சரித்திரம் பேசுகிறது! –யாரோ

அரிஞ்சயன்

Arinjaya Chola - Younger Son Of Parantaka Chola I

பராந்தகன், இராஜாதித்தன், கண்டராதித்தன் அனைவரும் சென்றபின் சோழ நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இனி வருவது காண்போம்.

பல அரசர்கள், ஆண்டு பல ஆண்டு, சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.

சில அரசர்கள், ஆண்டுகள் சிலவே ஆண்டும், சரித்திரத்தில் இடம் பெறுவார்கள்.
அரிஞ்சயன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவன்.
அவன் காலம் – சோழர்களுக்கு ஒரு சோதனைக் காலம்.

கண் பெற்று இழந்தவன் நிலை அது!
விஜயாலயன் காலத்தில் கண் பெற்று, பராந்தகனின் இறுதிக்காலத்தில் கண் போன நிலை அது! அடுத்து வந்த கண்டராதித்தன் நாட்டைக் காபந்து பண்ணுவதிலேயே கவனமாக இருந்தான். சிவ வழிபாட்டிலே தனது நாட்களைக் கழித்தான்.
சுற்றி நின்ற பகைகள் சிரித்துக் கொண்டிருந்தது!
சோழவளநாட்டைத் தின்பதற்குத் துடித்திருந்தனர்.  
கண்டராதித்தன் அரிஞ்சயனை கி பி 954 ல் யுவராஜாவாக அறிவித்திருந்தான். கி பி 957ல் கண்டராதித்தன் மரணம் அடைந்தான். கண்டராதித்தனின் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், அரிஞ்சயன் பட்டம் பெற்றான்.

இவன் பரகேசரி பட்டம் பெற்றவன். இவனுக்கு வீமன்குந்தவியார் ,கோதை  பிராட்டியார் என மனைவிகள் இருந்தனர். அதைத்தவிர இன்னொரு மனைவி கல்யாணி. அவளை வைத்துக் காவியமே எழுதலாம்.

சரி.. ஒரு குறுங்கதையாவது புனைவோமே!
அந்நாளில் தென்னிந்தியா முழுதும் பேசப்பட்ட இளவரசி கல்யாணி. திருமுனைப்பாடியில் அரசாண்ட வைதும்பராயருடைய புதல்வி அவள்.
அழகு என்றால் அப்படியொரு அழகு. எல்லா நாட்டு இளவரசர்களும் அவளை அடைவது எப்படி என்று அறையில் தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். சோழ நாட்டு இளவரசர்களும் அதற்கு விதிவிலக்கல்லர்.

இராஜாதித்தனும், அரிஞ்சயனும் அந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தனர். ஆனால், வைதும்பராயருக்கும், பராந்தகனுக்கும் ஒத்துப்போகவில்லை. முக்கியமாக, வைதும்பராயருக்கு பராந்தகன் மீது வெறுப்பு. பராந்தகன் வைதும்பராயரைக் கப்பம் கட்ட சொன்னான். வைதும்பராயன் மறுத்தது மட்டுமல்லாமல், விரோதம் பாரட்டத் தொடங்கினான். சோழ எதிரியான இராட்டிரக்கூட மன்னன்  கிருஷ்ணனுடன் கூட்டு வைத்துக்கொண்டான்.

ஏற்கனவே இரண்டு மனைவிகளிருந்த போதும், அரிஞ்சயன் துணிந்து விட்டான்.
‘தப்பாமல் நான் உன்னைச் சிறையெடுப்பேன், இரண்டு மூன்றாக இருக்கட்டுமே’ என்று மனத்துக்குள் ராகம் பாடினான் கல்யாணியின் மனநிலையை யாரோ அறிவர்.
கல்யாணியைக் கவர்ந்து பழையாறை அரண்மனையில் வைத்தான். பராந்தகன் அரிஞ்சயன் செயலை முழுமனதோடு ஆதரிக்கவில்லை. ஆயினும், கல்யாணியின் வரவு, வைதும்பராயரை சோழக்கூட்டணிக்கு வரவழைக்கும் என்று நினைத்திருந்தார். அவரது கணக்கு தவறியது. வைதும்பராயரது பகைமை விரிந்தது. கல்யாணியை கல்யாணம் செய்து கொண்ட ஒரு வருடத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. பராந்தகன் என்றே பெயர் வைத்தனர். அழகில் மன்மதன் போல விளங்கிய அந்தக் குழந்தை பராந்தக மன்னனின் செல்லப்பேரனாயிற்று. அவனை ‘சுந்தரா’ என்று அழைத்தான்.

சுருங்கிய நாட்டை சுருங்கிய நாட்களே ஆண்டான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன கால கட்டத்தில், அரிஞ்சய சோழன் தொண்டை மண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். தன் மகள் அரிஞ்சிகைப்பிராட்டியை வாணர் குல மன்னனுக்கு மணம் செய்து கொடுத்து வாண நாட்டை நட்பு நாடாக்கினான். போர் நிகழ்த்தி மேல்பாடி அருகில் உள்ள ஆற்றூர் என்னும் இடத்தில் இறந்தான்

வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று “ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி” என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி. பின்னாளில் சுந்தரன் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயர் வைத்தது, இந்த ராணியின் பெயரைத்தான். கல்யாணி வைதும்பராயனின் மகள் . நான்காவது பூதி ஆதித்த பிடாரி கொடும்பாளூர் நாட்டின் இளவரசி.

இந்த அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும் .அதற்கு  முன் பள்ளிப்படை என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். பழங்காலத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த மாவீரர்களின் ஞாபகமாக வீரக்கல் நட்டு கோயில் கட்டுவது மரபு .வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நட்டிருந்தால் அது  “நடுகற் கோயில் ” என்று கூறுவார்கள் .அத்துடன் ஏதாவது தெய்வத்தின் சிலையை நிறுவியிருந்தால் அது “பள்ளிப்படை” என்று அழைக்கப்படுகிறது.

அரிஞ்சயன், தன் மகன் சுந்தரனால் சோழ நாடு நல்ல நிலைக்கு வரும் என்று நம்பினான். அந்த நினைப்புடன் போர்க்காயங்கள் ஆறாது ஆற்றூரில் காலமானான்.

Sri Arinjaya Cholan Pallipadai | India Temple Tour

(அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை) 

ஆனால் அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. தனது சந்ததியினர் கொடிக்கட்டிப் பறந்து தரணி எல்லாம் ஆளுவர் என்று எண்ணவே இல்லை. அந்தக்கதைகளை விரைவில் எதிபார்க்கலாம்.

தொடரும் .. 

உலக இதிகாசங்கள் எஸ் எஸ்

Utnapishtim In Gilgamesh | pinsoftek.com Custom Academic Help

கில்காமேஷின் கதையைக் கேட்டபிறகு  உத்தானபிஷ்டிமுக்கு அவன்பால் இரக்கம் உண்டாயிற்று.

அவன் தோள் மீது கையை வைத்து, ” நீ என் பதில் இல்லாமல் போகமாட்டாய் என்பது தெரிகிறது. ஆகவே உனக்கு ஒரு மர்மத்தை   விளக்குகிறேன். கடவுள்கள் ரகசியமாக வைத்திருக்கும் அந்த விஷயத்தை உனக்குத் தெளிவு படுத்துகிறேன்” என்று கூறி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

” யூபிரடீஸ் நதிக்கரையில் உள்ள விர்ரூபக்  நகரம் உனக்குத் தெரியுமல்லவா கில்காமேஷ் ? அதன் தேவர்களையும் உனக்குத் தெரியும். அனு என்பவர்தான் நகரத்தின் தந்தை . என்லில் அவரது வலதுகரம் போர்த்தேவன். நினுர்த்தா, என்னுகி ,ஈயா , இஷ்டார் போன்ற தேவர்கள் அவருக்குத் துணையாக இருந்து வந்தார்கள்.

அப்போது பூமியின் பாரம் அதிகமாகிவிட்டது என்பதை அனைத்துக் கடவுள்களும் உணர்ந்தார்கள். உலக மக்கள் செய்கிற  அநியாயங்களும் , அக்கிரமங்களும் , கூக்குரலும் அதிகமாகிவிட்டது.   அதனால் மனித குலத்தை ஒட்டுமொத்தமாக  அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைத்துத் தேவர்களும் உணர்ந்தார்கள். அதற்காக மிகப் பயங்கரமான ஆயுதமான பிரளயத்தை ஏவலாம் என்றும் முடிவு கட்டினார்கள். அதைச் செய்துமுடிக்குமாறு என்லில்க்கு உத்தரவிட்டார்கள்.

அந்தக் கடவுளர் கூட்டத்தில் இருந்த ஈயா என் உயிர்த்தோழன். யாருக்கும் தெரியாமல் என்னிடம் வந்து அந்த ரகசியத்தைக் கூறினான்.

” உத்தானபிஷ்டிம் ! உலக மக்களில் நீ மிகவும் நல்லவன். அதனால் உனக்கு மட்டும் அந்தப் பிரளயம் வரப்போகிற ரகசியத்தைக் கூறினேன். அதுமட்டுமல்ல மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டியது என் கடமை. அதனால்தான் உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களையும் அழிக்கவேண்டும் என்ற  சக்திவாய்ந்த என்லில்தேவனின்  கட்டளையை மீறி இதைச் செய்கிறேன்.

நான்  கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்! உன் வீட்டை அழித்துவிட்டு மரங்களைக் கொண்டு பெரிய படகை நிர்மாணம் செய்! மழைத்தண்ணீர் உள்ளே வராத மாதிரி நெருக்கமான கூரையினால் அதை மூடு. மக்களை அண்டி வாழும்  மிருகங்கள் பட்சிகள் அனைத்திலும் ஒரு ஜோடி – ஆண் பெண்ணாக உன் படகில் ஏற்றிக்கொள் !   உன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள் ! மற்ற சொத்துக்களைப் பற்றிக் கவலைப்படாதே! உன் உயிரைக் காப்பாற்ற வேண்டியதைச் செய்”

எனக்கு அதன் தாக்கம் புரிய சற்று நேரம் ஆனது. புரிந்ததும், ”  ஈயாதேவனே ! உனக்குக் கோடான கோடி நன்றி! நீ சொன்னபடி நான்  செய்கிறேன்.    ஊரில் உள்ளவர்களிடம் நான்  என்ன சொல்வது?”  என்று கேட்டேன்.

அப்போது ஈசா , ” நல்ல கேள்வி! என்லில் உன்மீது கோபம் கொண்டிருப்பதால் அவருக்குப் பயந்து   ஈசா கடவுள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறேன் என்று அனைவரையும் நம்ப வைத்துவிட்டுப்  புறப்படு. ” என்று வழியையும் கூறினார்.

New Study: Babylonian Noah Duped by "Fake News" into Building the Ark

 

அப்போதே படகு நிர்மாணிக்கத் துவங்கினேன். ஐந்து நாட்களில் படகு ஒரு வடிவத்திற்கு வந்தது. அடித்தளம் ஒரு ஏக்கரா அளவு என்று அமைத்து மேல்தளத்துக்கு 120 முழத்திற்கு 120 என்று அமைத்தேன். மேல் தளத்திற்குக் கீழே ஆறு மாடிகளும் தயார் செய்தேன். படகில் நீர் கசியாமலிருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். ஜோடி ஜோடியாக பறவைகள் மிருகங்கள் ஜந்துக்கள் போன்றவைகளுக்கு தடுப்பு அறைகள் அமைத்தேன். உணவு மற்றும் தேவையான சாமான்களையும் பத்திரப்படுத்தினேன். வேலை செய்தவர்களுக்கு உணவும் மதுவும் வழங்கினேன்.

Did the Bible 'Borrow' the Noah's Ark Story From the Epic of Gilgamesh? | HowStuffWorks

என் குடும்பம் மற்றும் சில உறவினர்கள் படகு கட்ட உதவியவர்கள் அனைவரையும் படகில் ஏற்றி மிகுந்த சிரமத்துடன் அதை ஆற்று நீரில் மிதக்க வைத்து ஈசாவின் உத்தரவுக்காகக் காத்திருந்தேன்.

கடவுளர்கள் விதித்த அந்தப் பிரளய காலம் அன்றிரவு  வரப்போகிறது  என்ற தகவல் வந்ததும் நாங்கள் ஆற்று வெள்ளத்தில் படகைச் செலுத்திக் கொண்டு புறப்பட்டோம்.

நாங்கள் படகை மிகுந்த சிரமத்துடன் துடுப்பைப் போட்டு சென்று கொண்டிருந்தோம். படகு ஆற்றைக் கடந்து ஆழ்ந்த கடலுக்குள் சென்று கொண்டிருந்தது. 

The boat built by Utnapishtim reels about in the flood waters. send by the gods. The tale was included in the epic of Gilgamesh Stock Photo - Alamy

படகுக்கு வெளியே புயல்தேவன் தன் காட்டுக் குதிரையில் சவாரி செய்தான். பாதாளத்தின் தேவன் அணைகள் அனைத்தையும் உடைத்து உலகத்தை வெள்ளத்தில் ஆழ்த்தினான். போர்த் தேவனின் தளபதிகள் ஆறு குளங்கள் எல்லாவற்றிலும் நீரை நிரப்பி பூமியைத் தெரியாதபடி செய்தார்கள். மழைத்தேவன் தொடர்  மழையைப் பொழியவைத்து உலகையே தண்ணீர்க் காடாக மாற்றினான்.  பெருங்காற்று வீசியது. மின்னல் கோரதாண்டவம் செய்தது. மண்பானையை உடைப்பதுபோல் தேவர்கள் பூமியை உருத்  தெரியாமல் செய்துவிட்டார்கள்.  உலகம் முழுதும்  இருட்டில்  ஆழ்ந்தது. மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் ஜந்துக்கள் அனைத்தும் வெள்ளத்தில் கொல்லப்பட்டன. பிரளயத்தை ஏற்படுத்திய கடவுள்களால் கூட அதன் கொடுமையைக்  காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டனர். பூமியிலிருந்து வானத்துக்குச் சென்று ஒளிந்து கொண்டனர். 

காதல் தேவதையான இஷ்டார் அந்தக் கோரத்தைக் கண்டு அழுது புலம்பினாள். 

” உலகில் என் காரியங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. காதலால் பிறந்த மக்கள் பூண்டேயில்லாமல் அழிகிறார்களே ! இப்படிப் புயலை அனுப்பக் கடவுள்கள் தீர்மானித்தபோது நான்  ஏன் சம்மதித்தேன்? இவர்கள் என்னால் உண்டானவர்கள்!  என் அன்பு  மக்கள்! செத்த மீன்கள் நதியின் வெள்ளத்தில்  மிதப்பதுபோல இவர்கள் இந்தப் பிரளய வெள்ளத்தில் மிதக்கிறார்கள்!   இவர்கள் எல்லாரும் மடிய நானும் ஒரு காரணமாகி விட்டேனே!  ” என்று புலம்பினாள்.

மற்ற தேவர்களும் தேவதைகளும் மனிதர்கள் இப்படிச் சாவது பற்றி வாயைக் கையால் பொத்திக் கொண்டு அழுதார்கள்.

இப்படி ஆறு நாட்கள் தொடர்ந்து பிரளயம் நீடித்தது. நாங்கள் மட்டும் பத்திரமாக அந்தப் படகுக்குள் இருந்தோம். ஏழாவது நாள் கடல் அமைதியுற்றது. இடியும் புயலும் இருந்த இடம் தெரியாமல் போயின. உலகத்தைப் பார்த்தேன். எங்கும் மௌனம். மனித நடமாட்டமே இல்லை. இந்தப் பிரளயத்தைத் தாண்டி யார் உயிருடன் இருக்க முடியும்?  படகின் கூரைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சூரியனின் ஒளி  என் கண்ணில் பட்டது. வாய் விட்டு அழுதேன். 

பூமி எங்காவது தென்பட்டால் அங்கு படகை நிறுத்த எண்ணினேன். எங்கும் தரை தென்படவில்லை. படகு காற்று அடிக்கும் திசையில் சென்றது. பல காதங்கள் போன பிறகு நிசிற என்ற ஒரு மலை  தென்பட்டது. அதன்  உச்சியில் என் படகு ஒட்டிக்கொண்டது. 

வெளியே செல்ல எனக்குப் பயமாக இருந்தது. நாலைந்து நாட்கள் அந்த மலையருகே நின்றுய் கொண்டிருந்தேன். ஒரு புராவை வெளியே அனுப்பினேன். அது சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் படக்குக்கே வந்துவிட்டது. பிறகு  ஒரு சிட்டுக்குருவியைப் பறக்க  விட்டேன். அதுவும் தங்க இடம் கிடைக்காமல் திரும்பப் படகுக்கே வந்துவிட்டது.   பின்னர் காகத்தை அனுப்பினேன். அதற்கு உணவும் தங்க இடமும் கிடைத்தது . அது திரும்ப வரவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் படகின் அனைத்து கதவுகளையும் திறந்து எல்லாவற்றையும் வெளியே விட்டேன் 

பின்னர் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் அந்த மலை  உச்சியில் இறங்கினோம்.

அங்கே .. 

(தொடரும்)  

 

 

கம்பன் கவிநயம்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி

அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க, பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச, மணம்கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான்.

தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது

 

ஸ்ரீ ராம நாமம் உச்சரிப்பதின் மகிமை - YouTube
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்!

நோக்கம்:

‘இராம’ நாமத்தின் மகிமை

பொருள்:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தினம் தினம் எல்லாவித நல்லதும், உங்கள் தேவைக்கான செல்வங்களும் கொடுக்கவல்லது இராம நாமம்!

(தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே)

தின்மை  என்பது தீயசெயல் ஆகும். நன்மை என்பதின் நேரடி எதிர்பதமே தின்மை! பாவம் என்பது தீயவினை. தீயசெயல் என்பதும், தீவினை என்பதும் வெவ்வேறு. தீயசெயல் எப்போதுமே இந்த பிறவியில் நீங்கள் செய்யும் தீய நன்மையற்ற செயல்கள் ஆகும், பாவம் என்பது பெரும்பாலும் இந்த பிறவியில் நீங்கள் சந்திக்கும் கஷ்டங்கள், அந்த கஷ்டங்கள் முற்பிறவியில் நீங்க செய்த தின்மைகளினால் நேர்ந்தது! அதனால் திண்மை எப்போதும் தற்கால பிறவியின் தீ செயல்கள், பாவம் நீங்கள் முற்கால பிறவியில் செய்த தீசெயல்களின் சம்பளம் அவ்வளவு தான்! எது எப்படியோ இராம நாமம் இது எல்லாத்தையும் சிதைத்து விடும், அது இந்த பிறவியோ இல்லை ஆயிரம் பிறவிகளின் தாக்கமோ கவலையே இல்லை, இராம நாமம் இராம பானம் போல துளைத்து சிதைத்துவிடும்!


(சென்மமும் மரணமும் இன்றித் தீருமே)


சென்மம் என்பது பிறப்பு. பிறப்பும், மரணமும் இல்லது அந்த சுழற்சி இல்லாமல் போயி விடும் இராம நாமம் ஜெபித்தால்!

(இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்)

‘ராம’ நாமம் என்னும் இரண்டு எழுத்து மந்திரத்தினால் இந்த பிறவியிலேயே உங்களுக்கு இந்த அனைத்து மகிமைகளும் நிகழும்!

சிரம் தள்ளிய சரம் – அ கி வரதராஜன்

Indrajit - Wikipedia

சிரம் தள்ளிய சரம் என்ற தலைப்பில் உயர்திரு அ கி வரதராஜன் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போனது என்றால் மிகையில்லை. 

இந்தத் தலைப்பில் என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும்போது இலக்குவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். 

முடிவில் இலக்குவன் இந்திரஜித் போர் பற்றிக் கூறும்போது இலக்குவானால்  இந்திரஜித்தை வெல்லவே முடியவில்லை என்றும் இராமன் அறத்தின்   வழி நின்றது உண்மையென்றால்  இந்த சரம் அவன் சிரத்தைத் தள்ளட்டும் என்று ஆணையுரைத்து அம்பு  எய்துகிறான் இலக்குவன். 

இந்திரஜித்தின் சிரம் கொய்யப்படுகிறது. 

இதனை அவர் முத்தாய்ப்பாகக் கூறியபோது     அரங்கமே அதிர்ந்தது. 

அவரின் முழு காணொளியை இங்கே கேளுங்கள்!   

பூர்ணம் விஸ்வநாதன்-நூற்றாண்டு.! -ஆர்க்கே.!

தன் பதினெட்டாம் வயதில் நாடக மேடையில் தடம் பதித்து நாடக உலகில் தனிப்பாதை அமைத்த சாதனையாளர் கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருதுகள் பெற்ற பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவினை பாரதீயவித்யா பவனில் பூர்ணம் விஸ்வநாதன் குடும்பத்தினர் பூர்ணம் நியூ தியேட்டர் குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 1995 கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் பாரதீய வித்யா பவனுடன் இணைந்து தனித் திருவிழாவாகவே மயிலாப்பூரின் மாட வீதி பாரதிய வித்யா பவனில் கொண்டாடியது.

கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்ட இந்த கண்கவர் விழா மிகச்சரியாக ஆறு மணிக்கு களை கட்டியது.

கலைமாமணி சி வி சந்திரமோகன் தனக்கே உரித்தான கவிதைத் தமிழுடன் விழா இணைப்புரை பொறுப்பேற்க முத்ரா பாஸ்கர் அளித்த
“முத்ரா” தயாரிப்பிலான பூர்ணம் விஸ்வநாதன் குறித்து தயாரித்திருந்த ஒரு சிறப்பான ஆவணப் படம் திரையிடப்பட்டது.

“தரையிலிருந்து திரைக்கு” என நம் கவனத்தை தமிழ்ச்சுவை ஈந்து திரையிடலின் முன் நம் கவனம் ஈர்த்தார் இனிப்பு இணைப்புரையாளர் சி வி சி.

அந்த ஆவணப்படத்தில் கலாநிலையம் கே எஸ் நாகராஜன், பூர்ணத்துடன் பல காலம் இணைந்து நடித்த கூத்தபிரான், முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ நடராஜன், திருமதி சுசீலா பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் அவருடைய சிறப்பினை இயல்பாக பகிர்ந்துகொண்டனர். பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பங்க்ச்சுவாலிட்டி, வசன உச்சரிப்பிற்கு அவர் காட்டும் சிரத்தை, பயிற்சியில் பங்களிப்பாளர்களின் குறைகளை தனியே அழைத்துப் பேசும் நல்ல குணம் பற்றி பகிர, பூர்ணம் நியூ தியேட்டரின் சீனியர் நடிகர்கள் எம் பி மூர்த்தி அவரின் சிறந்த நிர்வாக திறன் பற்றி சொல்ல, விஸ்வநாதன் இரமேஷ் பூர்ணம் நாடகக் களங்களாக அவர் எடுத்துக்கொண்ட சமுதாய சிந்தனையை சிலாகித்தார். அவர் தம்முடைய கண்களை தானம் செய்ததையும் இறுதிப்பயண யாத்திரையில் தனக்கு நாடக மேக்கப் போட்டு நிறைவேற்றவேண்டும் என்ற அவரின் விருப்பத்தையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திருமதி பூர்ணம். பூர்ணம் விஸ்வநாதன் டெல்லியில் இசை விமர்சகர் சுப்புடுவுடன் நடித்தவர். முத்ரா ராம்கியின் குரல் வளத்தில் ஆவணப்படம் ஒரு பூரண அறிமுகம் தந்தது அவருடைய கலைப் பயணத்தை.

இறை வணக்க பாடலாய் கஜவதனாவை வணங்கிப் பாடினார் பூர்ணம் நியூ தியேட்டரின் சீனியர் அங்கத்தினரான உஷா ரவிச்சந்திரன். குருகுலம் கல்கத்தா எஸ் இரமேஷ் எல்லோரையும் சிறப்பாக வரவேற்று வரவேற்புரை வாசித்தார்.

