ஒரு அருமையான இனிமையான பெருமையான தீபாவளிப் பாடலைக் கேட்கவேண்டுமா? க்ளிக் செய்யுங்கள்!
Monthly Archives: October 2017
தலையங்கம்
முத்தமிழில் ஒன்றான நாடகக் கலை சங்க காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாடகக் கலையைப் பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
சங்க காலத்தில் கோலோச்சிய நாடகம் களப்பிரர் காலத்தில் புத்த ஜைன மதங்களால் புறக்கணிக்கப்பட்டது. பின்னர் பல்லவர் சோழர் காலத்தில் புத்துயிர் பெற்றது.
நகரங்களில் நாடகமாகவும் கிராமங்களில் தெருக்கூத்தாகவும் அது பரிணமித்தது.
சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் இராசமாணிக்கம், பம்மல் சம்மந்தமுதலியார், பாய்ஸ் கம்பெனி, டி கே எஸ் சகோதரர்கள்,அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர், சிவாஜி, சுந்தராஜன், சிவகுமார், மனோகர், சோ, பூர்ணம், ஒய் ஜி பி , கே பாலச்சந்தர், காத்தாடி ராமமுர்த்தி, மகேந்திரன், எஸ் வி சேகர், கிரேஸி மோகன் , போன்றவர்கள் தமிழ் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்தவர்கள்.
சினிமா மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள் நாடகமேடையை அடித்து நொறுக்கி அதகளப்படுத்திவிட்டன.
ஆனால் நாடகம் ஒரு ஜீவித கலை. என்றைக்கும் அழிந்துவிடாது.
முத்துசாமியின் கூத்துப்பட்டறை, ஞானியின் பரிக்ஷா, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் புத்துயிர் கொடுக்கிறார்கள்.
ஏராளமான இளைஞர்கள் நாடகங்களில் பங்கேற்க முன் வருகிறார்கள். நான்கு மணிநேரம் நடக்கும் பொன்னியின் செல்வன் முதல், பத்து நிமிடம் நடக்கும் ஷார்ட் & ஸ்வீட் நாடகங்களும் வரத் தொடங்கிவிட்டன.
அரசு நாடகத்தை ஊக்குவிக்கவேண்டும். ஊடகங்கள் இதைப் போற்றவேண்டும். புரவலர்கள் ஆதரிக்கவேண்டும். பள்ளிகளில் நாடகங்கள் நடத்தப்பெறவேண்டும். இசை விழாக்களைப்போல் நாடக விழாக்கள் நடைபெற வேண்டும். நாடகக் கலைஞர்கள் பெருமை பெறவேண்டும். மக்கள் அனைவரும் நாடகங்களைப் பார்க்கத் திரண்டு வரவேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கும் நீட்டுக்கும் நடத்தியதைப்போல் இதற்கும் ஒரு போராட்டம் நடத்தப்படவேண்டும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது?
குவிகம் இதற்கான பணியில் இறங்கத் தயாராயிருக்கிறது.
நீங்கள்?
தெய்வத்துள் தெய்வம் – நாடக விமர்சனம்- வி எல் நரசிம்ஹன்
( போட்டோ: நன்றி, லலிதா தாரிணி )
தெய்வத்துள் தெய்வம்
கடலுக்கு எல்லை உண்டு, கருணைக்கு எல்லை உண்டா? இல்லவே இல்லை. அந்தக் கருணைக் கடலையே நம் கண்ணுக்குள் மீண்டும் நிறுத்தியிருக்கிறார்கள், இந்த மிகப் பெரிய படைப்பின் மூலம்.
இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து, நம்மைச் சற்றே விலக்கி,வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த இரண்டரை மணி நேரமும் ஒரே நிசப்தம். ஒரு செல்போன் மணி ஒலிகூட நமது காதில் விழவில்லை. இது புது மொழி.(குண்டூசி விழும் சப்தம் கேட்டது- இது பழைய மொழி). பெரியவாளை தரிசனம் செய்யப் போகிறோம் என்பதனால் எல்லோரும் செல்போனை மறந்தே போனார்கள், நல்லது!
சாதாரணமாக நாடகம் என்றால் ஒரு சிறிய நடிக, நடிகையர் கூட்டம், இரண்டு அல்லது மூன்று காட்சி அமைப்பு, அதில் நகரும் கதையமைப்பு என்றே பார்த்துப் பழக்கப்பட்ட நாம், இதில் சற்று வித்தியாசமாக ஒரு 108 நடிக நடிகைகளைப் பார்க்கிறோம். எல்லோருமே இதில் பங்குபெறுவதை ஒரு “பகவத் கைங்கர்யமாக”ப் பார்க்கிறார்கள் என்றே அறிகிறோம்.
தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் நம்மைப் பழைய காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள். அப்பப்பா என்ன ஒரு தத்ரூபம்.
ஸ்வாமிநாதனாக அவதரித்த மகா பெரியவா நம் எல்லோர் உள்ளத்திலும் மஹாஸ்வாமியாக வீற்றிருக்கிறார்கள்.
பள்ளி மாணவனாக அறிமுகமாகிறார் ஸ்வாமிகள். அவர் நண்பர்களிடத்தில் எவ்வளவு ப்ரீத்தி வைத்திருக்கிறார் என்பதிலாகட்டும், தன்னுடைய ஆச்சார்ய பக்தியிலாகட்டும், ஆசிரியரை மதிப்பதிலாகட்டும், தின்பண்டம் விற்கும் மாமியிடம் குறும்பு செய்வதிலாகட்டும் என்னே நேர்த்தி. அந்தக் கிராமத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆச்சார்ய பீடத்திற்கு வந்தவுடன் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்க, பூரண கும்ப மரியாதை கொடுக்க அந்தக் கிராமமே திரண்டுவருகிறது. நிஜமான நாதஸ்வரக் கலைஞர்களையே வரவழைத்திருக்கிறார்கள். யானை மற்றும் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள் (வேஷம் தான்).இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாமே அந்தக் காட்சிகளை நம்மை மறந்து காண்கிறோம். முறுக்கு மாமியும், ஸ்வாமிகளும் மனதாலேயே பேசிக்கொள்வது, ஸ்வாமிகள் எல்லோர் மனதிலும் நிறைந்து இருப்பார் என்பதைப் பறைசாற்றுகிறது. முறுக்கு மாமி (தாரிணி கோமல்) கண்களே பேசுகிறது. பால ஸ்வாமிகள் வேதம் உபநிடதம் மற்றும் சம்பிரதாய விஷயங்களைக் கற்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். .
நாம் சுதந்திரம் பெற்றதைக் காட்டுகிறார்கள். தேர்தலைப் பற்றியும், ஜனநாயகத்தைப்பற்றியும், அஹிம்சையைப்பற்றியும் அழகாக ஸ்வாமிகள் எடுத்துரைக்கிறார்கள். நாம் காசு வாங்கி ஓட்டுப் போடக்கூடாது என்று 1952ல் ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார். அவர் மகான் அல்லவா? அதனால் தீர்க்கதரிசியாய் சொல்லி இருக்கிறார். நமக்குத்தான் கொஞ்சம் “ரோஷம்” வரவேண்டும்.
ஸ்வாமிகள் மேடையிலே நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் நாமும் அவருடனே பயணிக்கும் சிஷ்யனாக மாறிவிடுகிறோம். சபாஷ் டைரக்டர் ஸார், எங்களையே மறந்து போகிறோம். ஸ்வாமிகள் நம்மையும் தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஸ்வாமி கருணையை மட்டுமா கொடுப்பார், அவர் நம் தாய் அல்லவா? குழந்தைகளுக்கு மருந்தும் கொடுப்பார். “நான் கல்யாணத்திற்கு வரதக்ஷிணை வாங்கக் கூடாது, பட்டுப்புடவை வேண்டாம்’னு சொல்றேன். யாரும் கேட்கமாட்டேங்கிறா. என் படத்தை வேற போட்டுக்கிறா” என்று அங்கலாய்க்கிறார். எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்பதாகச் சொல்லுவது நம் காதில் விழுகிறது. அந்த முதியவராக வரும் பெரியவா (வாசுதேவன்)- அவர் வாசுதேவன் அல்ல தேவாதிதேவன்- நம் எல்லோர் மனதிலும் குடிகொண்டுவிட்டார். அப்படி ஒரு தேஜஸ், உருவ ஒற்றுமை, நடை உடை பாவனை எல்லாம் சேர்த்து மீண்டும் அந்த மகானை நம்மிடையே அனுப்பி வைத்து இருக்கிறார்கள், ஒப்பனைக் கலைஞர் மற்றும் டைரக்டர்.
ஸ்வாமியின் கருணையால் பலரது வாழ்க்கை மாறியிருக்கிறது. அதில் சிலவற்றை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர் கருணை, விவசாயி, ஏழைப்பெண் திருமணம், வளையல்காரர், அணு விஞ்ஞானி, குழந்தை எனப் பட்டியல் நீளுகிறது.
“கேளு, தெரிந்ததைச் சொல்கிறேன், இல்லாட்டி தெரிஞ்சுண்டு சொல்றேன்” என்று அவர் நீதிபதி இஸ்மாயிலிடம் சொல்வதைக் கேட்கும்பொழுது அவர் ஞானம் தெரிகிறது.
எல்லா மதத்தினரையும் மதிக்கவேண்டும் என்றும், உண்மையான பகுத்தறிவு எது என்பதைப்பற்றியும் சொல்லும்போது போலி மதவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படுகிறது.
ஸ்வாமிகளின் கனகாபிஷேகம் நிகழ்ச்சி நம்மை அப்படியே 90க்கு அழைத்துச்செல்கிறது. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளாக நடிக்கும் அந்த நபர் பாடியே அச்சு அசல்..
ஒவ்வொரு நடிகரையும் தேடித்தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஓ, யாரது.. திருமதி அருணா சாயிராமா.. அட ஆமாம். நேரே மேடைக்கே வந்து ஸ்வாமியின் முன்னால் பாடுகிறார். மகுடத்திற்கு மேல் மேலும் ஒரு வைரம் வைத்ததுபோல் இருந்தது.
ஸ்வாமிகளின் பல பருவம் முதல் முக்திவரை காட்டுகிறார்கள். குறிப்பாக ஸ்வாமியின் ‘ஒரு நாள்’ என்னென்ன செய்கிறார் என்று காண்பிக்கிறார்கள். நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஸ்வாமிகள்.
அட அதற்குள்ளே இரண்டரை மணிநேரம் முடிந்துவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. கண்டிப்பாக இந்த நாடகம் நம் மனதில் அமைதி மற்றும் பக்தி என்ற விதையை விதைத்திருக்கிறது. இது ஆலமரமாக வளர்ந்து நம்மைச் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறோம்
டைரக்டர் சார்… இரண்டாம் பாகம் ரெடியா? நாங்க ரெடி. .
சரித்திரம் பேசுகிறது – யாரோ
பாஹியான்-1
வாசகர்களே!
அடுத்து வருவது விக்ரமாதித்யன் என்கிற இரண்டாம் சந்திரகுப்தன் என்னும் மாமன்னனின் கதை.
அது வெகு விரைவில்…
அதற்கு முன் இன்னொரு மனிதன் செய்த செயல்களால் சரித்திரமே பெரும் பயன் அடைந்ததுடன் அவனைப் போற்றவும் செய்கிறது.
பொதுவாக…
‘மன்னர்கள்’ சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது சற்று எளிது.
ஆனால் ‘சாமானியன்’ சரித்திரத்தில் இடம் பெறுவது அரிது.
அதிலும் சரித்திரம் எழுதியே சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது வெகு அரிது.
(அட.. என்னைச் சொல்லவில்லை! ஹா ஹா !!)
அப்பேர்ப்பட்ட ஒருவன் அந்நாளில் இருந்தான்.
அவன் ஒரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’!
பாஹியான்!
அவன் கதை படிப்போம்:
அந்நாளில் சீனா நாடு பாரதவர்ஷ என்கிற பாரத நாட்டின் சிறப்பையும், அறிவுச்செல்வதையும் அறிந்து அதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. தங்களுக்குப் பிடித்த புத்த மதத்தின் பிறப்பிடம் பாரதம் என்பதால் அதன் மீது சீனா பெரும் அன்பு கொண்டிருந்தது.
கி.பி. 400ல் அந்நாட்டில் பாஹியான் என்ற அறிவாளி இளைஞன் ஒருவன் இருந்தான்.
‘புத்த மதம் சீனாவில் சரியான கொள்கைகளால் அமைக்கப்படவில்லை. பாரதம் சென்று அந்தத் தத்துவங்களை அறிந்து கொள்ளவேண்டும்’ என்று முடிவெடுத்தான்.
தனது நாட்டின் அறிவு ஜீவிகளுடன் ‘பாரத பயணம்’ செல்ல ஒரு குழு அமைத்து பயணத்தைத் துவங்கினான். அந்தப் பயணம் 15 வருடம் நீடிக்கும் என்று அவன் அன்று கனவிலும் எண்ணவில்லை.
பாதையோ நெடியது!
பயணமோ கொடியது!
போகுமிடம் வெகு தூரம்!
புத்தர் பிறந்து வளர்ந்து ஒளியூட்டிய இந்தியா அவர்களை ஆகர்ஷித்தது!
மனத்திண்மையே அவர்களுக்கு சக்தி கொடுத்தது!
காரகோரம் நெடுஞ்சாலை வழியாக இந்தப் பயணிகள் பல மாதங்கள் நடந்து வந்தனர்.
பயணம் தொடர்ந்தது.
முதலில் ஷன்ஷன் (Shanshan) சென்றடைந்தனர்.
அங்கு நாலாயிரத்துக்கும் மேலான மக்கள் புத்த சமயத்தைக் கொண்டாடி வந்தனர்.
ஒப்பிடமுடியாத கடினமான பாதைகள்…
கோபங்கொண்டு தாறுமாறாய் ஓடும் நதிகள்…
பனிமழையும் பனிக்கட்டிகளும் மலை வழியைக் கொடூரமாக்கியது.
இவை அனைத்தையும் கடந்து பாஹியானும் நண்பர்களும் ‘கோடான்’- என்ற சீனாவின் எல்லைப்புற நகரத்தை அடைந்தனர்.
அது பட்டுச்சாலையின் (silk road) ஒரு கிளையில் இருக்கும் நகரம்.
அங்கு பத்தாயிரத்திற்கும் மேலான மகாயான புத்தப் பிக்ஷுக்கள் இருந்தனர்.
‘கோமதி’ என்ற புத்த விஹாரத்தில் அனைவரும் இருந்தனர்.
அங்கு மணி ஒன்று அடித்தவுடன் மூவாயிரம் பிக்ஷுக்கள் உடனடியாக உணவறையில் கூடினர்.
கோடானில் இப்படிப்பட்ட விஹாரங்கள் பதினான்கு இருந்தது.
வீதியில் நடந்து வந்த பாஹியான் ஒரு மாபெரும் விஹாரத்தைக்கண்டு மலைத்துப்போனார்.
அருகில் நடந்த வயோதிகரிடம்:
‘ஐயா! இந்த விஹாரம் இவ்வளவு அழகாக இருக்கிறதே.
இதன் சரித்திரத்தைக் கூறுங்கள்’ – என்றான்.
சீன மொழியில் தான் கேட்டான்.
ஆனால் அது ‘உங்களுக்கு’ புரியாதே!
அதனால் தமிழில் எழுதுகிறேன்!
வயோதிகன்:
“இதைக் கட்டுவதற்கு 80 வருடங்கள் பிடித்தது. அதற்குள் மூன்று அரசர்கள் வாழ்ந்து மறைந்தனர். கட்டிடத்தின் மேல் ‘வெள்ளி’ – ‘தங்கம்’ இவற்றால் செய்யப்பட்ட தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.”
‘ஆஹா! புத்தர் பெருமை அகில உலகிலும் பொன்னொளி போல் வீசுகிறதே’ – பாஹியான் புளகாங்கிதம் அடைந்தார்.
அதன் பிறகு சில நகரங்கள் தாண்டி, மிகவும் சிரமப்பட்டு, ஆயிரக்கணக்கான பாறைப்படிகளைக் கடந்து சிந்து நதியின் தீரம் வழியாக நடந்தனர்.
கயிற்றுப் பாலம் மூலம் சிந்து நதியைக் கடந்தனர்.
கரணம் தப்பினால் மரணம்.
நதியைத் தாண்டியவுடன் அவர்களை அங்கிருந்த புத்த பிக்ஷுக்கள் வரவேற்றனர்.
“நீங்கள் வரும் கிழக்கு நாட்டில் புத்தரை வழிபடும் மக்கள் உளரா?’ என்று வினவினர்.
பாஹியான்: “எங்கள் நாட்டில் மட்டுமல்ல. வழி எங்கும் கண்டோம்”
சென்ற இடங்களில் எல்லாம் ‘புத்தம் சரணம் கச்சாமி’- என்ற முழக்கம்.
பாஹியான் காந்தாரம் வந்தடைந்தான்.
தக்ஷசீலா நகர் வந்தடைந்தனர்.
அங்கு கனிஷ்கர் அமைத்த 400 அடி உயரமான கோவிலைக் கண்டனர்.
நகரெங்கும் புத்தர் பிரான் வாழ்க்கை பற்றிய பொருட்கள் காணப்பட்டன.
அவரது காலடித் தடயங்கள்..
அவரது துணிகளைக் காய வைத்த கல்..
அவரது பிச்சைப் பாத்திரம்..
இப்படிப் பலப்பல பொருட்கள்…
அனைத்தும் கண்டு பாஹியான் கண்களில் நீர் மல்கினான்…
அடுத்து நகரஹரா (இன்றைய ஆப்கானிஸ்தானத்தில் ஜலாலாபாத்) என்ற நகரத்தை அடைந்தனர்.
அங்கு புத்த கோவிலில் புத்தரின் மண்டையோடு வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு அண்டை நாட்டு மன்னர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி காணிக்கைகளைச் செலுத்திவந்தனர்.
கோவிலில் புத்தரின் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் எப்பொழுது பஞ்சம் வந்தாலும் அந்த ஆடைகளை வெளியே எடுத்துப் பூஜை செய்தால் – பஞ்சம் அகன்று விடுமாம்.- இது அந்த நாட்டு மக்களின் நம்பிக்கை…
பாஹியான் கூட வந்த குழுவில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சீனாவுக்குத் திரும்பிச் சென்றனர்.
பாஹியான்கூட இருந்த இருவரில் ஒருவன் ‘ஹுய் சிங்’..
பனி மலையைக் கடக்கும் போது…
ஒரு பயங்கர குளிர் காற்று வீசியது.
உறைந்து போன யாத்திரிகர்கள் பேச முடியாமல் தவித்தனர்.
ஹுய் சிங்-ஐ குளிர் நோய் தாக்கியது..
அவன் வாயில் வெள்ளை நுரை வந்தது..
“பாஹியான்! இங்கிருந்தால் நாம் எல்லோரும் செத்துப்போவோம்.
உன் உடல் வலு இருக்கும் போதே இந்த மலையைக் கடந்து சென்று விடு..”
பேச்சு முடியும் போது.. அவன் மூச்சும் நின்றது.
“விதியை யாரே வெல்ல வல்லார்” – பாஹியான் நொந்தான்.
காந்தாரத்தைக் கடந்து மீண்டும் சிந்து நதியைக் கடந்து இன்றைய பஞ்சாப் பகுதி வந்தடைந்தான். அங்கும் புத்த மதம் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டது.
பஞ்சாப் முழுதும் புத்தரின் தாக்கம் பெரிதும் இருந்தது.
யமுனை ஆற்றங்கரையில் பல புத்த விஹாரங்கள் இருந்தன.
மெல்ல மெல்ல … மதுராபுரி வந்தனர்.
