தலையங்கம்

ஜூன்   2014 

                         பூ : ஒன்று ———————- இதழ் : ஏழு    

image

தேர்தல் முடிந்து மோடி அறுதிப் பெரும்பான்மையுடன் பதவியில் அமர்ந்து விட்டார்.

அவரைத் திரிசங்கில் நிறுத்தாமல் முழு உரிமையுடன் செங்கோல் கொடுத்த இந்திய வாக்காளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்! 

காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது! அவர்கள் தங்களைப் புடம்  போட்டு எடுத்துக் கொண்டால் தான் அடுத்த முறை  தலை நிமிர்த்திப்  பார்க்க முடியும்!

தமிழகத்தில் அம்மாவும், வங்காளத்தில் தீதியும்  பெரும் அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ஆனால் அவர்கள் உதவியில்லாமலே டெல்லியில் ஆட்சி அமைந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை!

பி ஜே பியும் ,அண்ணா தி மு கவும் இந்த அளவு வெற்றி பெறும் என்று எந்தக் கருத்துக் கணிப்பும் கூறவில்லை!

இந்திய வரலாற்றில் பெருமையான மாற்றங்களைப் புரிய இது ஒரு  அருமையான  சந்தர்ப்பம்!

நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்!

===================================================

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

===================================================

சங்கராபரணம்

ஜெய   ஜெய   ஜெய   ஜெய சங்கரா !
ஹர    ஹர    ஹர      ஹர  சங்கரா !

image

சங்கரர்      தலையில்   பதிந்த       சந்திரன்
      சுந்தர வடிவாய்    மாறிற்றோ?
சங்கரர்      சடையில்   சிக்கிய நதியும்
      புனித கங்கையாய்  மாறிற்றோ?                    ( ஜெய )

சங்கரர்      நெற்றியில்  தெறித்த     தீச்சுடர்     
      ஆறுமுகமாய்      மாறிற்றோ?
சங்கரர்      தோளைச்   சுற்றிய      பாம்பு
      சங்கராபரண       மாயிற்றோ?                       ( ஜெய )

image

சங்கரர்      கழுத்தில்    தங்கிய     நஞ்சும்
      நீல   கண்டமாய்   மாறிற்றோ?
சங்கரர்      கரத்தில்     பட்ட        கரிமுகம்
      கணபதி     வடிவாய்    மாறிற்றோ?              ( ஜெய )

சங்கரர்      விரலின்    ஞான       முத்திரை
      தட்சிணா    மூர்த்தியாய் மாறிற்றோ?
சங்கரர்      இடையில்   கட்டிய     ஆடையும்
      புலித்        தோலாய்    மாறிற்றோ?              ( ஜெய )

 
சங்கரர்      தூக்கிய     இடது       பாதம்
      தில்லைக்    கூத்தாய்     மாறிற்றோ?
சங்கரர்      உடலில்     இணைந்த   சக்திதான்
      அர்த்த      நாரியாய்    மாறிற்றோ?              ( ஜெய )

 
சங்கரர்      பிறந்த      மேனி       அழகு
      பிட்சாண்ட   ரூபம்  ஆயிற்றோ ?
சங்கரர்      கொண்ட    யோக       நிலைதான்
      லிங்க    வடிவாய்    மாறிற்றோ?              ( ஜெய )

image

குட்டீஸ் சுட்டீஸ் (சித்ரா ப்ரியா)

image

…“கேட்கமாட்டேன்மா …கேட்கமாட்டேன்மா …” – பக்கத்து வீட்டுச் சிறுவனின் அலறல் என்னை என்னமோ செய்தது. எவ்வளவு சொல்லியும் அலறியும் அம்மா அடிப்பதை  மட்டும் நிறுத்தவில்லை. 

பக்கத்து வீட்டுக்கு ஓடினேன் “ ஆமா… அந்தப் பையன் தான் கேட்கமாட்டேன் … கேட்கமாட்டேன்னு அலறரானே! இன்னும் ஏன் அடிக்கிறீங்க .. உங்களுக்கு இரக்கமே கிடையாதா ” என்று அந்தச் சிறுவனின் தாயிடம் பொரிந்து தள்ளினேன்!

அந்தப் பையனின் அம்மா என்னை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்து . ‘ஆமா. என்னவோ வக்காலத்து வாங்க வரீங்களே .. நான் இனி அம்மா சொன்னா  கேட்பியா  கேட்பியான்னு அடிச்சுக்கிட்டிருக்கேன் .அவன் என்ன திமிர் இருந்தா   …கேட்கமாட்டேன்மா ..கேட்கமாட்டேன்மான்னு சொல்லுவான்’ என்று மறுபடியும் அடிக்க ஆரம்பித்தாள்!

This gallery contains 2 photos.

பொன்னியின் செல்வன் நாடக விமர்சனம் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்கியின் மகோன்னதப் படைப்பான பொன்னியின் செல்வனை மூன்றரை மணி நேர நாடகமாக்கி  நம்மை  மெஸ்மரிசத்தில் ஆழ்த்திய மேஜிக் லேண்டர்ன்  குழுவினரை  எப்படிப்  பாராட்டுவது? பொதுவாக பிரபலமான கதையைக் கையாளும்போது நமது கற்பனை முகங்கள் நிஜத்தைப் பின்னோக்கித் தள்ளிவிடும். ஆனால் இதில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட வந்தியத் தேவன், அருள்மொழி,ஆதித்த கரிகாலன், குந்தவை, பூங்குழலி, மதுராந்தகன்,சேந்தன் அமுதன், சுந்தர சோழன், ஆழ்வார்க்கடியான் அனைவரையும் சந்திக்கும் போது நேராகப் … Continue reading

மதுரை ஸ்பெஷல்

image

மதுரைக்காரங்க எல்லாம் பாசமான பய பிள்ளைங்க!