பாரதிய வித்யா பவன் டைரக்டர் கே என் ராமசாமி விழாவின் தொடக்க உரையாற்றினார். பன்மொழி நாடகங்களை சிலாகித்து தமிழ் நாடகங்கள் இன்னும் சிறக்க வாழ்த்தினார். தாம் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பிற்கு ரசிகன் என்றும் திரைப்பட நடிப்பை விட நாடகத்தை அதிகம் நேசித்தவர் பூர்ணம் என்றும் குறிப்பிட்டார். அவர் உரையில் நாடகத்திற்கான முழு ஒத்துழைப்பையும் தர பாரதிய வித்யா பவன் சென்னை தயாராக இருப்பதாக மகிழ்வுடன் தெரிவித்தார். நாடக ஒத்திகைக்கான இலவச இடம் (மைக் வசதியுடன் கூடிய பிரத்யேக நான்காம் மாடியில்) நாடக நிகழ்த்துதலுக்கான சன்மானம் மற்றும் பாரதிய வித்யா பவனின் இலவச அரங்க பங்களிப்பு என தமிழ் நாடகக் குழுக்களின் வயிற்றில் கலையார்வப் பால் வார்த்தார்.

சிறப்புரையில் நாடகத்துறையிலிருந்து காத்தாடி இராமமூர்த்தி பூர்ணத்தின் நடிப்பு ருசியை சிலாகித்தார். நாடக மற்றும் திரைத்துறையில் அவருடனான தம் பயணத்தை
தனக்கே உரிய பாணியில் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாக பேசினார்.

திரைத்துறையிலிருந்து வந்து சிறப்புரை ஆற்றிய நல்ல பல திரைப்படங்கள் இயக்கிய திரை ஆளுமை வஸந்த் எஸ் சாய் தான் சிறு வயதில் பார்த்து வியந்த பூர்ணத்தை தொடர்ந்து தன் மூன்று படங்களில் பூர்ணம் ஸாரை நடிக்க வைத்ததை பெருமை பொங்க சொன்னார். தினத்தந்தி பேட்டி ஒன்றில் பிடித்த இயக்குனர்களில் பாலசந்தர் பாலுமகேந்திரா வஸந்த் என்று பூர்ணம் விஸ்வநாதன் பதில் சொன்னதை தனக்கான கௌரவம் எனக் குறிப்பிட்டார்.

ஒரு எஸ் வி ரங்காராவ் ஒரு எம் ஆர் ராதா ஒரு பூர்ணம் விஸ்வநாதன் என அவர் முத்தாய்ப்பாய் முடித்தது நடிப்பின் மூன்று தெய்வங்களின் குறியீடு போல இருந்தது. குருவைக் கொண்டாடும் குருகுலத்தை வாழ்த்திய விதம் தனித்துவம்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழா விருது நாடகத்தை வாசிக்கும் சுவாசிக்கும் விசுவாசிக்கும் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்/ஷ்ரத்தா நாடகக்குழுவின் T D S என அழைக்கப்படும் T D சுந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது. ராஜ கமலம் ட்ரஸ்ட் சார்பாக தரப்படும் அந்த விருதினை நிறுவி அளித்தவர் ஐ பி எஸ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ் அவர்கள். பூர்ணம் விஸ்வநாதன் அவருடைய சித்தப்பா என்பது அனைவரும் அறிந்ததே. கலை இலக்கிய குடும்பம் அவருடையது என்பது அடுத்து பேசிய அவர் உரையில் தெரிந்தது. ஒரே நாளில் நாலு காட்சிகள் தொடர்ந்து நடித்த அவரை சிலாகித்தார் அவர். அவருடைய இசையார்வம் பற்றியும் சொல்லத் தவறவில்லை.

அடுத்ததாக பேசிய பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் மகன் ராஜா என்கிற சித்தார்த் தன் அப்பாவைப்பற்றி கலைஞனாக தந்தையாக என இரு பார்வையில் பூர்ணத்தை பற்றி சுவைபட பேசினார். இந்த விழாவே தன் குடும்ப விழா போன்ற உணர்வை தருவதாக சிலாகித்தார். அவரின் டைரி எழுதும் வழக்கத்தை விசேஷமாக குறிப்பிட்டார். தினசரி வாழ்க்கையில் அவருடனான ஹாஸ்டல் தருணங்களை பகிர்ந்து கொண்டார். இந்திய சுதந்திர தின அறிவிப்பையும் அதன் பொன்விழா அறிவிப்பையும் அவர் வானொலியில் அறிவித்ததை பெருமையுடன் குறிப்பிட்டார். குருகுல குழுவினரின் உறுப்பினர் அனைவருமே அவரின் குழந்தைகள் போலத்தான் என்றும் குறிப்பிட்டார். மற்ற குழுக்களின் நாடகத்தை அவர் விரும்பி பார்ப்பதையும் இசைக் கச்சேரிகளில் அவர் வந்தால் அவருக்கு பிடித்த ரேவதி ராகத்தை பாடுவதையும் குறிப்பிடத் தவறவில்லை.

இயக்குனர் வஸந்த் வேண்டுகோள் வைத்து மொத்த அரங்கமும் திருமதி சுசீலா பூர்ணத்திற்கு எழுந்து நின்று கரவொலி தந்து நன்றி கூறிய விதம் மனநெகிழ்வு.!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் செக்ரட்டரி ராஜகோபால் சேகர் பூர்ணம் விஸ்வநாதன் வசன உச்சரிப்பு உடல்மொழி குறித்து மகிழ்வுடன் பேசினார்.

விருது பெற்ற T D சுந்தர் ராஜனை சக நாடகக் குழுக்கள் கௌரவிக்க ஏற்புரையில் விருது பெற்ற சுந்தர்ராஜன் உணர்வு பூர்வமாக சொன்னால் பிரிக்க முடியாத உறவு நாடகமும் பூர்ணமும் என்றார். தனக்கு கிடைத்த விருதினை நாடகத்துறை சம்பந்தப்பட்ட அனைவருக்குமான கௌரவம் என நெகிழ்ச்சியுடன் சமர்ப்பணம் செய்தார். இந்த வருட நாடக பத்மம் விருது பிரம்மகான சபாவால் இவருக்கு வழங்கப்பட இருப்பது காத்(து) தாடி ‘வாக்கில்’வந்த கூடுதல் சந்தோஷ இனிப்புத் தகவல்.

நடிகர் சிவகுமார் மற்றும் நாடக உலக ஏ ஆர் எஸ்ஸின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டன.

குருகுலத்தின் இளைய தலைமுறை பங்களிப்பாளரான கார்த்திக் கௌரிசங்கர் நன்றியுரை நவில, பூர்ணம் சுஜாதா காம்பினேஷனின் கிளாஸிக் ஓரங்க குறு நாடகமான “வந்தவன்” நாடகம் சிறப்புமிக்கதாய் நிகழ்த்தப்பட்டது.

ஒரு விழா பூரணத்துவமாய் பூர்ணம் விஸ்வநாதன் எனும் நாடக பிதாமகர் அவர்களின் நூற்றாண்டு விழாவை பல்லாண்டு காலம் நினைவு கொள்ளும் வகையில் நடந்து சிறந்தது குருவருள் அன்றி வேறென்ன.?

ஸ்ரீ குருப்யோ நமஹ.!

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

 குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
  25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
  26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
  27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
  28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
  29. மழையே வா ! – செப்டம்பர் 2021
  30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
  31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
  32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
  33. தமிழ் ! – நவம்பர் 2021
  34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021

 

கைக்கடிகாரம் !

வாட்ச் எந்த கையில் உள்ளது? கடிகாரம் ஏன் இடது கையில் அணியப்படுகிறது, வலதுபுறத்தில் இல்லை. 

டிக் டிக் டிக் டிக் கைக்கடிகாரம் !

நிற்காமல் ஓடும் கைக்கடிகாரம் !

நேரம் காட்டும் கைக்கடிகாரம் !

நாள் தேதி காட்டும் கைக்கடிகாரம் !

 

சின்னதும் பெரிதுமாய் கைக்கடிகாரம் !

சிவப்பும் கருப்புமாய் கைக்கடிகாரம் !

பலவித வாருடன் கைக்கடிகாரம் !

விலைக்கேற்றாற்போல்  கைக்கடிகாரம் !

 

எனக்கும் வேணும் கைக்கடிகாரம் !

அழகாய் இருக்கும் கைக்கடிகாரம் !

அப்பா போல் எனக்கும் கைக்கடிகாரம் !

அலாரம் அடிக்கும் கைக்கடிகாரம் !

 

ஓடுது பார் !

Nilgiri Mountain Railway: A Complete Guide

ஓடுது பார் ரயில் ஓடுது பார் !

தடதடவெனவே ஓடுது பார் !

பலரைச் சுமந்து சென்றாலும்

தளர்ச்சி சிறிதும் இல்லை பார் !

 

இருப்புப் பாதையை இறுகக் கவ்வி

இறுதிவரை கொண்டு சேர்க்குது பார் !

வீட்டைப் போலே வண்டிக்குள்ளே

எல்லா வசதியும் இருக்குது பார் !

 

காலை எழுந்தால் போதும் உடனே

காப்பி காப்பி வருகுது பார் !

ஒவ்வொரு வேளையும் இருந்த இடத்தில்

எல்லா உணவும் தருவது பார் !

 

இயற்கை அன்னை எழில்கள் எல்லாம்

ஜன்னல் வழியே தெரியுது பார் !

மலைகள் பறவைகள் செடிகள் கொடிகள்

பசுமையைக் காட்டி மயக்குது பார் !

 

தடால் தடாலென சத்தம் கேட்குது

பாலத்தின் மேலே போறோம் பார் !

சலசலவெனவே ஓடுது ஆறு

சீக்கிரம் வெளியே எட்டிப்பார் !

 

குட்டிப் பாப்பா பக்கத்து சீட்டில்

எட்டிப்பார்த்து சிரிக்குது பார் !

அண்ணன் தம்பி உறவுகள் இல்லை

ஆனாலும் பொங்கும் அன்பைப் பார் !

 

வெளியே தெரியும் மரங்கள் எல்லாம்

வானத்தை நோக்கி விரியுது பார் !

வயல் வெளியெல்லாம் வாயில்லாமல்

வணக்கம் வணக்கம் சொல்லுது பார் !

 

அதோ பார் அங்கே அழகாய் மேட்டில்

ஆட்டுக்குட்டி மேயுது பார் !

மே மே என்று கத்தும்போது

மெலிதாய் மேனி  சிலிர்க்குது பார் !

 

காக்கை குருவி தெரியும் நாம்

கண்டிராத பறவையும் தெரியுது பார் !

கருப்பும் சிவப்பும் மஞ்சளும் இருக்கு

மனதைப் போட்டு மயக்குது பார் !

 

வீடு பள்ளி வகுப்பு தேர்வு

எல்லாம் தூரம் ஆனது பார் !

உலகம் வெளியே விரிந்து கிடக்குது

முழுதாய் மூச்சை விட்டுப் பார் !

 

தூரத்தில் தெரியுது ஆலை ஒன்று

புகையை வெளியே தள்ளுது பார் !

கிடைத்த இடத்தில் கிரிக்கெட் ஆடும்

என்னைப்போல் சில பிள்ளை பார் !

 

கருப்புக் கோட்டு போட்டு வருகிறார்

டீடீஈ டிக்கெட் கேட்பது பார் !

இல்லை என்று சொன்னால் போதும்

இடையில் இறக்கி விடுவது பார் !

 

கார்டு மாமா கையை அசைத்தால்

உடனே வண்டி கிளம்புது பார் !

சொன்னது கேட்டால் நன்மை உண்டு

சுலபம் பயணம் சுலபம் பார் !

 

சுப்பு பாலு சங்கரி கீதா

சீக்கிரம் வந்து வெளியே பார் !

வாழ்க்கை எல்லாம் பறக்கும் நொடிகள்

விட்டுவிடாமல் இன்றே பார் !

 

ஓடுது பார் ரயில் ஓடுது பார் !

தடதடவெனவே ஓடுது பார் !

இருக்கும்போதே இன்பம் பழகு

வாழ்க்கை ஓடுது ஓடுது பார் !

 

              

 

             

 

 

 

 

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஓ! மேகங்களே! மீனாக்ஷி பாலகணேஷ்

Meghadootam मेघदूतम् - Kalidas Day - 22 June 2020 CE - YouTube        

   மழை கொட்டோகொட்டென்று கொட்டி நம்மை அச்சத்திலாழ்த்தும் நேரமிது.

           ஆனால் இந்த மேகங்களைப் பார்க்கும்போது  என்னென்ன எண்ணங்களெல்லாம் ஒவ்வொருவருக்கும் உதித்தன என்று அசை போட்டதின் விளைவே இந்தக் கட்டுரை!

 

                                          00000000000

           என் கனவுகளின் வானில் மிதக்கும் மாலைநேரத்து மேகம் நீ;

           என் அன்பின் தாபங்களால் உனக்கு வண்ணங்களும் வடிவங்களும் தருகிறேன்.

           முடிவற்ற என் கனவுகளின் கருவான நீ எனக்கே சொந்தம், எனக்கே சொந்தம்-                                             (தாகூர்- தோட்டக்காரன்:30)

           You are the evening cloud floating in the sky of my dreams.

           I paint you and fashion you ever with my love longings.

           You are my own, my own, dweller in my endless dreams!

           காதலனின் அன்புமொழிகளாக அமைந்த இது, தாகூரின் தோட்டக்காரன் எனும் கவிதைத் தொகுப்பிலுள்ளது. அன்புக் காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் இன்மொழிகளால் புனையப்பட்டது. படிக்கவும் ரசிக்கவும் ஏற்ற விரசமில்லாத அருமையான தொகுப்பு.

           மேகங்கள் எவ்வாறு காதலர்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டன என்பது வியப்பைத்தான் தருகின்றது. இந்திய மொழிகளில்தான் மேகங்களைக் காதலர்களுடன் தொடர்பு படுத்திக் கவிதைகள் காலகாலங்களாக, ஸ்ம்ஸ்க்ருதம், தமிழ், வங்கமொழி எனப் பலவற்றுள்ளும் பாடப்பட்டுள்ளன போலும். நான் அறியாதது இன்னும் பல மொழிகளில் இருக்கலாம்.

           ‘மேகம் காதல் வேட்கையைத் தூண்டும் பொருள்களில் ஒன்றாகும். மழைக்காலத்தில் மேகத்தின் தொடர்பால் தாழம்பூ பூக்கும்; அதன் மணமும் காதலைத் தூண்டுவதாகும்,’ என்று காளிதாசனின் மேகசந்தேசத்துக்கு உரையெழுதிய ஆசிரியர் திரு. வேங்கடராகவாச்சாரியர் கூறுகிறார்.

           மேகசந்தேசம் ஒரு அருமையான காதல்காவியம். மனைவியைப் பிரிந்து வாடும் யட்சன் ஒருவனின் கதையாக அமைந்து அருமையான பாடல்களைக் கொண்ட இணையற்ற காவியநூல். யட்சர்கள் மென்மை உள்ளம் கொண்ட தேவலோக மனிதர்கள். எங்கும் பிறர் கண்களுக்குப் படாமல் அலைந்து திரிபவர்கள். ஒரு யட்சன் ஏதோ ஒரு தவறுக்காக தன் அரசன் குபேரனால் ஓராண்டிற்கு நாடுகடத்தப்படுகிறான். தனது தெய்வத்தன்மையை இழந்து பூலோகத்திற்கு வந்து தன் இளம் மனைவியைப் பிரிந்து வாடுகிறான். இவ்வாறே ஏழெட்டு மாதங்கள் செல்கின்றன. மழைக்காலம் வருகிறது. மழைமேகங்கள் அடர்ந்து வானில் உலவுகின்றன. மேகங்கள் ஆகாயத்தில் பலவிதமான வடிவங்கள் கொண்டு தோன்றும். மழைக்காலக் கருமேகங்களை யட்சன் யானைபோன்று காண்கிறான். அவை யட்சனுடைய பிரிவுத்துயரையும் தாபத்தையும் மிகவும் அதிகரிக்கின்றன.

           ராமகிரி எனும் மலையில் தங்கியுள்ள யட்சன் அந்த மேகத்தை தன் நண்பனாக்கிக் கொண்டு அதனைத் தன் காதல் மனையாளிடம் தூது விடுகின்றான்.

           காளிதாசன் இதனை முகாந்தரமாகக் கொண்டு பாரத பூமியின் இயற்கை அழகை வருணிப்பது  மிகவும் அழகானது. பாடல்கள் (ஸ்லோகங்கள்) உள்ளத்தை இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் ஆழ்த்தும். இளம் உள்ளங்களைக் காதல் நினைவுகளில் திளைத்து மயங்கச் செய்யும். முதியோர் உள்ளங்களை இளம் பருவத்து இனிய நினைவுகளில் ஆழ்த்திவிடும்.

           சம்ஸ்க்ருதம் தெரியாவிட்டாலும் இதனைப் படித்து ரசித்து அனுபவிக்க திரு. சுப்ர. பாலன் அவர்கள் கல்கியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ள ‘தூது செல்லாயோ’ எனும் அற்புதமான நூலைப் படித்து அனுபவிக்க வேண்டும். படிக்கும்போது கேட்டு ரசிக்க உடன் ஒரு அழகான இசைத்தொகுப்பின் பதிவு. விஸ்வமோஹன் பட் இசையமைப்பில் ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திர ஸாதே  ஆகியோரின் மயக்கும் குரல்களில் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்ட காளிதாசனின் ‘மேகதூதம்’ நூலின் ஸ்லோகங்கள். (யூ ட்யூபில் உள்ளது. கேட்டு மகிழலாம்). மேகங்களை முழுமையாக ரசிப்பதற்கு இதுவே எளிதான அருமையான வழி!

                                    00000000000

           சங்க இலக்கியங்களில் பொருளீட்டிவரப் பிரிந்து சென்றிக்கும் தலைவனின் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி மழைமேகங்களைக் கண்டு பிரிவால் வருந்தும் பாடல்களைக் காணலாம். அவற்றின் கவிதைச்சுவையில் உள்ளம் பறிகொடுக்கலாம்.

           ஆனால் அதிகமாக யாரும் அறிந்திராத ‘மேகவிடுதூது’ எனும் பெயரில் ஒரு அழகான இலக்கியச்சுவை நிறைந்த நூலை அண்மையில் விரிவாகப் படிக்க நேர்ந்தது.

           திருநறையூரிலே கோயில் கொண்டெழுந்தருளியுள்ள பெருமாள் நம்பியிடத்து மையல்கொண்ட ஒரு தலைவி, அவரிடத்தே தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவித்து அவரணிந்த திருத்துழாய்மாலையை வாங்கிவரும்படி மேகத்தைத் தூதுவிடும் செய்தியைப் பொருளாக்கி நயமுடையதாகப் பாடப்பட்டிருப்பதொரு கலிவெண் பாட்டு இந்நூல்.

           வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து

           வானத்து ளேவளரும் வானமே- வானத்து    (10)   

           என்றெல்லாம் மேகத்தைப் போற்றுகிறாள் தலைவி. வானம் எனும் சொல் ஆகாயம், மேகம் எனும் பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல் பலவிதங்களில் மேகசந்தேசத்தின் போக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. (இதனை இயற்றிய கவிஞரான பிள்ளைப்பெருமாளையங்கார் காளிதாசனைக் கட்டாயம் படித்திருப்பார். அந்த நயத்தைத் தமிழில் குழைத்து வடித்திருக்கிறார் போலும்!)

           “மேகமே, பின்பு  அதிகப்படியான எனது கவலையால் உன்னைத் தூதாக திருநறையூர்ப் பெருமானிடம் அனுப்புகிறேன். மன்மதன் குளிர்ந்த மலர் அம்புகளை என்மீது எய்யாமல் இருக்க, வெண்மையான சங்கை உடைய சீதரனிடம் எனக்காக ஒரு சொல் சொல்லமாட்டாயோ? அவனிடமிருந்து ஒரு துழாய் மாலையையாவது எனக்குக் கொண்டுவந்து தர மாட்டாயோ? கேதகை எனும் தாழைக்குக் கணவனான நீ எனக்கு அப்பெருமானைக் கணவனாக்க மாட்டயோ?” என்றெல்லாம் மேகத்தைக் கேள்விக்கணைகளால் துளைக்கிறாள்.

          விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பான்
மைம்முகிலே சந்தாக மாட்டாயோ-பெய்ம்மதவேள்
தண்ணப்பஞ் செய்வதெலாந் தாமோ தானடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ-வெண்ணத்தின்
சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய்கொணர்ந்தெ
னாதரவு தீர்த்தருள லாகாதோ- கேதகைக்கு
மின்கேள்வ னாக்கியநீ விண்ணோர் பெருமானை
யென்கேள்வ னாக்கினா லேராதோ

  சொல் பொருள் இலக்கிய நயங்களில் சிறப்பான நூல் இது.

                                00000000000

           நமது திரைப்படங்களிலும் காதலியோ காதலனோ மேகத்தைத் தூதாக அழைக்கும் பாடல்களைக் கவிஞர்கள் இயற்றி அவை மிகவும் பிரபலமாகியுள்ளன. “அன்பு மேகமே இங்கு ஓடிவா, எந்தன் துணையை அழைத்துவா,” “ஓடும் மேகங்களே, ஒருசொல் கேளீரோ,” ஆகியன அப்படிப்பட்ட சில பாடல்கள்.

                                00000000000

           மேக் ராகம் என்பது ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரு அழகான ராகம்- மேகம் என்றே பொருள்படும். மேகத்தோடிணைந்து மழை பொழியும் ராகம் மேக் மல்ஹார்!

           தான்ஸேனின் சங்கீதத்தின் பெருமையை உணர்த்தும் ஒரு சிறுகதை.

           அக்பர் சக்ரவர்த்திக்கு தீபக் ராகத்தை முறைப்படி பாடினால் விளக்குகள் தானாகவே எரியும் என்பதனை நேரில் காண ஆசை. அதனால் அந்த ராகத்தைப்பாட தன் ஆஸ்தான இசைக் கலைஞனான தான்சேனைப் பணிக்கிறார். பாடுபவனையே அந்த ராகம் வெப்பத்தில் எரித்துவிடும் என்பதனை உணர்ந்திருந்த தான்ஸேன் முன்னேற்பாடாகத் தன் மகளுக்கு மேக்மல்ஹார் ராகத்தைப்பாடப் பயிற்சியளிக்கிறார். தீபக் ராகத்தினால் விளக்குகள் எரியத்தொடங்கியதுமே அவள் மேக்மல்ஹாரைப் பாட வேண்டும்; அவ்வாறே பாட, பெருமழை பெய்து தீபக் ராகத்தினால் எழுந்த வெப்பத்தைத் தணித்ததென்பது ஒரு சுவையான கதை.

           தமிழிசையிலும் மேகராகக் குறிஞ்சி எனும் ராகம் உண்டு.

                    

                              00000000000

           மேகங்கள் வானில் உலாவந்ததொரு தருணத்தில் இயற்கையின் சக்திகளும், சக்திவாய்ந்த மந்திரச் சொற்களும் கூடி அமைந்ததொரு தெய்வீகக் கீர்த்தனை அற்புதமானதொரு இசைக்கலைஞரின் குரலில் கூடிப் பரிணமித்து என்னையொரு தெய்வீகச் சூழலில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு. திறந்தவெளி அரங்கில் ஒரு கச்சேரி. அதிகமான கூட்டத்தால் மிகவும் பின்புறத்தில் தரையில் ஒரு ஒலிபெருக்கியின் சமீபம் அமர்ந்திருந்தேன். மாலை மணி ஏழு. இன்னும் பகல் வெளிச்சம் முழுமையாக மறையவில்லை. வானில் அங்கங்கே மேகங்கள் பல வடிவங்கொண்டு மிதந்தன. “ஜம்பூபதே” எனும் தீக்ஷிதர் கீர்த்தனையைத் தொடங்கினார் பாடகர். அவர் தன் இசையிலாழ்ந்து பாடப்பாட கண்களில் ஆனந்தவெள்ளம் புறப்பட்டுப் பெருகிற்று.  கண்களை மூடி அமர்ந்து கேட்டது போய், கண்கள் திறந்து வானில் கருமேகங்களுடன் சஞ்சரித்தன. 

           ‘பர்வதராஜனின் மகள் உன்னை வழிபடுகிறாள்; பஞ்சபூதங்களாலும் ஆன பிரபஞ்சமாக நீ உள்ளாய்! அனைத்துயிர்களுக்கும் தயை புரியும் சம்பு நீ!’ என்றெல்லாம் திருவானைக்காவில் நாவல்மரத்தடியில் குடிகொண்ட ஜம்புகேசுவரரைப் போற்றும் பாடல்.

