தலையங்கம்

Image result for ஊழல்

தமிழ் நாட்டுக்கு இன்றைக்கு என்ன தேவை?

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் ஊழல் இல்லாத அரசு !

தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி என்று சொல்வார்களே , அதுபோல எந்தத் துறையைத் தொட்டாலும் அதில் ஊழல் !

புரையோடிய புண்ணாகிவிட்டது ஊழல் !

மேல்மட்டம் முதல் அடித்தளம்வரை விரிந்து பரந்து கிடக்கிறது இந்த ஊழல் சாம்ராஜ்யம்!

பிரசவ ஆஸ்பத்திரி முதல்  மயானம்வரை ஒவ்வொரு படியிலும் ஊழல் நெடி!

அரசியல், ஆன்மீகம், இசை, ஈடு, உதவி, ஊடகம், எழுத்து, ஏடு, ஐஸ்வரியம், ஒழுக்கம், ஓட்டு, ஔடதம் ,என்ற அனைத்து உயிர்த்  துறைகளும் ஊழலில் ஊறிய  மட்டைகளாக இருக்கின்றன.

மெய்யெழுத்து பொய்யெழுத்துக்களாகிவிட்டன.

உயிர்மெய் உயிர்வதையாகிவிட்டன.

ஆயுதம் காப்பதற்குப்பதிலாக அழித்து வருகிறது.

பயிருக்கு நடுவே களையிருந்தால் பிடுங்கலாம்; களையையே பயிராக வளர்த்தால்  நாடு தாங்குமா?

இளைய சமுதாயமே! நீ பொங்கிவா! புயலாய் மாறிவா!

நீ நினைத்தால்தான் இந்த ஊழல் என்னும் நச்சுக் கொடியை வேரோடு வெட்டிச் சாய்க்கமுடியும்.

தம்பி வா! தலைமை ஏற்க வா!

ஊழல் செய்வது  அண்ணனாக இருந்தாலும் அன்னையாக  இருந்தாலும் அப்பனாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் அனைவரையும் எதிர்த்துப் போராடு!

அவர்களைத் திருத்திவிடு ! இல்லையேல் ……………………………

 

நீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன் 

Related image

 

தண்ணீரைப்பற்றி நினைத்துக்கொண்டேன்உயிர்களின் சிருஷ்டிக்கே தண்ணீர் ஒரு ஆதாரமாக இருக்கிறது.

தண்ணீர் இல்லாமல் நம் உயிர் நிலைக்காதுபூமியின் ஜீவராசிகளின் உயிர் வாழ்வுக்காக, ஜீவ நதிகளும், நிரந்தரமான பரந்த பனி ஏரிகளும், காலக் கணக்கற்றுக் கொட்டும் நீர் வீழ்ச்சிகளும், பருவம் பார்த்துப்பார்த்துப் பெய்யும் வான் மழையும், நிலத்தை ஆதரவாக அணைத்துக்கொண்டு உணவும் உறவும் கொடுக்கும் மகா சமுத்திரங்களும் பூமி வாழ்க்கையை ஆனந்தமாக்குகின்றனகுளிர்விக்கின்றன.

இயற்கையின் உன்னதக் கொடையாய் பூமியெங்கும் பரந்து தளும்பும் இந்தத் தண்ணீரை, மனித ஆன்மாவைக் கரைசேர்க்கும் புனிதமான தெய்வப்பதமாக, அன்னையாக, வேதங்களும் இதிகாசங்களும் போற்றிப் புகழ்ந்தேத்துகிறது; கொண்டாடுகிறதுஉயிர் நிலைப்பதற்கு அடிப்படையான எல்லா இயற்கைக் கொடைகளும் தெய்வத்தின் பிரத்யட்ச பிரதிமைகளாகப் பூஜிக்கப்படுகின்றன .

நாளடைவில் பூமி, தேசங்களாகவும், தேசங்கள் மாநிலங்களாகவும், பின் மொழிவாரிப் பிரதேசங்களாகவும், அரசியல் வட்டங்களாகவும், மேலும் மேலும் எல்லைகளைக் குறுக்கி வகுத்துக்கொண்டு, தனித்தனி வேலிகளைப் போட்டுக்கொண்டு, நிலத்தை பங்குபோடத் தொடங்கிவிட்ட பிறகு சகஜமாக வித்யாசமற்று ஓடிக் கொண்டிருந்த நீரோட்டங்கள் அரசியல் நிறம் கலந்து உரிமைப் பிரச்னைகளுக்கு ஆட்பட்டு அவரவர்கள் அணைகளைக் கட்டி நீரை முடக்கி சொந்தம் கொண்டாடிக்கொண்டு போராடும் பரிதாப நிலைக்கு இன்று வந்துவிட்டது

நதிகளின் விதியும் கதியும் இப்போது கேள்விக்குறியாகி விட்டன.

