குவிகம் குழுமம் – குவிகம் மின்னிதழ்

குவிகம் இலக்கியவாசல், அளவளாவல், பதிப்பகம், ஒலிச்சித்திரம் , குறும் புதினம் , ஆவணப்படம்

தலையங்கம்

1எடிட்

 

Image result for தமிழக அரசியல்

Image result for தமிழக அரசியல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து மிதமான தட்ப வெட்ப  நிலை  உருவாகி வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்டது. இந்த வருடம் 98 சதவீதம் மழை இருக்கும் என்று வானிலை ஜோதிடர்கள்  சொல்லுகிறார்கள்! பலிக்குமா தெரியவில்லை !

அரசியலில்?

தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்து தனது விளையாட்டைத் தொடங்கிவிட்டார். சதுரங்க வேட்டை ஆரம்பமாகிவிட்டது. அரசியல் சேவகர்கள் அதற்குத் தகுந்தபடி இங்கும் அங்கும் நட(ன)மாட ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதாவின் கட்டைவிரலுக்குக் கீழே இருந்து  பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்த  எம் எல் ஏக்கள், மந்திரிகள் இன்று இபிஸ், ஓபிஸ், தினகரன் என்று மூன்று சக்கர  சர்க்கஸ் விளையாட்டில் ‘பார்’ ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தான் கீழே விழாமல் இருக்க எந்தக் கையை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளத்  தயாராய் இருக்கிறார்கள்.   ‘நான் ஈ’ என்று  சொல்வது  போல  ‘எங்கே சர்க்கரை?’ என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினோ, அண்ணன் எப்போ விழுவான் திண்ணை   எப்போ காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கோ குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் டச் அப் வேலை செய்யவே நேரம் போதவில்லை

பி ஜே பியோ ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த அக்கன்னா (ஃ) –  அதிமுக என்ன செய்யப் போகுதோ என்று நூல் விட்டுக் கொண்டிருக்கிறது.

பா மு காவுக்கும் , விஜயகாந்த் கட்சிக்கும் பகல் கனவு காணவே நேரம் போதவில்லை

நாட்டு நடப்பு, நிர்வாகம் இவற்றைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

மக்களும்  ஜல்லிக்கட்டை விட்டுவிட்டு ஜி‌ டி பி , ஜி‌ எஸ் டி, மாட்டிறைச்சி, டாஸ்மார்க் , நீட் தேர்வு என்று பிசியாகிவிட்டார்கள்.

படிப்பாளிகள் இணைய தளங்களில் மீம்ஸ் போட்டுவிட்டு அப்பீட் ஆகிவிடுகிறார்கள் !

ரஜினியும் தன் பங்குக்கு ‘ம்மேய்ய்ய்’  … என்று வாய்ஸ் கொடுத்துக் கொண்டு 2.0க்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.

நாமும் தலையங்கம்  எழுதி விட்டு  சோம்பலை முறித்துக்  கொள்வோம்!

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தான் !!

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

இதோ குப்தர் வருகிறார் ! பராக்! பராக் ! 

Image result

 

Indian-style Kushan embossed and chased silver dish showing a yaksha drinking, 3rd or 4th century ce, Gupta period, found near Tank, northwestern Pakistan; in the British Museum. Diameter 25.15 cm.

பகலவன் உலகை ஒளியூட்டுமுன்…
அது முதலில் அடிவானத்திலிருந்து சிவப்புக் கம்பளம் வீசுகிறது.
இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் ஆட்சியில் 300 ஆண்டுகள் சூரியனைப்போல் ஒளிவீசியது.
சந்திரகுப்தர்-1, சமுத்திரகுப்தர், சந்திரகுப்தர்-2 என்று மாமன்னர்கள் நாட்டை பொற்காலமாக்கினர்.
ஆனால் அதற்கு அடித்தளமிட்டு சிவப்புக் கம்பளம் வீசியது யாரென்று சற்று பார்ப்போம்.

முதலில் ஸ்ரீகுப்தன்!

குஷான பேரரசில் பெரு நிலக்கிழாராக இருந்த ஸ்ரீகுப்தன் தற்கால பிகார் மாநிலமான மகதத்தில் கி பி 240-இல் குப்தப் பேரரசை நிறுவி, கி பி 280 முடிய ஆண்டான்.

ஸ்ரீகுப்தன்… சரித்திரப்பாடத்தில் ஆர்வம் கொண்டவன் போலும்!
முன்னாளில் பிம்பிசாரன் செய்தது போலவே ..
லிச்சாவி நாட்டு இளவரசியை மணந்து மகதத்தை சீதனமாகப் பெற்று மகத நாட்டை விரிவு படுத்தினான்.

வைணவ மதத்தைச் சேர்ந்திருந்தாலும் – சீனாவிலிருந்து வந்த புத்த துறவிகளுக்கு நாளந்தா அருகிலுள்ள மிருகஷிகவன என்ற இடத்தில் ஒரு கோவிலைக் கட்டிக் கொடுத்தான்.

பின்னாள் வந்த இரண்டாம் சந்திரகுப்தனின் மகள் பிரபாவதி குப்தா ஸ்ரீகுப்தனை ‘மகாராஜா ஸ்ரீகுப்தன்” என்றும் குப்த சாம்ராஜியத்தை நிறுவினவர் (ஆதி ராஜா) என்றும் ‘புனே கல்வெட்டுகளில்’
குறித்திருக்கிறாள்.

ஸ்ரீகுப்தரின் மகன் கடோற்கஜன் குப்த நாட்டை கி பி 280 முதல் 319 முடிய ஆண்டான்.

(கடோற்கஜ குப்தன்)

இவர்களது தலைநகரம் – பாடலிபுத்திரம்.
அது … பிம்பிசாரன் காலத்திலிருந்து மௌரியர்கள் காலம் கடந்து பல சாம்ராஜ்யங்களின் மாபெரும் தலைநகரம்.

ருத்ரதாமன் தொடங்கிய சம்ஸ்கிருத மொழி குப்தர்களின் ஆட்சி மொழி ஆயிற்று.

கடோற்கஜ குப்தனின் மகன் முதலாம் சந்திர குப்தன்…
மகாராஜாதிராஜா என்று பட்டம் சூட்டப்பட்டவன்.
மனைவி – குமாரதேவி.
அவள்.. லிச்சாவி நாட்டு இளவரசி.

மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்…
அது சில மகாராஜாக்களை மகாராஜாதிராஜாவாக ஆக்குகிறது!!

குப்தர் பரம்பரை அப்போது தான் பிறந்திருந்தது.
ஆனால் லிச்சாவி பரம்பரை பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்று விளங்கியது.

மணாளன் மன்னாதி மன்னனாக இருக்கும் போது …
மனைவியர் பெரும்பாலும் ‘மஹாராணி’ என்று மட்டுமே பெயர் எடுப்பர்.
அதில் வெகு சில ராணிகளே அரசியலிலும் பெயர் பெற்றவர்கள்.

குமார தேவி இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவள்.
பெரும் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டவள்!

நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி – குமாரதேவி!
உலக சரித்திரத்திலே இது முதல் முறை!!

முதலாம் சந்திர குப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் சமுத்திர குப்தர் தன்னை பெருமையுடன் ‘லிச்சாவி தகித்ரா’ என்று அழைத்துக் கொண்டு – தனது தாய் வழியைப் பெருமைப் படுத்துகிறார்.
‘குப்தன் மகன்’ என்று கூறாமல் ‘லிச்சாவி மகளின் மகன்’ என்று தன்னைக் கூறி மகிழ்கிறான்.

இப்படியாக… முதலாம் சந்திரகுப்தன் குப்தப்பேரரசை துவக்கிவைத்தான்.

இங்கு ஒரு கதை விரிகிறது.

சந்திரகுப்தனுக்கு இரண்டு மகன்கள்.
பெரியவன் கச்சா!
சிறியவனின் பிற்காலப் பெயர் சமுத்திரகுப்தன்!
சமுத்திரகுப்தன் மாவீரன்.
இருபத்தைந்து வயது கொண்ட வாலிபன்.
உடல் வலி கொண்ட வாட்டசாட்டமான பலசாலி.
சந்திரகுப்தன் அடைந்த போர் வெற்றிகளுக்கு சமுத்திரகுப்தனின் வீரமே காரணமாக இருந்தது.
அவன் உடலில் போர்க்களத்தில் பெற்ற தழும்புகள் நூற்றுக்கும் மேலானவை.
(பொன்னியின் செல்வர் ரசிகர்களே! இவன் அண்ணன் பழுவேட்டரையின் அண்ணன்!!)
சந்திரகுப்தன் சமுத்திரகுப்தனைப் பெரிதும் விரும்பினான்.

சந்திரகுப்தன் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்…
தனக்குப் பின் யார் அரசனாவது என்று முடிவு செய்யும் நேரம்..

அரசவையைக் கூட்டினான்.
மந்திரிகள் குழுமியிருந்தனர்.
மன்னரின் ஆலோசகர்கள், தளபதிகள் தங்கள் இருக்கையில் இருந்ததனர்.
இளவரசர்கள் மன்னன் அருகே தங்கள் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

சந்திரகுப்தன் மெல்ல எழுந்தான்.
‘அனைவருக்கும் வணக்கம்!
இத்துணை நாள் என்னுடன் பயணித்து இந்த குப்தராஜ்யத்தை உருவாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த குப்த ராஜ்ஜியம் – மேலும் பல நாடுகளை வென்று – மாபெரும் சாம்ராஜ்யமாக வர வேண்டும்.
பின்னால் வரும் குப்த மன்னர்கள் கலை, கல்வி, இலக்கியம், அறிவியல் என்று பல துறைகளிலும் இது வரை நாம் காணாத சாதனை படைக்க வேண்டும்.

மௌரியர்கள் ஆட்சியை விட சிறப்பாக நமது ராஜ்ஜியம் இருக்கவேண்டும்.
அவர்கள் மக்களுக்கு நிகழ்த்திய கொடுமைகளை குப்தர்கள் நிகழ்த்தகூடாது.
நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் என்றும் நிலவ வேண்டும்.

இது இந்த பார்த்திபனின் கனவு!
இதை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அடுத்து வரும் மன்னர் கரங்களில் இருக்கிறது.
நான் மன்னன் பதவியிலிருந்து விலகும் நாள் வந்து விட்டது.
எனக்குப்பின் குப்த மன்னனாக நான் அறிவிப்பது….”

இங்கு ஒரு மௌனம் …

அனைவரது இதயமும் அந்த மௌனத்தில் நின்று விட்டது…

‘சமுத்திர குப்தன்’- என்று கூறினான்.

சபையில் அனைவரும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

மூத்தவன் கச்சாவின் முகம் வெகு பயங்கரமாக மாறியது.
இதை அவன் எதிர்பார்த்திருக்கிறான் என்று தோன்றியது.
அரசவையில் தன் ஆட்களை அவன் குவித்திருந்தான்.
‘தந்தையே.. மூத்தோன் இருக்க இளையோன் அரசாள்வது என்பது நடக்காது. இந்த அரியாசனம் எனது”
அவனது ஆட்கள் மன்னரை அரியணையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
கச்சா அரியணையில் அமர்ந்தான்.
‘இன்று முதல் நானே குப்த மன்னன்’ என்று பிரகடனம் செய்தான்.
அவையோர் திக்பிரமையில் உறைந்து நின்றனர்.
கச்சாவின் வீரர்கள் சமுத்திரகுப்தனை நெருங்கு முன் அவன் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.
கச்சாவின் வீரர்கள் சமுத்திரகுப்தனைத் தேடிக்கொண்டிருந்தனர்.
கச்சாவின் சட்டவிரோதமான அரசு தொடர்ந்தது.
கச்சா தன் பெயரில் தங்க நாணயங்கள் வெளியிட்டான்.

மாவீரன் சமுத்திரகுப்தன் விரைவில் படை திரட்டி- கச்சாவை வென்று – குப்த ராஜ்யத்திற்கு மன்னனாக முடி சூட்டிக்கொண்டான்.

இந்தியாவின் பொற்காலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

இனி நடப்பது விரைவில் காணுவோம்…

 

 

எமபுரிப்பட்டணம் -(எஸ் எஸ் )

 

IMG_6692

சூரியதேவனுக்குத் தன் பராக்கிரமத்தைப்பற்றி , தன் அழகைப்பற்றி,  தனக்குத்  தேவ உலகில் கொடுக்கப்படும் மரியாதையைப்பற்றி எப்போதும் ஒருவித கர்வம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.  தன்னைச் சுற்றிவரும் கிரகங்கள், தன்னைச் சார்ந்துவரும் மற்ற வானுலக பூலோக அமைப்புகள், தன்னிடமிருந்து வெளிச்சம்பெறும்  கிரகங்கள் என்று எல்லாமே தன்னுள் அடக்கம் என்ற எண்ணம் சூரியதேவனை எப்போதும் ஓர் உயர்ந்த பீடத்திலேயே வைத்திருக்கும்.

இன்று சூரியன், விஷ்வகர்மாவின் மகள் ஸந்த்யாவைப் பார்த்து மயங்கியது உண்மைதான்.  அந்த அழகுப் பதுமையுடன் சற்றுமுன் கலந்து உறவாடியதைப் பற்றி எண்ணும் போதெல்லாம்    அவன் நெஞ்சிலும் உடலிலும் இன்ப  அலைகள் பெருகிப் பிரவாகம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் ஸந்த்யாவிற்காகத் தரையில் இறங்கியதால் தன்னை இந்தத் தேவதச்சர் எப்படிக் குறைபாடு உள்ளவன் என்று கூறமுடியும் ? ‘என்னிடம்  குறைபாடு இருக்கிறது என்ற எண்ணமே தவறல்லவா? ‘ என்று சூரியதேவன் ஆணித்தரமாக நம்பியதின் விளைவாக உலகங்களைப் படைக்கும் விஷ்வகர்மாவைச்  சுட்டெரிக்கும் கண்களால் நோக்கினான்.

விஷ்வகர்மாவுக்கு சூரியதேவனின் கோபக்கனல்  புன்னகையையே வரவழைத்தது. எந்த ஆண்பிள்ளைக்கும்  கையும் களவுமாகப் பிடிபடும்பொழுது அவனுக்கு வரும் கோபத்தின் அளவிற்கு அர்த்தம் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன? அதுவும் பெண்ணின் தந்தையிடமே பிடிபட்டுவிட்டோமே என்ற ஆத்திரமும் அவனிடம் சேர்ந்திருக்கிறது.   அவை எல்லாவற்றையும்விட ‘நான் அவனைக் குறைபாடு  உள்ளவன் என்று சொன்னது அவனை அதிகம் பாதித்திருக்கிறது’ என்பதை உணர்ந்த விஷ்வகர்மா அவனைச் சமாதானம் செய்யப்புறப்பட்டார்.

‘சூரிய தேவனே ! நீ தான் என் மகள் ஸந்த்யாவிற்குத் தகுந்த கணவன் என்பதை நான் அவள் பிறந்த  உடனேயே தீர்மானம் செய்துவிட்டேன். நீயே அவளைத்  தேடிவரும் காலம் வரும் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவளைப் பார்த்ததும் நீ நேரே என்னிடம் வருவாய், நானும் உன் கவுரவத்திற்கு ஏற்றபடி மிகச்  சிறப்பாக உங்கள் திருமணத்தை முடிக்கவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். பார்த்ததும்   காதல், அதுவும் உடனே  காந்தர்வத் திருமணத்தில்   முடிவடைந்துவிட்டது என்றால்    இதற்கு மேல் நான் என்ன சொல்ல? இருப்பினும் ஸந்த்யாவின் தேக ஸௌந்தர்யத்தில்  ஒரு மந்திர முடிச்சு இருக்கிறது.  அதைச் சரிசெய்யும் காலமும் வந்து விட்டது. ” என்று விஷ்வகர்மா தனது இரண்டாவது அஸ்திரத்தையும் வீசினார் சூரியதேவன் மீது.

விஷ்வகர்மாவின் இந்த இரண்டாவது கணையும் சூரியனைப் பாதித்தது. அவன் கண்களில் சஞ்சலத்தின் ரேகை படிய ஆரம்பித்தது. அதைக் கண்ணுற்ற விஷ்வகர்மா ‘சூரிய தேவா! கலங்க வேண்டாம்! நாம் அரண்மனைக்குச் சென்று இதுபற்றி முடிவெடுக்கலாம்!   அந்தத் தங்கப் பொய்கையில் இருவரும் முழுகி விட்டு நம் அரண்மனைக்கு வாருங்கள். உங்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்ய நான் முன்னே செல்கிறேன். உங்கள் இருவருக்கும் என் ஆசிகள்! ” என்று கூறிவிட்டு முன்னே நடந்தார் விஷ்வகர்மா !

IMG_1106

தந்தை நகர்ந்ததும் மறைவிடத்திலிருந்து ஸந்த்யா வெளியே  வந்தாள். தந்தையின் வார்த்தைகள்  அவளுக்கு அமிர்தம்போல் இனித்தன. சூரியதேவனின் கால்களில்  விழுந்தாள். சூரியனும் அவளை அப்படியே வாரிஎடுத்து அணைத்துக் கொண்டான். இருவருக்கும் இடையே வாய்ச்   சொற்கள் தேவையில்லாமல் இருந்தன. அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டுத்  தங்கப் பொய்கையை  நோக்கி நடந்தான். அவன் முதலில் தண்ணீரில் இறங்கிப் பிறகு மெதுவாக ஸந்த்யாவிற்கும் கைலாகு கொடுத்துத் தண்ணீரில்  இறக்கினான். இருவரும் தண்ணீரில் ஒரே சமயம் மூழ்கினார்கள். சூரியன் முதலில் நீரிலிருந்து வெளியே வந்தான். முதல் நாளே அவனை மயக்கிய ஸந்த்யாவின் பொன்னிற முதுகு தண்ணீருக்குள்ளிருந்து மெதுவாக வரத் தொடங்கியது.  

அதன் அழகைப் பருகியவண்ணம் இருந்த சூரியன் கண்களில் ஏதோ ஒன்று புதியதாகத் தென்பட்டது. ‘ அது என்ன அவள் முதுகில் சிவப்பாக .. ஒரு திட்டு போல.. முதல் நாள்  ரதத்திலிருந்து பார்த்த போதும்  ஏன்  இன்றைக்குப் பார்த்த போதும் , ஏன் அதற்கும் மேலாகச் சற்று முன் இன்ப உறவில் ஈடுபட்டிருந்த சமயத்திலும் அது தென்படவில்லையே! ஒருவேளை ஆசை மயக்கத்தில் கவனிக்கத் தவறிவிட்டேனா? நிச்சயமாக இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் அவன் கண்களின் கூர்மையைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் என்றைக்கும் இருந்ததில்லை.  இருக்கப்  போவதும் இல்லை !