           பர்வதஜா ப்ரார்த்திதாப்புலிங்க விபோ 

           பஞ்ச பூதமய ப்ரபஞ்ச ப்ரபோ

           சர்வஜீவ தயாகர சம்போ

           அனைத்துயிர்களுக்கும் தயைபுரியும் சம்புவே என உருகியுருகிப் பாடகர் இசைத்த வேளையில் பஞ்சபூதங்களும் காற்று, மழை, இடி, மின்னல், எனப் பொழிந்த இயற்கையின் அற்புதத்தை, இசையோடு இணைந்து அனுபவித்தது ஒரு அபூர்வ அனுபவம். ஈசனை, அவனிருப்பை உணர்ந்து பிரமித்த தருணம் அது.

           ஓ மேகங்களே! எத்தனை அற்புதங்களை உள்ளடக்கிக் கொண்டு உலகை வலம் வருகின்றீர்கள் நீங்கள்!

           உங்கள் பெருமையைச் சொல்ல என்னால் எப்படி முடியும்?

                     ———————————

பசுமாடு – வளவ. துரையன்

Tamil News | Latest Tamil News | Tamil news Online| Sigaram News

காலை ஏழுமணிக்குத்தான்
தெருக்குழாயில் குடிநீர்வரும்.

ஆனால் ஆறுமணியிலிருந்தே
வெல்லத்தை மொய்த்திருக்கும்
எறும்புகள் போலச்
சுற்றிலும் குடங்களின் முற்றுகை

அதிலும் தமிழ்நாட்டின்
இருப்பைப்போல்
பல்வகைப் பிரிவுகள்;

நெகிழி பித்தளை
மண் மற்றும் எவர்சில்வர்
எல்லாமே யாரோ ஒருவரால்
உருவாக்கப்பட்டவை

ஒழுக்கம் விழுப்பம் தருமென
ஒருவரிசையாகத்தான் நிற்பர்.
தண்ணீர் வந்ததும்
ஒரு கல்பட்ட
தேனீக்கூடு கதைதான்;

பிறகென்ன?
தமிழின் இடக்கரடக்கல்
இல்லாமலே பலசொற்கள்
மொழியப்பட்டன.
வந்தவற்றை வாங்கிப்படித்துப்
புதிய ஆயுதங்களாய் வீசினர்.

வாங்கும் கவளத்தொரு சிறிது
வாய்தப்பின் துயருறாத்
தூங்கும் களிறு போல
தண்ணீர் சிந்தி வழிந்தோடுவது
பற்றிக் கவலைப்படாத பிடிகள்

எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு
அமைதியாகக்காத்திருந்தது
கன்றை ஈன்ற பசுமாடு

 

கண்ணன் கதையமுது – 2 – தில்லைவேந்தன்

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess

 

(வசுதேவன்-தேவகியின் எட்டாம் மகனால் கம்சனுக்கு மரணம் நேரும் என்று அசரீரி கூறவே கொதிப்படைந்த அவன் தேவகியைக் கொல்ல முற்படுகிறான். தடுத்த வசுதேவன், பிறக்கும் பிள்ளைகளைக் கம்சனிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறுகிறான்)

வசுதேவன் உறுதிமொழி

கூந்தல் பற்றித் தங்கையினைக்
கொல்லக் கீழே தள்ளியவன்,
ஏந்து வாளை மேலுயர்த்த,
இளமான் அனையாள் நடுநடுங்கிச்
சோர்ந்து கண்ணில் நீர்வழியத்
தொழுது கையால் கும்பிட்டாள்.
தேர்ந்தெ டுத்த சொல்தொடுத்தான்,
சிறந்த ஞானி வசுதேவன்.

“மணநாள் அன்றே தேவகியை,
மாய்த்துக் கொன்று, திருநாளும்
பிணநாள் ஆக உருவானால்,
பெருமை உனக்கு வருமோசொல்?
குணமா மறவா! பெண்கொலையால்,
குலமும் மேன்மை பெறுமோசொல் ?
அணிமா மலராள் உயிர்பறித்தால்,
அழியாப் பாவம் விடுமோசொல்?

ஆற்றல் மிக்க மைத்துனனே,
அன்புத் தங்கை என்செய்தாள்?
சாற்றும் உண்மை செவிமடுப்பாய்,
சற்றும் அவளால் உன்னுயிர்க்குக்
கூற்றம் வருமென்று அக்குரல்தான்
கூற வில்லை. கொன்றுவிட்டால்,
தூற்றிப் பழிக்கும் இவ்வுலகம்.
சூழும் மாறாப் பெருங்களங்கம்

எட்டாம் மகவால் உயிர்க்கிறுதி
என்றே குரலும் கூறிடினும்
தட்டாது எல்லாப் பிள்ளைகளும்
தரையில் வந்த மறுகணமே,
கட்டா யமுன்றன் கைகளிலே
கடிதில் கொண்டு சேர்த்திடுவேன்.
மட்டார் மலர்பெய் குழலாளை
மட்டும் கொல்ல எண்ணாதே!”

சொலல்வலான், சோர்வும் இல்லான்,
சொல்நயம் அறிந்த நல்லான்,
சிலவுரை, பழத்தில் ஊசி
செலுத்தலைப் போலச் சொன்னான்.
“இலையொரு துன்பம், பிள்ளை
எடுத்துநான் தருவ தாலே,
குலமுறை மீறி விட்டால்
குற்றமே விளையும்” என்றான்.

 

கம்சன் அவர்களைப் போக விடுதல்

வனமலர் மாலை சூடும்
வாய்மையோன் சொற்கள் கேட்டுச்
சினமது தணிந்த கம்சன்
செற்றிடும் எண்ணம் விட்டான்.
“உனைமிக நம்பு கின்றேன்,
உறுதியைக் காத்தல் வேண்டும்.
நனைவிழி துணையைத் தேற்றி
நாடுநீ செல்வாய்” என்றான்.

( செற்றிடும்— கொல்லும்)

 

கம்சன் மனநிலை

ஈறது பிள்ளை எட்டால்
இயன்றிடும் என்ற எண்ணம்
ஊறியே உளம்வ ருத்த,
ஒவ்வொரு நாளும் தேரில்
ஏறியே சென்று பார்த்தான்
ஏவலர் செய்தி கேட்டான்.
நீறது பூத்தி ருக்கும்
நெருப்பெனும் சினத்துக் கம்சன்.

( ஈறு — இறுதி /மரணம்)

முதல் குழந்தை பிழைத்தல்

வசுதேவன் மனைவியவள் மணிவயிற்றில் கருவுயிர்த்துச்
சிசுவொன்று பிறந்தவுடன் சிந்தைமிக வருத்தமுற,
வசையறியா வாய்மையெனும் வழக்கத்தால் எடுத்துப்போய்
இசைவின்றி அம்மகனை ஈந்தானே மாமனிடம்

 

அமைதிதவழ் முகம்கண்ட அரக்கமன மைத்துனனும்
“சுமையகன்றேன் மகிழ்ந்தேனுன் சொற்காக்கும் தன்மையினால்,
குமையேன்நான், இவன்முதலாம் குழந்தையென்ற காரணத்தால்,
இமையெனநீ காத்திடவே எடுத்துப்போ மீண்டு”மென்றான்!

(தொடரும்)

நடுப்பக்கம் – சந்திரமோகன்

குவிகம் 100

நேற்று மாலை குவிகம்100, புத்தக அறிமுக நிகழ்வை கண்டு இரசித்தேன். அறிமுகப் படுத்த ஏதாவது இலக்கணம் உண்டா தெரியாது ஆனால் கவிதை, கட்டுரைகளை அறிமுகப் படுத்திய திரு. செந்தூரம் ஜெகதீஷ் அவர்களும், கதைகள் மற்றும் நாடகத்தை அறிமுகப்படுத்திய திருமதி. ரம்யா வாசுதேவன் அவர்களும் ‘அறிமுகப் படுத்தலின்’ இலக்கணத்தை நமக்கு அறிமுகப் படுத்தி அழகாக நிகழ்வை நகர்த்திச் சென்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.

ஆமாம்! இக்குழுமத்தில் புதிதாக இது யார் என்ற எண்ணம் ஒரிருவர் தவிற மற்றவர்களுக்கு தோன்றுவது நியாயம்தான்.

இக்குழுமத்திற்கு சற்றும் பொருந்தாதவன் நான். ஓரம் நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய என்னை இலக்கியவாதிகளும், படைப்பாளிகளும் உலவும் குவிகத்தின் நடுக் கூடத்திற்கு கை பிடித்து இழுத்து வந்து விட்டவர் நண்பர் சுந்தர்ராஜன்.

அகவை எழுபதில் இருக்கும் நான் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்னர் வரை கூட ‘ ஏடறியேன், எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன்’ என்ற வைரமுத்துவின் வரிகளின் உதாராணமாகத்தான் வாழ்க்கையின் தேடலில் தொலைந்திருந்தேன். நாற்பது ஆண்டுகள் தேடலில் எழுத்துக்கள் கூட அதிகம் படிக்கவில்லை, ஆனால் வாழ்க்கையை அதிகம் படித்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் மனைவி மறைந்த பின்னர் அவளுக்கு நான் எழுதிய கடிதம்தான் என் முதல் எழுத்து.

பின் துயரத்தை மறக்க சுந்தர்ராஜன், முத்து சந்திரசேகரன் மற்றும் எனது சென்னை கிறித்துவ கல்லூரி நண்பர்கள் இனைந்த வாட்ஸ்அப் குழுவில் எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் ஊக்குவித்தார்கள். சுந்தரின் கைதட்டல் பலமாக இருந்தது.
கடந்த ஆண்டு என் கட்டுரைகளையும் கதைகளையும் ஒழுங்கு படுத்தி 280 பக்கங்கள் கொண்ட புத்தகமாக பதிப்பித்து என்னை மகிழ்வித்தது குவிகம்.

பத்தாயிரம் மைல் பயணித்தவனும் பல நூற்கள் கற்றவனுமே ஒரு முழுமனிதன் என சீனப் பழமொழி போல வாழ்வில் ஒரு புத்தகமாவது எழுதி தன் சந்ததிக்கு விட்டுச்செல்பவன் ஒரு முழு மனிதன் எனவும் படித்த ஞாபகம்.

என்னை முழுமனிதனாக்கிய பெருமை சுந்தர ராஜன்- கிருபானந்தன்  இருவரையும் சேரும்.

இங்கு கிருபானந்தமன் அவற்களைப்  பற்றி சற்று கூற வேண்டும். என் புத்தகம் வெளிவந்த நாட்களில் அவர் அமெரிக்காவில் இருந்தார். அங்கு இரவு இங்கு பகல். அங்கு பகல் பொழுதில் என் எழுத்தைப் படிப்பார், இங்கு பகல் பொழுதில் அதைப்பற்றி என்னிடம் உரையாடுவார்.

எப்பொழுது உறங்குவார் என கேட்க வில்லை. நான் அதிகம் சந்தித்ததில்லை. வீடியோவில் முகத்தை காட்ட மாட்டார். சுந்தர் அவரை ‘கிருபா’ என்று அழைத்ததால் அவரை முப்பது வயது இளைஞர் என்று எண்ண வைத்த சுறு சுறுப்பு. என் புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்தார். தலை வணங்குகிறேன்.

நண்பர் சுந்தரைப்பற்றி அதிகம் புகழ்ந்தால் ஐம்பது ஆண்டுகள் நட்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

ஒன்று சொல்லியே ஆக வேண்டும். 

என்னுள் ஒளிந்து இருந்த சிறு திறமையை ஊக்குவித்து, வெளி கொணர்ந்து புத்தகம் போட வைத்து, குவிகத்தில் ‘நடுப் பக்கம்’ என எனக்கு ஒரு பக்கம் ஒதுக்கி குவிகம் 100 ல் என் கதையையும் இடம் பெறச் செய்துள்ளார். அனைத்திற்கும் காரணம் புதிய எழுத்தாளர்களை உலகிற்கு அறிமுப்படுத்தும் உயர்ந்த நோக்கமே. இத்தொண்டு இலக்கிய அன்னையால் ஆசீர்வதிக்கப் பட்ட அவருக்கு பல சிறப்புகளை கொடுக்கட்டும்.

இடியோ, மழையோ, இல்லை சென்னையில் உள்ளாரோ அல்லது ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்றுள்ளாரோ குவிகம் இலக்கிய வாசல் வீடியோவில் அவரது சிரித்த முகம் தோன்றினால் அச்சமயம் ஞாயிறு மாலை மணி 6.30. இந்த அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்,
சுந்தர ராஜன்-கிருபானந்தன் – குவிகம் மூவரும் பல்லாண்டுகள் வளமுடன் வாழ வாழ்த்தும்- 

(குவிகம்100 ல் ஒரு கதைக்கு சொந்தக்காரன்)

படிக்கும் போதே மனதைக் குத்துது – வாட்ஸ் அப்பில் கிடைத்தது

யார் பெத்த கவிதையோ ?  படிக்கும் போதே மனதைக் குத்துது! 

 

வறுமை ஒன்னும் புதுசில்ல…!

– அரசுப்பள்ளி மாணவன்

 

 

அட்டை போடாத
அஞ்சாவது புக்கு
என்னைக்கோ கிழிஞ்சுருச்சு.

ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு
அறிவிப்பு மட்டும்
வந்திருச்சி..

பள்ளிக்கூடம்
பூட்டு போட்டு
மாசம் இன்னைக்கு
நாலாச்சு…

பிரைவேட்ல
படிக்கிறவனுக்கு
“ஸ்கூல்”
வீட்டுக்கே வந்தாச்சு.. .

ஆன்லைன்ல படிக்கிறேன்டா..
ஆணவமா ஆதி சொன்னான்..

எதிர்வீட்டு
கோபி சொன்னான்..
ரெண்டு ஜிபி
தேவைப்படுமாம்..

சட்டையில மட்டுமில்ல
அப்பா போன்லயும்
ரெண்டு பட்டன் இல்லை..
ஸ்மார்ட் போன் வாங்க
காசு இருந்தா
ஸ்கூல் பீஸ் கட்டி
சேர்த்திருப்பார்..

கூலிக்கு மாரடிக்கும்
குருவம்மா எங்கம்மா..
கூறுகெட்ட
கொரானாவால
வீட்டுக்குள்ளே
முடங்கிருக்கா..

அப்துல் கலாம் ஆவேன்னா…
அரசு பள்ளியில
சேர்த்துவிட்டா?
ஒரு வேல
சுடு சோறு
தின்பான்னு
ஆசைப்பட்டா…!!

இப்ப…
சொல்லித் தரவும்
ஆளில்லை…
சோத்துக்கும் வழியில்ல…
கத்து தந்த
வாத்தியாரும்
முழு சம்பளமும்
…வாங்கி விட்டு
முடங்கி கெடக்காரு…

அவரு பையன்
ஸ்ஸ்கூல் கான்வென்ட்ல ஆன்லைன்ல
இங்கிலீசுல தூள்
கிளப்புறான் !

வறுமை ஒன்னும்
புதுசில்ல…
வாழ்ந்து பார்த்து
பழகிடுச்சு…
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான்
வாசல் பார்த்து
காத்திருக்கேன்…

மாஸ்க் வாங்க
காசு இல்ல…
கர்ச்சீப் தான்
கட்டிக்கிறேன்…

புக்கு மட்டும் குடு சாமி…
புரட்டி கிரட்டி கத்துக்கறேன்…

இப்படிக்கு
அரசுப்பள்ளி மாணவன்😭😭😭

வாட்ஸ் அப் பகிர்வு

குட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்

ஒரு தடவ சொன்னா…..!

Daughter helping father working in office

என் நண்பன் சேகரைப் பார்க்க அவன் ஆபீஸிற்குப்
போய், அவன் வருகைக்காக அவன் காபினில் உட்கார்ந்திருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.

கோபமும் அலுப்புமாக காபினுக்குள் நுழைந்தான் சேகர்.

‘டாமிட்… இன்காரிஜிபிள்.. ஸ்டா·ப் எல்லோரும் நல்லாப் படிச்சவங்க.. ஆனா, ஒவ்வொரு வேலையையும் நூறு தடவ சொல்ல வேண்டியிருக்கு.. அப்பத்தான் புரிஞ்சுண்டு செய்யறாங்க.. ரொம்ப அவஸ்தைப்பா…’ என்றான் என்னைப்
பார்த்து.

‘கேட்டுக் கொண்டிருந்த மிதிலா மெதுவாகச் சிரித்தாள்.
என்னடி சிரிக்கறே என்ற கேள்விக் குறியோடு கண் புருவங்களை உயர்த்தி அவளைப் பார்த்தேன்.

‘ஒண்ணுமில்லேப்பா.. பாட்சா சினிமாவுலே ரஜினி அங்கிள் எப்பவும் ‘ நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..’என்பார். இங்கே சேகர் அங்கிள் நூறு தடவ சொன்னா ஒரு தடவ சொன்ன மாதிரின்னு தோணுது.. அதை நினைச்சேன்.. சிரிப்பு வந்தது..’என்றாள் சிரித்து கொண்டே..

அந்த இறுக்கமான சங்கடமான நிலமையிலும் எங்களாலும்
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்..:

ரெண்டு வீடு…!

ஜோதிடரைப் பார்க்க கூட்டம் நிரம்பி இருந்தது.

‘அங்கே முத்ல்லே உட்கார்ந்திருக்காரே.. அவர் இந்த
தொகுதி எம்.எல்.ஏ.. நல்ல செல்வாக்கு உள்ளவர். ஆனா 
அவரைப் பத்தி ஒரு ரகசியம் தெரியுமா.. அவர் ரெண்டு
வீடு வெச்சிருக்கார்..’ என்றார் ஒருவர் மெதுவான குரலில்,
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.

‘அட நீங்க ஒண்ணு… இப்பப் பாருங்க.. பன்னிரண்டு
ராசிகள் – வீடுகள்… ஒன்பது கிரகங்கள்.. கணக்குப் போட்டு
பார்த்தோம்னா அட்லீஸ்ட் மூணு கிரகங்களுக்காவது ரெண்டு
வீடுகள் இருக்கும். நாம கடவுளா நெனச்சு வழிபடுகிற
கிரகங்களே அப்படி.. ஆ·ப்டர் ஆல் நாமெல்லாம் மனு-
ஷங்க.. விட்டுத் தள்ளுங்க.. கண்டுக்காதீங்க.. ‘

‘ !!! ‘

— சிவமால்.

 

கனவு -பி.ஆர்.கிரிஜா

Bamboo Farming Information Guide For Beginners | Agri Farming

“ சிறந்த தோட்டக்கலை நிபுணர் விருதினைப் பெறுபவர் ஆர்.புவனா. விருதோடு முதல் பரிசு தொகை பத்தாயிரம் ரூபாயும் புவனாவுக்கு அளிக்கப்படும்” என்ற அறிவிப்பு ஒலி பெருக்கியில் அறிவித்தவுடன் கூட்டத்தில் ஒரே கலகலப்பு. 500 பேர் குழுமியிருந்த அந்த அரங்கில் கைத்தட்டல் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று.

அரங்கில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த போட்டியாளர்களில் புவனாவும் ஒருத்தி. 20 வயது இளம்பெண். கல்லூரியில் தாவரவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி

அங்கு வந்திருந்த போட்டியாளர்கள் அனைவருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள். புவனா ஒருத்திதான் வயதில் எல்லோரையும் விட இளையவள். அவளால் அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.

1 indian Young Woman College Student Thumbs Up showing Stock Photo - Alamy

அறிவிப்பாளர் புவனா புவனா என்று மூன்று முறை கூறிய பிறகுதான் அவர் தன்னைத்தான் கூப்பிடுகிறார் என்ற சுய நினைவுக்கு வந்து உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு வேகமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்றாள். அங்கே அறிவிப்பாளர் புவனாவின் சாதனையை விவரித்துக் கொண்டிருந்தார்.

“எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறேன், கல்லூரியில் இளங்கலை தாவரவியல் இறுதியாண்டு படிக்கும் இந்த இளம் கல்லூரி மாணவி ஆர். புவனாதான் இந்த வருடத்திற்கான சிறப்பு தோட்டக்கலை நிபுணர் விருதினை மட்டுமல்லாமல் ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசும் பெறுகிறார்” என்று கூறிக்கொண்டே புவனாவின் சாதனையை மேலும் எடுத்துரைத்தார்.

“இந்த சின்ன வயதில் முள்ளில்லா மூங்கிலை விவசாயிகளிடம் எடுத்துச் சென்று அதன் பயன்பாடுகளை அறியச் செய்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூங்கில் வகைகள் இருந்தாலும் சுமார் 20 வகையான முள்ளில்லா மூங்கில்களில் பதினோரு வகைகளை நம் தமிழ்நாட்டிற்கு உகந்தவை என்று எடுத்துரைத்து சுகாதாரக் கேட்டிற்கு தீர்வாகும் இந்த மூங்கில் வளர்ப்பு என்று அறிய வைத்தார். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவு நீரிலும், ஏன் சாயப்பட்டறையிலுமிருந்து வெளிவரும் கழிவு நீரிலும் இந்த மூங்கிலை விவசாயம் செய்ய பயன்படுத்தலாம். தற்போது சாயக்கழிவு நீரை முற்றிலும் இந்த மூங்கில் பயிர் எடுத்துக்கொண்டு நிலத்தடிக்கு போகாதவாறு உபயோகப்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். செலவும் குறைவு.    விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றெல்லாம் விவசாயிகளை அறியச் செய்தவர் இந்த புவனா” என்று விரிவாக சொல்லி முடித்தார் அறிவிப்பாளர்.

அரங்கில் கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. பரிசுத்தொகை, சால்வை, விருது பட்டயம் அனைத்தையும் பெற்றுக் கொண்டாள். புவனா. பளிச் பளிச்சென கேமராவின் ஃப்ளாஷ் அவள் மீது விழுந்தன. அவளுக்கு பெருமை பிடிபடவில்லை.

இதற்காகத்தானே இந்த மூன்று வருடங்களும் கல்லூரி படிப்போடு, ஆராய்ச்சியும் செய்து ஒரு சாதனை படைத்தேன் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி தன் இருக்கைக்கு வருவதற்கு முன் பல்வேறு பத்திரிகை நிருபர்கள் உற்சாகத்துடன் அவளை அணுகி அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்

விழா முடிந்து அனைவரும் கலைய ஆரம்பித்தனர். புவனாவும் ஒவ்வொருவரிடமும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் எல்லா செய்தித்தாள்களிலும் செய்திகளுடன் தன் ஃபோட்டோ வருமே, அந்த நினைப்பே ஒரு  மயக்கத்தை தந்தது அவளுக்கு. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார் ? புவனாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

போட்டி முடிந்தவுடன் அரங்கை விட்டு வெளியே வந்து பார்க்கிங் இடத்தில் சென்று தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் புவனா. ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. ஓங்கி ஒரு உதை விட்டு அதை ஸ்டார்ட் செய்தாள்.

“ராட்சசி, ஏண்டி, மணி ஏழாச்சு, இப்படி படுக்கையிலிருந்து உதைவிட்டு பக்கத்துல இருக்கிற டைம்பீஸ கீழ தள்ளி ராத்திரியில குடிச்ச காபி மக்கையும் கீழே தள்ளி ஒடச்சு…. உன்னோட பெரிய  ரோதனையா போச்சு !” என்று கத்திக்கொண்டே புவனாவை தன் பலம் கொண்ட மட்டும் உலுக்கி எழுப்பப் பார்த்தாள் அவள் அம்மா சாரதா.

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த புவனா, “அட, சே ,  நான் கண்டது அத்தனையும் கனவா !” என்று கண்ணை கசக்கிக்கொண்டு டைம்பீஸைத் தேடினாள். அவள் விட்ட உதையில் அது கீழே விழுந்து வாயைப் பிளந்து பேட்டரி ஒரு மூலையில் தெறித்து விழுந்திருந்தது. இந்தப்பக்கம் காலை வைக்கலாம் என்று கீழே பார்த்தால், காபி மக் சில்லு சில்லாக உடைந்து அவள் காலை பதம் பார்த்தது.

சலிப்புடன் எழுந்து பல் தேய்க்கப் போனாள். அவள் அம்மா கிச்சனில் இருந்து இரைந்து கத்திக் கொண்டிருந்தாள்.

