Monthly Archives: April 2018
சரித்திரம் பேசுகிறது – யாரோ
காளிதாசன்-ரகுவம்சம் -2
‘தோள் கண்டார் தோளே கண்டார்” என்றார் கம்பர்.
‘இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டுகளித்து – முடியாமையால் அதனால் பிற உறுப்புக்களின் அழகைப்பார்க்க இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவர் கண்ட வண்ணம் இருந்தார்கள்’ –என்கிறார்!
அதே நிலைதான் நமக்கும்.
ரகுவம்சம் எழுதத்தொடங்கி அதை விட்டுப் போக மனம் வரவில்லை.
மேலும் அது இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் அதைத் தொடர்வோம்.
உடனடியாகக் கதைக்குச் செல்வோம்.
ரகு
திலீபனுக்குப் பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரைச் சூட்டினார்கள்.
தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும் பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தைத் தருவதற்கு முன்னர்… அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு அறிவுறுத்தினார்.
அஸ்வமேத யாகமும் துவங்கியது. அஸ்வமேத யாகக் குதிரைக்குக் காவலாகச் செல்ல, திலீபன் தன் மகன் ரகுவை நியமித்தான். அந்த யாகத்தைக் கண்டு ‘பொறாமை’ கொண்ட தேவலோக அதிபதியான இந்திரன் அந்த யாகக் குதிரையைகக் கவர்ந்து சென்றுவிட்டான்.
இப்படிப் பல முறை ‘பொறாமை’ கொண்டு அநீதி செய்த இந்திரன் எந்த தெய்வ நீதி மன்றத்திலும் தண்டனை அடைந்ததாகத் தெரியவில்லை – இந்நாளின் குற்றம் செய்த அரசியல்வாதிபோல!
யாகம் துவங்கியது. 99 குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு யாகம் ஒருவாரியாக நடந்து முடிந்த நிலையில் இருந்தது. நூறாவது குதிரையை அழைத்து வர ரகுவை அழைத்தபோதுதான் … தாம் காவலுக்கு வந்திருந்த யாகக் குதிரையைக் காணோம் என்கின்ற உண்மையை ரகுவும் உணர்ந்தான்.
இந்திரனைப் பார்த்து ரகு கூறினான்:
இந்திரனே! யாகங்கள் எங்கு நடந்தாலும் அதன் அவிர்பாகத்தில் முதல் பாகத்தைப் பெற்றுக் கொள்பவராக உள்ளவர் நீங்கள் என்றல்லவா முனிவர்கள் கூறுவார்கள். அப்படி இருக்கையில் என்னுடைய தந்தை செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் நீங்கள் குதிரையைக் களவாடிக் கொண்டுபோகலாமோ? யாகங்களைக் காப்பவரே யாகத்தைத் தடுத்து நிறுத்துபவராக இருக்கலாமா?
இந்திரன் கூறலானான் (வில்லன் நம்பியார் பேசுவதாகச் சற்று கற்பனை செய்யவும்):
ராஜகுமாரனே! உன்னுடைய தந்தை செய்யும் இந்த யாகமானது நடந்து முடிந்தால் அது என்னுடைய செல்வாக்கை மறைத்து விடும். ஆகவே நான் என்னுடைய நிலைமையில் இருந்து இதைத் தடுத்தேன்.
பதவி ஆசை தேவர்களுக்கும் உண்டு போலும்!
சற்றும் பயமில்லாத ரகு கூறினான்:
இந்திரனே, நீ அந்தக் குதிரையைக் கவர்ந்து செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். நீ வீரனாக இருந்தால் என்னுடன் போரிட்டு என்னை வென்று குதிரையைக் கொண்டுசெல்
இருவரின் படைகளும் சளைக்காமல் கடுமையாக யுத்தம் நடந்தது. இருவரும் ஒருவரைஒருவர் பயங்கரமாகத் தாக்கிக்கொண்டார்கள். ரகு மீண்டும் மீண்டும் விதவிதமான அம்புகளை ஏவி இந்திரனை நிலைகுலைய வைத்தான். இந்திரன் பவனி வந்த ஐராவத யானையே கதிகலங்கும் வண்ணம் போர் தொடர்ந்தது. இந்திரனும் ரகுவை ரத்தமயமாக்கிக் கீழே விழவைத்தான். ஆனாலும் சளைக்காத ரகு யுத்தத்தைத் தொடர்ந்தவண்ணம் இருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது. இந்திரனும் களைத்துப் போனான்.
ரகு ஒரு வீரன் மட்டுமல்ல..
தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்தான்..
இந்திரனை நோக்கிக் கூறினான்:
தேவலோக அதிபதியே, இன்னும் உன்னால் என் குதிரையைக் கவர்ந்து கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா ? என்னைக் கொன்றால் ஒழிய உன்னால் குதிரையை எடுத்துச் செல்ல முடியாது. எனக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். என் தந்தை செய்யும் யாகத்தின் பலனை அவர் அடைய வேண்டும். அதற்கு அந்தக் குதிரை தேவை. அதைக் கொடுக்காமல் உன்னைத் தேவலோகத்துக்குச் செல்ல விடமாட்டேன். ஆனால் அதற்கு மாற்றாக இதற்கொரு உபாயம் உள்ளது. அந்தக் குதிரையை விட மனமில்லை என்றால் என்னுடைய தந்தை செய்யும் யாகத்தின் முழுப் பலனையும் அவர் அடையட்டும் என சத்தியம் செய்து வாக்குக் கொடுத்து விட்டுச் செல். நானும் திரும்பிச் சென்றுவிடுவேன். நீயும் யுத்தம் செய்யத் தேவை இல்லை.
அதைக் கேட்ட இந்திரனும் இனிமேலும் தன்னால் சண்டையைத் தொடர்ந்துகொண்டு ரகுவைத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்தான். அவன் கேட்ட வரத்தை அப்படியே தருவதாக வாக்குறுதி தந்து சத்தியமும் செய்தபின் தேவலோகத்துக்குத் திரும்பினான்.
ரகுவும் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான். ரணகாயத்தோடு வந்த மகனை ஆரத் தழுவி வரவேற்றான் திலீபன். நடந்த அனைத்தையும் கேட்டறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதான். மீதி இருந்த யாகத்தைத் தொடர்ந்தான். யாகம் நல்லமுறையில் நடந்து முடிந்ததும் – சில நாட்கள் பொறுத்து ரகுவிடம் தனது ராஜ்யத்தைத் தந்துவிட்டுத் தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி இந்த உலகை விட்டு மறைந்தான்.
ரகு எனும் ரகுராமன் ராஜ்ய பதவியை ஏற்றுக் கொண்டு அரச பதவியில் அமர்ந்ததும், அவன் மன்னன் ஆக வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் மற்றவர்களும் மனதார மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் -அக்கம்பக்கத்தில் இருந்த அரசர்கள் பொறாமை கொண்டார்கள்.ரகு நான்கு திசைகளையும் நோக்கிப் பெரும் படையுடன் சென்றான்.
வங்க மன்னர்கள் வீழ்ந்தார்கள், கலிங்க மன்னர்கள் சாய்ந்தார்கள். மன்னனின் படையினர் மகேந்திர மலையைத் தாண்டிச் செல்ல, அங்கிருந்த மன்னர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தார்கள். ஆனால் மன்னர்களைச் சிறை பிடித்தபின் அந்தந்த மன்னர்கள் தாமே தமது செல்வங்களை ரகுராமனுக்குத் தந்து விட அந்த மன்னர்களை விடுவித்துவிட்டு அவர்கள் தந்த செல்வத்தை மட்டுமே தன் நாட்டுக்குக் கொண்டுவந்தான்.
சமுத்திரகுப்தன் பின்னாளில் இதே மாதிரி செய்தான் அல்லவா? ரகுவைப் பின்பற்றியோ என்னவோ?
தென் பகுதியில் காவேரிக் கரையைத்தாண்டி அனைவரையும் வென்று வந்தான் மன்னன் ரகுராமன்.
பாரசீகம் முதல் காஷ்மீர்வரை அனைத்து மன்னர்கள், மற்றும் நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து மன்னர்களையும் தோற்கடித்த பின்னர் நாடு திரும்பினான்!
அவன் சென்ற இடங்களெல்லாம் வெற்றி!
அவன் வழியில் வந்த எந்த மன்னரும் அவனிடம் தோற்றனர்!
அவன் வழி தனி வழி!
அவன் டிரான்சோக்சியானா (இந்நாளில் Uzbekistan) படையெடுத்துக் கண்டது வெற்றி! மத்திய ஆசியாவில் படையெடுத்துக் கோர யுத்தம் செய்தான்! தோற்றவர் முகங்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டது!
மன்னர்களின் கொலைவெறியைத்தான் என்னவென்று சொல்வது!
காம்போஜ நாடு (இந்நாளில் ஈரான்)… சென்றவுடனே –அந்த மன்னன் அடிபணிந்தான்.
இங்கே காளிதாசனது வர்ணனையைக் காணலாம்:
ரகுவின் திக்விஜயம்:
அன்னப் பறவைக் கூட்டங்களிலும், விண்மீன்களிலும், நீரில் மலர்ந்த ஆம்பல் பூக்களிலும் அவனுடைய புகழ்ச் செல்வமே பரவிக் கிடந்தது போலும்!
கரும்பின் அடர்ந்த நிழலில் அமர்ந்து நெற்பயிர் காக்கும் வேடுவப் பெண்கள், காவலனான ரகுவின் நற்புகழை குமரப் பருவம் தொடங்கிப் பாடினர்.
ஒளிமிகும் அகஸ்திய நட்சத்திரத்தின் உதயத்தால் நீர் தெளிந்தது.
ரகுவின் எழுச்சியால், அவமானத்தை எதிர்நோக்கிய எதிரிகளின் மனம் கலங்கியது.
மதங்கொண்டு, நதிக் கரைகளை முட்டி இடிக்கின்ற, பெருந்திமிள் படைத்த காளைகள், ரகுவின் பராக்கிரமத்தையே அனுசரித்து அழகாக விளையாடிக் காட்டின.
நதிகளை ஆழமற்றதாக்கி, வழிகளின் சேற்றை உலர்த்தி, ரகுவின் உற்சாகத்திற்கும் முன்னாகச் சென்று அவனை யுத்த யாத்திரைக்குத் தூண்டியது போலும் சரத்காலம்!
மந்தர மலையை இட்டதால் பாற்கடலின் அலைகள் தளும்பித் தெளிப்பதுபோல, நகர மூதாட்டிகள் அவன் மீது பொரிகளைத் தூவினர்.
தேர்கள் கிளப்பிய புழுதியால் ஆகாயம் மண்ணாயிற்று.
மேகங்களை ஒத்த யானைகள் மண்மீது நடந்து சென்று பூமியை ஆகாயமாக்கின.
சிவனாரின் செஞ்சடையினின்று நழுவும் கங்கை நதியை கீழ்க்கடலை நோக்கி அழைத்துச் செல்லும் பகீரதன் போல், ரகு தன் சேனைக் கடலைக் கிழக்கு நோக்கி அழைத்துச் சென்றான்.
செல்வம் துறந்த, பதவி இழந்த, தோல்வியடைந்த மன்னர்கள் நிரம்பிய ரகுவின் வழி, தெளிவானதாக இருந்தது – பழங்கள் உதிர்ந்து, வேர்கள் பறிக்கப்பட்டு, மரங்கள் முறிந்த யானையின் பாதைபோல.
நாற்றாங்காலில் பெயர்த்து நடப்பட்டு, தங்கள் வேரடியில் நிற்கும் தாமரை வரையில் வணங்கித் தாழும் நெற்கதிர்கள்போல, போரில் தோற்றபின் தங்கள் அரசபதவிகளைப் பெற்ற வங்கதேச மன்னர்கள், ரகுவின் மலரடி வணங்கி அவனுக்குச் செல்வமளித்து வளர்த்தனர்.
மகேந்திர மன்னனை சிறைப்பிடித்து, பின்னர் விடுவித்தான். அவனிடமிருந்த திருவை (செல்வத்தை) மட்டும் கவர்ந்துகொண்டான்; நிலமகளைத் (பூமியை) தொடவில்லை.
யானையின் மதநீர் வாசனை பெருக, ரகுவின் சேனை களியாட்டமிட்ட காவேரி, கணவனான சமுத்திரராஜனின் சந்தேகத்திற்கு உள்ளானாள்.
வெகுதூரம் கடந்துவந்த அந்த வெற்றிவீரனின் சேனை, கிளிகள் திரியும் மிளகுக் காடுகள் கொண்ட மலயகிரியின் சரிவுகளில் தங்கிற்று. அங்கு, குதிரைகள் நசுக்கிய ஏலச்செடிகளின் காய்ந்த துகள்கள் மேலே கிளம்பி, ஒத்த மணங்கொண்ட மதநீர் சொரியும் யானைகளின் கன்னங்களில் சென்று படிந்தன. கால் சங்கிலிகளை அறுக்கும் கம்பீரமான யானைகள், கட்டிய கயிற்றைக்கூட நழுவவிடாமல், சந்தன மரக் காட்டில் பாம்புகள் சுற்றிய பள்ளங்களில் நின்றன. தெற்கு திசையில் செல்கையில் கதிரவனின் ஒளிகூட சற்று குறைந்து விடுகிறது. ஆனால் அத்திக்கிலும், ரகுவின் பிரதாபத்தைப் பாண்டியர்கள் தாங்கவில்லை.
தக்ஷிணாயன காலத்தில் (ஆடி – தை வரை) தெற்கு திசையில் தோன்றும் சூரியன் சற்று ஒளி குன்றி இருப்பது இயல்பு. இங்கே கவி அதை சாதுர்யமாக, வீரம் மிகுந்த பாண்டியர்களுக்கு அஞ்சி சூரியனும் (பாண்டியர்கள் சந்திர குலம்), தன் ஒளியை குறைந்தவனாக இருக்கிறான்; ஆனால் அந்த பாண்டியரே ரகுவின் போர் திறனைத் தாங்கவில்லை என்கிறார்!
தாங்கள் சேர்த்துவைத்த புகழைக் கொடுப்பதுபோல், தாமிரபரணி சேரும் கடல் தந்த முத்துக் குவியலை ரகுவின் அடிபணிந்து அவர்கள் அளித்தனர்.
ரகுவின் சேனை எழுப்பிய புழுதி, பயத்தினால் தங்கள் அணிகளைத் துறந்த கேரள நாட்டு மகளிரின் முன்னுச்சிக் கேசங்களுக்கு நறுமணப் பொடியாயிற்று.
முரளா நதியில் வீசிய காற்று கொணர்ந்த தாழம்பூவின் மகரந்தம் படைவீரர்களின் மேலுடையில் படிந்து முயற்சியின்றிக் கிடைத்த ஆடை-வாசனைப் பொடியாயிற்று.
கவசமணிந்த குதிரைகள் எழுப்பிய பேரொலி, அங்கு காற்றிலசையும் பெரும் பனங்காட்டு மரங்களின் சலசலப்பையும் தோற்கடிப்பதாயிருந்தது.