அப்பாடா! ஒரு வழியாக குப்த சாம்ராஜ்யம் வந்தாயிற்று..
புத்த மதத்தின் ஆதிக்கம் குறைந்து- இந்துக்கள் நிறைந்த நாடு துவங்கியது…
(மதுரா)
பாஹியான் பிறகு எங்கெங்கு சென்றார்?
கண்ட காட்சிகள் என்ன?
இனியாவது அவர் பயணம் இனிதாக இருக்குமா?
சரித்திரம் அந்த விடைகளுடன் உங்களுக்காகக் காத்திருக்கும்.
நீங்கள்?
பத்து கோடி மக்கள் பார்த்த 2 நிமிடக் குறும் படம் !
பாராட்ட வார்த்தைகளே இல்லை !
பிம்பம் – வைதீஸ்வரன்
கட்டிலில் இருந்து எழுந்துகொண்டு கையைத் தேய்த்துக் கண்ணைக் கசக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்….
விடிந்து வெகு நேரமாகி விட்டதோ!!..விடியப் போகும் இந்த நாளைப் பற்றி நேற்று இரவெல்லாம் எனக்குள் பரபரப்பாக இருந்தது. அநேகமாகத் தூக்கம் வரவேயில்லை. விடிவதற்காக இரவை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
ஆறு மணிக்கே எழுந்துவிடவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். இந்த ஆறு மணி நான் என்றோ பிறந்த சுப வேளை. இதே தேதியில் எழுபது வருஷங்களுக்கு முன்னால் பிறந்த அதே தேதி… அதே ஆறு மணி… மீண்டும் இன்று!! ..
தினந்தினம் வேகமாக இறந்து கொண்டிருக்கும் இந்த முதுமையில் என் இன்றைய பிறந்த நாள் பற்றி எனக்குள் ஏனோ ஒரு அர்த்தமில்லாத …அக்கறை….பரபரப்பு…..
ஏதோ அசட்டு ஆசையாகக்கூட…இருக்கலாம்.. எழுந்தவுடன் என்னை சூழ்ந்துகொண்டு என் மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரும் கூடி நின்று என்னைக் கொண்டாடித் தழுவி என்னை நமஸ்காரம் செய்து “”என்னை.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டீ “ என்று ஆசையுடன் மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளவேண்டும். சிரித்துச்சிரித்துப் பேச வேண்டும்……என்று ஒரு…ஏக்கம்….
இப்போது யாரும் என்னுடன் இல்லை. எதுவும் நேரவில்லை. கையைத் தேய்த்துக்கொண்டு தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறேன் எனக்கு நானே பேசிக் கொண்டு..
மங்கலாக எதிரே தெரிகிறது வெற்றுச்சுவர்.. யாரும் என்னிடம் இல்லை. யாரும் வரவில்லை. இந்த முக்கியமான நாளைப் பற்றி யாருக்கும் அக்கறையோ ஞாபகமோ இருக்குமோ இருக்காதோ!!.
எல்லோரும் எங்கோ தூரத்து மூலையில் ஒளிந்து கொண்டு நான் உயிரோடிருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள். இல்லை இன்னும் உயிரோடிருக்கிறேனா என்று கவலையுடன் பார்க்கிறார்கள். பார்க்காமலும் இருக்கப் பழகிக்கொண்டு விட்டார்கள்
என் மகன்களும் உறவுகளும் எல்லோருமே உலகத்தில் கால தூரங்களுக்கு அப்பால் உள்ள வேறு தேசங்களில் எட்டாமல் இருந்து கொண்டு என் அந்திம நகர்வின் முடிவான நிறுத்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் மெள்ள எழுந்து அடுப்பில் வென்னிர் சுடவைத்து அதில் டீத் தூளைப் போட்டுக் கலக்கி இரண்டு வாய் குடித்தேன். நகர்ந்து கூடத்துக்கு வந்து அண்ணாந்து பார்த்தேன். சுவற்றில் மாட்டியிருந்த படங்களில் மகன் மகள் குடும்பங்களும் பேரன் பேத்திகளும் கூடி உட்கார்ந்து கொண்டு போட்டோக்காரனைப் பார்த்துஅச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்…
அவர்கள் கொஞ்சம் என்னைப் பார்த்தும் சிரிப்பதாக எண்ணிக் கொண்டு என்னை ஏமாற்றி மகிழ்ந்து கொண்டிருந்தேன். சிரித்துக் கொண்டேன்.. இருந்தாலும் துக்கம் தான் மிஞ்சியது.. யாரையாவது எந்த முகத்தையாவது ரூபத்தையாவது நேரில் பார்க்க முடியாத இந்த நிசப்தமும் தனிமையும் பாரமாக நெஞ்சை அழுத்தியது..
பீரோக் கதவில் மாட்டியிருந்த கண்ணாடி முன்னால் போய் நின்றேன். அங்கே அசைகின்ற ஒரே..முகம்… எனக்குத் தெரிந்த முகம்.. அது ஒன்று தான்…
Happy Birth Day too You ..” என்று கண்ணாடிக்குள் அந்த முகம் சொல்லிக் கொண்டிருந்தது … ஒரு பிம்பம் இன்னொரு பிம்பத்துக்க்கு வாழ்த்துக் கூறுகிறது.!!
தாழ்வாரத்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பின்கொல்லை வெளிச்சமாகத் தெரிந்தது.. ஆகாசம் பரந்து சிவந்திருந்தது… பசுமையான மரங்கள் பூக்களுடன் குலுங்கிக் கொண்டிருந்தது..
என் தனிமைக்கு சற்றும் ஒவ்வாத குதூகலமாக அந்த வெளிச்சமும் மரங்களும்!!
நான் வழக்கமாகக் காலையில் சாப்பிடும் அவல் பொரியைக் கிண்ணத்தில் போட்டுக்கொண்டு பின் கதவைத் திறந்துகொண்டு அங்கே போனேன். அங்கே இருந்த கல்மேடையில் உட்கார்ந்து கொண்டேன்.
காற்று மெதுவாக இதமாக . எனக்கானது போல்.. வீசியது. ஆறுதலாக என் மனசை ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.
மெள்ள மெள்ள இனிமையான மிருதுவான ஏற்ற இறக்க ஸ்தாயிகளில் மறைந்திருக்கும் பறவைகள் பல்வேறு தொனிகளில் என்னை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தன. ஏதோ என்னிடம் ஒட்டுறவுடன் பாசமுடன் செல்லமாக சீட்டியடித்து அழைப்பதைப் போல் ஒலித்தது.
வண்ண வண்ணமாக சீருடை அணிந்த என் பேரன் பேத்திகள் போல் குருவிகளும் கிளிகளும் மைனாக்களும் கிளைகளில் தோன்றித் தோன்றி மறைந்து எனக்கு வேடிக்கை காட்டி விளையாடிக் கொண்டிருந்தன.
நான் என் கையிலிருந்த அவல் பொரியைப் புல் வெளியில் ஆசையுடன் இறைத்தேன். பறவைகள் கூடிக்கூடி இறங்கி வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு பொரியை கொத்திக்கொத்தித் தின்று தலையாட்டிவிட்டு சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. இவைகளுக்கெல்லாம் இன்று ஏதோ கொண்டாட்டமாக இருப்பது போல் குதூகலிக்கின்றன. இது… எனக்காத்தானோ! அப்படித் தான் தோன்றியது.!
என் காலடியில் திடீரென்று பஞ்சுப் பூவைத் தடவியதுபோல் ஒரு மெது மெதுப்பு. குனிந்து பார்த்தேன். வெண்கல நிறத்தில் ஒரு குட்டிப் பூனை உடம்பை நெளித்து வாலை நீட்டி வளைத்து முறுக்கி உடல் சிலிர்த்து சிப்பிக்குள் முத்துப் போன்ற நீலக் கண்களை சுருக்கி என்னைப் பார்த்து “மியாவ்” என்றது. அண்ணார்ந்து பார்த்து… வாஞ்சையுடன்..
அதற்கு எப்படி என் பிறந்த நாள் ஞாபகத்துக்கு வந்தது?..
மனத்தில் சற்று முன் உழன்றுகொண்டிருந்த வெறுமை பனிபோல் சற்று கரைந்து போய்க்கொண்டிருந்தது. கையிலிருந்த அவல் பொரியை மேலும் வெளியெங்கும் இறைத்தேன்…
அப்போது அடுத்த வீட்டு சுவர் தாண்டி ஒரு சின்னப் பந்து எகிறி வந்து என் காலருகில் உருண்டு விழுந்தது… நான் சுவற்றைப்பார்த்தேன். “அந்தப் பந்து “” எனக்குத் தெரிந்த பந்து தான் .!!
“ பாட்டீ…பாட்டீ… அந்தப் பந்தை கொஞ்சம் தூக்கிப் போடுங்கோ பாட்டீ…” என்று கண்ணன் கத்தினான்…அடுத்த வீட்டுக் குழந்தைக்கு இதுதான் வழக்கமான… குறும்பு…
” நாம்ப விளையாடலாமா…பாட்டீ?..”
“ஏண்டா…கண்ணா… ஒங்கூட நான் எப்படீடா வெளையாட முடியும் கோந்தை…. எனக்கு வயசாயிடுத்து டா….”
என் பிறந்த நாள் ஞாபகம் எனக்கு மேலும் உறுத்தலாக வயதைக் கூட்டிக் காட்டியது. ..
“போ பாட்டி…பொய் சொல்லாதே! ஒனக்கு வயசாகல்லெ!! நீ இன்னிக்குத்தானே பொறந்தே! எனக்குத் தெரியுமே!..” பலமாக சுவற்றுக்குப் பின்னாலிருந்து சிரித்தான்… கண்ணன்
கண்ணனிடம் நான் என்றோ சொன்ன தகவல்..!!!!
குழந்தைகள் எதையும் மறப்பதில்லை. யாரையும் வெறுப்பதில்லை.
சுவற்றுக்குப் பின்னால் உள்ள கண்ணனைப் போல்தான் எல்லோரும் இருப்பார்களோ!! . யாரும் யாரையும் வெறுப்பதில்லை எதையும் மறப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாமல்.. இருந்தாலும்….
குறை என்னுடைய பிம்பத்தில்தானோ!!..
மறைப்பது என் மனச் சுவர்தானா??…………….
குவிகம் இலக்கியவாசல் – நிகழ்ச்சி விவரம்
குவிகம் இலக்கிய வாசலின் 31 வது நிகழ்வு
அசோகமித்திரன் அவர்களின் “காந்தி” என்ற சிறுகதை மிகவும் வித்தியாசமான சிறுகதை. அதைப்பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது கிருபாநந்தனின் ஆசை.
அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் மாலை 7 மணி அளவில் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
வாசகர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறோம்.
இனி , செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போமா?
( காணொளி : நன்றி விஜயன் )
செப்டம்பர் 30, சனிக்கிழமை
இலக்கியச் சிந்தனையின் 568 வது நிகழ்வு
” கவியோகி சுத்தானந்த பாரதி “
உரையாற்றியவர் : திரு. புதுவை ராமசாமி
அவரது பேச்சை இங்கே கேட்கலாம்.
தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 30 வது நிகழ்வு
நூல் அறிமுகம்
“நான் என்னைத் தேடுகிறேன்”
சுரேஷ் ராஜகோபால் அவர்களின் கவிதைத் தொகுப்பு
அறிமுக உரை : திரு ஆர். அரவிந்த்குமார் (கல்வியாளர், புதுவை)
அந்த உரையின் காணொளியை இங்கே காணலாம்.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாத குவிகம் வெளியீடும் அறிமுகமும்
பிரபல நாடக ஆசிரியரும் பல சிறுகதைகளின் ஆசிரியருமான ஈஸ்வர் அவர்களின் இரு குறுநாவல்களை ஒரே புத்தகமாக வெளியிட்டதில் பெருமை கொள்கிறோம்.
“பாஸ்டனில் ஒரு தேரடி” என்ற கதை முதல் பகுதியாக வருகிறது. அதே புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தால் “ஏரி காத்த ராமர்” என்ற கதை முதல் பகுதியாக வந்திருக்கிறது.
இதைப் புதுமை என்று சொல்லவில்லை; சற்று வித்தியாசமான முயற்சி.
அதன் அறிமுக உரை அரங்கு நிறைந்த மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவின் தொகுப்பும் திரு மாதவன் சுந்தரராஜன் பேசிய அறிமுக உரையும் பார்க்கலாம்.
அங்கிள் – அழகியசிங்கர்
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸில் இடம் பிடித்து அமர்ந்தவுடன், வண்டி கிளம்புவதற்குச் சரியாக இருந்தது.
என் மனநிலை. அது சரியாக இல்லை.
என் பக்கத்திலமர்ந்த அவளிடம் வேறுவிதமாக நடந்து கொண்டேன். நான் யாரோ அவள் யாரோ என்பதுபோல். எனக்கு அவள் மீது கோபம். ஆனால் இரைந்து கூச்சலிட்டுக் கோபத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. எனக்கு அது பொருந்தாத விஷயம். கோபத்தின் அலையில், சிந்தனையைச் செலவழித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுடன் பேச விரும்பவில்லை.
இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட உறவும், அதனால் ஏற்பட்ட பந்தமும், அந்தப் பந்தத்தின் விளைவால் ஏற்பட்ட பாசப் பிணைப்பும் இப்போது அவளைப் பார்த்துப் பேச வேண்டாமென்று தடுக்கிறது. முடியுமோ? அவள் சைகை செய்கிறாள். ” ஏன்? ஏன்?” என்று முணுமுணுக்கிறாள். அப்போது மூர்க்கமாகிப் போய் முறுக்கிக் கொள்கிறேன். கோபத்தை கண்களால் வெளிப்படுத்துகிறேன்.
காப்பி வேண்டும் என்கிறாள். பாராமுகமாக இருக்கிறேன். அவளுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதுபோல் பார்க்கிறாள். இல்லை, இல்லை அவளுக்கும் புரிகிறது. இதெல்லாம் சரியாகிவிடுமென்று தோன்றுகிறது.
“நிம்மதியாக இருப்போம்… நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள். அவர்கள் குழந்தையை சரியாகப் பார்த்துக் கொள்வார்கள்.”
“இருக்கட்டும். உனக்கு இரக்கமில்லை. அக்கறை இல்லை…”
“வேறு வழி.”
“ஏன் நீ லீவு போடக்கூடாது”
“லீவே இல்லை… அவர்கள் என்னைவிட நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.”
“உனக்கு எப்படி மனசு வந்தது… நீ பெத்தவள்தானே?”
அவள் பதில் பேசவில்லை. பேசப் பேச என் கோபம் எல்லை மீறி, வார்த்தைகள் கேட்கச் சகிக்காமல் போய்விடும். மௌனமானேன்.
எப்படிக் குழந்தையை விட்டுவிட்டு இருக்க முடிகிறது?
அவளுக்குத்தானே என்னை விட அன்பு அதிகமாக இருக்கவேண்டும். அவள் ஏன் யந்திரமாக இதை ஏற்றுக்கொண்டு இருக்கிறாள். புரியவில்லை. பெற்ற குழந்தையிடம் அதிக அன்பு செலுத்துவது பெற்ற தாயா? அல்லது தகப்பனா? என்று பட்டிமன்றம் வைத்தால் தகப்பன்தான் என்று வாதாடுபவள்போல் தோன்றுகிறது. பட்டிமன்றமும், அதைக் கேட்கிற கும்பலும், மனதில் நிழலாடி சகிக்க முடியாமலிருந்தது. இதெல்லாம் விரக்தி நிலையின் விபத்து. எதுவும் சகிக்க முடியாமல் தோன்றும்.
வண்டியின் வேகத்துடன், எண்ணத்தின் வேகமும் சேர்ந்து கொண்டது. எப்படி அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தொடங்கினேன் அந்த நிமிஷத்தில், என்பதும் ஆச்சரியமாக இருந்தது. என் பக்கத்திலிருந்தாலும், நான் அறியாத ஒருத்தியாகத் தென்பட்டாள். ஒரு அறியாத பெண் பக்கத்தில் அமரும்போது ஏற்படும் கூச்சம் தொற்றிக்கொண்டது. அவள் என்னைப் பார்க்கும்போது யாரோவாக உணர்ந்தேன். கோபத்தின் எல்லையில் அவளுடன் பேச விரும்பவில்லை. அவளும் புரிந்துகொண்டு மௌனமானாள்.
சில மணி நேரத்திற்கு முன், ஷ்யாம் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, உள் அறையிலிருந்து, ரோடைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்ணில்படாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
குழந்தையை அங்கே விட்டுவிட்டுச் செல்வது என்பது உறுதியான பிறகு, அந்தக் கணத்தில் பிரிந்து, இன்னும் சில மாதங்கள் கழித்தே பார்க்க வேண்டுமென்ற உணர்வு, தேவையற்ற சங்கடத்தை உண்டாக்கியது. இதை எதிர்த்துச் சொல்லவேண்டுமென்ற எண்ணம் அப்போது எழவில்லை.
அவள் அம்மாவும், அக்காவும் பிடிவாதமாக இருந்தார்கள். ஒரு சில மாதங்களாவது குழந்தையுடன் இருக்கப் போகிறோமென்ற உணர்வு அவள் அக்காவிற்கு சந்தோஷத்தைத் தரலாம். இல்லாதவர்களுக்குத்தான் குழந்தையின் அருமை புரியுமென்பதால், எந்த நிமிஷமும் அவள் அக்காவின் மனத்தை புண்படுத்தக்கூடாது என்றுபட்டது.
அவள் எனக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், மறுப்பைத் தெரிவித்திருப்பேன். அவள் இது மாதிரியான விஷயங்களில் முன்னதாக முடிவெடுத்து விடுவாள். ஒரு வேளை இதைப் பெரிய விஷயமாக நினைத்திருக்கமாட்டாள். நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா? உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயமாக ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். சந்தேகம் இல்லை. பின் ஏன் இந்த விஷயம் குறித்து மனதைப் போட்டுக் குடைய வேண்டும்.
அங்கிருந்து கிளம்பி வரும்போது, ஜன்னல் வழியாக ஷ்யாம் எங்களைப் பாத்து விடக்கூடாது என்பதற்காக, தெரியாமல் வந்தோம். பார்த்தால் ஒரு வேளை ஆர்ப்பாட்டம் செய்யலாம்.
பெங்களூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பிறகுதான், ஷியாம் நினைவும், அவள் நடந்து கொண்ட விதமும் என்னுடைய வெளிப்படுத்த முடியாத இயலாமையையும் சேர்ந்து சித்திரவதை செய்தன. அதைப்பற்றி யோசிக்கயோசிக்கப் புரிபடாத ஆத்திரம் என்னுள் மண்டிக் கிடந்தது.
சென்னையை வந்தடைந்த பிறகும், நானும் அவளும் அறிமுகமில்லாதவர்கள்போல் இறங்கினோம். நிழல்போல் அவள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். பேசுவதைத் தவிர்த்தோம். வழக்கம்போல், சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தோம். பஸ் வருவதும் போவதுமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டிற்குப் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியின் நெடியும், அங்கு நெளிந்த நோயின் சூழலும் வெறுப்பாய் இருந்தது. வெள்ளை உடையில் தெரிந்த நர்ஸ்களின் முகங்களில் எந்திரத்தனம்.
நாங்கள் எதிர்பார்த்த பஸ் வந்தது. அவள் மீது கோபம் இருந்தாலும், பஸ்ஸில் ஏறிவிட்டாளா என்று பார்க்கத் தோன்றியது. என் கோபத்திற்கு எதிர்க் கோபமாய் “உன்னுடன் வரமாட்டேன்” என்று போய்விடுவாளோ என்றும் பட்டது. பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். உற்சாகமில்லாமலிருந்த மனநிலை. பஸ்ஸைவிட்டு இறங்கியபிறகு ஒன்றைக் கவனித்தேன். பஸ்ஸில் என் பர்ஸ் பறி போயிருந்ததை. கோபத்திற்கான பலன் கிடைத்துவிட்டதாக நினைத்தேன். கவனக்குறைவால், கோபத்தில் உச்ச நிலையில், உணர்ச்சி வேகத்தில் கொதி நிலையில் என்னுள் நடப்பது தெரியாமல் போய்விட்டது.