“பாட்டனி படிக்கிறாளாம், மாடில தொட்டியில இருக்கிற துளசிச் செடியைக் கூட தண்ணி ஊத்தி உரம் போட்டு வளக்கத் துப்பில்ல, காலை வேள அவசரத்துல, சமையலையும் பாத்து இந்த துளசிக் செடியையும் பார்க்கணும். இருக்கிறதே ஒரு செடி, அதக் கூட பாக்காம அப்படி என்ன தூக்கம், சோம்பேறித்தனம்,? வயசு இருபது  ஆச்சு பொறுப்பே இல்ல”. என பொரிந்து தள்ளினாள் அவள் அம்மா சாரதா.

அம்மா புலம்புவது அனைத்தும் அவள் காதில் விழுந்தது. கண்ணாடியின் முன் நிதானமாக பல் தேய்த்துக் கொண்டிருந்தவள், அவள் அம்மா சொன்னதையும் தன் கனவில் நடந்த நிகழ்ச்சியையும் ஒருசேர நினைத்துப் பார்த்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அந்த சிரிப்புத்தான் அவள் கண்ட கனவைப் பின்னாளில் நனவாக்கியது !!

சமைக்கும் போது – கமலா முரளி

Catch Foods - Indian Spices, Food Recipes, Masala — Indian Delicious Food -  The Value of Indian Spices...

 

” ஏய், மச மசன்னு டீவி பெட்டிய பாத்துட்டு நிக்காத”

“எங்க அக்கா அவ பசங்கள அழைச்சு கிட்டு வரா..‌ எதனா… அதிரசம் முறுக்கு பண்ணு” என்றார் கணேசன் தன் மனைவி பாருவிடம்.

பாரு உடனே எழுந்து கிச்சனுக்கு போய் விட்டாள்.

“அப்பா ,ஏம்பா அம்மாவை விரட்டற. இந்த ஒரு சீரியல் தான் அம்மா டீவில பாக்குறாங்க” என்றாள் ராஜி.

” ஆமா , சமையல் பொரகராம் பாக்கறேன்னு பாதி நேரம் ரிமோட்டை எடுத்துக்குவா… அதில் நீ அவளுக்கு சப்போர்ட்”

பாரு ஒரு தட்டில் இனிப்பு துண்டுகளை வைத்து கொண்டு வந்தாள்.

” கொண்டைக்கடலை பர்பி”

நன்றாகத் தான் இருந்தது.

காரத்துக்கு  தினை மிளகு தட்டை.

அப்பா பாராட்டி பேசவில்லை. ஆனால் ருசித்து சாப்பிட்டார்

” அப்பா , ரொம்ப நல்லா இருக்குல்ல “

” ஹ்ம்..‌ எங்கம்மா கைப்பக்குவம் வராது”

” போப்பா, எங்கம்மா கைப்பக்குவம் வராது” என்று ராஜி கோபமாக சொல்ல…

” ராஜி , இங்க வா ,” என்று உள்ளே அழைத்தாள் பாரு.

” அப்பா என்ன புதுசாவா என்ன குறை சொல்லுறாங்க , எப்பவும் நடக்கிறது தானே”

பாரு தன் வேலைகளை ஞானி போல பார்த்துக்கொண்டு இருந்தாள்.

” அம்மா , முறுக்கு ஆரம்பிக்கிறயா? சரி போய்  ஒரு நல்ல புடவையா உடுத்திக்கொண்டு வந்து செய்யேன்”

” அழுக்காயிடும்”

  ராஜி ரொம்ப வற்புறுத்தியதால் கொஞ்சம் பெட்டரான காட்டன் சாரி கட்டிக் கொண்டாள்.

“எப்படி செய்வதுன்னு எனக்கு சொல்லேன்.”

ராஜி கையில் அவள் போன்.

“ராஜி போட்டோ எடுக்கப் போறியா ? அதுக்கு தான் நல்ல புடவை கட்டச் சொன்னயா “

“ஆமாம் , கொஞ்சம் முகத்தையும் சரி பண்ணிக்கோ”

வெட்கப்பட்டாள் பாரு.

” அதெல்லாம் ஒன்னும் வேணாம் ‌ போட்டோ எடுக்காத”

” நான் முடிவு பண்ணிட்டேன். நல்லா கோ ஆப்பரேட் பண்ணினா , அழகா வரும்”

பாருவும் ராஜி சொன்னபடி முகத்தை வைத்து , முறுக்கு எப்படி செய்ய வேண்டும், என்ன பொருட்கள் , அளவு , பக்குவம்  என அழகாக சொன்னாள்.

ராஜி அப்படியே வீடியோ எடுத்து யூ ட்யூபில் போட்டு மற்ற தளங்களிலும் ஷேர் செய்தாள்.

ஏகப்பட்ட லைக்குகள் , கமென்ட்

வேற தின்பண்டங்கள் செய்ய சொல்லி ரிக்வெஸ்ட்.

உருவாகியது ” ரானு கிச்சன்ஸ்” சேனல் , வெப் பேஜ் …‌

” நீ கமெண்ட் தரயாப்பா ” என ராஜி ஒரு நாள் கேட்க , ரொம்ப நாளாக தன்னையும் டீமில் சேர்த்து கொள்ள மாட்டார்களா என்று ஏங்கி கொண்டு இருந்த கணேசன் உடனடியாக சரண்டர் ஆனார்.

” பானு  சூப்பர் . சமைக்கும் போது மணக்கும். சாப்பிடும் போது ருசிக்கும். சாப்பிட்ட பிறகும் கவரும் ” என்று பன்ச் டயலாக்கை அள்ளி விட்டார் கணேசன்.

 

வாக்குறுதி – எஸ் எல் நாணு

Demands unmet, villagers boycott polls in 3 districts of Tamil Nadu - Times  of India

”யாருக்கு வாக்கு?”

வெள்ளந்தியாகக் கேட்ட சரோஜாவை புன் சிரிப்போடு பார்த்தார் இசக்கியாப் பிள்ளை. அறுபத்தைந்து வயதிருக்கும். மாநிறத்துக்கும் குறைவான நிறம்.. தலை வழுக்கை.. அதில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைக் கம்பிகள்.. ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய பழுப்பு ஏறிய வேட்டி. அதை விட பழுப்பேறிய முண்டா பனியன்,, இன்ன நிறம் என்று சொல்ல முடியாத துண்டு தோளில்..
“என்ன அவசரம்? ஒரு கட்சி தானே வந்திருக்கானுங்க.. ரெண்டாயிரம்னு பேசியிருக்கானுங்க.. இன்னொரு கட்சியும் வரட்டும்.. அவுங்க என்ன சொல்றாங்கன்னு பாப்போம்”
சரோஜா கன்னத்தில் கை வைத்தாள்.

“இன்னாங்க இது.. ஏதோ வியாவாரம் மாதிரிலே இருக்குது” இசக்கியாப் பிள்ளை அவள் சொல்வதை ஆமோதித்துத் தலையசைத்தார். அவர் முகத்தில் வருத்தம் தெரிந்தது.

“என்ன பண்ண? அப்படி ஆக்கிட்டானுங்களே.. அவங்க பேரத்தை ஒப்புக்கலைன்னா நமக்குத் தான் நட்டம்”

தாமிரபரணியை தொட்ட அந்த கிராமத்தில் மொத்தம் ஐம்பது அறுபது குடும்பங்கள்.. முன்னூறு ஓட்டு தேறும்.. இசக்கியாப் பிள்ளை தான் அவர்களுக்கெல்லாம் தலைவர் மாதிரி.. அவர் பேச்சை எதிலும் மீற மாட்டார்கள்.. கிராமத்தில் நல்லது கெட்டது எல்லாமே இசக்கியாப் பிள்ளையின் அறிவுறைப் படி தான் நடக்கும்..

வழக்கமாக எந்தத் தேர்தல் நடந்தாலும் அதற்கு ஒரு வாரம் முன்னால் இசக்கியாப் பிள்ளை ஊரைக் கூட்டி ஆலோசனை நடத்துவார்.. கிராமத்தில் அத்தனை வாக்கும் அவர் காட்டும் நபருக்குத் தான் விழும். கிட்டத்தட்ட ஊர் கட்டுப் பாடு மாதிரி தான் செயல் படுவார்கள்.

இந்த முறை கிராமத்தில் பலருக்கு மன வருத்தம் இருந்தது.

“தலைவரே.. ஊருக்குள்ள இப்ப ஒரே ஒரு பஸ்ஸு தான் வருது.. அதுவும் எப்பவாச்சும்.. நாம டவுனுக்குப் போய் வர எவ்வளவு பாடா இருக்குது.. இந்தப் பக்கமா வர போற பஸ்ஸுலாம் நம்ம கிராமத்துக் குள்ளாரயும் வரணும்னு ஒவ்வொரு தேர்தல் போதும் கோரிக்கை வெக்கறோம்.. சரின்னு தலையாட்டிட்டுப் போறானுங்க.. ஆனா தேர்தல்ல ஜெயிச்ச பொறவு அதை மறந்துடறானுங்க”
“ஊருக்குள்ள குழாத் தண்ணி வரணும்னு நாமும் சொல்லிட்டிருக்கோம்.. யாரும் கண்டுக்க மாட்டேங்கறானுங்களே”

“ஒரு சின்ன ஆஸ்பத்ரியாவது வேணும் தலைவரே.. வண்டி பிடிச்சு டவுன் ஆஸ்பத்ரி போறதுகுள்ளார உசிரே போயிடுது”

இத்தனைக்கும் நடுவில் தான் அரசியல் கட்சிகளின் பேரங்களும் நடந்துக் கொண்டிருந்தன..
“ஹாய்.. கிராண்பா.. தாமிரை இஸ் சூப்பர்”
பட்டணத்திலிருந்து வந்திருந்த இசக்கியாப் பிள்ளையின் பேரன் ஆதிமூலம் என்ற ஆதி சந்தோஷமாக வந்தான். அவன் தாமிரை என்று சொன்னது தாமிரைபரணி ஆறை. பட்டணத்தில் தண்ணித் தட்டுப் பாட்டில் சிக்கனமாகக் குளித்துப் பழகியவனுக்கு தாமிரைபரணியின் ஓட்டத்தில் கட்டுப்பாடில்லாமல் குளிப்பது பேரானந்த்தைத் தந்ததில் வியப்பில்லை தான்..

“எலே.. சீக்கிரம் ஈரத்தைக் களைஞ்சிட்டு வா.. சளி பிடிக்கப் போவுது” சரோஜா கரிசனத்துடன் சொல்ல..
“ஓக்கே கிராண்மா” என்று விருட்டென்று அறைக்கு விரைந்தான் ஆதி.

பட்டணத்தில் ஏதோ பெரிய படிப்பு படிக்கிறான். வருடம் ஒரு முறை தாத்தா பாட்டியைப் பார்க்க கிராமம் வந்து குறைந்தது ஒரு மாதமாவது தங்கி விட்டுப் போவான்..

உடை மாற்றிக் கொண்டு வந்த ஆதி மொபைலை நோண்டியபடி தாத்தாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்..

“ஐயா இருகாருங்களா?”
குரல் கேட்டு வாசலை எட்டிப் பார்த்தார் இசக்கியாப் பிள்ளை.
“யாரு?”
“நான் தான்.. முருகைய்யன்..”
இரண்டாவது கட்சியும் வந்து விட்டது.
“உள்ள வா முகைய்யா.. எப்படி இருக்கே?”

இசக்கியாப் பிள்ளை குரல் கொடுத்தவுடன் சற்று பவ்யத்துடன் உள்ளே வந்தான் முருகைய்யன். ஒரு காலத்தில் இசக்கியாப் பிள்ளையின் மாவு மில்லில் வேலை பார்த்தவன்.. வேலை பார்க்கும் போதே அரசியல் நாட்டம் அவனிடத்தில் அதிகமுண்டு என்பதை இசைக்கியாப் பிள்ளை கவனித்திருக்கிறார். அவர் நினைத்தது போலவே ஒரு அரசியல் புள்ளியைப் பிடித்து அவரோடு ஒட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று அந்தக் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து விட்டான். தேர்தலில் வெற்றி பெற்றால் ஜாதி அடிப்படையில் மந்திரி ஆகும் வாய்ப்பு கூட இருப்பதாகச் சொல்கிறார்கள்..

இவ்வளவு வளர்ந்தும் இசக்கியாப் பிள்ளையிடம் அவனுக்கு இருந்த மரியாதை மட்டும் குறையவே இல்லை..

“ஐயா.. அந்தக் கட்சிக் காரங்க வந்திருந்ததாக் கேள்விப் பட்டேன்.. ரெண்டாயிரம்னு சொன்னாங்களாம்.. வேண்டாங்க.. நாங்க மூவாயிரம் தரோம்.. மொத்தம் முன்னூறு ஓட்டு.. ரொக்கமா ஒம்பது லட்சம் கொண்டாந்திருக்கேன்..”
என்று திரும்பிப் பார்க்க அவனுடன் வந்த ஒரு நபர் பெரிய சூட்கேஸைக் கொண்டு வந்து வைத்தார். திறந்தால் உள்ளே கட்டுக் கட்டாக நோட்டு..
“என்னப்பா.. இப்படி வெளிப்படையாக் கொண்டு வந்திருக்கே.. அதிகாரிங்க யாராவது பார்த்துரப் போறாங்க.. பொறவு பிரச்சனையாயிரப் போவுது”
“அதெல்லாம் கவலையேப் படாதீங்க ஐயா.. இது நம்ம ஊரு.. நம்மள மீறி எந்த அதிகாரியும் எதுவும் பண்ணிர முடியாது”

கொஞ்சம் அதிகாரத் துள்ளலோடு சொன்னான்..
“சரி.. கிராமத்து சனங்க விடுத்த கோரிக்கைங்க.. கிராமத்துல பஸ், ஆஸ்பத்திரி, குழாய்த் தண்ணி..”
“கவலையேப் படாதீங்க ஐயா.. நான் ஜெயிச்சா.. மொத சோலியே இந்தக் கிராமத்துப் பிரச்சனைகளை தீர்க்கறது தான்.. இது நிச்சயம்”
தீர்மானமாகச் சொன்னான் முருகைய்யன்.
இசக்கியாப் பிள்ளையின் சொல்லை மீறாமல் முன்னூறு ஓட்டும் முருகைய்யனுக்கே விழுந்தது.. முருகைய்யன் தான் ஜெயிப்பான் என்று இசக்கியாப் பிள்ளை ஏற்கனவே கணித்து வைத்திருந்தார்..
தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற முருகைய்யன் வந்தான்..

ஊர் ஜனங்களுக்கு முன்னால் இசக்கியாப் பிள்ளையின் காலில் விழுந்தான்..
“நன்றி.. நன்றி.. உங்க இந்த முன்னூறு ஓட்டு நான் ஜெயிக்க ரொம்ப முக்கியமாப் போச்சு”
வழக்கமாக எல்லாப் பகுதிகளிலும் சொன்ன அதே வசனத்தை இங்கேயும் கக்கினான் முருகைய்யன்..
“அதெல்லாம் சரி முருகைய்யா.. எப்பச் சோலிய ஆரம்பிக்கறே?”

இசக்கியாப் பிள்ளை கேட்டது முருகைய்யனுக்குப் புரியவில்லை.

“என்ன.. என்ன சோலி?”

“அதான் சொன்னியே.. ஜெயிச்ச உடனே முதல் சோலியா.. இந்த கிராமத்துக்கு பஸ், குழாய் தண்ணி, ஆஸ்பத்ரி..”

“வந்து..”

“இப்ப ஜெயிச்சு வந்திட்டே.. சொல்லு எப்ப சோலியை ஆரம்பிக்கப் போறே? தேவையான எல்லா ஒத்துழைப்பையும் தர நாங்க தயாரா இருக்கோம்.. என்னப்பா?”

என்று மற்றவர்களைப் பார்க்க அவர்களும் “ஆமாம்” என்று குரலெழுப்பி ஆமோதித்தனர்..

முருகைய்யன் சற்று சுதாரித்துக் கொண்டான்.

“ஐயா.. இப்பத் தானே ஜெயிச்சிருக்கேன்.. இன்னும் பதவி ஏற்கலை.. ஆகட்டும்.. பொறவு பார்க்கலாம்”

இசக்கியாப் பிள்ளை அவனை விடுவதாக இல்லை.

“முருகைய்யா.. இதை நாங்க நிறைய கேட்டுட்டோம். ஆனா இதுவரை எதுவும் நடக்கலை.. இந்தத் தடவை நாங்க விடறதா இல்லை.. ஊர் ஜனங்க முன்னால சொல்லு.. எப்பச் சோலியை ஆரம்பிக்கறே?”

“ஐயா.. இப்படியெல்லாம் அவசரப் படுத்தக் கூடாது.. தேர்தலுக்கு முன்னால நாங்க ஆயிரம் சொல்லுவோம்..”

“அப்படிங்களா? சரி முருகைய்யா.. நாங்க பார்த்துக்கறோம்”

இசக்கியாப் பிள்ளை இதைச் சொன்னதும் முருகைய்யனுக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரம் வந்தால் புத்தி தடுமாறுவது இயல்பு. வார்த்தைகள் எல்லையை மீறுவதும் நிதர்சனம். அது தான் நடந்தது..

“என்ன பார்த்துப்பீங்க? நான் ஜெயிச்சு வந்தாச்சு.. இனிமே உங்களால எதுவும் பு……. முடியாது”
என்று அவன் சொல்லி முடிக்கும் முன் இசக்கியாப் பிள்ளை அவனை மடக்கினார்..

“முடியும் முருகைய்யா.. இந்தத் தடவை நாங்க முழிச்சுக் கிட்டோம்.. நாங்க நினைச்சா உன்னோட இந்த வெற்றியை தோல்வியா மாத்த முடியும்”

முருகைய்யன் அவரைப் புதிரோடு பார்த்தான்.
இசக்கியாப் பிள்ளை திரும்பி யாரையோத் தேடினார்.

“இதோ இருக்கேன் கிராண்பா..”
என்றபடி ஆதி கையில் லேப்டாப்புடன் வந்தான்.
லேப்டாப்பை உயிர்ப்பித்து ஒரு பட்டனைத் தட்ட..

திரையில் முருகைய்யன்..

“ஐயா.. அந்தக் கட்சிக் காரங்க வந்திருந்ததாக் கேள்விப் பட்டேன்.. ரெண்டாயிரம்னு சொன்னாங்களாம்.. வேண்டாங்க.. நாங்க மூவாயிரம் தரோம்.. மொத்தம் முன்னூறு ஓட்டு.. ரொக்கமா ஒம்பது லட்சம் கொண்டாந்திருக்கேன்..”
குளோஸ் அப்பில் முருகைய்யனின் ஆள் கொண்டு வந்த சூட் கேஸில் கட்டுக் கட்டாகப் பணம்..

அடுத்து இசக்கியாப் பிள்ளையின் குரல்..

“என்னப்பா.. இப்படி வெளிப்படையாக் கொண்டு வந்திருக்கே.. அதிகாரிங்க யாராவது பார்த்துரப் போறாங்க.. பொறவு பிரச்சனையாயிரப் போவுது”
உடனே முருகைய்யன்..

“அதெல்லாம் கவலையேப் படாதீங்க ஐயா.. இது நம்ம ஊரு.. நம்மள மீறி எந்த அதிகாரியும் எதுவும் பண்ணிர முடியாது”

இதைப் பார்த்து முருகைய்யனின் முகம் கருத்தது.
“என்ன பார்க்கறே? நீ வந்த போது என் பேராண்டி செல் போன் வெச்சுக்கிட்டு சும்மாவா உட்கார்ந்திருந்தான்? நீ பேசினதை எல்லாம் படம் பிடிச்சிட்டானே.. நீ கொடுத்த பெட்டி பணமும் அப்படியே இருக்கு.. சாட்சியா.. இது மட்டுமில்லை.. இன்னும் நிறைய இருக்கு.. எப்ப சோலியை ஆரம்பிக்கறேன்னு நீ உடனே சொல்லலைன்னா.. இந்தப் பெட்டில ஒரு பட்டனைத் தட்டினா தேர்தல் ஆணையர்லேர்ந்து ஆரம்பிச்சு.. எதிர்கட்சிக் காரங்க வரை எல்லாருக்கும் இந்தப் படம் போயிரும்.. அப்பறம் என்ன நடக்கும்னு உனக்கேத் தெரியும்”
முருகைய்யனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..

இசக்கியாப் பிள்ளை நிதானமாக அவனைப் பார்த்தார்.

”ஜனங்க முழிச்சுக்கிட்டாங்க முருகைய்யா.. இனிமே இப்படித் தான்.. சனங்களுக்கு நல்லது பண்ணாம ஏமாத்த முடியாது”

இதயக் கல்யாணம் – ரேவதி ராமச்சந்திரன்

Latest Wedding Trends, Bridal Make-Up And All About Fashion And Style

குவிகத்தில் இந்த வருடம் கல்யாணத்தில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடிக்கப் போகிறேன். இது ஹேமாவுடைய பிள்ளைக் கல்யாணம். கூத்துதான்.

ஹேமா பி ஹெச் டி தீஸிஸ் எழுதிக் கொண்டிருந்ததால் அவளுடைய கல்யாணம் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் கோயம்புத்தூரிலி ருந்து வந்த வரனுடன் நிச்சயம் ஆயிற்று. நிச்சயதார்த்தம் பிள்ளை வீட்டில் கோயம்புத்தூரில் நடக்க வேண்டும். ஆனால் ஹேமாவின் அப்பாவால் அவ்வளவு தூரம் டிராவல் பண்ண முடியாததால் சென்னையில் வைத்துக்கொள்ள ஹேமா அம்மா கேட்டாள். சிறிது யோசித்து சரி என்ற மாமியார் கனகம் ‘ஆனால் போக்குவரத்து செலவு கொடுத்து விட வேண்டும்’ என்றாள் கறாராக. இங்கே தான் ஆரம்பம். ஹேமா அம்மா இதற்கு தயங்கியதால் நிச்சயதார்த்தம் தனியாக நடக்கவில்லை. அதற்குப் பிறகு வரதட்சணை, இரட்டைத் தேங்காய், மண்டபத்தில் புதிய சொம்பு என்று கனகத்தின் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. எல்லோரும் ஹேமாவைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தனர். மாமியார் கொடுமை இப்பவே தொடங்கியாகி விட்டது என்று கவலைப் பட்டனர். ஆனால் வீட்டிற்கு வந்த பெண்ணை கனகம் அன்போடு கவனித்ததில் ஹேமா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைந்தது.

ஹேமாவிற்கு ஒரு பெண், ஒரு பிள்ளை. பிள்ளை கார்த்திக் ஆர்மியில் சேர்ந்து விட்டான். அங்கே டான்ஸ் ஆடும்போது கூட ஆடிய ஒரு பெண்ணைப் பிடித்துப் போக, வீட்டில் சொல்ல, பிராமின் என்ற காரணத்தால் எதிர்ப்பு எதுவும் சொல்லவில்லை. ஆனால் பெண் வீட்டில் பாஷை தெரியாத நிலையில், தூரம் உள்ள இடத்திற்கு அனுப்பத் தயங்கினர். எவ்வளவு எதிர்க்க முடியுமோ அவ்வளவு பயமூர்த்தினர். ‘அவங்க அம்மா தமிழில் உன்னை அடிக்கச் சொன்னால் கூட உனக்குப் புரியாது, ஆகையால் இந்தப் பையனை விட்டு விடு, நாங்கள் இங்கேயே ஒரு நல்ல பையனைப் பார்க்கிறோம்’ என்றனர். ஆனால் சமந்தா புத்திசாலி, கார்த்திக்கை நன்கு புரிந்து வைத்துள்ளதால் இதற்கு மசியவில்லை. ஆனால் இப்போது சமந்தா வீட்டில் உள்ளவர்களும் கார்த்திக்கையும், ஹேமாவையும் பார்த்த பிறகு இதை விட நல்ல சம்பந்தம் என்பது ஒன்று கிடையாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டனர்.

