குவிகம் குறும் புதினம்

 

உங்களுடன்……..

குவிகம் குறும் புதினம் என்ற புதிய புத்தக இதழைச் சென்ற மாதம் வெளியிட்டோம்.

சொல்லழகும் மயக்கும் மந்திரமும் சேர்த்துக் கதைகளில் கவிதை படைக்கும் லா ச ரா அவர்களின் கொட்டு மேளத்துடன் துவக்கினோம். அத்துடன் முகில் தினகரன் அவர்களின் பத்து பகல் பத்து ராத்திரி என்ற புத்தம் புதுக் குறும் புதினத்தையும் இணைத்து வெளியிட்டோம்.

அதற்கான வெளியீட்டு விழா தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14.04.2021) லா ச ரா அவர்களின் புதல்வர் சப்தகிரி, முகில் தினகரன் மற்றும் எண்ணற்ற எழுத்தாள நண்பர்கள் மத்தியில் ஜும் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இனிப்பும் காரமும் சேர்ந்த சுவையான சிற்றுண்டியாகக் குவிகத்தின் முதல் குறும் புதினம் புத்தகம் அமைந்திருக்கிறது என்று நண்பர்கள் பாராட்டினார்கள்.

இந்தத் திட்டத்தை ஆரம்பித்தபோது மாதம் இரு குறும் புதினங்களை வெளியிடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் பெரும்பாலான குறும் புதினங்கள் 30-35 பக்கங்களில் முடிந்து விடுவதால் சில மாதங்கள் இரண்டிற்குப் பதிலாக மூன்று குறும் புதினங்களும் வரலாம். மகிழ்ச்சிதானே?

இனிப்பு காரத்துடன் காபியும் கிடைக்கும். அதன்படி இந்தமாதம் உங்களுக்கு மூன்று குறும் புதினங்களைத் தருகிறோம்.

–      நாகூர் ரூமியின் “குட்டியாப்பா”

–      சுப்ரபாரதி மணியனின் “கட்டைவிரல்”, (புதியது)

–      மீனாக்ஷி பால கணேஷின் “கண்கள் உறங்காவோ”

மூன்றும் மூன்றுவிதச் சுவையோடு அமைந்திருக்கின்றன. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்!

நூறு அங்கத்தினர்களை இந்தத் திட்டத்தில் இணைக்கவேண்டும் என்று திட்டமிட்டோம். இதுவரை 85 இலக்கிய நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் இலக்கைத் தாண்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம் அங்கத்தினர்களில் பலர் இலக்கியத்துறையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் படைப்புக்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை “இலக்கிய நண்பர்“ என்ற தலைப்பில் வெளியிட இருக்கிறோம்.

இலக்கிய நண்பர் வரிசையில் முதலில் வருபவர் அழகியசிங்கர்!

நாங்கள் உங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்வது இவைதான்:

–      குவிகம் குறும் புதினத்தில் வெளியிட நீங்கள் ஏற்கனவே படித்து மகிழ்ந்த குறு நாவல்களை அறிமுகப்படுத்துங்கள்!

–      உங்கள் நண்பர்களையும் இத்திட்டத்தில் இணையும்படி செய்யுங்கள்!

–      புதிய கதைக்களன்களில் புதிய குறும் புதினங்களைப் படைத்து அனுப்புங்கள்!

–      உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அவ்வப்போது சொல்லுங்கள்!

எழுத்து, சொல், பொருள் இவை அனைத்தையும்தாண்டி நல்லதொரு நட்பு வட்டத்தை குவிகம் குறும் புதினம் மூலம் உருவாக்குவோம்!

 

மே 15, 2021                       சுந்தரராஜன் –  கிருபானந்தன்

 

 

 

 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

கில்காமேஷ் மகா ராட்சசனான காட்டரசன் ஹம்பாபாவை வெல்லத்  திட்டமிட்டிருக்கிறான் என்பதைக் கேட்டவுடன் எங்கிடு திடுக்கிட்டான். “நண்பா! நான் காட்டு மனிதனாக இருந்த போது  ஹம்பாபாவைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் . அவன் காட்டுக்கு அதிபதி .அவனிடம்  பல பயங்கரங்கள் ஆயுதங்களாக  இருக்கின்றன. அவன் கர்ஜித்தால்   நீர்வீழ்ச்சியைப் போல இருக்கும். அவன் மூச்சு நெருப்பாக எரிக்கும். அவன் எதையும் விழுங்கிவிடும் ஆற்றல் உடையவன். அவன் செவிகள் மிகவும் கூர்மையானவை. . அவனை வெல்வது என்பது முடியாத காரியம்” என்று … Continue reading

வெளிர் மஞ்சள் குருவி – ச பானுமதி

Yellow Sparrow | Beautiful birds, Cute animals, Singapore malaysia

வெளிர் மஞ்சள் நிறத்தில்

சிட்டுக்குருவி ஒன்று…!

எத்தனை அழகு? மஞ்சள் குளிக்காமலே.

 

செவ்வரி படர்ந்த கண்ணோரம்

கருமை நிறமும் அழகோ, அழகு.

பெண்ணுக்கு குருவிவால் கண்போலே.

 

ஓயாத சுறுசுறுப்பும்,

கீச், கீச் என இசைப் பேச்சும்

என்னை மயக்கியது…

 

அடிக்கடி பால்கனி பக்கம் போனேன்

பக்கமாக போனநேரம், விட்டுப்

பறந்தது சட்டென்று  ….

 

வரவழைக்க, பொட்டுக் கடலை

கைக்குள் கட்டினேன், காட்டினேன்

ம்ஹும் …வரவில்லை …ஏமாற்றமே!

 

எனினும், சந்தோஷம் …

நீயும், என்போல் …இலவசங்களுக்கு

மயங்குவதில்லை என்பதில்!

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ஆதித்தன்

Aditya Chola I - Second Ruler Of Imperial Cholas And Battle Of Sri  Purambiyam Or Thirupurambiyam

கி பி 870 – 907.

ஒரு அரசன் தன் வம்சத்தைத் துவக்கிவைத்தால்- அவனது வாரிசு அதைக் காப்பாற்றி வளர்க்கவேண்டும். அதன் பிறகு அவன் சந்ததியர் முனைப்போடு அந்த வம்சப்புகழை மேலும் வளர்க்கவேண்டும். குப்தர்கள் அதற்கு ஒரு நேர் உதாரணம். ஹர்ஷர்கள் அதற்கு எதிர் உதாரணம். இப்பொழுது நம் சோழர் கதையும் அந்த வளர்பிறைப்பாதையில் செல்கிறது.

ஆதித்தன் என்று சொன்னால் திருப்பியம்புரம் சண்டை உடனடியாக நமக்கு நினைவுக்கு வரும். அதைப்பற்றி மீண்டும் எழுதினால் வாசகர்கள் நம்மை முறைப்பார்கள். அறைத்த மாவை எத்தனை முறை தான் அறைப்பது? ஆகவே ஒன்றிரண்டு வரிகளில் அதை முடித்து விடலாம்.

நிலமைக்காரர்: திருப்புமுனையான திருப்புறம்பயம் போர் - விஜயாலயச் சோழன்

திருப்பியம்புரம் போரில் பல்லவன்-சோழன் கூட்டணி பாண்டியக் கூட்டணியை வென்றது. அதன் பெரும் பயனை ஆதித்தன் அடைந்தான். சோழ நாட்டு எல்லைகள் விரிந்தன. ஆஹா.. எப்படி ரத்தினச்சுருக்கமாக சொல்லிவிட்டோம்!

வென்ற ஆதித்தன் – கொங்கு நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ என்பார்கள். உண்மையிலேயே அந்நாளில் கொங்கு நாட்டில் தங்கம் மலிந்திருந்தது. அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பலமுகட்டைப் பொன்னால் வேய்ந்தான்.

வெற்றியின் சின்னமாகவும் மற்றும் சிவபக்தியாலும் காவேரிக்கரையின் இருபுறமும் 108 சிவாலயங்கள் கட்டினான். தஞ்சாவூர் அய்யம்பேட்டை அருகில் அவன் பெயரால் – ‘இராஜகேசரி சதுர்வேதி மங்கலம்’ என்றொரு ஊர் இருந்தது. அது ராஜகிரி என்ற பெயருடன் இன்றும் உள்ளது.

கங்க நாட்டு அரசனுடன் நல்ல நட்புடன் இருந்தான். சேர நாட்டு மன்னன் ஸ்தானு ரவியுடனுடனும் நல்ல நட்புடனிருந்தான். இந்த நட்புக் கூட்டணி அவனது பிற்கால வெற்றிக்கு உதவியது. அதை இப்பொழுது பார்ப்போம்.

கி பி 903:
ஆதித்தன் அரியணை ஏறி 32 வருடம் ஆயிற்று.
தமிழகத்தில் ஆதித்தன் சக்தி பெருகுவது அபராஜிதனுக்குப் பொறுக்கவில்லை.
தனக்குக் கீழ் இருந்த இதய சோழச்சிற்றரசு ‘கப்பம்’ கட்டுவதை நிறுத்திவிட்டது.
கேட்டால்.. ‘வானம் பொழிகிறது..பூமி விளைகிறது.. இதில் உனக்கென்ன கப்பம்’ என்ற வீர வசனம் வேறு பதிலாக வருகிறது.
பொறுமினான்.
ஆதித்தனும் ‘இந்த பல்லவன் ஆளும் வரை சோழ நாடு பழைய பெருமை அடையாது. இதை அழிக்கவேண்டும்’ என்று மனதில் உறுதி கொண்டான்.
‘ஒன்று அழிந்தால் தான் மற்றொன்று வளரும்’ – என்றெண்ணினான்.

வெற்றி என்பது ஒரு போதை.
வெல்ல வெல்ல தோள்கள் தினவெடுக்கும்.
ஆதித்தனுக்கு அது எடுத்தது.
ஒரு நாள் நண்பன் – இன்று அவன் எதிரி.
பகை மேகங்கள் தமிழ் நாட்டு வானில் கருக்கத்தொடங்கியது.
அது பல்லவனுக்கும் சோழனுக்கும் இடையே மைய்யம் கொண்டது.
போர்!
இந்தப் போர் பற்றி ஆழ்ந்த விளக்கங்களை சரித்திரம் நமக்குத் தரவில்லை.
ஆனால் அது எப்படி முடிந்தது என்பது பற்றி திட்டமாக சொல்கிறது.
ஆதித்தனின் சோழப்படை வலுவடைந்திருந்தது.
ஆயினும் எந்தப்படை வலுவானது என்பது அறிய முடியாததாக இருந்தது.
அபராஜிதன் யானை மேல் ஏறி போரிட்டு வந்தான்.

 பல்லவப் பேரரசின் கடைசி மன்னன்
ஆதித்தன் அந்த யானை மேல் பாய்ந்து அபராஜிதனைக் கொன்றான்.
அத்தருணம் தமிழகச்சரித்திரத்தில் ஒரு பெரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
பல நூற்றாண்டு ஆண்டு காஞ்சியை ஆண்டு – கற்கோயில்கள் செய்து- புகழ் பெற்ற பல்லவ வமிசம் அன்றுடன் தமிழகத்தில் மறைந்து போனது. அத்துடன் பழைய சோழர்கள் புதிய சோழர்களாக மறுமலர்ச்சி கொண்டு சாம்ராஜ்யம் தொடங்கும் நாள் அது. தொண்டை நாடு மெல்ல ஆதித்தன் வசமானது. சரித்திரம் அவனை ‘தொண்டைநாடு பாவின இராசகேசரிவர்மன்’ என்றழைத்தது.

ஆதித்தன் வீரத்தை போர்க்களத்தில் பார்த்தோம். அவனது ஆதிக்கம் அந்தப்புரத்திலும் விரிந்தது. நீங்கள் நினைக்கலாம் – போர் பற்றியே சதா எண்ணம் கொண்ட மன்னன் எப்படி பல ராணிகளை வச்சு ‘மெயின்டய்ன்’ பண்ண முடியும் என்று. ஆதித்தன் அதையும் செய்தான்!

ராணிகள் இரண்டு: இளங்கோ பிச்சி, வாயிரி அக்கண் (திரிபுவன மாதேவியார்).
‘இளங்கோ பிச்சி’ இராட்டிரக்கூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் மகள். இவளே ஆதித்தனின் மூத்த மனைவி. இவளுக்குப் பிறந்தவன் ‘கன்னர தேவன்’.

சின்ன வீடு பட்டியல்:
நங்கை சட்டப்பெருமானார், தென்னவன் மாதேவியார், செம்பியன் தேவியார் என்னும் குலமாணிக்க நம்பிராட்டியார், அழிசி கட்டடிகள்.
அவனது அந்தப்புரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.
அந்த உத்தமபுத்திரன் “யாரடி நீ மோகினி” என்று பாடிக்களிப்பது நாம் மனக்கண்ணில் விரிகிறது . அது சரி.. மற்றவர் அந்தப்புர அந்தரங்களை நாம் ஏன் பார்க்க வேண்டும்.
தொடர்வோம்.

கி பி 907: தொண்டைமானுர்.

இன்றைய ஆந்திராவிலிருக்கும் காளஹஸ்தி!
யுவராஜா பாராந்தகனுடன் ஆதித்தன் அங்கு கோவில் கட்டத்திட்டமிட்டிருந்தான். வயது முதிர்ந்திருந்தான்.
‘பாராந்தகா! சிவன் சித்தம் தானோ- சோழர்கள் ராஜ்யம் இன்று வளர்ந்திருக்கிறது. பாண்டியர்கள் சாமர்த்தியசாலிகள். அவர்களை வெல்லலாம் – ஆனால் அழிக்க முடியாது. ஆகவே நீயும் உன் சந்ததியினரும் அவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சோழர்களின் எதிர்காலம் உன் கையில்” – என்றான்.
ஆதித்தன் இறந்தான்.
பராந்தகன் ஆதித்தனுக்கு எரியூட்டினான். ஆதித்தனுடைய பள்ளிப்படையை அங்கு எழுப்பினான். அவனது சாம்பலின் மேல் ஆதித்தியேஸ்வர ஆலயம் (கோதண்டராமேஸ்வர ஆலயம்) என்ற சிவன் கோவில் கட்டப்பட்டது. சரித்திரம் அவனை ‘தொண்டைமானரூர் துஞ்சின உடையார்’ என்று எழுதியது.

விஜயாலயன் கோடு போட்டான்.
அந்தக் கோட்டில் ஆதித்தன் இராஜபாட்டை போட்டான்.
அதில் அடுத்த சந்ததியர் வெற்றி நடை போட்டனர்.
அந்தக் கதைகளைக் காணுமுன்..
ஆதித்தன் ஒரு காரியம் செய்திருந்தான்.
அது சரித்திரத்தின் பாடங்களை சரியாகக் கவனியாதது.
அவன் நல்லது என்று எண்ணி மகிழ்ந்து செய்த செயல் அவனை அடுத்து வந்த மன்னனைப் பாதித்தது.
அது பற்றி விரைவில் விரிவாகக் காணலாம்.  

சுற்றி நில்லாதே போ! பகையே! – கவி ஞாயிறு துரை. தனபாலன்

vel varuguthu vel varuguthu - YouTube

நேர்மையொடு வாய்மையினை நெஞ்சில் ஏற்றி
ஓர்மையது ஓங்கிடவே உள்ளிருள் ஓட்டி
கூர்மையுடை அறிவுடனே குவலயம் போற்றும்
சீர்மையதன் செவ்வியினைப் பெற்றனர் மாந்தர்!
பாரதத்தின் பெருமைகளை அழித்திட எண்ணிப்
பற்றியிங்கு படர்ந்தெம்மைச் சுற்றிடும் அரவே!
சுற்றிநில் லாதே போ! – பகையே!
சுருண்டே வீழ்ந்திடு வாய்!

உழைப்பதனைப் பெருமையென உயர்த்தும் நாட்டில்
ஊராரின் உழைப்பினையே உறிஞ்சி வாழ்ந்து
காலமெலாம் மக்கள்பணம் களவே செய்து
கறைபட்ட குறைவாழ்வே பொதுவாழ் வாகி
ஊழலிலே ஊறியவர் ஓடிவி டுங்கள்
உண்மையது வெற்றிபெறும் உயரிய காலம்
சுற்றிநில் லாதே போ! – பகையே!
சூழ்ச்சிகள் வெல்லா தே!

கலைகளுக்குத் தலைமையெனும் யோகக் கலையும்
கடும்பிணிகள் களைகின்ற மருத்துவக் கலையும்
நிலைபெறவே அவதரித்த சித்தர் பலரும்
நெடுங்காலம் புகழ்சேர்த்த புண்ணிய நாட்டில்
உலகினையே உலுக்கிபல உயிர்களைக் கொல்லும்
நுண்ணியதீக் கிருமியது நொந்திடும் விரைவில்
சுற்றிநில் லாதே போ! – பகையே!
தொற்றினி அற்றிடு மே!

எல்லைதனைக் காத்துநிற்கும் இந்தியப் படையை
எதிர்த்தெவரும் போர்புரிய எண்ணவும் வேண்டாம்
துல்லியமாய்த் தாக்குதலைத் தொடுத்திடும் தீரம்
தொன்புகழைப் பேணிபகை முடித்திடும் வீரம்
எல்லையினை மீறுமொரு தீவிர வாதம்
தொல்லையதைத் துடைத்தொழிக்கும் வல்லவர் கூட்டம்
சுற்றிநில் லாதே போ! – பகையே!
முற்றாய் அழிந்திடு வாய்!

சின்ன வீடு – செவல்குளம் செல்வராசு

Chinna Veedu (1985) | MUBI

பசியில் அவள்…             

கிறக்கத்தில் நான்…

சர்க்கரைக் குவளையில்   

அடைபட்ட எறும்பாய்

ரோமக் காட்டில் விரல்கள் 

 

கிறக்கம் தீர்ந்து

உறக்கத்தில் வீழ்ந்த நொடி   

எந்த நொடி என்றறியேன்

 

நடுஇரவில் நாயொன்றின்

ஊளை கேட்டு உறக்கம் கலைந்தேன்

 

மனம் மெல்ல வீடு திரும்பியது

மாலை திரும்புகையில்

மல்லி வாங்கி வரச் சொன்னாளே மனைவி

காத்திருந்திருப்பாள்…

 

மகளுக்காக வாங்கிய குட்டைப் பாவாடை

இதோ கட்டிலில்…

 

“நேத்து ஏன்பா வீட்டுக்கு வரல”

காலை மகளின் கேள்விக்கு

மனைவியின் கண்ணீர்த் துளிகள்

விடையாய்க் கிடைக்கும்

 

ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கையில்

புகைக்கச் சொன்னது மனம்

இன்னுமொரு போதை கிசுகிசுத்துப் புன்னகைத்தது

“தூக்கம் வரலயா ?”என்று

மௌனக் கட்டளைகளுக்குக்

கட்டுப்பட்டு இயங்க ஆரம்பித்தது

மனமும் உடலும்…

 

நாளைமுதல் இங்கு வரக்கூடாது என்ற

வழக்கமான சபதம்

நான் எடுத்து முடிக்கு முன்

காமம் கட்டளையிட்டது

“இது தான் கடைசிமுறை” என்று

சைக்கிள் – எஸ். கௌரிசங்கர்

Old Indian Bicycle High Resolution Stock Photography and Images - Alamy

ஏதோ சப்தம் கேட்டு சொர்ணம் வாசற் கதவைத் திறந்த போது, தனபால் கேட்டைத் திறந்து தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக சைக்கிளை ஓட்டிக் கொண்டே உள்ளே வரும் தன் கணவன் மெதுவாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்து அதை சுவர் அருகே ஸ்டாண்டு போட்டு நிறுத்தியதைப் பார்த்தாள்.

“ஏங்க சைக்கிள் செயின் கழண்டு போயிடுச்சா?”

“இல்லை, அறுந்தே போயிடுச்சு”

தனபால் இப்படிச் சொன்னவுடன் சொர்ணம் படியிறங்கி வந்து சைக்கிளைக் குனிந்து பார்த்தாள். பெடல் செய்யும் சக்கரத்தின் முனையிலும் பின் பல்சக்கர முனையிலும் செயின் அறுந்து இருபுறமும் தரையில் விழுந்து கிடந்தது.

“ஐயையோ! என்னங்க இப்படி அறுந்து கிடக்குது! தள்ளிகிட்டே வந்தீங்களா? எங்கேயிருந்து?”

“பெருங்குடி சிக்னலாண்டையே அறுந்திடுச்சு. அங்கேயிருந்தே தள்ளிகிட்டுதான் வரேன்”

“ஏன்? வழியிலே சைக்கிள் ரிப்பேர் கடையே இல்லையா?”

“இருந்துச்சு… இருந்தாலும் நம்ம கோவிந்தராசு கடையிலே கொடுக்கலாம்ன்னு  வந்துட்டேன். இங்கே வந்தா அவன் கடை பூட்டி இருக்குது.”

“ஏங்க, அவர் கடை ஒண்ணுதானா ஊர்லே?”

“வேறே இருக்கு…. ஆனா கோவிந்தன் ரொம்ப செலவில்லாம நல்லா ரிப்பேர் பண்ணுவான்.”

“ஆமா… உங்க சைக்கிளுமாச்சு, கோவிந்தனுமாச்சு! எத்தனி வருஷம் இந்த இரண்டையும் கட்டிகிட்டு அளுவீங்க? எத்தினி தடவை இதை ரிப்பேர் பண்ணுவீங்க?”

“ஏன் இந்த சைக்கிளுக்கு என்னாடி கொறைச்சல்?”

“ம்… நமக்குக் கல்யாணம் ஆன நாளிலேருந்து இந்த ஓட்டை சைக்கிளை வச்சுகிட்டு இருக்கீங்க. இப்ப முப்பது வருசமாச்சு… இன்னும் இதை வித்துட்டு ஒரு புது வண்டி வாங்கலை நீங்க.”

“அடியே! நீ பொண்டாட்டியா வரதுக்கு முன்னாலே இருந்து இந்த சைக்கிள் என் கிட்டே இருக்குது, தெரிஞ்சுக்கோ. சரி… உன்னையும் கட்டிகிட்டு முப்பது வருஷமாச்சு. உன்னை வித்துட்டு புதுசா ஒருத்தியைக் கொண்டாந்துட்டமா?”

“ஐய!  இருவது வயசு வாலிபன் இவரு! அறுவத்தஞ்சு வயசு கிழம் பேசறதைப் பாரு! யாராவது கேட்டா வளிச்சுகிட்டு சிரிக்கப் போறாங்க”.

சொர்ணம் முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள். வரிசையாக எட்டு வீடுகள் ஒன்றைத் தொட்டுக் கொண்டு மற்றது இருக்கும் ஒரு காலனி அது. தனபாலின் வீடு மூன்றாவது. இரண்டாவது வீட்டின் வாசலில் குப்பையைக் கொட்ட வெளியே வந்த அமிர்தம், வந்த வேலையை மறந்துவிட்டு இவர்கள் பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டு நின்றாள். அதை கவனித்து விட்ட சொர்ணம், “உள்ளே வாங்க” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டின் படியேறி உள்ளே சென்றாள்.

சிறிது நேரம் தன் சைக்கிளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த தனபால், கீழே உட்கார்ந்து அந்த செயினின் ஒரு பக்கத்தைப் பிடித்து விரல்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு அறுந்து கிடந்த மறுபக்க முனையில் பொறுத்திப் பார்த்தார். அது ஒட்டாமல் நழுவி கீழே விழுந்தது. இரண்டு மூன்று முறை இப்படிச் செய்து பார்த்தும் பலனில்லை. அலுத்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு, எழுந்து கைகளைப் பார்த்தார். கருப்பாக மை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை சுவரின் மீது தேய்க்கப் போனவர், சட்டென்று திரும்பிப் பார்த்த போது அடுத்த வீட்டு அமிர்தம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். உடனே கையை அவசரமாக இழுத்து மையை தன் தலை முடியில் தடவிக் கொண்டு வேகமாகப் படியேறி உள்ளே போனார்.   

நேராக பாத்ரூம் போய் கைகால்களை கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்த போது, சொர்ணம் கையில் ஒரு கோப்பையோடு வந்து, அதை அங்கிருந்த சிறு மேஜை மீது வைத்துவிட்டு, “டீயைக் குடிங்க” என்றாள். கோப்பையை கையில் எடுத்துக் கொண்ட தனபால், “என்ன! சொர்ணம் கோவிச்சுகிட்டியா?” என்றார். சொர்ணம் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் நின்றதைப் பார்த்துவிட்டு தனபால், “என்ன சொர்ணம் அழுவுறியா?” என்றார்.

“பின்னே? சைக்கிளை விக்கிறமாதிரி என்னையும் வித்துடுவீங்களா?”

“நீதானே சொன்னே பழசானா வித்துடணும்னு. அதான் நானும் சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன் சொர்ணம்”

தனபால் குரலில் இருந்த கெஞ்சலை கவனித்த சொர்ணம் லேசாக சிரித்துக் கொண்டாள். தனபாலுக்கு அவள் சமாதானம் ஆகிவிட்டதாகத் தோன்றியது. கோப்பையில் இருந்த டீயை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, காலிக் கோப்பையை அவள் கையில் கொடுத்து, “இப்ப உன்னை வித்தாலும் வாங்கறதுக்கு ஆள் வேணுமில்லை?” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

சொர்ணம் கண்களில் கோபம் பொங்க, தன் கையில் இருந்த கோப்பையை அவர் மீது வீசி எறிவதாக பாவனை செய்து, “வயசானாலும் இந்த வாய்க் கொளுப்பு போகலை பாரு!” என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள். சட்டென்று நின்று திரும்பி, “சைக்கிளைப் பூட்டினீங்களா?” என்று கேட்டாள்.

“செயின் அறுந்த சைக்கிளை எந்தத் திருடன் ஓட்டிகிட்டு போயிடுவான்?”

“ஏன்? உங்களை மாதிரியே எவனாவது தள்ளிகிட்டே போயிட்டான்னா?”

“ஆமாம்! அது எனக்குத் தோணலை பாரு! என் பொண்டாட்டி அறிவே அறிவு!”

“அதுக்காகவே என்னை நீங்க விக்காம இருக்கணும்” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.  சைக்கிளைப் பூட்ட தனபால் வெளியே விரைந்தார்.

இரவு படுக்கப் போகும் முன் சொர்ணம் தனபால் அருகில் வந்து மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.

“இங்க பாருங்க! அந்த சைக்கிளை ஆயிரம் தடவை ரிப்பேர் பண்ணியாச்சு. ஒவ்வொரு தடவையும் நூறு, இருநூறுன்னு அதை வாங்கின காசுக்கு மேலே செலவழிச்சாச்சு. போதும். தொலைச்சுக் கட்டுங்க அதை. யாரும் வாங்கிக்க மாட்டாங்கன்னா, என் கிட்டே கொடுங்க. பளைய இரும்பு வாங்கறவன் கிட்டே கொடுத்தா, பேரிச்சம் பளமாவது கிடைக்கும்”.

