தீபாவளி மருந்து

2/25

image

தேவையானவை (1 ½ கப்) 

மல்லி விதை /தனியா  2 ½ டேபிள் ஸ்பூன் 

ஓமம்                                2 1/2 டேபிள் ஸ்பூன் 

ஜீரகம்                              2        டேபிள் ஸ்பூன் 

மிளகு                              2        டேபிள் ஸ்பூன் 

இஞ்சி பவுடர்                1/4      ஸ்பூன் 

வெல்லம்                      3/4       கப் 

நெய்                               1-2      ஸ்பூன் 

தேன்                             கொஞ்சம் 

தனியா, ஓமம், ஜீரகம், மிளகு இவற்றை இலேசான சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும் 

பிறகு இவற்றை மிக்ஸியில் நல்ல பேஸ்ட்டாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இத்துடன் இஞ்சிப் பவுடரைச்  சேர்க்கவும். (இஞ்சிக்குப் பதிலாகச்  சுக்கை உபயோகித்தால் அதையும் ஊறவைத்து அரைத்துச் சேர்க்கவும்). இவை ஒரு கப் பேஸ்ட்டாக  வரும்.

¾ கப் வெல்லத்தை வாணலியில்  இட்டு ¼ கப் தண்ணீர் விட்டு சூடாக்கிக் கரைய வைக்கவும்.அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதை மேலும் 2  நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேஸ்ட்டைச்  சேர்த்துக்  கலக்கவும்.

இதை லேசான ஜுவாலையில் சூடாக்கிஅவ்வப்போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு  15 நிமிடம்  அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.   

பிறகு நன்றாக ஆறவைத்து தண்ணீர் இல்லாத பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.   

தீபாவளி மருந்து தயார். 

இது காரமாக இருந்தால் ஒரு ஸ்பூன் தேனைச்  சேர்க்கவும். 

 மற்றொரு முறை:

எல்லா சமாசாரங்களையும் டிரையாக இலேசான சூட்டில் வறுத்து,பிறகு நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மேலே சொன்ன மாதிரி வெல்லத்தைச்  சேர்த்துத்  தயார் செய்யவும்.   

Thanks to Jayshri’s Kitchen

http://www.jeyashriskitchen.com/2012/10/deepavali-marundhu-recipe-how-to-make.html

ஜெயலலிதா ……….. அம்மா

3/25

image

image

image

image

image

image

         image

image

image

தமிழ் நாட்டில் ஜெயலலிதா சரித்திரம் படைத்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

பெயரிலியே  வெற்றியைப் படைத்த இவர் தான் பங்கேற்ற துறைகள் எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்தவர். 

.தமிழ்  நாட்டின் நம்பர் 1 கதாநாயகி. நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர். எம் ஜி ஆருடன் மட்டும் 28 படங்கள் நடித்தவர். தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம் என்று பலமொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன்  நடித்துவெற்றி வாகை சூடியவர்.பரத நாட்டியத்திலும், பாடும் திறமையிலும் முன்னணியில் நின்றவர்.  

எம்‌ஜி‌ஆர் அரசியலில் வெற்றிப்பாதையில் பயணித்தபோது இவரையும் அழைத்துச் சென்றார். ராஜ்ய சபா உறுப்பினராக, கொள்கைபரப்புச் செயலாளராக இவர் உயர்ந்தார்.

எம்‌ஜி‌ஆருக்குப் பிறகு தன்னை கட்சியின் தலைமையாளராக மாற்றிக் கொண்டு வெற்றி கண்டவர். மூன்று முறை முதல்வராக இருந்து திமுகவைத் தோற்கடித்தவர்.

தோல்விகள் இவரைத் தளர்த்தியதில்லை. மாறாக ஆக்ரோஷத்துடன் பாயும் புலி போன்று இருந்தவர்.   

கனவுக்கன்னியாக இருந்தவர் இன்று தமிழகத்திற்கு அம்மாவாகி அமைச்சரையும் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரையும்  தன் காலில் விழ வைக்கும் திறன் மிக்கவர்.

தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை அனுமதிக்காதவர்.

இன்று அவர் சொத்து சேகரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முதல் முதலமைச்சர். சிறையில் இருப்பவர் .

