ஒரு அழகான தமிழ்ப் பாடலுடன் இந்த மாத குவிகம் இதழைப்
பாருங்கள் !
( பாடியவர்: ஆலங்குடி சுந்தரம் )
பிந்துசாரன்
பிந்துசாரன் பிறந்த கதை பார்த்தோம். (
(பிம்பிசாரன் வேறு . அவன் ஆம்ரபள்ளி கதையில் வருபவன் . பிந்துசாரன் சந்திரகுப்தனின் மகன். நெற்றியில் விஷப் பொட்டுடன் பிறந்தவன் , குவிகம் மே இதழில் உள்ள சரித்திரம் பேசுகிறது பகுதியைப் படிக்கவும்)
பிந்துசாரன் பிறப்பதற்குப் பிரசவம் பார்த்த சாணக்கியர் – அவனது ஆட்சியிலும் மந்திரியாகவும் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.
பிந்துசாரனின் மற்றொரு மந்திரி சுபாந்து.
சுபாந்துவுக்குச் சாணக்கியரைக் கண்டாலே ஆகாது.
பொறாமை!
சுபாந்துவுக்கு பொறாமை தாங்க முடியவில்லை.
ஒரு நாள் அரண்மனையில் சுபாந்து – மன்னன் பிந்துசாரனைத் தனியாகச் சந்தித்தான்.
“அரசே! நான் இப்போது சொல்லப் போவது சத்தியமான வார்த்தைகள். இதைச் சொல்வதால் தாங்கள் என்னிடம் கோபம் கொள்ளலாகாது!”
“அமைச்சரே! உங்கள் கருத்தை என்றாவது தவறாகக் கருதி இருக்கிறேனா? கூறுங்கள்”
“உங்கள் தாய்.. மகாராணி துர்தாரா.. அன்பும் அறிவும் கொண்ட பேரரசி” என்று நிறுத்தினார்.
“என்ன செய்வது சுபாந்து! நான் கொடுத்து வைக்காத பாவி! பிறந்த போதே அன்னையைக் கொன்றவன் நான்! தாயை ஒரு முறை கூடக் காணக் கிடைக்கவில்லை” – பிந்துசாரன் கண்கள் சற்றே கலங்கின.
“அரசே! அவர் மரணத்திற்குத் தாங்கள் எப்படிக் காரணமாவீர்கள்? ஆயினும் அதற்குக் காரணமானவர் சுதந்திரமாக உலவுவதுதான் எனக்கு இன்னும் வருத்தத்தைக் கொடுக்கிறது”
“என்ன சொல்கிறாய் சுபாந்து” பிந்துசாரனின் குரலில் சூடு ஏறியது…சற்றே நடுங்கியது!
சுபாந்து சாணக்கியரின் விஷத்தினால் மகாராணி துர்தாரா இறந்ததைக் கூறினார்.
“அரசே இந்நாள் வரை யாரும் தங்களுக்கு இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் – சாணக்கியர் மீது அனைவருக்கும் அவ்வளவு பயம். மகாராணியையே விஷம் வைத்துக் கொன்றவர் நம்மைக் கொல்லாமல் விடுவாரா என்ற பயம் எல்லோருக்கும்“
சுபாந்து பொய் சொல்ல மாட்டார் என்று நம்பினான்.
“சாணக்கியரை இன்றே கொன்று இதற்கு முடிவு கட்டுகிறேன் “ – பிந்துசாரன் வாளெடுத்துப் புறப்பட்டான்.
சாணக்கியருக்கு ஆயிரம் காதுகள்.
காற்று நுழையாத இடத்திலும் அவரது உளவாளிகள்.
மன்னரின் சூளுரை அவர் காதில் உடனே சென்றடைந்தது.
சாணக்கியர் தனது உடன் இருந்த இரு வயோதிக தாதிகளை (நர்ஸ்) அழைத்தார்.
“நீங்கள் இருவரும் எனது தக்ஷசீல காலத்திலிருந்து என்னுடன் பணி புரிகிறீர்கள். எனது எல்லா ஆயுர்வேத மருத்துவத்திற்கும் என்னுடன் துணை நின்றீர்கள். மகாராணி துர்தாரா பிரசவமும் உங்கள் உதவியால் தான் நடந்தது. சாணக்கியன் என்ற ஆலமரத்தின் வேர் நீங்கள்”
தாதிகள் இதைக் கேட்டு நெகிழ்ந்தனர்.
‘எதற்காக இப்படிப் பேசுகிறார் இன்று?’ என்று சற்றே குழப்பமும் அடைந்தனர்.
சாணக்கியர் தொடர்ந்தார்:
“இன்று மன்னன் பிந்துசாரன் – நான் மகாராணியைக் கொன்றேன் என்று – என்னைக் கொல்ல வருகிறான்”
“ஐயோ…“ – தாதிகள் பதறினர்.
சாணக்கியர் : “இந்தக் கிழவனுக்கும் வயதாகி விட்டது. எனது வாழ்வின் கடமைகள் அனைத்தும் முடிந்து விட்டது. இறைவனை நாடிச் செல்லும் நேரம் வந்துவிட்டது “
தாதிகள் விம்மினர்.
சாணக்கியர் :
“வருந்தாதீர்கள். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எனது சொத்துக்களை இந்நாட்டின் ஏழை, அநாதை, மற்றும் விதவை நிலையங்களுக்குக் கொடுத்து விடுங்கள். நான் விரதம் இருந்து இறைவனடி சேர முடிவு செய்து விட்டேன் “
தாதிகளுக்குத் துயரம் தாள முடியவில்லை.
“மன்னர் சந்திரகுப்தர் முதல் மன்னர் பிந்துசாரர் வரை – அரசர்களுக்கு நன்மை செய்தே வாழ்வைக் கழித்த உங்கள் சேவைக்கு இது தானா பரிசு” தாதிகள் இருவரும் கண்ணீர் வடித்தனர்.
சாணக்கியர் புறப்பட்டார். சுடுகாடு அருகில் உள்ள ஓரிடத்தில் – மாட்டு சாணத்தால் செய்த வரட்டிகளை வைத்து சிறு மேடை அமைத்து அதில் அமர்ந்தார். அன்ன ஆகாரம் இல்லாமல் விரதமிருந்து உயிர் விடத் துணிந்தார்.
பிந்துசாரன் கோபத்தின் உச்சியில் இருந்தான். நேரே சாணக்கியரின் அரண்மனை சென்றான். சாணக்கியரின் தாதியர் இருவரைக் கண்டான்.
‘ இந்த மூதாட்டிகள் தானே நான் இந்த உலகுக்கு வர உதவினர்!’ பிந்துசாரன் கரங்கள் கூப்பின. சற்றே சாந்தமடைந்தான்.
இருப்பினும் சாணக்கியர் செய்த கொடுமையை எண்ணி…
“சாணக்கியர் எங்கே?” என்று உறுமினான்!
ஜூலியஸ் சீசர் மரணத்திற்குப் பின் மார்க் ஆண்டனியின் சொற்பொழிவு ஷேக்ஸ்பியர் எழுதியதால் பிரபலமானது.
அன்று இந்த தாதியர் பேசியது அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.
ஒரு நூற்றாண்டு காலமாக மக்கள் நலம் – மன்னர் சந்திரகுப்தர் மற்றும் அவரது குடும்ப நலம்- ஒன்றையே மனதில் கொண்டு நாளும் இரவும் உழைத்த சாணக்கியரின் தியாகத்தை எடுத்துரைத்தனர்.