“என்ன அப்படி சொல்லிட்டே? எங்க அப்பா எனக்குக் கொடுத்த பொக்கிஷம்டி அது”

“ஆமாம்! பொக்கிஷம். காலணாவுக்குப் பிரயோசனமில்லை”

“சொர்ணம்! என் சைக்கிளைப் பத்தி யார் குறைச்சு சொன்னாலும் எனக்கு கோவம் வந்திடும், ஆமாம் சொல்லிட்டேன். சாதாரண சைக்கிளா அது?”

தனபால் தன் பழைய நினைவுகளில் ஆழந்து போனார்.

“எனக்கு அப்ப நாலு வயசிருக்கும். எங்கப்பா அந்த சைக்கிளை புதுசா வாங்கிட்டு வந்தாரு. ஹம்பர் சைக்கிள். அந்த காலத்திலே அந்த சைக்கிள் யாரு கிட்டேயும் இருக்காது. டபுள் பார். டைனமோ விளக்கு. அது மேலே மஞ்ச துணி சுத்தி போத்தி வைச்சிருப்பாரு. இரண்டு சக்கரத்திலேயும் கலர் கலராக ஒரு மாலை மாதிரி சுத்தி வைச்சிருப்பாரு. சுத்தும் போது பார்க்க அழகா இருக்கும். எங்க அப்பா நல்ல உயரம். அதனாலே அந்த சைக்கிளை வாங்கினாரு. அந்த சைக்கிள்லேதான் எல்லா இடத்துக்கும் போவாரு.”

சொர்ணம் எல்லாவற்றையும் சிரத்தை இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அப்ப ‘கல்யாணப் பரிசு’ சினிமாப் படம் வந்த நேரம். அதிலே ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் சைக்கிள் ஓட்டி கிட்டே பாட்டு பாடுவாங்க. அதைப் பார்த்துட்டு வந்து தானும் சைக்கிள் ஓட்டணும்னு வாங்கினேன் அப்படீம்பாரு. எங்க அம்மா கூட கேலியா பேசுவாங்க. அவங்களை பின்னாலே வைச்சுகிட்டு என்னை, பார்லே ஒரு தனி குட்டி சீட் போட்டு அதிலே உட்கார வைச்சு சினிமாக்கெல்லாம் கூட்டிகிட்டு போவாரு”

அப்படியே சிறிது நேரம் அந்த நினைப்பிலேயே இருந்தார் தனபால். சட்டென்று ஞாபகம் வந்தவர் போல், “வாரம் ரெண்டு தடவை நல்ல துடைச்சி, எண்ணை போட்டு பளபளன்னு வைச்சிருப்பாரு. சைக்கிளை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டாரு. எனக்குக் கூட கொடுக்கலை. ‘சைக்கிள் கத்துக்க வாடகை சைக்கிள் எடுத்து கத்துக்கோ’ ன்னு சொல்லிட்டாரு. அவருக்கு வயசாகிப் போய் நான் வேலைக்குப் போன பிறகுதான் அந்த சைக்கிளை என் கிட்டே தந்தாரு. அதுவும் அரை மனசோடதான். சாவறதுக்கு கிடக்கும் போது கூட, முதல் நாள் என் கிட்டே ‘தனபாலு, அம்மாவை நல்லா பார்த்துக்கோ. என் சைக்கிளையும் பார்த்துக்கோ. அதை யார் கிட்டேயும் வித்துடாதேன்னு’ சொல்லிட்டுத்தான் கண்ணை மூடினாரு”.

“சரி! போதும் அந்தப் பளைய கதை. இப்ப அதுக்கு துருப்பிடிச்சு, கலர் போயி, எல்லா பாகமும் கயண்டு போயி எலும்புக் கூடா இருக்கு. இனிமே அதை வைச்சுகிட்டு என்ன பண்றது?”

“ம்.., கல்யாணம் ஆன புதுசிலே நீ கூடதான் கொழுகொழுன்னு பளபளன்னு இருந்தே. இப்ப எல்லா கயண்டு போயி தொளதொளன்னு இருக்கே. உன்னையும் பழைய இரும்புகாரன்கிட்டே போட்டுரலாமா? பேரீச்சம் பழம் கிடைக்குமா?”

சொர்ணத்திற்கு கோபம் தலைக்கேறியது.

“உங்க பொண்டாட்டியும் அந்த ஓட்டை சைக்கிளும் உங்களுக்கு ஒண்ணா? என்னை தொலைச்சி கட்டிடுங்க. அந்த சைக்கிளோடேயே குடும்பம் நடத்துங்க. எனக்கென்ன? நீங்களாச்சு உங்க ஓட்டை சைக்கிளாச்சு. எக்கேடு கெட்டுப் போங்க”

சொர்ணம் அவசரமாக எழுந்து உள்ளே போய் கதவைப் ‘படார்’ என்று சாத்திக் கொண்டு படுக்கையில் விழுந்தாள். தனபால் மெதுவாக எழுந்து போய் ஒரு டம்பர் தண்ணீர் குடித்துவிட்டு ஹாலிலேயே பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டார்.

ஐம்பது வருஷத்துக்கு முன்னால் தனபாலின் அப்பா, தங்கப்பன் “ஹம்பர்” சைக்கிளை பிராட்வே கடை ஒன்றில் இருந்து வாங்கி வந்திருந்தார். குழந்தை தனபால் தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டுமென்று கேட்டிருந்தான். மாறாக, அப்பா தனக்கு சைக்கிள் வாங்கிக் கொண்டதில் அவனுக்குக் கோபம். “இந்த சைக்கிள்லே ஏற மாட்டேன் போ” என்று அப்பாவிடம் கோபித்துக் கொண்டது அவருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்பா அவனைக் கொஞ்சி, “இங்கே பார்! நீ உட்கார்ந்து வர உனக்கு தனி குட்டி சீட்” என்று பெருமையுடன் காட்டி அதில் உட்கார வைத்தவுடன் கோபம் பறந்துவிட்டது. அப்புறம் அப்பா வெளியே போகும் போதெல்லாம் அந்த சைக்கிள் சீட் சவாரிதான். பெரியவன் ஆகி சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பிறகும் அப்பா அந்த சைக்கிளைத் தொட விடவில்லை. ஸ்கூல் கடைசி பரீட்சையில் தனபால் ஃபெயில். தங்கப்பன், தான் வேலை செய்து வந்த முதலாளியிடம் சொல்லி அவர் சிபாரிசில், ரொம்ப கஷ்டப்பட்டு கிண்டியில் ஒரு ஃபாக்டரியில் வேலையில் அமர்த்தி விட்டார். அதற்குப் பிறகுதான் ஆஃபீஸ் போய் வர அந்த சைக்கிள் தனபாலிடம் வந்தது. நாற்பது வருஷமாக அதுதான் அவருடைய இணை பிரியா நண்பன். வெய்யிலோ மழையோ அதில்தான் சவாரி. நடுவில் இருக்கும் ஃப்ரேமைத் தவிர, மற்ற எல்லா பாகத்தையும் நிறைய தடவை மாற்றி ஆகி விட்டது. இருந்தாலும் அதை விட்டுவிட மனசு வரவில்லை.

ராஜா அண்ணாமலைபுரத்தில், தெற்குக் கோடியில் கால்வாயின் கரையில் ஒரு திடலில் குடிசைகளும் ஓட்டு வீடுகளுமாக பத்துப் பதினைந்து வீடுகள். அதில் ஒன்றில்தான் தனபால் குடும்பம் பல வருஷங்களாக இருந்து வந்தது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள், அந்த இடம் ஒரு ட்ரஸ்ட்க்குச் சொந்தமென்றும், அதில் பல மாடி கட்டிடம் கட்டப் போவதாகவும் உடனே அந்த இடத்தை எல்லோரும் காலி செய்ய வேண்டுமென்றும் நோட்டீஸ் வந்தது.  உடனே போராட்டம் வெடித்தது. போலீஸ், ரவுடி மிரட்டல்களும், சமாதானப் பேச்சு வார்த்தைகளும் ஒரு வருஷம் தொடர்ந்தன. முடிவில், வீடு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் இழப்பீடு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, எல்லோரும் இடத்தை காலி செய்தார்கள். தனபால், கையில் கிடைத்த பணத்தை வைத்து நாவலூரில் இப்போதிருக்கும் வீட்டை வாங்கினார். பத்து வருஷம் முன்னால் ஒரே பெண் வசந்திக்குத் திருமணமும் முடித்தார்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன், சும்மா இருக்க முடியாமல் திருவான்மியூரில் ஒரு கடையில் வேலை. தினமும், நாவலூரில் இருந்து போய் வருவது இந்த “ஹம்பர்” சைக்கிளில்தான். அதோடு அறுபது வருஷ பந்தம். இன்று வரை அதுவும் தனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. அதை விற்று விட வேண்டுமா? முடியவே முடியாது.

அடுத்த நாளும் கோவிந்தராசு சைக்கிள் ரிப்பேர் கடையைத் திறக்கவில்லை. “அவனோட மச்சினி புருஷனை வேலூர் ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காங்களாம். உதவிக்கு இவன் போயிருக்கான். அதான் கடையைத் திறக்கலை. பத்து நாள் ஆகுமாம். நான் பஸ்ஸிலேயே போறேன்” என்று விசாரித்து விட்டு வந்து தனபால் சொர்ணத்திடம் சொன்னார். பத்து மைல் சைக்கிளில் போவதைக் காட்டிலும் பஸ்ஸில் போவது நல்லதுதான் என்று நினைத்து அவளும் ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் மதியம் வாசல் மணி அடிப்பதைக் கேட்டு சொர்ணம் கதவைத் திறந்தாள். நடு வயதைக் கடந்தவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“யாருப்பா?”

“நான் ஆறாம் நம்பர் வீட்டிலே தச்சு வேலை செய்யறேன்மா. அம்மா உங்களை கேட்கச் சொன்னாங்க”

ஆறாம் நம்பர் தினகரன் வீட்டில் தரை டைல்ஸ் மாத்தி, ரிப்பேர் செய்து மராமத்து வேலை நடப்பதை அவர் மனைவி நாலு நாள் முன்னால் சொன்னது சொர்ணத்திற்கு ஞாபகம் வந்தது.

“என்ன கேட்கச் சொன்னாங்க? எங்க வீட்டிலே ஒரு ரிப்பேர் வேலையும் இப்ப இல்லை”

“அதில்லைம்மா! இதோ உங்க வீட்டு வாசல்லே நிக்கிறது உங்க சைக்கிள்தானே?”

“ஆமாம்! எங்க வீட்டு ஐயாவுது? ஏன் கேட்கிறே?”

“இது பழைய சைக்கிள்தானே? விலைக்குக் கொடுப்பீங்களா?”

“ஐயய்யோ! அது விக்கிறதுக்கில்லை. ரிப்பேருக்காக நிக்கிது.  கொடுக்கறதுன்னா எங்க வீட்டுக்காரரைத்தான் கேட்கணும்.”

“கேட்டு வைங்கம்மா! நான் இன்னும் நாலு நாள் வேலைக்கு வருவேன். காசு கொடுத்துட்டு வாங்கிக்கிறேன்.”

சொர்ணம் தனபாலைக் கேட்கவில்லை. கேட்டால் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று தெரியும். “வீணாக சண்டைதான் வரும். ஏன் வம்பு? அவராச்சு, அவர் சைக்கிளாச்சு, நமக்கென்ன?” என்று இருந்து விட்டாள். ஆனால் விஷயம் அதோடு நிற்கவில்லை. மனசில் சுழன்று சுழன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த சைக்கிளை விற்றால்தான் என்ன? சொந்த பெண்டாட்டியை விட அந்த ஓட்டை சைக்கிள்தான் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. “என்னை பழைய இரும்புக்காரனிடம் போட்டு விடுவாராமே? பார்க்கிறேன்”. தன் வீட்டிலேயே தனக்கு ஒரு சக்களத்தி இருப்பது போலத் தோன்றியது சொர்ணத்துக்கு. அதை ஒழித்துக் கட்டினால்தான் நிம்மதி.

நாலு நாள் கழித்து, மீண்டும் அந்த தச்சு வேலைக்காரன் வந்தான்.

“ஐயா என்னம்மா சொன்னாரு? சைக்கிளை கொடுத்துடலாம் இல்லை?”

“ஐயாவுக்குக் கொடுக்க இஷ்டம் இல்லை. நான்தான் வயசாயிடுச்சு, நீங்க இனிமே சைக்கிள் ஓட்ட வேண்டாம்னு சொல்லி சம்மதிக்க வைச்சிருக்கேன். ரொம்ப ராசியான சைக்கிள். சரி! எவ்வளவு கொடுப்பீங்க?”

“பழைய சைக்கிளு. என்ன ஒரு இருநூறு ரூபாய் கொடுக்கலாம்”

“இருநூறா? வேண்டாம். அது இங்கியே இருக்கட்டும். நீங்க வேறே வாங்கிகுங்க”

“என்னம்மா? செயினு கூட அறுந்து கிடக்குது. புது செயின் மாத்தி, டயர் மாத்தி ஓவராயில் பண்ணி ரோட்டிலே ஓட்ட லாயக்கா ஆக்கிறதுக்கே மேலே எழுநூறு, எண்ணூறு ஆகும்.”

“அதான். இது வேணாம். நீங்க புது சைக்கிளே வாங்கிகுங்க”

“என்னம்மா, இப்படிச் சொல்றீங்க? எனக்கு செலவிருக்கும்மா. சரி! இருநூத்து ஐம்பது கொடுத்திடறேன்”

“இல்லை, நான் ஐயாவைக் கேட்டு நாளைக்குச் சொல்றேன்”

“எனக்கு இன்னியோட வேலை முடிஞ்சிருச்சும்மா. நாளைக்கு நான் வர மாட்டேன். சரிம்மா! கடைசி விலை, முன்னூறு ரூபாய்.”

அவனிமிருந்து கடைசி விலையை வாங்கிக் கொண்டு சொர்ணம் சைக்கிள் சாவியை அவனிடம் கொடுத்தாள்.

அன்று மாலையில் தனபால் வீட்டிற்கு வந்த போது, வாசலில் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ந்து போனார். அவசரமாக உள்ளே நுழைந்தவர், துணியை மடித்துக் கொண்டிருந்த சொர்ணத்தைப் பார்த்து, “சொர்ணம், சைக்கிளைக் காணலை. நீ சொன்ன மாதிரியே எவனோ தள்ளிகிட்டு போயிட்டான்” என்று கத்தினார்.  சொர்ணம் பதில் ஒன்றும் சொல்லாமல் துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். “பூட்டிதானே வைச்சிருந்தேன்” என்று சொன்னவர் சட்டென்று சாவி வைக்குமிடத்தில் பார்த்த போது சைக்கிள் சாவியைக் காணவில்லை.

“சொர்ணம், சைக்கிள் சாவியும் காணலை. எவனோ வீடு புகுந்து சாவியை எடுத்துகிட்டு போய் வண்டியை தள்ளிகிட்டு போயிட்டான் போலிருக்கு. நான் பேசறதெல்லாம் உன் காதிலே விழுதா?”

சொர்ணம் மெதுவாக அவர் அருகில் வந்து “கத்தாதீங்க. எல்லாம் சொல்றேன். முதல்லே கைகாலை களுவிட்டு வாங்க. டீ தரேன்” என்று சொல்லிவிட்டு சமையல் அறைப் பக்கம் திரும்பினாள். தனபால் அவள் தோளைப் பிடித்து வேகமாகத் திருப்பினார்.

“அதெல்லாம் அப்புறம். என் சைக்கிளுக்கு என்ன ஆச்சு? அதைச் சொல்லு முதல்லே”

சொர்ணம் சில வினாடிகள் அவர் முகத்தைப் பார்த்து விட்டு, பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“சொல்லு, என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு”

“அந்த ஓட்டை சைக்கிள் விலை போயிடுச்சு. அதை வித்துட்டேன்.”

தனபால் பேயறைந்தவர் போல் ஆனார்.

“யார் கிட்டே?”

“ஆறாம் நம்பர் வீட்டுக்கு தச்சு வேலைக்கு வந்தவர் கிட்டே. முன்னூறு ரூபாய் கிடைச்சது. எடுத்து வைச்சிருக்கேன்”

“இப்ப நான் உன்னை அதை விக்கச் சொன்னேனா?”

“இல்லைன்னா இன்னும் பத்து வருஷம் அந்த ஓட்டை வண்டியை வைச்சுகிட்டு, நீங்க கஷ்டப்பட்டு மிதிச்சுகிட்டு தினம் நூறு மைல் போயிட்டு வருவீங்க. நான் ஒவ்வொரு நாளும் “நீங்க முழுசா திரும்பி வரீங்களா?”ன்னு இங்கே வயித்திலே நெருப்பைக் கட்டிகிட்டு காத்துகிட்டு கிடக்கணும். நீங்க அதை விக்க மாட்டீங்கன்னு தெரியும். அதான் நானே முடிவு பண்ணி வித்துட்டேன்.”

தனபாலுக்கு தலை சுழல்வது போல இருந்தது. தலையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து விட்டார். வாய் கேவிக்கேவி அழ, கண்களில் நீர் பெரிதாக வழியத் தொடங்கியது.

“இப்ப என்ன ஆகிப் போச்சு? ஏதோ எளவு விழுந்துட்ட மாதிரி இப்படி அளுவுறீங்க! நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன். அந்த சைக்கிள்தான் செத்து போய் ரொம்ப நாளாச்சு”

“அடிப்பாவி! உசிரில்லாத ஜடமா அது? உசிருள்ள ஜீவன்டி அது. சொந்தக் குழந்தைபோல இத்தினி வருஷமா அதை வைச்சு காப்பாத்திகிட்டு வந்தேன். ஒரு நொடியிலே கேவலம் முன்னூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வித்திட்டியே? கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்தக் குழந்தை இனிமே திரும்பக் கிடைக்குமா?”

“ஆமாம், கோடி ரூபாய் கொடுப்பாங்க! முன்னூறு ரூபாய்க்கே அவன் முக்கிகிட்டு கொடுத்தான். துருப்பிடிச்சுப் போய், அங்கமெல்லாம் அக்கக்கா கழண்டு போய் கிடக்குது. அதுக்கு உசிரு இருக்காம். இங்கே பொண்டாட்டி உசிருள்ள ஜீவனாத் தெரியலை. அதை விட அந்த சைக்கிள் ஒசத்தியாப் போயிடுச்சு.”

தனபால் ஆத்திரத்தோடு எழுந்து, அவள் கன்னத்தில் பலமாக அறைந்தார். அவள் தன் கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்தாள்.

“ஆமாண்டி! அது நான் பிறந்ததிலேருந்து என் கூட இருக்குது. நீ இடையிலே வந்தவதான். உன்னை விட அந்த சைக்கிள் எனக்கு ஒசத்திதான். போ! என் கண் முன்னாலே நிக்காதே!”

சொர்ணம் அவர் கண்களில் இருந்த வெறியைப் பார்த்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பேசாமல் போய் படுக்கையில் விழுந்தாள். அன்றிரவு இருவரும் சாப்பிடவில்லை. பேசவில்லை. ஒரு மயான அமைதி அந்த வீட்டில் நிலவியது.

மறுநாள், நீண்ட நேரமாகியும் தனபால் படுக்கையை விட்டு எழுந்திருக்காததைக் கண்டு சொர்ணம் உள்ளே போய் பார்த்தாள். அவர் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். சற்று தள்ளி நின்று கொண்டே, “ஏங்க, மணி ஒம்பது ஆவுது. நீங்க வேலைக்குப் போகலையா?” என்றாள். பதிலில்லை. “ஏங்க, எளுந்திருங்க” என்று சொல்லிக் கொண்டே அவரை தொட்டு எழுப்பப் போனவள், அவர் உடல் சுடுவதை கவனித்தாள். சட்டென்று நெற்றியில் கை வைத்துப் பார்த்த போது கையில் நெருப்பாய் சுட்டது.

“என்னங்க, உடம்பு சுகமில்லையா? ஜுரமா?” என்றாள்.

மெதுவாக போர்வையை விலக்கிக் கொண்டு கண்களைத் திறந்த தனபால் பதில் பேசவில்லை. உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

“என்னங்க இப்படி சுடுது! உடம்பு நடுங்குது. வாங்க உடனே போய் டாக்டரைப் பார்ப்போம்”

“வேணாம். பத்து போட்டு, கசாயம் குடுச்சா எல்லாம் சரியாப் போய்டும்”

மூன்று நாள், “கசாயம்” குடித்தும் ஒன்றும் சரியாகவில்லை. அதற்கு மேல், தாமதிக்கக் கூடாது என்று சொர்ணம், வாசலில் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி, அவரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, திரவியம் டாக்டர் கிளினிக்குக்குப் போனாள்.

டாக்டர் திரவியம் அந்தப் பகுதியில் ரொம்ப பிரசித்தம். “அஞ்சு ரூபாய் டாக்டர்” என்று பெயர் வாங்கியவர். யாராயிருந்தாலும் எந்த வியாதியாயிருந்தாலும் ஃபீஸ் “அஞ்சு ரூபாய்”தான். அதுவும் கட்டாயமில்லை. கையில் இருப்பதை அங்கிருக்கும் உண்டியலில் போட்டு விட்டுப் போகலாம். காசில்லாவிட்டால் அதுவும் தேவையில்லை. கூடிய வரைக்கும் மருந்து இலவசம். நூறு பேருக்குமேல் இருந்த கூட்டத்தைக் கடந்து, தனபாலின் முறை வர இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

“என்ன பண்ணுது?”

“மூணு நாளா உடம்பு ஜுரம் டாக்டர். கண்ணு முளிக்கவே இல்லை”.

“உடம்பு குளிர் நடுக்கம் மாதிரி இருக்குதா?”

“முதல்லே இருந்தது. இப்ப இல்லை”

எல்லா கேள்விகளுக்கும் சொர்ணம்தான் பதில் சொன்னாள்.

“என்ன குடுத்தீங்க?”

“கசாயம் கொடுத்தேன். சரியாகல்லை. கஞ்சிதான் குடிச்சாரு”

“சரி பார்ப்போம்”

டாக்டர் எல்லாம் பார்த்தார். பிறகு ஒரு சீட்டில் எழுதி நீட்டினார்.

“வைரல் ஃபீவர்தான். மருந்து எழுதிக் கொடுத்திருக்கேன். கொஞ்சம் விலை அதிகமான மாத்திரை. என் கையிலே இல்லை. வெளியிலே வாங்கிக்குங்க. கஞ்சி கொடுங்க. ரசம் சாதம், இட்லி, பன்னு கொடுக்கலாம். தயிர், மோர் வேணாம். ஒரு வாரம் கழிச்சு பார்க்கிறேன்”

ஒரு வாரம் ஆகியும் தனபாலின் உடம்பு முழுசாக சரியாகவில்லை. ஜுரம் குறைந்திருந்தது. ஆனாலும் உடம்பு பழைய தெம்பு, உற்சாகம் கொள்ளவில்லை. சோர்ந்து படுத்துக் கொண்டே, எதையோ பறிகொடுத்தவர் போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பாடும் சரியாக உள்ளே போகவில்லை. பல வேளைகளில் மறுத்துவிட்டார். சொர்ணம் எத்தனையோ முறை அவரை உற்சாகப்படுத்திப் பேசியும் ஒன்றும் தெளிவாகவில்லை. ஒருவாரம் கழித்து மீண்டும் டாக்டர் திரவியத்திடம் அழைத்துக் கொண்டு போனாள்.

“என்ன, எப்படி இருக்கீங்க?”

“இனிமே இருந்து என்ன பிரயோசனம் டாக்டர்?”

தனபாலின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் டாக்டர் அதிர்ந்து விட்டார்.

“ஏன் இப்படி விரக்தியாகப் பேசுறீங்க? இப்ப என்ன ஆயிடுச்சு? ஜூரம் வந்தது. போயிடுச்சு. இனிமே மறுபடியும் நல்லா சாப்பிட்டு நல்லா ஓய்வெடுத்துகிட்டு உடம்பைத் தேத்திக்க வேண்டியதுதானே? இதிலே என்ன கஷ்டம்?”

“இனிமே இந்த உடம்பைத் தேத்தி என்ன ஆகப் போவுது?” என்று சொல்லிவிட்டு தனபால் எழுந்து விட்டார்.

“சரி! நீங்க வெளியே இருங்க. நான் உங்க வீட்டுக்கார அம்மா கிட்டே மருந்து, டானிக் எல்லாம் எழுதித் தரேன்”

ஒரு நடைப்பிணம் போல தனபால் மெதுவாக நடந்து, வெளியே போனார். அவர் போனதும், திரவியம் சொர்ணத்திடம். “ஏம்மா? வீட்டிலே சமீபத்திலே ஏதாவது துக்க சமாசாரம் நடந்ததா? வேண்டியவங்க யாராவது இறந்து போயிட்டாங்களா?”

“இல்லீங்களே”

“பின்னே ஏன் இவ்வளவு சோகமா, விரக்தியா பேசறாரு? ஏதாவது முக்கியமான பொருள் தொலைஞ்சு போச்சா?”

“டாக்டர், அவர்கிட்டே அறுபது வருஷமா இருந்தது ஒரு சைக்கிள். அது அவரு அப்பா ஆசையா அவருக்குக் கொடுத்தது. அது துருப்புடிச்சு போய், ஓட்டை சைக்கிளா ஆகிப் போயிடுச்சு. அடிக்கடி நிறைய செலவு வைச்சுகிட்டு இருந்தது. நாந்தான் இனிமே அது எதுக்குன்னு…. அவருக்குத் தெரியாம அதை வித்துபுட்டேன். அடுத்த நாள்லேருந்துதான் இந்த ஜுரம்”

சொர்ணம் நடந்ததையெல்லாம் சொன்னாள்.

“ஆகா! அதுதாம்மா காரணம். அந்த சைக்கிள் மேலே அவரு உசிரையே வைச்சிருந்திருக்காரு. அது போனது அவரு மனசை ரொம்ப பாதிச்சிருக்கு.”

“சைக்கிள் போனதுக்கா இவ்வளவு துக்கம்? ரேடியோ போயிருக்கு, டி.வி. வெடிச்சிருக்கு, ஏன் ஒரு தடவை பீரோவிலிருந்த நகைகூட திருட்டுப் போயிருக்கு. அதெல்லாம் அவரை ஒண்ணும் செய்யலையே?”

“அம்மா, இதெல்லாம் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும். ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேலேயோ, ஒரு பொருள் மேலேயோ இருக்கிற ஆசை, பாசம், ஈடுபாடு மத்தவங்களுக்கு அதே ஆளுகிட்டேயோ பொருள் மேலேயோ அதே அளவு இருக்காது. அந்த ஈடுபாட்டை, பாசத்தை மத்தவங்களாலே புரிஞ்சுக்கவும் முடியாது. உங்க வீட்டுக்காரருக்கு அந்த சைக்கிள் மேலே இருந்த பிணைப்பு அதை இழந்ததிலே, அவருக்கு ஏதோ தன்னோட குடும்பத்திலே ஒருத்தர் செத்துப் போன மாதிரி ஆயிருக்குன்னு தோணுது”

“ஒண்ணும் பயமில்லையே?”

“வயசானவரு. சொல்றதுக்கில்லை. மனசு சரியாகலைன்னா உடம்பும் குணமாகாது”

“இப்ப இதுக்கு என்ன பண்ணறது டாக்டர்?”