குதிரைகளைமட்டுமே கொண்டு ரகு இமய மலைமீது ஏறுகையில், அங்கு கிளம்பிய தாதுப் பொடிகளால் அந்தச் சிகரங்கள் வளர்வதுபோலத் தோன்றின.
சரள மரங்களில் கட்டிய யானைகளின் கழுத்துச் சங்கிலியில் பிரதிபலித்த ஒளிவீசும் செடிகள் தலைவனான ரகுவிற்கு இரவிலேயே எண்ணையில்லா விளக்குகளாக வழிகாட்டின.
இந்த வர்ணனைகளில் மயங்கிக் கிடக்கும் வாசகர்களே!
எழுவீர்!
அல்லது..
சரித்திரம் பேசுகிறது என்று சொல்லிவிட்டு இது என்ன கதை சொல்கிறாய் என்று கோபம் கொள்ளும் வாசகர்களே!
நதிநீர் தான் எங்கு போகிறது என்று தெரியாமல் போவதுபோல் நமது கதை போகிறது!
(காளிதாசன் வர்ணனை நமக்கும் சற்று ஒட்டிக்கொண்டதோ!)
ஆக… காளிதாசனிடம் நாம் வசமாய் மாட்டிக்கொண்டோம்!
சரி…ரகுவம்சக் கதை தொடரட்டும்!
(சரித்திரம் இன்னும் நிறைய பேசும்)
காற்றே வாழி !- தில்லை வேந்தன்

“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்
நான் ஸ்கூல் கவுன்சிலர் பொறுப்பில், மாதாமாதம் வொர்க் ஷாப் செய்வது வழக்கம். ஒருமுறை அது முடிந்தவுடன், அதில் கலந்துகொண்ட ஒருவர் தன் பக்கத்து வீட்டுக் குழந்தையைப் பற்றி விவரித்தார். அவருக்கு, வொர்க் ஷாப்பில் சொல்லப் பட்ட அனைத்தும் மார்டீன் பற்றியே நினைவூட்டியது என்றார். குறிப்பாக நான் ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பதாலும், அவனை என்னிடம் அழைத்து வரலாமா என்று கேட்டார். மகிழ்வுடன் ஒப்புக் கொண்டேன்.
அவரே மார்டீனை அழைத்து வந்தார். மார்டீன் ஏழாவது படித்துக்கொண்டிருந்தான். அவன் அப்பா மைக்கேலுக்கு வெளி நாட்டுத் துறையில் வேலை. கடந்த மூன்று வருடமாக, முனைவர் படிப்பில் மும்முரமாக இருந்தார். பெரும்பாலும் வெளிநாடு சென்று விடுவதால், மாதத்தில் ஒரு வாரம் வீட்டில் இருப்பார். பல விதமான வேலைகள் அவருக்காகக் காத்திருக்கும். அவற்றை முடிப்பதற்குள் நேரம் ஓடியே போய்விடும். மார்டீன் அப்பாவுடன் இதைச் செய்யவேண்டும், அதைச் சொல்ல வேண்டும் என்ற பட்டியல் இட்டிருப்பான். பெரும்பாலும் அப்படியே நின்று விடும், ஏமாற்றமாகத் தோன்றும்.
அவன் அம்மா ரோஸ், மொழிபெயர்ப்பு செய்பவர். எப்பொழுது வீட்டில் இருப்பாள் என்று சொல்ல முடியாது. அதனால் தன் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்வான்.
அக்கா ஜாய்க்கு, சிறு வயதிலிருந்தே அவர்கள் தாத்தா-பாட்டி வீட்டில் தங்குவது பிடித்திருந்தது. இரண்டு தாத்தாக்களும் பக்கத்து ஊரில், மும்பாய்-பூனேயில் இருப்பதும் ஒரு தூண்டலாயிற்று. அவள் ஆறாவது வகுப்பிற்கு மாறும்பொழுது, அவர்களுடன் இருக்க ஆசைப்பட்டாள், அனுமதித்தார்கள். வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு வருவாள். மார்டீன் அவளை விருந்தாளியாகப் பார்த்தான்.
வீட்டில், அம்மாவும் பிள்ளையும்தான். கடந்த 3-4 வருடமாக ரோஸ் தன் சுக-துக்கங்களை மார்ட்டீனிடமே பகிர்ந்து கொண்டாள். அதிகமாகக் கோபப்படுவாள், அழவும் செய்வாளாம்.
கடந்த நான்கு வருடமாக மார்டீனுக்கு படிப்பில் கவனம் சிதற ஆரம்பித்தது. கை விரல்களை அசைக்க வேண்டும்போல் தோன்றி, தாளம் போட்டுக்கொண்டு, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பானாம். இப்படி, கை-கால் நடனமாடிக்கொண்டு இருப்பதால், பக்கத்தில் உட்காரும் மாணவர்களின் மேஜை, நாற்காலியும் சேர்ந்து அசைவதால், அவர்களின் கவனமும் பாதிக்கப்பட்டது. எங்கோ பார்வை ஒடுவதை ஆசிரியர்கள் கவனிக்கக் கண்டிப்பு அதிகரித்தது. ஆனால், புதிதாக ஒன்றைப் பார்த்தாலோ, கேட்டாலோ கவனம் செலுத்த முடிகிறது என்றும் உணர்ந்தான்.
இதுவெல்லாம் என்ன, ஏன் மற்றவர்களுக்கு இல்லை என்று யோசித்தான். மார்டீன் வகுப்பில், “நிபுணர்” என்ற பெயர் கொண்ட மோகனிடம் கேட்டான். மோகன் கணினியில் தேடி, அவனுக்கு ஏ.டி.எச்.டி. (ADHD) என்றான். மோகன் சொன்னால், சரியாக இருக்கும் என்று அம்மாவிடம் பகிர்ந்தான்.
ரோஸ் பதறினாள். மார்ட்டீனை அவனுடைய பீடியாட்ரீஷியனிடம் அழைத்துச் சென்றாள். அவர் தனக்குத் தெரிந்த ஸைக்கியாட்ரிஸ்டிடம் அனுப்பி வைத்தார்.
மார்டீன் அச்சு அசலாக வர்ணித்ததை வைத்து, சில குறிப்புகளைக் கூறி, அவனுக்கு “மைல்ட் டு மாடரெட் (Mild to Moderate) ஏ.டி.எச்.டி” என்று அதற்கு மாத்திரை கொடுத்து மூன்று மாதத்திற்குப் பிறகு வரச்சொன்னார். என் வொர்க் ஷாப்பிற்கு வந்தவருக்கு மார்டீனிடம் அதிக மாற்றம் தெரியவில்லை என்று தோன்றியது. அதனால்தான் என்னிடம் அழைத்து வர முடிவெடுத்தார்.
மறு நாள், ரோஸுடன் மார்டீன் வந்தான். அவன் வியர்வை வாடையுடன், ஒரு ரூபிக்ஸ் க்யூபை திருகியபடி வந்தான். ரோஸ், கரும்பச்சை நூல் பட்டு சேலையில் பளிச்சென்று இருந்தாள். அவளே தன்னைப்பற்றி முதலில் பகிர்ந்தாள், தான் ஒரு புதுமைப்பெண் என்பதால் எல்லாத் தேவைகளையும் தானே பார்த்துக் கொள்வதாக. அதேபோல் தன் இரு பிள்ளைகளும் என்றாள்.
சமீபத்தில், மார்டீனை பற்றிய புகார்கள் வந்தது அவளுக்குச் சலிப்பாக இருந்தது. இருந்தும், மார்டீன் படிப்பில் கவனம் சரிவதைப் பெரிதாக எண்ணவில்லை. எங்கே அதைப் பெரிதுபடுத்தினால், மார்டீன் ஹாஸ்டலில் சேர்க்கப்படுவானோ என்ற அச்சம் என்றாள். மைக்கேல், இவனை அப்படிச் சேர்த்துவிடலாம் என்று சொன்னதனால் பயம்.
தன் வேலையின் நேரத்தாலும், தோல் நோய் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பசங்களை வெளியே விளையாட விட்டதில்லை. கிரிக்கெட், ஃபுட்பால் எல்லாம் கணினியில்தான். இதனாலேயே கணினிப் பழக்கம் அதிகரித்தது.
மார்டீன் (கவனித்தான்,) தான் எதைச் சொன்னாலும் ரோஸ் ஏதாவது சுருக் என்று சொல்லிவிடுவாள். அம்மாவின் கோபம், அழுகையின்போது என்ன செய்வதென்று தெரியாமல், தான் சமாளிக்கும் விதங்களை விவரித்தான். தன்னுடைய விரலால் நகத்தை அழுத்திக் கொள்வானாம். அறைக்குள் போய் சுவரிலோ, தரையிலோ கைகளால், காலால் ஓங்கி அடிப்பானாம். கண்ணீர் வந்தால், தண்ணீரைக் கண்களில் வாரி வாரி அடித்துக் கொள்வான். சிலவற்றை வகுப்பிலும் செய்வதாகச் சொன்னான். இப்படிச் செய்ததும் கை கால் நடனம் அதிகரிப்பதைக் கவனித்தான் என்றும் பகிர்ந்தான்.
படிப்பில் ஆர்வம் சரிய, கணினி நேரம் கூடியது. வீட்டில் எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை. மைக்கேல், ரோஸ் எந்த விதமான கட்டுப்பாடுகளும் போடவில்லை, எதற்கும் குறிப்பிட்ட நேரம் காலம் கிடையாது. முகநூல் ஃப்ரெண்டஸ் வழிகாட்டி, ஆறுதல் சொல்லுபவரும்கூட.
இதை எல்லாம் மார்டீன் விவரித்த முழு நேரமும், ஆடாமல், அசையாமல் இருந்தான். அதை மார்டீனிடம் பகிர்ந்தேன். அவனால் நம்ப முடியவில்லை. அடுத்த முறை இதை மார்டீன் கவனத்திற்குக் கொண்டுவர, அவன் ஸ்தம்பித்துப் போனான். மார்டீன் முழு கவனிப்பை ஆட்கொள்ளும் விஷயங்கள் இருந்துவிட்டால், கை-கால் நடனம் கப்-சிப்!
இதைத் தொடர்ந்து, மார்டீன், ரோஸ், இருவரிடமும் சொன்னேன், என்னுடன் ஒத்துழைத்தால், பல வழிகளை அமைத்து, மாற்றங்களைச் செய்யலாம் என்று. என் தனிப்பட்ட அபிப்ராயம், கேள்விகளுக்கு பதில்கள் உண்டு. சவால்களைச் சந்திக்கப் பல வழிகள் உண்டு. தேடினால், கண்டிப்பாகக் கிடைக்கும்! ஸைக்கியாட்ரிஸ்டை பார்ப்பது, மாத்திரை சாப்பிடுவது அவர்களின் முடிவாக விட்டுவிட்டேன்.
மார்ட்டீன், என்னைப் பார்க்கும் முதல் நாள் தன் ஏ.டி.எச்.டி. பற்றிக் கேட்டான், “நான் ஏ.டி.எச்.டியா?” அதற்கு நான் பதிலளித்தேன், “புத்தகத்துக்கு அட்டைபோட்டு, என்ன பாடம் எனக் குறிப்பிட்டு, அதற்கு ஒரு லேபில் ஒட்டி விடுகிறோம். அதிலிருந்து, ஒவ்வொரு முறையும் அந்த லேபிலைப் பார்த்து, புத்தகத்தை உபயோகிப்போம். அதேபோல், “நான் ஏ.டி.எச்.டி” என்றால், அப்படியே நடந்துகொள்வோம். லேபில், சிகிச்சைக்கு அவசியமே தவிர, லேபிலை அணிந்துகொள்ள அவசியமே இல்லை. உன் அடையாளம், “மார்டீன் ஏ.டி.எச்.டி” அல்ல” என்றேன்.
தன் கை-கால் நடனத்தைத் கவனித்து, சொன்னபடி, குறித்துவந்தான். பாடங்கள் புரியாமல் குழம்பிய நிலையில் இருந்தால் தோன்றுகிறது என்று அறிந்தான். இதற்காக, வகுப்பில் ஒரு தனி அட்டையில் கவனம் இருப்பதை குறித்துக்கொள்ளச் சொன்னேன். ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் “எந்த அளவிற்கு: கவனித்தேன், எழுதினேன், புரிந்தது,” என்பதையும் குறித்துவரச் சொன்னேன். தான் எல்லாம் செய்து விட்டால், அதற்கே தனக்கு சிரித்த ஸ்மைலீ போட்டுக் கொண்டான். தன்னைக் கண்காணித்தது, பொறுப்பை வளரச் செய்தது.
ரோஸ் தன்னிடம் பகிர்ந்து கொள்வதைத் தாங்கிக் கொள்ளவே சத்தமான பாட்டு கேட்பதாகச் சொன்னான் மார்டீன். சத்தமிட்டு, மிக வேகமாகப் பாடும் பாட்டைக் கேட்டால் கை கால் நடனம் அதிகமாகிறது என்றான்.
மார்ட்டீனுக்கு எல்லாவற்றையும் முகநூலில் தேடிப் பார்ப்பது பழக்கம். அவனிடம் இந்த வகைப் பாட்டு கேட்பதின் விளைவுகள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளைப்பற்றிச் சொன்னேன், முகநூலின் தொடர்பையும் கொடுத்தேன். அதிலிருந்து புரிந்துகொண்டான், சத்தம் அதிகரிக்க, ஆறுதலுக்குப் பதிலாக பதட்டம்போல் தோன்றுகிறது. சத்தமாய் பாட்டைக் கேட்பதே, தன் அம்மா அவனிடம் பகிர்வதில் வரும் தவிப்பினால்தான் என்றான். “ம்யூஸிக் தெரபீ” பற்றிய விவரங்களை எடுத்துச் சொன்னேன். அவனுக்கு குடமல்லுர் ஜனார்த்தனின் ஃப்ளுட்டை அறிமுகம் செய்தேன். குறிப்பாக, வீணையைக் கேட்கப் பரிந்துரைத்தேன். அதற்கு நம்மை சாந்தப் படுத்தும் தன்மை உள்ளது என்பது பதிவானதே.
ரோஸையும் பார்ப்பதால் அவளிடம் மார்டீனிடம் பகிர்வதைப்பற்றிக் கலந்துரையாடினோம். சமீபத்தில், ரோஸுக்கு, தான் தனிமையாக இருப்பதைப்போல் தோன்ற, கோபமும், அழுகையும் வருவதாகச் சொன்னாள். சில தனிப்பட்ட விஷயங்களை, யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது மனபாரத்தை அதிகரிக்க, கசப்பினால் கோபம் வந்தது. மாற்றிப் பகிர்ந்துகொள்வதற்குப் பல பாதையை யோசித்தோம். மைக்கேலுடன் ஈமெயிலில், டைரியில் எழுதுவது என்று ஆரம்பித்தாள். மார்டீனிடம் ரோஸ் தன் குமுறல்களைக் கொட்டுவதைக் குறைக்க, மார்டீன் கேட்கும் இசையும் இதமானதாக மாறியது.