சமந்தா வடக்கு, சங்கர் தெற்கு. கல்யாணம் பெண் வீட்டில்தான் நடக்கும் என்பதால் டெல்லிதாண்டி முராதாபாதில் கல்யாணம். தன் பெண் கல்யாணம் முடித்துவிட்டு, ஹேமா, கணவர், கார்த்திக் மூவரும் முராதாபாத் சென்றனர். டெல்லியிலிருந்து ஒரு டாக்ஸியில் முராதாபாத் பயணப் பட்டனர். குண்டும் குழியுமான ரோடைப் பார்த்து விட்டு இனி இந்தப் பக்கம் தலை வைத்து கூடப்  படுக்கக் கூடாது என்று முடிவு கட்டினர்.

இப்போது அந்த ரோடு சரி செய்யப்பட்டுவிட்டது அது வேறு விஷயம்.

மண்டபம் அங்கே ஒன்றுதான் உள்ளது. அங்கே கல்யாணம் ஒரு வேளைதான் நடப்பதால் மண்டபத்தில் தங்கும் ரூம் அதிகம் இருப்பதில்லை. மாப்பிள்ளை பெண்ணுக்கென்று இரண்டு ரூம் தான் உள்ளது. பாட்டிக்கென்று சிறிது தலை  சாய்க்க ஒரு ரூம் கூட கிடையாது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் உடனேயே மண்டபம் புக் செய்யச் சொன்னால் ‘ஒரு ப்ராப்ளம் கிடையாது. மண்டபம் இங்கே எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். அப்படி இல்லா விட்டாலும் ஏதாவது ஒரு காலி இடத்தில் ஷாமியானா போட்டு கல்யாணம் செய்து விடுவோம்’ என்று ஈஸியாகச் சொன்னார் சமந்தாவின் அப்பா.  ஹேமாவிற்கு அந்த நிமிடத்திலிருந்து தெரிந்து விட்டது வடக்கில் எப்படி எல்லாவற்றையும் சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று. அதே மாதிரி எப்போதும் பாட்டும் டான்ஸும் தான். சிறியவர்கள் முதல் பெரிய பாட்டிமார்கள் வரை டான்ஸ் ஆடுவதும், நீண்ட லோலாக்கு அணிவதும்  யார் வேணா எந்த மாதிரி வேணா. தெற்கு மாதிரி யாரும் யாரையும் தூக்கிய புருவத்தில் பார்ப்பதில்லை.

ஹேமா தன் அக்காமார்களிடம் இந்தக் கல்யாணத்தைப் பற்றி முதலில் பிரஸ்தாப்பிதபோது அங்கே ஆரம்பித்தது முதல் முரண்பாடு. ‘ஓ நல்ல விஷயம்தான். ஆனால் டிசம்பரில் அங்கே குளிர் அதிகம். நாம் போட்டுக் கொள்ளப் போகும் சாரியின் அழகு, நிறம், ஜரிகை எதுவும் காமராவில் தெரியாது. மேலும் அங்கே பூவும் நன்றாக இருக்காது. எனவே சென்னையிலேயே வைத்துக் கொள்ளப் பாரேன்’ என்றனர். இப்போதுதான் பெண் கல்யாணத்தை முடித்த ஹேமா ‘இன்னொரு கல்யாணமும் நாமளே செய்ய வேண்டும், பிள்ளை வீட்டுத் தோரணையும் காட்ட முடியாது, மேலும் திரும்பவும் சமந்தா வீட்டில் பேச வேண்டும்’ என்று யோசித்து டெலிஃபோன் நம்பரை சுழற்றினாள். தயங்கித் தயங்கி கேட்டதிற்கு முதலில் மறுத்த அவள் அப்பா பின் ‘சரி, ஆனால் எங்களுக்கு சென்னையும் தெரியாது, அங்கே யாரையும் தெரியாதே’ என்று கை விரித்தார். ஹேமா தன் தலையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

இது கடைசி நிமிடத்தில் முடிவானதால் மண்டபம் தேடும் படலம் ஆரம்பித்தது. மண்டபம் எங்கே கிடைக்கும்! கடைசியில் ஒரு சுமாரான மண்டபம் கிடைத்தது. தரை அங்கங்கே விரிசல்களுடன் இருந்ததால்  மண்டபம் பூராவும் கீழே அலங்கார ஷீட் மூன்று நாட்களும் விரிக்க ஏற்பாடானது. மறுபடியும் ஹேமா பெண் கல்யாணத்திற்கு செய்தது போலவே பூ அலங்காரம், வாத்தியம், சமையல் என்று எல்லா ஏற்பாடும் செய்தாள் மூச்சு விட நேரம் இல்லாமல். ஒரு குறையும் இருக்கக் கூடாது என்று பார்த்துப் பார்த்து செய்தாள்.

சமந்தா வீட்டார் ரயிலில் கிளம்பி விட்டனர். டிசம்பரில் அங்கே நல்ல குளிர் ஆதலால் அந்த நினைவுடன் எல்லா ஸ்வெட்டர், குல்லாக்களுடன் கிளம்பினர். சென்னை வர வர சூட்டினால் ஒவ்வொன்றாக கழட்டினர். இதுதான் வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறதோ! இன்றும் அவர்களால் நம்ப முடியவில்லை சென்னையில் கடும் குளிர் என்பது கிடையாது என்று.

ஆயிற்று. வந்து இறங்கியாச்சு. ஹேமா புத்திசாலி. எப்போதும் டீ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு பண்ணியிருந்தாள். பெண் வீட்டார் தமது சாமான்களுடன் ஒரு டோலக்கும் கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் டிரைன்லேயே பாட்டுப் பாடிக் கொண்டு வந்தார்களாம். சமந்தா அம்மா மஞ்சு டீயிலேயே  குளிப்பவள்.

டான்ஸும் பாட்டும் மண்டபத்தின் முதல் மாடியில். ஹேமா மாடியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க சென்றால் மங்கலம் என்று அவளையும் டான்ஸ் ஆடச் சொல்ல யாரும் பார்க்கிறார்களாவென்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையைக் காலை ஆட்டினாள். அவளுக்கு வீட்டில் எல்லாரையும் தன் சொல்லுக்கு ஆட வைத்துத் தான் பழக்கம்.

விரதம் ஆரம்பம் ஆயிற்று. சமந்தா அப்பா இந்தப் பக்க கல்யாணத்தில் இத்தனை சடங்குகள் இருப்பது தெரியாமல் கனபாடிகளிடம் தங்கள் வழக்கத்தையும் கல்யாணத்தில் சேர்க்கச் சொல்ல ‘அது குழப்பத்தை ஏற்படுத்தி விடும். வேண்டும் என்றால் விரத காலத்தை நீங்கள் உபயோகப் படுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டார். அவர்கள் அதை மஞ்சள் பூசுவதாகக் கொண்டாடினார்கள்.

இங்கே விரதம் செய்யும்போது அங்கே சங்கு ஊதும் சத்தம் கேட்டு எல்லோரும் மிரண்டனர். அப்புறம்தான் தெரிந்தது அவர்களுக்கு அது மங்கல வாத்தியம் என்று. வந்திருந்த எல்லா பிள்ளை வீட்டு உறவினர்களும் பெண் வீட்டுப் பக்கம் சாய்ந்து விட்டனர் இது புதிதாக இருக்கே வென்று. விரதம் முடிந்து சாப்பிட உட்கார்ந்தால் வடக்கில் எப்போதும் பஃபே முறைதான் என்பதால்  பெரிய பெரிய வாழை இலையைப் பார்த்து ரசித்தனர்.  பாயசத்தை எப்படி இலையில் சாப்பிடுவது என்று இங்கும் அங்கும் பார்த்தனர். எல்லோருக்கும் எல்லா நேரமும் அப்பளம் போட்டது மிகவும் பிடித்திருந்தது. கேட்டுக் கேட்டு சாப்பிட்டனர்.

மறு நாள் கல்யாணம். முதலிலேயே முடி குட்டையானதால் குஞ்சலம் எல்லாம் வைத்துப் பின்ன வேண்டும் அதனால் 4 மணிக்கெல்லாம் பெண் அலங்காரத்திற்கு வந்து விட வேண்டும் என்று ஹேமா முன்னமேயே சொல்லியிருந்தும் அவர்கள் அதை உணராமல் ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தனர். ஹேமா கையைப் பிசைந்து பிசைந்து கைதான் தேய்ந்தது. ஒரு வழியாக பெண்ணை 5 மணிக்கு அனுப்பினர். குட்டை முடியானதால் இரண்டு சவரி வைத்து குஞ்சலம் வைத்து பின்னப் பட்டது. எல்லா அலங்காரமும் முடிந்தவுடன் மஞ்சு சமந்தாவின் மூக்கில் தங்கள் வழக்கப்படி நத்து போடலாமாவென்று பர்மிஷன் கேட்டாள். வரும் பொன்னை யாராவது வேண்டாம் என்பார்களா!

ஆனால் ஊஞ்சலில் பாலும் பழமும் கொடுக்கும்போது அவள் நத்தை தூக்கி பாலைக் குடித்தது எல்லோருக்கும் வேடிக்கையாய் இருந்தது. ஹேமா வேலைகளில் மூழ்கியிருந்ததால் பெண் வீட்டாரின் சில வேடிக்கைகளை பார்க்கவில்லை. இல்லாவிட்டால் இந்தக் கதை இன்னும் நீண்டிருக்கும்.

அடுத்தது நலங்கு. அப்பளத்தை ஒருவர் மேல் ஒருவர் உடைத்தபோது சமந்தாவின் சித்திக்கு அப்பளம் வீணாகப் போவது வருத்தமாக இருந்தது. சமந்தாவின் அப்பாவும் அம்மாவும் அழுதுகொண்டே பெண்ணை விட்டுச்சென்றது மனத்தை உருக்குவதாக இருந்தது. இது வடக்குக்கும் தெற்குக்கும் பொதுதான் போல இருக்கு!

ஹேமாவின் அம்மா ஒரு தீர்க்கதர்சி போலும். தன் குழந்தைகள் எல்லோருக்கும் ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அதிலும் ஹேமா ஹிந்தியில் நன்றாக பேசுவதைப் பார்த்தால் அவளது தாய்மொழி ஹிந்தி போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. அன்று புரியாமல் அழுத மஞ்சு இன்று சங்கரையும் ஹேமாவையும் பார்த்து இதை விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைத்திருக்காது என்று சந்தோஷப்படுகிறாள்.

இது இதயங்களின் சங்கமம். ஹிந்தி தமிழின் கலக்கல். இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களின் புணர்ச்சி. இந்த பந்தத்தை கடவுளைத் தவிர யாரோ அறிவர்!  

        

தோல்விகள் வெற்றிகளுக்காகவே…. இரஜகை நிலவன்

Why Your Greatest Success Will Come After Your Worst Failure (2020)

விண்மீது நோக்கமிருந்தால்
கன வாகும்
வினையதனை உணர்ந்தாலே
வெற்றி யாகும்

கனவதனை நினைவாக்க
துணிவின் துணைநாடும்
நன்னாளில் விழுந்தாலும்
எழுவதுவே முதற்படியின்
முதலாம் அடியின்
முனைப்பாகும் வெற்றிக்கே…

விதையது வீழ்ந்தால் தானே
வீரிய மரமாகும்
விண்ணின் கதிரவனும்
வீழ்ந்து அஸ்தமித்தால்
விடியல் உதயமாகி
வெளிச்ச வெள்ளமாகும்…

வெற்றி பெற்றவர்களின்
வாழ்க்கையக் கேட்டால்
விழுந்து எழுந்த கதைகள்
விரியுமே காவியங்களிலே

விழுந்து எழுந்து ஓடும்
விடியலின் மகிழ்வான
தலைமுறைக்கும் புரிகிறதே
எழுந்தால் தான் வாழ்க்கையாக…

தோல்விகளின் கவிதையே
முதல் வெற்றிப் படியென்றே
தோன்றிய பின்னும்
வீழ்ந்தவர்கள் எழுந்திடாமல்

முயற்சி திருவினையாக்கும்
முற்றும் துறந்த
முனிவரும் தவம் வேண்டி
முதல்வ்னை வேண்டிக்காத்திருக்க..

வீழாதவன் இங்கே நம்மில்
மனிதரில்லை என்பதை
உணராதவர் இப்புவியில்
மரணமின்றி வாழ்வாருண்டோ?

வாழ்வின் வெற்றிக் கண்டோர்
வீழ்ச்சியின்றி வெற்றி
வாகை சூடியதில்லை என்பதை
வாழ்வில் வரிப்போம்
வெற்றி தனைக்கண்டிட
வீழ்ந்திடினும் எழுந்து நின்றே
வசந்த்ங்களை வாழ்வில்
வரவேற்றிடுவோம் வண்ணமாகவே….

நிஷா – ந பானுமதி

நிமிர்ந்து பார்க்கையில் கடிகாரம் ஒன்பது மணி என்று காட்டியது. வழக்கத்தைவிட அதிக நேரமாகிவிட்டது இன்று. சுலபா காலையிலேயே முணுமுணுத்தாள்- வாரத்திற்கு இரு முறைகளாவது இவள் எட்டு மணிக்குள் வருவதில்லை என்று. அதிகப் பணம் கொடுக்கிறாள், அதிக சலுகைகளையும் கொடுக்கிறாள், ஆனால், சுலபாவால் சண்டைபோடாமல் இருக்க முடியாது. தான் ஏன் இன்னமும் இவர்களையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்கிறோமென்று தன்னிரக்கத்தில் மனம் ஒரு கணம் தடுமாறியது.

ஆனால். சுலபா அவளுக்குத் தேவையானவள்; கடுகடுத்தாலும் நிஷாவைப் பார்த்துக் கொள்பவள்; நிஷாவிற்கு உணவூட்டி, விளையாடி, தூங்கவைத்து, மருந்து கொடுத்து அரவணைப்பவள். குழந்தையைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதவள்; குழந்தையா.. நிஷா இன்னமும் குழந்தையா? சுலபா சொன்னாளே- “மீரா, இது உக்காந்துடும் கொஞ்ச நாள்ல;  என்ன செய்யப் போறோமோ?” ஒருமாதிரி அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. வேண்டாம், நிஷாவிற்கு இது வேண்டாம், எல்லாவிதத்திலும் வஞ்சனை செய்த கடவுள் இதிலாவது தனக்கு நல்லது செய்யட்டும்.

இத்தனை எண்ணங்கள் பின்ன அவள் கணினியை மூடி சுற்றிவரப் பார்த்தாள்; அலுவலகத்தில் எவரும் தென்படவில்லை. வேலை மும்முரத்தில் இன்று வெள்ளிக் கிழமை என்பதையே அவள் மறந்திருக்கிறாள். கைப்பையை எடுத்துக் கொண்டு அவள் தன் அறை விளைக்கை அணைக்கப் போகையில் உதவிப் பொது மேலாளரிடமிருந்து இன்டர்காம் அழைப்பு வந்தது. அவளுக்கு முதலில் வியப்பாக இருந்தது;

அவரைவிட மூன்று படி நிலைகள் கீழே உள்ள ஒரு நிதித் தொழில் நுட்ப மேலாளர் அவள். நேரடியாகப் பேசுவதற்கு இருவரிடமும் ஒன்றுமில்லை. தவிர்த்து விடலாமென நினைத்தவள் ரஸாக் இருப்பதைப் பார்த்ததும் அந்த அழைப்பை எடுத்துப் பேசினாள். உதவிப் பொது மேலாளர் அறைக்குச் செல்கையில் ரஸாக் புன்னகைத்தான்.

“மிஸஸ். மீரா, இந்த நேரத்தில் உங்களை அழைத்ததற்கு மன்னிக்கவும். ஹெச் ஓவிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.” என்றவன் பஸ்ஸரை அழுத்தி ‘ரஸாக், அந்த விக்னேஷ் ஹவுஸிங் ஃபைல எடுத்துக் கொடு. வெளில வெய்ட் பண்ணு’ என்றான். இந்த நேரத்தில் எதற்கு அந்த ஃபைல் என்று நினைத்தாலும் அவள் பேசாமலிருந்தாள். தனியார் வங்கியில் தோற்றம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்ற எண்ணம் தான் அவளுக்கு முதலில் வந்தது.

இந்த அறைக்கு அவள் வந்ததில்லை, வரவும் தேவையில்லை. சுவரில் வங்கியின் விவரங்கள் அடங்கிய அழகிய பெரிய படம் நடு நாயகமாக இருந்தது. அதைச் சுற்றி சிறிய தொங்கும் தொட்டிச் செடிகள், இடது புறத்தில் புரியக்கூடாதென்றே வரையப்பட்ட ஓவியம், கால் பதியும் காஷ்மீரக் கம்பளம், மேஜையில் பீங்கான் கிண்ணங்களில் 3டி ஓவியங்கள், சிறிய பிரம்புத் தொட்டில்கள் போலிருந்த மர ஊசலில் பல வண்ணங்களில் பேனாக்கள், பென்சில்கள், நிகு நிகுவென்று இரு கணினிகள், பூனை வடிவ தொலைபேசி ஒன்று, தேக்கு மரத்தில் மேஜை, ரோஸ்வுட் நாற்காலிகள், வருகையாளர் அமர்வதர்க்கென்றே கார்னர் சோஃபாக்கள், உயர்ந்த சிம்மாசனம் போன்ற அவனது இருக்கை, எதிரே நாலு நாற்காலிகள், அழகு, தூய்மை, மெல்லிய நறுமணம், செவ்விசை கசியும் ஸ்பீக்கர்ஸ்.. ஆம், ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவளும் இம்மாதிரி அறையில் நல்ல அந்தஸ்துடன் அமர்வாள்.

அவன் ஃபைலிலிருந்து தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். பிறகு மிகக் கறாராக அந்த கடன் விண்ணப்பத்தில் அவள் எழுப்பியிருந்த கேள்விகளைப் பரிசீலிக்கத் தொடங்கினான். ‘எவ்வளவு பேத்தலான அனாலிசஸ். இம்ப்ராக்டிகல் கண்டிஷன்ஸ். உங்களுக்கென்ன, எப்படியும் சம்பளம் வரப் போகிறது- வங்கியின் பிசினஸ் பற்றி என்ன கவலை உங்களுக்கு?’

“அந்த பிசினஸ் பற்றிய கருத்து இருப்பதால் தான் இப்படி நோட் எழுதியிருக்கிறேன். ஒரு புறம் வங்கி கடனை 720 சீனியர்களுக்கான வீடுகள் கட்ட அந்தக் கம்பெனிக்குக் கொடுக்கிறது- ஒவ்வொரு பேஸாக, புக் ஆக புக் ஆக கடன் கொடுக்கலாம்தான்; ஆனால், கம்பெனி, உரிமையாளர்களின் விற்பனை உரிமையில் கை வைக்கும் ஷரத்தைச் சேர்த்திருக்கிறது. இது சட்ட பூர்வமாகச் செல்லுபடியாகாது. சொத்துக்கள், வாரிசுதாரர்களின் இயல்பான சட்ட பூர்வ உரிமை. அதைக்கூட இந்தக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்து பின்னர் அதன் அனுமதியின் பேரில் தான் அந்த வாரிசுதாரர்கள் விற்கவோ, வாடகைக்கு விடவோ முடியும் என்பது அராஜகம். வளமான சீனியர்களுக்கான அனைத்து வசதிகளும் சேர்ந்த குடியிருப்பு என்பதால் பெரும்பாலும் வங்கிக் கடன் இல்லாமல் அவர்கள் வாங்குவார்கள். கட்டடம் எழும்பும் ‘ஸ்டேஜசி’ற்கு உண்டான பணத்தை கம்பெனியிடம் அவர்கள் தரக் கூடாது, மாறாக அந்தத் தொகை ‘எஸ்க்ரோ’ கணக்கில் வர வேண்டும். அதற்காகக் கட்டாயம். ‘ட்ரைபார்ட்டைட் அக்ரிமென்ட்’ வேண்டும். கம்பெனி ‘ப்ரோச்சரே’ இதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் ‘போர்ட்டில்’ ‘ஸ்பெஷல் ரெஸல்யூஷன்’ போட்டு அதைப் பதிவு செய்ய வேண்டும். அந்த நிலமிருக்குமிடம் பூமி அதிர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளற்றது என்ற சான்றிதழ் வேண்டும்.”

‘நிறுத்து, நிறுத்து, சும்மா பேசிண்டே போற. சி எம் சொன்னாரு- அது திமிர் புடிச்ச பொம்பளன்னு. தெரியாமத்தான் கேக்கறேன் உன் வேலை ‘ஃபன்ட் அனாலிசஸ்’, ‘ஸ்வாட்’, ‘ஃப்ளோ இம்பேரபிலிடி’, ‘ஆர்ஒஐ’ ‘ஆர்ஒஎ’ தானே? நீ ஏன் சட்டத்தைப் பத்திப் பேசற? சட்டப் பொது மேலாளர் ‘வெட்’ செஞ்ச பொறகுதான் உங்கிட்ட இது வந்திருக்கு. உன் எல்லைக்குள்ள நில்லு’

“சாரி, சார் இதுவும் என் ‘ஏரியா’தான். ஒரு ‘ப்ராஜெக்ட’ சாவித் துவாரம் வழியா பாக்க முடியாது. முக்கியமா ‘எஸ்க்ரோ’வும், ‘அக்ரிமென்ட்டும்’ இல்லேன்னா, இது வாராக்கடனாயிடும். அதப் போல சொத்துரிமைச் சட்டத்தை கம்பெனி வளைக்கறத்துக்கு அனுமதிக்கக் கூடாது.”

‘முடிவா என்ன சொல்லவர?’

“ஏற்கெனவே ‘நோட்ஸ்ல’ சொன்னதைத்தான்.”

‘அத மாத்தி எழுதுன்னு சொன்னா..?’

“செய்ய மாட்டேன். என் ‘நோட்ஸ்’ஐ ‘ரிஜெக்ட்’ செஞ்சு என் மேலதிகாரிகள் பதிவு செய்யலாமே?”

‘இது இன்சபார்டினேஷன்’

“இல்லை என் கடமை எனக்குக் கொடுத்திருக்கும் உரிமை”

‘என்ன ஒரு கர்வம் உனக்கு?’

“தேங்க்யூ, நான் கிளம்பலாமா?”

‘இதுக்கு ஒரு வழி சொல்லிட்டுப் போ. இந்தப் பாரு, நல்ல பிசினஸ் வரச்சே விட்டுடக் கூடாது. உனக்கு ஏதாவது கமிஷன் வேணுமா நா சொல்லி வாங்கித் தரேன். உன் பொண்ணுக்குக் கூட ஏதோ ‘ஆடிஸமும் டிஸ்லெக்சியா’வுமாமே? பாவம், செலவுக்கு வச்சுக்கோ.’

“என் சம்பாத்தியமே போதும். இந்தக் கமிஷனெல்லாம் உங்களோட வச்சுக்குங்க. நான் வேற மாரி நோட்ஸ் எழுத மாட்டேன். எனக்கு மேல ரண்டு பேரு இருக்காங்கல்ல, அவங்கள எழுத்துப் பூர்வமா இத ‘டீல்’ பண்ணச் சொல்லுங்க.”

அவன் இருக்கையை விட்டு  எழுந்து நடந்து கொண்டே பேசினான்.

‘இப்படி டஃப்  ஃபைட் கொடுக்கறது எனக்குப் பிடிச்சிருக்கு. யூ ஆர் யுனிக். கூல், மீரா,  கூல். இதப் பத்தி அப்றமா பேசலாம். இராத்திரி நேரம், நல்ல தனிமை இல்ல இப்ப என்ன நெனக்கற நீ’  

பேச்சு திசை மாறியதில் அவள் திகைத்து எழப் போனாள். 

‘மிஸஸ். மீரா நாகராஜ் ஓ சாரி, மிஸஸ். மீரா முகுந்தன், இந்த நேரத்தில் அழைத்ததற்கு மீண்டும் மன்னிக்க வேண்டும், இந்தப் பேச்சிற்காகவும். ப்ளீஸ் உக்காருங்கள். இது லெமன் ஜூஸ் தான்- எடுத்துக் கொள்ளுங்கள்.’

“மிக்க நன்றி சார். நான் குளிர் பானங்கள் இரவில் எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு நேரமாகிறது, நான் போக வேண்டும்.”

‘ஓ, ஐ சீ, அப்போ ஹாட் ட்ரிங்க்ஸ், ஓ சாரி, சில்லியாகக் கேட்டுவிட்டேன்.’

