலவு பால் போலப் பொழிந்து கொண்டிருந்தது.

அம்மா சொன்னார்: “சூர பத்மனை வதம் செய்வதற்காக சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து விடுவித்த ஆறு பொறிகள் கங்கையிலிருந்து சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் குழந்தையாகப் பிறப்பெடுத்தது. தேவி பார்வதி, அழகுக் குழந்தைகளை சேர்த்தணைக்க ஆறு முகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களுமாக முருகன் என்ற அழகன் உண்டானார். முருகனுக்கான விரத நாள் இது; அவரோட கல்யாண நாளும் இது. நம்மாழ்வார் பிறந்த நட்சத்திரம் விசாகம்; அர்ச்சுனன் சிவனிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை வாங்கியதும் விசாகம். திருமழப்பாடியில் சிவன் ஆனந்த நடனம் ஆடியதும் விசாகம். இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் ‘சத்ய ஞான சபை’யைத் தோற்றுவித்ததும் விசாகம் தான்.”

மூவரும் பந்தை எடுத்துக் கொண்டு வெகு நேரம் விளையாடி விட்டு களைத்து வந்தார்கள். அம்மா, சுத்தம் செய்யும் காகிதங்களை முதலில் கொடுத்தார். பின்பு, தட்டில் வடைகள், தினை மாவு உருண்டைகள், கோப்பையில் நாட்டுச் சர்க்கரை கலந்த பசும்பால் அனைவருக்கும் கொடுத்தார்.

‘ஆன்டி, இந்த வட சக்கரவள்ளிக் கிழங்குல செஞ்சீங்களா?’ என்றாள் பவானி.

“சரியாக் கண்டு பிடிச்சுட்டயே. நன்னா, கிழங்க வேக வச்சு மசிச்சு, வெல்லத் தூள், ஏலம், கொஞ்சம் போலப் பாலத் தெளிச்சு, தோசக் கல்லுல தவளவடயைப் போட்டு எடுக்கற மாறி, சுத்தி வர நெய்யும், எண்ணெய்யும் கலந்து ஊத்தி மொறு மொறுப்பா எடுக்க வேண்டியதுதான்.”

அம்மா, செய்முறை விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, சரூ மூன்றாவது வடையைக் கபளீகரம் செய்வதை பவானி கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பானுமதி ந

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…4 – மீனாக்ஷி பாலகணேஷ்

 

 

Austrian conductor Herbert Von Karajan (1908 – 1989), 13th May 1967. (Photo by Evening Standard/Hulton Archive/Getty Images)

 

தாழ்மையில் ஒரு பாடம்!

            காலங்கள்தோறும் நாம் இசைவல்லுனர்களைப் பற்றியும், அவர்கள் செருக்குடனோ, தாழ்மையுடனோ நடந்து கொள்வது பற்றியும் பலரும் கூறக் கேட்டறிந்துள்ளோம். இங்கு இரு நிகழ்வுகளை என் பங்காக நானும் பதிவு செய்கிறேன்.

                                                             ~~~~~~~~~~~

            1982ம் ஆண்டு; பெர்லின் நகரில் வழக்கம்போல் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. ஜூன் மாதம் நாங்கள் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும். நான் ஆராய்ச்சி செய்துவந்த இன்ஸ்டியூட்டில் என் சக ஆராய்ச்சியாளனுடன் – அவன் பெயர் லியோ (Leo) – மேற்கத்திய, இந்திய சாஸ்திரீய இசை பற்றி அடிக்கடி கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வது வழக்கம். எனக்கு ஆபராக்கள் (Opera) (மேற்கத்திய முறை இசை நாடகங்கள்) மிகவும் பிடிக்கும், முடிந்தபோதெல்லாம் சென்று கண்டு மகிழ்வேன் என அவனிடம் கூறியிருந்தேன். “நீ கரயான் (Karajan) நடத்தும் ஒரு ஸிம்ஃபனி (Symphony) இசை நிகழ்வையாவது கண்டு கேட்டு ரசிக்காமல் பெர்லினை விட்டுக் கிளம்பிவிடாதே,” என்றவன், அவருடைய ஒரு இசை நிகழ்ச்சியை நான் கேட்க, டிக்கட்டுக்காக அலையாக அலைந்தான். அவருடைய நிகழ்வுகள் அனைத்துமே ஹவுஸ்ஃபுல்!!

            அது சரி! யார் இந்தக் கரயான்? ஹெர்பெர்ட் ஃபான் கரயான் (Herbert von Karajan) எனும் ஜெர்மானியர்; இசையை நடத்தும் நடத்துனர் (Conductor); அங்கெல்லாம் பீதோவன் (Beethovan), பாஃக் (Bach), மொஸார்ட் (Mozart), இன்னும் பல புகழ்வாய்ந்த கலைஞர்கள் வடிவமைத்த இசையை – ஸிம்ஃபனி இசையை அதற்கென பயிற்சிபெற்ற நடத்துனரே நடத்துவார். அவர் தலைமையில் வயலின், புல்லாங்குழல், வியோலா, சில சமயம் பியானோ, பலவிதமான ட்ரம்கள், கிளாரினெட், ஹார்ன் (Horn) எனும் பல இசைக்கருவிகள் ஒருமைப்பட்டு ஒரு ஒழுங்கிற்குட்பட்டு இசைக்கப்படும். அதனால் ஒரு நடத்துனர் நடத்தும் இசைக்குழு மிக உயர்வானதென மக்களால் மதிப்பிடப்படும். அவ்விதத்தில் கரயானின் மதிப்பு மிகமிக உயர்வானது. பெர்லின் ஃபில்ஹார்மொனிகர், (Berlin Philharmoniker) வியன்னா ஃபில்ஹார்மொனிகர் (Vienna Philharmoniker) ஆகியன அவருடைய தலைமையில்தான் இயங்கின. மிகமிக உயர்வாகக் கொண்டாடப்பட்ட இசை நடத்துனர் அவர். இப்போது இது போதும்!

            “ஹாய்! இதோ பார்! ரொம்பவே சிரமப்பட்டு ஒரே ஒரு டிக்கட் தான் கிடைத்தது. உன் கணவர் உன்கூட வர முடியாது. நானும் உங்ககூட வரணும் என்று நினைத்தேன். அதுவும் முடியாது. சரி, நீ தனியாகத்தான் போய் கேட்கணும்,” என்றபடி ஒரேயொரு டிக்கட்டை என்னிடம் நீட்டினான் லியோ! கான்சர்ட் ஹாலில் எங்கேயோ ஒரு மூலையில் அமர்ந்து கேட்க 25 ஜெர்மானிய மார்க்குகள் (German Marks) எனக் குறைந்த விலையேயான ஒரேயொரு டிக்கட்! எங்கள் இருவருக்கும் அதுவே மிகப்பெரிய பொக்கிஷம்!!

            ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்தரை மணிக்கு அந்த இசை நிகழ்ச்சி. அவசர அவசரமாகக் காலையுணவை முடித்துக்கொண்டு, மதிய உணவையும் கணவருக்கும் குழந்தைக்கும் தயார்செய்து வைத்துவிட்டுக் கிளம்பினேன். பஸ்ஸைப் பிடிக்கப் போகும்போது அவசரமாக நடந்ததில், உறைந்துவிட்ட பனியில் வழுக்கி விழுந்து கால்முட்டியையும் சிராய்த்துக் கொண்டேன். கான்சர்ட் ஹாலை அடைந்து எனது சீட்டைக் கண்டுபிடித்து அமரவும், அடுத்த நிமிஷம் இசை நிகழ்ச்சி தொடங்கவும் சரியாக இருந்தது.

            முதலில் ஒரு சிறிய இசைவடிவம். உற்சாகம் என்னைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அந்தப் பெரிய ஹால் கொள்ளாத கூட்டம். நடுவில் உள்ள ஏறும் படிக்கட்டுகளில் எல்லாம் நெருக்கியடித்துக் கொண்டமர்ந்து இசை கேட்கும் இளைஞர் – முதியவர் கூட்டம்.

            ஹா! இது என்ன? நான் மிகவும் விரும்பும் மொஸார்ட்டின், எனக்கு மிகவும் பிடித்த ஸிம்ஃபனி! எண் 29. (மொஸார்ட் நூற்றுக்கணக்கான ஸிம்ஃபனிகளை இயற்றியதால் இவை எண்கள் மூலம் குறிப்பிடப்படும்). கண்களில் ‘குபுக்’கெனப் பொங்கிய ஆனந்த வெள்ளம். யாரும் காணாமல் டிஷ்யூவால் துடைத்துக் கொண்டேன். உடலெல்லாம் சிலிர்த்தது. ஸிம்ஃபனிகள் பெரும்பாலும் 4 பகுதிகளைக் (movements) கொண்டவை. முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் இடையே 15 அல்லது 20 நொடிகள்தான் அமைதி இருக்கும். முதல்பகுதி முடிந்தது. நீண்ட நேரமாகியும் அடுத்த பகுதி ஆரம்பிக்கப் படவில்லை. இப்போது பார்வையாளர்களிடையே லேசானதொரு அமைதியின்மை! ஒரு நீண்ட நிமிடம், 60 நொடிகள் ஆகியும் அடுத்த பகுதியை ஆரம்பிக்காமல் கரயான் அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் எதற்காகவோ நின்றபடிக்கு இருந்தார்…… என்னவாயிற்று?

            இதுதான் விஷயம்! ஒரு இளம் இணையர் அமர இடம் தேடி அவசர அவசரமாக அங்கும் இங்கும் விரைந்து கொண்டிருந்தனர். அந்த 20 நொடி இடைவேளையில் இடம் பிடித்துவிடும் துடிப்பு அவர்களிடம். அது மிக நீண்டுவிட்டதென அவர்கள் உணரவில்லை போலும்! தாங்கள் அமர்வதற்காக இசை நிறுத்தப்பட்டிருந்தது எனவும் அறியவில்லை அவர்கள். அனைத்து ரசிகர்களும் இவர்களின் பொறுப்பற்ற இச்செய்கையினால் அமைதியிழந்து தவிப்பது நன்றாகத் தெரிந்தது. அத்தனை பெரிய பிரபலமான இசை நடத்துனரைக் காக்க வைக்கலாமா? அவமரியாதை செய்யலாமா?

            கரயான் அவர்களோ புன்னகையுடன் இவர்கள் இருவரும் ஓரிடம் கண்டுபிடித்து அமரக் காத்திருந்தார். அமர்ந்ததும் இசை இனிமையாகத் தொடர்ந்தது. இசையுடன் இயைந்த என் உள்ளம் இப்போது இவருடைய பெருந்தன்மையான உள்ளத்தைக் கண்டு பரவசத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது. எத்தகைய மாமனிதர் இவர்! இவருடைய இசை நிகழ்ச்சியுடன் இந்த மனிதாபிமானம் மிக்க செயலைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்துருகியது.

            இதுவும் வாழ்க்கை எனும் ஓடம் வழங்கியதோர் பாடம்….. தாழ்மை!

            ஒருவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தலைக்கனம் கொண்டு அலையாமல், மற்றவர்களை இகழாமல் இருப்பதே அவருடைய பெரும்புகழை நிலைக்க வைக்கும் என அறிந்து கொண்டேன்.

            இது எனக்கு மறக்க முடியாத ஒரு இசை நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது!

            இவர் நடத்திய வேறு ஒரு இசை நிகழ்ச்சியின் காணொளியை இணைத்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் வியன்னா ஃபில்ஹார்மோனிக்கின் புத்தாண்டின் முதல் கான்சர்ட் (New Year concert) கரயானின் நடத்துதலில் தான் ஆரம்பிக்கும். கட்டாயம் கண்டு களியுங்கள் – ஒரு கலைஞன் தன் ரசிகர்களுடன் உள்ளம் திறந்து உறவாடும் காட்சிகள், அவர்கள் தன்னைக் கொண்டாடும் போது அவர் அடையும் பெருமகிழ்ச்சி, அவருடைய அன்பு, நகைச்சுவை அனைத்தும் கலந்ததொரு காணொளி. பார்த்தாலே சிலிர்க்கும்.

(கரயான் அவர்களின்  முகபாவம் கௌரவம் சிவாஜிகணேசனை நினைவுறுத்துகிறது  – சுந்தரராஜன்  )

            ஒவ்வொரு கலைஞனும் செல்லும் உயரத்தைத் தீர்மானிப்பவர்கள் ரசிகர்களே! இதைப் புரிந்துகொண்டு அவர்கள்பால் தானும் அன்பும், மதிப்பும், மரியாதையும் கொண்டு களிக்கும் இசை வல்லுனர்கள் பலர். வேறுமாதிரியாக இருப்போரும் உண்டு எனப் பின்னொரு நாளில் அறிந்தும் கொண்டேன்.

            நம்மூரில் ஒரு கச்சேரி. ரசிகர்களிடையே மிகப் பிரபலமான வித்வான். அருமையாகப் பாடிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் எல்லாரும் சங்கீத சாகரத்தில் மூழ்கி ஆனந்த அலைகளில் நீந்திக் கொண்டிருந்த தருணம். பின் வரிசைகளினின்றும் ஒரு வயதான அம்மையார் மெல்ல எழுந்து தட்டுத் தடுமாறி முன்னே வந்து கொண்டிருந்தார். ஒதுங்குமிடம் நோக்கி வழிதேடிச் சென்று கொண்டிருந்தார். முன்பக்கமாகவே வரவேண்டியிருந்தது. வித்வானுக்கு வந்ததே கோபம், பார்க்க வேண்டும். சைகை காட்டிப் பக்கவாத்தியங்களை நிறுத்தச் சொல்லித் தானும் பாடுவதை நிறுத்தினார்.  

            “நீங்கள் எங்கே போக வேண்டும் என்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்; பின்பு நாங்கள் பாடுவதைத் தொடர்கிறோம். நீங்கள் இப்படி நடுவில் எழுந்து நடப்பது தொந்தரவாக இருக்கிறது,” என்று ஆங்கிலத்தில் வேறு, கோபத்துடன் கூறினார் வித்வான். பேசாமல் அமர்ந்துகொண்டு அம்மையாரையே முறைத்துக் கொண்டிருந்தார்.

            இப்போது எல்லோரும் அந்த மூதாட்டியையே பார்த்தனர். அவருக்கோ ஒரே குழப்பம். என்னவாயிற்று எனப் புரியாமல் தவித்தார்; கலங்கிப் போய் விட்டார். நின்ற இடத்திலேயே நின்று செய்வதறியாது தடுமாறினார். பின் யாரோ ஒருவர் எழுந்து வந்து அந்த அம்மையாரை அழைத்துச் சென்றார். கச்சேரி தொடர்ந்தது; தொடர்ந்து கேட்கும் விருப்பம் காற்றில் பறந்து விட்டது.

            உள்ளம் பதறியது. என்றாவது ஒருநாள் எல்லாரும் இவ்வாறு வயதாகி நிற்போம். ஆசையாகக் கச்சேரி கேட்கவந்த ஒரு முதியவர் இயலாமையினால் ஒதுங்குமிடம் தேடினால் தப்பா? அதை இவ்வாறு வெளிச்சமிட்டுக்காட்டி அசிங்கப்படுத்தி மனம் வருந்தச் செய்யவேண்டுமா அந்த வித்வான்?

            விலாவாரியாகச் சொல்ல வேண்டாம். ரசிகர்களால்தான் கலைஞர்கள் உயரத்தை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். அதை நினைவிலிருத்திக் கொண்டிருந்தால் இதெல்லாம் நடக்கவே இடமில்லை அல்லவா?

            வாழ்க்கை வழங்கிய பல பாடங்களில் இதுவும் இன்னொன்று!

                                    ~~~~~~~~~~~~~~~~

நடுப்பக்கம் – சந்திரமோகன்

 

கல்கி எனும் சகாப்தம் | Life History Of Kalki | Story Of Ponniyin Selvan |  Writer Kalki | SuryanFM - YouTube

1.          கல்கி ( முதல் பாகம்) 

 

(கல்கி தன் கதைகளை பல பாகங்களாக எழுதினால் நாம் கல்கியை பற்றி இரண்டு பாகங்களாவது எழுத வேண்டாவா?)

 ‘சொர்க்க லோகம்’ பூவுலகில் கேள்விப்பட்டதைவிட மிகவும் நன்றாகவே இருந்தது. நிஜமாக சொர்க்கம் இப்படி இருக்கும் என்று தெரிந்து இருந்தால் பூலோகத்தில் இன்னும் சில நல்ல காரியங்கள் செய்து விட்டு ‘permanent residency status’ல் வந்து இருக்கலாம் என மனது சற்று அடித்துக் கொண்டது.

சொர்க்கத்தின் நுழைவு வாயிலே அவ்வளவு பிரமாண்டமாக, அவ்வளவு அழகாக இருந்தது. நான் சென்ற சமயம் அவ்வளவு கூட்டம் இல்லை.  வரிசையில் நானும் சேர்ந்து கொண்டேன். குளிர்ந்த சூழலில் இளையராஜாவின் இசை காதுகளுக்கு ரம்யமாக இருந்தது. கண்ணாடி தடுப்பின் வழியே சொர்க்கத்தின் நடவடிக்கைகளை வரிசையில் நிற்கும் பொழுதே நன்கு பார்க்கும் வசதி செய்து இருந்தார்கள்.

ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன. குன்னக்குடி, கத்ரி கோபால் நாத் ஒரு பக்கம் இசைத்துக் கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் MSV இசையில் TMS தனித்து பாடிக் கொண்டு இருந்தார். அவர் எதிரே சிவாஜி, MGR, கண்ணதாசன் ஆகியோர் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.

கருணாநிதியின் முன் சிறு கூட்டம். செயற் குழுவில் பேசுவது போல கையை உயர்த்தி ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். ஜெயல்லிதா,அருகில் யாரும் இன்றி தனித்து அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தார்.

கிரேசி மோகன் முன் அமர்ந்து ஒரு கூட்டம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருந்தது. என் கண்கள் MS அம்மாவை தேடியது. காரணம் அங்கு கண்டிப்பாக என் மனைவியை காண முடியும். ஆனால் அதற்குள் என் முறை வந்து விட்டது.

அங்கும் அதே கதைதான்.  நான் முன்பு அமெரிக்கா சென்ற பொழுது நிகழ்ந்த மாதிரி கை விரல்களோடு, கால் விரல்களையும் ஸ்கேனரில் பதிந்த உடன் என்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தும்ஒரு பெரிய திரையில் ஓடியது.