“அந்த சைக்கிளை வித்தவர் கிட்டேயிருந்து மறுபடியும் திருப்பிக் கொண்டு வாங்க. உங்க வீட்டுக்காரர் இரண்டு நாள்லே சரியாகி பழையபடி ஆயிடுவார்.”

மறுநாள் காலையில் சொர்ணம் ஆறாம் நம்பர் வீட்டுக்கு ஓடினாள். தினகரன் மனைவியிடம் அவர்கள் வீட்டில் தச்சு வேலை செய்த நபரின் விவரங்களைக் கேட்டாள். “ஏன் கேட்கிறீங்க?” என்றாள் அவள். தன் வீட்டிலும் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி சமாளித்தாள் சொர்ணம். “அவரு பெயர் என்னவோ பன்னீர் செல்வம்னு சொன்னாரு. ஐஸ் அவுஸ் பக்கத்திலே வீடுன்னாரு. எங்க வீட்டுக்காரரைக் கேட்டு அட்ரஸ் வாங்கித் தாரேன்”.

தினகரன் கொடுத்த அட்ரஸை வைத்துக் கொண்டு சொர்ணம் பஸ் பிடித்து விவேகானந்தர் இல்லத்தில் இறங்கி நடந்தாள். ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் தாண்டி ஏதோ ஒரு கான் சாகிப் தெருவில் திரும்பி பழைய நம்பர் புது நம்பர் எல்லாம் விசாரித்து அவன் வீட்டைக் கண்டு பிடித்தாள். நல்ல வேளையாக பன்னீர் செல்வத்தை வீட்டிலேயே பிடித்தாள்.

“என்னம்மா சொல்றீங்க? சைக்கிள் உங்களுக்கே மறுபடியும் வேணுமா? அதைத்தான் காசு வாங்கிட்டு வித்துட்டீங்களே? திருப்பி கேட்டா எப்படிம்மா?

“இல்லை, உங்க காசை நான் திருப்பித் தந்திடறேன். நீங்க சைக்கிளைக் கொண்டு வாங்க. எங்க வீட்டு ஐயா அவரைக் கேட்காம வித்துட்டதாலே என்னைத் திட்டுறாரு”

“அதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும்? இது என்னம்மா நியாயம்?”

“இங்கே பாருங்க, நான் அவரைக் கேட்காம செஞ்சது என் தப்புதான். மன்னிச்சுக்கோங்க. வண்டியைத் திருப்பிக் கொடுத்திடுங்க”

“அது எப்படி? வித்தது வித்ததுதான். அதெல்லாம் திருப்பிக் கேட்க முடியாது”

“இங்க பாருங்க. தகறாரு பண்ணாம கொடுத்தீங்கன்னா நல்லது. இல்லைன்னா….” சொர்ணத்தின் குரல் உயர்ந்தது.

“கொடுக்கலேன்னா என்னா பண்ணுவீங்கோ?”

“நீங்க எங்க காலனிக்கு வேலைக்கு வந்த போது, எங்க வீட்டுக்குள்ளே புகுந்து சாவியைத் எடுத்து, சைக்கிளைத் திருடிக்கிட்டு போயிட்டீங்கன்னு போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுத்திடுவேன். பொம்பளைன்னா போலீஸு உடனே ஆக்‌ஷன் எடுக்கும். உங்களை நாலு தட்டு தட்டி உள்ளே தள்ளிடுவாங்க.” சொர்ணம் தைரியமாகச் சொன்னாள்.

“என்னம்மா இப்படி மிரட்டுறீங்க?” பன்னீர் செல்வத்தின் குரலில் பயம் தெரிந்தது.

“பின்னே நயமாச் சொன்னா கேட்கலைன்னா அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கும். சரி, வண்டி எங்கே?”

“வண்டி இப்ப இங்கே இல்லை”

“ஐய்யய்யோ! வண்டியை வித்துட்டீங்களா?”

“இல்லைம்மா! ரிப்பேருக்குப் போயிருக்கு. நடுவுலே இருக்கிற பாரைத் தவிர மத்த எல்லா பார்ட்டும் மாத்த வேண்டியிருந்தது. எனக்கு எண்ணூறு ரூபாய் நஷ்டம்”

“எல்லா நஷ்டத்தையும் நான் கொடுத்திடறேன். பில்லோட, சைக்கிளையும் எடுத்துகிட்டு மரியாதையா நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்து சேருங்க”

இரண்டு நாள் கழித்து, தனபாலின் சைக்கிள் ஒரு ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தது. ஆட்டோ சார்ஜ், விலையாகக் கொடுத்த முன்னூறு உட்பட ஆயிரத்து இருநூற்று முப்பத்தைந்து ரூபாய் பன்னீர் செல்வம் வாங்கி கொண்டு அவளைத் திட்டிக் கொண்டே போய்ச் சேர்ந்தான்.

படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த தனபாலை எழுப்பி கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் சொர்ணம்.

“பாருங்க! உங்க செல்லக் குழந்தை திரும்ப வந்து சேர்ந்துடுச்சு. வித்தவன் கிட்டே இருந்து திரும்பி வாங்கிகிட்டு வந்துட்டேன். இப்போ சந்தோசம்தானே?”

புதுப் பொலிவோடு நின்ற தன் சைக்கிளைப் பார்த்த தனபாலுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. புது டயர்கள், செயின், புது காரியர், புது சீட், டபுள் பாரைச் சுற்றி ஒரு கவர். புது மெருகோடு சைக்கிள் ஜொலித்தது.

“இது என் சைக்கிளே இல்லை”. சொர்ணம் கலக்கத்துடன் அவரைப் பார்க்க, “கல்யாணப் பொண்ணு மாதிரி ஜொலிக்குது.”

“பின்னே ஆயிரம் ரூபாய் செலவளிச்சா, ஜொலிக்காம எப்படி?’

“ஆயிரம் ரூபாயா? எங்கே வைச்சிருந்தே?”

“அப்பப்ப உங்களுக்குத் தெரியாம சேர்ந்து வைச்சிருந்தேன். தீபாவளிக்கு புதுத் துணிமணி எடுக்கலாம்னு. எல்லாம் மொத்தமா கரைஞ்சி போச்சு”

“போனா போவட்டும் விடு. தீபாவளி ஒரு மாசம் முன்னாலேயே வந்துடுச்சி நமக்கு”

மறுநாள், தனபால் பழையபடி ஆகிவிட்டார். குளித்து, சாப்பிட்டு விட்டு, வேலைக்குக் கிளம்பினார். சொர்ணம் அவர் கையில் சைக்கிள் சாவியை எடுத்து நீட்டினாள்.

“வேணாம் சொர்ணம். நான் பஸ்ஸிலேயே போறேன். அதுவே சவுகரியமா இருக்கு.”

“அப்ப சைக்கிள்?”

“புது சைக்கிளை ரோட்டிலே ஓட்டினா அழுக்குபட்டு வீணாப் போயிடாது?’ என்று சொல்லிவிட்டு தனபால் படியிறங்கினார்.

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ – அழகியசிங்கர்

 

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ 

என்ற டயான் ப்ரோக்கோவன் என்ற நாவலை முன் வைத்து…

              டாக்டர் பாஸ்கரன், இந்தப் புத்தகத்தை –  ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்   – என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். கிட்டத்தட்டப் பல மாதங்கள் நான் படிக்காமலே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தேன்.  

            திரும்பவும் அவர் ஞாபகப்படுத்தியபோது, இன்று (27.10.2020) இந்தப் புத்தகம் முழுவதும் படித்து முடித்தேன்.

            இதை ஒரு நாவல் என்று சொல்லலாமா? குறுநாவல் என்று சொல்லலாமா? ஒரு நாவல் என்றால் குறைந்த பட்சம் 80 பக்கங்களாவது இருக்க வேண்டும்.  இந்தப் புத்தகம் 71 பக்கங்களில் முடிந்து விடுகிறது.

            காலச்சுவடு பதிப்பகம் நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்தப் புத்தகத்தைச் சேர்த்துள்ளது.

            டயான் ப்ரோகோவன் (பிறந்த வருடம் 1976) ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இந்த நாவல், ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.

          ஜூல்ஸுன் மரணம் இயல்பாக இந்த நாவலில்   விவரிக்கப்படுகிறது.  ஜூல்ஸு மரணத்தோடு நாமும் பயணம் செய்கிறோம்.

   ஜூல்ஸ் இறந்து போயிருந்தார்.  ஆனால் முதலில் அவர் தன் கடமையைச் செய்து முடித்திருந்தார். மேஜையைச் சீர்செய்து காபி கலந்து வைத்திருந்தார்.  

            ‘உயிரோடு இருப்பவர்கள் நிலைமைதான் மோசமானது’ என்று ஆலிஸ் நினைக்கிறாள்.

            மௌனமாக ஒரு உரையாடல் நடக்கிறது ஜூல்ஸுடன்.   ஆலிஸ் அந்த உரையாடலை நடத்துகிறாள்.  அவர் இறந்து விட்டார் என்று அவளுக்கு வருத்தமும் துக்கமும் இருந்தாலும் அவருடன் ஒரு மென்மையான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள். இந்த நாவல் முழுவதும் அவளுடைய அவரைப் பற்றிய நினைவுகள்தான்.  அதைச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது.

            அவள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்?  உண்மையில் மருத்துவரை அழைக்க வேண்டும்.  ஹெர்மன் என்ற அவள் பையனிடம் தெரிவிக்க வேண்டும்.  அப்படியில்லாவிட்டால் அவன் மனைவி எய்மியை கூப்பிட வேண்டும்.  அவள் இதையெல்லாம் செய்யவில்லை.  இயல்புக்கு மாறாக அவள் இருப்பதால் அவளுக்குப் பீதி ஏற்படுகிறது.  பீதியைத் தடுக்க இன்னொரு கோப்பை தேநீரைக் குடிக்கிறாள்.

அவள் எப்போதும் குளித்துவிட்டு வரும்போது செய்தித்தாள்களைப் படிப்பாள்.  இன்றும் ஜூல்ஸ்  உயிரோடு இல்லை என்று தெரிந்தும், ‘கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஜூல்ஸ் , ஒரு நிமிடத்தில் செய்தித்தாளைக் கொண்டு வருகிறேன்,’ என்கிறாள்.

            அது அவருடைய காலைநேரச் சடங்கு வெளியே தக்காளி வாங்கச் சென்றால் எல்லோரும் ஜூல்ஸ்  பற்றிக் கேட்பார்கள் என்று அவளுக்குத் தோன்றுகிறது.  அதற்கு என்ன பதில் சொல்வது? அவள் யாரிடமும் சொல்லாதவரை அவர் இன்னும் இறந்து போகவில்லை.  

            ஜூல்ஸுடன்  சதுரங்கம் ஆட டேவிட் வந்து விடுவான் என்பதை நினைத்துத் திகைத்து விட்டாள்.   டேவிட்டுக்கு ஆட்டிஸம்.  டேவிட் தாய் பியா அவன் பள்ளிக்கூடத்தில் சதுரங்கம் ஆடக் கற்றுக் கொள்கிறாள்.  அவர்களை  லிப்ட்டில்   ஒருநாள் ஜூல்ஸிம் ஆலிஸிம் சந்திக்கிறார்கள்.  இப்படியே தொடங்கியது நட்பு.  தினமும் டேவிட் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வருவான். சரியாக பத்து மணிக்குத் தினமும் டேவிட் சதுரங்கம் விளையாட வந்துவிடுவான்.

            போன் செய்து பியா சொன்னாள்.  அவள் தாய் இன்று காலை பனியில் சறுக்கி விழுந்துவிட்டாள்.  அவளை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.  அவள் வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் சென்றால் டேவிட் குலைந்து போவதாகச் சொல்கிறாள்.  அவனை ஆலிஸ் பொறுப்பில் விட்டுவிட்டுப் போக நினைக்கிறாள்.

            டேவிட் வந்து விடுகிறான்.  அவள் சதுரங்கப்பெட்டியைத் தேடி எடுத்து வருகிறாள். 

            அவன் கோபத்துடன் ஆலிஸ் உடன் செஸ் விளையாட விரும்பவில்லை.  

            “எனக்குப் பத்து மணிக்கு மிஸ்டர்  ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வேண்டு” மென்கிறான் டேவிட்.

            “மிஸ்டர் ஜூல்ஸ் சற்று உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்,” என்கிறாள் ஆலிஸ்.  

            அவனை ஜூல்ஸ் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.  அவன் ஜூல்சைத் தொட்டுப் பார்க்கிறான். பிறகு சொல்கிறான்.   “மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து விட்டார்” என்கிறான்.

            டேவிட் சதுரங்கம் விளையாடுகிறான்.  இரண்டுபேர் ஆட்டங்களையும் அவன் ஒருவனே ஆடுகிறான். ஆட்டம் முடிவில் “மிஸ்டர் ஜூல்ஸ் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்,”  என்கிறான் டேவிட்.

            ஒயின் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து டேவிட்டை திறக்கச் சொல்கிறாள்.  தக்கைத் திருகியை அவனிடம் கொடுக்கிறாள். 

            “தக்கைத் திருகி ஒரு நெம்புகோல்”  என்கிறான்  டேவிட்.   ஆட்டிஸம் இருந்தாலும் டேவிட் ஒவ்வொரு முறையும் எதாவது குறிப்பாகச் சொல்வான்.

            “சொர்க்கத்திலிருந்து வந்த அமிர்தம்”  என்றான் டேவிட் திறந்த ஒயின் பாட்டிலை அவள் பக்கமாகத் தள்ளி வைத்தபடி.

            இதுதான் முதல் முறையாக அவன் தேவையின் பாற்படாத ஒன்றைச் சொன்னது என்கிறார் நாவலாசிரியர்.

            பியா வந்து டேவிட் அழைத்துச் சொல்வதற்கு முன்,’பிற்பகல் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை.  நான் திரும்பவும் போக வேண்டும்’ என்கிறாள்.

            டேவிட் தன் தாயைப் பார்த்தவுடன் ஒரே ஒரு வார்த்தைதான்  சொன்னான். ” மிஸ்டர்  ஜூல்ஸ் ஜெயித்துவிட்டார்,” என்று.

            ஒரு புதையல் போல் மிஸ்டர் ஜூல்ஸ் காதலியான  ஓல்காவிற்கு எழுதிய கடிதத்தை, கண்டுபிடித்து விட்டேன் என்கிறாள் ஆலிஸ்.  

            அந்தக் கடிதத்தில் மிஸ்டர் ஜூல்ஸ் விடுமுறை தினத்தில் ஓல்காவை அழைத்துப் போவதாக எழுதியிருந்தார்.  

            ஆனால் ஏனோ அது நிறைவேறவில்லை.  அவருடன் வாழ்ந்த பழைய நினைவுகளை அசை போடுகிறாள்.  மிஸ்டர் ஜூல்ஸ் ஓல்காவுடன் விடுமுறைக்குச் செல்லவில்லை.  அதைத் தடுத்து விட்டாள் ஆலிஸ்.  

       ‘உங்களை வாழ்க்கைக்கு அர்பணிப்பதைவிட மரணத்திற்கு அர்ப்பணிப்பது எளிதாக இருக்கிறது’ என்று நினைக்கிறாள் ஆலிஸ்.   தன் நினைவுகள் மூலம் அவருடன் ஆலீஸ் வாழ நினைக்கிறாள்.

            ஓல்காவுடன் ஏற்பட்ட கள்ள உறவு முறிந்ததற்குக் காரணமாக ஆலிஸ் இருக்கிறாள்.  அவள் அதை அவர் முன் அவர் இறந்தபின் வெளிப்படுத்துகிறாள்.  

            அவள் நினைத்துப் பார்க்கிறாள் தன் மகன்  ஹெர்மனிடம் எப்போது சொல்வது என்று.  முன் மாலையில்தான்  ஹெர்மனை அழைக்க நினைக்கிறாள்.  

            ஆனால் அவள் மகன் ஹெர்மனை அழைக்கவில்லை. ‘ ஹெர்மனை அழைப்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது’  என்று அவள்  இறந்து போன கணவருடன் பேசுகிறாள்.

            தந்தை இறந்து விட்டதை ஒரு மகனிடம் சொல்வதை விட ஒரு மகளிடம் சொல்வது எளிதாக இருக்குமென்று நினைத்தாள்.  இப்போது அவள் ஏற்கனவே பிறக்க இருந்த தன் முதல் குழந்தை அரைகுறைப் பிரசவமாகப் போனதை நினைத்துப் பார்த்தாள்.

            திரும்பவும் பியா போன் செய்தாள்.  அவள் அம்மா உடல்நிலை மோசமாகி விட்டதாகவும், அவள் கட்டாயம் போகும்படி இருக்கும் என்றும், ஆனால் அவள் பையன் டேவிட் அழைத்துக்கொண்டு போக முடியாது என்றும் சொல்கிறாள்.

            எப்படியும் டேவிட்டை அவள் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன் என்று அழாதகுறையாகச் சொல்கிறாள்.  ஆலிஸ்.   அந்த வேண்டுகோளைத்  தட்ட முடியவில்லை.

            டேவிட்டை பியா அழைத்துக்கொண்டு அவளிடம் விடும்போது, ”மிஸ்டர் ஜூல்ஸ் எப்படி இருக்கிறார்,” என்று கேட்கிறாள்.  

            “அவர் அப்படியே இருக்கிறார்,” என்று ஆலிஸ் பதில் அளிக்கும்போது டேவிட்டைப் பார்க்கிறாள்.  அவன் முகத்தில் ஒருமாற்றம் நிகழ்கிறது.  அவன் அவள் அம்மாவிடம் மிஸ்டர்  ஜூல்ஸ் இறந்து போய்விட்டார் என்று சொல்லவில்லை .  எப்படி அவனைப் பாதுகாப்பது என்று அவளுக்குப் பெரிய நிர்ப்பந்தமாக இருக்கிறது.  மிஸ்டர் மிஸ்டர் ஜூல்ஸ் இருந்த அறையில் அவனை அழைத்துக்கொண்டு போக விரும்பவில்லை. ஏன்னென்றால்  மிஸ்டர் ஜூல்ஸ் விரும்பாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பவில்லை.

            டேவிட் எப்போதும் பத்துமணிக்குத்தான் சதுரங்க ஆட்டம் ஆடுவான்.  அதனால் தற்சமயம் பத்து மணியைக் கடந்து விட்டதால் அவன் ஆட மறுக்கிறான்.

            “வா நாம் ஜூல்ஸ் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு போகிறாள்.

            “மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து விட்டார்” என்றாள் டேவிட்டைப்  பார்த்து.

            டேவிட் ஜூல்ஸ் இறந்த உடலைத் தொட்டுப் பார்க்கிறான். அவருடைய முகத்தின் மீது அவனுடைய கையை ஓட்ட விட்டான்.

            அப்போது ஒன்று சொல்கிறான்.  அது முக்கியமாக இந்த  நாவலில் தோன்றுகிறது.

“மிஸ்டர் ஜூல்ஸ் போய்விட்டார். 

இது மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம்தான்” என்கிறான்.  இங்கே அவன் சொல்வது முக்கியமாகத் தோன்றுகிறது. 

            அவன் சொன்னதை விட்டு கதாசிரியர் சொல்வதுபோல் ஒரு வரி வருகிறது.  கல்லாகிப்போய் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜூல்ஸின் உடல் அவருடைய வெளிப்புறம்தான் உலகத்திற்கான அவரது ஆடை அது. இப்போது அதை அவர் கழற்றிப் போட்டுவிட்டார்.  

            சாப்பிடக் கூப்பிடுகிறாள் டேவிட்டை.  ‘சமையல் அறையில் நுழைந்த அலங்கோலம்..அலங்கோலம்..அலங்கோலம்’ என்று தன்னிச்சையாக ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறான்.

            சிறிது நேரத்தில் டேவிட் சொல்கிறான், ‘ஜூல்ஸின் வெளிப்புறம் தனியாக இருக்கிறது’ என்று.

            டேவிட் அம்மா போன் செய்து தான் அங்கு வர முடியாது  என்று தெரிவிக்கிறாள்.  டேவிட் சோபாவில் ஜூல்ஸின் பக்கத்தில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்து விட்டு விழித்துக் கொள்கிறான்.   அவன்  ஆலிஸ்  பார்த்துக் கேட்கிறான்.  நான் சோஃபாவின் தலையணி, போர்வையுடன் படுத்துக்கொண்டால் மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம் எங்கே போகும் என்று கேட்கிறான். ஆலிஸ் 

            அவனைத் தனியாகப் படுக்கை அறையில் படுத்துக் கொள்கிறான். அப்போது அவன் சொல்கிறான் “பனி வெளி யே பெய்கிறது.  வெம்மை உள்ளே இருக்கிறது” என்கிறான். அது ஒரு கவிதைபோல் ஒலித்தது என்கிறார் கதாசிரியர்.

            அவளும் தூங்கி விடுகிறாள்.  காலையில் எழுந்தபோது ஒரு புதிய நறுமணத்தை நோக்கி அவள் சென்றாள் என்று முடிவுக்கு வருகிறது நாவல்.

            டேவிட் ஆட்டிஸம் என்ற நோயிக்கு ஆளாகப்பட்ட சிறுவன் அவருடைய மரணத்தைப் புறம் என்று விவரிக்கிறான். அவன் அவர் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறான்.

‘மிஸ்டர் ஜூல்ஸுடன்  ஒரு நாள்’ – நாவல் – ஆசிரியர் : டயான் ப்ரோகோவன் – தமிழில் ஆனந்த் – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) ஙூட், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001

 

 

 

“சுஹா” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Seven-day institutional quarantine must for those coming from Maharashtra only - The Hindu

 

பனி மூட்டம், அடர்த்தியான செடிகள், முள்ளும் சுள்ளியும் எங்கும் இருந்தது. பேருந்து ஓட்டும் விதத்திலிருந்து அவனுக்கு இந்தப் பாதை பரிச்சயமானது எனத் தெரிந்தது. அந்த குக்கிராமத்தில்  வண்டியை நிறுத்தினான். விடியற் காலை நான்கு மணி.

Smiling Indian Doctor Woman Stock Photos - FreeImages.comசுஹா, பேருந்தை விட்டு கீழே இறங்கினாள். இங்கே மெடிக்கல் கேம்ப் செய்ய வந்திருந்தாள். இது முதல் முறை அல்ல. டாக்டர் பட்டம் பெற்றதிலிருந்தே மெடிக்கல் கேம்ப் வாய்ப்பை தேடி எடுப்பாள். இதுவும் அப்படி ஒன்றுதான்.

கல்யாணம் நிச்சயமாகும் போதுகூட சுஹாவின் பெற்றோர் இவளுடைய இந்த மெடிக்கல் கேம்ப் செய்யும் தீர்மானத்தைப் பற்றிக் கூறியிருந்தார்கள். பரிபூரணமான வரவேற்பு கிடைத்தது.

மாமியாரின் பேச்சுத் துணைத் தோழிகள் இதைப் பாராட்டினார்கள். அவர்களில் பலர் கேம்பிற்குப் பல விதமாக உதவி செய்ய முன் வந்தார்கள். மாமியாருக்குப் பெருமை ஒரு பக்கம், எனினும் கவலை மனதைக் குடைந்தது “நமக்கு வீட்டில் கை கொடுத்து உதவுவாளா” என்றே. மாமனார் சமாதானம் சொல்லிப் பார்த்தார். பலன் அளிக்கவில்லை.

இந்த முறை மெடிக்கல் கேம்ப், அங்கு இருக்கும் மருத்துவர்களுடன் கூடிச் செய்வதற்கென்று சுஹா தனியாக வந்து இருந்தாள். அந்த விதத்தில் வித்தியாசமான அனுபவம்.

இறங்கின இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு வெறிச்சோடியாக இருந்தது. யாரும் இல்லை. எதுவும் தென்படவில்லை. கும்மிருட்டு. கவலை கலந்த பயம் அவளைக் கவ்வியது. ஏற்கனவே பயணம் முழுதும் டிரைவர் அவளை மீண்டும் மீண்டும் பார்த்தது அவளுக்குக் கூச்சமாக இருந்தது.

டிரைவர் அவளை மேலும் கீழும் பார்த்தபடி “பயமா” என்று வினவினான். சுஹா அவனை ஒரு முறை முறைத்தாள். தான் போட்டிருக்கும் சுடிதாரை மேலே இழுத்துக் கொண்டாள்.

டிரைவரும் அவளை அருவருப்புடன் பார்த்து, “நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை” என்றான். இந்த அவநம்பிக்கை தான் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவனுக்குக் கோபம் குபீர் என வந்தது. அமைதிப் படுத்திக் கொண்டான். அமைதி பெற, எச்சில் துப்புவது அவன் பழக்கம்.

தன்னுடைய கையிலிருந்த எதையோ தேய்த்து சுத்தி விட்டு – சுஹா இதைக் கவனித்து நடுங்கினாள். அவனோ அதைப் பற்றவும் வைத்து விட்டான். பனியோடு புகை மூட்டமும் சூழ்ந்தது.

ஓர்சில நொடிகளில், பக்கத்தில் எங்கோ பல குரல்கள், சரக்கு சரக்கென்று காய்ந்த இலைகள் நொறுங்கும் சப்தமும் எழுந்தது. என்னவென்று புரிவதற்குள் அந்தப் பனி மூட்டம், புகை நடுவில் யாரோ தென்பட்டது போலத் தோன்றியது.

ஓர் சிறிய கூட்டமே அவள் நிற்கும் இடத்தை நோக்கிப் பரபரப்பாக வந்தது. அவர்களில் ஒரு முதியவர் டிரைவரைப் பார்த்து “தம்பி நன்றி, எப்பவும் போல உங்க தீக்குச்சி வச்சுதான் எங்கு நிக்கிறீங்கன்னு அடையாளம் தெரிஞ்சிது” என்று சொல்லி சுஹாவிடம் “டாக்டர், தாமதத்திற்கு மன்னிக்கணும்” என்றார். அவர் முடிக்கும் முன்னேயே, டிரைவர் “பெரியையா, நீங்க சொன்னாப்பில அம்மாவை முழுக்க முழுக்க கவனிச்சுண்டே தான் வந்தேன்”.

பிறகு டிரைவர் சுஹாவைப் பார்த்து “மேடம் இது உங்கள் டவுனு இல்லை. இங்க எந்த பயமும் தேவையில்லை. எப்பவுமே பாதுகாப்பு தான்” என்றான். சுஹா அவனைச் சந்தேகப் பட்டது தன்னுடைய கற்பனை விகாரம் தான் என உணர்ந்தாள்.

சுஹாவின் மாமியார் நிலையும் கிட்டத்தட்ட இதே சாயலில் தான்…

அன்று காலை நகரத்தில் அடை மழை.  சமையலுக்குக் காய்கறி வேண்டுமே! மாமியார் மொட்டை மாடியில் நின்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றைச் சமையலுக்குக் காய்கனிகள் அவளுடைய கண்முன்னே பூத்துக் குலுங்கி இருந்தன. என்ன  விதவிதமானவை!!

இதைப் பார்த்த தன்னையே கோபித்துக் கொண்டாள். செடிகொடிகள் ஒவ்வொன்றும் சுஹா தானாகப் பார்த்துப் பார்த்து வளர்த்து வந்தது தானே?