Image result for water wars in india

காற்றைப்போல் நீரும் பிரச்னைக்கு அப்பாற்பட்டுப் பொதுவாகி விடக்கூடும்.. .மனிதன் அதன் வறட்சிக்குக் காரணமாக இல்லாமல் இருந்தால்……

நதிகளை இணைத்தால் பிரச்னை வெகுவாகக் குறையலாம்மனித மனங்கள் தங்கள் குறுகிய அபிமானங்களைத்தாண்டி கூடிச் செயல்படுத்த வேண்டிய விஷயம் இது?

பாரதியாரின் பல கனவுகளைப்போல் இதுவும் இன்னொரு கனவாகவே இருந்து விடக்கூடுமோ?

**************

Related image

சமீபத்தில் மொகலாய மன்னர்களின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன்ஒவ்வொரு மன்னர்களும் தம் நாட்டு நீர் வளத்தை எப்படிப் பராமரித்து பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற தகவல் சுவையாக இருக்கின்றன.

அக்பர் சக்கரவர்த்திக்குக் கங்கா நதி நீர்தான் மிகவும் விசேஷமானதாக இருந்திருக்கிறதுஅவர் தலைநகரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் அவருக்கும் அவரை சூழ்ந்திருக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையானது கங்கைத் தண்ணீர்அது கிடைக்கும்படியான சேகரிப்புகளை நிர்வகிக்கப் பொறுப்பான அதிகாரிகளும் அதற்கென்று வாரியமும் ஏற்படுத்தப்பட்டிருந்தன .

அந்த தண்ணீர்க் கிடங்குக்குப் பெயர்” “அப்தர் கன்னா” கங்கா நதிநீரை களங்கப் படுத்தாமல் இருப்பதற்காக அங்கே பாதுகாவலர்களை நியமித்திருந்தார்தினந்தோறும் அவர்கள் பெரிய பெரிய ஸீல் வைத்த மூடிகள் போட்ட தொட்டிகளில் நீரை நிரப்பி அரண்மனைக்கு வண்டிகளில் அனுப்பி வைப்பார்களாம்.

அக்பருடைய தர்பார் ஆக்ராவுக்கும் பதேபூர் சிக்ரிக்கும் அவ்வப்போது இடம் மாறும் சமயங்களில் அவருடைய சைன்யத்தைத் தொடர்ந்து பெரிய மாட்டு வண்டிகளில் கங்கை நீர்த் தொட்டிகளும் பின்தொடரும்.. அக்பர் லாஹூரில் இருந்தபோது அவருக்கு ஹரித்வாரிலிருந்து கங்கை நீர் கொண்டுவரப்பட்டது அக்பர் கங்கைநீரை விரும்பியது அதன் புனிதத் தன்மைபற்றிய மதநம்பிக்கைகளால் அல்லகங்கை நீர் தூய்மையானது என்ற அபிப்ராயம்தானாம்.

கங்கைநதியின் வெவ்வேறு கரைகளில் இருந்து நீரைமொண்டு அதன் சுவையின் தரத்தை அறிந்துகொள்ள அவர் தொழில்முறை சுவைஞரை [Water tasters}  நியமித்திருந்தாராம்.

ஆனால் அவருடைய மகன் ஜஹாங்கீருக்குக் கங்கை ஜலம் அவ்வளவு முக்கியமல்லஅவருக்கு இயற்கையாக ஓடிவரும் எந்த நதி நீரும் உபயோகத்திற்கு உகந்தது. அவர் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள நீர் நிலைகளில் நீரெடுத்து அதன் எடை வேறுபாட்டை அறிந்து அவற்றுள் எடை குறைந்த நீர் எதுவென்று கண்டுபிடித்து உபயோகிக்க விரும்பினாராம்.  ஒரு வேளை தூய்மையான நீர் எடை குறைவாக இருக்கும் என்ற ஊகம் போலும்!

