
அலாதியான அலங்காரம்! விதவிதமான மண்பாண்டங்கள். பல சிறு தொழில் நிறுவனங்கள் பங்கு பெறும் கலைக் கண்காட்சி. குறிப்பாக இளம் கலைஞர்கள், அவர்கள் உருவாக்கியதற்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அறிவிப்பு. இதுதான் எங்களது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அருகிலிருந்தால் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுடன் நாலைந்து ஆசிரியர் நாங்களும் சென்று இருந்தோம்.
நுழைந்ததிலிருந்தே பல மண் பொருட்களைப் பார்த்ததும், அவை எனக்கு முன்னாள் க்ளையண்ட் சுநீத்தீயை ஞாபகப் படுத்தியது.. பத்து வருடத்திற்கு முன்பு பார்த்தவள். அவள் கைவிரலின் ஜாலம் அப்படி.
நினைவலைகளில் மூழ்கி இருந்த என்னை திடீரென்று பின்னாலிருந்து இரு கரங்கள் அணைத்தன. கலகலவென கைகளில் குலுங்கின வளையல்கள். திடுக்கிட்டுப் பார்த்தேன். அவளே!! ஸாக்க்ஷாத் சுநீத்தீ! இருவரும் திகைத்தோம். எப்போதும் நான் பார்த்த க்ளையண்டை பொது இடங்களில் கண்டால், தெரிந்தார் போல் காட்டிக் கொள்ள மாட்டேன். இங்கு தலைகீழாக ….
நாங்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் மற்றும் பலர் கூடி வந்தார்கள். அவர்கள் எல்லோரும் மராட்டியில் ஒரே குரலில் குசலம் கேட்க, மறுபடியும் திகைத்துப் போனேன். எங்கள் நிறுவனம் நடத்தும் கம்யூனிடீ செயல்திட்டத்தில் இணைந்த பெண்கள். ஆச்சரியப் பட்டேன். சுநீத்தி அவர்களை எல்லாம் தன்னுடன் அணைத்து “என்னுடைய நிறுவனத்தில் எனக்குச் சகாயம் செய்கிறார்கள்” என்றாள். தான் முதலாளி என்றதை இவ்வாறு விவரித்தாள். ஆமாம் சுநீத்தி யாரையும் தாழ்வாகப் பேச மாட்டாள்.
சட்டென்று சுநீத்தீ ஒருவனின் கையை இழுத்து, “அவிநாஷ், என் கணவர்” என்று அறிமுகம் செய்த வாரே, “இவங்க தான் நான் சொன்ன மேடம்” என்றதும் அவரும் “ஓ” என்று வியப்புடன் கூறும் போதே, பக்கத்தில் சிறுவன் ஒருவன் எட்டிப் பார்க்க, அவனையும் தன் மகன் மதுசூதனன் என்று அறிமுகப் படுத்தினாள்.
இதையெல்லாம் உள்வாங்கிக் கொள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி! “பிங்க்கீ” என்று அழைத்துக் கொண்டே வந்தவனைப் பார்த்தால், கான்ஹா!! ஒரு பெண் அவனுடன் கையைக் கோர்த்து, கையில் சிறுமி ஒன்றைத் தூக்கியவாறு ஓடோடி வந்தாள். தன் மனைவி மிருதுளா என்று கான்ஹா அவளை அறிமுகப் படுத்தினான்.
மிருதுளா அவனிடம் ஏதோ கேட்க, அவன் தலையை ஆட்டி, பெருமையுடன் சுநீத்தீயை ஜாடை காட்டினான்,அன்றும் இன்றும் அதேபோல. மிருதுளாவிடம் அவன் ஏதோ பதில் சொல்ல, அவள் என் கையை அழுத்தி நன்றி கூறினாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அருகில் சுநீத்தீயின் முரளி மாமா. சங்கடம் நிறைந்த குரலில், “மேடம் பார்த்தீங்களா, இப்பவும்..” என்று இழுத்தார். சுநீத்தீ-கான்ஹாவின் தர்மசங்கடமான நிலையைக் கண்டு கொண்ட மிருதுளா, கண்சிமிட்டும் நேரத்தில் கணவனின் முதுகைத் தட்டி, எல்லோரையும் பார்த்து “நண்பேன்டா” எனச் சொல்லிச் சுதாரித்து விட்டாள். உறவுகளின் வண்ணங்கள் வித விதமானவை!!
ஒரு விதத்தில் இதற்கெல்லாம் முரளி மாமா தான் காரணம். வாருங்கள் கொஞ்சம் ப்ஃளாஷ் பேக் செய்யலாம்.
