Monthly Archives: February 2019
நாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்
உழுகிற மாடு வயலை – தன்
உழைப்பால் உயர்த்திப் பார்க்கும்
அழகிய எங்கள் கிராமம் – மலை
அருகில் அமைந்த சொர்க்கம்.
கொக்குடன் மைனா, கிளிகள் – சிறு
குருவி பறக்கும் வயல்கள்
திக்குகள் எங்கும் இளமை – நமைத்
தேடி அழைக்கும் எழில்கள்.
ஓட்டது கூரை மேலே – தினம்
துள்ளிக் குரங்கு ஓடும்
வீட்டது பின்னே நன்கு – குளிர்
வீசும் வாய்க்கால் பாயும்.
பம்பரம், கோலி, கிட்டி – கபடி
பந்தும் ஆடும் இளையோர்
கம்பினைச் சுற்றி வீச -உயிர்க்
காதல் புரிவர் வளையோர்.
பண்டிகைக் கால மெல்லாம் – இசைப்
பண்ணும் கூத்தும் சேர்த்து
கண்களுக் கின்பம் கூட்டும் – நற்
கலைஞர் நிறைந்த நல்லூர்.
அலைநிறை பொருநை நதியில் – மீன்
அலையும் காட்சி கண்டால்
அலைகிற எண்ணம் நிற்கும் – உள்
அமைதி மேலும் ஊறும்.
நெல்லிடை ஓங்கும் செல்வம் – அங்கு
நித்தம் வாசம் செய்யும்
கல்லிடைக் குறிச்சி ஊரை – நாம்
கல்யா ணபுரி என்போம்.
மணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு
மணி மணியா சம்பா நெல்லு….
(உழவர் பாட்டு)
ஏர்பிடிச்சு மாடுகட்டி
எருவடிச்சு மண் உழுது
பதுக்கிவெச்ச வெத நெல்லால்
நாத்து வெச்சு பாத்திகட்டி
மூச்செறைக்க நீரெறைச்சு
நாள்பாத்து நடவு செஞ்சு
மழைசெதும்ப பேயணும்னு
மாரியாத்தாவ வேண்டிக்கிட்டு
கருக்கலில் வயக்காடுவந்து
கம்மாத்தண்ணி வரத்திருப்பி
உரமடிச்சு மருந்தடிச்சு
உறங்காம களபறிச்சு
பட்டினியோ பழஞ்சோறோ
பாராமலே கிடந்துண்டு
கதிர்முத்தி தல சாஞ்சா
காவலுக்குத்தானிருந்து
கருத்த மேகம் பாத்துப்புட்டா
பதபதச்சு நாள்குறிச்சு
கருப்பசாமி துணைவேண்டி
களமெறங்கி வாளெடுத்து
கதிரறுத்து கட்டுகட்டா
இடுப்பொடிய கதிர்சுமந்து
களத்துமேடு கொண்டுவந்து
மாடுகட்டி போரடிச்சு
முறமெடுத்து புடைக்கயிலே
தங்கம்போல தகதகக்க
மணிமணியா சம்பா நெல்லு (என்)
மனசுபோல சம்பா நெல்லு
பதரில்லாத சம்பா நெல்லு
அளஞ்சளஞ்சு சம்பா நெல்லு
அளந்தளந்து மூடகட்டி
அள்ளிக்கொண்டு போகையிலே
கெடய்க்கும் சுகம் வெளங்கலியே
பட்டபாட்டுக்கு நட்டமில்லாம
வெலைகிடைக்குமா தெரியலியே
கந்துவட்டி கைமாத்து
பாங்குல வாங்கின நகைக்கடனு
ஆளான புள்ளய கட்டிக் குடுக்கணும்
ஆம்புளப்புள்ளய படிக்க வைக்கணும்
கருப்பசாமிக்கு படியளக்கணும்
மாரியாத்தாளுக்கு படையல் செய்யணும்
மிஞ்சுமா என்னமும்
ஏங்குதே ஏம்மனம்
சாப்பிட ஒக்காந்தா
சோறு எறங்கல
பெஞ்சாதி சொல்லுது
வீணாக்காதே சோறன்னு!?!
துணிந்தேன், சரி செய்தேன்!- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
நான் மேல் படிப்புப் படித்துக்கொண்டிருந்த காலம். நம் நாட்டின் மிகச் சிறந்த, மனநல அரசு மருத்துவமனை. அன்றாடம் ஒரு மருத்துவர் தன் டீமுடன் நோயாளிகளைப் பார்ப்பது வழக்கம். இன்று எங்கள் முறை.
அன்று வந்திருந்தவர் ஒரு ஐம்பது வயதுள்ளவர். ஜானகி, நன்றாக வாரிய தலை, பச்சை நிற நூல் சேலை, கையில் பை. சற்றுத் தடுமாறித் தள்ளாடியபடி என்னை நோக்கிவந்தார். அருகில் வரவர, அவரின் கைகளில், முகத்தில் பல தழும்புகள் இருப்பதைக் கவனித்தேன். நான் கவனித்ததால் தன்னுடைய தலைப்பினால் மறைத்து, “கீழே விழுந்துவிட்டேன், ஒண்ணும் இல்ல” எனச் சொன்னாள். சொல்வதை ஏற்றுக்கொண்டேன்.
எதிர்நாற்காலியில் உட்கார்ந்ததும் ஜானகி கண்கலங்கி, தன் நிலையை விவரித்தாள். அவள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. வேலையிலிருந்து ஓய்வுபெற யோசிப்பதாகவும், முப்பது வயதுடைய மகன் ராஜாவுடன் இருப்பதாகவும் கூறினார். கடந்த நான்கு வாரமாகத் தனக்குப் பசி மற்றும் தூக்கம் சரியில்லை என்றும், ஒரு இனம்தெரியாத பதட்டநிலை உணர்வதாகவும், சட்டென்று அழுகை வருவதாகவும் கூறினாள். அவர்களின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் அம்மா சொன்னதால் வந்ததாகத் தெரிவித்தாள். தான் இங்கு வருவதை ராஜாவிற்குச் சொன்னதும் அவன் கோபத்தில் சத்தம் போட்டதாகவும், அதில் திகில் அடைந்து கீழேவிழுந்து அடிபட்டுக்கொண்டதாக மெல்லிய குரலில் சொன்னாள்.
என்னை நிமிர்ந்து பார்த்து, “தப்பாக நினைக்காதீர்கள், ராஜா ரொம்ப நல்லவன்” என்றாள். அவனுடைய வேலை பளு, விரும்பிய பெண் ராதா அவனைவிட்டு விலகிவிட்டது அவனுக்கு அவமானமாக இருக்கிறது, அதனால் கோபம் என விவரித்தாள்.
இதுவரையில் வீட்டு நிர்வாகம் பூராகவும் ஜானகி பொறுப்பில்தான் இருந்தது. சமீப காலமாக, ஏன் செய்யவேண்டும் எனச் சலிப்பு வருவதாகக் கூறினார். அவர்களின் கணவர் மாரடைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் மரணம் அடைந்த சம்பவத்தை விவரித்தார். மகனிடம் அதிக பாசம் இருந்ததால் அவர் மறைவை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவர் எப்பொழுதும் ஜானகியிடம் கோபித்துக்கொள்வார். குறிப்பாக அவள் ராஜாவுக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்துதருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
அதே மூச்சில், ராஜா நல்லவன், இளகிய மனம் உள்ளவன் என்றும் சொன்னாள். எந்தத் தொந்தரவும் அவனை அணுகாமல் பார்த்துக்கொள்வதே தன் பிரதானப் பொறுப்பு என்றாள். இதற்காகவே ஜானகி புத்தகம் படிப்பது, பாட்டுக் கேட்பது, நடைப் பயிற்சி என்று ஒவ்வொன்றாக நிறுத்தவேண்டியதாயிற்று. நிறுத்தினாள். நாளடைவில் மந்தமாக ஆவதுபோல் தோன்றியது என்றாள்.
விவரங்களை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் மன உளைச்சல் என முடிவானது. மருந்துகள் இல்லாமல் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் அவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டேன்.
வாரம் ஒருமுறை அவள் வருவதாக முடிவெடுத்தோம். வந்தாள். தான் சூழ்நிலைகளைக் கையாளும்விதம் சரியில்லாததால் சில நெருக்கடி நிகழ்ந்தன எனப் புரிய ஆரம்பித்தது. குறிப்பாக ராஜா இளைஞன் என்றாலும், ஜானகியே அவனுக்கு எது நல்லது, எது கெட்டது என்று முடிவு எடுப்பதால், அவனுடைய முடிவு செய்யும் திறன்கள் எப்படி, ஏன் பாதிக்கப்படும் என்பதை ஆராய்ந்தோம். மேலும் ஜானகி சூழ்நிலையைக் கையாளுவதை மையமாக வைத்துப் பல வழிமுறைகள் சிந்தித்தோம். அதேபோல் மனதை அமைதிசெய்ய என்ன செய்யலாம் என்பதையும் ஆராய்ந்தோம்.