மதுரைன்னு சொன்னதும் நமக்கு நினைவு  அங்கிட்டு  இங்கிட்டு போகாமே ஞாபகம் வருவது என்ன தெரியுமா? 

 • வை ராஜா கை  .. (வைகை) .. அழகர் ஆத்தில் இறங்குகிற  காட்சி .  மீனாக்ஷி திருக்கல்யாணம் !
 • மதுரை மல்லி ! உலக பேமஸ் !
 • மீனாட்சியம்மன் கோவில்
 • திருமலை நாயக்கர் மகால்
 • வண்டியூர் தெப்பக்குளம்
 • காந்தி மியூசியம் 
 • மாட்டுத் தாவணி
 • அழகர் கோயில்
 • பழமுதிர் சோலை
 • திருப்பரங்குன்றம் 
 • கையேந்தி பவன் -இட்லிக் கடை
 • சுவையான தென்னங்குருத்து 
 • அவிச்ச டீ 
 • முள் முருங்கை வடை 
 • பசுமலை
 • நாகமலை
 • தல்லாகுளம்
 • தமுக்கம் மைதானம்
 • பாண்டியர் தலைநகர்
 • தமிழ்ச் சங்கம்
 • பொற்றாமரைக்  குளம்
 • திருவிளையாடல்
 • கண்ணகி எரியூட்டு படலம் 
 • விளக்குத்தூண் ஜிகிர்தண்டா
 • மங்கம்மா சத்திரம் 
 • ஜல்லிக்கட்டு 

வந்தாள் தந்தாள் நின்றாள்

image

வீணை      ஒன்று      கையில்    கொண்டு
      வாணி      அங்கு       வந்தாள்
மோனை    எதுகை      சேர்ந்த      பாடல் 
      பாடச்       சொல்லிச்   சென்றாள் !
 
தீபம்        ஒன்று       கையில்     கொண்டு
      லக்ஷ்மி     அங்கு       வந்தாள்
கோப       தாபம்       போக்கி      விட்டு
      பொன்னும்   பொருளும்   தந்தாள் !

வேலை     ஒன்று       கையில்     கொண்டு
      சக்தி        அங்கு       வந்தாள்
காலை      முதல்       மாலை      வரை
    வேலை செய்யச் சொன்னாள்  !

 

image

மாலை      ஒன்று       கையில்     கொண்டு
      கோதை      அங்கு       வந்தாள்
மாலை      கொண்டு    மாலை      வென்ற
      பாவை      பாடல்      தந்தாள் !

 

image

ஆலோலம்  பாடிக்       கொண்டு
      வள்ளி      அங்கு       வந்தாள்
வேலவனைக் கண்டு நின்று
      வேண்டும்   வரம்        தந்தாள் !

கணக்கு

image

image

image

பத்தாவது படிக்கும் ராமனுக்கும் சீதாவுக்கும் கடும் போட்டி. கணக்கில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. ராமன் ராமானுஜன் என்றால் சீதா சகுந்தலா தேவி.கணித ஒலிம்பியார்ட் வந்தது. வெற்றி பெறுபவர்களுக்கு அமெரிக்காவில் தனிப்  பயிற்சி. ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆசிரியர்கள் – ஐ ஐ டியிலிருந்து வந்த புரபஸர்கள் திணறி விட்டார்கள். எல்லா டெஸ்டிலும்  இருவரும் சமமாக நூத்துக்கு நூறு வாங்கியிருந்தார்கள்.

 டை பிரேக்கர் மாதிரி மிகக் கடுமையான கணக்கைக் கொடுத்து இருவரையும் பத்தே நிமிடத்தில் போடச் சொன்னார்கள். ராமன் ஐந்து நிமிடத்தில் அதை முடித்து விட்டான். சீதாவுக்கு அது சுத்தமாகத் தெரியவில்லை. கண்களில் கடகடவென்று கண்ணீர். ராமன் தன் பேப்பரை அவளிடம் கொடுத்து விட்டு வெளியேறினான்.

சீதா இப்போது அமெரிக்காவில் கணிதப் பேராசிரியை. ராமன் மளிகைக் கடையில் கணக்கு எழுதுகிறான்.  

                  பனசங்கரி

image

வரம்  யாவும்   தருகின்ற  பரமேஸ்வரி – நல்ல
அருள்  காட்டும்  அவளே நம்  பனசங்கரி !
திரு நடனம்  புரியும் திரி   புரசுந்தரி !
இரு விழியில் ஒளி காட்டும் சிவசங்கரி !
 image
பால்தரும்  அன்னையே  பாகேஸ்வரி! – பொன்
வாளினைப்  பற்றிடும்   ராஜேஸ்வரி !
மாந்தரை  வாழ்த்திடும் மாதேஸ்வரி – நம்
சிந்தையில்  வீற்றிடும்   ஜெகதீஸ்வரி !
 
வீரத்தின்  இருப்பிடமே வீரேஸ்வரி ! – அழகு
மாரனின்  வில்புருவம்  காமேஸ்வரி
மலர்கின்ற பருவத்தில் கமலேஸ்வரி – தினம்
புலர்கின்ற   பொழுதினிலே  யோகேஸ்வரி !!

கோச்சடையான் (திரை விமரிசனம்)

image

கோச்சடையான் ஒரு பொம்மைப் படம்.

அதுக்கு பர்பார்மன்ஸ் கேப்சர் டெக்னாலஜி அப்படின்னு மேக்கப் போடுவதெல்லாம் சும்மா ‘லொளாங்காட்டி’. 