வீட்டில் கண்டிப்பும் -சுதந்திரமும் சரி செய்யவேண்டிய அவசியத்தை ரோஸிடம் உணர்த்தினேன். கண்டிப்பே இல்லாமல் முழு சுதந்திரம் கொடுப்பதாக எண்ணிச் செய்யும்பொழுது, வளரும் குழந்தைகளுக்குக் குழம்பிய நிலை வளரும் என்று புரியவைத்து, ரோஸுடன், பிறகு மைக்கேலுடன் கலந்து ஆலோசித்தேன். இருவரும், புரிந்து கொண்டார்கள், கட்டுப்பாடுகள் அமைத்து, எல்லைக் கோடுகள் நிர்ணயிப்பது தேவை என்று. இதிலிருந்தே நல்லது -கெட்டது தேர்வு செய்யவும் கற்றுக்கொள்வார்கள் என்பதைப் பல உதாரணம் கொடுத்துப் புரியவைத்தேன்.
தன் பங்கிற்கு மார்டீன், தன்னைக் கண்காணிப்பதைத் தொடர்ந்து செய்துவர, ஆசிரியயையின் பங்கும் ஆரம்பமானது. அவனின் கவனம் சிதறினால், குறிப்பிட்ட சிலவற்றைச் செய்ய, சில வழிமுறைகள் சொன்னேன். உதாரணத்திற்கு, யாருக்கும் தெரியாத வகையாக, வகுப்பில் தேவையானதை எடுத்து வரச் சொல்லுவது, ஆசிரியர்,கையில் உள்ள பொருளைக் கீழே போடுவது.
மார்டீன் போன்றவர்களுக்கு பாட க்குறிப்புகளை, செய்யவேண்டிய வேலைகளை, சின்னச் சின்னதாகப் பிரித்து, எளிதான வார்த்தைகளில் சொல்லவேண்டும். இப்படி, பாகங்களாகப் பிரித்துச் சொன்னால், அவர்களுக்கு உட்கொள்ள, சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு தானாக நினைவூட்டிச் செய்ய சுலபமாகும். வீட்டிலும், வகுப்பிலும், பட்டியலிட்டு, வேலையை முடித்துவிடுவார்கள். “நம்மாலும் செய்ய முடிகிறது”, “முடிக்க முடிகிறது” என்பது ஊக்குவிக்கும்!
மார்ட்டீன் வகுப்புக்கு வரும் ஆசிரியர்களுக்கு “லர்ணிங் ஸ்டைல்” முறையை அறிமுகப்படுத்தினேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் கற்பதுண்டு. நம்மில் சிலர் கேட்டு, சிலர் பார்த்து, சிலர் தொட்டு-செய்து என்ற பல விதங்கள் உள்ளன. மார்ட்டீனின் “லர்ணிங் ஸ்டைல்” தொட்டுச் செய்வதாக இருந்தது. அவனுக்கு மட்டுமின்றி முழு வகுப்புக்கும் இந்த முறையை யோசித்தோம். இந்த வடிவத்தை அமைத்ததும், மார்ட்டீனுடன் மற்ற மாணவர்களின் பங்களிப்பு, கற்றலும் மேலோங்கியது. இதன் விளைவு, ஆசிரியர்களால் “லர்ணிங் ஸ்டைல்” முறை வரவேற்கப்பட்டது.
மைக்கேல், ரோஸ் இருவருமே, பிள்ளைகள் செய்யும் தவறுகளை, குறைந்த மதிப்பெண்களை எல்லோரிடமும் பகிரங்கமாகச் சொல்வதுண்டு. மார்ட்டீன் வெட்கப்பட்டான். இதை, பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். மாறாக, பிள்ளைகள் சரியாகச் செய்வதைச் சொல்லச் சொன்னேன். பலர் முன் சொன்னால், ஊக்குவிக்கும்! குறைகளை, தனிமையில் எடுத்துச் சொல்லப் பரிந்துரைத்தேன். பெற்றோர் இதைப் பின்பற்ற, மார்டீனின் தன்னம்பிக்கை அதிகரித்தது.
மார்ட்டீனுக்கு, மிகக் குறைவாக நண்பர்கள் இருந்தார்கள். அதைச் சரி செய்ய, வெளியே விளையாடிப் பழக, நண்பர்களுடன் சைக்கிள், கிரிக்கட், நீச்சல், ஜாக்கிங், பேட்மிண்டன் என்று ஆரம்பித்தான்.
பகிர்ந்து கொள்வதை அவள் குறைக்க, தன் அம்மா மேல் பிரியம் அதிகரித்ததாகச் சொன்னான். ஜாய்யுடன் தொடர்பு கொள்ள விருப்பப்பட்டான், மின்னஞ்சல் பரிமாற்றம் தொடங்கியது.
மதிப்பெண்கள் ஐந்து-பத்தாக உயர்ந்தது. கவனம் சிதறாமல் எதை எடுத்தாலும் செய்து முடிக்க முடிந்தது. மற்றவரிடம் பழகுவது, பேசுவது, உதவி செய்வதில் பல மடங்கு முன்னேறினான்.
டிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்
இந்தக் குறும்படத்தின் முடிவு உங்களுக்குத் தெரியும்…
இருந்தாலும் எப்படி முடிக்கிறார்கள் என்று பார்க்கத் தூண்டும் படம்…
……………………ரசியுங்கள் ……………………
ஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு
ஏ கே ராமானுஜம் (1929-1993) உலக அளவில் அறியப்பட்ட ஒரு பெரிய மொழி வல்லுனர்
பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்.
தமிழ் சங்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
அவர் எழுதிய ஒரு கட்டுரைதான்: 300 ராமாயண வடிவங்கள், ஐந்து உதாரணங்கள், மூன்று எண்ணங்கள்
அது டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் 2006 இல் மாணவர்களுக்குப் பாடமாக இருந்தது.
அது இந்து மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் அதனால் அது பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் 2008இல் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.
மேல் முறையீட்டுக்காக உயர் நீதி மன்றத்துக்கு 2011இல் சென்றது.
ஒரு குழு அமைத்து அதன் பரிந்துரைப்படி பல்கலைக்கழகம் தீர்மானிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
அறிஞர் குழு (3:1) அந்தக் கட்டுரையை நீக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது.
பல்கலைக்கழகம், குழுவின் அறிக்கைக்கு எதிராக அந்தப் பாடத்தைப் பாடத்திட்டதிலிருந்து நீக்கியது.
தீவிரவாத இந்துத்துவத்தின் கட்டளையால் இது நீக்கப்பட்டது என்று நூற்றுக் கணக்கான பேராசிரியர்கள் போராடினர்.
வேறு ஒரு அமைப்பு புத்தகப் பதிப்பாளர் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரஸுக்கு அந்தக் கட்டுரையை நீக்கி பிரசுரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. பதிப்பகமும் அதை ஏற்று அந்தக் கட்டுரையின்றி மறு பதிப்பு வெளியிட்டது.
ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரஸ் , தனது புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையை எடுத்தது தவறு, இது எழுத்தாளர்களின் உரிமையை மீறும் விதம் என்று அறிஞர் பலர் அதை குரல் கொடுக்க இந்தப்பிரச்சினை உலக அளவிலும் சென்றது.
அவர்களின் கருத்தை ஏற்ற பதிப்பகம் அடுத்த பதிப்பில் அந்தக் கட்டுரையையும் அச்சிடுவதாக உறுதி கூறிப் பிரச்சினையை முடித்தது.
அதெல்லாம் சரி.. அவர் கட்டுரையில் என்னதான் எழுதியிருந்தது என்று கேட்கிறீர்களா?
பி பி சி செய்தியைப் பாருங்கள்:
பேராசிரியர் ஒருவர் இராமாயணத்தில் வரும் ‘அகல்யையின் சாபம்’ என்ற கிளைக் கதையில் வரும் சம்பவம் தொடர்பாக ஏ கே ராமானுஜத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
வால்மீகி இராமாயணத்தில் அகல்யை தானே விரும்பி இந்திரனை அழைத்ததாகவும், அதன்பின் இந்திரனின் உடல் ஆயிரம் பெண் குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் இது வேறு சில இராமாயணங்களில் ஆயிரம் கண்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏ கே ராமானுஜன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பெண் பேராசிரியர்கள் இது போன்ற விடயங்களை வகுப்பறையில் பேசுவது தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று கருதுவதாகவும் அ. மாரியப்பன் தெரிவித்தார்.
ஆனால் இந்த கட்டுரையை நீக்கக் கூடாது என்று தெரிவித்த பேராசிரியர் ஒருவர், பெரும்பான்மை முடிவு என்ற பெயரில் பெரும்பான்மயினர் ஆதரிக்கும் சிந்தாந்தங்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தால் ஆதரிக்கப்படும் என்ற தவறான செய்தியை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளதாக சாடியுள்ளார்.
ஏ கே ராமானுஜம் இராமாயணம் குறித்து எழுதிய சிறப்பான கட்டுரை டில்லி மத்தியப் பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் வெட்ககரமான செய்தி என்று சாகித்ய அக்காடமி விருது பெற்றுள்ள முன்னணி கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்தி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்
இரண்டு பேர் கரிய புகைக் கூண்டு வழியாக வேலையை முடித்துவிட்டு இறங்கி வருகிறார்கள்.. இறங்கி வந்தவர்களில் ஒருவன் முகம் மட்டும் கரிபடிந்து அழுக்காக இருக்கிறது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருக்கிறது.
குரு கேட்டார்.. இரண்டு பேர்களில் யார் முகத்தைக் கழுவிக் கொள்வார்கள்?
சிஷ்யன் சொன்னான் – சந்தேகமென்ன? அழுக்கு முகக்காரன்தான் முகங் கழுவிக் கொள்வான்.
குரு – இல்லை..யோசித்துப் பார்த்தாயா? அழுக்கு முகக்காரன் சுத்தமான முகக்காரனைப் பார்ப்பான். ஓ! தன்னுடைய முகமும் அப்படித்தான் சுத்தமாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்வான்.முகம் கழுவிக் கொள்ளமாட்டான்.
சிஷ்யன் — ஆமாம் அதுதான் சரி இப்போது தெரிந்து கொண்டேன்.
குரு – ஆனால்…சிஷ்யா….அது எப்படி சரியாகும்? தவறு … இப்படி யோசித்துப் பாரேன்!..
சுத்தமான முகமுடையவன் அழுக்கு முகக்காரனைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வான். அதனால் தன் முகத்தைக் கழுவிக் கொள்வான். சுத்தமான முகமுடையவன் தன் முகத்தைக் கழுவிக் கொள்வதால் அழுக்கு முகக்காரனும் தன் முகத்தைக் கழுவிக் கொள்வான்,
ஆக இரண்டு பேரும் முகம் கழுவிக் கொள்வார்கள் அல்லவா?
சிஷ்யன் – ஆமாம் குருவே! நான் இப்படி சிந்திக்கத் தவறிவிட்டேன் அதுதான் சரியான விடை.
குரு – இல்லை சிஷ்யா! அதுவும் ஏன் தவறாக இருக்கக் கூடாது? இப்படி வேறுவிதமாக யோசித்துப் பார்.
இரண்டு பேருமே முகம் கழுவிக் கொள்ள மாட்டார்கள்!!
சிஷ்யன் – குருவே என்ன சொல்லுகிறீர்கள்?
குரு – ஆமாம்…அழுக்கான முகக்காரன் சுத்தமான முகத்தைப் பார்த்து தன் முகமும் சுத்தமாக இருப்பதாக எண்ணிக் கொள்வான். அதனால் கழுவிக் கொள்ள மாட்டான். இதைப் பார்த்த சுத்தமான முகம் உடையவன் அழுக்கு முகம் கொண்டவன் கழுவிக் கொள்ளாததால் தானும் ஏன் கழுவிக் கொள்ள வேண்டும் என்று சும்மா இருந்து விட லாம் இல்லையா?
சிஷ்யன் – ஆ..ஹா..ஹா.. அதுதான் மனித சுபாவம்! குருவே இதுதான் மிகச் சரியான விடை. நான் இப்போது அறிந்து கொண்டுவிட்டேன்.
குரு—— அட சிஷ்யனே!! எதையுமே நீயாக யோசிக்கமாட்டாயா? எத்தனை நாள் நான் உனக்காக யோசிக்க வேண்டும். ..
சிஷ்யன் – மன்னிக்க வேண்டும் குருவே யோசித்துப் பார்த்தபோது நீங்கள் கடைசியாகச் சொன்ன பதில் மிகச் சரியானதாக நினைக்கிறேன்.
குரு– அட மடையனே! அதுவும் சரியான விடை அல்ல… தவறு.
இரண்டு பேர் கரிய புகைக் கூண்டிலிருந்து பணியை முடித்துவிட்டுக் கீழே இறங்குகிறார்கள். அதெப்படி ஒருவன் முகம் மட்டும் கரிபடாமல் சுத்தமாக இருக்க முடியும்? அவர்களுக்கு அது தெரியாத விவரமா?..”
சிஷ்யன் — ………ஓ……………………………………………
( ஒரு சீன நாடோடிக் கதை }
கவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி
மயில் தோகையில்
மடிந்த நிறங்கள் போல்
அவள் கன்னங்களில்
சிவப்புப் பருக்கள்.
தன் கண்ணீர்
உலகறிய
இடியைத் துணை
அழைத்ததோ மேகங்கள்
சுவாசிக்கும்
சிசுவிடம்
வாசிக்கச் சொல்கிறது
இன்றைய கல்வி
மனிதப் புகைவண்டியில்
புகையுடன் போகிறது
உயிரும்!!
கிராம சிறுவரின்
விளையாட்டு மைதானம்
வற்றிய ஏரி…
ஐயப்பன் திருப்புகழ் – சு ரவி
வேறொரு தாள வரிசையில் ஐயப்பன் திருப்புகழை ரவி அவர்கள் ஜனவரி 2017 குவிகம் இதழில் பாடியிருந்தார்.
இப்போது புதுப்பாடல் !
தனதான தந்த தனதானதந்த
தனதான தந்த தனதான
இருவேளை உண்டு வெறுமேதிரிந்து
பயனேதுமின்றி உழல்வேனை
இருள்மாயை என்ற திரையேவிழுந்து
இகபோகம் என்று திரிவேனை
அருளாசி பொங்க மகவாய் உகந்து
மறுவாழ்வு தந்த குருநாதா!
அழகான பம்பை நதியோரம் அன்று
சிசுவாய்மலர்ந்த சிவபாலா!
மருளாத சிந்தை ஒருபோதும் உன்னை
மறவாத நெஞ்சம் அருள்வாயே!
மலையே பிளந்து வடிவேல் எறிந்த
மலைவாசி கந்தன் இளையோனே!
விரைசூழும் வண்ண மலர்மாலை தங்கு
விரிமார்பிலங்க அமர்வோனே!
விரிவான் விளங்க ஒளிர்ஜோதி என்று
மலைமேல் எழுந்த பெருமாளே!
திருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்
நளன் கதை ‘நைடதம்’ என்ற பெயரில் மகாபாரத்தில் வந்த ஒரு நீண்ட பெருங்கதை!
கதைச்சுருக்கம்:
மகாபாரதத்தில் கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டை விட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அவர்களைப் பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இந் நூல் அமைந்துள்ளது.