சில தினங்களுக்குப் பிறகு, என்னிடமிருந்த கோபம் நழுவிவிட்டது. நானும் அவளும் சகஜமாகப் பழக ஆரம்பித்தோம். தேவையில்லாமல் எனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கோபத்தை நினைத்து, வெட்கமாக இருந்தது. கோபம் போனபிறகு, அவள் என்னிடம் திரும்பி வந்து விட்டாளென்று தோன்றியது. வெட்கமில்லாமல் அவளுடன் பழகிய தருணங்கள் ஞாபகத்திற்கு வந்தது. கூடுதலான சந்தோஷத்தை தரத் தவறவில்லை. குழந்தை எல்லாம் மறந்து அவளுடன் ஒன்றிவிட்டதாகப்பட்டது. நாட்கள் எப்படி ஓடிற்று என்பது தெரியவில்லை.
சில மாதங்கள் கழித்து நானும், அவளும், குழந்தையையும், அவள் அம்மாவையும் அழைத்து வருவதற்காகத் திரும்பவும் பெங்களூர் சென்றோம். இப்போது செல்லும்போது, கரைகடந்த உற்சாகத்துடன் இருந்தேன். வண்டியில் என் பக்கத்தில் அவள் வீற்றிருப்பது பெருமிதமாக இருந்தது. அவள் ஏதோ ஒரு வஸ்து போலவும், அந்த வஸ்து என்னிடம் ஒட்டிக்கொண்டதுபோலவும்பட்டது. அவள் தூங்கும்போது உரிமையுடன் என் தோளில் சாய்ந்து படுத்தாள். அவளுக்கு அப்படித் தூங்குவது பிடிக்கும். எனக்கும்தான்.
அவள் அக்கா வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஷ்யாமைத் தூக்கிக்கொண்டு கொண்டாடினாள். பையனை வினோதமாகப் பார்த்தேன். அவன் நிறத்தில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் இளைத்துவிட்டதுபோல் கண்களில் தென்பட்டான். இதைத் தெரிவித்தவுடன் சில தினங்களுக்கு முன் சுரம் வந்து அவன் அவதிப்பட்டதாகச் சொன்னார்கள். குழந்தையை கொஞ்சுவதற்குக் கைகளை நீட்டினேன், வருவதற்குத் தயக்கம் காட்டினான்.
அம்மாவைத் தெரிந்த அளவிற்கு என்னைத் தெரியவில்லை. விளையாட்டுக் காட்டினேன். அதை ரசித்தாலும் என்னிடம் வரவில்லை. அல்லது வலுக்கட்டாயமாக அவனை அழைத்துக் கொஞ்சினாலும், வர விரும்பவில்லை என்பதோடல்லாமல் சிணுங்கவும் தொடங்கினான். பக்கத்தில் நின்ற அவளை கோபத்துடன் பார்த்தேன். அவள் என்னை சமாதானப்படுத்தினாள்.
” பார்த்து ரொம்பநாள் ஆயிற்றே. அடையாளம் தெரியலை” என்றாள் அவள் அம்மா. குழந்தையின் இந்தச் செய்கை அவர்களிடம் சிரிப்பை உண்டாக்கியிருக்கும். எனக்கோ அந்த இடத்தைவிட்டுக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. அவ்வாறு செய்யவில்லை. செய்திருந்தால், அவர்களை அவமானப்படுத்தியிருப்பதைப்போல் தோன்றியிருக்கும். மேலும், சில மாதங்களாக அவர்கள் என் குழந்தையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் வேறு வழியில்லாமல், குழந்தையை அங்கு விட்டிருக்கிறேன். இத்தருணத்தில், கோபத்தை வெளிப்படையாகக் காட்டினால், அது மரியாதைக்குரிய ஒன்றாகத் தோன்றாது.
ஷ்யாம் என் பக்கத்தில் வருவதற்கே வெட்கப்பட்டவன் போலிருந்தான். அவர்களோ அவனிடம் என்னைக் காட்டிப் பக்கத்தில் போகும்படி சொன்னார்கள். இப்படிச் சொல்வது கூட ஏதோ விளையாடுவதுபோல் தோன்றியது. மறைமுகமாகக் கிண்டல் செய்வது போலிருந்தது. அதனால் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவது போலிருந்தது. அவர்களின் வற்புறுத்தல் தாங்காமல், அவன் என்னிடம் வந்தான். தயங்கிக் தயங்கி நின்றான்.
பிறகு, மெதுவாக என்னைப் பார்த்து ‘ ” “அங்கிள்” என்று கூப்பிட்டான்.
ஜிமிக்கி கம்மல் பாட்டு – கலக்கல்
இப்போதைக்குக் கலக்கல் பாட்டு இந்த ஜிமிக்கி கம்மல் தான்
எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ் )
சூரிய தேவனுக்கு ஸந்த்யாவைத் தனியே சந்தித்ததில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. மற்றவர்கள் யாரும் வருவதற்குமுன் அவளது தளிர் மேனியை இறுக்க அணைத்து அவளது சிவந்த கன்னத்தில் தன் இதழைப் பதிக்க விரும்பினான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனது ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கியது.
அதைச் செயலாற்றப் பாய்ந்து சென்ற அவன் கரங்களை ஒரு கண்ணாடித் திரை தடுத்தது. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரையை அமைத்தது யார்? அவள் தந்தை விஸ்வகர்மாவா? ஒருவேளை திரைக்கு அப்புறம் இருப்பது ஸந்த்யாவா அல்லது அவளது பிம்பமா?
சூரியதேவனின் தடுமாற்றத்தையும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட கோபத்தையும் பார்த்த ஸந்த்யாவால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை.
“ பிரபு! நம்மைப் பிரிப்பது திரை மட்டுமல்ல. எனது படைப்பின் ரகசியமும்கூட. நான் உங்களுக்கென்றே பிறந்தவள்தான். ஆனால் தங்களின் வெப்பப் பார்வையைக்கூடத் தாங்க முடியாத அளவிற்கு என்னை மென்மையாகப் படைத்துவிட்டார் பிரம்மதேவர். என் தந்தையாலும் அதை மாற்ற முடியவில்லை.”
அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. சூரியதேவன் துடித்துப் போனான்.
“பிரபு ! நீங்களும் நானும் சங்கமித்த அந்தச் சில கணங்களில் நான் நெருப்பில் இட்ட பொன்போல உருக ஆரம்பித்துவிட்டேன். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தங்கள் திருப்பார்வைபட்டு உடனே மறையும் பனித்துளியாக நான் இருந்தால் எனக்கு அதுவே போதும்.”
“இல்லை, ஸந்த்யா இல்லை! உன்னுடன் என்றென்றும் வாழத்தான் விரும்புகிறேனே அன்றி உன்னை உருக்கி அழிக்க விரும்பவில்லை. ஆனால் உன்னைப் பார்த்த அந்தக் கணத்திலேயே நான் என்னையே மறந்தவனாகி விட்டேன். நீ இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறி விடுவேன். இதற்கு ஒரு வழி இல்லாமல் போகாது. ”
“ இருக்கிறது சூரியதேவா!” என்று கூறிக் கொண்டே விஸ்வகர்மா வந்தார்.
“ என்ன வழி, சொல்லுங்கள் “ என்றான் சூரியதேவன் ஆவலுடன்.
“ஸந்த்யா தங்களை மணாளனாக அடைய உண்மையிலேயே பாக்கியம் செய்தவள். ஆனால் நீங்கள் அவளை அடைய வேண்டுமானால் உங்கள் உடலின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.”
“அது எப்படி முடியும் விஸ்வகர்மா அவர்களே?”
“ நான் கைலாசத்தில் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற காந்தப் படுக்கை இருக்கிறது. அதில் தங்களுக்குச் சந்திரனைக் கொண்டு சந்திர காந்தச் சாணை பிடிக்கவேண்டும். அதைச் சூரிய கிரகணம் என்றும் சொல்லலாம். அது சில நாழிகைகள்தான் பீடிக்கும். அப்படிச் செய்யும்போது உங்களின் பிரதிபலிப்பு, உக்கிரம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். சில நொடிகள் நீங்கள் முற்றிலும் இருளடைந்து மறைந்ததுபோன்ற உணர்வு உண்டாகும். அந்த சிகிச்சை முடியும்போது உங்களிடமிருந்து ஒரு வைர மோதிரம் தோன்றும். அதை ஸந்த்யா அணிந்துகொண்டாள் என்றால் அதன் பின் உங்கள் உக்கிரம் அவளைப் பாதிக்காது. ஆனால் இது நிரந்தரமானது அல்ல. வருடா வருடம் தாங்கள் இந்த சாணை பிடித்துக் கொண்டால்தான் அவளுடன் நீங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ முடியும். இது தங்களால் முடியக்கூடிய காரியமா?” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டார் விஸ்வகர்மா.
சூரியதேவன் என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான்.
ஸந்த்யாவின் கண்ணீர் ததும்பும் விழிகள் அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற துடிப்பில் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
எமியின் பாந்தமான அழகைப்போலவே அவளுடைய குரலும் அந்த இலக்கியக் கூட்டத்தில் உள்ள மக்களை வசீகரித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
எவ்வளவு புண்ணியம் செய்தவள் எமி என்கிற யமுனை என்பது யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் எடுக்கப்போகும் சமயத்தில் அவரைக் குழந்தையாகத் தன் மடியில் தாலாட்டப்போகும் பெருமை பெறப்போகிறவள்.
கிருஷ்ணன் அவதரித்த உடனே அவரைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு அவரது தந்தை யமுனை ஆற்றைக் கடக்க வருவார். அப்போது அவருக்கு வழிவிட்டு அந்தக் குழந்தைக் கிருஷ்ணனின் பாதங்கள் கூடைக்கு வெளியே இலேசாகத் தெரியும்போது தன் நீரால் வருடி பாதபூஜை செய்யும் பேற்றைப் பெறப்போகிறவள். அதனால் கங்கையிலும் அதிக புனிதத்தைப் பெறப்போகிற புண்ணிய நதியல்லவா அவள்?
“ உங்கள் அனைவரையும் இங்கு இந்த நல்ல நாளில் சந்தித்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல பொழுதை எனக்கு அளித்த என் அன்பு அண்ணனுக்கு நன்றி சொல்வதா, அல்லது சிறப்பாகப் பேசி அனைவரையும் அன்பினில் தோயச்சொன்ன ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி சொல்வதா, அல்லது நரகத்தில் வாடும் ஜீவன்களுக்காக வாதாடி என்னை அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவைத்த அன்பருக்கு நன்றி சொல்வதா என்று தெரியாமல் அனைவருக்கும் ஒருசேர நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று சொர்க்கபுரிக்கு அழைத்து வந்த என் சகோதரன் நாளை நரகபுரிக்கு அழைத்துச்செல்ல உத்தேசித்திருக்கிறார். என் அண்ணனுடன் செல்லும்போது எனக்கு நரகமும் சொர்க்கமாகவே தெரியும்.
இருந்தாலும் உண்மையான நரகம் என்பது நாம் அன்பு கொண்ட உள்ளத்திலிருந்து பிரிந்து வாழ்வதுதான். உங்கள் புரட்சிக் கவிஞன் கேட்கவில்லையா? “ நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ? என்று.
அந்த வகையில் நான் சிறு வயதிலேயே நரகத்தை அனுபவித்திருக்கிறேன்.
என்னுடன் இணைந்தே பிறந்த என் அண்ணன்மீது எனக்கு இருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. நாங்கள் அன்னை என்று நினைத்த எங்கள் சிற்றன்னை எங்களைக் கொடுமை செய்தபோது எனக்கு ஆறுதல் என் அண்ணன்தான். நான் பட்ட சித்திரவதைகளைக் கண்டு கோபத்தில் ஆழ்ந்த என் அண்ணன் சிற்றன்னையைக் காலால் உதைக்கும் அளவிற்குப்போனான். அதனால் அவன் கால்களைக் கொதிக்கும் நெருப்பில் போட்டது மட்டுமல்லாமல் அவனை எங்கோ காட்டிலும் விட்டுவிட்டு வந்துவிட்டாள் எங்கள் சிற்றன்னை. அவனைப் பிரிந்து நான் அழுத அழுகை இன்றைக்கு நினைத்தாலும் என்னை வாட்டுகிறது.
( இதைப் பற்றிய விவரமான கதைக்களம் எமபுரிப்பட்டணத்தின் முதல் பாகத்தில் அதற்கான காலம் வரும் போது விவரிக்கப்படும்)
அதுதான் நரக வேதனை என்பதனை உணர்ந்தேன். அதனால் நரகத்தில் துன்பப்படும் ஜீவன்களின் வேதனைகளுக்கு ஒரு வடிகால் தேட நான் முயல்வேன் என்று இப்போது உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுதான் என் தந்தையின் கட்டளையும் கூட.
உங்கள் அன்பிற்கு நன்றி. வணக்கம்.”
(தொடரும்)
பொருள்வயிர் பிரிவு – சிவ.விஜயபாரதி


இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல… – ஈஸ்வர் (திடீர் த்ரில்லர்)
இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல…
ஈஸ்வர்.
திருநெல்வேலி சிவசங்கரன் சுப்பிரமணியன் என்ற மணி சாப்-, மாதுங்காவின்அந்தப் பழைய பல மாடிக் குடியிருப்பின் முன்,தன்னுடைய 89-ம் வருட பத்மினி-பிரீமியரை நிறுத்தி, கார் கதவைத் திறந்தபொழுது மணி எட்டு –பத்து. கண்களில்பட்ட பெயர் , மங்கிய வெளிர் நீல மகாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ்.
அங்கங்கே கவலையான முகங்கள், இரண்டாவது மாடி பால்கனியைப் பார்த்தவாறு குசுகுசுத்துக் கொண்டிருந்தன. மூன்று போலீஸ் கட்டடத்தைப் பாதுகாத்துக்கொண்டிருந்தது. உள்ளே வர முயன்று கொண்டிருந்தவர்களை மராத்தியிலும், ஹிந்தியிலும் மிரட்டுவதிலும், விரட்டுவதிலும் மும்முரமாக இருந்தது.
பயிற்சி பெற்ற போலீஸ் உடம்பின் மிடுக்கு இருந்தாலும், மணியின் முகத்தில் அதை மீறி சற்றே நளினமான நாகரிகம் இருந்தது. இவனிடம் ஏதோ இருக்கிறது என்கிற மாதிரி கூர்மைமிகு கண்கள். வாயிலில் நிற்கும் போலீஸ் சல்யூட் வைத்தது.
“ஊப்பர் சார்… .. ஃப்ளாட் நம்பர் சாத்”.
மணி அவசரப்படவில்லை. நிதானமாக அந்த வீதியின் நீள, அகலங்களில் அவன் பார்வை வியாபித்தது. எதிர் திசை அபார்ட்மென்டையும் ஒரு அலசல்.
மும்பையில் இது இந்த மாதத்தின் மூன்றாவது கொலை. கடந்த இரண்டு மாதங்களில் நடந்த, ஐந்தாவது அமைதியான கொலை.
இந்த முறை ஏதோ ஒரு பாலக்காட்டுப் பாட்டி. பிள்ளை , துபாயில். பல வருடங்களுக்கு முன்னர் பம்பாயில் குடியேற்றம். இப்பொழுது, மும்பையிலேயே கடைசி மூச்சை, கஷ்டப்பட்டு விட்டிருக்கிறாள். தனிமை வாசம். கொலையின் நோக்கம்…?
உடமைகள் ஏதேனும் காணாமல் போயிருக்கின்றனவா? சொல்வதற்குக்கூட ஆட்கள் யாரும் கிடையாது. துபாய் பையன் வந்தபிறகே தெரியும்.
வயர்லெஸ்ஸில் மணிக்கு முன்கூட்டியே தகவல் வந்துவிட்டது. கடந்த முறைகள்போல், அவன் இந்த முறை கடைசியாகக் கூப்பிடப்படவில்லை. முன்கூட்டியே தகவல் வந்தது. முதலில் அவன் அங்கு வந்துவிடவேண்டும். மேலிடத்து விருப்பம்.
டி எஸ் பியும், மாதுங்கா இன்ஸ்பெக்டரும் ஏற்கெனவே அங்கு இருந்தார்கள். டி எஸ் பி, பூனாக்காரன். இளம் வயதை இலேசாகக் கடந்துகொண்டு இருக்கின்றவன். விவரமானவன். சிவசேனாவின் செல்லப் பிள்ளை என்று , சில முன்னாள் போலீஸ் வட்டாரங்கள் , காங்கிரஸ் காதில் கிசுகிசுக்கும் அளவுக்கு, பத்திரிகை பிரபலம் ஆனவன். ஆனால் கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் , அது இது என்று எதிலும் மாட்டிக்கொள்ளாதவன். டி எஸ் பி . மல்ஹோத்ரா ராம்குமார் ஆங்கிலத்தை அழகாகப் பேசுவான். அவனுடைய உயரம், மிடுக்கு, நிறம் ஆங்கில உச்சரிப்பு இவற்றிற்காகவே அவனுக்கு ஏராளமான விசிறிகள் உண்டு.
மணி -சாப்புடன் சேர்ந்து அவனும் செயல்படவேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசின் ஆணைதான் இந்த முறை , அவனுக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது. மணியின் மீது அவனுக்குப் பொறாமையோ , கசப்போ கிடையாது. இது மணிக்கும் தெரியும்.
ஏழாம் எண் ஃபிளாட். வாசலிலேயே மல்ஹோத்ரா நின்று கொண்டிருந்தான் .
. “ வழக்கம்போல்தான். உயிரு போயி இருபது மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கலாம். டாக்டர் உள்ளே இருக்காரு.”
“ மரணத்துக்குக் காரணம்?”
“அதுவும் வழக்கம்போலத்தான்.விழா ஊசிதான். சயனைட் டெத்.. பேட் ஆ க்ருயல் மர்டர்.”
“பையனுக்கு சொல்லியாச்சா?”
“ம். . துபாயில சார்டட் அக்கௌண்டண்டா இருக்கான். பெரிய எண்ணைக் கிணறு கம்பெனி. .சொந்தக்கார ஷேக்குக்குக் கிட்டத்தட்டக் கூடப் பொறந்ததவன்மாதிரி ஆயிட்டானாம். நாளைக்கே அவனை ஏதாவது ஒரு ஏர்லைன்ல போட்டு,இந்தியாவுக்கு அனுப்பறது இனிமே அந்த ஷேக்கோட கடமையாம்.
மல்ஹோத்ரா இலேசாகப் புன்னகைத்தவாறே சொல்கிறான். அழகாகவும், புன்னகைத்தால் மந்தஹாசமாகவும் இருக்கிறான்.
மும்பைக்கு என்ன ஆயிற்று? ஒரேயடியாக. தாத்தாக்களும், பாட்டிகளுமாக, பரலோகம் போய்க்கொண்டு இருக்கிறார்கள். தப்பு, தப்பு. அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் , அதிக வலியே இல்லாமல்.
முதலில், ஒரு பஞ்சாப் சிங்க். இடம், முலண்ட்.
இரண்டாவது, ஒரு மராட்டியப் பாட்டி. தாராவி பக்கம்.
இவை, போன மாதம்.
மூன்றாவது, ஒரு பார்சிப் பெண்மணி. இதே மாதுங்காவில்.
நான்காவது, ஒரு கன்னடக் கிழவர். மீண்டும், முலண்ட்.
ஐந்தாவது, இதோ, ஒரு பாலக்காட்டுப் பாட்டி.