“நல்லது செய்வது என்றே அவர் செய்த ஒன்று மகாராணியை பலி வாங்கியது. ஆனால் அது சந்திரகுப்தர் செய்த தவறு. அந்நாள் வரை மகாராஜாவும் மகாராணியும் தனித் தனியாகத்தான் உணவருந்த செய்யப்பட்ட ‘முறை’ யை மீறியதால் அது நிகழ்ந்தது. அதிலும் சாணக்கியரின் சமயோசிதத்தால் தான் ‘தாங்கள்’ உயிர் பெற்றீர்கள். சாணக்கியர் தவறு செய்ததாக நினைத்திருந்தால் – தங்கள் தந்தையே அவரைத் தண்டித்திருப்பாரே! எதற்காக உங்களை சாணக்கியரிடம் ஒப்புவித்து நாடு துறந்தார்? மன்னர் மன்னரே! சுபாந்துவிடம் குறை ஒன்றுமில்லை. சுபாந்துவின் பொறாமை மட்டும் தான் அவனது குறை. அதனால் இழைத்த இந்த தவறுக்கு அவனை நீங்கள் மன்னித்து விடவேண்டும்”
இதை எழுத நான் ஷேக்ஸ்பியர் இல்லையே. வெறும் ‘யாரோ’ தானே!
பிந்துசாரன் உண்மையை அறிந்தான்.
தாதியர் கால்களில் விழுந்து வணங்கினான்!
உடனே சாணக்கியர் இருக்குமிடம் சென்று மன்னிப்புக் கேட்டுத் தனது தவறுக்குப் பிராயச்சித்தம் என்ன செய்வது என்று கெஞ்சினான்.
சாணக்கியன் சொன்னான்: ‘அரசே… உங்கள் மன்னிப்பை நான் ஏற்கிறேன். ஆனால் சுபாந்துவும் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.”
மனிதனுக்குத் தான் என்ற அகங்காரம் அழிவதேயில்லை.
சாணக்கியனும் இதற்கு விலக்கில்லை!
பிந்துசாரன் ஒப்புக்கொண்டு புறப்பட்டான்.
சுபாந்துவை சந்தித்தான்.
கடுங்கோபத்தில் “உன்னை இன்றே கொல்லவேண்டும். ஆனால் நீ உயிர் வாழ ஒரே ஒரு வழி உள்ளது. சாணக்கியரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டால் நீ உயிர் பிழைக்கலாம்”
சுபாந்து மனமொடிந்து போனான். அரசனிடம் மன்னிப்புக் கேட்டு சாணக்கியரிடமும் மன்னிப்புக் கோர ஒப்புக்கொண்டான்.
சுபாந்து ஒத்துக்கொண்டாலும் மனம் சாணக்கியரை அடியோடு வெறுத்தது.
சாணக்கியரை சந்தித்து மன்னிப்பு வேண்டினான். அதே நேரம் அவர் அமர்ந்திருந்த வரட்டி மேடையில் ஒரு நெருப்புத் துண்டை மெல்ல ரகசியமாகச் செருகினான்.
காற்று சற்று வலுத்திருந்தது.
நெருப்பு கொழுந்து விட்டு பரவியது.
சாணத்தால் ஆன வரட்டி – சில நொடிகளில் முழு மேடையும் பற்றி எரிந்தது.
நெருப்புக்கு எல்லாம் ஒன்றுதான்!
சாண வரட்டியானாலும் சரி…. சாணக்கியரானாலும் சரி….
எதையும் எரிக்கும். யாரையும் எரிக்கும்.
அது மௌரிய சாம்ராஜ்யத்திற்கு அடிகோலிய சாணக்கியரையும் பாரபட்சமில்லாது எரித்தது!
பிந்துசாரன் அவன் ஆட்சியில் பதினாறு அரசாங்கங்களை வென்றான். அவன் ஆதிக்கத்தில் அகப்படாதவை : கலிங்கம், மற்றும் தென்னிந்திய சேர சோழ பாண்டியர் மட்டுமே..
பிந்துசாரன் பல நாடுகளை வென்றது மட்டுமல்லாது நாட்டின் அரசாங்கத்திலும் முன்னேற்றம் செய்தான். ஆயுர்வேதத்திற்கு பெரும் ஆதரவு அளித்தான். கலாச்சாரத்திற்கும் அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளித்தான். தந்தை பின் பற்றிய சமண மதத்தைப் பின் பற்றாது –புத்த மதத்தையும் பின் பற்றாது – அஜீவக மதத்தைப் பின் பற்றினான்.
பிந்துசாரன் பல மனைவிகளைக் கொண்டிருந்தான்.
அவர்களில் ஒருத்தி ‘தேவி தர்மா’!
தேவி தர்மா – சம்பா நகரத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த அழகிய பெண்!
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சில பெண்களின் அழகு பெரும் பிரசித்தம் அடைவதுண்டு. அது போல் தேவி தர்மாவின் அழகும் அந்நாளில் பெருவாரியாகப் பேசப்பட்டது. கால நிமித்தகர் இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறும் போது ‘மன்னனை மணந்து சக்கரவர்த்தியை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள்’ என்றனர்.
பெற்றோர்கள் அவளை பொன்னகையால் அலங்கரித்து –பாடலிபுத்திரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மன்னன் பிந்துசாரனை சந்தித்து :
‘எங்கள் மகள் மங்களகரமான பெண். தேவதை! இவளைத் தாங்கள் மணந்து கொள்ள வேண்டும்’ என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.
பிந்துசாரன் அவளை அந்தப்புரத்தில் சேர்த்தான்.
அந்தப்புரம் ஒரு பெரும் விடுதி போல் இருந்தது.
பதினாறு பேர் பிந்துசாரனின் மனைவியர்.
மற்றவர் பிந்துசாரனின் காமக் கிழத்தியர்.
அனைவருக்கும் இந்தப் பேரழகி மேல் ‘பொறாமை’ வந்தது.
‘மன்னன் இந்தப் பெண்ணிடம் உறவு கொண்டால், நம் ஒருவரையும் பிறகு சீண்டவே (தீண்டவே) மாட்டான்’ என்று எண்ணினர்.
அரண்மனைப் பெண்கள் ஒன்று கூடினர்.
கூடி, திட்டமிட்டு – அவளுக்கு சிகை அலங்காரம் பயிற்றுவித்தனர்.
‘இப்படிப்பட்ட சிகை கலாவல்லியுடன் மன்னன் உறவு கொள்ள மாட்டான்’ என்று நம்பினர்.
சிகை அலங்காரக் கலையில் தேவி தர்மா பெரும் தேர்ச்சி பெற்றாள்.
மன்னன் அந்தப்புரம் வரும்போது. அவனுக்கு உடல் அமைதி பெற உருவி இதமாக வருடி விடுவாள். மன்னன் உடனேயே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவான்..
மகிழ்ந்த மன்னன்:
“பெண்ணே! என் மனமும் உடலும் குளிர்ந்திருக்கிறது. உனக்கு ஒரு வரம் தருகிறேன்.
கேள்”
‘அரசே! நான் தங்களுடன் உறவு கொள்ள வேண்டும்’
பிந்துசாரன் : “ஆனால்… நீ ஒரு சிகை அலங்காரப் பெண் ஆயிற்றே …நான் அரச வம்சத்தினன்.. பின் எப்படி…” என்று இழுத்தான்.
