Monthly Archives: February 2022
ஆஸ்காருக்குச் செல்லும் இந்திய ஆவணப்படம் – Writing with fire – oscar entry
சிறந்த டாக்குமென்டரிப் படங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற படம் ஆஸ்கார் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.
டில்லியைச் சேர்ந்த ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் உருவாக்கியுள்ள இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து ஷார்ட் லிஸ்ட் ஆன 15 படங்களிலும் தேர்வாகி கடைசியாக இறுதிப் போட்டியில் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது.
“இந்திய டாகுமென்டரி படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆவது இதுவே முதல் முறை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்திய சினிமாவுக்கே இது ஒரு முக்கியமான தருணம். தலித் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றிய படம் இது. வலிமை என்றால் என்ன என்பதையும், இந்தக் கால இந்தியப் பெண்களைப் பற்றிய படமாகவும் இந்தப் படம் உருவாகியுள்ளது” என படத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சுஷ்மித் கோஷ் தெரிவித்துள்ளார்.
ஒரு தலித் பெண் நிருபர் ‘கபர் லாகாரியா ‘ என்ற ஒரு பத்திரிகையை பலவிதமான தடைகளை மீறி எப்படி வெற்றிகரமாகக் கொண்டுவந்தார் என்பதுதான் இந்தப் படத்தின் மையக்கருத்து.
உத்தர பிரதேசம் பூந்தல்கண்ட் ஊரில் தலித் பெண்களின் அவல நிலையை வெளிக் கொண்டுவர இந்தப் பத்திரிகை பட்டபாட்டை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
அதன் டிரைலர் இதோ:
முழுப் படத்தைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
குவிகம் இலக்கியத் தகவல்
அடுத்த மாதம் முதல் குவிகம் கேள்வி பதில் பகுதி வருகிறது.
முனைவர் வ வே சு அவர்கள் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தர இயைந்துள்ளார்.
” வ வே சு வைக் கேளுங்கள் ” அந்தப் பகுதியின் தலைப்பு
உங்கள் கேள்விகளை editor@kuvikam.com அல்லது 9442525191 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அனுப்புங்கள்
குவிகம் நண்பர்களுக்கு வேண்டுகோள்!!
குறும் புதினம் அங்கத்தினர்களின் முதலாம் ஆண்டுச் சந்தா மார்ச் 2022 இல் முடிவடைகிறது!
இரண்டாவது ஆண்டுக்கானச் சந்தாவை (Rs 1200) பிப்ரவரி முதல் தேதியிலிருந்து புதிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பலாம்.
சந்தா அனுப்பவேண்டிய வங்கி விவரம் இதோ!
KUVIKAM PADHIPPAKAM CURRENT ACCOUNT NO 510909010171947
CITY UNION BANK KKNAGAR CHENNAI IFSC CIUB0000184
gpay மூலம் அனுப்புபவர்கள் 8939604745 எண்ணிற்கு அனுப்பலாம்.
phonepe paytm மற்றும் வங்கிகளின் UPI செயலிகளில் kuvikam@cub என்றோ 8939604745@upi என்றோ அனுப்பலாம்.
100 அங்கத்தினர்களுடன் ஆரம்பித்த இந்த குறும்புதினம் இந்த ஆண்டு 200 எண்ணிக்கையைத் தாண்ட வேண்டும் என்பது நம் விருப்பம்!
இதைச் சுலபமாக எட்டிவிடலாம்!
BUY ONE GIFT ONE என்ற திட்டப்படி நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் நண்பருக்காகவும் சந்தா அனுப்புங்கள். அதற்காக உங்களுக்கு ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்!
உங்கள் ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைப்போம்!!
சுந்தரராஜன் – கிருபானந்தன்
kurumpudhinam@gmail.com
WhatsApp : 94425 25191, 8939604745
சென்னை புத்தகக் கண்காட்சி
நண்பர் அழக்கியசிங்கர் பங்குபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி 16 பிப்ரவரி அன்று துவங்குகிறது.
அழகியசிங்கர், கிருபாநந்தன், ராஜாமணி அவர்களை ஸ்டால் எண் 17 விருட்சம் அரங்கில் காணலாம்.விருட்சம் புத்தகங்களும் குவிகம் பதிப்பகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள புத்தகங்களும், மற்ற நண்பர்களில் புத்தகங்களும் அங்குக் கிடைக்கும்.
குவிகம் புத்தகங்கள் புத்தகம் அவற்றின் விலை கிடைக்குமிடம் ஆகியவற்றை இந்த பட்டியலில் பார்க்கலாம். புத்தகம் தேவையானால் நண்பர் கிருபானந்தனைத் தொடர்பு கொள்ளவும். (97910 69435)
cat 2 (1) குவிகம் பதிப்பகம் புத்தகப் பட்டியல்
தமிழ்த்திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்
தமிழ்த் திரை உலகில் கதாநாயகர்கள், நாயகிகள் மட்டுமல்ல, நகைச்சுவை நடிகர்கள், நடிகைகள், கதை வசன கர்த்தாக்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என பட்டியல் மிகவும் நீளம். எந்த மொழித் திரைப் பட உலகையும் விட, தமிழ்த் திரைப்பட உலகம் கொஞ்சம் அதிகம் பங்களிப்பை தந்திருக்கிறது என்பதே உண்மை.
அந்த வகையில்,தமிழ்த் திரை உலகம் அளித்த ஒவ்வொரு கவிஞரின் பங்களிப்பு பற்றி, இந்தத் தொடரில் நாம் காணலாம்
பாரதி, பாரதிதாசன், பாபநாசம் சிவன் எனத் தொடங்கி, கம்பதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, தாமரை, முத்துக்குமார், கபிலன் என எல்லாக் கவிஞர்களையும், இந்தப் பதிவில் தொடர்ந்து நாம் பார்க்கலாம். எனக்கு தெரிந்து, சுமார் 70 கவிஞர்களை நாம் இந்தத் தொடரில் நாம் சந்திக்கலாம்.
பாட்டுக்கோட்டை .என்று அழைக்கப்பட்டு, 30 வயதிற்குள் மறைந்துவிட்ட, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடன் துவங்குவோம். 29 வயதில், சைனஸ் என்று, காலை மருத்துவமனை சென்றவர், மாலையில், இறந்துவிட்டார். மருத்துவரின் கவனக்குறைவால் நடந்தது என்பதே உணமைத் தகவல். பள்ளி சென்று படிக்காதவர். . குறுகிய காலத்தில் , அற்புதப் பாடல்கள் எழுதியவர். , உழைப்பு, நேர்மை, பொதுநலம் இவை இணைந்த பொது உடமைக் கொள்கைதான் இவருடையது. கடவுள் மறுப்புக் கவிஞர் அல்ல.
இவர் எழுதிய சௌபாக்யவதி என்ற திரைப் படப்பாடல், ஒன்றைப் பார்த்தால், அவரின் ஆன்மிகம் அப்படியே இழையும்.
தில்லை அம்பல நடராஜா – செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா , வா வா அமிழ்தானாவா
என்று TM சௌந்தரராஜன் பாடிய பாடல், தேவாரப்பாடல் போல, ஆன்மிகம் இருக்கும் வரை எல்லாக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
கவிஞரின் சமுதாயக் கருத்துக்கள், தனிச் சிறப்பு வாய்ந்தவை மட்டும் அல்ல, அவரின் பாடல் வரிகள், படித்தவர், பாமரர் எல்லோரையும் சேர்ந்து அடைந்தன. கண்ணதாசன் மிகவும் நேசித்த, புகழ்ந்த, இன்னும் கூறப்போனால் நன்றி கொண்ட கவிஞர் பட்டுக்கோட்டையார் அவர்கள். கண்ணதாசனே எழுதி இருக்கிறார். பாகப்பிரிவினை போன்ற படங்களில்,இந்த வகைப் பாடல், என்னைவிட, கண்ணதாசன் நன்றாக எழுதுவார், அவரிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறும் பரந்த மனம் கொண்ட கவிஞர் அவர். எத்தனை விதைப் பாடல்கள் தந்தவர்.
அமுதவல்லி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற,
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
என்ற பாடல், அருணகிரிநாதரின் சந்தம் போன்ற அழகு. ஆடை,மேடை,ஓடை,ஜாடை என ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழ் இலக்கியத்தை தோரணம் கட்டி தொங்க விட்ட பட்டுக்கோட்டை, நிறைவில் கூறுவார்.
*வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை*
வழக்கு தமிழிலேயே, தமிழ் இலக்கிய நடையை எதுகை மோனைக்குள் கொண்டு வந்து விடும் அற்புத படைப்பிறகு இது ஒரு உதாரணம். இந்தப்பாடல், அவர் மணமுடிக்க இருந்த பெண்ணைப் பார்த்துவிட்ட வந்தபின், நண்பர்கள் கேட்ட கேள்விக்கு, பதிலாக சொன்னது என்று ஒரு தகவல் உண்டு. அது தான் அப்படியே படத்தில் உருவானது.
சிற்றிலக்கியங்களில் தூது விடும் பாடல்கள் நிறைய உண்டு ; காளிதாசன் மேகத்தை தூது விட்டான் – தமிழ் இலக்கியங்களில், புறா, கிளி, மயில், காற்று, அன்னம் என பலவகையில் தூதுப் பாடல்கள் உள்ளன. பதிபக்தி படத்தில், ஆணும் பெண்ணும், கோழியையும் சேவலையும் தூதாக வைத்துப் பாடுவதாக எழுதி இருபப்து மிக அழகு. மெல்லிசை மன்னர்கள் இசையில் TMS, ஜிக்கி குரல்கள் – அதுவும் ஜிக்கியின் கொக்கரக்கோ கொக்கரக்கோ என்றே கூவுவது காதில் ரீங்காரமாக ஒலிக்கும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே .
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினால் தேவலே
குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே
இருவரும் சேவல் மற்றும் கோழியை தூது வைத்து பாடுவதை நம்மால் மறக்க முடியாது. இப்படி, காதலில் பல அற்புத பாடல்கள் தந்தவன் – நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் என்ற இரும்புத்திரைப் படப் பாடலில், காதலைப்பற்றிக் கூறும்போது, நாயகி கேட்பாள்.
மலர்க்கொடி தலையாட்ட
மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி
ஆனதும் ஏனோ – அதற்கு நாயகன் பதிலாக,
இயற்கையின் வளர்ச்சி முறை
இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏன் என்று நீ கேட்டால்
நான் அறிவேனோ என்பார்.
அதேபோல, ஆளுக்கொரு வீடு என்ற படத்தில்,
அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா,
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா, என்று நாயகன் பாட, நாயகி, பதிலாக,
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும், புரியாமல் போகுமா என்பாள்,
பெண்கள் , அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும் என்கிறான் கவிஞன் திரைப்படப் பாடல் மூலம்.
ஸ்ரீதர்,-பட்டுக்கோட்டை, மஹேஸ்வரி, விடிவெள்ளி, கல்யாணபரிசு எனத் தொடர்ந்த கூட்டணி, மீண்ட சுவர்க்கம் படத்திற்கு பாடல் எழுத முடிவெடுத்த ஒரு வாரத்தில், கவிஞர் மரணம் அடைந்தார்.
ஸ்ரீதரின், கல்யாணப்பரிசு படப் பாடலான, வாடிக்கை மறந்ததும் ஏனோ என்ற பாடல் மிக அழகு.. நாயகனுக்கு, பதில் கூறுவதாக ,
நான் கருங்கல் சிலையோ,
காதல் எனக்கில்லையோ,
வரம்பு மீறுதல் முறையோ , என்றும்
பொறுமை இழந்திடலாமோ ,
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ , என்றும் எழுதுவார்.
பொதுவுடமைக் கவிஞர் என்பதால், வார்த்தைகள் வந்து விழுவதை பாருங்கள் – வரம்பு மீறுதல், பெரும் புரட்சி என்று. அதேபோல, தங்கப்பதுமை படத்தில் வரும் முகத்தில் முகம் பார்க்கலாம் என்ற காதல் பாடலில் கூட பொதுவுடைமைக் கருத்து வரும்.
இகத்தில் இருக்கும் சுகம்
எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாகலாம், என்பார்.
ஸ்ரீதர், பட்டுக்கோட்டையிடம் சென்று, கல்யாணப்பரிசு கதையை முழுவதும் சொல்லி முடித்து, இதுதான் கதை என்று பெருமூச்சுடன் முடிக்க, கவிஞர் ,
காதலிலே தோல்வி உற்றாள்
கன்னி ஒருத்தி
கலங்குகின்றாள் அவனை
நெஞ்சில் நிறுத்தி
இதுதானே உன் கதை எனக்கூற, ஆடிப்போய் விட்டாராம். இந்த வரிகளுடன், பாடல் ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அந்தப்பாடல் வந்தது.
ஆசையிலே பாதி கட்டி அன்பை விதைத்தாள்
அல்லும் பகலும் காத்திருந்து பயிர் வளர்த்தாள்
பாசத்திலே பலனை பறி கொடுத்தாள்
கனிந்தும் கனியாத உருவெடுத்தாள் என்ற வரிகள் climaxலும் பாடப்பட்டு, ரசிகர்கள் மனதில் நின்றது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற படத்தில் இடம் பெற்ற, என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே என்ற பாடல் – TG லிங்கப்பா இசையில் TMS அவர்களின் குரலில் அற்புதப்பாடல் . காதலன், நிலவை, காதலிக்கு , தூது விடுவதாக பட்டுக்கோட்டைஅவர்கள் எழுதியிருக்கும் அற்புதப் பாடல் இது.
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலவா
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உனை காவல் காக்கும் தோழிகளோ வெண்ணிலாவே
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே
உன் காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே
3 அல்லது 5 நிமிட திரைப்பட பாடலில் வந்த மொழி அழகு – தமிழ் அழகு – இசை அழகு – என எத்தனை எத்தனை!
தாரகைகள் , அதாவது நட்சத்திரங்கள் தான் நிலவின் தோழிகளாம். நிலவில் உள்ள கருமைக்கு காரணம், காதலன் கிள்ளியதாம். அப்புறம், நிலவிடம், காதலியிடம் இருக்கும் காதலனின் இதயத்தை அவள் தரமாட்டாள் – நீயே பறித்துக் கொண்டுவந்துவிடு. அதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் – அவள் அப்படித் தானே செய்திருக்கிறாள் – இதுவும் அவள் தந்த பாடம் தான் என்று, அந்த ஊடல் நிறைக் கோபத்துடன் நாயகன் பாடுவதாக, கவிஞர் எழுதி இருப்பது மிகச் சிறப்பு.
காதல் மட்டும் அல்ல,, சமுதாய அக்கறை மிகுந்த பல பாடல்கள் தந்தவன். திருடாதே படப் பாடல், வரிகள் மற்றும், அற்புத இசையுடன் பட்டி தொட்டி எல்லாம் பாடப்பட்டது. இன்றைக்கும் பொருந்தக் கூடிய வரிகள்.
வறுமையை நினைத்து பயந்து விடாதே
திறமை இருக்கு – மறந்து விடாதே
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டு இருக்குது – அதைச்
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரிகள் அபாரம். அத்துடன், உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா, கெடுக்கிற நோக்கம் வளராது, என்பார் திருடாதே படத்தில்.
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளுடா, என்ற அரசிளங்குமரி படப் பாடலில் ,
வேப்பமர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க,
உந்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே என்ற வரிகள், வேத வரிகள்.
அவரின் அறச் சீற்றம், அப்படியே கொப்புளிக்கிறது. வேலையற்ற வீணர்கள் – மூளையற்ற வார்த்தைகள் – வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே என்ற வார்த்தைகள் மூலம்.
நல்ல பொழுதை எல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்,
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும் வெறும்
கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று
அலட்டிக் கொண்டார்
என்று பாடியவர்,
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்,
உன் போல் குறட்டை விட்டாரெல்லாம் கோட்டை விட்டார் என்பார்.
அதேபோல, பதிபக்தி எனும் படத்தில், அற்புதமான பாடல்.
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி
என்ற வரிகள் அப்படியே, பொது உடைமை வரிகள். இன்றும் அது பொருந்துவதுதான் கவிஞரின் தீர்க்க தரிசனம்.
சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி , பாடலில்,
காடு வெளஞ்சன்னா மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம் என அவள் குறைப்பட்டுக் கொள்ள, நாயகன்,
காடு விளையட்டும் பெண்ணே
நமக்கு காலம் இருக்குதே பின்னே என்பான்.
உழைப்பு அதன் பலனைத் தரும் என்கிறார். நிறைவில்,
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்துடும் திட்டம்
அது நாடு நலம் பெரும் திட்டம் என்பார்.
அதேபோல, கைத்தறியை மையப் படுத்தி எழுதிய இவரின் புதையல் படப்பாடல், நெசவுத் தொழிலின் உயர்வைக் கூறும்.
சின்னச் சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறி சேலையடி
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி
குழந்தையை வாழ்த்திப் பாடும் உன்னைக் கண்டு நான் பாட்டில் கூட,
எண்ணத்தில் உனக்காக
இடம் நான் தருவேன்
எனக்கு நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
என்பார்.
நகைச்சுவைப் பாடலும் நிறைய தந்திருக்கிறார்.
பிள்ளையார் கோயிலுக்கு
வந்திருக்கும் பிள்ளை யாரு
இந்தப் பிள்ளை யாரு ?
தனக்கு ஒருத்தி இல்லாம
தனித்து இருக்கும் சாமியிடம்
எனக்கு ஒருத்தி வேண்டும்
என்று வேண்ட வந்தாரா , என்று கிண்டல் வரிகளாக எழுதி இருப்பார்.
வாழ்க்கையின் எதார்த்தத்தை, ஆதி சங்கரர் வார்த்தைகளை போல,
குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி மாட்டிக்கிட்ட குறவனுக்கு சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடி தான் சொந்தம் என்றும்,
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
என்றும் எழுதி இருப்பார்.
ஒரு பெண்ணின் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்போது,
காணாத நிலையை கண்டதினாலே
தங்கு தடை இன்றி
பொங்கு கடல் போலே ஆனேனே –
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் , என்பதுடன்,
கண் நிறைந்த கணவனுடன் வாழ்வு தொடங்கும்போது,
இன்று நமதுள்ளமே பொங்கும் புது உள்ளமே
என்று பாடி இருப்பது கொள்ளை அழகு.
இப்படியெல்லாம், காதல், சிரிப்பு, வாழ்க்கை, பொதுவுடமை, பாமர மக்கள், , விவசாயிகள் எனப் பாடியவர் , இன்னொரு பாடலில் கூறுகிறார் –
செய்யும் தொழிலே தெய்வம்
திறமை தான் நமது செல்வம்
கையும் காலும் தான் நமக்குதவி
கொண்ட கடமை தான் நமக்கு பதவி , என்று.
பொதுவுடைமை மட்டும் அவரின் கருத்து அல்ல. இறை, இயற்கை, இந்த மண்ணின் பண்பாடு, உழைப்பு என்றே அவரின் பாடல்கள் அமைந்திருக்கின்றன. பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக்கோட்டை. அதில் இருந்து, சில துளிகள் தான் இங்கே நாம் பார்க்கிறோம்.
இது போலச் சுவைக்கனிகள், திரையில் ஏராளம். அடுத்த பதிவில், இன்னொரு கவிஞரின் கவிதைக் கனியுடன் சந்திப்போம். .
உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்
‘சாவை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும். தன் நண்பன் எங்கிடு அக்கால மரணம் அடைந்ததைப் போலத் தானும் மடியக்கூடாது. ‘ என்ற ஒரே ஆசையால் உந்தப்பட்டு வீட்டைவிட்டு நாட்டை விட்டு காடு மேடு மலை பள்ளம் வெப்பம் பனி குளிர் மழை எதையும் பொருட்படுத்தாமல் உலகத்தின் கோடிக்கே வந்தான் கில்காமேஷ். இடையில்தான் எத்தனை தடைகள். கடவுள்களும் அவன் முயற்சி வெற்றி பெறாது என்று வலியுறுத்திக் கூறினாலும் சாவை வென்ற உத்னபிஷ்டிமைக் காண ஓடோடிவந்தான். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றான்.
ஆனால் சாவை வெல்வதற்கு ஏழு நாட்கள் கண் மூடாமல் தூங்காமல் இருக்க வேண்டும் என்று உத்ன பிஷ்டிம் விதித்த கட்டளையை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. இரவுத்திருடன் அவனை மயக்கி செத்தவன் போல உறங்க வைத்துவிட்டான். இனி தானும் சாவின் கோரப்பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணரும் போது அவன் மனம் துடியாய்த் துடித்தது.
கில்காமேஷின் சோகத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத உத்ன பிஷ்டிம் அவனைத் திரும்ப அனுப்புவதிலேயே குறியாய் இருந்தான். அவனுடைய படகுக்காரனை அழைத்தான்.
“நீ கில்காமேஷை இங்கு அழைத்து வந்தது மாபெரும் தவறு. இனி இந்த சாவுக் கடலையும் சாவு நதியையும் கடக்கும் ஆற்றல் உனக்கு இருக்காது. அழைத்து வந்த நீயே அவனைத் திரும்ப அழைத்துக்கொண்டுபோய் அவன் படகில் ஏறிய காட்டுப்பகுதியில் விட்டுவிடு. உங்கள் இருவராலும் இனி இங்கு வர இயலாது. ஆனால் போகுமுன் அவனை நல்ல நீரில் குளிக்கச்செய்து அவனது மிருக ஆடைகளுக்குப் பதிலாக என்னுடைய நல்ல ஆடைகளையும் பூமாலையும் கொடுத்து அனுப்பு ‘ என்று உத்தரவிட்டான்.
தன் கணவனுக்கு கில் காமேஷிடம் இந்த அளவிற்காவது இறக்கம் இருக்கிறதே என்பதைப் புரிந்து கொண்ட அவன் மனைவி கில் காமேஷிற்கு ஏதாவது கொடுத்து அனுப்பவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
வெகுநேரம் யோசித்த உத்னபிஷ்டிம் முடிவில் அவன் படகில் கிளம்பும் போது .” ஓ கில்காமேஷ்! நீ பெரும் பயணம் மேற்கொண்டு பல கஷ்டங்களை அனுபவித்து இங்கு வந்திருக்கிறாய். உனக்குச் சாவை வெற்றிகொள்ளும் வழியைச் சொல்லும் அதிகாரம் எனக்கில்லை. என்னால் அதைத் தரவும் முடியாது. உனக்கு ஒரு சிறப்பான பரிசு கொடுக்கவேண்டும் என்று என் மனைவியும் சொல்கிறாள். உனக்காக ஒரு இரகசியமான விஷயம் சொல்கிறேன். கேட்டுக்கொள்! சாவுக்கடலுக்கடியில் இங்கே ஒரு செடி வளருகிறது. அதில் முட்கள் நிறைய உண்டு . உன் கைகளை அவை காயப்படுத்தும். ஆனால் அந்தச் செடியின் பூ மிகவும் சக்திவாய்ந்தது. இழந்துவிட்ட வாலிபத்தைக் கிழவர்களுக்குத் தரக்கூடிய வலிமை இருக்கிறது அந்தப் பூவிற்கு. இதுதான் நான் உனக்குத் தரக்கூடியது. அதையும் உன் முயற்சியால்தான் நீ எடுத்துக்கொள்ளவேண்டும்.” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தான். கில்காஷைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் இல்லம் சென்றான்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் கில்காமேஷின் உடம்பில் அதுவரையில் இருந்த தயக்கம் மறைந்தது. அவன் மனதை வாட்டிக்கொண்டிருந்த சோகத்தை விட்டு ஒழித்தான். அவனுடைய வீரக் களை மீண்டும் அவன் உடலில் புகுந்தது. கால்வாய்க் கதவுகளைத் திறந்துவிட்டு படகை அதன் மூலம் வந்த நீரின் வேகத்தில் மிதக்கவிட்டு வாய்க்காலில் போனான். கால்கள் இரண்டிலும் கனமான கற்களைக் கட்டிக்கொண்டு ஓடும் நீரில் குதித்தான். காலில் கட்டப்பட்ட கால்களில் எடை அவனை இழுக்கக் கடலின் அடிக்குச் சென்றான். அங்கே உத்ன பிஷ்டிம் சொன்ன செடி ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டான். பயங்கரமான முட்களுக்கு இடையே பூத்திருந்த அந்தப் பெரிய பூவைக் கண்டான். முள் குத்திற்று. ரத்தம் பீரிட்டது. சுத்த வீரனான அவன் அதைப் பற்றிய லட்சியம் செய்யாமல் அந்தச் செடியில் பூத்திருந்த பூவை நோக்கிச் சென்றான். பல சிரமங்களுக்கிடையே அந்தப் பூவைப் பறித்தான். பிறகுத் தன் கால்களில் கட்டியிருந்த கனமான கற்களைக் கத்தியைக் கொண்டு வெட்டி எறிந்தான். பிறகு தண்ணீருக்கு வெளியே வந்து கரையை அடைந்தான்.