அப்படியானால் அது என்ன? பொன்னில் செம்பு கலந்தாற்போல அது என்ன சிறிய திட்டு?

மெல்ல எழுந்தாள் ஸந்த்யா. அவள் முகத்திலும்  பொட்டு வைத்தது போல அதே மாதிரி சிறிய சிவந்தத் திட்டு ! அது அவள் அழகுக்கு அழகூட்டுவதாக  இருந்தாலும்  அவன்  கண்களை ஏனோ அது உறுத்தியது.  “ஸந்த்யா! இது என்ன சிவந்த திட்டு முதுகிலும் முகத்திலும் ?” என்று அவன் கேட்டதும் அவள் திடுக்கிட்டு  ” இருங்கள் இன்னும் இரு முறை முழுக   வேண்டும்” என்று சொல்லி அவன் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இரண்டாவது முறை நீரில் முழுகி மெதுவாக எழுந்தாள். ‘என்ன ஆச்சரியம்! முதுகில் இருந்த அந்தச் சிவப்புத் திவலை மறைந்து விட்டதே! முகத்திலும் அதைக் காணவில்லையே? மூன்றாவது முறை அவள் நீரில் மூழ்கினாள். மூழ்கியவள் மூழ்கியவள்தான் . எழுந்திருக்கவே இல்லை ! அப்படியே மறைந்து விட்டாள்.

சூரிய தேவன்  திடுக்கிட்டான். அதுமட்டுமல்லாமல் அந்தப் பொய்கையின் நீரும் மறைந்து விட்டது. சூரியனின் உடம்பிலிருந்த நீர்த் திவலைகளும் மறைந்து விட்டன.  அவன் உடைகளும் மாறியிருந்தன. அவன் கண்ணெதிரே பொய்கை இருந்த இடத்தில் ஒரு சிறு விமானமும் காத்துக்கொண்டிருந்தது.

விஷ்வகர்மாவின் சித்து விளையாட்டு ஆரம்பித்துவிட்டதா?

(முதல் பகுதி தொடரும் – இரண்டாவது பகுதி ஆரம்பம்)

 

 

இரண்டாம் பகுதி ……………………….

Related image

 

” அண்ணா ! இது என்ன சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா? “

ஏன் இப்படிக் கேட்கிறாய்  எமி? நீ சென்றால் நரகபுரியும் சொர்க்கமாக மாறிவிடும் என்பது உண்மை தான்! உன் கரம் பட்ட இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறிவிடும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த யமுனை   நதி அல்லவா  நீ? அப்படி  ஒரு வரத்தையல்லவா நம் தந்தை வேண்டிப்பெற்றிருக்கிறார்!”

” ஆனால் அண்ணா ! நான் நடந்து வரும்போது  சில இடங்களில்    நரகத்தின் காட்சிகளைக் கண்டேன். கொதிக்கும் எண்ணையின் வாசத்தை உணர்ந்தேன். சாட்டையின் சவுக்கடிகள் சத்தமும் கேட்டது. அவை உண்மையா அல்லது என் பிரமையா?”

” ஆகா! உன் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது.  நீ பார்த்தது உண்மைதான். அது சொர்க்கத்தில் இருக்கும் நரகத்தின் ஜன்னல். நிழல். மாயை. சில இடங்களில் மட்டும் இது தெரியும்.  சொர்க்கபுரி வாசிகளுக்கு அவ்வப்போது நரகத்தின் காட்சி தெரியவேண்டும். உணவை உண்ணும்போது நம்மை அறியாமல் கார மிளகாயைக் கடிக்கவேண்டும். மலர்ப்படுக்கையில் துயிலும்போது சிறு முள் முதுகைப் பதம் பார்க்க வேண்டும். பாடல் கேட்கும்போது சிறிது அபசுரம் தட்ட வேண்டும். அப்போதுதான் நாம் பெற்றிருக்கும் பொருளின் மதிப்பு நமக்குப் புரியும்.  அதற்காகத்தான் இந்த நிழற்காட்சிகளைப் படைத்திருக்கிறோம் . அதைப்போல நரகாபுரி மக்களுக்கும் சொர்க்கத்தின் நிழற்படம் தெரியும் “

” நன்றாகப் பேசுகிறாய் அண்ணா? எமபுரியில் நீ அதிகம் பேசுவதேயில்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்!”

” உண்மை  எமி ! உன்னிடம்தான் நான் அதிகம் பேசுவதாக நானே உணருகிறேன். அதுமட்டுமல்லாமல் இன்று சொர்க்கபுரியில் ஒரு கூட்டத்தில் நான் பேசவேண்டும். “

“அது என்ன கூட்டம்? “

” தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஓர் இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். “

“என்னது? இலக்கியக் கூட்டமா? சொர்க்கத்திலா?  பூலோகத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்த ஆசை இன்னும்  விடவில்லையா? “

” அது  எப்படித்  தீரும் ? எத்தனைப்  பிறவிகள் எடுத்தாலும் மனிதர்களின் பாரம்பரியக் குணம் மட்டும் போகவே போகாது. கோபம், ஆசை, காமம், பேச்சு,   இசை, பாசம், புத்தி, பயம், சாதுரியம், போன்றவை அவன் ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும். இது தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் , கந்தவர்களுக்கும் பொருந்தும்.”

” புதுமையாக இருக்கிறது.  சொர்க்கவாசிகளுக்கே இவ்வளவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் நரக வாசிகளுக்கு இன்னும் அதிகமான குணங்கள் ஒட்டிக் கொண்டிருக்குமே? . அங்கே இந்த மாதிரி அமைப்புகளெல்லாம் கிடையாதா? “

” சொன்னால் நம்பமாட்டாய்! இங்கே இருப்பதைவிட  அங்கே இது போன்ற அமைப்புகளும் நிகழ்வுகளும் மிக மிக அதிகம். இன்றைய இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்க சொர்க்கபுரி எழுத்தாளர்களும் நரகபுரி எழுத்தாளர்களும் சேர்ந்தே வருவார்கள்.

“அதெப்படி அண்ணா?”

“இந்தக் கருத்து புரியவேண்டுமானால் உனக்கு இன்னொரு ரகசியத்தையும் சொல்லவேண்டும்.  சொர்க்கம் நரகம்  என்பது நீ நினைப்பதைப்போல இரண்டும் தனித் தனி இடங்கள் அல்ல. இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் சுவரும் உண்மையான சுவரும் அல்ல. இது இரண்டும் நான் பார்க்கும் பார்வையில்  தான் இருக்கின்றன. சித்திரகுப்தனுக்கும்  தர்மத்வஜனுக்கும் இந்தப் பார்வை உண்டு. இதை ‘மெய்நிகர்’ என்றும் சொல்வார்கள். அதாவது உண்மையைப் போல இருக்கும் ஆனால் உண்மை அல்ல. இதே இடத்தை நரகபுரியாக மாற்ற என் பார்வையைச் சற்றுத் திருப்பினால் போதும். நாம் நரகபுரியில் இருப்பதை நீ உணர்வாய். இதோ  பார் !”

“இது என்ன மாயம்? என் உடம்பு எரிவதைப் போல இருக்கிறதே? எங்கே போயிற்று சொர்க்கபுரியின் சுகந்த மணம் ? நான் யமுனை நதியாக மாறினால் தான் இந்தத் தீயின் ஜ்வாலையிலிருந்து என்னைக் காத்துக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதே?

” கவலைப்படாதே! நாம் நரகபுரிக்கு நாளைக்குத் தான் செல்கிறோம். இதோ நீ தொடர்ந்து வந்த சொர்க்கபுரி  ! அதோ தெரிகிறது பார் இலக்கியக்கூட்டம்.”

” ஆமாம்!  ஒரு சின்ன சந்தேகம்! இலக்கியவாதிகள் அனைவரும் சொர்க்கபுரியில் தானே இருப்பார்கள்?

” முதலிலேயே நான் சொன்னேன்  இந்தக் கூட்டத்திற்கு இரு சாராரும் வருவார்கள். ஆனால்  யார் சொர்க்க புரியில் இருக்கிறார்கள் யார் நரக  புரியில்  இருக்கிறார்கள் என்பது எங்களில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அதனால் இலக்கியவாதிகள் சொர்க்கபுரிவாசியாகவும் இருக்கலாம் நரகபுரிவாசியாகவும் இருக்கலாம்.”

” நீங்கள் இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்போகிறீர்கள்? “

“நான் மட்டுமல்ல, நீயும் பேசப்போகிறாய் !”

” நானா? “

கூட்டத்தைத் துவக்கி வைத்துப்  பேசப் போகிறவன் நான். நன்றி தெரிவித்துக் கூட்டத்தை முடிக்கப் போகிறவள் நீ “

“அது சரி! என்ன தலைப்பு? யார் தலைமை வகிக்கிறார்கள்? “

” தலைப்பு அக்கினிப் பிரவேசம்   தலைமை வகிப்பவர் ஜெயகாந்தன் “

” எனக்கு மட்டும் சொல்லுங்கள் அண்ணா ! இவர் எந்த புரியைச் சேர்ந்தவர். அப்போது தான் நான் நன்றி உரை கூறுவேன். “

” சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம் என்று சொல்வார்கள். ஆனால் தங்கையிடம் சொல்லலாம்”

சொன்னான்.

(தொடரும்)

குவிகம் இலக்கியவாசல் -நிகழ்வும் அறிவிப்பும்

 

மே 27, 2017 சனிக்கிழமை:

குவிகம் இலக்கிய வாசலின் இருபத்தி ஆறாவது நிகழ்வாக “புத்தகங்கள் வெளியிட எளிய  வழி” என்னும் தலைப்பில்  திரு ஸ்ரீகுமார் உரையாற்றி பல உபயோகமானத்  தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் ஒரு சில

புத்தககங்கள் அச்சடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரு பதிப்பு என்பது 2500 பிரதிகள் என இருந்தது.

  • அச்சுக்கோர்த்தல் கட்டாயம் என்பதால் அந்தச் செலவு ஒரு புத்தகம் அடித்தலோ 2500 அடித்தாலோ ஒன்று தான் என்பதால் அச்சடிக்கப்படும் புத்தககங்களின் எண்ணிக்கை கூடக்கூட புத்தகத்தின் அடக்க விலை குறையும்.
  • இப்போது தேவைக்கேற்ப  அச்சடிக்கும் ‘ PRINT ON DEMAND’ முறையில் ஒரு புத்தகமோ ஆயிரம் புத்தகங்களோ அடக்கவிலை ஒன்றுதான்.
  • இம்முறையில் குறைந்த செலவில் குறைந்த எண்ணிக்கை பிரதிகள் அச்சடித்து, தேவைப்பட்டால் மேலும் பிரதிகள் தயார் செய்து  கொள்ளலாம்.
  • இந்த முறையில் அடிக்கப்படும் புத்தகத்தின்  தரம் லித்தோ போன்ற மற்ற முறைகளில் அடிக்கப்படும் புத்தகத்தின் தரத்திலேயே இருக்கும்.
  • இந்த அச்சு எந்திரம் போட்டோ காபி எடுக்கும் அதே ஜெராக்ஸ் என்னும் கம்பனி உடையது என்பதால் இதனை ‘ஜெராக்ஸ்’ என்று வழக்கமாக அறியப்படும்.  போட்டோ காப்பி போன்று நாளடைவில் அழிந்துவிடும் எனத்  தவறாக எண்ணப்படுகிறது.
  • வணிகமுறையில் அல்லாது தனது எழுத்து பிறரை அடையவேண்டும் என நினைக்கும் பலருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

அவருடைய உரைக்குப் பின் கூட்டத்திற்கு  வந்திருந்த அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். பெரும்பாலோர் தங்கள் புத்தகங்களை  வெளியிட அதிகம் செலவு செய்தவர்கள் எனத் தெரிய வந்தது. கிடைத்த தகவல்கள் பலருக்குப்  பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தவிர்க்கமுடியாத காரணத்தால் நிகழ்வு  நடக்கும் இடம் மாற்றம் செய்ய நேரிட்டது. புதிய இடம் பற்றிய தகவல் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அம்புஜம்மாள் சாலை ஸ்ரீனிவாச காந்தி நிலையம் வந்து திரும்பிய ஒரு சிலரிடம் மன்னிக்க வேண்டுகிறோம்.

*****************************************************************************

வருகிற ஜூன் 24, சனிக்கிழமையன்று இலக்கிய சிந்தனையும் குவிகம்  இலக்கியவாசலும் இணைந்து வழங்கும் நிகழ்வு ஆள்வார்ப்பெட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி  நிலையத்தில்                   6 மணிக்கு நிகழ உள்ளது.

குவிகம் இலக்கிய வாசல் சார்பில் சந்தியா  பதிப்பகம்  நடராஜன் “தமிழில் அகராதி” என்ற தலைப்பில் பேசுகிறார் !

கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!

அனைவரும் வருக !!

 

 

கலப்படம் – அவிச்சது இல்ல -சுட்டது

Image result for ஜோக் படங்கள்

 என்னடா நடக்குதிங்கே?

மதியம் ஜூஸ் குடிக்கக் கடைக்கு போனா கடையில, மேஜை_காலி_இல்ல.. எல்லாம் காதல் ஜோடிங்க ..நான் தனியா வேற போயிருந்தேன்.. என்னடா பன்னலாம்னு யோசிச்சேன் ..
போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா..

#மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜூஸ்_குடிக்குதுடா_ அப்படின்னேன்… அவ்ளோதான் #அஞ்சி_டேபிள் காலி #
ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டேன் …

என்னா_வெயிலு…
((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) 
 
Related image

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”
– கணக்கதிகாரம்-

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

இது எப்படியிருக்கு? 

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

பிரபல பொருளாதார நிபுணர் ரயிலில் போகும்போது பக்கத்தில் இருந்த  கல்லூரிப் பெண்ணிடம் பேசிக்கொண்டு வந்தார். 

“நீங்க என்ன பண்ணறீங்க ” என்று கேட்டாள்  அவள். 

” நானா? இந்தியப் பொருளாதாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் ” என்றார் அவர்.

அந்தப் பெண் உடனே ” நான் போன வருஷமே அதைப் பாஸ் செய்துவிட்டேன்”  

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

விடுமுறைக்கு சித்தி வீட்டுக்குச் சென்றிருந்த குட்டிப்பெண் கேட்டாள்: 

சித்தி ! நான் பிரிட்ஜிலிருந்த மாம்பழத்தை சாப்பிட்டுக்கவா? 

சாப்பிட்டுக்கோம்மா! 

ரொம்ப தேங்க்ஸ் சித்தி

இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே? பசிக்குதா கண்ணு ? 

இல்லை சித்தி! நான் ஏற்கனவே அதைச் சாப்பிட்டுட்டேன் 

((((((((((((((((((((((((((((((((((((((((  )))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

டாக்டர் ! போன தடவை நீங்க எழுதிக் கொடுத்த மருந்தச் சாப்பிட்டதும் வயித்து வலி சரியாப் போயிடுச்சு ! ரொம்ப தேங்க்ஸ் !”

போன தடவை நான் மருந்தே தரலையே! பேனா  சரியா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்ததை எடுத்துக்கிட்டுப் போயிட்டியா? “

(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Image result for ஜோக் படங்கள்

ஒரு பேரிளம்பெண்ணுக்கு வயது 42. ஆனால் 24 வயது மாதிரி தன்னை நினைத்துக் கொள்வாள். அது மாதிரி உடை அணிவாள். வெளியில் போகும்போதெல்லாம் கடைக்காரர்களிடம் தனக்கு என்ன வயது என்று கேட்பாள். அவர்கள் 25 27 28 என்றே சொல்வார்கள். இல்லை எனக்கு 42 என்று பெருமையாகச் சொல்லுவாள். 

ஒருமுறை பஸ் ஸ்டாப்பில் நின்ற கிழவரிடம் ” எனக்கு என்ன வயதிருக்கும்?” என்று கேட்டாள். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ” நான் உன்னை முத்தமிட்டால்  சரியான வயசைச் சொல்லிவிடுவேன். அது என் ஸ்பெஷாலிட்டி!” என்றார்.

அவள் கொஞ்சம் ஆடிப் போனாலும்  ‘சரி, டெஸ்ட் பண்ணலாம்’   என்று ஒகே  என்று சொன்னாள். கிழவரும் அவளை முத்தமிட்டுவிட்டு ” உனக்கு வயது 42 ” என்று சொன்னார். ஆடிப் போய் விட்டாள். ” எப்படிக் கண்டுபிடித்தீங்க! அந்த ரகசியத்தை எனக்குச் சொல்லிக் கொடுங்க” என்றாள்.

கிழவரும்  ” ஒண்ணுமில்லே! நேத்து கடைக்காரன்கிட்டே நீ கேட்டுக்கிட்டு இருந்தபோது நானும் அங்கே சாமான் வாங்கிக்கிட்டிருந்தேன் ” என்றார். 

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

 

 

நம்மைத் தாக்கிய கதை வரிகள் -புலிக்கலைஞன் -அசோகமித்திரன்

ஒரு புலிக்கலைஞனின் திறமையை  இந்த வார்த்தைகளில் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் அசோகமித்திரன்!

படிக்கும் போதே  நமக்கு  ஒரு உதறல் ஏற்படும்! அப்படி நம்மைத் தாக்கிய வரிகள்:

இதைப்படித்துவிட்டு முழுக்கதையையும் படியுங்கள்!  இந்த வரிகளின் பெருமை இன்னும் அதிகமாகப் புலப்படும்!

Image result for புலிக்கலைஞன்

 

”சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.”

”ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே?”

”நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.”

அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.

”பேஷ்” என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்த வண்ணம் இருந்தோம்.

அவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

”பேஷ்” என்று சர்மா மீண்டும் சொன்னார்.

அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.

அவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ”ஐயோ” என்றேன்.

அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ”ஓ” என்று கத்திவிட்டோம்.

அது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.

அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.

”பத்திரம்பா, பத்திரம்பா” என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது.

அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.

நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.

சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.

நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.

”நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா” என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.

”நீ எங்கேயிருக்கே?” என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ”ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க” என்றான்.

”ஏன்?” என்று சர்மா கேட்டார்.

”இல்லீங்க….. என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.

”எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்” என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ”நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.