மூன்று வாரங்களுக்குப் பின்பு குணமாகும் சாயல் எட்டிப்பார்த்தாலும் ஏதோ இடையூறாக இருப்பதை உணர்ந்தேன். எங்கள் சீஃப் இடம் பகிர்ந்தேன். நாங்கள் மாணவர்கள் என்பதால், செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு. அவர்களிடம் உரையாடி, தெளிவுபெற்றேன்.
அடுத்த சந்திப்பில் வெளிப்படையாக என் கணிப்பை ஜானகியுடன் பகிர்ந்தேன். அவள் முழு நலன் அடையாததை அவள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.
ஜானகி மௌனமாக என்னைப் பார்த்துப் பல நிமிடங்களுக்குப் பிறகு ராஜாவைப்பற்றிப் பேசினாள். அவன் மது அருந்துவதுபற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள். அவனுக்குத் தான் விரும்பிய ராதா இல்லை என்றதும், சோகத்திலிருந்து மீள அதிகமாக அருந்தினான். ராஜா போதையில் விழுந்துகிடக்கும் தகவல் தெரிந்ததும் ஜானகி அவனை எப்படியாவது கூட்டி வந்துவிடுவாளாம். இதைச் செய்கையில் பலமுறை கை கால் தவறி விழுந்து இந்தக் காயங்கள். தன் மகனிடம் வேறு எந்தக் குறையும் இல்லை என்பதை வலியுறுத்தினாள்.
இந்த வர்ணனைகள், இதற்கு முன்னால் வார்த்தைக்கு வார்த்தை ராஜா நல்லவன் எனச் சொன்ன சூழல்களை அவளுக்கு நினைவூட்டி, அதிலிருந்து அவள் செய்வதைப் புரிந்துகொள்ளச் செய்தேன்.
எங்கள் பாஷையில் இப்படி நடந்துகொள்வதை, ‘கோ டிபென்டன்ஸீ’ என்போம். அதாவது போதைக்கு அடிமையானவர்களுடன் கூட இருப்பவர்கள் அவர்களின் பழக்கத்தை மூடிமறைக்க முயல்வார்கள். கஷ்டமோ நஷ்டமோ போதையில் உள்ளவர்களுக்கு எல்லாம் அனுகூலமாகச் செய்வது என்று முற்படுவார்கள். அக்கம்பக்கத்தில், உறவுக்காரர்கள் யாருக்கும் போதைப் பழக்கம் தெரியக்கூடாது என முயல்வது. அப்படியாவது பழக்கம் அடங்கும் எனக் கருதுவார்கள். தங்களின் பொழுதுபோக்கைப் பலிகொடுத்து விடுவார்கள். தாங்கள் இப்படிச் செய்வதால் போதையினால் நிகழும் முழு மாற்றத்தையோ விளைவுகளையோ கண்டுகொள்ளமாட்டார்கள்.
மாறாக, போதைப் பழக்கம் இன்னும் அதிகரிக்கும். இப்படிக் கூட இருப்பவர்கள் பொறுத்துக்கொள்வது, அவர்களுக்கு உதவுவது ‘கோ டிபென்டஸீ’ எனப்படும். இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணிப்பார்க்க, பல வாரமோ, வருடங்கள்கூட ஆகலாம்.
கடைசியில் உதவி தேடிவந்ததே பாராட்டப்பட வேண்டியது! ஜானகிக்குத் தன்னுடைய கோ டிபென்டஸீ, அதன் தோற்றம், விளைவுகளைப்பற்றிப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.
ராஜாவும் அவ்வப்போது, “என் அம்மாபோல் யாரும் இல்லை” எனப் புகழாரம் சூட்டுவதாகச் சொன்னாள். இதுதான் ஜானகிக்கு டானிக் என்றாள். இதைப் பெறுவதற்காகத் தன் பங்குக்கு அவனுக்கு எல்லாம் செய்தாள். அவள் தன் நிலைமையை மேலும் புரிந்துகொள்ள, மாற்ற யோசித்தேன்.
இப்படித் தான் செய்வதின் விளைவுகள் புரிய, அவளை ஆல் அனோன் (Al Anon) ஏ ஃப் ஜீ (AFG, Alcoholics Anonymous Family Group) என்று அழைக்கப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தேன். போதைக்கு அடிமையானவர்களின் மனைவி, பெற்றோர், கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் எனப் பாதிக்கப்பட்ட நபர்கள் குழுவாகும். இதற்குக் கட்டணமோ, அனுமதிக் கடிதமோ தேவையில்லை. இந்தக் குழுவில் எல்லோரையும் ஒன்றுபடுத்துவது வீட்டில் ஒருவரின் போதைப்பழக்கம், அதனால் நேரிடும் சஞ்சலங்கள். குழுவில், அவரவர் தங்களின் அனுபவங்களைப் பகிர, தாங்கள் செய்யும் தவறுகளை அறிய, மாற்றி அமைக்கச் சிறந்த வாய்ப்பாகிறது.
இப்போது ஜானகி அணுகியது மாற்றத்தின் முதல் கட்டம். மிக முக்கியம். ஆல் அனோன் (Al Anon)ல் பங்கேற்புடன் ஆரம்பித்து, மெல்லப் பேசத்தொடங்கினார், ஜானகி. அதே நேரம், தானாக நிறுத்திய தன் பொழுதுபோக்கை மறுபடி ஆரம்பிக்க நாங்கள் கலந்துரையாடினோம்.
தன் அம்மாவின் மாற்றத்தைக்கண்டு, ஆச்சரியப்பட்டு எங்களைக் காணவேண்டும் என ராஜா கூறியதை ஜானகி என்னிடம் பகிர்ந்தாள். அடுத்தபடியாக ராஜாவை அழைத்தேன். தன் அம்மாவிற்காக என எண்ணி வந்தான். முப்பது வயதுடையவன், ஏனோதானோ என உடை.
ஜானகிபற்றிக் கேட்க, அவனைப்பற்றிச் சொல்லச் சொன்னேன். தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று சொன்னான். இவன் ஒத்துழைப்பிற்கு அவன்போக்கில் போக முடிவெடுத்தேன்.
எங்கள் துறையில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவரவருக்கு ஏற்றவாறே சிகிச்சை முறையை அமைப்பது. நான் இதைக் கடைப்பிடிப்பதுண்டு. ராஜாவிற்கு அவர் போக்குவழியில், ஊக்குவிக்கும் முறையைக் கையாண்டேன்.
ராஜா தன் சூழ்நிலையை விவரித்தான். வேலைப்பளுவை சமாளிக்க 30 எம்.எல் மது அருந்துவதைத் தொடங்கியதாகச் சொன்னான். அவன் விரும்பிய ராதா விலகியதும் எம்.எல் அதிகம் ஆனதாகச்சொன்னான். ராதா, மது அருந்துவதைத் தடுக்க முயன்று, தோல்விபெற்றதும் விலகியதாகத் தெரிவித்தான். தன்னால் சமாளிக்க, தாங்கமுடியவில்லை என்றால் மது அருந்துவானாம். அப்படி என்றால் சமாளிக்கும் திறன் தரைமட்ட நிலையில் இருப்பதை அவன் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். பல நாட்கள் தூக்கம் சரியில்லை, பசி எடுப்பதில்லை, கவனித்து வேலை செய்யமுடியவில்லை என்பதால் வேலைக்குப் போகவில்லை என்றான்.
மது அருந்துவது பிடிக்கவில்லை என்றும் விளக்கினான். மது அருந்தினால்தான், மனோதைரியம் வருகிறதுபோலத் தோன்றியது என்றும் கூறினான். இதனை அடிப்படையாகவைத்து, ராஜாவைத், தன் எண்ணம், உணர்வு, நடத்தை எல்லாமே எவ்வாறு தான் மது அருந்த வசதிப்படுத்தி ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கிறது என்பதைக் கவனிக்கச் சொன்னேன். அவனால் புரிந்துகொள்ள முடியாததால் இவற்றை மூன்றாகப் பிரித்து: நிலை-உணர்வு-எண்ணம் என வரிசைப்படுத்தி எழுதி வரச்சொன்னேன்.
இதே தருணத்தில் அம்மாவுடன் ஒரு வாரம் அவர்கள் ஊர், குலதெய்வம் தரிசனமும் ஆனது. அந்த முழு நேரமும் மது ஞாபகம் வரவில்லை, அருந்தாமல் இருந்தான். இந்த நிலையைப்பற்றி விலாவாரியாக உரையாடியதில், தன்னுடைய சமாளிக்கும் திறனைப்பற்றி, நலத்திற்கு ஏற்றவாறு எவையெல்லாம் செய்தால், மது அருந்தும் பழக்கத்தை வெட்டி வீசமுடியும் என்பதில் கவனம் செலுத்தினோம். இதைத்தான் சற்று முன் சொன்னது, அவர்கள் போக்கில் போனால் எதிர்ப்பு இல்லாமல் அவர்களாகச் சரிசெய்ய முயல்வார்கள்.