தன்னை அழைத்துவந்த படகோட்டி தனக்காகக் காத்திருப்பதை அறிந்து அவன் அருகே சென்றான். அவனிடம் , ” படகோட்டியே! இதோ பார்! இந்த ஆச்சரியமான பூவைப் பார். இந்தப் பூவின் மூலம் கிழவன் இழந்த வாலிபத்தையும் பலத்தையும் மீண்டும் பெறுவான். நான் என ஊருக் நகருக்குச் சென்று இப்போது கிழவர்களாகப் போய் வாடி நிற்பவர்களுக்கு இதைப் பகிர்ந்து தருவேன். நானும் கிழப் பருவம் அடைந்தவுடன் இதை அருந்தி என வாலிபத்தை மீண்டும் பெறுவேன். இந்த மலரின் பெயர் என்ன தெரியுமா? ‘ இளமை திரும்பும் ‘.
மகிழ்ச்சியின் சிகரத்தில் இருந்தான் கில் காமேஷ் . சாவு வந்தால் வரட்டும். அது பற்றிய கவலை இல்லை. இருக்கும் வரை இளமையுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவனுக்கு ஆயிரம் யானைகளின் பலம் அளித்தது. படகுக்காரனும் அவனுக்கு புதிய ஆடைகளையும் மாலையையும் கொடுத்தான். அவற்றை உடுத்திக் கொண்ட கில்காமேஷுக்குப் புதிய உத்வேகம் பிறந்தது.
படகோட்டி படகைச் செலுத்தச் சாவு நீரைக் கடந்து சென்று கரையில் இறங்கினான். படகோட்டியிடம் ” உத்ன பிஷ்டிம் உன்னைத் துரத்திவிட்டதுபற்றிக் கவலைப் படாதே ! நீயும் என்னுடன் என் நாட்டிற்கு வா! உன் வாழ்நாள் முழுவதும் சௌகரியமாக இருக்க நான் ஏற்பாடு செய்து தருகிறேன். உனக்கு வயதானால் இந்தப் பூவையும் தருகிறேன்” என்று கூறினான். படகோட்டியும் மகிழ்ச்சியுடன் கில்காமேஷூடன் வர ஒப்புக் கொண்டான்.
இருவரும் கடற்கரை வனம் தாண்டி வந்த கதவு வழியே திரும்பப் போனார்கள். ஐம்பது காதங்கள் நடந்த பிறகு சற்று களைப்படைந்ததால் ஒரு பெரிய மரத்தின் அடியில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அருகில் ஒரு பெரிய கிணறு வேறு இருந்தது. களைப்பைப் போக்கிக்கொள்ள இருவரும் அந்தக் கிணற்றில் இறங்கிக் குளிக்க முடிவு செய்தனர். பூவைக் கரையில் வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கிக் குளிக்கச் சென்றனர். அந்தக் கிணற்றின் அடியில் ஓர் ஓரத்தில் ஒரு பெரிய பாம்பு வசித்து வந்தது. அதன் மூக்கை இளமை திரும்பும் பூவின் வாசம் தாக்கியது. மெல்ல ஊர்ந்து வந்து கிணற்றுக்கு வெளியே வந்தது. அந்தப் பூவைச் சுற்றிச் சுற்றி வந்தது. மெல்லத் தன் சட்டையை உரித்தது.
குளித்துவிட்டு இருவரும் மேலே வந்த போது அந்தப்பாம்பு இளமை திரும்பும் பூவைத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கில் காமேஷ் மிகுந்த கோபத்துடன் அந்தப் பாம்பைப் பிடிக்கச் செல்லும்முன் அது பூவை முழுவதுமாகச் சாப்பிட்டுவிட்டு வெகு வேகமாகக் கிணற்றுக்கு அடியில் இருக்கும் தன் புற்றில் சென்று மறைந்துவிட்டது.
திக்பிரமையில் நின்றான் கில் காமேஷ்!
(தொடரும்)
சரித்திரம் பேசுகிறது – யாரோ
மதுராந்தகன்
நாம் இன்னும் பொன்னியின் செல்வன் கதையின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறோம். அதில், சுந்தர சோழனுக்குப் பின்னர், ‘யார் மன்னன்’ என்ற பெரும் கேள்வி மையமாக இருந்தது. மதுராந்தகன் என்ற உத்தம சோழன் மன்னனான் என்ற விடை கிடைத்தது.
அந்த உத்தம சோழனோடு நமக்குப் பேச வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்கலாம்? ’நீங்க.. நல்லவரா? கெட்டவரா?’!
தமிழ்ச்சரித்திரத்தில் நாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் மர்மம் – ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு. அதில் மதுராந்தகனுக்குப் பங்கு இருந்ததா? அது மர்மத்தின் மர்மம்.
இதைப்பற்றி அலசி ஆராய – நாம் இன்று ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். இதில் ‘மதுராந்தகன் கெட்டவனே’ என்ற அணியில் சரித்திர ஆய்வாளர் திருவாளர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி பங்கு பெற உள்ளார்.
எதிர் அணியில், உத்தம சோழன் தன் பெயருக்குத் தகுந்தாற்போல ‘உத்தமனே’ என்று வாதிட வருகிறார் – சரித்திர ஆய்வாளர் திருவாளர் ‘சதாசிவ பண்டாரத்தார்’.
‘இந்த பட்டி மன்றத்தின் நடுவர் யாரோ?’ என்று நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள். உங்கள் ஊகம் சரிதான்.
‘ஹி.. ஹி.. அந்த யாரோ நாம் தான்!’
பட்டிமன்றம் துவங்கட்டும்.
நடுவர்:
சரித்திர ஆய்வாளர் ‘நீலகண்ட சாஸ்திரியார்’ மதுராந்தகனை வில்லனாகக் காட்டுகிறார். அவரை முதலில் பேச அழைக்கிறோம்:
நீலகண்ட சாஸ்திரியார்:
‘உத்தம சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர்ப் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட வேறு எந்தப் பதவியையும் ஏற்க அவன் விரும்பவில்லை. அரசக்குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தினால், அரியணை உரிமை தனக்கே என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும், அவன் மக்களும், அரியணையைத் தன்னிடமிருந்துப் பறித்துக்கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி, ஆதித்த கரிகாலனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறு வழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான்.
அருண்மொழியின் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றி கொண்டது. உள்நாட்டுக் குழப்பம் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, அருண்மொழி, உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக்கொடுத்து, அவன் காலத்துக்குப் பிறகு, தான் பட்டத்துக்கு வருவதற்குப் பொறுமையுடன் இசைந்தான். உத்தமனுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை, உத்தமனுடைய மக்கள் ஏற்காமல், அருண்மொழியே ஏற்கவேண்டும் என்ற உடன்பாட்டுக்கு வந்தனர் போல் தோன்றுகிறது.
இந்த வரலாறு உண்மையாயிருப்பின், பக்திக்கும் நேர்மைக்கும் புகழ் பெற்ற பெற்றோர்களுக்குத் தன்னலமும் மூர்க்கத்தனமும் உடைய மகன் பிறந்தான் என்ற முடிவு எற்படுகிறது. அவசர புத்தி, சுயநலம் ஆகியவற்றின் உருவமாக அவன் திகழ்ந்தான். முடிவாக, ஆதித்தன் மரணத்துக்குக் காரணமான இருவருக்கு இராசராசன் ஆட்சிக் காலத்தில்தான் தண்டனை கிடைத்தது என்பது என்பது மதுராந்தகனின் நிலையை உறுதி செய்கிறது.’
நடுவர்:
நீலகண்ட சாஸ்திரியார், உத்தமன் உண்மையில் ‘உத்தம வில்லனே’ என்று சாதிக்கிறார். இப்பொழுது, சதாசிவ பண்டாரத்தார், உத்தமன் – தன் பெயருக்கேற்ற உத்தமன் தான் என்று வாதிட வருகிறார்.
சதாசிவ பண்டாரத்தார்:
‘உத்தம சோழன், தான் அரசு கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து ஆதித்தனை கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலரது கூற்று. சற்றே ஆராய்ச்சி செய்தால் அது எத்துணை தவறான கருத்து என்பது விளங்கும். உத்தம சோழனுக்கு அந்தக் கொடுஞ்செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்த கரிகாலன் தம்பியும், குடிகளால் அன்பு பாராட்டு பெற்றவனும், பெரிய வீரனுமான அருண்மொழி அரியணயைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடங்குவானல்லவா? உத்தமன் அரசாள அவன் ஒப்புக்கொண்டிருக்க மாட்டான்.
உத்தமன் நாட்டை ஆட்சி புரிவதில் ’விருப்பமுள்ள’ வரையில் தான் அதனை மனத்தாலும் விரும்பேன் என்று குடிமக்களிடம் அருண்மொழி கூறியுள்ளான். அப்படி உத்தமன் ஆதித்தன் கொலையில் ஈடுபட்டிருந்தானாகில், மக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் உள்நாட்டு குழப்பங்கள் விளைந்திருக்கும். உத்தமன் ஆட்சி அமைதியாக நடந்தது. இராசராசன் பின்னாளில் கல்வெட்டில், செம்பியன் மாதேவியைக் குறிக்குமிடத்தில் ‘ஸ்ரீ உத்தமசோழரை திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன் மாதேவிப் பிராட்டியார்’ என்று குறித்தது காண்க.
இனி முக்கிய கருத்து. ‘ஆதித்தன் மரணத்துக்குக் காரணமான இருவருக்கு இராசராசன் ஆட்சிக் காலத்தில்தான் தண்டனை கிடைத்தது’ என்பது. இதை வைத்து உத்தமன் மீது கொலைப்பழி சுமத்துவது தவறு. மறைவில் நடந்த கொலையில் தொடர்புள்ளவர் யாவர் என்பதை ஆராய வருடங்கள் ஆகியிருக்கலாம். அதற்குள் உத்தமன் காலம் முடிந்திருக்கலாம்.
மேலும், இராசராச சோழன் தன் மகனுக்கு மதுராந்தகன் என்று பெயரிட்டான். பின்னாளின் அந்த மகன் இராஜேந்திர சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டிருந்தான். இராசராசன் தனது சிறிய தந்தை மதுராந்தகன் பால் பேரன்பு பூண்டொழுகியவனாதலின், தன் மகனுக்கு அவன் பேரே வைத்தனன் என்பது ஈண்டு உணரர்பாலது.”
நடுவர்:
“இருவரின் வாதங்களைக் கேட்ட பின் நாம் ஒரே முடிவுக்குத்தான் வர இயலும். கல்கியே மதுராந்தகன் மீது பழி சொல்ல விரும்பாமல், அவன் மதுராந்தகனே அல்ல என்று ஆள்மாறாட்டம் செய்து எழுதினார். சரியான ஆதாரம் எதுவுமில்லாததால், அந்த ஆதாரங்கள் கிடைக்கும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கிறோம்”
இந்த பட்டி மன்றம் இனிதே முடிந்தது.
இனி சமாசாரங்களுக்கு வருவோம்.
செம்பியன் மாதேவி அவரது மகன் மதுராந்தகன், கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் வளர்த்திருந்தார். அருண்மொழி மதுராந்தகனை மன்னனாக்கியதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
அருண்மொழிவர்மனுக்கும் மதுராந்தகனுக்கும் ஒரு உடன் படிக்கை ஏற்பட்டது. அதன்படி அருண்மொழி, உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக்கொடுத்து, அவன் காலத்துக்குப் பிறகு, தான் பட்டத்துக்கு வருவதற்குப் பொறுமையுடன் இசைந்தான்.
அந்நேரம் மதுராந்தகனுக்கு வயது 24. ஒரு வேளை மதுராந்தகன் அருண்மொழியின் வாழ்நாள் தாண்டியும் உயிர்வாழ்ந்திருந்தால், அருண்மொழிக்கு அரசாள வாய்ப்பே இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால், அதைப் பற்றிக் கவலை இல்லாது அருண்மொழி இந்த உடன்படிக்கை செய்திருந்தான். தியாக சிகரம் என்று கல்கி கூறியது எத்துணை பொருத்தம்!
பரகேசரி உத்தம சோழன் (கிபி 969 – 986) அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். பொற்காசு ஒன்று – நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது..
உத்தம சோழன் குடும்பம் : உத்தமசோழனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். கணக்கில் அடங்காதோ என்னவோ! ஐந்து பேர் மட்டுமே குறிப்பிடத்தக்கவர். அருள் – பட்டன் தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன் மகளார், பழுவேட்டரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். இவ்வைவரும் சேர்ந்து தம் மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி (கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது. மாமியாரைக் கைக்குள் வைப்பதில் அவர்களுக்குத்தான் எத்தனை கவனம்!
உத்தம சோழனுக்கு ஒரு மகன். அவன் பெயர் – மதுராந்தகன் கண்டராதித்தர். அவன் இராசராசன் ஆட்சியில் கோவில்களை மேற்பார்த்து வந்தான். அவன் அந்நாளின் ‘அறநிலைய அமைச்சர்’ போலும்!.
(கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மாதேவி புடைப்பு சிற்பம். புகைப்பட உதவி: thehindu.com)
ராஜமாதா செம்பியன் மாதேவி, பல சோழ மன்னர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். உத்தமசோழரின் மறைவுக்குப் பின்னர் பேரன் ராசராசசோழனை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து 1001 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.1019 ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியை, பார்வதியின் அவதாரமாக கருதி, நாகப்பட்டினம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் கல்லால் ஆன செம்பியன்மாதேவி சிலையை மன்னர் முதலாம் ராஜேந்திர சோழர் அமைத்தார். இன்று வரை அங்கு பூஜை நடைபெற்று வருகிறது.
போர்கள் நிறைந்த சோழர் சரிதத்தில், உத்தம சோழன் காலம் ஒரு அமைதிக் காலம்! அமைதியை சரித்திரம் பொதுவாகக் கொண்டாடுவதில்லை.
இனி வரும் நிகழ்வுகள் பொன்னேட்டில் குறிக்கப்பட வேண்டியவை.
அவை விரைவில்.
குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா ! – செப்டம்பர் 2021
- பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
- தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
- வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
- தமிழ் ! – நவம்பர் 2021
- பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
- கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
- ஓடுது பார் ! – டிசம்பர் 2021
- கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
- என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
- பார் பார் மெட்ரோ பார் !
வருகுது பார் இதோ வருகுது பார் !
மெட்ரோ ரயிலு வருகுது பார் !
சுக் சுக் சுக் சுக் சத்தம் இன்றி
சைலண்டாய் மெட்ரோ வருகுது பார் !
கீழே தரையில் இருந்து கிளம்பி
ஆகாயத்திலும் பறக்குது பார் !
உள்ளபடியே சென்னையின் அழகை
காட்டுது மெட்ரோ காட்டுது பார் !
பாரு பாரு பட்டணம் பாரு –
மெட்ரோ சுற்றிக் காட்டுது பார் !
பத்மா ரம்யா பேபி சுந்தர் –
பாம் பாம் சத்தம் போடுது பார் !
கோயம்பேட்டில் கிளம்பிய வண்டி
ஆலந்தூர் வரை ஓடுது பார் !
இடையிலுள்ள ஸ்டேஷனில் எல்லாம்
மக்கள் கூட்டம் மோதுது பார் !
தெருவில் டிராஃபிக் நெரிசல் இருக்கும் –
மெட்ரோவில் ஒன்னும் இல்லை பார் !
சொய் சொய் என்று ஸ்மூத்தாய் போகுது –
மெட்ரோ பயணம் ஜாலி பார் !
பத்து நிமிடப் பயணம் கூட
எத்துணை நன்றாய் இருக்குது பார் !
மெட்ரோ நாளை பெரிதாய் நீளும் –
இன்னும் சொகுசாய் இருக்கும் பார் !
நாளைய உலகம் உங்கள் கையில் –
நன்றாய் நீயும் எண்ணிப்பார் !
சென்னையை இன்னும் சிங்காரமாக்க
என்ன செய்யலாம் எண்ணிப்பார் !
வருகுது பார் இதோ வருகுது பார் !
மெட்ரோ ரயிலு வருது பார் !
சுக் சுக் சுக் சுக் சத்தம் இன்றி
சைலண்டாய் மெட்ரோ வருகுது பார் !
*************************************************
- நேதாஜி ! நேதாஜி !
நேதாஜி ! நேதாஜி !
சுபாஷ் ! சுபாஷ் ! சுபாஷ் !
போடுவோம் அவருக்கு –
சபாஷ் ! சபாஷ் ! சபாஷ் !
பாரத நாட்டின் விடுதலைக்கு –
தியாகம் செய்தோர் பலபேர்கள் !
அத்தனை தியாகிகள் மத்தியிலும் –
திலகம் எங்கள் நேதாஜி !
ரத்தம் சிந்த வேண்டும் என்றே
போர்க்குரல் எழுப்பிய நேதாஜி !
நித்தம் நித்தம் யுத்தம் என்றே
முழங்கிய எங்கள் நேதாஜி !
எத்திசை சென்றும் இந்தியாவுக்கு –
விடுதலை வேண்டிய நேதாஜி !
எதற்கும் துணிந்தோம் என்றே கூறி –
யுத்தம் செய்தார் நேதாஜி !
அஹிம்சை தத்துவம் பொறுத்திடாமல்
அவசரப்பட்டார் நேதாஜி !
அன்னை பாரதம் பட்ட துயர்களை –
ஏற்க மறுத்தவர் நேதாஜி !
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் என்றே –
கோஷம் செய்தவர் நேதாஜி !
ஐஎன்ஏ என்ற படையை வைத்து
விடுதலை தேடிய நேதாஜி !
என்றும் மனதில் அவரை வைப்போம் –
எங்கள் தியாகி நேதாஜி ! அன்னை பாரதம் பெருமை பெற்றாள் –
உம்மைப் பெற்றதால் நேதாஜி !
நேதாஜி ! நேதாஜி !
சுபாஷ் ! சுபாஷ் ! சுபாஷ் !
போடுவோம் அவருக்கு
சபாஷ் ! சபாஷ் ! சபாஷ் !
************************************************
கணக்குப் பாடம் – பி.ஆர்.கிரிஜா
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பவானி தன் மகள் தாரிணி கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு மாறி மாறி சேனல்களை மாற்றுவதை பார்த்தாள்.
“என்ன தாரிணி, இன்னிக்கு சீக்கிரமே காலேஜ் முடிஞ்சுதா ? வழக்கமா 6 மணிக்குத்தானே வருவ ? இன்னிக்கு அஞ்சரை மணிக்கே வந்துட்ட போல இருக்கே ?”
“ஆமாம் அம்மா…. இன்னிக்கு லாஸ்ட் அவர் செமினார் சீக்கிரம் முடிஞ்சது…. அதனால உடனே புறப்பட்டு வந்துட்டேன் ….. ஒரு டென்னிஸ் மேட்ச் பாக்கணும் அதான்…” என்று இழுத்தாள்.
“சரி சரி நான் போயிட்டு வரேன்..’ என்று உள்ளே கிச்சனுக்குள் நுழைந்தாள் பவானி.
தாரணி ஒரு ஸ்போர்ட்ஸ் பைத்தியம். கல்லூரியில் எல்லா விளையாட்டுகளிலும் அவள் பங்கெடுத்து கப்பும் வாங்கி வருவாள். இப்போது அவள் கவனம் முழுக்க டென்னிஸ்தான். காலை மாலை என எப்போதும் ப்ராக்டீஸ்தான். அவள் கணவரும் அவளை ஒரு டென்னிஸ் அகாடமியில் சேர்த்துவிட்டு அவளை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்.
பவானியின் மாமியார் அந்தக் கால மனுஷி….இதெல்லாம் பெண் குழந்தைக்குத் தேவையா…. என அவ்வப்போது பவானிடம் புலம்பித் தள்ளுவாள்.
பவானியின் கவனம் தன் இளமைக் காலத்துக்குச் சென்றது. அவள் ஐந்தாவது படிக்கும் போது கணக்கில் ஐம்பதுக்கு ஐந்து மார்க் வாங்கியிருந்தாள். அதை வீட்டில் காண்பித்தபோது ஏக ரகளை. அப்போதெல்லாம் ஜாயின்ட் ஃபேமிலி. அவள் அப்பா பெரியப்பா சித்தப்பா எல்லோரும் சேர்ந்து கொண்டு ஏதோ ஒரு கொலை செய்துவிட்டு வந்தது போல அவளை நார் நாராகக் கிழித்தனர்.
அவளுக்கு இப்போதும் அவர்கள் பேசியது காதில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.. “நல்லா இருக்கு நம்ம ஃபேமிலில?… எல்லாரும் கணக்குல புலி…. நம்ம வீட்ல அத்தன பசங்களும் கணக்குல நூத்துக்கு நூறு மார்க்கு தான் எடுப்பாங்க… ஏன் பவானியோட அக்கா சங்கீதா எப்பவும் நூத்துக்கு நூறு தான்… 99 வாங்கினா கூட ஒரு மார்க் போய்டுச்சேன்னு ஓன்னு அழுவா..
“இது என்னடான்னா 5 மார்க் வாங்கிட்டு வந்து திருட்டு முழி முழிக்குது… கல்லு குண்டா நிக்கறா பாரு…. ஏதாச்சும் வாய தொறந்து சொல்றாளா பாரு…. என்று ஆளாளுக்கு வசனம் வேறு.. இவளுக்கு இப்போதும் அதை நினைத்தால் உடம்பு நடுங்குகிறது.
அவள் ஒன்றும் முட்டாள் இல்லை.. எல்லா சப்ஜெக்ட்லயும் 90 க்கு மேல தான் மார்க் வாங்கினா.. ஆனா இந்த கணக்கு தான் ஒண்ணுமே புரியல.. அவளுக்கு. அதுவும் அந்த அல்ஜீப்ராவும், கால்குலஸும் அவள் பிளஸ் டூ படிக்கும்போது அப்பப்பா….. ஒண்ணுமே புரியல…
அவள் வீட்டில் அவள் அக்கா அவளை விட 8 வயது பெரியவள். கணக்கில் புலி. எப்போது பார்த்தாலும் நூற்றுக்கு நூறு மார்க். அதனால் இவள் பத்தாம் வகுப்பில் கணக்கில் குறைந்த மார்க் வாங்கியும் வலுக்கட்டாயமா ப்ளஸ் டூவில் கணிதம், பொருளாதாரம், வணிகவியல் காம்பினேஷனில் அவளை சேர்த்துவிட்டு, நான் சொல்லித் தரேன் எப்படி கணக்கு வராம போய்டும் என்று சவால் வேறு விட்டாள்.
ஆனால் பவானியும் எல்லா சப்ஜெக்ட்லயும் முதல் மார்க் வாங்கினாள் கணக்கைத் தவிர. கணக்கில் இருநூறுக்கு 70 மார்க் வாங்குவதற்குள் அவள் முழி பிதுங்கி விட்டது.
இப்போது ஐம்பது வயது ஆகிவிட்டது ஆனாலும் தினமும் கணக்கு பரீட்சை எழுதுவது போலவும் அவள் ஃபெயில் ஆகி விடுவது போலவும் கனவு தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. நிறைய நாட்கள் நடுநிசியில் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுந்து தன்னை சுதாரித்துக் கொள்வாள் பவானி. அவளும் பொருளாதாரம் படித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலையில் சேர்ந்து திருமணமும் ஆகி இப்போ இதோ 17 வயது பெண்ணுக்குத் தாய்.
தன் மகளாவது அவளுக்குப் பிடித்ததைப் படிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அவள் அதிர்ஷ்டம் அவள் கணவன் சந்திரனும் அவளை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் அவளுக்கு வாழ்க்கை சந்தோஷமாகவே அமைந்துவிட்டது. பால் பொங்கி விடவே சட்டென்று நினைவிற்கு வந்தாள்.
தனக்கும், தாரிணிக்கும் டீ போட்டு தன் மகள் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டு டீயை நிதானமாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தாள் பவானி. எல்லாவற்றையும் தன் மகளிடம் பகிர்ந்து கொள்வாள். தாரிணியும் மிகவும் பொறுப்பான பெண். படிப்பு விளையாட்டு இரண்டையும் யாரும் சொல்லாமலேயே அழகாக பேலன்ஸ் பண்ணுவாள். அதில் பவானிக்கு கொஞ்சம் பெருமையும் கூட. வரும் போட்டியில் அவள் கல்லூரியில் முதல் பரிசு வாங்கி விட்டால் அவளுக்கு அடுத்த லெவல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக தாரிணி சொல்லிக்கொண்டிருந்தாள்.
பவானியும் சந்திரனும் அவளை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் டென்ஷன் இல்லாமல் தாரிணியால் விளையாட முடிகிறது .டிவியில் டென்னிஸ் மாட்ச் பார்த்து விட்டு தன் ரூமிற்கு சென்று விட்டாள் தாரிணி.