கட்சித் தொண்டர்கள் இவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அளவே இல்லை .

பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் இவரது தண்டனையைக் கேட்டு உயிரைத் துறந்தனர்.

அவரது புகைப்படத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு அழுத கண்ணீருடன் அடுத்த மந்திரிசபை பதவிப் பிரமாணம் எடுத்தது.

‘கர்நாடக அரசே! காவிரியை எடுத்துக் கொள். எங்கள் அம்மாவைத் தா ’ என்ற போஸ்டர் வரிகள். 

மக்கள் முதல்வர் அம்மாவை உடனே விடுதலை செய்!  இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கர்நாடகா மக்கள் அனைவரையும் சிறைப் பிடிப்போம் 

‘தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா? 

நீதி தேவதைக்குத் தண்டனையா?

– என்றும் போஸ்டர் வரிகள்.

முன்னாள் முதல்வர் என்று சொல்லாமல்  மக்கள் முதல்வர் என்று கட்சியினரால் சொல்லப்படுபவர். 

மேல் முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப் படலாம். அல்லது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

எது எப்படி ஆயினும், 

தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஒரு  சரித்திரம் படைத்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை!

108 சிவாலயம் – பாபநாசம்

4/25

image

image

போற்றி போற்றி பாடல் சொல்வது நூற்றெட்டு
ஏற்றி ஏற்றி எரியும் தீபம்  நூற்றெட்டு
ஏற்றம் தந்திடும் காயத்ரி மந்திரமும் நூற்றெட்டு
ஊற்று நீரென இனிப்பது  நூற்றெட்டுச்  சிவாலயமே

விண்ணின்  கதிரவன் சாய்கிரணம் கலசம்விழ
பொன்னின் கும்பமும் மின்னலிட்டு ஒளிகூட்ட
மண்ணில் உறையும் உயிரனைத்தும் பொன்னாக
மின்னும் கோபுரமே நூற்றெட்டுச்  சிவாலயமே

முன்னவர் ராமலிங்க சுவாமி முன்னின்று
மூன்று வரிசையில்  நூற்றாறு லிங்கமுடன்
அனுமன் பிடித்த மாலிங்கம் தான்சேர்த்து
அணியாய் அமைந்தது நூற்றெட்டுச்  சிவாலயமே

ராவணன் கொன்றபாவம் தீர்த்தாய் கடலருகே
கரதூஷன் கொன்றபாவம் தீர்த்தாய் இத்தலத்தில்
கணக்குகள் இல்லாமல் பாவம் புரிந்தஎன்னை
பிணக்காமல் காத்திடுவாய் நூற்றெட்டுச்  சிவாலயமே

குடத்தை மண்ணாற்றில் வைத்தபெண் கண்கலங்க
விடத்தை கண்டத்தில் கொண்டஉன்னை  நினைந்துருக
மடந்தை துயர்தீர குடமுருட்டி நீர்தந்தீர்
குடந்தை அருகிலுள்ள நூற்றெட்டுச்  சிவாலயமே

கணபதி தொடங்கி மூலவர் தாள்பணிந்து
மனதினில் சிவமுடன் பிரகாரம் வலம்வந்து
அனுமந்த லிங்கமும் அம்மனையும் சுற்றிவந்தால்
ஒமென்று உணர்த்திடும் நூற்றெட்டுச்  சிவாலயமே

சங்கரர் துணையே பர்வத வர்த்தினி
குங்கும வாசனை பொருந்திய திருவடி
எங்கும் நிறைந்த பங்கய மேனியாள்
தங்கிடும் திருத்தலம் நூற்றெட்டுச்  சிவாலயமே

பாவங்கள் செய்யா மனிதன் ஈண்டில்லை
பாவங்கள் செய்தபின் பரிகாரம் தான் தந்து
பாவங்கள் எந்நாளும் புரியாமல் காத்திடும்
பாவநாசம் உறை நூற்றெட்டுச்  சிவாலயமே

மலைபோன்ற என்னைப் பொடிப்பொடி ஆக்கினும்
சிலைபோன்ற என்னை சிதைத்து வதைக்கினும்
அலைபோன்று என்னை அலக்க அழிக்கினும்
தலைவணங்க மறக்கிலேன் நூற்றெட்டுச்  சிவாலயமே

சந்தங்கள் சேர்த்து ஓதுவார்கள் பண்ணிசைக்க
சிந்தனைக் குவித்து சிவாச்சாரியார் வேதமோத 
சுந்தரன் எழுதிய ஈரைந்தும் படித்தவர்க்கு
சொந்தமாய் ஆகிடுமே நூற்றெட்டுச்  சிவாலயமே

image

தலமும் இருப்பிடமும்:
கும்பகோணத்திலிருந்து தஞ்சை சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ளது.