என்னாலும் பார்க்க முடிந்தது. ஆச்சரியம் பிறந்த சில ஆண்டுகள்வரை என் பாவக் கணக்கில் ஒரு புள்ளிகூட ஏறவில்லை. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்துவங்கியது.

பாவங்கள் அனைத்தும் நான் சம்பாதித்ததுதான். படைக்கும் பொழுது கடவுள் கொடுத்து அனுப்பியது  இல்லை.

நல்ல வேளை என்  புண்ணிய கணக்கிலும் சமமாகவோ, சற்று அதிகமாகவோ காட்டிக் கொண்டே வந்தது. ஏறக்குறைய ஓட்டு எண்ணும் பொழுது இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக ஓட்டு எண்ணிக்கை வந்து கொண்டு இருந்தால் வேட்பாளரின் மனது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என் மனது.

முடிவில் தலையில் கிரீடமும், மார்பு முழுதும் சட்டைக்கு பதிலாக  ஆபரணங்களை மாலைகளாக போட்டு இருந்த சொர்க்கலோக அதிகாரி என்னையும் அவர் முன் இருந்த திரையையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்.

நான் அவர் வாயில் இருந்து நல்ல வார்த்தை வர வேண்டும் என வேண்டாத தெய்வம் இல்லை.

அவர் தன் கர கரத்த குரலில் மெதுவாக “நன்று, சொர்க்கத்தில் நுழைய நீவிர் அனுமதிக்கப் படுகிறீர்கள். ஆனால் அடுத்த பிறவி எடுக்கும் வரை, தாற்காலிகமாகத்தான் தங்க இயலும்” என்றார்.

நானும் அவரை விட சற்று மெளிதான குரலில் சற்று பயத்துடன்,முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “நிரந்தரமாக இங்கு இருப்பதற்கு ஏதாவது வழி உள்ளதா” எனக் கேட்டேன்.

பதில் கூற சற்று நேரம் எடுத்து “இருக்கிறது. அடுத்த ரவுண்டில் சிறு அறிஞர் கூட்டம் இருக்கும். அவர்கள் சில கேள்விகள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் திருப்திப்படும் பதிலைக் கூறி விட்டால் வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

ப்பூ! இவ்வளவுதானா? பேங்கிலும், கம்பேனியிலும் எவ்வளவு பேரை நம்புகிற மாதிரி பதில் சொல்லி சமாளிச்சு இருக்கோம்.   என் மனது ‘permanent residency’ கிடைத்து விட்ட மாதிரியே சந்தோசத்துடன் அடுத்த மண்டபத்திற்குள் நுழைந்தேன்.

அப்பா! எவ்வளவு அறிஞர்கள். அவர்களில் பலரை பூவுலகில் இருக்கும்பொழுது போட்டோவில் பார்த்து இருக்கிறேன். அவர்களது படைப்புகளை படித்தும் இருக்கிறேன்.

அனைவர்க்கும் வணக்கம் கூறி அவர்கள் காட்டிய இடத்தில் அமர்ந்தேன். என்னை பற்றிய தவகல் அனைத்தும் அவர்கள் எதிரே இருந்த ஒரு பெரிய திரையில் ஓடியது.

ஆரம்ப காலத்தில் அறிவு பூர்வமாய் கேட்கும் அளவிற்கு நாம்தான் ஒன்றும் செய்ய வில்லையே? எனவே கேள்விகள் ஒன்றும் இல்லை. அப்பாடி.

பின் கடைசிபாகம் ஓடியது.

“நீவிர் கடைசி நாட்களில் நிறைய படித்தீரோ” கேட்டவர் ஜெயகாந்தன்

“ஆம் ஐயா, ஒரு துயர சம்பவத்தை மறக்க மாலை, இரவு பொழுதுகளில் சற்று படித்தேன்.”

“அதில் தவறு இல்லை. What’s up ல் சிறிது எழுதவும் செய்தீரோ” கேட்டது நம் சுஜாதா.

“பொழுது போவதற்கு சற்று பிதற்றினேன்” என்றேன்

“ஞானசூன்யம், ஞானசூன்யம்” என்றது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தேன், நம் K. பாலச்சந்தர் சாரின் குரல் அது. பரவாயில்லை மோதிர கையால்தான் குட்டு.

அருகில் கல்கி குனிந்த தலை நிமிரவில்லை. பக்கம் பக்கமாக சொர்க்கலோக வார பத்திரிகை ஒன்றுக்கு எழுதிக் கொண்டு இருந்தார்.

அவர் அருகே அமர்ந்து இருந்த  சாண்டில்யன் கேட்ட கேள்வி “கல்கியின்  கதைகள் அனைத்தும் படித்து இருக்கிறீர்களா?” என் உடம்பு சற்று குலுங்கி தூக்கிப் போட்டது.

 

2.          கல்கி. (பாகம் 2)

 

உடம்பு குலுங்கியது சாண்டில்யனின் கேள்வியால் அல்ல, என் மகன் ஸ்ரீராம் தொட்டு எழுப்பியதால்தான் என உணர்ந்தேன்.

“டாடி இன்று சீக்கிரம் walk போக வேண்டும் என்றீர்களே?” என ஸ்ரீராமின் குரலை கேட்ட உடன்தான் நான் கண்டது அனைத்தும் கனவு என தெரிந்தது.

கண்களை திறக்காமலேயே “நான், இன்று walk போகலப்பா” என்று கூறி விட்டு கனவை தொடர விரும்பினேன்.

கண்களை மூடி இருந்தும் அழகிய கனவு களைந்து விட்டது. முந்தைய இரவு ஒரு மணி வரை விழித்து ‘சிவகாமியின் சபதம்’ நான்காம் பாகத்தை முடித்ததின் தாக்கம்தான் அந்த கனவு.

‘பொன்னியின் செல்வனை’ இரண்டாவது தடவையாகத்தான் படித்தேன். இருப்பினும் முதல் தடவை படிப்பது போன்ற விறு விறுப்பு. இரவும் பகலுமாக படித்து முடித்தேன். ‘அலை ஓசையை’ கையில் எடுத்தேன், கீழே வைக்க மனமில்லை.

அவருடைய சிறு கதைகள் நூறுக்கும் சற்று குறைவாகவே படித்திருப்பேன். அனைத்திலும் பதுமை இருக்கும், எளிமை இருக்கும் கூடவே நகைச்சுவையும் இருக்கும். கல்கி ஒரு சகாப்தம். சாதனையாளர். அவரைப் பற்றி சில வரிகளில் சுருக்கமாக எழுத முயல்வது, கடல் நீரை கடுகுக்குள் அடைக்க முயல்வது போன்றதே. (கல்கியின் தாக்கம். அவர் உதாரணமே வருகிறது)

கல்கியின் புதினங்கள்தான் பல நூறு பக்கங்கள் என்றால் அவரின் நண்பர் சுந்தா எழுதிய கல்கியின்  வாழ்க்கை வரலாறு 912 பக்கங்கள் கொண்ட புத்தகம். 1954ல்  தனது 55 வயதில் மரணித்த கல்கி படைத்த படைப்புகள் சாகா வரம் பெற்றவை. இன்றும் புதிதாக படைக்கப் பட்டஙை போன்று காலத்தால் அழியாதவை.

 தியாக பூமியின் கதா நாயகியான ‘சரோஜா’ என்ற பெயரை தம் குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தனர் அன்றைய பெற்றோர். ‘பொன்னியின் செல்வன்’ கல்கி பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருந்த சமயம் ஒரு பாட்டி, தொடர் முடியும் வரை உயிர் பிச்சை கேட்டு இறைவனிடம் வேண்டிணாராம்.

அத் தொடரை எழுதும் பொழுது கல்கி அவர்கள் மூன்று தடவை இலங்கை சென்று வந்தாராம்.  நாம் கதையில் கூடவே பயணிப்பது போல இருக்கும். சுமார் 5 ஆண்டுகள் தொடராக வந்தது. பல நூற்றுக் கணக்கான வீடுகளில் அக்கதையை தனியே எடுத்து புத்தகமாக பத்திரப் படுத்தி வைத்தனர்.

நான் பிறந்த சமயம் வந்து கொண்டு இருந்த தொடர். எனக்கு படிக்கவும் பேசவும் தெரிந்து இருந்தால் என் பெயரைக்கூட அருள்மொழிவர்மன் என்றோ, வந்தியத்தேவன் என்றோ  வைக்க சொல்லி  கேட்டு இருப்பேனோ என்னவோ.

சரித்திர பாடம் புடிக்காதவர்களையும் விழுந்து விழுந்து சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கியர்களின் சரித்திரங்களை படிக்க வைத்தன அவருடைய படைப்புகள்.

நான்கூட சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை பாடமாக அல்லாது கதையாய் படித்து தெரிந்து கொண்டது கல்கியின் மூலம்தான். சுதந்நிர போராட்டத்தின் தாக்கத்தை கதையாய் சொல்லி உணர வைத்தார்.

கலையில் அவர் கை படாத துறை இல்லை. சுதந்திர போராட்டங்கள், சமூக சிந்தனை இவற்றின் ஊடே அவரால் இவ்வளவு படைப்புகள், எவ்வாறு முடிந்தது.

இது வரை கல்கியின் எழுத்துக்களை படிக்காத இளைஞர்கள் ஆர்வம் இருந்தால்  நேரம் கிடைக்கும் பொழுது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் சில பக்கங்கள் மட்டும் படியுங்கள். பின்னர் ஆறு பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிப்பீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி. சுமார் 2700 பக்கங்கள் மட்டுமே.

 எப்படியோ அடுத்த தடவை சொர்க்கத்திற்கு செல்லும் முன் இயன்ற வரை அவருடைய அனைத்து படைப்புகளையும் படித்து விட வேண்டும்.

அறிஞர் அவையின் முன் அன்று விழித்தது போல் திரு திருவென விழிக்கக் கூடாது.

சொர்க்கம் செல்லும் வாய்ப்பு (கனவில்தான்) கிடைக்கும் பச்சத்தில் காணும் காட்சிகளை கல்கியிடமே வார்த்தைகளை கடன் வாங்கி வந்து விரிவாக எழுதுகிறேன்.

கைரேகைகள் – ரேவதி ராமச்சந்திரன்

‘ஏ ரனியா.. ரே ரனியா. எழுந்திருக்கப்போகிறாயா இல்லை முதுகில் எட்டி உதைக்கட்டுமா? கொஞ்சம் தள்ளிப் போனால் போதும் கால் அகட்டிப் படுக்க வேண்டியது. வேலைக்காரர்களுக்கே இது ஒரு கெட்டபழக்கம். எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எழுந்திரு. என்ன  என்னை இப்படியே உருண்டைக் கண்களால் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறாயா?’

அம்மா ரொம்ப அன்பாக ‘ராணி குமாரி’ என்று பெயர் இட்டார்கள். அந்த ராணியைத்தான் எஜமானி ‘ரனியா’வாக்கி விட்டாள். இப்போது எல்லோரும், ஏன் வீட்டில் உள்ளவர்களும் நிஜப் பெயரை மறந்து விட்டனர். ஏழு வயதிலேயே ராணி ரனியாகி விட்டாள். எஜமானியின் பங்களாதான் அவளது உலகமும்.

தினந்தோரும் அடி உதை இல்லாமல் அவளுக்கு விழிப்பு வருவதில்லை, அன்று மட்டும் எப்படி வரும்! கோடை வெயில் நல்லவர்களுக்கேக் கண்ணை அழுத்தும்போது, கும்பகர்ணனோடு பழைய பந்தம் உள்ள ரனியா எம்மாத்திரம்! அன்றும் எஜமானி ரனியாவை ஒரு மாங்காயைத் தோல் சீவச் சொல்லி விட்டு தான் கட்டிலுக்குச் சென்று விட்டாள். ஆனால் தூக்கம் அவளிடம் செல்லாமல் ரனியாவிடம் போவதும் வருவதுமாக இருந்தது.

எஜமானியின் ஓர் அடி ரனியாவை நிமிர்த்தியது. அவளுக்கு எங்கே வேண்டுமானாலும் தூங்கும் பழக்கம். அதில் என்ன என்ன கனவுகள் – இனிப்பு பக்ஷணங்கள், புதிய துணிமணிகள், பக்கத்து வீட்டுப் பையன், எதிர் வீட்டு முனியா – என்று எல்லாம் வரும். இப்போதெல்லாம் எஜமானியின் மருமகளும் வருகிறாள். இப்போதுதான் அவளைப் பார்த்து ‘ஏன் அவள் ஆரஞ்சு வண்ண[ப் புடவையில் சோகமாக இருக்கிறாள்’ என்று யோசிக்கும்போதே ‘ஏ மகாராணி, நின்று கொண்டே எங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பாயா அல்லது ஏதாவது வேலை செய்வாயா?’ என்று எஜமானி மீண்டும் அவளது கனவில் மண்ணைப் போட்டாள். ‘கண்களைத் திறந்து கொண்டே கனவு கண்டால் எஜமானி நம்மைச் சும்மா விட மாட்டாள்’ என்று எஜமானியின் கூக்குரலிடையே வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.

ரனியா தூங்குவதைப் பார்த்து கத்திய எஜமானியின் குரலைக் கேட்டு மற்ற வேலையாட்களும் குழுமி விட்டனர். எல்லோரும் இப்போது இவளைத் திட்டப் போகின்றனர். சின்னவளாக இருப்பதில் இது ஒரு நஷ்டம். இந்தச் சமயத்தில் மருமகளின் அறைதான் சரண் அடையும் இடம். குளிர்ந்த நீரை பானையிலிருந்து அவசரமாக பித்தளைப் பாத்திரத்தில் நிறப்பிக்கொண்டு அந்த அறை நோக்கிச் சென்றாள்.

இப்போதெல்லாம் அவளுக்கு மருமகளைக் கவனித்துக் கொள்வதுதான் வேலை. அம்மா மிகவும் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இந்த வீட்டு டிரைவர் இவளை இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். அப்போது அவளுக்கு ஏழு வயது, இப்போது பதினான்கு. அப்போது எஜமானியின் கால்களுக்கு எண்ணைத் தேய்த்து விடும் ஒரே வேலைதான். இப்போது பதவி உயர்ந்து எஜமானியின் நிழலாகவே ஆகி விட்டாள். ஆனால் இப்போது எஜமானி அவளை மருமகளிடம் ஒப்படைத்து விட்டாள். கொத்து சாவியைக் கொடுக்கும் முன் நம்பகமான வேலையாளை ஒப்படைப்பதுதான் இந்த பங்களா வழக்கம் போலும்.

ரனியா சாயந்திரம்தான் வீட்டிற்குத் திரும்புவாள். ரனியாவின் அம்மா 5 வீடுகளில் பெருக்கித் துடைக்கும் வேலை செய்கிறாள். அப்பா சந்தையில் காய்க் கடை வைத்துள்ளார். மூன்று மூத்த சகோதரர்கள், பின் இரண்டு சகோதரிகளில் ரனியா நடுவில் உள்ளாள். எல்லோரும் வேலை செய்வார்கள். இப்போது அம்மாவின் காலைநேரத்து மசக்கையைப் பார்க்கும்போது வீட்டு மனிதர்களின் எண்ணிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை என்று தெரிகிறது.

அம்மா மாதிரி இங்கே மருமகள். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவள் அம்மா ஆகப் போவதுதான் ஒரே வித்யாசம். முழு வீடும் அவளை தலையாலும் கண்களாலும் தாங்குகின்றன. இந்தப் பங்களாவில் வசிப்பவர்கள் எத்தனை பேர்? நாள் பூரா வீட்டைத் தலையில் சுமந்து திரியும் எஜமானி, மிகவும் கோபக்கார எஜமானர், வேலை என்று சுற்றித்திரியும் ஒரு பையன், அவனுடைய மனைவி என்று இந்த நான்கு பேர்களுக்காக 5 வேலைக்காரர்கள், 2 வேலைக்காரிகள்.

ரனியா மருமளின் அறையில் தண்ணீரை வைத்தாள். அவள்  தூங்கிக் கொண்டிருக்கிறாள். கதவைத் திறக்கும் சப்தம் கேட்டும் எழுந்திருக்கவில்லை. நாள் பூரா படுக்கைதான். சாயந்திரம் சிறிது நேரம் மாடியில் இருப்பாள். இருட்டும் வரை அல்லது ரனியா வீட்டிற்குப் போகும் வரை. ரனியா அவளுக்கு நிழல் போல இருப்பாள். ஆனால் யார் நிழலுடன் பேசுவார்கள்! இரண்டு பேரும் ஒருவர் மற்றவருடன் பேசுவதில்லை. ஒருத்தி பேசாமல் கண்களால் ஆணை இடுவாள், மற்றொருத்தி பேசாமல் வேகமாக அதனைச் செய்து முடிப்பாள். இருவரும் அவரவர் உலகத்திலே.

அதனால் ஒரு நாள் மருமகள் மௌனத்தை உடைத்த போது ரனியா திடுக்கிட்டாள். சென்ற வாரம் புதன் கிழமை. ‘மருமகளால் குனிய முடியவில்லை, நீ அவளுக்கு காலை அலம்பி, நகம் வெட்டி, சிவப்பு சாந்து வைத்து விடு’ என்று எஜமானி உத்தரவிட்டாள். ரனியா அவ்வாறே வாளியில் சுடு தண்ணீர் எடுத்து வந்தாள். மருமகளும் காலை அதில் நனைத்தாள். ரனியா அவளது அழகான பாதங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். எஜமானியும் அழகுதான். ‘வெள்ளை நிறமாயிருந்தால் கழுதையும் அழகுதான்’ என்று அம்மா சொல்வார்கள். ‘கால்கள் நன்றாக இருந்தென்ன, கைரேகைகள் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு நடப்பதற்கு சின்ன பூந்தோட்டம்தான் கிடைத்துள்ளது, உன்னை மாதிரி பறக்க பரந்த வெளியா உள்ளது?’ என்று மருமகள் அங்கலாயித்தாள். எல்லோருக்கும் அடுத்தவர் வாழ்க்கைதான் நல்லதாகத் தெரிகிறது. சில துக்கங்கள் சொல்ல முடிவதில்லை. ‘கைரேகைகள் எப்படி இருந்தாலென்ன, என்னை மாதிரி காலில் ரேகை இல்லாமல் எஜமானியின் கால் அழகாக இருக்கின்றன’ என்று ரனியா நினைத்தாள்.