பவானியும் வழக்கம் போல தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அவளுக்கு அவள் அக்கா சங்கீதாவிடமிருந்து ஃபோன் வந்தது. அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். அடுத்த வாரம் மதுரை சென்று அம்மாவை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் அண்ணா வேறு ஃபோன் செய்து அம்மா உடல்நலம் சரியில்லை நீ வந்து பார்த்து விட்டு போ என்று சொன்னதிலிருந்து அதே நினைப்பு அவளுக்கு.
அவள் அக்கா மதுரையிலேயே இருப்பதால் அடிக்கடி போய் அம்மாவைப் பார்த்து வருகிறாள். இவளும் சந்திரன் வந்தவுடன் டிக்கெட் புக் பண்ணி ஒரு வாரம் ஆபீசுக்கு லீவு போட்டு மதுரை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இரவு 8 மணிக்கு சந்திரன் வீடு திரும்பவே பவானியும் அதை நினைவு படுத்தினாள்.
“பவானி நாளைக்கு நீயே ஆஃபிசிலிருந்து வரும்போது அப்படியே எக்மோரில் இறங்கி டிக்கெட் புக் செய்து விடு…. எனக்கு கொஞ்சம் வேல அதிகம்…. டிரெயின்ல தானே வர… அப்படியே இறங்கி டிக்கெட் வாங்கிவிட்டு அடுத்த ட்ரெயின புடிச்சு வீட்டுக்கு வா ப்ளீஸ்…” என்றான் சந்திரன்.
“ஓகே.. ஓகே… அதுவும் சரிதான்…. நானே வாங்கிட்டு வரேன்” என்று சொன்னாள்.
அடுத்த நாள் வழக்கம்போல காலை நேர அவசரத்தில் எல்லோரும் பிசி. பவானி 9 மணிக்கே கிளம்பி தன் ஸ்கூட்டரை மாம்பலம் ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு ட்ரெயினுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். வண்டியும் உடனே வந்து விட வேகமாக பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறினாள். அவள் அம்மா படுத்த படுக்கையாகி விட்டதாக அண்ணா சொன்னதிலிருந்து அவளுக்கு எப்போது மதுரை சென்று அம்மாவைப் பார்ப்போம் என்றிருந்தது.
மாலை வழக்கம்போல ட்ரெயின் ஏறி எக்மோரில் இறங்கி டிக்கெட் புக் செய்வதற்காக கியூவில் நின்றாள் பவானி. அப்போது அவளுக்கு முன் ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அசப்பில் அவள் கால்குலஸ் மேடம் சூசன் ஜேக்கப் மாதிரியே இருந்தாள். பவானிக்கு தூக்கிவாரிப் போட்டது. கால்குலஸில் ஃபெயில் ஆகி எத்தனை முறை இந்த சூசன் மேடத்திடம் திட்டு வாங்கியிருக்கிறாள்… அதே மேடம் இவள் மற்ற எல்லா பாடங்களிலும் முதல் மார்க் வாங்கியதை நம்ப முடியாமல் ஒருநாள் இவளிடம் பேசியது இப்போதும் பவானிக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
“பவானி டோன்ட் வொரி…. யு வில் டெஃபினிட்லி பாஸ் இன் கால்குலஸ்…. இட் இஸ் நாட் ஸோ டிஃபிகல்ட்….. யு கம் டு மை ஹௌஸ்…..ஐ வில் டீச் யூ… என்று சொன்னது.
சட்டென்று “எக்ஸ்க்யூஸ் மி மேடம்…. நீங்க சூசன் ஜேக்கப் மேடம் தானே ?’ என்றாள் பவானி.
“ஆமாம்… நீங்க?”
பவானிக்கு மகிழ்ச்சியாக இருந்தது அவர் முகம் மாறவே இல்லை. தலைமுடி அங்குமிங்கும் நரைத்திருப்பதைத் தவிர. மற்றபடி தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை.
“மேடம்…. நான் தான் பவானி உங்க ஓல்ட் ஸ்டூடண்ட்… நான் கூட உங்க சப்ஜெக்டில் ஃபெயிலாய்ட்டே இருப்பேன்…. உங்கள கண்டு ஓடி ஒளிஞ்சுப்பேன்… உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ…. ஆனா என் வாழ்க்கையில இந்த கணக்கு ஒரு சுனாமி போல இப்பவும் என் மனச தாக்கிக் கிட்டே தான் இருக்கு… இப்பவும் கணக்குல ஃபெயில் ஆற மாதிரி கனவு அடிக்கடி வருது…. நான் கூட என் கணவரோட சேர்ந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட கன்சல்ட் பண்ணினேன்… அவரும் எனக்கு டிரீட்மென்ட் கொடுத்து இப்ப நல்ல குணமாய்ட்டேன்….ஆனா உங்கள பாத்ததும் எனக்கு அந்த பயம், அதிர்ச்சி திரும்பி வர மாதிரி இருக்கு…. என படபடவென்று பேசி முடித்தாள்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு அவளை அன்பாக தோளில் தொட்டார்.
“மிஸ் பவானி கணக்குதான் வாழ்க்கை என்பது இல்ல… எத்தனையோ விஷயங்கள் நமக்கு பிடித்தவை இருக்கு… அதுல மனச செலுத்தி வாழ்க்கைலே ஒவ்வொருத்தரும் முன்னேறலாம்… நல்ல வேள… நீ இப்போ நல்ல நிலைமைல இருக்க… பாக்க சந்தோஷமா இருக்கு… நீ நல்லா இருக்கணும்….” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
க்யூ மிக நீளமாக இருந்ததால், வெயிட்டிங் நேரத்தில் இருவரும் மனசு விட்டுப் பேசினார்கள். அதற்குள் அவரின் டர்ன் வந்து விடவே அவர் டிக்கெட் வாங்கிக் கொண்டு அவளிடம் விடை பெற்று சென்று விட்டார்.
இவள் அப்படியே சிலையாக நின்றாள்.
“மேடம் பணத்தை சில்லறையா கொடுங்க….. நிறைய பேர் வெயிட் பண்றாங்க….”. என்று கவுண்டரில் இருந்தவர் சத்தமாகக் கூறவே பவானியும் டிக்கெட்டுக்கு பணத்தையும், ஃபார்மையும் கவுண்டரில் கொடுத்தாள்.
எப்போதும் இல்லாத அமைதி அவள் மனதில் நிலவியது.
செல்வம் சார் – எஸ் எல் நாணு
”லிஸன் டு போர்ட்”
இதைக் கேட்டாலே செல்வம் சார் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அவர் வகுப்பில் எல்லா மாணவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். இப்போது செல்வம் சார் எங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..
செல்வம் சாருக்கு இருபத்தி எட்டு வயதிருக்கலாம். ஐந்தடி உயரம். மாநிறத்துக்கும் குறைவான நிறம். பக்கவாட்டில் வாரப் பட்ட அடர்த்தியான கருப்பு முடி. நெற்றியில் மெலிதான விபூதிக் கீற்று.. (அதெப்படி மாலை வரை அழியாமல் இருக்கிறது என்பது முனைவர் பட்டத்துக்கு ஆராயப் பட வேண்டிய டாபிக்), அழகாக ட்ரிம் செய்யப் பட்டு நாசிக்கிக்குக் கீழே வழிந்திருக்கும் மீசை. அதன் கீழே நிரந்தர புன்னகை.. அவர் எப்பவும் அணிவது அரைக் கைச் சட்டை தான். டக் செய்திருப்பார்.. காலில் செர்ரி ப்ளாஸம் தயவில் பளிச்சிடும் ஷு..
பிளஸ்-டூ வகுப்புகளுக்கு செல்வம் சார் தான் கணக்கு டீச்சர். அவர் வகுப்பில் கடைசி பெஞ்ச் அடாவடி அளகேசன் கூட சேட்டை எதுவும் செய்யாமல் அவரையேப் பார்த்துக் கொண்டிருப்பான்.. காரணம் செல்வம் சாரின் ஆங்கிலம்.. அவருடைய பாடி லேங்குவேஜ்..
“லிஸன் டு போர்ட்”
என்று விரைப்பாக போர்டைப் பார்த்து ஒரு எபவ் டர்ன் கொடுத்துத் தான் செல்வம் சார் பாடம் ஆரம்பிப்பார்.
ரென் அண்ட் மார்டின் பார்த்து, கூகிள் சர்ச் பண்ணினாலும் ”லிஸன் டு போர்ட்”க்கு அர்த்தம் கிடைக்காது.. தொடர்ந்து அவர் வகுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் அது புரியும்..
“லிஸன் டு போர்ட்” என்றால் கவனமாகக் கேளுங்கள் என்று அர்த்தம்.
அதே மாதிரி “லெஸ்ஸன் யுவர் டால்க்” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
திடீரென்று ஒரு கணக்கை போர்டில் எழுதி..
“இதுக்கு யாரு சரியான ஆன்ஸர் கண்டு பிடிக்கிறாங்களோ.. அவங்களை ஐ வில் ஈட் யு ஸ்வீட் டுமாரோ”
என்று பயமுறுத்துவார். அதாவது அந்தக் கணக்கை சரியாகப் போடுபவர்களுக்கு மறுநாள் அவர் ஸ்வீட் கொடுப்பதாக அர்த்தம்.
இப்படி செல்வம் சாரின் ஆங்கிலப் புலமையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆங்கிலம் தான் கொஞ்சம் ஜகா வாங்குமே தவிற கணக்கில் செல்வம் சார் புலி. பல குழப்பமான கணக்குகள்.. நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு விடை கிடைகாமல் திண்டாடும் கணக்குகள்.. இறுதியில் செல்வம் சாரிடம் தஞ்சம் புகுவோம்..
”இது தானே.. லிஸன் டு போர்ட்”
என்று வழி காட்டுவார். அதைப் பார்த்த பிறகு.. ஃபூ.. இவ்வளவு தானா? இதற்காகவா மண்டையைக் குழப்பிக் கொண்டோம் என்று எங்களுக்கு அவமானமாக இருக்கும்..
ஆனால் என்ன.. ஒவ்வொரு ஸ்டெப் முடிந்தவுடனும் “ஸ்டாண்ட் அப்டு த ஸ்டெப்” என்பார். அதாவது இந்த ஸ்டெப்பை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.
அவர் சொன்ன ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அவர் பாஷையிலேயே நாங்கள் “ஸ்டாண்ட் அப்” பண்ணினதுனால் தான் பின்னாளில் வாழ்க்கையில் நாங்கள் ஸ்டாண்ட் பண்ண முடிந்தது என்பது என் கான்க்ரீட் நம்பிக்கை..
செல்வம் சாருக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.. தனிக் கட்டை.. ரொம்பவே சுமார் நிறம்.. அதோட ரொம்பவும் குட்டை.. அதனால் தான் பார்க்கும் பெண்களெல்லாம் ரிஜக்ட் செய்து விடுகிறார்கள் என்று மாணவர்கள் மத்தியில் ஒரு வதந்தி உலாவியது. அது உண்மையா இல்லையா என்று ஆராய எனக்குப் பிடிக்கவில்லை.. காரணம் திருமணம் என்பது அவர் தனிப் பட்ட விஷயம் என்று நான் நம்பினேன்..
பன்னிரெண்டாவது மாணவர்களை பள்ளியிலிருந்து எங்கேயாவது டூர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த முறை பெங்களூர் போவது என்று தீர்மானிக்கப் பட்டது. கோவா போக வேண்டும் என்று போராடிய சில மாணவர்களும் பெங்களூருக்கு ஒப்புக் கொண்டனர்.. காரணம் செல்வம் சார் தான் டூர் ஹெட்..
ரயிலிலும்.. பெங்களூரில் தங்கியிருந்த விடுதியிலும்.. கப்பன் பார்க், லால் பாக், விதான் சௌதா, பிருந்தாவன் கார்டன் என்று நாங்கள் சுற்றிய போதும்.. செல்வம் சார் எங்களுள் ஒருவராகவே மாறி விட்டார்.. கேலியும் கிண்டலும்.. பாட்டும்.. நடனமும்.. (செல்வம் சாருக்குள் இப்படி ஒரு திறமையா?.. அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல்..)
எங்கள் வகுப்பு ராகவன் பிரமாதமாக மிமிக்கிரி செய்வான்.. அதுவும் அவன் செல்வம் சாரைப் போல் மிமிக்கிரி செய்து காட்டியபோது அதை ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தது செல்வம் சார் தான்..
இவ்வளவு ஜாலியாக ராகவனின் மிமிக்கிரியை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும் செந்தில் மட்டும் முகம் தொங்கப் போட்டு ஓரமாக நிற்பதை கவனித்து அவன் அருகில் சென்றேன்..
“என்ன செந்தில்.. எல்லாரும் ஜாலியா இருக்காங்க.. நீ மட்டும் இங்க நிக்கறே? நீயும் கலந்துக்க.. வா”
செந்தில் என்னைக் கெஞ்சலாகப் பார்த்தான்.
“வேண்டாம்.. நான் இங்கயே இருக்கேன்.. என்னை விட்டுரு”
“ஏன்.. ஏதாவது பிரச்சனையா?”
செந்தில் சிறிது நேரம் மௌனமாகத் தரையைப் பார்த்தான். பின் மெதுவாக..
“டேய்.. உனக்கேத் தெரியும்.. எங்கப்பா குடிகாரர்.. எங்கம்மா நாலு வீட்டுல வேலை பண்ணி குடும்பத்தைக் காப்பாதறாங்க.. செல்வம் சார் எங்க தெருவுல தான் இருக்கார்.. எங்க நிலமை தெரிஞ்சு அவர் தான் எனக்கு ஸ்கூல் பீஸ் கட்டிப் படிக்க வெக்கறார்.. இதோ.. இந்த டூருக்குக் கூட அவர் தான் எனக்காக காசு கொடுத்திருக்கார்.. அவர் எனக்கு தெய்வம் மாதிரி.. அவரைக் கிண்டல் பண்ணும் போது எனக்கு மனசு ரொம்ப வலிக்கறதுடா.. அதான் ஒதுங்கி வந்திட்டேன்”
செந்தில் இதைச் சொன்னவுடன் என்னையுமறியாமல் திரும்பிப் பார்த்தேன்.. சந்தோஷமாக மற்றவர்களுடன் சிரித்துக் கொண்டிருந்த செந்தில் சார் உண்மையிலேயே விஸ்வரூபியாகத் தான் தெரிந்தார்.
செல்வம் சார் ஆசைப் பட்டது போலவே பிளஸ்-டூ பரிட்சையில் எங்கள் வகுப்பிலிருந்து ஏழுபேர் கணக்கில் செண்ட்டம் வாங்கினோம்.. தொண்ணூறு சதவிகிதம் பேர் தொண்ணூறுக்கு மேல்.. மீதி சில எண்பதுக்கு மேல்.. தேறவே மாட்டார்கள் என்று மற்ற ஆசிரியர்களால் தலை சுற்றி ஒதுக்கப் பட்ட அடாவடி அளகேசன் போன்றவர்கள் கூட கணக்கில் ஐம்பது மார்க் வாங்கி அசத்தியிருந்தார்கள்..
நாங்கள் எல்லோரும் சேர்ந்து செல்வம் சாருக்கு ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டோம்.. ஆனால் எப்படியோ இதைத் தெரிந்துக் கொண்ட செல்வம் சார் உடனே எங்களைக் கூப்பிட்டு எந்த கிப்டும் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். மாறாக அவர் எங்கள் எல்லோருக்கும் ஸ்ரீ மிட்டாய் காஜு கட்லி கொடுத்து அசத்தினார்..
”ஐ வில் ஈட் யு ஸ்வீட் டுமாரோ”
செல்வம் சாரின் குரல் என் காதில் மைண்ட் வாய்ஸாக ஒலித்தது. என்னையுமறியாமல் என் இதழ்கள் விரிந்தன..
நான் ஸ்கூல் டாப்பர் என்பதால் என்னைத் தனியாக அழைத்து “கங்ராட்ஸ்.. யு ஸ்டேண்ட் அப்” என்று ஒரு பார்க்கர் பேனாவைப் பரிசாகக் கொடுத்தார். (”யு ஸ்டேண்ட் அப்” என்றால்.. கரெக்ட்.. இந்நேரம் உங்களுக்கேப் புரிந்திருக்குமே.. நீ சாதித்து விட்டாய் என்று அர்த்தம்).
பிட்ஸ் பிலானியில் அட்மிஷன் கிடைத்து நான் அந்த கிராமத்துக்கு இடம் பெயர்ந்த பிறகு செல்வம் சாருடன் டச் விட்டுப் போனது. காரணம் ஆரம்பத்திலிருந்தே வாட்ஸ்-ஏப், பேஸ்-புக் இது எதிலும் அவர் நுழைந்தது கிடையாது.. செல் போன் கூட பழைய நோக்கியா மாடல் தான்.. ஆண்ட்ராய்ட் கிடையாது..
ஒரு முறை அவரிடம் பொறுக்காமல் கேட்டேன்..
“என்ன சார் இன்னும் பழைய மொபைலயே வெச்சிட்டிருக்கீங்க.. ஆண்ட்ராய்ட் வாங்கிக்குங்க சார்.. வாட்ஸ்-ஏப், பேஸ்-புக் எல்லாம்..”
என்று நான் முடிப்பதற்குள் செல்வம் சார் குறுக்கிட்டார்.
“வேண்டாம்பா.. அந்த வம்பே வேண்டாம்.. போன் எதுக்கு? எடுத்துப் பேச.. அவ்வளவு தான்.. நான் அந்த கண்றாவியெல்லாம் வெச்சுக்க மாட்டேன்.. யு டெலீட் திஸ் டாக்”
இதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன்,
இருந்த நம்பரையும் செல்வம் சார் மாற்றியிருக்க வேண்டும்.. காரணம் சில நாட்களுக்குப் பிறகு அவருடைய நம்பர் “நாட் இன் யூஸ்” அறிவிப்பு சொன்னது..
பிலானியில் கணக்கு சொல்லிக் கொடுத்த புரொபஸர் ஒரு ஜீனியஸ். ஆனால் அவருக்கு ஒரு மாணவனின் லெவலுக்கு இறங்கி வந்து பாடம் சொல்லித் தரத் தெரியவில்லை.. அல்லது பொறுமையில்லை..
என் மனம் செல்வம் சாரை நினைத்து ஏங்கியது..
“ஸ்டாண்ட் அப்டு த ஸ்டெப்”
செல்வம் சாரின் கணீர் குரல் கேட்டது. அவர் வழியிலேயே தான் பிலானியில் பாடம் கற்றேன்.
பிலானியில் ஐந்து வருடம் டூயல் டிகிரி முடித்து கோல்ட் மெடல் வாங்கிய கையோடு டெல்லியில் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்து சேர்ந்து விட்டேன். நான்கு வருடங்களில் இரண்டு பர்பார்மென்ஸ் பிரமோஷன் கிடைத்தவுடன் எனக்கு திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணி விட்டார்கள் என்னைப் பெற்றவர்கள். ஷாலினி.. எம்.சி.ஏ… அவளும் டெல்லி தான்..
சென்னையில் தான் கல்யாணம். பத்திரிகை வந்தவுடன் எடுத்துக் கொண்டு எங்கள் பள்ளிக்கு ஓடினேன்.
பள்ளி நிறையவே மாறியிருந்தது. வாசலில் வாட்ச்மேன் மணிக்கு பதிலாக செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆள் யூனிபார்மோடு நின்றிருந்தார். ஹிந்திக் காரர். நான் பேசிய வட நாட்டு ஹிந்தியில் மயங்கி என்னை உள்ளே அனுமதித்தார்.
சுற்று முற்றும் பார்த்தேன். நாங்கள் ஓடித் திரிந்த இடங்களிலெல்லாம் புது கட்டிடங்கள் முளைத்திருந்தன. பார்க்கக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது..
மாணவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். யூனிபார்ம் கூட நிறம் மாறியிருந்தன.
ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தேன்.
எல்லாம் தெரியாத முகங்கள். இந்த ஒன்பது வருடங்களில் எல்லோரும் மாறிவிட்டார்களா? அப்ப செல்வம் சார்..
பியூன் மாரி மட்டும் அடையாளம் தெரிந்தான்.
“மேனேஜ்மெண்ட் மாறினதுல அல்லாரும் மாறிட்டாங்க தம்பி.. பழைய ப்ரின்ஸி கிடையாது.. டீச்சருங்க கிடையாது.. அல்லாம் புதுசு.. நான் ஒரு ஆளு தான் தப்பிப் போய் பழசு”
“அப்ப செல்வம் சார்..”
“அவரு தான் மொதல்ல வெளில போனாரு..”
“எங்க போனார்? இப்ப எங்க இருக்கார்?”
“தெரீலயே தம்பி.. அவருக்குக் கண்ணாலம் ஆயிருச்சுன்னு மட்டும் யாரோ எப்பவோ சொன்னதா நாபகம்”
செல்வம் சாரை சந்திக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. என் வகுப்பில் படித்த சிலரைப் பிடித்து அவர்களிடமிருந்து செல்வம் சாரைப் பற்றிய தகவல் கிடைக்குமா என்று முயன்றேன்.. சிக்கிய சிலரும் வெளிநாட்டில் இருந்தனர். அவர்களும் செல்வம் சாரா என்று புருவம் உயர்த்தினர்.
செந்தில் நினைவுக்கு வந்தான்.. அவனுக்கு நிச்சயம் செல்வம் சாரைப் பற்றி தெரிந்திருக்கும்.. உடனே அவன் குடும்பம் வாடகைக்கு இருந்த முத்து முதலி தெரு வீட்டுக்குப் போனேன்.. ஆனால் அந்தத் தெருவில் இருந்த வீடுகளெல்லாம் பிளாட்டுகளாக மாறியிருந்தன.. செந்திலைப் பற்றி விசாரித்தேன்.. யாருக்கும் எதுவும் தெரியவில்லை..
செல்வம் சார் இல்லாமலே என் திருமணம் நடந்ததில் எனக்கு வருத்தம் தான்.
ஷாலினிக்கு டெல்லியில் மெட்ரோ பிராஜெக்ட் ஐ.டி. பிரிவில் வேலை. இருவரும் செட்டில் ஆகி இரண்டு வருடத்தில் பிரஜஸ் பிறந்து.. வளர்ந்து..
பிரஜஸை பள்ளியில் சேர்க்கும் தருணம் எனக்கு மறுபடியும் செல்வம் சார் நினைவில் வந்தார். அவர் கொடுத்த பார்க்கர் பேனாவை லாக்கரிலிருந்து எடுத்துப் பார்த்தேன். என்னையுமறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. ரயில் சிநேகம் மாதிரி அந்த உறவு முடிந்து விட்டதே என்று என் மனதில் எப்பவுமே தீராத குறையுண்டு..
ரஜோரி கார்டன் பகுதியில் இருந்த அந்த தனியார் பள்ளியில் பிரஜஸுக்கு அட்மிஷன் கிடைத்தது. கொஞ்சம் காஸ்ட்லி தான்.. இருந்தாலும் நல்ல பள்ளி என்று பெயர் வாங்கியிருந்தது..
பீஸ் கட்டி அட்மிஷன் ஊர்ஜிதம் செய்துக் கொண்டு பள்ளி காரிடாரில் நடந்து வந்தேன்..
வகுப்புகள் நடந்துக் கொண்டிருந்தன. எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன.. திடீரென்று..
“லிஸன் டு போர்ட்”
பக்கத்து அறையிலிருந்து கணீரென்று குரல் கேட்டது.
மின்சாரம் பாய்ந்தது போல் எட்டிப் பார்த்துத் துள்ளிக் குதித்தேன்..
கொஞ்சம் வயதான செல்வம் சார் கம்பீரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
சிற்பி பாலசுப்பிரமணியன்
தமிழ் எழுத்துலகில் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்த வருடம் குடியரசுத் திருநாளில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் நமது நண்பர் இந்திரன் அவர்களின் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். சிற்பி அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி சிறப்பிக்கும்போது அவரைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் இந்திரன் அவர்கள்.
40 நிமிட ஆவணப்படம் சிற்பி – இந்திரன் இருவரது திறமைகளையும் திறம்பட வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்தக் காணொளி இங்கே தரப்பட்டுள்ளது.
சிற்பி அவர்களைப் பற்றியத் தகவல்களை விக்கி பீடியாவிலிருந்து எடுத்து இங்கே தந்திருக்கிறோம்.
(https://ta.wikipedia.org/s/p0n)
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்.
1996-இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் அளித்து வருகிறது.