மாலை ஐந்தரை மணி, கிளம்பும் நேரம். அப்போது
ஒரு கான்ஸ்டபிள் அழு கொண்டிருந்த பதினைந்து-பதினாறு வயதுள்ள பெண்ணை (சுநீத்தீ) அழைத்து வந்தார். அவளை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தவர் (முரளி மாமா), விவரங்களைக் கூறினார். சுநீத்தீ காதலிக்கிறாளாம், அதை முறியடிக்க முரளி மாமா அவளைக் காவல்துறையினர் கண்டிப்பதற்காக அழைத்து வந்ததாக கான்ஸ்டபிள் கூறினார்.
எங்களது நிறுவனம் காவல் நிலையத்தில் இருப்பதால் எங்களது அணுகுமுறையை அறிந்தவர்கள் காவல்துறையினர். நாங்கள் எல்லோரும் மனநலன் படித்தவர்கள், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்றும் தெரியும்.
முரளி மாமா ஆரம்பித்தார், சுநீத்தீ தன்னுடைய தம்பி மகள். அவர்கள் ஊரில் வசதிகள் குறைவாக இருந்ததாலும் தம்பியின் சம்பாத்தியம் முறிந்ததாலும் இவளைத் தன்னுடன் இருக்க அழைத்து வந்தாராம். வந்ததிலிருந்து, வீட்டு வேலையில் கைகொடுத்து, பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டதில் ஒத்தாசையாக இருக்கிறாள் என்று ஒப்புக்கொண்டார்.
இதை விவரிக்கும் போது சுநீத்தீ அழுதவாறே இருந்தாள். முகமெல்லாம் கைவிரல்களின் தடயங்கள். அதைக் குறித்துக் கேட்க, தயக்கமோ பயமோ இல்லாமல், மாமா உடனே தான் அடித்ததாக ஒப்புக் கொண்டார். எவ்வாறு இது தகாத வன்முறை என்றும், அது எந்த அளவிற்கு ஒருவரைப் பாதிக்கும் என்றும் விளக்கினேன்.
தன்னுடைய பொறுப்பில் இருக்கும் போது காதல் ஏற்பட்டு விட்டதால்தான் அடித்ததாகக் கூறினார். அவமானம் எனத் தோன்றியது. காதலை முறிக்க இன்னொரு உறவினர் வீட்டில் அவளை விடப் போவதாகத் தெரிவித்தார்.
என்னுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டு, எங்களுக்கு உதவும் மங்களா சுடச்சுட நிறையச் சர்க்கரை போட்ட தேநீர் கோப்பையை சுநீத்திக்கு வழங்கினாள். இந்த சூடு, தித்திப்பு, உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் பாணம். விரல்கள் நடுங்க, பருகினாள் சுநீத்தி. அவளிடம், பருகும் வரை காத்திருப்பேன் என்றேன்.
முரளி மாமாவுக்கும் காப்பி தந்துவிட்டு எங்களது அணுகுமுறையை விளக்கினேன். அவருடைய விவரிப்பிலிருந்து உணர்வு, உறவில் சிக்கல்கள் தென்பட்டது. அதைச் சுதாரிக்க இருவரும் முழுமையான
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றேன். குறிப்பாகக் காதலை முறிப்பதோ, வளர்ப்பதோ எங்களது கண்ணோட்டம் அல்ல என்று கேட்டதும் மாமா அதிர்ச்சி அடைந்தார். விளக்கம் அளிக்க, ஒப்புக்கொண்டார்.
இவையெல்லாம் சுநீத்தியின் முன்னரே நடந்தது. அவளுடன் சில ஸெஷன்கள் தேவை என்று சொல்லி, நாள்-நேரத்தைக் குறித்துக் கொண்டோம். வர ஆரம்பித்தாள். மாமாவும்.
முதல் ஸெஷனில், அவளுடைய விவரங்கள் அறிந்து கொள்வதிலிருந்து ஆரம்பமானது. வீட்டின் முதல் குழந்தை சுநீத்தி. பிள்ளைக்கு ஏங்கி, பெண்ணாக இவள் பிறந்ததால் பெற்றோர்கள் இதை எப்போதும் சொல்லிக் காட்டுவதுண்டு. அவளைச் சுமையாக நினைத்தார்கள். அடுத்த இருவரும் ஆண் குழந்தை. தம்பிகளுக்குப் பல சலுகைகள் உண்டு. ஒரே ஒரு விஷயத்தில் இவளைப் புகழ்வது, அவளது நிறம் ரோஜாப்பூ போன்றதாக என்று மட்டுமே.