 

 “வலி நம் வசம்” மாலதி சுவாமிநாதன்

Image result for psychiatrist office in india

எனக்குக் கிடைத்த ஆசீர்வாதப் பட்டியலில்,  நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்பதும், நிம்ஹான்ஸில் படித்த மேல் படிப்பும், என் குரு, டீச்சர்களும் அடங்கும்.  ஊக்கமும் , கற்றலும் , பொறுமைக்குப்  பஞ்சமே  இல்லாத வேலை பார்த்த இடமும் பெரிய ஆசீர்வாதங்களே! க்ளையன்ட் (மனோதத்துவத்  துறையில் நோயாளிகளை  க்ளையன்ட் என்றே அழைப்போம்) எங்களை அணுகி, தங்கள் பங்குக்கு ஒத்துழைத்து, அடுத்த நிலைக்குச் செல்லும் கட்டமும் ஆசிர்வாதமே! இவர்களின் துணிவான மன உறுதியை நான் “ஜான்சி கீ ராணி” என்பேன்.

ஒரு முப்பது வயதான “ஜான்சி கீ ராணி” மாயாவின் பயணத்தை உங்களிடம் விவரிக்கப் போகிறேன்.

Related image

மாயா என்னை மருத்துவ நிலையத்தில்  சந்தித்தபோது  “டாக்டர் ! என்  தோள் பட்டை, கை, பாதங்களில் எப்போதும்  வலி  இருந்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக, மாலை வேளையில் அசதி அதிகமாக வாட்டுகிறது.  தினசரி வேலைகளை முடிப்பதற்குள் சோர்ந்து போகிறேன் . அதனால்  வேலைகளை  முடிக்கவும் நேரமாகிறது.  சமீப காலமாக  எதற்கெடுத்தாலும் சுள் என்று கோபம் வருகிறது.  சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் மறந்தே விட்டது. ஞாபக மறதியும் அதிகமாகிறது.  ஒருவேளை டென்ஷனாக இருக்குமோ  என்று இவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன்.  ஆனால் இப்போது வீட்டில்  உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை வருகிறது.  வீடே போர்க்களம் போல் தோன்றுகிறது . இந்த வலிகளை என்னால் தாங்க முடியவில்லை . ஆகையால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறேன்”   என்று கூறினாள்.

எட்டு வருட கல்யாணத்திற்குப் பிறகு விவாகரத்தைப் பற்றி யோசிக்கிறாள். காரணம்.. வலி .. வலிகள்…

வலி என்பது, தானாக வருவது அல்ல. அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றை நன்கு அறிந்துகொண்டு ஒரு ஹோலிஸ்டிக் வாழ்க்கையை மேற்கொண்டால்தான் வலி நம் வசப்படும். இல்லையேல் நாம் வலியின் பிடியில் வீழ்வோம். ( வலியின் அடிமை? )

மாயா தன் கணவர் கோபால், குழந்தைகள் ரோஹித் ( 8 வயது),  ரோஹன் (6 வயது) , மாமனார், மாமியாருடன் இருக்கிறாள். அவள் மாமனார், தனியார் நிறுவனத்தில் பெரிய பதவியில் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி  வெளியூர் பயணம் செய்வதால், மாமியார் வீட்டைக் கவனிக்கிறார்.  இவர்கள் குடும்பமோ , சம்பிரதாயங்களைக்  கடைப்  பிடிக்கும் குடும்பம். ‘வீட்டுப்  பராமரிப்பு-கணவர்- குழந்தை இவர்களைக் கவனித்துக் கொள்வது என்று இருப்பது தான்  பெண்களின் கடமை’ என்று நினப்பவர்கள்.  அவள் கணவர் கோபாலும் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற அபிப்ராயம் உடையவர். கோபால், எம். பி .ஏ. முடித்து வேலையில் இருக்கிறவர். மாயாவின் தந்தை பெரிய தொழில் அதிபர். அவளுடைய செல்வாக்கைப்  பார்த்துதான் கோபால்   அவளைத் திருமணம் செய்ய எண்ணினார்.   கல்யாணமானதும், மாயாவின் அப்பா நிறுவனத்திலேயே கோபால் வேலையில் சேர்ந்தார்.  கோபால் நிதானமாகச் செயல்படுபவர். அவருக்குத்  தன் மாமனாரின் வேகம் சற்றும் பிடிக்கவில்லை.

மாயாவின் தந்தைக்கு  வயது 60. இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்தார். எல்லாம் டான்-டான் என்று இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உடையவர். தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும்  இப்படியே  இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர் .அப்பாவின் இந்தக் குணங்கள் மாயாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு ஒரு புதிய பயம் வந்து  சேர்ந்தது. அவள் அம்மா பொறுமையின் சிகரம். தன் கணவன் சொன்னபடி நடப்பவள்.  தன் இன்னல்களை டைரியில் மட்டும்தான் எழுதுவாள். மாயா தன் அம்மாவை அடிக்கடி வியந்து பார்ப்பாள்.  அவளுடைய ஒரே அண்ணனுக்கு அப்பாவின் வழிமுறை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பா  ஆட்சேபிக்கும் அத்தனையும்  அவனுக்குப் பிடிக்கும் – நீள முடி, ஜிப்பா, கோலாப்பூரி செருப்பு, ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு இன்னும் எத்தனையோ. கடைசியில்  அவரை எதிர்த்துக் கல்யாணம் செய்து,  அவர் உறவை அறுத்துக்  கொண்டான்.  ஆனால் மாயாவிடம்   வைத்திருந்த பாசத்தினால் அவளிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தான் . மாயாவுக்கு அண்ணனின் பொது சேவை, பரிவு எல்லாம் பிடித்திருந்தது.

மாயா, தன் அப்பா சொற்படி ஆர்கிடெக்ட் படித்து அவர் நிர்வாகத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாள். கோபாலைத் திருமணத்திற்கு  சரி என்று சொன்னதும் அவரே. அப்பாவைப் பொறுத்த வரை கோபால் பணத்திலும், அந்தஸ்த்திலும் மிகச் சாதாரணம். இதனால், மாயாவுக்கு அவர்கள் வீட்டில் மதிப்பு கூடும் என எண்ணினார். கோபாலைத்  தன் நிறுவனத்தில் சேர்த்தது மாயாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அவளைப் பொறுத்த வரை, ‘ ஒருவர் தன் முயற்சி , திறமைகளால் முன்னேற வேண்டும்;  சிபாரிசினாலோ, மற்றவர் தோளிலில் ஏறியோ அல்ல’ என்ற கொள்கையில் தீர்மானமாக இருந்தவள்.  

இப்படி, பல சமயங்களில் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை –  அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது  என்று தெரியாமல் அவற்றை அப்படியே உள்வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படிச்  சேமித்தால், நாளடைவில், அதன் உறுத்தலை உணர்த்தவே உடலில் எங்கேயாவது வலி தோன்றலாம். அல்லது இருக்கிற வலியும் அதிகமாகலாம்.

மாயாவின் பிறந்த வீடும் , புகுந்த வீடும்  முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தன. அவளும் கணவன் வீட்டிற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டாள். ஆனாலும் பல முறை  தன் பிறந்த வீட்டு வழக்கங்களை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இரண்டு வீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்  ஆரம்பித்தாள்.அப்போதுதான் அவளிடம் முரண்பாடு நுழைந்து விட்டது.

ஒப்பிட்டு-முரண்பாடு செய்வது சஞ்சலம் உருவாக்கும் விதைகளே.

கல்யாணமாகி மூன்று மாதங்களில், அவள் மாமனார் அவர்கள் வீட்டை டிஸைன் செய்யச் சொன்னார். உற்சாகமாகத் தன் ஆர்கிடெக்ட் வேலையைச் செய்து முடித்தாள். அவர்களுக்குப் பிடித்திருக்கும்  என்று நம்பினாள்.  ஆனால்  ஒரு பொது இடத்தில், மாமனாரும், கோபாலும் இதைக் கிண்டல் செய்து பேசினார்கள்.  இது மாயாவின் மனதைக் காயப்படுத்தியது. யாரிடம் இதைச் சொல்ல முடியும் ? இதையும் தன் மனத்திலேயே உள் வாங்கி வைத்துக் கொண்டாள்.

குழந்தைகள் பிறந்தபின், கண்டிப்பான பராமரிப்பைக்  கடைப்பிடித்தாள். மாமனார், மாமியாரோ  கண்டிப்பே கூடாது என்றார்கள். வளர்ப்பு முறை வேறுபாடு மாயாவை நச்சரித்தது. மாமியார்தான் சமைப்பார்;  எப்போதும் குழந்தைகளுக்குப் பிடித்த வகைகள் செய்வார். அவர்களிடமே குழந்தைகள் இருந்தார்கள். இதனால் மாயாவுக்கு வருத்தம், ஏமாற்றம். வேறு வழியின்றி மாயா வீட்டின் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.

மாயாவின் அப்பா மாயாவைத்  தன்  வீட்டு வேலைகளை முடித்துவிட்டு , தங்கள் நிறுவனத்தில் வேலையில் சேரவேண்டும் என்று விரும்பினார்.  அவளுக்குப் பிடித்த ரிசர்ச் துறையில் பணி செய்யவேண்டும் என்றும் திட்டமிட்டார். கோபாலிடமும் , அவள் மாமியாரிடமும் கூறி அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அலுவலகத்தில் இதை வரவேற்ற கோபால் வீடு திரும்பியதும், ஏளனமாகப் பேசி, மாயாவை வீடு-கணவர் என்று இருக்கச் சொன்னார். அவள்  மாமியாரும் இந்த அபிப்பிராயத்தையே ஆமோதித்தாள். மாயாவுக்கு தலை கிறுகிறுத்தது. வலியின் வீரியம் அதிகமானது.

உடலின் வலியை  எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அதைச் சொல்லவும்  முடியும், ஏற்றுக்  கொள்ளவும் செய்வார்கள் . ஆனால் மனம், உணர்ச்சி என்று ஆரம்பித்தால் பல கோணங்களில் போய்விடும். இதனாலேயே, நம் மூளையும் சூழலுக்கு ஏற்றவாறு மன பாரத்தை – உணர்ச்சிகளை உடல் வலியின் வடிவில்  தெரிவிக்கும். (உணர்ச்சிகளைத் வெளிப்படுத்துவது என்றும் உசிதம்).

மாயா வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாள். ஆனால் அவளால் அவற்றைக்  சரிவரச் செய்ய முடியவில்லை.  வலியின் வேகம்  அதிகமானது. வேலை செய்யச்செய்ய வலி அதிகரித்துக் கொண்டுவந்தது.  கோபம் அதிகரித்தது. வலி தாங்க முடியாத அளவிற்குச் சென்றது.

வலி தனியாக வருவது இல்லையே; உடல்-மனம்-சூழல் எல்லாம்  இணைந்ததுதானே!

இந்தச் சூழ்நிலையில்தான் மாயா எங்களை அணுக நினைத்தாள். எங்களிடம் வருவதற்கும்  மிகச் சங்கடப் பட்டாள். ஒருவேளை தன் மேலேயே தவறு என்றாகி விடுமோ என்றும்  பயந்தாள். கோபால் சொல்வது போல், தான் “சாக்கு மூட்டையா”?  என்ற எண்ணம் வேறு அவளை அலைக்கழித்தது. அவளுடைய அப்பாவும் மனோ தத்துவ நிபுணர்களிடம் செல்வது ‘பலவீனம்’  என்றே  நினைத்தார்.                      ( உண்மையில் மனோதத்துவக் கல்வியில் இப்படி  உதவி கேட்பதைத் தான்  தைரியம் என்று சொல்லுவோம்)

பாவம் மாயா!  என்னிடம் ஏழு முறை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு வராமல்  பிறகு ரத்து செய்து விட்டாள்.

கடைசியில் அவள் வலி அவள் தயக்கத்தை மீறி எங்களிடம் வரச் செய்தது. தயக்கத்துடன் வந்தவளிடம், அவள் வலியைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். எந்தத் தகவலையும் துருவிக்  கேட்கவில்லை. அவள் போக்கில் சென்றேன். ஆறுதல் அடைந்தாள்.

மறுபடியும் வந்தாள். இந்தத் தடவை அவள் வீட்டின் நிலவரத்தைப்பற்றி மேலும் அறிந்தேன்.

வலி என்பது தனியாக எங்கிருந்தோ வருவது இல்லையே!  நம் கண்ணோட்டங்களால் நம் சூழலை எதிர்த்துச் சமாளிக்கும் திறன்களையும், சூழ்நிலைகளைக் கையாளும் விதங்களையும் அறிவதனால் வலியைக்  கையாளுவதும் புரியும். இவைகளே வலியின் சிகிச்சைக்கும் உதவும்.

மாயாவுக்கு ஒரு சந்தேகமும் உதித்தது.  வேற்று மனிதரிடம் குடும்ப விஷயம் சொல்லலாமா? நியாயமான சந்தேகம். அவளிடம், எங்கள் தொழில்முறையை விவரித்தேன்: சுற்றியிருக்கும் தகவல்கள் நம் சிகிச்சையின் கருவிகளாகும். அவள் விவரித்த வலியை ஒப்பிட்டு உதாரணங்கள் காட்ட, புரிந்து கொண்டாள். மேலும், இங்கு பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கங்களை  யாருடனும் பகிர்ந்து கொள்ள  மாட்டோம் என்பதை வலியுறுத்தினேன். நம்பிக்கை மலர்ந்தது.

சில நரம்பியல் மாத்திரைகள் –  உரையாடல்கள் –  மேலும் சில ஹோம் வர்க் என்று தொடங்கினோம். சில வாரங்களில் அவளுடைய அசதி நன்றாகக்  குறைந்தது,  எரிச்சல், கோபம் அவள் கட்டுப்பாட்டில் வந்தது. மெதுவாகச் சிரிக்கவும்  ஆரம்பித்தாள்.

அடுத்த கட்டமாக, மாயா-கோபால் உறவு நிலையை மையமாக வைத்து இருவரையும் இணைந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்பதால் அதைப்பற்றி நிறையப்  பேசினார்கள்.  அனுகூலமாகத்  தொடங்கியது,  கணவன்-மனைவி, பெற்றோர் என்ற உறவு முறையைப்  பற்றி எதுவும்  பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். தங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்கிறேனோ என்று கொஞ்சம் கூச்சத்திலும்  ஆழ்ந்தார்கள்.

பிறகு மாயா சுதாரித்து, கோபாலைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்தாள். கோபாலும் உரையாடினார். இந்த உரையாடலின் போதுதான் கோபாலுக்குச் சமைக்கும் திறனும், மாயாவிற்குப் பாடும் திறனும் இருக்கின்றன என்பதை இருவரும் உணர்ந்தார்கள். விஷயங்களைப் பகிர்ந்ததில், நெருங்கி நடப்பது, முகம் பார்த்துப் பேசுவது என, பல விதங்களில் நெருக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த நிலையில், மாயா,   கோபால்,  தன் தந்தைபோல் இருக்கவேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறினாள். அதுபோல கோபாலும்  சமையலில் தன் அம்மாவின் கை மணம் மாயாவுக்கு இல்லை என்ற வருத்தத்தைப்  பகிர்ந்தார். இருவரும், பல ஒப்பீடு முரண்பாடுகளை விவரித்தார்கள்.

வசதியான வாழ்க்கை மீது தனக்கிருந்த ஆசையே மாயாவைத் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கியக் காரணம்  என்று கோபாலும் ஒப்புக்கொண்டார், அவளின் பணக்கார வாழ்க்கை அவள் மீது ஒரு பொறாமையை உண்டு பண்ணியது.  இதனால் அவளை அடிக்கடி  கோபித்துக்  கொண்டார். மாமனார் மேல் உள்ள அச்சங்களையும் இவளிடமே காட்டினார். அவரிடம் சரி சொல்வது, பிறகு மாயாவிடம் மறுப்பு தெரிவிப்பது என்றே தான் நடந்துகொண்டதாக கோபாலும் ஒப்புக் கொண்டார்.  மனம் திறந்து பேசியதில், ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாயாவின் அண்ணனும் இதை வெளிப்படையாகப்  பாராட்டினான். தன் பங்குக்கு ஏதேனும் செய்ய விரும்பினான். கோபால் மாயா இருவருடனும்  கலந்துரையாடி, அவர்களை   விடுமுறைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்தான். ரோஹித்- ரோஹனைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.

திரும்பி வந்ததும், படுத்த படுக்கையாக இருந்த மாமனாரைத் தான் இதுவரை கவனிக்கவேயில்லை என்பதை மாயா உணர்ந்தாள். மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வதும் தனக்குச் சந்தோஷமான வேலை என்பதை உணர்ந்து செய்ய ஆரம்பித்தாள். ஆசை, பாசம், பராமரிப்பு கூடியது .கோபதாபங்கள் வெளியேறின.  வலியும் குறைந்தது,  

எதிர்பாராமல், கோபாலின்  உடல் நிலை சரிந்தது.டாக்டரைச் சந்தித்தார்கள். பரிசோதனையில் தீங்கற்ற டூமர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. டூமரை எடுத்து விடுவது நன்று என்ற முடிவை அனைவரும் ஆமோதித்தார்கள்.  வெளி நாட்டில் 3 மாதம் சிகிச்சை என்பதால் குழந்தைகள் தாத்தா-பாட்டியுடன் இருப்பது என்று முடிவானது. மாயாவுக்குக் கஷ்டம் என்று கோபால் வேறு ஏற்பாடு செய்ய நினைத்தார். மாயாவுக்கு இதில் உடன்பாடில்லை., “நான் வருகிறேன்” என்பதை உறுதியுடன் தெரிவித்தாள். கோபாலுடன் சென்றாள். மாயாவின் அண்ணனும், தந்தையும் தங்கள் பங்குக்குப் பல உதவிகள் செய்தனர்.

திரும்பியதும், மாயா என்னைப் பார்க்க வந்தாள்.

வலி தனக்கு நன்றாகவே குறைந்துவிட்டதால் வேலைகளை வெகுசீக்கிரமாகவும், நன்றாகவும் செய்ய முடிகிறது என்றாள். மகிழ்ச்சி பொங்க,  விமான நிலையத்தில் தன் மாமனார்-மாமியார் அவள் அம்மா-அப்பாவுடன் சிரித்துப்  பேசிக் கொண்டிருப்பதைப்  பார்த்துப் பரவசம் அடைந்ததைச்  சொன்னாள். மேலும் சண்டை போட்டுக் கொண்டிருந்த  தன் அண்ணன் – அப்பா இருவரும் சேர்ந்து அருகில் நிற்பதையும் பார்த்துக்  கொண்டாடியதையும்  சொன்னாள்.  கோபாலின் டூமர்-சிகிச்சை – கவனம்- ரிக்கவரீ தன்னையும்-அவரையும்  இன்னும் நெருக்கம் ஆக்கியதைக்  குதூகலமாகச் சொன்னாள்.