கதை திரைக்கதை வசனம் ஓகே.
பாட்டு .. ம்ம்  ஓகே 
ரஜினிகாந்தின் டயலாக் டெலிவரி வழக்கம் போல நல்லாயிருக்கு !
தீபிகா, சரத்குமார்,( அடையாளம் சத்தியமா தெரியலே) ஆதி,நாசர் நாகேஷ் எல்லாம்  இருக்காங்க.. அவ்வளவு தான். 

ஒருவேளை ராணா ரஜினியை  மட்டும்  பர்பார்மன்ஸ்   கேப்சரில் காட்டிவிட்டு  கோச்சடையான் மற்றும் மற்ற நடிகர் நடிகையரை  லைவா காட்டியிருந்தா சூப்பராயிருந்திருக்கும்.

நாம டெக்னாலஜியில முன்னேற இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். 

எல்லாரும் ஒருமுறை கட்டாயம் பார்த்துவிட்டு  அப்புறம் குறைகளைச்  சொல்லலாம். 

மீனங்காடி (ஏழாவது பகுதி)

image

“ என்ன ஆச்சு உங்களுக்கு? டீ கப் தொலைந்து போச்சா?” என்று சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே வந்தான்,  நல்ல சுருட்டை முடியுடன் வாட்ட சாட்டமாக அந்த மீனங்காடி இளைஞன், அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டான்.

‘இதோ இருக்கே’ என்று தட்டுத் தடுமாறி பக்கத்துத் தூணில் இருந்த ஒரு காலி கப்பைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் மேரி. பிறகு மெதுவாக அவனிடம் ‘ இங்கு என்ன நடக்கிறது? எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இதற்கு முன்பு இங்கு வந்திருக்கிறீர்களா?”

“ஊகூம். பெரும்பாலும் லஞ்சுக்கு அந்த ஏரிக்கரைக் கடைக்குத் தான் போவேன்”

image

“ புரியுது ! அங்கே அமைதியாக இருக்கும் ! ஆனால் இங்கே அப்படி இருக்காது ! எது உங்களை இங்கே வரவழைத்தது?” தெளிவாகவே கேட்டான்.

பக்கத்தில் இன்னொரு மீன்காரன் “ யாருக்கு வேணும் மீனு மீனு” என்று வேண்டுமென்றே கட்டைக் குரலில் கத்தத் தொடங்கினான்.  இன்னொரு மீன்காரன் மீனைக் காட்டி ஒரு பெண்ணை வேடிக்கையாகப் பயமுறுத்திக் கொண்டு இருந்தான்.  மேரியின் தலைக்கு மேலே ஒரு பெரிய கடல் நண்டை  ஒருத்தன் தூக்கிப் போட்டான். “அந்த நண்டு பொண்ணு பார்க்கப் பக்கத்து ஊருக்குப் போகுது பார்” என்று சொல்ல உடனே ஆரம்பித்து விட்டது கோரஸ்-  ‘போகுது பார் போகுது பார்’. ஒரு ஜாலியான பைத்தியக்காரக் கும்பல் போல் இருந்தது மேரிக்கு. ‘கேஷ் கவுண்டர்’ அருகே ஒருத்தன் வினோதமான ‘கேப்’ போட்டுக் கொண்டு ‘தையா…. தையா’ என்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு பொருட்காட்சி மைதானம் மாதிரி இருந்தது அந்த இடம்.

மேரி பராக்குப் பார்த்து விட்டுத் திரும்பினால் அந்த இளைஞன் கூச்சலைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அவள் முகத்தையே பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “கடவுளே ! அவன் என் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று மேரி நினைத்தாள்.  ஆனால் அவனிடம் என்ன சொல்வது? ஆபீஸில் ஏகப்பட்ட பிரச்சினைகள் அன்று சொன்னால் அவனுக்குப் புரியுமா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்வோம் என்ற கணக்கில் அவள் ஆபீஸ் பிரச்சினைகள் பற்றி சுருக்கமாகச் சொன்னாள்.

அவன் பெயர் டோனி. மேரி தன் மூணாம் மாடி அலுவலகத்தைப் பற்றிச் சொல்லும்போது பொறுமையாகக் கேட்டான். யாரோ தூக்கி எறிந்த மீன் அவன் மேலே பட்டு கீழே விழுந்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. மேரி சொன்ன தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிக் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

சுருக்கமாகச் சொல்லி விட்டுத் தலையை மெல்லத் தூக்கிக் கேட்டாள்.’என்ன நினைக்கிறீர்கள் எங்கள் குப்பைத் தொட்டி டிபார்ட்மெண்டைப்பற்றி?´ டோனி உடனே பதில் எதுவும் சொல்லி விடவில்லை. சற்று யோசித்து விட்டு “ மோசமான ஆபீஸ் தான். நானும் அதுமாதிரி இடங்களில் எல்லாம் வேலை பார்த்திருக்கிறேன் ! ஏன் இந்த ‘மீனங்காடி’ கூட முதலில் அபப்டித்தான் இருந்தது. இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டான்.

“ ஜாலியான சத்தம் ! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் “ தயங்காமல் சொன்னாள் மேரி.