ஒவ்வொரு செடிகொடிக்கும் பெயர் சூட்டி, அந்தப் பெயரால் தான் அடையாளம் காட்டுவாள். இதெல்லாம் இன்று வரை மாமியார் ரசிக்காத ஒன்று. வீட்டில் வேலை இருக்க, எதற்காக இன்னொன்று? இன்று போல, மழை நேரங்களில், போராட்டம் – பந்த் என்ற அவசர நிலையில் இது தான் எப்போதும் கைதரும், ஆனாலும்…

சுஹா தினமும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்புவதற்கு முன் குழந்தைகளுக்கும் ஆகாரம் தந்துவிட்டுக் கிளம்புவாள்.   “சுஹா நீ எப்படியோ எல்லாம் அலட்சியமாகச் செய்வது, இப்போதுதான் தெரிகிறது!” குழந்தைகளைத் தயார் செய்கையில் மனைவியை மனதார பாராட்டி நினைத்துக் கொண்டான் அவள் கணவன். “எல்லாம் சரியாக இருக்கா” என்று குழந்தைகளைக் கேட்க, “அப்பா, நீயும் அம்மா போலவே நன்னா தலையை வாரி டிரஸ் பண்ணி விட்டுருக்க!”. 

தன் சுஹாவை பற்றி நினைத்துப் பிரமித்தான். வீட்டிலும் அம்மாவிற்கு உதவுவது, வெளியிலும் கடும் உழைப்பாளி. “ஏதோ ஒரு விதத்தில் நானும் கை கொடுக்க வேண்டும்…”

அடை மழையினால் வீசும் காற்று செடிகளை, தொட்டிகளைத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. சுஹாவுக்கு குறிப்பாகச் சம்பங்கி மேல் ஆழ்ந்த கவனம். மிகக் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தாள். ஏனோ அதற்குக் காத்தவராயன் எனப் பெயரிட்டாள். காத்தவராயன் மட்டுமே பிடிவாதமாக மழைக்கும்-காற்றுக்கும் அசராமல் அசையாமல், விழாமல் நின்றுகொண்டு இருந்ததைப் பார்த்து மகிழ்ந்தாள் மாமியார்.

 

திரை ரசனை வாழ்க்கை 7 – எஸ் வி வேணுகோபாலன்

pics.filmaffinity.com/Chithram-798385555-mmed.jpg

சித்(தி)ரம் பேசிக் கொண்டே இருக்குமடி !

மலையாளப் படங்கள் ஒன்றும் அத்தனை பார்த்துவிடவில்லை. ஆனாலும், மோகன்லால் மீது அத்தனை ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணமாகி விட்டது அந்தக் குறிப்பிட்ட படம். மூன்று முக்கிய காரணங்கள், படத்தின் முதல் பாதியில் கலம் கொள்ளாமல் பெருகும் பால் போல் இடையறாத ஓட்டமாகக் கதையோட்டத்தோடு பொருந்தி அமைந்திருந்த நகைச்சுவை காட்சிகள். இரண்டாவது, பாடல்கள். மூன்றாவது தான் முதலில் சொல்லி இருக்க வேண்டியது, மோகன்லால், ரஞ்சனி, நெடுமுடி வேணு, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரது அபார நடிப்பு. ஹாஸ்யத்திற்கு மனித உரு கொடுத்தாற்போல் கலக்கிய மோகன்லால்.

முன் பாதியில் மிகவும் எளிதாக நகரும் ஒரு திரைப்படம், பின்பாதியில் சிக்கலான க்ளைமாக்ஸ் கொண்டிருக்கும் என்பது ஒரு திரை ரசிகருக்குத் தெரிந்தது தான். ஆனால், சித்ரம் எதிர்பாராத திருப்பத்தில் ரசிகரை ஓர் அதிர்ச்சி நிலைக்கு எடுத்துச் சென்ற திரைக்கதை கொண்டிருந்தது. சுவாரசியமாக வளர்த்தெடுத்துக் கொண்டு போய் வசீகரமான நிகழ்வுகளில் துள்ளல் நடைபோட்டுப் போகும் படம், சடாரென்று ஒரு புள்ளியில் வேறு அனுபவத்தை வழங்கக் காத்திருக்கும். கதையை விட, அந்தக் கதை சொல்லப்பட்ட விதமும், ரசமான காட்சிக் கோவைகளும், தூய்மையான காதலின் சித்தரிப்புகளும் தான் சித்ரம் படத்தைப் பெரிதும் பேசவைத்தன.

ராமச்சந்திர மேனன் அமெரிக்காவில் இருக்கிறார், மனைவியை இழந்தவர், மகளைக் குடும்ப நண்பர் புருஷோத்தம கைமள் பொறுப்பில் சென்னையில் விட்டிருக்கிறார். அவளோ காதல் திருமணத்திற்கு முடிவெடுத்திருக்கிற நிலையில், அங்கிருந்து பேசும் தந்தை, அவளுக்கு சொத்தில் ஒற்றை நயா பைசா கொடுக்க முடியாது என்று கோபத்தில் சொல்லிவிடுகிறார். அதைப்பற்றியென்ன, காதல் தான் முக்கியம் என்று கைமள் அவர்களோடு திருமணப் பதிவு அலுவலகத்தின் வாசலில் மாலையோடு காத்திருக்கும்போது, சொத்தில்லாத அநாதையை மணமுடிக்கத் தான் தயாரில்லை என்று கடிதம் கொடுத்து அனுப்பிவிடுகிறான் காதலன். அந்தக் கொடுமையும் கண்ணீருமாக வீடு திரும்பினால், இருதய நோயாளியாகிய தந்தை, அமெரிக்காவில் இருந்து அழைத்து, ‘அவசர ஆத்திரத்தில் மறுத்துவிட்டேன், நேரில் வந்து காதல் திருமணத்தை ஆசீர்வதிக்கிறேன்’ என்று அழைத்துச் சொல்லும்போது ஏற்படும் தர்ம சங்கடத்தில் தொடங்குகிறது கதை.

தந்தை வந்து தங்கி விட்டுப் போகும் மிகச் சிறு கால இடைவெளிக்காக, ஒரு தற்காலிகக் கணவனை, அவனது அவசரக் காசுத் தேவையைப் பயன்படுத்தி வாடகைக்குப் பிடிக்கிறார் கைமள். அவளுக்கோ அவனது சேஷ்டைகள், அதிக பிரசங்கித் தனங்கள், சீண்டல்கள் வெறுப்பாக இருக்கின்றன. அவனுக்கும் இந்த ஏற்பாட்டில் பெரிய சுவாரசியம் இல்லை. தந்தை அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கிவிடுகிறார், ‘மருமகனை’ மிகவும் பிடித்து விடுகிறது அவருக்கு. எல்லோரும் அற்புதமான கேரள கிராமத்தில் இருக்கும் பாரம்பரிய மாளிகைக்குப் போய் இறங்குகிறார்கள். அவனோ, கிடைக்கிற வாய்ப்பில் ஒரு தொகையோடு இடத்தைக் காலி செய்வதிலேயே குறியாக இருக்கிறான்.

எதிரெதிர் பண்பாக்கங்களின் உரசலில் அவளுக்கும், அவனுக்கும் பற்றி விடுகிறது காதல் தீ, ஒரு கட்டத்தில் ! ஒரு தூய்மையான, உள்ளார்ந்த காதல் தீபமாகச் சுடர்விட்டு எரிகிறது அந்தத் தீ. இடையே ஒரு தமாஷ் வில்லன் வேறு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார், பெரியவரின் சகோதரி மகன், சொத்து தனக்கே வந்துவிட வேண்டுமென்ற கனவு அவருக்கு. காதல் திருமணம் பற்றி அறிந்த அவர், கிராமத்திற்கு வந்திறங்கும் கணவன் வேறு ஆள் என்று பிடிபட்டு விடவே, அதை அம்பலப்படுத்தும் அசகாய சூர வேலைகளில் கற்பனையோடு இறங்கும் ஒவ்வொரு முறையும், கைமள் குறுக்கே வந்து மூக்கை உடைத்துக் கொண்டே இருக்கிறார்.

ஆனால், தற்காலிகக் கணவனுக்கு உண்மையான வில்லன் இறுதியில் அந்த கிராமத்திற்கு வந்து நின்றுவிடுகிறார், ஒரு காவல் அதிகாரி அவர். சிறையிலிருந்து தப்பி வந்த ஒரு தூக்குத் தண்டனை கைதி அவன் என்ற உண்மை, முதலில் அதிர்ச்சியுற வைப்பது கைமளை, அப்புறம் அலைபாய வைத்து விடுகிறது அந்தக் காதல் தீபத்தை.

அந்த சோகமான ஃபிளாஷ் பேக், எப்படி அவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டான் என்று வேகமாகப் பேசுகிறது. வாய் பேச இயலாத ஓர் அழகான நாட்டிய நங்கையை, புகைப்படக் கலைஞரான நாயகன் காதல் திருமணம் செய்துகொள்கிறான், சில போது யாருமற்ற இரவு நேரங்களில் தனது மனைவியை வந்து சந்தித்துப் போகும் இளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவனைத் தாக்கப் போகையில் ஏற்படும் தள்ளுமுள்ளு மோதலில் மனைவியின் மீது பாய்ந்துவிடும் ஆயுதம் அவள் உயிரைப் பறித்துவிட, சேச்சீ (அக்கா) என்று வந்தவன் அலறும்போது தான் தெரிகிறது, அவன் மனைவியின் தம்பி என்பதும், காவல் துறையால் தேடப்படும் நக்சலைட் என்பதால் ரகசியமாக வந்து ஓடிக்கொண்டிருந்தான் என்பதும்.

விசாரணை முடிவில் கொலைக்கான மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கையில் தனது குழந்தைக்காகவே சிறையிலிருந்து தப்பி வெளியே வந்து, காசு தேவைக்காகத் திருட்டில் ஈடுபட்டிருக்கையில் தான் தற்செயலாக கைமள் பார்வையில் பட்டு, இங்கே நடிக்க வந்தது. கைமள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இந்தப் பெண் கெஞ்சியும் கூடத் தன்னால் ஏதும் செய்ய முடியாது, அவனைத் திரும்ப அழைத்துச் செல்லவே தேடி இங்கே வந்தேன் என்று சொல்லிவிடுகிறார் காவல் அதிகாரி.

இது யாதொன்றும் அறியாத பேரானந்தத்தோடு பெரியவர் ராமச்சந்திர மேனன் அயல்நாடு திரும்பும் இடத்தில், மரண தண்டனைக்காக சிறை நோக்கி நாயகன் நடக்கும் வேதனையான இடத்தின் கவித்துவ துயரக் காட்சியில் நிறைவு பெறுகிறது சித்ரம்.
ஆனால், சித்ரம் படம் இந்தக் கதையின் தளத்தில் நின்றதைவிட அதன் காட்சிப்படுத்தலில் தான் ரசிகரை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

மோகன்லால், ரஞ்சனி சந்திப்பு தொடங்கிய நேரத்தில் இருந்து, ‘கணம் தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும்’ என்று மகாகவி வருணித்தது மாதிரி, அதிரடி வேடிக்கை விளையாட்டு அதகளம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இடையே நெடுமுடி படும்பாடு தனி ரசனையின் பாற்பட்டது. தமக்கு இல்லாத அதிகாரத்தால் மோகன்லாலை அவர் அரட்டியுருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், இந்தப் பக்கம் ரஞ்சனியை அவள் தந்தைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுபோகும்படி கெஞ்சிக் கொண்டிருக்கவுமாக அசத்தி இருப்பார் மனிதர். பூர்ணம், பரிபூரணமாகத் தமது கலையை, பாத்திரத்திற்கு வழங்குபவர், இந்தப் படத்தில் நிறைந்திருக்கும் அவரது நேயமிக்க கண்களும், கரிசனமும், இசைக்கான துடிப்பும்! இரக்கமற்ற அதிகாரியாகச் சிறிது நேரம் வருவார் சோமன்.

கதைக்கருவிற்கேற்ப அமைந்திருக்கும் வசீகர அம்சங்களில் ஒன்று வசனம். தன்னை மிரட்டப் பார்க்கும் நகைச்சுவை பாத்திரமான பாஸ்கரனை (சீனிவாசன்), மோகன்லால், நான் ஏற்கெனவே கொலை தண்டனை கைதி, ஒரு கொலை செய்தாலும் ஒரு தூக்கு , அடுத்து எத்தனை கொலை செய்தாலும் ஒரே தூக்கு தான் என்று பதிலுக்கு மிரட்டுமிடம், வேணுவுக்கும் மோகன்லாலுக்குமான உரையாடல்கள், ரஞ்சனியோடு மோதலும், காதலுமான நேரங்களில் வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கும். மரித்துப் போனாலும், நாளை முதல் வான்வெளியில் நட்சத்திரமாக உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பேன் மேலே இருந்து.. என்று மோகன்லால் கடைசி கட்டத்தில் சொல்லுமிடம் கண்ணீர் துளிர்க்கவைக்கும்.

இசை இந்தப் படத்தின் முக்கியமான கூறு. இன்னொன்று ஒளிப்பதிவு.

இயற்கையின் பசுமை விரிப்பை, பூ வனத்தை, காலை இளங்கதிர்ப் பூங்கொத்தை, நண்பகல் வெம்மையை, அந்திப் பொழுதின் சாரலை, இரவு அமுதத்தை ரசிகர்கள் அள்ளியள்ளிப் பருக வழங்கி இருப்பார் எஸ் குமார். கண்ணூர் ராஜன் (பாடல்கள்), ஜான்சன் (பின்னணி) இசை படத்தின் வெற்றிக்கு முக்கியமான அம்சம். ஸ்ரீ குமார் குரலில் நகுமோமு, சுவாமிநாத…பாடலை எத்தனை ஆயிரம் முறை கேட்டுக்கொண்டும், தானாகப் பாடிக் கொண்டும் திரிந்திருப்பேன் என்று கணக்கு இல்லை என்னிடம்.

தியாகய்யர் கீர்த்தனையான நகுமோமு பாடல் படத்தில் பிறக்குமிடம், மோகன்லால் பால் ரஞ்சனிக்குக் காதல் மொக்கு இதழ் விரிக்குமிடம். அந்தக் காட்சி, ஓர் உருது கவி சம்மேளன் போல் அரங்கேறும். இசையார்வம் கொண்டிருக்கும் பூர்ணம் தம்பூரில் சுருதி கூட்டி, மெல்ல ராக ஆலாபனை தொடங்கவும், ஒரு கம்பத்தில் சாய்ந்தவாறு, கரங்களைப் பின்னால் கட்டிக்கொண்டு அதை மோகன்லால் வளர்த்தெடுக்கவும், நெடுமுடி வேணு இதற்குப் பதிலை மிருதங்கத்தில் கொடுக்கவும், பூர்ணம் கண்களால் ஆசீர்வதிக்க, மோகன்லால் சம்மணம் போட்டு உட்கார்ந்து பல்லவியை எடுக்கவும், இசையின் ஈர்ப்பில் அங்கே வந்து பார்க்கும் ரஞ்சனி, கள்வனின் காதலியாக உருமாறுவதும், பாடல் நிறைவில் கைதட்டிவிட்டு, சமாளிக்க, படிக்கட்டு கைப்பிடி விளிம்பில் தூசியைத் தொட்டுத் தட்டியதுபோல் காட்டிக்கொண்டு போவதும் தூள் கிளப்பும் காட்சி.

இதற்கு நேர்மாறான இன்னொரு இசை சங்கமம், சோகமார்ந்த நேரத்தில் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்வது. ‘நம்மள் கூடணும் கைம்மளே’ என்று பாட்டுப் பாட பூர்ணம் அழைக்கையில், அந்த ‘சுவாமிநாத பரிபாலயா’ பாடலின் அழகு, துயர நீர்ப்பெருக்கில் அரங்கேறும். அந்த இசைக்கோவையின் நுட்பங்களை பூர்ணம் ரசிக்கும் முக பாவம் அபாரமாக இருக்கும்.

படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் கே வி ஜெயஸ்ரீ, ஏன் தோழர், ‘பாடம் பூத்த காலம்’ பற்றிச் சொல்ல மாட்டீர்களா, அதன் அழகில் மயங்குவீர்கள், கேளுங்கள் என்று சொல்வார். வயலின்களும், மற்ற இசைக்கருவிகளும், தாளக்கட்டுகளும் சேர்த்துப் பூத்த அருமையான மெல்லிசைப் பாடல் அது. படத்தின் பாடல்கள் எல்லாமே இனிமையாக ஒலிப்பவை.

எப்போதோ பார்த்திருந்தாலும், எப்போதும் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் சித்ரம்.

 

 

கிளித்தட்டு – தமிழ்நேயன்

“டேய் சுப்பிரமணி  எந்திரிடா…. பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு  போய் குளிச்சிட்டு வாடா… கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் செஞ்சுருக்கேன்” என அம்மா மாரியம்மா வீட்டு முத்தத்தில் சாணம் கலந்த தண்ணீர் தளித்தவாறே குரல் எழுப்பினாள்.

அவன் எழுந்து கண்களைக் கசக்கியவாறே வீட்டின்முன் நின்ற வேப்பமரத்திலிருந்து சிறிய குச்சியை ஒடித்து பல்துலக்க ஆரம்பித்தான்.

“அம்மா ரொம்ப கசக்குது. நாகநாதன் அப்பாலாம் அவனுக்கு பிரஷ் வாங்கி கொடுத்து பல்லு விளக்க சொல்றாங்க! என்னைய மட்டும் ஏன் இப்படிப் பண்றே” எனக் கோபமாகக் கேட்டான். “

அடேய்  குடிகாரப்பய மவனே உங்கப்பன் என்ன சொத்தாடா சேத்துவச்சிட்டுப் போயிருக்கான். இருந்த சொத்தை எல்லாம் குடிச்சே அழிச்சிட்டு நிம்மதியாய் போய்ட்டான். நீயாவது ஒழுங்காய் படிச்சு நல்ல வேலைக்குப் போயி இந்த ஆத்தாளுக்குக் கஞ்சி ஊத்து” எனக் கூறியவாறே அவன் தலையில் நல்லெண்ணெய் தடவ ஆரம்பித்தாள்.

“அம்மா எண்ணெயத் தடவாதே குளிச்சாலும் போக மாட்டேங்குது பிசுபிசுன்னு இருக்கு” என விலக ஆரம்பித்தவனின் தலைமுடியைப் பிடித்தவாறே “அடேய்…கம்மாக்கரையில இருக்குற கரம்பையை (உலர்ந்த களிமண்) எடுத்து தலையில தேய்ச்சுக்குளிடா! எண்ணெய்ப்பசை காணாமப் போயிடும்” என்றாள்.

அவன் அம்மா சொன்னவாறே கரம்பையைத் தேய்த்து குளித்துவிட்டு வந்து கம்பங்கூழையும் கருவாட்டு குழம்பையும் ருசிக்க ஆரம்பித்தவனிடம் மாரியம்மா பேச ஆரம்பித்தாள்.

“சுப்பிரமணி காலையில கோவமா பேசினதை மனசுல வெச்சுக்காதே  நாகநாதன் பிரஷ் வெச்சுப் பல் விலக்குறாங்கிறே, அப்ப ஏன்டா அடிக்கடி பல் டாக்டரைப் போய்ப் பாக்குறாங்க. நீ வேப்பங்குச்சிய வெச்சு விளக்குறதாலதான் எந்தப்பிரச்சனையும் இல்லடா அதனாலதான் அம்மா உனக்கு வாங்கித்தரல சரியா?” என தேற்றியவளிடம் “போமா…. உன்கிட்ட காசு இல்லங்கிறதுக்காக இந்த கதையிலாம் விடாதே” என கூறியவாறே மஞ்சப்பையில் நோட்டுப்புத்தகங்களோடு மதிய உணவு சாப்பிட தட்டையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டு நாகநாதன் வீட்டின் முன் போய் நின்றான்.

“டேய் நாகநாதா  சீக்கீரம் வாடா… பள்ளிக்கூடத்துக்;கு நேரமாச்சு” எனச் சத்தம் போட்டு அழைத்தான்.

“இன்னைக்கு என்னடா இவ்வளவு சீக்கீரமா கூப்பிடறே” எனக்  கேட்டுக்கொண்டே நாகநாதன் வந்தான். “ஏன்னா இன்னைக்கு நான் தானே ஏரு” எனக் குதூகலமாகக் கூறினான். ஆம் அது ஒருவிதமான குதூகலப் பயணம்! 

அவர்களுடைய ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. இரண்டு மைல் தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்குத்தான் சென்று படிக்க வேண்டும். வயல்காடுகளின் வழியே நடந்து செல்வதுதான் வழக்கம். ஊரில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் ஊரின் எல்லையிலுள்ள தண்ணீர் டேங்கின் அருகே கூடிவிடுவார்கள். எல்லோரும் சேர்ந்தபின்னர் மொத்தமாக அரட்டை அடித்துக் கொண்டே பள்ளிக்குச் செல்வர்.

அவ்வாறு செல்லும்போது ஒருவர் இரண்டு பேர்  கழுத்திலே இருகைளையம்  போட்டு முழங்காலை மடக்கி அவர்களின் இணைந்த பக்கவாட்டுக்கைகளில் வைத்து இன்னொரு காலை பின்னால் வரும் ஒருவர் தூக்கி வர வேண்டும். இது பார்ப்பதற்கு இரண்டு மாடுகளின் கழுத்திலே பூட்டிய ஏர் போன்றும் அதனை ஒருவர் ஒட்டி வருவது போன்றும் அமைந்திருக்கும். இவ்வாறு ஒவ்வொரு அமைப்புக்கும் நான்கு பேராகக் கூடி பயணிப்பது வழக்கம். ஏராக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒருத்தருக்கு வாய்ப்பு உண்டு. அதனால் தான் இன்றைக்கு சுப்பிரமணிக்கு அவ்வளவு குதூகலம். சாத்தையாவும் ஆறுமுகமும் இன்றைக்கு மாடுகள. சுப்பிரமணி ஏர் !  நாகநாதன் விவசாயியாக மாறி அவர்களின் பயணம் பள்ளிக்கூடத்திலே முடிந்தது.

அது ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கு பாடம் நடத்தப்படும். ஓரே ஒரு ஆசிரயர் தான் ஐந்து வகுப்புகளையும் நடத்துவார். அவர் பெயர் சந்தவழியான்.  அவரே தலைமையாசிரயரும் கூட. தினமும் அவர் மிதிவண்டியில் ஐந்து மைல் பயணம் செய்து பள்ளிக்கு வருவார். தடுப்புச்சுவர் இல்லாத வகுப்பறைகள். தான் அமர்ந்திருக்கும் மேஜையைச் சுற்றி நிற்க வைத்து யாராவது ஒருவரை வாசிக்கவிட்டுப் பாடம் நடத்துவார். இப்படித்தான் ஒவ்வொரு வகுப்பையும் சந்தவழியான் கையாளுவார். இப்பள்ளியில் உச்சபட்ச ஆங்கிலம் ஏபிசிடி மட்டுமே.

இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்குச் சென்றவர்களுக்கு ஒரே வியப்பு  ஏனென்றhல் பள்ளிக்கூடத்திலே இன்னொரு மேஜையும் நாற்காலியும் ஒன்று முதல் மூனறாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிரே புதிதாகப்  போட்டிருந்தார்கள். சந்தவழியான் மாணவர்களைப் பார்த்து “டேய் பசங்களா  இன்னைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்கு புதுசா ஒரு வாத்தியாரு வாராரு அவருதான் இனிமே ஒன்னாவது, இரண்டாவது, மூனாவது வகுப்புக்கு வாத்தியாரு சரியா?” எனக் கூறினார்.

 இவர் சொல்லி முடிப்பதற்குள் புது வாத்தியார் மிதிவண்டியில் வந்து இறங்கினார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். “வாங்க சார்  இப்பதான் உங்களைப் பத்தி பசங்களுக்குச் சொல்லிட்டுருந்தேன்” எனக் கூறிய சந்தவழியானிடம் “வணக்கம் சார்  பள்ளிகூடத்தைக் கண்டுபிடிச்சு வருறதுக்குள்ள நேரமாயிருச்சு. மன்னிக்கவும் ” என்றார். “பரவாயில்ல சார்” என்ற சந்தவழியான் மாணவர்களைப் பார்த்து” பசங்களா  சார் பேரு உதயக்குமார்  சேட்டை பண்ணாம ஒழுங்கா நடந்துக்கனும் என்று கூறினார். “சரிங்க சார் ” என ஒட்டுமொத்தமாகக் கூறி அந்தப் பள்ளியையே அதிர வைத்தனர்.

சுப்பிரமணியும் அவனது ஊர்ப்பிள்ளைகளும் மாலையில் பள்ளி முடிந்ததும் சுந்தவழியான் மிதிவண்டியைக் கொஞ்ச தூரம்  தள்ளிக்கொண்டு ஒடியபின் ஊருக்குச் செல்வது வழக்கம். சந்தவழியானும் கொஞ்சதூரம் பெடலை மிதிக்காமல் சொகுசாகச் செல்வார். மிக அதிக தூரம் தள்ளிக்கொண்டு வருகின்ற மாணவர் ஒருவரை தனது மிதிவண்டியிலேயே அழைத்துச் சென்று ஊரில் விட்டுச்செல்வார். ஏனென்றால் சுப்பிரமணியின் ஊரைத்தாண்டி தான் அவர் செல்லவேண்டும்.

இன்று இரண்டு பேரின்  மிதிவண்டியையும் தள்ளவேண்டும். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உதயகுமாரன் வண்டியையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சந்தவழியான் வண்டியையும் தள்ளிக்கொண்டு ஒடினர். ஆனால் உதயகுமாரன் ஊர் சுப்பிரமணியன் ஊருக்கு எதிர்த்திசையில் இருப்பதால் உதயகுமாரன் மிதிவண்டியில் பின்னால் உட்காருவதற்கு யாருக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

மறுநாள் பள்ளிக்கு சந்தவழியான் சொந்த விடுப்பின் காரணமாக வரவில்லை. உதயகுமார் மட்டுமே  அனைத்து வகுப்பு மானவர்களையும் அழைத்துப் பேச ஆரம்பித்தார். “பசங்களா  இன்னையிலிருந்து சில மாற்றங்களைக் கொண்டுவரப்போறேன். நீங்க ஒழுங்கா சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கணும் . யாரும் பரட்டைத்தலையோட வரக்கூடாது. நல்லா முடிவெட்டி தலைக்கு எண்ணெய் தேய்ச்சு சீவி ஒழுங்கா வரணும் . சாயங்காலம் ஒரு மணிநேரம் பள்ளிக்கூடத்திலேயே விளையாடிட்டுப் போகலாம். யாராருக்கு என்னென்ன விளையாட்டுப் பிடிக்கும்னு சொல்லுங்க பாக்கலாம்” என்று கூறினார்.