வலியின் மாத்திரையும்  தன் பங்குக்கு வேலை செய்தது; அதைவிட மாயா தனக்குள்ளும், தன்னைச்  சுற்றி உள்ள இன்னல்களையும் கவனித்துத்  தீர்வு செய்ததில் அவள் வலி அவள் கைவசத்தில் வந்தது. இதனால் “ எந்தச்  சூழ்நிலையிலும்  வலியைச் சமாளிக்கும் தைரியம் எனக்கு வந்துவிட்டது. என் வலியை நான் வென்றிடுவேன்”  என்று சொல்லி விடை பெற்றாள் மாயா – ‘ஜான்சி கீ ராணி’

மாயாவை இப்படிப் பார்ப்பது நல்ல ஆசீர்வாதம் தானே ? என்ன சொல்கிறீர்கள்?

மாயாவின் பரிமாணத்தை எங்கள் பாஷையில் ‘ரெஸிஸ்டன்ஸ் ட்ரான்ஸ்ஃபரன்ஸ்’ என்று சொல்வோம்.

பல முறை, “அட, எப்படிச்  சொல்வது”? என்று  இருந்தால், அது வலியாகத் தோற்றம் கொள்ளலாம்!

வலியின் வலி அதிகமாவதும் குறைவதும் நம் உணர்வுகளால்!

உடல் – மனம் – மூளை- சூழல் இவற்றில் நாம் கவனம் செலுத்துகையில்  வலி நம் வசம்! இல்லையேல், வலியின் அடிமை நாம்! ( அது நமக்குத் தேவையில்லை).

 

கம்ப்யூட்டர்   காதல் – (எஸ் எஸ் )

 

கம்ப்யூட்டர்   காதல்

image

காதல் என்பது சாப்ட்வேர்
காமம் என்பது  ஹார்ட்வேர்
இரண்டும்  சேர்ந்து படைத்த ப்ரோக்ராம்
குழந்தை என்பது அதன் பேர்

மடியில் தவழும்  லேப்டாப்பாக
மாறிட எனக்கு வரம் தா
வளைவுகள் என்னும் கீ போர்டில்
வருடிட எனக்கு  கரம்  தா!

ஆடைகள்  என்ற விண்டோசை
மெல்லத் திறந்திடு சீசேம் !
ஓப்பன் கோர்ஸ் ஒஎஸ்சை
முழுதாய் திறந்தால் பப்பி ஷேம்!

மேனி முழுதும் அம்பாய் மாறி
தேடுவது உந்தன் மவுசா!
கிளிக் கிளிக் என்று அமுக்கி என்னை
உசுப்புவது உந்தன் ரவுசா!

கருப்புச் சேலை திரையில்
கலர் கலராக வருவாயா
கண்ணை அடித்து வெப் கேமில்
என்னைப் படமாகப் பிடிப்பாயா

எந்தன் காதல் வரிகளை
மைக்கில் கேட்டு வந்தாயா
உந்தன் மோக முனகலை
ஸ்பீக்கர் போட்டு காட்டாதே

உணர்வுகள் என்னும் வெப் சைட்டில்
உறவுகள் கொண்டோம் இன்டர்நெட்டில்
நமக்குள் இருக்கும் ரகசியம் காக்க
பாஸ்வேர்ட் அதற்குத் தேவையில்லை

நீலக் கண்ணால் பார்க்கும் போது
ப்ளூடூத்  ப்ளுரே  தெரிகிறதே
மேடம்  உந்தன் மோடத்தில்
காதல் பாடம் படித்தேனே

வைப் இல்லாவிட்டால் பரவாயில்லை
வை-பை  இருந்தால் போதும்  எனக்கு
வாடி என்றும் அருகில் அழைத்து
டிவிடியை சுழல வைத்தேன்

பென்   டிரைவ் ஒன்றை சொருகிக் கொள்
டேட்டா பேஸூம் திறந்து கொள்ளும்
உடம்பின் சூட்டை குறைத்திடவே
கூலிங்க் பேடாய் நான் வரவா

காதல் என்ற சமூக வலையில் 
உதடு தான் பேஸ்புக் வலைப் பதிவா
முத்தமிட்டு  நான் போனால்
சத்தமில்லாமல் லைக் போடு

டேப்லெட் உன்னிடம் இருக்கும் வரை
நேரடிக் காதலில் தவறில்லை
பேட்டரி நன்றாய் இருக்கும் வரை
டிஸ்சார்ஜ் பற்றிக்  கவலையில்லை

மெமரி சரியாய் இருக்கும் வரை
வைரஸ் கவலை தேவையில்லை
தேதிகள் கொஞ்சம் தவறிப் போனால்
ஆன்டி வைரஸ்  போட்டுக்கொள்

ஹார்ட் டிஸ்க்  சரியாய் இருக்கும் வரையில்
பேக்கப் பற்றி பயமில்லை
பிளக் அண்ட் பிளே வந்தபிறகு
குஷிக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை

காதல் டிஜிட்டலாய் மாறும் போது
மொழிகள் அதற்குத் தேவையில்லை
விண்டோஸ் மூடிச் செய்தால் காதல்
திறந்த வெளியில் செய்தால் காமம்

உடம்பின் வளைவுகளைத் தெரிந்துகொள்ள
ஸ்கேனர் எனக்குத் தேவையில்லை
காதல் பயணம் செய்யும் போது
டிரைவர் எதுவும் தேவையில்லை

யாரும் நம்மை பார்த்து விட்டால்
கண்ட்ரோல் ஆல்ட் டெல் போட்டிடுவோம்
நிறுத்து  நிறுத்து என்றாலும்
ஸ்டார்ட் பட்டனைத் தான் அமுக்க வேணும்

எல்லாம் நன்றாய்  முடிந்த பின்னர்
ஸ்லீப் மோடுக்கு போயிடுவோம்
சாதனைப் பட்டியலைப் பார்த்த பின்னர்
ரீ- ஸ்டார்ட் மீண்டும் செய்திடுவோம்!

அசட்டுக்கு வந்த அதிர்ஷ்டம்..! — நித்யா சங்கர் ( சென்ற இதழ் தொடர்ச்சி )

Image result for ladies college quiz competition in chennai

 

காட்சி – 3

(பூமாவின் வீடு.. இரவு நேரம்.. கமலா, பாமா, லதா மூவரும்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். பூமா ஓடி வருகிறாள்)

பூமா : போச்சு.. எல்லாம் போச்சு.. நாசமாப் போச்சு.

கமலா: என்னடி உளரறே…

பூமா : யாரோ ஒருத்தர்.. பக்கத்தூரிலிருந்து வந்திருக்காராம்.
பார்த்தா நல்லா ஷோக்கா இருக்கார். பேச்சிலேதான்
அசடு வழியறது. என் பின்னாலே வந்து கன்னாபின்னான்னு
பேசிச்சு. நம்ம ஒரு கேள்விக்கு ப்ளூ க்ளௌடுன்னு
ஆன்ஸர் வச்சிருந்தோமில்லே.. அதைக் கண்டு பிடிச்சுடுத்து
போலிருக்கு. அதையும் உளறிடுத்து. கொஞ்சம் அந்தப்
பக்கமா ரவியும் நின்னுட்டிருந்தார். அவருக்கும் தெரிஞ்-
சிருக்கும்..

பாமா : (திடுக்கிட்டு) ஆ… அப்படியா..? என்னடி இப்ப செய்யறது?

லதா : (நிதானமாக) பூமா.. அதுக்கேன் கவலைப்படறே,,? அந்தக்
கேள்வியை நாம மாத்திட்டாப் போகிறது..

பூமா : ம்.. அப்படித்தான் செய்யணும்.. நம்ம கேள்வி ஒண்ணுக்-
காவது அவங்க ஆன்ஸர் சொல்ல முடியக் கூடாது. அப்படி
இருக்கணும் நம்ம கேள்விகளெல்லாம்…

கமலா: ஆமா.. யாரடி அது..? நம்ம கேள்விக்கு விடையை அவ்வளவு
ஈஸியா கேள்வியைக் கூட கேட்காம கண்டு பிடிச்சது..?

பூமா : யாருன்னு தெரியலே.. பார்க்கறதுக்கு அழகா இருந்தார். அவர்
பேர் என்னான்னு தெரியலே.. நான் கேட்கலே… ஆனா
பேசினாத் தெரியுது அவர் குணம். ஒரே அசடு.

லதா : ஆமா.. நீ அவரழகுலே மயங்கி ஏதாவது உளறியிருப்பே…

பூமா : போடி.. அவர் பேசின பேச்சே எனக்குப் பிடிக்கலே. எனக்கு
வந்த கோபம் உனக்குத் தெரியாது… அவர் எப்படி அதைக்
கண்டு பிடிச்சார்னே தெரியலே…

பாமா : ஒரு வேளை வேறு ஏதாவது நெனச்சிட்டு ப்ளூ க்ளௌடுன்னு
சொல்ல வந்திருப்பாரோ..?

கமலா: எப்படி இருந்தாலும் சரி.. நாம கேட்கப் போற கேள்வி
என்னவோ மூணுதான். இந்தக் கேள்வியை மாத்தி வேறொண்-
ணப் போட்டாப் போச்சு.

பூமா : ஓகே.. லதா.. அந்தப் புத்தகத்தைக் கொண்டு வா..

 

காட்சி — 4

Related image

(ராமானந்தா கல்லூரி ஆடிட்டோரியம்.. மாலை வேளை..
குவிஸ் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள்
கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விடுகின்றனர் மாணவிகள்.
ஒரே கை தட்டல்.. ஜட்ஜ் பேச எழுகிறார்..)

ஜட்ஜ் : மாணவ, மாணவிகளே.. மாணவர்கள் கேள்விகளுக்கெல்லாம்
தகுந்த முறையில் பதிலளித்து விட்டனர் மாணவிகள். இனி
மாணவியர் கேள்விகள் கேட்பார்கள். மாணவர்கள் பதில்
சொல்ல வேண்டும். எங்கே பூமா.. உங்கள் கேள்விகளைக்
கேட்கலாம்.

பூமா : (தொண்டையைக் கனைத்தவாறே) முதல் கேள்வி — உலகத்தை
விட மதிப்பு மிக்கது எது?.. இரண்டாவது – காற்றை விட
வேகமானது எது?.. மூன்றாவது – மனிதன் எந்த ஒரு குணத்தை
விட்டால் எல்லோராலும் விரும்பப்படுவான்?

(அமர்கிறாள்… மாணவர்கள் மெதுவாகப் பதிலைப்பற்றி
விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். நீலமேகம் தனியே
அமர்ந்து பூமாவையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..)

நீல : (தனக்குள்) ஐயோ… பியூட்டி க்வீன்….

குமா : டேய் ரவி.. குண்டையல்லவா தூக்கிப் போட்டுட்டா… கேள்வி-
களோடு தலையும் புரியலே… காலும் புரியலே..

ரவி : டேய் ஒரு கேள்விக்குப் பதில் தெரிஞ்சு போச்சு. உலகத்தை
விட மதிப்பு மிக்கது ப்ளூ க்ளௌடுதாண்டா.. அதுதானே
நமக்கு தண்ணீர் தருது..

மணி : வெரிகுட்… என்ஸைக்ளோபீடியாவில் இதுவும் போட்டிருந்-
தானா மடையன்… மத்த கேள்விகளுக்கு என்னடா பதில்? ம்…

சேக : மடத்தனமா கேள்வி கேட்டிருக்காடா.. காத்துதாண்டா
உலகத்திலேயே வேகமானது.. ஆமா. எதை மனிதன்
விட்டுட்டா எல்லோராலும் விரும்பப் படுவான்..?

மணி : உயிரை விட்டுட்டா…

ரவி : (ஏளனமாக) வெரி குட்.. எப்படீடா கண்டு பிடிச்சே…
(எரிச்சலோடு) இடியட் மூஞ்சியைப் பாருடா மூஞ்சியை…

குமார்: இப்ப என்னடா செய்யறது..?

ரவி : டேய் இந்தக் கேள்விகளுக்கு இங்கே யாருக்குமே பதில்
தெரியாது… நமக்கு ஒரு கேள்விக்கு தெரியுமில்லே.. அது
போதும்.. அதை வெச்சே பூமாவைக் கவர்ந்துடலாம்.. கவலைப்
படாதே.. நான் எழுந்து சொல்லட்டுமா…?

சேகர் : ஓ கே…

ரவி : (மெதுவாக எழுந்து) உலகத்தை விட மதிப்பு மிக்கது ப்ளூ
க்ளௌடு… அதாவது மேகம்.

பூமா : (நமுட்டு சிரிப்போடு) ஸோ ஸாரி… கிடையாது…

(ரவி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து
விடுகிறான். பெண்கள் கூட்டத்தில் நகைப்பொலி எழுகிறது.
இதுவரை பேசாமல் பூமாவின் அழகையே ரசித்துக்
கொண்டிருந்த நீலமேகம் எழுந்து கத்துகிறான்)

நீல : மதர் … மைன்ட் … ப்ரௌடு…

(பெண்களின் நகைப்பொலி சட்டென்று நிற்கிறது. பூமா
நீலமேகத்தையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டு
நின்று விடுகிறாள்)

ஜட்ஜ் : ஏன் என்ன ஆச்சு..?

பூமா : (சமாளித்துக் கொண்டு) ஒன்றுமில்லை.. இப்பொழுது விடை
சொன்னவர் எங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப்
பதில் சொல்லி விட்டார். உலகத்தை விட மதிப்பு மிக்கவள்
மதர் – தாய்… காற்றைவிட வேகமானது மைன்ட் – மனம்…
மனிதன் ப்ரௌடை – கர்வத்தை விட்டு விட்டால் எல்லோ-
ராலும் விரும்பப் படுவான்.

ஜட்ஜ் : இக்கேள்விகளுக்கு பதில் சொன்னவர் யார்..?

நீல : நான்தான்.. என் பெயர் நீலமேகம்..

ஜட்ஜ் : ஐ ஸீ… இன்னும் ஏதாவது கேள்வி இருக்கா பூமா..?

பூமா : இல்லை… அவ்வளவுதான்..

ஜட்ஜ் : ஆல் ரைட்… இப்போட்டியின் முடிவு நாளைக்கு அறிவிக்கப்-
படும். எல்லோரும் கலையலாம்.

(ஒரு மூலையில் ரவியும் நண்பர்களும் தவித்துக் கொண்டு
நிற்கிறார்கள்)

குமார்: டேய் அந்த அசட்டுக்கு எப்படீடா தெரிஞ்சது?

மணி : நம்ம திட்டமெல்லாம் போச்சேடா….

ரவி : என்னடா செய்யறது.? அந்த ஒரு கேள்வியாவது ரைட்டா
இருக்கும்னு நெனச்சேன்.. பாவி அதையும் தப்புன்னுட்டாளே…

சேகர்: ரவி.. யூ ஹாவ் மிஸ்ட் தி சான்ஸ். மிஸ்ட் தி மிஸ் ஆல்ஸோ.

மணி : டேய், பூமா எதுக்கோ அந்த அசடுகிட்டே போறாளே..
என்ன சொல்றா கேட்போம்…

(பூமா நீலமேகத்தின் அருகில் செல்கிறாள்)

பூமா : கன்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் நீலமேகம்…

நீல : (அசட்டுச் சிரிப்போடு) தாங்க் யூ… என்னமோ…

பூமா : யூ ஆர் வெல்  செட். மகாபாரதத்திலிருந்து எடுத்துக் கொடுத்து
இருக்கோம். கண்டு பிடிச்சிட்டீங்களே…

நீல : ஹி..ஹி.. அப்படி ஒண்ணுமில்லே.. வந்து…

பூமா : நீங்க அடக்கத்துக்காக அப்படிச் சொல்லலாம். நாளைக்கு
மார்னிங் எங்க வீட்டிற்கு வாங்களேன். அடுத்த தெருவிலேதான்
இருக்கு. கட்டாயம் வரணும்.. நான் காத்துட்டிருப்பேன்.

நீல : ஹி.. ஹி.. சரி…

(பூமா செல்கிறாள். ரவியும் நண்பர்களும் நீலமேகத்தின்
அருகில் வருகிறார்கள்)

ரவி : ஹலோ.. நீலமேகம்.. நீ எப்படியப்பா கண்டுபிடிச்சே..?

நீல : போப்பா.. நானெங்கே கண்டு பிடிச்சேன்.. பிரதர்.. பூமா
அழகுலே மயங்கி ‘அம்மா என்னை அட்லீஸ்ட் மதிக்கவாவது
செய்.. நான் ரொம்பக் கர்வப்படுவேன்னு’ சொல்ல வாயெடுத்தேன்
இங்கிலீஷிலே.. அதுலே பாதி வார்த்தைகளை முழுங்கிட்டேன்.
மதர்.. மைன்ட்.. ப்ரௌடுங்கறதுதான் வெளியே வந்தது. என்ன
செய்யறது ? அவங்க அவங்க தலை விதி. ஆ.. நல்ல வேளை
‘மிஸ்ஸுன்னு சொல்றதுக்கு பதிலா ‘மதர்’னு ஒளறி வெச்சுட்டேன்.
அதுவும் நம்ம நல்ல காலம் தான். நம்ம உளறல் சரியான
ஆன்ஸராப் போச்சு. ஓகே… நேரமாச்சு. நான் வறேன்.

(நீலமேகம் போகிறான்)

ரவி : டேய், அசட்டுக்கு இப்படியாடா அதிர்ஷ்டம் வரணும்? பூமா
என்னமோ இவன் பெரிய இன்டெலிஜென்ட்னு நெனச்சிட்டிருக்கா
நமக்கல்ல தெரியும் இவன் கதை… அவளை மீட் பண்ணி
எச்சரிக்கணும்.

மணி: டேய் ரவி.. இவனை வீட்டுக்கே கூப்பிட்டுட்டாளே.. உன்னை
ஒரு நாளைக்காவது கூப்பிட்டிருக்காளா..?

குமார்: விடிய விடிய படிச்சதுதாண்டா மிச்சம்.

சேகர்: ரவி யூ லாஸ்ட் ஹெர்… காதலிலே தோல்வியுற்றான் காளை
யொருவன்..

ரவி : டேய். பேசாம இருங்கடா..

(போகிறார்கள்)

காட்சி – 5

(பூங்கா.. மாலை நேரம்… நீலமேகம் சென்று கொண்டிருக்கிறான்.. பூமா பின்னால் செல்கிறாள்..)

நீல : இதோ பாருங்க மிஸ்.. உங்களுக்கு வார்னிங் கொடுக்கறேன்.
ஏன் என் பின்னாலேயே வர்ரீங்க… சூடு, சுரணை, மானம்னு
ஒண்ணுமே யில்லையா..?