“இந்தக் கும்மாளம், வேடிக்கை, விளையாட்டு எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

“ ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு”

“ எனக்கும் இது பிடிச்சிருக்கு ! இங்கே வேலை பார்த்து விட்டு வேறு எங்கேயும் வேலை பார்க்க முடியும்னு தோணலை.  முன்னாடி இந்த இடம் நீங்க சொன்னீங்களே அந்தக் ‘குப்பைத் தொட்டி’மாதிரி தான் இருந்தது.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதை மாத்தணும்னு முடிவு பண்ணினோம்.  அதன் முடிவு தான் இந்த ஜாலி ! வேடிக்கை !. இந்த சந்தோஷம் உங்கள் டிபார்ட்மெண்டுக்கு வரணுமா? “

“ வேணும் ! நிச்சயமா வேணும் ! அது தான் சரியான மருந்து “  மேரி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ நான் வேணும்னா இந்த ‘மீனங்காடி’ எப்படி மாறியது என்று சொல்றேன்.  யாருக்குத் தெரியும்? அதிலிருந்து உங்களுக்கு ஏதாவது யோசனை பிறந்தாலும் பிறக்கலாம்.”

image

“ ஆனா  எங்ககிட்டே தூக்கிப் போட்டுப் பிடிக்க எதுவுமே இல்லை.  நாங்க செய்யறதெல்லாம் ரொம்ப அறுவையான வேலை அதையே திரும்பத் திரும்ப……

“ நிறுத்துங்க மேடம் ! தூக்கிப் போட்டுப் பிடிக்கிறதில் இல்லை இந்த சந்தோஷம் ! உங்க வேலை நிச்சயமா இதை விட வித்தியாசமானதுதான்.  உங்களுக்குப் பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.  நான் ஏன் உங்களுக்கு உதவி செய்யக் கூடாது? நாங்க எப்படி இந்த இடத்தை இப்படி ஜாலியான வேலையாக மாற்றினோம் என்பதைச் சொல்லுகிறேன். இந்த ‘மீனங்காடி’ எப்படி ஒரு ஜாலியான வியாபாரத் தலமாக மாறிய கதையைச் சொல்லுகிறேன். நீங்க அதைப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னா அது உங்களுக்கு உதவியா இருக்காது? “ டோனி கேட்டான்.

“நிச்சயமா ! ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்காக இதைச் செய்யணும்?” மேரி கேட்டாள்.

(தொடரும்) 

மாக்களாய்ப் போனோமே! (கோவை சங்கர்)

image

மக்களையும் மாக்களையும் பிரிப்பது  ஓர்காலே!
பாகையையும் பகையையும் பிரிப்பது அதேகாலே!

இந்தியராம் நாமெல்லாம் ஒர்குலம் ஒர்ஜாதி
எம்மதமும் சம்மதமென சொல்லிவிடுவோம் ஓர் செய்தி 
எல்லோரும் மன்னராய்ப் பாகைசூடி வாழ்வதுவே  
காந்திகண்ட ராஜ்ஜியத்தில் பலமான அஸ்திவாரம் 

ராமரும் அல்லாவும் ஏசுவும் பகையில்லை 
ஓரினமாய் இருப்பதுவே அவர்காட்டிய வாழ்வுநிலை 
மதங்களின் போதனை அன்பும் அரவணைப்பும் 
மதப்பெயரில் நம்சாதனை கொலைகளும் கொள்ளைகளும் 

பாகையின் காலெடுத்து பகையாகிப் போனோமே
மக்களுக்குக் கால்கொடுத்து மாக்களாக  ஆனோமே!

திரு எழு கூற்றிருக்கை  என்பது தமிழ் கவிதையில் பிரபந்த வகையில் ஒன்று. இவற்றில் அஷ்ட நாக பந்தம், ரத பந்தம்,முரச பந்தம், பதும பந்தம் என்று பல வகை உண்டு.  

ரத பந்தம் என்றால் கவிதை ஒரு ரத (தேர்)  அமைப்பில் இருக்க வேண்டும்.மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் கீழே குறுகியும்  இருப்பது ரதத்தின் தன்மை. கவிதையும் அதே போன்று இருக்க வேண்டும். 

திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலும் கீழேயும் செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.

                                            1
                                         1 2 1
                                      1 2 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 


இடையில் தேர் தட்டு … … … … … … .

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
                             1 2 3 4 5 6 5 4 3 2 1
                                1 2 3 4 5 4 3 2 1
                                   1 2 3 4 3 2 1
                                      1 2 3 2 1
                                         1 2 1
                                            1 

  பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிக்கும் என்றால் அது தான் எழு கூற்றிருக்கை என்பதாகும். 

அருணகிரிநாதர் இத்தகைய பாடல்களைப் பாடியுள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு 

http://www.kaumaram.com/thiru_uni/tpun1326.html என்ற சைட்டைப் பார்க்கவும்.                                 

முயற்சி

image

மகாபலிபுரம் கடல் அருகே திவாகர் உட்கார்ந்து கொண்டிருந்தான். அருகே ஒரு ஜெர்மன் ஜோடி கடலில் குளிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று இவன் கூறியதை அவர்கள் கேட்கவில்லை. கொஞ்சம் நீஞ்சீவிட்டு புருஷன்காரன் கரைக்கு வந்துவிட்டான். அவளுக்கு வர மனசில்லை. அப்போது ஒரு பெரிய அலை அவளைத் தூக்கி எறிந்தது. அப்போது தான் திவாகருக்கும் புரிந்தது அவர்கள் இருவருக்கும் நீச்சல் அரைகுறையாகத் தான் தெரியும் என்று. அலை அவளை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. புருஷன் ‘ஹெல்ப்’ ஹெல்ப் என்று கத்தினான். திவாகர் தண்ணீரில் பாய்ந்து அலைகளுடன் போராடி அவளைக் காப்பாற்றிக்  கரை சேர்த்தான். புருஷன் திவாகரின் கையைப் பிடித்துக் கொண்டு ‘டாங்கே டாங்கே ’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். இருவரும் திவாகரின் அட்ரஸை வாங்கிக் கொண்டு  போனார்கள்.

இரண்டு வருடம் கழித்து திவாகருக்கு பெர்லின் வர டிக்கட், செலவுக்குப் பணம்,விசா வாங்க சர்டிபிகேட் எல்லாம் அந்தத் தம்பதியர்களிடமிருந்து வந்தது. அந்தப் பெண் தேசிய அளவு நீச்சல் வீராங்கனை ஆனதற்கு நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள!    