இடம். இதே மாதுங்காவில்தான்.
ஏதோ, எங்கோ, ஒரு லிங்க் இருக்கவேண்டும். எங்கே, என்ன என்பதுதான் புரியவில்லை.
(தொடரும்)
கார்ட்டூன் – லதா
“போட்டி” ஜி.பி. சதுர்புஜன்
நம்பவே முடியவில்லை.
எழுத்தாளர் ராம்நாராயணன் ‘முத்தமிழ்’ இலக்கிய இதழில் வெளிவந்திருந்த சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பை மீண்டும் ஒரு முறை முதலிலிருந்து ஒரு வரி விடாமல் படித்து மூக்கின்மேல் விரலை வைத்தார்.
இருக்காதா பின்னே?
சென்னைத் தமிழ்ச்சங்கம் என்ற முன்னணி இலக்கிய அமைப்பு ஒன்று ‘அமரர் விஷ்ணம்பேட்டை வி.சீ.சுந்தரம் நினைவுச் சிறுகதைப்போட்டி’யை அறிவித்திருந்தது.
பொதுவாக இதுபோன்ற போட்டிகளின் அறிவிப்புகளை மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் பக்கத்தைத் திருப்பிவிடுவதுதான் ராம்நாராயணனின் வழக்கம். ஏனென்றால், இந்த சிறுகதைப் போட்டிகளில் சுதந்திரமாக ஒரு கதையை எழுதி அனுப்பிவிட முடியாது. முதலில் நான்கு பக்கங்களுக்குள் இருக்கவேண்டும் என்பார்கள். சமுதாயத்திற்கு உபயோகமான நல்ல கருத்து ஒன்றை, கதைக்குள் கருவாய் வைத்துச் சொல்லவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே கதைகளை வெளியிடாத அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பார்கள். இன்னும் இதுபோன்ற ஆயிரம் நிபந்தனைகள். இது போதாதென்று, நடுவர்கள் யார் என்று பார்த்து அதையும் மனதில் வைத்துக் கதையை எழுதித் தொலைக்க வேண்டும். கடைசியில் பார்த்தால், முதல் பரிசே ஐந்நூறு, ஆயிரத்தைத் தாண்டாது.
ஆனால், இந்த அறிவிப்பு…?
எந்த விதமான அபத்த நிபந்தனையும் இன்றி வந்தது.
இது எல்லாவற்றையும்விட, ’ஒரு லட்ச ரூபாய் முதல் பரிசு’ என்றால் எந்த எழுத்தாளருக்கும் ஆசை வரத்தானே செய்யும்?
ராம்நாராயணனும் இதற்கு விதி விலக்கல்லவே!
நான் இதுவரை என் நண்பன் ராம்நாராயணின் இயற்பெயரை குறிப்பிட்டிருப்பதால், உங்களுக்கு அவர் யார் என்று தெரிந்திருக்க நியாயமில்லைதான். ‘வெற்றிவரதன்’ என்ற அவருடைய புனைப் பெயரைக் குறிப்பிட்டால் நீங்கள் சிறுகதைகளை விடாமல் படிக்கின்றவர் என்ற காரணத்தால் உங்களுக்கு இப்போது உடனே பிடிபட்டுவிடும்.
ஆம். சிறுவயதிலிருந்தே தன்னுடைய புனைவெழுத்துப் பயணத்தைத் தொடங்கி, தொன்னூறுகளில் தமிழ் எழுத்துலகில் சிறுகதை மன்னராகச் சரேலென்று விஸ்வரூபமெடுத்த அதே வெற்றிவரதன்தான். ஆனந்த விகடன், கல்கி என்று எல்லா முன்னணிப் பத்திரிக்கைகளிலும் அவர் பெயரைத் தாங்கிய ‘முத்திரைக் கதைகள்’ சரசரவென்று வந்து விழுந்தபோது, அவரது சொல்லாட்சியிலும் கற்பனையிலும் மனதைப் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் என்னைப்போல் நீங்களும் இருந்திருப்பீர்கள்தானே? அழகிய பெண்களை மட்டுமே அட்டைப்படமாய்ப் போட்டிருந்த காலம் மாறி, இலக்கியவாதிகளை அட்டையில் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்கும் என்று வெற்றிவரதன்தானே மாற்றிக் காட்டினார்?
இதையெல்லாம் நினைத்து அசைபோட்டபோது, வெற்றிவரதனாகவே முழுமையாக பெயர் மாற்றம் ஆகிவிட்ட ராம்நாராயணனுக்குப் பெருமையாகவே இருந்தது. தன்னையறியாமல் அவர் வலதுகை, அவருடைய நரைத்த மீசையை முறுக்கிவிட்டு முதிர்ந்த முகத்தில் ஒரு முறுவலையும் வரவழைத்தது.
எவ்வளவுதான் வெற்றிமேல் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பைக் கண்டதும் அவருக்குள் புது ரத்தம் பாய்ந்தது. எப்படியும் ஒரு சிறந்த கதையை எழுதி முதல்பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்று உடனே மனதிற்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அத்தகைய கதையின் கருவைத் தேடி அவர் மனம் அமைதியின்றி அலைபாயத் தொடங்கியது.
எப்போதையும்விட அன்றைக்கு அவருக்கு குளியல் அதிக நேரம் பிடித்தது. ஏனென்றால், தீவிரமாகக் கதையைப்பற்றி யோசிக்கும்போது அவருக்குத் தலையில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கவேண்டும். ஒரு நல்லகரு பிடிபட்டவுடன்தான் சுயநினைவு திரும்பி ஒருவழியாகக் குளியலை முடித்துக்கொள்வார்.
லட்ச ரூபாய் பரிசு என்றால் நிறைய எழுத்தாளர்கள் போட்டி போடுவார்களே? எல்லாவற்றையும் மிஞ்சுவது போலல்லவா கதை இருக்கவேண்டும்…?
தலையைத் துவட்டிக் கொண்டு வந்தபோது அவர் முகத்தில் திருப்தியும் சந்தோஷமும் கொப்பளித்தது. விநாயகர் அகவலை எப்போதும்போலப் படித்து முடித்துவிட்டு, சிற்றுண்டி முடித்து, தன்னுடைய அறையில் ஒரு திடமான முடிவோடு உட்கார்ந்து கொண்டு எழுதத் தொடங்கினார்.
பிள்ளையார் சுழி போட்டதுதான் தாமதம், அவருடைய கைப்பேசி அலறியது.
பெயர் எதுவும் இல்லை. நம்பர் மட்டும்தான் இருந்தது. ஆனாலும் எடுத்தார்.
“ஹலோ சார்… எழுத்தாளர் வெற்றிவரதன் சார்தானே…?”
“ஆமாம் …. வெற்றிவரதன்தான்… சொல்லுங்க…”
“வணக்கம் சார்… என் பேரு ஆனந்த் சீனிவாசன்… நான் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் சார்… எம்ஃபில் பண்றேன். உங்களைப் பற்றியும் உங்களோட சிறுகதைகளைப்பற்றியும்தான் என்னோட ஆய்வு. உங்களோட சிறுகதைத் தொகுப்பு அத்தனையும் முழுசாப் படிச்சு குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்!”
“சரி அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“வேற ஒண்ணும் இல்ல சார்! ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும். சில கேள்விகள் இருக்கு… அதை நேர்ல வந்து பாத்து பேசிட்டுப் போலாம்னு தோனிச்சு. சார் ஒரு பத்து நிமிஷம் எனக்கு இன்னிக்கு நேரம் ஒதுக்குங்களேன்… ப்ளீஸ்!”
“பத்து நிமிஷங்கறே… சரி, சரி… வந்து பாரு… எனக்கு சென்னை தமிழ்ச் சங்கத்தோட சிறுகதைப் போட்டிக்கு வேற கதை எழுதி அனுப்ப வேண்டியிருக்கு… ஆனாலும், நீ ஸ்டூடன்ட்ங்கறே… காலையில பத்து மணிக்கே வந்து பாத்துட்டுப் போயிடு… அப்புறம் என் வேலையைத் தொடர்வேன்…!”
“ரொம்ப நன்றி சார்!”
கைப்பேசியைக் கட் பண்ணிவிட்டு மீண்டும் கதையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார் வெற்றிவரதன்.
பத்துமணிக்கு டாண் என்று அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்ததும் புன் சிரிப்புடன் முதுகில் நீலநிறப்பை ஒன்றை மாட்டிக் கொண்டு அந்த இளைஞன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். அவன் அணிந்திருந்த கண்ணாடி அவன் ஒரு தீவிர படிப்பாளி என்று பறை சாற்றியது.
“வாப்பா… உட்காரு. வழி கண்டுபிடிக்கக் கஷ்டமா இருந்துதா…?”
“நீங்க வேற… அதெல்லாம் இல்லே சார். எழுத்தாளர் வெற்றிவரதன் வீடுன்னு தெருமுனையில கேட்டாலே எல்லாரும் சொல்றாங்க. நீங்க நெறய அவார்ட்ஸ் எல்லாம் வாங்கியிருக்கீங்க. ஒங்க முகம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ளகூட அடிக்கடி பேட்டி, அது இதுன்னு வரீங்க. யூ ஆர் எ செலிப்பிரிட்டி சார்!”
புகழ் போதை மனிதனுக்கு எங்கே போகிறது? வெற்றிவரதன் மீண்டும் குளிக்காத குறைதான்.
“சரி… கேளுப்பா ஒன்னோட கேள்விகளை!” என்று அவரே தொடங்கி வைத்தார்.
அவர் நினைத்ததைவிட ஆனந்த் சீனிவாசன் தீவிர வாசிப்பாளனாக இருந்தான். அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கரைத்துக் குடித்திருந்தான். அவரே மறந்துவிட்டிருந்த அவருடைய அந்த நாளையப் பழைய சிறுகதைகளை ஞாபகப்படுத்தி, அவற்றில் இடம் பெற்ற சம்பவங்களைப்பற்றி நுணுக்கமான ஆயிரம் கேள்விகளை அடுக்கினான். கதைமாந்தர்களின் மனப்போக்கைப் பற்றி அறிவதில் ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது. ஏன் இப்படி எழுதவில்லை, ஏன் இப்படி ஒரு முடிவை எழுதினீர்கள் என்று அவனுடைய தீராத ஆர்வம் பல திசைகளில் பாய்ந்தது.
வெற்றிவரதனுடைய சிறுகதைகளைத்தவிர, பொதுவாக சிறுகதைகள் எழுதும் கலையைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். சிறந்த கதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த எழுத்தாளர்களைப் படித்தால் சிறுகதைச் சூத்திரம் பிடிபடும் என்று துருவித்துருவித் தெரிந்துகொண்டான்.
ஆனந்த் சீனிவாசனுடன் பேசுவதும் அவனுடைய கேள்விகளுக்குப் பதிலுரைப்பதும் வெற்றிவரதனுக்கு மிகவும் சவாலான, சந்தோஷமான அனுபவமாக இருந்தது. இந்த சிறிய வயதில் இப்படி ஒரு தீவிர வாசகரை அவர் இதுவரை சந்தித்ததே இல்லை.
“சார்! சென்னை தமிழ்சங்கம் நடத்தற மெகாபரிசு சிறுகதைப் போட்டியில் நீங்களும் கலந்துக்கறீங்களா சார்…? அப்படிக் கலந்து கொண்டா, உங்களுக்குத்தான் சார் முதல் பரிசு ஒரு லட்சம்! அது நிச்சயம் சார்…!”
“ஆமாம்ப்பா… நான் கலந்துக்கப்போறேன். ஒரு கல்லூரி மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா எப்படித் தீவிரவாதியா மாறினான்ங்கறதை வெச்சுத்தான் என்னோட கதை…”
“அப்படியா சூப்பர் சார்! அதை எப்பிடி சார் ஆரம்பிப்பீங்க? எப்பிடி டெவலப் பண்ணுவீங்க? கடைசியில் திருப்பம் ஏதாவது இருக்குமா…?”
மீண்டும் மீண்டும் ஆனந்த் சீனிவாசனின் இடைவிடாத கேள்விகள்.
அவனுடைய ஆர்வத்துக்குத் தீனிபோடும் விதமாய் வெற்றிவரதன் தன் மனதிலுள்ள சிறுகதையை அப்படியே உணர்ச்சிகரமாய் விளக்கினார். இந்த முயற்சியில் கதையும் முழுமையாய் அவருடைய மனதிலும் விரிந்தது.
“சூப்பர் சார்! நன்றி சார்! வாழ்த்துக்கள் சார்!” – உற்சாகம் கொப்பளிக்க விடை பெற்று விரைந்தான் அவருடைய இளம் விசிறி.
விடைகொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பி கதையை ஒருவாறாக எழுதி முடித்தார் வெற்றிவரதன். ஆனாலும் கால அவகாசம் நிறைய இருந்ததால், இரண்டு வாரங்கள் கழித்தே அதைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
***
ஒரு மாதம் கழித்து சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியானபோது இலக்கிய உலகமும் வாசகர் வட்டங்களும் வியப்பில் விரிந்தன.
‘ஒரு மாணவன் மாறுகிறான்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை மிகச் சிறந்த சிறுகதையாக நடுவர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லா முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகளிலும் இந்த விபரம் கொட்டி முழங்கியது.
கதையை விறுவிறுவென்று படு சுவாரசியமான நடையில் எழுதி ஒரு லட்சம் ரூபாய் மெகா பரிசைத் தட்டிச் சென்றது ஒரு கல்லூரி மாணவனாம்.
அறிமுக எழுத்தாளர் ஆனந்த் சீனிவாசன் கண்ணாடியின் வழியே எல்லாப் பத்திரிக்கைகளிலிருந்தும் சிரித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிவரதன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.
நாம் ( முன்பு) வாழ்ந்த வீடு ! – தில்லைவேந்தன்

“உறைந்த நினைவுகள்” (மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்)
குறிப்பு: இந்தக் கதைக்கு ரேவதி அவர்களின் முக பாவங்கள் மிகப் பொருத்தமாக இருப்பதால் அவர் படங்களைத் தேர்ந்தெடுத்தோம். மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமில்லை (ஆ-ர்)
“ஸைகோஜெனிக் ப்ருரைடஸ்” (Psychogenic pruritus) என்பது ஒரு மிக அபூர்வமாகத் தோன்றும் பிரச்சினை. லீனா என்ற நாற்பத்தைந்து வயதுப் பெண்மணி எப்படி இதை வென்றாள் என்று பார்ப்போம்.
பல வருடங்களாகத் தனக்கு இருந்த நமைச்சல், தாங்க முடியாத அளவிற்கு வந்துவிட்டதால், தோல் டாக்டரிடம் காட்டினாள். அவர், அவளுடைய டென்ஷன், ஸ்ட்ரெஸ் (stress) பற்றி விசாரித்ததிலிருந்து, இதற்கு மனநலக் காரணங்கள் இருக்கக்கூடும் என்று ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரைப் (என்னை) பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.
லீனா என்னிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தாள். ஒன்று, இந்த நமைச்சல் போகவேண்டும்; இரண்டாவது, தனக்கு வந்த பயத்துக்கு ஸைக்கையாட்ரிஸ்ட் கொடுத்திருந்த மாத்திரையை நிறுத்த வழி காட்டவேண்டும்.
லீனாவை என்னிடம் அனுப்பிய டாக்டர் டையக்னோஸிஸை எனக்கு, மிகத் தெளிவாக விவரித்திருந்ததால், லீனாவுக்கும், அவள் கணவர், பாலனுக்கும் அணுகுமுறையைத் தெளிவு படுத்தினேன்.
“நான் சொல்வதைக் கேட்டு இது தீரப் போவதில்லை. கலந்துரையாடல், ஆயத்தச் செயல்கள் செய்ய, நீங்களே, உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். உங்களின் சூழ்நிலைகள், நமைச்சல் எப்பொழுது வருகிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து, அவற்றைப் புரிந்து கொள்வதின் மூலம்தான் உங்களுக்குத் தெளிவு பிறக்கும். இதற்கு உங்கள் கணவனின் உதவியும் தேவைப்படும்” என்று விளக்கினேன்.
மனம்விட்டுப் பேச அவர்கள் தயங்குவதை புரிந்துகொண்டு, என் சிகித்சையில் உள்ள இரகசியத்தன்மை (confidentiality) பற்றிக் கூறினேன். அதாவது, எங்கள் துறையில், க்ளையன்டைப் பற்றி, மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும்பொழுது பெயர் முதற்கொண்டு எல்லாத் தகவலும் மாற்றி அமைந்தே இருக்கும் என்றேன். இது எங்கள் தொழில் தர்மம். க்ளயன்ட்டே, அடையாளம் கொள்ள முடியாதபடி செய்வதினால், எங்கள் மேல் நம்பிக்கை வந்து,மனம் விட்டுப் பேசமுடிகிறது. இப்படி விளக்கியதும், அவர்களின் சந்தேகம் மறைந்தது.
அவர்களை விசாரிக்க ஆரம்பித்தேன்.
லீனா தனக்கு மறதி இருப்பதாக விவரித்தாள், எங்கே, எதை வைத்தாள் என்று ஞாபகம் வருவதில்லை. வயதோ, 45! தூக்கம் அதிகமாக வருவதால் காலையில் சமையலைப் பாலன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியும் அசதியாக இருந்தது. அப்போது பாலன் ஒரு தகவலைச் சொன்னார். அவள் அக்காவிடமிருந்து தொலைபேசியில் பேசியதும் அவளுக்கு நமைச்சல் அதிகமாகிறது, தொலைபேசியையும் வீட்டையும் மிகச் சுத்தமாக வைத்திருந்தாலும் கூட!
சமீப காலமாக, பயத்தின் காரணமாக லீனா வெளியே செல்லுவதும் குறைந்து போனது. காரை ஓட்டினாலோ, தனியாக இருந்தாலோ பயம் அதிகரித்து, அழுகை வந்தது. அண்டை வீட்டார் இவர்களின் நண்பர்கள், ஒரு நாள் இவள் காரைப் பயன்படுத்திய பின் பெட்ரோல் தீர்ந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதைப்பற்றிக் கேட்கும்போது, பேச்சு வார்த்தை முற்றி, அவர்கள் “உன்னை உண்டு இல்லைன்னு செஞ்சுடறேன், வெய்ட் அண்ட் ஸி” என்று சொன்னார்களாம்.
அடுத்த இரண்டு நாட்கள், லீனா ஏனோ அடிக்கடித் தடுக்கி விழுந்தாள், காருக்கும் சின்ன விபத்து நேர்ந்தது. அதிலிருந்து, சத்தம் கேட்டாலே அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர்களைப் பார்த்தாலே நாக்கு வறண்டது. அவர்களின் சாபத்தால்தான் இப்படி நடக்கிறது என்று முடிவு செய்தாள்.
லீனாவின் தகவல்கள் பல்வேறு மனநலப் பிரச்சினையைத் தழுவியதால் திரும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசித்தேன். அவர் “ஸைகோஜெனிக் ப்ருரைடஸ்” சம்பந்தப்பட்ட மருத்துவ இதழ்களை என்னிடம் கொடுத்தார்.
லீனா, இல்லத்தரசி, வசதி படைத்தவள், பாலன், தனியார் நிறுவனத்தில் வேலை. மூத்த பையன், பட்டதாரி, வேலை தேடிக் கொண்டிருந்தான், இளையவள் ப்ளஸ் ஒன்று. சொந்த அடுக்கு மாடி வீடு, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. ஆனாலும் அவள் இரண்டு உடைகளையே மாறி மாறி அணிந்து வந்தாள். அவள் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்ததும் அவள் தன் கடந்த கால சம்பவங்களை விவரித்தாள்.