பூமா : முன்னேயெல்லாம் சூடு ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. ஆம்பிளே பக்கத்துலே நெருங்க முடியாது. ஆனா இப்போ என்னவோ
ரொம்ப ஜில்லுன்னு இருக்கு…

நீல : ஓ…..

பூமா : மானம்… நம்ம கல்யாணத்தை நிச்சயித்து நிச்சயதார்த்தமும்
ஆனபிறகு நமக்குள்ளே எதுக்கு இந்த மானத்தைப்பற்றிய
பேச்செல்லாம்…

நீல : ஓ.. அப்படியா..?

பூமா : ஆமா நீங்க எப்படி ப்ளூ க்ளௌடைப்பத்தி கண்டு பிடிச்சீங்க?

நீல : நான் என் பெயரை சும்மா இங்கிலீஷிலே சொல்ல வந்தேன்.
அதுக்குள்ளே நீ அரண்டுட்டே…

பூமா : (நாணத்தோடு) வெகு சமர்த்தர்தான்.. நான் கூட முதல்லே
நீங்க உண்மையா அசடுதானோன்னு நெனச்சுட்டேன்..

நீல : (சிரித்தபடியே) என்ன செய்யறது..? அன்னிக்கு காலேலே நான்
இந்த ஊருக்கு வந்ததும் உங்க காலேஜ் பக்கம் வந்தேன்.
அங்கே ரவியும் அவன்  பிரெண்ட்ஸும்  உன்னை  எப்படியாவது
மடக்கிக் கேள்விகளைத் தெரிஞ்சுக்கணும்னு திட்டம் போட்டுட்டிருந்தாங்க. அவங்க முயற்சியை எப்படியாவது தடுக்கணும்னு முடிவு பண்ணினேன். பின்னே பூமாவை எப்படிக் கண்டு பிடிப்பது..? யோசிச்சேன்.. ம்… இந்த அழகு ராணியைக் கண்டு பிடிக்கறதா கஷ்டம்..?

பூமா : (நாணத்தோடு) போங்க….

நீல : கண்டுபிடிச்சு அசடாய் நடிச்சு உன்னைத் துரத்தினேன்.

பூமா : ஆமா.. நீங்க, ‘ஏதோ உளறினேன்.. எனக்கு உண்மையா
அவங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதுன்னு சொன்னீங்களாமே..!

நீல : (உரக்கச் சிரித்து) பாவம் ரவி, உங்கிட்டே அதைச் சொன்னானா..? உன்னை ரொம்ப லவ் பண்ணிட்டிருந்திருக்கான். எல்லோர் கண்களும் ஒரே மாதிரி இருக்காது பார். நான் உன் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி, நீ என்னைப் பார்த்து மயங்கி, அதைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் பட.. ஐயோ, அப்ப.. என் ராணியின் அழகு என்ன ஆறது?

பூமா : (நாணத்தோடு) ஐயோ போதுமே…

நீல : அந்த எண்ணத்தாலேதான் அவன்கிட்டே அதுமாதிரி
சொன்னேன். நான் மகாபாரதத்தை பத்து முறை படிச்சிருக்கே-
னாக்கும்… ஆனா ரவியை நீ இதுமாதிரி ஏமாத்தி இருக்கக்
கூடாது.

பூமா : அவரை இல்லேன்னா ஒங்கள ஏமாத்தி இருக்கணும்.

நீல : என்னை எப்படி ஏமாத்தி இருக்க முடியும்..? நானொண்ணும்
உனக்காக ஏங்கலையே..?

பூமா : உக்கும்… க்விஸ் போட்டி நடந்துட்டிருக்கும்போது என்
பக்கமே நீங்க பார்த்துட்டிருந்தது எனக்குத் தெரியாதாக்கும்..?

நீல : அடி கள்ளி.. அப்ப நீ என்னையே….

(சிரிக்கிறான்.. அவளும் அவனுடன் சிரிப்பில் கலந்து
கொள்கிறாள்)

 

குறும்படம் என்ற குறும்படம்

குறும்படம் எடுக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் குறும்படம் இது.

கடைசியில் உங்கள் கண்களிலிருந்து  கண்ணீரை வரவழைக்கக் கூடிய குறும்படம்!

சீமை கருவேலம் – ஒரு சந்தேகம், பல கேள்விகள்

இந்தக் கருத்து நமது கருத்தை பிரதிபலிப்பதாக இருப்பதால் தமிழ் ஹிந்துவில் வந்த கட்டுரையை மறு பிரசுரிக்கிறோம்! (தவறெனில் மன்னிக்க)

 

நன்றி: தமிழ் இந்து

Published: May 27, 2017 12:24 IST Updated: May 27, 2017 12:24 IST
சீமை கருவேலம் வில்லனா? – கையில் சிக்கிய திடீர் குற்றவாளி

கே.கே. லட்சுமணன்
சீமை கருவேலம் வறண்ட நிலங்களில் எந்த வித கவனிப்பும் இல்லாமல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மண் பக்குவம், பருவநிலை போன்ற எதைப் பற்றியும் கவலையில்லாமல் எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய தாவரம்.

தென் மாநிலங்களில் கடுமையான வறட்சி, பஞ்சம் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் பிரேசில் நாட்டிலிருந்து 1950-களில் விறகுக்காகவும் வேலியமைக்கவும் இது கொண்டு வரப்பட்டது. இவற்றின் விதைகளைச் சேகரித்து வந்தோர், அதன் பூர்விகத்தை அறிந்திருக்கவில்லை.

இன்னும் சில தாவரங்கள்

சீமை கருவேல மரத்தைப் போலவே வேறு பல தாவரங்களும் உயிரினங்களும் நம் மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அழகான மலர்களுக்காக லான்டானா (உன்னிச் செடி) வந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஆஸ்திரேலியாவில் இருந்து தைல மர நாற்றுகளை வனத் துறை அள்ளி வந்தது. தைல மரத்துக்கு விழா எடுத்துப் புகழ்பாடிய பின்னர்தான், அது அதிக நீரை உறிஞ்சுகிறது என்பதை உணர ஆரம்பித்தனர்.

அந்தக் காலத் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது, அப்போதைய அரசர் ஸ்பெயினில் இருந்து மரவள்ளிக்கிழங்கைக் கப்பலில் கொண்டுவந்தார். கப்பலில் வந்ததால் மக்கள் அதை ‘கப்பக்கிழங்கு’ என்றழைத்தனர். மக்கள் பசியாற்றிக் கொண்டதோடு, அப்பயிர் பற்றியும் சிந்தித்தனர். அதன் பலனே இன்றைக்குப் பல்வேறு கிளைகளை எடுத்துள்ளது மரவள்ளிக் கிழங்குத் தொழில். அத்துடன் நம் மண்ணில் நிலையானதொரு வேளாண் பயிராகவும் மாறியிருக்கிறது.

திடீர் கண்டுபிடிப்பு

இந்தப் பின்னணியில் வறட்சியிலும் நன்கு வளரும் தாவரமான சீமை கருவேலம், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அதிகம் வளர்கிறதென்றால் அது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தாவரம் 60 ஆண்டுகளாக நிலைத்திருந்தாலும் விஞ்ஞானிகள், அரசு, வனத் துறை போன்ற யாரும் இதன் ஆபத்து பற்றி பேசவில்லை. 60 ஆண்டுகளுக்குப் பின் அது மிகவும் மோசமானது என்று திடீரென்று எல்லாத் துறைகளும் எப்படிக் கண்டுபிடித்தன?
வன்னி மரம்

நீர்வளக் குற்றச்சாட்டு

இந்த மரம் வளர்வதால்தான் நீர் வளம் குன்றிவிட்டது, விவசாயம் அழிகிறது என்கின்றனர். மற்றொருவர் இந்தத் தாவரம் 1000 அடி ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சுகிறது என்கிறார். ஆற்று மணலை வாரி நிலத்தடி நீரை வீணடிப்பதற்கு எதிராக இத்தனை வலுவான எதிர்ப்பு ஒலிக்கவில்லையே. நீரற்ற சூழ்நிலையிலும் ஒரு தாவரம் வளர்கிறது என்றால், அதன் தனித்தன்மை பற்றித்தானே ஆராய வேண்டும்?

சீமைக் கருவேலம்தான் நீர்வளம் கெட்டதற்குக் காரணம் என்றால், கொங்கு பகுதியில் நொய்யல் ஆறு நொந்து போயிருப்பதற்கு உண்மைக் காரணம் என்ன? பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீரை வாரிவாரி கொடுக்கிறோமே, அது எந்தக் கணக்கில் சேரும்? விடுதலை பெற்று 68 ஆண்டுகளாகியும் அனைத்துக் கிராம மக்களுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லையே, ஏன்?

மேலும் சில புகார்கள்

இம்மரத்தைப் பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை என ஒருவர் எழுதுகிறார். தாவரத்தைப் பொறுத்தவரை இது நல்ல அம்சம்தான். இதற்கான காரணத்தை ஆராய்ந்து, மற்றத் தாவரங்களில் இதுபோன்ற பண்பை ஊக்குவிக்க என்ன செய்வது என்றுதானே ஆராய வேண்டும்?

இத்தாவரம் அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்று இன்னொருவர் குற்றஞ்சாட்டுகிறார். கருவேல மரக்கட்டைகளை எரித்தால் வரும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற நோய்களை உருவாக்கும் என்று இன்னொரு குற்றச்சாட்டு. இது எந்த நாட்டு ஆராய்ச்சியின் முடிவு?

திடீர் முடிவுகள்

இந்த மரத்தைப் பறவைகள், உயிரினங்கள் பயன்படுத்தவில்லை என்றொரு அபாண்டமான புகார். ஆனால், அது உண்மையில்லை.

கருவேல மரத்தின் இலை, காய்களை உண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்கிறது ஒரு வதந்தி. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த மரத்தின் இலைகள், காய்களை உண்ட எத்தனை கால்நடைகள் மலடாகியிருக்கின்றன? இது தொடர்பாக நாட்டில் எந்தத் துறை ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது?

நமது நாட்டில் கருவேல மரம், அது ஏற்படுத்திய தாக்கம் பற்றி எத்தனை அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன? பல கருத்துகள் அறிவியல் ஆதாரமில்லாமல் வதந்திகளாக, புகார்களாக, குற்றச்சாட்டுகளாகப் பரவலாக வலம் வருகின்றன.

இத்தனை பிரச்சினைகள் அதன் பின்னணியில் இருக்கின்றன என்றால், ஏன் இவ்வளவு காலம் அரசுத் துறைகள் உறக்கத்தில் இருந்தன? இன்றைக்குத் திடீரென ஏன் விழித்துக்கொண்டுள்ளன? இன்றைக்குப் பட்டியலிடப்படும் ஆபத்துகள் ஏன் இத்தனை ஆண்டுகளில் கண்டறியப்படவில்லை?

மருத்துவக் குணம்

இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இங்கிலாந்து பிளேக் நோயால் உலுக்கியெடுக்கப்பட்டபோது, இன்றைக்குப் போதை வஸ்துவாகக் கருதப்படும் கஞ்சா பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மயக்கமருந்துக்கு அடிகோலியதும் Cannabis என்ற தாவரமே. அதேபோலப் புகையிலை, மருந்தாக இருந்து, இன்றைக்குப் போதைப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

சீமை கருவேல மரத்தின் பேரினத்தைச் சேர்ந்த வன்னி மரம் (Prosopis spicigera) பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மூலிகை மருத்துவத்தில் சிற்றினங்களிடையே மருத்துவக் குணங்களில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சீமை கருவேல மருத்துவக் குணங்களை நமது மருத்துவ ஆய்வாளர்கள் துருவிப் பார்த்ததில்லை.

கருவேல மரக் காய்களில் கால்சியம், தயமின், ரிபோஃபிளேவின் போன்றவை நிறைந்துள்ளன. இதன் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் ‘அல்கரோபினா காக்டெய்ல்’ என்ற பானம் பெரு போன்ற நாடுகளில் காலையில் வந்து மதியத்துக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுமாம். இது வயிற்றுக் கோளாறுக்கு நிவாரணம், உடல் உறுப்புகளுக்கு உற்சாகம் ஊட்டுதல், பாலுணர்வைத் தூண்டுதல் ஆகிய தன்மைகளைக் கொண்டது.

பலன்கள் ஏராளம்

ஒரு விஞ்ஞானி நடத்திய ஆராய்ச்சியின்படி ஒரு ஹெக்டேரில் ஐந்து ஆண்டு வளர்ந்த நிலையில் உள்ள கருவேலமரங்கள் 8,000 கிலோ காய்களைக் கொடுக்கும். அதை உரிய வகையில் பயன்படுத்தலாம். இவற்றின் மலர்களில் நெக்டார் திரவங்கள் நிறைந்துள்ளன. ஒரு ஹெக்டேர் தாவரத்தில் 400 கிலோவரை தேன் எடுக்கலாம்.

விவசாயிகளும் விஞ்ஞானிகளும் இவற்றின் இலைகளைச் சிறந்த தீவனம் என்கின்றனர். இயல் தாவரங்களும்கூட இலைகளை உதிர்த்து நிற்கும்போது, கால்நடைகளுக்குக் கருவேல இலைகள்தானே இத்தனை காலமும் உணவாகின, அவைதானே நிழல் தந்தன.

இதன் கட்டைகளை மரப்பலகைகளாக, வீட்டுச் சாரங்களாக மாற்றலாம். ஏற்கெனவே, நின்று எரியும் விறகாகவும் இதன் கட்டைகள் பெருமளவு பயன்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 1970-களில் மரத்தை வெட்டி, சுட்டுக் கரியாக்கிப் பல ஏழைகள் வியாபாரம் செய்து முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தேவை அறிவியல் பார்வை

கிராமங்களில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வேலையற்று இருப்போருக்கு, சீமை கருவேல மரத்தின் மேற்கண்ட பயன்களைப் பயன்படுத்தி வேலையை உருவாக்கலாம்.

வறண்ட, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் இந்தத் தாவரம் நம் நாட்டில் மட்டும் மிக மோசமான கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட 50-60 ஆண்டுகளில் நாட்டில் எந்த ஒரு துறையும் இதன் மேலாண்மை, ஆராய்ச்சி சார்ந்து எதுவும் செய்யவில்லை.

எதிர்காலத்திலாவது இதன் நன்மை, தீமை குறித்து அறிவியல்பூர்வ ஆராய்ச்சியும் அதன் அடிப்படையில் இது மேலாண்மையும் செய்யப்பட வேண்டும். மாறாக, வீண் வெறுப்பும் கண்மூடித்தனமான அழிப்பும் எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

கட்டுரையாளர், கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kklaksh53@rediffmail.com

 

மணிமகுடம் – ஜெய் சீதாராமன்

Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்Image result for வந்தியத்தேவன்

இதுவரை…….இடைக்காலச்  சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்தபோது சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட வாணகப்பாடி நாட்டு சிற்றரசன்  வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான்.

புதுப் பதவியை ஏற்குமுன் பாண்டியர் வம்சாவளி மணிமகுடத்தையும் மற்றும் புராதனமான  இரத்தின மாலையையும்  ஈழத்தில் மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத்  தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர்  பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்குத்  தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத்  தீவுக்கு வருகிறான்.

வந்தியத்தேவன் மணிமகுடமும்   இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத்  துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டெடுத்து வந்து அவர்களின் கலத்தில் ஏறியதும் , கடல் கொள்ளைக்காரர்கள் கைகளில் சிக்குகிறான். அவர்கள் கைகளிலிருந்து சாதுர்யமாக தப்பித்த வந்தியத்தேவனுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன்,  மணிமகுடமும், இரத்தின மாலையும் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறித் தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களுடன்  திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.

இனி……………………..

அத்தியாயம் 12. நந்தினியின் சபதம்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு..

 

நந்தினி, அமர புஜங்கநெடுஞ்செழியப் பாண்டியன் மற்றும் அவர்களைச் சேர்ந்த வீரர்கள் கூடிய கூட்டம் ஒன்று, ராசிபுரம் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில், இரவு நடுசாமத்தில்  கூட்டப்பட்டிருந்தது. அவர்கள் யார் வருகைக்காகவோ காத்திருந்தினர்போல் தோன்றியது.

ஒரு சலசலப்பு! வெளியில் யாருடைய வருகைக்காகவோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் உள்ளே ஓடிவந்து “வந்துவிட்டார்கள்! வந்துவிட்டார்கள்!!” என்றான்.

உள்ளே ரவிதாசன் முன்வர கருத்திருமனும், சோமன்சாம்பவானும் ஓர் நீண்ட பெரிய பெட்டியைத் தூக்கி வந்து கீழ் வைத்து அவர்கள் முன் நின்றார்கள்.

“மகாராணி!உங்கள் முன்னோர் பாதுகாத்து வந்த விலை மதிக்கமுடியாத மணிமகுடமும் இரத்தின ஹாரமும் இதோ! பல எதிர்ப்புகளை சமாளித்து எடுத்து வந்துள்ளேன்” என்று பெருமிதம் பொங்கக் கூறினான் ரவிதாசன். அவன் இருகண்களிலும் மின்னல் பளிச்சிட்டது.

இதற்காகவே கொண்டு வரப்பட்டிருந்த பட்டுக் கம்பளம், நந்தினி முன் விரிக்கப்பட்டது.

கருத்திருமனும் சோமன்சாம்பவானும் மிகவும் ஜாக்கிரதையாக பெட்டியை அவள் முன் வைத்தனர். ரவிதாசன் அதில் பதிந்திருந்த மீன் சின்னத்தைத் தன் அங்கவஸ்திரத்தால் துடைத்தான்.

“மிகப் பெரிய சாதனை புரிந்திருக்கிறீர்.அதற்கான பரிசு உரிய காலத்தில் கிடைக்கும்” என்றாள்.

பக்கத்திலிருந்த பட்டுப் பையிலிருந்து வீர பாண்டியன் அவளிடம் ஒப்படைத்திருந்த பெட்டியின் சாவியை எடுத்தாள். ஒரு கையால் பூட்டைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால், சாவியை பொருத்திப் பூட்டைத் திறக்க முயன்றாள்.

முடியவில்லை!

சாவி பூட்டின் துவாரத்தைவிட பெரியதாய் இருப்பதை உணர்ந்தாள்.

“என்ன இது ரவிதாசன் அவர்களே? திறக்க இயலவில்லையே? விளக்கம் தேவை” என்றாள்.

ரவிதாசன் “என்னிடம் சாவியைக் கொடுங்கள்” என்று வாங்கித் திறக்க முயன்றான்!

பயனில்லை! அவனும் திகைத்தான்!