டாக்டர் ஜோக்ஸ்

image

டாக்டர்! எனக்கு கொஞ்ச நாளா கண் மங்கலாத் தெரியுது.!

தப்பு! உங்களுக்கு சுத்தமா கண் தெரியலை! இது கண் டாக்டர் கிளினிக் இல்லை. கண்டக்டர் வீடு.

image
டாக்டர்! எனக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றீங்களே! நான் செகண்ட் ஒபினியன் கேட்கலாமா?

ஓ! தாராளமா! நாளைக்கு இதே நேரம் வாங்க! சொல்றேன்!

image

டாக்டர்! எனக்கு ரொம்ப டல்லாயிருக்கு! உற்சாகமே இல்லை!
இந்த மருந்தை ஒருவாரம் குடியுங்க! சரியாப் போயிடும்!
என்ன மருந்து டாக்டர் இது!
டாஸ்மாக் சரக்கு தான்!

image

டாக்டர் பல்லை பிடுங்க எவ்வளவு நேரம் ஆகும்?
ஒரு நிமிஷம் தான்!
அதுக்கா ரெண்டாயிரம் ரூபாய் பீஸ்?
சரி! உங்களுக்காக வேணும்னா ஒரு மணி நேரம் பிடுங்கறேன்!

                        இலை இலை இலை

image

 

மலை போல       குவிஞ்சிருக்கு      இலை இலை இலை !
மனசெல்லாம்      நெறைஞ்சிருக்கு    தழை தழை தழை !!

வாய்  மணக்க     சாப்பிட வாழை இலை
வாய்  சிவக்க போட்டுக்க  வெத்திலை
தோரணமாய் தொங்கி   நிற்கும்   மாவிலை
சிவனுக்கு  ஆகி  வந்த   வில்வ இலை

மந்திரிக்க  தெளிக்க வந்த வேப்பிலை
சாப்பாடு  ருசிக்க வந்த கருவேப்பிலை
ஓலைஓலையாய்  குவித்து  வந்த  பனை இலை
கீத்துக் கீத்தாய்  பின்னி  வந்த  தென்னை இலை

காயம்  பட்டா  கசக்கிப்  போட பச்சிலை
தண்ணி  பட்டா  ஒட்டாத  தாமரை இலை
வேதாளம்  ஏற  வைக்கும்  முருங்கை இலை
கை சிவக்க போட  வந்த மருதாணி இலை

பிள்ளையாருக்குப் பிடித்த அரச இலை எருக்கு இலை
எல்லோருக்கும் தேவையான மரஞ் செடி  கொடி இலை
வெயில் வரும்   காலத்தில்   உதிரும் இலை
மழை வந்தால்   மறுபடியும்  துளிர்க்கும் இலை !!

Only great minds can read this!!

உங்களுக்கு ஒரு சவால்!
உங்களால் இதை வேகமாக படிக்கமுடியுமா? 

image

fi yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too 
Cna yuo raed tihs? Olny 55 plepoe out of 100 can. 
i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno’t mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!

read it in an e-mail

 முடிந்ததா? என்ன ஆச்சரியம்! இவ்வளவு அச்சுப் பிழை இருந்தாலும் நம்மால் வேகமாகப் படிக்க முடிக்கிறதல்லவா? 

அது தான் நமது மூளையின் ஸ்பெஷாலிட்டி!

முதல் எழுத்தும்  கடைசி எழுத்தும் சரியாக இருந்தால் நம்முடைய மூளையால் மற்றப் பிழைகளைப் பொருட்படுத்தாமல் சரியாகப் படிக்க முடியும்!

நமக்கெல்லாம் எதுக்கு spellbee டெஸ்ட் ! சுத்த வேஸ்ட் ! 

(அ) ராமாயணம்

image

(email இல் வந்தது)

ராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும்

 வார்த்தைகளால்வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள 

அயோத்திஅரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு 

அரணாக அரசனின்அம்சமாக அனுமனும் அவதரித்ததாக

அறிகிறோம்அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த 

அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,

அன்பழகன்,அன்பர்களைஅரவணைத்து அருளும் 

அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை 

அரசவையில்அரசனின் அரிய வில்லை அடக்கி, 

அன்பும்அடக்கமும் அங்கங்களாகஅமைந்த அழகியை

அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை 

அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !

அக்கைகேயிஅசூயையால் அயோத்தி அரசனுக்கும்

அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு

அனுப்பினாள். அங்கேயும் அபாயம்!

அரக்கர்களின் அரசன்,அன்னையின் அழகால் அறிவிழந்து

 அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின் 

அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. 

அயோத்திஅண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் 

அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில் 

அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து,

அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த

 அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக 

அரியணையில் அமர்த்தினர். 

அடுத்துஅன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில்

 அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.அனுமன், 

அலைகடலை அலட்சியமாகஅடியெடுத்துஅளந்து 

அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,

அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து

அண்ணலின்அடையாளமாகிய அக்கணையாழியை 

அவளிடம்அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற 

அவதிகள்அநேகமாகஅணைந்தன.அன்னையின் 

அன்பையும்அருளாசியையும் அக்கணமே அடைந்தான் 

அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து ,

அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு 

அக்கினியால்அழித்த அனுமனின் அட்டகாசம் , 

அசாத்தியமானஅதிசாகசம். அனந்தராமன்அலைகடலின் 

அதிபதியைஅடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,

அக்கரையை அடைந்தான். 