இந்த யுக்தியை இன்னொரு தெளிவு பெறவும் உபயோகித்தேன். ராஜா தான் உறுதிகொள்ள, அவமானம் மறக்க மது அருந்துவதாகக் கூறியிருந்தார். ஏன் இப்படிக் கருதவேண்டும் என்பதை ஆராய்ந்தோம். இங்கே ஜானகியை உடன் சேர்த்துக்கொண்டேன். அவர்களும் ராஜாவுக்குத் தானாக முடிவுகளைச்செய்ய வாய்ப்பளிக்கும் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால். வீட்டு நிலவரங்கள், அனுபவங்கள் என வரிசைப்படுத்தி முடிவுகள் எடுக்கும் திறன், பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதங்களை அம்மா பிள்ளை இருவரும் தெளிவு பெறும்வரை, வெவ்வேறு கோணங்களில் பல ஸெஷன்களில் பயிற்சிசெய்தோம்.
ராஜா தான் சிந்திக்கும் விதத்தைப் பார்த்ததில், எவ்வளவு சுலபமாக ஒரே ஒரு நிகழ்விலிருந்து எப்போதும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி விடுகிறோம் என்று பளிச்சென்று புரிய வந்தது. இதிலிருந்து ராஜாவிற்குத் தன்னுடைய இன்னொரு குணாதிசயம்பற்றியும் தெளிவானது. அவனைப் பொறுத்தவரை ஒன்றை அனுபவித்தால் எப்பொழுதும் அப்படியே என்று இருந்துவிடுவான். வேறு விதத்தில் இருக்கலாம், நடந்துகொள்ளலாம் என யோசிக்கத் தோன்றாது. அதாவது எல்லாவற்றையும் நல்லது அல்லது கெட்டது என்று அச்சுப் போட்டுவிடுகிறோம் என்று. இந்த மனப்பான்மை கடிவாளம் போடும் என்று, ராஜா அனுபவ உதாரணங்களை வைத்துப் பல ஸெஷன்களில் ஆராய்ந்து புரிந்துகொண்டான்.
தான் மாற்றம் அடைவதை வெளிப்படையாகக் கூறினான். மனதில் ராஜாவிற்குச் சஞ்சலம். இதுவரையில் சந்தித்த சிக்கல்களை இனி சந்திக்கக்கூடுமே? அபாய நிலைகளை வரிசைப்படுத்தினோம். ஸெஷன்களில், ஒவ்வொன்றையும்
அவனுடைய அனுபவம் மற்றும் கதைகள் உபயோகித்துப் புரியவர; இவற்றுடன் தானாக எழுதி, மற்றும் ஜானகியுடன் கலந்து உரையாடினான். தெளிவு பிறக்க ஆரம்பித்தது.
ராஜாவும் ஜானகியும் எங்களைத் தாம் ஏன் அணுகினோம், என்னவாயிற்று, எங்கு இருக்கிறோம் என்ற சுய பரிசோதனை செய்ய விரும்பினார்கள்.
அதற்கு அவர்களை ஆராயச்சொன்னது – எதனால் அவன் மது அருந்தலை வெற்றியின் பரிசாக எண்ணியது, தன் சோகத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் மது குடித்து அதை முழுக வைத்தது, மற்றும் தோழமை மற்றவர்களுடன் இருக்கவில்லை என ஆராயப் பரிந்துரைத்தேன். ஜானகி விட்டுக் கொடுத்தது ஏன் உதவவில்லை என்பதையும் தைரியமாக ஆராய்ந்தார்கள்.
இத்துடன் முடியவில்லை. இங்குப் பகிர்ந்தது சிலவற்றையே. அவர்கள் மறுபடியும் ராதாவைச் சந்தித்து, வாழ்வில் பல மாற்றங்கள் நேர்ந்தது; அது நீண்ட தொடர்…
இந்தக் கேள்விகளோ, பதிலோ முக்கியம் இல்லை. நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் துணிச்சலாகத் தன்னை, தன் செயல், சிந்தனைகளை ஆராயத் தயாராக இருப்பதே மாற்றத்தின் ஆரம்பம் என்பேன். என்னசெய்வது என்ற கேள்வி கேட்கும் எண்ணங்கள் பக்குவத்தைக் காட்டுகிறது. அதனால்தான் எங்கள் துறையில், ஒருவர் “சரி செய்யப் போகிறேன்” என்ற ‘தயார்’ நிலையிலிருந்து ஆரம்பித்தால் எந்தப் பிரச்சினையும் பெரியது அல்லவே அல்ல. நம்பிக்கை மிகப் பெரியதே!
**********************************************************************
தென்றலே தூது செல்ல மாட்டாயோ..! — கோவை சங்கர்
இன்பமெனும் நினைவூற்றை யெழுப்பிவிடும் மென்காற்றே
துணையின்றி நிற்குமெனைக் கேலிசெயு மிளந்தென்றல்
அன்பே ஆரமுதே கற்கண்டே நற்கனியே
அன்னநடை மின்னிடையா லுளங்கவருந் தண்மயிலே
பொன்னே பொற்றொளிரே நெறிதவறாப் பெட்டகமே
பேதையெனைப் பித்தனாய்ச் செய்துவிட்ட பெண்ணெழிலே
என்றெல்லாங் கூறிடவே துடிக்கின்ற வுள்ளத்தை
என்னருமைக் கன்னியிடம் நீகூற மாட்டாயோ!
தவிப்புதருந் தனிமை எங்குமிலை இனிமை
தொலைதூரங் காதலியும் போவதிது புதுமை
புவனமதை எழிலாக்கும் வெண்ணிலவைக் காண்கையிலே
பளிங்குபோல் சிரிக்குமென் னல்லிமுகம் பார்க்கின்றேன்
உவகையொடு புத்தகமும் கருத்துடனே படிக்கையிலே
உளங்கவரும் மீன்விழியாள் பார்வையினா லழைக்கின்றாள்
செவ்வியதாய் கண்மூடி அரைத்தூக்கம் போடுகையில்
கனவில்வருங் கன்னியவள் தொட்டுதொட்டு எழுப்புகிறாள்!
என்னிதயங் கொளைகொண்ட பெண்மானைப் பிடித்தற்கு
இவ்வுலகில் பயின்றுவரும் போலீஸின் துணையில்லை
என்னுயிரின் நிம்மதியைக் குலைத்துவருங் கன்னிக்கு
ஆயுள்சிறை கொடுத்திடவே நீதிபதி இங்கில்லை
தனிமையிலே மனம்நோக படுத்திருக்கும் வேளையிலே
தண்கையு மென்னுடலில் பட்டதுபோ லிருந்திடவே
அன்புடனே ஆவலொடு அவள்கரத்தைப் பிடித்தற்கு
எழுந்தெழுந்து பிரமையென்று ஏமாற்றம் கொள்கின்றேன்!
கயல்விழி கொடியிடை நன்னுதல் பூங்குழல்
தண்கரம் பவளவாய் மென்னுடல் மலரிதழ்
மயக்குநல் மதிமுகம் ஈர்த்திடும் முன்னழகு
தயங்காது என்நினைவி லகலாது நின்றிடவே
ஐயகோ பூங்கொடியே சோதனைகள் போதாதோ
என்மனதை வாட்டுதலும் உனக்கென்ன விளையாட்டோ
மெய்யன்பன் ஓர்கணமும் பொறுத்திடவே முடியாது
தேன்சுவையு மளித்திடவே யோடியோடி வாராயோ!
போதுமுன் சோதனை நான்படும் வேதனை
பைங்கிளியே என்னருகு விரைந்துநீ வாராயோ
பேசுதற்கு பலவுண்டு தேன்குரலைத் தாராயோ
பிர்ந்துநிற்குங் கொடுமைதனை யழித்திடவே வாராயோ!
சரித்திரம் பேசுகிறது – யாரோ
மகேந்திரவர்மன்
சரித்திரத்தில் பொதுவாக – ஒரு காலகட்டத்தில் – ஒருவன் பெருநாயகனாக இருப்பான் – அருகில் இருக்கும் மன்னர்கள் அவனிடம் தோற்றிருப்பர் – அல்லது அடங்கியிருப்பர்.
ஒரு சிறு கற்பனை செய்து பாருங்கள்: அலெக்சாண்டர் – ஜூலியஸ் சீசர் – சமுத்திர குப்தன் அனைவரும் ஒரே சமயத்தில் ஆண்டால்?