நிடத நாட்டின் மன்னன் நளன். விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தி. இருவரும் அழகில், அறிவில், ஆற்றலில் மேம்பட்டவர்கள். ஒரு பேசும் அன்னப்பறவை ஒருவரைப்பற்றி மற்றவரிடம் எடுத்துச் சொல்ல நள தமயந்தி இருவரிடையே பார்க்காமலேயே காதல் பிறக்கிறது.
தமயந்திக்கு நடக்கும் சுயம்வரத்திற்கு நளன் செல்கிறான்.
தமயந்தியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற இந்திரன், வருணன், வாயு, எமன் போன்ற தேவர்களும் அவளைத் திருமணம் செய்ய சுயம்வரத்திற்கு வருகிறார்கள்.
அவளுக்கு நளன் மீதிருக்கும் காதலை அறிந்து தேவர்கள் நளன் உருவிலேயே நிற்கிறார்கள்.
தன் அறிவின் திறத்தால் தான் விரும்பிய உண்மை நளனையே தமயந்தி மணக்கிறாள்.
தேவர்களும் அவர்களை வாழ்த்திச் செல்லுகிறார்கள்.
ஆனால் சுயம்வரத்திற்குத் தாமதமாக வந்த கலிபுருஷன் ( சனி பகவானின் மாற்று உருவம்) நள தமயந்தி மீது கோபம் கொண்டு அவர்களைப் பிரித்தே தீருவேன் என்று சபதம் எடுத்தான்.. அதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்தான்.
நளன் தமயந்திக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.
அப்போது ஒருமுறை பூஜைக்குக் காலைக் கழுவாமல் சென்ற நளனின் கால் வழியாக சனிபகவான் பிடித்து அவனுள் புகுந்து கொள்கிறான்.
தொடங்குகிறது காதலர்களுக்கிடையே ஏழரை ஆண்டு சோக நிகழ்வுகள்.
நளன் சூதாடி தன் நாட்டை இழந்து, குழந்தைகளை விதர்ப்ப நாட்டுக்கு அனுப்பிவிட்டு, தமயந்தியுடன் கானகம் செல்கிறான்.
தமயந்தி நலமாக வாழட்டும் என்று அவளை விட்டுப் பிரிந்து செல்கிறான்.
கார்க்கோடகன் என்ற பாம்பு நெருப்பிலிருந்து தன்னைக் காப்பாற்றிய நளனைத் தீண்டுகிறது.
விகாரமான குட்டை மனிதனாக நளன் மாறுகிறான்.
வேறொரு மன்னனிடம் தேரோட்டியாகவும் சமையல்காரனாகவும் பணிபுரிகிறான்.
தந்தை நாட்டில் இருக்கும் தமயந்தி நளனைக் கண்டுபிடிக்க நாலாபக்கமும் ஆட்களை அனுப்புகிறாள்.
தேரோட்டியாக இருப்பவன் நளனோ என்ற ஐயம் தமயந்திக்கு வருகிறது.
அவனை வரவழைக்கத் தனக்கு மறு சுயம்வரம் என்று அவனிருக்கும் நாட்டுக்கு மட்டும் சேதி அனுப்புகிறாள்.
மன்னனுக்காகத் தேரை ஓட்டி நளனும் வருகிறான்.
சனி அவனை விட்டு விலகும் காலமும் வருகிறது.
கார்க்கோடகன் கொடுத்த சட்டையை அணிந்து அழகே உருவான நளனாக மாறுகிறான்..
மீண்டும் சூதாடி நாட்டை வென்று தமயந்தி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
இதை ஸ்ரீ ஹர்ஷர் என்பவர் சமஸ்கிருதத்தில் “நைடதம்” என்ற பெயரில் தனிக் காவியமாக எழுதினார்.
தமிழில் அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன் “நைடதம்” என்ற பெயரில் நளன் கதையை எழுதினான்.
புகழேந்தி என்ற புலவர் அழகிய வெண்பாவால் “நளவெண்பா” என்ற பெயரில் எழுதினார்.
சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 405 வெண்பாக்கள் உள்ளன.
அழகு, ஆன்மீகம், இன்பம், துன்பம் அனைத்தும் கொண்ட நளதமயந்தி கதையை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மார்ச் 31 அன்று இலக்கியச் சிந்தனை – குவிகம் இலக்கியவாசல் சார்பாக நளசரிதம் என்ற தலைப்பில் அருமையாக எடுத்துரைத்தார்.
அதே தலைப்பில் அவர் புத்தகமும் வெளியிட்டிருப்பது சிறப்பான அம்சம்.
அவரது மற்ற நூல்கள் :
நீலக்குறிஞ்சி -ஜெய் சீதாராமன்
ஷகீலா ப்ராஜெக்ட் ப்ராக்ரஸ் மேனேஜ்மெண்ட் மீட்டிங் முடிந்து அவளுடைய கேபினுக்குள் நுழைந்தாள். ப்ராஜெக்ட் திட்டவட்டமாகக் கால வரையறைக்குள் முடிக்கத் தீர்மானம் ஆகியது. நீட்சிக்குக் கொஞ்சமும் இடமில்லை. ப்ராஜெக்ட் லைவ் டெஸ்டிங்க் ஸக்ஸஸ்ஃபுல்லாக முடிவடையும் தறுவாயில் ஆனந்தி எழுதிய ரொடீனில் ஒரு பெரிய பக். இப்போது பார்த்து புரோக்ராம் டீமிலிலிருந்து ஆனந்தி ரிஸைன் செய்து விட்டாள். அதன் விளைவு என்ன? போர்டில் வரையப்பட்டிருந்த ‘குறிக்கோள் தீவிர பாதை ஆய்வு’ படத்தில் அந்த புரோக்ராமின் முக்கியத்தை ஆராய்ந்தபோது அந்த புரோக்ராம் டெவலப் ஆகும் அதே சமயத்தில் டீமின் மற்ற அத்துணை பேரும் வெவ்வேறு விதத்தில் பங்கை நிறைவேற்ற நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. எனவே இந்த இழப்பைச் சரி செய்து ஈடு கட்டாவிட்டால் டார்கெட் டைம் நீடிப்பது உறுதி. இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்க இருக்கும் அந்த வேலை தொடங்கப்பட்டே ஆக வேண்டும். இல்லாவிடில் மற்ற விளைவுகளையும் சந்திக்க நேரிட்டு நமக்கு ப்ளாக் மார்க் கிடைப்பது நிச்சயம்.. வேறு ஒரு நம்பகமான நபரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். கன்சல்டன்ஸி நபரை அமர்த்தினால் பட்ஜெட்டுக்குக் கேடு. தனி ப்ஃரீலான்ஸ் நபரைத்தான் வேலையில் சேர்க்க வேண்டும். இந்தக் குறுகிய காலத்தில் அதுவும் ஐந்தே நாட்களில் நமக்குத் தேவையான க்வாலிஃபிகேஷன் எக்ஸ்பீரியென்ஸுடன் சேர்ந்து கூடிய நபரை எப்படித் தேடுவது? வரும் நபருக்கு ஸிஸ்டம் நாலெட்ஜ், ரொடீன் நாலெட்ஜ் கொடுத்து ரெடிபண்ணி, கோடிங் டைம், டெஸ்டிங் டைம் போக லைவ் டெஸ்டிங் பண்ணி சக்ஸஸாக முடிக்க இதைவிட டைட்டான சிசுவேஷன் இருக்கமுடியாது என்றெல்லாம் எண்ணி கவலையில் ஆழ்ந்தாள். ரிஸ்ட் வாட்ச்சைப் பார்த்து மணி மாலை 7 என்பதை அறிந்து பெருமூச்சுடன் ஹாண்ட்பாகிலிருந்து ஹெட்ஏக் பாமை எடுத்து இரண்டு பொட்டுகளிலும் தேய்த்துவிட்டுக்கொண்டாள். கார் பார்க்கை அடைந்து காரை எடுத்து வீட்டிற்கு ட்ரைவ் பண்ணத் தொடங்கினாள்.
ஜெண்டர் இம்பாலன்ஸ் ஆகி 2010ல் எடுத்த ஸென்ஸஸ் கணக்கெடுப்பின்படி பெண்கள்-ஆண்கள் ரேஷியோ 1000 பெண்களுக்கு 1200 ஆண்களென்று மதிப்பிடப்பட்டது. பெண்கள் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று பெரிய பதவிகளையெல்லாம் ஏற்றுத் தங்கள் தரத்தை உயர்த்திக்கொண்டனர். கூடவே தங்களை மணக்கப்போகும் மணாளன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்னும் அவர்களின் எதிர்பார்ப்புகளும் வெகுவாக உயர்ந்து விண்ணை எட்டியன. விளைவு, இவர்களுக்கு ஈடு கொடுக்கும் ஆண்கள் கணிசமாக இல்லாமல் போகவே சில பெண்களின் கல்யாண வயது தள்ளிக்கொண்டே போகத்தொடங்கியது. பெண்கள் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!
ஷகீலாவுக்கு வசீகரமான உடல். ஜிம்மிற்குத் தவறாமல் சென்று கட்டுக்கோப்புடன் டிப்டாப்பாக வைத்திருந்தாள். எவரையும் கவரும் முகம். என்ன, 27 வயதில் யௌவனத்தின் சாயல் கடுகளவு குறைந்தபோதிலும் பார்த்தார் மனதில் பளிச்சென்று நிற்கும்படியான தோற்றம்! படிப்பில் அதிக ஆர்வம் காட்டி கேம்பஸ் இன்டர்வ்யூவில் தேர்வாகி, நல்ல ஐடீ வேலை கிடைத்தது. அதில் படிப்படியாக முன்னேறி இப்போது ப்ராஜெக்ட் மேனேஜராக உயர்ந்திருந்தாள். கல்யாணத்தைப்பற்றிக் கொஞ்சம்கூட மனதில் இடம் கொடுக்காது வேலையில் ஆர்வத்தைக் காட்டினாள்.
ஓயெம்மாரில் இப்போது அவள் கார் போய்க்கொண்டிருந்தது. மணி இரவு எட்டைத் தொடத் துவங்கியிருந்தது. அந்தச் சாலையில் அவள் வழக்கமாக ரிலாக்ஸ் செய்யும் ஓர் உயர்தரமான காஃபீ ரெஸ்டராண்டில் காரைச் செலுத்தி பார்க்பண்ணி உள்ளே சென்றாள்.
வழக்கமாய் அமரும் க்யூபிகுளுக்குள் நுழைந்தாள். அங்கே அவள் தோழி நிருபமா இருக்கையிலிருந்து எழுந்து ‘ஹலோ ஷகீலா’ என்று ஷேக்ஹாண்ட் பண்ணி ‘ இப்படி வந்து உட்கார்’ என்று அவளை அன்புடன் அழைத்தாள். ஷகீலாவை உன்னிப்பாகக் கவனித்த நிருபமா ‘என்ன ஷகீலா, உன்னிடம் உள்ள இயல்பான உற்சாகத்தைக் காணோம்’ என்றாள்.
‘முதலில் எனக்கு ஒரு ஸ்ட்ராங் காஃபீ ஆர்டர் பண்ணு’.
அருகில் வந்த வெயிட்டரிடம் நிருபமா காஃபீ ஆர்டர் பண்ணினாள். உடனே அது கொண்டுவந்து வைக்கப்பட்டது.
‘என்ன ப்ராப்ளம்? உன்னிடம் நான் இன்று திட்டவட்டமாகப் பேசி உன் கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்க எண்ணியிருந்தேன். இப்படி எழிலான உன் தேகம் வேஸ்ட்டாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம். நீ என்னடா என்றால் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்’.
ஷகீலா காஃபியை அருந்திக் கொண்டே ‘அது ஒன்றுதான் இப்போது குறைச்சல். கல்யாணத்தில் எனக்குக் கொஞ்சம்கூட நாட்டமில்லை என்பது உனக்குத்தான் தெரியுமே. நான் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு ஆறுதல் சொல் அல்லது தீர்க்க வழி ஏதேனுமிருந்தால் அதைக் கூறு’ என்று ப்ராப்ளத்தை விளக்கினாள். பாவம், நிருபமா என்ன செய்வாள்! அவள் லைனே வேறு. ப்ராப்ளத்தை ஸால்வ்பண்ண ஐடியா கொடுக்க முடியவில்லை ஆனால் அவளால் ஷகீலாவுக்கு ஆறுதல் மொழிகளே தர முடிந்தது.
ஷகிலா எழுந்திருந்தாள். ‘நான் என் ஃப்ளாட்டுக்குச் சென்று இன்றிரவு நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளப்போகிறேன். நாளை இதற்குத் தீர்வான விடை கிடைக்குமெனத் திடமாக நம்புகிறேன். நீ என்ன செய்யப்போவதாக இருக்கிறாய்?’ என்றாள்.
நிருபமா, ‘இல்லை. நீ செல். என் பாய்ஃப்ரண்ட் சிவா இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வருவதாக இருக்கிறார். அவரோடு சிறிது நேரம் டைம் ஸ்பெண்ட்பண்ணுவதாக இருக்கிறேன்’ என்றாள்.
அப்போது பக்கத்து க்யூபிகுள்ளிருந்து ஒரு ஆண் உருவம் வெளி வந்தது. என்ன உடல்! என்ன அழகான முகம்! ஸ்லிம்மான 6 அடி உயரமுள்ள அந்த உருவம் ஜிம்முக்குச் சென்று உடலை வாட்ட சாட்டமாக வைத்திருப்பதாகத் தெரிந்தது. மெதுவாக நம் நண்பர்கள் க்யூபிகுளை தாண்டிச் சென்றது. போகும்போது எழுந்து நின்றிருந்த ஷகீலாவை ஏறெடுத்துப் பார்த்து மனதில் அவள் உடலை அப்படியே அங்கம் அங்கமாகப் பதிய வைத்துக்கொண்டது. ஜெண்ட்ஸ் ரூமுக்குச் சென்றது போலும்! சிறிது நேரம் கழித்து வெளிவந்து தன் க்யூபிகுளை நோக்கித் திரும்பி வரத் தொடங்கியது. அப்போது ஷகீலாவை அங்கு காணோம்.
வீக்கெண்ட் முடிந்து திங்கள்கிழமை. காலை 10 மணிக்கு ஷகீலா ஆஃபீஸுக்குள் நுழைந்தாள். அன்று ஸ்ட்ரைக் – டோட்டல் பந்த் என்று அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. இது என்ன சோதனை! என் கெடு இப்போது 5 நாட்களிலிருந்து 4 நாட்களாகக் குறைந்து விட்டதே! எப்படி ஈடு செய்யப்போகிறேன்?
அப்போது அட்டெண்டெண்ட், ‘இன்று கொரியர் ஆஃபீஸெல்லாம் கூட பந்த். யாரோ இந்த பேக்கேஜை ஸ்பெஷல் டெலிவெரி மூலம் அனுப்பியிருக்கிறார்கள்’ என்று கூறியவாறே பேக்கேஜை மேஜையில் வைத்துவிட்டுச் சென்றான்.