அரக்கன் அத்தசமுகனை அமரில்அயனின்

அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் 

அர்ப்பணித்த அன்னைஅவள் அதி அற்புதமாய் அண்ணலை 

அடைந்தாள். அன்னையுடன்அயோத்தியை அடைந்து

அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் . 

அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேய 

அடுக்கடுக்காகஅமைந்ததும் அனுமனின் அருளாலே!

image

       

(நன்றி …நன்றி …நன்றி )

மாங்காட்டுப் பாடல் (ஆறாவது வாரம்)

image

வரம்தனை      தினந்தினம்     தந்திடும் மாங்காட்டுத் தாயே!
வாரங்கள்       ஆறினில்       கேட்கும்வரம்   தாஎன்தாயே!
விறகினில்      வீழும்வரை    நினைக்கும்வரம் தாஎன்தாயே!
வீராப்பும்        வீம்பும்         கரையும்வரம்   தாஎன்தாயே!
உறவுகள்       உணர்வினில்   உறையும்வரம் தாஎன்தாயே!
ஊருக்கு        உலகுக்கு       உருகும்வரம்    தாஎன்தாயே!
வெறுமை       மனதினில்      அகலும்வரம்    தாஎன்தாயே!
வேற்றுமை     விழியில்        விலகும்வரம்    தாஎன்தாயே!
வைரமென      நெஞ்சம்        மாறும்வரம்     தாஎன்தாயே!
ஒற்றுமை      எண்ணத்தில்    சேரும்வரம்     தாஎன்தாயே!
ஓரறிவும்       நின்தாள்        பணியும்வரம்   தாஎன்தாயே!
வௌவால்      போல்தவம்     புரியும்வரம்     தாஎன்தாயே!
வ்ரதங்கள்      புரிந்துவந்தேன் காத்திடுவாய்   எனைநீயே!

 

திரைப்பட விமர்சனம் :

சாப்பிடுவதற்காக உயிர் வாழும் பிரகாஷ்ராஜ் சாப்பாட்டின் ருசியை ருசித்து நம்மைச் சப்புக் கொட்ட வைக்கிறார்!

பொண்ணு பார்க்கப் போன இடத்தில் நன்றாக வடைசெய்தது பொண்ணு இல்லை.என்று தெரிந்ததும் பொண்ணை அம்போ என்று விட்டுவிட்டு சமையல்காரனைத்  தன் வீட்டில் சமைக்க அழைத்துப் போவது அருமையான காட்சி!

அழகான பேரிளம்பெண் ஸ்னேகா! கல்யாணமாகாமல்  தவிக்கும் முதிர் கன்னி.! டப்பிங் ஆர்டிஸ்ட்! அவருக்கும் ஆர்க்கியாலாஜிஸ்ட் பிரகாஷ்ராஜுக்கும் பார்க்காமலே எப்படி சாப்பாடு மூலம்  காதல் மலருகிறது என்பது சுவையான கவிதை!

ஒருவரை ஒருவர் பார்க்கத் திட்டமிடும்போது  தாழ்வு மனப்பான்மையால் அக்கா மகனையும் சகோதரியையும் இருவரும் அனுப்புவதும் அவர்கள் இருவரும் காதலித்து பெரியவர்களை சண்டையில் மாட்டுவதும் சினிமாவில் தான் நடக்கும்!

இளஞ்ஜோடிகள் சிக்கென்று காதலிக்க பெரியவர்கள் தடுமாறுவது இயற்கையாக இருக்கிறது! முடிவில் ரெண்டு ஜோடிகளும்  ஒன்று  சேர்வதில் பெரிய த்ரில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் இயல்பான நடிப்பாலும் இளையராஜாவின் இனிமையான பின்னணி இசையாலும் தம்பி ராமையா குமாரவேல் இருவருடன் கூட்டணி அமைத்து பிரகாஷ் ராஜ் வெடிக்கும் நகைச்சுவை வெடிகளினாலும் படம் ஜாலியாக ஓடுகிறது!

நடுவில் தேவையில்லாமல் ஆதிவாசியைப் புகுத்தி பிரகாஷ் ராஜை ஹீரோவாக்க முயலுவதுற்குப் பதிலாக நகைச்சுவையை இன்னும் சேர்த்திருந்தால் ஏ ஒன் காமெடிப்படமாக இருந்திருக்கும்! 

டாக்டர் ஜோக்ஸ் -தொடர்ச்சி

image

டாக்டரும் கடவுளும் ஒன்றாமே! எப்படி?
ரெண்டும் நின்று கொல்லும்!

டாக்டரும் திருடனும் ஒன்றா? எப்படி?
ரெண்டு பேரும் கத்தியைக் காட்டி காசைப்   பிடுங்குறாங்க!

டாக்டருக்கும் வக்கீலுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்!
எப்படி?
அவர் குத்திக் குத்தி பீஸ் வாங்குவார்!.
இவர் கத்திக் கத்தி  பீஸ் வாங்குவார்!

image

டாக்டர்! என் கணவர் குறட்டை விடறார் !

சத்தம் அதிகமா இருந்தாத்தான் பிரச்சினை.

பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ராத்திரி பத்து மணிக்கு மேல் ஏன் மிக்ஸியை ஓட விடறேன்னு கேட்கிறாங்க!

image

உங்களுக்கு என்ன வியாதின்னு இப்போ சொல்லமுடியாது!போதை தெளிஞ்சப்புறம் தான் டெஸ்ட் பண்ண முடியும்.

சரி டாக்டர்! இன்னும் நாலு மணி நேரம் கழிச்சு வர்றேன்! அதுக்குள்ளே உங்களுக்கு போதை தெளிஞ்சுடும்னு நினைக்கிறேன்!

image

டாக்டர்! நேத்திலிருந்து எனக்குக் கடுமையான வயத்துவலி!
ஏன்! என்ன சாப்பிட்டீங்க?
நீங்க கொடுத்த சோத்துப் புண் மருந்து தான்!
அடப்பாவி! அது சேத்துப்புண் மருந்தாச்சே!