அது போல ஒரு காட்சிதான் அன்று இந்தியாவில் விரிகிறது…
மகேந்திர பல்லவன் (நரசிம்ம பல்லவன்), இரண்டாம் புலிகேசி , ஹர்ஷவர்த்தனன் – மூவரும் ஒரே சமயத்தில் ஆண்டு – போரிட்டு – பெருமையுடன் நாட்டையும் ஆண்டனர். ஒவ்வொருவரும் ஒரு நாயகர்தான்.
ஒவ்வொருவரும் சரித்திர நாயகர்தான்.
இவ்விதழில் நமது நாயகர் ‘மகேந்திரவர்மன்’.
சண்டை சமாச்சாரங்களை முதலில் ஆராய்வோம்:
சாளுக்கிய – பல்லவ யுத்தங்கள் எப்படி நடந்தன என்பதுபற்றிப் பல கருத்துக்கள் – மாறுபட்ட கருத்துக்கள் – சரித்திரத்தில் – தாறுமாறாகச் சிதறிக்கிடக்கிறது.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தான். அய்ஹொளே கல்வெட்டு, ‘அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்கவந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச்செய்தது. புலிகேசியின் பெரும்படைக் கடலைக்கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்துகொண்டான்.’- என்று கூறுகிறது. புலிகேசியை காஞ்சி அருகில் வரும்வரை விட்டுவிட்டதால் அது ஒரு தோல்வி என்று ஒரு கூற்று.
புலிகேசியை காஞ்சிக்கருகில் வரவிட்டு – மகேந்திரன் – அவனைத் துரத்தினான் –என்பது பல்லவர் கூற்று. ( பின்னாளில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது). புலிகேசியை காஞ்சிவரையில் வரவிட்டு – அவனைத் துரத்தியது ராஜதந்திரம் என்பது பல்லவர் கூற்று.
சாளுக்கியன் கல்வெட்டு:
“துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பனியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” –என்கிறது.
காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினான். போர் நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. தன் நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றிவளைத்துக்கொண்டான்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருந்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான்.
கங்க அரசனான துர்விநீதன் புலிகேசியுடன் சேர்ந்து மகேந்திரனுடன் போரிட்டான். துர்விநீதன் காடுவெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுக்கட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா’வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர்செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்” என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத் தம்பி மகன்; கங்க-துர்விநிதனுக்கு மகள் வயிற்றுப்பேரன். எனவே அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும். அப்பொழுது நடந்த போர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.
சரி! சண்டை போதும்.
சமயத்துக்கு வருவோம். சமயத்தில் அன்று தென்னிந்தியாவில் பெரிய திருப்புமுனை ஏற்பட்ட காலம். சமணமதம் கோலோச்சி வந்த காலம்.
மன்னர்கள் பெரும்பாலோர் சமணத்தை ஆதரித்த காலம்.
சிம்மவிஷ்ணு வைணவத்தை ஆதரித்தாலும் – மகேந்திரன் பட்டத்துக்கு வந்தவுடன் சமணத்தைத் தழுவினான்.
சைவத்திருமுறையில் சிங்கமென வந்த திருநாவுக்கரசர் மகேந்திரனின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக்
கொண்டுவந்தார்.
அது என்ன?
சைவசமயம் மறுபிறப்பு அடைந்த பொற்காலம் பிறந்தது.
மகேந்திரன் அதற்குப் பெரிய காரணமாயிருந்தான்.
மகேந்திரன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன்.
இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன்.
சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன்.
மகேந்திரன் மாமல்லபுரத்தில் செய்தது என்ன?
நாடகத்துறையில் மகேந்திரன் செய்தது என்ன?
என்ன என்ன என்ன?
விரைவில்..
திரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ – அவள் (செந்தமிழ்த் தேன் மொழியாள்)
கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ – அவள் ( செந்தமிழ்த் தேன் மொழியாள்)
மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிட செய்யும் மோகினியோ – (அவள் செந்தமிழ் தேன்மொழியாள் )
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
ராகுதேவனின் நிலை மிகவும் கேவலமாக இருந்தது. தனக்கும் விஷ்வகர்மாவிற்கும் இடையே நடக்கும் அறிவுப் போட்டியில் தான் வெற்றி அடைந்துவருவதாக எண்ணி அதன் மிதப்பில் சற்று இறுமாந்திருந்த ராகு தற்போது தோல்வியின் அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து திக்பிரமையில் ஆழ்ந்தான்.
தன்னைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் விஷ்வகர்மா என்று முதலில் எண்ணிய ராகு , உண்மையில் அவர் தன்னைப் பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார் என்பதை அறிந்ததும் அவன் மனம் துடியாய்த் துடித்தது.
ஆனால் நிலைமை தலைக்குமேல் போய்விட்டது. ராகுவிற்கு அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி எதுவும் இல்லை. அவரும் தன்னைபோலவே இரு வரம் கேட்பது அவன் உள்ளத்தை அறுத்தது.
அவனைச் சுற்றிலும் உறைந்துகிடக்கும் ஆயிரக்கணக்கான பாம்புகளையும் பனிச்சிலைபோல நின்று கொண்டிருக்கும் தன் இரு நாக மனைவிகளையும் பார்த்தான்.
“விஷ்வகர்மா அவர்களே! தங்கள் பெருமை அறியாது தங்களுடன் மோதவந்தது என் தவறுதான். நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுங்கள் ” என்று உணர்ச்ச்சிகளை அடக்கிக்கொண்டு கூறினான்.
“ராகு தேவனே! நீ உடனடியாகச் செய்யவேண்டியவை இரண்டு. முதலாவது, நீயும் உன் நாகப்படைகளும் இனி ஒருகணம்கூட இந்த உலகில் இருக்கக்கூடாது. உங்களுக்கென்று பூவுலகில் ஒரு தளம் அமைத்துத் தருகிறேன். திருநாகேஸ்வரம் என்ற சிவத்தலத்தில் நீயும் உன் மனைவியரும் இருந்து அங்கு எழுந்தருளியிருக்கும் நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட சிவபெருமானை வணங்கி உன்னைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரவேண்டும்.
தன்னை நாடு கடத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ராகு ‘ தங்கள் உத்தரவு ‘ என்று பணிவாக அதை ஏற்றுக்கொண்டான்.
“இரண்டாவது. இது மிக முக்கியமானது. கவனமாகக் கேட்டுக்கொள் ! என் மகள் ஸந்த்யாவின் நிழலில்கூட உன் பார்வைபடக்கூடாது. அதற்கான சத்தியம் நீ செய்துதரவேண்டும்” என்றார் விஷ்வகர்மா.
ஸந்த்யாவின் நிழலில்.. என்று அவர் கூறியதும் ராகுதேவனின் மனதில் சட்டென்று ஒரு கபடப் புன்னகை தோன்றியது. மிகவும் சாமர்த்தியமாக அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டான்.
“விஷ்வகர்மா அவர்களே! நீங்கள் கேட்டுக்கொண்டபடி சத்தியம் செய்துதருகிறேன். ஸந்த்யாவின் நிழலுக்கு என்னால் எந்தவிதத் தீங்கும் நேராது. இது சத்தியம் சத்தியம்” என்று அவசர அவசரமாகக் கூறினான்.
வேண்டுமென்றே நிழலுக்குக்கூட என்று சொல்லாமல் நிழலுக்கு என்று மட்டும் கூறினான்.
வெற்றிக் களிப்பில் இருந்த விஷ்வகர்மாவும் ராகுதேவனின் வார்த்தையில் மறைந்திருந்த சாமர்த்தியத்தைக் கவனிக்கவில்லை.
அதனால் பிற்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன என்பதை அந்தக் கணத்தில் யாரும் உணரவில்லை.
ராகுவைத் தன் மனத்திலிருந்தும் அந்த இடத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்ட விஷ்வகர்மா அடுத்து ஸந்த்யாவின் நிலைமை என்னவாயிற்று என்று யோசிக்கஆரம்பித்தார்.
சூரியதேவனைத் தொடர்ந்து சென்ற ஸந்த்யாவும் சூரிய மண்டலத்திற்குள் சென்றாள். சூரிய மண்டலம் தகதகவென்று நெருப்புக் கோளமாக இருந்தது. காந்தச் சிகித்சை எடுத்துக் கொண்டதால் அவளுக்கு அந்த நெருப்புக் கோளங்களின் பாதிப்பு சகித்துக்கொள்ளும் அளவில் இருந்தது. சூரியனின்மீது அவளுக்கு இருந்த அளவிடமுடியாத காதல் எதையும் தாங்கும் மனப்பாங்கையும் அவளுக்குக் கொடுத்திருந்தது.