அதை ஷகீலா கொஞ்சம் கூடச் சட்டைசெய்யவில்லை. ஸாஃப்ட்வேர் ஸேல்ஸ் ப்ரமோஷன் மெடீரியலாய் இருக்கலாம் என்பது அவள் எண்ணம். கிச்சனுக்குச் சென்று காஃபீ பார் மெஷினிலிருந்து ஒரு ப்ளாக் காஃபியை எடுத்துக்கொண்டு கேபினுக்குத் திரும்பினாள். காஃபியை ஸிப் செய்துகொண்டே கொரியரில் என்னதான் வந்திருக்கும் என்று பேகேஜை ஓப்பன் பண்ணினாள்.
ஒரு கவரிங் லெட்டெர். சில பேப்பர்கள். கவரிங் லெட்டரைப் படிக்க ஆரம்பித்தாள்.
மிஸ் ஷகீலா என்று ப்ளைன் பேப்பரில் ஆரம்பித்திருந்தது. படிப்பதை சிறிது நிறுத்தினாள். யார் அது? ஏற்கெனவே அறிமுகமானவருடன் பேசுவதுபோல ஆரம்பித்திருக்கிறது? கீழே ‘ரமேஷ்’ என்று கையொப்பமிட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டாள். மேலே தொடர்ந்தாள்.
‘ஏற்கெனவே அறிமுகமானவரிடமிருந்து வந்த லெட்டர் போல ஆரம்பித்திருக்கிறதே என்ற வினா உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்! தயவு செய்து தவறாக என்னை எடைபோட்டுவிடாதீர்கள். இந்தக் கடிதத்தைப் படித்தபின் ஒரு முடிவிற்கு வாருங்கள். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களைப்பற்றியும் உங்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைப்பற்றியும் சமீபத்தில் தெரிந்துகொண்டேன். நான் ஒரு ஸாஃப்ட்வேர் டெவலப்பர். என் கீழ் 50 ஸாஃப்ட்வேர் இஞ்சினியர்ஸ் வேலை பார்க்கிறார்கள். என் ஸாஃப்ட்வேர் ப்ராடக்ட்ஸ் இந்தியா முழுவதும் உபயோகப்பட்டு வருகிறது. அதில் ஒன்று உங்களை இப்போதைய ப்ராப்ளத்திலிருந்து நிச்சயம் ரிலீவ் பண்ணும் என்று திடமாக நம்புகிறேன். இரண்டாவது பக்கம் என் ஆர்கனைஸேஷனைப்பற்றியது. அது எங்கள் கம்பெனியைப்பற்றிய பேக்ரௌண்ட் இன்ஃபர்மேஷன். மூன்றாவது பக்கத்தில் இந்த ஸாஃப்ட்வேரை நீங்கள் உபயோகிக்க நான் கம்பெனி ஸீலுடன் கையொப்பமிட்ட எங்கள் ஆதரைஸேஷன் லெட்டர். நான்காவது பக்கத்தில் இந்த ஸாஃப்ட்வேர் இருக்கும் வெப் சைட்டும் அதை டௌண்ட்லோட் செய்ய எங்கள் பாஸ்வோர்டும். ஐந்தாவது பக்கத்தில் எப்படி இந்த ஸாஃப்ட்வேரை உபயோகிப்பது என்பதற்கான விளக்கம். வெரி ஈஸி. பராமீட்டர் ட்ரிவன். ஆறாவது பக்கத்தில் என் வாட்ஸ்அப் ஹாட் லைன் நம்பர். நான் உங்களுக்கு உதவி செய்ய ஆன் காலில் காத்திருப்பேன். தயங்காமல் என்னை காண்டாக்ட் பண்ணலாம்’ இப்படிக்கு ரமேஷ்.
அப்படியே ஷகீலா இன்ப அதிர்ச்சியில் சேரில் சாய்ந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. அவருக்கு எப்படி என்னைப்பற்றியும் என் சூழ்நிலையைப்பற்றியும் தெரிந்தது? எனக்கு ஹெல்ப்பண்ண அவருக்கு ஏன் தோன்றியது? இதைப்பற்றியெல்லாம் இப்போது ஆராய நேரமில்லை. முதலில் நாம் காரியத்தில் இறங்கி ப்ராப்ளத்தை ஸால்வ் செய்யமுயலலாம்.
அவளே ஸாஃப்ட்வேர் ரொட்டீனை டௌண்ட்லோட் செய்து தகுந்த இடத்தில் சேர்த்து ப்ரோக்ராம் டெஸ்ட் செய்து பிறகு சிஸ்டம் டெஸ்ட் செய்தாள். முதல் முயற்சியிலேயே எல்லாவற்றிலும் ரிசல்ட் சரியாய் அமைந்து வெற்றிகரமாய் முன்னேறியது. பிறகு டீம் மெம்பரைக் கூப்பிட்டு லைவ் டெஸ்டிற்கு ரெடிபண்ண உத்தரவு பிறப்பித்தாள்.
ரமேஷிடம் நடந்ததைப் பகிர்ந்து கொள்ள ஷகீலா மனம் துடிதுடித்தது. ஹாட் லைனில் ‘ ஹார்ட்டீ தாங்க்ஸ். சிஸ்டம் டெஸ்ட்வரை எல்லாம் சக்ஸஸ். லைவ் டெஸ்ட் ரிசல்ட் வர இன்னும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். உங்களின் எதிர்பாராத இந்த ஹெல்ப்பிற்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை’ என்று மெசேஜ் விட்டாள்.
‘கவலை வேண்டாம். கண்டிப்பாக அதுவும் சக்ஸஸாக நிறைவேறும்’. இது ரமேஷின் ரிப்ளை.
‘என்ன உறுதியான ஆறுதலான பதில்! ஆம்! எப்படி என்னைப் பற்றியும் என் ப்ராப்ளத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரிய வந்தது?’
‘நேற்று காஃபி ஹௌஸில் உங்களுடைய அடுத்த க்யூபிகிளுக்குள் நான் என் நண்பனின் வருகைக்காகக் காத்திருந்தபோது உங்களுக்கும் நிருபமாவுக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்க நேர்ந்தது. பிறகு நான் ஜெண்ட்ஸுக்கு செல்லும்போது உங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது!’
‘என்ன, பாக்கியமா?!!!!!!!!!!!!!’
‘ஆமாம். மேலும் சொல்லவா?’
‘ம்!’
‘உங்களைப் பார்த்துச் சொக்கிப் போனேன்! உங்களுக்கு எப்பாடுபட்டாவது உதவ முடிவு செய்தேன். ஜெண்ட்ஸிலிருந்து திரும்பி வரும்போது உங்களைக் காணோம். பிறகு நிருபமாவைப் பார்த்து என்னை ஸாஃப்ட்வேர் டெவெலப்பர் என்று அறிமுகம் செய்துகொண்டு உங்களைப்பற்றியும் உங்கள் ப்ராப்ளத்தைப்பற்றியும் விலாவாரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என்னுடைய ஒரு ஸாஃப்ட்வேர் உங்கள் ப்ராப்ளத்தை ஸால்வ் பண்ணுவதற்காகவே தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைந்திருந்ததை அறிந்தேன். ஆகையால் உங்களுக்கு என்னால் ஆணித்தரமாக உதவ முடியும் என்பதையும் நிருபமாவிடம் உறுதியாய் தெரியப்படுத்திக்கொண்டேன்’.
ஷகிலா, ரமேஷ் ‘உங்களைப் பார்த்து சொக்கிப் போனேன்’ என்று சொன்னதைக் கேட்டதில் ஒரு இனந்தெரியாத இன்பம் உடலெல்லாம் பரவுவதை உணர்ந்தாள். அடக்கிக்கொண்டு ‘என்னை நேரிலேயே பார்த்து ஹெல்ப் பண்ணியிருக்கலாமே?’ என்றாள்.
‘அதற்கு ஒரு சிறு தடங்கல். நீங்கள் நிருபமாவிடம் பேசியவிதத்திலிருந்து ஆண்களைச் சட்டை செய்யாதவர் என்றும் வெறுப்பவர் என்றும் தெரியவந்தது. நேரிலே ஆகையால்தான் வரவில்லை. மேலும் நிருபமாவிடம் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டுகோள் விடுத்தேன்’.
திடீரென்று சாட் டிஸ்கனெக்ட் ஆகி சில வினாடிகள் அமைதி நிலவியது.
ரமேஷ் ஃபோனில் ஃபேஸ்டைம் கால் வந்தது. ரமேஷ் தன் ஃபிகரை சரியாக அட்ஜஸ்ட் செய்து ‘ஹலோ’ என்றான். அதில் ஷகீலாவின் அழகான பஸ்ட் உருவம் மிகவும் கவர்ச்சியாக சல்வார் கமீஸில் தென்பட்டதைக் கண்டு ரமேஷ் இரண்டாம் முறையாக சொக்கிப்போனான்.
ஷகீலாவின் பதினோரு வருடத்திற்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி மலர் போன்ற மனம், அத்தி பூத்தாற்போல் அப்போது மெல்லப் பூரணமாக விரிந்து மலர்ந்து மகரந்த நறுமணத்தை அள்ளி வீசியது. ரமேஷாகிய வண்டு அதை உண்டு மூழ்கித் திளைத்தது.
ஷகீலா ‘ம்…….!!!! நான் எதிர் பார்த்ததைவிட மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆண்களைச் சட்டை செய்யாமல் இருந்தது என் கேரியரில் நான் காட்டிய ஆர்வம். ஆண்களை வெறுப்பவர் என்று நீங்கள் யூகித்தது தவறு. அதுவே என் இப்போதைய மகிழ்ச்சி. ஆமாம், நான் என்ன உணர்ச்சியற்ற மரக்கட்டை என்று நினைத்துக் கொண்டீர்களாக்கும்! ம்…. எப்போது பார்க்கலாம்?’ என்றாள்.
‘நாளை இரவு 9 மணிக்கு அதே காஃபி ஹௌஸில் கேண்டில் லைட் சப்பர்.. ஓகே?’
அம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
இட்லி மகிமை
இட்டளித்தாய் நீ இட்டளித்தாய் – நீ
பட்டாய் இட்டளித்தாய் !
குட்டளித்தாய் நீ குட்டளித்தாய் – மற்றவை
குட்டிக் குனியவைத்தாய் !
பஞ்சு போல் இட்லி என்று சொன்னதெல்லாம்
இந்தப் பணியாரம்தானோ ?
மிஞ்சிடுமோ இன்றிட்ட இட்லியை –
இனிய நளபாகம் இதுதானோ ?
தஞ்சைக் காவிரித் தண்ணீரால்
தனிசுவை வந்ததுவோ?
தாமிரபரணித் தண்ணீரால்
தேன்சுவை சேர்ந்ததுவோ?
மிளகாய்ப் பொடியால் சட்டினியால்
சிறந்திடும் இட்லிதான் !
ஒன்றும் இல்லாமல் உண்டு விட்டாலும்
அதுவும் தனி சுவையே !
சாம்பாரிலே மிதக்க விட்டு நான்
சாயுஜ்யம் பெறவேணும் !
சரிபாதி இரண்டும் சேர்த்தடித்தால்
வேறென்ன சுகம் வேணும்?
எத்தனை ஓட்டல்கள் சென்றாலும் – இந்த
வீட்டு சுவை வந்திடுமா?
அன்னையே இது இட்லியில்லை – உன்
அன்பினை இட்டளித்தாய் !
பிறந்து வர வேண்டும் உனை மிஞ்ச – வரம்
பல பெற்று வர வேண்டும் !
இன்னும் தர வேண்டும் – எனக்கென்றும்
உன் கை உணவு மட்டும் வேண்டும் !
@@@@@@@@@@@@@@
ஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி……
வெட்டிச் சங்கத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களான ஏகாம்பரமும் சந்துருவும் இளைஞர்கள். சிலகாலம் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பள்ளி நாட்களிலேயே ஒன்றாக ஊர் சுற்றியவர்கள். சில காரணங்களினால் ஏகாம்பரத்திற்கு ஒரு வருடம் படிப்பைத் தொடரமுடியாமல் போயிற்று. மீண்டும் சேர்த்துக்கொள்ள அந்தப் பள்ளி தயாராக இல்லை. வேறு பள்ளியில் மற்ற வருடங்கள் படித்து முடித்தார்.
சந்துரு தொடர்ந்து படித்து., பள்ளியில் நான்காவது ரேங்க். வேறு ஊரில் ஹாஸ்டலில் தங்கிக் கல்லூரியும் முடித்தவர். பி எஸ்சி முதல்வகுப்பில் தேறியவர். மேற்கொண்டு எம் எஸ்சி படிக்காத காரணம் தெரியவில்லை. வேலை தேடத் தொடங்கினார். சரியான வேலை எதுவும் மாட்டவில்லை. கிடைக்கும் ஓரிரு வேலைகளையும் நிராகரிக்க சந்துருவிற்கு ஏதேனும் காரணம் இருக்கும். இவர் வாழ்க்கையில் நிலைபெற நல்ல வேலை சீக்கிரம் கிடைத்தல் நல்லது என்று குடும்பத்தினர் அபிப்பிராயப்பட்டார்கள். பொதுவாக பிறர் சொல்வதைக் கேட்டுத் தன்னை மாற்றிக்கொள்ளும் வகையினைச் சேராதவர். வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் சௌகரியமாக இருக்கும் என்கிற நிலை இல்லை. ஆகவே இப்படியே ஓடிக்கொண்டிருந்தது.
ஏகாம்பரம் விரைவில் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம் அவர் படிப்பு முடிக்கும் தறுவாயிலேயே இருந்தது. அந்தக் காலத்து இளைஞர்களைப்போல அவரும் டைப்பிங் இன்ஸ்ட்டியூட் சேர்ந்து கற்றுக்கொண்டவர்தான். அவர் உறவினர் ஒருவர் ஒரு சின்னத் தொழிற்சாலையில். (இவரது பதினேழு வயதிலேயே) மிகக் குறைவான ஊதியத்தில் சேர்த்துவிட்டார். வங்கிக்கு சென்று பணம் கட்டுவது, வெளியூரிலிருந்து வரும் சரக்குகளை லாரி ஆபீசில் பணம்கட்டி வாங்கி வருவது, உள்ளூரிலேயே சிறிய சிறிய கொள்முதல்கள், தொழிற்சாலையின் அன்றாடச் செலவுகளை செய்வது என்று எப்போதும் இவர் கையில் முதலாளியின் காசு இருக்கும். சிறு வேலையாயிருந்தாலும், புழங்கும் பணம் குறைவுதான். ஆனாலும் இளைஞராகிக் கொண்டிருக்கும் ஒரு வளர்ந்த சிறுவனுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் கௌரவத்தையும் தந்தது. நம்பிக்கையான ‘பையன்’ என்று பெயரும் வந்தது. இப்படி அப்படி என்று வேலைகள் மாறிக்கொண்டே வந்திருக்கிறார். செய்து கொண்டிருக்கும் வேலையைவிட புதிய வேலை ஊதியம் கணிசமாகக் கூடுதல் ஆக இருக்கும். (“எல்லோரும் முதலில் சம்பளமும் பின்னர் பென்ஷனும் வாங்குவார்கள். நான் முதலில் பென்ஷன் வாங்கி பின்னர் சம்பளம் வாங்குகிறேன்” என்பார், ஏகாம்பரம்)
நான் சங்கத்தில் இருந்த நாட்களில் அவர் நல்ல நிலையில்தான் இருந்தார் என்று சொல்லவேண்டும். குடும்பமும் பணக் கஷ்டம் தெரியாத வாழ்க்கை வாழ்ந்து வந்தது. சொந்த பந்தத்தில் அவரைப்பற்றிய மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டே வந்தது.