இங்கே அம்மா வயிறு பெரிதாகிறது, அங்கே மருமகளின். மருமகளை  ஒரு வேலை செய்ய விடுவதில்லை. சாப்பாடு கூட படுக்கையில்தான். எஜமானி ரனியாவை அவள் கூடவே இருக்கச் சொல்லி விட்டாள், பாத்ரூம் போவதானால் கூட. வேலை என்னவோ எளிதாகத் தெரிந்தாலும், பேசாமல் நாள் கழிவதைப் பார்த்துக் கொண்டே இருத்தல் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அம்மா இன்னமும் அந்த 5 வீடுகளிலும் பெருக்கித் துடைக்கும் வேலை செய்து வருகிறாள். ஆகவே ரனியாவும் அவளது சகோதரிகளும் வீட்டு வேலைப் பார்த்துக் கொண்டு அம்மாவை சிறிது ஓய்வு எடுக்க வைக்கிறார்கள். ஆனால் அம்மாவோ ‘பயப்படாதீர்கள், இது நமக்குப் பழக்கமான ஒன்று’ என்று இவர்களை ஆசுவாசப்படுத்துகிறாள். எப்போதாவது மருமகளைப் பற்றி பேசும்போது ‘நாம் ஓய்வு எடுக்கும் அளவுக்கு நமது கைரேகைகள் இல்லை. எத்தனை தடவை இந்த மாதிரி ஆகி விட்டது. மருமகள் மாதிரி தவம் செய்து ஒன்றுதானா?’ என்று தன் உப்பிய வயிறைத் தொட்டுக் கொண்டே ரொட்டி செய்யலானாள். ஒரு வேளை கைரேகைகள் வயிற்றோடு சம்பந்தப்பட்டதுவோ!

எட்டாவது மாதமே மருமகளை ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரனியாவையும் அங்கேயே இருக்கச் சொல்கிறார்கள். என்ன பயம் என்று தெரியவில்லை! எஜமானி எப்போதும் பூஜை செய்வதும், வேண்டுதல்கள் வைப்பதுமாக இருக்கிறாள். சாயந்திரம் பிரசாதம் எடுத்துக் கொண்டு மருமகளைப் பார்க்க வருவாள். இப்போது யாரையும் திட்டுவதில்லை, கோபிப்பதில்லை. பூஜையின் புண்யத்தால் ஒரு பேரன் பிறக்க வேண்டி ஆஞ்சநேயருக்காக 11 செவ்வாய்க்கிழமைகள் நீர் கூட பருகாத விரதம் இருக்க எண்ணினாள்.

‘குழந்தை பிறப்பது என்ன அவ்வளவு கஷ்டமா, அம்மா ஒவ்வொரு வருடமும் ஒன்றைப் பெற்றுக் கொள்கிறாளே!’ என்று ரனியா எண்ணினாள். மருமகளின் கணவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவள் அருகிலேயே இருந்தார். அம்மா அப்பா மாதிரி அவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதும் இல்லை. அருகருகே இருந்தும் விலகியே இருந்தனர். சண்டைபோட்டாலும் அம்மா அப்பா எல்லா வருடமும் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனரே!.

ஒரு நாள் ரனியா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் அம்மா அரற்றிக் கொண்டிருந்தாள். ரனியாவின் பெரிய தமக்கை பக்கத்து வீட்டுப் பாட்டியைக் கூப்பிடச் சென்றாள். அம்மாவின் முகம் கருப்பதைப் பார்த்து யாரையாவது கூப்பிட வேண்டுமா, இல்லை அம்மாவின் அருகிலேயே இருக்க வேண்டுமா என்று ரனியாவிற்குப் புரியவில்லை. அவள் இது வரை இப்படிப் பார்த்ததில்லை. தமக்கைமார்கள் சொல்ல சிறிது கேட்டிருக்கிறாள். ஒன்றும் செய்வதறியாது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். ‘அந்தத் துணியை எடு, சிறிய பாத்திரத்தில் சுடு தண்ணீர் கொண்டு வா, உன் அப்பா இன்னும் வரவில்லையா, சரிதா எங்கே போய் விட்டாள்’ என்று அம்மா முனகிக் கொண்டே இருந்தாள்.. இதற்குள் சரிதா இரண்டு பெரியவர்களை அழைத்து வந்தாள். அவர்கள் இவர்கள் இருவரையும் வெளியே போகச் சொல்லி விட்டு அம்மாவைப் பார்க்கலாயினர். கதவருகில் உட்கார்ந்தவாரே தூங்கி தன் கையில் தங்கக் கோல் இருப்பதாகக் கனவு கண்டு கொண்டிருந்த ரனியாவைப் பலவந்தமாக உலுக்கி ‘கும்பகர்ணனின் சகோதரியா நீ, ஒரு மணி நேரமாகக் கூப்பிடுகிறேன். உள்ளே போ, உனக்குத் தம்பி பிறந்திருக்கிறான். ரொம்ப அழகாக, நெற்றியில் கரு முடிகள், சிவந்த நிறம், போய் அம்மாவைப் பார்த்துக் கொள்’ என்று பாட்டி சொன்னார்கள்.

உள்ளே அம்மா களைத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. பக்கத்தில் அழகான குழந்தை. ரனியா அவன் பக்கத்தில் படுத்துக் கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து எழுந்த ரனியா அம்மா முற்றத்தில் அடுப்பு மூட்டுவதையும், அப்பா காய்களை எடுத்து வைத்துக் கொள்வதும், சரிதா சின்னப் பையனைக் கையில் வைத்துக் கொண்டே பெருக்குவதையும் பார்க்கிறாள்.

அவசரமாக முகம் அலம்பிக் கொண்டு ரனியா ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். 1 ½ மாதங்களாக மருமகள் ஆஸ்பத்திரியில். அம்மா பிள்ளைப் பெற்றதைப் பார்த்து ரனியா டாக்டர்கள் பைத்தியமோ என்று எண்ணுகிறாள். மருமகள் என்ன நோய்வாய்ப்பட்டா இருக்கிறாள், பிள்ளைதானே பெற்று எடுக்க வேண்டும்!

ஒரு நாள் ஆஸ்பத்திரியில் டிரைவர் ரனியாவைத் தடுத்து ‘இனி நீ இங்கு வேண்டாம், வீட்டிற்குப் போய் விடு’ என்கிறார். அறையில் மௌனம். மருமகளின் உப்பிய வயிறு இல்லை. பையன் டாக்டரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான். எஜமானி கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறாள். ஏன் தாமதம் என்று யாரும் இவளைக் கேட்கவில்லை. டிரைவர் அவளை இழுத்துக் கொண்டு கீழே வருகிறார். ‘என்ன ஆச்சு மருமகள் தூங்கிக் கொண்டிறாள். பின் ஏன் பதட்டம். மருமகளின் வயிறு..’ அவளை முடிக்க விடாமல் ‘இறந்த குழந்தை வெளி வந்துள்ளது. இதைத்தான் இத்தனை நாட்களும்  நீ சேவகம் பண்ணினாயோ! என்ன பாக்கியம் பண்ணியிருக்காள் மருமகள்’ என்று டிரைவர் கூறினார்.

ரனியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘இறந்த குழந்தை எப்படி வயிற்றிலிருந்து வரும்? அம்மாவிற்கு என்ன அழகான குழந்தை பிறந்துள்ளது. நாம் பிறகு மருமகளிடம் கேட்போம் இப்போது இந்தக் கிழம் நம்மை உள்ளே விடாது’ என்று ரனியா மனதிற்குள் எண்ணினாள். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் இவள் ஓடிப் போய்ப் பார்த்தபோது ‘போ ரனியா இனி நீ தேவையில்லை, ஏன் நானே தேவையில்லை’ என்று மருமகள் ஈன ஸ்வரத்தில் கூறினாள்.

வீட்டிற்கு வந்து தன் தம்பியை மடியில் இருத்தி சிவப்பு நிற புடவையில் மருமகளைக் கனவில் காண்கிறாள். அப்படியே அவளுடைய சிவந்த பாதங்களையும், இங்கும் அங்கும் ஓடும் அவளது கைரேகைகளையும்!

 

 

பவா செல்லதுரை சியேட்டிலில்

StarsUnfoldedதிருவண்ணாமலையிலிருந்து  எழுத்தாளர், கதை சொல்லி, சமூக  சிந்தனாவாதி திரைப்பட நடிகர் என்று பலபலநிறப் பட்டைகளில் ஒளிவீசும் வைரம் பவா  செல்லத்துரை அவர்கள்.

நண்பர்கள் விருப்பப்படி அமெரிக்காவிற்கு தனது ரசிகர் வட்டாரத்துடன் கலந்து உரையாட வந்துள்ளார்கள்  பவா  அவர்களும் அவரது துணைவியார் கே வி சைலஜா அவர்களும் .

கே வி சைலஜா அவர்களும் சிறந்த கதை சொல்ல எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

இருவரும் சியேட்டிலில் சுமார் 150 தமிழ் அன்பர்களுடன் உரையாடியாது மிகவும் சிறப்பாக இருந்தது.

ஷைலஜா அவர்கள் தான் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த ‘சிதம்பர நினைவுகள்’ மற்றும் பல நூல்களைப் பற்றியும்  அதன் மையக் கருத்தான பெணணீயத்தை உணர்ச்சி பூர்வமாகக் கதையாகச் சொன்னவிதமும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  

பவா அவர்கள் அமெரிக்கவாழ் இந்தியர்களைக் கிண்டல் செய்யும் சக்காரியா அவர்களின் மலையாள நாவல் ‘சலாம் அமெரிக்கா’ பற்றிப் பேசிக் கலகலப்பை உருவாக்கினார். அத்துடன் பிரபஞ்சனின் மீன் கதையைப் பற்றியும் மற்றும் அவர் சொல்லும் ஒரு தாத்தா – பல பாட்டிகள் கதையையும் கூறி மகிழ்ச்சி அலை தொடந்து வரச் செய்தார்.  

பின்னர் பவா அவர்கள் பார்வையாளர்கள்  கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்ன விதம் அனைவரையும் கவர்ந்தது.   அதிலும் குறிப்பாக அமேரிக்கா வாழ் மக்கள் இந்தியாவில் ஆர்கானிக் விவசாயம் செய்யமுடியுமா? புலம் பெயர்ந்த மக்கள் என்ன கதை எழுதலாம் ? என்ற கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் மனதைத் தொடும் அளவிற்கு இருந்தது.

அவர் என்ன சொன்னார்? கே வி சைலாஜா அவர்கள் சொன்ன கதைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள சியேட்டில் நகரில் அவர்கள் பேசிய உரையின்  காணொளியைக் கேளுங்கள். 

 

சூர சம்ஹாரம் – நாடகம் இண்டஸ் கிரியேஷன்ஸ் சியேட்டில்

ஜூலை 8 , 9 தேதிகளில் இண்டஸ் கிரியேஷன்ஸ் , சியேட்டில் வழங்கிய சூர சம்ஹாரம் நாடகம் படு தூள். ! நல்ல அழுத்தமான நாடகம்.( POWERFUL  PLAY) 

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறப்போகும் அந்த ஆகஸ்ட் மாதம்!

இந்தியாவிலிருந்து மிக முக்கியமான பொக்கிஷத்தை  இங்கிலாந்துக்கு ரகசியமாக  எடுத்துச் செல்ல முயலும் ஜெனெரலிடமிருந்து அதைக் காப்பாற்ற தங்கள் உயிரையே பயணம் வைக்கும்  நான்கு குறிஞ்சிக்குறவர் என்ற பழங்குடியினர். ஆங்கிலேயருக்கு சவால் விட்டு பொக்கிஷத்தைக் காப்பாற்றித் தங்கள் ஊரில் சுடுகாட்டில் உள்ள முருகன் சிலைக்கு அடியில் பத்திரப்படுத்திவிட்டு உயிரை விடுகிறான் வெற்றிவேலன் என்ற நாயகனும் அவன் நண்பனும். பொக்கிஷம் பற்றிய விவரத்தைத்தன் வீர மனைவி வள்ளியிடம் மட்டும் சொல்லிவிட்டு தகுதியானவர் வந்தால் மட்டும் கொடுக்கும்படி ஆணையிட்டு மறைகிறான் வெற்றி வேலன். வேலனும் அவன் நண்பனும்  பாம்பாக மாறி அந்தப் பொக்கிஷத்தைக் காத்து வருகிறார்கள். 

வள்ளி நாட்டுக்காகப் பாடுபட்டுப் பேரும் புகழும் அடைந்து பின்  தனது 93 வது வயதில் தகுதியான ஒருவரைக் கண்டுபிடிக்கிறாள். அவர் அன்றைய தமிழகத்தின் முதலமைச்சர். நேர்மைக்கும் நீதிக்கும் நாட்டுப் பற்றுக்கும் பேர் போனவர். 

அவர்கள் அந்த பொக்கிஷத்தை எடுக்கப் போகும்போது , பிரிட்டிஷ் நாட்டு அரசு ரகசிய உத்தரவுப்படி ஒரு பெண் எஜண்ட் அதைக் கொள்ளை அடிக்க முயலுகிறாள். அதற்காக அந்த ஊரையே அழிக்கவும்  திட்டமிடுகிறாள்.   

அந்த சூர சம்ஹார நாளில் முதலமைச்சரிடம் அந்தப் பொக்கிஷத்தைக்  வள்ளி கொடுக்க முயலும்போது அந்த பிரிட்டிஷ் உளவாளி முதலமைச்சர் கழுத்தில் துப்பாக்கியை வைத்து தன்னிடம் அதனை ஒப்படைக்குமாறு மிரட்டுகிறாள்.

அப்போது முதலமைச்சர் உடலில் புகுந்த வெற்றிவேலன் அந்த உளவாளியைத்  தாக்கி பொக்கிஷத்தை எடுத்து இந்திய  நாட்டிற்கு அதனை  அர்ப்பணிக்கிறான். 

அந்தப் பொக்கிஷம் என்ன? அது எப்படி இந்தியாவை  சூப்பர் பவராக மாற்ற உதவியது என்பது அழகான சின்ன சஸ்பென்ஸ்! 

கதை – நடிப்பு – வசனம், -அரங்க அமைப்பு – நடனம்- சண்டை – ஒலி -ஒளி அனைத்தும் ஒன்றோரு ஒன்று  போட்டி போட்டுக்கொண்டு மிகச் சிறந்த தரத்தில்   அமைந்திருப்பது இந்த நாடகத்தின் வெற்றிக்குக் காரணம். 

90 க்கும் மேற்பட்ட மக்கள் மேடையிலும் மேடைக்குப் பின்னாலும் உழைத்திருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் பெருமிதமடைகிறது.

மதுரையில் ஒரு சிலை செய்பவரிடம் இந்த நாடகத்திற்கு முக்கிய பாத்திரமான அந்த முருகன் சிலையைச் செய்து கொண்டு வந்தார்களாம். அதைப் போல  அந்தப் பொக்கிஷமும் இதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்டதாம். 

18 ஆண்டுகளாக சியேட்டில் நாடக உலகில் கொடி கட்டிப் பறக்கும் இண்டஸ் கிரியேஷன்ஸ் ( விவேக் நடித்த வெள்ளைப் பூக்கள் திரைப்படமும் இவர்கள் தயாரிப்புதான்)    நிறுவனத்திற்கு இந்த சூர சம்ஹாரம் ஒரு மாபெரும் வெற்றி நாடகம்! 

அவர்களுக்கு நம்முடைய  வாழ்த்துகள்.! 

இந்த நாடகத்தின் சில காட்சிகளை எடுத்து விமர்சன வீடியோவாக மாற்றி யூ டியூபில் பதிவிட்டவருக்கு நன்றி! பாருங்கள் பிரம்மித்துப் போவீர்கள் !

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – ஜுன் 23 – மந்திரமூர்த்தி அழகு

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

இந்த ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாக எழுத்தாளர் அரவிந்தனின் ‘விருது’ சிறுகதையைத்  தேர்வு செய்கிறேன் -மந்திரமூர்த்தி அழகு 

முன்பு இலக்கியச் சிந்தனையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளில் இருந்து சிறந்த சிறுகதையினைத் தேர்ந்தெடுக்கும் விமர்சனம் மீது எனக்குத் தீராக் காதல் உண்டு. 

கடந்த ஜூன் மாதத்தில் வெளியான சுமார் 60 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தேர்வுக்காக வாசித்தேன். சொல்வனம், உயிர்மை, திண்ணை, கனலி, படைப்பு, வனம், ஆவநாழி, அந்திமழை ஆகிய மின்னிதழ்களில் இருந்தும், காலச்சுவடு, ஆனந்த விகடன், கணையாழி, அமுதசுரபி, குங்குமம், குமுதம், பூபாளம், அம்ருதா, தினமலர், தினமணி கதிர் உள்ளிட்ட அச்சு இதழ்களில் இருந்து 65 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்தேன்.

நான் வாசித்த 65 சிறுகதைகளில் இருந்து 10 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இவற்றில் இருந்து மிகவும் பிடித்த ஒன்றை இந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்ய வேண்டும்.

1. ஊட்டி வளர்த்த கதை – எழுத்தாளர் அரவிந்தன் (அந்திமழை)
2.குடம் – எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜே (வனம் மேகசின்)
3. ஈரல் – எழுத்தாளர் சுஷில் குமார் (வனம் மேகசின்)
4. கிரிஸ்ஸோபதேசம்- எழுத்தாளர் ஜாபாலன் (சொல்வனம்)
5.உள்ளிருத்தல் – எழுத்தாளர் ஆதித்யா ஸ்ரீநிவாஸ் (சொல்வனம்)
6.ஆனை விழுந்தான் கேணி – எழுத்தாளர் அண்டனூர் சுரா (விகடன்)
7.முகம் – எழுத்தாளர் சரவணன் சந்திரன் (உயிர்மை)
8.மூக்குத்தி – எழுத்தாளர் சரவணன் சந்திரன் ( கனலி)
9.மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் – எழுத்தாளர் அ முத்துலிங்கம் ( பூபாளம்)
10.விருது – எழுத்தாளர் அரவிந்தன் (அம்ருதா)

இந்தக் கதைகள் தவிரவும் இந்த ஜூன் மாதத்தில் பல சிறந்த சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பத்துச் சிறுகதைகளில் எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதியுள்ள சிறுகதைகள் இரண்டும், எழுத்தாளர் அரவிந்தன் எழுதியுள்ள சிறுகதைகள் இரண்டும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பத்துச் சிறுகதைகளும் எடுத்துக் கொண்ட செய்திகளைச் அருமையான முறையில் பேசி இருக்கின்றன.

