குவிகம் குறும்புதின போட்டி முடிவுகள்

                 

               குவிகம் குறும்புதின போட்டி

          முதல்கட்ட முடிவுகளின் அறிவிப்பு

குவிகம் குறும் புதினம் போட்டிக்கு எழுபதிற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்திருந்தன. அவற்றில் கீழ்கண்ட படைப்புகள் பிரசுரமாகிவிட்டன.

மாதம் குறும் புதினம் படைப்பாளி
ஏப்ரல் பத்து பகல் பத்து ராத்திரி முகில் தினகரன்
மே கட்டை விரல் சுப்ரபாரதிமணியன்
ஜூன் தன்நெஞ்சே வேணுகோபால் SV
ஜூலை பெருமாள் சங்கரநாராயணன் S

 

இனி வரவிருக்கும்  எட்டு மாத (ஆகஸ்ட் முதல் மார்ச் 2022 வரை) இதழ்களிலும் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் பட்டியல்

(அகர வரிசைப்படி)

 

குறும் புதினம் படைப்பாளி
எத்தனை உயரம் மைதிலி சம்பத்
என்ன  கொடுமை ‘யாரோ ‘
கண்டு வர வேணுமடி ராய செல்லப்பா
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் லதா ரகுநாதன்
கள்வர் கோமான் புல்லி ஜெயக்குமார் S
காற்று வந்து என் காதில் சொன்ன கதை தாமோதரன்
சின்னம்மா பெரியம்மா ஆன்சிலா பெர்னாண்டோ
சொல்விழுங்கியும்   பேசாமடந்தையும் பகவத்கீதா பெ
திரை விழுந்தது எஸ் எல் நாணு 
தெரியாத முகம் சதுர்புஜன் G B
நதியிலே புதுப்புனல் அன்னபூரணி தண்டபாணி
நதியின் மடியில் ரவி
நினைவழிக்கும்    விழிகள் ந பானுமதி
மகன் தந்தைக்கு ஆற்றும்… கௌரி சங்கர்
மீனும் நானும் ஒரு ஜாதி கோரி ஏ ஏ ஹெச் கே
வேட்டை  நாராயணன் தி தா

 

பதினாறு படைப்புகளும் மாதம் இரண்டாகப் பிரசுரிக்கப்படும்.

பிரசுரமாகும் இருபது குறும் புதினங்களில் பரிசுக்குறிய படைப்புகள்         (முதல் பரிசு Rs 5000/ ; இரண்டாம் பரிசு Rs 3000/; மூன்றாம் பரிசு Rs 2000 )         எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17  புதிய குறும் புதினங்கள் ஒவ்வொன்றுக்கும்  Rs 1000/ வழங்கப்படும் .

(இவை தவிர கிளாசிகல் வரிசையில் குறும் புதினத்தில் பிரசுரமாகும் ஏற்கனவே விருது பெற்ற குறும் புதினங்களுக்கு Rs  750/ வழங்கப்படும்.) 

மொத்தத்தில்  Rs 35000 குவிகம் குறும் புதின எழுத்தாளர்களுக்குப் பரிசில்களாக வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

போட்டிக்கு வந்த எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருந்தாலும் தேர்வு என்று வரும்போது விடுபடுதல் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.

கலந்துகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

    

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Killing Humbaba – By Common Consent, a Mormon Blog

மலை அரசன் ஹம்பாபா கில்காமேஷிடிடம் தோல்வியுற்று தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். தாய் அன்பைப் பற்றிக் கூறி அவன் மனதில் தன்மீது பாசம் ஏற்படச் செய்தான் ஹம்பாபா.

கில்காமேஷின் மனம் கொஞ்சம் இளகித்தான் இருந்ததது. ஆனால் எங்கிடு தயவு தாட்சணியம் இன்றி ஹம்பாபாவைக் கொல்வதுதான் உசிதம் என்று ஆணித்தரமாகக் கூறினான்.

முடிவில் கில்காமேஷ் தனது கோடாலியை எடுத்துக்கொண்டு செயலாற்று நின்ற ஹம் பாபாவை வெட்டினான். இரண்டாவது வீச்சு எங்கிடுவினுடையது. மூன்றாவது வீச்சு விழும் முன்னர் ஹம்பாபா அடியற்ற மரம் போல வீழ்ந்தான்.

காட்டின் தலைவன் ஹம்பாபா விழுந்தவுடன் காடே ஸ்தம்பித்துப் போய்விட்டது. செடார் மரங்கள் எல்லாம் ஒரு பேயாட்டம் ஆடி நிலைத்தன. மலைகளும் ஒரு ஆட்டம் ஆடி நின்றன. கில்காமேஷ் அனைத்து செடார் மரங்களையும் தன் கோடாலியால் வெட்டி வீழ்த்தினான். எங்கிடு அவன் வெட்டிய மரங்களின் வேர்களில் தீயை வைத்தான். ஹம்பாபாவின் ஏழு மாயங்களும் அழிந்து போயின. ஹம்பாபாவுக்குப் பாதுகாப்பாக இருந்த காட்டரண் முழுவதுமாக அழிக்கப்பட்டது. கொடூரத்தின் வடிவாக இருந்த ஹம்பாபாவின் ஏழு ஜோதிகளையும் நரகம், பாபம், சாபம், தீ, சிங்கம் போன்றவற்றிற்குக் கொடையாக அளித்தான் கில்காமேஷ்.

பின்னர் அவர்கள் இருவரும் ஹம் பாபாவின் உடலை என்விலின் பலி பீடத்தில் கிடத்தினார்கள். அவன் முகத்தையம் உடலையும் துணியால் போர்த்தி அவனைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தார்கள். ஹம்பாபாவின் தலையைக் கொய்தெடுத்து கடவுளுக்குப் படைத்தார்கள்.

மாபெரும் வெற்றி பெற்ற கில்காமேஷ் பேரழகனாகக் காட்சி அளித்தான். அவன் அழகைக் கண்டு மயங்கிய இஷ்டார் என்ற என்ற காதல் தேவதையே அவன் மீது காதல் கொண்டாள்.

” அழகும் வீரமும் கொண்ட கில் காமேஷ்! என்னைத் திருமணம் செய்துகொண்டு எனக்குப் பிள்ளை வரம் கொடு. ! உன்னை என் நாட்டின் மன்னனாக்கின்றேன்” என்று துடிதுடித்தாள்.

ஆனால் கில்காமேஷ்  அவளின் காதல் லீலைகள் அனைத்தையும் அறிந்தவன். அவளது பழைய காதலர்கள் எல்லாரும் அவளைத் தகிக்கும் நெருப்பு என்று கூறுவதையும் அறிந்திருந்தான். காதல் என்ற பெயரில் பல வீரர்களின் வாழ்வை அழித்தவள் அவள். அதனால் அவளிடம் தைரியமாக,

” இஷ்டார்! உன் காதலர்களின் கணக்கும் கதியும் எனக்கு நன்றாகவே தெரியும்! நீ எத்தனை பேரைக் காதலித்துக் கைவிட்டிருக்கிறாய் என்பதையும் நான் நன்றாக அறிவேன். பறவை அரசனைக் காதலித்தாய். அவன் சிறகுகளையெல்லாம் வெட்டி எறிந்த கொடுமைக்காரி நீ! அதன்பின் சிங்கத்தைக் காதலித்தாய்! அதையும் உன் தேவை முடிந்தபிறகு பெரிய குழிக்குள் விழுந்து மாளச் செய்தாய்! பின் யுத்தக் குதிரையை உன் காதல் வலையில் விழ வைத்தாய்! அவன் தாகத்திற்குத் தண்ணீர் தராமல் ஓட ஓட விரட்டினாய் ! அடுத்தவன் ஆட்டு மைந்தக்காரன்! அவன் உனக்காக எத்தனை ஆடுகளைப் பலி கொடுத்திருக்கிறான்? உன் காதல் பசி தீர்ந்த பிறகு அவனை ஓநாயாக மாற்றி அவன் ஆட்களே அடித்துக் கொல்லும் படிச் செய்தாய்! பிறகு அந்த தோட்டக்காரன்! உனக்காகக் கூடை கூடையாகப் பேரீச்சை கொடுத்து வந்தான். நீ அவனை அனுபவித்துவிட்டுப் பின்னர் அவனை வண்டாக மாற்றிப் பறக்க வைத்தாய் ! இப்படிப்பட்ட நீ என்னைக் காதலிப்பதாகக் கூறுகிறாய்! இவர்கள் கதி எனக்கும் நேராது என்பது என்ன நிச்சயம்?

கில்காமேஷ் சிரித்துக் கொண்டே கூறித் தன்னை நிராகரித்ததைக் கேட்ட இஷ்டாருக்குக் கெட்ட கோபம் வந்தது.

நேராகத் தன் தந்தையிடம் சென்றாள்.

அவள் தந்தை அனைத்துத் தேவர்களின் தந்தை என்று அழைக்கப் படும் ‘அணு’ என்பவர். உலகத்தைப் படைத்தவர் அவர் என்பதால் அவரை அனைவரும் மரியாதையுடன் போற்றி வணங்குவர்.

“தந்தையே! என்னை கில்காமேஷ் கேவலப்படுத்தி விட்டான். நான் செய்த பழைய காட்சிகளை என்னிடமே சொல்கிறான்! அவன் அழிய வேண்டும். ” என்று கோபத்தோடு மொழிந்தாள்.

” அவன் ஏன் உன் பழைய கதைகளைக் கிளறினான்? ” மகளைப் பற்றி நன்கு அறிந்த தந்தை வினவினார்.

” அது அப்படியோ போகட்டும். சொர்க்கத்திலிருந்து அந்த கொலைவெறி எருதினை உடனே அனுப்பி கில் காமேஷுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நான் மேல் உலகத்தாரையும் கீழ் உலகத்தாரையும் கலக்கச் செய்து குழப்பம் விளைவிப்பேன். செத்தவர்களை எழுப்பி உணவுப் பாண்டங்களைத் தின்று தீர்த்திடச் செய்வேன்” என்று தந்தையையே மிரட்டினாள் இஷ்டார்.

இதைக்கேட்ட அணு சுவர்க்கத்திலிருந்த பயங்கர எருதினை சேணம் போட்டு மகளிடம் கொடுத்து ஊருக் நகருக்கு எடுத்துச் செல்லும்படி கூறினான். 

அவளும் வெகு ஜாக்கிரதையாக நகருக்குள் அதை அனுப்பினாள். எருதின்  முதல் மூச்சு ஊருக் நகரின் சுவர்களில் விரிசலை ஏற்படுத்தியது. இரண்டாவது மூச்சு விட்டபோது நகருக்குள் நூறு வாலிபர்கள் செத்து மடிந்தனர். எருதின்  மூன்றாவது மூச்சு நேரடியாக எங்கிடுவைத் தாக்கியது. எங்கிடு அதன் தாக்கத்தைச் சமாளித்துக் கொண்டு ஒரே தாவாகத் தாவி அதன் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டான். எருது எங்கிடுவை வாலால் அடித்து அவனைக் கீழே தள்ளிவிட முயன்றது. எங்கிடு தைரியமாக கில்காமேஷை அழைத்து , ” நண்பா! நாம் புகழின் ஏணியில் உயரே செல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம். நீ உன் வாளை எருதின் தோளில் சொருகு. என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது” என்று கூறினான்.

கில்காமேஷ் உடனே பாய்ந்துவந்து ஒரு கையால் எருதின் வாலைப் பிடித்திழுத்துத் தன் வாளால் அதன் கழுத்தில் குத்தினான். சொர்க்கத்தின் சிறப்பு வாய்ந்த அந்த எருது செத்து விழுந்தது. அதன் இதயத்தை வெட்டி எடுத்து சூரியக் கடவுளான காமேஷுக்குப் படையல் செய்தனர்.

சுவர்க்கத்தின் எருது மடிந்ததைக் கண்ட இஷ்டார் மிகக் கோபமடைந்து கில்காமேஷை சபிக்க வந்தாள். அப்போது எங்கிடு எருதின் வலது தொடையை வெட்டி அவள் மீது எறிந்தான். ‘ஊருக் நகரின் உள்ளே வந்தால் எருதின் குடலை உன்  உடம்பில் கட்டிவிடுவேன்’ என்றும் எங்கிடு முழங்கினான். ஊரெல்லாம் கேட்கும்படி அழுகுரலில் ஒப்பாரி வைத்த வண்ணம் இஷ்டார்  ஊருக் நகரைவிட்டு வெளியேறினாள்.

 

The Epic of Gilgamesh | World Epics

கில்காமேஷூம் எங்கிடுவும் மகிழ்ச்சிப் பெருக்கத்தில் ஒருவரை ஒருவர் கட்டித்  தழுவிக் கொண்டனர்.

ஊருக் நகர மக்கள் அனைவரும் ” உலகில் சிறந்த வீரன் கில்காமேஷ்தான் ” என்று பாடல்கள் பாடினார்கள்.

ஆனால் அந்த சுவர்க்க எருதைக் கொன்றதனால் எங்கிடுவின் உயிருக்கு ஆபத்து வந்தது!

(தொடரும்)

சரித்திரம் பேசுகிறது – யாரோ

பராந்தகன் தொடர்ச்சி

 

மறுபடியும் நாம் பாண்டியர் கதைக்கு வருவோம்.

ஆட்சிக்கு வந்த பிறகு, பராந்தகன், பாண்டிய நாட்டைக் கைப்பற்ற மன்னன் இராஜசிம்மனுடன்  போர் தொடுத்தான். அப்போரில் பராந்தகனுடைய நண்பரான சேரன், முத்தரையர், பிற சிற்றரசர் பராந்தகனுக்கு உதவி புரிந்தனர்.

பாண்டியன் கல்வெட்டுக்கள் கூறுவதாவது:

“இராஜசிம்மன் தஞ்சை அரசனை நெய்ப்பூரில் தோற்கடித்தான். கொடும்பாளூரில் கடும்போர் செய்தான். வஞ்சி நகரைக் கொளுத்தினான். ‘நாவல்’ என்னும் இடத்தில் தென் தஞ்சை அரசனை முறியடித்தான்” – இப்படி இராஜசிம்மன் பட்டயம் பகர்கின்றது. சோழப்பாண்டியப் போர் பல ஆண்டுகள் நடந்ததாகத் தெரிகிறது. ஆதலின் இரு திறத்தாரிடத்தும் வெற்றி தோல்விகள் நடந்திருத்தல் இயல்பே ஆகும்.

முதல்கட்டப் போரின் முடிவில், இராஜசிம்மன் தோல்வியுற்று மதுரையை இழந்தான். பராந்தகன் மதுரையைக் கைக்கொண்டான்; அதனால் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்று தன்னை அழைத்துக் கொண்டான். ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வருவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். (எம் ஜி ஆர் படத்தைச் சொல்லவில்லை). மதுரையை இழந்த இராஜசிம்மன், அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த ஐந்தாம் கஸ்ஸ்பன் (கி.பி. 913-923) துணையை வேண்டினான்.

காட்சி மாறியது.
இலங்கை: (கி பி 915)

மன்னன் கஸ்ஸபன் (காசியப்பன் என்றும் சொல்லலாம்) தன் அரண்மனையில் வீற்றிருந்தான். பாண்டிய நாட்டிலிருந்து தூதுவர்கள் வந்திருந்தனர்.

“ஈழத்து அரசரே! பாண்டிய மன்னன் இராஜசிம்மன் – இந்தப் பரிசுப் பொருட்களை தங்கள் சமூகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.”
மன்னன் மகிழ்ந்தான்.

பரிசுகள் பளபளத்தன – பாண்டிய வெண் முத்துக்கள் – மரகதம்- மாணிக்கம் –தங்கத்தில் கடகங்கள்- மாலைகள்- ஹாரங்கள் – வாசனைத் திரவியங்கள் – பட்டு ஆடைகள் – என்று பாண்டிய நாட்டின் சிறந்த அங்காடி அங்கு விரிந்தது போல ஒளிர்ந்தது. மன்னன் கண்களும் விரிந்தது.
தூதுவர் தொடர்ந்தனர்:

“மன்னவா! பாண்டிய மன்னன் இந்த ஓலையை தங்களுக்குத் தந்தார்”- என்று ஒரு ஓலையை எடுத்துக் கொடுத்தார்.

 

அது ஓலை மட்டுமல்ல.. ஓலமும் கூட..
தனது தோல்வி நிலையைப் பற்றி எழுதி – பாண்டியன் படையுதவியைக் கோரியிருந்தான்.
அரசன் மந்திராலோசனைக்கூட்டம் நடத்தினான்.

மந்திரிமார்கள் மற்றும் படைத்தலைவர்களுடனும் ஆலோசித்தான்.
இராணுவ ஏற்பாடு செய்வது என்று முடிவெடுத்தான்.
மன்னன், சேனாதிபதி சக்கனை அழைத்தான்.

சக்கன் பலசாலி மட்டுமல்ல. சிறந்த படைத்தலைவன். சண்டை என்று வந்துவிட்டால் – உயிர் போவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் போர் புரிவான். அது எதிரிகள் உயிரானாலும் சரி – தன்னுயிரே ஆனாலும் சரி!

“சக்கா! நீ நமது சிறந்த படையைத் தலைமை தாங்கி, கப்பலில் பாண்டிய நாடு சென்று சோழனை வென்று பாண்டியனுக்கு வெற்றி தேடித் தா “- என்றான்.

சக்கன் மகிழ்ந்தான்.
அவன் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்து ஓய்ந்தான்.
“மன்னரே! காரியம் முடிந்தது என்று எண்ணிக்கொள்ளுங்கள்”- என்றான். ‘காரியம்’ என்ற சொல்லுக்குப் பல பொருள் இருப்பதை அன்று அவன் அறியமாட்டான்!

கப்பலில் சக்கன் தலைமையில் சிறந்த படை குழுமியிருந்தது. கடற்கரையிலிருந்து ஈழ மன்னன் படைவீரர்களிடம் தமது மூதாதையர்கள் அடைந்த வெற்றிகளைப் பற்றிக் கூறி – உற்சாகமூட்டிப் பேசி விடை கொடுத்தான். அந்த ஈழப்படை பாண்டிய நாடு சென்றடைந்தது. அங்கே, இராஜசிம்மன் கடற்கரைக்குச் சென்று அவர்களை வரவேற்றான். அவர்களது தோற்றம் அவனுக்கு பேருவகையைக் கொடுத்தது. “ஆஹா.. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இந்தப் படை கொண்டு, இந்த நாவலந்தீவு (தென்னிந்தியா) முழுதும் ஒரு குடைக்குள் கொண்டு வருவேன்” என்று உணர்ச்சி பொங்க உரக்கக் கூவினான்.
‘யார் குடை அது’ என்பதையும் யாரோ அறிவர்?

இரண்டாம் கட்ட பாண்டியப் போர் துவங்கியது.
இராஜசிம்மன்-சக்கன் கூட்டணி பராந்தகனை எதிர்த்தனர். பராந்தக சோழன் பக்கம் பழுவேட்டரையர் – கந்தன் அமுதனார் என்னும் சிற்றரசன் இருந்து போர் செய்தான். சோழனது ஒருபகுதியின் சேனைக்குத் தலைவனாக இருந்தவன் சென்னிப் பேரரையன்.
போர் – வெள்ளுர் என்னும் இடத்தில் கடுமையாக நடந்தது. ஈழத்து மலைநாட்டு வீரர்களின் போர் முறையே விசித்திரமாக இருந்தது. சோழக்கூட்டணி வெறி மிகுந்தவர்களைப்போல் போரிட்டது. பராந்தகனுடைய கைவாள் திருமால் கரத்துச் சக்கரம் போல் சுழன்றது. (கல்கி – பொன்னியின் செல்வனில் ஒரு சோழராஜனின் வாள்வீச்சை இவ்வாறு வர்ணித்திருப்பதை இங்கு வாசகர்கள் நினைவு கூறவேண்டும்). சுழன்ற வாள் எதிரிகளின் எமனானது.

சின்னாபின்னமாக்கப்பட்ட எதிரிகளின் பிணங்கள் மீது சோழர்களின் யானைகளும், குதிரைகளும் ஏறி நடந்தன. இரு பக்கத்திலும் சர்வநாசம். எங்கெங்கு காணினும் தமிழர்களின் உயிரற்ற உடல்கள் துண்டிக்கப்பட்டு, இரத்தத்தில் ஊறிச் சிதறிச் சிதைந்துக் கிடந்தன. கடும் போரின் இறுதியில், பராந்தகன் படை, பாண்டிய-ஈழப்படைகளை வென்றன. இராமாயணத்தில் இலங்கைப் படைகளை வென்ற ‘இராமன்’ போல தானும் இலங்கைப் படையை வென்றமையால், பராந்தகன் தன்னை ‘சங்கிராம இராகவன்’ என்று அழைத்துக் கொண்டான்.

ஆனால், போரோ முடிந்தபாடில்லை. “நான் உயிரோடு உள்ளவரை” போர் முடிவதில்லை – என்று சக்கன் அறைகூவல் விடுத்தான். மூன்றாம் கட்டப் பாண்டியப்போர் உடனே துவங்கியது.
ஈழப்படையின் தலைவனான சக்க சேனாதிபதி எஞ்சிய தன் சேனையைத் திரட்டி மூர்க்கமாக இறுதிப் போர் செய்ய முனைந்தான்.

சக்கன் முரடன்.
தோல்வி என்பதை அவனது மனது என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை.
போர் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
சோழர்களும், ஏற்கனவே பாதிப்படையை இந்த யுத்தத்தில் பலி கொடுத்திருந்தனர்.
திருப்பியம்புரம் போருக்குக் குறைவில்லை என்று சொல்லத்தக்க வகையில் ஒரு உக்கிரமமான போர் அங்கு நடந்தேறியது.
வெற்றி – தோல்விக்கு என்றும் விதி தான் காரணம்.

பராந்தகனின் அணி, வீரத்தைக் காட்டினாலும், வெற்றி யார் பக்கம் சேரும் என்பது பற்றி ஒரு தெளிவே இல்லாமலிருந்தது. பராந்தகன் – தில்லை நடராஜரை மனத்தில் பிரார்த்தனை செய்தான். ‘விஜயாலயனும், ஆதித்தனும் கண்ணீராலும் வீரத்தாலும் பயிரிட்டு வளர்ந்த சோழப்பயிர் என்னால் கருகுவதோ?” – என்று பராந்தகன் கவலை கொண்டான். இறையருள் இருந்து விட்டால் வேறென்ன தடை? பராந்தகனுக்கு அப்படி ஒரு வரம் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.