“மன்னர் மன்னா! நான் சிகை அலங்காரக் குலத்தில் பிறந்தவள் அல்ல. பிராமணப் பெண். என்னை உங்களுக்கு மனைவியாக என் தந்தை தந்தாரே… நினைவில்லையா?!”
ஒன்று இரண்டு என்று இருந்தால் அவனுக்கு நினைவு இருக்கும். இப்படி அந்தப்புரம் நிரம்பி வழிய பெண்கள் இருந்தால் பிந்துசாரன் என்ன செய்வான் … பாவம் J
“அப்படி என்றால்… யார் உன்னை இந்த சிகைத் தொழில் செய்யச் சொன்னார்கள் ?”
“அந்தப்புரப் பெண்கள்”
“இனி நீ இதைச் செய்ய வேண்டாம். இன்று முதல் நீ என் ராணி!”
அவர்கள் உறவு இரண்டு மகன்களைப் பெற்றுத் தந்தது.
முதல் மகன் பிறந்த உடன்:
‘இவன் பிறந்ததால் நான் சோகமற்றுப் போனேன். ஆகவே இவனை ’அசோகன்’ என்றழைப்பேன்.
இந்திய சரித்திரத்தில் பெரிதும் போற்றப்பட்ட சக்கரவர்த்தி அசோகனின் கதை சொல்வதற்கு
…சரித்திரம் அட்டகாசமாகப் பேசும்…
‘ஷாலு என் வைப் ‘ என்று என் குடும்பத்தைப் பற்றி ஒரு நகைச்சுவைத் தொடராக சும்மா எழுதிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு சீரியஸ் திருப்பம் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் இப்போது மிகப் பெரிய எலிப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
குவிகம் ஆசிரியரின் குரல் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
” நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும் கோமாதா பூஜையையும் பஜ்ரங் பலியையும் தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள். ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள்.
இதனால் சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்”
மோடி, யோகா, பெண் சாமியாரிணி, கோமாதா அவற்றைப் பற்றி எழுதியதால் நான் ஹிந்துத்துவத்துக்கு விரோதி என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் முத்திரை குத்த அதை ஒரு ஆயிரம் பேர் லைக் வேற போட பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து கொண்டே போயிற்று. மக்கள் எழுதிய கமெண்ட்களை எல்லாம் படித்த பிறகு எங்கே போய் என் முகத்தை வைத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. அந்தக் காலத்தில் பிடிக்காதவர் போஸ்டருக்கு சாணி அடிப்பது போல இப்போ கமெண்ட் என்ற பெயரில் நம்மைக் கிட்டத்தட்ட உரிச்ச கோழி ஆக்கிவிடுகிறார்கள்.
உதாரணம் சொல்லும் போது கூட ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருக்கு. சல்மான் கான் ஏதோ உளறப் போக இப்போ கோர்ட் அது இதுன்னு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையா வந்திருக்கிற மாதிரி ஆகி விடக் கூடாது. இன்னும் கொஞ்சம் போனா ‘ இனிமே நான் கீ போர்டைத் தொட மாட்டேன். என் பிளாக்லே நானே வைரஸ் விட்டு அழிச்சுக்குவேன்’ அப்படின்னு அறிக்கை கொடுக்க வேண்டியிருக்கும். கந்து வட்டிக்காரங்களை விட இந்த கமெண்ட் போடற மக்கள் ரொம்பவும் மோசம். ஆராய்ச்சி செய்து நம்ம ஜாதியைக் கண்டுபிடித்து அந்த ஜாதியைச் சொல்லித் திட்டத் தொடங்கிவிடுவார்கள்.
சரி, பொதுவான விஷயத்தைவிட்டு என் பிரச்சினைக்கு வருவோம். குவிகம் ஆசிரியர் காப்புரிமை ஆசிரியருக்கே என்று சொல்லி எல்லாவற்றிக்கும் நான் தான் காரணம், தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கிற பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.
அந்தக் காலத்தில் குமுதம் ஆசிரியர் எழுதிய ஒரு பிராக்டிகல் ஜோக்கிற்காக நீதிமன்ற வாசப்படியை அடிக்கடி மிதிக்க வேண்டி வந்ததை நினைத்து இப்போ இந்த ஆசிரியரும் ரொம்ப ஜாக்கிரதையா காரியம் செய்கிறார் .
இறைவி படத்தில தயாரிப்பாளரைக் கேவலமாகச் சித்தரித்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கம் கார்த்திக் சுப்பராஜ் மேல வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லையா? அது மாதிரிதான்.
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ” பத்திரிகையைத் தடை செய்யவேண்டும் . எழுதிய எழுத்தாளரை குண்டா சட்டத்தில் உள்ளே போடவேண்டும் ” என்று சில நற்பணி மன்றங்கள் அவருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
மீடியாக்களும் இதை சும்மா விடவில்லை. ஊதி ஊதிப் பெரிதாக மாற்ற முயல்கிறார்கள்.
ஓர் அரசியல் தலைவர் இது ‘ வலையில் வளரும் விஷக் களைகள்’ என்று கவித்துவமாகத் திட்டினார்.
இன்னொருவர் ‘இப்படி எழுதறவங்களோட விரலை முறிக்கணும்னு’ ஜாடையா சொன்னார்.
இன்னொரு கூட்டணித் தலைவரோ எனக்கு எதிராக இணைய தளத்தில் ப்ரவுஸ் யாத்திரை போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்.
மற்றொரு தேசிய மதச் சார்பற்ற கட்சியின் தலைவர்கள், மாறுபட்ட கருத்தைக் கூறியதால் அவர்கள் ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பது யாருக்குமே புரியவில்லை.
ஆங்கில சேனலில் என் தொடரைப் பற்றிக் கூறி அரைமணிநேரம் கார சாரமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு கட்சிப் பத்திரிகை ‘ ஆப்பசைத்த குரங்கு’ என்று என் படத்தைப் போட்டுக் கார்ட்டூன் போட்டது.
இன்னொரு பெரிய மனிதரோ ‘ இவன் தன்னை ஆர்.பி.ஐ. கவர்னர் என்று நினைத்துக் கொண்டு எழுதுகிறான் ‘ என்று என்னை மரியாதையாகச் சாடினார்.
என் நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச காலம் என்னைத் தலை மறைவாய்ப் போகும்படி வலியுறுத்தினார்கள். ஆபீஸில் என் பாஸ், இந்தப் பிரச்சினை முடியற வரைக்கும் ஆபீஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கவேண்டாம் என்று அன்போட எச்சரித்தார். மொத்தத்தில் என்னை -சாதாரணமா குடும்பக் கதை எழுதிய என்னை – ஒரு மெட்ராஸ் ஐ வந்தவன் மாதிரி -ஒரு தீவிரவாதி அளவில் மாற்றி விட்டார்கள். சில எழுத்தாளர் அமைப்புக்கள் எனக்காக வரிந்துகட்டி ஆதரவாகப் பேச அது எரிகிற நெருப்பில் எண்ணை விடுவதைப்போல ஆயிற்று.