ஷாஜஹான் மன்னருக்கு எப்போதும் யமுனை நீர்தான் விருப்பமானதுயமுனை ஜலம் பளிங்குபோல் தெளிவானதுபரிசுத்தமானதுஆக்ராவிலும் செங்கோட்டையிலும் சுவையான நீரூற்றுக்கள்கொண்ட கிணறுகள் பல இருந்தபோதிலும் ஷாஜஹான் யமுனையைத்தான் விரும்பினார்.

Related image

ஔரங்கசீப் தன் தந்தை ஷாஜஹானை ஆக்ராக் கோட்டையில் சிறை வைத்திருந்த வருஷம் 1658ல் அவன் அந்தக் கோட்டைக்குள் யமுனைத் தண்ணீர் பாய்வதற்குக் கட்டிய நீர்க் குழாய்களை அடைத்துவிட்டானாம்.

ஒரு பெரிய முகலாய மன்னர் ஷாஜஹான் தன் அந்திம காலத்தில் தாகம் தீர்த்துக்கொள்வதற்குத் தனக்கு விருப்பமான யமுனைத் தண்ணீர் கிடைக்காமல் ஏங்கித் தவிக்க வேண்டிவந்திருக்கிறது. .

தன் மகனே தனக்குத் தண்ணீர் கிடைக்காமல் செய்த வேதனையில் வெம்பி அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினார் ஷாஜஹான்

“ என் புதல்வனேமாவீரனே!

என்னுடைய துர்ப்பாக்கிய நிலைமையைப் பற்றி

நான் எவரிடம் ஏன் புகார் செய்யப் போகிறேன்?

இதோ இந்த மரத்தின் ஒரு சின்னத் துளிர் கூட

ஆண்டவனின் சித்தமன்றி விழக் கூடுமா?

நேற்றுத் தான் என் அதிகாரத்தின் கீழ் ஒன்பது

லட்சம்வீர்ர்கள் கட்டளைக்கு கைகட்டி நின்றார்கள்.

இன்று ஒரு வாய்த் தண்ணீருக்காக…. மகனே…. உன்னிடம்

கையேந்தி நிற்கிறேன்

ஹிந்து மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

இறந்தவர்களுக்கும் ஒரு வாய்த் தண்ணீர் அளிக்கிறார்கள்.

என் தவப் புதல்வனே…….முகலாய வம்சத்தின் தலைவனே!

இப்போது தண்ணீருக்கு ஏங்கிப் புலம்பும் தந்தையின்

வேதனைக்கு நீ காரணமாகி விட்டாயே!.

Related image

இந்த செய்தியைப் படித்த ஔரங்கசீப் ஒன்றும் கலங்கிக் கண்ணீர் விட்டுவிடவில்லைமுகலாய அரசுகளில் உறவினர்களை சிறை வைப்பதும் கொலை செய்வதும்தான் அரசாங்க நடைமுறையாக இருந்திருக்கிறதுகுடும்பப் பாசம் அரசியலில் இல்லை !

“” தந்தையே இதற்குக் காரணம் நானல்ல.

இந்த நிலைமையை வருத்திக் கொண்டது நீர் தான்…….”””.”

என்று கூசாமல் மறு பதில் அனுப்பிவிட்டான் ஔரங்கஸீப்.

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

 

Related image

விஷ்வகர்மா தன் திறமையெல்லாம் காட்டவேண்டிய தருணம் வந்தது. தான் செய்யப்போகும் காரியத்திற்கு மனைவி மகள் சூரியதேவன் மற்றும் உறவினர்கள் மந்திரிமார்கள் மற்ற எவருடைய ஒப்புதலும் கிட்டாது என்பதை நன்றாக  அறிந்திருந்தார். வெளியே தெரிந்தால் இது பஞ்சமாபாதகம் என்று அவரை   மூன்று  உலகமும்  தூற்றும்.  உலகத்தைப்பற்றிக் கவலைப்படாதவர் விஷ்வகர்மா. தன்னால் எதையும் செய்யமுடியும் என்ற அகம்பாவமும் கர்வமும் அவருக்கு எப்போதும் உண்டு. தேவலோகங்களையே நிர்மாணிக்கும் தேவ சிற்பி என்பதால் அவருக்குக் கிடைத்த மதிப்பிற்கும் செல்வாக்குக்கும் அளவே இல்லை. தன் எண்ணப் பிரதிபலிப்புகள்தான் நடைமுறைகளாக வரவேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருப்பவர்.