கவிதை நூல்கள் (20)
- நிலவுப் பூ (1963) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1963
- சிரித்த முத்துக்கள் (1966) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1968
- ஒளிப்பறவை (1971) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1971
- சர்ப்ப யாகம் (1976) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1976
- புன்னகை பூக்கும் பூனைகள் (1982) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1982
- மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982)
- சூரிய நிழல் (1990) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1990 இரண்டாம் பதிப்பு 1995
- இறகு (1996) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி
- சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1996
- ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
- பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி
- பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001)
- பாரதி – கைதி எண் : 253 (2002)
- மூடுபனி (2003)
- சிற்பி : கவிதைப் பயணங்கள் (2005)
- தேவயானி (2006)
- மகாத்மா (2006)
- சிற்பி கவிதைகள் தொகுதி – 2 (2011)
- நீலக்குருவி (2012)
- கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
- ஆதிரை (1992)
சிறுவர் நூல்கள் (2)
- சிற்பி தரும் ஆத்திசூடி (1993)
- வண்ணப்பூக்கள் (1994)
உரைநடை நூல்கள் (13)
- இலக்கியச் சிந்தனைகள் (1989)
- மலையாளக் கவிதை (1990)
- இல்லறமே நல்லறம் (1992)
- அலையும் சுவடும் (1994)
- மின்னல் கீற்று (1996)
- சிற்பியின் கட்டுரைகள் (1996)
- படைப்பும் பார்வையும் (2001)
- கவிதை நேரங்கள் (2003)
- மகாகவி (2003)
- நேற்றுப் பெய்த மழை (2003)
- காற்று வரைந்த ஓவியம் (2005)
- புதிர் எதிர் காலம் (2011)
- மனம் புகும் சொற்கள் (2011)
வாழ்க்கை வரலாற்று நூல்கள் (8)
- இராமாநுசர் வரலாறு (1999)
- ம.ப.பெரியசாமித் தூரன் (1999)
- பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் (1999)
- ஆர்.சண்முகசுந்தரம் (2000)
- சே.ப. நரசிம்மலு நாயுடு (2003)
- மகாகவி பாரதியார் (2008)
- நம்மாழ்வார் (2008)
- தொண்டில் கனிந்த தூரன் (2008)
மொழிபெயர்ப்பு நூல்கள் (11)
கவிதைகள் (5)
- சச்சிதானந்தன் கவிதைகள் (1998)
- உஜ்ஜயினி (ஓ.என்.வி.குரூப்) (2001)
- கவிதை மீண்டும் வரும் (சச்சிதானந்தன்) (2001)
- காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி) (2010)
- கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)
புதினங்கள் (3)
- அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
- ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999)
- வாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005)
பிற(3)
- தேனீக்களும் மக்களும் (1982)
- சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான் (கிரண்பேடி) (2006)
- வெள்ளிப்பனி மலையின்மீது (எம்.பி.வீரேந்திரகுமார்)(2009)
இலக்கிய வரலாறு (1)
- தமிழ் இலக்கிய வரலாறு (2010)
ஆங்கில நூல் (1)
- A Comparative Study of Bharati and Vallathol (1991)
அறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3)
- கம்பனில் மானுடம் (2002)
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை (2006)
- பாரதிதாசனுக்குள் பாரதி (2011)
உரை நூல்கள் (3)
- திருப்பாவை : உரை (1999)
- திருக்குறள் : சிற்பி உரை (2001)
- மார்கழிப்பாவை (2009) (திருப்பாவை,திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி உரை)
தொகுப்பு நூல்கள்
- நதிக்கரைச் சிற்பங்கள் (2012)
பதிப்பித்த நூல்கள் (11)`
- மகாகவி பாரதி சில மதிப்பீடுகள் (1982)
- பாரதி – பாரதிதாசன் படைப்புக்கலை (1992)
- தமிழ் உலா I & II (1993)
- பாரதி என்றொரு மானுடன் (1997)
- மருதவரை உலா (1998)
- நாவரசு (1998)
- அருட்பா அமுதம் (2001)
- பாரதியார் கட்டுரைகள் (2002)
- மண்ணில் தெரியுது வானம் (2006)
- கொங்கு களஞ்சியம் (2006)
- வளமார் கொங்கு (2010)
இதழாளர்
- வானம்பாடி (கவிதை இதழ்)
- அன்னம் விடு தூது (இலக்கிய மாத இதழ்)
- வள்ளுவம் (ஆசிரியர் குழு)
- கவிக்கோ (ஆசிரியர் குழு)
- கணையாழி (ஆசிரியர் குழு)
விருதுகள்
- மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
- பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
- கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளார் (1992)
- A Comparative study of Bharati and Vallathol
- உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
- இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
- பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
- தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
- கம்பன் கலைமணி விருது – கம்பன் அறநிலை, கோவை (1998)
- சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
- தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
- மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது (1998)
- ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
- சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
- இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
- பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை (1998)
- ‘பூஜ்யங்களின் சங்கிலி’ – தமிழ்நாடு அரசு பரிசு (1998)
- ‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
- ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
- சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
- சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003)
- பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
- மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
- பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
- தலைசிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)
- பாரதி பாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
- பாராட்டு விருது – அரிமா மாவட்டம் 324 / 01 வட்டார மாநாடு, கோயம்புத்தூர் (2004)
- தமிழ் வாகைச் செம்மல் விருது – சேலம் தமிழ்ச் சங்கம் (2005)
- ராஜா சர் முத்தையா விருது (2009)
- கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
- அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
- ரோட்டரி சங்கம் பொள்ளாச்சி [No Paragraph Style]For the Sake of Honour Award (2008)
- வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
- தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது (2009)
- ‘நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010)
- ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
- பாரதிய வித்யாபவன் கோவை, தமிழ்மாமணி விருது (2010)
- கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010)
- பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)
- பத்மஸ்ரீ விருது (2022)[2]
கவிஞர் சிற்பியைக் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்..
- சிற்பியின் படைப்புக்கலை – முனைவர் தே.ஞானசேகரன் (ப.ஆ.) (1993)
- கோபுரத்தில் ஒரு குயில் – சி.ஆர்.ரவீந்திரன் (1996)
- சிற்பி – மரபும் புதுமையும் – முனைவர் தே.ஞானசேகரன்(ப.ஆ.) (1996)
- கவிஞர் சிற்பி -கருத்தியல்வளம் – முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)
- கவிஞர் சிற்பி – கவிதைவளம் – முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)
- கவிஞர் சிற்பி – கவிதைக்குள் ஒரு பிரபஞ்சம் – முனைவர் இரா.சந்திரசேகரன் (2004)
- சிற்பியின் படைப்புலகம் – பேராசிரியர்கள் மா.நடராசன், மதியழகன் (ப.ஆ.) (2004)
- சிற்பியின் கவிதையில் சிறைப்பட்ட சீர்திருத்தக் கவிஞர் – அ.சங்கரவள்ளி நாயகம் (2006)
- சிற்பி துளிகளில் ஒளிரும் வெளிகள் – சொ.சேதுபதி (2011)
- சிற்பி – மௌனம் உடையும் ஒரு மகாகவிதை – நவபாரதி (2011)
- ஆழிக்கவிதைகளும், ஆழியாற்றுக்கவிதைகளும் – உ.அலிபாவா (ப.ஆ) (2012)
- Sirpi Poet as Sculptor – P.Marudanayagam (2006)
- A noon in Summer (1996)
- Sirpi Poems – A Journey (2009)
ஆய்வுத் திட்டங்கள் UGC – பெருந்திட்டங்கள்
- தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம் (1989 – 1991)
- இடைக்காலக் கொங்கு நாட்டின் சமூக – பொருளாதார அமைப்புகள் (1993- – 1997)
- கொங்கு களஞ்சியம் – இரு தொகுதிகளின் பதிப்பாசிரியர்
மதிப்புறு பொறுப்புகள்
- காந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்.
- சாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினர் / ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆலோசனைக் குழு (2008)
- சாகித்ய அகாதமி பொதுக்குழு / தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் (1993 – 1998)
- எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் செயற்குழு, விருதுக்குழு உறுப்பினர்.
- தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (2000 – 2005)
- தலைவர், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் (2009)
- தலைவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை
- தலைவர், பி.எம்.எஸ்., அறக்கட்டளை
- செயலர், பொள்ளாச்சி இலக்கியக் கழகம்
- உறுப்பினர், பாரதிய வித்யா பவன் நிர்வாகக் குழு, கோவை
- உறுப்பினர், டாக்டர் NGP கல்லூரிக் குழு, கோவை
- முன்னாள் உறுப்பினர், Afirm cancan either eitherraiseraise Money Moneyusing Equity,Equity, Equity,or using Debt DebtRKR கல்வியியல் கல்லூரிக் குழு, உடுமலைப் பேட்டை
- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்
- பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர்
- உறுப்பினர், நிர்வாகக்குழு, பாரதியவித்யா பவன், கோவை
- சென்னை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், கொல்கத்தா, அழகப்பா, மதுரை, கேரளப் பல்கலைக் கழகங்களிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் அறக்கட்டளை உரையாளர்
- பப்பாசி, புதியதலைமுறை, இளையராஜா அமைத்த பாவலர் வரதராஜன் நினைவு விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்
வலைத்தளம்
http://sirpibharati.blogspot.in/
“மா பா செய்ததைத்தான் செய்தேன்” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் “வாத்ஸல்யா ”(“Vatsalya” for Human Enrichment)” என்ற மனநல நிறுவனத்தை ஆரம்பித்திருந்த காலகட்டம். கூடவே எங்கள் ஸோஷியல் வர்க் பாடப் படிப்பின் ஒரு பிரிவிற்கு விரிவுரையாளராக (guest lecturer) உயர் கல்வி கல்லூரி ஒன்றிலும் பணியாற்றி வந்தேன். அங்கு முதுகலைப் பாடம் நடத்தும் ஆசிரியர் குமார் அவருடைய மாணவியைப் பற்றி ஆலோசிக்க என்னிடம் வந்தார்.
மாணவி பெயர் ப்ரீதம், இரண்டாம் வருட முதுகலை பட்டப்படிப்பு. சில வாரங்களாக இவள், முறையாக வகுப்புக்கு வருவதில்லை, எப்போதும் ஏதோ நினைத்துக் கொண்டு நகைக்கிறாள், கவனம் சிதறுகிறது என்று பல மாற்றங்களைக் கவனித்தார். கவலையுடன் என்ன செய்யலாம் என ஆலோசிக்க என்னிடம் வந்தார். மாணவியிடம் என்னைச் சந்திக்கச் சொல்ல முடிவானது.
சில நாட்களுக்குப் பின்னர், நான் வண்டியை விட்டு இறங்கியவுடன் இரு இளம் வயதினர் என்னை நிறுத்தி, கன்ஸல்ட் பண்ண வேண்டும் என்றார்கள். இருவரின் விழிகள் இங்கே அங்கே எதையோ தேடுவது போலத் தோன்றியது. அவளுடைய கழுத்தில் ஃப்ரெஷாக கட்டிய தாலிக் கயிறு. அவள் அவன் கையைப் பற்ற, அவன் உதறிவிட்டுக் கொண்டதைக் கவனித்தேன். அன்றைய முதல் க்ளயன்ட் தாமதமாக வருவதாகச் சொன்னதால், இவர்களையே முதலில் பார்க்க ஆரம்பித்தேன்.
இவர்கள் ப்ரீதம், ப்ரேம். குமார் சார் விலாசத்தைத் தந்ததாக அறிமுகம் செய்து கொண்டார்கள். எடுத்த உடனேயே சமீபத்தில் தங்களது திருமணத்தைப் பெற்றோருக்கு அறிவித்தோம் எனச் சொன்னார்கள். இரு தரப்பிலும் இப்படிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். ப்ரேம் ஒரு வயது இளையவன். ப்ரீதம் இருபத்தி இரண்டு, ப்ரேம் இருபத்தி ஒன்று.
ஒரே கல்லூரியில் படிக்கும் போது பல கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானது. “செம்ம ஜோடி” எனக் கல்லூரியில் கேலியாகச் சொன்னது நாளோட்டத்தில் தோழமையாகி, காலம் முழுவதும் சேர்ந்து வாழ முடிவு செய்தார்கள்.
வீட்டில் ஒப்புதல் தரமாட்டார்கள் என எண்ணி, பதிவு கல்யாணம் செய்து கொண்டனர். படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகே கல்யாணத்தை
பற்றிச் சொல்லலாம் என்று முடிவு. ஆனால் தற்செயலாக ப்ரீதம் அம்மா தாலிக் கயிறைப் பார்த்து விட்டு ஆவேசப் பட்டதில், சொல்ல வேண்டியதாக ஆயிற்று. குழப்பம் தவிப்பானது. அப்போது தான் ஆசிரியர் பரிந்துரை செய்ய, என்னிடம் வந்தார்கள்.
ப்ரீதம், ப்ரேம் ஸெஷனில் தங்களுடைய இப்போதையைக் கல்யாண வாழ்வைப் பற்றிய விவரத்துடன் துவங்கினேன். பேசப் பேச இருவரும் தங்களது கோட்பாட்டைக் கெட்டியாக கடைப்பிடிப்பதை உணர ஆரம்பித்தார்கள். கையை கோர்த்துக் கொள்ளாமல், தனது உறவு நெருக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வந்ததில் இருவரும் திருப்தி, சந்தோஷம் உணர்வது தெளிவானது. மாணவர்களாக நிலை நீடிக்கும் வறையில் இவ்வாறு என்று உருதி கொண்டிருந்தார்கள். இருவரின் பெற்றோருமே இதை நம்பவில்லை, சந்தேகப் பார்வையில் பாவிப்பதாகப் ப்ரேம் சொன்னான்.
இறுதிப் பரிட்ச்சை இருப்பதால் அதை முடித்துவிட்டு மறுபடி வருவதாக முடிவானது.
திரும்பி வந்ததும் அவர்களது கட்டுப்பாட்டைக் காக்கும் விவரங்களை எடுத்துக் கொண்டோம். அவைகளைச் சொல்லச் சொல்ல தங்களது முடிவுகளை ஆராய்ந்து வர அவர்களால் முடிந்தது. நிர்ணயம், மற்றவர்களுக்காக அல்ல என்று. இதை ப்ரேம் முழுக்க உணர்ந்தான். ப்ரீதம் தத்தளித்தாள்.
இந்த நிலையை ப்ரீதம் புரிந்து கொள்ள அவளுடன் ஸெஷன்களை தொடர்ந்தேன். எடுத்த உடன், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் செய்வது அவள் பெற்றோருக்குப் புதிது அல்ல என்றாள். அம்மாவும் இவ்வாறே செய்து கொண்டாளாம். இப்படிச் செய்து கொண்டதை மிகப் பெருமையாக அவளிடம் அம்மா சொல்லிக் கொள்வாள். அதே போல நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடமும்.
கேட்கக் கேட்க வாயைப் பிளந்து அம்மாவை ப்ரீதம் பார்ப்பாளாம். பாட்டியுடன் உறவைத் துண்டித்து விட்டிருந்தும் அம்மா கவலை இல்லாமல் இருப்பதைப் பார்த்து, இவ்வாறு செய்வது தப்பில்லை என ப்ரீதம் எடுத்துக் கொண்டாள். அவளுடைய இந்த முடிவைப் பல கோணங்களில் ஆராய்ந்தோம். தன் உள்மனத்தின் தூண்டுதலைப் ப்ரீதம் புரிந்து கொண்டாள். அவளுக்கு அம்மா போலச் செய்ய வேண்டும், அந்த சந்தர்ப்பம் வந்ததும், தானும் செய்தாள்.
ப்ரீதம் ஒருவர் ஏதேனும் சொன்னால் அது சரி என எடுத்துக் கொண்டு, தனக்குச் சரியா என்று ஆராயாமல் செய்வதைப் பெருமையாகக் கூறினாள். அதிலிருந்து பலவற்றை ஆராய, பல ஸெஷன்களில் ப்ரீதம் ஒருவர் நாலைந்து முறை இவ்வாறு செய் என்றதும் “நான் செய்து விடுவேன்” என்றாள்.
எந்த சூழலில் இவ்வாறு செய்வது நன்கு என அவளாகப் புரிந்து கொள்ள, அடுத்த மூன்று வாரங்களுக்குத் தான் எடுக்கும் முடிவுகளின் வழிமுறைகளை, விளைவுகளைக் கவனித்து, குறித்து வரச் சொன்னேன்.
கூடவே, ப்ரேமுடனும் ஸெஷன்களைத் தொடர்ந்தேன். குமார் சாரைச் சந்தித்தேன். பலமடங்கு ப்ரீதமிடம் கண்ட மாற்றத்தை விவரித்தார்.
ப்ரேம் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பகிர, அவனுடைய தவிப்பு தெளிவானது. குறிப்பாக நெருக்கமான இரு தோழர்களும் பிரேமை ப்ரீதம் வயது வித்தியாசமாக இருந்ததைப் பற்றி உஷார் செய்தார்கள். இங்கிருந்தே ஸெஷன்களை ஆரம்பித்தேன்.
அதன் தாக்கத்தைக் கவனித்த தருணங்களைக் குறித்து எழுதினான். அதை ஆராய, ப்ரேம் தன்னைவிட ப்ரீதம் யோசிக்கும் விதத்தில், புரிதலில் சில வித்தியாசங்களைக் கவனித்ததாகச் சொன்னான். அவர்களுக்கு அது சாதகமாக இருந்ததாம். தனக்கு ஏன் இவ்வகையான முதிர்ச்சி இல்லை என்று வினவினான். சில கட்டுரைகளைப் படிக்கப் பரிந்துரை செய்தேன். தான் விதிவிலக்கு அல்ல எனப் புரிய, ஆண்களைவிடப் பெண்கள் உளவியல் ரீதியாக முதிர்ச்சி சீக்கிரமே பெறுவார்கள் என்றதை அறிந்ததும் ஆறுதல் பெற்றான்.
அதற்குள் வருடத்தின் அரைப் பரிட்சை வந்து விட்டது. அது முடிந்ததும் ப்ரேமுக்கு ஒரு நிறுவனத்தில் தினந்தோறும் நான்கு மணிநேரம் வேலை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஸெஷன்களுக்கு வருவது கடினமானது. அவன் சுயத் திறனை மேம்படுத்த விரும்பினான். அதற்கான பல வழிகளைப் பட்டியலிட்டு, எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்துவது என்றதையும் நிர்ணயித்துக் கொண்டோம். வகுப்பு முடிந்த கையோடு வேலைக்குச் சென்று விடுவான். சிறிய ஸ்டைப்ஃண்ட் கிடைத்ததில், முக்கால் பணம் வீட்டிற்குக் கொடுத்து மீதியை தன் குடும்பத்திற்கும் சேமிக்க ஆரம்பித்தான்.
காலத்தவணை முடிந்ததும் தான் எடுத்துக் கொண்ட பயிற்சி தாள்களுடன் ப்ரீதம் வந்தாள். வந்ததும் தனக்கு அரசாங்க வேலை அழைப்பு வந்ததை மகிழ்ச்சியாகக் கூறினாள். வேலை இடம் சில நாட்களில் தெரியவரும் என்றாள்.
பட்டியலில் முதன்முதலில், தான் சோப் வாங்கியதே விளம்பரத்தால் எனத் துவங்கினாள். முடிவுகள் எடுக்கும் விதத்தைக் கவனித்ததை, அதில் எவ்வாறு தான் சிந்திக்காமல் மற்றவர்கள் சொன்னதால் செய்தாள் என்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாள். அவளது கணக்குப்படி மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது நன்கு. ஏற்றுக் கொள்ள வேண்டும். தம் சூழலுக்கு எவை உதவும் என எடை போடாததே சிக்கலானது. சிந்தனை செய்யும் விதத்தில் குறிப்பாக “க்ரிடிக்கல் தின்க்கிங் (critical thinking)” உள்ள பாதிப்பைப் பார்க்க வரும் ஸெஷன்களில் துவங்க முடிவானது.
ப்ரீதம் மறுபடி வருவதற்குக் காத்திருக்கையில் ஒரு நாள் என்னை ஆண்-பெண் ஜோடி ஆலோசிக்க வந்தார்கள்.
அவர்கள் பெண் வருவதாக இருந்ததாகவும் அவளை வீட்டில் விட்டுவிட்டு அவசரமாகத் தகவல் ஒன்றைப் பகிர்வதற்குத் தாம் வந்ததாகவும் சொல்லி, தங்களை அபிநயா-ராஜா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். தற்போது தங்களது மகள் முதுகலைப் பட்டத்துப் பரீட்சை முடித்துவிட்டு அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாகத் தெரிவித்தார். கல்யாணப் பேச்சை எடுத்தால் கூச்சல் சத்தம் போட்டு பேச்சைத் திசை மாற்றி வைக்கிறாள், ஒருவனைக் காட்டி கணவன் என்று சொல்கிறாள் என்றார். உடனடியாக இதை மாற்றி அமைக்க கௌன்சலிங் உபயோகப் படும் என நினைத்து மகளை என்னிடம் அழைத்து வருவதாகச் சொன்னார்கள். பெற்றோரின் ஆதங்கம் புரிந்தாலும் அதில் நாங்கள் ப்ரோஃபெஷனலாக அணுகுவதைப் பற்றி விவரித்தேன்.
பெண்ணின் பெயர் சொன்னதும் ப்ரீதமின் பெற்றோர் தான் எனப் புரிந்து கொண்டேன். அவளை நான் அறிந்த விஷயத்தை எங்களது துறையின் விதிமுறைகள் பிரகாரம் பகிரவில்லை. ப்ரீதம் இங்கு வருவதை அவளாகப் பகிர விட்டு விட்டேன்.
அபிநயா, ராஜா தவறான எதிர்பார்ப்பை வைக்கக் கூடாது என்பதற்காக எங்களது செய்முறையை எடுத்துக் கூறினேன். அபிநயா, ராஜா தங்களது மொழியில் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அந்த மொழி எனக்குப் பரிச்சயம் இல்லை. அபிநயா தனது தாயாரின் சாபம் தான் ப்ரீதம் கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்ளாததிற்குக் காரணம் எனத் தான் நம்புவதாகக் கூறினாள். அம்மா சொன்னது நினைவு வர, அது பயத்தைத் தருவதாகக் கூற, ராஜா தலையைத் தீவிரமாக ஆட்டி ஆமோதிப்பதைத் தெரிவித்தான்.
அபிநயா தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். பட்டப்படிப்பை இரண்டாவது வருடத்தில் நிறுத்தி கொண்டாள். வீட்டில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தான் விரும்பியவனைத் திருமணம் செய்து கொண்டதால் இப்படி. வீட்டில் ஏழு மாதத்திற்குப் பிறகு அவள் கழுத்தில் தாலியைப் பார்த்து வெலவெலத்துப் போனார்கள். அபிநயா வீட்டை விட்டு வெளியேறினாள். ராஜா, அபிநயா குடும்பங்களின் இடையே இருந்த நட்பு உறவு முறிந்தது.
தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர, சம்பாத்தியத்திற்காகச் சிறு தொழில்கள் செய்வதாக அபிநயா கூறினாள். கணவர் ராஜா நீதிமன்றத்தில் வரும் நபர்களுக்கு உதவி செய்து சம்பாத்தியம். இதுவரை இருவரின் பெற்றோர், சகோதரர் சகோதரிகளிடம் உதவி கேட்கவில்லை. அவர்களுக்கு ப்ரீதமை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துக் காட்டக் காத்திருந்தார்கள். இது அனைத்தையும் அபிநயா ராஜாவின் நண்பனான சுதீப் அறிந்திருந்தான். தேவையில்லாமல் தலையிடாதவன்.
மறுநாள் வரும்போது ப்ரீதம் என்னை அணுகியதைப் பற்றி இருவரிடமும் விவரித்ததாகச் சொன்னார்கள்.
அபிநயா வியந்து, தன்னைப் பார்த்து ப்ரீதம் திருமணம் செய்ததைச் சொன்னாள். பலமுறை அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றிய புகழாரம் பேச்சு வந்ததைப் பற்றி விளக்கி விவரிக்கச் சொன்னேன். விவரங்களைத் தரத் தர, ராஜா அபிநயா இருவரும் உணர்ந்தார்கள். சிறுவயதிலிருந்தே
குழந்தைகள் முன்னால் தாம் கல்யாணம் செய்து கொண்ட முறை, உறவைத் துண்டித்ததைப் பெருமையாகப் பேச, ப்ரீதம் மனதில் அப்படியே செய்ய ஆர்வம் ஒரு பக்கம். செய்வது தவறில்லை என்றும் எண்ணம். ப்ரீதம் செய்தாள்.
இந்த அறிதலால், முதல்முறையாக அபிநயாவிற்கு தன் அம்மா இதற்குக் குற்றவாளி இல்லை என்ற ஆதாரம் கிடைத்தது. திடுக்கிட்டாள். இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். தன் கணிப்பில், அம்மா சொல்லியவற்றில் ஒன்று நடக்கவில்லை என்பதைத் தினமும் ஒன்று நினைவு படுத்தி, அதைப் பற்றி முழுமையாக எழுதப் பரிந்துரை செய்தேன். செய்து வருவதாகக் கூறினாள்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு வந்தார்கள். பல தாள்களில் ஐம்பது சம்பவங்கள் விவரத்தைக் குறித்து. அனைத்தும் நண்பன் சுதீப் அறிந்ததால் கையோடு அவனையும் அழைத்து வந்தார்கள். பல வாரங்களுக்கு இவற்றை அலசி ஆராய்ந்து வருகையில், அபிநயா முதலில் புரிந்து கொண்டது போல ஆரம்பித்து, பிறகு அம்மா மீது பழி சுமப்பது தொடங்கியது. இதில், பலமுறை சுதீப் தெளிவுபடுத்த, அவன் விளக்கத்தைத் தருவதை ராஜா தடுத்தான். கணவனை அபிநயாவும் ஆமோதித்தாள். அபிநயா தனக்குத் தோன்றியதை உடும்பு பிடியாகப் பிடித்திருந்தாள்.