கால்பந்து, கபடி, நொண்டி என ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டைக் கூறினர். சுப்பிரமணி சத்தமாக “ சார் கிளித்தட்டு “ எனக் கூறினான். எல்லோரும் சிரத்தனர். உடனே உதயகுமார் “ஏன் சிரக்கிறீங்க  கிளித்தட்டும் நல்ல விளையாட்டுத்தானே. ஆண் – பெண் பேதமில்லாம விளையாடலாம். நல்லா சுவாரசியமா இருக்குமே  சுப்பிரமணியோட கிளித்தட்டு விளையாட வருறவங்க வரலாம். நானும் கிளித்தட்டு விளையாட வாரேன். சரியா ” என முடித்தார் உதயகுமார்.
சுப்பிரமணிக்கு கட்டிலடங்கா மகிழ்ச்சி  மாலை கிளித்தட்டு விளையாட்டு ஆரம்பமானது. சுப்பிரமணி தலைமையில் ஒரு அணியாகவும் உதயகுமார் தலைமையில் ஒரு அணியாகவும் விளையாடினர். இறுதியில் உதயக்குமார் அணி அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

சுப்பிரமணியை அழைத்து உதயக்குமார் பேச ஆரம்பித்தார். “சுப்பிரமணி  நாளை உன்னோட அணி வெல்ல வேண்டும். நன்றhக பயிற்சி செய்யுங்கள்” என்று கூறி உற்சாக மூட்டினார். தனக்குப் பிடித்த விளையாட்டை தனது வாத்தியாரும் சேர்ந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக வீட்டிற்கு வரும் வழியில் தனது நண்பர்களோடு பகிர்ந்து கொண்டான். தனது அம்மாவிடமும் இதைப் பற்றி கூறினான். “அடப்போடா போக்கத்தவனே  நல்லா படிச்சுப் பெரியாளா ஆகுடானு பள்ளிகூடத்துக்கு அனுப்புனா, ஏதோ கிளித்தட்டு விளையாடுறேன், புளித்தட்டு விளையாடுறேன்கிறே  பத்தாததுக்கு ஒன்னோட வாத்தியாரும் வேலை வெட்டி இல்லாம விளையாண்டமுன்னு சொல்ற. போய் படிக்கிற வேலையைப்பாருடா” என்று அதட்டினாள் மாரியம்மா. “போம்மா  இதுக்குத்தான் உன்கிட்ட எதுல[ம் சொல்றது இல்ல” என்று தன் அம்மாவைக் கடிந்து கொண்டான் சுப்பிரமணி.

பள்ளிக்கூடம் அமைந்துள்ள உள்ளூர்ப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் வாத்தியார் கிளித்தட்டு விளையாடுவதைச் சொல்லி மறுநாள் மாலையில் நிறையப் பேரை சேர்த்துவிட்டனர். சந்தவழியானும் இன்று பார்வையாளராகப் பங்கேற்று கைதட்டி ரசித்தார். இவ்வாறாக மாலை முழுதும் விளையாட்டு எனும் முண்டாசுக் கவிஞனின் பாடலுக்கேற்ப நாட்கள் கடந்தன .

சுப்பிரமணி ஐந்தாம் வகுப்பு முடிந்து நகர்பிறத்திலே உள்ள ஓர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பைத் தொடங்கினான்.  கால அட்டவணையில் வாரத்திலே இரண்டு பாடவேளை மட்டுமே விளையாட்டு. மற்ற வேளை முழுவதும் வேறு வேறு பாடங்கள். சுப்பிரமணி எதிர்பார்த்த விளையாட்டுப் பாடவேளை வந்தது. விளையாட்டு சொல்லித் தருகின்ற வாத்தியார் வில்சன் எல்லோரையும் நிற்கவைத்து எந்த விளையாட்டில் சேர விருப்பமென ஒவ்வொருவராகக் கேட்டார். சுப்பிரமணிக்கு உதயகுமார் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.

புட்பால், வாலிபால், பேஸ்கட்பால், கிரக்கெட் என ஒவ்வொருவரும் சொன்னது சுப்பிரமணியின் மூளைக்கு துளிகூட செல்லவில்லை. எப்போது தன்முறை வரும் என காத்திருந்து ‘கிளித்தட்டு’ என உரக்கச் சொன்னான். எல்லோரும் கைத்தட்டிச் சிரக்க ஆரம்பித்து விட்டனர். அதில் ஒருவன் “சரியான பட்டிக்காட்டான் சார்” எனக் கூறிவிட்டான். ஊடனே வில்சன் “டேய்  அந்தப் பட்டிக்காட்டுல விளையிறதைத் தின்னுட்டுத்தான் நீ இப்ப பாடிக்காட்டு முனீஸ்வரன் மாதிர உடம்பை வெச்சுருக்கே  அப்படி எல்லாம் பேசக் கூடாது” என அந்த மாணவனைக் கண்டித்தார்.

எல்லோரையும் அனுப்பிவிட்டு சுப்பிரமணியை அழைத்த வில்சன் “ என்ன சுப்பிரமணி  உங்க ஊரலே கபடி விளையாடி இருக்கியா? “ எனக் கேட்டார். ஊடனே சுப்பிரமணி” விளையாடி இருக்கேன் சார். இருந்தாலும் கிளித்தட்டு என்னுடைய விருப்பமான விளையாட்டு சார். கபடி மாதிரி  இதுவும் நம்ம தமிழ்ப் பாரம்பாரிய விளையாட்டுத் தானே சார். ஏன் கிளித்தட்டு மட்டும் நம்ம பள்ளிக்கூடத்திலே இல்லை?”எனக் கேட்டான்.

உடனே சிரத்தவாறே வில்சன் “சுப்பிரமணி  கிளித்தட்டு நம்ம பாரம்பாரிய விளையாட்டு தான். இன்னைக்கு இலங்கையில நம்ம தமிழர்கள் பெரிய பெரிய  கிளப்ல டீம் வெச்சு விளைளயாடுறhங்க. ஆனா நம்ம தமிழ்நாட்டுல இல்ல. இங்கதான் நம்ம பாரம்பாரிய விளையாட்டுக்களைத் தொலைச்சு பல நாளாச்சே   இப்ப இருக்கிற காலத்துல பேட்ஸ்மேனா? பௌலரா? இல்ல ஆல்ரவுண்டரானு நீதான் முடிவு பண்ணனும்” எனக் கூறி சுப்பிரமணியை அனுப்பி வைத்தார்.

மாலையில் வானொலியில் செய்தி ஒன்றை சரோஜ் நாராயணசுவாமி வாசித்தார் – கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக இந்தியக் கேப்டன் அசாருதீனும் துணைக் கேப்டன் ஜடேஜாவும் மீண்டும் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இச்செய்திகள் நிறைவடைந்தன

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

திருவாரூர்- வீதியுலா
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உருளும், அருளும் ஆரூர் அழகுத் தேர்! | Tiruvarur Chariot festival. Chariot has been rolling over a thousand years! - Vikatan

 

திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள  திருவாரூர் கிளம்பிக் கொண்டிருந்தேன். அச்சமயம் பார்த்துதானா அந்த நண்பர் வரவேண்டும்.  வந்தவர் “என்ன திருவாரூரா! தியாக ராசரை தரிசித்து வாருங்கள்” என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் “ திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி” எனக்  கூறி  வைத்தார்.  நாம் திருவாரூரில்  பிறக்கவில்லை, காசி போகவே வாய்ப்பில்லை. அப்ப முக்தியே கிடையாதா என்ற கவலை.  நல்ல  வேளை  உடன் இருந்தவர்‘  தில்லையை காண முக்தி திருவண்ணாமலையை நினைக்க முக்தி’ என முடித்தவுடன்தான் முக்தி பெற்ற நிம்மதி. நினைப்பதற்கென்ன சிரமம். தினசரி நினைத்துக் கொள்ளலாம்.

ஆனால் திருவண்ணாமலை சென்ற அப்பர் பெருமானோ “ இப்பூவுலகில் பிறந்து வாழ்ந்து மகிழ்தலே முத்திப் பேறு அடைதலை விட சிறந்தது” என்கிறார்.

அதுவும் சரிதான். இங்கு இன்னும் காண, கேட்க, கற்க உலகளவு நல்ல விஷயங்கள் உள்ளன. முக்தி பற்றி பின்னர் யோசிக்கலாம்.

ஓரு சில தடவைகள் ஆரூர் சென்றுள்ளேன். நினைத்தாலே ‘உடம்பு சிலிர்க்கும்’ என்பார்களே அந்த உணர்வு திருவாரூர் என்ற பெயர் கேட்டால் உண்டாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பெருமைகள் இருக்கும். ஆனால் ஊரே பெருமை பெற்றது என்றால் அது திருவாரூர்.

என் சிலிர்ப்புக்கு முதல் காரணம், ஆரூர் சென்றால் சுந்தரருக்காக ஈசனே பரவை நாச்சியாரிடம் ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் நள்ளிரவில் நடந்து தூது சென்ற வீதியை மிதிக்கும் புண்ணியம் கிடைக்கும்.

அன்றே நட்புக்கு இலக்கணம் வகுத்தான் ஈசன். நட்பிற்காக, நண்பனை மனதிற்கினியவளுடன் சேர்த்து வைக்க பரவையாரிடம் முதல் தடவை தனியனாய் இரண்டாவது தடவை பூத கணங்களுடன்  தூது சென்றான்.

சுந்தரரும்  இறைவனை நண்பனாக பாவித்து வேலை வாங்கினார். சுந்தரர் நண்பனாய் அன்பு காட்டி பாடிய தேவாரத்திற்கு  ‘ஸக மார்க்கம்’ என்பது பெயராம்.

பிள்ளை போல் அன்பு காட்டி ஞான சம்பந்தர் பாடியது ‘புத்ர மார்க்கம்’ 

ஊழியனாய் அன்பு காட்டி அப்பர் பாடியது ‘தாச மார்க்கம்’

மாணாக்கனாய் அன்பு காட்டி மாணிக்க வாசகர் பாடியது ‘சிஷ்ய மார்க்கம்’ என்றனர் பெரியோர்.

சுந்தரரை நண்பனாய் உலகிற்கு காட்ட திருமணத்தை நிறுத்தி, பொய் சாட்சியாக ஏடுகளை உண்டாக்கி ஆடிய நாடகத்தை நினைத்து அசை போடலாம்.

ஈசன் தன் நண்பனாகிய சுந்தரர் சங்கிலியாரை ( அநிந்திதையார்) திருவொற்றியூரில்  மணம் செய்து பின் நீங்குவதை தடுத்து நிறுத்த கருவறையிலிருந்து மகிழ மரத்தடியில் வந்தமர்ந்த விளையாட்டை நினைந்து மகிழலாம்.

சுந்தரர் சேகரித்த பொற்குவியலை பத்திரமாக விருதாசலத்திலிருந்து ஆரூர் கொண்டு செல்ல, ஈசன் விருதகிரி மணிமுத்தாற்றில் வீச வைத்து திருவாரூர் கமலாலயம நீரில் கொண்டு சேர்த்த அற்புதம் கொண்ட தெப்ப குளத்தை தரிசிக்கலாம். கோவிலின் பரப்பளவு 32 ஏக்கர் நிலமெனில், கமலாலயம் திருக்குளத்தின் பரப்பும் 32 ஏக்கராம்.  “ கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி” என பெருமையாக கூறுகிறார்கள்

நண்பர்கள் மட்டுமல்ல தன் தொண்டர்களும் என் உயிரே என உலகிற்கு உணர்த்த சேக்கிழாரின்  பெரிய புராணத்திற்கு மூல நூலான திருத்தொண்டத்தொகை பாட ஈசன் தன் வாயால் “ தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்து அடியவர்களின் பெருமையை பாட வைத்த  ஊர் ஆரூர்.

உமையவளின் தோழிகளான அநிந்திதை, கமலினி என்ற இருவருள் பரவை நாச்சியார் என்றரியப்பட்ட கமலினியார் அவதரித்த ஊர்.

சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரம், பெரிய கோவில் என்றால் திருவாரூர். கோவில் தோன்றி 5000 ஆண்டுகளுக்கும் மேல் என்கின்றனர். இறைவன் வந்தமர்ந்தது எப்பொழுது என ஞான சம்பந்தாராலேயே கூற முடியாமல் பாடல்களில் ‘நீ எப்பப்பா இங்கே கோவில் கொண்டாய்’ என கேட்கிறார். அங்கு பாடும் தேவாரத்தில்  “திருச்சிற்றம்பலம்” கூறப்படுவதில்லையாம், காரணம் சிதம்பரத்திற்கும் முன்னர் ஈசன் அமர்ந்த இடமாம். நாம் யார் கோவிலின் வயதை அளப்பதற்கு. பெரியவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வோம்.

பஞ்ச பூத தலங்களில் பூமிக்கு உரியது ஆரூர். காஞ்சிபுரம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

இங்கும் ஈசன் ஆடினார். அவர் ஆடும் நடனத்திற்கு ‘அஜபா நடனம்’ என்பது பெயராம். இன்றும் விஷேச காலத்தில் ஆடி மகிழ்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க ஆசை.

திருவாரூரில் அதிசயங்கள் பல நிகழ்த்திய ‘ தியாகராசர்’ ஊருக்கே ராஜாவாம். அந்த ராசருக்கு ஆசியாவிலேயே பெரிதான ‘ஆழித் தேர்’. திருவாரூர் தேரழகு என படித்துள்ளோம், தேர் ஆடி அசைந்து வரும் அழகு மேனி சிலிர்த்தலுக்கு மற்றொரு காரணம். அவர் நகர் வலம் தனியே வரமாட்டார். அனைத்து பரிவாரங்களுடன்தான் வருவார். கண்கொள்ளா காட்சி.

“ வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர் தேரழகு
திருவடை மருதூர் தெருவழகு
மன்னார்குடி மதிழலகு”

என அனைத்தையும் அனுபவித்தவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.

ஈசன் அரசாட்சி செலுத்துமிடம். 

வேறென்ன பெருமை? இசை அரசர்களான மும்மூர்த்திகளும் அவதரித்த ஊர் திருவாரூர். 

ஒருத்தர் திருச்சியிலும் அடுத்தவர் கோவையிலும் பிறந்திருக்க கூடாதா, இல்லையே. மூவரும் அவதரித்த மண். அதுதான் திருவாரூர் மண்ணின் பெருமை.

தன் வாரிசுகளுக்காக எதையும் தியாகம் செய்யும் ஆட்சியரை நாம் இன்று காண்கிறோம். ஆனால் நீதி காக்க மனு நீதிச்சோழன், தன் வாரிசையே தியாகம் செய்தது திருவாரூர் வீதியில்.

ஈசன் பீடு நடைபோட்டு நடந்த வீதி, 

சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரின் கால் தடம் பதிந்த வீதி.

எந்தை அருணகிரி நாதர் வலம் வந்த வீதி.

பட்டினத்தார் பாடி நடந்த வீதி.

சங்கீத மும்மூர்த்திகள் பரமன், திருமால் புகழ் பரவசத்துடன் பாடி நடமாடிய வீதி.

நீரில் விளக்கேற்றிய நமிநந்தியடிகள் முதலான நாயன் மார்கள் ஓடியாடி தொண்டு செய்த வீதி.

தேவேந்திரனும், தேவர்களும் ஈசனை காண நடந்த வீதி.

உமையவளின் உன்னத தோழி கமலினி அவதரித்த மாளிகை கொண்ட வீதி.

இவ்வளவு புண்ணியம் பெற்ற வீதியில் நான் வீதியுலா செல்ல உள்ளேன்.

‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன் யான்” என சுந்தரரே கூறும் பொழுது, திருவாரூர் மண்ணை மிதித்தால் மேனி சிலிர்ப்பது நியாயம்தானே.

 

 

*பாலம் கல்யாணசுந்தரம்*

கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940 ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர். 

செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் அதிலே பிடிவாதமாக இருந்தார்.

1963ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இந்திய சீனப் போரின் போது  நேருவின் வானொலிப் பேச்சைக் கேட்டு தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் மைனர் தங்கச் சங்கிலியை காமராசரிடம் கொடுத்துள்ளார்

. இவர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி 1998 இல் ஓய்வு பெற்றார்.


பில் கிளிண்டன்(US President)  இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?

# 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

# உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

# தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.

# சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்துக்கே சூப்பர் ஸ்டாருக்கு  நன்றிகூறி விட்டு திரும்பினார். 

# ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.


# ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.

# வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.

# கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

#  பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.

#  ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.

# பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.

# பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள். 

#  கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

# பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.

#  தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.
1. எதற்காகவும் பேராசைப்படாதே.2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.3. ‘தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்’ என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது…..


மூன்று இட்லி -ரேவதி ராமச்சந்திரன்

Drama in the court

குற்றவாளிக் கூண்டில் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார்  குமரேசன். தலை எல்லாம் கலைந்து, அலங்கோலமாக, உறக்கமின்றி சிவந்த கண்களோட, அவமானத்தில் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். இருந்தும் அவரது பணக்காரத்தன்மை அவரது செழிப்பான  உடல் வாகில் தெரிந்தது. 

சின்ன வயதில் சாப்பாட்டிற்கேக் கஷ்டப்பட்ட குடும்பம். ஆதலால் நன்கு படித்து, கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி இப்போது ஒரு மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். கார், பங்களா, வேலை செய்ய ஆட்கள் என்று பந்தாவாக வாழ்க்கையை நடத்துகிறார். பணம் சேரச் சேர அதன் மீது மோகம் அதிகமாக, ஆரம்பித்த கையாடல் இப்போது நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக நீதிபதி சிவராமன் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். சிவராமனுக்கு அவரது அலங்கோலமான நிலையைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவருக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க எண்ணினார். சின்னச் சின்ன உதாரணங்களால் வாழ்க்கையின் அறிய நிலையைப் புரிய வைப்பதில் சமர்த்தர் சிவராமன். 

சிவராமன் குமரேசனிடம் மெதுவாக ‘காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா’ என்று வினவினார். குனிந்த தலை நிமிராமல், பசியின் உத்வேகத்தால் ‘இல்லை’ என்று மெதுவேத் தலை அசைத்தார் குமரேசன். எண் சாண் உடம்பிற்கு வயிரே பிரதானம். சிவராமன் ஓர் ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.  அவரும் கொஞ்சம் தூரம் போய் சின்ன கடையாய் இருந்தாலும் மிருதுவாக இருக்கும் நான்கு இட்லியும் சட்னியும் வாங்கி வந்தார். குமரேசனின்  கையில் இட்லி பொட்டலம் கொடுக்கப்பட்டது. பசிக்கொடுமையினால் அவமானப்பட்டுக்கொண்டே அதை வாங்கிக் கொண்டார் குமரேசன். சிறிது தள்ளி நின்று சாப்பிடுவதற்காக திரும்பும் போது சிவராமன் குமரேசனைத் தடுத்து ‘பரவாயில்லை. நீங்கள் இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன்’ என்று மனிதாபிமானம் பாதி, மனசுக்குள் ஒரு யோசனை பாதியுமாகக் கூறினார்.

கவலையினால் இரண்டு நாட்கள் சாப்பிடாத குமரேசன் பசி பொறுக்க முடியாமல் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார். ஆனால் அவரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார். ‘என்ன ஓர் இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிடுங்கள்’ என்று பரிவோடும், ஓர் அர்த்தத்தோடும் சொன்னார் சிவராமன். ‘என்னால் சாப்பிட முடியவில்லை. போறும்’ என்றார் குமரேசன். போறும் என்ற வார்த்தையைத் தான் எதிர்ப்பார்த்தார் சிவராமன்.

சிரித்துக்கொண்டே ‘அவ்வளவுதான் வாழ்க்கை. பார்த்தீர்களா? உங்களால் மூன்று இட்லி தான் சாப்பிட முடிந்தது. அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பரத் தேவைகள் தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். ஆனால் உங்கள் ஆடம்பரத் தேவைகளுக்கு நான்காயிரம் கோடி என்ன, நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது’ என்று சொல்லி அவரையேப் பார்த்தார். குமரேசன் பெரிதாகக் குலுங்கி ஆழ ஆரம்பித்தார். அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல, நமக்கும்தான்.

கல்யாணமாகாமல், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையாமல் மனவேதனையிலிருக்கும் நம் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்யத் தடையாயிருப்பது இந்த ஆடம்பரத்தினால்தான். வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளை ஒதுக்குவது, வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது போன்ற பல வழிகளில் பாவங்களைச் செய்து விட்டு புண்ய ஷேத்திரங்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய  முயற்சிப்பது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கஷாயம் குடிக்கிற மாதிரி.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான். நாம் யாரும் இந்த உலகத்தில் நிரந்தரம் இல்லை. அடுத்த நொடி நமக்குச் சொந்தமில்லை. இங்கிருந்து ஒரு பைசா கூட நம்மோடு எடுத்து செல்ல முடியாது. எதையும் இங்கு கொண்டு வரவில்லை, எதையும் எடுத்துப் போக முடியாது. பின் ஏன் இந்த பேராசை! காக்கையைப் போல பகிர்ந்து உண்போம்.

இப்படி மூன்று இட்லி முன்னூறு தத்துவங்களை முத்தாகத் தந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா!

                                          

அந்த மூன்று நாட்கள் – S L நாணு

அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar

ஹேமா இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள்.  மாதர் சங்க கலா வந்து விஷயத்தைச் சொன்னதிலிருந்து அவளுக்கு எதுவுமே ஓடவில்லை. ஏன்.. எதற்காக.. என்ற கேள்விகளே அவள் மனதில் திரும்பத் திரும்ப விஸ்வரூபம் எடுத்து குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன

மாலையில் ஆபீஸிலிருந்து திரும்பிய விக்னேஷ் அம்மாவின் முகம் வாடியிருப்பதை கவனித்தான்.  ஆனால் எதுவும் கேட்கவில்லை. அம்மா கொடுத்த காப்பியை உறிஞ்சியபடி செல்லை மேய்ந்தபடி ஓரக் கண்ணால் அம்மாவைப் பார்த்தான்..

ஹேமா அதிகபட்சமான டென்ஷனுடன் சோபாவில் தவித்துக் கொண்டிருந்தாள்.. வழக்கமாக இது அவள் டிவியில் சீரியல் பார்க்கும் நேரம். ஆனால் இன்று டி.வி. அதிசயமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. நிச்சயமாக ஏதோ முக்கியமான விஷயம் தான் அம்மாவின் மனதைக் குடைந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான் விக்னேஷ்.

காப்பியைக் குடித்து முடித்தவன் எழுந்து சென்று அம்மாவின் அருகில் அமர்ந்தான்.

“என்னம்மா?”

யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்த ஹேமா படபடவென்று ஆரம்பித்தாள்.

“விக்னேஷ்.. இத்தனை வருஷமா நான் ஏமாந்து மோசம் போயிட்டேனோன்னு எனக்கு பயமா இருக்குடா..”

விக்னேஷுக்குப் புரியவில்லை. அம்மா என்ன சொலிறாள்?

”உங்கப்பா எங்க?”

”என்னம்மா தெரியாத மாதிரி கேட்கறே? அதான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை சேவாலயா குரூப்போட அப்பா ஊர் ஊராப் போய் மூணு நாள் சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு வரார்.. இந்தத் தடவை ஜெய்பூர் மேளாவுல ஹெல்ப் பண்ணப் போயிருக்கார்”

“அப்படின்னு தான் நானும் நம்பிண்டிருந்தேன்.  ஆனா உங்கப்பா ஜெய்பூர் போகலை.. மதுரைல ஒரு பொம்பளையோட சுத்திண்டிருக்கார்”

விக்னேஷ் அதிர்ந்து போனான்.

“என்னம்மா சொல்றே?..”

”கலா வந்து உங்கப்பாவை ஒரு பொம்பளையோட மதுரைல பார்த்தேன்னு சொன்ன போது தலைல இடி விழுந்த மாதிரி இருந்தது..”

விக்னேஷால் இதை ஏற்க முடியவில்லை.

”அம்மா.. அபத்தமாப் பேசாதே.. அப்பா அப்படி..”

என்று அவன் முடிப்பதற்குள் ஹேமா ஆரம்பித்தாள்.

“அப்படியெல்லாம் இல்லைன்னு தான் நானும் நம்பினேன்.. அதனால தான் போன தடவை உங்கப்பாவை குருவாயூர்ல ஒரு பொம்பளையோட பார்த்தேன்னு ரமா சொன்ன போது.. அதெல்லாம் இருக்காது. அவர் மும்பை போயிருக்கார்.. நீ வேற யாரையாவது பார்த்திருப்பேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இந்தத் தடவை உங்கப்பாவை மதுரைல பார்த்தேன்னு கலா அடிச்சு சொன்னா..  அவ போய் பேசறதுகுள்ள உங்கப்பாவும் அந்தப் பொம்பளையும் ஆட்டோவுல ஏறிப் போயிட்டாங்களாம்.. என்னால நம்பாம இருக்க முடியலை.. டேய் நிஜமாவே நான் மோசம் போயிட்டேன்.. உங்கப்பா எனக்கு துரோகம் பண்ணிட்டார்”

ஹேமா தீர்மானமாகப் புலம்பினாள்.  ஆனால் விக்னேஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“அம்மா.. பதட்டப் படாதே.. அப்பா ஊருலேர்ந்து வரட்டும்.. விசாரிப்போம்.. ஆ.. அப்பா வந்த உடனேயே அவசரப்பட்டு விஷயத்தை ஆரம்பிக்காதே.. பக்குவமா நான் கேட்கறேன்”

அன்றிரவு ஹேமாவுக்கு தூக்கம் வரவில்லை. எப்படிப் புரண்டு படுத்தாலும் கலாவின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.. தலையைப் பிய்த்துக் கொண்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது.

மறு நாள் காலையில் ராஜன் ஊரிலிருந்து வந்தார். வழக்கமாக சந்தோஷமாக அவரை வரவேற்கும் ஹேமா இன்று கனத்த முகத்துடன் சமயலறைக்குள் போனது ஏன் என்று புரியாமல் குழம்பினார். எதுவும் கேட்காமல் பல் துலக்கி முகம் அலம்பி துடைத்துக் கொண்டே வந்தவரை

“ஹாய் பா.. எப்ப வந்தீங்க?”

என்று வரவேற்றான் விக்னேஷ்.

“இப்பத் தாண்டா” என்று டைனிங் டேபிள் நாற்காலியில் உட்கார்ந்தவர்..

”என்ன இன்னிக்கு சீக்கீரம் எழுந்துட்டே?”

”ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு.. சீக்கிரம் போகணும்.. அது சரி.. ட்ரிப் எப்படி இருந்தது” என்று மெதுவாக ஆரம்பித்தான் விக்னேஷ்.

“அதுக்கென்ன.. வழக்கம் போல மனசுக்குத் திருப்தியா இருந்தது”

என்று அவர் முடிப்பதற்குள் காப்பி டம்ளரை அவர் முன்  வைத்து விட்டுப் போனாள் ஹேமா.  அவள் காப்பி டம்ளரை வைத்த விதமே அவள் கோபத்தின் தீவிரத்தைக் காட்டியது.  ராஜன் மகனைப் பார்த்தார்.  விக்னேஷ் அவர் பார்வையை தவிர்த்தான்.

“ஜெய்பூர்ல இப்ப நல்ல குளிர் இருக்குமே?”

இதைக் கேட்டு அப்பா பதில் சொல்லத் தயங்குவார் என்று விக்னேஷ் எதிர்பார்த்தான். ஆனால் ராஜன் பதட்டப் படாமல் சொன்னார்.

”குளிர் இன்னும் செட் ஆகலை.. சொல்லப் போனா நல்ல வெயில்.. கிட்டத் தட்ட முப்பது டிகிரி..”