“சார், என்னாலும் கேவலமாகப் பேச முடியும் என்னைப் பொறுத்தவரை ஆஃபீஸ் கூட கோயில்தான். எனக்கு சற்று அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும்.’ என்று சொன்னவாறே எழுந்தவளை அவன் கைகளால் சைகை செய்து மீண்டும் அமரச் சொன்னான். ஒரு மிடறு ஜூஸ் குடித்துவிட்டு, ‘சோ லைஃப் எப்படிப் போகிறது?’ என்றான்.

அவளுக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. அவன் பதவி உயர்வு பெற்று இந்த அலுவலகம் வந்தே இரு வாரங்கள் தானாகிறது. அதற்குள் தன் பெயரை இறந்து போன முன்னாள் கணவருடன் இணைத்து, பின்னர் தவறாகச் சொன்னது போல் நடித்து… இன்னும் என்னவெல்லாம் தெரியும் இவனுக்கு, இன்னும் என்ன கேட்கப் போகிறான் இவன்?

‘மன்னிக்க வேண்டும். அலுவல் விஷயமானால் பேசலாம், அது கூட நாளைக் காலையில் தான். அதற்குக்கூட அவசியமில்லை. எனக்கு இரு மேலதிகாரிகள் இருக்கின்றனரே; நான் உங்களுடன் அலுவல் விஷயங்கள் கூட டிஸ்கஸ் செய்ய வேண்டாமே.’ அதற்குள் அவன் அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறம் வந்து நின்றுவிட்டான். அவள் சேரைத் தள்ளி எழுந்திருந்தால் மோத வேண்டி வரும்; அவன் மூச்சுக்காற்று கழுத்தின் பின்புறம் படியும் அளவில் நெருங்கி நிற்கிறான்.

“பயப்படாதே, மீரா. நான் ஒன்றும் செய்ய மாட்டேன். உன் வாழ்க்கை நன்றாக இல்லையே, கணவர்களுமில்லையே- ஐ மீன் உன்னுடன் இப்போது இல்லையே.. அதனால் தான்.. உனக்கும் ஏக்கங்கள், ஆசைகள் இருக்கும்.. உடல் சிலவற்றிற்குக் கெஞ்சும்.. திருட்டுத் தனமாகவாவது ருசிக்கச் சொல்லும்.. நீ அப்படி அழகி ஒன்றுமில்லை.. ஆனால், உன்…. .. எல்லோருக்கும் கிடைக்காது. இல்லயில்லை.. இது என் கண்கள் ஊகிக்கும் ஒன்று.. மூடியிருந்தாலும் எனக்குத் தென்பட்டுவிடும்.’

இந்த முப்பத்தி நான்கு வயதில் அவள் கேட்கும் மிக நேரடியான வர்ணனை இது. கூச வைத்தாலும், அதன் உண்மை அவளுக்குள் சிறு சலனத்தை ஏற்படுத்தியது .தன் உணர்வுகளை அடையாளம் காண முடியாமல் அவள் தவித்தாள். நாகராஜனுடன் அவள் வாழ்ந்தது மூன்றே மாதங்கள் தான்; அவனுக்கு இரசனை என்ற ஒன்றே கிடையாது. எதிலும் ஓட்டம், எல்லாவற்றிலும் அவசரம், அதே அவசரத்தில் விபத்தில் இறந்தும் போனான். முகுந்தன் அவனுடைய நண்பன். அவள் துணையின்றி நின்ற பரிதாபத்தில் இரக்கப்பட்டு அவளை மணந்து கொண்டதாகச் சொன்னவன். இந்த இரண்டாம் கல்யாணத்திற்கு மறு வாரம் நிஷா பிறந்தாள். அவளைத் தன் பெண்ணெனக் கொண்டாடினான் முகுந்தன். நிஷா அவனை ஏனோ நெருங்க விடவில்லை.

இவன், இந்த ஜோஷி, ஆண்மைத்தனமாக இருக்கிறான். இவனது அருகாமை, இவனது வாசம், அந்த வரம்பு மீறும் வசீகரத்தின் வசியம், இரவு நேரம், ஆம் இரவு… நிஷா என்றால் இரவுமல்லவா?

அவள் குரலில் சிரிப்பையும், கொஞ்சலையும் வரவழைத்துக் கொண்டே சொன்னாள் “நான் முகுந்தனை விவாகரத்து செய்து விடுகிறேன்; நீங்களும் உங்கள் மனைவியை விலக்கி விடுங்கள். அதுவரை என்னிடம் வர முடியாது ஜோஷி.”

‘என்ன சொல்கிறாய், என் மனைவி யார் தெரியுமா? ….. மா நிலத்தின் கவர்னரின் மகள். உன்னைப் போல் இரட்டை ஆடு மேய்ந்த நிலமில்லை அவள். என்னைப் பேர் சொல்லி அழைக்கிறாய். உன்னை…..உன்னை என்ன செய்கிறேன் பார்.’

மீரா நாற்காலியைச் சடாரென்று தள்ளி எழுந்தாள். அவன் நிலைகுலைந்து விழ அவள் பஸ்ஸரை அழுத்தினாள். ரஸாக் அவள் நின்ற நிலையையும், அவன் கிடந்தெழுந்த நிலையையும் பார்த்தான். ஜோஷியின் கோப்பையில் ஒரு பானம் ஊற்றிக் கொடுத்துவிட்டு நின்றான்.

ஏற்கெனவே சிவந்திருந்த அவன் முகம் ரஸாக்கிடம் கோபத்தைக் கக்கியது. ‘வெளியே போ’ என்று கத்தினான். இது நல்ல சமயம் என்று போகப்போன அவள் சற்று நிதானித்தாள்.

தான் ஏன் இன்னமும் இங்கிருந்து நகரவில்லை எனப் புரியவில்லை. இவன் ஆபத்தானவன், வேகமாக வெளியே போவதுதான் இவனுக்குச் சரியான அவமரியாதை என்றது ஒரு மனம். இன்னொன்று, அவனைக் கீழே விழ வைத்தது போதாது, தன்னைக் கிட்டத்தட்ட வேசி என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அவனைப் பழி வாங்க வேண்டும். எப்படிச் செய்வது, அதுவும் இப்போதே என்ன செய்ய முடியும்?

“ஜோஷி, உன் பேர் அதுதானே, ஆஃபீஸ்ல ஆபாசமாப் பேசற உனக்கெல்லாம் என்ன மரியாத வேண்டிக் கிடக்கு. அத விடு, உனக்குத் தினவுன்னா, முகுந்தன் போபால்லதான் இருக்கான். அவன் ஒரு ஹோமோசெக்சுவல். உனக்கு ஏத்தவன். எம்பொண்ணுக்கு ஆடிசமுமிருக்கு, டிஸ்லெக்சியாவும் இருக்கு. ஆனா, அம்மாவ, ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி ஏமாத்தினவன்னு அவளுக்கு எப்படியோ புரிஞ்சிருக்கு. அவனக் கண்டாலே கத்தி ஆர்ப்பாட்டம் செய்வோ. அவ நிஷாதான்டா பாவி; ஆனா, எனக்கு நிஷாகாந்தி.”

‘நான் நெனச்சா..’

“நெனையேன்டா, என்ன செய்வ? பொய்யா சார்ஜ்ஷீட் கொடுப்ப, இன்சபார்டினேஷன்ன்னு மெமோ கொடுப்ப, ஏதேதோ சொல்லி சஸ்பென்ட் பண்ணுவ, தொலைவில இருக்கற இடத்துக்கு மாத்துவ. ஆனா, நா ஸ்பெலிஸ்ட் ஆஃபீஸர். என்ன நகரப் பகுதிக்குத்தான் மாத்த முடியும்; அங்க என் நிஷாவுக்கு வைத்யம் தொடர முடியும்.”

அவள் நிதானமாக நடந்து வெளியே வந்தாள். ரஸாக் மீண்டும் புன்னகைத்தான்.

பானுமதி.ந

 

ஆழ்துயில்- மலையாளத்தில் கே.ஏ.பீனா – தமிழில் தி.இரா.மீனா

 

மூலம்     :  கே.ஏ.பீனா [  K.A.Beena ]

ஆங்கிலம்  : ஆயிஷா சஷிதரன் [ Ayisha Sashidharan]

தமிழில்    : தி.இரா.மீனா

ஆழ்துயில்

 

Why is Lenin's Embalmed Body on Public Display? | History Hit

காலையில் நான் அவரைப் பார்த்த போது தெரிந்த அவருடைய அந்த வழக்கத்திற்கு மாறான தோரணை எனக்குள் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்திற்று. அன்று அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான நாற்காலிதோழமை கூடப் பக்கத்திலில்லை.

“என்ன ஆயிற்று அப்பா ?” செய்தித்தாளை வெறித்தபடி இருந்த அப்பாவின் வெளிப்படையான சங்கட நிலையைப் பார்த்து கேட்டேன். என் குரல் கேட்டு அவர் தலையை உயர்த்தினார்.

“லெனின் புதைக்கப்பட வேண்டுமா அல்லது கூடாதா என்பது குறித்தறிய அவர்கள் ஒரு வாக்களிப்பு நடத்தப் போகிறார்களாம். பெரும்பான்மை அவரைப் புதைப்பதை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்த மாதிரியான விஷயமெல்லாம் வாக்களிப்பில் முடிவு செய்யப்பட வேண்டியவையா?” அப்பா கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்லிய குரலில் சொன்னார்,

“நான் என் தோழரை ஒரு தடவை பார்க்க வேண்டும்.”

“என் தோழர் ? எந்தத் தோழர்?”

“தோழர் லெனின்,” அது போதுமானது என்பது போல சொன்னார்.

“ஒரு தடவை என் வணக்கத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இதுவரை நடைபெறாத ஒரு நீண்ட கால ஆசை அது. எந்த வகையிலாவது சோவியத் யூனியனுக்கு  பிரதிநியாகப் போகிற அளவிற்கு நான் பெரிய தலைவனில்லை. அவரைச்  சந்தித்தவர்கள், பேசியவர்கள்,அவரைப் பற்றி் எழுதியவர்கள் என்று எல்லோரின் அனுபவங்களையும் கேட்ட பிறகு, அந்த வேட்கை எனக்குள் ஊறி வளர்ந்து விட்டது. இப்போது  அவரைப்  பார்க்க எல்லோரையும் அனுமதிக்கிறார்களில்லையா ?மகனே ,நீ அதற்குமுயற்சிப்பாயா ?”

என்னால் மறுக்க முடியுமென்று தோன்றவில்லை. அப்பாவின் ஆசை, மகனாக நிறைவேற்ற வேண்டுமே.

“சரி, நான் உங்களுக்கு பாஸ்போர்ட் வாங்க ஏற்பாடு செய்கிறேன்.”

விசா, டிக்கெட் என்று எல்லாவற்றிற்கும் ரஷ்யத் தூதரகம் மிக வேகமாக  அனுமதி   தந்து விட்டது. அப்பா மிக உற்சாகமாகத் காணப்பட்டார்..

“இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு, ஏற்படும் சிறிது தாமதம் கூட  நாங்கள் லெனினைப் பார்ப்பதை தடுத்துவிடும். புதையல் சடங்கு எப்போது வேண்டுமானாலும்  நடக்கலாம். பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் அவருடைய தாயின் கல்லறை அருகேயுள்ள வால்கோவ் மயானத்திலா அல்லது கிரிம்லின் வாலிலா என்று இப்போது அதற்கான இடம் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது .பிரதமர் விளாதிமிர் புதின் புதையல்  சடங்கை  ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்தாலும், போரிஸ் எல்ஸ்டீன்       மிக விரைவிலேயே  அதை முடிக்க விரும்புகிறார். ரஷ்ய மரபு வழி   தேவாலயமும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. இவை எதுவும் நடப்பதற்கு   முன்னால் நான் அவரை ஒரு தடவை பார்த்து விட வேண்டும். இப்போது  அதுதான் நான் ஆசைப்படுவது.”

அப்பாவிற்குத்   தெரியாதது என்பது எதுவுமில்லை. முன்னாள் பள்ளி ஆசிரியர், சொற்களிலும், செயல்களி லும்  மிகத் துல்லியமாக இருப்பார், அவரது பத்திரிகையாளரான மகனை அவரோடு இன்றும் கூட ஒப்பிட முடியாது.

லெனின் உடலைச் சிதைவிலிருந்து பாதுகாக்கும் செயல்முறைகள் பற்றி இல்லினா விளக்கிக் கொண்டிருந்தாள். செக்கோஸ்லேவாக்யாவைச் சேர்ந்த அவள் வெறும் மொழி பெயர்ப்பாளர் மட்டுமில்லை பயிற்சியுள்ள ,நல்ல  சுற்றுலா வழிகாட்டியும் கூட. கிரிம்லின் சதுக்கத்தின் முன்னால் உள்ள காத்திருப்பு  வரிசை லெனின் கல்லறைக்கு வழிகாட்டுவதாக இருந்தது

நாங்கள்  வரிசையின் கடைசியில் இணைந்தோம்.

“லெனினுக்கு அன்றாடம் ஊசி போடப்பட்டது. ஒவ்வொரு பதினெட்டு மாதங்களுக்கும் அவர் உடல் ரசாயன நீரால் நீராட்டப்பட்டது.அந்த ரசாயன நீர் பொட்டாசியம் அசிடேட் ,மது, கிளிசரோல், கொய்னா, பதப்படுத்தப்பட்ட  தண்ணீர் ஆகியவற்றின் சேர்க்கையாகும்.இந்தக் கூறுகளின் சேர்க்கை கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அறியப்படாததாக இருந்தது. இப்போது எல்லாம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. இணையதளத்தில் விரிவான அறிக்கையுமிருக்கிறது.லெனின் உடலிலுள்ள கருப்பு புள்ளிகளுக்கும், சுருக்கங்களுக்கும் கூட சிகிச்சை  தரப்பட்டது. உண்மையில் இவை எல்லாம் மிகுந்த விலையுள்ளவை. தொடக்கத்தில் அரசாங்கம் இந்த செலவுகளை ஏற்றிருந்தது. இப்போது, நிதி  நிறையக் கிடைப்பதால், அமைப்புகள்  லெனினைப் பாதுகாக்கின்றன.”

தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் இல்லினா சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் விளக்கம் மிக அருமையாக இருந்ததெனினும் ஒரு வழிகாட்டிக்கு  உரிய செயற்கைத் தன்மை அவ்வப்போது வெளிப்பட்டது.

முன்பிருந்தது மாதிரி கிரிம்லின் சதுக்கத்தில் அவ்வளவு கூட்டமில்லை. இருப்பினும் , மிகச் சிறந்த புரட்சிவாதியைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து பயண நிறுவனம் எங்களை எச்சரித்து இருந்தது. இதற்கிடையே, இல்லினாவிற்கு அப்பாவைப் பற்றிய கவலையும்

“மிகப் பெரிய காத்திருப்பு வரிசை ! சார்,நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா?”

அப்பா சிரித்தார். “ இல்லை பெண்ணே, என் மண்ணில் நான் வேலை செய்யாமல் இருக்கும் தருணங்களில் மட்டுமே சோர்வடைவேன். இங்கு  நன்றாகவே இருக்கிறேன். உனக்குச் சோர்வாக இருந்தால் நிழலில் சிறிது நேரம் இருந்து விட்டு வா. இந்தச் சோம்பேறிப் பையனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போ.”

“பாதுகாவலருக்கு சிறிது பணம் கொடுத்தால் அவர் நம்மை உள்ளே விட்டு  விடுவார். வரிசையில் நிற்க வேண்டியதில்லை.”

அப்பா அவளை வெறித்தார்.” லஞ்சம் கொடுத்து தோழரைப் பார்க்க போகலாம் என்கிறாயா! இல்லை! ஒரு போதும் கூடாது.ஒரு பைசா கூட  அதற்காகச் செலவிடக் கூடாது/ நாம் இங்கேயே காத்திருக்கலாம்.”

“நாம் அத்தனை சுலபமாக உள்ளே போய் விடமுடியாது. தாமதமாக வரும் ஜனங்கள் பணம் கொடுத்து விட்டு,நம்மைக் கடந்து போய் விடுவார்கள்.

அப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.”

அப்பா சோர்வான முகத்துடன் வரிசையில் நின்றிருந்தார். பாவம் இல்லினா, நீண்ட காலமாக ,கண்டிப்பாக இருந்து வரும் ஒரு   கம்யூனிஸ்டின் உறுதியான மனநிலை அவளுக்கு எப்படிப் புரியும்!

முதல்நாள் மாஸ்கோ நகருக்கு எங்களை அழைத்துப் போகும் போதும் அதே மாதிரியான ஒரு தவறைச் செய்தாள்.  சுற்றுலாப் பயணிகள் என்று வந்தவர்களை அழைத்துச் செல்லும் எல்லா இ்டங்களுக்கும் அப்பாவைக்  கூட்டிக் கொண்டு போனாள்.டிஸ்கோத்தே நடக்குமிடம், சூதாடுமிடம் என்று எல்லா தெருக்களிலும் அப்பாவுடன் நடந்தாள்.அப்பா வேண்டாம் என்று  சொல்லும் வரை அங்கு சுற்றிக் கொண்டிருந்தோம்.

“போதும்! நாம் திரும்பிப் போய் விடலாம்,எனக்கு இங்கு எதையும் பார்க்க விருப்பமில்லை.”

“டூர் நிகழ்ச்சியின்படி இன்னும் போவதற்கு சில இடங்களிருக்கின்றன, ”

இல்லினா லேசான எரிச்சலோடு சொன்னாள்.

அப்பா கோபத்தோடு திரும்பினார். எனக்கு ராகவன் மாஸ்டரின்  வார்த்தைகள்  நினைவுக்கு வந்தன.“ நொறுங்கிப் போன கனவுகளின் கல்லறைகள்! இந்த வயதில் அவரால் அவற்றையெல்லாம் ஜீரணிக்க இயலுமா? பயணம் பற்றி முடிவு செய்வதற்கு முன்னால் நீ யோசித்துப் பார்க்க வேண்டும்.”

அப்பாவிற்கு யோசிக்க எதுவுமில்லை.அவர் விரும்புவதெல்லாம்  கடைசியாக ஒரு முறை தன் தோழரோடு இருக்க வேண்டியதுதான்.

லெனின் கல்லறைக்கு முன்னால் இல்லினா எங்களை பல புகைப்  படங்கள் எடுத்தாள்.

“மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் இடமாக இது இருந்தது.அதனால்  தான் ’ரெட் ஸ்கொயர்’ என்ற பெயர் .” இல்லினா விளக்கினாள்.

“குவிந்த முகட்டுடனான அந்த ஆலயத்தைப் பார்த்தீர்களா? அதுதான் புனித பேசில்  ஆலயம், மாஸ்கோவின் மைல்கல். லெனின் இறந்த பிறகு  அவருடைய உடலைப் பாதுகாத்து வைத்திருக்கும்படி கேட்டு ஆயிரக் கணக்கான தந்திகள்  வந்தன.அவருடைய மனைவியும், குழந்தைகளும் இதை எதிர்த்தார்கள்.ஆட்சிக் குழு நாற்பது நாட்கள் வைத்திருக்க முடிவு  செய்தது. நோயியல்  நிபுணரான அப்ராகோசவ் உடலைப் பதனம் செய்து  வைத்திருந்தார் .நாற்பது நாட்களுக்குப் பிறகும் லெனினைப் பார்க்க வரும் ஜன வெள்ளம் பெருகிக்கொண்டேயிருந்தது. தொடர்ந்து இது நடந்து கொண்டே போக ,அடக்கம் நடக்கவேயில்லை.”

தனி மனிதர்களை வழிபடும் நிலை கம்யூனிசத்திற்குள் ஊடுருவியது.

லெனின் உடலைப் பாதுக்காக்க ஸ்டாலின் முடிவெடுத்ததும் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமானது. கம்யூனிசம் மதங்களுக்கும், மத போதகர்களுக்கும் எதி்ரானது. ஆனால் லெனினின் உடலைப்  பாதுகாத்து வைக்க என்ன காரணம்?அது யூதர்— கிறித்தவ நம்பிக்கைகளின் தாக்கமாகி விடாதா ?விடை கிடைக்காத இம்மாதிரியான கேள்விகள்  இருக்கின்றன. இந்தக் கணம் முழுக்க முழுக்க அப்பாவின் வாழ்வில் மனநிறைவைத் தந்த கணம்.எந்தப் பாதிப்பு சிந்தனையையும் அவர் மனதில் நான் நினைவுபடுத்தி விடக்கூடாது.

நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி அப்பாவை அணுகி ஏதோ கேட்டாள். இல்லினா அவளைத் திட்டி அனுப்பினாள். கல்லறை மாடத்தின் முன்னால் ஜனங்கள் ஏராளமாய்த் திரண்டிருந்தனர். இல்லினா நேற்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.“பயண அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளருக்கும், வழிகாட்டிக்கும் நீங்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறீர்கள். எந்த அதிகப் பயன்பாட்டிற்கும் நான் நேரடியாகப் பணம் பெறமுடியும்.  இங்கு தங்க, , விளக்கங்கள் பெற நிறைய செலவாகும்.”

“இது என் அப்பாவின் யாத்திரை. எந்த விதத்திலும் அதன் புனிதத்தை நான் தொந்தரவுக்குள்ளாக்க மாட்டேன். அப்பாவிற்கு மகன் தரும் வெகுமதியாக இருக்கட்டும். இந்தக் கணத்தில் வேறெதுவும் அவசியமில்லை. “

பகல் பொழுதில் தனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை மறக்க விரும்புவது போல நள்ளிரவு வரை அப்பா புரட்சிப்பாடல்களை மெதுவாக  முணு முணுத்தும், சிறிது சத்தமாகப் பாடிக் கொண்டுமிருந்தார்.

இல்லினா தாளம் போட்டுக் கொண்டே பாடினாள்.

“இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது,

பிளாஸ்டிக் மனிதர்களுக்கு அதைக் காணக் கண்ணில்லை.

மணங்கள்  எவ்வளவு  மயக்கம் தருபவை

பிளாஸ்டிக் மனிதர்கள் பார்க்கத் தவறுகின்றனர்.

கவர்ந்திழுக்கும் ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்தையும்

பிளாஸ்டிக் மனிதர்களால் பார்க்க முடியாமல் போகிறது.”

அவளுடைய பாட்டிற்கேற்றபடி அப்பா தாளம் போட்டார்.

“இந்தப் பாடல் என் சகோதரனால் பாடப்பட்டது.’ உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்’ என்ற இசைக்குழுவை மிலன் ஹல்வசா என்ற முரசடிக்கும்  நண்பனோடு சேர்ந்து உருவாக்கியவன். சார்,உங்களுக்கு அவர்களது புரட்சிகர செயல்பாடுகள் குறித்துத் தெரியுமா ?”

அப்பா தலையாட்டினார்.“வில்லிஸ் புரட்சி என்பது செக்கோஸ்லோ வேக்யர்களால் வெல்வெட் புரட்சி என்று குறிப்பிடப்பட்டது.என்  சகோதரனின் பங்கு அதிலிருக்கிறது என்று தெரிந்து கொண்ட அதிர்ச்சியில் என் அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். ”

“சுதந்திர விழிப்புணர்வை தன் சகாப்தத்தில் கொண்டு வந்த அலக்சாண்டர் டப்செக்கின் காலத்தில் வாழ்ந்த போதும் உன் அப்பாவால் வெல்வெட் புரட்சியைத் தாங்க முடியவில்லையா ?”இல்லினாவை நோக்கிக் கேட்கப்பட்ட என் கேள்விக்கு அப்பா பதில் சொன்னார்.

“சித்தாந்ததை நோக்கிய மொத்த செயல்பாடுதான்—உண்மை கம்யூனிஸ்டின்  சாரம். அது குறித்த எந்த இடையூறும் அவனை அழித்து விடும்.”

அப்பா இன்னமும் ஒரு கம்யூனிஸ்டாகவே வாழ்கிறார். அவர் தன்  சைக்கிளை விற்கவுமில்லை, எங்கள் வீட்டைப் புதுப்பிக்கவுமில்லை.

’கண்காட்சி பொருள்’ என்றேகேலி செய்யப்படுவார். ஐந்து நட்சத்திர  கம்யூனிஸ்டுகள் நடுவே காலாவதியான மனிதராகவே இருந்தார்.