அப்பொழுது உண்டான உபசகம் (பிளேக்) என்னும் கொடிய விட நோயால் பல ஈழப்படைவீரர்கள் இறக்கத் தொடங்கினர். சக்கனும் அந்நோயால் பீடிக்கப்பட்டு காய்ச்சலில் விழுந்தான். ஒரே இரவில் அவன் இறந்தான். ஈழ-பாண்டியப் படைகள் தலைவனில்லாமல் சிதறியது. பின் வாங்கியது. சோழன் போரில் வென்றான். எஞ்சிய ஈழவீரர்கள் ஈழநாடு திரும்பினர். இப்போரில் உண்டான படுதோல்வியால் இராஜசிம்மன் மனமொடிந்தான். பாண்டியநாடு முழுவதும் பராந்தகன் ஆட்சிக்கு உட்பட்டது.

பாண்டியன் இலங்கைக்குக் கப்பலேறி ஓடிய கதை கல்வெட்டுக்களில் கவிதையானது:
“பராந்தகனின் வீரமான நெருப்பினால், நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்டு, பாண்டியன், அந்த நெருப்பின் வெம்மையைத் தணித்துக் கொள்ள துடிப்புக் கொண்டவனைப்போல, சரேலென்று கடலில் குதித்து விட்டான் (இலங்கைக்குச் சென்று விட்டான்)” என்று சோழக்கல்வெட்டுகள் கொக்கரித்துக் கூறுகின்றன.

கப்பலேறி இலங்கை வந்த பாண்டியனை ஈழ மன்னன் கடற்கரையில் வரவேற்றான். போர்க்காயங்களை உடலெங்கும் ஆபரணமாகத் தரித்த இராசசிம்மனைக் கட்டி அணைத்து ஆரத்தழுவினான். “பாண்டியரே! காலம் நமக்கு வெற்றியைத் தரவில்லை. விதி செய்தது சதி. உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்” – என்றான். பாண்டியன் மீது அவன் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தான். நிறைய செல்வங்களைக் கொடுத்து நகருக்கு வெளியே ஒரு அரண்மனை அமைத்து பாண்டியனை அமைதியுறச் செய்தான்.

“பாண்டியரே! இந்த சோழனை விரைவில் போரில் வென்று அவனுடைய இரு அரியணைகளையும் கைப்பற்றி அவற்றை உங்களுக்கு வழங்குவேன்” – என்று சூளுரைத்தான். இராஜசிம்மன் ஆறுதல் கொண்டான்.

இலங்கையரசன் மீண்டும் படைதிரட்டத் தொடங்கினான். ‘தோல்வி’க்கு நண்பர்கள் கிடையாது என்று சொல்வார்கள். அது போல் ‘சோழனிடம் தோற்ற’ காரணம் கருதி இலங்கையில் இருந்த சக்தி வாய்ந்த பிரபுக்கள் கலகத்தைக் கிளப்பி விட்டனர். எதிர்ப்பு வலுக்கவே, ஈழ வேந்தன், வேறு வழியில்லாமல், சோழப் படையெடுப்பை ஒத்திவைக்க முடிவு செய்தான். அது கேட்ட இராஜசிம்மன் நொடிந்து போனான். ஈழ மன்னனைச் சந்தித்தான்:

“அரசே! நீங்கள் எனக்காக செய்த உதவிகள் எண்ணிலடங்கா. என் பொருட்டுத் தாங்கள் இனியும் நீங்கள் துன்பங்கள் அனுபவிக்க வேண்டாம். எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யவேண்டும்” – என்று வேண்டுகோள் விடுத்தான்.

“என்ன வேண்டும் பாண்டிய மன்னா?”- என்றான் இலங்கைவேந்தன்.

“எனது பாண்டிய நாட்டுப் புராதனமான மணிமகுடத்தையும், இரத்தின ஹாரம், செங்கோல் மற்றும் ஆபரணங்கள் அனைத்தையும் உங்களது பொறுப்பில் விட்டு விட்டுச் செல்கிறேன். இன்று என்னால் இயலாதென்றாலும், என் குலத்தில் பின்னாளில் ஒருவன் வந்து இதை உங்களிடமிருந்து பெற்று பாண்டிய நாட்டை தமிழகத்தைச் சிறப்புற ஆள்வான்.”- என்றான்.

“கட்டாயம் பாண்டியரே! ஆனால் தாங்கள் எங்கும் செல்லாமல் எனது விருந்தாளியாகவே இருக்க வேண்டும் “ என்றான்.

இராஜசிம்மன் :“ஈழ ராஜனே! நான் மேலும் உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. இங்கு நானிருக்கும் காரணம், பராந்தகன் இங்கும் படையெடுத்து வரலாம். ஆதலால் நான் என் தாயார் வானவன்தேவி வாழும் சேர நாட்டுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன்” – என்றான்.

“ஆனால்.. சேர நாடும் – சோழநாடும் நட்பு நாடுகளாக உள்ளதே .. அங்கு நீங்கள் எப்படி?” -என்று இழுத்தான் ஈழத்தரசன்.
“தாய்வீட்டில் எனக்கு என்றும் பாதுகாப்பு உண்டு“ என்றான் இராஜசிம்மன் .

இராஜசிம்மன் கப்பலில் ஏறிச் சேரநாடு சென்றான். அவனது மகன் வீரபாண்டியன் மனம் தளரவில்லை. “தந்தையே! பராந்தகனுக்கும் ஒரு நாள் அடி சறுக்கும், அப்பொழுது மதுரையை நான் மீட்பேன். இந்தப் புராதனச் சின்னங்களின் மீது ஆணை!” என்றவன் பாண்டிய நாட்டுக்குச் சென்று மறைந்து படை திரட்டத் தொடங்கினான். இராஜசிம்மனை இனி நாம் பார்ப்பதில்லை. சரித்திரமும் அவனைக் காட்டவில்லை.

பராந்தகன் வெற்றிக்களிப்பில் இருந்தான். ஈழப் பாண்டிய படைகளை அடியோடு அழித்தபின் – மதுரையைச் சென்றடைந்தான். முதன் முறையாக ‘ஒரு சோழன்’ – பாண்டிய மன்னனாக மதுரையில் முடி சூட வேண்டும் – என்று ஆசைப்பட்டான். ஆமாம் இந்தப் பாண்டிய மணிமுடி தான் எங்கே போய்த் தொலைந்தது ?

நகரெங்கும் வலைபோட்டுத் தேடினர்.
பாண்டிய மணிமுடியைக் காணவில்லை.
அதனாலென்ன? வேறு ஒரு மகுடம் செய்து முடிசூட்டிக் கொள்ளவேண்டியது தானே என்று நீங்கள் அப்பாவித்தனமாகக் கேட்கக்கூடும். அப்படிச் செய்யலாம் தான்! ஆனால், அதில் என்ன பெரிய கெத்து இருக்கிறது? இதனால் சோழர்களுக்குப் பெரும் ஏமாற்றம். வேறு வழி என்ன? கடைசியில், நீங்கள் நினைத்தபடி தான் நடந்தது. அதாவது, சோழன் வேறு மகுடமெடுத்து பாண்டிய மன்னனாக முடி சூட்டிக்கொண்டான்.

ஆக – சோழன் வென்றாலும் அதிலும் ஒரு தோல்வி தான் கிடைத்தது.

அந்த பாண்டிய புராதனச் சின்னங்களைக் கொண்டு வர பராந்தகன் யுவராஜா ராஜாதித்தனை ஈழம் அனுப்பினான். அவன், ஈழத்தை வென்றாலும், அந்த பாண்டியச் சின்னங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் வெறுங்கையோடு தஞ்சை வந்தான். அதற்குள், தென்னிந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால், பராந்தகனுக்கு நடந்த சோதனைகளுக்கும், துன்பத்துக்கும் அளவில்லை.

அத்துடன் யுவராஜா ராஜாதித்தனின் கதையையும் பிற்கால சோழர்கள் எண்ணிக் கண்ணீர் விட்டு நினைவு கூர்வர்.

.அதை விரைவில் காணலாம்.

  நாட்டிய மங்கையின் வழிபாடு-11 – கவியரசர்  – தமிழில் தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்  

 

                வங்கமொழிக்கதையும் அதன் ஆங்கில மூலமும்: கவியரசர் தாகூர்;

                     தமிழ் மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்  

Untitled (Dancing Woman) - Canvas Prints by Ismail Gulgee | Buy Posters, Frames, Canvas & Digital Art Prints | Small, Compact, Medium and Large Variants

           முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் அரசன் வசித்துவந்தான். பல காரணங்களால் அரசி லோகேஸ்வரிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். அரசன் பிம்பிசாரனையும் படுகொலை செய்ததாகப் பேசிக் கொள்கிறர்கள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்து  புத்தமதத்தை அவமதிக்க இளவரசிகள் முனைகின்றனர். நகரெங்கும் கலவரம் தலைவிரித்தாடுகின்றது. ஸ்ரீமதியின் பொருட்டு இளவரசிகள் தமக்குள் சண்டையிடுகிறார்கள்.

           இனித் தொடர்ந்து படிக்கவும்:  

           ————————————

           ரத்னாவளி: இந்த நாட்டியப்பெண்ணிடமுள்ள தொற்றுநோய் உன்னிடமும் ஒட்டிக்கொண்டு உன்னை வதைக்கிறது.

           முதல் காவலாளி: (முதலாவது தாதியிடம்) வசுமதி! நாம் அனைவரும் ஸ்ரீமதியிடம் பெருமதிப்பு வைத்திருந்தோம்- ஆனால் அது தவறு என்று தோன்றுகிறது, ஏனெனில் அவள் இங்கு நடனமாட ஒப்புக்கொண்டிருக்கிறாளே.

           ரத்னாவளி: எப்படி அவள் மறுக்க முடியும்? அரசரின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் அவளால் இருக்க முடியுமா?

           2வது காவலாளி: அரசரிடம் பயம் என்பது நம்மைப் போன்றவர்களுக்கு, ஆனால்–

           ரத்னாவளி: அவளுடைய இடம் உன்னுடையதைவிட எவ்வாறு உயர்ந்தது?

           முதல் தாதி: எங்களைப் பொறுத்தவரை அவள் வெறும் நாட்டியப் பெண்ணல்ல. அவள் முகத்தில் தெய்வீகக் களை வீசுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

           ரத்னாவளி: சுவர்க்கத்திலானாலும் கூட, ஒரு நாட்டியப்பெண் என்பவள் நடனமாடியே தீர வேண்டும்.

           முதல் காவலாளி: அரச ஆணையால் ஸ்ரீமதிக்குத் தீங்கு விளைவிப்பேன் எனப் பயந்தேன்; ஆனால் இப்போது அதற்காகக் காத்திருக்கப் போவதில்லை.

           முதல் தாதி: அந்தப் பரிதாபத்துக்குரியவளைப் பற்றி மறந்துவிடு; ஆனால் அந்தக் கொடுங்குற்றம் இழைக்கப்படும் சமயம் நாம் இங்கிருந்தால் நமது கண்கள் அதனைக் கண்டு களங்கப்பட்டால் நமக்கு என்ன ஆகும் என்று சிந்தித்துப்பார்!

           ரத்னாவளி: அந்த நாட்டியப்பெண் தன்னைச் சிங்காரித்து முடித்துக்கொள்ள நாம் இன்னும் எத்தனை நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டும்? பாருங்கள் பெண்களே! உங்கள் குற்றமற்ற தோழி அலங்காரம் செய்துகொள்ள எத்தகைய புண்ணியமான மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறாள் எனப் பார்த்துக் கொள்ளுங்கள்!

           முதலாவது தாதி: இதோ அவள் வருகிறாள்! ஆபரணங்களை அணிந்துகொண்டு எப்படி ஜ்வலிக்கிறாள் அவள்!

           இரண்டாம் தாதி: அவளுடைய பாவம்நிறைந்த உடலை அலங்கரிக்க நூற்றுக்கணக்கான மெழுகுவத்திகளை ஏற்றியிருக்கிறாள்.

                                           (ஸ்ரீமதி நுழைகிறாள்).

           முதலாவது தாதி: பாவம் நிறைந்த ஸ்ரீமதி, நீ இத்தனைதூரம் மானங்கெட்டு நமது கடவுளின் வழிபாட்டுமேடை முன்பு நடனமாடத் துணிந்துவிட்டாயா? உனது கால்கள் இன்னும் காய்ந்துபோன கட்டைகளாக ஏன் மாறவில்லை என நான் ஆச்சரியப்படுகிறேன்.

           ஸ்ரீமதி: நான் இதைச்செய்ய வேண்டும் என்பதற்கான ஆணை எனக்குப் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

           இரண்டாம் தாதி: அப்படியானால் கோடிக்கணக்கான ஆண்டுகள் இரவும் பகலும் நீ நரகத்தில் எரியும் தீக்கங்குகளின்மீது ஆடுவாய்! – இதை நான் உன்னிடம் கூறியே தீர வேண்டும்.

           மூன்றாம் தாதி: நீ அணிந்துள்ள ஒவ்வொரு மோதிரமும் வளையலும் உனது சதைக்குள் தீவளையம் போலப் புகுந்து அழுத்தி, ஒவ்வொரு நரம்பிலும் தாங்கமுடியாத எரிச்சலை உண்டாக்கும்- அதனை நன்றாக நினைத்துப்பார்.

           (மல்லிகா அவசரமாக உள்ளே நுழைந்து ரத்னாவளியை ஒருபுறமாக அழைத்துச் செல்கிறாள்).

           மல்லிகா: (ரகசியமாக) அரசர் தனது ஆணையை ரத்து செய்துவிட்டார். அந்த விஷயம் விரைவில் இங்கு அறியப்படும் என எச்சரிக்கை செய்யவே நான் வந்தேன். இன்னும் மற்ற சமாச்சாரங்களும் உண்டு. மகாராஜா அஜாதசத்ரு தானே இங்குவந்து வழிபாடு நடத்த இருக்கிறார்.

           ரத்னாவளி: அப்படியானால், மல்லிகா, உடனே சென்று மகாராணி லோகேஸ்வரியை இங்கு அழைத்து வா!

           மல்லிகா: அவளே வந்து கொண்டிருக்கிறாள்!

           அரசி லோகேஸ்வரி நுழைகிறாள்; அனைவரும் பணிந்து வணங்குகின்றனர்.

           ரத்னாவளி: இதோ உங்கள் ஆசனம், மகாராணி.

           அரசி: நான் ஸ்ரீமதியிடம் தனிமையில் பேச வேண்டும் (அவர்கள் தனிமையில் பேசுகிறார்கள்)

                     ஸ்ரீமதி!

           ஸ்ரீமதி: என்ன, மகாராணி!

           அரசி: இந்தா, நான் இதனை உனக்காகக் கொண்டுவந்துள்ளேன்.

           ஸ்ரீமதி: என்னது அது?

           அரசி: சுவர்க்கத்தின் அமுதம்.

           ஸ்ரீமதி: எனக்குப் புரியவில்லை.

           அரசி: விஷம்! அதனைக் குடித்து உன்னைக் காப்பாற்றிக்கொள்.

           ஸ்ரீமதி: முக்தியடைய வேறுவழி இல்லையென்று எண்ணுகிறீர்களா?

           அரசி: இல்லவே இல்லை! நீ இந்த வழிபாட்டு மேடைமுன்பு நடனமாட வேண்டுமென்று ரத்னா ஏற்கெனவே அனுமதி வாங்கி விட்டாள். அந்த ஆணையை நீ நிறைவேற்ற வேண்டுமென்று அவர்கள் உன்னை வற்புறுத்துவார்கள்.

           ரத்னாவளி: நேரமாகிவிட்டது மகாராணி! நடனம் தொடங்கட்டும்.

           அரசி: குடித்துவிடு! இப்போது நீ இறந்தால் சுவர்க்கத்திற்குச் செல்வாய். இங்கு நீ நடனமாடினால், நரகத்திற்கான கீழ்த்தரமான பாதையில் செல்வாய்.

           ஸ்ரீமதி: ஆனால் முதலில் நான் அரச கட்டளையை நிறைவேற்ற வேண்டாமா?

           அரசி: அப்படியானால் நீ நடனமாடப் போகிறாயா?

           ஸ்ரீமதி: ஆமாம்.

           அரசி: உனக்கு பயமே இல்லையா?

           ஸ்ரீமதி: இல்லவே இல்லை.

           அரசி: அப்படியானால் யாருமே உன்னைக் காப்பாற்ற முடியாது.

           ஸ்ரீமதி: ஆம்; ரட்சிப்பவரைத் தவிர யாராலுமே என்னைக் காப்பாற்ற முடியாது.

           ரத்னாவளி: இனியும் காலந்தாழ்த்த முடியாது, மகாராணி. வெளியே எழும் கூச்சல்களைக் கேட்டீர்களா? கலகக்காரர்கள் அரண்மனைத் தோட்டத்தை உடைத்தெறிந்து உள்ளே நுழையப் போகிறார்கள். நாட்டியப்பெண்ணே, ஆரம்பி!

                     (ஸ்ரீமதி பாடியவாறே ஆடத் தொடங்குகிறாள்)

           ஸ்ரீமதி: என்னை மன்னிப்பீர், மன்னிப்பீர்!

                      எனது வணக்கங்களை ஏற்றுக்கொள்வீர்:

                     ஏனெனில் ஓ ஈடிணையற்றவரே, நான் தங்களை நினைக்கும்போது,

                     எனது ஆத்மா, நடன அசைவுகளில் பொங்கிப் பெருகி

                     எனது உடலில் நிரம்பி வழிகின்றது.

                     எனது கைகால்களின் அழுகையே ஒரு சீராகப் பாடலாகித் தங்களின் புகழைப் பாடுகின்றது.

                     தங்கள் மீதான எனது அன்பு எனது அசைவுகளில் எழும் இசையில் பிரவகிக்கின்றது.

           ரத்னாவளி: (குறுக்கிட்டு) என்ன இது? நடனமாடுவதாகப் பாவனையா? இந்தப் பாடலின் பொருள் என்ன?

           அரசி: ஓ! அவளைத் தொந்தரவு செய்யாதே!

                     (ஸ்ரீமதி தொடர்கிறாள்).

                                                                                                (தொடரும்)

 

வெக்கை – செவல்குளம் செல்வராசு

கற்படிகள் - சிறுகதை

கனவில் குத்திய திருகாணியை

கையால் தடவுகிறேன்

படுக்கை நனைந்து கிடந்த ஈரத்தில் கண்விழித்து

தலைமாடு கால்மாடாய்க் கிடந்துறங்கும்

பிள்ளைகளை நேராக்கி

காற்று போதாமல்

தொடை தெரியக் கிடக்கும்

தலைவியின் பக்கம் வந்து படுக்கிறேன்

 

சரிந்துகிடக்கும் மாரில் கிளர்ச்சியுற்று

கால் தூக்கிப் போட்டதும்

பதறி விழித்து

சூழல் உணர்ந்தபின் சொன்னாள்

கனவில் ஏதோ குத்தியது போல் இருந்ததென்று…

 

அறையின் வடகிழக்கு மூலை சுவரில்

அருகில் நிற்கும் இரையைப் பொருட்படுத்தாமல்

இரண்டு கனத்த பல்லிகள்

வாலோடு வால் முறுக்கி லயித்துக் கிடக்கின்றன

ஒன்றோடொன்று அணைத்து…

Is your Husband's watching Porn affecting your sexual Life? - 17 Aug 12

 

படபடக்கிறது….அவளைப் பார்த்து” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ஆண்கள் வீடு செவ்வாய்: பெண்கள் வீடு சுக்கிரன்! | ஆண்கள் வீடு செவ்வாய்:  பெண்கள் வீடு சுக்கிரன்! - hindutamil.in

செஷன் முடிந்து என்னுடைய க்ளையன்ட் வெளியே வருவதற்குள் எங்களுக்கு உதவும் சுஜா படக்கென்று உள்ளே நுழைந்தாள். நான் திகைத்துப் போனேன். அவள் இப்படிச் செய்பவள் இல்லை. அவள் படபடக்க “மேடம், நீங்க குமரன் சாரை கொஞ்சம் பார்க்கிறீர்களா? அவர் டாக்டரைப் பார்க்கத் தான் வந்திருக்கிறார். ஆனால், ஒரு மணி நேரத்தில் பத்து கிளாஸ் தண்ணீர் குடித்து, இப்படி அப்படி நடந்து கொண்டு இருக்கிறார். மேடம், அவர் இப்படி எல்லாம் இருந்ததில்லை. டாக்டர் ஒரு எமர்ஜென்சி பேஷன்ட் பார்த்துக் கொண்டு இருக்கிறார்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். சரியென்று, குமரனை அழைத்து வரச் சொன்னேன்.

அடுத்து பார்க்க வேண்டிய க்ளையன்ட்டை நான் கைப்பேசியில் அழைத்து விளக்கிய போது அவரும், “புரிகிறது, அவர் பதட்டமாக இருக்கிறார்”, என்றார்.

தயங்கித் தயங்கி குமரன் வந்தார். என்னைப் பார்க்க வரவில்லை என்றார். அவருடைய நிலைமையைப் பற்றி நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை. மாறாக, எப்போதும் அவர் குறுக்கெழுத்து (crossword) செய்வதைப் பார்த்து இருக்கிறேன். அதற்கென்று ஒரு சிறிய பென்சில் வைத்திருப்பார். அவை எதுவும் இல்லாததை அவர் கவனத்திற்கு நான் கொண்டு வந்ததும் மிக மிக மெல்லிய புன்னகை ஒடி மறைந்தது. உடனே, தனக்கு அவசரம், மனைவி வான்மதி தேடுவதற்குள் வீடு திரும்ப வேண்டும் என்றார். காரணம் கேட்பதற்குள் டாக்டர் அவரை அழைப்பதாக சுஜா வந்து சொன்னதும் அவர் ஓட்டமும் நடையுமாய் போனார்.

ஏறத்தாழ பத்து நிமிடத்தில் டாக்டர் என்னை அழைப்பதாக சுஜா சொல்ல, சென்றேன். இதுவும் வழக்கத்திற்கு மாறானது. நான் உள்ளே நுழைந்ததும் டாக்டர் குமரனைப் பார்த்து, என்னுடன் ஆலோசிக்கப் பரிந்துரை செய்தார். உடனே குமரன், “டாக்டர், அப்படி எல்லாம் எனக்கு மனநலப் பிரச்சினை ஒன்றும் இல்லை” என்றதும், டாக்டர் விளக்கினார். “நீங்கப் புரிந்து கொள்ள வேண்டும், நீங்க விவரித்த சம்பவங்கள் உங்களைத் தடுமாறச் செய்து இருக்கிறது. உங்களுடைய மனநலத்தைத் திடப் படுத்த மாலதி உதவுவாள். மருந்து எதுவும் இல்லாமல். உங்களுடைய இன்னலை ஆழமாகப் புரிந்து கொண்டு, உங்களுடைய வளங்களை வைத்தே ட்ரீட் செய்வார்கள், மன நலத் துறையில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பவர்கள். ஒரு நாலு ஐந்து செஷன்ஸ் வந்ததும் உங்களுக்கே புரியும். கரெக்ட் தானே மாலதி” என்றார். ஒப்புதல் தெரிவித்தேன்.