சமயலறை வாசலில் சுட்டெறிக்கும் பார்வையுடன் ஹேமா நின்றிருப்பதை விக்னேஷ் கவனித்தான்.

“மேளாவுல நல்ல கூட்டமா?”

“கூட்டமா? கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர். சமாளிக்கறது குள்ள ரொம்பக் கஷ்டமாப் போச்சு.. அதுவும்..”

பேசிக் கொண்டே போனார் ராஜன். அதற்கு மேல் ஹேமாவால் பொறுக்க முடியவில்லை.

“போதும் நிறுத்துங்க.. இதுக்கு மேல பொய் பேச வேண்டாம்” என்று கர்ஜித்தாள்.

ராஜன் எதுவும் புரியாமல் அவளைப் பார்த்தார்.

“நீங்க ஜெய்பூர் போகலை.. எவளோ ஒருத்தியோட மதுரைல கூத்தடிச்சிட்டிருந்தீங்க”

இதைக் கேட்டதும் முதல் முறையாக ராஜனின் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி தெரிந்தது.

”வந்து.. என்ன சொல்றே?.. நான்..”

“நீங்க மதுரைல எவளோ ஒருத்தியோட கூத்தடிச்சதை கலா பார்த்திட்டா.. அது மட்டுமில்லை.. போன தடவை மும்பை போறேன்னு பொய் சொல்லிட்டு குருவாயூர்ல சுத்தினதும் எனக்குத் தெரியும்”

இதைக் கேட்டு ராஜன் எதுவும் பேசாமல் மௌனமானார்.

ஹேமா தொடர்ந்து புலம்பினாள்.

“பார்த்தியா விக்னேஷ்.. குட்டு வெளிப்பட்ட உடனே வாயடைச்சுப் போயிட்டார்.. நான் மோசம் போயிட்டேண்டா..”

விக்னேஷ் அப்பாவைப் பார்த்தான்.

“என்னப்பா.. அம்மா சொல்றது நிஜமா?”

ராஜன் தலை குனிந்து கொஞ்ச நேரம் யோசித்தார். பின் மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.

“ஆமாம்.. உங்கம்மா சொல்றது நிஜம். நான் ஜெய்பூர் போகலை.. மதுரை தான் போயிருந்தேன்.. இது மட்டுமில்லை.. இது வரை நான் சேவாலயாவோட போய் சமூக சேவை பண்ணினேன்னு சொன்னதும் பொய் தான்”

“ஐயோ.. ஐயோ.. எப்படிக் கூசாம சொல்றார் பாரு” என்று கத்திய ஹேமாவை அடக்கினான் விக்னேஷ்.

”அம்மா.. கொஞ்சம் சும்மா இரு.. அப்பா என்ன இதெல்லாம்? சேவாலயாவோட போகலைன்னா அப்ப வேற எதுக்கு..”

”எவளோ ஒருத்தியோட கூத்தடிக்கத் தான்”

“அம்மா.. ப்ளீஸ்..”

இப்போது ராஜன் மகனை அடக்கினார்.

“விக்னேஷ்.. அவளை அடக்காதே.. உங்கம்மா கோபப் படறது நியாயம் தானே? அவளுக்கு உண்மை தெரியாதுலியா?”

விக்னேஷ் அப்பாவை புதிராகப் பார்த்தான்.

“உண்மையா?.. என்ன?..”

ராஜன் நிதானமாகச் சொன்னார்.

“விக்னேஷ்.. நான், எங்கண்ணா.. அதான் உன் பெரியப்பா, உன் அத்தை.. நாங்க மூணுபேருமே சின்ன வயசுலேர்ந்து ஒத்துமையா பாசமா இருப்போம்.  ஆனா எங்களுக்குக் கல்யாணமானதுக்கு அப்புறம் உன் பெரியம்மாவுக்கும் உங்கம்மாவுக்கும் நடுவுல முளைச்ச தேவையில்லாத பிரச்சனைனால எங்க மூணு குடும்பமுமே முகப் பார்வை கூட இல்லாம பிரிஞ்சு போச்சு.. ஆனா இது எங்க மூணு பேர் மனசுலயும் உருத்திக் கிட்டே இருந்தது.”

பேசிக் கொண்டே வந்தவர் சற்று நிறுத்தினார். ஹேமாவின் முகத்தில் சின்ன குழப்பம். ராஜன் தொடர்ந்தார்.

“ஒருநாள் திடீர்னு எங்கண்னா கிட்டேர்ந்து கால் வந்தது. அவன் சொன்ன இடத்துக்குப் போனேன். அங்க என் தங்கை உமாவும் வந்திருந்தா.. அண்ணாவையையும் தங்கையையும் ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்த்த உடனே ரொம்ப உணர்ச்சி வசப் பட்டேன்.. அப்ப எங்க அண்ணா சொன்னான்.. பொம்பளைங்க பிரச்சனைனால நாம பிளவு பட்டு நிக்கறோம்.. இதுல யாரு சரி யாரு தப்புன்னு விவாதிக்க நாம இங்க வரலை.. இவங்களுக்காக நாம ஏன் நம்ம பாசத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்காம இருக்கணும்?.. அண்ணா அப்படிக் கேட்ட உடனே எங்களுக்கு ஒண்ணும் புரியலை.. அப்ப அவன் சஜஸ்ட் பண்ணினான்.. மூணு மாசத்துக்கு ஒரு தடவை மூணு நாள்.. நாம கிளம்பி ஏதாவது ஊருக்குப் போவோம்.. கோயில் குளம்னு சுத்துவோம்.. ஆசை தீர பேசுவோம்.. சின்ன வயசுலேர்ந்து நாம வளர்ந்த மாதிரியே சந்தோஷமா பொழுதைக் கழிப்போம்.. வீட்டுல ஏதாவது சொல்லி சமாளிப்போம்னு சொன்னான்.. எனக்கும் மீனாவுக்கும் அது சரியாப் பட்டது.. அதுலேர்ந்து சேவாலயா கூட சமூக சேவை பண்ணப் போறதா உங்ககிட்டச் சொல்லிட்டு குருவாயூர், கோயம்பத்தூர், மதுரை, திருச்சின்னு ஒவ்வொரு தடவை ஒவ்வொரு இடத்துக்கு பிளான் பண்ணி போயிட்டிருக்கோம்.. ஹேமா.. மதுரைல கலா எங்கூட பார்த்தது என் தங்கை மீனாவை..”

இதைக் கேட்டு ஹேமா உண்மைலயே வாயடைத்துப் போயிருந்தாள்.

“விக்னேஷ்.. உப்புச் சப்பில்லாத பொம்பளைங்க பிரச்சனைகளுக்காக உறவுகளை அவ்வளவு சுலபமா வெட்டி விட்டுர முடியாது.. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல சொந்த அண்ணா தம்பியையே அறிமுகப் படுத்தித் தான் தெரிஞ்சுக்கணுங்கற நிலமை வந்துரும். அதனால தான் இந்தத் தடவை நாங்க பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.. இனிமே நாங்க சந்திக்கறது மட்டுமில்லை.. எங்க வாரிசுகளையும் அடிக்கடி சந்திக்க வெச்சு அவங்களுக்குள்ள ஒரு அந்யோன்யத்தை ஏற்படுத்தறதுன்னு.. விக்னேஷ்.. இதுக்கு நீ ஒத்துப்பியா? இல்லை உங்கம்மாவுக்குப் பிடிக்காதுன்னு நீயும்..”

ராஜன் முடிப்பதற்குள் விக்னேஷ் சொன்னான்.

“Why not? இதைக் கேட்கவே ரொம்ப த்ரிலிங்கா இருக்கு.. அப்பா.. நாங்க சந்திக்கறது மட்டுமில்லை.. கூடிய சீக்கிரம் அம்மாவையும் பெரியம்மாவையும் சந்திக்க வெச்சு அவங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையையும் சரி பண்ணி.. நீங்க ஆசைப் படர மாதிரியே எல்லாரையும் ஒரே குடும்பமாக்கறோம்.. என்ன ஓகே தானே?”

ராஜன் உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு விக்னேஷைக் கட்டிக் கொண்டார். எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஹேமா தர்ம சங்கடத்துடன் நின்றாள்.

 

கம்பன் கவி நயம் – சுரேஷ் ராஜகோபால்

sundara kandam / சுந்தர காண்டம்

கம்ப ராமாயணம் – சுந்தர காண்டம்

காட்சி படலம்

அசோகவனத்துள் அனுமன் புகுதல்:

 

மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,

‘தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;

ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;

வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.’

 

ஹனுமான் சூளுரைத்தல் :

தாய்க்கு ஒப்பான தன் தலைவரின் மனையாள், எப்படி இருப்பார் என்பது தெரியாத போதும் துணிந்து, முனைந்து இலக்கை வந்தடைந்தார். இலங்கையை வந்தடைந்தார்.  இலங்கையிலுள்ள . அசோக வனத்திலிருக்கிறார் என்ற செய்தி மட்டுமே அவர் மனதில் கொண்டு அங்குப் புயலெனப் புகுந்தார்,  இலங்கையை  அடைந்தவுடன் தன் இலக்கு  இதுதானென்று உணர்ந்து பயணப்பட்டார் ஸ்ரீ ராம தூதன்,  பக்கத்திலுள்ள அழகிய மலர்ச் சோலையைக் கடந்து, தேடி இவ்வழியில் சீதாபிராட்டியைக்  கண்டுவிட்டால் என் சிறுமை தீரும், என் குறை நீங்கும் (ஊடு கண்டிலென்என்னின்) . அப்படி இல்லாவிட்டால்  இலங்கை நகரத்தை, இங்குள்ள மலை கொண்டு  அழித்து, பின்னே யானும் இறப்பேன். என்று சூளுரைக்கிறார் ஹனுமான்.

 

இந்தப் பாடல், செய்யுள், சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் முதல் பாடல். இராவணன் சிறையில் இருக்கும் சீதாபிராட்டியைக்  கண்டு அவர் நலம், நிலை  பற்றிய செய்திதனை பெறவும்,   தன் தலைவன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நலம், நிலை பற்றிக்  கூறவும், அவர் கொடுத்த கணையாழிதனை கொடுக்கவும் ஹனுமான் பயணம் ஏற்பாடு செய்யப் பட்டது.

அன்று சர்வ வல்லமை பொருந்தியநிலையில் இருந்த  இராவணன் வைத்துள்ள சிறைக்குச் சென்று இச்செயல்தனை செய்ய முன் வந்த போது இத்தனை துயர்கள் இருக்குமென்று எண்ணவில்லை,  இருந்தாலும் வந்த துயர்களை வென்று அசோகவனம் வந்த போது, மனதில் ஒரு சஞ்சலம் ஒன்று வந்த போது ,  (இச்செயல் நம்மால் முடியுமா, எனவும் முடியாதெனில் உயிர் துறக்கவும்  தயார் நிலைக்கு தள்ளப்பட்டார்.)  அந்த நிலையை விளக்குகிறார் கம்பர்.

 

அடுத்தது அயோத்திக் காண்டம் – கங்கை படலம்

14 ஆண்டுகள் இலட்சுமணன் உறங்காத அதியசம் - இராமாயணம் தரும் ஆச்சர்ய தகவல்கள்.!

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்

பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்

 

சூரியனின் சுட்டெரிக்கும் ஒளி, ஸ்ரீ ராமபிரானின் மேனியிலிருந்து வரும், கதிர் வீச்சு போல  விரிகின்ற சோதியில் மங்கிப் போய்விட, அவர் கூட வரும் சீதாபிராட்டிக்கு இடுப்பு என்று ஒன்றிருக்கிறதா  (பொய்யோ எனும் இடையாளோடும்) இல்லையா… அது பொய்யா இல்லை உண்மையா  என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்.. அவள் அழகை  வியந்து வர்ணிக்கிறார் கம்பர்.

மூத்தவர் பின்னே, இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போகிறார் .

ஸ்ரீ ராமன்  நிறம் மை போன்ற கருமையோ,  மழை மேகம் போல் கருப்போ,  மரகத மணி போன்ற பச்சை நிறமோ,  கடல் போல நீலமோ, ஐயோ எப்படிச் சொல்லுவது… (ஸ்ரீ ராமனை வர்ணிக்கையில் ஆகா  கம்பரின் தடுமாற்றம் தெரிகிறது ), இப்படிப்பட்ட நிறத்தவன்  என்று நிர்ணயிக்க முடியாமல் இருப்பதே இவன் வடிவழகு என்பது என்றும் , எப்போதும் அழியாத அழகு உடையவன் என்றும்  தன்  தடுமாற்றத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் இங்கே.

 “ஐயோ” என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் அதன் சொல்லாட்சி  மிகவும் சொற்பமாகவே பெற்றது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

இடமாற்றம் – ஆ.கிருஷ்ணதாஸ்

Set Of 2 - Heritage Collection Gold Cobra Rollerball & Ballpoint Pen Black Designer  Pens: Buy Online at Best Price in India - Snapdeal

எஸ்.டி என்கிற தனியார் கொரியர் அலுவலகம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலைசெய்து வருகிறான் ராமு. பணம் சம்பாதிக்க போராடும் பலகோடி இளைஞர்களுள் அவனும் ஒருவன். அவனுக்கு பேனா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் தனது சூழ்நிலை உணர்ந்து, குறைந்த விலைமதிப்புடைய பேனாக்களையே வாங்கி உபயோகித்து வந்தான். ஒருமுறை பேனா ஒன்றை வாங்க கடைக்குச் சென்றான். அங்கே,

அண்ணா, அந்த கருப்பு கலரு பேனா எவ்வளவுணா?

அதுவா… அஞ்சு ரூபா வரும் தம்பி

அப்போ, அந்த நீல கலரு எவ்வளவுணா?

அதுவும் அஞ்சு ரூபாதான் தம்பி

சரி, எனக்கு அந்த நீல கலரு பேனாவ குடுங்க

இந்தாங்க தம்பி, இந்த பேப்பர்ல கூட எழுதி பாத்துக்கோங்க

சரிங்கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்… என தனக்கு பிடித்த பேனா ஒன்றை கடைக்காரரிடமிருந்து வாங்கிக் கொண்டு புறப்பட்டான். புதியபேனா அவனது சட்டைப்பையில் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, வீட்டிற்கு சந்தோச நடைபோட்டான் ராமு.

மறுநாள் காலை,

அம்மா எங்கமா இருக்க…டிபன் ரெடி பண்ணிட்டியா?

கொஞ்சம் பொறுடா, எடுத்து வச்சுட்டு இருக்கேன்ல

சீக்கிரம் வாம்மா… நேரமாகுதுல

இவனொருத்தன் எப்ப பாத்தாலும் சீக்கிரம் சீக்கிரமுனு சொல்லிக்கிட்டு, கொஞ்சம் சாப்டு போனாதான் என்னடா?

நான் அங்க போய் சாப்டுக்குறேன்…நீ டிபன் பாக்ஸ குடு

இந்தா டிபன் பாக்ஸு… கூட இதையும் புடி

என்ன இது?

ஒனக்கு தான், பேனா ஒன்னு வாங்குனேன்

எவ்வளவுமா இது?

அம்பது ரூபாடா…கொஞ்சம் டிசைனாவும் இருக்குல

யம்மா, நேத்து தான நான் ஒரு புதுபேனா வாங்குனேன்

ஆமா, எப்ப பாத்தாலும் மூணு ரூபா, அஞ்சு ரூபா பேனாவயே வாங்கிட்டு இருக்க…ஒரு நல்ல பேனாவ வாங்கி வச்சுருக்கியா நீ?

நீ ஏம்மா இப்டிலாம் பண்ற? அடுத்த மாசத்துல இருந்து சம்பளம் ஜாஸ்தியா கெடைக்கும், நான் அப்போ வாங்கிருப்பேன்ல

மொதல்ல பேனாவ பாக்கெட்டுல வச்சிட்டு, வேலைக்கு கெளம்பு

கெளம்புறேன், கெளம்புறேன்… என அம்மாவிடம் சலித்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தான். தான் வாங்கிய ஐந்து ரூபாய் பேனாவை காற்சட்டைக்குள் பத்திரப்படுத்திவிட்டு, தன் அம்மா வழங்கிய பேனாவை ஆசை ஆசையாய் கையிலேந்தி, தன் இதயத்தின் அருகே அமர்த்தினான். பேனாவின் ஒற்றைக்கரம் சட்டைப்பையை நன்றாக பற்றிக் கொள்ள, அலுவலகத்தை நோக்கிய அவனது பயணம் ஆனந்தமாக தொடங்கியது.

எலே சௌந்தரு…லயினுக்கு போகயில, அந்த ராசப்பன் டீ கடக்கி அஞ்சு தண்ணி கேனு போட்டுட்டு வந்துருலே

சரிங்க அண்ணாச்சி, பைசா ஒடனே வாங்கனுமா?

அத பெறவு பாத்துக்கலாம்…நமக்கு தெரிஞ்ச ஆளுதானலே

சரி, நான் லயினுக்கு போயிட்டு வார்றேன் அண்ணாச்சி…

மகாலட்சுமி மினரல் வாட்டர் சப்ளை கம்பெனியிலிருந்து 20லிட்டர் கொள்ளளவு கொண்ட, நிறைய தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க புறப்பட்டது, அந்த நான்குச் சக்கர சின்ன யானை.

பயணியர் நிழற்குடையில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான் ராமு. அங்கே கூட்டம் சற்று அதிகமாக இருக்க, அச்சமயத்தில் அவனுக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது.

சார்! கிளம்பிட்டேன் சார்… பஸ் ஸ்டாப்புல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

ஓகே ராமு, இன்னைக்கு உங்களுக்கு ஆறு டெலிவரி தான். சீக்கிரமா முடிச்சிட்டு வீட்டுக்கு போங்க. சம்பளத்த பத்தி நாளைக்கு நான் ஆஃபீஸ் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்.

சரிங்க சார், தேங்க்யூ… என சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்தில் பேருந்து வரப்போகும் சத்தம் அவனது காதில் வந்தடைய, தயார் நிலையில் இருந்தான் ராமு. ஏற்கனவே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நிறுத்தத்தில் நில்லாமல் சென்றது அந்த பேருந்து. வேகம் அவ்வளவாக இல்லை என்ற காரணத்தினால் அவன் படிக்கட்டின் உள்ளே தாவிக் குதித்தான். அவன் உள்ளே குதித்த வேளையில், அவனது சட்டைப் பையிலிருந்த பேனா வெளியே குதித்தது. வெளியே குதித்த பேனா உருண்டுகொண்டே தார்சாலையின் ஓரமாக ஐக்கியமானது. பாவம் ராமு! தன் அம்மா வழங்கிய பேனா, கீழே விழுந்தது கூட தெரியாமல் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டான்.

ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…

ஹலோ…ஈ2 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாராயணகுமார் பேசுறேன், சொல்லுங்க…

சார், டிஜிபி ஆபீஸ்ல இருந்து பேசுறோம் சார். இங்க ஃபேக்ஸ் வேல செய்யல, அதனால உங்களோட டிரான்ஸ்ஃபர் ஆர்டர நேத்தே கொரியர்ல அனுப்பிட்டோம். இன்னைக்கு உங்க கைக்கு வந்துரும், நீங்க கேட்ட மாதிரியே மதுரைக்கு உங்கள மாத்தியிருக்கோம் சார், வாழ்த்துகள்!

ஓ தேங்க்யூ சார்! நான் பாத்துக்குறேன், தேங்க்யூ சோ மச்… என்றதும் தொலைபேசி மீண்டும் தன் இருப்பிடத்தை வந்தடைய, காவல் ஆய்வாளர் நாராயணகுமார் தனது பணியிடமாற்ற ஆணை வருவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.

அலுவலக நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கினான் ராமு. கீழே இறங்கியதும் அவனது சட்டைப் பையை தொட்ட அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஐய்யய்யோ பேனாவ காணோமே! பஸ்ல ஏதும் விழுந்திருக்குமோ…? அம்பது ரூபா ஆச்சே…! அதுவும் அம்மா குடுத்ததாச்சே…! என்று புலம்பிக் கொண்டிருந்தான். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தன் காற்சட்டையில் இருந்த ஐந்துரூபாய் பேனாவை எடுத்து, தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்தான். அங்கே அவனுக்கு வழங்கப்பட்ட ஆறு டெலிவரிகளை குறித்து, எடுத்துக்கொண்டு அலுவலக இருசக்கர வாகனத்திலிருந்து புறப்பட்டான் ராமு.

வாடிக்கையாளர்களிடம் மினரல் வாட்டர் கேன்களை இறக்கிக் கொண்டிருந்த சௌந்தர், அடுத்த கடையை நோக்கி சின்ன யானையில் சவாரி செய்ய தொடங்கினான். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் கேன்களும் புதுயிடம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தன.

அடுத்தகடை வந்ததும், சின்ன யானையின் வேகத்தை குறைத்தான் சௌந்தர். பேருந்து நிறுத்தம் ஒன்றின் ஓரமாக நின்றது, அந்த வாகனம். அவன் வெளியில் இறங்கி வாகனத்தில் இருந்த கேன்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்க, அப்போது அவனது கால்பட்டு நகர்ந்த பேனா ஒன்றைக் கண்டான். கையிலெடுத்து அதன் அழகை உற்றுப் பார்த்து விட்டு, உடனே தனது வலது காதில் அதனை சொருகிக் கொண்டான். பின் கேன்களை இறக்கிவிட்டு, மீண்டும் சின்ன யானையை அடுத்த இடம் நோக்கி நகர்த்தினான்.

பேனாவை இழந்த வருத்தத்திலேயே தனது கொரியர் டெலிவரிகளை பார்த்துக்கொண்டிருந்தான் ராமு. இன்னும் இரண்டு டெலிவரிகள்தான் மீதமிருந்தது.

ஹலோ, ஈ2 போலீஸ் ஸ்டேஷனா சார்?

ஆமா ஈ2 போலிஸ் ஸ்டேஷன் தான், நான் இன்ஸ்பெக்டர் நாராயணகுமார் பேசறேன்…

சார் என் பேரு ராமு, நான் எஸ்.டி கொரியர்ல இருந்து பேசுறேன். உங்களுக்கு கொரியர் ஒன்னு வந்துருக்கு. ஒரு அரைமணி நேரத்துல வந்துடுறேன் சார்.

ஓகே மிஸ்டர்.ராமு வாங்க…

 

ராசப்பன் டீக்கடைக்கு அருகில் வந்ததும் சின்ன யானையை நிறுத்தினான், சௌந்தர்.

வணக்கம்ணே! அண்ணாச்சி கேன் போடச் சொன்னாங்க

ஆமா தம்பி, ஒரு அஞ்சு கேன் போடுங்க

சரிங்கண்ணே…

சௌந்தர் கேன்களை இறக்கிக் கொண்டிருக்கையில், அவனது காதில் அமர்ந்திருந்த பேனா கீழே இறங்கிவிட்டது. கேன்களை இறக்கும் கவனத்தில், கீழே விழுந்த அந்த பேனாவை அவன் கவனிக்கவில்லை. பின் கேன்களை இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

டேய் முத்து…!

சொல்லுங்கண்ணே…

இந்தா…ஸ்டேஷனுக்கு போயி இந்த டீய குடுத்துட்டு வா…

சரிங்கண்ணே… என்று சொல்லி தேநீர் கோப்பைகளை தூக்கிக்கொண்டு, அவன் நான்கு எட்டுவைக்க, முன்னே ஓடிய பேனாவைக் கண்டான். அதனை தூக்கியெடுத்து தனது இடுப்பில் சொருகிக்கொண்டு, காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.

 

வணக்கம் சார்…

வணக்கம், சொல்லுங்க…

சார், நான் எஸ்.டி கொரியர்ல இருந்து வர்றேன், உங்களுக்கு கொரியரொன்னு வந்துருக்கு, இந்தாங்க சார்.

ஓ! நீங்க தான போன்ல பேசுனது…? ரொம்ப நன்றி தம்பி, ரொம்ப நாளா டிரான்ஸ்ஃபர் ஆர்டருக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்குதான் அந்த ஆர்டர் கைக்கு வருது…

ரொம்ப சந்தோஷம் சார், வாழ்த்துக்கள்!

நன்றி தம்பி, டீ குடிச்சிட்டு போலாம். ஒரு நல்ல செய்தியோட வந்துருக்கீங்க, உங்கள சும்மா அனுப்புனா எனக்கு மனசு கேக்காது.

பரவாயில்ல சார்…

அட இருங்க தம்பி… “தம்பி முத்து! இங்க வாப்பா, இவருக்கும் ஒரு டீ குடு…”

சார், இந்த பேப்பருல ஒரு கையெழுத்து போடுங்க சார்…

ம்…குடுங்க என ஆய்வாளர் நாராயணகுமார் கையெழுத்திட பேனாவை எடுத்து எழுத நினைக்கையில், அந்த பேனா எழுதவில்லை. மீண்டும் எழுதிப் பார்த்தார் ஆனால் மறுமுறையும் அது எழுதவில்லை. ச்சே…என்ன இது எழுத மாட்டேங்குது…

அண்ணே, இந்தாங்க டீ… என தனது காதில் பேனாவை வைத்து குடைந்துகொண்டே ராமுவிற்கு தேநீரை வழங்கினான், முத்து.

டேய்…என்னடா அது? காதுல வச்சி கொடஞ்சிட்டு இருக்க…

இது ஒரு பேனா சார்… கீழ கெடந்துச்சு, காது கொடைய சூப்பரா இருக்கு அதான் வச்சிருக்கேன்…

அடேய்! அத குடுறா இங்க…

சார், அப்போ எனக்கு காது கொடைய?

இந்தா இத வச்சுக்கோ… என தனது பழைய பேனாவை கொடுத்துவிட்டு, அந்த பேனாவை வாங்கினார் ஆய்வாளர் நாராயணகுமார்.

ராமு அதை கவனித்துக் கொண்டிருக்கையில், சிறிது உற்றுப் பார்த்தான். “இது நம்ம பேனா மாதிரியே இருக்கே…? அவர்கிட்ட கேக்கலாமா இல்ல வேணாமா? எதுக்கு வம்பு…வேண்டாம்! வேண்டாம்!” என அவனது மனம் முனுமுனுத்தது.

அந்தப் பேனாவை வைத்து ஆனந்தமாக கையெழுத்திட்டார், ஆய்வாளர் நாராயணகுமார்.

இந்தாங்க தம்பி உங்க பேப்பரு, இந்த பேனாவுல எழுதுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

சரிங்க சார், நான் கெளம்பறேன்…

தம்பி ஒரு நிமிஷம், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க கையால நல்ல செய்தி வந்திருக்குறதால, உங்களுக்கு ஏதாவது குடுக்கனுமே! இந்தாங்க இந்த 200ரூபாய வச்சுக்கோங்க…

சார், காசுலாம் வேணாம் சார்…

அட சும்மா வாங்கிக்கோங்க தம்பி…

இல்ல, வேண்டாம் சார்…

அப்போ, வேற என்ன குடுக்கலாம்…? என யோசிக்கையில் திடீரென்று, இந்தாங்க பேனா! நீங்க கொரியர் ஆபீஸ்ல வேல செய்யுறதுனால உங்களுக்கு இது அடிக்கடி தேவப்படும். அதனால இத புடிங்க…

பரவாயில்ல சார்…

அட இதயாச்சும் வாங்கிக்கோங்க தம்பி… என அவனிடம் வழங்கினார்.