லீனாவுக்கு அவள் அக்காவின் மைத்துனனை நிச்சயம் செய்தார்கள். இவள், சந்தோஷத்தில் திளைத்தாள். இவள் எப்போதும் பளிச் நிறமுள்ள ஆடைகள், தலை நிறையப் பூ, கால்களில் கொலுசு, கை நிறையக் கண்ணாடி வளையல்கள் போன்றவற்றால் தன்னைச் சிங்காரிப்பதால், இவளை “மயில்” என எல்லோரும் அழைப்பார்களாம். ஏதோ கருத்து வேறுபாடுகளினால் நிச்சயதார்த்தம் கல்யாணம்வரை போகவில்லை. ஆனால், லீனாவைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று இருந்த “அவர்” திடீரென வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். “அவர்” இல்லை என்றவுடன் எதுவும் தேவையில்லை என்று லீனா சிங்காரிப்பதை எல்லாம் விட்டுவிட்டாள். அதன்பின் அவளுக்கு ஆறுதல் கூறி, பாலனுக்குக் கல்யாணம் செய்துவைத்தார்கள்..
அவள் அக்காவும், மைத்துனனும் இவள் ஆசைப்பட்டபடி கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். அங்கிருந்து ஃபோன் வந்தாலே லீனா அங்கு உள்ள நிலவரத்தைக் கேட்டு, இங்கு அப்படி “எதுவுமே இல்லை” என்று மிகவும் வருத்தப்படுவாளாம்.
அக்காவின் மைத்துனரோ லீனாவுக்கு பிடித்த மாதிரியான, நல்ல உயரம், வாட்ட சாட்டமான கட்டு மஸ்தான உடம்பு, பெரிய மீசை, கலகலவென சிரிப்பு, விவசாயி, நல்ல ஜாலி டைப். அவருக்கு நேர் மாறாக , பாலன், குட்டை, சிவப்பு, அமைதியானவர். பாலன் பாட்டே கேட்க மாட்டார். கல்யாணத்திற்கு முன் “அவருடன்” பாட்டுக் கேட்பதுண்டு ; கை கோர்த்துக்கொண்டு, பாடி மகிழ்ந்ததுண்டு! இப்பொழுது , அந்தப் பாடல்களைக் கேட்டால் ஏக்கம் அதிகரித்தது; ஏமாற்றம் அடைந்தாள். தான் இப்படி இருப்பது நல்லதல்ல என்று புரிந்தது. ஆனாலும், அந்தக் காலத்திலிருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்றாள்.
அவளின் ஞாபகப் பிரச்சினைக்குக் காரணம் தெரிந்தது. பாலன், பல விதத்தில் லீனாவுக்குப் பிடித்த மாதிரியாக இல்லாததால், அவர் சொல்வதை லீனா கவனமாகக் கேட்டுக் கொள்வதில்லை, ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை. எல்லாவற்றிலும் ‘அங்கும் – இங்கும்’ ஒப்பிடுவதால், ஏமாற்றம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. ரசனைகள் வேறுபட்டதால் கோபம் சூழ்ந்து வெறுப்பு அதிகரித்தது.
ஆனால் அவளின் “அவர்” அதே சிரிப்பும், சந்தோஷமுமாகத் தன் மனைவியுடன் இருந்தார். வெளிநாட்டுக்கெல்லாம் குடும்பத்தோடு சென்றிருந்தார்.
25 வருடத்திற்கு முன், தான் அடைந்த ஏமாற்றத்தை அவள் மட்டும் சுமந்து இருப்பதை உணர்ந்தாள். லீனா, தன் வாழ் நாட்களை “அவர்” வாழ்க்கையுடன் ஒப்பிட்டே தனக்குக் கிடைத்த வாழ்வை நிராகரித்துக் கொண்டு, வாழாமல் இருந்ததை முதல் முறையாக உணர்ந்தாள்.
அதன் விளைவே மன உளைச்சல். ஃபோன் வந்தால் மனக்கலக்கம் மேலோங்கியது. எல்லாம் சேர்ந்து, நமைச்சல் அதிகரித்தது. இது எல்லாம் தோலை எப்படிப் பாதிக்கும்?
நம் உடல் உறுப்புகளில் மிகவும் பெரிய உறுப்பு, தோல். உளைச்சல்களை உணரும் உறுப்பு. இரசாயனத் தூதுவனான நுயூரோ ட்ரான்ஸ்மிடர் (neurotransmitter) நம் மூளையையும், நரம்புப் பகுதிகளையும் நம் தோலுடனும், அதிலுள்ள மயிர்க்கால்களுடனும் இணைக்கின்றது. அதனால்தான் நமக்குச் சங்கடம் வந்ததும் நம் தோலின் நரம்பு முனைகள் உஷாராகும். அதனால் நமைச்சலும் தோன்றலாம். ஆனால் எல்லா நமைச்சலும் மன உளைச்சலினால் வருவது அல்ல. அதுபோல மன உளைச்சல் எப்பொழுதும் அரிப்பு கொடுக்கும் என்பதும் இல்லை.
உறைந்த நினைவுகளே நிறைந்திருந்ததால், லீனாவுக்குக் கசப்பும், பொறாமையும் நிலவியது. அவள் தன் வீட்டில் யாரையும் எப்போதும் பாராட்டியதே இல்லை
தற்போது லீனா இதிலிருந்து வெளியேற ஆசைப் பட்டாள். அதற்காகத்தான் என்னிடம் வந்திருக்கிறாள்
இதைச் சரி செய்ய, ஒரு யுக்தியைத் தேர்வு செய்தோம். காலை எழுந்ததும், லீனா தன்னைப் பார்த்து ‘ ஒரு நல் சொல்’ சொல்ல வேண்டும்; மாற்றம் நம்மிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். இத்துடன் தினம் யாரவது உறவினர், நண்பர் செய்வதைப் பாராட்டி நன்றாகச் செய்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்ல வேண்டும்.
மேலும் ஒரு மாதத்திற்கு, தினம் இரவு தூங்குவதற்கு முன் “இன்றைக்கு, இதற்காக நன்றி சொல்வேன்” என்று மூன்று விஷயங்களைத் தேர்வு செய்து விடாமல் எழுதச் சொன்னேன். அவளும் தொடர்ந்து எழுதிவந்தாள். மாதக் கடைசியில் அவற்றைப் படிக்கும்படிக் கூறினேன். அவள் படித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். “என் வாழ்விலும் பல சந்தோஷங்கள் உள்ளன” என்பதைக் கண்டு கொண்டாள்.
இவற்றையெல்லாம் லீனா தொடர்ந்து செய்தாள். செய்யச்செய்ய, அவளின் கசப்பு உணர்வும் குறைந்துகொண்டு வருவதை அவளே உணர ஆரம்பித்தாள்.
நமைச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது.
தூக்கம் மட்டும் அவளுக்குச் சற்று அதிகமாகவே இருந்தது. இதற்கு நாங்கள் திட்டமிட்டபடி அவளும், பாலனும் தினம் காலையில் நடைப் பயிற்சி ஆரம்பித்தார்கள். கை வேலைகள் செய்ய ஆரம்பித்தாள். , பக்கத்துப் பள்ளியில் வாலன்டியர் (volunteer) ஆகவும், தோட்ட வேலை செய்யவும் ஆரம்பித்தாள்.. புத்துணர்ச்சியுடன் பலவித உணவுப் பண்டங்கள் செய்யவும், கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்டினாள். இரண்டே வாரத்தில், தூக்கம் சரியானது.
அவளுடைய ஸைக்காட்ரிஸ்ட், லீனாவின் முன்னேற்றத்தைப் பார்த்து, மாத்திரைகளை படிப்படியாகக் குறைத்து விட்டார். லீனாவும், பாலனும் சந்தோஷப் பட்டார்கள்.
தற்செயலாக, அவளுடன் வாக்குவாதம் செய்த பக்கத்து வீட்டாரைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் ஏற்கனவே இதை நன்றாக ஆராய்ந்ததால், லீனா பயமின்றி மன்னிப்புக்கேட்க, அவர்களும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள, நண்பர்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்தார்கள்.
லீனா இன்னொன்றையும் புரிந்து கொண்டாள். சொல் நிஜமாகும் என்று நம்பியதால், நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளுடனே ஜோடித்திருந்தாள். இப்படிச் செய்வதை, நாங்கள் “ஒவர் ஜெனரலைஸேஷன் (over generalisation)” என்போம். தற்செயலாக நடந்ததை ‘அவர்கள் அப்படிச் சொன்னதால் தான் நடந்தது’ என்று நம்பினாள். மற்றவர் சொல்லுக்குப் பலத்தைக் கொடுத்ததில் அவளை எப்போதும் பயம் பீடித்தது. பயத்தினாலேயே அவள் முடங்கிப் போனாள்.
இதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டதால் அவளைப் பிடித்த அந்த பயம் அவளைவிட்டு அடியோடு விலகிவிட்டது.
நமைச்சல் பிரச்சினை முழுதாகத் தீர்ந்துவிட்டது என்று டாக்டர் லீனாவிடம் உறுதியாகச் சொன்னார். இதனால், அவளுக்குத் தைரியம் மேலும் கூடியது.
இதுவரை தன் மகனுக்குக் கொடுத்த சலுகைகளினாலே பல விஷயங்களைப் பாலனிடமிருந்து மறைத்திருந்தாள். இப்படிச் செய்வதில் அவரை வென்றதாக எண்ணம் கொண்டிருந்தாள். இப்போது இதை அவரிடம் சொல்ல விரும்பினாள். தங்கள் குலதெய்வம் ரத்தினகிரி முருகன் கோயில் சென்று, இதைப் பாலனிடம் பகிர்ந்து கொண்டாள். பாலன் எப்போதும் நல்ல தன்மையாக இருப்பவர் என்பதால் தன்னால் சுலபமாகச் சொல்ல முடிந்தது என்றாள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் கல்யாணம் முடிவானதும் பாலனின் அம்மா அவரிடம். “பெண் பிள்ளையை ஏசுபவன் நல்ல ஆண் பிள்ளை இல்லை. அவளை நன்றாகப் பார்த்துக்கொள்” என்று சொன்னாராம்.
பாலனுக்கும் அவர் அம்மாவுக்கும் லீனாவின் நிச்சயம் முறிந்த விஷயமும் தெரியும். (லீனாவுக்கு இது தெரியாது).
எட்டு மாதங்கள் கடந்தபின், லீனாவின் அக்காவின் மைத்துனன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இதைத் தானாக அமைந்த பரீட்சை எனலாம். இந்த முறை வந்தவருக்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்தாள். பலகாரமும் செய்தாள், உபசரித்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக அவரை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. பாலனை அவருடன் ஒப்பிடவோ, கோபித்துக் கொள்ளவோ இல்லை. லீனா வென்றாள், நிகழ்காலத்திற்கு வந்தாள்.
கடந்த கால நினைவலைகளால்
நிகழ் காலமே மூடுபனி ஆனதே! ஒப்பீடு செய்ய, புளித்தது, எல்லாமே. இவ்வளவு காலமும், அறியவில்லையே
இதோ, என் கண்முன், என் கைப் பிடியில் (தான்) என் மகிழ்வு!
****************************************************
சிவாஜி மணிமண்டபம்
சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் சென்னை அடையாரில் சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே கட்டப்பட்டு அவரது பிறந்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
ஒரு மாபெரும் கலைஞனைப் போற்றுவதில் பெருமைப்படவேண்டும்!
இதுநாள்வரை கேள்விப்படாத செய்தி ஒன்று.
சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தில் வரும் சிவன்-நக்கீரன்-தருமி வசனமும் நடிப்பும் அனைவரது பாராட்டையும் பெற்றது.
ஆனால் நான் பெற்ற செல்வம் என்ற படத்தில் அதையே ஒரு நாடகமாகக் காட்டியிருக்கிறார் அதன் வசனகர்த்தா A P நாகராஜன். அதில் சிவாஜி நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். வசனம் கிட்டத்தட்ட அதே மாதிரி.
திருவிளையாடலில் அதே காட்சியை நாகேஷின் துணையோடு மேலும் மெருகேற்றிக் கால காலமாக நினைவில் நிற்கும் காட்சியாக மாற்றியிருக்கிறார் A P நாகராஜன்.
பழைய நான் பெற்ற செல்வத்தில் இந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமா? இதோ…….
அட ராஜாராமா…! (சென்ற இதழ் தொடர்ச்சி) நித்யா சங்கர்
காட்சி – 5
(ஒரு வீடு. இரவு நேரம். பார்வதி கட்டிலில் உட்கார்ந்து
கொண்டிருக்கிறாள். ராஜாராமன் வருகிறான்)
ராஜா : (வந்து கொண்டே, நாடக தோரணையில்) மந்திரி..! அண்டாவில் தினமும் நீர் பொழிகிறதா..? குண்டாவில் அரிசி நிறைகிறதா..? உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்கிறதா..?
பார் : (சிரித்துக் கொண்டே) ஓ… எல்லாம் அப்படியே ஆகிறது
மன்னவா… !
ராஜா : (மனம் விட்டுச் சிரிக்கிறான்) அம்மா.. மகன் முகம் மலர மகிழ்வுற்றாள் தாய் என்று சொல்வாங்க… இந்தத் தாயின் முகம்
மகிழ்ச்சியடையும்போது பையன் மனம் அடையும் ஆனந்தம்
இருக்கிறதே…. ஊஹு ம்.. என்னால் விவரிக்க முடியாதம்மா..
அதை அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்… ஆமா.. நீ
இன்னுமா தூங்கலே… மணி பன்னெண்டு ஆச்சே..?
பார் : தூக்கமே வரலேடா… அதுதான் இந்த புத்தகத்தைப் படிச்சிட்டு
உட்கார்ந்திருக்கேன். ஆமா மனோரமா சௌக்கியமா
இருக்காளா..?
ராஜா : ஏனம்மா.. வந்ததும் அவளைப்பத்திக் கேட்கறே..?
பார் : (திடுக்கிட்டு) ஏண்டா..? அவ சௌக்கியம்தானே..?
ராஜா : அவ சௌக்கியமாத்தான் இருக்கா.. நான்தான் இப்போ தர்ம-
சங்கடத்துலே மாட்டிட்டிருக்கேன்…
பார் : என்னடா..? என்ன ஆச்சு..?
ராஜா : உன் பேச்சையும், அந்தப் பாழாப்போன மாதவன் இருக்கானே.. என் ப்ரண்டு.. அவன் பேச்சையும் கேட்டதனாலே வந்த
வினை…
பார் : (பரபரப்போடு) என்னடா நடந்தது..? விளக்கமாச் சொல்லு..
ராஜா : நான் வாரா வாரம் இங்கே வரேன்லே… என் தாயைப் பார்க்க
வரேன் இல்லே… அதை மனோ கண்டு பிடிச்சிட்டா…
பார் : (திடுக்கிட்டு) என்ன கண்டு பிடிச்சிட்டாளா..?
ராஜா : இன்னும் முழுதும் கண்டு பிடிக்கலே..ஞாயிற்றுக் கிழமை ஞாயிற்றுக்கிழமை எங்கே போறீங்கன்னு இன்னிக்கு காலையிலிருந்து துளைக்க ஆரம்பிச்சுட்டா.. அம்மா !அனாவசியமா எனக்கு வரும் அவஸ்தையைப் பார்…
(தாயின் மடியில் முகத்தைப் புதைத்து வைத்துக்
கொண்டு அழுகிறான்)
பார் : சீ.. சீ.. நீ ஆண்பிள்ளைடா… அழலாமா…?
ராஜா : நான் ஆண்பிள்ளையா இருக்கலாம்.. ஆனா மனசு கல் இல்லையே அம்மா.. இரங்கக் கூடிய மனசா இருக்கே.. எல்லாத்துக்கும் நீதான் காரணம்…
பார் : என்ன..?
ராஜா : ஆமா.. நியாயத்துக்கு இரங்கர மனசை என்னோடு வளர்த்து
விட்டிருக்கே பார்… அன்னிக்கே சொன்னேன்.. அம்மா.. நீ தனியா
போகவேண்டாம்… உன் வயத்திலேருந்து பிறந்த இந்தப் பாவி
உன்னைக் கவனிக்காம இருக்கற மாதிரி செஞ்சுடாதேன்னு
சொன்னேன். மனோக்கும் உனக்கும் மன வேற்றுமை இருக்கலாம்
அதுக்காக நீ தனியாப் போயிடறதான்னு கேட்டேன். அப்ப
நீயும் மாதவனும்தானே இப்படி ஒரு யோசனையைச் சொன்னீங்க..
ஸன்டே, ஸன்டே இங்கே நான் உன்னை வந்து பார்த்துட்டுப் போற மாதிரி ஏற்பாடு பண்ணினீங்க,,,
பார் : ராஜாராமா.. நீ தெரியாம பேசறே.. மனோரமாக்கு நான் சொல்றது ஒத்துக்கறதில்லே… என்னாலேயும் சில விஷயங்களைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியறதில்லே… நான் ஏதாவது சொல்ல, அவ ஏதாவது சொல்ல வார்த்தை முற்றிப் போயிடுது.. நீ ஆபீஸிலிருந்து வந்ததும் அவ கண்ணைக் கசக்கிட்டு நிக்கறா.. உனக்கு மனது வேதனைப்படாதா..?
ராஜா : அவளுக்கேன்மா நான் உன்மேல் வெச்சிருக்கிற அன்பு
தெரியறதில்லெ…
பார் : அவளுக்கு அந்த சக்தி இல்லைடா பாவம்…
ராஜா : (ஆத்திரத்தோடு) சக்தி இல்லைன்னா அவள் வீட்டைவிட்டுப்
போகட்டும்…
பார் : சீச்சீ.. ஆத்திரத்துலே எதை வேணும்னாலும் பேசிடறதா..?
நான் என்ன இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கேன்.. இனிமே
நீ அவள் கூடத்தானேடா குடும்பம் நடத்தணும். உன்னையே
நம்பி வந்து இருக்கற பெண்ணுக்கு அப்படி ஒரு கதி ஏற்படுத்-
தலாமாடா..?
ராஜா : (கலக்கத்தோடு) மன்னிச்சுக்கம்மா… ஏம்மா என்னை இப்படி
ஆளாக்கி விட்டிருக்கே. கல் மனசை ஏற்படுத்தி விட்டிருக்கக்-
கூடாது..? அம்மாவை வெளீலே போகச் சொல்லித் திரும்பிக்
கூடப் பார்க்காம இருக்கற மாதிரி ஒரு மனசை ஏற்படுத்தி இருக்கக்
கூடாது..? இல்லைன்னா பெண்டாட்டியை வெளியிலே துரத்திவிடக்
கூடிய தைரியத்தைக் கொடுத்திருக்கக் கூடாது..? அம்மாவின்
மனசு துன்பப்படக்கூடாதுன்னு அரை மனசு புலம்ப, நம்மையே
நம்பி வந்தவளின் மனசு வேதனைப்படக்கூடாதுன்னு அரை
மனசு புலம்ப நாடகம் ஆட வேண்டியிருக்கே… ஐயோ.. அம்மா
ஏன் இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலையில் மாட்டிட்டிருக்கேன்..
பார் : டேய் நல்லவனுக்குத்தான் எப்பவுமே சோதனை வரும்.. சோத-
னையை எதிர்த்து நிற்கணும்.. அவன்தான் ஆண்மகன்.. ஆமா..
நீ ஸன்டேதானே வருவே… என்ன இன்னிக்கு… அதுவும் இந்த
அர்த்த ராத்திரியில்…
ராஜா : மனோக்கு சந்தேகம் வந்துடுத்து.. நான் எப்படி இனி ஸன்டே
வர முடியும்..? அதனாலேதான் மாதவன் யோசனைப்படி
மனோ தூங்கினப்புறம் வந்தேன்.. இது எங்கே போய் முடியும்னே
புரியலே…
பார் : எல்லாம் காலப் போக்கிலே சரியாப் போயிடும்…
ராஜா : அம்மா.. எனக்கு ஆபீஸிலே ப்ரமோஷன் கெடச்சு, சம்பளம்
ஜாஸ்தியானதையோ, இன்க்ரிமென்ட் கெடச்சதையோ அவள்
கிட்டே நான் சொல்லவே இல்லே… அந்தப் பணத்தைத்தான்
உனக்கு இங்கே கொண்டு வந்து தரேன்.. இனி மனோ இதைப்
பத்தி விசாரிக்க ஆரம்பிச்சா….