இப்படித் தான் குமரன் தயக்கம் கலந்த அச்சத்துடன் வர ஆரம்பித்தார்.  ஐம்பது வயதுடையவர், சொந்த நிறுவனம், குழிப்பந்தாட்டம் (கோல்ஃப்) விளையாடுவது, பல தொண்டு நிறுவனங்களின் சேவை செய்வது, சனி-ஞாயிறு க்ளப் போவது என்று வாழ்க்கை ஓடியது.

சமீபகாலமாக வெவ்வேறு விதமான மாற்றங்களாம். எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், வேலையில் பல இன்னல்களைச் சந்திக்க ஆரம்பித்தாகக் கூறினார். குறுக்கெழுத்து போடக் கஷ்டமாக இருக்கிறதாம், இதனால் குறுக்கெழுத்துத் தாளின் மேலே கண் பட்டாலே பல்லைக் கடித்து, அதைத் தட்டித் தள்ளி விடுவாராம். அதைப் பார்த்தாலே கோபம் உருவாகிறது என விவரிக்க ஆரம்பித்தார்.

குழிப்பந்தாட்டத்தின் போது, எங்கே வான்மதி அழைத்து விட்டுத் தான் கவனிக்காமல் போனோமோ என்று கைப்பேசியை அவ்வப்போது செக் செய்து கொண்டு இருப்பாராம். அவளுடைய அழைப்பை உடனடியாக எடுக்காவிட்டால் அவளைச் சமாதானம் செய்வது சாமானியமானது அல்ல என்றார்.

சாப்பிடப் பொறுமை இழந்தது என்றார். இதெல்லாம் ஏன் இப்படி? எதற்காக? ஒன்றும் புரியவில்லை என்றார்.

குடும்பத்தைப் பற்றி ஒரு வரியில் அவசரமாகச் சொல்லி முடித்தார். மனைவி வான்மதி, மகள் தனுஜா. முதல் மகள் வனஜா, கணவனுடன் வட இந்தியாவில் இருக்கிறாள்.

மேற்கொண்டு சொல்லத் தயங்கினார். அவரை ஆசுவாசப் படுத்தி, இங்குப் பகிருவதைப் பகிரங்கமாக யாரிடமும் சொல்ல மாட்டேன் என உறுதி கொடுத்தேன். அவசரமும் இல்லை என்றேன். தனக்கு நடப்பதைக் கவனித்து, குறித்துக் கொண்டு, எப்போது தயாராக இருக்கிறோம் எனத் தோன்றுகிறதோ அப்போது வரச் சொன்னேன்.

இரண்டு வாரத்திற்குப் பிறகு குமரன் வந்தார். ஆரம்பத்தில் கவனிக்க எதுவும் இல்லை என்ற நிலையிலிருந்ததாகக் கூறினார். ஆனால் பல முறை தொண்டு நிறுவனத்தினர் அவரிடம் மிகத் தயக்கத்துடன் “நீங்க இதைக் கொண்டு வருவதாக / செய்வதாகச் சொன்னீர்களே?” என்ற வாக்கியம் திரும்பத் திரும்பக் கேட்க, குமரன் திகைத்தார். அதே மாதிரி நண்பர்கள், நிர்வாகிகள், “……மறந்து போய்விட்டீர்களா”? குழிப்பந்தாட்டத்திலும் நேர்ந்தது. நண்பர்கள் ஜாடையாகக் கேலி செய்தார்கள். வீட்டில் தோட்டக்காரன் “ஐயா, பூ பறிக்க சொல்லல!” என்று அவரையே பார்த்து நின்றான். ஆனால் ஏனென்றும், எதற்காக இப்படி ஆகிறது என்றும் தெரியவில்லை என்றார்.

ஸ்ட்ரெஸ் மன உளைச்சல், அல்லது மன அழுத்தம் நிலைகளில் இவ்வாறு ஆகலாம்.

வீடு, வேலை, உறவினர்களைப் பற்றி விளக்கினார். இவற்றை விவரிக்கும் போது அவருடைய உடல் மொழி பல விஷயங்களைத் தெரிவித்தது. தான் விவரிப்பதையும் தன்னை பாதிக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் குமரன் இல்லை. நமது மனம் அறிந்து, ஏற்றுக்கொள்ளும் வரை இப்படி ஒரு நிலை நீடிக்கும். அதனால் தான் ஏன்- எதற்காக என்றது அவருக்குக் கேள்வியாக நிலவியது.

உடல் மனம் ஒன்றை ஒன்று தாக்குவதை அவராகப் புரிந்து கொள்ள, இந்த முறை தடுமாற்றம், சஞ்சலம், மறதி ஏற்படும் சமயத்தில், சிந்தனை- உணர்வு- உடலின் நிலை இவை மூன்றையும் தாளில், நேரம் தேதியுடன் எழுதிக் கொண்டு ஒரு வாரத்திற்குப் பிறகு வரச்சொன்னேன்.

மூன்று நாட்களிலேயே குமரன் அவசரமாகப் பார்க்க வந்துவிட்டார். ஏதோ ஒரு தவிப்பு, சஞ்சலம், நாள் முழுவதும் தன்னை சூழ்ந்து கொள்வது போல இருப்பதாகப் பகிர்ந்தார். குறிப்பாகக் கைப்பேசியில் அழைப்பு மணி அடித்தாலே உடனே பதட்டமாக ஆவதும், வேர்வை ஊற்றுவதையும் கவனித்தாராம்.

இதனுடன் வான்மதி மேல் ஆத்திரம், எரிச்சல் இருக்கிறதோ என்ற அச்சம், கேள்வி அவர் மனதில் எழுந்துள்ளது. அதனாலேயே வந்ததாகக் கூறினார். இதுவரையில் இருந்த உற்சாகம் படிப்படியாக நழுவியது என்றார். இப்போதெல்லாம் க்ளப் போவதோ, தொண்டு நிறுவனங்களில் சேவை செய்வதோ, விளையாடுவதிலோ மனம் போகாததை, இந்த ஹோம் வர்க் செய்யும் போது கவனித்ததாகக் கூறினார்.

அதைப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம். வான்மதி பொழுது போக்காகப் பத்திரிகையில் எழுதுவதும், லேடீஸ் க்ளப் தலைவி என்றும், வீட்டைக் கவனிப்பதுமாக இருந்தாள். நல்ல வசதியான குடும்பத்தில் வளர்ந்தவள். வாழ்க்கைப் பட்டதும் அவ்வாறே. மகள் தனுஜா கல்லூரி படிப்பு, தன் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்வாள். இது வான்மதிக்குப் பிடித்திருந்தது.

கல்யாணமான மூத்த மகள் வனஜாவின் வாழ்க்கை அழகாக இருந்தது. அவள் மிகக் கலகலப்பான பெண். கல்யாணம் ஆகிப் போன இடமும், கலகலப்பாக, அக்கம்பக்கத்தினருடன் ஒரு குடும்பத்தைப் போல இருந்தார்கள். அங்குள்ள கலாச்சாரம். “அபியும் நானும்” படத்தின் வடக்கு இந்தியக் குடும்பம் போல.

நட்பு, தோழிகள் இருந்தாலும், அம்மா அப்பாவை வனஜா அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்துப் பேசுவாள். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அவ்வளவு நெருக்கமாகப் பழகி வருவதால் அவர்களும் இதில் சேர்த்தி உண்டு, பேசுவார்கள். வான்மதிக்கு வியப்பாக இருந்தது. அவர்களோடு பேசுவது ஏறத்தாழ ஒரு மணி நேரமாகி விடும். சந்தோஷம் தான். ஆனால் ஓய்ந்து போய்விடுவாள். குமரன் ஆச்சரியப் பட்டார்.

வனஜாவின் கல்யாணம் ஆன முதல் ஆண்டு என்பதால் அவர்கள் கலாச்சார பழக்கத்தின்படி வான்மதியும் குமரனும் தம்பதியாகப் பண்டிகைகளுக்குச் சீர் பட்சணம் தரப் போய் வந்தார்கள்.

அந்த இடத்தில் ஒவ்வொருவர் வீட்டுக்குப் போக வருவதில், அவர்களுக்குப் பிடித்த பலகாரத்தைச் செய்து கொடுப்பதை உண்டு கொண்டு பேசுவதில், ஒன்று கூடி கும்மாளம் போடுவதில் நாட்கள் ஓடிவிட்டன. வனஜா அந்த கலாச்சாரத்தில் ஒன்று கலந்து விட்டிருந்தாள். மனதிற்குள் குமரன் பெருமைப் பட்டார். வான்மதிக்கு இன்னும் ஆச்சரியம், ஆடிப்போய் விட்டாள். நம்பமுடியவில்லை.

அங்கேயும் சரி, திரும்பி வந்த பின்பும் வான்மதி மிகச் சோர்வாக இருந்தாள். பண்டிகை காலம் ஆகையால் வான்மதியின் தந்தையும் அவர்களைப் பார்க்க வருவது வழக்கம்.

பல வருடங்களாகவே,  இன்று வரை, மாமனார் குமரனிடம், “தைரியமா ஆம்பளையா இருங்க” என்று சொல்வதுண்டு. குமரனின் தந்தை முதலில் இதை ஆரம்பித்து வைத்தார். குமரன் தலைக்கனம் இல்லாமல் எல்லோருக்கும் உதவுவார், மிகப் பணிவாகப் பேசி நடப்பார், உடலும் அதே போல். அவர் தந்தை, மாமனார் இருவருக்கும் ஆண்பிள்ளை இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்ற மனப்பான்மையால் இந்த ஒருவரியை எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதைக் கேட்டதும் குமரனுக்கு அவமானமாகத் தோன்றும். தன் கல்யாணத்தின் போது தந்தை வழக்கம் போல எல்லோர் மத்தியிலும் சொன்ன பிறகு மாமனாரும் சேர்ந்து கொண்டார்.

மாமனார் சொல்வதைக் குமரனின் அக்கா கேட்கும் போதெல்லாம் குமரனைப் பரிதாபமாகப் பார்த்தவாறு, வான்மதியிடம் “கணவன் பக்கம் பேசாத மனைவி நீ” என நிந்தனை செய்வாள். வான்மதி பொருட்படுத்தாமல் இருப்பாள்.  தன் ஆண்மையைக் கொச்சை செய்வதாக நினைத்து, இந்த நடத்தை குமரனைக் கோபம் மூட்ட ஆரம்பித்தது. மொளனமாக குமரன் இருந்தாலும் மனத்திற்குள் புழுங்கிக் கொண்டு இருந்ததாகப் பகிர்ந்து கொண்டார். புதைக்கப் பட்ட இவை தலையைக் காட்ட, விரக்தியாக துவங்கி விட்டது.

பல வருடங்களாக ஓடிக் கொண்டிருந்த இந்த பிரச்சினைகள் திடீரென்று ஏன் இப்போது தலை காட்ட வேண்டும் என்பதைக் குமரன் அடுத்த சில ஸெஷன்களில் புரிந்து கொண்டார். இன்று வரை வேலை, தொண்டு, விளையாட்டு, பொழுது போக்கு எனப் பல விதமான வகையில் நேரம் போனது. வாழ்க்கை பல நோக்கங்களுடன் சென்றன. இப்போது படிப்படியாக ஒவ்வொன்றாக நின்றிருந்தது, கூடவே இந்த வெறிச்சோடி உணர்ச்சி சூழ்ந்தது. 

இப்போது குமரன் தன் உணர்ச்சிகளின் தாண்டவத்தை அடையாளம் காண ஆரம்பித்தார். வான்மதி மேல் வரும் உணர்வு, எதிர்மறை எண்ணங்களைக் கவனிக்கச் சொன்னேன். திரும்பவும் இல்லை என்று துவங்கி, பின் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்க, அவருக்கு இப்போது புரிந்தது – அவருடைய மனக்குமுறல் இந்த ரூபத்தில் வெளிப்படுகிறது என்று.

வேதனைப் பட்டார் இது தன் சுபாவம் அல்ல என்று. இதை மையமாக வைத்து உரையாற்றிய பின்பே தெளிவு பிறந்தது. அதாவது தன் அக்காவின் சொல்லை அப்படியே ஏற்று, மனைவியை அந்த சமயங்களில் துஷ்டனாக நினைத்ததால் வான்மதி தன் மேல் ஆசை, அன்பு வைக்கவில்லை என்று நினைத்து, போகப் போக இதை உண்மை என்று எடுத்துக் கொண்டார். சில வாரங்களுக்கு இவ்வாறு உணர்ந்த சம்பவங்களை எழுதி, அவைகளை ஸெஷனில் பரிசீலனை செய்த பிறகே தான் எவ்வாறு தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளோம் என்ற நிலையைப் பார்க்க, அதைச் சுதாரிக்கப் பல வழிகளைச் செயல்படுத்த, இந்த நிலைமை, உணர்வு ஏற்படும் விதத்திலிருந்து வெளியில் வந்தார்.

இந்த புரிதலின் விளைவாக வேலையில் கவனத்தைச் சீர் செய்யத்தொடங்கினார். குழிப்பந்தாட்டம், தொண்டு நிறுவனங்களில் சேவை, சனி-ஞாயிறு க்ளப் போவது எல்லாவற்றிலும் ஈடுபாடு மறுபடி கூடியது. அது மட்டும் அல்லாமல், வான்மதியிடம் சமீபத்தில் நேர்ந்த மாற்றத்தைக் கவனித்து வந்தார்.

மகள் வனஜா தொலைப்பேசி / கைப்பேசி மூலம் அழைத்தாலே வான்மதி ஓரிரு நிமிடம் பேசி நிறுத்தி விடுவாளாம். போகப் போக அவளிடம் பேசும் போது வான்மதிக்கு உடல் முழுவதும் நடுங்கின.

வான்மதியின் இந்த தவிப்பைப் பார்த்த குமரன் மனதில் ஒரு பக்கம் “பாவம்” எனத் தோன்றியது. மற்றொரு பக்கம் ஏனோ சந்தோஷம் ஏற்பட்டது. குமரனால் இதை நம்பமுடியவில்லை. ஆழமாகப் பகிரப் பகிர, தெளிவு பிறந்தது. அதாவது தன்னை உதாசீனம் செய்தாள் என எண்ணி இந்த தவிப்பைப் பார்த்து இவ்வாறு தோன்றியது. பழி உணர்வு எழுந்தது. இதுவெல்லாம் தான் குமரன் மனதை வாட்டியது. உடல் மொழியாகத் தெரிந்தது இப்படி அப்படி நடப்பது என, மறதி, கோபமும். சஞ்சலமும் எழுந்தது.

இப்போது இதெல்லாம் புரிய, அடையாளம் கண்டு கையாளுவது என முடிவானதுமே வான்மதியின் நிலையைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. மனைவிக்கு ஆதரவாக இருக்க முடிவு செய்ததும் மனம் லேசாக ஆனதாகச் சொன்னார். 

அடுத்த படியாக வான்மதியின் மனநிலை திடப்படுத்த, அவளுடைய கவனத்திற்குக் கொண்டு வர வழிகளை அமைக்க ஆரம்பித்தோம். வான்மதியின் வருகை, முன்னேற்றத்தைப் பற்றி இன்னொரு சமயம் பேசலாம்.

 

குண்டலகேசியின் கதை-12 – தில்லைவேந்தன்

தமிழறிவு!!: குண்டலகேசி

முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’ என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.

இருவரும், அங்கொரு மலையில் குலதெய்வக் கோயிலில் படையிலிட்டு வழிபட்டனர்.

பிறகு இயற்கை அழகைக் காணலாம் என்று கூறி மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்…….

 

        மலை உச்சிக்குச் செல்லுதல்

 

சுடுநெருப்புள் சென்றுவிழும் மலரே அன்னாள்,

     சொற்பிழையால் விளைதுயரம் அறியா மின்னாள்

கடுவனொடு மந்திவிளை யாடக் கண்டாள்

      களிப்புற்றாள், விருப்புற்றாள், மேலே சென்றாள்

நெடுமலையின் முடியதனை முத்த மிட்ட

     நீள்கொண்மூ எழில்கண்டு தனைம றந்தாள்

அடுதொழிலன், கொடுங்குணத்தன் சிரித்துக் கொண்டான்

     அடுத்தவினை தொடுத்திடவே முன்னே சென்றான்

                   ( கொண்மூ – மேகம்)

 

 உச்சியிலிருந்து பத்திரை கண்ட காட்சி

 

பொம்மைகளாய்த் தோன்றுகின்ற மாளி கைகள்,

     புல்வெளியாய்க் காட்சிதரு கான கங்கள்,

வெம்மைமிகு விலங்கொன்றின் விரித்த வாயாய்

      விழுபவரை  விழுங்குகின்ற  பள்ளம்  கண்டாள்.

அம்மம்ம, அழகென்ற போதும், நெஞ்சில்

     அழியாத அச்சத்தைத் தருதல் கண்டாள்.

“இம்மையிலே முத்திதரும் இடத்தைப் பாராய்

       இப்போதே பெறச்செய்வேன்” என்றான் காளன்

                  கவிக்கூற்று

 

குளிர்தென்றல் புயலாக மாறிப் போனால்

     கொடிசெடிகள், மரமெல்லாம் சாய்ந்தி டாவோ?

ஒளிர்நிலவு பெருநெருப்பைப் பொழிந்தால், இந்த

     உலகுயிர்கள் கருகிப்போய் மாய்ந்தி டாவோ?

நளிர்நீரும் நஞ்சானால் வேட்கை தீர

      நானிலத்து மக்களெலாம் எங்குச் செல்வர்?

இளமங்கை நம்பிவந்த கணவன், வஞ்சம்

      இழைக்கையிலே ஏந்திழைதான் என்ன செய்வள்?

 

காளன், தன் தீய எண்ணத்தைத் தெரிவித்தல்

 

பஞ்சணையில் கொஞ்சுவதால் மயங்கி உன்றன்

     பணியாளாய் இருப்பனென்று நினைத்தாய் போலும்,

கொஞ்சமும்நீ மதிப்பதில்லை, திருடன் என்று

     கூசாமல் எனையன்று பழித்து ரைத்தாய்.

வெஞ்சினத்து வீரர்களும் அஞ்சும் என்னை

      வெறுப்பேற்றும் ஆணவத்தை எங்குப் பெற்றாய்?

நஞ்சனைய சொல்லினைநான் மறக்க மாட்டேன்,

     நாணமிலாச் சிறுமகள்நீ இறக்க வேண்டும்!

 

    பத்திரை நடுக்கத்துடன் கூறுவது

 

குலதெய்வத்தின் மீதாணை! தாய்மீ் தாணை!

      குலங்காக்கும் எந்தையவன் மீதும் ஆணை!

நிலங்காக்கும், அறம்காக்கும், நீதி காக்கும்,

      நிகரில்லாச் சோழமன்னன் மீதும் ஆணை!

துலங்குமொரு காதலினால் உனைம ணந்தேன்

      சூதறியேன், தீதறியேன் நம்பு வாயே!

கலங்கடலில் கரைகாணும் விளக்காய் உன்னைக்

       கருதுமெனைப் பிழைகூறல் நன்றோ சொல்வாய்?

 

கேடெதும் நினைக்கா துன்னைக்

     கேள்வனாய்க் கொண்டேன், காதல்

ஊடலில் சொன்ன சொல்லுக்(கு)

     உலகினில் பொருளும் உண்டோ?

 நாடியுன் அன்பை மட்டும்

      நயந்திடும் என்னை நம்பு

தேடிநான் உன்னைக் கண்டேன்

      தெய்வமாய் மனத்தில் கொண்டேன்.

        ( கேள்வன் – கணவன்)

 

திவலையை அலைவெ றுத்தால்

     திரைக்கடல்  வற்றி டாதா?

அவமெனக் குதலைச் சொல்லில்

      ஆத்திரம்  கொள்ள லாமா?

கவவுக்கை நெகிழ லாமா?

       காதலி வருந்த லாமா?

தவறென நினைத்தால் அன்பால்

       சற்றுநீ  மன்னிப்  பாயா?

          ( திவலை – நீர்த்துளி)

 ( குதலைச் சொல்- குழந்தையின் மழலைச்சொல்)

          (கவவுக்கை–அணைத்த கை)

 

     காளன் கடுமொழி

 

புல்லென ஆன போதும்

     பொலிவுறு கொழுநன்  என்றும்,

கல்லென ஆன போதும்

    கணவனே தெய்வம் என்றும்,

சொல்லிய எல்லாம் பொய்யோ?

     சொல்லடி! செருக்கால், அம்பை

வில்லெதும் இன்றி என்மேல்

      விடுத்தனை உன்னைக் கொல்வேன்!

 

                    ( கொழுநன் – கணவன்)

 

பூண்டநகை அனைத்தையுமே கழற்றிப் போடு,

     புதுவாழ்வு தொடங்குவனுன் செல்வத் தோடு.

மாண்டபின்னர் உன்னுடலில் நகைகள் வீணே

      வரும்வாழ்வின் முதலீடாய்க் கொள்வேன் நானே.

ஈண்டிருந்து கீழ்தள்ளிக் கொல்வேன் உன்னை

       என்முடிவில் மாற்றமிலை அறிவாய் பெண்ணே

ஆண்டவனை வேண்டிக்கொள் சாகும் முன்னே,

        அமைதியுறும் ஆன்மாவும் ஏகும் விண்ணே!

 

 

(தொடரும்)

ஞாபகமும் மறதியும் – ஹெச்.என்.ஹரிஹரன்

அப்பா ………………….. ஒரு சரித்திரம் – chinnuadhithya

கொஞ்சம்கூட முன்னறிவிப்பு இல்லாமல் நண்பன் சுந்தர் வீட்டுக்குப் போய்விட்டோமோ என்று அழைப்பு மணி அடித்த நொடி குமாருக்குத் தோன்றியது.

சுந்தர் சிறுவயதிலிருந்து சினேகிதன். அவனுடைய அப்பாவையும் அப்போதிலிருந்தே தெரியுமென்றாலும்,  அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அழையா விருந்தாளியாக வாசலில் நிற்கிறோமே என்று நினைத்தான்.