பிறவியிலிருந்தே ஸந்த்யா அவருக்கு ஒரு சவாலாக இருந்துவந்தாள்.  அவள் பிறவியில் ஏற்பட்ட குறையைப்போக்கத் தன்னைப் படைத்த பிரும்ம தேவருக்கும் தெரியாதபடி சில காரியங்கள் செய்தவரல்லவா அவர். இன்று,  தான் நினைத்தபடி மகாபிரும்மருத்ரன்  ஸந்த்யாவிற்குப் பிறக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டார்.

அதன் முதல் படி ஸந்த்யா கருவுற்றிருக்கிறாளா என்று சோதனை செய்யவேண்டியது.  அவள்  கருவுற்றிருந்தால் அதைக் கலைக்க ஏற்பாடு செய்யவேண்டியது. இவைதான் தனது முதல் கடமை என்று தீர்மானம் செய்தார். அதற்கேற்றாற்போல் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

” சூரியதேவரே ! அருமை மகளே!  காந்த சிகித்சை மிகவும் அற்புதமாக முடிவடைந்துவிட்டது. இனி  உங்கள் இனிமையான இல்லற வாழ்விற்கு எந்தவிதத் தடையும் இருக்கமுடியாது. சூரியதேவரின் கிரணங்கள் ஸந்த்யாவை இனி பாதிக்காது. ஆனந்தமாக நீங்கள் இருவரும் வாழ்வைத் துவங்கலாம்.  இன்றே உங்கள் திருமண நாளை நிச்சயம் செய்துவிடுகிறேன். வருகிற மகரசங்கராந்தியில் உங்கள் திருமணத்தை கோலாகலத்துடன் நடத்திவைக்கிறேன். ஹிம பர்வதத்தில் பரமேஸ்வரன் பார்வதி திருமணம் நடந்ததைவிட மிகவும் சிறப்புடன் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்.  தேவ உலகமே இதுவரை கண்டிராத அளவிற்கு உங்கள் திருமண விழா சிறப்பாக அமையும்.  அது சூரியதேவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.  ஆனால் அதுவரை நீங்கள் சற்றுப் பொறுத்திருக்கவேண்டும்.”  என்று மேலும் பேசப்போன விஷ்வகர்மாவை சூரியதேவனின் கணீரென்ற குரல் தடுத்தது.

“விஷ்வகர்மா அவர்களே! எங்களை நீங்கள் மன்னிக்கவேண்டும். நானும் ஸந்த்யாவும் பார்த்த ஒரு கணத்திலேயே ஆதர்ச தம்பதிகளாகிவிட்டோம். அவளின்றி  நானும் நானின்றி அவளும் இனி ஒரு கணம்கூடப் பிரிந்திருக்க முடியாது. என் இதயத்தில் அவள் சங்கமமாகிவிட்டாள். அதேபோல் அவள் மனம், எண்ணம், உடல் அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்.   இனி நாங்கள் பிரிந்திருப்பது என்பது இயலாத காரியம். இன்றே நாங்கள் பெரியவர்கள் உங்கள் முன்னிலையில் சதி-பதிகளாகி விடுகிறோம். தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம் ” என்று விஷ்வகர்மாவை வணங்கினான் . ஸந்த்யாவும் அதற்கு உடன்பட்டவள்போல் சூரியதேவனுடன்சேர்ந்து தந்தையை வணங்கினாள்.

வேறு எவரேனும் விஷ்வகர்மாவின் இடத்தில் இருந்தால் இப்படித் தன் திட்டம் முறியடிக்கப்படுகிறதே என்று பதறிப்போயிருப்பார்கள். ஆனால் விஷ்வகர்மா செயல்களில் காட்டும் சாதுர்யத்தைத் தன் பேச்சிலும் காட்டினார். தன் மனத்தில் ஏற்பட்ட சலனத்தை முகத்தில் சிறிதளவுகூடக் காட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு கூறினார்.

“உங்கள் இருவருக்கும் இடையே உருவாகியிருக்கும் புதிய பந்தத்தை நான் நன்கு அறிவேன். உங்கள் திருமணம் திட்டமிட்டப்படி மகரசங்கராந்தியில் நடைபெறும். அதுவரையில் நீங்கள் பொறுத்திருக்கவேண்டும் என்றுதான் கூறினேனே தவிர பிரிந்திருக்கவேண்டும் என்று சொல்லவில்லை”.