‘ சரி, சக எழுத்தாளர் நண்பர்களிடம் யோசனை கேட்கலாம்’ என்று போனால் அவர்கள் என்னை மேலும் குழப்பமடையச் செய்துவிட்டார்கள். மன்னிப்பு அறிக்கை எழுதுவதிலிருந்து ஜனாதிபதிக்குக் கருணை மனு போடும் வரையான அத்தனை யோசனைகளும் வந்தன.
சரி குவிகம் ஆசிரியர் குழுதான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் குவிகம் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர், துணை ஆசிரியர், இணை ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழு என்று எல்லோரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சாத்தப்பட்டது. எல்லோரும் மிகுந்த யோசனையில் இருந்தார்கள். ‘இப்போ என்ன செய்வதாக உத்தேசம்?” என்று புதிதாக வந்த துணை ஆசிரியர் கேட்டார்.
” ஒரு வருஷத்துக்கு மேலா இந்தத் தொடரை நான் எழுதி வருகிறேன். இத்தனை நாளும் நீங்கள் அனைவரும் தான் இது நன்றாகப் போகிறது என்று சொல்லி என்னைத் தூண்டிவிட்டீர்கள். பேஸ்புக்கில் இதைப் பெரிதாக விளம்பரம் செய்து உங்கள் சர்குலேஷனை ஏற்றிக் கொண்டீர்கள். ‘ஷாலு ரசிகர்கள் மன்றம்’ என்று ஒரு வாசகர் வேறு பேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்போ பிரச்சினை என்று வந்ததும் எல்லோரும் என் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்க முயலுகிறீர்கள். இது நியாமா?”
“பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? ” என்று கேட்டார் ஆசிரியர்.
” எது பத்திரிகை தர்மம்? எழுத்தாளரைக் காவு கொடுப்பது தான் பத்திரிகை தர்மமா?’ நானும் சூடாகக் கேட்டேன்.
” இங்கே பாருங்க! இந்தப் பிரச்சினைக்கு நான் ஒரு வழி சொல்றேன். அதுபடி நீங்க செஞ்சீங்கன்னா நீங்களும் தப்பலாம் , நம்ம பத்திரிகையும் தப்பும்’ என்றார் குவிகம் ஆசிரியர்.
” என்ன ? என்ன ? என்று எல்லோரும் ஒருமித்துக் கேட்டனர். நானும் கேட்டேன்.
” இந்தத் தொடரை எழுதியதற்காக உங்கள் கைப்பட எழுதிய மன்னிப்புக் கடிதத்தை அட்டையில் போட்டுவிடுவோம். ‘இந்தத் தொடர் இனி வராது’ என்று நாங்களும் முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறோம்.”
“இது கோழைத்தனம். நாம் தைரியமாக இந்தத் தொடரைத் தொடர வேண்டும். இதனால் நாம் இழப்பது ஒன்றுமில்லை. எழுத்துரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோமே?’ என்று ஒரு ஆலோசகர் குழுவில் உள்ள இளைஞர் ஒருவர் கூறினார். அவர் மூட்டிய தைரியம் மற்றவர்களையும் பற்றிக் கொண்டது – குவிகம் ஆசிரியரைத் தவிர.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் குவிகம் ஆசிரியர் மசிகிறவராகத் தெரியவில்லை. மற்றவர்களை எப்படி கன்வின்ஸ் செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
குவிகம் ஆசிரியருக்குப் புதிய யோசனை தோன்றியது. ” இதுவரை நீங்கள் ‘ஷாலு மை வைஃப் ‘ என்று எழுதிவந்தீர்கள். இப்போ ‘ என் ஹஸ்பெண்ட் என் எனிமி’ என்று ஷாலுவை எழுதச் சொல்வோமே?. பெண்ணீயமும் திருப்தி அடைந்த மாதிரி இருக்கும். சபாஷ் சரியான போட்டி என்று மக்களும் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சில மாதங்கள் கழித்து – மக்கள் எல்லாரும் மறந்த பிறகு ‘ஷாலு மை வைஃபை ‘ நீங்கள் தொடரலாம். குமுதத்தில அந்தக் காலத்தில சுஜாதா ஒரு கதை எழுதினார். அதில சில பிரச்சினை வந்ததுன்னு அதை அப்படியே நிறுத்திவிட்டார் ஆசிரியர். கொஞ்ச நாள் கழிச்சு அதே கதையை வேற பெயரில் சுஜாதாவே எழுதினார். மக்களும் ஏத்துக்கிட்டாங்க ‘ என்று வயா- மீடியாவுக்கு வந்தார்.
மற்ற ஆசிரியர்களும் இந்தப் புதுமைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
‘ஷாலுவையும் குருஜினியையும் கிண்டல் செய்து எழுதியதற்கு இந்தத் தண்டனை எனக்குத் தேவை தான்’ என்று நினைத்துக் கொண்டேன்.
” சரி ஷாலுவிடம் சொல்கிறேன்.” என்று சொல்லி விட்டுக் கிளம்பும் போதுதான் அந்த சம்மன் எஸ்எம்எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது. கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது அந்த எஸ் எம் எஸ். இது என்ன கிணறு வெட்ட தண்ணி வந்து அதிலேர்ந்து திமிங்கிலம் வந்த மாதிரி இருக்கே என்று பயந்து கொண்டே படித்தேன்.
என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள் போலும்.
” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா என்னா சார்) விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.
ஜட்ஜ் ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.
அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில் இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது. உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம். “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை உடனே தடை செய்யவேண்டும் ” என்று புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.
எனக்குத் தலை சுற்றியது. ‘குவிகம் பிரச்சினையை ஒருவாறு முடிக்கலாம் என்றாலும் குடும்பப் பிரச்சினை இப்போ எங்கேயோ போயிக்கிட்டிருக்கே. இது ரொம்ப ரொம்ப முக்கியமான சமாசாரம். இதற்கு உடனே முடிவு கட்டிவிட வேண்டும் ‘ ‘ என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்குப் போனேன்.
வீடு பூட்டியிருந்தது.
(அடுத்த இதழில் முடியும்) அனைவரும்: அப்பாடா!!!
அபயமென்று வந்தவரை ஆட்கொள்ளும் முருகா
உபாயமொன்று சொல்லிடுவாய் எமக்கின்று முருகா
உற்பத்தி பெருகிடினும் கடைக்குவந்த பண்டங்கள்
கறுப்பு சந்தையிலே காணாமல் போகிறது
விண்முட்டும் விலையேற்றம் விழிகளும் பிதுங்குகிறது
செலவுமேல் செலவாகி பணமெலாம் கரைகிறது!
ஊழலின் சூழலில் மாந்தர்க்கு திண்டாட்டம்
கள்ளமுடை மாந்தர்க்கு நாளெல்லாம் கொண்டாட்டம்
சுயநலக் கும்பலின் கொடுமைகள் ஏராளம்
அமைதியை அழிக்கின்ற வன்முறையின் வெறியாட்டம்!
ஊழலிலா காற்றினையே சுவாசிக்க வேண்டும்
சுயநலமிலா உலகினிலே இருந்திடவே வேண்டும்
யாமும்நல் மனிதராய் வாழ்ந்திடவே வேண்டும்
அதற்குபல வழிகள்நீ சொல்லிடவே வேண்டும் !
உலக அளவிலான குறு நாடகங்களை ( பத்தே நிமிடங்கள்) ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் அறிமுகப்படுத்து கிறார்கள் இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.