இந்த கட்டத்தில் அபிநயா மீண்டும் கர்ப்பிணி ஆனாள். முதன்முறை அம்மாவிடம் போய் இந்த செய்தி சொல்லி, என்னைப் பார்ப்பதையும் பகிர்ந்தாள். கோபம் பொங்க, அம்மா, தன்னை உதறிவிட்டுப் போன ரணம் ஆரவில்லை என்றும் அவளுடைய செயலால் அபிநயாவின் தங்கைக்குக் கல்யாணம் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கத்தையும் சொல்லித் துரத்தி விட்டதாகச் சொன்னாள்.
மருத்துவர் அபிநயாவை ஓய்வு எடுக்கப் பரிந்துரைத்தார்கள். பிரசவம் வரை ஸெஷன்களுக்கு வருவது கடினம் என்றார்கள். இப்போதைக்கு வீட்டை ப்ரீதம் பார்த்துக் கொள்கிறாள் என்றார்கள். அவளுக்கு வெளியூரில் அரசாங்கப் போஸ்ட்டிங் வந்துவிட்டது. போகவேண்டிய நிலை. நாளடைவில் ப்ரீதம் சென்ற
ஆனால் ப்ரேம் இது அவர்கள் குடும்பமாக வாழப் பாதிக்குமோ எனப் பயந்தான். அடுத்த மூன்று மாதத்திற்கு அம்மாவைப் பார்த்துக்கொள்ள வாராவாரம் ப்ரீதம் வந்தாள். ஏனோ அபிநயாவிற்கு ப்ரீதம் இங்கு வருவதால் கருவைப் பாதிக்கிறது என்று எண்ணி, அவள் வருவதை நிறுத்திவிட்டாள். இதுவரை ப்ரீதம் திருமணத்தை மறுத்த அபிநயா-ராஜா, வரும் குழந்தை ஆண் என எடுத்துக் கொண்டார்கள். ப்ரீதம் போனால் போகட்டும் என்றார்கள். சுதீப் தகவல் பகிர்ந்து, என்னைப் பார்க்க மறுப்பதை வருத்தத்துடன் சொன்னான். சுதீப்பை சமாதானம் செய்து, ஒருவருக்கு அந்த தயார் நிலை இல்லையேல் என்றால், அவர்களுக்குத் தன்னைப் பற்றிய புரிதல் பெறுவது கடினமான காரியம் என்றதை விவரித்தேன்.
ப்ரீதம், ப்ரேம் நிலைமையில் மாறுதல் ஏற்பட்டது. ப்ரேம் படிப்பு முடிக்கும் கட்டம். நகரத்தில் நல்ல வேலை கிடைத்தது. கூடவே பாட்டுப் பாடப் பல வாய்ப்புகள் குவிந்தன. இதுவரை குறித்தபடி ஸெஷன்களுக்கு வந்து கொண்டிருந்தது தடைப்பட்டது.
இந்த காலகட்டத்தில், ப்ரீதம் அங்கே ப்ரேம் இங்கே என்ற நிலை நிலவியது. ப்ரீதம் வேலையை விடத் தயாராக இல்லை. ப்ரேம் வாய்ப்பை விட்டு குக்கிராமத்தில் வாழ விருப்பப்படவில்லை. இருவர் மனதிலும் பல குழப்பங்கள் அலை மோதியது. உறவில் கீறல் விழுந்தது.
ப்ரீதம் எந்த நாள், நேரம் சொல்கிறாளோ அதை மனதில் வைத்தே ப்ரேம் ஸெஷன் நேரம் குறித்தான். அப்படியும் ப்ரீதம் வருவது கடினம் எனக் காரணம் சொல்லி விடுவாள்.
ப்ரேம் நேரத்திற்கு வந்துவிடுவான். ப்ரீதம் வருவதற்குக் காக்கும் நேரத்தில் முன்னாளில் விட்ட இடத்தில் மறுபடி அவனுடைய திறன்களை மேம்படுத்தும் வழியைப் பார்த்து வந்தோம்.
திறனைக் கூட்ட தன் பெற்றோருடன் உறவைச் சீர்திருத்த விரும்பினான். சமூகத்தில் மிகப் பிரபலமானவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த இடைஞ்சலும் தரவில்லை.
தான் கல்யாணம் செய்ததால் நிலவிய கசப்பைப் போக்க விரும்பினான். அவன் செய்ததைப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம். தெளிவு பிறக்க, நல்ல முன்னேற்றம் தென்பட்டது.
இது போய்க் கொண்டு இருக்க, ப்ரீதம் ப்ரேம் ஒன்றாகப் பார்க்கும் நாட்களில் ப்ரீதம் வருகைக்கு ப்ரேமால் காத்திருக்க முடியவில்லை. அவள் வருவதற்கு நேரம் ஆகும். வேலையிலிருந்து கிடைத்த ஒரு மணி நேரத் தவணை முடிவடையும். அரை மனதுடன் கிளம்புவான். அவன் சென்று இரண்டு மணிநேரத்திற்குப் பின் தாமதமாக தொலைப்பேசியில் ப்ரீதம் வரமுடியாததை என்னிடம் சொல்வாள். எதுவும் கேட்பதற்கு முன் துண்டித்து விடுவாள். இது ஐந்தாறு முறை நடந்தது.
அன்றும் அதே மாதிரி. யாரோ கதவைத் தட்டி உள்ளே வந்ததும், ப்ரேம், “மா அப்பா” என்றபடி நின்றான். அப்பா அவனை அணைத்து “மன்னிக்கவேண்டும் மேடம், இவனுடைய அம்மா அப்பா. கூட்டிட்டு போரோம்”. அவனைப் பார்த்து “என்னடா இதெல்லாம்? வாடா வீட்டுக்கு” அழைத்து வெளியில் சென்றார். மறுநாள் ப்ரேம் அப்பா திரும்ப வந்து, “தப்பா நினைக்கவில்லையே? ப்ரேம் நல்ல பையன். முன்பைவிடத் தெளிவு, காண்பிடன்ட், தாங்க யூ” சொல்லிக் கிளம்பினார்கள். ப்ரேமோ ப்ரீதமோ திரும்பி வரவில்லை.
******************************************
நீ வருவாயா? – பாபு
சுமதி மொபிலைப் பார்த்தாள். கடந்த பத்து நிமிடங்களில் நூறு மெசேஜ். செங்கமலம் தான். “உடனே வா..” – இது தான் மெசேஜ். அந்த நூறு மெசேஜ்ஜிலும் இதே செய்தி தான். ‘கிரேஸிப் பெண் இவள்! என்ன ஆச்சு இவளுக்கு?’
செங்கமலத்தின வீடு சுமதி வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. திருச்சிக்கு அருகில் – நகரமுமல்லாமல், கிராமமுமல்லாமல் ..அது ஒரு சிறிய பண்ணை வீடு.. தொழுவம் .. மாடு.. காலையில் சேவல் கூவும். சுமதி செங்கமலத்தின் வீடு போய்ச்சேரும் போது இருட்டத் தொடங்கியிருந்தது.
செங்கமலம் நாலு மாதத்தில் ரொம்பவே இளைத்து போயிருந்தாள். கண்ணின் அடியில் கருவளையம். கொழு கொழு கன்னங்கள் போய் அதில் குழி விழுந்திருந்தது. பஞ்சத்தில் அடிபட்ட குருவி போல இருந்தாள்.
“என்னடி! என்ன ஆச்சு உனக்கு?” – சுமதி கேட்டாள்.
“மனசே சரியில்லையடி.. ராத்திரி ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடவேயில்லை. கண்ணன் போனப்புறமே இப்படி தான்” -என்றாள் செங்கமலம்.
“என்னடி ‘கண்ணன் என் காதலன்’ – அந்தக் கதை தானே. கண்ணன் எங்கடி போனான்? மும்பை தானே போயிருக்கிறான். சீக்கிரம் வருவான்”
“அவன் என்று சொல்லாதேடி” -கொஞ்சினாள்!
“நீயே அவனை அவன் என்று தானே சொல்வாய்”. செங்கமலம் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“அது போகட்டுமடி.. அவனிடமிருந்து வாட்சப் மெசேஜ் நாலு மாதமாக இல்லை. அவன் போனும் எடுக்கவில்லை. என்ன ஆச்சோ. பாரதியார் கண்ணன் பாட்டு எழுதியது போல நானும் அவனை நெனச்சு நெனச்சு வாடுகிறேன். தூக்கம் போச்சு.. பசி போச்சு. இந்த போன் இருந்துதான் பிரயோஜனம் என்ன?” – செங்கமலம் போனை சதுர்த்தேங்காய் போடுவது போல போட்டு உடைத்தாள். கண்கள் சிவந்தது. உடம்பு நடுங்கியது.
“உனக்கு என்ன பைத்தியமா?” -சுமதி.
அஞ்சு நிமிஷத்தில் செங்கமலத்தின் உடம்பு நடுக்கம் நின்றது..
“சாரிடி! அவன் இல்லாமல் நான் என்ன செய்வேன். தினமும் வாசல்லே உட்கார்ந்து மாட்டையும், சேவலையும், அணிலையும் பார்த்துக்கிட்டு இருக்கிறேன். வெளியே அந்த மரத்தடியில் ஒரு அணில் நாள் பூரா உலாத்திக்கிட்டிருக்கு. அதுக்கென்ன சோகமோ. அது போலவே எனக்கும் மனசு துடிக்கிறது”
“செங்கமலம்.. இதப்பாரு.. நீயும் காலேஜ் முடிச்சு நாலு மாசமாச்சு. ஏதாவது வேலைக்கு சேர்ந்து போற வழியைப்பாரு. நீ இப்ப தனியா வீட்டிலே இருக்கிறே .. அது தான் அணில் ஆடு இலை என்று பேசத்தோணுகிறது. உன்னுடைய அண்ணன் சென்னையில தானே இருக்கான்? அவன் கிட்ட போ. அதை விட்டு விட்டு கண்ணன்-கத்திரிக்காய் என்று என்ன இது கலாட்டா? அவன் என்ன செத்தா போயிட்டான். ?”
கொஞ்சம் வாய் தவறி உளறிவிட்டாள்.
சொல்லி முடிக்கவில்லை. செங்கமலம் பொங்கிவிட்டாள்.
“என்ன திமிருடி உனக்கு? கண்ணனைப் பத்தி என்ன சொன்னே..”. கையில் கிடத்த ஐபேடை எடுத்து சுமதியின் முகத்தில் விட்டெறிந்தாள். சுமதியின் நெற்றியின் சொட்டு ரத்தம் பரவியது.
“உனக்குப் பைத்தியம் தான்.. நான் கிளம்பறேன்” – சுமதி புறப்பட்டாள். வீடு போய் சேர்ந்து நெற்றியில் ‘பேண்ட் எயிட்’ போட்டாள். கண்ணனுடைய வாட்ஸ் அப் நம்பர் அவளிடமும் இருந்தது.
“கண்ணன்.. செங்கமலத்தை மறந்து விட்டாயா?” -என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
உடனே கண்ணனிடமிருந்து போன் வந்தது. “சுமதி! நானும் செங்கமலமும் போன இரண்டு வருஷமாக சந்தோஷமாத்தான் இருந்தோம். ஆனா ஆறு மாசம் முன்னே அவளுக்கு எங்கள் காதல் ஒரு வெறியாயிடுச்சு. நான் வேலைக்காக மும்பை போறேன்னு சொன்ன உடனே ‘ ஏண்டா போறே’ ன்னு கத்தி என் சட்டையைக் கிழித்தாள். நான் அதிர்ந்து போனேன். அதுக்கப்பறம் பல நேரம் வயலண்ட். சில நேரம் காதலைக் கொட்டுவாள். பல நேரம் நெருப்பைக் கொட்டுவாள். நான் முன்பு பார்த்த ஜென்டில் செங்கமலம் போய்விட்டாள். அதற்காக அவளை நான் மறந்து விட்டேன் என்று நினைக்க வேண்டாம். அப்புறம் நான் வேலைக்காக மும்பையிலிருந்து அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு – ஆறு மாதத்துக்குப் போகிறேன்.. செங்கமலத்திடம் இப்போதைக்கு எதுவும் சொல்லாதே” என்றான்.
சுமதி “கண்ணன்! அவளுக்கு ஏதோ டிப்பிரஷன் போலிருக்கு. நல்ல சைக்கியாடரிஸ்ட் இடம் காட்ட வேண்டும்”.
சுமதி – செங்கமலத்தின் அண்ணனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். ஒரு வாரத்தில் செங்கமலம் சைக்கியாடரிஸ்ட் டாக்டரைப் பார்த்தாள். ஸ்கிசோஃப்ரினியா – என்ற மன வியாதி உறுதிப்படுத்தப்பட்டது. மனப்பிரமைகள் – மருட்சி மற்றும் ஒழுங்கற்ற மற்றும் அசாதாரணமான சிந்தனை மற்றும் பேச்சு – செங்கமலம் அந்த மன நோயில் பாதிக்கப்பட்டிருந்தாள்.
சுமதி, கண்ணனுக்கு செங்கமலத்தின் நிலைமையை மெசேஜ் செய்தாள். கண்ணனிடமிருந்து பதில் வரவேயில்லை.
‘அவன் தான் என்ன செய்வான்? இந்தப் பைத்தியத்தை கட்டிக்கொண்டு மாரடிப்பானா என்ன?’ – சுமதி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அன்று செங்கமலத்தின் பிறந்த நாள். அவள் பெயருக்கு ஒரு சாக்கலேட் பார்சல் வந்தது. அது செங்கமலத்துக்கு ரொம்பப் பிடித்த சாக்கலேட்! செங்கமலத்துக்கு கண்ணனையே நேரில் பார்த்தது போல் சந்தோஷம். அத்தனை சாக்கலேட்டையும் இரண்டே நிமிஷத்தில் சாப்பிட்டாள். ஒவ்வொரு வாரமும் சாக்கலேட் பார்சல் – தவறாமல் வந்தது. செங்கமலத்திற்கு கண்ணனைக் காணாமல் மன நோயும் அதிகமானது – உடல்நிலையும் மோசமானது. திருச்சி ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்கள். சுமதி தினமும் செங்கமலத்தை சென்று பார்த்தாள்.
“அவன் வராமல் சாக்கலேட் மட்டும் எனக்கு அனுப்புகிறான். வரவர சாக்கலேட்டே பிடிக்கவில்லை. அவனது நினைப்பே என்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது”- என்றாள் செங்கமலம்.
சுமதி கண்ணனுக்கு தெரிவிக்கவேண்டும் என்று மெசேஜ் அனுப்பினாள். பதில் ஒன்றும் இல்லை. ‘அமெரிக்கா போய்விட்டானோ? அப்படியே போனாலும் மெசேஜ் அனுப்ப என்ன தடை? கண்ணனுடைய நண்பன் அர்ஜூன் திருச்சியில் இருந்தான். அவனுக்கு மெசேஜ் அனுப்பி கண்ணனைப் பற்றி விசாரித்தாள்.
அர்ஜுனிடமிருந்து இருந்து போன் வந்தது.
“சுமதி! நாலு மாசம் முன்னாடி கண்ணன் மும்பை வந்தவுடனே -ஒரு வகையான நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டான். நடை சற்று பாதிக்கப்பட்டது. போன மாதம் மும்பையில் ஒரு சாலையில் க்ராசிங் செய்யும் போது விபத்தில் அடிபட்டான். நான் அப்ப மும்பையில் தான் இருந்தேன். ஹாஸ்பிடலில் ஒரு நாள் இருந்தான். செங்கமலத்துக்கு சொல்லவேண்டாம் என்று சொன்னான். மேலும் என்னிடம் ‘அவள் குணமாகும் வரை வாரா வாரம் நீ சாக்கலேட் அனுப்பு. குணமான பின் மெதுவாக அவளுக்கு எனது முடிவைச் சொல்லிவிடு’ – என்றான்.
‘என்ன உன் முடிவு என்றேன்’? அவன் சிரித்தான். ‘நான் எடுக்கும் முடிவு அல்ல. ஆண்டவன் என்னை முடிக்க எடுத்த முடிவைச் சொல்கிறேன்’ என்றான். நான் அழுது விட்டேன். அன்று இரவு அவன் முடிவு வந்தது. சாகும் வரை அவன் நெஞ்சில் செங்கமலம் தான்.. சாகும் போதும் ‘செங்கமலம் உன்னைக் காணாமல் போகிறேனே’ என்று கலங்கினான்“ – என்றான்.
“கண்ணன் பெயரில், நான் தான் செங்கமலத்திற்கு சாக்கலேட் வாரா வாரம் அனுப்பி வருகிறேன்”- என்றான். சுமதி இடிந்து போனாள். காத்திருக்கும் செங்கமலத்துக்கு என்னவென்று சொல்வது?
செங்கமலமும் நாளை எண்ணிக்கொண்டிருக்கிறாள் – கண்ணனைச் சேரும் நாளை.
“நீ வருவாயா”
நடுப்பக்கம்


குப்பை – ஹெச்.என்.ஹரிஹரன்
வட்டாட்சியர் அலுவலகத்தைப் பார்த்தபடி சாலையின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் மீனாட்சி. பத்துமணி ஆகவில்லையெனினும், அதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டனர். ஓரிரு ஊழியர்களும் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தொலைதூரத்திலிருந்து ரயிலில் தினசரி வந்து பிரயாணத்திலும், அலுவலகத்திலும் வாழ்க்கையை நடத்துபவர்கள். காலை டிபன், மதிய உணவு என்று ஒரு நாளைய உணவை பையில் சுமந்துவந்து அலுவலகப் பணிகளின் ஊடே சாப்பிட்டுக் கொள்பவர்கள்.
அலுவலக காம்பவுண்டு சுவரை ஒட்டினாற் போல் அமைந்த காப்பி,டீ பங்க் கடையும் தனது உலோகப் பெட்டியின் கதவுகள் வானை நோக்கி உயர அன்றைய பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தது. பளபளவென்று தேய்த்து , அதற்கு வீபூதியும், குங்குமமுமிட்டு அறுபத்துமூவருக்கும் இளையவராய் பித்தளை பாய்லர் கவுண்டரில் எழுந்தருளியிருந்தது. அருகில் சிஷ்ய கோடிகளாய் உப்பு பிஸ்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள். அலுவலகத்தில் வருகிற பொதுமக்கள் தங்களது வேலை முடிகிற வரைக்கும், பொழுது போக்குவதற்கும், தாகசாந்தி செய்வதுற்குமான ஒரே இடம்.
கடந்த சில வாரங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிற மீனாட்சிக்கு அவையெல்லாம் பார்த்து பழகிவிட்டன. ஆனால் அவள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற எழுத்தர் அன்புக்கரசி இதுவரை வரவில்லை. சரியாக பத்துமணிக்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தாமதமாக , இரு கால்களையும் ஸ்கூட்டியின் வெளிப்புறம் தொங்கவிட்டபடி வந்து சேருவாள். கஷ்டப்பட்டு வண்டியை இழுத்து ஸ்டாண்டு போடுவாள். சில சமயம் டீக்கடைச் சிறுவன் பார்த்துவிட்டால் அவனே அவள் செய்கிற அந்த ஒரு வேலையையும் செய்து கொடுத்துவிடுவான். கால்கள் வைக்குமிடத்திலிருந்து லஞ்ச்பாக்ஸ், பிளாஸ்க் வைத்த பிளாஸ்டிக் வயர் பின்னிய பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைவாள். இவளுக்கு மட்டும் வீடு அருகில் இருக்கிறதுபோல என்று நினைத்துக் கொள்வாள் மீனாட்சி.
மீனாட்சி அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள்.கடந்த சில மாதங்களில் அவள் வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்கள் நடந்துவிட்டன…? இன்றைக்கு அன்புக்கரசியிடம் பேசி இரண்டில் ஒன்று தெரிந்தாகவேண்டும் என்கிற தீர்மானத்தோடு இருந்தாள்.
***
“உன் பேருதான் மீனாட்சியா?”
“ஆமாங்க சார்..”
“அதென்ன உன் வீட்டுக்காரர் பேரு மட்டும் விக்டர் தங்கராசுன்னு..? “ மேனேஜர் ஆர்வக் கோளாறர்.
“அவர் பேரு நெசத்துல தங்கராசுதான் சார். வீடு வீடா ஜெப நோட்டிசு கொடுக்கறவங்க, நான் இல்லாத நேரமாப் பாத்து, இப்படிப் பேரு வெச்சுக்கிட்டா வாழ்க்கையில் வெற்றிதான்னு சொல்லி , அவர் மனசை மாத்திப்புட்டாங்க சார்…“ என்றாள் மீனாட்சி.
“நல்லா வேலை செய்யற ஆளு .. தெருத் தெருவாகப் போய் பிளீச்சிங் பவுடர் தூவறதும், மருந்து தண்ணி பீச்சறதும் பொறுப்பாக செய்வாப்புல…பாவம்” சொல்லிவிட்டு மானேஜர் சற்று மௌனமாக இருந்தார். கொரோனாவில் அவளது கணவன் இறந்து போனதில் , அவரது கம்பெனியும் காரணம் என்கிற குற்ற உணர்ச்சி அவர் குரலில் ஒலித்தது.
உதடுகளை மீறி எழுந்த அழுகையைப் புடவைத் தலைப்பு நுனியில் அடக்கிக் கொண்டாள்.
“கம்பெனில அவருக்கு கொரோனான்னு சொன்னாங்க.. எந்த ஆசுபத்திரிக்கு இட்டுக்கினு போனாங்க.. என்னாச்சு, ஏதாச்சு.. கடைசி நேரத்தில் என்னைப் பாக்கணும்னு சொன்னாப்புலயா.. ஒண்ணும் தெரியலை சார்..கடைசி வரைக்கும் கண்ணுல காட்டலை.. செத்துடுச்சுன்னு ஒரு நாள் வந்து சொன்னாங்க.. பெரிய அதிகாரிங்க பொய்யா சொல்லப் போறாங்க?. எரிக்கலை.. புதைச்சுட்டோம்னு சொன்னாங்க.. இன்னிக்கு வரைக்கும் எந்த இடத்துல புதைச்சாங்கன்னு கூட …” வாக்கியத்தை முடிக்க முடியாமல். குமுறிக் குமுறி அழுதாள்.
அவளது அழுகை வெடித்துச் சிதறி ஓய்வதற்கு காத்திருந்தார் அந்த அதிகாரி.
“உங்க வீட்டுக்காரரு மாதிரி பல பேரு உயிரைக் காவு வாங்கிடுச்சு இந்தக் கொரோனா.. ஆனால் அவர் செய்த அந்த புனிதமான வேலையினால பல பேரைக் காப்பாத்திருக்காருன்னு நெனச்சுக்க.. அப்புறம்.. நீ கேட்டபடி உன் ஏரியாவுலயே டூட்டி போட்ருக்கோம்.. எத்தனை மணிக்கு வரணும், என்ன செய்யணும்னு எல்லாம் சூப்பர்வைசர் சொல்லுவாரு..”
மீனாட்சி கையெடுத்து கும்பிட்டுவிட்டு புறப்பட்டாள்.
“ வாரிசுதாரர் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொடுத்தா, கம்பெனி நஷ்டஈடு, பிஎப் பணம், அரசாங்கம் கொடுக்கிற இழப்பீடு எல்லாத்தையும் செட்டில் பண்ணிடலாம்..” என்று மீண்டும் நினைவூட்டினார் மானேஜர்.
அந்த தனியார் துப்புரவு கம்பெனி அலுவலகத்திலிருந்து மீனாட்சி வெளியில் வந்தாள் .
மானேஜர் சொல்லிக் கொடுத்தது போல , வீட்டின் அருகிலிருந்த ஈசேவை மையம் வழியாக வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து மூன்று மாதங்களாயிற்று. அது சென்றடைந்த அலுவலகத்தைத் தெரிந்து கொண்டு அந்த அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள்.
ஆரம்பத்தில் கொரோனாவின் உச்சத்தில் அலுவலகம் செயல்படவேயில்லை..பின்னர் பாதி பேர்கள் வரத்தொடங்கியிருந்த நிலையிலும், மீனாட்சிக்கு தேவையான டிபார்ட்மெண்டில் மட்டும் யாரும் வரவில்லை. ’தடுப்பூசி கேம்ப்’ வேலைகளுக்கு போயிருக்கின்றனர் என்று ஒரு சமயம் பதில் கிடைத்தது.