தலப்பெயர்கள்:
கீழைராமேச்சுவரம், 108 சிவலிங்கங்கள் இருப்பதால் நூற்றெட்டு சிவலிங்கக் கோயில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

தலவிருட்சம் :வில்வம்

மூர்த்திகள்:
இறைவன்:இராமலிங்கேசுவர்இறைவி:பர்வத வர்த்தினி, மலைவளர் காதலி அம்மன்..

தீர்த்தங்கள் :
குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம்.

தலப்பெருமை:
இராமலிங்கர் உடனுறை பர்வத வர்த்தினி அம்பாள் ஆலயம் ராமபிரான் காலத்துக் கோவிலாகும். ராமபிரான், சீதை, லட்சுமணன், அனுமனுடன், இராமேஸ்வரம் சென்று காவிரிக்கரையான பாபநாசத்திற்கு வருகிறார்கள். அழகிய தென்னஞ்சோலையும், நீர்வளமும் நிறைந்த பகுதியான பாபநாசத்திற்கு வரும்போது அவர்களை ஏதோ ஓர் நிழல் தொடர்வதாக உணர்ந்தார்கள். இது இராமபிரான் வதம் செய்த பாவம்தான் ராமர். சீதையையும் தொடர்கிறது என உணர்ந்து பாவத்தைப் போக்கி கொள்ள கழுவாய் தேடினார்கள். தங்களுடைய பாவத்தை 108 சிவலிங்கம் எழுந்தருளச் செய்வதன் மூலம் போக்கிக் கொள்ள நினைத்து காவிரியிலிருந்து மணல் கொண்டு வந்து 107 லிங்கங்களை கையால் பிடித்தார்கள்.
அனுமனை காசியிலிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வர அனுப்பினார்கள். சிவலிங்கம் பிடிக்கப்பட்டது. 6 அடி உயர லிங்கம் மூலவராக அமைத்தார்கள்.ராம! ராம! என்ற மந்திரத்தின் உச்சரிப்போடு லிங்கம் அமைக்கப்பட்டதால் மூலவருக்கு ராமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. இராமலிங்கத்தின் வலது புறத்தில் 106 லிங்கங்கள் மூன்று வரிசைகளில் எழுந்தருளிக்கப்பட்டது. காசிக்குச் சென்ற அனுமான் லிங்கம் கொண்டு வர தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. இராமர் கவலையுடன் இருக்கும்போது அனுமான் கொண்டு வந்த 5 அடி உயர லிங்கத்தையும் எழுந்தருளிடச் செய்தார்.
தலச்சிறப்பு:
ஒரே இடத்தில் கோவிலில் 108 சிவலிங்கங்களை வழிபடுவதன் மூலம் 108 சிவன் கோவில்களை வழிப்பட்ட பேறு கிடைக்கும். 108 சிவலிங்கம் உள்ளதால் பாபநாசம் சிவனின் புண்ணிய பூமியாய் திகழ்கிறது. இராமபிரானின் பாபம் நாசமானதால் இந்த ஊருக்கு பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனை பாபநாசத்தில் 108 சிவாலயத்தை வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
இக்கோயிலுக்கு பெருமை அளிக்கும் 108 சிவலிங்கங்களில் 106 சிவலிங்கங்கள் உள்ள ஒரு நீண்ட மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபத்தில் மூன்று வரிசைகளில் ஓர் வரிசைக்கு முப்பத்தி ஐந்து இலிங்கங்களாகவும், மூன்றாம் வரிசையில் முப்பத்தி ஆறும் ஆக 106 இலிங்கங்கள் உள்ளன. கருவறையில் உள்ள மூல லிங்கம் ஒன்றும், அனுமந்தலிங்கம் ஒன்றும் சேர்த்து இக்கோயில் 108 சிவ இலிங்கக் கோயிலாக விளங்குகிறது.
கோயிலுக்குத் தெற்கில் அனுமார் கொண்டு வந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று தனிக்கோயில் கொண்டு விளங்குவதைக் காணலாம். நினைத்த காரியம் சித்தியடைய வேண்டுவோர் 108 சிவலிங்கங்களையும் போற்றி வழிபடலாம். பழம் பெரும் புனித தலங்களுடன் ஒன்றாகிய ஜோதிர்லிங்க இராமேஸ்வரம் சென்று வழிபட இயலாதவர் கீழை இராமேஸ்வரம் என்னும் பாவநாசத்தை அடைந்து வழிபடலாம். அந்த இராமேஸ்வரத்துக்கு அங்குள்ள நீண்ட பிரகாரங்கள் பெருமையளித்துக் கொண்டிருப்பதைப் போல்,  இந்தக் கீழை இராமேஸ்வரத்துக்கு நூற்றியெட்டு லிங்கங்கள் பெருமையுற அமைந்திருப்பதைக் கண்டும் ஆனந்தித்திருக்கலாம்.
தகவல் நன்றி : http://www.supremeclassifieds.com/