நேரம் ஏறிகொண்டேயிருந்தது. வெயில் எங்கும் பரவியது. அப்பா  தளர்ச்சியாகத் தெரிந்தாலும் , அசையாமல் நின்றார். ஆனால் வரிசை மட்டும்  அப்படியேயிருந்தது.“லெனின் மூல கல்லறை மாடம்  மரத்தால்  கட்டப்பட்டது.1929 ல் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

ஸ்டாலினின் உடலும் அங்கு நீண்ட காலம் வைக்கப்பட்டிருந்தது.  பிறகு அது நீக்கப்பட்டது.லெனினின்  உடலும் சிறிது காலம் நீக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது நாசிஸ்ட்   பயம் காரணமாக  லெனின்  டைமனுக்கு கொண்டு செல்லப் பட்டார். போர் முடிந்த பிறகுதான் திரும்ப வந்தார்.”

“என்ன அச்சுறுத்தும் தலையெழுத்து ! ”

என் பதில்  எதிர்பாராமல்  இருந்தது . அப்பா என்னைப் பார்த்தார்.

மனித உடலின் பரிதாபகரமான விதி!   போரின் போது எடுத்துச் செல்லப்  பட்டு, பின் போர் முடிந்ததும்  கொண்டு வரப்பட்டது.காட்சிப் பொருள்  போல பல நூறாண்டுகள் வைக்கப்பட்டது.தொடக்கத்தில் ஜனங்கள்  அன்பிலும், மரியாதையிலும் அதைக் காண திரண்டது உண்மைதான்.

இன்னமும், பல காலங்களுக்குப் பிறகும் புதைக்கலாமா அல்லது  வேண்டாமா என்ற  வாக்குமுடிவிற்காக ஒரு மனித உடல் காத்திருப்பது. . .

மனிதாபிமான சுதந்திரத்திற்காக ஏங்கிய மனம் அந்த உடலில் சிறைப்பட்டு  இருக்கிறது. லெனின் மேலிருக்கிற பயபக்தியிலும், அன்போடும் கிரிம்லின்  சதுக்கத்திற்கு வருகிற என் அப்பாவைப் போன்ற யாத்ரீகர்கள் இப்போது குறைந்து விட்டனர்.  பலருக்கு அது மாஸ்கோவிலிருக்கிற இன்னொரு சுற்றுலா ஸ்தலம்தான்.

திடீரென நினைவுகள் ஒளிர்ந்தன. இப்போது எப்படி லெனின் புதையல்  நிகழ்வு நடக்கும்?   கம்யூனிச சகாப்தத்தின்  உச்சத்தில் வாழ்ந்து ,இறந்தவர்

லெனின். உலகளாவிய புகழின் உச்சத்தில் சோவியத்  யூனியன் இருந்த போது புதையல் நிகழ்வு நடந்திருந்தால் உலகமே தலைவணங்கி நின்றிருக்கும். வருந்தும்  குடும்பத்தினரோடு மனதைத் தொடும் வகையில்  விடையளிக்கும் நிகழ்வு நடந்திருக்கும். இப்போது, உலகின் வெவ்வேறு  கோடிகளில் இருக்கும் அப்பாவைப் போல மிகச் சிலர் லெனினுக்கு விடை  தருவார்கள்.தமது தோழருக்காக நெஞ்சில் ’இன்குலாப்’ நிறைந்திருக்கும். வரிசை  கல்லறையை அடைந்தது. அப்பா மௌனமாக இருந்தார் ,ஆனால் மனதின் கொந்தளிப்பை அவர் முகம் காட்டியது.கல்லறை இளஞ்சிவப்பான  கிரானைட் கல்லில் கட்டப்பட்டிருந்தது.  கருப்பு மற்றும் பச்சைப் பலகையில்  சிவப்பு எழுத்துகளால் லெனினின் பெயர் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருந்தது.

கருப்பு  சூட் அணிந்திருந்த லெனின் தரைக்கு இணையான ஒரு  கண்ணாடிப் பேழையில்  தூங்கிக் கொண்டிருக்கிறார்.நான் அப்பாவையே  பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணிமைக்காமல் அவர் லெனினையே  பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நிற்கும் விதத்தைப் பார்த்த இல்லினா ,என்னைப் பார்த்தாள்.

நான் அவளிடம்  சொல்ல விரும்பினேன் :

“என் நாட்டின் ஒரு  தலைமுறை தங்கள்  அஞ்சலியை என் அப்பாவின்  மூலமாகத் தெரிவிக்கிறார்கள். அவர்களின் கனவுகள், ஆசைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தூண்டி வளர்த்தவர், இங்கே படுத்துக் கிடக்கும் மனிதர். ஒரு நாட்டின் வணக்கம் இது.”

பாதுகாவலர் அருகே வந்து நேரமாகி விட்டது என சைகை காட்டினார்.

திடீரென அப்பா தன்    கை முஷ்டியைத் தூக்கிப் பெருங்குரலில் “ செவ் வணக்கம் தோழரே ,செவ்வணக்கம் !” என்றார்.

கல்லறையின் பெரும் அமைதியை விலக்குவதாக அப்பாவின்  இடி  போன்ற குரல் வெளிப்பட்டது. பாதுகாவலர் அப்பாவைப் பிடிக்க வேகமாக

வந்தார். ஆனால் இல்லினா அவரை அமைதிப் படுத்தும்   வகையில் ரஷ்ய  மொழியில் ஏதோ சொன்னாள். நான் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு   வெளியே வரும் பாதைக்கு வந்தேன்.அப்பா திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தார்.

வெளியே வந்ததும் அப்பா என் கையை அழுத்தி “நன்றி மகனே !” என்று  சொன்னார்.

“அப்பா, எதற்கு நன்றி எல்லாம்?”

“தெரியவில்லை. நேற்றிலிருந்து….”அவரால் முடிக்க முடியவில்லை.

“ஓ..போகட்டும், நீங்கள் இல்லியானாவிடம் அந்தப் பெட்டி எங்கே  இருக்கிறதுதென்று கேளுங்கள்.”

“பெட்டி ? எந்தப் பெட்டி?”

“லெனினின் புதையல் குறித்து வாக்களிக்க வேண்டிய பெட்டி பற்றி.”

“இனிமேல் அதுபற்றி என்ன?”

“நாம் ஒட்டளிப்போம். அதை முடித்த பிறகுதான் நாம் புறப்படுகிறோம்.”

“அப்பா, நீங்கள் எதற்கு ஓட்டளிப்பீர்கள் ?”

“உனக்கு ஏன் அது தெரிய வேண்டும்? பெட்டி எங்கேயிருக்கிறது என்று  மட்டும் விசாரி.”

அப்பாவிற்காக நான் இல்லினாவோடு அந்த பெட்டியை  தேடிக் கொண்டு  போனேன்.அங்கே லெனின் தூங்கியவாறு  தன் விதியை எதிர்நோக்கி இன்னொரு  பெட்டியில்  காத்திருந்தார்.

————————————————————————-

கே.ஏ. பீனா பயண இலக்கியம், சிறுகதைகள், சிறுவர் நாவல்கள், இதழியல்

தொடர்பான புத்தகங்கள் என்று 28 க்கும் மேற்பட்ட புத்தகங்களை

எழுதியவர்.மாத்ருபூமியில் சில காலம் பணியாற்றியவர்.

 

 

விலகியது புகை மூட்டம் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

How to Stop Being Nervous

பல வகையான “வரும் முன் காப்போம்” முறைகளைத் தனது ஊழியர்களிடையே பரப்ப நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்று. புகைபிடித்தல் பற்றிப் பரிந்துரை செய்து வர்க்ஷாப் நடத்தினேன். அதே நிறுவனத்தில், வாரத்தில் இருமுறை நங்கு மணி நேரம் அங்கே தனிநபர்களுக்கு நான் மனநல ஆலோசனை செய்வதுண்டு.

அந்த வர்க்ஷாப்பில பங்குகொண்ட ஜார்ஜ் என்னை அணுகினான். இளம் வயது. மிக மெலிந்த உடல்வாகு, இருபத்தி ஐந்து வயதுள்ளவன், குமாஸ்தா வேலை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன்.

அந்த வர்க்ஷாப்பில் பங்கேற்ற பிறகு, புகைபிடிப்பதை ஒரேயடியாக விட்டு விடலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது என்றான்.  ஆனால் விட்டு விடுவதின் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்று அஞ்சினான்.  முதலில் காலேஜ் நண்பர்களுடன் புகை பிடிக்க ஆரம்பித்தபோது, வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும் என்று இருந்தது. வேலை கிடைத்ததும், அது தினமும், நாள் முழுவதும் என்று ஆகிவிட்டது. இப்போது வலுக் கட்டாயமாகப் புகைபிடிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டால், உடலில் என்னென்ன உபாதை நேரிடுமோ என அஞ்சினான்.

மேலும், புகைபிடிப்பதினால் உடல் மெலிந்து இருப்பதாகத் தகவல் ஏதோ படித்திருந்தான், விட்டால் பருமனாகி விடுவோமோ என்ற கவலை வேறு.  விடுவதா, வேண்டாமா என்ற இந்த சிக்கலில் அகப்பட்டு அதிகமான அளவில் புகைபிடிக்கிறானாம். புகைபிடிப்பதால் தனக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் கூறினான். தற்போது சட்டங்கள் அதிக பட்சம் புகைபிடிப்பதைத் தடை செய்வதால் தவிப்பு. மனைவியிடம் பழக்கத்தை மறைக்க முயன்று, பிடி பட்டு, பெரிய அளவில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இவற்றினால் தான் என்னை அணுகியதாகக் கூறினான்.

வர்க்ஷாப்பில தெளிவாக நான் ஸைக்காரிக் ஸோஷியல் வர்கர், எங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு முறைகள் உண்டு என்பதை வலியுறுத்தி இருந்தேன். அலுவலகத்தில் பார்ப்பதன் போதிலும் இங்குப் பகிருவதை வேறு யாரிடமும் பகிர மாட்டேன் என்று உறுதியளித்தேன். ஆனால் அதனால் க்ளையண்டிற்கோ, வேலைக்கோ, அலுவலகத்துக்கோ ஆபத்து என்றால் பகிர நேரிடும் என்பதையும் விளக்கினேன்.

ஜார்ஜ் புகைபிடிப்பதை அறவே விட்டு விடவேண்டும் என்றால், அதன் மூல காரணங்களையும், ஆரம்பத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் வலம் வரும் மனப்பான்மை, சுற்றம் சூழலைக் கண்டு கொண்டு புரிந்தால் தேவையான மாற்றங்கள் கொண்டு வர முடியும். அறிவதே விடுவதற்கான முதல் படிக்கட்டாகும்.

ஜார்ஜ் தன் தந்தையும் தன்னைப் போலவே குமாஸ்தா வேலையில் இருந்ததாகக் கூறினான். அவருடைய சம்பளம் வீட்டுச் செலவுக்கு போதும்-போதாது என்ற இழுபறி, அம்மா எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதில் தருவார் அப்பா. ஏதேதோ வேலை செய்து பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனால் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய ஐந்தாவது வகுப்பு வரை இப்படித் தான். அதன் பிறகு அம்மா சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்து, வீட்டில் சின்ன மெஸ் ஆரம்பித்து ஓரளவிற்கு குடும்பச் செலவைச் சமாளித்துக் கொண்டாள். பிற்காலத்தில் எப்போதும் அவள் ஜார்ஜிடம் சொல்வது “நீ குழந்தையா இருக்கறச்ச உன்னை கவனிச்சுக்க முடியல” என்று.

எங்குப் போனாலும் பஸ், இரயில் தான். வீட்டில் சைக்கிள், ஸ்கூட்டர் எல்லாம் கிடையாது. நண்பர்கள் எல்லாம் இவனை “நடை ராஜா” என அழைக்க, வெட்கத்தில் பதில் பேச மாட்டான். அவன் தம்பி ஜான் கூட அண்ணன் இப்படித் தலைகுனிந்து போவதைப் பார்த்து ஏசுவான். இதையெல்லாம் தன்னுடைய துரதிர்ஷ்டமாக நினைப்பான் ஜார்ஜ். மொத்தத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவமானம் என ஏற்றுக்கொண்டான்.

நண்பர்கள் கேலி செய்யும் போது நகத்தைக் கடித்துக் கொள்வான். வீட்டில் பெற்றோர் மனஸ்தாபம் வந்து சண்டை போடும் போதும் அதே தான். இதைப் போன்ற நிலைமைகள் பல பல.

இப்படிக் கடந்த காலத்திலும் தற்போதும்  வெவ்வேறு சூழ்நிலைகளில் உணர்ந்ததை, செய்வதை நினைவு படுத்தி, கவனித்து, எடுத்து ஆராய்ந்து புரிந்து கொள்ள ஜார்ஜிடம் பரிந்துரைத்தேன். செய்ய ஆரம்பித்தோம். தற்சமயம் தான் நகத்தைக் கடிக்கும் நேரங்களைக் கவனித்துக் குறித்து வைத்து, நிகழும் பொழுது, அதை எதை எதிர்த்து அல்ல தவிர்க்க முயற்சி என்பதை நினைவு படுத்தி அதைப் பற்றி உரையாடினோம். மேலும் ஒரு வாரத்திற்கு இதைத் தொடர்ந்து செய்து வந்தான்.

ஸெஷன்களில் இதைச் சிறுசிறுதாகப் பிரித்துப் பார்க்க, ஆராய, ஜார்ஜ் ஒன்றை ஒப்புக்கொண்டான், தான் இக்கட்டான சூழ்நிலையில் என்ன சொல்வதென்று, செய்வதென்று தவிக்கும் நிலையில் நகத்தைக் கடிக்கின்றான் என்று. அதாவது தான் உதவியற்ற நிலையிலோ, தனக்கு ஆதரவு ஏதுமில்லை என்ற நினைப்பிலோ உடனடியாக விரல் வாயிற்குப் போய்விடுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையை உறுதியாகக் கொண்டிருந்தான். இதன் மூல காரணத்தை அறிய மேலும் ஆராய்ந்தோம். ஜார்ஜ் தன் வெவ்வேறு வாழ்க்கை தருணங்களை நினைவூட்டிப் பேசினான். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது, தன் வீட்டு நிலமையைச் சிறுவயதிலிருந்தே தான் அவமானமாக நினைத்தோம் என்று. இதனால் தன்னைப் பற்றியும் அப்படியே நினைத்தான்.

படிப்பிலும் மதிப்பெண் தடுமாறிக் கிடைக்க, ஆசிரியர் கொடுத்த தண்டனையினால் நண்பர்கள் மத்தியில் மதிப்பீடு பாதிக்கப் பட்டது. ஏன் அப்படி? பொதுவாக நண்பர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லையே?. மேலும் யோசிக்கச் செய்தேன். பலன் கிட்டியது. தன் நண்பர்கள் தனக்கு நேர்ந்த தண்டனையைப் பற்றி, படிப்புப் புரியாததைப் பற்றிக் கேட்டாலும், ஜார்ஜ் பதில் அளிப்பதில்லை. அத்தனை கூச்சம்! நண்பர்கள் ஊக்குவிக்கும் வகையில் பேசினாலும் கூட, தன் குறைபாடுகளின் மேல் கவனம் செலுத்துகிறார்கள், குத்திக் காட்டுகிறார்கள், என நினைப்பான். கோபத்தை அடக்கி, காலுக்கு அகப்படும் கல்லை மிதித்து, அதை எட்டி உதைப்பான். இந்த நடத்தையைப் பரிசீலனை செய்து தற்போதைய புகைபிடிக்கும் பழக்கத்துக்கு இணைத்தோம். ஜார்ஜ் எப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கமுடியவில்லை என்றாலும் அப்போது நகத்தை, விரலைச் சூப்புவதைச் செய்வான். இவற்றின் இடத்தில் இப்போது சிகரெட்.

அன்நாளிலும் தன்னைப் பற்றி மிகத் தாழ்வாக நினைத்தான். இப்போதும் அதுவே தொடர்ந்தது.

பல சம்பவங்கள் விவரிக்க, அவைகளைப் புகைபிடிப்பதுடன் இணைத்து, அதில் சுயமரியாதைக்கு உள்ள பங்கைப் பற்றி ஆராயச் சொன்னேன். பெரிய பட்டியலைத் தீட்டினான். தான் எவ்வாறு ஒரு கணக்கைப் போடத் தடுமாறினாலும், அது தன் திறன்களை மீறியதாக எடுத்துக் கொண்டு முயற்சி செய்யாமல் நிறுத்தி விடுவான் என்று. உதவி கேட்டால் தன்னை மேலும் திறனற்றவன் என முடிவு செய்வார்களோ என அஞ்சி கேட்காமலே இருந்து விடுவானாம். வீட்டிலும் இவ்வாறே. ஸெஷன்களில் புரிந்தது, தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று. தெரியவில்லை, புரியவில்லை என்றால் உதவி கேட்க வேண்டும்.

அதற்கு ஒரு யுக்தி எடுத்துக் கொண்டோம். வரும் வாரத்தில் நாளுக்கு ஒரே ஒரு முறை, தெரியாத ஒன்றுக்கு யாரிடமேனும் உதவி கேட்க வேண்டும். முதல் வாரம் கேட்காமலிருந்தான் ஜார்ஜ். சந்தர்ப்பத்தை, அதில் ஏற்பட்ட தயக்கத்தை எடுத்துச் சொன்னான். எவ்வாறு கையாண்ட முடிந்திருக்கும் என நடித்துக் காட்டச் சொன்னேன். முதலில் வெட்கத்தில், கோபத்தில் தடுமாறிக் கொண்டே செய்தான். செய்ய முடியும், முடிகிறது என்று நான் நினைவூட்டிக் கொண்டே இருக்க, தைரியம் தொத்திக் கொண்டது. மறு வாரம் முயன்றதாகச் சொன்னான். தேவையுள்ள இடங்களில் அதிகரிக்கச் சொன்னேன். ருசி கண்ட பூனைபோலச் செய்தான்.

வீட்டுக்குள்ளேயும் துவக்கி, செய்து வந்தான். தன்னை குறைவாக எடை போட்டிருந்தது நாளடைவில் மறைந்தது.

இப்போது அவன் எத்தனை புகைபிடிக்கிறான் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். ஒரு வாரம் கவனித்து வரச் சொன்னேன். வந்ததும் ஜார்ஜ் சந்தோஷம் ததும்ப, குறைந்திருந்தது என்றான். இருந்தும் கை போகிறது சிகரெட் பக்கத்தில்.

ஜார்ஜ் இன்னும் சிகரெட் மட்டுமே தன் உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதாக எண்ணினான். யாரோ எப்போதோ இதைச் சொன்னதால் பிடிப்பதை விடவில்லையாம். இதைப் பற்றி அறிவியல், ஆராய்ச்சி வடிவத்தில் வந்த பல கட்டுரைகள், தகவல்களைப் படிக்கத் தந்தேன். தவறான எண்ணம் மாறியது.

இப்போது சிகரெட்டிற்குப் பதிலாக வேறொரு ஆரோக்கியமான வழிமுறை என்ன அமைப்பது என்று யோசிக்கச் சொன்னேன்.. ஜார்ஜ் தனக்குப் பிடித்த ஒரு விளையாட்டைத் தினம் ஆட வேண்டும் என்று முடிவானது. உடற்பயிற்சியாக மிதிவண்டி (cycling) தேர்ந்தெடுத்தான். இது மன உளைச்சல் போக்க ஆயுதமாகவும் அமைந்தது. எடை ஏறவில்லை. எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உணவு, மனச் சாந்தி, பயிற்சி எல்லாம் கைகொடுக்க, புகை பிடிப்பது மெதுவாகக் குறைந்து கொண்டே வந்தது.

விட்டால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விடுவானாம் ஜார்ஜ். சிறுவயதில் அடுத்த உணவு எப்போது வரும், போதுமான அளவு கிடைக்குமா எனத் தெரியாததால். இன்னும் அப்படி அள்ளிச் சாப்பிட்டு விடுவோம் என அஞ்சி, அதைத் தடுப்பதுக்கு சிகரெட்டை உபயோகிக்கப் பழகியிருந்தான்.

உளவியலில் சிகரெட் பிடிப்பவர்கள் உணவு ஆசை, வாய் ருசியைப் பூர்த்தி செய்ய முயலுவார்கள். அந்த வகைதான் ஜார்ஜ் நகத்தைக் கடிப்பதும். அந்த நகத்தைக் கடிக்கும் பழக்கத்தையும் விட முயல வேண்டும் என ஊக்குவித்தேன். ஜார்ஜ் தன் ஐந்து வயதில் கட்டைவிரலைச் சூப்புவது நின்றது என்று சொன்னான். அப்போது நகம் கடிக்கும் பழக்கம் ஆரம்பமானது என்றான். இந்தப் பழக்கம், புகைபிடித்தலின் முன்னோடி என்பது உளவியலில் ஃப்ராயிட் (Freud) என்பவரின் தியரீ. ஜார்ஜ் வாழ்வில் இதற்கு மற்றொரு காரணி, அவனுடைய அம்மாவின் அரவணைப்புக் குறைவு. வீட்டிற்குச் சம்பாத்தியம் உயர்த்தி வரப் பாடுபட்டதில், குழந்தையின் மேல் கவனம் சரிந்தது. அவளும் இப்படி ஆகும் என நினைக்கவில்லை.

அம்மாவிற்கு ஏக்கம் நகத்தைத் தேடச் செய்கிறது எனப் புரிந்து கொண்டான். ஏக்கம் வரும்போது பிடித்த பாட்டை முணுமுணுத்து, பல நாட்களாக அழைக்காத நண்பரை அழைத்து விசாரிப்பது, எனப் பட்டியல் போட்டுச் செய்வது ஒரு பக்கம் துவங்கியது.

மற்றொன்றும் ஸெஷன்களில் துவக்கினேன், அம்மாவிடம் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றி நினைவு கூறுதல். இதைத் துவங்கியதும், தந்தையையும் சேர்த்துக் கொள்வது அவசியம் என்று உணர்ந்தான். அவர் முதலில் சிடுசிடுவென இருந்தவர் நாளடைவில் பாசமாக மாறினார். பணக்கஷ்டம் எந்த அளவுக்கு அவருடைய மனதை வருடியது என்றதை அவர் பகிர, ஜார்ஜ் அவர் மேல் கொண்டிருந்த கோபம் உருகியது. மனம் விட்டுப் பேசினாலே பிரச்சினை தீரும்.

போட்டுக் கொள்ளும் உடையில் சிகரெட் வாடை ஒட்டுமொத்தமாக மறைந்தது. பற்களைப் பல் மருத்துவர் மூலம் முழுதாகச் சுத்தம் செய்தது மேலும் ஊக்குவித்தது. ஜார்ஜின் தைரியமும் வளர்ந்தது. அவனுடைய மேனேஜர் என்னிடம் ஜார்ஜ் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றதைச் சந்தோஷமாகப் பகிர்ந்தார்.

 

குவிகம் 100

 

நன்றி: சதுர்புஜன்

(https://bookday.in/kuvigam-100-book-by-kirubanandhan-bookreview-by-g-p-sathurbujan/)

 

Kuvigam 100 Book by Kirubanandhan Bookreview by G P Sathurbujan. கிருபானந்தனின் குவிகம் 100

தற்கால தமிழ் இலக்கிய பஃபே உணவைச் சுவைக்க வாருங்கள் !

நூல்களைப் படிக்கும் பழக்கம் அருகி விட்டது, அதுவும் தமிழ் நூல்களைப் படிப்பவர்களை பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும் என்றெல்லாம் சில காலம் முன்பு வரை தமிழ் பிடிக்கும், தமிழ் படிக்கும் ஆர்வம் கொண்ட தலைமுறையைச் சேர்ந்த நாமெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் இருந்தோம்.

“அவ்வளவுதான் இனி தமிழ்”, “நம்மோடு போய்விட்டது இந்தத் தமிழ் படிக்கும் தலைமுறை” என்றெல்லாம் முடிவுரை கூட எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில், தமிழ் படிப்பதில் ஒரு மறுமலர்ச்சியே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்று நாம் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் பிறந்திருக்கின்றன. புக் டே போன்ற மின்னிதழ்கள் மூலமும், பரவலாக்கப்பட்ட மின் புத்தகங்கள் மூலமும், இணையவழி தமிழ் போற்றும், தமிழ் வளர்க்கும் சந்திப்புகளின் மூலமும் தமிழ் வாசிப்பு பட்டுப் போகாமல், இன்று, மீண்டும் துளிர்த்து, தலைதூக்கி இருக்கிறது. தமிழை ஆராதிக்கும் நமக்கெல்லாம் இது ஓர் இனிமையான தருணம் அன்றோ !