” புரியவில்லை  தந்தையே ” என்று வார்த்தையால் ஸந்த்யாவும் பார்வையால் சூரியதேவனும் வினவினர்.

” முதலில்  செயலைச் சொல்கிறேன் . பிறகு அதைப் புரியும்படி சொல்கிறேன்.  செயல் என்னவென்றால் சூரியதேவன்தான் பர்வதத்திற்குச் செல்லவேண்டும். அவர்கூட ஸந்த்யாவின் ஸ்வரூபம்  வரும். அதுபோல ஸந்த்யா இங்கிருப்பாள். அவள்கூட  சூரியப் பிரபை  இருக்கும். அதாவது ஸந்த்யாவின் ஸ்வரூபம் என்ற முப்புரப்பரிமாணப்  பிரதியை சூரியதேவனுடன் அனுப்பிவைக்கிறேன். அதற்கான மந்திரம் என்னிடம் இருக்கிறது. அதை ஸந்த்யா உச்சரித்தால் அவள் ஸ்வரூபம் உங்களுடன் வரும். ஸந்த்யாவிற்கும் அதற்கும் கொஞ்சங்கூட வித்தியாசம் இருக்காது. அந்த ஸ்வரூபம் பேசும், பாடும், ஆடும். அதைத் தொடலாம். உணரலாம். ஸந்த்யா இல்லையே என்ற எண்ணமே  சூரியதேவனுக்குத் தோன்றாது. தாம்பத்திய உறவைத்தவிர நீங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.

ஸந்த்யாவிற்கு என்னால் சூரியதேவனின் ஸ்வரூபம் தர இயலாது. ஆனால்  அவளை  ஒரு பளிங்கு அறையில் இருத்தி சூரியப் பிரபை விளக்கை ஏற்றிவைத்து சூரியதேவன் தன்னுடனே இருப்பதுபோன்ற பிரமையை என்னால் ஏற்படுத்தித் தரமுடியும். இதற்கு நீங்கள் இருவரும் ஒத்துழைக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் திருமணத்தை பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் ஒன்று சேரும் காலத்தில்தான் செய்வதாக அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்.” என்று மேலும் ஒரு அஸ்திரத்தைப் போட்டார் விஷ்வகர்மா.

வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்ட  சூரியதேவனும் ஸந்த்யாவும் விஷ்வகர்மாவின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

சரி என்று புறப்படத் தயாரான சூரியதேவனை நிறுத்தினார் விஷ்வகர்மா.

” நீங்கள் புறப்படுமுன் உங்கள் இருவருக்கும் ஒரு சாந்துக் குளியல் செய்யவேண்டும் . காந்தச்  சிகித்சை செய்துகொண்டவரும் செய்வித்தவளும்,   அதைத் தொடர்ந்து சாந்துகுளியல் செய்து கொள்ளவேண்டும். அப்போதுதான் காந்தப் பொடிகளின் கதிர்வீச்சு மற்றவரைத் தாக்காமல் இருப்பதோடு உங்கள் உடலிலிருந்தும் அறவே போய்விடும். அதற்கு  நம் பளிங்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இருவரும் அதோ மூலையில் தெரியும் இரு கூண்டுகளுக்குச் செல்லுங்கள். அவை தானாகவே உங்களைக் குளியல் அறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். ” என்றார் விஷ்வகர்மா.

அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட சூரியதேவன் மௌனமாக இடது கோடியில் இருக்கும் கூண்டிற்குள் சென்றான். உள்ளே சென்றதும் கூண்டு மூடிக்கொண்டது. மெதுவாக சுழன்று விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

Related image

ஸந்த்யா வலது கோடியில் இருக்கும் கூண்டில் நுழைந்தாள். அவள் கூண்டு உடனே பறக்கவில்லை. விஷ்வகர்மாவின் ஆணைப்படி ஒரு மரகத பசுமை ஒளி வட்டம் அந்தக் கூண்டின்  மேல் பகுதியிலிருந்து  கீழ்ப் பகுதி வரை  சுற்றிச்சுற்றி வந்தது. ஸந்த்யாவின் உடலினுள் இருக்கும் ஒவ்வொரு மூலக் கூறுகளையும் படம் பிடித்துக்கொண்டே வந்தது.