சில சமயம் வேலை நிமித்தம் வெளியூர் செல்லவும் நேரிடும். அங்கே இதைப் பார்த்தேன், அதைச் சாப்பிட்டேன் என்று கொஞ்சம் அலட்டிக்கொள்வார். தன்னுடைய ‘கெத்து’ குறையாமல் இருக்கச் சிறு பொய்கள் அவருக்கு ஆயுதங்கள்..
பள்ளித் தோழன் சந்துரு படிப்பில் ஏகாம்பரத்தைவிடக் கெட்டிக்காரர். பள்ளியில் ரேங்க் வாங்கியவர்., பட்டம் பெற்றவர், வெளியூரில் தங்கிய அனுபவசாலி, கல்லூரி நாட்களில், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பரிசுகள் வாங்கியவர். எல்லாம் சரி லௌகீக உலகில் அவர் வேலையில்லாப் பட்டதாரி.
பெரிய கம்பெனிகள், அரசாங்க, அல்லது அரசுத் துறை சேர்ந்த நிறுவனங்கள் என அவர் விண்ணப்பங்கள் போட்டுவந்தார். அவ்வப்போது தேர்வுகளும் நேர்முகத் தேர்வுகளும் சென்று வருவார். மூன்று வருடங்களாக இது தொடர்கிறது. யாரேனும் வேறு சில வேலைகளுக்குத் தகவல் தந்தால், போய்ப் பார்த்துவிட்டுதான் வருவார். ஏற்கனவே சொன்னதுபோல அவற்றை நிராகரிக்க அவருக்குக் காரணம் எதாவது கிடைத்துவிடும். (கடன் வாங்கிவிட்டுத் திருப்பித்தர இயலாதவர்கள் கடன் திரும்பக் கேட்பவரிடம் சாக்கு சொல்ல நல்ல கற்பனைவளம் வேண்டும் என்பார்கள். அதுபோலத் தட்டிக்கழிக்க இவருக்கும் கற்பனைக்கான தேவை இருந்தது)
எந்த நிலையில் தனது அலுவலக வாழ்வினைத் தொடங்க வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தாரோ, அந்த நிலைக்கு ஏகாம்பரம் எப்போதோ வந்து விட்டார். ரேங்க் ஹோல்டரும் இல்லை, பட்டதாரியும் இல்லை, கைதூக்கிவிடக் கூடிய சொந்த பந்தங்களும் இல்லை. ஆனாலும் இவரும் சொந்தக் காலில் நிற்கும் ஆளாகிவிட்டார்.
தனது நண்பன் சந்துருவிற்கு இருந்த கலை இலக்கிய ஆர்வத்திற்கு ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கலாம் என்பது ஏகாம்பரத்தின் கருத்து. சந்துரு நன்றாகப் பாடுவதைத்தவிர, படம் போடுவார், கதைகள் எழுதுவார். கொஞ்சம் நடிப்பும் வரும். ஆனால் எதிலும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றதில்லை. குழுக்களுடன் சேர்ந்து விட்டுக்கொடுத்து இயங்குவது அவருக்கு எட்டிக்காய். ஏதேனும் உருப்படியாக யோசனை யாரேனும் சொல்ல வந்தாலும், ஒரு மாதிரியாக அந்தப் பேச்சினை சந்துரு தவிர்த்து விடுவார்.
பிற்காலத்தில் ஏகாம்பரம் அடிக்கடி கண்ணில்படுவார். சந்துரு என்னவானார் என்று எனக்குத் தெரியவில்லை.
இரு நண்பர்கள் – இரு துருவங்கள்.
ஏகாம்பரம் | சந்துரு |
ஏதோ படிப்பை முடித்தாலும் ‘படிக்கிற பையன்’ என்று பெயரெடுத்ததில்லை | வகுப்பில் எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள். அரசுத் தேர்வில் பள்ளியில் நான்காவது மாணவன். |
கல்லூரிக்குச் செல்லாதவர். | முதல் வகுப்புப் பட்டதாரி |
இவருக்குப் பலர் பல சமயங்களில் வழிகாட்டி இருக்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்வார். ஆனால் முடிவு இவருடையதுதான். | யாரேனும் உதவ வந்தால், அனுதாபப்படுகிறார், நான் அனுதாபத்திற்குரியவன் அல்ல என்று பேச்சினைத் தவிர்த்து விடுவார்.
|
படிப்படியாக முன்னேறியவர். | படிப் பக்கமே போகாதவர். |
நான் அறிந்த காலகட்டத்தில் இவர் நன்றாக செட்டில் ஆகிவிட்டார். இப்போது நல்ல நிலையில் இருப்பதாகக் கேள்வி | அப்போது வேலையில்லாப் பட்டதாரி. இப்போது தெரியவில்லை |
(புதியதாக அட்டவணைபோட இப்போதுதான் கற்றுக்கொண்டேன். முயற்சி செய்ய வேண்டாமா?)
இன்னும் வரும்
ஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
ராகுதேவனின் முகத்தில் ஆனந்தமும் ஆக்ரோஷமும் ஒன்று சேர்ந்து கொப்பளித்துக் கொண்டிருந்தன.சூரியதேவன் தனக்குச் செய்த கொடுமைகள் எல்லாம் அவன் மனதில் நிழற்படம்போல் ஓடின. தான் அமுதம் குடிக்க இயலாமல் தடுத்தவன் சூரியன். தன் அழகு குலைவதற்குக் காரணாமாயிருந்தவன் சூரியன். முடிவில் விஷ்ணுவின் சக்கராயுதத்தால் தன் உடல் இரண்டுபடக் காரணமும் அவனே.
சூரியனை விழுங்கினால்தான் ராகுவிற்கு மனதில் சாந்தி கிடைக்கும். அவனுக்குத் தேவையான சக்தியும் கிட்டும். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு. மூன்றே முக்கால் நாழிகைக்குள் அவனை விழுங்கிய வாயாலே திரும்ப வெளியே கொண்டுவந்துவிடவேண்டும். இது பிரும்மா சூரியனுக்குக் கொடுத்த வரம். தனக்கு வழங்கிய இன்னொரு சாபம். பிரும்மாவின் வார்த்தகளைத் தட்டும் தைரியம் ராகுவிற்கு இல்லை.
அந்தச் சில நாழிகைப் பொழுதாகிலும் சூரியனைத் தன் பிடிக்குள் வைத்து அவன் அணு அணுவாகத் துடிப்பதைப் பார்ப்பதில் அவனுக்கு அளவில்லாத சந்தோஷம் வரும். இன்று இப்போது அவனுக்கு அந்தப் பொழுது கூடிவந்துள்ளது. சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
தன் கைகளால் சூரியதேவனுடைய உடலைப்பற்றி வட்டவடிவில் வைத்தான். கால்களைக் கைகளுடன் இறுக்கக் கட்டினான். வளையம்போல வளைந்து கிடந்தான் சூரியன். ராகு தன் வாயை அகலத்திறந்தான். சூரியன் அருகேவந்து அவனை அப்படியே விழுங்கத் தொடங்கினான்.
சூரியதேவனுக்கு அவன் வாயில் நுழையும்போது மயக்கம் தெளிந்து உணர்ச்சிகள் மெல்ல வரத்தொடங்கின. ஆனால் காந்த சிகித்சை சற்று முன்னர்தான் முடிவுற்றதால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
பிரும்மர் தன்னிடம் தனியாகக்கூறியது ஞாபகம் வந்தது. ராகு வருடாவருடம் சூரியனை விழுங்கியாக வேண்டும். இது இயற்கையின் சித்து விளையாட்டு. அதைத் தடுக்கமுடியாது.
ஆனால் அந்தச் சமயம் சூரியனுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள்ளச் சோர்வைப் போக்குவதற்கு அகத்தியமுனிவரை மனதில் வணங்கினால் அவர் ஆதித்யஹ்ருதயத்தை அவன் காது கேட்கும்படி உரைப்பார். அந்த ஸ்லோகங்கள் சூரியனின் அருமை பெருமைகளைக் கூறும் உன்னதமான பாடல்கள். பின்னாளில் இராவணனைப் போரில் வெல்லும் மார்க்கம் தேடித் தவித்த ராமருக்கும் இந்த ஆதித்யஹ்ருதயமே பலத்தைத் தந்தது.
அதுமட்டுமல்லாமல் பிற்காலத்தில் துன்பத்தில் உழலும் மக்கள் தங்கள் துயரைப் போக்கிக்கொள்ள காலையில் சூரிய தேவனை வணங்கி இந்த ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களைக் கூறினால் அவர்கள் துன்பமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும்.
அந்த ஸ்லோகங்கள்தான் தற்சமயம் சூரியதேவனுக்கு அருமருந்து. மனதளவில் அகத்தியரை எண்ணிக் கொண்டதும் அவர் குரல் ஒலிக்கத் தொடங்கியது. தன்னைப்பற்றி – தன் பராக்கிரமத்தைப்பற்றிய ஸ்லோகங்களைக் கேட்கும்போது அவனுக்குத் தன்மேல் அதிக நம்பிக்கையும் பலமும் கிடைத்தது. அந்த பலம் ராகுவின் மூலம் ஏற்படும் துன்பத்தைத் தாங்கும் சக்தியையும் அவனுக்குக் கொடுத்தது.
சூரியதேவனின் காதுகளில் ஆதித்யஹ்ருதயம் கேட்கத் தொடங்கின.
பாதி மயக்கத்திலிருந்த அவனுக்கு முழுப் பாடல்கள் காதில் விழாவிட்டாலும் அவற்றின் சாராம்சம் மட்டும் செவி வழியாகப் புகுந்து மனதைக் குளிரவைத்து இதயத்தில் தங்கிவிட்டன.
அதிதியின் புத்திரனே!
நீயே உலகிற்குப் பலத்தைக் கொடுக்கிறாய்!
ஒளி கொடுக்கிறாய்!
ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய்
தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களைக் கொடுக்கிறாய்.
கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! நீயே இருட்டை நாசம் செய்கிறாய்!
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.
ராகு என்னும் இருளைப் பிளந்துகொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டவன் நீ ! .
உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
*வட்ட வடிவத்தை உடையவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே!
மகத்தான ஒளியை உடையவனே!
நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே!
பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே!.
உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே!
அக்னியின் வடிவே!
சகல உலகமும் தோன்றக் காரணமானவனே!
அஞ்ஞானம் என்ற இருளைப் போக்குபவனே!
கருணாமூர்த்தியே!
உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! .
உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய்.
மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய்.
ஜலத்தை வற்றச் செய்கிறாய்.
உலகையே எரிக்கிறாய்.
மழை பெய்யச் செய்கிறாய்.
எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும்போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய்.
சர்வாத்மாவே!
சர்வேஸ்வரனே!
ஆதித்யனே!
வேத விற்பன்னர்கள் செய்யும் யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே!
உனக்கு நமஸ்காரம்.
ஆதித்யன் என்கிற சூரியதேவனின் ஹிருதயத்தில் போய்ச்சேரும் இந்த ஆதித்ய ஹ்ருதயம் ராகு விழுங்கும்போது அவனுக்கு ஏற்படும் துன்பத்தைத் தடுக்கும் கவச மந்திரமாக இருந்தது.
“ராகு என்னும் இருளைப் பிளந்துகொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டவன் நீ !”
இந்த வரி மட்டும் திரும்பத்திரும்ப அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருப்பதால் முன்னூறு யுகம்போலத் தோன்றும் அந்த மூன்றே முக்கால் நாழிகையையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடிந்தது.
தன்னைக் கடித்துத் துப்பும் ராகுவிற்குச் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சூரியதேவனுக்குத் தோன்றும்.
ஆனால் இது பிரும்மர் படைத்த பிரபஞ்சத்தில் நடைபெறவேண்டிய ஒரு முக்கியமான நியதி. அதை மாற்றுவது கூடாது! மாற்றவும் முடியாது !
மெல்ல மெல்ல ராகுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான் சூரியதேவன்.
ராகு அவனைப் பீடிக்கும் நேரமும் முடிந்தது.
அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்த சம்பவங்கள் தொடர்ந்தன.
(தொடரும்)
இரண்டாம் கதை ( எம கதை)
நாரதர் திட்டமிட்டுக் காரியத்தை நகர்த்துவதில் கில்லாடி.
தேவ உலகத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களைச் சேர்த்து மீட்டிங் போட்டதில் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. அதிலும் பிரும்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், முருகன், பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி, எமன், சித்ரகுப்தன் ஆகியோர் கலந்துகொண்டது அவருக்கு மிகவும் சாதகமாகப் போயிற்று.
ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களை மேலே யோசிக்க விடாமல் அப்படியே அமுக்கிப் போட்டுவிட்டார்.
எப்படியாவது பூலோகத்தில் இருக்கும் சிவா கன்சல்டிங்க் சர்வீசுக்கும், ராம் டெக்கிற்கும் சேர்த்து இந்த பிராஜக்டை வழங்கும்படி செய்யவேண்டும் என்பது அவருடைய திட்டம். சொல்லப்போனால் இது பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சேர்ந்து நடத்தும் திருவிளையாடல். நாரதர் ஆடுகின்ற பம்பரம். அதை ஆட்டுகின்ற கயிறு அந்த மூவரிடமே இருக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் வெகு சமர்த்தர்கள். ஏதோ எல்லாம் நாரதர் திட்டப்படியே நடக்கிறது என்ற மாயையை ஏற்படுத்தி, தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல நடிக்கவும் செய்கிறார்கள்.
எல்லாம் அறிந்த நாரதருக்குத் தான் ஒரு கருவி என்பதும் தெரியும். இருந்தாலும் எமபுரிப்பட்டணம் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பது சர்வேஸ்வரர்களின் விருப்பம் மட்டுமல்ல. நாரதருக்கும் சித்ரகுப்தனுக்கும் அதில் அதிக ஈடுபாடு உண்டு. எமனுக்கு மட்டும்தான் இந்தத்திட்டத்தின் பின்னணி அவ்வளவாகத் தெரியவில்லை. அதுவும் அவன் சகோதரி எமி வந்தபிறகு அவள் பூலோகத்தைப் பற்றிக் கூறிய தகவல்களால் அவன் மிகவும் குழப்பமடைந்திருந்தான். அதனால் இந்தத் திட்டதைப்பற்றி முழு விவரமும் அவனுக்கு ஏற்கனவே சித்ரகுப்தனால் சொல்லப்பட்டிருந்தாலும் எமன் அதை முற்றிலும் மறந்துவிட்டான்.
அதுமட்டுமல்ல. தன் உதவியாளர்கள், பணியாளர்கள் இவர்கள் விவரத்தில் அவன் எப்பொழுதும் தலையிடுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை தவறின்றி செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.