தென் இந்தியாவில் ஜூலை மாதத்தில் அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் (நுங்கம்பாக்கம்,சென்னை ) இந்த விழா நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தி அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து இயக்குனர்,நடிகர்களுக்குப் பரிசுகள் வழங்கி உலக அளவில் அவர்களைக் கொண்டு செல்ல இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு உதவுகிறது.
ஜூலை 6 லிருந்து – 23 வரை இந்த குறு நாடக விழா நடைபெற உள்ளது. முப்பது நாடகங்கள் மற்றும் திடீர் வரவு ( wild card ) கிட்டத்தட்ட 20 நாடகங்கள் நம்மை மகிழ்விக்க வருகின்றன.
27,29.30,31 தேதிகளில் இவற்றின் இறுதிச் சுற்று நடைபெறும்.
வருகின்ற நாட்களில் வரப் போகும் நாடகங்கள் :
Top 30 Week Two (13, 15, 16 and 17 July 2016 – 7 pm to 9 pm) | ||
Play | Playwright | Director/ITC |
The Goon | Pete Malicki | Ramakrishna Dhanasekaran |
Objectum Sexuality | Ron Burch | Meera Sitaraman |
Who Am I | R.Baskar | (Koothu -P- Pattarai) R. Baskar |
Unsubscribe! | Drishya Gautam | (The Stirfry Collective) Drishya Gautam |
Nee | John Pradeep | Udhaykumar Gunasekaran |
Real or Reel | Sabarish Menon | (The Drama Troupe) Sabarish Menon |
Damayanthi | Janardhan Raghavan | Guru Narayan Chandrasekaran |
Making a Supershero | Bhargav Prasad | Bhargav Prasad |
Sweep Sweep | Balakrishnan Venkataraman | (Theatre Nisha) Janani Narasimhan |
A tale of a tall girl or 27 f 5 11 | Shruti Parasuram | (Evam Lab) Sunil Vishnu |
Wildcards 2 (16 and 17 July 2016 – 2 pm to 4 pm) | ||
Play | Playwright | Director/ITC |
Ariyanai 234 | Vishnu Varatharajan, Kishore | (Saaral Koothu Pattarai) Prasanna M |
Forgive me Father | Sally Bartley | Dharish Kumar |
Debutantes | Shakila Arun | (Applause Theatric Activities) Shakila Arun |
Man & Monkey | Cordis Paldano | (Theatre of Maham ) Hari Ramakrishnan |
The Animal | Sudarsun Raghavan | (Theatre Zilch) Sudarsun Raghavan |
Right Swipes and Wrong Moves | Susan Goodell | Charles Britto |
A Play on Consent | Tarana Reddy | Prarthana Chandrasekaran |
–
Top 30 Week Three (21, 22, 23 and 24 July 2016 – 7 pm to 9 pm) | ||
Play | Playwright | Director/ITC |
Hammer Time | Sasha Siljanovic | Sushant Alexander |
War Kiss | Alex Broun | Karthik Anantharaman |
Red Wire Blue Wire | Albert Jamae | Shravan Karthikeyan |
How to find Joy in Nothingness | Charles Britto | Adhira Pandilakshmi |
Yours Urgently | Rajiv Rajaram | (MP Sabha) Rajiv Rajaram |
Chennai Pattinam 2065 | Mathivanan Rajendran | (Stray Factory) Mathivanan Rajendran |
Makku Police Manguttu Thirudan | Karthikeyan Ravi | John Pradeep |
Sweet | Manibharathi | (Azhagammai Theaters) Manibharathi |
Thaathaavin Petti | Vinodhini Vaidyanathan | (Theatre Zero) Amit Singh |
Boob Job | Meera Sitaraman | Balakrishnan Venkataraman |
இளமை + புதுமை + வித்தியாசமான கதைக் களன் + அட்டகாசமான நடிப்பு + வசனம் + அதி வேகக் காட்சி அமைப்பு – இவையே இந்த விழாவின் சிறப்பம்சங்கள்.
ஜூலை 8 அன்று நடைபெற்ற பத்து நாடகங்கள், நமக்கு ஒரு புது உலகத்தை அறிமுகப் படுத்தியது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில நாடகங்கள் தமிழில் இருந்தன.
The Funny Big Girl, First Day First Show, The Blind date, Manitha uravukal (தமிழ்), The Ordinary City, Ballet of Death (தமிழ்), How to find joy in Nothingness (தமிழ்), Shakespeare – As you Like It,Never Give Up (தமிழ்), Jam .
பார்த்த எட்டு நாடகங்களைப் பற்றி நம் கணிப்பு:
The Blind Date: ஒருவன் தன் காதலிக்காக் காத்திருக்கும் போது காதலியின் பாட்டியைப் பார்த்து மயங்கி ஆவலுடன் டேட்டுக்குப் போகத் துடிக்கும் நாடகம்.
Manitha uravukal: எட்டு வருடங்களாக அமெரிக்காவிலிருந்து வராத மகன் ஒரு நாள் வருகிறான். ஆனால் பெற்றோர்களுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு உடனே புறப்பட்டுச் செல்கிறான் – அவனுடைய பெற்றோர்கள் துயரில் துடிக்கிறார்கள்.
The Ordinary City: சென்னையை வெறுக்கும் ஒரு வடக்கத்திக்காரன் கடைசியில் ஊரைவிட்டுப் போகும்போது சென்னையின் அருமையை உணர்ந்து தவிக்கும் கதை
The Ordinary City, Ballet of Death : கண்ணுக்குத் தெரியாத ஒரு ‘குரல்’ஆறு பேரின் மனதில் இருப்பதைச் சொல்ல அதனால் ஏற்படும் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு சாகும் காமெடி கதை
How to find joy in Nothingness : ஒரு முன்னாள் ராணுவ வீரன் தனக்குக் கிடைத்த ஓட்டல் காவல்காரன் வே:லையில் நிறைவு கொள்வது பற்றிய கதை.
Shakespeare – As you Like It: ஜூலியட் எப்படி ஆணாதிக்கத்தால் பந்தாடப்படுகிறாள், புரூட்டஸ் ஜூலியஸ் சீசரைக் கொன்றது எப்படி GIF ஆக வந்தது, புரூட்டசும் ஆண்டணியும் பேசும்போது அருண் கோஸ்வாமி போல controversy கிளப்புவது எப்படி என்று சொல்லும் கலக்கல் காமெடி கதை
Never Give Up: ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிய எண்ணிய பெண் கடைசி 100 மீட்டரில் துவண்டு விழ, ஆனால் மனம் கலங்காமல் வலியைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை முடித்து அடுத்த ஒலிம்பிக்ஸில் சாதனை படைக்கத் தயாராக நிற்கும் பெண்ணைப் பற்றிய கதை
Jam: டிராஃபிக் ஜாமிலும் இனிமை காணமுடியும் என்ற மேஜிக்கைச் சொன்ன கதை
பார்வையாளர்கள் ஒட்டில் Shakespeare – As you Like It மற்றும் Never Give Up இரண்டும் சிறந்த நாடகங்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன.
மகத்தான இறுதிச் சுற்றைப் பார்க்க ஆவலாயுள்ளோம் !
*வாழ்க்கை*
சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை….
மலைத்து வாழ்வதல்ல வாழ்க்கை
பிறர் மலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை….
தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை….
ஆர்ப்பரித்து வாழ்வதல்ல வாழ்க்கை
அர்ப்பணித்து வாழ்வதுதான் வாழ்க்கை….