யாரிடம் கேட்கவேண்டும் என்று தெரியாத நிலையில், கடைசியில் டீக்கடைப் பையன் மட்டும் அவள் அடிக்கடி வருவதைப் பார்த்துவிட்டு விசாரித்து வந்து சொன்னான். அந்த அலுவலகத்தில் அவனுக்கு சகலமும் அத்துப்படி. அன்புக்கரசியின் பெயரைச் சொன்னவனும் அவன்தான்.
பல படையெடுப்புகளுக்குப் பிறகு , ஒரு நாள் அன்புக்கரசியைப் பார்த்தும் விட்டாள். அன்புக்கரசியின் மேசை மீதிலும் சுற்றியிருந்த அலமாரிகள் முழுக்க காகிதக் கட்டுகள். அவையெல்லாம் அவளைப் போல வெவ்வேறு காரணங்களுக்கான விண்ணப்பித்தவர்களின் மனுக்களாக இருக்கவேண்டும்.
அதுவரை மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தவள், மீனாட்சியைப் பார்த்துவிட்டு ‘கொஞ்சம் வெளியில் நில்’ என்பது போல் சைகை காண்பித்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள். மீனாட்சியும் அவளது உரையாடல் கேட்கிற தொலைவிற்கு அப்பால் நின்றபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது பார்வையே அன்புக்கரசிக்கு இடையூறாகத் தோன்றியதோ..? முகத்தைச் சுளித்தபடி, “என்னம்மா… என்ன வேண்டும்? இந்தக் டயத்துல பப்ளிக் யாரும் இங்க வரக்கூடாதும்மா.. யார் மூலமா என்ன வருதுன்னு தெரிய மாட்டேங்குதே” மாஸ்க்கை எடுத்து மாட்டியபடி கேட்டாள்.
மீனாட்சி விபரங்களைச் சொன்னதும், அன்புக்கரசி திரும்பி, விண்ணப்பக் காகிதக்கட்டுகளை மேம்போக்காக பார்வையிட்டு பெரும் மூச்சொன்றை வெளியிட்டாள். “எவ்வளவு குவிஞ்சு கிடக்கு பாத்தியா? இதுக்கு நடவடிக்கை எடுக்கிற ஆளுங்க சரியா வரதில்லை.. உன் பேப்பரைத் தேடி எடுத்து வைக்கிறேன். அடுத்த வாரம் வா..” என்றாள்.
சரியாக அடுத்த வாரம் மீனாட்சி தன்னுடைய வேலையை முடித்து விட்டு மதியந்தான் வரமுடிந்தது. அது இயல்பாக நடந்ததா அல்லது மீனாட்சியைப் பார்த்து வெளியில் இறங்கினாளா என்பது தெரியாது.
“வெளியில டூட்டி போட்டிருக்காங்க.. மார்க்கெட் பக்கம் போய் , மாஸ்க் போடாதவங்களுக்கு ஃபைன் போடணும்னு சொல்லியிருக்காங்க..நான் போயிக்கிட்டே இருக்கேன்.” என்று இறங்கிப் போய்விட்டாள். மீனாட்சியின் கண்கள் அன்புக்கரசியின் மேசை மேலிருந்த பேப்பர்கட்டுகளின் பால் சென்றது. முன்பைவிட , காகிதக்கட்டின் உயரம் கூடியிருந்தது.
அடுத்த முறை , அவளது மனுவைப் பற்றி முதலிலிருந்து விசாரித்துவிட்டு, “வீட்டுக்கு வந்து என்கொயரி பண்ணணும். உங்க தெரு பக்கத்துல இரண்டு வீட்டுல நோட்டிசு ஒட்டியிருக்காங்கபோல..? அதுக்கு அப்புறமா அதிகாரிங்க வருவாங்க ..” என்றாள் .
இப்படியாக, நடைமேல் நடையாக நடந்து அலுத்து ஓய்ந்துவிட்டாள் மீனாட்சி. எந்தக் காரணத்திற்காக அவளது மனுவின் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்கிறார்கள் என்று புரியாமல் தவித்தாள்.
டீகடைப் பையன்தான் சொன்னான். “இல்லக்கா .. மத்த நாள்ள இங்க திரிகிற ஏஜெண்டுங்க மூலம் காரியத்தை முடிக்கலாம். அவங்க மூலம் லஞ்சம் பட்டுவாடா ஆகிவிடும். உங்க வேலையும் ஆயிடும். கொரோனா பயத்துல அவங்களையும் காணோம். “ மீனாட்சியை அருகில் அழைத்து,” இங்க வேலை பாக்கவறங்களுக்கு சேரவேண்டிய பணத்தை எங்க ஓனர்கிட்டத்தான் ஏஜெண்டு குடுப்பாங்க.. வீட்டுக்கு கிளம்பிப் போக சொல்ல, அவங்க ஓனர்கிட்ட வாங்கிட்டு போய்டுவாங்க.. பணம் வரமாட்டேங்குது.. வேலையும் நடக்கல.. அதான் விசயம் அக்கா” என்று மெதுவாக குட்டை உடைத்தான்.
கடந்த முறை வந்தபோது, அன்புக்கரசி அப்போதுதான் முதல் முறையாகப் பார்ப்பது போல் மீனாட்சியைப் பார்த்தாள்.
எப்பவும் போல் விரல்களால், பேனாவைச் சுழற்றியபடி, “என்ன வேணும்.. ?” என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள்.
“ரெண்டு மாசமா நான் அடிக்கடி வர்றேன் மேடம்.. நீங்க ஏதாவது சொல்லி நாளைத் தள்ளிக்கிட்டே இருக்கீங்க.. என் பேரு உங்களுக்கு தெரியவேண்டாம்.. எனக்கு என்ன வேணும்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்லை..?” என்று படபடத்தாள் மீனாட்சி.
ஒரு சாதாரணப் பெண்மணி தன்னைக் கேள்விகேட்பதா என்று நினைத்தமாத்திரத்தில் அன்புக்கரசிக்கு கோபம் தலைக்கேறியது.
“என்னை எப்படி நீ கேள்வி கேட்கலாம்.? நான் என்னோட மேலதிகாரிக்குத்தான் பதில் சொல்லுவேன்.. இங்க பாத்தியா?” உட்கார்ந்தபடியே பின்புற அலமாரிகளிலும், மேசை மேலிருந்த காகிதக் கட்டுக்களையும் காட்டினாள்.
“என்னன்னு பாத்தீல்ல..? எல்லாம் உன்ன மாதிரி எழுதி, எழுதி அனுப்பவரங்களோடதுதான்.. எப்படி குப்பை மாதிரி குவிஞ்சு கிடக்கு பாத்தியா ..? அவங்க யாரும் வரல.. நீ மட்டும் ராணி மாதிரி வந்து என்னா கேள்வி கேட்கிற.. போ.. போ.. அது வரும்போது வரும்.. நீ கிளம்பு..” என்றபடி அவளைத் துரத்தியடிக்காத குறையாகப் பேசினாள்.
“என்ன மேடம் எங்களோட மனுக்களைப் போய் குப்பைன்னு சொல்றீங்க.. ?” என்ற மீனாட்சிக்கு தினமும் தான் பெருக்கியெடுக்கிற நாற்றமெடுக்கும் குப்பைகளுடன் தன்னுடைய மனுவையும் ஒப்பிட்டு சொல்வதை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவே இல்லை. அன்புக்கரசி பதில் பேசாமல் ஏதோ வேலை செய்வதுபோல் அவளைப் புறக்கணித்தாள்.
சற்று நேரம் அப்படியே அமைதியாய் நின்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
அதற்கப்புறந்தான் அன்புக்கரசிக்காக இன்றைய காத்திருப்பும் அதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற அவளது திடமான முடிவும்….
செல்போன் மணி அவளது சிந்தனைகளைக் கலைத்தது.
அவளுடன் வேலை செய்யும் லீலாவிடம் இருந்துதான் போன். போனைக் காதில் வைத்ததுமே, “என்னாக்கா. இன்னிக்கி டூட்டிக்கி வர்லியா..? “ என்றாள்.
“கொஞ்சம் வேலை இருக்குடி.. லீவு போட்டிருக்கேன்.”
“சூப்ரவைசர் உன்னைக் கேட்டாரு.. தெரியலைன்னு சொன்னேன்.. உடனே உன்னை கவரைத் தெருவுக்கு வர சொல்றாருக்கா..”
“நாந்தான் லீவுன்னு சொன்னேன்ல.. அதுவும் இந்த வாரம் மேட்டுப்பாளையம் தெருன்னு சொன்னாரே..”
“டூட்டிக்கு கூப்பிடலக்கா. கவரைத் தெருவுல நம்ம எல்லாரையும் கவுரவம் பண்ணப் போறாங்களாம்… நீ இல்லேன்னா எப்பிடிக்கா?.. சரி.. சரி.. சீக்கிரம் வா..” போனை வைத்துவிட்டாள்.
போகவில்லையென்றால் சூப்ரவைசர் அடுத்தநாள் தேவையின்றி ஏதேனும் பேசுவார். ஷேர் ஆட்டோவைப் பிடித்தாள்.
அன்றைக்கு கவரைத்தெரு குதூகலத் தோற்றத்தில் காட்சி அளித்தது.. அங்கங்கே கலர் பேப்பரில் தோரணங்கள் கட்டப்பட்டு ஒய்யாரமாகக் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததுமே ‘நாளைக்கு இதெல்லாம் தெருவுல எறஞ்சு கிடக்கும். அதையும் நாமதான் அள்ளணும்’ என்று முதலில் தோன்றியது அவளுக்கு.
சூப்பர்வைசர் உட்பட பத்துப் பதினைந்து துப்பரவு ஊழியர்கள் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
லீலா அவளைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள்.எல்லோரும் வந்தாயிற்று என்று உறுதிப்பட்டவுடன் , அவர்களை வரிசைக்கு மூன்று பேராக நிறுத்தி வைத்தனர். மீனாட்சி மூன்றாவது வரிசையில் நின்றாள்.
ஒவ்வொரு வரிசைக்கும் , தெருவாசிகள் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து மரியாதை செய்வதாக ஏற்பாடு. பணியாளர்கள் மேல் ரோஜா இதழ்களைத் தூவி, கர்ப்பூர ஆரத்தி எடுத்துவிட்டு, அரிசி துணிமணியுடன் கொஞ்சம் ரொக்கப் பணமும் கொடுப்பார்கள் என்று ஒலிபெருக்கியது. தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் , தினமும் வந்து தெருக்களைச் சுத்தம் செய்வதற்காக தாங்கள் செய்யும் மரியாதை அது என்று தெரு குடியிருப்பு சங்கத் தலைவர் பேசினார். வீடுகளிலிருந்து ஒரு சிலர் நிகழ்ச்சிகளை தமது போன் வீடியோவில் கவர்ந்து கொண்டிருந்தனர்.
முதல் வரிசையில் மரியாதை செய்து முடித்ததும், இரண்டாம் வரிசையில் உள்ளவர்களுக்கு மரியாதை செய்ய ஆரம்பித்தனர் வேறு இருவர்.
உயிரோடிருந்திருந்தால், தன்னுடைய இடத்தில் கணவன் தங்கராசு அல்லவா நின்றிருக்கவேண்டும் என்ற நினைப்பில் மீனாட்சியின் கண்களில் நீர் பெருகியது.
அப்போது அவளது வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு ரோஜாமலர் தூவ வந்த இருவரில் அந்த ஒரு பெண்மணி.. மீனாட்சி அப்போதுதான் கவனித்தாள்…. அன்புக்கரசி…!
‘இந்தத் தெருவிலா மேடம் குடியிருக்காங்க..? நான் பார்த்ததே இல்லையே..’ என்று தோன்றிய மறுகணமே ‘ஆபீசுல வெச்சுக் கேட்கவேண்டியதை இங்கயே கேட்கவேண்டியதுதான்.’ என்று தீர்மானித்தாள்.
மீனாட்சி மெதுவாக தன் மாஸ்க்கை கழற்றினாள். அவளைப் பார்த்ததில் அன்புக்கரசி திகைத்தபடி நிற்க, மீனாட்சி சிரித்துக் கொண்டே, “உங்க ஆபிசுலேயும் ஜனங்க போட்ட குப்பை நிறைய குவிஞ்சு கிடக்குன்னு சொன்னீங்களே.. அதை எப்போ சுத்தம் செய்யப் போறீங்க மேடம்?” என்று கேட்டாள்.
“என்னாக்கா.. இவங்களை உனக்குத் தெரியுமா?” என்றாள் அருகிலிருந்த லீலா ஆச்சரியத்துடன்.
“நல்லாத் தெரியும்.. வருசத்துல முன்னூத்தி அருவத்தஞ்சு நாளும் குப்பை போடறவங்க..” என்றாள் சத்தமாக.
வான்கா – ஆன்டன் செக்காவ் – தமிழில் :தி.இரா.மீனா
ஒன்பது வயதான வான்கா வேலை செய்வது ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில். அந்த வேலைக்கு வந்து மூன்று மாதங்களாகி விட்டன. அன்று கிறிஸ்துமஸ். முதலாளி, அவர் மனைவி, கடையின் மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போகும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவர்கள் புறப்பட்டுப் போன பிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மை பாட்டிலையும், துருப்பிடித்த முனையுடைய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான். தனது முதல் கடிதத்தை எழுதுவதற்கு முன்பு கதவுகள், ஜன்னல்கள், பரவியிருந்த ஷெல்புகள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு எல்லாவற்றையும் சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான். பெஞ்சில் அந்தத் தாளிருந்தது. மண்டியிட்டு உட்கார்ந்தான்.
“அன்புள்ள தாத்தா, கான்ஸ்டனின் மகாரிட்ஸ்,நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்.உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக !எனக்குத் தாய்தந்தை என்று யாருமில்லை.சொல்லிக் கொள்ள என்று உறவு நீங்கள் மட்டும்தான்.”
மெழுவர்த்தியின் வெளிச்சத்தை ஏறிட்டுப் பார்த்தான்.தாத்தா கான்ஸ்டனின் மகாரிட்சை நினைத்தான். அவர் ழிவராவ் குடும்பத்தில் இரவு காவலராக வேலை பார்க்கிறார். அறுபத்தி ஐந்து வயதாகும் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பார். ஆனால் சுறுசுறுப்பானவர். சிரிக்கும் முகமும், மயக்கும் கண்களும் கொண்டவர். பகல்நேரத்தில் வேலையாட்களின் குடியிருப்புகளுக்கான சமையலறையில் தூங்குவார். அல்லது சமையல்காரர்களோடு சேர்ந்து ஏதாவது நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பார். இரவில் ஆட்டுத் தோலாலான கம்பளியை உடலில் சுற்றிக்கொண்டு, தன் சிறிய கம்பைத் தரையில் தட்டியபடி காம்பவுண்டைச் சுற்றிச் சுற்றி வருவார். வயதான கஸ்தங்காவும், ஈலும் தலையைத் தொங்கப் போட்டபடி அவரைப் பின்தொடரும். குறிப்பாக ஈல் மிகவும் அன்பானது, மென்மையானது. தன் எஜமானர்கள், வெளியாட்கள் என்று எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கும். யாருக்கும் அது பற்றி நல்ல அபிப்ராயமில்லை. ஸ்டோர்ரூமுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துவிடுவது, கோழி குஞ்சைப் பிடிப்பது என்று பல நமுட்டு வேலைகள் செய்து அகப்பட்டுக் கொள்ளும்; அநேகமாக எல்லா வாரங்களிலும் பிடிபட்டு, சாவதுபோல அடிவாங்கிப் பின்பு பிழைத்துவிடும்.
சந்தேகமில்லாமல் இந்தச் சமயத்தில் தாத்தா கேட்டுக்கு அருகே நின்று கொண்டு சர்ச்சின் சிவப்பு ஜன்னல்களைப் பார்த்தபடி, வேலையாட்களுடன் பேசியபடியிருப்பார். அவருடைய சிறிய கம்பு பெல்டிலிருந்து தொங்கிக் கொண்டு இருக்கும். குளிரினால் கைகளைக் கோர்த்துக் கொண்டு வயதானவருக்கே உரிய கேலிப் பேச்சோடு முதலில் வீட்டு வேலைக்காரரையும், பிறகு சமையல்காரரையும் பரிகாசம் செய்வார்.
“இந்தாருங்கள், பொடி எடுத்துக் கொள்ளுங்கள்”என்று அந்தப் பணிப் பெண்ணிடம் பொடி டப்பாவை நீட்டுவார்.
அந்தப்பெண் அதை எடுத்துக் கொண்டு தும்முவாள். அவளைப் பார்த்துச் சிரித்தபடி “தும்மிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்பார்.
அவர்கள் நாய்களுக்கும் பொடியைக் கொடுத்து தும்மலை வரவைப்பார்கள். கஸ்தங்கா தும்மி, பின்பு தலையாட்டி விட்டு பயத்தோடு அப்பால் போய்விடும். ஈலுக்கு தும்மல் வராது; வாலை ஆட்டிக்கொண்டு போய்விடும்.
வானிலை அருமையாக இருக்கும். காற்று இதமானதாகவும், லேசாகவும் இருக்கும். ராத்திரியின் கருமையிருப்பினும், சிம்னியிலிருந்து வரும் புகை காரணமாக கிராமம் வெண்ணிறக் கூரையோடு இருப்பதாகத் தெரியும். வானம் முழுவதிலும் மின்னும் நட்சத்திரங்கள் சிதறியிருக்கும்
வான்கா பேனாவில் மையைத் தொட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினான்.
“நேற்று குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்த போது என்னை மறந்து அசந்து தூங்கிவிட்டேன். தலைமுடியைப் பிடித்து இழுத்து, முற்றத்திற்கு அழைத்து வந்து முதலாளி காலணிகளைத் தேய்க்கும் கட்டையால் என்னை விளாசிவிட்டார். ஒரு வாரத்திற்கு முன்னால் எஜமானியம்மா மீனைக் கழுவச் சொன்னார்கள். நான் மீனை கீழ்ப் பகுதியிலிருந்து சுத்தம் செய்ததால், அதைப் பிடுங்கி அதன் தலையை என் முகத்தில் மோதினார்கள். அதனால் வேலையாட்கள் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். எஜமானனுக்கு வைத்திருந்த வெள்ளரித் துண்டுகளை அறைக்குப் போய் எடுத்துவரும்படி என்னிடம் வேலையாட்கள் சொன்னார்கள். அவருக்கு அது தெரிந்து விட்டது. அவர் கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடித்துவிட்டார். சாப்பிட எதுவுமில்லை. காலையில் ரொட்டி, மதியம் கஞ்சி, இரவில் ரொட்டி என்று சிறிது கிடைக்கும். தாழ்வாரத்தில் படுக்கவேண்டும். இரவில் அந்தச் சின்னப்பேய் அழுதபடி என்னைத் தூங்க விடாது. எழுந்து தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். தாத்தா! என்னை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுங்கள். என்னால் பொறுக்க முடியவில்லை .நான் கிராமத்திற்கு வந்துவிடுகிறேன்.இங்கிருந்து கூட்டிக் கொண்டு போய் விடுங்கள்; இல்லாவிட்டால் நான் சாக வேண்டியதுதான்.”
வான்கா கண்களைத் துடைத்துக் கொண்டான். விம்மினான்.
“உங்களுக்கு நான் பொடி தயாரித்துத் தருவேன். நான் சரியாக நடந்து கொள்ளா விட்டால் என்னை நீங்கள் அடித்து நொறுக்கலாம்.எனக்கு அங்கு எதுவும் வேலை இருக்காது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் காலணிகளைத் துடைக்கும் வேலைசெய்வேன். அல்லது பெட்காவுக்கு பதில் நானே ஆடு மேய்ப்பேன். தாத்தா! என்னால் பொறுக்கவே முடியவில்லை.
இங்கு வாழ்க்கை என்பதேயில்லை. இந்த இடத்தைவிட்டு கிராமத்திற்கு ஓடிவந்து விடலாமென்றால் எனக்கு காட்டைப் பார்த்தாலே பயம். காலில் போட்டுக் கொள்ள செருப்பு எதுவுமில்லை. நான் பெரியவனான பிறகு உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். யாரும் உங்களை எரிச்சல்படுத்த விடமாடேன். நீங்கள் இறந்த பிறகு உங்கள் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்குச் செய்வது போல…”
“மாஸ்கோ மிகப் பெரிய நகரம். பணக்காரர்களின் வீடுகள்தான் அதிகம்.. அங்கு நிறையக் குதிரைகளிருக்கும். ஆனால் ஆடுகளில்லை. அங்கிருக்கும் நாய்கள் பகைக் குணம் கொண்டவையல்ல. பாட்டுப் பாடப் போவதற்கு இங்கு யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஒருமுறை கடையில் மீன்பிடிக்கும் கொக்கிகள் தொங்க விடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். விற்பதற்காக வைத்திருந்தார்கள். அதை வைத்து எந்த வகை மீனையும் பிடித்துவிடலாம். நாற்பது பவுண்ட் மீனைப் பிடிக்கும் அளவுக்கும் கூட ஒரு கொக்கி இருந்தது. அதுபோல எல்லா விதமான துப்பாக்கிகளையும் விற்கும் கடைகளையும் பார்த்திருக்கிறேன். அங்கு முதலாளியின் விலையுயர்ந்த துப்பாக்கி போலப் பல துப்பாக்கிகள்.. கசாப்புக் கடையில் முயல்கள், மீன்கள், காட்டுக்கோழிகள் என்று எல்லாமுமிருக்கும். ஆனால் அவை எங்கிருந்து சுட்டுக் கொண்டு வரப்பட்டவை என்று கடை உரிமையாளர் சொல்லமாட்டார்.”
“தாத்தா ! பெரிய வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும்போது அதிலிருக்கும் அந்த வாதுமைக் கொட்டையை எனக்காக வைத்திருங்கள்.வீட்டு அக்காவிடம் இது வான்காவிற்காக என்று சொல்லுங்கள்”
வான்கா பெருமூச்சு விட்டு ஜன்னலை வெறித்தான். தாத்தா தன் முதலாளியின் வீட்டிற்காக கிறிஸ்துமஸ் மரம் கொண்டு வர, காட்டிற்குப் போன போதெல்லாம் தானும் போனதை நினைத்துக் கொண்டான். அது மிகவும் சந்தோஷமான நேரம். காட்டிற்குள் போகும்போது தாத்தா தொண்டையைச் செருமி மிகப்பெரிய ஒலியெழுப்புவார். காடு அதை எதிரொலிக்கும். வான்காவும் அப்படிச்செய்வான். கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டுவதற்கு முன்னால் தாத்தா புகை பிடிப்பார். புகையை வெளியே விட்டு, சிறிது பொடியும் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரிப்பார். அங்கிருக்கும் அந்தச் சிறிய ஊசியிலை மரங்கள்.. தங்களில் யார் முதலில் வெட்டப்பட்டு சாவார்கள் என்று காத்திருப்போடு அசையாமல் நிற்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து ஒரு முயல் பனியினூடே அம்பாய்ப் பறக்கும்..“ பிடி..அவனைப் பிடி..விடாதே“என்று தாத்தா கத்துவார். கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டியபிறகு தாத்தா அதை இழுத்துச்சென்று பெரிய வீட்டின் முன்னால் போடுவார். பின்பு அதை அலங்கரிக்கும் வேலைகள் நடக்கும்.. வான்காவுக்கு மிகவும் பிடித்த ஓல்கா இக்நாத் யெவ்னா அக்கா தான் எல்லோரையும் விட மிகவும் மும்முரமாக இருப்பாள். வான்காவின் அம்மா பெல்கயே அங்கு வேலை செய்தவள். அவள் உயிருடனிருந்த போது ஓல்கா அவனுக்கு எழுதப் படிக்கச் சொல்லித்தருவாள். நூறு வரை எண்ணுவதற்கு சொல்லித் தருவாள்.. தின்பண்டங்கள் கொடுப்பாள்.. சில சமயங்களில் நடனமும் ஆடுவாள். அம்மா இறந்தபிறகு வான்கா தாத்தாவுடன் சமையல் பணியாளர்கள் இடத்திற்கு அனுப்பப்பட்டான். பிறகு அங்கிருந்து மாஸ்கோவிற்கு.
“தாத்தா,கண்டிப்பாக வாருங்கள்!” தயவுசெய்து என்னை அழைத்துக் கொண்டு போய் விடுங்கள்.இந்த அனாதையின் மீது இரக்கம் காட்டுங்கள்; எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.என்ன விதமான கொடுமை இது என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன்.வாழ்க்கை சீரழிந்து விட்டது. நாயை விடக் கேவலமாகிவிட்ட நிலையிலிருக்கிறேன்.. அல்யோனா, ஒற்றைக்கண் யகோர்கா ஆகியவர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் இசைக் கருவியை யாருக்கும் தர வேண்டாம்..தாத்தா தயவுசெய்து வாருங்கள். உங்கள் பேரன்”
வான்கா அந்தத் தாளை இரண்டாக மடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த கவரில் போட்டான்..சிறிது யோசனைக்குப் பிறகு மையைத் தொட்டு முகவரி எழுதினான்.