அவள் கருவில் மூன்று உயிர்கள் தோன்றியிருப்பதை அந்த ஒளிவட்டம் படம் பிடித்துக் காட்டியது. அதைப்பார்த்த விஷ்வகர்மாவின் கண்கள் தீப்பிழம்பைக் கக்கின.

சாந்துக் குளியலின்போது ஸந்த்யாவின் கருவில் இருக்கும் மூன்று உயிர்ப்புள்ளிகளையும் அழிப்பதற்கு மருந்து தயார் செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டார் விஷ்வகர்மா. ஸந்த்யாவின் கூண்டையும் பறக்கும்படி ஆணையிட்டுவிட்டு மருந்தைத் தயாரிக்கச் சென்றார் விஷ்வகர்மா.

அந்த மரகத ஒளிவட்டம் ஸந்த்யாவின் கால் நிழலில் பதுங்கியிருக்கும் ராகுவையும்   காட்டிக் கொடுக்கத் தவறவில்லை. ஆனால் அவள் கருவில் இருக்கும் மூன்று உயிர்களைக் கண்டதும் காலடியில் தெரியும் ராகுவை விஷ்வகர்மா பார்க்கத் தவறிவிட்டார். அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் விஷ்வகர்மாவையே பின்னால் நிலை குலையச்செய்தன .

(தொடரும்)

 

இரண்டாம் பகுதி

Image result for oracle database

ஆரக்கிளிலிருந்து வந்தவர் மிகவும் சாமர்த்தியசாலி.  தான் சமாளிக்கவேண்டியது மும்மூர்த்திகள், முப்பெரும்தேவியர்கள், மற்றும் விநாயகர், முருகன் ,எமன், சித்திரகுப்தன் என்பதை நன்கு அறிந்தவர். இந்த பிராஜக்டுக்காகவே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். டேட்டாபேசில் ஆராய்ச்சி செய்து டாக்டரேட் வாங்கி, பல கம்பெனிகள் இவரைத் தங்கள் நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளத் துடித்தபோது அனைத்தையும் உதறிவிட்டு ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் சேர்ந்து சுவாமி தத்தாம்ஸானந்தா என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர். தத்தாம்ஸ் என்றால் சமஸ்கிருதத்தில் டேட்டா  என்று அர்த்தம்.

பாகவதம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து அதில் பரந்து விரிந்துள்ள தகவல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, மிகப் பெரிய தீஸிஸ் எழுதியவர் தத்தாம்ஸானந்தா. ராமர், கிருஷ்ணர் பிறந்தபோது இருந்த கிரக நிலைகள், மகாபாரதப் போர்களின்போது கூறப்பட்ட அமாவாசை போன்ற திதிகள் இவற்றையெல்லாம் இணைத்து இதிகாச காலங்களை மிகத் துல்லியமாக  வரிசைப்படுத்தியவர்.  அத்துடன் ஆர்யபட்டரின் தத்துவங்கள், இன்றைய கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாவதற்குக் காரணமாக இருந்தவர். வானவியல் , கணிதவியல் இரண்டிலும் தேர்ச்சிபெற்ற பல அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாகக் கிடிதபதம் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் கல்ப  மன்வந்த்ரா யுகா போன்ற பெரிய அளவில் காலத்தைக் குறிக்கும் பதங்கள் தற்கால அண்ட இயலை ஒத்திருக்கிறது என்று வாதிட்டார். மேலும் கணிதபதம், காலக்ரியபதம், கோலபதம் போன்ற தத்துவக் கோட்பாடுகளையெல்லாம் விளக்கி உலகப் புகழ்பெற்றவர்.

அப்படிபட்ட ஒருவர்தான் இந்த எமபுரிப்பட்டணம் பிரஜாக்டை எடுத்துச் செல்லமுடியும் என்பதை அறிந்த நாரதர் தத்தாம்ஸானந்தாவை  நேரில் சந்தித்து  அவருடைய உதவி மிகவும் தேவை என்றும், இதை வெற்றிகரமாக முடித்தால், தேவ உலகமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.

சுவாமி தத்தாம்ஸானந்தா ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. பகவான் தனக்குத் தந்த  ஆணையாக ஏற்றுக்கொண்டார். நாரதர் கூறியபடி  ஆரக்கிளில் சேர்ந்தார்.