முதலாவதான ‘ஊட்டி வளர்த்த கதை’  சுமார் 10 வயது வரை பெண் குழந்தைக்கு இளம் தம்பதியர் உணவு ஊட்டுவதற்குப் ‘படுகின்ற பாட்டைப்பற்றி பேசுகிறது. அதனால் குடும்பத்தில் எழும் குழப்பங்கள், சண்டைகளையும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் அரவிந்தன். குழந்தைகளுக்குக் கதை சொல்லி ஈர்க்கலாம்; அதனால் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளைக் குறைக்கலாம் என்பதையும் அழகாகச் சொல்லி இருக்கிறார் அரவிந்தன். எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ள சிறப்பான கதை.

இரண்டாவது கதை எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜே எழுதிய ‘குடம்’ சிறுகதை. நாகர்கோவிலைக் களமாகக் கொண்டு எழுதியுள்ள கதை. விபச்சாரத் தொழிலில் விழுந்த பெண்ணின் கதையை மண்ணின் மொழியில் பேசுகிறது. யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் சொல்லப்பட்டு இருக்கின்ற சிறப்பான கதை. இது போன்ற பெண்களைக் குறித்த கதைகள் தமிழில் இதற்கு முன்பும் பேசப்பட்டு இருக்கின்றன.

மூன்றாவது சிறுகதையான ‘உள்ளிருத்தல்’ எழுத்தாளர் ஆதித்யா ஶ்ரீநிவாஸ் எழுதியது. தெருவில் புடவை விற்ற ஒருவன் ஒரு பெரிய ஜவுளிக்கடை முதலாளி ஆகிறான். தனது 2 மகன்கள் தலை எடுத்த பிறகு அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு பிசினஸ்ஸை விட்டு ஒதுங்குகிறான். அவ்வப்போது ஓரிரு பிரச்சனைகள் வரும் போது தீர்த்து வைத்தவன் வங்கியில் வாங்கிய கடனுக்கு கடை ஜப்திக்கு வரும் போது பற்றை விட்டு விலகி நிற்கிறான். மனைவிக்கு அவளது ஜீவனத்துக்கு வேண்டிய வசதிகளைச் செய்து விட்டு காசிக்கு ரயில் வண்டியில் ஏறும் பழைய பாணிக்கதை. சிறப்பான முறையில் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் ஆதித்யா ஶ்ரீநிவாஸ்.

நான்காவது சிறுகதை எழுத்தாளர் சுஷில் குமாரின் ‘ஈரல்’ சிறுகதை. ஈரல் அறுவை சிகிச்சை இருவருக்கும் தேவையாக இருக்கிறது. இருவருமே ஏழ்மைப் பெண்கள். கட்டணம் செலுத்தி சிகிச்சை எடுக்க முடியாது. இளம் வயது டாக்டர் ஒரு பெண்ணைக் கைவிட்டு இன்னொரு பெண்ணை இலவசக் கல்லீரல் சிகிச்சைக்குத் தேர்ந்து எடுப்பதைச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் சுஷில் குமார்.

எழுத்தாளர் ஜாபாலன் எழுதியுள்ள ‘கிரிஸ்சோபதேசம்’ தேர்வின் ஐந்தாவது சிறுகதை. குண்டலினி யோகாவுக்கு புதிய ஆப் தயாரிக்கும் ஒரு start up கம்பெனியின் செயலியை உருவாக்குவதில் மூளையாகச் செயல்பட்ட அர்ச்சுனனுக்கு உடன் வேலை பார்த்த ஒருவனே அந்த செயல்முறை ரகசியத்தைத் திருடி வில்லனாகிறான். அவன் போட்டி ஆப் ஒன்றைத் தயாரிக்கிறான். அர்ச்சுனனின் மென்டர்கள் பலரும் அவனது போட்டியாளனுக்குத் துணை நிற்க அர்ச்சுனன் கலங்குகிறான். பாரதத்தில் அர்ச்சுனன் தொடர்ந்து செயலாற்ற கண்ணன் துணை நிற்பது போல இங்கும் ஒருவன் வழிகாட்டி அறிவுரை சொல்லவும், பண உதவிசெய்யவும் துணை நிற்கிறான். நவீன மகாபாரதத்தில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இருவருக்கும் முதலீடு செய்வது ஒரே கார்ப்பரேட் முதலாளி தான் என்ற டுவிஸ்ட். பகடியோடு சிறப்பாகக் கதை எழுதியுள்ள எழுத்தாளர் ஜாபாலனைப் பாராட்டலாம்.

அடுத்து எழுத்தாளர் அண்டனூர் சுராவின் ‘ஆனை விழுந்தான் கேணி’ என்ற ஆறாவது சிறுகதை. இது வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் காதல் கதை (?) எனலாம். மணமகனது ஊர் ஆனை விழுந்த காணி என்று நினைத்துக் காதலிக்கிறாள் கதையின் நாயகி. ஆனால் ரெக்கார்டு படி மணமகன் ஊர் கேணி என்று இருப்பதைக் கண்டு மிரண்டு போகிறாள். காரணம் அவளது தாய் மாடு முட்ட வந்த போது நீர் இல்லாத கேணியில் தவறி விழுந்து இறந்து போனவள் . கடைசியில் அவள் எவ்வாறு மணம் முடிக்க சம்மதிக்கிறாள் என்பது தான் கதை. அண்டனூர் சுராவின் நகைச்சுவையான ஓட்டம் கதையின் சிறப்பு எனலாம்.

ஏழாவது கதை எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய ‘முகம்’ சிறுகதை. மருத்துவம் படிக்கும் பணக்காரப் பெண் குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு அடிதடியில் ஈடுபடும் ஒருவனைக் காதலித்துக் கரம் பிடிக்கிறாள். அவனை விரும்ப அவனது அழகான முகம் தான் காரணம் என்கிறாள். ஒரு தகராறில் முகத்தில் அவனுக்கு 3 வெட்டு விழுந்து முக அழகு பாழாகி விடுகிறது. ஆனால் அவனது மனைவி அதனால் அவனை வெறுக்கவில்லை. அவளது மனதில் அந்தப் பழைய அழகிய முகம் தான் நிற்கிறது என்கிறாள். சிறு சிறு பிரச்சனைகள் இருவருக்குமிடையே தொடர்ந்து வருகின்றன . தற்போதும் அவனது வெட்டுப்பட்ட முகத்தை விரும்பப் பெண் உண்டா? அப்படி வந்தால் விளைவு என்னவாகும் என்பதுதான் கதை. சரவணன் சந்திரன் கதையைக் கோர்வையாகச் சொல்லிச் செல்வதும், வாசகர்களுக்கு யூகிக்கச் சிலவற்றை விட்டுச் செல்வதும் எப்போதும் அவரது கதையின் அழகு.

எட்டாவது சிறுகதையான ‘மூக்குத்தியும்’ எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதியுள்ளது தான். அனுமாஷ்ய சக்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதை. சரவணன் சந்திரனுக்குப் பிடித்தமான களம். விலை உயர்ந்த நகைகள் திருட்டுப்போன வீட்டிற்கு விசாரிக்கச் செல்லும் கால்நடை ஆய்வாளர் அங்குத் தனியாக விழுந்து கிடந்த மூக்குத்தியை எடுத்துத் தனது பேண்ட் பையில் போட்டது முதல் உரிய இடத்தில் அதனைச் சேர்ப்பிப்பது வரையுள்ள சம்பவங்களைத் . திரில்லராகக் கதை கூறுகிறது. விறுவிறுப்பான அனுமாஷ்யச் சிறுகதை.

அடுத்து ஒன்பதாவது கதையானது எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சிறுகதை. கதையின் தொடக்கமானது டாக்டரம்மா குறித்த கதையோ என்று எண்ண வைக்கிறது. ஆனால் கதை போரினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்துப் பேசுகிறது. குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பிரச்சனை குறித்துப் பேசுகிறது. அவளது உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரும் வகையில் கணவன் நோய்வாய்ப்பட்டு போதையுடன் சீரழிக்கும் போது குழந்தைகளைக் காப்பாற்ற அவள் எடுக்கும் முடிவு என்ன? என்பது தான் கதை. எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் வாசகனுக்கும் யூகிக்க இடம் கொடுத்து கதையினை அருமையாகச் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

பத்தாவதான இறுதிக்கதை எழுத்தாளர் அரவிந்தனின் ‘விருது’ சிறுகதை. இன்றைய மார்கெட்டிங் உலகத்தின் முகம் என்ன? என்பதை இந்தக் கதையில் அருமையாக எழுதி இருக்கிறார் அரவிந்தன். நானும் ஒரு மார்க்கெட்டிங் ஆசாமி என்ற முறையில் கதை என்னை வெகுவாக ஈர்த்தது. விற்பனை உலகில் ஃபீல்டு மார்கெட்டிங் என்பது மிகவும் சிரமமானது. உழைக்கும் உழைப்பிற்கு ஏற்ற பலன் தருவதாக பல சமயங்களில் இருக்காது. கதையில் இறங்கி விளையாடி இருக்கிறார் அரவிந்தன். தேவையான செய்திகளை அருமையாகக் கதையில் பரிமாற்றம் செய்து இருக்கிறார்.

இந்த ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாக எழுத்தாளர் அரவிந்தனின் ‘விருது’ சிறுகதையைத் தேர்வு செய்கிறேன்.

தேர்ந்தெடுக்க வாய்ப்பளித்த குவிகம் அமைப்புக்கு மிக்க அன்பும், நன்றியும்.

எல்லாமே  என் கையில் – நித்யா சங்கர்

காதல் விவகாரம் : 15 ஆவது மாடியில் இருந்து குதித்த இளைஞர்!! | வவுனியா நெற்

‘பிறப்பும், இறப்பும் மனிதர்களாகிய நம் கையில் இல்லை.. எல்லாம் வல்ல
இறைவன் என்ன எழுதியிருக்கானோ .. அதது, அப்பப்ப, அப்படியப்படி நடக்கும்..
எல்லாம் அவன் சித்தம்..’

முந்தைய நாள் சொற்பொழிவில் குருஜி சொன்ன வார்த்தைகள் அந்த மூன்று
நண்பர்கள் காதுகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று அதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

‘வாட் ரப்பிஷ்.. குருஜியும், அவரைச் சேர்ந்தவர்களும் இன்னும் பதினாறாம்
நூற்றாண்டிலேயே இருக்கிறார்கள். டெக்னாலஜியும், மெடிகல் ஸயின்ஸும்
டெவெலப் ஆன இந்தக் காலத்திலே, அவனவன் நாளையும் குறித்து, முகூர்த்த
வேளையையும் குறித்து குழந்தையைப் பெத்துக்கறாங்க… இப்போ பிறப்பும்,
இறப்பும் டெக்னாலஜி கையில்… அதாவது நம் கையில்..’ என்றான் மோகன்.

‘இல்லடா மோகன்.. அப்படிச் சொல்ல முடியாது.. நீ சொன்ன மாதிரி
எத்தனையோ பேர் டெக்னாலஜி உதவியாலே நல்ல நட்சத்திரம் உள்ள நாளில்
ஸிஸரியன் மூலமா குழந்தையைப் பெத்துக்கறாங்க.. சரிதான். ஆனா அதுலே
எத்தனை கேஸ்கள் ஏதாவது தடங்கல் வந்து – திடீர்னு கரண்ட் கட் ஆகியோ,
டாக்டர் வர தாமதமாகியோ, வேறு ஏதாவது காம்ப்ளிகேஷன் ஆகியோ – குறித்த
நேரத்திலிருந்து தள்ளிப் போகுது.. சில கேஸ்கள் அவர்கள் குறித்த நாளுக்கு
முன்னாடியே பிரசவ வலி ஏற்பட்டு எமர்ஜன்ஸி ஆபரேஷன் செய்து குழந்தை
பிறந்து விடுது. அப்போ கடவுள் எழுதி வெச்சது அதுமாதிரின்னு எடுத்துக்-
கலாமே..’ என்றான் சேகர்.

‘அப்போ.. அவங்க குறிச்ச டைம்லே நிறைய பிரசவம் நடக்குதே.. அது..’
என்று கேட்டான் மோகன் ஒரு வெற்றிப் புன்னகையோடு.

‘அந்தக் கேஸ்களிலே கடவுளும் அது மாதிரியே எழுதி வெச்சிருந்திருக்-
கலாம்..’ என்றான் சேகர்.

‘இப்போ ஒரு மனிதன் சாகணும்னு நெனச்சான்னா அதுக்கு எத்தனையோ
வழிகள் இருக்கு,..’…. மோகன்

‘ஆமா .. அப்போ தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யற
எல்லோருமே சாகணுமே…அப்படி இல்லையே… அப்படி முயற்சி பண்ணின
எத்தனை பேரை இதே மெடிகல் ஸயின்ஸும், டெக்னாலஜியும் காப்பாத்தி
இருக்கு… அவங்களுக்கு இன்னும் வேளை வரலைன்னு அர்த்தம்..’ என்றான்
சேகர் தீர்மானமாக.

‘ஆமா.. நிகில்.. நீ என்னடா ஒண்ணுமே சொல்லலே… ‘ என்று நிகிலிடம்
கேட்டான் மோகன்.

‘டேய்.. இந்த மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தால் என்னடா
ஆகும்?’ என்று கேட்டான் நிகில்.

‘ஒரு எலும்புத் துண்டு கூடக் கிடைக்காது. எல்லாம் சிதறிப் போயிடும்..’
என்றான் மோகன் காஷுவலாக.

‘அப்போ.. நாளைக்குப் பேப்பர்லே, என் ஃபோட்டோவையும் போட்டு,
‘பிறப்பும், இறப்பும் நம் கையில்’ என்று நிரூபிக்க மொட்டை மாடியில்
இருந்து கீழே குதித்து இறந்த வாலிபன்’னு கொட்டை எழுத்திலே எல்லா
தினசரிகளிலும் நியூஸ் கொடுத்துடுங்கடா…’ என்ற நிகில் மொட்டை மாடிச்
சுவரின் மேல் ஏறி நின்றான்.

‘டேய், முட்டாள்.. என்ன காரியம்டா செய்யப் போறே.. நோ.. ‘என்று
நண்பர்கள் ஓடிவந்து அவனைத் தடுக்கும் முன் நிகில் கீழே குதித்து விட்டான்.

‘டேய்… என்ன பைத்தியக்காரத்தனம்… என்னடா இப்படிப் பண்ணினே?’
என்று அலறிய நண்பர்கள் கீழே போவதற்காக மாடிப்படிகளை நோக்கி
விரைந்தனர்.

கீழே, பெரும் உறுமலுடன் வந்த லாரி ஸடன் ப்ரேக் போட்ட சத்தம்
மாடிப்படி நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர்களுக்கு தெளிவாகக் கேட்டது.

அடுக்குமாடிக் கட்டிடத்தின் வெளியே ரோட்டிற்கு வந்த அந்த நண்பர்கள்
அங்கே ஒரு லாரி நிற்பதையும், அதை அடுத்து ஒரு சிறு கூட்டம் சூழ்ந்து
நிற்பதையும் பார்த்தனர்.

ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய லாரி டிரைவர், இறங்கி லாரியின்
பின்பக்கமாக வந்து பார்த்தான். கீழே விழுந்த நிகிலை லாரி ஏற்றி வந்த

பஞ்சு மூட்டைகள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன.

கூட்டத்திலிருந்த ஓரிருவர் உதவியுடன் பஞ்சு மூட்டைகள் மேலேறிய
டிரைவர், நிகிலை மெதுவாகக் கீழே இறக்கி, அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின்
கேட்டிற்கு முன்னால் படுக்க வைத்தான்.

‘பெரிய லூஸா இருப்பான் போலிருக்கு… இப்படியா ஒருத்தன் மொட்டை
மாடியிலிருந்து குதிப்பான்..?’ என்றார் ஒரு முதியவர்.

‘யார் கண்டார்கள்..? ஏதாவது லவ் ஃபெயிலியர் ஆகியிருக்கும்.. அதுதான்
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கான்..’ என்றது ஒரு இளவட்டு.

‘சிச்சீ.. பையனைப் பார்த்தா டீஸன்டா இருக்கான். அப்படி ஒன்றும்
இருக்காது.. ஏதோ கால் தவறி விழுந்திருப்பான்..’ என்றார் ஒரு நடுத்தர வயது
ஆசாமி.

கூட்டத்தை மெதுவாக விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தனர் சேகரும்,
மோகனும்.

நிகிலின் மூக்கின் கீழ் விரல் வைத்துப் பார்த்து சோதித்த ஒருவர்.
‘இல்லப்பா.. பையனுக்கு இன்னும் உயிர் இருக்கு. சீக்கிரமா ஆஸ்பத்திரிக்குக்
கூட்டிட்டு போகணும்..’ என்றார்.

சேகரும், மோகனும் முன்னால் வந்து, ‘ரொம்ப தாங்க்ஸுங்க.. இவர்
எங்க நண்பன்தான்.. கால் தவறி விழுந்துட்டார்.. அவரை நாங்க ஆஸ்பத்-
திரிக்குக் கூட்டிட்டுப் போறோம்…’ என்று சொல்லி, சேகர் தன் காரை கொண்டு
வந்து அந்த கேட்டின் பக்கத்தில் நிறுத்த, கூட்டத்திலிருந்த சிலபேர் உதவியுடன்
நிகிலை பின் ஸீட்டில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

‘சேகர்.. நிகில் என்ன இப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தை செய்திருக்கான்..? மேல்வாரியா பார்த்தா பெரிய அடிபட்டதா தெரியலே..
கையில் சின்னதா ஒரு ஃப்ராக்ச்சர் மட்டும் இருக்கும்னு தோணுது.. எக்ஸ்ரே,
ஸ்கான்னு எல்லா டெஸ்டும் பண்ணச் சொல்லி இருக்கேன். அவனுக்கு
இம்மீடியட்டா ஒரு ஊசி போட்டிருக்கேன். தூங்கிட்டிருக்கான். ஓகே.. நீங்க
வீட்டுக்குப் போங்க.. நான் பார்த்துக்கறேன். ஏதாவது தேவைப் பட்டால்
கால் பண்ணறேன்..’ என்றார் டாக்டர் மதன் – அந்த நண்பர்களின் டாக்டர்

நண்பன்.

அடுத்த நாள் காலை.. நிகிலுக்கு எப்படி இருக்கிறதோ என்ற கவலையில்
சீக்கிரம் எழுந்து எட்டு மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டார்கள்
சேகரும், மொகனும்.