அவருக்கு டிமென்ஷியா வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டன. மூளையின் மடிப்புக்களில் தேங்கி நிற்கும் நினைவுகளில் பெரும்பாலானவை கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போக அதுவே அவருக்கும், அதனால் அவனுக்கும் பிரச்சினை ஆகிவிட்டது. நினைவுகள் மட்டுமின்றி, கசடறக் கற்றவைகளும், நிற்பவைகளும் அல்லவா அதில் போய்விட்டன?

அவரைப் பீடித்திருப்பது டிமென்ஷியா என்று ஆரம்பத்தில் தெரியாமல், சுந்தர் வெறுப்புடன் புலம்பிக் கொண்டிருப்பான். “என்னாச்சுடா எங்கப்பனுக்கு? அறிவே இல்லாமல், வேட்டி இடுப்புல இருக்கான்னு கூடப் பார்க்காம கட்டிலில் இருந்து இறங்கி நடக்கிறார்டா..” என்றான் ஒரு நாள்.

“டேய். படுக்கையிலேயே பாத்ரூம் போய்த் தொலைக்கிறார்டா.. அப்படி என்னடா தூக்கம்..” என்றான் மற்றொரு நாள். அது அடிக்கடித் தொடரவே , ராத்திரி நேரத்திற்கு அடல்ட் டயபர் போட்டு இன்றுவரை சமாளிக்கிறான்.

“சாப்பிடவே தெரியலைடா அதுக்கு.. நாங்க யாராவது ஊட்டி விடணும்… எங்களோட கவனம் எல்லாம் தன்மேல இருக்கணும்னு சுயநலம்..”

‘அது என்பது எது? யாரைச் சொல்கிறான் இவன்” என்ற கேள்விக்குறியுடன் குமார் நிமிர்ந்து பார்க்க,

“எல்லாம் எங்கப்பனைத்தான் சொல்கிறேன்” – அவனது அப்பா சுய அறிவை இழந்ததினால் அவனுக்கு அவர் ‘அது’வாகிப் போனார். தான் யாரென்று அறியாதநிலையில் அவர் தனது வயதான காலத்தில் அவனுக்குச் சுமையாகிப் போனார். சுந்தரின் அக்கா பெங்களூரில்தான் செட்டில் ஆகி இருக்கிறாள். எப்போதாவது வந்து பார்த்து விட்டுப் போகலாம்தான். பசங்க படிப்பு, அவர் ஆபீசில் பிசி என்று காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிக்கிறாள். அதிகம் போனால் வீடியோ அழைப்பில் தனது அப்பாவைப் பார்த்துவிட்டுத்  தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறாள்.

தினமும் வங்கி அலுவல்நேரம் முடிந்த மறுநொடியில், பையையும், ஹெல்மெட்டையும் தூக்கிக் கொண்டு வெளியில் இறங்குகிறவன், இப்போதெல்லாம் மானேஜருக்கு உதவி செய்கிறேன் என்று இரவு எட்டு மணி வரை அலுவலகத்திலேயே பழியாய்க் கிடக்கிறான். வங்கி அதிகாரிகளைப் போல ஒரு குமாஸ்தாவிற்கு அப்படி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

கேட்டால், “வீட்டுக்குப் போகவே புடிக்கலைடா.. ஏதாவது பேசிக்கிட்டே இருக்காரு.. அதுவும் என்னைப் பார்த்தால் போதும்.. சம்பந்தமேயில்லாமல் பழைய கதையெல்லாம் இப்ப நடக்கிற  மாதிரி  திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்காரு.. அதான் இங்கயே கிடக்கிறேன்.” என்றான்.

குமார் கேட்கவே செய்தான். “ஏண்டா .. சொந்த அப்பனை நீ பாத்துக்காமல் உன் பொண்டாட்டிகிட்ட விட்டுட்டு வந்திருக்கே.. மாமனாருக்கு எல்லாம் செய்யணும்னு அவங்களுக்கு என்ன தலையெழுத்தா..?”

“நாந்தான் அவரோட புள்ளன்னு மட்டும் ஞாபகமிருக்கு போல.. என்னப் பார்த்தா மட்டும் எல்லா ஆர்ப்பாட்டமும் பண்ணுவாரு.. என் மனைவி கிட்ட ஒண்ணும் பண்ணமாட்டாரு..அதனாலதான் இப்படி.” என்றபடி உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

கடந்த ஆறுமாதங்களில் நிகழ்ந்த இவையெல்லாம் அறிந்தும் ஏன் சுந்தர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.

அதனால் என்ன..?  சத்தமில்லாமல் திரும்பிப் போய்விடலாம் என்று கூட யோசித்தான். அந்த நினைப்பு சற்று தாமதமாகிவிட்டது போல.

சுந்தர் வந்து கதவைத் திறந்தான். எப்போதும் முகம் மலர்ந்து வரவேற்பவன் , அவனைப் பார்த்து “வாடா” என்ற போதும் வழக்கமான உற்சாகமின்றி இருந்தான்.

வீட்டினுள் நுழைந்ததுமே சுந்தர் அவனைத் தன்னுடைய அப்பாவின் அறைக்குக் கூட்டிக் கொண்டு போனான். எந்நேரமும் சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுகிறார் என்பதனால் அவர் கீழே இறங்கமுடியாதபடி, கட்டிலைச் சுற்றி இரண்டடி உயரத்திற்கு  கம்பியில் வேலி அமைத்து அதை ஒரு தொட்டில் போல் செய்து வைத்திருந்தான்.

ஆஜானுபாகுவான மனிதர், உடலில் கிள்ளக்கூட முடியாதஅளவு  சதை ஏதுமின்றி எலும்பு மூடிய தோலனாய் இருந்தார். ஆழ்குழிக்குள் விழுந்தவை போல் கண்கள் இரண்டும் உள்ளிருந்து மிரண்டபடி காட்சி அளித்தன. அவரது வாய்  தன்னிச்சையாக அசைந்து கொண்டிருந்தது. மேலே சுற்றும் விசிறியின் உபயத்தில் அவரது மூத்திர, மலநாற்றங்கள் டெட்டால் நெடியோடு சேர்ந்து கொண்டு அறையில் சுழற்றியடித்தபடி இருந்தன.

“அவரு பேசற மூடில் இருக்காரு போலத் தோணுது … எஞ்ஜாய் பண்ணிக்கிட்டு இரு. நான் ஒய்ப்கிட்ட சொல்லி ஏதாவது சாப்பிடக் கொண்டு வருகிறேன்..” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். ‘எதுவும் வேண்டாம்’ என்று அவன் சைகையில் காட்டியதை சுந்தர் கவனித்தமாதிரியே தெரியவில்லை. அவனுக்கு அங்கிருந்து போகவேண்டும் போல.. அவ்வளவுதான்.

இப்போது குமாரும் அவரும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.அவன், ஒரு டிமென்ஷியா நோயாளியைப் பார்ப்பது இதுவே முதன்முறை.

சுந்தரின் அப்பா அவனை நேர்கொண்டு பார்த்தார். சாதாரண நாட்களில் அவர் பார்க்கும் பார்வையின் கூர்மை இப்போது இல்லை. அவனுக்குச் சிறுவயதிலிருந்தே அவரிடம் கொஞ்சம் பயம்தான். சுந்தரிடம் கூட அதைப் பற்றிச் சொன்னதுண்டு. “உங்கப்பா என்னைப் பார்க்கும் போது செஞ்ச தப்பு எல்லாத்தையும்  திறந்து விட்ட குழாய் மாதிரி வெளியே கொட்டிடுவோம்னு பயமா இருக்குடா “ என்று சொல்லியிருக்கிறான்.

அதற்கு சுந்தர் “மவனே.. நீ பண்ணின தப்பை மட்டும் சொல்லு.. என்னோடதையும் சேர்த்துச் சொன்ன .. கொன்னே புடுவேன்.” என்று சொல்வான்.

தற்போது அவர் பார்வையில் அவனைப் பார்க்கிறாரா அல்லது அவனுக்குப் பின்னால் மின்விசிறியின் காற்றில் சுவற்றில் ஆடும் மாதக் காலண்டரைப் பார்க்கின்றாரா என்று புரியவில்லை. ஆனால், முன்பு மாதிரி ஊடுருவும் பார்வை இப்போது அவரிடம் இல்லை என்றுதான் தோன்றியது.

ஒன்று அவனால்  நிச்சயமாகச் சொல்லமுடியும். அவருக்கு டிமென்ஷியா வந்த பிறகு, வெளிநபர்கள் யாருமே வராதபட்சத்தில் அவனது முகம் அவருக்கு வித்தியாசமாகவும் அதே சமயம் பரிச்சயமானதாகவும் தோன்றியிருக்கக்கூடும். அது அவர் முகத்தில் ஒரு மின்னல் கீற்றாய்ப் பளீரிட்டது.

மறுவிநாடியே யாரென்று புரியவில்லை என்பது போல், இரு கைகளாலும் தன்னுடைய தலைமுடியை இறுகப் பற்றிக் கொண்டார்.

குமார் எழுந்து நின்று அவர் அருகில் குனிந்தான்.

“நான்தான் அங்கிள்.. குமார் வந்திருக்கேன்..சுந்தர் ப்ரெண்டு.. தெரியுதா?” என்றான் சத்தமாக.

தலையை நிமிர்ந்து பார்த்தார். ஏதோ புரிந்தும் புரியாத மாதிரி தலையை ஆட்டினார்.”தெரியுது.. தெரியுது.தெரியுது” என்று ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் அவரது வாயிலிருந்து உருண்டு வந்தன. ஆனால் அதற்கு நேர்மாறாக முகபாவம் புரியவில்லை என்று காட்டியது.

குமார் அவரது கைகளைப் பற்றிக் கொண்டான்.

ஆறடி உயர மனிதர். அந்தக்கால பாஸ்கெட் பால் ப்ளேயர். அவரது உரம் பாய்ந்த கைகள், வலுவிழந்து நடுங்கிக் கொண்டிருந்ததை தனது கைகளில் உணர்ந்தான்.

சட்டென்று மடை திறந்த வெள்ளம் போல் அவர் பேச ஆரம்பித்தார். வாய் குழறியபடி இருந்தாலும் அவனால் அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ஈஸ்வரி.. நீ சொன்னது ஓண்ணுவிடாம வாங்கிண்டு  வந்துட்டேன் .. நீ லிஸ்ட் குடுக்க மறந்துட்டே.. அதனால என்ன.. சத்தமாச் சொல்லிக்கிட்டுத்தானே நீ லிஸ்ட் எழுதுவ.. அதை ஞாபகப்படுத்திக்கிட்டு சாமான்கள் வாங்கிட்டேன். நீ எழுத விட்டுப் போனதும் இதுல இருக்கு…’

அவரது மனைவி ஈஸ்வரி இறந்து போய் பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ‘பழையதையெல்லாம் பேசுகிறார் என்று சுந்தர் சொல்வது இதைத்தானா?’

சில நிமிடங்கள் மௌனம்.

“ஏண்டா அறிவு. ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு சொல்லுவன்னு பார்த்தா..உனக்குத் தோணவேயில்லையா? கடைசி நாள் இன்னிக்குத்தானே.. சட்டுனு ஞாபகம் வந்திடுத்து… இந்தா பணம் .. கொண்டு போய்க் கட்டுவியா.. இல்லேன்னா அப்பவும் பணத்தோடத் திரும்பி வருவியா..”

பலவருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்தச் சம்பவம் அவனுக்கே ஞாபகத்தில் இருந்தது. மனிதர் அலுவலக வேலைகளின் நடுவே பள்ளிக்கூடத்திற்கு வந்து அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கட்டிவிட்டுத்தான்  போனார்.

“சம்பந்தி.. நாங்க சொன்னதுல ஒண்ணுகூட பாக்கி வைக்காமல் எங்க பொண்ணுக்குச் செஞ்சிடுவேன்னு சொன்னபடி பண்ணிட்டேன்.. ஒருதடவை சொன்னாப் போதும் எனக்கு..”

இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனவர், களைத்துப் போய் அப்படியே  உறங்கத் தொடங்கினார்.

அவர் சொன்னதென்னவோ உண்மைதான். பிசியான அலுவல்களுக்கு இடையேயும் அவர் குடும்பத் தலைவருக்குரியத் தன் கடமைகளைச் செய்ய மறந்ததே இல்லை.

சுந்தர் சில பிஸ்கெட்டுகளும், காப்பியும் கொண்டு வந்தான். “என்னடா… ஒரு ஆளு கிடைச்சிட்டான்னு  பேசிக்கிட்டே இருப்பாரே.. அதனாலதான் நான் இங்க வரதே இல்லை.. “ என்றான்.

குமார் ஓரிரு பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட்டுப் பின்னர் காப்பியைக் குடித்தான்.

குமாருக்கு  இப்போதும் ஞாபகத்திற்கு வந்தது. அவர்  பணி ஓய்வு பெற்றதும் பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொண்டதாக சுந்தர் கூறியிருக்கிறான். அதுவும் பேத்தி அனு மீது அவருக்கு அலாதிப் பிரியம். தன்னுடைய மாதாந்திர பென்ஷன் பணத்தைச்  செலவழித்து அவள் பள்ளி செல்ல ஆட்டோ ஏற்பாடு செய்து அவரே பள்ளியில் கொண்டு விடுவதும் கூட்டி வருவதுமாக இருந்தார். ஒரு தடவை கேட்டபோது , “ஊரில் என்னவெல்லாமோ நடக்கிறதைப் படிக்கிறோம்.. அது நம்ம புள்ளக்கி நடந்துறக்கூடாது சுந்தர்..”என்று சொல்வாராம். அதையும் அவனே  பெருமையுடன் சொல்லியிருக்கிறான்.

அவர் தன்னையுமறியாமால் அனைத்தையும்  ஞாபகம் வைத்திருப்பது போல , ‘உங்களுக்காக இவ்வளவு செய்திருக்கிறேன்’ என்று  சொல்கிறார். ஆனால் சுந்தர்தான்  தன்னுடைய அப்பா அவனுக்காக, அவனது குழந்தைகளுக்காகக்கூட   செய்ததையெல்லாம் மறந்துவிட்டான் என்று தோன்றியது.

கனத்த இதயத்தோடு சுந்தரின் வீட்டை விட்டு இறங்கும் போது , அவர்கள் இருவரில்  யாருக்கு ஞாபகமறதி எனும்  வியாதி என்று அவனுக்குப் புரியவே இல்லை.

 

 

காத்திருப்பு – வளவ. துரையன்

விவசாயி Images Ravi - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்

ஆயுதபூஜை நடந்து
கொண்டிருக்கிறது.
எல்லாக் கருவிகளும்
தொண்டைமான் படைக்கருவிகளாய்
மின்னுகின்றன.

இருசக்கர மற்றும்
நான்கு சக்கர வாகனங்கள்
எல்லாம் சந்தன முகத்துடன்
சிரித்துக் கொண்டு
நெற்றிக் குங்குமத்துடன்
நாணம் காட்டுகின்றன.

அரிவாள் சுத்தி
கத்தி எல்லாம் மீசை
முறுக்கிப்
பயமுறுத்துகின்றன.

புத்தகங்களும் இன்று
ஒருநாள் அரியணை
ஏறி ஆட்சி செய்கின்றன.

கலப்பையும் பரம்படிக்கும்
பலகையும் தார்க்குச்சியும்
இல்லத்தின் இறுதியில்
அழைப்பார்களா
எனக்காத்திருக்கின்றன.

 

 

சஞ்சலம் – எஸ் எல் நாணு

Blog Therapy, Therapy, Therapy Blog, Blogging Therapy, Therapy,..

 

விஷயம் கேள்விப் பட்டதிலிருந்து மஹாதேவனுக்கு எதுவுமே ஓடவில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக எதிலிருந்து விலகியிருந்தாரோ.. எது நடக்கக் கூடாது என்று நினைத்திருந்தாரோ.. அது நடக்கப் போகிறது..

சிற்றம்பலேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா ஆவுடையப்பன் சொன்ன தகவல் தான் மஹாதேவனின் இந்த நிலமைக்குக் காரணம்.

“சாமி.. ஒரு நல்ல சேதி.. ஆச்சார்யர் யாத்திரை போயிட்டிருக்காருல.. வர இருபத்தஞ்சாம் தேதி நம்ம கிராமத்துக்கு வராரு.. பத்து நா இங்கிட்டுத் தான் கேம்ப்.. இப்பத் தான் அவுங்க ஆளுங்க போன்ல சொன்னாங்க”

வழக்கமாக உருகி உருகி ருத்ரம் ஜெபித்துக் கொண்டே சிற்றம்பலேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யும் மஹாதேவன் இன்று சுரத்தில்லாமல் ஏதோ சிந்தனையில் இயந்திரமாக செயல்பட்டதைக் கண்டு ஆவுடையப்பனுக்கு எதுவும் புரியவில்லை..

“கடவுளே.. ஏன் இந்த சோதனை?”

மஹாதேவனின் மனம் மட்டும் புலம்பிக் கொண்டே இருந்தது.

பிரசாதம் வாங்கிக் கொண்டு தர்மகர்த்தாவும் அவருடன் வந்த இருவரும் கிளம்பிய பிறகு ஈஸ்வரனைப் பார்த்தபடியே கோவில் தூணில் சாய்ந்து உட்கார்ந்தார் மஹாதேவன்.. கண்கள் ஈஸ்வரனை வெறித்தாலும் மனம் பின் நோக்கிப் பயணித்தது.

தாமிரபரணி கரை ஓரத்தில் அது ஒரு சின்ன கிராமம்.. மொத்தமே ஐம்பது குடும்பங்கள் தான்.. விவசாயம் தான் பிரதானம் என்பதற்கு செழுமையாக விரிந்துக் கிடந்த பச்சை வயல்களே சாட்சி..

கிராமத்துக்கு நடு நாயகமாக சிற்றம்பலேஸ்வரர் கோவில். தாயார் மரகதாம்பிகை. கோவிலின் சரித்திரம் புலப்படா விட்டாலும் அது ரொம்பவே புராதானம் வாய்ந்தது என்பது மட்டும் நிதர்சன உண்மை.  மஹாதேவனின் கொள்ளுத் தாத்தா சுந்தரேச கனபாடிகளின் காலத்திலிருந்து இவர்கள் குடும்பம் தான் பகவத் கைங்கர்யம் செய்து வருகிறது..

மஹாதேவனின் அப்பா சங்கர கனபாடிகள் ஆச்சார்யரின் பரம பக்தர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு நடை போய் தரிசனம் செய்து விட்டு வருவார். இப்படித் தான் ஒரு தரிசனத்தின் போது ஆச்சார்யர் அவரைப் பார்த்து..

“வேதவித்து நிறைஞ்ச பரம்பரை.. சுந்தரேச கனபாடிகள் வாரிசு.. இந்த வேத சம்ரக்‌ஷணத்தைத் தொடரணும்.. சிற்றம்பலேஸ்வரர் கைங்கர்யத்தையும் தொடரணும்..”

“தெய்வத்தோட உத்தரவு”

சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார் சங்கர கனபாடிகள். இது கடவுளுக்கே கொடுத்த வாக்காக அவருக்குப் பட்டது..

கொடுத்த வாக்குப் படி ஒரே வாரிசான மஹாதேவனை கனபாடிகளாகத் தேர்ச்சி பெற வைத்தார் .. சிற்றம்பலேஸ்வரர் கைங்கர்யமும் தொடர்ந்தது..

தன் காலம் முடிவதற்குள் ஆச்சார்யாரின் உத்தரவை மகனுக்கு நினைவூட்டினார் சங்கர கனபாடிகள்.

“மறந்துராதேடா.. தெய்வத்தோட உத்தரவு.. தட்டிராதே.. அப்புறம் அது தெய்வ குத்தம் ஆயிரும்”

மஹாதேவனுக்கு இரண்டு மகன்கள்.. மூத்தவன் சங்கரநாராயணன்.. சின்னவன் ராமலிங்கம். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம் தான்.. இரண்டு பேருக்கும் இள வயதிலேயே பிரம்மோபதேசம் செய்து வைத்து வேத அப்யாசத்தை ஆரம்பித்தார் மஹாதேவ கனபாடிகள்..

”சாமி”

குரல் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்ட மஹாதேவன் திரும்பி கோவில் வாசலை எட்டிப் பார்த்தார்..

“யாரு?”

“முனியனுங்க.. யாரோ பெரிய சாமி வாராங்களாமே.. கீத்துக் கொட்டா போடணும்.. மத்த ஏற்பாடுலாம் செய்யணும்.. கோவில் சாமியைக் கேட்டுக்கன்னு தர்மகர்த்தா ஐயா சொன்னாரு”

மஹாதேவன் கண்களை மூடிக் கொண்டார்..

“ஈஸ்வரா.. இதுலேர்ந்து தப்பிக்க முடியாதா?”

அவர் மனம் ஏங்கியது..

“சாமி”

முனியன் மறுபடியும் குரல் கொடுத்ததும் மஹாதேவன் நிதர்சனமானார்.

“சொல்லுங்க சாமி.. எங்க.. எவ்ளோ பெரிய கொட்டா போடணும்.. வேற என்ன ஏற்பாடுகள் செய்யணும்.. முன்னமே சொன்னாத் தான் பக்கத்தூருலேர்ந்து ஆளுங்க சொல்ல தோதா இருக்கும்”

மஹாதேவன் மெதுவாக எழுந்து வந்தார்..

ஆச்சார்யர் கோவிலில் தான் தங்குவார். அவருக்குக் கைங்கர்யம் பண்ணுகிறவர்கள் ஓய்வெடுக்க கோவிலைச் சுற்றி கொட்டகை போட்டுத் தர வேண்டும். அவர்களின் மடப் பள்ளிக்குத் தனி இடம் ஒதுக்க வேண்டும்.. கொட்டகையில் விளக்கு ஏற்பாடு பண்ண வேண்டும்.. கோவிலிலும் பிரகாச விளக்குகள் ஏற்பாடு பண்ண வேண்டும்.. நித்ய பூஜைக்கு இரண்டு வேளையும் ஏராளமான புஷ்பங்கள் தேவைப் படும்.. இதைத் தவிற பூஜாத் திரவங்கள்.. ஆச்சார்யரை தரிசிக்க பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.. அவர்களுக்கு  நித்ய அன்னதானத்திற்கான ஏற்பாடு..

மஹாதேவன் மனதில் வரிசையாக எழுந்தாலும் அவர் உடனே முனியனிடம் எதுவும் சொல்லவில்லை..