நந்தினி “நல்லது. ஏதோ தப்பு நடந்திருக்கிறதுபோல் தோன்றுகிறது. பூட்டை உடையுங்கள்” என்று கணீர் குரலில் கட்டளையிட்டாள்.

பூட்டு உடைக்கப்பட்டது.

பெட்டியை நந்தினி திறந்தாள்.

உள்ளே..

‘மணிமகுடமும் இரத்தின ஹாரமும்’ இல்லை!

அவைகளுக்குப் பதிலாக..

‘நிறைய கற்கள்’ இருந்தன!!!!

நந்தினி அதிர்ச்சியால் மயங்கிக் கீழே விழுந்தாள்.

ரவிதாசன் கண்கள் சிவந்தன. கருத்திருமன் விரல்களை நெறித்தான். சோமன்சாம்பவன் தலையிலடித்துக் கொண்டான்.

அமரபுஜங்கன் ஓடிச் சென்று நந்தினி முகத்தில் தண்ணீர் தெளித்தான். மற்ற எல்லோரும் “அய்யோ, எப்படி?” என்று புலம்பினார்கள்.

நந்தினி கண் விழித்தாள். பற்களை நறநற என்று கடித்து “இது வந்தியத்தேவன் வேலையாகத்தான் இருக்கவேண்டும். நன்றாக நம்மை ஏமாற்றிவிட்டான்” என்றாள்.

ரவிதாசன் ‘மஹாராணி..” என்று ஆரம்பித்தான்.

அவனை ஆவேசமாகப் பார்த்த நந்தினி,

“நீங்கள் இங்கிருந்து போனதிலிருந்து என்னவெல்லாம் நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?என்று அடங்காத கோபத்துடன் ரவிதாசனை வினவினாள்.

ரவிதாசன் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“ஆக, நீங்கள் சென்று அதனை எடுத்து வரவில்லை..வந்தியத்தேவன் எடுத்து வந்ததை அவனிடமிருந்து பறித்து வந்திருக்கிறீர்கள்.. அப்படித்தானே?”

ரவிதாசன் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தோன்றாமல், ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

நந்தினி அவனை மேலும் பேசவிடாமல் மறித்து “அப்படி பறித்து வந்ததும் வேறு.. சரி.. வந்தியத்தேவன் இறந்ததை உங்கள் கண்களால் பார்த்தீர்களா?” என்றாள்.

“இல்லை, ஆனால்..”என்று ரவிதாசன் முடிக்கவில்லை,

நந்தினி மீண்டும் அவனைத் தடுத்து, “கைதேர்ந்த சோழக் கடற்படை வீரர்கள் அவன் உயிரை மீட்டிருக்கலாம்! நம் குல உயிர்நாடியான பொக்கிஷங்களை நம்மிடமிருந்து அபகரித்து எதிரி சோழர்களிடம்  அவன் சேர்ப்பித்து விட்டிருக்கக்கூடும். அவன் நம் கையில்தான் உயிரை விடவேண்டும் என்பது விதி. வந்தியத்தேவா! மீண்டும் எங்களை முட்டாளாக்கி விட்டாய்! நீதான் எங்கள் முதல் எதிரி. சோழ வர்க்கத்தின் கதையை நாங்கள் முடிக்குமுன் உன் உயிர் எங்களால் எடுக்கப்படும். இது நாங்கள் எடுக்கும் புது சபதம்” என்று அனல் பறக்கக் கூறினாள்.

நந்தினி தன் கையை நீட்டினாள்! எல்லோர் கைகளும் அவள் கையோடு இணைந்தன!

(அடுத்த இதழில் முடியும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

கவிதையான சிவமே ! -படமும் பாடலும் – சு ரவி


 

 

நிலவு சூடும் அழகும்-கங்கை
நீர்மலிந்த சடையும்
உலவும் அரவு புனையும்- எஃகின்
உறுதி பாய்ந்த உடலும்,
அலகிலாத கருணை -பொழியும்
அமுத வதனமைந்தும்
கலைகளான பரமே- என்றன்
கவிதையான சிவமே!

அதல, சுதலம் முதலாய்- வளரும்
அண்டமாளு கின்றாய்!
நிதமும் கருணை  கொண்டே- பாரம்
நீக்கி அருளுகின்றாய்!
நுதலில் விழியினுள்ளே- ஞானச்
சுடர் வளர்த்து நின்றாய்!
முதலுமான பரமே- என்றும்
முடிவிலாத சிவமே!

அஞ்சும் நெஞ்சினோடு-சூழும்
அசுர, தேவர் கூட்டம்
தஞ்சமென்று நின்றன்-கமலத்
தாள்பணிந்த வேளை
அஞ்சலஞ்சல் என்றே -ஆங்கே
ஆலகாலமென்றோர்
நஞ்சையுண்ட பரமே!- என்னுள்
நடனமாடும் சிவமே!

பாடுகின்ற நாவில் -பனுவல்
பரிமளிக்க வருவாய்!
தேடுகின்ற நெஞ்சில்- பக்தித்
தேன் துளிர்க்க வைப்பாய்!
ஏடு தந்து நின்மேல்- பாடல்
எழுதவைத்துகந்தாய்!
காடுநாடும் பரமே- உமையாள்
காதலிக்கும் சிவமே!

தாதையாகி நின்றாய்- நீயே
தாயுமாக வந்தாய்!
வேதவடிவமானாய்!- எங்கும்
விரியும் அண்டமானாய்!
ஜோதி வடிவமானாய்-வானில்
சுழலும் கோள்களானாய்!
நாதமான பரமே!-என்னுள்
நானுமான சிவமே! 

 

வொண்டர் உமன் – புதிய திரைப்படம்

Image result for wonder woman
 சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் படம்  வொண்டர் உமன்.
ஆங்கிலக் கார்ட்டூன் கதைகளிலிருந்து படமாகத் தாவிய கதைதான் வொண்டர் உமன்.
ஆங்கிலத்தில் இரண்டு வகைக் கார்ட்டூன்கள் உண்டு. ஒன்று மார்வெல் காமிக்ஸ் . மற்றொன்று டி‌சி காமிக்ஸ்.
டிசி  உலகத்தின்  நாயகர்கள் சூப்பர் மேன், பேட் மேன்,  வொண்டர்  உமன் போன்றவர்கள். இவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று உருவகிக்கப்படுவார்கள்.  வார்னர் திரைப்பட நிறுவனம் டிசி காமிக்ஸின் உரிமைகளை வாங்கித் திரைப்படங்கள் எடுக்கிறது.
மார்வெல் உலகத்தின் நாயகர்கள்: ஸ்பைடர் மேன் , ஹல்க், அயர்ன் மேன் போன்றவர்கள். இவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்து சூப்பர் சக்திகளைப்பெற்றுத் தீரச் செயல்கள் புரிபவர்கள்.  வால்ட் டிஸ்னி நிறுவனம் மார்வெல் உரிமையை  வாங்கித் திரைப்படங்கள் எடுக்கின்றன.
இந்த வரிசையில் டிசியின் வொன்டர்  உமன் திரைப்படம் இப்போது வந்துள்ளது. இதன் சிறப்பு அம்சம்  என்னவென்றால்  ஒரு பெண்தான் படத்தின் ஹீரோ.  ( நம்ம ஊரிலே எடுத்தா அந்தக் காலத்து  விஜயசாந்தியைப் போட்டிருக்கலாம்) .
ஜீயஸ் என்ற கடவுள் தன் சாயலில் மக்களைப் படைத்து அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறார். ஆனால் ஆரிஸ் என்ற போர்க்கடவுள் மக்களை, ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடியச் செய்கிறான்.  அதனால் ஜீயஸ், அமேஸான் என்ற தீவில் பெண்களை மட்டும் வைத்து அவர்களுக்குத் திறமைகளைக் கொடுத்து உலகைப் போரிலிருந்தும் ஆரிஸிடமிருந்தும் காப்பாற்ற ஒரு ஆயுதத்தையும் படைக்கிறார்.
டயானா என்ற இளவரசி, ஸ்டீவ் என்ற பிரிட்டிஷ் கேப்டன் கூறியபடி உலகைக் காக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு  முதலாம் உலகப்  போர்     நடக்கும்போது ஜெர்மனிக்குச் செல்கிறாள்.  அங்குள்ள தளபதியை ஆரிஸ் என்று எண்ணி அவனைக் கொல்கிறாள்.  ஆனால்  போர்  மீண்டும் தொடர்வதைக் கண்டு அவள் திகைத்து, உண்மையான   பிரிட்டிஷ் தளபதி ஆரிஸாக இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுடன் சண்டையிடுகிறாள். ஸ்டீவும் டயானாவிடம் ஐ லவ் யு என்று சொல்லிவிட்டு , தன் உயிரைக் கொடுத்து ஜெர்மனியின் அழிவிலிருந்து லண்டனைக் காப்பாற்றுகிறான்.
 அப்போதுதான் ஆரிஸ் மூலம் டயானாவிற்குத் தெரியவருகிறது – தான்  தான் ஆரிஸைக்  கொல்லப் படைக்கைப்பட்ட  ஆயுதம் என்று. முடிவில்  டயானா ஆரிஸைக்  கொன்று உலகைக் காக்கிறாள்.  ஸ்டீவின் நினைவோடு வாழ்கிறாள்.
Image result for wonder woman
படம் விறுவிறுப்பாகப்   போனாலும் ஏதோ டப்பிங் படம் பார்த்த உணர்வுதான் வருகிறது.

பொன்னியின் செல்வன் -டெலி பிலிம் – பாம்பே கண்ணன்

Image may contain: one or more people, people standing and outdoor

 

Related image

பொன்னியின் செல்வன், கடல்புறா, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், நான் கிருஷ்ண தேவராயன் போன்ற எண்ணற்ற ஒலிப் புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்ட பாம்பே கண்ணன் அவர்கள் ‘பொன்னியின் செல்வனை’  ஓர்  ஒளிப்படமாகத் (TELE FILM) தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

நட்சத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

இதைப் பற்றி அவரே  தன் முகநூலில் கூறியவற்றை    உங்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ஒளிப்படம்

ஒளிப்பட வேலைகள் துவங்கி விட்டன

நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது

படப்பிடிப்பிற்கான இடங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன
உடைகளும் காட்சி அமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன

 TELEFILM ற்கும் TELESERIAL க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே

ஆனாலும் என்னுடைய பொன்னியின் செல்வன் TELEFILM என்று நான் கூறியதும் பலரும் எத்தனை EPISODE என்று கேட்கிறார்கள் திரைப்படமா என்றும் கேட்கிறார்கள்

அவர்களுக்காக இந்த விளக்கம்

நான் திட்டமிடுவது ஒரு முழுநீள தொலைக்  காட்சித்  திரைப்படம்தான்

ஆனால் இதைத் தற்சமயம் திரை அரங்குகளில் பார்ப்பதற்காகத்   தயாரிக்கப்  போவதில்லை

திரை அரங்குகளுக்குச்  செல்லவேண்டுமானால் அங்குள்ள பெரிய திரையில் காட்டும் வண்ணம் சில விஷயங்கள் படப்பிடிப்பிலேயே இருக்கவேண்டும்.மேலும் திரை அரங்குகளுக்குள் செல்ல விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் இவர்களின் தயவு வேண்டும்.  மிகுந்த பொருட்செலவில் விளம்பரங்கள் செய்யப்படவேண்டும்.  விநியோகஸ்தினர்களை நாடினால் பிரபலமான நட்சத்திரங்கள் யாரென்று கேட்பார்கள் அல்லது பிரபலமான இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும்.  பல கோடிகள் முதலீடு தேவைப்படும். இல்லை என்றால் அது சூதாட்டம்தான்.

இவற்றை எல்லாம் தற்சமயம் நினைக்காமல் இந்தப் படத்தை ஒரு வீடியோ பிலிமாகத் தயாரிக்க முற்பட்டு வருகிறேன்

மேலும் பொன்னியின் செல்வன் போன்ற படத்தைத்  திரை அரங்குகளுக்குக்  கொண்டு  செல்ல   வேண்டுமானால் அதை ஒரு இரண்டு மணி நேர படமாகச்  சுருக்க வேண்டும்

அது பொன்னி மட்டும்தான். பொன்னியின் செல்வன் அல்ல
யானையை பானைக்குள் அடைப்பது போன்றது

ஆனால் என்னுடைய படம் அந்தக்  கதைக்கு – அந்த சரித்திரத்திற்கு எவ்வளவு நீளம் தேவையோ அதை – அதன் தரம் குறையாமல் எப்படி எடுக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கும்

என்னுடைய இப்போதைய கணிப்பு 300 நிமிடங்களுக்குள் இருக்கும் என்பது.

இதுவே இரண்டு பகுதிகளாக வெளிவரும்.

வெளி நாடுகளில் சில சிறந்த நாவல்கள்  திரைப் படங்களாக வருவதில்லை அவை இப்படிபட்ட TELEFILM களாகவே வருகின்றன என்பதை நான் கண்டிருக்கிறேன்.

உதாரணமாக ARTHUR HAILEY போன்றவர்களின் படைப்புகள்

மேலும் TELEVISION தொடராக தயாரிக்கலாமே என்பதற்கு என்னுடைய பதில்: 

அதன் சிரமங்களை,  அறிந்தவர்கள் சொல்வார்கள்!

அதற்கான முதலீட்டில் நான் இரண்டு பொன்னியின் செல்வன் எடுத்து விடுவேன்

மேலும்,  என்னுடைய படத்தில் அந்தந்த சரித்திர பாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்பார்களே தவிர நடிகர்களைக் கொண்டு பாத்திரங்கள் அடையாளம் காணமாட்டார்கள். அந்த அளவிற்குப் பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கப்போகும் பொருத்தமான நடிகர்கள் இருப்பார்கள்

பொருத்தமான காட்சி பின்னணி காட்சிக்குத்தேவையான வெளிப்புறங்களில் படப்பிடிப்பு,அரங்க நிர்மாணம், உடைகள் கல்கியின் வசனங்கள் இசை மற்றும் பாடல்கள் எல்லாம் உண்டு

பின்னாளில் ஒருநாள் இதுவும் திரை அரங்குகளுக்கு செல்லும் –  தொலைக்  காட்சிகளில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு அதற்குத்  தேவையான TECHNICAL மாற்றங்களைக் குறைந்த செலவில் செய்யும் வண்ணம் இப்போது இதைத் தயாரிக்கின்றேன்

இதைப் பற்றியும் கிராபிக்ஸ் பற்றியும் தொழில்நுட்ப வல்லுனர்களோடு பேசி வருகிறேன்

மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த TELEFILM என்னும் திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்

நீங்கள் பார்க்கப்போவது ஒரு திரைப்படத்திற்கு நிகரானதாக இருக்கும்

நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே  DVD அல்லது வலைத்தளத்தில் காண்பீர்கள்

உங்களிடம்  மீண்டும் ஒரு முறை நான் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் அறிந்ததே

இதன் மாபெரும் பொருட்செலவிற்கான ஆதரவு

எங்களால் முடிந்த வரையில் இதில் செலவு செய்யப்போகிறோம்

இருந்தும் இதன் பிரம்மாண்டம் காரணமாக ,இது எல்லோர் மனதில் இருக்கும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசையினால்,நம் மனதில் இருக்கும் பாத்திரங்கள் கண் முன் தத்ரூபமாக தோன்ற வேண்டுமென்ற ஆவலினால், உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன்

என்னுடைய ஒலிப்புத்தகங்கள் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் அடுத்து எப்போது என்றும் அவர்கள் மனதிற்கு தோன்றும் சில கதைகளை ஒலிப்புத்தகமாக செய்யுங்கள் என்றும் விண்ணப்பங்களை முன் வைக்கிறார்கள்

நிச்சயம் ஒருநாள் கடவுள் அனுக்ரகமும் உடல் மனது தெம்பும் இருந்தால் நேரமும் கிடைத்தால் செய்வேன்

இதற்கிடையில் நான் கேட்பதெல்லாம் கல்கியின் ரசிகர்களும் பொன்னியின் செல்வன் நாவலை ஒளிப்படமாக பார்க்க விரும்புவர்களும் சிறிய முயற்சியாக இதற்கு உதவலாமே

உங்களால் முயன்ற அளவிற்கு ஒரு ஐந்துலிருந்து பத்து விநாடி படம் தயாரிப்பதற்கு ஒவ்வொருவரும் உதவினாலே சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல தேவையான ஆதரவு கிடைத்து விடும்

குறிப்பாக வெளி நாட்டில் வாழும் கல்கியின் ரசிகர்களும் என் ரசிகர்களும் இதற்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்

மிண்டும் படப்பிடிப்பு துவங்கியவுடன் உங்களை அணுகுகிறேன்.

என்னுடைய எண்ணமே துவங்கிய படம் வெற்றிகரமாக முடிய வேண்டும்

நாம் கல்கியின் கதாபாத்திரங்களை திரையில் காண வேண்டும்

அவர்களுடன் சில மணி நேரங்களை கழிக்க வேண்டும் என்பதுதான்

இந்த விண்ணப்பம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்தான்

அவர்கள் கொடுக்கப்போகும் சிறிய தொகை ஒவ்வொரு நாளும் அவர்கள் பெயர் சொல்லும்

உதவ விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் வங்கிக் கணக்கு தருகிறேன் அதில் செலுத்தி விடுங்கள்

கண்டிப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்

இதுவரையில் ஆதரவு அளித்துள்ள சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி

நன்றி வணக்கம்

Computer graphics எனப்படும் தொழில் நுட்பம் தெரிந்த கலைஞர்கள் இந்தத் தொலைக்  காட்சிப்  படத்திற்குத்  தேவைப்படுகிறார்கள்

புதியவர்கள் அனுபவஸ்தர்கள் ஆலோசனை வழங்க என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

 பாம்பே கண்ணன்

 

பிச்சி – ஜெயந்தி நாராயண்

 


“வேட்டு போட்டாச்சு. பெருமாள் புறப்புட்டுட்டார். இன்னும் சித்த நாழில நம்ம வீதிக்கு வந்துடுவார். சின்னதா ஒரு கோலத்த போட்டுட்டு வான்னா, எவ்வளவு நாழி எழச்சு எழச்சு போட்டுண்டே இருப்ப. உள்ள போய் முகத்த அலம்பிண்டு தலைய சரி பண்ணிண்டு வா”

“தோ வரேம்மா” என்றபடியே சற்று தள்ளி நின்று போட்ட கோலத்தை ஒரு தடவை ரசித்துப் பார்த்து விட்டு, கதவருகே நின்ற அம்மாவிடம் பல்லைக் கடித்தபடியே, “ஏம்மா இவ்வளவு பெருசா வீதி பூரா கேக்கற மாதிரி கத்தற.. எனக்குத் தெரியாதா”

“ஏண்டி, நீயும் ராஜியும் போடாததையா உன் பொண்ணு போட்டுட்டா. ரெண்டு பேரும் மார்கழி மாசம் வீதியடைச்சுப் போடற கோலத்தப் பாக்க ஊரே திரண்டு வருமே”

பக்கத்தாத்து கோமு பாட்டி முட்டாக்கை இழுத்து விட்டபடியே எங்காத்து திண்ணைல உக்கார்ந்துண்டா. பாட்டிக்கு எண்பது வயசாச்சு. ஆனா இப்பவும் தன் வேலையைத் தானே பார்த்துண்டு சுறுசுறுப்பாக எப்பவும் இருப்பா.