கிராமத்தில் உள்ள தாத்தாவுக்கு
பின்பு சிறிதுநேரம் தலையைச் சொறிந்துகொண்டான். கான்ஸ்டனின் மகாரிட்ஸ் என்று எழுதினான். நல்லவேளை கடிதம் எழுதவிடாமல் தடுப்பதற்கு அங்கு யாருமில்லை.. சட்டையைப் போடாமல் தொப்பியைப் போட்டுக் கொண்டு சட்டை போட்டது போன்ற நினைவில் தெருவிற்கு ஓடினான்.
அந்தப் பெட்டியில் போடப்படும் தபால்கள் தபால்கார்கள் மூலம் வண்டிகளில் எல்லா இடங்களுக்கும் அனுப்பப் படும் என்று கசாப்புக் கடையில் இருப்பவன் விவரம் சொல்லியிருந்தான். வான்கா அருகிலிருக்கும் தபால் பெட்டியை நோக்கி வேகமாக ஓடி, அந்த அருமையான கடிதத்தை அதற்குள் போட்டான்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இனிய நினைவுகள் தாலாட்ட அவன் நித்திரையில் ஆழ்ந்தான்… அடுப்புப் பற்றிக் கனவு வந்தது. தாத்தா அடுப்பினருகில் இருந்தார், கால்களை ஆட்டியபடி ,அந்தக் கடிதத்தை சமையல்காரர்களுக்குப் படித்துக் காட்டியபடி..
ஸ்டவ் அருகே ஈல் தன் வாலை ஆட்டியபடி நின்றிருந்தது.
————————————
உலகின் சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெறும் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ் [ 1860—1904 ] மருத்துவப் பட்டம் பெற்றவர். நாடகம், சிறுகதை என்ற துறைகளில் மிகச் சிறந்த படைப்புகளைத் தந்தவர். நாடகங்களில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்களுள் ஒருவரான இவர் ’மனநிலை சார்ந்த அரங்கியல்’ என்னும் நுட்பத்தையும், ஆழமான உரையாடல்களையும் அறிமுகப் படுத்தியவர். மக்களின் தினசரி வாழ்க்கையை,வாழ்க்கைப் போக்கை மிக இயல்பாக, எளிமையான வகையில் நகைச்சுவை உணர்வு வெளிப்பட எழுதியவர். வான்கா என்னும் இச்சிறுகதை குழந்தைத் தொழிலாளியின் மன வலிகளை ,ரணங்களைச் சொல்லும் கதையாகும். அவருடைய மிகச் சிறந்த சிறுகதைகளில் சில :The Tutor, The Cook s Wedding , Vanka, A Story without an end , Small Fry
குறுக்கெழுத்து – பிப்ரவரி 2022 – சாய் கோவிந்தன்
சென்ற மாதம் பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்துப் போட்டி வைத்தோம். 14 பேர் கலந்து கொண்டார்கள். அதில் 4 பேர் தான் சரியான விடை எழுதியிருக்கிறார்கள்.
1. திரு ராமமூர்த்தி
2. திரு நாகேந்திர பாரதி
3. திரு குமார் G
4. திருமதி மைதிலி ரவி (பகவத் கீதா )
நால்வருக்கும் பாராட்டுதல்கள்.
முதலில் அனுப்பிய ராமமூர்த்தி அவர்களுக்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
சரியான விடை இங்கே :
பூ ங் 2கு ழ லி 3யா ஜை ட 4ப னை 5கு ந் த 6வை 7கொ தை கை 8அ லை 9ஆ டி 10வா ண ர்யா ள் 11சே ந் த ன்
___________________________________________________________________
இனி பிப்ரவரி மாத குறுக்கெழுத்துப் போட்டி.
இது தீம் சம்பந்தப்படாத பொதுவான குறுக்கெழுத்துப் போட்டி.. அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மின்னஞ்சலில்தான் அனுப்பவேண்டும்.
முதலில் வரும் சரியான விடைக்கு 100 ரூபாய் பரிசு.
இதை கிளிக் செய்து விடைகளை அனுப்புங்கள்.
http://beta.puthirmayam.com/crossword/D8C2D1BAFD
அன்பெனும் இனிய கவிதை – மீனாக்ஷி பாலகணேஷ்
கைகள் ஒன்றோடொன்று உறவாடி, கண்கள் ஒன்றையொன்று நோக்குகின்றன. நமது இதயத்தின் பதிவுகள் இவ்வாறே தொடங்குகின்றன.
இது வசந்தகாலத்தின் நிலவு பொழியும் இரவு; மருதாணியின் இனிய வாசம் காற்றில் பரவுகின்றது; எனது புல்லாங்குழல் இசைக்கப்படாமலும், நீ தொடுக்கும் மலர்மாலை முடிக்கப்படாமலும் தரையில் கிடக்கின்றன.
குங்குமப்பூ நிறத்திலான உனது முகத்திரை எனது கண்களை போதையிலாழ்த்துகிறது.
நீ எனக்காகத் தொடுத்த மல்லிகைமாலை எனது இதயத்தைப் புகழ்ச்சியில் திளைக்கவைக்கிறது.
இது கொடுப்பதும் கொடுக்காததுமான விளையாட்டு; காட்டியும், வெளியிட்டும் விளையாடுவது; சில புன்னகைகள், சில சிறிய நாணங்கள்; சில பயனற்ற தடுமாற்றங்கள்.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
***
நிகழ்காலத்தைத் தாண்டிய புதிர்கள் இல்லை. முடியாததை அடைய முயலுவதில்லை! இனிமையின் பின் நிழல்களில்லை; இருளில் ஆழத் துழாவுவதில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
***
சொற்களற்ற அமைதிக்குள் சென்று நாம் தடுமாறுவதில்லை; நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதொரு வெளியில் நாம் கைகளை உயர்த்தித் தேடுவதில்லை.
நாம் கொடுப்பதும் பெறுவதும் நமக்குப் போதும்.
நாம் வலியின் மதுவை அருந்துவதற்காக மகிழ்ச்சியை எல்லையில்லாமல் கசக்கிப் பிழியவில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
(தாகூர்- தோட்டக்காரன்- கவிதை 16)
———————————-
காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு. தாகூரின் இந்தப் பாடல்கள் அந்த இனிமையான காதலைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.
எவ்வளவு உண்மை என்று ஏதாவது ஒரு நிகழ்வுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தால் பளிச்சென்று புரியும்.
இது காதலர் தினம் தொடர்பான கட்டுரை / கதை! எனக்கு நினைவுதெரிந்து நான் அறிந்துகொண்ட நிறைவேறாத காதல்கள் சில, ஆண்டுதோறும் இந்ததினத்தில் நினைவுக்கு வந்து மனத்தை வருத்துவதுண்டு. தாகூரின் இந்தக்கவிதை விசாலத்தையும் சுந்தரேசனையும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது இன்றைக்கு!
கேரளாவில் எங்கள் பெரியப்பா வாழ்ந்த ஏதோ ஒரு சிற்றூர். அங்கு விசாலம் மிகவும் ஏழைக் குடும்பத்துப்பெண். பெரிய அழகியாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காந்த அழகு இருந்தது அவளிடம். இந்த மாதிரிக் குடும்பங்களில் தகப்பனார் இல்லாமல் இருப்பதுதானே வழக்கம்? இங்கும் அதுவே நிஜம்! ஊரின் சின்னக் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று விளக்குக்கு எண்ணெய் போடுவதிலும், வேண்டும் வீடுகளுக்குச் சென்று சமையலில் ஒத்தாசை செய்வதிலும், மாலைப் பொழுதுகளில் ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி மகிழ்வதிலும் அவள் நாட்கள் கழிந்தன. ஏதோ இருந்த அற்ப சொத்தை வைத்துக்கொண்டு காலட்சேபம் நடந்தது.
டாக்டர் சுந்தரேசன் அந்தச் சின்ன ஊருக்கு டாக்டர். உடன் சாதுவான அம்மாவும், ஹைஸ்கூல் வாத்தியாராக இருந்து ரிடையரான அப்பாவும் இருந்தார்கள். எப்போதோ ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாத அம்மாவைக் கூட்டிக்கொண்டுவந்த விசாலத்திடம் சுந்தரேசனுக்கு ஈடுபாடு உண்டாயிற்று. நாளாக ஆக அவளுக்கும் அது புரிந்தது. ஆனால் அது எங்கும் போய் முடியப்போவதில்லை என்று இருவருக்கும் தெரியும். சாதுவான, வெகுளியான, அன்பான, கலகலப்பான அந்தப் பெண்ணிடம் பரிவாகத் தொடங்கிய ஈர்ப்பு காதலாக வளர்ந்தது. அந்த ஊரைப் பொறுத்தவரை காதல் கெட்டவார்த்தை! அதுவும் விசாலம் காதலில் விழலாமா?
ஒருநாள் ஆற்றங்கரையில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தவன், “விசாலீ, எத்தனை நாள் பேசாமல் இருப்பது? உங்கள் அம்மாவிடம் வந்து பேச என் அப்பா அம்மாவை அனுப்பட்டுமா?” என்று கேட்டான்.
“நடக்காத விஷயம் டாக்டர். யாரும் நம் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை,” விசாலம் உறுதியாகச் சொன்னாள். கோவிலுக்குக் கொண்டுபோவதற்காக தொடுத்துக்கொண்டிருந்த மாலை பாதியில் நின்று விட்டிருந்தது.
“சர்வ நிச்சயமா எப்படிச் சொல்லுகிறாய் விசாலம்? நாம் திருமணம் செய்து கொள்வதில் உனக்கு விருப்பமில்லையா?”
மெல்ல விரியும் பூப்போல அவள் முகத்தில் லேசான புன்னகை. “நான் அப்படிச் சொல்லலையே! எப்படி முடியும் டாக்டர்? நீங்களே யோசித்துப் பாருங்கோ! ஏதோ ஒரு சமயத்தில் இரண்டுபேரும் இஷ்டப்பட்டுட்டோம். தப்புத்தண்டா ஒண்ணும் நடக்கலையே! அதுவரைக்கும் நிம்மதி!” மலையாளம் கலந்த தமிழில் அவள் பேசுவதே ஒரு அழகு.
“நான் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறப்போ எங்களுக்கு கீட்ஸோட ‘ஓட் ஆன் அ க்ரீஷியன் அர்ன்’ (Ode on a Grecian Urn) பாடமா இருந்துது. அதில அழகா ரெண்டு வரி இருக்கும் பாருங்கோ! கேட்ட ராகங்கள் இனிமையானவை; ஆனால் கேட்காத ராகங்கள் இன்னுமே அழகானவை, இனிமையானவை, என்பான் கீட்ஸ். (Heard melodies are sweet, but those unheard are sweeter than those) அதுமாதிரித்தான் இது,” என்றாள் விசாலம். அந்த வறுமையிலேயும் இன்டர் படித்து முடித்திருந்தாள் அவள். பேச்சில் புத்திசாலித்தனம், பெரிய மனுஷித்தனம் எல்லாம் பளிச்சிட்டது.
அவளையே பார்த்தான் சுந்தரேசன். சொன்ன வரிகளின் உள்ளர்த்தம் புரிந்தது அவனுக்கு.
“குளிர் காலம் வந்தால் வசந்தகாலம் இன்னும் ரொம்பத் தொலைவில்லையே என்று நீ படித்ததில்லையா?” (For if winter comes, can spring be far behind?)
“எனக்கு பதில் சொல்லத் தெரியலை டாக்டர்,” என்றாள் விசாலி.
விசாலியும் சுந்தரேசனும் கடைசிவரை ஒருவரை ஒருவரோ வேறு எவரையுமோ திருமணம் செய்துகொள்ளவேயில்லை. நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஊரும் வாய்க்கு வந்தபடி பேசி ஓய்ந்தும் போயிற்று.
விசாலி காலமானபோது சுந்தரேசன் தான் அந்திமக்கிரியைகள் செய்தாராம்.
எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்கிறீர்களா? ஒருமுறை ஊருக்குப் போனபோது சுந்தரேசன் மாமாவே இதைச் சொன்னார்.
வயதும், அறிவு முதிர்ச்சியும், உரிமையும் தந்த தைரியத்தில் அவரைக் கேட்டேன்: “ஏன் மாமா நீங்கள் அவாளைக் கல்யாணம் செய்துக்கலே? என்ன தயக்கம் உங்களுக்கிடையிலே?”
“பாஸ்கர்! உனக்கு இப்போப் புரியும். விசாலம் ஒரு பால்ய விதவை. விவரம் புரியாத எட்டு வயசிலே கல்யாணம் பண்ணிவைத்து, அவள் பெரியவளாகி காதல், வாழ்க்கை எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாலேயே அவன் புருஷன் பெரிய வியாதிவந்து போயிட்டான். இவளுக்கு மேலே படிக்கவும் வழியில்லே. நாங்கள் மட்டும் விருப்பப்பட்டு என்ன பிரயோசனம்? அந்தமாதிரி கல்யாணங்களை யாரும் அந்தக் காலத்தில் ஒத்துக் கொண்டதேயில்லை. நண்பர்களாகவே இருந்து விட்டோம். என்னால முடிஞ்சது அவளை நல்லபடியா வழியனுப்பி வைக்கிறதுதான். அதனைத் தடுக்க என் அப்பா அம்மாவோ, அவளோட அம்மாவோ இருக்கலை அல்லவா? ஊர் பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சு. இதொண்ணுதான் மிச்சம். யாரைப் பற்றியும் கவலைப்படற நிலையை நானும் தாண்டியாயிற்று,” என்று சிரித்தார் மாமா. கண்களின் ஓரம் இரு நீர்த்துளிகளைப் பார்த்தேனோ?
தாகூரின் கவிதையின் சில வரிகளை இங்கு திரும்ப ஒரு உயிர் அனுபவமாக உணர்ந்தேன். இதயம் கனத்து வழிந்தது. சுந்தரேசன் மாமா விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார். நான் மெல்ல எழுந்து வெளியே வந்தேன். அந்த வீட்டின் மகிழமரத்தடியே நின்று அந்த வரிகளை அசைபோட்டுச் சிலிர்த்தேன்.
ஒரு வாழ்க்கை கவிதையாயிற்றா? அல்லது கவிதைகள் தான் வாழ்க்கையை உணர்த்துகின்றனவா?
நிகழ்காலத்தைத் தாண்டிய புதிர்கள் இல்லை.
இயலாததை அடைய நாம் முயலுவதில்லை!
இனிமையின் பின் நிழல்களில்லை;
இருளில் ஆழத் துழாவுவதில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலான இந்த அன்பு ஒரு எளிய கவிதையைப் போன்றது.
கம்பன் கவிநயம் – சுந்தரம்
இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல்.
கம்பர் எப்படி சட்டென்று தசரதனின் முடிவை நிர்ணயிக்கிறார் !
நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.
தசரதன் மீண்டும் தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?” என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்” என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.
இவ்வளவு டிரமடிக் ஆக காட்சியைக் காட்ட கம்பனைத் தவிர வேறு யாரால் முடியும்?
அடுத்தது ஜடாயுவின் மரணம். அதை சினிமாவின் இடைவேளைக்கு முன் வந்த காட்சி போல கம்பர் விஸ்தாரமாக அமைத்திருப்பார். இராவணன் சீதையை விமானத்தில் கடத்தி வான் வழியாகச் செல்லும்போது அவனைத் தடுக்க வரும் வயதான வீரனாக ஜடாயு வருகிறார். ஜடாயு இராவணனை தடுத்து நிறுத்துகிறார். அவனுக்கு அறிவுரை சொல்கிறார். வில்லன் கேட்பானா? ஜடாயுவை – அவர் வயதை எள்ளி நகையாடுகிறான்.
இருவருக்கும் போர் நடக்கிறது. இராவணனைத் தாக்கிக் கொண்டே சீதைக்கும் ஆறுதல் கூறுகிறார். தன்னால் ராவணனை ஜெயிப்பது கடினம் என்று ஜடாயுவிற்கும் தெரியும். இருந்தாலும் நாம் சண்டை போட்டு உயிர் துறப்பதற்குள் இராமன் வந்து சீதையை காப்பாற்றிவிட மாட்டானா என்ற நப்பாசை அவர் கண்களில் தெரியும். முடிவில் இராவணன் சிவன் வாளை உபயோகித்த பின்னரே அவரைக் கொல்லவும் முடிந்தது.
அதை கம்பர் மிகச் சிறப்பாக ஜடாயு உயிர் நீத்த படலத்தில் திரைப்படம் போல அமைத்திருப்பார்.
ஜடாயுவின் மரணத்தைக் காட்டும் பாடலில் சோகத்தை மீறி அவருடைய வீரமே புலப்படுமாறு கம்பன் படைத்திருப்பார்.
வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால் நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும் மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன் குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். –
சடாயு தன் வலிமையில் இராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி இராவணனின் வலிமை அல்ல. மேலும் சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும், விண்ணுலகத்திற்கு வேந்தனான இந்திரன் வச்சிரப்படை வீசச் சிறகுகள் அற்ற ஒரு மலைபோல் வீழ்ந்தான்.
நாணயம்- ரேவதி ராமச்சந்திரன்
‘அம்மா எனக்கு கோட்டையில் வேலை கிடைச்சிருக்கு’ கமலி ரொம்ப சந்தோஷமாகக் கூவிக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்தாள். இதைக் கேட்ட அவள் அம்மா ஜானுவுக்கு கவலை உண்டாயிற்று. கமலிக்கு மிகவும் பிடித்த குட்டி ஜாங்கிரி பண்ணிக் கொண்டிருந்த ஜானு ‘கமலி செங்கல்பட்டிலிருந்து கோட்டை வரை நீண்ட பயணம் செல்ல வேண்டுமே!’ என்று யோசித்தாள். ‘என்னம்மா சந்தோஷ ரேகையையேக் காணோம்!’ என்று கமலி ஒரு ஜாங்கிரியை சுவைத்துக் கொண்டே ஜானுவுடைய முகவாயைப் பிடித்துத் தூக்கினாள். ‘இல்லைடி அத்துணை தூரம் போக வேண்டுமே என்று யோசிக்கிறேன்’ என்றாள். ‘அம்மா நான் அங்கே வேலை செய்கிற என் ஃப்ரெண்ட்கிட்டே கேட்டேன். டிரையின் வசதியைப் பற்றி அவள் ரொம்ப சொன்னாள். வேகமாகச் செல்லும் டிரையின்லே போகலாமாம், பஸ்ஸைவிட ரொம்ப வசதியாம், தூரமெல்லாம் ஒரு விஷயமே இல்லை, ஒரு மணி நேரத்தில் போய் விடலாம், பஜனை, பாட்டு என்று ஜாலியா போகலாம் என்றாள்’ என்று மூச்சு விடாமல் பேசினாள். சிறிது ஆசுவாசப்பட்டு ஜானு மிச்சமுள்ள ஜாங்கிரியைப் பண்ணுவதில் முனைந்தாள்.
ஆயிற்று. இன்றுடன் ஒரு மாதம் ஓடியேப் போய் விட்டது. கமலி ரொம்ப உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். காலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு டிஃபன், சாப்பாடு எல்லாம் எடுத்துக் கொண்டு செல்வாள். டிரையினில் தலையை ஆற்றிக் கொள்வது , எல்லோரோடும் டிஃபன் பங்கீட்டுக் கொண்டு சாப்பிடுவது, பஜனை செய்வது, எப்படி ஆபீஸில் ஃபைல் பார்ப்பது என்று தெரிந்து கொள்வது, சமையல் எப்படி வித விதமாகச் செய்வது என்று அளவளாவுவது என்று இப்படி பயணம் கழிந்து விடும். இதனால் நெடுந்தூரம் என்பது ரொம்பவும் ஜாலியாகவே இருந்தது. மாலையிலோ வேறு விதமான அனுபவம். கீரையை கட்டாக மிகக் குறைந்த விலையில் வாங்கி அதை ஆய்வது, மல்லிப்பூ வாங்கி சரமாகத் தொடுப்பது, பாட்டுப் பாடுவது என்று பொழுது போய் விடும். நல்ல காய்கறிகள், பழங்கள் என்று நிறைய வரும். அவைகளை வீட்டிற்கு வாங்கிச் செல்வார்கள். சில சமயம் ஜாதக பரிவர்த்தனைகளும் நடைபெற்று திருமணமும் நடந்துள்ளன. கமலியும் இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு விட்டாள்.
ஒரு நாள் ஏப்ரல் மாதத்தில் நல்ல பெரிய மாம்பழங்களை ஒரு வயதான மூதாட்டி கொண்டு வந்தாள். வாசனை மூக்கைத் துளைத்தது. தன் தம்பி முந்திய இரவுதான் மாம்பழங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. என்ன விலை என்று விசாரித்தாள். ‘அம்மா நல்ல தோட்டத்து மாம்பழம், நேற்றுதான் பறித்தது. வாசனைப் பார்’ என்றாள் மூதாட்டி. ‘ஆமாம் நல்ல பெரிய பழம்தான் என்ன விலைம்மா’ என்று கமலி மீண்டும் விசாரித்தாள். ‘ஒரு பழம் கிட்டத்தட்ட ஒரு கிலோ தேறும், நல்ல ருசியான பழம், ஒன்று எண்பது ரூபாய்’ என்று மெதுவே கூறினாள். பழத்தையும், அந்த மூதாட்டியையும் பார்த்து ஒன்றும் பேசாமல் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டு நூற்று அறுபது ரூபாய் கொடுத்தாள். ‘உங் கை நல்ல போனி ஆகட்டும்’ என்று மூதாட்டி முகமலர்ச்சியுடன் போனாள். இவளும் சந்தோஷமாக தன் தம்பியை நினைத்துக்கொண்டே அந்தப் பழங்களைப் பையில் வைத்துக் கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து இவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர இருந்தது. இவள் இறங்கத் தயாராகும்போது அந்த மூதாட்டி அவசர அவசரமாக இவள் இருப்பிடம் வந்து ஒரு பழத்தை நீட்டி ‘நல்ல வேளை நீங்க இன்னும் இறங்கவில்லை இதை வாங்கிக்கோம்மா’ என்றாள். கமலி உடனே ‘இல்லம்மா, எனக்கு இரண்டு பழம் போதும். நல்ல பெரிதாக இருக்கின்றன’ என்றாள். ‘இல்லை இதுக்கு நீ காசு கொடுக்க வேண்டாம்’ என்றாள். ‘எனக்கு இனாம் தந்தால் உங்களுக்குத்தான் நஷ்டம். நீங்கள் ஏன் நஷ்டப்பட வேண்டும்?’ என்று பரிவோட வினாவினாள். அதற்கு மூதாட்டி ‘இல்லம்மா, இதற்கு நீ காசு கொடுக்க வேண்டாம் ஏற்கனவே கொடுத்து விட்டாய். இது இனாமும் இல்லை’ என்று இழுத்தாள். புரியாமல் பார்த்த கமலியிடம் மேலும் ‘அம்மா, நான் விலை சொன்னவுடன் நீ பேரம் பேசாமல் இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டாய். ஆனால் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் எல்லோரும் விலையைக் குறைக்கச் சொல்லி ஐம்பது ரூபாய் என்று வாங்கிக் கொண்டார்கள். நானும் எல்லோரும் வாங்கினால் எனக்கும் வியாபாரம் ஆகும் என்று வேறு வழி இல்லாமல் கொடுத்து விட்டேன். ஆனால் நீ எண்பது ரூபாய் என்று வாங்கிக் கொண்டாய். எனக்கு மனசு கேட்கவில்லை. அதனால்தான் உனக்கு இன்னொரு பழம் கொடுக்க வந்தேன்’ என்று கூறி புடவைத் தலைப்பால் வேர்வை வடியும் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கமலியின் முகத்தில் ஆச்சரியம், அதிசயம், சந்தோஷம் எல்லா ரேகைகளும் ஓடின. இப்படியும் மனிதர்களா! இல்லை மனிதருள் மாணிக்கங்களா! இதனால்தான் மாரியும் பொழிகிறானோ!
வளவதுரையன் கவிதைகள்
கனவில்தான்……
கதவு திறந்திருந்தாலும்
பறக்க மறந்தது
பழகிப் போய்விட்டது.
கம்பிகளைக் கடித்துக் கடித்து
அலகெல்லாம் வலிக்கிறது.
ஒரு நெல்லுக்காகக்
கழுத்து நோக
முப்பது சீட்டுகளைக்
கலைக்க வேண்டிஉள்ளது.
வெளியில் தெரியும்
வானமெல்லாம்
விரிந்து கிடக்கும்
கானல்நீர்தான்.
காலை முதல்
யாருமே வராததால்
முழங்கால்களுக்கிடையில்
முகம் புதைத்திருக்கும்
இவனும் பாவம்தான்.
எதிர்மரக்கிளையில்
இருக்கின்ற இணையே!
இன்றும் உன்னைக்
கனவில்தான்
கலக்கவேண்டும் போலிருக்கிறது.