“தர்மகர்த்தா கிட்ட பேசிட்டு சொல்றேன் முனியா.. அவர் உத்தரவு இல்லாம எதுவும் கூடாது.. நீ கிளம்பு”

முனியன் நகர்ந்ததும் மஹாதேவனும் நடையை சாத்தி விட்டு கோவிலைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்.

கோவிலை விட்டு இறங்கியதும் சன்னதித் தெரு.. மூன்றே மூன்று வீடுகள்.. அதில் முதல் வீடு மஹாதேவனுடையது. வீடு என்று சொல்வதை விட ஓட்டுக் கொட்டகை என்று தான் சொல்ல வேண்டும்.. தலை குனிந்து போக வேண்டிய நிலை வாசல்.. குறுகலான ரேழி.. அதைத் தாண்டி சிறிய கூடம்.. பக்கத்தில் சிக்கனமாக ஒரு அறை. தீப்பெட்டி அளவு சமையலறை..

ஈஸ்வர கைங்கர்யம் முடிந்து வழக்கமாக சந்தோஷமாக வரும் கணவர் இன்று முகம் வாடி வந்திருப்பதை அவருடைய சகதர்மணி விசாலம் கவனிக்கத் தவறவில்லை.. ஏதோ பிரச்சனை என்று அவளுக்குப் புரிந்தது.  ஆனால் உடனே எதுவும் கேட்கவில்லை.  கணவர் தானாகச் சொல்லட்டும் என்று காத்திருந்-தாள்.

கூடத்துச் சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்த மஹாதேவன் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மெதுவாக விசாலத்தைப் பார்த்து..

“ஆச்சார்யர் நம்ம கிராமத்துக்கு வரப் போறார்” என்று மெதுவாகச் சொல்ல.. விசாலம் முகத்திலும் இப்போது கவலை தொற்றிக் கொண்டது.. அவளும் இடிந்து போய் தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள்..

வேத அப்யாசம் பிரமாதமாகத் தான் ஆரம்பித்தது.  ஆனால் மஹாதேவனின் இரண்டு மகன்களுக்குமே அதில் நாட்டம் ஏற்படவில்லை.. மஹாதேவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.. கெஞ்சிப் பார்த்தார்.. தன் தகப்பனாரிடம் ஆச்சார்யர் போட்ட உத்தரவை நினைவுப் படுத்திப் பார்த்தார்.. ஆனால் அவர்களுக்கு அதில் லயிப்பு ஏற்படவில்லை.. இளையவன் ராமலிங்கம் பள்ளிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தினான்.. மூத்தவன் சங்கரநாராயணன் சுமாராகப் படித்து வந்தான்..

மஹாதேவன் மனதில் கவலை பிறந்தது. தன் தகப்பனார் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத பாவியாகி விட்டோமே என்று குற்ற உணர்வு பிறந்தது.. அவர்கள் குடும்பத்திலிருந்து சிற்றம்பலேஸ்வரர் கைங்கர்யமும் தன் காலத்தோடு முடிந்து விடப் போகிறதே என்று மனம் பதபதைத்தது..

அதிலிருந்து மகன்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார் மஹாதேவன். தன் தகப்பனாரைப் போலவே அடிக்கடி போய் ஆச்சார்யரை தரிசித்து வந்தவர்.. தொடர்ந்து அவரை தரிசிக்க தைரியமில்லாமல் அங்கு போவதையும் நிறுத்திக் கொண்டார்.. இனி ஆச்சார்யரின் முன் நிற்க தனக்குத் தகுதி இல்லை என்று பரிபூர்ணமாக நம்பினார்.. ஆச்சு.. இப்படியே பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன.. நித்தமும் ஆச்சார்யரை மனதார நினைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்பதோடு சரி..

ஒரு கட்டத்துக்கு மேல் மஹாதேவனின் மகன்கள் சுதந்திரப் பறவையாக பறந்து விட்டனர். ராமலிங்கம் எங்கோ எப்படியோ மேலே படித்து கம்ப்யூட்டரில் நல்ல தேர்ச்சி பெற்று சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான். மூத்தவன் சங்கரநாராயணன் மும்பை மாதுங்கா பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்துகிறான்.. அவனுடைய மஹாதேவன் சௌத் இண்டியன் தாபாவுக்கு அந்தப் பகுதி வாசிகள் மத்தியில் ஏக மவுசு.. பிஸ்னஸும் பிரமாதமாக நடக்கிறது..

இது எல்லாமே மற்றவர்கள் சொல்லிக் கேள்வி தான்.. மஹாதேவனாக எதையும் தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை.. கேள்விப் பட்ட விவரங்களும் அவர் மனதில் எந்த வித சலனத்தையும் ஏற்படுத்த வில்லை.. பெற்றவர்களைப் பார்க்க எப்பவாவது மகன்கள் ஊருக்கு வந்தாலும் அவர் அவர்களைக் கண்டுக் கொள்ளவதில்லை..

வழக்கமாக தாயின் மனம் வாரிசுகளை நினைத்துப் பித்தாக அலையும் என்பார்கள்.. ஆனால் ஆச்சர்யமாக விசாலம் இந்த விஷயத்தில் கணவன் பக்கம் நின்றாள்.. மகன்கள் வந்தால் அவர்களுக்குத் தேவையானதெல்லாம் செய்தாள்.. ஆனால் அவர்களிடம் முகம் கொடுத்து ஒரு வார்த்தைக் கூடப் பேச மாட்டாள்..

அப்பாவும் அம்மாவும் பாராமுகமாக இருப்பது குறித்து மகன்கள் இரண்டு பேருக்கும் பெரிய குறை..

மறுநாள் மஹாதேவன் பக்கத்து ஊர் சுவாமிநாத குருக்களை ஆவுடையப்பன் போனிலிருந்து அழைத்தார்..

“ஆச்சார்யர் வரும்போது நீங்க தான் பூர்ண கும்பத்தோட வரவேற்கணும்”

சுவாமிநாத குருக்கள் ஆச்சர்யப் பட்டார்.

“ஏன் சுவாமி.. நீங்க இருக்கும் போது நான் எப்படி?”

”தயவு செய்து எதுவும் கேட்காதேங்கோ.. இந்த ஒத்தாசையை மட்டும் பண்ணுங்கோ”

அதோடு பேச்சை முடித்தார் மஹாதேவன்.

ஆச்சார்யர் பரிவாரங்களுடன் வந்து பூரண கும்பம் சுவீகரித்து கோவிலுக்குச் சென்றார்.

ஊரே கூடியிருந்தது.

எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்த மஹாதேவன்.. ஆச்சார்யர் வந்தவுடன் பின்னுக்குச் சென்று விசாலத்துடன் கூட்டத்துக்குப் பின்னால் ஆச்சார்யர் கண்ணில் படாமல் தூணின் மறைவில் நின்று நடப்பதை கவனித்து வந்தார்..

ஆச்சார்யர் ஸ்நானம் முடித்து வருவதற்குள் சிஷ்யர்கள் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தனர்.. அதில் ஒரு குட்டிப் பையன்.. சுமார் பத்து வயது இருக்கலாம்.. துரு துருவென்று அங்கும் இங்கும் ஓடி ஒத்தாசை செய்துக் கொண்டிருந்தான்.. ஆச்சார்யர் வந்து பூஜையை ஆரம்பித்தவுடன் வேத கோஷம் துவங்கியது.. அந்தக் குட்டிப் பையனும் கணீரென்று வேதம் உச்சரித்துக் கொண்டிருந்தான்..

அவனைப் பார்க்கும் போது மஹாதேவனுக்கு பொறாமையாக இருந்தது .. தன் மகன்களை இது போல் வளர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவர் மனதை ரொம்பவே வருத்தியது..

பூஜை முடிந்து ஆச்சார்யரின் அனுக்ரக பாஷணத்துடன் அன்றைய நிகழ்வுகள் நடந்து முடிந்தன..

எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.. ஆவுடையப்பன் முன் நின்று எல்லாம் கவனித்தார். எதற்கும் தன்னை முன்னிலைப் படுத்த வேண்டாம் என்று மஹாதேவன் அவரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். காரணம் மட்டும் சொல்லவில்லை..

மஹாதேவனும் விசாலமும் சாப்பிடாமல் வீடு திரும்பினர். மனதில் குற்ற உணர்வு விஸ்வரூபம் எடுக்கும்போது சாப்பாடு இறங்காது தான்.. துவண்டு போய் உட்கார்ந்திருந்தவர்கள் சற்றைக்கெல்லாம் அப்படியே தரையில் படுத்துக் கொண்டார்கள். ஆனால் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லை.. மனம் எங்கெங்கோ அலைபாய்ந்தது..  .

திடீரென்று வாசல் கதவு தட்டும் சத்தம்..

”யார் இந்த நேரத்தில்”

மனதில் இந்தக் கேள்வியுடன் எழுந்து போய் கதவைத் திறந்தார் மஹாதேவன். இடுப்பில் நாலு முழம் வேஷ்டியுடன்.. குடுமித் தலையுடன் மாலையில் பூஜையில் பார்த்த சிறுவன் நின்றிருந்தான்.

“வாங்கோ”

மஹாதேவனுக்கு எதுவும் புரியவில்லை. எங்கே அழைக்கிறான்?..

“வாங்கோ”

அவன் மறுபடியும் அழைத்தான்.

மஹாதேவனுக்கு ஏனோ எதுவும் கேட்கத் தோன்றவில்லை.. அவனைத் தொடர்ந்து சென்றார்.

கோவிலுக்குள் சென்ற சிறுவன் வலது கோடியில் இருந்த தூணுக்கு அருகில் போய் நின்றான். மஹாதேவனும் அவனைத் தொடர்ந்து சென்றார்..

தூணுக்குப் பின்னால்..

மஹாதேவன் சாஷ்டாங்கமாக விழுந்தார். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்..

“என்ன.. தரிசனம் கொடுக்க மாட்டியா?”

ஆச்சார்யரின் குரல் உரிமையோடு ஒலித்தது.

எழுந்து கூனிக் குறுகி நின்ற மஹாதேவனுக்கு வார்த்தை வரவில்லை. அழுகை தான் வந்தது.

“பதினஞ்சு வருஷம் நாலு மாசம் இருபத்தி அஞ்சு நாளாச்சு.. நீ என்னை வந்து பார்த்து.. அதனால தான் நானே வந்துட்டேன்”

மஹாதேவனால் எதுவும் பேச முடியவில்லை..

“என்ன.. என்னைப் பிடிக்கலையா? இல்லை.. நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா?”

இதைக் கேட்டவுடன் “ஐயோ.. அபசாரம்.. அபசாரம்” என்று மறுபடியும் சாஷ்டாங்கமாக விழுந்தார் மஹாதேவன்..

“நான் தான் தப்புப் பண்ணிட்டேன்.. கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாத..  பாவியா.. உங்களை தரிசிக்கக் கூடத் தகுதி இல்லாதவனா நிக்கறேன்.. என்னை மன்னிச்சுருங்கோ.. இந்தப் பாவியை மன்னிச்சிருங்கோ.. நான்..”

மேலே பேச முடியாமல் குரல் கம்மியது ..

பின் சுதாரித்துக் கொண்டு தன் மகன்களைப் பற்றி சொல்லி முடித்தார்.

இதைக் கேட்டதும் அந்தப் பரம்பொருள் தலையாட்டியபடி புன்னகைத்தார்.

“இதுக்கா இந்த வனவாசம்? நான் என் விருப்பத்தைச் சொன்னேன்.. நடக்கறது அந்தப் பரம்பொருள் சித்தம்.. விதிச்சிருக்கறதுக்கு மாறா நாம போகவும் முடியாது.. அதுக்கு நமக்கு அதிகாரமும் கிடையாது..”

என்று மஹாதேவனை அழைத்து வந்த அந்தச் சிறுவனை சுட்டிக் காட்டினார்.

“இவன் யாரு தெரியுமா? நம்ம மடத்துல காவலுக்கு இருக்கிற மாரிமுத்-துவோட புள்ளை.. தவழற வயசுலேர்ந்தே வேதங்கள் மேல இவனுக்கு ஒரு ஈர்ப்பு.. அதனால தான் இவனை வேத பாட சாலைல அனுமதிச்சேன்.. ஆர்வமாக் கத்துண்டு இப்ப மஹா வித்வான்களுக்குப் போட்டியா வேதம் சொல்றான்.. இது இவனுக்கு விதிச்சிருக்கிறது.. அது என் மூலமா இல்லைன்னாலும் வேற யாரு மூலமாவாவது ஆண்டவன் நடத்தி வெச்சிருப்பார்.. அதே மாதிரி உன் புள்ளைகளுக்கு விதிச்சிருக்கிறது வேற.. அதை நினைச்சு நீ வருத்தப் பட வேண்டிய அவசியமே இல்லை”

மஹாதேவன் எதுவும் பேசாமல் அந்த ஞானகுருவையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எதையுமே திணிக்கக் கூடாது.. திணிச்சா அது சோபிக்காது.. அது மதமாகட்டும், கல்வியாகட்டும், கல்யாணமாகட்டும்.. அவா அவா விருப்பப் படி விட்டுரணும்.. ஏன்னா.. அது தான் இந்த ஜென்மாவுல அவாளுக்கு எழுதப் பட்டக் கணக்கு.. உன் புள்ளைகள் வேற வேற உத்யோகத்துல இருந்தாலும்.. பொய் சொல்லாம, அதர்மம் பண்ணாம நியாயமான முறைல நடந்துக்கறா.. அதுவும் பெரியவன் அன்னதாத்தா.. வேற என்ன வேணும் உனக்கு? நடக்கறதெல்லாம் நீ தினம் ஆராதனை பண்ணற இந்த சிற்றம்பலேஸ்வரர் சித்தம்னு பரி பூர்ணமா நம்பியிருந்தா.. உன் மனசுல இந்த சஞ்சலமே வந்திருக்காது”

இதைக் கேட்டதும் மஹாதேவன் வாயடைத்துப் போனார்.

“நீ தான் என்னை இத்தனை வருஷமாப் பார்க்க வரலை.. ஆனா உன் புள்ளைகள் ரெண்டு பேரும் வருஷா வருஷம் என்னைப் பார்க்க வந்துடறா தெரியுமா?”

இதைக் கேட்டதும் மஹாதேவன் அதிர்ந்து போனார்.

“மந்திரம் உச்சரிக்கறது மட்டும் பக்தி இல்லை.. மனசு ஐக்கியமாயிரணும்.. எல்லாமே நீ தான்.. நடக்கறது உன் சித்தம்.. அப்படிங்கற சரணாகதி தத்துவம் மனசுல வரணும்.. அது உன் புள்ளைகள் கிட்ட இருக்கு.. நான் சொன்ன மாதிரி உன் மூத்த புள்ளை லாபமும் சம்பாதிக்கறான்.. ஏழைகளுக்கு அன்ன தானமும் பண்ணறான்.. சின்னவனும் நான் சொன்னேன்னு நிறைய தர்மங்கள் பண்ணறான்.. இதுவும் அந்தப் பரம்பொருளுக்குப் பண்ணற ஆராதனை மாதிரித்  தான்.. அதனால இனிமேலாவது உன் புள்ளைகளை ஒதுக்காம.. அவாளை அரவணைச்சு ஏத்துக்கோ.. என்ன செய்வியா?”

”உத்தரவு.. உத்தரவு..”

என்று மறுபடியும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் மஹாதேவன்.. மனதிலிருந்து இமயமலை இறங்கியது போன்ற உணர்வு.

மறுநாள் தெளிவான முகத்துடன் தானே முன் நின்று எல்லா வேலைகளையும் கவனித்த மஹாதேவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார் ஆவுடையப்பன்.

 

 

தொலைதூரக் காட்சிகள் -மூலம்  – காக்கநாடன் – தமிழில்   தி.இரா.மீனா 

கேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்: சமூக வலைதளத்தில் அவதூறு  பரப்பினால் 5 ஆண்டு சிறை | Dinakaran

 

கடற்கரையிலுள்ள அந்த மிகப் பெரிய கட்டிடத்தில்,கடலை பார்த்தபடியிருக்கிற சிறிய தடுப்பு  அறையில் அவன் ஒரு கைதியாக இருந்தான். எப்பொழுதிலிருந்து, என்று அவனுக்குத்  தெரியாது . மிக நீண்ட காலமாக இருக்க வேண்டும். அவனிடம் காலண்டரோ அல்லது பஞ்சாங்கமோ இல்லை. சுவர் கடிகாரமோ அல்லது ஒரு கைக்கடிகாரமோ இல்லை.  அவன் அதற்காக சிறிது கூட வருத்தப்படவில்லை.அவனைப் பொறுத்த வரை, காலம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது.

என்ன இலக்கில்,  எவ்வளவு காலம் போனது என்பதுகுறித்தெல்லாம் அவன் ஒரு சிறிதும்  கவலைப்படவில்லை.

இது வெறும் சிறை மட்டுமில்லை,மிகப் பெரிய கோட்டை என்று அவன் நினைத்தான். கடற்கரையின் பலமான பாறைகள் மீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள கட்டிடத்த வெளிப்புறச் சுவர்கள் மிகவு உறுதியானவை. கடலையொட்டியிருந்த   ஜன்னல்களின் கம்பிகளை ஒரு யானையால் கூட அசைக்க முடியாது. சுவர்கள் அரை அடிக்கும் மேலான கனமுடையவை.

அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த மிகச் சிறிய அறையில் ஒருவர் கூட  தாராளமாக புழங்க முடியாது. ஆனால் அவனுக்கு மகிழ்ச்சியும், வசதியும் தருவதான அந்த அறை சிறையிலேயே மிகச் சிறந்தது. அறையின் விசேஷ  அம்சம் கடலைக் காட்சிப்படுத்துகிற அந்த ஜன்னல். அதன் வழியே பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்தான் தெரியும். தொடுவானம் வரை கடல். இருபத்தி நான்கு மணி நேரமும் அருமையான கடற்காற்று. காற்று மிகக்  கடுமையாகும் போதுதான், ஜன்னல் மூடப்படும். தனிமையின் எல்லையிலிருக்கிற ஒரு கைதிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம்.

சிறைக்கு வந்த சில நாட்களில் உயரதிகாரிகளுடன்  அவன் ஏற்படுத்திக் கொண்ட நல்லுறவு, அவனுக்குப் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்தது. படிப்பதற்கு அவனுக்குப் புத்தகங்கள் தந்தனர். எழுதுவதற்கு தாள்களும் கூட.

சிறுநீர் , மலம் கழிக்க ஒரு வாளியும் தரப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்துவது அவனுக்கு வெகுகாலம் வரை கடினமாகவேயிருந்தது. ஆனால் அவன் அதிகாரிகளுக்கு நெருக்கமாகி விட்ட பிறகு,  வெளியே  போவதற்கு நான்கைந்து  முறையாவது கதவைத் திறந்தார்கள்.அந்த  வாளி அங்கேயிருந்த போதும், அவன் அதைப் பயன்படுத்த வேண்டிய  அவசியமில்லை.

ராத்திரிகளை அவன் ஜன்னல் வழியாகவே சமாளிப்பான். பகல் நேரங்களில் கடலும்,சூரியனும்  தன்னைப் பார்ப்பதாக அவன் பயப்படுவான். கொலைகாரக் குற்றவாளிக்கு எங்கே இவ்வளவு வசதிகள் கிடைக்கும்!

அதிகாரிகள் காட்டிய இரக்கத்தால் அவன் அறைக்குள்ளேயே ஒரு கித்தான் நாற்காலியை உபயோகித்துக் கொள்ள முடிந்தது. சொகுசாக அந்த  நாற்காலியில் சாய்ந்து கொண்டு புத்தகங்களையும் , பத்திரிக்கைகளையும் அவனால் படிக்க முடியும், எதையாவது கிறுக்க முடியும். கடலை கூர்ந்து கவனிப்பது ,கடல்  மற்றும் வாழ்க்கையின் முடிவற்ற தன்மையை சிந்தித்துப் பார்ப்பது.. ஆயிரக் கணக்கான கனவுகளைப் பின்னுவது . எதிர்காலத்தைத் திட்டமிடுவது என அவன் பொழுதுகள் கழியும்.

உண்மையாகவே ஒரு சாவகாசமான தங்குமிடம். வெளிப்புற நிகழ்ச்சிகள் தினமும் இருந்தாலும், வெட்டவெளியில் நேரம் கழிக்கும் வாய்ப்புகள் என்பதேயில்லை. மண்ணைத் தோண்டுவது, செடிகளுக்குத்  தண்ணீர் விடுவது, விறகுடைப்பது உள்ளிட்டவை அவனுக்கு மிகவும் பிடித்த வேலைகள். அவை உடல் பயிற்சியாகவும் இருப்பவை .சுருக்கமாகச் சொன்னால்,எல்லாம் அற்புதம்! [ பூரணம்! ] வெளியாட்களுக்குத்தான் சிரமங்கள்.அவர்கள் பகலைக் கண்டு பயப்பட வேண்டும். பலரிடமிருந்து ஒளிய வேண்டும். எதைப் பற்றி யோசிக்க வேண்டுமென்றாலும் இரவில் ஒதுக்குப்புறமான  பகுதியில் முகாமிட வேண்டும்.அவர்களோடு ஒப்பிடும் போது தன் நிலை மேலாகவே அவனுக்குத் தெரிந்தது.

ஒரே பிரச்னை ஜன்னலின் வழியாகத்தான் அவன் தொலைவிலுள்ள கண்ணுக்குப் புலப்படும் காட்சிகளைப் பார்த்து திருப்தி அடைய வேண்டும். விரும்பியபடி அவனால் வெளியே சுற்ற முடியாது. ஆனால் எப்போதும் வெளிப்புற காட்சிகள்  அற்புதமானவை.

மீனவர்களின் படகுகள்..கடலுக்கு மேல் குவியலாக வட்டமிடும் கடற் பறவைகள், அலைகளுக்கு அருகே குதித்து மேலே  வரும் மீனைக் கவ்விக் கொண்டு போவது ; தொலைவில் அபூர்வமாகக் கப்பல்கள் கடப்பது. கடற்கரையின் அந்தப் பகுதி  சிறிது வளைவாக இருப்பதால், ஜன்னலின் ஒரு பக்கமாக அவன் நகர்ந்தால் கடற்கரையையும் ,மீனவர்களின் படகுகளையும், மீன் விற்பனையையும் அவனால் பார்க்க முடியும்.   அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவனால் கேட்க முடியாது, ஆனால் அவர்களின்  அருகாமையை அந்த நேரத்தில் அவனால்  உணரமுடியும். அவர்களின் இடையே இருப்பது போல அவன் உணர்ந்தான்.பொது மக்களோடு  இன்னமும் தொடர்பிழந்து விடாத தன் நிலைக்காக மகிழ்ந்தான்.