நிகில் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டி-
ருந்தான். இவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தான். அவன் கையில்
பான்டேஜ் போடப் பட்டிருந்தது.

‘பாவி மனுஷா… இப்படியாடா பண்ணுவே… ஒரு நாளா எங்க உயிர்
எங்ககிட்டே இல்லே தெரியுமா..?’ என்று அவனைக் கடிந்து கொண்டார்கள்.

‘ஓகே..ஓகே… கூல் .. கூல்… இப்பத்தான் எனக்கு ஒண்ணும் ஆகலையே..
ஆனா எனக்கு ஒரு பெரிய உண்மையை புரிய வெச்சுட்டாரே கடவுள்..’
என்றான் நிகில் ஒரு புன்னகையோடு.

ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்கள் சேகரும் மோகனும்.

‘ஆமாண்டா… நம்மை மீறிய சக்தி ஒண்ணு இருக்குடா..’

‘டேய்.. டேய்.. என்னடா சொல்றே..?’என்றனர் சேகரும், மோகனும் கோரஸாக.

‘ஆமாண்டா.. இல்லேன்னா… வெறிச்சோடிக் கிடந்த அந்த ரோட்டிலே
நான் விழற சமயம் பார்த்து ஏன் ஒரு லாரி – அதுவும் பஞ்சு மூட்டைகள் ஏற்றிய
ஒரு லாரி – திடீர்னு எங்கிருந்தோ வரணும்? விழுந்தவனைத் தாங்கி
பிடிக்கணும் .. காப்பாத்தணும்.. அந்தக் கடவுள் எழுதி வெச்ச என் முடிவு நேரம்
அதுவல்ல…’

‘ஏண்டா… தப்பா நெனச்சுக்காதே… அது ஒரு கோயின்ஸிடன்ஸா இருக்-
கலாம் இல்லையா..?’ என்றான் மோகன்.

‘இல்லடா மோகன்… நேற்று ஒரு சாலை விபத்துலே அடிபட்டு குற்றுயிரும்
குலையுயிருமா இருந்த ஐந்து பேரை இங்கே அட்மிட் செய்திருக்காங்க..
அதுலே ஒருத்தர் நல்ல முதியவர். இருவர் திடகாத்திரமான இளைஞர்கள்..

மற்ற இருவரும் நடுத்தர பெண்மணிகள். நடந்ததோ ஒரே ஆக்ஸிடன்ட்.
எல்லோருக்கும் நல்ல அடி… அந்த முதியவர் நிலைமை வெரி க்ரிடிகல்னு
பிழைக்கறது கஷ்டம்னு சொன்னாங்க டாக்டர்ஸ். மற்றவங்கெல்லாம்
ஆபத்து நிலைமையில் இல்லைன்னும் சொன்னாங்க. ஆனா இவங்க
கொடுத்த ட்ரீட்மென்ட்னாலே இம்ப்ரூவ் ஆகி அந்த முதியவர் ஆபத்து
நிலையிலிருந்து வெளியே வந்துட்டார். ஆனா அந்த இளைஞர்களில்
ஒருத்தரின் உடம்பிலே திடீர்னு காம்ப்ளிகேஷன் டெவலப் ஆகி இன்னிக்கு
காலையிலே இறந்துட்டார்.. அந்தக் கடவுள் கணக்குப்படி அந்த முதியவ-
ருக்கு இன்னும் டைம் வரலே… அந்த இளைஞருக்குப் போக வேண்டிய டைம்.
நாம பெருமையாச் சொல்லிக்கிற அட்வான்ஸ்ட் மெடிகல் ஸயின்ஸ் ஒண்ணும்
பண்ண முடியலே… அதனாலதான் இப்போ டாக்டர்களும் சொல்றாங்க..
‘நாங்க எங்களாலே முடியறதெல்லாம் செய்து பார்த்துட்டோம்.. இனி எல்லாம்
அந்தக் கடவுள் கையில்’னு. நானும் உணர்ந்துட்டேண்டா.. நம்மை மீறி சக்தி
ஏதோ ஒண்ணு இருக்கு.’ என்று ஒரு சொற்பொழிவே செய்து விட்டான் நிகில்.

‘டேய்.. நீ நாளைக்கே அந்த குருஜியின் ஸிஷ்யனா போயிடுவேன்னு
நினைக்கிறேன்’ என்றான் சேகர்.

அங்கே சிரிப்பலை படர்ந்தது.

‘என்ன நண்பர்கள் எல்லோரும் ஜாலியா இருக்கீங்க போலிருக்கு’
என்றபடி வந்தார் டாக்டர் மதன்.

‘நம்மை மீறி ஒரு சக்தி இருக்காங்கற டிஸ்கஷன்லே தான் இந்த லூஸுத்-
தனத்தைப் பண்ணினான் இந்தப் பாவி… இப்போ இருக்குன்னு சொல்லி ஒரு
பிரசங்கமே பண்ணிட்டான்’ என்றான் சேகர் சிரித்துக் கொண்டே.

‘ஓ… இப்போ நான் சொல்லப் போற குட் நியூஸைக் கேட்டா நீங்க
என்ன செய்யப் போறீங்கன்னு தெரியலே… நீங்க யாரும் இந்த மாடியிலிருந்து
குதிக்க முடியாது.. ஏன்னா எல்லா வின்டோஸும் மூடியிருக்கு.. ‘ என்றார்
டாக்டர் சிரித்துக் கொண்டே.

‘அப்படி என்ன டாக்டர்….?’

‘சொல்றேன்.. சொல்றேன்… நிகிலுக்கு சில டைம்லே ஒரு மாதிரி –
மைக்ரேன் மாதிரி – கடுமையான தலைவலி வந்து ஓரிரு நாட்கள் மூளை
கலங்கி சஞ்சலப்பட்டு இருக்கும் இல்லையா..’

‘ஆமா ‘

‘நேத்து எடுத்த ரிப்போர்ட்ஸெல்லாம் பார்த்தபோது மூளையிலே
அதைக் காஸ் பண்ணற பர்டிகுலர் நெர்வ்ஸ் சரியா ஸெட்டாகி கரெக்ட்
பொஸிஷனுக்கு வந்துடுத்துன்னு நினைக்கிறேன்.. நேத்து கீழே அந்தப்
பஞ்சு மூட்டைகள்லே விழுந்த இம்பாக்ட்லே இந்த மிரக்கிள் நடந்திருக்கணும்.’
என்றார் டாக்டர் சந்தோஷமாக.

‘ஓ.. மை காட்.. டாக்டர் நீங்கதான் இப்போ என் கடவுள்..’ என்றான்
நிகில் குரல் தழுதழுக்க.

‘சேகரும், மோகனும் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல்
நின்றார்கள்.

‘கடவுளே.. எல்லாம் என் கையில்’ என்று மமதையுடன் பேசிய எனக்கு
இப்படி ஒரு சாட்டை அடி… ஆனால் இந்த சாட்டையடி எனக்கு வலிக்கவில்லை..
ரொம்ப சுகமாக இருக்கு’ என்று டாக்டரையே நன்றியுடன் பார்த்துக் கொண்-
டிருந்தான் நிகில்.

 

இம்மாதக் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் (முனைவர் தென்காசி கணேசன்)

பூகம்ப விதைகள் » அறிவுடைமை புத்தகம்முன்னாள் அரசவைக்கவிஞர்

தமிழகத்தின் மேலவை உறுப்பினர்

இவரின் முதல் கவிதைப் புத்தகப்புத்தகத்திற்கு

அணிந்துரை எழுதி பாராட்டியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மரபுக் கவிஞர்

இத்தனை பெருமைகளுக்கெல்லாம் மீறிய மற்றொரு பெருமை அவருக்குண்டு. அதுதான் அவரின் எளிமையும் மற்றும் பழகும் குணமும்.  திரையுலகில் அர்த்தமற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல், நல்ல மொழியைக் கையாண்ட கவிஞர்களில் ஒருவர் திரு முத்துலிங்கம்.

கண்ணதாசன், 60களில் தென்றல் என்றொரு பத்திரிகை நடத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்

“பறக்கும் நாவற்பழம் எது கூறுக?” என்ற அந்தக் கேள்விக்கு, பதில் குறள் வெண்பாவில் எழுத வேண்டும்.

“பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது

அதில் கலந்து கொண்ட அன்றைய இளைஞர் முத்துலிங்கம் ,

“திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே

பறக்கின்ற நாவற்பழம்”

என்று எழுத, முதற்பரிசு கிடைத்தது அவருக்கு.

    

கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், காமராசன், அப்புறம் வந்த வைரமுத்து, நா முத்துக்குமார் மற்றும் பல கவிஞர்களுக்கு மத்தியில், தனது மொழி ஆற்றலால் தனித்துவத்துடன் நின்றவர் திரு முத்துலிங்கம்.

நடிகர் திலகம் படங்களை இயக்கிப் புகழ் பெற்ற  இயக்குனர் பி மாதவன்அவர்களின் தயாரிப்பான பொண்ணுக்குத்தங்க மனசு படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர்.

இவரின் பல  பாடல்கள்  பட்டி தொட்டியெல்லாம் பரவி தமிழ்நாட்டையே பேசவைத்தது என்றால் மிகை ஆகாது.

உன்னால் முடியும் தம்பி படத்தில், இதழில் கதை எழுதும் நேரம் இது

காக்கிச் சட்டை படத்தில, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள

மீனவ நண்பனில் தங்கத்தில் முகம் எடுத்து  – சந்தனத்தில் நிறம் எடுத்து

வயசுப்பொண்ணுவில் காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து

கிழக்கே போகும் இரயில் படத்தில் – மாஞ்சோலைக் கிளி தானோ மான் தானோ

எங்க ஊர் ராசாத்தி படத்தில் – பொன் மானைத் தேடி நானும்

புதிய வார்ப்புகள் – இதயம் போகுதே எனையே பிரிந்தே

உதய கீதம் படத்தில – சங்கீத மேகம்  தேன் சிந்தும் நேரம்

பயணங்கள் முடிவதில்லை – ராக தீபம் ஏற்றும் நேரம்

நான் பாடும் பாடல் படத்தில, தேவன் கோயில் தீபம் ஒன்று

இதயக்கோயில் படம் – கூட்டத்திலே கோயில் புறா

முந்தானை முடிச்சு படத்தில், சின்னஞ சிறு கிளியே

இன்று போல என்றும் வாழ்க படத்தில் – அன்புக்கு நான் அடிமை

வா வா பக்கம் வா – தங்க மகன் படம்

ஆறும் அது ஆழமில்லை – முதல் வசந்தம் படம்

ஊருக்கு ஒரு பிள்ளை படத்தில் – முத்துமணி சிரிப்பிருக்க

செம்பவள மோகவண்ண இதழிருக்க – தங்க நகை எனக்கெதற்கு

எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு

அதேபோல் இவரின்  பாடல்கள் இசையின் மெட்டுக்கு மிகப் பொருத்தமாக இருந்ததால் , எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆனது.

ராகவனே ரமணா என்ற இளமைகாலங்கள் படத்தின் பாடலும்  சரி,

தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த பூபாளம் இசைக்கும்

பாடலும் உதாரணங்கள்.

இந்தப் பாடலில் அனுபல்லவியில், சரணத்தில் நாலாவது வரியை அப்படியே கேட்போரின் கற்பனைக்கு விட்டுவிடுவார் – தித்திக்கும் இதழ்  முத்தங்கள் – தன தன என்று விட்டுவிடுவார். 

ராகவனே ரமணா பாடலைப் பலர் வாலி எழுதியது என்றே எண்ணுவார்கள். ஆனால், அது  முத்துலிங்கத்தின் கை வண்ணம். 

காக்கிச் சட்டையில் வெளிவந்த பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள,

உன்னை நான் சந்தித்தேன் படத்தின் தேவன் கோயில் தீபம் ஒன்று

சிவாஜி நடித்த சிரஞ்சீவி படப் பாடல் – 

அன்பெனும் ஒளியாக, ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக.,திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

போன்ற பாடல்கள் வரிகளுக்காகவே விரும்பிக் கேட்கப்பட்டன.

உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில்,

இதழில் கதை எழுதும் வேளை இது என்ற பாடல் முழு இலக்கியம்.

நாளும் நிலவது தேயுது மறையுது –

நங்கை முகமென்று யாரதைச் சொன்னது

என்று,  உவமையை எதிர்மறையாக கேட்பதுபோலவும் அதற்குப் பதில் தருவது போலவும் எழுதி இருப்பது, கவிஞர் சுரதாவை நினைவு படுத்தும். 

அதேபோல, சங்கர் கணேஷ் இசையில் அமைந்த ஒரு பாடல் –

கடலோடு நதிக்கென்ன கோபம்

காதல் கவி பாட விழிக்கென்ன நாணம்

இளங்காற்று தீண்டாத சோலை – என்ற  பாடல் வரிகள் மிகுந்த ரசனை மிக்கது.

சிவகங்கையில் பிறந்த இந்த தமிழ்க் கங்கை,  ஆரம்பத்தில் முரசொலி, அலை ஓசை, போன்ற நாளிதழல்களில் பணிபுரிந்து பத்திரிகை அனுபவத்தை வளர்த்துக் கொண்டது பெருமை. பல்வேறு கவி அரங்கங்களில் கலந்துகொண்டு கவிதைகள் தந்தவர். பல நூல்களை வெளியிட்டவர்.

“அலையோசை” பத்திரிகையில் பணியாற்றும் போது,கதை வசனகர்த்தா திரு பாலமுருகன் மற்றும் இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைக்க அவர் இயக்கிய “பொண்ணுக்கு தங்க மனசு” படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கிறது,கவிஞருக்கு.

“தஞ்சாவூரு சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா” பாடல் தான் முத்துலிங்கத்தின் முதல் பாடல்.. பின்னணிப் பாடகி சசிரேகாவிற்கும் இதுதான் முதல் பாடல். ஜி கே வெங்கடேஷ் இசை. அப்போது அவருக்கு உதவி இளையராஜா.

அதன் பின் “கந்தனுக்கு மாலையிட்டாள்,கானகத்து வள்ளிமயில்”(உழைக்கும் கரங்கள்) பாடலை எம் ஜி ஆர்  படத்துக்கு எழுதுகிறார். பிள்ளைத்தமிழ் பாடுகிறேன், தங்கத்தில் முகம் எடுத்து என பல பாடல்கள் எம் ஜி ஆருக்காக எழுதியவர்,  கடைசி திரைப்படமான “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை எழுதினார்.

வாலி, புலமைப்பித்தன், அவினாசி மணி, நா காமராசன் போலவே, இவரும் எம்ஜிஆரை, பல பாடல்களில்  புகழ்ந்து எழுதினார். எம்ஜிஆர் பிள்ளைத்தமிழ், எம்ஜிஆர் உலா என்று சிற்றிலக்கியங்களாக படைப்புகளைத் தந்தார்.

Untitledமேலவை உறுப்பினர் (MLC), அரசவைக் கவிஞர், கலைமாமணி, பாரதிதாசன் விருது என பல பதவிகள், விருதுகளும் இவருக்கு கிடைத்தன.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்காக இவர் எழுதிய பாடல், அன்றைய ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து எழுதிய வரிகள்.

ஆனால், இந்தப் பாடல் 1983 முதல், இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டது.

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்

வீரம் உண்டு வெற்றி உண்டு

விளையாடும் காலம் உண்டு

பூனைகள் இனம் போல பதுங்குதல் இழிவாகும்

புலியெனப் பாய்ந்து வருதல் முறையாகும்

முதன்முதலில், 24   வருடங்களுக்கு முன்னர்,  கம்பன் விழாவில் கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் , அவரை நான், என் மகனுடன்  சந்தித்த நினைவு சுகமானது. எல்லோரும் புறப்பட்டுப் போனபின், நிதானமாக உடன் இருந்து பேசியது அவரின் எளிமையைக் காட்டியது. 

அவரின் மற்றொரு பண்பு – மூத்த, சமகால மற்றும் அவருக்குப் பின் வந்த எல்லாக் கவிஞர்களையும் பாராட்டுவதுடன் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடும் அழகு. கவிஞர்கள் இந்தக் கவிஞரிடமிருந்து திறமை மற்றும் புலமையுடன், அவரின் எளிமையையும் கற்றுக்கொள்வது நல்லது. 

 வெற்றுச் சொல் இல்லாத முத்துச் சொல் கொண்ட கவிஞர்  முத்துலிங்கம் .

 

நான் ரசித்தவை- ஸ்வாமிநாதம்

Philips Radio Modelo B3X85 Tube Radio 1958/19 | eBay

பல நாட்கள் ஆனாலும் எப்போத கேட்ட ரேடியோ நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் / தொடர்கள், படித்த கதைகள் இன்றும் மனதில் நிற்கின்றன. அவற்றைப் பற்றி சில மாதங்கள் எழுதலாம் என்று இருக்கிறேன்.

40 / 50 வருடங்களுக்கு முன்னால் கேட்ட ஒரு ரேடியோ நாடகம் இன்றும் நினைவில் இருக்கிறது. அகில பாரத நாடக நிகழ்ச்சி என்று ஒலிபரப்புவார்கள். பலவேறு மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த நாடகங்களை மொழி பெயர்த்து ஒலிபரப்புவார்கள். இந்த நாடகம் ஒரு வட மாநில எழுத்தாளர் எழுதியது (ஒரியா என்று நினைக்கிறேன்). திருச்சி வானொலி நிலையம் ஒளிபரப்பியது. முக்கியமான பாத்திரமான “முஸ்தபா” வாக M M கண்ணப்பா என்ற அருமையான நடித்திருந்தார். வானொலியில் கேட்கும் போதே நேரில் பார்ப்பது போல, அந்த கதாபாத்திரங்கள் நம்மிடையே நடமாடுவது போல தோன்றியது. இன்றும் தோன்றுகிறது.

கதை இதுதான்.

முஸ்தபா என்கிறார் ஒரு கொஞ்சம் பெரிய கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். கூட யாரும் இல்லை. தனக்கு உறவு என்று யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். எல்லோரிடமும் நட்புடனும் அன்புடனும் நடந்து கொள்ளுவதால் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். யாரைக் கேட்டாலும் மிக மிக நல்லவர் என்றுதான் சொல்வார்கள்.