செய்திக் கதிர் -நன்றி தினமலர்

6/25

image

 • குழந்தைகள் உரிமைக்காகப் போராடிய கைலாஷ் சத்யார்த்துக்கும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாலாலாவுக்கும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கிடைத்திருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பெறும் முதல் நோபல் பரிசு இது தான். இந்த இரு நாட்டுக்கும் இது அமைதிப்  பாலம் அமைக்கட்டும்.    

image 

 • சிறுவயது முதல் பிரபலமான இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு 
 • தூர்தர்ஷன் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் ஜி ஜிங்பிங் (Xi Jinping) என்ற சீன அதிபர் பெயரை, ரோமன் எழுத்தை மனதில் கொண்டு லெவன் ஜின்பிங் (XI JINPING)என்று வாசித்தார். இதையடுத்து அவர் அந்தப் பணியிலிருந்து  நீக்கப்பட்டார்.
 • ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் புல்லெட் ரயில். ஓடப் போகிறது. 
 • விஜயவாடா ஆந்திராவின்  தலைநகரமாகிறது. 
 • ஹரியானாவும் மகாராஷ்ட்ராவும் மாநில சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகின்றன. தேர்தல் நாள் அக்டோபர் 15. 
 • தீபாவளி பயணத்திற்கு உதவ தமிழக அரசு 9088 ஸ்பெஷல் பஸ்களை இயக்கப் போகிறது.
 • நுங்கம்பாக்கத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தும் வசதி விரைவில் வர இருக்கிறது. 
 • தமிழ் நாட்டில் அக்டோபர் 15 முதல் புதிய வாக்காளர்கள் சேகரிப்பு  துவங்குகிறது.
 • அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் சகாயம் என்ற நேர்மையான ஐ‌ஏ‌எஸ் அதிகாரியை கிரானைட் குவாரி ஊழலை விசாரிக்க கோர்ட் உத்தரவு. 
 • காவிரி வைகை இணைப்புப் பணி துவக்கம்? 
 • ஹட் ஹட் புயல்  ஆந்திராவைத் தாக்கியதில் பயங்கர சேதம்
 • ரேடியா என்ற அழிந்துபோகும் சாதனத்திற்கு உயிர் கொடுத்து பிரதமர் மோடி விஜயதசமியன்று உரை நிகழ்த்தினார். 
 • மதுவின் ஆதிக்கத்தைப் படிப்படியாக குறைக்க கேரளா அரசாங்கம் முடிவு. தமிழகம் பின்பற்றுமா? 
 •  அமிதாப் நடத்தும்  கோன் பனேகா குரோர்பதியில் டில்லியைச் சேர்ந்த ஆச்சின் நெருலா, சர்தாக் நெருலா சகோதரர்கள் , மொத்த பரிசுத்தொகையான ரூ. 7 கோடியை வென்றுள்ளனர். 
 • திருப்பதியில் பிரம்மோத்சவம் 
 • எல்லையில் சீனப்படைகள் ஊடுறவு. பேச்சு வார்த்தைக்குப் பிறகு பதட்டம் குறைந்தது.
 • பாகிஸ்தான் படைகள் தாக்குதல். இந்தியா பதிலடி. 
 • உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி. 
 • ரயில் பயணிகள்,, எஸ்.எம்.எஸ்., மூலம் விரும்பிய உணவைப் பெறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
 •  டில்லி விலங்கியல் பூங்காவில் 20 வயது வாலிபர் வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த பகுதி வேலி மீது ஏறி, புலியை படம் எடுக்க முயன்ற போது உள்ளே விழுந்து  பலியானார். 
 • தேவையில்லாத சட்டங்களை நீக்க பிரதமர் மோடி உறுதி. 
 • இந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில். முடிக்க வேண்டும் என்றும்  டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக,  ஏவப்பட்ட, ‘மங்கள்யான்’ செயற்கைக்கோள், வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. 
 • 1993 முதல் 2010 வரை, பல்வேறு நிறுவனங்களுக்கு, சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட, 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது
 • இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க இந்தியா வந்துள்ள  பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். 
 • image