பார் : டேய்.. அவ்வளவு தூரம் ஒண்ணும் போகாது.. கவலைப்படாதே..
அதுக்கு ஒரே வழிதாண்டா இருக்கு.. நீ என்னை மறந்துடு..
இனி இங்கே வராதே….
ராஜா : (திடுக்கிட்டு) அம்மா… என்னம்மா சொன்னே.. நான் இங்கே வரக்கூடாதுன்னா சொன்னே…?
பார் : ஆமா.. நான் சாப்பாட்டுக்கு என்னவோ செஞ்சுக்கறேன்.. நீ
கவலைப்படாம போய் நிம்மதியா சுகமா இரு…
ராஜா : அம்மா..!
பார் : டேய்.. எனக்கு இனிமேல் என்னடா..? நீதான் வாழப்போறவன்..
ரெண்டுபேரும் நிம்மதியா, ஒற்றுமையா, சந்தோஷமா வாழுங்கடா..
உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்.. நீங்க எங்கேயாவது
சந்தோஷமா இருந்தாப் போதும்.. நீ அவதிப்படறதப் பார்த்து
நான் என்ன சந்தோஷமாவா இருக்க முடியும்..?
ராஜா : அம்மா.. நீ உன் பிள்ளையை அவ்வளவு தூரமா எடை போட்டு
வெச்சிருக்கே… நான் நாளைக்கு இரண்டுலே ஒண்ணு முடிவு
பண்ணிட்டு வந்துடறேன்.. இந்த இரட்டை வேடம் வேண்டவே
வேண்டாம்… என்னடா பொழப்பு இது.. சே…
(போகிறான்)
பார் : டேய் ராஜாராமா… நான் சொல்றதைக் கேள்… கோபத்துலே
ஒண்ணுக்கு ஒண்ணு செஞ்சு வெச்சுடாதேடா… நில்லு… தேவி
நீதாம்மா எங்க குடும்பத்தைக் காப்பாத்தணும்…
(கண்ணீர் மல்க நிற்கிறாள்)
காட்சி — 6
(ராஜாராமன் வீடு. காலை நேரம், ராஜாராமன்
ஹாலில் உட்கார்ந்திருக்கிறான். மனோரமா காபி
கொடுத்துவிட்டு அருகில் அமர்கிறாள்)
மனோ: என்ன உங்க கண்ணெல்லாம் சிவந்திருக்கு. ராத்திரி சரியா
தூங்கலியா என்ன..?
ராஜா : ச்… தூக்கமே வரலை…
மனோ: ஏன்..?
ராஜா : ச்… ஏதோ கவலை..
மனோ: ஏன்..? நான் நேத்து ஏதோ பேசிட்டேன்.. அதப் பத்தியே கவலைப்பட்டுட்டு இருந்தீங்களா..? நான்தான் அதைப் பத்தி இனி பேசமாட்டேன்னு சொல்லிட்டேனே..
ராஜா : சரி.. விடு..
மனோ: ஆமா.. ராத்திரி வெளியிலே போயிருந்தீங்களா..?
ராஜா : (திடுக்கிட்டு) ஏன்..? என்ன..?
மனோ: இல்லே… எனக்கு நடுவிலே விழிப்பு வந்தது. மணியைப் பார்த்தேன். மணி பதினொன்று.. பக்கத்திலே பார்த்தேன். நீங்கள்
இல்லெ.. அப்போ நீங்க வெளியிலே போயிருப்பீங்களோன்னு
நெனச்சேன்..
ராஜா : (சமாளித்துக் கொண்டு) ஓ.. அதுவா.. ஆமா.. தூக்கமே வரலையா.. சரி.. கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்னு போய் அடுத்த தெருவிலேயுள்ள கடையிலே ஒரு டீ குடிச்சிட்டு வந்தேன். நீ நல்லா
தூங்கிட்டு இருந்தே.. உன்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னுதான்…
மனோ: அது சரி.. இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேனே.. நேத்து
ராத்திரி உண்மையாவே எனக்குப் பயமாப்போச்சு.. திடீர்னு பூனை
ஏதோ சமையலறையில் உருட்டி விட்டுடுத்து.. உங்ககிட்டே
சொல்லலாம்னு பக்கத்தில் பார்த்தால் உங்களைக் காணோம்.
போய் சமையலறையில் பார்த்துவிட்டு வந்து படுத்தேன். அப்போ
மணி மூணு…
ராஜா : அப்படியா…?
மனோ: என்னங்க… உங்க முகத்தைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. கண் வேறே கலங்கி இருக்கு. இப்படி ராத்திரியெல்லாம் கண் விழிச்சா உங்க ஹெல்த் என்னத்துக்கு ஆகிறது..? (அவன் முகத்-
தையே உற்று நோக்கிக் கொண்டு) உங்க சந்தோஷத்துக்கும்,
மகிழ்ச்சிக்குமே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்க அம்மா எத்தனை
வருத்தப்படுவாங்க…?
ராஜா : (திடுக்கிட்டு) மனோ நான் போனது…. ஓ ஐயாம் ஸாரி…
மனோ: ஏன் வாய் தவறி வந்துடுத்தா..? சொல்லுங்களேன் தைரியமா…எங்க ரெண்டு பேர் மனஸ்தாபத்துலே அம்மாவை வெளியே அனுப்பிச்சிட்டீங்க… அம்மாவை திரும்பிக்கூடப் பார்க்க
மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுத்தீங்க… அதிலிருந்து
தவறி எனக்குத் தெரியாம ஸன்டே ஸன்டே அம்மாவைப் பார்க்கப்
போனீங்க… ஏன்..? நமக்குள்ளே மனஸ்தாபம் வந்துடுமோன்னு
பயந்து… உங்க ஸன்டே டிரிப் அம்பலமானதும் இனி ஸன்டே
போகக் கூடாதுன்னு சொல்லி நேத்தே புறப்பட்டுட்டீங்க.. எல்லாம்
எனக்குத் தெரியும்..
ராஜா : உனக்கு எப்படித் தெரியும்…
மனோ: நேத்து ராத்திரி நீங்க புறப்பட்டதும். நானும் உங்க பின்னாலேயே வேறு ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு வந்தேன். எல்லாத்தையும் தெரிஞ்சு கொண்டேன்.. ஏன் இதை என்கிட்டே மறைச்சீங்க..?
ராஜா : ஆமா… நான் மறைச்சது தப்புதான்… என்னை மன்னிச்சிடு…
மனோ: மன்னிப்பா..? இதுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்…
ராஜா : எனக்கு தண்டனை கொடுக்கப் போறியா..? நானல்லவா இதுக்கு ஒரு முடிவைத் தேடணும்னு நெனச்சிட்டிருந்தேன்…
மனோ: உங்க தண்டனைக்கு முன்னாலே நான் தண்டனை கொடுக்கப் போறேன்… போய் அம்மாவைக் கையோடு கூட்டிட்டு வந்திடுங்க.
ராஜா : (ஆச்சரியத்தோடு) என்ன..! என்ன சொன்னே..!
மனோ: (தணிவாக நெகிழ்வோடு) ஆமாங்க.. ஆத்திரத்துலே அன்னிக்கு என்னவெல்லாமோ பேசி உங்ககிட்டெ சத்தியமும் வாங்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் என் மனசு உறுத்தின உறுத்தல் எனக்குத்தான் தெரியும்.. வறட்டு கௌரவம் வேறே உங்களை அனுப்பி அம்மாவைக் கூட்டிட்டு வரச் சொல்ல விடாம தடுத்தது. ‘சே..
கேவலம்.. ஏதோ ஒரு அற்ப விஷயத்துலே மனஸ்தாபம்..
அதுக்காக உங்களையும், அம்மாவையும் பிரிச்சு வெச்சுட்டேனேன்னு வருந்தின வருத்தம் எனக்கு மட்டும்தான் தெரியும்.
நீங்கதான் கட்டாயமா உங்க அம்மாவை அழைத்து வந்திருக்கக்
கூடாதா…?
ராஜா : மனோ நீயும் வருத்தப்படக் கூடாது. அம்மாவையும் வருத்தக்
கூடாதுன்னுதான் இந்தத் திட்டத்தையே நான் ஒப்புக்கிட்டேன்.
நீ என்கிட்டே அம்மா இருக்கிற இடத்துக்கே போகக் கூடாதுன்னு
சத்தியம் வாங்கிக்கிட்டதாலே உண்மையாவே உன் எண்ணம்
அதுதானோன்னு நெனச்சுட்டேன்..
மனோ: என்னை உங்களுக்குத் தெரியாதா..? நான் என்ன அத்தனை
கொடுமைக்காரியா..?
ராஜா : ஆல் ரைட்.. எப்படியோ என் பிரச்னைக்கு முடிவு வந்துடுத்து..
எல்லாம் சுபமஸ்து…
மனோ: (சிரித்துக் கொண்டே) உங்க பிரச்னைக்கல்ல.. நம்ம பிரச்னைக்கு.. அப்புறம் இன்னிக்கு விருந்து வெச்சிடவா…?
ராஜா : பின்னே… காளன், ஓலன். அவியல், கிச்சடி, பச்சடி, பாயஸம்
கறின்னு ஜமாய்ச்சுடு.. நான் புறப்படறேன்…
(உள்ளே போகிறார்கள்)
சொன்னாங்க சொன்னாங்க
குவிகம் இதழில் வரும் கதை, கட்டுரை, கவிதை மற்றும் காணொளிகளைப்பற்றி சில வாசகர்களின் கருத்துக்கள்
இதோ:
( நீங்களும் எழுதலாம் – போஸ்ட் கார்டில் அல்ல – இமெயிலில் அனுப்பலாம் editor@kuvikam.com
கம்ப்யுட்டர் காதல் , தமிழ் எழுத்தாளர்களுக்கான இலங்கை ஜெயராஜ் அறிவுரை இரண்டும் அபாரம் – தமிழ்ப்பண்ணை
பேசா பெருமரம் கவிதைபற்றி……
கவிஞர் நிலா ரவியின் கற்பனை வளம் என்னை பிரமிக்க வைக்கிறது. அபாரம். இயற்கை பேரளிப்பையும், அதனால் எழும் வணிக பேராசையையும் ஆதாமும் ஏவாளும் கருத்தரிப்பு நிலையங்களில் கால்கடுக்க நிற்கும் கொடுமையை கண் முன் நிறுத்துகிறார் – ஆறு சரவணா பெருமாள்
அசோகமித்திரன் பற்றி ..
அருமையான நினைவேந்தல் – சுரேஷ்
பொன் குலேந்திரனின் “விசித்திர உறவு’ பற்றி
உண்மை கற்பனையைவிட அதிசயமானது – இராய செல்லப்பா
அழகியசிங்கரின் ‘கடிகாரம்’ பற்றி
அழகான உருவகக் கதை – இராய செல்லப்பா
சரித்திரம் பேசுகிறது பற்றி …
தமிழக மற்றும் இந்திய அரசியல் களம் இன்று பிருகத்ரதன் கதை மாதிரிதான் இருக்கிறது.. – புவனேஸ்வரன்
கிண்டிலில் தமிழ்ப்புத்தகம் பற்றி ..
இவ்வளவு ஈசியா புத்தகம் போடலாமா? ஆச்சரியமா இருக்கே! – ராஜாராமன்
ஏன்யா கதைன்னு பெருசு பெருசா போட்டுக் கழுத்தை அறுக்கறே? சின்னதா போடக்கூடாதா? – கிருஷ்ணமூர்த்தி
I was looking forward to read and kept searching for the கடைசிப் பக்கம். This wrap up of the கடைசிப் பக்கம் is an enjoyable to read – solid message, content mixed with subtle humour, a vistas of topic too – மாலதி ஸ்வாமிநாதன்
ஆகஸ்ட் 15 இதழ் பார்த்தேன் நல்ல அம்சங்கள். முக்கியமாக தேவதச்சனின் ஆவணப் படம் இங்கே தான் பார்க்கக் கிடைத்தது – வைதீஸ்வரன்
ராஜநட்பு -3 ஜெய் சீதாராமன்
முன்கதை…..
வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பீஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காணவந்திருந்த , கடல் கடந்து வணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் ஓலைகளைச் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சார தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம் ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதன்படி ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் கட்டப்போகும் ஆலயத்திற்கு பணி செய்யும் மக்களை சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்விக்க வாங்மெங் ஒப்புக் கொள்கிறார். அவ்வாறு நிகழ்ச்சிகள் புரியும் போது வாங்மெங் ஒரு சதிச்செயலைப்பற்றித் தெரிந்து கொள்ளுகிறார். தஞ்சாவூருக்கு வடக்கேயுள்ள பத்தாயிரம் வேலி நெல் கதிர்களை தீக்கிரையாக்கும் நோக்கத்தையும் ராஜராஜனைக் கொலை செய்யும் திட்டத்தையும் சிலர் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டறிகிறார்.
இனி……
3.வாங்மெங்கின் ஓலை மேலும் தொடர்கிறது.
“அதிர்ச்சியால் உந்தப்பட்டேன். ‘ஆலயம் கட்டும் பணிக்கு இவ்வளவு எதிர்ப்பா? சக்ரவர்த்தியைக் கொல்ல ஏன் இந்த சதி?’என்னும் எண்ண அலைகள் என் மனதில் ஓடின. கிருஷ்ணன் ராமன் இதைப்பற்றி ஏற்கெனவே என்னிடம் எச்சரித்திருந்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. தோற்றுப்போன பாண்டியர்கள் மறைந்திருந்து எப்படி சோழர்களை வேரோடறுக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதைப் பற்றியும், ஈழப் போர் கைதிகள் என்னேரத்திலும் கலவரத்தில் ஈடுபட்டு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். ‘இதையெல்லாம் யோசித்துத் தெரிந்துகொள்ள இப்போது அவகாசமில்லை. எப்படியாவது இந்த முயற்சிகளைத் தவிடுபொடியாக்க வேண்டும். எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உடனே என்ன செய்ய வேண்டும்’என்பதை எண்ணி மண்டபத்துக்கு வெளியில் வந்தேன்.
‘ குதிரையோ இல்லை. தஞ்சாவூருக்கு எப்படிச் செல்வது? வழிப்போக்கர்கள் எப்போது வருவார்கள்?’ இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தபோது மேகக் கூட்டங்கள் மறைந்து திங்களின் கிரணங்கள் இருட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. குதிரையின் கனைப்புச் சத்தம் கேட்டுத் தூண் பின்னால் மறையப் போனேன் , சேணம் போட்ட குதிரையொன்று வெறுமையாய் ஆளின்றி மெதுவாக நடந்துவந்து என்னருகில் நின்று சன்னமாய் கனைத்தது.
ஆகா! இது நம் குதிரையல்லவா? எஜமானர் விட்ட இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறது! பக்கத்தில் சென்று தாடையைத் தடவி வருடிவிட்டேன். சேணத்தில் இரு பக்கங்களிலும் தோல் பைகள் இன்னும் அப்படியே காணப்பட்டன. அவற்றில் ஒரு பையைத் திறந்து அதில் குதிரைக்காக வைத்திருந்த வெல்லக் கட்டிகளை எடுத்து வாயருகே நீட்டினேன். மிகவும் பசியாக இருந்த புரவி ஆசையுடன் உண்டது. அப்போதுதான் என் பசி எனக்குத் தெரியவந்தது. மற்ற பையிலிருந்த பண்டங்களை எடுத்து உண்டு பசியைப் போக்கிக் கொண்டேன். தெம்பு பிறந்தது. என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டேன். உடனே கிளம்பி தஞ்சாவூர் செல்ல மனம் துடித்தது. அப்படிச் செய்தால் பகைவர்களால் ஆபத்து நேரிட வாய்ப்புகள் இருக்கின்றன என்றெண்ணி விடியற்காலையில் கிளம்ப முடிவுசெய்தேன். குதிரையில் தொங்கவிடப்பட்டிருந்த குடுக்கையிலிருந்து தண்ணீர் குடித்துத் தாகத்தைப் போக்கிக் கொண்டேன். குதிரையைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கண்ணயரப் படுத்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை.
காலையில் கிழக்கு வெளுக்கும் தறுவாயில் எழுந்திருந்து தஞ்சாவூருக்குப் பயணித்தேன். குதிரை என் மனோநிலையைப் புரிந்துகொண்டது போலும்! அதிவேகமாய் பறந்து சென்றது! தஞ்சாவூரைப் பகல் நேரத்தில் வந்தடைந்தோம். நேராக திருமந்திர ஓலை நாயகம் கிருஷ்ணன் ராமன் இருக்கும் மாளிகைக்கு விரைந்தேன்.
அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டேன். திடுக்கிட்டு சிலையாய் சமைந்துவிட்டவர் சிறிது மௌனத்திற்குப் பிறகு “பயிர்களைத் தீக்கு இரையாக்காமல் தவிர்க்க வேண்டிய பெரிய பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். சக்கரவர்த்தி இப்போது ஊரில் இல்லை. நாளை பகல்பொழுது ஆலயக்களத்திற்கு நேராக வருவதாக இருக்கிறார். அதற்குள் சக்கரவர்த்திக்கு நேர இருக்கும் பேராபத்தை அவருக்கு எடுத்துச்சொல்லி அவரைக் காப்பாற்றும் பொறுப்பை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்”என்றுகூறித் தன் மடியில் தொங்கிக் கொண்டிருந்த பட்டுப் பையை எடுத்து “இதில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புலி பொறித்த தங்க பதக்கம் உள்ளது. சக்ரவர்த்தியிடம் இதைக் காட்டினால் மற்ற வேலைகளை நிறுத்தி உங்களுக்கு உடன் பேட்டியளிப்பார். அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் தங்கு தடையின்றிச் செல்லலாம்”என்று பதக்கத்தின் மகத்துவத்தைப்பற்றிக் கூறிவிட்டு அதை என்னிடம் நீட்டினார். அதைப் பெற்றுக்கொண்டேன். “ஜாக்கிரதை”என்று கூறிவிட்டுப் பறந்துசென்றார்.
நான் உடனடியாகச் சக்கரவர்த்தியின் மாளிகைக்கு விரைந்தேன். அவர் மாறுவேடத்தில் மாதமொருமுறை வெளி செல்வது வழக்கம் என்பதையும் அவர் செல்லும் இடத்தைப்பற்றிய விவரம் எவருக்கும் அறிவிக்கும் வழக்கம் இல்லை என்றும் தெரிய வந்தது. ‘ஆலயம் கட்டும் களத்தில் நாளை சக்ரவர்த்தி வருமுன், துப்பு துலக்கி, நம் முழு கவனத்தையும் செலுத்தி எப்பாடுபட்டாவது பகைவர்களின் எண்ணத்தைக் கண்டுபிடித்து, அவரைக் காப்பாற்றவேண்டும்’ என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துக்கொண்டேன்.
சம்பவப் பட்டியல் அதிகாரி வாங்மெங் எழுதிய எழுத்தோலையைப் படிப்பதை இங்கு நிறுத்தி “அரசே! வாங்மெங் எழுத்தோலை இதோடு முடிவடைந்துவிட்டது”என்று சொன்னார்.
சபையில் நிறைந்திருந்த அனைவரும் அதிசயத்துடன் வாங்க்மெங் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதுவரை சுவாரசியமாக ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஷேங்க்ஸான் சுதாரித்துக் கொண்டு இரண்டாவது ஓலையை எடுத்துப்பிரித்து அதிகாரியிடம் நீட்டினார். அதுவும் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அதிகாரி தொண்டையைக் கனைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.