தமிழிலே பலவித நூல்கள் அனுதினமும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. மின் வடிவத்திலும், அச்சு வடிவத்திலும் பல தரப்பட்ட நூல்கள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன. பழைய மரபு வழி பதிப்பாளர்களோடு போட்டி போட்டுக்கொண்டு பரிசோதனை முயற்சிப் பதிப்பாளர்களும் தமிழ் வாசகர்களுக்கு புதிய ஜன்னல்களைத் திறந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த புதிய வசந்தத்தை வாசகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

குவிகம் என்ற சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பு (கிருபானந்தன் மற்றும் சுந்தரராஜன் என்ற இரு இலக்கிய நண்பர்கள் தலைமையேற்று நடத்தி வரும் அமைப்பு ) தமிழ் இலக்கிய உலகில் புதிய தடம் பதித்து வருகிறது. இணைய வழி இலக்கிய சந்திப்புகள், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எழுத்துப் போட்டிகள், மின்னிதழ் வெளியீடு என்று பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்து கடந்த ஐந்து வருடங்களில் தனக்கென்று தனி இடத்தையும் நல்ல பெயரையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது குவிகம் அமைப்பு.

குவிகம் என்ற மாதாந்திர மின்னிதழ் கிட்டத்தட்ட 100 மாதங்களாக பல்வேறு சுவை மிக்க படைப்புகளைத் தாங்கி வெற்றிகரமாக வெளிவந்து வாசகர்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று இருக்கிறது. பல வளரும் எழுத்தாளர்களுக்கு இப்படி ஓர் எழுத்துக் களம் அமைத்துக் கொடுத்து அவர்கள் திறமைக்கு ஓர் அங்கீகாரம் அளித்து வருகிறது. குவிகம் லாப நோக்கமின்றி குறைந்த செலவில் தமிழ் நூல்களையும் பதிப்பித்து வருகின்றது.

சமீபத்தில் தன்னுடைய நூறாவது நூலான குவிகம் 100 என்ற நூலை குவிகம் வெளியிட்டுள்ளது வாசகர்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. 170 பக்கங்கள் ஓடும் இந்த குவிகம் 100 தற்காலத் தமிழ் இலக்கியத்தை சுவைத்துப் பார்க்க ஓர் அருமையான வாய்ப்பு.

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்ற மூன்று இலக்கிய வடிவத்தையும் தன்னுள்ளே தாங்கி வருகிறது குவிகம் 100. கொசுறாக ஒரு சிறிய நாடகமும் நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

குவிகம் 100 நூலில் நமக்கு காணக் கிடைக்கும் சுவையான படைப்புகளைப் பற்றி ஒரு பருந்துப் பார்வையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் கவிதைகள். ஏழு கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. கவிஞர் வைத்தீஸ்வரன், மீ.விசுவநாதன், “கவிஞாயிறு” துரை தனபாலன், தில்லை வேந்தன், கானப்ரியன், மதுவந்தி, தீபா மகேஷ் ஆகிய கவிஞர்களின் கவிதைகள் சுவைக்கத் தகுந்தன. மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் இவற்றில் சரியான விகிதத்தில் கலந்து படைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, அனைத்துக் கவிதைகளும் எளிமையான நடையில், பயிற்சி குறைந்த வாசகர்களும் புரிந்து ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனக்கு கூடுதல் சிறப்பாகத் தோன்றுகிறது. இந்த கவிதைகளிலிருந்து ஒரு சில வரிகளை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சுவைத்துப் பாருங்கள் :
எட்டும் கைகளுக்கு
எப்போதும் தப்பித்து காற்றில்
எட்டுப் போட்டுப் பழகும்
பட்டாம்பூச்சிகள் அங்கே ஏராளம்.
( “காலம் தாண்டி” – கவிஞர் வைத்தீஸ்வரன்)

கொள்ளை விலை சொல்லுகிற மால்கள் – எங்க
குலத்துக்கே குழிப்பறிக்கும் வேல்கள்
தள்ளுவண்டி காரனுங்க நாங்க – உங்க
தயவுலதான் நாளுதள்ளு ரோங்க.
( “தள்ளுவண்டிகாரனுங்க நாங்க” – மீ.விசுவநாதன்)

இல்லையினி முதியோரால் பயனே என்று
ஈன்றோரை விடுதிகளில் இடுதல் மடமை !
( “மடமையைக் கொளுத்துவோம் “ – “கவிஞாயிறு” துரை தனபாலன்)

ஒன்றுமறி யாதவர்கள் பெரிதென்றும் சிறிதென்றும்
உரைத்தலும் உலகத்தில் ஒவ்வொன்றும் ஒரு பயனே !
( “ஒவ்வொன்றும் ஒரு பயனே !” – தில்லைவேந்தன்)

உயர்ந்து கொண்டே போகிற
கூச்சலின் நீர் மட்டத்தில்
முழுமையாக
மூழ்கிப் போகின்றன
என் வார்த்தைகள்.
( “மானுடனும் அரக்கியும்” – கானப்ரியன்)

கரம் பற்றி தழல் சுற்றி
காலம் முழுவதும் உடன் வருவேனெனச்
சொன்னது கனவோ ?
( “ரத்து” – மதுவந்தி )

நீ இருக்கும் நேரங்களை விட
நீ இல்லாதபோது உன்னோடு
அதிகம் பேசுகிறேன்
( “உன்னுடனான என் உரையாடல்கள்” – தீபா மகேஷ்)

மேற்குறிப்பிட்ட கவிதை வரிகள் உங்களை வசீகரிக்கின்றனவா ? இந்தக் கவிதைகளைப் பற்றி இங்கே எழுதுவதை விட நீங்களே படித்து ரசிப்பதுதான் சரியாக இருக்கும்.

அடுத்தது கட்டுரைகளைப் பார்ப்போம். மொத்தம் 11 கட்டுரைகள். முனைவர் வ வே சு, இராய. செல்லப்பா, லதா ரகுநாதன், நாகேந்திர பாரதி, மாலதி சுவாமிநாதன், ஜி பி சதுர்புஜன், க.சிற்பி, தி. இரா. மீனா, எஸ் வி வேணுகோபாலன், எஸ் கௌரிசங்கர் மற்றும் முனைவர் தென்காசி கணேசன் ஆகிய இவர்களே இந்த கட்டுரைகளை வழங்கியிருக்கும் எழுத்தாளுமைகள். ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான ஒரு கருத்தைப் பேசுகிறது. பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தை வாசகனுக்கு இக்கட்டுரைகள் ஒரு பெரு விருந்தாக வழங்குகிறது.

“பாரதியும் பறவைகளும்” என்ற முனைவர் வ வே சு வின் கட்டுரை வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறது. பாரதியின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பறவைகளைப் பற்றி பேசும் இந்தக் கட்டுரை கற்பனையில் சிறகடித்துப் பறக்கிறது.

“இராய செல்லப்பாவின் “சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும்” எழுத்தாளருக்கு சரித்திர நாவல் மன்னர் சாண்டில்யனோடு ஏற்பட்ட நிஜ வாழ்வு அனுபவங்களை சுவையாக விவரிக்கிறது.

“கேள்விக்குறி ???” என்ற கட்டுரையில் லதா ரகுநாதன் முதியோருக்கு வங்கிகளின் வட்டி குறைப்பால் ஏற்பட்டுள்ள சவால்களைப் பற்றி ஆராய்கிறார்.

“ஆகாய அவஸ்தை” நாகேந்திர பாரதியின் பயணத்தைப் பற்றிய நகைச்சுவைக் கட்டுரை.

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் “எளிதான நற்செயல்” என்ற கட்டுரையில் மகிழ்ச்சியைப் பெருக்க சுலபமான உபாயம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார்.

ஜி.பி.சதுர்புஜனின் “வெண்பாக்களில் கிரேஸி மோகன்” நாம் பரவலாக அறியாத நகைச்சுவை மன்னனின் வாழ்க்கைப் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.
க.சிற்பி “புருஷ லட்சணம்” என்ற கட்டுரையில் வித்தியாசமான கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார்.

“காலம் கடந்து நிற்கும் வசனங்களும் வசனக்காரர்களும்” என்ற கட்டுரையில் தி. இரா. மீனா நாம் அறிந்திராத கன்னட வசனக்காரர்களைப் பற்றி புதிய விஷயங்களைப் பகிர்கிறார்.

எஸ் வி வேணுகோபாலனின் “பாவப்பட்ட பாட்டியும் பேரன்களும்” கதையா கட்டுரையா என்று இனம் பிரிக்க முடியாத ஒன்றாய், சுவையும் கருத்தும் கலந்த விருந்தாய் பரிமளிக்கிறது.

“பரிபூர்ண கலைஞர்” என்ற எஸ் கௌரிசங்கரின் கட்டுரை தமிழ் நாடக முடிசூடா மன்னர் பூர்ணம் விஸ்வநாதனை நினைவு கூர்கிறது.

முனைவர் தென்காசி கணேசன் “மழை” என்ற கட்டுரையில் நம்மை மகிழ்ச்சி மழையில் நனைய வைக்கிறார்.

ஆக, இந்தக் கட்டுரைக் கலவை மிகவும் ருசிகரமாகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இப்போது குவிகம் 100 ல் இடம்பெற்றுள்ள 15 சிறு கதைகளுக்கு வருவோம். வளவ. துரையன், பி ஆர்.கிரிஜா, ஜெ.பாஸ்கரன், அழகியசிங்கர், பத்மினி பட்டாபிராமன், சுரேஷ் ராஜகோபால், ஈஸ்வர், சிறகு இரவிச்சந்திரன், ஆர்க்கே, சந்திரமோகன், எஸ் எல் நாணு, மீனாக்ஷி பாலகணேஷ், யாரோ, பானுமதி. ந, ஹெச்.என்.ஹரிஹரன் ஆகியோர் இந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கருக்களையும் நடைகளையும் கொண்டவை. சிறிதும் அலுப்புத் தட்டாதவை.

வளவ துரையனின் “காற்று அசைத்து விடும்” கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அப்பாவைப் பற்றிப் பேசுகிறது. அனைவரும் ரசிக்கத்தக்கது.

பி. ஆர் கிரிஜாவின் “மூன்றாமவன்” “மூன்றாமவன் யார் ?” என்ற கேள்வியை நம்முள் எழுப்பி தன் சுவையான நடையில் இறுதியில் நம்மை முறுவலிக்கச் செய்கிறது.

ஜெ.பாஸ்கரனின் “அழகு” “அழகு என்றால் என்ன ?” என்று நம்மையே கேள்வி கேட்டு நம்மை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

அழகியசிங்கரின் “மௌனம் காத்தது” அலுவலகத்தில் நடக்கும் ஆண்-பெண் சந்திப்புகளில் நம்மை சுவாரசியமாக ஈடுபட வைக்கிறது.

பத்மினி பட்டாபிராமனின் “விரட்டல் எளிது” பூனையையும் காரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. நீங்கள்தான் படித்து ரசிக்க வேண்டும்.

சுரேஷ் ராஜகோபாலனின் “அத்தையம்மா” சிறுகதை என்ற போர்வையில் வரும் சிறிய நாடகம்.

சிறகு இரவிச்சந்திரனின் “இரண்டு மக்கு” விறுவிறு நடையில் வித்தியாசமான சிறுகதை. “நாம் மக்கா இல்லையா ?” என்ற கேள்வியை நம்மையும் இறுதியில் கேட்க வைக்கிறது.

ஆர்க்கேயின் “ அக்ர சேனரின் மணிமகுடம் “ ஒரு சரித்திரச் சிறுகதை. சித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது.

சந்திரமோகனின் “இப்படியும் சில மனிதர்கள்” வாழ்க்கையின் மிகக் கசப்பான தருணங்களைக் காட்டுகிறது. ஆனால் நிதர்சனமான கசப்பு.

எஸ் எல் நாணுவின் “பிராயச்சித்தம்” இந்தத் தொகுதியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. கதையில் கோபம் கொப்பளிக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமம்.

மீனாக்ஷி பாலகணேஷின் “ பயக்குறை வாழ்நாள்” பழைய கதையா, புதிய கதையா என நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. வித்தியாசமான நடை.

“யாரோ” என்ற புனைப்பெயரில் யாரோ எழுதிய “காற்றில் ஒரு காதல்” எனும் சிறுகதை நம்மை ஔரங்கசீப்பின் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. மறக்க முடியாத காதல் கதை.

பானுமதி.ந எழுதிய “புகையும் தீ” குந்தியைப் பற்றிய வித்தியாசமான புனைவு.

ஹெச்.என்.ஹரிஹரனின் “அப்பாவின் சைக்கிள்” மறைந்து வரும் ஒரு காலத்தையும் மறக்கமுடியாத அந்நாளைய மனிதர்களையும் நம் மனக்கண்முன் நிறுத்துகிறது.

மொத்தத்தில் குவிகம் 100 நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சோடை போகாத சிறுகதைகள். வாசகனை ஏமாற்றாத ரகம்.
இறுதியாக நாடகத்தை மறந்து விடக் கூடாது என்ற நல்ல நினைப்போடு எஸ் சுந்தரராஜனின் “அலெக்ஸி” நாடகத்தை நமக்காக வழங்கியிருக்கிறார் நூலின் தொகுப்பாளர் கிருபானந்தன் அவர்கள்.

அலெக்ஸி நம்மை அமெரிக்காவுக்கு அழைத்துப் போகிறது. புதிய உலகத்தை நமக்குத் திறந்து காட்டுகிறது.
குவிகம் 100 என்ற இந்த தொகுப்பு நூல் வாசகர்கள் தவற விடக்கூடாத நூல். அவசியம் படியுங்கள்.

குவிகம் 100
தொகுப்பு : கிருபானந்தன்
குவிகம் பதிப்பகம் ( முதல் பதிப்பு : நவம்பர் 2021 )
பக்கம் 172
விலை ரூபாய் 120
விமர்சகர் : ஜி.பி.சதுர்புஜன் : ஓர் அறிமுகம்
*இயற்பெயர் : பாஸ்கர் எஸ். ஐயர்.

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

முதுமைக்கு நரை அழகு | முதுமைக்கு நரை அழகு. Vairamuthu Specia… | Karthi |  Flickr

நரையின்றி வாழ….

தெருவில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியைக் கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தேன்…. “ஏ பெரிசு, பாத்துப் போ.. அங்க ஒரு எலெக்ட்ரிக் ஒயரு அறுந்து வுழுந்து கெடக்குது” என்ற அபாயக் குரல் கேட்டு சுற்று முற்றும் பெரிசைத் தேடினேன்… ‘அட, என்னைத்தான் ..’  நமக்கு வயதாகிவிட்டதை, சில சமயங்களில் பிறர் சொல்லித்தான் நமக்குத் தெரிகிறது! தலையில் வழுக்கை, நரை, முகத்தின் சுருக்கங்கள் போன்றவை ஒருவரின் வயதைக் காட்டிவிடக்கூடும்! 

‘Ageing gracefully’  – அழகாக, பச்சை இலை நிறம் மாறி பழுப்பாவதைப்போல – முதுமையை எதிர்கொள்வது ஒரு கலை. நரைதிரை என்பது ஒருவரின் வாழ்வானுபவத்தையும், முதிர்ச்சியையும் காட்டும் மாற்றங்கள்தானே!

புறநானூறு – சாலமன் பாப்பையா அவர்களின் புதிய வரிசை வகையைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கவலையின்மைக்குக் காரணங்கள் சிலவற்றைக் கூறும் பிசிராந்தையார் பாடல் ஒன்று – கோப்பெருஞ்சோழனுடன் பெருகிய நட்பினை ஒரு தவமாகப் போற்றி வாழ்ந்த அதே பிசிராந்தையார்தான் – கண்ணில் பட்டது. பழுத்த புலவர், நன்னெறி உணர்த்திய சீலர். அன்பே வடிவானவர். அதனால், முதுமையிலும் இளமை குன்றாமல் நரையின்றி வாழ்ந்தவர் பிசிராந்தையார்! அதற்கென்ன காரணம்? அவரே கூறும் பாடலைப் பார்க்கும் முன், நரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

தலை முடி நரைப்பது – வெள்ளை அல்லது வெள்ளி நிறத்தில் மாறுவது – பொதுவாக வயதானவர்களுக்கு வருவது. முப்பது வயதிற்கு மேல் நரை தோன்றுவது இயற்கையே; வயது ஏற ஏற, வெள்ளை முடிகளும் அதிகமாகும். எல்லா உறுப்புகளையும் போல், முடிக்காலில் உள்ள ‘மெலனோசைட்’ களும் – முடிக்குக் கறுப்பு நிறமளிக்கும் நிறமிகளைத் தயாரிக்கும் செல்கள் – முதுமையில் தங்கள் செயல்பாடுகளில் குறைந்து விடுவதால், கறுப்பு நிறம் குறைந்து, முடிகள் நரைத்து விடுகின்றன. நரை முடி ஒருவரின் வயதை மட்டுமன்றி, அவரின் அனுபவ ஞானத்தையும் காட்டுவதாக அமைகின்றது. இளமையாகக் காட்டிக்கொள்ள, தலையில் கருப்புச் சாயம் பூசிக்கொள்வது தேவையில்லாதது மட்டுமல்ல, சில நேரங்களில் அபாயமானதும் கூட. 

‘இளநரை’ – சிலருக்கு இளம் வயதிலேயே, முப்பது வயதுக்கும் முன்னமேயே தோன்றும் நரை பெரும்பாலும் மரபணு சார்ந்து, குடும்பங்களில் வருவது. சில நேரங்களில் உணவில் சத்துக் குறைபாடுகளினால் – வைட்டமின் B12, B6, D, E, A மற்றும் தாதுப் பொருட்கள் (minerals) Zinc, Iron, Magnesium, Selenium, Copper – நரை தோன்றக்கூடும். தைராய்டு சுரப்பியின் குறைபாடுகள், ஆட்டோ இம்யூன் எனப்படும் அழற்சி வகை வியாதிகள் இவற்றில் நரை தோன்றக்கூடும். 

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. 2020 ல் சில எலிகளுக்கு ஸ்ட்ரெஸ் கொடுத்து (எப்படி செய்திருப்பார்கள்?) சோதித்தபோது, அவற்றின் முடிகள் நரைப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இது மனிதர்களுக்கும் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  ஆனாலும் ஸ்ட்ரெஸ், முடி நரைப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு, அவர்களது மன அழுத்தத்தினால், விரைவில் நரை தோன்றுவதைப் பார்க்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாதவர்களுக்கு ஏற்படும் நரைக்கு, குடும்ப பாரம்பரியத்தைத்தான் காரணமாகச் சொல்ல வேண்டியதிருக்கிறது. இருபத்தைந்து வயதிலேயே நரைத்து விட்ட தலையைக் காட்டி, “இது என் அப்பா வழிச் சொத்து” என்று சொல்லும் என் உறவினர் ஒருவரின் நகைச்சுவையில் விஞ்ஞானபூர்வமான உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை!

புகை பிடித்தல்  விரைவாக நரை வருவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

உணவுச்சத்து குறைபாடுகள் தவிர்த்து, மற்ற நரைகளுக்குத் தீர்வு இல்லை என்பது வருத்தமான செய்தி. தலைக்குச் சாயம் பூசுவது ஓரளவுக்குத் தோற்றத்தை மாற்றும். சினிமாக்களில் வயதானவர்கள் தங்கள் இளமைக்கால ஃப்ளாஷ்பாக் காட்சிகளில் கருப்பு ‘விக்’ வைத்து வரும்போது நகைப்புக்கிடமாகிவிடும் – வாழ்க்கையில் இதைத் தவிர்ப்பது நல்லது!

80% முடி நரைத்து விட்டால், தலைக்குச் சாயம் பூசுவதை நிறுத்திவிடலாம் என்கிறது ஒரு மருத்துவக் குறிப்பு. 

தினசரிகளில் வரும் விளம்பரங்களையும், அதிக செலவில் செய்யப்படும் சிகிச்சை முறைகளையும் தவிர்ப்பது நல்லது. அவற்றால் நரை முடி குறைகிறதோ இல்லையோ, முடிகள் வலுவிழந்து, வழுக்கை விழும் வாய்ப்புகள் ‘பளிச்’ சென்று தெரிகின்றன!

கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என சிலவற்றைச் செய்து பார்க்கலாம் – மன அழுத்தம் அதிகமில்லாத, அமைதியான வாழ்க்கை, நல்ல சத்துள்ள உணவு, புகை பிடித்தலைத் தவிர்த்தல், தலையலங்காரத்திற்கென ப்ளீச்சிங், முடிகளை நேராக்குதல் (Hair straitening) போன்றவற்றைத் தவிர்த்தல், உணவில் கரும்பு ஜீஸ், நெல்லிக்காய், இஞ்சி (முடி கருப்பாகி, முகம் மாறினால் கம்பெனி பொறுப்பல்ல!) போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுதல் போன்றவை உதவக்கூடும்.

முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருவேப்பிலை, அஷ்வகந்தா (Indian ginseng) போன்றவையும் உதவக்கூடும். இரவில் தலைக்குத் தேங்காய் எண்ணைய் தேய்த்துக்கொள்வது, நரை தோன்றுவதைத் தள்ளிப்போட உதவும் – முடிகளின் புரதம் பாதுகாக்கப் படுகிறது. 

கை வைத்தியமாகப் பல மூலிகைகள், பூக்கள், இலைகள் எல்லாம் சேர்த்து தயாரிக்கப் படும் எண்ணைகளினால் முடி கறுப்பாகிறதோ இல்லையோ, அவற்றின் வாசம் பலரை பத்தடி வரைத் தள்ளி நிறுத்தி வைக்கும்!

இப்போது பிசிராந்தையார் சொல்லும் பாடலைப் பார்க்கலாம்.

“யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்

  யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,

  மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்;

  யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்

  அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை

  ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்

  சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.

(திணை: பொதுவியல் துறை; பொருண்மொழிக் காஞ்சி. புலவர்: பிசிராந்தையார் – புறம் 191)

வயதான போதிலும் முடி நரைக்காமைக்குக் காரணங்களாக பிசிராந்தையார் சொல்வது:

மனைவியும், மக்களும் மேன்மையான குணங்களை உடையவர்களாகத் திகழ வேண்டும். வீட்டில் பணி செய்வோர் (இளையர்) நாம் நினைப்பதையே அவர்களும் விரும்பிச் செய்ய வேண்டும். அரசும் (மன்னனும்) தவறானவற்றைச் செய்யாமல் மக்களைக் காக்க வேண்டும். ஊரில் நல்ல குணங்களால் நிறைந்து, பணிய வேண்டிய மேன் மக்களிடம் பணிந்து, ஐம்புலன்களும் தீய வழி செல்லாமல் அடங்கிய சான்றோர் பலர் வாழ் வேண்டும்.  இவையெல்லாம் எனக்கிருப்பதால் எனக்கு வயதானாலும் நரை இல்லை என்கிறார் புலவர். “கவலையின்மைதான் காரணம்” என்று தெளிவாகச் சொல்கிறார்.

எல்லாம் சரி, நம்ம ஊரில் இப்போது நிறைய பேருக்கு நரை முடியிருக்கிறதே ( சாயப்பூச்சைத் தவிர்த்து!) என்பவர்கள், பிசிராந்தையார் கூறியுள்ள காரணங்களில் எவையெல்லாம் இன்று நம்மிடையே இல்லை என்று ஆராயலாம். முடிவில் முடியைப் பிய்த்துக்கொண்டு வழுக்கையானால் என்னையோ, பிசிராந்தையாரையோ கடிந்து கொள்ளாதீர்கள்! வழுக்கையாகிவிட்டால், நரை பற்றிய கவலை இல்லைதானே!

(Ref: 1. தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் – தொகு: இரா. மோகன். சாகித்திய அகாதமி.

         2. புறநானூறு – புதிய வரிசை வகை – சாலமன் பாப்பையா. கவிதா பப்ளிகேஷன் சென்னை. 600017.)