சூரிய மண்டலத்தின் முகப்பில் சூரியனின் சாரதி அருணன் குதிரைகளுடள் அமர்ந்துகொண்டிருந்தான். வான ஊர்தியில் அங்கு வந்து இறங்கும் ஸந்த்யாவைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. சூரியதேவனுக்கும் ஸந்த்யாவிற்கும் இடையே உள்ள உறவைப்பற்றி அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அவர்களுக்குத் திருமணம் ஆனபிறகு தோழிகளுடனும் அலங்காரப் பொருட்களுடனும் ஆடம்பரமாக வருவாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்படி திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தது ஆச்சரியமாக இருந்தது.
அதுமட்டுமல்ல. சற்று முன்தான் ஏதோ ஒரு மயக்க நிலையில் சூரியபகவானும் வந்து தன்னிடம் சரியாகக்கூடப் பேசாமல் அரண்மணைக்குச்சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரித்துவிட்டுப் படுத்துவிட்டார்.
இப்போது ஸந்த்யாதேவி வந்திருப்பதால் அதனால் என்ன பிரச்சினை வருமோ என்றும் பயந்தான்.
இருப்பினும் ஸந்த்யாதேவியை மரியாதையுடன் வரவேற்று,
” தேவி! சூரிய மண்டலத்திற்குத் தங்கள் வரவு நல்வரவாகுக! தாங்கள் திடீரென்று வந்ததால் தங்களுக்கு உரிய மரியாதையைத் தர இயவில்லையே என்ற கவலையில் இருக்கிறேன். தங்களுடைய கட்டளை யாதோ?” என்று பவ்யமாக வினவினான் அருணன்.
” தங்கள் மரியாதையை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே என்னை சூரியதேவனிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள் ஸந்த்யா.
” தேவி! தற்போதுதான் வந்த அவர் தன் அரண்மனையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று கட்டளையும் போட்டிருக்கிறார். தங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை ” என்று உண்மையான கவலையில் கூறினான் அருணன்.
” நீர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. என்னை அவரிடம் உடனே அழைத்துச் செல்லவேண்டியதுதான்” என்று கோபத்தோடு மொழிந்தாள் ஸந்த்யா .
வேறு வழியின்றி அவளை ரதத்தில் அமர்த்தி சூரியதேவனின் அரண்மனையை நோக்கிச் செலுத்தினான். அரண்மனையின் எல்லாக் கதவுகளும் அவர்களுக்காகத் தானாகவே திறந்து வழிவிட்டன.
சூரியதேவன் இருக்கும் அறைக்கு வாசலில் வந்து சேர்ந்தார்கள். அருணணின் மரியாதை கலந்த எதிர்ப்பைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத ஸந்த்யா அந்த அறைக்கதவைத் தன் கரத்தால் வேகமாகத் தட்டத்தொடங்கினாள்.
“யாரது என்னைத் தொந்தரவு செய்வது”? என்று கேட்டுக்கொண்டு கோபாவேசத்துடன் எரியும் நெருப்புபோலக் கதவைத் திறந்தான் சூரியதேவன்.
அந்த ஒளிவெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அருணனே கண்களை மூடி கைகூப்பி நின்றுகொண்டான்.
எதற்கும் கலங்காத ஸந்த்யா சூரியதேவனை நோக்கிக் கோபப் பார்வை பார்த்தாள்.
சூரிய மண்டலமே ஸ்தம்பித்துப்போயிற்று.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
நாரதரும் எமியும் அந்த விவாத மண்டபத்திற்குச் சென்றதும்தான் புரியவந்தது அது ஒரு ஸ்பான்சர் நிகழ்ச்சி என்று.
எமபுரிப்பட்டணம் பிராஜக்டை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக சிவா மற்றும் ராம் கன்சல்டிங்க் சேர்ந்து இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சன் டிவி தான் இதனை நடத்தப்போகிறது.
அவர்களின் ஆஸ்தான பட்டிமன்ற பேச்சாளர்கள் மூவரையும் அழைத்து வந்திருக்கிறது.
ராஜா , பாரதி பாஸ்கர், திண்டுக்கல் லியோனி
சாலமன் பாப்பையா தான் நடுவர்.
பட்டிமன்றம் என்றால் இரண்டில் ஒன்று. விவாதமேடை என்றால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவாதத் தலைப்புக்களைக் கொடுத்து அதில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது.
இப்போதைய தலைப்பு “எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா? ” என்பதுதான்.
பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர்.
ஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி
காத்தல் சார்பில் ராஜா அணி
அழித்தல் சார்பில் திண்டுக்கல் லியோனி அணி
இந்த நிகழ்வு எமபுரிப்பட்டணத்தில் நடைபெறுவதால் சொர்க்கபுரி, நரகபுரி மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
பிரும்மா விஷ்ணு சிவன் மூவர் மட்டும் வரவில்லை. அவர்களுக்குத் தெரியும் இதில் பெரிய பிரச்சினை உண்டாக்கப்போகிறது என்று.
காரணம் சரஸ்வதியும் பார்வதியும் லக்ஷ்மியும் நாரதர் வைத்திருந்த அழைப்பிதழைப் பார்த்து அங்கே சென்றிருக்கிறார்கள்.
நல்லவேளையாக அவர்கள் மூவரும் கல்லூரி மாணவிகள்போல மாறுவேடம் பூண்டு சபையின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
மூவரும் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய என்ன செய்வது என்று தனித்தனியே தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து சாலமன் பாப்பையா பேச எழுந்தார்.
சபை கரகோஷத்தில் நிறைந்தது.
அப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எமி நாரதரிடம் கேட்டாள்.
” நீங்கள்தான் முக்காலமும் அறிந்த ஞானி ஆயிற்றே? சொல்லுங்கள் ! எந்த அணி ஜெயிக்கும்? “
“எமி ! என்னுடைய கருத்து சரியாக இருந்தால், இன்று எந்த அணியும் ஜெயிக்காது!”
“அதெப்படி? சாலமன் பாப்பையா எப்போதும் மற்ற பேச்சாளர்மாதிரி பட்டிமன்றத்தில் இரண்டும் சரி என்று சொல்லாமல் அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் சொல்வாராமே? அவர் சொல்வது இருக்கட்டும். நீங்கள் சொல்லுங்கள் ! எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா?”
” எமி, நாமிருவரும் இந்த விவாதமேடைக்கு வந்திருக்கவே கூடாது. இங்கே பார் எமி, பிரும்மா என்னைப் படைத்த தந்தை . காக்கும் கடவுள் நாராயணர் எனது ஞானத் தந்தை. அழிக்கும் கடவுள் மகாதேவரோ எனது ஆத்மத் தந்தை. அதனால் நான் எது ஜெயிக்கும் என்று சொல்வது சரியல்ல. அது கிடக்கட்டும். நீ சொல்லு . எது ஜெயிக்கும்? “
” நான் எப்பவும் அண்ணா கட்சிதான். அழித்தல் தொழில்தான் சிறந்தது. பாருங்கள் அதுதான் ஜெயிக்கும்.”
” எமி! அதோ மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்.! யார் என்று தெரிகிறதா?”
” கல்லூரி மாணவிகள்போல் இ ருக்கிறார்களே! யார் அவர்கள்? ”
” முப்பெரும் தேவியர்தான். இந்த நிகழ்ச்சியில் அமைதியாகத் தீர்ப்பு சொல்ல அவர்கள் விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை!”
ஐயையோ! அப்போது தீர்ப்பு என்ன ஆகும்?”
“பொறுத்திருந்து பாரேன்! “
சாலமன் பாப்பையா துவக்கினார்.
(தொடரும்)
திருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் !