( தொடரும் )
உங்கள் எடை குறைய ஒரு அருமையான வழி – லூஸ் இட்
உடல் இளைத்து அழகாக மாறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ‘லூஸ் இட்’ என்ற இலவச ‘ஆப் ‘மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஆன்ராய்ட் அல்லது ஆப்பிள் ஐ ஒ எஸ் இரண்டிலும் இந்த ஆப் இருக்கிறது.
முதலில் உங்கள் தற்போதைய எடை, நீங்கள் எதிர்பார்க்கிற எடை, வாரம் எவ்வளவு எடை குறைக்க விரும்புகிறீர்கள், ( அதிகபட்சம் 2 பவுண்ட்) இவற்றைக் கொடுத்தால் போதும். அதுவே சொல்லும் எத்தனை நாளில் நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள் என்று.
அதுமட்டுமல்ல, நீங்கள் தினமும் எவ்வளவு கலோரி உணவு சாப்பிடவேண்டும் என்று பட்ஜெட் போட்டுக் கொடுக்கும்.
எதைச் சாப்பிட்டாலும் அதன் அளவைத் தேர்ந்தெடுத்தால் அதுவே எவ்வளவு கலோரி என்று கணக்கிட்டுக் கொள்ளும். காலை, மதியம், மாலை, இரவு, இப்படி நீங்கள் சாப்பிட்ட உணவின் அளவைச் சரியாகப் போடவேண்டும். ( இட்லி, தோசை, பிட்சா, சாம்பார், மொளகூட்டல், கூட்டு, அப்பளம், நெய், ஊறுகாய் போன்ற எல்லாவற்றிற்கும் இந்த ‘ஆப் ‘பில் தனித்தனியே கலோரிக் கணக்கு உண்டு.)
நீங்கள் செய்கின்ற உடற்பயிற்சிக்கும் ( நடை,ஓட்டம், சைக்கிளிங், யோகா போன்றவை) கலோரியை அளவிட்டு அதை போனசாகக் கொடுக்கும்.
நாள் முடிவில் உங்களுக்கே தெரியும், நீங்கள் பட்ஜெட்டிற்கு மேலேயா கீழேயா என்று. தினமும் காலை ஒரே நேரத்தில் உங்கள் எடையையும் அதில் குறிக்கவேண்டும்.
அப்போது அதுவே சொல்லும் உங்கள் குறிக்கோள் நாள் முந்தி வருமா பிந்திப்போகுமா என்று.
இந்த முறையில் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் கலோரியை அளந்து சாப்பிடும்போது, தினமும் எடையைப் பார்க்கும்போது நமக்கு அதிகமாகச் சாப்பிடவே தோன்றாது.
உதாரணமாக , அக்டோபர் 1 அன்று ஒருவர் தனது 180 பவுண்ட் எடையை 170 ஆகக் குறைக்க எண்ணி வாரம் 2 பவுண்ட் குறைக்கத் தீர்மானித்தால் ‘லூஸ் இட் ஆப்’ உங்களுக்குத் தினமும் சுமார் 1200 கலோரி உணவு சாப்பிடவேண்டும் என்று சொல்லும். நீங்கள் அதைவிடக் குறைவாகச் சாப்பிட்டால் சீக்கிரமாகவே குறிக்கோளை அடைந்து விடலாம். அதிகமாச் சாப்பிட்டால் 6 அல்லது 7 வாரங்கள் ஆகும்.
நீங்கள் செய்யும் சிறப்பான காரியங்களுக்குத் தகுந்தவாறு உங்களுக்குப் பாராட்டுப் பத்திரங்களையும் இந்த ‘ஆப் ‘ வழங்கும்.
உங்கள் நண்பர்களோ , உறவினர்களோ இந்த ஆப்பில் சேர்ந்தால் அது நல்ல போட்டியாக இருந்து இதை ஒரு விளையாட்டுபோல உங்களை ஆர்வத்தோடு செய்ய வைக்கும்.
அப்பறம் என்ன, லூஸ் இட் – ஆட்டத்தை ஆரம்பிப்போமா ?
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன். (4) – புலியூர் அனந்து
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
எனக்கு ஒரு வேலை கிடைத்ததை அம்மா ‘கடவுள் செயல்’ என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். எங்கள் தெருமுனைப் பிள்ளையார் கோவிலுக்கு வரும் அர்ச்சகர் சொன்ன ‘தெய்வ சங்கல்பம்’ என்பதன் தமிழாக்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
நேரடியாகக் காரணம் சொல்ல முடியாத நடப்புகளுக்கு சௌகர்யமாக ‘கடவுள் செயல்’ என்றோ ‘முற்பிறவிப் பயன்’ என்றோ சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். நாத்திகர்கள் வேறு ஏதேனும் காரணம் தேடவேண்டியிருக்கும். ‘மறுபிறவி’ நம்பிக்கை இல்லாத மதத்தினர் முதல் காரணம் மட்டும்தான் சொல்ல முடியும்.
என் வாழ்க்கையில் ‘சாமி’ எப்போதெல்லாம் குறுக்கிட்டார் என்று யோசிக்கிறேன். எல்லோரையும்போல குழந்தைப் பருவத்திலே ‘உம்மாச்சி காப்பாத்து’, ‘சாமி கண்ணைக் குத்தும்’ எல்லாம் இருந்திருக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிந்து குலதெய்வத்திற்குக் கோலாகலமாய் படையல் இட்ட சம்பவம்தான் முதலில்.
அப்போது நாங்கள் நகரத்திற்கு வரவில்லை. நான் இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்குச் சற்று வெளியே அந்தக் கோயில். அதில் மூன்று பகுதிகள்.
முதல் பகுதியில் சாமி சிலை எல்லாம் பளபள என்று ஜொலிக்கும். பூஜை செய்யும் ஐயருக்கு ஓரளவிற்கு நல்ல வருமானம். அவரும் அவர் மகனும் குளத்திலிருந்து குடம்குடமாகத் தண்ணீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள். மேலும் வெண்கலச் சிலைகளையும் துடைத்த வண்ணம் இருப்பார்கள். அந்தப் பகுதியுடன் எங்களது தொடர்பெல்லாம், ஒருமுறை சுற்றி வருவது, சூடம் காண்பிக்கும்போது கன்னத்தில் போட்டுக்கொள்வது, தட்டிலோ, உண்டியலிலோ காசு போடுவது இவ்வளவுதான்.
இரண்டாம் பகுதிதான் நாங்கள் பெரும்பாலும் நேரம் செலவிடும் இடம். சாமி சிலைகள் அவ்வளவு பளபள கிடையாது. படையல் போடப்படுவதும் இங்குதான். மூன்று பகுதிகளையும் சுற்றி வயல் வெளிதான் என்றாலும் ஒரு பக்கம் ஒரு பெரிய குளம். ஒவ்வொரு பகுதியிலும் குளத்தில் படித்துறை உண்டு. நடுப் படித்துறை என்று அழைக்கப்படும் இடத்தில் அந்தக் பக்கவாட்டுச் சுவரும் அருகே ஒரு வளைந்த தென்னை மரமும் உண்டு. நன்றாக நீச்சல் தெரிந்த வயசுப் பையன்கள் அந்தச் சுவரில் தடதட என்று ஓடிவந்தோ தென்னையிலிருந்தோ குளத்தில் குதித்து நீச்சல் அடிப்பார்கள்.
குளத்திற்கும் கோவிலுக்கும் இடையே உள்ள திறந்தவெளியில் செங்கல்களால் செய்யப்பட்ட அடுப்புகள் இருந்தன. நாளடைவில் இடையிடையே சிமென்ட் அடுப்புகள் முளைத்தன. (ஐந்தாண்டுகளுக்கு முன் கோவில் புதுப்பிக்கப்பட்டபோது. ஒரு சிறு அறையும் அதில் நான்கு காஸ் அடுப்பும் வந்துவிட்டது.)
சர்க்கரைப் பொங்கல், புளிச்சோறு, தேங்காய் அல்லது எலுமிச்சம் சோறு, தயிர் சோறு என்று நான்கு விதமாய் தயார் செய்வார்கள். சமையல் இன்றும் வீட்டுப் பெண்களே செய்கிறார்கள். அதிலும் அளவில் ஏதோ கணக்கு வேறு.
நடுவில் ஒரு பெரிய வாழையிலையில் சர்க்கரைப் பொங்கல், மூன்று பக்கங்களிலும் மற்ற மூன்று பதார்த்தம், நாலாவது பக்கத்தில் பழம் வெற்றிலை, பாக்கு, தேங்காய், சுற்றிலும் மாலைகள் என்று அழகானதொரு அலங்காரம் செய்வார்கள். பிறகு பூசாரிக்காகக் காத்திருப்பார்கள்.
என் பள்ளிநாட்களில் இருந்த பூசாரி வயசாளி. தூக்கம் தூக்கம் என்றால் அப்படி ஒரு தூக்கம். இரவில் தூங்க ஆரம்பித்த அவர் எழுந்திருப்பதற்கு ஒரு கணக்கு இல்லை. பதினொன்றோ, பனிரெண்டோ சிலசமயம் அதற்குப் பிறகும்தான் எழுந்திருப்பார். எழுந்ததும் விடுவிடென்று குளத்தில்போய் விழுவார். கரையேறுவது எப்போதென்று சொல்லமுடியாது. கூப்பிடவும் முடியாது.
கரையேறி நெற்றி முழுதும் விபூதியும் குங்குமமும் பூசி கருவறையில் புகுந்துவிடுவார். அலங்காரம் செய்து சூடம் காண்பித்துப் பிறகு அருகில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொம்பினைக் கவிழ்ப்பார். அந்தச் சொம்பின் அருகேதான் மேற்சொன்ன படையல் இடவேண்டும். படையல் இடுபவர்களே சாம்பிராணி, சூடம் காண்பித்துப் படையலை சமர்ப்பிப்பார்கள்.
முதல் சோறு பூசாரிக்குத்தான். பிறகு குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் கொடுத்தபிறகுதான் படையலிட்ட குடும்பத்தினர் சாப்பிடலாம்.
சாப்பிட்ட பிறகுதான் பூசாரி மௌனம் கலைப்பார். அதுவரையில் இருந்த ஆளே வேறு. கறாராக காசு வாங்கிக்கொள்வார். அதில் ஏதேனும் பேச்சு தடித்தால் அவரிடமிருந்து வசவுகளும் கெட்ட வார்த்தைகளும் அருவியாகக் கொட்டும். அவர் நல்ல வார்த்தை சிறிதுநேரம் தொடர்ந்து பேசி நான் கேட்டதில்லை. சம்பிரதாயமோ அல்லது மேற்கண்ட காரணத்தினாலோ படையல் முடியும்வரை வாய் திறக்காதது நியாயமே. எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போய்விட்ட பூசாரியைப் பிறகு பார்க்க வேண்டுமானால் மாலையில் சாராயக்கடைக்குத்தான் போகவேண்டும். பின்னாட்களில் இருந்த பூசாரிகளின் நடவடிக்கைகள் சற்று நாகரீகமாக இருக்கும்.
கோவிலின் மூன்றாவது பகுதிக்குப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. மேலும் அங்கு கிடாவெட்டு போன்ற பலி கொடுப்பது உண்டு என்பதாலோ (நாங்கள் சைவம்), அங்கு காத்து, கருப்பு, பில்லி, சூனியம், வினை ஆகியவற்றிற்கு பரிகாரம் செய்யப்படுகிறது என்பதாலோ நாங்கள் அங்கு போவதில்லை.
இந்தப் படையல் நாட்களை நான் எதிர்பார்ப்பது விளையாட்டும் வேடிக்கையும் கலந்த பொழுதுபோக்கு என்பதனால் தவிர பக்தி என்று சொல்லமுடியாது. ஆனால், சற்று தூரத்து பங்காளி குடும்பத்து வரது அண்ணனின் மனைவி பார்வதி அண்ணி பக்தி பூர்வமாகத்தான் பங்குகொள்வாள். சொந்தத்தில் யார் படையலிட்டாலும் அங்கே அவள் ஆஜர். ‘குலதெய்வம் கொடுக்காததை வேறெந்த தெய்வமும் கொடுக்காது’ என்று தீவீரமாய் நம்புகிறவள். மற்றும் எங்கே கோவிலைக் கண்டாலும் விழுந்து விழுந்து கும்பிடுவாள். கோவிலிலிருந்து அவளைப் பிரித்தெடுப்பது சிரமமான காரியம்.
சாமி கும்பிடுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. வீட்டில் கூடவே வசிக்கும் வயதானவர்கள் (வரது அண்ணனின் பெற்றோர்) மற்றும் தன் குழந்தைகள் உணவு உண்டார்களா, அவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கவனிப்பது என்பது அக்கம் பக்கம் எந்தக் கோவிலிலும் விசேஷமொன்றும் இல்லையென்றால் தான். அது போன்ற சமயங்களில் வரது அண்ணன்தான் சாப்பாடு வாங்கிவந்து கொடுத்து, பிள்ளைகளையும் பள்ளிக்குத் தயார் செய்வார். அண்ணியை ‘சாமி பைத்தியம்’, ‘லங்கிணி’ என்றெல்லாம் கேலி செய்வார்கள். உறவினர்கள் மத்தியில் அண்ணனும்கூட கேலிக்குரியவர்தான்.
கிட்டத்தட்ட இதுபோலவே, எங்கள் தெருவில் வசித்து வந்த சாமிநாதன் என்றொருவர் குடும்பம் அவரது அபரிமித பக்தியால் அழிந்தது என்று சொல்வார்கள். ஊருக்குள் பட்டையோ நாமமோ, மொட்டையோ தாடியோ, சாமியார் என்று யாரேனும் வந்துவிட்டால் அங்கேயே பழியாகக் கிடந்து பணிவிடைகள் செய்வார். குடும்பத்துக்கு மட்டுமல்ல, வேலை பார்த்த இடத்திலும் அவ்வளவு உபயோகமில்லாதவராகக் கருதப்பட்டார். ஒரே மகன், ஒரு திருட்டு வழக்கில் தேடப்பட்டுத் தலைமறைவாகிப் போனவன்தான், பிறகு தகவலே இல்லை. அவர் மனைவி அடுத்த ஊர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். (ஊருக்குள்ளேயே ‘வசதி’யாகக் குளங்கள் இருக்கும்போது, ஏன் இதற்காக அடுத்த ஊர் போனார் என்று எனக்குச் சந்தேகம்). சாமிநாதனுக்கும் வேலை போய்விட்டது. ஆகவே, இப்போது எந்தக் குற்றமனப்பான்மையும் இன்றி, நிம்மதியாக (?) சாமியார்களுக்கு சேவை செய்கிறார். உள்ளூரில் யாரும் சாமியார் வரவில்லை என்றால் என்ன, சுற்று வட்டாரத்தில் யாராவது வரமாட்டார்களா?
இந்த அளவிற்கு இல்லையென்றாலும் இன்னொரு உதாரணம். என் நண்பனின் தந்தை அவர் ஊருக்கு வருகின்ற எல்லா சாமியாரையும் இவர் வீட்டில் நான்கு நாட்களாவது தங்கும்படி செய்வதில் அவருக்கு ஒரு மோகம். அவர் மறைந்து நண்பரின் தாயார் பல வருஷம் இருந்தார். தனது மகன்களுக்கு அவர் சொல்லி வைத்தது இதுதான். ‘ஒரு சாமியாரும் இனி நானிருக்கும் வீட்டில் காலடி வைக்கக்கூடாது. அப்படி யாரையேனும் நீ அழைத்து வருவதாக இருந்தால், உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு நான் அந்தச் சாமியார் போகும்வரையில் வேறு ஊருக்குப் போய்விடுவேன்.’
கடவுள் மேல் எனக்கு எந்தக் கோபமோ, வெறுப்போ இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவோ விவாதிக்கவோ நான் ஒரு சிந்தனாவாதி இல்லை. வாழ்வினை அப்படியே எடுத்துக்கொண்டு, சிற்றறிவுக்கு எட்டிய முடிவுகள் செய்து (சிச்சுவேஷனுக்கு தகுந்த ட்யூன் என்பாள் என் மனைவி) வாழ்ந்து வந்தவன். ஆனால் பக்தியைப்பற்றிக் கேள்விகள் உண்டு. (முதல் முறையாக ஒரு பட்டியலிடும் முயற்சி)
- அது என்ன பயபக்தி? பயமும் பக்தியும் எப்படிச் சேர்ந்தன? பக்தி பயத்தை உண்டு பண்ணுகிறதா அல்லது பயம்தான் பக்திக்குக் காரணமா?
- எனக்கு என்ன தேவை, அல்லது நான் எதற்கு அருகதை என்று எல்லாம் வல்ல சாமிக்குத் தெரிந்திருக்குமல்லவா? அப்போது நான் ஏன் ‘வேண்டி’க்கொள்ளவேண்டும்? (என்னுடைய தேவைக்குப் பதிலாக அவருக்கு ஒரு ட்ரெஸ் அல்லது 12 சிதறு தேங்காய் அல்லது எனது / என் குழந்தைகளின் முடி என்று கடவுளிடம் கான்ட்ராக்ட்.)
- சாமியிடம் ஒப்பந்தம்போட்டு அவரை நமது லெவலுக்கு இழுக்கும் அதே சமயம், பிறப்பால் மனிதர்களான சாமியார் சாமியாரிணிகளை கடவுளின் அம்சம் என்று ஆகா ஆகா ‘என்னே அற்புதம்’ என்று மனிதனைவிட ஒரு தட்டு மேல் வைக்கிறோம். கேட்டதை கொடுத்தால்தான் சாமி – அற்புதம் செய்தால்தான் மகான்.
- இந்தப் பிள்ளையாரைவிட அந்த விநாயகர் சக்திசாலி. ஆகவே நேரத்தை முதலாமவரிடம் வேஸ்ட் செய்ய வேண்டாம்.
- உனக்கு நடப்பதெல்லாம் ஊழ்வினை என்னும் பூர்வ ஜென்மப் பலன். இப்படி போதிக்கப்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும்? அடுத்த ஜென்மத்தில் நீ சௌகரியமாக இருக்க வேண்டுமென்றால் இந்த ஜென்மத்தில் ஒழுங்காக இருக்கவேண்டும் என்றோ? அப்படியானால் ‘பரிகாரம்’ என்பது அந்த எபக்டைக் குறைக்காதா?
எனது எண்ண ஓட்டம் சரியா தவறா என்னும் சந்தேகம் எப்போதும் உண்டு. அதனால் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது இருக்கட்டும் , வாய்விட்டு கருத்தினைச் சொல்லும் பழக்கம்கூடக் கிடையாதே. சொல்லியிருந்தால், (கு)தர்க்கவாதி என்று என்னை வகைப்படுத்தி இருப்பார்கள். ஆத்திகத்திற்கு எதிரிகள் நாத்திகர்கள் அல்ல. ஆத்திகர்கள்தான் என்று சில சமயம் தோன்றும்.
கடவுள் ஏன் கல்லானான் –
மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே
(ரிட்டையர் ஆன பிறகு போகிற வழிக்குப் புண்ணியம் சேர்த்துக் கொள்ளட்டும் என்கிற எண்ணத்தில் சில ஆன்மீக/பக்தி புத்தகங்களைப் பிரிவு உபசாரத்தின்போது கொடுத்தார்கள். இன்னும் பிரிக்கக்கூட இல்லை. உங்களுக்குத் தெரிந்து யாரேனும் இப்போது ஓய்வு பெறுவதாக இருந்தால் சொல்லுங்கள். பரிசளிக்க உங்களுக்கு உபயோகப் படலாம்.)