தான் வணங்கும் தெய்வங்கள் அனைவரையும் சந்திக்க இது மாபெரும் வாய்ப்பாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அவர்கள் முன்னிலையில் எப்படிப் பேசுவது என்று முதலில் ஒரு கணம் தயங்கினார். அவரது இந்தத் தவிப்பைப் போக்கவேண்டியது முதல் கடமை என்று உணர்ந்த நாரதர் ஒரு மாய வலையை சுவாமி தத்தாம்ஸானந்தா மீது போர்த்தினார். `அது அவருக்குப் புதிய உணர்வைக் கொடுத்தது.  அமர்ந்திருப்பவர்கள் தெய்வங்கள் என்ற எண்ணம்  மாறி அவர்கள் கிளையண்ட் என்ற உணர்வைத் தோற்றுவித்தது. 

அதன்பின் சுவாமி தத்தாம்ஸானந்தா  பிராஜக்ட் டைரக்டராக மாறினார்.

ஆரக்கிள் டேட்டாபேசில் இருக்கும் பாதுகாப்பு வளையங்களைப்பற்றி  அழகாக எடுத்துரைத்தார். தகவல்கள் எப்படி குறியீடாகப் பாதுகாக்கப்படும் என்றும், தேவையான அளவு தகவல், தேவையானவர்களுக்குப் பகுத்துத் தரப்படும் என்ற என்கிரிப்ஷன் , ரிடாக்சன்  விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தார்.

ஏற்கனவே  என்கிரிப்ஷன்பற்றி அறிந்திருந்த எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும்  அவர்  கூறிய கருத்துப் புரிந்தது மட்டுமன்றிப் பிடித்தும் இருந்தது.

எமபுரித் தகவல்கள் டேட்டாபேசில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை எமனுக்கும் வந்தது.

“யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் “என்று  சுவாமி தத்தாம்ஸானந்தா  கூறினார்.

பன்னிரண்டு கரங்கள் மேலே எழும்பின.  முருகன் எழுந்து நின்றார்.  “ஆரக்கிள் என்றால் என்ன என்பதைப்பற்றி நீங்கள் கூறவேயில்லை. அது என்ன என்பதை இந்த சபையோர் தெரிந்துகொள்ளும்படி விளக்கலாமே?” என்று வினவினார்.

பிரவணத்துக்குப் பொருள்கேட்டுப் பதில் தெரியாத பிரும்மரையே சிறையில் அடைத்த முருகன் ஆயிற்றே! சுவாமி தத்தாம்ஸானந்தா  தயங்கினார்.

“ஆரக்கிள் என்பது ஒரு நிறுவனம். அதுதான் இந்த டேட்டாபேஸை எல்லாம் …..”

” நான் அதைக்கேட்கவில்லை. ஆரக்கிள் என்ற சொல் எதைக் குறிக்கிறது?”  முருகன் ஆணித்தரமாகக் கேட்டார்.

ஆரக்கிள் என்பது கிரேக்க பெண் பூசாரிகளைக் குறிக்கும் சொல். அந்தப்  பூசாரிணிகள்  தங்களை வேண்டி வழிபடும் மக்களுக்கு பின்னால் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைச் சொல்லும் திறமை படைத்தவர்கள்.  அதைப்பற்றிய ஒரு சுவையான கதை உண்டு.

Image result for ஆரக்கிள்

“கிரேக்க மாபெரும் வீரன் அலெக்ஸாந்தர், தான் உலகத்தை முழுதும் வெல்வோமா என்று தெரிந்துகொள்ளக்  குறிசொல்லும் ஆரக்கிளை அணுகினான்.
யுத்தத்திற்குப் போகுமுன் அலெக்சாண்டர் ஆரக்கிளிடம் நல் வாக்குக் கூறும்படி வேண்டினான். ஆனால் அன்றைக்கு ஆரக்கிள் மௌன விரதத்திலிருந்தாள். பேசமறுத்தாள். அலெக்ஸாண்டரோ பிடிவாதத்துடன்  “நான் உலகத்தை வெல்வேனா ? பதில் கூறு”  என்று திரும்பத்திரும்பக்  கேட்டுக்கொண்டே இருந்தான்.
ஆரக்கிள் பதிலே சொல்லவில்லை. கடைசியில் அலெக்ஸாண்டரின் தொந்தரவு பொறுக்கமாட்டாமல் அவனுடைய பிடிவாதத்தைப்பற்றி,   “உன்னை ஜெயிக்கவே முடியாது போலிருக்கிறது” என்று  சொல்லி மௌன விரதத்தைக்  கலைத்துவிட்டு  “உனக்கு என்ன வேண்டும் ?” என்று கேட்டாளாம்.  
“ஆரக்கிள் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டது . அது போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டு அலெக்ஸாண்டர் யுத்தத்திற்குப் புறப்பட்டானாம்.
 