வெளிப்புறக் காட்சிகள் மட்டுமில்லை, அவன் ஆழமாக தன்னைப் பார்த்துக் கொண்டபோது, அவன் உள்மனமும் அவனுக்குத் தொலைவாகத் தெரிந்தது. அடிப்படை ஞாபகங்களும் வெகு தொலைவில்

இருந்தன. கருத்துக்கள் தொலைவாகவும்,  மந்தமாகவுமிருந்தன.  எனினும், அவன் எல்லாவற்றையும்  தினமும்  பார்த்துக்  கொண்டிருந்தான்.  கடந்து போன நாளின் உண்மைகளைத்தானே அவன் பார்த்தான் ? அல்லது மாயையான கருத்துப் படிவமா?

அவனுக்குத் தெரியவில்லை. துக்கமும் ,தீயதுமான அந்த அறியாமையை நினைத்த போது அவனுக்குள் சுய இரக்கம் எழுந்தது. அந்த இரக்கம் துக்கமாக வளர்ந்து விட்டது.

அவனுடைய ஞாபகங்களின் தொலைதூரக் காட்சிகளில் ஒன்றாக இருப்பது சரசு என்றழைக்கப்படும் சரஸ்வதியின் முகம்.

வெளுத்த , இரத்த சோகையான கண்கள். பருவத்தில் பூரித்திருக்க வேண்டிய கன்னங்கள் பூரிக்கவில்லை. உதடுகள் எப்போதும் வரண்டிருக்கும். மெலிந்த உடல். ஆனால் ஒரு புனிதமான அழகு,

அது எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டது. சரசு என்றால்  காதலின் சுருக்கம் மற்றும் சரணடையும் அன்பு. சோகமாக இருக்கும் போது அவள் கண்கள் தளும்பியிருக்கும். சந்தோஷமாக இருக்கும் போதும், காதல் வயப்படும் போதும் அவள் கண்கள் தளும்பியிருக்கும். சிரிக்கும் போது அவள் கண்கள் ஈரமாக இருக்கும்.

தன்னுடைய பழைய ஞாபக நிலவறைக்குள், அவனுடைய ஞாபகத்தின் சொர்க்கத்திற்குள் ,அவன் அப்பாவியான சரசுவின் இருப்பை உணர்ந்தான்.

“நீ எங்கே போனாலும், நான்  உன்னுடனிருப்பேன்”. அவளுடைய  வார்த்தைகள் இன்னமும் புதுமலர்ச்சியாக இருந்தன.அவளுடைய  இருத்தலை இங்கும் உணரமுடியும். கடலருகேயுள்ள சிறையிலும் கூட.

அவன் மேற்கே பார்த்தான்.அங்கே ,இரண்டு கப்பல்களுக்கு  அப்பால் , பலவீனமடைந்த சூரியன் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான். சிவந்த அந்திப் பொழுதின் மேகச்  சித்திரப் படத்தில் அவன் சரசுவின் வெளுத்த  முகத்தைப் பார்த்தான்.

“என்னுடன் வாழ வேண்டும் என்று கனவு காணாதே சரசு,” வெகு காலத்திற்கு முன்பே அவன் சொல்லியிருக்கிறான்.“ எனக்கான வாழ்க்கை என்பது சாத்தியமில்லாதது. என் வாழ்க்கைப் போக்கு பற்றி உனக்குத் தெரியும். ஒரு கவிஞன் சொன்ன மாதிரி ’எரியும் நெருப்பிற்கு மேலே, எழுபதாயிரம் அடிக்கு மேலே, ஒரு தலைமுடி போலிருக்கும் கயிற்றுப் பாலத்தில் நடந்து பயணிக்கும் ஒரு பயணி நான்.’ என்னுடன் வருவதல்ல உன் விதி.”

“ஆனால், அது என் விதி ”, என்றாள் அவள்.

“சரசு !” அவன் உணர்ச்சி வசப்பட்டான்.அவள் சிரித்தாள்.

வழக்கம் போல் அவள் விழிகள் ஈரமாயின.

“நீ உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமேயில்லை.”

அழுகை அவள் குரலில் சிரிப்புடன் சேர்ந்து கொண்டது. “நான் என் விதி  இப்படியிருக்கிறதே எனக் குறைபட்டுக் கொள்ளவில்லை.

மாறாக  நான் மிகத் திருப்தியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த விதிதான் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், சம்பந்தத்தையும் தந்திருக்கிறது.”

“சரசு !” அவன் தோல்வியின் சறுக்கலிலிருந்தான். அதிரும் அலைகளுக்கேற்றதான லயத்தோடு அது மேலும் ,கீழுமாக மிதப்பதை அவனால் உணரமுடிந்தது.

தொலைவில்,மிகத்  தொலைவில், கடலுக்கு, தொடுவானத்திற்கு அப்பால், மெழுவர்த்திகளின் ஒளி, பனைக் கூரை, மண் சுவரைக் கொண்ட சிறிய அறை. சிறை அறையை விட அது கொஞ்சம் பெரியது. வெளியே இருட்டில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது.  காட்டு மரங்களுக்கிடையே காற்றின் முழக்கம்  கேட்டது. எந்தச் சந்திர ஒளிக்கு முன்னாலும், காட்டு இரவு கருமைதான்.காற்றின் விரல்கள் மெழுகுவர்த்தி ஜூவாலையைப் பிளந்து ,ஊடுருவி அசைத்தன.  சில சமயங்களில் அதை அணைக்கவும் செய்தன.

எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளைச் சுற்றி, சில இளைஞர்கள் புல் விரிப்பில் உட்கார்ந்து அல்லது அரையாகச் சாய்ந்திருந்தனர். அந்த மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் அவர்களின் கண்களிலும், இதயங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. அவர்களின் உணவு பீடியும்,தண்ணீரும்தான். பிரெட்டை அவர்கள் முன்பே சாப்பிட்டு முடித்து விட்டனர். அவை செரித்தும் போயிருந்தன. பசி மீண்டும் வயிற்றை எரிக்கத் தொடங்கியது.இன்னமும் இரத்தம் நரம்புகளில் கொதித்துக் கொண்டிருந்தது. உற்சாகம் உள்ளுக்குள் பொங்கியது.

“இனிமேலும் அதைத் தள்ளிப் போடக்கூடாதென்று நான் நினைக்கிறேன்.”

“உண்மைதான். நமக்கு வேண்டிய பெரும்பான்மை விவரங்கள் கிடைத்து விட்டன. நமது செயல் நிகழ்வின் வரைபடமும் பெரும்பாலும் தெளிவாகிவிட்டது. நமக்கு இன்னும் ஒரு  சில விவரங்கள் மட்டும் தேவைப்படுகின்றன. சரிதானே?  அதற்கு ஒரு வாரம் போதாதா ?”

“நிச்சயமாகப் போதும்.ஆனால் இந்த ஒரு வாரத்தில் நாம் எல்லோரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.உடல் முழுவதும் கண்களும், காதுகளும், மூக்குகளும் இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். ஒரு சின்னச்  சத்தமோ அல்லது மணமோ நம்மிடமிருந்து  தப்பி விடக்கூடாது.”

“அவ்வாறெனில் நாம் அடுத்த வாரம் மீண்டும் சந்திக்க வேண்டும்.”

“ஆமாம். சரியாக இன்றிலிருந்து ஒரு வாரத்தில், அடுத்த வியாழக் கிழமை நாம் சந்திக்க வேண்டும்.’

“அப்போது நாம் இறுதி முடிவும் எடுத்து விடலாம்.”

“அதைப் பற்றிய சந்தேகம் ஏன்? நாம் இறுதி முடிவை எடுத்து விட்டோம் .நம்முடைய திட்டங்களை அமல்படுத்துவது குறித்த இறுதி முடிவு செய்யத்தான் நாம் கூடுகிறோம்.”

“எங்கே ?”

“இங்கேதான். இதுவரை இந்த மறைவிடத்தைக் யாரும் கண்டுபிடிக்கவில்லை.”

“இப்போது நாம் கலைவோம். எனில் விடிவதற்கு முன்னால். அவரவர்களின் வசதிக்கேற்ப ஒவ்வொருவரும் புறப்படுங்கள். ஒவ்வொருவரும்  தனித்தனியாகத்தான் போக வேண்டும்.  வழியில் சந்தித்தால் கூட ஒருவரையொருவர் பார்த்துச்  சிரிக்கவோ அல்லது பேசவோ வேண்டாம்.எல்லா உரையாடல்களும், புன்னகைகளும் அடுத்த வாரம்தான்.”

நாங்கள் கலைந்தோம்.

அடுத்த வியாழக் கிழமையன்று நடந்த கூட்டத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை ,அவன் அதை நினைத்துப் பார்த்தான்.இதற்கிடையே அவன் பாதை மாறிப் போனது . ஒரு விபத்து அவனைத் திசை திருப்பி விட்டது.

அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.இன்னொரு அந்தி கடலுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு  அந்தியும் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமானதுதான்.அஸ்தமிக்கும் சூரியன் வானத்தில் தீட்டுகிற அந்தியொளியின் ஒவ்வொரு படமும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதுதான்.

அந்த வெள்ளியன்று மதியம், மிகக் களைப்பாக காட்டிலிருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு கேள்விப்பட்ட அந்தச் சம்பவம் மிக அதிர்ச்சி தருவதாக இருந்தது. அந்த கிராமத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அதிகாரம் நிறைந்தவனாக இருந்த  செல்லப்பன் பிள்ளை அரிசனப் பெண்ணான தாராவின்  வீட்டிற்குள் புகுந்து அவளைக் கற்பழித்து விட்டான். அந்தப் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற போது யாரோ அவளைக் காப்பாற்றி விட்டனர். தாரா தலைவரான ராமனின் மகள். அவன் பலமுறை அவளைப் பார்த்திருக்கிறான். பதினைந்து வயதான அப்பாவிப் பெண், சிறிது கருப்பு, அழகில்லை, ஆனால், பருவ வயதிற்கான கவர்ச்சி ! அவனுடைய அம்மாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும்.பல விஷயங்களில் தாரா அவன் அம்மாவிற்கு உதவி செய்திருக்கிறாள்.

கற்பழிப்பை விட கொடுமையானதாக வேறெதுவாவது இருக்க வேண்டுமென அவன் நினைத்தான். புகார் கொடுக்கப் போன ராமனையும், நண்பர்களையும் செல்லப்பன் பிள்ளையும் ,ரவுடிகளும் அடித்து நொறுக்கி விட்டனர்.

“இந்தப் பகுதியில்,  வட்ட பரம்பில் செல்லப்ப பிள்ளையை கேள்வி கேட்க யாருக்கு தைரியமிருக்கிறது?”என்று செல்லப்ப பிள்ளை கர்வத்துடன்  மார் தட்டிக் கொண்டு அலைவதாக அவன் கேள்விப்பட்டான்.

“அராஜகம் செய்பவர்களைக் கேள்வி கேட்க இந்தப் பகுதியில் சிலர் இருக்கிறார்கள்,” என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அன்று மாலை அவன் கிராமச் சந்தைக்கு மிகுந்த கவனத்தோடு போனான். கோயிலருகேயுள்ள ஒரு பெரிய பாறையில் உட்கார்ந்து கொண்டு செல்லப்பபிள்ளை  தன் குத்துவாளைத் தீட்டிக் கொண்டிருந்தான்.

இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் உடனிருந்தனர்.

“உங்கள் புரட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?” அவன் அருகே போன போது செல்லப்ப பிள்ளை கேட்டான்.

அதற்கு பதில் சொல்லாமல், அவன் தீவிரமாக அந்த விஷயத்தை ஆரம்பித்தான்.

“நீ யார் அதைக் கேட்பதற்கு? அந்த தாழ்ந்த சாதிப் பெண்ணிற்கு தாலி கட்டிய புருஷனா?” செல்லப்பிள்ளை உறுமினான்.அருகிலிருந்த கூட்டாளிகள் ஆரவாரமாகச் சிரித்தனர்.

“அட! கேட்பது யார் பாருங்கடா !”

அவன் பதில் வார்த்தைகளாக இருக்கவில்லை.

ஒரு மூர்க்கமான சண்டை நடந்தது. செல்லப்பன் பிள்ளை, மற்றும் கூட்டாளிகளைத் தனியாகத் தாக்கினான். கடைசியாகத் தன் உயிருக்கு  ஆபத்து என்று தெரிந்ததும், செல்லப்பன் பிள்ளையின் குத்துவாளைப் பிடுங்கி ஆழமாகக் குத்திவிட்டான். ரத்தம் ஆலமரத்தின் உச்சிக்குப் பீச்சியடித்தது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.

அஸ்தமிக்கும் சூரியன் மேற்கு வானத்தில் ரத்தத்தைக் சிதறச் செய்து கொண்டிருந்தான். அவன் தன் முகத்தை தேய்த்துக் கொண்டான். தாடி வளர்ந்து  விட்டது. பரவாயில்லை. நாளை, சிறைக்கு முடி  திருத்துபவன் வருகிற நாள். .

 

 

நன்றி : Dakshina  A literary Digest of South Indian Languages 1986—1988

Sahithya  Academy

 

 

நவீன மலையாளத்திற்கு அடிக்கல் நாட்டியவர் என்று விமர்சகர்களால்

கருத்தப்படும் ஜார்ஜ் வர்க்கீஸ் காக்கநாடன் சிறந்த சிறுகதை

மற்றும் நாவலாசிரியர். ஏழாம் முத்திரை, கோழி, துலா வருஷம்

உள்ளிட்ட  நாவல்களும் பதினேழு ,கண்ணாடி வீடு ,மழையுடே

ஜூவாலைகள் உள்ளிட்ட சிறுகதைகளும் இவர் படைப்பில் சிலவாகும்.

விஸ்வபீடம்,  மலையாள  நாடு, சாகித்ய அகாதெமி,  கேரள

எழுத்தாளர் சங்க விருது உள்ளிட்ட பலவிருதுகள் பெற்றவர்.

 

 

 

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்

                    

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021

 

  1. பாட்டி – கதை சொல்லு !

 

பாட்டி, எனக்கொரு கதை சொல்லு !

தூக்கம் வரலை – கதை சொல்லு !

சமத்தாய் இருக்கேன் கதை சொல்லு !

புதுசு புதுசா நீ கதை சொல்லு !

 

ராமர் சீதை கதை சொல்லு !

அல்லா இயேசு கதை சொல்லு !

புத்தரைப் பற்றியும் நீ சொல்லு !

மகாவீரர் என்பவர் யார் சொல்லு !

 

மகாபாரதக் கதையெல்லாம்

மறக்காமல் எனக்கு நீ சொல்லு !

கிருஷ்ணனின் லீலைகள் நீ சொல்லு !

வெண்ணை திருடிய கதை சொல்லு !

 

தெனாலிராமன் கதை சொல்லு !

அக்பர் பீர்பால் கதை சொல்லு !

குரங்கு யானை எல்லாம் பேசும்

பஞ்சதந்திரக் கதை சொல்லு !

 

உன்னைப் பற்றியும் கதை சொல்லு !

அப்பா அம்மா கதை சொல்லு !

அண்ணன் தம்பி கதை சொல்லு !

அடிக்கடி எனக்கு கதை சொல்லு !

 

ஏதாவது நீயும் கதை சொல்லு !

இட்டுக் கட்டி கதை சொல்லு !

பாட்டி உன்னைக் கட்டிக்கறேன் –

விடாமல் எனக்கு கதை சொல்லு !

 

             

26. வீட்டுக்கு வா !

எனக்குப் பிடித்தது இட்டிலி !

தொட்டுக்க வேண்டும் சட்டினி !

சொய் சொய் என்று சத்தம் போடும்

தோசை என்றால் ஆசையே !

 

புஸ் புஸ் என்று உப்பிய பூரி –

புகுந்தே நானும் புறப்படுவேன் !

டால் சப்பாத்தி குருமா என்றால்

ஜாலி, நானும் சாப்பிடுவேன் !

 

வடையின் ஓட்டையில் விரலை விட்டு

வட்டமடித்து சாப்பிடுவேன் !

அடை என்றாலும் எனக்குப் பிடிக்கும் –

அரக்கப் பரக்கத் தின்பேன் நான் !

 

முறுக்கு தட்டை சீடை என்றால்

கடக்கு முடக்கென்று கடித்திடுவேன் !

காராசேவு கடலை மிட்டாய் –

எல்லாம் பிடிக்கும் சாப்பிடுவேன் !

 

எங்கள் வீட்டுத் தின்பண்டங்கள் –

உனக்கும் தருவேன் வருவாயா ?

அம்மா உனக்கும் எல்லாம் தருவாள் –

வா வா ! வீட்டுக்கு வா வா வா !

 

            

தலைப்பில்லாத புடவை – சாரி (sorry)…கவிதை -தீபா மகேஷ்

Young attractive couple on date in coffee shop. Woman kissing her men on the cheek with affection Stock Photo - Alamy

அருகாமையின் வாசம்

ஆளை மயக்கும்

பார்வையால் பருகிட

பாதி உயிர் போகும் 

கைகள் தீண்டிட

மின்சாரம் பாயும் 

உதடுகள் உரசிட

உயிர் கரைந்து போகும்

உணர்விலே கலந்து

உலகம் மறக்கச் செய்யும்

இதழ்கள் பிரிந்திட

ஏக்கம் தாக்கும்

அடுத்த முறைக்காக

ஆவலோடு காத்திருக்க வைக்கும்

காதலியின் முத்தம்…………

Downward Steps Stock Illustrations – 61 Downward Steps Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

(கவிதையின் தொடர்ச்சி) … 

                                                முத்தம் 

                                                      போலத்தான் 

                                                        இந்த காபியும்… 

 

காபி, பெரும்பாலான தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்று. நம்மில் பலருக்கு காபியின் நறுமணத்தோடுதான் காலைப் பொழுதுகள் விடியும். அதன் சுவைக்கு அடிமையாகி அதன் மணத்தில் என்னைத் தொலைத்த ஒரு தருணத்தில்  தோன்றிய கவிதைதான் இது.

பின் குறிப்பு : காபி என்று தலைப்பிட்டால் இதில் உள்ள சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் இது தலைப்பில்லாத ஒரு கவிதை. 🙂

அசோகமித்திரனின்  தண்ணீர் –  அழகியசிங்கர் 

தண்ணீர் - அசோகமித்திரன் - அசோகமித்திரன் - நற்றிணை | panuval.com          

இன்று நான் எடுத்துக்கொண்டு எழுதப்போகிற எழுத்தாளரைப் பற்றி பலர் பேசி விட்டார்கள்.  இதில் நான் என்ன புதுமையாகச் சொல்ல முடியுமென்று தோன்றவில்லை.  ஆனால் என்னிடம் தெளிவாக ஒரு விஷயம் தோன்றிவிட்டது.  நான் படிக்கிற புத்தகத்தைப் பற்றி தாவது எழுதுவது என்பது.  

            சில புத்தகங்களை நான் முழுவதுமாகப் படிக்க முடியவில்லை.  சில புத்தகங்களை தம் பிடித்துப் படித்து விடுகிறேன்.  நான் அப்படிப் படித்த புத்தகம்தான் நகுலனின் ‘இவர்கள்.’  அதேபோல் இன்னொரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  நினைத்தபடியே படித்து முடித்து விட்டேன்.  

            அவ்வளவு எளிதாக என்னால் படித்து முடிக்கமுடியாத புத்தகங்கள் அதிகமாக உள்ளன.  எல்லாம் ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்.  எல்லாம் நாவல்கள்.  முழுவதும் படித்து முடித்தால்தான் எதையாவது அந்த நாவல்  பற்றிச் சொல்ல முடியும்.

            தினமும் எதாவது ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு எதையாவது எழுத வேண்டுமென்ற கெட்ட வழக்கத்தை வைத்திருக்கிறேன். முதலில் 50 நாட்களுக்குத்தான் இது.  இது எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும்.  அதன் பின் தொடர முடியுமா தொடர முடியாதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

            நான் இன்று எடுத்துக்கொண்டு படித்த நாவல் அசோகமித்திரனின் தண்ணீர்.   நற்றிணை வெளியிட்டுள்ள இந்த நாவலில் ந முத்துசாமி ‘தண்ணீர்’ என்ற நாவலைப் பற்றி எழுதியுள்ள நீண்ட கட்டுரை உள்ளது.  அதில் ந முத்துசாமி ‘தண்ணீர்’ என்ற நாவல் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் குறியீட்டு நாவல் என்று குறிப்பிடுகிறார்.  ஏன் அப்படி சொல்கிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  

            வண்ணநிலவன் பின் அட்டையில் இப்படிக் கூறுகிறார் : அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற அமர சிருஷ்டிகள் என்பேன்.என்கிறார்.

            அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலம் அவர் சூட்சுமமான எழுத்தாளர் என்பதை அறிந்து கொள்ளலாம்.  சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும், நாவல்கள் ஆகட்டும், குரலே உயர்த்தாமல் ஒருவித அழுத்தத்தை வாசிப்பவரிடம் உருவாக்கி விடுவார்.  அவருடைய எழுத்துக்களை வாசிப்பவர்களைத்  திரும்பத் திரும்ப அவருடைய எழுத்துக்களைப் பற்றியே யோசிக்க வைத்து விடுவார்.

            யமுனா, சாயா என்ற இரண்டு பெண்மணிகள். இருவரும் சகோதரிகள். யமுனா வயதில் மூத்தவள்.  சாயா படித்தவள். திருமணம் ஆனவள்.    மிலிட்டரியில் அவள் கணவன் பணிபுரிகிறான்.  எப்போது சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வரப்போகிறான் என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறாள் சாயா.  முரளி என்ற ஆண்குழந்தை.  ஆனால் அவளுடன் வளரவில்லை.  சென்னையில் ஒரு ஒண்டு  குடித்தனத்தில்  வசிக்கிறார்கள்.  எவ்வளவு இடர்பாடுகள் இருக்குமோ அவ்வளவு இடர்பாடுகளுடன்.   அவர்கள் குடியிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீர்தான். 

            பாஸ்கர் ராவ் என்ற கயவன் யமுனாவிற்கு சினிமா ஆசையைக் காட்டி தன் இச்சைக்கு அவளைப் பயன்படுத்துகிறான்.  அவன் ஒருமுறை முனாவை அழைத்துக்கொண்டு போக வருகிறான்.  சாயாவிற்கு  அவனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை.  யமுனாவின் பலவீனத்தைப் பார்த்து அவளுடன் சேர்ந்து இருக்க வேண்டாமென்று தனியாகப் போய்விடுகிறாள்.