மனதில் உற்சாகம் பொங்க, தன்னுடைய பேனாவை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சந்தோஷமாக புறப்பட்டான் ராமு. தனது அம்மாவையே இதயமருகில் வைப்பதுபோல், அந்த பேனாவை சட்டைப் பையில் அமர்த்தினான். மீண்டும் அந்தப் பேனா, தனது ஒற்றைக் கரத்தால் அவனது சட்டைப் பையை இறுக பற்றிக்கொண்டது.

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021

           

  1. பஸ்ஸில் போகலாம் !

 

பாம் பாம் பாம் ! பாம் பாம் பாம் !

பாம் பாம் பாம் ! பாம் பாம் பாம் !

 

பஸ்ஸில் போகலாம் பாம் பாம் பாம் !

பராக்கு பார்க்கலாம் பாம் பாம் பாம் !

பயணம் போகலாம் பாம் பாம் பாம் !

பல இடம் பார்க்கலாம் பாம் பாம் பாம் !

 

ஊருக்குப் போகலாம் பாம் பாம் பாம் !

ஊர் சுற்றி பார்க்கலாம் பாம் பாம் பாம் !

ஜன்னல் பக்கம் அமர்ந்தே பாம் பாம் பாம் !

ஜாலியாய் போகலாம் பாம் பாம் பாம் !

 

பெரியவர்கள் வந்தாலே பாம் பாம் பாம் !

எழுந்து இடத்தைக் கொடுக்கணும் பாம் பாம் பாம் !

ஊனமுற்றோர் என்றாலே பாம் பாம் பாம் !

உடனே எழுந்திடனும் பாம் பாம் பாம் !

 

நடத்துனர் ரைட்டென்றால் பாம் பாம் பாம் !

ஓட்டுனர் ஓட்டிடுவார் பாம் பாம் பாம் !

கதவு கிட்டே தொங்காமல் பாம் பாம் பாம் !

பத்திரமாய் போகலாம் பாம் பாம் பாம் !

 

எல்லோர்க்கும் ஏற்றதிந்த பாம் பாம் பாம் !

எளிமையான பயணவழி பாம் பாம் பாம் !

நீயும் நானும் போகலாம் பாம் பாம் பாம் !

நாள் முழுக்க பஸ்ஸிலே பாம் பாம் பாம் !

 

 

                 ********************************************************

  

  1. சிட்டுக் குருவி !

 

 சிட்டுக் குருவி ! சிட்டுக் குருவி !

எங்கே போறே நீ ?

சிறகடித்துப் பறந்து பறந்து

எங்கே போறே நீ ?

இங்கும் அங்கும் மேலும் கீழும்

எங்கே போறே நீ ?

சின்ன சின்ன சத்தம் போட்டு

எங்கே போறே நீ ?

 

வாயில் ஒரு குச்சி கவ்வி

எங்கே போறே நீ ?

மும்முரமா எதனைத் தேடி

எங்கே போறே நீ ?

கூடு கட்ட இடத்தைத் தேடி

எங்கே போறே நீ ?

என் வீட்டிலேயே இடமிருக்கு

எங்கே போறே நீ ?

 

எங்க வீட்டு ஜன்னலிலே

கூடு கட்ட வா !

கூடு கட்டி அழகாய் அதில்

முட்டை இட வா !

முட்டையிட்ட கூட்டினிலே

குஞ்சு பொரிக்க வா !

குஞ்சு கூட சேர்ந்து நீயும்

குதூகலிக்க வா !

 

குருவி உன்னைப் பார்த்துவிட்டால்

குஷி பிறந்திடும் !

நீ பறக்கும் அழகைப் பார்த்துவிட்டால்

பிறக்கும் உற்சாகம் !

சிட்டுக் குருவி ! சிட்டுக் குருவி !

சீக்கிரமாய் வா ! – உன்

சிறகைத் தொட்டு பார்க்கணும் நான்

சீக்கிரமாய் வா !

 

 

நட்பாராய்தல் – முனைவர் கிட்டு முருகேசன்

இடியட் பாக்ஸ் - 33 : ஏஞ்சலின் வீட்டில் மார்க்ஸ்... உப்புமா எப்படி?! | Idiot  Box Part 33: Marx visits Angel's house... Later confronts Divya

அம்மா… யம்மோ… எங்கே மா… இருக்கே! அம்மா நான் பாஸ் ஆகிட்டேன். துள்ளிக் குதித்தோடி வந்தவன் சற்றே சந்தமடைந்து நின்றான்.

அவனது கண்களில் நீர் தேங்கி, கன்னத்தில் வழிந்தோடியது. ஆம்! அவன் கண்ட காட்சி அப்படி.

அம்மா தனியார் மில் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அப்பாவும் தனியார் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். தினமும் இவனைப் பள்ளிக்கு  இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விட்டுவிட்டு அதன் பிறகு தான் வேலைக்குப் போவது அவரது வழக்கம். அம்மா தினமும் ஷேர் ஆட்டோவில் மில்லுக்கு வேலைக்குச் செல்வாள். இப்படிப்பட்ட நடுத்தர குடும்பத்தில் பிறந்த கார்த்திக் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைச் சொல்வதற்காக வேகமாக ஓடி வந்தவன்; அப்பாவுக்கு வேலை செய்யும் போது கையில் அடிபட்டதில் ஒரு விரல் துண்டாக்கிப் போனதை பார்த்தவுடன் அமைதியாக வந்து அருகில் உக்கார்ந்தான். அவனைப் பார்த்தவுடனே மல்லிகா அழுது புலம்பினாள். இங்கே வாடா கார்த்தி, என்று அப்பா அழைத்ததும் அருகில் சென்றான்.

என்னடா தம்பி பண்றது. கடவுள் இப்படி செஞ்சுட்டாரு என வருந்திக் கொண்டார்.

அந்த சம்பவத்திற்குப் பின்னர்; அவர் வேலைக்குச் செல்லவில்லை. சுமையான எந்த பொருளையும் கையில் தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அதனால் வீட்டிலேயே முடங்கும் நிலை உருவானது.

கம்பெனி முதலாளி விபத்து நடந்த அன்று மட்டும் மருத்துவமனைச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். பின்னர் கையில் கட்டுப் போட்டு வீட்டிற்கு வந்த பிறகு மல்லிகாவின் உழைப்பில் கிடைத்த பணத்தை வைத்து அரசு மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்து வந்தனர்.

இதற்கிடையில் கார்த்தியின் மருத்துவ படிப்புக் கனவும் தகர்ந்தது. மகன் இன்ஜினியர் ஆகவேண்டும் என்ற அப்பாவின் கனவும் காற்றோடு கலந்தது.

மல்லிகா ஆங்காங்கே கடனை ஒடனே வாங்கி ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கார்த்திக்கை சேர்த்துவிட்டாள். அதற்கே அவள் எத்தனை நாள் இரவு பகல் வேலைக்குப் போகனுமோ!.

அவன் ஆசை பட்டதுதான் கிடைக்கல கிடச்சதையாவது நல்லா படிக்கணும் என்று சுந்தரத்திடம் சொல்லி நொந்து கொண்டாள் மல்லிகா.

முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பிப் போனான். அங்கு பிற மாணவர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. இவன் படித்த பி.காம்., வகுப்பில் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களும் படித்துக் கொண்டிருந்தனர். இவனோ அரசுப் பள்ளியில் படித்தவன். மற்ற மாணவர்களுக்கு ஈடாக படிக்க முடியவில்லை என்றாலும் சிறிது கவனம் செலுத்த முடிந்தது.

கார்த்திகுடன் படிக்கும் மாணவர்கள் பலர் விலை உயர்ந்த செல்போன்களை வைத்திருந்தனர். இவனிடம் செல்போனே இல்லை.

உடன் படிக்கும்  நண்பன் ஒருவன். டே…! கார்த்திக் உங்க அம்மாட்ட செல்போன் வாங்கித்தா; அப்பதான் காலேஜ்க்கு போவேன்னு சொல்லுடா, அப்பதான் உனக்கு மொபைல் கிடைக்கும் நானெல்லாம் அப்டிதான் பொய் சொல்லி வாங்கினேன் என்று சொன்னான்.

அவனோ வீட்டின் பொருளாதார நிலையை சற்று நினைவு கூர்ந்தான். பின்னர் கல்லூரியில் மாணவர்கள் பாடத்திற்கான அனைத்துக் குறிப்புகளையும் வாட்ஸாப், இ-மெயில் மூலம் பரிமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இவனிடம் செல்போன் இல்லாததால் சற்றே வருத்தமடைந்தான்.

பாடத்தின் அனைத்துக் குறிப்புகளையும் நூலகத்திலுள்ள புத்தகத்தில் இருந்தோ அல்லது அதனை நகலெடுத்தோ படிக்கும் பழக்கம் இன்றைய மாணவர்களுக்கு இல்லாமல் போனது நவீன அறிவியல் யுகத்தின் உச்சம்.

ஒருநாள் அம்மாவிடம் அதிகாரமாகவே கேட்டான். அம்மாவும் படிப்புக்குத் தானே என்று லோன் போட்டு (இ.எம்.ஐ யில்) மாதத் தவனையில் செல்போன் வாங்கிக் கொடுத்தாள்.

கார்த்திக் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்லை. நண்பர்களோடு புகை பிடிப்பது, விடுமுறை நாட்களில் மது அருந்துவது என தன்னிலை மறந்து நடைபோடத் தொடங்கிவிட்டான். அவன் சேர்த்துக்கொண்ட நண்பர்கள் அதுமாதிரி.

முதலாமாண்டு நிறைவு பெற்றது. நான்கு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அப்படியே இரண்டாம் ஆண்டு தொடர்ந்ததால்; மகன் பெயில் ஆகியிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது. அவன்தான் இரண்டாம் ஆண்டு படிக்கத் தொடங்கிவிட்டானே என்ற மகிழ்ச்சி மட்டும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

ஒரு நாள் போதை அதிகமானதால் ஒயின் ஷாப் அருகிலேயே விழுந்து கிடந்தான். அவனது நண்பர்கள் அப்படியே போட்டுவிடுக் கிளம்பிவிட்டனர். கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் இவனைக் காணவில்லையே என்று சுந்தரம் தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

Both Abstinence and High Alcohol Use Linked to Dementia - Psychiatry Advisor

மல்லிகாவோ!… அவன் எங்கே போப்போறான் எங்காவது நூலகத்தில் புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்னு போயிருப்பான். இப்பத்தான் ஒவ்வொரு பஞ்சாயத்துலயும் ஒரு நூலகம் இருக்கே; என்று தன் மகன் மீது கொண்ட பாசத்தாலும் நம்பிக்கையாலும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாவம்! மல்லிகாவுக்கு எப்படித் தெரியும்?

அந்த நூலகம் படிப்பதற்கு யாரும் வராமல் எப்போதாவதுதான் திறப்பார்கள் என்று. அவளோ! வீடு, மகன், மில்லு இதைத் தவிர வேறெதுவும் தெரியாது.

அவனுக்குப் போதை தெளிவதற்கு வெகு நேரமானது. இரவு ஏழு மணி இருக்கும். சட்டை முழுவதும் சேரும் சகதியுமாக வீடு வந்து சேர்ந்தான். கார்த்திக்கைப் பார்த்த மல்லிகா ஒரு நிமிடம் பயந்து போனாள்.

என்னடா ஆச்சு. இப்புடி வந்து நிக்குற?

ஒண்ணும் இல்லம்மா. நான் குளிக்கணும்.

சொல்லுடா?  லாரி, பஸ் ஏதாச்சும் சேத்தை வாரி இறைச்சிருச்சா?.

இல்லம்மா… போ! போ.. சோத்தைப் போட்டு வையி, நான் குளிச்சிட்டு வர்றேன்.

சரிடா என்னமோ சொல்லுற… என்று முணகியவாறு சமையல் அறைக்குள் சென்றாள்.

சுந்தரம் மட்டும் அவன் முகத்தைக் கவனித்தார். ஆனால் ஒன்னும் பேசல. அவனும் அவரைப் பார்த்ததும் வாயைத் துடைத்தபடி சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு குளிக்கச் சென்றான்.

மறுநாள் காலையில் சற்று நேராமாகவேத் தூங்கிவிட்டான். மல்லிகா வந்து எழுப்பினாள். ஏண்டா! காலேஜ்க்குப் போகலையா? இவ்வளவு நேரமாகியும் தூங்கிட்டே இருக்கியே… என்று சத்தமாகவே பேசினாள்.

அவன் எதையுமே காதில் வாங்காதவனாய் பாம்பைப் போல நெளிந்தபடி கிடந்தான்.

யாண்டா … ஒடம்புக்கு ஏதாச்சும் சரியில்லையாட? என்றவாறே அவனது நெற்றியில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமாகவே இருந்தது கண்டு பதறிப்போனாள். உடனே! என்னங்க… இங்கே வாங்க. இவனுக்கு ஒடம்பெல்லாம் காயுது. டாக்டருகிட்டே கூட்டிக்குப் போகலாம் வங்க; என்றபடியே வெளியில் வந்தாள்.

வீட்டு வாசலின் கட்டிலில் உக்காந்திருந்த சுந்தரம்; அதெல்லாம் ஒண்ணுமில்லை. சரியாகிவிடும் என்பதைப் போன்ற பாவனையில் பாத்துக்கலாம் என்றார்.

அவனை எழுந்திருச்சி மூஞ்சைக் கழுவி சாப்புட சொல்லு எல்லாம் சரியகிரும் என்று எதார்த்தமாகக் கூறினார்.

சுந்தரத்திற்குப் புரிந்துவிட்டது. அவன் மது குடிச்சிருந்தது. அவனிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.  

அன்று ஒருநாள் மட்டும் கல்லூரிக்குப் போகவில்லை. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனான். அவனது நண்பர்கள் என்னடா? கார்த்தி நேத்து காலேஜ்க்கு வரல. முந்தானேத்து அடிச்ச சரக்கு எரங்களையா? என்றவாறு அருகில் இருந்த மற்றொரு நண்பனிடம் சொல்லிச் சிரித்தான். அங்கிருந்த மற்ற மாணவர்களும் கேலி செய்து சிரித்தார்கள். அன்று மதியமே வீட்டுக்கு வந்துவிட்டான்.

சுந்தரம் வீட்டிலுள்ள திண்ணையில் உக்கார்ந்திருந்தார். மல்லிகா மில்வேலைக்குப் போயிருந்தாள். அவளுக்கு மாலை ஐந்து மணிக்குத்தான் வேலை முடியும். கார்த்திக் வருவதைப் பார்த்த சுந்தரம்; கண்டு கொள்ளாதபடி இருந்தார். அருகில் வந்த கார்த்திக் அப்பா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, அதான் காலேஜ்ல இருந்து வந்துட்டேன் என்றான்.

ஏண்டா! உன் நண்பர்கள்தானே உன்னோட உலகம். அவங்க கிட்டே இருந்தாதானே உனக்கு சந்தோசம். அதவிட்டுட்டு இங்கே வந்திருக்க.

இல்லப்பா… அவங்களப் பத்தி இப்பதான் தெருஞ்சிக்கிட்டேன்.

என்னடா பண்ணுனானுக? அவங்களோடு சவகாசம் வச்சித்தானே இப்புடி வளந்து நிக்குற என்று பல்லைக் கடித்துக்கொண்டார்.

அப்பாவின் பேச்சில் இருந்த சூசகம் அவனுக்குப் புரிந்தது. தப்பு செய்தவன் தன்னுடைய நிலையை உணர்ந்து கொண்டான் என்றால் அப்போதுதான் எவை உண்மை என்பது புரியவரும். அதனால்தானே ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று சொல்லி வைத்தனர்.

சுந்தரத்தின் முன்னே நின்று கொண்டு அழுதான் தேம்பினான். அப்பா… இனிமேல் நான் எந்தத் தப்பும் பண்ணமாட்டேன் அப்பா… என்று புலம்பினான்.

டேய்…! ஏண்டா அழுவுற இனிமேயவது ஊர் ஒலகத்த புரிஞ்சி நடந்துக்கோ. கண்டவனை எல்லாம் நம்பி ஏமாந்து போகாதே. ஒனக்குன்னு ஒரு இடத்த இலக்கா நிர்ணயிச்சிக்கோ அதை மட்டும் நம்பி உன் பயணத்தத் தொடங்கு ஒருநாள் நிச்சயம் ஒண்ணப் பாத்து சிரிச்ச பயலுக நிமிந்து பொறாமையோடப் பாப்பானுங்க என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிப்; போ… போயிட்டு சாப்புட்டுத் தூங்கு எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

அவனுக்கு இப்போதுதான் புரிந்தது. பள்ளிப் பருவத்தில் படித்த திருக்குறள் ஒன்று நினைவில் வந்தது. ‘உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு’.

பொருளைத்தேடி அலைகின்ற இந்த உலகத்தில் உண்மையான நட்பினை காண்பது அவ்வளவு எளிதான காரியமில்லை;

தாய், தந்தை இவர்கள்தான் உலகம். அவர்களின் கண்களில் கண்ணீர் வந்தால்; தாம் நிம்மதியாக வாழமுடியாது என்பதை உணர்ந்தான். தொடர்ந்து கல்லூரிக்குப் போனான். மூன்றாண்டு படிப்பு நிறைவு பெற்றது. அனைத்துப் பாடங்களிலும் நல்ல தேர்ச்சி அடைந்தான்.  பணியை நோக்கிய பயணத்திலும் பெற்றோரைப் பேணிக் காப்பதிலும் நாட்கள் நகர்கின்றன.

நட்பாராய்தல் நாளைய தலைமுறைக்கு தலையாய கடமை.

குண்டலகேசியின் கதை -10 – தில்லை வேந்தன்

குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்)- Dinamani

 

முன்கதைச் சுருக்கம்

 

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.

அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……

 

    இருவரும் மலையேறுதல்

 

புலியைத் தொடரும் மானாக, — தூண்டில்

     பொன்னை விழுங்கும் மீனாக,

வலையை விரிக்க வருவேடன் — இரையில்

     மயங்கிச் சிக்கும் புறவாக, 

கொலையில் கொடிய வெறியான்பின்– தாவிக்

     குதிக்கும் ஆட்டு மறியாக,

மலையில் ஏறும் காளன்பின், — அந்தோ

     மங்கை சென்றாள் பேதைமையால்!

 

   தன் உள்ளக் கருத்துத் தோன்றுமாறு காளன் பாடுதல்

 

அலையலையென விளைபிறவிகள் அவைதுயர்கொடு வரவும்

வலைபுகுந்திடும் கயல்நிரையென மடிந்திறுதியைத் தரவும்

நிலையிழந்திடும் வகைகலந்திடும் நினைவழிந்திடும் உலகில்

கலையுணர்ந்தவர் சுகம்பெறுவதில் கழியுவகையை  விழைவர்

 

அறமெனவொரு வழிநெறியினை அறிவுரையென அளிப்பர்

சிறுமயலெனச் சுகக்கடலதைச் சிடுசிடுமுகம் சுளிப்பர்

திறமறிந்தவர் உளம்மகிழ்ந்திடத் திளைத்திடுவரச் சுகத்தில்

மறமிகுந்தவர் மதுமையல்களில் மனங்களித்திட நினைப்பர்

 

இதுநாள்வரை முறையேயென  எமையேய்த்திடச் சிலபேர்

இதுதீதென, அதுதீதென இழிவாய்மொழி புகன்றார்

விதிதானொரு கொடுவாளென வெறும்வாதமும் புரிந்தார்

மதுவூறிடும் சுகம்தேடிடும் வழிபோவதெம் தொழிலே

 

நரைகூடிடும் திரைமூடிடும் நமன்கூவிடும் புவிமேல்

உரைநீதிகள் உதவாதவை ஒருபோதிலும் மதியேன்

விரைவாயினிச் சுகம்மேவிட விளையாடுதல் முனைவேன்

தரைவாழ்வினில் மகிழ்வேனெனைத் தடுப்போரிவண் உளரோ?

 

  பத்திரையின் வேண்டுகோள்

 

 கருத்தில் ஊறிக் கலந்திருந்த — பழைய

      கள்ள நச்சுக் கொள்கைகளை

வருத்தம் சிறிதும் இல்லாமல் — இசையில்

     வடித்தான் காளன். பத்திரையாள்,

பெருத்த வணிகக் குலப்பெண்ணை — மணந்து

     பெருமை பெற்ற தகவுடையாய்!

பொருத்தம் இல்லாப் புன்மொழிகள் — விடுத்துப்

      புகழ்வாய் இறையின் பெயரென்றாள்.

 

.       காளன் மறுமொழி

 

சரியென் கண்ணே விளையாட்டைத்

     தவறாய் எண்ணிக் கலங்காதே

விரிவெண் முகிலின் விண்ணுலக

      மேன்மை முத்தி நிலையளிக்கும்

அரிய அருள்செய் குலதெய்வம்

       ஆங்குக் கொண்ட கோயில்காண்!

விரைவில் சென்று படையலிட்டு

         வேண்டும்  வரத்தைப்  பெறுவோம்வா!

     

       குலதெய்வம் காண அழைத்தல்

 

கொடுக்கின்ற கையினையும் கொடுக்கால் கொட்டும்

   கொடுந்தேளின் மிகக்கொடியோன் கூறும் யாவும்

விடுக்கின்ற வெங்கணைகள் ஆகித் துன்பம்

     விளைக்கின்ற தன்மையினை  அறியா மங்கை

நடுக்கின்றி நம்பியவன் கையைக் கோத்து

     நாமுடனே குலதெய்வம் காண்போம் என்றாள்

வெடுக்கென்று முன்சொன்ன சொல்லால் நெஞ்சில்

        வெறுப்பென்ற கனல்வளர்த்தோன் புன்ன கைத்தான்!

 

 

(தொடரும்)

நாட்டிய மங்கையின் வழிபாடு-9 – கவியரசர் தாகூர்-    தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்  

                   

          முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு பிம்பிசாரன் நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி  இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மிகவும் நொந்து போயிருக்கிறாள்.

          அரசிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; அதனைப் பலவாறு நிந்திக்கிறாள். நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்ய இளவரசிகள் முனைகின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                         ————————————

                                                   அங்கம் – 3

                                         காட்சியிடம்- மாற்றமில்லை.

                               ஸ்ரீமதியும் மாலதியும் நுழைகின்றனர்.

 

          மாலதி: சகோதரி, எனக்கு அமைதியில்லை.

          ஸ்ரீமதி: உனது மனதை எது பாரமாக்கிக் கொண்டுள்ளது?

          மாலதி: அவர்கள் உங்களை நாட்டியத்திற்கு அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, நான் யாருக்கும் தெரியாமல் சுவர்மீதேறி, பின்புறமிருந்த சாலையை எட்டிப்பார்த்தேன். பிட்சுணி உத்பலாவின் உடலை அவர்கள் அடக்கம் செய்ய எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்; அதன் பின்னால்……

          ஸ்ரீமதி: உம்.. சொல்….

          மாலதி: சகோதரி, நீ என்னிடம் கோபம்கொள்ள மாட்டாயல்லவா? என் உடல் தளர்கிறது……

          ஸ்ரீமதி: எல்லாவற்றையும் சொல்!

          மாலதி: நான் அவரை அந்த உடலருகில் கண்டேன். ஈமச்சடங்குக்கான மந்திரங்களை அவர் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

          ஸ்ரீமதி: நீ யாரைப்பற்றி என்ன சொல்கிறாய்?

          மாலதி: நான் இருந்த இடத்திலிருந்து பார்த்தபோது அது அவரைப்போலவே- என் காதலரைப் போலவே இருந்தது.

          ஸ்ரீமதி: அது உண்மையிலேயே அவராக இருந்தாலும் இருக்கக்கூடும்.

          மாலதி: நான் எனது விடுதலையைப் பெறும்வரை அவரைக் கண்ணால்கூடத் தொலைவிலிருந்தும் பார்க்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன்.

          ஸ்ரீமதி: உனது உறுதிமொழியைக் காப்பாற்று. ஏக்கத்துடன் கடலை உற்றுநோக்கினால் எதிர்க்கரையை அடைந்து விடலாம் என எண்ணாதே! நிறைவேறவே முடியாத கனவுகளால் உன் சிந்தையைக் குழப்பிக்கொள்ளாதே!

          மாலதி: என்னக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் நான் அவரைக் காண ஆசைப்படவில்லை. அவர்கள் அவரையும் கொன்றுவிடுவார்களோ என்று பயப்படுகிறேன்; அதனால் அவரருகே இருக்க ஆசைப்படுகிறேன். எனது உறுதியிலிருந்து நான் தவறினால் என்மீது சினம் கொள்ளாதே!

          ஸ்ரீமதி: உனது இதயத்தின் தாபக்குரலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

          மாலதி: என்னால் அவரைக் காப்பாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும்; ஆனால் இறக்கும்போதிலாவது அவருடன் சேர்ந்து நானும் இறப்பேன் அல்லவா? ஓ சகோதரி! என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கு இந்த ஜன்மத்தில் விடுதலைக்கான உதவி ஒன்றுமே இல்லை!

          ஸ்ரீமதி: நீ இறுதியில் யாரிடம் சென்று சேர்வாயோ அவரே உனக்கு விடுதலையை அளிப்பார்; ஏனெனில் அவர் சுதந்திரமானவர். எனது இதயத்தின் வலியை உனது சொற்கள் எனக்கு நினைவுபடுத்துகின்றன.

          மாலதி: என்ன வலி அது, சகோதரி?

          ஸ்ரீமதி: ஒரு பழைய காயத்தின் வலி, இன்னமும் மாறாமல் என் இதயத்தில் உள்ளது. எனது வெளிப்புற உறவுகளை நான் எவ்வளவு அறுத்துக்கொள்ள முயற்சித்தாலும், அவை இன்னும் ஆழமாகச் சென்று வேரூன்றி மறைந்துகொள்கின்றன.

          மாலதி: இந்த அரண்மனையிலேயே உன்னைவிடத் தனிமையானவர் வேறு யார் இருக்கிறார்கள்? ஆனால் நான் செல்லவேண்டும் சகோதரி. எனக்காகச் சில சமயங்களில் மன்னிப்புக்கான பாடல்களை நீ கூறுவாயா?

          ஸ்ரீமதி: (இசைக்கிறாள்)

                     ஓ புத்தரே! பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற நீர்

                     எங்களது அத்துமீறல்களை மன்னிப்பீராக!

          மாலதி: (திரும்பத் திரும்ப நமஸ்கரித்த வண்ணம்)

                     ஓ புத்தரே! எனது அத்துமீறல்களை மன்னிப்பீராக!

                     சகோதரி! கேட்டாயா? திரும்பவும் அந்தக் கூச்சல்கள்! அவர்கள் ஒவ்வொருவருமே கொடியவர்கள், இரக்கமற்றவர்கள். புத்தபிரான் தமது ஈடற்ற கருணையால் இப்பூமிக்கு வந்துள்ளார்; இருப்பினும் நரகத்தின் நெருப்பு அணைக்கப்படவில்லையே. நான் இனியும் தாமதிக்கலாகாது. சகோதரி, விடைபெறுகிறேன். நீ உனது விடுதலையை அடைந்தபின்பு எனக்கு அழைப்பு அனுப்பு, எனக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பினைக் கொடு.