திருப்பாவையில் விஷ்ணுவைப் பற்றிய குறிப்புகள் எத்தனை வருகின்றன என்று கேட்டிருந்தோம்
இதோ அதற்கான பதில்:
மார்கழித் திங்கள்:
1. நந்தகோபன் குமரன்
2. யசோதை இளம் சிங்கம்
3. கார் மேனி செங்கண்
4. கதிர் மதியம் போல் முகத்தான்
5. நாராயணன்
வையத்துள் வாழ்வீர்காள்:
6. பரமன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
7. ஓங்கி உலகளந்த உத்தமன்
ஆழி மழைக் கண்ணா :
8. ஊழி முதல்வன்
9. பற்பனாபன்
மாயனை மன்னுவட
10. வட மதுரை மைந்தன்
11. யமுனைத் துறைவன்
12. ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு
13. தாமோதரன்
புள்ளும் சிலம்பின காண்:
14. புள்ளரையன்
15. பேய் முலை நஞ்சுண்டவன்
16. சகடம் கலக்கழித்தவன்
17. வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18. அரி
கீசு கீசு என்று எங்கும்:
19. நாராயணன்
20. மூர்த்தி
21. கேசவன்
கீழ் வானம் வெள்ளென்று:
22. மாவாய் பிளந்தான்
23. மல்லரை மாட்டியவன்
24. தேவாதி தேவன்
தூமணி மாடத்து:
25. மாமாயன்
26. மாதவன்
27. வைகுந்தன்
நோற்றுச் சுவர்க்கம்:
28. நாராயணன்
29. புண்ணியன்
கற்றுக் கறவைக் கணங்கள்
30. முகில் வண்ணன்
கனைத்து இளம் கற்றெருமை:
31. இலங்கை(க்) கோமானைச் செற்றவன்
32. மனத்துக்கு இனியான்
புள்ளின் வாய் கீண்டானை :
33. புள்ளின் வாய் கீண்டான்
34. கிள்ளிக் களைந்தான்
உங்கள் புழக்கடை:
35. சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
36. பங்கயக் கண்ணான்
எல்லே இளம் கிளியே :
37. வல் ஆனை கொன்றான்
38. மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
39. மாயன்
நாயகனாய் நின்ற:
40. மாயன்
41. மணி வண்ணன்
அம்பரமே தண்ணீரே
42. ஓங்கி உலகு அளந்தவன்
43. உம்பர் கோமான்
44. உம்பி
உந்து மத களிற்றன்:
45. பந்து ஆர் விரலி மைத்துனன்
குத்து விளக்கெரிய:
46. மலர் மார்பன்
47. மைத் தடம் கண்ணினாய் மணாளன்
முப்பத்து மூவர்:
48. கலி
49. செப்பம் உடையவன்
50. திரள் உடையவன்
51. செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
52. மணாளன்
ஏற்ற கலங்கள்:
53. ஆற்றப் படைத்தான் மகன்
54. ஊற்றம் உடையவன்
55. பெரியோன்
56. தோற்றமாய் நின்ற சுடர்
அம் கண் மா ஞாலத்து :
————
மாரி மலை முழைஞ்சில்:
57. பூ வண்ணா
அன்று இவ்வுலகம்:
58. அன்று இவ்வுலகம் அளந்தவன்
59. தென் இலங்கை செற்றவன்
60. சகடம் உதைத்தவன்
61. கன்று குணில் ஆவெறிந்தவன்
62. குன்று குடையாய் எடுத்தவன்
63. வென்று பகை கெடுத்தவன்
ஒருத்தி மகனாய்:
64. ஒருத்தி மகனாய்ப் பிறந்தவன்
65. ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
66. நெடுமால் .
மாலே மணிவண்ணா.
67. மால்
68. மணிவண்ணா.
69. ஆலின் இலையாய்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:
70. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறவைகள் பின் சென்று:
71. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
72. இறைவா
சிற்றம் சிறு காலே:
73. மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவன்
74. பறை கொள்வான்
75. கோவிந்தா
வங்கக் கடல் கடைந்த:
76. மாதவன்
77. கேசவன்
78. திருமால்
அம்மா கை உணவு (12) – சதுர்புஜன்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம்
பருப்புசிலி என்றொரு பதார்த்தமுண்டு – அட
என்ன ருசி சொல்லவொரு வார்த்தையில்லை !
மோர்க்குழம்போடு சேர்த்து குழைத்தடித்தால்
நிகரென்று எதுவுமே இல்லையடி !
ரசம் சாம்பார் என்று போரடித்தால் –
உசிலிதான் உதவிக்கு வந்திடுமே !
சிறப்புகள் நானும் சொல்லிடுவேன் – இந்த
தரணியில் இதற்கொரு நிகருமுண்டோ ?
இட்டிலித் தட்டினில் வேகும்போதே – மணம்
பரப்பி வரும் – வீடே கமகமக்கும் !
ஆவி பறக்க சோறெடுத்து – அதில்
பசு நெய்யும் பிசையவே போதை வரும் !
உப்பும் காரமும் நன்கு கொப்பளிக்க – அதில்
கொத்தவரைப் பிஞ்சாய்க் கலந்திருக்க
பச்சையும் மஞ்சளும் டாலடிக்கும் – கொடும்
பசியினைக் கிளறிக் கபகபக்கும் !
பருப்புசிலிக்கு மோர்க்குழம்பு – பெரும்
பொருத்தமடி ! பெரும் பொருத்தமடி !
கோபமணைக்கும் காதலைப் போல் – மோர்க்
குழம்பும் உசிலியைத் தழுவுதடி !
கூடவே ஒருபிடி கேட்குமடி – உசிலி
உச்சத்தை வேகமாய் காட்டுமடி !
கும்மென்று வயிறும் ஆச்சுதடி – உடல்
அக்கடா என்றே போச்சுதடி !
வழுக்குதடி – உள்ளே இழுக்குதடி – வெந்த
சேப்பங்கிழங்கு வழுக்கியே போகுதடி !
வெண்டையும் நன்றாய் சேருமடி – இதற்கு
வேறெதும் ஈடிணை இல்லையடி !
எப்படித்தான் முன்னோர் பிடித்தனரோ ? கண்டு
சுவைகளைத் தேடிக் கொடுத்தனரோ ?
காலம் காலமாய் அவர் கொடுத்த பெரும்
சுவைகளைப் போற்றிட வேணுமடி !
நீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
சிறுமியர் விளையாடும்
ஓட்டாஞ்சில்லை குளத்து நீரில்
ஓரக்கண்ணால் எறிந்தபோது
துள்ளி துள்ளி ஓடுவதுபோல்
நீர்பரப்பில் துள்ளி துள்ளி
நீந்தி சிலிர்க்கும் ஒரு மீன் !
அமைதியான நீர்பரப்பில்
ஆதவன் கதிர் ஒளியில்
பல வண்ணங்களில்
நீந்தி விளையாடும்
ஒளிரும் மீன்குஞ்சுகள் !
புரண்டு ஓடும் நதியில்
ஆனந்தமாக குளிக்கும்போது
நம் பாதங்களை மட்டுமல்ல
நம் உள்ளங்களையும்
முத்தமிடும் மீன்கள் !
கதிரவனின் ஒளிக்கதிர்கள்
பறக்கும் பறவை ஒலிகள்
பதுங்கும் நண்டுகள்
மணக்கும் தாமரை மலர்கள்
கண்ணாடித் தொட்டி நீரில்
தேடித் தேடி காணாமல்
கவலையுடன் நீந்தும் மீன்கள் !
லேடீஸ் ஸ்பெஷல்
குவிகம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா
அப்பா அவள் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.
ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது.
நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே
அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை.
நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்!
மாரடைப்பா
அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை
அடைத்து விட்டனவோ?
அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது.
போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது’ என்றாள் கடைசியாக.
திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது.
அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்!
இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது
நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவதும் வீட்டிலிருக்க மாட்டான்: இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டுவிட்டு வெளியே போவான்; இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான்.
அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது எனக்கே சங்கடமாக இருந்தது. நான் எழுத்தாளன் இரவும் பகலும் வீட்டிலேயே இருப்பவன்.
காலையிலும் மாலையிலும்தான் சிறிது நேரம் வெளியே போவேன்.
அந்த மனிதன் முந்திக் கொண்டு விட்டான்.
‘ஸார், நீங்கள் இங்கே தனியே இருக்கிறோமே என்று சங்கோசப்பட வேண்டாம். நான் சந்தேகப்படும் பேர்வழியல்ல; நீங்களும் உங்கள் ஜோலியோ நீங்களோ என்று இருக்கிறீர்கள். மனுஷ்யாள் தன்மையை அறிய எவ்வளவு நேரமாகும்? உங்களைப் போன்ற ஆசாமி வீட்டில் இருப்பது, நான் சதா வெளியே போவதற்குச் செளகரியமாக இருக்கிறது.
‘உங்களைப் போல என்று சொல்ல என்னிடம் என்னத்தைக் கண்டான்?
அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது.
அவன்-அவன் பெயர் கோபாலய்யர்-ஆபீஸுக்குப் போகுமுன்பே நான் முற்றத்திலிருந்த குழாயை உபயோகித்துக் கொண்டு விடுவேன். பிறகு, அந்தப் பக்கமே போகமாட்டேன். அவன் வெளியே போனதும் அவள் ரேழிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவாள். சாவித்திரி யாருடனும் வம்பு பேசுவதில்லை; வெளியே வருவதே இல்லை.
இப்படி ஒரு வாரமாயிற்று. இரவு இரண்டு மணிக்கு அவன் வந்து கதவைத் தட்டுவதும், சாவித்திரி எழுந்து போய்க் கதவைத் திறப்பதும், பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவள் அவனுடன் உள்ளே போவதும் எனக்கு அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒரு நாள் அவன் வந்து கதவைத் தட்டியபோது அவள் அயர்ந்து தூங்கிப் போய் விட்டாள் போல் இருக்கிறது. நாலைந்து தடவை கதவைத் தட்டிவிட்டான். நான் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.