”போடி கமலா, சீக்கிரம் போய் வேற புடவையும் மாத்திண்டு வா. இன்னிக்கிக் குதிரை வாகனம். தேர் முட்டி கிட்ட கிச்சாவாத்து திண்ணைல மொதல்ல போய் இடம் பிடிச்சுண்டா பெருமாள நன்னா சேவிக்கலாம். அங்க சித்த நாழி நிப்பார்.”

குதிரை வாகனத்துல பெருமாள் வரது கண்கொள்ளா காட்சியா இருக்கும். நான் வேகமா உள்ள போகத் திரும்பினபோது, எதுத்தாத்து ரெங்கன் மூச்சிறைக்க ஓடி வந்தான்.

“இன்னிக்கி நம்ம வீதிக்குப் பெருமாள் வரமாட்டார்.. முக்காத்துப் பிச்சி மாமி செத்து போய்ட்டா” என்றபடியே தகவலை மற்றவர்களுக்கும் சொல்ல ஓடினான்.

“ரெங்கா என்னப்பா சோதனை. வயசான கிழவியெல்லாம் விட்டுட்டு சின்னவள கூட்டிண்ட்டியே” என்றபடி பாட்டி பிச்சி மாமியாத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.

“என்னடி சொல்றான் இவன்” என்றபடியே கதவைப் பிடித்தபடி அப்படியே திண்ணையில் உட்கார்ந்தாள் அம்மா.

“கார்த்தாலதானேம்மா பாத்துட்டு வந்த”

அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. நிலை குத்திய பார்வையோடு அமர்ந்திருந்தாள். அம்மா எதற்கும் சுலபமாக கலங்குபவள் இல்லை. சற்று திடமானவள்தான்.

“வா உள்ள போகலாம்” என்று அவள் கையைப் பிடித்தேன். எப்பவும் மறுப்பவள் இன்று கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

கூடத்துத் தூணில் சரிந்தபடியே அமர்ந்தவள் வாய், ராஜி, ராஜி என அரட்டியபடி இருந்தது. கொஞ்ச நாழி முன்னால கோமு பாட்டி சொன்னாளே அந்த ராஜிதான் பிச்சி மாமி. ரொம்ப வருஷமா எல்லாரும் பிச்சி மாமின்னு கூப்டே பழக்கமாயிடுத்து.

அம்மாவின் பால்ய சினேகிதி. எப்பலேர்ந்து இந்தப் பிச்சி மாமி பித்து பிடிச்சவளாட்டம் ஆயிட்டானு பல தடவ கேட்டும் அம்மா கிட்ட இருந்து சரியா பதில் வந்ததில்லை.

இன்னிக்கித்தான் அம்மா சென்னைல இருந்து வந்தா.. சாரங்கன் மாமா ரெண்டு வாரம் முன்னால இறந்து போய் காரியம்லாம் முடிஞ்சு கார்த்தால வந்தா. வந்து காபி குடிச்சு குளிச்ச உடனயே “ராஜிய பாத்துட்டு வரேன்”னு கிளம்பிட்டா.

“என்னம்மா உன்னோட ஆருயிர் சினேகிதியப் பாக்காம பத்து நாளா தவிச்சுப் போய்ட்டயா” என்ற என் கேலியைப் பொருட்படுத்தாமல் கிளம்பிப் போய்ட்டா.

இப்ப திடீர்னு ராத்திரி அவ உயிரோட இல்லன்னு சொன்னா அதிர்ச்சியாத்தானே இருக்கும். என்ன வேலை இருந்தாலும், தன் சினேகிதியுடன் ஒரு மணி நேரமாவது செலவிடாமல் இருக்க மாட்டா அம்மா. இது எனக்கு நினைவு தெரிந்த நாளா நடக்கிறது… அப்பேற்பட்ட சினேகிதியின் இழப்பு கண்டிப்பாக இடியாகத்தான் இறங்கியிருக்கும். அப்பாவுக்கு கேன்சர் வந்தபோதும், ஆறு மாதத்தில் அவர் இறந்தபோதும் அதைத் தைரியமாக எதிர் கொண்டாள்.. அதே போல் இதிலிருந்தும் மீண்டு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன், “எழுந்திரும்மா, அவாத்துக்குப் போய்ட்டு வந்துடலாம்”

“இல்லடி நான் வர மாட்டேன். என் ராஜி கூட நா கார்த்தாலதான் பேசினேன். அவள இந்த கோலத்துலப் பாக்க எனக்கு இஷ்டமில்லை”

பிச்சி மாமி அம்மாவிடம் மட்டும்தான் பேசுவாள். வேறு யார் என்ன கேட்டாலும், சில சமயம் வெறும் சிரிப்பு அல்லது வெற்றுப் பார்வைதான்.

எவ்வளவு சொல்லியும் அம்மா கேக்கவே இல்லை. அவாத்துலயும் சொல்லி அனுப்பிட்டு காத்திருந்து பாத்துட்டு கடைசில பாடிய எடுத்துட்டா.

அம்மா ரெண்டு நாள்ல சரியாய்டுவான்னு பார்த்தா. எப்பப் பாரு ராஜி ராஜின்னு ஒரே புலம்பல். ஜுரமே வந்துடுத்து. ஜுர மாத்திரையக் கொடுத்து தூங்க சொல்லிட்டு, வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து படுத்தேன். நடு ராத்திரி இருக்கும், ராஜி ராஜின்னு அம்மாகிட்ட இருந்து குரல். அடுத்தாப்ல, “அண்ணா ராஜி உன் கிட்டயே வந்துட்டாண்ணா, ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்கோ, ராஜிம்மா போறுண்டி இவ்வளவு நாள் பிச்சியா நடிச்சது.”

“அம்மா அம்மா என்னம்மா சொல்ற” என்றதும் மலங்க மலங்க விழித்தாள். உடல் அனலாய் சுட்டது. இன்னொரு மாத்திரையை கொடுத்துட்டு அவ தல மாட்லயே உக்காந்திருந்தேன். கார்த்தால பால்காரன் விடாமல் மணி அடிக்கும் சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தேன்., அம்மாவைத் தொட்டு பார்த்தேன். வியர்த்து விட்டிருந்தது.

ஒரு வாரத்தில் உடல் சரியாகி கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தாலும் அம்மா முன்ன மாதிரி இல்ல. அன்னிக்கி ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் மொட்ட மாடில காத்தாட உட்கார்ந்திருந்தப்ப மெதுவா அம்மா கிட்ட, “அன்னிக்கி ஜுர வேகத்துல என்னன்னவோ உளறினமா, அதான் என்னன்னு கேக்கலாம்னு”

“என்ன உளறினேன்”

“இல்ல, அண்ணா, ராஜி உன்கிட்ட வந்துட்டா அப்டி இப்டின்னு, ஒண்ணும் புரியல”

“உளறலடி உளறல, எல்லாம் நெஜம். என் ராஜியே போய்ட்டா. உசிருக்கு உசிரானா அண்ணாவும் போய்ட்டான். இனிமே சொன்னா என்ன, சொல்றேன்.”

“ராஜி எனக்கு சினேகிதி மட்டும் இல்லை, அவா நமக்கு தூரத்து சொந்தம். அண்ணாவும் அவளும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசைப்பட்டா. என்கிட்டத்தான் ரெண்டு பேருமே முதல்ல சொன்னா. எனக்கா ரொம்ப சந்தோஷம். ஆருயிர்த்தோழியே மன்னியா வந்தா, இருக்காதா பின்ன, ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமா இருக்கும். அவ அவ்வளவு அழகு”

நான் நிமிர்ந்து பார்த்தவுடன், “நீ பாக்கறச்ச பித்து பிடிச்ச கோலத்துல எல்லா அழகும் மறஞ்சு போச்சுடி”

“ரெண்டாத்துலயும் சம்மதம். நிச்சயம் பண்ணணும்கிற நேரத்துல, ஊர்லேர்ந்து வந்த ராஜியோட தாத்தா, ” ஜாதகப் பொருத்தம் பாக்க வேணாமா ” என்று ஆரம்பித்தார். ராஜியோட அப்பா, “மனப் பொருத்தம் இருக்கு, சொந்த பந்தமுமாச்சு. அது போறாதா”
“அதெப்படிடா, உங்கம்மா நேக்கு அக்கா பொண்ணுதான், ஆனாலும் எட்டு பொருத்தமும் அமஞ்சதுனாலதான் கல்யாணம் பண்ணிண்டேன் தெரியுமோன்னோ. ஏன்? நீயும் அத்தை பொண்ணதான் கல்யாணம் பண்ணிண்ட, உனக்கு ஜாதகம் பாக்கலியா”

“இல்லப்பா அவா ரெண்டு பேரும் இஷ்டப்பட்டுட்டா. அதுனாலதான் நான் மத்த ஏற்பாட ஆரம்பிச்சேன். அதுக்கென்ன அவாள்ட்ட பிள்ளையோட ஜாதகம் வாங்கி பாத்துடலாம்”

ஜாதகம் பார்த்ததில், பொருத்தமும் சரியில்லாதது மட்டுமில்லாமல் பிள்ளை ஜாதகப்படி அவனுக்கு ரெண்டு தாரம் உண்டுன்னும் ஜோசியர் சொல்லிட்டார். தாத்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேனுட்டார். ராஜியோட அப்பா பெண்ணின் முக வாட்டத்தைப் பார்த்து, அப்பாவிடம்,
“பூ கட்டி வேணா பாக்கலாமா”

“ப்ரகஸ்பதி, உனக்கு ஒன்ணும் புரியாதா. அதான் ஜோஸியன் தெளிவா சொல்லிட்டானே. அந்த பிள்ளய கட்டிண்டு ஒண்ணு இவ அல்பாயுசுல போய்டுவா. இல்லன்னா இவ இருக்கறச்சயே அவன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிண்டுடுவான். பெத்த பொண்ணுமேல அக்கறை இருந்தா இப்படி பேசுவியாடா. போ போ வேற நல்ல மாப்பிள்ளையா பாரு”

அப்பா பேச்சை தட்ட முடியாமல் அவரும் வேறு வரன் பாக்க ஆரம்பித்தார். ராஜிக்கு என்ன பண்றதுன்னே புரியல. பயந்த சுபாவம். எதுத்துப் பேசிப்பழக்கமில்லை.

என்ன பண்றதுன்னு புரியாம தவிச்சா. அதுலேர்ந்து தப்பிக்க போட்டதுதான் இந்த பிச்சி வேஷம். பைத்தியக்காரப் பொண்ண எவன் கட்டுவான். அப்ப ஆரம்பிச்சது கட்டை சாயறவரைக்கும் இந்த நாடகம் தொடர்ந்துடுத்து. இதுக்கு ஒரே சாட்சியா நான். அவ தல விதி அப்படி ஆயிடுத்து. தினமும் நான் அவளோட செலவிடற சில மணி நேரங்கள்தான் அவளுடைய சந்தோஷம். எல்லாம் முடிஞ்சு போச்சு இப்ப.” என்றபடி கண்களை துடைத்தபடியே எழுந்தாள் அம்மா.

ரெண்டு பெண்டாட்டி உண்டு என்று ஜோசியரால் சொல்லப்பட்ட சாரங்கன் மாமா கடைசிவரை கட்டை ப்ரம்மச்சாரியாகத்தான் இருந்தார்.

 

 

 

பொன்னியின் செல்வன் – படக்கதை -தஞ்சை ஓவியர் தங்கம்

Thangam.jpg

பொன்னியின் செல்வன் கதையை சித்திரக் கதையாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் தஞ்சையைச் சேர்ந்த ஓவியர் ப. தங்கம் என்பவர்.

முதல் ஏழு அத்தியாயங்களை சித்திரக் கதையின் முதல் புத்தகமாக சென்ற ஆண்டு வெளியிட்டிருந்தார்.

தற்போது அதன் இரண்டாம் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

சென்னையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழ் வசந்தம் வார மலரில் ‘வீர சோழன்‘ என்ற தலைப்பில் ஏழு ஆண்டுகள் மாமன்னன் ராஜராஜசோழனின் வீர வரலாற்றினை வரைந்து சித்திரக்கதையாக வெளியிட்டார்.

அம்மன்னனைப்பற்றிய சித்திரக்கதைகளைத் தமிழகக் குழந்தைகளுக்குத் தருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார்

80 வயது ஆகியும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்ட ஓவியர் தங்கம் அவர்களைக்   குவிகம் சார்பில் வாழ்த்துகிறோம் .

ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் 200  மட்டுமே.

பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரும் இதை வாங்கி அவரை ஊக்குவித்துப்  பெருமையடையவேண்டும் என்றும்  கேட்டுக் கொள்கிறோம்.

ஓவியர் தங்கம் அவர்களை 9159582467 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தனது வங்கிக் கணக்கு எண்ணைத்  தெரிவிப்பார்.  அந்தக் கணக்கில் நீங்கள் பணம் செலுத்தியதும்  புத்தகத்தைத் தபாலில்   அனுப்பி வைப்பார்.

Scan_20160415

ponniyin-selvan-2Scan_20160418

 

 

எலிப்பொறி – ராமன்

 

 

நான் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வருடம். 1966ல்.  அப்போது லண்டன் ரீஜெண்ட் தியேட்டரில் ‘THE MOUSE TRAP’(எலிப்பொறி) என்னும் ஒரு அகதா கிரிஸ்டியின் பிரபலமான திட்டமிட்டுக்  கொலை புரிந்த கதையை  ‘யார் அதை செய்தார்கள்?’(whodunit?)  என்றவாறு அமைக்கப்பட்ட  விறுவிறுப்பான  நாடகத்தைப் பார்த்தேன்!

அந்த நாடகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை!!!

1952ல் தொடங்கிய நாடகம் நான் பார்த்த நாள் 1966ல் அதே தியேட்டரில் 14 வருடங்களாக தினமும் ஹவுஸ் ஃபுல்லாக நடந்து 14*52*6 கணக்கில் 4368 ஷோக்களைத் தொட்டது.

இப்போது 2017ம் வருடம். இன்னமும் தினமும் தியேட்டரில் முழுமையாக நிரம்பி 65 வருடங்களுக்குப் பின் 26500 ஷோக்களையும் தாண்டி கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டில் இடத்தை பெற்றிருக்கிறது!!  !!

நாடகம் 1972ம் ஆண்டு பக்கத்திலேயே இருக்கும் பெரிய செயிண்ட் மார்ட்டின் தியேட்டருக்கு மாற்றப்பட்டு அதிலேயே தொடர்ந்து நடைபெற்று மக்களை மகிழ்வித்துக் கோண்டிருக்கிறது! 

 

கனடாவில்  ஒன்டாரியோ, டொராண்டோவில் டிரக் தியேட்டரில் 9000 ஷோக்களை நிரப்பி சிங்கப்பூர், கோலாலம்பூர் , பேங்க்காக் போன்ற அயல் நாடுகளிலும் போடப்பட்டிருக்கின்றது!! உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து நாடகம் பார்ப்பதற்கென்றே மக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். நாடகம் இயங்கும் நேரம் 2 மணி 20 நிமிடங்கள்.

அந்த நாடகத்தின் கதை இப்படிப்  போகிறது:

லண்டனில் உள்ள ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கெஸ்ட்ஹௌஸாக மாற்றப்பட்ட ‘மான்க்ஸ்வெல் மேனர்’  என்னும் பழைய அரச எஸ்டேட். அதன் உரிமையாளர்கள் மாலி மற்றும் ஜைல்ஸ் என்னும் புது மண தம்பதிகள். முதல் வாடிக்கையாளர்களுக்காக கெஸ்ட்ஹவுஸை ரெடி செய்து காத்திருக்கிறார்கள். வெளியில் பலத்த சூறாவளிக்  காற்றுடன்  பனி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தம்பதிகள் முதல் வாடிக்கையாளர்களின் வருகையைப்  பாதிக்குமோ என்று பயம் கொள்கிறார்கள். அப்போது ரேடியோவில் அதே  தெருவில் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நடந்த மௌரீன் என்ற ஒரு பெண்மணியின் கொலையைப் பற்றி ஓர்  அறிவிப்பு வருகிறது. அந்தச்  செய்தி கெஸ்ட் ஹவுஸ் தம்பதிகளை அவ்வளவாகப்  பாதிக்கவில்லை. கடைசியில் ஒருவர் பின் ஒருவராக ஐந்து வாடிக்கையாளர்கள் வந்து சேர்கிறர்கள். முதலாதவர் மன நிலையினால் சற்று பாதிக்கப்பட்ட கிரிஸ்டஃபர் என்னும் இளைஞர், தம்பதிகளுக்கு சிறிது மன உளைச்சலை கொடுக்கிறார். இரண்டாதவர் திருமதி பாயில். ஒன்றுமே பிடிக்காதவர். பிறர் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர். மூன்றாமவர் எப்போதும் பட்டாளத்தைப்  பற்றியே பேசும் நடுத்தர வயதுள்ள மேஜர் மெட்காஃப். நான்காதவர் கேஸ்வெல் என்னும் இளைமையான பெண். ஏற்கெனவே ரேடியோவில் ஒலிபரப்பானக்  கொலையைப்  பற்றித்  தனக்குத்தெரிந்த சில உண்மைகளைச்   சொல்லுகிறார். திடீரென நுழைந்த பரவுசீனி என்னும் ஐந்தாதவர் தன் கார் பனிமழை சூறாவளியால் கவிழ்ந்து விட்டதாகக்  கூறிக்கொண்டே வந்து சேருகிறார்.