          ஸ்ரீமதி: வா, நான் உன்னுடன் வாயில்வரை வருகிறேன்.

                     அவர்கள் வெளியே செல்கிறார்கள். ரத்னாவளியும் மல்லிகாவும் நுழைகிறார்கள்.

          ரத்னாவளி: தேவதத்தனின் சீடர்கள் பிட்சுணியைக் கொலைசெய்து விட்டனரா? இதைச் செய்ய என்னதான் காரணம்? அவள் ஒரு விவசாயியின் மகள்தானே?

          மல்லிகா: ஆனால் இன்று அவள் இந்தப் புண்ணிய மதத்தைச் சேர்ந்தவளல்லவா?

          ரத்னாவளி: புனிதமான நூல்கள் அவளுடைய ரத்தநாளங்களில் ஓடும் ரத்தத்தை மாற்ற முடியுமா?

          மல்லிகா: மதக் கோட்பாடுகளின் மாற்றங்கள் ரத்தத்தின் மாற்றத்தைவிடப் பெரிதென்று இன்று நாம் காணவில்லையா?

          ரத்னாவளி: போதும் இந்தப் பைத்தியக்காரத்தனம்! தனது குடிமக்களின் ஆத்திரத்தால் அரசன் பெரிய கஷ்டத்தில் இருக்கிறான்- என்ன நிலை! இந்தப் பிச்சைக்காரனுடைய மதம் பேரரசின் பெருமையை மொத்தமாக உறிஞ்சிவிட்டதே!

          மல்லிகா: குடிமக்களின் சினத்திற்கு வேறொரு காரணமுமுண்டு. மகாராஜா பிம்பிசாரர் தனது ஆசிரமத்திலிருந்து கிளம்பி இந்த வழிபாட்டு மேடைக்கு வந்து வழிபாடு செய்யப் புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் அரண்மனையை வந்து சேரவில்லை. அவர்கள், மக்கள் ஏதோ சந்தேகப்படுகிறார்கள்.

          ரத்னாவளி: நானும் அவர்களின் ரகசியமான சொற்களைக் கேட்டேன். அது கெடுதலையே தெரிவிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறேன். ஆனால் இது, கடந்தகாலத்து முறையற்ற செயல்களின் பலன்தான்.

          மல்லிகா: என்ன முறையற்ற செய்கை?

          ரத்னாவளி: மகாராஜா பிம்பிசாரர் தனது தந்தை காலத்திலிருந்த வேத மதத்தைக் கொலைசெய்தார்- உண்மையில் அது தனது பெற்றோரையே கொலைசெய்வதற்குச் சமமல்லவா? அல்லது அதற்கு மேலும் கூட? அப்போது அணைக்கப்பட்ட யாகத்தீ பழிவாங்குமென்றும், அவனையே (அரசனையே) எரித்துவிடும் என்றும் பிராமணர்களால் வரப்போவது பற்றி கூறப்பட்டது.

          மல்லிகா: உஷ்! மெல்லப்பேசு! இந்த சாபம் நிறைவேறப் போகிறதோ என்று எத்தகைய மனவருத்தம் அவருக்கு, அரசருக்கு உண்டாகி இருக்கிறதென்று நீ அறிவாயா?

          ரத்னாவளி: யாருடைய சாபத்தைக் கண்டு அவர் அஞ்சுகிறார்?

          மல்லிகா: புத்தருடைய சாபம்தான். தனது மனத்தில், மகாராஜா, புத்தரைக்கண்டு மிகவும் பயப்படுகிறார்.

          ரத்னாவளி: ஆனால் புத்தர் யாரையும் சபிப்பதில்லை. தேவதத்தர் ஒருவருக்கே சாபம் கொடுக்கத் தெரியும்.

          மல்லிகா: அதனால்தான் தேவதத்தருக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தங்கள் விலையுயர்ந்த காணிக்கைகளைப் பழிவாங்கும் தெய்வங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ள மனிதர்கள் கருணையுள்ள கடவுள்களை ஏமாற்றுகிறார்கள்.

          ரத்னாவளி: பற்களும், நகங்களும் போன கிழட்டுச் சிங்கம்போல, தாக்கத் தெரியாத கடவுள்கள் பட்டினிதான் கிடக்க வேண்டும்.

          மல்லிகா: எது எப்படியாக இருந்தாலும், இன்று மாலை, புத்தருக்கான வழிபாடு கட்டாயமாக அந்த அசோகமரத்தடியே நடைபெறப் போகிறது என நான் கூறுகிறேன்.

          ரத்னாவளி: அவ்வாறு நடைபெறுவதாயின், நடக்கட்டும். இன்னுமொன்று சொல்வேன்- அதற்குமுன்பு இந்தப்பெண் தனது நாட்டியத்தை அந்த வழிபாட்டுத்தலத்தில் ஆடி முடித்திருப்பாள்.

                     மல்லிகா வெளியேற, வாசவி உள்ளே நுழைகிறாள்.

          வாசவி: நான் ஆயுதங்களுடன் வந்துள்ளேன்.

          ரத்னாவளி: எதற்காக?

          வாசவி: பழிவாங்க! அந்தப்பெண் என்னைப் பல சமயங்களில் அவமதித்திருக்கிறாள்.

          ரத்னாவளி: அவளுடைய நீதிபோதனைகளாலா?

          வாசவி: இல்லை. எனது மரியாதையைப் பலவந்தமாகப் பிடுங்கியெடுத்து….

          ரத்னாவளி: அதனால்தான் நீ இந்த வாளை வைத்திருக்கிறாயா?

          வாசவி: அதற்கு மட்டுமல்ல. ஒரு புரட்சிக்கும் வாய்ப்புள்ளது; அது நிகழுமானால் நான் பதிலடி கொடுக்காமல் சாகமாட்டேன்.

          ரத்னாவளி: அப்படியானால் உனது பழிவாங்குதல் எப்படி நிகழும்?

          வாசவி: இந்த கழுத்து ஆபரணம் அதனை நிறைவேற்றும் (காட்டுகிறாள்).

          ரத்னாவளி: இந்த வைரமாலையா?

          வாசவி: இந்த அரசகுடும்பத்துக்கேற்ற விலையுயர்ந்த அவமதிப்பு. இந்தப் பரிசை நான் அவள்மீது வீசியெறிவேன்.

          ரத்னாவளி: ஆனால் அவள் அதனை மறுத்துத் திரும்ப உன்னிடமே வீசினால்?

          வாசவி: அப்போது என்னிடம் இது இருக்கிறதே (வாளைக் காட்டுகிறாள்).

          ரத்னாவளி: நாம் மகாராணி லோகேஸ்வரியை அழைத்து வரலாம்- இந்தக் காட்சி அவளை மகிழ்வடையச் செய்யும்.

          வாசவி: நான் அவளைத் தேடினேன்; ஆனால் அவள் தனது அறைக்குள் தாளிட்டுக்கொண்டு இருக்கிறாள் என்றார்கள். அது இப்புரட்சி பற்றிய பயத்தாலா அல்லது தனது கணவன்மீது கொண்ட சினத்தாலா என்று யாரால் கூற இயலும்?

          ரத்னாவளி: ஆனால் இன்று அந்த நாட்டியக்காரி அவமானப்படுத்தப்படும்போது மகாராணி கட்டாயமாக இங்கிருக்க வேண்டும்.

          வாசவி: ஒரு நாட்டியப்பெண்ணின் அவமதிப்பு!  ஒரு நாடகத்திற்கான நல்லதொரு பெயர்.

          மல்லிகா: நான் நினைத்தபடியே அது நடந்திருக்கிறது. மகாராஜா அஜாதசத்ரு, தனது நாட்டிலுள்ள புத்தரின் எல்லாச் சீடர்களையும் வரவழைக்கக் கூறியுள்ளார்.

          ரத்னாவளி: மிகவும் நல்லது! அவர்களின் கதையை முடிப்பதற்காக பிறகு அவர்களை அவர் தேவதத்தரின் சீடர்களிடம் ஒப்படைக்கலாம்.

          மல்லிகா: அதுவல்ல அவருடைய எண்ணம்.  புனிதப்படுத்தும் பாடல்களை அவர்கள் அரசருக்காக இசைக்க வேண்டும். அவர் தனது உயிருக்கு ஆபத்து விளைந்துவிடும் பயத்தில் இருக்கிறார்.    

          வாசவி: ஏன்? என்னவாயிற்று?

          மல்லிகா: நீ கேள்விப்படவில்லையா? தலைநகருக்கு வரும்வழியில் மகாராஜா பிம்பிசாரர் படுகொலை செய்யப்பட்டார் என ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள்.

          வாசவி: ஓ! என்ன கொடூரம்! நிச்சயமாக இது உண்மையாக இருக்குமா?

          மல்லிகா: நிச்சயமாக, ஒரு ரகசியமான வலி, அல்லது மன வியாகூலம் அரசரின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

                                                                                  (தொடரும்)

                    

 

“யாழின் துயரம்” – டி வி ராதாகிருஷ்ணன்

கோவலன் | Tamil and Vedas

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்…ஒரு அதிகாலைப் பொழுது..

புகார் நகரில்…

மாசாத்துவான் எனும் வணிகரின் மகன் கோவலனுக்கும் ,மாநாயகன் மகள் கண்ணகிக்கும் இரு வீட்டு பெற்றோர்களாலும் நிச்சயக்கப்பட்டு அனைத்து ஊர்  பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக அன்று நடந்தேறியது. அப்போது கோவலனின் வயது பதினாறு. கண்ணகியின் வயதோ பன்னிரெண்டு.பெற்றோருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வாழ்ந்த அவர்களைப் பின் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லறமே நல்லறமாக தங்கள் வாழ்க்கையைத்  தொடங்கினர்.

இப்படி சில ஆண்டுகள் கழிந்து ஒரு நாள்..

கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி என்ற பெண் மயிலாளின் நடனம், சோழ மன்னன் முன்னிலையில் அரங்கேற்றம் ஆனது. நடனத்தைக் கண்டு ரசித்த மன்னன், மன்னர்குல வழக்கப்படி   மரகதமாலை ஒன்றினையும், அவளுக்கு “தலைக்கோலி” என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தான்.

ஒருநாள் மன்னர் கொடுத்த மாலையை, மாதவியின் வேலைக்காரி கூனி என்பவள் விற்பனை செய்வதற்காக பெரிய தெருவினுக்குச் சென்றாள்.

அம்மாலையைப் பார்த்த கோவலன்,அதை ஆயிரம் பொன்களைத் தந்து வாங்கியதுடன்,அவளுடனேயே மாதவியின் இல்லத்திற்கும் சென்றான். மாதவியைக் கண்டவன் அவளது பேரழகில் மயங்கி , தன் மனையாள் கண்ணகியை மறந்து , அவள் இல்லத்திலேயே தங்கினான்.

கோவலனின் அருகாமை மாதவிக்கு மகிழ்வையும்..அவனின் விலகல் கண்ணகிக்குத் துயரையும் தந்தது.

இந்நிலையில்…புகாரில் இந்திரவிழா துவங்கியது..

விழா அன்று காலை

புகார்நகர்..

மிகவும் அழகுடன் திகழ்ந்தது.காலை கதிரவனின் ஒளிக் கிரணங்களால் அதன் மாடங்களும்,கோபுரங்களும்,கோயில் தலங்களும் மற்றும் உள்ள மன்றங்களும் அழகுப் பெற்று பிரகாசமாகத் திகழ்ந்தன.

..
மாடி வீடுகளும், மாளிகைகளும்,பொய்கைக் கரையில் யவனர்கள் இல்லங்களும், நீர் நிலையில் கட்டியிருந்த வீடுகளும்..அந்நகரை வளப்படுத்தி அழகுடன் வைத்திருந்தன.

நறுமணப் பொருள்கள் விற்போர் ஒரு தெரு,நூல் நெய்வோர் ஒரு தெரு,பட்டும் பொன்னும் அணிகலன்களும் விற்போர் ஒரு தெரு,அப்பம் விற்போர்கள் விற்போர், மீன் விலை பேசுவோர், இறைச்சி,எண்ணெய்,பொன் வெள்ளி செம்புப் பாத்திரங்கள் விற்போர், பொம்மை விற்போர், தச்சர்,கம்மாளர்,இசை
வல்லுநர்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோர் நிறைந்த பகுதி
மருவூர்ப்பாக்கம் எனப்பட்டது. 

அடுத்து, பட்டினப்பாக்கம்.

அரச வீதி,தேர் வீதி,கடைத்தெரு,மருத்துவர்,ஜோதிடர், மணி கோத்து
விற்பவர்கள் என தனித்தனியே வசித்துவரும் உயர்நிலை மக்கள் வாழும் பகுதியாகும்.

அரசன்,அரண்மனை சுற்றி படைவீரர் குடி இருக்குகள், யானை..குதிரை..தேர்..காலாள் படை வீரர்கள் எனப் பலர் குடி
இருப்புப் பகுதி. கடற்கரையை ஒட்டியப் பகுதி என்பதால் பட்டினப்பாக்கம் எனப்படுகிறது.

இதை வைத்துதான், புகார் நகருக்கு,பூம்பட்டினம், பூம்புகார் என்றெல்லாம் பெயர் வழங்கப்பட்டு வருகிறது

மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இரண்டிற்கும் இடைப்பட்டப்
பகுதிகளில்தான் கடைகள் சூழ்ந்த பகுதியாகும்.அங்கு எப்போதும் விற்பவர் குரல்களும், வாங்குவோர் குரல்களும் பலத்த சப்தத்துடன் ஒலித்துக்கொண்டிருக்கும்.

இந்த இடத்தில் காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை அமைந்திருந்தது. சித்திரைத் திங்கள் சித்திரை முழுநிலவு அன்று இந்திர விழா புகாரில் கொண்டாடப்படும்.மக்கள் குறிப்பாக இந்த பலிப்பூடத்திற்கு பூவும், பொங்கலும்,விலங்குகளையும் பலி இடுவர். பின் “சோழ அரசன் வெற்றி பெறுக” எனக் கூவி மன்னனுக்கு வாழ்த்தினைக் கூறுவர்.

வச்சிரக் கோட்டம் எனும் இந்திரன் கோயிலில் இருக்கும் முரசத்தை எடுத்து யானை ஒன்றின் பிடரியில் ஏற்றி அதன் மீது இருந்து விழாச் செய்தினை அறிவிப்பார்கள்.

நகரத்து மாளிகைமுன் எங்கும் தோரணங்கள்.பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர் பாவை விளக்கும், கொடிச்சீலையும்,வெண்சாமரமும் ,சுண்ணமும் ஏந்தி மக்கள் வீதியில் பொலிவு ஊட்டினர்.

ஊரே கூடி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து, வேண்டுமோ… வேண்டாமோ அனைத்துப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பர். வீதிகளில் ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளும், பட்டி மன்றங்களும் நடக்கும்.

கண்ணகியிடம் இருந்து பிரிந்து நடன மங்கை மாதவியை நாடி வந்த கோவலன், மாதவியுடன் சேற்ந்து இந்த இந்திரவிழா காட்சிகளை மகிழ்வுடன் சுற்றிப் பார்த்தான்.மாதவிக்கு பொன்னும், பொருளும் வாங்கிக் கொடுத்தான்.

அவர்கள் வரும் வழியில் தெருக்களில் பல விலைமகளிரைக் கண்டனர்.பல ஆடவர்கள் அவர்களை நாடிச் சென்று உடற்பசியைத் தீர்த்துக் கொண்டதையும் கண்டனர். அவர்களைப் பார்த்த கோவலன், மாதவியையும் குறிப்பாகப் பார்த்தான்.அதில் சற்றே எள்ளல் இருந்தது போல இருந்தது. மாதவி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இந்திரவிழாவில் மாதவியின் நடனமும் இடை பெற்றிருந்தது.அந்த இடத்திற்கு வந்தனர் இருவரும்.மாதவியைக் காண மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர்.அவர்களை மாதவி தனது பதினோரு வகை நடனங்களால் பரவசப்படுத்தினாள்.

அன்று இரவு மாதவியும், கோவலனும் இணைந்தனர். இரவு கழிகிறதே! இன்னமும் சற்று நேரம் இருக்கக் கூடாதா? என எண்ணினர்.

விடியலில்..காவிரி கடலில் கலக்கும் சங்கமத்துறைக்குச் சென்று நீராடி, புத்தம் புது ஆடைகளை அணிந்தனர். தங்கியிருந்த இடம் வந்த போது மாதவியின் தோழி யாழ் ஒன்றினை மாதவியிடம் தர..அவள் அதை மீட்டி கோவலனிடம் கொடுத்தாள்.அதை வாங்கிக் கொண்ட தலைவன் அந்த யாழினை வாங்கி இசையினைக்
கூட்டிப் பாட ஆரம்பித்தான்.

“சோழ அரசனின் ஆட்சி கங்கை வரை பரவியுள்ளது.சோழன் கங்கையை அடைந்து உறவு கொண்டாலும்  வெறுப்பதில்லை. அடுத்து அவன் குமரியை அடைந்தாலும் காவிரி
பிணக்குக் கொள்ள வில்லை. இவை பெண்ணின் கற்புக்கு எடுத்துக்காட்டு.மகளிர் ஆண்களின் தவறுகளை பொறுத்துக் கொள்வது அவர்களது கடமையாகும்” எனப் பாடுகிறான்.

உடன் யாழினைத் தன் கைகளில் வாங்கிக் கொண்ட மாதவி..” பெண்கள் பெருமை அடைய வேண்டுமானால் அதற்கு ஆண்களின் செயல்கள் தூய்மையாய் இருக்க வேண்டும். ஆண்கள் செம்மையாகவும், மகளிரிடம் நேயம் மிக்கவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்” என்று பொருள்பட பாடினாள்.

அடுத்து கோவலன் பாடுகிறான், “என் கண்கள் செய்த பாவம் இவளைக் கண்டது. இவள் பெண்ணல்ல எமன். வானத்து நிலவல்ல..அரவம்.அது தெரியாது பெண் எனப்
பழகிவிட்டேன். கண்டவர்களைப் படுத்துபவள். இவளது
மொழி,மார்பகம்,முகம்,புருவம்,மின்னல் இடை ஆகியவை என்னை
வருத்தியதுடன்,இவளது கண்களாகிய வலையில்  புகுந்து மாட்டிக்
கொண்டுவிட்டேன்” என பொதுவாகப் பாடுவது போல மாதவியை மறைமுகமாகச் சாடுகிறான்.

இதை உணர்ந்து மாதவி யாழினை தன் கைகளில் வாங்கிக் கொண்டு, அவனுக்கு பதிலுரைப்பது போலப் பாடுகிறாள்…

“ஆண்கள் சீரோடு இருந்தால், அவர்களைச் சார்ந்த பெண்களுக்கு மதிப்பு.ஆனால், அவர்கள் இரக்கமற்றவர்கள்.பெண்களின் உணர்வினையும்,துன்பத்தினையும் அறியாதவர்கள்.பெண்களை விட்டு ஆண்கள் பிரிந்து செல்கின்றனர்.ஆனாலும், அவர்கள் சொன்னவற்றை உண்மை என நம்பி பெண்கள் உயிர் வாழ்கின்றனர்”என்று பொருள்படும்படி பாடினாள்.

“உன் பவள வாயில் முத்துப் பற்கள் இல்லை.கண்கள் குவளை மலர்கள் அல்ல..கொடியவை”என்கிறான்.”அன்ன நடை என்பார்கள்..ஆனால் அன்னமே! இவளது பின்னே செல்லாதே! இவளது நடை உலகை மிதித்து துவட்டும் நடை”

இப்படிப் பாடும் கோவலனின் பாடலைக் கேட்ட மாதவி,இவன் பாடலில் ஏதோ குறிப்பு இருப்பதாக உணர்ந்து,அதனால் இவன் நிலை மயங்கிப் பாடுவதாக எண்ணி, அவன் கைகளில்  இருந்த யாழினை வாங்கி..

“பூ ஆடை உடுத்தி பெருமிதமாக காவிரி நடப்பதற்கு எங்கள் சோழமன்னனின் செங்கோல் வளையாமையேக் காரணம்” என்றும்,”கோவலன் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும்” எனவும் உணர்த்துகிறாள் .

கோவலன் பாடிய பாடல்கள் பெண்கள் கொடியவர்கள் என்பது போல மாதவிக்கும், மாதவிப் பாடியவை , ஆண்கள் இரக்கமற்றவர்கள்… ஒழுக்கம் தவறியவர்கள் என்பது போல கோவலனுக்கும் பட்டது ஊழ்வினை என்றே எண்ண வேண்டும்.

மாதவி..மறைமுகமாக தன்னை நிந்திப்பதாய் எண்ணிக் கொண்டு, கோபத்துடன் வெளியேறினான் கோவலன்.

“பொழுது ஆகிறது..புறப்படுவோம்” என்று கூறி அவளை அழைக்க வேண்டியவன் அவ்வாறு கூறாது ,அவளை தனியே விட்டு இவன் மட்டும் ஏவலாளர்கள் உடன்வர அவளை விட்டு நீங்கினான்.

தோழியர் பேச வாய் எடுத்தனர்..அவர்களைத் தடுத்த  மாதவி..

ஓசைப்படாமல் எழுந்து தன் வண்டியினுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள்.

நடந்த நிகழ்வுகளைக் கண்டு யாழ் வருத்தத்துடன் மூலையில் தஞ்சம் அடைந்தது.

கீழ்வானில் கதிரவன் மறைந்தான்.மெல்ல இருள் பரந்தது.மீண்டும் …கோவலன் வருவான் என எண்ணியவள் ஏமாந்தாள். “அவன் என்னைப் பிரியலாம்..என்னை மறக்கலாம்.ஆனால் என்னால் அவனை மறக்கமுடியவில்லையே1” என கண்ணீர் உகுத்தாள்.

பிரிவுத் துயரால் உயிர் வாழ முடியாது தவித்தாள் மாதவி..கோவலன் தன்னை பிரிந்தாலும், அதனால் அவன் மீது ஏதேனும் தவறு இருந்தால் அவனை மன்னித்துவிடு என இறைவனை வேண்டினாள்.

கணிகையர் குலத்தாள் ஆனாலும் அவள் இறுதி வரை அவனையே எண்ணி வாழ்ந்தது போற்றத்தக்கது.பின்னாளில் தன் தாயின் காதல் கதையைக் கேட்ட மகள் மணீமேகலை…தன் வாழ்நாட்களை துறவியாகவே கழித்தாள்.

 கோவலனும், மாதவியும்  பிரிந்தது அவர்களுக்குள் இருந்த “தான்” எனும் அகந்தை.

தலைவன் தன்னைப் பிரிந்து செல்லமாட்டார் என எண்ணி மாதவி அலட்சியமாக இருந்து விட்டாள்.கோவலனும் பிரிவை சொல்லாமல் சென்று விட்டான். அச்சமயம், இருவரிடம் விட்டுக் கொடுத்தல் இல்லா அகந்தை.

மாதவி கணிகைதானே! என கோவலன் எண்ணி விட்டான் போலும்.. ஆனால்.. மாதவி தானும் கற்புடைவள் என்பதை நிரூபித்தாள்.

இவர்களால்  நமக்குக் கிடைத்தது சிலப்பதிகாரமும்..பின் மாதவிப்
பெற்றெடுத்த மணிமேகலைப் பற்றிய மணிமேகலை காப்பியமும்.

 

யார் தந்த விளக்கு எஸ் எஸ்

விளக்கு ஏற்றும் முறை | vilakku-etrum-murai

யார் தந்த விளக்கு ?

ஆசை நெய்யிட்டு வேட்கைத்  திரியிட்டு

காமத்தீ  இட்ட செம்பொன் விளக்கே!  

தீயவை பயக்காது பாயினில் தீவைக்கும்

பெண் பாவை விளக்கல்லவோ நீ 

முகத்தில் மலர்ந்து நெய்யில் தோய்ந்து

திரியால் ஒளிரும் புதுவிளக்கம் நீ

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் நீ தந்த சுடு முத்தம்

விழித்தீயில் மடியும் விட்டிலல்ல நான்

தீக்குள் விரல் வைக்கும் நந்தலாலா!

 

யார் தந்த விளக்கடி நீ ?

 

இமவான் பெற்றெடுத்த  குன்றிலிட்ட ஒளிவிளக்கா?

காமதேனு சுரந்திட்ட குடத்திலிட்ட குலவிளக்கா?

பாற்கடலில் அமிழ்ந்துவந்த அலைமகளின் அகவிளக்கா?

பெரியவர் பெற்றெடுத்த சுடர்ப்பாவைத்  திருவிளக்கா?

ஜனகமுனி  கண்டெடுத்த ஸ்ரீதேவி விடிவிளக்கா?

யமுனைத்துறை அருகினிலே கோபித்த சரவிளக்கா?

கலைமகள்  நாவுதித்த காப்பியக்  கலைவிளக்கா?

காஞ்சியிலே கொஞ்சிவரும் காமாட்சிக் கைவிளக்கா

சபரியில் கண்சிமிட்டும் மகரஜோதி திருவிளக்கா?

அண்ணாமலை உச்சியில் கார்த்திகைத் திரு விளக்கா?  

அம்மனுக்குப் படைத்துவிட்ட பச்சை  மாவிளக்கா?

விளக்கோ திருவிளக்கோ ஜோதி மணி விளக்கோ

அந்தியிலே ஏந்திழையாள் ஏந்திவரும் அகல்விளக்கோ

முக்கூடல் சங்கமத்தில் முன்வந்த சிறுவிளக்கோ?

குங்குமத்தில் குழைந்திட்ட செஞ்சுடரின் பொன்விளக்கோ ?

 

ஓமத்தீ நீயென்றால் பெய்யும்நெய் நான் உனக்கு

காட்டுத்தீ நீயென்றால் தேவதாரு நான் உனக்கு  

எரிமலை நீயென்றால் செங்குழம்பு நான் உனக்கு    

எரிவாயு நீயென்றால் ஜ்வாலையடி  நான் உனக்கு

 

யார் தந்த விளக்கடி நீ ?

 

மோகத்தீ பொங்கிவரும் தீபாவளித் திருநாளில்

கொள்ளிக்கண் தீபட்டு பட்டாடை பற்றியதே   

தீயே தீக்குளிக்கும் கொடுமையினைக் கண்டேனே!

அனலே அனலாக  கண்முன்னே கண்டேனே     

உன்னுடன் எரிந்துவிட ஓடிவந்த உன்உயிரை  

கொஞ்சமும் கருணையின்றி உதறிவிட்டுச்  சென்றாயே  

புதையலைப் புகையாய் சிதைத்த பாவிமுன்

சிதையிலே வரைந்த ஓவியமாய் மறைந்தாயோ?

 

எங்கே என் பூம்பாவை விளக்கு?

 

அகண்ட குங்குமத்தில் அமைதி கொண்டு

ஓவியச் சுடராய் பூஜையில் எரிகின்றாய்!

அன்பே தகழியாய் அமைதியே நெய்யாய்

காவியத் திரியாய் எரியும்சுடர் விளக்கே! 

என் நெஞ்சின் அழல் நீயம்மா!

உன் நெஞ்சின் நிழல் நானம்மா!