‘ஒ! நீங்களா திறந்தீர்கள்? மன்னிக்க வேண்டும்! என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் உள்ளே போனான். நான் என் அறையில் போய் படுத்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.
உள்ளே போனவன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை என்ன செய்தானோ தெரியவில்லை. பிறகு தெரிந்தது; உதைத்தான் காலால் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, ரொம்ப நாழி தட்டினர்களா? மத்தியானமெல்லாம் தலைவலி, உடம்பு… தெரியாமல்…’ என்று அவள் மெதுவாக பயந்து சொன்னது என் காதில் பட்டது.
‘உடம்பு தெரியுமா உனக்கு உடம்பு தெரியச் சொல்கிறேன்! என்று சொல்லிக் கொண்டு அடித்தான் அவளை அடித்தது என் காதில் விழுந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று கடைசியாகச் சும்மா இருந்துவிட்டேன்.
பிறகு இரவு முழுவதும் மூச்சுப் பேச்சு இல்லை. ஆனால் அவள் தூங்கவே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நானும் தூங்கவில்லை.
மறுநாள் இரவு கதவை அவள் விழித்திருந்து திறந்தாள். ஆனால், அன்றும் அவளுக்கு அடி விழுந்தது. முதல் நாள் போல அவள் பேசாமல் இருக்கவில்லை.
“என்னை ஏன் இப்படி அடித்துக் கொல்லுகிறீர்கள்? நீங்கள் செய்வது எதையாவது நான் வேண்டாமென்கிறேனா?
‘ஒஹோ, இப்பொழுது உனக்கு வாய் வேறா? ‘
எவ்வளவு நாள்தான் நானும்…’
‘சீ, வாயைத் திறந்தால் பல்லை உதிர்த்து விடுவேன்?
‘உதிர்த்து விடுங்கள்!”
பளாரென்று கன்னத்தில் அறை விழுந்த சத்தம் கேட்டது. என்னை யறியாமல் நான் எழுந்து ரேழிக் கதவண்டை போய், ஸார், கதவைத் திறவுங்கள் என்றேன்.
அதற்குமுன் என்னோடு பல்லிளித்துக் கொண்டு பேசி வந்த மனிதன் உள்ளே இருந்து மிருகம் போலச் சீறினான்.
“எதற்காக?”
‘திறவுங்கள், சொல்லுகிறேன்!
‘முடியாது, ஸார்!
” திறக்காவிட்டால் கதவை உடைப்பேன்!”
அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே ரேழிக்கு வந்து மறுபடியும் கதவை மூடிக்கொண்டு என்ன ஸார்?’ என்றான்.
‘உங்கள் மனைவியை நீங்கள் அடித்தது போல் காதில் பட்டது?
இருக்கலாம், அதைப் பற்றி உங்களுக்கென்ன?
‘நீங்கள் அந்த மாதிரிச் செய்யும்படி நான் விடமுடியாது!”
“என்ன செய்வீர்கள்?”
போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன், முதலில் நானே பலாத்காரமாக உங்களைத் தடுப்பேன்.”
அவன் முகத்தில் சோகமும் திகிலும் தென்பட்டன. திருதிருவென்று சற்று விழித்தான். என்னுடைய திடமான பேச்சைக்கண்டு அவன் கலங்கிப் போனான் என்று தெரிந்தது. அவன் கோழை என்று உடனே கண்டேன்; இல்லாவிட்டால் ஒருவன் பெண் பிள்ளையை அடிப்பானா?
‘நீங்கள் சாது, ஒரு வழிக்கும் வரமாட்டீர்கள் என்று உங்களை ரேழியில் குடிவைத்தேன். நீங்கள் அனாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதாக இருந்தால் காலையிலேயே காலி செய்து விடவேண்டும்.
‘நான் காலி செய்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளுவோம். இனிமேல் நீங்கள் விடிகிற வரையில் உள்ளே போகக்கூடாது.
‘நீர் யாரையா, இந்த மாதிரியெல்லாம் உத்தரவு செய்ய?
“யாராயிரருந்தால் என்ன? இப்பொழுது நீர் நான் சொன்னபடி செய்ய வேண்டியதுதான்; மீறினீரானால் உமக்கு நல்லதல்ல.
‘பயமுறுத்துகிறீர்களோ?
பயமுறுத்துவது மட்டுமல்ல-செயலிலே காட்டி விடுவேன். வாரும், என் அறையில் படுத்துக் கொள்ளலாம். அம்மா, கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் அவள் பக்கம் திரும்பி.
போட்டு விடுவாளோ அவள்?”
‘நான் இங்கே இருக்கிறவரையில் நீர் இனிமேல் அந்த அம்மாள் மேல் விரல் வைக்க முடியாது.”
அப்பொழுது சாவித்திரி கதவைத் திறந்துகொண்டு வந்தாள். என்னுடன் அவள் பேசினதே இல்லை.
தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புருஷனைப் பார்த்து, வாருங்கள் உள்ளே! என்றாள்.
‘நீ போடி உள்ளே! உன்னை யார் இங்கே வரச் சொன்னா என்று அவன் அவள்மேல் சீறி விழுந்தான்.
‘அம்மா, விஷயம் உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நான் தலையிடாமல் இருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அனாவசியமாக உங்களுக்கு சங்கடமே என்றுதான் நானே தலையிடுகிறேன் என்றேன் அவளைப் பார்த்து.
‘நீங்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டு தலையிடுவது தான் எனக்குச் சங்கடம் என்று அவள் சொன்னாள்.
சரி, கதவு திறந்திருக்கட்டும். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். வாசற்கதவைத் தாளிட்டு வருகிறேன். இவரும் நானும் என் அறையில் படுத்துக் கொள்ளுகிறோம் என்றேன்.
நான் இங்கே படுத்துக்கொள்ள முடியாது. எனக்கு வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது என்று அந்த மனிதன் வெளியே போக ஆயத்தமானான்.
என்ன மனிதன் அவன் அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை.
சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற்கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய்ப் படுத்துக்கொண்டேன்.
தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.
அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி…!
தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.
நான் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போலத் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.
வேண்டாம், விளக்கு வேண்டாம், அணைத்து விடுங்கள் என்றாள் அவள்.
உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையிலேயே உட்கார்ந்து விட்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். ‘புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்.
‘உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேனே என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று… வந்தேன்.
‘அம்மா…’
‘என் பெயர் சாவித்திரி.
“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப் போய் விட்டது
‘இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே. அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது ?”
ஆனால் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களா? ‘
வாயைத் திறந்து சொல்ல வேண்டுமா?”
‘பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை குருவி போலத்தான் மனிதர்களும். இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?
‘புருஷன்…’
‘என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்…’
‘நீங்கள் அப்படி…’
‘நீங்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே பெரியவர்கள். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும், எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’
‘இல்லை.”
ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால், நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’
வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்த துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவையாக இருந்தன.
‘அம்மா… சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக்கொண்டு…’
’இனிமேல் என்னை என்ன செய்துவிடப்போகிறான். கொலைதானே செய்யலாம்? அதற்குமேல்?’
‘நீ இப்படிப் பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்கு புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்.
‘நல்ல வார்த்தையா? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?
பின் என்ன செய்யப் போகிறீர்கள்?”
‘என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை – அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிற வரை அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.’
அடடா, இப்படியேயா!’
வேறு வழி என்ன இருக்கிறது?
என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
‘என்ன பதில் இல்லை? என்று அவள் சிரித்தாள்.
‘நான் என்ன சொல்வது… அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?” என்று திடீரென்று கேட்டேன்.
கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே சில மாதங்களுக்குப் பிறகு.? ‘
என்ன சாவித்திரி…”
அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புது முகத்தைப் பார்ப்பீர்கள்.”
‘நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்பொழுது, நானும் பேசலாமா?
‘தாராளமாக!’
‘என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது!”
அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்று உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது…’
‘நீ எப்படி அந்தமாதிரிப் பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?”
‘எப்படியா? என் புருஷனைப்போல் என்னிடம் பல்லைக்காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன். மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?”
‘சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?
“எது சுகம்? நகைகள் போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர்; புடவை, ரவிக்கை-நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம்; நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.
‘அதாவது…’
‘என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.”
பின் எதைத்தான் சுகம் என்கிறாய்? ‘
நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?”
‘உன் புருஷன் ஏன்…?”
‘என் புருஷனுக்கு என் சரீரம் சலித்துப்போய் விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.
‘சாவித்திரி தைரியமாக ஒன்று செய்யலாமே!
‘நான் எதையும் செய்வேன். ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம் அவ்வளவுதான்.