டாக்டர் சார்! எனக்கு வயத்திலே கட்டியாம்!
புரோகிதர்வாள்! பதினாயிரம் கட்டி வராகன்னு சொல்லும்!

                  எது கவிதை

image

கற்கள்  குவிந்தால்  கட்டடம்  ஆகுமா?
கற்குவியல்  தான்  ஆகும் !
சொற்கள்  குவிந்தால்  கவிதை ஆகுமா?
சொற்குவியல் தான் ஆகும் !

 கற்களை    வரிசையில்  அடுக்கி      வைத்து 
இடைஇடை  சாந்தினைப்  பூசி         வைத்து
சுண்ணம்    அடித்து      வண்ணம்    பூசினால்
கற்குவியல்  கோவிலாகும் !

சொற்களை  வரிசையில்  அடுக்கி      வைத்து
இடை இடை சந்தத்தைப்  பூசி         வைத்து
தாள மென்னும்   சுண்ணம்    தடவி
நய மென்னும்  வண்ணம்    தீட்டி
அணி  என்னும் அணிகலன்  பூட்டி
எதுகை மோனை  மினுமினுப்பு ஊட்டி
கட்டி  வைத்தால் பிறப்பது கவிதை ஆகும் !

எழுத்தும் சொல்லும் யாப்பசையும் அணியும்
அழுத்தி வந்து அழகு காட்டினாலும்
கருத்து  இன்றி  கவிதை     இருந்தால்
கழுத்து  இல்லா உடல் அது ! பயனிலை ! பயனிலை !
 

தேவன்  உள்ள பெட்டகம் கோவில்  என்ற  கட்டடம்    
ஜீவன்  உள்ள  சொற்றொடர்  கவிதை  என்ற  சித்திரம்
விதை  இல்லா  கவிதை சிதைப்  பட்டு போகும்
கருத்து  உள்ள  கவிதை  உறுத்து  வந்து   ஊட்டும் !!

image

ராஜராஜசோழன் உலா (நிறைவுப் பகுதி)

image

நந்தினி வரவில்லையா?‘  என்று சிவாச்சாரியார் கேட்டதும் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அவர்கள் முகத்தில் இருந்த இனிமை மறைந்திருந்தது. சிவாச்சாரியார் தன் தவற்றை உணர்ந்து நடுநடுங்கி நின்றார்.

ஆதித்த கரிகாலன் கோபத்தோடு கேட்டான் – “சிவாச்சாரியாரே! யார் அந்த நந்தினி? அவளுக்கும் சோழ குலத்துக்கும் என்ன சம்பந்தம்?”

அரசே! என்னை மன்னித்துவிடுங்கள்! நான் உங்கள் வரலாற்றைப் பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புத்தகத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.. அதில் ..”

“பொன்னியின் செல்வனா? யார் அவன்?”

“மன்னர் மன்னா! ராஜராஜ தேவருக்குத்தான் அப்படி ஒரு பெயரைச் சூட்டியிருந்தார் கல்கி அவர்கள்!

“ஆஹா! தம்பி! இதுவரை எனக்குத் தெரியாமல் போயிற்றே! நானும் இனி உன்னை ஆசை தீர பொன்னியின் செல்வன் என்றே கூப்பிடப் போகிறேன்!” – குந்தவி  கூறினாள்.

“அது சரி! நந்தினி யார்?” – ஆதித்த கரிகாலன் மீண்டும் வினவினான்.

“அதில் தான் எங்களுக்குப் பெரிய குழப்பம்! அவள் வீரபாண்டியன் மகளா காதலியா … இல்லை ஆதித்த கரிகாலர் காதலியா….”

“என்ன சொன்னீர் சிவாச்சாரியாரே” – ஆதித்த கரிகாலனைக் கட்டுப்படுத்த வந்தியத்தேவன் வரவேண்டியதாயிற்று.

“எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்! இனி நான் உங்கள் வரலாற்றுக்குச்  சம்பந்தம் இல்லாதவர் பற்றிப்பேசமாட்டேன்!” – சிவாச்சாரியார் கதறினார்.

கருவூர்த்தேவர் பேச்சை மாற்றினார். “ அது சரி..பதும மலர் ஆதித்தன் கையில் சேர்ந்திருக்கிறதே! அவர் என்ன செய்யப் போகிறார்?”

“அது சேரவேண்டிய இடம் சிவபெருமானின் திருவடிகள் தான் ஸ்வாமிகளே!”

ஆதித்தன் உறுதியாகக் கூறினான்.

உலா மேலும் தொடர்ந்து அடுத்த மண்டபத்தை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. கரிகாலன் மெல்ல மெல்ல பின்னால் வந்து சிவாச்சாரியார் அருகே வந்தான். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் கவனிக்கவில்லை.

ஆதித்த கரிகாலன் சிவாச்சாரியாரிடம் “ என் கோபத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! நந்தினி என்ற பெயரைக் கேட்டது மாதிரியும் இருக்கிறது. கேட்காதது மாதிரியும் இருக்கிறது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ரகசியம் தெரிந்திருக்கிறது. அதை என்னிடம் மறைக்கிறார்கள். அதுவும் என் நன்மைக்காகத் தான் இருக்கும். நான் அடிக்கடி அலறுகிறேன்! கோபப்படுகிறேன்! துடிக்கிறேன்! அதற்குக் காரணம் ஒரு பெண் என்பது புரிகிறது! அவள் யார்? அவள் தான் நந்தினியா?