அடுத்த பல ஸெஷனில் புரிந்தது, அதனாலேயே அக்கம்பக்கத்துப் பசங்களால் அவளுக்கு “பிங்க்கீ” என்ற புனை பெயர் சூட்டப்பட்டது. பெயரை முடிவு செய்தது கான்ஹா. இந்த பருவ வயதினர்களில் இது சகஜம்தான். வீட்டில் இதை நிந்தனை செய்தார்கள். பிங்க்கீ சட்டை செய்யவில்லை. ஸோவாட் என்று இருந்தாள். மாமாவிற்கு வியப்பு. அன்றிலிருந்து அங்குள்ளவர்கள் இந்தப் பெயராலேயே அவளை அழைத்தார்கள்.
பள்ளிக்குப் போகும் வழியில் கான்ஹாவின் பள்ளிக்கூடமும் இருந்ததால் பிங்க்கீ, கான்ஹா மற்றும் ஆறு ஏழு நண்பர்கள் குழுவாகப் போய் வரும் பழக்கம் ஏற்பட்டது. சுநீத்தி வர்ணிப்பின் படி இந்த “க்ளிக்” (clique) நல்ல நெருக்கமானதாக இருந்தது. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து கொடுப்பது, பகிர்வது, மனச் சஞ்சலங்களைச் சுதாரிப்பது எல்லாம் உண்டு.
பல உரையாடலில் சுநீத்தீ புன்முறுவலுடன் சொன்னாள், வீட்டில் தான் சொன்னால் செய்ய மாட்டார்கள் அதையே இந்தக் கூடத்தில் கூறினால், உடனே எடுத்துக் கொள்ளப் படும். அந்த வயதிற்கு அப்படித் தான். நட்பின் கெத்து!!
அவர்களில், கான்ஹா சற்று வித்தியாசமான பழக்கம் உள்ளவனாக இருந்தானாம். அவன் ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி பெறப் பல மாலைநேரம் போய் விடுவான். அவன் வர முடியாத இந்நாட்களில் ஒவ்வொருவருக்கும் நாலைந்து வரியில் ஒரு பகிருதல் எழுதி அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் விட்டுச் செல்வான். இது, பலமுறை முரளி மாமா கையில் அகப்பட்டுப் போய்விட்டது. இந்த முறை சந்தேகம் அதிகமாக, சுநீத்தியின் விளக்கம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அடித்து அழைத்து வந்து விட்டார்.
மாமாவின் ஒத்துழைப்பு குறைவாக இருந்ததால், நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் மனப்பான்மை அவ்வாறே இருந்தது.
சுநீத்தி மனநிலையை அவளும் அறிந்து கொள்ள, அடுத்த சில ஸெஷனில் தன் மனக்குமுறலை விவரிக்கச் சொன்னேன். பல காரணங்கள். அவற்றில் ஒன்று தோழமையுடன் கூட்டத்தில் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் கிடைக்கும் பாசம், அங்கீகாரம். இது அவளுடைய மனோபலத்தை ஊக்குவித்து விட்டதாகக் கூறினாள். அவளுடைய பெற்றோர்கள் பெண்ணாக இருப்பதால் எப்போதும் பாரமாக, இடைஞ்சலாக இருக்கிறாள் என்று சொல்லச் சொல்ல, அவர்களிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தன்னை நிராதரவாக நினைத்த குறையை, இங்கே நண்பர்கள் கூட்டம் போக்கி விட்டது மனதுக்குப் பிடித்தது.
இந்த நிலையில் மாமாவின் சொற்கள் தேள் கடி போல இருந்தது. மாமி ஆதரவை, ஆசையை மாமாவுக்குப் பயந்து காட்ட மாட்டாளாம். சுநீத்தி வளரும் பிராயம், பாசம் அன்பு காட்டினால் அது சரியான வளர்ப்பு இல்லை என்றது மாமாவின் கணக்கு. எனவே கண்டிப்பான வளர்ப்பு.
இங்கு, முரளி மாமா வீட்டில் பாதுகாப்புக்குக் குறையில்லை. பாசமான தோழர்கள். படிப்பில் கவனம் அதிகரித்தது. 90-95 மதிப்பெண் எடுத்தாள். அப்படியும், மாமா-மாமி இருவரும், சுநீத்தி அவளுடைய ஸ்நேக கூடத்தாலேயே மீதி மதிப்பெண்ணைக் கோட்டை விட்டாள் என்று குறை படுவார்களாம். கவனம் குறைவதற்கு நண்பர்களுடன் பேச்சு, சிரிப்பினால் தான் எனச் சொல்வது பழக்கமாகியது. மாமா-மாமி ஏன் இந்த வகை நடத்தை, புரியவில்லை என்றார்கள். ஏனோ அவர்கள் தங்களது பருவநிலை மறந்துவிட்டார்களோ எனச் சொல்லியது என் மைன்ட் வாய்ஸ்.