            யமுனா பாஸ்கர் ராவின் பலவீனத்திற்கு உடன்படுகிறாள்.  அங்கே ஒரு காட்சியை  அசோகமித்திரன் விவரிக்கிறார் : தினமும் அவனால் இழுத்துப் போகப்பட்டு யார் யாரோ பெயர் ஊர் பாஷை தெரியாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து குடித்துவிட்டு இரவெல்லாம் இருட்டிலும் விளக்கு வெளிச்சத்திலும் கிக்கிக்கி என்று வாய்விட்டு இளித்துச் சிரித்துக்கொண்டே காலம் கழிக்க வேண்டுமா? அவர்கள் சாராயத்தைத் தரும்போது அந்த தம்ளரைப் பிடுங்கிச் சாராயத்தை அவர்கள் மீதே ஏன் கொட்டி விட முடியவில்லை.

            பாஸ்கர் ராவ் படம் எடுப்பதற்குப் பணம் போடுபவர்களை வரவழைக்கிறான்.  இரண்டு இரண்டு பேர்களாக வருவார்கள்.  அவர்கள் முன் யமுனா படும்பாட்டை இப்படிச் சொல்கிறார் :

      இரு நெல்லூர் தடியர்கள் யமுனாவைத் துணியை அவிழ்த்து அந்த ஓட்டல்  அறையில் ஓட வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.  இந்தக் காட்சியைக் கற்பனை செய்ய முடியவில்லை.  சாயா யமுனாவை  விட்டுப் போய்விடுகிறாள்.  ஹாஸ்டலுக்குஇந்த சம்பவத்திற்குப் பிறகு யமுனா தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்.  ஆனால் அந்தத் தருணத்தில் வீட்டுக்காரி பார்த்துவிடுவாள்.  கத்து கத்தென்று கத்துவாள்.  வீட்டைவிட்டு காலி பண்ணச்சொல்லி ரகளை பண்ணுகிறாள். 

            யமுனாவை ஆறுதல் படுத்த இரண்டு மூன்று வீடுகள் முன்னால் டீச்சர் ஒருவர் வசிக்கிறார்.  அவருடைய கதையை அசோகமித்திரன் விவரிக்கிறார்.  அது இன்னுமொரு சோகக் கதை.  டீச்சர் யமுனாவிடம் தன் சோகத்தை விவரிக்கிறார். 

 யமுனாவிடம் டீச்சர் கொல்கிறார்என்ன ஆயிடுத்து அப்படி உனக்கு? உன்னோட தொல்லையெல்லாம் உன் தலைக்குள்ளேதானிருக்குஉன் கண்ணுக்குள்ளேயிருக்கு.’

            அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள்.  மாமா வீட்டில் இருக்கிறாள்.  மாமா அம்மா நிலைமையைச் சொல்லி யமுனாவையும் சாயாவையும் வந்துபார்க்கச் சொல்கிறார்.  அம்மாவைப் பார்க்க இருவரும் கிளம்புகிறார்கள்.  சாயாவைத் திரும்பவும் பார்க்கும்போது தன்னுடன் வந்து இருக்கும்படி கெஞ்சுகிறாள் யமுனா.   அம்மாவைச்   சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை.  ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சாயாவின் வாரிசு முரளி அங்கேதான் இருக்கிறான்.  

            அடுத்த முறை சாயா யமுனா இருக்கிற இடத்திற்கு பாஸ்கர் ராவ் வருகிறான்.  அவளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு சைட் ஹீரோயின் கொடுப்பதாகச் சொல்கிறான்.  யமனா வேண்டாமென்று சொல்லி விடுகிறாள்.  அதற்கு அவள் சொன்ன காரணம்.  அவனுடைய  குழந்தையைச் சுமக்கிறாள்.  மூன்று மாதம் என்கிறாள்.  சாயாவுக்குப் பெரிய அதிர்ச்சிபாஸ்கர் ராவிற்கு நம்ப முடியாமல் இருக்கிறது. 

            இந்த அதிர்ச்சியை யமுனா சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறாள். இப்படி சகதியிலே மாட்டிண்டே அக்கா,’ என்கிறாள் சாயா.

 எப்பவோ நடக்கப் போறதுக்கு ஏன் இப்பலேருந்தே  கவலைப்பட்டுண்டு  இருக்கணும்?’ என்கிறாள் யமுனா. 

            இந்த நாவல் முழுவதும் தண்ணீருக்காக இரவு பகலாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள்  படுகிறபாட்டை விவரிக்கிறது. 

       

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே – செ. சுதர்சன் –

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே | செ. சுதர்சன் கவிதை - Vanakkam London

யுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை…

நீல மிடற்றில் செம்பட்டி சூடி,

நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,

ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று!

 

யுகமே யுகமே எங்கெரியுற்றாய்!

வானிடை எகிறிப் பாய்ந்தெழு கொடியே,

வருபகை மடித்த மார்பெழு புகழே,

ஏனிடருற்றாய்! எங்கெரியுற்றாய்!

 

மூதின் முல்லைப் பெருங்கடல் அன்னாய்!

முள்ளிவாய்க்காற் சிறுமணற் கும்பிகாள்!

முடிவைக் கரைத்த நந்திக்கடலே!

மனத்துள் மண்ணை மகிழ்விற் சுமந்து,

களப்பெருஞ் சுரவழி நடைநின்றொழுகி,

நன்றென நின்றவர் நாடு பாடினர்.

காதம் நான்கின் வழிகளுந் தொலைய

கந்தகக் களிறால் எறிந்து வீழ்த்திக்

காடே ஆற்றாக் காடு பாடினை.

 

நெல்மணிச் சோறு, நெய்யெரி விளக்கு,

நேர்த்திச் சேவல், நெடுகுலை வாழை

படைத்துப் பரவும் கடவுளர் பரவேன்.

 

ஊழி யுகத்தின் மக்களைக் காண…

வெளியிடை இரைந்த காற்றைத் தேடினேன்,

காற்றில் எழுந்த அழுகுரல் தேடினேன்,

கருகிய மரத்து நிழற்கால் தேடினேன்,

நெடுங்கடல் அலையின் துயரிசை தேடினேன்,

நிலமிசை வீழ்ந்தவர் பூந்துகள் தேடினேன்,

கரத்திடை மண்ணில் கால்தடம் தேடினேன்.

 

கண்ணீர் மாலைப் படையலை விரித்து,

நெஞ்சின் வழியாய் நிலமிசைப் பரவினேன்…

‘மண்’ என்ற சொல் முன்நின்றவர்,

காய்ந்த என் மனத்துள் ‘கல்நின்றார்’.

 

குறிப்பு: ‘நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ – புறம் 335:12

 

 

முருகேஷின் நூற்றாண்டில் பூத்த ஹைக்கூ மலர்கள் – ரஷீனா


சிறுவயதிலேயே எனக்குப் புத்தகம் படிக்க வேண்டுமென்கிற ஆசையுண்டு. ஆனாலும், தொடர் வேலைகள் மற்றும் குடும்பச் சூழல்களால் புத்தகம் படிக்கிற சூழல் வாய்க்காமலேயே காலம் கடந்து போய்க்கொண்டிருந்தது.

ஓராண்டிற்கு முன்னால் நான் கலந்துகொண்ட நிகழ்வில் எனக்கொரு புத்தகத்தை நினைவுப்பரிசாகத் தந்தார்கள். அந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, எனக்குள்ளிருந்த புத்தக வாசிப்பார்வம் விழித்துக்கொண்டது. இப்போதெல்லாம் எனக்கு சிறிது நேரம் கிடைத்தாலும், புத்தகமெடுத்து வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றேன். சமீபத்தில் தேர்தல் பணிகளுக்குச் சென்றபோது கிடைத்த சொற்ப நேரத்திலும் இரண்டு நூல்களை வாசித்து முடித்தேன். பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’, சு.வெங்கடேசனின் நாவல்கள், நா.முத்துகுமார், பவித்ரா நந்தகுமாரின் கவிதைகள் நூல்கள் என என் வாசிப்புத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ்’ என்னும் இந்நூலினை வாங்கி வந்தேன். இந்த நூலினைப் படிக்கும்வரை எனக்கு ஹைக்கூ என்றால் அது ஏதோவொரு கவிதை வடிவம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த நூலைப் படித்த பிறகு, ஹைக்கூ எனும் ஒற்றைச் சொல்லுக்குள் இவ்வளவு நட்சத்திரங்களா என்று வியந்துதான் போனேன்.

இந்நூலில், மகாகவி பாரதி எழுதிய சிறுகட்டுரை ஒன்றின் வழியே 1916-ஆம் ஆண்டில் தமிழில் முதன்முதலில் அறிமுகமான ஜப்பானிய மரபுக்கவிதையான ஹைக்கூ பற்றிய அறிமுகத்தோடு, தமிழில் அறிமுகமாகி 2016-ஆம் ஆண்டில் நூற்றாண்டினைக் கண்ட ஹைக்கூ கவிதைகள் குறித்து கவிஞர் மு.முருகேஷ் எழுதிய கட்டுரைகள், ஹைக்கூ நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள், இதழ்களில் இடம்பெற்ற ஹைக்கூ தொடர்பான அவரது நேர்காணல்களையும் அழகுற தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் சு.சேகர்.

நீண்டநெடிய மரபுடைய தமிழ்க் கவிதைப் பரப்பில், ஹைக்கூ கவிதை அறிமுகமான காலத்திலேயே பல கவிஞர்கள் ஆர்வத்தோடு ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ளனர் என்பதை இந்நூலின் வழி அறிந்துகொண்டேன். கவிக்கோ அப்துல்ரகுமான், கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், ஓவியக்கவிஞர் அமுதபாரதி, அறிவுமதி, கழனியூரன், மித்ரா போன்றவர்கள் வரிசையில் மு.முருகேஷூம் தமிழ் மண்ணில் ஹைக்கூ கவிதைகளைப் பரவலாக விதைத்துள்ளார்.

இன்றைக்கு நாம் எதிலும் விரைவையே விரும்பும் ’ஃபாஸ்ட் ஃபுட்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தின் வழி எல்லா செயலிற்கும் இயந்திரங்களை உருவாக்கி, உழைப்பின் நேரத்தைச் சுருங்கச் செய்துவிட்டோம். அதே போல, 30 பக்க அளவில் சிறுகதைகள் எழுதப்பட்ட காலம் மாறி, இன்றைக்கு ஒரு பக்கக் கதைகளையும், கடுகுக் கதைகளையும் வாசிக்கப் பழகிவிட்டோம். இந்தக் காலத்தின் தேவை கருதிய ஒரு கவிதை வடிவமாகவே ஹைக்கூ கவிதைகளை நான் பார்க்கின்றேன்.

கீழ்த்திசை நாடான ஜப்பானில் இந்த ஹைக்கூ எனும் மூவரி கவிதை வடிவம் தோன்றியிருப்பினும், இன்றைக்கு ஹைக்கூ அறிமுகமாகாத நாடுகளே இல்லை என்கிற அளவுக்கு உலகமெங்கும் பரவியிருப்பதை அறிய முடிகின்றது. ஹைக்கூ நால்வர்களான பாஷோ, பூஸன், இஷா, ஷிகி ஆகியோர், பெளத்த நெறியைச் சார்ந்த ஹைக்கூ கவிதைகளை ஜென் தத்துவத்தின் வழிநின்று படைத்தனர். ஹைக்கூ கவிதை வடிவத்தில் தான் சுருங்கியதாக இருக்கும். ஆனால், அதன் உள்அர்த்தங்களை விரித்துக்கொண்டே போனால் பல பக்கங்கள் நீளும்.

மூன்றே வரிகளில் மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு காட்சியை நம் மனதில் அப்படியே ஓவியம்போல் தீட்டிச் செல்வதே ஹைக்கூவின் சிறப்பாகும். முதலிரு வரிகளில் ஒரு காட்சியும், மூன்றாவது வரியில் ஒரு எதிர்பாரா இன்ப அதிர்வையும் வாசிப்பாளனுக்குள் எழுப்புகிறது நல்ல ஹைக்கூ.

இந்த நூலில், கவிஞர் மு.முருகேஷ், தான் படித்து ரசித்த பல நல்ல ஹைக்கூ கவிதைகளை நமக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றார். அவை நமக்கும் பிடித்துப்போகின்றன.

எடுத்துக்காட்டாக, ஓவியக் கவிஞர் அமுதபாரதி எழுதிய ஹைக்கூ ஒன்று;

மீன் பிடிக்கப் போனான்
திரும்புகையில்
அவன் படகில் அவன்.’

மீனவர்களின் உயிர் பறிக்கப்படும் அவலத்தை வலியோடு வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.

கவிஞர் ராஜசேகர் எழுதியிருக்கும் ஒரு ஹைக்கூ;
‘கயிற்றில் நடப்பவன்
கீழே பார்க்கிறான்
தட்டில் சில்லறை.’

– என்ற வரிகளில் உழைப்பின் பயனைக் கீழ்நோக்கிக் பார்க்க, மனித உழைப்பு மட்டுமே மேலாக மிஞ்சுகிறது என்பதை வெகுஅழகாகப் பதிவு செய்துள்ளார்.

வீட்டுக்கூரைக்குப்
பீர்க்கங்கொடியில் பாலம்
எறும்புகள் போய் வருகின்றன.’

– இது கவிஞர் நா.முத்துக்குமாரின் ஹைக்கூ. வீட்டின்மேல் படர்ந்திருக்கும் கொடியின்மேல் ஊர்ந்துசெல்லும் எறும்புகள் கவிஞருக்குப் பாலமாகத் தெரிகிறது. அட… என்ன கற்பனை என வியந்தேன்.

தமிழில் முதன்முதலாக நேரடியான ஹைக்கூ கவிதைகளை எழுதிய பெருமைக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை என்பதும் இந்த நூலின் வழிதான் தெரியவந்தது. அவரெழுதிய புகழ்பெற்ற ஹைக்கூ இது;

‘இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்.’

ஒருவரின் நினைவு நம்மை எப்போதும் ஏதோ ஒரு வகையில் தொல்லை செய்வதை கொசுக்களோடு கவிஞர் ஒப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதைப் படித்து ரசித்தேன்.

தமிழ் ஹைக்கூ குறித்த ஒரு நூற்றாண்டின் அத்துனை தகவல்களையும் தேடி, திரட்டி எழுதியுள்ள கவிஞர் மு.முருகேஷ் எழுதியுள்ள ஹைக்கூ ஒன்றும் என் மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தது.

‘மகன் எட்டி உதைக்கையில்
தாயின் கைகள் அனிச்சையாய் வருடும்
வயிற்றுத் தையலை.’

தான் காயப்பட்டாலும், தான் ஈன்ற உயிருக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக்கூடாது என்று எண்ணுகிற தாய்மையின் உயிர் உன்னதத்தை குறைவான வார்த்தைகளில் செறிவாகப் பதிந்திருக்கிறார் மு.முருகேஷ்.

இந்நூலானது தமிழ்ச் சூழலில் வெறும் மூன்று வரித் துணுக்குகள் என்கிற புரிதலில் ஹைக்கூ எழுதுபவர்களுக்கு எது ஹைக்கூ என்பது பற்றிய தெளிவான புரிதலையும், சரியான திசை நோக்கி ஹைக்கூ பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நூலில் மேற்கோளாகக் காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகள்

அனைத்தையும் படித்து முடிக்கையில், அவை வெளிப்படுத்தும் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் அறியும்போது, நமக்குள்ளும் ஹைக்கூ எழுத வேண்டுமென்கிற ஓர் ஆர்வம் இயல்பாகப் பிறக்கிறது. இதுவே இந்த நூல் நமக்குள் ஏற்படுத்தும் மிகச் சிறந்த தாக்கம் என்று சொல்வேன். இந்த நூலை நேர்த்தியாகத் தொகுத்திருக்கும் முனைவர் சு.சேகர் மற்றும் சிறந்த முறையில் அழகுற வெளியிட்டிருக்கும் அகநி வெளியீட்டிற்கும் என் பாராட்டுகள்.

ஹைக்கூ கவிதை என்றால் என்னவென்று அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், இன்றைக்கு தமிழ் ஹைக்கூவின் போக்கு எப்படியுள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் ஹைக்கூ கவிதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் வழிகாட்டும் ஒரு ஒளிச்சுடராக இருக்கிறது என்பதைச் சொல்லுவதில் ஒரு வாசகியாகப் பெருமிதம் அடைகிறேன்.

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ்
தொகுப்பு : முனைவர் சு.சேகர்
பக்கங்கள் :168 விலை : ரூ.120
அகநி வெளியீடு, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408.

கோபமா… கொஞ்சம் யோசியுங்கள் – சுரேஷ் ராஜகோபால்

 

மாஸ்டர் – கொண்டாட்டம் – Mithiran

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் கொடுத்தார்கள்.

முதலில் ஒருவர் கூறினார்,

என் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.

நான் ஒன்று சொன்னால், 
அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.

மற்றொருவர்,

யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.

அடுத்தவர்,

நான் செய்யாததை செய்தது மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க ,மேலே உடனே கோபம் வந்துடும், என்கிறார்.

இன்னொருவர்,

சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார்.

வேறொருவரோ,

நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.

இப்படி ஒவ்வொருவரும் 
தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.

அது சரி…

நீங்களே ஏதாவது தவறு/ தப்பு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? 
என்றதற்கு,

அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர்.

கோபம்னா என்ன?

கோபம் என்பது 
அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு 
நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.

அதுமட்டுமல்லாமல்

நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம்

இதே கோபத்துடன் செயல்பட்டால்

நட்பு நசுங்கி விடும். 
உறவு அறுந்து போகும். 
உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன?

சவுக்கு எடுத்து சுளீர்…சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க.

கோபம் என்பது உணர்ச்சிகளின் தடுமாற்றமே. கோபம் என்பது எதிர்மறையான பாதிப்பு (அல்லது நரம்பியல் தன்மையுடன் தொடர்புடைய எதிர்மறை உணர்ச்சி நிலை)  எனவே உணர்ச்சி கோளாறுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது

 

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.

இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.

இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, 
ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.

இதை தடுக்க மருத்துவரிடம் (டாக்டரிடம்) சென்று மாத்திரை மருந்து பெற்று  சாப்பிடுவோம். 
இதே நிலை நீடித்தால் 
ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல. 
சத்தியமான உண்மை இது.

இதெல்லாம் நீங்க சொன்னீங்க…
உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு 
நீங்க சொல்றதும்.

அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது… 
அப்படி வாங்க வழிக்கு.

அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.

முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க.

அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க.

அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல “சாரி”ன்னு மன்னிப்பு கேளுங்க…

ஈகோ பார்க்காதீங்க.

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே.

முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. 
யார்மேல தவறுன்னு சிந்தியுங்க…

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.
அப்படி இல்லைன்னா 
அந்த இடத்தை விட்டு நகருங்க…

தனியா உக்காந்து யோசிங்க. 
அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள், இல்ல பேச முயலுங்கள்..

அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க அவர்களுக்கு நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். 
என்ன நடந்துருச்சு பெருசா. 
என்னத்த இழந்துட்டோம். 
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.

அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. 
எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க.

வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் 
என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.

நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது.

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாவிட்டாலும், கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,
நீங்க 
அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.

தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. 
ஒரு வினாடி/செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். 
இதில் ஆறாவது அறிவை 
அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க…

கோபம் வரவே வராது.

நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.

வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போமே.

என்னங்க நான் சொல்றது சரியா?
என் மேலே உங்களுக்கு  கோபம் இல்லையே!…..

  குருகும் உண்டு மணந்த ஞான்றே … [ஜனநேசன்]

Asian Indian Young Couple Riding On Bicycle, Posing For A Photo

 “ படித்திருந்தும் இப்படி  முட்டாளாய் இருந்திட்டோமே …கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ… யாருக்குத் தெரியும்  இப்படி நம்பிக்கை மோசம் செய்வான் என்று….மாலை போட்டவன்  காலை வாருவான், கைகளைப் பற்றியவன் , இப்படி  நட்டாற்றில் விடுவான் என்று நினைக்கவில்லையே … என் முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது ஏமாற்றவா.. “ நினைக்க நினைக்க  ஆவேசம் பொங்கியது. அழக்கூடாது. நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.