பக்கத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு பெண் வேகமாக ஓடிவந்து ஒரு புதரில் ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறான். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. யாரோ நாலைந்து பேர் “இந்த பக்கம்தான் ஓடினாள், இந்தப் பக்கம்தான்” என்று சொல்லிக் கொண்டு இங்கும் அங்கும் தேடி விட்டு, “சரி சனி விட்டது. எந்த போயிடும் பாக்கலாம். இவ்வளவு தூரம் நம்மை அலையவிட்டாளே பாக்கலாம். உருட்டி விட்டது தேட முடியாது. அப்புறம் வருவோம்” என்று சொல்லி விட்டு போய்விடுகிறார்கள்.

சிறிது நேரம் கழித்து முஸ்தபா “பயப்படாதம்மா வெளில வா அவங்க போயிட்டாங்க. பயப்படாம வெளில வா” என்று அழுது கொண்டே ஒளிந்திருக்கும் பெண்ணைக் கூப்பிடுகிறான். நடுங்கிக் கொண்டே வெளியே வருகிறாள். “பயப்படாதே, என் கூட வா. இப்ப எதுவும் பேச வேண்டாம். என் வீட்டுக்கு வா. அமைதியா பின்னர் பேசலாம்” என்று கூறி வீட்டுக்கு அழைத்துப் போகிறான்.

வீட்டுக்கு வந்ததும் நன்றி சொல்லி அழுது விட்டு “தயவு செய்து என்னைப் பற்றி எந்த தகவலும் கேட்காதீர்கள் எனக்கு யாரும் கிடையாது. நாளைக் காலை நான் போய் விடுகிறேன். ” என்கிறாள். “எங்கே போவாய் யாரும் இல்லை என்று சொன்னாயே”. “எனக்கு போக்கிடம் இல்லை. என் விதிப்படி நடக்கட்டும். என்னைக் காப்பாற்றியது க்காக இங்கேயே இருந்து உங்களுக்கு தொல்லை கொடுக்க முடியுமா”

“நீ இங்கே இருப்பதால் எனக்கு எந்த தொல்லையும் இல்லை. உண்மையில் எனக்கும் யாரும் இல்லை. உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நீ இங்கேயே தங்கலாம்”.

மிகுந்த சந்தோஷத்துடன் ” நான் இங்கேயே இருக்கலாம்? யாரும் எதுவும் சொல்ல மாட்டார்களா?

“எனக்கு யாரும் இல்லை எதுவும் சொல்ல. என் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் நான் சொல்லிக் கொள்கிறேன்” என்று சொல்கிறான்.

அவர்கள் வாழ்க்கை இப்படித் துவங்குகிறது. ஓரிரு வார்த்தைகளே பேசிக் கொள்கிறார்கள். சமைக்க என்ன வேண்டும். வேறு தேவையான சாமான்கள் என்ன வேண்டும் என்று அதோடு பேச்சு வார்த்தை முடிந்துவிடும்.

அவள் பெயர் “பேதானா” “Bhedhanaa” என்று சொல்கிறாள். அந்த பெயர் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது இதோ இந்த கதவில் எழுதி வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு. சத்தமாக ஒவ்வொரு எழுத்தாக “பே” “தா” னா” என்று விட்டு எழுதுகிறான்.

வெளியிலும், அவன் அலுவலகத்திலும் கேட்கிறார்கள் கொஞ்சம் கேலியாக “என்ன இப்ப வெல்லாம் இங்க சாப்பிடுவது இல்லை. கையிலும் சாப்பாடு பாக்ஸ் எடுத்துக்கிட்டு வந்துடறீங்க ” என்று கேட்கும் போது “இப்ப வெல்லாம் அவங்களே செஞ்சு குடுத்துராங்க வித விதமா செய்யறாங்க , நல்லாவும் இருக்கு. முன்பெல்லாம் வீட்டுக்குப் போனா யாரும் இருக்க மாட்டாங்க, இப்ப வீட்டில யாரோ காத்துக் இருக்காங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு” அப்படீன்னு பதில் சொல்லுவான். அவனைப் பற்றி எல்லோரும் தெரியும் என்பதால் ஒருத்தர் கூட சந்தேகம்கூடப் படவில்லை. அவள் யார் என்று கேட்கும் போது அப்பாவியாக “தெரியாது ஆனால் பாவம்” அப்படீன்னு சொல்லுவான்.

கட்டிக்கப் போறியான்னு கேட்டால் “தெரியாது” அப்படீன்னு சொல்லுவான்.

ஒரு முறை. “பேதானா.. என் நண்பர்கள் நம்மைப்பற்றி பேசிக்கறாங்க”

“என்ன பேசிக்கறாங்க? “

“என்னமோ பேசிக்கறாங்க… அதை விடு. நான் உன்னை பேதானா ன்னு கூப்பிடறேன் நீ என்ன சொல்லி கூப்பிடப்போறே “

“எப்படிக் கூப்பிடட்டும்…? “

இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அதைவிட பலமடங்கு ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள்.
இவர் மனதில் என்ன இருக்கிறது காப்பாற்றியதற்காக கல்யாணம் செய்து கொள்ளச் சொல்ல முடியுமா? அவர் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டால். இவ்வளவு நல்லவரை மன வருத்தப்படச் செய்யலாம்? பாவம். என்று அவளும்.

காப்பாற்றியதற்காக என்னை கட்டிக்கிறாயா என்று கேட்டால் நம்மை என்ன நினைப்பாள் என்று அவனும் மனதுக்குள் தவிக்கிறார்கள்.

“என்னை என்ன சொல்லி கூப்பிடப்போறே? அண்ணா அப்படீன்னு கூப்பிடறியா? ” ஒருவேளை அப்படி நினைக்கிறாளோ என்னவோ. நான் அதாவது சொல்ல நம்மை தப்பா நினைச்சுட்டா.. என்ன சொல்கிறாள்சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று எண்ணி அப்படிக் கேட்டு விட்டான்.

அட இவர் மனதிலே அப்படித்தான் நினைகிறாரா? நல்ல வேளை நான் எதுவும் தப்பாக பேசிவிட்டு வில்லை. நல்ல மனிதர் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார் என்று மனதை மாற்றிக் கொண்டு பதில் சொல்ல வரும்போது வெளியிலே இருந்து யாரோ “முஸ்தபா” என்று கூப்பிட வெளியே போய் விடுகிறான்.

ஒருநாள் அவளுக்கு காய்ச்சல் வந்து ரொம்ப கஷ்டம் படுகிறாள். வேலையில் இருந்து வீட்டுக்கு வந்தவன் பதறிப் போய் உடனே பக்கத்து ஊரிலிருந்து தெரிந்த டாக்டரை அழைத்து வருகிறான். சோதித்து விட்டு மருந்து கொடுத்து விட்டு “பயப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

உடம்பு தேறி பழையபடி வாழ்க்கை தொடர்கிறது.

ஒருநாள் டாக்டர் முஸ்தபாவை பாத்து “முஸ்தபா உங்கள் வீட்டிலே இருக்காங்களே.. பேதானா தானே அவங்க பேர்? இவங்களை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்னா வீட்டுக்கு வந்து கேட்கிறேன்” என்று சொல்கிறார். மனதுக்கு கஷ்டமா இருந்தாலும் “கேட்டுட்டு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு. இவ்வளவு நல்ல மனிதர் கிடைப்பது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணி வீட்டுக்கு வந்து கேட்கிறான்.

“நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர் அவருக்கு உன்னை புடிச்சு இருக்கு. கல்யாணம் பண்ணிக்கிறாயா? “
எவ்வளவு நல்ல மனிதர். எவ்வளவு நாள் நான் இவருக்கு பாரமா இருக்கிறது. வேண்டாம் என்று சொன்னால் வருத்தப் படுவார் என்று எண்ணி. “உங்கள் இஷ்டம்” என்று சொல்லி விடுகிறாள். திருமணம் நடந்து அவள் டாக்டர் வீட்டுக்கு போய் விடுகிறாள். மீண்டும் தனிமை. இப்போது இன்னும் அதிகமாக தெரிகிறது. அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் அவளை நினைவு படுத்துகிறது. வேறு வேலை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டு போகிறார். போகும்போது வீட்டைக் காலி செய்யும் போது உதவ வரும் நண்பரிடம் பெட்டியைக் கொடுத்து விட்டு உள்ளேபோய் எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு கதவைப் பூட்டுகிறார். அப்போது நண்பரிடம் சொல்கிறான். இதோபார் அவள் பேர் இந்த கதவுல எழுதியிருக்கு. மூணு எழுத்து பே தா னா …. இன்னும் ஒரு மூணு எழுத்து எழுதிடரேன்” என்று மேலும் மூணு எழுத்து “இ ல் லை” எழுதிவிட்டு . சேர்த்து படிக்கிறான்

“பே தா னா… இ ல் லை” என்று சொல்லிவிட்டு பெரிதாக அழுவான்.

அதோடு முடியும். மிகவும் பேசப்பட்டு நிறைய பாராட்டுக் கடிதங்கள் திருச்சி வானொலி நிலையத்துக்குக் குவிந்தது.

முஸ்தபா வாக நடித்த கண்ணப்பா என்ற நிலைய நடிகரை அதற்குப்பின் “முஸ்தபா” என்றே கூப்பிட்டார்களாம்.

This Drama disturbed me for long time. I told it to many even in Bank after decades and really wept when completed the narration with பே தா னா இ ல் லை.

கண்ணன் கதையமுது-21 – தில்லை வேந்தன்

 

govardhan puja significance date

 

(நீர்வளம் மிகுந்த செழிப்பான பிருந்தாவனத்தில் மகிழ்ச்சியுடனும்,நிறைவுடனும் வாழ்ந்து வந்த யாதவர்கள் ஆண்டுதோறும் இந்திர விழா எடுத்துக் கொண்டாடுவது வழக்கம். இவ்வழக்கத்தை மாற்ற நினைத்தான் கண்ணன்……)

மழைவளத்தால் பிருந்தாவனம் செழித்தல்

கார்வலம் வானில் வந்து
கனமழை பெய்வ தாலே,
நீர்வளம் பெருகி, உண்ணும்
நெல்வளம் பெருகி, ஆயர்
சீர்வளம் பெருகி, ஆவின்
திகழ்குலம் பெருகிப் பல்கித்
தார்வல மார்பன் நந்தன்
தண்ணகர் செழித்த தம்மா!

இந்திர விழாவைக் கண்ணன் மறுதலித்தல்

மழையினை அளிக்கும் அந்த
வருணனின் தலைவ னான
இழைமணி மாலை மார்பன்
இந்திரன் புகழைப் போற்றி
வழிவழி யாக ஆயர்
வழிபடும் வகையில் ஆங்கே
எழிலுறு வனத்தில் கூடி
இந்திர விழவெ டுப்பர்

இந்திர விழவைப் பற்றி
ஏந்தலாம் நந்தன் சொல்ல
மந்திரப் புன்ன கையான்
மாயனோ மறுத லித்தான்
முந்தியோர் யானை காத்த
முதலினை மறந்தாய் போலும்
அந்தமில் நார ணன்தான்
அனைவருக் காதி என்றான்.

கோவலர் குலத்தோ ருக்கும்
குவலய மக்க ளுக்கும்
காவலன் வனத்து ழாயின்
கடிமலர் மார்பன் அன்றோ
பாவலர் பாடு கின்ற
பரமனின் பணியைச் செய்யும்
ஏவலன் வானோர் வேந்துக்(கு)
இவ்விழா எதற்கோ என்றான்

அளத்தலில் நலத்தை நல்கும்
ஆவினம், அந்தண் மக்கள்,
வளத்தினை வழங்கிக் காக்கும்
வளர்மலை, வணங்கிப் போற்றி,
உளத்தினில் பொங்கும் நன்றி
உரைத்துநாம் விழவெ டுப்போம்.
கிளத்தவக் கண்ணன் சொல்லைக்
கேட்டவர் ஒப்பிச் செய்தார்.

கோவர்த்தன மலைக்கு விழா எடுத்தல்

வானவர் வேந்தன் தன்னை
வழிபட மறந்து விட்டார்
கானமும் கூத்தும் சேரக்
கைகளைக் கோத்துக் கொண்டார்
ஆனவம் மலையைச் சுற்றி
ஆயரும் தொழுது வந்தார்
மானமே போன தென்று
மறுகியே சினந்தான் விண்ணோன்

சீற்றத்தால் இந்திரன் பெருமழை பெய்வித்தல்

கறுவிய விண்ணோர் கோவும்
கடுஞ்சினம் நெஞ்சில் மேவச்
சிறுவனின் சொல்லைக் கேட்டுச்
செய்கையில் பிழைத்தார் ஆயர்
செறுமழை மாமு கில்காள்
சென்றுநீர் ஊழிக் கால
இறுதியை வரவ ழைப்பீர்
இடிமழை பெய்வீர் என்றான்

ஆழியே மேலே ஏறி
ஆத்திரம் கொண்டு கீழே
வீழுதல் போன்றே மாரி
வெறியுடன் கொட்டக் காற்றும்
சூழவே வீசிச் சாய்க்கத்
தோப்புடன் தோட்டம் வீடு
பாழெனச் சிதைய ஆயர்
பாரெமைக் கண்ணா என்றார்.

யாதவர்கள் கண்ணனிடம் முறையிடுதல்

கோப்பெரு வான வேந்தன்
கோபமே கொண்டு விட்டான்
பூப்புது முகத்துக் கண்ணா
பொழிமழை சூறைக் காற்றும்
ஆர்ப்பதைக் கேட்டி லையோ
ஆயரின் இறுதி நாளோ
காப்பதுன் கடமை அன்றோ
கழலிணை தொழுதோம் என்றார்

குன்று குடைபிடித்த கோவலன்

கண்டு நகைத்த கார்வண்ணன்
கவலை வேண்டா எனத்தன்கைச்
சுண்டு விரலின் நுனியாலே
தூக்கி அந்தப் பெருமலையை
மண்டு குடையாய்ப் பிடித்துப்பின்
வருவீர் உள்ளே எனவழைக்க
அண்டம் காக்கும் அவன்குடையின்
அடியில் தஞ்சம் புகுந்தாரே

ஆடும் மாடும் புகுந்தனவே
அன்புக் கன்றும் புகுந்தனவே
தேடிச் சேர்த்த செல்வங்கள்
திகழ்ந்த உடைமை புகுந்தனவே
பீடு மிக்க கோபருடன்
பெருமை மிக்க கோபியரும்
நாடி அடியில் புகுந்தனரே
நல்ல மலையாம் குடையின்கீழ்

கண்ணன் துதி – கவிக்கூற்று 

குன்றெடுத்துக் குடைபிடித்த கோவலனின் தாள்போற்றி
அன்றாயர் துயர்தீர்த்த அருமுகிலின் அடிபோற்றி
துன்றுமலர் வனமாலை சூடியதோள் திறல்போற்றி
என்றென்றும் இடர்களையும் எழிலிவண்ணன் அருள்போற்றி

இந்திரன் உண்மை உணர்ந்து அடிபணிதல்

ஏழு நாள்கள் இடையின்றி
இடியும் வெடிக்கப் பெருமழையும்
வாழும் அவரை அச்சுறுத்த
வரையே இன்றிப் பெய்ததம்மா
வேழம் காத்த விதிமுதல்வன்
வெற்பைக் குடையாய்த் தாங்கியதால்
ஊழி மழையும் சோர்ந்துநிற்க,
உண்மை உணர்ந்தான் விண்ணவர்கோன்

முந்தி மலையின் அடியிருந்தோர்
மூண்ட களிப்பால் வெளிவந்தார்.
சிந்தை வருந்தி இந்திரனும்
சென்று கண்ணன் அடிபணிந்தான்
வெந்த உள்ளச் செருக்கடக்கி
வெற்றி கொண்ட மலைதாங்கி
சிந்து நகையான் வாழ்கவெனச்
செப்பி ஆயர் போற்றினரே

( தொடரும்)

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? – ஜி பி சதுர்புஜன்-

   புத்தகம் : “BITS of Social Impact” ( English)

எழுதியவர்கள் : Harsh Bhargava and Sai Prameela Konduru

( A Social Entrepreneurship Primer with Stories of Founders from BITS, Pilani – With Foreword by Kumar Mangalam Birla)

    இது ஒரு ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியாவின் 2022 வெளியீடு.

   இந்த 250 +  பக்க நூலை பிட்ஸ் பிலானியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஹர்ஷ் பார்க்கவாவும் சாய் பிரமிளா கொண்டூருவும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இதை தங்களை உருவாக்கிய, சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்னும் நல்லெண்ணத்தை உருவாக்கிய பிட்ஸ் பிலானி கல்லூரிக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் இதன் ஆசிரியர்கள்.

   பிட்ஸ் பிலானி என்ற புகழ்பெற்ற சர்வகலாசாலையில் பயின்ற மாணவர்கள் உலகம் முழுவதிலும் பற்பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் ; அவர்கள் தொழில்நுட்பத்துக்கு பெயர் போனவர்கள் என்பதும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள் என்பதும் நாம் எல்லோரும் நன்கறிந்த உண்மை. பலதரப்பட்ட முன்னணி நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பிட்ஸ் பிலானியின் முன்னாள் மாணவர்கள் செயல்படுகிறார்கள் என்பதும், பலர் தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்கி அவற்றை உச்சத்திற்கு வளர்த்துச் செல்கிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால், இந்த நூல் அத்தகைய வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றியது அல்ல. தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல், “சோஷியல் இம்பாக்ட்” – அதாவது சமுதாய முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ள நிறுவனங்களைப் பற்றியும், அதன் நிறுவனர்களைப் பற்றியும் பேசுகின்ற அருமையான நூல்.

   சமுதாயப் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட இளைஞர்கள், அத்தகைய பிரச்சினைகளைக் கையிலெடுத்து, ஒரு தொழில் முனைவோருக்கான குறிக்கோளுடன் அவற்றுக்கு மாற்றுக்களை உருவாக்கத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. “சோஷியல் சர்வீஸ்” என்பதல்ல இது. சிக்கலான சமுதாயப் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதற்கு தீர்வு காண்பதையே ஒரு தொழிலாக வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதே இந்த நூலின் பேசு பொருள்.