நிதி நிலைக்க வாழ்வதல்ல வாழ்க்கை
நீதி நிலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை….
கோடிநாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை….
இருக்கின்ற பொழுது வாழ்வதல்ல வாழ்க்கை
இறந்த பின்பும் வாழ்வதுதான் வாழ்க்கை….!!!
( சென்ற இதழ் தொடர்ச்சி )
அடுத்த நாள்… ‘விபரீதம் ஏதாவது நடந்தால் என்ன செய்வது என்று ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆபீஸிற்கு வந்து விட்டார் பரந்தாமன். மெதுவாக எல்லா ஸ்டா·பும் ஆபீஸிற்கு வந்தார்கள்.
பத்து மணிக்குத் தன் செக்ரடரியைக் கூப்பிட்டார்.
‘மோகனா .. நம்ம ஆபீஸ் அன்டு ·பாக்டரி அட்டென்டன்ஸ் எப்படி இருக்குன்னு செக் அப் பண்ணி சொல்லு..’என்றார்.
மோகனா வெளியே போய் யார் யாருக்கோ ·போன் பண்ணி தகவல்களை சேகரித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
‘ஸார்.. அன்டென்டன்ஸ் ஆஸ் யூஷ்வல் ஸென்ட் பெர்ஸென்ட் ஸார்…”
‘வாட்..?’ ஆச்சரியமாகப் பார்த்தார் பரந்தாமன்.
‘ஸார்.. அப்புறம் ஒரு விஷயம்.. நம்ம கம்பனி காம்பௌண்டுக்கு வெளியே நம்ம ஸ்டாபுடைய மனைவி-மார்கள் சில பேர் ‘எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ என்று போர்டு வைத்துக் கொண்டு
உண்ணாவிரதம் இருக்காங்க… நம்ம டைரக்டர்ஸ் வீட்டுலேயிருந்தெல்லாம் டெலி·போன் வந்தது.. அவங்க வீட்டு முன்னாலேயும் இதே போல பெண்கள் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்காங்களாம்’
‘வாட்.. போலீஸிற்குத் தகவல் சொன்னீங்களா..?’
‘போலீஸிற்கு இன்·பார்ம் பண்ணியாச்சு.. அவங்க கூட இரண்டு கான்ஸ்டபிள்களை நிறுத்தியிருக்காங்க, கலாட்டா ஆனா தடுப்பதற்காக. ஆனா அந்த பெண்கள் சத்தமோ கூச்சலோ போடாம அந்த போர்டை மட்டும் வெச்சுக்கிட்டு ஏதோ பத்திரிகைகளையெல்லாம் புரட்டிப் பார்த்துட்டு உட்கார்ந்துண்டிருக்காங்க. சில பத்திரிகைக்காரங்க
அவங்களப் பார்த்து விசாரிச்சுட்டு போறாங்களாம். நாளைக்கு பேப்பர்களில் இதே நியூஸா இருக்கப் போறது‘
‘ஓ ஷிட்… சரி.. சரி.. நீ போ’ என்றார் எரிச்சலோடு.
‘ஸார்.. உங்களைப் பார்க்க நம்ம கஸ்டமர் ஒருத்தர்வந்துருக்கார்’
‘சரி.. வரச் சொல்..’
‘நமஸ்காரம்…’ என்று சொன்னபடியே எதிரே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார் அந்த கம்பனியின் நீண்ட கால கஸ்டமர் சச்சிதானந்தம்.
‘எஸ்.. மிஸ்டர் சச்சிதானந்தம்.. எப்படி இருக்கீங்க?.. என்ன விஷயம் சொல்லுங்க..’என்றார் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு.
‘ஸார்.. நான் வந்த வேளை சரியில்லை போலிருக்கு..இத்தன வருஷமா இல்லாம நம்ம கம்பனிக்கு முன்னாலே உண்ணாவிரதம்… இந்த லேபர் பிராப்ளம் எப்பத்தான் தீருமோ..? எனிவே நான் வந்த வேலையைச் சொல்-
லிடறேன். நான் ஒரு ஆர்டர் கொடுத்திருந்தேன் இல்லையா.. அதன் ஸப்ளை ஏப்ரலில்தான் டியூ.. பட், எனக்கு அது கொஞ்சம் முன்னால் கிடைத்தால் தேவலை..ஸே.. இந்த மாதம் அதாவது மார்ச் மாதம் பதினஞ்சாம் தேதிக்குள் கிடைத்தால் பரவாயில்லை..’
‘பார்க்கறேன்.. சச்சிதானந்தம்.. நீங்கதான் பார்த்தீங்களே.. நான் செக்கப் பண்ணி நாளைக்குச் சொல்றேன்..’
‘இந்தப் போராட்டத்தோட கிரேவிடி எனக்குத் தெரியாது.. ஏப்ரல், மே மாத சப்ளைகளெல்லாம் கரெக்டா வந்துடுமான்னு பார்த்துச் சொல்லுங்க..
இல்லேன்னா, நான் ஆல்டர்னேடிவ் அரேஞ்ச்மென்ட் பண்ணியாகணும்’ என்று எழுந்தார் சச்சிதானந்தம்.
‘ஓகே..’ என்றார் பரந்தாமன் எரிச்சலை வெளிக்காட்டாமல்.
ஒருவர் ஒருவராக டைரக்டர்களிடமிருந்து ·போன் வர ஆரம்பித்தது பரந்தாமனுக்கு. ஒரு குடும்பமா, ஒண்ணுக்கு ஒண்ணா இருந்துட்டு இவ்வளவு நாள் கம்பனி முன்னேற்றத்திற்காக பாடுபட்டுட்டு முதுகிலே குத்திட்டான் பார் அந்த ரவி..அந்த சச்சிதானந்தம் இனி சப்ளையெல்லாம் ரெகுலரா வருமான்னு கேட்கறார்… டிஸ்கிரேஸ்·புல்.. ‘ என்று தன் வீட்டில் மனைவியிடமும், மகளிடமும் கத்திக்கொண்டிருந்தார் பரந்தாமன்.
‘அப்பா.. இன்னிக்கு நைட் நியூஸிலே அஸோஸியேஷன் லீடர் ரவியின் இன்டர்வியூ இருக்காம்’ என்றாள் அவர் மகள் புவனா.
‘டாம்மிட்… அதைப் போய் என்னப் பார்க்கச் சொல்றியா..?’
‘ அப்பா.. கூல்..கூல்.. அவர் என்னதான் சொல்றார்னு கேட்போமே.. ஆஸ் அ மானேஜிங் டைரக்டர் உங்களுக்குப் பொறுமை வேண்டாமா அப்பா.. அவர்
சொல்றதைக் கேட்கறதாலே நமக்கு என்னப்பா நஷ்டம்..?’
‘சரி.. சரி.. பார்க்கலாம்’
புவனா டி,வி.யை ஆன் செய்தாள். நியூஸ் வந்து கொண்டிருந்தது. ரவி டி.வி. யின் திரையில் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
‘மிஸ்டர் ரவி.. வணக்கம்.. தொழிலாளர்களின் டிமாண்ட்ஸை மானேஜ்மென்ட் ஏத்துக்கலேன்னா வேலை நிறுத்தம், கதவடைப்பு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கோம். இது என்ன புதுமையான போராட்டம்?