“அரசே! எங்கள் யாருக்கும் புரியாத புதிர் தங்களின் திடீர் மறைவு தான்! வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள்  சூழ்ந்தது என்று தான் புரிந்ததே தவிர அது எப்படி யாரால் எங்கு எவ்வாறு நடந்தது என்பது எங்கள் யாருக்கும் விளங்கவில்லை“ என்று தழுதழுத்த குரலில் சிவாச்சாரியார் கூறினார்.

“சிவாச்சாரியாரே! இது வரை யாருக்கும் தெரியாத- யாரிடமும் கூறாத எனது மரண முடிச்சைப் பற்றி உங்களிடம் மட்டும் சொல்கிறேன்! யாருக்காவது இது தெரிந்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும்”.

சிவாச்சாரியாரிடம் ஆதித்த கரிகாலன் தன் மரணத்தின்  காரணத்தைக் கூறினான். அவ்வளவு தான்! சிவாச்சாரியார் ஸ்தம்பித்துப் போய்விட்டார் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை! அப்படியே பிராகாரத்தில் சாய்ந்து விட்டார். ஆகித்தனும் மற்றவரும் உலாவில் தொடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தான் இரு கூறாய்ப் பிரிந்தது போலிருந்தது. தானும் வானத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு. அப்படியே பறந்து தன் வீட்டுக்குப் போனது போலவும் ஒரு நினைவு. அதே சமயம் அவர்கள் உலாவையும் அவரால் பார்க்க முடிந்தது. அந்த அரை மயக்க நிலையில் அவர் சற்றுக் கண்ணசைந்து விழித்த போது அனைவரும் அவரைச் சுற்றி நிற்பதை உணர்ந்தார்.   ராஜராஜன் அவர் அருகில் வந்தான்.

“சிவாச்சாரியாரரே! இதுவரை இந்த கோவிலில் எல்லா இடங்களிலும் எங்கள் ஆசைதீர உலா வந்தோம். ஆயிரம் ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறோம்! ஆனால் நாங்கள் மறைந்த பிறகு பார்க்க முடியாத இடம் என்றும் ஒன்று இங்கே உள்ளது. அதைப் பார்க்கத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ  வேண்டும்” என்று மும்முடிச் சோழன்-ராஜகேசரிவர்மன் –அருண்மொழிவர்மன் என்றெல்லாம் பெயர் பெற்ற ராஜராஜ சோழன் பணிவோடு வேண்டி நின்றான்.

“ ஆம் . சிவாச்சாரியாரே! கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் சிவபெருமானைத் தரிசிக்க விரும்புகிறோம்! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் பதும மலரை அவர் காலடியில் வைத்தால் தான் எங்கள் கண்களுக்கு நாங்கள் பிரதிஷ்டை செய்த சிவபெருமானின் காட்சி கிடைக்கும்.! அதைத் தாங்கள் தான் நிறைவேற்றவேண்டும். மற்ற இடங்களுக்குச் செல்லும் உரிமை எங்களுக்கு உண்டு. ஆனால் கருவறையைத் திறந்து பதும மலரை வைக்கும் உரிமை உங்களுக்குத்தான் உண்டு.”

 

“மன்னர் மன்னா! வாருங்கள்! நீங்கள் கட்டிக் காத்த சிவபெருமானை உங்களுக்குத் தரிசனப் படுத்துகிறேன்!” – சிவாச்சாரியார் நெகிழ்ச்சியுடன் அனைவரையும்  கருவறைக்கு அழைத்துச் சென்றார்! அவரது இடுப்பில் கருவறையைத் திறக்கும் சாவி இருந்தது.

“ஆயிரம் ஆண்டுகளாக எங்களது தணியாத ஆசை இன்று நிறைவேறப் போகிறது!”- ராஜராஜன் கூறினான்!

 image

சிவாச்சாரியார் இடுப்பிலிருந்து சாவியை எடுத்து கருவறைப் பூட்டைத் திறக்க முயன்றார். அவர் கை நடுங்கியது. அவரால் முடியவில்லை! மனம் துடித்தது. தினம் கருவறையை சாதாரணமாகத் திறக்கும் அவரால் அன்று திறக்க முடியவில்லை!

 

“மன்னா! …நான் … ஏன் ..” வார்த்தை வராமல் தடுமாறினார் சிவாச்சாரியார்.

 நான் கூறுகிறேன்! என்று சொல்லிக் கொண்டே வந்தார் கருவூர்த்தேவர்.

“ மன்னா! சிவாச்சாரியாரின் கரங்களால் இனி கருவறைக் கதவை என்றுமே திறக்க முடியாது. அவர் வரும்போது மனிதராகத் தான் வந்தார். அவரிடம் கருவறைச் சாவியும் இருந்தது. இறைவனை அணுகும் உரிமையும் இருந்தது. ஆனால் அவர் எப்போது ஆதித்த கரிகாலன் வாயிலாக அந்த தேவ ரகசியத்தைக் கேட்டாரோ அப்போதே அவருடைய ஆத்மா அவருடைய உடலை விட்டுப் பிரிந்து விட்டது. இப்போது நம் முன் நிற்பது  அவருடைய ஆத்மா தான். இவரது உடலை ஏற்கனவே இவரது இல்லத்தில் சேர்த்து விட்டேன். இனி அவரும் உங்களுடன் செல்ல வேண்டியது தான். நாம் இன்று சிவபெருமானைத் தரிசிக்க இயலாது. சிவபெருமான் பாதம் பணிய நமக்குப் பதும மலர் வேண்டும். மானுடர் துணை வேண்டும். அதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதுவரை உங்கள் உலா.. ராஜராஜ சோழன் உலா தொடரட்டும்…. “ 

image

(முற்றும்)