குடிமைப்பணித்   தேர்வுக்காக அவளும் அவனும்  சேர்ந்து படித்தனர்   இவள்  படித்ததை அவனிடமும் , அவன்  படித்ததை இவளிடமும் பகிர்ந்து  கலந்து படித்தனர்  ; படிப்பின் தூரம் குறைந்து மனத்தால் நெருங்கினர். இவர்கள் சேர்ந்து படித்ததை சகப் பயிற்சியாளர்கள் அனைவரும் அறிவர். அவர்களே இவர்களது  நெருக்கத்தை கேலியும் கிண்டலும் பேசி  உற்சாகப் படுத்தினர் .இருவரும்  முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றனர் . அவன் நேர்முகத் தேர்வில்  காவல்துறைப்பணிக்கு  தேர்வாகிவிட்டான . இவள்  ஆட்சிப்பணிக்கான  நேர்முகத்தேர்வில் தேர்வாகவில்லை . இதே  வைராக்கியத்தை விட்டுவிடாமல்  அந்தப் பயிற்சி நிலையத்தில் பயிற்றுநராகப் பணியாற்றிக் கொண்டே அடுத்த தேர்வுக்காக  தயாராகிக் கொண்டிருக்கிறாள் .                                                                  அவன் காவல்துறை  பயிற்சி முடித்ததும்  தில்லியிலே  பணியமர்த்தப் பட்டான். அவனுக்கு  பயிற்சிநிலயத்தில் பாராட்டுக்கூட்டம்  ஏற்பாடு செய்திருந்தனர் . அவன்  விடைப்பெற்று செல்லும் நாளில் அவனிடம் அழுதாள்.. கைவிடமாட்டேன் என்று உறுதிகூறினான். சேர்ந்தே சினிமாவுக்குப் போனார்கள் . பிரிவின் துயரம்   நெருக்கத்தைத் தேடியது .   விடுதியில் உண்டனர் . உறங்கினர் .  கலந்தனர் . மறுநாள் பணியில் சேர டில்லிக்குப் பறந்தான்.  ஒரு மாதம்வரை  அனுதினம் இரவு பேசினார்; .மகிழ்ச்சியில் சிறகசைத்தனர்.                                                                        பிறகு வேலை அதிகமென்று பேச்சைக் குறைதான். அவனது   கைப்பேசி எண்ணை மாற்றிக்கொண்டான். அவனது மின்னஞ்சல் முகவரியையும்  மாற்றிக்கொண்டான். அவனது உயிர்த்துளி இவளுள்  வளரும்போது அவன்  தொடர்புக்கு அப்பால் போனான். நண்பர்கள் மூலம்  அவனைத் தொர்புகொள்ள பலவகையில் முயன்றும் முடியவில்லை. நண்பர்கள் எவரையுமே சாட்சி வைத்துக் கொள்ளவில்லையே. இவர்களது நெருக்கதை  ஊக்கப்படுத்தியவரெல்லாம் இவளை புண்படுத்துகிறார்கள்.. “சேர்ந்து படிக்கலாம். சேர்ந்து படுக்கலாமா? அவன் டில்லியில் எந்த வசதியான வடநாட்டு வெள்ளைத்தோல்காரியோடு திரிகிறானோ… “ நண்பர்கள் இவளுக்கு மனம்கொத்திகளாகினர். மனம் நைந்து.  சந்திப்பிள்ளையார் கோவில்முன் நின்று புலம்பினாள்

  “பிள்ளையாரப்பா உன் முன்னாலதானே  நாங்கள்  மாலை மாற்றி மஞ்சள்கயறு  அணிந்து கொண்டோம். நீ சாட்சி சொல்ல மாட்டாயா …என் கண்ணீருக்கு வழி  சொல்லுமாட்டாயா .” என்று இறைஞ்சினாள்.                           கணப்பொழுதில்  ஒரு குருவி  பிள்ளையாரின் முன் வைக்கப்பட்டிருந்த  பொங்கலைக் கொத்திக்கொண்டு இவளது தோளுக்கு மேல்  எதிரிலிருக்கும் விளக்குகம்பத்திற்குப் பறந்தது. இவள் ஏறிட்டுப் பார்த்தாள் . அங்கே ஒரு குருங்காமிரா பொருத்தி இருந்தது. கண்கள் நீர் பொங்க அப்பகுதி  மின்சேவை அலுவலரிடம் கெஞ்சி அன்றைய நாளின் காமிரா பதிவின் நகலைப்  பெற்றாள்  .                                                                பின்னர்  தனது பயிற்சிநிலைய  அலுவலரின்  உதவியால்   திரையரங்க  நுழைவுவாயில்  அந்நாளைய காமிரா பதிவிலிருந்தும் , உணவகத்து காமிரா பதிவிலிருந்தும் நகல் பெற்றாள். ஆனால் அவள் கெத்தாக,  கெஞ்சலாகப்  பல பொய்களைச் சொல்லி காமிரா பதிவு நகல்களைப்  பெறும்போது  அவர்களின் பார்வைமேய்ச்சலின் பற்கள் அவளை துளைத்த ரணம் சொல்லில் அடங்காது,                                                 நாள்காட்டித் தாள்கள் கரையக் கரைய குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது. ஐ.எ.எஸ். பாஸ் பண்ணிவிட்டுத்தான்  வீட்டுக்கு வருவேன்  என்று மாதாமாதம் பெற்றோர்களுக்கு பணம் அனுப்பி  சந்தேகம் வராமல்  பார்த்துக்கொண்டாள் .’ ஊரை,உறவை  மறைக்கலாம். வயிறை மறைக்கமுடியுமா. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில்  ‘ நேரே  அவனது  பெற்றோரை சந்தித்து முறையிடுவோம். முடியாத பட்சத்தில்  சட்டபூர்வமாக முயலுவோம். ‘ என்று  புறப்பட்டாள் .

   ஆட்டோவிலிருந்து  இறங்கியதும் அவள் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் .கம்பீரமாகத் தோன்றியது. உள்ளே இடப்புறம் வளைந்து நின்ற ஒற்றைத் தென்னையும், வலப்புறம்  குளிர்நிழல் குடை விரித்திருக்கும் வேம்பும்  அழகு சேர்த்தன. வந்த வேலையை விட்டுட்டு இப்படி மனதை பறிகொடுத்ததால் தானே இவ்வளவு துயரம். இன்னும் தனக்கு புத்தி வரலையே ,கடிந்து கொண்டு முன் நகர்ந்தாள்.                            சுற்றுச்சுவரில் ஒரு பித்தளைத் தகட்டில்  அவனது பெயர் , இந்திய காவல்பணி என்று மின்னியது. அவளைக்  கேலி செய்வது போலிருந்தது. கரும்பழுப்பில் மஞ்சள் பூ பொறித்த கனத்த இரும்புப்படல் அவனது  மனதைப் போலவே வழிமறித்து  நின்றது. அதை உந்தித்  தள்ளினாள்;   தாழிடாமல்   இருந்தது , முனகலோடு  திறந்தது. வீட்டிற்கு முன் இடப்புறம் ஒரு முல்லைக்கொடி கம்பைப் பற்றி மேலே ஏறத்துடித்துக் கொண்டிருந்தது. வலப்புறம் மல்லிகை ,செவ்வந்தி,சாமந்திப்பூ செடிகள் கண்ணுக்கு குளிர்வைத் தந்தன. வாசலை விட்டு விலகி கருப்பு இன்னோவா கார் நின்றிருந்தது .கைகள் நடுங்க மெல்ல அழைப்புமணியை அழுத்தினாள். மைனாவின் மென்கூவல் ஒலித்தது.                                                                 “இதோ வர்றேன் “ என்ற கனிந்த குரலைத் தொடர்ந்து சிவப்பு வளையல்கள் ஒளிர, சோப்புக்குமிழ்கள் படிந்த வலக்கரம் கதவை திறந்து ,                 “ வாங்க,உள்ளே ” என்றபடி மின்னலாக  உள்ளே மறைந்தது .

  காலை மணி பத்திருக்கும். காலைச் சிற்றுண்டிக்குப்பின் அவனது  பெற்றோர்  இருவரும்  செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம். ஐந்தரையடி  உயரம் கொண்ட அவளது வட்டமுகத்தில்  கருவுற்று துயரமேகத்தை  மறைத்து புன்னகைத்து கைகளைக் கூப்பினாள். பெற்றோர்  அவளை அடையாளம் கண்டு அமரச் சொல்லி உபசரித்தனர் .        

இவளை பார்த்ததும்  அவனுக்கு பாராட்டுவிழா நடந்தபோது, இவள் உற்சாகமும் சுறுசுறுப்புமாய் இனிய சொற்களைக்  கோர்த்து நிகழ்ச்சியை நடத்திய விதம்; இவளது  ஈர்ப்பான முகம் பெற்றோரது  நினைவுக்கு வந்தது, இன்று அவளது உடல்நிலை மாற்றம் அவள்மீது பரிவைச்  சுரந்தது . இந்தச் சூழலில்  தனக்கும் அவர்களது மகனுக்கும்  உள்ள உறவையும், மகனது  சிசுவை  சுமந்துகொண்டு இருப்பதை விம்மலுக்கிடையில்  சொன்னாள்.                                            அவளது இந்நிலைக்கு மகன்தான் காரணம் என்பதை தந்தை ஏற்க  மறுத்தார். தாய் இறுக்கதை  தளர்த்தி வெடித்தார் .   

“கலக்டருக்கு படிக்கிற பொண்ணு ,ஒரு மூணாவது  மனுஷருக்கு  கூட தெரியாம கல்யாணம் செஞ்சுக்கலாமா …? எங்கமகன் தான்  உன்னை கல்யாணம் செஞ்சுகிட்டதுக்கு  சாட்சிகள் இருந்தால் உன்னை எங்க மகனுக்கே  கல்யாணம் செஞ்சு  வைக்கிறதில எங்களுக்கு மறுப்பில்லை. ஆனா இதில் பொய்யோ கபடமோ இருந்தால் பொண்ணுன்னு  பார்க்காம தக்க தண்டனை வாங்கித்தரத்  தயங்க மாட்டோம் “

“நீங்களும்  எனக்கு அம்மா அப்பா மாதிரிதான் . உங்கள் மகன் மீது கொண்ட அளவற்ற பிரியத்தாலும் , நம்பிக்கையாலும் , என்னைப் பற்றி யோசிக்காமல் உங்கள் மகனிடம் என்னைக் கொடுத்து விட்டேன். ஆனால் தங்கள் மகன் என்னோடு தொலைப்பேசியில் பேசவும் ,மின்னஞ்சலில்  தொடர்பு கொள்ளவும் தவிர்க்கிறார். கைப்பேசி எண்ணையும்  , மின்னஞ்சலையும் மாற்றிக் கொண்டார் என்றறிந்ததும் தான் வயிற்றில் வளரும் சிசுவுக்காக நானே சாட்சிளைத் தேடினேன்.மஞ்சள்கயறு கட்டிய கோலத்தில்  ஒரு தன்படம் கூட எடுத்துக்கொள்ளத் தோன்றாமல் போனதே என்ற தன்னிரக்கம் என்னைப் பிழிந்து வதைத்தது .                                                           2019  ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி  அந்த ஜன நடமாட்டமில்லாத  பிள்ளையார் கோவிலில் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். கோவிலுக்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் பொருத்தப் பட்டுள்ள  கண்காணிப்பு காமிராவில் பதிவு  உள்ளது. அதன் நகலைப் பெற்றுள்ளேன். அதே நாளில் உணவகத்தில் உண்டது, திரைப்படத்திற்கு சென்றது, அன்றிரவு விடுதிக்கு சென்றது  என எல்லாவற்றிற்கும்  சாட்சிகளாக கண்காணிப்புகாமிரா பதிவுகளைப் பெற்றுள்ளேன். இதோ பாருங்கள் . இந்த சாட்சிககளைப் பெற நான் பட்ட சொற்காயங்களும் ,விழுங்கும் பார்வைகளும், ஏளனங்களும் சொல்லத் தக்கன அல்ல. நான் பட்ட துன்பம் எந்தப்பெண்ணுக்கும் நேரக் கூடாது.” தேம்பினாள்.

அப்பா பேச்சிழந்து உறைந்திருந்தார். அம்மா அவளை ஊடுருவிப் பார்த்தாள்.  “ நாங்கள்  விடுதி அறைக்குள் இருந்த நிலைக்கும் ஆதாரம் கேட்பீர்களானால்… , அம்மா…தெய்வமே .. என் வயிற்றில் வளரும் சிசுவின் மரபணுவையும் சோதித்துக் கொள்ளுங்கள் “ என்று மூச்சுவிடாமல் பேசியவள் மூர்ச்சையானாள். சரியும் முந்தானையை சரிசெய்யும் வேகத்தில் லாவகமாய் அம்மா அவளைத் தாங்கி மடியில் ஏந்தினாள் .

அப்பா ஓடி தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மயக்கம் தெளிவித்தார். “அம்மா பதறாதே. உன் வயிற்றில் வளரும் குழந்தைப் பற்றி கவலை வேண்டாம். அது எங்களது குடும்ப வாரிசு. நீ நினைத்திருந்தால்  உன்னிடம் உள்ள ஆதாரத்தை எல்லாம் மின்னூடகங்களில் கொடுத்தோ , வழக்கு தொடுத்தோ  எங்களது மகன் பணிக்கு களங்கத்தையும் ,எங்கள் குடும்பத்திற்கும்  தீரா அவப்பெயரையும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனா அப்படி செய்யாமல் எங்களிடமே முறையிட்டாய். அவனுக்கு நடத்திய பாராட்டு விழாவிலே உன்னைப் பற்றி விசாரித்தோம் . உன்னை நம்புறோம். கவலைப் படாதே உள்ளறையில் போய்  ஓய்வெடு.” என்றார். அவளுக்கு உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது.

.

கம்பன் கவிநயம் – இணையம்

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே ! – ஒரே இந்தியா செய்திகள்

இராவணன் தனது அமைச்சனான மகோதரனிடம் சீதையை நான் எப்படியும் அடைவதற்கு ஒரு நல்ல உபாயம் சொல் என்று கேட்கிறான். “சொல்கிறேன்” என்று மகோதரன் ஓர் சூழ்ச்சியைக் கூறுகிறான். “மருத்தன் என்றொரு அரக்கன், மாயையும், வஞ்சனையும் உடையவன். அவனை ஜனக மன்னன் போல உருவத்தை எடுத்துக் கொண்டு, சீதையிடம் கொண்டு செல்வோம். தன் தந்தை துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்” என்றான் மாயையில் வல்ல மகோதரன். இப்படியொரு ஆலோசனை வழங்கிய மகோதரனை, இராவணன் மார்போடு தழுவிக் கொண்டு, “அவனை இங்கே கொணர்ந்து அவ்விதமே செய்” என்றான்.

ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், “தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ? உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ? நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ?” என்றான். மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது? “அவ்வுரை கேட்ட நங்கை,

செவிகளை அமையப் பொத்தி வெவ்வுயிர்த்து, ஆவிதள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க ‘இவ்வுரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி செவ்வுரை அன்று இது’ என்னாச் சீறினாள், உளையச் செப்பும்”.

 

என் தந்தை இப்படிப்பட்ட பேச்சை பேசவே மாட்டார். பழியை ஏற்றுக் கொண்டு எப்படியாவது உயிர் வாழ வேண்டுமென்று என் தந்தை எண்ணவே மாட்டார். இவ்வார்த்தைகள் அறமும் அன்று, நேர்மையும் அன்று, என்று மனம் நைந்து வருந்தினாள். “அறம் உணர்ந்தவர் சொல்லும் சொல்லா இது? நற்குடிப் பிறந்தார் கூறும் செயலா இது? வேத நூல் கற்றவர் கூறும் நெறியா இது? உயிரினும் மேலாக பண்பு பாராட்டுவோர் நினைக்கக் கூடிய செயலா இது? நீ நற்குடி பிறந்த ஜனகன் அல்ல! நீ என் தந்தையே அல்ல!” என்று அலறினாள் சீதை.

 

கும்பகருணன் - தமிழ் விக்கிப்பீடியா

கும்பகருணன் மரணச் செய்தியைக் கேட்ட ராவணன் துடிதுடித்துக்  கூறுகிறான்.

தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான் மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான் பின்னைக் கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே”.

என் பொருட்டுப் போர்க்களத்தில் ஆவி துறந்த என் அருமைத் தம்பி! அந்த வில்வீரன் இராமனையோ, அல்லது அவன் தம்பியாகிய இலக்குவனையோ, அல்லது படைத்தலைவன் நீலனையோ, அல்லது வானர மன்னன் சுக்ரீவனையோ, அல்லது வாலி மைந்தன் அங்கதனையோ, அல்லது வாயுபுத்திரன் அனுமனையோ, அல்லது கரடிகளுக்கு அரசன் ஜாம்பவானையோ, கொன்று ஒழித்தாய் என்று உலகத்தார் சொல்லக் கேட்டு மகிழவேண்டிய நான் இன்று உனக்கே மரணம் வந்தது என்று கேட்கும்படி நேர்ந்து விட்டதே!.

கண்ணதாசனின் “அத்தான் என்னத்தான்’ பாடல் ஞாபகம் வருகிறதல்லவா?  மரணச் செய்தியைப் பாடிய கம்பனின் அடியை வருடி காதலில் கொஞ்ச வைத்த கண்ணதாசன் கம்பதாசனும் கூட! 

 

நன்றி: http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/2010/05/3.html

கடைசிப் பக்கம்- டாக்டர் ஜெ பாஸ்கரன்

“லேகினி” இன்னும் வருகிறதா?  
வழக்கம்போல், புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன் (ஒரு மாற்றுக்காக,எப்போதும் செய்யும் ‘புத்தகத் தேடலை’ச் சிறிது மறந்திருந்தேன்!). வழ வழ வென்ற அட்டையில், பல வண்ணத்தில் கண்ணைக் கவரும் கோட்டோவியங்கள் போட்ட இரண்டு சஞ்சிகைகள் – அந்தக் கால அமுதசுரபி, கலைமகள் அளவில் – கிடைத்தன. ‘பிரித்துக்கூடப் பார்க்கவில்லை’ என்பதை அவற்றின் ‘பளபளப்பும்’, கசங்காத பக்கங்களும் வருத்தமுடன் சொல்லிக்கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது!
மூளையின் மடிப்புகளில் சட் டென்று ஒரு விளக்கு எரிந்தது – ‘டேக்’ செண்டரில், ஒரு செவ்வாய்க்கிழமை மாலை சாருகேசி அவர்கள் என் கையில் கொடுத்தவை இந்த பத்திரிகைகள் – எழுதுகோல் தேவி “லேகினி” தமிழ்ப் பண்பாட்டுப் பத்திரிகை – புதுப் பாதை, புது இலக்கு என்ற முத்திரையுடன் இருந்தன. 
{லேக்கின்-எழுதுவோன்; லேகினி-எழுதுகோல்}
(ஜூன் 2016 – அறிமுக வெள்ளோட்ட மடல் மற்றும் தீபாவளி மடல் 2016 ஆகிய இரண்டு இதழ்கள்).
மாத இதழாக அறிமுகப் படுத்தப் பட்டது. தொகுப்பாசிரியர் எஸ்.லக்‌ஷ்மணன் (லெமன்). அந்தக் கால மஞ்சரியைப் போல பல சுவாரஸ்யமான கட்டுரைகள், கதைகள், தகவல்கள்!
“ஒளவையார் அவதரித்த காலத்திலும் மக்களிடையே துர்க்குணங்கள் இருந்தன. ஆத்திச்சூடி படித்தாலே இதை அறியலாம். அவ்வாறே வள்ளுவர் காலத்திலும் மற்ற பெரியோர்கள் தோன்றிய காலத்திலும் மக்களிடையே துர்குணங்கள் இருந்தன. ஆனபடியால் தற்காலத்திலும் ஒளவையாரைப் போல் மக்களுக்கு அறிவும், தூய உள்ளமும், பாக்கியமும் வளரச் செய்யும் ஓர் அவதார ஸ்திரீ, ஏன் தோன்றக்கூடாது? தோன்றுவாள். (‘உண்மைகள் உறங்குவதில்லை’ நூலில் உள்ல தமிழ்த்தாய் ஒளவை என்ற ராஜாஜியின் கட்டுரை).
‘தமிழ்த் தாத்தா’ – கி.வா.ஜ. வின் கட்டுரை! ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். திருநெல்வேலியில் நிலா ஒளியில் ஓர் ஏட்டுச் சுவடியைப் பிரித்துப் பார்க்கிறார். அது பத்துப்பாட்டு எழுதியிருந்த சுவடி. அதில் ஒன்று ‘முல்லைப் பாட்டு’. நிலவில் சுவடியைப் பாத்தபோது ‘முல்லைப் பாட்டு’க் கண்ணில் பட்டது. அதைப் பற்றி எழுதும்போது ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற பொருத்தமான தலைப்பில் கட்டுரை எழுதினார்!
‘குறிஞ்சிப் பாட்டில் வருகின்ற 99 மலர்களில் சில குறைந்திருப்பதைக் கண்டார். தருமபுர ஆதீனத்தில் கிடைத்த சுவடியில் அந்த மலர்களின் பெயர்கள் கிடைக்க, அதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு, ‘உதிர்ந்த மலர்கள்’ என்று பெயரிடுகிறார்! (‘தமிழ்த் தாத்தா’ நூலில் வரும் முன்னுரைக் கட்டுரை).
விருட்சம் வெளியீடான சில க.நா.சு. கவிதைகள் நூலிலிருந்து சில கவிதைகள், ஸ்வாமிநாத ஆத்ரேயன் எழுதிய ‘வேதமாநெறி’ (மாணிக்க வீணை நூலிலிருந்து ‘ஸத்ய நெறி’ என்ற கதை), மதனின் ‘தண்ணீர் என்னும் மகாசக்தி!’ கட்டுரை, ‘இன்னமுதம்’ (சுதேசமித்திரன்) நூலிலிருந்து, பல ஸ்தலங்களின் தேவாரம் உரையுடனும், கோபுலுவின் கோட்டோவியங்களுடனும் என அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன!
காஶ்ரீஶ்ரீ மொழிபெயர்ப்பில், ஶ்ரீகாண்டேகரின் மராட்டி வழிக் கதை – ‘வெற்றி-தோல்வி’ – போரில் தோற்ற அரசனின் சிலைக்கு முன் தோற்கும் ஓர் அரசனின் கதை!
பதிப்புத்துறை முன்னோடி வை.கோவிந்தன் பற்றிய கட்டுரை – ‘சக்தி’, ‘மங்கை’, ‘அணில்’ பற்றிய குறிப்புகளுடன் – ஏராளமான தகவல்களுடன் கொடுக்கப் பட்டுள்ளது. கவிமணி அவர்கள் ‘சக்தி’யில்தான் முதலில் சிறுவர்க்காகப் பாடல்கள் எழுதினார்கல் என்பது உபரித் தகவல்!
ஈரோடு தமிழன்பனின் ‘பொம்மைகள்’ (கலையும் கவிதையும் இலக்கியக் கட்டுரைகள்), எஸ்.வைதீஸ்வரனின் ‘நடைப் பயணம்’ (திசைகாட்டி – கட்டுரைகள்) ஆகிய கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.
அஃகேனம் -இ’.’கேனம் – தமிழில் GA, DA, DHA, BA ஆகிய ஒலிகளை வரிவடிவில் எழுத சில வழி முறைகளைச் சொல்லும் கட்டுரை – சிந்திக்க வைக்கிறது. (மஞ்சரி இதழில் வந்தது).
(தீபாவளி மடல் 2016 – நிறைய பக்கங்களுடன், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என சிறப்பாக வெளி வந்துள்ளது).
மஞ்சரி, ரீடர்ஸ் டைஜஸ்ட் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க சிறப்பான பத்திரிகை. கண்கவர் வடிவமைப்பு, சுவாரஸ்யமான தகவல்கள், அறிவார்ந்த கட்டுரைகள், கவிதைகள் என உள்ளடக்கம் கொண்ட பத்திரிகை. ஆனாலும் வாசகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
வாசிக்கும் பழக்கம் குறைவு என்பதை ஏற்பதற்கில்லை – வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், வேறு தளங்களில்!
நல்ல தகவல் களஞ்சியமாக உள்ள ஆரோக்கியமான பத்திரிகைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யாத குற்ற உணர்வு எதிர்காலத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்றே தோன்றுகின்றது.
‘லேகினி’ இன்னும் வருகிறதா?’.
ஜெ.பாஸ்கரன்.
Sent from my iPhone