உங்க ஸ்டா·பெல்லாம் வேலையில் இல்லா மனைவிமாரையும், மகள்களையும் உங்க கம்பனி ஆபீஸ், ·பாக்டரி, கம்பனி டைரக்டர்ஸ் வீடுகளுக்கு முன்னால் உண்ணாவிரதம் செய்ய வைத்திருக்கிறீர்கள்.. அதுவும் கூச்சலில்லை,கோஷமில்லை… ‘கோரிக்கைகளை நிறைவேற்று’ என்ற போர்டுகளை மட்டும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். ஆண்களாகிய நீங்களெல்லாம் கம்பனிக்குள் சென்று வேலை செய்திருக்கிறீர்கள்;;; ? என்றார் நிருபர் புன்னகையோடு.
‘எங்களுடைய உழைப்பினால் உருவானது இந்தக் கம்பெனி. இன்னிக்கு பொருள்களின் தரத்திலாகட்டும், விற்பனையிலாகட்டும், நிகர் லாபத்தி லாகட்டும் முதல் இடத்தில் இருக்கிறது. எங்க கம்பெனியின் உற்பத்தி
பாதிக்கப்பட்டால் அது இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும், ஏற்றுமதியைப் பாதிக்கும். அப்படிப்பட்ட கம்பெனியின் சரிவிற்கு நாங்கள் காரணமாக இருப்போமா..? ஒரு போதும் மாட்டோம்.. எங்களது கோரிக்கைகள் – எங்களைப் பொறுத்தவரை நியாயமான கோரிக்கைகள் – எங்களுக்கும், எங்கள் மானேஜ்மென்டுக்கும் உள்ள பிரச்னை.. ஒரு குடும்பச் சண்டை மாதிரி.. அதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்..”
‘நீங்கள் முழுமனதாக ஒத்துழைப்பு கொடுத்து, உற்பத்தி குறையாது பார்த்துக் கொண்டால், உங்கள் கம்பனி மானேஜ்மென்ட் உங்கள் டிமாண்டை அக்கறையோடு பரிசீலித்து ஒத்துக் கொள்வார்கள் என்று
நினைக்கிறீர்களா..? அவர்களுக்கு தொந்தரவு ஏற்படாதவரை அவர்கள் அப்படியே ஒதுங்கி அலட்சியமாக இருந்து விடலாமில்லையா..?
‘ஒரு சில முதலாளிகள் அதுமாதிரி இருக்கலாம். எங்கள் முதலாளிகள் எங்கள் கூடப் பிறவா சகோதரர்கள் மாதிரி.. எங்களுடனேயே வளர்ந்-
தவர்கள். அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை – அவை கம்பெனியின் உற்பத்தியை, விற்பனையை, லாபத்தை எந்த விதத்திலேயும் பாதிக்காது என்று புள்ளி விவரத்துடன் கூறி இருக்கிறோம்… அவர்களுக்கும் சிறிது டைம் வேண்டும் அல்லவா..? சிந்தித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். கத்தியின்றி, ரத்தமின்றி போராடி சுதந்திரம் வாங்கிய நாடு இது.. சாத்வீகப் போராட்டத்திற்கு உள்ள பலம் வயலன்ஸிற்குக் கிடையாது.. உண்ணாவிரதம் இருக்கும் எங்கள் மனைவிமார்களுக்கும் புள்ளி விவரத்தோடு எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தைச் சொல்லி இருக்கிறோம். அவர்கள் எங்கள் டைரக்டர்களின் மனைவிமார்களிடம் நிச்சயமாக டிஸ்கஸ் செய்திருப்பார்கள். டைரக்டர்களின் மனைவிமார்கள் எங்கள் பக்கம்தான் இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அந்த முறையிலும் எங்கள் மானேஜ்மென்டுக்கு பிரஷர் இருக்கிறது..‘
‘அதாவது மதுரையைப் பிடித்தால் சிதம்பரம் தானாக தலையாட்டும்னு சொல்றீங்க’
மெலிதாகச் சிரித்தான் ரவி.
‘உங்களுடைய போராட்டம் – நூதனமான போராட்டம்- இப்போது நாடு முழுவதும் பிரசித்தமாகி விட்டது. இதனால் உங்களுடைய கஸ்டமர்ஸ்
உங்களை விட்டுப் போகலாமல்லவா..? இது உங்கள் கம்பெனிக்கு அட்வர்ஸ் பப்ளிஸிடி இல்லையா?’
‘இல்லை.. அப்படி நான் நினைக்கவில்லை.. நீங்கள் எங்கள் கம்பெனிக்குக் காலணா செலவு இல்லாமல் நல்ல பப்ளிஸிடி தேடிக் கொடுத் திருக்கிறீர்கள்.. இந்த இன்டர்வியூ மூலம் எங்கள் கஸ்டமர்ஸ¤க்கும், ஜெனரல் பப்ளிக்குக்கும் எங்களால் – எங்கள் போராட்டத்தால் –
எங்க கம்பெனியின் உற்பத்திக்கோ, விற்பனைக்கோ ஒரு பங்கமும் வராது என்று புரிந்திருக்கும். என்னால் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமா சொல்ல முடியும். எங்களது நீண்ட கால கஸ்டமர் ஒருத்தர் இன்று எங்களது எம்.டி.யை அணுகி, ‘நாங்கள் ஏப்ரலில் சப்ளை செய்ய
வேண்டிய சில ஐட்டங்களை மார்ச் பதினஞ்சாம் தேதிக்குள் கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். நாச்சுவரலி எங்கள் எம்.டி. ஒன்றும் சொல்ல முடியாது நாளை சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது தெரிய வந்த நான் அவரைத் தொடர்பு கொண்டு எங்கள் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவரது சப்ளைகள் ரெகுலராக இருக்கும். அவர் விரும்பியபடியே ஏப்ரலில் சப்ளை செய்ய வேண்டிய ஐட்டங்களையும் எம்.டி.யிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு சப்ளை செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தேன்‘
‘இட் ஈஸ் வெரி கிரேட்…. உங்களை மாதிரி தொழிலாளர் தலைவர்கள் இருந்தால் எல்லாக் கம்பெனிகளும் செழிப்பாக இருக்கும். ஆமாம்.. உங்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி உங்கள் கம்பெனி காம்படிடர்ஸ் உங்களை அவர்கள் பக்கம் இழுக்க டிரைபண்ணலியா..?’
‘செய்தார்கள்.. செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன், எங்கள் திறமையையும், இனீஷியேடிவையும் பார்த்து ,நாங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் நாங்கள் எல்லாம் எங்கள் கம்பெனிக்கு கமிடெட் ஸ்டா·ப்… ஸோல்ஜர்கள்.. அவர்கள் என்ன கொடுத்தாலும் போக மாட்டோம் எங்கள் கம்பெனி மானேஜ்மென்ட் எங்களை வெளியே அனுப்பினால் ஒழிய.
எங்களது டைரக்டர்கள் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து ஒரு நல்ல பதில் சொல்வார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறோம். நன்றி..‘
ரவி டி.வி. ஸ்கிரீனிலிருந்து மறைந்தான். புவனா டி.வி யை ஆ·ப் செய்தாள்.
பரந்தாமன் கண்களில் கண்ணீர். ‘ரவி புள்ளி விவரங்களோடுதானே கேட்டான். அவன் கேட்டவற்றில் நியாயம் இருக்கிறதே. நாம் கோரிக்கைகளை ஒத்துக்கொண்டுதான் பார்ப்போமே..’
அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. மற்ற டைரக்டர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச டெலிபோன் நம்பர்களைச் சுழற்ற ஆரம்பித்தார்.
இருட்டென்றால் அப்படி கும்மிருட்டு
அமாவாசைக்கு அடுத்த நாள் இன்னிக்கி
இருப்பதோ பட்டிக்காடு மின் தடையும் வேற
ராந்தலும் வெளக்கும் அவிஞ்சு மணி மூணாச்சு
காலையில சரியா கூவிச்சு வெடக்கோழி
ஆறு அஞ்சு மணியைப் பாத்ததுமே மூடிக்கிச்சு
மதியம் சாப்பாட்டுக்குக் கோழி தயாராச்சு
கோழியக் கேட்டுட்டா மசாலா அறைப்பாக
உறிச்ச நாட்டுக்கோழி தளதளன்னு கொஞ்சிச்சு
மணக்க மணக்க மாமியா அறைச்சுத் தர
குலுக்கிக் குலுக்கிக் கொழுந்தியா கொதிக்கவைக்க
எட்டூருக்குக் கேட்டுச்சு நாட்டுக்கோழி வாசம்
தலை வாழை இலை போட்டு அள்ளி அள்ளி வச்சாக
வாயைத் தொறந்தாக்கா காக்கா கொத்தும் வரை
மாமனும் பிடி பிடிச்சேன் முட்ட முட்டத் தின்னுப்புட்டேன்
ராத்திரி ஆனதும் ஒருக்களிச்சு எழுந்திருச்சேன் வயித்துக் கோழிக்கு றெக்கை முளைச்சிடுச்சு
குறுக்கும் நெடுக்குமா முட்ட முட்டத் தொடங்கிச்சு பரக்கப் பரக்க நானும் இடந்தேடி ஓடிப்போனேன்
இருட்டே நல்ல துணை தனியிடமே செம சொகம்
கிருட்டுக்கிருட்டுன்னு சுவத்துக்கோழி கத்திச்சு
சளக்கு சளக்குன்னு கறுப்புப் பண்ணி பொறளுது
உஸ்உஸ்ஸுன்னு கரும் பாம்பு நெளியுது
கீக்குக்கீக்குன்னு சொறித் தவளை கத்திச்சு
வழ்வழ்ழென்று கிழ நாய் ஊளையிட
பாம்போ பண்ணியோ நாயோ தவளையோ
என் அவசரம் எனக்கு வேறெதுவும் தெரியலே
முள்ளளுச்செடிகிட்டே முட்டுக்குத்தி உக்காந்தேன்
கடனையெல்லாம் முடிச்சிபுட்டு காலார நடைநடந்து
தேங்கிக் கிடக்கும் பள்ளத்துக் குட்டையில்
காலைக் கழுவி இடக்கர் அடக்கல் முடித்தேன்
மாப்பு தான் நானும் ஆனாலும் தமிழ் வாத்தி .
குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் புதுமையான ‘ஸ்பேசஸ்’ அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.
சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின் நோக்கம் பற்றியும் கூறி அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
வேணுகோபால் அவர்கள் வாசித்த “தர்பன சுந்தரி’ எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது !.
பேராசிரியர் சிந்தாமணியின் கவிதைகள் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன.
இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல் தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள் சர்வ தேச வானொலி மற்றும் பிராஜக்ட் மதுரை.
தாரிணி கணேஷ், கோமல் சாமிநாதன் அவர்களின் இலக்கிய இதழ் “சுபமங்களா” வெளியிட்ட படைப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும் இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.
புத்தகமா இ- புத்தகமா ? என்ற கேள்வி எழுந்தாலும் அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும் இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது .
இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டார்.
நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இந்த விழாவின் விவாதங்களின் முழு விவரமும் காண கீழே கொடுத்துள்ள இலக்கியவாசலின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்!!
கால் பதித்து ஏறுகையிலேயே
காணாமல் போகும் மாயப்படிகள்
அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டு இருக்கையிலேயே
கவிழ்ந்து விழும் விமானங்கள்
சூரியனாய் மாறிய நட்சத்திரங்கள்
தீபாராதனை காண்கையிலேயே கால் கை அசைக்கும் கடவுள்கள்
படித்துக்கொண்டு இருக்கும்போதே பறிபோகும் பக்கங்கள்
ஆசையுடன் விழுங்கப் போகையில் அருவமான அன்னம்
கால்கள் தரையில் பதியாமல் பறக்கிற நடை,
கீழே நழுவும் மலையும் வயலும் கடலும் காடும்
குழந்தைகளாய் வளைய வரும் வளர்ந்த பிள்ளைகள்
முடிவில்லா பாதைகளும் ,மூடிய நுழைவுகளும்
எத்தனையோ வருடம் கழித்து சந்தித்த தோழி
அருகே போனதும் அன்னியமாய்ப் போனது
அலுவலகம் செல்லும் வழியிலேயே அவிழ்ந்து விழும் உடைகள்
தேடி அவலமாய்த் தவிக்கும் பொழுதுகள்
சிரித்தபடி குசலம் கேட்டு உறவாடும் மரித்த உறவுகள் என
வண்ண வண்ணக் கனவுகளில் தோய்ந்த என் பின்னிரவுகளும்
அதிகாலைகளும்
என் இருப்பை நிறைப்பவை !
வாட்ச் மேன்
என் நண்பனைப் பார்ப்பதற்காக, அவன் அபார்ட்மென்ட் முன்பு ஆட்டோவை நிறுத்தி, மனைவி மகளுடன் கீழே இறங்கினேன்.
ஆட்டோ டிரைவருக்குப் பணம் கொடுப்பதற்காக பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொண்டே, ‘ரமா.. டைம் என்னாச்சு..?’ என்று கேட்டேன்.
என் மகள் மிதிலா அந்த அபார்ட்மென்ட் கேட்டருகில் இருந்த வாட்ச் மேனிடம் போய், ‘அங்கிள்.. டைம் என்னாச்சு..?’ என்று கேட்டாள்.
அந்த வாட்ச்மேன், ‘பாப்பா.. அங்கிள்கிட்டே வாட்ச் இல்லே.. டைம் தெரியாதே..’ என்றான் மெலிதாக சிரித்துக் கொண்டே.
‘என்ன அங்கிள்..? உங்களிடம் வாட்ச் இல்லை. பின் ஏன் உங்களை எல்லோரும் வாட்ச்மேன் என்று கூப்பிடறாங்க..?’ என்றாள் மிதிலா.
வாட்ச்மேனுடன் நாங்களும் திகைத்து நின்றோம்!.
தசாவதாரத்தில் கலக்கிய பலராம் நாயுடு கமல் இப்போது தனி படமாக சபாஷ் நாயுடு என்று வருகிறார்.
இப்படத்தில் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம் கமலுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் கமலின் மகளாகவே நடிக்க இருக்கிறார். பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. லைக்கா நிறுவனம் வழங்க, கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் கமல் தனது முந்தைய படங்களில் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்டே இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தின் பாத்திரமான பல்ராம் நாயுடு வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்கள். இயக்கமும் கமல் !
தசாவதாரம் பலராம் நாயுடு காமெடி கொஞ்சம் பார்ப்போமா?