அடுத்த நாள்  போலிஸ் டிடெக்டிவ் சார்ஜெண்ட் ட்ராட்டர் கெஸ்ட் ஹவுசுக்கு  வருகிறார். அவர் ரேடியோவில் அறிவிக்கப்பட்ட  கொலை செய்யப்பட்டப்  பெண்மணி மௌரீனைப் பற்றிப்  பேசத் தொடங்குகிறார்.  சில வருடங்களுக்குமுன் நீதிமன்றம் மூன்று குழந்தைகளை, கவனித்துப் பாதுகாத்து வளர்க்க மௌரீன் வீட்டிற்கு அனுப்பியது.  ஆனால் அங்கு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள். அதை அறிந்த நீதிமன்றம் குழந்தைகளை அங்கிருந்து அகற்றுமுன் ஒரு குழந்தை மட்டும் பலியாகி இறந்துவிடுகிறது.  மௌரீன் பெண்மணி அக்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியவள். மௌரீன்  சிறை தண்டனை பெற்றாள். தண்டனை முடிந்த  பிறகு  கெஸ்ட் ஹவுசிற்கு அருகில்  வசித்து வந்தாள். அங்குதான் அவள் கொலை செய்யப்பட்டாள். அவள் வீட்டில் போலீஸ் கண்டுபிடித்த  நோட்புக்கில்  ‘மூன்று குருட்டு மூஞ்சூருகள்’ கொல்லப்படுவார்கள்’ என்றும்  ‘கெஸ்ட் ஹவுஸ்’ மற்றும் ‘மௌரீன்’ விலாசங்களும் எழுதப்பட்டிருந்தன. அவள் உடலில் ஒரு குறிப்பில்  ‘இதுதான் முதலாவது’ என்றும்  எழுதப் பட்டிருந்தது.

திருமதி பாயில் மேஜரிடம், நீதிபதியாய் இருந்தபோது குழந்தைகளை மௌரீனிடம் அனுப்பியது அவர்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார். ட்ராட்டர் அங்கிருப்பவர்களில் யாரோஒருவர் கொலை செய்யப்பட்டவரோடு தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கிறார். எல்லோரும் இதை மறுக்கின்றனர்.

திடீரென்று படிப்பறையில் திருமதி பாயில் கொலை செய்யப்பட்டு விட்டதாக மாலி அறிவிக்கிறார். ட்ராட்டர் எல்லோரையும் பாயில் கொலை செய்யப்பட்டபோது எங்கிருந்தார்கள் என்பதை விசாரணை செய்கிறார். அதற்கு உண்மையான பதில் கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகளில் மற்றொன்றின் இருப்பிடம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சந்தேகிக்கிறார்கள்.  அங்கிருப்பவர்கள் அனைவரும்  மௌரீன் கொலையில் எதோ ஒரு காரணத்திற்காகத்  தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பட்டாளத்தில் சேர்ந்த  விலாசமில்லாத எஞ்சியுள்ள பெரியதாய் வளர்ந்துள்ள குழந்தைதான் இப்போது முதலாம் சஸ்பெக்ட் எனவும் தெரியவருகிறது.  எல்லோரும் அவர்களில் அந்த கொலைகாரன் பதுங்கியிருப்பதை உணர்கிறார்கள். யார் அந்தக் கொலையாளி? அடுத்து கொலைபடப்போகும் அந்த   நபர் – ‘குருட்டு மூஞ்சூரு’ யார்? சஸ்பென்ஸ் அதிகரிக்கிறது.  சிதறடிக்கும் முடிவில் ‘அந்த கொலையை செய்தவர் யார்’ என்ற உண்மையை நேர் மாறான திசையில் திருப்பிக்  கொலைகாரனைக்காட்டி செயலின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி நம்மை ஒரு குலுக்கு குலுக்கிவிடுகிறார் அகதா கிருஸ்டி.

எலிஸபெத் ராணி II மூலம் உச்ச பிரிட்டிஷ் டேம்(dame) தலைப்பு பெற்ற அகதா கிரிஸ்டியின் உன்னத பாணியின் அதிர்வுறும் சஸ்பென்ஸில் அற்புதமான சிக்கல்கள் அடங்கிய சதித்திட்டம் எந்த மூலை முடுக்களிலெல்லாம் பதுங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களின் ஸ்டைலின் முடிவை ஊகித்துத் தெரிந்துகொள்ள இயலாத தன்மையின் உயர்வு தெரியவருகிறது.

கொலைகாரர் கடைசியில் நாடகம் பார்ப்பவர்களை அவரைப் பற்றியும் கதையின் முடிவைப்பற்றியும்,  யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நாடகம் முடிவடைகிறது! நானும் ஓருவரிடமும் பகிரப்போவதில்லை!!!

ஆரம்பத்தில் ரிச்சார்ட் அட்டென்பரௌ நடித்து பின்னர் அடிக்கடி நடிகர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஓர் அதிசயம் கின்ன்ஸ் புக்கில் இடம் பெற்ற டெரிக் கைலெர் 4515  ஷோவிற்குப் பிறகு இன்றும் உயிருடன் இருக்கிறார்!! அவரின் குரல் FMல் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!!!

 

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு ஏர்செல் ஏற்பாடு செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

 

 

டங்கன் – அமெரிக்க தமிழ் சினிமா டைரக்டர்

 

ஓர் அமெரிக்கர் இந்தியாவில் வந்து பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கினார் என்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது?

அதுவும் இவர் தான்  எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார் என்றால் இன்னும் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது?

எம்ஜியாருக்குத் தாடையில் ஒரு பள்ளம் இருப்பதால் அவர் கதாநாயகராக நடிக்கத் தகுதியானவர் இல்லை என்று மறுத்த டைரக்டர் அவர். முடிவில் தாடையில் ஒரு ஒட்டுத் தாடியுடன் நடிப்பதை ஒப்புக் கொண்ட டைரக்டர் அவர் ( படம் மந்திரி குமாரி)

அந்தக்கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை இயக்கியவர்.

காற்றினிலே வரும் கீதம் பாடலைப் பாடிய எம் எஸ் சுப்பலக்ஷ்மியின் மீரா படத்தை   இயக்கியவர் அவர்.

அவர் தான் எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் . அவர் இயக்கிய படங்கள்:

நந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்
சதிலீலாவதி (1936)
சீமந்தினி (1936)
இரு சகோதரர்கள் (1936)
அம்பிகாபதி (1937)
சூர்யபுத்ரி (1940)
சகுந்தலா (1940)
காளமேகம் (1940)
தாசிப் பெண் (1943)
வால்மீகி (1945)
ரிடர்னிங் சோல்ஜர் (1945)
மீரா (1945)
பொன்முடி (1950)
மந்திரி குமாரி (1950)

 

அவரைப் பற்றி  எடுத்த ஒரு ஆவணப் படத்தை ( சற்று நீண்ட படம்தான் ) பார்த்து ரசியுங்கள். தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில்  ஈடுபாடு கொண்டவர்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும்!!

Karan Bali's documentary celebrates a filmmaker who is credited pioneering moves in camera work and sound in Indian cinema

 

ராவெசு கவிதைகள்

நல்லா இருக்கனும்

Image result for beggar in chennai

பிச்சைக்குக்
கையேந்தி நின்றார்
பெரியவர்.                                                                    மகன் மக்களால்
கைவிடப்பட்டவர்.
ஒருரூபா
தட்டில் விழுந்ததும்
.’உன் குழந்தைகுட்டி
நல்லா இருக்கனும்’
என்றபடி நகர்ந்தார்.

 

 

இது என்ன கூத்து.

Image result for குடுகுடுப்பைக்காரன்

இது என்ன கூத்து ….!
வந்ததோ நற்செய்தி
வரவேற்கும் எதிர்காலம்
துள்ளவேண்டும் மகிழ்ச்சியில்                         ஏன் இப்படித்  துவண்டுவிட்டாய்
துன்பம் துயரம்
கண்டு கண்டு
பழகியதால்
நற்செய்தியை ஏற்க
மனம் மறுக்கிறதோ
உடல் எதிர்க்கிறதோ ?

வாழையடி வாழை

 

Image result for கல்யாண வீட்டில் வாழைவெட்டிய வாழை                           பந்தலில் கட்டிய வாழை
நீர்சிந்தி நிற்கிறது
குலையுடன்.                                                                                                  மண்டபத்துள்ளே
இருமனம்சேர
குலம் தழைக்க
திருமணம் நடக்கிறது
வாழையடி வாழை

 

இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம்

 

 

இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம்

மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் கிராமத்தை இந்தியாவின் முதல் புத்தகக் கிராமமாக உருவாக்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் வெல்ஷ் பகுதியில் உள்ள ஹே-ஆன்-வை கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிராமத்தில் 25 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கே கலையம்சத்துடன் வடிவமைப்புகளைச் செய்து கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களையும் வைத்திருக்கிறார்கள். மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. ..

இன்னொரு சந்தோஷமான செய்தி! இந்தக் கிராமத்தைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் ஒரு புத்தகக் கிராமத்தை உருவாக்கவிருக்கிறார்கள். கவிஞர் இந்திரன், பதிப்பாளர் வேடியப்பன், கோ. வசந்தகுமாரன் ஆகியோரின் முன்முயற்சியில் இந்தப் புத்தகக் கிராமம் உருவாகவிருக்கிறது. இதற்காக, மகாராஷ்டிரத்துக்குப் பயணம் செய்யவும் இருக்கிறார்கள் இந்தப் புத்தக நண்பர்கள்!

குவிகம் , இந்த முயற்சியைப் பாராட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், நண்பர்களின் இந்த முயற்சிக்குத் தன்னால் ஆன உதவியைச் செய்யவும் குவிகம் காத்துக் கொண்டிருக்கிறது!

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1

சைக்கிள் காலம்!

Image result for குரங்குப் பெடல் சைக்கிள்

Image result for குரங்குப் பெடல் சைக்கிள்

அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம் – கமலீஸ்வரன் கோயில் தெரு குள்ள ஸ்ரீதர் வாடகை சைக்கிளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான் – குரங்குப் பெடல் இல்லை – சீட்டில் உட்கார்ந்து!

அவன் ஓட்டிக்கொண்டிருந்தது, எங்கள் வீட்டில் இருந்த பச்சைக்கலர் ஹெர்குலெஸ் சைக்கிள் மாதிரி இல்லை. சின்னதாக நா..னே காலூன்றிக் கொள்ளுமளவுக்கு – (அந்த நீண்ட ’ஏ’காரம் என் குட்டை உருவத்தைக் குறிக்க!) – சிறுவர் சைக்கிள்!

தேய்ந்த பிரேக்குகள், துருவேறிய வீல் கார்டு, பெடலில் தொங்கும் நடு ரப்பர்க் கட்டை, 45 டிகிரியில் வானம் பார்த்த மரக்கட்டை சீட்டு, வளைந்த ஹாண்டில் பார், வாய்பிளந்த பிரேக் லீவர்கள்  – முதன் முதலில் இந்த சைக்கிளை ஓட்டிய பையனுக்கு இப்போது குறைந்தது ஐம்பது வயாதாகியிருக்கலாம்!

ஏக்கமாயிருந்தது – ஸ்ரீதர் கொஞ்சம் பெரியவன், வயதில்!  ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது?”

சின்ன வயது சைக்கிள் அனுபவம் பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும் – சைக்கிள் அன்றைய வெகுஜன சினேகிதன்! எல்லோர் வீட்டிலும் ஒரு சைக்கிள் – அவசரத்துக்கு சட்டென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, பக்கத்துத் தெரு பொட்டிக்கடைக்குப் போய் ஒரணாவுக்குத் தக்காளியோ, வெங்காயமோ வாங்கி வர சைக்கிளை விட வேறு டிரான்ஸ்போர்ட் ஏது?

ஆறாம் கிளாஸில் என்னுடன் படித்த நடராஜனுக்கு இரண்டு காலிலும் போலியோ – மெடல் காலிபர்ஸ் காலை இறுக்க, சின்ன சைக்கிளில் ஒரு மாதிரி கோணலாய் உட்கார்ந்து பெடலடித்தபடி வருவான். ஹாண்டில்பார் பிடிகளிலும், சக்கர கார்டுகளிலும் கலர்க் கலராய்க் குஞ்சலங்கள் ஆடிவரும் – போலியோ குறையை அந்தச் சின்ன சைக்கிள் நட்புடன் தீர்த்து வைத்தது!

 

என் தாத்தா சைக்கிளோட்டி நான் பார்த்ததில்லை. எத்தனை மைல்களானாலும் நடராஜா சர்வீஸ்தான்! ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம்! மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார்! நாளொன்றுக்கு முப்பது கிமீ சலிக்காமல் எழுபது வயது வரை சைக்கிளில் பவனி வந்திருக்கிறார். காலை நடையை விட இது சிறந்த உடற்பயிற்சி அவருக்கு!

’சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது’ ஒவ்வொரு சம்மரிலும் நடக்கும் ஒரு விவகாரம்! ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில்! உடன் வருபவர் மூச்சுத் திணறி பாதியிலேயே நின்றுவிட, பேச்சுக்குரல் இல்லாததால் ஓட்டுபவர் திரும்பிப் பார்க்க, பயத்தில் பாலன்ஸ் தவறி விழுந்து தெருவில் சில்லறை பொறுக்குவதும், விழுப்புண்கள் பெறுவதும், சைக்கிள் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப வருவன!

படிப்படியாக இரண்டு வருடங்களில் நானே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான்! சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு (?குரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சி! பிளாட்பாரமோ, மைல் கல்லோ – அதன் மீது காலூன்றி முதலில் பாரில், பின்னர் சீட்டில் அமர்ந்து சைக்கிள் சவாரி!

இதற்குள் சுள்ளி பொறுக்கிச் சென்ற செல்லாத்தாவின் பின்புறம் சைக்கிளால் மோதி – ப்ரேக் பிடிக்காமல் – கெட்ட வார்த்தையில் வாங்கிய திட்டு, மாது மாமாவின் புது வெள்ளை வேட்டியில் முன்சக்கரம் பட்டு அழுக்கானதற்கான  திட்டு, கட்டியிருந்த நாலு முழ வேட்டி, சைக்கிள் செயினில் மாட்டிக் கிழிந்து, எண்ணை/கிரீஸ் கறையில் கலர் மாறியது, தெரு முனையில் திரும்பிய குதிரை வண்டியைப் பார்த்து மிரண்டு, இடதுபுறம் சைக்கிளோடு சரிந்து, தெருவோரச் சாக்கடையில் சங்கமித்தது எல்லாம் சைக்கிள் கால வரலாற்று உண்மைகள்!

இரண்டு கைகளையும் விட்டு, சிட்டுக்களுக்கு முன்னால் சீன் போட்ட மறு நிமிடம், ஹாண்டில்பார் நொடிந்து ‘தடால்’ என கீழே விழுந்து தரை பெருக்காத வாலிபர்கள் குறைவு!

அந்தக்காலத்தில்,இரவு நேரத்தில் விளக்கில்லாமல் சைக்கிளில் போவது குற்றம். அதற்கான விளக்கை தினமும் துடைத்து, மண்ணெண்னை விட்டு ரெடி செய்வது ஒரு வேலை! பின்னால் வந்த முன்னேற்றம், சக்கரத்தில் உராய்ந்தபடி டைனமோவும் – அதனால் பிரகாசமாய் எரியும் கூம்பு வடிவ எலெக்ட்ரிக் லைட்டும்!

நாணல் படத்தில் விளக்கு இல்லை என நாகேஷை நடுரோட்டில் போலீஸ்காரர் நிறுத்த, மெதுவாய் அவரைச் சுற்றி வந்து, தோள்மீது கைபோட்டு சைக்கிளை நிறுத்துவார் – “பிளாட்ஃபாரமும் இல்லே, லைட் போஸ்ட்டும் இல்லே; நடு ரோட்டுல நிக்கச் சொன்னா, எப்படி சைக்கிள நிறுத்தறது? அதான் இப்படி…” என்பார்!

தமிழ் சினிமாக்களில் காதல் சொல்லும் சைக்கிள்கள் – நீதிக்குப் பின் பாசம் (எம்ஜிஆர் – சரோஜாதேவி), கல்யாணப் பரிசு (ஜெமினி – சரோஜாதேவி). அண்ணாமலை (ரஜினி, குஷ்பு) ! சைக்கிள் ஓட்டும் போதுதான் தத்துவப் பாட்டும் வரும் – பாவமன்னிப்பு (சிவாஜி). ஏழ்மையின் சின்னமும் சைக்கிள்தான் (நிறைய படங்கள்).

தபால்காரர், பால்காரர், பேப்பர் போடுபவர் எனப் பலரின் உற்ற தோழன் சைக்கிள் வண்டிதான்!

இரண்டு, மூன்று சக்கர சைக்கிள், சர்க்கஸ் பஃபூன் ஓட்டும் ஒரு சக்கர சைக்கிள், இரண்டுபேர் பெடல்செய்து போகும் மூன்று சக்கர சைக்கிள் எனப் பல ரகங்கள்.

முன்பக்க பார் இல்லாத லேடீஸ் சைக்கிள் பிரத்தியேகமாக பெண்களுக்கானது – ஓர் ஆண் அதை ஓட்டும்போது, பெண்ணுக்கான நளினத்துடன் ஓட்டுவதைப் போல் தோன்றுவது விந்தையானது!

சைக்கிள்கள் ஒரு தலைமுறையின் கலாச்சாரத்தைச் சொல்கின்றன. இன்றும் கிராமங்களின் முக்கியமான போக்குவரவு சாதனமாக இருப்பது சைக்கிள்கள்தான். காரியரில் தேங்காய்க் குலை, வைக்கோல் பிரி, கோழிகள் அடைத்த கூடை என வரப்புகளில் வளைந்து, வளைந்து சைக்கிளை ஓட்டிச்செல்வது அழகாய் இருக்கும்!

ஒலிபெருக்கி அலற, சுற்றிலும் காகிதத் தோரணங்கள் தொங்க, 24 மணி நேரம் இடைவிடாத சைக்கிள் சவாரி, ஊர்ப் பக்கங்களில் பிரபலம்.

நேரத்திற்குக் குழாய் வைத்த எவர்சில்வர் கேனில் டீயுடன் வரும் சைக்கிளுக்கு மவுசு கொஞ்சம் கூடதான்!

இன்று சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சியாகச் செய்யப்படுகிறது! சுரங்கத்தில் வேலை செய்பவரைப்போல முன் விளக்குடன் ஒரு ஹெல்மெட், ஸ்போர்ஸ் ஷூவுடன் இருபது, முப்பது கிமீ சைக்கிள் சவாரி செய்யும் இளைஞர்கள் (ஞிகளும்) இப்போது நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றனர்!

வீட்டுக்குள் காலைப் பயிற்சி சக்கரமில்லாத ‘ஸ்டாடிக்’ சைக்கிளில் தொடங்குகிறது – அது வெளியில் சைக்கிளில் சுற்றுவதற்கு ஈடாகுமா?