ஆக, ஆரக்கிள் என்பது குறி சொல்லும் தேவதை.” என்றார் சுவாமி  தத்தாம்ஸானந்தா.
“அதாவது, தேவர்களுக்கே மட்டும் தெரிந்த தேவரகசியத்தை மனிதர்களுக்குச் சொல்லும்  சூனியக்காரி ஆரக்கிள் . சரியா?”  என்று  முருகன் கிடுக்கிப்பிடி போட்டார். 
பேச்சு வேறு திசையில் செல்கிறது என்பதை அப்போதுதான் புரிந்துகொண்ட சுவாமி தத்தாம்ஸானந்தா  மட்டுமல்ல நாரதரும் சற்று நடுங்கினார். 
முருகனின் பன்னிரு விழிகள் மட்டுமல்ல மற்றவர்களின் விழிகளும்  அனலைக் கக்கின. 
(தொடரும்) 

ஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்


காற்றுச் சீரமைப்பியின் வெளிப்புறக் கூறுகள்
ஆங்காங்கே
கதறிக் கொண்டிருக்க

சமிக்ஞை உள்வாங்கும்
உணரித் தட்டுகள் – இவள்
சங்கதிகளையும் சேர்த்து உள்வாங்க

கவ்விகள் இருக்கும் துணிச்சலில்
கவலை மறந்து
கொடித் துணிகள் கொட்டமடிக்க

நிலவும் நட்சத்திரங்களும்
மேகங்களுள் முங்கியிருக்க
உலவும் உணர்வுகளோ
தேகத்திலேயே தேங்கியிருக்க

வீசும் காற்று இவளை
வேரோடு இடம் பெயர்க்க முயல –

வழக்கமான மொட்டை மாடி ஒன்று
இவளது
மௌனங்களை மெதுவாய்
மொழி பெயர்த்துக் கொண்டிருந்தது..!

Related image

 

யானை எத்தனை யானையப்பா

 • தமிழின் பெருமைக்கு மற்றுமொரு சான்று

  Image result for elephant herd

  # யானை (கரியது)
  # வேழம் (வெள்ளை யானை)
  # களிறு
  # களபம்
  # மாதங்கம்
  # கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
  # உம்பர்
  # உம்பல் (உயர்ந்தது)
  # அஞ்சனாவதி
  # அரசுவா
  # அல்லியன்
  # அறுபடை
  # ஆம்பல்
  # ஆனை
  # இபம்
  # இரதி
  # குஞ்சரம்
  # இருள்
  # தும்பு
  # வல்விலங்கு
  # தூங்கல்
  # தோல்
  # கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
  # எறும்பி
  # பெருமா (பெரிய விலங்கு)
  # வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
  # பூட்கை (துளையுள்ள கையை உடையது)
  # ஒருத்தல்
  # ஓங்கல் (மலைபோன்றது)
  # நாக
  # பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
  # கும்பி
  # தும்பி
  # நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
  # கரேணு
  # உவா (திரண்டது)
  # கரி (கரியது)
  # கள்வன் (கரியது)
  # கயம்
  # சிந்துரம்
  # வயமா
  # புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
  # தந்தி
  # மதாவளம்
  # தந்தாவளம்
  # கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
  # வழுவை (உருண்டு திரண்டது)
  # மந்தமா
  # மருண்மா
  # மதகயம்
  # போதகம்
  # விரமலி
  # மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
  # கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.
  # பிடி
  # அதவை
  # வடவை
  # கரிணி
  # அத்தினி ஆகியவை பெண்  யானைகளின் பெயர்கள்.

  இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்.
  தகவல் திரட்டியவர்: எம். அதுல்யா, வெங்கிட்ராஜ் மெட்ரிக் பள்ளி. சுல்தான்பேட்டை, சூலூர், கோவை.

  (நன்றி)