 • பெங்களூரு, பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை, நீதிபதி குன்ஹா அறிவித்தார். ஜெயலலிதா விற்கு, நான்கு ஆண்டு சிறைத்  தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா  முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார்.
 •  ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு ஜாமின் வழங்க, பெங்களூரு உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து ஜாமின் கோரி அவர்கள், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
 • ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் தமிழகத்திற்கு முதல்வராகிறார். 
 • .

  image

 • மோடியின் மந்திரங்கள் :
 • பிரதமர் நரேந்திரமோடி, 5 நாள் பயணமாக  அமெரிக்கா சென்றார்.  அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 30 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் .
 • அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நவராத்திரி விரதத்தில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்த 5 நாட்களும் எந்தவொரு உணவும் சாப்பிடவில்லை. ஒபாமா அளித்த விருந்திலும் இவர் வெறும் சுடு தண்ணீர் மட்டுமே குடித்தார்
 • 20000 இந்தியர்கள் மத்தியில் மேடிசன் ஸ்கொயரில் மோடி இந்தியில் அபாரமான பேச்சு. அதில் ,
 •  பாம்பாட்டிகளின் நாடு என்று கூறப்பட்ட நமது நாடு, ஒரு “மவுஸ் கிளிக்’கில் உலகையே நகர்த்தி கொண்டு செல்கிறது
 • ஆமதாபாத்தில் ஆட்டோவில் ஒரு கி.மீ., பயணம் செய்ய 10 ரூபாய் செலவாகிறது. ஆனால் ஒரு கி.மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே செலவு செய்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி உள்ளோம். ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கும் செலவை விட, குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளோம். 
 • தொழில் துவங்குவதில் இருக்கும் ரெட் டேப் அகற்றப்பட்டு ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிக்கப்படும். 
 • இந்திய உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்காகவும், அதற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ என்ற மாற்றுத் திட்டத்தைத் துவங்கி வைத்தார்.  
 • தூய்மையான தேசத்தை உருவாக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் ‘சுவாச் பாரத்’ (தூய்மையான பாரதம்) என்ற திட்டம், காந்தி ஜெயந்தி அன்று  துவங்கியுள்ளது.  இந்தத் திட்டத்தில், கமலும் பங்கேற்க வேண்டும் என மோடி விடுத்த அழைப்பை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார். 
 • ஆந்திராவை டிஜிட்டல் மயமாக்கும் மாநில முதல்வரின் கனவை நனவாக்கும் வகையில், மாநில அரசு, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

லாஸ்ட் ஸன்டே (சிவமால்)

7/25

‘பூமா.. இன்னிக்கு ஈவினிங் முரளியும் அவன் வைஃப் சாந்தாவும் நம்ம வீட்டுக்கு வராங்களாம்  .. நேத்திக்கு போன் பண்ணியிருந்தான்’ என்றான் சுந்தர்.

‘ஆமாமாம்.. அவங்க தான் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வராங்க.. நாம அங்கே போறதேயில்லெ…….. நமக்கும் ஒரு மரியாதை வேண்டாமா’ …..?