கிங்கரர்களின் பணி ஆயுள் முடிந்த உயிர்களை எமபுரிக்குக் கொண்டுவரவேண்டியது. சித்ரகுப்தன் பணி யார் யாருக்கு எப்போது ஆயுள் முடிகிறது என்பதைக் கணக்கிட்டுச் சரியான நேரத்தில் கிங்கரர் மூலமாக அந்த உயிர்களைக் கொண்டுவரச் செய்வது. அதன்பின் அவர்கள் செய்த நல்லது கெட்டது என்ன என்று அவ்வப்போது குறித்துக்கொண்டு வந்த கணக்குப் புத்தகத்திலிருந்து மொத்தமாக எமனிடம் எடுத்துச் சொல்லவேண்டியது. அதற்குத் தகுந்தபடி எமன் தீர்ப்பு சொல்லவேண்டியது.
சித்திரகுப்தனின் பணி முகவும் கடினமானது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு உதவியாக யாரையும் நியமிக்க முடியாத சூழ்நிலை. சித்திரகுப்தனின் கணக்குப்புத்தகம் என்பது உலகத்தின் மாபெரும் ரகசியம். அதில் இருக்கும் தகவல்கள் கொஞ்சம் கசிந்தால் போதும். அதனால் ஏற்படும் விளைவுகள் அதி பயங்கரமாக இருக்கும். அதனால் சித்ரகுப்தன் தன்னுடைய புத்தகத்தை ‘குறியாக்க முறையில்’ எழுதியிருப்பான். இன்றைய என்கிரிப்ஷனுக்கு அதுதான் முன்னோடி.. அந்தக் கணக்குப் புத்தகம் திறந்திருந்தாலும் அவனுக்குக் கவலையில்லை. சித்திரகுப்தனையும் எமனையும் தவிர யாராலும் அதைப் படிக்க முடியாது. படித்தாலும் புரிந்து கொள்ளமுடியாது.
இப்போது இந்தத் தகவல்களை மின்னணு மயமாக்க முயலும்போது ஏற்படும் தகவல் கசிவைப்பற்றி எமனுக்குக் கவலை வந்தது. அதுவும் வெளி மனிதர்களிடம், குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் தகவல்நுட்ப வல்லுனர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்பட்டால் அதனால் விளையும் அனர்த்தங்களுக்கு அளவே இருக்காது என்ற எண்ணம் எமனின் பயத்தை அதிகரித்தது.
முதலில் சித்திரகுப்தன் விருப்பப்படி இந்த வேலையை வெளியே அவுட் சோர்ஸ் முறைப்படி கொடுப்பதற்கு சிவபெருமானிடம் அனுமதி பெற்றவன்தான் எமன். ஆனால் இப்போது இதற்கென்று அமைத்த குழுவில் ஒவ்வொருவர் கடமைகளைப்பற்றிப் பேச்சு எழுந்தபோது எமனுக்குச் சற்று திக்கென்றிருந்தது. எமபுரிப்பட்டணத் திட்டத்தில் இருக்கும் குறைகளைச் சொல்லி அவர்களை எச்சரிக்காவிட்டால் நாளைக்கு ஏதாவது தவறு ஏற்பட்டால் தன் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதை உணர்ந்தான்.
எமன் பேச எழுந்தான்.
நான் முதலில் கூறியபடி இந்தத் திட்டத்திற்கு என் முழு ஆதரவு உண்டு. ஆனால் நேற்று என் சகோதரி எமியிடம் பேசியபோது பூலோகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டதும் என் கவலை அதிகமாயிற்று.
பூலோகத்தில் முகநூல் என்ற சமூக வளைத்தளத்தில் சேர்ந்துள்ள மனிதர்களின் முழுத் தகவல்களைத் தவறாகத் திரட்டித் தேர்தல் போன்ற சமயங்களில் அதை உபயோகப்படுத்தி, வேண்டிய நபர்களுக்கு வெற்றிபெற உதவுகிறார்கள் என்ற பீதி பரவியுள்ளதாம். அதுபோல நம் தகவல்கள் கசிந்தால் அது எமபுரிப்பட்டணம் மட்டுமல்ல தேவ உலகத்தையே பாதித்துவிடும்.
தகவல்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிக்கமுடியும் என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே இந்தத் திட்டத்தை வெளியாருக்கு அவுட் சோர்ஸ் செய்வதைப்பற்றி முடிவு எடுக்கமுடியும்
எமன் இப்படிக் கூறியதும் அனைவரும் சற்று கலகலத்துப் போயினர். ஒரே ஒருவரைத் தவிர.
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த நாரதர் சிரித்துக்கொண்டே அதற்குப் பதில் கூற எழுந்தார்.
(தொடரும்)
சீட்டுக்குருவி – வித்யாசாகர்
மிக இனிமையான நாட்கள் அவை
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்
‘அட என்னப்பா..? தலைவர் பேச ஆரம்பித்ததும் இருந்த
பிரம்மாண்ட கூட்டம் அவர் பேச ஆரம்பித்து பத்து நிமிடத்-
துக்குள்ளே மீட்டிங் கிரவுண்டே காலியாயிடுத்து..?!’
‘அட அதையேன் கேட்கறே..? இந்த தலைவர் வாயை
வெச்சுட்டு சும்மா இருக்கக் கூடாதா..? எதிர்க் கட்சியைத்
தாக்குகிறேன்பேர்வழீன்னு ‘எதிர்க் கட்சியைப் போல் இது
காசு கொடுத்துச் சேர்த்த கூட்டம் இல்லை.. தானா சேர்ந்த
கூட்டம். இவர்கள் இங்கே குழுமுவதற்கு நாங்கள் காசு
கொடுக்கவும் இல்லை… காசு கொடுக்கப் போவதும் இல்லை’ன்னு
உளறி விட்டார்.. எல்லோருக்கும் தலைக்கு ஆயிரம்னு பேசி
கஷ்டப்பட்டுக் கூட்டத்தைச் சேர்த்தி இருக்கோம். இப்போது
இந்தக் கூட்டம் அத்தனையும் கடைசியில் காசு கிடைக்காதோ
என்ற பயத்தில் நம்ம கட்சி அலுவலகத்தில் போய் தகராறு
பண்ணிட்டிருக்கும்..!’
நானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்
வலியோடு வாழ்க்கை பயணம்
ஆங்காங்கு புதுமுகங்கள்
சலிப்போடு நகர்ந்தாலும் மாறுதல்
புதிதில்லை – ஏனோ மனம் ஏற்கவில்லை
புதியவர் நடுவே தனியாக
வழியேதும் புலப்படாது
பலநூறு மனிதர் இருந்தும்
தனிமரமாய் தென்பட்டேன்
மனமெங்கும் படபடப்பு ஓரத்தே
சிலீரென எதிர்பார்ப்பு
இதமாக பேசி அமைதிதர
தனிக்காட்டில் யாருமில்லை
எல்லோரும் எனக்குத் தென்பட்டாலும்
யாருக்கும் நான் தெரியவில்லை
அவரவர் வேலையை அவர்செய்ய
என்தேவை அரிதானது
கூட்டத்தே புகுந்து என்பங்கு
உரிமை கொண்டாடினேன்
யாரும் தரவில்லை – என்னுரிமை
பறிபோனது பதட்டமானேன்
அந்தக் கூட்டம் எனைசாடியது
எனைத் தேடியது
நையப் புடைத்து புண்ணாக்கி
ஓரம் போட்டது
என்னுரிமை எனக்கில்லை என்றபின்னே
நான்யார் – கயவர் கூட்டத்தே
நானாக நானில்லை வெட்கி
தலை குனிந்தேன்
என் அடையாளம் அவர்களுக்கு
தெரியாமல் போகலாம் புதியவரன்றோ
எனக்கே ஏன் தெரியாமல் போனது
புதிராகத்தான் போச்சு
உன்னையே நினைக்க வேண்டும்..! —கோவை சங்கர்
உன்னையே நினைக்க வேண்டும் – முருகாநீ
என்னுடனே இருக்க வேண்டும்
உனைத்துதிக்கும் பாட்டினது ராகமாய் இருக்கவேண்டும்
மெல்லமெல்ல வந்துவந்து உன்னையே தழுவவேண்டும்
உன்னையே நினைக்குமந்த எண்ணவலையாய் இருக்கவேண்டும்
பரந்தவுன் மார்பகத்தில் நான்சங்கமம் ஆகவேண்டும்!
பாடுகின்ற பக்தர்களின் நாவினில்நான் இருக்கவேண்டும்
எப்போதும் உன்நாமம் பாடியேநான் மகிழவேண்டும்
கோஷமிடும் வேதத்தின் சொற்றொடரா யாகவேண்டும்
மணக்குமுன் மேனியினை யொற்றியொற்றி விடவேண்டும்!
உன்நினைவே இன்பம் துதிபாடல் பேரின்பம்
ஆறுபடை வீட்டினிலே வெவ்வேறு உருவத்தில்
கண்கொள்ளாக் காட்சியினைக் கண்குளிரக் கண்டுவிட்டு
தேமதுர மலரினையே சுற்றிவரும் வண்டானேன்
இந்திரஜாலம்
சுடலை / இந்திரன்
———————————————-
சுடுகாட்டு வேப்ப மரத்தின் குளிர் நிழலில்
ஓய்வெடுக்கிறேன் நான்.
புதைகுழிகளுக்கு மேல்
பூத்துச் சிரிக்கும் மஞ்சள் பூக்களில்
தேன் குடித்துச் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சிகள்
அபத்தத்தைக் கொண்டாடுகின்றன.
உண்மை மட்டுமே பேசியதால்
சுடுகாட்டில் கோயில் கொண்ட அரிச்சந்திரன்
வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று
சவ ஊர்வலத்தோடு வரும் ஒவ்வொருவரிடமும்
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.
நேற்று தகனம் செய்யப்பட்ட
அழியாத கவிதைகள் எழுத முயன்ற
கவிஞனின் உடல் சாம்பல்
இன்றைக்குக் கங்கையில் கரைக்கப்படுகிறது.
சுடுகாட்டில் தவம் செய்யும் சிவனின் பெயரான
சுடலை என்பதைத்
தன் பெயராகச் சூடியிருக்கிறான்
இடுகாட்டுக் காவல்காரன்.
வாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்
நன்றி: வரைந்தவருக்கும் அனுப்பியவருக்கும்
புவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்
சென்னகேஷவா என்னும் விஜயநாராயணா வைணவ கோவில் கர்நாடகா மாகாணத்தின் ஹாஸன் ஜில்லாவில் வெலபுரா நதி தீரத்தில் ஹோய்ஸாலா வம்சத் தலைநகரான பேலூரில் அமைந்துள்ளது. மூன்று தலைமுறை ஹோய்ஸாலா மன்னர்களால் இதைக் கட்டி முடிக்க 103 ஆண்டுகள் பிடித்து விஷ்ணுவர்தனா மகாராஜாவால் 1117ம் ஆண்டு துவக்கப்பட்டது. காலதாமத்தின் காரணம் அங்கு நேர்ந்த பல யுத்தங்களினால் கொள்ளையடிக்கப்பட்டும் தாக்கப்பட்டுச் சிதிலமடைந்தும் திரும்பத்திரும்பச் சீர் செய்யப்பட்டு தடைப்பட்டதால் நேர்ந்ததாகும். இதன் சிற்பங்கள் கட்டடக் கலையின் மிகவும் தலை சிறந்த 3டி முறையில் கட்டப்பட்டுஃப் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கின்றன. இது வைணவ சம்பிரதாய கோவிலானாலும் ‘எம்மதமும் சம்மதம்’ என்னும் அடிப்படையில் சைவ, ஜைன, புத்த மதங்களையும் போற்றுவிக்குமாறு கட்டப்பட்டிருக்கிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு இதில் கல்வெட்டு ஆதாரங்கள் குவிந்து காணப்படுகின்றன.
இந்தக் கோவிலில் ஒரு காணக் கிடைக்காத அதிசயம் ஒன்று இருக்கிறது.
கோவிலின் பிரகாரத்தில் மேடையின்மேல் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கருங்கல் தூண் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடித்தளம் இல்லா இத்தூணின் உயரம் 42 அடி. அஸ்திவாரம் இல்லாமல் புவி ஈர்ப்புச்சக்தியால் நின்றுகொண்டிருக்கிறது! இது கிபி 1414ல் விஜய நகர சாம்ராஜ்யத்தின் மன்னர் தேவராயர் காலத்தில் கட்டி இந்தக் கோவிலில் சேர்க்கப்பட்டது. தூணின் பாரம் மூன்று பகுதிகளில் மட்டுமே தாங்கியிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. தூணின் அடியில் எஞ்சியுள்ள பகுதியில் ஒரு காகிதத்தை நுழைக்கும்படியான இடைவெளியோடு அக்காலக் கட்டிடக்கலை வல்லுநர்களால் கட்டப்பட்டிருப்பது அதிசியமே!!!
இது ஒரு UNESCO WORLD HERITAGE SITE.
தலையங்கம்
“வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” என்று பாடிய தமிழ் நாடு
“காவிரித்தாயே கைவிரித்தாயே”
என்று இன்று சோககீதம் பாடுகிறது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காவிரியில் இன்று மணலும் கொள்ளை போகிறது.
நீர்வழிப்பாதைக்குள்ள உரிமையின் (Riparian Rights) அடிப்படையில்தான் உலக அளவில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஐ நா சபையும் ஹெல்சின்கி விதிகளும் ஒப்புக் கொண்ட உண்மை.
அதன்படி காவிரியின் முதல் மடையிலிருக்கும் கர்நாடகத்தைவிடத் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது என்பது தமிழகத்தின் வாதம்.
தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும் என்கிறது கர்நாடகம்.
வாதம், தர்மம், வழக்கம், பிடிவாதம், அரசியல் என்ற பஞ்ச சீலத்தை ஒதுக்கிவிட்டு நடு நிலைமையுடன் ஆராய்வோம்.
நாட்டின் தலைமை நீதிமன்றம் இட்ட ஆணையை அனைவரும் ஒப்புக்கொண்டு செயல்படுத்தவேண்டும்.
அதைச் செயல்படுத்த ஒரு நிரந்தர அமைப்பை – வாரியமோ, செயல்திட்டமோ (ஸ்கீம் ) ஏற்படுத்தவேண்டியது மத்திய அரசின் கடமை.
இந்திய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிப்போம்!
இந்த நிலையில் தமிழகம் என்னென்ன செய்யலாம்?
உரிமைக்காகப் போராடுவோம். கழகங்களும் கண்மணிகளும் அந்த வேலையைச் செய்யட்டும்.
திட்ட வல்லுனர்கள், கிடைக்கும் தண்ணீரை எப்படித் திறமையாக உபயோகப்படுத்தலாம் என்று திட்டமிடட்டும்.
வேளாண் விஞ்ஞானிகள், குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்று கண்டுபிடிக்கட்டும்.
விவசாயப் பெருமக்கள், எந்தப் பயிர்களை வளர்த்தால் நாட்டுக்கும் தங்களுக்கும் நல்லது என்று தீர்மானிக்கட்டும்.
பொதுமக்களும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு தங்கள் உணவுப்பழக்கங்களையும் மாற்றிக்
கொள்ளவேண்டும்.
ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் இல்லை இது.