                நூலின் பொருளடக்கத்தைக் கவனித்தால், 1. உடல் நலம், 2. கல்வி, 3. சுற்றுச்சூழல், 4. கலை மற்றும் கலாச்சாரம்,  5. சமூக மாற்றம் என்ற தலைப்புகளில் அவர்கள் வரிசைப்படுத்தும் கேஸ் ஹிஸ்டரிகளைப் பிரித்துள்ளார்கள். இந்த ஐந்து பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும், பிட்ஸ் பிலானிலிருந்து படித்து முடித்து வெளியே சென்ற பிறகு, சமுதாய மாற்றத்திற்கான நிறுவனங்களை அமைத்து வெற்றிகரமாக நடத்துபவர்களை சந்தித்து, பேட்டி கண்டு, வருங்கால சமுதாய மாற்றத் தொழில் முனைவர்களுக்குத் தேவையான பாடங்களை வடித்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள்.

    உதாரணத்திற்கு, உடல்நலம் அல்லது ஹெல்த் கேர் பிரிவில் ப்ரொஃபசர் விஜய் சந்துரு என்பவரைப் பற்றியும் அவர் நிறுவிய ஸ்ட்ரான்ட் லைஃப் சயின்ஸஸ், மெட்டாஸ்ட்ரிங் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் ஃபவுண்டேஷன்ஸ் பற்றிய விரிவான விளக்கம் முதல் கேஸாக வருகிறது. இது ஜெனோமிக் மெடிசின்ஸ் பற்றியது.

    கல்வி என்ற பிரிவில், அனிருத்தா மிஷ்ரா நடத்தும் “அப்னி க்ளாஸ்” என்ற நிறுவனம் இடம் பெற்றிருக்கிறது. இந்த நிறுவனம் ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு, அவர்களுடைய தாய்மொழி மூலமே எல்லாவிதமான படிப்புகளையும் படித்து முன்னேறும் வழியைக் காண்பிக்கின்றது. இதன் நிறுவனர், தான் பட்ட இன்னல்கள் அடுத்த தலைமுறைக்கு இருக்கக்கூடாது என்ற உயரிய உணர்வுடன் இதை நடத்தி வருகிறார்.

   இப்படி ஒவ்வொரு கேஸ் ஸ்டடியும் இந்தத் துறையில் நுழைய விரும்புபவர்களுக்கும், இத்தகைய முக்கியமான மாற்றங்களை நோக்கி உலகை நகர்த்திச் செல்லும் துறையைப் பற்றி நுணுக்கமாக அறிய விரும்புபவர்களுக்கும் அத்தியாவசியமான வாசிப்பு அனுபவம்.

   இத்தகைய நூலை எழுதிய இந்த ஆசிரியர்களுக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நாளைய சமுதாயம் இவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. இந்நூலை குவிகம் மின்னிதழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

   ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :

  1. The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel)               June 2023

 

திரைக்கதம்பம் ( ஜூன் 2023) – சிறகு ரவி

 1. வீரன் 

Veeran Stills - Pictures | nowrunningமலையாளத்தில் ஹிட்டடித்த டொவினோ தாமஸ்-குரு சோமசுந்தரம் படத்தை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நல்ல திரைக்கதையால் நம்மைக் கட்டிப் போடுகிறது படம். ஹிப் ஹாப் ஆதி தன்னளவுக்கு இயன்றவரை முயன்றிருக்கிறார். வில்லனாக வினய் இன்னும் கூட கொடூரமாக இருந்திருக்கலாம். ஹிப் ஹாப்பின் இசை பல காட்சிகளை சற்று உயர்த்துகிறது. மொத்தத்தில் நம்மை கொட்டாவி விட வைக்கவில்லை படம்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அதிரடியான சூப்பர் ஹீரோ படமில்லை. கிராமியப் பின்னணியில் சற்று நகைச்சுவை தூக்கலாக வித்தியாசப்படுகிறது இந்தப் படம். -ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்.

தமிழ் ஹிந்து சற்று காட்டமாகவே விமர்ச்சிக்கிறது. நல்ல திரில்லரை, சராசரிக்கும் குறைவான எழுத்து, பள்ளத்தில் தள்ளி விடுகிறது. போலவே சினிமா எக்ஸ்பிரஸும், மனிதன்-நாயகன்- சூப்பர் ஹீரோ எனும் வளையம் சரியாக இல்லை. வில்லனை கேலிச் சித்திரம் ஆக்கி விட்டார்கள். ஆதியைத் தாக்கிய மின்னல் லோ வோல்டேஜ் என்று கிண்டலடிக்கிறது ஃபிலிம் கம்பானியன்.

அதே சைக்கிள், அதே வாடகை: காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்- Dinamaniகாதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

எதையும் புதுசாக படைக்கவில்லை படம். ஆர்யா தன்னால் முடிந்ததை செய்து காப்பாற்ற முயல்கிறார். இசையும் மோசமான திரைக்கதையும் அவருக்கு உதவ மறுத்ததால் மியாவ் என்று முடிகிறது கர்ஜனை சிங்கம். இயக்குனர் முத்தையா இனி பழைய சோற்றை மூட்டை கட்ட வேண்டியது தான். – டைம்ஸ் ஆஃ இந்தியா.

முத்தையாவின் வெற்றி ஃபார்முலா இதன் அலுப்பை குறைக்க முடியவில்லை-தி ஹிந்து. அதிக நெகிழ்வு காட்சிகள், குதுகலிக்க வேண்டிய கிராமியப் படத்தை குட்டையில் தள்ளி விடுகின்றன – சினிமா எக்ஸ்பிரஸ்.

ஏகத்துக்கு தட்டை..அதுவும் நமக்கு வலிக்கும் அளவிற்கு தட்டையோ தட்டை -இந்தியன் எக்ஸ்பிரஸ்.

போர் தொழில்' சினிமா விமர்சனம் | Start Cut Action | Tamil cinema News | movie reviewsபோர்த்தொழில்

சரத்குமாரும் அசோக் செல்வனும் சேர்ந்து அற்புதமான திரில்லரை தோளில் சுமக்கிறார்கள். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒரு கடினமான கதையை லகுவாக இயக்கி இருக்கிறார். அனுபவமுள்ள உயர் அதிகாரி லோகநாதன், கத்துக்குட்டி பிரகாஷுக்கு ஒத்துழைப்பு நல்குவாரா? இதோடு தொடர் கொலைகளைச் செய்து வரும் குற்றவாளியை பிடிப்பாரா? இதை எந்த வித நெருடலும் இல்லாமல் எழுதி, அதை திரையில் அச்சு அசலாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அதிரடி சண்டைக் காட்சிகள் பக்கம் போகாமல், ஒரு மர்ம கதையை சற்றும் தொய்வில்லாமல் கொண்டு வந்திருக்கும் நேர்த்திக்கு எழுதிய இயக்குனரும் மற்றும் ஆல்ஃப்ரட் பிரகாஷும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இடைவேளைக்கு முன் கொலைகாரன் யார் என்று சொல்லும் தைரியம் இந்தப் படக்குழுவுக்கு இருக்கிறது. அதோடு கதையில் நிகிலா விமல் ஒரு அழகு பொம்மையில்லை என்பதும் சிறப்பு. சமீபத்தில் வந்த திரில்லர்களில் இது முதல் இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. – தமிழ் ஹிந்து.

சரியான, கச்சிதமான எழுத்து இதை தவிர்க்க முடியாத படமாக ஆக்கிவிடுகிறது. கலைச்செல்வனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்தை சற்று உயர்த்துகின்றன. அமரர் சரத்பாபுவின் பாத்திரம் ஒரு திருப்பம். படத்தில் அது ஒன்று தான் திருப்பம். வழக்கமான புலனாய்வு படங்களை விட்டு விலகி கவர்ந்திருக்கிறார் இயக்குனர். எழுபது விழுக்காடு மதிப்பெண்கள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

படத்தின் வெற்றி, காதலோ, ஹீரோயிஸமோ இல்லாத புத்திசாலித்தனமான காட்சிகளும் திரைக்கதையும்! பாதிக்கப்பட்ட மனநிலையில் சிறு வயது முதலே ஆட்கொள்ளப்படும் வில்லன் பாத்திரம் சராசரி. அதை வேறு மாதிரி சிந்தித்திருந்தால் இன்னமும் கூட இறுக்கமாக இருந்திருக்கும். ஆனாலும் முதல் படத்திற்கு நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது இயக்குனருக்கு. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சற்றும் தொய்வில்லாத திரைக்கதையோடு ஒரு திரில்லர் -இந்தியா டுடே.

சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என அறிவிப்பு… - Cinemamedai2018 தி ரியல் கேரளா ஸ்டோரி

ஜூட் ஆண்டனி ஜோசப்பின் இந்தப்  படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பிரச்சாரத் தொனி என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், சில உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறது படம். இளம் பெண்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றி, ஈராக்கின் தீவிரவாதப் படையில் சேர்க்கும் உண்மை அதிர வைக்கிறது. முக்கியமாக படத்தில் நடித்த அனைவரும் ஹீரோக்கள் தான்! இது ஆரோக்கியமான அம்சம் – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

டொவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், வினித் ஸ்ரீனிவாசன் என தெரிந்த முகங்கள் இருந்தாலும், டொவினோ கொடுத்த பாத்திரத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறார். அபர்ணா பாலமுரளி எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கைவிடப்படும் பாத்திரம் என்பது குறை. வெள்ளக் காட்சிகளை காண்பித்த விதத்தில் இது ஹை பட்ஜெட் படமோ என எண்ண வைக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது.-இந்தியன் ஹெரால்ட்,

கவனமாக செதுக்கப்பட்ட படத்தில் பணியாற்றிய அத்துணைக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சமின் சாக்கோவின் எடிட்டிங் இன்னொரு தொப்பி இறகு – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

150 கோடி வசூல். மோகன்லாலின் லூசிஃபரை தொட்டிருக்கிது இந்த எளிய பட்ஜெட் படம். இடர் காலத்தில் உதவும் ஒவ்வொரு நல்ல உள்ளமும் உத்தமர் தான் எனும் அடிநாதம் அழுத்தமாகப் பதியும் படம். – தமிழ் இந்து.

டக்கர் | Tamil cinema Takkar movie previewடக்கர்

அருமையான ஒன்றரை மணி நேர ஹாலிவுட் படம் போல இருக்க வேண்டியது, சுவையற்ற, மறக்க வேண்டிய, மோசமான காமெடி கேலிக்கூத்துகளுடன் நம்மை வீழ்த்துகிறது. அருமையான கலைஞர் சித்தார்த் வீணடிக்கப்பட்டிருக்கிறார் – தமிழ் இந்து.

கவனம் செலுத்த வேண்டிய கதை, தேவையற்ற சுழலில் சிக்கி சீரழிகிறது. தொடர்பில்லாத திரைக்கதையும் காட்சிகளும் இன்னும் புதை குழியில் தள்ளுகின்றன. பணம் குறித்த இருவரின் எதிரும் புதிருமான கண்ணோட்டத்தை மையமாக கொண்ட கதை, படிக்கும்போது சுவாரஸ்யம். பார்க்கும்போது பலத்த குறட்டை. அதோடு பயணம், ஸ்டண்ட் என்று ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாறும் காட்சிகள், ஒன்ற விடாமல் தடுக்கின்றன. நிவாஸ் பிரசன்னாவின் இசையில் நிரா நிரா பாடல் க்ளைமேக்ஸுக்கு முன்னால் ஒலித்து போக நினைத்தவர்களைக் கட்டிப் போடுகிறது. வீட்டிற்கு எடுத்துப் போக எந்த நினைவுகளும் இல்லாத படம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

பல நாட்கள் டப்பாவுக்குள் தூங்கிய படம் தூசு தட்டியதில் பழசும் புதுசுமாக விழி அரிப்புகள். காரியக் கோமாளி வேடத்தில் சித்தார்த் அருமை. ஆனால் அது மட்டும் போதவில்லை இப்படத்தை தூக்கி நிறுத்த! – இந்தியா டுடே.

விமானம் (தமிழ்) | Dinamalarவிமானம்

மாற்று திறனாளி வீரய்யாவும் அவரது மகனும் துருவனும் பிரதான பாத்திரங்கள். இருவரும் செமையாக நடித்தாலும், சில காட்சிகள் அழுத்தம். பல காட்சிகள் தேவையற்ற கண்ணீர் குளம். முப்பது வருடங்களுக்கு முன் வந்திருக்க வேண்டிய படம், அடுத்த என்ன எனும் எந்த எதிர்பார்ப்பும் எகிறாமல் கடந்து போகிறது. – தமிழ் இந்து.

படத்தை சமுத்திரக்கனி தோளில் சுமக்கிறார். ஒரே சமயத்தில் தெலுங்கு தமிழ் என்று வெளியிட்டதால், காட்சிகளின் களம் பழைய பேகம்பெட் விமான தளம் என்பது, தமிழுக்கு அந்நியமாகப் போய் விட்டது. இரண்டாம் பாதி கற்பனை வறட்சியில் மாட்டிக் கொள்கிறது. அடுக்கடுக்காக துன்பங்களைச் சுமத்தி நாயகனை மட்டுமில்லாமல் நம்மையும் வாட்டி விட்டார் இயக்குனர் சிவபிரசாத் யனாலா. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மனதை நோகச் செய்கிறது விமானம். – இந்தியா டுடே. பாத்திரங்களின் கஷ்டங்களை சொல்லிக் கொண்டே போகும் படம் அதை ரசிகனுக்கு கடத்தத் தவறி விட்டது. – சினிமா எக்ஸ்பிரஸ்.

எறும்பு | Dinamalarஎறும்பு

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் நிறைய ஆச்சர்யங்களைத் தருகிறது.நல்ல நோக்கங்களைக் கொண்ட திரை ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் சுரேஷ், விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாட வாழ்வின் அல்லல்களை உணர்வு பூர்வமாகச் சொல்லி இருக்கிறார். குறைகள் இல்லாமலில்லை..ஆனால் நல்ல படத்திற்காக அதை புறம் தள்ள வேண்டியது அவசியமாகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

காட்டிய உலகின் போதா நிலையும், எதிர்பார்ப்பு சற்றும் இல்லாத திரைக்கதையும் இப்படத்தை சராசரி ஆக்குகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்.

திரைக்கதையில் சறுக்கினாலும் இரண்டு சுட்டிகளின் நடிப்பு நம்மைக் கட்டிப் போடுகிறது. – ஆனந்தவிகடன்.

Charles Enterprisesசார்லஸ் என்டர்பிரைஸஸ்

புதிய உத்திகளும் சுவாரஸ்யமான உப கதைகளும் இல்லாத இப்படம் ஈர்க்க மறுக்கிறது. நல்ல கதையைக் கைவிட்ட சோகம் ரசிகனைத் தாக்குகிறது, -டைம்ஸ் ஆஃப் இந்தியா.

எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு நியாயம் செய்யும் ஊர்வசி போன்ற கலைஞரை வைத்துக் கொண்டு நல்ல படத்தை கொடுக்க தவறிவிட்டது படக்குழு. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

 

 

Toy – Review {2/5} – Bommai Cinema Movie Review : Toy – Absence | Movie Reviews | Tamil moviesபொம்மை

இயக்குனர் ராதா மோகன் தன்னுடை சவுகரியமான களத்தை விட்டு விலகி செய்த படம். துணிக்கடை வாசலில் நிற்கும் அழகு பொம்மையை உண்மை என்று நம்பிக் காதலிக்கும் நாயகன் எனும் மைய இழையில் இன்னும் கொஞ்சம் சவால்களைச் சேர்த்திருந்தால் இன்னுமொரு நல்ல படமாக மாறியிருக்கும். எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் போட்ட உழைப்பு விழலாகி விட்டிருக்கிறது. காரணம் குழப்பமான திரைக்கதை. மீண்டும் ஒரு சைக்கோவாக எஸ் ஜே சூர்யா. இன்னுமொரு குரூர நம்ப முடியாத காட்சிகளுடன் சரியாக எழுதப்படாத ஒரு படம் பொம்மை- டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அற்புதமான நடிகர் எஸ். ஜே. சூர்யாவாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. வழக்கமான மெலோ டிராமா காதல் காட்சிகளைப் புகுத்தி பழைய படமாக்கி விட்டார் இயக்குனர் ராதா மோகன். – தமிழ் இந்து.

வீரியமான கதையை திட்டமிடாத திரைக்கதையால் பாழாக்கி விட்டனர். எங்கும் எதிலும் தெளிவில்லை என்பதும் ஒரு குறை. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

 

தண்டட்டி" பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் கிராமத்து கதைதண்டட்டி

ஒரு முறை பார்க்கலாம் ரகம் என்றாலும் சீனியர் நடிகர் பசுபதி தன் பங்களிப்பால் படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். ஒரு அடையாளமற்ற கிராமக் காவலராக அவர் வாழ்ந்திருக்கிறார். இசை சில சமயம் ரிபீட் ஆகி சோதனை செய்கிறது – இந்தியா ஹெரால்ட்.

புதுமையாக யோசித்திருக்கிறார்கள் தான்..ஆனால் சற்று அதிகமாக ஆசைப்பட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. இயக்குனர் ராம் சங்கையாவுக்கு இது முதல் படம். தான் வரைந்த திரைச்சித்திரம் புரியாமல் போய் விடுமோ எனும் அச்சத்தில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் களத்தை, மாந்தரகளை விவரிக்க.. படத்தில் நெகிழ்வு பூரணம் நம்மை குறைகளைப் புறம் தள்ள வைத்து விடுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

ஹாரர் த்ரில்லரில் மிரட்டும் 'அஸ்வின்ஸ்'.. வசந்த் ரவி பட டிரெய்லர் வெளியீடு !அஸ்வின்ஸ்

மன ரீதியாக நம்மை பயமுறுத்த நினைத்த படம், சில இடங்களில் மட்டுமே ஜிலீர்! காட்டப்பட்ட உத்திகள் ஒன்றையொன்று சார்ந்தோ இணைந்தோ இருக்கவில்லை என்பது தான் இந்தப் படத்தின் குறை. ஹாரரில் இருந்து உளவியல் ரீதியான மடை மாற்றுக்கு, பின் பாதி உண்டாவது படத்திற்கு சாதகமும் பாதகமும். வசந்த் ரவி நல்ல நடிப்பை நல்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் கதை நாயகியாக அறிமுகம். மொத்தத்தில் ஒவ்வொரு துண்டும் முகம் காட்டும் உடைந்த நிலைக்கண்ணாடி! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வசந்த் ரவியின் அபரிமிதமான நடிப்பு இருந்தும் படம் சில இடங்களில் ஈர்ப்பு. சில இடங்களில் அலுப்பு – இண்டியா ஹெரால்ட்.