‘என்ன செய்யறது? .. அவன் வீடு ரொம்ப தூரத்திலில்லே இருக்கு..’

‘அவங்க மட்டும் இங்கே வரதில்லையாக்கும் ’

‘அவங்க டவுனுக்கு வராங்க ..அப்படியே நம்ம வீட்டுக்கும்  வராங்க.. நாம் போறதானா அவங்க வீட்டுக்குன்னு தான் போகணும். நம்ம டைமே ஒத்து வரதில்லே…அவன் அப்படி தப்பா நினைச்சுக்கப்படாதுன்னு தானே ‘அப்போ வந்திருந்தேன்.. இப்போ வந்திருந்தேன்.. நீ இருக்கவில்லை’ ன்னு சொல்றேன்..’

‘ஆமாமா.. இப்படி எத்தனை நாள் தான் பொய் சொல்லப் போறீங்களோ? ’

‘நோ..நோ..இது பொய்யல்ல .. மற்றவங்களைப் பாதிக்கும் வகையில் நாம் சொல்லும் பொய்  தான் பொய். மற்றவைக்கு புளுகு என்று பெயர் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கார் தெரியுமா? ‘ 

‘பொய்யோ.. புளுகோ . அவங்க தினமும் .ஈவினிங் வெளியிலே போயிடறாங்கன்னு இப்படிச் சொல்லிட்டிருக்கீங்க! அவங்களும் பாவம் நம்பிட்டிருக்காங்க. என்னிக்காவது மாட்டிக்கத் தான் போறீங்க’

‘டோன்ட் வொர்ரி .. மாட்டிக்க மாட்டேன்.’ என்றான் சுந்தர். 

image

சுந்தரும் முரளியும் காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பூமாவும் சாந்தாவும் ஹாலை ஒட்டிய அறையிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

‘முரளி.. லாஸ்ட் ஸன்டே ஈவினிங் நாங்க உங்க வீட்டுக்கு வந்திருந்தோம். நீங்க இருக்கலே..  பக்கத்து வீட்டம்மா  நீங்க எங்கேயோ வெளியிலே போயிருப்பதாகச் சொன்னாங்க’ என்றான் சுந்தர். 

‘ஹெள ஸாட்.!. எப்போ லாஸ்ட்  ஸன்டேயா ..டெலிபோன் பண்ணிட்டு வர மாட்டியோ’ என்றான் முரளி.

‘சடனா டிசைட் பண்ணினோம்..புறப்பட்டோம்.இட் ஈஸ் ஆல் ரைட். இப்பத்தான் பாத்தாச்சே’

‘அதையேன் கேட்கறே!   நானும் ரொம்ப பிஸி.. பதினாலாம் தேதி எங்க அப்பா வரேன்னு எழுதியிருந்தார். அவருக்காகக் காத்துக் காத்து வீ ட்டிலே வெய்ட் பண்ணி ஹோல் டே போரடிச்சுப் போச்சு. அப்புறம் அவர் யூஷ்வல் பஸ் கிடைக்காம ஏதேதோ பஸ் பிடித்து  ராத்திரி வந்து சேர்ந்தார்.  அப்புறம்  அவரோட எல்லா இடத்திற்கும் சுற்றினதில் அலைச்சல் வேறு.  நேற்றுத்தான் ஊருக்குப் போனார். அதனால் தான் இன்னிக்கு வரேன்னு  நேற்று  போன்  பண்ணினேன் “ என்றான் முரளி. 

‘அச்சா.’. என்றான் சுந்தர்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து  விட்டு முரளியும் சாந்தாவும் புறப்பட்டார்கள். அவர்களை  வழியனுப்பிவிட்டு சுந்தரும் பூமாவும் உள்ளே வந்தார்கள்.

விளக்கை அணைக்க முன்னறைக்குப் போன பூமா ‘ஐயோ’ என்று அலறினாள்.

‘என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?’ என்று பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் சுந்தர். 

பூமா தன் விரலால் அங்கே மாட்டியிருந்த காலண்டரில் 14 ஆம் தேதியைக் காட்டினாள்.

image

அன்று  ஸன்டே .. சுந்தர் முரளி வீட்டுக்குப் போயிருந்ததாகக் கூறினானே.. அந்த லாஸ்ட்  ஸன்டே.. .