தலைக்கனம்
கடந்த ஆறு மாதங்களாக
எனக்குத் தலைக்கனம்
அதிகமென்கிறார்கள்.
ஆமாம்; நான் கவிஞனன்றோ?
நானே வளர்த்துக் கொண்ட
நளினமான தலைக்கனம்!
எப்பொழுதுமே தலைக்கனம்
எல்லார்க்கும் தொல்லை தரும்.
எனக்குப் புதுவிதக் குழப்பம்
என் மனைவி இரவு முழுதும்
என்னால் உறங்க முடியவில்லை என்றாள்.
ஏனென்று கேட்டேன்
பதில் சொன்னாள்
தலைக்கனமாம் உங்கள்
முடிகாட்டில் குடிகொண்ட
மூன்று குருவிகளும்
இரவு முழுதும் பேசுகின்றன.
ஒரே சத்தம்
சரி, தலைக்கனத்தைச்
சற்று செதுக்கி வைப்போமென
ஓர் அழகு நிலையம் போனேன்;
நான்கைந்து பேர் காத்திருக்க
நான் வாசலில் அமர்ந்தேன்;
சற்று நேரம் கழிந்த்து.
என்பக்கத்தில் வந்து
ஒரு நாயும் பூனையும் அமர்ந்தன.
சற்று நேரம் கழிந்தது.
இன்னும் ரொம்ப நேரம் ஆகுமோ?
நாய் இப்படிக் கேட்டதும்
நான் திடுக்கிட்டுப் போனேன்.
நாய்கூடப் பேசுமா எனக்
கடைக்காரரைக் கேட்டேன்;
அவர் சொன்னார் ஆச்சரியப்படாதீர்
இப்போது கேட்டது நாயின் குரலன்று
நாயின் குரலில் பூனைதான் மிமிக்ரி செய்தது
அபூர்வங்கள்-2- பானுமதி.ந
சென்ற இதழில் ‘ஸந்த’ என்ற சொல்லை வைத்து சந்தான ராமனைப் பாடிய தீக்ஷிதரைப் பார்த்தோம். இதில் கணக்கை வைத்து கண்ணனைத் துதித்த திருமங்கை ஆழ்வாரைப் பார்ப்போம்.
07/02/2022 அன்று இரத சப்தமி. சூரியனின் தேர் வடகிழக்காக நகரத் தொடங்கும் நாள். அன்று தேர் வடிவில் கோலம் போடுவார்கள். திருமங்கை ஆழ்வார் தேரைப் போலவே பாசுரம் பாடியுள்ள அபூர்வத்தைப் பார்க்கப் போகிறோம்.
சோழ தேசத்தில் திருக்குறையலூரில் பிறந்த இவர் சோழ மன்னனின் படைத்தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றி பெற்றவர். அதற்குப் பரிசாக திருமங்கை என்னும் குறு நிலத்திற்கு அரசனானார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இவர் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்று 137 பாடல்கள் பாடியுள்ளார்.
அவற்றில் திருவெழுகூற்றிருக்கை (ஏழு+ கூற்று+ அறிக்கை) என்பதைப் பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம். இது ரதபந்தம்- தேர் அமைப்பினை ஒத்த பா வடிவம். ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறி ஏறி இறங்கி இறுதியில் ஒன்றில் முடியும் வகையில் நாராயணனை இதில் பாடியுள்ளார்.
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் (15)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் (20)
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி (25)
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே (30)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய் (35)
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த (40)
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே (46)
இவ்வகைப் பாடல்கள் ஏழு அறைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டங்கள் அமைத்து எண் ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும், இறங்கியும் சொற்களால் அமைக்கப்படும் சித்திரப் பாக்கள் அல்லது தேர் வடிவப் பாக்கள் என்று சொல்லப்படுகின்றன. பாடலில் இடம் பெற்றுள்ள எண்களும், பாடலின் பொருளும், அறிவு பூர்வமாகவும், தமிழ்ச் சுவையாலும் மேம்பட்ட அனுபவத்தைத் தருகின்றன.
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் ஒற்றை உந்தியிலிருந்து பெரும் தாமரைப் பூ கிளைத்தெழுந்து பிரும்மன் உருவாகிறான்.
இரு சுடர்களான நிலவும், கதிரவனும் உதிக்க அஞ்சிய இலங்கையின் மூன்று மதில்களைக் (கடல், மலை, வனம்) கடந்து இரு பக்கமும் வளையும் கோதண்டத்தால் அம்பினைச் செலுத்தி எதிரிகளை அழித்தான் இறைவன்.
நால் வகை நிலங்களை வேண்டி வாமனனாக வந்து மூவடியால் உலகம் அளந்தவன்.
நான்கு திசைகளும் நடுங்க, பெரிய திருவடியின் மீதேறி மும்மதம் கொண்ட இரு பெரும் செவியுடன் நின்ற ஒற்றை வேழமான கஜேந்திரனைக் காத்தவன்.
முத்தீ வளர்த்து, ஐந்து வகை வேள்விகளைச் செய்து, அனைவரின் நன்மைக்கென ஆறு வகை செயல்களைப் புரியும் வேள்வியரை இங்கே பாடுகிறார் ஆழ்வார்.
புற விஷயங்களில் ஐந்து புலன்களும் அலைபாய்வதை அடக்கி, மனது, புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கினையும் வசப்படுத்தி, சத்வம், ரஜஸ், தமோ (அமைதி, கோபம், சோம்பேறித்தனம்) ஆகிய மூன்றில், கோபத்தையும், சோம்பலையும் போக்கி, ஒரே ஒருவனான அவனை நினைப்பவர் உலக வாழ்வெனும் துக்கத்திலிருந்து மீள்கிறார்கள்.
மூன்று கண்களும், நான்கு தோள்களும் உடையவரும், ஐந்து நா கொண்ட பாம்பையும், கங்கை என்னும் ஆறையும் சிரசில் தரித்த உருத்திரனாக இருப்பவன் அவனே!
பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் நீலமணி போல், வராஹனாக சுமந்து காத்தருளிய கடவுளே!
அறு சுவைகளும் அவனே!
ஒளி பொருந்திய ஆயுதங்களை ஐந்து திருக்கரங்களிலும் ஏந்தும் எழில் கொண்டவனே!
அழகிய நான்கு தோள்கள் கொண்டவனே!
முந்நீர் வண்ணக் கடல் போலத் தோற்றம் காட்டுகிறாய்.
களங்கமில்லா ஒரு நிலவு; அது உன் இரு துணைவிகளான பெரிய பிராட்டியும், பூமித் தாயாரும். அவர்கள் பூவிலும் மென்மையான தமது இரு திருக்கரங்களால் முப்பொழுதும் உன் இரு திருவடிகளை வருட அறிதுயிலில் இருக்கிறான்.
நெறி முறைகள் மூன்று- சமூக, குல, நீதி ஆகியவைகள் வகுத்து நடத்துபவன்.
நால் வகை தொழில் தர்மம் சொன்னவன்.
ஐம்பெரும் சக்தியும் அவன் (நிலம், நீர், காற்று, விண், தீ)
ஆறு கால்களுடைய வண்டினம் தேன் குடித்து மயங்கும் மலர்களைச் சூடியுள்ள நப்பின்னையைக் கைபற்ற ஏழு எருதுகளை வென்றவனும் அவனல்லவா?
ஆறு சமயங்களும் அவனே. (ஸார்வாகம், பௌத்தம், சமணம், வைசேஷிகம், சாங்க்யம், பாசுபதம், நையாயிகம் என்று சொல்கிறார்கள் சிலர்; கணாதிபத்யம், கௌமாரம், சாக்தம், சைவம், வைணவம், சௌரம் என்றும் சொல்கிறார்கள் சிலர்.)
நறுமணம், அடர்த்தி, மென்மை, வசீகரம், சுருளான கேசம் என்ற ஐந்து சிறப்புகளுடைய குழலுடையவளான திருமகள், அவன் மார்பில் வசிக்கிறாள்.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அருள்பவன் அவனே.
மும்மூர்த்தியாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்ற வடிவில் இருக்கிறான்.
இருவகைப் பயனாகவும் இருக்கிறான். காரணக் காரியங்கள் அவன் மாயையால் காட்டப்படுகின்றன.
அனைத்தையும் அடக்கிய ஒன்று அவனே. ஒன்றே ஒன்றான பரமன் அவன்.
ஆழ்வார் பொன்னி நதியால் சிறப்புறும் இயற்கையைப் பாடி நிறைவு செய்கிறார். காவிரி பாய்ந்து, கழனி செழித்து, சோலைகள் மலர்ந்து, தேன் கனிகள் மிகுந்து, வானைத் தொடும் கொடிகள் மாளிகைகளின் மேலே பறக்கும் தென் திருக் குடந்தையில் அறிதுயிலும் பரமா, என் இன்னல்களைப் போக்காயோ என நமக்கும் சேர்த்து வேண்டுகிறார்.
இப்பாசுரம் மிகுந்த தத்துவ பொருளைக் கொண்டுள்ள ஒன்று. அதைப் பற்றி இதில் குறிப்பிடப்போவதில்லை. கணிதமும், தமிழும் இணையும் இறை அழகைக் கொண்டாடுவதுதான் நோக்கம்.
இரட்டைப்பிள்ளையார் – தரும ராஜேந்திரன்
கண்ணன் கதையமுது -4 – தில்லை வேந்தன்
(கம்சனைக் காண வந்த நாரதன்,எட்டாம் குழந்தை என்றில்லாமல் எந்தக் குழந்தையாகவும் நாராயணன் வரக் கூடும் என்று கூறிச் செல்கிறான்.
நாரதனின் எச்சரிக்கையால் அச்சமும், ஆத்திரமும் கொண்ட கம்சன், வசுதேவன், தேவகியைச் சிறையில் தள்ளி, அவர்களது முதல் ஆறு குழந்தைகளைக் கொல்கிறான்.)
தேவகி ஏழாம்முறை கருவுறுதல்
ஆலய மணிகள் காற்றில்
அன்புடன் ஓம்ஓம் சொல்ல,
பாலையும் பசுக்கள் தாமே
பாங்குடன் நனிசு ரக்க,
வேலைநீர் பொங்க லைகள்
மென்மையாய்த் தவழ்ந்து செல்ல,
சோலைவாழ் மயிலே அன்னாள்
சுடர்க்கரு மீண்டும் உற்றாள்
( வேலை- கடல்)
திருமால் மாயைக்கு இட்ட கட்டளை
ஆவதுவும், ஆனதுவும் வருங்கா லத்தில்
ஆவதற்குக் காத்திருக்கும் அனைத்த றிந்தான்,
மாவடிகள் மூவடியால் விண்ணும் மண்ணும்
மாவலியின் முடித்தலையும் அன்ற ளந்தான்,
சேவடியின் புகழ்போற்றி முனிவர், தேவர்
செப்பிநிதம் மகிழ்கின்ற முகில்நி றத்தான்
ஏவிலினால் இயங்குகின்ற மாயை வந்தாள்
மாலவனின் மலரடியை வணங்கி நின்றாள்.
“வடமதுரை வன்சிறையில் மங்கை நல்லாள்
வயிற்றினிலே எழுகருவாய் அனந்தன் உள்ளான்
திடமுடனே வளர்கருவை அகற்றி நீயும்
சிந்தாமல் சிதறாமல் ஏந்திச் செல்வாய்
அடர்பொழில்சூழ் கோகுலத்தில் நந்த கோபன்
அரண்மனைவாழ் ரோகிணியின் வயிற்றில் சேர்ப்பாய்
மடமயிலாள் யசோதையவள் கருவி லேநீ
வளர்ந்தொருபெண் குழந்தையெனப் பிறத்தல் வேண்டும்”
( எழுகரு – எழுகின்ற/ உருவாகும் கரு)
(எழுகரு – ஏழாவது கரு)
( அனந்தன் – ஆதிசேஷன்)
மாயை, தேவகியின் ஏழாவது கருவை ரோகிணிக்கு மாற்றுதல்
மகிழ்ந்தாள் மாயை, பாற்கடலின்
மாயன் உரைத்த மொழிகேட்டு
நெகிழ்ந்தாள், பணிந்தாள் திருவடியை.
நேரே மதுரை சிறைநுழைந்து
முகிழ்ந்த மொட்டாம் கருவகற்றி
முடுகி நந்தன் மனையின்கண்
திகழ்ந்த சீரார் ரோகிணியின்
திருவ யிற்றில் சேர்த்தாளே!
( முகிழ்ந்த – தோன்றிய)
(முடுகி – விரைந்து)
மாயை யசோதை வயிற்றில் கருவாதல்
ஓயாப் பிறவி கடல்கடக்க
உதவும் ஒருவன், முல்லைநிலக்
காயா மலரின் வண்ணத்துக்
கடவுள் வகுத்த வழியினிலே
சேயாய் நிலத்தில் பிறப்பெடுக்கச்
சிந்தை கொண்டு மாயையவள்
தாயாம் யசோதை மணிவயிற்றில்
தானோர் கருவாய் உருவானாள்!
ஏழாம் கரு கலைந்தது என்று அனைவரும் நினைத்தல்
தேவகி கருவும் மாறிச்
சென்றதை அறிந்தார் இல்லை
காவலின் கொடுமை யாலே
கலங்கியே கலைந்தது என்றே
யாவரும் எண்ணி உள்ளம்
ஏங்கியே வருந்த லானார்.
பாவியாம் கொடியோன் கம்சன்
படுவனே துன்பம் என்றார்
தேவகி எட்டாம் முறை கருவுறுதல்
எட்டாம் முறையாய்க் கருவுற்றாள்
எழிலார் மங்கை தேவகியாள்
மட்டார் மாலை மாலவனும்
வந்து புகுந்தான் மணிவயிற்றில்
கிட்டாப் பேறும் கிட்டியதே
கேடில் செல்வம் எட்டியதே
முட்டாச் சிறப்பின் முழுமுதல்வன்
மூண்ட கருவின் உள்ளுற்றான்
(முட்டாச் சிறப்பு — குறைவுபடாத தலைமை)
செய்தி அறிந்த கம்சன் நிலை
செய்தி கேட்ட கொடுங்கம்சன்
சிந்தை கலங்கி நிலைகுலைந்தான்
மெய்தி கழ்ந்த பேரழகை,
மேனி சுமந்த பொன்னெழிலை,
எய்தி நின்ற பூரிப்பை,
இருகண் கூசும் ஒளிப்பொலிவை
மைதி கழ்ந்த மாமாயன்
வரவின் குறிப்பாய் ஐயுற்றான்.
கொல்ல நினைத்தான், கொன்றுவிட்டால்
கூடும் கொடிய பழிநினைத்தான்.
நல்ல தங்கை கருசுமந்தாள்
நமனாய் மாறி உயிர்பறித்தால்
சொல்ல முடியாப் பெரும்பாவம்
சூழும் நிலையை மிகவுணர்ந்தான்
மெல்ல முள்மேல் ஆடையினை
விலக்க எண்ணி முடிவெடுத்தான்.
ஆத்திரத்தால் அறிவிழந்தான் கம்சன், ஆனால்
அவப்பெயரை அஞ்சியதால் பொறுத்தி ருந்தான்;
காத்திருக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டான்;
காலையிலும், மாலையிலும்,நிலவு வானில்
பூத்திருக்கும் வேளையிலும் எண்ணம் எல்லாம்
பொன்னாழி, புரிசங்க ஆழி யான்பால்
கோத்திருந்தான். நாரணன்பேர் உள்ளம் எங்கும்
குடியிருக்கச் சேர்த்திருந்தான் செயல் மறந்தான்.
( தொடரும்)
கடைசிப்பக்கம் – ஜெ.பாஸ்கரன்.
வீசாவும் வினய ஆஞ்சனேயரும்!
திரேதா யுகத்திலேயே வானில் பறந்தவர் ஆஞ்சனேயர் – பாஸ்போர்ட், வீசா ஏதுமின்றி இலங்கைக்குள் வான் வழி சென்றவர்!
நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் புஷ்பக விமானம் இராமாயணத்தில் பேசப்படுகிறது – தேவ தச்சரான விஸ்வகர்மாவினால் செயப்பட்டது. குபேரனிடம் இருந்த இந்த விமானத்தை, இராவணன் அபகரித்ததாகவும், அதில்தான் சீதையை மண்ணோடு பெயர்த்துக் கவர்ந்து சென்றதாகவும் புராணம் சொல்கிறது! இராவண வதத்திற்குப் பிறகு, விபீஷணன் புஷ்பக விமானம் பற்றி இராமனிடம், “வெள்ளை நிற மேகத்தின் நிறமுடையதும், சூரிய ஒளியில் மின்னுவதும், பாதுகாப்பானதும், அதி விரைவாகச் செல்லக்கூடியதும் (இலங்கையிலிருந்து ஒரே நாளில் அயோத்தியில் சேர்த்துவிடுமாம்!), நினைத்த மாத்திரத்தில் பறக்கக் கூடியதுமானது” என்று சொல்கிறான் என்று வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இன்றைய அதிவிரைவான விமானங்களுடன் ஒத்துப் போகின்ற விவரணைகள் நம்மை வியக்கத்தான் வைக்கின்றன! இராவணன் கடத்திய அதே விமானத்தில், சீதாதேவியை மீட்டு அழைத்து வருகிறார் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி!
எல்லாம் சரி, பாஸ்போர்ட் விசா பிரச்சனைகள் இல்லாத தெய்வப் பிறவிகளா நாம்? சமீபத்தில் கனடா செல்ல விசா கிடைப்பதில் சிறிய சிக்கல் – ஒருவரின் பாஸ்போர்ட் காலாவதியாவதுடன் (expiry க்கு சரியான தமிழ்தானே?), அவரது கனடா விசாவும் முடங்கிவிடுகிறது – மீண்டும் முதலிலிருந்து விண்ணப்பிக்க வேண்டும்! யூ எஸ் போன்ற நாடுகளின் விசா, பாஸ்போர்ட் ஆயுளையும் தாண்டி, அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்!
என் பாஸ்போர்ட் புதுப்பித்த போது, கனடா விசாவுக்கு விண்ணப்பித்தேன் – ‘பயோமெட்ரிக்ஸ்’ என்னும் கைரேகைப் பதிவுக்கும் சென்று வந்தேன். இனி அவர்கள் என் பாஸ்போர்ட்டை வரவழைத்து, அதில் கனடா விசாவுக்கான ஸ்டாம்ப் (முத்திரை) பதிக்க வேண்டும். காத்துக்கொண்டிருக்கிறேன் ……
இதற்குள், கொரோனா பேண்டமிக் எல்லாவற்றையும் போல் கனடா இமிக்ரேஷனையும் முடக்கி வைத்தது – எனக்கு விசா எப்போது வரும் என்று தெரியவில்லை! அதற்குள், குடும்ப சுழல் காரணமாக எனக்கு யூஎஸ் மற்றும் கனடா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட… ஈமெயில், போன் கால்கள், கடிதங்கள், விசாரிப்புகள் எல்லாம் கிணற்றிலிட்ட கல்!
பூவிருந்தவல்லி தாண்டி, பெரிய ‘மோட்டல்’ எதிரே வடக்கே திருப்பதி நோக்கிச் செல்லும் சாலையில் இரண்டு கிமீ பயணித்தால் வருவது திருமேழிசை. ஊரைப்பற்றியும், திருமேழிசை ஆழ்வார் பற்றியும், அமர்ந்த கோலத்தில் உள்ள ஜெகன்னாத பெருமாள் தல வரலாறு பற்றியும், அவரது கட்டை விரலில் உள்ள ‘கண்’ பற்றியும் பேச ஆரம்பித்தால், கனடாவிற்கு நடந்தே போனால் ஆகும் நேரமாகிவிடும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன் (மற்றொரு வியாசத்தில் முயற்சிக்கலாம்!).
‘மஹீசார க்ஷேத்ரம்’ – துவாபர யுகத்தில் பூலோகம் முழுவதையும் ஒரு பக்கத்திலும், மறு பக்கத்தில் திருமேழிசையையும் வைத்தால், திருமேழிசை ஒரு நெல்மணி அளவு (? 1 கிராம்) எடை கூடுதலாக இருக்கும் பெருமை உடையதாம்! ஒரு சமயம் பிரம்மாவுக்கு, திருப்பதி வேங்கடேசப் பெருமாள், இந்த ஊரில் உட்கார்ந்த கோலத்தில் தரிசனம் கொடுத்ததாக ஒரு புராண வரலாறு கூறுகிறது, பெரும்பாலும் மஹா விஷ்ணு நின்ற கோலத்திலும் (திருப்பதி), கிடந்த கோலத்திலும் (ஶ்ரீரங்கம்) அருள்பாலிப்பது வழக்கம். ஶ்ரீதேவி, பூதேவி இருபுறமும் இருக்க, உட்கார்ந்திருக்கும் கோலத்தில் மூலவர் இருக்கும் இந்தக் கோயில் (ஜெகன்னாத பெருமாள் கோயில் அல்ல) ஶ்ரீவீற்றிருந்த பெருமாள் தெவஸ்தானத்தைச் சேர்ந்தது. கிரீடத்தில் நான்கு லட்சுமிகளையும் சேர்த்து, அஷ்ட லட்சுமிகளுடன் அருள்பாலிக்கும் பெருமாள் “வீற்றிருந்த பெருமாள்” – தூய்மையாகவும், அமைதியாகவும், ஆளுயர உண்டிகளில்லாமலும் உள்ள இந்தக் கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப் படுகிறது – ஶ்ரீசெண்பகவல்லித் தாயார், ஆண்டாள், லக்ஷ்மி நரசிம்மர், வரதராஜப் பெருமாள், ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள முனிகள், திருமேழிசை ஆழ்வார், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார் சன்னதிகளும் உண்டு – இவர்களுடன் ஶ்ரீ வினய ஆஞ்சனேய ஸ்வாமி – விசா ஆஞ்சனேயர் – சன்னதியும் இருக்கிறது!
ஶ்ரீவினய ஆஞ்சனேயர் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்; வராஹமுக ஆஞ்சனேயர்; வரப்ரசாதி; புதிதாகக் கட்டப்பட்டுள்ள சன்னதியில் அருள் பாலிக்கும் இவர் கடன் தொல்லைகளையும், விஷ ஜுரம், ஜுர ரோஹம் போன்றவைகளையும் தீர்த்து வைப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது – “வைத்தியருக்கெல்லாம் வைத்தியர்” என்றும் போற்றப் படுகிறார்! திருமணமாகாத பெண்கள் ஆறுவாரம் பிரார்த்தனை செய்தால் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையும் உண்டு! இவரை வழிபட்டால், வெளி நாடுகளுக்கு வீசா கிடைப்பதில் உள்ள தடங்கல்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது – வீசா ஆஞ்சனேயர்!
மூன்று முறை மறுத்த யூஎஸ் விசா என் நெருங்கிய உறவினருக்கு, இங்கு வந்து சென்றபின் உடனே கிடைத்தது என்பதையும், தூரத்து உறவினர் ஒருவருக்கு, இங்கு வந்து சென்றபின் ஆஸ்திரேலியா விசா எதிர்பாராமல் விரைவில் கிடைத்தது என்பதையும் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்!
என் கனடா வீசாவுக்காக திருமேழிசையும் சென்று வந்தேன். வீசா வேண்டாத போதும், வீற்றிருந்த பெருமாளையும், வினய ஆஞ்சனேயரையும் பல முறை சேவித்திருக்கிறேன் – டயமண்ட் கல்கண்டு, புளியோரை, துத்தியொன்னம்,அக்காரவடிசில் போன்ற பிரசாதங்கள் கிடைக்கும் – பிரசாதமாக, விற்பனைக்கல்ல! நம்மாலாகாத ஒரு காரியத்துக்கு, யாரையாவது நம்பித்தானே ஆகவேண்டும்!
முன்பே வாங்கியிருந்த யூஎஸ் விமான டிக்கட், மாற்ற முடியாத நிலையில் (மீண்டும் மாற்றினால் ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் மேல் இழக்க வேண்டி வரும்!), கனடா விசா வராத நிலையில் யூஎஸ் வந்துவிட்டேன்.
ஒரே குழப்பம் – விசா ஸ்டாம்ப் பதிக்க பாஸ்போர்ட்டை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? அல்லது இங்கேயே யூ எஸ் ல் வாங்கிகொள்ளலாமா? நேரில் கனடா இமிக்ரேஷன் போக வேண்டுமா? இந்தியாவுக்குத் திரும்பி வந்து விசா வாங்க வேண்டுமா?
கடைசியாக, விசா கொடுக்க, கனடா என்பசியிலிருந்து அழைப்பு வந்துவிட்டது! இங்கேயே யூ எஸ் லேயே ஸ்டாம்ப் பதிக்கலாம் என்றும் வந்து விட்டது!
பாஸ்போர்ட் அனுப்பிவிட்டு, விசாவுடன் திரும்பி வரும்வரை, ஶ்ரீவினய ஆஞ்சனேயரை – விசா ஆஞ்சனேயரை – நினைத்துக்கொண்டு இருப்பது மட்டும்தான் செய்ய முடியும்!