எரிமலைக்கும் பனிமலைக்கும் போட்டி? யார் ஜெயிப்பார்கள்? (எஸ் எஸ் )
PolPele Legend as information science
பீலி தீ அரசி – போலி பனி அரசி
ஹவாய்த் தீவுகளில் நம் இந்தியப் புராணக் கதைகளைப்போல பல கதைகள் உலாவுகின்றன.
பனிக்கும் நெருப்பிற்கும் நடைபெற்ற யுத்தம் புராணக் கதையாகத் தோன்றும். ஆனால் அதுவே நிலவியல் தத்துவமாகவும் விரியும்.
‘போலி’ வானில் உலாவும் தேவதை. அழகெல்லாம் உருவெடுத்த தங்கப் பதுமை அவள். வெண்பனிக்கு அரசி. அவளின் கண் அசைந்தால் பனி மழை பொழியும்.
அவள் தோழிகள் மூன்று பேர். ஒருத்தி மூடுபனிக்கு அதிபதி. இன்னொருத்தி நீருற்றுக்கு அதிபதி. மற்றொருத்தி சுனை நீருக்கு அதிபதி.
அவர்கள் நான்கு பேரும் தங்கள் இருப்பிடமான மௌனகியா என்ற உலகத்திலேயே உயர்ந்த மலையில் ஆடிப்பாடித் திரிந்து கொண்டிருந்தனர்.
( மன்னிக்கவும் உலகில் உயர்ந்த மலை எவரெஸ்ட் என்பதும் சரி. மௌனகியா என்பதும் சரி. எப்படி என்கிறீர்களா? .கடல் மட்டத்துக்கு மேல் என்று பார்த்தால் எவரெஸ்ட் 28029 அடி. மௌன கியா 13796 அடி தான் இருக்கிறது. ஆனால் கடலுக்கு அடியில் 19700 அடியில்தான் மௌனகியாவின் அடிப்பாகம் இருக்கிறது. ஆக அதன் மொத்த உயரம் 39496 அடி. )
அப்போது மௌனகியா மலை உச்சியிலிருந்து கீழே கடலுக்குச் சறுக்கிக்கொண்டு வரலாம். அதற்கு அவர்கள் உபயோகிக்கும் சறுக்குத் தோணி இதற்கென்றே தயார் செய்யப்பட்டது. மலைப்பாதையில் சிறு கற்களுக்கு மேலே அந்தக் கட்டைத் தோணியில் சறுக்கி வந்து கீழே இருக்கும் கடலில் தொப்பென்று குதிப்பது மௌனகியா தேவதைகளுக்குப் பிடித்தமான வீர விளையாட்டு.
இந்தச் சறுக்கல் விளையாட்டில் எப்பொழுதும் வெற்றி பெறுபவள் பனியரசி போலிதான்.
ஒருமுறை அப்படி அந்த நான்கு அழகிகளும் சறுக்கி விளையாடும்போது செக்கச்செவேல் என்ற சிவப்புப் பெண் ஒருத்தி தானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டாள்.
அவள் வேறு யாருமல்ல. மாறுவேடத்தில் வந்த பீலி என்ற எரிமலை அரசிதான். அவள் யார் என்று கேட்டதற்குப் பறக்கும் தீ என்று சொன்னாள். அவள் ஒரு இடத்துக்கு வந்துவிட்டாள் என்றால் அந்த இடத்தின் தன்மையே மாறிவிடும்.
இதனை அறியாத போலியும் அவளது மற்ற தோழிகளும் அவளையும் சறுக்கல் விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். பீலி வெகு லாவகமாக தோணியில் இறங்கிப் போவதைப் பார்த்த அனைவரும் அவளது வேகத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவள் சென்ற வேகத்தில் அவளது தோணியிலிருந்து புகை வந்தது.
இதைப் பார்த்தவுடன் போலி, தனக்குச் சமமாக ஒருத்தியைக் கண்டு பிடித்ததில் மகிழ்ச்சி கொண்டு அவளுடன் சறுக்கல் போட்டியில் கலந்து கொள்ளத் தீர்மானித்தாள்.
கடலில் விளையாடிக் கொண்டிருக்கும் இரு பெண்களை நீதிபதிகளாக நியமித்து அழகுத் தேவதைகள் ஐவரும் சறுக்கல் போட்டிக்குத் தயாரானார்கள்.
முதலில் போலி சென்றாள். பனியில் வழுக்கிச்செல்லும் பறவை போல அந்தப் பனி அரசி பறந்து சென்றாள். அடுத்துச் சென்றது பீலி. நெருப்புப் பறவைபோல அவளும் சீறிக் கொண்டு சென்றாள். மற்றவர்களும் சிறப்பான முறையில் சறுக்கிச் சென்றார்கள்.
நீதிபதிப் பெண்கள் நன்றாக ஆராய்ந்து வெற்றி பெற்றது போலி தான் என்று கூறினார்கள்.
அவ்வளவு தான். பீலிக்கு வந்ததே கோபம். தானே வெற்றி பெற்றதாக அறிவித்துத் தன் காலால் தரையை வேகமாக உதைத்தாள். அந்தப் பிரதேசமே நடுங்கியது. அது நில நடுக்கம் என்பதை போலி உணர்ந்தாள்.
அப்போதுதான் போலிக்குத் தெரிந்தது, வந்திருப்பது எரிமலை அரசி பீலி என்று. இதுநாள்வரை அவள் அங்கு வராததால் அந்தப் பகுதி செழுமையாக இருந்தது. தோல்வி பெற்றுவிட்டோம் என்ற ஆத்திரத்தில் பீலி ,போலியைப் பார்த்து ‘உன் மௌன கியா மலையை அழித்தே தீருவேன்’ என்று மலை உச்சியை நோக்கிப் பறந்தாள். போலியும் மற்ற தோழிகளும் மலையைக் காப்பாற்ற பீலிக்கு முன்னாள் பறந்தார்கள். பீலி தன் எரிமலைக் குழம்பைக் கக்கிக்கொண்டே அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.
முதலில் மலை உச்சியை அடைந்த போலி தன் ஆணைக்குட்பட்ட பனியைக் கொண்டு மலை முகட்டை மூடினாள். மேலும் பனியைத் தொடர்ந்து பெய்யச் செய்தாள். ஆனால் பீலி மற்ற தேவதைகளின் ஆளுகைக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் அனைத்தையும் தீயின் நாக்குகளால் நிரப்பினாள்.
மௌன கியாவின் மற்ற சிகரங்களிலிருந்து எரிமலைக் குழம்பை ஓடவிட்டுக் கடல் வரை தீயைப் பரவ விட்டாள். அவர்கள் சறுக்காட்டம் ஆடிய அழகிய பகுதிகளில் எரிமலைக் குழம்பைக் கொட்டி அந்தப் பாதையையே அழித்துவிட்டாள்.
போலியும் அவளது தோழிகளும் பனியை மேலும் மேலும் கொட்டவைத்து ஒரு பனிப்போர்வையை உருவாக்கினர். அந்த சிகரம் முற்றிலும் பனிப்பாறையாக மாறியது.
அதனால் பீலியின் எரிமலைக் குழம்பு பனிப்பாறையில் கொட்டியதும் அந்த நெருப்புக் கோளம் கறுப்புப் பாறையாக மாறியது. அதனால் பனிப்பாறையை உருக்க முடியவில்லை. பீலி கடும் முயற்சி செய்து இன்னும் அதிகமாகக் தீக் குழம்பை வாரிக் கொட்டிப் பனியை உருக்க முயன்றாள்.
ஆனால் போலியின் பனிப்பாறை உருண்டு வந்து பீலியின் தீயின் வாய்களை மூடியது. பீலியால் எரிமலைக் குழம்பை உற்பத்தி செய்யவே முடியவில்லை. தான் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.
மௌனகியாவிலிருந்து பீலி ஓடிப் போனாள். மௌனகியா பகுதிகளில் எரிமலைக் குழம்பு அதற்குப் பின் எழவே இல்லை.
நிலவியல் படியும், எரிமலை லாவாவை பனிப்பாறைகள் அழித்த இடம்தான் மௌன கியா.
பீலி மௌன கியாயை விட்டுப் போனாலும் மற்ற எல்லா பகுதிகளிலும் அவளை எரிமலையின் அதிபதியாகப் போற்றி வணங்கித் துதிப்பவர் ஏராளம்.
களஞ்சியத்தின் பெட்டி – சுரேஷ் ராஜகோபால்
களஞ்சியத்துக்கு ,
அப்பா எழுதறது
இப்பவும் எனக்குக் கண் பார்வை மங்கலாகத் தெரிகிறது, காதும் சரியாகக் கேட்கமாட்டேங்கறது. உடம்பு ரொம்ப முடியலை. உங்க ஆத்தா இருந்தவரை ஏதோ ஆக்கிப் போட்டா. நாலு வார்த்தை பேசினா இரண்டு சண்டை போட்டாலும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆளிருந்தது. இப்ப வயல் வரப்பு கயணி பாத்துக்க ஆளில்லை, விவசாயமும் நின்னுபோச்சு. யார்யாரோ கூறு போட்டுகிட்டாங்க , எல்லாம் கைமீறிப் போச்சு.
ஐந்து கறவை மாடு, மூணு கண்ணு குட்டி பராமரிக்க முடியல, ஐந்திலே இரண்டு கறவை மாடு களவு போச்சு. மீதி மாடு கண்ணு எல்லாம் நம்ம பால்க்காரக் கோனாருக்கு வித்துட்டேன். ரூபா பத்து வந்தது. அந்த மாடு கட்டற குடிசைலதான் நான் இப்ப இருக்கேன். கயித்துக் கட்டிலும் பாதி ஒடஞ்சு போச்சு.
வருமானம் நின்னு போனதாலே நம்ம கல்லு வீட்டை ரூபாய் நாநுறுக்குப் பொட்டிக்கடை நாடாருக்கு வாடகைக்கு விட்டுவிட்டேன். அதுதான் மாச வருமானம்.. நாடார் வீட்டம்மா தினமும் கஞ்சியோ கூழோ கொடுப்பாங்க, மவராசி, அதுதான் சாப்பாடு.
நீ ஆத்தா காரியம் முடித்து போகும்போது வரதன் தெரு சேட்டுகிட்டே கடன் வாங்கிப் போனயாம். சேட்டு பீரோ கட்டில் எல்லாம் எடுத்து போயிட்டான். பீரோலே நம்ம நிலப்பத்திரம் எல்லாம் இருக்கு, பாத்துக்க.
நீயும் அப்பப்ப இங்க வந்து போ, எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். பணம் கிணம் ஒண்ணும் கொடுக்கவேண்டாம், வந்து பாத்துட்டு போ.
நாலு மாசம் முன்னே உன்தம்பி மட்டும் வந்து போனான், என் கையிலே ரூபா ஐயாயிரம் கொடுத்துப் போனது ரொம்ப உதவியா இருந்தது. ஏதோ உயிரைப் பிடிச்சுக்கின்னு ஏன் இன்னும் இருக்கேன் தெரியலை.
உன்தங்கை மவராசி மீரா, மாப்பிள்ளை, அவங்க பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. யாரும் ஒரு எட்டு வந்து போகல. அது உலகம் தெரியாத பொண்ணு, நீதான் பெரியவனா இருந்து பாத்துக்கணும். உனக்கு தம்பி கூட சண்டையாமே, எதுக்குப்பா…… சின்னவன் தானே விட்டுக்கொடுத்து போ தம்பி.
இதையும் நாடார் தம்பிட்டச் சொல்லித்தான் எழுதறேன். அவர்தான் எல்லா உதவியும் செய்யராறு, யாரு பெத்த பிள்ளையோ.
ஒரு எட்டு பாத்துப் போடா. உன் பிள்ளை குட்டி, மருமவளை பாக்கணும்போல இருக்கு, இந்த குருட்டுக் கிழவனுக்கு. எல்லாத்தையும் கேட்டேன் சொல்லுடா.
இப்படிக்கு
வடிவேலு (கிறுக்கிய கையெழுத்து)
முப்பது வருடம் முன்னே வந்த கடுதாசி.
அப்பா இறந்த செய்தி வந்தபோதுகூட அண்ணன் தம்பி தங்கை யாரும் போகலை. அப்போ நல்ல வசதியாத்தான் இருந்தார்கள். எல்லாமே தன் பங்கு செலவாகுமே என்று இவனும் ஒதுங்கி விட்டான். நாடார்தான் காரியங்களைக் காத்துக் காத்து இருந்து விட்டுச் செய்தாராம் இதுகூட இவன் தோழன் சொன்னதுதான். ஊர்ப் பக்கமே அப்பறம் போகலை.
களஞ்சியத்தின் மனைவி இறந்து மூணு வருஷமாச்சு, இரண்டு பசங்க, இரண்டு பேருமே பொண்டாட்டி புள்ளைகளோடு அமெரிக்காவிலே இருக்காங்க.
இவன் மனைவி இறந்தவுடன் சின்னவன், “ டாடி இங்க இரண்டு வீடு வெட்டியா இருக்கு, உன் ஒருத்தருக்கு எதுக்கு அது ? உன்னை அந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துடறேன், வீட்டை வித்துட்டு போயிடுரோம்” என்றான். தான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு, மகன்கள் பேரில் மாத்தியது தப்பா போச்சு. விக்கிற வேலை கிடுகிடுவென நடந்தது. வித்த பணம் என்ன ஆச்சுன்னு தெரியாது. மரியாதைக்குக்கூட சொல்ல நாதியில்லை.
சின்னவன்தான் சொன்னான் “ பணம் எதனா வேணுனா கேளு அனுப்பறேன்”ன்னு. இப்ப களஞ்சியத்துக்கு பென்சன் வரதுனால எதோ தப்பிச்சான். மூணு வருஷத்தில ஒருதடவைகூட வந்து பாக்கல, தபாலும் போடலை.
இப்பப் பெட்டியை குடைந்தபோது முதன்முறையாக அப்பா எழுதிய கடிதத்தைப் படித்தான். கண்ணில் கண்ணீர் வரவில்லை ரத்தம் வந்தது.
கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்
வைதீஸ்வரன் கவிதைகள்
கவிஞர் வைதீஸ்வரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி, அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு – மனக்குருவி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தொகுத்தவர் லதா ராமகிருஷ்ணன்.
விருட்சமும், டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலையமும் சேர்ந்து, “வைதீஸ்வரன் கவிதைகள் வாசிப்பு” என்ற நிகழ்ச்சியை ஒரு புதன் கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தார்கள். மனக்குருவியிலிருந்து கவிதைகள் வாசிப்பது என்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர் – கிட்டத்தட்ட இருபது பேர் வந்திருந்தனர் – தனக்குப் பிடித்த கவிதைகளை, புத்தகத்திலிருந்து வாசித்து, சிறிது சிலாகித்தும் பேசினர்.
கவிஞர் வைதீஸ்வரன் அனைவருக்கும் நன்றி சொல்ல, கூட்டம் இனிதே முடிந்தது.
கவிதை என்பது “ஒருவர் தன் எண்ணத்தையோ, அனுபவத்தையோ கற்பனை நயத்துடன், உணர்ச்சி பூர்வமாக (உரை நடை அல்லாத) சொல்லமைப்பில், சுருக்கமாகவும், செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்” – என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
மரபுக் கவிதைகள் பள்ளிக்கூட நாட்களில், செய்யுள் வடிவில், மனப்பாடப் பகுதிகளாக, சிறிது யாப்பிலக்கணம் கற்றதோடு போய்விட்டன. புதுக்கவிதைகள், ஹைக்கூ போன்றவை இன்று விசேஷ கவனம் பெறுகின்றன. அந்த வகையில் வைதீஸ்வரன் கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கிய வெளியில் பெரிய கவன ஈர்ப்பைப் பெறுகின்றன.
அவரது ‘உதய நிழல்’, ‘நகரச் சுவர்கள்’, ‘விரல் மீட்டிய மழை’, மனக்குருவி’ போன்ற எல்லாக் கவிதைத் தொகுப்புகளிலும் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகள் மிக நுட்பமாக, ஒருவித லயத்துடன் உலா வந்துகொண்டிருக்கும்!
வைதீஸ்வரன் ஒரு நல்ல ஓவியரும் கூட – அவரது ஓவியங்களில் கவிதைகளையும், கவிதைகளில் ஓவியங்களையும் வெளிப்படுத்துவது அவருக்கு மிகவும் லகுவாகக் கைவந்த கலை!
’பிணைப்புகள்’ என்ற கவிதையில் கிடைக்கும் காட்சியைப் பார்ப்போம் –
வானத்தில்
என்றோ கட்டறுந்துபோன
என் காற்றாடியை மறந்து
எத்தனையோ நாளாச்சு.
இன்று வரை தெரியவில்லை,
அது
என் வீட்டுக் கூரையிலேயே
வாலாட்டிக் கிடக்குதென்று.
கிராமப் புறங்களில் காய்ந்த கூரைகளின் மேல் சிக்கி, காற்றில் சிறகடித்துக் கொண்டிருக்கும் சாயம் போன காற்றாடிகளைப் பார்த்திருப்போருக்கு இது நிழற்படமாய் மனதில் விரியும்!
எறும்பு
கடிக்காதபோது
ஏன் கொன்றாய்?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்புதான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?
இதில் அவர் மிகத் தெளிவாய் சொல்ல வந்த செய்தியை முகத்தில் அறைவதைப் போல் சொல்லிச் செல்கிறார்!
கட்டுரை ஒன்றில் சுஜாதா, நம் தமிழ்க் கவிதைகளில் மிகக் குறைவாகக் காணப்படும் பாலியல் சார்ந்த கவிதைகளைப் பற்றிப் பேசியிருப்பார்! வைதீஸ்வரன் கவிதைகளில் ஆண்-பெண் உறவு நிலைகள் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. மாதிரிக்கு ஒன்று:
‘நான் சந்தனம்// பூசிக்கொள்// மணம் பெறுவாய்
நான் மலர்// சூடிக்கொள்// தேன் பெறுவாய்
நான் நதி// எனக்குள் குதி// மீனாவாய்
நான் காற்று// உறிஞ்சிக்கொள்// உயிர் பெறுவாய்
நான் உயிர்// கூடிக்கொள்// உடம்பாவாய்’ (கூடல் 2).
’ரஸனை’ – என்ற கவிதை நயமாய்க் கூறும் முரணை ரஸிக்கலாம்!
அவள் சமையல் முடிப்பதற்குள்
இவன்
கவிதை படைத்திருந்தான்.
சாப்பிட்டு எழுந்தவன்
ஏப்பத்தால் ‘பேஷ்’ என்றான்.
இரவின் இணக்கத்தால்
இவன் கவிதை கேட்க மசிந்தவளுக்கு
கொட்டாவியைக் குறைக்க முடியவில்லை,
கூடத்து விளக்கை அணைத்தாள்.
இசைஞானம் பெற்றவர், நாடகக் கலைஞர், ஓவியர், எழுத்தாளர் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள்) எனப் பன்முகத் தன்மை கொண்ட நல்ல மனிதர் வைதீஸ்வரன்!
இவரது ’திசைகாட்டி’ நூல் ஒரு கதம்ப மாலை – கவிதைகள், கட்டுரைகள், வாழ்வின் சம்பவங்கள் சிறு கதைகளாய் – இன்னும் பல்சுவை இலக்கியக் கலவை!
“நினைப்பைப் பொறுத்தது
நீ தேர்ந்துகொள்ளும் உலகம்’
என்கிறார் வைதீஸ்வரன்.
உண்மைதான் – நல்லதோர் உலகைத் தேர்ந்துகொள்ள வைதீஸ்வரன் படைப்புகளைத் தேர்ந்து கொள்ளலாம்!
‘மனக்குருவி’ – வைதீஸ்வரன் கவிதைகளை எல்லோரும் படிக்கலாம் – எளிமையோடும், சுவையுடனும் இருக்கின்றன – எனக்கே புரிகிறதே!!