ஊர் கூடிப் போற்ற வேண்டிய தெய்வம் நீர்.
நீரைப் போற்றுவோம்!
ஒரு விஞ்ஞானக் குறும்படம்
வலி – சுந்தரராஜன்
கோகிலத்துக்கு அந்த ஐ சி யு சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. மார்பில் ஒரு வண்டி சரளைக்கல்லைக் கொட்டியது மாதிரி தொடர்வலி. உடம்பின் மற்ற பாகங்களிலெல்லாம் ரணமயம். தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு கணுக்களிலும் அணுஅணுவாக மரணவேதனை தெறித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வலியெல்லாம்மீறி, சிரிப்புமட்டும் குபுக்குபுக் என்று தண்ணீரில் எழும்பும் காற்றுக் குமிழிபோல வந்துகொண்டிருந்தது. அது தொண்டைக்குழியில் ஆரம்பித்து வாய்க்குள்ளேயே முடிந்துவிடுகிறது. வாயைவிட்டு வெளியே வரவில்லை. சிரிப்பும் சரி, துக்கமும் சரி அவள் வாயைவிட்டு வெளியேவந்ததில்லை. அதுதான் அவளது 92 வயதின் சாதனையா? அதில்தான் இருக்கிறதா அவள் வாழ்க்கையின் ரகசியம்?
கோகிலா மெல்லக் கண்ணை விழித்துப் பார்த்தாள். வெளிச்சம் கண்ணைக் கூசியது. கண்ணை இடுக்கிப் பார்த்தாள். சில மாதங்களாகக் கையைப் புருவத்துக்கிட்டேவைத்து இடுக்கிப் பார்த்தால்தான் மனிதர்கள் வருவது தெரிகிறது. அதுவும் மங்கலாகத்தான் தெரியும். வாய் கொஞ்சம் கோணலாகப்போய் ஏழெட்டு வருஷம் இருக்குமா? மேலேயே இருக்கும். பேச்சு பரவாயில்லை . பேசமுடிகிறது. அது மற்றவர்களுக்கும் புரிகிறது. சாப்பிடுவதற்கு அவள்படும் கஷ்டம் அவளுக்குத்தான் தெரியும். நாக்கு மட்டும் இப்படி அப்படி அலையும். மூக்குக்குக் காற்றை லேசாக இழுத்துவிடுவதே கஷ்டமாக இருக்கிறது. வாசனையையும், நாற்றத்தையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிற சக்தியெல்லாம் அதற்கு எப்பொழுதோ போய்விட்டது.
எது எப்படி இருந்தாலும் கோகிலத்துக்குக் காதுமட்டும் சரியான பாம்புக்காது. சுத்தமாகக் கேட்கும். மெல்லப் பேசினாலும் கேட்கும். சின்ன வயதில் தெருமுனையில் இருக்கிற பைப்பில் புஸ்ஸுன்னு காத்துச் சத்தத்தோடு தண்ணி வருகிற சத்தம் முதலில் அவளுக்குத்தான் கேட்கும். தோட்டத்தில் மல்லிகைப் பூ கொடிகிட்டே நல்லபாம்பு மூச்சுவிடும் சத்தம்கூடக் கோகிலத்துக்கு மட்டும்தான் கேட்கும்.
தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பது ஒருமாதிரிப் புரிந்தது. அது இரவா பகலா என்பது தெரியவில்லை. என்னவாக இருந்தால் என்ன? யாரையும் பக்கத்தில் காணோம். எங்கோ சற்றுத்தள்ளி நர்ஸ் விடும் குறட்டைச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மூக்குக்குள்ளே ஒரு குழாய். அதன் வழியே ஏதோ ஒன்றை ஊற்றுகிறார்கள். அவள் மூச்சுவிடும் சத்தம் அவள் காதுக்கே கேட்கிறது.
மீண்டும் மீண்டும் சிரிப்பு அலைமாதிரி வந்துகொண்டே இருந்தது. அந்த சிரிப்பு அலைகளின் ஊடே அவள் வாழ்க்கைக்கதை நிழற்படமாக, திரைப்படம்போல விரிந்தது. சிரிப்பில் ஒரு வலி இருக்க முடியுமா? இருக்கிறதே! ஒவ்வொருமுறை அளவில்லாத சந்தோஷத்தில் சிரிக்கும்போது அவளுக்குத் தாங்கமுடியாத வலி வரும். மாதவிடாய் காலத்தில் வரும் வலியைப்போல. பிரசவ காலங்களில் ஏற்படும் இடுப்பு வலியைப்போல. இது பெண்களுக்குமட்டும் வரும் வலி என்று முதலில் எண்ணிக்கொண்டாள். ஆனால் மற்ற பெண்களுக்கு அந்தமாதிரி வலி வராததால் இந்த வலி தனக்குமட்டும் இறைவன் தனியாகக் கொடுத்த வரம் என்று நினைத்துக்கொண்டாள்.
முதல்முறையாக அவளுக்கு அந்த வலி வந்ததை அவளால் ஆயுசுக்கும் மறக்கமுடியாது. அவளுக்குத் திருமணமாகி ஐந்து வருஷம் கழித்து சாந்திக் கல்யாணம் செய்துவைத்தார்கள். கல்யாணமாகியும் பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்த கோகிலத்துக்கு அந்த சாந்திக் கல்யாணம் முதலில் பெரியதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவள் கணவன் புது மாதிரி விளையாடியபோதுதான் அவளுக்குத் தாங்கமுடியாத சிரிப்பும் சொல்லத்தெரியாத வலியும் ஒரேசமயத்தில் வந்தன.
அதன்பின் பல வித்தியாசமான வலிகள் – இந்தியா சுதந்திரம் அடைந்த அதே இரவில் முதல் பிள்ளை பிறந்தபோது, அடுத்து அடுத்து இரண்டு பெண்கள் பிறந்தஉடனே இறந்தபோது, கணவன் அவளைவிட்டு ஓடிப்போனபோது, தனி ஒருத்தியாக இட்டிலிக்கடை வைத்துப் பையனைப் படிக்க வைத்தபோது, அவள் தனிமையைப் பயன்படுத்திக்கொள்ளச் சில தெருநாய்கள் அவளைப் பார்த்தபோது, சோற்றுக்கு வழியில்லாமல் பல நாட்கள் தண்ணியையே குடித்துவிட்டுப் படுத்தபோது, வெள்ளத்தில் குடிசை இடிந்து விழுந்தபோது, பத்துவயதுப் பையனை ‘ஸ்வீகாரமாகத் தா’ என்று ஊர்ப் பெரியமனிதர் கட்டாயப்படுத்தியபோது, பையன் வேலைக்குப் போகிறேன் என்று அவளுக்குத் தெரியாமலேயே மலேயா போனபோது, தான் தனிமரமாகி விட்டோமோ என்று நாற்பது வயதில் தவித்து, அந்தத் தவிப்பின் உச்சியில் அரளிவிதையைத் தின்று தற்கொலைக்கு முயன்றபோது வலிகளின் எல்லாப் பரிணாமத்தையும் அனுபவித்தாள். ஆனால் ஒவ்வொரு வலியும் சிரிப்பில்தான் முடியும். கடவுளிடம் தனி வரம்பெற்றவளாயிற்றே!
அதுவரை வலிகளின் அடிச்சுவட்டிலேயே நடந்துவந்திருந்த அவள் கால்கள், அவளுடைய நாற்பத்திரண்டாவது வயதில்தான் முதன் முறையாக ஒரு இடத்தில் நின்றது. அது அவள் வாழ்க்கைக்குப் புதிய பாதையைக் காட்டியது.
****************
ஐ சி யுக்குள் டாக்டர்கள் நுழைவதுபோல இருந்தது. தூங்கிக்கொண்டிருந்த நர்ஸ் விழித்துக்கொண்டு அவர்களை அழைத்துக்கொண்டு கோகிலம் படுத்திருக்கும் படுக்கைக்கு வந்தாள். கோகிலத்தின் கண்கள் மூடியிருந்தாலும் காதுகளில் அவர்கள் பேசுவது விழுந்தது. பெரிய டாக்டர் மற்றவர்களுக்கு இந்தக் கேஸை விவரித்துக்கொண்டிருந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்திருக்கின்றன. அதனால் அவளது நினைவு பாதிக்கப்பட்டிருக்கும். அவளால் எதையும் புரிந்து கொள்ளமுடியாது என்பதை அழகான ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தார். இன்னும் இருபத்துநான்குமணி நேரத்தில் அவள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடும். ஆனால் அவளை எப்படியாவது வெண்டிலேட்டரில் வைத்தாவது உயிருடன் வைத்திருக்கவேண்டியது மிகமிக முக்கியம் என்றார். அதற்குக் காரணம் நாட்டின் பிரதமமந்திரி அவரைப் பார்ப்பதற்கு மறுநாள் வருகிறார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
தன்னால் எதையும் புரிந்துகொள்ளமுடியாது என்று பெரிய டாக்டர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னது கோகிலத்துக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஏன் என்றால் டாக்டர் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் அவள் காதுக்குக் கேட்டன. அவற்றின் அர்த்தமும் நன்றாகப்புரிந்தது.
போனமாதம் அவளுக்குப் பிரதமமந்திரியின் செயலாளரிடமிருந்து போன் வந்தது. இன்னும் சிலநாட்களில் கோகிலத்தின் ஐம்பது ஆண்டு சேவையைப் பாராட்டி அவளுக்கு உலகின் முதன்மையான ‘மதர் தெரசா’ விருது வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் அவளுக்கு மூச்சு முட்டுவதுபோல இருந்தது. தலை கிறுகிறுவென்று சுத்துவதுபோல இருந்தது. தனக்கு இந்தப் பட்டம் பதவியெல்லாம் தேவையா என்ற எண்ணம்தான் அவளுக்குப் புதிய வலியைக் கொடுத்தது. இந்தமுறை வலியுடன் இணைந்த சிரிப்பு வருவதற்குள் மயங்கி விழுந்துவிட்டாள்.
அதிலிருந்து அந்த ஆஸ்பத்திரியில் ஐ சி யூவில்தான் இருக்கிறாள். இந்தியாவில், அதுவும் டெல்லியில் மிகச் சிறந்த மருத்துவமனை அது. அவளுக்கு என்னமோ பிரதமர் வருவதற்குள் தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்று தோன்றியது. பிரதமருக்குப் பதிலாக ஓடிப்போன தன் கணவனோ, மகனோ, அல்லது பிறந்த உடனே செத்துப்போன மகளோ வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் நினைவு அவளுக்குப் பழைய வலியை ஞாபகப்படுத்தியது. சிரிப்பும் இலேசாக வருவதுபோல் இருந்தது. மரணவலி என்பது அப்படித்தான் இருக்குமோ? அதைத்தான் கோகிலம் பலமுறை அனுபவித்தவள் ஆயிற்றே!
கோகிலம் சிரித்துக்கொண்டே முதன்முறையாக வலியின்றி செத்துப் போனாள்.
மறுநாள் இந்தியா மற்றும் உலகப் பத்திரிகைகள் அனைத்திலும் அவளது வாழ்க்கை வரலாறு விவரமாக நான்குபத்திகளில் வந்திருந்தது.
‘கோகிலா மா‘ என்று ஆயிரக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கோகிலம் தனது நாற்பத்திரண்டாவது வயதில் ஆயாவாக செஷையர்ஹோமில் வேலைசெய்ய டெல்லிக்கு வந்தார்.
யார் அவரை அங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரியாது. ஆனால் அது நாட்டுக்கே பயனுள்ள ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவைசெய்வதே தன் வாழ்க்கையின் இலட்சியமாக அவர் எடுத்துக்கொண்டார்.
சில வருடங்களில், தன் வாழ்க்கையின் பலன் மற்றவர்களுக்குச் சேவைசெய்வதே என்று உணர்ந்துகொண்டார். டெல்லியிலேயே மற்றொரு பெரிய முதியோர்இல்லத்தில் சேவைசெய்ய அழைத்தார்கள். அங்கு சென்றபிறகு அவரது வாழ்வின் மாற்றங்கள் அவருக்கே ஆச்சரியத்தைக்கொடுத்தன என்று அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தபோது பத்திரிகையாளார்களிடம் பேசும்போது ‘கோகிலா மா’ கூறினார்.
எத்தனை தொழுநோயாளிகளுக்கு அவர் அன்னையாக இருந்திருக்கிறார்! புற்றுநோயால் துவண்டுகிடக்கும் மனித உடல்களின் துயரங்களைத் துடைத்தது ‘கோகிலா மா’வின் அன்புக்கரம். ஊனமுற்ற பிள்ளைகளைத் தன் தோளிலும் மடியிலும் தூக்கிவைத்துக் கொஞ்சும் வழக்கம் அவருக்கு மிகவும் பிடித்தது.
அந்த முதியோர் இல்லத்தை நிர்வாகிகள் தொடர்ந்து நடத்த முடியாமல்போய் நிறுத்திவிடலாம் என்று நினைத்தபோது ‘கோகிலா மா’ தன்னந்தனியாக அதை நடத்தியே தீருவேன் என்று முன்வந்தபோது அனைவரும் அதிசயப்பட்டனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத, கிராமத்திலிருந்து வந்த, ஒரு பெண்ணால் முதியோர் மற்றும் ஊனமுற்றவர் இல்லத்தைத் திறம்பட நிர்வகிக்கமுடியுமா என்று எண்ணினர். ஆனால் சேவைசெய்வதில் அவருக்கு இருந்த உண்மையான ஆர்வம் அவரால் இதுவும் முடியும், இன்னமும் முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
அதைப்போன்ற தொண்டுநிறுவனங்களை நாட்டின் பலபகுதிகளில் நிறுவினார். அவரது சேவைநிறுவனங்களில் ‘அன்பு பாசம் பரிவு ‘ இவை மூன்று மட்டும்தான் இருக்கும். பரிவைத்தேடும் எல்லா மனிதருக்கும் ‘கோகிலா மா’வின் நெஞ்சில் இடம் இருந்தது.
தனக்கே சேவைசெய்ய ஆட்களைத்தேடும் 92வது வயதிலும் மற்றவர்களுக்குச் சேவை செய்துவந்த ‘கோகிலா மா’விற்கு ‘’மதர் தெரசா’ பட்டம் என்ன ‘பாரத ரத்னாவே’ கொடுக்கலாம்.
உலகத்தின் ஒவ்வொரு கோடியிலும் இருக்கும், பிறப்பால், மனதால், உடலால், வியாதியால் ஊனமுற்றுக் காயப்பட்டுத் துன்பத்தில் துவளும் மனிதமனங்களுக்கு, ஆயாவாக, அன்னையாக, தெய்வமாக இருந்த ‘கோகிலா மா’ தனது 92 வயதில் சிரித்தமுகத்துடனே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
அந்தச் சிரித்தமுகத்திற்குப் பின்னால் இருந்த வலிகள் யாருக்கும் தெரியாது.
அவருக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தாலும் நரகத்தில் தவிக்கும் பாவிகளுக்குச் சேவைசெய்ய அவர் நரகத்தையே தேர்ந்தெடுக்கக்கூடும்.
அதுதான் ‘கோகிலா மா’ .