சுநீத்தி வரவில்லை என்றால் கான்ஹா வீட்டிற்கு வந்துவிடுவான். க்ளிக்கில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சூத்திரதாரி என்று தாமே நியமித்துக் கொண்ட பதவி என்பதால், இவளிடம் நேரடியாக அனைத்து விஷயங்களையும் சொல்லவே. ஒரு நாள் அவளை மாமா அடிப்பதைப் பார்த்துத் தடுக்க வந்தவனை மாமா அடித்துத் துரத்தி விட்டார். சுநீத்தி மிக வெட்கத்தில் மூழ்கினாள்.
நண்பர்கள் குழு அவள் மேல் இன்னும் கவனிப்பை அதிகமாகிக் கொண்டனர்.
ஒரு மாதமாக கான்ஹாவின் காகிதங்களை மாமா படித்து, அந்த அளவுக்குப் பாசம், விசாரிப்பது, அன்புக் கலவை இருப்பதால், காதல் கடிதம் என முடிவு செய்து கொண்டார். எது நடக்கக் கூடாது என நினைத்தாரோ அதுவே ஆகிறது என்று நினைத்தார். முரளி மாமா இவர்கள் உறவைக் காதல் எனக் கொச்சைப் படுத்தியதில், சுநீத்தி வேதனை அடைந்தாள், வெட்கப் பட்டாள்.
இந்த பருவநிலையில் தன் வயதினரோடு பேசத் தோன்றும். ஆனால் சுநீத்தீயை தவறான கண்ணோட்டத்தில் மாமா மனம் பார்த்தது.
மாமாவின் கட்டளையின் படி, நண்பர்கள் வட்டம் கான்ஹாவின் சகவாசம் ரத்து ஆனது. பள்ளிக்குப் போகும் வழியிலும் தான். இது சுநீத்தி மனதைப் பாதித்தது.
அவர்கள் குழு வட்டம், நண்பர்கள் தான், காதல் அல்ல, மாமா சொல்வது வேதனை அளிக்கிறது எனப் புரிய வைக்க முயன்றாள். வியந்தேன், இந்த இளம் மனதின் பக்குவத்தை உணர்ந்து! மாமா ஏற்க மறுத்தார். விளைவு மாமா காவல்துறை உதவி நாடியதே.
களங்கமற்ற உறவு, ஆனால் ஒரு சந்தேகம் சுநீத்தீயை வாட்டியது. அவள் கான்ஹாவிடம் மனம் விட்டுப் பேசும் போது, அவர்களது குழுவில் இருக்கும் போது ஒரு வித சிலிர்த்து விடுவதாக. இது நேரும் போது கூச்சமாக இருப்பதாகக் கூறினாள்.
அவர்களது உயிரியல் படிப்பில் உடல் உணர்வு பற்றிய நிலையை எடுத்துக் கொண்டு பல ஸெஷனில் இதை ஆராய்ந்தோம். வளரும் போது பல உடல் நிலை ஏற்படுகிறது. அதனால் நேரும் சுரப்பிகள் விளைவாக நேரும் உணர்ச்சியைப் பற்றி உரையாடினோம்.
அதே அனுபவமே வேறு எந்த இடத்தில் உணருகிறாய் எனக் கண்டு கொள்வது பல நாட்களின் ஹோம்வர்க் ஆனது. அது வீட்டிலோ, பள்ளியிலோ, சுநீத்தீ தான் செய்வதைக் கூர்ந்து கவனிக்கப் பரிந்துரைத்தேன்.
சமையல் செய்ததை மற்றவர் ருசித்துச் சாப்பிடுவதைப் பார்க்கையில், தான் பாடம் சொல்லித் தந்தவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்த தருணம், மாமா மாமிக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சகாயம் செய்யும் போதுது என ஒரு நீளப் பட்டியலை சுநீத்தீ போட்டாள். அப்போது தான் இவளின் தையல், சித்திரக் கலை, மண்பாண்டம் கைகளால் செய்யும் மாயாஜாலம் என்ற திறமைகள் எல்லாம் வெளிவந்தது. இத்தனை talents, ஆனால் தன்னடக்கம் மிக அதிகமாக இருந்தது!!