 

 

Azhagiya Kanne (2023) - IMDbஅழகிய கண்ணே

முன் தீர்மானம் எடுத்த அரத பழசு காட்சிகள்; எதற்கும் ரசிகனை உசுப்பி விடாத உத்திகள் என்று பயணிக்கும் படம், வழியில் நின்று போகும் பேருந்து! காப்பாற்றுவது ரம்மியமான இசை; கண்ணுக்கு குளிச்சியான ஒளிப்பதிவு; இதர தொழில் நுட்ப பிரிவுகள். உடைந்த சிலையை உயர்ந்த பீடத்தில் வைத்தாலும் அது சிதிலம் தானே! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஒரு சறுக்கல் படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். சஞ்சிதா ஷெட்டியும் விஜய் சேதுபதியும் கூட காப்பாற்ற முடியாத மோசமான எழுத்து!– ஃபிலிம் பீட்!

 

Sunaina starrer 'Regina' teaser release date announced | சுனைனா நடித்துள்ள 'ரெஜினா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்புரெஜினா

இன்னும் அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் ரெஜினா இன்னமும் மேம்பட்ட திரில்லராக இருந்திருக்கும். போலவே சுனைனா அசத்தாலான நடிப்பைத் தந்தும் படம் சறுக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சி நம்முடைய வினாக்களுக்கு பதில் தருகிறது. கொலைக் குற்றத்தின் புதியதொரு கோணத்தைத் தந்த வகையில் இது புதுசு. சதீஷ் நாயரின் இசையும் பின்னணி ஒலிகளும் அருமை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

காதலனைக் கொன்றவர்களைத் தேடிப் பிடித்து நாயகி பழி வாங்கும் வழக்கமான கதை. கடைசிக் காட்சிக்கும் முன்பாக அத்தனை திருப்பங்களுக்கும் விடை தருகிறார்கள். அதை முன்னமே கோடி காட்டியிருந்தால் இன்னும் படம் ஈர்த்திருக்கும் – தினமலர்.

 

Thalai Nagaram 2 (2023) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.தலைநகரம் 2

ரவுடி தாதா கதை, சரியான திட்டமிடாதலால் ஈர்க்க மறுக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் டான் அசோக் தெறிக்க விட்டிருக்கிறார். இறுக்கமான முகத்துடன் சுந்தர்.சி பாத்திரத்தில் பொருந்திப் போகிறார். மாஸ் ஹீரோவுக்கான பில்ட் அப்பில் கோட்டை விட்டிருக்கிறார். தலைநகரம் 1ல் வடிவேலு காமெடி பெரிய பலம். இந்தப் படத்தின் காமெடிதான் இதன் பலவீனம். மொத்தத்தில் கொஞ்சம் கதையையும்,நிறைய சண்டையையும் கொடுத்து நம்முடைய நேரத்தை வீணடித்திருக்கிறார் இயக்குனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

 

 

பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் 'ஹே பாப்பா' என்கிற இரண்டாவது லிரிக்கல் வீடியோ வெளியாகியதுபாயும் ஒளி நீ எனக்கு

தனது நண்பருடன் இணைந்து ஸ்டார்அப் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்த் (விக்ரம் பிரபு). சிறு வயதில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக அவரால் குறைந்த ஒளியில் பார்க்க முடியாது. இப்படியான பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அவர், ஒரு நாள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் ஒருவரை ரவுடிகளிடமிருந்து மீட்கிறார். அதன் எதிரொலியாக அவரை பழிவாங்க ஒரு கூட்டம் திட்டம் தீட்ட, மறுபுறம் அவரது சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னைச் சுற்றி நடப்பது புரியாமல் தவிக்கும் அரவிந்த், ஒரு கட்டத்துக்குப் பின் குற்றவாளிகளை நெருங்கி தனது இழப்புக்கு எப்படி பழிதீர்க்கிறார் என்பது திரைக்கதை.

தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மொத்தப் படத்தையும் ஒரே ஆளாக இழுத்து செல்கிறார் விக்ரம் பிரபு. இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகரின் பின்னணி இசை காட்சிகளில் கூட்ட முடியாத விறுவிறுப்பை இசையில் கூட்ட உதவியிருக்கிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் பிரித்து காட்டும் இடங்களில் கவனம் பெறுகிறது. பாயும் ஒளி’ தேவையான பாய்ச்சலில்லாமல் பின்தங்கியிருக்கிறது. – தமிழ் ஹிந்து.

விக்ரம் பிரபுவும் வாணி போஜனும் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்கள். குறை ஒளியில் பார்வை தெரியாத நாயகன் பாத்திரம் என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. சரியான திரைக்கதை இல்லாததால் அடுத்த முப்பது நிமிடங்களில் ஒளி அணைந்து விடுகிறது. – டைம்ஸ் ஆஃப் ;இந்தியா.

 

மாமன்னன் | Dinamalarமாமன்னன்

சூப்பரான முதல் பாதி; சுமாரான இரண்டாம் பாதி! வடிவேலுவும் ஃபகத் ஃபாஸிலும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சோடை போகவில்லை. கீர்த்தி சுரேஷின் பாத்திரம் இல்லாமலே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. இசைப்புயல் ரகுமானைப் பொறுத்த வரையில் பாடல்களும் இனிமை. பின்னணி இசையும் செழுமை. இது மாரி செல்வராஜ் எனும் இயக்குனரின் ரசிகர்களுக்குப் பிடித்த படம். பொது ரசிகனை ஈர்க்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தால் நாம் நினைக்கும் மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியும் என்பதை சொல்ல வருகிறது இந்தப் படம். சராசரியான படம், செழுமையும் அழுத்தமும் குறைவாக இருப்பதாகத் தோன்ற வைக்கிறது. வரம்பு மீறிப் போகும் அரசியல் சதுரங்கத்தில் தார்மீகம் மட்டுமே வெல்லும் என்று நினைக்கும் வடிவேலு. வெற்றி அனைத்து  தவறுகளையும் மறைத்து விடும் என்று நம்பும் ஃபாகத் ஃபாஸில் என்று இரண்டாம் பாதி பயணித்ததில், முதல் பாதியின் கனம் குறைந்து போய் படம் தக்கையாகி விடுகிறது. மூன்றாவது படத்திலேயே வர்த்தக கண்ணோட்டத்தில் மூழ்கிய மாரி செல்வராஜைப் பார்த்து வருத்தப்பட வைத்து விட்டது இந்தப் படம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம், சில தவறான அணுகுமுறையால் கவிந்து விடுகிறது. மாரி செல்வராஜ் எடுத்த படங்களிலேயே இதுதான் பலவீனமான கதையம்சம் கொண்டதாக இருக்கிறது. வில்லனுக்கு நாய்கள்; நாயகனுக்கு பன்றிகள் எனும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீட்டை தவறாமல் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். அது தவறாக மாறி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கீர்த்தி சுரேஷின் பாத்திரம் அவர் படம் நெடுக போட்டுக் கொண்டு வரும் சேகுவரா பனியனைப் போல இருக்கிறது. மொத்தத்தில் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரப் படமாகத்தான் இருக்கிறது.- இண்டியன் எக்ஸ்பிரஸ்.

ஜுவாலையாக எழுதப்பட்ட கதை, காற்றில் அலையும் சாம்பல் துணுக்குகளாக மாறி இருக்கிறது. அயோக்கியனுக்கு எதிராக கோழையாக இருக்காதே என்பது தான் ஒன் லைன். அதற்கு தகுந்தாற்போல் உதயநிதி தற்காப்பு கலையைச் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக வருவது நிச்சயம் கிளிஷே தான்! பலம் அடிவீரனிடம்; புத்தி லீலாவிடம் என்று சொல்லப் பட்டாலும், கீர்த்தி சுரேஷ் இன்னும் கூட புத்திசாலியாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் முடியும்போது ஒரு இலக்கில்லாத பயணம் போன உணர்வு தான் ரசிகனுக்கு வருகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்.

அருமையான முதல் பாதியும் அசத்தலான நடிப்பும் பாதாளத்தில் விழ வேண்டிய படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்பாதியில் சறுக்கினாலும் சொல்ல வந்த கருத்தை ஓங்கி உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இதுவரை பார்த்திராத வடிவேலுவின் நடிப்பும், அதற்கு உரம் சேர்க்கக் கூடிய ரகுமானின் இசையும் இந்தப் படத்தின் முத்திரைகள்.    – ஃபிலிம் கம்பானியன்.

 

பார்வையும் நோக்கும் – முனைவர் தென்காசி கணேசன்

பார்வையை கூர்மையாக்க எளிய பயிற்சி

என்ன பார்வை – உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை , என்பான் கண்ணதாசன்.

இந்தப் பார்வையில் நுணுக்கமான நோக்கு ஒன்று இருக்கிறது.

இடை மெலிந்தாள் இந்தப் பாவை , என்பதை , இடை மெலிந்தால் இந்தப் பாவை என்றும் நோக்கலாம்.

ஆம். பார்வை என்ற வார்த்தையின் இடை “ர்” . இது மெலிந்தால், வருவது பாவை. கவியரசர், பார்வையை எப்படி நோக்கி இருக்கிறார் என்பது நம்மை வியக்க வைக்கிறது.

பார்வை என்பது இயல்பாக பார்த்து விட்டு கடந்து செல்வது. ஆனால், நோக்கு என்பது வித்தியாசமானது – அடுத்த நிலை தொட்டது. ஒரு உள்ளார்ந்த எண்ணத்துடன் பார்ப்பது.

கம்பனின் நோக்கு

ராமன் சீதை சந்திப்பைப் பற்றி பேசும்போது, காவியக் கம்பன் கூறுவான் –

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்

அது வெறுமனே பார்வை அல்ல. மனது உள் நோக்கிய ஒரு பார்வை.
அதனால் தான் பார்த்தாள் என்று கூறாமல், நோக்கினாள் என்கிறான்.வெறும் பார்வை என்பது அந்தக் கணமே கடந்து, மறந்தும் போவது. ஆனால், நோக்கு என்பது, இங்கே காதலாகி, கருத்தொருமித்த கணவன் மனைவியானது.

மகாகவியின் நோக்கு

இறைவனின் அருள் நோக்கு என்கிறான் மகாகவி பாரதி. நம்மாழ்வார் மட்டும் தான் நாலாயிரத் திவியப் பிரபந்தம் எழுதவேண்டுமா – நானும் 6000 பாடல்கள் எழுதுகிறேன் என்று தொடங்குகிறான். அந்த பாரதி 66ல் தான் இந்த நோக்கு வருகிறது. ஆனால், 66 பாடல்கள் எழுதியபோதே, அவன் மறைந்துவிட்டான்.

பாரதி என்ற மானிடன் தமிழகத்தை மட்டும் எண்ணிப் பார்க்கவில்லை. பாரத நாட்டையும் ஒருங்கிணைத்து நோக்குகிறான்.. அப்படிப் நோக்கும்போதே உலகப் பார்வையைப் பெற்றதுடன், இங்குள்ள மக்களின் பிரச்சனையைத் தேசியப் பிரச்சனையாக, உலக மக்களின் பிரச்சனையாக அவன் உள்ளம் நோக்கியது. அதனால் அவன் தமிழர்கள் பிரச்சனையைப் பேசினாலும் இந்தியர்களின் பிரச்சனையைப் பேசினாலும் அது உலகப் பிரச்சனையாகியது.
பாரதி என்ற படைப்பாளி, கவிஞன் ஒரு மானிடராக உயர்ந்து நிற்கிறான். இந்த மானிடர் சக மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்பவர்; சக மனிதர்களின் சிக்கல்களைக் கண்டு வருந்துபவர். வெறும் வருத்தத்தோடு நின்றுவிடாமல் அவர் ஏக்கங்களும் தவிப்பும் செயல்பாடுகளாய் உருவாயின; சக மனிதர்களைத் தட்டியெழுப்பும் பள்ளியெழுச்சியாக அமைந்தது. போர்க்கோலம் கொள்ளச் செய்யும் முரசொலியாக முழங்கியது. எங்கெல்லாம் மக்கள் துயரமடைந்தார்களோ அங்குள்ள மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து, இங்குள்ள மக்களை எழுச்சியுறச் செய்தவர்; எந்த இன மக்கள் எங்குத் துயரத்தில் மூழ்கினாலும் அவர்களுக்காகப் பெரிது வருந்தும் பண்பை இயல்பாகக் கொண்டிருந்தார்
ஆதி சங்கரரின் நோக்கில் பாரதி (அஹம் ப்ரம்மாஸ்மி – தெய்வம் நீ என்று உணர்)
பாரதி இந்து சமயத்தைச் சார்ந்தவர்; ஆயினும் எந்தச் சமயத்தின் மீதும் அவருக்கு வெறுப்பில்லை, பகைமையில்லை; உயர்வு தாழ்வு என்ற எண்ணமில்லை. எல்லாச் சமயங்களும் சமம் என்றே எண்ணினார். மதித்தார். ஆயினும் தாம் சார்ந்த சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தம் சமயத்தை நேசித்ததாலேயே பிற சமயத்தையும் நேசித்தவர்; மதித்தவர். வேதாந்தக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்; ஆயினும் வெற்று (hollow) வேதாந்தியாக அவர் உருவாகவில்லை..பாரதி வேதாந்திதான்; ஆனால் வேதாந்தத்தின் உட்பொருளை உணர்ந்த பாரதி உண்மையான வேதாந்தி. வேதாந்தத்தின் உட்பொருளாவது, அனைவரிடத்திலும் இறைவன் இருக்கிறான், அனைவரும் சமம் என்பதாகும். பக்தியாளன்தான் பாரதி; ஆயினும் ஆயிரம் தெய்வங்களைப் பாடினாலும் தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
ஏனென்றால் ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் சூட்டி மகிழ்ந்த மக்களின் உள்ளத்தை நன்கறிந்தவர். அத்வைதக் கொள்கை தந்த கொடையிது. ‘அத்வைதம்’ என்பது என்ன? இந்த தேசத்தின் முதல் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆதி சங்கரர் கூறுகிறார் – ‘இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல, ஒன்றே’ என்பதாம். அதாவது தெய்வம் ஒன்றுதான்; அதை எந்தப் பெயராலும் அழைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? அந்தத் தெய்வம் உன்னிடத்திலும் இருக்கிறது; என்னிடத்திலும் இருக்கிறது. ஏன் உலகப் பொருள்கள் அனைத்திலும் உள்ளது. அனைத்து சீவன்களிலும் உள்ளது. அதாவது அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திலும் இருப்பது. அப்படியாயின் எல்லாச் சாதியிலும் மதத்திலும் இருப்பதுதானே? எல்லோரிடமும் இருப்பவர் இறைவன் என்றால் வேற்றுமைக்கு இடம் ஏது? பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு அடிப்படை வகுத்தது இந்த அத்வைதக் கோட்பாடுதான்.
அஹம் ப்ரம்மாஸ்மி என்றார் ஆதிசங்கரர். அதாவது, நானே இறைவனாக இருக்கிறேன். பாரதி, தெய்வம் நீ என்று உணர் என்கிறான். மனதற்களுக்குள்ள வள்ளுவன் கூறுவது போல, தீய எண்ணங்களை அகற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழும் ஒருவன், தெய்வத்திற்கு சமம் என்பதே இங்கு நான் காண்பது.
வள்ளுவனின் நோக்கு

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

நான் நோக்கும்போது, குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும்,என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பு.

இங்கே பார்வை என்ற அர்த்தம் வரவில்லை. நோக்கு என்பதில், காதல் முழுமையாய் மனதுக்குள் உருவானதைக் கூறுகிறது. அதாவது, பார்வையின் அடுத்த கட்டம் நோக்கு எனலாம். சாதாரணப் பார்வையைத் தாண்டி, மனதை ஊடுருவும் நிலை தான் நோக்கு.

காதலை இப்படிக் கூறும் வள்ளுவன், கற்பைப் பொதுவாக வைக்க, இதே நோக்கு என்னும் வார்த்தையை வைத்தே விளையாடுகிறான்.

வள்ளுவன், பிறர் மனை நோக்காமை பேராண்மை என்கிறான்.

எதிரே வரும் பெண்களை, பார்ப்பது இயல்பான ஒன்று. அது, உலகின் நடைமுறை. ஆண், பெண் ஒருவரை ஒருவர் பார்ப்பது என்பது இயற்கை. ஆனால், இங்கு பிறர் மனை பார்ப்பது என்று வள்ளுவன் கூறவில்லை. நோக்காமை என்று கூறுகிறான், காரணம், பார்க்கும் போது வெறும் பார்வை மட்டும் இல்லாமல், ஒரு வித எண்ணத்துடன், உள்நோக்கத்துடன் பார்க்கும் பார்வை தான், நோக்கு என்கிறது.

நோக்கு என்ற ஒரு வார்த்தையை காதலுக்கும் சரி, கற்புக்கும் சரி, வள்ளுவன் கையாளும் முறை வியக்க வைக்கிறது.

அடியார்கள் பார்வையில் நோக்கு

நிறைவாக, கடவுளை வணங்கும் வரிகளில் கூட, நோக்கு எப்படி இடம் பெறுகிறது?

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க !

நொடியில் பக்தர்களை நோக்கி அருள் பாலிக்க வேண்டும் என்கிறார் முருகனிடம். பார்ப்பது என்பதை விட , இறைவன் அடியவர்கள் மனதில் ஊடுருவி அருள் செய்யவேண்டும் என்கிறார்.

மணிவாசகர் நோக்கு

“நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று திருவாசககத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்.

இறைவனைப் பார்த்து, உன் பார்வை சாதாரண ஒன்று அல்ல. எப்போதும் இந்த உலகம் நன்றாக இருக்கவேண்டும் – உனை நம்பும் அடியார்கள் என்ன விரும்புகிறார்கள், என்ன வேண்டுகிறார்கள் என்பது உன் நோக்கால் அறிந்தவன் நீ. பக்தர்களின மனதில் உள்ளவற்றையும் நுணுக்கமாக அறிந்த நுண்ணுணர்வு நீ. எனவே உன் நோக்கு என்பது, அடியவர்களின அவலங்களைத் தீர்த்து, அவர்களின வாழ்வை வளம் பெறச் செய்வதே எனபதாக மணிவாசகர், சிவபுராணத்தில் பாடுகிறார்.

இன்னும் பல்வேறு இலக்கியங்களில் நோக்கு பலவிதமாக கூறப்பட்டுள்ளது.

தமிழுக்கு அமுது என்று பெயர் என்று சும்மாவா சொன்னார்கள்?