‘உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்து பார்க்கிறேனே!”
‘வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கிவிட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.
“எது சொன்னாலும்…’
‘ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.
நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.
‘நான் போய்ப் படுத்துக்கொள்ளட்டுமா?”
தூக்கம் வருகிறதா?”
தூக்கமா? இப்பொழுது இல்லை
பின் சற்று தான் இரேன்.
‘உங்கள் தூக்கமும் கெடவா?
‘சாவித்திரி…”
‘ஒன்றும் சொல்லாதீர்கள்!”
நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது
. நிஜம்மா என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
‘பொய் சொன்னால்தான் நீ உடனே…
அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்’
‘சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.
அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக் கட்டும். என் கட்டை சாய்ந்தபிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.
‘ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? ‘
இல்லை, இனிமேல் இந்த சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கேதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது.
நான் சொல்லவில்லையா? என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல் இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன்.
அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள்.
இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.
மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்… என் படுக்கையில் அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஒய்ந்து போனது போலப் பிரித்த படியே கிடந்தன.
திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.
‘சாவித்திரி, என்னம்மா? என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்.”
போதும்!”
‘சாவித்திரி, விளக்கு…’
அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.
‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.
‘நீ சொல்வது அர்த்தமாகவில்லை, சாவித்திரி!’
‘இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்!”
‘ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’
‘ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டுச் சிறிதும் தயங்காமல் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.
சட்டென்று என் உள்ளத்திலும் சற்று எரிந்த விளக்கு அணைந்தது.
போதும்!
எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா,என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்…?
******
கலாமோகினி, ஜனவரி-19
நேற்று இன்று2 நாளை! நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
தங்கள் ஆறாவது படைப்பாக நான்கு குறு நாடகங்களை அரங்கேற்றியது தியேட்டர் மெரீனா – சுஜாதா அவர்களின் மூன்று சிறுகதைகள் மற்றும் ஜெயராமன் ரகுனாதனின் ஒரு கதை – குறுநாடகங்களாக மேடையில் ஜவஹர் சேகர் இயக்கத்தில் நடிக்கப்பட்டன. அறிவியல் கதைகளை (Science Fiction) தமிழில் ஓரளவுக்குப் பிரபலமாக்கியது சுஜாதா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவற்றில் மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்து, நாடகமாக்கி, ஒரு விஷுவல் ட்ரீட்(மெண்ட்) கொடுக்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் தியேட்டர் மெரீனா என்றே சொல்ல வேண்டும்! ஜெ.ரகு மற்றும் தியேட்டர் மெரீனா குழுவினருக்கு வாழ்த்துக்கள்!.
இன்றைய அரசியல் பேசியபடியே ஒரு டீக்கடை பெஞ்ச் – அரசியல்வாதி, அவர் அல்லக்கை, பொதுஜனம் (ஒருவர்) – பேசியபடியே டீக்கடைக்காரர் ஒவ்வொரு கதையாக அறிமுகப்படுத்துவது நல்ல உத்தி மற்றும் காமிக் ரிலீஃப்! இந்த வசனங்களை எழுதியவர்(கள்) நகைச்சுவையுடன் இன்றைய அரசியலை அலசியிருக்கிறார்(கள்)! சில வசனங்கள் கரண்ட் பாலிடிக்ஸ் பேசுகின்றன. ஜவஹர் சேகர், பிரசன்னா, வெற்றி, கார்திக், முகுந்த் எல்லோருமே நல்ல ‘டைமிங்’ சென்சுடன் டயலாக் பேசினார்கள் – சேகர் சினிமா சிரிப்பு நடிகரை நினைவுபடுத்தும் கை ஆட்டங்களைத் தவிர்க்கலாம் – ஒரிஜினலாகவே அவருக்கு நல்ல காமெடி வருகிறது.
மகாபாரதச் சிறுகதை ‘நச்சுப் பொய்கை’ (நேற்று) – சுஜாதா தன் பாணியில், அதன் சீரியஸ் தன்மை குறையாமல் எழுதி, முடிவில் ஒரு அறிவியல் உண்மையைக் கூறி அசத்தியிருப்பார்! அப்படியே நாடக வடிவம்பெற்று, சுவை குறையாமல் நடிக்கப்பட்டது – கொஞ்சம் நையாண்டியைக் குறைத்திருக்கலாமோ என்று தோன்றியது; ஏனெனில், கதையில் நம்மை எதிர்பாராத அறிவியல் உண்மையைக் கூறிப் பரவசப்படுத்தும் சுஜாதா, இந்த கலாட்டாவில் மறைந்து விடுகிறார்.
ரகுநாதன் தன் ‘இரண்டாவது கதவு’ (இன்று) நாடகத்தை, வாத்தியார் பாணியிலேயே சொல்லியிருக்கிறார் – சபாஷ்! இந்தப் பிறவியில் பெண்களைக் கொடுமைப்படுத்துபவர்களுக்கு, நரகத்தில் எண்ணைக் கொப்பரைதான் என்பதை நகைச்சுவையாக சொல்கிறார் – கொடுமைக்கார கணவன், அப்பாவியாய் அடங்கி நடக்கும் அவன் மனைவி, மகன், மகள் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் – நரகத்தின் முதல் வாயிலில் செல்ஃபி எடுத்துச்செல்லும் பெண், நொண்டி, அரசியல்வாதி எல்லோரும் நொடியில் சிரிக்க வைக்கிறார்கள்! இளங்காதலர் உரையாடலில், ரகுநாதனுக்குள் உறைந்திருக்கும் சுஜாதா தெரிகிறார். வெல் டன் ரகு!
“கடவுள் பெட்டி” (இன்று) – பெட்டிக்குள்ளிருக்கும் கடவுள் வெளிவரும் அறிவியல் புதினம்! நாடகம் முழுதும் சுஜாதாவின் கைவண்ணம் தெரிகிறது. ஶ்ரீனிவாசன், தினேஷ், கிரிதரன் மூவருமே சிறப்பு – தினேஷின் ஆட்டத்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா சபாஷ்! ‘இறக்கிறானா, பறக்கிறானா’ வில் சுஜாதாவின் முத்திரை!
“தீபாவளி” (நாளை) – நாளைய ரோபோக்கள் உலகில், வர்ச்சுவல் பாத்திரங்கள் கொண்டாடும் தீபாவளியும், அதன் நகைச்சுவையும் (வழக்கமான தமிழ் நாடக பாணியில் வசனமும், நடிப்பும்!) – குறிப்பிட்ட நேரம் முடிந்தபிறகு, அவை மறைந்திட, மீண்டும் ரோபோ – இன்றைய அவசரமான, இயந்திர வாழ்க்கையில் நாம் எவற்றையெல்லாம் இழந்துவருகிறோம் என்பதை சுஜாதா, எதிர்கால இமாஜினரி மனிதர்களுடன் (இயந்திரங்களுடன்) தீபாவளியை இணைத்து எழுதியிருந்ததை, நல்ல முறையில் நாடகமாக்கியிருக்கிறார்கள்- அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தக்ஷினின் இசை நாடகத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது – கடவுள் பெட்டி டான்ஸ், தீபாவளி ரோபோ இசை எல்லாமே சிறப்பாக செய்திருக்கிறார்.
செட்ஸ், லைடிங் எல்லாமே கதைகளுக்கு ஏற்றபடி, அமைக்கப்பட்டிருக்கின்றன.
சுஜாதா நிச்சயமாக வாழ்த்தி மகிழ்ந்திருப்பார் – தன் அறிவியல் கதைகளை சிதைக்காமல் நாடகமாக மேடையேற்றியதற்காக!
மேலும் சுஜாதா கதைகளை நாடக வடிவில், விஷுவலாகக் காணும் சாத்தியக்கூறுகள் நிறையவே தென்படுகின்றன!
நல்ல முயற்சி – தியேட்டர் மெரீனா, ரகுனாதன் மற்றும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் வாழ்த்துக்கு உரியவர்கள்!
டாக்டர் ஜெ.பாஸ்கரன்
மதுரை சின்னபுள்ள.
இவர்தான் சின்னப்பிள்ளை!
அவர் என்ன சாதனைகள் செய்தார்?
எதற்காக இந்தப் பட்டம் ?

களஞ்சியம் என்ற மகளிர் சுய உதவிக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

- மகளிர் சுய உதவிக்குழு துவக்கும்போது பதினான்கு மகளிர்கொண்ட சுய உதவிக்குழுவிற்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாயிரம் மகளிர்க்குத் தலைவியானார்.
- ஏழு மாநில மகளிர் களஞ்சிய சுய உதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
- தற்போது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம், ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களைச் சேர்ந்த இருநூற்று நாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இக்கூட்டமைப்புக்குள் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ எட்டு இலட்சம் மகளிர்.