இந்த சமயத்தில் மாமா ஒத்துழைப்பு இல்லாததால் மாமியை ஸெஷன்களில் வரவழைத்தேன். மிகப் பொருத்தமாக இருந்தது. அவர்கள் சுநீத்தியின் உதவும் தன்மையைப் பாராட்டினார். ஆனால் பெண்களைப் பாராட்டும் பழக்கம் அவர்கள் கலாச்சாரத்தில் குறைவாக இருப்பதால், வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை என்று விவரித்தாள்.
அவர்களின் கடும் கண்டிப்பிற்கு வேறொரு காரணமும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். சுநீத்தி பெற்றோர் இவர்களுக்கு இரண்டும் ஆண் குழந்தை என்பதால் அவளை தாரைவார்த்துக் கொடுத்து விட்டார்கள். முரளி மாமா தன் வளர்ப்பில் தப்பு எதுவும் இருக்கக் கூடாது எனப் பல கட்டுப்பாடு விதித்தார். சுநீத்தி பொறுமையின் சின்னம் என்றதால் எல்லாம் ஏற்றுக்கொண்டாளாம்.
மாமிக்கு சுநீத்தியின் நண்பர்கள் கூட்டத்து நெருக்கம் புரியவில்லை என்றாள். தான் சொல்வதை விட அவர்கள் சொன்னால் செய்வாளாம். மாமிக்கு இந்த பருவநிலையைப் புரியவைக்க சுநீத்தி வயதுடைய எங்களது கம்யூனிடீ ப்ராஜெக்ட் பெண்களுக்கு, சுநீத்தியை தன்னுடைய கைவண்ணம் கற்றுத் தரும் வகையில் அமைத்தேன். கூடவே மாமியும் அவர்களுக்குத் தையல் பயிற்சிப்பதில் ஈடு படச் செய்தோம்.
மாமியிடம் அங்கு நடப்பதைக் கவனிக்கப் பரிந்துரைத்தேன். செய்தாள். அந்த பருவநிலையில் உள்ளவர்களின் நெருக்கம், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது, ஒத்தாசை செய்யும் வகை, உணர்ந்தாள். சுநீத்தி அவர்களுடன் கோந்து போல் ஒட்டிக் கொண்டது, இணைந்த வண்ணம் பார்த்து, அந்த வயதினரின் நடத்தையைப் புரிந்து கொண்டாள்.
இதை சுநீத்தீ-கான்ஹா குழுவினருடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னேன். மாமி மனம் தெளிவானது. மாமி-சுநீத்தி பந்தம் நெருக்கமாகியது.
ப்ராஜெக்டில் பண்டங்களைச் செய்வதுடன் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் ஊக்குவித்தாள் சுநீத்தி. விற்பனை செய்முறையை மாமி கற்றுக் கொடுக்க, பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் அவள் அந்த ஆனந்த நிலையை அனுபவிப்பதாகச் சொன்னாள்.
பள்ளிக்குச் செல்வதுடன் இப்போது இந்த கலையை கற்றுக் கொள்வது, கற்றுத் தருவது என நாட்கள் ஓடின. அவளை கான்ஹா, நண்பர்கள் கேலியாக “மிஸ் உத்ஸாகம்” என அழைத்தனர். இந்த நண்பர்கள் கூட்டம் இவளுடைய திறமையைப் பார்த்து வியந்தது. மேலும் உற்சாகம் செய்தனர்.
காவல்துறை அதிகாரிகள், நாங்கள் எல்லாம் மாமாவிடம் பல முறை எடுத்துச் சொல்லி, மாமியும் விவரித்ததால் இந்த விஷயத்தை விட்டு விடுவதாகக் கூறினார். சுநீத்தி நிலை நன்றாகச் சுதாரித்ததாலும் ஸெஷன்கள் முடிவடைந்தது.
அந் காலகட்டத்திற்குப் பிறகு இப்போது தான் சுநீத்தியை சந்தித்தேன்.
முரளி மாமா ஏனோ இந்த தோழமையை இன்னும் தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தார். அதனால் தான் இவ்வாறு ஒரு கமெண்ட். சில சமயங்களில் இவ்வாறு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மேலோட்டமாக இருக்குமே தவிர, க்ளையண்ட் நிலைமையைச் சுதாரிக்க உதவாமல் இருக்கும். முரளி மாமா இன்றும் தன்னுடைய தவறான மனப்பான்மையுடன் இருப்பது பலருக்கு வேதனை தருவதால் அவரை தனியாக அழைத்துப் பேசினேன். ஒரு நாலைந்து ஸெஷன்களுக்கு வர ஒப்புக்கொண்டார். ஆரம்பித்தேன்.